Jeyamohan's Blog, page 954

July 8, 2021

பேசாதவர்கள்[சிறுகதை]

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போலீஸ் துறையிலும் பின்னர் சிறைத்துறையிலும் வேலைபார்த்த என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளை முறையாக ஓய்வுபெறவில்லை. அதை எனக்கு அவரேதான் சொன்னார். தாத்தா  அவருக்கு ஓய்வூதியம் இல்லை. திருவிதாங்கூர் இல்லாமலாகி, தமிழகம் உருவாகும்போது அவருக்கு ஐம்பது வயதுதான். அப்படியென்றால் மேலும் பத்தாண்டுகள் சுதந்திர இந்தியாவின்  அரசு ஊழியராக பணியாற்றியிருக்க முடியும்.

நானும் என் அப்பாவைப்போல 1956ல் மாநிலப்பிரிவினையின்போது பழைய திருவிதாங்கூர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள், தாத்தாவும் வேலையை இழந்தார் என்றே நம்பியிருந்தேன். அது எப்படிச் சாத்தியமென்று யோசித்ததே இல்லை. பொதுவாக நாம் பழைய தலைமுறை பற்றி அவ்வளவாக யோசிப்பதில்லை. ஆகவே அவர்கல் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஓயாமல் சொல்லப்படுவதனாலேயே நாம் செவிகொடுப்பதில்லை.

தாத்தா திருவனந்தபுரம் சிட்டி கார்ட்ஸ் நாயர் பிரிகேடில் ஹெட்கான்ஸ்டபிளாகவும் ,அதன்பின்னர் ஐந்தாண்டுகள் சப்இன்ஸ்பெக்டர் ராங்கில் சிறையில் ஸ்பெஷல் வார்டர் ஆகவும் பணியாற்றினார்.வார்டராக பணியாற்றிய காலத்தில் அவர் ஒரு முக்கியமான குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அதை வெளியே சொல்லவில்லை. 1948ல் நிகழ்ந்த மொத்தக்குளறுபடிகளில் ஒன்றாக தன் வேலையிழப்பையும் ஆக்கிக்கொண்டார். முறையாகப் பதவி ஓய்வு பெற்றதாகவே நாற்பதாண்டுக்காலம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் உண்மையைச் சொல்ல நேர்ந்த சந்தர்ப்பம் ஒன்று அமைந்தது. அவருடைய நண்பரும், அவருடன் சேர்ந்து வேலையிழந்தவருமான ஆர்.கே.கருணாகரக் கைமளின் மகன் ஆர்.கே.அச்சுதன் அவரைப் பார்க்க எங்கள் ஊருக்குத் தேடிவந்திருந்தார். அவர் கேரளக் காவல்துறையில் டி.ஐ.ஜியாக இருந்தார். தாத்தா உயிருடனிருக்கும் செய்தியை எங்கள் பக்கத்துவீட்டில் குடியிருந்த கேரளச் சிறைத்துறை ஊழியர் அப்துல் வகாப் வழியாக அறிந்து பரிசுப்பொருட்கள் பழங்களுடன் வந்தார். அவர் சின்னக்குழந்தையாக இருக்கும்போது அப்பா அவர் வீட்டுக்கு அடிக்கடிச் செல்வதுண்டு. அவரை சைக்கிளில் அமரச்செய்து திருவனந்தபுரம் நகரைச் சுற்றிக் காட்டியிருக்கிறார். திருவனந்தபுரம் மிருகக்காட்சிசாலைக்கு அவரைக் கூட்டிச்சென்றதே தாத்தாதான் என்று சொன்னார்.

அவரைச் சந்தித்தது தாத்தாவையும் நெகிழச்செய்தது. கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. பொதுவாகவே தாத்தா வயதானபின் எதற்கெடுத்தாலும் கண்ணீர் விடுபவராக ஏற்கனவே மாறியிருந்தார். அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு நெடுநேரம் நினைவுகளைப் பேசிக்கொண்டிருந்தார்.  தாத்தாவுக்கு நினைவுகள் தெளிவாக இருந்தன. பல் நன்றாக இருந்ததனால் துல்லியமாகப் பேசவும் முடிந்தது.அந்தப் பேச்சின் நடுவில்தான் ஆ.கே.அச்சுதன் நான் மெல்லிய அதிர்ச்சியை அடைந்த செய்தியைச் சொன்னார். அவருடைய அப்பாவும் என் தாத்தாவும் ஒரே உத்தரவால் வேலையை இழந்திருக்கிறார்கள். வேலையிழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவருடைய அப்பா பத்து மாதங்களுக்குள் நெஞ்சடைப்பில் உயிரிழந்தார்.

நான் ஒன்றையும் காட்டிக்கொள்ளவில்லை. அவர் போனபின் தாத்தாவிடம் கேட்டேன், அது உண்மையா என்று. தாத்தா அப்போது பேச்சு மிகக்குறைந்து பெரும்பாலான பொழுதுகளில் அமைதியாக இருக்கப் ஆரம்பித்துவிட்டிருந்தார். அது உயிரின் தீ அணைவது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆறுமாதம் கழித்து தாத்தா தூக்கத்திலேயே உயிர்விட்டார். அப்போது அவர் சமகால நினைவுகளை கோக்க முடியாதவராக இருந்தார். காலையுணவு சாப்பிட்டோமா என்று நினைவிருப்பதில்லை. பேரப்பிள்ளைகளின் பெயர்கள் நினைவில் எழவில்லை. எந்த ஊரில் இருக்கிறோம் என்பதே கூட சரியாக ஞாபகம் வரவில்லை. ஆனால் பழைய நினைவுகள் மேலும் கூர்மைபெற்றிருந்தன. காட்சித்துல்லியத்துடன் அவற்றைச் சொன்னார்.

அவரும் பாட்டியும் முதன்முதலாக திருவனந்தபுரம் ஆறாட்டு பார்த்த அந்த வருடம்தான் அங்கே ஆட்டுமணி அரண்மனை முகப்பில் அமைக்கப்பட்டது என்றார். அன்று பாட்டி அணிந்திருந்த சேலை இளஞ்சிவப்பு நிறம் என்பதுகூட ஞாபகமிருந்தது, அன்றெல்லாம் வண்ணச்சேலைகளை கேரளப்பெண்கள் அணிவது மிக அபூர்வம். பாட்டி அன்றுதான் முதன்முதலாக உணவு விடுதியில் சாப்பிட்டார். அது ஒரு நாயர் பெண்மணி கரமனை ஜங்ஷனில் நடத்திவந்த கஞ்சிக்கடை. சம்பா அரிசிக் கஞ்சிக்கு பலாக்காய் அவியலும் ஊறுகாயும் அளிக்கப்பட்டது.

ஆனால் நான் நினைத்ததுபோல தாத்தா தன் நினைவுகளில் மூழ்கி அமர்ந்திருக்கவில்லை என்பதை அவர் பேசப்பேச  கண்டுபிடித்தேன். நினைவுகளை தூண்டினால்தான் அவை ஒன்றிலிருந்து ஒன்றாக கிளம்பி வந்தன. அவ்வாறு வரும் நினைவுகளுக்கும் எந்தத் தொடர்ச்சியும் இருக்கவில்லை. ஏதாவது மறைமுக தொடர்பு இருக்கும் நினைவுகளாக இருக்கலாம். சொல்லச்சொல்லத்தான் அவை உருவாயின. சொல்லாதபோது அவர் மனம் ஒழிந்து கிடந்தது. சொல்லோ சித்திரமோ இல்லாத வெற்றுவெளியாக. உள்ளத்தை இயக்கவும் ஆற்றல் தேவைப்படுகிறது. அவருடைய உயிராற்றல் திரிதாழ்ந்து மிகமிக மங்கலாக எரிந்துகொண்டிருந்தது.

நான் அவரிடம் அவர் ஏன் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று கேட்டேன். அவர் என் கேள்வியை என்னவென்றே தெரியாமல் நெடுநேரம் வெறித்துப் பார்த்தார். பலமுறை கேட்டபின்னரே அவருடைய ஆழத்திலிருந்து நினைவுகள் எழுந்துவந்து அந்தக் கேள்வியைச் சந்தித்தன. உண்மையில் நாற்பதாண்டுகளாகச் சொல்லிவந்ததை தாத்தா அவரே நம்பிவிட்டிருந்தார். அவர் அதைச் சொல்லிச் சொல்லி, உள்ளத்தில் நிகழ்த்தி நிகழ்த்தி, அவருக்கு உண்மையில் நடந்தவை கனவாக மாறி உள்ளே நகர்ந்துவிட்டிருந்தன. அவருடைய உள்ளத்தின் விசை அழிந்திருந்தமையால்தான் உண்மையை அவர் சொன்னார். இல்லாவிட்டால் அவருடைய கூர்மையான உள்ளம் புனைந்ததையே உண்மையென முன்வைத்திருக்கும்.

“எல்லாம் பேய்… பேய் என்று சொன்னால் ஒரு உக்கிரமான பேய்.” என்றார்.

நான் முதலில் சலிப்புற்றேன். கதைவிடப்போகிறார் என்று தோன்றியது. ஆனால் நினைவுகளை தொகுத்து கவ்வி இழுத்துவரப் போவது எது என்று சொல்லமுடியாது. அது ஒரு படிமம். ஆனால் அது இன்றைய மொழி. அன்றெல்லாம் அவை புழங்கும் உண்மைகள். தெய்வங்களும் தேவர்களும் நீத்தாரும் பேய்களும் பிசாசுக்களும் மனிதர்களுடன் புழங்கிய காலகட்டம்.

[ 2 ]

தாத்தா சொன்னார். நான் திருவனந்தபுரம் மத்தியச் சிறைச்சாலையில் வேலைசெய்த காலம். என் கண்காணிப்பில் இருந்த சாமிநாத ஆசாரி என்ற இளைஞனை தூக்கிலிட்டார்கள். திருவிதாங்கூர் ஆவணங்களின்படி கடைசியாகத் தூக்கிலிடப்பட்டவன் அவன்தான். மனைவியை கற்பழித்த உள்ளூர் நிலப்பிரபுவை கொலைசெய்த குற்றம். அவனுடைய கடைசிநாட்களில் நான் அவனுடன் இருந்தேன். அவன் இனிமையான மகிழ்ச்சியான இளைஞன். கடைசி ஆசை என்று ஒரு ஆடு வாங்கிவரச்செய்து சிறையில் இருந்த அனைவருக்கும் விருந்து வைத்துவிட்டு தூக்கிலேறினான்.

அவன் போனபின் ஒரு மாதம் சிறையே சோர்ந்துபோயிருந்தது. அவன் நினைப்பை பேசிக்கொண்டே இருந்தனர். அவன் கடைசியாகப்போட்ட அந்த விருந்தில் அத்தனைபேருமே சாப்பிட்டிருந்தனர்.ஆகவே அவன் தங்களுடனேயே இருப்பதாக அனைவரும் உணர்ந்தனர். ஆனால் சிறை என்பது ஒரு கொந்தளிப்பான இடம். அதுவும் 1946 என்பது நாள்தோறும் ஏதோ நடந்துகொண்டிருந்த காலகட்டம். சீக்கிரமே புதிய கைதிகள் வந்தனர். அவர்களில் பாதிப்பேர் அரசியல் கைதிகள். சிறைக்குள் அவர்கள் எதிர்ப்புக் கலவரம் செய்ய நாங்கள் அவர்களை அடித்து ஒடுக்கினோம்.

அதன்பின் காங்கிரஸ் தலைவர்கள் கேளப்பன், ஏ.கே.கோபாலன், கே.பி.கேசவமேனன் ஆகியோர் ஜெயிலுக்கு வந்தனர். ஜெயிலுக்குள் ஒரு வகையான அரசாங்கமே உருவானதுபோலிருந்தது. ஜெயிலுக்குள் பாரதமாதாகீ ஜே, இங்குலாப் சிந்தாபாத் எல்லாம் சாதாரணமாக ஒலிக்க ஆரம்பித்தது. ஜெயிலர்களுக்கே அரசியல் கைதிகள் மேல் மரியாதை வர ஆரம்பித்தது. ’ஒருவேளை சுயராஜ்யம் கிடைத்தால் இவர்கள் நம் எஜமானர்களாக வந்தாலும் வருவார்கள்’ என்று ஜெயிலர் குட்டப்பன் பிள்ளை சொன்னதும் நாங்களெல்லாம் சிரித்தோம். ஆனால் அது எல்லாருக்கும் உள்ளூர நடுக்கத்தை உருவாக்கியது.

ஆகவே நாங்கள் கைதிகளை அடிப்பதை நிறுத்திக்கொண்டோம். அவர்களை நாங்கள் அடிக்காமலானபோது அந்தச் சிறிய இடத்தில் அத்தனைபேரை அடைத்து வைக்கமுடியவில்லை. தண்ணீர் இல்லை. கழிப்பறை இல்லை. போர்வைகள் சட்டைகள்கூட இல்லை. ஆகவே அவர்கள் எப்போதும் சண்டைபோட்டார்கள். நாங்கள் அவர்களை கெஞ்சிக் கெஞ்சி சமாதானம் செய்யவேண்டியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அந்த தலைவர்களுக்கான வேலைக்காரர்களாக மாறினோம். எல்லாம் நாள் நாள் என நடந்தன. ஒருமாதம் கழித்து தூக்கிலேற்றப்பட்ட சாமிநாத ஆசாரி முழுக்கவே நினைவிலிருந்து மறைந்துபோனான்.

எனக்கு எங்கள் ஜெயிலின் ஸ்டோர் அறைமேல் ஓர் ஈடுபாடு உண்டு. இருட்டான அறை. உடைந்த பழைய சாமான்கள் நிறைந்து கிடக்கும். அரசாஙகத்தில் ஒரு பொருளை தூக்கிப்போடுவதென்றால்கூட ஏராளமான சட்டச்சடங்குகள் உண்டு.அதற்குச் சோம்பல்பட்டுக்கொண்டு எல்லாவற்றையும் இருட்டு அறைகளில் குவித்துப்போடுவார்கள். அந்த அறையில் என்னென்னவோ பொருட்கள் இருந்தன. பழைய பல்லக்குகள், உடைவாட்கள், ஈட்டிகள், தலைக்கவசங்கள், குதிரைச்சேணங்கள். ‘சென்ற கால வரலாறே உடைசல்களாக உள்ளே இருக்கிறது’ என்று ஜெயிலர் கட்டமம் வர்கீஸ் தாமஸ் மாப்பிள்ளை சொல்வதுண்டு.

நான் நினைத்துக்கொண்டேன். சுயராஜ்யம் கிடைத்தால் பழைய திருவிதாங்கூரையே அப்படி தூக்கி ஏதாவது இருட்டறைகளில் வைக்கவேண்டியிருக்கும். ஆயிரமாண்டுக்கால வரலாறு. எத்தனை கொலைகள், எத்தனை அநீதிகள், எத்தனை தோல்விகள், எத்தனை பேரழிவுகள். அரியகணங்களும் உண்டு. வெற்றிகள், சாதனைகள், மங்கலங்கள்,விழாக்கள். அவற்றை மட்டும் கோத்துக்கொண்டு மெல்லமெல்ல இன்னொரு வரலாற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான். அவற்றை கொண்டுசென்று முகப்பில் அலங்காரம் செய்து நிறுத்தவேண்டியதுதான்.

ஜெயிலில் பெரும்பலானவர்கள் அந்த அறையை நெருங்க மாட்டார்கள்.  வர்கீஸ் மாப்பிள்ளையே என்னைத்தான் அழைப்பார். உள்ளே இருட்டும், ஒட்டடையும், புழுதியும், களிம்பும் ,துருவும், மட்கும் துணிகளும், எலிப்புழுக்கைகளும் கலந்த மூச்சடைக்கவைக்கும் நெடி. அங்கே இருக்கையில் நான் மண்ணுக்கு அடியில் ஆழத்தில் புதைந்து போய்விட்டிருப்பேன். காலமே தெரியாது. மூச்சுத்திணறல் தாங்கமுடியாமலாகும்போதுதான் வெளியே வருவேன். எனக்கு அது அந்தக் கட்டிடத்தின் மலக்குடல் என்று தோன்றுவதுண்டு.

அந்த அறைக்கு உள்ளே சென்று மீளும்போது சமகாலகட்டத்தில் இருந்து எங்கோ ஒரு கனவுக்குள் சென்று திரும்பி வருவதுபோன்ற உணர்வு. தேவையில்லாமல் கூட அதை அடிக்கடி திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து அவை என்ன என்று பார்ப்பேன். கைநகங்களை பிடுங்கி எடுக்கும் குறடுகள், கொத்துக்கொத்தாக முடியை பிடுங்கி எடுக்கும் இடுக்கிகள், பற்களை இடுக்கி பிடுங்கி எடுக்கும் நெம்புகோல் போன்ற கருவிகள், பழுக்கக் காய்ச்சி உடலில் விதவிதமான முத்திரைகளைச் சூடுவைக்கும் இரும்பு அச்சுக்கள், பலவகையான சவுக்குகள், சவுக்காக பயன்பட்ட திரச்சிமீன் வால்கள் என ஏராளமான சித்திரவதைக் கருவிகள்.

ஒருகாலத்தில் சிறை என்பது வெறுமே அடைத்துவைக்கும் இடம் அல்ல, சித்திரவதைதான் முக்கியமாக நடந்திருக்கிறது. ஏனென்றால் அன்றெல்லாம் சாவு மிக எளிதானது. படைவீரனும் சாகத்தான்போகிறான். ஆகவே துளித்துளியாகச் சாகச்செய்தனர். உடலில் எழும் வலி எத்தனை ஆழமான நம்பிக்கையாலும் எத்தனை தீவிரமான பற்றினாலும் எவ்வளவு பெரிய துணிவாலும் எதிர்கொள்ளத்தக்கது அல்ல. அது ஓர் இயற்கைநிகழ்வு. அதை வெல்லவே முடியாது. எதிர்கொள்ள முயன்று மெல்லமெல்ல பணிந்துவிடவேண்டும்.

சித்திரவதை நம்மை வெறும் உடலாக ஆக்குகிறது. வெறும் மிருகமாக ஆக்குகிறது. இல்லை நான் மனிதன், நான் சிந்தனையாளன், நான் புரட்சியாளன், நான் நிரபராதி  என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஓர் எல்லைவரை. அதன்முன் தன் உள்ளத்தை கைவிடுகிறது உடல். வெறும் சதையென எலும்பென நரம்பென ஆகிவிடுகிறது. மிருகம்போல் ஊளையிடுகிறது, புழுப்போல நெளிகிறது. பரிதாபகரமான உடல், அருவருப்பான ஒரு பொருள் அது. எத்தனை பார்த்திருக்கிறேன் இந்தச் சிறையில்

எத்தனை வகையான சித்திரவதைகள். வதைக்கருவிகளில் கைகால்களை சேர்த்துப் பிணைக்கும் கிட்டிகள், தோலை உரிக்கும் மீன்செதில்கள், ஆளை சிலுவை வடிவில் இழுத்து அந்தரத்தில் நிறுத்தும் கொத்தாளங்கள், கைகால்களை முறுக்கி முறுக்கி எலும்புகளை ஒடிக்கும் முறிக்கைகள் போன்றவை மூர்க்கமானவை. இன்னும் நுட்பமான சித்திரவதைக் கருவிகள் உண்டு.அவை எப்படி பயன்படுத்தப்பட்டன என்று கண்டுபிடிப்பதே பெரிய கற்பனை தேவையாகும் பணி. நான் அதைக் கற்பனைசெய்யும்போது ஒருவகையான உடல்கூசும் பரவசத்தை அடைந்தேன். பல்லால் மின்சாரக் கம்பியை கடிப்பதுபோல ஓர் அனுபவம்.

பெரிய புனல் போன்ற இரு இரும்புப் பாத்திரங்கள் ஒரு சித்திரவதை கருவி. அவற்றின் கூர்முனைகளை  அசையாமல் கட்டிப்போடப்பட்ட  கைதியின் இரு காதுகளிலும் பொருத்துவார்கள். அவற்றின் அகன்ற வாயின் அருகே வெண்கலத்தாலான தட்டுமணிகள் கட்டித்தொங்கவிடப்படும். அவற்றை மெல்ல தட்டிக்கொண்டே இருப்பார்கள். அவற்றின் ரீங்காரம் அவன் செவிகளில் பலமடங்கு கார்வையுடன் முழக்கமிடும். அப்படி பல நாட்கள். பெரும்பாலானவர்கள் செவி அடைந்து பைத்தியமும் ஆகிவிடுவார்கள்.

அதேபோலவே கண்களை அகற்றி விழிகளுக்கு முன் லென்ஸ்களை நிறுத்தி அப்பால் மிகப்பெரிய வெளிச்சத்தைப் பீய்ச்சுவார்கள். வெளிச்சம் பலமடங்காக கண்களுக்குள் செல்லும். குருடாகிவிடுவார்கள். மிகநீளமான மோர்ஸிங் போன்ற ஒரு கருவியை பற்களால் கடிக்கவைத்து அதை சுண்டிக்கொண்டே இருக்கும் ஒரு சித்திரவதை உண்டு. தலையின் எலும்புகள் வழியாகச் செல்லும் அந்த ஒலியதிர்வு மூளையை கலங்கடித்துவிடும்.

நான் சித்திரவதை செய்பவன் அல்ல. என்னால் எந்த வன்முறையையும் நேருக்குநேர் பார்க்கமுடியாது. நான் காவல்துறைக்கு பொருத்தமானவனே அல்ல. இருந்தாலும் ஏன் அவற்றை பார்த்தேன்? என்னுள் இருந்த தாழ்வுணர்ச்சியாலா? அல்லது மறைமுகமான வன்முறை வெறி எனக்குள் இருந்ததா? எனக்கு இன்றும்கூட தெரியவில்லை. ஆனால் அந்த கொந்தளிப்பான காலத்தை அப்படியெல்லாம்தான் கடந்துவந்தேன்.

[ 3 ]

ஒருநாள் அந்த ஸ்டோர் அறையைத் திறந்தபோது உள்ளே எவரோ நிற்பதை உணர்ந்தேன். பயந்து நடுநடுங்கி வெளியே பாய்ந்து விட்டேன். துள்ளி துள்ளி அதிர்ந்த என் உடல் மெல்ல அமைதியடைந்தபிறகு கையில் இருந்த விளக்கை உள்ளே நீட்டி அது என்ன என்று பார்த்தேன். அது மனிதன் அல்ல, ஒரு பொம்மை. துணிப்பொம்மை. ஆனால் உள்ளே சட்டகம் இருக்கவேண்டும். விரைப்பாக நின்றது. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு மனிதனை விட கொஞ்சம் பெரியது. ஆறடி உயரம் இருக்கலாம். முகமோ கண்களோ வாயோ கிடையாது. தலை ஓர் உருளை. கைகால்கள், உடல், அவ்வளவுதான்

உள்ளே போய் அது என்ன என்று பார்த்தேன். அதை தூக்கமுயன்ற போது திடுக்கிட்டேன். அது நல்ல எடை இருந்தது. ஒரு பருத்த மனிதனின் எடை. கிட்டத்தட்ட எண்பது கிலோ. நான் தூக்கமுயன்றபோது அசைந்து சரிந்தது. அதை நன்றாகப் பார்த்துவிட்டு நான் தேடிச்சென்ற பழைய ஒரு தோல் சேணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.  வெளியே அமர்ந்துகொண்டபோது என் உடல் பதறிக்கொண்டிருந்தது. என்னை நான் சொற்களை கோத்து அமைத்து என் உள்ளமென அவற்றை ஆக்கி தேற்றிக்கொள்ளவேண்டியிருந்தது.

மீண்டும் உள்ளே சென்று அதை நன்கு ஆராய்ந்தேன். அது நன்றாகப் பருத்த ஒரு மனிதனின் உடலளவே எடைகொண்டது. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடல் அளவு கொண்டத்ய். மனிதனைப்போல செங்குத்தாக நின்றிருந்தது. இரும்பாலான சட்டகம் மேல் துணியைச் சுற்றி அதை உருவாக்கியிருந்தனர். எடைக்காக உள்ளே கற்கள் வைக்கப்பட்டிருக்கலாம். வயிறு -நெஞ்சுக் கூடுக்குள் அக்கற்கள் இருந்தன. ஆகவே சற்றே அசைத்தாலும் அது மேல்பகுதி எடையுடன் சரிந்து மண்ணில் விழுந்தது.

கட்டமம் வற்கீஸ் மாப்பிளையிடம் அது என்ன என்று கேட்டறிந்தேன். அது ஒரு டம்மி. “டம்மி உடம்பு. மனிதனைத் தூக்கில் போடுவதற்கு முன்னால் இதை தூக்கிலே போடவேண்டும்” என்றார்.

“ஏன்?”என்று கேட்டேன்

“1892ல் ஒருவனை தூக்கில் போட்டபோது கயிறு அறுந்துவிட்டது. கீழே விழுந்து அவன் துடித்தான். அவனை தூக்கிலே போடவேண்டாம் என்று அனந்தபத்மநாப சாமி ஆணையிட்டுவிட்டார், ஆகவேதான் தூக்குக் கயிறு அறுந்துவிட்டது என்றார்கள் சோதிடர்கள். ஆகவே அவனை விட்டுவிட்டார்கள். ஆனால் கழுத்து இறுக்கப்பட்டதனால் அவன் நோயாளியாக ஆனான். ஒருமாதம் படுத்த படுக்கையாக இருந்தான். உள்ளமும் கலங்கிவிட்டது. சாபங்கள் போட்டு அழுதபடியும், வெறிகொண்டு சிரித்தபடியும் இருந்தான். நாற்பத்திரண்டாம் நாள் அவன் இறந்தான்” என்றார் வற்கீஸ் மாப்பிள்ளை

“சோதிடர்கள் சொன்னபடி மகாராஜாவே ஆளனுப்பி அவனுக்குரிய ஈமச்சடங்குகளைச் செய்து நடுகல் நாட்டி பூசைக்கும் படையலுக்கும் ஏற்பாடுசெய்தார். ஆண்டுதோறும் அவனுக்கு குருதிக்கொடை அளிக்கப்படுகிறது. கரமனை ஆற்றின் கரையில் இன்று அவனுக்குக் கோயில் அமைந்துவிட்டது. தூக்குமாடன் சாமி என அவனை வழிபடுகிறார்கள்” என்று வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார்.

அப்போது நாங்கள் கதலிவாழைப்பழம் போட்டு வாற்றி கொண்டுவரப்பட்ட நாட்டுச்சாராயம் குடித்துக்கொண்டிருந்தோம். வேலாயுதன் தண்டான் கொண்டுடு வந்து தருவான். அது ஒரு மாதாமாதம் நிகழும் சடங்கு. அதை அருந்தி கொஞ்சம் வியர்வையும் பூத்தால் வற்கீஸ் மாப்பிள்ளை இளகி இலகுவாகி தத்துவப்பேச்சு பேசுவார். சிறுஏப்பம் விட்டபடி அவர் சொன்னார்.

“இன்று அவனுக்கு பெரிய கொடைவிழாவே நடைபெறுகிறது. அவன் மகாராஜாவுக்குப் போட்ட சாபத்தால்தான் அவர் திடீரென்று இறந்தார் என்று கதைகள் உள்ளன. கீழ்க்குடிகள் வந்து அவனை வணங்கிக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் அவனுக்கு மஞ்சளரிசிப்பொடியுடன் பச்சை ஆட்டுரத்தம் கலந்து உருட்டி படையலிடுகிறார்கள். பானைத்தாளமும் உறுமித்தாளமும் முழங்க அவர்கள் அவன்முன் வெறிகொண்டு ஆடும்போது அவர்களில் ஒருவரின் மேல் அவன் சன்னதம் வந்து தோன்றுகிறான். அருள்வாக்கும் குறிச்சொல்லும் அளிக்கிறான்.”

“ஆகவே இனி அப்படி நடக்கக்கூடாது என்று திவான் ஆணையிட்டார். அதன்படி தூக்குபோடுவதற்கு என்று சில சடங்குகள் உருவாக்கப்பட்டன. ஒரே கயிற்றில் திரும்பத்திரும்ப தூக்கு போடக்கூடாது. ஒவ்வொரு தூக்குக்கும் தனியாக கயிறு செய்யப்படவேண்டும். தூக்கு போடப்பட்டவனுடன் சேர்த்து அதையும் எரித்துவிடவேண்டும். தூக்கு நிகழவதற்கு முன்பு இதேபோல மனித எடை கொண்ட ஒரு டம்மியை தூக்கில் தொங்கவிடவேண்டும். கயிற்றின் உறுதியைச் சோதனை செய்தபின் தூக்கிலிடவேண்டும்”

“இதெல்லாம் நூறாண்டுகளாக சீராக கடைப்பிடிக்கப்படுகின்றன. வெள்ளையர்கள் எப்படி தூக்குத்தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் என்று பார்த்து அதே நடைமுறையை இங்கேயும் அப்படியே உருவாக்கினார்கள்…டம்மி என்ற வார்த்தையே அவர்கள் உருவாக்கியதுதான்” என்று வற்கீஸ் மாப்பிளை சொன்னார். “டம்மி என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று நான் கரமனை சுந்தரேசய்யரிடம் கேட்டேன். அவர் இங்கிலீஷ் அறிந்தவர். டம்பி என்ற வார்த்தையிலிருந்து வந்தது. டம்ப் என்றால் பேசாதவன் அல்லது பேசமுடியாதவன்”

நான் திரும்பி அந்த துணிப்பொம்மையைப் பார்த்தேன். பேசாதவனா பேசமுடியாதவனா? என் எண்ணத்தை என்னால் எப்போதுமே கட்டுப்படுத்த முடிவதில்லை. பேசமுடியாதவை என ஏதும் இல்லை. எல்லாமே பேசும். அதற்குரிய தருணம் வந்தாகவேண்டும், அவ்வளவுதான்.

அந்த எண்ணத்தை உணர்ந்தவர்போல வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார் “இது ஒருவேளை பேசிவிடுமோ என்ற பயம் இருந்திருக்கிறது நம் அதிகாரிகளுக்கு. ஆகவேதான் கண்ணோ வாயோ மூக்கோ இல்லாமல் முகத்தை மொழுங்கையான உருண்டையாக உருவாக்கியிருக்கிறார்கள்” என்று வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். ”பேச ஆரம்பித்தால் என்ன சொல்லும்? எத்தனை முறை எங்கெல்லாம் தூக்கிலிடப்பட்டது என்றா? திரும்பத்திரும்ப தூக்கிலிடப்படுவதன் துக்கத்தைச் சொல்லுமா?”

ஆனால் பேசுவதற்கு வாய் அவசியமா என்ன? உடலால் பேசமுடியாதா? நாக்கு நெளிந்து நெளிந்து தவித்துத் தவித்துதானே பேசுகிறது? என் மண்டைக்குள் ஓடும் சிந்தனையை என்னால் அடக்கவே முடிவதில்லை.

“இந்த டம்மி உண்மையில் ஐநூறாண்டுகளாக தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறது” என்று வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். நான் இங்கே சர்வீஸுக்கு வரும்போது அச்சுதன் நாயர் இங்கே இருந்தார். மிக வயதானவர். அவர் பதிமூன்று வயதிலேயே இங்கே காவலனாக வந்துவிட்டார். அன்றெல்லாம் வேலைக்கு வயது வரையறை இல்லை. இந்தச் சிறையை கட்டியதும் இங்கே வந்த முதல் காவலர் படைப்பிரிவில் அவரும் இருந்திருக்கிறார். தெரியுமே, அதற்கு முன்பு சிறை அங்கே, தேவாரக்கெட்டு அரண்மனைக்கு அருகே கோட்டைக்குள் இருந்திருக்கிறது.அச்சுதன் நாயர் ஒருவகை ஆயுள்கைதி. இந்த சிறையிலேயே வாழ்ந்து இங்கேயே மடிந்தார். காவலனாக என்பதுதான் வேறுபாடு”

“இந்த டம்மியைச் செய்தவர் அச்சுதன் நாயர். நல்ல பருமனான மனிதனின் எடையும் அளவும்கொண்ட டம்மி வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஆசாரியைக்கொண்டு அதை மரத்தில் செய்யலாம் என்று யோசித்தனர். ஆனால் மரம் அவ்வளவு எடை கொண்டிருக்காது. அந்த அளவுள்ள எடை கொண்ட மரம் என்ன என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது அச்சுதன் நாயர் அவரே செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். சரி என்று சொல்லி ஆணை கொடுத்துவிட்டார்கள். ஒரே நாளில் அச்சுதன் நாயர் இந்த டம்மியைச் செய்தார். அவருக்கு அன்று அதற்குப் பரிசாக ஐந்து வெள்ளிச்சக்கரம் பரிசாக அளிக்கப்பட்டது. அன்று அது பெரிய பணம்”

“அச்சுதன் நாயர் இதை எப்படிச் செய்தார் என்று அவரே சொன்னார்.” என்றார் வற்கிஈஸ் மாப்பிள்லை “அவருக்கு சட்டென்று ஓரு யோசனை தோன்றியிருக்கிறது. இங்கே தூக்குபூட்டு என்று ஒரு சித்திரவதைக் கருவி உண்டு. நீ அதை இப்போதுகூட பல சிறைகளிலே பார்க்கலாம். இப்போது அதை பயன்படுத்துவதில்லை. அது இரும்பாலான ஒரு கூண்டு. மனித உடலின் அதே வடிவில் இருக்கும். அதற்குள் தண்டனைக்குள்ளானவனை போட்டு  பூட்டிவிடுவார்கள். மேலே உள்ள கொக்கியால் அவனை முச்சந்தியில் ஏதாவது மரத்தில் தொங்கவிடுவார்கள்”

“அந்தக் கூண்டு மனித உடலின் அளவே ஆனது. இறுக்கமாக அசையாமல் மனித உடலை நிறுத்திவிடும். தொங்கிக் கிடப்பதனால் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் நீர் முழுக்க கால்களிலும் கைகளிலும் தேங்கி வீக்கம் ஏற்படும். விளைவாக தசைகள் இரும்புக்கூண்டில் இறுகி உடலில் வலி தொடங்கும். அந்த வலி பெருகிப்பெருகி நாட்கணக்கில் நீடிக்கும். ஆனால் ரத்த இழப்பு இல்லை என்பதனால் மயக்கம் வராது. வலியை அறிந்தே தீரவேண்டும். அவன் பசியால் மயங்காமலிருக்க பதநீரை குடிக்கக் கொடுப்பார்கள். நிறைய நீர் உடலில்  இருந்தால் உடல் உப்புவதும் அதிகரிக்கும். மெல்லமெல்ல உடல் உடைந்து நீர் வழியும். காகங்கள் வந்து கொத்தி கிழிக்கும். பதினைந்து நாட்கள் வரை வலியால் துடித்து துடித்து உயிர்பிரியும்”

“இது நடப்பது முச்சந்திகளில்…” என்று வற்கீஸ் மாப்பிள்ளை கைகளை தூக்கி குரல் எழுப்பிச் சொன்னார். “யோசித்துப் பார், முச்சந்திகளில்! அதைக் கண்டு மற்றவர்கள் பயப்படவேண்டும். ராஜத்துரோகிகள் இப்படி தண்டிக்கப்பட்டார்கள். சாதிச்சுவர்களை தாண்டிய புலையர்களும் மலையர்களும் ஈழவர்களும் இப்படி தண்டிக்கப்பட்டார்கள்”

நான் பிரமைபிடித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த தூக்குபூட்டு கருவியை நான் பார்த்திருக்கிறேன். அந்த குடோன் அறைக்குள் கூட உடைந்துபோன ஒன்று இருந்தது.

“தூக்குபூட்டுக் கூண்டை எடுத்து உள்ளே நாலைந்து கல்குழவிகளை வைத்து அதன்மேல் துணியை இறுக்கமாகச் சுற்றி இந்த டம்மியை உருவாக்கினார். இது நூறுகிலோ எடை. ஆறரை அடி உயரம்”. என்றார் வற்கீஸ் மாப்பிள்ளை.

“இதை இப்போதும் தூக்கில் போடுகிறார்களா?”என்று நான் கேட்டேன்.

“ஆமாம். நூறாண்டுகளாக ஒவ்வொரு தூக்குக்குக்கும்  முன்னால் இதை தூக்கிலேற்றுவார்கள். கடைசியாக இப்போது சாமிநாதன் ஆசாரியை தூக்கிலேற்றும்போதுகூட இதை தூக்கிலிட்டோம்”

நான் அதை அறிந்திருக்கவே இல்லை.

“அதற்காகத்தான் அதை வெளியே எடுத்தோம். அதை எப்படிச் செய்வது என்றெல்லாம் எழுதிவைக்கப்பட்டுள்ளது. உண்மையான தூக்கு போலவே இதற்கும் எல்லா அதிகாரிகளும் வரவேண்டும். எல்லாமே உண்மையான தூக்கு போலவே நடைபெறவேண்டும். தூக்குக்கான ஆணையை நான் படிப்பேன். சாட்சிக்கு இரண்டு அதிகாரிகள் இருப்பார்கள். ஆராச்சாரும் உதவியாளனும் இந்த டம்மியை தூக்குமேடைமேல் ஏற்றி நிறுத்துவார்கள். நாங்கள் ஆணையிட்டதும் இதை உதவியாளன் பிடித்துக்கொள்ள ஆராச்சார் கழுத்தில் சுருக்கை மாட்டுவார். நான் ஆணையிடுவதற்கு முன்பு மற்றவர்களிடம் அனுமதி கேட்கவேண்டும். ஆணை இடப்பட்டதும் லிவர் இழுக்கப்படும். கீழே கதவு திறந்து ஓசையுடன் விழும். பள்ளத்தில் டம்மி விழுந்து தொங்கி சுழன்றுகொண்டு ஆடும்”

“உண்மையான மனிதனைப்போலவே அது ஆடும்” என்று வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். ”முப்பது நிமிடங்கள் அது கயிற்றில் அப்படியே தொங்கிக்கிடக்கவேண்டும் என்று ஆணை. அந்த முப்பது நிமிடங்களும் அங்கே நிற்பது ஒரு பெரிய அனுபவம். உண்மையான தூக்குக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. நம் கைகால்கள் பதறிக்கொண்டிருக்கும். சிறுநீர் வந்து முட்டும். கண்களில் இருட்டு படியும். அரைமணிநேரம் கழித்து அதை எடுப்பதற்கு கைகாட்டவேண்டும். கையை தூக்கவே முடியாது. உடல் பிணம்போல செயலிழந்து, வியர்த்துக் குளிர்ந்திருக்கும்”

“அதை இழுத்து சுருக்கை அவிழ்த்து படுக்கவைப்பார்கள். டாக்டர் சென்று அதை சோதனைசெய்வதுபோல பாவனை செய்யவேண்டும். அது செத்துவிட்டது என்று அறிக்கை அளிக்கவேண்டும். அதை நான் பதிவுசெய்யவேண்டும். எல்லாமே நாடகம். ஆனால் முறையாக நடிப்போம்” என்று வற்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். “நாடகம் ஒருவகையில் அந்த நிஜ நிகழ்வை விடக் கொடியது. மறுநாள் உண்மையில் ஒரு மனிதனை தூக்கிலிடும்போது அந்த அனுபவம் கொஞ்சம் பதற்றம் குறைவானதாகவே இருக்கும். அதை எண்ணி நான் வியந்திருக்கிறேன். அது ஏன் என யோசித்திருக்கிறேன். ஒருமுறை அதை நாம் நடித்துவிட்டதனால் மறுபடி நிகழும்போது பதற்றம் குறைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்”

”அந்த டம்மி மனிதனை விட பரிதாபத்திற்குரியது என்பதனால்கூட இருக்கலாம்” என்று நான் சொன்னேன் “அதை நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் தூக்கிலிடுகிறார்கள்”

வற்கீஸ் மாப்பிள்ளை திகைப்புடன் என்னைப் பார்த்தார். பிறகு “ஆமாம், எதற்கும் நீ அந்த டம்மியை தொடவேண்டாம்… அதை திரும்ப பழைய இடத்திலேயே வைத்துவிடு. இனி அடுத்த தூக்கு வருவது வரை நமக்கு அது தேவையில்லை”

“ஆமாம்” என்றேன்.

“அதில் என்னென்ன கெட்ட ஆவிகள் இருக்கின்றன என்று யார் கண்டார்?”என்றார் வற்கீஸ் மாப்பிள்ளை. அவருக்கு நாக்கு நன்றாக குழறத் தொடங்கிவிட்டிருந்தது. “இப்போது அந்த டம்மியை இறக்கி படுக்கவைத்துவிட்டு டாக்டரிடம் போய் பரிசோதனைசெய்ய சொன்னோம். அவர் போய் கையில் நாடிபார்ப்பதுபோல நடிக்கவேண்டும். கையை பிடித்ததுமே அவர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். உடம்பு நடுங்கியது. நான் என்ன என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று சொல்லி மீண்டும் நாடித்துடிப்பை பார்த்தார். அறிக்கையும் அளித்தார்”

”நாங்கள் டாக்டரின் காரில்தான் வீட்டுக்குச் சென்றோம். அவருடைய வீடு வழுதைக்காட்டில் இருந்தது. காரில் டாக்டர் அமைதியாக இருந்தார். பதறிக்கொண்டிருந்தார். நான் என்ன ஆயிற்று என்று கேட்டேன். பதில் சொல்ல மறுத்துவிட்டார்.  ஆனால் பத்துநாட்களுக்குப் பின்பு சொன்னார். அந்த டம்மியை அவர் நாடி பிடித்துப் பார்த்தபோது அதில் கொஞ்சம் துடிப்பு எஞ்சியிருந்தது என்று…”

[ 4 ]

“சேச்சே” என்று நான் சொன்னேன். “அந்தக்காலத்து ஆட்களின் மூடநம்பிக்கைகள்… குற்றவுணர்ச்சியிலிருந்து வருபவை அவை”

“இல்லை, நானும் அதில் ஏதோ குடியிருந்தது என்று நினைக்கிறேன்”என்று தாத்தா சொன்னார். “டாக்டர் சொன்னது உண்மை. அதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஏனென்றால் நானே அதை உணர்ந்திருக்கிறேன்”

நான் ஒன்றும் சொல்லவில்லை. தாத்தா அவரே பேசலானார். அவருடைய நினைவுகளும் உணர்வுகளும் கலந்து மழுங்கிய கிழக்குரலில் வெளிப்பட்டன

நான் அந்த டம்மியை குடோன் அறைக்குள் இருந்து எடுத்து பலமுறை பார்த்திருக்கிறேன். அதை மறுபடியும் பார்க்கவே கூடாது என்று நினைப்பேன். ஆனால் அதை என்னால் தவிர்க்கவே முடிந்ததில்லை. அந்த அறைக்குள் அது இருக்கிறது என்னும் உணர்வு என்னுள் இருந்தது. இருண்ட கருவறைக்குள் இருக்கும் தெய்வம்போல.

அது என்னை பார்த்தது. அதற்குக் கண்கள் இல்லை. கண்களால் பார்க்கத்தான் வெளிச்சம் தேவை. அந்தப்பார்வைக்கு இருட்டு மேலும் பொருத்தமானது. அது வாயற்றது, பேசமுடியாதது அல்லது பேசாதது. ஆகவே அதன் பார்வை கூர்மைகொண்டிருந்தது

அதை நான் முதலில் தொட்டபோது ஓர் அதிர்வை உணர்ந்தேன். ஆம், மெய்யாகவே உணர்ந்தேன். உயிருள்ள ஓர் உடலின் அதிர்வு அது. உயிரின் அதிர்வு. அந்த அதிர்வை உணர்ந்ததும் நான் கைகளை உதறிவிட்டு உளறியடித்தபடி அறையை விட்டு வெளியே ஓடிவிட்டேன். ஆனால் வெளியே வந்ததுமே நிதானமடைந்தேன். அதை என் கற்பனை என்று விளக்கிக்கொண்டேன். மீண்டும் உள்ளே சென்று அதன் கையைப் பிடித்துப்பார்த்தேன். அதே அதிர்வு இருந்தது.

இம்முறை நெஞ்சு உடைவதுபோல துடித்துக்கொண்டிருந்தாலும் என்னால் நிதானமாக அதை ஆராய முடிந்தது. சத்தியமாகச் சொல்கிறேன், எந்தக் கற்பனையும் இல்லை, அதில் உயிரின் துடிப்பு இருந்தது. அதுதானா அதுதானா என எத்தனையோ முறை சோதித்துப் பார்த்தேன். அது உயிரின் துடிப்பேதான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2021 11:35

ஆலயம், இறுதியாக…

ஆலயம் எவருடையது?

ஆலயம் ஆகமம் சிற்பம்

நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்

அன்புள்ள ஜெ,

ஆலயங்களை விட்டு அரசு வெளியேறவேண்டும் என்பது நெடுங்காலமாக விஸ்வஹிந்து பரிஷத் முன்வைத்த கோரிக்கை. மறைந்த பெரியவர் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி அவர்களும் இதை சொல்லியிருக்கிறார். இவற்றையே இன்று ஜக்கி வாசுதேவ் அவர்கள் சொல்லிவருகிறார்கள். ஒரு மக்களியக்கமாக ஆரம்பித்திருக்கிறார்கள்.

நீங்கள் இன்று ஆலயப்பாதுகாப்புக்கென ஆலோசனை சொல்வீர்கள் என்றால் என்ன சொல்வீர்கள்?

அர்விந்த் குமார்

அன்புள்ள அர்விந்த்குமார்,

விஸ்வஹிந்து பரிஷத் இந்தக்கோரிக்கையை நாற்பதாண்டுகளாக எழுப்பி வருகிறது. எனக்கு நாற்பதாண்டுகளாகவே அவ்வியக்கத்தை அணுகியமர்ந்து நோக்கும் வாய்ப்பும் அமைந்தது. அதிலிருந்தே ஆலயங்கள் தனியாரிடம் செல்லவே கூடாது என்றும், இந்து பக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு அதற்கான அறத்தகுதியோ அறிவுத்தகுதியோ இல்லை என்றும் புரிந்துகொண்டேன்.

விஸ்வஹிந்து பரிஷத்தும் சங்கர மடமும் நிறுவிய இந்துமதம் சார்ந்த அமைப்புக்கள் எப்படிச் செயல்படுகின்றன, எந்நிலையில் இருக்கின்றன என்று ஒரு பொதுப்பார்வை பார்த்தாலே போதும். உண்மை நிலவரம் புரியும். அந்தக் கசப்புநிறைந்த உண்மைகளுக்குள் செல்ல விரும்பவில்லை.

இந்துபக்தர்கள் என்பது மிகப்பொதுவான வார்த்தை. எத்தகைய பக்தர்கள்? நேற்றுவரை ஆலய அதிகாரம் கொண்டிருந்தவர்களா? இன்று ஆலயவழிபாட்டுக்கு வந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் அடித்தள இந்துக்களுக்கு என்ன இடம் அதில்? நேற்றுவரை இந்து ஆலயங்களைச் சூறையாடிய பரம்பரை அறங்காவலர்களும் ஆலயநிலங்களை உரிமைகொண்டவர்களும் இந்து பக்தர்களா? அவர்கள் நாளை அமைப்புக்களை கைப்பற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? சாமானிய இந்துக்களுக்கு இதில் என்ன பங்கு?

இன்று இந்துக்கள் நடுவே வரவேண்டிய விழிப்புணர்வு இதுதான். பலமுறைச் சொன்னதைத் திரும்பச் சொல்கிறேன்.

அ. ஆலயங்களை பராமரிக்கவேண்டியது அரசின் பொறுப்பு. ஏனென்றால் ஆலயத்தை பராமரிப்பதற்கு அளிக்கப்பட்ட நிலங்களை பிறருக்கு கையளித்து ஆலயங்களைக் கைப்பற்றிக்கொண்டது அரசுதான். ஆகவே ஆலயநிதி வேறெதற்கும் பயன்படுத்தப்படலாகாது. அரசு மேலும் நிதியொதுக்கி ஆலயங்களை பராமரிக்கவேண்டும்.

ஆ. ஆலயநிலங்கள், சொத்துக்கள் கைப்பற்றப்படவேண்டும். உரியமுறையில் குத்தகை வசூலிக்கப்படவேண்டும். அதற்கான தனி சட்ட அமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும்

இ. ஆலய ஊழியர்களை அரசூழியர்களாக ஆக்கவேண்டும். பெரிய ஆலயங்கள் சிறிய ஆலயங்கள் என அனைத்து ஊழியர்களையும் அரசூழியர்களாக ஆக்கவேண்டும். இயலாத விஷயம் அல்ல. நம்மைவிட வருமானம் குறைவான ஆலயங்கள் கொண்ட கேரளத்தில், கம்யூனிஸ்டு ஆட்சியாளர்களால் அது நடைமுறைப்படுத்தப்பட்டு அரைநூற்றாண்டாகிறது.

ஈ. ஆலயத்தின் அமைப்பு சற்றும் மாற்றப்படலாகாது. ஆலயத்தில் புதிய கட்டுமானங்கள் எழுப்பப்படலாகாது. ஆலயத்தை மாற்றியமைக்க ஆகம- சிற்பநூல் வல்லுநர்களின் ஆலோசனை தேவை. அதில் மத்திய தொல்லியல்துறையின் நெறிகள் கடைப்பிடிக்கப்படவேண்டும்

உ. ஆலயத்திற்குள் வழிபாட்டு நெறிகள் மட்டுமல்லாது நடத்தை நெறிகளும் கடைப்பிடிக்கப்படவேண்டும். ஆலய அழிவை உருவாக்கும் எந்த செயலும் உறுதியாக கட்டுப்படுத்தப்படவேண்டும்.

ஊ. ஆலயத்திற்குள் பெருங்கூட்டம் வருவது கட்டுப்படுத்தப்படவேண்டும். ஆலயக் கட்டுமானம் அத்தகைய மாபெரும் திரளுக்கு உகந்தது அல்ல. அப்படி கூட்டம் வரும்போது கட்டுப்படுத்தும்பொருட்டு அமைக்கப்படும் மூங்கில் கட்டுமானங்கள், இரும்பு கட்டுமானங்கள் சென்ற இருபதாண்டுகளாக ஆலயங்களை அழிக்கின்றன.

பலகாலமாக நான் சொல்லிவருவன இவை. ஒருமுறை நண்பர் ஒருவர் முயற்சியால் துண்டுப்பிரசுரமாகவும் வெளியிடப்பட்டவை. அரசியல் காழ்ப்பாளர்கள், வெறுப்புமொழியர்களின் சலசலப்பைக் கடந்து, ஆலயத்தை கைப்பற்ற நினைக்கும் தன்னலமிகளின் கூற்றுக்களை கடந்து, இச்செய்தி சிலரையாவது சென்றுசேர இந்த விவாதம் உதவினால் நல்லது.

ஜெ

ஆலயம் கடிதங்கள்-2

ஆலயம் கடிதங்கள் 3 

ஆலயம் கடிதம் 4

ஆலயம் கடிதம்-5

ஆலயம் விவாதம் மேலும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2021 11:33

கோவை சந்திப்பு நினைவுகள்

கோவை வாசகர் சந்திப்பு, மார்ச் 2021

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு.

வாசிப்பு அகச்செயல்பாடு. அது உருவாக்கும் உணர்வெழுச்சி மிக தீவிரமானது. நமது ரசனைகளை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாத நிலை சோர்வடைய செய்வது. அந்த உளநிலையை  மாற்றும் பொருட்டு நீங்கள் உங்கள் வாழ்வில் இலக்கிய  வாசகர்களை சந்தித்து கொண்டு இருக்கிறீர்கள். அது உருவாக்கும் தீவிரமான உள்வட்டம் மிகவும் பெரிதாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (20,21 மார்ச் 2021) நடைபெற்ற முதல் வாசகர் சந்திப்பில் நான் பங்குபெற வாய்பளித்தமைக்கு நன்றிகள்.

நீங்கள் கொண்டிருக்கும் செயலூக்கத்தினை காண்பதற்காகவேனும் ரெண்டு நாட்கள் எல்லா வாசகர்களுக்கும் வாய்க்க வேண்டும். 20ஆம் தேதி காலை 9.30 யிலிருந்து 21ஆம் தேதி மாலை 3 மணி வரை நீங்கள் நிகழ்த்திய உரையாடல், இந்த இரு நாட்கள் வந்திருக்கும் அத்தனை வாசகர்களுக்கும் இலக்கிய தளத்தில்  புதிய திறப்புகளையும், முக்கிய அடிப்படைகளையும் அளிக்க வேண்டும் என்கிற தீவிரம் மலைக்க வைத்தது. ஒரு தொடர் செயல்பாடாக இலக்கியத்தில் நிகழும் இந்த அறிவு பகிர்தல் உங்கள் வழி எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.

வாசிப்பில் நிகழும் முக்கிய செயலான தவறான தொடர்புறுத்தல் ( Association Fallacy) பற்றி நீங்கள் கூறிய விளக்கம் இனி வாசிப்பின் ஊடாக வரும் கவன சிதறலை தவிர்க்க உதவும். அது உருவாக்கும் பிழை , வாசிப்பில் ஏற்படும், நிகழ்வில் வாழும் அனுபவத்தை (Live in the Situation)இல்லாமலாகிவிடும்.

ஒரு விவாதத்தில் மைய  கருத்தை (Frame of Focus)  பற்றிய உரையாடலில் விவாதம் அதன் மையத்தை விட்டு விலகாமல் இருக்க வேண்டிய அவசியத்தை தெளிவாக விளக்கினீர்கள். பேசப்படும் கருப்பொருளின் உயர்வான தொடர்பனாலும் ( High Association) மலிவான தொடர்பாக இருந்தாலும் ( low association ) விவாதத்தின் மட்டுறுத்துனரால் மறுக்கப்பட்டு விவாதத்தின் மையத்தோடு இயைந்து செல்வது தான் தெளிவான தீர்வு தரும் விவாதமாக அமையும் என்பதையும் விளக்கினீர்கள்.

ஒரு உரையாடலில் பார்வையாளருக்கு உள்ள முக்கிய தடுமாற்றங்களை தவிர்க்கும் காரணிகளை  இந்திய குருகுல மரபில் எவ்வாறு பழக்கி கொண்டுள்ளார்கள் என கூறினீர்கள். பேச்சாளருக்கு முன் அமர்ந்து உள்ள பார்வையாளன் மூன்று காரணிகளால் சிதறப்படுகிறான் ஆணவம் (Ego), அனுபவம் ( Experience ) உணர்ச்சிகள் (Emotion). ஒரு உரை நம்மை அடையும் போது அதில் கூறப்படும் கருத்துகளால் நாம் உள்ளுக்குள் சீண்டப்பட்டு பேச்சாளரை மனதில் நம் பதில்களால்   மறுத்து கொண்டே இருத்தல் ஆணவ சிதறல் ( Ego Scattering ). உரையில் வெளிப்படும் கருத்துகளில் நம் அனுபவங்களை செலுத்தி அதில் மூழ்கிப் போதல் அனுபவ சிதறல்  ( Experience Scattering ) . உரையோடு  உணர்ச்சிகரமாக நம்மை இணைத்து கொண்டு நெகிழ்வடைதல் உணர்வு சிதறல் (Emotion Scattering ) . இந்த மூன்று காரணிகளையும்  பார்வையாளன் முழுமையாக தவிர்க்கும் போது தான் மனதில் சிந்தனைகள் எழாமல் ஒரு உரையை முழுமையாக உள்வாங்க முடியும். நிச்சயம் இந்த திறப்பு எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

புதிய வாசகர்களின் படைப்புகள் பற்றிய விவாதத்தில், படைப்பின் அமைப்பில் ( Craft Structure ) நிகழும் தவறுகளை விளக்கினீர்கள். படைப்பு அதன் கூறுமுறையை மாற்றி கொண்டே இருப்பது அதன் வடிவ ஒருங்கை சிதைக்கும் மற்றும் வாசகனின் வாசிப்பில் பெரும் சவாலை ஏற்படுத்தும். ஒரு படைப்பில் ஒரு நிகழ்வுக்கும் மற்றொரு நிகழ்வுக்கும் இடையில் உள்ள ஒழுக்கு (Transition ) இளம் படைப்பாளிகளுக்கு பெரும் சவாலாக அமைவது பற்றி கூறினீர்கள்.  Stitching Error (பிணைப்பு பிழை)  என்ற தவறு நிகழாமல் இருக்க படைப்பாளி உரையாடல்  (dialect) என்ற வடிவத்தை கதை மாந்தர்களுக்குள் நிகழ்த்தினாலொழிய ஒரு சிறந்த இலக்கிய படைப்பு உருவாக்க முடியாது என்று தெளிவுபடுத்தினீர்கள்.

ஒரு நல்ல எழுத்தாளராக உருவாக எழுத்து பயிற்சி தேவை  (practice) தினமும் அதற்கென நேரம் ஒதுக்கி செய்து கொண்டே இருப்பது தான் அடிப்படை பயிற்சி என்றும், அதன் பின் அந்த படைப்பை எந்த வகையில் வெளிப்படுத்த (Conceive) போகிறீர்கள் என்பதை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதை விளக்கினீர்கள்.  இறுதியாக படைப்பாளியாக நீங்கள் உருவாக்கும் படைப்பின் நோக்கம் ( Reason for work ) சமகாலத்தை காட்டுவதால் ( Contemporary ) , நேரடியான அனுபவம்  (Personal Experience)   மானுட உணர்ச்சிகளை கூறுவதால் ( HUman Emotions ) ஆகிய  மூன்று நோக்கங்களும் பெரும்பாலும் இளம் படைப்பாளிகள் கொண்டிருப்பார்கள். நிச்சயம் இந்த மூன்று காரணத்திற்காக இலக்கியம் படைக்க படலாகாது என்று கூறினீர்கள்.

படைப்பு உருவாக மூன்று அடிப்படை நோக்கங்கள் எழுப்பப்பட வேண்டும். அவை மானுடத்தை நோக்கிய கேள்வி (Quest) ,மானுடத்தின் உலகளாவிய பிரச்சனை (Problem) , தரிசனம் (Vision) இவையே படைப்பு உருவாவதற்கான ஆதார நோக்கமாக இருக்க வேண்டும் இந்த ஆதார நோக்கங்களை நாம் அறிவதற்கு தத்துவத்தின் மீது தேடலும் முறையான அறிவை கொண்டிருப்பதன் அவசியத்தை கூறினீர்கள்

தத்துவம் தேடலும், இலக்கிய தேடலும்  மானுடத்தின் தீரா கேள்விகளை நோக்கி தான்  கூட்டி செல்கிறது.ஆனால் தத்துவம் நேரடியாக சிந்தனைகளின் (ideas ) வழியாக தர்க்கபூர்வமாக இயங்குகிறது. இலக்கியமோ புனைவின் (Fiction ) வழியாக மொழியில் வனைந்து  படிமங்கள் (Images), குறியீடுகள் (Metaphor), உருவகம் (Allegory ) என பல கருவிகளின் உதவியோடு வெளிப்படுகிறது. இலக்கியம் தத்துவ கேள்விகளை தவிர்த்து வெளிப்படும் போது கலைப்படைப்பாக மட்டும் நிலைக்கிறது , அதுவே தத்துவ கேள்விகளை நோக்கி எழுதப்பட்ட இலக்கியங்கள் அனைத்தும் காலம் கடந்து நிற்கும் செவ்வியல் படைப்புகளாக வரலாற்றில் நிலை பெறுகின்றன என்று கூறினீர்கள்.

எழுத்தாளன் இளமையில் அனுபவித்த பாடுகள் அவனை எழுத்தை நோக்கி செலுத்த அல்லது அந்த அனுபவங்கள் உள விசையை உருவாக்கும் காரணியாக இருப்பது முழுவதும் முக்கியமில்லை என்றும் , வெறும் யதார்த்தவாத படைப்புகளுக்கு அந்த நாட்களின் நினைவுகள்  உதவியாக இருக்கலாம் ஆனால் நாம் வாழ்ந்திராத ஒரு காலகட்டத்தை, மானுட அவலத்தை அதன் தீவிரத்தை எழுதிய பேராசான்கள் பல பேர் கடின வாழ்க்கை   வாழாதவர்கள் தான் என்று கூறினீர்கள்.  பெரும் நிகழ்வுகள் தான் உண்மையில் இலக்கியத்திற்கான கருப்பொருளாக கொள்ள வேண்டும், அது தான் எழுத்தாளன் இந்த சமுகத்திற்கு ஒரு கருவியாக இருந்து கடந்த காலத்தை அதன் மகத்துவத்தை அது வழி வரும் பண்பாடு, மரபு, கலாச்சாரத்தை அளிப்பதாக அமையும். எழுத்தாளனாக நாம் வெறும் குமிழியாக தான் இருக்கிறோம், ஆனால் நம்மால் உருவாக்கப்பட்ட அந்த படைப்பு ஒரு மலையென சமூகத்தில் நிலை பெற்றுவிடும்  என்றீர்கள்.

எழுத்தாளன் தன் சொந்த நிலத்தை சுற்றியே புனைவை உருவாக்குதல் அந்த நிலம் அதை சுற்றியுள்ள இடங்கள் வாழ்வோடும் நினைவுகளோடும் நெருங்கிய தொடர்புடையது. நாளடைவில் அந்த இடங்கள்  குறியீடுகளாக மாறி மனதில் தங்கி விடுவது தான் புனைவு எழுத்தாளனுக்கு உதவியாக இருக்கிறது என்றும்,நாம் அதிக நாட்கள் புழங்காத  வேறு ஒரு நகரத்தை குறியீட்டு அடையாளமாக மாற்ற முடியாது என்றும் கூறினீர்கள்.

கவிதை பற்றிய உரையாடலில், நல்ல மொழிபெயர்ப்பு கவிதை படைக்க, நேரடியான மொழிபெயர்ப்பை முதலில் வடித்து கொண்டு பின் அந்த வடிவத்திலிருந்து வார்த்தைகளை குறைத்து கவித்துவமான வரிகளில் அதிலிருந்து ஒரு கவிதையை படைத்தால் மொழிபெயர்ப்பு செறிவு உள்ளதாக இருக்கும் என்றீர்கள். கவிதை அடுத்த அடுத்த வரிகளில் தாவி தாவி மேலே சென்று கொண்டிருக்க வேண்டும், அதனால் எப்போதும் எளிமையான தளத்திலிருந்து ஒரு பிரம்மாண்ட தளத்தை நோக்கி கவிதையை செலுத்துதல் சரியான வடிவமாக இருக்கும். கவிதை என்றும் வரிகளால் தான் நினைவுகூரப்படுகிறது எனவே கவிதை மொழி எப்போதும் கூர்மையாக இருக்க வேண்டும் என்று கூறினீர்கள்.

இரண்டு நாட்களும் உங்கள் தனிப்பட்ட வாழ்வனுபவங்கள், உங்கள் பயண நாட்கள் பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டவை அனைத்தும்  வாசகனாக, எழுத்தாளனாக புதியவர்கள் இலக்கியத்தினை  தீவிரமாக அணுக வேண்டியதன் அவசியத்தை பற்றி தெரிந்து கொள்ள பெரும் உதவியாக இருந்தது.

இரண்டு நாட்களும் அழகான ஒரு இயற்கை சூழலில் எந்த சமரசமும் இல்லாமல் மிக நேர்த்தியாக  இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்திய அனைவருக்கும்   மனமார்ந்த நன்றிகள். இந்த இலக்கிய சந்திப்பில் நமது ரசனை சார்ந்த ஒரு நட்பு வட்டம் உருவாகிறது.  நிறைவான இரண்டு நாட்களை என்  வாழ்வில் உருவாக்கி தந்த உங்களுக்கு எப்போதும் என் நன்றிகள்.

என்றும் வாசிப்புடன்

சரவணன்

புதியவாசகர் சந்திப்பு கோவை- கடிதம்

புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை

புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2021 11:32

பொலிவதும் கலைவதும்

இத்தொகுதியில் உள்ள கதைகளின் பொதுத்தன்மை என்பது இதன்தலைப்புக்கதையின் பெயராக உள்ளது. பொலிவதும் கலைவதும். வாழ்க்கையை, ஓர் அகவை வரை வந்து திரும்பிப்பார்க்கையில் தோன்றும் வரி அது. ஒரு மந்திரம் போலச் சொல்லிக்கொள்ளலாம். பொலிவதும் கலைவதுமென அனைத்தும் திகழும் ஒரு காலச்சரடின் பெயரே வாழ்க்கை. இக்கதைகள் வெவ்வேறு பொலிதல்களை கலைதல்களை முன்வைக்கின்றன.

சிறுகதை என்னும் வடிவம் ‘துளிகளில் முழுமையை கண்டடையும் பொருட்டு’ உருவாக்கப்பட்டது என்பார்கள். சிறுகதைகளின் முன்னோடிகள் அவ்வண்ணம் அழகிய முத்துக்களை உருவாக்கியிருக்கிறார்கள். நான் சிறுகதையை அழுத்திச் செறிவாக்கி எடைமிக்க ரசத்துளியாக மாற்றப்பட்ட நாவல்கள் போலவும் எழுதியிருக்கிறேன். துளியில் பொலிந்தெழுவதாகவும் எழுதியிருக்கிறேன். ஆட்டக்கதை முதல்வகையானது. முதல் ஆறு இரண்டாம் வகையானது.

இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு,பிரிவு,கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை.

சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]

இந்நூலை என் பிரியத்திற்குரிய சுசித்ரா ராமச்சந்திரனுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெ

பொலிவதும் கலைவதும் வாங்க

***

வான்நெசவு முன்னுரை ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை தேவி – முன்னுரை ஐந்து நெருப்பு முன்னுரைபொலிவதும் கலைவதும் முன்னுரை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2021 11:31

‘குருதிச்சாரல்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 16 ஆவது நாவல் ‘குருதிச்சாரல்’. ‘சாரல்’ என்பதைத் ‘தெறித்தல்’, ‘சிதறுதல்’ என்று பொருள்கொள்ளலாம். மழைத்துளிகள் சிதறுவதை ‘மழைச்சாரல்’ என்போம். அதுபோலவே, ‘குருதிச்சாரல்’ என்பதை, குருதித்துளிகள் சிதறுதலை, குருதித்துளிகள் விலகுதலை, குருதித்துளிகள் ஓர்மையறுவதைக் குறிப்பதாகக் கருதலாம்.

இந்த நாவலில் இரண்டு முதன்மையான கூறுகள் உள்ளன.

ஒன்று – அரசக் குருதியுறவுகள் சிதறுதல்.

இரண்டாவது – அரண்மனை அகத்தளங்களில் வாழும் அரசகுடிப் பெண்களின் எழுச்சி.

குருவம்சத்தின் குருதி சிதறுகிறது. அதிலும் திருதராஷ்டிரரின் குருதிவழியினர் அவரை விலக்குகின்றனர். கௌரவர்கள் பாண்டவர்களை விலக்குகின்றனர். பாண்டவர்களின் பிறப்பும் அது சார்ந்து குந்தியின் கற்பும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

திருதராஷ்டிரர் இசையைக் கேட்பதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, நாற்கரம் ஆடக் கற்றுக்கொள்ளுதலும் தனக்குத் தானே ஆடி மகிழ்தலும் ஒரு குறியீடாகவே படுகிறது. அவர் இசைகேட்ட காலங்களில் அவர் உள்ளத்தளவில் முழுமையாகவே அஸ்தினபுரியைவிட்டு விலகியே இருந்தார். அவர் நாற்கரம் ஆடத் தொடங்கியதும் அவரின் உள்ளம் முழுமையாகவே அஸ்தினபுரிக்குள் புகுந்துகொண்டது.

அதன் பின்விளைவாகவே அவர் சஞ்சயனை மறைமுகமாகப் பாண்டவர்களிடம் தூது அனுப்புகிறார். அது ‘மன்றாட்டு’ என்ற போர்வையில் விடுக்கப்பட்ட ஆணைதான். அந்த ஆணையின் முதன்மைநோக்கம் தன் குருதிவழியினரைக் காப்பதே. அதன் துணைமை நோக்கம் அஸ்தினபுரியின் ஆட்சிக்குட்பட்ட பெருநிலத்தை எவ்வகையிலும் பங்கிடுவதைத் தடுத்தலே.

அந்த ஆணையைப் பீமன்,

எந்தை இட்ட ஆணை என்னை முழுக்க ஆள்வதே. குலமூதாதையெனத் தருக்கி நின்று அவர் சொல்லியிருந்தால் அதை உதறி முன்சென்றிருப்பேன். குலத்தின்மேல் சொல்லாண்மை அற்றவர் குலமூதாதை என்று ஆணையிடும் உரிமையற்றவர். குடிமூத்தார் என்றும் அவர் நின்று ஆணையிடமுடியாது , ஏனெனில் , குடிநெறியனைத்தையும் கைவிட்டுவிட்டு அங்கு அமர்ந்திருக்கிறார். ஆனால், மைந்தரை முன்வைத்து எளிய தந்தையென்று அவர் கூறிய சொல் என்னை முற்றிலும் ஆள்கிறது. எந்தையின் கண்ணீரை அருகிலெனக் காண்கிறேன். அதற்கப்பால் ஒரு சொல்லும் என்னுள் இல்லை

என்று கூறி ஏற்கிறான். அந்த ஆணைப் பாண்டவர்களுக்கு எத்தகைய இழப்பினை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் எந்த நிலையிலும் திருதராஷ்டிரருடனான குருதியுறவைப் பேணவே விரும்புகிறான்.

இளைய யாதவரின் முதற்தூதால் திருதராஷ்டிரரின் அந்த மறைமுகத் தூது வெட்டவெளிச்சமாகிறது. அப்போது திருதராஷ்டிரர் தன் மகன்களிடம்,

“என் மைந்தரே , உங்கள் உடன்குருதியினரிடம் எந்நிலையிலும் பூசலிடாதிருங்கள். எதன்பொருட்டும் அவர்களுக்கு எதிராக உங்கள் படைக்கலங்கள் எழக்கூடாது. உங்கள் கையால் அவர்களின் குருதி சிந்தக்கூடாது. அவர்களின் மைந்தரும் மைந்தர்மைந்தரும் உங்களுடையவர்களென்றே ஆகுக! அதுவே , விண்ணமைந்த நம் மூதாதையர் உகக்கும் செயல். நம் குடியினருக்கு நலம்பயப்பது. நம் கொடிவழியினர் தழைக்க அடிகோலுவது. அளி கூர்க! தந்தைக்குப் புன்கொடையென இதை அளியுங்கள் , என் குழந்தைகளே !

எனறு மன்றாடுகிறார். ‘பிறர் கேட்டும் கொடுக்கவில்லை’ என்ற நிலையில் அந்தக் கொடையைப் ‘புன்கொடை’ என்று சொல்லலாம். துரியோதனனிடம் பலவகையிலும் பலரும் மன்றாடியும் அவன் கொடுக்கத் தயங்கும் கொடையினைத் தனக்குப் புன்கொடையாகத் தருமாறு திருதராஷ்டிரர் வேண்டுகிறார்.

சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே நிகழ இருந்த பெரும்போரைத் தவிர்ப்பதற்காகக் கோவூர்கிழார் முயன்ற செயலை நாம் இங்கு ஒப்புநோக்கலாம்.

“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன் ;

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!

நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே ; நின்னொடு

பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே ;

ஒருவீர் தோற்பினும் , தோற்ப நும் குடியே ;   

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே ; அதனால் ,

குடிப்பொருள் அன்று , நும் செய்தி ; கொடித்தேர்

நும்மோர் அன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி உவகை செய்யும் , இவ் இகலே! ” (புறநானூறு, பாடல் எண்- 45.     

இந்தப் பாடல் முற்றுகை இட்டிருக்கும் நலங்கிள்ளிக்கும் முற்றுகைக்குள்ளே இருக்கும் நெடுங்கிள்ளிக்கும் கூறும் அறிவுரையாக அமைந்துள்ள பொதுப் பாடல். உன்னை எதிர்ப்பவன் பனம்பூ மாலை சூடிய சேரனும் அல்லன். வேப்பம்பூ மாலை சூடிய பாண்டியனும் அல்லன். உன் கண்ணியும் உன்னை எதிர்ப்பவன் கண்ணியும் சோழர் குடிக்கு உரிய ஆத்திப்பூ. இருவரில் யார் தோற்றாலும் தோற்பது உன் குடியே என்கிறார் புலவர் கோவூர்கிழார்.

கௌரவரோ, பாண்டவரோ இருதரப்பில் யார் அழிந்தாலும் அழிவது ‘குருவம்சத்தின் குருதியினரே!’ என்பதால்தான் திருதராஷ்டிரர் இந்த மன்றாட்டினைத் தம் மைந்தரிடம் முன்வைக்கிறார்.

துரியோதனன், ‘பெருநிலத்தைத் தானே முழுதாள வேண்டும்’ என்ற மண்ணாசையால், தன் நோக்கத்திற்குத் தடையாக இருக்கும் தன் தந்தையின் குருதியுறவைத் தன்னிலிருந்து முற்றாக விலக்கவும் கலிதேவனுக்குத் தன்னை முழுதளிக்கவும் முன்வருகிறான்.

திருதராஷ்டிரர் தனக்கும் தன் மகனுக்குமான குருதியுறவைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகவே துரியோதனன் செய்த, செய்கிற, செய்யவுள்ள அனைத்துக் கீழ்மைகளுக்கும் அனுமதியளிக்கிறார். பாண்டவர்களைக் கொன்றொழிக்கவும் நாட்டைத் துரியோதனனே முழுதாளவும் உளம்விரும்பி ஆணையிடுகிறார்.

ஆனாலும், துரியோதனன், ‘திருதராஷ்டிரர் தனக்குத் தந்தை அல்லர்’ என்ற நிலைப்பாட்டினை எடுத்து, தன்னைக் கலிதேவனுக்கு முழுதளித்தவுடனேயே திருதராஷ்ரர் வேறு வழியின்றி, தன் தம்பி பாண்டுவின் குருதிவழியினரைக் காப்பதற்காக, சஞ்சயன் வழியாக மறைமுகமாகப் பாண்டவருக்கு அளித்திருந்த ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்.

ஆக, இறுதிக்காலத்தில் திருதராஷ்டிரர் ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய ஏதாவது ஒரு குருதிவழியினரைப் பேணிக்கொள்ளவே விரும்புகிறார். அவரின் முதன்மை நோக்கம் கௌரவர்களைக் காப்பது. துணைமை நோக்கம் பாண்டவர்களைக் காப்பது.

இறுதிக்காலத்தில் திருதராஷ்டிரரிடம் ‘அறம்’ என்பது, கானல்நீராகிவிடுகிறது. ‘பெருந்தந்தை’ என்ற நிலையில் இருந்து அவர் சறுக்கிவிடுகிறார். தன்னைத் ‘தந்தை அல்லர்’ என்று புறக்கணித்த துரியோதனனைப் பழிவாங்கவே தான் பாண்டவருக்குச் சஞ்சயன் வழியாக விடுத்திருந்த ஆணையைத் திரும்பப் பெறுகிறார் என்றே கருதவேண்டியுள்ளது. அதனை நாம் பாண்டவர்களின் மீதான பாசம் என்று எந்த நிலையிலும் கருதவேண்டியதில்லை.

‘பெருந்தந்தை’ என்ற நிலையிலிருந்த திருதராஷ்டிரர், குருதிப்பற்றால் சிறுமையடைந்து ‘வெறுந்தந்தை’யாகிவிடுகிறார்.

இதுநாள்வரை அரண்மனை அகத்தளங்களில் ஒருவகையில் அடிமைகளாகவே இருந்துவந்த அரசகுடிப் பெண்கள், தங்களின் மைந்தர்களின் உயிரைக் காப்பதற்காகப் போர்ரைத் தவிர்க்கவேண்டிப் பலவகையில் அரசுசூழ்கின்றனர்.

விழாக்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் மட்டுமே அரசவையில் அமர்ந்தவர்கள், தம் கருத்தாக எதையுமே இதுவரை பேசாதவர்கள் போரை முன்னிட்டுத் தம் கருத்துகளை முன்வைக்கத் துணிகின்றனர். அன்னையருக்குத் தம் மைந்தர் மீதிருக்கும் ‘பெரும்பற்று’ இதன் வழியாக நிறுவப்படுகிறது.

மற்றொரு வகையில், தம் மைந்தருக்கு நிலங்களைப் பெற்றுத்தரும் போராட்டத்தையும் அவர்கள் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த நாவலில் பேருருக் கொள்பவர்களாகத் தேவிகை, அசலை, துச்சளை, தாரை, பலந்தரை, விருஷாலி, சுப்ரியை, பிந்துமதி, கரேணுமதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் பேரன்னையராக உருவெடுக்க விரும்புகின்றனர். அதனை முன்னிட்டே தம் கணவன்மார்களைப் புறக்கணிக்கவும் தன் மைந்தர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு அளிக்கவும் அவர்கள் பின்னாளில் ஆள்வதற்குரிய நிலத்தை உறுதிசெய்யவும் துடிக்கின்றனர்.

தேவிகை பூரிசிரவஸிடம்,

“அன்னையராகிய நமக்கு நிலமில்லை , குலமும் குடியும் நகரும் கொடியும் ஒன்றுமில்லை. நாம் பெண்கள் , அன்னையர். பிறிதெவருமில்லை. அதை அவர்களிடம் சொல்லுங்கள். இதோ இந்திரப்பிரஸ்தத்தின் முடியுரிமைப்போரில் என் மைந்தன் களமிறங்குகிறான். நான் இந்திரப்பிரஸ்தத்தை j தெரிவு செய்யவில்லை. அவனை ஆக்கிய உயிர்த்துளியை விரும்பி ஏற்றுக்கொள்ளவுமில்லை. பானுவும் அசலையும் அவ்வாறே. இந்தப் போர் எங்களுடையதல்ல. ஆனால், இழப்புகளனைத்தும் எங்களுக்கே. எவர் வென்றாலும் தோற்பவர் அன்னையரே!”

என்கிறார்.

இரண்டாம்முறை தூதாக இளைய யாதவர் ஷத்ரிய அவைக்குச் செல்லும்போது, துரியோதனனால் பாண்டவர்களின் பிறப்பும் அது சார்ந்து குந்தியின் கற்பும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இதுகுறித்து, விகர்ணன் விருஷாலியிடம்,

ஷத்ரிய அவையில் இழிவுபடுத்தப்பட்டது நம் அன்னை மட்டுமல்ல, ஒரு குலமகள். இனிப் பிறக்கவிருக்கும் அஸ்தினபுரியின் அனைத்துப் பெண்டிரும் அவைச்சிறுமை கொண்டிருக்கின்றனர். இனி எந்த மன்றிலும் எந்த ஆணும் அன்னையையும் துணைவியையும் அவைக்கு வந்து தன் கருப்பைமுளைக்குப் புறச்சான்று சொல்க என்று ஆணையிட முடியும். எந்த மைந்தனையும் தாயைச் சொல்லி அவைவிலக்கு செய்ய முடியும். கீழ்மையை மானுடருக்குக் கற்பிக்க வேண்டியதில்லை. அதை அவர்களே நன்கறிவார்கள். அதைச் செய்யலாகாது என முன்னோர் அளித்த ஆணையை மட்டும் சற்று வேலியுடைத்துவிட்டால் போதும், திரண்டு பெருக்கெடுக்கும் நம் சிறுமதியும் தன்னலமும் பெருவிழைவும்.

என்று கூறுகிறான். மானுட மனங்களில் ததும்பும் கீழ்மைகளைப் பற்றிய விரிவான விளக்கமாகவே இதனைக் கொள்ள முடிகிறது. கீழ்மையுடையோர் மட்டுமே பேராசை கொள்கின்றனர். அவர்கள் தம் பேராசையை நிறைவுசெய்துகொள்ள எத்தகைய கீழ்த்தரமான செயல்களிலும் இறங்குவர் என்பதை இதன் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான இந்த மண்பங்கீட்டுச் சிக்கலில் இளைய யாதவர் தாமே விரும்பித் தலைகொடுக்கிறார். இதன் வழியாக அவர் தான் இந்த உலகில் வேதமுடிபு மெய்மைக் கொள்கையை நிலைநாட்ட விரும்புகிறார். தன்னுடைய வேதமுடிவுக் கொள்கை பற்றி,

இமயத்திலிருந்து எழுந்ததே கைலை மலைமுடி. ஆனால் புலரிப்பொன்னொளியில் வான்விரிவு அதை தான் எடுத்து மடியில் வைத்திருக்கிறது. வேதமுடிபு வேதமே. ஆனால் முழுமையின் மெய்யொளியில் அது வேதங்களுக்கும் மேல் விண்ணில் எழுந்து நிற்கிறது. வேதங்களை , வேதக்கூறுகளை , துணைவேதங்களை மதிப்பிடும் துலாவின் நடுமுள் அது. அறிவனைத்தும் வேதத்தின் ஒளியால் துலங்குபவை என்கின்றனர் முன்னோர். எனவே மானுட மெய்மை அனைத்தையும் அளவென்றாகி மதிப்பிட்டு , மையமென்றமைந்து தொகுத்து , ஒளியென்றாகி துலக்கி , வானின் ஒலியென்றாகி வழிகாட்டிச் செல்லும் தகைமை கொண்டது வேதமுடிபு

என்று கூறியுள்ளார் இளைய யாதவர்.

பாண்டவர்களின் பக்கம் நின்று கௌரவர்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாத நிலையில், பாண்டவர்கள் இளைய யாதவரையே விரும்பித் தேர்கின்றனர்.

இளைய யாதவர் பாண்டவர்களின் சார்பாகக் கௌரவர்களிடம் மும்முறை  தூதுசெல்கிறார். இது குறித்து அவர் பலந்தரையிடம்,

அரசி , எனக்கு மூன்று முகங்கள் என்று தாங்கள் அறிந்திருப்பீர்கள். யாதவக் குடிப்பிறந்தவன் என்ற வகையில் என் அத்தையின் மைந்தருக்காக முதலில் சொல்லுடன் சென்றேன். படைமுகம் நின்றவன் , நாடாண்டவன் என்னும் முறையில் ஷத்ரிய அவையில் சென்று சொல்சூழ்ந்து மீண்டுள்ளேன். இன்று சாந்தீபனி குருநிலையில் வேதம் முற்றோதிய முதலாசிரியன் என்ற முறையில் செல்ல எண்ணுகிறேன். இதுவே , என் முதன்மை முகம். என் முழு ஆற்றலும் இதிலேயே. இது வெல்லும்

என்று கூறுகிறார்.

இளைய யாதவர் பாண்டவர் சார்பாக மேற்கொள்ளும் மூன்றாவது தூதின் போது, வேள்வியில் வேள்விக்காவலராகத் துரியோதனன் அமரும்போது அவருக்குத் வேள்வித்துணைவராகக் கர்ணனை அமர்த்த வேண்டும் என்று சூழ்ச்சி  செய்கிறார்.  அந்தச் சூழ்ச்சியின் பின்னணியாக இளைய யாதவர்,

“வேதம் காக்கும் வில்லுடன் எழுந்து நின்றிருக்கும் அங்கநாட்டரசர் அவ்வண்ணம் இங்கு எழவிருக்கும் பல்லாயிரம் புதிய ஷத்ரியர்களின் முதல் வடிவம். அவர் அவையமர வேண்டும். வேள்விச்செயல் முடிக்கவேண்டும். அது பாரதவர்ஷத்திற்கே இப்பெருவேள்விநிலை அளிக்கும் செய்தியாக அமைய வேண்டும்”

என்று கூறுகிறார். ஆனால், இளைய யாதவரின் உள்ளத்தையும் அவரின் சூழ்ச்சியையும் நன்குணர்ந்த சல்லியர்,

இளைய யாதவர் மிகச் சிறப்பாகச் சொல்நகர்த்தி, சரியான புள்ளிக்குக் கொண்டுவந்துள்ளார். இன்று இந்த அவைக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. நாம் அங்கநாட்டரசரை வேள்வியவையிலிருந்து வெளியேற்றுவது. அதனூடாக நாம் நம் தரப்பில் வில்லேந்தவிருந்த மாபெரும் வீரர் ஒருவரை இழக்கிறோம். அல்லது அவரை அவையமரச் செய்யலாம். அதனூடாக நாம் ‘வேள்விக்காவலுக்கென முன்னோரால் அமைக்கப்பட்ட தொல்குடி ஷத்ரியர்களின் உரிமைக்காக எழுந்துள்ளோம்; வேதநெறி மாறாது காக்க உறுதிகொண்டுள்ளோம்’ என்பதை நாமே மறுக்கிறோம். அதன்பின் ஷத்ரியப் படைக்கூட்டே பொருளில்லாமலாகும். இரண்டில் எதைத் தெரிவு செய்தாலும் நாம் தோற்றவர்கள்; அவர் வென்றவர். இதில் அங்கர் வெளியேற்றப்பட்டால், நாம் இழப்பது சிறிது. போரில் எந்தத் தனிமனிதனும் இன்றியமையாதவன் அல்லர். பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமர், ஜயத்ரதர், துரியோதனர் என்னும் பெருவீரர்கள் நமக்கிருக்கிறார்கள். ஷத்ரியப் பெருவீரர் உடனிருக்கிறார்கள். கரையிலாப் பெரும்படை உள்ளது. நாம் வெல்வோம் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவரை வேள்விக்கு அமர்த்தினோமென்றால், நம் படை மெல்ல மெல்ல சிதறுவதை நம்மால் தடுக்கவே முடியாது. ஏனென்றால், தென்றிசை அரசர்கள் இப்போதே சைந்தவ, சாரஸ்வத, காங்கேய நிலத்தின் தொல்குடி ஷத்ரியர்கள் படைமுதன்மை கொள்வதை எண்ணி கசப்பும் அச்சமும் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இது வேத உரிமைகொண்ட ஷத்ரியர்களின் படைக்கூட்டு என்னும் சொல்லே நாம் சொல்லும் மறுமொழியாக உள்ளது. அதை மறுத்தால் இக்கூட்டைக் கட்டியமைத்திருக்கும் சரடு அறுபடுகிறது. பாண்டவர் தரப்பின் மிகப் பெரிய படைக்கலம் இளைய யாதவரின் நாக்கே என்பதில் ஐயம் தேவையில்லை

என்கிறார். வேள்வியிலிருந்து கர்ணன் வெளியேற்றப்படுகிறார். அவரின் இடத்தில் கௌரவர்களின் மச்சினன் ஜயத்ரதன் அமர்த்தப்படுகிறார்.

இளைய யாதவர் தான் பாண்டவர்களின் சார்பாக மேற்கொண்ட மூன்று தூதிலும் தோற்றவராகித் திரும்புகிறாரா? என்ற நமக்கு எண்ணத் தோன்றும். இல்லை. இந்த மூன்று தூதுகளின் வழியாகப் பாண்டவர்கள் எந்தநிலையிலும் போரை விரும்பவில்லை என்பதும் மண்மீதான கௌரவர்களின் பேராசையும் உலகறியச் செய்யப்படுகின்றன. கௌரவர்களின் படைத்தலைமையிலிருந்து கர்ணனை முற்றொதுக்கவும் முடிகிறது.

ஆனால், இளைய யாதவரால் தன்னுடைய வேதமுடிபுக்கொள்கையை நிலைநாட்ட இயலவில்லை. ஆனால், அதனை அவர் நிகழவுள்ள குருஷேத்திரப் போரின் வழியாக நிலைநாட்டிவிட இயலும்.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் இந்த நாவலிலும் தம்முடைய மிகச்சிறந்த உவமை வரிகளைப் பயன்படுத்தியுள்ளார். அதற்குச் சான்றாக,

“ஒற்றை ஓநாய் கால்தடம் நூல்தையல் வரி என ஓடிச்சென்று, பிணைத்த செவ்வலை ஏடுகளாலான பாலை மணல்வெளி. இமயமலைச்சரிவு மீது மெல்ல நகர்ந்து செல்லும் மலைமுகில் நிழல். குளிர்நீர்க் கோதையின் மீது அசைவற்று நின்றிருக்கும் முதலைவடிவப் படகுகள். ஏடுகளை அடுக்கி வான் வரை நிறுத்தியது போன்று அங்குள்ள கற்தட்டு மலைகள்”

என்ற இந்தப் பகுதியினைக் காட்டலாம்.

இந்த நாவலில் இடம்பெற்றுள்ள அரசகுடிப் பெண்களிடம் இரண்டு பொதுநலன் சார்ந்த கருத்துகளும் இரண்டு தன்னலம் சார்ந்த கருத்துகளும் இருப்பதைக் காணமுடிகிறது.

திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் தம் கணவன்மார்களைப் புறக்கணித்த பெண்களையும் நிகழவுள்ள பெரும்போரைத் தவிர்ப்பதற்காகத் தனிப்பட்ட முறையில் தூதினை மேற்கொள்ளும் பெண்களையும் போரில் தன் மைந்தரின் குருதிசிந்தப்படலாகாது என்றும் போருக்குப் பின்னர் தன் மைந்தர் ஆள நிலம் தேவை என்பதற்காகவும் பல வகையில் போராடும் பெண்களையும் இந்த நாவலில் காணமுடிகிறது.

இந்த நாவலில் முழுக்க முழுக்க அகத்தளப் பெண்களைப் பேச வைத்திருக்கிறார் எழுத்தாளர். அவர்களின் விழைவுகளின் வழியாகவே, அவர்களை அன்னையர் நிலையிலிருந்து பேரன்னையராக்க எழுத்தாளர் முனைந்துள்ளார்.

முனைவர் . சரவணன், மதுரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2021 11:30

July 7, 2021

இந்திய இலக்கிய வரைபடம்

அன்புள்ள ஜெ,

நலம் தானே.

How to Read a Book by Mortimer Adler புத்தகம் பற்றி பார்க்க நேர்ந்தது. அதன் இறுதியில், அவர் காலவரிசை படி மேற்கின் சிறந்த எழுத்தாளர்களையும், அவர்களின் முக்கியமான படைப்புகளையும் கொடுத்திருந்தார். அவர் குறிப்பிட்டு இருக்கும் நூல்களை படித்தால் மேற்கின் இலக்கியம், தத்துவம், அரசியல், அறிவியல் பற்றி நல்ல அறிமுகம் கிடைக்கும் என நினைக்கிறேன். ஆனால் கீழை மரபை பற்றி தனக்கு போதிய பரிச்சயம் இல்லாததால், அது பற்றிய நூல்களை குறிப்பிடவில்லை எனக்கூறியிருக்கிறார்.

ஒருவன் இந்த பாரத நிலத்தில் இன்று வரை நடந்த வரலாறு, இலக்கியம், தத்துவம், அறிவியல்,புவியியல்,அரசியல் பற்றி போதிய அறிமுகம் பெற வேண்டுமானால் அவன் என்ன நூல்களையெல்லாம் வாசிக்க வேண்டும்?

உங்களால் விடை கூற முடியும் என நம்புகிறேன்.

நன்றி

இப்படிக்கு,

சண்முகசுந்தரபாண்டியன் த

***

 

சிவராம காரந்த் கன்னடம்

எஸ்.எல்.பைரப்பா கன்னடம்

அன்புள்ள சண்முகசுந்தர பாண்டியன்,

மேற்கே இலக்கிய விமர்சனத்திற்கு இருநூற்றைம்பதாண்டுக் கால வரலாறுண்டு. தொடர்ச்சியாக ஏற்றும் மறுத்தும் இலக்கிய விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன. பட்டியல்கள் காலந்தோறும் போடப்படுகின்றன, மேலையிலக்கியம் சார்ந்து குறைந்தது நூறு பட்டியல்களையாவது நான் சேமித்து வைத்ததுண்டு. அவற்றிலிருந்து மீண்டும் ஒரு பொதுப்பட்டியலை உருவாக்குவது எளிது.

இந்தியச்சூழல் அப்படி அல்ல. இந்திய மொழிகளிலேயே சிறப்பான விமர்சன இயக்கம் இல்லை. பலமொழிகளின் விமர்சன அணுகுமுறையே இல்லை. இந்திய அளவில் ஓர் எழுத்தாளர் அறியப்படவேண்டுமென்றால் அவர் ஆங்கிலம் வழியாக பரவலாக சென்றடையவேண்டும்.

 

 

வைக்கம் முகம்மது பஷீர் மலையாளம்தகழி சிவசங்கரப்பிள்ளை மலையாளம்

அதற்கு இரு வழிகள். மைய அரசின் இலக்கியநிறுவனங்கள், கல்வித்துறை நிறுவனங்கள் ஒரு வழி. அவ்வாறு அறிமுகமாகும் முகங்களில் முக்கால்வாசிப்பேர் உள்ளீடற்றவர்கள். தொடர்புகள் வழியாக முண்டியடித்து உள்ளே நுழைந்தவர்கள். பெரும்பாலும் கல்வித்துறைப் பேராசிரியர்கள். அல்லது பேராசிரியர்களின் தயவைப் பெற்ற ஆழமில்லாத எழுத்தாளர்கள்.

நல்ல எழுத்தாளர்கள் அப்படி முண்டியடிப்பதில்லை. ஆகவே அவர்கள் மொழியாக்கம் செய்யப்படுவதில்லை, தேசிய அளவில் முன்வைக்கப்படுவதில்லை. என் புரிதலில் மலையாளம், வங்கம், கன்னடம், உருது மொழிகளில் இருந்து அறியப்படுபவர்கள் பெரும்பாலும் அங்குள்ள விமர்சன இயக்கத்தால் முன்வைக்கப்பட்டவர்கள்.

புதுமைப்பித்தன்

ஜெயகாந்தன்

இந்தியிலும், மராட்டியிலும் தமிழிலும் கலவையாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒப்புநோக்க இந்தியிலிருந்தும் தமிழிலிருந்தும் தேசிய அளவில் அறியப்படுபவர்கள் மேலோட்டமான படைப்பாளிகள்தான். யோசித்துப்பாருங்கள் இந்தியாவின் இலக்கியப் பேருருவங்களின் வரிசையில் தமிழிலிருந்து நாம் கொண்டு வைக்கும் பெயர் அகிலன். தமிழிலேயே இன்று அவரை பொருட்படுத்த எவருமில்லை.

தெலுங்கு, பஞ்சாபி, ஒரியா, அஸாமி மொழிகளில் இருந்து பெரும்பாலும் மொக்கைகளே தேசிய அளவில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களைக்கொண்டு அந்த மொழி இலக்கியத்தை மதிப்பிட்டால் அது மிகப்பெரிய அநீதியாக ஆகிவிடும். உதாரணமாக கன்னட இலக்கியத்தின் மகத்தான முகம் எஸ்.எல்.பைரப்பா. ஆனால் அவருக்கு ஞானபீடம் அளிக்கப்படவில்லை. சந்திரசேகரக் கம்பார் என்ற அரைவேக்காட்டுக் கவிஞர் ஞானபீடம் பெற்றார். எளிய அரசியல் நாடகங்களை எழுதிய கலைஞர் கிரீஷ் கர்நாட் ஞானபீடம் பெற்றார்.

பிரேம்சந்த் இந்தி

கிரிராஜ் கிஷோர்- இந்தி

இன்னொரு வழி, வணிகப்பிரசுரங்கள் வழியாக வரும் இந்தியமொழி இலக்கியங்களின் மொழியாக்கங்கள். ஆனால் மிகமிகமிக அரிதாகவே வணிகப்பிரசுரங்கள் தரமான இலக்கியங்களை வெளியிடுகின்றன. பெரும்பாலும் அவர்கள் வெளியிடுவது இந்தியாவின் கல்வித்துறைவாசிப்பை நம்பித்தான். இந்திய பல்கலைகழகங்களில் ஆங்கிலம் வழி இலக்கியம் கற்கும் பல ஆயிரம் மாணவர்களே இலக்கு.

ஆகவே விளிம்புநிலைக் கதையாடல், தலித் எழுத்து, பெண்ணிய எழுத்து என்றெல்லாம் எளிதில் ‘லேபில்’ குத்தப்படும் எழுத்துக்களையும், பெருமாள் முருகன் போல சர்ச்சைக்கிடமான எழுத்துக்களையுமே வெளியிடுகிறார்கள். அவையே பாடத்திட்டத்திற்கும் உகந்தவை. ஓரளவு வெளியேயும் வாசிக்கப்படுகின்றன.

குர்ரத்துலைன் ஹைதர் உருது

ராஜேந்திரசிங் பேட்டி [உருது]

இந்திய ஆங்கில இதழ்களில் இலக்கியரசனையுடன் மதிப்புரை எழுதுவோர் எவருமே இல்லை. பெரும்பாலும் அனைவருமே இதழாளர்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் எளிமையான அரசியல் வாசிப்பு. அதில் தேறும்படைப்புகளையே அவர்கள் முன்னிறுத்துவார்கள். அவ்வகையிலேயே பிரசுரங்களும் நூல்தேர்வை நிகழ்த்துகின்றன.

இப்பதிப்பங்களின் நூல்கள் வழியாக நாம் இலக்கியப் புரிதலை அடைந்தால் தமிழின் முகங்கள் பெருமாள் முருகன், சல்மா, இமையம் போன்றவர்கள். அவர்கள் மிக மிக எல்லைக்குட்பட்ட படைப்பாளிகள். அவர்களைக் கொண்டு தமிழிலக்கியத்தின் தரத்தை புரிந்துகொள்ள முடியுமா?

விபூதிபூஷண் பந்த்யோபாத்யயா வங்காளம்

தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய வங்காளம்

 

ஆஷாபூர்ணா தேவி, வங்காளம்

இந்திய வணிகப்பதிப்பகங்களின் மொழியாக்கங்களை நம்பியும் நாம் இலக்கிய மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு இருவகையிலும் கிடைக்கும் நூல்களைக் கொண்டு இந்திய இலக்கிய வரைபடத்தை உருவாக்கிக் கொள்வதும் சரி, மதிப்பிடுவதும் சரி மிக அநீதியான செயலாகவே இருக்கும்.

அத்துடன், இன்று ஒட்டுமொத்த இந்திய இலக்கியச் சூழலையும் கருத்தில்கொண்டு எழுதும் இலக்கிய அறிஞர்கள் எவரும் கண்ணுக்குப் படவில்லை. சென்றகாலத்திலாவது ஏ.கே.ராமானுஜன், கே.எம்.தாமஸ், சச்சிதானந்தன் போன்ற சில பெயர்கள் இருந்தன. இன்று வெறும் இதழாளர்களே தெரிகிறார்கள். தேசிய அளவில் அறியப்பட்ட இந்திய இலக்கிய விமர்சகர் என ஒரு பெயர் கூட இல்லை.

ஸ்ரீஸ்ரீ- தெலுங்கு

ஆகவே எவரும் நமக்கு ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்கும் இடத்தில் இல்லை. நாமே கிடைக்கும் நூல்களைக் கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்கவேண்டும். நமக்கு கிடைக்கும் நூல்கள் பலசமயம் இருபத்தைந்தாண்டுக்காலம் பழையவை. அவற்றைக்கொண்டு சமகாலச் சித்திரத்தையே உருவாக்கிக் கொள்ள முடியாது.

சிலமொழிகளின் இலக்கியங்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. நான் வாசித்தவரை தெலுங்கில் இருந்து ஒரு நல்ல நாவல்கூட, சொல்லப்போனால் அச்சிடும் தகுதிகொண்ட நாவல்கூட வாசிக்கக் கிடைக்கவில்லை. ஒரியமொழியில் ஞானபீடம் கிடைத்தவர்களில் பிரதிபா ராய் சிவசங்கரியைவிட ஒரு படி கீழே. அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமியின் எந்தப்படைப்பையும் ஓர் இலக்கிய பிரசுரநிறுவனம் வெளியிடத் தேர்ந்தெடுக்காது. வெறும் அரசியல் கூச்சல்கள் அவை.

சீதாகாந்த் மகாபாத்ரா ஒரியா

கிடைக்கும் நூல்களைக் கொண்டு நான் ஒரு சித்திரத்தை உருவாக்கி முன்வைத்துள்ளேன். ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ என்னும் நூல் இந்திய இலக்கியச் சித்திரத்தை 20 நாவல்கள் வழியாக முன்வைப்பது. அதிலிருந்து இந்திய இலக்கியத்தின் ஒரு வரைபடத்தை அடைய முடியும்.

சமீபத்தில் அந்நூலை விரிவாக்கலாம் என சாகித்ய அக்காதமி வெளியிட்ட சில மொழியாக்கங்களை வாசித்தேன். கன்னடத்தில் இருந்து இறையடியான் மொழியாக்கம் செய்த போராட்டம் [வியாசராய பல்லாள] ப.கிருஷ்ணசாமி மொழியாக்கம் செய்த சிதம்பர ரகசியம் [பூர்ணசந்திர தேஜஸ்வி] ஞானன் மொழியாக்கம் செய்த நீலநிலா [சிவ்பிரசாத் சிங்] ஆகிய நாவல்களின் மொழிநடை அந்நாவல்களை வாசிக்கச் செய்யவில்லை. 

வி.எஸ்.காண்டேகர் மராத்தி

பல மொழியாக்கங்கள் அத்தகையவை. ஏனென்றால் இங்கே இந்தியமொழிகள் நடுவே மொழியாக்கங்கள் இந்தி, ஆங்கிலம் வழியாக நடைபெறுகின்றன.இந்த மொழியாக்கங்கள் வழியாக நாம் அடையும் சித்திரமும் சரியானது அல்ல. இவற்றை நம்பி நாம் இன்று இந்திய இலக்கிய வரைபடத்தை உருவாக்கிக் கொள்ள முடியாது.

நாம் ஒர் இந்திய இலக்கிய கருத்தரங்குக்குச் சென்றால் அங்கே நம்மிடம் தமிழில் சிறந்த எழுத்தாளர் என்று கேட்டால் அவர்களுக்கு கொஞ்சம்கூட தெரியாத பெயர்களைச் சொல்கிறோம். பலமொழிகளில் நாம் கேள்விப்பட்டே இராத பெயர்களையே சொல்கிறார்கள். இந்தியச் சூழல் இன்று இதுதான்.

பன்னலால் பட்டேல் [குஜராத்தி]

ஜாவேர் சந்த் மேக்னானி

இச்சூழலில் எப்படி ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்வது? இன்று நாம் கிடைப்பவற்றை வாசிக்கலாம், பட்டியலெல்லாம் போடவே கூடாது. இந்திய இலக்கியத்தை இந்தியர்கள் வாசிக்கவே இன்னும் ஒரு நூற்றாண்டாவது ஆகும். அதன்பின்னர்தானே உலகம் வாசிப்பது.

இந்திய அரசு சார்ந்த நிறுவனமான சாகித்ய அக்காதமி பெருமுயற்சி எடுக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால் இந்திய இலக்கியப் பரிமாற்றத்தில் நம் கல்வித்துறை பரிதாபகரமான தோல்வியே அடைந்துள்ளது. அதில் இந்திய மொழிப்பேராசிரியர்களின் பங்கு எந்த வகையிலும் ஆக்கபூர்வமானது அல்ல, பெரும்பாலும் எதிர்மறையானது. அவர்கள் பரிசுகளை தாங்கள் பெறவும், தங்கள் அடிமைகளுக்கு வாங்கித்தரவுமே முயல்கிறார்கள். அவர்களில் உண்மையான ரசனை கொண்டவர்கள், அறிதல் கொண்டவர்கள் அரிதினும் அரிது.

இந்திய இலக்கியம் ஒற்றைப்பெரும்பரப்பாக ஆக மிகப்பெரிய அறிவியக்கம் தேவை. பெரும்பாலான முதன்மைப்படைப்பாளிகள் இந்தியமொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்படவேண்டும். அவர்களைப் பற்றிய உரையாடல் நிகழவேண்டும்.அதற்கான இதழ்கள், கருத்தரங்குகள் வேண்டும்.

யோசித்துப் பாருங்கள்,  இந்தியமொழிகள் அனைத்திலும் வெளிவரும்படி இந்திய இலக்கியத்தை அறிமுகம் செய்யும் ஒர் இதழை சாகித்ய அக்காதமி நடத்தியிருக்க முடியாதா? சரி, இன்று ஒரு வலைத்தள இதழை நடத்த முடியாதா? சுதந்திரம் கிடைத்தபின் இந்த முக்கால்நூற்றாண்டில் அது நிகழவில்லை.

இன்றையச் சூழல் இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு மிகமிகப் பின்னால் சென்றுவிட்டிருக்கிறது. இன்று உலக அளவிலேயே இலக்கிய உரையாடல் இல்லை. அதற்கான அமைப்புகள் எல்லாமே செயலற்றுவிட்டன. இன்று உலக அளவில் இலக்கியம் வணிகப்பிரசுரங்களால் ஒருங்கிணைக்கப் படுகிறது. ஆகவே எல்லா மொழிகளில் இருந்தும் ‘விற்கப்படும்’ நூல்களே பொதுவாக வந்து சேர்கின்றன. அவற்றாலான உலக இலக்கியச் சூழல் அமைந்துவிட்டது.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2021 11:35

ஆலய விவாதம், மேலும்…

ஆலயம் எவருடையது?

ஆலயம் ஆகமம் சிற்பம்

அன்புள்ள திரு ஜெயமோகன்,

வணக்கம். ஆலயங்கள் தொடர்பான உரையாடல்கள் இந்தத் தளத்தில் தொடர்ந்து நிகழ்கின்றன.ஆலய நிர்வாகத்தில் அனுபவம் மிக்க இந்துக்கள் நேரிடையாக ஈடுபட வேண்டும் என்று கோருவதும் அரசு தலையீடு கூடாதென்று கோருவதும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

அரசின் காப்பில் சிதிலமடைந்துள்ள ஆலயங்களில் பானை சோற்றுப் பதமாக 100 ஆலயங்களின் காணொளிகள் சமீபத்தில் ஈஷா சார்பில் வெளியிடப்பட்டன.

ஆலயங்கள் பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாமல் சில அதிகாரிகள் அவற்றைக் கையாள்வதன் சான்றுகள் அவை சான்றுகள்.

இன்று பெரும்பாலான  ஆலயங்களில் அறங்காவலர் குழுக்கள் இல்லை.சமய அக்கறையும் சமூக அக்கறையும் மிக்க பல தொழிலதிபர்கள் அந்தப் பொறுப்பில் இருந்து செய்த பல சீரமைப்புகளை அறங்காவலர் குழுக்களின் பதவிக்காலம் முடிந்ததுமே அந்தத் துறை நிறுத்தி விடுகிறது.

ஓர் உதாரணம் சொல்கிறேன்.பொள்ளாச்சி அருகே புகழ்மிக்க அம்மன் கோவில் ஒன்று. அதன் அறங்காவலர் குழு தலைவராக பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து ஓர் இளம் தொழிலதிபர் பொறுப்பேற்கிறார்.

அம்மனுக்கு சார்த்தப்படும் புடவைகளை ஏலம் விடாமல் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் இந்துப் பெண்களுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றுகிறார். பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ இல்லாத ஏழை இந்துக் குழந்தைகளுக்கான புகலிடம் உருவாக்குகிறார்.இவற்றுக்கெல்லாம் சட்டத்தில் இடமுண்டு.

அவருடைய பதவிக்காலம் முடிந்ததுமே துறையானது இந்த ஏற்பாடுகளை நிறுத்தி விடுகிறது. அறங்காவலர் குழு சொல்வதை நிறைவேற்றவே செயல் அலுவலர்கள் என்பது சட்டம். ஆனால் நிலைமை தலைகீழ்.

தீட்சிதர்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தந்திருக்கும் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப் பட்டால் அறநிலையத்துறை ஆலயங்களில் இருந்து வெளியேறி ஆக வேண்டும். நீங்கள் வேறு இந்தத் திட்டதிற்கு என் ஒப்புதலைத் தரமாட்டேன் என அறிவித்து விட்டீர்கள். எனவே இன்னும் சில ஆண்டுகளுக்காவது நீங்கள் ஜனாதிபதி ஆகாமல் பார்த்துக் கொள்ளும் ஜனநாயகக் கடமையை வேறு நான் ஆற்ற வேண்டி வந்து விட்டது.

நன்றி

அன்புடன்

மரபின் மைந்தன் முத்தையா

அன்புள்ள மரபின் மைந்தன்,

நீங்கள் என்னதான் சொன்னாலும் ஒரே கேள்வி எஞ்சியிருக்கும். ‘தகுதியும் திறமையும்’ உள்ள  ‘இந்துக்களை’ ஆலயநிர்வாகிகளாக தேர்வுசெய்வது யார், அவர்கள்மேல் சாமானிய இந்துக்களுக்கு உள்ள கட்டுப்படுத்தும் அதிகாரம் அல்லது கேள்விகேட்கும் அதிகாரம் எது?

ஜனநாயகத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் மன்னரும் குடியரசுத்தலைவரும்தான்.ஓட்டு என்பதன் நேர்ப்பொருள் ஒப்புதல் என்பதுதான். அது உங்களுக்கு புரியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை, ஆரம்பம் முதலே நான் ஜனநாயகத்துக்காகவும் நீங்கள் எதிர்நிலையிலும் நின்று பேசிக்கொண்டிருக்கிறோம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் ஆலயம் குறித்து சொன்னவை எல்லாம் காட்டிற்குள் நுழைவதற்கும் அப்படியே பொருந்தும். வனத்துறையிடமிருந்து காட்டை விடுவிக்கவேண்டும் என்றும்  ஒரு குரல் உண்டு.  வருகையாளர்கள்   எண்ணிக்கை காட்டின் தாங்கும் சக்திக்குமேல் அதிகரித்தபோது ஆலயங்களில் என்ன நிகழ்ந்ததோ அதுவே காட்டிலும் நடந்தது. இரண்டிலும் இருப்பதும்  ஒன்றுதானே!

அன்புடன்
நிக்கோடிமஸ்

அன்புள்ள நிக்கோடிமஸ்

உண்மையில் எவர் என்ன சொன்னாலும் இன்னும் சில ஆண்டுகளில் ஆலயத்தில் நுழைபவர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் சட்டங்கள் வந்தே தீரும். இன்றைய போக்கில் ஆலயங்களை அழித்துவிடுவார்கள். அதை எந்த நாகரீக சமூகமும் அப்படியே அனுமதிக்காது.

ஜெ

தமிழக ஹிந்து ஆலயங்கள் அறநிலைத்துறை வசமிருந்து மீட்கப்பட வேண்டும் என்று எழுந்து வரும் குரல்கள் தொடர்பாக ஜெயமோகன் ” ஆலயம் எவருடையது ” என்னும் கட்டுரையை எழுதியுள்ளார் . ஆரம்பம் முதலே இந்தக் குரலை ஒருங்கிணைக்கும் பெரிய அமைப்புகள் மீது அவநம்பிக்கையும் தனிமனிதர்கள் மீது ஓரளவு நம்பிக்கையையும் கொண்டிருக்கிறேன் . ஆலய வழிபாடுகளில் , சடங்குகளில் அரசின் தலையீடு எள்ளளவும் இருக்கக் கூடாது என்பது தான் என் நிலைப்பாடு . கணக்கு வழக்குகளை கையாள்வது குறித்து அதிருப்தி இருந்தாலும் மாற்று ஏற்பாடுகளை உருவாக்கும் வரை பொறுத்திருக்க வேண்டியிருக்கிறது .

அனீஷ்கிருஷ்ணன் நாயர் கட்டுரை

அன்புள்ள அனீஷ்,

உங்கள் குறிப்பில் நான் எழுதியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதை நான் தெளிவாகவே எழுதியிருந்தேன். அரசியல்பிரச்சாரகர்கள் மற்றும் தன்னலமிகளின் உத்தி என்பது எழுதப்படுவனவற்றை எதிர்கொள்வது அல்ல. அவற்றை தங்கள் வசதிப்படி திரித்து அதன்மேல் மிகையான கோபவெறியையும் ஏளனத்தையும் வெளிப்படுத்துவது. அந்த திரித்தலை பரப்புவது.

நான் ஆலயங்கள் ஆகமமுறைப்படி அமைந்தவை, அவற்றை சிதைக்கவோ மாற்றவோ கூடாது என்கிறேன். இந்த விவாதத்தில் குறைந்தது பத்துமுறை அதைச் சொல்லிவிட்டேன். பதினெட்டு ஆண்டுகளாக அறிவுலகில் தனியாளாக ஓங்கிச் சொல்லிவருகிறேன். அப்படிச் சொல்லும் ஒருவன் ஆலயங்கள் வழிபாட்டிடங்கள் அல்ல என்று சொல்வானா என நீங்கள் எண்ணிப்பார்த்திருக்கலாம்.

ஆலயங்கள் ‘வெறும்’ வழிபாட்டிடங்கள் என்று சொல்பவர்களுக்கான பதிலே இக்குறிப்புகள் அனைத்திலும் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. அவை வழிபாடு நடக்கும் கட்டிடங்கள் அல்ல. அவை ஆகமமுறைப்படி அமைந்தவை, கல்லில் எழுந்த மந்திரங்கள். ஆகவே அவற்றைச் சிதைக்கக் கூடாது. அவை ’மேலதிகமாக’ பண்பாட்டு மையங்களும் வரலாற்றுச் சின்னங்களும்கூட. அந்நிலையில் மொத்த தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும், மானுட குலத்துக்கும் உரிமையுள்ள செல்வங்கள். ஆகவே அவற்றை பக்தர்கள்  எனச் சிலபேர் தாங்களே முழுஉரிமை கொள்ளவும் தங்கள் தேவைக்கேற்பச் சிதைக்கவும் கூடாது. இதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ முறை.

இக்கூற்றை ‘ஆலயங்கள் வழிபாட்டிடங்கள் அல்ல, அவை அருங்காட்சியகங்கள் என ஜெயமோகன் சொல்கிறார்’ என்று கொந்தளிப்பவர்கள் மூடர்கள் அல்ல, உள்நோக்கம் கொண்டவர்கள். அதை நீங்கள் கவனித்திருக்கவேண்டும். இத்தனை தெளிவாக மீளமீளச் சொல்லப்படும் ஒரு கருத்தை எப்படி இவர்களால் தலைகீழாகத் திரிக்க முடிகிறது? ஏனென்றால் அது அரசியல்வாதிகளின் வழி. ஆலயம், ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் இந்த காழ்ப்புநிறைந்த அரசியல்கூச்சல் உள்ளே நுழைவது சரியா, அதன்பின் எதையாவது எவராவது பொதுவெளியில் பேசமுடியுமா, உண்மை திரண்டுவருமா என நீங்கள் யோசிக்கவேண்டும்.

’ஆலயங்கள் வழிபாட்டுக்குரிய கட்டிடங்கள் மட்டுமே, அவற்றை தேவைக்கேற்ப என்னவேண்டுமென்றாலும் செய்யலாம், அழிந்தால் வேறு கட்டிவிடலாம்’ என திரும்பத்திரும்பச் சொல்லும் ‘பக்தர்களிடம்’ அப்படி அவை வெறும் கட்டிடங்கள் என்றால் வெளியே கொண்டுசென்று தெய்வத்தை நிறுவி வழிபடலாமே இந்தக் கட்டிடம்தான் வேண்டும் என்பதில்லையே என பதில் சொல்கிறேன். அந்த வரி தெளிவாகவே உள்ளது. பலமுறை விளக்கவும்பட்டுவிட்டது. அதன்பின்னரும் ‘ஆலயத்தெய்வங்களை வெளியே கொண்டு செல்லவேண்டும்’ என்று ஜெயமோகன் சொல்கிறார் என்று திரித்துச் சொல்பவர்கள் எத்தகையகவர்கள்? மெய்யாகவே அவர்களின் நோக்கம் ஆலயத்தை பாதுகாப்பதுதானா? அந்த பொய்யர்களிடம் ஆலயம் சென்றுவிட்டால் என்ன ஆகும்?

நீங்கள் இந்து அமைப்புக்களை அறிந்தவர்கள். விஸ்வஹிந்து பரிஷத் உட்பட இந்து இயக்கங்கள் சென்றகாலங்களில் உருவாக்கிய அமைப்புக்கள் இன்று எந்நிலையில் எவர் கையில் உள்ளன? விஸ்வஹிந்துபரிஷத்துக்காவது அவற்றில் உரிமை உள்ளதா? சங்கரமடம் நிறுவிய அமைப்புக்கள் என்ன ஆயின?சரி, இந்த அமைப்புக்களுக்கே உண்மையில் ஆலயம்- ஆகமம் ஆகியவற்றில் நம்பிக்கை உண்டா? உண்மை தெரியாதவரா நீங்கள்? அந்த மலைமுழுங்கிகள் ஆலயங்களுக்காக கிளம்பியிருக்கிறார்கள், அதன்பொருட்டே இந்த அவதூறு- திரிப்பு- காழ்ப்புப் பிரச்சாரம் என அறிந்துகொள்ள ஒன்றும் விசேஷபுத்தி தேவையில்லை.

இன்று சட்டென்று அத்தனை சாதிவெறியர்களும், பழமைவெறியர்களும் ‘ஆலயப்பாதுகாப்பாளர்களாக’ குதித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஒப்பிட ஜக்கி வாசுதேவின் அமைப்பு எவ்வளவோ நம்பகமானது. ஆலயங்களை இந்தக் கும்பல்களில் இருந்து பாதுகாப்பது பற்றிய பெரும் பீதியே என்னை இப்போது ஆட்கொள்கிறது.

ஜெ

ஆலயம் கடிதங்கள் – 1 ஆலயம் கடிதங்கள் – 2 ஆலயம் கடிதங்கள் – 3  ஆலயம் கடிதங்கள் – 4 ஆலயம் கடிதங்கள் – 5

ஆலயம் அமைத்தல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2021 11:32

தேவி

ஆஸ்கார் வைல்டின் ‘எந்த மர்மமும் இல்லாத பெண்’ என்ற ஒரு சிறுகதை உண்டு. பெண்மையின் ஜாலம் என்று அக்கதையைச் சொல்லலாம். சிறுகதை தோன்றிய காலகட்டம். அப்போதே அதை எழுதிப்பார்த்திருக்கிறார். அதன் பின் இத்தனை ஆண்டுகளில் உலகச்சிறுகதைகளை திரும்பிப்பார்க்கையில் சிறுகதை என்ற வடிவில் முடிவில்லாமல் எழுதப்பட்டவை பெண்மையின் வண்ணங்களே என்று படுகிறது. புதுமைப்பித்தன், ஜானகிராமன், வண்ணதாசன் வரை. அது தவிர்க்கமுடியாது. வைரத்தை திருப்பி ஒரு கணம் மின்னும் ஒரு பட்டையின் ஒளியை கண்டடைவதுபோன்றது பெண்மையின் ஒரு தருணம் வெளிப்படுவது. அதற்குரிய வடிவம் சிறுகதைதான்.

இந்தக்கதைகளை மறுபடி தொகுப்புக்காகப் பார்க்கையில் இதிலுள்ள பெண்மையின் வெவ்வேறு தோற்றங்கள் நெகிழ்வூட்டுகின்றன. வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி, வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி. இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகைகொண்டிருக்கிறேன். அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது. இன்று பெண்மையின் இந்த ஜாலங்களை தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு ஆடுக மகளே என்று சொல்லுபவனாக ஆகியிருக்கிறேன்.

இக்கதைகளின் நுட்பங்கள் என நான் நினைப்பது பெண் அளிக்கும் பாவனைகளை. அவை மெய்யாக வெளிப்படுபவையும்கூட. மண்ணின் பாவனைகளே பருவங்களும் பொழுதுகளும் என்பதுபோல. அவையே நம் வாழ்வின் அத்தனை அழகுகளையும் தீர்மானிக்கின்றன.

இந்நூலை என் பிரியத்திற்குரிய சிங்கப்பூர் சித்ரா ரமேஷுக்குச் சமர்ப்பிக்கிறேன். வாழ்க்கையின் துயர்கள் அலைக்கழிப்புகள் அனைத்துக்கும் அப்பால் ஆசிரியை என நிமிர்ந்து நிற்கும் ஆளுமை கொண்டவர். எந்நிலையிலும் தழையாத நன்னம்பிக்கையும் ஊக்கமும் கொண்டவர், அத்தகைய நட்புகள் பெரும் கொடைகள்.

ஜெ

தேவி வாங்க

***

வான்நெசவு முன்னுரை ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை தேவி – முன்னுரை ஐந்து நெருப்பு முன்னுரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2021 11:32

மொழியாக்கங்கள், மறுமொழியாக்கங்கள்.

Contance Garnett வெண்ணிற இரவுகள்- பிரவீன்

அன்பின் ஜெ எம்,

‘வெண்ணிற இரவுகள்’ குறித்த நவீனின் கடிதத்தை ( ஜூன் 24,2021) உங்கள் தளத்தில் பார்த்தேன். கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில் முன்பு வந்த தஸ்தயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளை – White nights- நானும் அண்மையில் பொதுமுடக்க காலத்தில் ‘வெண் இரவுகள்’ என்ற தலைப்பில்,  மொழிபெயர்த்திருக்கிறேன்.  அந்த மொழிபெயர்ப்பை  ஏற்குமாறுஎன்னைத்தூண்டி  நூலை வெளியிட்டிருப்பவர்கள் நற்றிணைப்பதிப்பகத்தார்.

ஒரே ரஷ்ய நாவலுக்குப் பல ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் இருக்கும்போது தமிழிலும் அப்படி இருக்கலாம்தானே? மேலும் மாறி வரும் மொழி அமைப்பைக்கருத்தில் கொண்டு பாரக்கும்போது,அது காலத்தின் தேவை என்று தோன்றியதாலும் அதை மேற்கொண்டேன். அதைச்செய்யவில்லையென்றால் வாழ்வின் மிகப்பெரிய ஓர் அனுபவத்தை இழந்திருப்பேன் என்று அதை மொழிபெயர்த்தபிறகு தோன்றியது.

குற்றமும் தண்டனையும்,அசடன் போன்ற மிகப்பெரிய நாவல்களுக்கு இணையான சவால்களையும் உழைப்பையும் அந்த 40 பக்க குறுநாவல் என் முன் வைத்தது. இனிமையான அந்தச்சவால்களை ஆர்வத்தோடு எதிர்கொண்டபோது,புதிர் போர்த்திய திரைகளை ஒவ்வொன்றாய் விலக்கிக்கொண்டே  செல்வது போன்ற மகிழ்ச்சி.  மனதுக்குப் பிடித்தமான ஒரு சங்கீதத்துணுக்கின் ரீங்காரம் போல இந்தப்படைப்பை மொழிமாற்றம் செய்த பொழுதுகள் என்னுள் ரீங்கரித்துக்கொண்டிருக்கின்றன.

என் தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்பு வரிசையில் இது ஆறாவது (குற்றமும்தண்டனையும்,அசடன், நிலவறைக்குறிப்புகள்,இரட்டையர், தஸ்தயெவ்ஸ்கி கதைகள்..,இப்போது ‘வெண் இரவுகள்’) என்ற செய்தி, தொடர்ந்து  என்னை ஊக்கப்படுத்தி வரும் தங்களுக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்பதால் இந்தப்பகிர்வு.

அன்புடன்

எம் ஏ சுசீலா

எம்.ஏ.சுசீலா

அன்புள்ள சுசீலா அவர்களுக்கு,

தல்ஸ்தோயின் நாவல்கள் ஆரம்பத்தில் வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் ஆங்கிலத்திற்கு கொண்டுவரப்பட்டன. அவருடைய கொசாக்குகள் என்னும் நாவலை யூஜின் ஸ்கைலர் [Eugene Schuyler] 1878ல் மொழியாக்கம் செய்தார். இதுவே முதல் மொழியாக்கம். அவர் மாஸ்கோவில் அமெரிக்க தூரதாரக இருந்தார். தல்ஸ்டோயை நன்கறிந்தவர். நாதன் ஹாச்கல் டோ [Nathan Haskell Doe] அன்னா கரீனினாவை ஆங்கிலத்திற்கு கொண்டுவந்தார். அந்த மொழியாக்கங்கள் எவையும் பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை. தல்ஸ்தோய் ருஷ்யாவுக்கு வெளியே அறியப்படவே இல்லை.

தல்ஸ்தோயை உலகறியச் செய்தவர் மொழிபெயர்ப்பாளரான கான்ஸ்டன்ஸ் கார்னெட் [ Constance Garrnet] ரஷ்ய நாவல்களை மொழியாக்கம் செய்து அவற்றுக்கு ஆங்கிலம்பேசும் உலகில் ஏற்பை உருவாக்கியவர் அவர். ஆனால் அவருடையது ஒருவகை சுதந்திர மொழியாக்கம் என்றும், அவர் ஆங்கிலத்திற்கு ஏற்ப பலவற்றை மாற்றியும் திரித்தும் குறைத்தும்தான் மொழியாக்கம் செய்திருக்கிறார் என்னும் குற்றச்சாட்டு உண்டு. ஆகவே பின்னாளில் மேலும் மூலத்திற்கு விசுவாசமான மொழியாக்கங்கள் வந்தன. ஆனால் இன்னும்கூட வாசிப்புக்கு எளியதும், இலக்கிய அனுபவம் அளிப்பதுமாக கார்னெட்டின் மொழியாக்கமே உள்ளது.

தமிழில் தல்ஸ்தோயின் அன்னா கரினினா  சற்று சுருக்கமான மொழியாக்கமாக க.சந்தானம் அவர்களால் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர்தான் மற்ற மொழியாக்கங்கள் வெளிவந்தன. வெண்ணிற இரவுகள் ருஷ்ய நேரடி மொழியாக்கம் [பூ.சோமசுந்தரம்] சற்று சம்பிரதாயமானது. அதை சமகால நடைக்கு மொழியாக்கம் செய்வது இன்றியமையாததுதான்.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

தஸ்தயேவ்ஸ்கி பற்றி உங்கள் தளத்தில் வெளிவந்த கட்டுரைகளை, கடிதங்களை மட்டுமே தொகுத்து வாசித்தேன். ஒரு முழுமையான புத்தகத்தை வாசித்த நிறைவை அடைந்தேன். ஒரு பேரிலக்கியவாதியை இப்படி தொடர்ச்சியாக நினைவூட்டிக்கொண்டே இருப்பது ஒரு பெரும்பணி. அது ஒரு அளவுகோலை உருவாக்கி நிலைநிறுத்துகிறது என்று நினைக்கிறேன் மற்ற அத்தனை இலக்கியப்படைப்புக்களையும் மதிப்பிடுவதற்கு அது ஒரு வழி

நன்றி

ராஜசேகர்

மொழியாக்கம் ஒரு கடிதம் மொழியை பெயர்த்தல் மொழியாக்கம் பற்றி- ஸ்வேதா சண்முகம் எம்.ஏ.சுசீலா விழா :இந்திரா பார்த்தசாரதி உரை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2021 11:31

குறளுரை- கடிதம்

அன்பு ஜெ,

”குறளினிது” என்ற உங்களின் உரை குறளைப் பற்றிய என் கண்டடைதல்களுக்கான சரியான வாசலாக அமைந்தது. அதற்கு முன்பு வரை கூட வெகு சில குறள்களில் வள்ளுவரை முரண்பட்டு அவரிடம் சண்டையிட்டிருக்கிறேன். நான் எங்கெல்லாம் முரண்பட்டேனோ இன்று அவற்றையெல்லாம் நீங்கள் விளங்கவைத்துவிட்டீர்கள். கவிஞனின்/எழுத்தாளனின் மையத்தை அவனின் ஆழத்தை மிகச் சரியாக அணுகும் ஒரு வாசகனை அவன் அகத்தில் அணைத்து இன்பத்தை நல்குவான். நீங்கள் வள்ளுவரை மிக அணுக்கமாக தழுவியிருந்தது உங்கள் உரையில் தெரிந்தது. நான் அந்த அணைப்பை அடைவதற்கான சாலையின் சரியான வாசலை இந்த உரையின் மூலம் காணித்திருக்கிறீர்கள்.

தமிழ் நாட்டின் சிறுவர்களைப் போலயே திருக்குறள் மனப்பாடப் போட்டியின் வாயிலாக தான் முதன் முதலில் குறள் பரிச்சயமாகியது எனக்கு. மனனம் செய்து ஒப்புவிக்கும் தன்மைக்கு ஏதுவாகவே குறள்கள் இருக்கின்றன. அதற்கான காரணம் வரலாற்றுப் பின்புலத்தை நீங்கள் இந்த உரையில் அளித்திருந்தீர்கள். சூத்ரா மற்றும் மந்த்ரா என்பதைப் பற்றிய சித்திரத்தை அளித்து குறள் எவ்வாறெல்லாம் ஒரு சரியான சூத்ரமாக உள்ளது என்பதை நிறுவியிருந்தீர்கள். ”ஒரே சொல் திரும்பத்திரும்ப வந்து ஒப்புவிக்கும் நேரத்தைக் குறைக்கும் குறள்கள்; அழுத்தங்களும் ஏற்ற இறக்கங்களும் கொடுத்து உச்சரிப்பை அழகாக்கும் குறள்கள்; சொல்விளையாட்டுக்கு பயன்படும் குறள்கள் என குறள்களின் புறத்தையே பலவாறு சிறுபிராயத்தில் அடைந்திருந்தேன். ஒன்றை கவனித்திருக்கிறேன, குறள் போட்டிகள் என்பதே சிறுவர்களுக்கானது என்பதே அதை பெரியவர்களிடமிருந்து விளக்கிவிடுகிறது. ஆனால் என் விடுதியில் மார்செலின் சிஸ்டர் வாடர்ன் ஆக இருந்த கால கட்டத்தில் பிரேயர் ஹாலில் பைபிள், பகவத் கீதை, திருக்குறள் மூன்று புத்தகங்களை வைத்திருப்பார். இவை மூன்றுமே ஒன்று தான் என்று அவர் கூறுவார். அவரிடம் உரையாட குறளின் விளக்கத்தை படிக்க ஆரம்பித்து சில தருணங்களில் நண்பர்களிடம், சூழ்நிலையில் சொல்லும் ஒரு பழமொழி போல குறள் மாறிப்போனது என் வாழ்வில். அப்படி சொல்லி ஒரு முறை திட்டும் பகையும் வாங்கிக் கொண்டேன். விடுதியில் தலைவியாய் இருந்த ஒரு அக்காவை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அதுவும் பெண்கள் பள்ளியில் படிப்பவர்களுக்கு காதல் என்பது இரண்டு வகையான அக்காக்களின் மேல் வரும். ஒன்று விளையாட்டில், இன்னொன்று படிப்பில் பேச்சில் எழுத்தில் முன் நிற்பவர். அப்படி தான் அந்த அக்காவை எனக்குப் பிடித்திருந்தது. எப்படியாவது ஒரு தருணத்தில் அவர்களை தோழியாக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். ஒரு முறை படிப்பு அறையில் நானும் தோழியும் கத்திக் கொண்டிருந்தோம். இருவரையும் திட்டி படிக்கச் சொல்லிவிட்டு அவர் தன் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் அவர்களிடம் சென்று “அக்கா, சொல்லுதல் யார்க்கும் எளிய அறிவாம்; சொல்லிய வண்ணம் செயல்” என்று சொல்லிவிட்டு பாராட்டிற்காக காத்து நின்றேன். ஏனெனில் அவர் ஒரு அருமையான பேச்சாளர். குறளை எப்போதும் தன் பேச்சில் எடுத்தியம்புபவர். ஆனால் அன்று அவள் என்னை காட்டமாகத் திட்டிவிட்டு அன்றோடு என்னுடன் பேசாமலானாள். அதன் பின் சூழ்நிலைக்கு ஏற்ற குறள்கள் சொல்லுவதையே நான் விட்டுவிட்டேன்.

அதன் பின் மீண்டும் குறளை கையில் எடுத்து சிலாகித்தது போட்டித் தேர்வின் போது பாடத்திட்டமாகத் தான். பள்ளியில் அறத்துப்பாலில் தான் பெரும்பான்மையாக குறள்கள் மனப்பாடம் செய்வோம் அது தவிரவும் சில பொருட்பால் அதிகாரங்கள் தான். இங்கு தேர்வின் போது பொருட்பாலிலுள்ள அரசியலும், அமைச்சியலும் கிட்டத்தட்ட முந்நூற்றி ஐம்பது படித்திருக்கிறேன். ஆனால் இம்முறை மனப்பாடமாக அல்ல. புரிந்து படித்தேன். ஒரு அரசாளுபவனுக்கான, அமைச்சனுக்கான, தலைமைப் பண்பு கொள்ள வேண்டுபவனுக்காக, நிதி அமைச்சனுக்காக, வெளியுறவுத்துறைத் தூதனுக்காக என பல தரப்பினருக்கான குணங்களையும், செயல்படும் முறைமைகளையும் கூறிக் கொண்டே வந்து அதன் நன்மை தீமைகளை எடுத்துக் கூறியிருப்பதை புரிந்தேன். பெரும்பாலும் பொருட்பாலில் வரும் குண நலன் சார்ந்த (எ.கா: காலமறிதல், அறிவுடைமை, செங்கோன்மை etc) குறள்களில் வள்ளுவரின் தொடர் வைப்பு முறைமைகளாக நாங்கள் சொல்லும் போது “தாத்தா முதலில் இன்ன குணம் என்பதைப் பற்றிச் சொல்லி, அதனால் வரும் நன்மை, கேடுகள் ஆகியவற்றை தலையைத்தடவி எடுத்துக் கூறி, இறுதியில் அதைக் கடைபிடிக்காத ஆட்களுக்கான சாபத்தை அல்லது திட்டை உதிர்த்து அடுத்த அதிகாரம் நோக்கி சாந்தமாகச் சென்று விடுவார்” என்று  நகைச்சுவையாகக் கூறுவோம். ஒவ்வொரு ”பால்” –ம், அதிகாரம்” –ம் வைக்கப்பட்ட முறைமைகளைக் கூட ஆராய்ந்து தெளிந்திருக்கிறோம். ஆனா நீங்கள் சு.ரா -வின் அறிவுரைப்படி அசைச் சொற்களை 1330 குறளுக்கும் பட்டியலிட்டேன் எனும்போது இப்படியும் குறளைக் கண்டடையலாம என வியந்தேன்.

இப்படி குறளை சிலாகித்தாலும் ஒரு ஒவ்வாமையாக எனக்கு அமைந்தது பரிமேலழகர்” உரை தான். அதற்கான காரணம் பலரும் அறிந்ததே. ஆனால் அறிவார்ந்த வட்டாரம் என்று காணிக்க விளையும் பலர் அதை மிக உயர்த்திப் பேசி மற்ற உரைகளை தாழ்த்தி வள்ளுவரை வேதியராக்கும்போதே முதல் விலக்கத்தை இளமையில் அடைகிறோம். பின்னும் திராவிட கால கட்டதில் எழுதப்பட்ட உரைகள் (சாலமன் பாப்பையா, கலைஞர்) வள்ளுவருக்குள் செல்லாமல் தங்கள் கொள்கைகளை முன் நிறுத்தி வள்ளுவரை அந்த வலையத்திற்குள் தள்ளிவிடுவது அவரின் கவிதைத் தருணங்களை கண்டடையாதபடிக்கும், தத்துவார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாதபடிக்கும் அமைந்துவிடுகிறது. மத அடிப்படைவாத்களும், திராவிடவாதிகளும் எழுப்பிய இந்த மிகப் பெரிய அரண் என்றைக்குமே தகர்க்கமுடியாதபடிக்கு ஒரு நவீன வாசகன் உள் நுழையாதபடிக்கு சிலையாகவும், குறள் விளக்கமாகவும், பேச்சாகவும் உலவிக் கொண்டிருக்கிறது. மேலும் மக்களாட்சியில் இங்கு நான் நின்று கொண்டு ஐயன் முடியாட்சியை அதன் பெருமைகளை எடுத்துச் சொல்வதையும் விலக்கியிருந்தேன். இது தவிரவும் ஒவ்வொரு நவீன வாசகனும் எந்தெந்த காரணத்தினால் குறளிலிருந்து விலகியிருக்கிறானோ அவற்றையெல்லாம் நீங்கள் பட்டியலிட்டு அதற்கான சரியான விளக்கத்தை இந்த உரையில் அளித்திருந்தீர்கள். உங்கள் உரையைக் கேட்டபின் தான் என் ஒவ்வாமையின் காரணத்தையே முழுதறிந்து அதை அகற்றினேன்.

குறளில் உள் நுழைய ஏதுவாக ஒரு பகுத்தறிவான வரலாற்றுப் பின் புலத்தை அளித்து. ஒரு சமணரால் ஆனால் தமிழ் சமுதாயத்தை நோக்கி எழுதப்பட்ட ஒரு அற நூலாக, தொகுப்பு நூலாக, முதன்மை நூலாக அதை நிறுவி, எவ்வெவற்றாலெல்லாம் அது ஒரு மூல, தொல், மாறாத் தன்மையதான நூலாக சித்தரிக்ககூடாது என்பதை புரிய வைத்திருந்தீர்கள். சமணம் தமிழில், தமிழ்ச் சமுதாயத்தில் செய்த மாற்றத்தை, அதன் வரலாற்றை எடுத்தியம்பியபோது அது மேலும் திறப்பாயிருந்தது. குறளை ஒரு ஞான நூலாக எவ்வகையில் பாவிப்பது, அதனினின்று ஒரு ஆப்த வாக்கியமாக எப்படி மாற்றி பொருள் கொள்வது என்பதையும் கூறி, அதை சொல்லாக எண்ணி, அந்த ஒவ்வொரு சொல்லுக்கு இருக்கும் அத்தனை பொருளுக்கும் அர்த்தமறிந்து ஆராய்ந்து தெளிதல் பற்றி கூறி கற்க வேண்டிய முறையை எனக்கு விளங்கவைத்துள்ளீர்கள். அதன் பின் தனிப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குறள் தருணங்களைக் கண்டடைதலை இறுதியாகச் சொல்லி உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த பல குறள் தருணங்களைச் சொன்னபோது ஒரு ஆகச் சிறந்த கதை சொல்லியின் முன் அமர்ந்து கேட்பது போன்ற உணர்வு வந்தது. நீங்கள் சொன்ன குறள் தருணங்கள் சில சிலிர்ப்பாகவும், சில கண்கலங்க வைப்பதாயும், திறப்பைத் தருவதாயும், வள்ளுவரின் ஆன்மாவைத் தழுவுவதற்க்கான பாதையை நோக்கி உந்திவிடுவதாயும் அமைந்தது. இனி நீங்கள் அமைத்துக் கொடுத்த அறிவார்ந்த பாதையில் பயணித்து எனக்கான குறள் தருணங்களைக் கண்டடைந்து உங்களுக்கு எழுதுவதே அடுத்து நான் செய்ய வேண்டியது. அறிவார்ந்த இந்த ”குறளினிது” உரைக்காக நன்றியும் அன்பும்.

இரம்யா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2021 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.