Jeyamohan's Blog, page 962
June 25, 2021
காந்தி: காலத்தை முந்திய கனவு
காந்தியின் லட்சியமான அகிம்சை என்பது உயர்ந்த சிந்தனை, ஆனால் நடைமுறை சாத்தியமற்றது என்று கூறும் போக்கு இன்றைய உலகில் காணப்படுகிறது. இந்த நம்பிக்கையில் காணப்படும் முரண்பாடு என்னவென்றால், காந்தியின் கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு, அவருக்குப் புனிதத்துவத்தை இது வழங்குகிறது. எனினும், காந்தி ஒரு துறவி அல்ல; அவர் மதத் தலைவரும் அல்ல. அவர் மிக மிக முக்கியமாக ஓர் அசல் சிந்தனையாளர், மிகக் கூர்மையான அரசியல் ராஜதந்திரி, மனித குலத்துக்கு அகிம்சை என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் சாத்தியம் குறித்து ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர்.
காந்தி: காலத்தை முந்திய கனவு-Prof. (Dr.) Ramin JahanbeglooJune 24, 2021
காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?
திரு ஜெயமோகன் அவர்களே
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு “இன்றைய காந்தி” நூலை படித்தேன். காந்தி மக்களை அரசியலுக்கு அழைத்துவந்தார், அரசியலில் பங்கெடுக்க செய்தார், அதுவரை அரசியலிருந்து ஒதுங்கியிருந்தவர்களை ஜனநாயகப்படுத்தினார் போன்ற வரிகளை படித்தபோது, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, எவ்வளவு சரியான ஒன்றை செய்திருக்கிறார் என்று மகிழ்ந்தேன்.
ஆனால் அவர் அதை முழுமையாக செய்து முடித்தாரா? மக்கள் அரசியலை புரிந்தவர்களாக இருக்கிறார்களா? அரசியலுக்குள் வந்துவிட்டார்களா? அரசியலில் சரியாக ஈடுபடுகிறார்களா? இக்கேள்விகள் இன்று வலுக்கின்றன.
ஒரு மாநிலத்துக்குள், கோடிக்கணக்கானவர்கள் தங்களை நிரந்தரமாக ஒரு கட்சியுடன் பிணைத்துக்கொள்கிறார்கள், தன்னை அதுவாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். எந்நிலையிலும் அந்த கட்சியையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
வாக்குக்காக கொடுக்கப்படும் பணத்தை வாங்க மறுத்த ஒருவரையாவது பார்த்திருக்கிறீர்களா? எனக்கு இன்னும் பணம் வரவில்லை என்று கொந்தளிப்பவர்களை நிச்சயம் பார்த்திருப்பீர்கள் (ஏழை அல்லாதவர்கள் உட்பட). தனிப்பட்ட நலன், குழு (ஜாதி, மதம், அரசு ஊழியர்) நலன் தாண்டி பொதுநலன் கருதி வாக்களிக்கும் திறன் உண்டா மக்களுக்கு?
காந்தி காலத்திலாவது உண்மையில் அப்படி மக்கள் இருந்தார்களா? இவ்வளவு விரைவில் அப்படி மக்கள் இல்லாமல் ஆகிவிட்டார்கள் என்றால்! அவ்வளவு மேலோட்டமானதா அவர் ஏற்படுத்திய மாற்றம்! இல்லை அது வெறும் மாயையா? அப்படி ஒன்று என்றுமே இருந்தது இல்லையா?
பொதுவெளியில் பேசுவதின் மூலமாகவே, தாங்கள் எவ்வளவு திறன் அற்றவர்கள் என்று அப்பட்டமாக காட்டிக்கொள்ளும் நபர்கள் எல்லாம் எளிதாக தேர்தலில் வென்றுவிடுகிறார்கள்.
சமீபத்தில் அரசியலுக்கு வந்தவர், என் பார்வையில் மிகக் கடுமையான உழைப்பாளி, ஆச்சரியப்படத்தக்க உணர்ச்சி சமநிலை கொண்டவர் (பொதுவெளியில் மட்டுமே அவரை பார்த்தவன்) காந்தியை தன் ஆதர்ஷமாக கருதுபவர், மிதவாதி, பஞ்சாயத்து ராஜ்யத்தில் (அதிகார பகிர்வில்) உறுதியான நம்பிக்கை கொண்டவர் (எல்லாம் நான் அறிந்தவரை, அவர் நீங்களும் அறிந்தவரே, உண்மையில் அவர் இப்படிபட்டவராக இல்லாமலும் இருக்கலாம்). சமீபத்தய தேர்தலில் தோல்வியடைகிறார், மக்கள் அவரை ஏற்கவில்லை என்பது ஆச்சர்யமூட்டுகிறது எனக்கு.
இதை பார்கையில் ஒரு மிதவாதியான காந்தியால் எப்படி இவ்வளவு பெரிய தேசத்தின் மக்களை கவர முடிந்தது, தன்னை பின்தொடர வைக்க முடிந்தது, தொடர்ந்து அவர்களை சென்று சேரமுடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. உண்மையில் காந்தி அவ்வளவு மக்கள் செல்வாக்கு பெற்றிருந்தாரா அல்லது மிகைப்படுத்தலா? அவர் தேர்தலில் நின்றிருந்தாள் வென்றிருப்பாரா?
பா – சதீஷ்
***
அன்புள்ள நண்பருக்கு,
‘காந்தியம் இங்கே என்ன செய்தது?’ என்ற கேள்வி வெவ்வேறு காலகட்டத்தில் எழுந்துகொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு வரலாற்றுத் தருணத்திலும் இந்தியாவின் சூழலை வைத்து ‘காந்தியம் இங்கே தோற்றுவிட்டதா’ என்ற விவாதம் நிகழ்கிறது.
‘காந்தியின் பங்களிப்பு என்ன?’ என்ற கேள்விக்கு, அவர் இந்திய மக்களை அரசியல்படுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லலாம். பல படிகளாக வரலாற்று நோக்கில் விரித்தெடுக்கக்கூடிய ஒரு வரி அது.
இந்தியா ஒரு நிலப்பிரபுத்துவ நாடு. மன்னராட்சி நிலவியது. நாட்டின் பல பகுதிகளில் அரைப்பழங்குடி அரசாட்சிகளும், இன்னும் ஏராளமான பகுதிகளில் பழங்குடி வாழ்க்கைகளும் இருந்த நிலப்பரப்பு. அதன் மீது ஒரு காலனியாதிக்க அரசு அமைந்தது.
அக்காலனியாதிக்க அரசு, உருவாகி வந்த நவமுதலாளித்துவ அமைப்பின் இயல்புகள் கொண்டது. முதலாளித்துவம் அளிக்கும் சில கொடைகளை அது இந்த சமுதாயத்துக்கு அளித்தது. பொதுக்கல்வி, பொதுநீதி, அடிப்படை மனித உரிமைகள் போன்றவை. பழைய நிலப்பிரபுத்துவ அமைப்போடு ஒப்பிடும்போது காலனியாதிக்க நவமுதலாளித்துவ அரசு அளித்த இக்கொடைகள் மிக முக்கியமானவை. மிக அடிப்படையானவை.
காந்தி இந்திய அரசியலுக்கு வரும்போது, அவர் பழைய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் தேக்கத்தையும் அதன் விளைவான தீமைகளையும் பார்க்கிறார். அதற்கு மாற்றாக பிரிட்டிஷ் அரசு அளித்த கொடைகளையும் பார்க்கிறார். அவருடைய பங்களிப்பென்பது இவ்விரண்டிலிருந்தும் நன்மைகள் அனைத்தையும் அறிந்து பெற்றுக்கொண்டு இவற்றைக் கடந்த ஒன்றைக் கற்பனை செய்ததில்தான் உள்ளது.
பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பை அன்றைய பல சிந்தனையாளர்கள் செய்தது போல வெறும் சாதிமுறை, வெறும் சுரண்டலமைப்பு, என்று அவர் நிராகரிக்கவில்லை. அல்லது பழமைவாதிகள் செய்தது போல முன்னோர்களின் சொல்வழி அமைந்த ஒரு மாற்றமுடியாத சமுதாய அமைப்பென்றும் எண்ணிக்கொள்ளவில்லை.
மாறாக அதை முன்முடிவுகளின்றி ஆராய்கிறார். பழைய சமுதாய அமைப்பில் இருந்த நன்மையான கூறுகள் என்னென்ன என்பதை தர்க்கபூர்வமாக வகுக்கிறார். பழைய இந்திய நிலப்பிரபுத்துவ முறை ஒரு மையமற்ற சமுதாயத்தை உருவாக்கியிருந்தது என்று அவர் கண்டுகொண்டார். அதை தவிர்க்கமுடியாது என்று புரிந்துகொண்டார்.
இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு கொண்ட பொருளியல் அலகுகளாகவும், தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் சுதந்திரமான சமூகங்களாகவும் இயங்குவதை அவர் கண்டார். அந்த மையமில்லா சமூகத்திரளை வென்று, வன்முறையால் ஒன்றெனத் தொகுத்து பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசு தில்லியை மையம்கொண்ட ஒரு வலுவான அரசை உருவாக்கிக் கொண்டிருப்பதை கண்டார். மையப்படுத்தல் உருவாக்கும் ஊழல்கள், மேலாதிக்கங்கள், மாபெரும் இந்தியப்பெருநிலத்தில் அதன் விளைவாக உருவாகும் அநீதிகள் ஆகியவற்றையும் அறிந்தார்
பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து காந்தி அடிப்படையில் பெற்றுக்கொண்டது அந்த மையமற்ற சமுதாய உருவகத்தைத்தான். மத்தியில் ஒரு அரசு, பாதுகாவலுக்காகவும் ஒரு தொகுப்பு மையமாகவும் திகழ, ஒவ்வொரு அலகும் சுதந்திரத்துடன் தன் தனித்தன்மையைப் பேணி தன் வழிகளைத் தானே கண்டு, தன்னில் நிறைவுற்றிருக்கும் ஒரு சமுதாயத்தை அவர் கனவு கண்டார்.
காந்தி முதலாளித்துவத்தை, அதன் முகமாகிய காலனியாதிக்கத்தை காந்தி நிராகரித்தார். ஆனால், காலனியாதிக்கம் அளித்த நவீனக் கல்வியை, பொதுக்கல்வியை அவர் ஏற்றுக் கொண்டார். நவீனத்துவத்தின் முகமென பிரிட்டிஷாரால் முன்வைக்கப்பட்ட நீதிமுறையை அவர் முழுக்க நம்பினார். அத்தனை நீதிமன்றங்களிலும், நீதிமன்றம் என்ற அமைப்பை ஏற்றுக்கொண்டு அவர் பேசியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இந்தியாவை நிர்வாக ரீதியாக ஒருங்கிணைத்த பிரிட்டிஷ் அரசின் கொடையை அவர் அங்கீகரித்தார். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா முழுக்க உருவாக்கிய செய்தித்தொடர்பு, போக்குவரத்துத் தொடர்புகளை அவர் பயன்படுத்திக்கொண்டார். அவற்றை நிலைநிறுத்திக்கொண்டு மேலதிகமான ஒரு சமுதாயத்தை அவர் கற்பனை செய்தார்.
அது ஒரு நவீன ஜனநாயக அரசு. மையமற்ற அதிகாரம் கொண்ட, தன்னிறைவான அலகுகள் கொண்ட ஒரு புதிய வகையான அரசு. அந்தக் கனவை மக்களுக்கு அளிக்கவேண்டும் என்றும், அந்த உரிமைகளைக் கோருபவர்களாக மக்களை ஆக்கும்பொருட்டு குடிமைப்பயிற்சி அளிக்கவேண்டும் என்றும், அந்தவகையான பொருளியலமைப்பில் வாழும்பொருட்டு அவர்களுக்கு கிராமியவாழ்க்கைப் பயிற்சி அளிக்கவேண்டும் என்றும், அத்தகைய அரசுகளை உருவாக்கும் பொருட்டு மக்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்க வேண்டுமென்று அவர் எண்ணினார். அவருடைய மொத்த அரசியல் செயல்பாடும் அதை சார்ந்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவுக்கு 1918-ல் அவர் வரும்போது ஏற்கனவே ‘ஹிந்து ஸ்வராஜ்யம்’ எழுதிக் கையில் வைத்திருந்தார். அடுத்த முப்பதாண்டுகளில் அவருடைய பணிகள் அனைத்தும் அந்த முதற்கனவிலிருந்துதான் தொடங்குகின்றன. அந்த இலக்கை நோக்கி நகர்வதற்கு முதலில் மக்கள் தங்கள் சமூக உரிமை, பொருளியல் உரிமை ஆகியவற்றைப் பற்றிய தன்னுணர்வை அடைய வேண்டுமென அவர் நினைத்தார். ஆகவேதான் ஒத்துழையாமை போராட்டம் போன்ற பொருளியல் உள்ளடக்கம் கொண்ட போராட்டங்களை ஒருங்கிணைத்தார்.
அரசியல் சார்ந்த தன் உரிமைகளைக் கோரும், அதற்க்கென போராடும் ஒரு திரளாக இந்தியாவைக் கட்டமைத்தார். அதை வன்முறையின்றி நிகழ்த்த வேண்டுமென்ற அவருடைய கனவு மிக முக்கியமானது. அதைப் பற்றி நேரு எழுதும்போது “இந்தியாவைக் கவ்வியிருந்த அச்சத்தில் இருந்து மக்களை விடுவித்தார்” என்கிறார். அதற்கு முன் நடந்த வன்முறைப் போர்களினால் ஒடுக்கப்பட்டு பஞ்சத்தால் அடிபட்ட மக்களுக்கு போராடும் அடிப்படை மனநிலையில்லாமல் ஆகியிருந்தது. சிறு வெற்றிகள் வழியாக அவர் அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தார். தங்களுக்கு உரிமைகள் இருக்கின்றன, அதற்காகப் போராட வேண்டுமென்ற செய்தியைத்தான் முதல் பதினைந்து ஆண்டுகள் இந்திய சமுதாயத்திற்கு அவர் ஊட்டினார்.
அதன் பிறகு இந்தியாவில் ஒரு நவீன ஜனநாயக செயல்பாடுகள் தொடங்கவைத்தார். தேர்தல் அரசியல் என்ற ஒன்றை இங்கு பிரிட்டிஷார் அறிமுகம் செய்த போது அதில் ஈடுபட்டு, வென்று ஜனநாயக நிறுவனங்களை, இணையரசுகளை நடத்தும் நிர்வாக அனுபவங்களை இந்தியர்கள் பெறச் செய்தார். இவ்விரண்டும்தான் காந்தி இந்தியாவுக்கு அளித்த ஜனநாயகப் பயிற்சி.
இவ்வாறு அவரளித்த அரசியல்படுத்துதலை மூன்று அலகுகளாகப் பிரித்துக் காட்டலாம்.
அ. உரிமைகளுக்காகப் போராடும் மனநிலையை அளித்தல்.
ஆ. சிவில் சமூகமாகத் தங்களைத் தொகுத்துக் கொள்ளும் பண்பை அளித்தல், அதன் பொருட்டே ஆலய நுழைவு, தீண்டாமை ஒழிப்பு, கிராமப் பொருளியல் ஆகியவற்றை அவர் உருவாக்கினார்.
இ. நிர்வாகத்தில் பயிற்சி.
இவ்வாறு அரசியல்படுத்தப்பட்ட சிலகோடி மக்களால்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியா இன்றும் ஒரு ஜனநாயக நாடாக இருப்பது அன்றடைந்த அந்தப் பயிற்சியினால்தான்.
இந்தியாவோடு சுதந்திரம் பெற்ற நாடுகளில் பெயரளவிலேயே ஜனநாயகம் இருக்கக் கூடிய நாடுகள் எவையென்று பாருங்கள். அவை ஜனநாயகப் பயிற்சி பெறாத, அரசியல்படுத்தப்படாத மக்களால் நிகழ்த்தப்படும் அரசுகள். அரசியல்படுத்தப்படாத மக்களுக்கு வரலாற்றுக் கொடையாக சுதந்திரம் கிடைக்குமென்றால் அது சர்வாதிகாரத்துக்குத்தான் செல்லும் என்பதற்கு பாகிஸ்தானும், பர்மாவும், மலேசியாவும் இன்னும் ஏராளமான கீழைநாடுகளுமே சான்று.
இந்தியாவின் கோடானுகோடி மக்களை வெறும் முப்பதாண்டுகளில் அரசியல்படுத்துவதென்பது சாதாரண விஷயமல்ல. ஓர் எளிய கருத்தை பலகோடி பேருக்குக் கொண்டுசென்று சேர்ப்பதென்பது இன்றைய செய்தியுகத்திலேயே பெரும் பணி. காந்தி செய்தது அன்றைய மக்களுக்கு முற்றிலும் அன்னியமான, அவர்கள் அறிந்தே இராத நவீன ஜனநாயக விழுமியங்களை அவர்களுக்குக் கற்பித்தது
சென்ற முப்பதாண்டுகளில் அவ்வாறு இந்தியா முழுக்க என்ன பொதுவான கருத்துக்கள் கொண்டுசென்று சேர்க்கப்பட்டுள்ளன என்று பாருங்கள். எழுபதுகளில் சூழியல் சார்ந்த சில விழிப்புணர்வுக் கருத்துக்கள் மக்களிடையே கொண்டுசெல்லப்பட்டன. மக்கள் அவற்றை கொஞ்சமேனும் புரிந்துகொள்ள நாற்பதாண்டுகள் ஆயின. எண்பதுகளில் மிகைநுகர்வு பற்றிய கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்ல ஆரம்பித்தோம். நாற்பதாண்டுகளாக பெரிய அளவில் சென்று சேரவே இல்லை.
இவற்றோடு ஒப்பிடும்போது 1918-லிருந்து 1948-க்குள் முப்பதாண்டுகளில் இந்தியாவுடைய கோடானுகோடி மக்களுக்கு ஜனநாயகம் என்பதைப்பற்றி, அரசில் தங்களுடைய பங்களிப்பைப்பற்றி ஒரு புரிதலை உருவாக்குவதற்கு ஒரு தனிமனிதரால் இயன்றதென்றால், அது எவ்வளவு பெரிய சாதனை!
அந்த மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக மன்னனை தெய்வம் என்று வழிபட்டவர்கள். ‘திருவுடை மன்னன் திருமால்’ என்று நினைத்தவர்கள். உரிமை என்ற ஒன்று இருக்கிறதென்றே அறியாதவர்கள். பழங்குடிச் சிற்றூர்களில் இருந்து நகரங்கள் வரை பரந்திருக்கும் பலதரப்பட்ட மக்கள் அனைவரிலும் அரசென்பது தங்களுக்கானது, தங்களால் தேர்ந்தெடுக்கப்படுவது, தங்கள் நன்மைக்காக செயல்படவேண்டியது, தங்களுடைய பிரதிநிதியாக நிலைபெறுவது என்ற செய்தி, வெறும் முப்பதாண்டுகளில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டது.
அதுதான் காந்தியின் சாதனை. இந்தியாவின் மக்கள் அரசியல்படுத்தப்பட்டதன் வழியாக உலகத்தின் மக்கள்தொகையில் ஏறத்தாழ ஆறில் ஒரு பகுதியை அவர் அரசியல்படுத்தியிருக்கிறார். இந்த அரசியல்மயமாதல் இன்று வரைக்கும் கூட சீனாவில் நிகழவில்லை. உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒருபகுதி அரசியல் என்றால் என்ன, அரசியல் உரிமை என்றால் என்ன, குடிமைப் பண்பென்றால் என்ன என்று தெரியாமலேயே இன்று வரை வாழ்ந்துகொண்டிருக்கிறது. காந்தியின் இடம் என்ன என்பதை அந்த ஒப்பீட்டின் வழியாக நீங்கள் அறியலாம்.
சுதந்திரத்துக்குப் பிறகு என்ன நிகழ்ந்தது? அரசியல்படுத்தப்பட்ட அந்த மக்கள் எங்கே? அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள். அவர்களின் அடுத்த தலைமுறை இங்கு இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின்போது அந்த அரசியல் இலட்சியவாத அரசியலாக இருந்தது. இன்று அது தன்னல அரசியலாக மாறிவிட்டது. தன்னல அரசியல் என்று சொல்லும்போது அது ஒருபடி குறைவானது என்று நான் எண்ணினாலும் கூட இலட்சியவாத அரசியல் மட்டுமே இருக்கவேண்டுமென நான் கருதவில்லை. ஒரு ஆதிக்கத்தின் கீழிருக்கும்போது இருக்கும் இலட்சியவாதம், தன்னாட்சியின் கீழ் இல்லாமல் போவது இயல்பே.
சுதந்திரம் கிடைத்த உடனேயே இங்குள்ள மக்கள் இனம்,வட்டாரம், மொழி, மதம்,சாதி சார்ந்து தங்கள் உரிமைகளுக்காக முண்டியடிக்கத் தொடங்கினர். அதற்கான அரசியல் இங்கு உருவாகி வந்தது. அதுவே நாம் இன்று காணும் அரசியல். இது பங்கீட்டின் அரசியல். இதில் காந்திகால அரசியல் நெறிகளுக்கு இடமில்லை.
இந்த அரசியலிலும் காந்தி உருவாக்கிய ஜனநாயக குடிமைக் கூறுகள்தான் இன்றுவரைச் செயல்படுகின்றன. இலட்சியவாத அரசியலென்பது சமூகத்திற்கு தன் பங்களிப்பை அளிப்பது, அடைவதைவிட தியாகத்தால் மதிப்பிடப்படுவது. தன்னல அரசியல் என்பது உரிமைகளைப் பெறுவது, அதன் பொருட்டு அணிதிரள்வது, அதன் பொருட்டுப் போராடுவது என்ற நெறி கொண்டது. இன்று நிகழ்வது அதுதான்.
இது ஒரு முரண்பட்ட குழம்பிய சூழலை இந்தியாவுக்கு அளித்திருக்கிறதென்று மேலோட்டமாகத் தோன்றும். ஆனால் இப்போராட்டம்தானே ஜனநாயகம்! இவ்வாறுதானே இது இயங்க முடியும்! இந்தப் பிரம்மாண்டமான தேசத்தில் ஒவ்வொரு பிரிவும் தன்னுடைய உரிமைக்காக, தன்னுடைய நலனுக்காக ஆயுதமின்றிப் போராடுமென்றால், அப்போராட்டத்தின் சமரசத்தினால் இங்கு அதிகார மாற்றங்களும், அதிகார சமநிலைகளும் நிகழுமென்றால் அதுதானே ஜனநாயகம்!
இலட்சியவாதத்துடன் ஒப்பிட்டு, இன்று தன்னலம் வந்துவிட்டது ஆகவே காந்தி தோற்றுவிட்டார் என்பதல்ல உண்மை. இன்றைய தன்னல அரசியலில் இருக்கும் ஜனநாயகப் பண்புகளும் காந்தி பயிற்றுவித்தவைதான். தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரி உண்ணாவிரதமிருக்கும் ஒரு குழுவும், விவசாய உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று சொல்லி சத்தியாகிரகம் இருக்கும் ஒரு குழுவும், தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று சொல்லி போராடும் குழுவும் காந்திய வழிகளைத்தானே கைக்கொள்கின்றன? அனைவருமே காந்தியைத்தானே முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறார்கள்
பல ஆண்டுகளாக பெரும் போர்கள் நடந்த தேசம் இது என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் இன்னொரு பகுதியுடன் மோதி ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. ஒன்று இன்னொன்றைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது வெறும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு. அதிலிருந்து எழுந்து ஒரு ஜனநாயகக் கட்டமைப்புக்குள் ஒவ்வொரு விசையும் மற்றவற்றுடன் மோதி தன் உரிமைகளுக்காகப் போராடுவதென்பது இயல்பான ஜனநாயக செயல்பாடுதான்.
ஜனநாயக அரசியல் என்பது அதன் உயர்கொள்கைகளின்படி மட்டுமே நிகழும் ஒன்று அல்ல. அது பல்வேறு நடைமுறை வாய்ப்புகளால், சூழல் கட்டாயங்களால் நிகழ்வது. ஜனநாயகத்தின் அடிப்படை மக்கள் அனைவருமே தங்கள் உரிமைகளைக் கோரிப் பெறுவது. அவ்வாறு கோரும்பொருட்டு திரள்வது. அது இனம், மொழி, மதம், சாதி என்னும் அடையாளத்தால் திரள்வதாக அமையலாம். அதுவும் ஜனநாயகச் செயல்பாடுதான். ஆனால் கொள்கைகளின் அடிப்படையில் திரள்வதே உயர்ந்தது, முன்னுதாரணமானது.
நான் பலமுறை எழுதிய ஒன்று, நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் முன்னால் ஒருமுறை நரிக்குறவர்களின் உரிமைப்போராட்டத்தைக் கண்டேன். எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் அவர்கள் அப்படி தங்களுக்கென உரிமை என சில உண்டு என்றே உணராமல் இருந்திருக்கிறார்கள்! இன்று அதை அதிகாரத்தின் வாசல்முன் வந்து நின்று கேட்கிறார்கள் என்றால் அது ஜனநாயகத்தின் வெற்றி அல்லவா? அந்த ஜனநாயகத்தின் அடிப்படைகளைத்தான் காந்தி இங்கே பயிற்றுவித்தார்.
அந்த ஆர்ப்பாட்டத்தை கண்டுசெல்லும் ஒருவன் எத்தனை பழைமைவாதியாக இருந்தாலும் அவர்கள் அப்படி கோரக்கூடாது என்று இன்று சொல்லமாட்டான். தனக்கும் கோருவான், அவ்வளவுதான். அந்த மனநிலையையே இந்தியா சென்ற நூறாண்டுகளுக்குள்தான் அடைந்திருக்கிறது. அதுதான் காந்தி மக்களை அரசியல்படுத்தினார் என்பதன் பொருள்.
இன்றைய ஜனநாயகம் இலட்சியவாத ஜனநாயகம் அல்ல, தன்னல ஜனநாயகம். இதில் தன் உரிமைகளை வென்று தருபவர்களை, தங்களுக்கு உலகியல் நன்மைகளை ஈட்டித்தருபவர்களை மக்கள் தேர்வுசெய்கிறார்கள். அதன்பொருட்டே குழுவாக, கூட்டமாகச் செயல்படுகிறார்கள். இங்கே இலட்சியவாதம் தேர்தலில் வெல்லும் மதிப்பு கொண்டதாக இல்லை.
ஜனநாயகத்தில் சிக்கல்கள் உண்டு. உலகம் முழுக்க அவை உணரப்படுகின்றன. அடையாள அரசியல், பணஆதிக்கம் ஆகியவை முதன்மையான நோய்க்கூறுகள். சமீபகாலமாக கட்டற்ற ஊடகம் உருவாக்கும் சிக்கல்கள். இன்று அவை மக்களால் பொறுப்பற்று பயன்படுத்தப்படுகின்றன. விளைவாக கருத்துருவாக்கம் நிகழாத வெற்று அலையாக செய்தியூடகம் ஆகிவிட்டிருக்கிறது. நாளை அரசு சமூக ஊடக வெளியை முழுக்க கையகப்படுத்துமென்றால் அது ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் கருத்துருவாக்கத்தையே அழிக்கும்.
இவ்வாறு, ஜனநாயகத்திற்கு பல நோய்க்கூறுகள் உள்ளன. புதியவை எழுகின்றன. அவற்றுக்கெல்லாம் ஜனநாயகத்தை அளித்த முன்னோடிகள்தான் பொறுப்பு என்றால் நாம் செய்யவேண்டியது என்ன? காந்தி மக்களை அரசியல்படுத்தி ஜனநாயகத்தை அளித்தார். அதை மக்கள் நழுவவிட்டு நுகர்வில், ஊழலில் திளைத்தால் காந்தி அதற்குப் பொறுப்பா என்ன?
காந்தியை ஏற்றுக்கொண்ட முந்தைய இலட்சியவாத தலைமுறையால்தான் இந்தியாவின் ஜனநாயக அடித்தளம் உருவாக்கப்பட்டது. காந்தி சுட்டிக்காட்டினார் என்பதனால்தான் நேரு இந்தியாவால் முழுமையாக ஏற்கப்பட்ட தலைவராக ஆனார். இந்தியாவை குடியரசாக நிலைநாட்டும் அரசியல்சட்டத்தை, அரசியலமைப்புகளை உருவாக்கினார்.
எண்ணிப்பாருங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இந்திய அரசால் அளிக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரும்பான்மையினரான மக்கள் ஏன் அதை எதிர்க்கவில்லை? உண்மையில் எதிர்த்திருந்தால் எந்த அரசாவது அளித்திருக்க முடியுமா? ஏன் எதிர்க்கவில்லை என்றால் அது காந்தி அளித்த வாக்குறுதியின் நிறைவேற்றம், அன்றைய மக்கள் காந்தியை ஆதர்சமாக நினைத்தவர்கள். அன்றிருந்தது இலட்சியவாத அரசியல்.
இன்று தலித் ஒதுக்கீட்டை ஒரு இரண்டு சதவீதம் உயர்த்தட்டும் ஓர் அரசு. இன்றைய தன்னல அரசியலில் அத்தனை தலித் அல்லாத சாதியினரும் கிளம்பி கிழித்து குதறிவிடுவார்கள். காந்தி உருவாக்கிய அரசியல்மயமாதல் என்றால் என்ன என்று அப்போது புரியும்.
இன்றும் இந்தியாவில் லட்சியவாத செயல்பாடுகள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான காந்தியர்கள் உள்ளனர். தகவலறியும் சட்டத்தில் இருந்து ஊழலுக்கெதிரான போர் வரைக்கும் காந்தியர்கள் தான் இங்கே ஒருங்கிணைக்கிறார்கள். இந்தியாவின் சுற்றுச்சூழல் இயக்கம் முழுக்க முழுக்க காந்திய வழிகளைப் பின்பற்றித்தான் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இந்தியாவுடைய மைய அரசின் வரம்பில்லா அதிகாரத்துக்கே தளைகட்ட அதனால் இயன்றிருக்கிறது.
இன்று இந்தியாவில் இருக்கும் அத்தனை சூழலியல் சட்டங்களும், பாதுகாப்புகளும் காந்திய வழிகளால் அடையப்பட்டவையே. இந்தியாவின் தனிமனித உரிமைகள் அனைத்தும் காந்திய வழிகளால் அடையப்பட்டவை. தகவல் அறியும் சட்டம் போன்ற இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் சுதந்திர இந்தியாவிலேயே காந்திய வழிமுறைகளால் வெல்லப்பட்டவை.
அவை தனிமனித சாதனைகள் அல்ல. ஒருவர் காந்திய வழிமுறையை எடுத்து முன்வைக்கும்போது, அவர்களுக்கு ஆதரவாகத் திரளும் மக்கள்களில் காந்தி வாழ்கிறார். அவர்கள்தான் காந்தியால் பயிற்றுவிக்கப்பட்ட, காந்தியால் அரசியல்படுத்தப்பட்ட மக்களின் வாரிசுகள். பாபா ஆம்தேவுக்கோ, கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதானுக்கோ கூடும் கூட்டமென்பது அதுதான்.
பிற எந்த நாட்டை விடவும் இந்தியாவில் அந்தத் திரள் இன்று அதிகம். அவ்வகையில் உலகத்துக்கே அது ஒரு முன்மாதிரி. உலகின் மிக அதிக மக்கள் தொகை மிகுந்த ஒரு தேசம், உலகின் வேறுபாடுகள் மிகுந்த ஒரு தேசம், பொருளியல் நிறைவடையாத ஒரு தேசம், இன்னும் ஜனநாயகமாக நீடிப்பது காந்தி பயிற்றுவித்த அரசியலால்தான்.
ஜெ
விகடன் பேட்டி – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஆனந்த விகடன் உரையாடல் பார்த்தேன். வழக்கமான ஸ்டுடியோ பேட்டிகளில் இருக்கும் செயற்கையான சிரிப்பு, பாவனைகள் இல்லாத பேட்டியாக இருந்தது. பேட்டிகண்ட இருவரும் இயல்பாக இருந்தனர். பட்டிமன்றம் ராஜா கேள்விகளில் மெல்லிய நகைச்சுவையும் பாரதி கேள்விகளில் உங்கள் படைப்பை விரிவாகப் படித்திருந்த சான்றும் இருந்தது. பல கேள்விகள் ஏற்கனவே தெரிந்தவை. பதில்களும்தான். ஆனாலும் மீண்டும் கேட்கமுடிந்தது. அந்த உற்சாகமான முகபாவனைகளுக்காகவும் குரலுக்காகவும்.
அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.
சாந்தி. ஆர்
அன்பு ஜெ,
உங்களுடைய விகடன் பேட்டியை பார்த்தேன். மிக நேர்த்தியான ஒளி ,ஒலி மற்றும் மொழி.
திருமதி பாரதி பாஸ்கர் கேள்விகள் அறிமுகம் மற்றும் அவ்வபோது அவர் முகம் காட்டிய பூரிப்பு அதை உள்வாங்கி அனுபவித்து நீங்கள் சொன்ன பதில்கள் அனைத்தும் ரசனைக்கு உரியவை. கொன்றைப்பூ வெண்முரசு பற்றிய காணொளியில mute செய்து முகத்தை பார்ப்பது என ரசிக்கத்தக்க பகிர்தல்கள்.
உங்கள் குரு நித்யா வின் சோப்பு நுரை என்ற விளக்கம் பிரமிப்பை உள்ளாக்கியது. அந்த நுரை ஒரு அறையை மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வாசகர்களின் மனதையும் நினைக்கக்கூடிய நிறையாகவும் இருந்து வருகிறது..
துறவிகளைப் பற்றி நீங்கள் கொடுத்த விளக்கங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு உரியவை. அதை போகிறபோக்கில் சொல்லியது இனிமை.
நிறைவாக காந்தியை பற்றி உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி சொல்லும்போது சிறப்பாகவே இருந்தது.
இப்போது நீங்கள் காந்தியைப்பற்றி எப்போது சொன்னாலும் எழுதினாலும் உடனடியாக என்னை போலவே பலருக்கு அந்த சிலிர்ப்பான அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஒருவேளை உங்களை நேரில் பார்த்து இப்படி ஒரு கேள்விக் கணைகள் இருந்திருந்தால் இவ்வளவு இயல்பாக பேசி இருப்பீர்களா என்று தெரியவில்லை.
இயல்பான அனுபவங்கள் இயல்பான மனிதர்கள் . அத்தகைய விஷயங்கள் மனதைக் கவர்வது இயற்கைதானே.
மற்ற பாகங்களுக்கு காத்திருக்கிறோம்.
நடராஜன்
கோவை
அன்புள்ள ஜெ,
விகடன் பேட்டி நன்றாக இருந்தது. அது வெவ்வேறு இடங்களை எதிர்பாராதபடித் தொட்டுச் செல்கிறது. காந்தியைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறீர்கள். ஆனாலும் இந்தப்பேட்டியில் சொல்லப்பட்டுள்ளவை புதியதாகவும் சிந்தனையை தூண்டிவிடுவனவாகவும் இருந்தன. இயல்பான உரையாடலும் புன்னகையும் அழகாக இருந்தன.
ராஜ்குமார்
அன்புள்ள ஜெ
விகடன் பேட்டி பார்த்தேன். சிறப்பான அழகான பேட்டி. ஆனால் சமீபகாலமாக உங்களைப் பற்றிய எந்த பதிவு இருந்தாலும் கணிசமான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வந்து வசைகளை எழுதிவிட்டுச் செல்கிறார்கள். அதிலும் திரும்பத்திரும்ப ஒரே வார்த்தை. ஒரே விஷயம். வேறு எதுவும் உங்களைப் பற்றி தெரியாது. சம்பந்தப்பட்ட பதிவைக்கூட வாசித்திருக்க மாட்டார்கள். இலக்கியம் கலை பற்றி எந்த புரிதலும் இருப்பது தெரியாது.
அப்படியென்றால் எப்படி இந்தவகையான பேட்டிகளுக்கு வருகிறார்கள்? உங்கள் பெயரை வைத்து தேடிக்கொண்டிருக்கிறார்கள். பதிவுகளைக் கண்டதும் வந்து வசையை எழுதிவிட்டுப் போவதை ஒரு கடமை போலச் செய்கிறார்கள். இந்த மதக்காழ்ப்பை இப்படி வெளிப்படுத்திக் கொள்வதில் அவர்களுக்கு வெட்கமே இல்லை. மதக்காழ்ப்புக்கு அடிப்படை என்பது எங்காவது எவராவது சொன்ன சில அவதூறுவரிகள் மட்டும்தான்.
இங்கே இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் நடந்துகொள்ளும் முறை அருவருப்பானது. எந்த அறிவுப்பழக்கமும் இல்லாமல் காழ்ப்பை மட்டுமே கக்குகிறார்கள். கொஞ்சம் வாசிப்பவர்கள், யோசிப்பவர்கள் கூட மதக்காழ்ப்புடன் இருப்பதில் வெட்கம் கொள்வதே இல்லை. நீங்கள் ஜமாலன் என்பவர் பற்றி பாராட்டி எழுதியிருந்தீர்கள். அவர் எழுதியவற்றைச் சென்று வாசித்தேன். மார்க்ஸியம் பின்நவீனத்துவம் எல்லாவற்றையும் கலந்துகட்டி எழுதியிருந்தார். அது பரவாயில்லை. ஆனால் அவருடைய அடிப்படையான பார்வை அப்பட்டமான மதவெறியும் காழ்ப்பும் மட்டும்தான். அவரெல்லாம் தன்னை முற்போக்கு என நம்பும் சூழல் இங்கே உள்ளது.
இந்து கிறிஸ்தவர் முஸ்லீம் எவரானாலும் மதக்காழ்ப்புடன் இருப்பதற்கு கொஞ்சமேனும் வெட்கப்பட்டாலொழிய அவர்மேல் எந்த மதிப்பும் வரவில்லை. மதக்காழ்ப்பும் கட்சிக்காழ்ப்பும் எதையுமே புரிந்துகொள்ளாதபடிச் செய்துவிடுகின்றன. புனைபெயர்களில் இயங்கும் பலர் மதச்சிறுபான்மையினர் என்பதை அவர்களின் ஐடியை தொடர்ந்தால் கண்டுபிடித்துவிட முடியும். காழ்ப்பு காரணமாக அடிப்படையான புரிதலே அவர்களுக்கு இருப்பதில்லை. உதாரணமாக இந்த விக்டன் பேட்டியிலேயே நீங்கள் விவேகானந்தர் ஆகிவிடலாமா என முனைந்ததை நையாண்டியாகச் சொல்கிறீர்கள். மதக்காழ்ப்பு கொண்ட ஒருவர் கீழே வந்து உங்களை விவேகானந்தருடன் ஒப்பிடுகிறீர்கள் என்று சொல்கிறார். அவருடைய புரிதல்திறனை மதக்காழ்ப்பு அந்த அளவுக்கு மழுங்கடிக்கிறது.
இவர்களை காணாமல் பேட்டிகளையும் பேச்சுக்களையும் மட்டுமே கேட்டுவிட்டு வருவதே நல்லது. ஆனால் கண்ணில்பட்டு தொலைக்கிறது.
எம்.பாஸ்கர்
சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
பிறிதொன்று கூறல், கட்டுரை கவிதை பற்றிய ஒரு புதிய பார்வையை உருவாக்குவதாக இருந்தது. சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளும் அழகானவை. அவர் இன்னமும் தொகுப்பு என ஏதும் போடவில்லை என நினைக்கிறேன்.
ஒரு மரபில் கவிதை மட்டும் எத்தனை துள்ளினாலும் அதன் பண்பாட்டு அடிப்படைகளை விட்டு மேலே போகவே முடியாது என்று ஒரு கூற்று உண்டு. அதாவது அது மெய்யான கவிதையாக இருக்கும்பட்சத்தில். செயற்கையாக நகலெடுக்கும் கவிதைகளைச் சொல்லவில்லை.
இதை நான் சமீபத்தில் பேசும்போது உணர்ந்தது ஜப்பானிய மாங்கா காமிக்ஸின் வசனங்களை வாசிக்கும்போது அவற்றிலுள்ள நையாண்டியும் இயற்கைபற்றிய ஓரிருவரிக் குறிப்புகளும் ஜென் தனமாக இருக்கிறதே என்று எண்ணினேன். அந்த அழகியலில் இருந்து அவை வெளியேற முடியாது
அப்படிப்பார்த்தால் சங்ககால அழகியல் தமிழ் நவீனக் கவிதைகளில் உள்ளது. ஆனால் தமிழின் தனித்துவம் கொண்ட அழகியல் என்பது ரிட்டாரிக் அல்லவா? தமிழுக்கே அந்த ரிட்டாரிக் அம்சம் உண்டு. அது ஏன் நவீனக் கவிதைகளில் நிகழவில்லை? எந்த தற்பிடித்தம் அதை தடுக்கிறது?
எம்.பாஸ்கர்
***
அன்புள்ள ஜெ,
சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகள் அழகாக உள்ளன. நவீனத் தமிழ்க்கவிஞர்களிடம் ஓர் அம்சத்தைப் பார்க்கிறேன். அவர்கள் தமிழ்மொழியை இலக்கணச் சுத்தமாகப் படித்திருப்பதில்லை. இலக்கணச்சுத்தமாக தமிழ் படித்தால் இரண்டுவகை மொழிகள் வந்துவிடும். ஒன்று, பத்திரிகை மொழி. இன்னொன்று, பள்ளிக்கூட மொழி. இரண்டு மொழியுமே ஸ்டேல் ஆனவை. ஆகவே கவிதைக்கு உதவாதவை. அவற்றில் எழுதினால் கவிதை கான்கிரீட்டில் செய்ததுபோல இருக்கும்.
நவீனக் கவிஞர்கள் தங்கள் மொழியை சூழலில் இருந்து பெற்றுக்கொண்டு அதில் தங்கள் கவித்துவத்தை முன்வைக்க முயல்கிறார்கள். அப்போது இலக்கணப்பிழைகள் நிகழ்கின்றன. கூடவே புதிய சொல்லாட்சிகளும் அழகுகளும் உருவாகின்றன. இதுதான் நவீனக்கவிதைக்குரிய மிகமிக அழகான அம்சம் என நினைக்கிறேன்.
நிலத்தில் மட்டுமே எஞ்சியிருந்தன
பெய்ததின் அறிகுறிகள்
என்றவரியை இலக்கணவாத்தி என்ற வகையில் நான் பெய்தமையின் என திருத்துவேன். ஆனால் பெய்ததின் என்ற வரி இன்னும் பல அர்த்தங்களை அளிக்கிறது.
இல்லாமல் ஆக்க முடியாத
மனங்களின் சுவடுகள்போல
இருந்தது
என்னும் வரியிலுள்ள ஒருமைபன்மை மயக்கமே அழகை உருவாக்குகிறது என நினைக்கிறேன்
ஆர்.சுப்ரமணியம்
***
அறமென்ப, வழக்கறிஞர்கள் – கடிதம்
அன்புள்ள திரு. ஜெயமோகன்
அவர்களுக்கு,
வாகன விபத்து வழக்குகளில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் பொறுப்பு அந்நிறுவனத்திற்கு உண்டு. நீதிமன்றத்தில் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கலாகும் போது அந்நிறுவனம் அதன் வழக்கறிஞர் மூலம் முன்னிலையாகும். அவ்வழக்கறிஞர் விபத்து மற்றும் தொடர்புடைய பொருண்மைகள் குறித்து காப்பீட்டு நிறுவனத்திடம் உரிய அறிவுறுத்தல் பெற்று எதிருரை தாக்கல் செய்வார். அதன் பின்பு அவ்வழக்கு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்.
இதில் காப்பீடு நிறுவனம் ஒரு முக்கியமான விஷயத்தை உறுதி செய்வது வழக்கம். அது அவ்விபத்து உண்மையாக நடந்ததா என்பதை தன் புலனாய்வு அலுவலரால் காப்பீடு நிறுவனம் விசாரித்துக் கண்டடையும். இதற்கு ஒரு வரலாறு உண்டு. தென்னை மரத்திலிருந்து விழுந்தவர்கள், குளியலறையில் வழுக்கி விழுந்தவர்கள் என எலும்பு முறிந்தவர்கள் பலர் தங்களுக்கு வேண்டிய வாகனங்களை வைத்து அதன் ஓட்டுனர் மீது விபத்து நடந்தாகப் பொய்யான புகார் கொடுத்து வழக்கு பதிவார்கள். விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்படும் எதிரி குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி வழக்கை முடித்துக் கொள்வார்.
மரணத்தை ஏற்படுத்தும் விபத்து தவிர சாதாரண காயம் மற்றும் கொடுங்காயம் ஏற்படுத்தும் விபத்து வழக்குகளுக்கு இன்றளவும் குற்றவாளிகளுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. இந்த குற்ற வழக்கு மேஜிஸ்ட்ரேட் கோர்ட் எனப்படும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். இது குற்ற வழக்கு. வாகன உரிமையாளர் மீதும் காப்பீடு நிறுவனத்தின் மீதும் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கலாகும். நஷ்ட ஈடும் கிடைக்கும்.
இந்த நஷ்ட ஈடு வழக்கு M.C.O.P. எனப்படும். இவ்வழக்குகள் சார்பு நீதிமன்றம் நிலையில் இருக்கும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவது வழக்கம். இது சிவில் வழக்கு. இது போன்ற வழுக்கி விழுந்த விபத்து வழக்குகளைத் தொழில் முறையில் செய்து கொடுக்க தரகர்கள், காவல் அதிகாரிகள், குமாஸ்தாக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உண்டு.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் நடந்த உண்மை சம்பவம். ஒரு காப்பீடு நிறுவனம் அதன் பேரில் தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈடு வழக்குகளின் உண்மைத் தன்மைகளை விசாரிக்கிறது. சுமார் 7 வழக்குகளில் ஒரே பதிவெண் கொண்ட ஒரு TVS 50 வாகனம் விபத்தை ஏற்படுத்தியுள்ளது கண்டு நிறுவனம் அதிர்ச்சிக்குள்ளாகிறது. மீண்டும் பழைய வழக்குகளை பரிசீலிக்க ஏற்கனவே அதே வாகனம் விபத்துக்களை ஏற்படுத்தியதாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அதில் நஷ்டஈடும் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த அதிர்ச்சி அனைத்து வழக்குகளையும் தாக்கல் செய்தது ஒரே வழக்கறிஞர். அனைத்து வழக்குகளிலும் குற்ற வழக்கு பதிவு செய்தது ஒரே காவல் நிலையம். வெவ்வேறு தேதிகளில் ஒரே இருசக்கர வாகனம் ஒரே காவல் நிலைய ஆளுகையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தனை விபத்துக்களிலும் காயம்பட்ட நபர்கள் விபத்து நஷ்டஈடு வழக்குத் தாக்கல் செய்ய ஒரே வழக்கறிஞரை அணுகியிருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவன் சொல்லிவிடுவான், அதற்கு வாய்ப்பில்லையென்று.
விபத்தில்லாத பல்வேறு சம்பவங்களில் காயம்பட்ட நபர்களை தரகர்கள் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அவர் தனக்கு வேண்டிய ஒரு வாகனத்தைப் பயன்படுத்தி ஒரே காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கிறார். வழக்கறிஞருக்கு வேண்டிய காவல் ஆய்வாளர் குற்ற வழக்குகளை செவ்வனே பதிவு செய்து சம்பவம் உண்மைதான் என்று இறுதியறிக்கை தாக்கல் செய்து குற்ற வழக்கை முடித்துத் தருகிறார். பின்பு நஷ்டஈடு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது.
இத்தனையும் கண்டறிந்த காப்பீடு நிறுவனம் காவல் நிலையத்தில் மோசடி குற்றத்திற்கான புகாரைத் தருகிறது. புகார் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு வழக்கறிஞர்கள், தரகர்கள், காவல் ஆய்வாளர் என சுமார் பத்து நபர்கள் மீது இறுதியறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றதில் குற்ற வழக்கு நடந்து வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சுமார் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றார்கள். தண்டனை பெற்ற எதிரிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு திருச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதியானது. அதற்கு மேல் மீண்டும் எதிரிகள் தாக்கல் செய்த சீராய்வு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்போதும் நிலுவையில் உள்ளது.
இது போல் இந்தியா முழுவதும் பல ஆயிரம் மோசடி நஷ்டஈடு வழக்குகள் அதையொட்டி தாக்கலான மோசடி குற்றவழக்குகள் இன்றளவும் நடக்கிறது. பல வழக்கறிஞர்கள் தண்டிக்கப்பட்டும் விட்டார்கள்.
இந்த நீண்ட முன்னுரை ‘அறமென்ப’ சிறுகதையை ஒட்டி நடந்த விவாதத்தை குறித்துப் பேச அவசியமாகிறது. ‘அறமென்ப’ சிறுகதையில் எவ்வித பொருண்மைப் பிழையும் இல்லை. அக்கதை எவ்விதத்திலும் வழக்கறிஞர்களின் மாண்பைக் குலைப்பதாக இல்லை. விபத்து நஷ்ட ஈடு வழக்குகளில் சில வழக்கறிஞர்கள் கீழ்மையின் எல்லைகளைக் கடந்து பல காதம் சென்றுவிட்டார்கள். என்பதுகளின் இறுதி வரை விபத்து நஷ்ட ஈடு வழக்குகளின் நஷ்ட ஈடுக் காசோலை வழக்கறிஞர்கள் பெயரிலேயே வழங்கப்பட்டு வந்தது. வழக்கறிஞர் கட்டணத்தை நஷ்டஈடாக கொடுத்துவிட்டு, நஷ்டஈட்டை தங்கள் கட்டணமாக சில வழக்கறிஞர்கள் எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததும்தான் காசோலை பாதிக்கப்பட்டவர் பெயருக்கு வழங்கப்படுகிறது.
மேற்கண்ட சம்பவங்களை வைத்துப் பார்த்தால் கதையில் பேரம் பேசிய வழக்கறிஞர்களில் செயல் ஒன்றுமே இல்லை. இதை ஒட்டி ஆட்சேபனை, அதற்குப் படைப்பாளியின் பதில் என்பது சட்டத்துறையில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் எனக்கு மிகப்பெரிய அயற்சியை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு அடிப்படையாகத் தெரியும் ஒரு விஷயத்தை அதை விளங்க மறுக்கும் ஒருவருக்கு விவரிக்கத் தொடங்கும் போது ஒரு அயற்சி ஏற்படும் தெரியுமா? அந்த அயற்சியே இக்கடிதத்தைக்கூட தாமதப்படுத்தியது.
அந்தக் கதை முடிவில் ஏமாற்றப்பட்ட நாயகன் ஒரு சந்தோஷ மனநிலைக்கு வருகிறான். இனியும் அவன் காயம்பட்டவனைக் கண்டால் உதவக்கூடும். ஏன்? அதைக் கண்டடைய வேண்டியதே ஒரு வாசகனின் மனநிலையாக இருக்க வேண்டும். அதில் விவாதிக்க நிறைய உண்டு. அதை விடுத்து கதையில் பொருண்மைப் பிழை, தகவல் பிழை என்பதெல்லாம் அறியாமை இல்லை, பேதமையின் உச்சம்.
அன்புடன்,
ஆர். பிரேம் ஆனந்த்.
***
அறமென்ப, திரை – கடிதங்கள் அறமென்ப, எச்சம்- கடிதங்கள்***





![Aanaiyillaa!: ஆனையில்லா! (Tamil Edition) by [Jeyamohan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/hostedimages/1624438455i/31534885.jpg)
வெண்முரசு இரு கடிதங்கள்
அன்பு ஜெ,
உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதும் கடிதம். 2018 வருடம் எனது வாழ்வின் மிக கடினமான காலகட்டம் – தனிப்பட்ட அலைக்கழிப்பு, எனது குடும்பம் சிதறுண்டு நான் சந்தோசமாக இருக்கவேமுடியாது என்று வாழ்ந்திருந்த சமயம். வெண்முரசு என்னை மீட்டது; எனது வினாக்களுக்கு விடையளிக்கும் நூல் எப்படியாவது என்னிடம் தக்க சமயத்தில் வந்துசேரும் – அதை நல்லூழ் என்பதே தவிர வேறு எப்படி புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. வெண்முரசின் சமநிலை, அறம், விதியின் பாதை என்னை மருகட்டமைக்க உதவியது.
நானும் எனது மனைவியும்,”குழந்தை இல்லாமலே வாழ்ந்துவிடலாம்” என்று பலவருடங்களுக்கு முன்னரே முடிவுசெய்திருந்தோம். 2020 வருடம் திடீரென்று ஒரு நாள், அந்த முடிவே மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொண்டோம்.
என் வாழ்வின் மிக மிக மகிழ்ச்சியான நாட்கள் இரண்டு – 1) என் மனைவி கருவுற்றிகிறாள் என்றறிந்த நாள் 2) எனது மகளை செவிலி கையில் அளித்த நாள் – கண்கள் என்னை அறியாமல் இப்பொழுதும் பனிக்கிறது. என்னில் ஒரு தாயை நான் கண்டது அவளிடம் சரணடையும் பொழுது. மற்றொரு உயிரை இவ்வளவு விரும்பமுடியும் என்பதே எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது (நான் மிகவும் ரேஷனல் ஆனவன் என்ற கற்பனை எனக்கிருந்தது).
வெண்முரசு எனக்களித்த வரங்கள்;
1) தந்தை வடிவங்கள்: பாண்டு போன்ற ஒரு தந்தையாகவும் திருதராஷ்டிரர் போன்று அன்பே வடிவானவராகவும் எனது மகளுக்கு இருக்க விழைகிறேன்.
2) தரிகட்டு அலைந்த மனதை சீர்படுத்தி எனது தெரிவுகளை மறுபரிசீலனை செய்யும் மனநிலை. அறம் நோக்கி என்மனது பயணிக்க ஆரம்பித்தது
3) தற்செயல்களின் ஆடல் பற்றிய புரிதலை
4) இன்னும் நிறைய இருக்கிறது…சுருக்கமாக சொன்னால் வெண்முரசு என்னை கண்டறியாவிடில் எனது வாழ்கை பாதை மாறியிருக்கும்
எங்களது மகளுக்கு “மாயா” என்று பெயரிட்டிருக்கிறோம். இத்துடன் சில படங்களையும் இணைத்துள்ளேன். ஒரு வகையில் நீங்களும் எனக்கு குரு/தந்தை வடிவம்தான் – உங்களது படைப்பு இல்லாவிடில் இந்த இடத்திற்கு நான் வந்திருப்பது சந்தேகமே. உங்களக்கு என் நன்றிகள் பல. மாயா உங்களது கதைகளை கேட்டே வளரப்போகிறாள் :-) நீங்களும், உங்களது அன்பிற்கு உரியவர்களும் நீண்ட காலம், நல்லாரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறையிடம் வேண்டுகிறேன். 31 தேதி சந்திக்க பேராவலுடன் இருக்கிறேன்.
பேரன்பும் / நன்றிகளும்,
ஜி
***
அன்புள்ள ஜி,
வெண்முரசு அளிப்பது என்ன அனுபவம் என்று கேட்டால் ஒருவகையில் ஆணவமழிவுதான் என்று சொல்வேன். வாழ்க்கையின் பெருஞ்சித்திரம் நாம் அரிதானவர்கள், நாம் தனித்துவம் கொண்டவர்கள் என்ற ஆணவத்தை இல்லாமலாக்குகிறது. இங்கு வாழ்ந்து மறையும் கோடானுகோடிகளில் ஒருவர். ஆகவே நாம் நம்மை தருக்கி மேலேற்றிக்கொள்ளவேண்டியதில்லை. நம்மை நாம் கீழிறக்கிக் கொள்ளவேண்டியதுமில்லை. நாம் மானுடத்திரளேதான். மானுடமேதான். அந்த நிறைவுணர்வும் அதன் விளைவே
ஜெ
***
திரு ஜெயமோகன் அவர்களுக்கு
தற்போது பன்னிரு படைக்களம் வந்துவிட்டேன் உங்களுடைய வெண்முரசு படிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து வேறு ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் இன்னும் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இதை நீங்கள் எழுதி அதை நான் படிக்க வரம் பெற்றிருந்தால் என் வாழ்க்கை மாறி இருக்கக்கூடும் எனினும் தற்போதைய மாற்றங்களே நான் வரவேற்க கூடியவைதான் அதுவும் இந்த சொல்லொணாத் துயரில் உலகமே அடங்கியிருக்கும் பொழுதில
என் உள்ளம் மட்டும் சுறுசுறுப்பாக உங்கள் எழுத்துக்களில் நடனமாடிக் கொண்டிருப்பது என்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் பெரும் ஆச்சரியத்தையும் பொறாமையையும் கொண்டு சேர்த்திருக்கிறது.
பெண்களின் ஆளுமையை மிகப் பிரமாதமாக கொண்டு செல்கின்றீர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுமை உடைய பெண்கள் நினைப்பதை அப்படியே சித்தரிக்கிறீர்கள் எனினும் துரோணர் பட்ட அவமானத்தையும் கர்ணன் கொண்ட கஷ்டங்களையும் பார்த்து அதை fiction தான் என்று புரிந்து கொண்ட போதிலும் இன்று அதனால் பெற்ற தைரியம் மிக அதிகம். வெண்முரசு என்னிடம் 18 வால்யூம் இருக்கிறது மேலும் 5 வாங்கவேண்டும் என நினைக்கிறேன் பக்கத்தில் இருக்க மிகவும் செல்வம் கொண்டவளாக மிதக்கின்றேன் இந்த உணர்வை கொடுத்ததற்காக மிக்க நன்றி தமிழுக்கு நீங்கள் கிடைத்தது ஒரு பெரிய வரம்
என்னைப் போன்றவர்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் ஒரு பெரிய வரம் உங்கள் புத்தகங்களை வாங்க எனக்கு ஆற்றல் இருப்பது பெரிய வரம் தற்போதைய நேரம் மிகப் பெரிய வரம் மொத்தத்தில் ஜெயமோகன் என்றாலே வரம் பெற்றவர்களின் அருகில் உள்ளவர் என்பதே என் புரிதல் நீங்கள் பல்லாண்டு வாழ நான் வணங்கும் ஈசன் அருள வேண்டும்
நான் வேலை செய்யும் பி எஸ் ஜி ட்ரஸ்டுக்கு வானவில் நிகழ்ச்சியில் நீங்கள் பேச வந்த பொழுது உங்களைப் பார்த்து இருக்கின்றேன் ஆனால் அப்பொழுது எனக்கு வெண்முரசு அதிகம் தெரியாது தெரிந்த பிறகு நீங்கள் நின்றிருக்கும் மேடை மிக உயரம் என்ற புரிதல் மிகவும் சரியே நீங்கள் பல்லாண்டு வாழ நோய் நொடியற்ற உடல் நலத்துடன் தெளிவான தமிழ் கொடுக்க நான் வணங்கும் ஈசனை மீண்டும் வேண்டுகின்றேன் உங்கள் மனைவிக்கு குழந்தைகளுக்கு என் நல்வாழ்த்துக்கள்
டாக்டர் பானுமதி
டைரக்டர் பி எஸ் ஜி விஷ்ணுகிராந்தி
கோவை
***
அன்புள்ள பானுமதி அவர்களுக்கு,
நன்றி. வெண்முரசு ஒருவருக்கு ஒரு முழுமைப்பார்வையை அளிக்கவேண்டுமென எண்ணினேன். ஒன்று இன்னொன்றை முழுமையாக நிறைவுசெய்யும் ஒரு நிலையை. இலக்கியப்படைப்புக்கள் பொதுவாக அளிப்பது நிலைகுலைவை. ஆனால் நூற்றுக்கணக்கான நிலைகுலைவுகள் வழியாக ஓர் ஒருமையை அளிப்பதே செவ்விலக்கியம் என்பார்கள்.
உங்கள் வாசிப்பு உங்களை நிறைவுசெய்யட்டும். நான் அதிலிருந்து மிக விலகி அதை ஒரு வாசகனாகப் பார்க்கும் நிலையில் இன்றிருக்கிறேன்
ஜெ
***
June 23, 2021
மரபுக்கலையும் சினிமாவும்
ஒரு பண்பாட்டின் வேர்கள் அதில் உருவாகி வந்திருக்கும் தனித்தன்மை கொண்ட கலைவடிவங்களில் உள்ளன. தமிழகத்துக்கு தெருக்கூத்து, கேரளத்திற்கு கதகளி போல. சினிமா அப்படி அல்ல. அது ஒரு சர்வதேசக் கலை. அதன் அழகியல் உலகளாவியது. அதுவே அதன் சிறப்பு. அந்த சர்வதேசக்கலையை எப்படி ஒவ்வொரு பண்பாடும் தன்வயப்படுத்திக் கொள்கிறது என்பதில்தான் அப்பண்பாட்டின் நிலைகொள்ளலும் வளர்ச்சியும் உள்ளது.
கேரளத்தின் முதன்மைக் கலையாக கேரளமக்களின் உள்ளத்தில் கதகளியை நிலைநிறுத்தியதில் சினிமாவுக்கு பெரும் பங்குண்டு. தொடர்ச்சியாக சினிமா கதகளியை தன் பாடல்கள் வழியாக, பின்புலமாக கதகளியை நிறுத்துவதன் வழியாக பொதுமக்களின் நினைவில், உளவியலில் நிலைநாட்டிக்கொண்டே இருக்கிறது.
மோகன்லால் நடித்து ஷாஜி என் கருண் இயக்கத்தில் வெளிவந்த வானப்பிரஸ்தம் இந்திய-பிரெஞ்சு கூட்டுத்தயாரிப்பு. கேன் திரைவிழாவில் முதலில் திரையிடப்பட்டது. கலைஞனுக்கும் அவன் கலைக்குமான உறவை பேசும் படைப்பு இது. அர்ஜுனனாக வேடமிடும் குஞ்ஞிகுட்டனில் அர்ஜுனனை மட்டுமே காதலிக்கும் அரசகுலப்பெண், தன் அர்ஜுனனைக் கொல்ல தன்னை எதிர்மறைக் கதாபாத்திரமாக உருமாற்றிக்கொள்ளும் குஞ்ஞிக்குட்டன் என பல நுண்ணிய தளமாறுதல்களைக் கொண்ட படம்.
கதகளியை பகைப்புலமாக கொண்ட கலைப்படங்களில் களியச்சன் ஃபரூக் அப்துல் ரஹ்மான் இயக்கியது. மனோஜ் கே ஜயன் மைய வேடத்தில் நடித்தார். மலையாளத்தின் முதன்மையான கற்பனாவாதக் கவிஞரான பி.குஞ்ஞிராமன் நாயர் எழுதிய களியச்சன் என்னும் கதைக்கவிதையை ஒட்டி எழுதப்பட்டது.
பி.குஞ்ஞிராமன் நாயருக்கும் அவருடைய ஆசிரியரான வள்ளத்தோள் நாராயணமேனனுக்குமான உறவின் ஒரு சித்திரமே களியச்சன் கவிதையில் உள்ளது என விமர்சகர்கள் கருதுகிறார்கள். கதகளி நடிகன் அவனை கலைஞனாக ஆக்கிய ஆசிரியனை எதிர்கொள்ளும் இருளும் ஒளியும் கொண்ட உறவே இக்கதையின் கரு. குருவை மிஞ்சினாலொழிய சீடனுக்கு தனி அடையாளம் இல்லை என்பது ஓர் இரும்புவிதி. குருவை மிஞ்சும் வழி என்பது குரு காட்டியதாக இருக்கவேண்டும் என்பதில்லை. அந்நிலையில் குருவை எதிர்க்கவேண்டியிருக்கிறது. அது தன்னுள் இருக்கும் ஆழ்ந்த நல்லியல்பை, இலட்சியத்தை எதிர்ப்பதுதான். தன்னைத்தானே சிதைத்துக்கொள்வதுதான்.
குருவிடமிருந்து விலகி, தன்னைத்தானே வெளியேற்றிக்கொண்டு, ஆணவத்தின் தனிமையின் இருண்டபாதைகளில் அலையும் கதகளிநடிகனின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது களியச்சன். குருவே ஒருவகையில் தந்தையுமாகிறார். ஆகவே அது தந்தைமகன் உறவும்கூட.குறியீடாகவேனும், கொள்கையளவிலேனும் ஒரு தந்தைக்கொலை [Patricide] செய்யாமல் ஒருவனுக்கு மீட்பில்லை. அந்த குற்றவுணர்விலிருந்து மீள்வது மறுபிறப்பு.
வினீத் நடிக்க வினோத் மங்கரா இயக்கிய காம்போஜி ஒரு கதகளி நடிகனின் வாழ்க்கையைப் பற்றிய படம். கதகளி அதில் பின்னணியாகவே உள்ளது.
வெகுஜனப் படங்களில் கதகளியின் பண்பாட்டுச்சூழலை யதார்த்தமாக வெளிப்படுத்திய படம் என ரங்கம் சொல்லப்படுகிறது. மோகன்லால், சோபனா நடிக்க ஐ.வி.சசி இயக்கிய படம். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதியது. கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த நல்ல பாடல்களுடன் ஒரு பெரிய வெற்றிப்படம் இது.
கதகளிக்கான கலாசதனம் என்னும் அமைப்பை நடத்தும் கருணாகரப் பணிக்கர் அவருடைய முதன்மை மாணவனாகிய அப்புண்ணி, பணிக்கரிடம் பயிலும் நடனமணியாகிய சந்திரமதி, கருணாகரப் பணிக்கரின் மகன் மாதவன் ஆகியோரின் கதை இது. உணர்ச்சிகரமான ஒரு முக்கோணக் காதல்கதை. ஆனால் நுட்பமாக இதிலுள்ளது துரோணர் -அர்ஜுனன் – அஸ்வத்தாமன் கதைதான்.
இந்தப் படத்தில் கேரளத்திலுள்ள அரசு உதவிபெறும் சிறிய கதகளிப் பயிற்றுநிலையங்களின் நிலையும் அங்குள்ள பண்பாட்டுச்சூழலும் மிக யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. கதகளி நடிகர்கள் இன்றைய உலகுடன் சம்பந்தமில்லாத ஒரு பழைய உலகில் வாழ்பவர்கள். அந்த கள்ளமின்மையை, அதன் கொந்தளிப்பையும் உக்கிரத்தையும் மோகன்லால் அற்புதமாக நடித்துக் காட்டியிருக்கிறார்.
லோகிததாஸ் எழுத சிபி மலையில் இயக்கிய கமலதளம் படத்திலும் மோகன்லால் கதைநாயகன். இதிலுள்ளது வள்ளத்தோள் நிறுவிய கலாமண்டலம் போன்ற பெரிய அமைப்பு. அதற்கு பெரிய நிதி வருகை உள்ளது. ஆகவே அரசு நியமிக்கும் தாளாளரே அதன் முதன்மை அதிகாரம் கொண்டவர். அது ஒருவகை அரசு நிறுவனம். அரசு நிறுவனங்களிலுள்ள அத்தனை ஊழல்களும் பொறுப்பின்மையும் அங்கும் உண்டு.
கலை என்றால் என்னவென்றே தெரியாத அரசியல்வாதி அதன் பொறுப்பாளராகிறார். அவர் அத்தனை கலைஞர்களும் தன்னை வணங்கவேண்டுமென எதிர்பார்க்கிறார். கலைஞர்கள் கலைநிமிர்வு கொண்டவர்களே ஒழிய போராட்டக்காரர்களோ துணிவானவர்களோ அல்ல. ஆகவே அவர்கள் குமுறுகிறார்கள்.
அச்சூழலில் நிகழும் கொலை, அதன் பழி, அதிலிருந்து வெளியேறும் கதைநாயகன் என விரியும் கதை கதகளியை பின்னணியாகக்கொண்டு நிகழ்கிறது. குடிகாரனாகிய கதகளிக் கலைஞராக மோகன்லால் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதகளி சம்பந்தமான படங்களில் பெரும்பாலும் மோகன்லால் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. அவர் அடிப்படையில் கதகளி ரசிகர். ஒரு மேடையில் கதகளி மேதை கலாமண்டலம் கோபியின் கால்தொட்டு வணங்கி அவர் தன் இருக்கையில் அமர்ந்ததைக் கண்டேன். மலையாள நடிகர்களில் கதகளியை ஆடிக்காட்டவும் தெரிந்தவர் அவரே.
பிரபலக்கலையில் மரபு நிலைநிறுத்தப்படுவதென்பது ஒரு பண்பாட்டியக்கத்தின் அடிப்படைத் தேவை. தில்லானா மோகனாம்பாள், கொஞ்சும் சலங்கை போன்ற படங்கள் நாதஸ்வரம் பற்றி தமிழகம் முழுக்க இருந்த ஒட்டுமொத்தப் பார்வையையே மாற்றியமைத்தன. ஆனால் இன்று தமிழ்ச்சூழலில் அத்தகைய ஏற்பு மரபுக்கலைகளுக்கு இல்லை என்றே தோன்றுகிறது
[ மேற்குறிப்பிட்ட படங்களின் சப்டைட்டில் கொண்ட பதிப்புகள் ஹாட்ஸ்டாரில் கிடைக்கின்றன]
கிரெக்- ஒரு கடிதம்
ரிச்சர்ட் பார்லெட் க்ரெக் , சில எண்ணங்கள்- பாலசுப்ரமணியம் முத்துசாமி
அன்புள்ள ஜெ
நான் ஒரு விஷயத்தை அடிக்கடி உணர்வதுண்டு, இனிமேல் நம்மால் இந்தியக் காந்தியவாதிகளின் கோணத்தில் காந்தியைப் புரிந்துகொள்ள முடியாது என்று.
இந்தியாவில் இன்று காந்தியை அணுகிப்பேசுபவர்களில் ஒருசாரார் செயல்வீரர்கள். அவர்களால் காந்தியை ஆய்வுநோக்கிலே அணுகமுடியாது. அவர்களுக்கு காந்தி ஒரு வழிகாட்டித் தெய்வம். அவர்கள் காந்தியைப் பக்தியுடன் பின் தொடர்பவர்கள். அவர்களில் பெரும் சாதனைகளைச் செய்தவர்கள் பலர் உண்டு. சுந்தர்லால் பகுகுணா போல. ஆனால் அவர்களின் வாழ்க்கை வழியாகவே நாம் காந்தியை அணுகமுடியும். காந்தியைப் புரிந்துகொள்ள அவர்களின் சொற்களால் பயனில்லை.
இன்னொரு சாரார் காந்தியைப் பற்றிப் பேசும் வாய்ச்சொல்லாளர்கள். அரசியலிலும் அறிவுத்துறைகளிலும் காந்தியைப் பற்றிப் பேசுபவர்கள். அவர்களுக்கு காந்தி ஒரு சரித்திரபிம்பம். அவர்களுக்கு காந்தியை முழுக்க ஆராய்ந்து அறியும் அறிவுத்திறனோ பொறுமையோ இல்லை.திரும்பத்திரும்ப காந்தி பற்றிய ஜார்கன்களை உற்பத்தி செய்பவர்கள் இவர்கள்தான். உதாரணம் காந்திகிராம் போன்ற அமைப்புக்களிலிருந்து காந்தியைப் பற்றிப் பேசுபவர்கள்.
இன்னொரு சாரார் இன்று திடீரென்று காந்தியைப்பற்றிப் பேச ஆரம்பித்திருப்பவர்கள். காந்தியை நொறுக்கிவிட்டு இன்று இந்துத்துவம் அரசியலைக் கைப்பற்றியிருக்கிறது. இன்றைய சூழலில் சாதிமதப் பேதங்களுக்கு அப்பால் நின்று அரசியலைப் பேச காந்தியே உகந்த பொது அடையாளம் என்பதனால் காந்தியைப் பேசுகிறார்கள். அ.மார்க்ஸ் போன்றவர்கள் உதாரணம். இவர்களுக்கு காந்தி வெறும் கருவி மட்டுமே. காந்தி சொன்னபடி இவர்கள் தங்கள் சாதி, மத, இன, மொழிவெறிகளை கடந்தவர்கள் அல்ல. காழ்ப்பரசியலை கைவிட்டவர்களும் அல்ல.
இச்சூழலில் இங்கே என்றும்போல காந்தியைப்பற்றிய எதிர்மறைப்பேச்சுக்கள்தான் நிறைந்திருக்கின்றன. காந்தியை வசைபாடுவதென்பது நாம் நம்முடைய சொந்த காழ்ப்புகளை மறைத்துக்கொள்ளத்தான். எந்தக் காழ்ப்பும் முற்போக்கு, புரட்சிகரம் என்றெல்லாம் முத்திரைகுத்திக்கொண்டுதான் வரும். காந்தியை அவதூறு செய்பவர்கள் நிறைந்திருக்கும் சூழல் இது.
இன்று அடுத்த தலைமுறையினரிடம் காந்தியைப்பற்றிப் பேசும்போது அவர்களின் தர்க்கபூர்வமான கேள்விகளை எதிர்கொள்ள இந்திய காந்தியர்களின் சொற்களால் இயலவில்லை. உலக வரலாற்றுப் பின்னணியில், தத்துவநோக்கில், காந்தியின் சொற்களைக்கொண்டு ஆதாரபூர்வமான ஒரு சித்திரத்தை அளிக்கவேண்டியிருக்கிறது. அது பலசமயம் நம்மால் இயல்வதில்லை.
இச்சூழலில் காந்தியை பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருப்பவை மேலைநாட்டு ஆய்வாளர்கள் எழுதிய நூல்கள்தான். லூயி ஃபிஷர் எழுதிய காந்தியைப் பற்றிய நூல்தான் எனக்கு உண்மையில் காந்தியை பற்றிய சித்திரத்தை அளித்தது. அதன் பின் பல நூல்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்கள்அறிமுகம் செய்த ரிச்சர்ட் பார்லெட் கிரெக் எழுதிய காந்தி பற்றிய நூல் அறிமுகம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. அந்நூலும் காந்தியை பற்றி காய்தல் உவத்தல் இல்லாமல், இன்றைய சிந்தனைக்கு ஏற்ப காந்தியை ஆய்வுசெய்திருப்பார் என நினைக்கிறேன்,
பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்கள் இன்றும் காந்தியவழியில் வெற்றிகொண்ட பலரைப்பற்றி எழுதிய இன்றையகாந்திகள் நூலும் மிக முக்கியமான ஒன்று. அவருக்கு என் நன்றிகள்
ஆர்.என்.ராமகிருஷ்ணன்
ஷோஷா – காளிப்பிரசாத்
முதற்வாசிப்பில் எளிமையான நேர்கோட்டுக் கதையாகத் தோன்றும் நாவலுக்குள் எத்தனை தளங்கள் இயங்குகின்றன என்று ஆச்சரியமும் உண்டாகிறது. எழுத்தாளனாக விளங்கும் யூத இளைஞனின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு பன்முக சமூகத்தின் வரலாறும் மனித மனங்களின் மாறுதல்களையும் மேன்மைகளையும் சொல்லிச் செல்கிறார் ஐசக் பாஷவிஸ் சிங்கர்
ஷோஷா – ஐசக் பாஷவிஸ் சிங்கர் – (தமிழில்) கோ.கமலக்கண்ணன்ஆர்.காளிப்பிரசாத்
வெண்ணிற இரவுகள்- பிரவீன்
‘தஸ்தயேவ்ஸ்கி’ அவர்களின் மூன்று குறுநாவல்கள் தொகுப்பான “உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்” புத்தகத்தினை வாசித்தேன். இது “பாரதி புத்தகாலயம்” வெளியீடு. அதில் உள்ள “வெண்ணிற இரவுகள்” குறுநாவல் வாசிக்கையில் என்னுடைய அனுபவங்களை கீழே தொகுத்துள்ளேன்.
இது ஒரு கனவுலகவாசியைப் பற்றிய அதி அற்புத காதல் கதையாகும். பீட்டர்ஸ்பர்க் நகரில் நம் கனவுலகவாசி, வாழ்க்கையில் எப்போதுமே ஒரு கனவுலகத்தில் வாழ்பவர். நகரத்து மக்கள் எல்லாம் வேலை முடிந்து அவரவர் கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கையில், இவர் மட்டும் கால் போன போக்கிலே நகரை சுற்றி வந்து கொண்டிருப்பார். நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவருக்கு ஒரு நண்பர் கூட இல்லை. அந்நகரதில் உள்ள அத்தனை தெருக்களிலும் அவர் நடந்துள்ளார். அவ்வீடுகழும் தெருக்களும் தான் அவரின் நண்பர்கள்.
இப்படி ஒரு முறை அவர் நகரத்துக்கு வெளியில் சென்று விட்டு வரும் போது , பாலத்தின் ஓரம் ஒரு இளம்பெண் அழுதுகொண்டு இருப்பதைக் கண்டார். அப்பெண்ணை பார்த்ததுமே தன் தனிமையின் வேதனைகளை அனுபவிப்பவளாக தெரிந்தாள். அதனால் அவளிடம் இவருக்கு ஒரு இனம் புரியா அன்பு மலர்ந்தது. அவளை ஒரு குடிகாரனிடமிருந்து அன்று இவர் காப்பாற்றுகிறார். அவளைத் தன்னிடம் அறிமுகம் செய்து கொள்கிறார்.
இருவரும் அன்றைய முதல் நாள் சந்திப்பில் பேசிக் கொள்கின்றனர். நம் கனவுலகவாசி, தன் அக எண்ணங்களை எல்லாம் அவளிடம் கூறுகிறார். அவர் இந்த நகரில் வாழும் தனிமை வாழ்க்கையைப் பற்றி. தன கனவுலகத்தில் அவர் காணும் அற்புத காதலைப் பற்றி. அந்தப் புனிதமான காதலை வெறும் கனவாகவே அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் காதல் என்னும் கனவின் மீது தீராக் காதல் கொண்டுள்ளார். ‘நாஸ்தன்கா’வும் அவரிடம் நட்பு பாராட்டுகிறாள்.
அவள் தன் கதையை கூறுமுன் அவரிடம் ஒரு சத்தியம் செய்து வாங்கிக் கொள்கிறாள். அவர் அவளின் மேல் காதல் கொள்ளக் கூடாது என்று. அவள் தன் கண் தெரியாத பாட்டியிடம் தனியாக வாழ்கிறாள். அவள் ஒரு முறை செய்த ஏதோ ஒரு தப்பிற்காக, அவள் சட்டையையும் தன் சட்டையையும் சேர்த்து ஒரு ஊக்கு போட்டு எப்போதும் வைத்துள்ளார் அவள் பாட்டி. இவள் அதனை எப்போதும் வெறுத்தாள் . தான் நினைத்த இடத்திற்கு போக முடியவில்லயே என்று இவள் எப்போதும் விடுதலைக்காக ஏங்குவாள். அப்போது அவர்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவனிடம் இவள் காதல் கொண்டு விடுகிறாள். ஒரு வருடம் முன்பு அவன் இந்நகரை விட்டு போய் விடுகிறான். போகும் முன் தான் இன்னும் ஒரு வருடத்தில் வந்து அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான் .
ஒரு வருடம் முடிந்து விட்டது. அவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது தான் நம் கனவுலகவாசி அவளைக் பாலமருகே காண்கிறான். அவளும் அவனும் இதையெல்லாம் அந்த வெண்ணிற இரவில், வெளியில் ஒரு பெஞ்சின் மீதமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் இரவில், அவள் தனது இந்தக் கதையினை அவரிடம் சொல்லி முடித்துவிட்டு, அவன் மீண்டும் வந்து விட்டதாகவும் அது தமக்கு தெரியும் என்றும், அவன் என்னைப் பார்க்க வராதது மிகவும் கவலை அளிப்பதாகவும் அவரிடம் கூறுகிறாள்.
நம் கனவுலகவாசி அவள்மீது தீராக் காதல் கொண்டு விடுகிறார். இது வரையில் கனவில் மட்டுமே காதலித்து வந்தவர் இப்பொழுது நிஜத்தில் காதலிக்கிறார் அவளை. அனால் அவளிடம் அவர் செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவர் இதை அவளிடம் சொல்லவில்லை.
அவளை இந்த கவலையிலிருந்து போக்க அவளிடம் பல சமாதானங்கள் கூறுகிறார். அவள் அதையெல்லாம் உண்மை என்பது போலவே நினைத்து சமாதானம் அடைகிறாள். இது அவருக்கு வியப்பாக இருக்கிறது. இந்தப்பெண் உண்மையிலே நாம் சொன்னவற்றை எல்லாம் நம்பிவிட்டு சமாதானம் அடைந்துவிட்டாளா? இவ்வளவு அப்பாவிப் பெண்ணாக அல்லவே இருக்கிறாள். அவர் அவளிடம் அவனுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லி கேட்கிறார். அவள் அக்கடிதத்தினை எழுதி, அவனிடம் கொண்டு சேர்க்கும்படி மன்றாடுகிறாள். அவரும் சரியென்று, அதைச் செய்வதாய்ச் சொன்னார்.
அடுத்த நாள் இரவு பெருமழையில் இருவரும் சந்திக்க முடியவில்லை. ஆனால் அவளின் வீட்டின் பக்கம் இவர் சென்று பார்க்கிறார். ஏதோ சொல்லவொண்ணா ஏக்கம் அவரின் நெஞ்சடைக்கவே திரும்பவும் தன் வீட்டிற்கு வந்து படுத்துறங்குகிறார். அடுத்த நாள் மூன்றாம் இரவில், அவள் இவருக்கு முன்னாடியே வந்தமர்ந்து இவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். தான் அந்த கடிதத்தை சேர்த்து விட்டதாகவும், அவன் நிச்சயம் இன்று உன்னை வந்து சந்திக்கப் போகிறான் என்றும் அவளிடம் சொன்னார். அவள் அவரின் கையைபப் பிடித்துக் கொண்டு ஆனந்தம் அடைந்தாள். அவள் அவரிடம், நாம் இருவரும் இப்படியே ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்றும் எப்போதும் பிரியக் கூடாது என்றும் கூறினாள்.
அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தினருகே யாரோ ஒருவர் தென்படவே, அவர் தன் கையை அவளிடமிருந்து எடுத்துக் கொள்கிறார். ஆனால் அதற்குள் அது வேறு யாரோ ஒருவர் என்று தெரிகிறது. அவள் அவரிடம, ஏன் நீ கையை எடுக்க வேண்டும், அவன் வந்தாலும் கூட இப்படடியே நாம் கைகோர்த்துத் தான் அவனை வரவேற்போம்என்று சொன்னாள். அவர்கள் ரொம்ப நேரம் அங்கேயே அவனுக்காக காத்துக்கொண்டிருக்கிறாரகள். அவள் அழத் தொடங்குகிறாள். அவர் நிறைய சமாதானம் சொல்கிறார். இறுதியில் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தன் காதலை அவளிடம் சொல்லிவிடுகிறார். அவளும் முதல் அதிர்ச்சி முடிந்த உடனேயே அவரை கட்டி அணைத்துக்கொள்கிறார். அவள் அதற்கு தனக்கு தானே பல்வேறு சமாதானங்கள் சொல்லிக் கொள்கிறாள். அவர் தான் தன்னை உண்மையாக காதலிக்கிறார் என்றும், அவன் அவளை காதல் செய்யவே இல்லை என்றும், தான் தான் அவன் மீது காதல் கொண்டனென்றும், இனிமேல் அவனை காதலிக்க போவதில்லை என்றும், அவரைத்தான் காதலிக்கப் போவதுமாகச் சொன்னாள். அவரும் தன் காதல் கைகூடியதை நினைத்து மிதமிஞ்சிய இன்பம் கொள்கிறார். அவர்கள் இருவரும் நெடு நேரும் இரவு முழுவதும் நடந்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவரும், அவளும் காதலித்தார்கள். அவள் அத்தனையும் மறந்து அவரிடம் மிகவும் இன்பமாக பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் அழுதார்கள், சிரித்தார்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். செல்ல சண்டைகள் போட்டார்கள்.
அப்பொழுது திடீரென்று அங்கு ஒரு உருவம் வந்து நிற்கிறது. அது யாரென அவர் யோசிக்குமுன், நாஸ்தென்கா அவர் பிடியிலிருந்து விலகி அவனைப் போய் கட்டிக்கொண்டாள். திரும்ப அவரை நோக்கி வந்து அவரை ஒரு முறை கட்டிதழுவிவிட்டு அவனிடம் அவள் சென்று விட்டாள்.
அடுத்த நாள் அவர் அவளிடம் தான் கொண்ட காதலினை பற்றி யோசித்துக் கொண்டுருக்கையில், அவளிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதை அவர் படித்துவிட்டு அமைதியாக அவரும் அவளும் காதல் கொண்ட அந்த ஒரு சில கணங்களையே எண்ணி கொண்டிருந்தார்.
காதலுக்காக ஏங்கும் ஒரு இளம்பெண்ணும், கனவிலே காதல் கொண்ட ஒரு ஆணும் இதற்கு மேல் காதல் செய்ய ஏதும் இல்லை. அவளின் செய்கைகள் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையானவையோ அவ்வளவுக்கு அவ்வளவு சமூகத்தில் சேராதவை. இங்கு சமூக கட்டமைப்பினால் காதலை ஒரு வடிகட்டிய பொட்டலம் போன்றெ அணுக வேண்டியுள்ளது. அல்லது இந்த சமூக கட்டமைப்பு இருப்பதால்தான் இந்த மாறி காதல்கள் உருவாகிறதா என்றும் தெரியவில்லை. ஊழின் வசத்தால் மனங்கள் செய்வதறியாது திக்குமுக்காடுகிறது. ஒன்றை மறுத்து எழும் காதல் உண்மையில் காதலே இல்லை. அது தன்னிச்சையாக நிகழ்வது. அவளின் முடிவுகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு பிள்ளையின் செயலாகவே உள்ளது.ஆனால் அது தான் உண்மையான உணர்களோ? அதற்கு மேல் நாம் கட்டி அமைத்த நாகரிகம் நம்மை தர்க்கத்தில் கொண்டு வந்து கணக்கு போட வைத்து விடுகிறது.
நாகரிகம் வளர்ந்து நம் உணர்வுகளை வகைமைப்படுத்தி பொட்டலமாக்கிவிட்டோம். அதனால் முரண்களினால் வரும் உணர்வுகள் ஒன்று சண்டையினால் அல்லது தியாகத்தினால் முடிவடைகிறது. இதற்கு எங்கும் விதிவிலக்கே இல்லை என்றே தோன்றுகிறது. இது அப்படித்தான் நடக்கும், வேறு வழியே இல்லை என்றும் நினைக்கிறேன்.
அன்புடன்,
பிரவின்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

