Jeyamohan's Blog, page 971
June 9, 2021
உரையாடலும் வாசிப்பும் -கடிதம்
அன்பு ஜெயமோகன்,
உங்களின் ஓஷோ உரையை மீண்டும் கேட்கத் துவங்கி இருக்கிறேன். முதன்முறை மூன்று அமர்வுகளில் அவ்வுரையை வெகுநிதானமாய்க் கேட்டிருக்கிறேன் என்றாலும், ஓஷோவின் கீதை உரையை வாசித்து விட்டு மீண்டும் கேட்கும் போது அது இன்னும் விரிவான அர்த்தம் பெறுவதாகத் தோன்றுகிறது. விரைவில், அவ்வனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வேன் என நினைக்கிறேன், பார்ப்போம்.
சமீபமாய் நான் ’அதிர்ச்சி’ அடைந்தது அருண்மொழி அக்காவின் வெண்முரசு ஆவணப்பட உரையைக் கண்டும், கேட்டும்தான். ஒரு நிகழ்த்துகலைஞர் போல சரளமான உடல்மொழி. எங்கும் தயக்கமின்றி புன்னகையுடனான உரையாடல். ஓயாமல் படபடத்துக் கொண்டிருக்கும் காற்றைப் போன்ற உற்சாகம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். சில அமர்வுகளில் படமாக்கப்பட்டிருந்தாலும் அக்காவின் முகத்தில் அலுப்பே இல்லை. ஓவியர் ஷண்முகவேலின் சித்திரங்கள் இன்னும் அழகு.
மகாபாரத மறுஆக்கம் என்பதாகச் சொல்லப்படும் வெண்முரசை அரசியல் இந்துத்துவாவுக்கு அல்லது சங்பரிவார் அமைப்புகளுக்கு வலு சேர்க்கும் ஆதரவுத்தரப்பாகவே பெரும்பாலான இலக்கியவாதிகளும், திறனாய்வாளர்களும் கருதுகின்றனர். அதனால்தான், யாரும் அதை எதிர்மறையாகக் கூட விமர்சிக்கவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்களை பொதுவெளியில் பார்வைக்கு வைத்திருக்கும் ஒரு சமகால எழுத்தாளரைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதில் தவறில்லை; அவரின் படைப்புகளை ஒதுக்குவதில் வருத்தமும் இல்லை. பிழைபடப் புரிந்து கொள்வதும், அப்புரிதலை வருந்தலைமுறைக்கு ஆவேசமாகக் கடத்துவதும்.. கடந்து போய்த்தான் தீர வேண்டி இருக்கிறது.
சமீபமாய், ஒரு தோழரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் உங்கள் படைப்புகளை வாசித்திருக்கிறார். வெண்முரசைப் படிக்க முயன்று கொண்டிருக்கிறார். மகாபாரதம் என்றாலே அரசியல் இந்துப்பிரதி என பலகாலம் நம்பி வந்ததால் பாத்திரங்களின் பெயர்களைக் கண்டாலே வெறுப்பு வருகிறது, மேற்கொண்டு வாசிக்க முடிவதில்லை என்றார். அதுதான் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம் என நான் அவரிடம் சொன்னேன். மேலும், ”அதற்காக நாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நம் சிந்தனை முறைமையைச் சிறிதுகாலம் வழக்கத்தில் இருந்து கொஞ்சம் மாற்றி வைத்து அதுபோன்ற ஆக்கங்களை வாசிக்கப் பழகுதல் நலம் அல்லது அவற்றைக் குறித்த அறிமுகத்தையாவது பெறலாம். பிறகு அவற்றை ஏற்கலாம் அல்லது தவிர்க்கலாம்” என்றும் சொன்னேன்.
பள்ளிக்காலத்தில் என் சிந்தனை முறைமையை அடியோடு தகர்த்தெறிந்த பெருமைக்குச் சொந்தக்காரர் தந்தை பெரியார். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. கணித ஆசிரியர் இரா.காளியண்ணன் அவர்களால் பெரியாரின் சிந்தனைகள் சிலவற்றை வாசித்தபோது, என் அப்போதைய சிந்தனை முறைமை குறித்த நடுக்கம் எழுந்தது. அவ்வதிர்ச்சியினால், ஆத்திகனாய் இருந்த நான் நாத்திகனாய் மாறினேன். என்றாலும், திராவிட இயக்கங்களில் உறுப்பினராகப் பங்கு கொள்ளவில்லை. பெரியார் என்னை அதிபுத்திசாலியென நம்ப வைத்தார் அல்லது அவரின் சிந்தனைகள் வழி நான் அப்படி நம்பி இருந்தேன். கோவில்கள், கடவுளர்கள், பிராமணர்கள் போன்றவற்றை ஒழித்துக் கட்டிவிட்டால் தமிழகம் நலமும் வளமும் பெற்றுவிடும் என உறுதியாய் நம்பவும் தலைப்பட்டேன்.
கொடுமையைப் பாருங்கள், பத்தாம் வகுப்பிலேயே தமிழ்த்தேசிய உணர்வு என் சிந்தனை முறைமையைப் புரட்டிப் போட்டது. இரா.காளியண்ணன் அவர்களின் இல்லத்தில் தோழர் தியாகு மற்றும் சுப.வீரபாண்டியன் போன்றோர் ஆறுமணி நேரம் தமிழ்த்தேசியம் குறித்து எங்களுடன் உரையாடினர். அப்போது சுத்தமாய்ப் புரியவில்லை. எனினும், பண்பாடு அரசியல் போன்ற சொற்கள் அவ்வுரையாடலில் அதிகம் புழங்கின. பெரியார் மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதான குற்றச்சாட்டு எனக்குப் பிடித்திருந்தது. ஒன்பதாம் வகுப்பில் யாரைத் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடினேனோ, அவரை(பெரியாரை) அதலபாதாளத்திற்கு உருட்டி விட்டேன். சில வருடங்கள் பெரியாரை எதிரியாக நெருக்கமானவர்களிடம் புலம்பிச் சலித்திருக்கிறேன்.
தமிழ்த்தேசிய வெறியும் வெகுநாள் நீடிக்கவில்லை. சித்தர்களின் பக்கம் எட்டிப்பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. கொஞ்ச வருடங்கள் சித்தர் பித்து. தொடர்ந்து பாலகுமாரனும், ஓஷோவும். குறிப்பாக, பாலகுமாரனை வெறித்தனமாக வாசித்தேன். ஒருமுறை, அவரைச் சந்தித்தே ஆக வேண்டும் எனச் சென்னை கிளம்பி விட்டேன். பல்சுவை நாவல் அலுவலகம் சென்று ஆசிரியர் பொன்.சந்திரசேகரைச் சந்தித்து ஆசையைச் சொன்னேன். நாளைக்குக் காலை போகலாம் என்றார். ஏனோ, சந்திப்பு அமையவில்லை. அச்சமயத்தில அதிகம் வருந்தினேன். தலையணைப் பூக்கள், கரையோர முதலைகள், பந்தயப்புறா, அகல்யா, இரும்புக் குதிரைகள், மெர்க்குரி பூக்கள் என மாய்ந்து மாய்ந்து பாலகுமாரனை வாசித்த காலகட்டம் அது. அக்காலகட்டத்தில்தான் பேனா நணபராக கவிஞர் வே.பாபு அறிமுகமானார். இருவரும் பல வருடங்கள் தொடர்ந்து நட்பில் இருந்தோம்.
இவ்விடத்தில் ஒன்றை நினைவூட்ட வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் பெரியார் அறிமுகமான சமயத்திலேயே தமிழ் மொழித் துணைப்பாடநூல் வழியாக அசோகமித்திரனும் வல்லிக்கண்ணனும் அறிமுகமாகி இருந்தனர். அவர்களின் கதைகள் பெரியாரின் சிந்தனையைப் போன்று என்னை ஈர்க்கா விட்டாலும்.. தொடர்ந்து என்னோடு வந்தன. அக்காலகட்டத்தில் விளையாட்டுத்தனமாக அசோகமித்திரனுக்கும், வல்லிக்கண்ணனுக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். அவற்றுக்கு இருவரும் பதில் எழுதி இருக்கின்றனர். பெரியார் என் சிந்தனை முறைமையில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு அவர் எதிரிகளை எனக்கு அடையாளம் காட்டியதுதான் என இப்போது ஊகிக்கிறேன். எதிரிகளால்தான் நாம் வீழ்ந்தோம் என்பதான அக்கருத்து தமிழ்தேசிய உணர்வில் இருந்தபோது இன்னும் வலுப்பட்டது. அசோகமித்திரனோ, வல்லிக்கண்ணனோ அப்படி எதிரிகளைக் காட்டவில்லை என்பதோடு கழிவிரக்க மனிதர்களையே கதைகளின் மாந்தர்களாகப் பெரிதும் கொண்டிருந்தனர்.
பல ஆண்டுகள் ஆளுமைகள், சித்தாந்தங்கள் என மாறி மாறிச் சென்றபோதும் அடிப்படையான குறைந்தபட்சத் தெளிவு புலப்படவில்லை. நேர்மாறாக, குழப்பம் அதிகமாகிக் கொண்டே போனது. அச்சமயத்தில்தான் கோவை ஞானி போன்ற விமர்சகர்களின் கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புதுவிதமான சிந்தனைமுறைமை ஒன்றை அடைந்தேன். பெரியாரின் சிந்தனைகளை நான் நேரடியாகப் படித்திருக்கவில்லை என்பது உறைத்தது. அதைப்போன்றே பிறர் சிந்தனைகளையும். பெரியாரின் கட்டுரைகளை நேரம் ஒதுக்கிப் படிக்க ஆரம்பித்தேன். வாழ்ந்த காலத்தின் சமூகப்பிரச்சினைகளுக்கு அவர் ஆற்றிய எதிர்வினைகளே அவை என்பது விளங்கியது. மேலும், பெரியார் வாழ்ந்த காலத்தில் பகுத்தறிவுக்கே அதிக முக்கியத்துவம் இருந்தது. அதனால் பகுத்தறிவு கொண்டு சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம் எனும் கருத்து தீவிரமானது. பெரியார் அதைக் கண்மூடித்தனமாக நம்பினார்(ஒரு பக்தன் கடவுளை நம்புவதைப் போல). அதைத் திராவிட இயக்கங்கள் மேலதிகமாய் வளர்த்தெடுத்தன.
பகுத்தறிவுக்கு எதிரானது பண்பாடு என்பதான தொடர் பிரச்சாரத்தை பெரியார் தொடர்ந்து மக்கள் மன்றங்களில் மேற்கொண்டிருந்தார். அதன் பயனாக, நவீன அறிவியல் கோட்பாடுகளும் கண்டுபிடிப்புகளும் கொண்டாடப்பட்டன. பகுத்தறிவுக்குப் பொருந்தாத சமூகப் பண்பாட்டு அசைவுகள் காரணமின்றி எள்ளி நகையாடப்பட்டன. சமூக வாழ்வைப் பகுத்தறிவு மட்டுமே கொண்டே மதிப்பிடும் நவீன மூடநம்பிக்கைக்கு வந்து சேர்ந்தோம். பகுத்தறிதலை, சமூக வாழ்வின் ஏற்றத் தாழ்வுக்கான காரணங்களை ஆராய்வதை ஒருபோதும் நான் குறைகூறவில்லை. பகுத்தறிதலை எப்படியான அளவுகோல் வழியாக பெரியார் மேற்கொண்டார் என்பதே முக்கியம். தெளிவாகச் சொல்வதாயின், சமுகப் பண்பாட்டு இயங்கியலைப் பெரியார் உள்வாங்கிக் கொண்டிருக்கவே இல்லை. அதனால்தான் கோவில், கடவுளர், சடங்குகள் போன்றவற்றின் பண்பாட்டுத் தேவையை அவர் பகுத்தறிய முயலவில்லை. மாறாக, அவர் அவற்றைக் களைகளாகக் கருதி அகற்றிவிடுவதில் தீவிர முனைப்பு காட்டினார்.
பண்பாட்டைப் பகுத்தறிவு கொண்டு மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்பது பெரியார் பாணியில் சொல்வதானால்.. காட்டுமிராண்டித்தனம்; பச்சை அயோக்கியத்தனம். பண்பாட்டைப் புரிந்து கொள்ள பகுத்தறிவு உள்ளிட்ட பல சமூக அறிவியல் காரணிகளைக் கணக்கில் கொள்வது அவசியம். சமூக வாழ்வு இயங்கி வந்த விதத்தை உற்றுக் கவனிப்பது மிகவும் முக்கியம். அதற்காக பெரியாரை முற்றிலும் ஒதுக்கிட மாட்டேன். அவராலேயே ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றும் அரசியல் தளங்களை நான் அறிந்து கொண்டேன். துவக்கத்தில் அவரே பண்பாட்டின் போதாமையை அல்லது கோளாறுகளைப் புரிந்து கொள்ளும் சிந்தனை முறைமைக்கு என்னைத் தயார்படுத்தினார். இப்போது யோசித்துப் பார்க்கையில், அது தெளிவாகவே தெரிகிறது.
நாம் எங்கு தவறு செய்கிறோம் எனும் இடத்திற்கு வருகிறேன். ஒன்று பெரியாரைக் கொண்டாட வேண்டும் அல்லது தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும். அவரின் சிந்தனைகளை அல்லது அவர் பங்களிப்பைப் பொதுநிலையில் நின்று ஆராய்ந்துவிடக் கூடாது. ஒன்று அவரைப் புனிதனாக்கிக் கோவில் கட்ட வேண்டும் அல்லது அபுனிதனாக்கி தரைமட்டமாக்க வேண்டும். அவரை ஆராய்வதன்வழி ஒருவன் தனிப்பட்டு சமூக வரலாற்று இயக்கத்தை எவ்வகையிலும் தெளிந்து விடக் கூடாது. ஒற்றைப்படையான சித்தாந்த உறுதியில் நாட்டைச் சுடுகாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லப்படும் சங்பரிவார் அமைப்புகளை எதிர்க்கும் முற்போக்கு அமைப்புகளில் பன்முகப்பரிமாணங்களுக்கு இடம் தரும் சித்தாந்தத் தெளிவு இருக்கிறதா? அமைதியாய் யோசித்துப் பாருங்கள்.
ஒரு சமூகம் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று, பண்பாடு. மற்றது, அரசியல். பண்பாடு என்பது சமூகத்தின் அகவுணர்வு. அரசியல் என்பது புறவடிவம். இன்றைக்கு இரண்டுதளங்களும் திரிபாக்கப்பட்டு வெறுப்பரசியல் எனும் மாயத்தளம் மட்டுமே சமூக யதார்த்தத்தில் இருக்கிறது. ஒருவன் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும் அல்லது இந்துவாக இருக்க வேண்டும். நான் இந்து கம்யூனிஸ்ட் என ஒருவன் சொல்ல இயலாத நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். நான் இந்து எனக்குறிப்பிடுவது பண்பாட்டுத்தளத்தை. கம்யூனிஸ்ட் எனக்குறிப்பிடுவது அரசியல்தளத்தை.
பண்பாட்டைக் கொண்டாடுவதாகச் சொல்லிக் கொள்ளும் வலதுசாரிகளும், அரசியல் புரட்சிக்குத் தயாராவதாய்ச் சொல்லி மாளும் இடதுசாரிகளும் வெறுப்பரசியலுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றனர். வெறுப்பரசியலின் கனல் தணிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள.. தங்கள் முன்னோடிகளின் பெயர்களைத் தொண்டை புடைக்க அலறுகின்றனர்; கற்பனைச் சமூகத்தை முழக்கங்களாக்கிப் பொங்குகின்றனர். மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், காந்தி, விவேகானந்தர் போன்ற சிந்தனையாளர்களைத் தங்கள் அரசியல் இலாபங்களுக்காக அடையாளங்களாக நிறுவிக் கொண்டதில் பெருஞ்சாதனை செய்திருக்கின்றனர் நவீன அறிவுஜீவிகள்.
சமூகவலைதளங்களில் தங்கள் ’விசாலமான அறிவை’ வெறுப்பரசியலுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கும் ஆளுமைகளைக் காணும்போது வருத்தமே எஞ்சுகிறது. அவ்வெறுப்பரசியலில் வெண்முரசு போன்ற ஆக்கங்கள் பந்தாடப்படுகின்றன. உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் திரிபுக்குள்ளாக்கப்பட்டு வசைபாடப்படுகின்றனர்; பேராசிரியர் தருமராஜைப் போன்ற ஆய்வாளர்கள் திட்டமிட்டே ஓரங்கட்டப்படுகின்றனர்.
வெண்முரசு உரையாடலுக்கு வருகிறேன். ஒரு வாசகியாய் அருண்மொழி அக்கா பகிர்ந்து கொண்டிருந்த கருத்துக்கள் வெண்முரசை ஒருவர் வாசிக்கத் தூண்டுமா எனத் தெரியவில்லை. ஆனால், வாசித்துக் கொண்டிருப்பவர்களை உறுதியாய் உற்சாகப்படுத்தும். வெண்முரசு கதாபாத்திரங்களின் பெயர்களையும், உறவுகளையும், உணர்வுகளையும் சொல்லும்போது அவரின் முகத்தில் அவ்வளவு கொண்டாட்டம். அக்கொண்டாட்டத்தின் அகமாய் உங்களின் எழுத்து முகமே முண்டியடித்து நின்று கொண்டிருந்தது.
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்
பறக்கும் வெயில்- சக்திவேல்
இந்த கவிதை தொகுதியை வாசித்து முடித்தவுடன் நீங்கள் சொன்ன இனிய எடையின்மை என்ற வார்த்தையே உளம் நிறைத்தது ஜெ. நான் அதிகமும் கவிதை வாசிப்பவன் அல்ல. அதில் அத்தனை எளிதாக நுழைந்துவிட முடிவதில்லை எனக்கு. அந்த தயக்கத்தாலேயே பெரும்பாலும் அந்த பக்கம் செல்வதில்லை. ஆனால் ஒன்றிரண்டு கவிதைகளை வேறு எப்பொழுதேனும் படித்து அவை திறக்கையில் பெரும் பரவசத்தை உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் இத்தொகுதியும் ஒன்று.
இதன் இனிமையை வாசகனாக குறிப்பிட வேண்டுமெனில் ஏதென்றிலாது எங்கென்றிலாது இருத்தலுமற்று இறகென மிதந்தலைவதன் உவகை என்பேன். இந்த தொகுப்பிலுள்ள எல்லா கவிதையும் அதை தருகின்றன. வாசித்து முடிக்கையில் குளிர் நீராடி எழுந்த புத்துணர்ச்சியை, அதிகாலையின் தொடுவானத்து சூரியனின் முதற்கதிர் எழுந்து முகம் வருடுகையில் நாம் கொள்ளும் மலர்வை, அந்த மென்பனியில் நன்மணம் வீசும் நித்தி மல்லி போல் என்பேன்.
சமவெளியில் ஆடு மேய்க்கும் சிறுவன்
மானசீகமாக கும்பிடுகிறான்
அதிகாலைப் பனியை
ஆடுகள் தங்களது காலை உணவில்
சேர்த்து விழுங்குகின்றன
மேய்ப்பாளனின் கடவுளை
மேய்ப்பரும் கர்த்தா
மேய்வதும் கர்த்தா
இந்த கவிதை காட்சியென எழுந்து பரவசப்படுத்துகையிலேயே கவிதையென தித்திப்பது அந்த ஈற்றடிகளையும் சேர்த்து தான். முதல் நோக்கில் கள்ளமில்லா சிறுவன் கொள்ளும் அழகனுபவமாக விரிந்து அங்கிருந்து மேய்ப்பரும் மேய்வதும் மேயப்படுவதும் ஒன்றென்றாவதன் விந்தையை சொல்கையில் கவிதை மலர்ந்து எழுகிறது.
எங்கிருந்தோ
ஒரு பந்து வந்து
கைகளில் விழுந்தது
விரிந்த மைதானத்தின்
நட்டநடு வெளியில்
நிற்கும் எனக்கு
இப்பந்தின் உரிமையாளர்
குறித்து அறிவது
அரிதான காரியம்
யாருடைய பெயரும்
எந்தவொரு விதமான
மை கிறுக்கல்களும்கூட
இப்பந்தின் உடம்பில் இல்லை
தான் இன்னாருக்கு சொந்தம்
என்று அறிவித்துக்கொள்ளாத
பந்து
பூமியைப் போலவே
இருந்தது
உள்ளங்கையில்
பொதிந்திருந்த பந்து
ஒருமுறை
ஓரேயொரு முறை
சிரித்தது
இந்த கவிதையும் எங்கிருந்தோ வந்த விளையாட்டு பந்தை கைகளில் உருட்டி பார்த்து மகிழும் அந்த சின்னஞ்சிறு பிஞ்சின் இனித்தலை காட்டி நம்மை முகம் மலர்கையில் பூமியைப் போலவே என சொல்லி அது எத்தனை மகத்தான என காட்டிவிடுகிறது. ஒருமுறை ஓரேயொரு முறை சிரித்தது என்ற வரிகளில் அந்த தரிசனம் முழுமை பெறுவதுடன் தன் குழந்தை சொற்களால் பேருவகையில் ஆழ்த்துகிறது.
காலை, வாலை மிதிப்பது தவி்ர
வேறெதற்கும் உசும்பாமல்
படுத்திருக்கிறதிந்த கருப்பு வெள்ளை நாய்
தொடர்வண்டி பிடிக்க ஓடும்
எந்தச் செருப்பும்
எழுப்பவில்லை
ரயில் வருகிறதென
ஒலி எழுப்பும்
எந்திர குரல்காரியாலும் முடியவில்லை
ஒரு காதை பூமிக்கும்
இன்னொரு காதை வானுக்கும் கொடுத்து
ஒருகளித்துத் துயிலும் இது
பூமியின் இதயம் வேகமாகத்
துடிப்பதை கேட்கிறது
தகக் தசக் தடக் ததக் தபக் தரக்
செப்பல் அணிந்து குழந்தையொன்று
நடந்து வந்தால் கேட்கிறது
தஙக் தஞக் தணக் தநக் தமக் தனக்
மிக எளிய காட்சி சித்திரத்தின் வழியே உயிர்கள் இரண்டு சந்தித்து குலாவும் இனிமையை காட்டி விடுகிறது. வறண்ட நிலத்தில் புதுமழைக்கு பின் இளந்தளிர் எழுவது போல். அந்த செப்பல் ஒலிகள் பூமியின் இதயம் எனும் போது எழுகிறது கவிதை.
கதவைத் திறந்ததும்
ஒரு பெரும் ஆச்சர்யம் –
ஆகாசத்தின் கதவா
என் எளிய சன்னல்
கவிஞனுக்கே உரிய குழந்தைமையின் வியப்பை கொட்டும் இது, பனி துளியில் பனையை காட்டுவதே தான். அந்த சன்னலெனும் மனத்தை திறந்து கொள்ள ஒவ்வொரு முறையும் குழந்தையென உலகை காணும் கவி உள்ளம் எழுந்து வரவேண்டியிருக்கிறது.
மதாரின் அத்தனை கவிதைகளும் கள்ளமில்லா குழந்தைத் தனத்தில் வெளிப்பட்டு ஒளிவிடுகின்றன. ஒவ்வொன்றையும் எழுதலாமென்றாலும் முதன்மையாக ஒன்றுண்டு. நீங்கள் பிறிதொன்று கூறலில் கவிதை வாசிக்கையில், என் அறையில் குண்டூசி விழும் ஓசையே இடியோசையின் ஒலி என்று கூறியிருந்தீர்கள் ஜெ. இந்த கவிதைகள் அனைத்துமே கவிஞன் தன் அந்தரங்கத்தின் மிக மெல்லிய பகுதியை திருப்பி வைப்பவை. நமது தன்னந்தனிமையில் தனித்தினித்து சுவைக்க வேண்டியவை.
மதாருக்கு வாசகனாக என் வாழ்த்துக்களும் அன்பும்.
அன்புடன்
சக்திவேல்
வெயில் பறந்தது தபாலில் பெற :
https://azhisi.myinstamojo.com/product/289695/veyil-parandhathu/அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :7019426274கிண்டிலில் படிக்க :https://cutt.ly/9njlmdNஇந்து என உணர்தல் – மறுப்பு
அன்புள்ள ஆசிரியருக்கு,
நீங்கள் எழுதிய இந்து என உணர்தல் கட்டுரை மற்றும் அதற்கு வந்த கடிதங்களைப் படித்தேன்.இணையவெளியில் இருப்பதால் இக்கட்டுரையைக் குறித்து பிறர் எழுதியதையும் தேடிப் படித்தேன்.இது குறித்து கிருஷ்ணனுடனும் விவாதித்தேன்.அவற்றினைக் குறித்து உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று எண்ணினேன்.ஆனால் ஏற்கனவே மனு விவகாரத்தில் என் கருத்துக்காக உங்களைத் திட்டியவர்கள் இக்கடிதத்திற்காகவும் உங்களைத் திட்டக்கூடும் என்று தயங்கினேன்.ஆனாலும் இங்கு சில அடிப்படை விஷயங்களை பேச வேண்டிய தேவை இருப்பதை நான் உணர்ந்தேன்.ஆகவே வேறுவழியின்றியே இக்கடிதம்.
நீங்கள் எழுதும் புனைவு மற்றும் அபுனைவில் புனைவின் அடிப்படைகளையே புரிந்துகொள்ளாமல் அணுகி, தவறான கருத்துக்களை உருவாக்கி, அதை விவாதமாக்கும் நபர்களைப் பொதுவெளியில் தொடர்ந்து பார்க்கிறேன்.அதைப் புனைவை அணுகக்கூடிய அடிப்படைகளை அறியாமல் செய்யும் பிழை என எண்ணியிருந்தேன்.ஆனால் அவர்களே இக்கட்டுரையைப் போன்ற அபுனைவு எழுத்துக்களைக்கூட புரிந்து கொள்ள முடியாத சூழல் எவ்வாறு நிலவுகிறது என்பதை எண்ணியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் கிருஷ்ணனுடன் நான் சென்றபோது நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலுக்கு விளக்கம் சொல்ல கிருஷ்ணன் கேட்ட பதில் கேள்வி பொதுவெளியில் அனைவரும் அறிந்ததாக அறிவியக்கத்திலிருப்பவர்கள் எண்ணும் சில அடிப்படைக் கருத்துருக்களைக்கூட அறியாமல் இங்கு சிலர் இருக்க முடியும் என்பதை உணர்த்தியது.அதே பிரச்சினை தான் இங்கும் நிகழ்கிறது .கொடூரம் என்னவென்றால் இங்கு இணையத்தில் பலர் அத்தகையவரே. அத்தகையவரின் குரலுக்கே இங்கு வீச்சும் அதிகம். ஒரு படுகேவலமான சிந்தனையை அது முன்வைக்கும் ஓசையழகை மட்டும் கவனித்து, அதன் பின்னால் வரக்கூடிய அழிவை அறியாமல், அதை உயர் அறிவெனக் கொண்டாடும் அறிவின்மையைப் பொதுச்சூழலாகக் கொண்ட தமிழகத்தின் பொதுமக்களுக்கு அவர்களே அறிவாளிகள்.அத்தகைய அறிவாளிகளுக்கான பதிலாகவே இக்கடிதம்.
இந்து என உணர்தலைப் பொறுத்தவரை அது நீங்கள் எழுதிய அபுனைவுக் கட்டுரை என்பதால் அதைப் புரிந்து கொள்ள எந்தக் கற்பனையும் நுண்ணிய அம்சங்களைக் கவனிக்கும் திறனும் தேவையில்லை.ஆனால் அபுனைவு எழுத்தினைப் புரிந்து கொள்ளத் தேவையான அடிப்படைக் கருத்துநிலை நமக்கு தேவை. அதாவது எழுதப்படும் ஆசிரியன் எந்நோக்கில் அதை விரிக்கிறானோ அந்த நோக்குக்குரிய தரத்தில் புரிந்து கொள்ளக்கூடிய திறன் வேண்டும்.
எழுதப்படும் அபுனைவு எழுத்தினை எவ்வாறு எத்தரத்தில் புரிந்து கொள்வது என்பதற்கான கருத்துருவை புரிதலுக்காக நான்காக பொதுவாக வைக்கலாம்..
1.எழுத்தில் சொல்லப்படும் நிகழ்வுகளாக.
2.நிகழ்வுகளின் முரணியக்கத்தால் உருவாகும் சிந்தனையாக
சிந்தனைகளின் முரணியக்கத்தால் உருவான தத்துவமாக4.தத்துவத்தால் முடிந்தவரை சொல்ல முயலப்பட்டு எப்போதும் பெரும்பாலான நபர்களிடம் தோல்வி அடையும் அறிதலாக.
இந்நான்கும் நான்கு தரம் என்று வைத்துக்கொள்வோம்.உயர் தரத்துக்கான வரிசை என்பது மேலே சொல்லப்பட்டதன் தலைகீழ் வரிசையாகவே எப்போதும் அமையும்.
இந்நான்கு தரத்தில் ஒவ்வொன்றிலும் எதிராளி சொல்ல வருவதை நன்நோக்கில் புரிந்து கொண்டு எதிராளியினை விடச் சிறந்ததாகத் தன் தரப்பின் கருத்தினைச் சொல்லிப் பதிலளிக்க முயற்சிப்பவர்கள் முதல் தரமென்றால் திரித்தும் தானறிந்த சில உண்மையினை மறைத்தும் பழித்தும் பேசுபவர்கள் தரவரிசையில் கீழாகச் செல்வார்கள்.இதைப் பேச இது சமயமல்ல.எனவே இந்நான்கினை மட்டும் இங்கு காண்போம்.
1.நிகழ்வுகள்
எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்டவற்றை சமகால அல்லது கடந்தகால நிகழ்வுகளோடு இணைத்துப் புரிந்து கொள்ள முயற்சிப்பது முதல்வகையாக இருந்தாலும் தரத்தினைப் பொருத்தவரை நான்காம் தரமே.இத்தரத்தில்தான் இங்கு பெரும்பாலான எதிர்வினை வந்தது. இது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இதற்கு எதிரான வேறொரு நிகழ்வு கண்டிப்பாக இருக்கும். சிலவேளைகளில் மாற்றுக் கோணம் இருக்கும்.அவற்றை அறியாமல் முடிவெடுப்பது அறிதலின் பாதையில் அடியெடுத்து வைக்கும் செயலையே மறுப்பதாகும் .
எடுத்துக்காட்டுக்கு இந்து மதம் சாதிகளின் தொகுதி என்பதை இங்கு தத்துவக் கருத்தாக உருவாக்கி விட்டனர் என்பதால் அதையே எடுத்துக்கொள்வோம்.இது எவ்வாறு இங்கு உருவாகியது என்பதைக் கவனிக்கும் போது இங்கு தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்ந்தன. சமூக அடுக்கில் கீழ் நிலையில் இருப்போரின் உழைப்பினால் உருவாகும் செல்வத்தினை மேலே இருப்போர் சுரண்டுவது பல்வேறு நிகழ்வுகள் மூலம் தெரிய வந்தது.இதற்கான காரணமாக இங்கு இருந்தது வர்ணமும் சாதியும். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எனும் நவீன உலகின் விழுமியத்தின்படி இத்தகைய நிலை மோசமானது. எனவே அதை மாற்றும் சூழல் நடைபெற வேண்டும் எனில் வர்ணத்தையும் சாதியையும் அழிக்கப்படக்கூடிய நிகழ்வுகள் இங்கு நடைபெற வேண்டும்.
இந்நிலையில் இத்தரத்தில் நின்றே உங்கள் கட்டுரையினை மறுப்பவர் இம்மோசமான நிலைக்கு காரணமானதை அழிக்காமல் இம்மதத்தினை காக்க வேண்டிய தேவை என்ன எனக் கேட்கின்றனர்.அவர்களுக்குப் பதில் கூற முயற்சிக்கலாம்.இத்தரத்தில் நீங்கள் சொல்லியதை புரிந்து கொள்ள இயலாமல் அல்லது அரசியல் நோக்கில் திரித்தும் இழிவுபடுத்துவதும் நடைபெறுகிறது.அவர்கள் மூடர்கள்.அவர்களுக்குச் சொல்ல என்னிடம் எப்பதில்களும் இல்லை.
இந்து மதம் வர்ணத்தினையும் சாதியையும் உருவாக்கி பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக மிகப்பெரும் மக்கள்திரளை துயருக்கு உள்ளாக்கியது என்பது மறுக்க முடியாத தரவுகளோடு கூடிய உண்மை. அப்படி துயருக்கு உள்ளாக்கியதை ஏன் இங்கு முன்னர் பின்பற்றினர்.அதுவும் மோசமான சொல்லாக கருதக்கூடிய சூத்திரன் போன்றதை பெருமைமிகு அடையாளம் போல சற்சூத்திரன் எனக் கல்வெட்டுகளில் பொறிக்குமளவு இருந்த நபர்கள் அனைவரும் முட்டாள்களா அல்லது நாம் இன்று காண முடியாத வேறு ஏதோ காரணி அன்று இருந்திருக்கலாமோ என்று யோசித்தாலே எதிர்தரவுகள் கிடைத்து விடும்.அதைவிடப் பார்வைக் கோணத்தினை மாற்றினால் கூட இதற்கான பதில் கிடைத்து விடும்.
நான்கு வர்ணத்திற்கும் தனித்தனி வேலைகளை ஒதுக்கி எளியவர்களை ஒடுக்கியதாகச் சொல்லும் இதே வர்ணாசிரம அமைப்புதான் சூத்திரனை ஆயுதம் எடுக்காமல் இருக்க வைத்துள்ளது.சிறுசிறு அரசாங்கங்களாக அமைந்த பழங்காலத்தில் ஷத்திரியனைத் தவிர மற்றவர்கள் போரிட வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், ஆயிரக்கணக்கில் போர்களங்கள் நிகழ்ந்தாலும் எதிரி நாட்டினர் உள்ளே புகுந்து கொள்ளையிடும் நிலை வரும்வரை இறப்பது முழுவதும் ஷத்ரியனே.பெரும்பாலும் போரில் தோற்ற ஷத்ரிய குழுக்கள் சூத்திரர் ஆவதும்,தங்கள் பலத்தினை திரட்டும் சூத்திர குழுக்கள் தங்கள் பகுதியின் வைசிய குழுக்கள் மற்றும் பிராமண குழுக்களின் உதவியோடு புதிய அரசுகளை அமைத்ததை, இப்போது கிடைக்கும் வரலாறு கொண்டே அறியமுடியும்.தன்னுடைய சமூகத்தினைப் பற்றி அம்பேத்காரும் அப்படித்தான் கூறியிருக்கிறார்.
தன் குழுவின் வலிமையினை வைத்து அரசாண்டபோது அடுத்தவன் உழைப்பினை எடுத்துக் கொண்டவனுக்கு தன்வலிமை குன்றி அடுத்தவன் ஆளும் போது என் உழைப்பினைச் சுரண்டுகிறான் என்று சொல்வதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?.மீண்டும் தன் சமூகத்தின் வலிமை அதிகப்படுத்தி அதிகாரத்தினைப் பெற முயல்வது நியாயம்.அதை யாரும் மறுக்க முடியாது.ஆண்ட காலத்தில் நால்வர்ணத்தின் நலனைப் பெற்றுவிட்டு சூழல் மாறி கடைநிலையில் இருக்கும்போது என்னை அம்முறையே கொடுமைப்படுத்தியது என்பது என்னைப் பொறுத்தவரை அறிவு நேர்மையல்ல.இதைப் படிக்கும் போது சிலருக்கு நான் கொடூரமான பிற்போக்கு சிந்தனையைக் கொண்டவன் என்று தோன்றும்.ஆனால் சுயமாகச் சிந்திக்கும் அனைவருக்கும் நான் சொல்ல வருவது புரியும்.
அப்படியெல்லாம் இந்தியாவில் சாதியும் வர்ணமும் மேல்கீழாக எல்லாம் மாறவில்லை இரண்டாயிரம் ஆண்டுகளாய் எங்களை ஆண்ட சாதிகளும் பிராமணரும் அடிமைப்படுத்தியது மட்டுமே உண்மை என்று எவராவது சொல்வார்கள் என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளாய் இவர்களை காப்பாற்றும் பொருட்டு அரசு என்ற அமைப்பினை உருவாக்கி இவர்களில் ஒருவர்கூட தங்கள் உயிரை நாட்டுக்காக இழக்க தயாரில்லாமல் இருக்கும் சூழலில் மாற்று நாட்டினரிடம் இருந்து இவர்களையும் அரசையும் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைச் சிந்திய ஷத்ரிய குழுக்களுக்கும்,அவ்வாறு உயிரைக் கொடுப்பதற்கான கருத்துருவை சமூகத்தில் ஏற்படுத்தி அக்குழுக்களை வழிநடத்திய பிராமணக் குழுக்களுக்கும் அரசு எனும் அமைப்பின் பலனை எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறதுதானே. இங்கு விலையின்றி எதுவும் கிடைப்பதில்லை எனும்போது தொடர்ந்த நீதிமுறையற்ற கொந்தளிப்பான போர் மூண்ட எண்ணிறந்த வீரர்கள் இறந்த போர்காலமாகிய கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சண்டையே போடாமல் வாழ்ந்ததற்காக கொடுத்த விலை என்பது இதற்கான மாற்றுக் கோணம்.
கடந்த காலத்தில் எவ்வாறு நிகழ்ந்திருந்தாலும் ஒருமனிதன் இன்னொருவனைச் சமமாக நடத்தியதும் நடத்துவதும் கடந்த கால மற்றும் நிகழ்காலக் குற்றம் என்று ஏற்பதாயின் தனக்கு பிறர் செய்த சமமின்மையைத்தான் தான் ஒருபோதும் பிறருக்கு செய்யாமல் காப்பது நலம் .
இங்கு பலம் பொருந்தியவன் கீழிறங்குவதும் பலமற்றவன் பலம் அடைவதும் நிகழ்ந்து கொண்டே இருப்பதை அறிந்தவன் அவ்வாறு செய்யாவிடில் அதே சமமின்மையை காலமாற்றம் பிறர் மூலம் தனக்கு செய்வதை காலத்தால் உணர்வான்.ஆனால் அப்போதும் அதனால் பயன் ஒன்றும் இல்லை.இந்தச் சக்கரம் முடிவின்றிச் சூழன்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.
2.சிந்தனையாக
இரண்டாம் தரமான பல்வேறு நிகழ்வுகளின் வழியாக உருவாகும் சிந்தனையைப் பொறுத்தவரை சாதியும் வர்ணமும் இங்கு சிலருக்கு நன்மையும் பலருக்கு தீயவைகளையும் செய்திருக்கின்றன என்பதைப் போன்ற தோற்றம் வருவதற்கான பல்வேறு நிகழ்வுகள் உள்ளன.அவைகள் மட்டுமன்றி பிறப்பு முதல் இறப்புவரையிலான சடங்குகள் உணவு வாழ்விடம் எனப்பலவகையிலும் இந்து மதத்தின் சாதியும் வர்ணமும் வேறுபாடுகளைச் செயல்படுத்துகின்றன.எனவே புறச் செயல்பாடுகளான நிகழ்வுகளோடு கருத்துச் செயல்பாடான சடங்குகள் கற்க வேண்டிய நூல் வரை வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் இச்சிந்தனை ஒழிக்கப்பட வேண்டியது என்ற சிந்தனைக்கு வருகிறார்கள்.
இத்தரத்தில் வரமுயன்று தோற்ற கடிதத்திற்குத்தான் நீங்கள் பதிலளித்தீர்கள்.சிந்தனைகளைப் பொறுத்தவரை வேவ்வேறு வகையான சடங்குகள் முதல் பல்வேறு வகையான பிரிவினைகள் ஏன் இங்கு சாதியின் பொருட்டு உருவாகி நிலைநிறுத்தப்பட்டன என்று நோக்கும்போது குறைந்த பட்ச அறிதலுடையவன் இவைகள் ஒட்டுமொத்தச் சமூகமாக பல்வேறு குழுக்கள் ஒன்றிணையும்போது அக்குழுக்கள் அதுவரை கொண்டிருந்த சடங்குகள் மற்றும் மற்றவரிடமிருந்து வேறுபடும் காரணிகளை தக்கவைத்துக் கொள்ள அக்குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை என எடுத்துக் கொள்வான்.என்னுடைய சடங்குகள் மற்றும் வழிபாடு மட்டுமே உயர்வானவை உன்னுடையவை தாழ்ந்தவை எனவே அவற்றினை ஒழித்து என்னுடையதைப் பின்பற்று என்று ஒருங்கிணைக்கப்பட்ட அனைவருக்கமான பொதுவானவையாக தன் சடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகளை மாற்றிய ஆபிரகாமிய மதங்களைப் போல இங்கும் ஏன் இல்லை என்பதே இவர்களின் குரல். நாம் நவீன அறிவியக்கம் இன்று அனைத்துக் குரல்களுக்குமான பல்குரல் தன்மையினைக் கொடுத்ததே நம்காலத்தின் சிறப்பென ஏன் சொல்கிறோம் என்பதையே அறியாத மூடத்தனம். தன் நம்பிக்கையினை செயல்பாடுகளை காத்துக் கொண்டு பல்வேறுதரப்பட்ட மக்கள் வாழும் சமூகத்தில் எது இணையும் புள்ளியோ அதில் இணைந்து முன்செல்ல அன்று முயன்றிருக்கின்றனர் என்பதே இதற்கான பதில்.
3.தத்துவத்தளம்
மூன்றாம் தரமான தத்துவத்தரத்திற்கு வருவதற்கு புறச்செயல்பாடுகளான நிகழ்வுகள் அவற்றின் முரணியக்கத்தினை வைத்து உருவான சிந்தனைகளின் முரணியக்கமாக இந்து மதத்தின் தர்மசாஸ்திரங்கள் வர்ணத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து வைப்பதற்கான கருத்தியல் கட்டமைப்பினை உருவாக்கி விட்டது .எனவே ஒழிக்கப்பட வேண்டியது.
இத்தரத்திற்கான பதிலைக் கூறவேண்டுமெனில் இது நீண்ட கடிதமாகிவிடும்.ஆகவே அதை பின்னர் எழுதுகிறேன்.
4.அறிதலின் தளம்
முதல்தரமான அறிதறிலின் தளத்தினைப் பொறுத்தவரை அனைவரையும் ஒன்றெனக்கருதாத தத்துவத்தினை விட மேம்பட்ட புதிய அறிதலை முன்வைக்க வேண்டும்.இத்தரத்தில் பேசுவதாகவே பலரும் சொல்லிக் கொள்வர்.ஆனால் இத்தரத்தினை அடைந்ததற்கான எந்த அடையாளத்தையும் உங்களை எதிர்ப்பவர்கள் எழுதி நான் படித்ததில்லை.ஆகவே இதைப் பற்றியும் இங்கு எழுதப்போவதில்லை.
இந்தக் கட்டுரைக்கு வந்த கடிதங்களில் முதலிரு தரங்களில் மட்டுமே எதிர்வினைகள் வந்தன.நான்காம் தரத்தினை விடுத்து மீதமுள்ளவைகளில் பொருட்படுத்தத்தக்க கடிதமாக நீங்கள் பதில் சொன்ன கடிதம் மேலைநாட்டுச் சிந்தனைகளின் எதிர்சிந்தனை வடிவம்.எந்த எதிர்சிந்தனையும் அதன்நேர்ச் சிந்தனையில்லாமல் நிலைத்து நிற்கமுடியாது.அது மட்டுமல்லாமல் அவை எந்த இடங்களில் மட்டும் பயன்படக்கூடியவை என்பதற்கான தெளிவும் அங்கு உண்டு.அதை இங்கு எடுத்து பொதுச்சிந்தனையைப் போலப் பரப்பி தங்களை அறிஞர்கள் எனக் காட்டிக் கொள்கின்றனர்.
அத்துடன் சமூகத்தில் அறிஞர்கள் எனத்தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் ஆரம்பித்து வைத்து இன்று அறிவியக்கத்தையே அழித்துக் கொண்டிருக்கும் மோசமான பழக்கம் எதிராளியின் தரப்பின் பாதுகாப்பற்ற பகுதியையே குறிவைத்துத் தாக்கி வெற்றி பெற்று விடலாம் என எண்ணுதல்.மேல்பார்வைக்கு இத்தகைய தாக்குதலைத் தொடுத்தால் உடனடியாக வென்றது போலத்தான் தோன்றும்.எப்போதும் எந்தத் தரப்பின் பாதுகாப்பற்ற பகுதியாக இருந்தாலும் அதைக் கவனித்துப் புரிந்து கொள்ள நாம் உயர்வான எண்ணத்துடன் அணுகாமல் கீழ்மையுடன் மட்டுமே அணுகவேண்டிய தேவை ஏற்படும்.
அவ்வாறு தொடர்ந்து நிகழ்ந்தால் அக்கீழ்மை உயர்வானவற்றைப் பார்க்கும் பார்வையோ எது எதிர்த்தரப்பின் உச்சமோ அதை மீறி முன் செல்ல நம்தரப்புக்கு இருக்கும் வாய்ப்பினையோ அழித்து விடும்.ஆகவே குறைந்தபட்சம் எதிர்தரப்பாக இருந்தாலும் அவர்கள் சொல்ல வருவதன் உயர்ந்த அம்சத்தினை எதிர்ப்பதே மேம்படுவதற்கான வழி.அதை இங்கு பின்பற்ற பெரும்பாலும் யாரும் தயாரில்லை.கான முயல் எய்த அம்பை விட யானை பிழைத்த வேலை ஏந்தலே எப்போதும் உயர்வானது.அவ்வாறு யாராவது இக்கட்டுரையை எதிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அப்படியானால் இந்து என உணர்தல் எனும் இக்கட்டுரைக்கான எதிர்தரப்பின் பதில் என்னவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை சொல்லுவது என் கடமையாகிறது.மனதளவில் நான் எதிர்க்கும் வெறுக்கும் தரப்பின் குரலாக இருப்பதற்கு நான் வழக்கறிஞராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது.ஆகவே அக்கட்டாயத்தினை ஏற்று எந்தத் தரத்தில் அக்கட்டுரைக்கான மறுப்பு இருக்க வேண்டும் என்று மாற்றுத்தரப்பினை முன் வைக்கிறேன்.
இந்து மதத்தினைப் பற்றி இதற்கு முன் பிறர் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது சடங்குகளைப் பற்றியும் அதன் தேவைகளைப் பற்றியும் இந்தியாவில் உருவான ஆன்மீகச் சிந்தனைகளைப்பற்றியும் இந்தியாவில் உருவான தத்துவங்கள் எந்த வகையில் உங்களுக்குத் தேவையானதாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.அவற்றையே இங்கு எவரும் எதிர்த்து எதையும் கூறமுடியாதபோது இப்போது நீங்கள் இந்தக் கட்டுரையில் சொல்லும் அறிதலின் படிநிலையை புரிந்து கொள்வது மிகச்சிரமமே.
அந்தக் கட்டுரையில் நீங்கள் வைக்கக்கூடிய காரணங்களில் உச்சம் ஆழ்படிமம்.ஏன் உங்களுக்கு அது முக்கியமானதாக இருக்கிறது.படிமங்கள் என்பவை தான் அறிந்ததை அல்லது தான் உணர்ந்ததை முழுமையாக மற்றவர்க்கு உணர்த்த முடியாத மானிட வெளிப்பாடுகளின் போதாமையினால் இயற்கையின் நிகழ்வுகளின் துணை கொண்டு உவமைகளாக வெளிப்படுத்தியவை.அவை தங்கள் பணியைச் செவ்வனே செய்ததால் படிமங்களாகத் தங்களை நிறுவியவை.எனவே அப்படிமங்கள் அவ்வகை அறிதலின் சாத்தியத்தினை அடைந்த அது சொல்லப்பட்ட காலத்திலிருந்து காலம்தோறும் பல்வேறு சாத்தியங்களின் துணை கொண்டு விரிந்து சென்று ஆழ்படிமங்களாக மாறுகின்றன. ஆகவே அவை நீண்ட நெடிய விரிவுகளைக் கொண்டவை.ஒரு படைப்பாளியாக அறிதலைத்தேடும் ஞானதாகியான யாரையும் இந்த நீண்ட விரிவு கொண்டவைகள் ஈர்க்கவே செய்யும்.ஆகவே அவை உங்களைக் கவறுதல் இயல்பானதே.
அதேசமயம் படிமங்களை அறிதலின் வழிமுறையாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற விவாதத்தில் கிருஷ்ணன் அதற்கான சாத்தியம் உண்டு என்பதைச் சொன்னார்.உள்காட்சி மூலம் அதற்கான வாய்ப்புள்ளது என்றும் தான் முன்னர் எண்ணியதற்கு மாறான நிலை தற்போது தனக்கு ஏற்ப்பட்டதாகக் கூறினார்.அந்தக் கருத்துடன் எனக்கு எப்போதும் உடன்பாடே.ஆனால் கடமையின் காரணமாக அதற்கு எதிரான கருத்தினைக் கூறவேண்டியது கட்டாயமாகிறது.எனவே என் கருத்தினை நான் மேலே சொன்னவாறே நான்கு தரத்திலும் ஆழ்படிமங்களை மறுப்பது எப்படி என்று கூறுகிறேன்.அதற்காக நான் ஆழ்படிமங்களுக்கு எதிராக நவீனப்படிமத்தினை முன் வைக்கிறேன்.
1.நிகழ்வுகளின் அடிப்படையிலான மறுப்பு.
படிமங்கள் என்பவை என்று அந்தப் படிமங்கள் ஆரம்பமாகிறதோ அக்காலத்தின் அறிவுக்கு உட்பட்டவையே.ஆகவே அறிவு வளரும் தோறும் முன்னர் இருந்த நிலையில் இருந்தவை தவறெனக் காலத்தால் உணரப்படும்.அவ்வாறு இருக்கும் நிலையில் முன்னர் இருந்த படிமங்கள் காலத்தால் வரும் அந்த வளர்ச்சியை அடைய முடியாததால் ஏற்றுக் கொள்ளப்படமுடியாதவைகளாக மாறுகின்றன.
எடுத்துக்காட்டாகக் கூறவேண்டும் என்றால் நெருப்பினை நெய்யுற்றி வளர்க்க முயன்றாலும் வளராத நெருப்பினைப் பற்றிய படிமத்தினை எடுத்துக்கொள்வோம்.இப்படிமம் கூறப்பட்ட காலத்தில் நெருப்பினை வளர்ப்பதற்குரிய அதிகப்படியான எரிதல் திறன் கொண்டது எண்ணெய்கள் தான்.ஆகவே அவைகளை வைத்து இப்படிமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.மனித உணர்ச்சிகள் பற்ற வேண்டிய நேரத்தில் பற்றாமல் இருக்கும் நிலை எனும் இயற்கையின் பெருவிந்தைக்கான மிகச் சிறந்த படிமம் அது என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.
ஆனால் காலப்போக்கில் நாம் இன்று நெருப்பினைப் பற்ற வைப்பது மட்டுமல்லாமல் எவ்வளவு துல்லியமாக நம்முடைய தேவை இருக்கிறதோ அத்தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கான நெருப்பினை உருவாக்கும் திறன் பெற்று இருக்கிறோம்.ஆகவே இன்று நெருப்பினை உணர்வுகளோடு சம்பந்தப்படுத்தும் இப்படிமம் தவறானதாகவே தோன்றும்.இதற்குப் பதிலாக நவீனப் படிமமான நெருப்பு தொட்டால் பற்றியெழும் எரிவாயு என்பதைக் கொள்ளலாம்.
ஆகவே குறிப்பிட்ட காலத்தில் சொல்லப்பட்ட படிமங்கள் அக்காலத்தில் சரியானதெனக் கருதப்பட்டாலும் காலமாற்றத்தால் வரும் மாற்றங்களால் தவறான புரிதலைக் கொண்டதாகக்கூட மாறக்கூடும் .எனவே படிமங்களை ஆழ்படிமங்களாக கருதுவதே அடிப்படையில் தவறானவை.
2.சிந்தனை அடிப்படையிலான மறுப்பு.
சிந்தனை ரீதியாக ஆழ்படிமங்களுக்கு எதிரானது என்ன எண்ணி அதைப்பற்றி கிருஷ்ணனிடம் விவாதித்தபின் நான் உணர்ந்தது உறைபடிமம்.இந்தச் சொல் அதற்குச் சரியான கலைச்சொல் அல்ல.வேறு ஏதேனும் கலைச் சொல் அதற்கு இருக்கக் கூடும்.எனக்கு அது தெரியவில்லை.எனவே இச்சொல்லை நானே உருவாக்கி இருக்கிறேன்.
என் பார்வையின் படி மரபு பயன்படுத்தும் பழைய படிமங்களை ஆழ்படிமம் உறைபடிமம் என இரண்டாகப் பிரிக்கலாம் என எண்ணுகிறேன்.உறைபடிமம் என நான் கூறுவது காலத்தினால் சொல்லப்படும் சூழலினால் திட்டவட்டமான பொருளைக் கொடுப்பதற்கான படிமங்களாகவே பயன்படுத்தப்பட்டவை.இவைகளுக்கான விளக்கத்தினை விரித்துச் சொல்லவோ மாற்றவோ கூடாதென்பவை. ஆழ்படிமங்களுக்கு முற்றிலும் எதிரானவை.மாற்றமின்றியே தன்னுடைய படிமங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தனக்குப் பின்வரும் நபர்களுக்குக் கட்டளை இடுபவை.பழைய படிமத்திற்கான புதிய விளக்கத்தினை திரிபுவாதம் என ஒதுக்கித் தள்ளக்கூடியவை.
சில நேரங்களில் ஆழ்படிமங்கள் அரசியலின் பொருட்டோ மொழியின் பொருட்டோ பண்பாட்டின் பொருட்டோ ஆழ்படிமத்தின் காலத்தினை அது கடந்து வந்த விரிவினை இன்னும் அடையப்போகும் விரிவு அத்தனையும் மறுத்து,எது தற்காலத் தேவையோ அதன் பொருட்டு அப்படிமத்தின் தேவையான பகுதிகள் மட்டும் சுட்டிக் காட்டப்பட்டு அவை புனிதமாக்கப்பட்டு உறை படிமமாக மாற்றப்படுக்கூடும்.
எடுத்துக்காட்டாக இந்திய தத்துவ மரபின் அனைத்து தரப்புகளுக்கும் ஏற்ப்புடைய படிமமான தாமரையினை எடுத்துக் கொள்ளலாம். தவிர்க்கவே இயலாத படிமம் அது.அப்படிமத்தினை இன்னும் உறைபடிமாக மாற்றும் கொடூரத்தினை இன்னும் நல்வேளையாக பாஜக செய்யவில்லை.ஒருவேளை செய்தால் நிகழப்போவதை எண்ணிப் பாருங்கள்.
ஆழ்படிமாக நீங்கள் தாமரையினைக் கூறும் போது அது வேதத்தில் எங்கு சொல்லப்பட்டது எனத்தொடங்கி அது பின்னர் எவ்வாறு தங்களுக்குரியதாக ஒவ்வொரு தத்துவ மரபும் அதற்குரிய விளக்கத்தினை கொடுத்தன என்பதையும் அறிந்து அவர்கள் கூறியதற்கு மேல் நீங்கள் கூறவிரும்புவதைக் கூறுகிறீர்கள்.இதனால் அப்படிமம் வளர்கின்றது என்பது உண்மை.ஆனால் அரசியலுக்காக அதை உறைபடிமாக மாற்றிவிட்டால் இத்தகைய விரிவுகளுக்கு அங்கு இடமே இல்லை.ஆழ்படிமங்களை உறைபடிமமாக மாற்ற பெரிய முயற்சி தேவை என்பதும் இல்லை.
வரலாற்றினைக் கவனித்துப் பார்த்தால் ஆழ்படிமங்கள் புனிதப்படுத்தப்படுவதன் மூலமாக உறை படிமங்களாக மாற்றப்படுவதையும் உறை படிமங்கள் படைப்பாளிகள் படைப்பாற்றலால் ஆழ்படிமங்களாக மாற்றப்படுவதையும் அறிய முடியும்.அதனால் எது உண்மையான ஆழ்படிமம் எது உண்மையான உறைபடிமம் என்பதினை கண்டறிவதே இவ்விவகாரத்தில் முதன்மைச் சிக்கலாக இருக்கிறது.
தான் அறிந்ததை திட்டவட்டமாகச் சொல்லி அது மாற்ற இயலாதது என உறைபடிமமாகப் பயன்படுத்தியவனின் படிமத்தினை அவனுக்குப் பின்வந்த படைப்பாளி யாரேனும் ஆழ்படிமமாக மாற்றி இருக்கலாம்.அவ்வாறாயின் அது அப்படைப்பாளியின் ஆழ்படிமமே தவிர உறைபடிமத்தின் ஆழ்படிமம் அல்ல என்பது இதன் முதன்மைச் சிக்கல்.இதற்கும் இந்து என உணர்தலுக்கும் இங்கு தொடர்பில்லை என்பதால் இதை அப்படியே விட்டுவிடலாம்.ஆனால் இச்சிக்கல் இருப்பதை மறுக்க இயலாது.
இங்கு ஆழ்படிமத்தினை உறைபடிமமாக மாற்ற இயலா வண்ணம் மட்டுமல்ல உறைபடிமத்தினை ஆழ்படிமமாக மாற்ற இயலாவண்ணம் செய்வதற்குரிய வழிமுறைகள் உருவாக்கப்படவேணடும்.
ஆழ்படிமங்களை உறைபடிமமாக மாற்றுவதன் மூலம் உயர்வானவையும் நீண்ட அறிவியக்கப் பின்ணனி கொண்ட படிமம் மோசமானதாக மாற்றப்படுவது கொடுமை என்றால் உறைபடிமமாக இருப்பது ஆழ்படிமமாக மாற்றப்படுவது அதைவிடக் கொடுமை.இக்கொடுமைகளைக் களைதலுக்கான காரணிகள் இங்கு பேசப்படவேண்டும்.
படிமங்கள் மானுட அறிதலின் மிக முக்கியமான அம்சங்கள்.அவைகளை அறிந்ததாக எண்ணி நாம் நம் சிந்தனையை முன்வைத்துச் செல்லும்போது ஆழ்படிமங்கள் காலம் தாண்டியும் விரிவைக் கொடுப்பதாக பல்குரல் தன்மையை ஆமோதிப்பதாக மானுட அறிதலை ஒரடி முன்வைத்து செல்ல உதவுவதாக இருக்கும்போது சரியான விளைவினைக் கொடுக்கக்கூடும் ஆனால் அவைகள் உறைபடிமமாக மாற்றப்பட்டால் மோசமான விளைவினைக் கொடுக்கக்கூடும்.இங்கு படிமங்களாகச் சொல்லபபட்டவை அனைத்தும் ஆழ்படிமங்களே என்றே எண்ணிக் கொண்டிருக்கிறோம்.இத்தகையது ஒன்று உள்ளது என்பதைப் பற்றி நாம் கவனிக்கவில்லை.
எனவே ஆழ்படிமங்களைப் பொறுத்தவரை அவை படைப்பாளிக்கும் அறிதலின் பொருட்டு இருப்பவனுக்கும் பயன்படக்கூடும்.ஆனால் அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?. ஆயிரத்தில் ஒன்று இருக்கக்கூடும்.அவர்களுக்காக இந்த ஆழ்படிமங்களை அனுமதிப்பதாயின் இங்கு அவை உறைபடிமமாக மாற்றப்படும் போது அல்லது சாதாரண மக்களின் அறிவின்மையால் உறைபடிமமாக தவறாகப் புரிந்து கொள்ளப்படும் போது வரும் அழிவுகளுக்கு யார் பொறுப்பாவது?.கூடவே உறைபடிமமாக இருந்து காலத்தால் தள்ள வேண்டியதை ஆழ்படிமமாக எண்ணி பின்சென்று அவை பயன்படாததை அறிந்து திரும்ப மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டுவதாயின் ஏற்பட்ட கால இழப்புக்கு என் செய்வது.எனவே இவைகளுக்கான தெளிவு இங்கு உருவாகும்வரை இத்தகைய ஆழ்படிமங்களை இந்து என உணர்தலுக்கு முன் வைப்பது தவிர்க்கப்பட வேண்டியது என்பதே குறைந்த பட்ச எதிர்வாதம்.
3.தத்துவம் சார்ந்த மறுப்பாக
படிமங்கள் ஆழ்படிமங்களாக உருவாக நீண்ட காலம் தேவைப்படுகிறதென்பதை கருத்தில் கொண்டு பாரக்கும்போது காலத்தால் அந்தப் படிமத்தின் தேவை தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் மட்டுமே அவ்வாறு ஆகமுடியும். அவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும் படிமம் அதன் நீண்ட கால பயன்பட்டினால்தான் மதிப்பிடப்படுகிறதே தவிர அது ஆரம்பகாலத்தில் இருந்து மானிடர்களுக்கு உணர்த்தியதையும் அதில் நடந்த மாற்றங்களையும் இன்றும் அதன் தேவை என்ன என்று முழுமையாக அனைவருக்கும் உணர்த்தி மானுட சிந்தனை வரலாற்றில் இது சிறந்த படிமம் என்பதைச் சொல்லி நிறுவப்படுவதில்லை.ஆகவே அப்படிமங்கள் நிகழ்கால நோக்கில் அவற்றைவிடச் சிறப்பான நவீனப் படிமங்களால் மாற்றப்படுவதற்கான சாத்தியங்கள் உடையவை.நவீனப் படிமங்கள் பழைய படிமங்களை விடச் சிறப்பானதாக அமையும் என்பதற்கு மேலே சொன்ன நெருப்பு படிமத்தின் வழியாகக் அறியலாம்.
இன்று இருக்கும் நவீன எரிபொருளான எரிவாயுவினை படிமமாக எடுத்துக் கொள்வோம். நெருப்பு தன் நுனியால் தொட்டால் பற்றிக்கொள்ளுமளவு இருக்கும் இந்தப் படிமம்தேவையான பொழுது பற்றியெழாத ஆழ்படிமத்திற்கு முற்றிலும் எதிரானது.ஆனால் இன்றிருக்கும் சூழலுக்கு மிகப் பொருத்தமானதாகவே இருக்கிறது.எண்ணியதை நிறைவேற்ற அன்று எவ்வாறு தன் அகத்தினை செயல்படுத்துவது என்று தெரியாததாக இருந்த சமூகம் இன்று தொட்டால் பற்றியெரியும் அளவுக்கான எதிர்வினைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.இவைகளுக்கு பெரிய உதாரணம் கொடுக்கத் தேவையில்லை என்றே எண்ணுகிறேன்.
அறிவைக் கொண்டு எரிபொருளின் தரத்தினை உயர்த்தியது போல் உணர்வுகளைத் தூண்டும் காரணிகளையும் காலப்போக்கில் கண்டறிந்திருக்கிறோம்.அந்தக் காரணிகளைக் கூர் தீட்டவும் இங்கு பயின்றிருக்கிறோம் என்றிருக்கும்போது ஆழ்படிமத்தினை விட காலத்தால் உருவான நவீனப்படிமங்களே மனிதனின் அறிதலை அடுத்தவருக்கு கடத்துவதில் முதன்மை இடத்தினைப் பெறமுடியும்.
4.அறிதலின் மறுப்பாக
ஆழ்படிமங்களை விடச் சிறந்ததாக நவீனப் படிமங்கள் சமகாலத்தில் இருக்கும் மனிதனுக்கு தான் சொல்ல வருவதைக் கடத்த முடியும் என்பதை அறிதலின் தரப்புக்கான மறுப்பாக எடுத்துக்கொள்ளலாம். அதற்குச் சான்றாக ஏற்கனவே தத்துவத்திற்குச் சொன்ன அதே படிமத்தினை எடுத்துக் கொள்வோம்.
அந்தப் படிமமான எரிவாயு என்பது மனிதர்களின் இன்றைய நடவடிக்கைகளுக்கு எவ்வாறு ஒன்றுகிறது என்பதைப் பார்க்கும்போது எந்த ஆழ்படிமத்தையும் விடச் சிறப்பானதாக இதுதான் சிறந்த படிமம் என்று உணரமுடியும்.
எரிவாயு சில இடங்களில் இயற்கையாகவே கிடைக்கிறது.மனித இனத்திலும் எக்கணத்திலும் தன் மூர்க்கமான நடத்தைகளைக் காட்டும் சில குழுக்கள் இருக்கின்றன.திரவ நிலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயினைப் பிரித்தெடுப்பதில் மிக எளிதான வெப்பநிலைக்கே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு புறச் சூழலுக்கு மாறாக அழுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவே எரிவாயு திரவமாக்கப்பட்டு இங்கு பயன்படுத்தப்படுகிறது.அதைப் போலவே சமூக மற்றும் அரசின் நடவடிக்கைகள் எனும் அழுத்தத்திற்கு ஏற்பவே இங்கு பெரும்பாலான மக்கள் அடங்கியிருக்கின்றனர்.எங்காவது சிறு இடைவெளி கிடைத்தாலும் வெளிப்படத் தயாராக இருக்கின்றர்.அப்படியான வாய்ப்பு அமையும் போது பற்றிக் கொள்வது மட்டுமின்றி முற்றழிவுக்கும் தயாராக இருக்கின்றனர்.இவர்களைப் பயன்படுத்தி தனக்கு வேண்டுமான வெப்பத்தினை உருவாக்கப் பயன்படுத்தும் அறிவினை இன்றைய அரசியல்வாதிகள் அமைப்புகள் கொள்கைகள் சரியாக எந்த அளவில் இந்த எரிவாயு மாதிரி மக்களின் கோபம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்கின்றன.தனக்கு கிடைத்த மக்கள் எனும் எரிவாயுவினை நல்வழியில் பயன்படுத்தி பல அரசுகளும் அமைப்புகளும் கொள்கைகளும் செயல்படுகின்றன.முற்றழிவுக்குப் பயன்படுத்த முடியுமா என்று சில அரசுகளும் அமைப்புகளும் கொள்கைகளும் செயல்படுகின்றன.எரிவாயுவினால் நடக்கும் விபத்திற்கு எரிவாயுவினைக் குறைகூற முடியாததைப் போல பல பேரழிவுகளுக்கு மக்களைக் குறை கூறவே முடியாத சூழலே நிலவுகிறது.சரியான திட்டமிடுதலுடன் அப்பேரழிவுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் அல்லது அமைப்பு அல்லது கொள்கை பின் இருப்பது சற்று கவனித்தால் தெரிய வரும்.
இத்தனை ஒற்றுமைகளையும் வைத்துப் பார்க்கும்போது ஏற்கனவே இருக்கும் தேவையான பொழுது பற்றியெழா நெருப்பெனும் ஆழ்படிமத்தினை விட இன்றைய மனிதகுலத்தி
ஆனந்த சந்திரிகை,வெண்முரசு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா
இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா இணையத்தில் நாளை நடக்கிறது. இன்று [9-6-2021] எழுத்தாளர் தேவிபாரதியின் இல்லத்தில் நேரடியாக ஒருசில நண்பர்கள் முன்னிலையில் விருது வழங்கப்படும். தேவிபாரதி விருதை வழங்குவார்.
நாளை [10-6-2021 அன்று] ஸூம் செயலியில் விழா நிகழும். குமரகுருபரனின் நண்பரான அந்திமழை இளங்கோவன் குமரகுருபரனை நினைவுகூர்வார். குமரகுருபரனை நினைவுகூர்ந்து கவிஞரை வாழ்த்தி கவிஞர். பா.தேவேந்திரபூபதி பேசுவார். கவிஞரை வாழ்த்தி கவிஞர் கண்டராதித்தன் பேசுவார்.
ஈரோடு கிருஷ்ணன், வேணுதயாநிதி ஆகியோருடன் நானும் பேசுவேன்.
யூடியூப் லைவ் இணைப்பு
June 8, 2021
தொழில்நுட்பம்
”உங்க எக்ஸ்ரேயிலே விலாவெலும்பு உடைஞ்சது தெரிஞ்சது. ஃபோட்டோஷாப்லே அதை ஒட்டி சரிபண்ணிட்டோம்”
நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில்.எங்களூரில் தொழில்நுட்பமும் சாத்தானும் இணையாகக் கருதப்பட்டன. பூச்சிமருந்து அடிக்கும்போது அந்த பம்பை தரையில் வைத்த அந்தோணி அது ஸ்ஸ்ஸ் என பின்னால் நகர்வதை கண்டு அஞ்சி ஓடி சர்ச்சுக்குப் போய் கதற ஃபாதர் செறியான் ஃபிலிப் வந்து அந்த பம்புக்கு முன்னால் ஜெபம் செய்து சாத்தானாகிய கொடிய பாம்பை துரஅத்தி அவன் அச்சத்தை தணித்த கதையெல்லாம்கூட உண்டு.
நானே உயர்தர நைலான் உடையை ரேசர்பிளேடால் கிழிக்க முடியாது என்று நினைத்து முயன்று, தொடைவரை அதை கிழித்து ,மனமுடைந்து அழுதிருக்கிறேன். அதை உருக்கி ஒட்டிவிடலாம் என முயன்று, ஒருகால் முழுக்க சுருங்கி நாற வைத்திருக்கிறேன். அதை கைப்பிடித் துணியாகப் பயன்படுத்தலாமென முயன்ற எங்கள் வீட்டு வேலைக்கார அம்மா செம்புதவலையில் அது உருகி ஒட்டிக்கொள்ளச்செய்து பின்னர் சட்டுவத்தால் சுரண்டி எடுக்கவேண்டியிருந்தது.
”ஆ! மனுஷப்பண்பாட்டோட அடையாளம் தெரியுது!”
அப்படிப்பட்ட நான் நேராக தொலைபேசித் தொழில்நுட்பத்தை சென்றடைந்தேன். அதுவரை நான் தொலைபேசியை காதிலேயே வைத்திருக்கவில்லை. பல இடங்களில் அதைக் கண்டதுண்டு. ஆனால் அதை எடுத்துப் பேச தைரியம் வந்ததில்லை. ஆகவே நான் பணியாற்றிய அலுவலகத்தில் முதல்நாள் ஜேஇ ஃபோனை எடுத்து காதில் வைக்கச் சொல்லி “என்ன சத்தம் கேக்குது?”என்றபோது “பூனை தூங்குற சத்தம்” என்றேன்.
சற்றுநேரம் பிரமித்தபின் “சரி, அப்டீன்னா அப்டி”என்றார். “அதுக்குப்பேருதான் டயல்டோன். அது இருந்தாத்தான் ஃபோனிலே கனெக்சன் இருக்குன்னு அர்த்தம்”. அவ்வாறு நான் பழைய ஸ்டிரௌஜர் தொழில்நுட்பத்திற்குள் சென்றுசேர்ந்தேன். டெல்லியில் இருந்து கம்பிவழியாகவே காசர்கோடுவரை எப்படி பேசமுடியுமென்பதை கண்டுகொண்டேன்.
”கண்ட்ரோல் ரூம்! இந்த கிரகத்திலே தண்ணி இருந்ததுக்கான தடையம் இருக்கு”
அன்றுமின்றும் தாங்கள் ஓர் உயர்தொழில்நுட்பத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஊழியர்களை நம்பவைப்பது நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறது. இன்று கணினிநிரலாளர்களை பொறியாளர்கள் என்று சொல்லி நம்பவைத்திருப்பதுபோல அன்று எங்களையெல்லாம் தொலைபேசி இணைப்பாளர்கள் என நம்பவைத்தனர். “வி கனெக்ட் பீப்பிள்” என்ற தற்பிரகடனம் அத்தனை உயர்வானதல்ல என்பதை பல ஆண்டுகளுக்குப் பின் அதை ஒரு பைம்பீகர் [பிம்ப் என்பதன் சம்ஸ்கிருத வடிவம்] சொல்வது வரை அறிந்திருக்கவில்லை.
அன்று ஃபோன் என்பது அரிதினும் அரிது. பெரும்பாலானவர்களுக்கு ஃபோனில் பேசத்தெரியாது. அதைக் கண்டதுமே கூப்பாடுபோடுவார்கள். பெரும்பாலான பேச்சுக்களில் எண்பது சதவீதம் வரை ஹலோ என்ற சொல்தான் இருக்கும். எஞ்சிய இருபது சதவீதத்தில் பாதி ‘கேக்கல்லே”என்பதாக இருக்கும்.
”நான் கூகிளிலே டயக்னைஸ் பண்ணிட்டேன் டாக்டர். செகண்ட் ஒப்பினியனுக்காகத்தான் வந்தேன்”
மத்திய அமைச்சராக ஆன ஒருவருக்கு ஃபோன் வேலைசெய்யவில்லை. பலமுறை சரிசெய்தாலும் அவர் அது வேலைசெய்யவில்லை என்று சொல்லி கோபித்துக்கொண்டார். ஜெனரல் மானேஜரே நேரில் சென்றார். ஃபோன் வேலைசெய்தது.
“ஒரு முறை டயல்செய்து பேசிப்பாருங்கள் சார்” என்று ஜெனரல் மானேஜர் சொன்னார். அவர் டயல்செய்தார். அதைப்பார்த்தபோதுதான் விஷயம் புரிந்தது. அவர் ரிசீவரை ஸ்டாண்டிலிருந்து எடுக்காமலேயே டயல் செய்தார். அதன்பின் ரிசீவரை எடுத்து காதில் வைத்துக்கொண்டார்.
”உங்க மூளை ஏகப்பட்ட பாஸ்வேர்டாலே கிளாட் ஆகியிருக்கு”
அதன்பின் சலிப்புடன் சொன்னார். “சாலையில் கார்கள் ஓடும் சத்தம் மட்டும்தான் கேட்டுக்கொண்டிருக்கிறது. அங்கே டெலிபோன் எக்ஸேஞ்சில் சன்னல்களை திறந்து போட்டிருக்கிறீர்கள்!”
ஜெனெரல் மானேஜரால் உண்மையைச் சொல்லமுடியவில்லை. ”இருங்கள் சார், நான் டயல் செய்கிறேன்” என்று டயல் செய்தார். அதை அமைச்சர் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்குப் புரிந்துவிட்டது.
“கிடைக்கிறது சார்” என்றார் ஜெனெரல் மானேஜர்
“சரி, பார்க்கிறேன்” என்றார் அமைச்சர்
கண்களைச் சந்திக்காமல் அவர்கள் விடைபெற்றனர். கண்கள் சந்தித்திருந்தால், அரைத்துளி சிரிப்பு ஜிஎம் கண்ணில் எஞ்சியிருந்தால் வேலை போயிருக்கும்.
”அந்தக்காலத்திலே இருந்த நியூஸ்பேப்பர்ஸ் எல்லாம் எவ்ளவு சௌகரியமான டெக்னாலஜி!”
ஆனால் தொழில்நுட்பர்கள் எப்போதும் தொழில்நுட்பர்கள்தான். நான் காசர்கோட்டில் வேலைபார்த்தபோது லைன்மேன் கே.கே.வி நாராயணன் எக்ஸ்ரே எடுக்கப்போனார்.அந்த இயந்திரம் நின்றுவிட்டது. ஏதோ பிரச்சினை.
சட்டென்று எழுந்து ஸ்க்ரூ டிரைவரை எடுத்து அதை கழற்றிவிட்டார். அங்கிருந்து ஃபோனில் அழைத்து கண்ட்ரோல் ரூமிலிருந்த டெக்னீஷியனிடம் “ஒரு ரிங் குடுங்க,செக் பண்னணும்” என்றார்.
“எந்த நம்பர்?”
“நம்பரில்லை, இது எக்ஸ்ரே மிஷின்”
“அடப்பாவி, அது டெலெபோன் இல்ல. அதுக்கு ரிங் குடுக்க முடியாது”
“டயல்டோன் இருக்கே!” என்றார் கேகேவி.
“டயல்டோன் பூனையிலேகூடத்தான் இருக்கும். வைய்யா ஃபோனை”
”நான் அனுப்பின ஈமெயில் எல்லாம் பாத்துட்டீங்களான்னு கேட்டு ஒரு லெட்டர் அனுப்பியிருந்தேனே, கிடைச்சுதா?”
மூன்றரை மணிநேரம் கழித்து வந்த கே.கே.வி நாராயணன் சொன்னார். “சரியாக்கி குடுத்திட்டுதான் வர்ரேன்”
“என்ன பண்ணினே?”
“டயல்டோன் வரவழைச்சேன்”
எப்படி என்று யாருக்கும் புரியவில்லை. ஆனால் மூன்றுமாதம் கழித்து டாக்டர் டெலெபோன் எக்ஸேஞ்சை கூப்பிட்டார் “எக்ஸ்ரே மிஷின் ஓடலை. ஆளனுப்புங்க..”
“சார், இது டெலெபோன் எக்ஸ்சேஞ்ச்… நாங்க டெலெஃபோன்தான் ரிப்பேர் செய்வோம்”
“போனவாட்டி உங்க ஆள்தானே சரி பண்ணினான்” என்றார் டாக்டர் “இப்ப டயல்டோன் இல்ல. சரி பண்ணி குடுங்க!”
“அவன் லூசு சார். எப்டியோ தற்செயலா சரிபண்ணிட்டான்…”
“அவனை அனுப்புங்க… நான் இப்ப கண்ணூருக்கு சொன்னா அவங்க அடுத்தவாரம்தான் ஆளனுப்புவாங்க”
“அதெல்லாம் ஆளனுப்ப முடியாது சார்… இது டெலெஃபோன் எக்ஸேஞ்ச்”
”மூணு சான்ஸ் இருக்கு. நீங்க செத்தாச்சு, இல்ல கர்ப்பமா இருக்கீங்க, இல்லேன்னா எங்க கம்ப்யூட்டர் ஹேக் ஆயிருக்கலாம்.”
ஆனால் பதினைந்து நிமிடத்தில் டிவிஷனல் ஆஃபீசரே கூப்பிட்டார். “யார்யா அது கம்ப்ளெயிண்ட் செக்ஷனிலே? டாக்டரோட எக்யூப்மெண்ட் டயல்டோன் வரலேங்கிறார். சரிபண்ணி குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களா?”
“சார், அது ஃபோன் இல்லை. எக்ஸ்ரே மிஷின்”
“ஓ” என்றார் டி.இ. நடந்ததைச் சொன்னபோது “டாக்டர் ஒரு அச்சு பிடிச்ச ஆள். ஆனா என் மனைவிக்கு அவர்தான் பாக்கிறது. கேகேவியையே அனுப்பி வையுங்க. அவன் என்னமாம் கொண்டாடட்டும்”
கே.கே.வி. வழக்கமான டூல்கிட்டுடன் போனார். நான்குமணிநேரம் கழித்து ஃபோனில் சொன்னார். “டார், டாக்டர் எக்யுப்மெண்ட் ஓக்கே. ஓடுது.ஃபால்ட் ரெக்டிஃபைட். எழுதிக்கிடுங்க”
“டாக்டர் கிட்டே குடு”
டாக்டர் மலர்ச்சியுடன் “ஓடிட்டிருக்கு. தேங்க்ஸ். இதை நான் மேலே கூப்பிட்டுச் சொன்னாத்தான் செய்றீங்க…பேட் செர்வீஸ்” என்றார்.
“சார், இது டெலெஃபோன் எக்ஸேஞ்ச். அவன் என்ன பண்றான்னே எங்களுக்கு தெரியாது”
“சரியாக்கிட்டானே? அப்றம் என்ன?”
”என்னோட ஸ்மார்ட்போனும் ஸ்மார்ட் டிவியும் ஸ்மார்ட் வாட்சும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டதை நான் கேட்டேன். என்னைய ஸ்டுப்பிட்னு சொல்லி சிரிச்சுக்கிட்டுதுங்க”
மறுநாள் கேகேவியை எல்லாரும் சூழ்ந்துகொண்டு கேட்டனர். ‘என்னடா செஞ்சே? எப்டி ரிப்பேர் பண்ணினே?”
“டயல்டோன் வரவழைச்சேன்”
“அதான் எப்டி?”
“எனக்கு சொல்லத்தெரியாது. இப்ப வந்தீங்கன்னா அதை கழட்டி டயல்டோன் வராம ஆக்கி மறுபடி வரவழைச்சு காட்டுறேன்”
ஆனால் கேகேவியின் நண்பன் குமாரனுக்கு ஆச்சரியமே இல்லை. “அவன் ரத்தமே டெலெபோன் ரத்தம்சார். பதிமூணு வயசிலே மஸ்தூரா வந்தவன். இருபத்தேழு வருச சர்வீஸ்… இந்திய டெலெபோன் சர்வீஸே அவன் மேலேதான் உருண்டு வந்திருக்கு…. போன வருஷம் வீட்டு கிளாக்கிலேயே டயல்டோன் வரவழைச்சிட்டான் சார்!”
”ஒயர்லெஸ் தொழில்நுட்பம் ரொம்ப அட்வான்ஸா போய்ட்டுதுன்னு நினைக்கிறேன்”
அத்தனைபேரும் ‘உயர்தொழில்நுட்ப’ உலகில் வாழ்ந்துகொண்டிருந்த அந்த பொன்னாட்களில் நாங்கள் கண்ட சிக்கல் என்னவென்றால் எவருக்கு எந்த மனச்சிக்கல் வந்தாலும் உயர்தொழில்நுட்பம்தான் அதற்குக் காரணமாக அமைந்தது என்பதுதான். ஃபோன்மணி ஓயாமல் அடிப்பது, ஃபோனை எடுத்தாலும் அடிப்பது, காதுக்குள் போன் கேட்டுக்கொண்டே இருப்பது பலருக்கும் உருவாகும் பிரச்சினை.
வீட்டிலிருக்கும் அயர்ன்பாக்ஸ், ரேடியோ எல்லாமே மணியடிக்க ஆரம்பிப்பது அடுத்த கட்டம். சட்டிபானைகள் மணியடிப்பது முற்றுதல். அவற்றில் எல்லாம் அழைப்புகள் வர ஆரம்பிக்கும்போது கைமீறிப் போயிருக்கும்.சாதாரணமாக அப்போதுதான் மனைவியர் ஏதோ சிக்கல் இருக்கிறது என உணர்ந்து அழைத்துக்கொண்டு வருவார்கள்.
“டெக்னிக்கலா பாத்தா இந்த விமானம் பறக்க வாய்ப்பில்லை”
ஆர்.எஸ்.ராமன் மனச்சிதைவுக்கு ஆளானபோது அவரிடம் மைக்ரோவே டவர்களே நேரடியாக தொடர்பு கொள்ளத் தொடங்கின. அவருடைய இரு காதுகளும் ஆண்டனாக்களாக மாறி சிக்னல்களைப் பெற்றுக்கொண்டன. சிக்னல்களுக்கேற்ப அவை திரும்பவும் தொடங்கின என்று அவர் சொன்னார்.
இந்தப்பிரச்சினைகளை தோழர் நந்தகுமார்தான் ‘டீல்’செய்வார். ஆனால் ராம்குமாருக்கு வந்த பிரச்ச்னையை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவனிடம் பேசிக்கொண்டிருந்தது டிவி டவர்.
“புது டெக்னாலஜி அழிவைத்தான் கொண்டுவரும்! சக்கரம் ஒழிக!”
மங்களூர் உளமருத்துவர் கிருஷ்ண பட் மிக எளிதாக ராமனை குணப்படுத்தினார். “சஜஷன் தெரப்பிதான்… அப்டியெல்லாம் மைக்ரோவேவ் டவர் நேரடியாக மனிதனிடம் தொடர்புகொள்ளாது, அது மனப்பிரமை என்று ராமனை நம்பவைத்தேன்” என்றார்
“ஆனால் அவர்தான் எதையும் கேக்கிற நிலைமையிலே இல்லியே” என்று நான் கேட்டேன்.
“நான் அந்த மைக்ரோவ் டவர் வழியாகத்தான் தொடர்பு கொண்டு அவருக்கு அதையெல்லாம் சொன்னேன்” என்றார் கிருஷ்ணபட் “அவ்ளவு ஈஸியா நேரடியா உள்ள போகிற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கு. இனிமே ஹிப்னாட்டிசம், சைக்கோ அனலிஸிஸ் எல்லாம் வேஸ்ட்”
20 ஊதிப்பெருக்கவைத்தல் 11ஆப்’ 10பகடை பன்னிரண்டு 9சிரிக்கும் ஏசு 8டேனியல் லாபெல் 7ஸாரி டாக்டர்! 6ஆடல் 5கம்யூட்டர் யுகத்துக் கடவுள் 4 மனம் 3குருவும் குறும்பும் 2இடுக்கண் வருங்கால்… 1ஆன்மிகமும் சிரிப்பும்சூமுலகம்
கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் அழைத்திருந்தார். ”என்ன செய்றீங்க? வெளியே ஒண்ணும் சுத்தலியே? வீட்டிலேயே இருங்க. அங்க இங்க லாந்திட்டிருக்கவேண்டாம்” என்றார்.
அவருடைய உற்சாகமான குரலை கேட்பது எப்போதுமே நிறைவளிப்பது. அத்துடன் அவர் அப்படி அழைத்து சொன்னது கேட்டு வயக்கரைவீட்டு பாகுலேயன் பிள்ளையே “வீட்டிலே இருடா நாயின்றே மோனே” என்று சொல்வதுபோல, ஒரு நிறைவு ஏற்பட்டது. நமக்கு அது சிலசமயம் தேவைப்படுகிறது. குறிப்பாக கொரோனாவாவது ஊரடங்காவது, மயிரேபோச்சு, கிளம்பிவிடலாம் என்னும் முனையை வந்தடைந்த சமயத்தில்.
சென்ற ஏப்ரல் 23 அன்று நாகர்கோயில் வந்தபின் இதுவரை பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருக்கிறேன். மாடியிலேயே நடைபயணம். கடைக்குப் போவதெல்லாம் அஜிதன்தான். இப்படியே போனால் மக்கள் சிறைசெல்வதை அஞ்சாமலாகிவிடுவார்கள், வேறுவகை தண்டனைகளை அரசு கற்பனை செய்ய வேண்டியிருக்கும் என நினைத்துக்கொண்டேன்.
வீடடங்கு என்றாலும் ஒவ்வொரு நாளும் தொடங்குவதறியாமல் முடிந்துவிடுகிறது. தினமும் 4 பேருடன் தலா 40 நிமிடங்கள் ஸூம் செயலி வழியாக உரையாடுகிறேன். அதுவே மூன்றுமணிநேரம் ஆகிவிடும். ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்ட நேரத்திற்கு அட்டவணை போட்டு நானே அழைக்கிறேன். நாளின் ஒழுங்கை அந்த அட்டவணையே இப்போது தீர்மானித்துவிடுகிறது.
சென்ற மேமாதம் 16 முதல் தொடங்கிய உரையாடல் இது. இதுவரை 96 பேருடன் உரையாடிவிட்டேன். இன்று சதமடிப்பேன் என நினைக்கிறேன். இம்மாத இறுதிவரை நாள்கொடுத்திருக்கிறேன். அதற்குமேல் வேண்டாம் என நினைக்கிறேன். அப்போது ஊரடங்கும் இருக்காது, பயணங்களும் இருக்கலாம்.
இந்த அட்டவணையின் சிக்கல் என்னவென்றால் இதை நான் மாற்றிமாற்றி அமைக்க முடியாது. ஒருவரின் பொழுதை மாற்றவேண்டுமென்றால் இன்னொருவரின் பொழுதை மாற்றவேண்டும். எனக்கு பொதுவாக இப்படிப்பட்ட அட்டவணையிடுதலே பெரிய தலைவலி. ஆகவே நான் அளிக்கும் பொழுது வசதிப்படாது என்றவர்களிடம் பிறிதொரு காலகட்டத்தில் பேசலாம் என்றுதான் பதில் சொல்லவேண்டியிருந்தது.
நூறில் நான்குபேர் நோய் முதலிய காரணங்களால் பேசமுடியாமலானார்கள். அவர்களின் பொழுதை பெற வேறுசிலர் தயாராக இருந்தமையால் பொழுது வீணாகவில்லை.
நான் கருதியதுபோல இந்த உரையாடல் போகப்போக ஒரேபோல ஆகி சலிப்பூட்டவில்லை. குறைந்தபட்சம் எனக்கு மிக உதவியானதாகவே உள்ளது. பேசியவர்களில் ஓரிருவர் தவிர அனைவருமே இளைஞர்கள். அவர்களின் உலகங்களும் வேறு. ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை நிலப்பரப்புகளும் வேறுபட்டவை.
வழக்கமான நேர்ச்சந்திப்புகளை விட இந்த காணொளிச் சந்திப்பில் பங்கேற்பாளர்களின் விகிதாச்சாரம் வேறுபட்டிருந்தது. வழக்கமாக பேசிக்கொள்பவர்களுக்கு இடமில்லை என்பதனால் விஷ்ணுபுரம் நண்பர்கள் எவரும் பங்கெடுக்கவில்லை. ஓரிருவர் தவிர பிறர் புதிய வாசகர்கள், சிலர் ஓரிருமுறை நிகழ்ச்சிகளில் சந்தித்தவர்கள்.
வழக்கமாகப் புதுவாசகர் சந்திப்பில் இருபதுபேருக்கு மூவர் என்ற கணக்கில்தான் பெண்கள் இருப்பார்கள். இப்போது காணொளிச் சந்திப்புகளில் நேர்ப்பாதிபேர் பெண்கள். நம் சூழலில் சந்திப்புகளுக்குச் செல்ல பெண்களுக்கு இருக்கும் சிக்கல்கள் மற்றும் தயக்கங்களை இது காட்டுகிறது.
நேர்ச்சந்திப்புகள் மற்றும் விழாக்களில் ஓரிருவரே இஸ்லாமியர் பங்கெடுப்பது வழக்கம். இணையச்சந்திப்பில் மூவரில் ஒருவர் இஸ்லாமியர். ஒரு இஸ்லாமிய வாசகரிடம் அதைக் கேட்டேன். ‘அழைத்தவர்களின் பெயர்களை நீங்கள் வெளியிடுவீர்கள் என்றால் உங்களை அழைத்திருக்க மாட்டேன்’ என்றார்.
ஏனென்றால் என்னுடன் தொடர்பு கொண்டால் நட்பு, சுற்றத்தில் பலவகையான கெடுபிடிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். வசைகளும் வரும். ”அவர்கள் எவருக்கும் உங்கள் எழுத்துபற்றி ஏதும் தெரியாது. ஆனால் பொதுவெளியில் சிலர் உருவாக்கும் காழ்ப்புகளை கற்றுவைத்திருக்கிறார்கள். உங்கள் புத்தகங்களை முழுக்க இணையத்தில்தான் வாசிக்கிறேன், கையில் வெளிப்படையாக வைத்து வாசிக்க முடியாது” என்றார்.
இந்த உரையாடல்களில் ஒரு முறைமை இருக்கிறது. காணொளியில் சந்திப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நேரில் சந்தித்தால், அல்லது ஒரு காணொளியில் பலருடன் சேர்ந்து வந்திருந்தால் வாய் திறக்கவே வாய்ப்பில்லாத உள்முகமனநிலை கொண்டவர்கள். ஆகவே பேசுவதற்கு மூச்சுத்திணறுகிறார்கள். அதோடு சிலர் என்னை ஒரு கடுமையான மனிதராகவும் சிலர் எண்ணியிருக்கிறார்கள். ஆகவே அறிமுகம் கொஞ்சம் திணறல், கொஞ்சம் சங்கடமான சிரிப்பு. இயல்புநிலையை அடைய பத்துநிமிடமாகும்.
அதன்பின் கேள்விகள், உரையாடல். பலர் கேள்விகளைக் குறித்துவைத்திருந்தனர். சிலர் அக்கேள்விகளை அப்படியே மறந்துவிட்டுத் தத்தளித்தனர். இருபது நிமிட உரையாடலுக்குப் பின்னரே பேச்சு தீவிரமடைந்து முழுமையாக ஒன்றிக் கேட்கவும் பேசவும் செய்தனர்.
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்தன. பெரும்பாலும் இக்காலகட்டத்திற்குரிய பொதுப்பிரச்சினைகள்தான். ஆனால் பேச்சின் இறுதியில், சற்று தயங்கியபின் தனிப்பட்ட பிரச்சினைகளை சொன்னவர்களும் பலர் இருந்தனர். என் எண்ணங்களை அவர்களிடம் சொன்னேன்.
வெவ்வேறு வாழ்க்கைச் சிக்கல்களைப் பிரச்சினைகளை அணுக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு இது. தனிப்பட்ட முறையில் பேசுகையில் மட்டுமே உருவாக்கும் தொடர்புறுத்தல். இத்தனை பேசியும் எழுதியும்கூட இந்த தனியுரையாடல்களில், முன்பு நான் அறிந்திராத கேள்விகளையும் வாழ்க்கைச் சிக்கல்களையும் சந்தித்தபோது புதியதாக பலவற்றை யோசித்து முன்வைத்தேன்.
இதை இனி எவ்வகையிலேனும் தொடரவேண்டுமென எண்ணுகிறேன்.
அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி
திருநெல்வேலி வாசிகள் எப்போதுமே வெயில் பிரியர்கள். நான் ஒருமுறை போத்தீஸ் சென்ற போது அங்கே லிப்ட் இயக்குபவர் இப்படி புலம்பிக் கொண்டிருந்தார், “ஒரு வாரமா ஒரே மழ ஒன்னும் ஓடல பாத்திக்கிடுங்க… இன்னைக்கி தான் சத்த வெயிலு தலயக் காட்டுது” என்றார். இந்நகரின் வாழ் மக்களின் மனநிலையை சொல்லும் வாக்கியம் அது. இங்குள்ளவர்கள் வெயிலில் மட்டும் தான் சமநிலையில் வாழப் பழகியவர்கள் சிறு மழையோ, பனியோ அவர்களின் உடல் அல்லது மனதின் சமநிலையை குலைத்துவிடும்.
இங்குள்ள சிறுதெய்வங்கள் பலவற்றின் பெயரில் அதனைக் காணலாம். எங்கள் குல தெய்வத்தின் பெயர் ‘வெயிலுகந்த சாஸ்தா’. அதே போல் வெயிலுகந்த அம்மன், வெயிலுந்த மாடன் என பல சிறு தெய்வங்கள் இங்கே உண்டு. இவர்கள் அனைவரும் வெயிலை தாங்கியே நிற்பர். கோவிலுக்கு பெரும்பாலும் மேற்கூரை இருக்காது. அவர்களுக்கான பூஜை உச்சி மதியத்திலேயே நடக்கும். கால் சுட சுட சாஸ்தா கோவிலின் வாசலில் நின்ற என் குழந்தைப் பருவ நினைவுகள் மதார் கவிதைகளை வாசிக்கையில் எழுகிறது. வெயில் சுட சுட தான் ஆனந்தம், அந்த அனலோனின் தித்திப்பும், திகிலும் அதன் உக்கரத்திலேயே அமைந்திருக்கிறது.
கடும் வெயில் காலம்
முகம் கழுவுதல் என்பது
முகம் கழுவுதலாய் இருப்பதில்லை
முகத்திற்குத் தண்ணீர் ஊற்றினேன்
வெயில் கழுவினேன்
மீண்டும் ஊற்றினேன்
வெயில் கழுவினேன்
முகம் கழுவ இவ்வளவு நேரமா
என்ற வெளிக்குரல்
அது அறியாது
நான் வெயில் கழுவி
முகம் தேடும் திகிலை.
யோசித்துப் பார்த்தால் தமிழர்கள் குறிப்பாக திருநெல்வேலி வாசிகள் வெயிலோடு உறவாடியது போல், மழையோடோ, பனியோடோ உறவாடியிருக்க மாட்டார்கள். எங்களுக்கு வெயில் என்பது ஒரு விளையாட்டு, தினம் தோறும் உடன் வரும் தோழி.
மேலே சொன்ன கவிதையில் முகம் தேடும் திகில் பின்னால் வரும் மதார் கவிதையில் வேறொன்றாக மாறுவதைக் காணலாம்.
நதி நீரில் ஒரு இலை
குளிக்கத் துவங்கும்போது
நதி நீர் குளியல் நீர்
ஆகிறது
துவட்டும் வெயிலுக்கு
இந்த இரகசியம்
தெரியாது
வெயில் பறந்து பறந்து
குளியல் நீர்த் தொட்டிகளை
எங்கெங்கும் தேடுகிறது
ஆழ சமுத்திரமுங்கூட
வெயில்
நீராட்
அனுமதிப்பதில்லை
ஒரு வாளி நிறைய
நீர் எடுத்துக் கொண்டு
உதடு நிறைய
புன்னகை எடுத்துக் கொண்டு
வெயில் மீது வீசினேன்
கிடைமட்டமாய்ப் பறந்து
தரையில் போய் விழுந்தன துளிகள்
மண்ணை எடுத்து
கையில் வைத்துப் பார்த்தேன்
வெயில் தும்மிய ஈரம்
மண்ணை விட்டுப் போகவே இல்லை
உதட்டில் புன்னகையை எடுத்துக் கொண்டு வெயில் மீது வீசினேன் என்ற வரிக்கு நிகராக வந்து நிற்கிறது இக்கவிதையின் இறுதி வரியில் வெயில் தும்மிய ஈரம்.
மதாரின் இக்கவிதையிலும், பிறக் கவிதைகளிலும் தென்படும் இன்னொரு அம்சம் குழந்தையின் கள்ளமின்மை. அந்த கள்ளமின்மையே மேலே வெயிலை அழகாக்குகிறது. பிறிதொரு கவிதையில் வீட்டின் கதவாய் வந்து நின்ற மரத்தை,
கதவும் நானும் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டோம்
ஞாபகப்படுத்திச் சொன்னேன்
‘மரம் தானே நீங்க’
கதவு சொன்னது
‘ஏ! குட்டிப் பயலே’
வேறொரு கவிதையில் அப்போது பேசத் தொடங்கிய குழந்தையின் குழந்தைமை நோக்கி செல்லும் நானின் சொற்கள்,
அப்போது வரை
பேசிக் கொண்டிருந்த
என் சொற்களையெல்லாம்
துறந்துவிட்டு
எதிரெதிரே
பந்து பிடித்து
விளையாட்டு
அது கொடுக்கும்
சொல்லை
அதனிடம் அதனிடம்
தூக்கிப் போட்டு
இறுதியாக அந்த கள்ளமின்மை தெய்வச் சிலையின் புன்னகையில் வந்து அமர்கிறது,
பிரார்த்திக்கும் அம்மாவின்
முந்தானையைப் பிடித்திழுக்குது குழந்தை
கண்ணாமூச்சி விளையாட்டின்
மூன்றாம் நபர் போல்
கடவுள் உதட்டில் கை வைத்துப் புன்னகைக்கிறார்
குழந்தை புன்னகைத்தபடியே கடவுளைப் பார்க்கிறது
அம்மா கண் திறக்கவும்
கடவுள் விளையாட்டிலிருந்து
காணாமல் போகிறார்.
இந்த காணாமல் போன கடவுளையே மதார் தன் ஒவ்வொரு கவிதையிலும் தேடி விரிகிறார். கைகளால் கண்ணைப் பொத்தி அதனோடு கண்ணாமூச்சி விளையாடிப் பார்க்கிறார். அந்த கள்ளமின்மையே அவர் கவிதையை அழகாக்குகிறது.
மதாருக்கு என் வாழ்த்துக்கள் !
நன்றி,
என். நிரஞ்சனா தேவி
வெயில் பறந்தது தபாலில் பெற :
https://azhisi.myinstamojo.com/product/289695/veyil-parandhathu/அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :7019426274கிண்டிலில் படிக்க :https://cutt.ly/9njlmdNவிருது – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சமீபத்திய கொரோனா செய்திகளையும் மீறி இலக்கிய மாமணி அரசில்அறிவிப்பையும் தாண்டி அது பற்றி உங்களுடைய கட்டுரைக்கு ஏற்படுகின்ற அதிர்வு எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
அந்தப் பட்டியலில் இடம்பெறாத அவர்களின் ஆதரவாளர்கள் என்று ஒரு கூட்டம் அந்தப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களைப் பற்றி குறை சொல்லும் ஒரு கூட்டம் இன்று பல்வேறு தரப்பினர் தங்களுடைய கருத்தை முகநூலில் மற்றும் பல ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் ஆச்சரியம் என்னவென்றால் உங்களுடைய கருத்தை மறுதலித்து பேசுவதற்கு ஈடாக ஒருவரிடமும் சரக்கு இல்லை என்பதே.
எனக்குத்தெரிந்து சமகாலத்தில் முடிந்தவரை அடுத்த எழுத்தாளர்களை படித்து எழுதுகின்ற ஒரே எழுத்தாளர் நீங்கள் தான் என்று நான் நினைக்கிறேன்.
. சில சரியான தகுதியான எழுத்தாளர்களை நீங்கள் விட்டு விட்டால் தான் என்ன? உங்கள் விமர்சனத்தைத் தாண்டி அப்படி ஓர் தகுதியுள்ள எழுத்தாளர் இருக்கக் கூடாதா என்ன? அதை வஞ்சம் , அகம்பாவம் , திமிர் என பல அடைமொழிகள் உங்கள் மீது படும்போது நீங்கள் சொன்ன அந்த பீடத்தில் அமர்ந்து இருக்கின்ற எழுத்தாளன் என்றே எனக்குத் தோன்றுகிறது.
எனினும் நீங்கள் அடுத்த கட்டுரையில் அஜிதன் சொன்னதாக அந்த அவநம்பிக்கை தொனி நானும் கவனித்தேன். இன்று இருக்கக்கூடிய சூழலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு அதை நிறைவேற்றாமல் போனால் மத்திய அரசோ மாநில அரசோ பெரும் கேலிக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகின்றனர் என்பது உறுதி.
நான் அறிந்தவரையில் இந்த ஆட்சி இருக்கும் வரை இந்த விருது மற்றும் கனவு இல்லம் நீங்கள் பரிந்துரைத்த அல்லது எதிர்த்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் தமிழ் இலக்கிய உலகில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று
நன்றி
S நடராஜன்
கோவை
அன்புள்ள நடராஜன்,
என் கட்டுரை ஏன் விவாதமாகிறது என்றால் அது முன்வைக்கும் அந்த அளவுகோல், அதற்குப்பின்னாலுள்ள விழுமியங்கள், தொடர்ந்து பேசி நிறுவப்பட்டவை என்பதனால்தான். அவை வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் அல்ல. அவற்றுக்கிப்பின்னால் ஒரு விமர்சன இயக்கம் இருக்கிறது. குறைந்தது ஐந்தாயிரம் பக்கம் எழுதப்பட்டிருக்கிறது.
அது அழகியல் சார்ந்த ஒரு தரப்பு. அந்தத்தரப்பை பிற பார்வைக்கோணம் கொண்டவர்கள் எதிர்ப்பதும் இந்த விவாதத்தின் பகுதியே. அவற்றுக்கு ஏதேனும் மறுப்பு தெரிவிக்கவேண்டியிருந்தால் தெரிவிப்பேன். இந்த விவாதமே வெறும் சண்டை, ஏதோ நோக்கத்துடன் நடத்தப்படுவது, தேவையில்லாதது என்றெல்லாம் இலக்கியமறியா பாமரர் நினைப்பதும் எப்போதும் உள்ளதுதான். இப்போது அவர்களுக்கு அதையெல்லாம் எழுதிவைக்க ஊடகம் உள்ளது என்பதே வேறுபாடு.
இத்தகைய விவாதங்களில் எவரும் செய்யவேண்டியது ஒன்றே. தங்கள் தெரிவை, தங்கள் எழுத்தாளர் பட்டியலை முன்வைப்பது. அதை முன்வைப்பதற்குண்டான காரணங்களை கூறுவது. விவாதிப்பது. அதைத்தவிர அனைத்தையுமே செய்கிறார்கள்.
என் கட்டுரைமேல் வம்புரைக்க வருபவர்களிடம் ‘சரி, உங்கள் பட்டியல் என்ன?’ என்று கேளுங்கள் என்று நண்பர்களிடம் சொன்னேன். “எத்தனையோ எழுத்தாளர் இருக்காங்க சார்” என்பார்கள். “சரி ஒரு ரெண்டு பேர் பேரைச் சொல்லுங்க” என்றால் விழிப்பார்கள். யோசித்து “இப்ப — இல்லியா?”என்பார்கள். ”சரி சென்ற ஓராண்டில் நீங்கள் அந்த எழுத்தாளர் பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள்? எங்கெல்லாம் அவரையோ அவர் நூலையோ சொல்லியிருக்கிறீர்கள்?”என்றால் அவ்வளவுதான் சீறிக்கொந்தளித்துவிடுவார்கள். இதுதான் இந்தக் கூட்டத்தின் தரம்.
இத்தனை பூசலிலும் எவராவது நானும் என் பார்வையில் தரமான எழுத்தாளர்களின் ஒரு பட்டியலை வைத்திருக்கிறேன், அவர்களுக்கன்றி தரமற்ற ஒருவருக்கு விருதளிக்கப்பட்டால் கண்டிப்பேன் என்று சொல்கிறார்களா என்று பாருங்கள் என்று சொன்னேன். எத்தனை தந்திரமாக என் கட்டுரைக்குள்ளேயே தங்கள் பூசல்களை நிறுத்திக்கொள்கிறார்கள்.
கவனியுங்கள், எழுத்தாளர்கள் மேல் இந்தப் பாமரர்களுக்குத்தான் எத்தனை வசை! ஒட்டுமொத்தமாக அத்தனைபேர் மேலும் வசை. தனித்தனியாக வசை. அத்தனைபேரும் அதற்குத் திரண்டு வருகிறார்கள். தனக்கு உகந்த எழுத்தாளர்களைப் பற்றி ஏதாவது பாராட்டி எழுதியிருக்கிறார்களா?
ஆண்டுமுழுக்க எத்தனை ஆயிரம் முகநூல் குறிப்புகள். அவற்றில் இலக்கியம் பற்றி, எழுத்தாளர் பற்றி எத்தனை உள்ளன? இலக்கியம் பற்றியோ எழுத்தாளர் பற்றியோ எதைத்தேடினாலும் நீங்கள் இந்த தளத்துக்குத்தான் வரவேண்டும். ஏனென்றால் ஆண்டுமுழுக்க எழுத்துக்களை, படைப்பாளிகளை முன்வைத்துக்கொண்டே இருக்கிறேன். என் கருத்துக்கள் அத்தகுதியிலிருந்து எழுகின்றன.
நான் எழுதியதுதான், உண்மையிலேயே நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகவே இதைக் கொள்ளவேண்டும். தமிழில் சுதந்திரம் கிடைத்த முதல்தலைமுறைக்குப்பின் இப்படி ஒரு முயற்சி நடந்ததில்லை. ஆகவே நல்லது நடக்குமென எதிர்பார்ப்பதே முறையானது.
ஜெ
வணக்கம்.
சிறப்பான கட்டுரை. இந்த கருத்தை ஒத்த கடந்த கட்டுரையும் சிறப்பு. விமர்சனங்களை எதிர்நோக்கியே நீங்கள் சொல்லும் கருத்துக்கள் வலுவானவை.
இளம் எழுத்தாளர்கள், யுவ சாகித்திய அக்காடமி விருது வாங்கியவர்கள் , பெண் எழுத்தாளர்களை மருந்துக்கு கூட பட்டியலில் சேர்க்கவில்லை. இயன்றால் ஒரு பதில் வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
ஜோசஃபைன் பாபா
அன்புள்ள ஜோசஃபைன்
இளம் எழுத்தாளர்களின் பட்டியலைச் சேர்க்கவில்லை. ஏனென்றால் அந்தக் கட்டுரையே உடனடியாக பரிசு கொடுக்க பரிசீலிக்கப்படவேண்டியவர்களின் ஒரு சிறு பட்டியல்தான். இரண்டு அளவுகோல்களுடன் அப்பட்டியல் அளிக்கப்பட்டது என்று அதில் தெளிவாகவே உள்ளது – திமுக எதிர்ப்பு இல்லாததனால் திமுகவால் பரிசீலிக்கப்படவேண்டியவர்களில் மூத்த எழுத்தாளர்கள். அந்த விருது இளம் படைப்பாளிகளுக்குரியது அல்ல.
பெண் எழுத்தாளர்களைச் சேர்க்கக் கூடாது என்றில்லை. ஆனால் இலக்கியத்தில் அப்படி ‘பெண்’ என்னும் தனிப்பார்வை தேவையா என்பது என் குழப்பம். அதில் ஒரு ‘பரிவுப்பார்வை’ உள்ளது.அது எனக்குரிய அளவுகோல் அல்ல.
மூத்த பெண் எழுத்தாளர்களில் அம்பை மட்டுமே இலக்கியத்தில் செயல்படுபவர். ஆனால் ஒரு தனித்தன்மைகொண்ட முன்னோடிப் படைப்பாளி என்று சொல்லுமளவுக்கு பெரிதாக ஏதும் எழுதவில்லை. நெடுங்காலமாக ஏதும் எழுதுவதுமில்லை. மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். இன்றைய பார்வையில் அப்படைப்புக்களில் மிகக்குறைவாகவே பொருட்படுத்தும்படி உள்ளது.
இளம்தலைமுறையில் பெண்படைப்பாளிகள் உள்ளனர். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல இது இளம்படைப்பாளிகளுக்கான விருது அல்ல. இளம்படைப்பாளிகளையும் உள்ளடக்கி விருது அளிக்கப்படுமென்றால் என் பெருமதிப்பிற்குரிய உமா மகேஸ்வரி தொடங்கி நல்ல எழுத்தாளர்களின் ஒரு வரிசையே உள்ளது.
ஜெ
அன்புள்ள ஜெ,
தமிழக அரசின் விருதுக்கு நீங்கள் சிலரை பரிந்துரை செய்திருக்கிறீர்கள். அதற்குப் புறவயமான அளவுகோல்களை முன்வைத்திருக்கவேண்டும் அல்லவா? வெறும் சிபாரிசு என்றால் அதை ஏன் செய்யவேண்டும்?
ரவீந்திரன் ஆர்
அன்புள்ள ரவீந்திரன்,
நீங்கள் புதியவர் என நினைக்கிறேன். அதில் நான் குறிப்பிடும் பெரும்பாலானவர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். சொல்லப்போனால் அவர்களைப் பற்றி நான் மட்டுமே விமர்சனநோக்கில் விரிவாக எழுதியிருப்பேன்.
அந்தக் கட்டுரையிலேயே அளவுகோல்கள் பேசப்பட்டுள்ளன. கட்டுரையை படிக்காமல் ஸ்க்ரோல் செய்து பார்த்துவிட்டு பேசும் வம்புகளை நீங்கள் கவனிக்கிறீர்கள். நான் அக்கட்டுரையில் மூன்று வகையினரை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். ஒட்டுமொத்தமாக விருதுக்குத் தகுதியானவர்களின் பட்டியல் அல்ல அது.
திமுக அதன் தேர்வில் திமுக சார்பை, அல்லது எதிர்ப்பின்மையை ஓர் அளவையாகக் கொள்ளும் என்பதே என் புரிதல். அதன் சரித்திரம் அப்படி. முழுக்கமுழுக்க இலக்கிய அளவுகோல்களை கொள்ளவேண்டும் என்பது ஓர் இலட்சிய எதிர்பார்ப்பு – திமுகவிடம் அதை எதிர்பார்க்க முடியாது என்பதே கடந்தகாலம் காட்டுவது. அப்படிப் பார்த்தால்கூட கருத்தில்கொள்ள வேண்டியவர்களின் பட்டியலையே அளித்திருக்கிறேன். அவர்கள் திமுக எதிர்ப்பின்மையும், எழுத்தில் சற்று முதிர்வும் சாதனையும் கொண்டவர்கள்.
அடுத்தபடியாக இன்று இடர்மிக்க நிலையில் இருப்பவர்களின் பட்டியல்.அதில் சிலரைச் சொல்லியிருக்கிறேன். இன்றைய சூழலில் அவர்களுக்கு அளிக்கப்படும் எந்த நிதியும் உதவியானது. அவர்களுக்கு அகவை நிறையட்டும் என காத்திருக்கவேண்டியதில்லை. அது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மூன்று, எந்நிலையிலும் கருத்தில்கொள்ளப்படவேண்டிய முன்னோடிகளின், முன்னுதாரணமான படைப்பாளிகளின் பெயர்கள் ஓர் உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளன.
இத்தகைய கட்டுரை ஏன் முன்னரே எழுதப்படவேண்டும்? ஏனென்றால் இந்த அளவுகோல் இங்கே எப்போதுமிருக்கும். இத்தரப்பின் எதிர்வினை என்றும் வந்தபடியே இருக்கும். இத்தகைய அமைப்புக்களை உருவாக்குபவர்கள் இதை அறியவேண்டும்
நானறிந்தவரை இத்தகைய கட்டுரைகள் ஏதேனும் நல்லது செய்ய எண்ணுபவர்களுக்கு மிக உதவியானவை. அவர்களிடம் வரும் தகுதியற்ற சிபாரிசுகளை தவிர்க்க இக்கட்டுரைகளையே ஆதாரமாகச் சுட்டிக் காட்டலாம். “நாம ரொம்பப் போனா இவனுக கிழிச்சிருவாங்க சார். கெட்டபேராயிடும்” என்று சொல்லி தவிர்க்கமுடியும். வெளிப்படுத்தப்படும்போதே ஒரு கருத்து ஒருவகை பொருண்மையான சக்தியாக ஆகிறது. எப்போதுமே இவை அப்படி செயல்படுகின்றன என நான் அறிவேன்
–ஜெ
பிகு
இந்த உரையாடல் வேண்டிய அளவுக்கு நீண்டுவிட்டது. இங்கே நிறைவுறட்டும். நம்பிக்கையை மட்டும் முன்வைப்போம்.
பாலையாகும் கடல்- கடிதம்
அன்புள்ள ஜெ,
கடலூர் சீனு சொல்கிற புலால் அடிமைத்தனத்தை நான் என் அலுவலகத்திலேயே பார்த்திருக்கிறேன். ஊழியர்களிடையே பேச்சு என்பது பாதிநேரம் சாப்பாட்டைப் பற்றியும் மீதிநேரம் சினிமாவைப் பற்றியும்தான் இருக்கும். போனவாரம் சாப்பிட்ட ‘பக்கெட் பிரியாணி’ பற்றியோ அடுத்தவாரம் சாப்பிடப்போகும் ‘தலப்பாகட்டி’ பற்றியோ. ‘மெக்டி’ யா ‘கேஎ∴ப்சி’ யா எந்த சிக்கன் சிறந்தது? இந்தவாரம் அதிக தள்ளுபடியில் சிக்கன் பர்கர் தரப்போவது யார்? யார் யாரிடமிருந்தெல்லாம் இன்னும் ‘ட்ரீட்’ பாக்கி இருக்கிறது? பிரிவில் யாராவது புதிதாகச் சேர்ந்தால் அந்த ஊழியர் ‘ட்ரீட்’ தரவேண்டும். வெளியே போவதாக இருந்தாலும் அதே சட்டம். இதுதவிர மாதாந்திர, பிறந்தநாள், திருமணநாள் ‘ட்ரீட்’ கள் தனி. ‘ட்ரீட்’என்றால் புலால் உணவு மட்டுமே.என்னைப் போன்ற சைவப்பிராணிகளுக்கு அங்கு இடமில்லை என்றாலும் எப்போதும் இந்தப்பேச்சே காதில் விழுந்துகொண்டிருப்பது எரிச்சலையே உண்டுபண்ணும். ‘கவுச்சி இல்லாம சாப்படவே பிடிக்காது’ என்று மகனையோ, கணவனையோபற்றி பெருமையடித்துக் கொள்ளும் பெண்களைத்தானே அதிகம் பார்க்கிறோம். இந்த வெறி ஓரளவு தணிவது புரட்டாசி மாசத்திலும், சபரிமலை சீசனிலும்தான்.
சீனு சொன்ன ‘சீஸ்பைரசி’ படம் பார்த்தேன். சூழலியல் கொள்ளை நடத்தும் மீன்பிடி மாஃபியாவின் திருவிளையாடல்களை அம்பலப்படுத்துகிறார் இயக்குனர் அலி, அவரால் முடிந்த சிறிய அளவில். தன் கண்ணைக் குத்திக்கொண்டு குருதிகொப்பளிப்பதைப் பார்த்து ஆனந்தமடையும் மனிதனைப் பார்த்த அனுபவம்தான் எனக்கு. குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப்பில் பயன்படும் ‘ட்ராலர்'(Trawler) வலைகள் கடல்தளத்தையே நாசம் செய்யக்கூடியவை. பவளப்பாறைகள் எல்லாம் சுரண்டி எறியப்பட்டு ஒரு நாட்டின் நிலப்பரப்பளவேயான கடலடி மொட்டை நிலங்கள் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. மேலும் ‘பைகேட்ச்’ என்பது குறிப்பிட்ட (டுனா போல) மீன்களைப் பிடிக்கும் போது மாட்டும் வேறுவகை மீன்கள். அவைகளைக் கொன்று கடலுக்குள்ளேயே வீசியெறிகிறார்கள். அவர்கள் கொடுக்கிற புள்ளிவிவரங்கள் மலைப்பூட்டுகின்றன, எல்லாமே லட்சக்கணக்கில்.
இந்த ஆழ்கடல் மீன்பிடிப்பினால் மிகவும் பாதிப்புக்குள்ளாயிருக்கும் ‘∴பைட்டோபிளான்க்ட்டன்’ (Phytoplankton) என்னும் கடல்வாழ் நுண்ணுயிரி இல்லையேல் ஒட்டுமொத்த மனிதகுலமும் பெரும் கேள்விக்குறிதான். நமக்குக் கிடைக்கும் பிராணவாயுவின் பெரும்பகுதி ‘∴பைட்டோபிளான்க்ட்டன்’ என்னும் இந்தக் கடல்வாழ் நுண்ணுயிரிலிருந்தே கிடைக்கிறது, அதாவது அமேசான் காடுகளிலிருந்து கிடைப்பதைப்போல பலமடங்கு. மழைமேகங்களை உற்பத்திசெய்வதில் பெரும்பங்கு வகிப்பவை இந்த நுண்ணுயிரியே. நிலத்தில் இருக்கும் தாவரங்களைப்போலவே ஒளிச்சேர்க்கை செய்வதால் இவைகளுக்கு சூரிய ஒளி அவசியம். அதனாலேயே கடல் மட்டத்திலிருந்து இருநூறு மீட்டர் ஆழத்திற்குள் வாழக்கூடியவை. கடல்வாழ் உயிரினங்களின் கழிவுகளை மறுசுழற்சி செய்து பிற கடல்வாழ் தாவரங்களுக்கு உணவாக்குவதும், கடலுக்குள்ளே நிலவும் உணவுச் சங்கிலி உடையாமல் காப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவைகளை அழிப்பது தற்கொலை தவிர வேறில்லை.
நிலமோ, விண்வெளியோ, கடலோ மனிதன் குப்பைபோடாத இடம்தான் ஏது? காலாவதியான ராக்கெட்டுகள் வெறுமனே பூமியைச் சுற்றிக்கொண்டிருப்பதைப் போல அங்கங்கே இவர்கள் கழித்துக்கட்டிய வலைகளும் நெகிழிக் கழிவுகளும் பெரும்திட்டுக்களாக கடலில் மிதந்து கொண்டிருக்கின்றன. அதுபோக இந்த மீன்பிடி மாஃபியா கும்பலில் வேலைசெய்யும் பெரும்பாலானவர்கள் கொத்தடிமைகள். படகில் ஏறிவிட்டால் அவர்கள் கரையைக் காண்பதுவரை நிச்சயமில்லை. அவர்கள் கொல்கிற மீன்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. நடுக்கடலில் நடக்கும் மனிதக்கொலைகள் யாரும் அறியாதவை.
ஜப்பான், சோமாலியா, ஹாங்காங், டென்மார்க் என்று அந்தந்த நாடுகளின் சூழியல் சுரண்டல்களைக் காணும்போது ‘உங்களையலாம் ஏண்டா இன்னும் சுனாமி தூக்கல?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஏதாவது நடந்து கடல் தன்னைக் காத்துக்கொண்டால்தான் உண்டு போல. அவர்கள் சொல்லும் புள்ளிவிவரங்கள் ஒருவேளை பாதி உண்மையாக இருந்தாலும் பதறவைக்கக் கூடியவை. விளம்பரங்களில் காரட் நிறத்தில் காணப்படும் ‘சால்மன்’ மீனின் துண்டுகளுக்கு அந்த நிறத்தைக் கொடுப்பது அந்த மீன் பண்ணையில் அவர்கள் மீனுக்கு உணவாக அளிக்கும் செயற்கை நிறமூட்டிகளே. ‘சுகாதாரமான கடல் உணவு’ என்ற வில்லையை வாங்குவதற்கும், மீன்பிடித்தடை உள்ள இடங்களில் மீன்பிடிக்கையில், காவல்துறையை வேறுதிசையைப் பார்க்கவைக்கவும் பெரும்பணம் கையூட்டாக அளிக்கப்படுகிறது. யார் கண்டார்கள்? நாளை இந்த நாசகாரக் கும்பல் விஞ்ஞானிகளையே விலைக்கு வாங்கி ‘ஃபைட்டோபிளான்க்ட்டன்கள்’ ளும், பவளப்பாறைகளும்தான் சூழியல் அழிவுக்கே காரணம், எனவே அவற்றை ஒழிப்பதற்கு ஆழ்கடல் மீன்பிடிப்புதான் ஒரேவழி என்று சொல்லச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நடிகர் சிவகுமார் ஒரு பேட்டியில் ‘நாற்பது வயதிற்குமேல் அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது’ என்று கூறியிருந்தார். அட, அது கூட வேண்டாம், எல்லோரும் வாரத்திற்கு ஒருநாளைக்கு மேல் மீன் சாப்பிடுவதைத் தவிர்த்தாலே ‘மூலவளம் குன்றா சார்பு நிலை மீன் பிடி’ யை நோக்கிவைக்கும் உறுதியான முன்னெடுப்பாக இருக்கும். மனதுவைத்தால் முடியாதா என்ன?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

