Jeyamohan's Blog, page 973
June 6, 2021
கதாநாயகி – கடிதங்கள்-11
அன்புநிறை ஜெ,
கதாநாயகி வாசித்து முடித்ததுமே எழுத எண்ணினேன். பத்து நாட்களாக வேறொரு மனநிலை. இன்றொரு முறை முழுவதுமாக மீள்வாசிப்பு செய்தேன்.
கதையின் முதல் வரியிலேயே சொல்லி விடுவது போல இது வளர்ந்து கொண்டே இருக்கும் கதை.
இதில் வரும் ஃப்ரான்ஸெஸ் பர்னி எழுதிய நாவல் “Evelina or the History of a Young Lady’s Entrance into the World”, “The Wanderer: Or, Female Difficulties” இணையத்தில் கிடைப்பதால் அதையும் வாசித்துக் கொண்டிருந்தேன். கதாநாயகிக்காக அன்றி இந்த 18ஆம் நூற்றாண்டு நாவலுக்குள், இந்த மொழிக்குள் உள்ளே நுழைந்திருக்க மாட்டேன். ஒரு புத்தகம் யாரால் வாசிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அந்த எழுத்து உயிர் கொள்வதும் அது புத்தகமாகவே நீட்டிப்பதும் நிகழ்கிறது. “அகலிகையை எளுப்பிட்டீங்க” என்று இன்ஜினீயர் ராஜப்பன் சொல்வது போல, தங்கள் கண்பட்டதும் இதில் இருந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக உறைந்திருந்த பெண்கள் உயிர் பெற்று வருகிறார்கள், இவ்வளவு நீண்ட கதை எழுந்து வருகிறது.
இக்கதை என்னவாக எனக்குள் இருக்கிறது என உணர்ந்து கொள்ளத்தான் இன்று எழுதுகிறேன். முதலாவதாக பல பட்டைகள் கொண்ட வைரம் போல எனத் தோன்றுகிறது. அன்றன்று வாசித்த போது அவ்வெழுத்து வந்து சூழ்ந்து கொண்டே இருந்தது, மனதில் என்ன சென்று படிகிறது என உணரவே இயலவில்லை. ஒரு இசையைக் கேட்கும் போது நாமறியாத வெளிகளில் அலையச் செய்யும் கலைஞன் போல கதை எங்கெங்கோ அழைத்துச் சென்றது. முழுவதுமாக பதினைந்து நாட்கள் அந்தக் காடு வந்து சூழ்ந்து கொண்டது, அப்பெண்கள் வந்து பின்னால் நின்றார்கள், ஆவன்னா வால் சுருட்டிய குரங்காக இருந்தது, ஒரு கலைடாஸ்கோப் பார்ப்பது போல இருந்தது. அந்த அறையில் அமர்ந்துதான் இக்கதையை வாசித்துக் கொண்டிருந்தேன்.
வாசித்து முடித்த பிறகு கதை உள்ளே வளர ஆரம்பித்தது. ஒவ்வொரு நேரம் ஒவ்வொன்று மேலெழுந்து வருகிறது, பல பரிமாணங்கள். 1980களில் ஒரு அரசாங்க வேலை கிடைக்கும் ஒரு வேளாண் குடும்பத்து இளைஞனின் வாழ்வின் சித்தரிப்பு, அதன் வழியாக விரியும் ஒரு காலகட்டத்தின் சித்திரம், பற்பசையைக் காட்டிலும் பற்பொடி விலை மலிவு என வீடுகளில் கணக்கிட்ட காலமும், இன்லாண்ட் லெட்டரின் அணைத்து இண்டு இடுக்குகளிலும் சுற்றத்தார் க்ஷேமலாபங்கள் எல்லாம் எழுதி, முக்கியமான தகவலை கடிதத்தைக் கிழிக்கும் மடிப்பில் நுணுக்கி எழுதும் என் பெரியம்மாவும் மனதில் வந்து போனது. முப்பது நாற்பது வருடங்களுக்குள் தொன்மமாகிவிட்ட ஒரு காலத்தின் சித்திரம். பதினெட்டாம் நூற்றாண்டு வரை போவதற்கு முன்னால் இந்த 80-களின் வாழ்வே ஒரு பீரியட் திரைப்படம் பார்ப்பது போல இருந்தது. தாங்கள் எழுதித் தீராத காடு, காணிக்காரர்களின் வாழ்வு, அவர்கள் எழுத்தை ஒவ்வொன்றாகப் புதிதாகத் தொட்டுத் திறக்கும் கணங்கள், கல்வி என்னும் தீப்பொறி பற்றியேறும் வேகமும், அது தரும் வெளிச்சமும், இது போல அதீத சூழல்களுக்கு சென்று எழுத்தறிவிக்கச் சென்ற முகமறியாத ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, 18ஆம் நூற்றாண்டின் பெண்களின் நிலை, அவர்களது எழுத்தும், பாவனைகளும், வாழ்வும், மனப்பிறழ்வின் படிநிலைகள் என ஒவ்வொன்றும் உள்ளே சென்று நிறைந்திருக்கிறது.
முதலில் இந்நாவல் ஒரு காடுதான் எனத் தோன்றியது. முதலில் திகைக்க வைப்பது நாவலின் கட்டுமானம், திக்குத் தெரியாத காடு. திசை போதம் அழிந்து மேலும் மேலுமென பசுமைக்குள் நுழைந்து இறுதியாக முதலில் துவங்கிய இடத்துக்கே வந்து சேர்வது போல ஃபேன்னி என்ற பெயரில் எழுதும் ஃப்ரான்ஸெஸ், அவள் புனைவும் உண்மையுமாக உருவாக்கும் ஈவ்லினா, அவர்கள் ஒருவரை ஒருவர் கதைக்குள்ளேயே சந்திக்கும் பொழுதுகள், அங்கு வரும் ஹெலனா அவர்கள் உரையாடல்களின் வாயிலாக திறக்கும் மற்றொரு கதவுக்குப் பின்னிருக்கும் விர்ஜினியா என ஒரு காட்டில் தொலைந்து போன உணர்வு. அப்பெண்களின் உணர்வுகள், வெளிப்பாடுகள், ஆணும் பெண்ணும், பெண்ணும் பெண்ணும் நிகழ்த்திக் கொள்ளும் நடிப்புகள், வாழ்வைத் தாங்கள் அறிந்த விதத்தில் மேம்படுத்திக் கொள்ள அவர்கள் கொடுக்கும் விலைகள், மீறல்கள்.
தான் படித்த ஆங்கில நாவல் வாயிலாக இவர்கள் அனைவரையும் சந்திக்கும் மெய்யன் பிள்ளை. மெய்யன் – பெயர் சொல்வது போல அவன்தான் கதாநாயகியின் நிதர்சனம் (ரியாலிட்டி) அல்லது மெய்மை. எழுத்துகளுக்குள் உறையும் கடந்த காலத்தை தொட்டெடுக்கும் நுண்மையுள்ள அதே நேரம், சூழ்ந்திருக்கும் காட்டை, காணிக்காரர்கள் வாழ்வை, தனது வாழ்வை உணர்ந்த நிதர்சனமானவன். ஒவ்வொரு காலடியாக உடைவு நோக்கி நகரும் போதும் அனைத்தையும் உற்று நோக்கிக் கொண்டே இருக்குமளவு கால்களை மண்ணில் ஊன்றியிருப்பவன். பசுங்காட்டில் மண்ணில் ஆழ வேர் ஊன்றி, விண்ணில் தனது கிளைகளைப் பரப்பும் பெருமரங்கள் போல தன்னைத் தொலைத்துவிடாதிருக்க செய்யும் அத்தனைப் பிரயத்தனங்களுக்கு இடையே இருநூறு ஆண்டு காலமாக யாருமின்றி மொழியறியா மண்ணில் அலையும் அப்பெண்களுக்காக மனம் இளகுபவன். அவன் ஒரு மாறுதலின் காலகட்டத்தில் நிற்பவன். கல் பெண்ணென மலர்வதற்காக காத்திருந்தது போல, புத்தகம் தனக்குரிய வாசகனுக்காக, காணிக்காரர்கள் வாழ்வு அவன் வருகைக்காக காத்திருக்கிறது. மரங்களின் மேல் மாடம் அமைத்த காணிக்காரர்கள் காடுகளுக்குள் நீளும் அரசாங்கத்தின் சிறுவிரல் தொடுகையென ஒரு கருப்பலகையும் சோறுமாகச் சென்று கல்வி வாயிலாக அவர்களுக்கு எழுத்தறிவித்தவன், பட்டினி இன்றி வாழச் செய்தவன். அவர்களுக்காக எழுதப்படாத நமது கல்வித் திட்டத்தில் இருந்து விலகி, அக்குழந்தைகளுக்குத் தேவையான கதைகளைச் சொல்லும் ஆசிரியன். காட்டு தெய்வங்களுக்கிடையே சரஸ்வதியைக் குடியேற்றுகிறான், முதலில் அவர்கள் மாடத்தில் தானும் ஏறி அமர்ந்து, பின்னர் அவர்களை வெளியுலகுக்கு கைபிடித்து அழைத்துச்செல்கிறாள் கல்வியின் தெய்வம்.
இரண்டாவதாக காடு நாவலுக்குப் பிறகு, இக்கதை முழுவதுமாக காட்டுக்குள் வாழ வைத்தது. மாரிக்காலம் முழுமைக்குமாகப் பெய்யும் ஒரே நீண்ட மழை, ஒன்றை ஒன்று முட்டி மேலேறி வரும் மேகம் எனக் கண்முன் நிற்கிறது நான் கண்டறியாத அக்காடு. “மழை எதையோ சத்தியம் செய்வது போல மண்ணை ஓங்கி அறைந்தது”, “நீரில் நீர்விழுந்து தெறிப்பது நீராலான சிறிய நாற்றுக்கள் போல தோன்றியது”, இத்தனை எழுதிய பின்னும் மழையைச் சொல்ல வார்த்தைகள் எவ்வளவு எஞ்சியிருக்கின்றன.
மூன்றாவதாக, கதை முழுவதும் வரும் காணிக்காரர்கள் மொழியைக் கையாளும் விதம் குறித்த சித்தரிப்புகள். “கதவு சிரிக்குந்ந வெளிச்சம்” போன்ற மின்னல்கள்; “புலியை காட்டிலும் பெரிய கரண்டு என மின்சாரத்தை சொல்லுவதும், யானைப்பலகை எனக் கருப்பலகைக்கு பெயரிடுவதும், பனங்கொட்டை என யானைக்குட்டியை சொல்வதும், “ஆ” என்ற ஓரெழுத்துஒருமொழியால் உணர்த்திடும் பல உணர்வுகளும், அவர்கள் கல்வி கற்றுக் கொள்ளும் விதமும் என ஒரு குழந்தை முதன் முதலாய் மொழியை வைத்து விளையாடுவதைப் பார்க்கும் அனுபவம். அறிதலின் மகிழ்ச்சியைச் சொல்ல துப்பன் முற்றம் முழுக்க “அ” எழுதிய காட்சி இனி எப்போதும் நினைவில் எழும்.
நான்காவதாக கதை வாசித்த ஒவ்வொருவரையும் தாங்கள் மனப்பிறழ்வின் கோட்டுக்கு எவ்வளவு அருகில் நின்றிருக்கிறோம் என உணர்த்திய விதம். இன்றைய காலகட்டத்தில் எந்த நோய் குறித்து இணையத்தில் கூகுளில் தேடினாலும் மரணம் வரை அனைத்து சாத்தியங்களையும் சொல்லி உண்மையில் நாம் மரணத்தை நெருங்கி விட்டதாய் உணரச் செய்யும், அது போல இக்கதையில் மெய்யனுக்கு நேரும் ஸ்கிஸோஃப்ரினியாவின் பல அறிகுறிகள், கோட்டுக்கு எந்தப் பக்கம் இருக்கிறேன் எனும் கேள்வியை எழுப்பியது. இக்கதையில் வருவது போல “அச்சமூட்டக்கூடிய எந்த அனுபவத்திலும் அதை எப்படி விளக்கி நாம் ஏற்கனவே கொண்டிருக்கக்கூடிய உலக உருவகத்துடன் பொருத்திக்கொள்வது என்பதில்தான் நம்முடைய அகத்தின் பதற்றம் இருக்கிறது. ” அவனுக்கு நேர்ந்தது மொத்தமும் ஸ்கிஸோஃப்ரினியா என்று விளக்கிக் கொள்வது மண்ணில் கால் ஊன்றிக் கொள்ள வசதியாக இருக்கிறது. ஆனால் காடுகளுக்குள் அவன் மீண்டும் காணும் கர்னல் சாப்மானும் காப்டன் மெக்கின்ஸியும் இன்னொரு நிகர் உண்மையாக உடன் இருக்கிறார்கள். அந்த நிகர் உண்மையே மனதுக்கு வேண்டியிருக்கிறது. விளக்கிக் கொள்ள முடியாதவற்றின் வசீகரம் இக்கதையை பசுமை நுரைத்த காடு போல ஆக்குகிறது.
இறுதியாக ஃபேன்னி பர்னி, ஈவ்லினா, ஹெலெனா , விர்ஜீனியா வாயிலாக விரியும் பெண்கள் குறித்த பெண்களின் கருத்துக்கள், பெண்களை முன்னிட்ட ஆண்களின் சொற்கள், பெண்களின் சொற்களாக மெய்யன் காணும் வரிகள் என நிறைந்திருக்கிறது இக்கதை. இந்தப் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் அடக்கப்படுகிறார்கள், வெளியேறத் துடிக்கிறார்கள். நாடகங்கள் நிறைந்த பெண்களின் உலகை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். ஆண்களால் சுரண்டப்படுகிறார்கள், தான் ஒரு கள்ளமற்றவள் என்ற பாவனை வழியாகவே ஆண்களைப் பயன்படுத்துகிறார்கள், எங்கோ ஓரிடத்தில் வெல்கிறார்கள். வேட்டையாடப்பட்டு பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் தலைகள் போல ஐரோப்பிய பெண்கள் ஒரு பதாகையாகவே பார்க்கப்படுகிறார்கள். கள்ளமின்மையின் அழிவை தங்கள் அடையாளமாக, அதிகாரமாக சூடிக் கொள்ளும் ஆண்களின் பதாகை. பச்சைவயல்கள் அழிவதும், காடுகளில் குரங்குகள் தேவையின்றி சுடப்படுவதும், இப்பெண்கள் சுரண்டப்படுவதும் அனைத்தும் ஒரு ஆணவ நிறைவுக்காக. ஒரு கணமும் தாழக் கூடாத கொடியாகக் காணப்படும் விர்ஜீனியாவின் கௌரவம் போலத்தான், காப்டன் மக்கின்ஸியின் பதவி உயர்வுக்காக கர்னலிடம் பழக நேரும் ஹெலெனா. அப்பெண்கள் தங்களை விடுவித்துக் கொள்ள, ஒரு பிரேஸ்லெட்டை உதற வாழ்நாள் முழுவதும் தேவைப்படுகிறது, சில சமயம் காடுறையும் புலி உதவுகிறது. ஹெலெனா கர்னலை உதைத்த உதை ஃப்ரான்ஸெஸ் பர்னி வெட்டி எறிந்த முலை.
இறுதியாக கள்ளமின்மையின் அழிவு என்பது சூறையாடப்படும் சித்திரமாக மேற்கில் இருப்பதை மெய்யன் உணர்வதற்காகவே இவை அனைத்தும் நிகழ்வதாகத் தோன்றியது. காணிக்காரர்களின் இயல்பான அறிவுத்திறனையும் கற்பனைத்திறனையும் கல்வி என்ற பெயரால் அழித்து விடுவேனோ என்ற மெய்யான கவலையோடும் அக்கறையோடும் அவர்களோடு அவர்கள் சூழலிலேயே வாழ்ந்து, அவர்களது வாழ்வின் தரத்தை மேம்படுத்தவென்றே தன்னை அர்ப்பணிக்கும் தெளிவும் அதிலிருந்தே மெய்யனுக்கு கிடைத்திருக்கும் எனத் தோன்றியது. “என்றே குரு, ஏசுகிறிஸ்து மீனவனை வலையை வீசிட்டு வான்னு கூப்பிட்ட மாதிரி என்னை விளிச்சு எளுப்பினவர்” என்று துப்பன் சொல்வது காடு மெய்யனுக்குத் தந்த வாழ்த்து.
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள ஜெ,
கதாநாயகி நாவலை நான் மீண்டும் மீண்டும் படிக்கிறேன். மீளவிடாத ஏதோ ஒன்று அதில் இருக்கிறது. ஒரு நாவல் நிறைய இடைவெளிகளை விட்டுவிட்டதென்றால் அவற்றை நிரப்பமுயன்று நாம் அதை பெரிதாக்கிக் கொள்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக அவை மிகப்பெரிதாக ஆகிவிடுகின்றன.ஏராளமான புதிய கற்பனைகள் எழுகின்றன.
உதாரணமாக துப்பன் எழுத்துக்களில் இருந்து விலங்குகளை எழுப்புகிறான். அவற்றை எழுதிய ஆதிமுன்னோடி அவற்றில் மறையவைத்த விலங்குகள் அவை. அப்படித்தான் மெய்யனும் அந்நாவலில் இருந்து மனிதர்களை எழுப்புகிறான்
அருண்குமார்
கதாநாயகி,கடிதங்கள் -5 கதாநாயகி கடிதங்கள்-4 கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1புலரியில் மறைந்த மஞ்சள் கடல்-தெய்வீகன்
நிலவொளியில் முழுமயானமும் முன்பகல் போல ஒளிர்கிறது. கல்லறைத் தோட்டமெங்கும் நட்டிருந்த சிலுவைகள், உள்ளே பாய்ந்த மஞ்சள் கடலில் மெல்ல மேலெழுந்து மிதக்கின்றன. அதில் தனித்ததொரு பூங்கன்றின் மலர்கள் அப்போதும் மலர்ந்தபடியுள்ளன. மஞ்சள் நிற அலை தீராப் பழியோடு எனது கற்குடிசையையும் கடைசியாக கவ்விச்சென்று விடுகிறது.
புலரியில் மறைந்த மஞ்சள் கடல்வெண்முரசு, உரையாடல்
வாசகர் முத்துக்குமார் வெண்முரசு நாவல்களைப் பற்றிய அவருடைய எண்ணங்களை காணொளிக் காட்சியாக வெளியிட்டிருக்கிறார். உரையாடலுக்கான பல புள்ளிகளை தொட்டுச்செல்லும் பேச்சு
June 5, 2021
ஒரு முகம், ஒரு குரல்.
வெண்முரசு ஆவணப்படத்தின் டிரெயிலர் வந்திருந்தது. பார்த்தீர்களா என்று நண்பர்கள் கேட்டனர். பார்த்தேன், கேட்கவில்லை. கிட்டத்தட்ட ஒலியை அணைத்துவிட்டு அருண்மொழியை பார்த்துக்கொண்டிருந்தேன். அழகாக இருக்கிறாள், மிக அழகாக இருக்கிறாள் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது. முப்பதாண்டுகளுக்கு முந்தைய எண்ணம் அப்படியே நீடிக்கிறது. எப்போதுமுள்ள உயிர்த்துடிப்பு. சிறுமியுடையதுபோன்ற துள்ளல்.
அவள் தன் வலைத்தளத்தில் எழுதுவதை வாசிக்கிறேன். அதை ஓர் எழுத்தாளர் எழுதுவதாக நினைக்கவே முடிவதில்லை. அவளிடம் எப்போதுமே மாறாத ஒரு குளிர்த்தன்மை உண்டு. அந்த மொழியிலேயே அவற்றை வாசிக்க முடிகிறது. அவளுடைய இளமைக்கனவுகள், அதை ஒரு வட்டத்திற்குப்பின் அவள் வந்து தொட்ட விதம் எல்லாமே அணுக்கமான வேறொரு மொழியில் எனக்குக் கேட்கின்றன.
அதைவிட நான் எப்போதுமே விரும்புவது அவளுடைய நகைச்சுவை உணர்ச்சி. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் நான் அவளுடன் பேசுவதை அரிய அனுபவமாகவே உணர்கிறேன். அவள் பேசி முடித்து சென்றபின் சட்டென்று நினைத்துச் சிரித்துவிடும் ஒரு வரியாவது எஞ்சாமலிருந்ததே இல்லை.
அவளுடைய pun என்பது எதிர்விமர்சனமோ கேலியோ இல்லாதது. முழுக்கவே எவரையும் புண்படுத்தாதது. [சுரா வீட்டுக்கு போய்விட்டு வந்தாள். நான் கேட்டேன். “தங்கு எப்டி இருக்கா?”. அவள் சொன்னாள் “தங்குதடையில்லாம பேசுறா”]. ஆண்களிடம் அந்த மென்மையான நகைச்சுவை அனேகமாக இல்லை என்பது என் எண்ணம். ஒரு சின்ன முள் உள்ளே இருக்கும்.
இக்கட்டுரைகள் முழுக்க அந்த மென்மையான நகைச்சுவை ஓடுகிறது. இதெல்லாம் இப்படித்தானே என்ற எண்ணத்துடன் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் மனநிலையின் வெளிப்பாடு அது. அவளுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் அசோகமித்திரன், தி.ஜானகிராமன், அ.முத்துலிங்கம். அவர்களின் மென்மையான நகைச்சுவையை பேச்சில் இயல்பாக அடைவாள். எழுத்தில் முயல்கிறாள்.
[”அம்மா எப்டி இருக்காங்க?” என்றேன். “எந்திரிச்சு உக்காந்து இந்த இவ இருக்காளே…ன்னு நீட்டி பேசி சித்தியை வையுறாங்க. அப்டியானா நார்மலா இருக்காங்கன்னுதானே அர்த்தம்?” ]
சாயங்காலம் வீட்டுக்குவந்து தஸ்தயேவ்ஸ்கி படிப்பவள், ஆனால் அலுவலகத்திலும் அண்டையிலும் அத்தனை பெண்களிடமும் அவர்களில் ஒருத்தியாக அரட்டை அடிக்க முடியும். அவளுடைய இலக்கிய ஆர்வமெல்லாம் அவர்களுக்கு இன்றுவரை தெரியாது. அவர்களுடன் புழங்குவதற்கென்று டிவி சீரியலில் கதை மட்டும் இணையத்தில் தோராயமாக தெரிந்து வைத்திருப்பாள்.புடவை நகை வம்பு என்று இயல்பாகப்புழங்குவாள். நான் ஆச்சரியத்துடன் மட்டுமே பார்க்கும் விஷயம் இது. ஆண்களுக்கு இது அனேகமாகச் சாத்தியமே இல்லை என நினைக்கிறேன்.
இக்கட்டுரைகளில் என் சாயல் இல்லை என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது இயல்பு. இந்த முப்பதாண்டுகளில் நான் கண்டது அது. எதனாலும் அடித்துச் செல்லப்படாத, எவராலும் எதன்பொருட்டும் ஆணையிடப்படுவதை ஏற்காத ஓர் உறுதி அவளிடமுண்டு. இயல்பான பணிவின் உள்ளே அது எப்போதுமிருக்கும். எவராயினும் அவளிடம் உரையாடவே முடியும். தந்தையோ கணவனோ என்ன, மத்திய அரசுக்குக்கூட அவள் பணிய வாய்ப்பில்லை.
அப்படி இருக்க ஒருவர் எதிர்மனநிலை கொண்டிருக்கவேண்டியதில்லை. கசப்பும் கோபமும் கொண்டிருக்கவேண்டியதில்லை. தன்னுடைய அகத்தை நிலையாக, ஆழமாக வைத்துக்கொண்டிருந்தால் போதும். எப்போதுமே இனியவளாக, எச்சூழலிலும் உறுத்தாதவளாக, ஆனால் தன்னிலையை சற்றும் விடாதவளாக இருக்க முடியும்.அருண்மொழியின் நேர்நிலைத்தன்மையும் நம்பிக்கையும் நான் எனக்காக நம்பியிருக்கும் பிடிமானங்கள்.
அருண்மொழி அவளுடைய பெரிய குடும்பத்தின் , என் நட்புச்சூழலின் எத்தனையோ பேருக்கு தாங்குகோல். இனி ஒரு தலைமுறைக்குப்பின் அவள் படிக்கவைத்த, அவள் வாழ்க்கை அமைத்துக்கொடுத்த குழந்தைகளால்தான் அவள் முதன்மையாக நினைக்கப்படுவாள்.
‘எடைமிக்கவை எவையென்றால் ஆழ்ந்த வேருள்ளவையே’ என்று ஒரு மலையாள கவிச்சொல். [வைலோப்பிள்ளி]. நம் அன்னையர் இப்படி இருந்தார்கள்.
இந்த எழுத்துக்களின் முதல்வாசகனாக இவை எனக்கு அளிக்கும் பரவசம் பிறிதொருவர் அறியமுடியாதது.
விட்டு வந்த இடம்– அருண்மொழிநங்கை.கொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை
அன்புள்ள ஜெ.,
கரு.ஆறுமுகத் தமிழன் அவர்களின் கட்டுரைகளை இணையத்தில் தொடர்ந்து வாசித்திருக்கிறோம். புத்தக கண்காட்சி இலக்கிய விழாக்கள் போன்ற சந்தர்பங்களில் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசியதுண்டு.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆழிசூழ்உலகு குறித்த வாசகசாலையின் அமர்வு ஒன்றில் கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள் பங்கேற்றிருந்தார். அப்போது தனிப்பட்ட உரையாடலில் காடு நாவல் குறித்தும் ஒப்பிட்டுக் கூறியது நல்ல திறப்பாக அமைந்தது.
இவ்வாண்டு ‘நற்றுணை கலந்துரையாடல்’ உருவான போது காடு அல்லது கொற்றவை நாவல் குறித்து உரையாட அவரை அழைக்க வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. இவ்விரண்டில் கொற்றவை குறித்து அவர் உரையாட கேட்க வேண்டும் என்று கடலூர் சீனு உறுதியாக இருந்தார்.
‘இன்றைய காந்திகள்’ எழுதிய பாலா அவர்கள் வழியாக தொடர்புகொண்டு கரு.ஆறுமுகத்தமிழன் அவர்களை சந்திக்க நேரம் வாங்கினோம்.
சிறிது நேரமே ஆனாலும் அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடியது உவகையான ஒன்று. தனித்தமிழ் இயக்கம், அதில் அரசியலை இணைத்து புரிந்து குழப்பிக் கொள்வதில் உருவாகும் சிக்கல்கள், வடமொழி பெயர்களை எழுதும் பொழுது எழுந்த சில நகைச்சுவையான உதாரணங்கள் ஆகியவற்றைக் குறித்துக் கூறினார். அவரது திருமந்திரம் புத்தகங்கள் குறித்தும் உரையாடினோம். கொற்றவை நாவலை பதிப்பகம் சார்பாக வாசித்து அதில் திருத்தராக பங்கு வகித்ததையும் குறிப்பிட்டார். அப்பொழுதே இந்த உரை குறித்த எதிர்பார்ப்பு எழுந்து வந்தது..
கலந்துரையாடல் அமர்வில், நாவலுக்கான உரை முடிந்த பின்னரும் அடுத்த ஒரு மணிநேரத்திற்கு தமிழ் இலக்கியம் சார்ந்த வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவருக்கு எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்
அன்புடன்,
விஷ்ணுபுரம் சென்னை நண்பர்கள்
விருதுகள்,விடுபடல்கள் – கடிதம்
அன்புள்ள ஜெ
தமிழக அரசின் இலக்கியவிருதுகள் என்னும் கட்டுரை கண்டேன். திமுக ஆதரவாளர்களின் காழ்ப்புக்கூச்சல்கள் சவடால்களைக் கண்டு நானும் சலிப்படைந்துதான் இருக்கிறேன். திமுக சென்ற காலங்களில் நவீன இலக்கியத்தைப் புறக்கணித்தது என்பதையும், சென்றகாலங்களில் அதன் இலக்கிய -பண்பாட்டுச் செயல்பாடுகள் தனிநபர்துதி, கட்சிக்கொண்டாட்டம் ஆகியவையாக மட்டுமே இருந்தன என்பதையும், தலைசிறந்த படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் எப்படி புறக்கணிப்பப்பட்டார்கள் என்பதையும் திட்டவட்டமாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லவேண்டியிருக்கிறது.
அவ்வண்ணம் மீண்டும் நிகழக்கூடாது என்ற எச்சரிக்கையுடனும், நிகழாது என்ற நம்பிக்கையுடனும் நீங்கள் எழுதியிருக்கும் குறிப்பு முக்கியமானது. இதையும் வழக்கம்போல வம்புப்பேச்சாகவே இங்கே எடுத்துக்கொள்வார்கள். இங்கே வெறும் வம்பு மட்டுமாகவே இலக்கியத்தை எடுத்துக்கொள்ளும் கூட்டம்தான் எல்லா தரப்பிலும் உள்ளது. ஆனாலும் இளந்தலைமுறைக்கு இக்குறிப்புகள் உதவலாம்.
இரண்டு கேள்விகள்தான் எனக்கு உள்ளன. வண்ணநிலவனின் பெயரை நீங்கள் விட்டுவிட்டீர்கள். மனுஷ்யபுத்திரனையும் சு.வெங்கடேசனையும் குறிப்பிடவில்லை. அதற்கான காரணங்கள் என்ன?
அர்விந்த்குமார்
அபிஅன்புள்ள அர்விந்த்,
இத்தகைய கட்டுரையை எழுதும்போதே எதிர்வினைகளை எதிர்பார்த்துத்தான் எழுதுகிறேன். எல்லாவகையான எதிர்வினைகளும் வரலாம். என் பெயர் கேட்டாலே வசைபாடுபவர்களையும் நான் அறிவேன். ஆனால் விவாதம் நடக்கட்டும். எல்லாமே ஒட்டுமொத்தமாக நல்விளைவை உருவாக்குவனதான். ஆகவே கசப்புடன் அணுகுவதில்லை.
[ஆனால் என் கட்டுரையில் இருக்கும் அவநம்பிக்கை தேவையில்லாதது, அது கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றுகிறது என்று அஜிதன் சொன்னான். அவனுடையது எப்போதுமே நிதானமான, நம்பிக்கை கொண்ட அணுகுமுறை. அவனுடைய பரந்த வாசிப்பறிவு, அவ்வயதில் அரிதான நிதானம் ஆகியவை நான் என்றுமே வியப்பவை. அவன் சொல்வது உண்மை என இப்போது எனக்கும் படுகிறது.
எனது அந்த அவநம்பிக்கை சென்ற மு.க ஆட்சிகாலத்து நினைவுகள், இன்றும் அம்மனநிலைகளை வலியுறுத்தும் குரல்கள் அளிக்கும் ஒவ்வாமையில் இருந்து எழுந்தது. அன்றே அதைப்பற்றி அழுத்தமாக எழுதியவன் நான். அக்குரல்களுக்கு பதிலளிக்கும் தொனி அதில் வந்துவிட்டது. அதை தவிர்த்து நேர்நிலை நம்பிக்கையுடன் அக்கட்டுரையை எழுதியிருக்கலாம்தான். நம் சூழலில் நேர்நிலையுடன் இருப்பதைப்போல கடினமானது வேறில்லை]
தமிழவன்நான் எழுதவந்தபோதே அற்பஎழுத்து, போலிஎழுத்து என்னும் விமர்சனங்களுடன் சிலரை விமர்சித்து ஒதுக்குபவனாகவே இருந்தேன். என் பார்வையில் வண்ணநிலவன், பிரம்மராஜன், பா.செயப்பிரகாசம் மூவரும் அவ்வகையிலானவர்கள். அவர்கள் அடுத்த தலைமுறைக்கு மோசமான முன்னுதாரணங்கள் என்பது என் கருத்து. சில்லறை விஷயங்களை பூடகமாகச் சொல்வது வண்ணநிலவனின் எழுத்து. செயற்கைச் சிடுக்கு பிரம்மராஜன். போலிப்புரட்சி செயப்பிரகாசம்.
அது வெறும் அபிப்பிராயம் அல்ல, விவாதித்து முன்வைக்கப்பட்ட விமர்சனக்கருத்து. அப்படிப்பட்ட கருத்துக்கள் வழியாகவே விமர்சகன் செயல்படுகிறான். அதை இன்னொரு விமர்சகன் மறுப்பான் என்றால் அது அவன் கருத்து, விவாதச்சூழலில் அதை அவன் முன்வைக்கலாம். அதில் ஒன்று நிலைபெறலாம். அதுவே இலக்கியம் இயங்கும் முறை.
முப்பதாண்டுகளாக நான் அதைச் சொல்வதனால் அவர்கள் என்மேல் வெளிப்படுத்தும் காழ்ப்பையும் நான் அறிவேன். அதுவும் இயல்பானதே. அவர்களை ஓர் இலக்கிய வரலாற்றுப் பட்டியலில் சேர்ப்பேன். அவர்களுக்கு ஒரு விருது அளிக்கப்பட்டால் ஒரு சம்பிரதாயமான வாழ்த்து சொல்லவும் செய்வேன்.ஆனால் முன்னோடிகளாக முன்வைக்க மாட்டேன்.
கோணங்கிஇந்த பட்டியல் விருதுக்குரியவர்களை முழுமையாகச் சிபாரிசுசெய்யும் பட்டியலொன்றும் அல்ல. இலக்கியப் பங்களிப்பின் பட்டியலும் அல்ல. இது இன்றைய சூழலில் திமுக அரசு அதன் எல்லைகளுக்குள் நின்று குறைந்தபட்சம் விருதுக்கு பரிசீலிக்கவேண்டியவர்களின் ஒரு வரிசையே உள்ளது. ஒரு பொதுப் பரிந்துரை, அவ்வளவுதான்.
இன்னும் சொல்லப்போனால் திமுக எதிர்ப்பு இல்லாதவர்களின் பெயர்களையே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் அதையேனும் கருத்தில்கொள்வார்கள் என்று. ஆனால் திமுக எதிர்ப்பா ஆதரவா என்பது ஓர் அளவுகோல் ஆகக்கூடாதென்பதையே கட்டுரையின் சாரமாக கூறியிருக்கிறேன்.
அதில் எந்த விருதுகளுக்கும் எந்நிலையிலும் தவிர்க்கவே முடியாத இலக்கிய முன்னோடிகள், அதேசமயம் கௌரவிக்கவும் படாதவர்கள் என்ற கோணத்தில்தான் தேவதேவன், தேவதச்சன் என சிலர் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். மூத்த படைப்பாளிகள் அனைவரையும் அதில் குறிப்பிடவில்லை.
எஸ்.வி.ராஜதுரைஎன் பெருமதிப்பிற்குரிய வண்ணதாசன், பூமணி பெயர்கள்கூட அதில் இல்லை. ஏனென்றால் அவர்கள் வேண்டிய அளவுக்கு கௌரவிக்கப்பட்டுவிட்டர்கள். தமிழகத்தின் உயர்விருதுகள் அளிக்கப்பட்டுவிட்டன. அவர்களுக்கு இனிமேல் ஞானபீடம் அளிக்கப்படுமென்றால் வரவேற்பேன்.
கோணங்கி, அபி இருவர் பெயரையும் சொல்லவில்லை. அவர்கள் மேல் பெருமதிப்பை முன்வைப்பவன். ஆனால் அவர்களின் அழகியலை ஒரு பொது வாசகச்சமூகத்தின் முன் எவ்வகையிலும் நிறுவ முடியாது. தொடக்க காலகட்டத்தில் விருதுகள் பொதுச்சூழலிலேயே சற்றேனும் விளக்கும்படி அமையவேண்டும். மௌனி, நகுலன் இன்றிருந்தால் அவர்களுக்கும் இதே அளவுகோல்தான்.
எழுத்தாளர் பூமணிபெருமாள் முருகன் அவருடைய தகுதிக்கு மீறி, பலவகை குழுச்செயல்பாடுகள் வழியாக, சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்டவர்.அதோடு வெட்கமே இல்லாமல் இவ்விருதுக்கு முண்டியடித்து அபத்தமான கவிதைகளெல்லாம் எழுதுகிறார். அவருடைய ஆக்கங்களை முழுக்க நிராகரிக்க மாட்டேன். அவற்றுக்கு ஓர் இலக்கியத்தகுதி உண்டு. ஆனால் அவருடைய செயல்பாடுகள் உருவாக்கும் ஒவ்வாமையை மறைக்க விரும்பவில்லை
அவர் இத்தனைநாள் முழுக்கமுழுக்க பிராமண ‘லாபி’யால் முன்வைக்கப்பட்டவர். திமுக வென்றதும் ஒரே இரவில் பிராமண எதிர்ப்பாளராகி ஒடுக்கப்பட்டவராக வேடமிட்டு வந்து நிற்கிறார். எங்கு இலைபோட்டாலும் அங்கு சென்றுவிடும் இவ்வியல்புதான் கசப்பை உருவாக்குகிறது. அது நவீன எழுத்தாளன் செய்யக்கூடிய செயல் அல்ல.
நான் சுட்டிக்காட்டுவது இவ்வண்ணம் சுட்டிக்காட்டினால் மட்டுமே ஆட்சியாளர்கள் கவனிக்கக்கூடிய படைப்பாளிகளை மட்டும்தான். இவ்வண்ணம் சுட்டிக்காட்டுவது விமர்சகனின் பணி என்பதனால் மட்டும்தான். இதெல்லாம் வெறும் தனிநபர் அபிப்பிராயங்கள் அல்ல, நூற்றுக்கணக்கான பக்கங்கள் இலக்கியவிமர்சனங்கள் எழுதிய ஒருவனின் தரப்பு. இதேயளவு ஆழத்துடனும் விரிவுடனும் எழுதிய இன்னொருவரிடம் விவாதிக்கவும் செய்வேன்.
அ.மார்க்ஸ்அறிஞர்களின் பட்டியலிலும் என் மதிப்புக்குரிய தமிழவன், க.பூரணசந்திரன், எஸ்.வி.ராஜதுரை, பேரா தர்மராஜ், அ.மார்க்ஸ், ஜமாலன் ஆகியோர் விடுபட்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் சிந்தனைகளை அறிமுகம் செய்தவர்கள் மட்டுமே. நான் குறிப்பிடுபவர்கள் நேரடியான புறவயமான ஆய்வுகளைச் செய்தவர்கள், ஆய்வுநூல்களை உருவாக்கியவர்கள். அரசியல்மையச் செயல்பாடுள்ளவர்களையும் தவிர்த்திருக்கிறேன். இது இலக்கியப் பட்டியல்
இந்தச் சிபாரிசுகளின் மதிப்பென்ன என்பதை இப்பட்டியலை வாசிப்பவர் எவரும் உணரமுடியும். முப்பதாண்டுகளாக இத்தனைபேரையும் ஏறத்தாழ முழுமையாகவே படித்து, இவர்கள்மேல் விரிவான மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டவர்கள் மிக அரிதாகவே நம் சூழலில் உள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவரின் சாதனைகள் எல்லைகள் இரண்டையும் கூற, இவர்களின் பங்களிப்பை சுருக்கமாக எடுத்துக்கூற தமிழில் பிறகுரல்கள் எழுவதில்லை என்பதை கவனிக்கலாம். அவ்வாறு நான் எழுதும் ஒவ்வொரு குறிப்புக்கு முன்னரும் இணையத்தில் தேடிப்பார்ப்பேன். வேறெவரும் எழுதிய எதுவுமே சிக்குவதில்லை. வெறும் வம்புகள் மட்டுமே கண்ணுக்குப் படும்.
வண்ணதாசன்என் தலைமுறை படைப்பாளிகளில் மனுஷ்யபுத்திரன், சு.வெங்கடேசன் பெயர்களைச் சொல்லவில்லை. அவர்கள் முக்கியமான படைப்பாளிகள் என்று நினைக்கிறேன். ஆனால் சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினர். மனுஷ்யபுத்திரன் திமுகவின் முகமாக அறியப்படுபவர். அவர்களுக்கு விருதளிப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
திமுக என்பதற்காக ஒருவருக்கு விருது அளிக்கப்படாமல் இருக்கக்கூடாது.ஆனால் அதன் முகங்களென அறியப்படுபவர்களுக்கு விருதுகள் அளிக்கப்படலாகாது. அது கட்சிக்குள்ளேயே அத்தனை கட்சிப்படைப்பாளிகளும் துண்டை விரிக்கவே வழிவகுக்கும்.
க.பூரணசந்திரன்மனுஷ்யபுத்திரன் தமிழின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்பதே என் கருத்து. அவருடைய நீண்ட இலக்கிய அனுபவம் பயன்படும் வகையில் பொறுப்புகள் அளிக்கப்பட்டால் நன்று. அவர் மத்திய மாநிலங்களவைக்கு அனுப்பப்படுவாரென்றால் அவர் சிறப்புற ஆற்றத்தக்க பணிகள் அங்குண்டு.
அவர் இந்த அரசின் முகம், இந்த ஆட்சியில் அவர் அளிக்கும் பங்களிப்பால்தான் அவர் நினைவுகூரப்படவேண்டும்–வேழவேந்தன் போல. இவ்வரசு அளிக்கும் கௌரவத்தால் அல்ல, அவ்வண்ணம் விருது பெறுவது மதிப்புக்குரியதல்ல என பிற்காலத்தில் அவரே உணர்வார். அது அவர் இதுகாறும் பேசியதன் நோக்கத்தையே சிதைத்துவிடும்.
அதேசமயம் மையஅரசின் சாகித்ய அக்காதமி விருது அவருக்கு அளிக்கப்படுமென்றால் அது சிறப்பானது. ஆனால் அவருக்கு இவ்வரசின் விருது உட்பட எந்த விருது அளிக்கப்பட்டாலும், அது தனிப்பட்ட முறையில், இலக்கிய விமர்சகன் என்ற முறையில் என் வரவேற்புக்குரியதே.
[சென்ற பல ஆண்டுகளாகவே சாகித்ய அக்காதமி விருதுகளில் கவிதைகள் கருத்தில்கொள்ளப்படுவதில்லை. மிகப்பிழையான அணுகுமுறை அது. அதையும் இங்கே சொல்லியாகவேண்டும்]
பேரா தர்மராஜ்இதைச் சொல்வதற்கான என் தகுதி குறித்து ஒரு நண்பர் ஆவேசமாகக் கேட்டிருந்தார். இலக்கியவாசிப்பில் அடிப்படை அறிந்த ஒருவர் என் தகுதி குறித்து கேட்க மாட்டார்- அறிந்தவர் இன்று அதற்கான முதன்மைத் தகுதி எனக்குண்டு என்பதில் ஐயமும் கொண்டிருக்க மாட்டார்.
இது ஒரு பீடமா என்றால், ஆம். இதை அடைய முதலில் மறுக்கமுடியாத படைப்புச்சாதனையும் முழுமையான வாசிப்புப் பின்புலமும் தேவை. கருத்துக்களை உருவாக்குபவர்களுக்கே அக்கருத்துக்களை நெறிப்படுத்தும் தகுதி வருகிறது. இன்று அத்தகுதி கொண்ட இன்னொருவர் பெயர் எது?
அனைத்துக்கும் மேலாக இந்த இடம் என்பது பலவகை இழப்புகள் மற்றும் துறப்புகள் வழியாக, தனித்து நிற்கும் துணிவு வழியாக, பலநூறு எதிர்ப்பு மற்றும் கசப்புகள் வழியாக ஈட்டப்படும் ஒன்று. அதற்குச் சித்தமானவர்கள் இப்பீடத்தை அடையலாம்.
*
நான் சொல்லியிருப்பது ஒரு சிறந்த நடைமுறைக்கான எதிர்பார்ப்பையும் அதற்கான வழிமுறைகளையும். அது நிகழ்ந்தால் நல்லது. இதைச் சொல்வது இப்படியொரு நல்நோக்கம் இவ்வரசுக்கு இருப்பதாக அது வெளிப்படுத்திக் கொள்வதனால். தமிழகத்தில் இது அரிதான ஒரு தொடக்கம், அது வழக்கம்போல கடத்தப்பட்டுவிடலாகாது என்பதனால்.
அடிப்படையில் இந்த வகையான பட்டியல்கள், இதையொட்டிய விவாதங்கள் போன்றவற்றால் ஒரே பயன்தான். இது ஒரு வரிசையை உருவாக்குகிறது. அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்களின் பெயர்களை கொண்டுபோய் சேர்க்கிறது. இடம்வலம் தெரியாமல் அரசியல்கூச்சலிடும் கும்பல்கூட எப்படியோ இதில் ஒரு பங்களிப்பை ஆற்றுகிறது, அது நல்லதுதான்.
இப்படிப்பட்ட ஒரு விவாதம் வழியாக இவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். சற்று முன்பின்னாக இவ்வரிசை ஏற்கப்படுகிறது. அதுவே ஓர் இலக்கியமரபை கட்டமைத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கிறது. நோக்கம் இதுவே.
-ஜெ
மதார் கடிதம்-4
அன்பு ஜெ,
மதாருக்கு விருது என்று அறிந்த அன்றிலிருந்தே ஒரு பூனை குட்டி போட்டது போல மனதுக்குள் மகிழ்ச்சி அலையடித்துக் கொண்டே இருந்தது. உங்களுடனான முதல் சந்திப்பின் போது எனக்குக் கிடைத்த நண்பர் மதார் அவர்கள். கனம் நிறைந்த கவிதை காலகட்டத்திலிருந்து இலகுவான இன்றைய நவீன காலகட்டத்தைப் பற்றி அறிமுகம் செய்து மதாரை ஒரு இடத்தில் நிறுத்தி எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். அதற்கு முன்பு வரை மிக ஆழமாக உணர்வுகளைத் தொடும், தேடலைத் தரும் பிரமிள் அவர்களின் மீமெய்யியல் பாதங்களில் தான் அமர்ந்திருந்தேன்.
மதாரின் கவிதைகள், கைகளைப் பிடித்து இழுத்துச் சென்று ”இங்க பாத்தியா” என்று பரவசமூட்டும், பாடங்களைக் கற்பிக்கும் குழந்தையைப் போன்றவை. ”தன் குழந்தைகளுடனான நேரடியான உரையாடலை, விளையாட்டை ஏதோ காரணம் கருதித் துறப்பவன் இழப்பது, அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்வின் பெரும்பகுதியை என்பதே உண்மை” என்று ஜெ.சைதன்ய சிந்தனை மரபு என்ற புத்தகத்தில் சொல்லியிருப்பீர்கள். ஒரு குருவாகிய குழந்தையின் தேடலை கவிதையாக்கும் தன்மை மதாருக்கு வாய்க்கப்பட்டிருக்கிறது. அது நம்மை பரவசமூட்டுகிறது. திடுக்கிடச் செய்கிறது. பாடம் கற்பிக்கிறது. வேறொரு உலகைக் காணிக்கிறது.
“பறந்தலையும் தன்மை” என்று நீங்கள் சொல்வது போல அவரின் உளக்கிடக்கை அமைந்தொழுகுவதை அவரின் கவிதைகளில் காணலாம்.
”…முகம் கழுவ இவ்வளவு நேரமா
என்ற வெளிக் குரல்
அது அறியாது
நான் வெயில் கழுவி
முகம் தேடும் திகிலை”
வெயிலைக் கழுவுவதா? அப்படி முற்படுவது ஒரு சிறுவனாக அன்றி யாராக இருக்க முடியும். பெரியவர்கள் வெறும் கழுவுதல் மட்டுமே செய்யக் கூடியவர்கள். ”நிறத்தை நுகர்வதற்கு எங்கே செல்ல வேண்டும்?” என்று கேட்டு நம்மை திக்குமுக்காட வைக்கிறான் அந்தச் சிறுவன்.
வாசல் தெளிக்கும் அந்த நொடியில்
வாசல் தெளிப்பவள்
மழையாக்குகிறாள்
நீரை
வாளி வகுப்பறைக்குள்
இறுக்கமாக அமர்ந்திருந்தவை
இப்போது தனித்தனியாக
விளையாடச் செல்கின்றன
எனும்போது படிமமாக ஒரு காட்சிப்படுத்தல் நிகழ்ந்தேறி குழந்தைகள் துள்ளிக் குதித்து மகிழ்வாய் விளையாடச் செல்வதைக் காண முடிகிறது. இனி எங்கு வாசல் தெளிப்பதைக் காண நேர்ந்தாலும் இந்த சித்திரத்தை தானே நினைத்துக் கொள்வேன்.
இது தவிரவும் என்னைக் கவர்ந்த இன்னொரு கவிதை உண்டு. ”WIND” –ப் பற்றி சொல்லும் போது அதை “movement of air“ என்கிறார்கள். இந்த movement பொதுவாக ”அதிக அழுத்தத்திலிருந்து குறைவான அழுத்தம் நோக்கி நகர்கிறது”. இதை சிறுவயதில் படிக்கும் போது எந்த சலனமும் இருந்ததில்லை. ஆனால் முதிர்ச்சியடைந்தபின் வாசித்தபோது இந்த சமமின்மை இல்லை எனில் இயக்கமே நடைபெறாது என்று அறிந்தபோது மனம் அதனின்று பல தத்துவார்த்தங்களை உதிர்த்துக் கொண்டது. அதைக் கொண்டு தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம் என பெருக்கிக் கொண்டேன். ஆனால் மதாரின் கவிதையில் இந்த ஒன்றை வேறொன்றாகக் கண்டேன்.
“…ஒரு உயரத்திலிருந்து
இன்னொரு உயரத்திற்கு
காற்று தாழ்வாக ஏறியது
ஒரு உயரத்திலிருந்து
இன்னொரு உயரத்திற்கு
மகிழ்ச்சி சென்று வந்து கொண்டிருந்தது
ஒரு உயரம் இன்னொரு உயரத்தை
காதலோடு பார்த்தது
ஒரு உயரம் வானமாகவும்
இன்னொரு உயரம் பூமியாகவும் இருந்தது
மழையும், பறவைகளும், ஒளியும்
அதனை நிரப்பிக் கொண்டிருந்தன.”
ஆகா! என்று தான் முதலில் தோன்றியது. ’இந்த இரு சமமின்மைக்கு நடுவில் எதை இட்டு நிரப்பி வைத்திருக்கிறார் பாரேன்!’ என்று வியந்தது என் மனது. ஆமாம் தானே! அதை இட்டு நிரப்பினால் தானே இந்த ஒரு பரிமாற்றம் நடைபெறும். அந்த பரிமாற்றத்தை அவர் மகிழ்ச்சி, காதல் என்கிறார். அந்த சிந்தை இல்லாத ஒரு முனையால் பரிமாற்றம் நிகழ்த்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
வட்டம் என்பதன் மேல் எப்போதும் எனக்கு ஆச்சரியம் இருந்ததுண்டு. ஒற்றை செல் –லிருந்து மிகப்பெரிய கோள்கள் வரை யாவும் வட்டமாகவே இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். வட்டமான கடுகுக்குள் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்ட முடியும் என்று ஒரு சிறு உருளையின் ஆற்றலை உணர்ந்த ஒளைவையை நினைத்து பெருமிதங்கொண்டிருக்கிறேன். ஆனால் மதார் இங்கு பூனையின் கண்களை கிரகத்திற்கு ஒப்பிட்டு,
“அப்படி எனில்
செண்டி மீட்டர் அளவுகோல் போதும்
பூமிக்கும் நிலவுக்கும்
இடைப்பட்ட தொலைவை அளக்க”
என்கிறார். என் எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்து அலைந்து அளக்கமுடியாத தொலைவுகளே இல்லை என்று அமைந்து கொண்டது. இன்னும் சொல்லிக் கொண்டே செல்வேன் நான். ஆனால் அவர் அழைத்துச் செல்லும் உலகிற்குள் ஒவ்வொருவரும் தாமாகச் சென்று கண்டடையும் பரவசம் அளப்பறியது.
மாதரின் உலகத்திலுள்ள கொஞ்சிப் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள், கிறுக்குப் பறவை ராட்டினங்கள், கிரகம் போன்ற கண் கொண்ட பூனை, ஆகசத்தையே ஒளித்து வைத்திருக்கும் அவரின் ஜன்னல் என தரிசிப்பதற்கு அதிகம் உள்ளது. அவை வெயிலை மட்டுமல்ல நம்மையும் பறக்கச் செய்து இலகுவக்குபவை.
மதாருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
-இரம்யா
வெயில் பறந்தது தபாலில் பெற :
https://azhisi.myinstamojo.com/product/289695/veyil-parandhathu/அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :7019426274கிண்டிலில் படிக்க :https://cutt.ly/9njlmdN‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல் தொடரில் 17 ஆவது நாவல் ‘இமைக்கணம்’. ‘இமைக்கணம்’ என்பது, காலத்தின் மீச்சிறுதுளி. ஆனால், முன்னும் பின்னும் அற்ற தனித்த காலத்தின் மீச்சிறுதுளி என்பதே அதன் தனித்துவம். ‘இமைக்கணம்’ நாவல் இயற்றுதலுக்கும் எய்துதலுக்குமான இடைவெளியை வரையறுக்க முயன்றுள்ளது. உயிர்களின் நோக்கம் என்ன? அவற்றின் எல்கை யாது? என்ற அடிப்படை வினாக்களுக்கு மெய்மை நோக்கில் விடைகளை அளித்துள்ளது.
‘வெண்முரசு’ நாவல் தொடரில் குருஷேத்ரப் போர் தொடங்கியபோதே நான் ‘கீதை’யைப் பற்றி நினைத்து அஞ்சினேன். போர் நடைபெறுவதற்குச் சற்று முந்தைய கணத்தில் இளைய யாதவர் அர்சுணனுக்குக் கீதையை விரிவாகக் கூறுவாரே, அதை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதத் தொடங்கினால், அதுவே ஒரு நாவலளவுக்கு நீளுமே என்று அச்சப்பட்டேன்.
அதுமட்டுமல்ல, நாவலின் கதையோட்டத்துக்கு அது எந்தெந்த வகையிலெல்லாம் வாசிப்புத் தடையாக இருக்கும் என்பது குறித்தும் சிந்தித்தேன். நல்லவேளையாக எழுத்தாளர் அவ்வாறு செய்யவில்லை. தனக்கேயுரிய புனைவு நேர்த்தியால் அந்தக் கீதையை, அதன் சாரத்தை ஒரு கனவுநிலையில் இந்த நாவலிலேயே மிகச் சுருக்கமாக வெளிப்படுத்திவிட்டார்.
இந்த ‘இமைக்கணம்’ நாவலில், இதுவரை ‘வெண்முரசு’ நாவல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து முதன்மைக் கதைமாந்தர்களின் உள்ளத்திலும் வாழ்நாள் முழுக்க அலைவுறும் வெளிப்படுத்தமுடியாத வினாக்களுக்கெல்லாம் விடையளிக்கும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார் எழுத்தாளர். அந்த வினாக்கள் அனைத்தும் முழுமெய்மையை நோக்கியதாகவே உள்ளன.
அந்த வினாக்களை எழுப்புவது மானுடராக இருந்தாலும் அவற்றுக்கு விடைகளை அறிப்பது இறைவன். மானுடரின் வினாக்களை யமன் தனக்குள் ஏற்றிக்கொண்டு, அவற்றைப் பற்றி விரிவாக இறைவனிடம் உரையாடி விடைகளைப் பெறுவதாக ஒரு நாடகீயமாகவே உருவாக்கியுள்ளார் எழுத்தாளர்.
தருக்க உரையாடல்கள் இறுதியாகத் தத்துவத்தில் நிலைபெறுகின்றன. அந்தத் தத்துவம் மானுடரின் உள்ளத்தை முழுமெய்மையை நோக்கி நகர்த்துகிறது. மானுடர் தன்னுடைய உலகவாழ்வில் தான் இயற்றுவதும் எய்துவதும் எவை என்பன குறித்து முழுதறிவுபெறுகிறார். அதுவே அவர்களுக்கான விடுதலையாக அமைகிறது. தன் வினாக்களிலிருந்து விடுபடுபவனே விடுதலை பெற முடியும். அந்த விடுதலைக்கான களமாகத்தான் இந்த ‘இமைக்கணம்’ நாவல் உள்ளது.
யமன் தனக்குள் பொங்கிய வினாக்களுக்கு விடைதேடி இளைய யாதவர் வடிவில் இருக்கும் திருமாலிடம் செல்கிறார். அவர் தன்னுடைய வினாக்களை நேரடியாகக் கேட்காமல் தன்னைப்போலவே உலகில் அகவினாக்களால் பித்தேறி, நிம்மதியற்று அலையும் மானுடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் உருவில் கலந்து, அவர்களின் கனவுகளின் வழியாக இளைய யாதவரைச் சந்திக்கிறார்.
கர்ணன், பீஷ்மர், சிகண்டி, விதுரர், கிருஷ்ண துவைபாயனன் (வியாசர்), யுதிஷ்டிரர் மற்றும் திரௌபதி ஆகிய மானுடர்களை யமன் யமன் தேர்ந்தெடுக்கிறார். திரௌபதியின் உருவினைத் தான் ஏற்கும்போது யமன் யமியாக மாறிக்கொள்கிறார்.
இந்த மானுடர்களின் அகவினாக்கள் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வை உள்ளடக்கியதாகவே உருப்பெற்றுள்ளன. அதனால்தான், இளைய யாதவர் அவற்றுக்கு விடையளிக்கும்போது, அவர்களை அவர்களின் முற்காலத்துக்கும் பிற்காலத்துக்கும் காலத்தைக் கலைத்து அழைத்துச் செல்கிறார். இந்தக் காலக் கலைப்பு உத்தியை எழுத்தாளர் ‘மாமலர்’ என்ற நாவலில் ‘குள்ளர் முண்டன்’ (அனுமன்) என்ற கதைமாந்தர் வழியாக நிகழ்த்தியிருக்கிறார். இங்கு அதே பணியினை இளைய யாதவர் (திருமால்) செய்கிறார்.
ஒவ்வொரு முறையும் காலத்தைக் கலைக்கும்போதும் ஓர் உபகதையும் இந்த நாவலில் விரிகிறது. மானுடர்கள் ஒரு நிகழ்வு தனக்கு ஏற்றதாக, விருப்பமானதாக நிகழாவிட்டால் ‘அது இவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டாமே’ என நினைப்பது இயல்புதான். அத்தகைய நிகழ்வுகள் அவர்கள் விரும்பும் விதமாக அது நிகழ்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதைத்தான் இளைய யாதவர் இந்த நாவலில் விளக்கியுள்ளார்.
சான்றாகக் கர்ணனின் பிறப்பு பற்றிக் கூறப்படுதலைப் பற்றிப் பார்ப்போம். கர்ணன் உண்மையிலேயே முதற்பாண்டவராக உலகோரால் அறியப்பட்டிருந்தால், அவரும் அவரின் சகோதரர்களும் ‘பாண்டவர்கள் ஆறுபேர்’ என்ற பெயரிலேயே வாழ்ந்து, முதிர்ந்திருப்பர். ஆனாலும், கர்ணனின் அகத்தில் தங்கியிருக்கும் ‘வெறுமை’ நீங்காது என்பதை இளைய யாதவர் விளக்குகிறார். இதுபோலவே ஒவ்வொருவருக்கும் அவர்களின் முழுவாழ்வையும் மாற்றிக் காட்டி, அவற்றின் வழியாகவும் நீங்கள் உங்களின் அகவினாக்களைத் தவிர்த்திருக்க முடியாது என்றே குறிப்பிடுகிறார்.
இந்த நாவலில், திரௌபதி தன் கனவில் முன்பே சூரியப்பிரஸ்தத்தை உருவாக்கிவிட்டாள் என்றும் பின்னாளில் இந்திரப்பிரஸ்தமாக மாறிவிட்டது என்றும் ஒரு குறிப்பு வருகிறது. உண்மைதான்.
‘பாண்டவர்கள் ஆறுபேர்’ என்று நிகழ்ந்திருந்தால், திரௌபதி தன்னுடைய தன்னேர்ப்புமணத்தின்போது எந்தவிதமான போட்டியையும் வரையறுக்காமல் தானே முன்வந்து கர்ணனுக்கு மாலையிட்டிருப்பாள்.
காரணம், பிற ஐந்து பாண்டவர்களின் தனித்துவங்கள் அனைத்தும் ஒன்றுகூடிய முழுவடிவம் ‘கர்ணன்’ என்பதால்தான். கர்ணனை அவள் மணந்திருந்தால், தன்னுடைய கனவுநாடான சூரியப்பிரஸ்தத்தை உருவாக்கியிருப்பாள். ஆனால், காலம் வேறு விதமாக நிகழ்ந்து விட்டமையால், அவள் அர்சுணனை மையப்படுத்தி இந்திரப்பிரஸ்தத்தை நிறுவுகிறாள்.
இந்த நாவலில் நிகழும் உரையாடல்கள் பல இறைவன்-ஆன்மா ஆகியவற்றுக்கு இடையில் நிகழ்வதாகவே கருத இடமுள்ளது. அந்த உரையாடல்கள் தருக்கமாகத் துவங்கி, தத்துத்தைக் கண்டடைந்து, முழுமெய்மையை நோக்கிச் சென்று, அகவிடுதலையை அளிக்கின்றன.
சிண்டி, சுதாமன் (குசேலன்) பற்றியும் பாண்டவர்களின் படை ஒருக்கம், குடிமக்களைப் போர்க்களத்தில் நிறுத்தும் பீமனின் முயற்சி குறித்தும் இந்த நாவலில் பேசப்பட்டுள்ளன.
இந்த நாவலில், ‘மரணம்’ குறித்தும் ‘அகவிடுதலை’ பற்றியும் பேசப்பட்டுள்ளது. இயற்றுதல் ‘மானுடக் கடமை’ என்றும் எய்துதலே ‘அகவிடுதலை’ என்றும் காலத்தின் போக்கில் தன்னை ஒப்புக்கொடுத்து, ஊழின் பெருவிசைக்கு எதிர்நிற்காமல் இருத்தலே ‘முழுவாழ்வு’ என்றும் நாம் இந்த நாவலின் வழியாகப் பொருள்கொள்ள முடிகிறது. அதுமட்டமல்ல, இறைவனேயானாலும் மனிதராகப் பிறந்துவிட்டால் மரணம் உறுதி என்ற நிலையாமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இராமனின் மரணம் பற்றிப் பேசும்போது இயல்பாகவே இளைய யாதவரும் இறப்பார் என்பதை வாசக மனம் ஏற்கத் தொடங்கிவிடுகிறது.
வழக்கமாகவே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் பிறர் பெரிதும் பயன்படுத்தாத, வழக்கொழிந்துவிட்ட பழந்தமிழ்ச் சொற்களைக் கையாள்வதில் கைத்தேர்ந்தவர். இந்த நாவலில் அத்தகைய ஒரு சொல்லைக் கையாண்டுள்ளார்.
யமன் கர்ணன் வடிவில் வந்து இளைய யாதவரிடம்,
“ யாதவரே , வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளும் கணமொன்றுக்காக என்னுள் நஞ்சு நீறிநீறிக் காத்திருந்தது ”
என்று கூறுகிறார். ‘நீறிநீறி’ என்ற அடுக்குத்தொடரில் உள்ள ‘நீறுதல்’ என்ற சொல் தொழிற்பெயர்.
நீறு ஆகிப்போதல் (சாம்பல் ஆகிப்போதல்) ‘நீறுதல்’ ஆகும். நீற்றப்பட்ட நீறு, திருநீறு. ‘நீறுபூத்த நெருப்பு’ என்பது பழமொழி. ‘நீறுதல்’ என்னும் இச்சொல் ‘மனம் புழுங்குதல்’ என்னும் பொருளில் வரும். ‘புழுங்குதல்’ என்பது, ‘பொறாமைப்படுதல்’ என்பதாகும்.
கர்ணனின் மனம் புழுங்குகிறது. மனப்புழுக்கமே ஒரு வகையில் நஞ்சுதான். இங்குக் கர்ணனின் மனம் வஞ்சம் கொண்டு புழுங்குகிறது. அதுவும் நஞ்சாகிப் புழுங்குகிறது. ஒருவகையில் பார்த்தால், துரியோதனனைவிடவும் நச்சுமிகுந்தவனாகக் கர்ணனே எனக்குத் தெரிகிறான்.
இந்த ‘இமைக்கணம்’ நாவல், எக்காலத்துக்கும் பொதுவான, எக்காலத்திலும் அழியாத பேரறத்தைப் பற்றிப் பேசுகிறது. அந்தப் பேரறமே அகவிடுதலைக்கான ராஜபாட்டை. அந்தப் பாதையின் முடிவில் முழுமெய்மையை நமக்காகக் காத்திருக்கும். அதை அடைவதே, அதை எய்துவதே மானுடவாழ்வின் பெருநோக்கு. அந்த வகையில், இந்த நாவல் ஒட்டுமொத்த ‘வெண்முரசு’ தொடர் நாவல்களுக்கும் அச்சாணியாக அமைவுகொள்கிறது.
– முனைவர் ப. சரவணன், மதுரை
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
வெண்முரசு ஆவணப்படம், மூன்று அமெரிக்க நகரங்களில்…
வெண்முரசு ஆவணப்படம், மே மாதத்தில் மூன்று வெவ்வேறு அமெரிக்க நகரங்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, தொடர் கடிதங்களும் விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன. அவர்களுக்கு எங்களது நன்றியும் அன்பும்.
இந்த மாதத்தில் ஐந்து நகரங்களில் திரையிடுவதற்கான ஏற்பாடுகளை வாசக நண்பர்கள் செய்து வருகிறார்கள். ஜூன், 12, 2021, வாஷிங்க்டன் DC சுற்றுவட்டத்தில் அடங்கிய ஃபேர்ஃபாக்ஸ் நகரத்திலும், தென் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்ச் நகரிலும், ஜியார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டாவிலும் திரையிடப்பட இருக்கிறது. இந்த மூன்று நகரங்களிலும், அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள், வெண்முரசு தமிழில் நிகழ்ந்திருக்கும் சாதனையென கருதி ஒருங்கிணைந்து படத்தை வெளியிடுகிறது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாஷிங்டன் DC / வர்ஜீனியா :
ஜுன் 12, 2021 – சனிக்கிழமை – 2.30 PM
Cinemark Fairfax Corner and XD
11900 Palace Way,
Fairfax, VA 22030
தொடர்புக்கு – விஜய் சத்யா, vijaysathiyadc@gmail.com , Phone – 571-294-7603
தென் கலிபோர்னியா :
ஜுன் 12, 2021 – சனிக்கிழமை – 2.00 PM – 5.00 PM
Century Stadium 25 and XD
1701 West Katella Avenue
Orange, CA 92887
தொடர்புக்கு – ஸ்ரீராம், 949-529-1774
அட்லாண்டா, ஜியார்ஜியா :
ஜுன் 12, 2021 – சனிக்கிழமை – 2.30 PM
Springs Cinema and Taphouse
5920 Roswell Rd Unit C-103, Sandy Springs, GA 30328
தொடர்புக்கு – ராஜா raaj.vvs@gmail.com
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
June 4, 2021
தமிழக அரசின் இலக்கியவிருதுகள்
புதிய திமுக அரசின் இலக்கியத்துறை சார்ந்த அறிவிப்புகள் பற்றி பல கேள்விகள் வந்தன. ஊடகத்தினரின் கேள்விகளை தவிர்த்துவிட்டேன். அவர்கள் நான் சொல்வதைப் போடமாட்டார்கள். சமூக ஊடகங்களுக்கு வசைபாடுவதற்கு உகந்தவகையில் எதையும் வெட்டி எடுத்துக்கொள்ள தெரியும்.
இதில் விவாதிப்பவர்கள் ’திமுக அரசு எழுத்தாளர்களை கொண்டாடவில்லை’ என்ற ஒற்றைவரியை வைத்துக்கொண்டு பொத்தாம்பொதுவாகத் தடவித்தடவிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இவை சார்ந்து மிகத்தெளிவாக பேசப்பட்டவற்றை படிப்பதில்லை. மீண்டும் அதே ஒற்றைவரி உழப்பல்கள். சவடால்கள்.
தேவதேவன்திமுக அரசு எழுத்தாளர்களைக் கொண்டாடவில்லை என்று எவரும் சொல்லவில்லை. கொண்டாடியிருக்கிறார்கள். எந்த அரசும் அவர்களுக்கு உகந்தவர்களைக் கொண்டாடத்தான் செய்யும். அவர்கள் இருவகை. அந்த அரசை அமைத்துள்ள கட்சிகளின் கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கியவர்கள், அந்த அரசுடன் ஒத்துப்போகிறவர்கள்.
திமுக அரசு மு.கருணாநிதி அவர்கள் பதவியேற்ற நாள்முதல் அவ்விரு சாராரையும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறது. பாரதிதாசன் பெயரில் பல்கலைக் கழகம் உள்ளது.தேவநேயப் பாவாணர் பெயரில்தான் மாவட்ட மைய நூலகம் உள்ளது. மூவாலூர் ராமாமிருதத்தம்மையார் பெயரில்தான் பெண்களுக்கான நலத்திட்டம் உள்ளது. அரசுடன் ஒத்துப்போனமையால்தான் சுரதாவுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்படி விருதுகளும் பரிசுகளும் பெற்ற பலர் உண்டு.
தேவிபாரதிகுற்றச்சாட்டுகளாகக் கூறப்படுபவை இரண்டு. ஒன்று, திராவிட இயக்க முன்னோடிகள் எனும்போதே அவர்களில் எவர் உகந்தோர் எவர் அல்லர் என்ற தெரிவு திமுக அரசிடம் இருந்தது. அந்த தெரிவு மு.கருணாநிதியின் தனிப்பட்ட கசப்புகள் விருப்புகள் சார்ந்ததாகவே இருந்தது. ஆகவே கா.அப்பாத்துரை, எஸ்.எஸ்.தென்னரசு போன்ற பலர் புறக்கணிக்கப்பட்டார்கள். அவ்வாறு ஒரு புறந்தள்ளப்பட்டோர் பட்டியல் திராவிட இயக்க எழுத்தாளர்களுக்குள்ளேயே உண்டு.
நாம் பேசிக்கொண்டிருப்பது நவீன இலக்கியம் பற்றி மட்டுமே. அரசியலெழுத்து பற்றி அல்ல. அவற்றின் இடம் தெரியுமென்றலும் இலக்கியமுன்னோடிகள் நவீன இலக்கியத்தை மட்டுமே முன்வைத்தனர். நவீன இலக்கியத்திற்கு இங்கே ஆதரவும் புரலவலரும் வாசகரும் இல்லை என்பதனால். என் தலைமுறையில் ஓரளவு வாசகர்கள் வந்துவிட்டனர். ஆகவே இன்னும் கொஞ்சம் விரிவாக அரசியலெழுத்தையும் உள்ளே கொண்டுவந்து இலக்கியத்தின் இலக்கணங்களை அமைத்துக்கொண்டேன். எஸ்.எஸ்.தென்னரசு அல்லது விந்தன் பற்றிப் பேசிய இலக்கியவிமர்சகன் நான்தான்.
விக்ரமாதித்தன்இரண்டாவது குற்றச்சாட்டே முக்கியமானது. அரசு என்பது அரசை அமைக்கும் கட்சிக்கு மட்டும் உரியது அல்ல. தான் ஆட்சி செய்யும் நிலத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டிற்கும் பொறுப்பேற்பதுதான் அரசின் கடமை. அப்பண்பாட்டைப் பேணவும் வளர்க்கவும் முயலவேண்டியது அதன் பணி. அரசின் நடவடிக்கைகள் அந்நோக்கிலேயே அமையவேண்டும். ஏனேன்றால் அக்கட்சிக்கு வாக்களித்தவர்களின் வரிப்பணத்தை மட்டும் அது செலவுசெய்யவில்லை. அது ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணத்தால் இயங்குகிறது.
ஜனநாயகத்தின் அடிப்படை ஒன்று உண்டு. ஆட்சியைப் பிடிப்பது வரைத்தான் கட்சி அரசியலின் பார்வை இருக்கவேண்டும். அதற்குப் பிறகு இருக்கவேண்டியது அனைவருக்குமான ஆட்சியாளரின் பார்வை. கட்சிச்சார்புப் பார்வை இருந்தால் அது பண்பாட்டுக்குச் செயல்பாடுகளுக்குப் பேரழிவாக முடியும். அந்த ஒட்டுமொத்தப் பண்பாட்டையே கட்சிக்கருத்தியலாகச் சுருக்கிவிடுவதில் முடியும். திமுக ஆட்சியில் நடந்தது அதுவே.
எஸ்.ராமகிருஷ்ணன்ஆகவேதான் புதுமைப்பித்தனுக்குக் கூட சென்னையில் ஒரு பண்பாட்டு நினைவகம் இல்லை. நவீன இலக்கியம் ஒட்டுமொத்தமாகவே திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்டது. இங்குள்ள நவீன இலக்கியம் தமிழ்மொழி அடைந்த வெற்றிகளில் ஒன்று. தமிழ்ப்பண்பாடு என்றும் பெருமை கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் ஐம்பதாண்டுகளாக அது அரசாலும், அரசின் கல்விநிறுவனங்களாலும், முற்றாகவே கைவிடப்பட்டது.
இக்குற்றச்சாட்டுகளுக்கான பதிலாக திராவிட இயக்க எழுத்தை நவீன இலக்கியம் ஏற்றுக்கொண்டதா என்ன என்று கேட்கிறார்கள். அபத்தமான கேள்வி அது. இது கொடுக்கல்- வாங்கல் அல்ல. நவீன இலக்கியத்திற்கு அதற்கான அழகியல் கொள்கைகள், அதற்கான வாழ்க்கைப்பார்வைகள் உண்டு. அவற்றையே அது முன்வைக்கும். அதனடிப்படையிலேயே அது தன்னை வரையறை செய்துகொள்ளும். அதனடிப்படையிலேயே அது பிற இலக்கியங்களை மதிப்பிடும். அந்த அளவுகோல்களை இழந்தால் அதன்பின் அது நவீன இலக்கியமே அல்ல. அப்படி அது தன்னை அழித்துக்கொண்டு அடைவதற்கொன்றும் இல்லை.
கலாப்ரியாதிராவிட இயக்க இலக்கியப் போக்கு நவீன இலக்கியத்தை ஏற்காமல் போகலாம், அது இயல்பானதே. மு.கருணாநிதிக்கு அவை ஒவ்வாமையை அளிக்கலாம். திராவிட இயக்க அமைப்புகள் அளிக்கும் விருதுகள் நவீன எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவேண்டுமென எவரும் எதிர்பார்ப்பதில்லை. இங்கே பேசப்படுவது அரசைப் பற்றி, கல்வித்துறை பற்றி. அனைவரின் வரிப்பணத்தால் அனைவருக்குமாக அமைந்துள்ள அரசு செய்யவேண்டிய பண்பாட்டுப் பணிகள் பற்றி.
ஓர் உதாரணம் சொல்கிறேன். கேரளத்தில் நேர்ப் பாதி ஆட்சிக்காலம் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியே ஆட்சியில் இருந்துள்ளது. மிகத்தெளிவான அரசியல்கொள்கையும், திட்டவட்டமான இலக்கியக்கொள்கையும் கொண்ட கட்சி அது. அதில் சமரசமே இருப்பதில்லை. ஆனால் அது அரசில் இருந்த காலகட்டத்தில் மார்க்ஸிய எழுத்தாளர்களை மட்டும் முன்னிறுத்தவில்லை. அதற்காக அரசுநிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ளவுமில்லை.
சுரெஷ்குமர இந்திரஜித்மாறாக கேரள இலக்கியச் சூழலில் உள்ள மிகச்சிறந்த ஆளுமைகளை நடுவர்களாக, ஆலோசகர்களாகக் கொண்ட குழுக்களே பண்பாட்டுச் செயல்பாடுகளை நடத்தின. கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் பழுத்த காங்கிரஸ்காரர்கள், தீவிர கம்யூனிஸ்டு எதிரிகள் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நினைவகங்கள் அமைந்துள்ளன. அரசுமரியாதைகள் அமைந்துள்ளன. முதல்வரே நேரில் சென்று அவர்களை பாராட்டிய, நோய்நலம் உசாவிய தருணங்கள் உண்டு.
ஆனால் கம்யூனிஸ்டுக் கட்சியின் அமைப்புகள் அளிக்கும் விருதுகள் அவர்களுக்குரிய எழுத்தாளர்களுக்கே அளிப்பட்டன.பொதுவெளியில் அவர்களை மட்டுமே மிகத்தீவிரமாக முன்வைத்தனர் கம்யூனிஸ்டுகள். அவர்களுக்காக மாநாடுகளையே நடத்தினார்கள். கம்யூனிசத்தை ஏற்காத எழுத்தாளர்களை கட்சியின் விமர்சகர்கள் கடுமையாக மறுத்து கட்சி இதழ்களில் எழுதினர். இதுதான் வேறுபாடு.
இமையம்டெல்லியில் ஆண்ட சென்ற காங்கிரஸ் அரசுகளையே உதாரணமாகக் கொள்ளலாம். காங்கிரஸ் அரசு இருந்த காலகட்டத்தில் தேசிய அளவிலேயே சாகித்ய அக்காதமி விருதுகளைப் பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகள், சோஷலிஸ்டுகள். காங்கிரஸ் அதில் தலையிடவில்லை.
இன்றும் சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், இமையம் வரையிலான பாரதிய ஜனதா எதிர்ப்பாளர்கள் சாகித்ய அக்காதமி விருது பெறுகிறார்கள். அரசு அதில் தலையிடுவதில்லை. திராவிட இயக்க எழுத்தாளரான இமையம் பெற்ற ஒரே விருது பாரதிய ஜனதா ஆளும் மத்திய அரசு அளித்தது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு உகந்தவர்களுக்கோ ஆளும் கட்சியின் கொள்கையைச் சார்ந்தவர்களுக்கோ அவ்விருதுகள் வழங்கப்படுவதில்லை — இப்போதைய சூழலைப் பார்த்தால் எவ்வளவுநாள் அது நீடிக்குமென தெரியவில்லை என்பது வேறுவிஷயம். ஏனென்றால் சுதந்திரமாகச் செயல்பட்ட பல பண்பாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே சீரழிக்கப்பட்டுவிட்டன.
சாருஇதுவே முறைமை. இந்த வகையான ஒரு நடுநிலைமை, அரசையும் கட்சியையும் ஆட்சியாளர்களையும் பிரித்துப்பார்க்கும் பார்வை, கலாச்சாரச் செயல்பாடுகளையும் அரசியல்செயல்பாடுகளையும் வேறுவேறாகப் பார்க்கும் நிதானம் இதுவரை திமுகவில் இருந்ததில்லை. திரும்பத் திரும்பச் சுட்டப்படுவது அதைத்தான். திமுக எழுத்தாளர்களை ஏற்றதில்லை என்று சொன்னதுமே திமுக கொண்டாடிய கட்சிசார் எழுத்தாளர்கள், குற்றேவல் எழுத்தாளர்களின் பெயர்பட்டியலுடன் வருபவர்களிடம் இதைச் சொல்லி புரியவைக்க முடியாது
இங்கே தமிழ் என்றென்றும் பெருமைகொள்ளவேண்டிய மாபெரும் படைப்பாளிகள் எந்த ஏற்புமின்றி, எந்த வசதியுமின்றி ஏங்கி மறைந்தனர். அவர்களை கௌரவிக்க, அவர்களை விருதளிப்பவர்களுக்குச் சுட்டிக்காட்ட என்னைப் போன்ற எழுத்தாளர்களே இறங்கி நண்பர்களிடம் பணம் திரட்டியும், கைப்பணம் போட்டும் விருதுகளை அமைக்கவேண்டியிருந்தது. பலநூறுகோடி ரூபாயில் அரசின் ‘இலக்கிய மாநாடு’கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில ஆயிரம் ரூபாய் செலவில் வெளியிடப்பட்ட சிற்றிதழ்களை நம்பி நவீன இலக்கியம் வாழ்ந்தது.
யுவன்
இரா முருகன்
பா.ராகவன்அரசுக்கும் அரசமைப்புகளுக்கும் அணுக்கமாக ஆகும் கலையறிந்தோர் அறிஞர் என்றும் ஆய்வாளர் என்றும் முன்னிறுத்தப்பட்டனர். வெற்று மேடைப்பேச்சாளர்கள் மேடைமேடையாக மு.கருணாநிதியை வெட்கமின்றி புகழ்ந்து வெகுமதிகளை பெற்றுக்கொண்டனர். மெய்யான அறிஞர்கள் மூர்க்கமாக புறந்தள்ளப்பட்டனர். அவர்களில் திராவிட இயக்கச் சார்புள்ள பேரறிஞர்களும் உண்டு.
கோவையில் திமுக நடத்திய சென்ற உலகத்தமிழ் மாநாட்டை எண்ணிப்பாருங்கள். அ.கா.பெருமாளுக்கு அங்கே இடமில்லை என்றால் தமிழகத்தில் வேறெந்த ஆய்வாளர் மேடையேறத் தகுதி கொண்டவர்? கோவையிலேயே இருந்த நாஞ்சில்நாடனுக்கு கோவையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பில்லை என்றால் அது என்ன இலக்கியமாநாடு?
சு.வேணுகோபால்சென்ற திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பலர் நினைவில் இருக்காது. எழுத்தாளர்களுக்கு அரசுக் குடியிருப்புகளில் வீடு, நிரந்தரப் புத்தகக் கண்காட்சி அமைத்து அங்கே அனைவருக்கும் நிரந்தரமான கடைகள், சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு, திரைத்துறையின் ஊழியர்களுக்கு வீடு… எவையும் நிறைவேறவில்லை. சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு அளிப்பதற்கான ‘கூப்பன்’களை அளிக்க ஒரு திமுக செயல்பாட்டாளர் பணம் வசூல் செய்து எடுத்துக்கொண்டார் என்று பேசப்பட்டது.
இவையெல்லாமே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மேடையில் அறிவித்தவை. ஆனால் அரசாணைகளாக ஆகவில்லை. அரசாணைக்காக எதிர்பார்த்து, பின்னர் நேரில் சென்று கேட்ட பதிப்பாளர்களிடம் ”அவர்தான் சொல்கிறார் என்றால் உங்களுக்கு தெரியவேண்டாமா? அரசிடம் வீடுகட்ட ஏது நிலம்? பெருநகர்நிலமும் வனநிலமும் தவிர சென்னையில் நிலம் எங்கே இருக்கிறது? அரசூழியர் குடியிருப்புக்கே நிலம்தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று ஸ்டாலின் நிலைமையை விளக்கியதாகச் சொல்வார்கள்.
தேவதச்சன்இப்போது திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் செயல்முறை எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. அறிவிப்புக்கு அப்பால் சென்று நடைமுறையாகும் என்றாலும்கூட சென்றகால மனநிலைகளே நீடிக்குமென்று நம்பவே சூழல் உள்ளது. ஏனென்றால் கட்சியோ அமைப்போ பெரிதாக மாறவில்லை. ஊடகங்களில் கூச்சலிடும் உடன்பிறப்புகளும் திடீர் உடன்பிறப்புகளும் தரத்தில் பழையவர்களைவிட இன்னும் பின்னால் சென்றுவிட்டிருக்கிறார்கள் – சென்ற கால உடன்பிறப்புகளுக்கு திராவிட இயக்க எழுத்தாவது கொஞ்சம் அறிமுகம் இருந்தது. நான்கு முன்னோடிகளைச் சொல் என்றால் சொல்வார்கள். இவர்கள் தற்குறிகள்.
ஆகவே விருதுகள் இணையத்தில் கூச்சலிடும் திராவிட இயக்கத்து மொண்ணைகளுக்குச் சென்றுசேரவே வாய்ப்பு மிகுதி. பென் டு பப்ளிஷ் போன்ற விருதுகளையே அமைப்பாகத் திரண்டு வென்ற அரைவேக்காடுகள் இவற்றை விட்டுவைக்கப் போவதில்லை. அவர்களில் பலர் கவின்கலை விருதுகளுக்காக கோழிமுட்டைகள், தென்னைமரங்கள் என படங்கள் வரைய ஆரம்பித்திருப்பதாகவும் செய்தி.
புலவர் செ இராசுஒரு ஜனநாயகத்தில் நாம் எதிர்பார்க்கவேண்டிய செயல்பாடு என்பது கேரளத்தில் நிகழ்வதுபோல தகுதியானவர்களைக் கொண்டு அமைக்கப்படும் சுதந்திரமான அமைப்பு. அதன் வெளிப்படையான செயல்பாடு. அந்த தகுதி கட்சிச்சார்பு அல்ல, அறிவியக்கத் தகுதி. திட்டவட்டமான வெளிப்படையான சாதனை.எந்த அரசு வந்தாலும் தமிழகத்தில் ஒரு சிறு ‘அறிஞர்’குழு உள்ளே சென்று அமர்ந்துவிடும். என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் பொருட்படுத்தத் தக்க ஒரு புத்தகம்கூட இருக்காது. சரியான குழுவே சரியான ஆளுமைகளை தெரிவுசெய்யமுடியும். கௌரவிக்கப் படுபவர்களும் நிறுவப்பட்ட இலக்கியத் தகுதி கொண்டிருத்தல் அவசியம்.
ஆனால் இன்று தமிழகத்தில் அதற்கான வாய்ப்புண்டு என நான் நினைக்கவில்லை. இந்த இலக்கியப்பரிசுகள் அறிவிக்கப்பட்டிருப்பதே இந்த அரசு பதவிக்கு வந்ததில் அதை ஆவேசமாக ஆதரித்த சில எழுத்தாளர்களுக்கு ஒரு பங்குண்டு என்பதனாலும், அவர்களுக்கு பதிலுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதனாலும்தான் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே அவர்கள் கணக்குபேச ஆரம்பித்துவிட்டனர். கட்சியும் ஆட்சியும் வேறுவேறு என்றெல்லாம் இங்கே இவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.
பாவண்ணன்ஆகவே இங்கே அதிகபட்சம் நான் எதிர்பார்ப்பது, திமுக மீது சாய்வு கொண்டவர்களிலேயே கொஞ்சம் இலக்கிய முக்கியத்துவம் உடையவர்கள் கௌரவிக்கப்படுவதுதான். உதாரணமாக எஸ்.ராமகிருஷ்ணன், விக்ரமாதித்யன், இமையம், கலாப்ரியா, சுரேஷ்குமார இந்திரஜித், பாவண்ணன், தேவிபாரதி,சுப்ரபாரதி மணியன், சு.வேணுகோபால், எஸ்.செந்தில்குமார், தமிழ்மகன், அ.வெண்ணிலா போன்றவர்கள். கட்சிச் சார்பு இல்லையென்றாலும் இவ்வரசு மேல் நல்லெண்ணம் கொண்ட சாரு நிவேதிதா போன்றவர்களையும் பரிசீலிக்கலாம்.
இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பூமணி போன்று ஏற்கனவே உரிய அங்கீகாரம் பெற்ற முன்னோடிகளை விட்டுவிடலாம். அரசின் நிதியுதவி உடனடியாகத் தேவையாகும் இடத்தில் இருக்கும் ரமேஷ் பிரேதன், யூமா வாசுகி, கீரனூர் ஜாகீர்ராஜா, கண்மணி குணசேகரன், ஃப்ரான்ஸிஸ் கிருபா போன்றவர்களுக்கு அது கிடைக்குமென்றால் அதன்பொருட்டு இந்த அரசை மனமுவந்து பாராட்டுவேன். தொடர்புகள் ஏதும் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களும் திமுக- இடதுசாரி ஆதரவு மனநிலை கொண்டவர்களே.
ராஜ் கௌதமன்மெய்யாகவே பண்பாட்டியக்கம் மேல் ஆர்வம் கொண்ட ஒரு நவீன அரசு உவந்து கௌரவிக்கவேண்டும் என்றால் அதன் முதல் தெரிவு தேவதேவன் ஆகவே இருக்கும். அவரோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர். மனிதமுகங்களை நினைவுக்கூர்வதுமில்லை. ஆகவே தொடர்புகளும் இல்லை. ஒரு பொதுச்சூழலில் கருத்துக்களை முன்வைப்பவராகவும் அவர் இல்லை. ஆனால் அவரைத் தேடிச்செல்லும்போதே எந்த விருதும் பெருமை கொள்கிறது. தேவதச்சன் ஒரு முன்னோடியின் இடம் கொண்டவர்.
திமுக எப்படியும் பிராமணர்களை பொருட்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே காழ்ப்புக் கூச்சல்கள் எழத் தொடங்கிவிட்டன. ஆகவே யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன்,இரா.முருகன், பா.ராகவன் ஆகியோரை முன்வைத்துப் பயனில்லை. இருந்தாலும் இப்படி ஒரு பட்டியலில் அவர்களைச் சொல்லி வைக்கவேண்டும்—வாசகர்களுக்காக.
அ.கா பெருமாள்இந்த அரசு பண்பாட்டுச் செயல்பாடுகளுக்காக, அறிவுச் செயல்பாடுகளுக்காக ஏதாவது மெய்யாகவே செய்யவேண்டும் என்றால் செய்யவேண்டிய சில உள்ளன. நோபல்பரிசு பெற்ற தமிழகத்து அறிவியலாளர்களுக்கான நினைவகங்களை இங்கே உருவாக்கவேண்டும். சர்.சி.வி.ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர். கணிதமேதை ராமானுஜனுக்கு ஒரு நினைவகம் உருவாகவேண்டும். அவை அவர்களின் துறை சார்ந்தவையாக இருக்கவேண்டும். அவர்களின் சாதி காரணமாக அவர்கள் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டனர். அந்த கீழ்மையிலிருந்து திமுக வெளிவரவேண்டும்.
கட்சிச் சார்புக்கு அப்பாற்பட்ட நோக்குடன் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெ.தூரன், பேரகராதி உருவாக்கிய எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோர் இனிமேலேனும் நினைவகங்கள் வழியாக அங்கீகரிக்கப்படவேண்டும். தமிழிசை இயக்கத்தின் முன்னோடியாகிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இங்கே இன்னும்கூட அங்கீகரிக்கப்படவில்லை. அவருடைய நினைவு நிலைநிறுத்தப்படவேண்டும்.
குடவாயில் பாலசுப்ரமணியம்எப்போதுமே நம் ஆசைகள் இவை. இவற்றை நமக்குநாமே சொல்லிக்கொண்டே இருக்கிறோம். புதுமைப்பித்தனுக்கு சென்னையில் ஒரு சிலையை நானே நிதி திரட்டி வைக்கவேண்டும் என்னும் கனவு எனக்கு பத்தாண்டுகளாக உள்ளது. சொந்தமாக அமையும் சிறு இடத்தில். கோவையில் வைக்கலாமென்று சொல்லும் பல நண்பர்கள், புரவலர் இன்று உள்ளனர். அது ஒரு படைப்பூக்கமற்ற நிர்வாகச் செயல்பாடு என்பதனால்தான் தொடங்குவதற்குத் தயங்குகிறேன். அவ்வாறு அமையும் என்றால் அதுவே புதுமைப்பித்தனுக்குக் கௌரவம்.
எந்த அரசு இருந்தாலும் அவ்வரசு நோக்கி இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இந்த தளத்தில் ஒவ்வொரு விருதின்போதும் இதையெல்லாம் எழுதுகிறேன். ஒவ்வொரு விவாதத்திலும் குறிப்பிடுகிறேன். நம்பிக்கைதான், எதிர்பார்ப்புதான். ஒரு புதிய அரசு அமையும்போது அதைக் கோரலாம். சென்ற ஐந்தாண்டுகளில்தான், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைந்த பின்னர்தான், ஒரு முதல்வர் ஓர் இலக்கியமுன்னோடி மறைவுக்கு நான்குவரி அஞ்சலியை முன்வைக்கும் வழக்கமே ஆரம்பித்தது. அது இந்த ஆட்சியில் இன்னும் விரிவாக, இன்னும் பயனுள்ளதாகவேண்டும். இவ்வறிவிப்புகளை அவ்வண்ணம் நம்ப விரும்புகிறேன்.
சோ.தர்மன்ஆனால் அந்நம்பிக்கைகள் நிறைவேறும் இன்றில்லை என்றே தோன்றுகிறது. இணையவெளியில் திமுகச் சில்லறைகள் இங்குள்ள எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மேல் பெய்துகொண்டிருக்கும் காழ்ப்புக் கூச்சல்கள் செவிகூச செய்கின்றன. இது தாங்கள் வேட்டையாடிப்பெற்ற இரை, தாங்களே பிய்த்துக்கிழித்து தின்போம் என்ற வெறியை மட்டுமே அதில் காணமுடிகிறது. அவர்கள் வெறும் தொண்டர்கள், அவர்களின் மனநிலை எப்போதும் அதுதான்.
ஆனால் அவர்களின் வெறிக்கூச்சலை சாதாரணமாகக் காணமுடியாது. அதற்கு மிகப்பெரிய செல்வாக்குண்டு. மெல்லமெல்ல அவர்களில் சிலரையே அறிஞர் என்றும் படைப்பாளர் என்றும் அரசு அங்கீகரிக்கவே இந்த பரிசுகள் வழிவகுக்கும். அந்த இரையை அடையும்பொருட்டு பிற அனைவரையுமே அவர்கள் கூட்டாக இழிவுசெய்வார்கள். அனைவரையும் பொதுவெளியில் சிறுமைப்படுத்துவார்கள். விளைவாக தமிழுக்குப் பெரும்பங்களிப்பாற்றியவர்கள் அவமதிக்கப்பட்டு இச்சில்லறைகள் அரங்கிலேறும் சூழல் அமைந்தால் அதைவிட கீழ்மை வேறில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இங்கேதான்.
ஸ்டாலின் ராஜாங்கம்இது முன்பும் நிகழ்ந்ததுதான். அவ்வாறு அரசால் வெற்றுக்கூச்சலிடும் கட்சிக்காரர்கள் இலக்கியவாதிகளாக, சிந்தனையாளர்களாக, ஆய்வாளர்களாக முன்னிலைப் படுத்தப் படும்போது அவர்கள் இலக்கியவாதிகளோ, சிந்தனையாளர்களோ ஆய்வாளர்களோ அல்ல என்று சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
அது விருதை எதிர்ப்பது அல்ல. அவ்விருதின் வழியாக நிறுவப்படும் ஒரு மதிப்பீட்டை எதிர்ப்பது. அடுத்த தலைமுறையினரிடம் எது இலக்கியம், எது சிந்தனை, எது ஆய்வு என்று சுட்டிக்காட்டுவது. அதைச் செய்யாவிட்டால் தவறான முன்னுதாரணங்கள் உருவாகி நிலைபெறு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்சென்று அதைச் செய்வது விமர்சகர்களின், இலக்கியச் செயல்பாட்டாளர்களின் கடமை.
ப.சரவணன்இந்த அளவுகோல்கள் மிகக்கறாரானவை அல்ல. எவரைவிட எவர் மேல் என்றெல்லாம் துல்லியமாக எவரும் சொல்லிவிடமுடியாது. ஆனால் இப்படிச் சொல்லலாம், பொதுவாக தீவிர வாசிப்புச் சூழலிலும் ஆய்வுச்சூழலிலும் ஏற்கப்பட்ட இலக்கியப் படைப்பாளிகளும் ஆய்வாளர்களுமே முக்கியமானவர்கள். அங்கே வெற்றுக்கூச்சலிடும் அரசியலாளர்கள் இடம்பெறலாகாது. அவர்களே ஓசை கிளப்புபவர்கள், எங்கும் முண்டியடிப்பவர்கள், கும்பலாகச் செயல்படுபவர்கள். அவர்கள் அங்கே சென்று அமரவே வாய்ப்பு மிகுதி. ஆட்சியாளர்களின் விவேகமே அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கும்.
கொரோனா ஒழிப்பு உட்பட பலதளங்களில் இந்த அரசின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. இதை நேரடியான அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். இத்தனை திறன்மிக்க நிர்வாகத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிதானமும் அன்பும் கொண்ட முதல்வர் என ஸ்டாலின் இன்று தென்படுகிறார். நம்பிக்கையூட்டும் விஷயம் இது. இது நீடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். குறைந்தபட்ச நல்லதேனும் நிகழும் என எண்ணுகிறேன்.அவ்வாறெனில் பாராட்டுவதும் அல்லவென்றால் விமர்சிப்பதுமே என் பணி.
கரு ஆறுமுகத்தமிழன்பண்பாட்டு ஆய்வாளனாக, இலக்கிய விமர்சகனாக என்னை எப்போதுமே அந்நிலையில்தான் நிறுத்திக்கொள்வேன். க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் தன்னை நிறுத்திக்கொண்ட இடம் அது. எந்த புதிய அரசையும் நம்பிக்கையை அளித்தே எதிர்கொள்ளவேண்டும். இன்று அதையே செய்கிறேன்.
மேலே சொல்லப்பட்ட ஆசிரியர்கள், ஆய்வாளர்களின் பட்டியல் என்பது நான் எப்போதும் முன்வைப்பது. இவர்களைப்பற்றி எப்போதும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன். விமர்சனம் மட்டுமல்ல, பரிந்துரையும் இலக்கியச் செயல்பாட்டின் பகுதியே. ஆகவே இதை முன்வைக்கிறேன். இதையே மலையாளத்திலும் செய்வதுண்டு.
எஸ்.செந்தில்குமார்இவற்றைப் பேசும்போது இப்படி பரிந்துரை செய்வதிலுள்ள சிக்கல்களையும் சொல்லியாகவேண்டும்– ஒரே கட்டுரையில் எல்லாம் இருந்தால் நல்லது என்பதனால். ஆய்வுகள் போன்றவற்றுக்கு புறவயமான அளவீடுகள் உண்டு. அ.கா.பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியம். புலவர் செ.இராசு பேராசிரியர் பா.ஜம்புலிங்கம், ஆ.சிவசுப்ரமணியம், ஆ.இரா.வேங்கடாசலபதி, ப.சரவணன். கரு.ஆறுமுகத்தமிழன், ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களின் பணி தெளிவானது, மறுக்கமுடியாதது. அவர்களின் நூல்களே சான்று.
ஆனால் இலக்கியத்தின் தரமதிப்பீடுகள் அகவயமானவை. அவை புறவயமாக நிறுவப்படுவது தொடர்ச்சியான விமர்சனச் செயல்பாடுகள் வழியாகத்தான். இந்திரா பார்த்தசாரதியைவிட இந்திரா சௌந்தரராஜனை அறிந்தவர் பல மடங்கு. இந்திரா பார்த்தசாரதியைவிட இந்திரா சௌந்தரராஜனை மேலான எழுத்தாளர் என நினைப்பவர்களும் பற்பல மடங்கு இருப்பார்கள். ஆகவே ஜனநாயக அடிப்படையில், மக்களின் ஏற்பின் அடிப்படையில் விருது அளித்தால் இந்திரா சௌந்தரராஜனே இலக்கிய விருதுகளை எல்லாம் பெறவேண்டும்.
அ.இரா.வேங்கடாசலபதிஆனால் இலக்கிய அழகியலை முன்வைக்கும் விமர்சனம் இந்திரா பார்த்தசாரதியை முன்வைத்து அவரே சிறந்தவர் என கூறுகிறது. அந்த இலக்கியவிமர்சனக் கருத்தும் ஒரு சிறுவட்டத்திலேயே திகழும். அதன் செல்வாக்கு இலக்கியவாசகர் நடுவே மட்டும்தான். ஆனால் மெல்லமெல்ல அந்தத் தரப்பு நிலைகொள்கிறது. அப்படித்தான் இலக்கியவாதிகள் நிலைபெறுகிறார்களே ஒழிய ‘மக்கள் ஏற்பினால்’ அல்ல.
கி.ராஜநாராயணன் நூறாண்டு வாழ்ந்தார். அவரை அறிந்தோர் ரமணிசந்திரன் வாசகர் எண்ணிக்கையில் நூறிலொருவரே இருப்பார்கள். ரமணிச்சந்திரன் இலக்கியவாதி அல்ல, கி.ராஜநாராயணன் இலக்கியவாதி. இந்த வேறுபாடு என்றுமுள்ள ஓர் உண்மை. அதை ஜனநாயகப் பண்புகளால் நிறுவவில்லை, அழ்கையலால்தான் நிறுவியிருக்கிறோம்.
இச்சூழலில் ஓர் அரசு எவருக்கு விருதளிக்கவேண்டும், கௌரவிக்க வேண்டும்? மக்கள் கருத்தையா அது பொருட்படுத்தவேண்டும்? இல்லை, அங்கே அரசு மக்களுக்கு தந்தை எனும் இடத்தில் உள்ளது. எது மக்களுக்கு பிடிக்கிறதோ அதையல்ல, எது மக்களுக்குத் தேவையோ அதை அளிக்கவேண்டும்.
ரமேஷ் பிரேதன்
கீரனூர் ஜாகீர்ராஜா
யூமா வாசுகி
கண்மணிஆகவேதான் உலகமெங்கும் அரசுகள் மக்கள் அறியாத கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் விருதளித்து அவர்களை முன்னிறுத்துகின்றன. சத்யஜித் ரே விருது பெறுகிறார், ரமேஷ் சிப்பி விருது பெறுவதில்லை. அடூர் விருது பெறுகிறார், ஐ.வி.சசி விருது பெறுவதில்லை.
அவ்வகையான அங்கீகாரம் நிகழ்வதற்கு இரண்டு அடிப்படைகள் தேவையாக உள்ளன. ஒன்று, மதிப்பீடுகளை முன்வைத்து அதை நிறுவும் விமர்சன இயக்கம். இரண்டு, அவ்விமர்சன இயக்கத்திற்கு அரசு மற்றும் கல்வித்துறை சார்ந்த அங்கீகாரம். விமர்சன இயக்கம் தர்க்கங்களை உண்டுபண்ணுகிறது. அதற்கு தீவிர வாசகர்களின் ஏற்பு உருவாகிறது. கல்வித்துறை தொடர்ந்து வரவேண்டும். [அது நிகழாததனாலேயே இங்கே கி.ரா போன்ற இலக்கியமுன்னோடிகளுக்கு ஞானபீடம் போன்ற விருதுகள் வந்தமையவில்லை.]
ஆ.சிவசுப்ரமணியம்தமிழில் விமர்சன இயக்கம் சென்ற தலைமுறை வரை வலுவாக இருந்தது. இன்றும் வாசகர்களிடம் அந்த விமர்சன இயக்கத்தின் செல்வாக்கு உள்ளது, ஆனால் அதற்கு அரசு அல்லது கல்வித்துறை அங்கீகாரம் இல்லை. அரசு தன் கட்சிச்சார்பாலும் கல்வித்துறை அதன் சாதியரசியல்- ஆள்பிடிப்பு அரசியலாலும் இலக்கியத்தை அணுகுகிறது.
ஆகவே இன்று நவீன இலக்கியச் சூழலில் உள்ள மதிப்பீடுகளுக்கு எந்த புறவய மதிப்பும் இல்லை. தேவதேவனோ தேவதச்சனோ மாபெரும் கவிஞர்கள் என்பதில் இலக்கியவாசகனுக்கு ஐயமே இல்லை. ஆனால் அதை இந்தச் சின்ன வட்டத்திற்கு வெளியே கொண்டுசெல்ல முடியவில்லை. ஆகவே அரசு அல்லது கல்வித்துறையின் ஏற்பு அவர்களுக்கு அமைவதே இல்லை.
சுப்ரபாரதிமணியன்சூழல் இப்படி இருக்கையில் நாம் நம் கலைஞர்கள் சமூக ஏற்பின்றி சிறுமை கொள்வதைப்பற்றி குறைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. சமூக ஏற்போ, கல்வித்துறை ஏற்போ இல்லாமல் அரசின் ஏற்பு இயலவேண்டுமென எதிர்பார்ப்பதிலும் பயனில்லை. அதை மாற்றுவது இந்த அறிவுச்சூழலில் இருந்து எவரேனும் அரசில் பங்குபெற்றால்தான் இயலும்.
கேரளத்தில் கலைப்பண்பாட்டு துறை என்ற ஒரு துறையும் அதற்கு அமைச்சரும் உள்ளனர். அதில் இலக்கியவாதிகள் அமைச்சராவதில்லை. இலக்கிய ஆர்வம் கொண்ட, இலக்கியஅறிவு கொண்ட அரசியல்வாதி ஒருவர் அமைச்சராகிறார்
[இலக்கியவாதி அதற்கு முற்றிலும் தகுதியற்றவன். அவன் அந்த இடத்தை ஓர் இலக்கிய அதிகாரமாக ஆக்கிக்கொள்வான். அவ்வண்ணம் ஓர் இடம் ஓர் இலக்கியவாதிக்கு அளிக்கப்படும் என்றால் அவன் தன்னை இலக்கியவிமர்சகனாக, வெளிப்படையான அளவுகோல்களுடன் தன் தெரிவை முன்வைத்து நிறுவியவனாக, இருக்கவேண்டும். கேரளத்தில் அவ்வாறு அமைச்சரான இலக்கிய விமர்சகர் ஜோசப் முண்டச்சேரி. அகில இந்திய அளவில் டாக்டர் ஸ்ரீகாந்த் வர்மா, டாக்டர் கரன்சிங் மற்றும் கே.நட்வர்சிங்]
ஜம்புலிங்கம்கேரள கலாச்சார அமைச்சர்களில் எம்.ஏ.பேபி [கம்யூனிஸ்ட்] ஜி.கார்த்திகேயன் [காங்கிரஸ்] போன்றவர்கள் கட்சி எல்லை கடந்து நீடித்த பங்களிப்புக்காக இன்றும் நினைக்கப்படும் ஆளுமைகள். அப்படி எவரும் திராவிட ஆட்சி உருவானபின் இருந்ததில்லை.
அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் கலைக்களஞ்சியம் [பெ.தூரன்] தமிழ்ப்பேரகராதி [எஸ்.வையாபுரிப்பிள்ளை] போன்ற பெரும்பணிகள் நிகழ்ந்தன. [ஆனால் தமிழ்வழிக் கல்வி என்னும் தளத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன், அரங்கநாயகம் மூவருமே பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள்]
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்உண்மையான பண்பாட்டுச் செயல்பாடுகள் அரசியலுக்கு அப்பால் நின்றிருக்கும் அளவுகோல்களால் மதிப்பிடப்பட்டு, கௌரவிக்கப்படும் ஒரு சூழல் தமிழில் மெல்லமெல்ல உருவாகலாம். அவ்வண்ணம் உருவானால் இலக்கிய விழுமியங்கள் விருதுகளுக்கான அளவுகோல்களாக ஆகலாம். அதற்குரிய காலம் இன்னும் கனியவேண்டும்.
சரி, என்னை எங்கே
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


