Jeyamohan's Blog, page 958

July 2, 2021

தடுப்பூசித் தவம்

அன்புள்ள ஜெ

பயணத்தில் இருப்பதாக எழுதியிருந்தீர்கள். உங்கள் மேல் ஓர் அக்கறை சார்ந்த பதற்றம் இருப்பதனால் கேட்கிறேன், தடுப்பூசி எடுத்துக்கொண்டுவிட்டீர்களா?

எஸ்.ஆர்.

***

அன்புள்ள எஸ்.ஆர்,

இப்படி கேட்பவர்கள் எல்லாரும் பெண்களாகவே இருக்கிறீர்கள்.

நான் கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்துக்கொண்டு எண்பத்தைந்து நாளாகிறது இன்று. அப்போது நாகர்கோயில் பென்ஸாம் ஆஸ்பத்திரியில் நானும் இன்னொருவரும் மட்டுமே ஊசி போட்டுக்கொள்ள வந்திருந்தோம். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்தது கொரோனா வார்டு

ஆனால் அதன்பின் இரண்டாம் அலை வந்தது. பென்ஸாம் மருத்துவமனைக்கு இரண்டாவது டோஸுக்காக அழைத்தால் ‘நாங்கள் தடுப்பூசி போடுவதில்லை. இங்கே தடுப்பூசியே வருவதில்லை’ என்று சொன்னாகள்.

அதன்பின் தெரிந்த அனைவரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். எங்குமே ஊசி கிடைப்பதில்லை. பலர் மருத்துவத் துறையில் இருப்பவர்கள்.

இன்று குமரிமாவட்டம் முழுக்க நிலைமை இதுதான். காலை நான்கு மணிக்கே சென்று கொட்டும் மழையில் குடையுடன் காத்து நிற்கிறார்கள்.ஒன்பது மணிக்கு அலுவலகம் திறக்கப்பட்டு முந்திவந்தவர்களுக்கு முதலில் என்னும் அடிப்படையில் டோக்கன் வழங்கப்படுகிறது. ஐந்தாயிரம்பேர் வரிசையில் நிற்கையில் முந்நூறுபேருக்கு டோக்கன். எஞ்சியோர் திரும்பிவிடவேண்டும்.

அந்த முந்நூறு டோக்கனிலும் அதிகாரிகள் சிபாரிசுடன் முன்னால் நுழைபவர்கள் பலர். முண்டியடித்து முன்னால் செல்பவர் பலர். தடுப்பூசிக்காக அத்தனை சமூக இடைவெளியையும் விட்டு முட்டிமோதுவதை காணலாம். தடுப்பூசி மையங்களில் சண்டை என தினத்தந்தி செய்திகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.

இப்போது சில நாட்களாக தடுப்பூசியே போடப்படவில்லை. எங்குமே கிடைப்பதில்லை என்று செய்தி. சில தனியார் மருத்துவமனைகளில் சில ரகசிய வழிகள் வழியாக சில ஆயிரம் ரூபாயில் ஊசி போடப்படுகிறது என்கிறார்கள். எனக்கு அது செவிச்செய்திதான்.

தடுப்பூசிகள் போடப்படாத சூழலில் மூன்றாம் அலை என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று. அதை எதிர்கொள்ளவேண்டியதுதான். என் வீட்டில் என் மனைவி முதல் ஊசி கோவாக்ஸின் போட்டுவிட்டாள். இரண்டாம் ஊசி கிடைக்கவில்லை. மகள் எதையும் போடவில்லை. எனக்கும் என் மகனுக்கும் கொரோனா வந்துசென்றதனால் கொஞ்சம் தைரியமாக இருக்கிறோம்.

இந்தியாவின் தடுப்பூசித்திட்டம் ஊழல், உதாசீனம் ஆகியவற்றாலானது. மத்திய அரசு முழுக்கச் செயலிழந்து மக்களை கைவிட்டுவிட்டது என்பதே உண்மைநிலை. எனக்கு இன்று மைய அரசின் செயலி ‘உங்களுக்கு கோவிஷீல்டு இரண்டாம் டோஸ் போடும் நாள் இன்று. அருகிலுள்ள தடுப்பூசி மையத்தை அணுகுங்கள்” என தானியங்கிச் செய்தி வந்தது. பரவாயில்லையே என தேடினேன். அருகில் எங்குமே மருந்து இல்லை என காட்டியது.

சரி வேறெங்கே என தேடினால் எங்குமே இல்லை. குமரிமாவட்டம், நெல்லை, ஈரோடு எங்குமே இல்லை என்றுதான் காட்டுகிறது. சோறு இல்லை என்று சொல்லத்தான் தூங்குபவனை தட்டி எழுப்பியிருக்கிறார்கள்.

நானெல்லாம் கொஞ்சம் விதியை நம்புபவன். ஆகவே கொரோனா மறுபடி வராது, வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என வழக்கமான அலைச்சலில் இருக்கிறேன். குடும்பத்திற்கு ஊசி போட்டுவிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2021 11:34

மலையில் பிறப்பது… அருண்மொழிநங்கை

மதுரைக்கு முதல்முறையாக ஜெயனுடன் வந்து தொழும்போது ஏனோ அவர் அம்மா விசாலாக்‌ஷி அம்மாவை நினைத்துக் கொண்டேன். அவரிடம் ஆசி வாங்குவதுபோல் உணர்ந்தேன். மீனாக்‌ஷி, காமாக்‌ஷி, விசாலாக்‌ஷி எல்லாமே மலைமகளின் வேறு வேறு நாமங்கள் இல்லையா?ஜெயனிடம் உடனே சொல்ல கூச்சமாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பான முதல் சந்திப்பின் தனிமையில் அவர் அம்மாவைப் பற்றி நிறைய கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் அந்தக் கொந்தளிப்பிலிருந்து முழுவதும் வெளிவந்துவிட்டாரா என்று அறிய விரும்பினேன்.

மலையில் பிறப்பது… அருண்மொழிநங்கை

அறிவிப்பு: அருண்மொழி இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் செய்திகளுக்கு ஆதாரம் ஏதுமில்லை. எழுத்தாளர்களைப் பற்றி இவ்வண்ணம் அவர்கள் கண்ணெதிரிலேயே மாற்றுவரலாறுகளை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது. மாற்று வாசிப்புக்கு இலக்கியத்திலேயே இடம், வாழ்க்கையில் அல்ல. நானெல்லாம் இளமையிலேயே சங்கீதம் கேட்டு வளர்ந்தவன். அன்றெல்லாம் கதகளி சங்கீதத்தை முதியவர்கள் பாடுவார்கள். ஆகவே அது இயற்கையிலுள்ள விலங்குகளின் ஒலிகளில் ஒன்று என தவறாக நினைத்துக்கொண்டேன், அவ்வளவுதான்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2021 11:34

ஆலயம் கடிதங்கள்-3

ஆலயம் எவருடையது? ஆலயம் கடிதம் 1 ஆலயம் கடிதங்கள்-2

வணக்கம்,

வாரந்தோறும் செல்லும் அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் வசதிக்கேற்ப தூரத்திலிருந்து பார்த்தால் மூர்த்தி தெரியும் வகையில் ஒரு focus light ஐ வைத்து கருவறையில் ஒளியை பாய்ச்சுகிறார்கள். அந்த ஒளியின் வெப்பத்தில் ஐந்து நிமிடங்கள் கூட நம்மால் நிற்க முடியாது. ஒரு பக்தன், உள்ளே இருப்பது கல் என்று நம்பியிருக்க வேண்டும் அல்லது  அவர் எவ்ளோ சூடும் தாங்குவார் என்று  நம்பியிருக்க வேண்டும்.  யார் சொன்னது கடவுள்தான் பக்தனை சோதிக்கிறார் என்று?

ஆகவே பெரிய கோயில்களுக்கு திங்கள் அல்லது புதன் கிழமைகளிலும் திருநாள்களில்/ விடுமுறைகளில் பிரபலமிலாத கோயில்களுக்கும் செல்வதுதான் வழக்கமாகியிருக்கிறது. மாறிச்சென்றால் அன்றுமுழுதும் ஆற்றாமையும் கோபமும்தான் பொங்கி வருகிறது

ஆலயம் பதிவு தக்க சமயத்தில் எழுதப்பட்ட முக்கியமான ஒன்று. அதுவே பக்தர்களின் குரல்

அன்புடன்

R.காளிப்ரஸாத்

அன்புள்ள ஜெ

ஆலயங்கள் அரசிடம் இருக்கவேண்டுமா இல்லையா என்பதல்ல இன்றைய பிரச்சினை. ஆலயங்களைப் பாதுகாப்பது எவர் என்பதுதான். ஆலயம் பற்றிய தெளிவு இந்துக்களிடம் இல்லை. அவை பாரம்பரியச் சொத்துக்கள் என்னும் நினைப்பு இல்லை. சிலர் அவற்றை தங்கள் சொத்து என நினைக்க பிறர் அவற்றுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறார்கள். ஆலயத்தின் சிற்பங்களையும் கட்டிட அழகையும் அறிபவர்கள் நாத்திகர்களானாலும் அவற்றை பேணவே நினைப்பார்கள். ஆலயங்களின் ஒத்திசைவு என்பது ஒரு மெய்ஞானத்தின் பருவடிவம் என நினைக்கும் ஆத்திகர்கள் அதை அன்றாடப்புழக்கத்துக்காக அழிக்க நினைக்க மாட்டார்கள். ஆனால் அந்தப் புரிதல் இரு சாராருக்குமே இல்லை. ஆகவேதான் ஆலயங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன.

ஜி. சம்பத்குமார்

அன்புள்ள ஜெ

ஆலயங்களைப் பற்றிய விவாதத்தில் தெளிவாக ஒன்றைச் சொல்லியிருந்தீர்கள், ஆலயம் என்பது ஒரு மந்திரம் போன்றது. அதை மாற்ற நமக்கு உரிமை இல்லை. அதை நானும் பலவாறாக பக்தர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் பக்தர்கள் இன்னும் அதை ஒரு கட்டிடமாகவே நினைக்கிறார்கள்.

ஆலயங்களுக்குள் குப்பைத்தொட்டிகள் வைக்கலாமா என்ற ஒரு சர்ச்சை ஒருமுறை வந்தது. வைக்கக்கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் அப்படியென்றால் குப்பையை அப்படியே போடுவார்கள் என்றார்கள். ஆலயம் முழுக்க ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் இருப்பதற்கு நம் மரபில் என்ன பொருள்? அது மூதேவி, ஜ்யேஷ்டாதேவி. அதை ஆலயம் முழுக்க நிரப்பி வைக்கலாமா?

சரி, அப்படியென்றால் குப்பையை என்ன செய்வது? நேற்றுவரை என்ன செய்தார்கள்? குப்பையை ஆலயத்துக்குள்ளா போட்டார்கள். குப்பையை உள்ளே கொண்டுவரவில்லை. குப்பை உள்ளே இருந்தால் உடனே வெளியே கொண்டு சென்று போட்டார்கள். அப்படி இன்றைக்கும் செய்யலாமே?

அடுத்த கேள்வி, அது கொஞ்சம்பேர் வரும்போது சரி. ஆயிரக்கணக்கானவர்கள் வரும்போது? ஆயிரக்கணக்கானவர்கள் ஏன் வரவேண்டும்? ஆயிரக்கணக்கானவர்கள் மைதானம்போல கூடினால் அது கோயிலாக இருக்குமா? கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கெட்டவார்த்தை சொல்கிறார்கள். தடியடியும்கூட நடைபெறுகிறது.

ஆலயங்களுக்கு பெரும்பாலும் வேடிக்கைபார்க்க சுற்றுலாப்பயணிகளாகவே வருகிறார்கள். அதுதான் பிரச்சினை. பக்தர்களாக வருபவர்களிடம் கூட பேசி சில நியமங்களை புரிந்துகொள்ளச் செய்ய முடியும். வெறும் சுற்றுலாக்கூட்டமாக பெருந்திரளாக வருபவர்களிடம் என்ன சொல்வது? அவர்கள் சிற்பங்களை தட்டியும் கொட்டியும் பார்ப்பார்கள். அவர்கள் பார்க்க சிற்பங்களை நம்மவர்கள் கல்லால் அடித்து காட்டுவார்கள்.சீரங்கத்தில் ஒருவர் சிற்பங்களை கல்லால் அடித்து மணியோசை எழுப்பிக் காட்டுவார். அதற்கு கூலி வாங்கிக்கொள்வார். இதெல்லாம்தான் இங்கே பக்தி என்ற பேரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆலயத்துக்கு மெய்யான பக்தர்கள் வரட்டும். கலையார்வம் கொண்டவர்களும் வரட்டும். கொஞ்சம் ஆலயத்தைப் பற்றி அறிந்துகொண்டு, அதன் சட்டங்களைக் கடைப்பிடிப்பவர்கள் வரட்டும். வெறுமே வேடிக்கைபார்க்க பெருங்கூட்டம் வரவேண்டாம். வந்தால் மூலைக்கு மூலை அக்காள்தரிசனம்தான் கிடைக்கும்.

எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2021 11:31

காந்தி அரசியல்படுத்தியவர்கள்- கடிதம்

காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே? காந்தி அரசியல்படுத்தியவர்கள்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

‘காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?’ என்ற கேள்விக்குத் தங்களது விரிவான பதிலில் தற்கால ஜனநாயக அரசியல் வழிமுறைகளில் அஹிம்சை முறையில் மக்கள் பங்கெடுப்பதும், காந்தீய முறையிலான போராட்டங்களைக் கொண்டு தங்களது கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவித்துப் பெறுவதன் வழியே, காந்தி அரசியல்ப்படுத்திய மக்களின் வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தங்களது பதில் நேர்மையானது.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், பாபா ஆம்தே போன்ற மகான்கள் உலவிவரும் காலத்தில் வாழ்வதால் காந்தீய முறைகள் யாவை, காந்தீய முறைகளைக் கையாண்டால் கிடைக்கும் மரியாதை பற்ற்றி அறிந்துகொள்ளும் பேறு பெற்றுள்ளோம் என்பது உண்மையே. சமீபத்தில் மறைந்த நானாஜீ தேஷ்முக் ஆற்றியிருந்த பணிகள் மூலமும் காந்தீய வழிமுறைகள், கிராமப் பொருளாதாரம் மேம்படத் தனி நபர்கள் எடுக்கும் முயற்சிகள் அடையும் வெற்றி முதலானவையுமே கூட காந்தீய வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன என்பதையே காட்டுகின்றன. தற்காலத்திலும், ஊருக்கு ஒரு கெத்தேல் சாஹிப் இருக்கிறார் என்று நீங்கள் சொன்னதைப் போல, ஆங்காங்கே ஓரிரு காந்தீயவாதிகள் தென்படுகிறார்கள் என்பது உண்மை. ஸ்வயம் ஸேவகர்கள் சிலர், கம்யூனிஸ்டுகள் ஆங்காங்கே அவ்வாறானவர்களாக இருப்பதை நான் அறிந்தே இருக்கிறேன்.

ஆனாலும் உங்கள் கட்டுரை மன நிறைவை அளிக்கவில்லை. ஏனெனில், ‘காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?’ என்ற கேள்விக்கான பதில் கிடத்ததாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கேள்வி முக்கியமானது. தற்காலத்தில் இளைஞர்கள் மனதில் ‘காந்தி’ என்பது ஏதோ வேறெங்கோ, எந்த நூற்றாண்டிலோ வாழ்ந்த புராண புருஷர் என்பதான பிம்பமே உள்ளதை அவர்களுடன் அடிக்கடி உரையாடுவதன் மூலம் காண்கிறேன். ஆகவே, காந்தியைத் தற்போதுள்ளவர்கள் உணர்ந்துகொள்ள, அவர் வழியில் நடக்கும் அரசியல் தலைவர்கள் எங்கே என்கிற கேள்வியை நானே கேட்டுக் கொள்கிறேன். அவர் அரசியல் வழி காட்டினார். பலர் அவ்வழியில் நடந்தனர். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவித்தார். ‘நான் காந்தியவாதி’ என்று சொல்லிக்கொண்டு பெண்கள் அரசியலில் கௌரவத்துடன் வலம் வர முடிந்தது. ஆயினும், அவர் உருவாக்கிய தலைவர்கள், அவர் வழியில் நடப்பதற்கான மற்ற தலைமுறையினரை உருவாக்கத் தவறிவிட்டனரா? இன்று ஏன் ஒரு காந்தியவாதத் தலைவரையும் அரசியலில் காண முடிவதில்லை?

காந்தியை நம்பி அவரது ஆஸ்ரமத்திற்குச் சென்று, தங்கி, சேவை ஆற்றிய பெண்கள் பலர் இருந்தனர். திருமணம் ஆன பெண்கள் கூட அவ்வாறு சென்றிருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காந்தியோடு பேசுவேன்’ சிறுகதையில் அவ்வகையிலான ஒரு சித்தரிப்பு வருவது நினைவிருக்கலாம். எங்கள் வீட்டில், 1940களில், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே வாசித்திருந்த என் பாட்டி, காந்தி சொன்னார் என்பதற்காக ராட்டினம் வாங்கி நூல் நூற்று, அதனை சர்வோதயப் பண்ணையில் கொடுத்துள்ளார். காந்தி இறந்த அன்றும், பின்னர் பல காந்தி ஜெயந்திகளிலும் நூற்பது ஒரு வழக்கமாக இருந்துள்ளது. காந்தி என்னும் ஒற்றைச் சொல்லுக்கு அவ்வளவு தாக்கம் இருந்துள்ளது.

‘நான் பெரியாரிஸ்ட்’, ‘நான் கம்யூனிஸ்ட்’, ‘நான் அம்பேத்காரிஸ்ட்’ என்று கூறிக்கொள்ளும் தற்கால இளைஞிகள் மத்தியில், ‘நான் காந்தியிஸ்ட்’  என்று கூறும் இளைஞிகள் காணப்படுவதில்லை. இளைஞர்களில் ‘நான் காந்தியவாதி’ என்று கூறிக்கொள்பவர்கள் யாராகிலும் உள்ளனரா ( டாக்டர்.சுனில் கிருஷ்ணன் தவிர). இளைஞர்களைக் காந்தி சென்றடையவில்லை என்பது வருத்தமான விஷயம் இல்லையா? 40 கோடி மக்களின் பெருங்கனவை சிருஷ்டி செய்து, வளர்த்தெடுத்து, அவர்களுக்கு அக்கனவை மெய்ப்பித்தும் கொடுத்து மறைந்த அந்தக் கதராடைக்காரரை முற்றிலுமாகப் புரிந்துகொண்டு அவரது வழியில் நடப்பேன் என்று சொல்லும் இளைஞர்கள் இல்லாமல் ஆனது நமது துரதிருஷ்டமா? எவ்விடத்தில் தோல்வி? நேரு வழியமைத்துக் கொடுத்த கல்வித்திட்டத்தில் காந்தியைத் தொன்மமாகக் காணும் பார்வை மட்டுமே போதிக்கப்பட்டதா? என்னதான் நடந்துள்ளது?

சுருக்கமாக: நாம் காந்தியை எங்கே தொலைத்தோம்? இன்று காந்தி போன்ற ஒரு அரசியல் வழிகாட்டி எங்கே?

நன்றி.

ஆமருவி தேவநாதன்.

www.amaruvi.in

அன்புள்ள ஆமருவி தேவநாதன்,

நான் சொன்ன பதில் காந்தி அரசியல்படுத்திய சமூகம் எங்கே என்னும் கேள்விக்கு பதில். காந்தி அரசியல்படுத்திய சமூகம் அவர் காலத்தில் இலட்சியவாத அரசியலை முன்னெடுத்தது.ஜனநாயகப் போராட்டத்தை நிகழ்த்தியது. அப்போது பொதுஎதிரி இருந்தான். நாடு அடிமைப்பட்டிருந்தது. விடுதலைக்குப் பின் இங்கே உருவானது உரிமையரசியல். அதுவும் முற்றிலும் ஜனநாயகபூர்வமாகவே இங்கே நிகழ்கிறது. காரணம் இந்திய சமூகம் அரசியல்படுத்தப்பட்டமையால்.

அப்படி அரசியல்படுத்தப்படாத சமூகங்கள் வாழும் அண்டைநாடுகளில் எங்கும் மெய்யான ஜனநாயகம் சென்ற எண்பதாண்டுகளில் உருவாகி வரவில்லை. அதையே சுட்டிக்காட்டினேன். அரசியல்படுத்துதல் என்றால் ஜனநாயக விழுமியங்களைப் பயிற்றுவித்தல், ஜனநாயகமுறைப்படி உரிமைகளுக்காக போராடும் மனநிலையை நிலைநாட்டுதல். காந்தி அதைச் செய்தார்.

நீங்கள் கேட்பது காந்தியவாதிகள் எங்கே என. காந்தி இந்தியர் அனைவரையும் காந்தியவாதிகளாக ஆக்கவில்லை. அது எளிதும் அல்ல. அவருடன் காங்கிரஸில் இருந்தவர்களிலேயே பலரை அவர் காந்தியவாதிகளாக ஆக்க இயலவில்லை. முற்றிலும் காந்தியவாதியாக ஆவது எளிதும் அல்ல.

ஆனால் இந்திய அரசியல்வாதிகளிலேயே காந்தியவழியில் நம்பிக்கை கொண்டவர்களே மிகப்பெரும்பாலானவர்கள். இந்தியாவில் கம்யூனிசமே காந்தியவழிமுறைகளை மேற்கொண்டது. காரணம் இ.எம்.எஸ் போன்ற தலைவர்கள்.வன்முறையை முற்றாகத் துறந்த அம்பேத்கர் கடைப்பிடித்தது காந்தியப் போராட்டங்களையே. [காந்தி அம்பேத்கரை எப்படி பாதித்தார் என அறிய டி.ஆர்.நாகராஜின் எரியும் பாதங்கள் வாசிக்கலாம்]

இன்றும் இந்தியாவின் ஆட்சிநோக்கமில்லா அரசியல், இலட்சிய அடிப்படைகொண்ட அரசியல், முழுக்க முழுக்க காந்தியவழியிலானதே. இந்தியாவின் சூழியல்போராட்டங்கள் முழுமையாகவே காந்தியவழியிலானவை.பழங்குடி உரிமைகளுக்கான போராட்டங்களும், விவசாயிகளுக்கான போராட்டங்களும் காந்திய வழியையே கைக்கொண்டிருந்தன. ‘அறப்போர்’ என்னும் சொல்லே காந்திய வழியைச் சுட்டுவதுதான்.

நான் முகநூலில் காழ்ப்பைக் கக்குவதை அரசியல் என நினைக்கவில்லை. தொண்டைகிழிய எதிரியை நோக்கி கூச்சலிடுவதை பொதுப்பணி என நம்பவில்லை. அதிகார நோக்குடன் மக்களை ஒன்றுதிரட்டுவதுதான் அரசியலாளன் செய்யவேண்டிய ஒரே வேலை என்று கருதவுமில்லை. மக்களை தன்பக்கம் திரட்டும்பொருட்டு அவர்களிடையே கசப்பையும் பிளவையும் விதைப்பதை அரசியலுக்கு எதிரான மோசடிச்செயல்பாடாகவே நினைக்கிறேன்.

அவற்றுக்கு அப்பால் ஆக்கபூர்வமாக அரசியல், பொதுச்சேவை செய்பவர்களாக நான் கண்டிருக்கும் அத்தனை இளைஞர்களும் காந்தியர்களே. இந்த விவாதத்தில் பாலா சுட்டிக்காட்டிய குத்தப்பாக்கம் இளங்கோ, ஓடந்துறை சண்முகம் உதாரணம். அதைப்போல பலநூறு பேரை காட்ட முடியும். அப்படி அல்லாத பிற அரசியல் நம்பிக்கை கொண்ட ஒருசில கம்யூனிஸ்டுகளை கண்டிருக்கிறேன், அவ்வளவுதான்.

இலட்சியவாதமும் காந்தியமும் இன்று உலகமெங்கும் ஏறத்தாழ ஒன்றாகவே ஆகியிருக்கின்றன. நம்மைச் சுற்றி அத்தகையோர் உள்ளனர். நாம் நமக்கு உவப்பான அரசியல் தரப்பை கொண்டவர்களை மட்டுமே பார்க்க விழைகிறோம். அவர்களையே நம்புகிறோம். ஆகவே மெய்யான மக்கள் பணியாளர்களை காண்பதில்லை. கண்டாலும் ஏற்பதில்லை. சற்று கண் திறந்திருந்தால் அவர்களைக் காணவும்  உடன்நிற்கவும் இயலும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2021 11:31

July 1, 2021

களப்பிரர்கள் பற்றிய ஊகங்கள்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்- மயிலை சீனி வெங்கடசாமி களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

அன்பிற்குரிய ஜெ வணக்கம்,

எனக்கு சமீப காலமாக களப்பிரர் வரலாற்றை அறிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று அழைக்கப்பட்டது தான் அதற்கு காரணம் என நினைக்கிறேன். ஜெ களப்பிரர் வரலாற்றை பற்றி விரிவாக எழுதப்பட்ட நூல்கள் ஏதானும் தமிழில் உள்ளதா? நான் தேடிய வரையில் திரு.மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் “களப்பிரர் கால தமிழகம்” என்னும் ஒரு நூல் கிடைத்தது. அதிலும் ஆசிரியருக்கு களப்பிரர் வரலாற்றை எழுத போதுமான தகவல்கள் இல்லை என்றே தோன்றுகிறது.

முன்னூறு ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த மரபில் மூன்று மன்னர்களின் பெயர்களை மட்டுமே (அச்சுத விக்கந்தன்,கூற்றுவன், அச்சுத களபாளன்) ஆசிரியர் அளிக்கிறார். திரு. கே. கே பிள்ளை அவர்களும் தனது   தமிழகம் வரலாறும் பண்பாடும் நூலில் களப்பிரர் பற்றி மூன்று பக்க அளவில் சிறிய அறிமுகம் ஒன்றை மட்டுமே அளிக்கிறார் .இது தவிர களப்பிரர் கால அரசாட்சி, கலைகள், இலக்கியங்கள்,கல்வெட்டுக்கள் போன்றவற்றை விரிவாக விளக்கும் நூல்கள் உள்ளனவா?

அன்புடன்,

க.சுப்ரமணியன்

அன்புள்ள க.சுப்ரமணியம்,

களப்பிரர் காலம் பொற்காலம் என்ற பெயரில் க.ப.அறவாணன் அவர்கள் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதுவும் தரவுகள் குறைவான நூலே. ஆனால் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்னும் பழைய வரலாற்றெழுத்துக்கு மாறாக அது சமணர்களின் ஆட்சிக்காலம், தமிழகத்தில் கல்வியும் மருத்துவமும் வணிகமும் செழித்த காலம் என நிறுவுகிறார்.

இரண்டு விஷயங்களை கருத்தில்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். தமிழக வரலாற்றெழுத்தில் எழுபதுகளுக்குப்பின் பெருந்தேக்கம் உள்ளது. முதன்மை வரலாற்றாசிரியர்கள் எவருமில்லை. புதியதரவுகள் கண்டடைந்து எழுதப்படாத பகுதிகளை நிரப்பும் ஆய்வுகள் அனேகமாக ஏதுமில்லை.அடிப்படை ஆய்வுகள் கண்ணுக்குப் படவில்லை.

மாறாக இன்றிருப்பவை, இரண்டு வகை வரலாற்றாய்வுகள். ஒன்று, சாதியவரலாறுகள். ஒவ்வொரு சாதியும் தங்களுக்குரிய வரலாற்றைக் கற்பனைசெய்து எழுதிக்கொள்கிறது. அதனடிப்படையில் களப்பிரர்களைப் பற்றி ஏராளமாக பேசி வைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகள் அவ்வாய்வுகளை குப்பைகள் என்று புறந்தள்ளலாம்

இரண்டு, மேலைநாட்டுப் பல்கலைகளில் இருந்து பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கிளம்பிவரும் கொள்கைகளின் அடிப்படையில் ஏற்கனவே எழுதப்பட்ட வரலாற்றை பிய்த்துப்போட்டு மறுபடி எழுதுவது.

ஆழமான வரலாற்றுப்பார்வையோ சமநிலையோ இல்லாமல் அன்றாடக் காழ்ப்பரசியலின்மேல் நின்றுகொண்டு வரலாற்றைப் பேசும் குரல்களும் இங்கே நிறைந்திருக்கின்றன. அவற்றுக்குச் செவிகொடுத்தால் நம்மால் வரலாற்றை அறியவே முடியாது.

களப்பிரர் காலத்தைப் பற்றி கே.கே.பிள்ளை காலத்திற்குப் பின் புதிய தரவுகளோ ஆய்வுகளோ இல்லை. அவ்வண்ணம் ஒர் ஆய்வு நிகழவேண்டும் என்றால் அன்றையதமிழகத்தின் மதமாக இருந்த சமணத்தின் மொழியாகிய பிராகிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர்கள் வேண்டும். சமணத் தொல்நூல்களை விரிவாக ஆராயவேண்டும்.

அன்றைய தமிழகம் என்பது சமணமதத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் தலைமையகம் என்பது சிரவணபெளகொளா, கும்சா ஆகிய ஊர்களில் இருந்தது. ஆகவே ஆய்வை தமிழக எல்லைக்குள் நிறுத்திவிடாமல் ஒட்டுமொத்த தென்னகத்தையே கருத்தில்கொண்டு ஆராயவேண்டும்.

அவ்வாறான ஓர் ஆய்வுக்கு இங்கே தடையாக இருப்பவை முதன்மையாக மொழியறிவுக் குறைப்பாடு. பன்மொழி அறிஞர்கள் என எவரும் இன்றில்லை. சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம்,தமிழ் அறிந்த ஓர் ஆய்வாளரைச் சுட்டிக்காட்ட முடியவில்லை. அத்துடன் தமிழ்ப்பெருமிதத்தை அக்குளில் வைத்துக்கொண்டு செய்யும் ஆய்வுகள். அவர்களால் தமிழ் எல்லையைக் கடந்துபோக முடியாமல் செய்வது அந்த பெருமிதம். அதற்குள் இருப்பது வெற்றுச்சாதிப்பெருமிதம்.

களப்பிரர்கள் அன்றைய சாதவாகனப்பேரரசின் கீழே இருந்த குறுநிலமன்னர்கள் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தச் சாதவாகனப்பேரரசின் பெருஞ்சித்திரம் உருவாக்கப்பட்டு அதன் பகுதியாக களப்பிரர் காலம் ஆராயப்படவேண்டும். தென்னகத்தில் சாதவாகனப் பேரரசைப் பற்றி ஆராய்பவர்கள் அனைவரும் கூடும் சில கருத்தரங்குகள் நடத்தப்பட்டால் ஒரு தொடக்கம் நிகழலாம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக சென்ற முப்பதாண்டுகளாக வரலாற்றாய்வுக்கு இந்திய அரசு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை. இன்றைய கல்விமுறையில் வரலாற்றாய்வு புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இன்றைய கல்விமுறை பயனுறுகல்விக்கே முதன்மையிடம் அளிக்கிறது.

ஜெ

களப்பிரர்

களப்பிரர்,பாண்டியர்,நூல்கள்:கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2021 11:35

மண்ணில் உப்பானவர்கள் -உரையாடல்

மண்ணில் உப்பானவர்கள் நூல்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா. நீண்ட நாட்களுக்குப் பின் எழுதுகிறேன். சமீபத்தில் சித்ரா பாலசுப்பிரமணியன் அவர்களின் “மண்ணில் உப்பானவர்கள்” நூலை முன் வைத்து ஒரு நிகழ்ச்சியை சித்ரா அவர்களோடு ஒருங்கிணைத்து இணையத்தில் நடத்தினேன். சித்ராவின் நூல் எளிய வாசகருக்கும் ஒரு மகத்தான சரித்திர நிகழ்வை அறிமுகம் செய்கிறது அதே சமயம் தேர்த்ந்த வாசகனிடத்திலும் ஒரு சலனத்தை விட்டுச் செல்லும்.

எப்போதும் காந்தி மார்டின் லூதர் கிங், மண்டேலாவுக்கு ‘inspiration’ என்று பொதுப்படையாகச் சொல்வது வழக்கம் ஆனால் எந்தளவு, ஏன் என்று அவ்வளவாகப் பேசப்பட்டதில்லை. காந்தி மிக இளமையில் (24/25 வயதில்) கறுப்பினத்தவர் பற்றி எழுதிய சில வரிகளை வைத்தே இந்று அவரை கட்டமைக்கும் முயற்சி நடக்கிறது. ஆனால் சம காலத்திலேயே ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் காந்தியையும், காந்திய பேரியக்கத்தையும் மிகக் கூர்ந்து கவனித்தும் விவாதித்தும் வந்திருக்கிறார்கள்.

1922- இல் காந்தி கைதான அடுத்த இரண்டாம் நாள் நியூ யார்க் சர்ச்சில் அவரை பற்றி பிரசங்கம் நடந்திருக்கிறது. அதே பாதிரியார், காந்தி கொல்லப்பட்ட இரண்டாம் நாள் அதே சர்ச்சில் ஒரு அஞ்சலிக் கூட்டம் நடத்தி அதில் பகவத் கீதை ஒரு அத்தியாயம் படிக்கப்படுகிறது. காந்தியை வெறுமனே தங்கள் போராட்டத்துக்கு உத்திகள் கற்பிப்பவராக மட்டுமல்லாமல் தங்கள் கிறிஸ்தவத்துக்கு புதிய புரிதல் அளிப்பவராகவும் பார்த்தார்கள். இவர்கள் காந்தியை மத மாற்றம் செய்ய முயன்ற சாதாரணர்களைப் போல் அல்லாது தாங்கள் நல்ல கிறிஸ்தவர்களாக இருக்க காந்தியிடம் பயின்றார்கள் எனலாம்.

அரவிந்தன் கண்ணையன்

மண்ணின் உப்பானவர்கள் காணொளி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2021 11:33

அ.வெண்ணிலாவின் இந்திரநீலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

அ. வெண்ணிலாவின் எட்டு சிறுகதைகளைக்கொண்ட ‘’இந்திர நீலம்’’ வாசித்தேன். கதைகளின் வடிவம்தான் சிறியது ,அவற்றின் பேசுபொருளோ ஆகப்பெரியது. பெண்களின் மனப்பக்கங்கள் பல்லாயிரம் கதைகளாக எழுதப்பட்டுவிட்டன பலரால், ஆனால் இந்திரநீலம் காட்டுவது பெண்ணின் பேசப்படாத அந்தரங்கப் பக்கங்களை. இதை பெண்ணெழுத்தாளரான வெண்ணிலா எழுதியது இன்னும் சிறப்பு.

பாமா என்னும் சமகாலப்பெண், திரெளபதி, காரைக்காலம்மையான புனிதவதி,, கண்ணனின் கோபியர்கள், மாதவியின் மணிமேகலை, ஏசுவின் உடையை தொட்ட பாலியல் தொழில் செய்யும் பெண், கடவுளுக்கு தன்னை அளித்துவிட்ட நக்கன், கண்ணகி என 8 கதைகளும் காட்டும் பெண்கள், அவர்களின் வாழ்வு, மனக்குழப்பங்கள், உளக்கொப்பளிப்புக்கள், அந்தரங்கங்கள், காலம்காலமாக அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் தளைகள், தளைகளுக்கெதி்ரான அவர்களின் விழைவுகள், என இந்தக்கதைகள் என்னை வெகுதொலைவிற்கு அழைத்துச்சென்றன. எல்லாக்கதைகளிலுமான உள்ளடக்க சொல்லாடல் மிகவும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது

இளமை இறங்குமுகத்திலிருக்கும் சமகாலப்பெண்ணொருத்தி, ஐவருக்கு மனைவியான திரெளபதி,  மாதவியிடமிருந்து மீண்டு வந்திருக்கும் கோவலனை எதிர்கொள்ளும் கண்ணகி, சிவனுண்ட அமுதினால் நஞ்சாகிய இல்வாழ்வினை இழந்த, கணவனால் தொழப்பட்ட புனிதவதி, காமம் கடந்த வாய்மையளாக காட்டப்படும் காதலனைத்தொழுத மணிமேகலை, கடவுளுக்கு சொந்தமானவளான நக்கன், ராசலீலைக்காரனான கண்ணனை மறக்கமுடியா கோபியர்கள், ஆன்மாவைக்கொல்லும் ஆயுதமான காமம் நிறைந்திருக்கையில் கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்டவளான நங்கை, பாலியல் தொழிலில் விற்கப்படும் தன்னுடலை,  பாவிகளின் பொருட்டு சிலுவை சுமக்கும், குருதி வடியும் கர்த்தரின் உடலுடன் ஒப்பிடும் மற்றுமொரு விவிலியம் காட்டும் பெண்  என இந்திரநீலம் காட்டும்  ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள், சுவாரஸ்யமானவர்கள்

’’தன்னுறு வேட்கை முற்கிளத்தல் கிழத்திக்கில்லை’’யென்றுதானே தொல்காப்பியக்காலத்திலிருந்தே தலைவியின் குணநலன்களாக காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.  இந்திரநீலம் சொல்லும் பெண்களின் அந்தரங்கமான உணர்வுகள் இலக்கிய உலகில் அதிகம் பேசப்பட்டிருக்கவில்லை. வெண்ணிலா இதில் சொல்லியிருப்பவை தனக்குத்தானே கூட பெண்கள் நினைத்துக்கொள்ள நாணும், அஞ்சும், தயங்கும் காலம் காலமாக மரபென்னும் பேரில் கற்பென்னும் பேரில் தடைசெய்யப்பட்ட விஷயங்களை குறித்தென்பதால் இந்நூல் இக்காலத்தில்  மிக முக்கியத்துவம் பெற்றதென்று தோன்றுகிறது.

இந்த நூற்றாண்டிலும் சேனிடரி நாப்கின்களை செய்தித்தாளில் சுற்றி மறைவாக ஏதோ குற்றம் செய்ததுபோல் வாங்கிக்கொண்டு வீடு வருவதும் இங்குதான். பூப்புநன்னீராட்டு  விழாவிற்கு உச்ச நடிகர்கள் ஆசிவழங்கும் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டுவதும் இங்குதான். பெண்மை வாழ்கவென்று கூத்திடும் நாட்டில்தான் ஒராயிரம் அகக்கணக்குகள் வழியேவும் கணவனிடம் அந்தரங்க ஆசையை தெரிவிக்க முடியாமல்  தத்தளிக்கும் மனைவியரும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பிரபல வார இதழொன்றில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு சேனிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கும் இயந்திரமொன்றைக் குறித்த பதிவில் பள்ளி வளாகத்தில் நேப்கின்களை இயந்திரங்களிலிருந்து எடுக்கும் மாணவிகளின் முகத்தை மறைத்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். பெண்களின் மாதவிலக்கென்னும் உயிரியல் நிகழ்வையே இந்த நூற்றாண்டிலும் மறைக்கப்படவேண்டியதொன்றாகவே நம்பும்  சமூகத்தில் இந்திரநீலத்தின் பெண் காமம் செப்பும் சிறுகதைகள் புதிய கதவுகளை திறந்து வைக்கின்றன.

உடலைக்கடத்தலென்னும் ஒரு கடிதத்திற்கு பதிலாக நீங்கள் சமீபத்தில் யோகமரபு சொல்லும் மானுட இருப்பின் ஐந்து வகைகளைக்குறித்து சொல்லியிருந்தீர்கள்.என் அறிவுக்கு எட்டியவரையில் எனக்கு இந்திர நீலத்தின் 8 நாயகிகளும் அந்த ஐந்திற்குள் பொருந்துவதாக தோன்றியது.

உடலென்னும் அடிப்படையான கீழ்நிலை இருப்பில் உடலின்பத்தையும் துன்பத்தையும் பெரிதாக நினைக்கும், பால்யத்திலிருந்தே உடலைக்குறித்த குற்றவுணர்வுடன், ஆர்வத்துடன்  வளர்ந்த , அசர்ந்தப்பமாக வந்திருப்பதாக அவள் நினைக்கும்  காமத்துடன் பாமா,அசுத்தமனோமய இருப்பு என்னும்  உடல்சார்ந்த உணர்வுகளால் ஆன இருப்பில்  திரெளபதியும், கண்ணகியும்.உடல்சார் உணர்வுகளுக்கு அப்பால் சென்று  தூயநிலையில் உவகையையும் துயரையும் அடையும் சுத்த மனோமய இருப்பில் கண்ணனின் கோபியர்கள். உடலில்லா உள்ளத்துடனான  இப்பெண்களின் உடல் குறியீடுகளாக மட்டுமே இருக்கின்றது.

மனோமய நிலைக்கு அப்பாலுள்ள ஆழ்ந்த இருப்புநிலையான ஞானத்தாலான விக்ஞானமய இருப்பில் புனிதவதியும், காமத்தை சந்தித்து உடன் அதை கடந்துவிடும் மணிமேகலையும்.

உடலில் இருந்து மேலும் நுண்ணிய இருப்புகளை நோக்கிச் செல்லும், மெய்மையால், நிறைவாலான ஆனந்தமய இருப்பில் நக்கனும், விவிலியம் காட்டும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணும்.

பெண்களின் உடல்சார்ந்த, உணர்வு சார்ந்த, காமம்சார்ந்த, காதல் சார்ந்த, அகப்போராட்டங்களை, அகச்சிக்கல்களை, ஒழுக்கக்குறைபாடென்று சமுகம் அவர்களுக்கு கற்பித்தவற்றை, நூற்றாண்டுகளாக இங்கு ஊறியிருக்கும் கற்பையும், இல்லறத்தையும் குறித்தான, கற்பிதங்களை என்று பலவற்றை சொல்லும் இந்த எட்டுக்கதைகளிலும் வரும் பெண்களில் பலர் இதை வாசிப்பவர்களும், அக்கம் பக்கம் சந்திப்பவர்களும், என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்தான், எனவே கதை நாயகிகளை என்னால் அணுக்கமாக புரிந்துகொள்ள முடிந்தது.

இந்திரநீலம் குறித்த ஒரு இணைய வழிகூடுகையில் பிரபல திரைக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு மூத்தபெண்மணி சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த கணவனுக்கு தான்  தாயாகவும் இருந்ததை பகிர்ந்து கொண்டார். வாசிக்கும் பெண்களில் பலர் இந்திர நீலக் கதைகளில் அவரவர்களையும்  அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

பிற வளர்ந்த நாடுகளில் இருக்கும் பாலுறவு மற்றும் பாலுணர்வு சுதந்திரம் இல்லவே இல்லாத இச்சமூகத்தின் பல்லாயிரம்பெண்களின் குரலாகவே எனக்கு இந்திரநீலம் ஒலித்தது…

என் அமெரிக்க தோழி தன் முதற்காதலையும், அது முறிந்ததையும், பிறகுவந்த இன்னொரு காதலையும், அவர்களுடனான காமத்தையும் ஒரு சிறு பாறைக்குன்றின் மீதமர்ந்தபடி இருபாலருமாயிருந்த நானுள்ளிட்ட நண்பர் குழுவிற்கு விவரித்து உண்ர்வெழுச்சியுடன் ஒரு கதையைபோல சொல்லிக்கொண்டிருந்ததை இந்திர நீலம் வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்.   இந்திரநீலம் என்னும் பெண்களின் அந்தரங்கத்தை குறித்து பேசும் கதைகள் இப்போது வந்திருக்கிறது, இந்த சுதந்திரம் நம் பெண்களுக்கு வர பலநூறாண்டுகளாகலாம். ஒருவேளை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கலாமாயிருக்கும், ஆனால் நான் பிறந்து வளர்ந்து  வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த சமூகத்தில் பாமாவை, நக்கனை, புனிதவதியை  பார்த்துக்கொண்டெதான் இருக்கிறேன் எனவே இந்திர நீலம் என்னை வெகுவாக பாதித்தது.

ஹாஸ்டலிலிருந்து வீடுவரும் மகள்களின் மாதாந்திர விலக்கு நாட்களை துப்பறியும் அம்மாக்களும்,  பாத்ரூமில் அதிகநேரம் குளிக்கக்கூட விடாத குடும்பங்களும், பெண்ணுடலே பாவமென்று சொல்லி சொல்லி வளர்ககப்ட்ட பெண்களும் நிறைந்துள்ள சமூகத்தில் இந்திர நீலம் வந்திருப்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கிறது.

லோகமாதேவி

நுண்மையான அகச்சிக்கல்களும், நேரிடையான காமமும்  சொல்லப்படாத விழைவுகளும் துயர்களுமாக இருக்கும் இந்த எட்டுக்கதைகளுக்கு தலைப்பாக விழைவின் வடிவாகிய இந்திரனையும், காமத்தின், காதலின், நஞ்சின் நிறமாகிய நீலத்தையும் இணைத்து வைத்திருப்பது மிகப்பொருத்தமாயிருக்கின்றது. அனைத்து பெண்களுக்கும் பெண்களைக் குறித்த அறிதெலென்பதே இல்லாத ஆண்களுக்குமான கதைகள் இவை.

அன்புடன்

லோகமாதேவி

 

அ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2021 11:32

மாடத்தி கடிதங்கள்-2

மாடத்தி – கடிதங்கள்

லீனா மணிமேகலையின் ’மாடத்தி’ – கடலூர் சீனு

அன்புள்ள ஜெ

மாடத்தி எனக்குப் பிடித்தமான சினிமாவாக அமைந்துவிட்டது. நான் அந்தப்படத்தை பயந்துகொண்டுதான் பார்த்தேன். ஏனென்றால் இதற்கு முன் என் கலைப்பட அனுபவங்கள் அப்படிப்பட்டவை. டுலெட் படம்கூட ஒரு கான்ஸெப்ட் ஆகத்தான் நன்றாக இருந்தது. காட்சிரீதியாக ஒன்றும் இல்லை. மாடத்தி நுட்பமான கூர்மையான காட்சியமைப்புகள் கொண்ட படம்.

அதை நான் பெண்ணியப்படமாகப் பார்க்கவில்லை. அதை ஒரு Coming of age படமாகவே என்னால் பார்க்க முடிந்தது. அப்படிப்பார்த்தாலும் எதுவும் குறையவில்லை. இளமைப்பருவத்தில் ஒருவன் ஒருமுறை உலகை வெல்லவேண்டியிருக்கிறது. அது தன்னைக் கண்டடைதலும்கூட. தன்னை வெல்லுவதும்தான். அதைக் காட்டும் படமாகவே அதைக் கண்டேன்.

மாடத்தி வழக்கமான திரில்லர், காதல், அரசியல் வகை படங்களை ரசிப்பவர்களுக்கான படம் அல்ல. இது ஒரு நல்ல இலக்கியச் சிறுகதை போன்ற படம். இதிலுள்ள அழகுகளை ரசிக்க கொஞ்சம் பொறுமையான, நல்லெண்ணம் கொண்ட பார்வை தேவை.

நானேகூட இந்தவகை படங்களின் ரசிகன் அல்ல. எனக்கு சென்ற இரண்டு ஆண்டில் வணிகப்படங்கள் திகட்டிவிட்டன. நாளுக்கு ஒரு சினிமா பார்த்தேன். நெட்சீரிஸ்கள் பார்த்தேன். சட்டென்று சலித்துவிட்டது. அந்தச் சலிப்புக்கு அற்புதமான மாற்றாக அமைந்தது இது.

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள ஜெ

மாடத்தி பார்த்தேன். அழகான சின்ன படம். அந்த படம் முடிந்தபின்னரும் பல காட்சிகள் மனதில் நின்றன. ஒரு நல்ல படத்துக்கான இலக்கணம் அதுதான் என நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக அந்தப் பெண்ணின் தோளில் கிளி அமர்ந்திருக்கும் ஒரு ஷாட். மதுரை மீனாட்சியின் உருவத்துடன் அந்த படம் அற்புதமாக இணைகிறது. படம் சொல்லாத பலவற்றை அந்தக் காட்சி உணர்த்துகிறது. கன்னியுடன் கிளி அமர்ந்திருப்பது நமது சிற்பங்களில் ஏராளமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கிளி அவளுடைய மழலை உள்ளம். தூய்மை. அவளுடைய கன்னித்தன்மை.பலவாறாக விரியும் நிறைய படக்காட்சிகள் கொண்ட அழகான படம். லீனா மணிமேகலை பாராட்டுக்குரியவர்

ஜெயக்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2021 11:31

ஆலயம் கடிதங்கள்-2

www.marvelmurugan.com ஆலயம் எவருடையது? ஆலயம் கடிதம்

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

நானும் நலமே.

ஆலயம் எவருடையது என்ற கட்டுரையும் தொடர்ந்த கடிதமும் கண்டேன். அதிலுள்ள அத்தனை செய்திகளும் நானே உணர்ந்தவைதான். நான் அறநிலையத்துறை ஊழியனாக இருந்தவன். என் கருத்துக்கள் சிலவற்றைச் சொல்கிறேன்.

பரம்பரை அறங்காவலர்கள் செயலாக இருந்த காலகட்டத்திலேயே ஆலயங்களின் சிற்பங்கள், செல்வங்கள் பெரும்பாலும் திருடப்பட்டு நகல்கள் வைக்கப்பட்டுவிட்டன. அவற்றை அறிந்தே கையெழுத்துபோட்டு வாங்கவேண்டிய இடத்தில்தான் அறநிலையத் துறை ஊழியர்கள் உள்ளனர். அவற்றுக்கு நம்பர் மட்டும்தான். விவரணை கூட இல்லை. புகைப்பட ஆதாரம், விவரணை எல்லாமே எண்பதுகளுக்கு பிறகுதான். இன்றுகூட அந்த வேலை முழுமையாக நடைபெறவில்லை. ஆகவே எந்த அரும்பொருள் உண்மையானது எது இருக்கிறது எதையுமே உண்மையாக கண்டடைய முடியாத நிலை. ஆனால் அறநிலை ஊழியர்கள்தான் பொறுப்பேற்கவும் வேண்டும். இந்த பரம்பரை அறங்காவலர்கள் பெரும்பாலும் பரம பக்தர்கள், அல்லது அப்படிக் காட்டிக்கொள்பவர்கள். மீண்டும் இவர்களிடம் ஆலயங்களை அளிக்கவேண்டுமா என நாம் முடிவுசெய்யவேண்டும்.

ஆலயங்களில் அதிகாரங்கள் உரிமைகள் விவாதத்திற்கு வரும்போதுதான் ஆகமம் பற்றிப் பேசுகிறார்கள். மற்றபடி ஆகமங்கள் காற்றில் பறக்கவிட்டு ரொம்பநாள் ஆகிறது. பூசை நேரங்கள் ஆகம விதிப்படி எந்தக் கோயிலில் நடைபெறுகின்றன? வழிபாட்டுமுறையெல்லாம் இஷ்டத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. பெரும்பாலான கோயில்களின் வடிவங்கள் மாற்றப்பட்டு எதிரொலியே மாறிவிட்டது. கோயில்களின் சுருதி மாறுவதே மோசமான இலக்கணம்தான். திடீரென்று ஒரு பரிவார தேவதை முக்கிய தேவனாக ஆவதும் மூலவர் மவுசு இழப்பதும் பரிவார தேவதையின் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்படுவதும் எல்லாம் எந்த ஆகம விதிப்படி? அதைக் கேட்கமுடியாது. ஏனென்றால் அதையெல்லாம் செய்பவர்கள் பக்தர்கள்தான்.

கோயில் சிற்பிகள் பொறியியலாளர்கள் ஆகமநிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவால் கண்காணிக்கப்படவேண்டும். சர்வதேசப் பார்வையாளர் ஒருவர் எல்லா சீரமைப்புக் குழுவிலும் இடம்பெறவேண்டும். யுனெஸ்கோ சீரமைப்புக்குழுக்களில் அப்படித்தான். அப்போதுதான் ஆலயங்களைக் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் அழிவை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஆர்

அன்புள்ள ஆர்

நான் உணர்ந்து திரும்பத் திரும்பச் சொல்வது இது. ஆலயவழிபாடு, ஆலயக்கட்டுமானம் இரண்டிலும் ஆகம, சிற்ப முறைகள் முற்றாகவே கைவிடப்படுகின்றன. ஆகமம் பற்றி கூச்சலிடுபவர்கள் தங்கள் சௌகரியத்துக்காக எல்லாவற்றையும் மாற்றிக்கொள்கிறார்கள்.

ஆலயங்களுக்குள் கழிப்பறை, உபரி மண்டபங்கள் போன்றவை கட்டப்படலாகாது. ஆலயத்தின் பகுதிகள் கொடவுன்களாக பயன்படுத்தலாகாது. ஆலயத்தில் எந்த தெய்வமும் உரிய பூசைகள் இல்லாமல் விடப்படலாகாது. ஆலயத்திலுள்ள பரிவார தேவதைகள் அல்லது சிறுதெய்வங்கள் அவற்றின் இடத்துக்குமேல் கொண்டாடப்படலாகாது. அவற்றுக்கான பூசைகள் விழாக்கள் மாற்றப்படலாகாது. பலசமயம் அவை உக்ரதேவதைகள். அரிதாக எதிர்ப்பண்புள்ள தேவதைகளும்கூட.

தமிழகத்தின் பேராலயங்கள் பல எதன்பொருட்டு அவை அமைக்கப்பட்டுள்ளனவோ அந்நோக்கத்தில் இருந்து தவறிவிட்டன. எவையாக அவை இருக்கவேண்டுமோ அவையாக இன்று இருக்கவில்லை. அதை பக்தர்கள் உணர்வதே இல்லை என்பது ஆச்சரியம்.

ஜெ

அன்புள்ள ஜெ.,

ஆலயம் குறித்த ஒரு பதிலில் இவ்வாறு எழுதி இருந்தீர்கள்:
“ஓர் ஆலயம் மாற்றியமைக்கப் படுவது ஒரு மந்திரம் சொற்சிதைவு செய்யப்படுவதேதான். அது நலம்தருவதற்குப் பதில் தீங்கும் தரலாகும். இதை பத்தாண்டுகளுக்கு முன் அறிதலாகச் சொல்லிவந்தேன். இன்று அதற்கப்பால் ஓர் இடத்தில் இருந்து உறுதியாகச் சொல்கிறேன்.”

மறுஜென்மம் குறித்தும் உங்களுக்கு அனுபவம் உண்டு என்பதை முன்பு பதிவு செய்திருக்கிறீர்கள். இதை எல்லாம் விரிவாக சொல்லமுடியுமா என்று அறியேன்,

உங்கள் வாசகர்களில் பெரும்பாலானோர் ஆன்மிகத் தளங்களில், ஆழ்நிலை தியானங்களில்  ஓரளவேனும் முயற்சியும் பயிற்சியும் உடையவர்கள் தாம். முக்கியமாக ஆன்மிகம் சார்ந்த வினாக்களில் உழல்பவர்கள்.

உங்களின் அனுபவங்களை என்றேனும் எழுதுவீர்களா என்று எப்போதுமே எனக்கு ஒரு ஏக்கம் உண்டு. காத்திருக்கிறோம்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்,

அது புறவயமான அனுபவம் அல்ல. ஆகவே புறவயமாக விவரிக்க முடியாது. அதற்கான சொற்களே இல்லை. மரம் வளர்வதை நம்மால் உணரமுடியாது, கனி உண்ண முடியும் என்பார்கள். அதுபோல.

ஜெ

Dear Jeyamohan

Mostly I agree with your thoughts on who has the right to manage the ancient temples in India. Definitely, they are our treasure and need a disciplined way of maintenance and restoration. A centralized governing body is required to handle this properly and privatization may lead to additional issues.

But I was surprised to read in your write-up that even Sri Meenakshi Amman can be removed from the temple and can be worshipped elsewhere. I am taking this as your dismay and not really you meant it.

Our temples and the whole tradition of worship format is living history.  Can you imagine Sri Rangam temple without “Arayar seva” and the early morning “Thirupalliyezhuchi! If you take that from the temple it is no difference than the Assyrian artifacts in the British Museum.

When I visited Luxor and Karnak temples in Egypt, the guide merely said that this is the temple pond where the priests take their ritual bath and this is the promenade where the procession takes place etc. I felt sad that the whole culture was destroyed and nothing remained except the pillars, ornate sculptures and the obelisks. Definitely, we do not want that to happen to our temples.

When I enter any ancient temple in India, I admire the continuity of a living tradition, and the integrated cultural elements. Yes, it is sad that preservation methods are not properly utilized.  We need an educated religious endowment governance board/dept which must consult the archaeologists and Sthapathis before starting a renovation project.

Thank you and best wishes.

Warm regards

Sobana Iyengar

அன்புள்ள சோபனா

நான் சொன்னது மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் வெளியே கொண்டுசெல்லவேண்டும் என்று அல்ல. அது அவர்களின் இல்லம். ஆனால் வழிபாடு மட்டுமே முக்கியம், ஆலயம் வெறும் வழிபாட்டுக் கட்டிடம்தான், அதை என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்பவர்கள் வேண்டுமென்றால் தெய்வங்களை வெளியே கொண்டுசென்று வைத்து வழிபடலாம் என்றுதான் சொன்னேன்.

 

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2021 11:31

‘சொல்வளர்காடு’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 11ஆவது நாவல் ‘சொல்வளர்காடு’. என்னைப் பொருத்தவரை, அகத்தில் எழும் ஒற்றைச்சொல்; அகத்தேடலின் முதற்துளி; நெடும்பயணத்தின் முதற்காலடி ஆகியன ஒன்றிணைந்து, பெருகி வளர்ந்த புலமைக்காடுதான் ‘சொல்வளர்காடு’. பல்வேறு காடுகளில் அமைந்த, வெவ்வேறு இறுதி முடிவுகளை முன்வைக்கும் வேதக்கல்விக் குருகுலங்களின் பெருங்கூட்டமே ‘சொல்வளர்காடு’.

‘அறிதல்’ சார்ந்த சொல்லாடல்கள் மட்டுமே ஏற்றப்பட்ட பெரும்வண்டி இந்தச் ‘சொல்வளர்காடு’ நாவல். நம்முடைய வாழ்நாள் அறிதல்களையும் முன்முடிபுகளையும் ஒட்டு மொத்தமாகவே கவிழ்த்தி, நமக்குள் புதிய சிந்தனைகளையும் புதிய வகையான அறிதல் முறைமைகளையும் புதிய தத்துவத்தைக் கண்டடையத் தக்க உரையாடல்களையும் நமக்குள் அடுக்கும் பெரும்பணியை இந்த நாவல் செய்து முடித்துள்ளது. அதனாலேயே, இந்த நாவலைப் படித்து முடித்ததும் நம் உடல் முழுக்க  அறிவுசால் தத்துவக் கருத்துகளை அள்ளி அள்ளிப் பூசிக்கொண்டது போல ஓர் உளமயக்கு எழுகிறது.

‘வெண்முரசு’ நாவல் தொடரில் ‘நீலம்’ நாவலைப் படிக்க வாசகருக்குத் தனிவகையான வாசிப்பு மனநிலையும் தேர்ந்த சொற்பயிற்சியும் தேவை. அதேபோல, இந்த நாவலைப் படிக்கவும் தத்துவம் சார்ந்த, பல்வேறு அறிதல் முறைகள் சார்ந்த அடிப்படை புரிதல்களும் பயிற்சிகளும் நமக்குத் தேவையாக உள்ளன. அவை இல்லையெனில், இந்த நாவல் வெறும் சொற்குவியலாகத்தான் நமக்குத் தோன்றும். இருப்பினும் வேறொரு வழியும் உள்ளது.

இந்த நாவலில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள பின்வரும் பத்திகளை இணைத்து, வேதங்கள் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். பவமானன் தர்மனிடம் கூறும் சில கருத்துகள் பின்வருமாறு –

வேள்விகள் என்றுமிருந்தன. நாகர்களும் நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் அரக்கர்களும்கூட வேதமோதி அவியிட்டனர். நால்வேதங்கள் என அவை எல்லையைக் கட்டப்பட்டபோது , அவை முறைப்படுத்தப்பட்டன. இன்று அதர்வவேதத்துடன் மட்டுமே நாகர்களும் கிராதர்களும் கொண்டிருந்த வேதஉறுப்புகள் இணைந்துள்ளன….

வேதவேள்விகளை பிராமணங்கள் வகுத்தன. வேதச்சொல்லை ஆரண்யகங்கள் விளக்கின. இன்று என்ன நிகழ்கிறது இக்கல்விநிலைகளில் ? எந்த எரி எச்செயலுக்கு , எந்த வகை எரிகுளம் , நோன்பென்ன , நெறியென்ன , ஏன் அவியென்ன விறகென்ன என்றுகூட முற்றாக வகுத்துவிட்டிருக்கின்றனர். ?…

ஒன்றில் வேதங்களைச் சொல்லெண்ணிக் கற்கிறார்கள். வேள்விச் சாலைகளைக் கூடுகட்டும் குளவிகளைப்போல அச்சு மாறாமல் கட்டுகிறார்கள். வேதத்தைக் காட்டுச்சீவிடுகளைப் போல ஒற்றையிசையாகப் பாடுகிறார்கள்… .”

“இரண்டாவது எல்லையில், இவர்களை முற்றிலும் மறுத்து அமர்ந்திருக்கிறார்கள் சார்வாகர்கள். ‘வேதமில்லை, வேள்வி தேவையில்லை’ என்கிறார்கள். ‘இன்பமே விழுப்பொருள்; அதை அடையும் வழியே அறிவு; அதைக் காலஇடத்தருணத்தில் கண்டடைவது மட்டுமே கல்வி’ என்கிறார்கள்….

 “மூன்றாம் எல்லையில் அருமணிதேரும் வணிகனைப்போல வேதச் சொல்லை எடுத்து ஒளியில் நோக்கி ஆராய்கிறார்கள். அதன் ஒவ்வொரு பட்டையையும் கணக்கெடுக்கிறார்கள். அருமணிகளேதான். எவருக்கும் எப்பயனும் இல்லாத நுண்மைகள். ஒரு குவளை நீரோ ஒருபிடி உணவோ ஆகாத பேரழகுகள். பிரக்ஞையே பிரம்மம். ஆத்மாவே பிரம்மம். இவையனைத்திலும் உறைகிறது இறை. அது நீயே. எத்தனை பெருஞ்சொற்றொடர்கள்! எத்தனை ஊழ்கச்சொற்கள்! அவை இங்கே காட்டுக்குள் எவ்வுயிரும் அண்டாத மலையுச்சிச் சுனைபோல் ஊறி, நிறைந்து கொண்டிருக்கின்றன….

மூன்றுக்கும் அப்பால் ஒன்று இருக்கவேண்டும். இல்லையென்றால் உருவாகி வரவேண்டும்… .”

“வேதமெய்நூல்களின் சிறப்பே அவை மாற்றற்கரிய உறுதிகொண்டவை என்பதுதான். அதனால்தான் அவை வென்று நின்றன. மானுடம் சிதறிப்பரவிய காடுகளிலிருந்து பாரதவர்ஷத்தைப் படைத்தெடுத்தன. அவற்றின் தீங்கும் அவ்வுறுதியே. வைதிகன் யானைமேல் செல்பவன் போல. அவன் எந்த வாயிலிலும் தாழ்ந்துசெல்ல முடியாது என்று சொல்லப்படுவதுண்டு. வேதத்தின் உறுதியுடன் காவியப்பாடல்களின் நெகிழ்வுடன் புதியவேதம் எழவேண்டும்.

பவமானன் தர்மனிடம் பேசும்போது வேதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். வேதம் சார்ந்த நடவடிக்கைகளை, வேதம் சார்ந்த செயல்வடிவங்களை, அவற்றின் பயன்களைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்.

இங்குச் சொல்லெண்ணி இவர்கள் கற்பது மாறாது இவற்றை நிலைபெறச்செய்யும் ஆணைகளை மட்டுமே. அவற்றை நாநுனியில் ஏற்றிக்கொண்டவன் பெருவைதிகனாக இங்கிருந்து புறப்பட்டு நகரங்களுக்குச் செல்கிறான். அரசவைகளிலும் ஊர்மையங்களிலும் அமைந்து நற்கொடை கொள்கிறான். வேதம் ஓதி வாழ்த்துரைக்கிறான். விதைப்புக்கும் அறுவடைக்கும் திருமணத்திற்கும் பிறப்புக்கும் தருணம் குறிக்கிறான். போருக்கு எழுபவர்களின் வாள்தொட்டு அருள்புரிகிறான். இவையே வேதமெய்யறிவு என்றால் , வேதமில்லாப் பழங்காலத்துக்கு மீள்வதே உகந்ததாகும்.

தத்துவத்தை நோக்கிய தருக்க உரையாடல்களைப் பற்றித் தருமர் நகுலனிடம் கூறும் செய்திகள் மிக முக்கியமானவை.

“தத்துவத்துடன் முரண்பட்டு மோதாதவர்களைத் தத்துவம் தொடுவதே இல்லை. எந்தத் தத்துவக் கொள்கையையும் நன்னெறியென்றோ, மூத்தோர் சொல்லென்றோ எடுத்துக்கொண்டால், அது பொருளிழந்து, எளிய சொல்லாட்சியாக மாறி நின்றிருப்பதைக் காணலாம். அதை வியந்து வழிபடலாம்; கற்று நினைவில் நிறுத்தலாம்; சொல்லி உரை அளிக்கலாம். ஆனால், காற்று பாறைமேல் என அவை அவனைக் கடந்துசென்றுகொண்டிருக்கும். இளையோனே, எதிர்விசையால்தான் தத்துவம் தன் அனைத்து ஆற்றல்களையும் வெளியே எடுக்கிறது. முன்னின்று மோதும்போது மட்டுமே அதற்கு விழிகளும் பற்களும் உகிர்களும் சிறகுகளும் முளைக்கின்றன.

“ஒரு தத்துவக்கூற்றைக் கொலையாணையை எதிர்கொள்ளும் குற்றவாளி போல, காதலியின் குறியிடச் செய்திபோல ஒருவன் எதிர்கொள்கிறான் என்றால், அவன் மட்டுமே உண்மையில் தத்துவத்தை அறிகிறான். அவனுக்குத் தத்துவம் வெற்றுச்சொற்கள் அல்ல; பொருள்கூட்டி நாற்களமாடல் அல்ல; அது, அவனுக்கு வாழ்க்கையை விடவும் குருதியும் கண்ணீரும் சிரிப்பும் செறிந்தது. இவர்கள் காண்பவை கல்விழிகளுடன் அமர்ந்திருக்கும் தெய்வச்சிலைகளை மட்டுமே. அவன் அவற்றைக் குருதிபலி கேட்கும் கனிந்து அருளும் விண்நோக்கித் தூக்கிச் செல்லும் தெய்வங்களாகக் காண்கிறான். அவன் இக்கொலைக்களிற்றை வென்று மத்தகத்தின்மேல் ஏறிக்கொள்வான் அல்லது அதன் காலடியில் மடிவான்

தத்துவ விவாதத்தில் பங்கெடுத்து வெல்பவரின் தகுதியாக நாம் சாந்தீபனி முனிவர் கூறவதனைக் கொள்ளலாம்.

  “பிரம்மன் படைத்தவற்றில் பெரிய காளைக்களிறொன்று இருந்தது. அதன் ஒரு கொம்பிலிருந்து மறுகொம்பு வரைக்கும் ஆயிரம்கோடிக் காதம் தொலைவு. அப்படியென்றால், அதன் வலக்கொம்பிலிருந்து எழுந்து பறக்கும் செம்பருந்து எத்தனை காலம் கழித்து இடக்கொம்பைச் சென்றணையும் ?” இங்கிருந்து அங்குவரை ஒற்றைச் சிறகடிப்பில் செல்லும் ஒரு பறவையால் மட்டுமே இங்கு எழும் அத்தனை எண்ணங்களையும் ஒன்றெனத் தொகுக்க முடியும்.

‘சொல்வளர்காடு’ நாவலுக்கு இரண்டு சிறப்புக் கூறுகள் உள்ளன.

ஒன்று – பொதுவாகவே ‘வெண்முரசு’ நாவல் தொடரில் சூதர்களும் பாணர்களும் நாவலின் கதையொழுக்குக்கு ஏற்ப தொல்கதையைக் கூறுவார்கள். இந்த நாவலில் முனிவர்களும் சில இடங்களில் எழுத்தாளரும் கதை கூறுகிறார்கள்.

இரண்டாவது – கதைப் பின்னல் சார்ந்தது. வழக்கமாக ‘வெண்முரசு’ நாவல் தொடரில் ‘திடீர்க்கதைப் பாய்ச்சல்’ நிகழும். இந்த நாவலில் பெண்களின் கூந்தல் ஜடைப்பின்னல் போல் மூன்று சரடுகள் (பாண்டவரின் வனவாசம், சூதாட்டத்திற்குப் பின்னர் அஸ்தினபுரியில் நிகழ்ந்தவை, இளைய யாதவரின் குருகுலக்கல்வியும் சூதாட்டத்தின் போது துவாரகையில் நடந்தவையும்) மாறி மாறி கதை நகர்த்தப் பட்டுள்ளது.

இளைய யாதவரின் குருகுலக்கல்வி மற்றும் துவாரகை சார்ந்தவை பெரும் இடைவெளிவிட்டு வந்தாலும் அஸ்தினபுரி நிகழ்வுகள் சார்ந்தவை பிறரின் கண்ணோட்டத்தில் தொகுத்துச் சொல்லப்படுவதாக மாறி மாறி அமைக்கப்பட்டுள்ளன. பாண்டவரின் ‘வனவாசம்’ ஒவ்வொரு காடாகச் சொற்களைத் தொகுத்துக்கொள்வதன் வழியாகவே நிகழ்கிறது. அவர்களின் பின்னாலேயே அலைந்துதிரியும் வாசகரின் மனத்துக்கு ‘அஸ்தினபுரியின் நிகழ்வுகள்’ ஒரு நிழற்தங்கலாகவே உள்ளன.

யாதவர்களின் குடிப் பூசல், துவாரகை சார்ந்த நிகழ்வுகள், யாதவர்களை ஒன்றிணைக்க இளைய யாதவர் செய்யும் பெருங்கொலைகள், அதன் வழியாகப் பலராமர் இளைய யாதவரின் மீது கொள்ளும் அகப்பகை ஆகிய  அனைத்துமே நமக்கு இளைய யாதவரின் மீது கருணையையும் இரக்கத்தையுமே குவியச் செய்கின்றன.

அஸ்தினபுரி சார்ந்த நிகழ்வுகளுள் பலவற்றைக் ‘காலன்’ என்பவரின் வழியாகவே காட்சிப்படுத்துகிறார் எழுத்தாளர். ‘காலன்’ தான் கண்டவற்றை, தனக்கு எதிர் நின்று உரையாடியவர்களின் உளவியல் சார்ந்த மெய்ப்பாடுகளோடும் அப்போது அங்கிருந்த புறச்சூழலோடும் கலந்தே பாண்டவர்களிடம் உரைக்கிறார். அவை அனைத்தும் மிக நுட்பமாக எழுதப்பட்டுள்ளன.

குறிப்பாகக் காலன் குந்திதேவியைச் சந்தித்துப் பேசியபோது, குந்திதேவியிடம் அவன் கண்டடைந்த உளவியல் சார்ந்த மெய்ப்பாடுகள் அனைத்துமே வாசகருக்குத் தங்களின் யதார்த்த வாழ்க்கையில் நிகழும் உணர்ச்சிகரமான தருணங்களின்போது பெரிதும் பயன்படத்தக்கவையே.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் அவ்வப்போது தனிப்பேச்சிலும் மேடைப் பேச்சிலும், “நகைச்சுவை இல்லாமல் தத்துவ விவாதம் நடைபெறலாகாது” என்றும் “அவ்வாறு நடந்தால் அங்குத் தத்துவம் கைநழுவியபடியே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

பாண்டவர்களுக்கு இடையில் நிகழும் தத்துவம் சார்ந்த உரையாடல்களுள் பீமனின் சொற்கள் மிக முக்கியமானவை. பீமனே நகைச்சுவையின் வழியாகவே தத்துவத்தின் மையத்தை எளிதில் அடையவல்லவர்.

பீமன் நகைச்சுவைக் குறும்பன்; தேர்ந்த ஞானி; பிரம்ம மாகிவந்தவன். அவனால் மட்டுமே அனைத்தையும் கேலியாகவும் உண்மையாகவும் எதிர்கொள்ள முடிகிறது. மனிதர்கள் அணியும் அக முகமூடிகளை அவ்வப்போது கிழித் தெறிபவனாகவும் பீமனே இருக்கிறார். குறிப்பாக அவர் பலமுறை தர்மனின் அகமுகமூடிகளைக் கிழிக்கிறார். அவருக்கு நிகரானவர் சகாதேவன். ஆனால், அனைத்தையும் சகித்துக்கொண்டு தன்னிலையில் உறைந்து நிற்கிறார். அதனால்தான் பெரும்பாலான இறுதி முடிவுகளைத் தர்மர் சகாதேவனைக் கேட்டே எடுக்கிறார். ஆனால், அதை தர்மர் பல நேரங்களில் முழுமையாகச் செயல்படுத்துவதில்லை என்பதுதான் அவரிடமிருக்கும் பெருங்குறை.

தர்மரிடம் நட்புக்கொள்ளும் ‘சூக்தன்’ என்ற குரங்குக்குட்டி இந்த நாவலில் ஒரு குறியீடாக இடம்பெற்றுள்ளது. அதுதான் ‘நாமறியாத நம் குழந்தைமையின் வெளிப்பாடோ?’ என்றுதான் என்னால் நினைக்க முடிகிறது.

அதை நாம் அடக்கிவைக்கும்போது, நாம் பிறராகித் தருக்கி நின்று, தடுமாறுகிறோம் (தருமர்). அதை அவிழத்துவிடும்போது நாம் நாமாகி, இயல்பாகவே நலமடைகிறோம் (பீமன்). ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘சூக்தன்’ இருக்கிறான். அதை அடக்கி வைக்கிறோமா அல்லது அவிழ்த்துவிடுகிறோமா என்பதில்தான் நமது புற அடையாளமும் நமது அகவிடுதலையும் இருக்கிறது.

இளைய யாதவர் தன் கூரிய நடுநிலையான சொற்களால் திரெளபதியின் உச்சந்தலையில் தட்டி (குட்டுவைத்து), அவளின் மனவெழுச்சியைச் சற்று அடங்கச் செய்துவிடுகிறார். மிக நுட்பமான சொல்லாடல் அது. பிறர் எதிர்பார்க்காத தளத்தில், கோணத்தில் அவர் சிந்தித்துப் பேசுகிறார். இந்தப் பகுதி எழுத்தாளரின் மிகச் சிறந்த நாவல் உரையாடல் அமைப்புக்குச் சான்று என்பேன்.

‘சூதாட்டத்தில் உன்னைப் பணையப்பொருளாக வைத்தார்கள், என்பதற்காகவே நீ வஞ்சினச் சூளுரைத்து, மிகப்பெரிய போரைத் தொடங்கி, அதில் எண்ணற்ற உயிர்களைப் பணையமாக வைத்துள்ளாய்’ என்ற கருத்தில் இளைய யாதவர் அவளிடம் பேசுகிறார்.

சூதாட்டக்களத்தில் அவமானப்படுத்தப்பட்ட திரௌபதியை எளிய பெண்ணாகவே கருதி, அவளின் மீது வாசகர்கள் பெரிதும் இரக்கம் காட்டி நிற்கும்போது (அதே இரக்கத்தைத்தான் திரௌபதியும் அங்கிருந்த எல்லோரிடமும் எதிர்பார்த்தாள்), இளைய யாதவர் அவளிடம் நீ ‘பேரரசி’ என்றும் அதனாலேயே நீ எளிய பெண் அல்லள் என்றும் கூறுகிறார்.

இளைய யாதவர் அவளிடம், அரசியல் சார்ந்து எத்தனையோ பேரரசர்கள் அவமானப்படுத்தப் பட்டுள்ளனர், எத்தனையோ அரசர்கள் தலை கொய்யப் பட்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்து, நீ அரசியலுக்குள் நிலைப்பட்ட பின்னர் ரத்தம் சிந்தவோ, அவமானப்படவோ ஏதும் இல்லை என்ற கோணத்திலும் இதில் ஆண், பெண் எனப் பிரித்து நோக்க வேண்டியதில்லை என்ற கருத்தாக்கத்திலும் அரசு, அரசியல் என்றே இதைப் பார்க்க வேண்டும் என்ற சிந்தனைத் தளத்திலும் உரையாடுகிறார்.

இந்த உரையாடலின் முடிவில் திரௌபதியின் அகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. வாசகரின் புரிதல் சார்ந்தும் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. இதுவரை வாசகர்கள் திரௌபதியின் மீது கொண்டிருந்த மிகப்பெரிய இரக்கம், தன்னளவில் சிறிது குறைந்துவிடுகிறது என்பதே உண்மை.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களம் ஓர் ‘ஆதூரசாலை’க்கு (மருத்துவமனை) நிகரானது. நாம் நமது அகத்தையும் புறத்தையும் அதற்கு ஒப்புக்கொடுத்துவிட்டாலே போதும். உடலும் உள்ளமும் புத்துணர்வுகொள்ளும். அங்கிருந்து நாம் திரும்பி வரும்போது, நாமறியாத ஒன்று நமக்குள் இருந்து எழுந்து, வெளியே வந்து, நாமாகி நிற்கும் நாம் அதுவாகியே வாழலாம்.

‘சொல்வளர்காடு’ நாவலின் மற்றொரு பெருஞ்சிறப்பு, ‘வேதக்கல்வியில்  பெண்களின் இடம்’ குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது என்பதே. திரௌபதி வைரோசனரிடம் கேட்கும் வினாவிலிருந்து, ‘வேதக்கல்வியின் பெண்களின் பங்களிப்பு’ குறித்து எழுத்தாளர் பேசத் தொடங்குகிறார். கார்க்கி, வதவா பிரதித்தேயி, அம்பை காத்யாயனி, சுலஃபை மைத்ரேயி எனத் தொடர்கிறது அவர்களின் வேதக்கல்வி. பெண்களுக்கான தனித்த வேதக்கல்விப் பாடசாலையை உருவாக்குகிறார்கள். அங்கு ஆண்களுக்கு இடமில்லை என்பதும் தனிச்சிறப்பு.

இந்த நாவலில் எண்ணற்ற காடுகள் வருகின்றன. ‘காடு’ என்பது, முல்லைத்திணை சார்ந்தது. அதன் உரிப்பொருள் ‘காத்திருத்தல்’. பாண்டவர் மேற்கொண்ட வனவாசமே மிக நெடிய காத்திருப்புதான் என்பதாலும் தருமன் தனக்கான மெய்யறிவைப் பெற, தன் உடன்பிறந்தவர்களோடும் மனைவியோடும் காடுகள் தோறும் அலைந்து அலைந்து திரிவதாலும் அதற்காகவே காத்திருப்பதாலும் இந்த நாவலில் முல்லைத்திணை சார்ந்த உரிப்பொருள் மிகவும் இயல்பாகவே பொருந்தியுள்ளது என்பேன்.

‘வெண்முரசு’ நாவல் தொடரை நாம் பல நிலைகளில் ‘கவிச்சக்கரவர்த்தி’கம்பரோடுதான் ஒப்பிட்டுக்கொள்ள இயலும். அந்த வகையில், மைத்ராயனியக் காட்டில் உள்ள அன்னசாலையில் பாண்டவர்கள் பணிபுரியும் காட்சி சார்ந்த விவரிப்பு பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

அங்கு நிகழும் விரைந்த செயற்பாடுகளைக் காட்டுவதற்காகவே எழுதப்பட்ட ‘சொல்லோட்டம்’ கொண்ட தொடர்கள் எழுத்தாளரின் எழுத்துநடைச் சிறப்புக்குச் சான்று என்பேன். ‘கவிச்சக்கரவர்த்தி’ கம்பர் தானெழுதிய ‘ராமகாதை’யில், பல இடங்களில் கதைமாந்தர்களின் மனவோட்டத்திற்கு ஏற்பவே சொற்களைச் தேர்ந்து, செய்யுட்களை யாத்திருப்பார். அதுபோலவே, இங்கு எழுத்தாளர் அன்னசாலையின் விரைவுச் சூழலைக் காட்சிப்படுத்த தொடர்களைத் தேர்ந்து, பத்திகளை அமைத்திருக்கிறார்.

இந்த நாவலில் இடம்பெற்றுள்ள அதிசிறப்பான காட்சிக்களங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

சுஃபர கௌசிகர் என்ற ‘ஆசுர வேள்வி’ செய்யும் அந்தணர் பற்றிய காட்சி. ‘தனக்கென ஒன்றும் பெறாது தன்னை இழப்பது வேள்வியின் உச்சம்’ என்ற கருத்துக்குச் சான்றாகவே அவரின் வேள்வி நிறைவுகொள்கிறது. அரணிக்கட்டைகளைத் தேடிச்செல்லும் பாண்டவர்கள் மாண்டு (தருமனைத் தவிர), மீண்டும் உயிர்ப்பெறுதல். மூத்த யட்சர் மணிபத்மரைத் தம் மூதாதையர்களுள் ஒருவராக ஏற்றல்.இந்த நாவலுக்குள் உபகதையாக விரியும் அரசர் சோமகன் பற்றிய செய்தி. சோமகன் என்ற அரசன் பெற்றெடுத்த ‘ஜந்து’ என்ற சௌமதத்தன். குழந்தைகள் மீது தந்தைகொள்ளும் பெரு விழைவுகளைக் காட்டும் காட்சிச் சித்தரிப்பு. ஒருவகையில் அந்தச் சோமகன் வடிவில், நான் திருதராஷ்டிரரைத்தான் பார்த்தேன். எனக்கு அவர்களுக்கிடையே இருந்த ஒற்றுமைகளாக நூறு மகன்கள், பிள்ளைப்பித்து ஆகியன தெரிந்தன.பிதாமகர் பீஷ்மர் சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய ஆயுதசாலையில் துரியோதனனை அடித்துச் சிதைக்கும் காட்சி. உடன்பிறந்தார் மீது எல்லை மீறிச் செயல்படும் ஒவ்வொரு தருணத்திலும் துரியோதனனை யாராவது அடித்துச் சிதைக்கவே விழைகிறார்கள். முன்பு திருதராஷ்டிரர், இப்போது பீஷ்மர். ஆனால், ஒருபோதும் துரியோதனன் அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதில்லை. இயலாது என்பதால் மட்டுமல்ல; அவர்களின் மீது தன்னுள்ளத்தின் ஆழத்தில் கொண்ட பெரும்பற்றின் காரணமாகவும்தான். அதே அளவு பேரன்பினைத்தான் துரியோதனன் மீதும் திருதராஷ்டிரரும் பிதாமகர் பீஷ்மரும் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், இவ்விருவருமே இறுதியில் தன்னுடைய ஆதரவினைத் துரியோதனனுக்கு நல்குகிறார்கள்.அஸ்தினபுரியைவிட்டுச் செல்லும் விதுரரின் மனவோட்டம் பற்றிய காட்சிச்சித்திரம். யாருக்கும் தெரியாமல் தனித்தலையும் விதுரர் இறுதியில், அஸ்தினபுரிக்கே திரும்புகிறார். கர்ணன் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும்கூட துரியோதனன் விதுரரையே மீண்டும் அஸ்தினபுரியின் பேரமைச்சராக்குகிறார். துரியோதனனின் உளப்பாங்கினைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. அதனாலேயே வாசகர் உள்ளம் எப்போதும் துரியோதனனுக்கும் சிறிதளவு இடத்தை ஒதுக்கியே வைத்துள்ளது போலும்!.துரியோதனன் பாண்டவர்களை அஸ்தினபுரியின் தொழும்பர்களாக்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விதுரர் கணிகரைச் சந்திக்கும் சூழல். சகுனி சூதாட்ட நிகழ்வுக்குப் பின்னர் தன்னுடைய பகடைகளை எரித்துவிடுவதும் இனிச் சூதாடுவதில்லை என்று முடிவு செய்வதும் சிறப்பான தருணங்கள். கணிகர் விதுரரிடம் பாண்டவர்களை அஸ்தினபுரியின் தொழும்பர்களாக்காமல் இருப்பதற்கு மாற்றுத் தண்டனையாக ‘வனவாசம்’ குறித்துப் பேசும் உரையாடல்கள் மிக நேர்த்தியானவை.யாதவர் குலப் பூசல் சார்ந்து பலராமருக்கும் இளைய யாதவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் சார்ந்த காட்சி.வனவாசத்தில் திரௌபதி தருமரிடம் சினந்து பேசும் சூழல். கணவன்-மனைவிக்குள் எழும் உச்சகட்ட சண்டைக்கு நிகரானது அது. திரௌபதியை மிகத்துணிந்த பெண்ணாகவும் கொற்றவையாகவும் வாசகர் அறியும் தருணம் அது.விதுரர் தன் முற்பிறப்பினை அறியும் காட்சி. அதன் இணைவாகவே பீஷ்மரின இறுதியும் அவருக்கு அறிவிக்கப்படுகிறது.மைத்ரேயர் துரியோதனனின் முக்காலத்தையும் அறிந்து பகரும் காட்சி. அப்போது துரியோதனன், ‘நான் வெகுதூரம் சென்றுவிட்டேன். இனித் திரும்பி வருவதற்கு இல்லை’ என்று கூறுகிறான். அந்தத் தருணத்தில் வாசகரின் உள்ளம் துரியோதனனின் பிடிவாதத்தின் மீது வெறுப்புக்கொள்கிறது. அதற்குக் கர்ணன் உடந்தையாக இருக்கிறான் என்பதும் நமக்கு எரிச்சலையே ஊட்டுகிறது. இருப்பினும் இருளில் நிற்பவர்களை நம்மால் பார்க்க முடியாது. அது போலவே அறத்துக்கு வெளியே நிற்பவர்களையும் நம்மால் பார்க்க முடியாதுதான். அதனால், அவ்விருவர் மீதும் வாசகர் இரக்கமே கொள்ளவே நேர்கிறது.கோபானர் தருமருக்கு ஹரிசந்திரன் வாழ்க்கையைக் கூறும் காட்சி.கிரிஷ்மன் மூன்று தந்தையர் கதையைக் கூறும் நிகழ்வு.மிதிலையில் அரசமுனிவர் ஜனகர் தன்னுடைய அமைச்சர் அஸ்வலனரின் ஆலோசனையின்படி, ‘பகுதட்சிணைப் பெருவேள்வி’யை நடத்தும் காட்சி. அதில் பங்கேற்றும் யாக்ஞவல்கியர் தன்னுடைய மெய்யியல் சிந்தனைகளால் கார்க்கி உள்பட அனைவரையும் வெற்றிகொண்டு, ‘பாரதவர்ஷத்தின் அந்தண முதல்வர்’ என்று அறியப்படும் தருணம்.யுவனாஸ்வன் மாந்தாஸ்யதியைப் பெற்றெடுத்து, தாயுமானவனாக மாறும் நிகழ்வு.பாண்டவர்களின் இருப்பினைக் கௌரவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காகவே குந்திதேவி அஸ்தினபுரியிலேயே தங்கிவிடும் காட்சி.வனவாசத்திற்குப் புறப்படும் முன்பாகத் திரௌபதி தம் பிள்ளைகளைத் துரியோதனனின் மனைவி பானுமதியிடம் ஒப்படைக்கும் தருணம்.இளைய யாதவருக்கும் சால்வனுக்கும் இடையே நடக்கும் போரில் இளைய யாதவரின் படையினர் இளைய யாதவருக்குத் துரோகம் செய்யும் சூழல். அந்தச் சூழ்ச்சியையும் இளைய யாதவர் வெற்றிகொண்டு, சால்வனை வெற்றிகொள்ளுதல்.

சூதாட்டம் தந்த பெருந்துயருடன் பாண்டவர்கள் சௌனக வேதமையத்தின் பன்னிரண்டாவது காத்யாயரைச் சந்திக்கின்றனர். அப்போது அவர் தருமரிடம் கூறுவது அனைத்து மானுடருக்கு ஏற்ற ஒன்றே.

“ஊழின் வழிகளைப் பற்றி ஒருபோதும் உள்ளி உள்ளிச் சொல்லாடலாகாது என்பதே மூதாதையர் கூற்று என்றார். அங்கு நிகழ்ந்தவை வேறுமுறையில் நிகழமுடியாதவை என்று உணரும் அடக்கம் இருந்தால் மட்டுமே அவை அளித்த துயரத்தைக் கடக்கமுடியும். ஒரு சிறு இறகு காற்றில் பறந்தலைவதை க் காணுங்கள். அது தேரும் திசையும் சென்றமரும் இடமும் முடிவிலா விசும்பால் முடிவுசெய்யப்படுபவை என்று அறிவீர்களா ?”

இந்தத் தெளிவு நம் ஒவ்வொருவருக்குள் இருந்தால், எத்தகைய பெருந்துயரையும் எளிதில் கடந்து செல்லலாம்.

தருமன் வனவாசத்தைத் தொடரலாமா? வேண்டாமா? என்ற குழப்பமான தருணத்தை அடையும் போது, அவருக்குச் சகாதேவன் கூறும் அறிவுரை மிகச் சிறப்பானது.

“மூத்தவரே! படைகொண்டு முடியை அடைந்தால் படைகொண்டே இறுதிவரை அரியணையைக் காக்கவேண்டும். சொல்காத்து அவ்வறத்தின் வல்லமையால் எழுந்து வந்து அவர் முடிகொண்டால், அதன்பின் அந்த அறமே அவருக்குப் படைக்கலமாக ஆகும். விழைவுமுந்தி வென்று பின் நூறாண்டுகாலம் படைக்கலம் கொண்டு காக்கவேண்டிய அரசைப் பதின்மூன்றாண்டுகாலம் பொறுத்து, வென்று, தெய்வங்கள் காவலாக நிற்க ஆள்வதுதான் நன்று.

‘வெண்முரசு’ நாவல் தொடரில் பல இடங்களில் கதையில் அல்லது உபகதையில் வரும் அரசர்கள் பலர் குழந்தைப்பேறு அற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் பலவகையான யாகங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை இரண்டு தேவைக்காகவே ‘தங்களுக்குக் குழந்தை வேண்டும்; அதுவும் ஆண்குழந்தை வேண்டும்’ என்று விரும்புகிறார்கள். ஒன்று – தனக்கு நீர்த்தார்கடன் செய்ய. மற்றொன்று – தனக்குப் பின்னர் இந்த நாட்டை ஆள்வதற்கு.

அவர்களுக்கும்  பொதுவாகவே குழந்தையற்றவர்களுக்காகவும் ஓர் அறிவுரையாகப் பின்வரும் பத்தியை எழுத்தாளர் எழுதியிருக்கிறார். ஓர் அரசனை நோக்கி வருண தேவர் கூறுவதாக இடம் பெறும் பகுதி இது –

 “அரசே! நீர் அள்ளி அளிக்க குருதிமைந்தன் வேண்டுமென்பதில்லை. ‘மைந்தன்’ என ஏற்கப்பட்ட எவருக்கும் அவ்வுரிமை உண்டு. ‘மைந்தரில்லை’ என்பவர் குருதிமுளைக்காதவர் அல்லர்; உள்ளம் விரியாதவர் மட்டுமே. வெளியே எத்தனை இளமைந்தர்!. எத்தனை ஒளிரும் விழிகள்!. எத்தனை பாற்புன்னகைகள்!. உளமிருந்தால், பல்லாயிரம் மைந்தருக்குத் தந்தையாகலாம். நூறு பிறவிகளில் அவர்கள் இறைக்கும் நீரால், அங்கொரு கங்கையை ஓடச்செய்யலாம்

இந்தப் பத்தியைக் கடக்கும்போது நான், மக்கள் சேவைக்காகவே திருமணம் செய்துகொள்ளாதவர்களையும் குடும்ப வாழ்வில் குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களையும் இயலாதவர்களையும் நினைத்துக்கொண்டேன். அவர்களுக்கு உள்ளம் விரிவுகொண்டால், அவர்களைத் தவிர பிற மானுடர் அனைவருமே அவர்களுக்குக் குழந்தைகள்தானே!

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களால் எதையும் சொல்மேல் சொல்லடுக்கி, விரித்துப் பெருக்கிச் சில ஆயிரம் பக்கங்களிலும் எதையும் பொருளுக்குள் பொருள் புதைத்து, மடக்கிச் சுருக்கி ஒரேயொரு பத்தியிலும் கூற முடியும். அதற்குச் சிறந்த சான்றாக, இளைய யாதவர் தன் அண்ணன் பலராமரிடம் யாதவ குலத்தைப் பற்றியும் துவாரகையின் எழுச்சி பற்றியும் மிகச் சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும் கூறுவதைக் குறிப்பிடலாம்.

காலந்தோறும் அடிமைப்பட்டுக் கிடந்த குலம் , மூத்தவரே. இன்று காலம் ஒரு பீடத்தை நமக்கு காட்டுகிறது. இது ஒரு தற்செயல். நீரொழுக்கில் செல்பவன்மேல் வந்து முட்டும் தெப்பம்போன்றது. நம்மைவிடத் தகுதியான குலங்கள் பல இங்கிருக்கலாம். நமக்கு இது அமைந்தது. புதுநிலங்களைத் தேடிச்சென்ற நம் குடி பெருகியதனால் ; நம் குடிகளை இணைக்கும் வணிகப்பாதைகள் உருவாகி வந்தமையால்; நம்மை வெல்லும் படைவல்லமை கொண்ட ஷத்ரியப் பேரரசுகள் இன்மையால்; ஷத்ரியப் பேரரசுகளின் உட்பூசல்களால்; கலங்கள் கட்டும் கலை வளர்ந்து கடல்வணிகம் பெருகியமையால். ஆயிரம் உட்சரடுகள். அவை பின்னிய வலையில் நாம் மையம் கொண்டிருக்கிறோம்.”

‘சொல்வளர்காடு’ நாவலில், தத்துவத்தை நோக்கிய சொற்களைத் தவிர வேறு என்னவெல்லாம் வளர்கின்றன? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிக்கொண்டால், அதற்கு விடைகளாகத் தனிநபர் கழிவிரக்கம், பகை, வஞ்சம், ஆணவம், பிடிவாதம், புதிய சிந்தனை மரபு, அறிதல் நிலைகள், புதியன கற்றல் ஆகியன கிடைக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யறத்தைத் தருமர் பெறுவது இங்குதான். அவர் இறுதியில் பிரபஞ்சப் பெருநெருப்பினை எதிர்கொண்டு, அதற்குத் தன்னையே உவந்தளித்து, அகத்திலும் புறத்திலும் எரிந்து, புடம்போடப்பட்ட தங்கமாக மீண்டு வருகிறார்.

 

இளைய யாதவர் தன்னுடைய இயல்பைப் பற்றித் தருமரிடம் கூறும் போது,

 “ என்னால் ஒன்றை பேசத்தொடங்கினால் நிறுத்தமுடியாது. நான் எவர் செவிக்காகவும் பேசுபவன் அல்ல. என்னுள் எழும் ஒரு சித்திரத்தைத்தான் பேசிப் பேசி முழுமையாக்கிக் கொள்வேன். தொடுத்துச்செல்வது முழுமையடையாமல் என்னால் நிறுத்தமுடியாது

என்பார். எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் இயல்பும் இதுவே என்பது என்னுடைய உளச்சான்று. அதனால்தான், அவரால் வெண்முரசினை 25,000 பக்கங்களில் எழுதி நிறைவுசெய்ய இயன்றுள்ளது. குறிப்பாகச் ‘சொல்வளர்காடு’ நாவலை அறிவார்ந்த சொல்லாடல்களால் மட்டுமே எழுதி எழுதி முழுமையாக்க முடிந்துள்ளது. ‘இந்த நூற்றாண்டு தமிழ் இலக்கியத்துக்கும் இந்திய மெய்யியலுக்கும் அளித்துள்ள பெருங்கொடை இவரே’ என்பேன்.

முனைவர் . சரவணன், மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.