Jeyamohan's Blog, page 952
July 12, 2021
ஆனையில்லா!
நான் என் நிலம் என உணரும் குமரி பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறேன். ஆனால் என் சொந்த கிராமமான திருவரம்பு பற்றி அனேகமாக ஏதும் எழுதியதில்லை. அந்த ஊருடன் எனக்கு ஓர் அகவிலக்கம் இருந்திருக்கிறது. என் அம்மா அப்பா இருவருமே தற்கொலைசெய்துகொண்டார்கள். அந்த ஊர் அந்நினைவுகளுடன் இருக்கிறது கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் நான் அந்த மண்ணில் கால்வைத்ததில்லை.
ஆனால் இந்த மண் என்னுள் குறியீடுகளாக ஆகிவிட்டிருக்கிறது. உணர்ச்சிகளின், கனவுகளின் அடையாளங்கள் இங்குள்ள அத்தனை பொருட்களும். என் அகத்தை இப்பொருட்கள் வழியாகவே நான் புறமாக ஆக்கிக்கொள்ள முடியும். ஆகவே நான் ஒரு அகநிலத்தை உருவாக்கிக் கொண்டேன். என் கற்பனையில் உருவான அந்த குமரிநிலத்தையே எழுதிக்கொண்டிருந்தேன். என் கதைமாந்தர் பேசும் மொழிகூட மிகச்சரியான குமரிமாவட்ட மொழி அல்ல, அது நானே உருவாக்கிக் கொண்டது. இங்குள்ள வட்டாரவழக்கின் நுட்பமான, ஒலியினிமைகொண்ட, வேடிக்கையான துளிகளை கோத்து அதை அமைத்தேன்
பலகதைகளில் என் அம்மா வந்திருக்கிறார்கள். ஆனால் அப்பாவை நான் எழுதியதில்லை. அதுவும் ஓர் அகவிலக்கமே. நான் என் அப்பா என் நினைவில் இறுதியாக எஞ்சிய அந்த வயதை இப்போது அடைந்துவிட்டேன். அப்பா 61 வயதில் மறைந்தார். எனக்கும் 58 ஆகிறது. இறந்தவர்களுக்கு வயதாவதில்லை. ஆகவே அவரும் நானும் ஒரே வயதினர். ஆகவே இப்போது அவரை விலக்கமும் மதிப்பும் இல்லாமல் அணுகுகிறேன். அவரை கிண்டல் செய்கிறேன். வீட்டில் குழந்தைகளுடனான உரையாடலில் கரடிநாயர் என்கிற தங்கப்பன் நாயர் என்கிற வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை பாகுலேயன் பிள்ளை வந்துகொண்டே இருக்கிறார்.
ஆகவே சென்ற 2020 ஏப்ரலில் புனைவுக்களியாட்டு என்ற பேரில் நூறு கதைகளை தொடர்ச்சியாக எழுதியபோது அவர் புதிய ஒளியுடன் பிறந்து வந்தார். அன்பான, முட்டாள்தனமான, மூர்க்கமான, நுண்சுவைஞரான, நட்பில் நிறைந்த, ஆணாதிக்கவாதியான, பழமைவாதியான கரடி நாயர். என் வாழ்க்கையில் இப்படி அவரை மீண்டும் பெற்றது ஒரு பெரிய நிகழ்வு. என் அகக்குறைகள் அனைத்தையும் நிறைவுறச்செய்தது. நான் இழந்த அப்பா மீண்டு வந்தார். நான் விரும்புவதுபோலவே அவர் இருந்தார். இனி இவர்தான் என்னில் எஞ்சுவார்
இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்தம்புதிய ஓர் உலகு. ஒளிமிக்க உலகு. முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள்
என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன். ஒருவேளை எழுதாமல் போகலாம். ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன். இப்போதே எழுதப்படாத பல கதைகள் என்னுள் இருக்கின்றன. இவற்றிலுள்ள கள்ளமற்ற கொண்டாட்டமே இவ்வுலகில் நான் வேண்டுவது. இங்கே மானுடர் வாழவேண்டிய வகை அது
இந்நூலை என் தந்தை வடிவமான மூத்த அண்ணன் பிரசாத் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். என் அம்மாவுடன் பிறந்த சகோதரிகளின் மைந்தர்களாகிய உடன்பிறந்தாரில் அவரே மூத்தவர்.
ஜெ
ஆனையில்லா வாங்க


வான்நெசவு முன்னுரை
ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை
மலைபூத்தபோது
முன்னுரை


தேவி – முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை
பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை
புகழ்- ஒரு கேள்வி
அன்பு ஜெ,
“ உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்,
அன்ன மாட்சி அனைய ராகித்
தனக்குஎன முயலா நோந்தாள்
பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே”
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய இந்த புறநானூற்றுப் பாடலில் “புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்” என்ற இந்த வரிகளை அப்படியே எடுத்துக் கொண்டல் ஒரு அர்த்தம் வருகிறது ஜெ. அந்த அர்த்தத்தை அப்படியே எடுத்துக் கொள்ளும் போது “புகழ் விரும்பிகளாக” இருந்தார்களோ என்று ஒரு அர்த்தத்தை எடுத்துக் கொண்டேன்.
வள்ளுவரும் கூட புகழைப் பற்றிய ஒரு அதிகாரத்தையே எழுதியிருக்கிறார். தத்துவத்திலோ/ மெய்ஞானத்திலோ/ஆன்மீகத்திலோ எடுத்தோமேயானால் புகழை விரும்புவதை அறப் பிறழ்வாக அல்லது நிலையாத் தன்மையாகச் சொல்கிறார்கள் (அல்லது நான் அப்படி நினைத்தேன்).
பொருண்மொழிக்காஞ்சி எனும் முனிவர்கள்/சான்றோர்கள் ஆராய்ந்து கண்ட ஒன்றில் புகழை விரும்புவது என்பது எனக்கு முதலில் இடித்தது. இந்த வரிக்கு வேறு எவ்வகையேனும் பொருள் கொள்ளலாமா? அல்லது புகழை விரும்புவது என்பதை எவ்வகையிலெள்ளாம் சரியான ஒன்றாக எடுத்துக் கொள்வது? எந்த எல்லை வரை அது தகும்? புகழ் என்ற சொல்லுக்கு சங்கத்தில் எதுவெல்லாம் பொருளாகக் கொள்ளலாம்? என்பதை உங்கள் வரிகளில் கேட்டுத் தெளிவுற அவா.
இரம்யா.
***
அன்புள்ள இரம்யா,
சொற்களுக்கு எப்போதும் ஒரே பொருள் அல்ல. சில சொற்கள் காலப்போக்கில் சுட்டுபொருளிலேயே மாறுதலடைகின்றன. உதாரணமாக காதல். ‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாக் காதல் நோயாளன் போல’ என்பது நம்மாழ்வார் பாட்டு. வாளால் அறுத்துச் சுட்டாலும் மருத்துவன்மேல் மாளாத காதல் கொண்ட நோயாளிபோல என்று பொருள். இங்கே காதலென்பது பேரன்பு என்றே பொருள் தருகிறது. இன்றுள்ள பொருளில் அல்ல.
இன்னொருவகை பொருள்மாறுபாடு சூழலில் வரும் மாற்றத்தால் உருவாவது. சூழல்பொருள் மாறுவது நாம் அச்சொல்லைக் கையாளும் தன்மையிலுள்ள மாற்றத்தால். சென்ற இருநூறாண்டுகளாகவே நமக்கு ஜனநாயகம் அறிமுகமாகியிருக்கிறது. ஜனநாயக அரசியலில் புகழ் என்பது நேரடியாகவே அதிகாரமாகவும் பணமாகவும் ஆகக்கூடியது. அதாவது புகழ் என்பது ஓர் உலகியல் நன்மை. புகழுக்காக முயல்வதென்பது உலகியல்சார்ந்த ஒன்றுக்காக முயல்வது. பணத்துக்காக, அதிகாரத்துக்காகச் செயல்படுவது.
இன்றைய ஜனநாயக அரசியல் சூழலில் புகழ் என்பது அதிகாரமும் பணமும் ஆகையால் அது குறுக்குவழியில் ஈட்டப்படுகிறது. சிறுசெயல் பெரும்புகழை அளிப்பதாக ஆக்கப்படுகிறது. விளம்பரங்கள் வழியாக செயற்கையாக புகழ் கட்டமைக்கப்படுகிறது. புகழுக்கு நாம் அளிக்கும் எதிர்மறை அழுத்தம் முழுக்க இன்றைய ஜனநாயகச் சூழலில் உருவாவதுதான்.
ஆகவேதான் இன்று புகழ்வேண்டாதவர் என்றால் உலகியலில் பற்றற்றவர் என்று பொருள் வருகிறது.அது ஓர் உயர்ந்த பண்பாக கருதப்படுகிறது. ஒரு நற்செயலைச் செய்தபின் அதன் புகழை ஒருவர் நாடுவாரென்றால் அது செய்த நற்செயலுக்கு உலகியல் பிரதிபலனை தேடிச்செல்வதாகப் பொருள்படுகிறது.
ஆனால் சென்ற நிலவுடைமைச் சமூகத்தில் அப்படி அல்ல. புகழ் என்பது உருவாக்கப்படுவது அல்ல, தேடிவருவது. அன்றைய சூழலில் ஆன்றோரிடமும் மூதாதையரிடமும் சுற்றத்தோரிடமும் எளியோரிடமும் விண்ணுலகிலுள்ள தேவர்களிடமும் பெறப்படும் நற்பெயர்தான் புகழ். புகழால் எவருக்கும் உலகியல்நன்மை ஏதுமில்லை. அது முழுக்கமுழுக்க ஒரு ஆன்மிகச்செல்வம்தான். இன்று புண்ணியம் என்கிறோமே அதைப்போல.
அன்றைய விழுமியங்களின்படி இவ்வுலகில் ஈட்டவேண்டியது புகழ். மறுவுலகில் வீடுபேறு. இங்கு புகழை ஈட்டியவன் அங்கே வீடுபேறை அடைவான். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான். உலகியல்புகழ் என்பது வீரம், கொடை, நோன்பு, கடமை, நெறிநிற்றல் ஆகியவற்றால் அடையப்படுவது.
புகழ் விரும்பப்பட்டதுபோலவே இழிபெயர் நரகத்திற்கு இணையாக அஞ்சப்பட்டது. வஞ்சினம் உரைப்பவர்கள் ‘என்னை புலவர் பாடாது ஒழிக’ என்று சொல்வதையும் நாம் பழைய பாடல்களில் பார்க்கிறோம். பெண்கொலைபுரிந்த நன்னன் என்பவனை புலவர் இழிபெயராக வரலாற்றில் நிறுத்திவிட்டதையும் காண்கிறோம்.
ஜெ
***
ஆலயங்கள் சமூகக்கூடங்கள்
www.marvelmurugan.comநம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
அன்பு ஜெயமோகன்,
ஆலயங்கள் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஆகமம், சிற்ப சாஸ்திரம், பண்பாட்டு மையம் மற்றும் வரலாற்றுச் சின்னம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்கள் கருத்தை நீங்கள் வலியுறுத்தி இருந்தீர்கள். அதுபற்றிய எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆலயம் எவருடையது எனும் பதிவு வெளியான மறுநாளே மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சீற்றத்தோடு எதிர்வினை ஆற்றி இருந்தார். உங்களை நன்கு அறிந்திருக்கும் அவரின் சீற்றம் ஆச்சர்யம்தான். எனினும், அவர் சார்ந்திருக்கும் அமைப்பு சார்பில் பேசியாக வேண்டி இருந்திருக்கலாம்.
ஒன்றைத் தெளிவாக்கிக் கொண்டே மேல்நகர விரும்புகிறேன். இந்து அறநிலையத்துறை அல்லது அறங்காவலர்கள் தரப்புகளைக் குற்றஞ்சாட்டி பிரச்சினையை வம்பரசியலாகக் கடந்து போய்விடுவதில் பயனில்லை. ஆகவே, ஆலயம் பற்றிச் சிந்திக்கும்போது அதன் சமூக வரலாற்றுப் பின்புலத்தோடு பேசுவதே நலம்.
ஆலயங்களை மதத்துக்குள் மட்டுமே அடைத்துப் பேசுவது அறிவீனம். அதைப்போன்று ஆலயங்களை ஆகம, சிற்ப சாஸ்திர மரபுக்குள் மட்டுமே அடக்க முயல்வதும் என்னளவில் நியாயமில்லை. காலமாற்றத்திற்குத் தகுந்தவாறு, சமூகவெளியில் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்வதைத் தவிர்க்க இயலாது. அவற்றை எதிர்கொள்வது குறித்தான பன்முகப்புரிதல் முதலில் முக்கியம். இங்கு அப்படியான உரையாடல்கள் சாத்தியமே இல்லாத வகையில் ஆலயங்களை அரசியல் மயமாக்கி ஆயிற்று. திராவிட இயக்கத்தவர்கள் இந்து அறநிலையத்துறை சரி என்பார்கள். ஆன்மீக அமைப்புகள் உள்ளூர் அறங்காவலர்களே சரி என்பார்கள். கிட்டத்தட்ட ஆத்திக எதிர் நாத்திகத் தரப்பு போன்று. இங்கு உரையாடலை முன்னெடுப்பதே அபாயகரமானது.
என்னளவில், ஆலயங்களைச் சமூகப் பண்பாட்டு நிறுவனங்கள் எனும் அளவில் இருந்து புரிந்து கொள்வதே முதலில் தேவை. சங்க்காலம் துவங்கி தற்போதைய காலம் வரையிலான கோவில் உருவாக்க வரலாறு குளித்த ஓரளவு தெளிவான தரவுகளை இன்றைக்கு நம்மால் தொகுத்து விட இயலும். அப்படி தொகுக்கும் ஒருவர் கற்றழி துவங்கி இன்றைய பிரகார மண்டபங்களை உள்ளடக்கிய பேராலயம் வரையிலான வரைபடத்தைத் தயாரித்து விட முடியும். ஆலயம் என்றாலே பக்தர்கள்தான் எனும்படியான தோற்றம் மத அரசியலால் விளைந்தது என்பதை அவ்வரைபடம் சுட்டிக்காட்டி விடும். குன்றக்குடி அடிகளார் திருச்சி வானொலி நிலையத்தில்(1986) ஆற்றிய ஆலயங்கள் சமுதாய மையங்கள் எனும் உரையை இவ்விடத்தில் பரிந்துரைக்கிறேன்(வானதி பதிப்பகம் அவ்வுரையை நூலாகவும் வெளியிட்டிருக்கிறது).
தனது உரையில் கல்விச்சாலை, கலைக்கூடம், மருத்துவச் சாலை, ஊராட்சி மன்றங்கள், நீர்நிலைப் பாதுகாப்பு, தமிழாய்வு, இலக்கிய அரங்கேற்றம், நீதி சபை, முறை மன்றம் போன்றவற்றை உள்ளடக்கியதாக ஆலயங்கள் இருந்தமையாகக் குறிப்பிடுகிறார். அவ்வுரையின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு :
”இன்று நமது திருக்கோயில்களுக்கும் நமது சமுதாயத்திற்கும் நெருக்கமான உறவில்லை. திருக்கோயில் வணிகக்கூடமாக உருமாற்றம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயில், சமுதாயத்தின் நல்லமைப்புக்கு எதிராக இருக்கிற தீமைகளிலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும். அதாவது சாதி வேற்றுமை, தொழில் வேற்றுமை, தீண்டாமை பாராட்டுதல் முதலிய தீமைகளிலிருந்து மீட்கவேண்டும். திருக்கோயில் ஒரு சுரண்டும் நிறுவனமாக வளர்வது, திருக்கோயில் தத்துவத்திற்கே முரணானது! அதனால், நாடு கெடும். பொதுமை நெறிக்கு மாறான ஒரு மேலாதிக்கக்குடி திருக்கோயிலைச் சார்ந்து தோன்ற அனுமதிக்கக் கூடாது.
திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் அனைவரும் தொண்டர்கள். திருக்கோயிலைச் சார்ந்து, மீண்டும் திருநெறிய தொண்டு உயிர்ப்புப் பெறுதல் வேண்டும். திருக்கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊராட்சி மன்றங்கள், கல்விச்சாலைகள், மருத்துவச் சாலைகள் மீண்டும் திருக்கோயில் வளாகத்துக்குள் வந்தாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் திருக்கோயிலுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்!
நாம் ஒவ்வொருவரும் திருக்கோயிலுக்குரிய கடமைகளை-அவை எத்தகையவாக இருந்தாலும் தவறாது செய்தல் வேண்டும். ஆண்டுதோறும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியினைத் திருக்கோயிலுக்கு உளமார மனமுவந்து செலுத்த வேண்டும். இங்கனம் செலுத்துவதன் மூலம் திருக்கோயில் நிதிநிலை சீராகும். இது நடைமுறைக்கு வந்தவுடன் அருச்சனைச் சீட்டு முறைகளை(வணிக முறைகளை) அறவே நீக்க வேண்டும். திருக்கோயில் நிதி சீராகச் செலவழிக்கப் பெறவேண்டும். சிக்கனமாகச் செலவழிக்கப் பெறவேண்டும். திருத்தொண்டின் மூலமே, ஊதியம் பெறாத உழைப்பின் மூலமே, திருக்கோயில்கள் தூய்மையுடன் பேணப்படவேண்டும்.
திருக்கோயிலில் ஆரவாரமான செலவுகளைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயிலில் பொது நிதி ஆதாரத்தை வலிமைப்படுத்தி, வளமாக வாழ வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி உதவி செய்து அவர்களை உயர்த்த வேண்டும். மீண்டும் திருக்கோயிலை மையமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பது நமக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.
திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையங்களாகவும் சமுதாயத்தின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும். திருக்கோயில்கள் தனியார் உடைமைகளாகவும் மதச்சார் பற்ற அரசாங்கத்தின் உடைமைகளாகவும் இருப்பது விரும்பத்தக்கதல்ல. திருக்கோயில்களை மீண்டும் சமுதாய மையமாக மாற்றுவோம்”
குன்றக்குடி அடிகளார் இருதரப்புகளையுமே மறுத்து இருக்கிறார். அவரின் ஆலோசனை தற்கால நடைமுறைக்கு ஒத்துவருமா எனத் தெரியவில்லை. என்றாலும், அவர் முன்வைக்கும் தரவுகளின் வழியாக ஆலயங்கள் எவ்வாறு சமூக நிறுவனங்க்ளாக இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.
ஆலயம் கடிதங்கள்-2ஆலயம் கடிதங்கள் 3
ஆலயம் கடிதங்கள் 4
ஆலயம் கடிதங்கள்-5
ஜீன் ட்ரெஸ்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இன்று ஜீன் ட்ரெஸின் கட்டுரையின் மறுபிரசுரத்தை கண்ட பின் இக்கடிதத்தை எழுதுகிறேன். முன்பு முதல்முறை பாலாவின் இன்றைய காந்திகள் புத்தகத்தை வாசிக்கும் போது, ஒவ்வொரு கட்டுரையையும் என் நோக்கில் சுருக்கி தொகுத்து எழுத ஆரம்பித்தேன். சோனம் வாங்சு மற்றும் ஜீன் ட்ரெஸ் குறித்து எழுதியவுடன் மற்ற ஆளுமைகள் குறித்து எழுத காந்தியம் குறித்த என்னுடைய அறிவு போதாமையை உணர்ந்தேன். எனவே இடையிலேயே நிறுத்தி வைத்துவிட்டேன்.
இன்று நீங்கள் மீள் பிரசுரம் செய்தவுடன் அவரை பற்றிய என் சுருக்க குறிப்பை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பொருளாதாரம் என்னும் ஞானம்
மையமும் விளிம்பும் இல்லாத ஒவ்வொரு அலகையும் தன்னில் நிலைத்து மையம் கொள்ளும் பொருளாதார கட்டமைப்பையே காந்தியின் கிராம சுயராஜ்ய கனவும் பொருளியல் குறித்த பார்வையும் என்று கூறலாம்.
ட்ரெஸ் பற்றி இந்த கட்டுரையில் குஹா கூறுவது எனக்கு பண்டைய இந்திய ரிஷிகளின் சித்திரத்தை நினைவூட்டியது. லூவெனில் பிறந்து இந்தியாவை தன் இருப்பிடமாக கொண்டு வசிப்பதிலிருந்து, அவரது இல்லத்தின் மூங்கில் புதர் சூழ்ந்து புளியமரம் தழைந்திருக்கும் குடிலும் கிரிம்சன் பறவையின் குரலும் அந்த சித்திரத்தை வலுவாக கட்டி எழுப்புகிறது.
இம்மரபில் ஞானம் என்பது அறிவையும் அதை கொண்டு அறிதலையும் பின் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து கடந்து செல்லுதல் என்கிறோம். ட்ரெஸை அப்படி பார்க்கலாம். கட்டுரை தலைப்பின் அடிக்குறிப்பில் குஹா அவரை துறவி என்பது அவருக்கு பொருந்துகிறது. அமர்த்தியா சென்னோடு அவர் உறவை சுட்டுவது அவரது அறிவுப்பணியை மட்டுமல்ல, சமகால அறிவியக்கத்தில் இந்திய மனதையும் ஐரோப்பிய மனதையும் அலசி பார்க்க வாயில் திறக்கிறது. மொத்தத்தில் இந்த தகவல்கள் ஒரு நாவலுக்கு தூண்டு கோலாக அமையலாம் என நினைக்கிறேன்.
இந்த சிறிய கட்டுரையில் ஜான் ட்ரெஸின் வாழ்க்கை முறை, அறிவுப்பணி, அவருடைய புத்தகம் ஒன்றின் அறிமுகம் என்று சுவரசியமாக ஒரு அழகிய கோட்டு சித்திரத்தை வரைந்தளிக்கிறார் குஹா.
இந்நூலில் உள்ள ஒரெயொரு மொழிப்பெயர்ப்பு கட்டுரையானலும் மூல ஆசிரியரின் நடையை தனித்து தெரியும் வகையில் அமைத்திருக்கிறார் பாலா. நேரடியாக காந்தி குறித்து ஒரு சொல்லும் இல்லையெனினும் இக்கட்டுரையை நூலின் பிற கட்டுரைகளோடு சேர்த்து வாசிக்கும் போது நமக்கு காந்தியின் பொருளியல் குறித்து புதிய வெளிச்சம் ஒன்றை காட்டுகிறது.
அன்புடன்
சக்திவேல்
***
அன்புள்ள ஜெ
ஜீன் ட்ரெஸ் பற்றிய கட்டுரை முன்னரே தளத்தில் வந்தபோது நான் வாசிக்கவில்லை. அது அடிக்கடி நடக்கிறது. பலசமயம் கொஞ்சம் நீளமனா, சீரியசான கட்டுரைகளை அப்படியே தூக்கி வைத்துவிடுகிறோம். அது இந்த சமூக ஊடகச்சூழல் உருவாக்கும் மனச்சலிப்பு. ஆச்சரியம்தான். சில்லறை அக்கப்போர்களால் எரிச்சல் வருகிறது. சலிப்புற்று வேறு சில்லறை விஷயங்களை மேலும் வாசிக்கிறோம். சீரியசாக வாசிக்க சோம்பல் படுகிறோம்.
இப்போது ட்ரெஸ் தமிழக அரசின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதை ஒட்டி அவரைப்பற்றி ஆர்வம் ஏற்பட்டதனால் அக்கட்டுரையை வாசித்தேன். அற்புதமான ஓர் அறிமுகம். ஒரே வரியில் அதை இப்படிச் சொல்வேன். எவருக்காக நீ பொருளியல் கொள்கைகளை வகுக்கிறாயோ அவர்களுடன் வாழ்ந்துபார். அந்த அனுபவமே மெய்யான பொருளியல் கல்வி
டிரெஸ் அவர்களுக்கு வணக்கம்
ஜெ.ஆர்.பத்மநாபன்
July 11, 2021
அ.முத்துலிங்கமும் ஈழப்போரும்
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். ஈழ எழுத்தாளர்களில் அவருடைய நடை வித்தியாசமானது. பல நாடுகளில் வேலை நிமித்தம் அவர் வசித்ததால் அந்த நாடுகளின் மண் சார்ந்தும் எழுதியிருக்கிறார்.
ஆனால் என் நண்பர்களில் சிலர் அவர் மீது ஒரு விமர்சனம் வைக்கின்றனர். ஈழப் பிரச்சினைகளில் அவர் மேம்போக்காக எழுதியிருக்கிறார் என்றும் தீவிர ஈழ எழுத்தாளர்களான ஷோபாசக்தி, வாசு முருகவேள், தமிழ்நதி போன்றவர்களை போல் போர் பற்றியும் ஈழ பிரச்சினை குறித்தும் தீவிரமாக எழுதவில்லை என்கின்றனர்.
என் கேள்வி ஒரு எழுத்தாளன் தன் மண் சார்ந்த பிரச்சினைகளை கட்டாயம் எழுதியே தீர வேண்டுமா? அவனுக்கான சுயத்தோடு எழுதவே கூடாதா? ஏனெனில் எனக்கு அ.முத்துலிங்கத்தை மிகவும் பிடிக்கும் ஆதலால் தான் கேட்கிறேன்.
அன்புள்ள
செல்வா
திசையெட்டும்தமிழ்.
அ.முத்துலிங்கம்அன்புள்ள செல்வா,
அந்த நண்பர்களுக்கு வயது முப்பதுக்கு கீழே என்றால் இலக்கிய அறிமுகம் செய்து வையுங்கள். மேலே என்றால் அவர்களிடம் இலக்கியம் பேசாதீர்கள். மூச்சு விரயம்.
ஓர் எழுத்தாளன் எதை எழுதுகிறான் ஏன் எழுதுகிறான் என்பதை அவனே சொல்லிவிட முடியாது. அவனுடைய ஆழம் கொண்டிருக்கும் வினா அவனை இயக்குகிறது. அவனே கண்டடையும் சில அவன் ஆக்கங்களில் வெளிப்படுகிறது. அது புறவுலகில் எதை கருத்தில் கொள்கிறது என்பது அந்த வினாவைச் சார்ந்ததே ஒழிய சூழலின் அழுத்தமோ வாசகனின் தேவையோ அதில் எந்தப் பங்களிப்பையும் ஆற்றுவதில்லை.
இந்தியச் சுதந்திரப்போர் நடந்துகொண்டிருந்தபோது எழுதிய புதுமைப்பித்தன், குபரா எழுத்துக்களில் சுதந்திரப்போராட்டத்தின் சாயலே இல்லை. அவர்கள் அன்றாடம் கண்டுகொண்டிருந்த உலகம் அவர்களுக்குள் எந்தச் சலனத்தையும் உருவாக்கவில்லை. ஆனால் தொலைதூர இலங்கையில் தலித் மக்கள் பட்டுக்கொண்டிருந்த துயரம் புதுமைப்பித்தனை பாதித்தது. அவர் அவர்களைப் பற்றி எழுதினார். (துன்பக்கேணி)
ஆனால் புதுமைப்பித்தனை சுதந்திரப்போர் பெரிதும் பாதித்திருக்கிறது. அதில் கலந்துகொள்ள விரும்பியிருக்கிறார். அதை அவருடைய கடிதங்கள் காட்டுகின்றன. ஆனால் அப்புலத்தில் ஏன் கதைகள் எழுதவில்லை? அவருக்கு போர்மேல் உணர்வுரீதியான ஈடுபாடு இருந்தது, ஆனால் தத்துவச்சிக்கல் இல்லை, கேள்விகள் இல்லை. ஆகவே அது எழுதும்களமாக ஆகவில்லை.
அ.முத்துலிங்கம் ஈழ எழுத்தாளர்களில் முதன்மையானவர். பிற எவரும் அவரைவிட பல படிகள் கீழேதான். ஈழப்போர் குறித்து இங்கே நிறையபேருக்கு செய்திகள் வழியாகத் தெரியும். ஒருவகை கவர்ச்சியும் அதிலுள்ளது. ஆகவே அதைப்பற்றிய கதைகளை விரும்பி வாசிக்கிறார்கள். அக்கதைகளில் அவர்களுக்கு பிடிகிடைக்கும் பலவிஷயங்கள் உள்ளன. ஆகவே கொஞ்சம் ரசனை குறைந்தவர்களும் அக்கதைகளை விரும்புகிறார்கள்.
முத்துலிங்கம் எழுதுவது முதன்மையாகப் பண்பாடுகளுக்கு இடையேயான முரண்பாட்டை. புலம்பெயர்ந்தவர்கள் அங்கிருக்கும் பண்பாடுகளுடன் கொள்ளும் அணுக்கமும் விலக்கமும் அதன் சிக்கல்களுமே அவர் கதைகளில் உள்ளன. உண்மையில் ஈழத்தவர் வாழ்க்கையில் போரைவிட பலமடங்கு பிரம்மாண்டமானது புலம்பெயர்வு. அதை எழுதுபவர் அ.முத்துலிங்கம்.
பொதுவாக இரு பண்பாடுகள் உரசிக்கொள்ளும் முனைகள் இலக்கியத்திற்கு முக்கியமானவை. ஏனென்றால் விழுமியங்கள், மனித ஆளுமை ஆகியவை பெரும்பாலும் கலாச்சார உருவகங்கள். அவற்றை அக்கலாச்சாரத்திற்குள் வைத்து மதிப்பிடுவது சற்று கடினம். இன்னொரு கலாச்சாரத்திற்கு அருகே வைத்து மதிப்பிடுகையில் அவை எளிதில் துலங்குகின்றன.
விழுமியங்களையும் ஆளுமைகளையும் கலாச்சாரத்திற்குள் வைத்து மதிப்பிடுகையிலேயே கூட நாம் ஒரு கலாச்சாரக் கூற்றுடன் முரண்படும் இன்னொரு கலாச்சாரக் கூற்றுடன் ஒப்பிட்டே அந்த அளவீடுகளைச் செய்கிறோம். நேற்றை இன்றுடன் ஒப்பிடுகிறோம். நகரத்தை கிராமத்துடன் ஒப்பிடுகிறோம். தந்தையை மைந்தருடன் ஒப்பிடுகிறோம்.
கலாச்சாரங்களின் முரண்புள்ளிகளை கொண்டு மனிதநிலைகளை, மதிப்பீடுகளை புரிந்துகொள்ளும் முயற்சி பேரிலக்கியங்கள் அனைத்திலும் நிகழ்வது. அ.முத்துலிங்கம் செய்வது அதையே. கீழைப்பண்பாட்டுக்கும் ஐரோப்பியப் பண்பாட்டுக்குமான முரண்பாடு, ஆப்ரிக்கப் பண்பாட்டுக்கும் ஆசியப் பண்பாட்டுக்குமான முரண்பாடே அவருடைய பேசுபொருள்.
ஆனால் அவர் அதை எளிய வேடிக்கையாக ஆக்குவதில்லை. தீர்ப்புகளை சொல்வதில்லை. அனைத்துக்கும் மேலாக தன் பண்பாட்டுப்புலம் பற்றிய பெருமிதமும் அவரிடம் இல்லை. அவர் அந்த களத்தில் வைத்து மனிதர்களையும் அவர்களின் விழுமியங்களையும் புரிந்துகொள்ள மட்டுமே முயல்கிறார்.
ஆனால் அந்த உசாவல் நேரடியான தர்க்கங்களாக அவர் கதைகளில் வெளிப்படவில்லை. விவாதமே இல்லை. முடிவுகளும் சொல்லப்படுவதில்லை. அவர் கதைகள் எளிமையான, மென்மையான நிகழ்வுச்சித்தரிப்புகள். அவற்றினூடாக வாசகன் சென்றடையவேண்டிய இடமாகவே அந்த கலாச்சார உரையாடற்களம் உள்ளது. நவீனக்கவிதையின் அழகியலைக் கொண்டே அ.முத்துலிங்கத்தை புரிந்துகொள்ள முடியும். தமிழில் அ.முத்துலிங்கத்தின் புனைவுலகுக்கு அணுக்கமானது கவிஞர் இசையின் உலகுதான்.
அ.முத்துலிங்கத்தின் புனைவுலகம் நேரடியான அரசியலோ அப்பட்டமான பகடியோ நையாண்டிகளோ கொந்தளிப்புகளோ கூச்சல்களோ கொண்டது அல்ல. அது நுட்மான வாசகர்களுக்கு, கதையில் இருந்து நுண்ணிய படிமங்களை எடுத்துக்கொள்ளும் கவித்துவ அழகியலில் பயிற்சி கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது.
ஜெ
பழைய கட்டுரைகள்
புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து அ.முத்துலிங்கம் நேர்காணல்நீர்வழிப்படூம்,நாகம்மாள் – கடிதம்
அன்புள்ள ஜெ,
சென்ற புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்களை அடுத்த சந்தைக்குள்ளாவது படித்து முடித்துவிடவேண்டும் என்று தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். தளத்தில் உங்கள் அறிமுகம் பார்த்தபிறகே வாங்கினேன். தேவிபாரதியின் ‘நீர்வழிப் படூஉம்’ – நாவிதர் வாழ்க்கைப்பின்னணியில் எழுதப்பட்ட நாவல்.
இன்றைக்கு பத்துக்குப் பத்து அடைப்புகளுக்குள் ‘பார்பர்’ ‘அம்பட்டன்’ போன்ற பெயர்களில் புழங்கும் நாவிதர் சமூகம்தான் நமக்குத் தெரியும். ஆனால் அன்று சமூகத்தில் ஓர் இடத்துடன் இருந்திருக்கிறார்கள். அன்றைக்கு குடிநாவிதர்கள் இல்லாமல் கல்யாணமோ, கருமாதியோ, பூப்புனித நீராட்டுவிழாவோ, வளைகாப்போ எந்த ஒரு காரியமும் நடந்துவிட முடியாது. எந்தெந்த விசேஷங்களுக்கு யார்யாரை, எப்படி அழைக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்களும் அவர்களே. இவ்வாறு பண்ணையக்காரர்களின், பண்ணையக்காரச்சிகளின் சமூக அடுக்குகளிடையே முக்கியமான கண்ணியாக இருந்திருக்கிறார்கள் குடிநாவிதர்கள். அவர்களுக்கு ‘மருத்துவர்’ என்றொரு பெயருமுண்டு. இன்றைக்கு இருக்கும் ‘∴பேமிலி டாக்டர்’ என்று சொல்லப்படுபவர்களின் ஆதிவடிவங்கள். வீட்டில் யார் யாருக்கு என்னென்ன நோக்காடு, அதற்கான மருத்துவ முறைகள். கே.கே.பிள்ளை எழுதிய ‘தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’ நூலில் புதிதாகக் குடியேறிய கொங்கு வேளாளர்களுக்கு அந்த ஊர் நாவிதர்கள் வேலைசெய்ய மறுத்துவிட, தங்கள் சாதியிலிருந்தே குடிநாவிதர்களை உருவாக்கிக் கொண்டதை எழுதியிருப்பார்.
தங்கைகளுக்காக உயிர் கொடுக்கும் அண்ணனாய் இருந்து மணம் முடித்து, குழந்தைகளைப் பெற்று, பெண்டாட்டி பிள்ளைகள் உட்பட எல்லோரையும் தொலைத்துத் தேடி அலைந்து, நொந்து வலிப்பு நோயால் அவதியுற்று மரிக்கும் கதைசொல்லியின் காருமாமா. லிங்கநாவிதன் என்ற அந்த சமூகத்துப் பாணனின் இழவுப்பாட்டுக்களை தங்கச்சி பாட, ஊர்கூடிச் சிறப்பாக, காருமாமாவின் காடேத்தம் நடந்து முடிவதில்தான் கதையே தொடங்குகிறது. திருப்பூருக்கருகில் உள்ள உடையாம்பாளையத்தில் உள்ள குடிநாவிதரான ஆறுமுகம் என்கிற காருமாமாவின் வாழ்க்கைச் சம்பவங்கள் கதைசொல்லியின் பார்வையில் நினைவுகூறலாக விரிகிறது. அவருடைய பிரிந்துபோன குடும்பம் அவருடைய இறப்பின்மூலமே ஒன்று சேர்கிறது.
கதைசொல்லிக்கும் அவர் அத்தை மகளுக்குமான காதல் அந்த இழவுச்சடங்குக்கு நடுவேயே இயல்பாக மலர்கிறது. பெரியவர்களெல்லாம் ஜெமினி கணேசன், சாவித்திரி என்று கிண்டலடிக்கிறார்கள். காருமாமாவின் தங்கைப் பாசமும் பாசமலர் சிவாஜி – சாவித்திரி என்றே கிண்டலடிக்கப்படுகிறது. எழுபது எண்பதுகளின் வாழ்வியலில் பிரிக்கமுடியாத ஆதிக்கம் செலுத்திய வானொலி, சினிமாவின் தாக்கங்கள்- குழந்தைகளை வேலைசெய்யும் இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்கள் கண்முன்னேயே பண்ணையக்காரச்சியின் அவமதிப்புக்குள்ளாகும் பெரியம்மா -சாயப்பட்டறையில் என்றைக்கோ செய்துகொள்ளப்போகும் தற்கொலைக்காக ஒளித்துவைக்கப்படும் சாயப்பொடிகள், அரசுவேலை அடித்தளச் சமூகத்தில் ஏற்படுத்திய மறுமலர்ச்சி என்று வாழ்க்கையின் பலமுகங்களைச் சித்தரிக்கும் ஆழமான பதிவு.
நாவலில் ‘தாயரக்கட்டம்’ முக்கியமான படிமமாக உள்ளது. கதாபாத்திரங்களே சுழட்டிப்போட்ட தாயக்கட்டைகள்தான் என்கிற நிலையில், இழவு வீட்டில் அவர்கள் கட்சி கட்டிக்கொண்டு ஆடுகிற ‘தாயரக்கட்டம்’ ஒரு முக்கியமான நிகழ்ச்சியை முடித்துவைக்கக் காத்திருக்கிறது. நான் படித்த நாவல்களில் மிகவும் பரபரப்பான கட்டத்தில் முடிந்த சமூக நாவல் இதுதான்.
அதேபோல் கோவை வட்டார வழக்கு இவ்வளவு விஸ்தாரமாக ஆவணப்படுத்தப் பட்டிருப்பது இந்த நாவலில்தான். அந்த வட்டார வழக்கு அறிமுகமாகாத பொதுவாசகனுக்கு அதுவே பெரியதடையும் கூட. அதேபோல நாவலில் ஆங்காங்கே காணப்படும் ஒரு பாரா அளவுக்கேயான மிகநீண்ட வாக்கியங்கள். இந்த நாவலைத் தொடர்ந்து நான் படித்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ நாவலும் இதே கோவை வட்டாரப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்தான். வட்டார வழக்கை உபயோகப்படுத்திய வகையில் முன்னோடி நாவல். ஆனால் பொதுவாசகனைக் கருத்தில்கொண்டோ என்னவோ, வட்டார வழக்கை மிகக் குறைந்த அளவே உபயோகப்படுத்தியிருப்பார் ஆசிரியர்.
‘நாகம்மா’ளின் சிக்கல்கள் வேறு. ‘நீர்வழிப் படூஉம்’ அடித்தட்டு மக்களின் அவலவாழ்வைப் பற்றிப் பேசுகையில் ‘நாகம்மாள்’ ஆண்டைகளின் அவலவாழ்வைப் பற்றிப் பேசுகிறது. இங்கு முதலாளிகளும் கடும் உழைப்பாளிகளே. நாள் முழுதும் நிலத்தில் வேலைசெய்கிறார்கள். நிலம் அவர்களுடையது என்பதைத் தவிர, வாழ்க்கைத் தரத்தில் தொழிலாளிகளுக்கும் அவர்களுக்கும் பெரும் வேறுபாடு இல்லை.
நாகம்மாள் இளம் விதவை. ஒரு பெண் குழந்தையின் தாய். கணவனை இழந்தபின், அவனுடைய தம்பி சின்னப்பன் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறாள். அவள் கணவனின் பங்கு நிலமும் இப்போது கொழுந்தனின் கையில் இருக்கிறது. இவளாகப் பங்கு கேட்க சமூகக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல தடைகள். ‘எதுக்காகக் கேக்கோணும்? இப்பிடியே இருந்து கொண்டு, பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக்குடுத்துட்டு, இம்ம்புட்டுக் கஞ்சியைக் குடிச்சுப்போட்டு போய்ச்சேர வேண்டியதுதானே’ என்ற முனைக்கும் ‘என்னோட பங்க ஏன் கேக்காம இருக்கோணும்?’ என்னும் இன்னொரு முனைக்குமான நாகம்மாளின் அல்லாட்டமே கதை. அவனிடமிருந்து நிலத்தை மீட்பதற்காகவே அந்த ஊர் முரடன் கெட்டியப்பனுடன் ‘தொடர்பு’ வைத்துக் கொள்கிறாள். ஊர் பலவாறாகப் பேசுகிறது. சின்னப்பனுக்கும் தெரியாமலில்லை.
கடைசியில் கெட்டியப்பனுடனான தகராற்றில் சின்னப்பன் கொலை செய்யப்படுகிறான். நாகம்மாளும் காருமாமாவைப்போல ஒரு நீர்வழிப் படூஉம் புணைதான். ஆறுகள் வெவ்வேறு. வேகமும் சுழிப்புகளும் பாதிப்புகளும் அவ்வாறே. இன்றைக்கும் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் நிலம் தொடர்பான தகராறுகள் கொலையில் முடிவது சாதாரணமாக இருக்கிறது. பேசினால் அரைமணியில் தீரக்கூடிய பிரச்சினைகள்தான். ஆனால் அந்தப் பேச்சுதான் நடப்பதே இல்லை. இந்த நாவலிலும் அதேதான். ஆனால் இப்பிடிப் பேசித்தீர்ப்பதாக இருந்தால் நமக்கு பல நாவல்கள் கிடைக்காமலேயே போயிருக்குமோ?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
ஞானி- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஞானி பற்றிய உங்கள் கட்டுரைத்தொடர் முக்கியமானது. நான் அவரைப்பற்றி மேலும் பலர் எழுதுவார்கள் என எதிர்பார்த்தேன். எதையும் காணமுடியவில்லை. ஆகவே அனேகமாக இதுவே அவரைப்பற்றிய ஒரே பதிவாக இருக்கும். ஏற்கனவே சுந்தர ராமசாமி பற்றி நீங்கள் எழுதிய நூலை வாசித்தபோதும் இதை உணந்தேன். அவரைப்பற்றி அதற்கு பிறகும்கூட ஒரு நல்ல நூல் வரவில்லை.
இந்நூலில் ஞானியின் புறவுலகம், அவருடைய அறிவுத்தேடல் மட்டுமே உள்ளது. சுந்தர ராமசாமி நினைவுகளிலும் அப்படித்தான். முழுமையாகவே நீங்கள் அவரைப்பற்றிய அகவய நினைவுப்பதிவுகளை தவிர்த்துவிட்டீர்கள். அவர்களின் குடும்பம் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை.
அப்போது அது விசித்திரமாகத் தோன்றியது. இப்போது ஏன் என்று புரிகிறது. இந்த நூலில் ஞானி வாழ்ந்த அறிவுச்சூழல், அவர் செயல்பட்ட விவாதக்களங்கள் விரிவாக உள்ளன. ஐம்பதாண்டுக்காலம் இங்கே இடதுசாரி அறிவுக்களத்தில் நிகழ்ந்த அனைத்துமே சுவாரசியமாக பதிவாகியிருக்கிறது.
சு.ரா நினைவின் நதியில் போலவே அவ்வப்போது வெடித்துச் சிரித்தபடி வாசிக்க வைத்த நூல்
ஜெயராம் கணேஷ்
அன்புள்ள ஜெ
ஞானி பற்றிய உங்கள் கட்டுரைகள் எனக்கு நிறைய புரிதல்களை அளித்தன, எனக்கு இந்து மதத்தின் அன்றாட தளத்தில் இருக்கும் சமத்துவமின்மை பற்றிய வருத்தங்கள் இருந்தன, அதில் எப்படி கொண்டுவர முடியும், அதற்கான சாத்தியம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டியதிருந்தது, இது பற்றியெல்லாம் யோசித்து பார்பேன்.
ஞானியின் தேடல் பற்றிய நீங்கள் அளித்த சித்திரம் என் தேடலுக்கு நேரெதிர் திசையில் இருந்தது, அதாவது அவர் மனித சமத்துவத்தை முன்வைக்கும் தரிசனத்தை கையில் வைத்து கொண்டு அதை ஒட்டிபோகும் பண்பாட்டிலுள்ள கூறுகளை தேடுகிறார். எஸ் என் நாகராஜன் வழியாக அடைகிறார், மனித சமத்துவம் என்பதை விட மேலான ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பொருளும் கூட கொண்ட அனைத்தையும் ஒன்றாக காணும் அத்வைதம் இந்த இடத்தில் வருவது எனக்கு பெரிய உற்சாகம் அளித்தது, இந்துமத சீர்திருத்த வாதிகள், அடித்தள மக்களை உள்ளுக்குள் கொண்டுவந்த பக்தி இயக்கம் என வாசிக்கும் போது முன்பே சமத்துவத்தை அடைவதற்கான வழி இங்கு இருந்திருக்கிறது, இருக்கிறது என்பதை அறியும்போது உற்சாகம் வருகிறது.
மார்சியத்தில் பண்பாட்டு கூறுகளை உள் கொண்டுவருவதை விட பண்பாட்டு பின்னணிக்குள் மார்க்சியம் முன்வைக்கும் சமத்துவத்தை பண்பாட்டிலிருந்தே எடுத்துக்கொள்வது, அடைவது, அதை மதத்தின் பிராதன இயல்பாக மாறுவது இன்னும் சிறந்தது என்று தோன்றுகிறது. ஞானி மார்க்சியம் என்ற கோணத்தில் அணுகாமல் அது முன்வைக்கும் விஷயங்களை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று பார்த்திருந்தால் மார்க்சியத்தை கைவிட்டு அத்வைத பின்னணியை நோக்கி போயிருப்பார் அல்லது போயிருக்க கூடும்.
இன்னொன்று ஒரு அறிதலை அடைத்த பிறகு கிடைக்கும் பார்வையை கைவிடுவது என்பது சாத்தியம் என்ற விஷயம் எனக்கு உறுத்தியது, அதாவது எல்லா மக்களும் ஒன்று என என்னும் சர்வதேசியத்தை கொண்டிருக்கும், பார்வை தெளிவை கொண்டிருக்கும் ஒருவர் குறுகுழு மனநிலைக்குள் சென்று அமைகிறார் என்பது எனக்கு வருத்தமளித்தது. ஒருவர் தான் நிராதரவு ஆகும்போது தன் பிறப்பிலான அடையாளத்திற்குள் சென்று அமைந்து ஆதரவு தேடி கொள்கிறார் என்று தோன்றுகிறது. நிராதரவு மனநிலை நம்மை அடையாளமற்றவனாக ஆக்கிக்கொள்கிறது போல, இந்த வெறுமையை அழிக்க தனது பிறப்பு சார்ந்த சொத்தான மண்ணின்மைந்தன் தளத்திற்குள் வந்து விடுகிறார்கள் போல.
இந்த கட்டுரைகள் ஞானி பற்றியது மட்டுமில்லாமல் உங்கள் முதல் மூன்று பெரிய நாவல்களை எப்படி அணுகவேண்டும் எனும் புரிதலை உங்கள் விளக்கங்கள் மற்றும் உங்கள் நூல்கள் பற்றி ஞானி சொல்கிற விமர்சனங்கள் வழியாக வெகுவாக புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த கட்டுரைகள் தொடர்ச்சியாக ஈ எம் எஸ்ஸும் கேரள தேசியமும் எனும் இரு கட்டுரைகள் வாசித்தேன், அந்த தொடரை நீங்கள் முடித்தீர்கள் என்றால் எனக்கு தேசியம் சார்ந்து இன்னும் உள்வாங்கி கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
ராதாகிருஷ்ணன்
இரு கேள்விகள்
நாமக்கல் கவிஞர்ஜெயமோகன் அவரகளுக்கு,
வணக்கம். நான் உங்கள் எழுத்துக்கள் மற்றும் video சில பார்த்தும் உங்கள் விசிறியானவன். ஒரு இதயநோய் மருத்துவன். தமிழ் மீது பற்றுக்கொண்டவன்.
தெண்பாண்டி சீமை.இந்த சொற்றொடர் பிரயோகம் தமிழ் சினிமா பாடல்களில் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
1.தெண்பாண்டி சீமையில தேரோடும் வீதியில.
2.தெண்பாண்டித்தமிழே
3. தெண்பாண்டிக்கூடலா
4. தேனே தெண்பாண்டி மீனே…
இன்னும் நிறைய…
இது எதனால் ?உங்கள் கருத்துக்கள் கேட்க விரும்புகிறேன், மிகவும் சுவைபட இருக்கும் என நம்புகிறேன்.
டி.மூர்த்தி
அன்புள்ள மூர்த்தி அவர்களுக்கு,
சினிமாப்பாட்டில் தென்பாண்டி என வருவது முதன்மையாக அது தந்தான என்னும் சந்தத்தில் அமைவதனால்தான்.
அந்தச் சொல்லாட்சி நாட்டார்பாட்டுகளில் உண்டு. காரணம் மதுரைக்கு தெற்கே உள்ள நாட்டார் பாடல் வகை தெம்மாங்கு எனப்படுகிறது. தென்பாங்குப் பாட்டு என்பதன் மரூஉ அது.
அதைப் பாடுகிறவர் தன்னை தென்பாண்டி நாட்டான் என்றும் தன் நிலத்தை தென்பாண்டிநிலம் என்றும் சொல்வதுண்டு.
சினிமாப்பாட்டில் தெம்மாங்குப் பாட்டின் செல்வாக்கு நேரடியானது. அது தெருக்கூத்தில் இருந்து நாடகத்துக்குச் சென்று அங்கிருந்து சினிமாவுக்குச் சென்றது. புகழ்பெற்ற பல பாடல்கள் தெம்மாங்கு மெட்டு கொண்டவை. [உதாரணம், மாமா மாமா மாமா, என்னடி ராக்கம்மா, ஒத்தரூவா தாரேன்…]
தெம்மாங்கு சினிமாவுக்குச் சென்றபோது தென்பாண்டி என்னும் சொல்லாட்சியையும் எடுத்தாண்டிருக்கிறார்கள்.
ஜெ
மனோன்மணியம் சுந்தரனார்அன்புள்ள ஜெ,
இளம் வாசகன் பேசுகிறேன்.
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு என் இனிய வணக்கம்.
இப்போது நான் எழுத்தொடங்கியிருக்கிறேன்.என்னுடைய கேள்வி , கவிதை, கட்டுரை,சிறுகதை,நாவல்,உரைநடை, குறுநாவல் போன்ற வகைமைக்குள்தான் இயங்க வேண்டுமா ? ,எழுத வேண்டுமா ?
அன்புடன்
ப.கலைச்செல்வன்
புலவர் ஆ பழனிஅன்புள்ள கலைச்செல்வன்,
இன்றிருக்கும் எந்த வடிவும் மாறா இலக்கணம் அல்ல. இலக்கணங்களை மீறி தாராளமாக எழுதலாம். அப்படி பல முயற்சிகள் எப்போதுமே நடைபெற்றிருக்கின்றன. கவிதை நாடகங்கள் [சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியம், ஆ.பழனியின் அனிச்ச அடி] கவிதை நாவல்கள் [நாமக்கல் கவிஞரின் அவனும் அவளும்] கவிதைபோன்ற உரைநடையாகிய உரைவீச்சு [என்.ஆர்.தாசன்] என பல வடிவங்கள் முயலப்பட்டுள்ளன.நீங்களும் புதியன காணலாம்
ஜெ
முதுநாவல்
காலந்தோறும் கதைகள் ஏன் சொல்லப்படுகின்றன என்று ஆராய்ந்தால் வாழ்க்கையின் விளிம்புக்கு அப்பால் கால்வைப்பதற்காகத்தான் என்று தோன்றுகிறது. அன்றாடத்தின் அறிதல்களுக்கு அப்பால் செல்லவே எப்போதும் கதைகள் முயல்கின்றன. தர்க்கம் தயங்கிநிற்கும் இடங்களில் சிறகுகொண்டு கற்பனை பறந்தெழுகிறது. ஆகவேதான் உலக இலக்கியத்தில் பெரும்பகுதி மாயக்கதைகளாக, பேய்க்கதைகளாக, தேவதைக்கதைகளாக உள்ளன.
இங்கே இவ்வாறு சொல்லப்பட இயலாத ஒன்றைச் சொல்வதற்கான கதைகள் அவை.இலக்கியம் உருவாக்கிக்கொண்ட பல கூறுமுறைகள் அந்த யதார்த்த எல்லையை கடக்கும்பொருட்டே அடையப்பட்டன. உருவகங்கள், படிமங்கள், கனவுத்தன்மைகள், தொன்மங்கள், ஆழ்படிமங்கள், சொல்லப்படாத இடைவெளிகள். மிகுகற்பனை, மாயயதார்த்தம், அறிவியல்கற்பனை, தொன்ம உருவாக்கம் என நவீன இலக்கியம் யதார்த்தத்தின் விளிம்பைக் கடந்து, கனவுகளைக் கடந்து கற்பனையின் வீச்சுடன் சென்றுகொண்டிருக்கிறது.
துரதிருஷ்டவசமாக நம் நவீன இலக்கியத்தில் நவீனத்துவத்தின் நம்பிக்கைகளும் அழகியலுமே மேலோங்கி இருந்தன. நவீனத்துவம் கல்லில்செதுக்கி வைக்கப்பட்டது போன்ற புறவயமான யதார்த்தத்தை நம்புவது. ஒவ்வொன்றையும் தன்னிலிருந்து தொடங்குவது. அதற்கு ‘அது’ இல்லை. ‘அப்பால்’ இல்லை. அதன் மீறல்கள் எல்லாமே தன்னில் இருந்து துள்ளி தன்னில் விழுபவை மட்டுமே. அந்த மனநிலை இங்கே இரண்டுதலைமுறைக்காலம் நீடித்தது
ஆனால் புதுமைப்பித்தன் இயல்பாக யதார்த்தத்தின் எல்லைகளை மீறிச்சென்றிருக்கிறார். அசோகமித்திரன் அரிதாக அத்தகைய படைப்புக்களை எழுதியிருக்கிறார். அவ்வகை மீறல் என்றும் இருந்துகொண்டேதான் இருக்கும். ஏனென்றால் கதைகேட்கும் மானுட உள்ளத்தின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று அது.
நான் எழுதவந்தபோது யதார்த்தவாதம் உருவாக்கிய அந்த எல்லையை இயல்பாக மீறிச்சென்றேன். புராணம், பேய்க்கதை, திகில்கதை, அறிவியல்புனைவு என எல்லா வகையிலும் எழுதிப்பார்த்தேன். அவ்வகை கதைகள் என் புனைவுலகில் நிறைந்துள்ளன. இவை ஒரு நுட்பமான எல்லைக்கோட்டில் நகரும் கதைகள். புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன.
எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது. இங்கு இவை என நாம் அறியும் அனைத்தையும் கடந்துசென்று அறியவேண்டிய எங்கோ.
இக்கதைகள் கற்பனையின் எல்லையை நீட்டி வாசகனின் அகத்தை கொந்தளிக்க வைக்கக்கூடும். அவனை அகம்பறக்கச் செய்யக்கூடும். ஆனால் வெறுமே வாசிப்பின்பத்தின் பொருட்டல்ல, மெய்மையை சென்று தீண்டுபொருட்டே இவை அந்த மீறலை நிகழ்த்துகின்றன. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது. இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள்.
லக்ஷ்மி மணிவண்ணன்இத்தொகுதியை நண்பர் லக்ஷ்மி மணிவண்ணனுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ
முதுநாவல் வாங்கJuly 10, 2021
புனைவில் தொன்மங்கள் தேவையா?
அன்புள்ள ஜெ
நாம் நமது தினசரி சிக்கல்களிலிருந்தும் நமது மனதில் உருக்கொள்ளும் என்னற்ற உரையாடல்களிலிருந்தும் தொன்மத்தை கொண்டு வெளியேறுவதில்லை,கடப்பதில்லை.அதை நாம் தர்க்கம் கொண்டும் கடக்கலாம் அல்லது அதனாலேயே பிறழலாம்,அல்லது அதனூடேயே வாழலாம்.
இன்று நாவல்கள், கதைகளில் ஒரு சிக்கலை தொன்மத்தோடு இணைத்து விட வேண்டும் என்ற எண்ணம், நோக்கு உள்ளது.நமது சிக்கல்கள் அனைத்தும் ஏன் ஒரு தொன்மத்தோடு இணைந்தே ஆக வேண்டும்?
இன்று ஒரு இயந்திரத்தின் திறன் பலநூறு பேரை வேலையிலிருந்து நீக்கி விடக்கூடும்.வேலைக்கு தேவை ஆனால் ஊதியம் அதிகம் தர இயலாது என்ற நிலை சென்று வேலைக்கு தேவையில்லை உன் வேலையை இயந்திரமே செய்து விடக்கூடும் உனக்கான ஊதியம் உன் மீது அரசும் நிர்வாகமும் கொள்ளும் கருணை என்ற நிலை வரும் காலத்தில் நாம் இருக்கிறோம்.இவற்றை போன்ற சிக்கல்களை நாம் ஏன் தொன்மத்தில் இனைத்து பேச வேண்டும்?
சர்வோத்தமன் சடகோபன்
மலோஹ் Molochஅன்புள்ள சர்வோத்தமன்,
புனைகதைகளில் வேண்டுமென்றே தொன்மங்களை இணைக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. இணைத்தால் அவை பொருந்தாமல் நின்றிருக்கும்.
தொன்மங்களின் பயன் என்ன? அவற்றின் பெயர்சுட்டுவதுபோல அவை தொன்மையானவை. இன்றிருக்கும் ஒன்றை தொன்மையான, காலம்கடந்த ஒன்றுடன் இணைக்கும் பொருட்டே கதைகளில் தொன்மங்கள் இணைக்கப்படுகின்றன.
அப்படி இணைக்கப்படுமென்றால் அந்தப் பேசுபொருள் காலம்கடந்ததாக இருக்கவேண்டும். என்றென்றும் உரிய சிக்கலாக இருக்கவேண்டும். தொன்மத்துடன் இணைப்பதன் வழியாக “இது காலந்தோறும் உள்ள மானுடப் பிரச்சினை. இது வாழ்க்கையின் போக்கில் உருவாவது அல்ல. இது மானுட அகத்திலோ அல்லது இயற்கையிலோ உள்ளுறைந்துள்ள ஒன்று” என்று சொல்கிறோம்.
ஆகவே இன்றைய வாழ்க்கையில் இன்று மட்டுமே பொருட்படுத்தப்படவேண்டிய சிக்கலுக்கு தொன்மங்களை இழுக்கவேண்டியதில்லை. முயன்றாலும் தொன்மங்களுடன் அவற்றைப் பிணைக்கவும் முடியாது. ஓர் இயந்திரம் பலநூறுபேரை வேலையில் இருந்து அகற்றுகிறது. அது நவீனகாலகட்டத்தின் சிக்கல். பதினேழாம்நூற்றாண்டில் இயந்திரப்புரட்சி உருவானபின் எழுந்த ஒன்று.
[இந்தப் பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டது தானியங்கி தறிகள் வந்தபோது. அவை ஆற்றோட்டத்தின் விசையால் இயக்கப்பட்டன. எஸ். நீலகண்டன் எழுதிய ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை என்னும் நூலில் இதன் முழுச்சித்திரத்தைக் காணலாம்]
இந்தப்பிரச்சினையை பேசும்போது இரு கோணங்கள் உள்ளன. ஒன்று, இந்த்ப்பிரச்சினையை மட்டுமே பேசவேண்டும். அவ்வாறு பேசினால்தான் நடைமுறைத் தீர்வை நோக்கிச் செல்ல முடியும். அவ்வாறு பேசும்போது அதில் எந்த வரலாற்று ஊடாட்டமும் இருக்கலாகாது. எந்த தொன்மமும் இணையலாகாது. அப்போதுதான் அந்த பிரச்சினை கூர்மைபெறும்.
ஆனால் அதன் ஒரு படைப்பாளி தத்துவார்த்தமாக நீட்டலாம். காலந்தோறும் மானுடர் அவர்கள் படைத்தவற்றால் ஆட்சிசெய்யப் படுகிறார்கள். அவர்களின் கற்பனையால் அவர்களின் சொந்தக் கைகளால் உருவான ஒன்று அவர்களை அடிமைப்படுத்துகிறது, அவர்களால் அதை வெல்லமுடியாது. ஒருபோதும் அதைக் கடக்கமுடியாது. இந்த உண்மையை நோக்கி அக்கதையைக் கொண்டுசென்றால் என்ன ஆகும்?
அதற்கு தொன்மம் தேவைப்படுகிறது. மனிதன் படைத்தவையே தெய்வம், அரசன், அரசு, பணம் அனைத்தும். அதைச் சுட்டும் ஆழ்ந்த படிமம் ஒன்று அனைத்தையும் பெருஞ்சித்திரமாகக் காட்டிவிடும். அவ்வாறன்றி அத்தகைய முழுச்சித்திரத்தை காட்டவேண்டும் என்றால் கதைக்குள் பக்கம் பக்கமாகப் பேசவேண்டும். நேரடியாகச் சொல்லவேண்டும். அது கலையே அல்ல. அத்துடன் அது ஆசிரியர்கூற்றாகவே இருக்கும், வாசகனால் விரித்தெடுக்கப்படாது.
நவீனத்தொன்மம் அல்லது நவீனப்படிமம் ஒன்றைக் கையாளலாமே என்று கேட்கலாம். அவ்வண்ணம் கையாள்கையில் அந்த கதை காலாகாலமாக, என்றென்றுமாக என்ற பொருளை பெறுவதில்லை. காலம்கடந்த தன்மை ஒன்று கதைக்குள் தேவைப்படுகிறது. ஆகவேதான் தொன்மம்.
இந்தக் கருவுக்கே சிறந்த உதாரணமாக அமையும் கதை ஒன்று உண்டு. அலக்ஸாண்டர் குப்ரினின் மலோஹ். மலோஹ் என்பது பண்டைய பாகன் மதத்தின் அக்கினித்தெய்வம். நெருப்பை மனிதனால் உருவாக்க முடியும். அதன்பின் அதில் அவனுக்கு கட்டுப்பாடே இல்லை. ஒரு தொலைநிலத்தில் தொழிற்சாலை ஒன்றை உருவாக்க வரும் இளம்பொறியாளன் பல்லாயிரம்பேரின் வாழ்க்கையை விழுங்கும் அக்கினிக்கடவுளை அவன் எழுப்பிவிட்டதை உணர்கிறான்.
அவன் அந்த ஆலையை ஒரு சிறு லிவரை இழுப்பதன் வழியாக அழிக்க முடியும். அதில் கையை வைக்கிறான். ஆனால் இழுக்க முடியவில்லை. முடியவே முடியாது. மானுடத்தின் வரலாற்றில் எப்போதுமே அதற்கு முடிந்ததில்லை. அந்த தரிசனம் அக்கதையை ஒரு நடுக்கமூட்டும் அனுபவமாக ஆக்குகிறது. கவனியுங்கள் ‘மானுடவரலாற்றில் எப்போதுமே’ என்ற சொல்லே அக்கதையின் ஆழம். அந்த உணர்வை ஊட்டுவது மலோஹ் அதில் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதனால்தான்.
அக்கதையை வெறும் தொழிற்சாலையாக எழுதியிருக்கலாம். அந்நெருப்பை ஒரு நவீனக்குறியீடாக ஆக்கியிருக்கலாம். ஆனால் எப்போதுமே என்னும் உணர்வு, அது அளிக்கும் பெருந்திகைப்பு உருவாகியிருக்காது
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

நாகம்மாள் வாங்க
