Jeyamohan's Blog, page 976

June 1, 2021

வெள்ளிநிலம்- கடிதம்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா,வணக்கம். தங்களின் “வெள்ளி நிலம்” நாவலைப் படித்து மகிழ்ந்தேன். சுட்டெரிக்கும் சூரிய வெயில் உள்ள திருச்சியில் இருந்து திபெத்திற்கும், லடாக்கிற்கும், பூடானுக்கும் தங்களின் எழுத்து மூலம் நான் நொடிகளில் சென்றதுதான் ஆச்சரியம். நான் மிகவும் மூழ்கி போன கதைகளில் இதுவும் ஒன்று.இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் நாக்போ என்கிற நாய் தான். மனிதர்களின் வாழ்க்கையைப் பார்த்து சலித்து கொள்ளும் அது நமக்குப் பல நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுக்கிறது.நோர்பா,பாண்டியன்,டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் கதாப்பாத்திரங்கள் மூலம் மனிதர்கள் தாங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடுவார்கள் என்பதை அறிந்து கொண்டேன். ‘மதம் என்பது ஒரு நம்பிக்கை என்ற நிலையை உடைத்து அது மக்களை ஒருங்கிணைக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் ஒரு வழிமுறை ‘ என்பதை எளிய முறையில் தாங்கள் வாசகர்களுக்கு விளக்கி உள்ளீர்கள். வரலாற்றில் ஆர்வம்உள்ள எனக்கு 5000 வருடங்களுக்கு முன்பு அழைத்து சென்ற இந்தப் புத்தகம் ஒரு விருந்தாக அமைந்தது.இந்த நாவலின் வாயிலாக மலைவாழ் மக்களின் உணவு முறைகள் குறித்து அறிந்து கொண்டேன்.அமைதிக் கோபுரம்பற்றிய தகவல் வியப்பளித்தது. சீனாவில் சீனர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று எண்ணி இருந்தேன். ஆனால்  பல ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் அங்கே உள்ளார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.புத்தகத்தின் சில பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் பெட்டிகளும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. கதையினைப் படங்கள் வாயிலாக காட்சிப்படுத்தியிருப்பது என்னை மிகவும் கவர்ந்து. சுவாரிசியமான கதையுடன் அரிய பல செய்திகளையும் அறிய செய்த வெள்ளி நிலம் நாவலை     அளித்ததற்குத்  தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.இப்படிக்கு,மீ. அ. மகிழ்நிலா,எட்டாம் வகுப்பு ,ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ,கூத்தூர்,திருச்சி -621216அன்புள்ள மகிழ்நிலா,மகிழ்நிலா அழகான பெயர். உன் அப்பாவு- அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்.வெள்ளிநிலம் உனக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி அளித்தது. மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது சுதந்திரம்தான். சுதந்திரம் என்பது மூன்றுவகைகளில் மனிதனுக்கு வருகிறது. ஒன்று, புதியபுதிய நிலப்பரப்புக்களில் அலையும்போது. இரண்டாவது, கற்பனைகளில் திளைக்கும்போது. மூன்று, புதிய விஷயங்களை அறிந்துகொள்ளும்போது. மூன்றுமே வெள்ளிநிலம் நாவலில் உண்டு. பூட்டான், திபெத், லடாக், ஸ்பிடிவேலி என புதிய நிலங்கள் உள்ளன. அவற்றில் கற்பனையில் அலையலாம். கூடவே புதியவற்றை கற்றுக்கொள்ளலாம்.எதிர்காலத்தில் ஏராளமான நீ புதிய கதைகளை வாசிக்க, புதிய அறிவுகளை பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.கூடவே புதிய நிலங்களுக்கு நிறைய பயணங்கள் செய்யவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். லடாக், ஸ்பிடிவேலி, பூட்டான் எல்லாம் எளிதாகச் சென்றுவரத்தக்க இடங்கள்தான்.வாழ்த்துக்கள்ஜெ

வெள்ளிநிலம்- சிறுமியின் விமர்சனம்

வெள்ளிநிலம்- கடிதம்

வெள்ளிநிலம் -குழந்தை வாசிப்பு

வெள்ளிநிலம் நாவல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2021 11:32

வெண்முரசு கதைகூறல்கள்-கடிதம்

அன்புள்ள ஜெ

வெண்முரசை முழுக்க வாசித்திருந்தாலும் அந்த கதைகளை எவராவது உணர்ச்சிகரமாக சொல்லும்போதோ நடிக்கும்போதோ வேறொருவகையான உணர்ச்சிகரம் உருவாகிறது. வெண்முரசின் கதையைச் சொல்லி பதிவிடப்பட்டிருந்தவற்றை நானும் என் குழந்தைகளுடன் அமர்ந்து கேட்டேன். வேறொரு உலகத்துக்குச் சென்றதுபோல் இருந்தது.

ஏனென்றால் மகாபாரதக் கதை என்னதான் எழுதப்பட்டாலும் அடிப்படையில் சொல்லும் கதைதான். செவியில் விழுந்து வளர்வதுதான். வாசிப்பு வேகம் கூடாத நம் குழந்தைகளுக்காக மொத்த வெண்முரசையும் கதையாகச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்

அத்துடன் சுபஸ்ரீயின் தனிநடிப்பு நெகிழச்செய்தது. நீலம் நாவலே காதில் இசையுடனும் உணர்ச்சியுடன் ஒலிக்கும் ஒரு பெரிய செய்யுள். அதை அப்படி டிரமாட்டிக் மோனோலாக் ஆக கேட்டது ஒரு அற்புதமான அனுபவம்

சாரதா

அன்புள்ள ஜெ,

மகாபாரதக் கதைகளை நாமெல்லாம் கதையாகவே கேட்டிருப்போம். வெண்முரசின் கதைகளை கதைகளாகக் கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன். நாவலை அப்படியே வாசித்துப் பதிவேற்றுவது வேறு. கதையாகத் திருப்பிச் சொல்லும்போது சொல்லுபவர்களின் பங்களிப்பும் அதில் உள்ளது.

அப்படிச் சொல்லிக் கேட்கும்போது கதை புதியவகையில் நம்முள் விரிகிறது. இந்த நோய்க்காலத் தனிமையில் அது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கிறது. ஆடியோ மட்டுமாக இருந்தாலும் சிறப்பான அனுபவம். உணர்ச்சிகரமான நடிப்புடன் சுபஸ்ரீ முன்வைக்கும் நீலம் பகுதி கண்ணில் நீர்வரச்செய்தது. நீலம் எப்போதுமே நெகிழச்செய்யும் நாவல். தமிழ் மொழியின் அழகை காதால்தான் நம்மால் முழுமையாக ரசிக்கவே முடியும்

அர்விந்த்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2021 11:31

‘நீர்க்கோலம்’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 14ஆவது நாவல் ‘நீர்க்கோலம்’. நீரால் வரையப்பட்ட கோலம் அல்லது நீரில் வரையப்பட்ட கோலம் என இரண்டு விதங்களில் இந்தத் தலைப்புக்குப் பொருள்கொள்ளலாம். எல்லாச் சிக்கல்களும் நீர்க்கோலத்தைப் போலவே கணநேரத் தோற்றம்தான்; நிலைத்து நிற்காது; எதுவும் கடந்துபோகும் என்பதனைக் குறிப்புணர்த்தும் வகையில் இந்த நாவலுக்குரிய தலைப்பு அமைந்திருக்கிறது.

என்னைப் பொருத்தவரை இந்த ‘நீர்க்கோலம்’ என்பது, கண்ணீர்க்கோலமும் செந்நீர்க்கோலமும்தான். இந்த நாவலில் பெண்களின் அக, புறக் கண்ணீத் துளிகளுக்கு இணையாகவே ஆண்களின் அகக் கண்ணீரும் புறச் செந்நீரும் இடம்பெற்றிருக்கின்றன. நாவலைப் படித்து முடித்ததும் என் நினைவில் ததும்பிய திருக்குறள் இதுதான்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை(திருக்குறள், குறட்பா எண் : 555) 

பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கையை முழுமையாக விவரிக்கும் இந்த நாவலின் இடைவெட்டாக, நிஷத இனக்குழு மக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது.

இனக்குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, பேரரசுகளாக எழ முயலும் தன்மையை இந்த நாவல் முழுக்கவே காணமுடிகிறது. குலக்குடிகளின் வரலாறும் பூசலும் இந்த நாவலில் நிலத்தடி வேராக, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, முயங்கியுள்ளன.

தர்மரைப் போலவே மன்னர் நளனின் வாழ்க்கையும் அமைந்துவிட்டதை இந்த நாவலில் இணைப் பிரதியாகவே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதிச் சென்றுள்ளார். திரௌபதியைப் போலவே தமயந்தியின் வாழ்வும் இருந்ததை உணரமுடிகிறது.

வெறுமனே பாண்டவர்களைப் பற்றி மட்டும் பேசாமல், நளன்-தமயந்தியின் வழியாக இந்த வாழ்வில் மானுடர்கள் தங்களின் விழைவுகளால் அடையும் நன்மையையும் தீமையையும் பற்றிய பெருஞ்சித்திரத்தை எழுத்தில் வரைந்து காட்டியுள்ளார் எழுத்தாளர்.

பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கையில் மாற்றுருகொண்டு வாழவேண்டியுள்ளது. ‘மாற்றுரு’ என்பது, ‘உடலையும் உடல்மொழியையும் மாற்றிக்கொள்வது மட்டுமல்ல; உள்ளத்தையும் மாற்றிக்கொண்டு நாம் பிறிதொரு நபராக, முற்றிலும் மாறி வாழ்வதே!’ என்ற கருத்தை இந்த நாவலில் காணமுடிகிறது.

தமனர் உரு, மாற்றுரு பற்றிக் கூறும்போது,

“உருவென்பது, ஓர் ஆடையே. உருவமைந்து அறிவதன் எல்லையை மாற்றுருவெடுத்து கடக்கலாம். பிறிதொன்றென ஆகாமல் எவரும் பிறிதெதையும் அடையவியலாது

என்று தெரிவித்துள்ளார்.

பாண்டவர்கள் இந்தக் கருத்தை அடியொற்றி, தம்மை முற்றிலும் மாற்றிக்கொள்கிறார்கள். புதிய நிலம், புதிய ஆளுமை, புதிய வாழ்க்கை என அவர்கள் தங்களை அகத்திலும் புறத்திலும் மறுபுனைவுசெய்து கொள்கிறார்கள்.

அரண்மனைச் சேடியாகவும் மாயங்கள் பல அறிந்தவளாகவும் சைரந்திரி என்ற பெயரில் திரௌபதியும் சூதாட்டத்தில் வல்லவராகவும் நூல் பலகற்றவராகவும் அறிவார்ந்த சொல்லாளுமை மிக்கவராகவும் குங்கன் என்ற பெயரில் தர்மரும் அடுமனையாளராகவும் மற்போர்வீரராகவும் வலவன் என்ற பெயரில் பீமனும் நாட்டியக் கலையும் போர்க்கலையும் அறிந்த திருநங்கையாகப் பிருகந்நளை என்ற பெயரில் அர்சுணனும் குதிரைகளைப் பழக்கும் நுட்பங்கள் அறிந்த திறமைமிக்க சூதராகக் கிராந்திகன் என்ற பெயரில் நகுலனும் சமணப்படிவராக அரிஷ்டநேமி என்ற பெயரில் சகதேவனும் மாற்றுரு கொள்கின்றனர். ஓர் ஆண்டுவரை கலைத்துக்கொள்ள முடியாத மாபெரும் அக, புற ஒப்பனையாகவே அவர்களுக்கு இந்த மாற்றுருக்கள் அமைந்துவிடுகின்றன.

பெரும் ஆளுமைகொண்ட பெண்களின் விழைவுகள் பெரும்பாலும் ஒரேமாதிரியாவே இருக்கின்றன. அவர்களின் ஒட்டுமொத்த விழைவுகளின் உச்சம், ‘பாரதவர்ஷத்தின் மேல் இடக்காலை வைக்கவேண்டும்’ என்பதாகவே இருக்கிறது. தேவயாணி, தமயந்தி, சத்தியவதி, குந்திதேவி, திரௌபதி, மாலினிதேவி வரிசையில் இனி உத்தரையும் வந்து இணைந்துவிடக் கூடும்.

அனைத்து ஆண்களின், பெண்களின் கனவுகளைப் பற்றிக் கூறவிழையும் எழுத்தாளர் கதைமாந்தரின் கூற்றாக, ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் பின்வரும் ஒற்றைப் பத்தியில் சொல்லிவிடுகிறார்.

கனவுகள் முழுக்க நிறைவேறும் வாழ்க்கை தேவர்களுக்கும் அமைவதில்லை. என் கனவுகளில் ஒரு பகுதி நிறைவேறியது. ஆகவே , எஞ்சியவற்றை அடைந்துவிடலாமென்று எண்ணினேன். இப்போது, ‘கனவுகளைத் துரத்துவதைப்போல வாழ்க்கையை வீணடிப்பது பிறிதொன்றில்லை’ என்று தோன்றுகிறது. கனவுகளில் அமர்ந்து திளைத்து மகிழ்ந்து அவற்றிலேயே மூழ்கி மறைய முடியுமென்றால் அதுவே பெருங்கொடை ”.

நளன் – புஷ்கரன் சூதாட்ட நிகழ்வுகள் பாண்டவர் – கௌரவர் சூதாட்ட நிகழ்வினை நமக்கு நினைவூட்டிச் செல்கின்றன. விராட நாட்டின் பேரமைச்சர் ஆபர் ‘சூதாட்டம்’ குறித்து,

 “தன்னைக் கடந்து சூதாடுபவனை நாற்களம் தன்னில் ஒரு காய் என அமர்த்திவிடுகிறது. அவன் ஆடுவதில்லை, ஆடப்படுகிறான் என அவன் அறிவதே இல்லை. புவியின் இருள்நிழல் ஊடாட்டங்களனைத்தையும் பரப்பிக் காட்டும் வல்லமை கொண்டிருப்பதனால் ஒருவன் வாழ்நாள் முழுமையையும் இக்களத்தை நோக்கிக் குனிந்தே கழித்துவிடமுடியும். அரசே, சூதில் மறந்து மீண்டெழுந்தவர் அரிதிலும் அரிது. ஏனென்றால், ‘சூது’ வெளியே நிகழ்வது மட்டும் அல்ல. விரிக்கப்பட்டிருக்கும் இக்களம் ஆடுபவனின் அகம். அகத்தை இப்படி ஏதேனும் புறப்பொருளில் ஏற்றிக்கொள்ளாமல் நம்மால் பார்க்க முடியாது. அந்தணரின் வேள்விச்சாலையும் நிமித்திகர்களின் பன்னிருகளமும் வணிகர்களின் துலாக்கோலும் உழவர்களின் வயலும் உள்ளமே என்றறிக! நாற்களமென இருண்டும் ஒளிர்ந்தும் முடிவிலியை மடித்துச் சுருட்டிவைத்து இதோ பரவியிருப்பது உங்கள் இருவரின் உள்ளம். இக்காய்களை நகர்த்தி நகர்த்தி நீங்கள் கண்டுபிடிப்பது உங்களையேதான்.”

என்கிறார்.

கரியோன் நளனிடம் கூறுவதையும் இதனோடு இணைத்து நோக்கலாம்.

“எல்லாச் சூதாட்டங்களும் பிறிதொரு பெருஞ்சூதாட்டத்திற்குள் நிகழ்கின்றன. ஒன்றின் நெறியை அது அமைந்திருக்கும் பிறிதின் நெறி கட்டுப்படுத்துகிறது. சூதிற்குள் சூதிற்குள் சூதென்று செல்லும் ஆயிரம் பல்லாயிரம் அடுக்குகள். நீங்கள் ஆடியது ஒன்றில். அதன் உச்சமெனப் பிறிதொன்றில்.”

இந்தப் போக்கினைத்தான் பாண்டவர் – கௌரவர் சூதாட்டத்திலும் நம்மால் காணமுடிந்தது. சகுனி கணிகரோடும் மாற்றுருக்கொண்ட தர்மர் குங்கனாக விராட மன்னருடனும் ஆடும் களியாடலாக ஆடும் சூதாட்டமும் இதைப் போன்றதே என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

சகுனி தனித்து தனக்குத் தானே ஆடும் சூதாட்டமும் இதற்கு நிகரானதுதான். சூதாட்டத்தில் நமக்கு மறுதரப்பாக ஊழை அமரவைத்து, அதனோடு ஆடி ஆடி நம்மை நாமே கண்டடைவதே சூதின் பெரும்பின்விளைவு.

இந்த நாவலில் ருத்ரன் கூறும் ஒரு தொடரை நான் ஒட்டுமொத்த உலகுக்குமே சொல்லப்பட்டதாகவே கருதுகிறேன்.

“முறைமீறி முடிசூடுபவர்கள் ஒருபோதும் அறத்தில் நின்றதில்லை. முதற்பிழை தொடர்பிழையேதான்.”

இந்தத் தொடரோடு விராட நாட்டின் பேரமைச்சர் ஆபர் கூறுவதனையும் இணைத்து நோக்கலாம்.

“மீண்டும் மீண்டும் இந்நிலத்தில் உடன்பிறந்தார் நிலத்திற்கெனப் பூசலிட்டிருக்கிறார்கள். பின்னர் விண்ணேகி அங்கே ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டிருக்கிறார்கள். ஆயினும் குருதிப் பூசல் அடங்கவில்லை

பாரதவர்ஷத்தில் தோன்றிய எண்ணற்ற இனக்குழுக்களுக்கும் சிறிய அரசுகளுக்கும் பேரரசுகளுக்கும் குறிப்பாகக் கௌரவர்களுக்கும் இது பொருத்தமுடையதுதான்! ஆனால், இந்த நாவலில் குருதிப் பூசல் புஷ்கரன், கீசகன், பீமத்துவஜன் ஆகியோரை உள்ளடக்கியே நிகழ்கிறது. இவர்களையே கலித் தெய்வம் தன் ஊர்தியாகத் தேர்ந்தெடுக்கிறது என்றும்கூடக் கருதலாம்.

விராட நாட்டின் பேரமைச்சர் ஆபர் விராட நாட்டு இளவரசன் உத்தரன் கௌரவர்களோடு போர்புரிந்தமை குறித்த ஒற்றுச் செய்தியைத் தொகுத்துக் கூறும்போது, ‘பொருபுலி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார்.

ஏழு செய்திகள் வந்துள்ளன. எப்படி போர் நிகழ்ந்ததென்றே விரிவாக எழுதியிருக்கிறான் ஓர் ஒற்றன். அனலைத் துணைகொண்டு வென்றிருக்கிறார்கள். நம் இளவரசர் களத்தில் ‘பொருபுலி’ என நின்றிருக்கிறார் …”

‘பொருபுலி’ என்ற இந்தச் சொல்லாட்சி, இந்த இடத்தில் மிகச் சிறந்த உவமைச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ‘பரணி’ இலக்கியத்தில், தன்னிகரற்ற இலக்கியமாகக் கருதப்படும் ‘கலிங்கத்துப் பரணி’யில்,

 “பொருபுலி புலியொடு சிலைத்தபோல்

       பொருபட ரொடுபடர் சிலைக்கவே

 அரியினொ டரியினம் அடர்ப்பபோல்

     அரசரும் அரசரும் அடர்க்கவே.

(ஜெயங்கொண்டார், கலிங்கத்துப்பரணி, பாடல் எண் – 408)

என்ற அடிகள் இடம்பெற்றுள்ளன.

‘எதிரெதிரே நின்று போர் புரிந்தனர்’ என்ற செய்தியைப் ‘பொருபுலி புலியோடு சிலைத்தபோல’ என்ற உவமையால் கூறியிருக்கிறார். உத்தரன் துரியோதனிடமும் கர்ணனிடமும் துச்சாதனனிடமும் எதிர்நின்று அம்பை எய்து, வெற்றி பெறுகிறான். எழுத்தாளர் ‘பொருபுலி’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருப்பது, வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

இந்த நாவலில், பல இடங்களில் உளவியலை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் சான்றுக்காக இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

சான்று – 1

பீமன் வலவனாக மாற்றுருவில் இருக்கும்போது, கீசகனால் அழைத்துவரப்பட்ட ஜீமுதனிடம் மற்போரிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுநாள் வரை களிப்போராக வலவனிடம் மற்போரிட விரும்பிய கீசகன் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தானே மனத்தளவில் வலவனாக மாறி ஜீமுதனிடமும் பின்பு ஜீமுதனாக மாறி வலவனிடமும் போரிடுகிறான். இந்த நிலை மாறி மாறி அவனுள் எழத் தொடங்கியது.

“கீசகன் முதலில் வலவனாக நின்று ஜீமுதனிடம் போரிட்டுக் கொண்டிருந்தான். எப்போதென்று அறியாமல் ஜீமுதனாக மாறியிருந்தான். இருவரும் உருண்டு, புரள்கையில் ஒருகணம் அவனாகவும் மறுகணம் இவனாகவும் உருமாறி ஒன்றில் சென்று நிலைத்தான்”.

சான்று – 2

தருமர் குங்கனாக மாற்றுருவில் இருக்கும்போது, சகுனியைப் போலவே தோற்றமளிக்கிறார். காரணம், பாண்டவர்கள் ஒருவருக்கொருவர் யார் எந்த மாற்றுருவை ஏற்றால் பொருத்தமாக இருக்கும் என்பது பற்றிக் கூடிப்பேசுகின்றனர். தருமர் மேற்கொள்ள வேண்டிய மாற்றுரு குறித்துத் தரௌபதி கூறுகிறாள்.

சொல்கிறேன் , நான் சொல்வதில் நால்வரில் எவருக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் இதை பிழையென்றே கொள்வோம் என்றாள். பதைப்புடன் மணலை அள்ளியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் தருமன். சகுனி என்றாள் திரௌபதி. நாற்களத் திறவோன். தீயுரை அளிப்போன். அரசனின் ஆழத்திலுறையும் ஆணவத்தையும் கீழ்மையையும் கருக்களாக்கி ஆடுவோன் என்றாள் . “ இல்லை என்றபடி தருமன் பாய்ந்தெழுந்தார். இது வஞ்சம். என் மேல் உமிழப்படும் நஞ்சு இது. ஆனால் அவர் தம்பியர் நால்வரும் அமைதியாக இருந்தனர். சொல் இதுவா உண்மை ?” என்று தருமன் கூவினார். ஐவரும் சொல்லில்லாமல் நோக்கி அமர்ந்திருக்க , “ இல்லை! இல்லை! என்றார். பின்னர் தளர்ந்து மணலில் விழுந்து தெய்வங்களே என்றார்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் தருமர் சகுனியைப் போலவே மாற்றுருவை ஏற்கிறார். அவர் உள்ளத்தாலும் சகுனியாகவே தன்னை மாற்றிக்கொள்கிறார். அந்த உளமாற்றம் அவரின் உடலிலும் வெளிப்படத் தொடங்குகிறது. இதனை உற்றுநோக்கியவர் விராட நாட்டு மன்னர்தான். அவர் இது பற்றிக் குங்கனாக மாற்றுருவில் தருமரிடம்,

 “ எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு , குங்கரே. இப்போது நீங்கள் அசைந்து ஒலியெழுப்புகையில் உறுதிப்பட்டது. உங்கள் அசைவுகளை மட்டும் கண்டால் நீங்கள் புண்பட்டு உடற்குறை கொண்ட ஒருவர் எனத் தோன்றும் என்றார். குங்கன் என்ன ?” என்றான் வியப்புடன். ஆம் , உங்கள் இடக்காலில் புண் எழுந்து முடமானதுபோல. அதை நீங்கள் மாளா வலியுடன் அசைத்து வைப்பதாகவே தோன்றும் என்றார். குங்கன் புன்னகைத்து நாம் அதை அறியவோ பகுக்கவோ இயலாது என்றான்.

சகுனியின் காலில் ஓநாய் கடித்ததால் புண் ஏற்பட்டு,  அவர் காலம் முழுக்கத் தன் காலைத் தாங்கி தாங்கி எடுத்துவைத்து, வலியோடு நடக்கிறார். சகுனியைப் போலவே மனத்தளவில் மாறிவிட்ட தர்மருக்கு இதே வலியும் நிலையும் மனத்தளவில் மட்டும் ஏற்பட்டுவிடுகின்றன. அவை, புறத்தில் ஓர் அசைவாக மட்டுமே பிறருக்குத் தெரிகின்றன. ‘உள்ளம் தான் முதலில். அது எப்படியோ அப்படியே உடலும் மாறும்’ என்ற கருத்து இங்குப் பொருத்தமுடையதாக உள்ளது.

‘கானாடல்’ என்ற தலைப்பில் அமைந்துள்ள பகுதியும் அதனைத் தொடர்ந்து வரும் சில பகுதிகளும் உளமயக்கக் கனவுகளால் மாந்தர்கள் கொள்ளும் அக எழுச்சியை வெளிப்படுத்தியுள்ளன. ‘தம் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்தவரைக் கனவில் சந்தித்தல், விரும்பியேற்றல்’ என்ற நிலையில் அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆழ்மன வெளிப்பாடுகளைக் கனவுத் தன்மையாக எழுத்தில் கொண்டுவரும் எழுத்தாளரின் சொற்தேர்ச்சி வியப்பளிப்பதாக உள்ளது.

இந்த நாவலில், நாகமும் நாகவிஷமும் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, நாவல்மாந்தர்களின் உளமாற்றத்தின் போதும் உளமயக்கத்தின் போதும் உருமாற்றத்தின் போதும் (தமயந்தி முதுமையுருவைப் பெறுதல்) நாவலின் திருப்புமுனையான காட்சித் தருணங்களிலும் (கரவுக்காட்டுக் காட்சிகள்) நாகங்கள் வருகின்றன. எழுத்தாளர் இந்த நாவலில் நாகங்களைக் குறியீடாகவே பயன்படுத்தியுள்ளார். ‘நாகம்’ என்பது, தோன்றாத் துணையாகவும் தீமையை அழிக்கும் பேரறத்தின் சினமாகவும் குறிப்புணர்த்தப் பட்டுள்ளது.

‘நடனக்கலை’, ‘சமையற்கலை’, ‘குதிரை, யானையைப் பழக்குதல் கலை’, ‘இசைக்கலை’, ‘நிமித்த நூற்கலை’ போன்றவற்றில் உள்ள  செய்திகள் இந்த நாவலில் எழுத்தாளரின் பார்வையிலும் கதைமாந்தர்களின் பார்வையிலும் நீண்ட விவரணைகளோடு இடம்பெற்றுள்ளன.

சான்றாக, அர்சுணன் திருநங்கையாக உருமாறி, பிருகந்நளை என்ற பெயரில் உத்தரைக்கு நடன ஆசிரியராக வருகிறார். நடனக்கலையைக் கற்பிக்கும் காட்சிகளில் பெரும்பாலும் ‘நடனக்கலை’ பற்றிய நீண்ட விளக்கங்களை எழுத்தாளர் கொடுத்திருக்கிறார்.

நளனைப் பற்றிக் கூறும்போது, சமையற்கலையும் புரவிப்பழக்குதல் கலையும் பற்றிய நீண்ட விளக்கம் இடம்பெறுதல் இயல்புதான். காரணம், நளன் சமையற்கலையிலும் புரவிப்பழக்கும் கலையிலும் கைத்தேர்ந்தவர். இந்த நாவலில் அரிஷ்டநேமி என்ற பெயரில் மாற்றுருக்கொண்ட சகதேவன் நிமித்தநூல் கற்றவராகவும் அருகப்படிவராகவும் இடம்பெற்றுள்ளார். அதனால், அவர் சார்ந்த கதைப்பகுதியில் நிமித்தநூல் பற்றிய விரிவாக செய்திகள் இடம்பெற  வேண்டியுள்ளது.

கதைக்களம், கதைமாந்தரை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தகவல்கள் மிக விரிவாகக் கூறப்படுவதால், இவை நாவலின் கதையோட்டத்தைச் சிதைக்கின்றனவா? என்றும் வாசகருக்குத் தோன்றும். அதற்கு விடைகாண வேண்டுமானால், நாம் இந்தப் பகுதியைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அரங்கேற்றுக்காதையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

கோவலன் கலைரசிகன் என்பதாலும் மாதவி ‘தலைக்கோல்’ எய்திய நாட்டிய மங்கை என்பதாலும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ‘ஆடல்கலை’ பற்றிய விரிவான தகவல்களை அரங்கேற்றுக்காதையில் கொடுத்திருக்கிறார்.

ஆடற்கலையின் இயல்பையும் இசைக்கலையின் இயல்பையும் ஆடலரங்கேற்ற மேடையின் அமைப்பையும் அவற்றின் இலக்கணத்தையும் மாதவி பதினோருவகை ஆடலையும் அவிநயம் முதலான செய்திகளையும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். நாட்டியத்திற்கு வேண்டிய ஆடலாசிரியன், இசையாசிரியன், நாட்டியக்கவிஞன், தண்ணுமையாசிரியன், குழலாசிரியன், யாழாசிரியன் ஆகியோரின் தகுதிகள் பற்றியும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

“நடனத்தை முறையாகக் கற்று, அரங்கேற்றுவதற்கு ஒரு நடனப்பெண் பெற்றிருக்க வேண்டிய அனைத்து இலக்கணங்களையும் ஆட்டுவிக்கவல்ல ஆடல் ஆசிரியன் தகுதிகளையும் நடனத்திற்கு உறுதுணையாக அமையும் இசையாளர்களின் இலக்கணங்களையும் மிக நுட்பமாகக் கூறுகிறது” (ஆய்த எழுத்து, ஜூன் 2015, ப. 103) என்கிறார் து. பத்மபிரியா,

அரங்கேற்றுக் காதையில் இளங்கோவடிகள் அளிக்கும் செய்திகள் அனைத்தும் எந்த வகையிலும் சிலப்பதிகாரக் காப்பியக் கதையைச் சிதைக்கவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். பெருங்காப்பியத்தில் கதையோடும் கதைமாந்தரோடும் தொடர்புடையன பற்றிய தகவல்களை விரிவாகக் கொடுப்பது காப்பிய ஆசிரியரின் இயல்புதான்.

அந்த நோக்கில் நாம் ‘நீர்க்கோலம்’ நாவலை அணுகினால், எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘நடனக்கலை’, ‘சமையற்கலை’, ‘குதிரையைப் பழக்குதல் கலை’ போன்றன பற்றிய தகவல்களை விரிவாக நாவலில் அளித்துள்ளமை ‘பெருநாவல்களுக்கே உரிய இயல்பு’தான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

இனி, ‘வெண்முரசு’ தொடர் நாவல்களைப் போன்ற ஆகப்பெரிய, ஆகச்சிறந்த நாவல்களை எழுதவுள்ள எழுத்தாளர்கள், இதுபோன்ற மிகுந்த உழைப்பை எழுத்தாளர்களிடம் கோரும் உத்திகளைப் படைப்பில் புகுத்தினால், அவர்களின் மீதும் அவர்களின் படைப்புகளின் மீதும் வாசகர்களின் கவனம் கூடுதலாகக் குவியும்.

 

முனைவர் . சரவணன், மதுரை

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2021 11:30

’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021

குமரகுருபரன் அஞ்சலி, குமரகுருபரன் குமரகுருபரன் விருது – முழுப்பதிவுகள்

2021 ஆண்டுக்கான குமரகுருபரன் விருது நெல்லையைச் சேர்ந்த கவிஞர் முகம்மது மதாருக்கு அறிவிக்கப்படுகிறது. இவ்வாண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதனால் பொதுநிகழ்வு நடத்தமுடியாத சூழல். குமரகுருபரனின் பிறந்தநாளான ஜூன் 10 அன்று ஒரு சூம் கலந்துரையாடல் வழியாக முகம்மது மதாருடன் உரையாடி விழாவை நடத்தலாமென எண்ணுகிறோம்.

குமரகுருபரன் தமிழின் புதுவீச்சுடன் எழுந்து வந்த கவிஞர். 2016ல் மறைந்தார். 2017 முதல் அவருடைய நினைவாக குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை இளங்கவிஞர்களுக்கான விருதுகள். இதுவரை சபரிநாதன் [2017], கண்டராதித்தன் [2018], ச.துரை [2019], வேணு வேட்ராயன் [2020] ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இவ்வாண்டு விருது பெறும் முகம்மது மதார் மதார் என்றபேரில் எழுதிவருகிறார். வெயில் பறந்தது என்னும் கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது. நெல்லையைச் சேர்ந்தவர். இப்போது கிராமநிர்வாக அதிகாரியாக பணியாற்றிவருகிறார்.

 

குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு

 

கண்டராதித்தன் விருது விழா -முத்து

 

ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது

வேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு

 

குமரகுருபரன் நினைவுகள் குமரகுருபரன் இறந்தவனின் இரவு நல்லதோர் வீணை தொடுதிரையும் கவிதையும் வலியிலிருந்து தப்ப முடியாத தீவு மீறல்களின் கனவு

 

நெல்லையில்… மதார் கவிதை வெளியீட்டு விழா – கடிதங்கள் மதார் கவிதை வெளியீட்டு விழா- கடிதங்கள் 2 புன்னகையின் தரிசனம் – பாவண்ணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2021 06:50

May 31, 2021

“சயன்ஸ்!”

”கடவுளே! என் பிரேயர் வந்து சேந்துச்சுன்னா ஒரு அறிவிப்பு குடு”

எழுபதுகளில் நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது கண்ணனின் பார்பர்ஷாப்பில் ஒரே கூட்டம். பரவசக்குரல்கள். நான் அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கையில் எதிரே வந்த அம்புரோஸ் பெருவட்டரிடம் “என்னவாக்கும்? என்ன காரியம்?” என்றேன்

“சயன்ஸு!” என்று அவர் சொன்னார். “காலம் கெட்டளிஞ்சு நாசமத்து போவுது. எல்லாம் இந்த சயன்ஸினாலேல்லா?”

சயன்ஸை பார்க்க நான் ஓடிச்சென்றேன். கண்டேன். அது ஓர்  இரண்டுமடக்கு குடை. துபாயிலிருந்து அச்சுநாயரின் மகன் மணிகண்டன் கொண்டுவந்தது. அவர் அதை வெற்றிலைபாக்கு வாங்க வந்தபோது கொண்டுவந்திருந்தார். அறிவியலின் தூயவடிவம். ஒரு தொழில்நுட்பச் சாதனை!

தொழில்நுட்பத்தின் எதிர்காலம்!

அதை நானும் தொட்டுப் பார்த்தேன். கூட்டத்திலிருந்தவர்கள் விதவிதமாக மடித்து பார்த்தனர். “வௌவால் மாதிரில்லாடே இருக்கு!”என்ற வியப்பொலி. அக்கணமே அது வௌவால்குடை என்று பெயர் பெற்றது. உண்மையிலேயே அதன் மடிப்பு வௌவாலின் கால் அல்லது கை அல்லது சிறகு மாதிரித்தான் இருந்தது. நாய்க்குட்டி மாதிரியான பாவமான முகம்தான் இல்லை.

முறைவைத்து அதை வாங்கி மடித்து விரித்து பார்த்தனர். அது டப் என விரிந்தபோது “சிறகடிக்குது” என்று குரல். “எளவு கையிலே அடிச்சுப்போட்டுதே… வெசமுண்டாலே?” என்று ஐயங்கள்.

”இதை இப்டியே சஞ்சியிலே வைச்சுகிடலாம்”என்று அச்சுநாயர் சொன்னார். “அங்கெல்லாம் வீடுகளை இதேமாதிரி சுருக்கி மடக்கி சஞ்சியிலே வைச்சு கொண்டு போறாங்களாம். எனக்க மவன் சொன்னான்… சயன்ஸு போற போக்கே!”

”நீ செஞ்சதெல்லாம் ஃபேஸ்புக் அக்கவுண்டிலேயே இருக்கு, பாத்துக்கிடறேன்”

“அமெரிக்காவிலே பஸ்ஸையில்லா இப்டி சுருட்டி மடக்கி வீட்டுக்குள்ள ஓரமா கொண்டுபோயி வைக்கான்!” என்று நல்லதம்பி சொன்னார்.

அச்சுநாயர் குழம்பிவிட்டார். அதை எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை. மறுத்தால் தான் சொன்னதும் மறுக்கப்படும். ஏற்றால் தான் சொன்னது சின்னதாக ஆகிவிடும்.

சகாவு ஸ்ரீகுமார் “ரஷ்யாவிலே ஏரோப்பிளேனை சுருக்கி வைச்சிருக்கான்… ஆயிரம் ஏரோப்ளேனை ஒரு வீட்டுக்குள்ளே கொண்டுபோயி அடுக்கி வைச்சிருவான். வேணுங்கிறப்ப எடுப்பான். அதக்கண்டு பயந்துல்லாவே அமெரிக்கா அந்தால பொத்திக்கிட்டு இருக்கு” எங்களூரில் சகாவு சொல்வதே அறிவியக்கத்தின் அறுதிச் சொல்.

வாரிசு

ஆனால் என்னால் நவீனத் தொழில்நுட்பத்தின் அந்த வெற்றியை மறக்கவே முடியவில்லை.தங்கையா நாடாரிடம் சொன்னேன். “அந்தக்காலத்திலே இங்கே ஓலைக்குடையாக்கும். அப்பதான் இந்தச் சீலைக்குடை வந்தது. மடக்கி கக்கத்திலே வைக்குத குடை. காக்காய் சிறகு விரிக்கிற மாதிரி விரிஞ்சுகிடும். அதனாலே அதுக்கு காக்காக்குடைன்னாக்கும் அப்ப பேரு. காக்கா போயி வௌவால் வந்திருக்கு…”

தங்கையாநாடார் தொழில்நுட்பம் அறிந்தவர். வால்வ் ரேடியோவை பழுதுபார்ப்பார். ஏதாவது கேள்விகேட்டால் பேசுவதற்குமுன் அப்பு அண்ணா “ம்ம்ம்ம் ஆஆஅ…ங்ங்ங்ங்” என நீண்ட ஒலியெழுப்பி மெல்ல சொல்லெடுப்பதைக் கண்டு நான் வியந்தபோது “அவன் தலைக்குள்ள வால்வு சூடாகி வரணும்லா?”என்றார். நான் நெடுநாட்கள் மனித மண்டைக்குள் வால்வுகள் உண்டென்றே நம்பியிருந்தேன்.

எங்கள் தமிழய்யா அறிவியல் கிறிஸ்தவர். ஏசு கன்னி வயிற்றில் பிறந்தது முதல் தண்ணீரை ஒயினாக்கி, தண்ணீர்மேல் நடந்து, உயிர்த்தெழுந்தது வரை அறிவியல்பூர்வமானவை என்றும் மற்றவை மூடநம்பிக்கை என்றும் நம்புபவர்.”ஏலே சிவனுக்க தலையிலே நிலா இருக்கு. நிலாவிலே கிறிஸ்தவன் காலை வைச்சாச்சு. கிறிஸ்தவன் சவிட்டின தலையாக்கும்லே சிவனுக்கு!” என்பார். சிவனை வெள்ளைக்காரன் மிதித்தமைக்காக நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.

நிலாவில் ஆம்ஸ்ட்ராங் போன பிறகு கிராமங்களில் அறிவியல்புரட்சி உருவானது. பிள்ளைகள் சயண்டிஃபிக் என்ற சொல்லுக்காக எதையும் செய்தார்கள். எழுபதுகளில் சயண்டிபிக் பட்டன் என்று ஒன்று வந்தது. ஜாக்கெட்டில் வைத்து தைப்பது. அழுத்தினால் சட்டென்று ஒட்டிக்கொள்ளும். இழுத்தால் வரும். “நாம எப்ப மூடுதோம் எப்ப திறக்கிறோம்னு அதுக்கு தெரிஞ்சிருக்கு பாரேன்” என்றார் சண்முகம் பிள்ளை மாமா. கணேசண்ணன் சோகமாக “சிலசமயம் நல்ல நேரத்திலே புரிஞ்சுகிடாம சள்ளை பண்ணிப்போடும்”என்று சொன்னார்

ஊரடங்கின் கடைசித் தொழில்நுட்பர்

பின்னர் ஸிப் வந்தது. “வலிச்சா திறக்கும் மறுக்கா வலிச்சா மூடிரும்” கிராமங்களில் பரபரப்பு. “முதலைக்க வாயி மாதிரி இருக்கு” என்று உவமை. அதன் தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ள கடுமையான ஆராய்ச்சிகள் நடந்தன. கைப் பையில் சிப் வைத்துக்கொள்ள பெரும் ஆர்வம் இருந்தது.

“ஒண்ணுமில்ல காந்தம் வச்சிருக்காண்டே…”

ஆனால் பலர் மறுத்தனர். “அது சயன்ஸாக்கும். சமயங்களிலே மக்கர் பண்ணிப்போடும். திறக்கல்லேன்னா வெள்ளக்காரன விளிக்க முடியுமாலே?”

“ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் பண்ணின தக்காளியிலே என்னமோ பயங்கரமா தப்பா போயிடிச்சு” 

பெரும்பாலானவர்க்ள் பாண்டில் ஸிப் வைத்துக்கொள்ள அஞ்சினர். பலருடைய மென்நுனிகள் அதில் சிக்கி கதறி கண்ணீர்விட்டு அப்படியே ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல நேரிட்டபின் “அங்க வேண்டாம் கேட்டியளா? இனி வாழ்க்கைக்கு இருக்குத ஒற்றை ஒரு நம்பிக்கை அதாக்கும்”. எண்பதுகளில் ஜீன்ஸ் வருவது வரை அங்கே மட்டும் ஜிப் இல்லை.

மூன்றாம்பிறையிலோ என்னவோ கமல் சில்க் ஸ்மிதாவின் உடையின் நீண்ட ஸிப்பை திறப்பார். unzip என எங்கே படித்தாலும் அது நினைவில் வந்து தொலைகிறது. winzip என்று இன்னொன்றும் கண்ணில் படுகிறது. கமல் செய்தது அதுதானோ?

”குழந்த நல்லா வளந்திட்டிருக்கு. நீங்க விரும்பினா அதுக்கு ஒரு இமெயில்கூட அனுப்பலாம்”

”சயன்ஸுக்கு ஒரு இது உண்டு, அது நாம ஒண்ணை பளகிட்டா அதை அப்பமே விட்டுப்போயிரும். பளகாத்த விசயமாக்கும் சயண்டிஃபிக்” என்று எங்கள் சரித்திர ஆசிரியர் ஆறுமுகம் பிள்ளை சொல்வார். “பளகிப்போன விசயமாக்கும் சரித்திரம்…” என்று சேர்த்துக் கொள்வார்.

அது உண்மைதான். சென்ற அறுபதாண்டுகளில் நான் ஆண்டுதோறும் திகைப்பூட்டும் அறிவியல் கண்டுபிடிப்புகளை சந்தித்தபடியே இருக்கிறேன். மையை தானாக உறிஞ்சும் பேனா, பென்சிலின் தலையிலேயே ரப்பர், பாக்கெட் ரேடியோ, பென்சில்டார்ச், முடிவெட்டும் எந்திரம், டேப்ரிக்கார்டர், கால்குலேட்டர், டிஜிட்டல் வாட்ச், ஆட்டமேட்டிக் பல்தேய்க்கும் பிரஷ், கேஸ் அடுப்பு, கயிறைப்பிடித்து இழுத்தால் தண்ணீர்கொட்டும் கழிப்பறை, டிவி, கம்ப்யூட்டர், செல்போன், மைக்ரோவேவ் அடுப்பு, டிரோன், எஸ்கலேட்டர், சொன்னபடி கேட்கும் கார்  என்று எவ்வளவோ விஷயங்கள்.

எங்களூரில் சயன்ஸ் என்ற சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள்! என் அப்பா அந்தக்கலத்தில் சுயசவரம் செய்பவர். பயன்படுத்திய ரேசர் பிளேடை வாங்க ஏகப்போட்டி. முன்னரே சொல்லி வைத்திருப்பார்கள். ராமன் வந்து என்னிடம் அதில் ஒன்றை எடுத்து தரச்சொல்லி கேட்டான். அதற்கு அவன் சொன்ன வார்த்தை எனக்கு புரிய நெடுநேரமாகியது. “சயன்ஸுகத்தி”

இப்போதெல்லாம் சயன்ஸ் என்றாலே வாயைப்பிளப்பதற்கு தயாரான மனநிலையை படிப்படியாக வந்தடைந்துவிட்டேன். கடைசியாக ப்ளூடூத் தொழில்நுட்பத்தை கண்டு திகைத்தேன். அஜி எங்கோ எவரிடமோ ஏதோ பேசி, குரல் கேட்காமல் கத்த, என்னருகே ஒரு விந்தையான பொருள் பேய் போல பேசிக்கொண்டிருந்தது.

“வேலைபாக்கிறவங்க ரெகுலனா இமெயில் பாக்கணும். உங்க டிஸ்மிசல் ஆர்டரை போனமாசமே அனுப்பிச்சாச்சு”

பழையகாலம் முதல் அறிவியலில் மக்களுக்கு ஈர்ப்பு இருந்திருக்கிறது. நிலைக்கல் குகையில் சக்கரங்களின் கற்குடைவுப் படங்கள் இருக்கின்றன. கற்காலத்திலேயே சக்கரங்களை உருட்டலாம் என்னும் பிரபஞ்ச உண்மையை கண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் வண்டுருட்டிப்பழம் என்னும் இயற்கை நிகழ்விலிருந்து கண்டடைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் அறிவியலை நாம் இரண்டு வகையாகப் பார்க்கிறோம். நமக்கு உடனடியாகப் பயன்படாத அறிவியல் கண்டுபிடிப்பு என்பது ஒரு பொம்மை. பயன்படுவதே பரவசம் அளிப்பது. நெடுங்காலம் முன்பு கோதையாறு மலைக்குச் சென்றபோது காணிக்காரர்கள் சயன்ஸ் என்ற வார்த்தையை சகஜமாகப் பயன்படுத்துவதை கண்டேன். அப்போது அங்கே பாதையோ வண்டிகளோ வருவதில்லை. கழுதைகள்தான். கழுதை கொண்டுவரும் ஒருவரிடம் ஒரு பொருள் உண்டு என்று காணி சொன்னார். கண்கள் விரிய பரவசத்துடன் “அது சயன்ஸாணு”

”போனை மறந்துட்டேன். எல்லாத்தையும் மூளையிலேயே வைச்சுகிட வேண்டியிருக்கு…”

அவர் சொன்னது தீப்பெட்டியை. தீயை மடியில் கட்டிக்கொண்டு அலையலாம் என்பதை அவரால் பல ஆண்டுகளாகியும் நம்ப முடியவில்லை. தீப்பெட்டி வந்தபின்புகூட நெடுங்காலம் காணிகள் மரக்கட்டைகளையும் கற்களையும் உரசித்தான் தீ உருவாக்கினார்கள். தீ ‘மண்ணுகாருக்கு’ அதாவது சமநிலத்தவருக்கு மட்டுமே கட்டுப்படும் என்று நினைத்தார்கள்.

அதன்பின் அவர்களில் தலைமைப்பண்பும் ஆய்வுமனநிலையும் கொண்டவர்கள் மட்டும் தீப்பெட்டிக்கு வந்தார்கள். அப்போதுகூட அது அபாயகரமான ஓர் அறிவியல் உபகரணம் என்று நினைத்தார்கள். மடியிலிருக்கும் தீப்பெட்டியை தொட்டு “என்றெ கையில் தீயிண்டு! தீ”என்று சொல்லிக்கொள்பவர்களை கண்டிருக்கிறேன். தீப்பெட்டியை தொட்டு சத்தியம் செய்வார்கள்.

நானே வியந்திருக்கிறேன், நமக்கு சின்னவயசிலேயே பழகிவிட்டது. ஆனால் தீயை அப்படி ஒரு சாத்தியக்கூறாக, ஒரு பொருளில் வைத்திருப்பதுபோல திகைப்பூட்டும் கண்டுபிடிப்புகள் குறைவுதானே?

“இவ்ளவு பழைய டெக்னாலஜிய பயன்படுத்துற நீங்க சொல்ற டேட்டாவ எப்டி நம்புறது?”

ஆனால் பழங்குடிகளைப் பொறுத்தவரை பயன்பாடற்ற, ஆகவே குதூகலமான அறிவியல் கண்டுபிடிப்பு என்பது வண்டிகளின் ’ஆரன்’ தான். அதை அடித்து சத்தம் உருவாக்க அப்படி ஆசைப்படுவார்கள். பழைய பலூன் பாணிஆரன்.

லாரிக்காரர்கள் ஒருமுறை ஆரன் அடிக்க ஒரு பலாப்பழம் என்ற மேனிக்கு கூலி பெற்றுக்கொண்டு அனுமதிப்பதை, ஆரன் அடித்தபின் முகம் மலர கண்கள் இடுங்க பரவசத்துடன் செல்லும் காணிகளை நான் கண்டிருக்கிறேன்.

ஒரு முறை ஒரு நூறுவயதான காணி ஆரன் அடித்தபின் நவீன அறிவியலை நேருக்குநேர் சந்தித்த உத்வேகத்தில் கண்ணீர் விட்டது. நான் கேட்டேன்  “காணி சயன்ஸ் எப்டி இருக்கு?”

காணி முகம் பல்லாயிரம் சுருக்கங்களால் நெளிபட சொன்னது. “சயன்சு கொள்ளாம். நல்லதாக்கும்” மேலும் வெட்கத்துடன் “பஸ்ஸும் வெக்கப்படாம நின்னு குடுத்துது”

அது அப்படித்தான். முப்பதாண்டுகளுக்கு முன் அஜந்தாவில் ஒரு ஜப்பானியர் ஒருவன் விற்றுக்கொண்டிருந்த ஒரு பொம்மையை கண்டு வியந்து மகிழ்ந்து துள்ளிக்கொண்டிருந்தார். அது ஒரு கட்டையில் ரப்பர் பாண்டை சுற்றிவைத்து இழுத்து இழுத்து ஓடவிடும் டிராகன் போன்ற காகிதப்பொம்மை. அவர் அது தன்னருகே வந்தபோது சிறுவன் போல துள்ளி விலகினார்.

பின்னர் எனக்கு அறிமுகமானார். அவருடன் சுற்றினேன் அவர் டொயோட்டோ கம்பெனியில் உயர்பதவியிலிருக்கும் பொறியாளர் என அறிந்துகொண்டேன். “நீங்க எவ்ளவோ டெக்னாலஜி பாத்திருப்பீங்க”

“டெக்னாலஜியா? நானா?”

“பின்ன?”

“டெக்னாலஜி எல்லாம் மிஷினுக்குத்தான் தெரியும்”

“அப்ப நீங்க?”

“எந்த மிஷினுக்கு என்ன தெரியும்னு மட்டும்தான் எனக்குத்தெரியும்”

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2021 11:35

அடங்குதல்

இன்றிருத்தல்… இன்றிருந்தேன்…

இந்த நோய்க்கால ஊரடங்கை எதிர்கொள்வதன் சவால்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். செய்வதற்கு சிலவே உள்ளன. முதன்மையானது நம்மையும் நம் குடும்பத்தையும் வீடடங்கில் வைத்து நோய் பரவலாகாமல் இருக்க வேண்டியவற்றைச் செய்வது. அடுத்தபடியாக நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவுவது.

ஆனால் இரண்டையும் விட முக்கியமானது இந்த ஒடுங்கும் சூழ்நிலை நம் உள்ளத்தை பாதித்து நம்மை கசப்பும் காழ்ப்பும் நிறைந்தவர்களாக ஆக்காமல் பார்த்துக் கொள்வது. அதனாலென்ன என்று கேட்கலாம். இதை எழுதும்நாள் சு.ரா நினைவுநாள். அவருடைய சொல் ஒன்று உண்டு. காழ்ப்பு, பதற்றம், அச்சம் கொண்டிருப்பவன் கவனிக்க முடியாது. எதிர்மறை மனநிலை கொண்டிருப்பவர் எதையுமே அறிய முடியாது. அறியாமையென்னும் போர்வையால் நம்மை மூடிக்கொள்வதே அது. சிந்திப்பவன் தன் அகத்தை கூர்மையாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு உள்ளவன்.

மூன்றாவதுதான் உண்மையில் சிரமமானது. இன்றைய செய்தி ஊடகச் சூழலும் சரி, சமூக ஊடகச் சூழலும் சரி, தனிப்பட்ட உரையாடல்சூழலும் சரி, எதிர்மறைத் தன்மையை நம் மீது அள்ளிக்கொட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த புழுதிப்புயலில் இருந்து தப்புவதே முதலில் செய்யவேண்டியது.

செய்தியூடகங்களைப் பொறுத்தவரை எதிர்மறைச் செய்தியே அனைவராலும் கவனிக்கப்படும் செய்தி. செய்தி இன்று ஒரு விற்பனைப்பொருள். ஆகவே எதிர்ம்றைச் செய்தியே அதில் நிறைந்திருக்கிறது. அவர்களுக்கு வேறுவழியில்லை.

சமூக ஊடகச் சூழல் பெரும்பாலானவர்கள் தங்கள் மனச்சிக்கல்களை கொட்டும் வெளி. கசப்பை, காழ்ப்பை கொட்டிவைப்பதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார்கள். அதன்பொருட்டு தங்களை முழுக்க நல்லவர்கள், அறச்சீற்றம்கொண்டவர்கள், அரசியல்சரிகளின்படி மட்டுமே சிந்திப்பவர்கள், கோட்பாட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள் என்றெல்லாம் கட்டமைத்துக்கொண்டு எதிரிகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அகப்பட்டவுடன் நச்சுமிழத் தொடங்குகிறார்கள். அவதூறுகள், வசைகள், அரைச்செய்திகள், சதிகளின் உலகம் அது.

தனிப்பட்ட உரையாடல்சூழலில் பெரும்பாலும் சோர்வுறச்செய்யும் செய்திகளே வந்துகொண்டிருக்கின்றன. சாவுச்செய்திகள், நோய்ச்செய்திகள்தான் மிகுதி. அவற்றை பகிராமலும் இருக்கமுடியாது [நான் பகிர்வதில்லை] என்னைப்போன்ற ஒருவரின் உறவு-நட்பு வட்டம் தமிழகம் கேரளம் என மிகப்பெரியது. ஆகவே தினமும் இரண்டுமூன்று சாவுச்செய்திகள்.

இவை அனைத்தும் இணைந்து அளிக்கும் சோர்வு நம்மை உருமாற்றிவிடும். நாம் பிறருக்கு பெரும் கசப்பும் சோர்வும் அளிப்பவர்களாக மாறிவிடுவோம். அதுவே நம் ஆளுமை சென்றடையும் இழிந்த நிலை. அதற்கு எதிராகவே போராடவேண்டும்

செய்திகளில் தேவையற்றதை தவிர்த்துவிடலாம். சமூக ஊடகங்களை அகற்றலாம். தனிப்பட்ட செய்திகளிலிருந்து கூடுமானவரை விலகலாம். ஆனால் தவிர்க்கவே முடியாத ஒன்றுண்டு, அதைப் பற்றியும் எழுதியாகவேண்டும். அது நாம் செய்யும் உதவிகளில் இருந்து நமக்கு வரும் கசப்பு. உதவி செய்யச் செய்ய அது கூடுதலாக வந்துசேர்கிறது.

இன்று உதவிகள் செய்தால் அதில் எப்படியும் ஒரு பகுதியினர் நம்மை ஏமாற்றுவார்கள். தவறிப்போய் பொய்யர்களுக்கு, ஏமாற்றுபவர்களுக்கு  உதவிசெய்ய நேரிடாமல் எவரும் எந்த உதவியும் செய்ய முடியாது.

ஏனென்றால் மனிதர்கள் அப்படித்தான். அதைப் புரிந்துகொள்வதே இலக்கியம். ஒவ்வொருவரும் அவரவருக்கான சாத்தியக்கூறுகளை அவரவர் இயல்புப்படி எதிர்கொள்கிறார்கள். இதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம். முற்றிலும் எச்சரிக்கையாக இருக்க எவராலும் முடியாது. அந்த எச்சரிக்கை நிலை எதுவும் செய்யாத நிலையை கொண்டுவரும்.

ஏமாற்றமடைந்து அதிலிருந்து கசப்படைந்தால் இழப்பு நமக்கே. நம் நல்லமனநிலையை இழக்கிறோம், நம் ஆளுமையை நாமே அழித்துக் கொள்கிறோம். ஆகவே அது அப்படித்தான், ‘பேக்கேஜில்’ அதுவும் உண்டு என்று கொள்ளவேண்டியதுதான். எனக்கெல்லாம் ஒருநாளில் இரண்டு அனுபவங்களேனும் அத்தகையவை உள்ளன.

அதோடு உதவிபெறுபவர்களின் நிலையும் சிக்கலானது. அவர்கள் கையறு நிலையில் இருக்கிறார்கள். ஓர் உதவி சற்று தாமதமானால்கூட வசையும் குடும்பத்துக்கே சாபமும் வருகிறது. அதன்பின் அந்த உதவி சென்றுசேர்ந்தால் கூச்சமடைந்து பேசாமலிருந்துவிடுகிறார்கள்.

வெல்வதற்கு ஒரே வழி சிரிப்பதுதான். நமக்கு நாமே சிரித்துக்கொள்வது. சிரிப்பூட்டுவனவற்றை தேடி ஈடுபடுவது. படைப்பாக்கத்தில் ஈடுபடுவது. உயர்ந்தவற்றை நோக்கி நம்மை நிரந்தரமாகத் திருப்பி வைத்திருப்பது. சிறியார், சிறுமைகளின் உறவுகலவாமைக்காக நோன்பு கொள்வது.பிறர்மேல் குற்றம்சாட்டாமலிருப்பது.

காலையில் செல்போனை எடுக்கக் கூடாது, நேரடியாக இணையத்துக்குச் சென்று நகைச்சுவைகளை மட்டுமே பார்க்கவேண்டும் என்பது என் இப்போதைய முடிவுகளில் ஒன்று. உலகமெங்குமுள்ள கார்ட்டூன்காரர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன். நானே முழுக்கமுழுக்க ஒரு கார்ட்டூன் நாவல் எழுதும்வரை இதுதான் கதி.

முன்பு எழுதியதுதான்,மீண்டும். நண்பர்கள் நமக்குநாமே சொல்லிக்கொள்ள. நண்பர்கள் நடித்த சூம் நாடகம் அவர்களை வெளியே கொண்டுவந்தது என்றனர். மீண்டும் ஊக்கமும் சிரிப்பும் கொண்டவர்களாக ஆகிவிட்டனர். படைப்புநிலையே மீளும் வழி. இன்று நிலைகொள்ளவேண்டிய பீடம்

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2021 11:34

கதாநாயகி கடிதங்கள் -9

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நானும் நலம்

கதாநாயகி நாவலை இரண்டாம் முறை ஒரே வீச்சில் மீண்டும் வாசித்தபோதுதான் முழுமையாக பிடிகிடைத்தது.

ஒரு நல்ல நாவலென்பது உள்ளே மடிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய காகிதக்கலை போன்றது. இந்த நாவலின் மடிப்புக்களை விரித்து எடுக்கவேண்டியிருக்கிறது.

மெய்யன் இரண்டு இடங்களிலிருந்து ‘பூதங்களை’ விடுவிக்கிறான். ஒரு வகை பூதங்கள் நூல்களில் உள்ளன. இன்னொரு வகை பூதங்கள் காட்டில் மக்களில் உள்ளன. ஒன்று இறந்தகாலம். இன்னொன்று எதிர்காலம்.

காலம் அழியாமல் உருமாறி தொடர்கிறது. ஒரு டெஸ்மண்ட் பேக்லி நாவலில் ஒரு வரி வரும். பாலைவனத்தை ஹீரோ பார்க்கிறான். அப்போது ஒருவன் சொல்கிறான். ‘இங்கே ஒரு எதிர்காலக் காடு மறைந்திருக்கிறது’

ராஜாராம் கோவிந்த்

*

அன்புள்ள ஜெ,

எழுத்தை வெளியே உள்ள பொருட்களோடு தொடர்புபடுத்தி கொள்ளும் பொழுதே தும்பனின் தருக்க மனம் அதை ஏற்றுகொள்வது  போல்தான் மெய்யப்பன் அவன் கண்ணில் மட்டும் படும் ஒன்றை புற ரீதியாக தர்கபடுத்தி கொள்ளும் முயற்சி என்று அந்த மணநோயை பார்க்கலாமா. பருப்பொருள் இன்றி நம் மணம் எதையும் புரிந்து கொள்வதில்லை, ஏற்பதில்லை. அருவமானதை உணர்ந்தாலும் அதை பருவுடையதாக மாற்றி மணம் ஏற்று கொள்கிறது, நம்புகிறது. ஏன் என்றால் உடல் பருவாக உள்ளது. இங்கு அனைத்தும் பொருள்வயமாக உள்ளது. கடவுள்கள் பேய்கள் என நாம் உருவக படுத்தி வைத்திருக்கும் அனைத்தும் அப்படிதானா.

நம்மிடம் உள்ள எழுத்துகளுக்கு மொழிக்களுக்கு அப்பால் நம் தர்கத்துக்கு அப்பால் நம் மூளையின் திறனுக்கு அப்பால் விஷயங்கள் இங்கு இவ்வெளியில் உள்ளது. நம் எல்லைக்குள் இருந்து நாம் புரிந்துக்கொண்டதே இதுவரை நமக்கு தெரிந்தது. தும்பன் எழுத்து வழியாக புற உலகை அறிகிறான். மெய்யப்பன் மொழியை கலைத்து கனவு வழியாக வேறு ஒன்றை அறிகிறான். இரண்டு வழிகளிலும் மொழி என்ற இறுகிய கட்டுமானம் தகர்கிறது. மொழி உருவாகும் ஊற்றுக்கு செல்கிறது. அங்கு அது தான் மொழியே என்று உணர்த்துகிறது.  கதையில் ஒருபுறம் ஒருவன்  மொழியில் இருந்து மொழியின்மை நோக்கி செல்ல இன்னொருவன் மொழியின்மையிலிருந்து மொழிநோக்கி வருகிறான். ஒருவன் விலங்கு எல்லையை கடக்கிறான் இன்னொருவன் மனித எல்லையை கடக்கிறான் என்று வாசிக்கலாமா.

யோசிக்க விசித்திரமாக இருக்கிறது. அந்த பங்கலா, டேபுல் நாற்காலி, ரகசிய அறை, புத்தகம், வெள்ளையர்கள், சூழந்திருக்கும்  கடுமையான காடு, அந்நியமான இடம், தனிமை  ஆகிய இவ்வளவு பொருள் வயமான விஷயங்கள் வழியாக அதை ஊன்றுகோலாக வைத்துதான் மனசிதைவு அல்லது அந்த அனுபவம்  முழுக்க முழுக்க வெளிப்படுகிறது. அந்த பங்களாவும்  காடுகளும் கதைகளும் தொன்மங்களா. அது அந்த மக்கள் அனைவருக்குள்ளும் இருந்ததா. அது மெய்யப்பனில் இப்படி வெளிப்பட்டதா. அல்லது ஒவ்வொரு புத்தகமும் தொன்மத்தின் புற உருவங்களா. வாசிப்பு என்பது ஆழ்மன செயல்பாடா.

புலியும் யானையும் பாம்பும் மழையும் இருக்கும் அந்த காடுதான்  இந்த வெளி. அதில் நாம் கட்டிவைத்திருக்கும் பங்களாவோ குடிலோதான் நம் அகம். எவ்வளவுக்கு எவ்வளவு நம் அகமும் அதன் புறவெளிபாடானா பங்களாவும் காட்டை வென்று விட்டதாக நினைக்கிறதோ அந்த அளவுக்கு அது எதிர்திசையிலும் பயம் செய்ய நேரிடுமா. அதுதான் பங்களாவில் வாழ்பவர்களின் மனநோயும் மரணமும் உணர்த்துவதா. அதனால் தான் கோரன்  பங்களாவில் இருந்து வெளியேறி தனக்கான குடிலை மரத்தின் மீது கட்டிகொள்கிறானா. தனக்கு ‘எ’ மட்டும் போதும் என்ற அவனுடைய தேவையா.

மேலும் இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் கூட ஒவ்வொரு மனநிலை கூறுகளின் வெளிப்பாடுகளாக உள்ளதாக பார்க்க முடிகிறது. ஹெலனாவின் உதையை அடக்கு முறையில் இருந்து மீளும் வெளிப்பாடாக பார்க்கலாம். அதே சமையம் அச்சபட்டு ஓடும் ஹெலனாவை போன்றது தான்  ஆண்களுடைய இயல்பும், தனக்குள் அதை அடக்கி ஒதுக்கி மறைத்து கொண்டு வீரனாக மட்டும் இருக்க முயள்கிறான். ஆண்மை என்று தான் நம்பும் ஒன்றின் பொருட்டு தன் கல்லமின்மையை  பலிக்கொடுகிறான்.

இறுதியில் அவனுள் ஒழிந்திருக்கும் இயல்பான அந்த அச்சமே, அவன் அவனுள் அடக்கி வைத்திருந்த ஒன்றே அவனை பலியாக்கி விடுகிறது என்று வாசிக்கலாமா. அல்லது பெண்களை யானைகளாக வாசிக்க வேண்டுமா. அல்லது அவள் வழக்கமான வரலாற்றுக்கு மாறாக ஆண்மையில் இருக்கும் கல்லமின்மையை பயண்படுத்தி கொண்டாளா. தன் வஞ்சம் தீர்த்து கொண்டாளா. ஹெலன்னா தன் வாழ்வின் இக்கட்டில்  இருந்து தப்பிக்க மெக்கின்ஸியை பயன்படுத்திகொண்டாள். அங்கிருந்து தப்பிக்க கர்னலை பயன்படுத்திகொண்டாள்.

புலியிடம் இருந்து தப்பிக்க கர்னலை பலியாக கொடுத்தாள். அவள் வாழும் சூழலில் அவள் எங்கும் நிறைவாக மகிழ்வாக இல்லை. யதார்த்தத்தில் இருந்து தப்பிக்கதான் அவளுக்கு கலைகளும் நூல்களும். நிறைவின்மை கொண்ட ஆத்மாக்கள்தான் நூல்களில் உயிர்வாழ்கிறதா கட்டுண்டு கிடக்கிறதா.  இக்கதையில் ஏன் பெண்கள் எல்லோரும் எழுந்து வருகிறார்கள். அவர்கள்தான் மெய்யப்பனை கருவியாக கொண்டார்கள்.  அவர்கள்தான் அனைத்து ஆண்களையும் இயக்கினார்கள் அதன் வழியாக நடக்கும் அனைத்தையும். அதனால் தான் அவர்கள் கதாநாயகியா.

இன்னொன்று புற ரீதியாக மெய்யப்பனுடைய வாழ்க்கையும் அந்த வெள்ளையர்களின் வாழ்க்கையும் ஒன்றுபோல் தோற்றம் அளித்தாலும் வேறு வேறு. வெள்ளையர்கள் தங்கள் நாட்டுக்காக செயல்படுகிறார்கள் அப்பாவி பெண்களுக்கு வாழ்க்கை தருவதில் பெருமையடைகிறார்கள். தங்களை அடக்கியிருக்கும் ஆண்களின் மயக்கத்தின் வழியாக பெண்கள் விடுதலையை தேடி கொள்கிறார்கள். இங்கும் மெய்யப்பன் காட்டில் கல்விக்காக தன்னை அற்பனித்து கொள்கிறான். தன் குடும்பத்தை ஒரு ஊரை இனத்தை சமூகத்தை மாற்றுவதில் முக்கிய விசையாக இருக்கிறான். கால் ஊனம் கொண்ட பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். வெள்ளையர்கள் செய்தது அனைத்தும் தங்கள் ஆண்மைக்காக, மெய்யப்பன் செய்தது எல்லாம் தன் கடமையை. இது தன்னை விட்டால் யாரும் செய்ய முடியாது என்பதற்காக. மெய்யப்பனிடம் இருந்த தாய் உள்ளம் அவர்களிடம் இல்லை.

நான் சிலமுறை பயந்தது உண்டு. கதையில் தெரியும் சப்டெக்ஸ்டுகளும், வாசக இடைவெளிகளும் கூட ஸ்கீர்சோபோனியாவோ என்று. இருப்பதில் இருந்து இல்லாமல் இருப்பதை வாசிப்பது. ஆனால் அறுதியாகவும் கூறிவிட முடியாது. அப்படி கூற முடிந்தாலும் பிறர் நம்புவதற்கு அதை அவராக உணரவேண்டும். நம் அனுபவத்தில் இருந்து நம் கண்ணுக்கு மட்டும் தெரிவது. அதை புற ரீதியாக கூறி விளக்கிவிட முயன்றபடி இருப்பது.

நன்றி

பிரதீப் கென்னடி

*

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம். நலமாக வாழ வேண்டுகிறேன். இது நான் எழுதும் முதல் கடிதம். என்னை பற்றி சில வரிகள் தங்கள் வாசகி கடந்த 10 ஆண்டுகளாக. ஊர்:  கோவை தொழில்:    Veterinary Medical

கதாநாயகி கதையை பற்றி எனக்கு தோன்றிய எண்ணம்.தங்களின் தங்க புத்தகம் கதையும் கதாநாயகி கதையும் ஒரே தளத்தில் நடக்கிறது. தங்க புத்தகம் ஆன்மிக தளம். கதாநாயகி நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் ஒரு தளம்.

எப்போதுமே எல்லா புத்தகங்களும் தனக்கு உரிய முறையில் மட்டுமே ஒருவருக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.அதனை நாம் எவ்வாறு நடைமுறை வாழ்வில் அல்லது மனத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கொள்கிறோம் என்பதே வாழ்க்கை என்று புரிந்து கொண்டேன். கிடைத்த புத்தகத்தை வாழ்க்கை முழுவதுமாக முழு அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டு அலைபவர்கள் பாட் போன்று வாழ்க்கையை இழந்து விடுகின்றனர்.

மெய்யன் பிள்ளையும் முக்தாவும் வாழ்க்கையை நிறைவுடன் வாழ்கிறார்கள் இன்னும் பல கோணங்களிலும் ஆராய வேண்டிய கதை.

நன்றி

ஆவுடையம்மாள் சுடலைமுத்து 

கதாநாயகி, கடிதங்கள் -8

கதாநாயகி கடிதங்கள்- 7

கதாநாயகி, கடிதங்கள்-6

கதாநாயகி,கடிதங்கள் -5 கதாநாயகி கடிதங்கள்-4 கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2021 11:31

கொற்றவை, கரு.ஆறுமுகத் தமிழன் – கடிதம்

அன்பு ஜெ,

கொற்றவை கலந்துரையாடல் நிகழ்வு

கொற்றவை நாவலைக் கலந்துரையாட கரு ஆறுமுகத்தமிழன் ஐயாவை விட ஒரு சிறந்த மனிதர் இருக்க முடியுமா என்று வியக்குமளவு இன்றைய கலந்துரையாடல் நிகழ்வு அமைந்தது. இனிமையான தமிழைப் பேசும் என் பள்ளி ஆசிரியர் ஒருவரின் உரையைக் கேட்பது போலவே இருந்தது. கொற்றவை உரை என்றவுடன் வெறுமே நாவலைப் பற்றி அல்லது நாவலில் தனக்குப் பிடித்தது போன்றவற்றைப் பற்றி இருக்குமோ என்று ஊகித்திருந்தேன். ஆனால் ஐயா அவர்கள் சிலம்பையும் கொற்றவையும் ஒப்பு நோக்கி ஒரு உரையைத் தரப்போவதாக அறிமுகம் செய்தபோதே ஆர்வமாகிவிட்டேன்.

இளமையில் அறிஞர் அண்ணா அவர்களின் “நாம் நமது கற்பனா சக்தி முன்பு கம்பரையும் இளங்கோவையும் நிறுத்தி பேசச் சொன்னால் கம்பன் இளங்கோவைப் பார்த்து, ’எனக்கு உயிர் ஊட்டிய உத்தமரே!, அணி அழகு தந்த ஆண் அழகரே! என்பார்” என்ற வரிகளின் வழியாகத்தான் சிலம்பு எத்துனை உயர்வானதென அறிந்திருந்தேன். அதன் பின் தேர்வுக்காக அதிலிருக்கும் “மதுரைக் காண்டமும்”, ஆர்வத்தால் பிற இரண்டு காண்டங்களையும் படித்திருக்கிறேன். அத்தகைய சிலம்பின் மறு ஆக்கமாக கொற்றவையை ஐயா அவர்கள் சொல்லி இரண்டின் வேறுபாடுகளை எடுத்துக் கூறியிருந்தார்.

சிலம்பின் மையம் மாறாமல் நீங்கள் கொற்றவை எழுதியிருப்பதாக நினைத்த அவரின் வாசிப்புப் பார்வை இப்பொழுது மாறியிருக்கிறது என்று கூறி அதன் காரணங்கள் வழியாக சிலம்பின் மையம் கொற்றவையின் மையமல்ல என்று நிறுவினார். அதன் வழியாகவே கொற்றவையில் நீங்கள் எதை மையமாக வைத்திருக்கிறீர்கள் என்றும் கூறினார். எத்துனை ஆழமான ஒப்பீடு என்று வியந்தேன். அதற்கு அவர் சொன்ன உவமை மிகப் பொருத்தமாயிருந்தது. “முன்பு அவர் சிலம்பின் மையத்தை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கூட்டை எழுப்பினார் என்று நினைத்தேன். இன்று தான் சிலம்பின் கூட்டை மட்டும் எடுத்துக் கொண்டு மையத்தை இட்டு நிறப்பி கொற்றவை எனும் நாவலைப் படைத்திருக்கிறார்” என்று அறிந்தேன் என்றார். அதை அவர் நிறுவும் தருணத்தை நோக்கி மேலும் முடுக்கித் தள்ளினார்.

முதலாவதாக, சிலம்பின் கண்ணகி முதலில் உலகறியாதவளாக, எளிய சூட்டிகைப் பெண்ணாகத்தான் இருக்கிறாள் ஆனால் கொற்றவைக் கண்ணகியோ திண்ணமாக, ஒவ்வொரு கணமும் அவளை அறிய வைப்பதற்கு நீலி உடனிருப்பதாகச் சொல்லியிருந்தார். இது எனக்கு சரியெனவே பட்டது. சிலம்பு படிக்கும் போது பல இடங்களில் கண்ணகியின் மேல் கோபம் தான் வந்தது. ”ஏதுமறியாதவர்களாக, அபலைகளாக, கட்டுப்பெட்டியாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பெண்களை எப்போதும் எனக்குப் பிடித்ததில்லை. “வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்” எனும்போதும், வேட்டுவ வரியில் சாலினி தெய்வம் ஏறப்பெற்று ஆடும்போது

“இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி

தெந்தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து

ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய

திருமா மணி”

என்று மொழிந்த வரிகளைக் கேட்ட கண்ணகி நாணி “பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டி” என்றே கணவனின் முதுகுப் புறத்தில் மறையும் போது கோபம் தான் வரும் எனக்கு. அவள் சிலம்பில் கொற்றவையாக கோவலன் இறக்க வேண்டியுள்ளது. ஆனால் ‘கொற்றவை’ யில் அவள் தெய்வமாகவே மொழியப்பட்டு, நீலி வழிநெடுக உடனிருந்து கொற்றவையாக்கும் நிகழ்வில் ஜெ சிலம்பிலிருந்து விலகி அதை முன்னெடுத்துச் சென்றுவிட்டார் என்று கூறிய பார்வை வியக்கச் செய்தது. ”HIJACKED BY JE” என்ற வரி மிகப்பிடித்திருந்தது. மண்மகள் அறிந்திலள் என்று சிலம்பில் சொன்ன வரிகளுக்கு நீங்கள் சொன்ன மாற்று விவரனையைச் சொல்லி வியந்தார்.

சிலம்பின் மையமாக இளங்கோவடிகளால் சொல்லப்பட்டது மூன்று.

“அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”

இந்த மூன்று மையக் கருத்துக்களில் முதல் கருத்தைத்தவிர பிற இரண்டையும் என் இளமையில் நான் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. ஊழைப்பற்றிய என்னுடைய புரிதல்கள் உங்கள் எழுத்துக்களின் வழியாக இன்று மடை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐயா அவர்கள் சொல்லும்போது அவர் அது சங்க காலத்திலிருந்து “நீர் வழிப்படூஉம் பனைபோல ஆருயிர் முறைவழிப்படூஉம்” என்ற வரிகளை நோக்க ஊழைப்பற்றிய சிந்தனை இருந்து வந்திருப்பதைச் எடுத்தியம்பினார். மேலும் கொற்றவையில் ஊழ் என்பது மையத்திலிருந்து விலகி கண்ணகி தான் ஆற்ற வேண்டிய செயலை அறிந்தவளாக சித்தறிக்கப்படுவதாகச் சொன்னார்.

ஆனால் பத்தினி என்ற ஒன்றை மையப்படுத்துவதை நீங்கள் கொற்றவையில் விலக்கியிருக்கிறீர்கள். அதுவே இது புதுக்காப்பியமாகத் திகழ்வதற்கு வழி வகுக்கிறது என்றார். அதே போல இது போன்ற ஒரு கதையில் ஒரு ஆண் தன்னை எங்கே பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு கொற்றவை நாவல் ”அன்னையின் மடி தேடி ஓடி ஆடை கலைந்து உட்கார்ந்து கொள்ளும் புதல்வனாக அமையப்பெறுதல்” கூறுவதாக விளம்பியது அருமையான தருணம்.

மேலும் எவ்வாறெல்லாம் சிலம்பினின்று கொற்றவை வேறுபடுகிறது என்று கூறி “எப்படி வால்மீகி இராமாயணத்தை கம்பன் எழுதும்போது தனக்கானதாக கம்ப இராமாயணமாக எழுதினானோ அப்படித்தான் இளங்கோவின் சிலம்பை ஜெ மறு உருவாக்கி கொற்றவையாக செய்திருக்கிறார்” என்று நிறுவினார்.

ஐவகை நிலங்களிலும் சொல்லப்பட்ட பெண்களின் கதைகள் வழி கண்ணகியை இணக்கும் சரடை எடுத்தியம்பி கண்ணகியின் அறச் சீற்றத்தின் போது நூறு கண்ணகிகள் எழுந்து வருவது பற்றியும் இணைத்தபோது சிலம்பு எப்படி கொற்றவை ஆகிறது எனும் சித்திரத்தைக் கடத்திவிட்டார்.

தத்துவார்த்தத்தை அவர் எடுத்துச் சொன்ன விதமும் பிடித்திருந்தது. ”அறியமுடியாமையின் நிறம் நீலம்” என்று ஆரம்பித்து குமரியிலிருந்து குமரியில் முடிந்து ஒரு முடிவிலியை நோக்கிச் செல்லும் ஒன்றாக கொற்றவை அமையப்பெறுகிறது என்றார். புத்தர் சூனியத்தை வெறுமையால் தான் நிறைக்க முடியும் என்று கண்டறிந்ததை அவர் எடுத்துச் சொன்ன விதம் பிடித்திருந்தது.

ஐம்பூதங்களான(ஐம்பருக்கள்) நீர், காற்று, நிலம், தீ, வானம் ஆகியவற்றிலெள்ளாம் கொற்றவையை பொருத்தி ’வானும் கடலும் சந்திக்கும் இடமும் நீலம் தான்’; ’அறியமுடியாமையின் நிறம் நீலம்’; முடிவிலி என்ற ஒரு பார்வை மிகத் திறப்பாயிருந்தது.

மேலும் மேலும் பல திறப்புகள் அடங்கிய அவரின் உரை கண்டிப்பாக கேட்டு உய்த்துணர வேண்டியது. ஒரு நவீனச் சிலம்பாக கொற்றவை நாவலை நிறுவிய பெருமை ஐயாவையே சாரும்.

’எனக்கு சடக்குனு பேச வராது’; வந்துருவாய்ங்க, அங்கிட்டு போன்ற வட்டார மொழி பயன்படுத்தலும், ‘விதந்தோபல்கள், தண்ணீர் குடிக்க இடைவெளி எடுக்கும் போது “ஒரு மணித்துளிகள்” என்று சொன்ன போதும் என்னை அறியாமல் ஐயாவை நோக்கி புன்னகை செய்து கொண்டிருந்தேன். ஜெ, நீங்கள் தேனீ சிறுகதையில் சொன்னது போல “தேனு மாதிரில்லா இனித்தது. தேனுல்லா!” என்று சொல்லத்தோன்றுகிறது அவரின் மொழி. ஒரு பயனுள்ள, இனிய மாலையை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக நற்றுணைக் குழுவிற்கும், அதை சாத்தியமாக்கிய கரு ஆறுமுகத்தமிழன் ஐயாவிற்கும் நன்றிகள்.

அன்புடன்

இரம்யா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2021 11:31

சௌந்தரிய லகரியும் சங்கரரும்

ரிஷிமூலம்

பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

வணங்குகிறேன்! தங்களது ரிஷிமூலம் பற்றிய கேள்விக்கான பதிலில் “ஆதிசங்கரரின் சௌந்தரிய லகரி “அது பெருந்தரிசனமாகிஅவரை முழுமைகொள்ளச் செய்தது”, என்று குறிப்பிடுகிறீர்கள்.

நீங்கள் முன்பு சில கட்டுரைகள், பதில்கள் இவற்றில்  சௌந்தரியலகரி ஆதி சங்கரர் எழுதியிருக்கவாய்ப்பில்லை அவர் தூய அத்வைதி என்றேசொல்லியிருக்கிறீர்கள்.

உங்களுடைய இந்த கருத்து மாற்றத்தின் பரிணாமத்தை எங்களுக்கு சிறிது விளக்க முடியுமா? (குமரித்துறைவி- கொண்டு  அதை நான் ஓரளவுக்கு புரிந்து கொளள முயல்கிறேன்). ஆயினும் தர்க்க பூர்வமாக அதை விளங்கவைக்க முடியுமா? அல்லது என் புரிதலில் பிழையா?

என்றும் நன்றியுடன்,

கருணாகரன்.

அன்புள்ள கருணாகரன்,

ஆதிசங்கரர் சௌந்தரிய லகரியை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பது ஒரு விவாதத்திற்குரிய ஊகம், நிறுவப்பட்ட கருத்து அல்ல. ஆதிசங்கரர் பெயரில் புழங்கும் துதிகளும் சில ஸ்மிருதிநூல்களும் அவர் எழுதிய பெருநூல்களின் மொழிநடைக்கு காலத்தால் பிந்திய நடைகொண்டவை, மாறுபட்ட பார்வை கொண்டவை. ஆகவே பின்னாளில் சங்கரர் என அறியப்பட்ட அவருடைய வழித்தோன்றல்கள் எழுதியிருக்கலாம் என்பது ஒரு தரப்பு. அது ஏற்கப்பட்ட உண்மை அல்ல.

ஆகவே ஒரு பொது விவாதத்தில், வேறொரு சூழலில் மேற்கோள் காட்டும்போது சௌந்தரிய லகரியை ஆதிசங்கரர் எழுதியதாகச் சொல்வதே முறை. ஏனென்றால் அதுவே ஏற்கப்பட்டது. அங்கே ஒரு விவாதக்கருத்தைச் சொல்லக்கூடாது. அக்கட்டுரைக்குள் அந்த விவாதத்திற்கு இடமில்லை. ஒரு விவாதத்திற்குரிய கருத்தை நிறுவப்பட்டதுபோலச் சொல்லக் கூடாது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2021 11:31

வெண்முரசு -குந்தி மணத்தன்னேற்பு

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு நாவல் வரிசையில் மழைப்பாடல் நாவலில் வரும் குந்தியின் மணத்தன்னேற்பு நிகழ்வை ஒலி வடிவில் YouTube ல் பதிவேற்றி இருக்கிறேன். பெருங்கடலை சிறு குப்பிக்குள் அடக்கும் முயற்சிதான். இந்த வீடு அடைதல் நாட்களில் மேலும் நிறைய வாசகர்களை வெண்முரசை நோக்கி இழுக்கும் ஒரு சிறு முயற்சி யாக இது இருந்தால் மகிழ்வேன். தங்களின் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்களுக்கு பிடித்திருந்தால் தனி YouTube channel ல் பதிவேற்றும் எண்ணம் இருக்கிறது.

மிக்க நன்றி

தண்டபாணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2021 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.