Jeyamohan's Blog, page 965
June 19, 2021
கதாநாயகி கடிதம்-14
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
‘கதா நாயகி’ குறுநாவலுக்கு என் தளத்தில் எழுதிய வாசிப்பனுபவம்:
முதல் பார்வைக்கு இக்குறுநாவல் சிக்கலான, புதிர் போன்ற ஒரு அமைப்பு கொண்ட கதையாகத் தான் தோன்றியது. தொடர்ச்சியாக அனைத்து அத்தியாயங்களையும் ஒரே அமர்வில் வாசிக்கும் போது தான் இக்கதையின் முழு அமைப்பும் வசமானது. கதை ஒவ்வொரு நாளாக வெளிவருகையில், மெய்யன் பிள்ளையைப் பற்றி வரும் பகுதிகள் சுவாரஸ்யமானவையாகத் தோன்றின; முழுக்க வாசிக்கையில் கதையின் கடந்த காலத்தில், கதாநாயகிகளைப் பற்றி வரும் பகுதிகள் மிகுந்த சுவாரஸ்யம் அளிப்பவையாக இருக்கின்றன. வடிவம் சார்ந்து, ஒரு ஆங்கில நாவலின் பழமையான ஆங்கிலம் எடுத்தாளப் பட்டு, அதன் அர்த்தத்தோடு, ஆசிரியரின் கற்பனையும் கலந்து உருவாகியுள்ளது இப்படைப்பு. முன்பு எந்நாவலிலாவது இங்கனம் நிகழ்ந்துள்ளதா?
ஒரு கோணத்தில், இக்கதையை ‘எழுத்தின்’ கதை எனச் சொல்லலாம். வேட்டையாடும் போது, தன் உடல் சமிக்ஞைகளையே மொழியாகப் பயன்படுத்துகிறான் ஒரு காணிக்காரன் இக்கதையில். மிகச் சிறந்த முறையில் தொடர்புறுத்துபவனாக அவனே அக்குழுவில் திகழ்கிறான். மொழியின் இலக்கு தொடர்புறுத்துதல். ஆயினும், அது எழுத்தாக எழுதப் படும் போது, அதில் பேய்களும், தெய்வங்களும், மாயங்களும் குடி கொள்கின்றன என்கிறது இந்நாவல்.
துப்பனுக்கும், கோரனுக்கும், உச்சனுக்கும் ‘எழுத்து’ தெய்வத்தின் வடிவம் தான். கோரன் ‘எ’ என்னும் எழுத்தை தன் நாய்ச் சாமியாகவே பார்க்கிறான். தன் கையில் அதை எழுதிக் கொண்டு, இனி எந்த பாம்பும், தன்னைத் எதுவும் செய்ய முடியாது என தைரியம் கொள்கிறான். துப்பனுக்கும் ‘சா’ எனும் எழுத்து, சாத்தனும் அவன் எதிரில் அமர்ந்திருக்கும் நாயாகவுமே தோன்றுகிறது. ஒவ்வொரு எழுத்தையும் தனக்கே உரிய வகையில், துப்பன் விவரிக்கும் பகுதிகள் மிகவும் அழகானவை, கவித்துவமானவை. அந்த மலையின் காணிக்காரர்களுக்கு, பட்டினியின்றியும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு துப்பன் மூலமாக வழி காட்டிய தெய்வம் தான் எழுத்து. இங்கு எழுத்தின் வழி தெய்வம் எழுந்து வருகிறது.
அதே எழுத்தில் ஹெலெனாவும், எவ்லினாவும், ஃபிரான்ஸஸ் பர்னியும், விர்ஜீனியாவும், தம் ஆழமான உள்ளுணர்வுகளையும், ஏக்கங்களையும், நிராசைகளையும், அவமானங்களையும் இறக்கி வைத்ததாலேயே, பேய்களாக, நிறைவுறா ஆன்மாக்களாக எழுந்து வருகிறார்கள். இவ்வெழுத்து இருக்கும் வரை, வெவ்வேறு கதைகளின் வழியாக, வாசகரோடு உரையாட அவர்கள் அதில் காத்துக் கொண்டே தான் இருப்பார்கள்.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இக்கதாநாயகிகள் ஒரு vertical அடுக்காக இக்கதையில் அடுக்கப் பட்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் எவருடைய கதைக்கும் சென்று வர முடிகிறது. ஹெலெனா, மெய்யன் பிள்ளை அமர்ந்து வாசிப்பதை தன் காலத்திலேயே கண்டு விடுகிறாள். மெய்யன் பிள்ளை ஹெலெனாவை ஸ்தூல உருவாக, தொடு உணர்வாக அறிகிறான். இவ்விடத்தில் காலத்தின் வரையறை முழுவதுமாக அழிந்து விடுகிறது.
எழுதுபவளும், எழுதப்படுபவளும், வாசகியும் ஒரேயிடத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். மெய்யன் பிள்ளையோ ஹெலெனாவோ வாசிக்கும் போது, அவர்கள் மனதில் உள்ளது தான் புத்தகத்தில் வரிகளாக வருகிறது. மீண்டும் அதைத் தேடும்போது அது அவ்வாறாக இருப்பதில்லை. புற விவரணையாக இது இக்கதையில் வந்தாலும், நுட்பமாக, எப்புத்தகமும் வாசகர் மனதில் இவ்வாறே அல்லவா நிகழ்கிறது.
இங்கு காலமும், இடமும், அர்த்தமும் அழிந்த மாய உருவைக் காட்டுகிறது எழுத்து.
விர்ஜீனியாவும், ஃபிரான்ஸஸ் பர்னியும், எவ்லினாவும், ஹெலெனாவும் என இந்த நான்கு பாத்திரங்களும் ‘அதிகாரத்திற்காக சுரண்டப் படுதல்’ என்னும் சரடினால் இணைக்கப் பட்டிருக்கிறார்கள். இச் சுரண்டல ஒவ்வொருவர் கதையிலும் ஒவ்வொரு வேடம் போட்டுக் கொள்கிறது. விர்ஜீனியாவின் கதையில் பாசம், குடிப்பெருமையை பாதுகாத்தல் என்னும் வேடம், ஃபிரான்ஸஸ் பர்னிக்கு இலக்கியம் , எவ்லினாவுக்கு மதம், ஆன்மீகம் என்னும் வேடம், ஹெலெனாவுக்கு காதல் என்னும் வேடம்.
கிழட்டுப் புலி தன் அதிகாரத்தை பிரகடனப் படுத்த, தனக்கு உபயோகமில்லாத பொருட்களின் மீதும் சிறு நீர் கழித்து வைப்பதைப் போன்றது தான், இக்கதையில் வரும் கிழட்டு கனவான்கள் கதா நாயகிகளின் மீது செலுத்தும் அதிகாரம், என்று எனக்குத் தோன்றியது. கர்னல் சாப்மென் ஹெலெனாவின் உடல் மீது செலுத்தும் வன்முறையை, புலி பாய்ந்து பிடிக்க வருவது போலத் தான் கற்பனை செய்து கொள்கிறாள் அவள்.
இக்கதையின் ‘கனவான்கள்’ அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் விர்ஜீனியாவின் கதையினால், அவள் விர்ஜீனியஸால் தலை சீவி கொலை செய்யப்படும் நிகழ்வால், இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார்கள். கர்னல் சாப்மன், ‘கள்ளமின்மையைத் தயக்கமின்றி கொல்வதே அதிகாரத்தை அடைவதற்கான வழி’ என்று வெளிப்படையாகவே ஹெலெனாவிடம் பிரகடனம் செய்கிறான். வரிசையாக வந்தமரும் குரங்குகளில் தாட்டான் குரங்கையும், அன்னை குரங்கையும், விவரம் புரியாமல் தந்தையை இழுத்துப் போக முயலும் குட்டிக் குரங்கையும் தயக்கமின்றி கொன்று விட்டு, பெருமை பட்டுக் கொள்கிறான். ஹெலெனாவின் உடல் மீதும் அதே போன்று தயக்கமின்றி அத்துமீறலை நிகழ்த்துகிறான். இவற்றைக் கண்டும் கேட்டும் அனுபவித்தும் கொண்டிருக்கும் ஹெலெனா, புலி பூனையாகி காத்திருப்பதைப் போல, அனைத்திற்கும் புன்னகை என்னும் வேடத்தை இட்டுக் கொண்டு காத்திருக்கிறாள்.
சரியான சமயத்தில் புலியை நோக்கி ஒரே உதையில் அவனைத் தள்ளி விடுகிறாள் ஹெலெனா. அவன் கொடுத்த பிரேஸ்லெட்டையும் அவன் மீதே கழற்றி வீசி விட்டு ஓடுகிறாள். மெக்கன்சியை கொன்றதும் அவளாக இருக்கலாம். அவள் கொடுக்கும் உதை, சுரண்டப் பட்டவர்கள் அனைவருக்காகவும் அவள் அதிகாரத்தின் மீது கொள்ளும் பழி என்று கொள்ளலாம்.
கர்னல் சாப்மெனோடு வருபவர்களில் ஃபிரேஸர் மட்டும் பளிச்சென்று அவள் கண்ணுக்குத் தெரிவதும், ஒரு தலையசைப்பும் வாழ்த்தும் மட்டுமாக ஒரு நாள் முழுவதுக்குமான, அவளோடான உரையாடலை அவன் நிறுத்திக் கொள்வதும் கவித்துவமான பகுதிகள். இவை வேறொரு கதையைத் தீற்றிச் செல்கின்றன.
ஃபிரான்ஸஸ் பர்னி தன் மார்பகங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு விடுதலையுணர்வு அடைவதை, அவள் உடல் மீதும், அவளின் பெண்ணெனும் தன்னிலையின் மீதும், அவளின் ஆன்மா மீதும், நடந்த அத்துமீறலுக்கான எதிர்வினையாக புரிந்து கொள்ளலாம், கேன்ஸருக்காகத் தான் என்றாலும்.
ஃபிரான்ஸஸ் பர்னியின் அதீத கசப்பும் காழ்ப்பும் கொண்ட பேச்சுகள், பெண்களைப் பற்றிய அதீத கருத்துகள் இவையெல்லாமே அவளுடைய எதிர்வினையின் பகுதிகள். அவளிடமிருந்த கேன்ஸர் கட்டிகள் அவை என்று தோன்றுகிறது. பெண்களுக்கிடையே வாள் உரசிக் கொள்வது போல நடக்கும் பேச்சுகள் அவர்களுக்கு நடந்த ஒரு விதமான mental conditioning என்று தான் தோன்றுகிறது. பெண்களையே பெண்களுக்கான checks and balances ஆக உபயோகப்படுத்திய காலத்தின் பிரதிபலிப்பு அது. (இப்போதும் அது அவ்வாறு தான்) பெண்களின் இத்தகைய பேச்சுகள் ஒரு set of accepted transactions-ன் பகுதிகள். யாரிடமோ, எங்கோ validation தேடுபவை. ‘To belong/to conform’ என்னும் நிர்ப்பந்தத்துக்காக செய்யப்படுபவை. யாராவது ஒரு பெண் அக்காலகட்டத்தில் புதிதாக சரியாக ஏதாவது பேசியிருந்தாலும் தனிமைப் படுத்தப் பட்டிருப்பாள். (ஏன், இக்காலத்தில் கூட, ஒரு பெண், expected/conditioned lines-ஐ மீறுவது scandulous தான். அடுத்த தலைமுறையில் அது அவ்வாறு இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலளிக்கக் கூடியது, என்று நான் நம்ப விரும்புகிறேன்.)
இக்கதையில் ஒரே நேரத்தில், வெவ்வேறு உலகங்கள் காட்டப் படுகின்றன. ஒரு எழுத்து கூடத் தெரியாத, குரங்குகள் சாப்பிட்ட மிச்சத்தையும் உண்ணும், மின்சாரத்தை புலியை வெல்லும் தெய்வமாகப் பார்க்கும் காணிக்காரர்களின் கற்கால உலகம்; தங்கைகளுக்கு திருமணம், தாய் தந்தையரின் கடமைகள் என அனைத்தையும் தன் தோள் மேலேற்றிக் கொண்டு, வாய் பேசாத, காது கேட்காத பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராகும்-லௌகீகத்தில் கழுத்தளவு புதைந்திருக்கும் மெய்யனின் சமகால உலகம்; 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேயர்களின் தளுக்கும், பூடகப் பேச்சுக்களும், நாகரீகம் என்னும் பெயரில் செய்யும் அனைத்து சுரண்டல்களும், அதிகாரத்தின் மீதான வேட்கையுமென ஒரு மேட்டுக்குடி உலகம்; எப்படியும் இப்பள்ளியை நடத்தி காணிக்காரர்களுக்கு எழுத்தறிவித்து விட வேண்டும் என்று மெய்யனின், எப்படியும் கல்வி கற்று விட வேண்டும் என்று துப்பனின் லக்ஷியங்களால் நிறைந்த ஒரு உலகம், என பல விதமான உலகங்கள் இங்கு co-exist செய்கின்றன. எந்த சமுதாயத்திலும் இது போன்ற வித விதமான உலகங்கள் ஒரே நேரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன அல்லவா? இவ்வுலகங்களுக்கிடையே செல்வது தான் time travel என்று சொல்லத் தோன்றுகிறது.
இத்தனை உலகங்களில் விடுபட்ட ஒரு உலகம் மெய்யனின் அகவுலகம். Schizophrenia-வின் அனைத்து நிலைகளும், அறிகுறிகளும், சிகிச்சையும், ஆலோசனைகளும் கூட இக்கதையிலேயே கொடுக்கப் பட்டிருக்கின்றன. இது வலிமையான ஒரு தர்க்க ரீதியான கோணத்தை கதைக்கு அளிக்கிறது.
தர்க்கரீதியாகவும், மாயங்கள் நிறைந்ததாகவும், அதிகாரத்தின் கதையாகவும், பெண்களின் கதையாகவும், காட்டின் கதையாகவும், மலைக்குடிகளின் கதையாகவும், லக்ஷியவாதிகளின் கதையாகவும், காணிக்காரர்களுக்கு நடைபெறும் ஒரு காலமாற்றச் சித்திரத்தை, வரலாற்றுப் பார்வையில் அளிப்பதாகவும், அனைத்துமாகவும் இருக்கிறது இக்கதை.
அன்புடன்,
கல்பனா ஜெயகாந்த்.
கதாநாயகி,கடிதங்கள் -5 கதாநாயகி கடிதங்கள்-4 கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1வெண்முரசு ஆவணப்படம் – கனெக்டிகட் மற்றும் போர்ட்லாண்ட்
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம். இதுவரை ஏழு திரையரங்குகளில், வெண்முரசு ஆவணப்படம், வெளியிடப்பட்டு, வாசக நண்பர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்ற வாரத்தில், ஆவணப்படம் பார்த்த, சத்யராஜ்குமார் எனும் நண்பர், தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மதியம் வெண்முரசு ஆவணப்படம் திரையிட்ட தியேட்டருக்கு சுமார் 80 பேர் வந்திருந்தார்கள். ஒரு இலக்கிய நிகழ்வுக்கு, அதிலும் கோவிட் சமயத்தில் இவ்வளவு பெரிய கூட்டம் என்பது மகிழ்ச்சிக்குரியது” எனக் குறிப்பிட்டிருந்தார். ஆவணப்படத்தில் பேட்டிகளும், இசையும் அழுத்தமாக வந்திருக்கின்றன என்ற பாராட்டுடன், அதன் தாக்கத்தை வெளியிட, Jermantown Rd, என்பதை ஜெயமோகன் ரோடு என்று வாசித்ததாக சொல்லியிருந்தார்.
அடுத்து திரையிடவிருக்கும் இரு நகரங்களின் விபரங்கள் கீழே.
ஹார்ட்போர்டு, கனெக்டிகட்:
ஜுன் 27 2021 – ஞாயிற்றுக்கிழமை – 3:00 PM
Apple cinemas waterbury
920 Wolcott St, Waterbury, CT 06705
தொடர்புக்கு – பாஸ்டன் பாலா, bsubra@gmail,com, Phone – 978-710-9160
போர்ட்லாண்ட், ஓரேகன் :
ஆகஸ்ட் 7, சனிக்கிழமை – 5.00 PM to 7.00 PM
Clinton Street Theater,
2522 SE Clinton St, Portland, OR 97202
தொடர்புக்கு : பிரபு, prabumrgm@gmail.com Phone – 971-717-4223
வெண்முரசு ஆவணப்படத்தைப் பற்றிய பொதுவான விபரங்களுக்கு, vishnupuramusa@gmail.com-க்கு தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
June 18, 2021
அஞ்சலி: எஸ்.ரமேசன் நாயர்
குமரிமாவட்டம் உருவாக்கிய படைப்பாளிகளில் ஒருவர் எஸ்.ரமேசன் நாயர். மலையாளக் கவிஞர். திரைப்பாடலாசிரியர். திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றையும் மு.கருணாநிதி எழுதிய நூல்களையும் மொழியாக்கம் செய்தவர். நாராயணகுரு பற்றிய நூலுக்காக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர். கோவிட் தொற்றால் இன்று [18-6-2021] காலமானார்.
எஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அகாடமி விருது
நட்சத்திரங்கள் தெரியும் தருணம்
எழுதுபவர்கள் அனுபவங்களை அப்படியே பதிவுசெய்ய முதலில் முயல்கிறார்கள். அப்படியே பதிவுசெய்ய முடியாமல் அதை உருக்கி உருமாற்றுபவர்களே புனைவுக்குள் செல்கிறார்கள்.
அருண்மொழி அவள் இளமையை எழுதமுற்பட்டபோது அந்தர்வாகினியாக தஞ்சையில் ஓடும் காவிரியை கர்நாடக சங்கீதமாக உருவகிக்கும் இடத்தில் புனைவுக்குள் சென்றாள். அதை அப்போதே சுட்டிக்காட்டினேன். அவளுடைய எல்லா கட்டுரைகளிலும் அந்த புனைவம்சம் எப்போதுமிருந்தது. ரஷ்ய இலக்கிய வாசிப்பை இமையமலைகளின் உருகாத பனியுடன் ஒப்பிட்டிருப்பதிலும் நவீனக்கவிதையின் அழகியல் இருந்தது.
அந்த அழகியல் இன்னும் நுட்பமாக வெளிப்பட்ட கதை – கட்டுரை இது. ஓர் உணர்வுக்கொந்தளிப்பின் நிலை [catharsis ] அதன் உச்சத்திற்கு அப்பால் உன்னத தரிசனமாக [sublime] ஆவதை இயல்பாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. அந்த தன்மய பாவமும் கண்ணீரும் இல்லையென்றால் அந்த விண்மீன்கள் கண்களுக்குப் பட்டிருக்காது
நேரா நிர்வாகம்
“சொன்ன நேரத்திலே, சொன்ன பணத்திலே வேலையை முடிச்சிட்டேன்”
“ஜாஸ்தியா குடுத்துட்டோமோ?”
என்னிடம் பலர் நேரில் கேட்கும் கேள்வி ‘நேரமேலாண்மை’ பற்றியது. அது ஒருவகை ஆணாதிக்கச் சொல்லாடல் என்பது என் எண்ணம். நேரம் அப்படியெல்லாம் நம் சொல்லும்பேச்சை கேட்காது. அதேசமயம் “அப்பவே தலைதலையா அடிச்சுகிட்டேன் கேட்டியா?”என்று நம்மை இடித்துரைக்கவும் செய்யும்.
நேரத்தை என்ன செய்வதென்பது பெரிய சிக்கல்தான். இங்கே தோல்பாவைக்கூத்து நாடகத்தில் உச்சிக்குடும்பனுக்கு ஒரு பைசா கிடைக்கும். அதை கையில் வைத்துக்கொண்டிருப்பான். என்ன செய்வதென்று தெரியாது. “எங்கிட்ட ஒரு பைசா இருக்கே! யாருக்கு வேணும் ஒரு பைசா? ஒரு பைசா இருக்கே!” என்று பாடிக்கொண்டிருப்பான்.
”இப்ப உனக்கு முப்பது வயசு. அஞ்சே வருசத்திலே நீ எங்க இருப்பேன்னு கற்பனை பண்ணிப்பாரு”
“முப்பத்தஞ்சிலே”
யாருமே பொருட்படுத்தாதபோது “யாருக்குமே வேண்டாமா? எங்கிட்டே ஒருபைசா வாங்க யாருக்குமே தைரியம் இல்லியா? எங்கிட்ட ஒரு பைசா வாங்க பயப்படுறாங்க பிக்காலிப்பயக்களா?” என்று சொல்ல ஆரம்பிக்கும்
ராமன் அதைக் கேட்டு தொந்தரவு தாங்கமுடியாமல் ஒருபைசாவை கடனாக வாங்கி அவனை அமைதிப்படுத்துவார்.ஆனால் மறுநாள் அரண்மனையின் வாசலில் வந்து அமர்ந்துகொண்டு “ராமன் எங்கிட்ட கடனாளி! அய்யோ ராமன் எங்கிட்ட கடனாளி” என்று பாட ஆரம்பிப்பான் உச்சிக்குடும்பன்.
”வியூகம் வரைஞ்சதெல்லாம் போரும். போய் ஏதாவது வேட்டையாடி கொண்டு வா. பசிக்குது”
கோபம் கொண்ட ராமன் பைசாவை எடுத்து உச்சிக்குடும்பனுக்கு விட்டெறிவான். உச்சிக்குடும்பன் அதைப்பொறுக்கிக்கொண்டு போய் முச்சந்தியில் அமர்ந்து “எங்கிட்ட வாங்கின கடனை ராமன் திருப்பித் தந்துட்டானே…” என்று சொல்ல ஆரம்பிப்பான்.
நேரமும் அப்படித்தான். வேலை மிச்சமிருந்தால் அய்யய்யோ வேலை மிச்சமிருக்கிறதே. முடிந்துவிட்டால் அடாடா, ஏதாவது தவறாகச் செய்துவிட்டோமா? சரியாக நேரம் செலவழிந்திருந்தால் என்ன ஓய்வே இல்லையே. ஓய்வெடுக்கையில் நேரத்தை வீணடிக்கிறோமா?
”புதிய நேரமேலாண்மை செயலி… அமுக்கினா உங்க காலண்டரும் கடிகாரமும் அப்டியே மறைஞ்சிரும்”
என்னைப் பொறுத்தவரை நேரமேலாண்மைக்கான பாடத்தை நான் சின்னவயசிலேயே கற்றிருந்தேன். அன்றெல்லாம் மூத்த பயல்கள் சின்னவன்களை தூக்கி குளத்தில் வீசிவிடுவார்கள். சின்னவன்கள் உயிர்வெறியுடன் கைகாலடித்து மேலே வரும்போது நீச்சல் தெரிந்துவிடும். மிகவும் மூழ்கிவிட்டால் பாய்ந்து காப்பாற்றிவிடுவார்கள்.
செம்பட்டை நரேந்திரன் நேராக கடப்பாரைபோல அடித்தளம் நோக்கிச் சென்றான். அவனை தூக்கி எடுத்து படுக்கவைத்து அமுக்கி நீரை எல்லா துளைகளிலிருந்தும் வெளியேறச் செய்து பார்த்தால் கால்சட்டைப் பையில் எதிரிகளை தாக்குவதற்கான கருங்கல்சில்லுகள், மாங்காயை உடைப்பதற்கான குழவி, இரும்புக்குண்டுகள் என ஏகப்பட்டது வைத்திருந்தான். தரையிலேயே அவன் கொஞ்சம் மூழ்கித்தான் நடப்பான் என நினைவுகூர்ந்தேன்.
”டைம் மேனேஜ்மெண்ட் சூப்பர் ஐடியா. ஆனா அதுக்கு எனக்கு எங்க நேரமிருக்கு?”
நேரத்தை நிர்வாகம் செய்ய சிறந்த வழி நேரத்தின் மேல் கையில் கிடைத்த எல்லாவற்றையும் தூக்கி வைக்காமலிருப்பதுதான்.”நேரமே இல்ல, என்ன பண்றதுன்னே தெரியல்ல” என்று ஒர் இளம் நண்பர் சொன்னார். அதை அனுதாபத்துடன் செவிமடுத்தபின்னர் சாதராணமாக “இப்ப வாரதிலே என்னென்ன சீரியல்ஸ் பாக்கலாம்?”என்றேன். அவர் ஒரு இருபது நெட்சீரியல்களைச் சொன்னார். தரவரிசையும் படுத்தினார். எஞ்சிய நேரத்தில் அவருக்கு கழிப்பறை சென்று சிறுநீர்கழிக்க நேரம் கிடைப்பதே ஆச்சரியம். அல்லது ஒருவேளை ரப்பர் பை ஏதாவது பொருத்தியிருக்கிறாரா என்று தெரியவில்லை.
அத்துடன் நேரச்சிதறல்கள்.உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பதுபோலத்தான் இந்த சமூக ஊடகச் சூழலில் நாம் நம்மை உணர்கிறோம். நாம் நாநூறாகப் பெருகிப்பரவியிருப்பதாக பிரமையும் அடைகிறோம். நிமிடங்களுக்கொருமுறை டிவிட்டர், வாட்ஸப், ஃபேஸ்புக் நோட்டிஃபிக்கேஷன்கள் கூவிக்கொண்டிருக்க வாழும் ஒருவன் எதைச் சிந்தித்தாலும் ஒரு நிமிடநேரமே அது நீடிக்கமுடியும்.
”செஞ்சே ஆகவேண்டிய நூறு விஷயங்களை பட்டியலிட்டேன். முதல்ல செய்யவேண்டியது மட்டும் 99 இருக்கு…”
அக்காலத்தில் திருவரம்பில் பாச்சு ஆசான் என்பவர் இருந்தார். வயது தொண்ணூறு இருக்கும். திண்ணையில் காலையிலேயே வந்து அமர்ந்துவிடுவார். அவ்வழியே செல்பவர்கள் அவரிடம் “பாட்டா, இன்னும் போவல்லியா?”என்று கேட்டுவிட்டு அவர்கள் பாட்டுக்கு செல்வார்கள். கிழவர் “போறது உனக்க அம்மைக்கம்மைலே… அவளை நான் ஏறியிருக்கேன்லே…நாறப்பயலே, பீறப்பயலே” என ஆரம்பித்து வசைச்சூறாவளியை கிளப்புவார்.
கொஞ்சம் ஓய ஆரம்பிக்கும்போது அப்பாலிருந்து இன்னொருவர் வந்து “பாட்டா, போவல்லியா?” என்று கேட்டுவிட்டுச் செல்வார். மீண்டும் வசை மழை. அருகே பெட்டிக்கடையில் அமர்ந்திருக்கும் கொச்சுநாணன் அவ்வழி வரும் சிறுவர்களிடம் ‘அந்தாலே போயி அப்பச்சிகிட்டே போவல்லியான்னு கேட்டுட்டு வாங்கலே, ஆளுக்கொரு புளிச்சமிட்டாய் இனாம்’ என ஏவி விடுவான்.
”இங்க சொற்கத்திலே காலண்டர் இல்ல, கடிகாரமும் இல்ல. முடிவிலிதான். ஆனாலும் டைம் மேனேஜ் பண்ண முடியலை”
ஊருக்கு எவராவது புதியவர்கள் வந்தால் “அந்தா வயசாளி இருக்காருல்லா? அவரு கோயிலுக்கு போகணும்னு வந்து இருக்காரு… நீங்க போறப்ப பாட்டா போவலியான்னு ஒரு வார்த்தை கேட்டிருங்க. சனங்க அவருகிட்டே பேசுறது அவருக்கு இஷ்டமாக்கும்” என்று சொல்லி அனுப்புவார்கள்.
ஒரு கட்டத்தில் பாட்டாவிடம் காகங்கள், கோழிகள், வண்டிகளின் ஆரன்கள் எல்லாமே ‘போவலியா?”என கேட்க ஆரம்பித்தன. வசைபாடி தளர்ந்து திண்ணையிலேயே சரிந்து தூங்கினாலும் அதே கேள்வி. போய்விட்டார். இந்த நோட்டிஃபிகேஷன்கள் என்பவை நம்மிடம் ‘போகலியாடே?”என்றுதான் கணந்தோறும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.
”கொட்டாவிவிட்டு நெளியறதுக்கு ஆறுஇண்டர்வெல் விடுவோம். உங்க அலுப்பை அதன் அடிப்படையிலே சரியாத் திட்டமிட்டுக்கிடுங்க”
நான் அரசூழியனாக இருந்தவன். அங்கே காலமென்பது ஆயிரங்காலட்டைக்கு உரியது. ஆயிரம் கால்களால் பத்தாயிரம் அடியெடுத்து வைத்தாலும் அரை இஞ்ச் தொலைவுதான் காலம் நகர்ந்திருக்கும். அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பதெல்லாம் அரசு அலுவலகத்தில் செல்லுபடியாவதில்லை. அம்மி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்தே அங்கேதான் இருக்கிறது.
அரசு அலுவலகக் காலம் இரண்டு வகை. எழுநேரம் விழுநேரம் என அதை வகுத்திருக்கிறார்கள். காலை பத்துமணிக்கு வந்ததுமே அரைமணிநேரம் அதிபுயலனாக வேலை செய்து, மெல்ல சுருள்வில் தளர்ந்து ,மதியத்தை நெருங்கும்போது சொட்டுத்தண்ணீர் தரையில் விழுவதுபோல இரண்டு நிமிடத்துக்கு ஒரு லொட் என்னும் மேனிக்கு டைப்ரைட்டரில் எழுத்துக்களை தட்டும் கூட்டம் விழுநேரம் கொண்டது.
‘டைம் மேனேஜ் பண்ண என்னோட செல்போன் ரொம்ப உதவியா இருக்கு. நான் அதை ஆஃப் பண்ணி வைச்சிருவேன்”
எழுநேரம் கொண்டவர்கள் பத்து மணிக்கு வந்ததும் மெல்ல ஃபைல்களை அடுக்கி வைக்கிறார்கள். பேனாவுக்கு மை போடுகிறார்கள். சோம்பல் முறிப்பது, காது குடைவது, கனைத்துக்கொள்வது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். ஃபைல்களை மீண்டும் அடுக்கி வைக்கிறார்கள். வெற்றிலை, பொடி போட்டுக்கொள்கிறார்கள். வெளியே போய் பீடி பிடிக்கிறார்கள். டீ குடிக்கிறார்கள். ஃபைல்களை மீண்டும் அடுக்கி வைக்கிறார்கள்.
ஆனால் மதியம் ஒருமணிக்கு பிறர் சாப்பிடக் கிளம்பும் நேரத்தில் தலை கலைந்திருக்க, முகம் வியர்த்து வழிய, கழனிநீர் குடிக்கும் எருமைபோல மேஜைமேல் குப்புறக் கவிழ்ந்து கடும் உழைப்பைச் செலுத்திக்கொண்டிருப்பார்கள். டைப்ரைட்டர்கள் துள்ளி அதிரும். சூழ்ந்திருக்கும் காற்றிலேயே அதிர்வுகள் இருந்துகொண்டிருக்கும். பொதுவாக இவர்கள்தான் அலுவலகத்தில் நல்லபெயர் வாங்குபவர்கள்.
”கண்டிப்பா சொன்னநேரத்துக்குள்ள சொன்ன பட்ஜெட்டுக்குள்ள முடிச்சுத்தாரேன். ஆனா நீங்க எனக்கு ஜாஸ்தி நேரமும் பட்ஜெட்டும் ஒதுக்கித்தரணும்”
பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்து நண்டுசிண்டுகளை எழுப்பி சோறூட்டி சீரூடையில் திணித்து பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு கணவனை அலுவலகம் செலுத்திவிட்டு பஸ்பிடித்து ஓடி மூச்சிளைக்க அலுவலகம் வந்தாகவேண்டும். அதற்குள் அன்றைய நாளின் ஊக்கமிகு பொழுது முழுக்கவே தீர்ந்துவிட்டிருக்கும். அதன்பின் ஓய்வுநிலைக்கு உடலும் உள்ளமும் சென்றுவிடுகின்றன. பெரும்பாலானவர்களின் கண்கள் பாதி மூடியிருக்கும். இதை ’அர்த்த நிமீலித நேத்ரம்’ என்று காளிதாசனும் ‘பாதிவிழிகள் மூடிக்கிடக்கும்’ என்று கண்ணதாசனும் சொல்கிறார்கள்.
இதை நான் கவனித்திருக்கிறேன். புதிதாக வேலைக்கு வரும் பெண்கள் சரசரவென பேசுவார்கள்.“சாரெம்மோவைப்புட்டப்பண்ணியிருக்கிறதைப்பாத்தார்டரையனுப்பியிருங்கநான்போயரைமணிநேரங்கழிச்சுவரேன்” என்று சொற்றொடரே சொல்லென திகழும். ஈராண்டு அரசுப்பணிக்கு பிறகு “சார்” அதன்பின் யானை உள்ளே புகுந்து உள்ளே செல்லும் இடைவெளி. “எனக்கு” அதன்பின் யானைகள். “கொஞ்சம்…” அதன்பின் களிற்றியானைநிரை. “உடம்பு சரியில்லை”. அதே வேகத்தில்தான் நம் சொற்களும் சென்றடைகின்றன. அரசுப்பணி என்பது ஒரு மாபெரும் டிராங்குலைசர்.
”சொல்றதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. நீ வேலைக்கு வந்து ரெண்டுநாள்தான் ஆகுது. ஆனா வேலையிலே மூணுவாரம் பிந்தியிருக்கே…”
அதீத உற்சாக மேலதிகாரிகள் வந்து சிலகாலம் அலுவலகத்தை ரணகளமாக்குவார்கள். “ஏய் அந்த ஈஓ ஃபைலை எடு. என்னது இந்த ஃபைலை இன்னும் புட்டப் பண்ணலியா? ஏன் இது தூங்கிட்டிருக்கு?” அரசு கோப்புகள் தூங்கியநிலையிலேயே பறப்பவை என அவருக்குத் தெரிவதில்லை. அவருக்கு எப்படி எதிர்வினையாற்றுவதென்று அனைவருக்குமே தெரியும். அனைவருமே பழந்தின்று கொட்டைபோட்டு அதை முளைக்கவும் வைத்தவர்கள்.
ஃபைல்களை அகழ்ந்து அகழ்ந்து எடுப்பார்கள். வெறிகொண்டு வேலைசெய்து மொத்தத்தையும் அவர் மேஜைக்கே கொண்டுசென்று குவிப்பார்கள். ஆயிரக்கணக்கான முடிவுகள் எடுக்கப்படவேண்டும். ஆயிரம்வகை பிழைகள் திருத்தப்பட்டு புதியபிழைகள் செய்யப்பட்டாக வேண்டும். அவர்மேல் மொத்த அலுவலகமே இடிந்து பொளிந்து விழுவதுபோல. ”கோப்பாலடிப்பது” என்று அதற்குப்பெயர்.
”என்னைய வேலைக்கு வச்சுக்கிட்டா மத்தவங்ககிட்டே குரைக்கிறத நான் செய்வேன். நீங்க உருப்படியா வேற வேலைச்செய்ய முடியும்…”
அதன்பின் அதைப்பற்றிய நினைவூட்டல்கள். இடைவெளியே இல்லாமல் நாலைந்துபேர் முறை வைத்து அவர் அறைக்குள் சென்று வேலைகளை நினைவூட்டுகிறார்கள். இப்போது சவுக்கு நம் கையில். புட்டம் அவருடையது.
சீனியர் ஹெட்கிளார்க் உள்ளே சென்று பணிந்து “சார், அந்த ஜிஓவை மட்டும் கொஞ்சம் பாத்துட்டீங்கன்னா…” என இழுக்கிறார்.
அவர் முறைத்து “அதுக்கு பி.ஓ வேணுமே?”
“அது எஸ்.ஏ ஃபைலிலே இருக்கு சார். அதுக்கு உண்டான எல்லா பேப்பர்ஸும் பி-1 ஃபைலிலே இருக்கு. அதை படிக்கிறதுக்கு முன்னாடி பி.ஏ.1 ஃபைலை படிச்சிருங்க…” என்று மேலும் பணிவாகச் சொல்கிறார். “அதுக்குண்டான ஆர்டர்ஸை ஏ-1 ஃபைலிலே வரிசைக்கிரமமா குறிச்சீங்கன்னா பின்னாடி ரெஃபர் பண்ண ஈஸியா இருக்கும்”
“சரி” அதிவிரைவரின் கண்கள் கண்ணாடிக்குள் இடுங்குகின்றன. பொறுடா பொறு என அவர் தன்னை ஆள முயல்வதை கைவிரல்களின் துடிப்பிலிருந்து காணமுடிகிறது.
”நான் எவ்ளவு பிஸியா இருந்தாலும் நான் எவ்ளவு பிசின்னு விளக்கமாச் சொல்றதுக்கு டைம் கண்டுபிடிச்சிருவேன்”
”அதிலே என்ன குழப்பம் வந்தாலும் ஜி4 ஜி2 ஃபைல்களை தெளிவாப் படிச்சிருங்க. ஜி2 ஃபைலுக்கு நாலஞ்சு அனெக்ஸ் இருக்கு. அதையும் அத்துபடி பண்ணிருங்க. ஆனால் அதெல்லாம் ஏகே3 ஃபைலிலே ஒரு சிங்கிள் ஸ்டேட்மெண்டா இருக்கு. அதை செல்வி எழுதிட்டிருக்காங்க. அதுவும் சேத்தாத்தான் மொத்தமா ஒரு பிக்சர் வரும். அப்பதான் நம்மாலே எஸ்2 எஸ்4 ஃபைல்களை இதோட இணைச்சு புரிஞ்சுகிட முடியும். செல்வி எழுதின உடனே இப்ப கொண்டுவரேன்”
“சரி”
“அவங்க எழுதுறதுக்கு இப்ப இந்த ஜிஓ ஃபைல் தேவைப்படுது”
அவர் வெடித்துச் சிதறும் ஒரு தருணம் உண்டு. அதன்பின் “நாசமாப் போற ஃபைலு…” என்று விம்முவார். “எங்கியாம் போயிச் சாவுதேன்…செத்து ஒளியுதேன்”
அந்த ஹெட்கிளார்க் எப்போதும் அரசுப்பணியில் கனிந்தவராகவே இருப்பார். இனிய தண்ணென்ற குரலில் “சார், சர்க்கார் வேலை அப்டித்தான் அது பாட்டுக்கு போய்ட்டே இருக்கும். ஆத்த நம்ம கொல்லைப் பக்கமாட்டு திருப்பிவிட்டு குண்டி களுவிக்கிடுதேன்னு சொன்னா நம்ம குண்டிதான் நாறும்”
”டைம் மேஜேன்மெண்ட் எல்லாம் பொய். மேனேஜ் பண்ண முடிஞ்சா நான் இப்பவும் 16 வயசுக்காரியாகவே இருந்திருப்பேன்”
அந்த அற்புதமான பழமொழியை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. அப்படி நிர்வாகவியலில் அதியற்புதமான பல பழமொழிகள் வடகேரளத்தில் இருக்கையிலும் தென்குமரிக்கு வந்தபின்னரும் கேட்டிருக்கிறேன். நடுவே தர்மபுரியில் இருந்தபோது அவர்கள் ’அறுக்கமாட்டாதன் கையிலே ஆறு அரிவாளாம்’ என ஒரே பழமொழியை வைத்துச் சமாளிப்பதைப் பார்த்தேன். சுக்லாம்பரதரம் விஷ்ணும் வேகத்தில் தினசரி நாலைந்துபேர் நாலைந்து தடவை அதைச் சொல்வார்கள்.
கொஞ்சுதமிழ் குமரியில் “கொத்துறது ஒருதடவை, கொக்கரிக்கிறது நூறு தடவை’ என்ற சொல் அரசூழியரின் பணிப்பாணியை வரையறுத்துச் சொல்கிறது. ”கிண்டுறது கிலோமீட்டருக்கு கொத்துறது குன்றிமணியை” என்பது இதன் அடுத்த நிலை. “அறுக்கப்பிடிச்சாலும் கியா கியா வளக்கப்பிடிச்சாலும் கியா கியா’ என்பதும் அரசூழிய மனநிலை பற்றியதே
”நான் உன் மேஜையை திட்டாம தாண்டிப்போனா அதையே பாராட்டா எடுத்துக்கோ”
’குடிக்கிற நீரில் குஞ்சை விட்டு ஆழம்பார்ப்பது’ நாஞ்சில்நாடனால் புகழடைந்த குமரிப்பழமொழி. அதுவும் ஃபைல் நிர்வாகத்தில் ஒரு வழிமுறையாகக் கருதப்படுகிறது. “ஆப்பை எடுக்கப்போயி அண்டி மாட்டிக்க்கிட்டுது” என்பது பொதுவாக அடிக்கடி நிகழும் நிர்வாகச் சிக்கல்.
“ஆளி வாயிலே அம்பளங்கா” என்று ஒரு பழமொழி உண்டு. யாளியின் வாய்க்குள் கிடக்கும் உருளைக்கல் போல அங்கேயே காலாகாலமாக விழுங்கவும் துப்பவும்படாமல் கிடக்கும் உண்மைகள். அது மலபார் பழமொழி. அங்கே ஆனைமொழிகள் அனேகம். “ஆனைச்சூத்திலே எலி ஏறினா அதைப்பிடிக்க பூனையை ஏற்றி விட முடியுமாடே?” உண்மையில் பல அரசு நடவடிக்கைகள் இவ்வகைப்பட்டவை என்பதை ஆய்வோர் அறிவர்.
”திங்கக்கிழமை என்னோட வாரச்செயல்திட்டத்தை ரெடி பண்ணணும். செவ்வாக்கிழமை அதை திட்டம்போடுவேன். புதன்கிழமை திட்டத்தை மறுபரிசீலனை பண்ணுவேன். வியாழக்கிழமை திட்டத்தை கம்ப்யூட்டரிலே ஏத்துவேன். வெள்ளிக்கிழமை அடுத்தவார திட்டம் போடவேண்டிய வேலை வந்திரும்”
”சொறிபோலே சோலியில்லை” என்பதை மலபாரின் சகாவு சிவராமன் சொல்லி அறிந்தேன். அரசூழியர்களை தொடர்பணியில் வைத்திருக்கும் நெறி அது. சொறியச்சொறியச் சொறி என்பதே அந்த வேலையின் இயல்பு. “குந்தம் நட்டு வெள்ளம் கோரணுமாடே?” என்று ஒருமுறை ஒரு வேலையைப்பற்றி நாராயணன் மாஸ்டர் கேட்டார். ஈட்டியை நட்டு அதை முளைக்கவைக்க நீர் இறைத்தல். அரசில் நாம் செய்வது வேறென்ன?
”குறிச்ச்சிட்டா மறிச்சுநோக்கண்டா” [குறிப்பெழுதி வைத்தால் திரும்ப அதை புரட்டிப் பார்க்கவே வேண்டாம்] என்பது குமாஸ்தாக்கள் அறிந்திருக்கவேண்டிய வேலை. எங்கும் நம் கைப்பட ஒரு குறிப்பை எழுதிவிட்டால் நாம் எப்போதுமே மாட்டிக்கொள்வதில்லை, அக்குறிப்பை படிக்காத மேலதிகாரிதான் அதற்குப் பொறுப்பு. கோப்புகளை அவற்றுக்குரிய புதைகுழிக்குள் அடுக்கிவிட்டு நாம் நம் ஜோலியை பார்க்கலாம்.
புதிய புதிய ஐடியாக்களை நீசொல்லணும். ஆனா அதெல்லாம் நான் இருவத்தைஞ்சு வருசமா செஞ்சிட்டிருக்கிற மாதிரியே இருக்கணும்…”
ஆனால் ஃபைல்களை புதைத்து வைப்பதிலும் நெறிகளுண்டு. “பீயைப் புதைக்கலாம் தீயைப் புதைக்கக் கூடாது” என்று என்னிடம் அம்புரோஸ் நாடார் சொன்னார். எரிந்து ஏறி தோட்டத்தை அழித்துவிடும், ஆனால் இரண்டும் வண்ணம் ஒன்றாகவே தெரியும். தொட்டுப்பார்த்து வேறுபாட்டை அறியவேண்டும். “தொட்ட ஃபைலும் விட்ட குசுவும் நம்ம கையிலே இல்ல” என்ற நிம்மதி இருக்கும் குமாஸ்தாக்கள் அல்லல் அடைவதில்லை.
நான் ஓராண்டிலேயே கற்றுக்கொண்டேன். இல்லாமலிருப்பதே குமாஸ்தாவாக இருப்பதன் சிறந்த வழி. ஏனென்றால் அரசு என்பது உண்மையில் சிறிதும் பெரிதுமான குமாஸ்தாக்களால் ஆனது. அதுவும் இல்லாமலிருப்பதையே தன் இருப்பாகக் கொண்ட ஓர் அமைப்பு
நேரநிர்வாகம், துல்கர் ரஹ்மான் பாணி
30 நிர்வாகம்
20 ஊதிப்பெருக்கவைத்தல் 11ஆப்’ 10பகடை பன்னிரண்டு 9சிரிக்கும் ஏசு 8டேனியல் லாபெல் 7ஸாரி டாக்டர்! 6ஆடல் 5கம்யூட்டர் யுகத்துக் கடவுள் 4 மனம் 3குருவும் குறும்பும் 2இடுக்கண் வருங்கால்… 1ஆன்மிகமும் சிரிப்பும்அமுதமும் காந்தியும் – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் Sir,
நலம்தானே? என்று கேட்டுத்தான் இந்த கடிதத்தை தொடங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் தளத்தில் தினமும் வெளிவரும் கார்டூன் கட்டுரைகளையும், குறிப்பாக நேற்று வெளியான “இலக்கியம்!!!” கட்டுரையையும் வாசித்த பிறகு தற்போதைய சூழலில் இந்தியாவிலேயே உங்கள் அளவுக்கு நலமாக (at least மனதளவில்) இருப்பவர்கள் குறைவுதான் என்று தோன்றுகிறது. எனவே இந்த கடிதத்தை வாசிக்கையிலும் அப்படியே இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில், மேற்கூறப்பட்ட அந்த கேள்வியை கேட்காமல் விட்டுவிடுகிறேன். (நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு கடிதம் எழுதுவதால் கொஞ்சம் அதிகமாகவே முறுக்குப் பிழிந்துவிட்டேன், தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.) “இலக்கியம்!!!” கட்டுரையை வாசித்த பிறகு இந்த கடிதத்தை எழுதுவது ஒரு விதத்தில் முரணாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த கடிதம் ஏற்கனவே ஒரு வருடம் தாமதமாக எழுதப்படுவதால் அந்த முரணை ஒதுக்கிவிட்டு எழுதுகிறேன்.
புனைவுக்களியாட்டின் சிறுகதைகளில் அப்போது வாசிக்காமல் விட்ட சிறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அப்படித்தான் “அமுதம்” கதையை நேற்று வாசித்தேன். சில வருடங்களுக்கு முன் Domnique Lapierre எழுதிய Freedom at Midnight நூலை வாசித்தபோது அதில் காந்தி நோவாகாளியில் தனியாக நடக்கும் The Lonely Pilgrim of Peace என்று தலைப்பிடப்பட்ட ஒரு புகைப்படம் இருந்தது. அந்த புகைப்படம்தான் என் மனதில் பதிந்த காந்தியைப் பற்றிய முதல் ருபாய் நோட்டு அல்லாத சித்திரம். இந்த கதையை வாசித்த உடனே மனதில் தோன்றிய முதல் உருவம் அந்த நோவாகாளி காந்தியின் உருவம்தான். மனிதகுலம் முழுவதற்குமான ஒரு போராட்ட முறையையும், இந்தியாவின் அரசியல்/சமூக மறுமலர்ச்சியையும் வடிவமைத்தவர், நம் சுதந்திரத்திற்குப் பின் முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கப்பட்டது நாம் அறிந்த வரலாறே. காந்தியின் கொலை பற்றிய ஆஷிஷ் நந்தியின் கட்டுரையில், “காந்தியின் மீதான வெறுப்பு என்பது அவரது பெண்மை மீதான வெறுப்பே. அந்த வெறுப்பு அன்றைய பெரும்பாலான இந்தியர்களின் மனதில் இருந்த வெறுப்புதான். அதன் வெளிப்பாடு மட்டுமே நாதுராம் கோட்ஸே.” என்ற வரிகளை முதன்முதலாக வாசித்தபொழுது நான் அடைந்த அதிர்ச்சி இன்றும் நினைவிருக்கிறது. அந்த அதிர்ச்சியை “அமுதம்” கதையில் மீண்டும் அடைந்தேன்.
அமுதம் கதையின் அம்மச்சி பசுதான் அந்த ஊரின் ஊற்றுமுகம். மலை தெய்வமான அவள் வரும் முன் அந்த ஊர் இந்த உலகில் தனித்து விடப்பட்ட, யாரும் தேடி வராத ஒரு சராசரி கிராமம். அவளில் இருந்து பிறந்ததே அந்த ஊர். சொந்த கன்றை தின்று செரித்து அவள் ஊட்டிய அமுதே அவர்களில் உயிராகவும், உழைப்பாகவும், அழகாகவும் விளைந்தது. ஆனால் உலகின் அத்தனை அமுதும் நஞ்சாகும் ஒரு தருணத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவள் காருண்யத்தை உண்டு வளர்ந்தவர்களுள் அது கசப்பாகவும் நஞ்சாகவும் திரியும் தருணம் கதையில் அபாரமானது. அவளை முதலில் அதிசயமாகவும், பிறகு வெறும் கதையாகவும், பிறகு ஊருக்கே தாயாகவும், பிறகு ஊரை பிடித்த பேயாகவும், கடைசியில் அவளையே கொன்று ஒரு தெய்வமாகவும் அவர்கள் நிலைக்கேற்ப மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவளை உண்மையில் அறிபவர்கள் அந்த ஊரின் பெண்கள் மட்டுமே. அப்பெண்களில் அம்மச்சியின் அமுது பொலிவாகிறது, ஆற்றலாகிறது. அதுவே அந்த ஊரின் ஆண்களில் கசப்பாகிறது. அவர்கள் அம்மச்சியை வெறுப்பதன் வழியே அவர்கள் வீட்டுப் பெண்களின் ஆற்றலை வெறுக்கிறார்கள், அஞ்சுகிறார்கள். அதற்கும் மேலாக அவர்களுக்குள்ளே இருக்கும் பெண்மையை அஞ்சுகிறார்கள்.
மேற்கூறப்பட்ட அனைத்து வரிகளிலும் அம்மச்சி என்ற வார்த்தைக்கு பதிலாக காந்தி என்ற வார்த்தையை பயன்படுத்தினால் நாம் ஆஷிஷ் நந்தியின் விளக்கத்தை வந்தடைந்துவிடுகிறோம். தன்னை உயிரோடு கொளுத்தும்போதும் அந்த ஊரை சபிக்காமல் எரியும் அம்மச்சி, நோவாக்காலியில் தனியே நடக்கும் காந்திதான். காந்தி கொலை வழக்கில் கோட்ஸேவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களில் ஒன்று காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவனை தூக்கிலிட அனுமதிக்க மாட்டார் என்பதுதான். அந்த எரியும் தைலப்புல் காட்டில் அமைதியாக நிற்கும் அம்மச்சி என் மனதில் முழுவதும் காந்தியாகவே நிறைந்திருக்கிறாள்.
காமதேனுவான அம்மச்சியை எதிர்க்க அந்த ஊர்க்காரர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் அவள் காமம். அதைக்கொண்டே அவள் மீது மலினங்களை எறிகிறார்கள். அவளை அதைக்கொண்டே எதிர்க்கிறார்கள், அழிக்கிறார்கள். அவள் பெண்மையும் அதன் காமமும் அவர்களை அஞ்சவைக்கிறது. அந்த அச்சத்தையே அவர்கள் வெறுப்பாகவும் கசப்பாகவும் காட்டிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் அஞ்சுவது அவளையும் அவள் அமுதுண்டு வளர்ந்த அவள் மகள்களையும்தான். அவளை அவர்கள் அதற்காகவே எரிக்கிறார்கள். நாம் காந்திக்குச் செய்தது அதைத்தானே. காந்தியின் வருகைக்கு முன் அத்தனை பெண்கள் பங்கேற்ற ஒரு அரசியல்/சமூக இயக்கத்தை இந்த உலகில் எவரும் கண்டதில்லை. வளர்ந்த நாடுகளின் suffragette இயக்கங்களைவிடவும் பல மடங்கு பெண்களின் பங்களிப்பை காந்தியால் உருவாக்க முடிந்தது. அவர் போராட்ட முறைகள் ஆண்களைவிட பெண்களுக்கே அணுக்கமாக அமைந்தது. அந்த பெண்மையே காந்தியை பெரும்பாலான இந்தியர்கள் வெறுக்க காரணமாக இருந்தது. பெண்மையை அடக்கி ஆளும் ஆண்மையே சிறந்தது எனும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தில் வளர்ந்த கோட்ஸேவுக்கு காந்தியின் மீது உண்டான வெறுப்பை, அம்மச்சியை ஆபாசமான வார்த்தைகளை கூவிக்கொண்டே எரிக்கும் ஊர்க்காரர்களிடம் நாம் கண்டுவிடுகிறோம். இன்றளவும், காந்தியைப் பற்றி வசைபாடும் பெரும்பாலானவர்கள் அவரை அவர்களின் பாலியல் வக்ரங்களால்தானே எதிர்க்கிறார்கள். அவள் அமுதுண்டு வளர்ந்து, பிறகு அவளையே எரித்த ஊர்க்காரர்கள்தானே நாம் அனைவரும்.
அமரர் கி.ரா. ஐயா எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலில், அந்த ஊர் மக்கள் ஒரு காட்டு காளையில் இருந்து ஊர் பசுவை சினையாக்கி, ஒரு காரிக் காளையை பெற்று, அதன் காமத்திற்காகவே கோவில் மாடாக வளர்ப்பார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அதே காளையை, அவர்களின் தேவை தீர்ந்ததும், அதன் கொட்டத்தை அடக்க காயடித்து விடுவார்கள். அந்த கதையை வாசித்தபொழுது அதன் முரணையும், காமத்தையும் நினைத்து வியந்தேன். ஆனால், நேற்று அமுதம் கதையை வாசிக்கையில், இந்த கதையின் வரலாற்று, தத்துவ, மரபு சார்ந்த பல அடுக்குகள் என்னை பல தளங்களில் பிரம்மிக்க வைத்தன. காமதேனுவான அம்மச்சியும், அவள் மடியுண்டு வளர்ந்த மகள்களும், அவர்களில் எழும் காமமும் என்னை நெகிழவைக்கின்றன. ஆனால், காமம், வர்கீஸ் குரியன், கௌரி பார்வதி பாய், காமதேனு, என்று எத்தனை திசைகளில் சென்றாலும் ஒவ்வொரு முறையும் மனம் சென்றடைவது அந்த நோவாக்காளி புகைப்படத்தைதான். அந்த புகைப்படமும் தைலக்காட்டில் நின்றெரியும் அம்மச்சியும் என் மனதில் எப்போதும் ஒன்றெனக் கலந்தே இருப்பார்கள்.
அன்புடன்
விக்னேஷ் ஹரிஹரன்
அன்புள்ள விக்னேஷ்
நலம்தான். சிரிக்க ஆரம்பித்தால் எல்லாமே சிரிப்பாக ஆகிவிடும் விந்தையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
உண்மையில் சரித்திரம் முழுக்க அத்தனை தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் நாம் அப்படித்தான் நடத்தியிருக்கிறோம்.
ஜெ
’காடு’ ஆழ்தலின் ரகசியம்- வேலாயுதம் பெரியசாமி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் தளத்தில் வந்த ‘அதிமதுரம் தின்ற யானை’ கட்டுரையை வாசித்தவிட்டு, அந்த உந்துதலில் காடு நாவலை வாசித்து முடித்தேன்.
காடு எந்த அளவிற்கு அழகும், ஆபத்தும், சிக்கலும் நிறைந்ததாக இருக்கிறதோ அதுபோலவே மனித மனங்களும், மனித வரலாறும், மனித வாழ்கையும் இருக்கிறது. கிரிதரன் இயல்பிலேயே கற்பனையாளனாகவும், நுண்ணுர்வாளனாகவும் இருக்கிறான். தன் காமத்தை உன்னதப்படுத்தி காட்டின் மீதும், நீலியின் மீதும் பித்தேறி கபிலனாக தன்னை உருவகித்து உச்சநிலைகளிலேயே வாழ்கிறான். அவனுக்கு நீலி மீது ஏற்பட்டது காதல் அல்ல பிரேமை, அவன் அவளது தூய பெண்மை மீதே பித்தேறி அழைகிறான். அதனால் தான் அவனால் சினேகம்மை, ரெஜினாள் மேரி, மாமியுடன் கூட முடியவில்லை. ஆனால் குட்டப்பன் தழைகீழாக இருக்கிறான். வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் அப்பட்டமாக காண்கிறான். இவன் செய்யும் அனைத்திலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. கிரி அகத்திலும், குட்டப்பன் புறத்திலும் வாழ்கிறார்கள்.
இது ஒரு வகையில் கிரியை நம் செவ்வியல் மரபுடனும், குட்டப்பனை நாட்டார் மரபுடனும் ஒப்பிட்டு எண்ண வைக்கிறது. கிரி கபிலனிலும், கம்பனிலும் திழைக்கிறான். குட்டப்பனிடம் உள்ள ஞானம் அவன் தந்தையின் வாய்வழி கேட்டு அறிந்ததே. இந்நாவல் முழுக்க நாட்டார் மரபும், செவ்வியல் மரபும் ஒன்றை ஒன்று தொட்டு, இயைந்து செல்கிறது. குட்டப்பனும், ஐயரின் சமையல்கார நாயரும் நாட்டார் மரபில் வேறூன்றி நிற்கிறார்கள். கிரி மற்றும் ஐயரின் மனங்கள் நாட்டாரியல் மரபிலிருந்து பெற்றுக்கொண்டே, செவ்வியலில் உழாவி கொண்டிருக்கிறது. கிரி மற்றும் ஐயரின் இசை ரசனையும் செவ்வியலையே நாடுகிறது. நாவலில் ஐயரும், கிரியும் மலைச்சாராயம் முழுக்க குடித்துவிட்டு தித்தித்தாரா தித்தித்தாரா, கொடுங்கல்லூர் பூரப்பாட்டு என பாடிக்கொண்டிருக்கும் சமையல்கார நாயரை சந்திக்கும் இடம் நாட்டார், செவ்வியல் மரபுகள் எப்படி ஒன்றை ஒன்று நிரப்பி, வெளிப்பாடு கொள்கிறது என்பதை சித்தரித்து காட்டும் இடம். நாவல் முழுக்க எந்த அளவிற்கு கபிலர், கம்பர் வரிகள் வருகிறதோ, அதே அளவிற்கே நாட்டார் பாடல்களும் ஆங்காங்கே பாடப்படுகிறது. நாவல் முழுக்க இந்த கூறு துலங்கி கொண்டேயிருக்கிறது.
நாவலின் முடிவில் கிரிதரன், இஞ்சினியர் மேனன் மனைவியுடன் கூடும் இடத்தில் இருவேறு வாசிப்புகள் நிகழ சாத்தியங்கள் இருந்தன.
1) கிரிதரனின் பிரேமை? அந்த பிரேமையின் எல்லை என்ன? அவனில் இருந்த பிரேமை, உன்னதமாக்கப்பட்ட காமம் உடைந்து , அவளுடன் கூடும் இடம் அவன் தன்னை ஒரு விலங்காக உணரும் தருனம். மேனன் மனைவியுடனான காமத்தை உள்ளூர வேண்டி, விரும்பித்தான் ஏற்றுக்கொள்கிறான்.
நீலி இருப்பதை உணர்ந்தும், அவன் காமத்தால் காந்தத்தால் இழுக்கப்படும் இரும்புத்துகள் போல ஈர்த்து கொள்ளப்படுகிறான். இங்கே மனிதன் எவ்வளவு எளிய உயிர் என்பதும், காதல், பிரேமையின் எல்லைகளும், கிரி போன்ற எளிய மனிதர்கள் காமத்தின் பேராற்றல் முன் உடைந்து நொருங்குவதையும் காட்டி செல்கிறது நாவல்.
மேனன் மனைவியின் பருத்த உடல் காமம் எனும் பேராற்றலின் குறியீடாக எழுந்து ஒரு புலி மானை கவ்வுவது போல அவனைக்கவ்வி இறையாக்கி கொள்கிறது. அவளுடன் கூடும்போது, அவன் மனதில் அம்மா, அம்பிகா அக்கா, சினேகம்மை, ரெஜினாள் மேரியின் பிம்பங்கள் எழுந்து மறைகின்றன. அவனது கனவுகளில் மாமி பலமுறை வந்திருக்கிறாள், அவனே மாமியை இரவுகளில் எண்ணி கொண்டுமிருக்கிறான் அவள் இவனை ஆட்கொள்ள நினைத்தவள். ஆனால் அவனுள் பிம்பங்களாக எழுந்த பெண்கள் அப்படியல்ல. நாவலில் கிரி பதின்வயதில் தன் அம்மாவுடன் தூங்கும்போது அவள் அவன் காலை தள்ளிவிட்டு விலகி படுத்துகொள்ளும் இடத்தையும், அவள் பிம்பம் எழும் இடத்தையும் வைத்து (Oedipus Complex) உளச்சிக்கல் என்ற கோனத்தில் ஆராயலாம். மேலும் இத்தனை பெண்களின் பிம்பங்கள் அவனுள் தோன்றியது, அவனுக்குள் உள்ளுரைந்திருக்கும் மீறலையும், அவனது காமம் சராசரி மனிதனின் காமத்தை விட பெரியது என்பதையும் காட்டிச்செல்கிறது. அந்த கலை மனத்தாலேயே அந்த மாபெரும் ஆற்றலால் அடித்து செல்லப்படுகிறான்.
2) நீலி நாகரீகம் என்று நாம் சொல்லி அலையும் போலித்தனத்தின் சிறு சுவடு கூட படியாத, பெண்மையின் ஆதார குணங்களுடன் ( தாய்மை, தன்மைய நோக்கின்மை) இருக்கிறாள். உலகின் அனைத்து இடங்களிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையுடன் இயைந்து, அதன் பேராற்றலை வணங்கி வாழ்ந்த நம் மூதாதையர்கள் ( இந்திய பழங்குடிள், செவ்விந்தியர்கள், அமேசான், ஆப்பிரிக்க பழங்குடிகள்) என அனைவரும் திரட்டி அளித்த தொல்ஞானத்தின் கடைசி துளியென, அதன் ஒட்டுமொத்தத்தின் பிரதிநியாக (கல்வெர்ட்டில் காட்டின் பிரதிநிதியாக வந்து தடம் பதித்துவிட்டு செல்லும் அந்த மிளாவை போல) நாகரீகத்தின் வாசல் முன்பு நின்று கதறி அழுது கொண்டிருக்கிறாள்.
மேனனின் மனைவி நாகரீகம் திரட்டி எடுத்த, நுனி நாக்கு ஆங்கிலமும், சுரண்டலும், அதிகார திமிரும், கருனையின்மையும், நுகர்வு வெறியும், பேராசையும் கொண்ட அறவுணர்ச்சியற்ற நாகரீகத்தின் பிரதிநிதி. அவளது பெருத்த உடல், வியர்வை நாற்றம், ரம் அருந்திவிட்டு தன்னை ஆணாக உணரும் தன்மை அனைத்தும் நாகரீகத்தின் சுரண்டல், அதன்மீது படிந்திருக்கும் ரத்த வாடை, அதன் ஆண் தன்மை (தாக்கும் தன்மை, சுயமைய நோக்கு) கின் குறியீடாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
நீலி ஒட்டு மொத்த தொல்ஞானத்தின் கடைசி துளியென நாகரீகத்தின் வாசல் முன்பு கதறி நின்றிருக்க, நாகரீகம் கதவை தாழிட்டுவிட்டு போகத்தில் திழைத்து கொண்டிருக்கிறது. கிரி அங்கே நெருப்பில் விழும் பூச்சியை போல நாகரீகத்தின் சூட்டிற்கு இரையாகிறான். நாம் அனைவருமே அந்த சூட்டிற்கு இரையாகி கொண்டிருக்கும் நாகரீகத்தின் பிரதிநிதிகள் தானே.
நாவல் வரலாற்றின் அறுபடாத சரடுகளின் வழியே நகர்கிறது. தொல்குடி வாழ்க்கை, மன்னர் காலம், நிலபிரபுத்துவ விழுமியங்களை சுமந்து திரியும் மனிதர்கள், கிறிஸ்தவத்தின் வருகை நாகரீக சமூகமான படித்த வரக்கத்தின் வருகை என ஒரு நீண்ட தொடரை, அதன் இயங்கியலை, மோதலை, உள்முரண்களை, நகர்வை என வரலாற்று தரிசனத்தை அளிக்கிறது. காட்டை பற்றிய வர்னனைகள், சூழல், பொழுதுகள், மரங்கள், மலர்கள், மிருகங்களின் சமூக வாழ்க்கை, தெய்வங்கள், அதனுடன் ஒன்றி வாழும் மனிதர்கள், அவர்களின் உறவுகள் , பல வகையான காம இயல்புகள் என ஒரு முழு வாழ்க்கை சித்திரத்தை அளிக்கிறது நாவல்.
நீங்கள் காட்டின் விதையை எனக்குள் விதைத்து விட்டீர்கள், அதை வளர்த்து, வளர்த்து பெரிய காடாக்கி அதனுள் உலாவிக்கொண்டிருக்கிறேன்.
நாவலை நோய்தொற்று தனிமையிலிருக்கும் போது படித்தேன். The Shawshank Redemption படத்தில், கதாநாயகன் சிறையில் இருப்பான். சிறையில் Mozart-ன் இசையை போட்டதற்கு, இரண்டு வாரங்கள் வெளிச்சம் இல்லாத, மிகவும் சிறிய தனிமைச்சிறைக்குள் இருந்துவிட்டு வந்து சாப்பிடும் இடத்தில் சக கைதி நண்பர்களை சந்திப்பான்.
ஒரு நண்பன், அந்த பொந்திற்குள் இரண்டு வாரங்கள் எப்படி கழிந்தது? என்று கேட்பான்.கதாநாயகன், என் வாழ்விலே இனிமையான நாட்கள் என்று பதில் சொல்வான்.மற்ற நன்பர்கள் அப்படி இருந்திருக்கவே முடியாது, அந்த பொந்திற்குள் நாட்கள் நீளமாகவும், கடுமையாகவும் இருந்திருக்கும் என்பார்கள்.அதற்கு அவன், எனக்கு துணையாக Mozart இருந்தார். இசையினுடைய இனிமையே அதுதான். அது நம் மூளையிலும், மனதிலும் எப்பொழுதும் இருக்கும். அதை யாராலும் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் யாரும் இசையை அப்படி உணர்ந்ததில்லையா? என்று கேட்டு முடிப்பான்.
உங்கள் எழுத்துக்கள் எனக்கு Mozart-ன் இசையை போன்றதுதான், அது என் மனதிலும், மூளையிலும் கன நேரமும் பிரியாமல் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் துணைபுரிந்து கொண்டிருகிறது. இந்த தனிமை நாட்களில் மேலும் அர்த்தத்தை அளிக்கிறது, உங்கள் வாசகர்களுக்கு தனிமை என்பதே வாழ்நாளில் கிடையாது போலும். சரஸ்வதியிடம் சரண் புகுந்தவர்களுக்கு ஏது தனிமை.
பணிவன்புடன்,
வேலாயுதம் பெரியசாமி
paintings https://www.davidmceown.com/
June 17, 2021
தனிமையும் உரையாடலும்
மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம். எழுத்தின் தீவிரத்தன்மைக்கு சற்றும் குறையாத தீவிரத்தன்மையோடு உரையாடல்களை முன்னெடுக்கிறீர்கள். உங்கள் பயணங்கள் பெரும்பாலும் நண்பர் கூட்டத்தோடு அமைவதைக் காண்கிறேன். உங்கள் துறவு நாட்களுக்குப் பின்னர் முழுத்தனிமை என்றொன்று அமைந்திருக்கிறதா? அது சாத்தியமா?
தொடர்ச்சியான மனிதத் தொடர்பிலிருக்கத் தேவையான மனவெளியைத் தாங்கள் எப்படி வளர்த்துக் கொண்டீர்கள் என்பதை அறிய விழைகிறேன். (எனக்கு அவதானிப்பதில் உள்ள விருப்பு, தொடர் உரையாடலில் இல்லை. மேலும் அது அகத்தடையா பெருங்குறையா என்று ஒரு கலக்கம்.)
உங்கள் எழுத்தின் கட்டற்ற தன்மைக்கும் ஆளுமைக்குமான தொடர்பாக அதைப் பார்க்கிறேன். தனிமை விருப்பென்பது அவரவர் இயல்பு, ஒரு வகையில் எழுத்தாளர்களுக்கு உகந்தது என்றாலும், புற உலகத்தைப் பற்றிய அறிவும், உரையாடல்களும் எழுத்தைச் செறிவாக்குவதை உணர்கிறேன். இந்நிலையில், எழுத்துக்கான கச்சாப்பொருளை தனிமைவிருப்பு கொண்டவர்கள் வாசிப்பைத் தவிர வேறு எங்கிருந்து பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. நேரடியாக பெற்றுக்கொள்ளாததெல்லாம் முழுமையற்றதாகிறதா? தேவையற்ற இருண்மையும் பூடகத்தன்மையும் எழுத்தில் புகுந்து விடுகிறதா? நன்றி.
பார்கவி
அன்புள்ள பார்கவி,
தனிமை – உரையாடல் இரண்டுமே இலக்கியவாதிகள் மட்டுமல்ல ஆன்மிகவாதிகளிடமும் ஒன்றின் இரு பக்கங்களாக இருப்பதைக் காணலாம். ஓர் ஆன்மிகவாதி நீண்டநாட்கள் முழுத்தனிமையில் தவம் செய்யலாம். பின்னர் அவரே வெளிவந்து எழுதியும் பேசியும் விவாதித்தும் முழுமையாக வெளிப்படலாம். மீண்டும் தனிமையை நாடவும் செய்யலாம்.
அரவிந்தரின் வாழ்க்கையைப் பாருங்கள். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அவர் பல ஆண்டுகள் இருந்த ஓர் இருட்டறையைக் காட்டுவார்கள். அங்குதான் அவர் புற உலகுடன் தொடர்பே அற்று, புறஇருட்டில் வாழ்ந்தார். ஆனால் அவர்தான் பின்னர் வெளிவந்து சாவித்ரி போன்ற பெருங்காவியத்தை எழுதினார். அவருடைய விவாதங்களும், கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அவை பல ஆயிரம் பக்கங்கள் உள்ளன. மாபெரும் அமைப்பையும் உருவாக்கினார். ஒடுங்குதலும் விரிதலும் ஒரே செயலின் இரு நிலைகள்.
எழுத்தாளர்களும் அவ்வாறுதான். அவர்களிடம் ஓர் அகத்தனிமை உண்டு. தனிமையில் இருக்க அவர்கள் விழையும் நாட்களும் உண்டு. வெளிப்படுவதற்கும் உரையாடுவதற்கும் விரும்பும் நாட்களும் உண்டு. வெளிப்படுவதற்காகத்தானே அவர்கள் எழுத வருகிறார்கள்? தனிமையில் சேர்த்ததை வெளிப்படுத்துகிறார்கள் என்று சொல்லலாம்.
நான் முழுமையான தனிமையில் அலைந்த நாட்கள் 1981 முதல் 1984 வரை நான்காண்டுகள். அன்று வாயில் சொற்கள் வருவதே கடினம். மாதக்கணக்கில் உரையாடாமலிருந்தது உண்டு. பின்னர் மேலும் ஆறாண்டுகள் அலுவலகத்தில் உரையாடி புழங்குபவனாகவும், அதற்கு அப்பால் தன்னந்தனியனாகவும் இருந்தேன். காசர்கோட்டில் ஒரு கடலோரத்தோப்புக்குள் தனிவீட்டில் தனியாக வாழ்ந்தேன். பாலக்கோட்டிலும் தர்மபுரியிலும் தனியாக இருந்தேன். 1991ல் அருண்மொழியை மணம் செய்வது வரை அத்தனிமை இருந்தது.
உண்மையில் தனிமையை மீறிவந்து எழுத ஆரம்பித்தேன். 1986ல் நான் எழுதி வெளிவந்த முதல் கவிதை ‘கைதி’ தனிமையை மீறுவதைப் பற்றியதுதான்.கதவே இல்லாமல் சிறைப்பட்டிருக்கும் ஒருவன் தன் இருப்பை எழுதி ஓர் இடுக்கு வழியாக வெளியே வீசுவதைப் பற்றியது அக்கவிதை. சுந்தர ராமசாமியிடம் கொடுத்தேன். அவர் கட்டைக்காடு ராஜகோபாலனிடம் கொடுக்க கொல்லிப்பாவை இதழில் வெளியாகியது. அது ஒரு தொடக்கம்.
அன்று முதல் தீவிரமாக எழுதி வருகிறேன். என் எழுத்து என்பது ஒருவகையான இலக்கிய இயக்கம். அந்த தன்னுணர்வு எனக்கு தொடக்கத்திலேயே இருந்தது. வெறுமே சிலகதைகளை எழுதி வைத்துவிட்டுச் செல்வதற்காக நான் எழுதவரவில்லை. இலக்கியத்தில், வாழ்க்கைப்பார்வையில் அடிப்படையான சில மாற்றங்களை உருவாக்க விரும்பினேன். தமிழ் நவீனஇலக்கியத்தையும் மெய்யியலையும் இணைப்பது என் பணி. 1988ல் என் 26 ஆவது வயதில் எழுதிய குறிப்புகளிலேயே அதைச் சொல்லியிருக்கிறேன் என இப்போது பார்க்கையில் எனக்கும் வியப்புதான்.
அன்றைய இலக்கியச் சூழல் நவீனத்துவ அழகியல் கொண்டது. புறவய உண்மைகளை, கச்சிதமான குறுகிய வடிவம்கொண்ட புனைவாக, எண்ணி எழுதும் சொற்கள் வழியாக முன்வைப்பது அவ்விலக்கிய அழகியல். மரபை மறுப்பதும் பரவசங்களையும் பித்துகளையும் தரிசனங்களையும் நிராகரிக்கும் தர்க்கப்பார்வை கொண்டதுமாக அது தன்னை வரையறை செய்துகொண்டது.
நான் அதை மறுத்து காவியஅழகியலை முன்வைக்க விரும்பினேன். கட்டற்றுபெருகும் பெரும் புனைவுகளின் வடிவை, ஆசிரியனைப் பிளந்து அவனை மீறி எழும் மொழியை, வாழ்க்கையின் பரவசக்கணங்களை, வாழ்க்கையைக் கடந்துசெல்லும் பித்துகளை, மெய்த்தரிசனங்களை முன்வைக்க முனைந்தேன். அதற்காக மரபிலிருந்து அடிப்படையான தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எடுத்தாளவும், மரபை மறுஆக்கம் செய்யவும் முயன்றேன். இந்திய மதமரபுகளை மட்டுமல்ல, தொல்தமிழ் மரபுகளைக்கூட நவீனத் தமிழ் இலக்கியச்சூழலுக்கு மீண்டும் கொண்டுவந்தேன்.
நவீனப்புனைவு சென்றகாலக் காவிய ஆசிரியர்களிடமிருந்தும் சித்தர்களிடமிருந்தும் மெய்ஞானிகளிடமிருந்தும் விலகிச்செல்லலாகாது என்றும் அவர்களிடமிருந்து அது தொடங்கி சமகாலத்தில் புதிதென எழவேண்டும் என்றும் சொன்னேன். தமிழ் நவீனத்துவப் புனைவு தனக்கிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த ‘நவீனத்தன்மை’ என்பது ஐரோப்பிய நவீனத்துவம் கிரேக்க முன்னோடிகளிடமிருந்து உருவாக்கிக் கொண்டது. அது வேரற்றது அல்ல. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நாம் இங்கே வேரற்றவர்களாக ஆகவேண்டியதில்லை. அதை நம் வேர்களில் நின்றுகொண்டு நாம் பரிசீலிக்க முடியும் என்றேன்.
தமிழ்ச்சூழலில் அன்று இது ஒரு துடுக்குத்தனமான பேச்சாக கருதப்பட்டது. அந்தப்பார்வையை அன்றிருந்த இடதுசாரிகள் தங்கள் மேலோட்டமான பார்வையால் மதவாதம் என முத்திரைகுத்தினர். அது நவீனத்துவர்களுக்கு தர்க்கநோக்கை உதறிவிட்டு பழமைநோக்கிச் செல்லுதலாக தோன்றியது. எழுத்தை வெறும் சமூகச் செயல்பாடாகக் கருதுபவர்களுக்கு நான் அதை ‘மர்மமாகவும் புனிதமாகவும்’ ஆக்க நினைக்கிறேன் என்று தோன்றியது. தரிசனம் என்ற சொல்லைப்பற்றியே நாலைந்தாண்டுகள் விவாதிக்க நேர்ந்திருக்கிறது. ஆகவே அனைவருடனும் நான் விவாதிக்க வேண்டியிருந்தது. அக்குரல் இன்றும்கூட எழுகிறது. ஆகவே அந்த விவாதம் இன்றும் தொடர்கிறது.
நான் அன்று அனைவரிடமும் விவாதிக்க முயன்றேன். மறுத்த அனைவருக்கும் கடிதங்கள் எழுதினேன். பதில் கட்டுரைகள் எழுதினேன். வசைபாடியவர்களுக்குக் கூட அவர்களை பாராட்டி, அங்கீகரித்து விவாதங்களுக்கு கொண்டுவர முயன்றேன். நானே நடத்திய சிற்றிதழில் அவர்களை எழுதச் செய்தேன். ஆனால் பின்னர் கண்டுகொண்டேன், வசைபாடிகளுடனும் செயற்கைப்புரட்சியாளர்களுடனும் உரையாட முடியாது. அவர்களால் வெறுமே கூச்சலிடவே முடியும். ஏனென்றால் அவர்களிடம் ஆழமான நம்பிக்கையும் இல்லை, தெளிவான புரிதலும் இல்லை. அஞ்சுகிறார்கள், எதிர்த்தரப்பை குறுக்கி முத்திரையிட்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே ஒருகட்டத்தில் அவர்களை முற்றாகப் புறக்கணித்தேன். இன்றுவரை அதுவே என் வழி. சென்ற இருபதாண்டுகளகா முதன்மைக்குரல்களிடம் மட்டும் விவாதிக்கலானேன். சுந்தர ராமசாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன், ஞானி, எஸ்.என்.நாகராஜன், ராஜ் கௌதமன், வேதசகாயகுமார், குமரிமைந்தன்,அன்பு பொன்னோவியம் ஆகியோருடன் விவாதத்தில் இருந்தேன்.பேசிப்பேசி என்னை தெளிவுபடுத்திக் கொண்டேன்.
கூடவே அன்றிருந்த அத்தனை எழுத்தாளர்களுடனும் தொடர்பிலிருந்தேன். கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், எஸ்.சங்கரநாராரயணன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், சுகுமாரன், திலீப்குமார், ந.ஜெயபாஸ்கரன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் அனைவருக்கும் கடிதங்கள் எழுதினேன். கடிதங்கள் வழியாக விவாதித்தேன்.
அவ்வாறு முப்பதாண்டுகளாக விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.மெல்லமெல்ல என் தரப்பை இங்கே ஒரு வலுவான குரலாக நிலைநாட்ட என்னால் முடிந்தது. இங்கே இருந்த இலக்கிய அழகியலில், மரபைநோக்கிய அணுகுமுறையில், வாழ்க்கைநோக்கில் ஒரு மாற்றத்தை உருவாக்கவும் முடிந்தது. இன்றைய இலக்கியப் படைப்புகளே அதற்குச் சான்று
இன்று எனக்கு அடுத்த தலைமுறையினருடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்.இன்று கடிதங்கள் எழுதுகிறேன். வாசகர் சந்திப்புகள் நடத்துகிறேன். பயணங்கள் செய்கிறேன். விழாக்களை ஒருங்கிணைக்கிறேன். இவையனைத்தும் நான் எண்ணும் ஓர் இலக்கிய இயக்க்த்தை உருவாக்கி நிலைநிறுத்தி முன்னெடுக்கும்பொருட்டுதான். இலக்கியத்தின் அடிப்படை நோக்கம்
இதையெல்லாம் எல்லா எழுத்தாளர்களும் செய்யவேண்டுமென்பதில்லை. புனைவை மட்டும் எழுதிவிட்டுச் செல்லும் எழுத்தாளர்களுக்கு இவை தேவையுமில்லை. ஆனால் இலக்கிய- அறிவுத்தள மாற்றத்தை உருவாக்க எண்ணும் எழுத்தாளர்களுக்கு இதுவே வழி. க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் இதைச் செய்தனர். தி.ஜானகிராமனும், கு.அழகிரிசாமியும், அசோகமித்திரனும் இதைச் செய்யவில்லை.
இது என் பணி, ஆங்கிலத்தில் இதைச் சொல்ல சரியான சொல் உள்ளது- mission. ஆனால் இதைச் செய்யும்போதும் நான் என் தனிமைக்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறேன். எவரும் அணுகமுடியாத தனிமை அது. என் குரு மட்டுமே எட்டிப்பார்த்த ஓர் உலகம். அங்கிருந்துதான் என் புனைவுகள் வருகின்றன. ஒரு நாளில் இவ்வளவு பேசி எழுதியபின்னரும் தனியாக இருக்கும் பொழுதுகளே மிகுதி. அணுக்கமான நண்பர்களுடன் இருக்கையில், அடுத்த தலைமுறையினருடன் விவாதிக்கையில் உவகையுடன் இருக்கிறேன். ஆனால் புனைவுகளை உருவாக்கும்போது எட்டுதிசையும் திறந்து கிடக்கும் தனிமையே என்னைச் சூழ்ந்திருக்கிறது.
ஜெ
நிர்வாகம்
“ஊழியர்களை பார்த்து குரைப்பது, உறுமுவது, முனகுவது எல்லாம் சரிதான். ஆனால் பூனையைப்பார்த்ததும் நீங்கள் துரத்த ஆரம்பிப்பதுதான் பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது”
லோகிததாஸிடம் இதைப் பார்த்திருக்கிறேன்,நிர்வாகவியலில் முக்கியமான நிலைபதறாமை. அதை ஸ்திதபிரதிக்ஞை என்று பேராயர் சொல்கிறார். நாங்கள் ஒரு நண்பரின் பண்ணைவீட்டுக்கு சென்றோம். லோகி மது அருந்தினார். நள்ளிரவில் வீடு திரும்பினோம். ஆனால் ஓட்டுநர் வழி தவறிவிட்டார். அப்பகுதி முழுக்க தென்னந்தோப்பு. எந்தப்பக்கம் சென்றாலும் ஏற்கனவே வந்ததுபோல இருந்தது. வழிகேட்க எவருமில்லை.
ஒருமணிநேரம் ஓட்டியபின் ஓட்டுநர் மனம் தளர்ந்துவிட்டார். காரின் அலைவிலேயே அந்தப் பதற்றம் தெரிந்தது. ஒரு தென்னைமரநிழலிடம் வழிகேட்க வண்டி தயங்கியது.
பின்பக்கம் சாய்ந்து கிடந்த லோகி சொன்னார். “பயப்படாதே சுதாகரா, நாம் எப்படியானாலும் வீட்டுக்குப் போகத்தான் போகிறோம்”.
“பரமமுட்டாள்களைத்தான் நான் வேலைக்கு வைத்துக்கொள்வது. இந்த ஆபீஸில் நான்தான் புத்திசாலியாக இருக்கவேண்டும்”
எவ்வளவு பெரிய உண்மை! அந்தத் தோப்பிலேயே சாகப்போவதில்லை. மிஞ்சிப்போனால் ஓர் இரவு. காலையில் கிளம்பிப்போகப்போகிறோம். அதற்கு ஏன் பதறவேண்டும்? அந்த நிதானம் வந்தால் பின் எதை அஞ்சவேண்டும்? சுதாகரன் உண்மையாகவே நிதானமடைந்தான். அரைமணிநேரத்தில் வழி கிடைத்தது.
லோகியின் பொன்மொழிகளில் ஒன்றும் “பயப்படுவதனால் பயம் கொஞ்சம்கூட குறைவதில்லை” இதை அறிந்ததும் அவருடைய வாழ்க்கை இனிதாகியது. மிகமிக அடித்தள வாழ்க்கையிலிருந்து, கடும் பட்டினியிலிருந்து எழுந்து வந்தவர் லோகி. ஆகவே அவர் எவரையும் எதையும் அஞ்சவில்லை. “ஆனைவந்தா கொல்லும், மயிரையா பிடுங்கும்?”என்ற திரிச்சூர் வட்டாரப் பழமொழியில் நம்பிக்கையுடன் வாழ்ந்தார்.
“நான் செய்றதுக்கெல்லாம் என் பாஸ் பலனை அடைஞ்சுக்கிடறார். நான் நேத்து செய்ததுக்கு அவர் கர்ப்பமாயிடுவாரோன்னு பயமா இருக்கு”
ஒன்றைச் செலவிட்டால் அது குறையவேண்டும். ஒன்றைச் செய்தால் அது பழகிப்போகவாவது வேண்டும். எத்தனை பயந்தாலும் பயம் குறைவதில்லை. எத்தனை முறை பயந்தாலும் பயம் பழகிவிடுவதுமில்லை. பிறகு பயப்படுவதைப்போல அபத்தமான செயல் வேறென்ன? பயப்படாமலிருந்தால் நமக்கு நாம் பயப்படவில்லை என்று தெரிந்திருப்பதன் தைரியமாவது எஞ்சுகிறது!
லோகி என்னிடம் சொன்னார். “நல்ல சினிமா இயக்குநரை மீறி நிகழவேண்டும் என்று பரதன் சொல்வார். அது உண்மையா என்று தெரியாது. ஆனால் நல்ல சினிமா புரடக்ஷன் மானேஜரை மீறி நிகழ்கிறது” .அது உண்மை, தயாரிப்பு நிர்வாகி என்னும் அதிமானுடனை நம்பி சினிமா நிகழ்கிறது. அது எப்படி நிகழ்கிறது என்று எந்த புரிதலும் இல்லாத ஒருவர்தான் நல்ல தயாரிப்பு நிர்வாகியாக இருக்கமுடியும். தெரிந்தால் பதற்றமாகிவிடுவார்.
“உன் கருத்து எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அதனாலே அதை ஒரு அபூர்வமான சந்தர்ப்பத்துக்காக பத்திரமா வைச்சிரு என்ன?”
நிர்வாகவியலை நன்கறிவதற்கு அரசுத்துறைகளில் வேலைபார்க்க வேண்டும். என்னென்ன செய்யக்கூடாதென்று தெரியவரும். என்ன செய்தாலும் நிர்வாகம் நடக்கும் என்ற உண்மையும் தெளிவாகும். அதன்பின் உருவாகும் நிதானம் என்பது நிர்வாகத்திற்கு மிக முக்கியமானது. ”ஆனை அப்பியிட்டப்பவே ஒண்ணும் நடக்கல்ல, இனி அணில் புளுக்கையிட்டுல்லா நடக்கப்போகுது” என்பது எங்களூர் பொன்மொழி.
நான் அரசூழியனாகச் சேர்ந்தபோது முதல்நாள் என்னிடம் தோழர் நந்தகுமார் சொன்னார். “நீ இப்போது ஒரு மாபெரும் இயந்திரத்தின் ஸ்க்ரூ அல்லது நட்டு. சி.எம்.ஸ்டீஃபன் [தகவல்தொடர்புத்துறை அமைச்சர்] இன்னொரு ஸ்க்ரூ அல்லது நட்டு. நாம் இல்லையென்றாலும் இது ஓடும். ஆகவே இதன் ஆற்றலுக்கு நாம் பொறுப்பல்ல. ஆனால் நாம் உடைந்தால் இது நின்றுவிடும். ஆகவே பிழைகளுக்கு நாம் பொறுப்பு”
“போரடிக்குது, நான் திட்டுற மாதிரி எதையாவது செய்”
அதன் பின் நான் எப்போது தொலைபேசிநிலையத்தின் பிரம்மாண்டமான அமைப்பை பார்த்தாலும் அதன் அத்தனைச் சிக்கல்களுக்கும் நானே பொறுப்பு என்ற பிரமைக்கு ஆளாக ஆரம்பித்தேன். அதை அவரிடம் சொன்னேன். “அது ஒரு பிழை செய்யும் வரைத்தான். அதன்பின் தெளிந்துவிடுவாய்” .தெளிந்துவிட்டேன்.
அரசுநிர்வாகத்தை அதன் அடித்தளத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தோழர் நந்தகுமார் சொன்னார். “பெருமலையன் மலைவாதை தெய்வங்களுக்குப் பூசை செய்வதை கண்டிருக்கிறாயா? ரத்தத்துடன்குழைத்த பலிச்சோற்றை இருட்டில் எட்டுத்திசைக்கும் வானுக்கும் மண்ணுக்கும் வீசி எறிவார். தேவைப்படும் தெய்வங்கள் எடுத்துக் கொள்ளலாம். நாம் கொடுக்கவில்லை என்று அவை நினைக்கவேண்டாம். அது போலத்தான் ஃபைல்களை ஃபார்வேட் செய்வது”
”நீ மட்டும் 25 சதவீதம் சம்பளக்குறைவுக்கு ஒப்புக்கொண்டா நான் அதிலே 10 சதவீதம் உனக்கு ஊக்கப்பரிசா தரேன்”
கோப்புகளில் நாம் எழுதும் குறிப்புகளால் அமைப்பின் அடித்தளமே ஆடிக்கொண்டிருக்கிறது என்று கற்பனைசெய்வது சிலரை வேலைசெய்யவைக்கும் தூண்டுதலாக உள்ளது. நந்தகுமார் சொன்னதுபோல “No hair will walk” [ஒரு மயிரும் நடக்காது] என்ற எண்ணம் மேலும் நம்பகமாக வேலைசெய்யத் தூண்டுகிறது என்பது என் அனுபவம்.
குளம் எத்தனை குண்டிகண்டிருக்கும், குண்டி எத்தனை குளம் கண்டிருக்கும் என்பது மலையாளப் பழமொழி. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரே பிரச்சினை நூறுமுறை வந்திருக்கும். நூறுவகையாக அது தவறாகக் கையாளப்பட்டும் இருக்கும். நாம் தவறாகக் கையாண்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. சரியாகக் கையாண்டால் பெரிய வேறுபாடும் நிகழ்வதில்லை.
“தலைமைத்திறமையா? இருக்கு. உங்க கம்பெனிக்கு எதிராக்கூட போனவாரம் ஒரு தெருமுனை ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைச்சேன்”
ஒருவர் நம்மிடம் ஒரு மனு கொண்டுவந்து தருகிறார். அவருடைய அப்பா செத்துவிட்டார், அவருக்கு அப்பாவின் ஃபோனை மாற்றித்தரவேண்டும். ஃபோன் அன்றெல்லாம் ஒரு சொத்து. வாரிசுச் சான்றிதழ், சாவுச் சான்றிதழ், கேட்பவர் உயிரோடிருப்பதற்கான சான்றிதழ் உட்பட எல்லாவற்றையும் கேட்டுவாங்கி “இதன்படி இந்த மனுவை நான் தங்கள் மேலான பார்வைக்காக அனுப்புகிறேன்” என்று சொல்லி திசைவெளி நோக்கி வீசிவிட்டால் நம் வேலை முடிந்தது.
மிகச்சாதாரணமான விஷயம். ஆனால் அரசுத்துறையில் எம்முடிவும் கூட்டாகவே எடுக்கப்பட முடியும். ஆகவே மேலே இருப்பவர் சம்பந்தமே இல்லாமல் ஃபோன் மெயிண்டென்ஸில் இருக்கும் அதிகாரியிடம் “இந்த ஃபோனுக்கு பழுதுபார்ப்புச் சிக்கல்கள் உண்டா?”என்று ஃபைலை அனுப்பி வைக்கிறார். உற்சாகத்தில் ஒருவர் உள்ளூர் நகரசபைக்குக் கூட அனுப்பியிருக்கிறார்.அது அவ்வாறு பல வாசல்களில் தட்டி பல கையெழுத்துக்களை பெற்று சுழன்றுகொண்டிருக்கும்.
“பத்துக்கு ஒன்பதுபேர் என் கருத்தை ஏத்துக்கலை. இதிலேருந்து என்ன தெரியுதுன்னா பத்துக்கு ஒன்பதுபேருக்கு விஷயம்புரியலை”
அப்போது சம்பந்தப்பட்டவர் பலமுறை வந்து நம்மை பார்க்கிறார். ஒவ்வொரு முறையும் நாம் மிகுந்த அக்கறையுடன் அவருடைய பிரச்சினையை முற்றிலும் புதியதாக மீண்டும் கேட்கிறோம். அவர் பெயரையும் கேட்டுக்கொள்கிறோம். “மேலே இருக்கிறது” என்கிறோம். அது ஆத்மா செத்து வானுலகு சென்று மறுபிறப்பு கொள்வதுபோலத்தான். ஆனால் வந்துவிடும், எப்படியும்.
ஆனால் சில ஃபைல்கள் கதிகிடைக்காத ஆன்மாக்களாகச் சுழன்றுகொண்டிருக்கும். 1988ல் நான் ஓர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி போட்டேன். இருபதாண்டுகளுக்குப் பின் எனக்கு எல்.ஐ.சியில் இருந்து ஒரு கடிதம் வந்தது. ”உங்கள் சம்பளத்தில் இருந்து பிரிமியம் என மாதமாதம் தொகை பிடிக்கப்பட்டு இருபதாண்டுகளாக எங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. எதற்கு என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?”
”எனக்கு தலைமைப்பண்பு இல்லைன்னு யார் சொன்னது? மத்தவங்களுக்கு பின்தொடருற பண்பு இல்லை, அவ்ளவுதான்”
1988ல் நான் காசகோட்டிலிருந்து தர்மபுரிக்கு மாற்றலானேன். அங்கிருந்து நாகர்கோயில் வந்து பணியாற்றி ஓய்வும் பெற்றேன். ஆனால் காசர்கோட்டிலிருந்து என் மாற்றல் ஃபைல் தர்மபுரிக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. அனேகமாக அது பங்களாதேஷ் பூட்டான் சிக்கிம் திபெத் பாகிஸ்தான் மாலதீவு வழியாக சுழன்று வந்து கொண்டிருக்கலாம்.
நான் நேரில்போய் விளக்கினேன். ஓர் ஊழியர் “நீங்க காசர்கோடு போய் அந்த ஃபைல் நம்பரை பாருங்க சார். அதை ஃபாலோ பண்ணி தர்மபுரி போய் அங்கேருந்து….” அதாவது ஜேம்ஸ் பாண்ட் வேலை. licence to kill the time. எவ்வளவு ரூபாய் மொத்தமாக வரும் என கணக்கிட்டேன். ஏறத்தாழ அறுபதாயிரம் ரூபாய். அதை துரத்திப்பிடிக்க அவ்வளவு செலவாகும். பயணம், விடுதி எடுப்பது, சாப்பாடு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உற்சாகப்பரிசுகள்.
”இங்க உள்ள பிரச்சினையே யாரும் எதுக்கும் பொறுப்பேற்றுக்கிடறதில்லைங்கிறதுதான். இதை நான் சொன்னதா யார்ட்டயும் சொல்லவேண்டாம்”
“நான் அந்த பணத்தை எல்.ஐ.சிக்கே தந்துவிடுகிறேன். தேச நிர்மாணத்துக்கு என்னுடைய கொடையாக” என்று சொன்னேன். பிறகு தெரிந்துகொண்டேன், எல்.ஐ.சியின் மொத்த மதிப்பில் பாதி இதேபோல கொடுக்கப்படாத நிலுவைப்பணம்தான், அதைக்கொண்டுதான் தேசமே நடந்துகொண்டிருக்கிறது. சொல்லப்போனால் எல்.ஐ.சி நடத்தப்படுவதே இவ்வாறு பணம் தண்டல் செய்வதற்காகத்தான்.
பொதுவாக மேலதிகாரிகள் இதைப் பற்றி கவலையே படுவதில்லை. விசாரணைக் கைதிகள் இருபதாண்டுக்காலம் சிறையிலேயே இருக்கும் ஒரு தேசம் இது என்பதை நாம் மறக்கக் கூடாது. ஒரு ஃபைல் இருபதாண்டுக்காலம் அந்தரத்தில் பறப்பதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.
”நம்ம ஆபீஸிலே ஆமாஞ்சாமிகளே வேண்டாம், என்ன சொல்றீங்க?
“ஆமா! ஆமா!”
இந்த ஃபைல் குறிப்புகளைப் பற்றி நான் பி.ஏ.கிருஷ்ணனிடம் கேட்டேன். பெரும்பாலான உயரதிகாரிகள் குறிப்புகளை அரைக்கால் நிமிடத்தில் படித்துவிடுவார்கள். பி.ஏ.கே. ஒரு ஜோக் சொன்னார். லிண்டன் ஜான்ஸன் சொன்னது.
ஒரு செகரட்டரி அதியற்புதமான சொற்சேர்க்கைகளுடன் ஃபைல்களில் குறிப்பெழுதிக்கொண்டிருந்தார். லிண்டன் ஜான்சன் அரைநொடியில் கடந்து சென்றுவிடுவார். மனமுடைந்து செகரடரி கேட்டார். “மிஸ்டர் பிரசிடெண்ட், நீங்கள் நான் எழுதிய குறிப்புகளை பாராட்டுவதில்லை”
லிண்டன் ஜான்சன் சொன்னார் “ டாம், ஃபைல்குறிப்புகள் என்பவை நம் கால்சட்டைக்குள் நாம் சிறுநீர் கழிப்பதுபோல. வெப்பத்தை நாம் மட்டுமே உணரமுடியும்”
“நாம கவலைப்படுறதிலே 90 சதவீதம் விஷயங்கள் நடக்கிறதே இல்லை. அதனாலே நாம இன்னும் கொஞ்சம் கவலைப்படணும்”
நிர்வாகவியலில் பல விதிகள் உண்டு. அதிலொன்று சொற்களுக்கு நேர்ப்பொருள் கொள்ளலாகாது என்பது. “இதை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” “வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்பதிலெல்லாம் மகிழ்ச்சியும் வருத்தமும் மெய்யாகவே கிடையாது என நாமனைவரும் அறிவோம். அவை கீழிருந்து மேலே அனுப்பப்படும் அறிக்கைகளிலுள்ள புள்ளிவிபரங்கள் போலத்தான். அல்லது மேலிருந்து கீழே வரும் ஆணைகளைப் போல. அனுபவிக்கவேண்டும், ஆராயக்கூடாது.
நிறைய தருணங்களில் பழைய கடிதங்களை நகலெடுத்து தேதி, பேசுபொருள் மட்டுமே மாற்றி அனுப்புவது குமாஸ்தா வழக்கம். ஆகவே “உங்களை இந்த தேதியிலிருந்து வேலைநீக்கம் செய்வதில் மகிழ்ச்சி அடைவதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றெல்லாம் கடிதங்கள் வந்துள்ளன.
”உங்க முன் அனுபவம்னா, போனபிறவியிலே எகிப்திய பாரோ மன்னரா இருந்து பிரமிடு கட்டியிருக்கீங்க. தலைமைப்பண்புக்கு அதுக்குப் பிறகு ஏதாவது சான்று இருக்கா?”
புதிதாக சேர்ந்த நிர்வாகிகள் சூடாக இருப்பார்கள். “புதுப்பெண் வீட்டுக்கூரையையும் கூட்டிப்பெருக்குவாள்” என்பது நிர்வாகவியலின் பாடங்களில் ஒன்று. எங்கள் இலாகாவில் ஜிபிஎஃப் லோன் வாங்குவது மாதக்கடைசியின் சடங்குகளில் ஒன்று. அதற்கான விண்ணப்பத்தில் எதன்பொருட்டு அந்த கடன் வாங்கப்படுகிறது என்று தெரிவிக்கவேண்டும். அதில் அத்தனை பேரும் சுமங்கலி பிரார்த்தனை என்றுதான் போடுவார்கள்.
ஏனென்றால் வேறேது காரணம் போட்டாலும் அந்த தேதி கடந்துவிட்டால் நிராகரிக்கப்பட்டுவிடும். எப்போதும் நிகழச்சாத்தியமான ஒரே மதக்கொண்டாட்டம் சுமங்கலி பிரார்த்தனைதான். வருங்காலத்தில் ஓர் ஆய்வாளர் தொலைதொடர்புத்துறை ஆவணங்களைக்கொண்டு நாகர்கோயிலின் மதநம்பிக்கையை பற்றி ஆராய்ந்தால் இங்கே சுமங்கலிவழிபாடு என்ற மதம் தீவிரமாக இருந்ததை நிறுவ முடியும்.
ஆனால் எங்கள் புதிய நிர்வாகி ஒரு விண்ணப்பத்தை வாசித்துவிட்டு ‘இஸ்லாமியர் எப்படி சுமங்கலி பிரார்த்தனை செய்ய முடியும்?’ என உசாவினார். அவருக்கு நிர்வாகவியல் கற்பிக்கப்பட்டது. அவருடைய புகழுடல் அலுவலகத்திலும் பூத உடல் சொந்த ஊரிலும் இருப்பது போலத்தான்.
“சொல்றதைப் புரிஞ்சுகிடறதிலே எனக்கு பிரச்சினை இருக்குன்னு சொன்னீங்களே, அப்ப எதை உத்தேசிச்சீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
நான் கல்வெட்டுக்களை கொண்டு வரலாற்றாய்வு நிகழ்த்துவதில் அவநம்பிக்கை கொண்டிருப்பதும் இதனால்தான். பிஎஸ்என்எல் ஆவணங்களைக்கொண்டு நூறாண்டுகளுக்குப் பின் ஆய்வுசெய்பவர்கள் நாகர்கோயிலில் இரண்டே இரண்டு டாக்டர்கள் இருந்தார்கள் என்ற முடிவுக்குத்தான் வருவார்கள். அவர்கள்தான் அத்தனை பேருக்கும் மருத்துவம் பார்த்தனர். அத்தனை மருத்துவச் சான்றிதழ்களிலும் இரண்டே கையெழுத்துக்கள்தான்.
அத்துடன் அத்தனை பேருக்கும் பிரச்சினை முதுகுவலிதான். ”நாகர்கோயில் வட்டாரத்தில் பரவலாக இருந்த முதுகுவலியும் அதன் மருத்துவ சமூகவியல் காரணங்களும்” என்ற தலைப்பு நல்ல ஆய்வேடுக்குரியது. ஆனால் அதன் உண்மையான காரணம் நிர்வாகவியல்தான்
”உங்க ஆயுளிலே மொத்தம் 6.35 ஆண்டுகளை நீங்க ஸ்பாம் மெயில்களை டிலிட் பண்றதிலே செலவழிச்சிருக்கீங்க”
முதுகுவலி ஏனென்றால் அதை மட்டும்தான் சோதனைகளில் பொய்யென நிரூபிக்க முடியாது. முதுகுவலிக்கிறது என்றால் வலிக்கிறதுதான். ஆனாலும் என் கீழே வேலைபார்த்த ஒருவர் மாட்டிக்கொண்டார். மாவட்ட மருத்துவ அதிகாரி அவருடைய மருத்துவச் சான்றிதழ் பொய்யா என சோதனை செய்யும்போது ”வலி சரியா எந்த முதுகுலே?” என்று கேட்டிருக்கிறார். “இங்க டாக்டர் எழுதினதுக்கும் நீங்க சொல்றதுக்கும் சரியா இல்லேன்னா நடவடிக்கை எடுப்போம்”
இவர் குழம்பிவிட்டார். உளறி மாட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு பின் மன்னிக்கப்பட்டார். “ஏய்யா, முதுகு ஒண்ணுதானே இருக்கு?”என்றேன். “ஆமால்ல?”என்று வியந்தார். நெல்லைப் பக்கம் வேளாளர்களுக்கு பலமுதுகுகள் உண்டு என பின்னர் அறிந்தேன். அதிலொன்று புறமுதுகு.
”வித்தியாசமாக சிந்தனை செய்- நான் சிந்திப்பது போல”
மேலதிகாரிகள் எதுவும் ’த்ரூ பிராப்பர் சானல்’ என்பதில் தெளிவாக இருப்பார்கள். நான் காசர்கோட்டில் இருந்தபோது தொழிற்சங்கத்தலைவரும் கிளார்க்குமான ராஜு ஃபோனை போட்டு நேரடியாகவே டிவிஷனல் எஞ்சீனியரிடம் சொன்னார். “என்ன நம்பூதிரி, இங்க ஒண்ணும் சரியில்லியே. மெயிண்டெனெனன்ஸே இல்லியே?”
நாங்கள் நாற்பதுபேர் டி.இ என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க செவிகூர்ந்து லைனுக்குள் காத்திருந்தோம். நம்பூதிரி பணிவாகச் சொன்னார் ““Mr Raju, you have to insult me through proper channel”
20 ஊதிப்பெருக்கவைத்தல் 11ஆப்’ 10பகடை பன்னிரண்டு 9சிரிக்கும் ஏசு 8டேனியல் லாபெல் 7ஸாரி டாக்டர்! 6ஆடல் 5கம்யூட்டர் யுகத்துக் கடவுள் 4 மனம் 3குருவும் குறும்பும் 2இடுக்கண் வருங்கால்… 1ஆன்மிகமும் சிரிப்பும்எழுத்தாளர் படங்கள்
வணக்கம் ஜெயமோகன்,
நான் அழியாச்சுடர்கள் ராம்.
நான் எனது அழியாச்சுடர்கள் பேஸ்புக் பக்கத்தில் ( https://m.facebook.com/azhiyasudar ) எழுத்தாளர்கள்களின் பழைய புகைப்படங்களை ரீஸ்டோர் செய்து வெளியிட்டு வருகிறேன்.
இந்த ஒருமாதம் ஊரடங்கை கடக்க இதை விளையாட்டாக ஆரம்பித்தேன். ஒவ்வொரு புகைப்படமும் உருமாறி வருவதை பார்க்க மகிழ்ச்சியும் உத்வேகமும் கிடைத்து கிட்டத்தட்ட 60 புகைப்படங்கள் ரீஸ்டோர் செய்துள்ளேன்.
கருப்பு தாடி விக்ரமாதித்யன், தேவதேவன்,நீல பத்மநாபன்,தாடியில்லாத தஞ்சை பிரகாஷ்,மீசையில்லாத ஜெயகாந்தன்,தாடியுடன் திலீப்குமார்.
உங்கள் இரண்டு புகைப்படங்களையும் இணைத்துள்ளேன்.
நன்றி
அன்புடன்
ராம் பிரசாத்
அன்புள்ள ராம்
உண்மையில் மிக ந்ல்ல முயற்சி.
நான் எப்போதுமே எழுத்தாளர்களுடன் அவர்களின் படங்களை இணைப்பதுண்டு. இளம் எழுத்தாளர்களுக்குக் கூட முகம் முக்கியமானது. அதுதான் அவர்களின் அத்தனை கதைகளையும் ஒன்றாக ஒரு கோட்டில் தொகுக்கிறது. அவர்களைப் பற்றிய மதிப்பீட்டை வாசகனிடம் உருவாக்குகிறது. அவர்களுடன் உரையாடும் உணர்வை வாசகர்கள் அடையச்செய்கிறது
[ ஆனால் இணையதளத்தின் ‘டேட்டாச் சுமை’ கருதி படங்கள் பெரும்பாலும் தொகுப்பிலிருந்தே எடுக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்]
தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் புகைப்படங்களே இல்லை. இணையத்தில் படங்கள் கிடைப்பது அரிதினும் அரிது.பெரும்பாலும் கருப்புவெள்ளைப்படங்கள். வண்ணம் மாற்றப்பட்ட படங்கள் இதழ்களுக்கு மிக உதவியானவை.
தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களின் வாரிசுகளையும் சந்தித்து புகைப்படங்களைச் சேகரித்து இணையத்தில் ஏற்ற முடியுமானால் அது ஒரு பெரும்பணியாக இருக்கும். ஏற்கனவே இதை எழுதியிருக்கிறேன். மலேசியாவில் நவீன் இந்த அரிய முயற்சியைச் செய்துகொண்டிருக்கிறார். [சடக்கு – ஒரு மகத்தான முயற்சி ]
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

