Jeyamohan's Blog, page 978
May 29, 2021
வெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்
நட்டாஷா என்ற பெயரை போரும் வாழ்வும் நாவல் படித்தவர்கள் மறந்து விட முடியாது. மிக நுட்பமாக உருவகிக்கப்படும் கதாப்பாத்திரம் அவள். அறிந்தசிறுமியுடன் இளம்பெண்ணுடன் அன்னையுடன் என ஏதோவொரு வகையில் அவளை ஒப்பிடாமல் வியக்காமல் ஏங்காமல் அந்நாவலை படித்து முடித்து விட முடியாது. அத்தனை அணுக்கமானவள் என்பதாலேயே பெரு வாழ்வென எல்லாப் பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் அந்நாவலில் நட்டாஷாவின் முடிவுகளும் குழப்பங்களும் வாசிப்பவர்களை பாதிக்கும். ஒரு நாடக அரங்கில் அனடோல் என்ற ஒழுக்கமற்ற பேரழகனிடம் நட்டாஷா மனமிழப்பதை மிக நுண்மையாக நாடகத்தின் காட்சி மாற்றங்களைக் கொண்டே சித்தரித்திருப்பார் டால்ஸ்டாய். பரிதவிக்கச் செய்யும் அத்தியாயம் அது. ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் தவிக்கும். அதே தவிப்பினை பன்மடங்குத் தீவிரத்துடன் வெண்முகில் நகரத்தின் முதல் பத்தொன்பது அத்தியாயங்கள் அளித்தன.
வெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்May 28, 2021
“ஓவியமாத்தான் இருக்கு!”
சிந்தனையாளனும் செயல்படுபவனும்
மேலைநாட்டில் எல்லா நல்ல ஓவியங்களுக்கும் கார்ட்டூன்கள் உள்ளன. நம்மூரில் அவ்வழக்கம் இல்லை. ஏனென்றால் ஓவியங்கள் நமக்கு அவ்வளவு முக்கியமானவை அல்ல. நாமறிந்த ஓவியங்கள் ஜெயராஜ், மாருதி, மணியம்செல்வம் வரைபவை.அவை ஏற்கனவே பாதி கார்ட்டூன்கள்.
மேலைநாடுகளில் ஓவியங்கள் இளம் வயதிலேயே மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்ரன. சிறுநகரங்களிலேயே நல்ல கலைக்கூடங்கள் உள்ளன.உதாரணமாக சிறுநகரமான ராலேயில் உள்ள பெரிய கலைக்கூடத்தில் கிளாட் மோனேயின் அசல் ஓவியம் இருக்கிறது. சின்னக்குழந்தைகளை கூட்டிவந்து அவற்றை காட்டி அவை என்ன இசம், அவற்றின் வரலாறு என்ன எல்லாவற்றையும் அறிமுகம் செய்கிறார்கள். [மோனெட் என்று சொல்லக்கூடாது. கவியூர் பொன்னம்மா சொல்வதுபோல ‘ம்ம்மோனே’ என்று சொல்லவேண்டும்]
கிளாட் மோனேயின் கலைவாழ்க்கை முடிவுக்கு வந்த விதம்
அத்தனை சின்ன வயசில் இதெல்லாம் அறிமுகம் செய்வது நல்லதுதான். ஆனால் அதற்கு எதிர்வினையும் உண்டு. கற்பிக்கப்படும் எதற்கும் நையாண்டியால் எதிர்வினையாற்றுவது குழந்தைகளின் வழி. ஆகவேதான் இத்தனை ஓவியம்சார்ந்த ஜோக்குகள் அங்கே உருவாகியிருக்கின்றன.
பல ஜோக்குகளை ஓவியம் சார்ந்த சில நுட்பங்கள் தெரியாமல் ரசிக்கமுடியாது. உதாரணமாக எல்லாவற்றையும் மங்கலாகக் காட்டும் இம்ப்ரஷனிஸ்ட் ஓவியர் கிளாட் மோனே. அவர் முதல்முறையாக மூக்குக் கண்ணாடி மாட்டி உலகை யதார்த்தமாகப் பார்த்து பரவசம் அடையும் காட்சியின் பகடி இம்ப்ரஷனிசம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு என்னடா இது என்று இருக்கும்.
பள்ளிக்கூடம் போன்னு சொன்னா டிராமாவா போடுறே?
இங்கே நான் பகிரும் பல ஜோக்குகளை ‘இதிலே ஜோக் எங்கே?”என்று பலர் எனக்கு எழுதுவதைக் காண்கிறேன். ஜோக்குகளின் அடிப்படையே நமக்கு அது எதைப் பற்றிப் பேசுகிறது என கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும் என்பதுதான். நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் ஒன்றின்மீதான கோணல்பார்வையெ பகடி என்பது. மேலே உள்ள கார்ட்டூன் எட்வர்ட் மஞ்சின் The scream என்ற புகழ்பெற்ற எக்ஸ்பிரஷனிஸ ஓவியத்தை நினைவுக்கு கொண்டு வந்தாலொழிய சிரிப்பை வரவழைப்பதில்லை.
அந்த அறிதல் கலை, இலக்கியம், வரலாறு என விரிந்திருக்கவேண்டும். ஒன்றுமே தெரியாதவர்களுக்கு சினிமாவின் பழகிப்போன நகைச்சுவைகள், மற்றும் அரசியல் சார்ந்த வசைகளும் மட்டம்தட்ட்லகளும்தான் சிரிப்பதற்குரியவையாக உள்ளன. ஒரு நகைச்சுவை தனக்குப் புரியவில்லை என்பதை தன் தகுதியாகக் கொள்ளும் நகைச்சுவை தமிழில் பரவலாக உள்ளது.
“கலையிலே நுண்மையாக்கம்னு ஒண்ணு இருக்கு. வட்டத்தை சதுரமாக்கலாம். கோளத்தை கனசதுரமாக்கலாம். நான் ஒட்டகத்தை இப்டி ஆக்கியிருக்கேன்”
எங்களூரில் ஒரு விஷயம் கந்தரகோலமாக இருந்தால் “ஓவியமாத்தான் இருக்கு” என்பார்கள். நவீன ஓவியத்தை பார்த்து இதை உருவாக்கிக் கொண்டார்களா என்று தெரியவில்லை.
’ஒரு புளியமரத்தின் கதை’ நாவலில் சுந்தர ராமசாமி ஒரு பெண்ணை ‘அன்னாரின் மனைவி ஓவியத்தில் வரைந்ததுபோல் இருப்பாள்’ என்று எழுதியிருந்தார். ‘பிக்காஸோ ஓவியமா சார்?”என்று நான் கேட்டேன். பகபகவென்று சிரித்துவிட்டா. பிக்காசோ அவர் வரைந்த பெண்ணை [அமர்ந்திருக்கும் பெண்] தெருவில் நேருக்குநேராகப் பார்த்து பயந்துதான் செத்துப்போனார் என்று ஒரு கதை உண்டு.
”நீ இங்க படம் வரைஞ்சிட்டிரு… பக்கத்துவீட்டுக்காரன் அங்க தீய கண்டுபிடிச்சுட்டான்”
பிக்காஸோ நகைச்சுவைகள் என புத்தகங்களே உள்ளன. பிக்காஸோவின் வீட்டில் திருடன் புகுந்தபோது அவர் அவனை ஒர் ஓவியமாக வரைந்து அளித்தார். அதனடிப்படையில் போலீஸ் ஒரு கன்யாஸ்திரீ, ஒரு எருமை, ஒரு வாஷிங்மிஷின் ஆகியவற்றை கைதுசெய்தார்கள்.
வேற்றுக்கிரகவாசிகள் மண்ணுக்கு வந்தபோது அவர்கள் பிக்காஸோ வரைந்த அழும் பெண் ஓவியத்தை பார்த்துவிட்டு ”டேய் ஏற்கனவே நம்மாளுக இங்க வந்திட்டாங்கடா!” என்றார்களாம்.
பிக்காஸோ கார் ரிப்பேர் கம்பெனி
அமெரிக்க அதிபர் ரீகன் பிக்காஸோவின் பெண் என்னும் ஓவியத்தைப் பார்த்து ரசித்து மகிழ்ந்து பாராட்டியதாகவும், ஆனால் அதன்பின் “தபால்பெட்டியை எல்லாம் இப்படி கற்பனையோட வரைய முடியும்னு நினைச்சதே இல்லை” என்று மேலும் பாராட்டியதாகவும் சொல்வார்கள். [பெண், பிக்காஸோ]
முன்பு கேரள ஓவியர் ஒருவர் வரைந்த கார்ட்டூன் ஜோக். ஓவிய மாணவனிடம் ஆசிரியர் சொல்கிறார். “சரி நீ கியூபிஸ முறைப்படி பலாப்பழத்தை வரைகிறாய். அதற்காக ஒவ்வொரு முள்ளையும் கியூபாக ஆக்கவேண்டியதில்லை”.
பிக்காஸோவின் The Dream என்ற பெண்ணோவியம் கேரளத்தின் கலைவிவாதங்களில் no-ball realism என்னும் அழகியல் கொண்டது என்று சொல்லப்படுவதுண்டு- ஒரு லார்ஜ் ஏற்றிக்கொண்டபின்.பேட்மிண்டனுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. [அல்லது ஒரு காலத்தில் பேட்மிண்டன் அப்படிப்பட்டவர்களால் ஆடப்பட்டிருக்குமோ?]
”இதான் கலையோட பயன். தலைதுண்டாகிறப்ப அவன் ஜாலியா சாகிறமாதிரி தெரியும்”
ஷிட் ஜோக் அடிக்கும் நண்பர் ஒருவர் உண்டு. “ஏங்க நாய் ஒருமாதிரி இளம்பச்சையா கழிஞ்சு வைச்சிருக்கு?” என்று மனைவி கேட்டதற்கு “வான்கோவோட starry night பெயிண்டிங்கை தின்னிருக்குமோ?”என்றார். மனைவி அவர் சீரியஸாக சொல்வதை மட்டுமே நகைச்சுவையாக எடுத்துக்கொள்பவர்.
எங்கள் அலுவலகத்தில் அந்தகாலத்தில் ஒர் அதிகாரி இருந்தார். பெயர் பன்னிருகைப் பெருமாள். நாலாபுறமும் லஞ்சம் வாங்குபவர் என்று சொல்லவேண்டியதில்லை. அந்தக்காலத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பன்னிருகையன் சிலையைப் பார்த்தபின் ஒரு கிறிஸ்தவர் ஆழ்ந்த பெருமூச்சுடன் “இந்த தெய்வத்தையெல்லாம் சிலுவையில் ஏற்றமுடியாது. ஏகப்பட்ட ஆணிகள் தேவைப்படும்” என்றாராம்.
”இதெல்லாம் நியாயமே இல்ல”
மறைந்த என் தந்தை பாகுலேயன் பிள்ளை நாயர்பற்று கொண்டவர். சரஸ்வதி, லட்சுமி எல்லாம் சம்பா அரிசிச் சோற்றில் தேங்காய்க்குழம்பு விட்டுச் சாப்பிடும் நாயர்ஸ்த்ரீகள் தான் என அவர் நம்பியது ரவிவர்மா ஓவியங்களைக் கொண்டுதான். துர்க்கை நாயர் ஸ்த்ரீயாகவே இருக்கமுடியும் என அவர் இளமையிலேயே புரிந்துகொண்டிருந்தார்.
ஆனால் சிவனுக்கு மீசை உண்டு என்பதை அவர் நம்ப மறுத்தார். அதெப்படி கழுத்தில் பாம்பு இருக்கும்போது சவரம் செய்துகொள்ள முடியும்? பத்துதலை ராவணனுக்கே மீசை இருக்கிறதே, இருபது கன்னங்களுக்கு அவன் சவரம் செய்துகொள்ளவில்லையா என்று அச்சு மாமா கேட்டபோது யோசித்துப் பார்த்தார்.
”அப்டியே ஓடிப்போய் குகை ஓவியமா வரைஞ்சிருவோம். இல்லேன்னா எவனும் நம்பமாட்டான்!”
ராஜா ரவிவர்மா பற்றி ஒரு கதை. அவர் ஒரு நாயின் படத்தை வரைந்தார். அதன் வாயில் நுரை சரியாக வரவில்லை. சலிப்படைந்து ஒரு கட்டத்தில் “நாசமாப்போக” என்று வண்ணம்பூசும் கடற்பஞ்சை எடுத்து ஓவியம் மேல் எறிந்தார். சர்ரியாக வாயில் பட்டது. நுரை கனகச்சிதமாக அமைந்துவிட்டது.
ராஜா ரவிவர்மாவின் ‘மத்ஸ்யகந்தி’ படத்தில் பராசரர் சத்யவதியை படகுத்துறையில் சந்திக்கிறார். [மத்ஸ்யகந்தி] சத்யவதியின் பக்கவாட்டு அழகு தெரிகிறது. பராசரர் உணர்ச்சிவசப்படும் காட்சி. ஓவியத்தை பார்த்துவிட்டு வள்ளத்தோள் நாராயணமேனன் சொன்னராம். “கொஞ்சம் பஞ்சோட குறைவு தெரியுது”
பிக்காஸோவும் டாலியும்
உலக அளவில் அதிகமாக கிண்டலடிக்கப்பட்ட ஓவியர் சால்வடோர் டாலியாகத்தான் இருக்கவேண்டும்.சர்ரியலிசக் கோரத்தை பிக்காஸோவின் கியூபிசம் வந்துதான் சமாளிக்க முடிந்தது. “கடிகாரத்தைக் கொண்டு ஆம்லேட் போடலாம் என்று கண்டுபிடித்தவர்” என்று விகேஎன் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். பிளாஸ்மா டிவியின் ஐடியாவே அந்த ஓவியத்தில் இருந்துதான் வந்தது என்று சொல்லப்படுவதுண்டு.[The Persistence of Memory]
குளோட் மோனே உட்பட இம்ப்ரஷனிஸ்டுகளின் கண்களைப் பற்றிய ஆய்வுகளைச் செய்து அவர்களின் படங்களைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள். சால்வடோர் டாலியின் ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவருடைய இரவுணவைத்தான் ஆராயவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. வாயு பதாத்தங்கள் கெட்ட கனவுகளை உருவாக்குபவை. மறுநாள் ஆராய்வதுதான் உண்மையில் சர்ரியலிச அனுபவம்.
சார்ல்ஸ் டிக்கன்ஸின் பிக்விக் பேப்பர்ஸ் நாவலில் பிக்விக் ஓவியத்தை ரசிக்கும் நுட்பம் உண்டு. ஒரு நாளிதழை உருட்டி குழலாக்கி அதன் வழியாகப் பார்க்கிறார். ஓவியம் முப்பரிமாணம் கொண்டதாக இருந்தால் ஓகே என்கிறார். பாரீஸ் லூவர் அருங்காட்சியகத்திலேயே சிலர் அப்படிப் பார்ப்பதை காண்பது வரை அது பகடி என்று நினைத்திருந்தேன்.
கலைவிமர்சகர்களிலேயே யதார்த்தவாதிகள் உண்டு. மைக்கேலாஞ்சலோவின் டேவிட் சிலையில் டேவிட்டின் குஞ்சு அளவு proportionate ஆக இல்லை என்று ஒருவர் கவலையுடன் எழுதியிருக்கிறார். இந்தியாவில் கலையில் ஆண்குறி என்பதே கிடையாது , இருந்தால் அது கருவறையில் தனியாக பூதாகரமாக நின்றிருக்கும் என அவருக்கு கடிதமெழுதவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
வான்கோவின் அறை. உண்மையும், அவர் வரைந்ததும். கலை என்பது தெரிவுகளால் ஆனது! [அசல் ஓவியம்]
”ஸ்நேகிதனே ஸ்நேகிதனே செவிகொடு ஸ்நேகிதனே” பாட்டு பிரபலமாக இருந்தபோது அருண்மொழி சொன்ன ஜோக். “வான்கோ கிட்ட ஸ்நேகிதி கேட்டதை பாட்டா எழுதிட்டானுகளா?”
கல்லில் சிற்பம் வடிப்பது எளிது என்று ராய் சௌதுரி சொன்னார். “கல்லிலே இருந்து சிற்பம் அல்லாத எல்லாத்தையும் செதுக்கிட்டா போதும்”. அதைப்பற்றி விகேஎன் சொன்னார். “ஒரு சிற்பம் ஏன் அத்தனை கல்லை கூடவே வச்சிருந்ததுன்னு யாருமே யோசிக்க மாட்டீங்களாடா?”
கலைஞனும் யதார்த்தவாதியும்
கே.சி.நாராயணனை திருவட்டார் கோயிலுக்குக் கூட்டிச்சென்றேன். சுற்றுபிராகாரத்தில் வரிசையாக விளக்கு மங்கையர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முகம், வடிவம், அணிகலன்கள். “பாத்தீங்களா? இத்தனையையும் செதுக்க எவ்ளவு மாடல் பெண்கள் தேவைப்பட்டிருப்பாங்க?”
யதார்த்தவாதியும், வாழ்க்கைமுழுக்க அமெச்சூர் எழுத்தாளர்களின் படைப்புகளை திருத்திக்கொண்டிருக்கும் வேலை செய்தவருமான கே.சி.நாராயணன் சொன்னார். “ஒருவேளை ஒரு மாடலை நிக்கவைச்சு நூறு அமெச்சூர் சிற்பிகளை அவளைப் பாத்து செதுக்கச் சொல்லியிருப்பாங்களோ?”. ஒருவரே கடைசிவரை முயற்சி செய்து பார்த்ததாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அதன் பிறகுதான் அடைந்தேன்.
”என்னோட ஓவியங்களை நீங்க சிட்டி முழுக்க பாக்கலாம்”
கல்பற்றா நாராயணன் ஒரிசாவில் கல்லாலான யானையைப் பார்த்து வியந்து சொன்னார். “யானையாகிறதுக்கு கல்லுதான் நல்லது”. கடவுள் யானையை என்புதோல்தசையில் படைத்தார். நாம் கல்லில் இன்னும் நல்ல யானையை படைத்தோம். கடவுளையே கல்லில் படைத்திருக்கிறோம்.
கலையைப் பற்றிய பேச்சு வேடிக்கையானது. அருவமான ஒன்றைப்பற்றி தர்க்கபூர்வமாகப் பேசுவதன் அபத்தம். மூன்றுவருடங்கள் நாவலில் செக்காவ் அதை கிண்டலாக எழுதியிருக்கிறார். படம்வரையும் பெண் சீனியர் ஓவியரிடம் படத்தை காட்டுகிறாள். அவர் விமர்சனம் செய்கிறார்.
“ஓ சிவப்பு ஏன் இப்படி கூச்சலிடுகிறது. சரி சரி, பச்சைக்கு அது தேவையே. நீலம் கொஞ்சம் கனிவானது என்றாலும் கோடுகள் வானத்தில் என்ன செய்கின்றன?”
அவர் எந்த அளவுக்கு அபத்தமாகப் பேசினாரோ அந்த அளவுக்கு அவள் தெளிவாகப் புரிந்துகொண்டாள் என்கிறார் செகாவ்.
ஓவிய மாடல்களின் வரவேற்பறை
எழுபதுகளில் ஆதிமூலம் பழைய தமிழ் கல்வெட்டுகளின் பாணியில் எழுத்துருக்களை உருவாக்கி சிற்றிதழ்கள் மற்றும் கவிதைத் தொகுதிகளில் தலைப்புக்களை எழுதினார். சுசீந்திரம் சென்றுவிட்டு மீண்ட ஒருவர் சுந்தர ராமசாமியிடம் சொன்னார். “அங்க நெறைய கல்வெட்டு இருக்குசார். எல்லாமே ஆதிமூலம் ஸ்டைல்”.
நம்மூர் சிற்பங்களை இப்படி வேடிக்கையாக ஆக்கலாமா என்று நான் யோசிப்பதுண்டு. ஆனால் நம் அர்ச்சகர்களும் ஆலயத்திருப்பணியாளர்களும் அதைச் செய்திருக்கிறார்கள். இடதுபாதம் தூக்கி ஆடும் நடராஜனுக்கு கோவணத்தை கட்டிவிட்டிருக்கிறார்கள். தஞ்சையில் அகோரவீரபத்ரனுக்கு ஆசியன் பெயிண்டில் அண்டர்வேர் வரைந்திருக்கிறார்கள்.
வெள்ளைக்காரர்கள் பலர் இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்களை நம் கலையுணர்வு பாதித்துவிடக்கூடாது என்று கவலை எனக்கு உண்டு. அங்கே போய் மைக்கேலாஞ்சலோவின் தாவீதுக்கு ஜட்டிபோட்டுவிடுவார்கள்.
ஆப்’ பகடை பன்னிரண்டு சிரிக்கும் ஏசு டேனியல் லாபெல் ஊதிப்பெருக்கவைத்தல் ஸாரி டாக்டர்! ஆடல் கம்யூட்டர் யுகத்துக் கடவுள் மனம் குருவும் குறும்பும் இடுக்கண் வருங்கால்… ஆன்மிகமும் சிரிப்பும்
ஆட்டுப்பால் புட்டு- அ.முத்துலிங்கம்
ஊர் பெரியவர், ’ஆட்டை திருடியவன் இந்தக் கிராமத்தில் விற்கமாட்டான். அடுத்த கிராமத்திலும் விற்கமாட்டான். இன்று சந்தை கூடும் நாள். ஆட்டை அங்கேதான் விற்பான்’ என்று கூறினார். சிவப்பிரகாசம் ஊர் பெரியவரை அழைத்துக்கொண்டு சந்தைக்கு சென்று தேடினார். அவர் சொன்னது சரிதான். அங்கே அவருடைய ஆடு ஏற்கனவே கைமாறப்பட்டு கசாப்புக் கடைக்கு செல்வதற்கு ஆயத்தமாக நின்றது.
ஆட்டுப்பால் புட்டுபின்னே?
நண்பர் ஒருவர் பீதியுடன் அழைத்தார். தீவிர வலதுசாரி. “அருண்மொழி எழுதிய கட்டுரை படிச்சேன். அவங்க இடதுசாரியா?”
“அப்டித்தான் தெரியுது” என்றேன்.
“அப்ப உங்க பிள்ளைகளும் அப்டித்தானோ?”
“வேற எப்டி இருக்கும்?” என்றேன்.
சற்றுநேரம் சோகம். பிறகு “ஆனா காட்டிக்கிடவே இல்லியே?”என்றார்.
“அதெல்லாம் குடும்பப் பெண்கள் காட்டிக்கிட மாட்டாங்க. காப்பி டீ கொஞ்சம் லேட்டா வரும், அவ்வளவுதான்”
மேலும் சோகமான அமைதி. பிறகு “அதிலே ஒண்ணும் கலந்திருக்க மாட்டாங்கள்ல? ஏன்னா நான் மோடியப் புகழ்ந்து நெறைய பேசியிருக்கேன்”
“பேசின நாளிலோ மறுநாளிலோ உங்க உடம்புக்கு ஒண்ணும் ஆகலைல்ல?”
அவர் ஆழமாக யோசித்து “ஆகலியோ?”என்று என்னிடம் கேட்டார்.
“நான் உங்க கிட்டே கேக்கிறேன்”
“ஆகலைன்னுதான் நினைக்கிறேன்”
“அப்ப சரி”
அவர் நீள்மூச்சுடன் “பாருங்க, என்ன ஏதுன்னு ஒண்ணுமே தெரியமாட்டேங்குது” என்றார். கடைசிப்பெருமூச்சுடன் “சரி பாப்பம்”
அவரை அப்படி விடக்கூடாது என்று தோன்றியது. “ஒண்ணுமில்லை, இவ உங்க வீட்டம்மாகிட்டே நெறைய பேசுறாளே..” என்றேன்.
“அப்டியா?”என்று மூச்சொலியாகச் சொன்னார்.
“சரிங்க, பாத்து சூதானமா இருந்துக்கிடுங்க. காலம் கெட்டு கெடக்கு” என்று போனை வைத்துவிட்டேன்.
பின்னே?
சின்னச் சின்னப் புரட்சிகள் – அருண்மொழி நங்கைகதாநாயகி, கடிதங்கள்-6
அன்புள்ள ஜெ
கதாநாயகி ஒரு மெல்லிய அச்சத்தை மட்டுமே வளர்த்தெடுத்துக் கொண்டு செல்கிறது. அந்த அச்சம் அறியாததன் மீதான அச்சம். அதுதான் ஆழமானது. நாவலை வாசிக்கும்போது எனக்கு எங்கே பேய் இன்னும் வரவில்லை, நீட்டி நீட்டிச் செல்கிறாரே என்ற பொறுமையின்மை கொஞ்சம் இருந்தது. அவ்வப்போது சலிப்பும்.
ஆனால் அது எங்கிருந்து வந்தது என்று பார்த்தேன். அந்த எண்ணம் வந்தது கான்ஜூரிங் போன்ற ஆங்கிலப்படங்களைப் பார்த்ததில் இருந்துதான். அவை படுபயங்கரமாக பேய்களை காட்டிவிடுகின்றன. சட்டென்று கொடிய பேய்கள் தோன்றும் காட்சிகளுக்காக நாம் எதிர்பார்க்க ஆரம்பிக்கிறோம். திடுக்கிடவைப்பது, அலறவைப்பதுதான் பேய்க்கதை என நினைக்கிறோம்.
ஆனால் கதாநாயகி வேண்டுமென்றே மென்மையான அச்சத்தை மட்டுமே முன்வைக்கிறது. எடித் வார்ட்டன், மேரி கெரெல்லி எழுதியதுபோன்ற பேய்க்கதை. பத்தொன்பதாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் பேய்க்கதைகள் எல்லாமே இந்தவகைதான். பேயா பிரமையா என்ற எல்லையிலேயே கதை சென்றுகொண்டிருக்கும். அவற்றில் அந்த எட்ஜ் தான் உண்மையில் கலைத்தன்மை கொண்டது.
படித்து முடித்தபிறகு உண்மையில் குழப்பிக்கொண்டே இருப்பது இத மதில்மேல்பூனை தன்மைதான். உளவியல்சிக்கலாக இருக்கலாம். பேயாகவும் இருக்கலாம். புத்தகம் எழுப்பும் பிரமைகளாகவும் இருக்கலாம். ஆனால் இது இங்கே நடந்துகொண்டிருக்கும் நிஜம். யாருக்கும் நடக்கக்கூடியது. வெறும் கொடூரக்கனவு அல்ல. அந்த எண்ணம்தான் நீடித்த பயத்தை உருவாக்குகிறது.
இந்தக்கதையை படித்து முடித்தபிறகுதான் தொகுக்க முடிகிறது. தொட்டுத்தொட்டு தொகுத்துக்கொண்டே இருந்தேன். ஃப்ரான்ஸெஸ்ன் பர்னி முதல் ஹெலெனா வரையிலான கதைகள் பல தொடர்ச்சியில்லாமல் வருகின்றன. விர்ஜீனியஸ் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறான். இன்றைக்கும் இருக்கிறான்.
எஸ்.கே.ராம்
அன்புள்ள ஜெ
கதாநாயகி முடியும்போதுதான் அது எதன் கதை என்று புரிந்தது. இன்று வைரமுத்து, பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் என்று பேசப்பட்டுக்கொண்டிருப்பதும் அதுதானே. பெண்களால் சிலவற்றை மறக்கவோ கடக்கவோ முடிவதில்லை. அவர்களும் அதில் சூழ்ச்சியாலோ அறியாமையாலோ ஈடுபட்டிருந்தால் இன்னும் கடுமையான மனப்பாதிப்பை அடைகிறார்கள். மூன்றுபெண்களில் விடுபட்டவர் ஃப்ரான்ஸெஸ் பர்னிதான். ஹெலெனா மாட்டிக்கொள்கிறாள். ஆகவேதான் நிறைவேறாத ஆத்மாவாக அந்தப்புத்தகப்பக்கங்களில் அவளும் இருந்துகொண்டிருக்கிறாள்.
எம்.கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
நான் மனவியல் சிகிச்சை மையத்தில் கொஞ்சகாலம் பணியாற்றியிருக்கிறேன். 13 வருடம். அதில் நான் கண்டடைந்த ஒரு விஷயம் உண்டு. மனவியல்பாதிப்பு உள்ளவர்களுக்கு மிக மிக அபாயமானது புத்தகம்தான். அதிலும் புனைவுக்கதைகள். அவற்றை அவர்கள் வாசிக்கவே கூடாது. நாம் புனைவுக்கதைகளை வாசிக்கும்போது அவை கற்பனை என்று நம் கான்சியஸ் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அந்தக் கான்சியஸ் பலவீனமானது. ஆகவே அதெல்லாம் அவர்களுக்கு உண்மையாகிவிடுகிறது.
புனைவுக்கதைகள் சுற்றிநடக்கும் உண்மைக்கதைகளைவிட கூர்மையானவை, ஆழமான பாதிப்பை அளிப்பவை. ஏனென்றால் அவை முறையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன, மனிதர்களை தெளிவாக வரையறை செய்து காட்டுகின்றன. ஆகவே மனச்சிக்கல்கொண்டவர்கள் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களை அந்தக்கதைகள் மூடிவிடுகின்றன. திரும்பவே முடியாது.
நாம் வாசிக்கும்போது சுற்றுப்புறம் பற்றிய பிரக்ஞை இருக்கும். ஆனால் அவர்களுக்கு அதெல்லாம் இருக்காது. பத்துப்பனிரண்டு மணிநேரம் வாசிப்பவர்கள் உண்டு. ஒரே நூலை பல ஆண்டுகள் வாசிப்பவர்கள் உண்டு. அவர்களுக்கு அதிலிருந்து கடந்தகாலம் அப்படியே எழுந்து வந்து விர்ச்சுவல் ரியாலிட்டியாக ஆகிவிடுகிறது.
வாசித்த உலகத்துக்குள் வாழும் நோயாளிகள்தான் ஸ்கிஸோப்ரினியா நோயாளிகளில் பாதிக்குமேல். ஆகவே அவர்கள் வாசிக்கக்கூடாது என்றுதான் டாக்டர்கள் சொல்வார்கள்.
கதாநாயகி நாவலில் வாசித்து வாசித்து அவன் ஆழ்ந்து செல்வதும், அப்படி ஆழ்ந்து செல்வதை உனர்ந்து அவனே பயப்படுவதும், அதை நிறுத்த முயலும்போது அந்தப்புத்தகம் அவனை இழுத்து இழுத்து எடுத்துக்கொள்வதுமான போராட்டம் அந்த பிரேக்கிங் பாயிண்ட் வரை உக்கிரமாகச் சொல்லப்பட்டுள்ளது.
ராஜ்குமார் முருகேசன்
கதாநாயகி- கடிதங்கள் -5 கதாநாயகி கடிதங்கள்-4 கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
சில நாட்களுக்கு முன் “குமரித்துறைவி ” குறுநாவல் வாசித்தேன்.அபாரமான படைப்பு என்பதைத் தாண்டி நெகுநேரம் மனம் ஏதோ மீள முடியாத ஒன்றில் சிக்கியதைப் போல ஒரு உணர்வில் இருந்தேன். நீண்ட குறிப்பை எழுதலாம் என நினைத்து பின் சரி இன்னும் எத்தனை நாள் அதன் தாக்கம் இருக்கும் எனப் பார்த்தேன். காலை முதற்கொண்டு ” தந்தை மூத்து மகன், மகன் மூத்து தந்தை ” என்கிற வரி உள்ளே நிறைந்துகொண்டது. சம்பிரதாயங்கள் , சடங்குகள் மூலமே ஒரு தொன்மம் நம்மிடையே வலுவாக இருக்கிறது. யாரோ எதற்கோ ஆரம்பிக்கிற ஆட்டம் சொல்லும் பொருளும் கொண்டு அது பயணிக்கும் தொலைவு பிரமிப்பைத் தருகிறது.
புனைவின் அதி நுட்பங்களையும், சொற்களையும் ஒரு கணம் கூட வாசிப்பு மட்டுப்படாத அளவிற்கு எழுதியிருக்கிறீர்கள். தொன்மமும், வரலாறும் இணைந்து செல்லும் ஒரு மாயம். மகளை உருகி உருகி நேசித்த தந்தைகளை பார்த்திருக்கிறேன். என் தந்தையும் அதில் இருக்கிறார். மகளிடம் எந்த தகப்பனும் தன்னை மறைத்துக் கொள்வதில்லை. அவளின் பிரிவு என்பது அவர்களுக்கு தங்களின் இறப்பை பார்ப்பதைப் போன்றது . மகாராஜா ‘ என் நாட்டின் வளங்கள் நம்மை விட்டு செல்கிறது ‘ என சொல்லும் இடத்தில் உள்ளம் உடைய இறுதி பகுதியை நோக்கிச் சென்றேன்.
கடந்த ஆண்டு மலையாள எழுத்தாளர் ஓ.வி. விஜயனின் நினைவில்லம் சென்றிருந்தேன். என் பாட்டி வீட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் இருக்கும் தஸ்ரக் என்கிற அத்தனை அழகான இடம் அது. அங்கிருந்து வேறு ஒரு வழியில் செல்லும் போது சிறு வனப்பகுதி ஒன்றிலிருந்து பாரதப்புழாவின் கிளை ஆறு ஒன்று வெளியே தெரிய வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஆற்றின் ஓரமாக தொட்டால் சிணுங்கி தளைந்திருந்த ஒரு சிறிய பாதையில் உள்ளே நுழைந்தேன். ரீங்கராத்தை தாண்டி வாகை, ஆலமரம், அரசமரம் , காட்டு வேங்கை என சிறகடித்து எழுந்த பறவைகளின் ஒலியில் வெளியே செல்ல மனம் படபடத்தது. நிசப்தம் ஒருவகையான மாயை. தடுமாற்றத்தில் மேலும் உள்ளே சென்றேன் . கருங்கற்களால் திட்டு அமைக்கப்பட்ட ஒரு அரசமரத்தின் அடியில் ஒரு சிலையை அமர்த்தியிருந்தார்கள். ஏதோ ஒரு குலத்தின் மூதாதை. இப்போது வரை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான் ஆனால் அந்த கணம் எதையும் சிந்திக்காமல் முதல் படியில் அமர்ந்து கண்களை மூடி பிராத்தனை செய்தேன். இதோ என் வாழ்க்கை ஒரு பிடிப்பும் இல்லாத ஒரு பலத்த காற்றுக்கு மாறுகிற திசையைப் போல. எனக்கு ஒரு பிடியைக் கொடு அல்லது அது எதுவெனக் காட்டு என இமையில் கண்ணீர் படற அமர்ந்திருந்தேன். அத்தனை நேரம் வாழ்வில் வேறு எந்த படைப்பின் முன்னாலும் இப்படி சிந்தனை தளர நின்ற நினைவில்லை. இருட்டத் தொடங்கியதும் எல்லாம் சரியாக நடந்தால் நான் மீண்டும் உன்னை காண வருகிறேன் எனக் கிளம்பிவிட்டேன். பின்னாட்களில் உண்மையில் பயம்தான் கடவுளா இல்லை கலைமனம் கொண்டதால் அந்த வடிவத்தில் ஈர்க்கப்பட்டு அமர்ந்தேனா என பல குழப்பங்களுக்கு பின் யோசித்த போது ஒன்று புரியவந்தது. நாம் மூர்க்கத்தனமாக நம்புகிறவற்றில் நாம் இல்லை. அதை மீறி நம் இயல்பில் ஒதோ ஒன்றில் உறைந்திருக்கிறோம். அது அறிய வருகிற நேரம் உள்ளே இருக்கிற அறிவுஜீவி அதை நம்ப மறுப்பதால் உள்ளம் நடுக்கம் கொள்கிறது . ஒரு கணத்தால் அடித்துச் செல்லப்பட்டு நீ போடுகிற வேசங்கள் அல்ல நீ என உணர்கிறோம். இந்த மாதிரி படைப்புகளை வாசிக்க அதை அனுபவிக்க ‘அந்த ‘ மன நிலைகளும் தர்க்கங்களும் உதவாது என்பதற்காக சொல்கிறேன்.
இரண்டு நிகழ்வுகள் என் நினைவிற்கு வருகிறது . ஒன்று கோவில் பூசாரியான என் தாத்தா சன்னதி முன் அமர்ந்து ஏதோ வேண்டுதலை முன் வைத்தார். அது பூவின் நிறமாக மறுப்பு தெரிவிக்க உடனே இவர் எழுந்து ” என்கிட்ட களிக்காதடி பின்ன ஞான் யாருன்னு காணிச்சு தாரேன் இட்டயா ” என மலையாளம் கலந்த தமிழில் சில உரையாடலை நடத்திவிட்டு மீண்டும் கேட்டார். இந்த முறை அவருக்கு சாதகமாக இருந்தது அந்த பயம் இருக்கட்டும் என எழுந்துகொண்டார். நான் தூண் அருகே ” conversation with maniratnam ‘ என்பதைப் போல இதுவும் ‘ conversation with maariyamman” னாக இருக்கும் என ஒதுங்கிக் கொண்டேன். பின்னொரு சமயத்தில் முகநூலில் ஒரு வீடியோ சத்தியமங்கலம் பகுதியில் இரவில் சென்று கொண்டிருக்கும் ஒரு வானகத்தை யானை ஒன்று இடை மறிக்கிறது உள்ளே இருந்து பீதி குரல்கள். ஒருவரின் குரல் மட்டும் தனியாக பணிந்து ” பண்ணரியம்மா காப்பாத்து ” என ஒலிக்கிறது. யானை மேலும் முன்னே வந்து அனைத்து வைக்கப் பட்டிருந்த விளக்குகளுடன் பின்னகரும் வாகனத்தை முட்டி மோதி சாலையில் இருந்து மண் பாதைக்கு நகர்த்துகிறது . இப்போது ஆட்கள் முகம் தெரியாத அளவிற்கு கைபேசி கீழே விழுந்துவிட்டது மீண்டும் அதே குரல் ” அம்மா வேண்டாம் சொன்னா கேளு ” என வேண்டுதலை மீறி கோபத்துடன் முன் வைக்கிறார். எளியவர்களின் தெய்வம் என்பது இதுதான். உண்மையில் பயத்தை, பணிவை மீறிய நேசம் அது. குமரித்துறைவி அதை சரியாக வெளிப்படுத்திய புனைவு. ஒரு சிலை மீண்டும் கிளம்பிய இடத்திற்கு செல்ல வேண்டும். அதில் எத்தனை விழுமியங்கள். கடவுள்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் மூலம் ஒழுகிச் சென்றவண்ணம் இருக்கிறார்கள்.ஒரு படைப்பு அதன் சாத்தியங்களை சரியாக அடையும்போது நிலை கொள்கிறது என்பதைத் தாண்டி வெறும் கதைதான் என நம்பமுடியவில்லை என்பதே இந்தப் படைப்பின் வெற்றி. இறை வழிபாடு இப்படிப்பட்ட புனைவாக வரும்போது அது மேலும் வேரூன்றிக் கொள்கிறது. மதுரை மீனாட்சியை இனி காண நேர்ந்தால் அது முற்றிலும் வேறு ஒரு கோணமாக இருக்கப் போகிறது. தனி நூலாக வரும் அளவிற்கு சிறந்த படைப்பு. நன்றி
அன்புடன்
சங்கர் சதா
வெண்முகில்நகரம் மையம்
நம்மை அறியாமலே நம் குழந்தைகள் வளர்வதைப் போல அந்த வளர்ச்சியும் இருக்கிறது. அதில் வளர்ந்த குழந்தையின் உருவினையும் முதல் நாளில் பிறந்த குழந்தையின் வடிவையும் எண்ணி சுகிக்க முடிகிறது வேறொரனுபவம். வெண்முகில் நகரம் தீயில் பிறக்கிறது. இன்று வளர்ந்து நீரில் நதியலையில் முடிந்திருக்கிறது.
வெண்முகில்நகரம் மையம்May 27, 2021
கடவேல்
கடவுள் மாபெரும் ஏரிகளை உருவாக்கியது எப்படி?
கடவுளைக் கலாய்ப்பது என்பது ஓர் ஆன்மிகச் செயல்பாடு மட்டுமல்ல, அன்றாடச் செயல்பாடும்கூட. கொஞ்சநாள் முன்னால் ஒருவர் செத்துப்போய்விட்டார். அதைப்பற்றி வெற்றிலைப் பாக்குக் கடையில் பேச்சு. ஒருவர் “கடவுளுக்கு கண்ணில்லியா?”என்றார்.
அருகே இருந்த மூத்த நாடார் “உண்டுலே, ஆனா அங்கேருந்து இங்க பாக்குத தூரக்கண்ணாடி இல்ல பாத்துக்கோ”என்றார்.
”முதல் அஞ்சு கட்டளைதான் ஃப்ரீ. மிச்சம் வேணும்னா சந்தா கட்டு”
இது இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. இங்கே நிகழும் எல்லாவற்றையும் ஒருத்தரே செய்கிறார், அல்லது அவர்தான் காரணம் என்றால் எவ்வளவு முரண்பாடு. அதுவே நகைச்சுவைதான். அளவிலாக் கருணைகொண்ட அருளாளன் கொரோனாவை ஏன் அனுப்பினான் என்றால் அவனுடைய அளவிலாக்கருணையை நாம் நம்பவில்லை என்பதற்குத் தண்டனையாக என்கிறார்கள். குழப்பமாகத்தான் இருக்கிறது.
சின்ன வயசில் நான் கடவுளை புரிந்துகொண்டது பழைய பொருட்களை வாங்குபவர் மாதிரி ஒருவர். நமக்கு பெரிய உபயோகம் இல்லாத தேங்காய், வாழைப்பழம், சமந்திப்பூ போன்றவற்றை வாங்கிக்கொண்டு பரீட்சையில் மார்க், லாட்டரியில் பரிசு போன்றவற்றை தருபவர். அத்தனைபேரிடமும் இப்படி நஷ்டவியாபாரம் செய்யும் அவரை எண்ணி நான் அனுதாபப்பட்டதெல்லாம் உண்டு.
கடைசியா இதையும் கொஞ்சம் சேத்தா விறுவிறுப்பா இருக்கும்…
கடவுள் ஜோக்குகளுக்கு அத்வைதத்தில் முதன்மையான இடம் உண்டு. சகுணப்பிரம்மத்திடம் நிர்குணப்பிரம்மம் தலைதலையாக அடித்துக்கொண்டதாம் “வேண்டாம் வேண்டாம்னு சொன்னேனே கேட்டியா? இப்ப இதையெல்லாம் யாரு அள்ளி கூட்டி பெருக்கி ஒண்ணாக்குறது?”.
பெருவெடிப்பு பிரம்மம் கைதவறி கீழே போட்டது என்றுகூட சொல்லப்படுவதுண்டு. அப்படியென்றால் கருந்துளை பிரம்மத்தின் மாபெரும் துடைப்பம். இந்தப்பக்கம் கூட்ட அந்தப்பக்கம் சிந்திக்கொண்டே இருக்கிறது.
”நானும் பிரம்மம் நீயும் பிரம்மம், பிரம்மம் பிரம்மத்திடம் கடனை திரும்பக்கேட்கலாமா?” வகை நகைச்சுவைகள் பேச்சுவழக்கிலேயே சாதாரணம்.
பிரபஞ்ச சிருஷ்டி
சிவனை ஒன்றரைக் கண்ணன் என்று ஒரு பேச்சில் வாரியார் சொன்னார். முக்கண்ணன், ஆனால் பாதி உடல் பார்வதிக்கு. அப்படியென்றால் ஒன்றரைக் கண்தானே? அம்மைக்கும் ஒன்றரைக் கண்தான். நல்ல ஜோடிப்பொருத்தம்.
“கடவுள் எங்கயும் இருக்காருன்னு சொல்லுதியே, அப்ப நீ எங்க ஒண்ணுக்கடிப்பே?” என்று ஒரு கிராமத்து நாத்திகனாகிய கேசவன் கேட்டபோது “கேசவனுக்க மனசுன்னு எழுதி அங்க ஒண்ணுக்கடிக்கவேண்டியதுதான்” என்று ஆத்திகனாகிய மாதவன் பதில் சொன்னதாக ஒரு கதை
”பழைய ஏற்பாடு கடவுளே நல்லாருக்கு. இவரு ரொம்ப மாடர்னா இருக்காரு”
கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவ ஜோக் நிறையவே சொல்வார்கள். மற்ற கிறிஸ்தவர்கள் சீரியஸாக இருப்பதே ஒருமாதிரி ஜோக்காக இருக்கும். பாவம் செய்யாதவர்கள் முதற்கல்லை எறியுங்கள் என்று ஏசு சொன்னதும் பிதா “அப்ப நான் எறியட்டாலே?” என ஆவலாக கேட்டதாக எங்களூரில் ஒரு பேச்சில் தங்கையாநாடார் சொன்னார்.
தங்கையா நாடாரின் இறையியல் உரைகள் ஆழமானவை. “ஏலே, ‘என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்’னு ஏன் பைபிள் சொல்லுது? அவரு முன்னாலே போனா இவன் அங்க இங்க வாய்பாத்துட்டு நின்னிருவான். அவரு அந்தாலே பிதாகிட்டே போயி திரும்பிப் பாத்தா பின்னாலே ஒத்த ஒருத்தன் இருக்கமாட்டான். அதனாலே பின்னால வாறாரு. சூத்தாம்பட்டியில் அடிச்சு பத்தி கொண்டு போணும்லாடே?”
கடவுளின் கம்ப்யூட்டர் கேம்
”மண்ணிலும் விண்ணிலுமுள்ள அனைத்தும் அறிந்தது பரிசுத்த ஆவி மட்டுமே” என்று பாதிரியார் பேசியபோது விசுவாசி எழுந்து “அப்ப கத்தோலிக்க சர்ச்சுக்கு எவ்ளவு சொத்து இருக்குங்கிற முழுவிவரம் அவருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு, இல்ல ஃபாதர்?” என்று கேட்ட ஒருவரைப் பற்றி நண்பர் பேச்சில் ஒருமுறை சொன்னார்.
கடவுள் நகைச்சுவைகளை ஆங்கிலத்தில் நிறையவே காண்கிறோம். எல்லாமே தாடிவைத்த வயதான கிழவர். டக்ளஸ் ஆடம்ஸின் The Hitchhiker’s Guide to the Galaxy கதையில் வரும் கடவுள் அமெரிக்க அதிபர் போலிருக்கிறார். அழகான, கம்பீரமான, ஆழ்ந்த குரல்கொண்ட அடிமடையர். ஆகவே ஆழ்ந்த தன்னம்பிக்கைக் கொண்டவராகவும் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறவராகவும் இருக்கிறார். அவருக்கு பிரபஞ்சம் பற்றி ஒன்றுமே தெரியாது. அவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதைப் படிப்பார்.
”ஆறுநாள் கடுமையா உழைச்ச களைப்பிலே குழம்பிப்போய் கைதவறி மனுஷனை படைச்சிட்டீங்க… பரவாயில்லை”
சின்னவயசில் சைதன்யா பள்ளியிலிருந்து கற்றுவந்த ஜோக். “எட்டையும் மூணையும் கூட்டினா பதிமூணு வரும், எப்டி?”
பலகோணங்களில் யோசித்து கடைசியில் நான் சொன்னேன். “தெரியல்ல பாப்பு, எப்டி வரும்?”
“இதுகூட தெரியல்லியா? கணக்க தப்பாப் போட்டா வரும்”
இந்த எல்கேஜி ஜோக் இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள மிகமிக உதவியானது. கடவுள் கணக்கு தெரியாத ஒரு சின்னப்பயல். முதலில் விடையை எழுதிவிடுகிறான். அதற்கேற்ப கணக்கை தப்பாக போடுகிறான். அதைத்தான் நமக்கு சுற்றும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கடவுள் :”எப்பவுமே மகிழ்ச்சியா இருக்கிற,தீராத அன்புள்ள, முடிவில்லாம மன்னிக்கக்கூடிய ஒண்ணுன்னு சொன்னப்பவே நீ ஊகிச்சிருக்கணுமே?”
ஓயாமல் கடவுள் நாமம் சொல்பவர்கள் உண்டு. ஞானபண்டிதா, முருகா, நமச்சிவாயம் என்றெல்லாம். நம்பூதிரி வாய் ஓயாமல் நாராயணா என்பார். எந்நேரமும் நாராயணா என்னும் ஜெபம்தான். ஒருநாள் நல்ல பாம்பு வழியில் படமெடுத்து நின்றது. நாராயணா என்று கத்தினார். பயனில்லை, கடித்துவிட்டது.
மேலே வைகுண்டம் போனதும் பெருமாளிடம் மனத்தாங்கலுடன் கேட்டார். “என் குரல் உனக்கு கேக்கலியா நாராயணா?”
கொஞ்சம் சம்மலுடன் நாராயணன் சொன்னார். “கேட்டேன். ஆனா நீ வழக்கம்போல அனத்திட்டிருக்கேன்னு நினைச்சுட்டேன்”
ஆப்’ பகடை பன்னிரண்டு சிரிக்கும் ஏசு டேனியல் லாபெல் ஊதிப்பெருக்கவைத்தல் ஸாரி டாக்டர்! ஆடல் கம்யூட்டர் யுகத்துக் கடவுள் மனம் குருவும் குறும்பும் இடுக்கண் வருங்கால்… ஆன்மிகமும் சிரிப்பும்
வரலாற்றுப் பெருக்கால் விழுங்கப்படுதல்
எஸ்.செந்தில்குமாரின் ‘’கழுதைப்பாதை’ – கடலூர் சீனு
நான் முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு நாவல் எழுத எண்ணியிருந்தேன். அருமனை மாறப்பாடி பகுதியில் ஆற்றில் பாலம் கட்டப்பட்டபோது வேலையிழந்த படகுக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி. படகுகள் விழுவதற்கான உரிமை திருவிதாங்கூர் மகாராஜாவால் அளிக்கப்பட்டது. திருவிதாங்கூரின் சக்தி வாய்ந்த அரசி பார்வதிபாய் காலம் முதல் அந்த சேவை அங்கே இருந்தது. அது ஒரு வரலாறும் அதையொட்டிய பண்பாடும் கொண்ட ஓர் உலகம்.
மாறப்பாடியில் உருவான சிமிண்ட் பாலம் அதை சட்டென்று இல்லாமலாக்கிவிட்டது. அங்கே படகுகளை ஓட்டிய குடும்பங்கள் வறுமையை அடைந்து வாழ்க்கையை மாற்றிக்கொண்டன. படகுகள் கொஞ்சகாலம் அங்கேயே கிடந்து மட்கி மறைந்தன. ஆனால் சற்று அப்பால் திருவட்டாறில் வெள்ளையர் ஆற்றின்மேல் அமைத்த இரும்புப்பாலம் அதனருகே உருவான கான்கிரீட் பாலத்தால் கைவிடப்பட்டது. துருப்பிடித்து நின்றுள்ளது. அந்த படகுகள் மட்கியதைப்போல.
அந்த கைவிடப்படுதலையும் இன்றியமையாத மறைவையும்தான் நான் எழுத விரும்பினேன். பாலம் என்பது நவீன உலகின் அடையாளம் என்று சொல்லலாம். ஆனால் அதைவிட இயற்கையின் இன்றியமையாத செயல்பாடு என்றும் சொல்லலாம். ஏனென்றால் எளிய, மேலும் எளிய , விரைவான, மேலும் விரைவான இணைப்புகளை உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான் இயற்கையின் பரிணாமகதி. சாலை படகை இல்லாமலாக்கியது. ஒரு தேசியநெடுஞ்சாலை சிறியவழிகளை இல்லாமலாக்கிவிடும். நாளை பறத்தல் எளிதாகுமென்றால் சாலையே இல்லாமலாகிவிடும்.
எஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை என்ற நாவலை நான் இந்தக் கோணத்தில், நான் எழுதாமல் விட்ட ஒன்றின் நிறைவேற்றம் என்ற அளவில்தான் வாசித்தேன். தமிழில் எழுதப்பட்ட நல்ல நாவல்களில் ஒன்று என்று கழுதைப்பாதையை தயங்காமல் சொல்லமுடியும்.
இது கேரளமும் தமிழகமும் சாலைகளால், லாரிகளால் இணைக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தின் நாவல். மலைகளைக் பொதிகளுடன் கடந்துசெல்ல கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கழுதைகளுடன் கழுதையாக வாழ்பவர்களின் ஒரு குட்டிச் சமூகம் உருவாகிறது. அடக்குமுறை, அதைமீறும் எளியவழியான திருட்டுத்தனம் எல்லாம் வளர்கின்றன. சாலைகளும் வண்டிகளும் உருவான 1950களில் கழுதைப்பாதைகள் கைவிடப்படுகின்றன. அவை பழைய புண்களின் வடு போல காட்டில் ஆங்காங்கே காணக்கிடைக்கலாம்.
ஒன்று அழிந்தபின்னர்தான் அதை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக் கொள்ள முடிகிறது. கழுதைப்பாதையை செந்தில்குமார் வரலாற்றில் ‘தொலைந்துபோன ஒரு சிறு சமூகத்தின் வரலாறு’ என கட்டமைப்பதில் வெற்றியடைந்திருக்கிறார். வாசிக்கையில் அந்நினைவு எழுவதில்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால் அத்தனை ’காலத்தால் கைவிடப்பட்ட’ சமூகங்களின் கதையாகவும் ஆகும் தன்மை இந்த சித்தரிப்புக்கு உள்ளது. ஆகவேதான் இது முக்கியமான இலக்கியப்படைப்பாக ஆகிறது.
முக்கியமாக இந்தவகை நாவல்கள் இயல்புவாத [நாச்சுரலிச] பாணி கொண்டவை. உள்ளது உள்ளபடிச் சொல்வது, தகவல்களை மட்டுமே சொல்வது, கற்பனை கலக்காமல் சொல்வது என்னும் புனைவுப்பாவனையை கொண்டிருக்கின்றன. கற்பனைக்கதைதான், ஆனால் கற்பனையல்ல வாழ்க்கை என்று தோன்றவைப்பதுதான் இந்த வகையான கதையின் இயல்பு.
இதிலுள்ள சித்தரிப்புகள் பல ஆக்ரோஷமானவை. அன்றைய அடிமைத்தனமும் அதை மீறும்பொருட்டு செய்யப்படும் வேவ்வேறு துரோகங்களும் நம்பகத்தன்மையை அடைவது மொத்த நாவலுமே இயல்புவாத அழகியல் கொண்டிருப்பதனால்தான். ஆகவே இவை வாசிப்புக்கு ஒரு வணிகநாவல் அளிக்கும் வேகத்தை தருவதில்லை. நவீன நாவல்போல கச்சிதமாக இருப்பதில்லை. செவ்வியல்நாவல் போல பேருருவவிரிவையும் அளிப்பதில்லை. இவற்றின் இந்த இயல்புவாத அழகியலுடன் நாம் நம்மை பொருத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.
இந்நாவல் ஒரு தெளிவான அடையாளம் கொண்ட நிலச்சூழலில் நிகழ்ந்தாலும் அந்நிலம் பற்றிய விவரணைகள் குறைவு. சூழல்சித்தரிப்பே குறைவுதான். ஏனென்றால் இவை இச்சூழலில் உள்ள இயல்பான கதைமாந்தர் வழியாகவே வாசகனுக்குக் காட்டப்பட முடியும். அவர்கள் அந்த சூழலை, இயற்கையை ‘பார்ப்பவர்கள்’ அல்ல. அங்கே புழங்குபவர்கள். செவ்வியல்நாவல்கள் அச்சூழலில் இருந்து மேலெழுந்த கதாபாத்திரங்களை கொண்டு அச்சூழலை சித்தரிக்கவும் ஆராயவும் முற்படும். அந்த சௌகரியம் இயல்புவாத நாவல்களுக்கு இல்லை.
இயல்புவாத நாவல்களின் இன்னொரு எல்லை என்பது அவை வலுவான கதைமாந்தர்களை உருவாக்க முடியாது என்பது. ஏனென்றால் ‘கதாபாத்திரம்’ என்பது ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக தொகுத்து மையம் கற்பிக்கும்போது உருவாவது. இயல்புவாதம் அதற்கு எதிரானது. அது ‘அகத்துக்கு’ அதிகம் செல்வதில்லை. சாராம்சம் காண முற்படுவதில்லை. மனிதர்களை நிகழ்த்தி கடந்துசெல்கிறது. ஆகவே கதாபாத்திரங்கள் மனிதச்சித்திரங்களாகவே நிகழ்ந்து நின்றுவிடுவார்கள்.
கழுதைப்பாதை நாவல் முழுக்க கதாபாத்திரங்கள் செறிந்திருக்கிறார்கள். அவர்களினூடாக அன்றைய சமூக அதிகார மாற்றத்தை கற்பனையில் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. ராவுத்தர்களின் அழிவு அவர்களில் எழும் நாயக்கர்களின் வணிகம் என ஏற்கனவே இருந்த ஆதிக்கத்தின் ஒரு வரலாறு கதைகளினூடாக சொல்லப்படுகிறது. அவ்வரலாற்றின் அழிவிலிருந்து உருவாகி வருகிறது மூவண்ணா, சுப்பண்ணா குடும்பத்தின் மேலாதிக்கம்.
அவர்கள் நூறு கழுதைகளைக் கொண்டு மலைக்குமேலிருந்து தோட்டப்பொருட்களை மலையிறக்கி கீழிருக்கும் பொருட்களை மலைக்குமேல் கொண்டுசென்று ஒரு தொழிற்கண்ணியை நிலைநிறுத்துகிறார்கள். அக்கண்ணி நீடிப்பதற்குண்டான அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள். கழுதைகள் எப்படி ஒடுக்கப்பட்டு சுமைதூக்கச் செய்யப்படுகின்றனவோ அப்படித்தான் அவற்றை கொண்டு செல்லும் கூலியாட்களும். அவர்கள் சாப்பாட்டுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள். ஒருவரோடொருவர் போட்டியிட்டு அதன்வழியாக குரோதமும் கசப்பும் கொண்டவர்களாக ஆகிறார்கள்.
ஆதிக்கம் மாறுபடுகிறது, சுரண்டல் மேலும் வலுப்பெறுகிறது. இந்நாவலை வாசிப்பவர்கள் விரிவாக்க வேண்டிய புள்ளிகள் இது அளிக்கும் இந்த சமூக ஆதிக்கச் சித்தரிப்பில்தான் உள்ளன. ராவுத்தர் காலம் முதல் மூவண்ணா சுப்பண்ணா காலம் வரை பார்த்தால் சுரண்டல் வலுப்பெறவே செய்கிறது. ஒப்புநோக்க ராவுத்தர்தான் ஊழியர்களை மனிதாபிமானத்துடன் பார்த்தவராக இருக்கிறார்.
இதை இப்படி விளக்கிக்கொள்ளலாம். ராவுத்தர் தொன்மையான நிலவுடைமைக்காலத்தையவர். அவரும் அடிமை ஊழியர்களை வைத்திருந்தார். ஆனால் அவர்களுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். பண்டை நிலவுடைமையில் ஆண்டை என்பவர் தந்தையும்கூட. அரசன் கடவுளாக இருந்த காலம். அடுத்த காலகட்டத்தில் ஆண்டை மெல்ல முதலாளி ஆகிறான். அவனுக்கு உழைப்பாளர்கள் வெறும் கருவிகள். அவர்கள் அழியக்கூடாது அவ்வளவுதான். அவன் அவர்களுக்கு எவ்வகையிலும் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை.
இந்நாவலில் இணையான இரு உலகங்களாக இருப்பவை முதுவர் என்னும் பழங்குடிகளின் வாழ்வும் தரைக்குடிகளின் வாழ்வும். மலையை நுட்பமாக, நன்கறிந்திருக்கும் முதுவர் காட்டை வெட்டி காப்பித்தோட்டங்களை அமைக்கவில்லை. அவர்களின் வாழ்க்கையை விரிவான நுண்ணிய செய்திகள் வழியாகச் சித்தரிக்கும் ஆசிரியர் அவர்களின் பண்பாட்டின்மேல் தரைக்குடிகள் ஊடுருவுதை, அதன் சிதைவை காட்டுகிறார்.
இந்நாவலில் அடிப்படை விசைகளான காமமும் வன்முறையும் வஞ்சமும் துரோகமும் மைய உணர்வுகளாக நீடிக்கின்றன. ஒருவரை ஒருவர் தின்று வாழும் சிற்றுயிர்களின் பெருந்திரள் என இந்நாவலில் உள்ள கதைமாந்தர் எங்கோ ஒரு புள்ளியில் நமக்கு திகைப்பை உருவாக்குகிறார்கள்.
புறவுலகச் சித்திரத்தைச் சொல்வதன் வழியாக உருவாக்கும் குறியீடுகளின் ஆற்றல் வழியாக இயல்புவாத நாவல்கள் நிலைகொள்கின்றன. இந்நாவலும் அத்தகைய குறியீடுகளால் வலுவாகக் கோக்கப்பட்டது. ஆனால் அவற்றை குறியீடுகளாக ஆக்கிக்கொண்டு மேலே சென்று ஒரு வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியது வாசகனின் பணி. இந்நாவலில் வரும் கழுதைகள் இறுதியில் எரிந்தழிகின்றன. தளைபட்டு கிடந்த அவை அந்த தளையிலேயே மடிகின்றன. ஒரு காலகட்டம் ஊழியில் அறுதியாக அமைகிறது. நாம் வாழும் இன்னொரு காலகட்டம் தொடங்குகிறது.
வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள் என தொடங்கி அனுபவக்குறிப்புகள் வாழ்க்கைநிகழ்வுகள் என கோத்துக்கொண்டே சென்று ஒரு சமூகத்துளியின் வரலாற்றைச் சொல்லிவிடுகிறது இந்நாவல். பெருவெள்ளம் வரும்போது ஆற்றில் ஒரு காட்சியைக் காணலாம். மணலாலும் சேறாலும் உருவான ஆற்றிடைக் குறை செடிகளுடன் ஒரு சிறு தீவென நின்றிருக்கும். வெள்ளம் அதைக் கரைத்துக் கரைத்து இல்லாமலாக்கிக்கொண்டே செல்லும்.ஒரு கட்டத்தில் முற்றாக மறையும். இன்றியமையாத ஒரு அழிவு. காலநதிக்கு உணவாகி செரிக்கப்பட்டுவிடுதல். அந்த காட்சியை பேருருவாகக் காணும் அனுபவம் எஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை.
கழுதைப்பாதை வாங்ககதாநாயகி- கடிதங்கள் -5
கதாநாயகி வாசிப்பை இப்படி நான் தொகுத்து கொள்ள விரும்புகிறேன்.சில ஆண்டுகளுக்கு முன் De Lannoy கருங்கல் கோட்டையாய் எழுப்பி இருந்த வட்டக்கொட்டைக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அதன் கருங்கல் படிகள் வழி மேல் தளம் செல்லும் பொழுது என் மகள்,” அப்பா இந்த வழியா தான ராஜா எல்லாம் நடந்து போய் இருப்பாங்க” என்றாள். “ஆமா யான வச்சு பீரங்கி ய மேல கொண்டுபோனாங்க. எல்லாரும் இந்த வழியாக தான் நடந்து போனாங்க” என்றேன். அவள் கால்களை அகலமாய் வைத்து, நெஞ்சை நிமிர்த்தி என் முன் ராஜநடை நடந்து சென்றாள்.கருங்கற்கள் காலத்தை தங்களுக்குள் சேமித்து வைத்து அதை தீண்டுபவரை காலங்கள் பின் நோக்கி கொண்டு செல்கிறது. காட்டின் அந்த கல் பங்களா 17ம் நூற்றாண்டு காலத்தின் அதிர்வை உள்ளடக்கிக்கொண்டு காத்திருக்கிறது.
காலத்தை புத்தன் சொன்னது போல ஒரு சக்கரமாய் கொண்டால், இந்த நிகழ்காலம் ஒரு மெல்லிய அடுக்காக கடந்த காலத்தின் மீது மறுபடி மறுபடி படிந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிறு திறப்பு மற்றும் நுண்ணிய மன அதிர்வின் துணை கொண்டு, வாய்க்கப்பெற்ற சிலர் இந்த அடுக்குகளின் ஊடே மேலும் கீழும் சென்று காலத்தின் நிலைகளை தொட்டுணர இயலும் என கொள்கிறேன். Burney, கதாநாயகன் என எல்லாரும் அதையே செய்கிறார்கள் . Burney யின் நாவல் அதற்கான WormHole.
ஆனால் அப்படிப்பட்டவர்கள் அசாதாரணமானவர்கள். அவர்கள் வாழும் உலகு அசாதாரணமானவை. ஒரு சாதாரண மனதால் தொட்டு உணர இயலாத பரிமணங்களை தொட்டு வரக்கூடியவர்கள். அசாதாரணங்களை நாம் ஏற்றுக்கொள்ள தயங்கி மருத்துவ மற்றும் மன ஆய்வுக்கு உட்படுத்தி schizophrenia அல்லது வேறு ஒன்றால் பெயரிட்டு விடுகிறோம்.ஆனால் அவர்களே மனித மனம் தொட்டுணராத விஷயங்களை கொண்டுவந்து எல்லா துறையிலும் சேர்கின்றனர். எல்லா அறிவு ஜிவிகளும், தத்துவ ஆசிரியர்களும் அந்த ரகம். எனக்கு ஜான் நாஷ்( The Beautiful mind திரைபடத்தின் நிஜ நாயகன்), நியூட்டன், பிகாசோ என்று என் பட்டியல் நீள்கிறது. நாம் அவர்களை நமக்கு தெரிந்த விதத்தில் விலக்கிக்கொண்டு அவர்களை extraordinary இல் இருந்து ordinary ஆக்கி கொள்கிறோம். கதாநாயகனின் வாழ்வியல் அறம் அவன் அசாதாரணமான மனிதன் என்பதற்கான சான்று.
Burney வாழ்த்த 17-18ஆம் நூற்றாண்டில் அவரை போல பல பெண்ணிய எழுத்தாளர்கள் ஆணாதிக்கத்தின் கசப்பின், ஆண்களுக்காக தங்களை தியாகம் செய்து கொள்ளும் பெண்களின் குரலாக இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு ஆண் தங்களை புரிந்து கொள்வானா என்ற ஏக்கம் இருந்திருக்கலாம். தன் உடன்பிறந்த இரு பெண்களுக்காக தன் வாழ்வை தியாகம் செய்யும் கதாநாயகனை காணும் Burney, Helena,Georgia தங்கள் கதைகளைப் அந்த ஆணுடன் பகிர்ந்து கொள்ளமுனைகின்றனர்.
இக்கதை Shutter Island, Inception, Tenent போன்ற திரைப்படங்களை பார்த்த ஒரு அனுபவம். Linear திரைக்கதைகளை கொண்ட படங்களை பார்ப்பதில் இல்லாத த்ரில் இந்த திரைப்படங்கள் தருபவை. இரண்டு கண்ணாடிகளை எதிர் எதிரே வைத்து முடிவிலியான பிரதிபலிப்புகள் கொண்ட கதைகள் மிக சுவாரசியமானவை. மேல் சொன்ன படங்களை பார்த்து விட்டு வரும் ஒருவரின் ‘ ஒரு எழவும் புரியல சார்.’ ரக மன பிம்பத்தை இந்த கதையும் தருகிறது. Long shot இல் தாத்தா அல்லது குடும்பத்தோடு சிரிக்கும் end card தேவை படும் ரசனையாளர்கள் இது போன்ற கதைகளை வெறுக்கவும் கூடும்.
மனதின் ஊடே சென்று விளையாடும் கதைகள் எனக்கானவை.மறுவாசிப்பு புதிய திறவுகொல்களை கையில் தந்து புதிய கதவுகளை திறக்கும்.இந்த கதை முடியவில்லை. இது ஒரு முடிவிலி. இப்பொழுது நானும் மற்றும் பல வாசகர்களும் அந்த புத்தகத்தின் உள் இருக்கிறோம். அந்த காட்டு பங்களாவில், மேஜை யின் ரகசிய அறையில், புழுதி படற காத்திருக்கிறோம். இன்னொரு கை அதை தீண்டும் வரை.
நன்றி
அன்புடன்
அரவிந்தன்
இராஜை
அன்புள்ள ஆசிரியருக்கு,
நலம் தானே ..
அடுக்கடுக்கான பணிச்சுமை. அலைபேசி நிறுவனங்களுக்கான உச்சகட்ட தொழில்நுட்ப முன்னேற்பாடுகள், அலைவரிசை மற்றும் தொடர்பான திறனாய்வு, அதோடு நுண் மேம்படுத்தல்களுமென இந்த தொற்று காலம் கழிகிறது.
அம்மா, தம்பி என இரண்டு மாத இடைவெளியில் பேரிழப்புகள். சொல்லிவைத்தாற்போல மாரடைப்பு. பெரிய வடுக்களை விட்டுச்செல்லும் இழப்புகள், நிரந்தர அதிர்வுகளை தண்டவாளத்தில் விட்டுச்செல்லும் நீண்ட இரயிலென.
கிளை விட்டெழுந்தேயாகவேண்டிய பறவையின் கட்டாயத்துடன் படிக்க ஆரம்பித்த தொடரிது. பல்வேறு வகையிலும் மெய்யன் பிள்ளையை என்னுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.ஆழத்தில் புதைத்துவிட்டதாக இறுமாந்து கொண்டிருந்த பழியுணர்ச்சிகளும், ஏளனப்பார்வைகளும், குரூர எண்ணங்களும் அப்பா க்ரிஸ்ப் ஃபான்னி – உரையாடலிலும், விர்ஜினியா – தந்தை உரையாடலிலும், ஹெலனா – சாப்மான் உரையாடலிலும், மெல்ல நமக்குள் எழும்போது திகைப்பெழுகிறது.
முதல் ஐந்து அத்தியாயங்களை முடித்த பின்னர் மீண்டும் முதலிலிருந்து வாசித்து என்னைத் தொகுத்துக் கொண்டேன்.தேர்ந்த மனநல மருத்துவர் நம் ஆழங்களைத் தோண்டி, மென்மையான நீரில் கழுவி, கண்ணாடியாய் நம்மிடமே காண்பிக்கும் பதற்றமெழுகிறது. உச்சாணியாய் இரண்டு மூன்று இடங்களில் விருந்துகளில் பரிமாறப்படும் குரூரமான முட்களை முன்கூட்டியே ஊகிக்க முடிந்ததில் நிஜமாகவே அதிர்ந்துதான் போனேன்.
சித்த பிறழ்வு கொண்டவர்களை சிறுவயதில் கடக்கும்போது மிகச்சரியாக தாங்கள் சொன்ன ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது.வீட்டுக்கு வந்தவுடன் குற்றவுணர்வுடன் பிரார்த்தித்ததும் நடந்திருக்கிறது.
“அத்தனை உள்ளங்களிலும் ஒரு பகுதி சிதைந்திருக்கிறது. எஞ்சும் பெரும்பகுதி சிதைய வாய்ப்பு கொண்டதாக இருக்கிறது. மெல்லிய கோடு ஒன்றின் மேல்நடந்து செல்வது போல ஒவ்வொரு கணமும் சமநிலையை தேடியபடி சென்று கொண்டிருக்கிறோம். அந்த தரிசனம் திகிலூட்டுவது. “
மெல்லிய கோடொன்றின் மேல் நடந்து என்ற வார்த்தையைப் படிக்கும்போது உள்ளங்கால் இரண்டும் கூசி, பற்கள் கிட்டித்ததை இங்கே எழுதும்போதும் உணரமுடிகிறது. மெய்யனுக்கும் காணிக்குழந்தைகளுக்கும் முகிழ்க்கும் அந்த நெருக்கம் கண்ணீரை வரவழைப்பது. அம்மா ஆசிரியை என்பதால் முழாண்டு விடுமுறை முடியும் நாட்களில் சேரிப்பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்க்காய் அலைவாள். பலகட்ட வற்புறுத்தல்கள் செய்தும் பின்னடைவு ஏற்படும் கடைசி அஸ்திரமாக, எடுத்துக்கொடுக்கும் ஒரு பிஸ்கட் பொட்டலம் அந்தமுயற்சியை முன்னெடுப்பதைக் கண்டிருக்கிறேன். மெய்யனின் நெகிழ்தலை அதே தளத்தில் நின்று புரிந்து கொள்ளமுடிகிறது.
“காடு” அளித்த சித்தப்பிரமையை இங்கேயும் கொண்டாட முடிகிறது மீண்டும் மீண்டும். காடு, மழை பற்றிய பத்திகள் மட்டும் எத்தனை முறை வாசித்தாலும் உள்ளே பச்சையத்தை பெருக்குபவை. நீலிகள், யட்சிகள் ஈவ்லினாகவோ, ஹெலெனா வாகவோ, விர்ஜினியாகவோ தங்களில் எழுந்து நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். கல்கியின் ‘நந்தினிகளுக்கு’ இன்றளவிலும் தேவைகள் இருந்து கொண்டே இருக்கிறதுதானே ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும்…? இலண்டனின் பழைய வீதிகளில் நடந்திருக்கிறேன்; ஒவ்வொரு பாசம் பிடித்த கற்சுவரிலும் வரலாறு புதையுண்ட, மாயையான நாகரீகத்தை பின்தொடர்ந்து அடையாளமிழந்த பெண்களின் குருதியையுணரமுடிகிறது.
வெகுநேரம் சமநிலையை குலைத்துப் போட்ட படைப்பிது. யாரோ ஒருவரின் இருப்பையுணர்த்திக்கொண்டே இருந்தது அதன் வரிகள். தங்களின் சமகாலத்தில் வாழும் பேற்றைவிட வேறென்ன வேண்டுமென கண்ணீருடன் நினைத்துக்கொள்கிறேன்…!!
அந்த புத்தகத்தைப் பற்றி இப்படியெழுதத் தோன்றியது:
புதுமகவின்
பூவயிறென குழைந்த
வெதுவெதுப்புடன் குளிர்ந்து
அமர்ந்திருக்கிறதென் உள்ளங்கையில் அது.
நாட்படு நீரளாவலின்
உரசல்களில் பளபளப்பும்
வெண்மையும் வந்திருக்கக்கூடும்.
தட்டையாகவிருப்பதென்னவோ நிஜம்தான்
கோட்டைக்கெனவும்
அஸ்திவாரத்திற்கெனவும்
அது தேவைப்படுவதில்லைதான்..
கண்டெடுக்கும் குழந்தைக்கைகளில்
சிறிது நேரம் அந்த
குழைவையும் திசையில்லா
விரிந்திருத்தலையும்
தவிர அதுவிடம் வேறெதுவுமில்லை…!!
சிலவமயம் நீரிலானதோவென
மாயங்காட்டி நெகிழ்வதால்தான்
அது கூழாங்கல்லோ …?
அன்புடன்,
இ. பிரதீப் ராஜ்குமார்
அன்புள்ள ஜெ
நீண்டநாட்களுக்கு முன் வில்லியம் பீட்டர் பிளாட்டியின் எக்ஸார்ஸிஸ்ட் என்ற நாவலை வாசித்தேன். அதன்பின் நூறு பேய்ப் படங்களை பார்த்திருப்பேன். பல நாவல்களை வாசித்திருப்பேன். அதுபோல எந்த படைப்பும் பாதிக்கவில்லை.
ஏனென்றால் அந்நாவலில் பேய் என்ற நிகழ்வுக்கு எல்லா உளவியல் விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கும். உளவியலின்படி எல்லாமே சாத்தியம்தான் என்று காட்டப்பட்டிருக்கும். ஆனால் ஒரு சின்ன எட்ஜ் பேய்க்கு அளிக்கப்பட்டிருக்கும். இத்தனை விளக்கங்களுக்கு அப்பாலும் ஒரு சின்ன மிச்சம்.அந்த மிச்சம் அதன் லாஜிக்கலான தன்மையால் மிரளச்செய்தது.
அதேபோலத்தான் கதாநாயகி. பேய் அல்ல. ஸ்கிஸோஃபிர்னியாதான். ஆனால் ஸ்கிஸோப்ரினியாவே எதற்கோ மனித மனம் அளிக்கும் எதிர்வினைதான். அந்த எதிர்வினையை உருவாக்கும் ஏதோ ஒன்று உண்மையில் இருக்கிறது என்கிறது நாவல்
ராத்திரி அதைப் படித்தேன். ஒருமாதிரி கைகள் நடுங்கிவிட்டன
ஜெயக்குமார்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

