Jeyamohan's Blog, page 957
July 3, 2021
ஆலயம் எவருடையது? கடிதம் 4
ஆலயம் எவருடையது?
ஆலயம் கடிதம் 1
ஆலயம் கடிதங்கள்-2
இனிய ஜெயம்,
ஆலயம் எவருடயது? பதிவைக் கண்டேன். உண்மையை சொல்லி விடுகிறேன், இந்த உரையாடல் எனக்குள் மெல்லிய பதற்றத்தையே அளிக்கிறது, ஏதோ நிகழக் கூடாத ஒன்று அருகணைந்து கொண்டிருப்பது போல.
இந்த கோரிக்கையை ‘எழுப்பியதில்’ பக்தர்களின் பங்கு என உண்மையிலேயே ஒன்று இருக்கிறதா என்ன? ஒட்டு மொத்த பக்கதர்களின் மனநிலைக்கு வாய் என்று எழுவதல்ல ஜக்கி அல்லது அவரை போன்றவர்கள் குரல், ஜக்கி அல்லது அவர் போன்றவர்கள் தனது குரல் வழியே தமிழக பக்தர்களின் மனநிலையை வடிவமைக்க முயல்கிறார்கள் என்பதே உண்மை.
வாலி சுக்ரீவன் சிலைக்கும், ஆஞ்சநேயர் சிலைக்கும் பேதம் அறியாமல் வெண்ணெயடிக்கும் அப்பாவி பக்தர்கள் வசமா இந்த நிர்வாகம் கைமாறும்? இத்தகு பக்தர்கள் அப்பாவிகள் என்றே சொல்வேன். இந்தியப் பொது மனதில் இன்றளவும் முகிழாத சிவில் சென்ஸ் குறைபாடு அவர்களிடமும் உண்டு. ஆனால் ‘சரியான அமைப்பு’ வழியே அவர்களை பழக்கி எடுக்க முடியும்.
இன்று எந்தப் பேராலயத்திலும் கற்பூரம் எரிவதில்லை. பெரும்பாலான விசேஷ தினங்களில் எண்ணெய் விளக்குகள் ப்ரகாரத்தில் தனி இடம் கண்டு எரிந்து கொண்டிருக்கிறது. எல்லாம் கடந்த ஐந்து வருடத்தின் மாற்றம். இப்படி பலவற்றை சொல்லமுடியும். சிலைக்கு மேலே வாலி சுக்ரீவன் என்ற பதாகையும், அந்த சிற்பம் பேணப்பட வேண்டிய சொத்து என்பதை சொல்ல ஒரு காவலாளியும், கோவில் வெளி ப்ரகாரத்தில் பக்தர்கள் வெண்ணெயாடிக்க வசதியாக ஒரு தனித்த ஆஞ்சநேயர் கோயிலும் போதும், அதே ஐந்து வருடத்தில் இந்த சிவில் ஒபிடியன்ஸுக்குள் பக்தர்கள் வந்து விடுவார்கள்.
இப்படி கோயில் பண்பாட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு கோவிலிலும் ஓதுவார் பணி போல ‘சொல்லிக்கொடுக்க’ ஒருவர் இருந்தால் போதும், பெரும்பாலான பக்தர்களை மாற்றி விட முடியும். சிவ ராத்திரி அன்று கோவிலில் குழுமி நிற்பவர்களில் 50 சதம் யுவன் யுவதிகள். இவர்களால் சிவ ராத்திரியை கண்டடைய முடியும் என்றால் சிவ வடிவங்களையும் கண்டடைய முடியும். கடற்கரையில் ஆமைக்குஞ்சை காப்பாற்றும் இவர்களை நமது கலை மேன்மைகள் மீதான போதத்தை எழுப்பி இவற்றை பேணச் செய்ய துணைக்கோட முடியாதா என்ன?
தமிழகம் தழுவியதொரு செயல்திட்டமாக ஒவ்வொரு வீட்டிலும், குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதி அகரம் பதிப்பகம் வெளியிட்ட கலை ரசனைக் கட்டுரைகள் நூலை கொண்டு சேர்த்து, அது போல ஒரு ஐந்து நூல்கள் கொண்டு ஒரு விரிவான அறிமுக உரையாடல்களை துவங்கினால், இப்படி பல ஒருங்கிணைந்த தொடர் செயல்பாடுகள் வழியே 10 வருடத்தில் கோவில் பண்பாடு நமது சொத்து எனும் போதத்தை இளம் மனங்களில் கொண்டு வந்து விட முடியும்.
விஷயம் இது சார்ந்தது அல்ல, அப்பாவி பக்தர்களை ‘அப்பாவிகளாகவே’ நீடிக்க வைத்து இந்த பக்தர்கள் வசம் கோவில் நிர்வாகம் வர வேண்டும் என்பதே இப்போது எழும் குரல் பின்னுள்ள நிலை. அப்படி வந்தால்? நிச்சயம் பல நல்லது நடக்கும். கூடவே, எவன் பண பலமும், சாதி பலமும், அரசியல் பலமும் கொண்ட சுமடனோ, அவன் கையில் ஒவ்வொரு ஊரின் பிரதான கோயிலும் சென்று சேரும். வைகாசி திருவிழாவில் அந்த பிரதான ஆண்டான் சாதி முன்னிலை வகிக்கும். அடிமை சாதி எல்லாம் செருப்பு இல்லாமல் சொக்காயை கழற்றி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு ரத வீதியில் நடக்க வேண்டும் என்று நியதி உருவாகும்.
ஒரே ஒரு பேராலயம். உதாரணமாக நெல்லையப்பர் கோவில். ஒரே ஒரு வருடம் அதன் அனைத்து விழாக்களையும் நெல்லை சமுதாய சமண தொழிலதிபர்கள் வசம் கொடுத்துப் பாருங்களேன். இந்தியாவே திருப்பி பார்க்கும் வண்ணம் அத் திருவிழாக்களை பொலியச் செய்ய அவர்களால் இயலும். (அந்த ஆவல் கொண்ட எத்தனையோ சமண தொழில் அதிபர்கள் எல்லா ஊரிலும் உண்டு) . சும்மா பேச்சுக்குத்தான் சொல்கிறேன். இதை நோக்கிய ஒரே ஒரு நகர்வு போதும் பிறகு பாருங்கள் நமது கோவில் பண்பாட்டு மீட்சிக்கான பேரிகைகளின் கூப்பாட்டை. உண்மையில் இந்த சாதி, மதம் சாராத அப்பாவி பக்தர்கள் எவருக்கும் எவர் கோவிலின் அடித்தளங்களில் ஒருவரோ அவருக்கு இந்த ‘கோவில் மீட்பு’ போன்ற எந்த விஷயங்களும் அர்த்தமாகாது. அவர்களின் சார்பாக என்று சொல்லி குளிர் காய எழுந்து வர போவது சாதி சுமடர்களும், ஆசாரவாத மூடர்களும்தான்.
மூன்றாவது மிக முக்கிய ஆபத்தான கண்ணி அரசியல். மேற்சொன்ன இரண்டும் கோவில் மேல் படியப்போகும் ஆக்சிஜனும் பெட்ரோலும் என்றால், அதில் வந்து விழப்போகும் தீ, அரசியல். எத்தனையோ வருங்கால அரசியல் சூழல்களை அடுத்த கட்ட சதுரங்க காய் நகர்த்தல்களை போல திட்டமிட்டு உருவாக்கப்பட்டது நமது அரசியல் சாசனம். அத்தனை சதுரங்க நகர்விலும் இருக்கும் பிழை சாத்தியங்களை கண்டறிந்து அதிலேயே அடித்து அடித்து வந்து அமர்ந்துருப்பது இன்றைய மத்திய அரசு. கட்டுப்பாட்டுகளே இன்றி இப்படி ஒரு மைய அரசு அமைய இயலும் என்று மைய அரசியல் அமைப்பை விரும்பிய ஆசிரியர் அம்பேத்கார் யூகித்திருக்கவே மாட்டார்.
நிகழ்ந்த இந்த வரலாற்று பிழைக்கு மூல காரணம் ராம ஜென்ம பூமி. பிரச்சனையை பேசி பேசி பெரிதாக்கி வெறும் கால் நூற்றாண்டில் இன்று இந்தியாவை வலதுசாரி சர்வாதிகாரத்துக்குள் கொண்டு வந்து விட்டது அரசியல். தமிழ் நாட்டில் இப்படி ஒரு வெற்றிகரமான முன் மாதிரியை முயர்சித்து பார்க்க அருமையான களம் இந்த கோயில் மீட்பு எனும் விஷ விதை. 60 வருட திராவிட ஆட்சியில் அந்த ஆட்சியாளர்கள் வசம் சிக்கி சீரழிந்து விட்ட ‘நமது பண்பாட்டின்’ மைய்யமான கோயில்களை மீட்போம். இந்த கோஷமும் ராம ஜென்ம பூமி கோஷமும் வேறு வேறா என்ன? இந்த உரையாடல் எங்கே துவங்கி எங்கே நகர்ந்தாலும் இறுதியில் அது வளர்ந்து இந்துத்துவ அரசியல் புற்றுக் கட்டியாகவே வெளிப்படும். இதுவே கண் முன் உள்ள நேற்றைய வரலாறு நமக்கு அளித்தது.
கோவில் பண்பாடு மருமலர்ச்சி காண வேண்டும் அதற்கு நிர்வாகம் கைமாற வேண்டும் என்றால், நம் முன் உள்ள எளிய கேள்வி, கோவில்கள் இப்போது உள்ள நிலையிலேயே அவைகளின் மீட்சிக்காக அதன் ஆர்வலர்கள் கூடி, கடந்த 10 ஆண்டுகளில் முயன்று பார்த்தவைகள் என்னென்ன?
பதில் மௌனம். நாம் எதையுமே முயன்று பார்க்கவில்லை என்பதே மெய். உதாரணமாக ஜக்கி அவர்களின் குழுக்கள் ஊருக்கு ஊர் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் முக்கிய கோவிலில் ஒரு ஐந்து பேர் நாளொன்றுக்கு மூன்று மணிநேரம் செலவிட்டால் போதும், குறைந்த பட்ச போதம் ஒன்றை பொது மனதில் கடந்த பத்து வருடத்தில் கொண்டு வந்திருக்க முடியும். எதையுமே செய்து பார்க்காமல், எல்லா சரிவுக்கும் அறநிலைய துறைதான் காரணம் அதிலிருந்து கோவில்களை ‘மீட்டால்தான்’ எதையாவது செய்ய முடியும் என்பது, அரசியல்வாதிகள் பேச்சு.
அடுத்த பத்து வருடத்துக்கு நடக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான், ஆக்கப்பூர்வமான நேர்நிலை செயல்பாடுகள். அதுவண்றி கோயில் மீட்போம் கோஷம் வழியே (தமிழ்நாட்டில் நோய் பரவாதிருக்க இளம் தலைமுறை எப்படி சமுக இடைவெளியை கடைபிடிக்கிறதோ அப்படி) நெருங்கி வரும் எவரையும் விட்டு இளம் தலைமுறை விலகி நிற்க வேண்டியதே கோவில் பண்பாட்டின் மறுமலர்ச்சிக்கு செய்யக் கூடிய சிறந்த பங்களிப்பு.
கடலூர் சீனு
வல்லினம் சிங்கைச் சிறப்பிதழ்
வல்லினம் ஜூலை மாத இதழ் சிங்கப்பூர் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சிங்கப்பூர் இலக்கியத்தில் இரண்டு முகங்கள் உண்டு. இலக்கியம் என்றால் என்ன என்று அறிந்துகொண்டு, அதற்குரிய உழைப்பையும் கவனத்தையும் செலுத்தும் ஒரு தரப்பு. சிங்கப்பூர் என்னும் நவீன தேசம் அளிக்கும் வாய்ப்புகளுக்காக மட்டுமே செயல்படும் ஒரு தரப்பு. இலக்கியத்தரப்பை முன்னிறுத்தியிருக்கிறது வல்லினத்தின் இந்த இதழ். ஒரு சமரசமற்ற இதழே இதை செய்யமுடியும்.
‘கிராதம்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல் தொடரில் 12ஆவது நாவல் ‘கிராதம்’. ‘கிராதம்’ என்பது, மோகத்தின் முதன்மைத் தெய்வத்தைக் குறிக்கும். கிராதனாகச் சிவனும் கிராதியாகக் காளியும் இந்த நாவலில் இடம்பெறுகின்றனர். இந்த நாவலில் சிவன் பல்வேறு வடிவங்களில் கிராதனாக வருவது கூடுதல் சிறப்பு.
இந்த நாவலின் ‘மையம்’ என்று, வேதங்களுக்கு மாற்றாகப் புதிய வேதத்தை இளைய யாதவர் நிலைநிறுத்த விரும்புவதையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துத் தெய்வங்களும் ஓர் அணியில் திரள்வதையும் குறிப்பிடலாம்.
நாவலின் கதைப்பின்னலாக இருப்பது இரண்டு பெரியஇழைகள் மட்டுமே.
ஒன்று – இளைய யாதவருக்கு நிகர் நிற்பதற்காகவே அர்சுணன் நாற்திசைகளை வெற்றிகொண்டு, அதன் வழியாக ஒவ்வொரு திசைத் தெய்வத்திடமிருந்தும் ஒவ்வொரு மெய்மையைப் படைக்கலமாகப் பெற்றுக் கொள்வது.
இரண்டு – புதிய வேதத்தைத் தடுக்கும்பொருட்டு இளைய யாதவருக்கு எதிராக அர்சுணனைப் போரில் நிறுத்தவே இந்திரன் முதலான அனைத்துத் தெய்வங்களும் பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றன. அதன் உச்ச நிகழ்வாக இந்திரன் இந்திரலோகத்திற்கு வரும் அர்சுணனிடம் குருஷேத்திரப் போரின் பின்விளைவுகளை முன்கூட்டியே உரைக்கிறார். ஆனாலும் அர்சுணன் பிடிவாதமாக இளைய யாதவருக்கு நிகராகவும் அவருக்கு என்றென்றும் நண்பனாகவும் திகழவே விழைகிறார்.
இந்த நாவல், ‘வேதமெய்மைகளைப்’ பற்றியே பெரிதும் பேசுகிறது. ‘மெய்மை’ என்பது, அறுதி உண்மை. இந்தச் சொல்லை ‘மெய்ம்மை’ என்று தவறுதலாகப் புரிந்துகொள்ளக் கூடாது.
உள்ளத்தில் பொய்யின்றி ஒழுகுதல் உண்மை; உள்ளத்தில் உள்ள உண்மை மாறாமல் வாய் வழியாக, சொல்லாகவோ பேச்சாகவோ வெளிப்படுவது வாய்மை; வாய்மை மொழி மாறாமல் நடப்பது மெய்ம்மை (மெய் – உடல்; உடலால் செயற்படுதல் மெய்ம்மை). இந்த நாவலில் குறிப்பிடப்படுவது, ‘மெய்மை’ என்ற அறுதி உண்மையையே.
தர்மர் வேதமெய்மையை முற்றறிவதோடு ‘சொல்வளர்காடு’ நாவல் நிறைவு பெறுகிறது. அடுத்த நாவலான இந்த கிராதத்தில், அர்சுணன் வேதமெய்மைகளைப் படைக்கலங்களாகக் கைக்கொள்ளும் விதங்கள் பற்றி விரிவாகக் காட்டப் பட்டுள்ளன.
அர்சுணன் தன்னுடைய அகத்தேடல் பற்றி,
“ ஒவ்வொரு திசைக்கும் ஒரு மெய்மை . இருண்ட ஆழத்தின் மெய்மை யமனிடம். ஒளிரும் துயரங்களின் மெய்மை குபேரனிடம். நெளியும் உண்மை வருணனிடம். உடையாத வைரத்தின் உண்மை இந்திரனிடம். மெய்மை என்பது, இந்நான்கும் கலந்த ஐந்தாவது ஒன்றாகவே இருக்க முடியும். நான்கையும் கடக்காது ஐந்தாவதற்குச் செல்ல முடியாது என்று தோன்றுகிறது ”
என்று கூறியுள்ளார்.
அந்தத் தேடல் சார்ந்த அவரின் வீர தீரப் பயணம் பெரும்பாலும் வழிநடைப் பயணிகளின் வழியாகவே கூறப்பட்டுள்ளது. சூதர்களின் மொழியாகவும் எழுத்தாளரின் கூற்றாகவும் அர்சுணனின் பயணம் விரிந்து விரிந்து நம் கண்முன்னால் நீள்கிறது.
அர்சுணன் வேதமெய்மைத் தேடலுக்காக அடையும் துயர் மிகுதி. வழிநடைப் பயணி சண்டன்,
“ உயிருடன் உணர்வுடன் ஆடை களைந்து இல்லம் களைந்து ஊர் களைந்து அச்சம் களைந்து ஆணவம் களைந்து அமையும் உணர்வனைத்தையும் களைந்து திசைகளைச் சூடி நின்றிருப்பதற்கோர் ஆண்மை வேண்டும் ”
என்று கூறுவார்.
அத்தகைய ‘ஆண்மை’ கொண்டவரே அர்சுணன். அதனால்தான் அவரால் நாற்திசைத் தெய்வங்களையும் வெற்றிகொண்டு, அத்திசைகளின் மையமான பாசுபதத்தைப் பெற்று, நிறைவுகொள்ள முடிகிறது.
இந்த ‘கிராதம்’ நாவலில், பிச்சாண்டவர், வைசம்பாயனன், மகாகாளர், கண்டன், ஜைமினி, பைலன், பிரசாந்தர், பிரசண்டன் ஆகியோரின் வழிநடைப் பயணத்தின் வழியாகவே எண்ணற்ற கதைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
அவர்களின் பயணத்தில் வழியாக வெவ்வேறு வணிகப்பாதைகள்; வணிகக்குழுக்கள்; வணிகப் பொருட்கள்; பல்வேறு பருவங்களைக் கொண்ட பெருநிலங்கள், அடர்காடுகள், பெருமலைகள் எனப் பலவற்றையும் காட்சிப் படுத்தியுள்ளார் எழுத்தாளர். இந்த நாவலைப் படித்து முடித்ததும் வழிநடைப்பயணிகளோடும் அர்சுணனோடும் நாமும் அந்தப் பயணத்தில் பங்கேற்று, மீண்ட மனநிறைவு எழுகிறது.
மரங்கள் நெருங்கி, நெடிது வளர்ந்து காடாவதுபோலவே, இந்த நாவலில் துணைக்கதைகள் அடர்ந்து, பெருகிக் கதைக்காடாகியுள்ளது. காட்டுச் சிலந்தியின் வாயிலிருந்து வலுமிக்க நூலாம்படை அறுபடாமல் முடிவின்றி வந்து கொண்டிருப்பது போலவே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் சிந்தனையிலிருந்து வியத்தகு கதைநிகழ்வுகள் வந்துகொண்டே இருக்கின்றன.
அர்சுணன் தன்னுடைய வேதமெய்மைத்தேடலைத் தெற்கிலிருந்து தொடங்குகிறார். ஆனால், அவரின் தந்தை இந்திரன் இருக்கும் திசையோ கிழக்கு. ஏன் இந்த முரண்? இதற்கு இந்த நாவலிலேயே விடை இருக்கிறது.
ஜைமினி,
“சண்டரே! வேதமெய்ப்பொருளை அறிய வேத முதன்மைத் தெய்வமாகிய இந்திரனிடமல்லவா அர்ஜுனன் சென்றிருக்க வேண்டும்?”
என்றான்.
“ ஆம் , அந்தணரே ! ஆனால், அறிதலில் மட்டும் படிப்படியாக மேலெழுவதே உகந்தது ”
என்றான் சண்டன்.
“ இருண்ட தெற்கின் இறப்புலகில் இருந்து தொடங்கி உயிர் முளைகொண்டெழும் கிழக்குவரை செல்வதே உகந்த சுற்று ”
என்றான் பைலன்.
பாரதப்பெருநிலத்தின் நான்கு திசைகளிலும் சுற்றியலைந்து மெய்மைகளைப் பெறுகிறார் அர்சுணன். இவரின் அலைச்சலின் வழியாகவே பாண்டவர்களின் வனவாசத்திற்குரிய ஆண்டுகள் சிறுக சிறுகக் குறைவதாக உணர்த்திவிடுகிறார் எழுத்தாளர். நாவலில் கதை நிகழும் காலத்தை இவ்வாறுதான் குறிப்புணர்த்திக் கடக்க இயலும். இது காவியப் புனைவுத் தர்மமும்கூட. இது சிறந்த உத்தியே!.
பாண்டவர்களை நமது கைவிரல் ஐந்திற்கு ஒப்பாகச் சொல்லலாம். நடுவிரல் தர்மர். மோதிர விரல் நகுலன். சுண்டு விரல் சகாதேவன். அவன் எப்போதும் நகுலனுடனேயே இணைந்து நிற்பவன். எதற்கும் முந்தி நிற்கும் ஆட்காட்டி விரலே பீமன். ஐவரோடு எப்போதும் இணைந்து பணியாற்றியும் எப்போதும் விலகியும் இருக்கும் கட்டைவிரல்தான் அர்சுணன்.
அத்தனை திறன்களைப் பெற்றிருந்தும் வாழ்க்கை முழுவதும் தனிமையில் தவிப்பவன் அர்சுணன். தன்னந்தனியன். அதனால்தான் அவனால் ஓர் இடத்திலும் அமைவுகொண்டு இருக்க முடிவதில்லை. அவன் காற்றின் போக்கிற்கு அலையுறும் சருகுபோலவே தன்னுடைய தனிமையைப் போக்கிக்கொள்ள ஏதேதோ காரணங்களை முன்வைத்து, தனிப் பயணியாக அலைந்துகொண்டே இருக்கிறான்.
அர்சுணன் எங்கும் எந்நிலையிலும் தோல்வியை எதிர்கொள்ள விரும்பாதவர். வெற்றிகொண்டு முன்னேறிச் செல்வதே அவரின் வழி. அவர் பெறும் மெய்மையும் அதுவே.
முதுமைகொண்ட சோனக வணிகர்,
“வீரர் செய்வதும் வணிகமே. அவர்கள் வெல்வது பணமல்ல, புகழ்.” முதிய வணிகன் “புகழ் அல்ல, வெற்றி. தன்மீதான வெற்றி. அது அளிக்கும் மெய்மை” என்று கூறுகிறார்.
இது முழுக்க முழுக்க அர்சுணனுக்குப் பொருந்தும்.
ஆனால், அர்சுணன் தான் நாற்திசைத் தெய்வங்களிமிருந்து பெற்ற அதிஅம்புகளைக் கொண்டு போரிட்டும் தோற்பது, கிராதரான சிவனிடம் மட்டுமே. ஆனால், ‘அர்சுணன் கிராதரான சிவனைத் தன் ஆசிரியராகக் கொள்வதால், இந்தப் போர் தோல்வியல்ல; பயிற்சி, கல்வி’ என்று கிராதியான காளி கூறுகிறார்.
ஜாததேவனின் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக அர்சுணன் யமலோகத்திற்குச் செல்வதும் 28 வாயில்களைக் கொண்ட ‘பரிச்சேதம்’ என்பதில் அச்சமின்றி நுழைந்து, மீள்வதும் யமனிடம் இருந்து அன்புப் பரிசாகத் ‘தண்டகை’யைப் பெற்றுக்கொள்வதும் ஜாதவேதனின் இறந்த குழந்தையின் உயிருக்கு ஈடாகத் தன் மகனின் உயிரை வைத்து, அந்தக் குழந்தையை உயிர்ப்பிப்பதும் எழுத்தாளரின் துள்ளல் எழுத்துநடையில், உணர்ச்சிகரமாகக் காட்டப்பட்டுள்ளன. அர்சுணனுக்கு ஏற்படும் அதே பதற்றம் வாசகருக்கும் ஏற்பட்டுவிடுகிறது.
ஒருவேளை ‘பரிச்சேதம்’ வாயிலுக்குள் தர்மர் நுழைந்திருந்தால், அவரிடம் முதலில் உதவிகோரும் கம்சனையும் அவனின் படையினரையும் மீட்டிருப்பார்.. ஒருவேளை ‘பரிச்சேதம்’ வாயிலுக்குள் கர்ணன் நுழைந்திருந்தால், அந்த முடிவற்ற பெருங்குழியில் கிடந்த அனைத்து உயிர்களையும் மீட்டிருப்பார்.
அர்சுணன், ‘இலக்கு ஒன்றே என் வேதம்’ என்ற கொள்கையுடையவர். அதனால்தான் ‘பரிச்சேதம்’ வாயிலுக்குள் நுழைந்த அவர், யாருடைய குரலுக்கும் செவிசாய்க்காமல், ஜாதவேதனின் இறந்த குழந்தையை உயிர்ப்பிக்கும் இலக்கினை மட்டும் எய்து, திரும்புகிறார்.
ஸ்ரீராமரின் அம்புக்குப் பலியான வாலி, இந்திரலோகத்தில் பாலியாக அமர்ந்திருக்கிறார். அர்சுணனைப் போலவே பாலியும் இந்திரனின் மகன்தான். இளைய யாதவர் முன்பு ஸ்ரீராமராக இருந்தவர். ஆக, இப்போது இளைய யாதவர் அர்சுணனுக்கும் எதிரிதான். இளைய யாதவர் இந்திரனுக்குத் தம் குலத்தில் பூஜைகள் ஏதுமில்லாமல் செய்து, இந்திரனை ஒரு திசைத் தெய்வமாக மட்டும் அமரச் செய்துவிட்டார்.
விஸ்வாமித்திரனின் கொடிவழிவந்த காலவர், தன்னை இழிவு செய்த சித்தரசேனன் என்ற கந்தர்வனைக் கொல்வதற்காக இளைய யாதவரைத் தேர்கிறார். சித்தரசேனனின் மனைவி தன் கணவரைக் காத்துக்கொள்வதற்காக அர்சுணனைத் தேர்கிறார். ஆனால், சித்தரசேனனைக் கொல்வதாக இளைய யாதவர் வாக்களித்திருப்பதை அர்சுணன் பின்னரே அறிகிறார்.
வாக்களித்துவிட்டதால் அர்சுணன் இளைய யாதவரை எதிர்கொள்ள விழைகிறார். அஸ்வபகஷத்தில் இளைய யாதவருக்கும் அர்சுணனுக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்தது. ஆனால், காலவரும் கந்தர்வன் சித்ரதேசனனும் தங்களுக்குள் சமரசமானதால், அந்தப் போர் பாதியிலேயே நிறைவுற்றது. அர்சுணன் உயிர்ப் பிழைத்தான்.
அதன்பின்னரே இளைய யாதவருக்கு நிகர்நிற்பதற்காகப் புதிய படைக்கலத்தைத் தேடி நான்கு திசைகளுக்கும் அலைந்தான் அர்சுணன். ஆனால், உண்மையில் அவனின் நோக்கம் வேறுவிதமாக இருப்பதை இந்திரலோகத்தில் பாலியைச் சந்தித்துத் திரும்பும் அர்சுணனின் மனவோட்டத்திலிருந்து அறிய முடிகிறது.
“அந்த விழிகளிலிருந்த வஞ்சம் எத்தனை உண்மையானது என அவன் உள்ளம் அன்று அறிந்தது. அவனை அலைக்கழித்தது அதுதான். அவன் திசைத் தேவர்களின் படைக்கலம் தேடிச் சென்றது அதனால்தான். நான் நிகர்நிலை நிற்க விரும்பி படைக்கலம் தேடவில்லை. அவனை அஞ்சியே அலைகிறேன். அவனிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளவே இவையனைத்தும்.”
அர்சுணன் இந்த உலகத்தில் அஞ்சுவது இளைய யாதவரிடம் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் அனைத்துமே நவீனக் காவியம்தான். யதார்த்த வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொள்ள உதவாத காவியங்களால் எப்பயனும் இல்லை. அவ்வாறு இணைத்துப் புரிந்துகொள்ளத் தெரியாத வாசகரின் வாசிப்பால் அந்தக் காவியங்களுக்கு எப்பயனும் இல்லை.
சான்று – 01 –
விருத்திரனின் படைத்தலைவன் கௌமாரன் விருத்திரரின் சொல்கொண்டு புற்றிகபுரியை ஆள்பவர். விருத்திரனைத் தேடிவரும் வருணன் அவரிடம் உரையாடும் பகுதி முக்கியமானது. நமது யதார்த்த வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என நான் நினைக்கிறேன். சான்று –
வருணன் கௌமாரனிடம்,
“உங்கள் அரசன் இன்று அந்திக்குள் என்னை வந்து சந்திக்க வேண்டும். பெருங்கடல்களின் ஆழத்தில் எனது மாளிகை உள்ளது. அதன்முன் அவன் ஒரு காலத்தில் இரந்து கையேந்திய முற்றம் உள்ளது. அங்கே வாயிலில் கைகட்டி வாய்பொத்தி நின்று சந்திப்பு கோரவேண்டும். இல்லையேல், அவன் இறுதிக் குருதியும் எஞ்சுவதுவரை போரிடுவேன். இறுதிச் சாம்பலும் எஞ்சுவதுவரை வஞ்சம் கொண்டிருப்பேன். அவனை அறிவுறுத்துவதற்கே வந்தேன் ”
என்றான்.
கௌமாரன்,
“ வருணனே , நீர் உளம் திரிந்திருக்கிறீர். இப்புவிக்கு மட்டுமே நீர் பேருருவர். இன்று விண் எழுந்த ஏழு உலகங்களையும் வென்று இந்திரனென அமர்ந்திருக்கிறார் விருத்திரர். விதையென இருக்கையில் ஆலமரத்திற்கு நீர் நீரூற்றியிருக்கலாம். பன்னிரண்டாயிரம் விழுதுகள் எழுந்தபின் ஆலமரம் உமது முற்றத்துத் தொட்டியில் அடங்கவேண்டுமென நினைத்தீர் என்றால் , உலகறியாப் பேதையெனப் பேசுகிறீர். ”
என்று அவரைச் சினக்கிறான்.
யதார்த்த வாழ்வில் இந்த ஆணவம் இல்லாத பெரிய மனிதர்களே இல்லை. இத்தகையவர்கள் குறிப்பாக வணிகம் சார்ந்தும் கல்விசார்ந்தும் அரசியல் சார்ந்து இருப்பதையே பார்க்க முடிகிறது.
யாருக்காவது ஏதாவது ஒரு தருணத்தில் எதையாவது உதவிபோலச் செய்துவிட்டு, பின்னாளில் தன்னிடம் உதவிபெற்றவர்கள் தன்னைத் தாண்டி வளர்ந்து நிற்கையில், தன்னுடைய வெற்று ஆணவத்தால், முன்னாளைய தருணத்தின் அடிப்படையிலேயே அவர்களைத் அளவிட எண்ணுவது எவ்வளவு பெரிய மூடத்தனம்! அந்த மூடத்தனத்தால் அவர்கள் அடையும் இழப்பு குறித்ததாகவே கௌமாரனின் பின்வரும் சொல்லாடல் அமைந்துள்ளது என்று நினைக்கிறேன்.
கௌமாரன் வருணனின் தோளைத்தொட்டு,
“ முதுமையின் அறிவின்மை ஒன்றுண்டு , அது இளையோரை எப்போதும் இளையோரென்றே காணும். காட்டில் குலமாளும் முதுகளிறும் அவ்வண்ணமே. அது இளங்களிறின் கொம்புபட்டு குடல்சரிந்து சாகும் ”
என்றான்.
சான்று – 02 –
யதார்த்த வாழ்வில் சிலரின் ஆசைகளைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. ஜாதவேதனும் அவரின் மனைவியும் இறந்த குழந்தையை உயிர்ப்பிக்குமாறு அர்சுணனிடம் வேண்டுகின்றனர். அர்சுணன் யமலோகத்தில் தன் மகனை ஈடாக்கி அந்தக் குழந்தையை மீட்கிறார். அந்தக் குழந்தையுடன் சில நாட்கள் தங்குகிறார். ஜாதவேதனும் அவரின் மனைவியும் அந்தக் குழந்தைக்கு விழா எடுக்க நினைத்து, அதற்குரிய பொருள் இல்லாமல் திண்டாடுகிறார்கள். வறுமை தரும் அழுத்தத்தின் காரணமாக அந்தக் குழந்தையை அவர்கள் வெறுக்கின்றனர்.
அவர்களுக்கு முதலில் எது முதன்மையாக இருந்ததோ அது மற்றொரு தருணத்தில் தேவையற்றதாக, பெருஞ்சுமையாக மாறுவதை எழுத்தாளர் காட்டியுள்ளார். அர்சுணன் மிகுந்த மனவருத்தம் அடைகிறான். இத்தகையவர்களுக்காகத் தம் வாழ்க்கையில் உதவிய எண்ணற்றோர், அர்சுணனின் அடைந்த அதே மனநிலையைத்தான் அடைந்திருப்பர். எப்போதும் காவியங்கள் நிகழ்காலத்தின் கண்ணாடியாகவே திகழ்கின்றன.
இந்த நாவலில் எழுத்தாளரால் காட்சிப்படுத்தப்படும் தருணங்களுள் ஐந்து மிக அழகானவை.
அர்சுணன் தன் தந்தை இந்திரனின் கோரிக்கையைப் புறக்கணித்து, எதை இழந்தாலும் தான் இளைய யாதவனுடனேயே இருப்பேன் என்று கூறுவது.ஊர்வசி தன்னை விலக்கிய அர்சுணனின் மீது தீச்சொல்லிட்டு, அவனைப் பெண்ணாக்குவது. பெண்ணுருவை விரும்பி ஏற்ற அர்சுணன் மனத்தளவில் ராதையாக மாறி, இளைய யாதவருடன் செல்ல நினைப்பது.குழந்தை உக்ரன் தெய்வ அருள்கொண்டு வியாசரின் மனவோட்டத்தில் பேசுவதும் பாடுவதும். ஒருநிலையில் அவன் குழந்தையாகவும் மறுநிலையில் பெருஞ்சூதனாகவும் திகழ்கிறான். அவனை வழிநடைப் பயணிகள் நால்வரும் ‘மகாசூதன்’ என்று பாராட்டித் தம்முடன் நடைவழிப் பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.நாற்திசைக்கும் நடுவில் உள்ள பாசுபதத்தைப் பெறுவதற்காகத் தம்மைத் தேடி வரும் அர்சுணனைச் சிவனும் காளியும் விநாயகரும் முருகரும் வேட்டுவக்குலத்தினர் போல உருமாறி, அவனை எள்ளிநகையாடுவது.இந்திரலோகத்தைக் கைவிட்ட இந்திரன் சதகூபம் பெருங்காட்டில் பிரபாலம் ஆலமரத்தின் உச்சிப்பெந்தில் ஒளிந்துகொண்டு, தேனுக்குள் தேனீயாக மயங்கிக் கிடக்கும் காட்சி. அவனை நாரதர் தெளிவிக்கும் பொருட்டு மேற்கொள்ளும் உரையாடல்.இந்த நாவலில் ஓர் ஒத்திசைவு நிகழ்ந்துள்ளது. இதனை எழுத்தாளர் திட்டமிட்டுச் செய்தாரா அல்லது நாவலில் அது தானே நிகழ்ந்துவிட்டதா எனத் தெரியவில்லை.
அத்ரி முனிவரின் மனைவி மகாகாலரைக் குழந்தைவடிவில் காண்பது. அதன் வழியாகத் தன் கணவரின் சினத்திலிருந்து தப்புகிறார். இந்திரகீலத்திற்குச் செல்லும் அர்சுணனை இறுதியாக வழிநடத்தும் இளம்பெண்ணின் பெயர் மத்யை. சிறுமியாக உருமாறும் அவளை அர்சுணன் தூக்கிக் கொஞ்சிக்கொண்டே மலையேறுகிறார். அதனால்தான் அவர் இறுதித் தடையையும் கடந்து, இந்திரனைச் சந்திக்க முடிகிறது.
அன்னை தன் மைந்தனைக் குழந்தையாகப் பார்ப்பதும் தந்தை தன் இளமகளைச் சிறுமியாகப் பார்ப்பதும் என இந்த இரண்டு நிகழ்வுகளும் இருநிலைஎதிர்வுகளாக அமைந்துள்ளன.
‘வெண்முரசு’ தொடர் நாவல்களில் சில இடங்களில் சங்க இலக்கிய வரிகள், அற இலக்கிய வரிகள், இலக்கண நூற்பா ஆகியன மெல்லத் தலைகாட்டும். அவை வாசிப்புச் சுவைக்கு மேலும் வலுவூட்டும்.
எழுத்தாளர் அந்த வரிகளை அப்படியே மேற்கோளாகக் காட்டியிருக்க மாட்டார். அவற்றின் சாரம் சார்ந்த சொல்லடுக்கை இடத்துக்கு ஏற்ப கதைமாந்தர்களின் உரையாடலில் பயன்படுத்தியிருப்பார்.
‘வண்ணக்கடல்’ நாவலில் இடம்பெற்றுள்ள முதல் இரண்டு அத்யாயங்களை அதற்குச் சான்றாகக் காட்டலாம். முழுக்க முழுக்க எள்ளல் சுவைக்காகவே அவற்றைப் பயன்படுத்தியிருப்பார். இந்த ‘கிராதம்’ நாவல் கதைநகர்வுக்கு ஏற்பப் பயன்படுத்தியிருக்கிறார்.
இலக்கண நூற்பாவுக்குச் சான்று –
“வேள்வி என்பது சொல். எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே ” என்று ஜைமினி தொடர்ந்தான். ”
இது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலில் உள்ளது.
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”
(தொல்காப்பியம், சொல்லதிகாரம், பெயரியல், நூற்பா எண் – 642.)
சங்க இலக்கிய வரிகளுக்குச் சான்று –
‘காவல்யட்சி’ வாமை தன்னைப் புறக்கணித்துச் செல்லும் அர்சுணனிடம் கூறுவதை இங்குச் சான்றாகக் காட்டலாம்.
“திரும்பாமல் அவன் கடந்துசென்றபோது மெல்லிய விம்மலோசை கேட்டது.
“ நில்லுங்கள் , என் விழைவு மெய்யானது. இனி அது நிறைவுறப்போவதே இல்லை ” என்றாள் அவள். அவன் அவ்வெல்லையைக் கடக்கையில் , ‘நலமுணப்படாது துறக்கப்பட்டோர் சூடுநர் இட்ட பூவோரன்னர்’ என்றாள்.
இந்த உவமை கலித்தொகையில் உள்ளது.
“நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோ
ரல்குநர் போகிய வூரோ ரன்னர் ”
கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர்
சூடின ரிட்ட பூவோ ரன்னர்” (கலித்தொகை, பாலைக்கலி, பாடல் எண் – 23)
சில தருணங்களில் மட்டும் கதைக்குத் திருப்புமுனையாக அமையும் இடத்தில், அவற்றை நுட்பமாகப் பயன்படுத்தி, வாசக மனத்தைப் பேரெழுச்சிப் பெறச் செய்துவிடுகிறார்.
சான்று –
போர்முரசின் ஒலி கேட்டு கவசங்களை அணிந்துகொண்டு அமர்ந்த அசுரன் விருத்திரன் மது கொண்டுவர ஆணையிட்டான். மேலும் மேலும் என அருந்தி, கவசங்களுடன் படுத்துத் துயின்றுவிடுகிறான்.
“மறுநாள் விழித்தெழுகையில் உடலில் கவசங்கள் இருக்கக் கண்டு, நடந்ததை உணர்ந்து, பாய்ந்து சென்று விரைந்து அமைச்சரை அழைத்து, “என்ன நிகழ்ந்தது?” எனக் கேட்டான் விருத்திரன்.
“ அரசே , இந்திரனின் படைகள் அணுகிவிட்டன. நகருக்குள் அவை நுழைந்துகொண்டிருக்கின்றன ” என்றார் அமைச்சர்.
“ இனி ஒருகணம்கூட நமக்கு இல்லை ” என்று கூவினார். “ ஆம் , காலம் …” என்று விருத்திரன் சொன்னான்.
“ நாள் என ஒன்றுபோல் காட்டி வாளென்று வருவது. அவ்வாறே ஆகுக! ” என்றான் .
‘காலம் நாள் என ஒன்றுபோல் காட்டி வாளென்று வருவது’ என்ற குறிப்பு திருக்குறளில் உள்ளது.
“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின் ”
(திருக்குறள், நிலையாமை அதிகாரம், குறட்பா எண்:334)
வழிநடைப் பயணி சுமந்து வியாசரைப் பற்றி,
“அவருடைய சொற்களை என்னால் பல்லாயிரம் சொற்களுக்கு நடுவே முதல்செவியிலேயே சொல்லிவிட முடியும். அவரன்றிப் பிறர் அந்த உயரத்திற்குச் செல்ல முடியாது. தோழரே! விண்ணிலிருந்து செம்பருந்து உதிர்க்கும் ஒற்றை இறகு போதும், அது அங்கே அளாவிய முகிலையும் ஒளியையும் நாம் அறிவதற்கு.”
என்று கூறுகிறான்.
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் அறிவாழத்துக்கும் கற்பனைப் பெருக்கிற்கும் சொல்வளத்துக்கும் நான் இதே வரிகளையே கூற விரும்புகிறேன்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
July 2, 2021
சீவகசிந்தாமணி-உரை
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்
‘நற்றுணை’ கலந்துரையாடலின் (https://www.jeyamohan.in/142878/) அடுத்த அமர்வு வரும் ஜூலை 4 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ‘காவியங்களை வாசித்தல்- சீவகசிந்தாமணி’ என்கிற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பேசுவார்.
இது வழக்கம் போலவே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -6
நாவல் – காவியங்களை வாசித்தல்- சீவகசிந்தாமணி
கலந்துரையாடல் நாள்:- 04-07-21
நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை
Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
தொடர்புக்கு: 9965315137
(லா.ஓ.சி. சந்தோஷ் )
நாவல் குறித்து உரையாடுபவர்:- எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள்
நன்றி!!!
அன்புடன்,
சென்னை விஷ்ணுபுர நண்பர்கள்
வரவிருக்கும் எழுத்து
தண்டபாணிஅன்புள்ள ஜெ
எழுத்தாளனின் குரல் அவனின் உள்ளுணர்வின் அகத்தூண்டலால் வரும் அறச்சீற்றமே. அதற்கு வரைமுறைகள் வைக்க முடியுமா என்ன? தர்க்க ரீதியான தரவுகள் எழுத்தாளனின் மனசாட்சியின் குரலை ஒன்றும் செய்ய இயலாது. எழுத்தாளன் ஒட்டு மொத்த சமூகத்தின் குரல் அல்ல. அது சராசரி அகத்தரிசனத்தால் மானிடரை விட மேலெழுந்து பீடத்திலிருந்து எழுப்பப்படும் குரல் அல்லவா? அது அவச்சொல்லாயினும் சாபமாயிருந்தாலும் அவனின் ஞானத்தின் ஒரு துளி அல்லவா?அவ்வை நக்கீரன் கம்பன் பாரதி வரிசை வந்த குரல் அல்லவா?
நான் ஒரு மரபியல் அறிவியலாளன் என்ற இடத்திலிருந்து பேசுகிறேன் , மெண்டலின் வழி வந்தவன் என்ற முறையில். டார்வின் அல்ல ( Gregor Johan Mendel) பேராசிரியர் லோகமாதேவி அவர்களின் இலக்கிய தரிசனம் நுண்ணுணர்வால் தூண்டப்பட்டு அவரின் தாவரவியல் அறிவினால் சரி பார்க்கப்படுகிறது. மாபெரும் உள மகிழ்ச்சியை நெகிழ்ச்சியை அவர் அடைகிறார். அதை பல்வேறு இடங்களில் பதிவு செய்கிறார்.
ரோஜர் பென்ரோஸ்குறிப்பாக மூங்கில் பூத்த தருணம். நான் சென்ற வருடம் மஞ்சவாடி கணவாயில் மூங்கில் பூத்ததை பெரு மகிழ்ச்சியுடன் கண்டேன். ஆனால் அந்த இடம் மிக குறுகியதாகவும் மேடாகவும் இருந்ததால் காரை நிறுத்த முடியவில்லை. இருந்தாலும் நான் வழக்கம் போல ப்ரியாவிடமும் தியாவிடமும் மூங்கிலின் பூக்கும் பண்புகளையும் மூங்கில் அரிசி பற்றியும் விளக்கினேன்.
காட்டெலிகள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்யும் காரணத்தையும் அதனால் அக்காலங்களில் பஞ்சம் வந்ததையும். இப்போது வராதா என்று பிரியா கேட்டதற்கு நான் தற்கால வேளாண் செயல்பாடுகளை விளக்கினேன். தியாவின் கண்ணில் தெரிந்த ஆர்வம் எப்போதும் என்னை உற்சாகப்படுத்தும். அவளுக்கு இப்போதே பயிர்களில் இனக்கலப்பு ( hybridization) செய்வது பூச்சிகளின் வகைப்பாடு போன்றவைகளை விளக்கினேன்.
பேராசிரியர் லோகமாதேவி அவர்கள் மூங்கில் பூக்கும் தருணத்தின் நெகிழ்ச்சியை பதிவு செய்தபோது நானும் அந்த நெகிழ்ச்சியை நினைவு கூர்ந்தேன். வெண்முரசு வாசகர் ஒருவர் அவரின் அக்குரலை/நெகிழ்ச்சியை வெற்றுத்தகவல் சார்ந்த வாசிப்பு எனவும் வேதாந்தத்தை விட்டு விலகிய வாசிப்பு நிறுவியிருந்தார். அறிவியல் ஆசிரியனாக நான் உறுதியாக ஒன்று வரையறுத்து சொல்ல முடியும்.
பேராசிரியர் லோகாமதேவி ,முனைவர் சுசித்ராவின் கூரிய தர்க்கங்கள் (குறிப்பாக தல்ஸ்தோய் பற்றிய) அறிவியல் கருத்தரங்களில் படிக்கப்படும் அறிவியல் கட்டுரைகளுக்கு நிகரானவை. அதற்காக லோகமாதேவியோ சுசித்ராவோ நானோ நீங்கள் என்ன எழுத வேண்டும் என்று கேட்க முடியுமா என்ன?
முனைவர் எம்.தண்டபாணி
ரிச்சர்ட் ரிஸ்டாக்அன்புள்ள தண்டபாணி,
பொதுவாக ஒரு சூழலில் வாசிப்பு என்பது ஒருமுகப்பட்ட தன்மை கொண்டிருப்பதில்லை. மக்கள் பல படிநிலைகளில் இருக்கிறார்கள். ஆகவே எழுத்தின் ஏற்பு என்பதை ஒரு பரந்துபட்ட விவாதமாகவே பார்க்கவேண்டும்.
தமிழ்ச்சூழலில் சிற்றிதழ் சார்ந்த எழுத்து நெடுங்காலம் ஆழமாக வேரூன்றியிருந்தது. அதில் தனிப்பட்ட டைரிக்குறிப்புகளே ஆழமான, அந்தரங்கமான இலக்கியம் என்று சொல்லப்பட்டது. பிற எல்லாமே புறவயமானவை, ஆழமற்றவை என நிராகரிக்கப்பட்டன. சமூகசித்திரங்கள், வரலாற்றுச் சித்திரங்கள்கூட கலையில் இருந்து விலக்கப்பட்ட ஒரு காலம் இங்கே இருந்தது. மரபின் படிமங்களை விலக்கி அந்தரங்கமான படிமங்களை முன்வைத்தனர். அவை மரபின் படிமங்களின் மறுவடிவங்களே என அறியாமலிருந்தனர்.
நாவல்களில் தகவல்கள் எதற்கு என்றெல்லாம் இங்கே விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. புறவுலகச் சித்தரிப்பு கொண்ட நாவல்களை தகவல்குவியல் என அடையாளப்படுத்தினர். அவ்வாறு ‘தகவல்குவியலாக’ அல்லாமலிருக்கும் ஒரே ஒரு மகத்தான நாவலை உலக இலக்கியத்தில் சுட்டிக்காட்டுங்கள் என்று நான் அறைகூவியிருக்கிறேன். நாவல் என்பதே ‘தகவல்களின் கலை’ என்ற அமெரிக்க விமர்சகக் குரலை முன்வைத்திருக்கிறேன். அந்த உளநிலை அந்தக் காலகட்டத்துடன் நின்றுவிட்டவர்களில் நீடிக்கிறது.
விஷ்ணுபுரம் புறவயமான செய்திகளை பிரம்மாண்டமாக கட்டி எழுப்பும் நாவல். சிந்தனைக் கட்டுமானம், ஆலயக்கட்டுமானம், சமூகக் கட்டுமானம் என்னும் மூன்று தளங்கள் கொண்டது. அதை வாசிக்க அன்று சிரமம் இருந்தது. நாவலில் தகவல்கள் எதற்கு, சொந்த வாழ்க்கையில் நன்றாகத் தெரிந்த செய்திகளை மட்டுமே எழுதவேண்டுமென்றெல்லாம் சிலர் சொன்னார்கள். ஆனால் படிப்படியாக அதற்குரிய வாசகர்கள் அமைந்தனர்.
சர்வதேச அளவில் இன்று அறிவியல் கட்டுரைகள் புனைவுகளின் வீச்சை கடந்துவிட்டனவோ என்று ஐயம்கொள்ளும் அளவுக்கு எழுதப்படுகின்றன. ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஃபெய்ன்மான், ஆலிவர் சாக்ஸ், ரிச்சர்ட் ரீஸ்டாக், விலயன்னூர் ராமச்சந்திரன், ரோஜர் பென்ரோஸ் போன்றவர்களின் கட்டுரைகள் அறிதல்- கற்பனை – உள்ளுணர்வால் உணர்தல் என்னும் மூன்று தளங்களிலும் செயல்படுபவை. இலக்கியம் – அறிவியல் என்னும் எல்லைகளை உடைப்பவை
இருபதாண்டுகளுக்கு முன் சொல்புதிது வெளிவந்தபோது இந்த ‘இலக்கிய அடிப்படைவாதக் குறுகலை’ வெல்ல நினைத்தோம். ஆகவே ஆலிவர் சாக்ஸ், ரிச்சர்ட் ரீஸ்டாக் போன்றவர்களின் அறிவியல் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டோம். அவை மிகச்சிறந்த புனைவை விஞ்சி நிற்பதைக் காட்டவும், சிந்தனைகளில் பெரிய மாற்றத்தை உருவாக்கவும் இயன்றது.
தியடோர் பாஸ்கரன்புறவயமான தகவல்களை மட்டுமே முன்வைத்து, அவற்றை முன்வைக்கும் விதம் வழியாகவே ஒரு பிரபஞ்சதரிசனத்தை அளித்துவிட முடியும் என தமிழில் நிறுவியவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள். அவை புனைவுகள் அல்ல, ஆனால் மகத்தான புனைவுகள் அளிக்கும் அனுபவவிரிவை, மெய்த்தரிசனத்தை அளித்தவை. புனைவுxகட்டுரை, அந்தரங்க உண்மை x புறவய உண்மை, அனுபவம் x கற்பனை, படிமங்கள்xதகவல்கள் ஆகிய இருமைகளை அவை உடைத்தன.
அ.முத்துலிங்கம்அதன்பின் அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள் வரத்தொடங்கியன். அவை பெரும்பாலும் புறவயமான தகவல்களில் இருந்து தொடங்கி முன்னகர்பவை. ஆனால் எங்கோ மானுடத் தரிசனத்தை, பிரபஞ்ச உண்மையைச் சென்று தொட்டு மீளும் கவித்துவம் கொண்டவை. அவருடைய சிறுகதை நூல் ஒன்றின் தொடக்கத்தில் இணைப்பறவைகளில் ஒன்றைச் சுட்டு வீழ்த்திவிட்டு சட்டென்று அந்த பறவைகள் இணையாக இருந்திருந்தால் உருவாகியிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை அறிவியல்பூர்வமாக கணக்கிட்டு அவர் திடுக்கிடும் ஒரு சந்தர்ப்பம் சொல்லப்பட்டிருக்கும். தூய அறிவியல் பார்வை. ஆனால் அபாரமான கவித்துவத் தருணம். ஆதிகவி வான்மீகி அடைந்த ‘மாநிஷாத!’ என்னும் சொல்லுக்கு நிகரானது.
ஆஸ்திரேலிய உயிரியல் பேராசிரியரான ஆசி கந்தராசா இன்னொரு உதார்ணம். அவருடைய கறுத்தகொழும்பான் என்னும் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். ஓரு யாழ்ப்பாண மாமர வகை ஆஸ்திரேலியாவில் வேர்விட செய்யும் போராட்டம் பற்றிய தகவல்கட்டுரை அது. ஆனால் ஈழத்து அகதிவாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட எந்த கதையை விடவும் ஒரு படி மேலானது.
அதன்பின் இந்த தகவல் எதற்கு என்னும் கூற்றுக்கள் கொஞ்சம் பின்னடைவு கொண்டன.இணையம் வந்து பலவகை எழுத்துக்கள் வர ஆரம்பித்தன. சிற்றிதழ்ச்சுருக்கம் மறைந்தது. ஆனாலும் தகவல்சார் எழுத்தின் அழகியலைச் சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டியிருக்கிறது.
ஆசி.கந்தராசாநேற்று என் கட்டிடப்பொறியாளர் ஆனந்த் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேராசிரியராக இருந்து கட்டுமானத்திற்கு வந்தவர். மாற்றுக் கட்டிட வகைமையில் தேர்ச்சிகொண்டவர். அடிப்படையில் ஒரு மகத்தான கலைஞர் அவர் என்பது என் கணிப்பு. அவர் பேசும்போது பொறியியல் செய்திகளாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் சொல்வதெல்லாம் எனக்கு கவிதையாகத் தோன்றிக்கொண்டிருந்தன.
பொருட்களின் எடைதாங்கு திறன், நீரின் விசையும் விரிவும் கொள்ளும் சமன்பாடு எல்லாமே பிரபஞ்ச உண்மைகள். தத்துவக் கருத்துநிலைகள் அளவுக்கே உள்ளத்தை விரியச்செய்பவை. உதாரணமாக கடினத்தன்மை, தாங்குதிறன் ஆகிய இரண்டுக்குமான வேறுபாட்டை அவர் சொன்னார். கண்ணாடி கடினமானது, அதில் ஒரு கீறலை வரைய முடியாது. ஆனால் தாங்குதிறன் குறைவானது, உடைந்துவிடும். கல்லும் அத்தகையதே. இரும்பு குறைவாகவே கடினமானது, ஆனால் தாங்குதிறன் கொண்டது.
“தாங்குதிறனின் அடிப்படை என்ன?” என்று நான் கேட்டேன். “நெகிழ்தன்மைதான். தன் திறனைவிட மிகுதியாக அழுத்தம் வந்தால் நெகிழ்ந்து வளைந்து இடம்விடவேண்டும். கண்ணாடி அதைச் செய்வதில்லை” என்றார் ஆனந்த். நான் ஒரு மகத்தான கவிஞனிடம் பேசிக்கொண்டிருக்கிறேனா என்று திகைத்துவிட்டேன்.
பாலசுப்ரமணியம் முத்துசாமிநண்பர் பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதும் பொருளியல் கட்டுரைகள் பல மிக இயல்பாக மெய்த்தரிசனம் நோக்கிச் செல்வதைக் காண்கிறேன். உதாரணமாக இந்தியப் பொருளியலில் 90களில் நிகழ்ந்த மாற்றம் பற்றிய கட்டுரைகள். அவை செய்திகள் மட்டுமல்ல, முழுமையான உலகப்பார்வை கொண்டவை. அவை இங்கே நிகழும் மானுடநாடகமாக மாறுகின்றன,இலக்கியத்தின் எல்லைக்குள் நுழைகின்றன.
[அருண்மதுரா, பாலா, பாலசுப்ரமணியம் முத்துசாமி என பலபெயர்களில் எழுதியிருக்கிறார். பாலசுப்ரமணியம் முத்துசாமி என்னும் பெயரிலேயே நீடிக்கவேண்டும்]
இன்று பல அறிவியல் துறைகளில் புதிய அறிதல்கள் நிகழ்கின்றன. அவற்றை கூர்ந்தறியும் ஒருவர் தகவல்கள் வழியாக, கோட்பாடுகள் வழியாக, கற்பனைக்கும் உள்ளுணர்வுக்கும் இடமளித்து மேலே செல்வார் என்றால் புத்தம்புதிய இலக்கிய வகைமையாகிய அறிவியல் இலக்கியம் இங்கே நிலைகொள்ளும்.
லோகமாதேவிலோகமாதேவி மூங்கில் பற்றியும், கருவேலம் பற்றியும் எழுதிய கட்டுரைகள் உண்மையில் புனைவுகள் உருவாக்கும் கற்பனைக்கு நிகரான விரிவு கொண்டவை. மிக எளிதாக பிரபஞ்சப்பார்வை ஒன்றை அளிப்பவை.
மூங்கில் பற்றிய கட்டுரை இயற்கையின் வெவ்வேறு நிகழ்வுகள் ஒரு மாபெரும் திரைக்கதை என பின்னிப்பிணைந்திருக்கும் பெருஞ்சித்திரத்தை அளிப்பது. [மூங்கில் மிகைமலர்வு- லோகமாதேவி ] மிகைமலர்வு என்னும் சொல்லே கவித்துவமானது. மலர்வு எப்படி எப்போது மிகையாக ஆகிறது? எவ்வாறு அழிவென உருக்கொள்கிறது?
கருவேலம் பற்றிய கட்டுரை மனிதனுக்கும் தாவரங்களுக்குமான உறவைப் பற்றிய ஒரு புதிய பார்வையை அளிப்பது.[சீமைக்கருவேலத்திற்காக ஒரு குரல் ]நாம் தாவரங்களில் எவற்றை எப்போது மருந்தென்றும் நோயென்றும் கொள்கிறோம்? எதை கதாநாயகனாகவும் எதை வில்லனாகவும் ஆக்குகிறோம்? தாவரம் என்பது இயற்கை என்றால் நாம் இயற்கையை பார்க்கும் பார்வையைத் தீர்மானிப்பது நம் தேவை மட்டும்தானா? தேவைக்கும் அச்சத்திற்கும் அப்பால் சென்று நம்மால் இயற்கையை பார்க்கமுடியாதா? கருவேலம் ஒரு புதிர்போல நின்றிருக்கிறது. தியாகியாகிய கதைநாயகன் போல, வில்லன் போல.
இக்கட்டுரைகளில் உள்ள குறைபாடு என்பது இவற்றை பெரும்பாலும் எதிர்வினைகளாகவே லோகமாதேவி எழுதியிருக்கிறார் என்பது. அவ்வாறன்றி தனித்து நிற்கும் அனுபவத்திறப்புகளாக, புறச்சுட்டிகள் இன்றி எழுதப்பட்டிருந்தால் தமிழின் மிகச்சிறந்த இலக்கியப்படைப்புகளின் வரிசையில் இவற்றை வைக்க தயங்கமாட்டேன். கட்டுரைகளில் செய்திகளைச் சொல்லும்போதே சென்றடையும் இடம், உச்சம் ஒன்று எழவேண்டும் என நினைவில்கொண்டாலே போதும்.
இன்னொன்று, இத்தகைய கட்டுரைகளில் கல்வித்துறை ஆய்வுக்கட்டுரைகள் போல ஏராளமான சுட்டிகளை அளிக்கலாகாது. அடிப்படையான பொதுவெளிச் செய்தி என்றால் அப்படியே அளிக்கலாம். மிக அரிதான செய்தி என்றால் மட்டும் கட்டுரைக்குள் அந்த நூலை, அல்லது ஆசிரியரைச் சுட்டலாம். அடிக்குறிப்பாக அளிப்பது அக்கட்டுரையின் வடிவ ஒருமைக்கு ஊறாக அமைவது. லோகமாதேவி தான் தமிழில் ஒரு முன்னோடி என்னும் தன்னுணர்வு கொள்ளவேண்டும். முழுவிசையுடன் வடிவ ஒருமையும் பார்வைவீச்சும் கொண்ட படைப்புக்களை எழுதவேண்டும்.
நீங்கள் நெல் ஆராய்ச்சியாளர். அதன்வழியாக இப்பிரபஞ்சத்தை ஆக்கியிருக்கும் நெறிகளுடன் மோதுகிறீர்கள். எந்த புனைவெழுத்தாளனை விடவும் முடிவிலியை நேருக்குநேர் எதிர்கொள்கிறீர்கள். குறுவைநெல் உருவாக்கத்தில் உங்கள் சாதனையை நான் அறிவேன். அதைப்பற்றி நீங்கள் எழுதலாம். அது பயனுள்ள தகவல்களாக இருக்கலாம். எங்கே அது அந்த எல்லையை விட்டு எழுந்து இலக்கியமாக ஆகிறது?
நெல்லுக்கு இயற்கை விதித்த விளைவுக்காலம் ஆறுமாதம். ஆய்வகத்தில் நெல்லை தேர்ந்து, மறுபெருக்கம் செய்து, மகரந்தங்கள் ஒட்டி, அதன் விளைவுக்காலத்தை குறைக்கிறீர்கள். மூன்றுமாத நெல்லை உருவாக்குகிறீர்கள். நெல்லின் காலத்துடன் விளையாடுகிறீர்கள். மானுடன் நீண்டகாலம் வாழ நெல் குறுகியகாலம் வாழ்கிறது. நெல்லின் காலம் என்னும் அந்தக் கருத்தாக்கத்தை உங்கள் எழுத்து தொட்டுவிட்டதென்றால் அது தகவல்கட்டுரையாக நிலைகொள்கையிலேயே இலக்கியமாகவும் ஆகிவிடுகிறது. [நெல்லும் தண்டபாணியும்]
இனி தமிழில் எழுதப்படவேண்டியவை இத்தகைய கட்டுரைகளே. எழவேண்டிய அலை அதுவே. அறிவியல் தன் தகவல்தன்மையை இழக்காமல், இயல்பாக மெய்யறிவின் சாயலைக் கொண்டு, புனைவின் எல்லைக்குள் நீண்டு வந்து நிலைகொள்ளும் எழுத்துக்கள். லோகமாதேவி அவ்வகை எழுத்தில் தமிழில் மிக முக்கியமான முன்னோடி.
அதை உணர்ந்தே அக்கட்டுரையை நான் அத்தனை முக்கியத்துவம் அளித்து பிரசுரித்தேன். இலக்கியமென்றால் என்ன, அதன் வழித்தடங்களும் வருங்காலமும் என்ன என்பதைப் பற்றி எனக்கு ஒரு தெளிவு உண்டு. இக்கட்டுரைகளுக்கு தமிழின் பழையபாணி வாசகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து வாசிப்பு வராது. ஆனால் தாங்கள் முன்னோடிகள் என்னும் உணர்வை நீங்களெல்லாம் அடையவேண்டும்.
ஜெ
நெல்லும் தண்டபாணியும் மூங்கில் மிகைமலர்வு- லோகமாதேவி சீமைக்கருவேலத்திற்காக ஒரு குரல்
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா
1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா
தடுப்பூசித் தவம்
அன்புள்ள ஜெ
பயணத்தில் இருப்பதாக எழுதியிருந்தீர்கள். உங்கள் மேல் ஓர் அக்கறை சார்ந்த பதற்றம் இருப்பதனால் கேட்கிறேன், தடுப்பூசி எடுத்துக்கொண்டுவிட்டீர்களா?
எஸ்.ஆர்.
***
அன்புள்ள எஸ்.ஆர்,
இப்படி கேட்பவர்கள் எல்லாரும் பெண்களாகவே இருக்கிறீர்கள்.
நான் கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்துக்கொண்டு எண்பத்தைந்து நாளாகிறது இன்று. அப்போது நாகர்கோயில் பென்ஸாம் ஆஸ்பத்திரியில் நானும் இன்னொருவரும் மட்டுமே ஊசி போட்டுக்கொள்ள வந்திருந்தோம். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்தது கொரோனா வார்டு
ஆனால் அதன்பின் இரண்டாம் அலை வந்தது. பென்ஸாம் மருத்துவமனைக்கு இரண்டாவது டோஸுக்காக அழைத்தால் ‘நாங்கள் தடுப்பூசி போடுவதில்லை. இங்கே தடுப்பூசியே வருவதில்லை’ என்று சொன்னாகள்.
அதன்பின் தெரிந்த அனைவரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். எங்குமே ஊசி கிடைப்பதில்லை. பலர் மருத்துவத் துறையில் இருப்பவர்கள்.
இன்று குமரிமாவட்டம் முழுக்க நிலைமை இதுதான். காலை நான்கு மணிக்கே சென்று கொட்டும் மழையில் குடையுடன் காத்து நிற்கிறார்கள்.ஒன்பது மணிக்கு அலுவலகம் திறக்கப்பட்டு முந்திவந்தவர்களுக்கு முதலில் என்னும் அடிப்படையில் டோக்கன் வழங்கப்படுகிறது. ஐந்தாயிரம்பேர் வரிசையில் நிற்கையில் முந்நூறுபேருக்கு டோக்கன். எஞ்சியோர் திரும்பிவிடவேண்டும்.
அந்த முந்நூறு டோக்கனிலும் அதிகாரிகள் சிபாரிசுடன் முன்னால் நுழைபவர்கள் பலர். முண்டியடித்து முன்னால் செல்பவர் பலர். தடுப்பூசிக்காக அத்தனை சமூக இடைவெளியையும் விட்டு முட்டிமோதுவதை காணலாம். தடுப்பூசி மையங்களில் சண்டை என தினத்தந்தி செய்திகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.
இப்போது சில நாட்களாக தடுப்பூசியே போடப்படவில்லை. எங்குமே கிடைப்பதில்லை என்று செய்தி. சில தனியார் மருத்துவமனைகளில் சில ரகசிய வழிகள் வழியாக சில ஆயிரம் ரூபாயில் ஊசி போடப்படுகிறது என்கிறார்கள். எனக்கு அது செவிச்செய்திதான்.
தடுப்பூசிகள் போடப்படாத சூழலில் மூன்றாம் அலை என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று. அதை எதிர்கொள்ளவேண்டியதுதான். என் வீட்டில் என் மனைவி முதல் ஊசி கோவாக்ஸின் போட்டுவிட்டாள். இரண்டாம் ஊசி கிடைக்கவில்லை. மகள் எதையும் போடவில்லை. எனக்கும் என் மகனுக்கும் கொரோனா வந்துசென்றதனால் கொஞ்சம் தைரியமாக இருக்கிறோம்.
இந்தியாவின் தடுப்பூசித்திட்டம் ஊழல், உதாசீனம் ஆகியவற்றாலானது. மத்திய அரசு முழுக்கச் செயலிழந்து மக்களை கைவிட்டுவிட்டது என்பதே உண்மைநிலை. எனக்கு இன்று மைய அரசின் செயலி ‘உங்களுக்கு கோவிஷீல்டு இரண்டாம் டோஸ் போடும் நாள் இன்று. அருகிலுள்ள தடுப்பூசி மையத்தை அணுகுங்கள்” என தானியங்கிச் செய்தி வந்தது. பரவாயில்லையே என தேடினேன். அருகில் எங்குமே மருந்து இல்லை என காட்டியது.
சரி வேறெங்கே என தேடினால் எங்குமே இல்லை. குமரிமாவட்டம், நெல்லை, ஈரோடு எங்குமே இல்லை என்றுதான் காட்டுகிறது. சோறு இல்லை என்று சொல்லத்தான் தூங்குபவனை தட்டி எழுப்பியிருக்கிறார்கள்.
நானெல்லாம் கொஞ்சம் விதியை நம்புபவன். ஆகவே கொரோனா மறுபடி வராது, வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என வழக்கமான அலைச்சலில் இருக்கிறேன். குடும்பத்திற்கு ஊசி போட்டுவிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை.
ஜெ
மலையில் பிறப்பது… அருண்மொழிநங்கை
மதுரைக்கு முதல்முறையாக ஜெயனுடன் வந்து தொழும்போது ஏனோ அவர் அம்மா விசாலாக்ஷி அம்மாவை நினைத்துக் கொண்டேன். அவரிடம் ஆசி வாங்குவதுபோல் உணர்ந்தேன். மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி எல்லாமே மலைமகளின் வேறு வேறு நாமங்கள் இல்லையா?ஜெயனிடம் உடனே சொல்ல கூச்சமாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பான முதல் சந்திப்பின் தனிமையில் அவர் அம்மாவைப் பற்றி நிறைய கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் அந்தக் கொந்தளிப்பிலிருந்து முழுவதும் வெளிவந்துவிட்டாரா என்று அறிய விரும்பினேன்.
மலையில் பிறப்பது… அருண்மொழிநங்கைஅறிவிப்பு: அருண்மொழி இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் செய்திகளுக்கு ஆதாரம் ஏதுமில்லை. எழுத்தாளர்களைப் பற்றி இவ்வண்ணம் அவர்கள் கண்ணெதிரிலேயே மாற்றுவரலாறுகளை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது. மாற்று வாசிப்புக்கு இலக்கியத்திலேயே இடம், வாழ்க்கையில் அல்ல. நானெல்லாம் இளமையிலேயே சங்கீதம் கேட்டு வளர்ந்தவன். அன்றெல்லாம் கதகளி சங்கீதத்தை முதியவர்கள் பாடுவார்கள். ஆகவே அது இயற்கையிலுள்ள விலங்குகளின் ஒலிகளில் ஒன்று என தவறாக நினைத்துக்கொண்டேன், அவ்வளவுதான்.
ஆலயம் கடிதங்கள்-3
வணக்கம்,
வாரந்தோறும் செல்லும் அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் வசதிக்கேற்ப தூரத்திலிருந்து பார்த்தால் மூர்த்தி தெரியும் வகையில் ஒரு focus light ஐ வைத்து கருவறையில் ஒளியை பாய்ச்சுகிறார்கள். அந்த ஒளியின் வெப்பத்தில் ஐந்து நிமிடங்கள் கூட நம்மால் நிற்க முடியாது. ஒரு பக்தன், உள்ளே இருப்பது கல் என்று நம்பியிருக்க வேண்டும் அல்லது அவர் எவ்ளோ சூடும் தாங்குவார் என்று நம்பியிருக்க வேண்டும். யார் சொன்னது கடவுள்தான் பக்தனை சோதிக்கிறார் என்று?
ஆகவே பெரிய கோயில்களுக்கு திங்கள் அல்லது புதன் கிழமைகளிலும் திருநாள்களில்/ விடுமுறைகளில் பிரபலமிலாத கோயில்களுக்கும் செல்வதுதான் வழக்கமாகியிருக்கிறது. மாறிச்சென்றால் அன்றுமுழுதும் ஆற்றாமையும் கோபமும்தான் பொங்கி வருகிறது
ஆலயம் பதிவு தக்க சமயத்தில் எழுதப்பட்ட முக்கியமான ஒன்று. அதுவே பக்தர்களின் குரல்
அன்புடன்
R.காளிப்ரஸாத்
அன்புள்ள ஜெ
ஆலயங்கள் அரசிடம் இருக்கவேண்டுமா இல்லையா என்பதல்ல இன்றைய பிரச்சினை. ஆலயங்களைப் பாதுகாப்பது எவர் என்பதுதான். ஆலயம் பற்றிய தெளிவு இந்துக்களிடம் இல்லை. அவை பாரம்பரியச் சொத்துக்கள் என்னும் நினைப்பு இல்லை. சிலர் அவற்றை தங்கள் சொத்து என நினைக்க பிறர் அவற்றுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறார்கள். ஆலயத்தின் சிற்பங்களையும் கட்டிட அழகையும் அறிபவர்கள் நாத்திகர்களானாலும் அவற்றை பேணவே நினைப்பார்கள். ஆலயங்களின் ஒத்திசைவு என்பது ஒரு மெய்ஞானத்தின் பருவடிவம் என நினைக்கும் ஆத்திகர்கள் அதை அன்றாடப்புழக்கத்துக்காக அழிக்க நினைக்க மாட்டார்கள். ஆனால் அந்தப் புரிதல் இரு சாராருக்குமே இல்லை. ஆகவேதான் ஆலயங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன.
ஜி. சம்பத்குமார்
அன்புள்ள ஜெ
ஆலயங்களைப் பற்றிய விவாதத்தில் தெளிவாக ஒன்றைச் சொல்லியிருந்தீர்கள், ஆலயம் என்பது ஒரு மந்திரம் போன்றது. அதை மாற்ற நமக்கு உரிமை இல்லை. அதை நானும் பலவாறாக பக்தர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் பக்தர்கள் இன்னும் அதை ஒரு கட்டிடமாகவே நினைக்கிறார்கள்.
ஆலயங்களுக்குள் குப்பைத்தொட்டிகள் வைக்கலாமா என்ற ஒரு சர்ச்சை ஒருமுறை வந்தது. வைக்கக்கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் அப்படியென்றால் குப்பையை அப்படியே போடுவார்கள் என்றார்கள். ஆலயம் முழுக்க ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் இருப்பதற்கு நம் மரபில் என்ன பொருள்? அது மூதேவி, ஜ்யேஷ்டாதேவி. அதை ஆலயம் முழுக்க நிரப்பி வைக்கலாமா?
சரி, அப்படியென்றால் குப்பையை என்ன செய்வது? நேற்றுவரை என்ன செய்தார்கள்? குப்பையை ஆலயத்துக்குள்ளா போட்டார்கள். குப்பையை உள்ளே கொண்டுவரவில்லை. குப்பை உள்ளே இருந்தால் உடனே வெளியே கொண்டு சென்று போட்டார்கள். அப்படி இன்றைக்கும் செய்யலாமே?
அடுத்த கேள்வி, அது கொஞ்சம்பேர் வரும்போது சரி. ஆயிரக்கணக்கானவர்கள் வரும்போது? ஆயிரக்கணக்கானவர்கள் ஏன் வரவேண்டும்? ஆயிரக்கணக்கானவர்கள் மைதானம்போல கூடினால் அது கோயிலாக இருக்குமா? கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கெட்டவார்த்தை சொல்கிறார்கள். தடியடியும்கூட நடைபெறுகிறது.
ஆலயங்களுக்கு பெரும்பாலும் வேடிக்கைபார்க்க சுற்றுலாப்பயணிகளாகவே வருகிறார்கள். அதுதான் பிரச்சினை. பக்தர்களாக வருபவர்களிடம் கூட பேசி சில நியமங்களை புரிந்துகொள்ளச் செய்ய முடியும். வெறும் சுற்றுலாக்கூட்டமாக பெருந்திரளாக வருபவர்களிடம் என்ன சொல்வது? அவர்கள் சிற்பங்களை தட்டியும் கொட்டியும் பார்ப்பார்கள். அவர்கள் பார்க்க சிற்பங்களை நம்மவர்கள் கல்லால் அடித்து காட்டுவார்கள்.சீரங்கத்தில் ஒருவர் சிற்பங்களை கல்லால் அடித்து மணியோசை எழுப்பிக் காட்டுவார். அதற்கு கூலி வாங்கிக்கொள்வார். இதெல்லாம்தான் இங்கே பக்தி என்ற பேரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஆலயத்துக்கு மெய்யான பக்தர்கள் வரட்டும். கலையார்வம் கொண்டவர்களும் வரட்டும். கொஞ்சம் ஆலயத்தைப் பற்றி அறிந்துகொண்டு, அதன் சட்டங்களைக் கடைப்பிடிப்பவர்கள் வரட்டும். வெறுமே வேடிக்கைபார்க்க பெருங்கூட்டம் வரவேண்டாம். வந்தால் மூலைக்கு மூலை அக்காள்தரிசனம்தான் கிடைக்கும்.
எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன்
காந்தி அரசியல்படுத்தியவர்கள்- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?
‘காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?’ என்ற கேள்விக்குத் தங்களது விரிவான பதிலில் தற்கால ஜனநாயக அரசியல் வழிமுறைகளில் அஹிம்சை முறையில் மக்கள் பங்கெடுப்பதும், காந்தீய முறையிலான போராட்டங்களைக் கொண்டு தங்களது கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவித்துப் பெறுவதன் வழியே, காந்தி அரசியல்ப்படுத்திய மக்களின் வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தங்களது பதில் நேர்மையானது.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், பாபா ஆம்தே போன்ற மகான்கள் உலவிவரும் காலத்தில் வாழ்வதால் காந்தீய முறைகள் யாவை, காந்தீய முறைகளைக் கையாண்டால் கிடைக்கும் மரியாதை பற்ற்றி அறிந்துகொள்ளும் பேறு பெற்றுள்ளோம் என்பது உண்மையே. சமீபத்தில் மறைந்த நானாஜீ தேஷ்முக் ஆற்றியிருந்த பணிகள் மூலமும் காந்தீய வழிமுறைகள், கிராமப் பொருளாதாரம் மேம்படத் தனி நபர்கள் எடுக்கும் முயற்சிகள் அடையும் வெற்றி முதலானவையுமே கூட காந்தீய வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன என்பதையே காட்டுகின்றன. தற்காலத்திலும், ஊருக்கு ஒரு கெத்தேல் சாஹிப் இருக்கிறார் என்று நீங்கள் சொன்னதைப் போல, ஆங்காங்கே ஓரிரு காந்தீயவாதிகள் தென்படுகிறார்கள் என்பது உண்மை. ஸ்வயம் ஸேவகர்கள் சிலர், கம்யூனிஸ்டுகள் ஆங்காங்கே அவ்வாறானவர்களாக இருப்பதை நான் அறிந்தே இருக்கிறேன்.
ஆனாலும் உங்கள் கட்டுரை மன நிறைவை அளிக்கவில்லை. ஏனெனில், ‘காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?’ என்ற கேள்விக்கான பதில் கிடத்ததாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
கேள்வி முக்கியமானது. தற்காலத்தில் இளைஞர்கள் மனதில் ‘காந்தி’ என்பது ஏதோ வேறெங்கோ, எந்த நூற்றாண்டிலோ வாழ்ந்த புராண புருஷர் என்பதான பிம்பமே உள்ளதை அவர்களுடன் அடிக்கடி உரையாடுவதன் மூலம் காண்கிறேன். ஆகவே, காந்தியைத் தற்போதுள்ளவர்கள் உணர்ந்துகொள்ள, அவர் வழியில் நடக்கும் அரசியல் தலைவர்கள் எங்கே என்கிற கேள்வியை நானே கேட்டுக் கொள்கிறேன். அவர் அரசியல் வழி காட்டினார். பலர் அவ்வழியில் நடந்தனர். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவித்தார். ‘நான் காந்தியவாதி’ என்று சொல்லிக்கொண்டு பெண்கள் அரசியலில் கௌரவத்துடன் வலம் வர முடிந்தது. ஆயினும், அவர் உருவாக்கிய தலைவர்கள், அவர் வழியில் நடப்பதற்கான மற்ற தலைமுறையினரை உருவாக்கத் தவறிவிட்டனரா? இன்று ஏன் ஒரு காந்தியவாதத் தலைவரையும் அரசியலில் காண முடிவதில்லை?
காந்தியை நம்பி அவரது ஆஸ்ரமத்திற்குச் சென்று, தங்கி, சேவை ஆற்றிய பெண்கள் பலர் இருந்தனர். திருமணம் ஆன பெண்கள் கூட அவ்வாறு சென்றிருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காந்தியோடு பேசுவேன்’ சிறுகதையில் அவ்வகையிலான ஒரு சித்தரிப்பு வருவது நினைவிருக்கலாம். எங்கள் வீட்டில், 1940களில், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே வாசித்திருந்த என் பாட்டி, காந்தி சொன்னார் என்பதற்காக ராட்டினம் வாங்கி நூல் நூற்று, அதனை சர்வோதயப் பண்ணையில் கொடுத்துள்ளார். காந்தி இறந்த அன்றும், பின்னர் பல காந்தி ஜெயந்திகளிலும் நூற்பது ஒரு வழக்கமாக இருந்துள்ளது. காந்தி என்னும் ஒற்றைச் சொல்லுக்கு அவ்வளவு தாக்கம் இருந்துள்ளது.
‘நான் பெரியாரிஸ்ட்’, ‘நான் கம்யூனிஸ்ட்’, ‘நான் அம்பேத்காரிஸ்ட்’ என்று கூறிக்கொள்ளும் தற்கால இளைஞிகள் மத்தியில், ‘நான் காந்தியிஸ்ட்’ என்று கூறும் இளைஞிகள் காணப்படுவதில்லை. இளைஞர்களில் ‘நான் காந்தியவாதி’ என்று கூறிக்கொள்பவர்கள் யாராகிலும் உள்ளனரா ( டாக்டர்.சுனில் கிருஷ்ணன் தவிர). இளைஞர்களைக் காந்தி சென்றடையவில்லை என்பது வருத்தமான விஷயம் இல்லையா? 40 கோடி மக்களின் பெருங்கனவை சிருஷ்டி செய்து, வளர்த்தெடுத்து, அவர்களுக்கு அக்கனவை மெய்ப்பித்தும் கொடுத்து மறைந்த அந்தக் கதராடைக்காரரை முற்றிலுமாகப் புரிந்துகொண்டு அவரது வழியில் நடப்பேன் என்று சொல்லும் இளைஞர்கள் இல்லாமல் ஆனது நமது துரதிருஷ்டமா? எவ்விடத்தில் தோல்வி? நேரு வழியமைத்துக் கொடுத்த கல்வித்திட்டத்தில் காந்தியைத் தொன்மமாகக் காணும் பார்வை மட்டுமே போதிக்கப்பட்டதா? என்னதான் நடந்துள்ளது?
சுருக்கமாக: நாம் காந்தியை எங்கே தொலைத்தோம்? இன்று காந்தி போன்ற ஒரு அரசியல் வழிகாட்டி எங்கே?
நன்றி.
ஆமருவி தேவநாதன்.
அன்புள்ள ஆமருவி தேவநாதன்,
நான் சொன்ன பதில் காந்தி அரசியல்படுத்திய சமூகம் எங்கே என்னும் கேள்விக்கு பதில். காந்தி அரசியல்படுத்திய சமூகம் அவர் காலத்தில் இலட்சியவாத அரசியலை முன்னெடுத்தது.ஜனநாயகப் போராட்டத்தை நிகழ்த்தியது. அப்போது பொதுஎதிரி இருந்தான். நாடு அடிமைப்பட்டிருந்தது. விடுதலைக்குப் பின் இங்கே உருவானது உரிமையரசியல். அதுவும் முற்றிலும் ஜனநாயகபூர்வமாகவே இங்கே நிகழ்கிறது. காரணம் இந்திய சமூகம் அரசியல்படுத்தப்பட்டமையால்.
அப்படி அரசியல்படுத்தப்படாத சமூகங்கள் வாழும் அண்டைநாடுகளில் எங்கும் மெய்யான ஜனநாயகம் சென்ற எண்பதாண்டுகளில் உருவாகி வரவில்லை. அதையே சுட்டிக்காட்டினேன். அரசியல்படுத்துதல் என்றால் ஜனநாயக விழுமியங்களைப் பயிற்றுவித்தல், ஜனநாயகமுறைப்படி உரிமைகளுக்காக போராடும் மனநிலையை நிலைநாட்டுதல். காந்தி அதைச் செய்தார்.
நீங்கள் கேட்பது காந்தியவாதிகள் எங்கே என. காந்தி இந்தியர் அனைவரையும் காந்தியவாதிகளாக ஆக்கவில்லை. அது எளிதும் அல்ல. அவருடன் காங்கிரஸில் இருந்தவர்களிலேயே பலரை அவர் காந்தியவாதிகளாக ஆக்க இயலவில்லை. முற்றிலும் காந்தியவாதியாக ஆவது எளிதும் அல்ல.
ஆனால் இந்திய அரசியல்வாதிகளிலேயே காந்தியவழியில் நம்பிக்கை கொண்டவர்களே மிகப்பெரும்பாலானவர்கள். இந்தியாவில் கம்யூனிசமே காந்தியவழிமுறைகளை மேற்கொண்டது. காரணம் இ.எம்.எஸ் போன்ற தலைவர்கள்.வன்முறையை முற்றாகத் துறந்த அம்பேத்கர் கடைப்பிடித்தது காந்தியப் போராட்டங்களையே. [காந்தி அம்பேத்கரை எப்படி பாதித்தார் என அறிய டி.ஆர்.நாகராஜின் எரியும் பாதங்கள் வாசிக்கலாம்]
இன்றும் இந்தியாவின் ஆட்சிநோக்கமில்லா அரசியல், இலட்சிய அடிப்படைகொண்ட அரசியல், முழுக்க முழுக்க காந்தியவழியிலானதே. இந்தியாவின் சூழியல்போராட்டங்கள் முழுமையாகவே காந்தியவழியிலானவை.பழங்குடி உரிமைகளுக்கான போராட்டங்களும், விவசாயிகளுக்கான போராட்டங்களும் காந்திய வழியையே கைக்கொண்டிருந்தன. ‘அறப்போர்’ என்னும் சொல்லே காந்திய வழியைச் சுட்டுவதுதான்.
நான் முகநூலில் காழ்ப்பைக் கக்குவதை அரசியல் என நினைக்கவில்லை. தொண்டைகிழிய எதிரியை நோக்கி கூச்சலிடுவதை பொதுப்பணி என நம்பவில்லை. அதிகார நோக்குடன் மக்களை ஒன்றுதிரட்டுவதுதான் அரசியலாளன் செய்யவேண்டிய ஒரே வேலை என்று கருதவுமில்லை. மக்களை தன்பக்கம் திரட்டும்பொருட்டு அவர்களிடையே கசப்பையும் பிளவையும் விதைப்பதை அரசியலுக்கு எதிரான மோசடிச்செயல்பாடாகவே நினைக்கிறேன்.
அவற்றுக்கு அப்பால் ஆக்கபூர்வமாக அரசியல், பொதுச்சேவை செய்பவர்களாக நான் கண்டிருக்கும் அத்தனை இளைஞர்களும் காந்தியர்களே. இந்த விவாதத்தில் பாலா சுட்டிக்காட்டிய குத்தப்பாக்கம் இளங்கோ, ஓடந்துறை சண்முகம் உதாரணம். அதைப்போல பலநூறு பேரை காட்ட முடியும். அப்படி அல்லாத பிற அரசியல் நம்பிக்கை கொண்ட ஒருசில கம்யூனிஸ்டுகளை கண்டிருக்கிறேன், அவ்வளவுதான்.
இலட்சியவாதமும் காந்தியமும் இன்று உலகமெங்கும் ஏறத்தாழ ஒன்றாகவே ஆகியிருக்கின்றன. நம்மைச் சுற்றி அத்தகையோர் உள்ளனர். நாம் நமக்கு உவப்பான அரசியல் தரப்பை கொண்டவர்களை மட்டுமே பார்க்க விழைகிறோம். அவர்களையே நம்புகிறோம். ஆகவே மெய்யான மக்கள் பணியாளர்களை காண்பதில்லை. கண்டாலும் ஏற்பதில்லை. சற்று கண் திறந்திருந்தால் அவர்களைக் காணவும் உடன்நிற்கவும் இயலும்
ஜெ
July 1, 2021
களப்பிரர்கள் பற்றிய ஊகங்கள்
அன்பிற்குரிய ஜெ வணக்கம்,
எனக்கு சமீப காலமாக களப்பிரர் வரலாற்றை அறிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று அழைக்கப்பட்டது தான் அதற்கு காரணம் என நினைக்கிறேன். ஜெ களப்பிரர் வரலாற்றை பற்றி விரிவாக எழுதப்பட்ட நூல்கள் ஏதானும் தமிழில் உள்ளதா? நான் தேடிய வரையில் திரு.மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் “களப்பிரர் கால தமிழகம்” என்னும் ஒரு நூல் கிடைத்தது. அதிலும் ஆசிரியருக்கு களப்பிரர் வரலாற்றை எழுத போதுமான தகவல்கள் இல்லை என்றே தோன்றுகிறது.
முன்னூறு ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த மரபில் மூன்று மன்னர்களின் பெயர்களை மட்டுமே (அச்சுத விக்கந்தன்,கூற்றுவன், அச்சுத களபாளன்) ஆசிரியர் அளிக்கிறார். திரு. கே. கே பிள்ளை அவர்களும் தனது தமிழகம் வரலாறும் பண்பாடும் நூலில் களப்பிரர் பற்றி மூன்று பக்க அளவில் சிறிய அறிமுகம் ஒன்றை மட்டுமே அளிக்கிறார் .இது தவிர களப்பிரர் கால அரசாட்சி, கலைகள், இலக்கியங்கள்,கல்வெட்டுக்கள் போன்றவற்றை விரிவாக விளக்கும் நூல்கள் உள்ளனவா?
அன்புடன்,
க.சுப்ரமணியன்
அன்புள்ள க.சுப்ரமணியம்,
களப்பிரர் காலம் பொற்காலம் என்ற பெயரில் க.ப.அறவாணன் அவர்கள் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதுவும் தரவுகள் குறைவான நூலே. ஆனால் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்னும் பழைய வரலாற்றெழுத்துக்கு மாறாக அது சமணர்களின் ஆட்சிக்காலம், தமிழகத்தில் கல்வியும் மருத்துவமும் வணிகமும் செழித்த காலம் என நிறுவுகிறார்.
இரண்டு விஷயங்களை கருத்தில்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். தமிழக வரலாற்றெழுத்தில் எழுபதுகளுக்குப்பின் பெருந்தேக்கம் உள்ளது. முதன்மை வரலாற்றாசிரியர்கள் எவருமில்லை. புதியதரவுகள் கண்டடைந்து எழுதப்படாத பகுதிகளை நிரப்பும் ஆய்வுகள் அனேகமாக ஏதுமில்லை.அடிப்படை ஆய்வுகள் கண்ணுக்குப் படவில்லை.
மாறாக இன்றிருப்பவை, இரண்டு வகை வரலாற்றாய்வுகள். ஒன்று, சாதியவரலாறுகள். ஒவ்வொரு சாதியும் தங்களுக்குரிய வரலாற்றைக் கற்பனைசெய்து எழுதிக்கொள்கிறது. அதனடிப்படையில் களப்பிரர்களைப் பற்றி ஏராளமாக பேசி வைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகள் அவ்வாய்வுகளை குப்பைகள் என்று புறந்தள்ளலாம்
இரண்டு, மேலைநாட்டுப் பல்கலைகளில் இருந்து பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கிளம்பிவரும் கொள்கைகளின் அடிப்படையில் ஏற்கனவே எழுதப்பட்ட வரலாற்றை பிய்த்துப்போட்டு மறுபடி எழுதுவது.
ஆழமான வரலாற்றுப்பார்வையோ சமநிலையோ இல்லாமல் அன்றாடக் காழ்ப்பரசியலின்மேல் நின்றுகொண்டு வரலாற்றைப் பேசும் குரல்களும் இங்கே நிறைந்திருக்கின்றன. அவற்றுக்குச் செவிகொடுத்தால் நம்மால் வரலாற்றை அறியவே முடியாது.
களப்பிரர் காலத்தைப் பற்றி கே.கே.பிள்ளை காலத்திற்குப் பின் புதிய தரவுகளோ ஆய்வுகளோ இல்லை. அவ்வண்ணம் ஒர் ஆய்வு நிகழவேண்டும் என்றால் அன்றையதமிழகத்தின் மதமாக இருந்த சமணத்தின் மொழியாகிய பிராகிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர்கள் வேண்டும். சமணத் தொல்நூல்களை விரிவாக ஆராயவேண்டும்.
அன்றைய தமிழகம் என்பது சமணமதத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் தலைமையகம் என்பது சிரவணபெளகொளா, கும்சா ஆகிய ஊர்களில் இருந்தது. ஆகவே ஆய்வை தமிழக எல்லைக்குள் நிறுத்திவிடாமல் ஒட்டுமொத்த தென்னகத்தையே கருத்தில்கொண்டு ஆராயவேண்டும்.
அவ்வாறான ஓர் ஆய்வுக்கு இங்கே தடையாக இருப்பவை முதன்மையாக மொழியறிவுக் குறைப்பாடு. பன்மொழி அறிஞர்கள் என எவரும் இன்றில்லை. சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம்,தமிழ் அறிந்த ஓர் ஆய்வாளரைச் சுட்டிக்காட்ட முடியவில்லை. அத்துடன் தமிழ்ப்பெருமிதத்தை அக்குளில் வைத்துக்கொண்டு செய்யும் ஆய்வுகள். அவர்களால் தமிழ் எல்லையைக் கடந்துபோக முடியாமல் செய்வது அந்த பெருமிதம். அதற்குள் இருப்பது வெற்றுச்சாதிப்பெருமிதம்.
களப்பிரர்கள் அன்றைய சாதவாகனப்பேரரசின் கீழே இருந்த குறுநிலமன்னர்கள் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தச் சாதவாகனப்பேரரசின் பெருஞ்சித்திரம் உருவாக்கப்பட்டு அதன் பகுதியாக களப்பிரர் காலம் ஆராயப்படவேண்டும். தென்னகத்தில் சாதவாகனப் பேரரசைப் பற்றி ஆராய்பவர்கள் அனைவரும் கூடும் சில கருத்தரங்குகள் நடத்தப்பட்டால் ஒரு தொடக்கம் நிகழலாம்.
ஆனால் துரதிருஷ்டவசமாக சென்ற முப்பதாண்டுகளாக வரலாற்றாய்வுக்கு இந்திய அரசு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை. இன்றைய கல்விமுறையில் வரலாற்றாய்வு புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இன்றைய கல்விமுறை பயனுறுகல்விக்கே முதன்மையிடம் அளிக்கிறது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

