Jeyamohan's Blog, page 968

June 14, 2021

கதாநாயகி- கடிதம்-12

அன்புள்ள ஜெ

கதாநாயகி நாவலுக்கு பெண்கள் யாரும் எதிர்வினையாற்றவில்லை என்று எழுதியிருந்தீர்கள். வாசிக்க வாசிக்க அதற்கு மனதளவில் எதிர்வினையாற்றிக்கொண்டே இருந்தேன் தான். ஆனால் எழுதவேண்டுமென்று தோன்றவில்லை. இப்போதும் அப்ஜெக்டிவாக விமர்சனப்பூர்வமாக எதையும் எழுதமுடியுமா என்று தெரியவில்லை.

ஏனென்றால் அந்த கொந்தளிப்புகளை அறிவேன். எழுத்தில் எரிக்கநினைக்கும் கச்சாப்பொருள் அது. நேர்வார்த்தைகளில் அவற்றைப் பேசினால் அபத்தமாக இருக்கும். சமநிலை இருக்காது. பேசினாலும் எப்படியும் மாறுவேடம் அணிவித்து முன்வைக்கத்தான் முடியும். அங்கதமாகவோ கசப்பாகவோ இல்லை கண்ணாடி அணிவிக்கப்பட்ட தீவிரமான ஆராய்ச்சிபாவனையோடோ. கதையில் சுற்றிச்சுற்றி வரும் மொழிவிளையாட்டுகளைப்போல. ஆனால் உண்மையில் அவற்றைச் சலிப்பாக உணர்கிறேன். ஏனென்றால் அவையெல்லாம் அரைபுனைவு. ஆகவே பொய்.

ஓர் உதாரணம் சொல்கிறேனே? நான் இப்படித் தொடங்கலாம். “பொதுவாக கைவிடப்பட்ட பங்களாவில் எழுத்தாளரைத்தான் பேய் பிடிக்கும். இங்கே எழுத்தாளரே ஒருவகையான பேய். சரிதான், எழுத்தாளர் பெண் என்கையில் பேயாகத்தானே வரமுடியும்?” இப்படி ஏதாவது. கொஞ்சம் அங்கதம். கொஞ்சம் கசப்பு. கொஞ்சம் சுய ஏளனம். நீலகேசி ஒரு பேய். காரைக்கால் அம்மையார் இன்னொரு பேய். மரபில் இருக்கிறதே? அப்படியே கண்ணாடியைத்திருப்பிக் காட்டலாம். அந்த நாவலே கண்ணாடிகளின் அறை. நாயகி எண்ணியதை ஆசிரியை எழுதி வாசகி வாசித்ததாக நாயகன் எண்ணுவதை ஆசிரியர் சொல்வது. அதற்குள் இன்னொரு கண்ணாடியை கொண்டுப்போய் மாட்டிவைக்கலாம்.
ஆனால் அப்படி வைப்பதில் ஓர் இடுங்கல் தன்மை உள்ளது. பிம்பத்தை பிம்பத்தால் மதிப்பிடுவது. மொழியை மொழியால் அளைவது. நேரடியாக எதிர்கொள்ளமுடியாத மெடூசாவின் முகத்தை நூறு நூறு பிம்பங்களாகப் பிளந்துபோடுவது. ஆனால் மெடூசாவுக்கு அவள் முகத்தை கண்ணாடியில் பார்த்தாகவேண்டிய நிர்பந்தம் இருக்கிறதே? பாம்புக்கூந்தலை படியவைக்க வேண்டுமே? :)

சரி மெடூசாவை விடுவோம் பாவம். எத்தனை தலைமுறை ஆணியவாதிகளும் பெண்ணியவாதிகளும் தான் அவளோடு சிண்டுமுடி பிடிப்பது. இத்தனை பிம்பங்கள் மூலம் அங்கே எதிர்கொள்ளமுடியாமையோடு நிலைப்பது என்ன? பெண்ணுக்கு அவள் பெண் இருக்குப்பும், விரிந்த மானுடத்தன்மைக்கும், எப்படியோ ஒரு முரண் கற்பிக்கப்படுகிறது. சுரண்டல் தொடங்குவது இந்த முரணிலிருந்து தான். பேய் என்பதே அந்த முரண்பாட்டின் தலைகீழாக்கம் அல்லவா?

என்னிடம் மேலதிகமான அறிவு பெண்மையில் ஒரு குறைபாடு என்று நேரடியாகவே சொன்னவர்கள் உண்டு. பெண்களுக்கு மானுட விரிவு சாத்தியப்படாதென்று சொன்னவர்கள் உண்டு. அறிவின் விலைக்கு பெண்மையும் பெண்மையின் விலைக்கு அறிவும் பேரம்பேசப்பட்டதுண்டு. பெண்கள் மத்தியில் அறிவால், அறிவார்ந்தோர் மத்தியில் பெண் என்பதால் அன்னியப்பட்டதுண்டு.

ஆனால் என் அனுபவத்தில் அதைத்தாண்டி மேலும் முக்கியமான ஒன்றை உணர்ந்திருக்கிறேன். அது எந்நிலையிலுமே, நான் என்னை இயல்பாகவே ஒருங்கிணைவோடு தான் உணர்கிறேன் என்பது. பிளக்கும் பார்வைகள் ஒவ்வொரு முறையும் எனக்கு வியப்பையும் திகைப்பையுமே அளிக்கின்றன. ஏனென்றால் எனக்குள் பிளவுகள் இல்லை. பெண்மைக்கும் விரிந்த மானுடத்தன்மைக்கும் என் வரையில் எந்த முரணும் இல்லை. என் உடலுக்கும் மனதுக்கும் புத்திக்கும் ஆன்மாவுக்கும் இடையே எந்த முரணையும் நான் உணர்ந்ததில்லை. ஆண்களோ பிறரோ இதில் சொல்ல ஒன்றும் இல்லை.

ஆனால் முரண் இருக்கிறது, பெண்ணின் இடம் எப்போதும் வேறு, பெண் என்பதாலேயே மானுடத்தின் ராஜபாதையில் உனக்கு இடமில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்கு என்ன பதில் சொல்வது? இல்லை, என் உள்ளூணர்வு சொல்வது வேறு, நான் உணரும் ஒருங்கிணைவு மானுடப்பொதுவானது தான் என்று மட்டும் தானே? அந்த ஒருங்கிணைவை உணர்ந்து அதன் படி authentic-ஆக வாழமுடியாமல் போனால் அது ஒரு தீவிரமான தத்துவப்பிரச்சனை அல்லவா?

இந்த ஆதாரச் சிக்கலைத்தானே கதாநாயகியர் அங்கதமாக கசப்பாக வஞ்சமாக ஆக்குகிறார்கள்? ஆனால் இதை கசப்புகள் வழியாக கழித்துவிட்டுப்போவது எப்படி நிறைவுகொள்ளச்செய்யும்? இந்த நாவலில் வெளிப்படும் ஃபிரான்செஸ் பர்னியின் அங்கதம், ஈவிலினாவின் கசப்பு, ஹெலேனாவின் வஞ்சம், இவை இந்த நாவலுக்குள் பொருத்தமாக வெளிப்படுபவை தான் – மெய்யனின் மனதில் உருவாகும் பிம்பங்கள் என்ற வகையில். மெய்யனிலிருந்தே அப்பா கிறிஸ்ப் வழியாக வர்ஜீனியஸ் வரை ஒரு கோடை இழுக்கமுடியும். அவர்களுக்கு அந்த எதிர்வினை தேவையாகிறது. ஆனால் அதனால் என்ன? என் வாழ்வில் அந்த பிம்பங்களுக்கு பிம்பங்கள் என்பதைத்தாண்டி என்ன அர்த்தம் இருக்கிறது? என்று என்னை நான் கேட்டுக்கொள்கிறேன்.

மானுடமனம் போடும் வேடங்கள் பிரதிவேடங்களை துல்லியமான சித்திரங்களாகக் காண முடிகிறது. ரசிக்க முடிகிறது. கதார்ட்டிக்காக அதைக் கடக்க முடிகிறது. ஆனால் இவையெல்லாமே எதிர்வினைகள். வாழ்க்கையில் வழிகளாக திறக்காதவை. கசப்பை அங்கதத்தை வஞ்சத்தை எதிர்வினையாக வைப்பதை இறுதியான வழிகளாக என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் இயல்பாக நேராக உணரும் ஒருங்கிணைவை அவை குலைக்கின்றன. ஆகவே அவற்றிற்கு மேலான ஒன்றை எதிர்பார்க்கிறேன்.

*

நான் ஃபிரான்ஸெஸ் பர்னியை வாசித்ததில்லை. ஆனால் அவரிலிருந்து தோன்றிய ஐரோப்பிய பரப்பின் 18ஆம், 19ஆம் நூற்றாண்டின் பெண் எழுத்தாளர்களை வாசித்திருக்கிறேன். அவர்களில் பலரும் தங்கள் எழுத்தில் இந்தச்சிக்கலை ஏதோ ஓர் வடிவில் பேசுகிறார்கள். ஜார்ஜ் எலியட்டின் மிட்டில்மார்ச்சில் வரும் டோரதி புரூக் என்ற கதாபாத்திரத்தை ஆசிரியர் அறிமுகம் செய்யும்போதே அவிலாவின் புனித தெரெசாவுடன் ஒப்பிடுகிறாள். அந்தவகை ஆற்றலும் தீவிரமும் கூடிய ஒரு பெண்ணுக்கு யதார்த்த வாழ்வில் மதிப்பென்ன என்று கேட்கிறாள். அவருடைய ரொமோலா என்ற நாவலின் நாயகி மோசக்கார கணவனையும் தான் நம்பிக்கைவைத்த கிறுக்கனான மதகுருவையும் கடந்து தன் மீட்பை எளியோர் சேவையில் கண்டுகொள்கிறாள் (கிட்டத்தட்ட மணிமேகலையைப் போல). சார்லட் பிராண்டியின் ஜேன் அயர், அன்னி பிராண்டியின் ஹெலென், லூயீசா ஆல்காட்டின் ஜோ, ஜார்ஜ் சாண்டின் கான்சுவேலோ என்று பல பாத்திரங்கள். கல்வியிலும் கலையிலும் சேவையிலும் முழுமைபெருபவர்கள்.

சுவாரஸ்யமாக, கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே கதை இறுதியில் திருமணமும் செய்துகொள்கிறார்கள். அக்காலத்திலேயும் சரி இப்போதும் சரி இந்த முடிவு, குறிப்பாக பெண்கள் மத்தியில், புருவம் உயர்த்தியிருக்கிறது. ஒரு தனி மனித இருப்பாக தன்னளவில் முழுமைபெறுவது தானே லட்சிய பெண்ணின் கொள்கையாக இருக்கவேண்டும்? எதுக்கு கல்யாணம் குட்டி? என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் பிளவு. ஆனால் ஆசிரியர்கள் அப்படி நினைக்கவில்லை. அவர்களில் பலரே மணமாகாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆணின் முழுமை பேராண்மையில் நிகழ்கிறது. மகாவீரரைப்போல. அப்படியெனில் பெண்ணின் முழுமை பெரும்பெண்மையில் அல்லவா நிகழவேண்டும்? இப்படி அடிக்கடி யோசித்திருக்கிறேன். அதே சமயம் ஆண்மை பெண்மை போன்ற கருத்துகளே ஆணவக்கட்டமைப்பின் அங்கங்கள். நாம் நம்மில் செறுக்குக்கொள்ளும் அம்சங்கள். அத்தனைப்பெரிய எடையை வைத்துக்கொண்டு எப்படிப் பறக்க முடியும்?

இருந்தாலும் ஃபிரான்செஸ் பர்னிக்கு அந்த அறுவைசிகிச்சையின் வழி ஏற்படும் விடுதலையானது என்னை திகைக்கவே செய்கிறது. அது ஓர் உருச்சிதைவு. ஏதோ இயற்கை விரோதம் இருக்கிறது அதில். அப்படி ஒரு விடுதலை சாத்தியமாகுமா என்று நான் சந்தேகப்படவில்லை. ஆனால் அதுதான் வழியா? அது மட்டும்தானா? உடலில் விழுந்த அடிகளை ஆற்ற உடலையும், மனதில் விழுந்த அடிகளை ஆற்ற மனத்தையும் சிதைத்துக்கொள்ள வேண்டுமா என்ன? பெண் விடுதலையாக ஆணாக வேண்டுமா? குறைந்தபட்சம் பெண்மையை கழித்துக்கொள்ள வேண்டுமா? ராதா பாவனையில் தங்களை மூழ்கடித்துக்கொண்டு பெண்ணாகி மோட்சம் கண்ட ஆடவருக்கு நிகரான செயலா இது?

களிற்றுயானைநிறையில் சம்வகை முன்னாள் படைத்தலைவர் வஜ்ரதந்தரின் கவசத்தை அணியும் இடமும் இதே நிலைகொள்ளாமையை உருவாக்கியது. அவள் அந்த கவசத்தை அணிந்தபோது அதன் எடையை என் தோளில் நான் உணர்ந்தேன். ‘அவள் அதை நிறைக்க வளர்வாள்’ என்று ஒரு கதாபாத்திரம் அப்போது சொல்லும். ‘வளரவேண்டுமா’ என்று என்னை நான் பலவீனமாகக் கேட்டுக்கொண்டேன். அந்த கவசம் சென்றகாலத்து அதிகாரத்தின் குறியீடு. அந்த அதிகாரம் அந்த ஆணுடுப்புடன் சம்பந்தப்பட்டது. அந்த அதிகார உடுப்பை அணிந்துகொள்ளாமல், தன்னை உருமாற்றிக்கொள்ளாமல், பெண்ணால் தன்னளவில் நிற்க முடியாதா?

இன்று மேற்கத்திய நாடுகள் பலவற்றில் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம். பதின்பருவத்துப் பெண்கள் தங்களை ஆண்களாக, அல்லது இடைப்பாலினத்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆணின் பெயர், ஆணின் உடுப்புகள், நடை, பாவனை, எல்லாம் அணிகிறார்கள். இப்படி அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு gender identity disorder அல்லது gender dysphoria இருக்கிறதென்றும், அவர்களுக்கு male gender affirmation செய்யப்பட வேண்டும் என்றும் உளவியலாளர்கள் கருதுகிறார்கள். ஆகவே அவர்கள் விருப்பப்பட்டால் அவர்களுக்கு testosterone அளிக்கப்படுகிறது. பருவமடைதலை தடுக்கும் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

பன்னிரண்டு, பதிமூன்று வயது பெண் குழந்தைகள் கூட தங்களுக்குப் பெண்ணாக வேண்டாம் என்று சொல்லி இந்தப்பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களில் பலர் இருபது வயதை கடப்பதற்கு முன்னாலேயே தங்களுடைய மார்பகங்களை அகற்ற அறுவை சிகிச்சையையும் செய்துகொள்கிறார்கள். கருப்பையை அகற்றிக்கொள்கிறார்கள். Gender பற்றிய பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் இந்த போக்குகளை வரவேற்கிறார்கள். உளவியலாளர்கள் மருத்துவர்கள் பலர் இதை ஆதரிக்கிறார்கள். அறுவை சிகிச்சைகள் எல்லாமே இலாபகரமானவை. இதற்குப்பின்னால் மருந்து கம்பெனிகளின் கையும் உள்ளது.

துயரமென்னவென்றால், இவற்றின் முடிவில் நல்ல உடல்நிலையிலுள்ள பெண்கள் ஆண்களாக மாறுவதில்லை. மாறாக, தன்னுடைய எலும்புகளின் வலிமையை இழந்து, பருவமடைதல் சரியாக நிகழாமல் போவதால் கருத்தரிப்புக்கான சாத்தியம் வெகுவாக குறைந்து, உடல் சிதைந்து, அதன் நுண்ணுணர்வு வெகுவாக மழுங்கடிக்கப்பட்டு, ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையை இழந்த பெண்களாக பலர் நிற்கிறார்கள்.

இவ்வகையில் ‘ஆணாகும்’ பல பெண்கள் சில வருடங்களிலேயே இதில் தேவையில்லாமல் சிக்கிக்கொண்டதாக உணர்கிறார்கள். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஜெர்மனியிலும் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கீரா பெல் [Keira Bell] என்ற இருபத்திமூன்று வயதுப் பெண் பிரிட்டனில் டாவிஸ்டாக் [Tavistock] என்ற மருத்துவமனைக்கு எதிராக வழக்குத்தொடர்ந்தார் [பார்க்க]. தன்னைச் சரியாக பரிசோதனை செய்யாமல், தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பருவமடைதலை தடுக்கும் மருந்துகளும் டெஸ்டாஸ்டிரோனும் தனக்கு மிட்டாய் போல அளிக்கப்பட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் கூறுகிறார். அந்த வழக்கையும் வென்றார்.

ஆனால் இச்சிறுமியர் ஏன் ஆண்களாக மாற நினைக்கிறார்கள்? இவர்களில் பலரும் ஒரே விஷயத்தை சொல்கிறார்கள். அவர்களுக்கு ஆணாக மாற விருப்பமில்லை. ஆனால் கண்டிப்பாக பெண்ணாக இருக்க வேண்டாம்.  பெண்மை என்பதையே ஏதோ நீச்சமான ஒன்றாக, அசௌகரியமான ஒன்றாக இவர்கள் பார்க்கிறார்கள்.

ஏன்? காட்சி ஊடகங்கள் பெண்களின் பிம்பங்களை கவர்ச்சியின் அடையாளமாகவே கையாள்வது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு காலத்தில், மேற்கிலேயும்கூட, போர்னோகிராஃபி என்பது ரகசியமாக பார்க்கப்படக்கூடிய, நல்ல உரையாடலில் பேசத்தகாத ஒரு சபலமாகவே இருந்துள்ளது. இன்று எல்லோர் உள்ளங்கையிலும் எந்நேரமும் காணக்கிடைக்கிறது. பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் பார்க்கிறார்கள். மிகச்சிறு வயது முதலாகவே உடற்சார் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். அப்படியென்றால் பெண் என்றால் உடற்பாகங்களின் குவியல், போகப்பொருள் என்ற நினைப்பு அந்தச்சிறுவர்கள் மனதில் தோன்றியிருக்கலாம். தவிர, ஆணுக்கு அமையும் வெளிகள் சற்று விரிவானவை. புறநோக்கு கொண்டவை. அதிகாரம் உடையவை. மற்ற ஆண்களை எளிதில் உள்ளிழுத்துக்கக் கூடியவை. பெண்ணாய் இருப்பது அங்கே லையபிலிட்டி. ஆகவே அறிவுசார், புறவுலகு சார் விருப்பங்கள் உள்ள பெண்கள் எல்லா வகையிலேயும் ஆணாகவே மாறிவிட முடிவு செய்கிறார்கள். பெண் என்ற அடையாளத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.

அப்படி வெளியேறுகிறவர்களில் ஒரு சாராருக்கு தங்கள் உடல் நலிவடைந்தாலும் பரவாயில்லை, பக்கவிளைவுகள் ஏற்பட்டாலும் சரி. பெண்ணாய் இருப்பதை விட ஆணாய் வாழ்வது மேல் – அல்லது பெண்ணல்லாதவளாய் வாழ்வது மேல் – என்று அந்த வாழ்க்கைமுறையிலேயே நீடிக்கிறார்கள். தங்களை துறத்திய பேய்களிலிருந்து விடுதலையடைந்து விட்டதாக சொல்கிறார்கள். ஃபிரான்செஸ் பர்னியின் விடுதலையாக நாவலில் சொல்லப்படுவதை இத்துடன் தொடர்பு படுத்திக்கொள்கிறேன்.

இதை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. எதற்காக ஒருவர் இப்படி உடலையும் மனத்தையும் சிதைத்துக்கொள்ள வேண்டும்? ஏடன் தோட்டத்து ஆப்பிளை தின்றதற்காக, இயேசு சிலுவையில்  ஏற்றப்பட்டபோது சிரித்ததற்காக, இப்படி ஏதும் கடந்தகால பாவத்துக்கான தண்டனையா இது? அல்லது பெண்ணாய்ப் பிறப்பெடுத்த இருத்தலியல் குற்றத்துக்காக  உடலை வறுத்திச் செய்யப்படும் நோன்பா?

என் அனுபவம் வேறு. நான் பதினெட்டு வயதில் தாகூரின் சித்ராங்கதா என்ற நாடகத்தை வாசித்தேன். அதன் வழியாக இந்த உலகத்தில் பெண்ணின் இடம் என்ன என்று ஒரு திறப்பை அடைந்தேன். அதன் பிறகு கொற்றவை. அப்படிப் பல பயணங்கள். அங்கிருந்து சொல்கிறேன். வஞ்சம், கசப்பு, சுயவதை தாண்டிய ஒன்றை எதிர்பார்க்கிறேன். சொற்களின் இடுங்கிய வழிகள் வேண்டாம். பேய் வாழ்க்கையின் குறுகல் வேண்டாம்.

காட்டின் விரிவு வேண்டும். துப்பனின் உலகம் போன்ற ஒன்று. மெய்யனின் ஆசிரிய வாழ்வைப்போல ஒன்று. அதை பெண்ணாகவே இருந்து அடைதல் சாத்தியப்பட வேண்டும். மானுட விரிவை நோக்கிச்செல்லும் ஆண்களை யாரும் ஆண்மையை இழக்கச் சொல்வதில்லையே? அல்லது ஆணாக பிறந்ததால் மானுட விரிவு சாத்தியமாகாது என்று சொல்வதில்லையே? அந்த மாதிரி, இயல்பாக.

இல்லை, பெண் தன்னை உருகுலைத்து வஞ்சம் தீர்த்து தான் அந்த இடத்தை அடையமுடியும் என்றால், அது இந்த உலகின் இயங்குதலிலேயே நெய்யப்பட்டுள்ள

விதி என்றால், அது மாபெரும் அநீதி. அப்படியென்றால் இங்கே வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் சமரசம் தான்.

சுசித்ரா

தாநாயகி – கடிதங்கள்-11

கதாநாயகி கடிதங்கள் 10

கதாநாயகி கடிதங்கள் -9

கதாநாயகி, கடிதங்கள் -8

கதாநாயகி கடிதங்கள்- 7

கதாநாயகி, கடிதங்கள்-6

கதாநாயகி,கடிதங்கள் -5 கதாநாயகி கடிதங்கள்-4 கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2021 11:31

ஒப்புக்கொடுத்தல்- யோகேஸ்வரன் ராமநாதன்

இளையராஜா- கலை தனிமனிதன் உரை

அன்பின் ஜெ,

வணக்கம்!

முகநூலில், இரு வரிகளில், தெரிவித்து முடித்திருக்க வேண்டிய பிறந்தநாள் வாழ்த்து ஒன்று, உங்களால் ஒரு கட்டுரையாக நீண்டுவிட்டது.

) : கலைக்கு சிறிதும் மிச்சமின்றி தன்னை ஒப்புக் கொடுத்தல்.

) : கலைக்கான ஒழுக்கங்களில் இருந்து வழுவாமல் இருத்தல்.

) : தனிமனிதர்கள் மீது விருப்பமோ,விலக்கமோ கொள்ளாதிருத்தல்.

) : கருத்துகளின் வழியே, கலைக்கான கருத்துக்களின் வழியே கலையை நோக்காமல் இருத்தல்.

இந்த மாதம் 12ம் தேதி, மாலை 6 மணிக்கு “Muthalvan Media” யூடியூப் சேனலுக்காக “கலையும் தனி மனிதனும்” என்ற தலைப்பில்  “இளையராஜா” அவர்கள்  குறித்த உங்கள் உரையின் முத்தாய்ப்பாய் அமைந்த நான்கு விஷயங்கள்.

உரை முடிந்த பின்னால், கலைக்கு மிச்சமின்றி கொடுத்த கலைஞர்கள் குறித்தான  எண்ண ஓட்டங்கள், குறிப்பாக தவில்-நாதஸ்வர கலைஞர்கள் குறித்தான சிந்தனை மனதில் வெகுநேரம் ஓடிக்கொண்டிருந்தது.

தவில் நாதஸ்வர கலைக்கு தம்மை முழுமையாக ஒப்புக் கொடுத்தவர்கள் முந்தைய தலைமுறைகளில் அதிகம். ஆனால் பெரும்பாலோனோர் குடத்திலிட்ட விளக்காக, வெளியே தெரியாமல் போனவர்கள்…

கொஞ்சும் சலங்கை திரைப்படத்தின்  “சிங்கார வேலனே தேவா…”  பாடலுக்கு காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களுடன் இணைந்து தவில் வாசித்தவர் பெரும்பள்ளம் வெங்கடேசன் பிள்ளை. “சினிமாப்பாட்டுக்கு தவில் வாசித்திருக்கிறார்இவரெல்லாம் என்ன ஆளு” என்ற அவதூறில் இருந்து தப்புவதற்காக குடும்ப உறுப்பினர்களிடம் கூட சொல்லாமல் இருந்திருக்கிறார். வெகுகாலம் கழித்து தனது மைத்துனரான எனது பாட்டனாரிடம் தெரியப்படுத்த அதன் பிறகே குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இந்த பாடல் ரெக்கார்டிங் போது நடந்த மற்றுமொரு சம்பவம், ஒலிப்பதிவு முடிந்து போட்டு பார்க்கையில் நாதஸ்வரத்துடன் கூடவே ஒரு முணுமுணுப்பும் தொடர்ந்து வந்திருக்கிறது… எங்கிருந்து வந்தது என்று பல முறை குழம்பி, ஒரு வழியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

வாசிக்கையில், பாடலின் ஸ்வரங்களை மெல்ல முணுமுணுத்தபடி தவில் வாசித்திருக்கிறார் வெங்கசேடன் பிள்ளை.

****

இன்றைய தலைமுறை கலைஞர்களில் கலைக்காக தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துள்ள பெரும்பாலான தவில்-நாதஸ்வர கலைஞர்கள் பெரும்பாலோனோருடன்  நேரில் பழகும் வாய்ப்பு எனது தந்தையின் மூலம் கிடைத்தது என்னுடைய நல்லூழ்.

சுவாமிமலையை சேர்ந்த சரவணன் என்னும் இளைஞர், இன்றைய தலைமுறை தவில்-நாதஸ்வர கலைஞர்களின் பெரும்பாலான இசை நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து யூடியூபில் வலையேற்றி வருகிறார். இவர்  கலை விமர்சகர் மறைந்த “தேணுகா”வின் அண்ணன் மகன்.

இலக்கிய நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்துவதில் ஸ்ருதி டிவி கபிலனின் செயல்பாடுகளுக்கு இணையாக தவில்-நாதஸ்வர இசை நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்தி வருபவர்.

கமகம்” [  https://carnaticmusicreview.wordpress.com/tag/lalitharam/ ]  என்ற பெயரில் கர்நாடக சங்கீத குறித்து எழுதிவரும் லலிதா ராம்.  பரிவாதினி [(43) Parivadini Music – YouTube] என்ற யூடியூப் சேனலில் மூலம் பல தவில் நாதஸ்வர இசை நிகழ்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

மற்றும் இசை ஆய்வாளர் பி.எம். சுந்தரம் [மங்கல இசை மன்னர்கள் புத்தகத்தின் ஆசிரியர்]  ஆகியோரின் வழித்தோன்றலாக உருவாகி வருகிறார் சரவணன்.

சரவணன் ஆவணப்படுத்தி இருக்கும் பல நிகழ்வுகள், நேர்காணல்கள் அவருடைய யூடியூப் சேனலில் [(56) Swamimalai Saravanan – YouTube]  காணக் கிடைக்கிறது.

மூன்று காணொளிகள்

1): நாதஸ்வர வித்வான் செம்பனார்கோவில் S.R.D வைத்தியநாதன் அவர்கள், கர்நாடக சங்கீத பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்திற்க்கு ”சவுக்க காலப்பிரமாணத்தில்” சொல்லிக்கொடுக்கும் அழகு. (41) Sembanarkoil SRD Vaidyanathan teaching Sanjay Subrahmanyan – YouTube

2) : கையில் சுருட்டி வைத்திருக்கும் புகையிலையை போலவே , மனதில் சுருட்டி வைத்திருக்கும் ”சுவாமிமலை சுவாமிநாதன்” கீர்த்தனையை,  “சுருட்டி”  ராகத்தில், நாதஸ்வர வித்வான், கீழ்வேளூர்  என்.ஜி.கணேசன் அவர்கள் உருவாக்க  ஆரம்பிக்கும் தருணம். (41) Ragam : Surutti – Swamimalai Swaminathaswami Kriti – Composer Kizhvelur Nagaswaram N G Ganesan – YouTube

3) : மதுரையில் பல வருடங்களுக்கு முன்னாள் “பொன்னுசாமி நூற்றாண்டு” சிறப்பு விழாவில், தவிலிசையின் ”தஞ்சை நால்வர்” என்று அழைக்கப்பட்ட அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி, தஞ்சாவூர் டி.ஆர்.கோவிந்தராஜன், வேதாரண்யம்.வி.ஜி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் ”தவில் சோலோ” வாசிப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கையில், பாடகர் மதுரை சோமு தானாக முன்வந்து தன்னுடைய பல்லவிக்கு நால்வரும் தனி ஆவர்த்தனம் வாசிக்கட்டும் என்று நிகழ்ச்சியின் வடிவை சுவாரஸ்யமாக்குவது.

நாற்பது வருடங்களுக்கு முன்பான நிகழ்வொன்றை, நால்வரில் ஒருவரான வேதாரண்யம் வி.ஜி.பாலசுப்பிரமணியம் அவர்கள் விவரிப்பது… (41) Part 03 – Thavil Vidhwan Vedaranyam V G Balasubramaniam – “Sharing Memories of his Musical Journey” – YouTube  [ 2 வது நிமிடம், 19வது வினாடி]

என்னளவில் முக்கியமானதாக கருதும் காணொளிகளை எனது தளத்தில் http://yogeswaran.in/2021/06/13/132/  தொகுத்துள்ளேன்.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2021 11:31

June 13, 2021

விளம்பரம்

“ஒரு நல்ல சேல்ஸ்மேன் கஸ்டமரோட விருப்பத்தை நிறைவேத்திவைக்கணும். நீ இப்பவே வெளியே போகணும்னு நான் விரும்பறேன்”

கோபால் பல்பொடிதான் விளம்பரம் என்றாலே என் நினைவுக்கு வருவது. அன்றெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாவனத்தின் [அப்படித்தானா? இல்லை கூட்டுத்தாவரமா? கூட்டுத்தாமதம்?] இடைவிடாத ஒலிபரப்பினூடாகத்தான். இலங்கை, இந்தியா, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அந்தச் செங்கல்பொடி பிரபலமாக பல்தேய்க்கப்படுகிறது என்ற செய்தியை நான் நம்பவில்லை, ஆனால் என் மூளையில் அதை ஸ்குரூவால் திருகி இறுக்கிப் பதியவைத்துவிட்டனர்.

அன்றெல்லாம் சின்னப்பிள்ளைகள்கூட “கோபால் பல்பொடி! இலங்கை இந்தியா…”என்ற வசனத்தை அழுத்தமாகச் சொன்னபடி இடதுகையால் அவிழும் நிஜாரைப் பிடித்துக்கொண்டு வலதுகையை வீசி ஊளைமூக்கை உறிஞ்சிக்கொண்டு ஓடிவிளையாடும் வழக்கமிருந்தது. அது அந்தரங்கவாயு போல எங்களிடமிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. எங்கிருந்து ஊறி வருகிறதென்று தெரியாது. உணர்ந்ததுமே அசௌகரியம். வெளியேறியதும் நிம்மதி.

“முதல் ரூல், கஸ்டமர் அவரோட வழியிலே போகட்டும். ஆனா அதுக்கு முன்னாடி அது உன்னோட வழியா இருக்கிறமாதிரி பாத்துக்கோ”

கோபால் பல்பொடியை எங்களூரில் எவருமே பயன்படுத்துவதில்லை- ஏனென்றால் உமிக்கரியுடன் உப்பை கலந்து பொடித்து வைத்து பல்தேய்ப்பதுதான் உகந்தது என்பது எங்களூர் நம்பிக்கை. மாமர இலை, வேப்பங்குச்சி, ஆலவிழுது போன்றவற்றையும் பயன்படுத்துவதுண்டு. கோபால்பல்பொடி உயர்குடி, உயர்சாதியினருக்கு உரியதாக இருக்கலாமென நம்பப்பட்டது.

அப்படிப்பட்ட ஊரில் ஒருவன் வந்து நூறு பாக்கெட் பல்பொடி விற்றுவிட்டுச் சென்றான். ஒரு சிறு பையன் பொட்டலத்துடன் உடன்வர, கோட் சூட் அணிந்து கறுப்புக் கண்ணாடி போட்ட ஒருவர். “புரபசர் மேனன்”என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். வீட்டுக்கு வரும் மற்ற விற்பனையாளர்களைப் போல அல்லாமல் வந்ததுமே அப்பாவை பார்த்து “குட் மார்னிங்” என்றார். நேராக ஏறி அப்பாவின் முன் நாற்காலியில் அமர்ந்து திரும்பி என்னைப் பார்த்து “ஹாய்”என்றார்

”முப்பத்தஞ்சு வருசமா உங்களை என் கிளையண்ட் ஆக்க முயற்சி பண்ணினேன். இப்ப நாம ரெண்டுபேருமே இங்க வந்திட்டோம். முடிவின்மை வரை முயற்சி பண்ண நேரமும் இருக்கு… உக்காந்து பேசுவோம்” 

நான் காற்றாக “ஹாய்”என்றேன்

“ஃபேன் இல்லையா?”என்றபின் “ஒரு விசிறி…கொஞ்சம் தண்ணி” என்று எனக்கு ஆணையிட்டபின் அப்பாவிடம் “பேசலாமா?”என்றார். அப்பா எழமுயல “பரவாயில்லை, உக்காருங்க. மரியாதை மனசிலே இருந்தாப்போரும்”

“சார்?” என்றார் அப்பா பணிவாக.

“நான் மிரக்கிள் டூத்மேஜிக் தயாரிப்பாளர் புரபசர் மேனன்… பைதபை ஐயாம் புரடியூஸிங் டூத்மேஜிக். இது பல்பொடி இல்லை. மேஜிக். அதனாலே அப்டி பேரு வைச்சிருக்கோம்… ஆக்சுவலி…”

அவர் பொட்டலத்தை காட்டினார். ஒரு சிவப்பு பொடி. “இந்தப் பொடியை தயாரிக்க நாங்க ரிசர்வ் பேங்கிலே லோன் வாங்கியிருக்கோம்”

“கோபால் பல்பொடி கேட்டிருக்கேன்” என்றார் அப்பா

”நல்ல கஸ்டமர் சர்வீஸ்ங்கிறது அபூர்வம். அபூர்வமானதெல்லாம் மதிப்புள்ளது. மதிப்புள்ளதெல்லாம் வெலை ஜாஸ்தி. கஸ்டமருக்கு செலவு வைக்கக்கூடாதுன்னுதான் நாம மோசமான கஸ்டமர் சர்வீஸை குடுக்கிறோம்”

“ச்சே, அதெல்லாம் வெறும் செங்கல்பொடி. இது மேஜிக். அமெரிக்காவிலே இருந்து வரவழைச்ச ஆறுவகை ரசாயனங்களை ஒரு விசித்திரமான வகையிலே கலந்து இதை தயாரிக்கிறோம். இதை தயாரிக்கிற இடத்தைச் சுற்றி பத்து ஃபர்லாங் தூரம் அன்னியர் வரமுடியாது. காவல் உண்டு. அப்டி ரகசியமானது…. ஸீ, ஐ வில் டெமான்ஸ்ட்ரேட்”

அவர் ஒரு துருப்பிடித்த சைக்கிள் ரிம்மின் துண்டை எடுத்தார். “ஸீ, இப்ப உங்க பல்லு எப்டி இருக்கு? தோ இப்டி… வேறவழியில்லை. வெத்திலைபோட்டா பல்லு அப்டி ஆயிடும். நோ வே…” அவர் அதன்மேல் அந்தப்பொடியை தூவினார். திரும்பி என்னிடம் “ஒரு துண்டு துணி…”என்றார்.

”எங்க கம்பெனியிலே சேல்ஸ்மேனா ஆகிறதுக்கு முன்னாடி நீங்க யூரின் டெஸ்ட் குடுக்கணும். போயி பதினஞ்சு நிமிசத்திலே இந்த யூரினை வித்து காட்டுங்க”

நான் துண்டுத்துணி கொண்டுபோய் கொடுத்தேன். அவர் அதைவைத்து அந்த ரிம் துண்டை துடைத்தார். அதன்பின் ஒரு பெரிய மஞ்சள்துண்டால் துடைத்தார். எடுத்துக் காட்டினார். அப்போது செய்யப்பட்ட புதிய ரிம்மில் உடைத்து எடுத்த துண்டு போல வெள்ளி மின்னியது.

“எந்தக் கறையும் போயிரும். இரும்பிலே வெள்ளி வரும். வெள்ளியிலே மின்னல் வரும்… வெத்திலைப் பல்லிலே வெளிச்சம் வரும். பல்லிலே வெளிச்சமிருந்தால் சொல்லிலே வெளிச்சம். சொல் வெளிச்சமானால் சிந்தனையிலே வெளிச்சம்… சிரிக்கிறவனுக்கு சொற்கமுண்டுன்னு குருகாரணவன்மார் சும்மா சொல்லலை. ஒரு பொட்டலம் அஞ்சே அஞ்சு ரூபாய்”

”அப்டியே கண்ண மூடுங்க. எங்களோட இந்த பிராடக்டை தேவைக்குமேலே விலைகுடுத்து வாங்குற அளவுக்கு நீங்க வசதியா இருக்கிறதா கற்பனை பண்ணுங்க. ஜாலியா இருக்குல்ல?”

“அஞ்சு ரூபாயா?” என அப்பா பவ்யமாகக் கேட்டார்.

“அஞ்சு பொட்டலம் இருபது ரூபாய்தான்…டேய் சாருக்கு அஞ்சுபொட்டலம் எடு…” என்றார் புரபசர் “எல்லாருக்கும் வேணும்… கேக்கிறவங்களுக்கு இல்லேன்னு ஆயிடக்கூடாது. அஞ்சு போதும்”

“அஞ்சுன்னா….”

“மாசம் ஒண்ணு… ஆறுமாசம் கழிஞ்சுதான் எங்களாலே வரமுடியும். இல்லேன்னா எங்க ஏஜெண்டுகள் வருவான்… டேய் சாருக்கு ஆறா வைச்சிரு. ஆறு பொட்டலம் இருபத்தஞ்சு ரூபாய்…தேங்யூ சார்”

அப்பா அதுவரை பணத்தை எடுக்கவில்லை. ஆனால் தேங்க்யூ சொன்னபின் ஒன்றும் செய்யமுடியாது. அவர் வெள்ளைக்காரன் மரபுகளை மீறுபவர் அல்ல. ”நோ மென்ஷன் ப்ளீஸ்” என்று சொல்லி பணத்தை கொடுத்தார்.

”இந்த செல்போனிலே கால் மசாஜுக்கு ஆப் இருக்கு. வைப் மோடிலே போட்டுட்டு மிதிச்சாப்போரும்”

புரபசர் மேனன் “தென், பை. ஸீ யூ சர்” என்று கிளம்பினார். அப்பா அவரிடம் “நைஸ் டு மீட் யூ” என்று முறைப்படிச் சொன்னார்

நான் அவர்பின்னாலெயே சென்றேன். கோயில் முற்றத்தில் அவர் போற்றியிடம் “மொத்தம் நூறுதான் கொண்டுவந்தேன். ஆறு பொதி வக்கீல்சார் வாங்கியாச்சு. போதுமான்னு சந்தேகமா இருக்கு”என்றார்

“வக்கீல் இல்லை, ரிஜிஸ்டராப்பீஸ்” என்று நான் சொன்னேன்.

“ஆமா, ரிஜிஸ்டராப்பீஸ்”

“உள்ளதாக்குமா?”என்றார் போற்றி என்னிடம்

நான் தலையசைத்தேன். போற்றி ஐயம் தீராமல் கண்களால் வினவ நான் ஆம் என கண்களால் தெரிவித்தேன். அவ்வாறுதான் போற்றி அவர் வாழ்க்கையில் எண்ணி வருந்திய முடிவுகளில் ஒன்றை எடுத்தார்

”வீட்டிலே கரையான் நிறைய இருக்கு இல்ல?சரி, சுவையான மொறுமொறுப்பான வீடுன்னு விளம்பரத்திலே சேத்துக்கறேன்…”

அதேபோல மாஜிக் காட்டப்பட்டது. நூறு பொட்டலம் விற்கப்பட்டு புரபசர் குலசேகரம் பஸ்ஸிலேறி மறைந்தார். அவர் முதலில் காட்டிய அந்த துருவேறிய ரிம் துண்டும் வெள்ளிமின்னும் துண்டும் மீண்டும் மீண்டும் வந்தன என்பதை நான் கண்டுபிடித்தேன். ஆனால் அதை நாலுபேரிடம் சொல்வதற்குள் அவர் குலசேகரம் தாண்டிவிட்டிருந்தார்.

டூத்மேஜிக் பரவலாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதைத்தேய்த்த பற்களில் எந்த மாற்றமும் வரவில்லை. முன்புபோலவே கூழாங்கற்கள், புளியங்கொட்டைகள் மாதிரியே பற்கள் நீடித்தன. கணவர்கள் பல் தேய்ப்பதைக் காண திரண்டு கூடிய மனைவிகள் “எல்லாருக்கும் பல்லு வெளுக்குது. இதுக்க பல்லுக்கு அரம்போட்டு ராவணும்…நாசமா போறதுக்கு’ என வசைபாடினர்.

”உங்கிட்ட இன்சூரன்ஸ் பத்தி பத்து நிமிசம் பேசிட்டேன்னு வை, இந்த ஹாலிடேயை பிசினஸ் டிரிப்பா கணக்கெழுதிருவேன்”

“ஆனா மனசாட்சி உள்ளவனாக்கும். வல்ல வெடிமருந்தையும் கலந்து நம்ம வாய புண்ணாக்காம போனானே. இது நல்ல செங்கல்பொடிதான்… கொஞ்சம் சூடம் கலந்திருக்கான், மணத்துக்கு” என்று அப்பா சொன்னார்.

“முன்னாடி இப்டித்தான் ஒருத்தன் முடித்தைலம் வித்தான். அதை போட்டவனுக முடியெல்லாம் போயி தலை சட்டி மாதிரி ஆயிட்டுது…பிறவுதான் அவன் சொன்ன பேரு எல்லாருக்கும் ஞாபகம் வந்தது. வைத்தியர் கிட்ட அர்த்தம் கேட்டாங்க. கேசஹாரிணி. அதாவது தலமுடியை அழிக்கிறது.அவன் பொய் சொல்லல்லேன்னு வைத்தியர் சொல்லிட்டார். நியாயமாத்தான் ஏவாரம் செஞ்சிருக்கான்” என்றார் தங்கையா நாடார்.

”இந்தச் சரிவு அடுத்த மேட்டிலே பாய்ஞ்சு ஏறுறதுக்குண்டான ஓட்டம்தான்”

எங்களூருக்கு விற்பனை உத்திகள் புதியவை அல்ல. அவை பல ஆயிரம் ஆண்டுகளாக எண்ணி இயற்றி மெருகேற்றப்பட்டவை. கடற்கரையில் இருந்து மீன் வாங்கி கூடையில் கொண்டுவருபவர்கள் அருகே ஒரு இடத்தில் கூடைகளை இறக்கி சுடச்சுட கடல்மணலை கொட்டி மீன்களை புரட்டி எடுப்பார்கள். ’பிடிச்சமணல் போகாத புதியமீன்!’ அதற்காக மணலை கடற்கரை முதல் இருபது கிமீ தொலைவு சைக்கிளில் வைத்து மிதிக்க முடியுமா?

அப்படி பல உத்திகள். “ துள்ளுத மீனு, பிடைக்குத மீனு!” என்று கூவும்பொருட்டு ஒரு கலத்தில் நீர் விட்டு அதில் உயிருள்ள மீன்களை கொண்டுவந்து கூடைக்கு இரண்டுவீதம் போட்டுவிடுவதுண்டு. கூடைக்கு அடியில் காலைவைத்து நெம்பி நெம்பி அசைவை உருவாக்குவதுமுண்டு.

”பார்மஸிக்கு வந்து தேவையில்லாத எல்லா மருந்தையும் வாங்கிட்டுப்போறதுதான் நீங்க முன்னாடி வாங்கின மருந்தோட சைட் எஃபக்ட். சொல்ல விட்டுப்போச்சு…ஸாரி”

நான் ஒரு சூரை மீனை வாங்கினேன். அது வாய்திறந்து மூடிக்கொண்டிருந்தது. புத்தம்புதியது, உயிர் முழுக்கப்போகாதது என்றார் ஸ்டனிஸ்லாஸ். அம்மா முகர்ந்து பார்த்ததுமே அது நாய் மட்டுமே உண்ணத்தக்கது என்று சொல்லிவிட்டார். ஆனால் வாய் திறந்ததே?

“உள்ள வெரலவிட்டு ஆட்டியிருப்பான்… அவன் அதைச் செய்யுத ஆளுதான்”என்று தங்கம்மை சொன்னாள்

“அதுக்குண்டான ஆளைப் பாத்துத்தான் செய்வான்!”என்றாள் அம்மா

உண்மையாகத்தான் இருக்கவேண்டும். அந்த மீனில் பாதி ஏற்கனவே வெட்டி விற்கப்பட்டுவிட்டது. அதன்பின் அது எப்படி மூச்சுவிடமுடியும்?

”ஓகே சார். நீங்க கடைசி முடிவெடுக்க தயங்குறீங்கன்னு நினைக்கிறேன். நான் மறுபடி வரேன்”

மரவள்ளிக்கிழங்கை சேற்றில்புரட்டி கொண்டுவருவதுண்டு. உள்ளூர்க்காரரான சங்கரன் மாமா காதி பார்சோப் வாங்கி அதை கொஞ்சம் ஓடிகொலோன் கலந்த கொழுத்த சிவப்புச் சாயத்தில் முக்கி வெள்ளித்தாளில் பொட்டலம் கட்டி குளியல்சோப்பாக விற்று வீடுகட்டுமளவுக்கு லாபம் ஈட்டினார்.

அதிலும் விளம்பர உத்தி உண்டு. சோப்புகளை வீடுதோறும் அவருடைய மகன்களே சப்ளை செய்வார்கள். ஆர்டர் பிடிக்கும்போதும் அடுத்த ஒருமாசமும் அளிக்கும் சோப்புகள் உண்மையான குளியல்சோப்புகள். அதற்கு மனம் ஒப்பிவிட்டால் பிறகு காதிசோப்புகள் மேல் ஐயம் வருவதில்லை.

”கனிகள் கேட்டப்ப கடவுள் உனக்கு லெமன் மட்டுமே குடுத்தார்னு வை. செயற்கையான லெமன் தட்டுப்பாட்டை உண்டுபண்ணி விலையை ஏத்து. லெமனை நல்ல லாபத்துக்கு வித்து மத்த கனிகளை வாங்கிடு”

எங்களூரில் பீட்ரூட் “ரெத்தக்காய்!” என்று விளம்பரம் செய்யப்பட்டு விற்கப்பட்டது. அதைச் சாப்பிட்டால் ரத்தம் ஊறும். அதைப்பிழிந்து காட்டி “பாருங்கம்மிணி, அம்பிடும் ரெத்தம்! நல்ல சூடுள்ள ரெத்தமாக்கும்!” என்று காய்கறிக்காரி செல்லம்மை சொல்லி நாடெங்கும் பரப்பினாள்.

ஆனால் அவளுடைய அம்மா காணியம்மைதான் தக்காளியை அப்படி பரப்பியது. அது காய் அல்ல, அதை ஒரு விலங்கு குட்டியாகப் போடுகிறது என்றுகூட அவள் சொல்லிச் சிலரை நம்பவைத்திருக்கிறாள். “அதுக்க மேனியப் பாருங்க… பச்சப்பிள்ள, இப்பம் பெத்ததுன்னு ஆருக்கும் தெரியுமே!” பச்சைப்பிள்ளையை தின்பதில் குற்றவுணர்வுகொண்டு வாங்காதவர்களும் இருந்தனர்.

”என்னை மாதிரி வெற்றிகரமான சேல்ஸ்மேன் ஆகணும்னா நிதானமா அன்பா கனிவா பேசத்தெரிஞ்சிருக்கணும். புரிஞ்சுதாடா மரமண்ட நாயே?”

நாகர்கோயிலில் இருந்து வருபவற்றுக்கு மேலதிக மதிப்பு இருந்தது.காலாயம் வீட்டு தம்பி பசுநெய் போன்ற உள்ளூர் பொருட்களை நம்பி சாப்பிட மாட்டார். அவருக்காக சிறப்பான டால்டா நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் அனுப்பி வைக்கப்படும் “என்ன மணம்ங்கியே? பசுநெய்யிக்க நாத்தம் உண்டுமா?அப்டி ஒரு மணமில்லா?”

ஆனால் நான் டப்பாவை பார்த்திருக்கிறேன். பசுநெய் போலவே மணமும் குணமும் கொண்டது என்றுதான் விளம்பரம் செய்திருப்பார்கள். அதை சொல்லப்போனபோது தங்கையா நாடார்”சும்மா இருடே, அதுவும் இதுவும் ஒண்ணா? அந்த டப்பாவுக்க வெலையிலே ஒரு பசுவ வாங்கிப்போடலாமே?”என்று சொல்லிவிட்டார்.

”நம்ம சேல்ஸ்மேன்களுக்கு நல்ல சேல்ஸ்மேன் ஆகச் சொல்லிக்குடுக்கிறதுக்குப் பதிலா நம்ம கஸ்டமருக்கு நல்ல கஸ்டமராகச் சொல்லிக் குடுக்கலாமே”

மேட்டிமை என்பது நுகர்வின் அடிப்படையாக இருந்தது. எங்கள் வீட்டில் தங்கை மட்டுமே பௌடர் போடுவாள். அதற்கு ரெமி பவுடர் ஒரு டப்பா வாங்கினால் மூன்றுமாதம் வரும். பக்கத்துவீட்டு பார்கவி அக்கன் “எங்க வீட்டிலே ஒரு பெரிய டப்பா குட்டிக்கூரா வாங்கினா ஒரு வாரம் வரும்”என்றாள். அம்மா வியப்பாக தலையாட்டிவிட்டு அவள் போனதும் “அவங்க வீட்டிலே எருமைக்காக்கும் குட்டிக்கூரா போடுதது”என்றாள்.

நான் பள்ளிக்கூடத்தில் பேசும்போது எம்ஜிஆர் அவருடைய மெட்ராசிலுள்ள வீட்டில் ஆண்டுதோறும் குட்டிக்கூரா பௌடரையே கரைத்து வெள்ளையடிப்பதாகச் சொன்னேன். எம்ஜிஆர் ரசிகனாகிய கே.விஸ்வநாதன் அதை உடனே ஏற்றுக்கொண்டு அருமனை வட்டாரங்களில் பரப்பினான். ஆறுமாதத்திற்குள் அது நிறுவப்பட்ட உண்மையாக ஆகி என்னிடமே பலரும் சொல்லத் தலைப்பட்டனர்.சிவாஜி வீட்டில் லக்ஸ் சோப்பால் வெள்ளையடிக்கிறார்கள் என்ற செய்தி சில மாதங்களிலேயே வந்து சேர்ந்தது.

”சரி, இந்த கிராஃபையே கருப்பு பின்னணியிலே நல்லா மின்னுற மாதிரி கலர்லே செஞ்சிரு. எதிர்காலம் பிரகாசமா இருக்கிறமாதிரி தெரியும்”

அதன்பின்னர் டிவி வந்தது. விளம்பரங்களே வாழ்க்கை என்றாகியது. அரசியல்தலைவர்கள், ஆன்மிகச்செம்மல்கள் கூட விளம்பரத்தால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டார்கள். “ரொம்ப சக்திவாய்ந்த தெய்வம்ங்க. விளிச்சா விளி கேட்கும். ஆனால் போதுமான அளவு விளம்பரம் இல்லே…”என்று சொல்வதை கேட்கமுடிகிறது. “அவரு பெரிய ஞானிங்க. ஆனா விளம்பரத்தை விரும்புறதில்லை”என்ற விளம்பரம் மிகப்பரவலாக உள்ளது.

சினிமாவிற்குச் சென்றபின் பலவகையான ‘சேல்ஸ் டாக்’ களை நான் கேட்டிருக்கிறேன். இடைநிலையாளர்கள் சினிமாவை பிரமோட் செய்யும் வகையே அலாதி. “நாலு ஃபைட், அஞ்சு சாங், எட்டு செண்டிமெண்டு, மூணு டைலாக் சீன் இருக்குங்க. படம் தீயா இருக்கு. டிகே போட்டிரலாங்களா?”

இலட்சியத்தை அடைதல் பட்டறை. “உங்க முதல் பத்து இலட்சியங்களை ஒவ்வொரு நாளும் ஆயிரம் தடவை காகிதத்திலே எழுதிக்கிடுங்க. மிச்சம் நேரமிருந்தா அதிலே எதையாவது அடைய வாய்ப்பிருக்கு”

“ஆனா அதுதான் எல்லா படங்களிலேயும் இருக்கே…”

”ஆமாங்க. ஆனா இதிலே வேற மாதிரி பண்ணியிருக்காங்க… நாலுஃபைட்டிலேயும் ஈரோ ஈரோயினிய கட்டிப்புடிச்சுக்கிட்டே சண்டை போடுறாரு”

“ஆனா அதைக்கூட விஜயகாந்து பண்ணியாச்சே”

“ஆமா, அந்தப்படம் நூறுநாளுங்க… இதும் பிச்சுக்கிட்டு ஓடும்…நான் சொல்லுறேன், குறிச்சுக்கிடுங்க”

”இப்ப நம்ம விளம்பரத்துக்கு என்ன தேவைன்னா, நல்ல புதிய ஒரிஜினல் தேய்வழக்குகள்”

டிவி உரையாடல்கள் ஒருவகை ’சேல்ஸ் டாக்’ . நான் கடவுள் படம் வந்தபோது அதற்கு எப்படி டிவி உரையாடல் வைக்கலாம் என்று நான் பாலாவிடம் நடித்துக் காட்டினேன்

“முதல்ல பாலா இந்த படத்தோட ஒன்லைனை எங்கிட்ட சொன்னப்ப நான் ரொம்பநேரம் ஒண்ணுமே பேசல….அப்டியே சைலண்ட் ஆயிட்டேன்” கொஞ்சம் நாடக இடைவெளி. மோவாயை தடவியபின் “அப்றம் நினைச்சுகிட்டேன். இந்தாளு என்ன லூசா?”

அப்படி பல வசனங்கள். ”எனக்கும் பாலாவுக்கும் இந்தப்படத்திலே கெமிஸ்ட்ரி நல்லா வர்க்கவுட் ஆயிருக்கு” இடைவெளிக்குப்பின் “அக்கவுண்டன்ஸியிலேதான் சில பிரச்சினைகள் இருக்கு”

”எப்டி தெருவுக்கு வந்தேன்னா கேக்கிறீங்க? நான் ஒவ்வொரு நாளும் என் லட்சியங்களை எழுதி மனப்பாடம் பண்ணி திரும்பத்திரும்பச் சொல்லி கற்பனை பண்ணி பாத்திட்டிருந்தேன். மத்த சேல்ஸ்மேன்லாம் சேல்ஸ்கால் பண்ணிட்டிருந்தாங்க”

வேடிக்கைக்ககாச் சொல்லப்போய் அந்த மாதிரியே பிரமோவை வைத்துக்கொள்ளலாம் என்று பாலா துடிப்பு கொள்ள அவரைச் சமாதானம் செய்வதற்குள் டன் கணக்கில் ஆற்றல் வீணடிக்கப்பட்டது.

கடைசியாக பாலாவை சந்தித்தபோது ‘எர்வாமார்ட்டின்’ வைத்திருந்தார். என் தலையைக் கொலையார்வத்துடன் பார்த்து “முடியெல்லாம் கொட்டிப்போச்சே. இருங்க, போறப்ப எர்வா மார்ட்டின் தாறேன். தேச்சுப்பாருங்க. முடிக்கு நல்லது”

”ஏஜென்ஸி எடுத்திருக்கீங்களா?” என்றேன் நையாண்டியாக.

“சேச்சே, வாங்கி வைச்சிருக்கேன். வேண்டியவங்களுக்கு கொடுப்பேன்”

“எதுக்கு வாங்கி வச்சிருக்கீங்க?”

“எனக்கு நல்ல பிரயோசனம் இருக்கே?”

”இத வாங்கினவங்க அதையும் வாங்கினாங்க”

அவருக்கு சீப்பே சிக்கிக்கொள்ளும் அடர்முடி. நரையும் இல்லை.  “உங்களுக்கு எதுக்கு எர்வா மார்ட்டின்?”என்றேன்.

“முடி உதிராம இருக்கத்தான்…”

“அதன உதிரலியே”

“பாத்தீங்களா? அதைத்தான் சொல்றேன்…நல்ல பிரயோசனம் இருக்கு”

மேற்கொண்டு விவாதித்தால் சிக்கலாகிவிடும் என உணர்ந்து நான் மெல்ல கேட்டேன். “நம்ம மொட்டை ராஜேந்திரனுக்கு குடுத்தீங்களா?”

“சேச்சே, அதெல்லாம் செவ்வாய்க்கிரகம் மாதிரி. ஆக்ஸிஜனே இல்லாத எடம்”

25 ’சயன்டிஸ்ட்!’

24தொழில்நுட்பம்

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’ 10பகடை பன்னிரண்டு 9சிரிக்கும் ஏசு 8டேனியல் லாபெல் 7ஸாரி டாக்டர்! 6ஆடல் 5கம்யூட்டர் யுகத்துக் கடவுள் 4 மனம் 3குருவும் குறும்பும் 2இடுக்கண் வருங்கால்… 1ஆன்மிகமும் சிரிப்பும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2021 11:35

இளையராஜா- கலை தனிமனிதன் உரை

இளையராஜா அவர்களின் கலைக்குப் பின்னால் உள்ள தனிமனிதனைப் பற்றிய என்னுடைய உரை.Muthalvan Media என்னும் அமைப்புக்காக நண்பர் தமிழ் முதல்வன் இளையராஜா பற்றி ஒருங்கிணைக்கும் தொடர் உரையாடல்களில் ஒன்றாக 12-6-2021 அன்று மாலை 5 மணிக்குப் பேசியது.

இந்த உரையை சரியாக ஆற்றியிருக்கிறேனா என்று தெரியவில்லை. அந்த ஐயத்தால் திரும்பக் கேட்க முனையவில்லை. இன்னும் நீண்டநாட்களுக்கு பிறகுதான் இதை என்னால் கேட்கமுடியுமென நினைக்கிறேன். வழக்கம்போல உச்சரிப்பில் சொற்கள் மறைந்திருக்கும். வழக்கம்போல உணர்ச்சிவசப்படும் இடங்களில் மெல்லிய மூச்சிளைப்பு இருந்திருக்கும்.

இது பொதுவாசகர்களுக்குரியது அல்ல. தர்க்கபூர்வமாக எவரிடமும் நான் ஏதும் சொல்வதற்கில்லை. எவரையும் சொல்லிப் புரியவைக்கவும்  முயலவில்லை. இது என் கலையின் தருணத்தை நான் இன்னொரு இடத்தில் கண்டடைந்ததன் விவரிப்பு மட்டுமே. ஒரு மனிதன் அவனுடைய உடலெனும் எல்லையில் இருந்து, உள்ளமென்னும் எல்லையில் இருந்து, அவனுடைய வாழ்வெனும் எல்லையிலிருந்து மீறிப் பறந்தெழும் தருணங்கள் கலையால் இயல்வதைப் பற்றிச் சொல்லமுயன்றிருக்கிறேன்.

ஆனால் சூம் அதற்கான ஊடகமல்ல. நான் எவருடன் பேசிக்கொண்டிருந்தேன் என எனக்கு தெரியவில்லை. எனக்குநானே சிலவற்றைச் சொல்லிக்கொண்டேன். எனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இளையராஜாவின் இசையை நுணுகி அறிந்து, நூல்பிரித்து ஆராயும் நிபுணர்களை எனக்குத் தெரியும். நண்பர் சுகா, இசைஆய்வாளர் நா.மம்முது,  வெவ்வேறு மலையாள இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் பேசும்போது ராகங்களின் ஒழுங்கும் ஒழுங்குக்குலைவும் எப்படி ராஜாவிடம் வெளிப்பட்டிருக்கிறது என்று பேசியும், பாடியும், கருவிகளில் வாசித்தும் கேட்டிருக்கிறேன். தொல்லிசையுடன், நாட்டாரிசையுடன், மேலைச்செவ்வியலிசையுடன் அவரை ஒப்பிட்டு பேசப்பட்டவற்றை கேட்டிருக்கிறேன். உளக்கிளர்ச்சியூட்டும் அறிதல்கள் அவை.

ஆனால் இது அவர் இசையை உருவாக்கும் தருணம், அவருடைய ஆளுமையிலுள்ள இசையம்சம், இசையெனும் ஊடகம் வழியாக அவரிடம் வெளிப்பட்ட இன்னொன்று, அவரில் திகழும் அவரைக்கடந்த ஒன்று பற்றிய ஒரு வெளிப்பாடு. சொல்லவேகூடாது என நான் நினைப்பது- சொல்லிப்பார்த்திருக்கிறேன்.

அவரைவிடச் சிறந்த இசையமைப்பாளர்கள் இருக்கலாம் என்று நான் சொன்னதைப் பற்றி ஒரு நண்பர் கேட்டார். இசையில் இரு அம்சங்கள் புறவுலகு சார்ந்தவை. அதன் தொழில்நுட்பம், அதன் உலகியல்வாழ்க்கைக் கூறு. அவையிரண்டும் சிறப்பாக வெளிப்படும் பாடல்கள் இசைக்கலையின் மிகச்சிறந்த வெளிப்பாடாக அமையலாம். அதுவே இலக்கியத்திலும். நான் சொல்வது அதற்கப்பாலுள்ள ஒன்று. அது இசையென வெளிப்படுகையில் பலசமயம் முழுமையாக தன்னை வெளிப்படுத்துவதில்லை. பலசமயம் கையில் அது வந்திருந்தமையின் தடத்தால் மட்டுமே நாம் அதை உணர முடிகிறது.

ஆகவே எந்த எதிர்வினையையும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் சொல்வதைப் புரிந்துகொள்ள தமிழகத்தில்  சில ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்களுக்காக மட்டுமே இந்த உரை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2021 11:35

கடிதங்கள்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் இலக்கிய விருதுகளை ஏற்பது விருதுகள்,விடுபடல்கள் – கடிதம் விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்

அன்புள்ள ஜெ,

தங்களின் இலக்கிய  விருதுகள் பற்றிய கட்டுரை படித்தேன். நாங்கள் அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் தமிழ் ஆர்வலர் குழு என்கிற வாட்ஸ் ஆப் குழுவை நடத்தி வருகிறோம். அதில்  சங்க இலக்கியம் மற்றும் நவீன இலக்கியம் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். படித்தல், பகிர்தல், படைத்தல் இவைதான் எங்கள் குழுவின் நோக்கம். மற்ற அரசியல் கருத்துக்கள் வந்தால் தடை செய்து விடுவோம்.

நான் அமெரிக்கா வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால் நம் தமிழ் நாட்டின் உண்மை சொரூபம் தெரியாது.சமீப காலமாக திமுக ஆட்சிக்கு வந்து இலக்கிய மாமணி விருது அறிவித்தபோது அடடா எத்தனை பேரை அரசியல் செய்தி போடாதீர்கள் என்று சொன்னோம்.இப்போது நல்ல செய்தி கூட போட முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன் . அக்குழுவிற்கு நானும் ஒரு அட்மின் என்பதால் ரொம்ப கடினமாக அரசியல் செய்திகளை தவிர்க்க சொல்லுவேன். அனால் நீங்கள் உண்மை நிலவரத்தை சொன்னதும் என் செயலின் நியாயம் புரிந்தது,

நாங்கள் ஒரு நாலு பேர் இருக்கிறோம். அடிக்கடி சாதாரண மனிதர்களுடன் ஓட்டமுடியாமல் தவிப்போம். ஆனால் உங்களை படிக்க படிக்க நாங்கள் நேர்வழியில் செல்கிறோம் என்பதை ஆணித்தரமாக நம்ப முடிகிறது. நன்றி ஜெ

அன்புடன்
மேனகா

 

அன்புள்ள மேனகா

நான் இலக்கிய விவாதங்களில் அரசியலைத் தவிர்க்கச் சொல்வது இரண்டு காரணங்களுக்காக. இலக்கியவிவாதங்களில் ஆர்வமில்லாதவர்கள், எங்கும் எதிலும் வழக்கமான கட்சியரசியலின் வம்புகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள் வந்து வேறெதையும் பேசவிடாமல் ஆக்கிவிடுவார்கள்.

இலக்கியம் என்பது நுட்பமான கவனமும் சொல்தேர்வும் சமநிலையும் இருந்தால்தான் பேசப்படக்கூடிய ஒன்று. அரசியலென்பது பெரும்பாலும் வம்புகளால் ஆனது. கசப்புகளும் காழ்ப்புகளும் கொண்டது. அங்கே பேசவேண்டிய அனைத்தும் ஏற்கனவே எவராலோ பேசப்பட்டிருக்கும். அதை எதிரொலித்தாலேபோதும்.

ஆகவே அரசியல்பேசுபவர்களின் உரத்தகுரலே எங்கும் ஓங்கி ஒலிக்கும். அவர்கள் வேறெந்த பேச்சும் பேச விடமாட்டார்கள். அவர்களை தவிர்க்காமல் இலக்கியம்பேச முடியாது.

அத்துடன் இங்குள்ள அரசியலென்பது மிகமேலோட்டமன கொள்கை, கோட்பாட்டுப் பாவனைகளுக்கு அடியில் சாதி-மதப் பற்றால் மட்டுமே இயக்கப்படுவது. இலக்கியத்தை விவாதிப்பதற்கு அவற்றுக்குமேலே நின்று அறிவுசார்ந்து, ஆன்மிகம் சார்ந்து பேசும் ஒரு தளம் தேவை. தற்காலிகமாகவாவது அங்கே செல்லாதவர்களால் இலக்கியம் பேசமுடியாது. அரசியல்பேசுபவர்கள் தங்கள் வழக்கமான சாதி- மதக் காழ்ப்புகளுக்கு இலக்கியமுலாம் பூசி அங்கே வைத்து அங்கே எதுவுமே பேசவிடாமலாக்கிவிடுவார்கள்.

இலக்கிய அரங்கில் அரசியல்பேசுபவர்கள் ஒருவகை நோயாளிகள். அந்த நோய் எளிதில் தொற்றுவதும்கூட. அவர்களை முழுமையாக விலக்கிவிடுவதே நல்லது

 

ஜெ

 

அன்பு ஜெ

 

தங்கள் வலை பக்கத்தையும் விக்கி யையும் துலாவும் தோறும் எம்மவர்க்கு விருதுகள் இல்லையே என நினைத்து வருந்தியது உண்டு. எனினும் பல முறை நீங்கள் விளக்கி கூறியதால் அமைதி கொண்டிருக்கிறேன்.ஆனால் விருதுகளை ஏற்கமாட்டேன் என்பது எத்துணை பெரிய செயல். இதை தவறாக கர்வம் என கூட நான் வாசிப்பின் ஆரம்ப காலங்களில் நினைத்ததுண்டு.

‘வெண்முரசு எழுதுவதற்கு முன்பு அரசு விருதுகள் பெறுவதில் எனக்கு தடையேதும் இருக்கவில்லை. அப்போது பத்ம விருது வந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பேன். இன்று நான் வேறு ஒரு இடத்தில் இருக்கிறேன்’

ஒரு தவறு நடக்கும் பொழுது அதை அத்துறையில் எதிர்க்கும் தன்மை என்பது அறத்தின் வழி . தாங்கள் கொண்டுள்ள நிலைப்பாடு கண்டு வியக்கிறேன். உந்தப்படுகிறேன்.

வணங்குகிறேன்.

அன்புடன்

அரவிந்தன்

இராஜை

 

அன்புள்ள அரவிந்தன்,

 

எழுத்தாளன் என்றல்ல எவரும் தங்களுக்கு உகந்த இடத்தை தாங்களே முடிவுசெய்து அங்கே தங்களை வைத்துக்கொள்ளவேண்டும். அதுதான் புறச்சூழலின் அலைகளில் இருந்து அகன்று தனக்குரிய செயலைச் செய்வதற்கான சிறந்த வழி

ஜெ

விருது – கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2021 11:33

மதார் கவிதைகள்- வேணு தயாநிதி

சமகால தமிழ்க்கவிதைகள் மீதான விரிவான விவாதமாக அல்லாமல் இவ்வருட குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் மதார் அவர்களின் கவிதைகளின் மீதான விமர்சனம் மட்டுமாக குவித்து என் எண்ணங்களை தருகிறேன்.

எஸ்ரா பவுண்ட் முன்வைக்கும் ’படிமம்’ என்பது, ஒரு கருத்து அல்ல, அது ஒரு இயங்குதளம். அதாவது, ”அதிலிருந்து, அதன் வழியாக, தொடர்ந்து கருத்தாக்கங்கள் விரைந்து செல்லும் ஆற்றல் மிக்க எந்திரத்தைப்போல ஒளிகொண்டு திகழும் ஒரு ஆற்றல் மையம் (Vorticism, 1914)” என்பதை நினைவுறுத்துகிறது –

”உயரம் குறையக் குறைய

உயரம் கூடுவதைக் காணுகிறது

கிணறு”

என்ற கவிதை. யோசிக்குந்தோறும், பெயரிடப்படாத இக்கவிதையில் வரும் கிணறு என்ற படிமம் வேறு பலவாக மாறி மாறி, சகலத்தையும் மேலிருந்து கண்டு காத்து ரட்சிக்கும் மேசன் முத்திரையில் வரும் ஒற்றைக்கண்போல பிரம்மாண்ட வடிவெடுத்து விரிகிறது.

”ஒரு ரிலே ஓட்டப்பந்தய வீரர்களைப் போல                       

மூதாதையர்கள் தலைமுறைகளை உருவாக்குகிறார்கள்”

 

”குதிரை ஒன்று புல்லை மேய்வது போல

துர்ச்சொப்பனங்கள் மறைகின்றன”

 

என்பது போல பல அபாரமான புதிய படிமங்களை மதார் அறிமுகபடுத்துகிறார்.

 

முகத்திற்குத்

தண்ணீர் ஊற்றினேன்

வெயில் கழுவினேன்

மீண்டும் ஊற்றினேன்

வெயில் கழுவினேன்

 

என்ற நுண்சித்தரிப்பில் அரூபமாக நிலைபெறும் வெயிலைப்போல,

 

காஃபி   ஆற்றும்போது
நறுமணக்கிறது
காற்று
வெயில்   காலத்தை
ஆற்ற
ஒரு   மாஸ்டர்   தேவை

 

என்ற வரிகளில் காற்றும், அதை ஆற்ற தேவைப்படும் மாஸ்டரும் உவமான உவமேயமாக வந்தாலும் எதை ஆற்றி எடுக்க வேண்டும், ஏன் எடுக்கவேண்டும் என்பவை சொல்லப்பாடாமல் உள்ளுறையாக நின்று கவிதையை வாசகனின் மனதில் நிகழச்செய்கின்றன.

 

”இடையனைத் தொலைத்த ஆடு

பாத வடிவில்

மேய்கிறது புல்லை

ஆட்டினை தொலைத்த இடையன்

தொடர்கிறான்

பாத வடிவ புல்லை”

 

என உவம உருபுகளின்(simile) பயன்பாட்டுக்கு தேவை ஏற்படுத்தாமல் உவமேயம் உவமானம் இரண்டுக்குமான எல்லைகளில் கோடழிந்து வேறுபாடுகள் தெரியாதபடி உருவகமாக மாறியும், அப்படி மாறிய உருவகத்தை மீறியும், தாண்டியும் சென்று கச்சிதமான ஒற்றை ஓவியமாக மாறியுள்ளதையும் பாராட்டியாக வேண்டும்.

படிமங்கள் என்பவை வரலாற்று கலாச்சாரங்களில் தங்கள் முறைமைகளை வழித்தடங்களையும் மாற்றிக்கொண்டு கிடைத்த இடங்களில் தற்காலிகமாக ஆக்கிரமித்து நின்று இளைப்பாறிச் செல்லும் நாடோடிகள்தான்.

என்றாலும் சில படிங்கள் அவற்றின் ஆகச்சிறந்த சாத்தியங்களை கண்டறிந்துகொண்டபின் அதே இடங்களில் என்றைன்றைக்குமாக உறைந்து நின்று விடும் சாத்தியமும் உண்டுதானே, என நான் நினைப்பதுண்டு. பின்வரும் கவிதையை படித்தபோது அந்த எண்ணத்தை மீட்டிக்கொண்டேன்.

 

”கட்டையாகவும் நெட்டையாகவும்

ஒரு திருமண பந்தல் ஜோடி”

 

”ஒரு உயரம் வானமாகவும்

இன்னொரு உயரம் பூமியாகவும் இருந்தது’

 

என்று வாசிக்கும்போது உயர வித்தியாசங்கள் கொண்ட ஜோடியையும், வானுக்கும் பூமிக்கும் உள்ள உறவையும் இதை விட சிறப்பாக சொல்லிவிட முடியாது என்பதைப்போல, வானும் பூமியும் என்றென்றைக்குமாக காலத்தின் முடிவிலியில் நிலைத்து நிற்கும் அழகிய ஓவியம் நம் நினைவில் விரிகிறது.

 

”எந்தக்காரணமும் இல்லாமல்

ஒரு தீக்குச்சியை கொளுத்து

அதன் பெயர்தான் ஒளி”

என ஒளியை உமிழும் ஒரே நோக்கத்திற்காக காலத்தின் சில துளிகளில் எரிந்து முற்றவிந்து இல்லாமலாகும் தீக்குச்சி, ஒரு காட்டையே எரித்து இரையாக்க முடிகிற வல்லமை கொண்டிருந்தும் அதன் சாத்தியத்தை இழந்து செயலின்றி அமைதி கொள்வதை,

நமத்துப்போன தீக்குச்சி

ஒன்றுக்கும் உதவாது

எனச்சபித்து எறிகிறாய்

அது அமைதியாக விழுகிறது

என படிக்கும்போது உருவாகும் கவிதை ஒன்று என்றால்

  அது அமைதியாக விழுகிறது

எரியாத காட்டின்

பறவைக்கூட்டிற்குக்கீழ்”

என முடியும்போது நமக்குள் உருவாகும் கவிதை வேறொரு விதமானது. அதன் இன்னொரு சாத்தியமான ”வெந்து தணிந்தது காடு” என்ற வரிதான் நமக்கு உடனே நினைவுக்கு வருவது. அது பறவையின் கூடு என்பதால் அமைதியாக விழுகிறதா? என்ற கேள்வியை வாசகனுக்குள் உருவாக்கி எழவைத்திருப்பதே இக்கவிதையின் வெற்றி. அப்படி ஒரு கேள்வியை எழுப்பி அதன் மூலம் கவிதையை வாசகனுக்குள் ’நிகழ’ வைப்பதன் சாத்தியத்தின் வழியாக தன்னை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மேற்சொன்ன இரண்டு கவிதைகளும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றின் மற்றொரு பக்கமாக உள்ளுறையாக நின்று ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன. அடைய முடிவதிலேயே ஆகச்சிறந்த சாத்தியத்தை கண்டறிந்து அதை ஆற்றி அடைவதுதான் செயல் தர்மம் என்பது போலவே, ஏதோ ஒரு காரணத்திற்காக செயலாற்றாமல் ஆகி அமைதியுள் ஆழ்ந்து அமைவதும்கூட ஒரு தர்மத்தின் பொருட்டே என்பதை நாம் உணரச்சாத்தியமாக்கி இருப்பது இக்கவிதையின் சாதனை.

***

சமகால நவீனக்கவிதையின் உள்ளடக்கத்தை, பாணியை ஒத்துவரும் எத்தனையோ பாடல்கள் நம் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் எட்டுத்தொகை நூல்களிலும் உள்ளன என்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல. இலக்கிய மரபிலிருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு வானத்திலிருந்து குதித்தெழுந்ததே நவீனக்கவிதை என்று நாம் யாரும் நம்பவும் இல்லை. யாப்பின் இலக்கண வடிவத்தை மட்டும் விடுவித்து நீக்கி விட்டால் அவை உடனடியாக சமகால கவிதையாகிவிடும் என்பதை நினவுறுத்தும் பல செய்யுள்கள் நம்மில் உண்டு.

ஆங்கிலத்தின் அறிமுகமும் உலக நவீனக்கவிதையின் அறிமுகமும் தமிழ் மொழிக்கு வந்து சேர்ந்திருக்காவிட்டால் கூட, வெளி உலக தொடர்பே அற்றுப்போய்விட்டிருந்தால் கூட, நம் சங்கப்பாடல்களிலிருந்து தோன்றும் இழை ஒன்று வளர்ந்து பரிணாமடைந்து காலப்போக்கில் நேரடியாக முளைத்தெழுந்து வளர்ந்திருக்க சாத்தியமானதே இன்றைய நவீனக்கவிதை என்று பல சமயங்களில் எண்ணுவதுண்டு. சமீபத்தில் அப்படி எண்ணச்செய்தது மதாரின் இக்கவிதை:

கடையைத்   திறப்பதாகவும்
கடையை   மூடுவதாகவும்
சொல்லிக்கொண்டு
ஊரையே   திறக்கிறாள்
ஊரையே   மூடுகிறாள்

ஊரின் முகப்பாக அமைந்து ஊரையே அன்றாடமும் திறந்து மூடும் பூக்காரியின் கடையின் உள்ள பூக்கள், மற்றும் பூக்களிலிருந்து பரவும் நறுமணம் ஆகியவற்றை சொல்லாமல் தன் குறிப்பில் உள்ளடக்கி குறுந்தொகை அல்லது நற்றிணையின் ஒரு பாடல் போல அமைந்துள்ளது.

மதாரின் கவிதைகள் ஆன்மீக தேடல் கொண்டு நிறைகின்றன என்றாலும், உள்ளே தத்துவம் திணிக்கப்பட்டிருக்கவில்லை. உள்ளடக்கத்தின் பொருண்மை எடை கொண்டு கனத்து அழுத்தி, கவிதையின் முதுகை கூன வைப்பதில்லை. மாறாக எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் முதுகிலிருக்கும் பள்ளிப்பையின் சுமையை தூக்கி எறிந்து விட்டு,

வாசல் தெளிக்கும் அந்த நொடியில்

வாளி வகுப்பறைக்குள்

இறுக்கமாக அமர்ந்திருந்தவை

இப்போது தனித்தனியாக

விளையாடச் செல்கின்றன

என நீர்த்திவலைகளை கூட குழந்தைகளாக, தன் நண்பர்களாக பாவித்து அவைகளுடன் விளையாடச்செல்லும் குழந்தையின் குதூகலத்துடன்

கதவும்  நானும் ஒருவரையொருவர்

பார்த்த்துக்கொண்டோம்

மரம்தானே நீங்க ?”

என கேட்டும் குட்ட்டிப்பயலின் விளையாட்டுத்தனமான மனநிலையிலிருந்து எழும் கேள்விகளும் அதனால் அடையப்பெறும் தரிசனங்களினாலும் அமைகின்றன. மரத்தடியில் நிற்கும் அப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கும் குழந்தையுடன் அதுவரை பேசிக்கொண்டிருந்த சொற்களையெல்லாம் துறந்துவிட்டு சம்மணமிட்டு எதிரெதிரே அமர்ந்து பந்து பிடித்து விளையாடி பெற்றுக்கொள்ளும் சொற்களை கொண்டு உருவாகும் உலகில் அமைகின்றன. குழந்தைப்பருவம் தாண்டிய பிறகு உருவாகும் அங்கதமும் பகடியும் அற்றவை என்பதும் இன்னொரு காரணம்.

பைத்தியம் தெளிபவனின் மண்டையில் நிகழும் மாற்றங்கள் கூட பிச்சி கனகாம்பரமாகவும்,  பரோட்டா வாசனையாகவும், அழைக்கும் ஆட்டோக்காரர்கள், சினிமா போஸ்டர்கள், விரையும் வாகனங்கள், சாலையின்  தரை, மழை, சிகரெட் புகை,  சாரலுக்கு ஒதுங்கும் பெண்கள் என காட்சித்தெளிவு கொண்டு துலக்கம் கொள்கின்றன. அன்றாட வாழ்க்கையின் சுமை, வாழ்க்கையின் அழுத்தம், இருத்தலின் துயரம், இருத்தலின் பதற்றம் ஆகிய எதற்குள்ளும் இக்கவிதைகள் சிக்கிக்கொள்வதில்லை என்பது மட்டுமல்ல, எதைப்பற்றியுமான மெல்லிய துயரம் (melancholy) கூட இவற்றில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

***  

”சன்னலை திறந்ததும்

ஒரு பெரிய ஆச்சரியம்

ஆகாசத்தின் கதவா, என் எளிய சன்னல்!”

 என்பது போன்ற அழகிய படிமங்கள் கொண்ட கவிதைகள் உட்பட, தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் இலக்கை நோக்கி துல்லியமாக எய்யப்பட்ட அம்புகளின் நேர்த்தியுடன் அமைவதுடன், ஒவ்வொன்றும் தனக்கே உரிய திருத்தமான வடிவை அடைந்துள்ளதையும் காணமுடிகிறது.

”முகமறியா காற்றில்

என்ன அழகைக் கண்டு

இப்படி கொஞ்சி கொஞ்சி பறக்கிறது

வண்ணத்துப்பூச்சி”

என்பதைப்போல பல கவிதைகள் அன்றாட நேரடி அனுபவங்களிலிருந்து, அவ்வனுபவங்களை விளக்கும் எளிய சித்தரிப்பின் வழி கலையை நோக்கி செல்கின்றன. ”பஞ்சாரத்துள் அடைத்த படிமங்கள்” என்பது போல எப்போதும் விடாமல் கூவிக்கொண்டிருக்கும் ஆரவாரம் மிக்க படிமங்கள் அவர் கவிதைகளில் இல்லை என்பதைத்தான், மதார் (வலிந்து) படிமங்களை  ”உருவாக்க” முயல்வதில்லை என்று முன்பு குறிப்பிட்டேன். இதை இக்கவிதைகளின் தனித்தன்மையாகவும் பலமாகவும் சொல்லவேண்டும்.

கவிஞன் உத்தேசிக்கும் இடம் பொருள் சார்ந்து உருவாகும் அகமொழி அல்லது மீமொழியில் (parole), மொழிக்கும் மீமொழிக்கும் இடையே விசேஷமாக உருவாகும் வெளியின் இடத்தில் கவிதை இயங்குகிறது. குறிப்புணர்த்த படிமங்கங்களும் தேவையாகின்றன. மொழியில் குறியீடுகள் படிமங்கள் ஆகியவற்றின் இடமும் தேவையும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆங்கிலம் தமிழ் என ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், கவிதையில் படிமத்தின் தேவையை சற்று மிகைப்படுத்தி புரிந்து கொண்டிருக்கிறோமோ, என்ற சந்தேகம் சில சமயங்களில் எழுவதுண்டு. கவிதையில், அப்படி படிமத்தின் அவசியத்தை மிகைப்படுத்திக்கொண்டுவிட்டதை டி.எஸ். எலியட்டின் நவீனக் கவிதை மீதான கருதுகோளின் முக்கியமான ஒரு குறைபாடகவும் கருதமுடியும் என நினைக்கிறேன்.

பெரும் காப்பியங்களும் நவீனக்கவிதைகளும் நேர் எதிரானவை என்பதால், கேன்டோஸ் (cantos) கவிதையை அதன் உள்ளடக்கத்திற்காக சாடும் ராபர்ட் பிளை, ”எஸ்ரா பவுண்ட் கவிதையை வெறும் ’அறிவின் தொகையாக’ பார்க்கிறார். கவிதையில் தன் எல்லா முக்கியமான எண்ணங்களையும் உரையாடல்களையும் செவ்வியல் துகள்களையும் கூடுமானவரை சேர்க்கிறார். ஒரு மனிதன் அந்த ஒரு புத்தகத்தை மட்டுமே வைத்திருந்தாலும் கூட அதிலிருந்து பொருளாதாரம், அரசு, கலாச்சாரம் ஆகியவை பற்றிய உண்மைகளையும் அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்பதைப்போல. கவிதையில், கவிஞனின் ஆழ்மனத்திற்கு பதிலாக உள்ளீட்டில் இப்போது பொருளாதாரம் இருக்கிறது என்பதால் கவிஞனின் ஆழ்மன போதத்தின் வெளிப்பாடாக அமையும் வாய்ப்பை கேன்டோஸ் இழந்து விடுகிறது”, என வாதிடுவதையும் நினைவு கொள்கிறேன்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துவற்கு ஒரே வழி அதற்கு தொடர்புடைய ”புறவயமான” இன்னொரு ஒரு பொருளை (objective correlate or imagery), சூழலை அல்லது நிகழ்வுத்தொடர்களை கண்டறிவது மிகவும் அவசியமானது என டி.எஸ். எலியட் கருதுகிறார். கவிதையின் சாரம் என்பதே அப்படி கண்டறியப்பட்ட புறவயமான பொருளே, என அவர் வாதிடுவதையும் காணலாம். அப்படி ஒரு ”புறவயமான தொடர்புறுத்தலின்” தேவை என்பது, கவிதையை உள்நோக்கி அகவயமாக குவிப்பதற்கு பதிலாக அதை ஒரு அறிவியல் சமன்பாட்டைப் போல ஆக்கி புறவயமாக பொருள்களை அறிந்தறியும் செயலாக ஆக்கிவிடும் என்ற அபாயத்தை, பெருமளவுக்கு குறைத்து மதிப்பிட்டிருக்கிராறோ, என்ற எண்ணம் நமக்கு எழாமல் இல்லை. அப்படி திட்டமிட்டு உள்ளக்கிடக்கைகளுக்கு ஏற்ற புறவயமான தொடற்புறுத்தல்களை தேடிக்கொண்டிருப்பது கவிதையை முன்னோக்கிய செல்ல விடாமல் தடுத்து, அதை புறவயமான பெளதீக உலகை நோக்கி திருப்பிவிடுகிறது. மனதில் உருவாகும் மனஎழுச்சியின் உந்துதலை (impulse) அதன் வழியில் முன் செல்லாமல் தடுப்பதுடன் கவிதையை கவிஞனின் ஆழ்மனதிலிருந்து துண்டித்து, கவிதையின் தரிசனத்தை தட்டையாக்கி, அதை ஒரு ”கருத்து (idea)” என்பதாக பாவிக்க வேண்டிய நிலையை உருவாக்கி, இறுதியில் கவிஞனின் மனமே ஒரு அகவயமான பொருளாக சிறுத்து எஞ்சும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

ரிகார்டொ வுயங் (Ricardo Gullon) கூற்றுப்படி ’கவிதை என்பது உள்ளுணர்வை கடத்துவது’. என்று வைத்துக்கொண்டால், உள்ளுணர்வு என்பது கவிஞனின் ”தனிப்பட்ட அனுபத்தில்” ஆழ்மனதில் உறைந்திருப்பது – என்பதால், அதை வாசகனுக்கு அறியத்தர பெளதீக உலகின் புறவயமான பொருள்களின் பிணைப்பு அவசியமில்லை, என மாற்றுக் குரல்கள் எழுந்துள்ளன. அதைப்போல டி.எஸ். எலியட்டை மறுத்து, ஷ்பானிய விமர்சகரான கியோம் டெ தொர்ரே (Guillaume de Torre), மினஸோடாவின் கவிஞரான ராபர்ட் பிளை ஆகியோர் வாதிட்டுள்ளதையும் நினைவு கொள்கிறேன்.

கவிதையில், அதைப்போல புறவயமான தொடர்புறுத்தல்களின் இடம் பற்றியான மிகை மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்யலாம் என்பதற்கு சான்றாக மதாரின் கவிதைகள் அமைந்துள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாக, பின்வரும் கவிதையை சொல்லாம் என நினைக்கிறேன்:

பிரார்த்தனை ஏதுமற்றிருந்தேன்,

கைகளில் ஜில் காற்று

வீசிக் கொண்டே இருந்தது

கைகளை அப்படியே வைத்திருந்தேன்

பிரார்த்தனை செய்வதை விடவும்  

அது நன்றாக இருந்தது

 

என ஒரு எளிய இருப்பையே பிரார்த்தனையை மாற்றி,

 

ஒரு அதிசய

காலை விழிப்பின் போது

நாம்

டெய்ரி காட்டுக்குள்

தொலைந்திருந்தோம்

ஒருவரை ஒருவர்

தேடிக் கொள்ளவில்லை

என்பதைப்போல, கவிதையின் நுண்சித்தரிப்பில், அதன் தன்னியல்பான வெளிப்பாட்டில் உருவாகும் மொழியின் ஆரவாரமின்மையும், அதன் வழி உருவாகி நிலைபெறும் கலையமைதியையும் அடிக்கோடிட்டி, அவற்றை மதார் கவிதைகளின் முக்கியமான அம்சமாக இங்கு கவனப்படுத்த விரும்புகிறேன். இதை எழுதும்போது ”தத்துவ நூல்களில் நாம் தொடர்ந்து ஈடுபடுவது விடுதலை அனுபவத்தை பெறவே, எந்த தத்துவ நிலைப்பாட்டையும் நிறுவுவதற்காக அல்ல’ என்று எங்கோ எப்போதோ வாசித்த வரி நினைவுக்கு வருகிறது.

கவிதை அரசியலில் வலுவான ஆயுதமாக செயல்படக்கூடும். உரத்து பாடலைப்போல வாசிக்கப்படும்போது கேட்பவரின் நாடி நரம்புகளை முறுக்கேறச்செய்து ஆயுதம் ஏந்திச்சென்று போராடக்கூட தூண்டக்கூடும்தான். அரசியல் கவிதைகளை ’முக்கியமில்லாதவை’ என நான் கருதவில்லை.

ஆனால், இக்கவிதைகள் எதிலும் அரசியல் கருத்துகள் இல்லை என்பது தனிப்பட்ட முறையில் ஒரு வாசகனாக எனக்கு பெரும் மகிழ்ச்சியும் நிறைவும் அளிப்பதாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இக்கவிதைகளின் புழங்கியுள்ள தொகுப்புத்தன்மையின் நேர்த்தியும், வடிவத்தின் மீதான கவனமும், மொழிப்பயிற்சியும் அபாரமானது.

கவிஞர் மதாருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, அவர் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

 

-வேணு தயாநிதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2021 11:31

பாலையாகும் கடல் – கடிதம்

பாலையாகும் கடல்- கடலூர் சீனு பாலையாகும் கடல்- கடிதம் பாலையாகும் கடல், கடிதம்- பாலா

அன்புள்ள ஜெ.,

‘பாலையாகும் கடல்’ குறித்த பாலாவின் கடிதம் கண்டேன்.பாலையாகும் கடல், கடிதம்- பாலா நான் நீராகாரமும் ஊறுகாயும் சாப்பிட்டால் சூழலியல் மேம்படும் என்கிறார். அவர் என்னை பட்டினி கிடக்கச் சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். போன ‘சஷ்டி’யின் போது ஆறுநாள் விரதம் இருந்தேன். முதல் இரண்டுநாட்கள் கடுமையாகத்தான் இருந்தது. சாப்பாட்டு நினைவாகவே இருக்கும். இன்னும் ஐந்துநாட்கள் இருக்கிறதே என்று மலைப்பாக இருக்கும். ஆனால் மூன்றாவது நாளிலேயே உடலில் ஒரு ஒழுங்கு அமைந்துவிட்டிருந்தது. நாலாம், ஐந்தாம் நாட்கள் இயல்பாகக் கடந்தன. விரதம்முடிந்து மறுநாள் சாப்பாட்டுத்தட்டின் முன் உட்கார்ந்தபோது அண்ணா ஹசாரேயை நினைத்துக்கொண்டேன்.

இவ்வளவு கடும்விரதத்தை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். ஆனால் ஒருநாள் விரதம் யாரும் எளிதாக இருக்கமுடியும்.  ஒரு வருடத்திற்கு முன் ஏகாதசி விரதம் இருக்க ஆரம்பித்தேன். காலையில் ஓட்ஸ் கஞ்சி. இரவு படுக்கும்முன் வாழைப்பழம். நடுவே ஒரு கைப்பிடியளவு கோதுமைமாவும் வெல்லமும் சேர்ந்த சத்துமா ஒரு உருண்டை, இரண்டுமுறை. காப்பி உண்டு. உப்பு கிடையாது.மனதை தொடர்ந்து வெவ்வேறு செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டால் நேரம் போவதே தெரியாது. இன்றுவரை ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கிறது. இதுதவிர வாரம் ஒருநாள் காலை உணவைத் தவிர்த்து விடுவேன். காலை பத்தரை மணிக்கு ஓட்ஸ் கஞ்சி. அப்புறம் இரவு சிற்றுண்டிதான். நடுவே காப்பி மட்டும் உண்டு. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாரம் மூன்று நாள் அரிசிச்சாப்பாட்டைத் தவிர்த்தாலே உடல்எடை குறைவதைக் கண்முன்னால் காணலாம். அந்த நாட்களில் பப்பாளிப் பழம் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

சில நாட்களுக்குமுன் ‘வாட்சப்’ பில் நீராகாரத்தை ‘சாஷே’ க்களில் அடைத்து நூறு டாலருக்கு விற்றுக்கொண்டிருக்கும் படங்களை என் அம்மாவிடம் காண்பித்தேன். பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென்று கண்கலங்கி அழுதுவிட்டார் ‘இந்த நீராகாரம் கூடக்கெடைக்காம எத்தனைதடவை வெறும்வயித்தோட பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கோம்’ என்று. என் அப்பாவின் நிலைமையும் அதைவிட மோசமே. சிறு வயதில் வயிறு நிறையவேண்டுமே என்பதற்காக இருப்பதிலேயே நல்லபெரிய வெள்ளரிக்காயாகப் பார்த்து வாங்கிவருவாராம். இளம்வயதில் தலைவனை இழந்த குடும்பங்களின் கதி அதோகதிதான்.

நாங்கள் சிறுவயதில் நீராகாரம் சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் எங்கள் வீட்டிற்கு வேலைக்குவரும் நாகம்மாள் என்ற பெண்மணி காலையில் வந்தவுடனேயே முதலில் நீராகாரம் தான் கேட்பார். எனவே நீராகாரம் எங்களுக்கு இயல்பாக மறுக்கப்பட்டது. ஆனால் பழையசாதம் சாப்பிடுவோம். எப்படியோ அந்தப் பழக்கமும் காலப்போக்கில் ஒழிந்தது. இன்று நீராகாரம் குடல்நோய் உட்பட பலநோய்களுக்கு மருந்து என்கிறார்கள்.பட்டினி கிடப்பது ‘ஸ்டெம் செல்’ செயல்பாடுகளில் சிறந்த முன்னேற்றத்தைக் கொடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

https://news.mit.edu/2018/fasting-boosts-stem-cells-regenerative-capacity-0503  

நிற்க. அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, இன்று ‘ரேஷன்’ கடைகளிலும் இலவசமாக வழங்கப்படும் இந்தச் சூழலில், சூழியல் சுரண்டலுக்கெதிராக நான் கூறிய மீன் தவிர்ப்பும், பாலா கூறும் அரிசி தவிர்ப்பும் ஒன்றேதானா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2021 11:31

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 18 ஆவது நாவல் ‘செந்நா வேங்கை’. இந்த நாவலைப் பொருத்தவரை ‘செந்நா வேங்கை’ என்பது, குருஷேத்திரப் போர்க்களம்தான். சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் “போர் நிகழும் மண்ணை, ‘வேட்டை முடித்த வேங்கையின் செந்நா’ என்கின்றன நூல்கள்” என்று கூறுகிறான்.

சங்கன், ஸ்வேதனிடம், “குருஷேத்திரத்தில்தான் போர் நிகழும். ஏனெனில், அதுதான் குருதிநிலம். இந்திரன் விருத்திரனை வென்ற இடம். பரசுராமர் ஷத்ரியர்களின் குருதியை ஐந்து குளங்களாகத் தேக்கிய மண். அங்கு நிகழ்ந்தால் போர் அறத்திலேயே இறுதியில் சென்று நிலைக்குமென்று நம்புகிறார்கள். அதற்குத் தொல்நூல்களில் ‘அறநிலை’ என்றே பெயர் உள்ளது” என்றான். ‘அறநிலை’ என்று அறியப்பட்ட ‘குருஷேத்திரம்’, குருதிகுடிக்கும் செந்நா வேங்கையெனக் காத்திருக்கிறது.

வீரர்கள் ‘தாம் இறப்போம்’ என்று எண்ணியும் துணிந்துமே அந்தப் போர்க்களத்தை நோக்கிச் செல்கின்றனர். தாரை பானுமதியிடம், “அவைநின்று பழிகொண்ட பெண் சொன்ன சொல் அவ்வண்ணமே நிகழ்ந்தாக வேண்டும். அதுவே இங்குப் பெண்ணுக்குக் காவலெனத் தெய்வங்கள் உண்டென்பதற்கான சான்று. தலைமுறை தலைமுறையெனப் பிறந்தெழுந்து வரும் பெண்கள் அனைவருக்கும் நம் மூதாதையர் உரைக்கும் சொல்லுறுதி அது. பிறிதொன்று நிகழாது” என்கிறார். இதனை அத்தனை வீரர்களும் உணர்ந்திருந்தனர். வேள்வியில் ஊற்றப்படும் நெய்யெனத் தழலை நோக்கி, ஒழுகி ஒடுகின்றனர். இது போர்வேள்வி. பெண்பழியைத் துடைக்க இயற்றப்படும் பெருங்களவேள்வி.

இந்தப் போரில், ‘அறத்திற்கு எதிராக நிற்கும் தரப்புக்கு வெற்றி கிடைக்காது’ என்பதைப் பல்வேறு நிகழ்வுகள் குறிப்புணர்த்துகின்றன. அஸ்தினபுரியின் அரசவைக்கு வரும் பிதாமகர் மூத்த பால்ஹிகரை வணங்குவதற்காகப் பிதாமகர் பீஷ்மர் செல்கிறார்.

“அவர் கைகளைக் கூப்பியபடி முன்னால் சென்று பால்ஹிகரின் கால்களைத் தொட்டு சென்னி சூடி வணங்கினார். பால்ஹிகர் அவர் தலைமேல் கைவைத்து ‘புகழ் சேர்க!’ என்றார். பீஷ்மர் எழுந்து பூரிசிரவஸிடம் “தன்னை அறியாமல் சொல்கிறார். எனினும் சரியாகவே அவர் நாவில் வருகிறது. மூதாதையரும் அன்னையரும் நா மறந்தும்கூட, ‘நாம் வெற்றி பெறுவோம்’ என்று வாழ்த்துவதில்லை” என்றார். பீஷ்மர் தனக்குத்தானேயென, “அதுவும் ஒருவகையில் சரிதான். ஷத்ரிய மரபின்படி நோயுற்றிறப்பது ஓர் இழிவு. படைக்களத்தில் இறப்பவரே விண்ணுக்குரியவர்” என்றார். பின்னர் இடறிய தாழ்ந்த குரலில் “தன் குருதியினன் ஒருவன் கையால் இறப்பதென்பது மேலும் சிறப்பு. அது தன்னால் தான் தோற்கடிக்கப்படுதல். மண்ணில் பிற குருதியர் எவர் முன்னாலும் தோற்றதில்லை என்ற புகழுடன் விண்ணேக இயலும்” என்றார்.

கௌரவர்களின் தரப்பில் இணைந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தாம் ‘அறத்திற்கு எதிராக நிற்கிறோம்’ என்பது தெரிந்திருக்கிறது. ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட காரணம் இருக்கத்தான் செய்கிறது.

துரியோதனனுடன் ‘செஞ்சோற்றுக்கடன்’ என்றும் ‘தோழமை’ என்றும் கர்ணனும் பூரிசிரவஸ் இணைந்திருக்க, ‘அஸ்தினபுரியின் அரியணையைக் காப்பவன்’ என்ற கடமை உணர்ச்சியில் பிதாமகர் பீஷ்மரும் துரியோதனனுடன் நிலைகொள்கிறார். பிதாமகரின் வழியினைப் பின்பற்றுபவர்களாகத் துரோணரும் கிருபரும் நின்றுகொள்கிறார்கள். ‘வேதத்தைக் காப்பவர்கள்’ என்ற பெயரிலும் ‘இளைய யாதவர் நிலைநிறுத்த விரும்பிய புதிய வேத மெய்மையைப் புறக்கணிப்பவர்கள்’ என்ற பெயரிலும் பிற ஷத்ரியர்களும் சல்லியரும் துரியோதனனுடன் இணைந்து நிற்கிறார்கள். ‘உடன்பிறந்தோர்’ என்ற நிலையில் குண்டாசி, விகர்ணன் உள்பட கௌரவர்கள் நூற்றுவரும் துரியோதனனுக்கு நிழலாகின்றனர்.

திருதராஷ்டிரருக்கும் பிரகதிக்கும் பிறந்த யுயுத்ஸு மட்டுமே இளைய யாதவர் இருக்கும் தரப்பே ‘அறத்தின் தரப்பு’ என்பதை நன்கு புரிந்துகொண்டவன். அவனால் மட்டுமே முழுத் தெளிவுடன், திடமான முடிவினை எடுக்க முடிகிறது. அவன் துரியோதனனிடம் நேரடியாகவே பேசி, பாண்டவர்களின் அணியில் சேர்ந்துகொள்ள அனுமதிகேட்கிறான். அவனுக்கு உரிய அஸ்தினபுரியின் பங்கினை வழங்கி, அவனை வழியனுப்பி வைக்கவே துரியோதனன் விரும்புகிறான். துரியோதனனின் பெருந்தன்மைக்கு அளவேயில்லை என்றுதான்படுகிறது.

பாண்டவர்களின் அணியில் இணைந்துள்ள நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் மலைக்குடிகளும் இன்னபிற குடியினர் அனைவரும் ‘பெண்பழி’க்கு நிகர்செய்யவே போருக்கு வந்தவர்கள். உண்மையில், அவர்களுக்குள்தான் ‘அறம்’ குருதியாக ஓடுகிறது.

இதனை ஸ்வேதன் – திருஷ்டத்யும்னன் உரையாடலின் வழியாக அறிய முடிகிறது. ஸ்வேதன் திருஷ்டத்யும்னனிடம், “ ‘இப்போரில் எங்களுக்கான இடம் என்ன?’ என்று மட்டுமே அறிய விரும்புகிறோம். ‘எங்களுக்கு எது கிடைக்கும்?’ என்ற கணிப்பை முன்வைக்க விரும்பவில்லை. ஏனெனில், ‘எங்கள் தலைவர்களுக்காகப் போரிடவேண்டும்’ என்ற ஒரே நோக்கில் கிளம்பி வந்தோம்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “தாங்கள் அறிந்திருப்பீர்கள் குலாடரே, இங்குப் படைகொண்டு வந்திருக்கும் அரசர்களில் எவரும் மெய்யாகவே இன்றுவரை போருக்குப் பின் தங்களுக்குக் கிடைப்பதென்ன என்று கேட்டதில்லை. அவர்கள் கேட்கத் தயங்கியிருக்கக்கூடுமோ என்று ஐயுற்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நான் உசாவியிருக்கிறேன். அதன் பொருட்டு விருந்துகளை ஒருக்கியிருக்கிறேன். நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் கோரிப் பெறுவதற்கென எதுவுமே அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அளிக்க மட்டுமே வந்திருக்கிறார்கள். பாரதவர்ஷத்தில் இதுபோல வென்ற பின் கொள்வதற்கில்லாத ஒரு படை இதற்கு முன் திரண்டிருக்காது” என்றான். “பின்னர் எதன் பொருட்டு அவர்கள் படைகொண்டு வந்திருக்கிறார்கள்?” என்று ஸ்வேதன் கேட்டான். ‘பெரும்பாலானவர்கள் பெண்பழி தீர்க்கும் கடமை தங்களுக்குண்டு’ என்று வந்திருக்கிறார்கள். அன்னையர் அவர்களுக்கு அளித்த ஆணையைத் தலைமேற்கொண்டிருக்கிறார்கள். எஞ்சியோர் இளைய யாதவரின் கொள்கைமேல் பற்றுக் கொண்டு, அதற்கென நிலைகொள்ள விழைந்து வந்தவர்கள். நானும் விராடரும் மட்டுமே யுதிஷ்டிரரின் முடிநிலைக்க வேண்டுமென்றும் அவர்கள் கொடிவழி அஸ்தினபுரியை ஆளவேண்டுமென்றும் விரும்பி வந்திருக்கிறோம். ஏனெனில், எங்கள் குருதியின் வெற்றி அது” என்றான்.

அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரர் அறத்துக்கும் அறமின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில், ஏறத்தாழ துலாக்கோலின் முள்ளெனத் தன் நிலைப்பாட்டினை நிறுத்தி, இந்தப் போரை விலகியிருந்து காண்கிறார். இந்த நிலைப்பாட்டினை எடுக்க அவர் தன்னை வெறும் ‘சூத குடியினன்’ என்றே கருதிக் கொள்கிறார்.

திருதராஷ்டிரர் தன் மகன் குண்டாசியிடம், “நீ வஞ்சினம் உரைக்கச் செல்லவில்லையா?” என்றார். “இல்லை, நான் பாண்டவர்களைக் கொல்வதாக வஞ்சினம் உரைக்கமாட்டேன்” என்று குண்டாசி உரக்க சொன்னான். திருதராஷ்டிரர் சிலகணங்கள் அசையாமல் நின்றுவிட்டு, “ஆம், ஒருவனாவது அவ்வாறு எஞ்சட்டும்” என்றார். திருதராஷ்டிரர் தன் தம்பி விதுரரைப் போலவே இந்தப் போரிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறார்.

குண்டாசி காந்தாரியிடம், “நான் அங்கு சென்றுவிட விழைகிறேன்” என்றான். காந்தாரி புன்னகைத்து, “ஆம், இந்த நிலத்துக்கான பூசல்களை எல்லாம் விட்டுவிட்டு என் மைந்தர் அங்கே சென்று அன்னையின் மைந்தர்களாகச் செம்புழுதியாடி வாழ்ந்தால் அதைவிட நான் விழைவதொன்றும் இருக்கப் போவதில்லை” என்றாள். காந்தாரிக்கும் இந்தப் போரில் துளியும் விருப்பம் இல்லை.

திருதராஷ்டிரர் தன் அருகே வந்த காந்தாரியிடம், “மைந்தர்களுக்கான பலி அல்லவா?” என்றார். “ஆம்” என்று அவள் சொன்னாள். “என் மைந்தர்கள் அங்கே உபப்பிலாவ்யத்திலும் உள்ளனர்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். குண்டாசி தன் முதுகெலும்பு குளிர்வதைப்போல் உணர்ந்தான். கணம்கணமென அவன் காத்திருந்தான். காந்தாரி “ஆம், அவர்களுக்காகவும் பூசனை நிகழட்டும்” என்றாள்.

பெருந்தந்தையும் பேரன்னையும் இந்தப் போரில் அறம் வெற்றி பெற  வேண்டும் என்றும் போரின் முடிவில் தங்களின் புதல்வர்களுள் ‘அறப்புதல்வர்கள்’ மட்டுமே வாழ வேண்டும் என்றும் விழைகின்றனர்.

ஆனாலும், திருதராஷ்டிரர் குருஷேத்திரத்துக்குச் செல்கிறார். அங்குச் சஞ்சயனின் உதவியுடன் போர்க்காட்சிகளைக் கேட்டறிந்து, தன் உள்ளத்தால் அவற்றைக் காட்சியாக்கிக்கொள்கிறார்.

பிற மகாபாரதப் பிரதிகளில் இடம்பெற்றிருப்பதுபோல, ‘ஞானக்கண்’கொண்டு சஞ்சயன் போர்க்காட்சியைக் கண்டு, திருதராஷ்டிரருக்கு உரைப்பதுபோல இந்த வெண்முரசில் காட்சியை அமைக்காமல், பகுத்தறிவோடு இந்தக் கதைநிகழ்வினைக் கையாண்டுள்ளார் எழுத்தாளர்.

பீதர்களிடம் பெற்ற இரண்டு ஆடிகளை ஒருங்கிணைத்து (துல்லியமான தொலைநோக்கி) வெகுதொலைவில் நடைபெறும் போர்க்காட்சியைச் சஞ்சயன் மிகத் துல்லியமாகக் கண்டு, அவற்றைத் தன் சொற்களில் தொகுத்து, திருதராஷ்டிரருக்கு உரைப்பதுபோலக் காட்சிப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர்.

இந்த நாவல் முழுவதும் போருக்கான இறுதி ஒருக்கத்தைப் பற்றியே பேசுகிறது. நாவல் முதல்நாள் போரின் அழிவைப் பற்றிப் பேசி நிறைவுகொள்கிறது. போருக்கான முன்திட்டமிடல்கள், படைநகர்வுகள், பாசறை அமைப்புகள், போர் அடுமனை முதல் போர் இடுகாடு வரை அனைத்தைப் பற்றியும் மிக மிக விரிவாகவும் தெளிவாகவும் இந்த நாவல் பேசுகிறது.

‘போர்ஒருக்கத்தை’ மட்டுமே மையப்படுத்தி ஒரு முழு நாவலை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ஏன் எழுத வேண்டும்?. அப்படியென்ன முதன்மைத்தன்மை இந்தப் போருக்கு இருக்கிறது? இந்த வினாக்கள் நாம் விடைகளைத் தேட முனையும்போது, அவை நம்மை ஒட்டுமொத்த ‘வெண்முரசு’ தொடர் நாவல்களை நோக்கித் திருப்பிவிடுகின்றன.

120 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரதவர்ஷத்தில் நிகழும் பெரும்போர் இது. ஏறத்தாழ நான்கு தலைமுறையினர். நான்கு தலைமுறையினரின் நேரடிப் பிரதிநிதியாகப் பிதாமகர் மூத்த பால்ஹிகர் வந்துநிற்கிறார். இந்தப் போரைத் தலைமையேற்று நடத்தும் இருபெருந்தலைவர்கள் தருமரும் துரியோதனனும் ஆவர். அவர்கள் பிறக்கும்போதே இந்தப் பெரும்போர் முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், நாள் மட்டும் குறிக்கப்படவில்லை.

அந்தத் தலைவர்கள் இருவருமே தங்களின் முதுமையை நெருங்கியவர்கள்தான். ஒவ்வொரு நாளும் இந்தப் பெரும்போருக்காகக் காத்திருந்தவர்கள்தான். ஆனால், தங்களால் முடிந்தவரைக்கும் போருக்கான நாளைத் தள்ளிவைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஒவ்வொரு நாளும் அந்தப் போரை வெவ்வேறு வகைகளில் தங்களின் ஆழ்மனத்திற்குள் நிகழ்த்திக்கொண்டே இருந்தார்கள்.

பாரதவர்ஷத்தில் வாழும் ஒவ்வொரு ஷத்ரியரும் இந்தப் போருக்காகக் காத்திருந்தனர். இந்தப் போரில் பங்கெடுக்கவும் போருக்குப் பின்னர் தங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் போர், ‘பேரறத்தை நிலைநாட்டுவதற்கான போர்’ என்றே எல்லாத் தரப்பினராலும் நம்பப்பட்டது. எல்லாவகையிலும் இந்தப் போர் அதை நோக்கியே நகரத் தொடங்கியது. அதனால்தான் காந்தாரி தம் மைந்தர்களை வாழ்த்தும்போது, “அறம் வெல்க!” என்று மட்டுமே வாழ்த்துகிறார். போர்க்களத்தில் தன்னிடம் வந்து வாழ்த்துபெறும் தருமனைப் பிதாமகர் பீஷ்மர் “அறம் வெல்க” என்றே வாழ்த்துகிறார்.

‘பாரதவர்ஷத்தில் அறத்தை நிலைநாட்ட எழுந்த பெரும்போர்’ என்ற வகையில் இந்தப்போர் முக்கியத்துவம் கொள்கிறது. அதனால்தான் இந்தப் போருக்கான ஒருக்கத்தைப் பற்றி எழுத்தாளர் ஒரு நாவல் முழுக்க எழுதியுள்ளார்.

‘வெண்முரசு’ தொடர் நாவல்களுள் ஒன்றான ‘வெண்முகில் நகரம்’ நாவலில் அறிமுகமான பூரிசிரவஸ் பின்னாளில் அஸ்தினபுரியின் தூதனாகவே பாரதவர்ஷம் முழுவதும் அலைகிறான். எல்லாவிதமான இளிவரல்களுக்கும் அவன் இலக்காகிறான். ஆனாலும் அவன் மனங்கலங்குவதில்லை.

வாள்வீச்சும் சொல்வீச்சும் கொண்ட இனிய இளைஞனாகவும் (வயதானாலும்கூட) தன்குலத்தை வரலாற்றில் நிலைநிறுத்தும் வகையில் எதிர்காலவியல்நோக்கோடு  செயல்புரிபவனாகவும் திகழ்கிறான். தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் வசதிகளையும் முற்றிலும் தன்குடியினரின் பெருவளர்ச்சிக்கே செலவிடுகிறான்.

அவனின் உண்மை நோக்கம் இந்த நாவலில்தான் எழுத்தாளரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக அஸ்தினபுரியோடு நெருங்கிய தொடர்பிலிருந்த அவன் தன்னுடைய மலைநாடான, மிகச் சிறிய சிற்றரசான, பாரதவர்ஷத்தின் கண்களுக்குத் தெரியாமலிருந்த பால்ஹிக நாட்டை பெருஞ் சாலைகளை உடைய, நாகரிகம் மிக்க ஒரு வணிக நாடாக மாற்றிவிடுகிறான்.

நிகழவுள்ள பெரும்போருக்கான படைஒருக்கத்தில் தனக்கு உதவியெனத் தன்னுடைய கொடிவழியினரை அழைத்துவந்து, அவர்களுக்குப் படையொருக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறார். பின்னர் அவர்களைப் பாதுகாப்பாகத் தன் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவைக்கிறான். தன்னுடைய மலைநாட்டின் எதிர்காலத்தைத் தன் வாழ்நாளிலேயே மாற்றியமைத்து விடுகிறான். மூத்த பால்ஹிகரை அழைத்துவந்து கௌரவப் படையினருக்குப் புத்தூக்கம் கொடுக்கிறான்.

‘எதற்காக இதையெல்லாம் அவன் செய்தான்?’ என்பதற்கு விடையாகப் பின்வரும் அவனது வாய்மொழியே சான்றாகிறது. “முற்றிலும் பயனுறுதி கொண்ட ஒன்றை மட்டுமே இயற்ற வேண்டுமென்று எண்ணி எவரும் எதையும் செய்ய இயலாது. பணியாற்றுவது எனது நிறைவுக்காக. நான் வாழ்கிறேன் என்பதற்காக”. உண்மையில் அவன் தன் வாழ்நாளில் பயனுறுதிகொண்ட ஒன்றைத்தான் மிகச் சரியாகச் செய்திருக்கிறான்.

அவனுடைய நோக்கங்களும் திட்டங்களும் செயல்பாடுகளும் துரியோதனனுக்குத் தெரிந்தே இருக்கின்றன. துரியோதனன் மனம் உவந்து அவற்றையெல்லாம் ஏற்கிறான். அவற்றின் பின்விளைவுகள் அனைத்தையும் அவனுக்கு அஸ்தினபுரியின் கொடையாகவே அளிக்கிறான். துரியோதனனின் விரிந்த உள்ளத்துக்குச் சான்றாகப் பால்ஹிகபுரியின் பெருவளர்ச்சியையும் நாம் சுட்டிக்காட்டலாம். துரியோதனன் தோழமையைப் பேணுபவன். அவனுக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு தோழமைகளுள் ஒருவர் கர்ணன்; மற்றவன் பூரிசிரவஸ் என்றே நான் கருதுகிறேன்.

துரியோதனனால் பூரிசிரவஸ் நிமிர்வுகொள்வதைப் போலவே திரௌபதியால் சாத்யகி நிமிர்வுகொள்கிறார். சாத்யகியின் மகன் அசங்கனுக்குத் திருஷ்டத்யும்னனின் மகள் சௌம்யையைத் திருமணம் செய்து வைக்கிறார் திரௌபதி. ஷத்ரியகுடியில் மணவுறவு ஏற்படுகிறது. அதுவும் அரசரின் மகளோடு மணவுறவு. இதன் வழியாகச் சாத்யகியின் தலைமுறை புதிய வெளிச்சத்தை நோக்கி முன்னெட்டு வைக்கிறது. சாத்யகிக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையே உள்ள தோழமையும் இதற்கு ஒரு காரணம் எனலாம்.

ஒட்டுமொத்த வெண்முரசில் உறவினர்களுக்கு இடையில் நிகழும் அகம், புறம் சார்ந்த கொடுக்கல் – வாங்கல்கள் விளைவிக்கும் நன்மைகளைவிடத் தோழமைக்குள் நிகழும் அகம், புறம் சார்ந்த கொடுக்கல் – வாங்கல்கள் மிகுந்த நன்மையை விளைவிக்கின்றன.

ஆண்கள் மிகுந்த பொறாமைப்படும் ஒரு கதைமாந்தராக மூத்த பால்ஹிகர் திகழ்கிறார். தன் முதுமையை மீண்டும் மீண்டும் வெல்கிறார். உடற்திறனை மீட்டெடுக்கிறார். புதிய புதிய மணவுறவுகளின் வழியாகத் தன் தலைமுறையினரைப் பெருக்குகிறார். இறுதியில் அஸ்தினபுரியில் ஹஸ்தியின் மணிமுடியை அணிகிறார். நான்கு தலைமுறையினரின் நினைவுப்பெருக்கில் திளைக்கிறார். முக்காலத்தையும் அழித்து நம் கண்முன் நிஜத்தில் நிற்கும் வாழும்தொன்மமாக இருக்கிறார் அவர்.

‘வெண்முரசு’ தொடர் நாவல்களுள் பலவற்றுள் பலதருணங்களில் திருதராஷ்டிரரின் விரிந்த உள்ளத்தையும் அதற்கு இணையாகத் துரியோதனனின் பெருந்தன்மையையும் காணமுடிகிறது. ‘பெருந்தந்தையின் மூத்தமகன்’ என்ற நிலையில் துரியோதனனும் அத்தகைய உளவிரிவினைப் பெற்றவனாக இருக்கிறான்.

அஸ்தினபுரியைவிட்டுப் பாண்டவர்களின் 13 ஆண்டுகாலம் விலகியிருந்தபோது, துரியோதனன் அஸ்தினபுரிப் பேரரசின் எல்லைக்குட்பட்ட நிலத்தில் வாழும் மக்களுக்கு ஒருகுறையும் இல்லாதவாறும் அப்பகுதியில் ஓர் அறப்பிழையும் நிகழாதவாறும் நல்லாட்சியை நடத்துகிறான். அதில் பிதாமகர் பீஷ்மர் உள்ளிட்ட அனைவருக்குமே மாற்றுக்கருத்துகள் இல்லை.

வியாசரின் மகாபாரதம் முதல் காலந்தோறும் எத்தனையோ பேர் எழுதிய அனைத்து வகையான மகாபாரதங்களும் துரியோதனனைக் கீழ்மகனாகவும் எதிர்நிலைநாயகனாகவும் உருக்காட்டியபோது, எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் மட்டும் தன்னுடைய மகாபாரதத்தில் துரியோதனனை மிகுந்த உளவிரிவுகொண்ட நாயகனாகவே நம் முன் நிறுத்துகிறார்.

மிகுந்த நல்லவனாக இருக்கும் துரியோதனன், பாண்டவர்களுக்காக மும்முறை தூதுவந்த இளைய யாதவரை வெறுங்கையுடன்தான் திருப்பி அனுப்புகிறான். பாண்டவர்களை முற்றழிக்கவே துடிக்கிறான். துரியோதனன் ஏன், எதற்காக எதிர்நிலைநாயகனாக மாறினான்? என்பதற்குரிய விடையைத் துரியோதனனின் வாய்மொழியாகவே அளித்துள்ளார்.  துரியோதனன் தன்னுடைய நிலைப்பாட்டினைத் தன் தம்பி குண்டாசியிடம் மனந்திறந்து பகிர்ந்துகொள்கிறான்.

குண்டாசியின் தோளில் கைவைத்து மெல்லிய புன்னகையுடன் துரியோதனன் சொன்னான், “இளையோனே, இவையனைத்தையும் ஏன் இயற்றுகிறேன்? இறுதியில் என்ன எய்துவேன்? என்று எனக்கு இன்றும் தெரியவில்லை. பிறிதொன்றின் மேலேறிச் சென்றுகொண்டிருப்பவன் நான். பெரும்புயலுக்குத் தன்னைக் கொடுக்கையில் சருகு ஆற்றல் கொண்டதாகிறது. பிறிதொரு நிலையிலும் தான் கொள்ளமுடியாத விசையை எய்துகிறது. அழிவாக இருக்கலாம், ஆயினும் அது ஓர் உச்சநிலை. இப்புவியில் பிறந்த ஒவ்வொருவரும் தன்னுள் ஆற்றலை உணருகையில் அந்த உச்சத்தையே கனவு காண்கிறார்கள். அஞ்சித் தயங்குபவர் உண்டு. தங்கள் சுற்றத்தையும் உறவையும் எண்ணி நின்றுவிடுபவர் உண்டு. அவையிரண்டையும் கடப்பவர்கள்கூட அறத்தை எண்ணி அதற்கப்பால் செல்வதில்லை. நான் என் உச்சம் நோக்கிச் செல்லவேண்டுமென்ற எண்ணம் மட்டும் கொண்டவன். அதன்பொருட்டு நான் கடந்த அனைத்து அறங்களையும் நான் நன்கு அறிவேன். ‘அறத்தை மீறாதவனுக்கு முழு விசை இல்லை’ என்பதொன்றே நான் சொல்ல எஞ்சுவது. ஆனால், நான் கடந்த அறங்களின் அனைத்து எல்லைகளிலும் எனது துளி ஒன்று நின்று ஏங்குகிறது. உனது சீற்றத்திலும் விகர்ணனின் துயரத்திலும் மட்டுமல்ல, சுபாகுவின் நிகர்நிலையிலும் என் மைந்தனின் விலக்கத்திலும் வெளிப்படுவதும் நானே என்றான் துரியோதனன். வீம்புடன் தலை தூக்கி, குண்டாசி சொன்னான், “அன்னை முன் நான் உரைத்த வஞ்சினம் ஒன்றுதான். ‘இப்போருடன் என் குடி முற்றழியுமென்றால், என் குருதிமேல் தெய்வங்கள் வீழ்த்திய பழி அனைத்தும் அழிந்து போகட்டும். நம் கொடிவழியில் எவரேனும் ஒருவர் எஞ்சுவாரென்றால்கூட அவர் தூயராக, நிறைவுற்றவராகப் புவி வாழ்த்துபவராக விண்ணேக வேண்டும். அதன் பொருட்டு களத்தில் என் தலைகொடுக்கிறேன் தேவி’ என்று சொன்னேன்.” புன்னகையுடன் அவன் தோளை அழுத்தி, துரியோதனன் சொன்னான், “அதை நானும் வேண்டினேன் என்று கொள்க!” என்று.

‘அறத்தை மீறாதவனுக்கு முழு விசை இல்லை’ என்பதே துரியோதனனின் தரப்பு நியாயமாக இருக்கிறது. அதனாலாலேயே, ‘அறத்துக்குக் கட்டுப்பட்டவனே முழு விசை கொண்டவன்’ என்பதே தருமர் தரப்பு நியாயமாகத் திகழ்கிறது என்று நாம் கருதலாம்.

தருமரின் அதீதஅறத்தை எப்போதும் எள்ளிநகையாடுபவராகவே பீமன் இருக்கிறார். துரியோதனனின் அறமீறல்களைச் சுட்டிக்காட்டி, இளிவரல் செய்பவனாகக் குண்டாசி இருக்கிறான்.

அறத்துக்கும் அறமீறலுக்குமான இழுவிசையே குருஷேத்திரத்தில் போர்வடிவில் நிலைகொள்கிறது. இரண்டுதரப்புகளும் தம்முள் முழுவிசை கொள்ளவே விழைகின்றன. இதையே ‘ஊழ்’ எனலாம். இதனை விளக்க, நாம் நகுலன்-சகதேவனுக்கு இடையில் நிகழும் ஓர் உரையாடலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“கைவிரல்களில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அளவிலும் இயல்பிலும் படைத்த தெய்வங்கள் அறிந்த ஒன்று நமது படைகளில் உறையக்கூடும்” என்றான் சகதேவன். நகுலன், “ஆனால் மானுடர் உருவாக்கும் கருவிகள் மானுடக் கைகளைவிட பலமடங்கு விசையும் ஆற்றலும் செயல்முழுமையும் கொண்டவை. அவற்றில் இந்த மாறுபட்ட இயல்புகளின் தொகுப்புத்தன்மை இல்லை” என்றான். “ஆம் மானுட உறுப்புகளைக்கொண்டு உருவாக்கும் கருவிகள் அவ்வுறுப்புகளை விடத் திறன்மிக்கவை, விசைகொண்டவை. ஆனால், முன்பு வகுக்கப்படாத ஒரு செயலைச் செய்கையில் கருவிகள் தோற்றுவிடுகின்றன. மானுடக் கைகள் தங்கள் வழியை முற்றிலும் புதிதெனச் சென்று கண்டுகொள்கின்றன. கணந்தோறும் மாற கைகளால் இயலும் கருவிகளுக்கு அத்திறன் இல்லை” என்று சகதேவன் சொன்னான்.

இந்த உரையாடலில் இடம்பெறும் ‘படைக்கருவி’ என்ற இடத்தில் நாம் மனிதரையும் ‘மானுட உடற்தன்மை’ என்ற இடத்தில் நாம் ஊழையும் பதிலீடுசெய்து வாசித்துப் பார்க்கலாம். ‘ஊழின் கையில் இருக்கும் படைக்கருவிதான் மானுடர்’ என்ற தெளிவு நமக்குக் கிடைக்கும். இந்தப் பெரும்போர் ஊழின் ஆடல் அல்லாமல் வேறு என்ன?

என்னைப் பொருத்தவரையில் இது ‘வெண்முரசு’ அல்ல; ‘ஜெயமோகனின் மகாபாரதம்’தான். இந்தத் தலைமுறையினருக்கும் இனிவரும் அதிநவீனத் தலைமுறையினருக்கு ‘மகாபாரதம்’ என்பது, ‘வெண்முரசு’ என்றே அமைவுகொள்ளட்டும். வாழ்வியலுக்குரிய அழியாப்பேரறம் இந்த வெண்முரசின் வழியாகவே இனி எக்காலத்துக்கும் ஒலிக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!

முனைவர் . சரவணன், மதுரை

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2021 11:30

June 12, 2021

’சயன்டிஸ்ட்!’

‘இந்த இடத்தை நீங்க இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம்’

நான் முதலில் கண்ட ‘சயண்டிஸ்டுகள்’ இருவர். ஒருவர் உலகம்சுற்றும் வாலிபன் சினிமாவில் வரும் விஞ்ஞானி முருகன். அவர் உலகையே அழிக்கும் அணுகுண்டை தன் சட்டைப்பையிலேயே வைத்திருக்கிறார். தன் காதலியிடம் அதை நிரூபித்துக் காட்டுவதற்காக வீசி எறிந்து மொத்தக் காட்டையும் எரித்துவிடுகிறார்.

ஆனால் ‘கவலைப்படாதே, அதை அணைக்க ஆளை வைத்துவிட்டுத்தான் இங்கே வந்தேன்’ என்கிறார். நேர்மையானவர் மட்டுமல்ல, காதலிக்காக காட்டை எரிப்பவர் மட்டுமல்ல, காதலியிடம் என்ன பேசப்போகிறோம் என்பதையும் முன்னரே அறிந்திருக்கிறார். மேதை! மேலும் விஞ்ஞானி முருகன். எவ்வளவு கற்பனா ஊக்கமுள்ள பெயர்!

எம்.ஜி.ஆர் கிளப் பாடகன் போலிருந்தார். விஞ்ஞானி போல இல்லை. ஆனால் பிரேம் நசீர் ஒரு படத்தில் ரஷ்ய விஞ்ஞானியாக வருவார். சுடிதார் போல கருப்பாக ஒரு அங்கி போட்டு மந்திரவாதிக்குரிய உயர்ந்த தொப்பி வைத்திருப்பார். அங்கிக்கு ஏன் செலவேறிய துணி என எண்ணியிருப்பார்கள். காற்றில் கோட்டு அலையலையாகப் பறப்பதை அப்போதுதான் பார்த்தேன்.

அவர் அறிவியலாளர் என்று நம்புவதற்கு நான் அன்று தயாராக இருந்தேன். பிரியப்பட்ட நசீரிக்கா என்னவேண்டுமென்றாலும் ஆக முடியும்! அவர் அதற்கு முன் சி.ஐ.டி ஆகி “நானொரு சி.ஐ.டீ! அடித்தால் திருப்பி அடிப்பேன்!” என்று பாடியிருக்கிறார். இந்தப்படத்தில் அவர் ரஷ்யமொழியில் பாடவில்லை. ஆனால் மலையாளம் பேசினார்.

”ஆக்சுவலா நான் குவாண்டம் மெக்கானிக்ஸிலேதான் ஆரம்பிச்சேன். எங்கேயோ வழிதிரும்பிட்டேன்”

அதன்பின்னர்தான் சயண்டிஸ்ட் என்பவன் ரகசியமாக பல விஷயங்களைச் செய்பவன் என்னும் எண்ணத்தை அடைந்தேன். பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருப்பவன். ஆகவே கறுப்புக் கண்ணாடி அவசியம். சயண்டிஸ்டுகளுக்கு நல்ல காதலிகளும் அமைகிறார்கள். அவர்களைக் கொல்ல மருவைத்த கொடூரர்கள் வருவார்கள் என்றாலும் சயண்டிஸ்ட் வாழ்க்கை இனியதுதான்.

ஆகவே பள்ளியில் நான் என்னவாக வேண்டும் என்ற கேள்விக்கு சயண்டிஸ்ட் என்று சொல்ல ஆரம்பித்தேன். சயண்டிஸ்ட் ஆகி என்ன கண்டுபிடிக்கப்ப்போகிறேன் என்று ஒரு ஆசிரியை கேட்டுவிட்டார். அதுவரை அதைப்பற்றி யோசிக்கவில்லை. சட்டென்று ஒன்றும் தோன்றவில்லை. பதறிவிட்டேன். எம்ஜியாரை எண்ணி “ஸ்டண்ட்” என்று சொல்லவந்து அடக்கிக் கொண்டேன்.

”இதோ இங்க ஒரு அடிப்படையான தப்பு இருக்கு”

நல்லவேளையாக நசீர் நினைவுக்கு வந்தார். “அணுகுண்டில் இருந்து உலகத்தைக் காப்பாற்றுவேன்” என்று சொல்லிவிட்டேன். பதில் பாராட்டப்பட்டது. எப்படி என்று எவரும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நசீர் செய்ததைச் சொல்லியிருப்பேன். அவரிடம் காலிங் பெல் போல சின்ன சுவிட்ச் இருந்தது. அதை அமுக்கினால் அணுகுண்டு வெடிக்காது.

ஆனால் எங்களூரிலேயே ஒரு சயண்டிஸ்ட் இருந்தார். அவர் சயண்டிஸ்ட் என்று தெரிய ரொம்பநாள் ஆகியது. ஊருக்குத்தேவையற்ற ஆனால் முக்கியமான பல கண்டுபிடிப்புகளை அவர் செய்திருக்கிறார். அதிலொன்று பாட்டு டப்பா.

தேவதை: மனம்தளராம மறுபடி மூணுமாசம் இதே ஆராய்ச்சியை திரும்பப் பண்ணு. மறுபடி மூணுமாசம் அதை உறுதிபண்ணிக்கோ. மறுபடியும் ரிசல்டை பதிவுபண்ணி, விரிவா ஆராய்ஞ்சு உன்னோட பேப்பரை எழுது…

சாத்தான்: அடிச்சு விடு மாப்ளே…யாருக்குத் தெரியப்போகுது.

எங்களூரில் வாழை, நெல் ஆகியவற்றில் வந்திறங்கும் பச்சைக்கிளிக் கூட்டங்களைத் துரத்த டப்பா கட்டி தொங்கவிடுவார்கள். அவை காற்றில் ஆடும்போது ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு ஓசையெழுப்பும். அது எம்.எஸ்.விஸ்வநாதன் ஜோசப்ஃ கிருஷ்ணா வழியாக எம்ஜியார் படங்களுக்கு அமைக்கும் கிளைமாக்ஸ் இசையோசை போல இருக்கும். கிளிகள் பறந்துபோகும் என்பது எதிர்பார்ப்பு. காற்றில் ஊரே ஓலமிடும். அதை காற்றின் ஓசையென்றே எண்ண நாங்கள் பழகியதுபோல நாய்களும் பசுக்களும் பழகியிருந்தன. கிளிகளும்தான்.

ஞானப்பன் என்ற எங்களூர் தொழில்நுட்பன் அந்த டப்பாக்களில் தாளத்தை அல்லது இசையை கொண்டுவர முடியுமென நிரூபித்தான். டப்பாவில் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரு கழி ஒரு சுழலும் காற்றாடியுடன் தொடர்பு கொண்டது. காற்றாடி சுற்றும்போது அந்தக் கழியின் மறுநுனி வில்லாக இழுத்துக் கட்டப்பட்ட மூங்கிலில் உள்ள வெவ்வேறு நார்களில் விழுந்து விழுந்து எழும்.

”அதுவா? ஆராய்ச்சி நடுவிலே என்னோட வலதுமூளையும் அப்பப்ப முழிச்சுகிட்டு செயல்பட்டுடும்”

விளைவாக காற்றடித்தால் கழி அந்த நார்களின் இடைவெளிக்கு ஏற்ப டப்பாமீது தாளமிடும். மூன்று டப்பாக்கள் அவ்வாறு சேர்த்து வைத்திருக்கப்படும். ஆகவே மணி, முரசு, முழவு ஆகிய மூன்றும் சேர்ந்து ஒலிக்கும். காற்றடிக்கும்போது டண்டண் டணாக்கு டண் டண் டணாக்கு டம் டம் டம் என தாளமெழுவது மெய்யாகவே திகைப்பூட்டியது.

ஆனால் மறுநாள் விடியற் காலையில் தோட்டத்தில் காலைக்கடமைக்குச் சென்ற அச்சுதன் நாயர் காட்டுக்குள் முரசும் மணியும் ஒலிக்கக் கேட்டார். சங்கொலியும் கேட்டதாக அவர் சொன்னார். நாலைந்து நாள் கழித்து மலைவாதை அப்பச்சியையே நேரில்கண்டதாகச் சொல்ல ஆரம்பித்தார். கையில் கொடுவாளும் முழவும் சங்கும் வைத்திருந்தது. ஒருகையில் சூலாயுதமும்.

”இந்த ஆராய்ச்சியோட அடிப்படையே புரியலை. பாதிப்பேருக்கு வெறுந்தண்ணியை மருந்தா குடுத்திருக்காங்க. மிச்சபாதிபேருக்கு வேறமாதிரி வெறுந்தண்ணியை மருந்தாக்குடுத்து ரிசல்டை ஒப்பிட்டுப் பாத்திருக்காங்க”  

அலறியடித்து எழுந்து அங்கே அதற்கு முன் கழிக்கப்பட்டிருந்த முந்தைய மாலை, அன்றுகாலைக் கடன்களில் வழுக்கி அவற்றின் மேலேயே விழுந்து உருண்டு புரண்டு எழுந்து அலறி துள்ளி துள்ளி ஓடிவந்து வீட்டு முற்றத்தில் விழுந்து வலிப்பு கொண்டார்.

அவரை தொட்டு தூக்க முடியாமல் மேலே பழையச்சாக்கை போட்டு சாக்கோடு தூக்கவேண்டியிருந்தது. முகத்தில் தண்ணீரை அடித்தபோது விழித்துக்கொண்டு “மலைவாதை அப்பச்சி!” என்று சொல்லி மீண்டும் மயங்கினார்.

“வாடையை பாத்தா குட்டிச்சாத்தான்னுல்லாடே தோணுது!” என்று தங்கையா நாடார் சொன்னார்.

”அடடா! இந்த ஆளுக்கு நாப்பது வயசுதான் இருக்கும். இவன் செத்ததனாலே இந்த சிட்டியோட சராசரி ஆயுள் 0.35 சதவீதம் கீழே போய்டிச்சே…”

ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகும் வழியில் ஓடையில் அவரைப் போட்டு புரட்டிப்புரட்டிக் குளிப்பாட்டினார்கள். காலாலேயே அவர் உடலை தேய்த்ததாகச் செய்தி. ஆஸ்பத்திரியில் நான்குநாள்  ‘ஊசிகுத்தி, வட்டு விழுங்கி‘ படுக்கையில் கிடந்தார்.

அப்பாவும் தங்கையா நாடாரும் சென்று ஆராய்ச்சி செய்து அந்தத் தானியங்கி இசைக்கருவியைக் கண்டுபிடித்தனர். ஞானப்பனுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது. “எளவு ஆளுகளை கொன்னிருவான் போலல்லா இருக்கு. லேய், இனி நீ இது வல்லதும் செய்தே, அண்ணையோட நீ ஆளு தீந்தே..போ போ” என எச்சரித்து அறிவியலாளர் விடப்பட்டார்.

”இந்த ஃபார்முலா எதுக்கும் சமம் காட்டலை. ஆனாலும் பாக்க நல்லா இருக்கு”

ஆனால் ஞானப்பனின் தாகம் அடங்கவில்லை. அவனுக்கு வாட்ச் மற்றும் கடிகாரம் மீது ஆர்வமிருந்தது. ஸ்ரீதரன் நாயருக்கு ஒரு கருவி செய்து கொடுத்தான். அவர் திருவனந்தபுரம் வானொலியின் அடிமை. மதியம் இரண்டரை மணிக்கு அதில் ஒலிபரப்பாகும் ஒருமணிநேர மலையாளச் சினிமாப்பாடலுக்காக ஏங்கி காத்திருப்பார்.அதில் தோய்ந்து அன்றெல்லாம் அதே நினைப்பாக இருப்பார்.

ஆனால் நாளெல்லாம் ரேடியோ ஒலிக்க அவர் மனைவி ஒத்துக்கொள்ளவில்லை. ரேடியோ ‘கண்டமானிக்கு’ கரண்டை செலவழிப்பதென்பது ஒரு நம்பிக்கை. ஏசுதாஸ் கரண்ட் செலவில்லாமல் பாட ஒப்புக்கொள்ளுவாரா என்ன? ஆகவே ஒரு மணிமுதலே கடிகாரத்தை ஓரக்கண்ணால் பார்ப்பார்.

ஞானப்பனின் கருவி சரியாக  இரண்டரை மணிக்கு ரேடியோவை ஆன் செய்துவிடும். அது சரியாகவே வேலை செய்தது. ஆனால் விடியற்காலை இரண்டரை மணிக்கு அவர்கள் வீட்டில் எழுந்த ஓலத்தை கேட்டு அத்தனைபேரும் எழுந்து தடிகள் டார்ச் விளக்குகளுடன் நாலாபக்கமும் பாய்ந்து அதன்பின் கண்டுபிடித்தனர், அது ரேடியோவேதான்.

யூக்லிட்டின் [ஜியோமிதிப்] பூனை

ஞானப்பனின் பல கருவிகளை இப்போது நினைவுகூர்கிறேன். ஒரு மூங்கில் கழி போன்ற கருவியை கலப்பையில் கட்டிவிட்டு மேழி மீது ஒரு கருங்கல்லையும் தூக்கி வைத்தால்போதும் கலப்பை ஆழ உழுதுசெல்லும்.மாடு இழுக்கும் விசையால் ஒரு வில் முறுகி ஓர் இடத்தில் விடுபட்டு  சரியாக திரும்ப வேண்டிய இடத்தில் கழி காளையின் புட்டத்தில் மெல்லிய தட்டு ஒன்றை தட்டும். மாடு அதுவே உழுதுகொண்டிருக்க உழுபவன் அமர்ந்து பீடி பிடிக்கலாம். அதை காளைவண்டியில் மாட்டினால் மாட்டின் பின்பக்கம் அவ்வப்போது அடிவிழும். வண்டிக்காரன் தூங்கலாம்.

ஆழமான ஓடையில் நீர் அருவிபோல கொட்டும் விசையைக் கொண்டே ஓர் உருளையைச் சுழலச்செய்து அதில் சுற்றப்பட்ட கயிற்றைக்கொண்டு ஓடைநீரை வாளியில் அள்ளி மேலே கொண்டுவந்து அங்கிருக்கும் வீட்டுக் கொல்லையில் ஊற்றும் ஒரு கருவியை அவன் கண்டுபிடித்தான். அது ஒருநாள் இயங்கியது. நீர் குடமில்லாமலேயே மேலே வருவது வியப்படையச் செய்தது

”எல்லா ஃபார்முலாவையும் சுத்திவளைச்சு ஒரு சதுரம் போட்டுட்டா அது ஒருங்கிணைந்த தியரியா ஆயிடுமா என்ன?”

மறுநாள் ஒரு சின்னப்பயல் அந்த வாளியில் ஏறியமர்ந்து கயிறு உடைந்து அவன் ஓடைக்குள் விழுந்து அடிபட ஞானப்பனின் கண்டுபிடிப்பு வசைபெற்றுத் தந்தது. பயலை எல்லாரும் கொஞ்சினார்கள். அவனுடைய சாகச உணர்வுக்காக. ‘சொன்னபேச்சு கேக்கமாட்டான்’ என்பது பயல்களுக்கான பாராட்டுச் சொல்.

ஆனால் சைக்கிள் டைனமோவை ஒரு காற்றாடி வழியாகச் சுழலச்செய்ய வீட்டுக்கு மின்விளக்கு அமைக்கும் அவனுடைய திட்டம் பாராட்டப்பட்டது. அப்படிச் செய்வது சர்க்கார் விதிகளுக்கு மாறானது, கரண்ட் என்பது சர்க்கார் சொத்து என்று பில்கலெக்டர் நாணப்பன் சொன்னதனால் அதை எவரும் மேற்கொண்டு ஆதரிக்கவில்லை.

”அறிவிப்பு. அபாயகரமான பொருள். விபத்து ஏற்பட்டால் ஆயிரம் வருடம் இந்த ஏரியாப்பக்கம் வராதீர்கள்!”

நான் பள்ளிக்கு பின் அறிவியலே படிக்கவில்லை. அப்போதே ஐன்ஸ்டீன் கொள்கைபற்றி எனக்கு சொல்லித்தந்தனர். அது மிக எளிதாக இருந்தது. எனக்கே தெரிந்த ஒரு விஷயத்தைச் சொல்லி ஒருவர் நோபல் பரிசு பெற்றுவிட்டது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. “ஒண்ணுமில்லடே, பாட்டை கணக்கா மாத்திட்ட்டான். நோபல்பரிசு குடுத்தானுக” என நண்பர்களிடம் சொன்னேன்

அதன்பின் நான் கண்டுபிடிக்க நினைத்த பல பொருட்களை ஏற்கனவே பலர் கண்டுபிடித்திருப்பதை அறிந்தேன்.நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது யா.பெரெல்மானின் பொழுதுபோக்குப் பௌதிகம் என்னும் நூல் வாசிக்கக் கிடைத்தது. அதிலுள்ள பல பொருட்களை என் கற்பனையுடன் கலந்து செய்து இளம் அறிவியலாளனாக புகழ்பெற்றேன். பத்து பைசா போட்டால் ஒரு நாரங்காமிட்டாய் அளிக்கும் இயந்திரம் அதில் முக்கியமானது.

 

ஞானத்தின் பாதை

ஆனால் அது நாணயம் அளவு எடையுள்ள பானையோட்டுச் சல்லியை போட்டாலும் மிட்டாய் அளிப்பதை விஸ்வநாதன் கண்டு சொல்ல எனக்கு மிட்டாய்களுக்குப் பதிலாக ஓட்டுச்சல்லிகள் கிடைத்தன. அப்போதுதான் ஞானப்பனின் துயரத்தை அறிந்தேன். அறிவியலாளர் அறிவியலை கண்டுபிடிக்கிறார்கள். சாமானியர் அதை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் நாவலில் ஒரு வரி. “அறிவியல் கண்டுபிடிப்புகள் எங்கள் கிராமத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கின. முக்கியமாக, தண்டவாளம் போடப்பட்டு ரயில் ஓட ஆரம்பித்தது. மக்கள் அதை தற்கொலைக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்”

 

”உங்களை வேலைக்கு வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி. உங்க கார்பன் காலடித்தடம் எவ்ளவு பெரிசு?”

எட்டுகட்டை டார்ச்சில் ஒரு கம்பியை இணைத்து அதைக்கொண்டு எருமையின் பின்பக்கத்தில் மெல்லிய மின்னதிர்வு அளித்தால் அது சரமாரியாக பால் கறப்பதை குலசேகரத்தில் ஒருவர் கண்டுபிடித்திருந்தார். தற்செயலாக அதைக் கடித்தபோது அவருக்கு சிறுநீர் தன்னிச்சையாகப் பெருகியதிலிருந்து அதை உருவாக்கியிருந்தார். வலிப்பு வந்து இழுத்துக்கொள்பவரின் வாயில் பாட்டரியை கடிக்கக் கொடுக்கும் வழக்கம் முன்னரே இருந்தது.

எருமை பால்கறக்காத போதும் அந்த அதிர்ச்சியை விரும்ப ஆரம்பித்தது. அதை அது என்னவென்று நினைத்தது என தெரியவில்லை. பாட்டரி உரிமையாளரைப் பார்த்தபோதெல்லாம் அது எழுப்பிய ஒலியைக் கேட்டு மாட்டுவைத்தியர் தேவநேசன் நாடார் “எரும அமறுதே, சேர்க்கைக்கு கொண்டுபோகப்பிடாதாலே?”என்றார்.

 

“ஒண்ணுவிட்ட சொந்தத்திலே ஒரு மச்சானை சாப்பாட்டுக்கு கூட்டிவாரதா சொன்னியே, இவன்தானா?” 

எங்களூரின் உச்சகட்ட அறிவியல்பயன்படு பொருட்களில் ஒன்று எவரெடி பாட்டரி. அது டார்ச்சை எரியவைக்கிறது. அந்த ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளும்பொருட்டு அதை சாராய ஊறல்களில் போடுவதுண்டு. அந்த ஊறலை அருந்தினால் கண்கள் பல்பாக ஆகிவிடும்.

மொத்த உடலுமே பல்பாக ஆகிவிட்டதாக தாணப்பன் ஆசாரி புலம்பியதை நினைவுறுகிறேன். “பல்பாகிப் போயிட்டேனே! யே அய்யா, பல்பாகி போயிட்டேனே”

“அது நல்லதாக்குமே ஆசாரியே?” என்று கேட்டதற்கு சீற்றத்துடன் அவர் சொன்னார். “பேட்டரி போனா பீசாகிபோவேனே? பின்ன எனக்க பெஞ்சாதி என்னை மயிருக்கா மதிப்பா?”

 

சிட்னி ஹாஸின் அறிவியல் கேலிச்சித்திரங்கள்

சிட்னி ஹாரீஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2021 11:35

கடவுளை நேரில் காணுதல்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம் , சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்ப திரும்ப வருவது ‘தவம் செய்தான் , கடவுள் தரிசனம் தந்தார்’ என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும் , மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு பாதைக்கு மாறினார் என்றும் படித்தேன். புராணங்களில் இப்படி இருக்கிறது என்றால் , அதற்கு முன்பே இது போலக் கடவுளை நேரில் கண்ட தொனமங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இது போன்ற தொனமங்கள் தோன்றுவதற்கு அடிப்படை அதீதக் கற்பனையா,இல்லை உண்மையிலேயே தியானத்தில் / ஒரே சிந்தனையில் பல நாள் இருந்ததினால் ‘கடவுளை’ காண முடிந்த ஒரு பிரம்மையா அல்லது தவத்தை முடிக்க வேண்டிய கட்டாயமா அல்லது ஒருவித மனத்திருப்தியா அல்லது ஒருவிதமான illusion or hallucination or delusion தோன்றி இருக்குமா?

இது பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்களா என்று தேடினேன் , கிடைக்கவில்லை.இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். புராணங்கள் எப்போதோ நடந்தவை என்ற என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கேள்வி இல்லை, மாறாக அப்படி எழுத/கற்பிக்கத் தூண்டிய psychological feature பற்றியே எனது ஆவல்.

அன்புடன்

கோகுல்

[image error]

அன்புள்ள கோகுல்,

சுவாரசியமான ஒரு கதையுடன் தொடங்கலாம். கார்ல் சகன் எழுதிய தொடர்பு [contact] என்ற அறிவியல்புனைகதையில் கதைநாயகி எல்லி ஓர் ஆய்வகத்தில் விண்வெளியில் வேற்றுயிர்கள் உள்ளனவா என்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கிறாள். விண்ணில் இருந்து வரும் சமிக்ஞைகளைக் கண்காணிக்கும் கருவிகளில் ஒருநாள் ஒரு செய்தி வர ஆரம்பிக்கிறது. அச்செய்தியைப் புரிந்துகொள்கிறார்கள். அது ஒரு இயந்திரத்துக்கான வரைபடம்.

அந்த இயந்திரம் செய்யப்படுகிறது. அதில் எல்லி நுழைந்து பிரபஞ்சத்தின் வெப்பத்துளைகள் வழியாக அதன் குறுக்காக அகாலத்தில் பயணம் செய்து பால்வழியைத்தாண்டி ஒளிவருடக்கணக்குகளுக்கு அப்பால் செல்கிறாள். அங்கே அவள் பிரபஞ்சத்தில் மிகமிக ஆரம்பத்தில் தோன்றிய உயிர்களை, அல்லது பிரக்ஞைகளை சந்திக்கிறாள். அவர்கள் பரிணாமத்தில் பற்பல படிகள் முன்னால் சென்றிருக்கிறார்கள். பல்வேறு பால்வீதிகளில் வாழ்ந்து வாழ்ந்து கைவிட்டுச்சென்றிருக்கிறார்கள். இப்போது அவர்கள் பிரபஞ்சத்தின் அதிபர்களாக, பிரபஞ்சத்தை மேலும் மேலும் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

அந்தப் பரிணாமத்தில் அவர்களின் அகம் விரிவடைந்து பேரறிவாகவும் ஒட்டு மொத்த பிரக்ஞையாகவும் மாறி விட்டிருக்கிறது. அதற்குமேல் உடல் தேவை இல்லை என்பதனால் உடலற்றவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்குக் காலமும் இடமும் இல்லை. தூயபிரக்ஞையாகவே அவர்களால் எல்லியின் பிரக்ஞையுடன் உரையாட முடிகிறது. ஆனால் எல்லியால் அவர்களைத் தன்னுடைய எல்லைக்குட்பட்ட பிரக்ஞையால் அறியமுடியவில்லை. அது அவளுக்குப் பெரும் தவிப்பை உருவாக்குகிறது.

ஆகவே அவர்களில் ஒருவர் அவளுக்கு ஒரு பெரிய மெய்நிகர் உலகை உருவாக்குகிறார். எல்லி சிறுவயதில் தந்தையை இழந்தவள். அவள் நினைவில் அவள் தன் தந்தையுடன் செலவிட்ட கடற்கரை இளவெயிலொளியுடன் அழியா நினைவாக இருந்துகொண்டிருக்கிறது. அந்த நினைவை அவள் பிரக்ஞையில் இருந்தே எடுத்துக்கொள்ளும் அந்த பிரபஞ்சப்படைப்பாளிகளில் ஒருவர் அந்த கடற்கரையை ‘உண்மையில்’ உருவாக்கி அந்தக் கடற்கரையில் அவளுடைய தந்தையாக ‘உண்மையாக’ வந்து அவளுடன் உரையாடுகிறார்.

உலகப்புகழ்பெற்ற அறிவியல் அறிஞரான கார்ல் சகனால் துல்லியமான அறிவியல் தகவல்களுடன் எழுதப்பட்ட இந்த நாவல் அதன் அறிவியலின் எல்லையை மீறிக் கவித்துவம் நோக்கிச் செல்லும் தருணம் இது. பொதுவாக எந்த அறிவியல் புனைகதைக்கும் இல்லாத இலக்கியத்தகுதியை இந்நாவல் அடைந்தது.

இந்த உச்சகட்டம் மிக முக்கியமான ஒரு சாத்தியப்புள்ளியைத் தொட்டுக்காட்டுகிறது. காலத்தின், பிரபஞ்சத்தின், ஆற்றலின், பிரபஞ்சக்கருத்தின் முடிவின்மையைச் சந்திக்க நேரும் மானுடப்பிரக்ஞை எவ்வாறு அதை உள்வாங்க முடியும்? எந்த அளவுக்கு அதைத் தன் பிரக்ஞையால் அள்ள முடியும்? எந்த அளவுக்கு அதை வெளிப்படுத்த முடியும்?

மனிதப்பிரக்ஞை என்பது மனித உடலில் இருந்து விடுபட முடியாதது. விடுபடும் என்றுகொண்டாலும்கூட அது ஓர் உச்சநிலையில் மட்டுமே சாத்தியம். நாம் நம் இருப்பை நம் உடலைக்கொண்டே உணர்கிறோம். அதுவே நம்முடைய சாத்தியங்களின் எல்லை.. மானுட உடல் கால-இடத்தில் அமைந்திருப்பது. ஆகவே நம் அகம் என்பது நாம் நம் உடலின் புலன்கள் மூலம் உணரும் தூலஅறிதலின் நுண்வடிவமாகவே உள்ளது. படிமங்களாலும் மொழியுருவகங்களாலும்தான் நாம் நம் அகத்தை உணரமுடிகிறது, வெளிப்படுத்த முடிகிறது. அகால இருப்பு, தூலமே அற்ற நுண் இருப்பு என்பது சாதாரணமாக நம் அறிதல்களுக்கு அப்பாலுள்ளது.

எல்லியின் அறிதலின் எல்லையும் அதுதான். அவளால் அவளுடைய உடல்சார்ந்த இருப்பைவிட்டு வெளியே பிரக்ஞையைக் கொண்டுசெல்லமுடியவில்லை. ஆகவே அந்த பிரபஞ்சபிரக்ஞைகளை அவளால் உள்வாங்க முடியவில்லை. அதனால் அவர்கள் கனிந்து இறங்கி வந்து ,அவளுடைய எல்லைக்குள் நுழைந்து, தங்களை அவகளுக்காக உருவாக்கிக் காட்டுகிறார்கள்.

அந்த பிரபஞ்ச ஆளுமைகளை ஒரு வசதிக்காகக் கடவுள்கள் என உருவகித்துக்கொண்டால் கார்ல் சாகன் காட்டும் இந்நிகழ்வு அப்படியே எந்த ஒரு இந்து தொன்மத்துக்கும் சமானமானதாக ஆகிவிடுகிறதல்லவா? வேறு வழியே இல்லை, இந்நாவலின் உச்சத்தை இப்படி மட்டுமே சித்தரிக்கமுடியும்.

இன்னொரு வழி உள்ளது . எல்லி அவளுடைய உடல்சார் இருப்பை உதறி பிரபஞ்ச பிரக்ஞையாக அவளே மாறி அவர்களைச் சந்திக்கமுடியும்.

அதாவது கடவுள் மனிதனாக வேண்டும். அல்லது மனிதன் கடவுளாகவேண்டும். அந்த இருவழிகளிலும் இந்து புராணமரபு கடவுளை சந்திக்கும் தருணத்தை எழுதியிருக்கிறது. புராணம் எழுதிய ரிஷி எப்படி அதைச் சொல்ல முயல்கிறாரோ அதைத்தான் நவீன வானியலறிஞரும் முயல்கிறார்.

இந்திய ஞானிகளின் இறையுணர்ச்சியை மேலைநாட்டு அறிவியலாளர்கள் அவர்களின் நிரூபணவாத அறிவியல் நோக்குடன் ஆராய்ந்து நிறையவே எழுதியிருக்கிறார்கள். தியானம் போன்றவை தொடர்ச்சியான தனிமை மூலமும், செயலின்மை மூலமும் கடுமையான சலிப்புணர்ச்சியை உருவாக்கிக்கொண்டு அடையப்படும் பிரமைக்காட்சிகள் என்பதே அவர்கள் பொதுவாகச் சொல்லும் விளக்கமாக இருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு இலக்கியவாசகனும் அன்றாடம் அடையும் சாதாரண இலக்கிய அனுபவத்தை அந்த அறிவியல் மூலம் அவர்கள் விளக்கும்போதே அது எந்த அளவுக்கு அபத்தமானதாகவும் போதாததாகவும் இருக்கிறது என நாம் உணர்கிறோம். அவர்களே பத்து வருடத்துக்கு ஒருமுறை ஒரு விளக்கத்தை மறுத்து அடுத்த விளக்கத்தை முன்வைக்கவும் செய்கிறார்கள். பிரபஞ்சஅனுபவம் போன்ற ஒன்றை எப்படி அவர்கள் தங்கள் தர்க்கங்கள் மூலம் விளக்கிவிடமுடியும்?

எல்லி அவளுடைய பிரபஞ்சப்பயணம் முடித்து திரும்பி வருகிறாள். அவள் பலப்பல ஒளிவருடங்கள் பயணம் செய்து வந்திருக்கிறாள். ஆனால் எல்லாப் பதிவுகளும் அழிந்துவிட்டிருக்கின்றன. காரணம் இந்த உலகின் எளிய தொழில்நுட்பத்தால் அந்தப் பயணத்தைப் பதிவுசெய்ய முடியாது. அவள் இயந்திரத்துக்குள் இருந்த காலம் பூமியின் கணக்குப்படி இருபது நிமிடங்கள். அவள் சொன்னதை எவருமே நம்பவில்லை. அவள் மட்டுமே அறிந்த ரகசியமாக, ஒரு மெல்லிய புன்னகையாக அவளில் தங்கிப்போன ஒன்றாக அந்த ஞானம் எஞ்சுகிறது.

அதுதான் ஞானிகளின் நிலை. அவர்கள் எப்படி அந்த அலகிலா அறிதலை உள்வாங்கிக்கொள்ளமுடியும்? ஒன்று தங்கள் அறிதலின் எல்லைக்குள் அதைக் கொண்டுவந்து அள்ளிக்கொள்ள முடியும். அதாவது தங்களுக்குள் இருக்கும் படிமங்களால் அதைத் தனக்கென அறிந்து கொள்ளமுடியும். அல்லது தங்கள் சுயத்தை முழுமையாக அழித்துக்கொண்டு அதுமட்டுமாக ஆகி அதை அறிய முடியும். அந்த இருவகை அறிதல்களையுமே இந்திய மதங்களில் நாம் காணலாம். பலசமயம் அருகருகே காணலாம். ஏராளமான பாடல்களில் அவ்விரு அறிதல்களுமே ஊடும்பாவுமாகப் பின்னி வெளிப்படுவதைக் காணலாம்.

புத்தரின் கதையில்கூட அவர் அடைந்த உச்ச அனுபவம் தூய அறிதலாக, தன்னை இழந்து அதுவாக ஆகி விரித்துக்கொள்ளும் நிலையாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதுவரையிலான பயணம் எல்லாமே உருவகங்களின் தரிசனங்களகவே இருக்கிறது. அவர் தன் தியானத்தில் மாரனை நேரில் காண்கிறார்.

ஒரு பிரபஞ்ச அனுபவத்தை ஒரு மெய்ஞானி முருகனாக, பெருமாளாக, ஏசுவாக ’நேரில்’ காண்பதை நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். அந்த வடிவங்கள் இங்கே உள்ள மதமரபால் அவர் ஆழ்மனத்தில் மிகச்சிறிய வயதிலேயே நடப்பட்டவை. அவரது கற்பனையால் ,தியானத்தால், நீரூற்றி வளர்க்கப்பட்டவை. அவர் அவ்வடிவங்கள் வழியாகவே சென்றார் என்றால் உச்சகணத்தில் பிரபஞ்ச அனுபவம் அவருக்கு மிக அந்தரங்கமான அந்த வடிவத்தை அடைகிறது.

அதாவது அந்த வடிவங்களைக் குவளையாகக் கொண்டு அவர் அந்தக் கடலை அள்ளுகிறார். அந்த அனுபவம் தன்னை அவ்வடிவங்கள் மூலம் அவருக்குள் நிகழ்த்திக்கொள்கிறது. எல்லிக்கு நிகழ்ந்தது போல. அவரால் அதை அந்தப் படிமங்கள் அல்லது உருவகங்கள் வழியாக வெளிப்படுத்த முடியலாம்.

அலகிலா வெளியாக அந்தப் பிரபஞ்ச அனுபவத்தை உணர்பவர் தன்னை முழுமையாக இழக்கிறார். அவரால் தன்னிலையை உணர முடிவதில்லை. நாராயணகுரு சொல்வதுபோல ’அறிவும் அறிபவனும் அறிதலும் அறிபடுபொருளும் ஒன்றேயாகும் நிலை’ அது. உப்புபொம்மை கடலை அறிதல் போல என ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். அந்த அனுபவத்தை அவர் தத்துவார்த்தமாக ஓர் எல்லைவரை விளக்கலாம். ஒருவேளை ஒரு தகுதியான மாணவனுக்குக் கொஞ்சம் புரியவைக்கவும் கூடும்.

பிரமை அல்லது மனப்பிறழ்வுக்காட்சி அல்லது சுயஏமாற்று என்றெல்லாம் இந்தப் பேரனுபவத்தை முத்திரைகுத்திவிட்டு செல்லலாம்தான். அதைத் தங்கள் நிரூபணவாத அறிவியல் மீது முடிவிலா நம்பிக்கை கொண்ட வெள்ளையர் சிலர் செய்வதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால் அது அறிய விரும்புபவனின் வழி அல்ல. அது நிராகரிக்க விரும்புவனின் வழி.

அந்தப் பேரனுபவத்தைப் பெற்றவர்கள் என அறியப்படுபம் ஞானிகள் எவரும் பிரமைக்கும், மனப்பிறழ்வுக்கும், மெய்யனுபவத்துக்கும் வேறுபாடு சொல்லத்தெரியாத அசடுகளோ மனநோயாளிகளோ எத்தர்களோ ஆக இருக்கவில்லை. நம்மில் மிகச்சிறந்த அறிவியலாளர்களை விட தெளிவான தர்க்கம் கொண்டவர்களாக, நம்மில் மிகச்சிறந்த கவிஞர்களை விட துல்லியமான கற்பனை கொண்டவர்களாக, நாம் ஒவ்வொருவரையும் விட தெளிந்த நடைமுறைப்பிரக்ஞை கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தத்துவநூல்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்கள். சர்வசாதாரணமான லௌகீக விஷயங்களில்கூட மிக நுட்பமான நடைமுறைத் தீர்வுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் அடைந்த அந்த அனுபவம் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதை அறியமுடியாதவர்களின் பிடியில் இருந்து ஒவ்வொருமுறையும் நழுவிக்கொண்டிருக்கிறது. அந்தப் பிரபஞ்ச அனுபவம் என்ன? அதை என்னால் சொல்லமுடியாது. நான் அதை அறிந்தவனல்ல. ஆனால் நான் முழு உறுதியுடன் சொல்கிறேன், அந்த அனுபவம் மானுட சாத்தியமென்பதை நான் என் சொந்த அனுபவத்தால் அறிவேன்

தியானத்தின் இரண்டாம் படிகளில் அந்த உச்ச அனுபவத்தின் சிதறலனுபவங்கள் பலவற்றை அடைவோம். பலசமயம் அவை எதிர்மறையானவை. மிகத்துல்லியமான மெய்யனுபவங்கள் அவை. நம் எல்லாப் புலன்களும் உண்மையாகவே அபாரமான, பயங்கரமான பல வடிவங்களை அறியும். நம் முன் நம்மருகே அவை ‘உண்மையிலேயே’ இருக்கும்.

அவை என்ன? பிரமைகள் என எளிதாகச் சொல்லிவிடலாம். மனப்பிறழ்வு என்று விளக்கலாம். ஆனால் அந்த அனுபவத்தை அறிந்தவனுக்குத் தெரியும் அவை பிரமைகளோ பிறழ்வோ அல்ல என. அவன் மிகத்தெளிவாக மிக சமநிலையுடன் இருப்பதை அவன் அறிவான். நித்யா அதை The Projection என்று சொல்வார். நம்முள் உள்ள, நம்மைச்சுற்றி உள்ள ஒரு விஷயம் தன்னை அந்த வடிவில் வெளிப்படுத்திக்கொள்கிறது. ஒரு மரக்கிளையை அசைத்துக் காற்று தன்னைக் காட்டிக்கொள்வதுபோல

அந்தத் தூலவடிவம் நம்முடைய ஆழ்மனதில் எங்கோ உள்ளது. நமக்கு நம் மரபு தருவது. நம் அனுபவங்கள் மூலம் நாம் திரட்டி உள்ளே வைத்திருப்பது. நாம் அறியும் அந்த அருவமான அகக்கூறு தன்னிச்சையாக அந்தத் தூலவடிவத்தை அந்தக் கணத்தில் எடுத்துக்கொண்டு, தன்னைக் காட்டுகிறது, அவ்வளவுதான். அவ்வாறு நூற்றுக்கணக்கான அகநிகழ்வுகள் தன்னை வெளிப்படுத்தும் அந்த கட்டம் தியானத்தில் மிக ஆபத்தானது. சரியான வழிகளினூடாகக் கடந்துசெல்லவேண்டியது.

ஹரி சிங்கமுகமூடியுடன் தன் தங்கை முன் வருகிறான். தங்கை பயந்து அலறுகிறாள். ஹரி முகமூடியை அகற்றியதும் தங்கை சிரிக்கிறாள். ராமகிருஷ்ணர் சொன்ன உதாரணக்கதை இது. அந்த சிதறும் பிம்பப் பெருவெளியை ஒற்றை பிம்பமாகத் தொகுத்துக்கொள்ள இங்கே அவர் வழிகாட்டுகிறார். எல்லா வடிவங்களும் ஒன்றின் முகங்களே என உணர்வதே ராமகிருஷ்ணர் அளிக்கும் நெறி. அது ஓர் உச்சநிலை அறிதல்.

புராணங்களில் ‘தவம் செய்து கடவுளைக் கண்டான்’ என மிக எளிதாக அந்த அறிதலே சொல்லப்பட்டுள்ளது. புராணங்களைப்பொறுத்தவரை ஓர் உண்மை உள்ளது, அவற்றில் மிக எளிதாக எது சொல்லப்படுகிறதோ எது மிக அடிக்கடி வருகிறதோ அதுவே மிக முக்கியமானது, மிகமிக நுட்பமானது

ஜெ

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Nov 10, 2011 

ஆன்மீகம் தேவையா?

நான் இந்துவா?

தத்துவம் தியானம்-கடிதம்

யோகம்,ஞானம்


யோகம் ஒருகடிதம்

ஆன்மீகம் போலி ஆன்மீகம்

தியானம்


தியானம் ஒரு கடிதம்


பொம்மையும் சிலையும்

ஆன்மீகம் போலி ஆன்மீகம் மதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.