Jeyamohan's Blog, page 963
June 23, 2021
நிறைவு – ஒரு கடிதம்
பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு ,
இந்த கொரோனா காலகட்டத்தில் மீண்டும் ஒருமுறை திசைகளின் நடுவே , மண் முதல் நூறு கதைகள் வரை ஒரு மீள்வாசிப்பு . பெரும்பான்மையான கதைகளில் என்னுடைய எளிமையான வாசிப்பில் நான் கண்ட recurring theme , நீங்கள் மரபு உரையில் சொன்னது போல “சாதாரணர்களுக்கு மலையில் பிடித்து ஏற மரபின் வேர்கள் தேவை , பறவைகளாகப்பட்டவர்க்கு அல்ல ” .
வெண்முரசு வார்த்தைகளில் “பராசரா, உன்னிலிருப்பது ஞானம். அது மரங்களை மடித்து உண்டு காடதிர காலெடுத்து நடந்துசெல்லும் மதகரி.. கவிதையோ இசையென்னும் சிறகு முளைத்த பறவை. அது விண்ணில் நீந்தும், மலர்களில் தேனுண்ணும்.. மதகரியைப் படைத்த நியதியே பறவையையும் படைத்தது என்று உணர்க” ; கிரிதரன் , குட்டப்பன் ; பிராஞ்சி,கண்டன்காணி ; X , ஹோவர்ட் சொமெர்வெல் ; பாண்டியன் , கிம் ; அஜிதன் , பித்தன்,etc என நீளும் பறக்க எத்தனிக்கும் ஒரு மதகரியின் வேட்கையும் /வீழ்ச்சியும் .வெண்முரசிற்கு பிந்தைய படைப்புகளில் , பசுமையின் இருட்டு இல்லை , உயரப்பறக்கும் பறவையின்யின் மேல் எதன் நிழல் விழும்? பெரு நிம்மதியுடன் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். மண்டையோடு சிதற முட்டி திறக்கும் வாசல்கள் கொண்டு செல்லும் இலக்குகளை காண்பித்துவிட்டீர்கள்.Thank you for showing us ,the path of salvation through relentless pursuit of excellence.
உங்களை படிக்க ஆரம்பித்த பன்னிரண்டு வருடங்களில் பெரிதாக எதையும் பேசியதில்லை , ஆனால் ஒரு நாள் கூட உங்களுடன் உரையாடல் இல்லாமல் இருந்ததில்லை. இப்பொழுதும் கேட்டு தெரிந்து கொள்ள எல்லாம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் தேடினால் பதிலை எங்காவது எழுதி வைத்திருப்பீர்கள். ஒரு நன்றி மடல் எழுத வேண்டும் என்று இன்று ஒரு உந்துதல். முன்பொரு நாள் வாழ்க்கையில் உங்களால் ஈட்டிய அனைத்திற்கும் கூறிய நன்றியை ஏற்க மறுத்துவிட்டிர்கள். நித்தியாவிடம் இருந்து உங்களுக்கு கிடைத்தது, அவர் குரு பீடத்தில் இருந்து அவருக்கு கிடைத்தது , யாருக்கும் உரிமை இல்லாதது என்று சொல்லிவிட்டடீர்கள். ஆனால் உங்களால் அமைந்த நட்பு வட்டத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு. அந்த இனிமையான குழுமம் வாழ்க்கையின் கொண்டாட்டங்களை மேம்படுத்தும் , வீழ்ச்சிககளில் தாங்கிப்பிடிக்கும் , ஆன்மிக பயணங்களில் துணை நிற்கும் ஒரு உன்னத சங்கம். மீண்டும் நன்றிகள்.
நீங்கள் புது இடத்தில் அமைந்தபின் வந்து மரியாதைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்.
அன்புடன் ,
ரவிக்குமார் ,
திருச்செந்தூர்.
***
அன்புள்ள ரவிக்குமார்,
இப்போது அமைந்திருக்கும் இடம் இங்கிருந்து எங்கும் செல்லவும், எதையும் அடையவும் தூண்டுவது அல்ல. இதை வந்தடைவேன் என்று நினைத்ததும் இல்லை. குமரித்துறைவி எழுதி முடித்தபோது அதை உணர்ந்தேன், எதுவுமே எஞ்சவில்லை என்று. எந்த எழுத்தும் எழுதி முடித்தபின் உருவாகும் நிறைவின்மையை அது அளிக்கவில்லை.
பெரும்படைப்புக்கள் முடிந்த பின் ஒரு மங்கலப்பாடல் வரும். சில சமயம் பெரும்படைப்புக்களுக்குப் பின் தனியாக ஒரு மங்கலப்பாடல் வரும். அத்தகைய ஒன்று குமரித்துறைவி
ஜெ
***





![Aanaiyillaa!: ஆனையில்லா! (Tamil Edition) by [Jeyamohan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/hostedimages/1624438455i/31534885.jpg)
![Mudhunaaval: முதுநாவல் (Tamil Edition) by [Jeyamohan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/hostedimages/1624438455i/31534886.jpg)
June 22, 2021
காந்தி,மார்க்ஸ்- இலட்சியவாதம்-கருத்தியல்
மரியாதைக்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்கள் நலம் அறிய விழைகிறேன். தங்களுக்கு 60 அகவைதொடங்கி உள்ளது அறிந்து மகிழ்கிறேன். தங்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவிக்கிறேன். வாழ்வில் எல்லா தருணங்களும் முக்கியமானவை என்றாலும் 60 வயது வரும் பொழுது ஒரு கூடுதல் நிறைவான தருணம் என எண்ணுகின்றேன். என்னுடைய கருத்துப் படி நீங்கள் இப்போது எழுதுவதில் உச்சபச்ச form இல் உள்ளீர்கள். சச்சின் பேட்டிங்கில் peak form ல் இருந்த நிலை போல. 80 கள் மற்றும் 90 களின் இளையராஜா போல. -தமிழ் இலக்கியத்தை பொறுத்த வரையில் இந்த காலம் உங்களுக்குரியது என எதிர் கால வரலாறு சொல்லும். உலக வரலாற்றில் உங்கள் அளவிற்கு தரமாகவும் அதே நேரத்தில் மிக விரைவாகவும் ஏராளமாகவும் எழுதக் கூடியவர்கள் எவரும் இலர் என்றேகூறலாம்.
பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட வெண்முரசு எழுதி விட்டு பின் நீங்கள் எழுதும் வேகம் பிரமிக்க வைக்கிறது. அந்த முகில், குமரித் துறைவி போன்ற கதைகளை இவ்வளவு வேகமாக ஒருவர் எழுத முடியமா என்ற ஐயம் இருந்து கொண்டே இருக்கிறது. ஓஷோ, – ‘ஒரு நிகழ் கலையில் VERB மட்டுமே இருக்க அங்கே NOUN என்று எதுவும் இருக்காது.அந்த அளவிற்கு “செயல்” நிகழ்த்துபவரை அது ஆட்கொண்டுவிடும்’ என்று சொல்வார். அதை போல இறைத் தன்மை உங்கள் மூலமாக எழுதிக் கொண்டியிருக்கிறது என நான் திடமாக நம்புகிறேன். பாமரத் தனமாக சொன்னால் சாமி வந்ததை போல் எழுதிக் குவிக்கிறீர்கள். இதை நான் எழுதும் போதே மிகுந்த உள நெகிழ்ச்சி உடன் எழுதுகிறேன்.
தங்களின் ‘கல்லெழும் விதை’ உரை கேட்டேன். மிக முக்கியமான உரை. உரையை கேட்பவர்கள் வாழ்வு குறித்த செறிந்த விளக்கத்தை பெறுவார்கள் என்பது நிச்சயம். இந்த உரையின் ஒரு பகுதியின் சாராம்சத்தை குறித்து எனக்கு ஓர் ஐயம். வாழ்வை பற்றியும், லட்சிய வாதம் பற்றியும் இதை விட தெளிவாக விளக்கி விட முடியாது என்றாலும் வாழ்நாள் எல்லாம் நீடித்த நீண்ட ஒரு லட்சிய போராட்ட வாழ்க்கைக்குப் பிறகு மார்க்சிஸ்ட்/ இடது தலைவர்களுக்கு/ தொண்டர்களுக்கு கிடைப்பது கசப்பு மட்டுமே என்பதை ஏற்பது எனக்கு கஷ்டமாக உள்ளது.
அதே சமயத்தில் இடதுசாரிகளை பற்றி நீங்கள் கூறும் எதிர்மறை தன்மையை ஓரளவு நான் ஏற்கிறேன். (total negativity is there,true ) இடது சாரி தொழிற்சங்கத்தை பொறுத்த வரையில் கசப்போ வெறுப்போ இல்லாமல் நிறைவாக தொழிற்சங்க பணியை வாழ்நாள் முழுவதும் செய்து விட்டு சில பல நூறு அல்லது ஆயிரம் தொழிலாளிகள் நலன் காத்தோம் என்ற நிறைவோடு ஓய்வு பெறுகிற தலைவர்கள் பலரை எனக்கு தெரியும். அவர்கள் விரும்பிய சமூக மாற்றம் அவர்கள் வாழும் போது வந்து விட வில்லை என்றாலும் சரியான பாதையில் நடந்தோம் என்ற திருப்தியுடன் அவர்கள் நேர்மறையாக மகிழ்ச்சியுடன் வாழ்வை நிறைவு செய்ததை நான் பார்த்து இருக்கிறேன்.
மகிழ்ச்சியோடு அதை செய்தார்களா அல்லது வெறுப்பு கசப்போடு செய்தார்களா என்பது ஒரு subjective ஆன விஷயம். அதை பொதுமைப் படுத்தி சொல்லி விட முடியாது என நினைக்கிறேன். இருப்பினும் காந்திய இயக்கங்களின் நேர்மறை தன்மை (positivity) இடது சாரி இயக்கங்களில் இல்லை என்பதும் உண்மை. Their very basis is ultra negative and projecting enemies from the beginning to end stages. அந்த எதிர்மறை தன்மையை நீக்கி விட்டு அந்த இயக்கங்கள் செயல் பட முடியுமா என்ற ஒரு முக்கிய கேள்வியையும் உங்கள் உரை எழுப்பி உள்ளதாக நான் உணர்கிறேன்.
மேலும் தனிப் பட்ட ஒரு மனிதன் மகிழ்வுடன் ஒரு செயல் செய்வதற்கும் கசப்புடன், வெறுப்புடன், செயலை செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் சுட்டி உள்ளீர்கள். இது உலகம் முழுவதும் உள்ளமக்கள் நல/இடது சாரி செயல் பாட்டாளர்கள் முன் உள்ள ஒரு மிக முக்கிய சவாலாக நான் பார்க்கிறேன். இந்த கேள்விக்கான தீர்வை அவர்கள் கண்டு விட்டால் இடது சாரிகளின் இன்றைய சரிவைக் கூட சரி செய்து விடலாம் என எனக்கு தோன்றுகிறது.
மார்க்ஸ் அவர்கள் இள வயதில் எழுதிய ஒரு கட்டுரையில் ” எவர் ஒருவர் வாழ்க்கையில் எந்த அளவிற்கு கூடுதலான மனிதர்களுக்கு சேவை செய்கிறாரோ அந்த அளவிற்கு நிறை வாழ்க்கை வாழ்ந்ததாகிறார் “.எனக் கூறி உள்ளதை லட்சியமாக கொண்டு வாழ்பவர்கள் அப்படிப்பட்ட லட்சியத்தோடு வாழ்ந்து தங்களால் இயன்ற பங்களிப்பை செலுத்தி விட்டுஅந்த லட்சிய பயணத்தை தொடர எதிர் கால சந்ததியை பணித்து விட்டு செல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அந்த செயல் பாடு செய்பவர்கள் எல்லாம் கசப்பில் வெறுப்பில் வாழ்வை முடிக்கிறார்கள் என்று சொல்வது சரியான பார்வையா என்ற வினா எழுவதை தவிர்க்க முடியவில்லை.
1950 களில் இருந்து 1980 கள் வரையான லட்சிய இடது சாரி வாழ்க்கையை இக்கால இளைஞர்கள் வாழத் தயார் நிலையில் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக வாழ்வை தியாகம் செய்யும் கூட்டம் இன்றி அந்த சமூகம் மேல் எழாது என்பது தானே வரலாறு. தனிப்பட்ட முறையில் (at the individual level) அவர்களது தியாகம் வீண் ஆனது போல் தோன்றினாலும் அதன் சமூகப் பலன்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது என்றே தோன்றுகிறது. நமது விடுதலை போராட்ட தியாகங்கள் நம் கண் முன்னே நிற்கின்றன. நமது இன்றைய சுதந்திர வாழ்வு முந்தைய தலைமுறை எண்ணற்ற மனிதர்களின் தியாகங்களின் பரிசு என்பதை நாம் மறுக்கவியலாது.
மற்றும் ஒன்று. லட்சிய வாதம் (idealism ) வேறு கோட்பாட்டு வாதம் வேறு (idealogical ) என சொல்வதில் உள்ள வித்தியாசம் எனக்கு புரியவில்லை. கோட்பாடு இல்லாத லட்சியம் இருக்க முடியுமா என்ற கேள்வி வருகிறது.
நான் சமீபத்தில் கடிதம் எதுவும் எழுத வில்லை எனினும் உங்கள் தளத்தோடு பயணிப்பதை தொடர்ந்து கொண்டு இருப்பவன். பல கட்டுரைகள் கதைகளை பொக்கிஷம் போல நீங்கள் தமிழுக்கு அளித்துக் கொண்டு இருக்கிறீர்கள். தமிழ் உள்ளவரையில் உங்கள் நூல்கள் நிலை பெற்று இருக்கும் இடத்தில அமர்ந்து உள்ளீர்கள். பொறாமை தீயில் சிலர் இணைய தளமும் வலைப்பூவும் உள்ளதே என்று உங்களை பற்றிஅவதூறு எழுதிக் கொண்டு அவர்களை உயிர்ப்போடு வைத்து இருக்க முயற்சி செய்கிறார்கள். நீங்கள் உரையில் கூறியது போல கசப்பும் வெறுப்பும் எதையும் சாதிக்க உதவாது. உங்களை குறை சொல்லி வலையில் எழுதும் வேலையை விட்டு விட்டு உங்கள் எழுத்தை படிக்கவாவது செய்யலாம். அது உருப்படியான வேலையாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
அன்பு கலந்த நன்றியுடன்,
சுப்ரமணியம்,
கும்பகோணம்.
அன்புள்ள சுப்ரமணியம்,
நன்றி, என் படைப்பியக்கம் என்பது நான் சொல்வதுபோல எதற்கு எதிரானதும் அல்ல. அதில் சோர்வு இல்லை. தன்னை அளித்தல், தன் வழியாக கடந்துசெல்லல் மட்டுமே உள்ளது.
ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். இடதுசாரிகள் அனைவருமே எதிர்மறை மனநிலைகொண்டு சோர்விலும் சலிப்பிலும் கசப்பிலும் இருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. அதேபோல காந்தியர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நிறைவுற்றவர்களாகவும் இருப்பார்கள் என்றும் நான் கூறவறவில்லை. அவ்வாறு இருமைப்படுத்திக்கொள்வது சிந்தனைக்கு எப்போதுமே எதிரானது என்பது என் கருத்து. பெரும்பாலும் இதெல்லாம் அந்தந்த ஆளுமைகளைச் சார்ந்தது. மனிதர்கள் எந்தக் கருத்தியலையும், இலட்சியவாதத்தையும் தன் அடிப்படை இயல்புக்கு ஏற்ப வளைத்தே ஏற்றுக்கொள்கிறார்கல்.
கருத்தியல்- இலட்சியவாதம் இரண்டுக்குமான் வேறுபாட்டையே நன முன்வைக்கிறேன். அதனடிப்படையில் மார்க்ஸியம், காந்தியம் இரண்டுக்கும் இடையே உள்ள உள்ளடக்கத்தின் தனித்தன்மைகளை முன்வைக்கவே அந்த உரையில் முயன்றிருக்கிறேன்.
காந்தியம் அடிப்படையில் எதிர்ப்பரசியல் பார்வையை முன்வைக்கவில்லை. அது ஆக்கபூர்வமான ஒரு பார்வையை முன்வைக்கிறது. அது கொள்கையளவில் ஏகாதிபத்யம், காலனியாதிக்கம், புவியை உரிமைகொள்ளும் நவமுதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது. நடைமுறையில் வெள்ளையர்களுக்கு எதிராக போரிட்டது. ஆனால் அவற்றை வெறுக்கவோம், முழுமையாகவே அவை அழிவுச்சக்திகள் என்று காட்டவோ முயலவில்லை. அவற்றில் இருந்து சாதகமானவற்றை பெற்றுக்கொண்டு, அவர்றை உள்ளடக்கிக்கொண்டு கடந்துபோக முயன்றது. அவற்றை எதிர்த்துப் போராடும்போது கூட அவற்றைச் சார்ந்த மனிதர்களிடம்கூட அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்தும்படி அறைகூவியது.
அரசியல் செயல்பாடு என்பது மக்களை வழிநடத்துவது. சேவை என்பது மக்களுக்குப் பணியாற்றுவது. காந்தி அரசியலையும் சேவையையும் ஒன்றெனக் கருதினார். திரும்பத்திரும்ப இதை அவர் வலியுறுத்தினார். சேவை என்பது அடிப்படையான பணிவில் இருந்து உருவாவது. செயல்வழியாக தொடர்ந்து தன்னை மாற்றிக்கொள்வது, அதனூடாக புறவுலகை மாற்ற முயல்வது அதனுடைய வழிமுறை. ஆகவே சேவை என்பது ஒவ்வொரு கணமும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும்படியாகவே இருக்கவேண்டும் என்று காந்தி சொல்கிறார். ஆகவே, தான் ஏற்கனவே ஒரு முழுமை பெற்ற நிலையில் இருப்பதாகவும், தான் விடுதலை பெற்றவன் என்றும் அறிஞன் என்றும் ஒரு சேவையாளன் கருதிக்கொள்ள வேண்டியதில்லை. அது ஆணவத்தை உருவாக்கும், பிழையைப் பெருக்கும்.
மாறாக மார்க்சியம் அடிப்படையிலேயே ஒரு எதிர்ப்பரசியல். அடிப்படையில் அது இன்றிருக்கும் அமைப்பை முற்றிலும் எதிர்மறையானதாக, முற்றாக அழிக்கப்படவேண்டிய ஒன்றாக வரையறை செய்கிறது. அதனைச் சார்ந்த ஒவ்வொருவரும் எதிரிகள் என்றே வகுக்கிறது. இன்றுள்ள ஒவ்வொன்றையும் தலைகீழாக மாற்றவும் தான் விரும்பிய இன்னொரு அமைப்பை உருவாக்கவும் முயல்கிறது. அவ்வாறு மாற்றவேண்டிய பொறுப்பை அது சிலரிடம் ஒப்படைக்கிறது. அவர்களை ‘ப்ரோலட்டேரியன்’ என்று வரையறை செய்கிறது. மார்க்சியம் அதை ஏற்றுக்கொண்ட அரசியல்செயல்பாட்டாளனை அறிவுஜீவி என்றும், இவ்வுலகை மாற்றும் கடமையும் பொறுப்பும் கொண்டவன் என்றும் நம்பவைக்கிறது. ஆகவே ஒரு மார்க்சிய தொண்டன், தன்னை இவ்வுலகை மாற்றியமைக்கும் தகுதி கொண்டவனாகவும் கற்பனை செய்துகொள்கிறான்.
சராசரி மார்க்சியரிடம் இருக்கும் மிதமிஞ்சிய தன்னம்பிக்கை, பிறருக்கு அறிவுரை சொல்லும் தகுதி தனக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளும் தருக்கு, அவர்களை வெறும் வாயாடிகளாக ஆக்கியிருப்பதை நீங்கள் எங்கும் பார்க்கலாம். அவர்களின் முதன்மைச் செயல்பாடென்பது விவாதமே. அதிலும் மட்டம்தட்டுதல், அவதூறும் ஏளனமும் செய்தல், திரித்தல், முத்திரைகுத்துதல், வெறுப்பையும் காழ்ப்பையும் வசைகளாக வெளிப்படுத்திக்கொள்வது அவர்களின் முறை. எந்த விவாதத்திலும் புகுந்து எதையாவது ஓங்கிச் சொல்ல அவர்கள் தயங்குவதேயில்லை. எதற்கும் ஒரு தீர்வு அவர்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எப்பொழுதும் தெளிவுடன் இருக்கிறார்கள். எது சார்ந்தும் அவர்களிடம் குழப்பம் இருப்பதில்லை.
சராசரி மார்க்சிய ஆர்வலன் அவனுடைய பதின்பருவத்திலேயே மார்க்சிய கொள்கையின்பால் ஈர்ப்புக் கொள்கிறான். உடனேயே அவனுக்கு இவ்வுலகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் பொறுப்பு இருப்பது கற்பிக்கப்படுகிறது. உண்மையிலேயே அவ்வாறு நேரடியாகச் சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற மேற்கோள் ‘அறிவுஜீவிகள் இந்த உலகை புரிந்துகொள்ள முயல்கிறார்கள், நாம் மாற்றியமைக்க முயல்கிறோம்’. அதாவது, உலகைப்பற்றிய புரிதல் முழுமையாக ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது- அவர்களின் தீர்க்கதரிசிகள் அதைச் செய்துவிட்டார்கள். அந்த வரைபடங்களின் படி இவ்வுலகை இடித்து திரும்பக் கட்டவேண்டியதுதான் பாக்கி.
இளம் மார்க்ஸிய ஆர்வலன் இவ்வுலகம் இயங்குவது எப்படி என்பதற்கான சில எளிய சூத்திரங்களை கற்றுக்கொள்கிறான். அதற்கு ஒரு தத்துவ அடிப்படை இருக்கிறதென்று அவனுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் அந்த அணுகுமுறை ஓர் அறிவியல் என்றும், நிரூபிக்கப்பட்ட உண்மை என்றும், ஆகவே அதற்கு மாற்றுத் தரப்பே இருக்க முடியாதென்றும் அவனுக்கு கற்பிக்கப்படுகிறது. மார்க்சியம் என்பது எவ்வகையிலும் ஒரு அறிவியல் அல்ல என்பதும், சமூக அறிவியலென்றோ பொருளியல் என்றோ அதைச் சொல்லமுடியாது என்றும் அவனிடம் எவரும் சொல்லமுடியாது. அவனுக்கு உறுதியான நம்பிக்கை அளிக்கப்படுகிறது.
அறிவியலின் இயங்குமுறையே வேறு என்றும் அதில் இவ்வகையான முரட்டுத்தர்க்கங்களுக்கு இடமில்லை என்றும் அவன் உணர்வதில்லை. மதவெறியர்களின் அதே மூர்க்கமான நம்பிக்கையே அவனை இயக்குகிறது. மார்க்சியம் என்பது மிகையாக்கிச் சொல்லப்போனால்கூட ஒரு தத்துவக் கொள்கை மட்டுமே என்றும், சரியாகச் சொல்லப்போனால் ஒரு வகை அரசியல் – வரலாற்று உருவகம் மட்டுமே என்றும் அவன் தெரிந்துகொள்வதே இல்லை. நிரூபிக்கப்பட்ட அறுதி உண்மையை அறிந்துவிட்டவனாக அவன் தன்னைக் கற்பனை செய்து கொள்கிறான்.
அதன் பிறகு இவ்வுலகமே அவனுக்கு மாறிவிடுகிறது. மிக எளிய விடைகளால் ஆனதாக அரசியலும், பொருளாதாரமும், சமூகவியலும், பண்பாடும், இறையியலும், இலக்கியமும் எல்லாம் தோன்ற ஆரம்பிக்கின்றன. எங்கும் துணிவுடன் புகுந்து தன் கருத்தைச் சொல்வான். எவனையும் மூடன் என்று வரையறுப்பான். மிக அடிப்படை வயதிலேயே மோசமான அகந்தையுடன் இருக்கும் இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவருமே இடதுசாரிகள்தான்.
இடதுசாரியாக இருப்பதென்பது ஒரு லட்சியவாதம் என்று நாம் நினைக்கிறோம். ஓர் இலட்சியவாதம் அதில் உள்ளது. அதில் ஈர்க்கப்பட்டு அதில் நுழைந்து செயல்படுபவர்களும் உண்டு. ஆனால் பெரும்பாலானவர்கள் அது அளிக்கும் மிகையான தன்னம்பிக்கையால்தான் ஈர்க்கப்படுகிறார்கள். அறிவியக்கத்தில் அது ஒரு மோசமான படுகுழி. மிக விரைவிலேயே தன் அறிவின் எல்லையை உணர்ந்து அதிலிருந்து வெளிவந்தவன் தப்பித்துக்கொள்வான். அதற்கான விவேகமில்லாதவன், தன் வாழ்நாள் முழுக்க அந்த எளிய அகந்தையிலேயே கிடப்பான்.
அத்தகையவன் ஆரம்பத்தில் உலகைத் திருத்த முற்பட்டு அறிவுரைகளை அள்ளிவீசிக்கொண்டிருந்தவன், மிக விரைவிலேயே உலகமே தனக்கு எதிரியாக இருப்பதாக எண்ணிக்கொண்டு வசைபாடியாக மாறி காழ்ப்பையும், கசப்பையும் கொட்ட ஆரம்பிப்பான். தன் காழ்ப்புக்கும் கசப்புக்கும் அணிதிரட்டுவான். அவ்வாறு அணிதிரட்டும் பொருட்டு சாதியையும் இனவாதத்தையும் அதுபோன்று உதவக்கூடிய எதையும் கையிலெடுப்பான். ஒரு கட்டத்தில் வெறும் காழ்ப்பு கொண்டவன் மட்டுமே ஆவான். இந்த குணாதிசயங்கள் தனிநபர் சார்ந்தவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அடிப்படையில் மார்க்சியக் கொள்கையிலேயே இது இருக்கிறது.
காந்தியம் முற்றெதிர்ப்பை முன்வைப்பதில்லை. இந்தச் சமூகம் பல நூறு நம்பிக்கைகளால் கொள்கைகளால் வாழ்க்கைமுறைகளால் ஆன ஒரு மாபெரும் இயக்கம் என்று அது சொல்கிறது. காந்தி உண்மை என்பது பல்லாயிரம் பட்டைகள் கொண்டது என்பதைத் திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார். ஆகவே நான் நம்புவது உண்மை, பிற அனைத்தும் பொய் என்று ஒரு காந்தியவாதி எண்ணுவதில்லை. பிறதரப்பிலும் உண்மையும் நன்மையும் இருக்கலாகும் என்றும், அதனுடன் உரையாடவேண்டும் என்றும், அதையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் எண்ணுவான்.
தன்னுடைய பங்களிப்பினால் இந்த சமூகம் நலம் பெற வேண்டும் என்று காந்தியவாதி நினைப்பான்.சமூக மாற்றத்தை நிகழ்த்த தன் முழுவிசையுடன் இயங்கும்போதே சமூகம் என்பது சாதகமும் பாதகமுமான பல்லாயிரம் விசைகளின் பெரும் முரணியக்கத்தால் நிகழ்வது என்றும் அறிந்திருப்பான். அதில் ஒரு விசையே தான் அளிப்பது என கருதுவான். அவன் சமூகத்தை தான் தலைகீழாக மாற்றிவிட முடியும் என்று எண்ணுவதில்லை.ஆனால் தன் செயல்பாட்டால் சமூகம் எவ்வகையிலோ மாறிக்கொண்டிருக்கிறது என்றும் நம்புவான்.
ஆகவே தன் பங்களிப்பை ஆற்றி முடிக்கும்போது அவனுக்கு நிறைவேற்படுகிறது. அவன் தன் பங்களிப்பை ஆற்றுவதனூடாகத் தன்னை மேம்படுத்திக் கொண்டவன் என்பதனால் தன்னுடைய ஆன்மீக வளர்ச்சியைக் குறித்த நிறைவு அவனுக்கு இருக்கிறது. கொள்கையளவில் இந்நிறைவை காந்தியம் அளிக்கிறது. ஆகவே அது ஒருவகையான லட்சியவாதம்.
ஆனால் மார்க்சியம் என்பது லட்சியவாத அம்சம் இருந்தாலும் அடிப்படையில் அது ஒரு கோட்பாடு. கண்மூடித்தனமான நம்பிக்கை அதற்குத் தேவைப்படுகிறது. அந்நம்பிக்கையை சொல்லிச் சொல்லி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது நமர்-பிறர் என்று இவ்வுலகை இரண்டாகப் பகுத்து விடுகிறது. நம் தரப்பு நட்பு சக்திகள், தோழர்கள் என்றும், எதிர் தரப்பு எதிர் சக்திகள் எல்லாவகையிலும் பகைவர்கள் என்றும் பேசாத ஒரு மார்க்சியரையாவது எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
மார்க்ஸியர்களின் முழுநேர அறிவுச்செயல்பாடே எதிரிகளை கண்டடைவதுதான். நட்புசக்திகளைக் கண்டடைவது அல்ல. அவர்களுடன் இணைந்து செயல்பட்டவர்களைக்கூட எதிரிகளாக்கி அழித்தொழித்த வரலாற்றை நாம் ரஷ்யா முதல் காண்கிறோம். இந்திய வரலாற்றிலேயே மார்க்சிய கம்யூனிஸ்டுகளும் இந்தியக் கம்யூனிஸ்டுகளும் நக்சலைட்டுகளும் மாறிமாறி கொன்ற்றொழித்திருக்கிறார்கள். இடதுசாரிகளுக்கு முதன்மை எதிரிகள் இன்னொரு இடதுசாரிக்குழுவாகவே இருக்கிறார்கள்.
ஒரு மார்க்சியர் தன் வாழ்வின் ஒரு கட்டத்தில் மார்க்சியத்தின் எல்லையைப் புரிந்து அதிலிருந்து உளம் விலகலாம். தன்னுடைய எதிர்ப்பு மனநிலையை அவர் கைவிடலாம். இதுகாறும் நம்பியிருந்தது லட்சியவாதம் அல்ல, அரசியல்கோட்பாடு மீதான நம்பிக்கைதான் என்று அறிந்து கொள்ளலாம். அதன்பிறகு அவர் தான் ஆற்றிய பணிக்கு ஒரு மதிப்புள்ளது என்றும் தொழிற்சங்கத்திலோ, சமூகப்பணியிலோ தன் சேவை மக்களுக்கு ஒரு கொடையாக ஆகியிருக்கிறது என்று நிறைவுறவும் செய்யலாம். ஆனால் அவ்வாறு நிறைவுறும்போது அவர் உளரீதியாக சரியான மார்க்சியராக இல்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
ஏனென்றால் ஒரு மார்க்சியரைப் பொறுத்தவரை, ஒரு முதலாளித்துவ சமூகஅமைப்பு இருக்கும் வரை அவர் நிறைவடைய முடியாது. அது எஞ்சும் வரை அவர் தோல்வியுற்றவர்தான். அதை முழுக்க மாற்றும் பொருட்டுதான் அவர் அரசியலில் ஈடுபடுகிறாரே ஒழிய, தன் பங்களிப்பை அளிப்பதற்காக அல்ல. ஆகவே பங்களிப்பு அளித்ததைக் குறித்து ஒரு மார்க்சியராக நிறைவுறவே முடியாது. வெற்றி, தோல்வி மட்டும்தான் அதில் இருக்கிறது. ஒருவேளை என்றேனும் புரட்சி வரலாம் என்று நினைத்து, ஒரு மெல்லிய நிறைவுடன் அவர் உயிர் துறக்கலாம்.
ஆகவே மார்க்சியம் அளிக்கும் அந்த எதிர்மறைப் பண்பு, முழுமுற்றான நம்பிக்கை, அதனடிப்படையிலான காழ்ப்பும் கோபமும் லட்சியவாதத்துக்கு உரியதல்ல. லட்சியவாதம் எந்நிலையிலும் நேர்நிலைப் பண்பு கொண்டதாக, அதை நம்புபவனை மேம்படுத்துவதாக மட்டுமே அமையும். லட்சியவாதத்தை நம்பியவன் ஒருபோதும் தன்னைக் கைவிடப்பட்டவனாக உணர மாட்டான். இருளில் எஞ்சவும் மாட்டான்.
இன்று இங்கே அரசியல்களத்தில் உள்ள மார்க்சியம் என்பதேகூட சரியான அளவில் மார்க்சியம் அல்ல என்பதை நீங்கள் கருத்தில்கொள்ளவேண்டும். வன்முறையை கூடுமானவரை கைவிட்டு ஜனநாயகத்திற்கு திரும்பிய மார்க்சியம் இது. ஜனநாயகப் போராட்டங்களுக்காக காந்தியவழிமுறைகளை கையாளும் மிகப்பெரிய இயக்கம் இன்று இந்தியாவின் கம்யூனிஸ்டுக் கட்சிகளே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அடிப்படையில் காந்தியத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவரான இ.எம்.எஸ் என்னும் தத்துவமுன்னோடியால் மறுவரையறை செய்யப்பட்ட கம்யூனிசமே நாம் இன்று இங்கே பொதுத்தளத்தில் காண்பது. அந்த மார்க்ஸியத்திற்குள் ஒரு காந்திய இலட்சியவாதத்துடன் ஒருவர் வாழ்ந்து நிறைவுற வாய்ப்புள்ளது.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் பொருளியல் உரிமைக்கான குரல்கள் எழுந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகவே மார்க்சியத்தை ஒருபோதும் முழுமையாக நிராகரிக்க மாட்டேன். அதன் அடிப்படையான மானுடவாதமும் வரலாற்று ஆய்வுமுறையும் இன்றைய சிந்தனைக்கு இன்றியமையாதவை. மார்க்சியம் அந்த மானுடவாதத்தையும் வரலாற்று ஆய்வுமுறையையும் காந்திய இலட்சியவாதத்துடன், செயல்முறையுடன் இணைத்துக்கொண்டு முழுமையாக ஓர் இந்தியவடிவை எய்தவேண்டும்.
ஜெ
அம்பேத்கர் உரை- கடிதம்
அன்புள்ள ஜெமோ,
சிட்னி கார்த்திக் உங்கள் Egalitarians அமைப்பின் அம்பேத்கார் பற்றிய பேச்சு சார்ந்து கீழ்வரும் பதிவை பேஸ்புக்கில் போட்டிருந்தான்.
அது சார்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது, அம்பேத்கார் நம் சமூகத்தில் தலித் சிந்தனைவாதியாக மட்டுமே தொடர்ந்து முன்வைக்கப்படும்போது அது ஒற்றைப்படையாகி, ஒரு தரப்புக்கான சிந்தனையாளராக மட்டுமே கருதப்படுகிறார், அதைத்தாண்டி விரிவான தளத்தில் அவர் ஒரு அறிவுத்தரப்பாக முன்வைக்கபட வேண்டிய அவசியத்தை, தேவையை இருவரும் ஏற்றுக்கொண்டோம். நீங்கள் முன்னெடுப்பது அப்படி ஒற்றைபடையாக தலித்திய சிந்தனையாளராக மட்டுமே புரிந்துகொள்ளப்பட்ட/ அந்த தளத்தில் மட்டுமே விவாதிக்கப்பட்ட அம்பேத்காரை வரலாற்றாசிரியராகவும் முன்னெடுப்பது. ஆனால் இந்த முன்னெடுப்பு மிக சிரமமானது என்பது நிகழ்ச்சியின் இறுதியில் மீண்டும் மீண்டும் சாதிய/அரசியல் தளத்தில் இருந்து மட்டுமே கேட்கப்பட்ட கேள்விகளால் புரிந்தது. நீங்கள் மீண்டும் மீண்டும் அவர்களை இந்த தளத்துக்கு கொண்டு வந்து சிந்திக்க வலியுறுத்த வேண்டி இருந்தது. நீண்ட காலமாக சாதியம் சார்ந்து மட்டுமே அம்பேத்காரை புரிந்து கொண்ட பொதுவாசகர்களால் இன்னொரு தளத்தில் அவரை வைத்து சிந்திக்கவே இயலவில்லைதான்.
ஆனால் அப்படி ஒற்றைப்படையாக அடையாளப்படுத்த வேண்டிய நடைமுறை தேவை, அவசியம் அரசியல் தளத்தில் இன்னும் இருக்கிறது என்றான் கார்த்திக். இன்று அம்பேத்கர் என்பது சாதிய எழுச்சியின் ஒரு குறியீடாக இருக்கிறது, அது அவ்வாறு இருக்கும்போதுதான் அது தீவிரமாக இருக்கும், அறிவுத்தரப்பு என்பது அதை பரவலாக்கி, அதன் வீச்சை குறைத்துவிடுமோ என்றான். இந்த வரலாற்று நோக்கு என்பது அறிவார்ந்த தளத்தில் ஆராய்ச்சி நோக்கில் விரிவாக பார்க்கப்பட வேண்டும். ஆனால் பொதுத்தளத்தில் அல்லது அரசியலில் இந்த ஆராய்சிசார் பிம்பம் கலக்காமல் இருப்பதே தற்போதைக்கு நல்லது என்றான். அம்பேத்காரை அகெடெமிக்கலாக, அறிவார்ந்த தளத்தில் ஆராய்சினோக்கில் பொதுதளத்தில் வைத்துப்பார்ப்பது, அவருக்கு ஏற்கனவே இருக்கும் பிம்பத்தின் வீரியத்தை குறைக்கிறது என்பது அவன் எண்ணம். அவன் சொல்வது ஒருவகையில் உண்மை என்றுதான் தோணுகிறது.
அம்பேத்காரை அறிவுத்தளத்தில் விரிவாக வைப்பது என்பது அவரை எல்லா தரப்புக்குமான ஒரு பொது ஆளுமையாக ஆக்குவதன் நோக்கத்தைக் கொண்டிருக்கிறதா?அப்படியான நோக்கத்தைக் கொண்டிருக்கிறது எனில், அவரை இன்றைய நிலையிலேயே, ஒரு சாதியச் சிந்தனையாளராகவே எல்லோருக்குமான பொது ஆளுமையாக ஏற்கவைக்க முடியாததன் நம் சமூகத் தோல்வி என்று கொள்ளலாமா?இல்லை, இது எதுவும் இல்லாமல், நீங்கள் சொன்னதுபோல் இந்த சாதியபிரட்ச்சனைகள் எல்லாம் தொலைந்துபோகும் ஒரு எதிர்காலத்தில் (ஒருநூறுவருடத்துக்குப்பின்?) அவரை ஒரு தத்துவஞானியாக நிலைநிறுத்தும் நோக்கம் மட்டும்தானா?
இன்றைய நம் சமூகத்தில் அம்பேத்காரை சாதியச் சிந்தனையாளராகவே எல்லோருக்குமான பொது ஆளுமையாக ஏற்கவைக்க முடியாததன் நம் சமூகத் தோல்வியை நாம் ஒத்துக்கொள்ளலாம் என்றே தோணுகிறது. இதில் பூசிமொழுக அவசியமில்லை, இன்றும் அம்பேத்காருக்கு பெரியார். காந்தி, நேதாஜி, சே க்வாரா போன்று ஒரு பொதுமனிதனின் டிசர்டில் இடம் இல்லைதான். அந்த அடையாளத்தை அதீத கவனத்துடன் தவிர்க்கும் ஒரு நிலைதான் நம் சமூகத்தில் இன்றும் இருக்கிறது. இதைத்தாண்டி, பொதுசிந்தனைத்தளத்தில் அம்பேத்கார் உருக்கொண்டெழ தடையாக இருப்பது, அதீதமாக அவரை பாதுகாப்பதோ என்றும் தோணுகிறது.
அவரை விமர்சித்து ஒரு வார்த்தையும் யாரும் பேசிவிடக்கூடாது என்ற மற்றவர்களின் கண்டிப்பும், தாம் அப்படி பேசிவிடக்கூடாது என்ற ஒருவரின் அதீத தற்கவனமும், பயமுமோ என்று தோணுகிறது. (இன்றைய நிலையில் அதன் தேவையையும் அவசியத்தையும் உணர்ந்தே இருக்கிறேன்) இது அவரை ஒரு சிறு வட்டத்துக்கு் மட்டுமேயான பேசுபொருளாக குறுக்கிவிடுகிறது. அவரை எல்லோருக்குமான பொதுமனிதராக ஆக்குவதற்கான கடும் தடையாக இருக்கிறது என்பது என் எண்ணம். அவரை ஒரு பொதுவெளி பேசுபொருளாக்கும், ஏற்க்கும் & விமர்சிக்கும் வசதி அவரை சிந்தனைத்தளத்தில் விரிவு கொள்ளவே செய்யும், அது மிக அவசியம்.
இன்று காந்தியையும் பெரியாரையும் எவரொருவரும் எதிர்த்து பொதுவெளியில் எழுதிவிடலாம், உடனே ஆதரித்தும் நாலுபேர் எழுதுவார்கள்… இரண்டும் சரிசமமாக தொடர்ந்து சிந்தனைத்தளத்தில் உள்ளாடி இயங்கிக்கொண்டே இருக்கிறது. இது அம்பேத்காருக்கு நிகழவில்லை எனில் அவர் சிந்தனைகள் இறுகிப்போய் புனித பிம்பமாக வணங்க மட்டுமேபடும் ஒரு ஆளுமையாக நிலைகொள்ளும் அபாயம் இருக்கிறது.
சரவணன் விவேகானந்தன்
கார்த்திக்கின் பேஸ்புக் பதிவு.
அம்பேத்கரின் வரலாற்று பார்வைEgalitarians அமைப்பின் சார்பாக அம்பேத்கர் குறித்து ஜெ ஆற்றியிருக்கும் இந்த உரை முக்கியமானது . பெரும் ஆளுமைகளை நாம் பொதுவாக ஒருவாறு சுருக்கி திரட்டி வலுவான ஒற்றை அடையாளமாக ஆக்கிக்கொள்வது இயல்புதான் . காந்தி என்றால் அகிம்சை , போஸ் என்றால் வீரம் என்பது போல .
ஒருவர் முக்கியமாக எதற்காக நின்றார் ,எதில் சிறந்து விளங்கினார் , எதற்காக பாடுபட்டார் எவ்விதம் வெளிப்பட்டார் என்பது ஒரு ஒற்றை அடையாளமாக இருக்கும்போது தான் அதன் மூலம் பெரும் திரளாக மக்களை அடையவும் அவர்களை திரட்டவும் முடியும் . அந்த ஆளுமைகள் கொள்ளும் விசையும் வீரியமும் இவ்வாறு மக்கள் மனதில் அடையாளங்களாக பதிவதன் மூலமாகவே உருவாகிறது . ஆனால் ஆளுமைகள் ஒற்றைப்படையானாவர்கள் அல்ல .
இவ்வாறு ஒற்றை அடையாளமாக திரண்டு வருதலுக்கு இணையாகவே அவர்களின் மீதான முழுமைப் பார்வையும் அறிவுத்தளத்தில் அவசியமாகிறது . அவர்கள் முன்வைத்த சிந்தனை , பார்வை கோணங்கள் போன்றவற்றை அவர்கள் விட்ட இடத்தில் இருந்து முன்னெடுத்துச்செல்ல இந்த முழுமைப்பார்வை அவசியம் ஆகிறது . அந்த கோணத்தில் அம்பேத்கர் அவர்களை முழுமையாக வரையறை செய்யும் உரை இது .
ஓரளவு கல்லூரி விரிவுரைகளை ஒத்த ஆனால் சுவாரசியமான கட்டுக்கோப்பான உரை . மிக விரிவாக தொன்மங்களில் ஆரம்பித்து , வரலாறு , வரலாற்றின் வகைகள் , வரலாற்று எழுத்தின் வகைகள் (Historiograhy ) என்று இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த வெவ்வேறு வரலாற்று பார்வைகளை ஆராய்கிறது . அந்த வரலாற்று பார்வைகளில் உள்ள போதாமைகளை, விடுபடுதல்களை பேசுகிறது.
இதில் அம்பேத்கர் முன் வைக்கும் வரலாற்று பார்வை கோணம் எவ்வாறு Historic Positivism என்பதை ஒத்திருக்கிறது என்பதை நோக்கி உரை செல்கிறது. இது வரை புழக்கத்தில் இருந்த வரலாற்று பார்வைகளை எல்லாமே ஏதோ ஒரு வகையில் தலித்துகளை வெளியே வைத்துவிட்டே தான் பேசியிருக்கின்றன. தொன்னூறுகளில் உருவாகிவந்த sub altern வகை வரலாற்று கோணம் கூட தலித் என்னும் அடையாளத்தை விளிம்பு நிலை என்னும் அடையாளத்தோடு சேர்த்தே பேசி வந்திருக்கிறது .
தலித் வரலாறு விளிம்பு நிலை வரலாறு அல்ல அவர்கள் எக்காலத்திலும் சமூகத்துக்கு வெளியே நின்றவர்கள் அல்ல , மாறாக ஒட்டு மொத்த சமூகமே அவர்களின் மேல் தான் அமர்ந்திருக்கிறது என்னும் பார்வை முக்கியமானது . அம்பேத்கர் பயன்படுத்தும் depressed class என்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த உரை அடிக்கோடிடுகிறது .
அம்பேத்கரின் வரலாற்று முடிவுகளின் இருக்கும் போதாமைகள் குறித்த நியாயமான விளக்கங்களை முன் வைக்கிறது . அவர் பார்வையில் துலங்கி வரும் அற நோக்கை (ethics ) முக்கியத்துவப்படுத்துகிறது . அம்பேத்கர் பெளத்தத்தை தழுவியது சனாதன எதிர்ப்பு மட்டுமல்ல அது அவரின் ஆன்மீக புரிதலையும் உள்ளடக்கியது .(அம்பேத்கரின் “தம்மம்” குறித்து ஜெ ஏற்கனவே முக்கியமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார் . )
இறுதியாக அம்பேத்கரின் முக்கிய வரலாற்று தத்துவ பார்வைகளான Historic positivisim , non-sentimentalism , peoples history , objective view of myths போன்றவைகளை உள்ளடக்கிய, பெருமிதங்கள் அற்ற ஒரு புதிய வரலாற்று பார்வையை எப்படி உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற ஒரு blueprint ஐ அளிக்கிறது. இப்படி வால்டேரில் இருந்து நொபுரு கராஷிமா வரை , தொன்மங்களில் இருந்து மனித ஆன்மீக பரிணாமம் வரை ( ரஜினியோ மதங்களோ பேசும் ஆன்மீகம் அல்ல இது ) ஒரு கோட்டை இழுக்கும் பிரிதொரு உரை கேட்கக்கிடைப்பது அரிது .
ஜெ “இன்றைய காந்தி” தொடரை எழுதியபோதே அவர் அதே போன்று அம்பேத்கர் குறித்தும் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் அதை ஓரளவு ஈடுகட்டும் விதத்தில் இந்த உரை அமைந்திருக்கிறது. காந்திய நோக்கும் அம்பேத்கரிய நோக்கும் அவர்கள் காலத்தில் நடைமுறை சார்ந்த சில முரண்களை கொண்டிருந்தாலும் அதன் அற அடிப்படையில் ரொம்பவும் வேறானதல்ல என்பதை உணரமுடிகிறது.
தனிப்பட்ட முறையில் இந்த புள்ளியில் இருந்து இந்தியா என்பது குறித்த ஒரு புதிய நவீன integrated & inclusive view வை உருவாக்க தேவையான இணைவுகளை இந்த உரை அளிப்பதாக உணர்கிறேன் .
விசை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
என் அப்பாவை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரப்பதிவுக்கு அழைத்துச் சென்றேன். அவர் கையெழுத்திட்ட எல்லா தாள்களும் கிழிந்துவிட்டன. அவரால் பேனாவால் எழுதவே முடியவில்லை. நான் கொஞ்சம் கடுமையாகப் பேசினேன். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவர் சொன்னார். “தம்பி அப்பா மண்வெட்டி எடுத்து வேலைசெஞ்சவர். மண்ணு அப்டி வெட்டினாத்தான் வெளையும். பேப்பர் தொட்டாலே சோறுபோடும். அவருக்கு மண்ணோட கடுமைதான் தெரியும்”
அந்தவரி என்னை உலுக்கிவிட்டது. அவர் இன்றைக்கு இல்லை. நேற்று விசை கதை வாசித்தேன். சட்டென்று எல்லாமே புரிந்தது. அப்பாவின் அந்த விசை எதிலுமே என்னிடம் இல்லை என்று தெரிந்து கண்ணீர்விட்டேன். வணக்கம் ஜெ
ஆர்.மாணிக்கம் தங்கசாமி
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். விசை வாசித்து இருபது நாட்களாகியும், நேசையனின் அம்மை ஓலைக்காரி என் மனதை விட்டுச் சென்றபாடில்லை. நிஜ வாழ்வில், சில பெண்கள் ஆக்ரமித்துவிடுவதுபோல, புனைவில் வரும் பெண்களும் மனதில் அப்படியே நின்று விடுகிறார்கள். என்னை அல்லது என் வாழ்வை ஏதாவது ஒரு வகையில் பாதித்த பெண்களுக்கென்றே , ‘அவளின்றி நானில்லை’ என்று ஒரு கவிதை வைத்திருக்கிறேன். அவர்களுக்கு அந்தக் கவிதையை, தகுந்த தருணங்களில், கொடுக்கும் வழக்கம் எனக்கு உண்டு. ஓலைக்காரி புனைவில் வந்த நாயகி என்றாலும், புனைவில் கூட இறந்துவிட்டவள் என்றாலும், அவளுக்கும் அந்தக் கவிதையை கொடுக்க மனது துடிக்கிறது. இவள் ஒரு வகையில், கி.ரா-வின் ‘இந்த இவள்’ நாயகியை நினைவு படுத்துகிறாள். கி.ரா-வின் இந்த இவளுக்கும், ஓலைக்காரிக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இருவரும் கணவனை இழந்தவர்கள். அவள் ஊரே மெச்சி சாப்பிடும் சாப்பாட்டை சமைப்பவள். இவளுக்கோ பொங்கிய சோறும் தேங்காய் துவையுலும்தான் தெரியும். உழைப்பு என்பதே ஒரு அழகு. ஆதலால், அவர்கள் இருவரும் ஒரே மாதிரி என் மனக்கண்ணில் அழகானவர்களாக, ஆக்ரிமிப்பவர்களாக, ஆகி விடுகிறார்கள். என் உழைப்பு அவர்களது உழைப்பிற்கு நிகர் இல்லை என்று நான் இருமாந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவளது விசை என்னவோ எனக்குத் தெரியாது. அவளைப் போன்றவர்களை அறியும் தோறும் எனக்கு ஒரு விசை கிடைக்கிறது என்றே உணர்கிறேன்.
ஓலைக்காரியை , ஒரு வேளை, என் அப்பாவைப் போன்ற உழைப்பாளி என்பதால், எனக்குப் பிடித்துப் போய் இருக்கலாம். 96 வயதில், அவர் இன்றும் தோட்டத்தில் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பார். மாட்டிற்கு சோழத்தட்டை அறுத்துக்கொண்டிருப்பார். ரோட்டாரமாக இருக்கும் தோட்டம் என்பதால், போகிறவன் வருகிறவன் எல்லாம் வந்து, ‘என்ன நயினா, உங்க சின்ன மகன் அமெரிக்காவிலிருந்து காசு அனுப்பறதில்லையா?’ என்பார்கள். ‘நான் உங்கிட்ட வந்து காசு கேட்டனா, உன் வேலையை பார்த்துக்கிட்டு போவயா’ என்பார் என் அப்பா.
எனக்கு, ‘பாசக்கார பையன்’ என ஊரில் பெயர் உண்டு. இந்தியா வரும் சமயங்களில் , ஆசைஆசையாக உறவினர்களை சென்று பார்ப்பேன். நேசையனிடம் கேட்கும் டீக்கனாரைப் போல, யாராவது ஒருவர் என்னிடம், “அப்பாவுக்குத்தான் விடிவே இல்லை. அவரு பாடுதான் இன்னும் தீரவே மாட்டேன் என்கிறது. அவர சும்மா இருக்க சொல்லலாம் இல்ல’ எனக் கேட்பார்கள். எனது சப்த நாடியும் அடங்கிவிடும்.
சில நாயகிகளை என் மனச்சித்திரத்தில் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஓலைக்காரியும் அப்படித்தான் எனக்கு. ஆதலால், நண்பர்கள் , விசை பற்றி எழுதிய கடிதங்களை வாசிக்கவே இல்லை. எப்பொழுது ஊருக்கு வருவோம், தென்னை ஓலையைப் பார்ப்போம் என்று இருக்கிறது.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்
***





![Aanaiyillaa!: ஆனையில்லா! (Tamil Edition) by [Jeyamohan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/hostedimages/1624438455i/31534885.jpg)
தனிநடிப்பு- பிரசன்னா
வணக்கம் ஜெ,
நலம் தானே? ஏப்ரல் 14 அன்று மதுரையில் தங்களை நேரில் சந்தித்து சில மணி நேரம் தங்களின் அருகாமையில் இருந்தது மன நிறைவாக இருந்தது. கொரோனாவிற்கு மத்தியிலும் பெங்களூரிலிருந்து மதுரைக்கு வர மூன்று காரணங்கள் இருந்தன.
1) நீங்கள் பங்கு பெரும் கூட்டங்களுக்கு வந்து சென்றால் எழுத்தில் ஈடுபடும் உத்வேகம் அதிகமாகும். இது பலர் உணர்ந்தது தான். 4 மாதத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றிற்கு சென்று வந்து விட்டால் அதனுடைய kick சில நாட்களுக்கு தங்கும்.
2) சிவராஜ் அண்ணாவின் சிரிப்பு. சிவராஜ் அண்ணாவை முதல் முறை “டமருகம்” துவக்க நாள் நிகழ்வில் கண்டேன். அந்த சிரிப்பில் உண்மையிலேயே மயங்கி வீழ்ந்தேன் :) மனம் விட்டு நிறைவுடன் கூடிய சிரிப்பென்பது அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை. ஆனால், அதை அடைவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதற்கு ஒரே வழி செயல் தான் என்பது தன்மீட்சி நூல் தெள்ளத்தெளிவாக உணர்த்தியது.
3) தன்மீட்சி நூலை வாசித்து நான் எழுதிய கட்டுரை தேர்வாகியிருந்தது. நித்யாவின் புகைப்படத்துடன் உங்களுடைய வாசகமும் கூடிய அந்த பெரிய ஃபிரேம் போட்ட புகைப்படம் இப்போது என் சுவரில் அமைதியாக இருக்கிறது. மூன்றாவது காரணத்திற்காக தான் மதுரைக்கான பயணமே என்றாலும் முதல் இரண்டு காரணங்கள் என்னளவில் மிகவும் முக்கியம்.
தன்வெளிப்பாடு பற்றி அண்மையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தீர்கள். அதன் விளைவாக உருவான “ஒளி” என்ற நாடகத்தையும் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. உங்களுடைய எழுத்துக்காகவும், நரேனின் நடிப்பிற்காகவும். நண்பர் ஆனந்துடன் அதைப் பற்றி பேசிய போது என் மனதில் அந்நாடகம் மேடையில் அமைந்திருந்தால் எப்படி அமைத்திருக்கலாம் என்றெண்ணத் தொடங்கினேன். ஆறு பேருக்கும் focus light (with different colors). ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ண விளக்கு. எவர் பேசுகிறாரோ அவர் மீது மட்டும் ஒளி பாய்ச்சப் பட வேண்டும். அவர்கள் அனைவருமே ஒரு பெட்டியில் அடைப்பட்டுக் கொண்டிருப்பது போன்று set அமைக்க வேண்டும். ஆனால், சில கதாபாத்திரங்கள் சில காட்சிகளில் அதெல்லாம் கற்பனை என்பது போல் உடைத்து வெளி வந்துக் கொண்டே இருக்க வேண்டும். கடைசி சில நிமிடங்களில் வந்து வந்து மறையும் ஒரு அமானுஷ்ய ஒளி பார்வையாளர்கள் பக்கமும் மேடையிலும் தெரிய வேண்டும். மேடையை சுற்றிலும் சிறைக் கம்பிகள் வரையப்பட்டிருக்க வேண்டும். இப்படியெல்லாம் தோன்றிக் கொண்டே இருந்தது.
நான் கடந்த இரண்டு வருடங்களாக அவ்வப்போது நாடகத்தில் நடித்து வருகிறேன். கேமெராவிற்கு முன் நடிப்பதற்கும் மேடையில் தோன்றி நடிப்பதற்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது போல் தோன்றியது. எழுத்தில் வெளிப்படும் நான், நடிக்கும் போது மாறுபடுகிறேன். ஆனால், எழுதும் போதும் நடிக்கும் போதும் நம்மையே மறந்து அடையும் உச்சம் எனக்கு நிறைவைக் கொடுக்கிறது. அந்த உச்சம் ஒன்றே போல் இருப்பதாக தோன்றியது. என்னை மறந்து முழுதாக எழுத்திலோ நடிப்பிலோ லயித்தல். தர்க்கத்துக்கு நேர் எதிரான மன நிலை அது. ஆனால் நான் புழங்குவது, Data Analytics. எண்களால் சூழப்பட்டு, 2+2 = 4 என்று ஒரே முடிவாக வகுக்கப்பட்ட ஒற்றைப் பாதையில் எவ்வித பிசகும் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். காலையில் எழுந்ததும் எழுதவோ, நடிப்பிற்கான பயிற்சியையோ செய்து கொண்டிருக்கிறேன். காலை என்பது தவறவிடக் கூடாத உன்னதப் பொழுதென்பதை உணர்ந்தேன். மூளை தர்க்கத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறது. எழுத்து மற்றும் நடிப்பிலிருந்து எண்களின் உலகிற்கு எளிதாக gear மாற்ற முடிகிறது. ஆனால், vice-versa herculean task (என் போன்றவர்களுக்கு).
எதையோ சொல்ல வந்து எங்கோ சென்றுக் கொண்டிருக்கிறேன். ஊரடங்கு காலம் தொடங்கிய உடனே எங்கள் குழுவின் நாடக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திபோடப் பட்டன. எப்போது மீண்டும் நடைபெறும் என்று தெரியாத குழப்பம். அப்போது என் மொத்தக் குழுவும் கவலையில் சுருண்டனர். நானும் ஏமாற்றத்தில் திளைத்தேன். அதை வெல்ல ஏதாவது வழி கிடைக்குமா என்றெண்ணி, பாவாவின் கதை சொல்லும் வீடியோக்களினால் உந்தப்பட்டு, எனக்குப் பிடித்த வகையில் என்னை பாதித்த மற்றும் “சொல்லக்” கூடிய கதைகளை நடித்துப் பார்க்கலாம் என்றெண்ணினேன். மேடையில் கையை காலை குரலை உயர்த்தி நடித்தப் போது வந்த சுந்தந்திர உணர்வு கேமெராவிற்கு முன் முற்றிலும் கட்டுப்பட்டது. ஆனாலும் வேறு வழி இல்லை. ஊரடங்கில் வெறும் வாசிப்பு, சினிமா மற்றும் எழுத்து மட்டும் போதாது. உடல், கை கால் முகம் அனைத்தையும் இயக்கி உள்ளுக்குள் ஓருணர்வை தக்கவைத்துக் கொண்டு வெளிப்படுத்தும் நடிப்பும் எனக்கு மிகத் தேவையான வெளிப்பாடாக இருந்தது.
கடந்த ஆகஸ்ட் வாக்கில் இது போன்று எப்போதெல்லாம் ஒரு கதை அல்லது கரு என்னை உந்தித் தள்ளுகிறதோ, அதை கூறும் படியாகவும் உள்ளதோ அதை தேர்ந்தெடுத்து “சொல்லிப்” பார்த்தேன். என் நண்பர் ஒருவர் பெங்களூரில் ஒரு முழு நேர கதைசொல்லி. அவரிடமும் வேறு சிலரிடமும் காண்பித்து சில தவறுகளை திருத்திக் கொள்வேன். ஆனால், technical சமாச்சாரங்களை நான் பெரிதாக கண்டுகொள்வதில்லை. நடிக்கும் போது தேவையான ஒரு spontaneity, flow, honesty, keeping up and staying at a certain emotional level எல்லாம் technical விஷயங்களில் கவனம் செலுத்தும் போது மறைந்து விடுவதாக எண்ணுகிறேன்.
கிட்டத்தட்ட 8 வீடியோக்கள். அதிலொன்றை இன்னும் ஏற்றவில்லை. அது தான் நான் செய்து பார்த்த முதல் முயற்சி. இந்த எட்டைத் தவிர குழந்தைகளுக்கான 3 கதைகளை கூறி ஒரு என்.ஜி.ஓவின் இன்ஸ்டாகிராமில் ஏற்றுவதற்காக பதிவு செய்து கொடுத்தேன். வெண்முரசு நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை. அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து செய்ய பெரு விருப்பம் உண்டு. சந்தோஷ் லா.ஓ.சி. ஒரு கதையை அனுப்பினார். அதை செய்ய வேண்டும். அதற்கு நடுவே வேறு சில கதைகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டன. ஏன் இப்போது இந்த காணொளிகளை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று தெரியவில்லை. ஆனால், அனுப்ப வேண்டும் தோன்றிற்று. இலக்கிய கதைகள் பலவற்றை பலர் இப்போது audio book ஆக வெளியிடுகின்றனர். தமிழ் படிக்கத் தெரியாத பல செந்தமிழர்களுக்கு அது உதவுகிறது.
நான் முயன்று பார்த்திருப்பது ஒரு வகையான dramatic acting. இன்னும் முழு திருப்தியுடன் ஒரு காணொளியை என்னால் பதிவேற்ற முடியவில்லை. எனக்கு எழுந்து ஓடியாடி நடிக்க வேண்டும். அதற்கு இன்னொரு மனிதத் துணைத் தேவை. கீழே இரண்டு காணொளிகளுக்கான Youtube link இருக்கிறது. ஒன்று எஸ்.ராவின் குறுங்கதையிலிருந்து. மற்றொன்று தீப்பாதி என்ற தன்னனுபவ கதையிலிருந்து (பாலச்சந்திரன் சுள்ளிக்காடு). முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. இவ்வனைத்து காணொளிகளையும் கண்டால் என் நடிப்பின் வளர்ச்சி தெறியும் அல்லது தெரியாமல் போகலாம், தாடியின் வளர்ச்சி நிச்சயம் தெரியும்.
நன்றி
எஸ்.பிரசன்ன கிருஷ்ணன்
முதல் ஒரிய மொழி நாவலும் சிறுகதையும்
ரேபதி நல்ல சிறுகதை. திறமை அற்ற எழுத்தாளர் எழுதி இருந்தால் செயற்கையான மெலோட்ராமா சிறுகதையாக வந்திருக்கும், இவர் மெய்நிகர் அனுபவத்தை, ஒரு காலகட்டத்தை, அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார். சிறுமி ரேபதிக்கும் கிராமத்து வாத்தியார் பாசுவுக்கும் நடுவில் ஏற்படும் ஈர்ப்பு, பெண்ணைப் படிக்க வைக்க நினைக்கும் அப்பா, படித்து என்ன கிழிக்கப் போகிறாய் என்று திட்டிக் கொண்டே இருக்கும் பாட்டி, ஓட்டைப் பாத்திரத்தை விற்று அரிசி பருப்பு வாங்கும் காட்சி, என்று மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார். குளத்தங்கரை அரசமரம் சிறுகதையை படிக்கும் உணர்வு ஏற்பட்டது.
முதல் ஒரிய மொழி நாவலும் சிறுகதையும்June 21, 2021
ஒரு பேட்டி
பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், ராஜா இருவரும் விகடன் இணைய இதழுக்காக என்னை எடுத்த பேட்டி. உரையாடல் என்று சொல்லலாம். என் பின்னணி, காந்தி பற்றியெல்லாம் இயல்பாக பேசியிருக்கிறேன். நீண்ட பேட்டி. மேலும் சில பகுதிகளாக வரும் என எண்ணுகிறேன்.
ஜீன் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!
தமிழக முதல்வரின் பொருளியல் ஆலோசனைக் குழுவில் இணைக்கப்பட்டுள்ள ஜீன் ட்ரெஸ் பற்றிய கட்டுரை. மறுபிரசுரம்.
ராஞ்சியில் மிகப் புகழ்பெற கிரிக்கெட் வீரர் ஒருவர் வசிக்கிறார். அவர் முன்னோர்கள் உத்தாரக்கண்ட் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்தவர்கள். அதே போல, ராஞ்சியில், புலம்பெயர்ந்து வந்த இன்னொரு மனிதரும் வசிக்கிறார். கிரிக்கெட் வீரரைப் போலவே, தன் துறையில் புகழ் பெற்ற மனிதர். அவரைப் போலவே ஒரு தனித்துவ சிந்தனை கொண்டவர். கிரிக்கெட்டர் தன் திறன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்திருக்கிறார். இவரோ, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட வைத்திருக்கிறார். அவர்களை கொடிய வறுமையின் பிடியில் இருந்து மீட்டிருக்கிறார். இவர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்ட உருவாக்குதலில் மிக முக்கிய பங்கு வகித்தவர். பின்னர், அதன் சட்ட வரைவை உருவாக்குதலிலும், அந்த திட்ட நிறைவேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்தலிலும் பங்கு பெற்றவர். தகவலறியும் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்ட உருவாக்கங்களிலும் தன் பங்களிப்பைச் செய்தவர்.
ஃபிப்ரவரி மாதத் துவக்கத்தில், உளவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்ற ராஞ்சி சென்றிருந்தேன். எம்.எஸ்.தோனி ஊரில் இல்லை என எனக்குத் தெரியும். இருந்திருந்தாலும், நாங்களிருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ள அதிக விஷயங்கள் இல்லை. ஆனால், ராஞ்சியின் அந்த இன்னொரு முக்கிய மனிதரைச் சந்திக்க விரும்பினேன். முன்னெச்சரிக்கையாக, அவர் ராஞ்சியில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அவரைப் பார்க்கச் சென்றேன். இருவருமே தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பவர்கள். எம்.எஸ்.தோனி, தன் தொழிலுக்காக உலகமெலாம் விமானத்தில் பறக்கிறார். இவரும், தன் தொழிலுக்காக இந்தியாவெங்கும் பஸ்களிலும், ரயில்களிலும் பயணிக்கிறார். இரவுகளில், நல்ல விடுதிகளில் தங்காமல், கிராமக் குடிசைகளில் தங்கிக் கொள்கிறார்.
நான் ஜான் ட்ரெஸை இதற்கு முன்பு பலமுறை சந்தித்திருக்கிறேன். 1990 களின் துவக்கத்தில், முதன் முறை சந்தித்த போது, லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics) பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். தொழிலாளிகள் வாழும் பகுதியில், ஒரு வசிப்பிடத்தில் தங்கியிருந்தார். அடுத்த முறை, 90களின் இறுதியில் சந்தித்த போது, தில்லிப் பொருளாதாரப் பள்ளியில் (Delhi School of Economics) பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். தில்லியின், திமர்ப்பூர் என்னும் சேரியில் தங்கியிருந்தார். 2000 த்தின் துவக்கத்தில் மூன்றாவது முறையாக அவரை பெங்களூரில் சந்தித்தேன். சந்திப்பின் முடிவில், அவரை ரயில் நிலையம் கொண்டு விடச் சென்றேன். அங்கிருந்து, தமிழகச் சத்துணவுத் திட்டத்தைப் பற்றிய ஆய்வுக்காக, தமிழகத்தின் சிறு கிராமங்களுக்குப் பயணம் செல்வதாகத் திட்டமிட்டிருந்தார். இன்னொரு முறை, ஒரிஸ்ஸா ஆதிவாசிக் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நான் அந்தக் கிராமத்தை அடைவதற்குக் கொஞ்சம் முன்னர்க் கிளம்பி, கால்நடையாகத் தன் ஒரு வாரப் பயணத்தைத் துவங்கியிருந்தார். ஒருமுறை, தில்லியில் எங்கள் சந்திப்பை ரத்து செய்துவிட்டு, ப்ரஸ்ஸல்ஸ் பறந்தார். அப்போது, அவர், இந்தியக் குடியுரிமையை பெறும் முயற்சியில் இருந்தார். இந்தியக் குடியுரிமை பெறும் சிரமங்களை விட, பெல்ஜியக் குடியுரிமையை ரத்து செய்ய, பெல்ஜிய அதிகாரிகளை ஒப்புக் கொள்ள வைப்பது, அவருக்கு அதிக சிரமமாக இருந்தது.
இதுபோன்ற அவ்வப்போதையச் சந்திப்புகளுக்கிடையே, நானும் அவரும் தொடர்ந்து சம்பாஷனையில் இருந்தோம். ஒருவர் மற்றவரின் எழுத்துக்களை படித்து, கருத்துக்களை, விமரிசனங்களைப் பரிமாறிக் கொண்டோம். இருவருமே, அரசுகள் வெறுமே சந்தைப் பொருளாதாரத்தோடு நின்று விடாமல், தன்பங்களிப்பையும் செய்து, சந்தைப் பொருளாதாரத்தின் எதிர்மறை விளைவுகளை சமன் செய்ய வேண்டும் என்னும் கருத்தில் ஒன்றுபட்டோம். சமன் செய்ய வேண்டும் என்னும் கருத்தில், அவர் (என்னை விட) அதிகமாக அரசின் பங்கு இருக்க வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவர்.
ஜான் ட்ரெஸ் என்னை விட ஒரு வயது இளையவர். நாங்கள் இருவருமே எங்கள் முனைவர் பட்டங்களை இந்தியாவில் பெற்றவர்கள்; இருவருமே இந்தியாவில் பணிபுரிந்து, இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதியவர்கள். இந்த ஒற்றுமைகளைத் தவிர, எங்கள் வாழ்க்கைப் பாதைகள் மிகவும் மாறுபட்டவை; ராஞ்சியில் அவரைச் சந்திக்க விரும்பியதற்குக் காரணம், அவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கொஞ்சம் அதிகம் தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான். முன்பே தீர்மானித்த படி, ராஞ்சிப் பல்கலைக்கழகத்தில், அவர் அலுவலகத்தில் சந்தித்தோம். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளில், ராஞ்சியில் இருந்து ஹசாரிபாக் செல்லும் நெடுஞ்சாலையில் பயணித்தோம். அரைமணி நேரப் பயணத்திற்குப் பின்னர், ஒரு மண் சாலையில் திரும்பினோம். சிறிது நேரப் பயணத்திற்குப் பின், வண்டியை ஒரு அரசமர நிழலில் நிறுத்தி விட்டு, ஒரு நீண்ட நடைப்பயணத்தை மேற்கொண்டு, ஒரு குன்றின் மீதிருந்த பாறையில் அமர்ந்தோம். கீழே தெரிந்த நிலைப்பரப்பை அமைதியாகக் கொஞ்ச நேரம் கவனித்துக் கொண்டிருந்தோம். கீழே, சமவெளியில் ஒரு நீரோடை ஓடிக்கொண்டிருந்தது. ஓடையின் மறுபுறத்தில், அழகிய நீல வண்ணம் பூசப் பட்ட சுவர்களைக் கொண்ட முண்டா இனத்தவர்களின் வீடுகள் தெரிந்தன. இந்த இயற்கையான சூழலில், நண்பர் பேசத் துவங்கினார்.
ஜான் ட்ரெஸ், பெல்ஜியத்தில் லூவென் என்னும் ஒரு பழங்கால நகரத்தில் 1959 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் தந்தை ஜாக் ட்ரெஸ், உலகின் மிக மதிக்கப்பட்ட பொருளியல் அறிஞர்களில் ஒருவர். சிறந்த பேராசிரியரும் கூட. அவரும், அவர் மனைவியும் பொது வாழ்வில் மிக ஈடுபாடு கொண்டவர்கள். கல்வியறிவும், சேவையும் ஒருங்கிணைந்த ஒரு குடும்பச் சூழலில் ஜான் வளர்ந்தார். அவர் சகோதரர்களில் ஒருவர் இடதுசாரி அரசியல்வாதி; இன்னொருவர் மேலாண்மைப் பேராரிரியர்; மூன்றாமவர் மொழிபெயர்ப்பாளர்.
எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்த ஜான் ட்ரெஸ்ஸுக்கு, வளர்ச்சிப் பொருளியலில் ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வம் அவரை, தில்லிப் புள்ளியியல் கழகத்திற்கு கொண்டு வந்தது. அங்கே பேராசிரியர் அமர்த்தியா சென்னைச் சந்தித்த ஜான் ட்ரெஸ், அவருடன் இணைந்து நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார் (மேலும் இரண்டைத் தொகுத்துள்ளார்). புத்தகங்களுக்கான 90% வேலையை ட்ரெஸ் செய்வதாகவும், ஆனால், 90% புகழ் தனக்குக் கிடைப்பதாகவும் அமர்த்தியா சென் சொல்லியதைக் கேட்டிருக்கிறேன். அது கொஞ்சம் மிகைதான். ஒருவர் பங்களிப்பு இல்லாமல், இன்னொருவர் இல்லை என்னுமளவுக்கு சரியளவு பங்களிப்பில் உருவான அந்தப் புத்தகங்களுக்காக, அவர்களின் வாசகர்கள் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பார்கள்.
அமர்த்தியா சென், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கிறார். ஜான் ட்ரெஸ், இந்தியாவில் வாழ முடிவு செய்து, தில்லிப் பொருளாதாரப் பள்ளியில் பணிபுரியத் துவங்கினார். அங்கிருந்து அலஹாபாத் பல்கலைக்கழகம் சென்றார். தற்போது ராஞ்சிப் பல்கலைக்கழகத்தில் பணி. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்குக் கற்பிப்பதையும், இந்தியாவின் வறுமை நிலவும் பகுதிகளில் பணிபுரிவதையும், ஒரு வளர்ச்சிப் பொருளியல் அறிஞராகத் (Developmental Economist) தன் அறம் எனக் கொண்டவர் ஜான். அது, துறவியைப் போல வாழும் அவரது ஆளுமையுடன் ஒன்றியது. அவர் தன் பணிகளுக்காக ஊதியம் பெற்றுக் கொள்வதில்லை. அவரது தேவைகள் மிகக் குறைவு. அவற்றை, செய்தித்தாள்களுக்கு எழுதும் கட்டுரைகள் மூலம் வரும் வருமானம் மற்றும், தன் புத்தகங்களின் விற்பனையில் கிடைக்கும் ராயல்டி மூலமாகப் பூர்த்தி செய்து கொள்கிறார். பல ஆண்டுகளாக களப்பணியில் ஈடுபட்ட அனுபவத்தில், மிக நன்றாக இந்தி பேசுவார்.
பலமணி நேர உரையாடலுக்குப் பின், குன்றிலிருந்து இறங்கி, ஜானின் மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தோம். திரும்பி வரும்வழியில், மனசரோவர் என்னும் அழகிய பெயர் கொண்ட ஒரு சாலையோர உணவகத்தில், மதிய உணவு உண்டோம். பின், என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தினேன். ராஞ்சி நகரத்தின் எல்லையில் அமைந்துள்ள, ஒரு மலைவாசிக் கிராமத்தில் இருக்கும் தன் குடிசைக்கு அழைத்துச் சென்றார். நகரம் வளரும் வேகத்தில், இன்னும் சில ஆண்டுகளில், இந்தக் கிராமம் விழுங்கப்பட்டு விடும். வீட்டின் ஒரு புறம் மூங்கிற் புதரும், வாசலில் புளிய மரமும் இருந்தது. பேசிக் கொண்டே, ஜான் எனக்கு தேநீர் போட்டுக் கொடுத்தார். மரக்கிளையில் இருந்து, க்ரிம்ஸன் ரெட் பார்பெட் (Crimson Red Barbet) ஒன்றின் அழைப்புக் கேட்டுக் கொண்டிருந்தது.
உரையாடலினூடே, தான் ஒரு ஹிந்திப் பத்திரிகையில் ஒரு கட்டுரைத் தொடர் துவங்க உள்ளதாகத் தெரிவித்தார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், ஏற்கனவே, Sense and Solidarity என்னும் பெயரில் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. ‘அனைவருக்குமான ஜோல்னாப்பைப் பொருளாதாரம்’ எனச் சுய எள்ளலுடன், உப தலைப்பிடப்பட்ட புத்தகம் அது. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், குழந்தைகள் உரிமை, அணு ஆயுதப் போர் அபாயம் எனப் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு அது. அவை உழவர்கள், ஆதிவாசிகள், தொழிலாளிகள், புலம் பெயர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கையையும், போராட்டங்களையும் பற்றிய உண்மையான அறிதலில் இருந்து எழுந்தவை. எதிர்மறைவாதம் தவிர்த்த தெளிவான நடையும், கூர்மையான அலசல்களும் இவர் கட்டுரைகளின் சிறப்பம்சங்கள். இந்திய மக்களாட்சி மற்றும் முன்னேற்றம் பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் உடனே வாங்க வேண்டிய புத்தகம் இது.
முன்பே சொன்னது போல, நாங்கள் இருவரும் சம வயதினர். புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதும் தொழிலில் (தொழில் என்னும் வார்த்தையை அவர் அனுமதித்தால்..) இருப்பவர்கள். 2002 ஆம் ஆண்டில் இருந்து ஒரே நாட்டின் சுங்கச் சீட்டை (passport) வைத்திருப்பவர்கள். இவர் என் சம காலத்தவர், சக ஊழியர் என்பது எனக்குப் பெருமை. என் நாட்டின் சக குடிமகன் என்பதில் அதைவிடப் பெருமை!
மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Apr 7, 2019 at 00:06
——–
https://www.telegraphindia.com/opinion/a-day-with-dr-egrave-ze/cid/1463695 லக்ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா போற்றப்படாத இதிகாசம் -பாலா பங்கர் ராய்நித்யாவின் சொற்கள்
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு…
நித்ய சைதன்ய யதியின் தத்துவங்களையும் கனிவிருப்பையும் மனமேந்தும் விதமாக, கடந்த சித்திரை 1 அன்று நிகழ்ந்த கல்லெழும் விதை நிகழ்வில், யதி ஒளிப்படங்கள் மற்றும் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் தன்மீட்சி வாசகங்களையும் இணைத்து ஒளிப்படச் சட்டகங்கள் உருவாக்கி, நிகழ்வரங்கின் சுவர்களில் பொருத்தியிருந்தோம்.
யதி ஒளிப்படச் சட்டகங்கள் எல்லாவற்றின் வடிவமைப்பையும் இங்கு பகிர்கிறோம். வார்த்தையாலோ முகமிருப்பலோ தத்துவநீட்சியாலோ அகநம்பிக்கை அடையவிரும்பும் அனைவருக்குமான உளச்சுடரை ஒளிப்படுத்தும் ஒளிப்படங்களாக இவை நம் மனதில் நிலைக்கட்டும்!
தன்னறம் நூல்வெளி
ஜெ.சைதன்யா- ஒரு கடிதம்
ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு வாங்க
அன்புள்ள ஜெ சார்,
நலம், வேண்டுவதும் அதுவே! என்னுடைய முந்தைய கடிதத்திற்கான பதிலையும் அதில் தாங்கள் கொடுத்திருந்த விளக்கமும் எனக்கு மிகப்பெரிய திறப்பாக இருந்தது. உங்கள் கடிதத்தை ஒரு reference ஆக எடுத்து வைத்துள்ளேன்.தொடக்கநிலை வாசகர்களிடம் உரையாடி என்னை போன்றோரின் புரிதலை மேம்படுத்துவதற்கு நன்றி.
தொடந்து உங்களின் படைப்புகளை வாசிக்க முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது வாசித்து முடித்திருப்பது ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு. பெரும்பான்மையான பக்கங்களை சிரித்துக்கொண்டே தான் வாசித்தேன். அவ்வளவு அழகான சித்தரிப்பு. இரண்டு பெண் குழந்தைகளை சென்ற வருடம் ஈன்ற நாங்கள் இப்பொழுதான் தாங்கள் விவரித்துள்ள கட்டங்களை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதில் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.
குழந்தை பிறந்த நாள் முதல் அனைவரும் குழந்தையின் புறவயமான (superficial details – யாரை போல் உள்ளனர், என்ன நிறம், எடை) தகவல்களை மட்டுமே தெரிந்துகொள்ள ஆர்வமாயிருந்தார்கள், அதிலும் அதீத ஆர்வம் கொண்டது புகைப்படத்தில் மட்டும் தான். குழந்தையின் சிந்தனை மற்றும் அவர்களின் மொழி, அறிவுத்திறன் போன்ற வேறு எந்த வளர்ச்சியிலும் யாருக்கும் ஆர்வம் இல்லை. மனைவியின் தொடர் தூண்டுதலின் பேரில் நான் மேலே இணைத்துள்ள குழந்தையின் வளர்ச்சிகளை ஆவணப்படுத்தும் readymade notebook ஒன்றை வாங்கி வந்து, அதன் அமைப்பில் சற்றும் ஆர்வமில்லாமல் இருந்தேன். இப்பின்புலத்தில் இருந்து கொண்டுதான் நான் உங்களின் புத்தகத்தை வாசித்தேன், ஒரு குழந்தையின் வளர்ச்சியை இவ்வளவு அழகாக மொழியில்படைத்திருக்கிறீர்கள். அதிலும் ஆரம்ப கால ஒற்றை எழுத்து உச்சரிப்பு முதல், அவர்களின் சிந்தனை படிநிலைகளாக மாற்றம் பெரும் அழகைகாட்டிருக்கீறீர்கள். உங்களை பற்றிய விவரணைகள் third person ‘ல் இருப்பது இன்னும் சுவாரஸ்யம். இந்தப் புத்தகத்தில் இருப்பது போல அத்தனை அழகான நொடிகளையும் நாங்களும் கடக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.
வாழ்வில் நடக்கும் அனைத்து நல்ல தருணங்களையும், நிகழ்வுகள், மற்றும் உணர்வுகளையும் கைபேசியில் வெறும் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டு வாழும் இன்றைய வாழ்க்கை சூழலில், மொழி வடிவில் குழந்தையின் இயல்பான வளர்ச்சி தருணங்களை இத்துணை சிறப்பாக அத்தியாயங்களாக ஒரு framework pola படைத்திருப்பது நிறைவை அளிக்கிறது.
இப்புத்தகத்தை அழகிய வடிவமைப்புடனும், அருமையான வரைபடங்களுடனும் கொடுத்திருக்கும் தன்னறம் நூல்வெளிக்கு பாராட்டுக்கள்.
நன்றி சார்,
விவேக்.
ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

