Jeyamohan's Blog, page 966

June 17, 2021

விருதுகள்- கடிதங்கள்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் இலக்கிய விருதுகளை ஏற்பது விருதுகள்,விடுபடல்கள் – கடிதம் விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்

அன்புள்ள ஜெ,

இலக்கிய விருதுகள் பற்றி எழுதியிருந்தீர்கள். அதையொட்டி வந்த விவாதங்கள், காழ்ப்புகள், கசப்புகள் எல்லாவற்றையும் வாசித்தேன். உங்களைப் பற்றியோ தமிழிலக்கியம் பற்றியோ ஒன்றுமே தெரியாத ஒரு கும்பல் நீங்கள் விருதுக்காக துண்டுபோடுவதாகவும், விளம்பரம் தேடுவதாகவும், விவாதம் கிளப்பி குளிர்காய்வதாகவும் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்தது. அற்பர்கள். வாசிக்கையில் குமட்டல் எழுப்பும் அற்பத்தனம். ஆனால் இவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிரான போராட்டமாகவே நவீனத் தமிழிலக்கியத்தின் சென்ற நூறாண்டுக்கால வரலாற்றைச் சொல்லமுடியும்.

நீங்கள் எழுதவந்த காலம் முதல் நான் தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். நம்மிடையே ஒருகாலத்தில் கடிதப்போக்குவரத்தும் இருந்துள்ளது. 92ல் கோவி மணிசேகரன் சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது அவ்விருதை கண்டிக்கவேண்டும் என்று கோரி எழுதிய கடிதம் எனக்கும் வந்தது. அன்று இதழ்கள் இல்லாததனால் கடிதமாகவே அந்த இயக்கத்தை முன்னெடுத்தீர்கள்.

சுந்தர ராமசாமி அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது எழுதிய கடுமையான கட்டுரையும் [போலிமுகங்கள்] இப்படித்தான் அன்றைய சில்லறைகளால் வசைபாடப்பட்டது. பொறாமை என்றும் காழ்ப்பு என்றும் சொன்னார்கள். ஆனால் அந்த ஒரு கட்டுரைதான் இன்றுவரை தமிழின் புகழ்பெற்ற வணிகநட்சத்திரங்கள் ஞானபீடம் பெற்று நம் முகத்தை இந்திய அளவில் சீரழிக்காமலிருக்க தடையாக நின்றுகொண்டிருக்கிறது

நீங்கள் இருபத்தைந்து ஆண்டுகளாக அத்தனை விருதுகளுக்கும் எதிர்வினை ஆற்றியிருக்கிறீர்கள். அதற்கு ஓர் இலக்கிய அளவுகோல் வைத்திருக்கிறீர்கள். தகுதியான போது பாராட்டுவதும் அல்லாதபோது கடுமையாக விமர்சிப்பதும் உங்கள் வழக்கமாக இருக்கிறது. கடைசியாக வைரமுத்து சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது கண்டித்திருந்தீர்கள். அதற்குமுன் தகுதியற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டபோது இயல்விருதை மிகக்கடுமையாக கண்டித்திருந்தீர்கள்.

சென்ற இருபதாண்டுகளில் சாகித்ய அக்காதமி மட்டுமல்ல, தமிழில் அளிக்கப்பட்டுவரும் பொதுவான எல்லா விருதுகளிலும் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு சாதாரண எழுத்தாளருக்கு, அவர் எந்த அளவுக்குப் பெரிய வணிக நட்சத்திரமாக இருந்தாலும், இன்று விருதுகொடுக்க தயங்குகிறார்கள். பெரும்பாலும் தகுதியானவர்களுக்கே விருதுகள் செல்கின்றன. ஏனென்றால் இன்று கடுமையான வாசகக் கண்காணிப்பு உள்ளது என அனைவருக்கும் தெரியும்.

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு எவருக்கெல்லாம் விருதுகள் சென்றன என்று எனக்கெல்லாம் தெரியும். அந்நிலை இப்படி மாறுமென நான் எதிர்பார்த்திருக்கவுமில்லை. அந்த மாற்றத்தில் உங்கள் பங்களிப்பு மிக முக்கியமானது. வசைகள் அவமதிப்புகளை தாங்கிக்கொண்டு, கடமையைச் செய்யும் அர்ப்பணிப்போடு கால்நூற்றாண்டாக சில அடிப்படை விழுமியங்களை முன்வைத்தபடியே இருந்ததன் விளைவு இது.

நீங்கள் உருவாக்கிக்கொண்டிருப்பது ஓர் இலக்கிய இயக்கம். இன்றைக்கு நான் இலக்கியவாசிப்பில் இருந்து நீண்டநாட்கள் ஒதுங்கியிருந்து மீண்டு வந்தபோது இந்த மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆர்.ராகவன் [சிற்பன்]

 

வணக்கம் ஜெ சார்,

தமிழக அரசின் விருதுகள் கட்டுரை, முகத்திலடித்தாற் போல, எழுத்துலகிற்கான சரியான மரியாதை பற்றி தெளிவாக எடுத்துரைத்தது.

எங்களைப் போன்ற வாசகர்களின் வாழ்க்கை முறை,  சரியான வாசிப்பின் மூலமே பண்படுகிறது, வளரும் தலைமுறைக்கும் கடத்த முடிகிறது.

எழுத்துக் கூட்டி வாசிக்க கற்றுக் கொண்ட திலிருந்து, கதைகளின் மேல் ஆர்வம் கொண்டு, இன்றுவரை வாசிப்பு, வாழ்க்கையின் பல பரிமாணங்களை காட்டிச் சென்றுள்ளது.

நீங்கள் பரிந்துரைத்த சிறந்த எழுத்தாளர்களின் பட்டியலில் மிகச் சிலருடைய படைப்புகளில் ஒரு சில வற்றை மட்டுமே வாசித்தது, குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது,.பல குப்பைகளை வாசிக்காமல், வைரம் தென்படுவதில்லை. சரியான வாசிப்பு, சரியான எழுத்தாளர் களுக்கான மரியாதை.

சரி, என்னை எங்கே வைத்துக்கொள்வேன்? ஏற்கனவே சொன்னதுதான். எந்த அரசுக்கும் என் பணிவை, முழுதேற்பை அளிக்க முடியாது. குடிமகனுக்குரிய உரிமைகளுக்கு அப்பால் அரசுகள் அளிக்கும் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. எந்த மேடையிலும் எவர் முன்பும் கொஞ்சம் தணிந்து, சிலரில் ஒருவனாக நிற்க முடியாது. கொஞ்சம் மோசமான ஆணவம்தான். ஒன்றும் செய்வதற்கில்லை.

உங்களின் அறச் சீற்றம் நம் வருங்கால சந்ததியினருக்கு, ஆகச் சிறந்த பண்பாட்டு வரமாகும். இன்றைய பள்ளி பாடத் திட்டத்தில்(தமிழ்) உள்ள பாடங்களைக் காணும்பொழுது மிகவும் சோர்வளிக்கிறது. சமீப(சம) கால எழுத்துலக படைப்புகள், எழுத்தாளர்கள் பற்றி எந்தவொரு குறிப்புகளுமில்லாமல், வளரும் தலைமுறை சரியான வாசிப்பனுவத்தைப் பெற முடியுமால் போக நேரிடுகிறது.

உங்களின் அறச் சீற்றம் தாண்டி, நம் பண்பாட்டு வரலாறு, வாசிப்பு, விழிப்புணர்வான வாழ்க்கை முறை ஆகியவற்றை நம் தமிழ்ச் சந்ததியினருக்கு கடத்த வேண்டிய மிகப் பெரிய இடத்தில் இருக்கிறீர்கள் சார். அது நிச்சயமாக நடக்கும் காலம் வெகு அருகே இருக்கிறது.

நன்றி

ராஜி மோகன்ராம்.

 

அன்புள்ள ஜெ

பொட்டில் அடித்தாற்போல் சொல்லியுள்ளீர்கள். எழுத்து என்பது வரம் அல்ல…. தவம்… இது 20 ஆண்டுகளுக்கு முன் குமுதம் தீபாவளி சிறப்பு அதல் உங்கள் பேட்டிக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு. அந்த புத்தகத்தை கூட நான் இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக நினைவு….

அந்த தவத்தை இன்னும் நீங்கள் தொடர்கிறார்கள்…. விருதுகள் என்னும் மேனகை ரம்பை அசைந்து கொடுக்காமல், முனிவன் போல் தன்னை நம்பி தன்னம்பிக்கை துணைகொண்டு செயல்படும் உங்களின் தளம்…. நிச்சயம் உங்களுக்கு பெயரைத்தான் கொடுக்கும்….

உங்களின் தார்மீக முடிவு கோபம் இலக்கியம் சார்ந்தது…. வரலாறு சார்ந்ததல்ல…. வரலாறு என்பது யாரோ எழுதியது அல்ல தனி ஒருவனால் படைப்பது. அதை காலம் நிகழ்த்தும் உங்களின் கருத்துக்கு ராயல் சல்யூட்…. நன்றி ஜெ.மோ.. சார்….

இரா வேல்முருகன்

சேலம்.

விருது – கடிதங்கள் வைரமுத்துவுக்கு ஞானபீடமா? வைரமுத்து – எத்தனை பாவனைகள்! சாகித்ய அகாடமி மீண்டும்

சாகித்ய அகாடமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்

சாகித்ய அகாதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்

இயல் விருது – ஒரு பதில்

‘இயல்’ விருதின் மரணம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2021 11:31

பழையநூல்கடை

வணக்கம் ஜெ

இது பழைய நூல்கள் விற்கும் இணையதளம். கடந்த ஆறு மாதங்களாக அவ்வப்போது சில நூல்கள் வாங்கிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம், கட்டுரைகள், அபுனைவு, வரலாறு, தமிழ், பிறமொழி, உலக இலக்கியம், ஆங்கிலம் என பல்வேறு பிரிவுகளில் முதன்மையான நூல்கள் கிடைக்கின்றன. வாங்கவும், விற்கவும் அணுகலாம். வாசகர்களுக்குப் பயனளிக்கும்.

விவேக் ராஜ்

https://usedtamilbooks.com/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2021 11:31

நீர் எனும் வாழ்க்கைநாடகம்- தேவதாஸ்

பன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு விசாரணை பன்னலால் பட்டேல்

இந்நாவல் மான்வி நீ பவாயி என்ற பெயரில் குஜராத்தியில் திரு பன்னாலால் பட்டேல் அவர்களால் 1947ல் எழுதப்பட்டது. 1973ல் துளசி ஜெயராமன் அவர்களால்

மேற்கண்ட பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்ட் மூலமாக வெளியிடப்பட்டது. அசதாரணமான சகிப்புத்தன்மையின் உச்சம் என்றும் இதனைக் கூறலாம்.

கிராமிய விவசாயப் பின்புலத்தைக் களனாகக் கொண்ட யதார்த்தவாத நவீனத்துவ வரலாற்று நாவல் எனலாம். நாவல் இன்றைய குஜராத்தின் சாபர்கந்தா மாவட்டத்தின் நாட்டார் வழக்கில் மூல மொழியில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. நாவலின் மிக முக்கிய நிகழ்வு 56ம் வருடப் பஞ்சம் என குஜராத்தி மக்களால் பெரும்பாலாக அறியப்பட்ட பொ.யு 1899-1900 வருடப் பஞ்சம்.

நாவல் நிகழும் காலம் 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. நாவல் நிகழும் களன் அன்றைய குஜராத்தின் மாளவ எல்லையோரம் அமைந்த கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதி. இன்றைய ராஜஸ்தானின் தென்கிழக்கு, குஜராத்தின் வடகிழக்கு மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மேற்கு எல்லையில் அமைந்த சிறு குன்றுகளும், சமவெளி நிலமும், சிற்றாறுகளும் உள்ளடக்கிய விவசாயநிலங்களும்,,கிராமங்களும் மற்றும் டேகடியா என்று அன்று அழைக்கப்பட்ட பேரூருமே இக்கதை நிகழும் களம்.

இந்நூலானது 1947ல் பன்னாலால் படேல் மக்காச் சோள வயல்கள் சூழ்ந்த தன் பூர்விக கிராமமான மாண்ட்லியில் வசித்தபோது எழுதியாகத் தெரிகிறது. நாவல் துவங்குவது கூட கோதுமை, சோளக் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி அசையும் பனிக்காற்றுடன் கூடிய மார்கழி மாதத்து இரவில் தான். இவ்வயலின்  வரப்பு அருகே நெருப்புக் கணப்பு உண்டாக்கி பின்னிரவில்  குளிர் காய்ந்த படி வயலைக் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காலு படேல் முடமான கையுடன் உக்கா பிடித்தபடி தன் வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறார்.

இக்கதையானது ஆசிரியரின் முன்னோர்களது அல்லது அவர்களால் அறியப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையாக இருக்கலாம். 1912 ல் பிறந்த கதாசிரியர் தன்னுடைய 35 வது வயதில் சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை உணர்வுபூர்வமாக தன் எழுத்தில் கொணர்ந்துள்ளார். 1900 ங்களில் புன்செய் விவசாயம் செய்யும்  இந்திய கிராமம் குறித்த ஆவணமாகவே இக்கதையைப் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் எந்த ஒரு ஊரும் இக்கதை பேசும் கிராமங்களளைப் போன்றுதான் அன்று இருந்திருக்கும். இக்கிராமங்களின்  விவசாயம் பெரும்பாலும் பருவ மழையை நம்பியே இருந்தது. குறிப்பாக தென்மேற்குப் பருவமழை. ஆடி மாதப் பருவ மழையை நம்பியே விதை விதைக்கும் நிகழ்வு நடக்கின்றது. அது ஒரு திருவிழா போன்று கிராமத்திலுள்ள அனைவராலும் கொண்டாடப் படுகிறது.

கிராம மக்கள் அனைவரின் முகங்களும் அன்று மலர்ந்து காணப்படுகிறது. கிராமத்தின் அருகில் ஓடும் சிறுநதி குடிநீர்க்கும், வாழ்வியல் தேவைகளுக்கும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்படுகிறது. பெண்களுக்கு தண்ணீர் சுமப்பதே அன்றாட முக்கியப் பணி. நதிநீர்ப் பாசனமோ, கிணற்றுப் பாசனமோ அன்றைய காலகட்டத்தில் அப்பகுதிகளில் இல்லை. வசதியானவர்கள் பயணங்களுக்கு குதிரை வைத்துள்ளனர். விவசாய வேலைகள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களே செய்கிறார்கள். வீடுகளுக்கு ஓடு மாற்றுதல், தட்டிகளாலான சுவர்களை அமைத்தல் போன்ற வேலைகளை அவர்களே செய்து தனனிறைவான வாழ்க்கை வாழ்கின்றனர்.

அருகிலுள்ள மலைக் குன்றுகளில் வாழும் குறவர்கள் எதுவும் பயிரிடுவதில்லை. தானாக காடுகளில் விளையும் தானியங்களையும், காய், கனி, கிழங்குகளையும் உண்டும், சிறு விலங்குகளை வேட்டையாடி உண்டும் தங்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். மலைக்கிராமத் தலைவரின் அனுமதியுடன் குறவச் சிறுவர்கள் ஓரிருவர் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்கிறார்கள்.

இம்மாதிரியான சூழ்நிலை நிலவும் காலத்தில்,  பலசாலியும், பண்பாளரும், வறுமையில் வாடுபவருமான வாலா படேலின் அந்திம வயதில் ஒற்றை மகனாகப் பிறக்கிறார் காலு. தன்னுடைய விவசாயப் பணிகளுக்கு தோள் கொடுக்க வந்த வரமாக நினைத்து சிறுபிள்ளையின் பிறப்பை கொண்டாடுகிறது குடும்பம். வாலா பட்டேலின் தம்பி பரமா கிராமத் தலைவர். அவருடைய மனைவி மாலி காழ்ப்பும், பொறாமையும், சுயநலமும் ஒருங்கே கொண்ட பெண்மணி. இவர்களுக்கு வயது வந்த இரு மகன்கள் ரணசோட்  மற்றும் நாநா .

காலுவை கரியன் என்று கூறி காழ்ப்பைக் கொட்டுகிறாள் அவன் சிற்றன்னை. பரமா ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்கிறார். காலுவின் பிள்ளைப் பிராயம் வயல்வெளிகளில் தன் வயதொத்த பிள்ளைகளோடு விளையாடுவதிலும் தந்தையும் மற்றவரும் செய்யும் பணிகளைப் பார்ப்பதுமாக கழிகிறது. அக்கால வழக்கப்படி பிள்ளைக்கான பெண்ணைத் தேடி வாலாவின்  அண்ணி பூலி, வசதியான காலா பட்டேலின் அழகான மகளான ராஜியை காலுவிற்கு பேசி முடிக்கிறார். குழந்தைகளின் திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடக்கிறது. சித்தி மாலி பொறாமைத் தீயில் எரிந்தாலும், கிராமத்தினரால் பிசாசுக் கிழவி என்றழைக்கப்படும் பூலியை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.

கிராம மக்களின் செல்வ நிலை அவர்களது குடும்பத்திலுள்ள கால்நடைகளின் எண்ணிக்கை, அவர்களது வீட்டில் பயன்படுத்தும் நெய் மற்றும் வெண்ணையின் அளவு மற்றும் உண்ணும் தானியம் இவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. கோதுமை உண்பவர்கள் வசதியானவர்களாாகவும், சோளம் உண்பவர்கள் அடுத்த நிலையிலும் திணை உண்பவர்கள் வறியவர்களாகவும் அறியப் படுகின்றனர். செப்புக்குடம் வைத்திருப்பது உயரிய அந்தஸ்தாக கருதப்படுகிறது. மலை கிராமத் தலைவரின் வீட்டில் ஒரு செப்புக் குடமும், பரமாவின் வீட்டில் இரு செப்புத் தோண்டிகளும் உள்ளன.

காலுவின் நான்காவது வயதில் அவரின் தந்தை காலுவின் கையைப் பிடித்து அவனைத் தன் தம்பி பரமாவிடம் ஒப்படைத்துவிட்டு மறைகிறார். அதைத் தொடர்ந்து ராஜியின் தந்தை காலாவும் மறைகிறார். பரமா மனைவியை மீறி காலுவிற்கு உதவ முடியாததால் அவன் அன்னை ரூபியின் அரவணைப்பில் வளர்கிறான். காலு எருதுகளைப் பார்த்துக்கொள்ளவும், ஏர் உழவும் கற்று கொள்ளும் ஏழு வயதில் விதை விதைக்க வேண்டிய ஆடித் திருவிழா வருகிறது. ஊரின் அனைத்து நிலங்களிலும் விதை விதைப்பு நடக்கிறது. காலுவின் நிலத்தில் விதை விதைக்க ஆட்கள் யாருமில்லை. மாலி இகழ்ச்சியாக வசை மழை பொழிகிறாள். இதனால் மனமுடைந்த காலுவின் தாய் ரூபி காலுவைக் கொண்டு ஏர் உழவும், விதைக்கவும் முடிவு செய்து, எருதுகளையும், காலுவையும் கூட்டிக்கொண்டு விதைக் கூடையுடன் நிலத்திற்கு செல்கிறாள்.

அக்காலத்தில் பெண்கள் ஏர் உழுதால் பஞ்சம் வரும் என்ற நம்பிக்கை காரணமாக ஊரார் ரூபியைத் தாக்க முனைந்தனர். ரூபி தான் உழவில்லை காலு தான் உழுதான் எனக் கூறி தப்புகிறாள். சுற்றியுள்ள கிராமத்தினரின் பகைக்கு அஞ்சி பிராயசித்தமாக ரூபியை நிலத்திலிட்டு ஏர் கொண்டு உழ முற்படும் போது பெருமழை பெய்து ரூபி காப்பாற்றப்படுகிறாள். இவ்வத்தியாயம் அற்புதமான தருணங்களால் நாடகீயமாக மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். ரூபியின் மதிப்பு இதனால் கிராமப் பெண்களிடம் உயரும்.

பின்னர் மாலி குடும்பத்தின் சூழ்ச்சியால் காலு ராஜியின் திருமணம் தடைப்பட்டு விதி வசத்தால் ராஜி  பக்கத்து கிராமத்தில் காலுவின் வருங்கால மாமனாரின் தம்பியை மணக்க, காலு பலியை மணப்பான். இக்காலத்தில் காலு நல்ல பலசாலியாாகவும், கடின உழைப்பாளியாகவும் மாறுவான். இரு வீட்டு விவசாய வேலைகளையும் தனி ஒருவனாக முடிக்கும் திறன் பெற்றிருப்பான். மேலும் அவனுக்கான ஓர் நண்பர், உறவினர் கூட்டத்தையும் உருவாக்கி ஊரின் முக்கிய மனிதாக மாறுகிறான்.

காலு, ராஜிக்கு இடையேயான காதலும், உறவும் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கும். களங்கமில்லா, கண்ணியம் மீறா தீராக் காதல். அவர்களுக்கு இடையே உடல் ரீதியான தீண்டல் இல்லாததாலேயே தீராக் காதல் இருந்ததா? என்னும் கேள்வி ஒவ்வொரு வாசகனின் மனதில் எழும் வண்ணம் காலுவின் பார்வையில் நாவலை எழுதிச் செல்கிறார் கதாசிரியர். ஆணின் ஆணவத்தையும் (ego), நுண்மையான அகத் தருணங்களையும் படிப்பவர் தானே உணரும் வகையில் அற்புதமாக எழுதியுள்ளார். காதல், பொறுமை, தியாகம், சகிப்புத்தன்மை, பேரன்பு கொண்ட தாய்மையின் மொத்த உருவமாகவே ராஜி கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஜெயமோகன் மொழியில் சொல்வதானால் சீதா தேவியின் மறு வடிவம்.

வளமான காலத்தை தொடர்ந்து, பருவமழை பொய்க்கத் தொடங்குகிறது. ஏழைகள் தங்கள் சேமிப்பில் உள்ள பொருட்களையும், கால்நடைகளையும் விற்று ஜீவிக்க முனைகின்றனர். பின்னர் வீட்டிலுள்ள அத்தியாவசியப் பொருட்களையும் விற்று உணவு தானியங்களை வாங்குகிறார்கள். பஞ்ச காலத்தை முதலில் உணர்பவர்கள் மலைக்குடிகளே. அவர்களிடம் சேமிப்பு ஏதுமில்லாத காரணத்தால் குன்றுகளை விட்டு இறங்கி வந்து கிராமங்களை கொள்ளையிடுகின்றனர். கிராம மக்கள் ஊர்க்காவல் அமைத்து தங்கள் உடைமைகளையும், கால்நடைகளையும் காத்துக் கொள்ள முயலுகிறார்கள். நாவலின் நடையானது ஆரம்ப அத்தியாயங்களில் கோடைகால வறண்ட நதியின் நீரொழுக்கைப் போல் நிதானமாக ஆரம்பித்து பின் மெல்ல வேகம் பெற்று இறுதியில் மலை விட்டிறங்கும் காட்டாற்று வெள்ளம் போல் அதிவிரைவான சம்பவங்களால் அடித்துச் செல்லப்படுகிறது.

காவல் காக்கும் பணியின் போது காலு மலைக் குறவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட தனது எருமை மாடுகளை மீட்கச் செல்லும்போது மரத்தின் மீதமர்ந்து அவன் காணும் காட்சி ஒரு கொடூர அனுபவம். பசியின் கோர முகத்தை அவன் அங்கு காணுகிறான். ஏன் இந்த மனிதப்பிறப்பையும், பசியையும் படைத்தாய்? என கடவுளை நொந்து கொள்வான். அதன்பின் அவருடைய மனம் மாறுகிறது. குறவர்கள் கொள்ளையடிக்க வரும் போது தன் உடைமைகளையும், பொருட்களையும் காக்க அவர் பெரும்பாலும் முயற்சிப்பதில்லை.

அப்படிப்பட்ட ஒரு கொள்ளையின் போது சுயநலமே உருவான மாலி கிழவி தன் குடும்ப நகைகள் அனைத்தையும் அனைவரிடமிருந்தும் பிடுங்கி தானே மூட்டை கட்டி பாதுகாக்க முனைந்து கட்டிய துணி முதற்கொண்டு அனைத்தும் இழந்து உயிரையும் விடுவாள். அவளுடைய சிதையேற்றம் பரிதாபமான அதே சமயம் உணர்வு பூர்வமான நிகழ்வு. இடையில் இரு காவல்காரர்களுடன் கிராமம் வழியே செல்லும் தானிய வண்டிகளை கொள்ளையிட காலு முடிவெடுத்து முதிய காவல்காரரான காபூலிவாலாவுடன் மோதும் நிகழ்வு ஒரு சாகசச் செயல். குண்டடிபட்ட இடது கையுடன் முதிய வீரரை வீழ்த்தி தானியங்களை கிராம மக்களுக்கு பங்கிட்டு ஒரு மாதம் பசிப்பிணியை நீக்குவார். காபூலிவாலாவுக்கும், காலுவுக்கும் அப்போது முகிழ்க்கும் தந்தை மகன் உறவு அருமையானது. காபூலிவாலா தனது கடமையை நிறைவேற்ற தவறியதால் முதலாளியின் முகத்தில் முழிக்க மறுத்து கிராமத்தை விட்டு வெளியேறும் தருணம் நெஞ்சைத் தொடக்கூடியது.

காலு வாழ்வின் இறுதியாக ராஜியை சந்திக்க நீண்ட வாள்,அம்பறாத் துணி மற்றும் அம்புகளுடனும் பக்கத்து கிராமத்திற்குச் செல்வார். மெலிந்த உடலுடன் வீட்டின் முன் அமர்ந்திருக்கும் ராஜியை அவரும், புதிய தோற்றத்திலுள்ள காலுவை ராஜியும் அருகில் வரும் வரை அடையாளம் காணமாட்டார்கள். இசசந்திப்பு நெகிழ்ச்சியானதாகவும், உரையாடல்கள் பஞ்சத்தின்  கொடுமையை சிறப்பாகக் கூறுவதாகவும் அமையும். தானியக் குதிர்களை அம்பு விட்டு அளந்து அதன் வெறுமையை உணர்வது, நெருப்பு எரியாத அடுப்பங்கரையைப் பார்ப்பது என வீட்டின் வறுமையை காட்சிகள் மூலம் உணர்த்தியிருப்பார். வீட்டின் முன்புறம் உள்ள மயானத்தில் தினந்தோறும் எரியும் சிதைகளைக் கண்டு நம்பிக்கை இழந்து விரக்தியில் சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் வாழ்வை காண்பிப்பது என கொடுங்காட்சிகளை விவரித்திருப்பார்.

கிராமங்கள் கைவிடப்பட்டு வசதியானவர்கள் உட்பட அனைவரும் பஞ்சம் பிழைக்க டேகடியா கிராமம் சென்றனர். டேகாடியாவில் பன்னாலால் பட்டேல் காட்டும் பஞ்சத்தின் காட்சிகள் மனதை உலுக்கக் கூடியவை. ராஜி, காலுவின் குடும்பங்களும் ஒன்றிணைந்து டேகாடியா சென்றன. பசி கிராம மக்களின் விழுமியங்களையும், நீதி உணர்ச்சியையும் வீழ்த்தியது. மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தவம், தானம், முயற்சி, தாளாண்மை, காமம் ஆகிய குண விழுமியங்களை கிராம மக்கள் இழந்தனர். பதிபக்தி பேசிய பெண்கள் மானம் இழந்து வாழ்த் துணிந்தனர். குலபபெருமை பேசியவர்கள் அவர்கள் பார்வையில் தாழ்ந்தகுலத்தாருடன் வாழத் தலைப்பட்டனர்.

காலு ஒரு கவளச் சோற்றுக்காக முடமான கையுடன் நாள் முழுவதும் பாத்திரம் விளக்கினார். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறையே சிறிதளவு உணவு கிடைத்தது. பலர் வெள்ளையர் அமைக்கும் இரயில் தண்டவாளப் பணிக்கு செல்ல முயன்று பாதி வழியில் பசியால் உயிரிழந்தனர். முதியவர்கள் பெரும்பாலும் பசியாலும், நோயாலும் இறந்தனர். ரண சோட்,, பூலியின் மகன் சங்கர் முதலான காலுவின் உறவினர்களும், ராஜியின் கணவரும், மைத்துனரும் பசியால் உயிரிழந்தனர். காலுவின் மனைவி பலி, உறவினர் ருக்கி முதலான பெண்கள் மானமிழந்து வாழத் தீர்மானித்தனர். நாநாவின் மனைவி கோடி வேறு மதத்தவருடன் வாழச் சென்றாள்.

இச்சூழ்நிலையிலும் ராஜி காலுவிற்காகவும், மைத்துனரின் குழந்தைகளுக்காகவும் பசியை சகித்து வாழ முனைந்தாள். இறந்தவர்கள் பாக்கியவான்களாகவும், உயிருடன் வாழ்பவர்கள் பாவப்பட்டவர்களாகவும் கருதப்பட்டனர். டேகாடியா கிராமத்தில் தானியங்களை பஞ்சம் பிழைக்க வந்த மக்களிடமிருந்து பாதுகாக்க அரசாங்கம் சிப்பாய்களையும், துப்பாக்கிகளையும் அனுப்பும்.  அக்காலத்தில் அப்பகுதியில் பிரிட்டீஷ் அரசின் நேரடி ஆட்சி நடந்ததா? அல்லது அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட ஜுனாகட் நவாப் போன்றவர்களின் முடியாட்சி நடந்ததா எனும் விவரம் நாவலில் இல்லை. அதைக் கண்ட காலு படேலின் மனக்குமுறல் வழியாக அரசாங்கம் மீதான விமர்சனத்தை வைக்கிறார் நாவலாசிரியர்.

‘அடேய்! கொலைகாரப் பதர்களா, இங்கே தெருவெங்கும் மரணம் நடமாடுகிறது. நீங்கள் மேலும் மரணம் விளைவிக்கும் ஆயுதங்களை இறக்குகிறீர்களே. நீங்கள் இறக்க வேண்டியது மனிதர்களை வாழ வைக்கும் தானிய மூட்டைகளை அல்லவா? உங்கள் திறனை சாவடிப்பதற்கு பதில் வாழ்விப்பதில் காட்டினால் என்ன? முப்பத்தாறு கலைகளையும் பயன்படுத்தி மனிதனைக் கொல்ல முயலுகிறீர்களே? அவற்றைக் கொண்டு உயிர்களை வாழ்விப்பது தானே? உங்களை காக்க வந்த தேவர்கள் என நினைத்தேன். நீங்கள் தேவர் வடிவில் உயிர் குடிக்க வந்த அரக்கர் ‘

மேலும் நிலத்தில் மரணம்தான் மழையனப் பெய்து கொண்டிருந்தது. கானகத்தில், வயல் வெளிகளில், கடைத்தெருக்களில், பாதைகளில் எங்கும் பிணக்குவியல்கள். யார் உடலைப் புதைப்பது? யார் உடலை எரிப்பது? யாருக்கான ஈமக்கிரியைகளை யார் செய்வது? இறந்த உறவினர்களை நினைத்து உயிருடன் இருந்தவர்கள் ஆறுதல் அடைந்தனர். உறவினர்களைப் பார்க்காதிருப்பது வருத்தத்தை குறைத்தது என்பது போன்ற வர்ணனைகள் பஞ்சத்தின் கொடுமையை நம் கண் முன்னால் காட்டுகிறது.

உணவுக்கு வழியில்லாத சூழலில் காலு தன் அக வலிமையை இழந்து மனச்சோர்வுடன் சொல்வார், ‘தொல்லையிலும் மிகப் பெரிய தொல்லை பசி’. ராஜி பதிலளிப்பாள் இல்லை அதனினும் கொடியது கவலை. அது மனிதனின் நம்பிக்கையை அழித்து உருக வைத்து விடும் என்று. ஒரு பெரு வியாபாரி தானியங்களை தானம் அளிப்பதாக அறிந்து தானம் வாங்கச் செல்லும் ராஜிக்கும், காலுவிற்கும் இடையேயான உரையாடல் இன்னுமொரு உன்னதக் காட்சி.

தானம் வாங்க வரிசையில் நிற்பவர்கள் ஊரின் பெரும் செல்வந்தர்கள் என அறியப்பட்டவர்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை அந்தணர்களுக்கும், வறியவர்களுக்கும் இல்லை என சொல்லாது வாரி வாரி தானம் வழங்கியவர்கள். நாநா போன்ற ஊர்த்தலைவர் குடும்பத்தினர் மற்றும் வாழ்வின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த எண்ணற்ற நபர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது வரிசையில் நின்று கொண்டிருக்கும் காலு உடன் நிற்கும் ராஜியிடம் சொல்வார் ‘பசியை விடக் கொடியது பிச்சை ஏற்பது. பசி மனிதனின் தசையையும், எலும்பையுமே உருக்கும். ஆனால் பிச்சை ஏற்பதோ கெளரவத்தையும், ஆன்மாவையும் உருக்குகிறது’ எனக் கூறி வரிசையில் இருந்து விலகிச் செல்வார்.

அப்போது வரிசையை சீர்படுத்த நின்ற சிப்பாய் கேட்பான் ‘ ஏ முடமே எங்கே செல்கிறாய்? என அதற்கு காலு சொல்வார் ‘எனக்கு வேண்டாம்’ என அதைத் தொடர்ந்து சிப்பாய் கேட்பான் ‘ நீ  என்ன பெரிய சேட்டா ? எல்லா சேட்களும் இங்கு வரிசையில் நிற்கவில்லையா? என. காலு பதில் சொல்வார் ‘சேட்டா இருந்தா வரிசையில் நின்றிருப்பேன். நான் விவசாயி. இந்த தானியங்களை விளைவித்தவன், ஏற்பது எனக்கு இகழ்ச்சி’ இச்சமயத்தில் தானமளிப்பவர் தலையிட்டு ‘ நீ இனாமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம். எனக்கான சிறு பணியைச் செய்து விட்டு கூலியாகப் பெற்று செல்’ என்பார். இந்நிகழ்ச்சி

‘ கரப்பார்க்கு யாங்கொளிக்குங் கொள்ளோ இரப்பார்

சொல்லாடப் போகும் உயிர்’

என்ற வள்ளுவரின் கடைசி நான்கு சொற்களுக்கு உயிரூட்டுவதாக அமைந்துள்ளது.

காலுவும், ராஜியும் குழந்தைகளுடன் சொந்த கிராமம் திரும்புவர். ராஜியும், காலுவும் அவருடைய சொந்த நிலத்தில் சிறுவர்களாக விளையாடிய ஆல மரத்தினடியில் காலு பசியால் தனது கடைசி உயிர்ச் சக்தியை இழந்து மயங்கி வீழ்வார். அருகிலிருந்த ராஜி தன் வறுமுலை திறந்து அவரின் உயிர் மீட்பார். ராஜியின் உயிர் நீர் உதட்டில் பட்டவுடன் கண்திறக்கும் காலு காற்றில் மழையின் வாசத்தை உணர்வார். தூரத்தில் மழையின் வரவை அறிந்து எழுந்தமர்வார். விசும்பின் துளி வீழ்ந்தவுடன் எழுந்து நடக்க ஆரம்பிப்பார். ராஜி நினைப்பாள் இனி இந்த மனிதன் கால தூதரையும் காத்திருக்கச் சொல்வார் என. வான் நின்று பொழியும் அமுதத்துடன் கதை நிறைவடைகிறது.

பொறையுடைமையும், பெருங்கருணையும் கொண்ட  நில மகள்கள் இப்பாரத நிலமெங்கும் வாழ்ந்திருக்கிறாார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழ்வார்கள் அவர்களால் மானுடம் தழைக்கும் வெல்லும்.

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான் இன்றி அமையாது ஒழுக்கு.

தேவதாஸ்

 

பன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு நாடகம்- வேலு மலையன்

வாழ்க்கை ஒரு நாடகம் பிடிஎஃப்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2021 11:30

June 16, 2021

இலக்கியம்!!!

“என்னை இளைச்சிட்டே?

அப்பெண்டிக்ஸை வெட்டி வீசிட்டாங்க”

இலக்கியம் பற்றிய பழைய ஜோக். அக்கால விமர்சகர் ஒருவர் திருவனந்தபுரம் காலேஜில் பேசி முடித்ததும் ஒரு மாணவன் கேட்டான். “வளவள பேச்செல்லாம் வேண்டாம். இலக்கியத்தை எப்படி புரிந்துகொள்வது? அதைச் சொல்லுங்கள்”

விமர்சகர் சொன்னார். “இலக்கியத்தை புரிந்துகொள்கிறோமா?” மோவாயை வருடி மீண்டும் சொன்னார் “இலக்கியத்தை புரிந்துகொண்டவர்கள் உண்டா?” இன்னொரு வருடலுக்கும் பெருமூச்சுக்கும் பின் “புரிந்துகொள்ளத்தான் வேண்டுமா?”

மாணவன் சொன்னான். “புரிந்தது”

விமர்சகர் கேட்டார் “என்ன?”

“இலக்கியம்!”

அவ்வாறாகத்தான் யூனிவர்சிட்டி கல்லூரியில் இலக்கியம் பற்றிய தெளிவு உருவாகி நீண்டநாட்கள் நீடித்திருக்கிறது

”புத்தகம்கிறது மூளைக்கு உணவுன்னா இதிலே உப்பு புளி வெண்ணை எல்லாம் சேத்து தாளிச்சிருந்திருக்கணும்”

கேரளப் பல்கலைக் கழகங்கள் எப்போதுமே புரட்சிக்கனல் மூட்டப்பட்டவை. சமோவர் வைத்தால் டீ கொதிக்கும். புரபசர் எம்.கே.சானு ஒரு பல்கலையில் பேசும்போது ஒரு புரட்சி மாணவன் எழுந்து “இலக்கியத்தால் புரட்சிக்கு ஒன்றுமே செய்ய முடியாது” என்று கூச்சலிட்டான்

சானு பணிவாக “ஆமாம், ஆகவே புரட்சிக்கு எதிராகவும் ஒன்றும் செய்ய முடியாது. நாங்க எங்க பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துகிடறோமே?” என்றார். மாணவன் கருணை காட்டி வெளியே சென்றதாகக் கதை உண்டு.

”புனைவு ஏரியாவிலே இருந்து இலக்கியம் ஏரியாவுக்கு மாத்திட்டாங்கிறதனாலே அவன் ஒண்ணும் நம்மளவிட பெரிசா ஆயிடலை”

ஒரேநாளில் நான் இரண்டு எல்லைகளில் இருந்து தாக்கப்பட்டேன்.எங்கள் தமிழய்யா “இலக்கை இயம்புவதுதான் இலக்கியம்’ என்று எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அன்றே மலையாளம் முன்ஷி ராமச்சந்திரன் நாயர் என்னிடம் ‘ச ஹிதம் சொல்லப்படுவதே சாகித்யம். இனிமையாக இதமாகச் சொல்லப்படுவது அது” என்றார்.

நான் அவர்களிடமிருந்து கைமீறிப்போய் சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அவை இரண்டுமே இலக்கியமல்ல என்று கற்றுக்கொண்டேன். இலக்கியத்திற்கு இலக்கு இல்லை. அது இதமாக இருக்கவேண்டும் என்பதுமில்லை. அது பாட்டுக்கு இருக்கலாம்.

”ஆமா, அவன்தான் என்னைய புடிச்சு உள்ள இழுத்து வச்சிருந்த புக்கோட எழுத்தாளர்”

அந்த விடுதலையை அடைவதற்கு முன்பு நான் மரபுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். எதுகைமோனைக்கு பின் எஞ்சிய இடங்களை நிரப்புவதற்காக நாட்கணக்கில் தவம் செய்த பொன்னாட்கள். ஆனால் அதனால் ஒரு நன்மை உண்டு. மரபுக்கவிதை இயற்கையையும் பெண்களையும் அழகாக ஆக்கிவிடுகிறது. அப்படி நம் அகம் மாறியபின் புறம் அப்படி மாறாமலிருக்க முடியுமா என்ன?

என்னுடைய மரபுக்கவிதைகளை ரசிக்க சிலர் அன்றிருந்தனர். ஆசாரி நாணுக்குட்டன் “நல்லா எளுதுதாண்டே” என்று என்னை பாராட்டினார். “நம்ம நச்சத்திரம்மா குறிசொல்லுத மாதிரி இருக்கு கேக்க” என்று அவர் சொன்னபோது நான் கொஞ்சம் ஐயப்பட்டேன்.

”அதுவா செல்லம்? அதெல்லாம் புத்தகம். அதிலே இருந்துதான் சினிமாக்களை எடுக்கிறாங்க”

இந்நாட்களில் என்னென்ன இலக்கியவகைமைகள் வழியாக கடந்து வந்திருக்கிறேன். கைசுருட்டி ஓங்கி கழுத்துபுடைக்க கூவும் புரட்சியிலக்கியம். மளிகைக்கடை அண்ணாச்சி பட்டியலிடும்போது தொகையை கூட்டிக்கொள்வதுபோல ஒலிக்கும் ‘அந்தரங்கமான, கறாரான, மிகையே இல்லாத, சொற்கச்சிதமான, ஓசையே எழாத’ நவீனத்துவ இலக்கியம், சாமிவந்த பூசாரிக்கு ஆய் வந்ததுபோன்ற தானியங்கிச் சொற்பெருக்கி இலக்கியம், பூடகமே உலகம் என்னும் கொள்கை கொண்ட கவிதைகள்..

மறுபக்கம் இலக்கியக் கருத்துக்கள், விமர்சனங்கள். கநாசு பாணி 36-28-36 அழகியல் விமர்சனம், துண்டுப்பிரசுரத்தில் இருந்து இலக்கியம் வந்தது என்னும் கைலாசபதியின் பரிணாமவாதம், கதையறியாமல் ஆட்டம் பார்க்கும் தமிழவன் பாணி கோட்பாட்டு விமர்சனம், கல்வித்துறையின் அட்டவணைப் பரிதாபங்கள்,பாக்டீரியாவுக்கு வைரஸ் தொற்று வந்ததுபோன்று மார்க்ஸியத்தில் பெண்ணியம் ஏறி மேயும் எழுத்துக்கள், நாட்டாரியலில் வீட்டாரியலை கண்டுபிடிப்பவை, கட்டுடைத்து கூடையில் அள்ளி அப்பால் கொட்டும் நாகார்ஜுனவாத விமர்சனங்கள்…

 ‘கிளாஸிக்ஸ்- முதல் இரண்டு அத்தியாயங்கள் மட்டும்’ செக்‌ஷன்

”உண்மையச் சொன்னா அதைமட்டும்தான் படிக்கிறாங்க. அதான்…”

இப்போது இரண்டு உலகப்போர்களுக்குப் பின்னர் ஓய்வுபெற்ற ராணுவ வீரனாக உணர்கிறேன். “தோஸ் ஆர் த டேய்ஸ்” என்று கண்களைச் செருகிச் சொல்லலாம்தான். ஆனால் போர்களில் உண்மையாக ஈடுபட்டவர்கள் மீண்டுவருவதில்லை, மீண்டு வந்தவர்கள் வேடிக்கை பார்த்தவர்கள்தான் என்பதை அடுத்த தலைமுறையினர் அறிந்திருக்கிறார்கள்.

காலச்சலிப்பை கடந்து எஞ்சியிருப்பவை ஆங்காங்கே காதில் விழுந்து நெஞ்சில் நிறைந்த பகடிகள். அவற்றில் பலவற்றை நெஞ்சிலேயே வைத்துக்கொள்ளவேண்டும், நாலுபேருக்குத் தெரிந்தால் கௌரவமில்லாமல் இருக்கும். “கோவி மணிசேகரனுக்கு நல்ல வெங்கலக் குரல் தெரியுமோ, ஆனா அவரோட கதைகளை வாசிக்கையிலேதான் அது நமக்கு கேக்கும்” என்ற அசோகமித்திரனின் கண்களில் சிரிப்பு இருந்ததா, இல்லை சோடாப்புட்டி உருவாக்கிய மாயம்தானா?

தர்க்கவியல், ஆண்கள் பகுதி, பெண்கள் பகுதி

சுந்தர ராமசாமி சிரிப்பதில்லை. சிரியஸாக நீல பத்மநாபனைப் பற்றி “அவரு தமிழிலே ஒரு whiner மரியா ரில்கே” என்றார். அந்தப் பகடியை புரிந்துகொள்ள நாம் அவரை ஆழ்ந்து அறிந்திருக்கவேண்டும். அதைவிட நீல பத்மாநாபனை. நான் புன்னகைக்க, என் கூட இருந்த பேராசிரியர் “ஆமாங்க, இப்பல்லாம் நெறைய கவிதைகள் எழுதுறார்” என்று சொன்னார்.

பிரமிள் பற்றிய ஓர் உரையாடலில் “கடுமையா உழைப்பார், கவிஞர் மாதிரி தெரியறதுக்கு” என்றார். ஒரு வீட்டில் விருந்தினராகச் சென்ற பிரமிள் அங்கே ஓர் இடத்தில் எறும்புகள் புற்றுக்குள் சென்றுவருவதை பார்த்தபடி இரண்டு மூன்று மணிநேரம் அமர்ந்திருந்தார், அக்குடும்பத்தில் இருப்பவர்கள் அதை விசித்திரமாகவும் திகைப்பாகவும் பார்ப்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின்.

மெல்லிய பொறுக்கித்தனம் கொண்டவை  புனத்தில் இக்காவின் வரிகள். “புனைவில் உள்ள அந்தரங்க எழுச்சி நம்மை தொடவேண்டும். பஸ்ஸில் அப்படி பலமுறை நடந்திருக்கிறது”

”எனக்கு நிரந்தர உண்மைகளையும் நீதியையும் அறத்துணிவையும் குடுக்கிற கிளாசிக் புத்தகம் வேணும், ஆனா அந்த புத்தகம் என்னோட நம்பிக்கைகளை மாத்திடக்கூடாது” 

அன்றாடத்திலிருந்து உவமைகளை எடுப்பது ஆற்றூர் ரவிவர்மாவின் வழக்கம். “பேக்கேஜ் மெட்டீரியல்களை எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்து வைக்கிறது நம்ம பழக்கம். பழைய பொருட்களை தூக்கி வீச மனசில்லாம வீடுமுழுக்க நிறைச்சு வைச்சிருப்போம். நம்ம இலக்கியத்தோட பிரச்சினையே அதுதான்”

அவருடைய பாணியில் இருந்து புனத்தில் குஞ்ஞப்துல்லா இக்காவின் பேச்சுமுறை கொஞ்சம் மாறுபட்டது. “அன்றெல்லாம் இஸ்லாமியப் பெண்டிர் குண்டாக இருப்பதே அழகென நம்பப்பட்டது. அறைக்கல் பீபி தன்னுடைய இடுப்பில் அரைநாண் கொடியில் சாவியை கட்டி வைத்திருந்தார்.நகைகள் வைக்கும் ரகசியப்பெட்டியின் சாவி. அரைநாண்கொடி அறுந்ததில் சாவி தொலைந்துவிட்டது. வீடெல்லாம் தேடினார்கள், கிடைக்கவில்லை . பல மாதங்களுக்குப் பின் கிடைத்தது. பீபியின் இடுப்பு மடிப்புகளில் ஒன்றுக்குள் இருந்தது”

”அறிவியல் மாயப்புனைவு”

அதைச் சொன்னது மகாகவி ஜி.சங்கரக்குறுப்பின் நூற்றாண்டுவிழாவில். “ஜி கவிதைகள் அணியலங்காரச் செறிவு கொண்டவை. ஆனால் பொலிவு கொஞ்சம் கூடுதலாகி சாவி அதில் மறைந்துவிடுகிறது. தேடி எடுப்பது அத்துமீறலாகவும் ஆகிவிடுகிறது.” அதை விழாக்குழுவினர் பாராட்டாகவே எடுத்துக்கொண்டார்கள்.

சுந்தர ராமசாமி பேசும்போது நகைச்சுவையை உத்தேசிக்கிறாரா என்பதுதான் நாம் கூர்ந்து புரிந்து கொள்ளவேண்டியதாக இருக்கும். “கவிஞர்களை மனைவிகள் மதிக்கிறதில்லை” என்று ஒருமுறை சொன்னார். அப்பால் நடந்து போகிறவரை காட்டி “ஆனா மனைவி மதிக்காததனாலே கவிதை எழுதுறவரு அவரு”. சோகமாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

”வாசகரை சந்தியுங்கள்!’ நிகழ்ச்சி

”என்னோட ரெண்டு புக்க நீங்க படிச்ச விதம் சந்தோஷமா இருக்கு”

ஒருவரைப் பற்றிச் சொல்லும்போது “இவர் அவரோட கோஸ்ட் ரைட்டர்னு சொல்றாங்க” என்றார். இன்னொருவரை உத்தேசித்து “அவரு?”என்றேன். “சேச்சே அவரு டெவில்”. உண்மையில் டெவில் ரைட்டிங் என்று ஒன்று இருக்க முடியுமா? இன்றுவரை ஐயம்தான் எனக்கு. சிலர் நினைவுக்கு வராமல் இல்லை.  Think of the devil என்ற சொல்லாட்சியும் நினைவுக்கு வருகிறது.

பல்கலைக் கழகத்தின் கவிதைக் கருத்தரங்கு ஒன்றுக்குச் சென்றுவிட்டு வந்திருந்தார் ஆற்றூர் ரவிவர்மா. நல்ல களைப்பு. நான் “கவிதையைப் பற்றி என்ன பேசினாங்க?”என்றேன். அவர் மேலும் களைப்புடன் அவருடைய இளவயது அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஜேன் ஆஸ்டினின் பிரைட் ஆண்ட் பிரஜுடீஸ் சுருக்கமாக.

”நான் உன்னை வெறுக்கறேன்!”

[சில விஷயங்கள் நடக்கின்றன]

”நான் உன்னை விரும்பறேன்!”

அது குரோட்டன்ஸ்கள் வந்த காலம். வண்ணஇலைச் செடிகள் மேல் பெரும் மோகம் கொண்ட ஆற்றூர் அவற்றைக் கொண்டுசென்று தன் வீட்டின் முற்றத்திலும் வேலியிலும் வளர்த்தார். வண்ணப்பொலிவின் பரவசம்.

ஆனால் லீவுக்கு ஊருக்கு வந்தபோது ஒரு நாள் அம்மா அதன் இலைகளை பறித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். “என்ன பண்றே?”என்றார்.

“பொரியல்வைக்க கீரை பறிக்கிறேன். ஏன்டா?”

“அய்யோ அம்மா, அது கீரை இல்லை, அது குரோட்டன்ஸ்”

”கீரேட்டன்” என்று அம்மா சொன்னார்

“அதைச் சாப்பிடக்கூடாது… அது சாப்பிடுறதுக்கு உள்ளது இல்லை”

”டெஸ்ட் ரிசல்ட் வந்திருக்கு. அது வெறும் உருவகம்தான்”

“பின்னே எதுக்கு இப்படி முளைச்சு தழைச்சு நின்னுட்டிருக்கு?” என்றாள் அம்மா “தண்ணி வேற தினசரி ஊத்துறோமே?”

“இது வெறும் அழகுக்கு… அழகுக்காக”

“அழகா?”என்று அம்மா குரோட்டன்ஸை பார்த்தாள். “அழகுன்னா ஏதாவது பிரயோஜனம் வேண்டாமா?”

“அழகுதான் அதோட பிரயோசனம்”

“போடா, அழகான் செடிய அப்டி சும்மா விட்டா அது தெய்வத்தை அவமானப்படுத்துற மாதிரி” என்று அம்மா அடுக்களைக்கு குரோட்டன்ஸ் இலைகளுடன் சென்றார். “ஆறுமாசமா இதுதான் சமைக்கிறேன். உங்க மாமாவுக்கு இந்தக் கீரைதான் ரொம்ப பிடிச்சிருக்கு”

”எழுத்தாளருடன் கண்கள் சந்திப்பதை தவிர்க்கவும்” அறிவிப்பு

ஆற்றூர் மாமாவிடம் கேட்டார் ”உங்களுக்கு இது பிடிச்சிருக்கா அம்மாவா?”

“ருசி ஒருமாதிரித்தாண்டா இருக்கு. ஆனா மலச்சிக்கலுக்கு நல்லது” என்றார் அம்மாவன். “மலச்சிக்கல் இல்லாம ஆனதனாலே எப்ப அதைப்பாத்தாலும் நல்ல அழகா தெரியுது!”

நான் சிரித்துக்கொண்டே “பல்கலைகழகத்தில் யாருக்குமே எந்த சிக்கலும் இருக்காது” என்றேன்.

அருகே இருந்த எம்.கங்காதரன் உரக்கச் சிரித்து “பேராசிரியர்களுக்குக் கவிதை விமர்சனம் என்பது உழிச்சில்காரன் பெண்ணுகெட்டியது போலே” என்றார். [ஆயுர்வேத மசாஜ் செய்பவன்]

”போதும் வில்லியம், நான் கெளம்பறேன். உன் நாடகத்தை இதுவரை நம்பினதுபோதும்”

ஏறத்தாழ இதே காட்சி பி.பத்மராஜனின் ஒரிடத்தொரு ஃபயல்வான் சினிமாவிலும் வருகிறது. பயில்வான் ஆண்மையற்றவர். உடலைப்பேணுவதற்காக அப்படி ஆக்கிக்கொண்டவர். திருமணம் செய்துகொள்கிறார். முதலிரவில் மனைவியை தூக்கி போட்டு பிடித்து விளையாடி மகிழ்கிறார்.

இன்றுவரை நான் கல்விநிலையங்களில் கவிதை ஆய்வுசெய்பவர்களை, அங்கிருந்து கிளம்பிவந்து பொது ஊடகங்களில் கவிதை மேய்வு செய்பவர்களை காணும்போதெல்லாம் அந்த வரி நினைவுக்கு வந்து வெடித்துச் சிரித்துவிடுவேன். பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? கவிதைக்கு உடற்பயிற்சியும் தேவைதானே?

”இலக்கியத்தில் டாக்டர்கள் யாராவது இருக்கீங்களா? அவசரம்!”

பொதுவாக இலக்கியத்தில் கெட்டவார்த்தைகள் நேரடியாகப் புழங்குவதில்லை, அவற்றுக்கு இலக்கியநயம் கம்மி. கவிதை என்பது மறைபொருள். வேறுசொற்கள் கெட்டவார்த்தையாகப் புழங்கும். நான் வணிகவியலுடன் ஆங்கில இலக்கியம் பயின்ற கல்லூரி நாட்களில் ‘பெண்டாமீட்டர்” கெட்டவார்த்தையாக புழங்கியது.‘இயாம்பிக் பெண்டாமீட்டர்’ கடும் கெட்டவார்த்தை. [திருட்டுத் தாழ்வாரம் என்று சொல்லும் உச்சரிப்பில் சொல்லவேண்டும்]  “இன்னொருதடவ சொல்லிப்பாருலே, ஏலே, ஆம்புளையானா சொல்லிப்பாருலே” என்று கத்தியை உருவிய ராஜசேகரன் இப்போது பேராசிரியர்.

நவீனத் தமிழிலக்கியத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் உள்ளொளி [லே, இந்த உள்ளோளித்தனம் எங்கிட்ட வேண்டாம் கேட்டியா?] கட்டுடைப்பு [இவனையெல்லாம் மாப்ள, புடிச்சு நல்லா கட்டுடைச்சு விட்டாத்தான் அடங்குவான்] நுண்ணரசியல் [பீயிலே நுண்ணரசியல் பொறுக்குறவன் அண்ணாச்சி அவன்] போன்ற பல சொற்கள் கெட்டவார்த்தைகளாகப் புழங்கியிருக்கின்றன. சில சொற்கள் கிளுகிளுப்பாகவும் [நல்ல அமைப்பியல் உள்ள குட்டியாக்கும் அவ] பின் அமைப்பியலும் உண்டு.

”யுலிஸஸ் முதல் எடிஷன் மியூசியத்திலே இருக்கா, ஏன்?”

”யாருமே வாசிக்காத புத்தகம் அது” 

முன்பு தினமணியில் நூல்களின் பின்னட்டையையே மதிப்புரையாக போட்டுவிடுவார்கள். அதற்கான ஒரு சாஃப்ட்வேர் இருந்திருக்கலாம். சகட்டுமேனிக்கு நூல்மதிப்புரைகள் இருக்கும். “அகவெளியில் வெளிச்சம் பாய்ச்சி இருளகற்றி ஆழத்திற்குள் நுழைந்துசெல்லும் கதைகள் இவை”என்பதுபோல. வாசிக்கும்போது அக்கதைகள் வால் சுழல துளைத்துத் துளைத்து இறங்கிச் செல்வதை கற்பனைசெய்தால் நமக்குப் பின்பக்கம் கூசும்.

ஆனால் கோயில்பட்டியில் மாயஇலக்கியம் செழித்தோங்கி தமிழ் மஸாஜ் வைத்தியத்திற்கு ஆளான அந்நாட்களில் ஒரு கவிதைத்தொகுதியின் பின்னட்டை இப்படி இருந்திருக்கிறது. “இருப்பின் வெளிப்பில் வெளிப்படும் இருப்பின் முகங்களில் ஊறும் வெறிப்பில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் சிறபடிப்பில் ஆழ்ந்துசெல்லும் மணல்கோடுகளின் மலைகளால் சூழப்பட்டது அப்பாசின் பேனாவில் ஊறி ஆச்சரியங்களில் அலையும் மை”. தினமணியின் மென்பொருள் இப்படி புரிந்துகொண்டது. ”அப்பாவின் மை எவ்வளவு சிறப்பானது என்று சொல்லும் நூல் இது”

 

புத்தகப்புழுக்களின் விமர்சனம்.“ஏமாற்றம்”  “சுவையேஇல்லை” “உறைஞ்சுப்போயிருக்கு”

ஆனால் தினத்தந்தி அளவுக்கு உச்சகட்ட இலக்கிய நகைச்சுவையை அளித்த இதழ் வேறில்லை என்று வேதசகாயகுமார் சொன்னார்.  “அகிலனுக்கு ஞானபீடப் பரிசு!!!” என்று மூன்று ஆச்சரியக்குறி போட்டிருந்தார்கள்.

“அதிலே எவனோ வெவரமான ஆளு இருந்திருக்கான்” என்று சுந்தர ராமசாமி சொன்னார்.

28 ஏர்போர்ட்!

27விற்பனை!

26 விளம்பரம்

25 ’சயன்டிஸ்ட்!’

24தொழில்நுட்பம்

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’ 10பகடை பன்னிரண்டு 9சிரிக்கும் ஏசு 8டேனியல் லாபெல் 7ஸாரி டாக்டர்! 6ஆடல் 5கம்யூட்டர் யுகத்துக் கடவுள் 4 மனம் 3குருவும் குறும்பும் 2இடுக்கண் வருங்கால்… 1ஆன்மிகமும் சிரிப்பும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2021 11:35

மதார் விருது, நிறைவு

அன்புள்ள ஜெயமோகன் ,

வணக்கம். இந்த ஒரு வாரமும் மிகுந்த மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் கழிந்தது. உங்கள் தளத்தில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்து நிறைய புது நண்பர்கள் கிடைத்துள்ளனர். இந்த விருதை தேர்வு செய்தது ‘நீங்கள்’ என்பதை பெருமையாக உணர்கிறேன். உங்கள் மேல் எப்போதும் எனக்கு ஒரு தீராத வியப்பும், பயமும், அன்பும், மரியாதையும் உண்டு. தொடர்ந்து நிறைய வாசிக்கவும், எழுதவும் முயல்கிறேன்.

மிக்க நன்றி சார்.

மதார்

அன்புள்ள மதார்,

ஒரு விருது என்பது ஒரு வாசகர்- விமர்சகர் குழு அளிக்கும் ஓர் அங்கீகாரம். விஷ்ணுபுரம் விருதைப் பொறுத்தவரை ஆக்டோபஸ் போல விரிந்துகிடக்கும் எட்டு, பதினெட்டு கைகள் கொண்ட அமைப்பு இது. பல பரிந்துரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றிலிருந்து தேர்வாகிறது இந்த விருது. அறுதியாக நான் முடிவெடுக்கிறேன். ஆனால் அம்முடிவை நண்பர்களிடம் நான் நிறுவியாகவேண்டும்.’

கவிதையில் என் அளவுகோல்கள் வெளிப்படையானவை. தமிழில் அனேகமாக தொடர்ந்து கவிதைகளைப் பற்றி பேசி எழுதி வருபவன் நானே. எல்லா கவிஞர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். என் அளவுகோல்களில் இரண்டு அடிப்படைகள் முக்கியமானவை. கவிதை மொழியனுபவமாக இருந்து மேலே செல்கிறதா என்பது ஒன்று. கவிதையில் வழக்கமான பாவனைகள் இல்லாமலிருக்கிறதா என்பது இன்னொன்று.

எங்கள் விருதுகளை விரிவான கட்டுரைகள் வழியாக நிறுவுவதும் விருதின் பணிகளில் முக்கியமானது. இவ்விருது வெறுமே அளிக்கப்பட்டது அல்ல. ஏன் என்பதை என் குறிப்புகளும், வாசகர் கடிதங்களும் நிலைநாட்டுகின்றன.

இவ்விருதை விமர்சகனாக, வாசகர்களாக எங்கள் வாழ்த்துக்கள் என எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் எதிர்பார்ப்புகளை கூர்தீட்டி வைத்திருக்கிறோம்.

ஜெ

அன்புள்ள ஜெ,

நவீன கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பெரும்பாலும் ஆழ் படிமங்களுடன் மிக சிடுக்குகள் கொண்ட கவிதைகள் நம்மை வசீகரித்தாலும், குழந்தை மனத்துடன் எளிய படிமங்களுடன் வரும் கவிதைகள் நம்மை வசமிழக்கச் செய்கின்றன. மதாரின் வெயில் பறந்தது குழந்தை மனத்துடன் எழுதப்பட்ட நவீன கவிதை என்றே சொல்வேன். எப்போதும் புத்தகத்தின் பக்கம் திரும்பாத என் மனைவிக்கு இந்த கவிதைகளை சொன்னவுடன் ரசிக்க ஆரம்பித்துவிட்டாள் அதுவே இந்த கவிதைகளுக்கான அழகு

         உயரம் குறைய குறைய          உயரம் கூடுவதை          காண்கிறது          கிணறுநான்கு வரியில் வாசகனின் கற்பனையை விரிவுபடுத்தும் வரிகள்.மழைகுடையில்லைமரம்ஒதுங்கினேன்குளிர்குளிர்இரு குயில் மரக்கிளையில்இட்டுக் கொண்ட முத்தம்இதமான சூடுவெயில்வெயில்வெயில் பறந்ததுகுக்கூ என்றபடி வானில்சாதாரண மனிதன் கடந்து போகிற காட்சிகளை கவிஞன் கவிதையில் கடத்துகிறான் அழகியலோடு. மதாரின் இந்த கவிதைகள் வாசகனை குழந்தைகளாக்கி விடுகிறது . குமரகுருபரன் விருது பெற அனைத்து வகையிலும் மதாரின் கவிதைக்கு தகுதி உண்டு. மதாருக்கும் வெளியிட்ட உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். திசையெட்டும் தமிழ் ——————————————————————–

’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021

குமரகுருபரன் விஷ்ணுபுரம் – விருதளிப்பு நிகழ்வு

மதார்- பேட்டி

மதார் கவிதைகள்- வேணு தயாநிதி

பறக்கும் வெயில்- சக்திவேல்

அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி

அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்

மதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்

மதார் கவிதைகள் குறித்து- கா.சிவா

மதார்- கடிதங்கள் 6

மதார்- கடிதம் -5

மதார் கடிதங்கள்-3

மதார்- கடிதங்கள்-2

மதார்- கடிதங்கள்-1

மதார் கவிதை வெளியீட்டு விழா – கடிதங்கள்

வெயில் பறந்தது தபாலில் பெற :

https://azhisi.myinstamojo.com/product/289695/veyil-parandhathu/அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :7019426274கிண்டிலில் படிக்க :https://cutt.ly/9njlmdN
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2021 11:34

கதாநாயகி- கடிதங்கள்-13

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

கதாநாயகி கதை  பல்வேறு கோணங்களில் மிக நுட்பமாக வாசிக்கப்பட்டு வருவதை தளத்தில் வரும் கடிதங்கள்  மூலம் அறிகிறோம். இன்னும் விரிவாக வாசிக்கப்படவேண்டிய பல்வேறு தளங்கள் அதில் உள்ளதையும் அறிவோம்.

பெண்களின் உலகை காட்டும்  கதை, பெண்களின் அதிகார வெறியையும், பெண்கள் மேல் அவர்கள் செலுத்தும் அடக்குமுறையையும் கூறும் கதை, எழுத்தின் வலிமையை, ஒரு படைப்பு வாசகனுக்கு அளிக்கும் அனுபவத்தை விளக்கும் கதை,  பேய் கதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமான கதை, மன சிதைவை, அதன் எல்லையை, அறிவியலுக்கு அப்பால் அதில் உள்ள புரிந்து கொள்ளப்பட முடியாத தன்மையை ஒரு தரிசனமாக முன்வைக்கும் கதை என்று  ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் கதையை அணுகுகிறார்கள்.

இவையனைத்தும் இக்கதையில் உள்ளவையே. அதைத் தாண்டியும் பல உள்ளன. இக்கதையில் என்னை மிகவும் ஈர்த்தது, இதில் நீங்கள் படைத்த இரு உலகம். இது வெறும் இரு வேறுபட்ட, சில முரண்பாடுகளையுடைய உலகம் அல்ல. இரண்டும் அதனதன் எல்லையின் உச்சங்கள். ஒன்று கிழக்கு மற்றொன்று மேற்கு. ஒன்று ஏதும் அறியா சிறு குழந்தை மற்றொன்று அனைத்தையும் அறிந்து, வாழ்ந்து நிற்கும் முதியவர். எழுத்தே என்னவென்று அறியாத இடத்தில் இருக்கும் ஒரு உலகம், நாவல் எழுதிக்கொண்டிருக்கும் மற்றொரு உலகம். மற்ற வனவிலங்குகளுக்கும் தங்களுக்கும் பெரிய வேறுபாடில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம், செல்வம், அதிகாரம், நாகரீகம், கலை என அனைத்திலும் உச்சத்திலிருக்கும் ஒரு இடம். உலகமே பார்த்து வியக்கும், பொறாமை கொள்ளும் பிரபுக்களும், சீமாட்டிகளும் உலாவும் உலகம்.

ஆனால் அனைத்தையும் அடைந்து பண்பட்ட சமூகத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிற இடத்தில்தான் பொய், பாவனை, பொறாமை, சுயநலம், சூழ்ச்சி, வஞ்சம், பேராசை, அடிமைப்படுத்துதல், பழிவாங்கல் போன்ற அனைத்து இழிசெயல்களும் நிறைந்துள்ளன.  வெறும் சோற்றையே பிரமிப்பாய் பார்த்து, அதை உண்ண ஏங்கும் காணிக்காரர்கள் உலகம்   ஆனால் அதைக்கூட அவர்கள் பங்கிட்டுதான் சாப்பிடுகிறார்கள். சகமனிதனுக்கு மட்டுமல்ல, குரங்குக்கு கூட தன் உணவை அளிக்கும் பெரிய மனம் கொண்டவர்கள்.  பொய்யை உருவாக்க தெரியாதவர்கள், உட்பொருள் வைத்து ஏதும் சொல்ல தெரியாதவர்கள்.

வெண்முரசில் ஒரு இடம். பீமனும் திரௌபதியும் கங்கையில் நீந்திக்கொண்டிருக்கையில்  திரௌபதியின் இடும்பியை பற்றியான கேள்விக்கு பீமன் சொல்வான், ” பொறாமை, வஞ்சம், காழ்ப்பு ஏதும் அவளுக்கு இல்லை. அவர்களின் குலம் அவ்வுணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது ஏனென்றால் அவர்களுக்கு விழைவுகளில்லை”. அதற்கு திரௌபதி, “நல்லவேளை நான் அப்படி இல்லை. எனக்குள் ஆசையும், அகந்தையும் நிறைந்திருக்கின்றன ஆகவே வஞ்சமும், காழ்ப்பும் பழியும் கொண்டவளாகவே இருந்து வருகிறேன்” இந்த இரு வேறு உலகின் வேறுபாட்டை இதை கொண்டு அறியமுடிகிறது.

V.S.செந்தில்குமார்

 

அன்புள்ள ஜெ

கதாநாயகி கதை வாசிக்கும்போது பரபரப்பாக இல்லை. ஒருவகையான அலைகொள்ளலைத் தான் உருவாக்கியது. என்ன சொல்ல வருகிறார், எங்கே போகிறது கதை என்றே புரியாத நிலை. குழப்பங்கள். சிலசமயம் பொறுமையிழந்துபோய்விட்டேன். ஒரு குறுநாவலாக நூலாக வந்திருந்தால் ஒரே மூச்சில் முடித்திருப்பேன். ஆனால் வாசித்து இத்தனை நாட்களுக்குப் பிறகும் மனதிலேயே நின்றிருக்கிறது. திரும்பத் திரும்ப அலைக்கழிக்கிறது. பல கேள்விகளை எழுப்புகிறது. பதில் இல்லாமல் அலையச் செய்கிறது.

வாசிப்பின் வழியாக நாம் எதை ஏன் எழுப்பிக்கொள்கிறோம் என்பதே கேள்வி. அந்த அத்துவானக் காட்டில், அந்த தனிமையில் ஏன் அவன் இருநூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்தவர்களை எழுப்பிக்கொள்கிறான்? அந்தக் காட்டில் அவர்களின் கதையின் ஒரு துளி ஏன் மிச்சமிருக்கிறது?

பிரிட்டன் இந்தியாவை விட்டுச் செல்லவே முடியாது என்று நினைக்கிறேன்

ராஜ்குமார்

கதாநாயகி- கடிதம்-12

தாநாயகி – கடிதங்கள்-11

கதாநாயகி கடிதங்கள் 10

கதாநாயகி கடிதங்கள் -9

கதாநாயகி, கடிதங்கள் -8

கதாநாயகி கடிதங்கள்- 7

கதாநாயகி, கடிதங்கள்-6

கதாநாயகி,கடிதங்கள் -5 கதாநாயகி கடிதங்கள்-4 கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2021 11:33

எல்லைகளை தகர்த்தல்- கடலூர் சீனு.

இனிய ஜெயம் ,

இந்த பாண்டமிக் சூழலில் நான் செவிமடுக்க நேர்த்த மற்றொரு அபூர்வ நேர்நிலை ஊக்கக் குரல் ஜோஹன் ராக்ஸ்டாம் அவர்களுடையது.

https://en.m.wikipedia.org/wiki/Johan_Rockstr%C3%B6m

சமீபத்தில் சீஸ்பைரசி தொடர்ந்து அவ்வரிசை வழியே கண்டடைந்த ஆளுமை. கொரானாவில் இருந்து விடுபட உலக நாடுகள் முழுக்க செயலில் இறங்கி இருக்கும் சூழலில் அந்த செயல்பாட்டு திட்டங்களில் ஒன்றாக, ஒவ்வொரு நாடும் நிதி ஒதுக்கி, ஒருங்கிணைந்து சூழலியல் சீர்கேட்டு வேகத்துக்கு ஒரு முட்டுக்கட்டை போட முடியும் என நம்பிகை உருவாக்க முயலுகிறார். இந்த நோய் சூழல் மீட்சியின் பாதையில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மனிதனும் பயிலவேண்டிய ஒன்றாக சூழலியல் சார்ந்த போதத்தை, ஆரோக்கிய நெறிமுறைகளுடன் இணைந்து பின்பற்ற வேண்டிய கடமையாக சில சூழலியல் செயல்களை இந்த காலத்தில் உலக நாடுகள் இணைந்து முன்னெடுக்க முடியும் என்கிறார் ஜோஹன்.

இதை ‘சும்மா சொல்லிவெப்போமே’ வகையறா கருத்து கந்தசாமியாக அவர் சொல்லவில்லை. தனது வாழ்நாள் பணியாக சூழலியல் சீர்கேடு வேகத்துக்கான அறிவியல் பூர்வமான அட்டவணை ஒன்றை உருவாக்கியவர் இவர். துருவ பனித்தொப்பிகள் முதல் ஓசோன் படலம் வரை இந்த புவிக் கோளத்தை ஒன்பது நிலைகள் வழியே வகுத்து, ஒவ்வொரு நிலையிலும் பச்சை மஞ்சள் சிகப்பு என்ற நிலைகளில் சூழல்பாதிப்பு எந்த எல்லையில் இருக்கிறது, என்ற துல்லிய வரைபடம் உருவாக்கி அளித்திருக்கிறார். மெல்ல மெல்ல, ஒவ்வொரு தனி மனிதன் முதல் உலக நாடுகள் வரை கூடி நமது அன்றாட செயல்களில் ஒன்றாக சிலவற்றை கடைபிடிப்பதன் வழியே வெறும் 30 ஆண்டுகளில் இந்த 9 நிலைகளில் சிகப்பு எல்லை கோட்டை தொட்ட அலகுகளை மஞ்சளுக்கு கொண்டு வந்துவிட முடியும் என நம்பிக்கை அளிக்கிறார்.

https://www.ted.com/talks/johan_rockstrom_let_the_environment_guide_our_development/up-next?language=en#t-570521

ஜோஹன் மற்றும் அவரது வாழ்நாள் ஆய்வுப் பணி வழியே  உருவாக்கிய கையேட்டையும் தீர்வுகள் நோக்கிய அவரது பாதையையும், இயக்குனர் ஜொனதன் க்ளே, சூழலியல் ஆசான் டேவிட் அட்டன்பரோ வை கொண்டு ஒரு நல்ல அறிமுக ஆவணம் கொண்டு வந்திருக்கிறார். =எல்லைகளை தகர்த்தல் : நமது புவிக்கோளத்தின் அறிவியல்=. எனும் தலைப்பில்.

https://youtu.be/2Jq23mSDh9U

நமது புவியின் சீதோஷ்ண சமன்பாடு, அது பிறந்த காலம் தொட்டு, அதன் கிராஃப் இதய துடிப்பு கோடுகள் போல மேலும் கீழும் ஓடி வந்து, கடந்த 10,000 ஆண்டுகளாகத்தான் ஒரே நேர்கோட்டில் சென்றுகொண்டு இருக்கிறது. இதே நேர்க்கோட்டில் நிற்கும்வரை சிக்கல் இல்லை. ஆனால் கடந்த 50 வருட மானுட செயல்பாடுகள் இந்த சமன்  கோட்டை  மீண்டும் இதயத்துடிப்பு கோடுகள் போல மாற்றும் எல்லைக்கு கொண்டு வந்து விட்டது.

கடந்த 50 வருடங்களில் உலக சக உயிர் சூழலில் 65 சதமானத்தை அழித்து விட்டோம். அமேசான் காடுகளில் 25 சதம் அழித்து விட்டோம். உலக மொத்த பறவைகளில் 30 சதம் மட்டுமே வன உயிர். கடந்த 50 வருடத்தில் கடலின் அமில அளவு 25 சதம் உயர்ந்திருக்கிறது. 70 சதம் நிலத்தடி புதை படிம எண்ணெயை எரித்து தீர்த்து, கரியமில நிலையை உயர்த்தி, துருவத்தை உருக்கி, ஓசோனில் ஓட்டை போட்டு விட்டோம். எல்லா தகவல் பின்னாலும் இருக்கும் அறிவியல் துல்லியத்தை, அந்தந்த நிபுணர்களின் வாழ்நாள் பணிகள் வழியே சொல்லி செல்கிறார் அட்டன்பரோ.

இதில் இந்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, நம்பிக்கை தரும் நிலைகளை முன்வைக்கும் ஜோஹனின் செயல்திட்டங்கள் மற்றும் அவரது வரைபடத்தை விரிவாக அறிமுகம் செய்கிறார் அட்டன்பரோ. சில அபாரமான அறிவியல் கணக்குகள் வழியே சூழல் மண்டலத்தில் 1.1 எனும் எண்ணில் கரியமில நிலை இருப்பதை காட்டுகிரார் ஜோஹன். 1.3 தொட்டுவிட்டால் இனி மீட்சி இல்லை எனும் நிலை. இப்படி ஒன்பது நிலைகளில் புவிக் கோள சூழலியல் கையேடு ஒன்றை உருவாக்கி, ஒவ்வொரு நிலையிலும் நாம் பச்சையா, மஞ்சளா, சிகப்பா எந்த கோட்டில் நிற்கிறோம், ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனும் அரசும் இணைந்து செயல்பட்டு, சூழலை மீட்டுருவாக்கம் செய்யும் வகைமையை, ஜோஹனின் சிந்தனைகளை அட்டன்பரோ விரித்துரைக்கிறார்.

கச்சா எண்ணெய்களின் எரித்தல் அளவை சாத்தியம் உள்ள எல்லை வரை குறைப்பது, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாள் கடமையாக சில மரங்களை நடுவது, உணவு, உடை, இருப்பிடம் என சாத்தியம் உள்ள எல்லை வரை அனாவசிய நுகர்வு தவிர்த்து, அவசியம் எதுவோ அதை மட்டுமே கைக்கொள்ளுவது, காடழிவு, சக உயிர்களை கொல்வது இவற்றில் சற்றேனும் போதம் கொள்வது என மெல்ல மெல்ல  அடுத்த கால்நூற்றாண்டு செயல்திட்டமாக முன்வைக்கப்படும் இவ்வாவணத்தின் தீர்வுகள் எல்லாம் நம்மால் மிக முன்னரே கைக்கொள்ள முடிந்த, ஆனால் கைக்கொள்ளாத விஷயங்கள்.

ஜக்கி அவர்கள் சொன்னதாக ஒரு சொல் உண்டு.  நம்மால் செய்ய முடியாததை செய்யாமல் போவதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் நம்மால் செய்ய முடியும் என்று நமக்கு தெரிந்த ஒன்றை செய்யாமல் போவது மாபெரும் பிழை ஆம் உலக மானுடன் ஒவ்வொருவருக்கும் தெரியும். இதை நம்மால் செய்ய முடியும். ஆனால் செய்யாமல் இருக்கிறோம். இனியும் காலம் இல்லை. 1.1 க்கும் 1.3 கும் இடையே வெகு தூரம் இல்லை. மீண்டு வர ஒரு வாய்ப்பு. இறுதி வாய்ப்பு. செயல்பாடு நோக்கி மீண்டும் ஒரு மட்டுருத்தலை அட்டன்பரோ, ஜோஹன் கூட்டணி வழியே நிகழ்த்தி இருக்கிறார் இயக்குனர் ஜொனதன் க்ளே.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2021 11:32

ராஜா- கடிதங்கள்

இளையராஜா- கலை தனிமனிதன் உரை

இனிய ஜெயம்

இசை ஞானி குறித்த உங்களது உரை கேட்டேன். சில விஷயங்களை பொதுவில் சொல்லக் கூடாது. ஆனாலும் எந்த எல்லை வரை சென்று ஒரு கலைஞனின் ஆத்மீக  இருப்பை சுட்டிக்காட்ட முடியுமோ அதை செய்திருக்கிறீர்கள். சிறப்பு. நீங்கள் அறியாததல்ல ஆயினும் ஒரு நினைவூட்டல். இந்தப் பதிவு சார்ந்து ‘அது எப்புடி சொல்லப் போச்சி’ வகையறா வம்புகள் எதற்கும் பதில் சொல்லாதீர்கள்.

நீங்கள் சுட்டிய பல விஷயங்களை முன்னர் ராஜாவே எழுதி இருக்கிறார். பின்னர் விவேகம் கொண்டு அத்தகு விஷயங்களை பொதுவில் சொல்வதை விட்டு விட்டார். இருப்பினும் என் நினைவில் நீங்காத அவரது கட்டுரைகள் சில உண்டு. குறிப்பாக இசை வழியே அவர் ஆத்மீகமாக நிகழ்த்திய பயணம் குறித்த கட்டுரை. இந்த பிரபஞ்சம் முழுக்க நாத வெளியாகி அதில்  தானொரு நாத பிந்துவாக மிதக்கும் அனுபவம் வாய்த்த தருணம் ஒன்றை எழுதி இருப்பார். தமிழில் மிக்க தனித்துவம் கொண்ட மெய்யியல் ஓடை ஒன்றை சுட்டி நின்ற கட்டுரை. வாசிக்கக் கிடைத்தோர் பாக்கியவான்கள்.

அவரது பிற வாழ்வனுபவங்கள் குறித்து அவரே எழுதிய முக்கியமான நூல் பால் நிலாப் பாதை. தேனி ஏலக்காய் பேக்டரி அனுபவங்கள் துவங்கி, சிவாஜி இறுதி ஊர்வலம், திருவாசகம் சிம்பனி என ராஜா அவர்கள் கண்ட தனித்துவமான அனுபவங்கள் குறித்த நூல். மழை பொழியும் ஒரு ஐப்பசி மாதத்தில் ரமணரின் விருபாக்ஷா குகை வாசலில் அமர்ந்து அருகே பொழியும் சிற்றருவியின் சாரல் முகம்  தெளிக்க அந்த நூலை வாசித்திருக்கிறேன். என் அகம் அறிந்த உண்மை ஒன்று உண்டு. ரமணரில் எது மௌனமாக திகழ்கிறதோ, அதுவே ராஜாவில் இசையாக வெளிப்படுகிறது. பாரதம் அடைந்த நற்பேருகளில் ஒன்று நமது இசை ஞானி.

உங்கள் உரை காணொளி தொடர்ந்து முதல்வன் மீடியா தளத்தின் பிற பதிவுகள் கண்டேன். மிக முக்கியமான தளம். ராஜ் கெளதமன் எழுதிய ஆகோள் பூசலும் பெருங்கற்காலமும், தேவி பிரசாத் எழுதிய இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பணவும் அழிந்தனவும் போன்ற பல முக்கிய நூல்கள் மீதான விரிவான அறிமுகங்கள் இருக்கிறது.

தமிழகத்தில் கேரளத்தில் பௌத்தம், சமணம் தொடர்பான ஆய்வுகள், ஸ்ட்டாலின் ராஜங்கம், கவுதம சன்னா போன்றவர்களின் செரிவான உரைகள், கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் குறித்த ஆவணப்படம், நண்பர் பாரி செழியன் இயக்கிய அயோத்திதாசர் ஆவணப்படம் போன்ற பல அதில் உள்ளது. என்னை ஒரு கணம் துனுக்குற செய்து அழைக்கழித்தது தளத்தில் இருந்த அண்ணன் எழுத்து அலெக்ஸ் அவர்களின் காணொளி. அவரது குரல். அவரது உடல் மொழி, அவரோடு சேந்து உண்டு உறங்கி பேசிக் கடந்த நாட்கள் என நினைவில் ஒரு சுனாமி எழுந்து அறைந்தது. முக்கியமான உரையாடல்கள் அடங்கிய தளம்.

கடலூர் சீனு

 

அன்புள்ள ஜெ

நான் உரையில் முதலிலேயே இணைந்து கொண்டேன். ஆனால் ஒரு சிறு பகுதியே கேட்க முடிந்தது. எங்கள் வீட்டில் ஏதோ ஒரு இணைய தொடர்பு சிக்கல்.. ஜூம் மிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. பிறகு மீண்டும் சேரவே முடியவில்லை – அதிக பட்ச தொடர்புகள் ஏற்கனவே இருக்கிறது என ஜூம் அறிவிப்புகள். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

நீங்கள் இன்று உரையின் லிங்க் இணையத்தில் தெரிவித்ததற்கு நன்றி. உரை முழுவதும் கேட்டேன். நன்றாக இருந்தது.

இப்படி சொல்வது சரியா தெரியவில்லை. இளையராஜா பற்றி மரியாதை கலந்த பெருமிதம் கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்ததும், அது உங்கள் உரையாக இருந்ததும் நிறைவாக இருந்தது.

உரை பற்றி ஒரு எளிய மகிழ்ச்சி கலந்த நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்.

அன்புடன்

முரளி

அன்புள்ள ஜெ,

மிக சிறந்த உரை, மிக்க நன்றி. உரை முழுவதிலும் நீங்கள் பயன்படுத்திய படிமம், நீர். இசைக்கு – நீர் என்பது   மிகப்பொருத்தமான படிமம் தான்.குளுமை- ஓட்டம் – அதன் குணம்/வடிவம் அது சேரும் இடத்தை சார்ந்தது (ஆதி சங்கர் ரின் வரியை கூறினீர்கள்).

என் நினைவில் இருந்து ஒருமுறை பொதிகையில் இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் , ஒரு நதியில் நீங்கள் பார்க்கும் ஒரு நீர் பார்த்த நீர் அதே  இடத்தில இருப்பதில்லை ஒரு உவமையை இசையோடு பொருத்தி கூறியிருப்பார்.

பகவான் – இளையராஜா – ஜெ  என்வரையில், என் வாழ்க்கையில் மூன்று  ஜீவ நதிகள் தான்.

நன்றி

ராமகிருஷ்ணன்

 

வணக்கம் ஜெ

இளையராஜா உரை கிட்டதட்ட நம் ஸும் உரையாடலின் தொடர்ச்சி போல இருந்தது. எவ்வளவு விளக்க முயன்றாலும் அதற்கும் அப்பால் இருப்பது என்றும் அவ்வாறே இருக்கும். அதை விளக்க முற்படுவது அதை ஒருவகையில் மலினப்படுத்துவது என்றே எண்ணுகிறேன். உரையின் பல இடங்களில் நீங்கள் உங்களிடமே பேசிக்கொள்வதைப்போல உணர்ந்தேன். இசைஞானி உண்மையிலேயே ஞானி(mystic) தான் என்று சட்டென ஒப்புக்கொண்டீர்கள், பின்னர் அதற்கு மேல் பேசவோ விளக்கவோ கூடாதென உரையை முடித்துக்கொண்டீர்கள்.

10ம் தேதி அன்று முன்னரே கைப்பேசியில் வரைந்த மீனாக்ஷி கனவு ஒவியத்தை கேன்வாஸில் வரைந்தேன். நான் வரைகையில் என்னை அறியாத ஏதோ ஒரு உந்துதலில் தான் எப்போதும் வரைகிறேன். இதுவரை அனைத்து ஓவியங்களையும் ஓரே மூச்சில் 15 முதல் 30 நிமிடங்களில் வரைந்தவை (இத்தனை வேகத்தில் வரையவைப்பதும் அதுவே)வரைந்தபின் திரும்ப அதில் எந்த மாற்றங்களும் செய்ததில்லை.

மீனாக்ஷி கனவு வரைந்து முடித்ததிலிருந்து ஒரு கேள்வி ஓடிக்கொண்டேயிருந்துத- இதை எப்படி புரிந்துக்கொள்வார்கள், இவ்வோவியங்களை எவ்வாறு விளக்குவது? முன்னர் இக்கேள்விகளுக்கு இப்படி பதில் சொல்லிவந்தேன்- சொற்களைக் கொண்டு விளக்க முடியுமென்றால் பின்னர் நான் ஏன் வண்ணங்களால் அதை வடிக்கப்போகிறேன், அது ஒவியம் என்ற வகையிலேயே பொருள்கொள்ளதக்கது, அதை சொற்களால் அளவிட முடியாது.

இப்போது யூடியூபில் இந்த உரையை கேட்டவுடன் சில விஷயங்களை விளக்காமல் விட்டுவிடுவதே நன்றென புரிகிறது, அவற்றை விளக்கவும் முடியாது, கூடாது.

இவ்வருடத்தில் நான் வரைந்த சில ஓவியங்களை உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்.

ஸ்ரீராம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2021 11:31

கொற்றவை எனும் புதுக்காப்பியம்-சூர்யப்ரகாஷ்

கொற்றவை வாங்க

அன்புள்ள ஆசிரியருக்கு,

சித்திரை புத்தாண்டில் மதுரையில் நடைபெற்ற குக்கூ அமைப்பின் நூல் வெளியீட்டு விழாவில் தங்களை சந்தித்து உங்களது சொற்பொழிவை காண நேர்ந்தது என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. கொற்றவை நாவலில் தங்களது கையெழுத்தை பெற்றுக்கொண்டேன் கொற்றவையை வாசித்துவிட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன்.

உண்மையில் தங்களை காணும்பொழுது அங்கு ஜெயமோகன் என்ற மனிதர் மறைந்து விஷ்ணுபுரமே எழுந்து என் கண்முன்னே பேசிக்கொண்டிருந்ததான பிரமிப்பு எழுந்தது…….கொற்றவையை வாசித்தபின் அந்த பிரமிப்பு இன்னும் பெரிதாகிவிட்டது….உண்மையில் கொற்றவைக்கும் விஷ்ணுபுரத்திற்கும் முன்பு நீங்கள் சாதரண மனிதராக இருப்பதை நான் விரும்பவில்லை….ஆனால் மேலும் மேலும் தங்களின் படைப்புகளை வாசிக்க வாசிக்க உங்கள் மீது எனக்குள் உருவாகும் பிம்பம் வளர்ந்துகொண்டே வருகிறது.

சரி விஷயத்திற்கு வருகிறேன்…..தங்களை நிறைய படித்திருக்கிறேன் உங்களது ப்ளாக்கை வாசிக்காமல் என் நாளை நான் துவக்குவதேயில்லை. விஷ்ணுபுரத்தை பற்றி கடிதம் எழுதலாம் என்றால் அஜிதனின் வாதம் நிகழும் இடம் எனக்கு இன்னும் புரிபடவேயில்லை அல்லது அதை புரிந்து கொள்ளும் தகுதி எனக்கு இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறேன். ஆதலால் அதைக்குறித்து எதையும் இக்கடிதத்தில் நான் எழுதப்போவதில்லை.

மேலும் கொற்றவை எனக்கு ஐந்து வருடங்களுக்கு மேலாக போக்குகாட்டிக் கொண்டிருந்தது நானும் அதை முட்டி மோதி எப்படியாவது அதன் சுவையை உணர்ந்துவிட வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தேன் அதற்கு சரியான சமயமாக வாய்த்தது இந்த கொரோனா காலம் இதில்தான் ஜெயமோகன், தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், இவான் துர்கனேவ், ஆண்டன்செகாவ், காந்தி, தேவதேவன், வண்ணதாசன், பஷீர், தொ.பரமசிவன், ஓஷோ மிகெய்ல் நெய்மி என பலரை வாசிக்க நேரம் வாய்த்தது. தனிமையும் அசுரத்தனமான வாசிப்பும் என்னுடைய வாசிப்புத்தன்மையின் தரத்தை உயர்த்தியிருக்கிறது என்று உணர்கிறேன், இதற்க்கு இந்த நோய்த்தொற்று காலத்திற்க்கு தான் நான் நன்றிகூறவேண்டும்.

கொற்றவை குறித்த என் பார்வையை எழுதும் அளவிற்கு எனக்கு தகுதியிருப்பதாக நான் நினைக்கவில்லை…ஆனால் தங்கள் கூற்றுக்கேற்ப நான் வாசிக்கும் எந்த நூலைப்பற்றியும் விவாதிக்காமலோ எழுத்தாக கருத்துநிலையாக உருவாக்கிக்கொள்ளாமலோ நான் கடந்துசெல்வதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு ப்ளாக் கணக்கை துவங்கி எழுத முற்பட்டிருக்கிறேன். (கதைகளையும் கட்டுரைகளையும் கூட எழுத முயல்கிறேன் என்பதையும் அச்சத்துடன் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்) இன்னும் சில எனது தனிப்பட்ட கேள்விகளை தங்களிடம் எழுப்ப வேண்டும் என ஆசை பிறிதொரு கடிதத்தில் அதைக்குறித்து எழுதுகிறேன்.

கொற்றவையை “The Burning Book” என உருவகித்து உங்கள் வாசகர் எழுதிய கடிதம் எனக்கு பிடித்திருந்தது, மெய்யாகவே அது வாசித்தால் பற்றிக்கொள்ளும் அனல் மிகுந்ததாக எரிந்தது. கொற்றவையை வாசிக்கும் முன்பு ஒரு முன்னேற்பாடாக இருக்கட்டும் என அதைக்குறித்து தங்கள் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் அனைத்தையும் வாசித்துவிட்டே நூலைப்படிக்கத்துவங்கினேன்.

வாசித்தபின்பு கொற்றவை எனக்கு என்ன கொடுத்தது என்று கேட்டால் பெண்கள் மீது ஒரு பெரிய மதிப்பும் மரியாதையையும் உண்டுபண்ணிவிட்டது எனலாம் அல்லது நான் ஆணாக இருப்பதாலேயே பெண்களை நான் எப்படிப்பார்க்கிறேன் என்பதை எனக்கு சுட்டிக்காட்டும் விரலாக கொற்றவை தோன்றிற்று. என்னவோ சூர்யப்ரகாஷ் கொற்றவைக்குபின் ஒரு புதிய சிந்தனைத்தளத்திற்குள் நுழைந்துவிட்டிருக்கிறான் என்பதே உண்மை.

நல்ல சினிமாக்களை பார்க்கும் வழக்கம் உண்டென்பதாலேயே கொற்றவையின் பல பகுதிகளை சிறந்த சினிமாவாக காட்சிப்படுத்தும் தளங்களை கொண்டிருப்பதாக தோன்றிற்று. முக்கியமாக “எரி” பகுதியை மட்டும் காட்சிப்படுத்தமுடிந்தால் அது க்ளாடியேட்டர், ட்ராய் போன்ற பல படங்களுக்கு சவால் விடும் வகையில் சிறந்த வரலாற்று சித்திரமாக எடுக்கப்பட இயலும். இவ்வாறேல்லாம் கற்பனை செய்தவாறே “இப்டி பண்ணா எப்டியிருக்கும்…….அப்டி பண்ணா எப்டியிருக்கும்” என்று கற்பனை செய்தவாறே பொழுதைக்கடத்தினேன்.

இக்கடிதத்தில் நான் எவ்வளவு எழுதினாலும் கொற்றவையை பற்றி என்னால் முழுதாக என் பார்வையை எழுதிவிட முடியாது அது என்னுள் உணர்வாகி உறைந்துவிட்டிருக்கிறது என்பதே உண்மை. எப்படி இமயத்தின் அழகை நாம் வார்த்தைகளில் உண்டாக்கிவிடமுடியாதோ அப்படி ஒரு அதிர்வை கொற்றவை எனக்கு அளித்தது.

உண்மையில் கொற்றவை என்றால்………

மூவகைதீயும் முறைகொண்டு ஆளும் மண்ணில் சூழ் கொண்டவளே கொல்தவை

சிலப்பதிகாரம் என்பது வெறும் மதிப்பெண்ணிற்காக சிறுவயதில் என்மீது திணிக்கப்பட்ட ஒன்றாக மட்டுமே எண்ணியிருந்திருக்கிறேன் மேலும் அது என் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதினாலேயே அதன்மீது ஒரு வெறுப்பு உருவாகிவிட்டிருந்தது. சிறு வயதில் ஏற்பட்ட அந்த வெறுப்பே பிற்காலத்தில் அதன்மீது காதலுண்டான பொழுது அதை கற்கவியலாமல் அதை சுவையை ருசிக்கமுடியாதபடி தடையாக மாறிவிட்டிருந்தது. பெருஞ்சிரமத்திலெயே இன்று தமிழை நான் மீண்டும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

சிலப்பதிகாரம் கண்ணகியின் கோவலனின் கதையாக நமக்கு முன்னரே வாய்மொழிக்கதையாக மட்டுமே அறிமுகமாகியிருக்கும் அதிலுள்ள கருத்துக்களையும் அது கூறமுற்படும் நீதியையும் நாம் அறிகிறோம். ஆனால் சிலப்பதிகாரம் வெறும் நீதிக்கதை மட்டுமேயல்ல அது தமிழ்க்குடியின் தொன்மையை பாடும் ஒரு பெரும்குரல், நம் தொல்குடியின் அதன் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு காலக்கண்ணாடி.

வரலாறாக நாம் அறிவதெல்லாம் நமக்கு நம் முன்னொர் கூறிச்சென்ற கதைகளேயாம், ஒவ்வொரு சமூகமும் தன்னை பற்றிய தகவல்களை வரலாறாக எழுதிவைத்துவிட்டோ கற்கோவில்களை உருவாக்கியோ சொல்லில் முடிந்துவைக்கும் கதைகளாகவோ பிற்கால மக்களுக்கு விட்டுச்செல்கின்றன அதன் தொன்மையை நாம் புரிந்துகொள்ள நமக்கு மொழி என்னும் கருவி தேவை ஏனெனில் காலம் தோறும் உருமாறினாலும் சிறிதும் அழியாமல் தன்னை புதுப்பித்துக்கொண்டு நம்முடன் இருப்பது அதுவே, அது நம் மூதாதையின் குரல்வளையிலிருந்து ஒலித்து பின்னர் எழுத்துருவை அடைந்து வளர்ந்து சொல்லாகி வார்த்தையாகிப் பெருகி சொல்வளர்காடாக மாறி நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அந்த மொழியில் இருப்பது வெறும் ஒலியல்ல அது நம் மூத்தகுடிகளின் ஆன்மா. அந்த எல்லையற்ற இருப்பில் இருந்து அவர்கள் பெற்று நமக்களித்தது.

வரலாற்றுணர்வு என்றால் என்ன என்பதே நமக்கு தெரியவில்லை, கற்பது ஆங்கில அல்லது தமிழ்வழிக்கல்வியானாலும் எங்கும் எவரும் மோகமுற்றிருப்பது ஐரொப்பிய நாகரீகத்துணுக்குகளின்மீதான வேட்கையே. நமது மரபை நம் சந்ததியினர் அறிந்துகொள்வதற்கான சாத்தியம் இம்மண்ணில் பிறக்கும் குழந்தையின் தாய்தந்தையிடமிருந்தே துவங்குகிறது, முற்காலத்தில் அனைவரும் தம் குடியின் தொல்கதைகளை கேட்டு வளர்ந்தார்கள். இன்று அப்படி கதைசொல்லும் ஆட்கள் அனேகமாக அழிந்துவிட்டனர் அவர்களின் இடத்தை காட்சியூடகமும் திரைப்படங்களும் எடுத்துக்கொண்டுவிட்டன. ஆனால் இன்றும் மக்கள் பலர் தங்கள் வரலாற்றை தெரிந்துகொள்ளவிழைகின்றனர் ஆனால் மொழி அவர்களை திகைக்க வைக்கும்படியான ஆழத்திற்குள் சென்றுவிட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தை நான் வாசிக்க முயன்றபோது ஏற்பட்ட கடினமான களைப்புறச்செய்யும் செய்யுள்கள் அதன் அர்த்தத்தை நான் புரிந்து கொண்டாலும் என்னால் அதை சுவைக்க முடியவில்லை அது அன்னியமான ஒரு மொழியில் இருப்பதான மயக்கம் எனக்கு எற்பட்டது. புதுக்கவிதையில் திளைத்திருந்த எனக்கு அந்த மரபுக்கவிதை கொடுக்கும் நெருக்கடி இதுவென உணர்ந்தேன் ஆனால் என் மாதிரியான ஆட்களுக்கே ஜெயமோகனை போன்ற வரலாற்று மனிதர் சிலப்பதிகாரத்தின் காவியத்தன்மை மாறுபடாமல் சிறிதும் கவித்துவம் குறையாமல் அதை மீட்டு சமைக்கிறார்……வாசிக்கும் அனைவருக்கும் சொல் எவ்வளவு சுவையானது என்று உணரும்படியும் இதை எழுதியிருப்பது நிச்சயம் இது ஒரு புதுக்காப்பியம் என்று சிலிர்க்க வைக்கிறது.

கொற்றவை   எனும்   புதுக்காப்பியம்

வழக்கமாக ஜெயமோகன் என்று எந்த புத்தகத்தில் பெயர் இருந்தாலும் அதை எடுத்து படித்துவிடுவது என்று ஒரு வழக்கம் வைத்திருந்தேன் இப்படி ஒரு நாள் கிளை நூலகத்தில் தேடிக்கொண்டிருந்த பொழுது கையில் அகப்பட்டது இந்த கொற்றவை அப்போது நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன், ஆர்வத்தில் அதை வீட்டிற்க்கு கொண்டு வாசித்துவிட முயன்று தோற்றேன்.

ஆனால் பல நாளாக எனக்கு கொற்றவை என்னும் பெயரில் ஒரு ஈர்ப்பு இருந்தது, அதன் பிறகு தங்களின் மற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் படித்து அடுத்த கட்டமாக பிற ருஷ்ய ஆங்கில எழுத்திற்குள் சென்றாயிற்று, தமிழில் பிற எழுத்தாளர்களை வாசித்திருந்தாலும் தங்கள் அளவிற்கு என்னை வேறு எவரும் வசீகரிக்கவில்லை…

முன்பு அசோகமித்திரன் எங்கோ சொன்னதாக தங்கள் தளத்தில் படித்த நினைவு  ”ஒவ்வொரு ஐம்பது வருட்த்திற்கும் ஒரு எழுத்தாளர் அதிக வாசகர்களின் வாசிப்பில் தாக்கம் செலுத்துவார் அன்றைய ஜெயகாந்தனைப்போல இன்றைய காலத்தில் ஜெயமோகன்”……. விஷ்ணுபுரத்திற்கு பின் நான் உணர்ந்தேன் கொற்றவைக்கு நான் தயாராகிவிட்டேன் என உடனே வாசிக்கத்துவங்கிவிட்டேன்.

கொற்றவை எனும் பழந்தமிழரின் போர்த்தெய்வம் கண்ணகி எனும் கற்பரசியின் மூலம் அறம் பிறழ்ந்த மண்ணை அவியாக்கும் பொருட்டு புகாரில் பிறந்து கோவலனை மணந்து பின் பல அலைக்கழிப்பிற்க்கு பின் கொண்டவனை இழந்து மதுரையை எரித்து பின் சேரம் சென்று தெய்வமாகிறாள். நாம் அறிந்த கதையாயினும் அறியாத நம் முன்னோர்களின் வாழ்க்கையை தமிழ் மொழியின் தோற்றம் முதல் கடல் கோளால் அழிந்து தற்போதைய தமிழ்நிலம் உருவாகும் வரை உள்ள வரலாற்றையும் புனைவூடாக வெளிக்கொணர்கிறது.

இப்புதுக்காப்பியம் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது நிலம், நீர், காற்று, எரி மற்றும் வான். அனைத்திற்கும் அடுத்து சிலப்பதிகார வரிகள் இடம் பெற்றுள்ளன “பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று தொடங்கி “மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்றிகந்த கோமகளும் தாம் படைத்த கொற்றகத்தாள்” என பொருந்தியுள்ளன.

இதுவரை காப்பியத்தை படித்திராத வாசகர்களுக்கு இந்த நூல் பாணர்பாடியது, குலக்கதை சொன்னது, பழம்பாடல் சொன்னது என புதிய யதார்த்தத்தினுள் தள்ளுகிறது, அதில் குறிப்பிடப்பெறும் கடல்கொண்ட கன்னி நிலம், கபாடபுரம்,குமரிக்கண்டம் என தென் தமிழ் நிலத்தின் தொன்மகதையை விளக்க முயல்கிறது. வாசிக்கும் பொழுது நாம் ஒரு போதும் அறியமுடியாத லெமூரிய மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் மனவோட்டத்தையும் உணரமுடிகிறது, பல முறை கடல்கோளால் அலைகழிப்பிற்கு உள்ளாகும் அம்மக்களின் கனவில் கடல் ஒரு அச்சுறுத்தும் நீலமாக ஒளிர்ந்தபடியே இருப்பதை காணமுடிகிறது.

பின் இன்று நாம் வணங்கும் சிவன், திருமால், முருகன் மற்றும் விநாயகர் எனும் பெருந்தெய்வங்களின் தோற்றம் குறித்து உணர்த்தப்படும் செய்திகள் அதிர்ச்சியை உண்டுபண்ணுவதாக உள்ளது உதாரணமாக சேவல் இலச்சினை ஏந்திய முருகன் எனும் பழங்குடித்தலைவன், காளை மாட்டின் மேல் அமர்ந்து மலையிறங்கி வரும் சிவன் என என் வீட்டில் உள்ள தெய்வங்களை நான் நேரில் சந்திக்க முற்பட்ட்து போன்ற உருவெளியை உண்டாக்கியது.

”அன்னையின் பெயரன்றி எப்பெயருமே இவளுக்கு உகக்காது. கண்ணகையின் அருள் நகை பெற்ற இவள் பெயர் கண்ணகை.” என துவங்கும் கண்ணகியின் தோற்றம் பின் அவள் சாக்கிய நெறியில் தெய்வமாகும் வரை அவள் மீது ஒரு யக்‌ஷியின் பராசக்தியின் கவர்ந்திழுக்கும் தன்மையும் அதே சமயம் கதை நெடுக அவள் ஒரு மனித உருவில் உள்ள ஒரு தெய்வம் எனும் பயம் கலந்த உணர்வை அளித்தது.

நான் ஒரு ஆணாக இருப்பதாலேயோ என்னவோ நாவலில் பல இடங்களில் என்னை நான் கோவலனாக உணர்ந்தேன், அதுவும் கண்ணகியை அழைத்துக்கொண்டு மதுரை செல்லும் வழியில் மாதவியின் மடல் கிடைக்கிறது அப்போது அதை முன்பே தெரிந்து கொண்ட கண்ணகியை “நீ புகார் விட்டுவந்த கண்ணகியே அல்ல” என்பான் அதற்கு மறுமொழியாக “ஆம் நீண்ட தூரம் வந்துவிட்டேன்” என அவள் கூறும்போதும், பின்னர் “மாதவியை பிழையாக எண்ணிவிட்டேன்” என கோவலன் கூறியபோது……..

கண்ணகி ”இல்லை. காதலியின் கற்பைப்பற்றி உள்ளூர அறியாத காதலர் உண்டா? அவளை நீங்கள் எப்போதும் அறிவீர்கள். அவளே குலமரபு கிளத்தும் பெருங்கற்புள்ளவள். தெய்வம் தொழாது கொழுநனை தொழுதெழுந்தவள். ஆதிமந்தியின் வழிவந்தவள்…..”

கோபத்துடன் கோவலன் கண்ணைச்சுருக்கியபடி “நீ?”

”நானறிந்த தெய்வங்களே வேறு” என கண்ணகி மறுமொழிகையில் அவள் முகத்தில் தழலாட்டம் தெரிந்து மறைகிறது. அப்போது கோவலன் அச்சத்துக்கு ஆளாகிறான்.

அதன்பிறகு கோவலன் கொலையுறும் வரையில் நான் ஒரு அச்சத்துடன் தான் கண்ணகியை பார்த்துக்கொண்டிருந்தேன். நாவல் முடிவுற்றபொழுது என்னைச்சுற்றியுள்ள அனைத்து பெண்களுக்குள்ளும் ஒரு கண்ணகி ஒளிந்திருப்பதை உள்ளூர உணர்ந்தேன்.

அதிலும் குறிப்பாக அணங்கெழு காதையில்…

கோவலன் கொலையுண்டபின் அவனது உடலை காணும் சுற்றியிருந்த மக்களிடம்…..

எரிதவழ் முகம்மீது படிந்த கருங்குழலை ஒதுக்கி, தலைதூக்கி அரிமா என முழங்கிய குரலெழுப்பி கண்ணகி கேட்கிறாள் “சான்றோர் என எவரும் உளரோ இங்கு?” அக்கணம் வரை தங்களை சான்றோர் என உணர்ந்த அனைவரும் உளம் சிறுத்து தலைகவிழ்ந்தனர். “ஆடவரில் சான்றோர் என ஒருவர் உண்டோ?” என கொற்றவையின் குரல் எழுந்தது…..இங்கே கண்ணகி மறைந்து கொற்றவை வெளிப்படுகிறாள்.

இரு கரங்களையும் விரித்து வெறிபொங்கும் பெருங்குரலில் அன்னை கேட்டாள் “பத்தினி என எவரேனும் உளரோ இங்கு?” அக்கணமே அங்கு நின்ற அத்தனை பெண்களும் எரிதழல் வடிவாயினர் “பெண்டிரில் பத்தினி என உண்டோ?” என்றாள் அவள்.

தன் கணவனின் குருதியில் பாதம் நனைத்து நின்று கன்னி கேட்டாள் “தெய்வம் என ஏதும் உண்டோ இங்கு?”…….

ஆழ்ந்த அமைதியில் இருந்து பதிலுக்கு வந்தது ஒரு வெறிக்குரல். முகிழா இளம்முலைக்கன்னி ஒருத்தி அணங்கெழுந்து ஆடிவந்து கூவினாள். அவள் குரலில் ஒலித்தது தென்புலத்தெய்வங்களின் மொழி விலங்குகளும் மனிதர்களும் ஒன்றாகபேசிய பெருமொழி. மொழிகளைச்சூலுற்ற முதல் மொழி.

பின் அப்பகுதியெங்கும் பெண்ணுடல்களில் சன்னதம் கொண்டு வெளிக்கிளம்பி வந்தனர் மண்ணிலும் மொழியிலும் காலத்திலும் கனவிலும் புதைந்து கிடந்த ஆயிரமாயிரம் தொல் மகளிர். நீர் மகளிரும் கான் மகளிரும், வான் மகளிரும் பெருங்குரல் கொண்டெழுந்தனர். திசையெட்டும் நிறைந்தென அணங்குகள், பாவைகள் பேய்கள், கண்சுடர் எரிந்த பிடாரிகள், கொடுஞ்சிரிப்பெழுந்த குலதெய்வங்கள். அங்கே திணிந்து நெரிந்த உடற்திரளுக்குள் அலையடித்த ஆழ்கடல் பிளந்து வந்தபடியே இருந்தன.

இங்கு கண்ணகி ஐவகை நிலத்தின் மூதன்னையரின் அருள்பெற்று வெறும் தழலாக உருப்பெற்று தொடும் அனைத்தையும் அவியாக்கும் தீயாகி தன் சிறைமீறி எரிமலரிதழில் இலங்கும் இறைவடிவமாகி மதுரையை எரிக்கிறாள்.

இவ்வாறு அணங்கெழு காதையிலும் எரிகொள் காதையிலும் ஆயிரம் பெண்தெய்வங்கள் எழுந்து வரும் ஒரு போர்க்காட்சி கண்ணுக்குள் விரிந்தது. ஆயிரம் அமேசான்பெண்கள் போருக்காக எழுந்து நிற்கும் காட்சியை எனக்குள்ளே எழுப்பிப்பார்த்துக்கொள்கிறேன்.

கொற்றவையின் மாந்தர்

இது தவிர என்னை மிகவும் கவர்ந்த பாத்திரமாக கவுந்தியடிகள் இருக்கிறார் அவரை நீலியாக உருவகப்படுத்தி கண்ணகிக்குள் இருக்கும் தெய்வத்தை நெருப்பை வெளிக்கொணரும் ஒரு நிமித்தமாக இருப்பதும், கண்ணகிக்கு நீலி கூறும் விஷயங்களாகட்டும் ஓவ்வொரு நிலத்தை கடக்கையிலும் அவளுக்கு அந்நிலத்தை முழுவதுமாக காண அந்நிலத்திற்குரிய உயிரினத்தின் கண்களைக்கொடுப்பதாகட்டும் அனைத்து இடங்களிலும் வியக்க வைக்கிறார்.

என்னை ஆச்சர்யப்படுத்திய விடயங்களாக இருப்பது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என பாடிய தமிழ் நிலத்தில் ”உரிமாக்கள்” என மக்களை அடிமைகளாக வட நாட்டிற்க்கு விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் மறவர் குலம் பிற குடிகளின் சொத்துக்களை கொள்ளையடிப்பதும் விதைநெல்களைக்கூட விட்டு வைக்காமல் கவர்வதை நெறியாக கொண்டிருப்பதும் வியப்பளிக்கத் தவறவில்லை.

புறஞ்சேரியில் வேதத்தை துறந்த அந்தணர் வாழ்வதும், பாலை நிலத்தில் தெய்வமான குமரியன்னை என்ற குறியீடும், நீருக்குள் வாழும் நீரர மகளிர் என்ற தொன்மமும் ஐயப்பனான இளங்கோவடிகளும் புதிராக தோன்றியது, ஒருவேளை இவைகளை விளங்கிக்கொள்ள இன்னும் பல மீள்வாசிப்பை நான் நிகழ்த்தவேண்டும் என்பதுபோல்.

கொற்றவையின் தமிழ் .

என் தந்தையார் கொற்றவையின் சில பகுதிகளை மட்டும் படித்துவிட்டு ”என்னடா இது ஒன்னுக்கொன்னு சம்பந்தமே இல்லாம இருக்கு!!!!!” என்றார். நான் சிரித்தபடி ”அப்படின்னா உங்களுக்கு வாசிப்பு போதவில்லைன்னு அர்த்தம்” என்றேன். உண்மையில் கொற்றவையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியுமா என்று கேட்டால் போதுமான வாசிப்பு பயிற்சியும் தமிழார்வமும் இருந்தால் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் தான் இப்புதுக்காப்பியம் எழுதப்பட்டிருக்கிறது.

கொற்றவையின் மொழி தமிழ்தான் எனினும் சில வார்த்தைகளை புரிந்துகொள்ள நாம் கவிதையை அணுகும் வகையில் அணுக வேண்டியுள்ளது மேலும் பாணர் பாடியது என வரும் பகுதிகளிலும் “தீயுண்ணவே தீய்மை எனவும் உண்பதால் தூய்மை எனவும்” என்ற வரிகளில் உள்ள பொருள் நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது…..இது வெறும் கண்ணகி கோவலன் கதையல்ல இது என்னுடைய கதை இந்த மொழியின் மைந்தர்களாகிய அனைவரின் கதை என சில வரிகளில் நாம் புரிதலுக்குட்படுகிறோம்.

தமிழ் மொழியின் தொன்மை பற்றி கொற்றவையில் “உண்பதும் உண்ணப்படுவதும் என இருநிலைகொண்டு கண்முன்விரிந்த அம்மண்ணிலிருந்து ஒலிகளைப் பெற்றுக்கொண்டார்கள். “அ, இ, உ” என்ற மூன்று ஒலிகளால் உரையாடாத தருணங்களில் ‘ம்” என்ற அமைதியை கேட்டார்கள். ஒலியையும் ஒலியின்மையும் கலந்த வானையும் மண்ணையும்  கடலையும் சுட்டுவதற்காக அந்நான்கையும் கலந்து “ஓம்” என்ற ஒலியை அடைந்தார்கள். அச்சத்திலும் மகிழ்விலும் துக்கத்திலும் அப்பெரும் வல்லமைகளை அவ்வொலி சுட்டியது. அவ்வொலி அவர்களுடன் இருந்தது, கனிந்த முதுமூதாதையரின் அருள்போல………” இவ்வாறு தமிழ் தன்னை தமிழ் என அறிந்து கொண்ட நிகழ்வை ஆசிரியர் விவரிக்கும் பொழுது ‘ஆதியில் வார்த்தை இருந்தது….அந்த வார்த்தை தேவனாயிருந்தது…” எனும் ஆதியாகம வசனம் சட்டென மனதில் தோன்றி மறைவதைக் கண்டேன்.

காற்று என துவங்கும் பாகத்தில் ”சொற்களை பொருளுள்ளவையாக்கும் தெய்வங்கள் வான் துழாவும் ஒளிச்சிறகுகளுடன் பறந்தலையும் வெளியே காற்று” எனவும் “பாணர் பாடும் பாடல்களைக் காற்றே அறியும். ஏனெனில் நேற்றையும் இன்றையும் நாளையும் இணைத்துக்கொண்டு ஒயாது ஓடும் காலத்தின் மூச்சல்லவா அது?” என காற்றின் தன்மைகளை வாசிக்கையில் Space and Time continuumக்கு இதைவிட சிறப்பான கவித்துவமான விளக்கத்தை யாராலும் கொடுக்கவியலாது எனத்தோன்றியது.

சொல்லால் அழியும் துயர் என பாரதி கூறினான், சொல் தரும் சுவை அல்லது இன்பம் என்பது என்ன என்று கவிதையையும் இலக்கியத்தையும் தீவிரமாக பயில்பவர்கள் உணர்வார்கள், கொற்றவையை முதன்முறை வாசிப்பவர்கள் இதன் மொழியை ஒருதடையாக உணரலாம் ஆனால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்படுகையில் நிச்சயம் அனைவரையும் கவரும் கவித்துவமும் தொன்மமும் நிறைந்த புதினமே இது.

கொற்றவையும் நானும்                     

கொற்றவை எனக்கு அளித்தது என்னவென்று வினவினால்? என்னுடைய புத்திக்கும் தமிழ் மெய்யியலில் எனக்குள்ள ஆர்வத்திற்க்கும் ஏற்ப அது தன் தோற்றத்தின் ஒரு பகுதியை வெளிப்படுத்தியது என்றே உணர்கிறேன், தத்துவம், ஆன்மிகம் தொடர்பான தேடுதல்கள் தகுதிக்கேற்பவே அதன் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்…. ஆனால் கொற்றவை நாவலாக அனைத்து தமிழர்களையும் அவர்களின் வேர்களோடு மரபோடு இணைக்கும் ஒரு மாயச்சரடு ஆகும். கொற்றவையைப்பற்றி நான் எவ்வளவு எழுதினாலும் என்னால் எழுதமுடியாத ஒரு உச்சத்தில் இப்படைப்பு நிற்கிறது.

சொற்களை விஞ்சும் உணர்வாக என்னுள் இது என்றும் அதிர்வாக இருக்கிறது. சிலப்பதிகாரத்தை எல்லையாகக் கொண்டாலும் இது வழிநூலாக இல்லாமல் புனைவை பல இடங்களில் நிரப்பியபடி ஒடும் புதிய சிலம்பாகும். உதாரணத்திற்கு சிலப்பதிகாரம் அதன் புனைவில் கண்ணகியை இறுதியில் வானூர்தியில் கோவலனுடன் விண்ணேறிய தெய்வமாக காட்டப்பட்டது கொற்றவையில் அவள் சாக்கிய நெறியில் மொட்டையடித்துக்கொண்டு பல ஆண்டு தவத்திற்க்குபின் அவள் சமாதியடைவதாக புனையப்பட்டுள்ளது. இவ்வாறு தனக்கு முன் உள்ள சிலம்பை உடைத்து புதிய சிலம்பை ஜெயமோகன் வெளிக்கொணர்ந்ததாக.

உருவாக்கப்பட்ட சிலம்புகள் அனைத்தும் உடைபடுவதற்கே……..

ஆம்..அவ்வாறே ஆகுக.

இன்னும் பல உரையாடல்களை தங்களிடம் நிகழ்த்த வேண்டும் என்ற காதலுடன்,

-சூர்யப்ரகாஷ் பிச்சுமணி

மதுரை.

கொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை

கொற்றவை, மானுட அழிவின் கதை

கொற்றவை- கடிதம்

கொற்றவை தொன்மமும் கவிதையும்

திருப்பூர், கொற்றவை- கடிதம்

கொற்றவை -கடிதம்

அக்னிநதி, கொற்றவை -கடிதங்கள்

கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)

வெள்ளையானையும் கொற்றவையும்

கொற்றவையின் தொன்மங்கள்

கொற்றவையின் நீலம்

கொற்றவை ஒரு மீள் வாசிப்பு

கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.

கொற்றவை-கடிதங்கள்

கொற்றவை பித்து- 3

கொற்றவைப் பித்து- 2

கொற்றவை பித்து-1

கொற்றவை- கனவுகளின் வெளி

கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை

கொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்

வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா?

கொற்றவை ஒரு கடிதம்

கொற்றவை-கடிதம்

காடு, கொற்றவை-கடிதங்கள்

கொற்றவை – ஒரு கடிதம்

கொற்றவையும் சன்னதமும்

கொற்றவை கடிதம்

கொற்றவை-கடிதம்

கொற்றவை, ஒரு கட்டுரை

கொற்றவை-கடிதம்

விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

கொற்றவை கடிதம்

கொற்றவை

கொற்றவை – ஒருகடிதம்

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை- ராமபிரசாத்

கொற்றவை,கடித ங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2021 11:30

June 15, 2021

ஏர்போர்ட்!

“மலிவான விமானம்னு சொன்னோமே. விமானத்தை இப்பல்லாம் நிப்பாட்டுறதில்லை. தாழ்வா பறந்துட்டு அப்டியே மேலே போயிடுவோம். இறங்கிருங்க”

நாற்பதாண்டுகளுக்கு முன் என்னுடைய இருபது வயதில் ஒரு சோதிடர் நான் டவுன் பஸ்ஸில் செல்வதுபோல விமானங்களில் அலைந்து கொண்டிருக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தால் குமட்டில் குத்தியிருப்பேன். அன்று விமானம் என்றால் வானில் மிக உயரத்தில் பறக்கும் ஒரு வெள்ளிப்பொம்மை. ஆங்கில சினிமாக்களில் சுட்டுச் சுட்டு வீழ்த்தப்படுவது.

அன்றெல்லாம் நாங்கள் விமானங்கள் இல்லாத ஆங்கிலப்படங்களைப் பார்ப்பது இல்லை. ஆங்கிலப்படங்களின் செல்வாக்கு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. என் நண்பன் ராதாகிருஷ்ணன் “லைப்ஃலே ஒரு விமானத்தையாவது சுட்டு வீழ்த்தணும்டா” என ஏங்கினான்.

”நம்ம அபாய அறிவிப்புகளை அவங்களுக்கு வாட்ஸப் பண்ணியிருக்கணுமோ?”

நான் திகைத்து “நீ விமானத்திலே ஏறியிருக்கியா?”என்றேன்

“இல்ல”

“சரி, விமானத்தை பக்கத்திலே போய் பாத்திருக்கியா?”

“இல்லை”

“ஆனா சுட்டு வீழ்த்தணும், இல்ல?”

அதன்பிறகே அவனுக்கு அவனுடைய ஆசையின் அபத்தம் உறைத்தது. கிரிகரி பெக் படங்களைப் பார்த்துப் பார்த்து அவன் விமானங்கள் சுட்டுவீழ்த்துவதற்குரியவை என்று கற்பனை செய்திருந்தான்.

”ஸாரி, டிக்கட் போட்டவர் நூறு டாலர் கூடுதலா கட்டி உங்க சேர் பின்னாடி சாயவே கூடாதுன்னு தனியா சொல்லியிருக்கார்”

எழுபதுகளில் விமானப்பயணம் எல்லாருக்குமே கொஞ்சம் அரிதானதாகவே இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் ஏர்ப்போர்ட் என்ற பேரில் ஆர்தர் ஹெய்லி ஒரு நாவல் எழுதி அக்காலத்தில் வெறிகொண்டு வாசிக்கப்பட்டிருக்கிறது. விமானங்களைப் பற்றிய சினிமாக்கள் நிறைய வந்திருக்கின்றன. பறக்கும் விமானத்திலிருந்து இன்னொரு பறக்கும் விமானத்துக்கு கயிறுகட்டிச் சென்றார்கள். இல்லை, விஜயகாந்த் அல்ல.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் திருவனந்தபுரம் பார்க்க அழைத்துச் செல்வார்கள். அருங்காட்சியகம், உயிர்க்காட்சிசாலை, பூங்கா, அனந்தபத்மநாபசாமி கோயில், சங்குமுகம் கடற்கரை காண்பிப்பதற்கு நடுவே திருவனந்தபுரம் ஏர்ப்போர்ட்டும் உண்டு. விமானம் பெரும்பாலும் தரையில் நின்றிருக்கும். நாலைந்துபேர் சோர்வாக அங்குமிங்கும் நடமாடுவார்கள்.

”கவனியுங்க, ஏர்ப்போர்ட் ஸ்கானர் த்டீர்னு ஃபெயில் ஆனதனாலே முகத்த ஜெராக்ஸ் எடுத்துட்டு உள்ள அனுப்பிட்டிருக்கோம்”

நாங்கள் சலிப்பும் எதிர்பார்ப்புமாக அரைகிமீ தொலைவில் ஓர் இடத்தில் நின்றிருப்போம். சட்டென்று முழக்கம். விமானம் மேலேறி மறைந்துவிடும். அதை சரியாகப்பார்க்கவேண்டும். கமர்கட்டை சட்டைநுனியில் வைத்து கடித்து உடைத்து பங்குபோடுவதில் ஈடுபட்டிருந்த சலீலன் நிமிர்ந்தபோது விமானம் மேலே போய்விட்டது. அவன் கண்ணீர்விட்டுக் கதறி அழுதான்.

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஒருமுறை ஒரு பிளைவுட் விமானத்தை கொண்டுவந்து வைத்திருந்தனர். டிக்கெட் எடுத்தால் ஏறி அமரலாம். சீட்பெல்ட் உண்டு. விளக்கு உண்டு. அறிவிப்புகளின் குழறல், எச்சரிக்கை மணிகள், தொப்புளில் ஜிகினா ஒட்டிய ஏர்கோஸ்டஸ் பெண்பிள்ளை, அவள் தட்டில் கொண்டுவந்து தரும் சர்பத், டேக் ஆப் ஆகும் குலுக்கம் உலுக்கம், தட் என இறங்கி அமரும் ஓசை எல்லாம் உண்டு. பறத்தல் மட்டும் இல்லை. பின்னாளில் பல இலக்கியப்படைப்புகளை வாசித்தபோது அந்த பொருட்காட்சி விமானத்தை குறியீடாக எடுத்துக் கொண்டேன்.

”பயணிகள் கவனிக்கவும், விமானம் இறங்கப்போகுது. தயவுசெஞ்சு 58 டன் உலோகம் ஒரு கான்கிரீட் பரப்பிலே மணிக்கு 170 மைல் வேகத்திலே மோதி இறங்குறத கற்பனை செஞ்சுகிடவேண்டாம்னு கேட்டுக்கிடறோம்”

நான் முதல்முறையாக விமானத்தில் ஏறியது திருவனந்தபுரத்தில் நடந்த ஓர் இலக்கியவிழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டபோது. மலையாள இதழ் அது. அன்றுமின்றும் என் தந்தையின் இடம் அந்த இதழுக்கு உண்டு. வீடுகட்டி கடனில் இருந்தபோது தானாக அழைத்து கைகொடுத்த பிரசுரம். நான் ஆசைப்பட்டது தெரிந்திருக்கும், எனக்கு விமான அனுமதி உண்டு.

ஆனால் நான் இருந்தது காசர்கோட்டில். அங்கிருந்து எப்படி திருவனந்தபுரம் வருவது? விடமாட்டேன் என உறுதிகொண்டேன். காசர்கோடு அஸீஸ் டிராவல்ஸின் அப்துல் இக்காவை துணைகொண்டேன். டிக்கெட் போட்டுவிட்டேன்.

”நான் இங்க இருந்துகிட்டு இந்த ஐபாட் வழியா இந்த விமானத்தை ஓட்டமுடியும்னு சொன்னா நம்ப மாட்டீங்க”

அதன்படி அதிகாலையில் கிளம்பி மங்களூர் போனேன். அங்கே முழுநாளும் காத்திருந்து மாலையில் விமானம் ஒன்றில் ஏறி பெங்களூர் சென்றேன். அங்கே நள்ளிரவில் இறங்கி மீண்டும் இரவெல்லாம் காத்திருந்து அதிகாலையில் விமானம் ஏறி திருவனந்தபுரம் வந்திறங்கினேன். கண்கள் பல்ப் போலிருந்தன. சிந்தனைகள் ஒருமுகப்பட்டு கழிப்பறை என்னும் ஒருசொல்லாக மாறியிருந்தன.  வாந்திக்கு முந்தைய முகபாவனை உருவாகி இரண்டுநாட்கள் நீடித்தது.

நான் மங்களூரில் இருந்து பெங்களூர் சென்ற விமானம் பழைய டகோட்டா பாணி. அது ஒரு ரங்கராட்டினம்.அத்தனை காற்றுத்துளைகளிலும் விழுந்து எழும். மலர்தேடும் கோத்தும்பி போல மேகங்களில் இருந்து மேகங்களுக்குச் செல்லும். பின்னாளில் அபியின் அந்தர நடை என்ற கவிதைத் தொகுப்பின் அட்டையைப் பார்த்து அது டகோடா விமானத்தைப் பற்றியது என்று நெடுநாள் நினைத்திருந்தேன்.

”வணக்கம், உங்க பைலட் பேசுறேன். இன்னிக்கு நான் வீட்டிலே இருந்தே வேலைசெய்றேன்”

அதன்பின் பலவிமானப் பயணங்கள். 1991ல் நான் அருண்மொழியை மணந்தபோது அவளுடைய முதல் விமானப்பயணம். டெல்லிக்கு சம்ஸ்கிருதி சம்மான் விருது வாங்க. அவள் மருண்ட விழிகளுடன் “இவங்கள்லாம் கெட்டவங்களா ஜெயன்?”என்று என்னிடம் கேட்டாள். கேட்கப்பட்டவர் மேஜர் சுந்தரராஜன் சாயலில் சினிமா வில்லன் போலத்தான் இருந்தார், தொழிலதிபராக இருக்கவேண்டும்.

நான் பல விமானப்பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் அப்போது விமானப்பயணங்களில் கொந்தளிப்பான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன என அறியாமலிருந்தேன். ஆகவே தட்டில் வைத்து தரப்பட்ட முகம்துடைக்கும் டிஷ்யூவை ஒரு தின்பண்டம் என அருண்மொழிக்குச் சொல்லி அவள் முகர்ந்து பார்த்து “என்னமோ அமெரிக்க மணம் வருது வேண்டாம்”என்று மறுத்துவிட்டாள். அமெரிக்க நாகரீகத்துடன் ஒத்துப்போவதா வேண்டாமா என நான் தயங்கிக்கொண்டிருக்க அப்பாலிருந்த கனவான் அதை எடுத்து முகம் துடைத்து எனக்கு நல்வழி காட்டினார். நான் தின்பதைப் பார்த்து மற்றவர்கள் தின்னாமல் காத்தருளினார்.

”ஓர் அறிவிப்பு.யாரும் கவலைப்பட வேண்டாம், அத்தனைபேருக்கும் கம்ப்ளீட் இன்ஷ்யூரன்ஸ் கவரேஜ் உண்டு!”

எண்பதுகளில் ஏர் இந்தியா மட்டும்தான். அதுவும் நினைத்த நேரத்தில் போகும். போகாமலும் இருக்கும். வருபவர்களுக்கும் அவசரமெல்லாம் இல்லை. ஃப்ளைட் கேன்ஸல் என சகஜமாக அறிவிப்பார்கள். அவர்களும் “சீதா, இன்னிக்கும் ஃப்ளைட் கேன்ஸல்டீ… டிபன் எடுத்து வையி…”என போன் பண்ணி சொல்லிவிட்டு சாவகாசமாக கிளம்பிச் செல்வார்கள்.

விமானடிக்கெட் விலை மிக அதிகம். எனக்கு எழுநூறு ரூபாய் மாதச்சம்பளம் இருந்த காலத்தில் திருவனந்தபுரம் டெல்லி விமானச்செலவு நான்காயிரம் ரூபாய். இன்றைய கணக்கு என்றால் மூன்றரை லட்சம் வரவேண்டும். ஆகவே விமானங்களில் ஆளே இருக்காது. பலசமயம் ஏசுதாஸ் மட்டும் உள்ளே உட்கார்ந்திருப்பார். அவர் இண்டியன் ஏர்லைன்ஸின் செட்பிராப்பர்ட்டி போல.

”ரொம்ப செலவுகுறைஞ்ச விமானமா இருக்கே, டிக்கெட்டுக்கு எவ்ளவு குடுத்தீங்க?”

விமானம் ஏறும்போது சிலுவைபோட்டுக் கொள்வது, பிரார்த்தனை செய்வது வழக்கமாக இருந்தது. அதேபோல விமானம் இறங்கும்போது கைதட்டுவதும் எண்பதுகளில் வழக்கம். நான் நெடுங்காலம் இந்தியன் ஏர்லைன்ஸின் டப்பாக்கள் பறப்பதன் விந்தையைக் கொண்டாடுகிறார்கள் என நினைத்திருந்தேன். அது ஒரு வெள்ளைக்காரப் பழக்கம் என எழுபதுகளின் சினிமாக்களை மறுபடி பார்க்கும்போது கண்டடைந்தேன்.

விமானநிலையங்களும் ஓய்ந்து கிடக்கும். இறுக்கமான முகம் கொண்ட விஐபிக்கள் விஐபித்தனமாக செல்வார்கள். நாம் அவர்களை வாய்பிளந்து வேடிக்கை பார்க்கலாம், அதை அவர்கள் விரும்புவார்கள். ரொம்பவும் விஐபித்தனமாக இருப்பவர்கள் விஐபிகள் அல்ல , ஓஸி ஃபிளைட்டில் பயணம் செய்யும் அரசு அதிகாரிகள் என்பது தெரியும்.

”சாப்பாடு மோசமா? காப்டன் இப்ப ஜோக்கடிப்பார், அதக்கேளுங்க”

முதன்மை வாடிக்கையாளர்கள் விந்தையானவர்கள். நான் பயணம் செய்த ஒரு விமானத்தில் அன்றைய அமைச்சர் ஒருவர் கால்கள் இரண்டையும் மேலேற்றி வைத்து குந்தியே பெரும்பாலும் அமர்ந்திருந்தார்.அருகே துணைக்கு வந்த ஒருவனிடம் மிகமிக உச்சக்குரலில் கூவிப்பேசிக்கொண்டும் அடிக்கடி விமானப்பணிப்பெண்ணை “இந்தாடி… ” என அழைத்துக் கொண்டும் இருந்தார்.

அன்றெல்லாம் விமானம் ஏறியதுமே விமானப்பணிப்பெண்களை ‘பார்வையிடும்’ வழக்கம் உண்டு. அழகான பணிப்பெண்கள் அரிதினும் அரிது. அவர்களை அவர்கள் பார்க்காதபோது பார்ப்பது விமானப்பயண அனுபவத்தில் முக்கியமானது. பார்ப்பதை உணர்ந்தால் அவர்கள் வேண்டுமென்றே வேகமாக ஆங்கிலம் பேசி நம்மை சிறுமைசெய்துவிடுவார்கள்.

”குப்பை கலெக்ட் பண்றோம்…அஞ்சு டாலர் கட்டணம், அஞ்சு டாலர்”

விமான ஆங்கிலம் ஒரு மாயம். பணிப்பெண்களும் பைலட்டுகளும் எவ்வளவு விரைவாக ஆங்கிலம் பேசுகிறார்கள் என நான் வியந்ததுண்டு. அது ‘ஆஸ் ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ வகை ஆங்கிலம்தான், நாளுக்கு நாநூறுதடவை சொல்லி மனப்பாடமானது என தெரிய பல ஆண்டுகளாகியது.

ஆங்கிலம் விமானப்பயணத்தின் சிக்கல்களில் ஒன்று.  தமிழகத்தின் இளந்துடிப்பு அரசியல்வாதி ஒருவர் இயக்குநருக்கான தேசியவிருது வாங்கிய ஒளிப்பதிவாளருடன் முதல் விமானப்பயணம் செய்யும்போது “தம்பி அண்ணனுக்கு இன்னொரு பீர் வேணும்டா. இன்னொண்ணுன்னு எப்டி கேக்கிறது?”என்று கேட்டிருக்கிறார்

“ஒன்ஸ் மோர்னு கேளுங்கண்ணே”

அரசியல்வாதி ‘தங்கையை’ கைசுட்டி அழைத்து சொன்னார். “ஒன்ஸ் பீர்!”

”ஓர் அறிவிப்பு. எங்களோட மதிப்புக்குரிய முதல்வகுப்பு எலைட் கஸ்டமர்ஸ்  மட்டும் முதல்ல வாங்க”

இந்தியன் ஏர்லைன்ஸில் அன்று முற்றிய பேரிளம்பெண்கள் பணிப்பெண்களாக இருந்தனர். இப்போது கனிந்த மூதாட்டியர். நமக்கு சாப்பாட்டு பரிமாறிவிட்டு “கொட்டிக்கிட்டு தூங்குடா, கடன்காரா” என அதட்டிவிடுவார்களோ என்று பதற்றமாக இருக்கும்.

நான் ஒரே ஒருமுறை சிங்கப்பூர்-சென்னை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தேன். அது டவுன்பஸ் கூட இல்லை, ’பாஸஞ்சர் லாரி’ என ஒன்று ஆந்திராவில் ஓடுமே அது. ரீ ரீ என ஆரன் ஒலிகூட கேட்டுக்கொண்டிருப்பதாக பிரமை. வழியில் நிறுத்தி ‘மெராஸ், மெராஸே” என்று கூவி ஆளேற்றவில்லை, அவ்வளவுதான்.

”இது பிஸினஸ்கிளாஸ் தானே?”

முழுக்க முழுக்க குருவிகள். விமானம் மேலெழுந்ததுமே லுங்கிக்கு மாறினார்கள். பொட்டலங்களை விரித்து நடைபாதையில் கொட்டி பொருட்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். சிலர் நடைபாதையிலேயே படுத்துவிட்டார்கள். பணிப்பெண்ணை “யக்கா!’ என சொந்தமாக அழைத்தார்கள். பூசல்கள், சிரிப்புகள்.

பணிப்பாட்டிகளும் பாசமாக இருந்தார்கள். மேலும் ஒரு மிடறு பீர் கேட்டவனை “த சும்மா கெட” என அதட்டினார்கள். “டேய் சரவணா,  என்ன உத கேக்குதா உனக்கு?”என நல்வழிப்படுத்தினர். சென்னையை வந்தடைந்தபோது மொத்த விமானமும் ஆழ்துயிலில் இருந்தது. “டேய், கண்ணா, எந்திரிடா. ஊரு வந்தாச்சு பாரு” என்ற தொனியில் அத்தனைபேரையும் எழுப்பினார்கள்.

”அறிவிப்பு. விபத்து நடந்தா ஆக்ஸிஜன் மாஸ்க் கீழே வரும். கிரிடிட் கார்டை தேய்ச்சு அஞ்சு டாலர் பணம் கட்டி அதை நீங்க மாட்டிக்கிட்டு பக்கத்திலே இருக்கிறவங்களுக்கு உதவுங்க” 

கொழும்பு- சென்னை விமானத்தில் ஒருமுறை மது ஏலம் விட்டார்கள். “போனா வராது, பொழுதுபோனா சிக்காது. பிளாக்லேபில் ஒரிஜினல்… அங்க டூட்டி ஃப்ரீயிலே கிடைக்கிறதெல்லாம் கலீஜு… நம்பி ஏமாறாதே. நம்பினார் கெட்டதில்லை! சார், ஒரு பிளாக்லேபில் எடுக்கட்டுமா? நல்லா இருக்கும்”

என்னருகே இருந்த ஒருவர் நான் வாங்குவதில்லை என அறிந்து திகைப்படைந்தார். அருண்மொழியும் வாங்கவில்லை என உணர்ந்து மேலும் திகைப்படைந்தார். “ஆளுக்கு ரெண்டு பாட்டில் அலௌடு சார். நீங்க ரெண்டு வாங்கிக்கிடுங்க… வெளியே வந்ததும் எங்கிட்ட குடுங்க. பாட்டிலுக்கு முந்நூறு ரூவா லாபம் நிக்கும் சார்”

“பயணிகள் கவனிக்கவும். விமான ஊழியர்களை தரக்குறைவாகப் பேசினால் முதல் கெட்டவார்த்தைக்கு முப்பது டாலர் அபராதம். அடுத்த ஒவ்வொரு கெட்டவார்த்தைக்கும் ஐம்பது டாலர் வீதம் வசூலிக்கப்படும்”

நான் மறுத்துவிட்டேன். தேசப்பொருளியலை சீரழித்தவனைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே வந்தால் பலர் கைக்குழந்தைகளை என புட்டிகளை அணைத்துக்கொண்டு செல்வதைக் கண்டேன்.

உலகில் பலநாடுகளில் பல விமானநிலையங்கள். விமானநிலையம் பற்றி நான் ஒரு வெண்முரசே எழுதலாம். நியூயார்க் விமானநிலையம் கோயம்பேடு மாதிரி.ஆனால் எப்படியோ எல்லாரும் ஏறி எல்லாரும் இறங்கி எல்லாம் நடந்துவிடுகிறது. அது ஏன் என எவருக்கும் தெரியாது. அமெரிக்காவில் சில விமானநிலையங்கள் உள்ளூர் மோட்டல்கள் மாதிரி இருக்கும்.

”பைலட் வேலைக்கு உங்க ரெஸ்யூம் நல்லாருக்கு. ஆனா அனுபவங்களிலே 62 டேக் ஆஃப் 54 லேண்டிங்னு இருக்கு, அதான் குழப்பமா இருக்கு”.

ஜாம்பியாவில் ஓர் விமானநிலையம்தான் விசித்திரம். எதையோ மென்றுகொண்டிருந்த கரிய குண்டு மாமிக்களிடம் எங்கே செக்யூரிட்டி செக் என்று கேட்டேன். அதெல்லாம் தேவையில்லை போய் ஏறிக்கொள் என்று மென்றபடியே அன்புடன் சொன்னார்கள்.

விமானத்தை நோக்கி ஓடி இடம்போடாவிட்டால் வேறு ஆள் ஏறிவிடுவார்கள். கவலை வேண்டாம், அடுத்த விமானத்தில் அதே டிக்கெட்டில் ஏறிக்கொள்ளலாம்.என்னை ஒரு மாபெரும் கருப்பின மாமி முழங்கையால் இடத்து அப்பாலி விலக்கி ஏற கதவு சாத்தப்பட்டது.

“வேணுமானா தாவலாம். ஒரு சின்ன கட்டணம் கட்டினா நாங்க இணைப்பு குடுப்போம்”

ஆனால் இரண்டுமணிநேரத்தில் அடுத்த விமானம் இருந்தது. கீழே பொட்டல்போன்ற நிலத்தில் சென்ற யானைகளைக் காட்ட விமானி விமானத்தை தழைத்து வளைத்து மேலெழுப்பி எங்களை உற்சாகப்படுத்தினார்.  விண்டூக்கில் விமானம் கீழிறங்கியதும் நேராக இறங்கி சென்றுவிடவேண்டியதுதான். லக்கேஜ்? அது யோகமிருந்தால் வந்துசேரும். ஆனால் வந்து சேர்ந்தது.

ஆப்ரிக்க விமானங்களில் பொழுதுபோக்குகள் தேவையில்லை, விமானங்களே பொழுதுபோக்காக அமையும். நமது பெட்டிகள் எங்கே சென்றிருக்குமென ஊகிப்பது மயிர்க்கூச்செறியும் அனுபவமாகவும் அமையும் என அ.முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். அது உண்மை, என் பெட்டி ஒருநாள் கழித்து வந்துசேர்ந்தது. அது அதிருஷ்டமுள்ள பெட்டி என்றார்கள். மிச்சபெட்டிகள் விமானநிலையத்தில் தூசு போர்த்தி அமைந்திருந்ததைக் கண்டேன்.

”நெருக்கடிநேரத்திலே ஆக்ஸிஜன் மாஸ்க் கீழே வரும். அவசரமா டிவீட் பண்றதுக்கு முன்னாடி அதை மூக்கிலே பொருத்திக்கிடுங்க”

செலவுகுறைந்த விமானங்கள் தொண்ணூறுகளில் வந்தன. விமானநிலையங்கள் சந்தடி மிக்கவையாக மாறின. “ஏ ராசுக்குட்டீ, இந்தாலே வாடீ… இங்கபாரு கமலஹாசண்டீ…ஆமாடீ அவனே தாண்டீ!”என்னும் வகையான பரவசக்கூச்சல்கள் கேட்கலாயின. ஏர்போர்ட் கார்ப்பெட்டில் தூங்குபவர்கள், விமானம் தாமதமானால் நைட்டிக்கு மாறிக்கொள்ளும் குடும்பப்பெண்கள், ”செத்த அந்தால தள்ளித்தான் உக்காருறது, உங்க அப்பன் வீட்டு எடமொண்ணும் இல்லதானே?” வகை பெரியப்பாக்கள் எல்லாரும் விமானநிலையங்களில் தென்படலாயினர்.

இப்போது விமானநிலையம் மிகமிக சுவாரசியமானது. மெட்டல்டிடெக்டருக்குள் குடும்பமாக நுழைபவர்கள், தேங்காய்துருவியை துணியில்சுற்றி எடுத்துவருபவர்கள், காதில் இயர்போன் மாட்டி சூயுங்கம் மென்றபடி திரிபவர்கள். ஒருவர் செக்யூரிட்டி பெல்டை கழற்றச் சொன்னதும் கழற்றி, கைதூக்கச் சொன்னதும் தூக்கினார். அவருடைய ஜீன்ஸ் தொளதொள வகை. அடியில் சிவப்பு அண்டர்வேர் போட்டிருந்தார்.

”உங்க விமானம் போயிடுச்சு சார். ஆனா எங்களோட டிரோன் சர்வீஸ் இருக்கு…”

உள்ளே டீகாப்பி எல்லாவற்றுக்கும் காசு. பச்சைத்தண்ணீர் அரை டம்ளர்தான். மேலே கேட்டால் கோக் வாங்கு என்னும் பார்வையை அளிப்பார்கள். நான் ஒர் எண்ணத்தை எழுதியனுப்பினேன். விமானத்தில் ரத்தச்சிவப்பான காரச்சட்டினியுடன் இட்லி இலவசமாகக் கொடுக்கலாம். குடிக்க தண்ணீர் வேண்டுமென்றால் கோப்பை எழுநூறு ரூபாய். நல்ல வசூலாகும்.

ஆனாலும் விமானநிலையங்கள் நமக்கு அணுக்கமானவை. நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்னும் நிலையின் நிம்மதியை அளிப்பவை. திருவனந்தபுரம் பழைய விமானநிலையம் எனக்கு அப்படிப்பட்டது. ஒரு பழைய தறவாடு வீடுபோன்ற தோற்றம். தெரிந்த முகங்கள். பரபரப்பே இருக்காது. முக்கியமாக எல்லா தின்பண்டங்களும் பலநாட்கள் பழகி வீட்டுச்சுவை வந்துவிட்டவை.

”சாரிங்க, சீட்டெல்லாம் மாத்த முடியாது. அப்றம் எல்லாரும் கேக்க ஆரம்பிச்சிருவாங்க”

விமானப்பணிப்பெண்களுக்கு என்னை தெரியும். நான் விமானத்தை மறந்து வாசித்துக்கொண்டிருந்தால்  “ஜெயேட்டா, வண்டி எடுத்து கழிஞ்ஞு கேட்டா”என அழைத்துச் சொல்வார்கள். பலரும் ஒழிமுறி ரசிகைகள்.

ஒருமுறை பிந்திவிட்டது. விமானத்தின் கதவை மூடிவிட்டார்கள். உள்ளே போகமுடியாது என புதுமுகம் பணிப்பெண் சொன்னாள். எனக்குப்பின்னால் வேறொரு விமானத்திற்காக சுரேஷ் கோபி நின்றிருந்தார். அவருக்கே உரிய பாணியில் “கேற்றிவிடு மோளே, ஞானல்லே பறயுந்நது?”என்றார்

”உங்க பொண்ணு சாப்பிடுற விதம் வித்தியாசமா இருக்கே? ஏர்ஹோஸ்டஸா இருக்காளோ?”

“செரி சேட்டா” என்ற அந்தப் பெண் என்னை பலவகை இண்டு இடுக்குகள் வழியாக அழைத்துச் சென்று ஒரு ஏணி வழியாக ஏற்றி விமானக்கதவை தட்டி திறந்து ஏற்றிவிட்டாள். “தெய்வத்தின்றேயும் நம்முடெயும் சொந்தம் ஏர்ப்போர்ட்”

இப்போது அதை மாற்றிவிட்டார்கள். பளபளவென புதிய இரு விமானநிலையங்கள். அந்தப் பழைய ஏர்ப்போர்ட்தான் எனக்கு பிடித்திருக்கிறது. எவ்வளவு கடந்தகால நினைவுகள். பழைய திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இறங்கி இருபது ரூபாய்க்கு ஆட்டோ பிடித்து தம்பானூர் வந்து நாகர்கோயில் பஸ்ஸில் ஏறலாம். எல்லாம் சோஷலிசம். புதிய விமானநிலையத்தின்முன் ஆட்டோவே இல்லை.

27விற்பனை!

26 விளம்பரம்

25 ’சயன்டிஸ்ட்!’

24தொழில்நுட்பம்

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’ 10பகடை பன்னிரண்டு 9சிரிக்கும் ஏசு 8டேனியல் லாபெல் 7ஸாரி டாக்டர்! 6ஆடல் 5கம்யூட்டர் யுகத்துக் கடவுள் 4 மனம் 3குருவும் குறும்பும் 2இடுக்கண் வருங்கால்… 1ஆன்மிகமும் சிரிப்பும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2021 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.