Jeyamohan's Blog, page 960
June 28, 2021
பெண்களின் துறவு, ஒரு வினா
அன்புநிறை ஜெ,
இது கதாநாயகிக்கு வந்த சுசித்ராவின் கடிதம் குறித்த கடிதம். மிகத் தெளிவாக கோர்வையாகத் தனது பார்வையை முன்வைத்திருந்தார். கதாநாயகியர் நிரையை வாசித்தபோது “ஆம் இது அப்படித்தானே” என்பதுபோல இயல்பான ஏற்பே எனக்கு இருந்தது என்பதை இந்தக் கடிதத்தை வாசித்ததும்தான் உணர்ந்து கொண்டேன். இன்றும்கூட பெண் என்பதைக் காரணமாக்கி மறுக்கப்படும் இடங்களின், பாதைகளின் பொருட்டு காரைக்கால் அம்மை போல பேயாகி விடவும், ஒளவை போல இளமையை ஒரு நொடியில் துறந்து விடவும் வழி இருக்கிறதா என்ற எண்ணம் வாராதிருப்பதில்லை. எனவே ஃபிரான்செஸ் பர்னியின் விடுதலை உணர்வை அப்படியே ஏற்றுக்கொண்டது மனம்.
வெண்முரசில் சிகண்டினியை மகனே என்றழைத்து அம்பை சிகண்டியாக்கும் தருணம் பெரிய கொதிப்பை ஏற்படுத்தியது நினைவில் எழுந்தது. அதைத் தொடர்ந்து துரியன், யுவனாஸ்வன், பங்காஸ்வன், விஜயை எனப் பல கதாபாத்திரங்கள் பெண்மையைத் துறப்பதும் ஏற்பதுமாய் வரும். பெண்மையென எதைத் துறக்கிறார்கள் அல்லது ஏற்கிறார்கள் என்ற கேள்வி எழும். முன்பொரு கடிதம் அது குறித்து எழுதியிருந்தேன்.
“எதற்காக ஒருவர் இப்படி உடலையும் மனத்தையும் சிதைத்துக்கொள்ள வேண்டும்?” என்ற சுசித்ராவின் கேள்வி உள்ளே ஒலித்துக் கொண்டே இருந்தது. இன்றைய விகடன் பேட்டியில் பாரதி பாஸ்கர் அவர்கள் துறவு போன்ற தேடல் கொண்ட பெண்ணுக்கு இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இந்தியாவில் அதற்கான சாத்தியங்கள் இல்லை குறைந்தபட்சம் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அது சாத்தியாமாகிறது என்ற தங்களின் பதிலைக் காலையில் கேட்டதும், அந்த விடுதலைக்காக இந்த அடையாளத்தை துறக்க சம்மதமே என்ற பதில்தான் தோன்றியது. அது மாபெரும் சமரசம் என்றாலும் அநீதி என்றாலும் துறக்கும் பெண்மைக்கு நிகராக துலாக்கோலின் மறுபுறம் விடுதலை இருக்குமென்றால் அதை செய்யவேண்டி இருக்கிறது.
பெண்ணாகவே இருந்து மானுடனுக்கு சாத்தியமான விரிவை பெண் அடையும் காலம் வேண்டும் எனக் கேட்ட சுசித்ராவுக்கு அன்பும் நன்றிகளும். கனவு மெய்ப்பட வேண்டும். கைவசமாவது விரைவில் வேண்டும்.
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள சுபா,
உண்மையில் இந்தியாவில் பெண்கள் துறவிகளாக அலைந்து திரிய முடியாத நிலைக்குக் காரணம் மதம் சார்ந்த கொள்கைவரையறை அல்ல. மாறாக நடைமுறைப் பிரச்சினைகள்தான். அதாவது சமூக ஏற்பு மற்றும் அதுசார்ந்த உளநிலைகள்தான். புத்தரின் காலகட்டத்தில் இளம்பிக்குணிகள் சாதாரணமாக நாடெங்கும் உலவியிருக்கிறார்கள். சமணத்திலும் பெண்துறவிகள் நிறையவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் பயணங்கள் செய்திருக்கிறார்கள்.
நம் சமூகத்தின் ஏற்புநிலை இளம் ஆணை துறவியாக ஏற்கிறது. இளம்பெண்ணை அவ்வாறு ஏற்பதில்லை. அதை ஓர் ‘ஒடுக்குமுறை’ என்றும் ‘பாரபட்சம்’ என்றும் பார்ப்பதெல்லாம் இன்றைய ‘புண்பட்ட பெண்ணிய’ நோக்கு. அப்படி எல்லாவற்றையும் பார்ப்பதன் வழியாக நம்மை நாம் குறுக்கிக்கொள்கிறோம். ‘போராளி’ பிம்பத்துக்கு அது உதவலாம். ஆனால் உண்மையை அறிய சமரசமில்லாத பார்வை தேவை. நாம் செய்துகொள்ளும் முதல்சமரசம் நமது உணர்வுகளுக்கேற்ப உண்மைகளை திரித்துக்கொள்வதே.
இது தொன்மையான ஒரு சமூகம். இதன் மதிப்பீடுகள் பெரும்பாலும் பழங்குடி வேர்கள் கொண்டவை, நவீன முதலாளித்துவ சமூகத்திற்கான மாற்றங்களை அடையாதவை. பழங்குடிச் சமூகங்களில் பெண்கள் குழந்தைகளை பெற்றுத்தரும் செல்வங்கள். ஆகவே அரிதானவர்கள். சென்ற நூறாண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நிலத்திலேயே பெண்ணை கவர்ந்துவருதல் ஒரு ஏற்கப்பட்ட கலாச்சாரமாக, வீரம் மிக்க மணமுறையாக இருந்தது. இன்றும் பல சாதியினரின் மணச்சடங்குகள் குறியீட்டு ரீதியாகப் பெண்கவர்தலை நடிப்பவைதான்.
பெண்கள் பற்றிய நம் பார்வை பொதுவாக அதுதான். தன் இனக்குழுப் பெண்ணை, அல்லது குடும்பத்துப் பெண்ணை தன் உரிமைப்பொருள் என நினைத்துப் பாதுகாப்பது, பிற இனக்குழுப் பெண்ணை அல்லது குடும்பத்துப்பெண்ணை கவரமுயல்வது என்றே இன்றும் இங்கே சராசரி ஆணின் மனநிலை உள்ளது. அது பல்லாயிரமாண்டுக்காலத் தொன்மை கொண்ட ஒன்று. அது காலாவதியாகும் காலம் மெல்லவே வரும்.
ஆகவே இளம்பெண் தனியாகப் பயணம்செய்வது, தனியாக தவம் செய்வதெல்லாம் ஆபத்தானதாகவே இங்கே இருந்தது, இருக்கிறது. அவள் திறந்துவைக்கப்பட்ட செல்வம் போல. அவள் கைப்பற்றப்படலாம், ஆக்ரமிக்கப் படலாம். இங்கே ஆண்துறவிகள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து திரளாக அலைய முடிகிறது. பெண்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை.
ஆகவே பௌத்தத்தின் தொடக்க காலத்திற்கு பிறகு பெண்கள் வெளியே செல்வதற்கு கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் திரளாகவே செல்லவேண்டும் என்றும், முன்னரே வகுக்கப்பட்ட மடாலயங்களிலேயே தங்கவேண்டும் என்றும், நட்பில்லாத சமூகங்கள் மற்றும் பௌத்த ஆதரவில்லாத மன்னர்கள் ஆளும் நிலங்களுக்குச் செல்லக்கூடாதென்றும் நெறிகள் உருவாக்கப்பட்டன. சமணப் பெண்துறவிகளுக்கு இன்றும் அக்கட்டுப்பாடுகள் உள்ளன.
துறவு பூண்டு தனியாகப் பயணம் செய்யும் ஆணுக்கு இந்த அபாயங்கள் உண்டா? பெண்கள் அளவுக்கு இல்லையென்றாலும் உண்டு. ஒருபாலினச் சேர்க்கையாளர்களால் வன்முறையாகக் கைப்பற்றப்படுதல், வெவ்வேறு வகையான இரவுக் குற்றவாளிகளால் தாக்கப்படுதல் என பல அபாயங்கள். பெரும்பாலும் எல்லா துறவிகளும் அதைப் பதிவுசெய்திருக்கிறார்கள். எனக்கும் பல அனுபவங்கள் உண்டு.
காவல்துறையேகூட துறவிகளிடம் இன்று மிகக்கடுமையாகவே நடந்துகொள்கிறது. தமிழகத்திலும் ஆந்திரத்திலும் அலைந்து திரியும் துறவிகளைப் பிடித்து போலி அடையாளங்கள் உருவாக்கி, குற்றவாளிகளாக்கிச் சிறையிலடைத்து, குற்றக்கணக்கை முடித்துவைக்கும் வழக்கமும் உண்டு. துறவுநிலைகளில் அதைப்பற்றிய எச்சரிக்கைகளை எப்போதுமே குறிப்பிடுவார்கள். அப்படி கைதுசெய்யப்பட்டு ஐந்தாண்டுகள் சிறையில் கழித்த துறவிகளையே எனக்குத் தெரியும்.
அதாவது ஆண்கள் இங்கே கௌரவமாக, பாதுகாப்பாக துறவிகளாக அலைகிறார்கள் என்று இல்லை. அவர்கள் அபாயங்களை பொருட்படுத்துவதில்லை என்பதே உண்மை. சில இடங்களில் அவர்களுக்கு துறவி என்னும் ஏற்பு உள்ளது, பல இடங்களில் இல்லை. அலைந்து திரியும் துறவிகள் ரயிலில் கழிப்பறை அருகே அமர்ந்து டிக்கெட் இல்லாமல் பயணம்செய்வதும், அவர்களை பரிசோதகர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடுவதும் இங்கே இருநூறாண்டுகளாக வழக்கம். ஆனால் அவர்களை ஒவ்வொருமுறையும் கடுமையாகத் தாக்கும் பரிசோதகர்கள் உண்டு, என்னையே ஒருவர் தாக்கியதுண்டு.
ஆண்கள் துறவுபூண்டு வெளியே இறங்கும்போது இதற்கெல்லாம் தயாராகத்தான் செல்கிறார்கள். அப்படிச் செல்லத்துணியும் பெண்ணுக்கும் அதெல்லாம் தடையாக இருக்காது. உதாரணமாக, ஒரு பெண் தன் உடலை தானல்ல என்று எண்ணினால், பாலியல் வல்லுறவுகளை ஒரு பொருட்டென கருதாதவளானால், அவளுக்கு அதன்பின் அஞ்ச ஏதுமில்லை. அந்நிலையில் பெண் இல்லை, மிகத்தீவிரமான உளப்பாதிப்புகளுக்கு உள்ளாகிறாள் என்பதே மிகப்பெரிய சிக்கல்.
இந்திய சமூகத்தில் துறவிகளுக்கான ஏற்பு மிகமிக வேகமாக மறைந்து வருகிறது. 1982ல் நான் அலைந்ததுபோல இன்று அலைய முடியாது. இதை பலவாறாக எழுதியிருக்கிறேன். இன்று இரண்டுவகை மனநிலைகள் உள்ளன. அலையும்துறவிகளை ஞானம்தேடிச் செல்பவர்கள் என்றும், உலகியலாளர்களால் பேணப்படவேண்டியவர்கள் என்றும் எண்ணும் வழக்கம் நமக்கு இருந்தது. நம் மரபு அதற்குக் கற்பித்தது.
அவர்கள் உலகிடம் வேண்டுவது ஒருநாளில் இருவேளை உணவு மட்டுமே. அதை அளிப்பது எந்தச் சமூகத்திற்கும் சுமை அல்ல. எந்தப் பஞ்சத்திலும் இந்தியாவில் துறவிகள் கைவிடப்பட்டதில்லை. பல ஊர்களில் ஊர்த்தலைவர்கள் சாவடிகளுக்குச் சென்று அங்கே எந்த துறவியோ வழிப்போக்கரோ சாப்பிடாமல் இருக்கிறார்களா என்று பார்த்து அன்னமிட்டுவிட்டே உண்ணும் வழக்கம் இருந்தது.
இரவில் உண்பதற்கு முன் ஊர்ச்சாவடிக்குச் சென்று அங்கே எவரும் இல்லையென்றாலும் கைகளைத் தட்டி நாற்புறமும் நோக்கி “இரவுணவு இல்லாத எவரேனும் உண்டா?”என்று கேட்டபின்னரே உணவுண்ணவேண்டும் என்னும் வழக்கம் சமீப காலம்வரைக்கும் கூட இருந்தது. குறிப்பாக வேளாளர், தேவர் சாதியினரிடையே.
[ஆச்சரியமான சில செய்திகள் உண்டு. பெரும்பஞ்சங்களில் அலையும் துறவிகள் அன்னம் அளிப்பவர்களாக உருமாறினர். பிச்சை எடுத்து கஞ்சித்தொட்டிகள் திறந்தனர். தமிழகத்தின் மாபெரும் உணவு வள்ளல் ஒரு துறவிதானே?]
ஆனால் சில தலைமுறைகளாக அலையும் துறவிகளெல்லாம் சோம்பேறிகள், திருடர்கள் என்னும் மனநிலை இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இடதுசாரி அமைப்புகள், ஊடகங்கள் அனைத்தும் இணைந்து இதைத் திட்டமிட்டு உருவாக்குகின்றன. அவ்வப்போது சிக்கிக்கொள்ளும் சில போலிச்சாமியார்களை முன்வைத்து உருவாக்கப்படும் இந்தப் பிம்பம் உள்நோக்கம் கொண்டது. ஒப்புநோக்க மேலும் கூடுதலாக கிறிஸ்தவத் துறவிகள் பற்றிய அச்செய்திகள் வருகின்றன. ஆனால் அவர்களைப் பற்றிய அப்பிம்பம் கட்டமைக்கப்படவில்லை என்பதைக் கவனியுங்கள்.
சுரண்டித் தின்னும் அரசியல்வாதிகளையும் வெற்றுக்கூச்சலாளர்களையும் எல்லாம் ஏற்றுக்கொண்டு கொண்டாடும் நம் ‘முற்போக்கு’ கும்பலுக்கு உணவன்றி வேறேதும் கோராமல், பெரும்பாலும் கண்களுக்கே தென்படாமல் வாழும் துறவிகள் ஒட்டுண்ணிகளாகவும் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படவேண்டியவர்களாகவும் தெரிகிறார்கள். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று, ஆண்டுக்கு ஒரு நூல்கூட படிக்காமல், தினசரி ஒருமணிநேரம் வகுப்பில் உழப்பிவிட்டு சுற்றிவரும் கல்லூரிப்பேராசிரியர்கள் துறவிகளை ‘சமூகத்தின் செல்வத்தை சுரண்டி வாழ்பவர்கள்’ என எழுதும் கேவலம் இங்குள்ளது.
அந்த மனநிலையை அவர்கள் கடுமையாகப் பரப்புவதனால் சமூகத்தில் துறவிகளுக்கான ஏற்பு மறைந்துவருகிறது. கேரளம், தமிழகம், ஆந்திரத்தில் மிகக்குறைந்துவிட்டது. இன்று வட இந்தியாவிலும் மறைந்து வருகிறது. இன்று நகரங்கள் எல்லாம் துறவிகளுக்கு எதிரானவை. ரயில்களில் அவர்களை ஏளனம் செய்பவர்களை அடிக்கடி காண்கிறேன். அவர்கள் பெரும்பாலும் அமைதியாகக் கடந்துசெல்கிறார்கள்.
துறவிகளை பொதுவெளியில் கேலிசெய்து அவமதிப்பவர்கள் அறிவுஜீவிகள் என பாவனை காட்டி மகிழ்கிறார்கள். துறவிகள் கடுமையாக தாக்கப்படும் பல வீடியோக்களை நாம் யூடியூபில் பார்க்கலாம். தாக்கியவர்களே பதிவுசெய்து வலையேற்றியவை அவை. தாக்கப்பட்டவர் அடையாளமற்றவர், புகார்சொல்லாத அன்னியர், சமூகத்திற்கு வெளியே வாழும் தனியர் என்பதனால் தண்டனை இல்லாமல் அதைக் கொண்டாடுகிறார்கள்.
இன்றுள்ள இந்துத்துவ அரசியலும் அரசியலுக்குப் பயன்படாத துறவிகள் தேவையற்ற குப்பைகள் என்று பார்க்கும் மனநிலையை கொண்டுள்ளது. ஏளனங்களையும் வசைகளையும் காணமுடிகிறது. எத்தகைய துறவியானாலும் தங்கள் அரசியலை ஏற்காதவர் என்றால் அவரை இழிவு செய்யவும் வசைபாடவும் இந்துத்துவர் தயங்குவதில்லை. சமீபத்தில் ஓர் இந்துத்துவ அறிவுஜீவி நித்ய சைதன்ய யதியை இழிவு செய்து எழுதியிருந்தார். நித்ய சைதன்ய யதியை நான் முன்வைக்கிறேன் என்பதனால்.
இன்று சிற்றூர்களிலேயே அலையும் துறவிகளுக்குச் சற்றேனும் ஏற்புள்ளது. அங்கும் அவர்கள் திருடர்கள் என தாக்கிக் கொல்லப்படுவது அடிக்கடி நிகழ்கிறது. பல ஆயிரமாண்டுகளாக இந்தியாவெங்கும் பரவியிருந்த ஞானத்தேடிகளினாலான ஒரு பேரியக்கம், மானுடகுலத்திற்கே ஓர் அரிய நிகழ்வு எனக் கொள்ளத்தக்க ஒன்று, இப்போது மெல்லமெல்ல மறைகிறது. இனி அது உருவாகப்போவதுமில்லை.
உடலை ஒடுக்குதல் அல்லது மறைத்தல் குறித்தும் சொல்லவேண்டும். இந்து, பௌத்த, சமண மதங்களில் உடலழகை இல்லாமலாக்குதல், உடலை ஒறுத்தல் என்பது ஆண்களுக்கும் நெறியாக முன்வைக்கப்பட்டது. துறவிகள் எவ்வகையிலும் உடலை அழகுபடுத்திக்கொள்ளலாகாது. காஷாயம் என்னும் காவியுடையே அதற்குரியதுதான். சடையும் தாடியும் முடியும் வளர்த்தல், மொட்டையடித்துக்கொள்ளுதல் போன்று உடலழகை மறைத்துக்கொள்ளும் செயல்கள் துறவுடன் இணைந்திருந்தன. இன்றும் அவ்வாறே.
ஏனென்றால் உடல்வழியாக தான் வெளிப்படலாகாது, உடலை வைத்து தன்னை பிறர் மதிப்பிடலாகாது என்பதுதான். ‘கால்நடைகள் கொழுத்தால் அழகு, துறவி மெலிந்தால் அழகு’ என்று பழமொழி ஏதோ வடிவில் எல்லா இந்திய மொழிகளிலும் உள்ளது. அதன் உட்பொருள் இதுவே. ஆகவே துறவுபூணும் பெண்களுக்கு மட்டும் உடலொடுங்குதல் உள்ளது என்பதில்லை. அது துறவின் ஆதாரநெறியென்றே இங்கே கொள்ளப்பட்டது.
இத்தனை தடைகளையும் கடந்து செல்லும் ஆற்றல் அசாதாரணமான ஆளுமைகளுக்கு உண்டு. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் போன்ற துறவிகள் இயல்பாக வீடுதுறந்து அலையவும் காடேகி தவம் செய்யவும் இயன்றிருக்கிறது.
துறவுபூண்டு தனியாக அலைவதற்குப் பெண்ணுக்கு இங்கே சுதந்திரம் உண்டா என்ற கேள்விக்கான விடை இது. துறவி அல்லாத பெண்கள் தனியாக அலைய முடியுமா? சூழலை கணித்து, போதிய எச்சரிக்கையுடன் பயணம் செய்வது இன்று மிக இயல்புதான். நம் தோழமையைச் சேர்ந்த செல்வராணி தனியாக லடாக் வரை பைக்கில் பயணம் செய்து மீண்டார். நாங்கள் ஸ்பிடி சமவெளியில் பயணம் செய்தபோது ஜே.கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஓர் இளம் ஆசிரியை பேருந்திலேயே ஆறுமாதங்களுக்குமேல் பயணம் செய்து இறுதியாக அங்கே வந்து சேர்ந்திருந்தார்.
இன்று இணையுள்ளம் கொண்ட பெண்கள் சிறிய குழுக்களாகப் பயணம் செய்வது நடக்கிறது. அதற்கான இணையக்குழுக்கள் உள்ளன. வருங்காலத்தில் அத்தகைய பயணங்களுக்கான வாய்ப்புகள் பெருகும். இன்றுள்ள ஒரே சிக்கல், இந்தியா என்னும் இந்தப்பெரிய தேசம், மக்கள்தொகை மிகுந்த இந்நிலப்பரப்பு, முழுமையாக அரசின் சட்டப்பாதுகாப்புக்குள் கண்காணிப்புக்குள் இல்லை என்பதே. குற்றக்குழுக்கள் எங்கும் உள்ளன.
ஒப்புநோக்க ஐரோப்பா போன்ற சிறிய, மக்கள்தொகை குறைந்த நாடுகள் அரசுக்கண்காணிப்பு, கட்டுப்பாடு இருப்பதனால் பாதுகாப்பானவை. ஆனால் சென்ற சில ஆண்டுகளாக ஃபிரான்ஸ் இத்தாலி முதலிய நாடுகள் தனியாகப் பயணம்செய்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, மிக ஆபத்தானவையாக ஆகிவிட்டிருக்கின்றன.
கடைசியாக, இங்கே ஒருவர் அறிவுத்துறையில் ,மெய்யியல் துறையில், சேவைத்துறையில் பணியாற்றி வெற்றிபெற பாலியல் அடையாளத்தை துறந்தாகவேண்டுமா? காந்தியின் அழைப்பை ஏற்று நேரடியாக பழைய நிலப்பிரபுத்துவச் சூழலில் இருந்து அரசியலுக்கு வந்த பல லட்சம் பெண்கள் இருந்தனர். சிறைசென்றனர், தொலைதூரச் சிற்றூர்களுக்குச் சென்றனர், அமைப்புகக்ளைக் கட்டி எழுப்பினர். உங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அவ்வண்ணம் பெருவாழ்வு வாழ்ந்த ஒரு பெண்ணின் வீடு இருக்கும்.
எத்தனை முகங்கள்! நினைவிலிருந்தே நூறு பெயர்களை என்னால் உடனடியாகச் சொல்லமுடியும். அவர்கள் எல்லாம் பெண்ணுடலை துறந்தா அவ்வண்ணம் எழுந்தனர்? அவர்களுக்கெல்லாம் பேருருக்கொண்டு எழ பாலியல் தடையாக இருந்ததா? ஒரு பெண் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனோ அருணா ராயோ ஆக பாலியல் என்ன தடை அளிக்கிறது?
தடைகள் உள்ளன, குடும்பமும் சமூகமும் அளிக்கும் தடைகள். அதைவிட நம் தன்னலமும், நம் ஆசைகளும் ,அச்சங்களும் அளிக்கும் தடைகள். அவை ஆண்களுக்கும் உண்டு. அத்தடைகளை கடந்து எழுபவர்களாலேயே சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.
உலகில் இருசாரார் உள்ளனர். சாதனையாளர்கள், சாதனை படைக்க தடையாக இருப்பவற்றை பட்டியலிட்டுக்கொண்டு வாழ்ந்து முடிபவர்கள்.
ஜெ
செங்கோட்டை ஆவுடையக்கா பாடல்கள்
***
குமரித்துறைவி
வான் நெசவுஇரு கலைஞர்கள்
பொலிவதும் கலைவதும்
தங்கப்புத்தகம்
“
ஆனையில்லா
”
முதுநாவல்
ஐந்து நெருப்பு
மலைபூத்தபோது
தேவி
எழுகதிர்
சிறுகதைகள்-செந்தில் ஜெகன்னாதன்,திருச்செந்தாழை
இனிய ஜெயம்
பொதுவாக வார இறுதிகளில் கடலூர் நற்றிணை கூடல் நண்பர்கள், அவர்கள் வாசித்த சில கதைகளை பகிர, தொலைபேசியில் அக்கதைகள் மேல் கலந்துரையாடல் நிகழும். இந்த வாரம் வந்த கதைகளில் நண்பர் இதயதுல்லா பகிர்ந்த இரண்டு அழகிய கதைகள் உரையாடல் முதன்மை பெற்றன.
முதல் கதை மழைக்கண்.
எழுதியவர் செந்தில் ஜகன்நாதன்.
இவரை நான் அறிந்ததில்லை. புது வரவு எனில் வாழ்த்துக்கள். அதுல ஒரு அரசியல் இருக்குதுங்க, பின்நவீன பாய்ச்சல், வகையறா புதைகுழியில் துவங்காமல், நேரடியாக கண்முன் உள்ள வாழ்விலும், அது என்ன என்பதன் மீதான விசாரணையிலும் சரியாக துவங்கி இருக்கிறார்.சரியான துவக்கம் வெற்றிக்கு முதல் நிபந்தனை என்பது முன்னோர் சொல். மிஸ்டிக்கான கதை. தன்னை அழிக்க வந்த ஒன்றை, தானே நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து எடுக்கும் விசித்திர விதியை நோக்கி திறக்கும் கதை. நம்பகமாக சொல்லப்பட்ட வாழ்வும் வீழ்ச்சியும் கொஞ்சம் பிசகி இருந்தால் சென்டிமென்ட் கதையாக மாறி இருக்கும் அபாயத்தை தனது எழுத்தாற்றல் கொண்டு கடந்திருக்கிறார் ஆசிரியர்.
அதே சமயம் sub text மீது ஆசிரியரின் மிகுபோதம் ஒரு மெல்லிய படலமாக கதை நெடுக பரவி நிற்கிறது. சொல்லப்பட்ட வாழ்வு வழியே சொல்லப்படாத வாழ்வு ஒன்றையும் ‘சொல்லிவிட’ வேண்டும் என்ற போதம் அது. தலைப்பு எனக்கு அசோக வன சீதையை நினைவூட்டியது. தலைப்பு கம்பனின் சொல் என்றே நினைக்கிறேன். கதையின் சாரம் எதுவோ அதற்கு மிக விலகி நிற்கும் பாரமான தலைப்பு. மற்றபடி குறிப்பிட்டத் தக்க நல்ல கதை ஜகன் அவர்கள் வசம் மேலதிகமாக எதிர்பார்க்கலாம்.
இரண்டாவது கதை, துடி.
எழுதியவர் பா.திருச்செந்தாழை. ஐயமின்றி சொல்லிவிடலாம். Master touch. வைல்டு எனும் நிலை டொமெஸ்டிகேட் எனும் நிலைக்கு நகரும் ஆர்க் மீது நிகழும் கதை. காட்டிருந்து இறங்கி வந்து வீடடங்கும் மிருகம். இன்னும் மிருக பண்பு மாறாத மனித நிலை தேராத ஒருவனின் நிலை மாற்றத்துக்கான தவிப்பு. புறச் சித்தரிப்பு× அகச் சித்தரிப்பு, உணர்வுதளம்× அறிவு தளம், கற்பனை×தர்க்கம், ஆர்ட்× கிராஃப்ட் என, எல்லா எதிர் நிலைகளும் தண்டவாளம் போல சமன் கண்டு, அதில் பயணித்து உள்ளுணர்வை தொடும் கதை.
ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி நிலை நிறுத்த, நாவல் எனும் களம் வழங்கும் வசதி எதுவும் சிறுகதை வழங்குவதில்லை. அந்த எல்லையை சவால் எனக் கொண்டு சிறு கதைக்குள் நாவல்அளிக்கும் அதே தாக்கத்தில் கதாபாத்திர உருவாக்கம் நிகழ்ந்திருக்கிறது. ஜனதா வாத்தியாரின் சொல் மிகையோ குறைவோ இன்றி கச்சிதமும் உன்னதமும் கொண்டு கதையின் தளத்தையே உயர்த்தி விடுகிறது. இறுதியில் இன்னாசி இரவின் இருளுக்குள் சைக்கிளை மிதிக்கும் சித்திரம் வருகையில் இவன் லௌகீகத்தில் நிச்சயம் ஜெயிப்பான் என்று தோன்றியது. அழகிய கதை வாசித்து முடித்ததும் கதைக்கு முன்னும் பின்னும் என வாசகன் மனதுக்குள் ஒரு நாவலே எழ சாத்தியத்தை உள்ளடக்கிய கதை.
கடலூர் சீனு
இரு சிறுகதைகள்- செந்தில் ஜெகன்னாதன்,பா.திருச்செந்தாழை
இனிய ஜெயம்
பொதுவாக வார இறுதிகளில் கடலூர் நற்றிணை கூடல் நண்பர்கள், அவர்கள் வாசித்த சில கதைகளை பகிர, தொலைபேசியில் அக்கதைகள் மேல் கலந்துரையாடல் நிகழும். இந்த வாரம் வந்த கதைகளில் நண்பர் இதயதுல்லா பகிர்ந்த இரண்டு அழகிய கதைகள் உரையாடல் முதன்மை பெற்றன.
முதல் கதை மழைக்கண்.
எழுதியவர் செந்தில் ஜகன்நாதன்.
இவரை நான் அறிந்ததில்லை. புது வரவு எனில் வாழ்த்துக்கள். அதுல ஒரு அரசியல் இருக்குதுங்க, பின்நவீன பாய்ச்சல், வகையறா புதைகுழியில் துவங்காமல், நேரடியாக கண்முன் உள்ள வாழ்விலும், அது என்ன என்பதன் மீதான விசாரணையிலும் சரியாக துவங்கி இருக்கிறார்.சரியான துவக்கம் வெற்றிக்கு முதல் நிபந்தனை என்பது முன்னோர் சொல். மிஸ்டிக்கான கதை. தன்னை அழிக்க வந்த ஒன்றை, தானே நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து எடுக்கும் விசித்திர விதியை நோக்கி திறக்கும் கதை. நம்பகமாக சொல்லப்பட்ட வாழ்வும் வீழ்ச்சியும் கொஞ்சம் பிசகி இருந்தால் சென்டிமென்ட் கதையாக மாறி இருக்கும் அபாயத்தை தனது எழுத்தாற்றல் கொண்டு கடந்திருக்கிறார் ஆசிரியர்.
அதே சமயம் sub text மீது ஆசிரியரின் மிகுபோதம் ஒரு மெல்லிய படலமாக கதை நெடுக பரவி நிற்கிறது. சொல்லப்பட்ட வாழ்வு வழியே சொல்லப்படாத வாழ்வு ஒன்றையும் ‘சொல்லிவிட’ வேண்டும் என்ற போதம் அது. தலைப்பு எனக்கு அசோக வன சீதையை நினைவூட்டியது. தலைப்பு கம்பனின் சொல் என்றே நினைக்கிறேன். கதையின் சாரம் எதுவோ அதற்கு மிக விலகி நிற்கும் பாரமான தலைப்பு. மற்றபடி குறிப்பிட்டத் தக்க நல்ல கதை ஜகன் அவர்கள் வசம் மேலதிகமாக எதிர்பார்க்கலாம்.
இரண்டாவது கதை, துடி.
எழுதியவர் பா.திருச்செந்தாழை. ஐயமின்றி சொல்லிவிடலாம். Master touch. வைல்டு எனும் நிலை டொமெஸ்டிகேட் எனும் நிலைக்கு நகரும் ஆர்க் மீது நிகழும் கதை. காட்டிருந்து இறங்கி வந்து வீடடங்கும் மிருகம். இன்னும் மிருக பண்பு மாறாத மனித நிலை தேராத ஒருவனின் நிலை மாற்றத்துக்கான தவிப்பு. புறச் சித்தரிப்பு× அகச் சித்தரிப்பு, உணர்வுதளம்× அறிவு தளம், கற்பனை×தர்க்கம், ஆர்ட்× கிராஃப்ட் என, எல்லா எதிர் நிலைகளும் தண்டவாளம் போல சமன் கண்டு, அதில் பயணித்து உள்ளுணர்வை தொடும் கதை.
ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி நிலை நிறுத்த, நாவல் எனும் களம் வழங்கும் வசதி எதுவும் சிறுகதை வழங்குவதில்லை. அந்த எல்லையை சவால் எனக் கொண்டு சிறு கதைக்குள் நாவல்அளிக்கும் அதே தாக்கத்தில் கதாபாத்திர உருவாக்கம் நிகழ்ந்திருக்கிறது. ஜனதா வாத்தியாரின் சொல் மிகையோ குறைவோ இன்றி கச்சிதமும் உன்னதமும் கொண்டு கதையின் தளத்தையே உயர்த்தி விடுகிறது. இறுதியில் இன்னாசி இரவின் இருளுக்குள் சைக்கிளை மிதிக்கும் சித்திரம் வருகையில் இவன் லௌகீகத்தில் நிச்சயம் ஜெயிப்பான் என்று தோன்றியது. அழகிய கதை வாசித்து முடித்ததும் கதைக்கு முன்னும் பின்னும் என வாசகன் மனதுக்குள் ஒரு நாவலே எழ சாத்தியத்தை உள்ளடக்கிய கதை.
கடலூர் சீனு
உரைகள்,கடிதங்கள்
ஐயா
உங்களது பல வீடியோக்களை பார்த்தேன்.நான் கொரோனா தமிழன்.தமிழை தாய்மொழியாகக் கொண்ட நான் கம்பனையும் என்முப்பாட்டன் வள்ளுவனையும் என்னுடைய 68 வது வயதில்தான். அதுவும் இந்த கொரோனா காலத்தில்தான் படிக்க அறிந்துகொள்ள தொடங்கியிருக்கிறேன் நானும் வாசகன்தான். விகடன் குமுதமென்று வாலிபத்தை கிடந்தேன்.ஆனால் யாருடைய கதையும் நான் படித்ததில்லை.
கடந்த மூன்று நாட்களாக கேட்ட ஆதி சங்கரர்,கீதை பேருரைஇரண்டும் திரும்ப திரும்ப கேட்கிறேன். ஒரு எழுத்தாளனிடம் (கம்பனையோ வள்ளுவனையோ கடந்து நான் உங்களை சிந்திக்கவில்லை) புனைவு செய்கிற உங்களிடம் ஆற்றல் இருப்பதை கண்டு வரிந்து போனேன்.
தொடர்ந்து கம்பவாரிதி ஐயா வீடியோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு நுண்ணிய மேடைப்பேச்சு என்பது அடுக்குமொழி இல்லையென்றாலும் மிக மிக அற்புதம்.
தெற்கே தலை வைத்து எடுக்கக்கூடாது என்பார்கள்.ஆனால் நேற்று முதல் தெற்கே தலை வைத்துதான் எடுக்கிறேன். (உங்கள் ஊர் நாகர்கோவில்என்பதால்) .மொழியறிவும் எழுத்துக்கலையும் இல்லாததால் ஒரு சினிமா ரசிகன் மாதிரி புகழ்ந்து விட்டேன். பரவாயில்லை அதற்கு தகுதியானவர்தான்.
பவா செல்லத்துரைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். *எனக்கு பரமபதத்தை அடைய* *வைத்த ஆழ்வார் அவர்தான்.*
இங்ஙனம்
சு.திருவேங்கடகிருஷ்ணன்.
ஆழ்வார் பேட்டை
சென்னை
அன்புள்ள திருவேங்கட கிருஷ்ணன்
தாமதமாவது இல்லாமலிருப்பதைவிட மேல்தான். வாசிப்பு ஓர் அகவைக்குப்பின் கடினம். ஆனால் கேட்கலாம். நான் நூறு உரைகளுக்குமேல் பேசியிருக்கிறேன் என நினைக்கிறேன். உரைகள் அடுக்குமொழி மற்றும் சொல்லாற்றலுடன் இருக்காது. குரல்வளமும் குறைவுதான். ஆனால் பயனுள்ளவையாக இருக்குமென உறுதியாகச் சொல்வேன்
நன்றி
ஜெ
திரு.ஜெமோ அவர்களுக்கு
உங்கள் எழுத்துக்களை பற்றிய முழு புரிதலில்லாமல் சமகால அரசியல் வெளியில் தனிப்பட்ட உங்களை ஒரு வலதுசாரியாக பரவவிடப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி கொண்டு இவ்வளவு காலம் மூர்க்கமாக உங்கள் எழுத்துக்களை புறக்கணித்து வந்திருந்தேன். முன்பொருமுறை ஏழாம் உலகம் வாசித்திருந்தேன், பின்னர் இன்றைய காந்தி யும், சில மாதங்களாக பவா அவரது யூட்யூப் சானலில் எடுத்துரைந்திருந்த அறம் சிறுகதைகள் என்னை உங்கள் பால் லேசாக திருப்பதுவங்கியிருந்த தருணம் நண்பனிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஊமைசெந்நாயும் இன்னும் நெருங்க செய்தது…
எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று மதியம் கிண்டில் வழியாக வாசிக்க தொடங்கி இன்று அதிகாலை 4:30க்கு முடித்திருக்கும் “காடு” என்னை கொடூரமாக உலுக்கியிருக்கிறது. சென்னையின் ஒரு உயர் அடுக்ககத்தின் 12 மாடி வீட்டில் இந்த அதிகாலையில் அனைத்து விளக்குகளையும் எரிய விட்டுக்கொண்டு உங்களுக்கு இதை தட்டச்சு செய்ய வைத்துவிட்டாள் நீலி. இப்பொழுது உங்கள் மீது ஒரு சந்தேகம், சொல்லுங்கள், உண்மையில் நீங்கள் ஒருவர் தானா? அல்லது ஆயிரமாயிரம் க்ளோன் களை செய்து மண்ணில் உலவ விட்டு அனுபவங்களை கிரகித்து கொண்டே இருக்கிறீர்களா?? எப்படி அந்த அய்யர், குட்டப்பன், ரெசாலம், நீலி, சினேகம்மை என எல்லாரையும் வடிக்கிறீர்கள்.. உண்மையில் ஒற்றை ஆயுளில் இத்தனை அனுபவங்கள் சாத்தியமா?
பெண்களின் சடை பின்னல்களை மேலிருந்து கீழ் அளக்கையில் எந்த கற்றை அடுத்ததென தெரியாதோ அந்த சுவாரசியத்தை வேறு வேறு காலத்தையும் இடத்தையும் வைத்து பின்னியிருக்கிறீரகள்.. என் மனமென்னவோ நீலிக்கற்றை வெளிவரும் இடத்தையே எண்ணி கவனத்தை குவித்து கொண்டிருந்தது. சமீபத்தில் ஒரேஅமர்வில் இவ்வளவு பெரிய வாசிப்பை உறங்காமல் வாசிக்க வைத்தது நீங்கள் தான். இன்று இனி நான் உறங்க முடியாது, ஜன்னல் வெளியே நீலி ‘தம்புரானே’ என்றே அழைத்து கொண்டிருக்கிறாள். அசைபோட எவ்வளவோ அடுக்குகள் மனதில் உதித்து கொண்டே இருக்கிறது. நேற்று மதியம் காட்டுக்குள் எட்டு வைத்த நான், பேச்சிமலையில் நின்று இப்போது காட்டை பார்த்து கொண்டிருக்கிறேன்.. இப்பேரணுபவததை தந்தமைக்கு நன்றியும், முந்தைய என் அனுமானத்திற்க்கு மன்னிப்பும் கோரி.
இப்படிக்கு
ந. சௌந்தரராஜன்
சென்னை
அன்புள்ள சௌந்தர ராஜன் அவர்களுக்கு,
பொதுவாகவே தமிழ்ச்சூழலில் எதையேனும் பொருட்படுத்தும்படிச் சொல்லியிருக்கிற, செய்திருக்கிற எவரைப்பற்றியானாலும் எதிர்மறை விமர்சனங்களும் வசைகளுமே முதலில் வந்தடையும். எவரைப் பற்றிவேண்டுமென்றாலும் கவனித்துப் பாருங்கள். அவர்களை அணுகுவதற்கான தடைகளைத் தான் சூழல் அளிக்கும். அதைக் கடந்து வந்து அணுகுபவர்களே உண்மையான இலக்கியத்தையும் சிந்தனையையும் அடையமுடியும்.
அந்தத் தடையை உருவாக்குபவர்கள் எவர்? மேலோட்டமான சிந்தனையும் ஆழமற்ற கலைத்திறனும் கொண்டவர்கள். அவர்களின் இருப்பை தரமான கலையும் சிந்தனையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. ஆகவே அவர்கள் ஒன்றாகக்கூடி தரமான அனைத்தையும் பொதுவாசகர்களிடமிருந்து மறைக்க முயல்கிறார்கள். அவர்களே திரிபுகளை உருவாக்குகிறார்கள். அவதூறுகளையும் வசைகளையும் சூழலில் நிரப்புகிறார்கள். முன்முடிவுகளையும் காழ்ப்புகளையும் பரப்புகிறார்கள்.
வேறுவழியில்லை, கடந்துவந்தே ஆகவேண்டும். கடந்து வந்துகொண்டும் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவர். நன்றி
ஜெ
காந்தி அரசியல்படுத்தியவர்கள்- கடிதம்
காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?
சதீஷ் அவர்களின் கடிதம் கண்டேன். அதற்கான உங்கள் மறுமொழி தெளிவாகவும், நேர்மறையாகவும் இருந்தது. வரலாற்றுப் பார்வையில் எங்கே முன்னகர்ந்து வந்திருக்கிறோம் என்பதையும், காந்தியையும், உங்கள் அளவுக்கு, சமகாலத்தில், தமிழ்ப் பொது வெளியில் யாரும் பேசியதில்லை. நன்றி.
நாம் ஒரு விஷயத்தை ஒட்டு மொத்தப் பார்வையில் பார்க்கையில், ஒரு எதிர்மறை மனநிலை எப்படியோ நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. எப்படியோ வந்து விடுகிறது. இது ஏன் என ஆராயப்பட வேண்டும்.
அவர் கமலஹாஸனைச் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் தோல்வியடைந்தது வருத்தமே.அரசியல் என்பது, தேர்தலில் வெற்றி பெற்று, கோட்டையில் அமர்ந்து முதல் நாள் முதல் கையெழுத்துப் போடுவது என்பது மட்டுமல்ல.. அது ஒரு குறுகிய வரையறை.
தகவலறியும் சட்டம் கொண்டு வர உழைத்த அருணா ராய் (அவர் தந்தை ஒரு காந்தியர். அருணா ஆசஃப் அலியின் நினைவாக அவருக்கு அருணா எனப் பெயர் வைத்தார்), தொடக்கத்தில் தன் கணவர் பங்கர் ராயுடன், வெறும்பாதக் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். அது ஊரக மக்களுக்கான பொருளாதாரத் தற்சார்பை அடைய மக்களுக்கான பயிற்சிகளையும், திட்டங்களையும் உருவாக்கும் ஒரு நிறுவனம்.
ஆனால், அருணாவுக்கு, ஜெயப்பரகாஷ் நாராயண் ஆதர்சம். மக்களை அரசியல் படுத்தி, மக்களிடம் அதிகாரத்தைக் கைமாற்ற வேண்டும் என்பது அவர் கனவு. எனவே, இரண்டு நண்பர்களோடு, ஒரு தனிப் பயணத்தைத் தொடங்குகிறார். 18 ஆண்டு களப் பணியின் விளைவாக, அது தகவலறியும் சட்டத்துக்கான ஒரு இயக்கத்தை முன்னெடுக்கிறார்.
அதன் விளைவாக, ஒரு ஒன்றிய அரசின் தேசிய ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். அங்கே அவரைப் போலவே இன்னொருவரும் வருகிறார். தகவலறியும் சட்டம், உணவுப்பாதுகாப்புச் சட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்னும் மிக முக்கியமான மக்கள் நலச் சட்டங்கள் நிறைவேறுகின்றன. இவை மூன்றும் சுதந்திர இந்தியாவில், வறுமை மீது மிக நேரடியான தாக்கத்தை ஏற்படுத்திய அரசுத் திட்டங்கள். ஒரு பத்தாண்டில், 23 கோடிப் பேர் வறுமையில் இருந்து மேல் எழுந்து வருகின்றனர்.
(பஸ்மாசுரன் தன் தலையில் கைவைத்து மாண்ட புராணக் கதை போல, தான் கொண்டு வந்த தகவலறியும் சட்டம் வழியே வெளிவந்த ஊழல் புகார்களில், அரசியல் அதிகாரத்தை அந்தக் கட்சி இழந்தது ஒரு நகைமுரண்).
இந்தியச் சமூக வெளியில் எவ்வளவு பெரும் அரசியல் விளையாட்டை, தேவ்துங்ரி என்னும் சிறு கிராமத்தில், குறைந்த பட்சக் கூலியை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறார் அருணா ராய் என நினைக்கையில் அதிசயமாகத் தோன்றலாம்.. ஆனால், அதன் பின்னால் காந்தி இருக்கிறார் என அறிந்து கொள்கையில், அப்படித் தோன்றாது.
குத்தப்பாக்கம் இளங்கோஇந்திய அரசியலில் பெரிதும் அறியப்படாத இரண்டு அரசியல் தலைவர்கள் உள்ளனர். ஒருவர் குத்தம்பாக்கம் இளங்கோ. இன்னொருவர் ஓடந்துறை சண்முகம். குத்தம்பாக்கம் இளங்கோ, காரைக்குடி மின்வேதியல் கல்லூரியில் படித்து, அரசுப் பணியில் இருந்தவர். அவர், குன்றக்குடி அடிகளாரால் ஈர்க்கப்படுகிறார். நாமும் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்.
1992 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் சாசனத்தின் 73 ஆவது மாற்றமாக, பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. குத்தம் பாக்கம் இளங்கோ தன் வேலையை விட்டுவிட்டு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, குத்தம்பாக்கம் கிராமப்பஞ்சாயத்துத் தலைவராகிறார்.
தன் அதிகாரத்தையும், தொடர்புகளையும் பயன்படுத்தி, உள்ளூரில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அங்கே பெரும் பிரச்சினையாக இருந்த கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறார். இலவச அரசு வீடு கட்டும் திட்டத்தில், ஒரு புதுமையைப் புகுத்துகிறார். அதாவது, எல்லாச் சாதியினரும் ஒரே குடியிருப்பில் வசிக்குமாறு. தமிழகத்தின் முதல் சமத்துவபுரம் உருவாகிறது. பின்னர் அது மாநிலமெங்கும் திட்டமாக மாறுகிறது.
ஓடந்துறை சண்முகம்ஓடந்துறை சண்முகம் அதிமுக கட்சியைச் சார்ந்தவர். கோவை மாவட்டத்தில் உள்ள ஓடந்துறை என்னும் ஊரைச் சார்ந்தவர். 12 கிராமங்கள் அடங்கிய ஓடந்துறைப் பஞ்சாயத்தில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஊர்களில் குடிநீர் வசதி கிடையாது. பல கிலோமீட்டர்கள் நடந்து போய் நீர் கொண்டு வர வேண்டும். 1999 ஆம் ஆண்டு, தேசியக் குடிநீர் இயக்கம் என்னும் ஒரு திட்டம் வருகிறது. குடிநீர்த்திட்டத்தில் 10% பணத்தை மக்கள் ஏற்றுக் கொண்டால், அரசு 90%த்தை மானியமாகத் தரும் என்னும் திட்டம். ஏன் மக்கள் 10% தர வேண்டும்? அப்போதுதான், அந்த திட்டத்தின் மீது மக்களின் stake holding உயிர்ப்போடு இருக்கும் என்பதுதான் காரணம். பவானி ஆற்றிலிருந்து, 48 லட்சம் செலவில், மக்களின் நிதிப்பங்களிப்போடு, 12 கிராமங்களுக்கும், தூய்மையான குடிநீர் வீடுகளைச் சென்றடைகிறது. அடுத்த முன்னெடுப்பாக, பஞ்சாயத்து நிதியுடன், வங்கிக் கடனும் பெற்று, காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்கிறார். அதில் வருடம் 19 லட்சம் வருமானம் வருகிறது.
இந்தியாவின் பெருமிதங்கள் இந்தத் தலைவர்கள். ’தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் நேர்மையான பஞ்சாயத்துத் தலைவர்கள் இருக்கிறார்கள்.. அவர்களை இணைத்து, ஒரு இயக்கமாக முன்னெடுத்து வருகிறோம்’, என்கிறார் குத்தம் பாக்கம் இளங்கோ.. தமிழகத்தில் மொத்தம் 12000 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. 8% நேர்மை நல்ல விஷயம்தான்.
வாக்களிப்பு ஜனநாயகத்தோடு நின்றுவிடும் நாம், நாம் தேர்ந்தெடுப்பவர்கள் நமக்கான கனவு தேசத்தை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஒரே ஒரு தலைவரில், தேர்தலில், சமூகம் மாறிவிடாது.. அது மெல்ல மெல்லத்தான் மாறும். அதுதான் வாக்களிப்பு ஜனநாயகச் செயல்திறனின் எல்லை.
அந்த மாற்றத்தை வேகமாக்க வேண்டுமெனில், நாமும் பங்கு பெற்று, நாட்டை பங்கேற்பு ஜனநாயகமாகவும், பங்களிப்பு ஜனநாயகமாகவும் மாற்ற வேண்டும். இதுதான் அருணா ராய்களும், குத்தம்பாக்கம் இளங்கோக்களும், ஓடந்துறை சண்முகங்களும் நமக்குச் சொல்லும் சேதி.
அன்புடன்
பாலசுப்ரமணியம் முத்துசாமி
கி.ரா, கஞ்சிக்கிழங்கு- லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
கி ராவின் மிச்சக்கதைகள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உங்களையும், நாஞ்சில் சார் உள்ளிட்ட பல எழுத்தாளர்களையும், விஷ்ணுபுரம் குழும நண்பர்களையும் சந்தித்ததும், நூலைக் குறித்தும் கி.ராவைக் குறித்தும் உங்களின் பிரமாதமான உரையைக் கேட்டதுமாக, சென்ற வருட விஷ்ணுபுர விழாவை கொரோனாவால் தவறவிட்டதின் வருத்தமே காணாமல் ஆகிவிட்டது. வீடு வந்த கையோடு புத்தகத்தை வாசித்து முடித்தேன்.
’’மிச்சக்கதைகள்’’ என்ற தலைப்பு கிராவின் வயதை நினைத்து வைக்கப்பட்டிருக்கலாம், இன்னுமவர் எழுதவேண்டுமே என்று நானும் நினைத்தேன். கதைகளை வாசிக்கையில்தான் கி.ராவின் பல கதைகளின் தொடர்ச்சியை போலவும், துண்டு துண்டாக கிடக்கும் அவரது வாழ்வின் பல அற்புதக்கணங்களின் தொகுப்பென்றும் தெரிந்தது, முழுவதுமாக படித்து முடித்ததும் பெரும் பிரமிப்பு உண்டாகியது. அவரது கிராமத்துக்கே வீட்டுக்கே, வாசலுக்கே, தெருவுக்கே என்னையும் கூட்டிச்சென்று விட்டிருக்கிறார். புத்தகத்தை மூடினதும்தான் நான் பொள்ளாச்சிக்கு திரும்பியிருந்தேன். எத்தனை இயல்பான கதைசொல்லல்!
இந்தக்கதைகளை ஒருவர் எழுதி, அவை அச்சிடப்பட்டு, ஒரு புத்தகத்தின் பக்கங்களில் வாசிக்கும் உணர்வே இல்லாமல் கி.ராவுடன் அவர் வீட்டுதிண்ணையில் அமர்ந்து ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தமில்லாத, ஆனால் வெகு சுவாரஸ்யமான சங்கதிகளை அவர் மனம் விட்டுப் சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்லனும்.
புதுப்புது வட்டாரவழக்கு சொற்களை அதிசயித்து வாசித்து குறித்துக்கொண்டேன். தேங்காய் உடைப்பது குறித்து சொல்லுகையில் பெருவிரலால தேங்கா கண்ண பொத்திகிட்டு நரம்பின்மீது தட்டி கீறல் விட்ட தேங்காயின்
//கீறலுக்குள்ளே மேஜைக்கத்தியோட நுனியை விட்டு கத்தியை குத்தி அகலிச்சா, தோ வந்தேன்னு இறங்கிடும் தண்ணி// என்கிறார். கீறலுக்குள் கத்தியை விட்டு விரிசலை பெரிதாக்குவதை அகலிச்சா என்பதுதான் எத்தனை பொருத்தமாயிருக்கிறது.
இதைப்போலவெ பக்கரை, போக்காளி, கால்கள் லத்தாடின, இரிசி, தடபுதல், என்றும் சில சொற்கள் வருகின்றது.
காதோர நரை, லட்சுமிகாந்தன் கொலை, பிராமணாளுக்கு தனி தடுப்பறை இருந்த ஹோட்டல்கள், குழந்தைகளை பெண்களிடம் கொடுத்து கொஞ்சச்சொல்லிவிட்டு, மறைந்திருந்து அவர்கள் கொஞ்சுவதை பார்ப்பது, காணாமல் போன எருமைமாடு, உருண்டை உருண்டையான மணமில்லா மலர்களுடன் தொட்டாச்சிணுங்கி செடிகள், புதுமாப்பிள்ளைக்கு இவர் அந்தரங்கமாக உதவியது, குத்தாலம் , விருந்துக்கு போன இடத்தில் பொண்ணு மாப்பிளைக்கு நடந்த விநோதங்கள், ரசிகமணி ஆண்களின் எச்சில் இலையில் பெண்கள் சாப்பாடு நடக்கவிடாமல் செய்த சம்பவமென்று என ஒவ்வொன்றும் ஒரு ரகம் , ஒவ்வொன்றும் ஒரு சுவை, ஒரு புதுமை.
வெற்றிலைக்கதைகளாக இடையிடையே பாலுறவக்கதைகளும் கலந்து வந்துகொண்டே இருக்கிறது.கஞ்சிகெட்டலு என்னும் பஞ்சகாலத்துக்கிழங்கு, மலைமேலே இலைபோட்டுச்சாப்பிட்டால் குப்பை சேரும் என்று உருவாக்கப்பட்டிருந்த குத்தாலத்தின் திருவோட்டுப்பள்ளங்கள் என்று ஏராளம் அதிசயவிஷயங்களும் இருக்கின்றது,
எதுமாதிரியும் இல்லாத புதிமாதிரியான கதைகள் இவையனைத்துமே. புதுவை இளவேனிலின் புகைப்படங்கள் வெ்கு அற்புதம், கருப்பு வெள்ளையில் காலங்களை கடந்த புகைப்படங்கள். உண்மையில் அத்தனை அருமையான இயல்பான புகைப்படங்களால்தான் கதைகளை கி ரா சொல்லச்சொல்ல கேட்கும் அனுவபவம் வாய்த்ததென்றும் சொல்லலாம்.
லோகமாதேவிபஞ்ச காலத்தில் சாப்பிடப்பட்ட பூண்டைப்போலிருக்கும் அந்த கிழங்கைக்குறித்து அறிந்துகொள்ள நிறைய தேடினேன். 1968ல் journal of agricultural traditions என்னும் சஞ்சிகையில் எழுதப்பட்ட Plants used during scarcity and famine periods in the dry regions of India என்னும் கட்டுரையொன்றில் Ceropegia bulbosa என்னும் செடியின் பூண்டைப்போலிருக்கும் கிழங்குளை பஞ்சகாலத்தில் மக்கள் வேக வைத்து கஞ்சியாக்கி உண்டது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுவாகவும் இருக்கலாம் அதன் தமிழ்ப்பெயரைக்குறித்த தகவலை தேடிக்கொண்டிருக்கிறேன்,
கடலைப்போல பெரிய, சின்ன கதைகளில் அடங்காத ரசிகமணி சமாசாரங்களை, இன்னொரு முறை பார்ப்போமென்கிறார் கிரா இதில்.
காத்திருக்கிறேன்
அன்புடன்
லோகமாதேவி.
June 27, 2021
வேதாந்தமும் இறைவழிபாடும்
சாரதாதேவி, சிவகிரிவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். சிறுகதைகளின் மூலம் மற்றுமொரு மிகச்சிறந்த வாசிப்புக் காலத்தை அளித்திருக்கிறீர்கள். அதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அனைத்து சிறுகதைகளையும் வாசித்துவிட்டேன் குறிப்பாக வாசகர் கடிதங்களையும். அவை உங்கள் சிறுகதைகளை எந்த எல்லைக்கும் விரித்து செல்லலாம் என்பதையும், தனிப்பட்ட முறையில் என் வாசிப்பை மேம்படுத்திக்கொள்ளவும் உதவியது.
படித்தவற்றில் ‘மலைபூத்தபோது’ சிறுகதை மனதை மிகவும் நெகிழ வைத்தது. கடுத்தா, பிறுத்தா மற்றும் சிறுத்தா போன்ற மலை தெய்வங்களைப் பற்றி இப்பொழுது தான் தெரிந்துகொள்கிறேன். நிலம் வாழும் மானுடர் காலப்போக்கில் அத்தெய்வங்களை மறப்பதையும் அவற்றுக்குரிய படையலை நிறுத்துவதையும் இயல்பாய் வாசித்து கடந்து செல்ல முடியவில்லை. சிறுகதையின் இறுதியில் நானும் வேண்டிக்கொண்டேன் ‘பிழையெல்லாம் பொறுக்கவேண்டும். பெற்றவரென்றே கனியவேண்டும்’ என.
இப்புள்ளியில் எனக்கு ஒரு சிறு சந்தேகம் எழுந்தது. சில வருடங்களுக்கு முன்னர் சடங்குளிலும், பூசைகளிலும் எனக்கிருந்த ஈடுபாடு குறைந்தது. ‘இவற்றின் மூலம் நாம் பெறுவதுதான் என்ன?’ என்ற கேள்வியே மெல்ல அதனிடம் இருந்து ஒரு விலகத்தை உருவாக்கியது. உபநிடதங்களை, இந்து மதத்தின் தரிசனங்களை, தத்துவங்களை படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. எனினும் அதில் இருக்கும் ஈடுபாடு சடங்கு மற்றும் பூசைகளில் வருவதில்லை.
‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ புத்தகத்தில் அத்வைத மரபு பற்றி ஒருவரி வரும். ‘அத்வைத மரபு பக்திக்கு எதிரானது, ஞானமே முக்திக்கு வழி என்று சொல்வது’ என. மேலும் வேதாந்தம் பற்றி படிக்கும்போது அது சடங்குகளுக்கு எதிரானது என்று தெரிந்துகொண்டேன். இவை இரண்டுமே என் சிந்தனைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்ந்தேன்.
அதன்பின்பே உபநிடதங்கள் மற்றும் தரிசனங்கள் பற்றி மேலும் ஆழ்ந்து படிக்க ஆர்வம் எழுந்தது. இந்நிலையில் இருந்தவாறு எவ்வாறு ‘கடுத்தா, பிறுத்தா மற்றும் சிறுத்தா’ போன்ற தெய்வங்களை அணுகுவது? சடங்குகளின் குறியீட்டு தன்மையையும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் சில கட்டுரைகளில் கூறியிருந்தீர்கள். வேறுசில காரணங்களினால் சடங்குகளின் தொடர்ச்சி அறுபடும் சித்திரத்தை நம்மை சுற்றிலும் காண்கிறோம்.
வேதாந்தம் வழிபாட்டுச் சடங்குகளை தவிர்க்கும் நிலையில் இம்மலை தெய்வங்களை அது எப்படி அணுகும்? மறக்கடிக்கப்படும் நிலையில் இருக்கும் இத்தெய்வங்களை மீட்டெடுக்க முயலுமா? அவ்வாறெனில் எப்படி அதை நிகழ்த்தும்? இதை புரிந்துகொள்வதில் எனக்கு சிக்கல் இருக்கிறது. கொஞ்சம் விளக்க முடியுமா?
பி.கு: ‘இந்திய ஆங்கில வாசிப்பு’ என்ற தலைப்பில் எனது கேள்விக்கான தங்களது பதிலை படித்தேன். இதுவரையிலான எனது புரிதலை இன்னும் கூர்படுத்திக்கொள்வதற்கு அது வழிவகுத்தது. மேலும் இந்திய ஆங்கில நாவல்கள், வாசகர்களின் தன்மை, உணர்வுகள், வட்டார இலக்கியம் என பலவாறாக விரிந்துசென்று ஒரு பெருங்சித்திரத்தை அளித்துவிடீர்கள். ஆசிரியருக்கு எனது நன்றிகள்.
இப்படிக்கு,
சூர்ய பிரகாஷ்
அன்புள்ள சூர்யப்பிரகாஷ்,
அத்வைதம் ஒரு வழிபாட்டு முறை அல்ல. ஒரு மதநம்பிக்கை அல்ல. ஒரு தத்துவ நிலைப்பாடுகூட அல்ல. அதை ஒரு மெய்த்தரிசனம் என்றுதான் சொல்லவேண்டும். “இங்கனைத்திலும் இறை உறைகிறது. அவ்விறை நானே. இறை ஒன்றே உண்மை, பிறிதனைத்தும் அதன் மாயத் தோற்றங்களே” எனும் அடிப்படை தரிசனம் அது.
ரிக் வேதத்தின் இறுதியெனத் திரண்டு வந்தது இது. ஆகவே அது வேதமுடிபுக் கொள்கை [வேதாந்தம்]. அந்த முழுமுதலை பிரம்மம் என்கிறார்கள். ஆகவே அதை பிரம்மவாதம் என்கிறார்கள். பிரம்மத்தை அனைத்தையும் ஆற்றி அமையும் பரமபுருஷன் என்னும் முதல் தன்னிலை என உணர்கிறார்கள். ஆகவே புருஷதத்துவம் என்கிறார்கள், பிரம்மமும் பிரபஞ்சமும் வேறுவேறல்ல என உணர்வதனால் அதை இரண்டின்மைவாதம் [அத்வைதம்] என்கிறார்கள்.
இது இந்திய சிந்தனை முறையின் ஒரு உச்சவெற்றியாகத் திகழ்கிறது. இந்தியாவின் அனைத்துச் சிந்தனை முறைகளிலும் அத்வைதத்தின் செல்வாக்கு உண்டு. இந்தியாவின் அனைத்து மக்களின் சிந்தனைகளிலும் அத்வைதம் ஏதேனும் ஒரு வகையில் ஊடுருவி இருக்கும். ஓர் எளிய விவசாயி தன் தோட்டத்தில் நட்டு வளர்த்த ஒரு செடி முளைவிடுவதைப் பார்த்து தெய்வம் எழுகிறது என்று சொல்லும்போது, தன் பசு கன்றிடும்போது தெய்வம் பிறந்திருக்கிறது என்று உணரும்போது அவன் உள்ளிருந்து இயங்குவது அத்வைதமே.
அத்வைதம் இந்து மரபின் அடிப்படையான ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் என ஆறு. அவற்றில் உத்தர மீமாம்சமே வேதாந்தம் எனப்படுகிறது. வேதாந்தம் பிற அனைத்து சிந்தனைகளுடனும் உரையாடும்தன்மை கொண்டது. பிற நான்கு விரல்களையும் எளிதாகத் தொடும் கட்டைவிரல் அது என்று நாராயண குரு ஒருமுறை கூறினார்.
சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் ஆகிய நான்கு சிந்தனைகளையுமே வேதாந்தம் மாற்றியமைத்திருக்கிறது. சாங்கியம் புருஷன் என்னும் கருத்தை உள்வாங்கிக்கொண்டு சேஸ்வர சாங்கியம் (இறைசேர் சாங்கியம்) என்று தன்னை மாற்றிக்கொண்டது. யோகம் அதன் அடிப்படையில் ஒரு இறைநிலை அடையமுயலும் செயல்பாடாக மாறியது. வைசேஷிகமும் நியாயமும் வேதாந்தத்தின் அடிப்படையான தத்துவங்கள் [பொருட்களின் கருத்தியல் இருப்புநிலைகள்] என்னும் கொள்கையை ஏற்றுக்கொண்டன.
வேதாந்தமும் சாங்கியதில் இருந்தும், யோகத்தில் இருந்தும், நியாயத்தில் இருந்தும், வைசேஷிகத்தில் இருந்தும் அனைத்து முதன்மைப் பார்வைகளையும் உள்ளிழுத்துக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டது. சாங்கியத்தில் இருந்து அது பிரகிருதி – புருஷன் என்னும் இருமையைப் பெற்றுக்கொண்டது. யோகத்தில் இருந்து ஒருங்கிணைவுப் பார்வையை எடுத்துக்கொண்டது. வைசேஷிகத்தில் இருந்து தன்மாத்திரை போன்ற கருத்துக்களை எடுத்துக்கொண்டது. அவ்வாறாக பின்னர் இந்து மதம் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக தொகுப்பு கொண்ட இந்த ஞானத்தொகையின் மையச் சரடாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. அச்செயல் நிகழும் முதன்மை நூல் கீதை என்பதனால் அது முக்கியமானது.
இந்து மதம் என்பது இந்தியா முழுக்க இருந்த வெவ்வேறு வழிபாட்டு முறைகளும், ஆசாரங்களும், மெய்த்தரிசனங்களும் ஒன்றை ஒன்று கண்டடைந்து, உரையாடி, ஒன்றை இன்னொன்று நிறைவு செய்து, நீண்ட காலப்பயணத்தினூடாக தன்னைத் தொகுத்துக் கொண்டு உருவானது. அதற்கு வெவ்வேறு காலகட்டங்கள் இருக்கின்றன. வேத வேள்விப் பண்பாடு பிற வழிபாடுகளை உள்ளிழுத்துக்கொண்டதை நாம் அதர்வ வேதத்திலேயே காண்கிறோம். அதன்பின் ஆலய வழிபாடை அது தன்னுள் எடுத்துக்கொண்டது. இந்தியா முழுக்க இருக்கும் பழங்குடிப் பண்பாடு வழிபாடுகள் அதற்குள் சென்றமைந்தன. பேரரசுகளின் காலகட்டத்தில் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்னும் ஆறு பெரும் மதங்களாக அது வளர்ச்சியடைந்தது.
பின்னர் பக்தி காலகட்டத்தின் பிற்காலத்தில் அது சைவம், வைணவம், சாக்தம் என்னும் மூன்று மதங்களாகியது. இன்று சைவமும் வைணவமும் இந்து மதத்தின் இருவேறு முகங்களாக நிலை கொள்கின்றன. சைவத்திலும் வைணவத்திலும் பெருந்தெய்வங்கள் வழிபடப்படும்போதே ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு துணைத்தெய்வங்கள், பழங்குடித் தெய்வங்கள் அதில் இணைப்பு பெற்றுக்கொண்டே இருக்கின்றன.
இந்து மதத்தின் பேராலயங்கள் அனைத்துமே ஆலயத்தொகைகள்தான். ஒரு ஆலயத்திற்குள் பல்வேறு தெய்வங்கள் அமைந்திருக்கின்றன. அவை வெவ்வேறு காலகட்டத்தில் இங்கே மரபுக்குள் நுழைந்தவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. சென்ற ஐம்பது ஆண்டுகளுக்குள் சுடலை மாடன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் இந்த மைய மரபுக்குள், மைய ஆலயங்களுக்குள் நுழைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். இன்னும் இருநூறு முன்னூறு ஆண்டுகளில் இதுவரை நாம் கண்டிராத தெய்வங்கள் கூட இந்த ஆலயத்தொகைகளுக்குள் இடம்பெறக்கூடும். இவ்வாறுதான் இந்துமதம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சைவம், வைணவம் என்ற இரு பெருமதங்களுக்கும் பொதுவானதாகவும், அவற்றின் அடிப்படைத் தத்துவக் கட்டமைப்பை உருவாக்கக் கூடியதாகவும் வேதாந்தமே இருக்கிறது. வேதாந்தம் பௌத்தத்துடனும் ன்னர் தன்னுடன் தானேயும் விவாதித்து தன்னை பலவாறாகப் பெருக்கிக்கொண்டது. அவ்வாறு வேதாந்தத்தில் இருந்து அத்வைதம் ஒரு தனித் தரிசனமாக எழுந்தது. அத்வைதமே ஆறு மதங்களுக்கும் பொதுவான தரிசனமாகியது. இன்று ஸ்மார்த்த மரபின் அடிப்படை தரிசனம் அத்வைத வேதாந்தமே. ஆறு மதங்களுக்கும் பொதுவான பூசனை முறை அவர்களுடையது.
வைணவர்களின் விசிஷ்டாத்வைதம், அத்வைதத்துடன் முரண்பட்டு எழுந்த ஒரு வேதாந்தப் பிரிவு. பிறிதொரு வைஷ்ணவப் பிரிவாகிய துவைதமும் மத்வரால் வேதாந்தத்துடனும் விசிஷ்டாத்வைதத்துடனும் முரண்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு வேதாந்தப் பிரிவுதான்.
ஆகவே வேதாந்தம் இந்துமதத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் உள்ளமைந்த சாராம்சமாக உள்ளது. வேதாந்தத்துடன் நேரடி உறவற்றது என்று தோன்றுவது சைவ சித்தாந்தமும் கேரளத்தின் சாக்த தாந்த்ரீக மரபும். ஆனால் அவ்விரண்டும் கூட வேதாந்தத்துடன் முரண்பட்டு விவாதித்து தங்களை முழுமைப்படுத்திக் கொண்டவையே.
வேதாந்தத்தைப் பொறுத்தவரை பிரம்மவாதமே முதன்மைக்கொள்கை . உருவற்றதும், விவரணைக்கு அப்பாற்பட்டதும், அறிவுக்கு எட்டாததும், இங்குள்ள அனைத்தும் ஆனதும், பிறிதொன்றிலாததுமான பிரம்மமே அதன் மைய தரிசனம். ஆகவே பிரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்களே இங்குள்ள அனைத்தும். ஆகவே இங்குள்ள எதை வழிபட்டாலும் அது பிரம்ம வழிபாடே ஆகும். எந்த தெய்வத்தையும், எந்த பொருளையும் உள்ளுணர்ந்தவன் பிரம்மசொரூபம் என்று சொல்லிவிடலாம்.
வேதாந்தம் சாமானியம், விசேஷம் என்று எப்போதும் அறிதல் நிலைகளை, வழிபாட்டு நிலைகளை பிரித்துவிடுகிறது. சாமானிய தளம் என்பது உலகியல் சார்ந்தது, தர்க்கவியல் சார்ந்தது, அன்றாடம் சார்ந்தது. விசேஷம் என்பது அதற்கென்றே உரிய தனித்த நிலை. விசேஷ நிலையில் இங்கு பிரம்மம் மட்டுமே உள்ளது, பிற அனைத்தும் மாயை. ஆனால் சாமானிய தளத்தில் இங்குள்ள அனைத்துமே தெய்வம்தான்.
“ஈசோவாஸ்யம் இதம் சர்வம்” [இங்குள அனைத்திலும் இறையுறைகிறது] என்று சொல்லும்போது, புல்லிலும் பூண்டிலும் பிரம்மமே இருக்கிறது என்னும்போது, ஒருவர் எதை பிரம்மம் என்றெண்ணி வழிபடுகிறாரோ அது பிரம்மமேதான் என்றுதான் பொருள். அது இறையேதான். ஆகவே எந்த வகை வழிபாட்டுக்கும் வேதாந்தம் எதிராக இருக்க வாய்ப்பில்லை. எல்லா வழிபாடுமே பிரம்ம வழிபாடுதான் என்றுதான் அது சொல்லும்.
எங்குமுள இறை ஒன்றே, மனிதர்கள் அதைப் பல பெயரிட்டு அழைக்கிறார்கள் என்று ரிக்வேதம் சொல்கிறது. சாந்தோக்ய உபநிஷதம் வெவ்வேறு உவமைகள் வழியாக இந்த ஒருமை தரிசனத்தை அளிக்கிறது. அனைத்து ஆறுகளும் கடலை சென்றடைவது போல அனைத்து வழிபாடுகளும் பிரம்மத்தை சென்றடைகின்றன. ஆகவே வேதாந்தத்திற்கு உவப்பற்றதாக ஒரு வழிபாட்டுமுறை இருக்க வாய்ப்பில்லை.
ஒருவர் சாமானிய நிலையில் வழிபாடுகளையும் சடங்குகளையும் ஏற்கவும் விசேஷநிலையில் அவற்றுக்கு அப்பாற்பட்டவராக செல்லவும் இயலும். நாராயணகுரு ‘அறிவில் அறிவென அமைதல்’தான் வீடுபேறு என முன்வைத்தவர். அவருடைய தத்துவநூல்கள் அனைத்தும் அதையே பேசுகின்றன. ஆனால் அவர்தான் சிவன் முதல் சாரதாதேவி வரை தெய்வங்களை பதிட்டை செய்து ஆலயங்களை அமைத்தார். காளிநாடகம், சுப்ரமணிய அஷ்டகம் போன்ற பக்திக்கவிதைகளை இயற்றினார்
அன்றாடப்பிரார்த்தனைக்காக நாராயணகுரு இயற்றிய ‘தெய்வமே காத்துகொள்க கைவிடாது இங்கு எங்களை’ என்னும் பாடல் புகழ்பெற்றது. “அன்னமும் வஸ்திரமும் போன்றவை குறையாமல் எங்களுக்கு அருள்க’ என்ற பிரார்த்தனையே அதிலுள்ளது.
வேதாந்தம் அதன் பிரம்மதரிசனத்தால் ஒரு பொற்பட்டுநூலாக இந்தியாவின் பல்லாயிரம் வழிபாட்டுமுறைகளை, நம்பிக்கைகளை, ஆசாரங்களை, தெய்வங்களை ஒன்றென இணைத்தது. அதையே நாம் இந்து மதம் என அழைக்கிறோம்
ஜெ
கடவுள்,தொன்மம்- கடிதம்
வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,
இன்று தளத்தில் கடவுள், தொன்மம், சில வினாக்கள் குறித்து நீங்கள் எழுதியிருந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று. ஆழ்ந்த புரிதலோடும் அனுபவம் நிறைந்த தெளிவோடும் சமூகத்தின் மீதான கருணையோடும் எழுதப்பட்ட ஒரு அருமையான விளக்கம்.
இங்கே திருவண்ணாமலையில் எத்தனையோ இல்லற பொறுப்பும் குடும்பக் கடமைகளும் நிறைந்த பலர் செயலின்மை என்னும் மதுவுக்குள் சிக்கி சீரழிவதை கடந்த பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். செயல் இன்மையை விட்டொழித்து முயன்று தன்னால் இயற்றப்பட முடிந்தவற்றை இயற்றப்பட வேண்டியவற்றை இயற்றாமல் குடும்பக் கடமைகளை சரியாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்விலும் சிக்கித் தவிக்கின்றார்கள். ரமணரின் உபதேசங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் செய்துகொண்டிருந்த வேலையையும் தொழிலையும் விட்டுவிட்டு ஏதோ கொஞ்சநஞ்சம் இருக்கின்ற சேமிப்பை நம்பி குடும்பத்தோடு இங்கே வந்து சாதனை செய்து முக்தி அடைய வேண்டும் என்ற நம்பிக்கையில் அடிப்படைக் கடமைகளை கூட செய்யமுடியாத ஒருவித சோம்பல் நிலையில் விழுந்து விடுகிறார்கள்.
அளவுக்கு அதிகமான பொருளாதார பலமும் சொத்துக்களும் இருப்பவர்களுக்கு செயலின்மை அத்தனை பெரிய சுமையாக இருப்பதில்லை ஆனால் அடிப்படைத் தேவைகளை கூட நிவர்த்தி செய்து கொள்ள முடியாதவர்களுக்கு செயலின்மை பெரும் துயரத்தை அளிப்பதையே பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு காலத்தில் வலிமையான பொருளாதாரத்தோடு இருந்து ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக தொழிலையும் வியாபாரத்தையும் விட்டுவிட்டு ஆன்மிக சாதனையின் பெயரால் திருவண்ணாமலைக்கு குடும்பத்தோடு வந்து விட்டவர்கள் இன்றைய நெருக்கடி பொருளாதார சூழ்நிலையில் வாழ முடியாமல் குற்ற உணர்வில் தவிப்பதையும் பார்த்து கொண்டுதான் இருக்கின்றேன். அனைத்தையும் விட்டு துறவு நிலையில் இருந்து செய்ய வேண்டிய ஒரு சாதனை முறையை இல்லறத்தில் இருந்துகொண்டே செயலின்மை பயின்று இல்லற பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர ஆற்றாததனால் விளைகின்ற துயர் இது.
இதன் எதிர்முகமாக எத்தனையோ துறவிகள் அனைத்தையும் விட்டு வேதாந்த சிரவண மனனங்களை முடித்து தீவிரமாக நிதித்யாசனம் செய்ய வேண்டிய காலகட்டத்தில் அதிதீவிர லோகாதாய (உலக மற்றும் சமூக நன்மை) செயல்பாடுகளில் இறங்கி வெளி முகப்பட்டு தாம் எதன் பொருட்டு துறவு மேற்கொண்டோமோ அந்த இலக்கையும் மறந்து செயல்களில் சிக்கி சிக்குண்டு தம் வாழ்வின் அந்திம காலத்தில் கதறி அழுது நிறைவின்மையோடு உயிர் நீப்பதையும் இங்கே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
நீங்கள் உங்களுடைய கட்டுரையில் மிகத்தளிவாகஇவற்றின் வரையறைகளையும் விளக்கங்களையும் முன் வைத்திருக்கிறீர்கள். தனக்கான பாதையை சரியாக தேராததனால் வருகின்ற குழப்பங்களே இவைகள். பூரண ஞானமும் முக்தியும் மட்டுமே தனக்கான தலையாய குறிக்கோள் என்று உண்மையில் தனது உள்ளத்து ஆழத்தில் உணர்கின்ற ஒருவர் துறவு பாதையை தேர்ந்து சிந்தையை அடக்கி சும்மா இருந்து செயலின்மையில் திளைத்தல் மிகச் சரியானதே. அதையே மொட்ச சன்யாச யோகத்தில் கிருஷ்ணனும், “சும்மா இரு” என தனது உபதேசமாக ரமணரும் முன்வைக்கிறார்கள்.
பூரண ஞானத்தையும் முக்தியையும் தவிர பிற ஏதோ ஒன்றை அல்லது பலவற்றை தனக்கான தலையாய இலக்காக உள்ளத்தில் உணர்பவர்கள் அந்தப் பாதையில் முயன்று தன்னால் இயன்றவரை அதிதீவிரமாக செயலாற்றுவதே நல்லது. செயலாற்றல் ஒன்றே அவர்களுக்கான யோகம். காலப்போக்கில் அந்த செயல் யோகமே அவர்களை தூய்மைப்படுத்தி சித்த சுத்தி அளித்து மெல்ல மெல்ல பூரண ஞானம் மற்றும் முக்திக்கான பாதையை நோக்கி செலுத்தும். அதுவரையில் அவர்கள் “செயல் செயல் செயல்” என்றே தமது இலக்கை நோக்கி தீவிரமாக முயல்வதே நன்று.
துறவுப்பாதையில் இருப்பவர்களே என்றாலும் கூட அவர்களுக்கு வாசனைகள் அகத்தில் எஞ்சி இருக்கின்ற நிலையில் செயலின்மை என்பது சாத்தியமாவதில்லை. அதனாலேயே நன்கு உணர்ந்த ஞான குருமார்கள் சிரவண மனன காலத்தில் அத்தகைய இன்னும் பக்குவப்படாத துறவிகளை உபாசனை மற்றும் கர்ம யோகத்தில் ஆழ்த்தி தீவிரமாக செயலாற்ற வைத்து அவர்கள் பக்குவப்பட்ட பிறகே நிர்விகல்ப சமாதியை இலக்காகக் கொண்ட செயலின்மை யோகத்தை பரிந்துரைக்கின்றார்கள். சில நாட்களுக்கு முன்பான ஒரு கடிதத்தில் மிக அழகாக இதை நீங்கள் வார்த்தைகளில் தெளிவுபடுத்தி இருந்தீர்கள். சொல்லின் தெய்வம் உங்களோடு இருக்கிறது அதனாலேயே நமது மெய்ஞான பொக்கிஷத்தை உங்களால் மிக அழகாக தமிழில் வார்த்தைகளாக வடித்து எடுக்க முடிகிறது.
நீங்கள் மேலும் மேலும் மெய்யியல் குறித்த பல கட்டுரைகளை எழுத வேண்டும். உங்கள் தனித்துவமான, உள்ளம் கொள்ளை கொள்ளும், எழுத்து நடைக்கே உரித்தான சக்தியும், நமது மெய்யியலின் ஆழ்ந்த உண்மைகளும் இணைந்த பிரவாகம் எத்தனையோ குழம்பித் தவிக்கின்ற அன்பர்களுக்கு தெளிவை அளித்து அவர்களின் தேடுதல் தாகத்தை தீர்த்துவைக்கும். அவர்கள் தங்களின் சரியான வாழ்க்கைப் பாதையை தேர்ந்து எடுப்பதில் அவர்களுக்கு பேருதவி புரியும்.
மிக்க அன்புடன்,
ஆனந்த் சுவாமி
திருவண்ணாமலை
அறஞ்செயவிரும்பு- கடிதம்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலம். நலமே விழைக என்று பிராத்திக்கின்றேன். விக்கிப்பீடியா கடிதம் கண்டதும் படித்துவிட்டேன். இணைய பொது சுதந்திர கொள்கை பின்பற்றும் விக்கி தளத்தை கடந்த காலத்தில் அன்றாடம் பயண்படுத்தியுள்ளேன்.
பள்ளியில் பாடங்களை சரியாக படிக்காத காரணத்தாலும் பின் நாட்களில் படிக்கும் பழக்கம் வந்த காரணத்தாலும் தொடர்ந்து வாசித்து தகவல் சேர்த்துக்கொண்டே இருந்த காலம் அதிலும் குறிப்பாக வரலாறு மற்றும் வேலைக்காக தொழில்நூட்பம். அப்படி படித்து தமிழ் ஆர்வம் கொண்ட நண்பருடன் விவாதிக்கும் போது நாங்கள் விளையாட்டாக களித்த மத்திய பொழுதுகள் நினைவில் வந்து மகிழ்ச்சியூட்டிது.
நினைவில் ஓடிய விவாதம், ’அசோகர் காலத்தில் கூட தெற்கே அவனால் வரமுடியல ’என்று வெட்டிவிராப்பு பேசுகையிலே இருவரும் ஒரு சேர சொல்லிக்கொண்டோம் அவன் ஒரு வியுகத்தில பொறுமையா இருந்திருப்பான் தெற்க அடிக்கடி ஒருத்தன ஒருத்தன் அடிச்சிகிட்டு இருக்கான் அவனுக முடிக்கட்டும் அப்பறம் மிதம் இருப்பவர்களை நாம பார்த்துக்குவோம் என்று ஆனால் இன்று வரை இவர்கள் அடிச்சிகிட்டு முடிஞ்சபாடில்ல என்று… ;)
சேவை என்பதை கடந்து எதுவும் இலவசம் இல்லை என்பது என் எண்ணம் ஆகையால் தொடர்ந்து குறைந்த நன்கொடை பங்களிப்புகளை தந்துள்ளேன். பின் நாட்களில் புத்தகங்கள் வாசிப்பு தொடரவும் விக்கி குறைந்தது அதே போல் நன்கொடை பங்களிப்பும் நின்றது. விக்கி கடிதம் அந்த குற்ற உணர்ச்சியை தூண்டியது
அதற்கு மற்றொரு காரணம் அவர்கள் வடிவமைப்பை நாங்கள் அறம்செயவிரும்பு (ww. அறம்செயவிரும்பு.com) வில் பயண்படுத்துகின்றோம். இன்று இந்த கடிதத்தை எழுத அவசியப்பட்டது, படிக்க கிடைக்கும் தரவுகள், தமிழ் என்பதை கடந்து அந்த வடிவமைப்பு விக்கியின் முக்கிய பங்களிப்பு என்பதற்காக.
இதே போன்ற பொது வெளியில் பங்களிப்புகளை கோரும் பிற நிறுவனங்கள் தான் முகநூலும், சுட்டுரைகளும் ஆனால் விக்கியின் ஆக்கபூர்வமான முயற்சி பலவகையில் பயணுள்ளது. மதுரை திட்டம், குட்டன்பர்க் திட்டங்களுக்கு உதவக்கூடியது அவர்கள் செயல்பாடுகளை எளிமைப்படுத்தக்கூடியது.
பொது வெளியில் பலரின் பங்களிப்புகளால் தகவல் சேகரிக்க மற்றும் செறிவுட்ட அவசியப்படும் இடத்தில் அவர்களது இந்த விக்கி வடிவமைப்பு அவரவர் தேவைக்கு ஏற்ப பயண்படுத்திக்கொள்ளலாம். அறம்செயவிரும்பு வில் நாங்கள் பயண்படுத்துகிறோம் பொது வெளியில் பங்களிப்புகளை பெற்றுக்கொள்கிறோம், ஊக்குவிக்கின்றோம்,
அதே நேரத்தில் பொதுமான நேரம் எடுத்து மேற்பார்வை செய்தே பிரசுரிக்கின்றோம். தகவலின் தரம் குறையாமல் அதே சமயம் ஆத்திசூடிக்கான விவாத களமாக, அதாவது மிக பெரிய கனவாக, தொடர் விவாதங்கள் கலந்துரையாடல் வழியாக அந்த அந்த காலகட்டத்திற்கான, துறைக்கான ஆத்திசூடி செய்யுள் உருவாகிக்கொண்டே இருக்கும் ஒரு சுரங்கமாக இருக்க வேண்டும்.
அவ்வை ஆத்திசூடிக்கு பின் பாரதி ஆத்திசூடி, பாரதிதாசன் ஆத்திசூடி, அழ வள்ளியப்பா ஆத்திசூடி என்ற வரிசையில் இன்று காலத்திற்கு ஏற்ப உருவாகிக்கொண்டே இருத்தல் நலம்.
மிக குறைந்த அளவிலான தகவலோடு தரவுகளோடு ஆமை வேகத்தில் செயல்படுகின்றோம். ஆத்திசூடிக்கு இன்று கிடைக்கும் அநேக தரவுகளிலும் இருந்து அறம்செயவிரும்பு சற்று மேன்மையாக இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றோம். இதற்கு விவாதங்களை சாத்தியப்படுத்தியது ஒரு காரணம்,
கூறிப்பிட வேண்டிய சில, ‘இயல்வது கரவேல்/ தானமது விரும்பு’ சொல்லிய அவ்வை ஏன் ‘ஏற்பது இகழ்ச்சி’ என்கிறாள்? ‘ஓதுவது ஒழியேல்’ என்ற அவ்வை ஏன் ‘எண் எழுத்து இகழேல்’ என்றும் கூறிப்பிட வேண்டும். ‘நாடு ஒப்பன செய்/ தேசத்தோடு ஒட்டி வாழ்’ என்ற உரைத்த அவ்வை கூடி வாழ்வதற்கு ஊரைத்தான் சொல்கிறாள் ‘ஊருடன் கூடி வாழ்’ என்று. ஏன் பொழுதுகளில் வைகறைக்கு கவனம் ‘வைகறை துயில் எழு’ என்று?
குறிப்பாக பொது தமிழ் விக்கி என்பது அநேகம் மக்கள் கலந்துக்கொள்ளும் திரைப்படம், விளையாட்டு என்று இருக்கலாம் ஆனால் தமிழ், மொழி, வரலாறு என்று வந்தால் பற்றாலர்களை விட ஆர்வலர்களே அவசியம். அதை மேன்படுத்த, தமிழ் மன்றம் போல பள்ளி கல்லூரி பாடத்திட்டத்தில் மாணவர்களை கலந்துக்கொள்ள செய்ய வேண்டும் அவற்றை மேற்பார்வை செய்து மேன்பட்ட தகவல்களை பிரசுரிக்கலாம். எங்களுக்கு இதை சாத்தியபடுத்தியிருப்பதில் விக்கிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். உங்கள் தளத்தில் இதை தெரியபடுத்துவதில் மகிழ்ச்சி.
இன்று தமிழ் விக்கியில் இருக்கும் சிக்கல் என்பதை கடந்து அவற்றை நாம் உள்வாங்கிக்கொள்ளும் முறை அவசியம் அவற்றின் சாத்தியங்களை கொண்டு பங்காற்ற இன்னும் இன்னும் ஆர்வலர்கள் களமிறங்க வேண்டும். நன்றி!
நாராயணன் மெய்யப்பன்.
கி.ரா.உரை- கடிதம்.
அன்புள்ள ஜெ.
சமீப காலத்தில் கேட்ட மிகச் சிறந்த உரைகளுள் ஒன்று உங்களின் மிச்சக் கதைகள் வெளியீட்டு உரை.
கோவையில்தான் நைனாவை முதன்முதலில் பார்த்தேன்.. காந்திபுரத்தில் ஒரு விழாவில். அவருக்கும் அவர் மனைவிக்கும் விஜயா பதிப்பக வேலாயுதம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 1984 அல்லது 5.
அவர் கதைகளை அதுவரை படித்ததில்லை. அந்தக் கூட்டத்தில், வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில், அன்று கல்லூரி மாணவனாக இருந்த எனது பட்ஜெட்டுக்கேற்ற அளவில் சிறு புத்தகத்தை வாங்கினேன். பிஞ்சுகள். அன்றிரவே படித்தேன். இறுதியில், அதன் கதாநாயகனாகிய சிறுவன், தன் காக்கை, குருவி, ஈசல் என்னும் உலகை விட்டு, அருகிலுள்ள டவுணுக்குப் படிக்க, ரயிலில் போகிறான். அத்தோடு முடிகிறது. அந்த முடிவு சட்டென என் வாழ்க்கையுடன் ஒட்டிக் கொண்டது. தளவாய்ப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு முடித்து, மேலே படிக்க அம்மாயி வீட்டுக்குச் செல்ல வேண்டும். மாமா எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, 1976 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ஒரு நாள் அதிகாலையில், எங்கள் கருப்புசாமி தோட்ட வாசலில், ஈரோடு செல்லும் SRT பஸ்ஸில் ஏறிப் போனேன்.என் பயணமும், பிஞ்சுகள் கதையின் சிறுவனின் பயணமும் ஒருவழிப் பயணம் என அந்தக் கதையைப் படித்த அன்று உணர்ந்தேன்.நவீனத்துவம், தொழில்நுட்பம், வீரிய விதைகள், பூச்சி மருந்துகள் என, 70 களுக்கு முன்பிருந்த ஒரு உலகம் இனி வரமுடியாத ஒரு யுக மாற்றம் எனச் சொல்ல வேண்டும்.
அம்மை விழுந்து தனியே கிடந்த சிறுவனுக்கு, அம்மா இறந்து போன செய்தி சிலநாள் கழித்தே சொல்லப்படுகிறது.அன்று காலரா, அம்மை, பிரசவம் எனப் பல வழிகளில் மரணம் வீட்டருகில் இருந்த காலம்.எங்கள் பக்கத்துத் தோட்டத்துப் பெண் ஒருவர் பிரசவிக்க முடியாமல் அழுத ஓலமும், பின்னர் அவரது மரணமும், 7 வயதில் கேட்டது.
நைனாவின் எழுத்தின் அளகு (அவர் பாஷையில்), என்னவெனில்,அம்மை போட்டு முடிந்த குழந்தையை, வேப்பிலை நீர் கலந்த வெந்நீரில் குளிப்பாட்டுவார்கள். அவர் எளுதும் அழகில், வேப்பிலை கலந்த வெந்நீர் வாசனை எழுந்து வருவதுதான்.
35 ஆண்டுகளுக்குப் பின் இன்று மதிப்பிடச் சொன்னால், பிஞ்சுகள், ஒரு சூழலியல் செவ்வியல் கதை என்று சொல்வேன்.பாரதியின் பாஞ்சாலி சபதம் போன்ற ஒரு குறுங்காவியம்.பாரதி ஏன் பாஞ்சாலியின் சபதத்தோடு, தன் குறுங்காவியத்தை முடித்தான்? (1992 ஆம் ஆண்டு குடிமைப் பணித்தேர்வில், இது ஒரு கேள்வி.). இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை அத்துடன் பொருத்திப் பார்த்தால் புரியும். அது போல, நவீனத்துவம், வழமையான ஊரக வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஒரு விசையாக தனி வாழ்வில் உள்ளே நுழைந்து, அவனைத் திரும்ப முடியாத ஒரு உலகத்துக்குள் செலுத்தும் கணத்தோடு முடியும் அந்தக் கதையும் அபூர்வமான ஒன்றுதான்.
பின்னர் இதுவா அதுவா என பிரிக்க முடியாத இணைப் படைப்புக்கள் – கோபல்ல கிராமம் மற்றும் கிராமத்து மக்கள். கிராமம் போன்ற குறுங்குழுக்களுக்குள் ஆயிரம் போட்டி பொறாமை.அதை நைனா எழுதும்போது, அதைப் பற்றிய முன்முடிவுகளும், மனச்சாய்வுகளும் மறைந்து, அது அச்சமூகத்தின் குணம் என அதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொள்ள வைக்கிறது. சிங்கப்பூர் நாய்க்கரைக் கண்டால், சீனி நாய்க்கருக்கு பூளுல மொளகாயத் தடவின மாதிரி எரியும் என்பது, வைரமுத்துவின் பாஷையில் சொன்னால், கம்பன் பாடாத சிந்தனை
பல நாட்களில், தொடர்பே இல்லாத இடங்களிலும், எதிர்கொள்ளும் நிகழ்வுகளிலும், நைனா வின் நினைவு வரும்.சமீபத்தில் ஒரு நாள் மாலை மங்கிய பொழுதில், கடற்கரையினில் உயர்தர ரஷ்யச் சாராயம் மாந்திக் கொண்டிருக்கையில், ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி க்ளிப் ஒன்று வந்தது.
அது அமெரிக்க டாய்லெட்களைப் பற்றியது.தில் பேசும் தமிழ்ப்பெண் சொல்கிறார்.. “அமெரிக்கா என்னங்க வல்லரசு நாடு.என்ன வல்லரசு நாடு? டேய் மொதல்ல ஒரு டாய்லட் கதவ முழுசாக் கட்டுங்கடா.அப்பறமா மெக்சிகோவுக்கு குறுக்கால செவுரு வச்சிக் கட்டலாம்…” வெடித்துச் சிரித்ததில், கையில் இருந்த பாதிக் கோப்பை மது சிதறிவிட்டது.
கோப்பையை மீண்டும் நிரப்பிக் கொள்ளும் போது நினைத்துக் கொண்டேன். ரோமியோ ஜுலியட் என்னங்க பெரிய காதல் ஜோடி? என்ன பெரிய காதல் ஜோடி?? எங்க கிட்டப்பன் – அச்சிந்திலுவுக்கு இணையாகுமா ந்னு என்னை நானே கேட்டுக் கொண்டேன்…
ஒரு வீம்புக்காகப் பிரிதல் என்பது கிராமத்தில் மிக எளிதாக எவரும் காண்பதுதான்.ஆனால், அந்த வீம்புக்கு பின் உயிர்த்திருக்கும் காதலை எழுத நைனாவால் மட்டும்தான் முடியும்.இரவில், சிறுநீர் கழிக்க பின்புறம் வரும் அச்சிந்திலு, அவர்கள் வீட்டு மாடு சினைக்கான பருவத்தில் இருப்பதும், அதைத் தணிக்க காளை, சுவற்றைத் தாண்டி வந்து, மாட்டைப் புணர்தலும் – அதை அச்சிந்திலு கண்டு மோகிக்கும் கணமும், அச்சு அசல் சங்க காலப் பாடலின் தொடர்ச்சி.குறுந்தொகையில் இப்படி ஒரு பாட்டு இருந்தது என எவரேனும் கதைவிட்டால், உலகம் கேள்வி கேட்காமல் நம்பிவிடும்.
அதே போல, கரிசல் காட்டில், கிட்டப்பன், பிசின் வழியும் மரத்தின் முன் அச்சிந்திலுவின் நினைவில் ஏங்கி, மயங்கிச் சரிதலும் எனக் காமத்தைச் சூழலுடன் மிகச் சரியாகப் பொருத்தி எழுதியவர் என் சிற்றறிவில் எவருமில்லை.இத்துடன் ஒப்பிடுகையில், பலமான எதிர்பார்ப்போடு வாசித்த Lady Chatterlie’s lover பெருத்த ஏமாற்றத்தை அளித்தது என்றே சொல்ல வேண்டும்.. தி.ஜா மூணாப்பு ஃபெயில்! நம்முலகில், நைனா போல இதை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்தவர் யாருமில்லை.
இறுதியில் கண்ணம்மா – கன்னிமையில் வரும் நாச்சியார்… பாரதியின் கண்ணம்மாவை விட உயிர்ப்பானவள்.
”ஒரு நாளைக்கு உருத்த பச்சை வெங்காயம் கொண்டுவந்து ‘கடித்துக்’ கொள்ள கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின் காம்பைப் பறித்துவிட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு அதை உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும். அப்படியே வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது, கஞ்சியைக் ‘கொண்டா கொண்டா’ என்று சொல்லுமாம்!
இரவில் அவர்களுக்கு வெதுவெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமா பருப்புக்கறி விட்டு நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய் வெஞ்சனமாகக் கொண்டுவந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா நிறைய ரஸம். ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.
அவள் அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்தது வீடு நிறைந்திருந்தது. தீபம்போல் வீடு நிறைஒளி விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தாள்.
மார்கழி மாசம் பிறந்துவிட்டால் வீட்டினுள்ளும் தெருவாசல் முற்றத்திலும் தினமும் வகை வகையான கோலங்கள் போட்டு அழகுபடுத்துவாள். அதிகாலையில் எழுந்து நீராடி திவ்யப்பிரபந்தம் பாடுவாள். இப்பொழுதும் பல திருப்பாவைப் பாடல்களை என்னால் பாராமல் ஒப்புவிக்கமுடியும். சிறுவயசில் அவளால் பிரபந்தப் பாடல்களைப் பாடக் கேட்டுக்கேட்டு எங்கள் எல்லோர்க்கும் அது மனப்பாடம் ஆகிவிட்டது”.
வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மா என்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப் படைத்துப் படைத்து அவர்கள் உண்டு பசி ஆறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு தேவ திருப்தி”.
எனக்கு கொய்யாக்காய் மிகவும் பிடிக்கும். பூ காயாகத் துவங்கி, கனியும் முன்பு திரண்டு நிற்கும்.அதைச் செங்காய் எனச் சொல்வார்கள்.அதற்கென ஒரு அபூர்வ குணமும் ருசியும் இருக்கும்.குடும்பம் என்னும் பாரம் நுகத்தில் ஏற்றும் முன்பு, எந்த எடையும் இல்லாமல், உலகின் இன்பமே என் இன்பம் என வாழும் சிறு காலம். பணி நிமித்தம், பல ஊர்களில் சுற்றும் போதெல்லாம், இந்தப் பருவத்துப் பெண்களைக் காண்கிறேன்.. அதில் சுடரும் ஒரு அபூர்வமான ஒளியை, பாரதியை விட நைனா கச்சிதமாகச் சித்தரித்திருக்கிறார் என்றே சொல்வேன்.இப்படி துள்ளித் திரியும் பெண்களைக் காணும் பொழுதெலாம் நைனாதான் நினைவுக்கு வருகிறார்.
மண் சார்ந்த படைப்பு எனப் பலரைச் சொல்வார்கள்.அப்படித்தான் நான் ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாளை வாசித்தேன்.அதில் கொங்கு மொழி இருந்தது. கவுண்டர்களுக்கே உரித்தான பங்காளிச் சண்டை இருந்தது.ஆனால், கொங்கு நிலப்பரப்பின் செம்மண்ணும், மணமும் இல்லை.இன்றுவரை, அந்தக் கதையின் நிலப்பரப்பு நினைவில் இல்லை.நீங்கள் உங்கள் உரையில் சொன்னது போல், நவீனத்துவம் என நினைத்து எழுத வந்தவர்கள், சூழலை ஒரு backdrop என மட்டுமே உபயோகித்தார்களோ என சந்தேகிக்கிறேன்.
நான் ஒரு சாதாரண வாசகன்.எனது உலகில், பிடித்தவற்றை வாசிக்கும் ஒரு pedestrian reader என்றுதான் என்னைச் சொல்லிக் கொள்வேன்.உலகின் உன்னதமான கதைகளையோ, காவியங்களையோ படித்தவனில்லை.இன்றிருக்கும் மனநிலையில் இனிமேல் படிப்பேனா என்றும் தெரியவில்லை.
ஆனால், கதை படிக்கும் ஆர்வமிருந்த காலத்தில் ஒரு நாள் நைனா என்னை ஆட்கொண்டார்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அப்படீங்கற மாதிரி, ஒரு காலத்தில் அவர் பெயர் கேட்டு, பின்னர் அவர் கதை கேட்டு, அவருக்கே பித்தான கதை என் கதை.
ஏன் என யோசித்துப் பார்க்கிறேன் –
சிறு வயதில் ஒரு நாள், என் அம்மாயி, ஒரு வேலையாக அவர் சொந்த ஊரான கன்னடியன் பாளையத்துக்கு என்னை எடுத்துச் சென்றார்.. ஒரு உறவினர் வீட்டில், ஏதோ காரணத்துக்காக, என்னை உறங்க வைத்து விட்டு, இன்னொரு உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்.. மரத்தடியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த என்னை விட்டு விட்டு, அவர்கள் அனைவரும் கடலைக் கொடி பிடுங்கச் சென்று விட்டனர். மாலை மங்கும் நேரத்தில், விழித்துப் பார்த்தேன்.. யாருமில்லை.தன்னிரக்கத்தில் வீறிட்டு அழத்துவங்கிய என்னை, அந்த வீட்டின் வெள்ளச் சீலக் கார ஆயா ஓடி வந்து தூக்கிக் கொண்டார்.
‘ஏஞ்சாமி.. பயந்துட்டியா கண்ணூ’, என அணைத்துக் கொண்ட அவரின் வெற்றிலை வாசனை இன்றும் நினைவிருக்கிறது… தேம்பிக் கொண்டிருந்த என்னைத் தேற்றி, சுடுதண்ணியில் குளிக்க வைத்து, துணி மாற்றித் தன் மடியிலேயே வைத்து அணைத்துக் கொண்டார். வேகவைத்த கடலைக்காயை உரித்து எனக்கு ஊட்டிக் கொண்டேயிருந்தார். நைனா அப்படி ஒரு அன்னை.
அன்புடன்
பாலசுப்ரமணியம் முத்துசாமி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

