Jeyamohan's Blog, page 949

July 18, 2021

சிங்கப்பூர் இலக்கியம், ஒரு பேட்டி

வல்லினம் சிங்கப்பூர் சிறப்பிதழ் ஆழமான படைப்புக்கள், விமர்சனங்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றாலானதாக உள்ளது. அதற்குப்பின்னாலிருக்கும் உழைப்பு வியப்பூட்டுவது. இன்று இணைய இதழ்கள் தீவிரமான உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டு வெளியிடப்படுகின்றன. வாசித்தேயாகவேண்டிய இதழ்கள் என தமிழினி, கனலி, யாவரும் என சிலவற்றைக் குறிப்பிடலாம். வல்லினம் மலேசிய- சிங்கப்பூர் இலக்கியத்தையும் அகழ் ஈழ இலக்கியத்தையும் மையமாக்கி வெளிவருகின்றன. அரூ இணையதளம் மாற்று எழுத்து, மற்றும் அறிவியல்புனைவுகளுக்கான தளமாக வெளிவருகிறது. சென்றகாலச் சிற்றிதழ்களையும் நடுத்தர இதழ்களையும் பார்த்தவன் என்ற வகையில் இது ஒரு மூன்றாவது இலக்கிய அலை என்றே சொல்வேன்.

வல்லினம் இதழில் சிங்கப்பூர் லதாவின் பேட்டி வந்துள்ளது. லதா கவிஞராகவும், கதையாசிரியராகவும் இதழாளராகவும் அறியப்படுபவர். அத்துடன் சிங்கப்பூர் இலக்கியமரபை விமர்சனரீதியாக நன்கறிந்தவரும்கூட. பொதுவாகவே பேட்டிகளில் உள்ள எண்ணிச் சொல்லெடுக்கும் கணக்கீடுகள் இல்லாமல் நேரடியாக, இயல்பாக பேசியிருக்கிறார். முக்கியமான பேட்டி இது

இந்நாட்டு படைப்பிலக்கியம் குறித்த கூர்மையான விமர்சனத்தை முன்வைக்க வெளிநாட்டு, உள்நாட்டு விமர்சகர்கள் ஒரு சிலரைத் தவிர, பலருக்கும் தயக்கம். ஏனென்றால், இந்நாட்டில் இன்னமும் விமர்சனத்துக்கும் அவதூறுக்கும் இடையேயான வேறுபாடு உணரப்படவோ, உணர்த்தப்படவோ இல்லை. அதனால் எதிர்மறையான விமர்சனங்களை தனிப்பட்ட நிந்தனையாகவே பார்க்கிறார்கள். அதனால் மனவருத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் அது பகைமையாகிறது அல்லது போலிஸ், சட்டம் என்பது வரை நிலைமை போய்விடுகிறது. இப்போக்குக்கு ஆதரவுக்குரலே இங்கே அதிகம் உள்ளது.

1991இல் சுந்தர ராமசாமி சிங்கப்பூர் சிறுகதைகள் மீது வைத்த எதிர்மறையான அபிப்பிராயத்துக்குப் பின்னர் அவர் இங்கு அழைக்கப்படவே இல்லை. ஜெயமோகன் இந்நாட்டு கதைகள் குறித்து தீவிரமாக விமர்சனம் செய்தபோது போலிசில் புகார் செய்தார்கள். மலேசியாவிலிருந்து ம.நவீன் எழுதியபோது அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதினார்கள். அதன்பிறகு, ஏன் வம்பு என்று இவர்களை இங்கே அழைப்பதற்கே யோசிக்கிறார்கள். தெரியாத, புரியாத ஒன்றைக் குறித்த பயம், கோபமாகவும் வெறுப்பாகவும் காழ்ப்பாகவும் வெளிப்படுவது இயல்பு என்பது மனோதத்துவியலாளர்கள் கூறுவது.

லதா பேட்டி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2021 11:33

புதிய நூல்கள் – கடிதங்கள்

ஜெயமோகன் அமேசான் நூல்கள்

வணக்கம் ஜெ

தங்களுடைய இணையதளம் இன்று ஒரு அறிவுத்தளமாக இயங்கி வருகிறது. அதில் இலக்கியம், மதம், பண்பாடு, சமூகம், கலை போன்ற பல விஷயங்களில் பல விவாதங்கள் நிகழ்கின்றன. சில வகை கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வந்துள்ளன. குறிப்பாக மதம், பண்பாடு விஷயங்களில் ‘கலாச்சார இந்து’, ‘இந்திய ஞானம்’. காந்தி பற்றிய சமீபத்தில் வெளிவந்த கட்டுரை தொகுப்பு நூல். மேலும் உங்களது பயண இலக்கியம் போன்றவை. அன்றாடம் நீங்கள் பதிவேற்றும் கட்டுரைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு நூலாக வருவது மிக பயனுள்ளதாக இருக்கிறது.

அதேபோன்று திராவிட இயக்கம், ஈ.வே.ரா. குறித்த கட்டுரைகளையும் தொகுத்து நூலாக வெளியிடவேண்டும் என்பது என் வேண்டுகோள். இன்றைய தமிழ்ச் சூழலில் திராவிட இயக்கம், அதன் அரசியல், அதன் இலக்கியம்   போன்றவைகளை பற்றியும், ஈ.வே.ரா குறித்தும்  தெளிவான பார்வைமுறை அவசியம். அதுகுறித்த உங்களது முழு கட்டுரைகள், வாசகர்களின் கேள்விகளுக்கு  நீங்கள் அளித்த பதில்கள் போன்றவற்றை தொகுத்து ஒரு நூலாக வந்தால் அது மிக பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி

விவேக்

அன்புள்ள விவேக்,

பொதுத்தலைப்பில் அவ்வாறு கட்டுரைகளை தொகுக்கும்பணி நடைபெற்று வருகிறது. வெவ்வேறு நண்பர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். விரைவில் நூல்களாக வெளிவரும். முதலில் மின்னூல்களாகவும் பின்னர் அச்சுநூல்களாகவும்.

ஜெ

அன்புள்ள ஜெ,

சிறுகதைகள் தொகுதிகளாக வெளிவருவதைப் பார்க்கிறேன். நான் அத்தனை சிறுகதைகளையும் இணையதளத்திலேயே வாசித்துவிட்டேன். அவற்றை நூல்வடிவில் வாசிக்கவும் சில நண்பர்களுக்குப் பரிசாக வழங்கவும் நினைக்கிறேன். அவை எப்போது நூலாக வெளிவரும்?

அர்விந்த்குமார்

அன்புள்ள அர்விந்த் குமார்,

என் சிறுகதைகள் இப்போது மின்னூல்களாக கிடைக்கின்றன. அவற்றை விரைவில் அச்சுநூல்களாகக் கொண்டுவர முயல்கிறோம்.

ஜெ

[விளம்பர வடிவமைப்பு கீதா செந்தில்குமார்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2021 11:32

வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு- கனெக்டிகட்

அன்புள்ள ஜெ  அவர்களுக்கு,

27/06/21 சனிக்கிழமை மாலை 3மணிக்கு கனெக்டிகட் மாகாணத்தில் ( Waterbury) பாஸ்டன் பாலா மற்றும்  நண்பர்கள்  முயற்சியால் வெண்முரசு ஆவணப்படம் திரையிடப்பட்டது.

பாலா அவர்களின் அறிமுக உரையுடன் படம் துவங்கிய இரண்டு மணி நேரம் உளம்  ஒன்றி, விழி திருப்பாது, இருக்குமிடம் மறந்து கழிந்தது. செறிவான அறிமுகம், திரைத்துறை மற்றும் தமிழ் இலக்கியத்துறை ஆளுமைகளின்  கருத்துரைகள் (அருண்மொழி நங்கை அவர்களின் பெருமிதம் கலந்த புன்னகை),பிரம்மாண்டமான இசை. நறுவிசான படத்தொகுப்பு, சண்முகவேலின் ஓவியங்களுடன் வெண்முரசு  theme music  என செவிக்கும், கண்ணுக்கும், மனதுக்கும்  இனிய அனுபவம். வலைத்தளத்தில் கடிதங்கள் மற்றும் படைப்புகள் மூலம் மிகவும் பரிச்சயமாகிவிட்ட கடலூர் சீனு, சுபஶ்ரீ, சுசித்ரா, பேரா.லோகமாதேவி மற்றும்பலர் வெண்முரசில் இருந்து கற்றதும் பெற்றதும் என அனுபவப் பகிர்வுகள் அருமை. ஒவ்வொரு நாளும் வெளிவருமுன் படித்து, செப்பனிட்டு ஒருங்கிணைத்த பெரும்பணியை ஆற்றிய சுதாவின் அனுபவத்தைக் கேட்டபோது ‘பெரிய பணிகள் முழுதளிப்புள்ளவர்களை கண்டடைகின்றன’ என்று நீங்கள்  குறிப்பிட்டது நினைவில் வந்தது.

இதுவரை வெண்முரசு படித்திராதவர்களுக்கும் ஒரு அறிமுகமாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது. பாஞ்சாலி துகில்  வளரும் காட்சி குறிப்பிடப்பட்ட போது என்னுடன் வந்திருந்த (இன்னும் வெண்முரசு படித்திராத) என் கணவர்  “அட, அது அப்படித்தானே இருக்கமுடியும், வேறெப்படி என்று வியந்தார். வீடு வந்து தொலைபேசியில் என் 80 வயது தாயிடம் இதைக் குறிப்பிட்டபோது சொன்னது ‘ ‘அந்தப் பெண்கள் மனசுல இருந்து அதை செய்ததும் அவன் தானே, இது ஏன் இதுவரைக்கும் யாருக்கும் தோணலை?’.’.

ராஜன் இசையில் ,கமல், சைந்தவி, ஶ்ரீராம் பார்த்தசாரதி குரலில் வந்த தாலட்டு  அற்புதம். வரிகளில் உச்சகட்ட கவித்துவமும் அதற்கிணையான இசையும்… சிறுகுமிழ் விரல்களே, அமைக என் தலைமேல்! என்ற வரிகளில் என் கண்ணீல் நீர் பெருகி உடல் புல்லரித்தது. முடிவில் சண்முகவேல் அவர்களின் ஓவியங்களுடன்  வந்த  theme music ன் நிறைவுக்காட்சியில் திரை நிறைய மயிற்பீலிகள்.  உன் முடியிலெழுந்த பீலிவிழி மட்டும் இமையாதாகுக! கண்ணே, இப்புடவிமேல் உன் நோக்கு ஒருகணமும் அணையாதாகுக!…. What a finale!

இந்தத் தொற்றுக்காலத்திலும் ஆவணப்படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கிய  நண்பர்கள் ஆஸ்டின் சௌந்தர், ராஜன் சோமசுந்தரம் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கமும். இலக்கிய உலகில் இதுபோன்ற முன்னுதாரணங்கள் இருக்கலாம். ஆனால் இது ஒரு மயில்கல்.

திரையிடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட பாஸ்டன் பாலா, கிஷோர்  மற்றும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இதற்குக் காரணமாய் அமைந்தது வெண்முரசு என்னும் பேரிலக்கியம். அதை ஆற்றிய உங்களுக்கு என் அடிபணிந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும். இன்னுமொரு நூற்றாண்டிரும்.

அன்புடன்,

ஜெயஶ்ரீ.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2021 11:30

July 17, 2021

வெண்முரசு நாள் – குருபூர்ணிமா – ஜூலை 23 நிகழ்வு

வெண்முரசு நாள் – குரு பூர்ணிமா – 23/07/2021 வெள்ளி இரவு 8 மணி தொடங்கி

2020 ம் ஆண்டு துவங்கி, குரு பூர்ணிமா முழுநிலவு நாளை நாம் வெண்முரசு நாளாக கொண்டாடி வருகிறோம். தொன்று தொட்டு, இந்த நாளில் நமது வாழ்வில் ஞான ஒளி ஏற்றிய ஆசிரியர்களை வழிப்பட்டு வருகிறோம். பாரதம் இயற்றிய வியாசரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

2020 ம் வருடம், மகாபாரதம், தமிழில், நாவல் வடிவில், ‘வெண்முரசு’ என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்டது. தமிழ் மொழியில் நிகழ்ந்த மகத்தான சாதனைகளில் ஒன்று இந்த நாவல்வரிசை.

இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.

ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும்.

இந்த பெரும் முயற்சி முழுமையடைந்து, இந்நாவல் எழுதி நிறைவு செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து ஆண்டு தோறும் குருபூர்ணிமா முழுநிலவு நாளில் வெண்முரசு வாசிப்பு, ஆசிரியருடனான உரையாடல் என கொண்டாடுகிறோம்.

நேரில் முழுநிலவின் வெளிச்சத்தில் ஆசிரியருடன் உரையாடுவதே இந்நிகழ்வின் வடிவம் , சூழல் ஒத்துழைக்கமையால் இணையம் வழியே சந்திப்பு.

இவ்வருடம், குரு பூர்ணிமா (ஜூலை 23, 2021) அன்று, ஆசிரியருடன் ஜூம் மீட்டிங் மற்றும் யூடியூப் லைவ் வழியாக உரையாட உங்களை அழைக்கிறோம். தங்கள் கேள்விகள், கருத்துக்களை லைவின் கமண்டில் இடலாம். வருக.

ஜூலை 23, 2021, வெள்ளி இரவு 8 மணி முதல்
யூட்யூப் லைவ்: https://www.youtube.com/c/jeyamohanwriter

ஜூம் மீட்டிங் :
https://us02web.zoom.us/j/4625258729
Meeting ID: 462 525 8729
(முதல் 100 பேர் மட்டும்)

வெண்முரசு வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்.

அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம், வருக.

விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: solputhithu@gmail.com
வாட்ஸப் : +91 9965315137; +91 98940 33123

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2021 11:40

ஸ்ரீநிவாச கோபாலன் – பேட்டி

[2021 ஆம் ஆண்டுக்கான முகம் விருது பெறும் ஸ்ரீநிவாச கோபாலன் அவர்களுடன் ஒரு பேட்டி]

முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு

ஶ்ரீநிவாச கோபாலன் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் எனும் கிராமத்தில் மே14, 1994-இல் வேதாந்த தேசிகன் மற்றும் ரெங்கநாயகி தம்பதிக்கு இரட்டையரில் முதல்வனாகப் பிறந்தார். மின்னணு ஊடகவியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்று பெங்களூரில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 2017ஆம் ஆண்டு ‘அழிசி’ (Azhisi eBooks) என்ற மின்னூல் பதிப்பகத்தை தொடங்கி நடத்திவருகிறார். நாட்டுடைமையான நூல்களையும் அச்சில் இல்லாத முக்கியமான நூல்களையும் தேடிக் கண்டடைந்து மின்புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவற்றை இலவசமாகவும் மிகக் குறைந்த விலையிலும் அளித்துவருகிறார். இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். மாறிவரும் மின்னூல் வாசிப்புச் சூழலைச் சரியாகக் கணித்து பெருவாரியான வாசகர்களை மின்னூல்களை வாசிக்கத் தூண்டும் தளம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த ஆண்டுக்கான குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பின் ‘முகம்’ விருது ஶ்ரீநிவாச கோபாலனுக்கு வழங்கப்படவிருக்கிறது. அதனை முன்னிட்டு அவருடைய இல்லத்தில் நிகழ்த்திய நேர்காணல்.

அழிசிஎன்று உங்களுடைய பதிப்பகத்திற்குப் பெயர் வைத்திருக்கிறீர்கள். உச்சரிக்கவே இனிமையாக உள்ளதே. அதற்கு ஏதாவது பின்புலம் இருக்கிறதா?

சங்கப் புலவரான ‘கொல்லன் அழிசி’ என்பவரின் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறுந்தொகையில் அவரது நான்கு பாடல்கள் உள்ளன. அதில் ‘கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே…’ எனத் தொடங்கும் பாடல் அறிமுகமான போது அந்தப் பாட்டுடன் அதன் ஆசிரியரும் எனக்கு நெருக்கமானார். ‘அழிசி’ என்ற பெயரைச் சொல்லிக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றொரு கிறுக்குத்தனம். தமிழினி வெளியிட்ட‘தேவதேவன் கவிதைகள்’ பெருந்தொகுப்பைப் படித்தபோது ஒரு வருஷத்துக்கு “தேவதேவன்… தேவதேவன்…” என்று சொல்லிக்கொண்டே திரிந்தேன். கூட இருப்பவர்களையும் சொல்லச் சொல்லி பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்பேன். அப்படித்தான் ‘அழிசி’ என்ற பெயரும் மீண்டும் மீண்டும் என் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்று நினைத்தேன். நம்மாழ்வாருக்கு பெருமாளின் பெயர் ‘செவிக்கினிய செஞ்சொல்லாக’ இருந்ததைப் போல எனக்கு ‘அழிசி’ என்ற பெயர் இருந்தது. அந்தப் பெயரைத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கலாம் என்பதற்காக ‘அழிசி இலக்கிய வானொலி’ ஆரம்பித்தேன். கொஞ்ச காலத்துக்கு மேல் அதைத் தொடரவில்லை. பிறகு ஒருநாள் நெடுஞ்சாலையோரத்தில் திரிந்து கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியை வீட்டுக்குத் தூக்கிவந்தேன். அதற்கு ‘அழிசி’ என்று பெயரிட்டேன். இப்போது வீட்டில் தினமும் “அழிசி…” என்ற அழைப்பு கேட்கத் தொடங்கிவிட்டது. அழிசி வீட்டுக்கு வந்த அடுத்த மாதத்தில்தான் என் பதிப்புப்பணியை ஆரம்பித்தேன். வெளியிடும் மின்னூல்களைப் பற்றிப் பகிர்வதற்காக சமூக வலைத்தள பக்கங்களை உருவாக்கும்போது, அவற்றுக்கும் ‘அழிசி’ பெயரையே வைத்தேன்.

உங்களுக்கு இலக்கியத்தின் மீதான அறிமுகம் எப்போது?

நான் புத்தகங்களை ஆர்வமாகத் தேடி வாசித்தது கல்லூரி காலகட்டத்திலிருந்து தான். சிறுபிராயத்தில் பத்திரிகைகளில் வந்த கதைகள், குறிப்பாக மூன்று நான்கு பக்கங்களுக்குள் ஒரே இதழிலேயே முடிந்துவிடக்கூடிய படக் கதைகளை சிறுவர்மலர், சிறுவர் மணி, கோகுலம் போன்றவற்றில் வாசித்திருக்கிறேன். திருச்சியில் கல்லூரிப் படிப்புக்குச் சென்றபோது அந்தச் சூழல் எனக்குப் பிடிக்கவில்லை. யாருமே இல்லாத இடத்திற்குள் சென்று ஒளிந்துகொள்ள ஒரு இடம் தேவைப்பட்டது. நூலகமே அந்த இடத்தை வழங்கியது.

பள்ளிகாலத்திலிருந்தே எனக்குத் தமிழ்ச் செய்யுள் பகுதியின் மீது ஆர்வம் உண்டு. சுவாரஸ்யமாகச் செய்யுள்களை விளக்கிய என் தமிழாசிரியர்கள்தான் அதற்குக் காரணம். எனக்குத் தெரிந்த பழந்தமிழ் நூல்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். புலியூர் கேசிகன் முதலியவர்கள் எழுதிய சங்க இலக்கியங்களின் உரை நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது வாசித்த மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ இன்றும் எனக்குப் பிடித்த நூல்களில் ஒன்று. செய்யுளை பொருள் கொள்ளும்போது அடையும் பரவசம் என்னைத் தொடர்ந்து வாசிக்க வைத்தது.

பின், கல்கி, நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், பாலகுமாரன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோரை வாசித்தேன். பட்ட மேற்படிப்புக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது அங்கிருந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்தினேன். ஓர் இலக்கிய வாசகன் விரும்பிய அனைத்தையும் படித்துவிடமுடியும் அளவுக்குச் சிறப்பான நூல் சேகரம் அங்கே உண்டு.

அழிசி பதிப்பகம் உருவான கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

2017 மார்ச் மாதம் கிண்டிலில் மின்னூல்கள் வெளியிட ஆரம்பித்தேன். அதற்கு முன்பு வரை பழைய புத்தகங்களைத் தேடிக் கண்டடைந்து பதிப்பிக்க வேண்டும் என்ற ஈடுபாடு இல்லை. ஒரு வாசகனாக முதல் பதிப்புகளை வாசிக்க எப்போதும் விரும்புவேன். நூலகங்களில் இதுபோன்ற புத்தகங்களை வாசித்தால் இனிமேல் இதை லேசில் காண இயலாது என்று தோன்றும் போது அதை செல்போனிலேயே நகல் எடுத்து வைத்துக்கொள்வேன். இப்படி அரிய முதல் பதிப்புகள் கிடைத்தால் உற்சாகத்துடன் வாசிப்பதும், பிடித்திருந்தால் ஸ்கேன் செய்து வைப்பதுமாக இருந்தேன். பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் 2017க்கு முன் இல்லை. ஆனால் என் இந்தப் பழக்கம் பின்னால் எனக்கு உதவியிருக்கிறது.

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் நான் இந்த வேலையைத் தொடங்கும் முன்பே பல எழுத்தாளர்களை கிண்டிலில் மின்னூல்கள் வெளியிட ஊக்குவித்து உதவிக்கொண்டிருந்தார். அவரது தூண்டுதலால் விக்ரமாதித்யன், பிரம்மராஜன், வண்ணநிலவன், சமயவேல், சி. மோகன், ரவிக்குமார் முதலிய பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்கள் கிண்டிலுக்கு வந்திருக்கின்றன. அவர் மூலம்தான் கிண்டிலில் புத்தகங்கள் வெளியிடும் வாய்ப்பு உள்ளதை அறிந்தேன். வேலை நேரம் போக மற்ற நேரத்தில் நாட்டுடைமையான நூல்களை மின்னூலாகத் தயாரித்துப் பதிவேற்றத் தொடங்கினேன்.

நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் பெரும்பாலும் இணையத்திலேயே PDF வடிவில் கிடைக்கின்றன. ஆனால், நாட்டுடைமையானபோதும் க. நா. சுப்ரமண்யம், தி. ஜ. ரங்கநாதன் முதலிய எழுத்தாளர்களின் நூல்கள் PDF வடிவில் இல்லை. இவர்களைப் போன்ற எழுத்தாளர்களின் நூல்கள் எனக்குக் கிடைக்கும்போதெல்லாம் எனக்குப் பழக்கமான முறையில் ஸ்கேன் செய்து, கூகுள் தொழில்நுட்ப உதவியுடன் அவற்றை யூனிகோட் எழுத்துக்களாக மாற்றுவேன். பின் மெய்ப்பு நோக்கி, பக்க ஒழுங்கு செய்து, அட்டைப்படமும் தயாரித்து பதிவேற்றுவேன்.

நீங்கள் வெளியிடும் நூல்கள் தவிர இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கும் கிண்டிலில் புத்தகங்களை வெளியிட உதவுகிறீர்கள் இல்லையா?

ஆமாம். அதை எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்.ஆரம்பத்தில்எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனுடன் இணைந்து சில ஆசிரியர்களின் மின்னூலாக்கத்தில் உதவியிருக்கிறேன். பின்எழுத்தாளர்கள் தேவதேவன், அ. முத்துலிங்கம்,சுரேஷ்குமார இந்திரஜித், க. மோகனரங்கன், எம். கோபாலகிருஷ்ணன், பாவண்ணன், கண்மணி குணசேகரன், பாரதிமணி, க. கலாமோகன்,சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், கே. என். செந்தில், அரிசங்கர், ம. நவீன், செல்வேந்திரன், ஜான் சுந்தர், வேணு வெட்ராயன், பவுத்த அய்யனார் ஆகியோரின் படைப்புகளை கிண்டிலில் வெளியிடுவதில் பங்காற்றிருக்கிறேன். எழுத்தாளர்கள் என். சொக்கன், வானதி ஆகியோரின் நூல்களுக்கு அட்டைப் படங்கள் மட்டும் செய்கிறேன்.

அந்தந்த எழுத்தாளர்களின் பெயரிலேயே ஒரு கணக்கு தொடங்கி, புத்தகங்களைப் பதிவேற்றுவேன். இப்படிச் செய்வதால் மாதாமாதம் ராயல்டி நேரடியாக எழுத்தாளரின் வங்கிக் கணக்குச் சென்றுவிடும். நானாக என் விருப்பத்தின் பேரில் வெளியிடும் நூல்களைவிட இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் மின்னூல்கள் வெளியாவதில் பங்காற்றுவதையே முக்கியமாகக் கருதுகிறேன். அதற்கே முன்னுரிமை தருகிறேன்.

சமூக வலைத்தளங்கள் மூலம் மின்னூல்களைப் பரவலாக்கும் முயற்சியையும் செய்துகொண்டிருக்கிறீர்கள். ‘அழிசி’ என்ற தளத்தையும் நடத்துகிறீர்கள். இவை பற்றிச் சொல்லுங்கள்.

புத்தகங்களை வெளியிடுவதைப் பொருத்தவரை நூல்களின் தட்டச்சுப் பிரதியை உருவாக்குவது, மெய்ப்பு நோக்குவது, அட்டைப்படம் வடிவமைப்பது போன்ற வேலைகளைச் செய்கிறேன். சமூக வலைத்தளங்களில் புதிய புத்தகங்கள், சலுகை விலையில் கிடைக்கும் புத்தகங்கள், இலவச நூல்கள் என கிண்டிலில் வாசிப்பவர்களுக்கு பயன்படக்கூடிய தகவல்களைப் பகிர்கிறேன்.

‘அழிசி’ இணையதளத்தில், நான் வெளியிடும் நூல்களிலிருந்து சில பகுதிகளைப் பதிவிடுகிறேன். ‘எழுத்தாளர்களும் மின்னூல்களும்’ என்ற ஒரு தொகுப்பை உருவாக்கியிருக்கிறேன். அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தாளரின் மின்னூல்களையும் பெறுவதற்கான இணைப்பைத் தந்திருக்கிறேன். நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களின் மின்னூல்களுக்கான சுட்டிகள் அந்தத் தொகுப்பில் உள்ளன.

கிண்டிலில் புத்தகங்கள் தொடர்ந்து விற்பனையாக எழுத்தாளர்கள் வாசகர்களுடன் சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருக்கவேண்டும். அவ்வப்போது தங்கள் நூல்களின் சுட்டிகளைப் பகிர்வது, வாசகர் எதிர்வினைகளைப் பகிர்வது போன்றவை அந்த நூல்களை மற்ற வாசகர்களிடம் கவனப்படுத்தும். பெரும்பாலான எழுத்தாளர்கள் இதைச் செய்யத் தயங்குகிறார்கள். நான் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெவ்வேறு எழுத்தாளர்களின் நூல்களை அவ்வப்போது பகிர்ந்துகொண்டே இருக்கிறேன். இல்லாவிட்டால் அமேசானில் உள்ள லட்சக்கணக்கான நூல்களில் சில நூல்கள் இருப்பதே தெரியாமல் இருந்துகொண்டிருக்கும். சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் பா. ராகவனின் ‘யானி: ஒரு கனவின் கதை’ என்ற நூலின் சுட்டியைப் பகிர்ந்தேன். பலர் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்பதையே அப்போதுதான் அறிந்துகொண்டதாகவும் எப்போது எழுதினீர்கள் என்று விசாரித்ததாகவும் பா. ரா. கூறியிருக்கிறார்.

புத்தகங்களைத் தொட்டு, பக்கங்களைப் புரட்டி வாசிப்பதையே விரும்பும்வாசகர்கள் மின்னூல்களை நோக்கி நகர்ந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து மின்னூல்களை வாசிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறது. மின்னூல்களை விரும்பி வாசிக்கும் சிலவாசகர் குழுக்களும் உருவாகியுள்ளன. பல எழுத்தாளர்களும் தங்கள் புத்தகங்களை கிண்டிலில் வெளியிட முன்வருகிறார்கள். பதிப்பகங்கள் மூலமும் நூற்றுக்கணக்கான நல்ல நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சில எழுத்தாளர்கள் அச்சு நூல்களை பதிப்பகங்கள் மூலமாக வெளியிட்டுவிட்டு, மின்னூல்களை மட்டும் தாமே வெளியிடுகிறார்கள். அண்மையில் எழுத்தாளர் என். சொக்கன் இனி தன் நூல்கள் அனைத்தும் முதலில் மின்னூலாகத்தான் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். இது வாசகர்கள் மின்னூல்களை ஏற்கும் இடத்திற்கு நகர்ந்திருப்பதால்தானே.

எழுத்தாளர் சி.மோகன் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் தனது புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாகக் கொடுத்தார். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து வாசிக்கிறார்கள். தொடர்ந்து வாசக எதிர்வினைகள் வருகின்றன. நண்பர் முத்து பிரகாஷ் ‘வானதி’ என்ற பெயரில் பல முக்கியமான நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அனைத்தும் கிண்டிலில் மட்டுமே கிடைக்கும். இருந்தாலும் அவரது மொழியாக்கங்களுக்கு நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள். சிறப்பாக நூல்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கிறார். விரைவில் அச்சிலும் அவரது நூல்கள் வெளியாகவுள்ளன. இனி மின்னூல்களை மட்டுமே படிப்பது என்று முடிவெடுத்தவர்கள்கூட இருக்கிறார்கள். சில பதிப்பகங்களும் அச்சு நூல் வெளியாகும்போதே மின்னூலையும் வெளியிட ஆரம்பித்துள்ளன. கிண்டிலில் மட்டுமே கிடைக்கும் நூல்களையும் வெளியிட்டுள்ளன. சில பதிப்பகங்கள் ஒருசில நூல்களை முதலில் கிண்டிலில் வெளியிட்டு பின்னர் அச்சில் கொண்டுவந்திருக்கின்றன. இவையெல்லாம் வாசகர்கள் மத்தியில் மின்னூல்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு கூடியிருப்பதையே காட்டுகின்றன.

எதிர்காலத்தில் அமேசான் கிண்டில் தவிர வேறு ஏதேனும் தளங்கள் மின்நூல் வாசிப்பில் கவனத்தை ஏற்படுத்துமா?

இந்தியாவைப் பொருத்தவரை இப்போது அமேசான் கிண்டில் (Amazon Kindle) மட்டுமே மின்னூல் வாசிப்புக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிளே புக்ஸ் (Play Books) என்ற தளத்திலும் ஏராளமான மின்னூல்கள் தமிழிலும் வெளியாகியுள்ளன. எதிர்காலத்தில் Kobo, Nook போன்ற வேறு நிறுவனங்களும் இந்தியாவில் மின்னூல் விற்பனையைத் தொடங்கப்போகிறார்கள்.

கவிஞர் தேவதேவனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறீர்கள். அவரதுபல நூல்களை கிண்டிலுக்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள். அவருக்கும் உங்களுக்கும் இடையேயான உறவு பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

2014 ஏப்ரலில் அவருடைய ‘தேவதேவன் கவிதைகள்’ தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். அந்தப் பெருந்தொகுதியை மாதக்கணக்காக மெதுவாகத்தான் வாசித்தேன். அத்தொகுப்பில் ராஜசுந்தரராஜன் ‘ஆற்றுப்படை’ என்ற முன்னுரையை தேவதேவன் கவிதை வரிகளையே அழகாகக் கோர்த்து எழுதியிருப்பார். அந்த முன்னுரையில் கிட்டத்தட்ட அனைத்தும் தேவதேவன் கவிதைகளில் உள்ள சொற்கள்தான். அவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவரது கவிதைகள்தான் முன்னெழுகின்றன.

’நீர்க்கரை மரக்கிளையில் முழுநிலா

அபூர்வமான ஒரு கனி

நீரில் குதித்து அள்ளி அள்ளிப் பருகினேன்

உனக்கென நான் அதை

அள்ளி வரத்தான் முடியவில்லை.’

காந்தி பற்றி பல முக்கியமான தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்வைப் பார்க்கும்போது காந்திய வாழ்வு என்று தோன்றும். உங்கள் செயல்பாடுகளுக்கு காந்திதான் காரணமா?

காந்தி என் வாழ்க்கையைப் பாதித்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் ‘காந்திய வாழ்வு’ என்று சொல்வது எவ்வளவு தூரம் பொருந்தும் என்று தெரியவில்லை. எளிமையாய் இருக்கவேண்டும் என்று எப்போதும் மெனக்கெடுவதில்லை. இது எனக்கு வசதியாய் இருக்கிறது. அதனால் இப்படி இருக்கிறேன். அவ்வளவுதான்.

எனக்குக் கிடைத்த சில நூல்களை ‘காந்தி இன்று’ தளத்தில் தொடர் பதிவுகளாக வெளியிட்டேன். அந்தத் தளத்தின் ஆசிரியர்களில் ஒருவரான சுனில் கிருஷ்ணன் அந்த வாய்ப்பை அளித்தார். அவற்றை கிண்டிலிலும் வெளியிட்டேன். காந்தி நூல்களை தொடர்ந்து அவ்வப்போது இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தேன். அதற்கு நிறைய வரவேற்பு இருந்தது. நான் வெளியிட்ட காந்தி நூல்கள் சிலவற்றை வெளியிட நவஜீவன் ட்ரஸ்ட், சர்வோதய இலக்கியப் பண்ணை முதலிய அமைப்புகளின் அனுமதி பெற்றுதான் வெளியிட வேண்டும் என்பதை பின்னர்தான் அறிந்தேன். உடனே அவற்றை நீக்கிவிட்டேன். அவற்றுக்கான அனுமதி பெற்று வெளியிடும் எண்ணம் இருக்கிறது.

எதிர்காலத்திட்டம் என்ன ? அச்சிலும் நூல்களை வெளியிடுவீர்களா?

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ’கவனம்’, ’ழ’, ’மீட்சி’ ஆகிய சிற்றிதழ்களின் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறார். அதுபோல இன்னும் பல சிற்றிதழ் தொகுப்புகளைக் கொண்டுவரவேண்டியிருக்கிறது.

ந.பிச்சமூர்த்தியின் கதைகளை முழுத்தொகுப்பாக வெளியிட முயன்று கொண்டிருக்கிறேன். கிடைக்காத சில கதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். தி. ஜ. ரங்கநாதன் மொழிபெயர்த்த ’லூயி ஃபிஷரின் காந்தி வாழ்க்கை வரலாறு’, வ. ரா. மொழிபெயர்த்த ’நேருவின் சுயசரிதை’, க. நா. சு.வின் விமர்சனக் கட்டுரைத் தொகுதிகள், ஆர். ஷண்முகசுந்தரம், த. நா. குமாரஸ்வாமி, த. நா. சேனாதிபதி ஆகியோரின் மொழியாக்கங்கள், ராஜம் கிருஷ்ணன் மொழிபெயர்த்த ’பீகார் நாட்டுபுறக் கதைகள்’, நாமக்கல் கவிஞர் மொழிபெயர்த்த ‘காந்தீய அரசியல்’ என்ற நூல் என பல அச்சில் இல்லாத நூல்களை கிண்டிலில் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் உள்ளது. இவையெல்லாம் நாட்டுடைமையானவை. இவை தவிர, வெங்கட் சாமிநாதன் பல்வேறு தளங்களில் எழுதிய விமர்சனக் கட்டுரைகள், மு. அருணாசலத்தின் இசை, இலக்கிய வரலாறுகள் முதலியவற்றையும் வெளியிட வேண்டும்.

சில நூல்களை அச்சிலும் கொண்டுவரலாம் என்ற எண்ணமும் உள்ளது. அச்சு நூல்களையும் வாசகர்கள் எளிதாக வாங்கும் வகையில் மிகக் குறைந்த விலையில் கொண்டுவர வேண்டும், ஒவ்வொரு நூலிலும் கணிசமான பிரதிகளை விலையில்லாமலும் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முதல் நூல் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது. அடுத்த வெளியீடுகளுக்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.

உங்கள் பணிக்கு குடும்பச் சூழல் ஆதரவாக இருக்கிறதா?

குடும்பச் சூழல் ஆதரவாகத்தான் இருக்கிறது. சில சமயம் வேறு வேலையைத் தேடிக்கொள் என்றோ போட்டித் தேர்வுகளை எழுதி அரசு வேலைக்கு முயலலாம் என்றோ சொல்வார்கள். முயற்சி செய்தால் என்னால் அவற்றை அடைய முடியும். ஆனால் இதுதான் நான் செய்யவேண்டிய வேலை என உணர்வதால் இப்படியே இருக்க விரும்புகிறேன். குடும்பம் மட்டுமின்றி நண்பர்களின் துணையும் எனக்குத் தேவை. நண்பர்கள் மதார், சுரேஷ், அருண் பிரசாத் ஆகியோரும் அண்ணன் யமுனை செல்வனும் பல வகைகளில் உதவி ஊக்கமளிக்கிறார்கள்.

முகம்விருது உங்களுக்கு கிடைத்ததைப் பற்றி

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கடிதத்துக்கு எழுதிய பதிலில், செயல் தளத்தில் இயங்குவோருக்காக கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் சொன்ன நெறிகள் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகத் தொடங்கப்படும் இயக்கம் அதை மட்டுமே செய்யவேண்டும். செயற்களத்தை விரிவாக்கிக் கொண்டால் எதையும் செய்ய முடியாமலாகும். அதை பிடிவாதமாக, என்ன வந்தாலும் சரி என, ஒரு இருபதாண்டுகள் செய்வது என முடிவெடுத்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்’ என்பது தான் அவர் முதலில் சொல்வது. நான் முதல் படியையே இன்னும் பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில் பேராளுமைகள் பலருக்கும் கொடுக்கப்பட்ட இவ்விருதுக்கு என்னைத் தேர்வு செய்திருப்பது என் பேறு. கூடுதல் பொறுப்புணர்வுடனும் அக்கறையோடும் செயல்பட வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் இணையதளங்களில் சுட்டிக்காட்டப்பட்ட பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன். அவர்களுக்கு என் அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். குக்கூ காட்டுப்பள்ளி நண்பர்களுக்கும் குறிப்பாக சிவராஜ் அண்ணனுக்கும் மனமார்ந்த நன்றியைச் சொல்கிறேன். ஆனால் இந்தச் சம்பிரதாயமான நன்றி நவிலலுக்கு அப்பால் அவர்களை என் மனதுக்கு நெருக்கமாக உணர்கிறேன்.

பேட்டி: மதார் மற்றும் இரம்யா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2021 11:35

உடையாள்

உடையாள் வாங்க

இந்த குழந்தைகளுக்கான அறிவியல் புனைகதையை முதன்மையாக என்னுடைய ஒரு அகவிடுதலைக்காகவே எழுதினேன். இது மொழியில் கற்பனையில் எனக்கு ஒரு புதிய வழியைக் காட்டியது.

ஆனால் இவ்வாறு சில  கதைகளை எழுத வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு ஏற்படுவதற்கு நம் பள்ளிகள், கல்லூரிகளுடன் எனக்கிருக்கும் உறவாடலும் ஒரு காரணம். இங்கே பள்ளிகளில் பொதுவாக அறிவியல் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை, அறிவியல் தகவல்களே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. விளைவாக, தொழில்நுட்பமே அறிவியல் என கருதப்படுகிறது

அறிவியல் என்பது அறிவியல் கொள்கைகளே. அவை தத்துவத்திற்கே அணுக்கமானவை. மெய்ப்பித்தல்- பொய்ப்பித்தல் வழிமுறைகளின் படி அவை நடைமுறை வாழ்வுக்கு வருகின்றன. அதன் பின் தொழில்நுட்பமாக ஆகின்றன. அறிவியலின் தர்க்கம் பற்றி கார்ல் பாப்பர் விரிவாக எழுதியிருக்கிறார். அதைப்பற்றிய விவாதம் இத்தளத்தில் நடைபெற்றுள்ளது

அறிவியல் கொள்கைகளை ‘அறிந்து கொள்வது’ வேறு ‘புரிந்து கொள்வது’ வேறு. புரிந்துகொள்வதையே அறிவியல் கல்வி என்கிறோம். ஓர் அறிவியல் கொள்கையை கற்பனையைக் கொண்டு விரிவாக்கம் செய்ய முடியும் என்றால், மறுத்து வாதாட முடியும் என்றால், முன்பில்லாத ஓர் உதாரணத்தைச் சொல்ல முடியும் என்றால் ஒருவர் அந்த அறிவியல் கொள்கையைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று பொருள்.

அந்தப்புரிதலை அறிவியல் புனைகதைகள் எளிதாக உருவாக்க முடியும். ஆகவேதான் உலகமெங்கும் அறிவியல்கல்வியில் இன்று அறிவியல் புனைகதை ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது. இக்கதையின் முதன்மை நோக்கம் அதுவே

கூடவே இன்னொன்றும் உண்டு. ‘தத்துவப்படுத்தல்’ [philosophizing] என்று அதைச் சொல்லலாம். செய்திகளை தர்க்கபூர்வமாக தொகுத்தும் பகுத்தும் பொதுமைப்படுத்தி விதிகளை உருவாக்குவது அறிவியலின் தர்க்கச் செயல்பாடு. Induction deduction method என அது அறிவியலில் விரிவாகப் பேசப்படுகிறது

அதற்கும் அப்பாலுள்ளது அறிதல்களை நுண்மையாக்கி அருவமாக்கிப் பார்ப்பது. அதைத்தான் தத்துவப்படுத்தல் என்கிறோம். எடை என்பது எப்படி உருவாகிறது என்பது தர்க்கபூர்வ கேள்வி. எடை என்றால் என்ன என்பது நுண்மையாக்கல். காலம் என்றால் என்ன, தூரம் என்றால் என்ன என்பதெல்லாம் அத்தகைய தத்துவக் கேள்விகள்.

இளமையிலேயே தத்துவப்படுத்தல் கற்பிக்கப்படவேண்டும். அந்தப்பயிற்சி சிந்தனைக்கு மிக முக்கியமானது. எல்லாவகையான கல்வியிலும் தத்துவப்படுத்தல் இன்றியமையாதது. அதுவே அடிப்படை விதிகளை உருவாக்குகிறது. அது இல்லாததனால்தான் நாம் சிந்தனையில் முன்னகர முடிவதில்லை.

நம் கல்வியில் தத்துவப்படுத்தல் இல்லை. ஆகவேதான் கொஞ்சம் நுட்பமாக ஒரு சிந்தனை தென்பட்டாலும் ‘ஒரே தத்துவமா இருக்கு’ என்று சொல்லி கடந்து செல்கிறோம். குழந்தைகள் அளவிலேயே தத்துவப்படுத்தலை அறிமுகம் செய்யும் முயற்சி இந்தக்கதை.

இந்தக்கதையின் தத்துவப்பகுதிகள் குழந்தைகளுக்குப் புரியுமா என்று பலர் கேட்டனர். இது எல்லாக் குழந்தைகளுக்கும் உரிய கதை அல்ல. கொஞ்சம் சிந்திக்கும் தன்மைகொண்ட குழந்தைகளுக்குரியது. அக்குழந்தைகளுக்குக் கூட முழுக்கப் புரியாது. ஆனால் அவர்களைச் சிந்திக்க வைக்கும். புரியாத பகுதியை அவர்கள் பின்னர் கண்டடைவார்கள்.

நம் குழந்தைகள் வெறுமே தகவல்களைத்தான் படிக்கின்றன. தகவல்களில் இருந்து மேலே சிந்திக்கும் குழந்தைகளுக்காக மட்டுமே இக்கதை எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக  ‘நாமி வெளியே சென்று செடிகளில் பாக்ட்ரீயாக்கள் மஞ்சளாகப் படிந்திருப்பதை பார்த்தாள், அவை வெயிலில் மின்னிக்கொண்டிருந்தன’ என்று இந்தக்கதையில் வாசித்ததுமே ஒரு சராசரி எட்டாம் வகுப்பு குழந்தை ‘பாக்ட்ரீயாக்கள் கண்ணுக்கு தெரியாது, என் பாடப்புத்தகத்தில் அப்படித்தான் உள்ளது’ என்றுதான் சொல்லும்.

ஆனால் நான் உத்தேசிக்கும் குழந்தை ‘பாக்ட்ரீயாக்கள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்தால் கண்ணுக்குத் தெரியும் வடிவை அடையலாமே. செல்கள்கூடத்தான் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்த உடம்பு தெரிகிறதே” என்று யோசிக்கும். அந்த அடிப்படைத் தர்க்கத்திறன் கொண்ட குழந்தைதான் இந்நாவலை வாசிக்கமுடியும். நம் குழந்தைகள் அப்படி ஆகவேண்டும் என்பதே என் எண்ணம்.

நான் உத்தேசிக்கும் அந்தக் குழந்தை மேலும் தேடல் கொண்டு கூகிளைப் பயன்படுத்தி தேடினால் பாக்டீரியாக்கள் திரண்டு பலவகை வடிவங்களில் பூச்சுகள், முண்டுகள் வடிவில் தாவரங்களில் இருப்பதை கண்டுகொள்ள முடியும். ஆஸ்திரேலியா அருகே என்னும் ஷார்க் பே கடற்கரையில்  cyanobacteria என்ற பெரியவகை பாக்டீரியாக்களாலான பாறைகள் உள்ளன. பூமியில் உயிர் உருவான காலத்தில் உருவானவை இவை. இப்பாறைகள் Stromatolite எனப்படுகின்றன. அன்று கடல்நீரில் இருந்த பாக்டீரியாக்கள் அடுக்கடுக்காக படிந்து படிந்து நீண்டகால அளவில் பாறைகளாக மாறிவிட்டன. டேவிட் அட்டன்பரோ அங்கே போய் எடுத்த ஆவணப்படத்தையும் பார்க்கமுடியும்

நம்முடைய சூழலில் அறிவியல்கல்வி என்பது தகவல் மனப்பாடக்கல்விதான். பலர் அதில் பட்டம்பெற்றும் பல்வேறு வேலைகளைச் செய்கிறார்கள். ஆனால் அறிவியலின் அடிப்படைகள் கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் படித்த வேலையை இயந்திரம் போல செய்பவர்கள். தங்களுக்கு தெரியாது என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. இது கொஞ்சம் தேடல் கொண்ட அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கான கதை.

இதை எழுதியதும் தகவல்களைச் சரிபார்க்க இரண்டு முதுநிலை அறிவியலாளர்களுக்கு அனுப்பினேன். சுவிட்சர்லாந்தில் நுண்உயிரியலில் முதுமுனைவர்  ஆய்வுசெய்யும்  சுசித்ரா ராமச்சந்திரன், அமெரிக்காவில் இயற்பியலில் ஆய்வு செய்யும் கே. மாதவன். இருவருக்கும் நன்றி.

இந்தக்கதையை ஆறாவது படிக்கும் நண்பரின் மகனுக்கு அனுப்பினேன். அவனுக்கு ஆர்வத்தையும் சிந்தனைப் பெருக்கையும் உருவாக்குகிறது என்று தெரிந்தது. அவன் அம்மா “அந்தக்குழந்தை அங்கே தனியா இருக்கா?” என்று கேட்டபோது “அதுக்கு தனிமைன்னா என்னான்னே தெரியாதே” என்று அவன் பதில் சொன்னான். அவன் கதைக்குள் வந்துவிட்டான் என்று தெரிந்துகொண்டேன்.

சூழ்ந்திருக்கும் அரைகுறைத்தன்மை, அறியாமையின் ஓசைகளைக் கடந்து நம் குழந்தைகள் அறிதலின் புதிய எல்லைகளை நாடவேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்நூலை என் பிரியத்திற்குரிய தாவரவியல் பேராசிரியை லோகமாதேவி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெ

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரைமலைபூத்தபோது முன்னுரைஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரைமுதுநாவல் முன்னுரைஆனையில்லா! முன்னுரைதங்கப்புத்தகம் முன்னுரைஅந்த முகில் இந்த முகில் முன்னுரைபத்துலட்சம் காலடிகள் முன்னுரை இருகலைஞர்கள் முன்னுரை உடையாள் முன்னுரை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2021 11:34

பேசாதவர்கள்- கடிதங்கள்

பேசாதவர்கள்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

பேசாதவர்கள் கதை வாசித்தேன். வரலாற்றை வெறும் தரவுகளாகவும் நினைவுகளாகவும் சொல்லிச்செல்லும் ‘பாவனை’ கொண்ட பல கதைகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இதுவும் அப்படிப்பட்ட அழகியல்கொண்ட கதை. கதையின் உள்ளுறையாக ஓடும் பதற்றமான வரலாற்று இருளுக்கும், அதை வெளிப்படுத்தும் படிமத்துக்கும் அந்த விலகிய பாணி மிக உதவியாக இருக்கிறது.

மூகநாயக் என்பது அண்ணல் அம்பேத்கர் தொடங்கிய பத்திரிக்கை. ஊமைகளின் தலைவன். பேசாதவர்களின் பொருட்டு பேசுபவன் என்று பொருள். பேசாதவர்களுக்கு டம்மி என்பது உலுக்கும் ஒரு குறியீடு. எந்த குற்றமும்செய்யாமல் நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் தூக்கிலிடப்படும் ஒன்று. இன்றுவரை தலித் வாழ்க்கைக்கு அளிக்கப்பட்ட குறியீடுகளில் சொ.தர்மனின் கூகையும், இதுவும்தான் உக்கிரமானவை என நினைக்கிறேன். முகமற்ற, பார்வையற்ற, வாயற்ற டம்மி. அது முளைத்தெழுந்து பேசும் ஒரு காலகட்டத்தின் வருகையை அறைகூவும்கதை

டி.எஸ். பாரி

***

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு

வணக்கத்துடன் தமிழரசி எழுதுவது,

தளத்தில் பேசாதவன் கதை படித்ததிலிருந்து மனசுக்குள்ள கேள்விகள் கேள்விகள் என்று குடைந்து கொண்டேயிருக்கிறது. மேல் மனம் என்பது தர்க்கமனம். படித்தது, பட்டுத் தெரிந்து கொண்டது என்பதை வைத்து நியாயம், நேர்மை, அநியாயம், பாவம், புண்ணியம் இப்படி தர்க்கம் பண்ணிட்டேயிருக்கு. ஆழுள்ளத்துக்குள் குரூரமே நிரம்பியிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

நான் நாய், பூனை இவற்றை குழந்தையை போல வளர்ப்பவள். காகத்துடன் பேசுபவள். சுற்றத்தினர் யாரும் பகையில்லை என்று இருப்பவள். நான் அந்த சித்திரவதைக் கருவிகளைப்பற்றி படிக்கும் போது இயற்கை காட்சி வர்ணனையை படிக்கும்போது ஏற்படும் பரவசநிலை போன்ற பரவசத்துடனேயே படித்தேன். அது எப்படி செயல் பட்டிருக்கும் என்று கற்பனை கூட செய்தேன். அந்த பத்தி தாண்டியவுடனேயே என்னதிது இதைப்படிச்சா இவ்வளவு பரவச உணர்ச்சி வந்தது என்று என்னை நானே குற்றவுணர்வுடன் நிந்தனை செய்து கொண்டேன்.

தூக்குப்பூட்டுக்குள்ள ஐநூறு வருசமா எத்தனை பேர் வேதனையில துடி துடித்து இறந்திருப்பாங்க. காலம் மாறும் போது சற்றே முறை மாற்றி துணியை சுற்றி பொம்மையாக்கி உண்மையாவே தூக்குல போடற மாதிரி முறையா நடிச்சி தூக்குல போட்டுட்டேயிருக்காங்க. அந்த வலியும் வேதனையும் உணர்ச்சிகளும் எங்க போகும். அதுக்குள்ளயே ஒவ்வொரு புள்ளியிலயும் ததும்பி நின்றிருக்குமா. அதைத்தான் டாக்டர் நாடித்துடிப்பாகவும் கதை சொல்லி உயிரின் அதிர்வாகவும் உணர்ந்து கொண்டார்களா.

பண்டிட் கறம்பன் தனக்கு பதிலாக பேசாதவனை தூக்கிலிட்டு பார்க்கும் போது பேசாதவனின் உணர்வுகளை புரிந்து கொண்டானா. அந்த வலியும் வேதனை உணர்வும்தான் கையசவாக நீலியுடன் பேசியதா. அவன் நீலி மூலம் தீ வைத்து ஐநூறு வருட இன்னலுக்கு விமோசனம் கொடுத்தானா. பண்டிட் கறம்பனின் மனதுக்குள் இருந்த வேகமே மகன் மூலம் அடுத்த தலைமுறைக்கு வந்திருக்குமோ. உடலுக்குதான் இறப்பு. உணர்வுகளுக்கு இறப்பு கிடையாதோ.

கயிறு இறுக்கி உயிர் போக வேண்டிய இடத்தில் கயிறு அறுந்து உயிர் பிழைச்சது நாம் எதிர்பார்த்ததுக்கு எதிரா நடந்த விசயம். அதை தர்க்க மனம் மூலமா தெய்வ சங்கல்பமா மாத்தி அவனை அருள்மிகு தூக்குமாடனா தலைமுறை தோறும் கும்பிடும் சாமியாக்கி மனதை சமாதானப்படுத்திக்கிடறோமோ.

வரலாறு இவ்வளவு  கொடூரங்களுக்கு இடையிலதான் வளர்ந்து வந்திருக்கு. ஆனால் நாம் குளம் வெட்டினார். மரம் நட்டார். சாலை அமைத்தார் என்று பொன் வண்ண நுழைவாயில் வழியாகவே வரலாற்றினுள் நுழைகிறோம். வரலாறு என்பதே மறைக்கப்பட்ட உண்மைகள் தானோ.
நன்றி.

தமிழரசி

அன்புள்ள ஜெ,

பேசாதவர்கள் வாசித்தேன். சுயராஜ்யம் கிடைத்தபின், இருட்டறைகளுக்குள் சென்றுவிட்ட திருவிதாங்கூரின் ஆயிரமாண்டுகால வரலாற்றை அவற்றில் புதைந்து கிடக்கும் புராதனப் பொருட்களிலிருந்து கோத்து எடுத்துக் கொண்டு, அவற்றைக் கலையாக்குவதன் மூலம் மெல்ல மெல்ல ஒரு இணை வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல விழைகிறேன். உப பாண்டவத்தின் முன்னுரையில் எஸ்.ரா குறிப்பிட்டிருப்பார். அஸ்தினாபுரத்துக் குழிகளில் கிடைத்த குதிரைகளின் எலும்புகளிலிருந்து, அதன் வரலாற்றை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று. இந்த வல்லமை கலைஞனுக்கு மட்டுமே சாத்தியம். உங்களது இன்னொரு சிறுகதையான கணக்கு -ல் வரும் மரப்பலாக்காயையும், பணப்பலகையையும் நினைத்துக் கொள்கிறேன். இக்கதையில் தூக்குப் பூட்டு. ஒரு சின்ன பொருள். அது தூண்டும் நினைவுகள். அவற்றிலிருந்து விரியும் கலை. காணும் ஒவ்வொரு பொருளும் இப்படித்தான் எழுத்தாளனைக் கலைக்குத் தூண்டிக் கொண்டே இருக்குமா?

ஜெயிலின் ஸ்டோர் அறைக்குள் சென்று மீளும்போது கனவுக்குள் சென்று திரும்பி வந்ததைப் போலிருக்கும் என்கிறார் தாத்தா. நீங்களும் அந்த ஸ்டோர் அறைக்குள் அடிக்கடி சென்று வாருங்கள். எங்களுக்கெல்லாம் நல்ல கதைகள் கிட்டும். பலவகைப்பட்ட சித்திரவதைக் கருவிகளைப் பார்த்து தாத்தா திகைத்து நிற்கும் போது, இவை ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒரு கதை இருக்குமே, இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று நீங்களும் திகைத்து நின்ற மாதிரியே கற்பனை செய்து கொண்டேன். ஒவ்வொரு கருவியைக் கொண்டும் எப்படியெல்லாம் சித்திரவதை செய்ய முடியும் என்று தாத்தா அடுக்குவதை வாசிக்கும்போது, சற்றே ஒவ்வாமை ஏற்பட்டது. வதைபடும்போது உடல் அதன் மேல் போர்த்தியுள்ள பாவனைகளையும், பாசாங்குகளையும் இழந்து வெறுமனே உடலாக மட்டுமே நிற்கிறது. காமத்திலும் அதுதானே நிகழ்கிறது. காமத்துக்கும், வன்முறைக்கும் ஏன் இவ்வளவு ஒற்றுமை? வன்முறையை நேர்கொண்டு பார்க்கமுடியாத தாத்தா, மீண்டும் மீண்டும் அச்சித்திரவதைக் கருவிகளைப் பார்த்தது அவருக்குள் இருந்த வன்முறை வெறியால் தானா என்று கேட்டுக் கொள்கிறார்.

இந்தக் கதைக்குப் பேசாதவர்கள் என்று பன்மையில் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் வெகுநாள் பேசாத தாத்தா பேச ஆரம்பித்து பேசிக் கொண்டேயிருக்கிறார். நற்றுணை கதை இந்நேரத்தில் நினைவுக்கு வருகிறது. முதியவர் ஒருவரின் நினைவுகூரல் வழியாகவே விரியும் கதை. அந்த நினைவுகூரலில் விரியும் வரலாற்றின் கவனிக்க மறந்த பக்கங்கள். தூக்குக்கயிற்றின் வலிமையைப் பரிசோதிக்க உபயோகப்படுத்தப்படும் டம்மியும் பேசுவதில்லைதான். ஐநூறு ஆண்டுகளாகத் தூக்கில் தொங்கும் அது வாயிருந்தால் என்ன சொல்லும். திரும்பத் திரும்பத் தூக்கிலிடப்படும் துக்கத்தையா என்று வர்கீஸ் மாப்பிள்ளை கேட்கிறார். ஆனால் உடலால் பேச முடியாதா என்று தாத்தா கேட்டுக் கொள்கிறார். அந்த டம்மியோடு சேர்ந்து வேறு யார் பேசாதவர்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாமிநாதன் ஆசாரியைத் தூக்கிலிடுமுன்னும், டம்மி தூக்கிலிடப்படுகிறது. மருத்துவர் அதன் நாடி பிடித்துப் பார்த்தபோது அதில் துடிப்பு எஞ்சியிருந்தது என்கிறார். தாத்தாவுக்கும் டம்மியில் உடலில் ஒரு அதிர்வு தெரிகிறது. எத்தனை முறை கொல்லப்பட்டாலும் சாகாதது ஒன்று அதன் உடலில் இருக்கிறது என்று குறிப்பிடும்போது, இது பேய்க்கதை என்று அதுவரை கொண்டிருந்த ஐயத்தை இழந்தேன்.

அய்யன்காளியின் புலையர் மஹாஜன சபையின் உறுப்பினர் பண்டிட் கறம்பன் கதையில் வந்தபோது, கரைநாயர்கள் குறித்தும், புலையர் மஹாஜனசபை குறித்தும் நீங்கள் எத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள் என்று வியந்து கொண்டேன். பின் தொடரும் நிழலின் குரலில் வரும் மெல்லிய நூல் முதற்கொண்டு. அதற்குமுன்பிருந்தே கூட நீங்கள் எழுதியிருக்கக் கூடும். எனக்கு மெல்லிய நூல் சட்டென்று நினைவுக்கு வந்தது. கடைசியில் கறம்பனின் மனைவி மலையத்தி நீலி அந்த டம்மியோடு உரையாடுகிறாள்; அதற்குத் தீ வைக்கிறாள். இக்கதையின் கதை சொல்லியைப் போலவே நானும் இக்கதையில் இருந்த மர்மங்களை ஒவ்வொன்றாகத் தொட்டு, புரிந்து கொள்ள முடியாமல் விலகிக் கொண்டிருந்தேன்.தொன்மத்தையும், நிகழ்கால அரசியலையும் இணைக்கும் கதை. நன்றாக ரசித்து வாசித்தேன்.

இதையெல்லாம் எழுதிவிட்டு, எல்லாவற்றையும் கன்ட்ரோல் ஆல் டெலிட் செய்து விடலாமா என்று யோசித்தேன். கதை வாசித்தேன். நன்றாக இருந்தது என்று எளிமையாகச் சொல்வதை விட்டு ஏன் ஏதேதோ எழுதுகிறேன் என்று தோன்றியது. இருப்பினும் ஒரு படைப்பு பற்றி நமக்குப் புரிந்ததைச் சரிபார்க்க இப்படித் தோணுவதையெல்லாம் எழுதுவதும் சரி என்றும் பட்டது.

அன்புடன்

ஜெகதீஷ் குமார்

பிகு : இன்று நவீனிடம் இந்தக் கதை குறித்துப் பேசினேன். பேசாதவர்கள் யார் என்று அவருடன் உரையாடிய பிறகே என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது.

எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். பேசாதவர்களைப் பற்றி, பேசாமலேயே நீங்கள் குறிப்பிட்டிருப்பதை எப்படியோ தவறவிட்டு விட்டேன்

பேசாதவர்கள்- திருச்செந்தாழை

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2021 11:31

விகடன் பேட்டி -கடிதம்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்,

நலம்தானே? விகடன் நேர்காணல் முதல் இருபாகங்கள் பார்த்தேன். நேர்காணல் என்பது வினாக்கள் தொடுப்பவராலேயே சிறப்பாக அமையும் என்பது என் கருத்து. ஏனெனில் விடையளிப்பவர் தன் கருத்து எதனையும் தாமாக முன்வந்து சொல்லமுடியாது. கேள்வி கேட்பவர்கள் தம் கேள்விகள் வழி அரிய செய்திகளை வெளிக்கொணர வேண்டும். அந்த வகையில் இரண்டாவது பாகம்தான் என்னை மிகவும் ஈர்த்தது

இரண்டாம் பாகத்தில் வினாக்கள் ஆழமானவை. அத்னாலேயே தங்கள் பதில்கள் கூர்மையாகக் கனமானவையாக இருக்கின்றன எனக்கும் பிடித்திருக்கின்றன. குறிப்பாகத் தாங்கள் சொன்ன, கம்பன் விழா மேடையனுபவம். புதுச்சேரியில் நடைபெற்ற அந்நிகழ்விற்கு நண்பர்களுடன் நானும் வந்திருந்தேன். உங்களுக்கு நினைவிருக்கும் என எண்ணுகிறேன். நண்பர் நாகராசன் ஏற்பாடு செய்திருந்த புதுவை பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியிலும் தாங்கள் உரையாற்றுகையில் ஒரு சம்பவம் நடந்தது. தங்களின் உரைக்கு நடுவில் இருவர் எழுந்து சென்றனர். அவர்கள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் என்றெண்ணுகிறேன். உடனே தாங்கள் பேச்சை நிறுத்திவிட்டு “வெளியில் செல்ல விரும்புபவர்கள் இப்பொழுதே சென்றுவிடலாம், இதன் பின் இடையில் எழுந்துச் செல்வது எனக்குப் பிடிக்காது” என்று துணிச்சலாகக் கூறினீர்கள்.

இலங்கை ஜெயராஜ் சொன்னது போல ஒரு பேச்சாளர் அவரைக் கேட்கும் வாய்ப்பை நமக்களித்திருக்கிறார் என்பதையே நிகழ்ச்சிக்கு வருபவர்கள் உணர்வதில்லை.   உங்கள் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால் ஏதோ கேளிக்கை அளிப்பவனாகப் பேச்சாளரை இன்று பார்க்கிறார்கள். மேடையில் இருப்பவருக்கு மரியாதை தரவேண்டும் என்ற கூற்று உண்மையானது. ஒருவர் மேடையில் உரையாற்றத் தன்னை எந்த அளவுக்குத் தயார் செய்ய வேண்டும் என்பதைக் கேட்க வந்திருப்பவர் உணர வேண்டும்.

ஆனால் தொழில்முறைப் பேச்சாளர்கள் இதுபோல நடைபெறும் இடையூறுகளைப் பற்றிக் கவனிப்பதில்லை. அதைத்தான் “நாங்கள் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டமோ” எனப் பாரதி பாஸ்கர் வெளிப்படையாகவே கூறினார். இந்த நேர்காணலைப் பார்க்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களும் பேச்சாளர்களும் சற்றுத் திருந்தினால் இங்கு நல்ல மேடைப்பேச்சுகள் நிகழும். அடுத்து முக்கியமானது

ஓர் எழுத்து தொடங்கி அடுத்தக் கட்டத்திற்குப் போகவில்லை எனில் அதைப் பிரசுரிக்கக் கூடாதென்பது.  கொற்றவையே சரியாக வரவில்லை என்று ஞானி அவர்கள் முன்னாலேயே கிழித்து விட்டு எழுதியது; விஷ்ணுபுரத்தில் “என் கால்களுக்குக்கீழே என்று தொடங்கும் முதல் வரி ஒரு விடியலில் தோன்றியது, நீலம் தொடங்க ஒன்றரை மாதம் காத்திருந்து, கோழி கூவ அதிலிருந்து வார்த்தை பிறந்தது என்பன பலர் அறியாத அரிய செய்திகள். தாங்கள் சொன்ன தர்க்கம் கற்பனை, உள்ளுணர்வு எனும் வகைப்பாடுகள் முக்கியமானவை எனக் கருதுகிறேன்.

எப்பொழுது மழைபெய்யும் என்பது விவசாயியின் உள்ளுணர்வுக்குத் தெரியும் என்பதை அனுபவ பூர்வமாகக் கூறி உள்ளீர்கள். அதிலும் வாழ்வின் அனுபவம் உள்ளுணர்வோடு கலந்து எதன் மூலமாவது வெளிப்படுவதே எழுத்து என்பது சரியான ஒன்று. ரப்பரில் பைபிள் வாசகம் இடம் பெற்றது குறித்துக் கேட்டபோது டால்ஸ்டாயின் அன்னாகரினாவில் பைபிள் வாசகம் இருப்பதைக் கூறியது பொருத்தம். அது மட்டுமன்று. நானும் குட்டி டால்ஸ்டாய் என்று கூறினீர்கள். இல்லை ஜெ. நீங்கள் தமிழின் டால்ஸ்டாய்தான். வட இந்தியாவின் பல பாரதங்களில் திரௌபதி சிரித்தது மற்றும் வஸ்திராபரணக் காட்சி இல்லை என்பது எனக்குப் புதிய செய்தி. மேலும் தென்னிந்தியாவில்தான் தோற்ற மன்னரை அவமானப்படுத்தும் ஒரு மரபு இருப்பதைச் சான்றாகக் கூறியது நல்ல எடுத்துக் காட்டு.

வெண்முரசில் கிருஷ்ணனிடம் இடம் என்பது அவன் ஒரு ஞானியான அரசன் என்பது சிறப்பான ஒன்று. மேலும் அவரைக் கடவுளாக்கினால் ஏன் துச்சாதனின் கைக்குப் பக்கவாதம் வரச்செய்திருக்கலாமே என்பது நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் சரியான கேள்விதானே? மேலும் கிருஷ்ணை ஆடை தந்தாலும் கிருஷ்ணன் தந்தாலும் ஒன்றுதானே என்பதும் பொருத்தமாகத்தான் உள்ளது. தமிழின் மகாபாரத உபன்யாசகர்கள் பாரதத்தை வரலாற்று ரீதியாகப் பயிலாதவர்கள் என்பது முற்றிலும் உண்மையே. ஆக மொத்ததில் பல புதிய செய்திகளையும் தங்களின் எழுத்து அனுபவங்களில் சிலவற்றையும் அறிந்துகொள்ள இந்த நேர்காணல் மிகவும் உதவி செய்திருக்கிறது,

வளவ. துரையன், கடலூர்  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2021 11:31

பாரதநிலம் -கடிதம்

அன்புள்ள ஜெ

வெண்முரசு வாசிப்பதன் அனுபவங்களில் முக்கியமானது அதில் தொன்மையான ஊர்களை அடையாளம் காண்பதும் அந்த இடங்கள் இந்தியாவில் இப்போது எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதும். வரைபடத்தை வைத்துக்கொண்டு ஊகித்தபடியே இருக்கிறேன். தேவபாலபுரம் சிந்துவின் அழிமுகத்திலுள்ள தீவாகிய டேபல்.மூலஸ்தானநகரி என்றால் முல்தான்… இப்படியே இந்தியாவை கண்டடைவது என்பது வெண்முரசு அளிக்கும் இந்திய தரிசனம். மகாபாரதம் என்பதை இந்த நவீன காலகட்டத்தில் ஓர் மெய்யனுபவமாக உணரவைத்திருக்கிறது இந்நாவல். எத்தனை ஊர்கள். எத்தனை மலைகள். எவ்வளவு ஆறுகள்….

ஜெயராம் கிருஷ்ணா

***

அன்புநிறை ஜெ,

கிராதம் வாருணப்பயணத்தில்,

“அர்ஜுனன் பீதர்களின் கலத்தில் மேற்குப் பாலைநிலத்தின்  முனம்பிலிருந்த அயிலம் என்னும் துறைநகரிலிருந்து கிளம்பி எட்டுமாதங்கள் பயணம் செய்து பாரதவர்ஷத்தை குமரிமுனம்பு வழியாக சுற்றிக்கொண்டு கிழக்கே சென்று புவியில் இந்திரன் வந்திறங்கும் இடமென்று தொல்கதைகளில் சொல்லப்பட்டிருந்த இந்திரகீலம் என்னும் பறக்கும் மலையை சென்றடைந்தான்” என்று வரும். இந்த கிராதப் பயணப் பகுதியை பலமுறை வாசித்திருக்கிறேன்.

இறந்த கடல் பகுதியிலிருந்து ஜோர்டானின் பாலை நிலங்கள் வழியாக ஒரு கடல் முனம்புக்கு வருவதென்றால் இஸ்ரேல்/ஜோர்டான் கரைகளிலிருந்த பண்டைய துறைமுக சாத்தியங்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அயிலா என்றழைக்கப்படட எயிலத் என்னும் இன்றைய இஸ்ரேல் துறைமுகம் கண்ணில்பட்டது.

விக்கியிலிருந்து(https://en.m.wikipedia.org/wiki/Eilat)

On the right, an early Israeli map drawn shortly after the founding of modern Eilat.

Historical “Elath” / Ayla is located at Aqaba, in Jordan; the Israeli map includes the words Hebrew: אֵילַת הרומאית‎, lit. ‘Roman Eilat’

Archaeological excavations uncovered impressive prehistoric tombs dating to the 7th millennium BC at the western edge of Eilat, while nearby copper workings and mining operations at Timna Valley are the oldest on earth.[citation needed]

தற்போது நண்பர் ஷாகுல் ஏறக்குறைய இதே வழியில் யான்பு துறைமுகத்திலிருந்து பாரதவர்ஷத்தை குமரிமுனம்பு வழியாக சுற்றிக்கொண்டு கடல்வழிப் பயணத்தில் இருக்கிறார். அந்த யான்பு துறைமுகம் குறித்து தேடி வாசித்துக் கொண்டிருக்கையில் இந்தத் தகவல் எதிர்பாராமல் இணைந்து கொண்டது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் பயணத்தில் வரும் சிறியகண், முள்ளூற்று போன்ற பொருள் தரும் பெயர்களையும் அந்தப் பாலை வழியின் பல இடங்களின் பெயரோடு (அரேபிய/உருது பெயர்களின் பொருள் அல்லது அதன் மரூஉச்சாத்தியங்களோடு) ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேயிருப்பதும் மனதுக்கினிய ஒரு விளையாட்டு.

மிக்க அன்புடன்,
சுபா

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2021 11:30

July 16, 2021

மொக்கவிழ்தலின் தொடுகை

நீண்டநாட்களுக்கு முன் உயிர்மையில் ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்தது. அதுவரை எந்தச் சிற்றிதழிலும் வெளிவராத கவிஞரின் பெயருடன். கிட்டத்த இருநூறு கவிதைகளுடன், பெரிய தொகுப்பு. எந்தச் சிற்றிதழாளனும் அத்தகைய தொகுதியை ஓர் ஆர்வமின்மையுடன்தான் எடுத்துப் பார்ப்பான். எவனோ சொந்தக்காசை காகிதத்தில் மைக்கறையாக்கித் தொலைத்திருக்கிறான் என்னும் எண்ணத்துடன். ஆனால் முதல் கவிதையே என்னை உள்ளிழுத்தது. முகுந்த் நாகராஜன் எனக்கு அறிமுகமானார். அவரைப் பற்றிய முதல் பாராட்டுக் குறிப்பை நான் எழுதினேன்.

அதன்பின் செல்லுமிடமெல்லாம் என்னிடம் கேட்பார்கள், மெய்யாகவே நன்றாக இருக்கிறதா? அப்படி என்ன இருக்கிறது அவற்றில்? ஏனென்றால் எந்தச் சிற்றிதழிலும் நாலைந்துபேர் கவிதை எழுதியிருப்பார்கள். திருகலான மலச்சிக்கல் மொழியில் தன்னுரையாடலாக காமப்புழுங்கல் அல்லது தனிமைத் தத்துவக் குமுறல். இரண்டும் இல்லாவிட்டால் புரட்சி. உரைநடையாளனுக்கு நவீனக்கவிதையின் மோசமான சொற்சேர்க்கை போல எரிச்சலூட்டுவது பிறிதொன்றில்லை. அச்சூழலில் முகுந்த் நாகராஜன் ஒரு குளிமென்காற்று. பைதல்களுக்குரிய அழகான அறியாமையுடன் பேசுவன அவருடைய கவிதைகள்.

இன்றும் தமிழ்க்கவிதையின் தவிர்க்கமுடியாத தனிக்குரல் அவருடையது. அவருடைய இடத்தை எவரும் அளிக்கவேண்டியதில்லை. நேற்றுகூட நெருக்கியடித்து ஜீப்பில் வரும்போது ஒருவர் இறங்கிக்கொள்ள சற்று கால்நீட்ட இடம் கிடைத்தபோது ஈரோடு வந்துவிட்ட தருணத்தில் ஒருவர் ‘இதெல்லாம் ஒரு காரணமா என்ன?’என்ற முகுந்த் நாகராஜனின் வரிகளைச் சொன்னார். அப்படித்தான் கவிஞன் வாழ்கிறான்.

தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்வை, எளிமையான அரசியல் கருத்துக்களை. அது மொழியின் எளிமை அல்ல. கவிதையின் மொழியில் தன்னியல்புத்தன்மைக்கே இடம், செயற்கையான எளிமைக்கு இடமில்லை. அந்த எளிமை கவிஞனின் அகஎளிமை. இயற்கையின்முன், பிரபஞ்சப்பெருக்கின் முன், வாழ்க்கைநாடகத்தின் முன் அவன் ‘புனிதமான அறியாமையுடன்’ நிற்கும்போது உருவாகும் எளிமை அது.

அத்தகைய எளிமைதான் கவிஞனை மலர்களை, விலங்குகளை, குழந்தைகளை நோக்கிக் கொண்டுசெல்கிறது. அவனுடைய கவித்தன்னிலை வானை, வெளியை,.கடலை,ஏரியை எல்லாம்கூட மலராக குழந்தைகளாக ஆக்கிவிடுகிறது. நான் விரும்பும் கவிஞர்கள் எல்லா மொழியிலும் முதன்மையாக அத்தகையவர்களே. சட்டையைக் கழற்றிவிட்டு ஒளிரும் குளிர்ச்சிற்றோடையில் இறங்குவதுபோல அவற்றுக்குள் நுழைந்துவிட முடிகிறது. தேவதேவன், கல்பற்ற நாராயணன், பி.ராமன், இசை என பலருடைய கவிதைகளில் நான் காணும் அழகு அது.

ஆனந்த்குமார் கவிதைகளை அந்த மனமலர்தலுடன் கண்டடைந்தேன். வாசித்தபின் புன்னகையுடன் அவற்றை காட்சியாக விரித்தபடி அமர்ந்திருந்தேன். எந்த ‘எண்ணத்தையும்’ ‘கருத்தையும்’ உருவாக்காத கவிதைகள். வெறும் புன்னகையில் கனியச்செய்பவை. காட்சிகளாக விரிந்து சட்டென்று இப்புடவி என நமைச் சூழ்ந்துள்ள மாபெரும் லீலையை உணரச்செய்யும் வரிகள்.

மலையாளக் கவிதைவரி ஒன்றுண்டு, கே.ஏ.ஜெயசீலன் எழுதியது. ‘இத்தனை எளிதாகவா இவையெல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன? இத்தனை பிந்தியா அதை நான் உணரவேண்டும்?’ எளிமையான ஒரு எண்ணம், ஆனால் சென்ற முப்பதாண்டுகளாக என்னை தொடர்கிறது இந்த வரி. இங்கே மலர்கள் விரிகின்றன, மலர்களைப்போல் எரிமலைகள் புகைமலர்கின்றன. விண்மீன்கள் தோன்றி மறைகின்றன. அத்தனை எளிமையாக. அதை உணரும் ஒரு தனிநிலை அகத்தே உண்டு. அதை வெளியே நிகழ்த்திக் காட்டுகின்றன ஆனந்த்குமாரின் கவிதைகள்.

நகர் நடுவே
அந்த ஏரியை
வேலியிட்டு வைத்திருந்தார்கள்
தொட்டிலுக்குள்
எழுந்துவிட்ட குழந்தைபோல
கவிழ்ந்து கிடந்து
உருள்கிறது
அழவில்லை சமர்த்து.

கம்பித்தடையின்றி
ஏரியைப் பார்க்க
சுற்றிவந்தேன்
சாலை தாழும்
ஒரு பழைய
ஓடையருகே
விரல்விட்டு வெளியே
மணல் அளைந்துகொண்டிருந்தது
ஏரி

அந்த கவித்தொடுகையையே இன்னொரு கவிதையில் கண்டேன். மலர் எழுந்து தொட்டு கற்சுவரை சற்றுக் கனியச் செய்கிறது. பட்டுத்திரை என சுவர் நெகிழும். மலரிதழ் என விரியும். வீடு ஒரு மாமலர் என ஒளியும் வண்ணமும் கொள்ளும் என நினைத்துக்கொண்டேன். மிகமிக மென்மையான மலர்த்தொடுகையைப்போல அத்தனை பேராற்றலை வேறேதும் அளித்துவிடக்கூடுமா என்ன?

மலர்த் தொட்டியை கொஞ்சம்
சுவற்றிற்கு அருகிலேயே வைத்துவிட்டேன்
புதிய மலரென
பூப்பதற்கு முந்தைய நாள்
சுவற்றை கொஞ்சம்
சீண்டிப் பார்க்கிறது மொட்டு.

அம்மாடி,
அத்தனை உறுதி ஒன்றுமில்லை.
சிறுமகள் தொட்ட
தந்தையின் உடலென
கொஞ்சம்
நெகிழ்ந்துதான் போனதென்
வீடு

யாவரும், ஆனந்த் குமார் கவிதைகள்

கனலி ஆனந்த்குமார் கவிதைகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2021 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.