Jeyamohan's Blog, page 979
May 27, 2021
ஓ.என்.வி பற்றி…
ஓ.என்.வி.குறுப்புஅன்புள்ள ஜெ,
ஓ.என்.வி குறுப்பு முக்கியமான கவிஞரா? ஞானபீடம் பெற்றிருக்கிறார். ஆனால் சினிமாக்கவிஞர் மட்டுமே என்கிறார்கள். ஆகவே கேட்கிறேன்
ஆர்.ராஜன்
அன்புள்ள ராஜன்,
நான் முன்பு ஓ.என்.வி குறுப்பு பற்றி எழுதியிருக்கிறேன். மீண்டும்.
ஓ.என்.வேலுக்குறுப்பு என்னும் ஓ.என்.வி குறுப்பு இடதுசாரிகளுக்கு உகந்த கவிஞர். இடதுசாரிகளின் எழுச்சிக்காலமான 1950களில் தோப்பில் பாசியால் நடத்தப்பட்ட இடதுசாரி நாடகக்குழுவான கே.பி.ஏ.சிக்கான பாடல்களை எழுதியவர். இடதுசாரி ஆதரவு வேட்பாளராக தேர்தலில் நின்றிருக்கிறார்.
ஓ.என்.வி குறுப்பு கல்லூரி ஆசிரியராக இருந்தார். அப்போது பாலமுரளி என்ற பெயரில் சினிமாவுக்குப் பாடல்கள் எழுதினார். ஓய்வுக்குப் பின்னர் ஓ.என்.வி குறுப்பு என்றபேரிலேயே பாடல்களை எழுதினார்.
இடதுசாரி ஆதரவாளராக தோன்றினாலும் ஓர் உயர்குடிப் பேராசிரியரின் வாழ்வும், நோக்கும் கொண்டவர். சம்ஸ்கிருதம் நிறைந்த மலையாளத்தில் சம்பிரதாயமான பழைய கருத்துக்களையே கவிதைகளாக எழுதினார்.
அரசியல் தலைவர்களுடன் அணுக்கமாக இருப்பவர். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கையில் காங்கிரஸுக்கு தீவிர ஆதரவாளராக இருப்பார். எல்லா தரப்பு மேடைகளிலும் தோன்றுவார். ஆகவே அனைவருக்கும் வேண்டியவர்.
இந்த பொதுவான அடையாளமும் வெகுஜனப்புகழும் அனைவருடனான சீரான தொடர்பும் அவருக்கு பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் பட்டங்களையும் ஞானபீடம் உட்பட விருதுகளையும் பெற்றுத்தந்தன.
அவருடைய கவிதைகள் இருவகை. காமத்தின் சம்பிரதாயமான வர்ணனைகள், பொதுவான சமகால அரசியல் கருத்துக்கள். அவை தலையங்கக் கவிதைகள் எனப்படுகின்றன. யாப்பில் எழுதினார். அவருடைய சொல்லாட்சிகள் சம்ஸ்கிருதத்தின் அழகு கொண்டவை. அத்துடன் அனைவருக்கும் அஞ்சலிக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.
ஓ.என்.வி குறுப்புயின் கவிதை மரபு சங்ஙம்புழா கிருஷ்ணபிள்ளை என்னும் முன்னோடியிடமிருந்து தொடங்குகிறது. ஷெல்லியில் இருந்து தூண்டுதல்பெற்ற கற்பனாவாதக் கவிஞரான சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளைக்கு பின்னர் பல நகல்கள் உருவானார்கள். அவர்களை பொதுவாக ‘மாற்றொலிக் கவிஞர்கள்’ என்பார்கள். [எதிரொலி] வயலார் ராமவர்மா அவ்வாறு குறிப்பிடப்பட்ட திரைக்கவிஞர். வயலார் ராமவர்மாவின் எதிரொலி என ஓ.என்.வி குறுப்பைச் சொல்ல முடியும்.
ஓ.என்.வி குறுப்பு திரையிசையில் நல்ல பல பாடல்களை எழுதியிருக்கிறார். அதிருஷ்டவசமாக அக்காலத்தில் பாடல் முதலில் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டது. ஆகவே அழகிய கற்பனாவாத வரிகளை அவர் எழுத முடிந்தது. மெட்டுக்கு எழுதவேண்டியிருந்தபோது அவர் பின்னடைவு கொண்டார்.
ஓ.என்.வி குறுப்பு புதுக்கவிதை அல்லது நாட்டார்பாடல்களின் சாயலே அற்ற சம்பிரதாயமான மரபுக்கவிதையின் மொழிநடை, உவமைகள், அணிகளையே கவிதையில் பயன்படுத்தினார்.
ஓ.என்.வி குறுப்பு வெகுஜனத் தொடர்புகளால் பலமடங்கு மிகைப்படுத்தப்பட்ட, சுமாரான கவிஞர். நல்ல பாடலாசிரியர்.
ஒ.என்.விக்கு ஞானபீடம் அளிக்கப்பட்டபோது நான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறேன் – தமிழிலும் மலையாளத்திலும். அக்கித்தம் அவர்களே தகுதியானவர் என்று வாதிட்டேன். அதற்கு ஆதரவும் திரண்டது. பத்தாண்டுகளுக்குப்பின் அக்கித்தம் ஞானபீடம் பெற்றார்.
ஜெ
ஓ.என்.வி ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம் விருதுகள், அமைப்புகள் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்
பொன்னரிவாள் அம்பிளியில் கண்ணெறியுந்நோளே
கதிர்சூடும் புதுநெல்லின் கிசுகிசுப்பு
ஓ என் வி நாடகப் பாடல்கள் தொகுதி
இந்து புஷ்பம் சூடி நில்கும் ராத்ரி – பாம்பே ரவி ஓ என் வி
இவிடே காற்றினு சுகந்தம் — சலீல் சௌதுரி ஓ என் வி
ஒரு கல்லூரி மாணவியின் கடிதம்
வணக்கம்
“என்னடா இந்த மெயில் இவளோ பெருசா இருக்கே” என்று படிக்காமல் போய்விடாதீர்கள். இந்த மெயிலை நான் நீண்ட நாட்களாக அணுப்ப நினைத்து இப்போது தான் நீங்க வாசிக்கிறீர்கள்.
கல்லூரியில், மூன்றாம் பாடவேளை. அப்போதுதான் மதிய உணவு உண்டுவிட்டு வந்து அமர்ந்தோம். எங்கள் வகுப்பாசிரியர், நாங்கள் உணவுவேலை முடிந்து வருவதற்குள் மேசையில் ஸ்பீக்கரையும் புரோஜக்டெரையும் வைத்து இருந்தார். என் இருக்கையான மூன்றாவது வரிசையில் மூன்றாவது மேசையில் மேசை ஓரத்தில் அமர்ந்தேன்.
கண்டிப்பாக எங்கள் எல்லோருக்கும் தெரியும் ஆசிரியர் இலக்கியம் பற்றிய வீடியோவைதான் போடுவார் என்று. ஆனால் எங்கள் மனதிற்குள் ஒருநப்பாசை “திரைப்படம் போட்டால் எப்படியிருக்கும்”. இது நடந்து இருந்தால் உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்து இருக்கும்.
வீடியோவை போட ஆரம்பித்தார். சன்னல்களை மூட செய்தார். முதல் வரிசையில் இரண்டு மேசைகளில் மட்டும் தான் மாணவர்கள், மற்ற பதிமூன்று மேசையிலும் மாணவிகள். எதிர்ப்பார்த்தது போல் இலக்கிய சொற்பொழிவுதான். இருகுரல்கள் மட்டும் தான் கேட்டது வீடியோ தெரியவில்லை. ப்ரொஜக்டெர் பிரச்சனைதான்.
அப்போது ஆசிரியர் வீடியோவை நிறுத்தி விட்டு, இல்லை இல்லை ஆடியோவை நிறுத்தி விட்டு “இது ஒரு இன்ஞ்ஜினியரிங் கல்லூரியில் நடத்தப்பட்ட சொற்பொழிவு, இத ஏன் உங்களுக்கு போட்டுக் காட்ட விரும்பினேன்னா, தமிழ் படிக்கிறவங்க தான் இலக்கியம் படிக்கனும்னு இல்ல எல்லாரும் இலக்கியம் படிக்கனும். கற்பனைத்திறன் அப்போதான் வரும். அதுமட்டும் இல்ல நெறய இருக்கு ஆன இப்ப உங்களுக்கு புரியருது இல்ல. தமிழ் படிக்கிற நீங்களும் இத தெரிஞிக்கனும். இதுல பேசுரவரு மிகப்பெரிய எழுத்தாளர் ஜெயமோகன்” என்றார்.
‘எங்கேயோ கேட்ட பெயரா இருக்கே’ என்று நினைத்தேன் ஆனால் அது ஜெயகாந்தன். அதும் சிலபசில் இருந்தது. ஆசிரியர் தொடர்ந்தார் “வீடியோவ காட்டலாம்ன்னு பாத்தா வீடியோ வரல. சரி ஆடியோ மட்டும் கேளுங்க” என்று ஆடியோவை போட்டார்.
’நல்லா கவனிக்கலாம், இலக்கணத்துலே இருந்து தப்பிச்சாச்சு’ என்று நினைத்தேன். ஆனால் ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம்தான் கழிந்து இருக்கும். உண்ட மயக்கம். வெறும் ஆடியோ. கூடவே நிசப்தம் எல்லாம் எனக்கு விரோதமாக இருந்து தூக்கத்தை வரவைத்தது. என்னை அறியாமலையே இருமுறை என் தலை மேசைக்கு ஒடியது.
இப்படித்தான் உங்களின் பெயர் எனக்கு அறிமுகமானது. பிறகு ஆசிரியர் உங்களின் சொற்பொழிவின் லின்க் அனுப்பினார் புலனம் குழுவில். பின்பு உங்களின் சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன்.
நீங்கள் யுடூப் சேனலில் வெண்முரசு பற்றி உரையாடல் நடத்தினீர்கள். அதில் ஒருவர் “மறுபிறவி இருக்கா இல்லையா நீங்க நம்புரீங்களா?” என்று கேட்டு இருந்தார். அதற்கு நீங்கள் அளித்த பதில் என்னை ஒரு நிமிடம் ஆச்சரியப்படுத்தியது. இதுவரை நான் அப்படி ஒரு பதிலை கேட்டது இல்லை. நான் உங்கள் கருத்திற்கு உடன்படுகிறேன் அல்லது இல்லை என்பது விஷயம் இல்லை, அந்த உறுதி எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
இப்படியாக உங்களை பின் தொடர்ந்தேன். பவாசெல்லதுரை அவர்கள் உங்களின் சோற்றுக்கணக்கை சொல்லி கேட்டேன். ஆசிரியரும் வகுப்பில் ஒரு முறை அறம் பற்றி பேசினார். (9.3.2021) அன்று என் தோழியும் நானும் நந்தனம் புத்தக கண்காட்சிக்கு சென்றோம். எங்களின் ஆசிரியர் கூறியதின்படி ஆதிப்பதிப்பகத்தில் “அறம்” தொகுப்பை வாங்கினோம்.
அறம் வாசிப்பிற்கு முன் பின் என என்னை பிரிக்கல்லாம். சாதி இட ஒதிக்கீடு இருக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் அறம் வாசிப்பிற்கு பின் என் என்னம் மாறியது. உன்மையை அறிந்தேன் அதற்கு உதவியது “அறம்” தொகுப்பு தான். இதில் நீங்க “என்னை பற்றி மறைக்க எதுவும் இல்லை” என்று பதிவிட்டு உள்ளீர்கள். உங்களின் வாழ்கை வரலாற்றை அறிய விரும்புகிறேன்.
படித்ததற்கும் படைத்ததற்கும் நன்றி!
என்னை பற்றி. இந்துக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறையில் படிக்கும் என் பெயர் சு. தீபிகா. ஆண்காக்கை கவிதை தொகுப்பின் ஆசிரியர் சுப்பிரமணி இரமேஷ் என் வகுப்பு ஆசிரியர். இம் மெயிலை அனுப்ப ஊக்குவித்தவரும் அவரே. நன்றி!..
நீண்டதோர் கடிதம் இப்படி நான் யாருக்கும் இதுவரை அனுப்பியது இல்லை. ஆதனால் தான் இத்தலைப்பை வைத்தேன்.
நன்றி!
தீபிகா
அன்புள்ள தீபிகா,
நன்றி. தமிழ்ச்சூழலில் இலக்கியத்தையோ பொதுவான அறிவுச்செயல்பாடுகளையோ வகுப்பில் அறிமுகம் செய்யும் ஆசிரியர்கள் அரிதினும் அரிதானவர்கள். ஆகவே சுப்ரமணி இரமேஷ் அவர்களுக்கு என் நன்றி.
உங்கள் கடிதம் நேர்த்தியாக இருந்தது. எண்ணங்களை எழுத்தில் பதிவுசெய்வது மிக அரிதானது. இளமையிலேயே அதைச்செய்ய உங்களால் முடிந்திருக்கிறது. வாழ்த்துக்கள்
சில திருத்தங்கள் செய்திருக்கிறேன், கவனிக்கவும். ஒன்று பேச்சுமொழி எழுத்துமொழி ஆகியவற்றை கலந்து எழுதக்கூடாது. தட்டச்சு செய்யும்போதுவரும் எழுத்துப்பிழைகளை கவனித்து திருத்திக்கொள்ளவேண்டும்.
அறம் என் படைப்புலகில் நுழைவதற்கு சிறந்த வாசல். அதிலுள்ள கதைகள் நேரடியானவை, ஆகவே உள்ளே நுழைய முடியும். வாசிக்க வாசிக்க விரிந்து தீவிர இலக்கிய அனுபவமாகவும் ஆகக்கூடியவை.
என் வாழ்க்கை என் நூல்களிலேயே உள்ளது. பலநூல்கள் உள்ளன. புறப்பாடு, வாழ்விலே ஒருமுறை, சங்கசித்திரங்கள் என வாழ்க்கைப்பதிவுகள் உள்ள நூல்கள் நிறைய உள்ளன. வாசித்துப் பாருங்கள்.
அன்புடன்
ஜெ
வெண்முரசு ஆவணப்படம்- கடிதம்
[ஆஸ்டினில் நிகழ்ந்த வெண்முரசு ஆவணப்பட வெளியீட்டில் கி.ராஜாநாராயணனுக்கு மௌன அஞ்சலி]
வெண்முரசு திரையிடல், ஆஸ்டின் பதிவு
வெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- நியூஜெர்ஸி
வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு
அன்புள்ள ஜெ,
சில படைப்புகள் தங்களது பொருண்மையாலேயே காலங்களைத் தாண்டி நின்றுவிடுபவை. இராமாயணம், மகாபாரதம், இலியட், ஒடிசி என நீளும் அப்படைப்புகளின் வரிசையில் வெண்முரசும் இயல்பாக சென்று இணைந்து கொண்டுள்ளது. அதன் முக்கியமான தடம் தான் இந்த ஆவணப்படம்.
இதன் முன்னோட்டக் காட்சி மட்டுமே நான் பார்த்துள்ளேன். இந்தியாவில் திரையிடப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன். அமெரிக்கவாழ் நண்பர்கள் இதைக் கொண்டாடித் தீர்ப்பதைப் பார்க்க ஏக்கமாகத் தான் இருக்கிறது. இருந்துவிட்டு போகட்டும். உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் இப்படைப்பு ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்பட வேண்டும். இதன் இருப்பு உலகின் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உணர்த்தப்பட்டாக வேண்டும்.
தொடர் சந்திப்புகள், விவாத நிகழ்வுகள், கட்டுரைகள், கடிதங்கள் என சற்றேனும் இலக்கிய ஆர்வம் இருப்பவர்கள் வட்டத்தில் மட்டுமல்ல, பொதுமக்கள் அனைவருக்குமே இப்படி ஒரு படைப்பு இருக்கிறது என்பது அறிவிக்கப்பட்டாக வேண்டும்.
கம்பராமாயணம் பற்றி அறியாதவர்கள் குறைவு. அப்படி அறிந்தவர்களில் அதைப் படித்தவர்கள் புள்ளி ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே. இருப்பினும் அதன் இருப்பு தமிழ் மக்களுக்குத் தெரியும். வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் தங்கம் பணத்தாளாக, சில்லறை காசாக அவர்கள் கைகளுக்கு வந்து சேர்வது போல ஏதேனும் ஒரு வடிவில் கம்பனும் வந்து சேர்ந்து கொண்டுதான் இருப்பான். இந்நிலைக்குக் காரணமான கம்பன் கழகத்தையும், அதை உருவாக்கிய முன்னோடிகளான காரைக்குடி சா.கணேசன் மற்றும் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆகியோர் என்றென்றும் தமிழ்க்குடியின் நன்றிக்குரியவர்கள்.
அதற்கிணையான படைப்பு தான் வெண்முரசும். ஏனெனில் இதுவும் கம்பராமாயணத்தைப் போல பண்பாட்டு கருவூலம். இப்பாரத தேசத்தின் முன்னைப் பழமைக்கும் பழைமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் அனைத்தையும் இணைத்து, முரணியக்கம் கொண்டு முன்னேறும் பண்பாட்டையே முழுமையாய்த் தொகுத்தளித்த, இப்புடவியின் எப்பகுதிக்குச் சென்றாலும் அப்பண்பாட்டை மீளுருவாக்கி தரக்கூடிய தகைமையைக் கொண்ட படைப்பு. நம் பண்பாட்டுக் கருவூலம். அது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதன் இருப்பைக் குறித்து, அதன் மதிப்பைக் குறித்து, அதன் சிறப்பைக் குறித்த பெரூமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
அதற்கு இந்த பிரம்மாண்டமான ஆவணப்படம் என்பது மிகப் பொருத்தமான துவக்கம். இப்படம் இந்தியாவிற்கு வரும் போது இன்னும் பெரிய கவனப்படுத்தலை நாம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் உலகின் மிகப்பெரிய நாவல் நம் தமிழில் தான் உள்ளது, அதன் பெயர் வெண்முரசு என்பதாவது அனைவருக்கும் சென்றடைய வேண்டும்.
ஒரு ஆவணப்படத்தை எடுப்பது என்பது சாதாரணமானது அல்ல. அதுவும் இத்தனை பிரம்மாண்டமாக, அபாரமான தரத்தோடு இந்த வீடுறைவு காலத்தில் அனைத்தையும் இணைய வழியாகவே தொடர்புறுத்தி முடித்துக் காட்டியது மிகப் பெரிய சாதனை. இதை சாத்லியமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும், முன்னோடியாய் இருந்து தளரா ஊக்கத்தோடு, சோர்வின்றி இசையமைத்தும், ஒருங்கிணைத்தும் பணியாற்றி இன்று ஓர் இனிய நிறைவை அனுபவித்துக் கொண்டிருக்கும் ராஜன் சோமசுந்தரம் மற்றும் ஆஸ்டின் சௌந்தர் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும். நம் அனைவரையும் ஒரு குடைக்கு கீழ் என்றும் இணைத்திருக்கும் ஜெ க்கும் என் நன்றிகள்.
விரைவில் திரையில் கொண்டாடுவேன் என்ற நம்பிக்கையில்….
என்றும் அன்புடன்,
அருணாச்சலம் மகாராஜன்.
May 26, 2021
மோனா
மோனா லிசா, நாலு பிள்ளை பெற்ற பிறகுநான் மோனாலிசாவின் மர்மப்புன்னகையை தினத்தந்தியில்தான் வாசித்தேன். ஒரு துணுக்குச் செய்தியாகப் போட்டிருந்தார்கள். ”லியனாடோ டாவின்ஸி வரைந்த இந்த ஓவியத்தில் இந்தப் பெண்மணி ஏன் புன்னகைக்கிறாள் என்ற மர்மத்தை உலக கலைவிற்ப்பன்னர்கள் இன்னமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்றது செய்தி
உண்மையிலேயே அவள் புன்னகைக்கிறாளா இல்லையா என்பதுதான் மர்மம் என்பது பின்னாளில் தெரியவந்தது. ஆனால் அப்போதெல்லாம் ”அவ சிரிச்சா என்ன சிரிக்காட்டி என்ன?”என்னும் மனநிலைக்குச் சென்றுவிட்டிருந்தேன்.
“மர்மம் போதுமான அளவுக்கு வரலியோ?”
மோனாலிஸா என்பது சுருங்கி எம்மெல் என்றாகி, பின்னர் நீண்டு எம்மெல்லே ஆகி, அதன்பின் தமிழில் சட்டமன்ற உறுப்பிரனாகி ,அதன்பின் சஉ ஆகிகுறுகி, சவு ஆக திரிந்து ஒரு கலைச்சொல்லாக எங்கள் கல்லூரி நாட்களில் புழங்கியது. அன்றெல்லாம் மோனாலிசாக்கள் ஏராளம்.
இன்றைய கிட்களுக்கு அதெல்லாம் புரியாது. அன்று பேருந்துகளில் அழகிகள், அழகிகள் என நினைத்துக்கொள்பவர்கள், அழகிகளைப்போல ஆகிக் கொண்டிருப்பவர்கள் என பலவகைப் பெண்கள். அவர்கள் பேருந்துகளில் வசமான இருக்கைகளைப் பிடித்து அமர்ந்துகொள்வார்கள். முகத்தில் ஒரு பொதுவான புன்னகை இருக்கும். புன்னகையா இல்லையா என்று கண்டுபிடிக்கவே முடியாத ஒரு புன்னகை அது.
அந்தக்காலத்திலே புன்னகையிலே என்னமோ மர்மம் இருந்திருக்காம்
அவளைப் பார்க்கும் அத்தனை பேருக்கும் அவர்களுக்கான தனிப்புன்னகை அது என்று தோன்றும். தன் நகைச்சுவை, ஸ்டைல் எல்லாவற்றையும் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து அவள் புன்னகைக்கிறாள் என்று பிரமை ஏற்படும். ஆனால் அவள் அப்பா பேருந்தில் இருந்தால் அவள் சும்மா அமர்ந்திருப்பதாகவும் தெரியும்.
அந்தப்புன்னகை இந்த ஒளிரும் பூச்சிகளின் சூழ்ச்சி. அதை நம்பி முன்னால் சென்றால் அடிவிழும். அவள் அப்படியே கமர்கட் பாப்பாவாக மாறிவிடுவாள். ”லே ஆளு சவுவாக்கும் கேட்டுக்கோ… விட்டிலு பிடிக்க வெளக்கு வச்சிருக்கு” என்போம். மழைக்காலத்தில் ஹெட்லைட்டை பகலிலும் போட்டுக்கொள்வது போல சதா மோனாவாக இருந்த பெண்கள் உண்டு. பலரை இருபதாண்டுகளுக்குப் பின் பார்த்தேன். குமட்டலுக்கு முந்தைய முகபாவனையில் நிலைகொண்டிருந்தார்கள்.
”சிரிக்க வைக்கிறாப்ல ஆம்புளைய சந்திக்கலை, அப்புறம் என்ன பண்றது?”
மோனாலிசாவின் இந்த ‘மர்மத்தை’ பல அர்ச்சகர்கள் சொல்வதை அடிக்கடி கேட்டிருக்கிறேன். “தோ அந்த தூணாண்டை நின்னு பாருங்கோ, அம்மன் சிரிக்கிறா மாதிரி இருக்கும். நேர் அந்தண்டை போய் பாருங்கோ அம்மன் வருத்தமா இருக்கிற மாதிரி இருக்கும். அப்டி செதுக்கியிருக்கா அந்தக்காலத்திலே. இப்பல்லாம் இதெல்லாம் முடியுமா? தபஸ் செஞ்சு செதுக்கியிருக்கா…”
எந்த சிலையும் வெளிச்சம் வரும் திசைக்கு மறுபக்கம் போய் நின்றால் உதட்டின் நிழல் பக்கவாட்டில் விழுந்து சோகமாகத்தான் தெரியும் என ஒர் அர்ச்சகரிடம் சொன்னேன். அவர் என்னை துஷ்டா என்பதுபோலப் பார்த்தார். அம்மனின் மர்மத்துடன் விளையாடும் அரக்கன்!
”இதவிட அந்த மர்மமே பரவால்லாம இருந்திச்சு”
மோனாலிசா ஓவியத்தை நேரில் லூவர் அருங்காட்சியகத்தில் பார்ப்பது பல நடிகைகளை நேரில்பார்ப்பதற்குச் சமம். சென்றுதேய்ந்திறுதல் அணி. முதலில் அது ஒரு சின்ன, மங்கலான ஓவியம். இரண்டு, அதில் எந்த அசாதாரணமான கைத்திறனும் கற்பனைத்திறனும் எனக்கு தெரியவில்லை. டாவின்ஸியின் ஓவியங்களில் கடைசி இரவுணவு போன்ற அற்புதமான ஓவியங்கள் உண்டு. இது அவர் தனக்காக வரைந்துகொண்டது.
மோனாலிசா டாவின்சி தன்னிடம் வைத்திருந்த ‘பர்ஸ் ஃபோட்டோ’ என்கிறார்கள். தூக்கிக்கொண்டு அலைந்திருக்கிறார். அப்படி கையோடு கொண்டுபோகும் பொருட்கள் காலப்போக்கில் அன்றாட உபயோகத்திற்கு வருவதை கண்டிருக்கிறேன். என் பழையகால சீனியர் அறைத்தோழர் காதல்மனைவியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பர்ஸிலிருந்து எடுத்து அதைக் கொண்டு மேஜையில் கொட்டிய மூக்குப்பொடியை வழித்து அள்ளுவதை கண்டிருக்கிறேன். டாவின்ஸி அந்தப் பலகையை எழுதுமணையாக பயன்படுத்தவில்லை என எவர் உறுதிசொல்லமுடியும்?
மோனா லிசா புன்னகைத்ததன் ரகசியம்
அவ்வப்போது இப்படி ஆகிவிடுகிறது.’ இங்கே உங்கள் கற்பனைகளைக் கொட்டவும்’ என்று ஒரு புள்ளியை சரித்திரத்தில் உருவாக்கிவிடுகிறார்கள். மானுடமே அங்கே கொட்டிக்கொட்டி அதை மலையாக உயரச்செய்துவிடுகிறது. வான்கோவின் காது போல நம்முடைய கூட்டுப்படிமங்கள் தொன்மங்களாகிவிடுகின்றன. ஆயிரமாண்டுகளுக்கு பின் வான்கோவின் காதுக்கு பாரிஸில் சிலை அல்லது கோயில் இருந்தால் ஆச்சரியப்படவே மாட்டேன்.
மோனாலிசா ஓவியத்தைவிட அதன்முன் மக்கள் கொள்ளும் பாவனைகள் மிகச் சுவாரசியமானவை. வரிசையாக செல்லவேண்டும் திருப்பதி சன்னிதானத்திற்குச் செல்வதுபோல. அருகே நெருங்கியதும் “ஏடுகொண்டலவாடா!” கூச்சல். ‘ஜருகண்டி ஜருகண்டி’யும் உண்டு.
”ஏம்மா டூத்பேஸ்ட் விளம்பரத்துக்கு வந்தா வாயை இப்டியா வச்சுக்கிட்டிருப்பே?”
பெரும்பாலான ஜப்பானியர்கள் கலையை சரிவரக் கையாளக் கற்றவர்கள். சட்டென்று சென்று ஒவியத்திற்கு முன் குண்டிகாட்டி நின்று இருவிரலைக் காட்டி ஃப்ளாஷ் இல்லாமல் நூறு காமிராக் கிளிக் கிளிக் கிளிக் செய்து குடுகுடுவென ஓடி அப்பால் செல்வார்கள். ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்குவர். அப்பால் சென்று அங்கிருக்கும் வாசல்படிஓரத்து சுண்ணக்கல் சிங்கத்துடனும் அதே கிளிக் கிளிக் கிளிக்.
ஐரோப்பியர்களுக்கு கலைதின்று வாழ்ந்தவர்கள் என காட்டும் பொறுப்பு உள்ளது. சோகமான முகத்துடன் கிழவிகள் வியப்பொலிகளை வெளியிடுகிறார்கள். மேலும் சோகத்துடன் கிழவர்கள் ஆமோதிக்கிறார்கள். கலைக்கருத்துக்கள் வெளிவருகின்றன. கலைச்சொற்கள் இருக்கும். முனகல்களும் அவற்றில் சேர்த்தி. அதன்பின் சிறப்பாக வாயு வெளியேற்றிய நிம்மதியுடன் அப்பால் செல்கிறார்கள்.
ஐரோப்பாவில் இளைஞர்களை அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்களில் காணமுடியாது. அதெல்லாமே எண்பது கடந்தபின் செய்யவேண்டியவை. அதுவரை பப்தான். ”வயசானா ஏதாவது கலைக்கூடம் அருங்காட்சியகம்னு தொலையணும். அய்யய்ய, சும்மா நை நைன்னு உயிர வாங்கிட்டு…”என கிழங்கட்டைகளை திட்டுவார்களாக இருக்கும்.
இந்தியர்கள் அங்கே நம் நிலத்தின் அறிவுத்தளத்தை வெளிக்காட்டுகிறோம். ஓவியங்கள் முன் நின்று ஒரு கண் மூடிப் பார்ப்பது, கையை குவித்து குழலாக்கிப் பார்ப்பது, நுட்பங்களைத் தேடுவது. ‘திராட்சைப்பழத்தை என்னமா வரைஞ்சிருக்கா பாரு” என கணவன் சொல்ல மனைவி “நம்ம ரம்யாகூட அன்னிக்கு ஆப்பிள் வரைஞ்சா” என கலையார்வத்தை வெளிப்படுத்துவாள்.
மோனாலிசா முன் வருகிறோம். “மாப்ள ஒரிஜினலை அப்பவே கடத்தி வித்துட்டாங்களாம்டா… இது டூப்ளிக்கேட். மங்கலா இருக்கு பாரு” வண்ணச்சட்டை போட்ட ஆள் சொல்கிறார். “நமக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் ஒரிஜினலை பாத்திருக்கார். வா சொல்றேன்”. சதியும் அதைக் கண்டுபிடிப்பதும்தான் சிந்தனை என்பது இந்திய நவீன தத்துவம்.
எனக்குத்தான் ஏதாவது பிரச்சினை இருக்கவேண்டும். நான் பல சவுக்களின் நினைவுகளில் முகம் மலர்ந்து பரவசமாக நின்றேன். ஒருவேளை கலையனுபவம் என்பதே அதுதானோ?
ஆப்’ பகடை பன்னிரண்டு சிரிக்கும் ஏசு டேனியல் லாபெல் ஊதிப்பெருக்கவைத்தல் ஸாரி டாக்டர்! ஆடல் கம்யூட்டர் யுகத்துக் கடவுள் மனம் குருவும் குறும்பும் இடுக்கண் வருங்கால்… ஆன்மிகமும் சிரிப்பும்
கதை, முகநூல், ஒரு விவாதம்
எனக்கும் போகன் சங்கருக்கும் இன்று [26-5-2021] இடையே ஒரு சின்ன உரையாடல் நடந்தது. அவருடைய சுருள்வில் என்னும் கதையை ஒட்டி. தமிழில் எழுதப்பட்ட குறுங்கதைகளில் மிக முக்கியமான ஒன்று அது.
அக்கதையை காலையில் எனக்கு இரண்டுபேர் அனுப்பியிருந்தனர். இரண்டுபேருமே அக்கதையின் மையம், அல்லது தூண்டும்புள்ளியை சரியாக வாசித்திருந்தனர். அந்த இரு கடிகாரங்களும் ஓட ஆரம்பிக்கின்றன. உறைந்து நீண்டநாட்களாக நின்றிருந்தவை. அந்தக் காலம் மீண்டும் தொடங்குகிறது. மீண்டும் வந்தவர்களின் காலம் நிகழ ஆரம்பிக்கிறது. அதுதான் கதையின் வெடிப்புறுபுள்ளி. அங்கிருந்து ஆரம்பிக்கிறது கதை. வாசகனின் கற்பனையில்.
அதற்கான சாத்தியங்களை கடிகாரம் என்னும் படிமம் அளித்துக் கொண்டே இருக்கிறது. அதன் சுருள்வில் தளர்ந்து அது நின்றிருக்கவில்லை. இறுகி இறுகி காத்திருந்திருக்கிறது. அதை இறுகச்செய்தபடி அதற்குள் எவரோ இருந்திருக்கிறார்கள்.
எல்லா பேய்க்கதைகளும் காலத்தைப் பற்றியவையே. மீளவியலா இறந்தகாலம் மீள்வதன் முடிவில்லாத மர்மத்தையே அவைப் பேசிப்பேசி பேசிவிட முடியாமல் கற்பனையை தூண்டிவிட்டு நின்றுவிடுகின்றன
அவர்கள் இருவரும் யார் என்பதை கதையின் முதல்நான்கு வரிகளை வாசித்த கதைவாசிக்கும் வழக்கமுள்ள எவரும் ஊகிக்க முடியும். அதுவல்ல உண்மையான கதை. இத்தகைய கதைகளின் ‘டெம்ப்ளேட்’ ஒன்றுதான். அது கதையின் டெம்ப்ளேட் அல்ல. நம் அச்சம் உருவாவதன், நம் கற்பனை ஒன்றுதொட்டு ஒன்றென விரிவதன், நம் அகத்தின் டெம்ப்ளேட். அதை மீறினால் அங்கே கதை நிகழாது. அது என்றும் அப்படித்தான். நாட்டுப்புறக்கதைகளில்கூட அதேவகையில்தான்.
அது நவீன இலக்கியத்திற்குள் வரும்போது அந்த நுண்மையாக்கம், [improvisation] அல்லது கூடுதலாக்கம்தான் அதை இலக்கியப்பிரதியாக ஆக்குகிறது. அதை நோக்கியே நல்ல வாசகனின் கற்பனை செல்லும். எளியவாசகன் உடனே அந்த டெம்ப்ளேட்டை மட்டுமே பிடித்துக்கொண்டு ‘அதுதானே? நான் அப்பவே கண்டுபிடிச்சுட்டேன்’ என்று சொல்வான், அதற்குமேல் அவனால் சொல்லமுடியாது.
இன்னொன்று, சல்லிசாக்குதல். [trivialization] இத்தகைய கதையை கேலிசெய்ய ஆரம்பித்தால் உடனே கதை இயங்குவது நின்றுவிடும். ’லக்கேஜ் இல்லாமல் வந்தால் ரூம்கிடைக்குமா” என்றெல்லாம் விவாதித்தாலே கதை ஸ்தம்பித்துவிடும்.
ஆனால் பொதுவாசிப்புத்தளத்தில் இதெல்லாம்தான் நிகழும். நான் இரு நண்பர்களிடம் கேட்டேன். இது வெளியான முகநூல் எதிர்வினைகளில் எவரேனும் ஓரளவேனும் பொருட்படுத்தத்தக்க வாசிப்பை அளித்திருந்தார்களா என. இல்லை, சல்லிசாக்குதல், டெம்ப்ளேட்டை வாசித்தல் மட்டுமே நிகழ்ந்தது என்றார்கள்.
அவ்வாறுதான் நிகழும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் கலைக்கான வாசிப்பு என்பது அதற்காக உருவாக்கப்படும் ஒரு வட்டத்திற்குள் மட்டுமே நிகழவாய்ப்புள்ளது. தொடர் வாசிப்பு மற்றும் உரையாடல் வழியாக உருவாகி நிலைகொள்ளும் வட்டம் அது. கலை ஒருபோதும் பொதுவெளிக்கு உரியது அல்ல. அங்கே அது கூசிச்சுருங்கிவிடும். தகழி சொன்னதுபோல “கதகளி வேஷம் தெருவில் வந்ததுபோல” [அல்லது வி.கே.என் ஒருமுறை சொன்னதுபோல “சிருஷ்டிமூலத்தை சம்பந்தப்படாதவர் பார்க்கக்கூடாது”]
கலைக்கான வட்டத்திற்குள் உள்ளவர்கள் சில அடிப்படை மனநிலைகளைப் பயின்றவர்கள்.
ஒன்று, ஓர் இலக்கிய ஆக்கம் அதிலிருந்து விரியும் கற்பனைக்காக மட்டுமே எழுதப்படுகிறது. அது அளிக்கும் குறிப்புகளைக் கொண்டு கற்பனையில் விரிந்தெழும் வாசகர்களை மட்டுமே உத்தேசிக்கிறது.
இரண்டு, ஆகவே கலைப்படைப்புக்கு கூர்ந்த வாசிப்பை அளிப்பதும், அதைநோக்கி தன் கற்பனையை திருப்பி வைப்பதும் வாசகனின் கடமை.
மூன்று, ஆகவே ஒரு கலைப்படைப்பை ஒருபோது சாதாரணமாக கையாளலாகாது. தனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றுக்குள் இழுத்துச் செல்லலாகாது. அது தெரியாத ஓருலகை உருவாக்கி அளிக்கிறது என்றே அதை அணுகவேண்டும்.
நான்கு, எந்தக்கதையாக இருந்தாலும் கதைகேட்கும்போது நாம் கதைசொல்லிக்கு கீழே ஏற்புநிலையிலேயே இருக்கிறோம். அங்கே இணைபாவனை பிழையானது, மேட்டிமைப் பாவனை அறிவின்மை.
போகனிடம் அவர் இப்படிப்பட்ட கதைகளை முகநூலில் எழுதுவதைப் பற்றி பேசினேன். அது ஒரு வீணடிப்பு. அங்கே வாசிப்பவர்கள் எவ்வகையிலும் முன்னகர்வதில்லை, எழுதுபவர்கள் வளர்வதுமில்லை.
ஆனால் அவர் தனக்கு தன் கெடுபிடிமிக்கச் சூழலில் ஒரு சமூகவயமாதலுக்கு அது தேவையாகிறது, அதிலுள்ள தொடர்புறுத்தல் அல்லது தொடர்பாடல் தனக்கு தேவையாகிறது என எழுதியிருந்தார்.
*
போகன் எழுதிய கடிதம்
நன்றி ஜெ.போக மார்க்கம் என்று ஒரு ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணம் கொஞ்ச நாட்களாக இருக்கிறது.மின்னிதழ்களில் எழுதும்போது கொஞ்சம் வேறு வகையான வாசகர்கள் கிடைக்கிறார்கள்.
நான் முகநூலில் இருக்க இலக்கியம் தவிர வேறு காரணங்களும் )) உண்டு.பெரும்பாலும் நான் அதில் விளையாடுகிறேன்.ஒரு கணினி விளையாட்டு போல என்னுடனும் பிறருடனும் விளையாடும் ஒரு மன விளையாட்டு.அதில் சிலர் சேர்ந்து கொள்கிறார்கள். சிலர் சேர்ந்து கொள்வதில்லை.மேலும் மனிதர்களை அணுகுவதில் என்னிடத்தில் அணுகவிடுவதில் சிக்கல்கள் உள்ள எனக்கு இது மிக உபயோகமாக இருக்கிறது. பல நேரங்களில் உபத்திரவம் உபயோகத்தை மீறிவிடவும் செய்கிறதுதான்.அப்போது அவ்வாறு உபத்திரவாதிகளை ப்ளாக் செய்துவிடுகிறேன்.அல்லது விலகிவிடுகிறேன்.
மேலும் இடாலோ கால்வினோ எழுதிய ஏன் க்ளாசிக்குகளை வாசிக்க வேண்டும்?புத்தகத்தில் ஓரிடத்தில் இலக்கியத்துக்குப் புறம்பான விஷயங்களை (அவருக்கு அப்போது செய்தித்த்தாள்கள், தொலைக்காட்சிகள் என்பதாய் இருந்தது நமக்கு இப்போது வாட்சப் பேஸ்புக் என்பதாய் இருக்கிறது)இரைச்சல் என்கிறார்.ஆனால் இசையை அதன் முழு தித்திப்புடன் உணர்ந்துகொள்ள தேவைப்படுகின்ற பின்னணி இரைச்சல் என்பதாய் சொல்கிறார்.contrast என்று நிறங்களில் சொல்வது போல.
ஒருவர் முழுமையாக இலக்கியத்திலேயோ இசையிலேயோ மூழ்கிவிட முடியும் என்றால் நல்லதுதான்.ஆனால் அதன் சாத்தியக் கூறுகள் பற்றி எனக்குச் சந்தேகம் உண்டு.சாமுவல் ஜான்சன் cant என்று சொல்கிற அற்ப விஷயங்கள்,ஆர்ப்பாட்டங்கள், புலம்பல்கள் இந்த contrast ஐ அளிக்கின்றன என்பது என் கருத்து.கடுமையான இலக்கியம் தொடர்பில்லாத சர்ச்சைகளுக்கு பிறகு நீங்கள் மிக நல்ல கதைகளை எழுதியது கண்டிருக்கிறேன்.ஒருவகையில் அவைதான் அந்தக் கதைகளின் உந்துசக்தி என்றும் சொல்லலாம்தானே?அந்த வகையில் அவற்றுக்கு ஒரு பயன்மதிப்பு உண்டு.
இன்னொரு பக்கம் கலை என்பது என்ன (அல்லது இலக்கியம் அல்லது இசை)அவற்றின் ஊடகங்கள் என்ன என்பதைக் குறித்து இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் Andy Warhol ,Duchamp போன்றவர்கள் மறுவிளக்கம் கொடுத்ததையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒருவர் எழுதுவதற்கான அனுபவங்களை எங்கிருந்து சேகரித்துக் கொள்கிறார் என்பது இதனுடன் தொடர்புடைய கேள்வியாகக் கருதுகிறேன்.தொடர்ந்த வாசிப்பு பிற இலக்கியவாதிகளுடன் தொடர்பு,உரையாடல் ,பிரயாணம் போன்றவை முக்கியமான கச்சா பொருட்களாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
வாசிப்பைப் பொறுத்தவரையில் நான் நிறையவே வாசிக்கிறேன்.நீங்கள் சொல்கிற சஹ்ருதயர்கள் அல்லது ட்ராட்ஸ்கி சொன்ன ‘சக பயணிகள்”கொஞ்சம் குறைவுதான்.இருந்தாலும் சிலர் இருக்கிறார்கள்.மூன்றாவதாக எனது லவுகீக சூழலினால் அதிகம் பிரயாணங்கள் மேற்கொள்ள முடியாததையே என் ஆளுமையில் பிரதான குறைவாக கருதுகிறேன்.முக நூல் ஏதோ ஒரு வகையில் அதை பூர்த்தி செய்கிறது. பல தரப்பட்ட நிலைகளில் உள்ள மனிதர்களை இங்கு சந்திக்க முடிகிறது.
நான் அதற்கு எழுதிய பதில் இது
ஆம் அது உண்மை. அது ஓர் உலகம். அது முழுக்க பாவனைகளால் ஆனது. ஆனால் பாவனைகளிலிருந்து உண்மையை காண எழுத்தாளர்களால் முடியும். நீங்கள் அங்கே புழங்குவது பற்றி எனக்கு குறையேதுமில்லை. ஆனால் வாசிப்புக்கான இடம் அல்ல அது என உணர்வது நல்லது. அதற்கு வேறு தளங்களில்தான் எழுதவேண்டும். முகநூலில் நீண்டநாட்களாக எழுதுபவர்கள் கூட நடையில் மேம்படவில்லை. வாசிப்பவர்கள் வாசிப்பிலும்.
இலக்கியத்துக்கு அன்றுமின்றும் சிறிய ஒரு வட்டம்தான். இலக்கியம் என்பது முக்கியமான ஒரு நடவடிக்கை, அதற்கு தொடர்ச்சியான கூர்ந்த கவனம்தேவை, அது விளையாட்டல்ல என்னும் எண்ணம் கொண்டது அது. அந்த அக்கறையே காலப்போக்கில் வாசிப்புப் பயிற்சியாக ஆகிறது.
ஜெ
பிகு. ஒருநண்பர் கதையை வாட்ஸப்பில் அனுப்பி “கரகரவென்று அந்த முள்ளை பிடித்து பின்னால்கொண்டுசென்றுவிடவேண்டும் என்று தோன்றியது’ என எழுதியிருந்தார். அது மேலும் முன்னகரும் வாசிப்பு
சுருள்வில் – போகன் சங்கர்.
“ரூம்?” என்றார் அவர்.நான் அந்தக் குரலைக் கேட்டு சற்று திடுக்கிட்டுவிட்டேன் என்றே சொல்லவேண்டும்.அப்படியொரு மழையில் சுமார் நூறாண்டுகளாவது பழமையான,நல்ல வானிலையிலேயே அடைவதற்குச் சிரமமான அந்த மலை வாசஸ்தல விடுதிக்கு யாரும் வரக்கூடும் என்று நிச்சயமாக நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
மெழுகுவர்த்தி ஒளியில் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை கவனமாக பக்கக்குறிப்பானால் அடையாளம் வைத்துவிட்டு நிமிர்ந்து “நிச்சயமாக சார்” என்றேன்.
“எல்லா அறைகளும் காலியாகவே இருக்கின்றன. நானும் சமையல்காரனும் மட்டும்தான் இருக்கிறோம்.விடுதியின் சிறந்த அறையை உங்களுக்கு அளிக்கிறேன்”என்றேன்.” உங்கள் பெயர் விலசத்தை இதில் எழுதுங்கள்.எங்கிருந்து வருகிறீர்கள்?”
அவர் “இங்கிலாந்திலிருந்து” என்றபடி அதை நிரப்பினார்.
“ஏதோ படித்துக்கொண்டிருந்தீர்கள் போலிருக்கிறது”
“ஆம்.Taylor Caldwell எழுதிய The captains and the kings”
அவர் “ஓ அந்த அமெரிக்கப் பெண்மணி” என்றார்.”மறுபிறவி,இல்லுமினாட்டி போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்”
நான் “உங்களுக்குக் கிடையாதா?” என்றேன்.அவர் “இல்லை” என்றவர் “மன்னிக்கவும் எனக்கு நன்றாக பசிக்கிறது.குடிக்கவும் ஏதாவது வேண்டும்”
“ஓ சாரி “என்றவன் ” சுப்பையா சுப்பையா “என்று கத்தினேன்.பிறகுதான் அவர் உடைகள் நன்றாக நனைந்திருப்பது கவனித்து “ரொம்பவுமே நனைந்து விட்டிருக்கிறீர்களே.அது சரி நீங்கள் எதில் வந்தீர்கள்? உங்கள் லக்கேஜ் எங்கே?”
அவர் “அதுதான் வேடிக்கை. எனது லக்கேஜ் நாளைதான் வரும்.அது வேறோரிடத்தில் சிக்கிவிட்டது”
நான் “அது வரை ஈர உடையுடனா இருப்பீர்கள்?”என்றபோது சுப்பையா வந்துவிட்டிருந்தான்.தூக்கம் கலைந்த எரிச்சல் அவன் கண்களில்
“ சுப்பையா சாருக்கு 101 ஐக் கொடு.அவர் சாப்பிடவும் இல்லை.சப்பாத்தி குருமா செய்ய முடிகிறதா பார்.ப்ரெட் இருக்கிறதா?அத்தோடு நமது ஸ்டோரைத் திறந்து அவர் கேட்கிற உடைகளையும் கொடு”
சுப்பையா அதே எரிச்சலோடு அவரை அறைக்கு அழைத்துப் போனான்.நான் மறுபடி என் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டேன்
“டெய்லர் கால்டுவெல் என்ன சொல்கிறாள்?” என்ற குரல் கேட்டுதான் நிமிர்ந்தேன்.”அட்லாண்டிஸ் என்ற கண்டம் இருந்தது என்று சொல்கிறாளா?”
நான் புன்னகைத்தேன்.”இதிலெல்லாம் தான் உங்களுக்கு நம்பிக்கை இல்லையே?”
அவர் “உண்மைதான் இவையெல்லாம் வெளியே இப்படி மழை செய்யும்போது படிக்க நல்ல புத்தகங்கள் அவ்வளவுதான்” என்றார்.”குடிக்க ஏதாவது கேட்டேனே?”
நான் என் முதுகுக்குப் பின்பிருந்த மர பாரை எட்டித் திறந்து”பேக் பைபர்?”
அவர் அங்கேயே அமர்ந்து மெதுவாக மதுவருந்த ஆரம்பித்தார்.பிறகு கேட்டார் “அப்போதே கேட்கவேண்டும் என்று நினைத்தேன்.இவை என்ன இரண்டு ஆளுயர கடிகாரங்கள்.?இங்கிலாந்தில் சில பழைய கோட்டைகளில்தான் பார்த்திருக்கிறேன்”
நான்”சரிதான்.இவை இரண்டும் இங்கிலாந்திலிருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டவை.இந்த விடுதி முன்பு இரண்டு வெள்ளைக்கார சகோதரர்களின் வேட்டை பங்களாவாக இருந்தது.அதாவது ஏறக்குறைய சுதந்திர காலகட்டத்துக்கு முன்பு.பிறகு கை மாறி கை மாறி இப்போது ஒரு விடுதியாக இருக்கிறது பெங்காலி முதலாளி கல்கத்தாவில் இருக்கிறார்.யாரிடமாவது விற்றுவிட தேடிக்கொண்டிருக்கிறார்.”
அவர்”ஓ!”என்றார்.”நீங்கள் சொன்ன வெள்ளைக்கார சகோதரர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும் இங்கிலாந்துக்கு போய்விட்டார்களா?”
“இல்லை இங்கேயே ஒரு வார இடைவெளியில் மலேரியாவில் இறந்து போய்விட்டார்கள்”
“பிட்டி!” என்றவர் அந்தக் கடிகாரங்களை மீண்டும் பார்த்தார்.”இரண்டு மனிதர்களை ஒளித்து வைக்கக் கூடிய அளவு பெரிய கடிகாரங்கள் “என்றார்” அல்லது பிணங்களை”
அந்த உவமை என்னை சற்றே துணுக்குறச் செய்தது.
“ஆனால் இரண்டுமே இப்போது ஓடவில்லை.இல்லையா?இரண்டுமே இறந்துவிட்டன.அந்த வெள்ளைக்காரர்கள் போல”
“இல்லைதான்.ஆனால் இவை இப்போது ஓட வேண்டிய அவசியமில்லையே.அலங்காரத்துக்காக வைத்திருக்கிறோம்”
அவர் “இல்லை கடிகாரம் என்றால் ஓடவேண்டும்.துப்பாக்கி என்றால் சுடவேண்டும்.சும்மா காட்சிக்கு வைத்திருப்பது சரியில்லை”என்றார்.
என் மனதில் அப்போதுதான் அந்த எண்ணம் உதித்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.ஏதோ ஒரு விதத்தில் அவரைச் சற்று சீண்ட விரும்பினேன்.நான் படித்த புத்தகத்தை என் நம்பிக்கைகளை அவர் சற்றே கேலி செய்ததால் இருக்கலாம்.
“இந்தக் கடிகாரங்கள் பற்றி ஒரு கதை உண்டு.வெள்ளைத் துரைமார்களில் முதலாமவர் இறந்துபோன அன்று இந்தக் கடிகாரம் நின்று போனது.ஒரு வாரம் கழித்து இரண்டாமவர் இறந்த அன்று இரண்டாவது கடிகாரம்.” என்றேன்”ஆனால் இதெல்லாம் நீங்கள் நம்ப மாட்டீர்கள் அல்லவா?”
அவர் புன்னகைத்து “அப்கோர்ஸ் நிச்சயமாக நம்ப மாட்டேன்”என்றபடி மதுக்கிண்ணத்தைக் கவிழ்த்து வைத்தார்.” உறங்கச் செல்கிறேன்.மழைக்கால இரவிற்கு உகந்த கதை.குட் நைட்”
அவர் போய்விட்டார்.நான் ஏனோ சற்று ஏமாற்றமாக உணர்ந்தேன்.நான் என்னை முட்டாளாய்க் காண்பித்துக்கொண்டுவிட்டேனா?ஒரு மேஜிக் ஷோவில் தொப்பியிலிருந்து முயலை வரவழைக்கத் தவறிய மந்திரவாதி போல் உணர்ந்தேன்.என்னையும் அறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது.அது அடங்கியது மறு நொடி அந்த ஒலியைக் கேட்டேன்..
கடிகாரங்களில் ஒன்று சட்டென்று மீண்டும் ஓடும் ஒலி கேட்ட அதிர்ச்சியில் என் கையிலிருந்த மதுக் கோப்பையைத் தவற விட்டுவிட்டேன்.அது கீழே விழுந்து நொறுங்கியது. வேகமாக திரும்பிப் பார்த்தேன்.நான் ஒரு கணம் என்னையே இழந்துவிட்டேன் என்றே சொல்லவேண்டும்.ஆம்.அந்த ஆளுயர அறுபது வருடங்களுக்கும் மேலாக ஓடாத பிரிட்டிஷ் கடிகாரம் மீண்டும் ஓடத் துவங்கியிருந்தது!
நான் “சார்!சார்!” என்று மேல்தளத்தை நோக்கிக் கத்தினேன்.
நான் அவ்வாறு வெறிபிடித்தவன் போல் கத்திக்கொண்டிருக்கும்போதே யாரோ என்னை அழைத்தார்கள்.நான் திரும்பினேன்.
அங்கே என் முன்னால் இன்னொருவர் நீர் சொட்டும் உடையுடன் நின்றுகொண்டிருந்தார்
“ரூம் இருக்கா?”என்று கேட்டார்..சற்று முன்பு வந்த மனிதரின் இளம்வயது பதிப்பைப் போல் இருந்தார்.
என் வாய் தானாகவே அசைந்து “இருக்கு” என்ற சொன்ன நொடியில் ஒரு செருமலுடன் இரண்டாவது கடிகாரமும் ஓட ஆரம்பித்தது.
பெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை
கதாநாயகி – கடிதங்கள்-4
அன்புள்ள ஜெ,
எளிமையின் பேரழகுகொண்டது குமரித்துறைவி. நேர்நிலை அம்சம் ஓங்கியது. இரண்டுமே அற்றது கதாநாயகி. சிக்கலின் அழகியல். எதிர்மறைகளின் அழகியல். நீங்கள் உங்களை ரீவைன்ட் செய்துகொள்ள எழுதியது. [ஆனால் முடியும்போது அந்த இனிமையான பாஸிட்டிவ்னெஸ் அதுதான் நீங்கள் இன்றிருக்கும் மனநிலை. அதை விடவே உங்களால் முடியாது]
கதாநாயகி ஆண்களால் எழுதப்படும் கதாபாத்திரமாக இருக்கிறாள் [விர்ஜீனியா] பின்னர் பெண்களால் எழுதப்படும் கதாநாயகியாக மாறுகிறாள் [ஈவ்லினா] பின்னர் பெண்ணால் வாசிக்கப்படுகிறாள். வாசகி கதாநாயகியாகிறாள். இந்த மூவாயிரமாண்டுக்கால மாற்றம்தான் இந்த சிறிய பேய்க்கதைக்க்குள் செறிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
[கதைக்குள்ளேயே பெண்கள் எழுத ஆரம்பிப்பதன் மீதான ஆண்களின் கசப்பு பதிவாகியிருக்கிறது. ஷேக்ஸ்பியர் இருந்திருந்தால் இன்றைய பெண்களின் எழுத்துவாசிப்பு சூழலில் நிரகரிக்கப்பட்டிருப்பார் என்ற பிலாக்காணம்]
பெண் பெண்ணை எழுதும்போது ஆணின் ரொமாண்டிசிசம் இல்லை. வில்லியாக்குவதும் இல்லை. ஈவ்லினா வில்லியா? இல்லை கதாநாயகியா? அவள் சூழ்ச்சியானவள். எல்லா தந்திரமும் அறிந்தவள். அந்தக் களத்தில் குரூரமாக விளையாடுகிறாள். ஆனால் இயல்பாக இன்னொரு பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளவும் செய்கிறாள்.
இந்நாவலின் அழகான பகுதிகள் லண்டனின் உயர்குடி வட்டார இலக்கியவிவாதங்களும் அவர்களுக்குள் ஓடும் சூழ்ச்சிகளும் பாவனைப்பேச்சுக்களும்தான். அந்த உலகிலிருந்து இன்னொரு உலகுக்கு வந்துசேர்கிறாள் ஹெலெனா. இங்கேதான் அவள் கர்னல் சாப்மானை உதைத்து தள்ளமுடியும்
எம்.ராஜேந்திரன்
அன்புள்ள ஜெ..
உஙககளது ,”மத்துறு தயிர் ” சிறுகதையில் ஒரு மாமனிதரும் உன்னத கிறிஸ்தவரும் நல்லாசிரியருமான ஒரு பேராசிரியர் இப்படிச் சொல்வார்.இதை சொன்னதெல்லாம் கம்பன் இல்லை அவன் நாவில் சரஸ்வதிதேவி குடியேறி அவனைஇப்படியெல்லாம் பாட வைத்திருக்கிறாள்.அதேபோல கதாநாயகி கதையில் துப்பனின் கல்வி வெறியைப்பார்த்து “சரஸ்வதி தலைக்கு அடிச்சுப்போட்டா. இனிமே வேற வளியில்லை” என்பார் ஞானப்பன். இந்த சரஸ்வதிதான் கதாநாயகி கதையின் கதாநாயகி என கருதுகிறேன்
தொன்ம நாயகி விர்ஜினியா , படைப்பாளி பர்னி , கதையின் ஒரு பாத்திரமான ஈவ்வினா ஆகியோரின் ஆற்றாமையை நன்கு அறிந்து பதிலடி அளி்க்கும் ஹெலேனா ,இவர்களது தாஙககவொண்ணா விசையை தன்னுள் தாங்கிக்கொண்டு , கல்விப்புரட்சி நடத்தும் அரசு ஆசிரியர் , படிப்பால் நூல்களால் ஒரு தலைவராக உயரும் துப்பன் , கல்வியில் மாறுகின்ற மலைவாசிகள் என அனைவரையும் இணைக்கும் மையச்சரடு வாசிப்பு , கல்வி , புத்தகம் போன்ற சரஸ்வதி அம்சஙககள்தான்
காட்டு உயிரிகளை தம்முள் ஒருவராக தெய்வமாக நினைக்கும் மலைவாசிகள் பிற உயிர்கள் அனைத்தும் மனிதனுக்காக சாக வேண்டியவைதான் என கருதும் வெள்ளைக்காரர்களின் இந்த மனோபாவத்தால் மனசாட்சி உலுக்கப்படும் ஒரு வெள்யைக்காரப் பெண் என்ற காட்சி அமைப்பு நுட்பமானது
அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பழங்குடியினருக்கு எதிரான கொடூரங்களை உலகின்முன் கொணர்ந்தவர்கள் இப்படி மனசாட்சி உலுக்கப்பட்ட வெள்ளையர்கள்தானே.
கல்வி மூலம் ஒரு கிராமத்தில் நிகழும் மாற்றத்துக்கான வேர் தேசம் கடந்து இருந்தாலும் எல்லைகளைக் கடந்து ஆட்சி புரியும் சரஸ்வதியை கதாநாயகியாக பார்ப்பதில் எங்களுக்கு நிறைவு..
உங்களையும் எங்களையும் இணைப்பதும் அவளேயல்லவா
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள ஆசானே,
இருப்பதை இல்லாமலாக்கி பித்தாக்கியது தங்கப் புத்தகம்
இல்லாததை இருத்தி வைத்தியம் செய்கிறது கதாநாயகி.
அன்புடன்,
செ.சரவண பெருமாள்.
அன்புள்ள ஜெ,
இந்நாவலை ஒரு பேய்க்கதையாக வாசிப்பதை விட சைக்காலஜிக்கல் திரில்லராக வாசிப்பதே சரியானது. எல்லாமே பேய் என்னும்போது பயம் வரவில்லை. ஏனென்றால் பேய் இல்லை என்று தெரியும். கடைசி அத்தியாயத்தில் எல்லாமே ஸ்கிஸோஃப்ரினியா என்ற விளக்கம் வந்தபோது திகிலாகிவிட்டது. ஏனென்றால் ஆரம்ப அடையாளங்கள் எல்லாமே எனக்கும் இருப்பதுபோலிருந்தது. அனேகமாக அத்தனைபேருக்குமே கொஞ்சம் இருக்கும். அத்தனைபேருமே அந்தப் பேய்களைச் சந்திக்க வாய்ப்புண்டு. அதுதான் சில்லிட வைத்துவிட்டது
ஜி.சரவணக்குமார்
அன்புள்ள ஜெ,
இந்நாவலில் ‘ஒரு புத்தகத்தில் இருந்து உயிர்த்தெழுந்து வருதல்’ என்பதுதான் கதைக்கரு. எழுத்துவடிவில் இருக்கிறது வரலாறு, கடந்தகாலம். தொட்டதுமே எழுந்து பூதபேய்களாகச் சூழ்ந்துகொள்கிறது. கதை அதை நேரடியாகவே சொல்லவும் செய்கிறது.
இன்னொரு உலகம் உள்ளது, காணிக்காரர்களுக்கு கல்வி கற்பிப்பது. அது சம்பந்தமில்லாமல் வந்துகொண்டிருந்தது. ஆனால் துப்பனைப் பற்றிச் சொல்லும்போது ஹேமச்சந்திரன் நாயர் “நீர் எழுப்பிவிட்டது ஒரு பூதத்தையாக்கும்” என்று சொல்லும்போதுதான் அதுவும் இதே கதைதான் என்பது சட்டென்று உறைத்தது.
இங்கே புத்தகங்களில் எழுத்துக்களில் இருந்து கடந்தகாலம் எழுகிறது. அங்கே எழுத்துக்கள் சென்று எதிர்காலத்தை உசுப்பி எழுப்பி விட்டிருக்கின்றன. அந்த இணைப்பு அற்புதமானது.
செல்வக்குமார்
கப்பல்காரன் நாட்குறிப்புகள் ஷாகுல் ஹமீது
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா
ஷாகுல் கப்பல்காரன் அவர்களுடன் வாட்சப்பில் அவ்வப்போது உரையாடுவோம். அவருடைய தளத்தில் naval engineer க்கு தேவையான பல தகவல்கள் அங்கங்கே ஒரு கதை சொல்லும் பாணியில் அழகாக சொல்லி செல்கிறார்.தமிழில் இது ஒரு முக்கியமான naval engineering website என்றே சொல்லலாம்.அவருடைய அனுபவங்களை நிச்சயம் தினம் தினம் அவர் எழுத வேண்டும். நான் கரையில் நின்று கொண்டு ஒவ்வொரு நாளும் கப்பலை பற்றி கனவு காண்பதை, அவருடைய நாட்குறிப்பயை படிக்கும் போது நேரில் பார்த்து போல் ஒரு மகிழ்ச்சி.அன்புடன்பன்னீர் செல்வம் கப்பல்காரன் நாட்குறிப்புகள் ஷாகுல் ஹமீதுகொற்றவை- நற்றுணை கலந்துரையாடல்
‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு வரும் மே 30 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ‘கொற்றவை‘ நாவல் குறித்து எழுத்தாளர் திரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள் பேசுவார்.
இது வழக்கம் போலவே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -5
நாவல் – கொற்றவை
கலந்துரையாடல் நாள்:- 30-05-21
நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை
Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
தொடர்புக்கு: 9965315137
(லா.ஓ.சி. சந்தோஷ் )
நாவல் குறித்து உரையாடுபவர்:- எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன்
(எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கு தமிழ் இலக்கிய உலகில் அறிமுகம் தேவையில்லை. அவருடைய கட்டுரைகளில் சில இங்கே இணைத்திருக்கிறோம்
நன்றி!!!
அன்புடன்,
சென்னை விஷ்ணுபுர நண்பர்கள்
வெண்முகில் நகரம் முடிவு
வெண்முகில் நகரம் முடிந்து விட்டது. என்னால் வெண்முகில் நகரத்தை பிரயாகையின் தொடர்ச்சியாக, அதன் இரண்டாம் பாகமாகத் தான் பார்க்க இயல்கிறது. ஒருவகையில் இந்நாவலில் தான் உண்மையான இணைவு, பிரயாகை நிகழ்ந்திருப்பது காரணமாயிருக்கலாம். ஒருவிதத்தில் வெண்முகில் நகரம் வரை உள்ள நாவல் தொகுதிகளை வெண்முரசின் ஓர் பெரும்பாகம் ஒன்றின் முடிவாகக் கொள்ளலாம். உண்மையான பாரதமே இனிமேல் தான் துவங்கப் போகிறது இல்லையா!!
வெண்முகில் நகரம் முடிவுJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

