Jeyamohan's Blog, page 964

June 21, 2021

வெண்முரசு ஆவணப்படம் வாஷிங்டன் டி.சி திரையிடல் நிகழ்வு

 

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன்,

வெண்முரசு ஆவணப்படம் ஜூன் 12, 2021, வாஷிங்டன் டி.சி மெட்ரோ பகுதியில் உள்ள ஃபேர்பாக்ஸ் நகரத்தில் திரையிடப்பட்டது.  இலக்கிய வாசகர்கள் பலர் ஆவணப்படத்தை பார்ப்பதற்கு ஆவலுடன் வந்திருந்தார்கள். படத்திற்கு இசையமைத்த ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பெருந்தொற்றுக் காலத்தில் நேரில் சந்திக்க இயலாமல் போன நண்பர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக் கவசம் அணிய விலக்கம் அளிக்கப்பட்டிருப்பதால் பலரும் நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

திரையரங்கின் நுழைவில்வெண்முரசு நூல்கள், ஷண்முகவேல் ஓவியம் மற்றும் பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு மேசை ஒன்றை அமைத்தோம்.  அங்கு வைத்திருந்த, ஆயிரம் பக்கங்கள் கொண்ட நான்கு வெண்முரசு நூல்களை பார்த்து இதேப்போல 26 நூல்களா? என்று பலர் ஆச்சரியப்பட்டார்கள். மொத்தமாக 25000 பக்கங்களுடன் வெண்முரசு உலக இலக்கியத்தின் மிகப்பெரும் படைப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதே பலருக்கும் வியப்பளித்தது.

நேர்த்தியான இசையுடம் ஆவணப்படம் துவங்கியது. இசைஞானி இளையராஜாவின் ஆசியுடன் அவரை குரு ஸ்தானத்தில் வைத்து  வெண்முரசு முதற்கனல் நாவலை ஏழு ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுத தொடங்கியதை இளையராஜா அவர்கள்  சொல்ல தொடங்கியவுடன் அரங்கம் நிமிர்ந்து கொண்டது.

நீலம் திருப்பல்லாண்டு பகுதியில் வரும் பாடலை பத்மஶ்ரீ கமல்ஹாசன் “கண்ணானாய் காண்பதானாய்..” என்று உருக்கமாக பாட, ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி தொடர்ந்து முழுப் பாடலையும் இனிமையாகப் பாடினார்கள். ரிஷப் சர்மாவின் சிதார் இசை மேலும் பரவசத்தை அளித்தது.

ஆவணப்படத்தில் இலக்கியவாதிகள் தொடர்ந்து பேசுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இனிய அதிர்ச்சியாக பாடல் அமைந்தது. “அமைக இப்புவிமேல்! அமைக காப்பென்று அமைக!” என்ற வரிகள் மந்திரம் போல் மனதில் நீண்ட நேரம் ஒலித்ததுகொண்டிருந்தது.

வெண்முரசை எழுதுவதற்கு தவமாக தொடர்ந்து ஏழு ஆண்டுகள் முழுமையாக நீங்கள் அர்ப்பணம் செய்ததை உங்கள் வாசகர்கள் அறிவார்கள். அந்த தவத்தை புதியவர்கள் உணர்ந்து கொள்ள, அவர்களையும் வெண்முரசை வாசிக்க துண்டுவதற்கு இந்த ஆவணப்படம் மிகவும் உதவியாக இருக்கும்.

முக்கிய தமிழ் இலக்கிய ஆளுமைகள், ஆ.முத்துலிங்கம், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புமிக்க மூத்த எழுத்தாளர்கள் வெண்முரசின் சிறப்பை விவரித்து பாராட்டினார்கள். பல வாசகர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

உங்களுடைய சிறப்பு உரையை கேட்க ஆவலாக இருந்தோம். படைப்பை முடித்த பிறகு முற்றிலும் அதிலிருந்து விலகியது போல் இருந்தது உங்கள் பேச்சு. மிகவும் மெண்மையாக உங்கள் ஏழாண்டு தவத்தை சொல்லி, பல வகையான தவத்தில் இதுவும் ஒருவகையான தவம் என்றது வாசகர்களுக்கு புதிதாக ஒன்றை உணர்த்தியிருக்கும். இனி தாங்கள் ஈடுபடும் பணிகளில் முழுதளித்து,  அர்ப்பணிப்போடு செயலாற்றும் மன உறுதியை பெற்றிருப்பார்கள். படம் முடிந்தபின் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள்.

வாஷிங்டன் பகுதியின் தமிழிசை ஆய்வாளர் பாபு விநாயகம் இசையமைப்பாளர் ராஜனுக்கு பூங்கொத்து வழங்கி  கௌரவித்தார்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில்படத்தை தயாரித்த ஆஸ்டின் சௌந்தரையும், இசையமைப்பாளர் ராஜனையும் அனைவரும்  வெகுவாகப் பாராட்டினார்கள். இந்த சீரிய வாசகர் வட்டம் தகுதியான நபர்களைக் கொண்டு உங்கள் படைப்புகளை மொழிப்பெயர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அரங்கை விட்டு வெளியேறிய பின்பும் நண்பர்கள் சிறுகுழுக்களாக கூடி நீண்டநேரம் வெண்முரசைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

இனிய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மகிழ்ச்சியில் நிறைவாக வீடு திரும்பினோம்.

 

நன்றி

விஜய் சத்தியா

வாஷிங்டன் டி.சி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2021 11:30

June 20, 2021

எழுதும்போது…

மதிப்பிற்குரிய ஜெ,

சிறுவயதில் இருந்தே எழுதுகிறேன். எட்டு வயதில் முதல் முதலாக பெரியப்பா மகள் திருமணத்திற்கு பரிசாக ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். அக்காவை வர்ணித்து வர்ணித்து எழுதியிருந்தேன். அவ்வளவுதான் நினைவுள்ளது. வரிகள் எதுவும் நினைவில்லை. அது எப்படியோ மொய்ப்பண கவர்களோட சேர்ந்து விட, இரவு பணம் எண்ணிக் கொண்டிருந்த பெண்களிடம் சிக்கிவிட்டது. எல்லோரும் அதை வாசித்து வாசித்துச் சிரித்திருந்தார்கள். அக்கூட்டத்தில் அம்மாவும் இருந்தார், சிரித்துக் கொண்டு.

அக்கா அப்போது ‘ஆமா அவ (என்னைத்தான்) என்னமோ குடுத்தா காலைல’ என்றது. வெளிப்படுத்துதல் என்பது அவமானத்தை தரக்கூடிய ஒன்றாகவே பலவருடங்கள் நினைத்திருந்து எனக்கு மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். உங்கள் ஆக்கங்களை வாசித்த பிறகு அவ்வெண்ணம் இன்னும் உறுதியானது. ‘இப்படிப்பட்ட ஆக்கங்களெல்லாம் இருக்கும் போது நம்முடையவை அவமானத்தையே தரும்’ என்றிருந்தேன்.

பிறகு உங்கள் மூலமாகவே அத்தகு எண்ணங்களிலிருந்து விடுபட்டேன். நீங்கள் அறிந்தும் அறியாமலும் எத்தனையோ மனஉறுதியையும்  தைரியத்தையும் புகட்டி இருக்கிறீர். எனக்குச் சொன்னது போக இப்போது உங்கள் மனைவி திருமதி அருண்மொழி நங்கைக்கு நீங்கள் சொன்ன அறிவுரையையும் நான் எனக்கும் எடுத்துக்கொண்டேன்.

‘எழுதுவதை எழுத்தின் இன்பத்தின் பொருட்டு மட்டுமே செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆணவமும் அங்கீகாரத்தேடலும் ஊடாக வரக்கூடாது. எழுத்தில் மட்டுமே முழுமையாக வாழ்பவர்களே எழுத்தாளர்கள் ஆகிறார்கள். எழுத்தில் புகுந்தால் தனக்கான உலகை உருவாக்கிக் கொள்பவர்கள்.அதன் பொருட்டு வேறெதையும் விட்டு விடுபவர்கள்.’

எவர் குறித்த தயக்கமுமின்றி எழுத முடிகிறது, வெளிப்படுத்தவும் முடிகிறது. உளம் நிறைந்த நன்றிகள்.

ராணி சம்யுக்தா [பிரியதர்சினி]

விடியல்

நகர மறுக்கும் கால்கள்

ஊடலும் காதல் நிமித்தமும்

அன்புள்ள பிரியதர்சினி,

கதைகள், குறிப்புகள் நன்றாக உள்ளன. மொழி ஒழுக்குடன் உள்ளது. உங்களுக்குரிய அவதானிப்புகள் நுட்பமாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

. ஒருபோதும் நீங்களே எழுத்தை சாதாரணமாக, அலட்சியமாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்ற தொனி எழுத்தில் வந்துவிடக்கூடாது.

ஆரம்பகால எழுத்தாளர்களில் பலரிடம் வரும் ஒரு மனநிலை அல்லது பாவனை இது. நான் ஒன்றும் பெரிதாக எழுதப்போவதில்லை, சும்மா என் அனுபவங்களைச் சொல்லப்போகிறேன் என அவர்கள் தாங்களே நினைத்துக் கொள்கிறார்கள். வாசகர்களிடம் சொல்கிறார்கள். தங்கள் வலைப்பூக்களுக்கு அவர்கள் வைக்கும் பெயர்களும் அவ்வாறே இருக்கின்றன.இதை ஒரு வகை அவையடக்கமாகச் சொல்பவர்கள் உண்டு. மெய்யாகவே தங்கள் தகுதி பற்றிய ஐயத்தால் சொல்பவர்களும் உண்டு.

இது வாசகர்களிடையே கவனமற்ற வாசிப்பை உருவாக்கும். அவர்கள் எதிர்வினைகளும் அவ்வாறே இருக்கும். நமக்கு நாம் செய்வதில் அகம் ஒன்றாநிலை உருவாகும். காலப்போக்கில் ஆர்வமிழப்போம். ஆகவே எழுதும்போதே தீவிரமாக, முழுவிசையுடன், சாத்தியமான உச்சத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, முழுமையை நெருங்கும்பொருட்டு எழுதுகிறோம் என்று நமக்கே சொல்லிக்கொள்ளவேண்டும்.

ஆ. எழுதும் எல்லா கட்டுரையும் கதையும் அதற்குரிய வடிவை அடைய நம்மால் முடிந்தவரை முயலவேண்டும்.

போகிறபோக்கில் எனக்கு தோன்றியதை எழுதினேன் என நமக்கு நாமே சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நாம் எழுதுவதெல்லாமே தலைமுறை தலைமுறையாக வரும் இந்த மாபெரும் சொல்வெளி நோக்கி என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதில் நம்முடைய சிறந்ததையே முன்வைக்கவேண்டும். கட்டுரையோ கதையோ எதுவானாலும் அதற்குரிய வடிவம் என்ன என்பதை கருத்தில்கொள்ளவேண்டும். பயிலவேண்டும். அதை அடைய முயலவேண்டும். அடைந்தாலொழிய பிரசுரிக்கக் கூடாது. அதுவரை அதை வைத்திருக்கவேண்டும்.

பிளாக் எழுதுவது வழக்கொழிந்தமைக்குக் காரணம் பலர் அதில் எதையும் பிரசுரிக்கலாம் என்பதனால் எல்லாவற்றையும் பிரசுரித்ததனால்தான். அதை ஓர் இதழாகவே நினைக்கவேண்டும். அதில் வெளியாகும் ஒவ்வொரு படைப்பும் நமக்கு நிறைவை அளிக்கும்படி தன் வடிவை அடைந்திருக்கவேண்டும். நாமே அதன் ஆசிரியராகவும் செயல்படவேண்டும்.

இ. ஏதேனும் ஒன்று எழுத்தில் நிகழ்ந்திருக்கவேண்டும்

பெரும்பாலான வலைப்பூக்களில் நினைவுகளே அதிகம் எழுதப்படுகின்றன. அது இயல்பு. நாம் எழுத ஆரம்பிப்பதே நம் நினைவுகளால்தான் ஆனால் நினைவுகளை ‘அப்படியே’ எழுதி வைத்தால் நாம் அவற்றை இழக்கிறோம். அந்நினைவுகள் வழியாக நாம் எதையேனும் அடைந்திருக்கவேண்டும். கண்டடைதல் அப்படைப்பின் உச்சமென, முழுமையென வெளிப்படவும் வேண்டும்.

உதாரணமாக நகரமறுக்கும் கால்கள் என்னும் கதை. அதை ஓர் அனுபவக்குறிப்பாக எழுதியிருக்கிறீர்கள். இளமையின் ஒரு கணத்தில் காலத்தை தேக்கிவிட முயல்வது அனைவருக்கும் உரிய ஓர் ஏக்கம். அதிலும் பெண்கள் அதில் மேலும் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் பொன்னாட்கள் அந்த இளம்பருவத்திலேயே உள்ளன.

அந்த மீள்கையை சித்தரித்துப் பார்க்கிறீர்கள். நினைவும் விழைவும் கலந்த நிலை. ஆனால் அதை எத்தனை தொலைவுக்குக் கொண்டுசெல்லலாம். எது மெய்யாக நடந்தது? எது நினைவிலிருந்து மறைந்தது? எது நினைவில் நீடிக்கிறது? ஏன் அவ்வாறு நிகழ்கின்றன? அந்த வினாக்களை இந்தக்கதை சென்றடையலாம் அல்லவா? அதன் விடையென சிலவற்றை கண்டடையலாம் அல்லவா?

உதாரணமாக அந்த நிகழ்வுகள் மெய்யாக நிகழ்ந்தபோது சற்றும் கவனிக்கப்படாத ஒன்று இப்போது முழுமையான நினைவாக ஆகிவிட்டிருக்கிறது. அன்று வாழ்க்கையை நிறைத்திருந்த ஒன்று முற்றாகவே மறைந்துவிட்டிருக்கிறது. அந்த தேடல் வழியாக சென்றடையும் விடைதானே எழுத்தின் இலக்காக இருக்கமுடியும்?

ஆனால் ஐந்து மணி அலாரத்தை அமர்த்திவிட்டு இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் என்று தூங்கியபோது வந்த கனவு என ஒரு பொறுப்புதுறப்பை போட்டு அதைக் கடந்து செல்கிறீர்கள். அதாவது அத்தனை வாய்ப்புகளையும் தவிர்க்கிறீர்கள். அதைத்தான் எழுதுபவர் ஒருபோதும் செய்யக்கூடாது. அதிலுள்ள தயக்கம், தன்னம்பிக்கைக் குறைவு எழுத்துக்கு எதிரானது.அத்துடன் அந்த அனுபவத்தை நீங்கள் மீண்டும் எழுதமுடியாதபடி இழந்தும் விடுகிறீர்கள்.

ஒருபெண் தன் கல்லூரிநாட்களுக்கு திரும்பிச் சென்றால் என்ன நிகழும் என்பது புனைவுக்கான ஒரு வாய்ப்பு. ஒரு கரு. அதை யதார்த்தமாக காட்டலாம் – மெய்யாகவே ஒரு மறுசந்திப்பு நிகழ்கிறது. அதை புனைவினூடாக உருவாக்கலாம். ஒரு அம்னீஷியாநோயால் ஒருத்தி நினைவை இழந்து அந்த 18 வயதுக்குச் சென்று விடுகிறாள். அல்லது ஒரு ஹிப்னாட்டிச சிகிழ்ச்சையில் அவள் அந்நாட்களை மீட்டு எடுக்கிறாள்…

ஆனால் கண்டடைதல் என ஒன்று நிகழவேண்டும். அதுவரை அந்தக் கருவை மீளமீள எழுதவேண்டும். முயன்றுகொண்டே இருக்கவேண்டும். கண்டடைதல் அளித்த நிறைவே அதை வெளியிடும் எண்ணத்தை அளிக்கவேண்டும். அக்கண்டடைதல் உங்களுக்குரியதாக இருந்தால் அது இலக்கியமே.

இ. ஒரு வாசக – விமர்சகச் சுற்றத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும்

இன்றைய சூழலில் இயல்பாக வலைப்பூக்களுக்கு வாசகர்கள் வருவதில்லை. அதை வாசிக்கவும் விமர்சிக்கவும்கூடிய நட்புகளை நட்புக்குழாம்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும். விவாதக்குழுமங்கள், இலக்கிய உரையாடல் அமைப்புக்களில் ஈடுபட்டு அங்கே இணையான உள்ளங்களைக் கண்டுகொள்ளவேண்டும்

எழுத்து என்பது நம் தன்வெளிப்பாடு. ஒரு தியானம். அதன் வழியாக விடுதலை. ஆனால் நாமே நிறைவுறும்படி அது நிகழ்கையிலேயே அது நம்மை விடுவிக்கிறது. அதற்கு நாம் அதற்கு நம்மை முழுதுற அளிக்கவேண்டும். அதனூடாக நாம் முன்னகரவேண்டும்.

தொடர்ந்து எழுதுங்கள். எழுதுபவருக்கு அமையும் விடுதலை ஒன்றுண்டு.

ஜெ

பெண்கள் எழுதுதல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2021 11:35

வளவதுரையன் – ஆவணப்படம்

அன்பின் ஜெ,

கடலூரில் வசிக்கும் எழுத்தாளர் வளவ துரையன் இலக்கியச் சூழலில் நீண்ட காலமாக பன்முகத்தன்மை கொண்டு இயங்குபவர், குன்றாத செயலூக்கத்திற்கு எடுத்துக்காட்டு. அவரது இடையறாத உழைப்பை அடையாளப்படுத்தும் ஒரு சிறு முயற்சியாக ஆவணப்படம் ஒன்று தயாரித்துள்ளோம். நீண்ட தயக்கத்திற்குப் பின் வளவ துரையன் ஐயா இதற்கு இசைந்தார் . இதன் முக்கிய பகுதிகளை கொரானா ஊரடங்கிற்கு முன்பே பதிவு  செய்தமை எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆயினும் ஊரடங்கு இதற்காக நாங்கள் மேற்கொள்ளவிருந்த பயணங்களை தவிர்க்க செய்தது, குறிப்பாக எழுத்தாளர்களை நேரடியாக சந்திக்க முடியாமல் போனது எங்களுக்கு தனிப்பட்ட இழப்பே.

ஆவணப்படத்திற்காக  வளவ  துரையனின்  செயல்பாடுகள், படைப்புகள் குறித்த கருத்துக்களை பேசிய மூத்த எழுத்தாளர்களுக்கு வணக்கங்கள். இவ்வழிக்கு எம்மை ஆற்றுப்படுத்தும் கடலூர் சீனுவுக்கும், எழுத்தாளர்களை அணுக உதவிய விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும்.  நண்பர்களின் ஆர்வமும் ஊக்கமும் மட்டுமே இதன் முதலீடுகள். இது எங்கள் எளிய முதல்  முயற்சி, இனிவரும் காலங்களில்  தரமான ஆக்கங்களை மேற்கொள்ள  தொடர்ந்து முயல்வோம்.


தாமரைக்கண்ணன்
புதுச்சேரி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2021 11:32

நம்பிக்கையின் துளிர்-கடிதம்

வணக்கம் ஜெயமோகன்,

என்  பெயர் மனோபாரதி, தங்களை ஒரு முறை மட்டுமே நேரில் சந்தித்துப் பேசி‌ இருக்கிறேன். வெண்முரசு நாவலை ஆடியோ புத்தகமாக யுடிபில் பதிவிடுகிறேன். தங்களின் பிறந்த நாளின் போது மழைப் பாடல் முழுவதையும் பதிவேற்றி விட்டு அதை பிறந்த நாள் பரிசாக அனுப்ப திட்டமிட்டுருந்தேன். ஆனால் என் அம்மாவிற்கு உடல் நலமில்லாததாதல் சென்று பார்த்த சில தினங்களில் எனக்கும் கொரோனா வந்து விட்டது.

நோய் தொற்று காலத்தில் உடன் பிறந்தவர்களிடம் கூட உதவி வரவில்லை. என்னால் என் கணவருக்கும் வந்து விட்டது. இருவருமே மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவியில் இருக்கிறோம். இன்று தான் எனக்கு கொஞ்சம் உடல் தேறியுள்ளது. உடல் நலமில்லாத போது, எல்லோரின் மீதும் வெறுப்பும், கோபமும், பொறாமையும் இன்னும் இருக்கும் அனைத்து கெட்ட எண்ணங்களும் மனதில் இருந்து கொண்டே இருந்தது. எல்லோருமே எங்களை கை விட்டு விட்டதை போல

உண்மை அது தான், ஆனால் எனக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எத்தனை சொந்தங்களுக்கு எவ்வளவு செய்தோம்.உடன்பிறந்தோர்கள் அவர்களின் குழந்தைகள் என என் சாம்பாத்தியத்தை எல்லாம் செலவு செய்தேன். எனக்கு திருமணம் ஆகி எட்டு மாதங்கள் தான் ஆகிறது. நான் வாழ ஆசை படும் போது, கடவுள் இப்படி செய்ததை எண்ணி கடவுளின் மீதும் வெறுப்பு, பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் மனதில் இது மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. எத்தனை மருந்துகள், ஊசிகள், பரிசோதனைகள்,  எல்லாம் செய்தும் நான் குணமாவதற்கான வாய்ப்பு சிறிதளவு கூட வரவில்லை.

நேற்றிரவு மனதில் என்னவோ நிகழ்ந்தது, மனம் விட்டு, கண்ணீர் விட்டு அழுதேன், கடவுளே என் கணவரையும், என்னையும் வாழ வையுங்கள் என்று. மற்றவர்களின் மீது இருந்த கோபதாபங்களை எல்லாம் விட்டு விட்டேன்.மன்னித்து விட்டேன். எங்கேயோ நன்றாக இருக்கட்டும் என்று கடவுளிடம் அவர்களுக்காக கூட வேண்டினேன். அதிகாலை 5 மணி அளவில் தான் மனம் அமைதியாக உறங்கினேன். எட்டு மணிக்கு வந்த மருத்துவர், மருந்துகள் வேலை செய்வதாக கூறினார். என் முகம் தெளிவாக இருப்பதாக கூறினார். இன்னும் இரு தினங்களில் வீடு திரும்பிவிடலாம் என்றார். என் கணவரின் உடல் நிலையும் தேறி வருகிறது.

இதை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் என்னைப் போன்ற பலர், எல்லோருக்கும் எத்தனை செய்தும் நன்றியில்லை என்று எண்ணி, தங்களின் உடல் நிலையை கெடுத்து கொள்வார்கள். முதலில் நாம் வெல்ல வேண்டியது, சுய பச்சாதாபம் மற்றும் மன்னிக்கும் குணம். அது தான் நமக்கு நாமே செய்து கொள்ளும் தன்னறமும் தன்மீட்சியும் என்று நான் உணர்ந்தேன். இது மற்ற யாருக்கேனும் கூட உதவலாம் என்று எண்ணி தங்களுக்கு எழுதுகிறேன். நன்றி….

https://youtube.com/playlist?list=PLvWdiqurBsACId-UV2Fw21VaQoGQpjMjj. _ மழைப் பாடல்

https://youtube.com/playlist?list=PLvWdiqurBsAB03rVav_bjC7WrEAVHV5F0  _ முதற்கனல்

அன்புடன்

மனோபாரதி விக்னேஷ்வர்

 

அன்புள்ள மனோபாரதி,

உங்கள் ஒலிப்பதிவுகளை கேட்டேன். சிறப்பாக உள்ளன. உளம் தோய்ந்து வாசித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

உங்கள் அனுபவங்களை வாசிக்கையில் ஒன்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒன்றைப் பற்றிக்கொண்டு மீண்டு வருகிறோம். எவரும் தளர்ந்துவிடுவதில்லை. கசப்பு, அதிலிருந்து எழும் வீம்பு கூட ஒரு பற்றுகோல்தான்.

ஆனால் உண்மையான நம்பிக்கையும், அதிலிருந்து வரும் தெளிவும் அளிக்கும் மகிழ்ச்சியே மேலானது. நிறைவளிப்பது. இப்போது இயல்புநிலைக்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2021 11:31

விசும்பின் வழி- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

‘விசும்பு’ தொகுதியிலுள்ள விசும்பு, ஐந்தாவது மருந்து கதைகளில் நடப்பது போலவே ஒரு அறிவியல் செய்தி: கண் பார்வையை இழக்கச் செய்யும் மரபணுவை கண்டடைந்து அதை கருவிலேயே மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தினால் அதை தாங்கியிருக்கும் chromosome முற்றிலுமாக அழிந்து அதன் காரணமாக வேறு நோய்கள் அந்த கருவை தாக்குகின்றன.

https://www.cuimc.columbia.edu/news/study-identifies-pitfall-correcting-mutations-human-embryos-crispr

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.

வாசகர் விமர்சனம் விசும்பு – அறிவியல்புனைகதைகள் அறிமுகம் – பி.கெ.சிவகுமார்

விசும்பு- நூல்

விசும்பு மதிப்பீடு

அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்

*

விசும்பு அறிவியல் சிறுகதைகள் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2021 11:31

அப்சரா- ம.நவீன்

“இது அப்சராக்களின் உலகம். மற்ற வழிகாட்டிகள் இந்து, பௌத்த ஆலயம் எனச் சொல்வதெல்லாம் ஏடுகளில் தவறாக எழுதப்பட்ட தகவல்கள் மட்டுமே. நீ விரும்பினால் உன்னிடம் அதை நிரூபிப்பேன்” என்று  காதருகில் கிசுகிசுத்தவளின் முகத்தைப் பார்த்தேன்.

அப்சரா- ம.நவீன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2021 11:31

June 19, 2021

கடவுள் எனும் தங்கப்புத்தகம்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

கடவுளை நேரில் காணுதல்

அன்புள்ள ஜெ,

ஒரு வாரம் முன்பு தான் “தங்கப்புத்தகம்” கதையைப் படித்தேன். மனதில் நிறைய கேள்விகள்.. மனம் தான் சுற்றிச்சுற்றி அறிகிறது. அதுவும் மனதையே அறிகிறது. எனில் மனிதனின் உச்சகட்ட சாத்தியங்கள் எல்லாம் மனதுக்குள்ளேயே முடிந்துவிடுகிறதா? மனதைத் தவிர அறிய ஒன்றும் இல்லை என்றால் இந்த வாழ்க்கைக்கு என்ன தான் அர்த்தம்? என்னால் அறிய முடியுமா என்பது இல்லை கேள்வி. அறியும் தருணத்தில் இந்த ‘என்’, ‘நான்’ எல்லாம் அர்த்தமிழந்தே போகட்டும். ஆனால் அறிவதற்கே ஒன்றும் இல்லை என்பது எத்தனை கொடுமை.. எல்லாமே சுழல் வட்ட பாதைகள் தானா? இப்படி ஏதேதோ யோசித்துக் குழப்பிக் கொண்டிருந்தேன். விஷ்ணுபுரம் படித்த போதும் இதே போன்ற குழப்பங்கள் ஏற்பட்டது.

“கடவுளை நேரில் காணுதல்” எனும் கட்டுரை அதற்கு விடை தந்தது. இது நீங்களே பல முறை சொல்லி இருப்பது தான். ஆனாலும் அவ்வப்போது நம்பிக்கை இழக்கும் போது இப்படி ஒன்று தேவைப்படுகிறது. இப்போது அந்தக் கதையே வேறொரு ஒளியில் தெரிகிறது. அறிவதற்கு ஒரு தங்கப்புத்தகம் எப்போதும் இருக்கிறது. பிரதி எடுக்கும் மனதில் தானே குறை. அறியும் மனம் எப்போதும் குறையுடன் தான் இருக்கும். அது தங்கப்புத்தகத்தின் பிரச்சினை அல்லவே..

நன்றியுடன்

பன்னீர் செல்வம்.

அன்புள்ள பன்னீர்செல்வம்,

வெவ்வேறு மதங்களின் கடவுள் தரிசனங்கள் முரண்படுவதைப் பற்றி நாராயணகுருவிடம் கேட்கப்பட்டபோது “அனைவருக்கும் ஒரே மாதிரி தெரியுமளவுக்கு அது சிறியது அல்ல” என்று அவர் வேடிக்கையாகவும் ஆழ்பொருளுடனும் பதிலளித்தார் என்று சொல்லப்படுகிறது.

கடவுளை விடுங்கள், வாழ்க்கையின் அடிப்படைகளைப் பற்றிய கேள்விகளுக்கே தத்துவ ஞானிகளும், இலக்கியமேதைகளும் மாறுபட்ட பதில்களையே அளித்துள்ளனர். ஒருவர் இன்னொருவருக்குச் சளைத்தவர் அல்ல. எனில் எது உண்மை?

அதற்கான பதில் இதுதான், ஒன்று உண்மை இன்னொன்று பொய் என்று திகழுமளவுக்கு அது ஒற்றைமுகம் கொண்டதாக இருக்கவேண்டுமா என்ன? வாழ்க்கையின் அடிப்படை உருவகங்கள் பல. சுயம், உறவுகள், இன்பம், அறம், நீதி, மீட்பு என பல கருத்துருவங்களாக அவை நம் முன் உள்ளன. அவற்றுக்கு இதுவரை மானுடம் கண்டடைந்துள்ள பதில்கள் முடிவற்றவை.

முதிரா அறிவுடையோர்தான் ஏதேனும் ஒன்றை அறுதி உண்மையென ஏற்பார்கள். அதை முன்வைத்து மற்றவை பொய் என மறுத்து வாதிடுவார்கள். அந்த மனநிலை மதவெறியர்களிடம் உண்டு. மதத்தை எதிர்ப்பவர்களிடமும் அதே மனநிலைதான் நீடிக்கிறது.

வாழ்க்கை ஒரு தங்கப்புத்தகம். மெய்மை ஒரு மாபெரும் தங்கப்புத்தகம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிக்குமளவுக்கு அது பிரம்மாண்டமானது. முடிவே அற்றது.ஒவ்வொருவரும் உண்மையையே அடைகிறார்கள். ஒவ்வொரு உண்மையும் ஒவ்வொன்று. ஒன்று இன்னொன்றை மறுப்பதில்லை. ஏனென்றால் எல்லாமே அந்தத் தங்கப்புத்தகத்தில் உள்ளவைதான்.

ஏதோ ஒரு கணத்தில் இந்த பன்முகத்தன்மையை கண்டடைந்தவர்கள் மட்டுமே மெய்யறிந்தவர்கள். ஏகம் சத்விப்ரா , பஹுதா வதந்தி என ரிக்வேதம் மானுட ஞானம் தொடங்கும் காலத்திலேயே அதை கண்டடைந்துவிட்டது. அதை உள்ளுணர்ந்தவர்களே பிறரிடம் எதையேனும் சொல்லத் தகுதி கொண்டவர்கள். எஞ்சியோர் பிரிவையும் பகைமையையுமே உருவாக்குவார்கள்.

ஏன் அவ்வாறு நிகழ்கிறது? ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையனுபவங்கள், வாழ்க்கைச்சூழல்கள், பிறவி இயல்புகள் வெவ்வேறானவை. ஆகவே எழும் வினாக்களும் வேறுவேறானவை. அவ்வினாக்கள் சென்று தொட்டு அடையும் விடைகளும் வேறுவேறாகவே அமையலாகும்.

நமக்குரிய விடையை நாம் அடைந்துவிட்டால் நாம் நிறைவுற்றவர்கள். நம் விடை நம் ஒவ்வொரு நாளையும் செயலூக்கமும் இனிமையும் கொண்டதாக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக நம் வாழ்க்கையை நிறைவுடையதாக்கவேண்டும். நம்மை அடிப்படையான ’ஞானப்பதற்றங்களில்’ இருந்து விடுவித்து அமையச்செய்யவேண்டும்.

நமக்குரிய விடை வெளியே ஏற்கப்பட்டாகவேண்டும் என்பதில்லை. நாமறிந்த கடவுள், நாமறிந்த பிரபஞ்ச உண்மைக்கு வேறு எங்கிருந்தும் சான்று தேவையில்லை. கிடைக்க வாய்ப்புமில்லை. நாம் நிறைவுறுவது ஒன்றே அதற்கான சான்றாக இருக்கமுடியும்.

நாமறிந்த விடை, நம் கடவுள், நம் மெய்மை இன்னொருவருக்கு உரியது அல்ல என நாம் அறிந்திருக்கவேண்டும். அவர் தன் விடையை தானே கண்டடையவேண்டும். அவ்விடைநோக்கிச் செல்ல நாம் சென்றபாதை அவருக்கு உதவக்கூடும். அவர் கோரினால் அதைச் சொல்லலாம். அவருக்கு உதவினால் நன்று, உதவாவிடில் ஒன்றுமில்லை. வலியுறுத்த, வாதாட நமக்கு உரிமையில்லை. அறிவையே அறியாமையின் கருவியாக்கிக்கொள்வது அது.

ஜெ

ஆன்மீகம்,கடவுள், மதம்

கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா

காந்தியின் கடவுள்

கடவுள்நம்பிக்கை உண்டா?

கடவுளின் உருவம்-கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 19, 2021 11:35

அந்திக்கு எதற்கு செந்தூரம்?

மலையாள எழுத்தாளர் கே.சுரேந்திரனை நான் 1986ல் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் எங்கள் தொலைதொடர்புத்துறையில் ஊழியராக இருந்தவர். பின்னர் பணிவிலகி திரைக்கதையாசிரியராக புகழ்பெற்றார். அவருடைய தேவி, மாயா போன்ற பல நாவல்கள் சினிமாவாக ஆகி வெற்றி பெற்றன. உணர்ச்சிகரமான கதைகள் அவருடையவை. ஜானகிராமன் நாவல்கள் போல இலக்கியத்திற்கும் பொதுவாசிப்புக்கும் நடுவே நின்றிருப்பவை. பெரும்பாலும் பெண்களின் உலகு சார்ந்தவை. காதல்- காமம் இரண்டும் மையப்பேசுபொருளாக அமைந்தவை.

பிற்காலத்தில் குமாரன் ஆசானின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய மரணம் துர்ப்பலம், நாராயணகுருவின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய குரு ஆகிய இருநாவல்களும் இலக்கிய முக்கியத்துவம் கொண்டவை. கேரளத்தின் முக்கியமான பல விருதுகளைப் பெற்றவர்.1997ல் தன் 76 அவது வயதில் திருவனந்தபுரத்தில் மறைந்தார்.

 

 

 

 

 

 

1972ல் வெளிவந்த மாயா என்னும் சினிமா கே.சுரேந்திரனின் புகழ்பெற்ற நாவலை ஒட்டியது. மாயா தொடர்கதையாக வெளிவந்தது. தந்தை, காதலர்களின் உலகால் அலைக்கழியும் பெண்களின் உலகம். அன்று மிக விரும்பிப் படிக்கப்பட்டது.

சந்தியக்கு எந்தினு சிந்தூரம்?

சந்த்ரிகைக்கு எந்தினு வைடூரியம்?

காட்டாறினு எந்தினு பாதசரம்?

என் கண்மணிக்கு எந்தினு ஆபரணம்?

 

மாயிகமாகும் மந்தஸ்மிதத்தின்றே

மாற்றறியுந்நவர் உண்டோ?

தங்கமே நின் மேன் கண்டால் கொதிக்காத்த

தங்கமும் வைரமும் உண்டோ?

 

பூமியில் சொர்க்கத்தின் சித்ரம் வரைக்குந்நு

காமுகனாய வசந்தம்!

என்னே காவிய கந்தர்வனாக்குந்நு

சுந்தரி நின் ஃபாவ கந்தம்!

ஜெயச்சந்திரன்

தட்சிணாமூர்த்தி

ஸ்ரீகுமாரன் தம்பி

[தமிழில்]

அந்திக்கு எதற்கு செந்தூரம்?

சந்திரனுக்கு எதற்கு வைடூரியம்?

காட்டாற்றுக்கு எதற்கு கால்கொலுசு?

என் கண்மணிக்கு எதற்கு ஆபரணம்?

 

மாயம் நிறைந்த இப்புன்னகைக்கு

மாற்று ஆராய்ந்தவர்கள் உண்டா?

தங்கமே உன் மேன் கண்டால் விரும்பாத

தங்கமும் வைரமும் உண்டா?

 

பூமியில் சொர்க்கத்தின் சித்திரத்தை

வரைந்து காட்டுகிறது காதலனாகிய வசந்தம்!

என்னை காவிய கந்தர்வனாக்குகிறது

சுந்தரி உன் காதலின் சுகந்தம்!

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 19, 2021 11:34

தெய்வீகனின் கதை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நான் தமிழ்ச்சிறுகதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி முன்பு எழுதிய ஒரு குறிப்பை நினைவுகூர்கிறேன். அவர் தமிழர்கள் உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழ்வதைப்பற்றி எழுதியிருந்தார்.அவர்களிடமிருந்து வெறும் நஸ்டால்ஜியாக்கள் வந்துகொண்டிருந்தன. சுந்தர ராமசாமி தாழ்ந்து பறக்கும் தமிழ்க்கொடி என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அடுத்த அலையில் ‘வேடிக்கைபார்க்கும்’ கதைகள் வரலாயின. புலம்பெயர்ந்த நாட்டின் விசித்திரங்களை வியந்தோ கேலி செய்தோ எழுதப்படும் கதைகள் அவை. அதற்குப்பிறகுதான் அ.முத்துலிங்கம் எழுதலானார். அப்போதுதான் புலம்பெயர்ந்த கதைகள் மேலெழுந்தன. தமிழ்க்கொடி மெய்யாகவே பறந்தது

சென்ற இடத்தின் வாழ்க்கை, அங்குள்ள மனிதர்களை வெறுமே அவதானிப்பது மட்டுமன்றி அவர்களை அடையாளங்களும் படிமங்களுமாக்கி ஒரு யூனிவர்சல் பார்வையை அடைவதைத்தான் கலைநயம் மிக்க புலம்பெயர்ந்த கதைகள் செய்யவேண்டும். அத்தகைய கதைகளில் ஒன்று தெய்வீகனின் புலரியில் மறைந்த மஞ்சள் கடல்.

இக்கதையின் வலிமையே அதன் காட்சிவெளிச் சித்தரிப்புதான். “மயானத்தின் வாயிலுக்கு வந்தபோது, கறுப்பு பொலீத்தீன்களால் மூடிக்கட்டிவிட்டது போல, உள்ளே உயரமாக நின்றுகொண்டிருந்த மரங்கள் அடர்ந்த அச்சத்தைத் தந்தன” என்ற வரி அளிக்கும் துணுக்குறல் கலையில் மிக முக்கியமானது. வரவர ஃபேஸ்புக் குறிப்புகள் போல நுட்பமில்லாமல் நக்கலும் நையாண்டியுமாக செயற்கையாக எழுதப்படும் கதைகளில் பெரும் சலிப்பை அடைந்துவிட்டேன். இந்தக்கதையின் இந்த ஒரு வரியே எனக்கு ஒரு தனி கவிதைபோல. இன்று எழுத்தாளர்களிடம் நாம் எதிர்பார்ப்பது இதையெல்லாம்தான்.

“காலை வேளைகளில் சமைத்து விடாதே! காற்று அருகிலுள்ள குடிமனைகளை நோக்கி வீசும் நேரமது. மயானத்திலிருந்து கறிவாசனை வந்தால், பயந்து போவார்கள். பின்னேரங்களில் காற்று எதிர்திசையில் காட்டுப்பக்கமாக வீசும். அப்போது பிரச்சினை இல்லை” என்ற வரியை இன்னொரு உதாரணமாகச் சொல்வேன். மயானத்தில் இருந்து மாமிசவாடை எழுவது இந்தியாவில் சகஜம். அங்கே அது பிசாசின் வாசனை.

அந்த ஜப்பானியப் பெண், அவள் அடைந்த ஜென்மாந்தர அன்னியத்தன்மை, அவள் அன்னையென வந்து அணைத்துக்கொள்ளும் மென்மை, கனவுக்கும் நனவுக்குமென ஊடாடும் அந்த சூழல் எல்லாமே இதை ஓர் அருமையான கதையாக ஆக்குகின்றன.

இன்றைக்கு நாம் வாசிக்கும் பெரும்பாலான கதைகள் எளிய லௌகீக – அரசியல் புத்திக்கு உரியவையாக உள்ளன. அந்த புத்தியால் எழுதவும் படுகின்றன. ஆனால் எனக்கு இலக்கியமென்பதே வண்ணங்கள் முயங்கிக் கலைந்து உருவாகும் ஓவியம்போல ஒரு மயக்கநிலையை உருவாக்குவதற்குரியதுதான். செய்திகள், அறிக்கைகள் எல்லாம் உருவாக்கும் அதீதமான தெளிவை உடைப்பதற்குத்தான் கலை. புகைப்படத்துக்கு மாற்றாக நவீன ஓவியம் வந்ததுபோல.

ஆகவே தெளிவான துல்லியமான மொழி இருந்தாலே அந்தக்கதை சலிப்பை அளிக்கிறது. மொழி உருகி மயங்கும் அனுபவம் எதையும் அந்த எழுத்தாளன் தொடவில்லை, அவன் லௌகீகத்தையே சமையல் செய்கிறான் என்று தோன்றிவிடுகிறது. இந்தக் கதையில் அந்த மயானம் எனக்கு லௌகீகமான அனைத்தையும் கடக்கும் ஒரு பெரிய படிமமாக உள்ளது.

ஸ்ரீனிவாஸ்

அன்புள்ள ஜெ,

தெய்வீகனின் கதை சமீபத்தில் வாசித்த அழகிய ஆக்கங்களில் ஒன்று. போரிடும் ஈழம் என்னும் மாபெரும் மயானத்தில் இருந்து இன்னொரு மயானத்துக்குச் சென்றவனின் கதையில் இருக்கும் அங்கதம் ஆழமானது.

உன் மண்ணில் வாழும் வரைக்கும்தான் உன் அடையாளம் என்பது உனக்கு அகங்காரம். இன்னொரு மண்ணில் அது வெறும் ஆபரணம்.

என்றவரியில் கதை ஒரு முழுமையை அடைகிறது. மீண்டும் மீண்டும் வாசிக்கச்செய்யும் ஒரு எடைமிக்கச் சோர்வு இக்கதையில் உள்ளது

ஆர்.ரவீந்திரன்

புலரியில் மறைந்த மஞ்சள்கடல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 19, 2021 11:31

கீழைத் தத்துவம்- எளிதாக

கீழைத்தத்துவம் தொடக்க நிலையினருக்கு- வாங்க

இனிய ஜெயம்,

சமீபத்தில் வாசகி கிறிஸ்டி அவர்கள் எழுதிய சோபியின் உலகம் நாவல் குறித்த பதிவு ‘இந்த காலக்கட்டம்’ சார்ந்து முக்கியத்துவம் கொள்ளும் அறிமுகங்களில் ஒன்று.  கடந்த ஆண்டு நோய் சூழல் விடுமுறையில் 10 அல்லது +1 முடித்த நிலையில் நின்ற பொது இளம் மனங்களுக்கு ஒரு முக்கிய தருணம் இதை எத்தனை பேர் உணர்திருப்பார்கள் தெரியவில்லை.

கடந்த கால் நூற்றாண்டாக இந்தியக் கல்வி அமைப்பு இறுகி இறுகி வந்து கிட்டத்தட்ட கயிறு பிரி அறுந்து போகும் நிலை. எட்டாம் வகுப்பு துவங்கி பாலர்கள் பொதி கழுதை போல பாடங்களை சுமந்து 10 ஆவது  மதிப்பெண் நோக்கியும், கிடைத்தவுடன் நேரடியாக 12 நோக்கி பொதி கழுதை ஓட்டமும், கிடைத்தவுடன் கல்லூரி பொதி கழுதை என்றாகி, அது முடிந்ததும் வேலை தேடி ஓடி, இடைவெளி கிடைத்தால் வைக்கோல் தின்று கோமியம் குடிப்பது போல, கிரிக்கெட் ஆடி சினிமா பார்த்து பொழுது போக்கி, மொத்தத்தில் ஆத்மீகமாக ஒன்று பிறக்க சாத்தியம் கொண்ட முக்கியமான பருவசூழல் ஒன்றினை எந்த போதமும் இன்றி சோத்துக் கல்விக்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய சூழல் இந்த செக்கு மாட்டு தடத்தில் திடீர் உடைப்பை கொண்டு வந்திருக்கிறது. சினிமா வெப் சீரிஸ் கிரிக்கெட்கு வெளியே நுண்ணுணர்வு அழியா வெகு சில மனங்கள் வாசிப்பு நோக்கி திரும்பக் கூடும். அத்தகு மனங்கள் சிலவற்றில் இன்னும் சிறிய எண்ணிக்கை கொண்ட சில மனங்கள் சூழும் துயர் கண்டு  அபூர்வமாக இந்த வாழ்க்கை குறித்து சிந்திக்கவும் வாய்ப்பு உண்டு. அத்தகு தொடக்க நிலையினருக்கு தங்களது வினாக்களை கூர் தீட்டிக்கொள்ள தமிழில் வாய்ப்பு எந்த அளவு உண்டு எனில் (சோபியின் உலகம் போன்ற ஒன்றிரண்டு பிரதிகள் அன்றி) பூஜ்ய சாத்தியமே எஞ்சும்.

முன்னர் தமிழக அரசு வெளியிட்ட பாட திட்டங்கள் போன்றவை இருப்பினும், பாட திட்டம் என்ற வடிவ போதம் கொண்டே அவற்றில் முகத்தில் அடிக்கும் ஒரு அகடமிக் அம்சம் கூடி விடுகிறது. ஆக இவற்றை இரண்டாம் தேர்வாக வந்து சேரும் முன்பான முதல் தேர்வு என தமிழில் ஏதும் இல்லை. இத்தகு சூழலில்தான் சோபியின் உலகம் போன்ற நல்ல மொழியாக்கத்தில் வெளியான புனைவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நாவலுக்குள்  சோபி தான் வாழ்வது யதார்த்த உலகில் அல்ல என்று ஒரு கட்டத்தில் சந்தேகம் கொள்கிறாள், சந்தேகத்தை பின்தொடர்ந்து தான் ஒரு புனைவுகள் கதாபாத்திரமாக சிறைப்பட்டு இருப்பதை கண்டு பிடிக்கிறாள், அப்புனைவு உலகில்  இருந்து வெளியேறி ‘உண்மை’ உலகுக்கு எங்கணம் சோபி மீள்கிறாள் எனும் ஒரு துப்பறியும் நாவலின் சுவாரஸ்யத்துடன் நகரும் புனைவில், அவள் கிரேக்க தொன்மங்கள் துவங்கி, பிளேட்டோ தொடர்ந்து இன்றைய பின்நவீன கால தத்துவங்கள் வரை அறிமுகம் செய்து கொள்கிறாள். (இதிலும் விடுபட்டவராகவே இருக்கிறார் ஆர்தர் ஷோஃபனவர்).

இந்த வாழ்க்கை குறித்த அத்தனை  அடிப்படை கேள்விகளையும் விவாதிக்க மேலை தத்துவ மரபை இத்தனை சுவாரஸ்யமாக அறிமுகம் செய்து கொள்ளும் ஒரு இளம் மனம் இயல்பாகவே மேலதிக வாசிப்பு வேண்டி, அகடமிக் வடிவத்துக்குள் அந்த வடிவம் தரும் இடர் குறித்த தயக்கம் இன்றி நுழைய முடியும்.

மேலை தத்துவத்தை அணுக தொடக்க நிலையினருக்கு இருக்கும் சோபியின் உலகம் போன்ற சாத்தியங்கள் கீழைத் தத்துவத்தை அணுக இல்லவே இல்லை என்று நினைத்திருந்தேன். மாறாக ஒரே ஒரு அழகிய நூல் உண்டு என்பது கவனத்துக்கு வந்தது. ஜோ லீ கார்ட்டூன்கள் இணைய, ஜிம் பாவல் எழுதி, க. பூர்ணசந்திரன் மொழிபெயர்த்த, அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட,  = கீழைத் தத்துவம்: தொடக்கநிலையினருக்கு = எனும் நூல்தான் அது.

180 பக்கங்களே கொண்ட இந்த நூலில் இந்தியாவின் சிந்துப் பண்பாடு துவங்கி, சைனா, ஜப்பான், திபெத் தலாய் லாமா  முடிய கீழைத் தத்துவ மரபின் ஒரு சிறிய அறிமுகத்தை நிகழ்த்துகிறார் ஜிம். திபெத்திய பான் மதம் அதை உட்செறித்த வஜ்ராயன பௌத்ததுக்கு நூலின் இறுதியில் மிக சில பக்கங்களே அளித்த நிலையில் இந்த நூலின் சரி பாதி, இந்திய தத்துவ மரபுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மீதி பாதியில் பெரும்பான்மை சீன தத்துவ மரப்புக்கும் ஜப்பானிய மரபுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானிய ஷிண்டோ மார்க்கம், ஷியின்கோன் பௌத்தம், ஜென் பௌத்தம், தூய இன்ப பௌத்தம், நிக்கிரேன் பௌத்தம் என ஜப்பானிய தத்துவ மத பண்பாட்டுக் கிளைகளை சுருங்க அறிமுகம் செய்யும் நூல், சீன தத்துவ வரலாற்றை நான்கு பருவகாலங்கள் என உருவகித்து, கன்பூசியஸ்,மென்சியஸ், தாவோயிசம் இவற்றை வசந்த காலம் பகுப்பிலும், சீனாவில் நுழைந்து செழித்த பௌத்தத்தின் வண்ண பேதங்களை கோடை பூக்கும் பருவத்திலும், நவ கன்பூசிய எழுச்சிக்கு வித்திட்ட ஆசிரியர்களை இலையுதிர் காலத்திலும், நவீனம் துவங்கி மாவோ வரையிலான காலத்தை குளிர் பருவத்திலும் வைத்து அறிமுகம் செய்கிறது. ஜப்பானிய ஷிண்டோவின் காமி எனும் ஆற்றல், இந்திய வாமஆசாரம் போல சீனாவில் நிகழ்ந்த இன் யான் என பல சுவாரஸ்யங்கள் வழியே பயணிக்கிறது இந்த பகுதிகள்.

சீன மரபை ருதுசரி பருவ கால பிரிவில் வைத்து அறிமுகம் செய்வதை போல, இந்திய தத்துவ மரபை ஆல மரம் எனும் உருவகம் வழியே அறிமுகம் செய்கிறார் ஜிம். இந்தியப் பண்பாட்டை பனை மரம் போல ஒற்றை வடிவில் அறிய முனைவது பிழை, அது ஆல மரம் போன்றது, சிந்து பண்பாடு துவங்கி, நவீன கால ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி வரை பல்வேறு விழுதுகள் கொண்ட ஆலமரம்தான் இந்தியப் பண்பாடு, அதே சமயம் அந்த ஆலமரம் ஒரே விதையில் இருந்து முளைத்த ஒன்று என்பதையும், கீழை மரபில் மேலை மரபில் இருப்பது போல தத்துவத்தை ‘தனியே’ பிரித்து நிற்கும் ஒன்றாக அறிய முடியாது, அது இங்கே மதப் பண்பாடு எனும் முழுமையின் ஒரு பகுதி என சிறிய குறிப்புகள் வழியே விளக்கி விட்டே முன்செல்கிறார் ஜிம்.

எல்லா மேலை சிந்தனையாளரும் வந்து இடரும் ஆரிய வந்தேறி கருத்தியலை ( ஜிம்முக்கே அந்த சார்பு இருந்திருக்கும் என்று நூலின் சில இடங்கள் வழியே யூகிக்க முடிகிறது) அந்த கருத்தியல் எவ்வாறு உருவானது என்ற சமன் கொண்ட சிறு விளக்கத்துடன் துவங்குகிறார் நூலாசிரியர். ‘படையெடுத்து வந்த வெறுப்பை உமிழும் ஆரிய  நாடோடிகள்’ என்ற சிறப்பான யூகம் நிலைபெற தொல்லியல் சான்றுகள் ஏதும் இல்லை என்பதை குறிப்பிடும் ஜிம், மொழிக் குடும்பம் எனும் ஆய்வுகள் வழியே எவ்வாறு இந்த கருத்தாக்கம் நிலை பெற்றது என்பதை சுருங்க விளக்குகிறார். சிந்துப் பண்பாட்டை ‘படையெடுத்து’ வந்த ஆரியர் அழித்தனர் எனும் கருதுகோள் தொடர் ஆய்வுகள் வழியே எவ்வாறு மெல்ல பின்வாங்கிக் கொண்டிருக்கிறது என விளக்கிய பிறகே, இந்தியப் பண்பாட்டின் சான்றுகள் ரீதியான தத்துவம் நோக்கிய  முதல் அசைவுக்கு வேத காலம் வளர்ந்த வகைமை சொல்கிறார். வேதங்கள் அதன் விளக்கங்கள், திரண்டு வந்த பிரம்மம் எனும் கருதுகோள், அதை விவாதித்து வளர்த்தெடுத்த உபநிஷத், அதன் பின்னான சமண பௌத்த எழுச்சி, ஆறு தரிசனங்கள், தாந்த்ரீகம்,பின்னர் பக்தி இயக்கம் வழியே நிகழ்ந்த சைவ வைணவ எழுச்சி, முகமதிய, கிறிஸ்துவ மதங்களின் நுழைவு, சீக்கிய மதத்தின் துவக்கம், மறுமலர்ச்சி கால விவேகானந்தர் துவங்கி நவீன கால ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வரை, இந்திய தத்துவ மரபை அதன் வழிபாடு, சடங்குகள், நம்பிக்கைகள் பின்னிப் பிணைய நிற்கும் அதன் வகைமையை விளக்குகிறார் ஜிம்.

எதிர்மறைக் கூறுகளில் (இந்தியாவின் அந்நியப் படையெடுப்பு அழிவுகள், சீனாவின் மாவோயிஸ அழிவுகள் போல) கவனம் செலுத்தாமல் நேர்மறை கூறுகளில் மட்டுமே அழுத்தம் கொடுத்து இந்த அறிமுகத்தை நிகழ்த்தும் ஜிம், இந்தியா, சீனா, ஜப்பான், திபெத் என தத்துவ ஓடை நிலம் கடக்கும் போதெல்லாம் அந்தந்த நிலம் சார்ந்த அழகிய நிலச் சித்தரிப்பு வர்ணனை ஒன்றின் வழியே வாசகனை அழைத்துப் போகிறார்.  சின்னச் சின்னப் பத்திகள் வழியே அமைந்த நூல். அதிகபட்சம் ஒரு பக்கத்துக்கு மூன்றே பேரா. எனும் வடிவம் மிகுந்த வாசிப்பின்பம் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

இந்த விறுவிறுப்பான வாசிப்புக்கு துணை நிற்கும் மற்றொரு அம்சம் இந்த அறிமுகம் கைக்கொள்ளும் கதை சொல்லல் முறை. ஆலிஸ் , அவளது கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லும் கம்பளிப்புழு உடன் அவள் பயணிக்கும் அற்புத உலகம் எனும் கற்பனைக்குள் பின்னப்பட்ட கதை, சில விளக்கங்களை புன்னகையை விட்டு விட்டு மறையும் பூனைஅளிக்கிறது. சில விளக்கங்களை தொப்பிப் பைத்தியம் அளிக்கிறான். குறிப்பாக சமணத்தின் சப்த பங்கி. சப்த பங்கி என்றால் என்று புழு ஆரம்பிக்கும் முன்பே, “நான் சொல்றேன்…அத நான் சொல்றேன்” என ஓடி வருகிறான் தொப்பி பைத்தியம். யோகத்தின் வழியே கிடைக்கும் அட்டமா சித்தி எனும் வரிசையில் உடலை மிக சிரிதாக்குவது, மிக மிக பெரிதாக்குவது என்பதையெல்லாம் புழு விளக்கும் போது, ஆலிஸ் புரியுது மேல சொல்லு எனும் போது, வாசகருக்குள் முன்னர் படித்த ஆலிஸ் கதையில் வரும் ஆலிஸ் மருந்து குடித்து சிறிதாவது, கேக் தின்று பெரிதாவது போன்ற சித்திரங்கள் வந்து இணைந்து கொண்டு புன்னகையை வரவழைக்கிறது.

சுவாரஸ்யமான இந்த தத்துவ அறிமுக நூலின் சுவாரஸ்யத்துக்கு மற்றொரு முக்கிய காரணி ஜோ லீ. அவரது கார்ட்டூன்கள் ஒட்டு மொத்தமாக இந்த நூலின் வடிவமைப்பையே வேறு தரத்துக்கு உயர்த்தி, ‘இன்றைய காலத்துக்கான’ நூல் என்று இந்த நூலை மாற்றி விடுகிறது. இந்த வடிவம் தமிழில் இன்னும் பெரிதாக பின்பற்றப்படாத, பின்பற்றப் பட்டால் மிக நேர்த்தியான வாசிப்பு அனுபவத்தை வழங்க வல்லது. ஜோ லீ யை இந்த நூலின் இணை ஆசிரியர் என்றே சொல்லி விடலாம் என்பதை போல நூல் நெடுக அவரது முத்திரைகள். அஸ்வமேத யாகத்தின் பாலியல் சடங்கு சார்ந்த விவரனை வருகையில், ‘என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க’ என்ற ரீதியில் முறைக்கிறது ஒரு குதிரை, யானையை உதாரணமாக கொண்டு சப்த பங்கி அறிமுகம் செய்யப் படுகையில், ஒரு யானை தலையில் கை வைத்து விசனமாக உட்கார்ந்து இருக்கிறது. தலைக்குள் இப்போ  நான் யார்தான்யா எனும் கேள்வி, இத்தனையோடு அது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்க்க முயலுகிறது. அந்த கண்ணாடியின் அளவோ அரை அடிக்கு அரை அடி. இப்படி நூல் நெடுக ஆங்காங்கே ஜோ லீ ன் பஞ்ச் இந்த நூலின் தனி அழகு.

ஆலிஸ் வழியே ‘வினவும் கலை’யை கற்றுக் கொடுக்கும் இந்த நூல், புழுவின் சித்தரிப்பு வழியே பௌத்தம் இந்தியாவில் முளைத்து, கிளை விரித்து, சீனா ஜப்பான் திபெத் எல்லாம் பரவி, இதழ் இதழாக, சென் பௌத்தம்,தூய இன்ப பௌத்தம், வஜ்ராயன பௌத்தம் என்றெல்லாம் மலர்ந்து செழிக்கும் சித்திரத்தை பிரமாதமான பல பௌத்த உருவகங்கள் வழியே அதற்கான ஜோ லீயின் சித்திரங்களுடன் விவரிக்கிறது.

ஒரு பண்டைய நகரத்துக்கு சுற்றுலா செல்லும் முயற்சியின் முதல் அடியாக நாம் திறந்து பார்க்கும் சுற்றுலா நில வரைபடம் நமக்கு எதை அளிக்குமோ அதற்கு இணையானது இந்த கீழைத் தத்துவ அறிமுக நூல், ஜிம் பாவல், ஜோ லீ கூட்டணியை மிக இலகுவான மொழிநடையில் தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் பூர்ணசந்திரன். தீவிரமான ஒன்றை அந்த தீவிரம் குன்றாமல் எந்த எல்லை வரை விளையாட்டுக்கு உரிய சுவாரஸ்யத்துடன் எழுத முடியும் என்பதை, அது அளிக்கும் உவகையை ஒவ்வொருவரும் வாசித்து  அறிய வேண்டிய நூல்.

கடலூர் சீனு

பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 19, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.