Jeyamohan's Blog, page 945

July 26, 2021

பேசாதவர்கள், கடிதங்கள் -4

பேசாதவர்கள்[சிறுகதை]

பேசாதவர்கள் சிறுகதையின் காலம் இந்திய சுதந்திர காலகட்டத்தின் இறுதி மற்றும் தொடக்கத்தின் நிகழ்வுகளிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. இது இந்தியா தனது நில உடமை சமூக கட்டமைப்பை கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்குள் காலடியெடுத்து வைத்து ஆரம்பிக்கும் புதிய தொடக்கம். மேற்கத்திய நாடுகளில் ஜனநாயக விழுமியங்கள் நீண்ட கால உரையாடலின் வழி  மக்களை பழக்கி  நில உடமை சமூக மனநிலையை மழுங்கடித்து நிறுவப்பட்டதாகும் ஆனால் இந்தியா நேரடியாக, எந்தவித முன் தயாரிப்புகளுமின்றி ஜனநாயகத்திற்குள் பாய்ந்தது. எனவே தான் சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் பழைய மனநிலைகளின் எச்சங்கள் நம்மில் பெரும்பாலானவிகளிடம் இன்னும்  ஒட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த சிறுகதை இந்தியாவின் இந்த பாய்ச்சலை நீலி எனும் தொன்மத்துடன் இனைத்து சொல்லப்படுவதினாலேயே முற்போக்கு எனும் போர்வைக்குள் நிகழும் பொங்குதலை தாண்டி வாசகனின் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. நில உடமை சமூக சித்தரவதை கருவிகளில் ஒன்றான சாதிய கட்டமைப்பின், அதன் Dummy-Dumpy குரலும், முகமுமற்ற மனிதர்களுக்காக தெய்வம் (நீலி) மேலிருந்து கீழிறங்கி வருகிறாள். எல்லா காலகட்டங்களிலும் தெய்வங்கள் (ஏசு, புத்தர், காந்தி) யாக மண்ணிலிறங்கி வந்திருக்கின்றன. இங்கே நீலி சென்ற காலத்தின் சித்தரவதை கருவிகளை எரியூட்டி, டம்மிகளுக்கான புது உயிரை தன்னில் சுமந்துகொள்கிறாள். அதுவே ஜனநாயக இந்தியா. அங்கே தனது மகன் சிருகண்டனின் இடி, மின்னல் போன்ற குரலை ஒலிக்க விடுகிறாள். அவள் எரியூட்டியது முழுதும் எரிந்து இன்னும் அடங்கவில்லை. அது இன்னும் இந்த சமூகத்தில் நீடித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வரலாற்றில் அவை எரிந்து அடங்கத்தான் போகிறது. அதற்கான பாதையில் தான் நாம் பயணம் செய்துகொண்டிருககிறோம்.   அதற்கான சான்றுகளில் ஒன்று தான் நீங்கள் இனைத்துள்ள ஓவியத்தில் சித்தரிகப்பட்டிருக்கும் பழங்குடியினரான  ‘மது’ கேரளாவில் அடித்து கொள்ளப்பட்ட  நிகழ்வு. சென்ற காலத்தில் பண்டிட் கறம்பனின் சாவுக்கு நீதி கேட்க தெய்வம் இறங்கி வரவேண்டியிருந்தது, ஆனால் ஜனநாயகத்தில் மது வின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிராக பல சமூக நிறுவனங்கள், காவல்துறை, நீதிமன்றம் எதிர்வினையாற்றின. இதுவே ஜனநாயகத்தின் கொடை.

இந்த கதை ஒரு நாவலின் விரிவை தன்னுள் கொண்டுள்ளது. அனைத்தையும் பூடகமாகவும், குறியீட்டுரீதியாகவும் கூறி செறிவான மொழியினால் கதையை எல்லா திசைகளிலும் விரியும் வண்ணம் கட்டமைத்திருக்கிறீர்கள். உதாரணமாக, ஜனநாயகத்தால்  குரலும், அடையாளமும் பெறப்பட்டுள்ள நிலையில் சென்ற காலத்தில் மன்னனுக்கு சாபமிட்டு இறந்து போனவன் தூக்குமாடசாமியாக மக்களால் வழிபடப்படும் அதேவேளையில், சாமிநாத ஆசாரி அனைவரது நினைவிலிருந்தும் மறைந்துபோகிறான். பெண்கள் மேலெலுந்து வரும் சித்திரம், தாணப்பன் பிள்ளை மனைவியின் வாயிலாக தொட்டுக்காட்டப்பட்டுள்ளது. இப்படி கதை முழுக்க பல நுண் தளங்கள் இழையோடுகிறது. இது ஒரு நுரை போல பொங்கி அனையும்  முற்போக்கு கதை அல்ல, வாசகனின் அகத்திற்குள் ஊடுருவி சென்று உணர்தலுக்கு ஆட்படுத்தும் ஒரு ஒவியம், அழிந்திருக்கும் மதுவின் முகத்தை நம் அகத்தில் வரைந்துவைக்கும் ஒரு தூரிகை இந்த சிறுகதை.

 

அன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

 

அன்புள்ள ஜெ

பேசாதவர்கள் கதையை அந்தத் தலைப்பிலிருந்துதான் வாசிக்க ஆரம்பிக்கவேண்டும். மீண்டும் மீண்டும் தூக்கிலேற்றப்படும் விதி கொண்ட டம்மி. பேசாததனால் அது தூக்கிலேற்றப்படுகிறதா, அல்லது தூக்கிலேற்றப்படுவதனால் அது பேசாமலாகியதா? தன்னைப்போல் ஒரு உருவத்தை படைத்து அதைத் தூக்கிலேற்றுகிறான் மனிதன். தனக்குத்தானே அவன் அந்த இழிந்த மரணத்தை விதித்துக்கொள்கிறான்.

பத்மநாபபுரம் அரண்மனையில் அந்த கூண்டை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கே என்னை பெரிதும் தொந்தரவு செய்தது கைகளை கூட்டி ஆணியால் துளைத்து கிடுக்கிட்டு கும்பிடுவதுபோல ஆக்கி வைத்துக்கொல்லும் சித்திரவதைக் கருவிதான். கொடுமையானது அது. கும்பிட்டபடியே சாகச்செய்வது.

நம் மரபை அதன் பெருமையுடன் அறிமுகம் செய்யும் நீங்கள் அதன் ஆத்மாவில் படிந்த வரலாற்றின் இருட்டையும் சற்றும் தயங்காமல் முன்வைக்கிறீர்கள். ஆற்றல் கொண்ட எழுத்தாளனின் பார்வை என்பது அதுதான்

ஆர்,என்.ஸ்ரீனிவாஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2021 11:31

July 25, 2021

கீதை,அம்பேத்கர்

பெருமதிப்புக்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் ,

தங்களுக்கு நான் சில கடிதங்கள் எழுதி உள்ளேன். சில கடிதங்கள் பதில் அளிக்க தக்கவையாகவும் சில பதில் கூற தகுதி இல்லாததாகவும் இருந்து இருக்கிறது என எண்ணுகிறேன். உண்மையில் தங்கள் தளத்தை படிக்க தொடங்கியதில் இருந்தே நான் தரமாகவும் சற்றே கூடுதலாகவும் வாசிக்கிறேன். கொஞ்சம் கட்டுரைகளும் எனது blog இல் எழுதி உள்ளேன்.

சமீப காலமாக Dr அம்பேத்கர் அவர்களின் நூல் தொகுப்புகளை படித்து கொண்டு இருக்கிறேன். நான் படித்தவற்றில் எனக்கு புதியதாகவும் சுவாரஸ்யம் மிகுந்தவையாகவும் உள்ளவற்றை கட்டுரை வடிவில் சுருக்கமாக தொகுத்து எழுத முயன்று கொண்டு இருக்கிறேன். பகவத் கீதை மற்றும் மஹாபாரதம் பற்றிய சில விமர்சனங்கள் அவரது நூல் தொகுதி  ஏழில் இடம் பெற்றுள்ளது. அதில் உள்ள விவரணைகளை படித்த பின்பு தங்கள் தளத்தில் உள்ள பகவத் கீதை பற்றிய கட்டுரைகள் சிலவற்றை படித்தேன்.

இரண்டிற்கும் சில முரண்கள் இருப்பது இயற்கையே என்றாலும் உங்கள் கட்டுரைகளில் நான் காணாத சில விஷயங்கள் (நான் படித்த வரையில் ) அம்பேட்கர் அவர்கள் சொல்கிறார். அதை பற்றி தங்கள் கருத்து என்னவாக இருக்கும் என அறிய ஆவலாக உள்ளேன்.

எதிர் புரட்சியாளரின் பைபிள் – பகவத் கீதை

பகவத் கீதை ஒரு புத்த மதத்திற்கு  எதிரான ஒரு எதிர் புரட்சி பைபிள் நூல்  என்பது  அம்பேட்கர் அவர்களுடைய கருத்தாக உள்ளது. ஜைமினியின் பூர்வ மீமாம்சையே மாற்று வடிவில் தத்துவமாக கீதையில் வடிக்க பட்டு உள்ளது. அதில் பல பகுதிகள் இடை செருகல் மட்டுமே. திருத்தப்பட்ட கீதையின் காலம் மிகவும் பிற்காலமாக இருக்க வேண்டும். தோராயமாக கி பி 400-464  வரை திருத்தங்கள் நடந்து இருக்கலாம். இடை செருகளில் சில பகுதிகள் அப்படியே புத்த மத புத்தகங்களில் இருந்து எழுதப் பட்டு உள்ளது. (இடை செருகளை மறுத்து நீங்கள் எழுதிய கட்டுரையையும்  படித்தேன்)  அவர் கீதையில் இருந்து சில பாடல்களை அதற்கு ஆதாரமாக காட்டுகிறார். அற்பமான கட்சி பிரசுரம் போல தான் கீதை இருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். இந்தியாவில் புத்த மதத்தின் தத்துவார்த்த பின்னடைவிற்கு கீதையே காரணம் என்றும் அவர் சொல்கிறார்.

கீதை பற்றி இந்து மத தத்துவ எதிர்ப்பாளராக அம்பேட்கர் சொல்லும் கருத்துகளில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்றாலும் புத்த மதத்தின் கருத்துகள் கீதையில் அப்படியே எடுத்தாள பட்டு உள்ளது என கூறுவது என்பது வியப்பாக உள்ளது. சரணாகதி தத்துவம், ப்ரம்ம நிர்வாணம் என்ற வார்த்தை பிரயோகம், ஆகியவை தவிர மொழி அமைப்பு, சில செய்யுள்கள் கூட அப்படியே தழுவல் ஆக இருப்பதாக அம்பேட்கர் கருதுவது எனக்கு முற்றிலும் வியப்பாக இருந்தது. இதை பற்றிய எனது தொகுப்பு கட்டுரை இணைப்பு :– https://manianviews.blogspot.com/2019/06/7-1.html .

தங்களுக்கு நேரம் இருக்கும் போது கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றியுடன்

எஸ் சுப்ரமணியம்

கும்பகோணம்

 

அன்புள்ள சுப்ரமணியம் அவர்களுக்கு,

அம்பேத்கர் அவர்களை நவீன இந்திய சிந்தனைத் தளத்தில் செயல்பட்ட முதன்மையான சிலருள் ஒருவராகவே கருதவேண்டும். அவருடைய பங்களிப்பென்பது முதன்மையாக சமூகஆய்வுத்தளத்திலும் சட்டத்துறையிலும். அதன்பின்னர் வரலாற்றாய்விலும் மதங்களிலும் அறவியலிலும். அவருடைய தரப்பைக் கருத்தில்கொண்டுதான் நாம் எந்த தத்துவவிவாதத்தையும் ஆற்றவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் எந்த அறிஞரையும் அவருடைய நான்கு அடிப்படைகளைக் கருத்தில்கொண்டே நாம் மதிப்பிடவேண்டும்.

அ. அவர் தனக்கென கொண்டிருக்கும் தரப்பு, அவருடைய நம்பிக்கை.

ஆ. அவருடைய காலகட்டம்.

இ. அவர் கருத்தில்கொண்ட நூல்கள்.

ஈ. அவர் தன் காலகட்டத்தில் பேசிய கருத்துச் சூழல்.

அம்பேத்கர் தொடக்கத்தில் மேலைநாட்டு தாராளவாத [லிபரல்] பார்வை கொண்டவராக இருந்தார். வரலாற்றாய்வில் அவர் அமெரிக்காவில் அன்று ஓங்கியிருந்த தர்க்கபூர்வப் புறவயப் பார்வை [ பாஸிட்டிவிஸம்] கொண்டிருந்தார். பின்னர் இறுதிக்காலத்தில் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். பௌத்த அறவியல் ஆன்மிகம் ஆகியவற்றை முன்வைத்தார்.

அம்பேத்கரின் அணுகுமுறையில் இந்த இரண்டு காலகட்டங்களுக்கு நடுவே வேறுபாடுகள் உள்ளன. அவருடைய பொதுவான வரலாற்றுப்பார்வை புறவயமானது. ஆகவே மதத்தை அவர் ஓர் அதிகார அமைப்பாகவே கருதினார். அது அரசாங்கங்களுக்கு உதவியாக இயங்கும் ஒரு நிறுவனம், கருத்தை தன் ஆயுதமாகக் கொண்டது, மக்களிடமிருந்த நம்பிக்கைகளையும் தத்துவத்தையும் தொகுத்துக்கொண்டு மெல்லமெல்ல உருவாகி வருவது. இந்துமதத்தை அவர் அவ்வாறுதான் பார்த்தார்.

ஆனால் இரண்டாம் காலகட்டத்தில் ஒரு பௌத்தராக அவர் மதத்தை, குறிப்பாக பௌத்த மதத்தை, வழக்கமான தர்க்கபூர்வப் புறவயப்பார்வையைக்கொண்டு அணுகவில்லை. மதத்தை வெறும் அதிகாரக் கட்டமைப்பாக காணவில்லை. பௌத்தத்தை அகக்குறியீடுகளின் தொகுதியாகவும் அறவியலின் தொகுதியாகவும்தான் அணுகுகிறார்.

அம்பேத்கரின் இந்த பரிணாம மாற்றத்தை கருத்தில்கொண்டுதான் அவருடைய கருத்துக்களை நாம் யோசிக்கவேண்டும். அவர் முதல்காலகட்டத்தில் இந்துமதத்தை தர்க்கப்புறவயவாத நோக்கில் அணுகினார். இரண்டாம் காலகட்டத்தில் பௌத்த நோக்கில் அணுகினார். இரண்டுமே இந்துமதத்தை எதிர்நிலையில் நின்று அணுகுவதுதான். இரண்டுமே இந்து மதத்தை நிராகரிப்பதுதான்.

ஆகவே இன்று பார்க்கையில் இந்துமதம் ஒட்டுமொத்தமாக எதிர்மறையாகவும் பௌத்தம் நேர்நிலையிலும் அவரால் அணுகப்பட்டுள்ளது என்று தோன்றுகிறது. அதற்கான அரசியல் சமூகக் காரணிகளை விட்டுவிட்டாலும் அவருக்கு வலுவான தத்துவக் காரணங்கள் உள்ளன. இவ்விவாதத்தில் அவற்றையே கருத்தில்கொள்ளவேண்டும்.

அம்பேத்கரின் மதம்சார்ந்த கொள்கைகளை புரிந்துகொள்ள தனியாகவே விவாதிக்கவேண்டும். ஒரு சில வரிகளில் இங்கே சொல்வதென்றால் இவ்வாறு சுருக்கலாம்.

அவர் அந்தக் காலகட்டத்தில் ஓங்கியிருந்த மையமும் ஒழுங்கும்கொண்ட அமைப்புகள்மீதான நம்பிக்கையை தானும் கொண்டிருந்தார். அவ்வகையில்தான் பௌத்தத்தை ஏற்றார். பின்னாளில் அவ்வண்ணம் ஒன்றை உருவாக்கவும் முயன்றார்.

அம்பேத்கர் மதம் என்பது மெய்யியலால் வழிநடத்தப்படுவதாக இருக்கவேண்டுமென நினைத்தார். ஆகவே அது மெய்யியலாளர்களால் மேலிருந்து ஆளப்படுவதாக இருக்கவேண்டுமென கருதினார்.அது அறிவொளிக்கால ஐரோப்பாவின் கனவு.

இவ்வண்ணம் மையமும் ஒழுங்கமைவும் மெய்யியல்சார்ந்த குவிதலும் கொண்ட மதங்களே உறுதியான அறவியலை முன்வைக்க முடியும் என்றும், அவையே காலமாறுதல்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் நினைத்தார்.

இந்து மதம் மையமற்றதாக, ஒழுங்கமைவும் நிறுவனத்தன்மையும் அற்றதாக, எந்நிலையிலும் விவாதத்தன்மையும் உள்முரண்பாடுகளும் கொண்டதாக இருந்தது. அதில் மெய்யியல் உயர்நிலையிலும் பழங்குடித்தன்மை அடியிலும் இருந்தது. ஆகவே அது வலுவற்ற அறவியல்கொண்டதாகவும், பெரும்பாலும் சடங்குகள் மற்றும் ஆசாரங்களால் நிகழ்வதாகவும் இருந்தது என அம்பேத்கர் நினைத்தார். ஆகவே அவர் இந்துமதத்தை நிராகரித்தார்.

அம்பேத்கர் பேசிய காலகட்டம் இருபதாம்நூற்றாண்டின் ஆரம்பம். அன்று இந்தியவியலில் பல நூல்கள் பதிப்பிக்கப்பட்டு படிக்கப்படவில்லை. பௌத்தநூல்களிலேயே பல நூல்கள் ஆய்வுக்கு வரவில்லை. பௌத்த மதம் திகழ்ந்த காலகட்டத்தின் வரலாற்றுத்தரவுகளும் பௌத்த அறவியல்நூல்களும் ஆய்வுச்சூழலில் பேசப்படவில்லை. ஒட்டுமொத்தமாகவே இந்திய வரலாற்றாய்வு அப்போதும் தொடக்கநிலையில்தான் இருந்தது. ஆகவே அன்று கிடைத்த செய்திகளின் அடிப்படையிலேயே அவருடைய ஆய்வுகள் நிகழ்ந்தன.

அக்காலத்தில் பௌத்தம் இந்துமதத்தின் சாதிசார்ந்த மேலாதிக்கத்துக்கு எதிரானது என்ற நம்பிக்கை இருந்தது. சண்டாலபிக்ஷுகி போன்ற இலக்கியச் சான்றுகளைக்கொண்டு உருவாக்கப்பட்டது இந்த கருத்து. ஆனால் பல தொல்நூல்கள் வெளிவந்தபின் நிகழ்ந்த பிற்கால ஆய்வுகள் பௌத்தம் இந்தியாவில் சாதிமேலாண்மையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, அதை உயிர்க்கொலையின் அடிப்படையில் உறுதியாக வகுத்து நிலைநிறுத்துவதிலும் பெரும்பங்கு ஆற்றியிருப்பதையே காட்டுகின்றன.

அம்பேத்கர் சம்ஸ்கிருத மூலநூல்களை ஆராய்ந்திருந்தார். இந்தியவியலாளர்கள் இந்திய மூலநூல்களைப் பற்றி எழுதியிருந்தவற்றையும் வாசித்திருந்தார். ஆனால் இந்திய மூலநூல்கள் அடுத்த ஈராயிரமாண்டுகளில் எவ்வண்ணம் வாசிக்கப்பட்டன, மறுவாசிப்பு அளிக்கப்பட்டன, எவ்வண்ணம் விவாதிக்கப்பட்டன என்பதை அவர் வாசித்திருக்கவில்லை என அவர் நூல்கள் காட்டுகின்றன. ஆகவே இந்தியாவில் அந்நூல்கள் உருவாக்கிய விரிவான அறிவுத்தளமும் அதன் பல்வேறு காலகட்டங்களின் பரிணாமமும் அவருடைய பரிசீலனைக்கு வரவில்லை. அவர் அவருடைய  ஆரம்பகால தர்க்கப்புறவயவாத வரலாற்று நோக்கில் மட்டுமே அந்நூல்களை மதிப்பிட்டார்.

உதாரணமாக, கீதையை மூலச்சொற்களைக் கொண்டு மட்டும் வாசிப்பது வேறு, கீதை இரண்டாயிரமாண்டுக்காலத்தில் எவ்வண்ணமெல்லாம் வாசிக்கப்பட்டது, விவாதிக்கப்பட்டது, என்னென்ன அறிவியக்கங்களை உருவாக்கியது என்று வாசிப்பது வேறு. கீதை ஒரு தனிநூல் அல்ல. அது ஓர் அறிவுத்தரப்பு. அவ்வாறு அணுகினாலொழிய அதை முழுமையாக மதிப்பிட முடியாது. எந்த மூலநூலையும் அவ்வாறே மதிப்பிடவேண்டும்.

சொல்லப்போனால் எந்த தொல்நூலையும் அவ்வாறுதான் மதிப்பிடவேண்டும். குறள் என்பது அந்த 1330 ஈரடிகள் மட்டுமல்ல. அதன்மீதான ஆயிரத்தைநூறாண்டுக்கால வாசிப்பும் விளக்கமும் சேர்ந்ததுதான்.  இன்றைய ஏற்பியல் போன்ற மொழிக்கோட்பாடுகள் அதையே முன்வைக்கின்றன.

ஏனென்றால் மொழி நிலையானது அல்ல. அதன் சொற்பொருட்களம் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. மொழி மாற மாற நூல்களின் வாசிப்பு மாறுகிறது. நாம் இன்று நாம் புழங்கும் சொற்பொருட்களைக் கொண்டு கடந்தகால நூல் ஒன்றுக்கு அளிக்கும் பொருள் என்பது நமது வாசிப்பே ஒழிய அறுதியாக அந்நூலின் பொருள் அல்ல.

கீதை நாமறிந்த வரலாற்றுக் காலகட்டத்தில் எந்த வகை வாசிப்புகளை உருவாக்கியது? மிகச்சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.

முதன்மையாக அது ஓர் தத்துவசமன்வய நூல். வேதாந்தத்தை மையச்சரடாக்கி வெவ்வேறு முரண்படும் தரப்புகளை அது ஒருங்கிணைக்கிறது. அவ்வாறு ஒரு புதிய சிந்தனைப் போக்கை தொடங்கிவைக்கிறது. அதன்பின் அது பிற்கால வேதாந்தங்களான அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகியவற்றின் முதல்நூலாக தூய அறிவு வாதத்தை முன்வைக்கும் நூலாக வாசிக்கப்பட்டது. பின்னர் கிருஷ்ணபக்தியின் முகப்புநூல் என ஆகியது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இந்து மறுமலர்ச்சிக்காலத்தில் மீண்டும் வேதாந்தத்தின் மூலநூலாகவும், தூயஅறிவு வாதத்தை முன்வைப்பதாகவும் வாசிக்கப்பட்டது. அத்வைதத்தின் உயர்தத்துவத்தை அன்றாடச் செயல்சூழலுக்கு கொண்டுவரும் நூலாக வாசிக்கப்பட்டது. அனைத்துவகையான பார்வைகளுக்கும் இடமளிக்கும் முதல்நூல் என கொள்ளப்பட்டது.

அம்பேத்கர் தலித் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் தலைவராக எழுந்துவருவதற்கு முன்னரே இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய, தீண்டாமைக்கு எதிராக நிலைகொண்ட பல அமைப்புக்கள் இருந்தன. அவை பெரும்பாலும் அத்வைத சபைகள். சென்னையிலேயே பல நிறுவனங்கள் பணியாற்றின. அவர்களின் மூலநூல் கீதையே. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலான நாராயண குரு கையிலெடுத்ததும் கீதைதான்.

ஆகவே அம்பேத்கரின் வாசிப்பு என்பது அன்றிருந்த இயந்திரத்தனமான ஐரோப்பிய புறவயத்தர்க்கவாதம் சார்ந்தது மட்டுமே. அது இன்றையநோக்கில் முழுமையான ஆய்வுநோக்கு அல்ல. ஒரு கவிதையை அகராதிச் சொல் கொண்டு வாசித்து பொருள்கொள்வது போன்றது அது.

அத்துடன் அன்றிருந்த எளிமையான புறவய வரலாற்றுப்பார்வையை கீதைமேல் போடுவது அது. வரலாறென்பது ஒடுக்குமுறை – அதிகாரம் இரண்டால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது என்பது தர்க்கப்புறவயவாத அணுகுமுறையின் பார்வை. அன்றைய ஐரோப்பிய அறிஞர்கள் முழுநம்பிக்கையுடன் அதை மொத்த உலகுக்கும், அத்தனை செவ்வியல்நூல்களுக்கும் அளவுகோலாகக் கையாண்டிருப்பதைக் காணலாம். அது இன்று ஏற்புடையது அல்ல.

அம்பேத்கரே பின்னாளில் பௌத்தநூல்களை ஆராய்வதற்கு எந்த அளவுகோல்களைக் கையாண்டாரோ அதே அளவுகோல்களின்படி நேர்நிலையில் நின்று கீதையை ஆராய்ந்திருந்தால் அவருடைய முந்தைய பார்வையை அதுவே மறுதலித்திருக்கும். அவர் குறியீடுகளை, உருவகங்களைக் கொண்டு அகவயப்பார்வையை அடைய அந்த பௌத்தநூல்களின் வாசிப்பில் முயல்கிறார். ஆனால் அப்போது அவர் கீதைக்கு எதிரான பௌத்த நிலைபாட்டைக் கொண்டிருந்தார்.

அம்பேத்கர் தன் காலகட்டத்தின் அறிவுச்சூழலின் பொதுவான போக்குக்கு எதிராக நின்று வாதிட்டார். அது பதினெட்டாம் நூற்றாண்டின் இந்து மறுமலர்ச்சிக்காலகட்டம் முதிர்ந்து இந்திய தேசிய இயக்கமாக உருமாறிய தருணம். இந்தியாவின் மரபார்ந்த பெருமை, வரலாற்றுச் சிறப்புகள் கண்டடையப்பட்டன. மிகைப்படுத்தப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட்டன.இந்தியாவின் பண்பாட்டு ஒருமையை முன்வைக்கும் நூல்கள் எழுதப்பட்டன. சுதந்திரப்போருக்கு மக்களை திரட்டும் கருத்தியல்கருவிகளாக அன்று அவை தேவைப்பட்டன.

அந்தப்போக்கு அன்றும் தொடர்ந்த தலித் ஒடுக்குமுறையை பொருட்படுத்தாமல் முன்செல்வதாக இருந்தது. வரலாற்றிலிருந்து அந்த கறையை பார்க்கத்தவறுவதாகவும் இருந்தது. அதை அம்பேத்கர் முன்வைத்தார். ஆகவே ஒருவகையில் அன்றைய இந்துப்பெருமிதவாதங்கள் அனைத்துக்கும் எதிராக அவர் எதிர்வினையாற்றினார். அது கருத்தாடலாக மட்டுமல்லாமல் பலதருணங்களில் கருத்துப்பூசல் [polemics] என்ற அளவிலும் நிகழ்ந்தது.

திலகர் முதல் காந்தி வரை கீதையை மூலநூலாக முன்வைத்தனர். தங்கள் சமகாலச் சூழலுக்காக அதை விளக்கினர். அவர்களுக்கு அரசியல்ரீதியாக எதிர்நிலையில் நின்றிருந்த அம்பேத்கர் அதனாலேயே கீதையை நிராகரிக்க நேர்ந்தது. அவருடைய கருத்துக்கள் பெரும்பாலும் கருத்துப்பூசல் தன்மைகொண்டவையாக, சமநிலையற்றவையாக இருப்பதும் அதனாலேயே. இந்த அம்சத்தை ஷோப்பனோவர், ஹெகல் முதல் எந்த தத்துவவாதியின் கருத்துக்களை ஆராயும்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் கருத்துப்பூசல்சூழலில் சொன்ன வரிகளை ஆய்வுமுடிவுகளாக எடுத்துக்கொள்ளலாகாது.

1950கள் வரை கீதை கிபி நான்காம் நூற்றாண்டில் குப்தர் காலகட்டத்து இந்து மறுமலர்ச்சியின்போது எழுதப்பட்டதாக இருக்கலாம் என்னும் நம்பிக்கை இருந்தது. டி.டி.கோசாம்பியும் அவ்வாறு சொல்கிறார். சீன பயணியான பாஹியானின் ஒரு குறிப்பில் இருந்து அம்முடிவுக்கு வருகிறார்கள். அதை பலரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் கீதையிலுள்ள பல வரிகள் பௌத்தநூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என்பது அவர்களின் ஊகம்.

கீதை போன்ற நூல்கள் எவ்வண்ணம் எழுதப்பட்டன, வாசிக்கப்பட்டன என்னும் புரிதல் இல்லாத காலகட்டத்தின் முடிவுகள் அவை. கீதை போன்றவை பொதுவாசிப்புக்கான நூல்கள் அல்ல. உதாரணமாக கீதை இந்தியாவெங்கும் புழங்கியதற்கான இலக்கியச் சான்றுகள் குவிந்துள்ளன. ஆனால் இந்திய மொழிகள் எவற்றிலும் அது மொழியாக்கம் செய்யப்படவில்லை.கீதைக்கான தழுவல்மொழியாக்கம் என்றால்கூட 13 ஆம் நூற்றாண்டில் ஞானேஸ்வர் மராத்தி மொழியில் செய்ததுதான்.

கீதை குருமரபுகளுக்குள் மட்டும் பயிலப்பட்டது. ஞானநூலாகவும் ரகசியநூலாகவும். ஆகவே அது ஞானமரபை கடைப்பிடிக்கும் மாணவர்களிடம் மட்டுமே இருந்தது. அதை மக்கள்கூடி வாசிப்பதும், அது ஒரு பொதுநூலாக ஆனதும் எல்லாம் உண்மையில் பதினெட்டாம்நூற்றாண்டின் இந்து மறுமலர்ச்சிக் காலகட்டத்திற்குப் பின்னர்தான்.

இத்தகைய நூலின் காலகட்டத்தை கண்டடைவது மிகக்கடினமானது. அதிலுள்ள சிலகுறிப்புகள், அதன் மொழிநடை ஆகியவற்றைக் கொண்டே அதன் காலத்தைப் பற்றி முடிவுக்கு வரமுடியும்.

கீதை பிரம்மசூத்திரத்தைப் பற்றிச் சொல்வதனால் அது பிரம்மசூத்திரத்தின் சமகாலத்தையது, அல்லது பிந்தையது. அதன் முதலிரு யோகங்களை தவிர்த்தால் அதன் மொழிநடை அதை கிமு 3 அல்லது அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்ததாகவே காட்டுகிறது.

கீதை எவ்வகையிலும் பௌத்த, சமண மதங்களின் கருத்துக்களை குறிப்பிடவில்லை. ஏற்றோ மறுத்தோ. கீதை ஒரு சமன்வய நூல். அதாவது சமரசம், ஒத்திசைவுதான் அதன் வழி. கீதையின் இயல்பின்படிப் பார்த்தால் அதன் காலகட்டத்தில் பௌத்த சமண மதங்கள் வலுவாக இருந்திருந்தால் அது அந்த மதக்கருத்துக்களை எடுத்தாண்டிருக்கும். கீதையின் காலகட்டத்தில் வேதமதத்தின் வலுவான எதிர்த்தரப்பு சாங்கியம்தான். கீதை இயல்பாக பெயர்சுட்டியே சாங்கியத்தின் பல தரப்புகளை தன்னுள் எடுத்தாள்கிறது.

கீதை நெடுங்காலமாக மகாபாரதத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. மகாபாரதத்தில் கீதை சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது மகாபாரதத்துடன் சம்பந்தப்படாதது அல்ல. மகாபாரதம் முழுக்க கீதைதான் முழங்கிக்கொண்டிருக்கிறது.கீதை சொல்லும் வேதாந்தக் கருத்துக்கள் உபநிடதங்களிலும் பிரம்மசூத்திரத்திலும் திரண்டு வந்தவைதான்.

கீதையின் தத்துவக் காலகட்டத்தை இன்று ஒருவாறாக வரையறைசெய்ய முடியும். உபநிடத காலகட்டத்தின் இறுதியில், விரிவான உள்விவாதம் காரணமாக, வேதாந்தத்தின் தரப்பு பரந்து விரிந்து சென்றபோது அந்த தரப்பை ஒட்டுமொத்தமாக தொகுக்கும்பொருட்டு உருவான நூல் அது. அன்று பலநூறு உபநிடதங்கள் இருந்திருக்கலாம். அவை அனைத்துக்கும் சாரமாக ஒரு மையப்பார்வையை நிறுவுகிறது அது. அன்று சாங்கியமும் வைசேஷிகமும்தான் வேதாந்தத்தின் எதிர்த்தத்துவத் தரப்புகள். அவற்றிலிருந்து சாராம்சமானவற்றை கீதை உள்ளிழுத்துக்கொண்டு தன் தரிசனத்தை முன்வைக்கிறது.

அம்பேத்கரின் கருத்துக்களை இந்துமெய்யியல் ஆய்வுகளில் எப்போதும் ஓர் எதிர்தரப்பாக கருத்தில்கொள்ளவேண்டும். அதை தலித் தரப்பாக சுருக்கும் போக்கு சிலரிடம் உள்ளது. அது தத்துவக் களத்தில் பிழையான பார்வை. அவரை தொன்மையான சார்வாக- சாங்கிய மரபின் குரலெனவும், பிற்கால பௌத்தக் குரல் எனவும் கொள்வதே முறையானது. அந்த எதிர்க்குரல் என்றும் இங்கே இருந்துள்ளது. அதனுடனான விவாதமும் அவ்வாறு உருவாகும் முரணியக்கமும்தான் இந்து மெய்யியலை இயக்கவிசை கொள்ளச் செய்பவை.

அம்பேத்கரின் கீதை பற்றிய கருத்துக்களை மறுக்கிறேன். தேவையென்றால் நூலளவிலேயே எழுதமுடியும். மிகச்சுருக்கமாக எழுத முயன்றிருக்கிறேன். ஆயிரம் சொற்களுக்குள். என் தரப்பு கீதையை முதல்நூலாகக் கொண்ட நாராயண குருவின் மரபின்வழி வந்தது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 11:35

ராமப்பா கோயில்- ஒரு கடிதம்

இந்தியப் பயணம் 11 – வரங்கல் ருத்ரை- சிறுகதை அழியா இளமைகள்

அன்புள்ள ஜெ,

‘இடம் மாறி இடம் மாறி மல்லாந்து படுத்து அந்தச் சிற்பங்களை பார்த்து பார்த்து திகட்டி சலித்து மீண்டும் தாகம் கொண்டு மீண்டும் பார்த்து அது ஒரு மீளமுடியாத அவஸ்தை. அந்த ஒரு மண்டபத்தை சாதாரணமாக ரசிக்கவே ஒரு நாள் முழுக்க போதாது. சிவபெருமானின் நடன நிலைகள். அவரைச் சூழ்ந்து பிற தெய்வங்கள். நடன மங்கையர். இசைக்கலைஞர்கள். அந்த மண்டபமே தெய்வங்களும் தேவர்களும் மானுடரும் சேர்ந்து கொண்டாடும் ஒரு பெரும் கலைத்திருவிழாபோல் இருந்த்து.

ராமப்பா கோயிலின் வெளியே மேல்கூரை வளைவுக்கு அடியில் உள்ள கரியகல் மோகினி நாகினி சிலைகள் ஒவ்வொன்றும் பெரும் கலைப்படைப்புகள். இதற்கு அப்பால் ஒரு கலையே இந்தியாவில் இல்லை என்ற பெரும் பிரமிப்பை உருவாக்குபவை. நண்பர்கள் ஒவ்வொருவரும் அரற்றியபடியே இருந்தார்கள். பித்து பிடிக்க வைக்கும் ஒரு அபூர்வமான காட்சிப்பெருவிருந்து இந்த ஆலயம். இந்திய நாட்டில் ஒரே ஒரு கலைச்சின்னம் மட்டும் எஞ்சினால் போதுமென்றால் இதை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்…’இந்தியப் பயணம் 11 – வரங்கல்

இந்திய பயணத்தில் நீங்கள் எழுதியது சார். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு உங்களை பரவசத்தில் ஆழ்த்திய இந்த சிற்ப  அற்புதம்  இனி உலகமெல்லாம் கவனிக்கப்படும். ஆம், இந்த ஆலயத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்  கிடைத்துள்ளது. நிச்சயமாக தனி தெலுங்கானா மாநிலத்தால் கிடைத்த ஆகப்பெரும் நன்மை இதுதான். இந்த உலக அங்கீகாரத்திற்காக உண்மையாகவே மெனக்கெட்டு இருக்கிறார்கள் இங்குள்ள மந்திரிகள். இந்த செய்தி கேட்டவுடன் மனம் துள்ளிக்குதித்தது . உங்கள் பதிவை தேடி படித்தேன். அதே பரவசம் உங்களில் இன்றும் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு சின்ன சுவாரசியம் இந்த கோயிலுக்கு உண்டு சார். ஜாயப்பா சேனானி என்று காகதீய அரசி ருத்திரம்மாவின் தந்தை கணபதி தேவனின் மச்சினன் ஒருவர் இருப்பார். இவருடையது கோதாவரியின்கரையில் உள்ள சிறு நாடு. சோழர்களின் உறவினர்களான கிழக்கு சாளுக்கியர்களின் கீழ் இருந்தவர். சோழர்களின் வீழ்ச்சி கிழக்கு சாளுக்கியர்களையும் வீழ்ச்சியடைய காகதீய பேரரரசின் ஏழுமுக காலம் ஆரம்பமானது. கணபதி தேவன் கோதையின் கரையில் உள்ள சிற்றரசுகளை வென்றான். ஜாயப்பாவும் வீழ்ந்தான். ஆனால், கணபதிதேவன் அவரை கொல்லாமல் மன உறவின் மூலம் தன் அரசில் ஐக்கியமாக்கினார். ஜாயப்பாவின் தங்கைகளை மணந்தார்… ருத்திரம்மாவின் மாற்று தாய்கள் இவர்கள்.  அவரை சகல மரியாதைகளுடன் வரங்கல் அழைத்து தனது சேனானி ஆக்கினார். இந்த ஜாயப்ப பெரும் வீரன் மட்டுமல்ல நடன கலைஞரும் கூட! அதனுடன் சேர்த்து எழுத்தும் இருந்து இருக்கலாம். அதனால் தான், பாரதமுனியின் நாட்யசாஸ்திரத்திற்கு இணையானது என்று சொல்லும் ‘ந்ருத்த ரத்னாவளி’ என்ற சம்ஸ்க்ருத நூலை எழுதினர். அந்த நூலின் மூலம்…  தெலுங்கானாவில் உள்ள ‘பேரினி’ நாட்டியத்தை வரையறுத்தார். அதற்கு ஒரு கிளாசிக் அந்தஸ்தை கொடுத்தார். அவரின், அந்த நாட்டிய நூலின் சிற்ப வெளிப்பாடுதான் இந்த ராமப்பா ஆலயம்.  அதாவது ஒரு நூலில் சொன்ன வரையறைகளை வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ள எழுப்பிய சிற்ப களஞ்சியம் தான் இது. ஒரு புத்தகத்திற்கு சிற்ப வடிவம் என்பதே கிளர்ச்சியை அளிக்கிறது.

ஜாயப்பா… பேரினி கலை அழிந்துவிடும் என்று ஐயுற்றாரா? அதற்காகத்தான் அந்த நூலை எழுதி, தன் மாமாவின் மூலம் இவ்வளவு பெரிய ஆலயத்தை எழவைத்தாரா? அந்த நாட்டியம் 16வது நூற்றாண்டிற்கு பிறகு முற்றாகவே அழிந்து போனது. 1980 களில் நடராஜ ராமகிருஷ்ணா என்ற நாட்டிய கலைஞர் பேரினி நாட்டியத்தை மீள் உருவாக்கம் செய்தார். இந்த ஆலயத்தில் தவம் கிடந்து இங்குள்ள சிற்பங்களின் வடிவங்கள், அசைவுகளின் வழியே அதை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தார். அவர் வடிவமைத்த பேரினி சிவதாண்டவம் இன்றும் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்..

அன்புடன்
ராஜு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 11:32

ஸ்ரீனிவாச கோபாலன் – கடிதங்கள்

ஸ்ரீனிவாச கோபாலன் பேட்டி முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு

இனிய ஜெயம்

நண்பர் அழிசி பதிப்பகம் திரு ஸ்ரீனிவாச கோபாலன் அவர்ககள் பெறும் முகம் விருதுகான அறிவிப்பைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. செயலை மட்டும் காட்டி முகமே காட்ட மறுப்பவர் ஒருவருக்கு ‘முகம்’ விருது.

குக்கூ அமைப்பினர் இதுவரை முகம் விருது வழியே கெளரவப்படுத்திய ஆளுமைகள் வரிசையில் நிச்சயம் மற்றொரு பெருமிதம் கோபாலன். குக்கூ அமைப்பினரின் இத்தகு முன்னெடுப்பு மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. எவர் எவரெல்லாம் நமது பெருமிதம் என்றும் நமது பதாகை என்றும் உயர்த்திப் பிடிக்கப்பட்ட வேண்டுமோ அவர்களை தேடிச்சென்று, அந்த போதம் கொண்ட சிறுபான்மை சார்பாக இத்தகு விருதுகளை அளிக்கிறார்கள் என்பது கலாச்சார முக்கியத்துவம் கொண்டது.

ஒரு வணிக சினிமா இங்கே எந்த அளவு பேசிப் பேசி உயர்த்திப் பிடிக்கப்படுகிறது, ஒரு அரசியலும் அதன் தலைமையும் எவ்வாறு பேசிப் பேசி பிடிக்கப்படுகிறது. பெரும் பொருட்செலவில் நிகழும் இதில் சினிமா எனில் பணமும் புகழும் உண்டு, அரசியல் என்றால் பேர் புகழ் பணம் அதிகாரம் வரலாற்று தடம் என என்னென்னவோ கிடைக்கும்.

ஆனால் களப்பணிக்கு? இலக்கியத்துக்கு? அரசியல் போல சினிமா போல சேவையில் இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபடும் பலர் இங்கே உண்டு. பணம் இல்லை புகழ் இல்லை. இலக்கியம் என்றாலோ இன்னும் கீழே, கொள்ஹே யில்  சம்சாரமே இன்றி   வாழும் மடையன் எவனுடைய வசை மட்டுமே கிடைக்கும். இவற்றுக்கு வெளியே இவற்றை செய்வதால் எழும் நிறைவு இவை மட்டுமே இத்தகு ஆளுமைகள் கண்ட மிச்சம்.

இத்தகு சூழலில் தான் தன்னரம் போன்ற நண்பர்கள் முன்னெடுக்கும் இத்தகு விஷயங்கள் முக்கியத்துவம் கொள்கிறது. தன்னரம் நண்பர்களுக்கும் விருது பெறும் நண்பர் ஸ்ரீனிவாச கோபாலன் அவர்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்.

கடலூர் சீனு

 

அன்புள்ள ஜெ

முகம் விருது வழியாகவே ஸ்ரீனிவாச கோபாலனைப் பற்றி அறிந்துகொண்டேன். இந்தத்தலைமுறையில் அத்தனைபேரும் லௌகீக வெற்றிக்கு பின்னால் வெறிபிடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நானெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போதுகூட இத்தகைய இளைஞர்கள் இருப்பதும், அவர்களை அடையாளம் காணும் இளைஞர் அமைப்புக்கள் இருப்பதும் மிகவும் மனநிறைவையும் நம்பிக்கையையும் அளிக்கின்றது. என் வாழ்த்துக்கள். அவர்களை அடையாளம் காட்டும் உங்கள் தளத்துக்கும் நன்றி

ஜெயராம் ஸ்ரீனிவாஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 11:31

சீவகசிந்தாமணி- கடிதம்

பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு

சிந்தாமணி

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

இணைய சூம் நேரலையில் தங்களின் சீவகசிந்தாமணி குறித்த உரை கேட்கும் பேறு பெற்றேன். கடந்தகால ஒட்டுமொத்த தமிழ் பண்பாட்டுக் கலாச்சார இலக்கிய பொக்கிஷங்களை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஒரு சீரிய முயற்சி இது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் சங்கச்சித்திரங்கள் உரை எழுதிய பொழுது அந்த உரைகளை படித்துவிட்டு சங்க இலக்கியங்களின் பக்கம் பார்வையை பலர் திருப்பினர். அந்த அற்புதமான உரைகள் சங்கப் பாடல்களுக்கு புதிய தலைமுறையினர் இடையே ஒரு புத்துயிர்ப்பை அளித்தது.

தாங்கள் கொற்றவை புதுக் காப்பியத்தை எழுதியதன் காரணமாக, அதைப் படித்ததால், பலருக்கு சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற உந்துதலும் கிடைக்கப்பெற்றது.

மகாபாரதத்தை மீள் உருவாக்கம் செய்து நீங்கள் படைத்த நிகழ் காவியமான வெண்முரசு ஆற்றிக் கொண்டிருக்கின்ற அளப்பரிய பணியை வார்த்தைகளினால் வடித்துவிட முடியாது. தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்ள விரும்புகின்ற, இந்தியப் பண்பாட்டை புரிந்து கொள்ள ஆவல் உள்ள எத்தனையோ நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு வெண்முரசை படிக்க பரிந்துரைத்து, அவர்கள் வாழ்க்கை மேம்படுவதை கண்கூடாகக் கண்டவன் என்பதனாலேயே தங்களின் படைப்புகள் ஆற்றும் பெரும்பணியை நன்கு உணர்ந்தவன் நான்.

தங்களின் சீரிய முயற்சியினால் சீவக சிந்தாமணியும் மணிமேகலையும் புதிய தலைமுறையினரின் வாசிப்பிற்கு உட்படுத்தப்படும் என்று நம்புகின்றேன். நம் தமிழகத்துக் கோயில்களைப் பாதுகாப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நமது பழம் பெரும் இலக்கியங்களை பாதுகாப்பதும் என்று தாங்கள் முன்வைத்த கருத்து மிகவும் ஆழமானது. பழம்பெரும் இலக்கியங்களை பாதுகாத்தல் என்பது அவற்றைப் படித்தல், அவற்றைக் குறித்து பேசுதல், மீளுருவாக்கம் செய்து எழுதுதல் என்கின்ற புரிதலும் உங்களால் மிகச்சிறப்பாக அனைவருக்கும் கடத்தப்பட்டது.

கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் இன்றளவுக்கும் தொடர் வாசிப்புக்கு உட்படுத்த படுவதற்கான காரணங்களை பட்டியலிட்டிர்கள். அதேவிதமாக சீவக சிந்தாமணியும் மணிமேகலையும் ஏன் வாசிக்கப்படுவதில்லை என்பதற்கான காரணங்களையும் மிகத் தெளிவாக முன்வைத்தீர்கள். உங்களின் இந்த உரை அளித்த வெளிச்சத்தைக் கொண்டு சரியான புரிதலுடன் இந்த இரு காப்பியங்களையும் இனி அணுக முடியும் என்ற நம்பிக்கை உருவானது.

தங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை தமிழ் சமூகத்தின் சார்பாக முன்வைக்க விழைகிறேன். நல்ல இலக்கிய நயமும் கவிதைச் சுவையும் உள்ள சில விருத்தங்களையேனும் தேர்ந்தெடுத்து தாங்கள் சீவகசிந்தாமணிக்கும் மணிமேகலைக்கும் ஒரு அடிப்படை சித்திரத்தை அளிக்க வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள். இந்தப் பணியை செய்வதற்கு இன்று இருக்கின்ற இலக்கிய ஆளுமைகளில் தாங்களே மிகச்சரியானவர் என்பதனாலேயே இந்த வேண்டுகோளை தங்களிடம் முன்வைக்கிறோம். ஒருசில நூற்றுக்கணக்கான இளைஞ்ஞ  இளைஞ்ஞிகளையேனும் தங்களின் அந்தச் சித்திரங்கள் தமிழின் பழம்பெரும் காப்பியங்களுள் இழுத்து உள் நிறுத்தும் என்கின்ற பூரண நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

எல்லாம் வல்ல பேரியற்கை தங்களுக்கு நல்ல உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் நல்கட்டும் என்ற வேண்டுதலோடும், தங்களின் சீரிய பணிகள் மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்ற நல்வாழ்த்துக்களோடும், ஒரு மிகச்சிறந்த உரையை அளித்தமைக்கு தங்களுக்கு நன்றி கூறி அமைகிறேன்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 11:31

ஒருபாலுறவு

ஒருபாலுறவு வாங்க

இந்த நூல் இயல்பாக என் இணையதளத்தில் உருவாகி வந்த விவாதங்களில் இருந்து திரட்டப்பட்டது. ஒருபாலுறவினரான விஜய் என்னும் நண்பர் எழுதிய கடிதத்தில் இருந்து இந்த உரையாடல் தொடங்கியது. நான் நண்பர்களின் நம்பிக்கைக்குரியவன் என்பதனால் இத்தகைய தனிப்பட்ட கடிதங்கள் நிறையவே வருவதுண்டு.

இக்கடிதங்கள் தமிழ்ச்சூழலிலேயே ஒருபாலுறவு ஈர்ப்பு கொண்டவர்கள் பலர் இருப்பதும், இங்குள்ள சமூகநோக்கு அவர்களை ஒரு தலைமறைவுச் சமூகமாக ஆக்கியிருப்பதும் தெரிந்தது. இந்த விவாதங்களில் பல தளங்களில் இருந்து குரல்கள் எழுந்து வந்தன. அவற்றை தொகுத்திருக்கிறோம்

என்னுடைய பார்வை எப்போதுமே தெளிவானது.நான் பாலியல், ஒழுக்கவியல் கொண்டு மனிதர்களை அளவிடுவதில்லை. சமூகப்பங்களிப்பைக் கொண்டே அளவிடுகிறேன்.   ஒருவர் தன் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது அப்பங்களிப்பின் வழியாகவே. அதை இயற்றுவதற்குரிய வாழ்க்கையை அவர் அமைத்துக்கொண்டார் என்றால் அதுவே உகந்த வாழ்க்கை.

இந்நூல் தன்பாலுறவினருக்கு மட்டுமல்ல அவர்களை அறியவிழைபவர்களுக்கும் உகந்ததாக இருக்குமென நினைக்கிறேன். தமிழின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான அனிருத்தன் வாசுதேவன் தன்னை தன்பாலுறவினராக பொதுவெளியில் அறிவிப்பவர். அவருக்கு இந்நூல் சமர்ப்பணம்

ஜெ

ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரைமலைபூத்தபோது முன்னுரை ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரைமுதுநாவல் முன்னுரை ஆனையில்லா! முன்னுரைதங்கப்புத்தகம் முன்னுரைஅந்த முகில் இந்த முகில் முன்னுரை பத்துலட்சம் காலடிகள் முன்னுரை இருகலைஞர்கள் முன்னுரை உடையாள் முன்னுரை ஞானி முன்னுரை கதாநாயகி முன்னுரை வாசிப்பின் வழிகள் முன்னுரை இலக்கியத்தின் நுழைவாயிலில் முன்னுரைஒருபாலுறவு முன்னுரைவணிக இலக்கியம் முன்னுரை  
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 11:31

July 24, 2021

பார்ப்பான் பிறப்பொழுக்கம்

சமண வள்ளுவர்

வணக்கம் ஜெ,

இந்த குறளில் வரும்  “பார்ப்பான்” என்னும் சொல், அந்தணரைக் குறிக்கிறதா?  காண்பவன் என்ற பொருளும், சரியாக இருப்பதாகத் தோன்றவில்லையே ?

எல்லா உரைகளிலும் அந்தணர் என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள்.  உங்கள் கருத்து என்ன?

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்குறள் 134

[ அறத்துப்பால் , இல்லறவியல் , ஒழுக்கமுடைமை ]

அன்புடன்

கோபிநாத் ,     

சேலம் .

அரசாங்க வள்ளுவர்

அன்புள்ள கோபிநாத்

குறளின் பொருளை கொள்ளும்போது அது உருவான காலகட்டத்தின் பொதுவான சமூகச்சூழல், அன்றிருந்த அறவியல், குறள் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் பார்வை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் பொருள்கொள்ளவேண்டும்.

குறள் சமணப்பண்பாடு தமிழகத்தில் வேரூன்றிய களப்பிரர் காலகட்டத்தில், ஒரு சமணக் குரவரால், இங்கு அவர்கள் உருவாக்கிய கல்விப்பணிகளின் பொருட்டு எழுதப்பட்ட அறநூல் என்பது என் எண்ணம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஏறத்தாழ எல்லாமே சமண – பௌத்த பின்னணி கொண்டவை. தங்கள் கல்விப்பணிகளின்பொருட்டு இலக்கணநூல்கள், அறநூல்கள் ஆகியவற்றை இந்தியாவெங்கும் சமணர் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆனால் குறள் சமணத்தை போதிக்கும் நூல் அல்ல. பொதுவான அறத்தையே அது முன்வைக்கிறது. சமணம் இன்று நம்மில் கற்பிதம் செய்வதுபோல வேதமதத்திற்கு எதிரானது அல்ல. மாற்றான பார்வை ஒன்றை முன்வைத்தது, கொள்கையளவில் முரண்பட்டது எனலாம். ஆனால் வைதிகமதத்திற்கும் சமணத்திற்கும் பொதுவான தொன்மங்களும் அறங்களும் தத்துவங்களுமே மிகுதி.

இக்குறள் அந்தணரின் ஒழுக்கம் பற்றியே பேசுகிறது. சங்கப்பாடல்கள் தொட்டு தமிழிலக்கியத்தில் எங்கெல்லாம் அந்தணர் குறிப்பிடப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் இரண்டு இயல்புகளைக் கொண்டு அடையாளப்படுத்தப் படுகிறார்கள். ஒன்று அவர்களின் நோன்பு வாழ்க்கை. இரண்டு அவர்களின் மூவேளை எரியோம்பும் கடமை. அந்தப் பார்வையின் நீட்சியே இதில் உள்ளது.

ஆனால் நுட்பமான ஒரு வேறுபாடும் உள்ளது. வைதிகமதத்தைப் பொறுத்தவரை கற்றவேதத்தை மறப்பதே அந்தணம் சென்றடையும் அறுதியான இழிநிலை. குறள் அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம் தன் குடிக்குரிய ஒழுக்கநெறிகளை அவன் கைவிடுவது அதைவிடவும் கீழானது என்கிறது. உடைமையின்மை, கொல்லாநெறி, இன்சொல் என அந்தணருக்கான ஒழுக்கநெறிகள் அன்று வகுக்கப்பட்டிருந்தன. அவையே முதன்மை, வேதமோதுவதோ வேள்வியோ அல்ல என்று குறள் சொல்கிறது. அது சமணத்தின் பார்வையாக இருக்கலாம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2021 11:35

ஆலயம் – எஞ்சும் கடிதங்கள்

ஆலயம் எவருடையது?

ஆலயம் ஆகமம் சிற்பம்

நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்

ஆலயம், இறுதியாக…

அன்பின் ஜெ

வணக்கம்

மை ஆர் ஒண்கண்ணார் மாடம்

நெடுவீதிக்

கையால் பந்து ஒச்சும் கழி சூழ்

தில்லையுள் (திருமறை 1866.1 -2 )

திருஞானசம்பந்தரின் பாடல் வரிகளை கொண்டே தில்லை நடராசர் கோயிலின் தொன்மையை அறிந்து கொள்ளலாம். அத்தகைய தொன்மையான கோயிலை சோழர்களுக்கு பிறகு பாண்டிய மன்னர்களும் அதன் பிறகு கிருஷ்ணதேவராயரும் அடுத்து  நாயக்கர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்து.யார் யாரெல்லாம் திருப்பணிகள் செய்தார்களோ அதற்கான  கல்வெட்.டுச்  சான்றுகள் இருக்கிறது. நாயக்கர் காலத்தின் போது  புராதனமும் தொன்மையும் கலந்த  அற்புதமான ஓவியங்கள்  கிட்ட தட்ட முழுவதும் அழிந்து விட்டது.காரணம் கோயில் புணரமைப்பு என்று சொல்லப்பட்டது.. நந்தனர் வந்த தெற்கு கோபுர வாசலை மேற்பூச்சு கொண்டு பூசி பல நூறு ஆண்டுகள் ஆகிறது. நந்தனார் வழிவந்த வாயிலை மூடிய பழியும் காலம் காலமாக இருந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் சொல்லும் ஆகம விதி இங்கு மீறப்பட்டு பல  நூறு ஆண்டுகள் ஆகிறது. தெற்கு கோபுர வாசலை அடைத்திருப்பதால். நந்தியோடு நடராசனை தரிசிப்பது இயலாத விஷயம். நந்தியை புறம் தள்ளி கோயில் கொடி ஏற்றி திருவிழா காணும் கோயில் தில்லை நடராசர் கோயில் தான்.

செப்டம்பர் 2019 ல் ராஜசபை என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் மரபிற்கு மாறாக வெகு விமர்சையாக தொழிலதிபர் ஒருவரின் திருமணம் நடைபெற்றது.அது வரை வரலாற்றில் நிகழாத ஒன்று.அதையெல்லாம் தாண்டி இப்பொழுது கோயிலின் நான்கு புறமும் பூங்காக்கள் நீர்வீழ்ச்சிகள் கழிப்பறைகள் என்று கோயிலின் உட்புறமாகவே கட்டுமானங்கள் நடந்து கொண்டிருக்கிறது.கொரோன பெருதொற்று காலத்தில் மிக வேகமாக கட்டுமானங்கள் நடைப்பெற்று இருக்கிறது.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வராத கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட்டு புராதனங்களை அழிக்கும் என்பதற்கு மிகச்  சிறந்த உதாரணம் தில்லை நடராசர் கோயில்.நீங்கள் இங்கு வரும் போது அதை உணர்ந்து கொள்வீர்கள்.

தொன்மத்தின் பிரமாண்டத்தை அழித்து  செயற்கை அலங்காரங்களால் பிரமாண்டப்படுத்தி கோயிலை வணிக மையமாகும்  தனிநபர் குழுக்களிடம் கோயில் நிர்வாகம் ஒரு போதும் சேரக்கூடாது.

இரா. சசிகலாதேவி

 

அன்புள்ள ஜெ.

ஆலயம் சம்பந்தமாக உங்கள் பதிவையும், அதனை தொடர்ந்து வரும் கடிதங்களையும் நான்   படித்தேன். நான் சுமார் 30 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா வருவேன்.  சிகாகோ பகுதியில் பல ஆலயங்கள் கட்டப்பட்டு, நன்குபராமரிக்க பட்டாலும் அவை முழுதாக ஆகம விதிகளுக்கு ஏற்ப இருப்பதாக எனக்கு தெரியவில்லை (நீங்கள் சொல்வதை பார்க்கும் போது). உதாரணமாக முக்கால்வாசி கோவில்களில் அங்கு “பேஸ்மென்ட் லெவலில்” கழிப்பறை இருக்கும். ஆனால் அங்குள்ள பழக்கங்களாலும், கூட்டம் குறைவு என்பதாலும் எல்லாம் சுத்தமாகவே இருக்கும். ஆனால் அங்கும் தேவைக்கு அதிகமாகவே ஆலயங்கள் கட்டப்படுகின்றன என்பது என் கருத்து. பணமும் இடம் இருந்தால் இந்து கடவுள்கள் அனைத்துக்கும் கோவில் கட்டி முடித்துவிட்டுத்  தான் நிற்பார்கள் போல.

நான் நாத்திகன் அல்ல. ஆனால் இந்துக்கள் உண்மையான பக்தியை விட்டு விட்டு சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கியிருகிறார்கள் என  நினைக்கிறேன். இந்தியாவில், கூட்டம் சமாளிக்க வேறு வழியில்லாமல் புதிதாக கட்டுமானம் செய்கிறார்கள் போல. மேலும், இங்கு ஊருக்கு ஒரு கோவில் ஏற்க்கெனவே இருக்க

எதற்காக மேலும் மேலும்  நினைத்த  போதெல்லாம்   கிடைத்த இடத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். ( பாரம்பரியம் மிக்க பழம் கோவில்கள் கேட்பாரற்று சிதிலமாய் இருக்க ).  இந்து மதத்தில் ஒரு “சென்ட்ரல் அதாரிடி ”  இல்லாததுபெரும் குறை என நான் நினைக்கிறேன்.

அது தவிர, இப்போது எல்லாம் பல இடங்களில் சிலை திருட்டு, கடத்தல் எல்லாம் நடப்பது வேதனைக்கு உரியது.  என் நண்பர் ஒருவர், சிகாகோவில் கோவில் பராமரிப்பில்  பங்கேற்பவர் . (சிகாகோ அருகில் அரோரா என்ற நகரில் இருக்கும் ஸ்ரீ பாலஜி கோவிலை கட்டுவதில் பெரும் பங்கு வகித்தவர் அவர்)அவருக்கு இந்தியாவில் இருக்கும் ஸ்தபதிகளைப் பற்றி நன்கு தெரியும். மிக பிரபலமான  ஸ்தபதி ஒருவர் இந்தியாவில் சிலை மாற்றும் விவகாரத்தில் சிக்கிக்கொண்ட  போது அவர் சொன்னார் “நாம் தான் சார் சாமி அப்படின்னா பயந்துக்குறோம். அவங்களுக்கு அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார்”

கோவில்களில் இருப்பவர்களே இப்படி எல்லாம் இருப்பது வேதனைக்கு உரியது தான். சமீப காலமாக செய்தித்தாள்களில் அடிக்கடி வரும் செய்தி “கோவில் நிலங்கள் மீட்டு எடுக்கப் பட்டன” . மேய்ப்பனிடம் இருந்தே  ஆட்டை மீட்டு எடுப்பதும் வேலியே பயிரை மேய்வதும்  போன்ற தாக இருக்கிறது இது!! கோவில் சொத்துகளை திருடினால் என்ன ஆகும் என யாருமே அச்சம் கொள்வதாக தெரியவில்லை!! “கோவில் சொத்து குலநாசம்” என கதை கேட்பதிலேயே நாம் காலம் போய் விடும் போல.

 

கோவில்களில் அசுத்தம் பற்றி ஒரு வாசகர் கடிதம் படித்த போது என் மாமன் முறை உறவினர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது.  அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் மகள் வீட்டில் ஒரு ஆறு மாதம் தங்கி பின் இந்தியா திரும்பினார். அப்போது இரவு பல மணி நேரம் சென்னை  விமான நிலையத்தில் தங்க வேண்டி இருந்தது.

அவருடன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த சக பயனியர் குடும்பமும் இருந்தது. அந்த குடும்பத்தில் இருந்த சிறுவர்களும் பெரியவர்களும், உணவுப் பொருட்கள் வாங்கி வந்த காகிதம் மற்ற குப்பைகளை உட்கார்ந்த இடத்திலேயே  போட்டு அசுத்தம் செய்ய,  இவர் கேட்டிருக்கிறார்.  “என்னங்க அங்க அமெரிக்காவுல எங்க போனாலும் நீங்க குப்பை போடுறது இல்ல, குழந்தைகள் உள்பட; ஆனா இங்க இப்படி பண்றீங்களே”. அதற்கு அவர்கள் சொன்ன  பதில் “அட போங்க சார்.  இது நம்ம ஊரு”

இந்த மன நிலை எப்போது மாறும்?  (ஆனால் சில வருடங்கள் முன்பு நான் சென்னை விமான நிலையம் வந்த போது உட்புறம் சுத்தமாகவே இருந்தது. இந்த மாற்றம் மற்ற கோவில்கள் உட்பட மற்ற பொது இடங்களுக்கும் வரவேண்டும்.

 

அன்புடன்

மரு.ப.சந்திரமவுலி

 

அன்புள்ள ஜெ

ஆலயங்கள் பற்றிய மிக நீண்ட விவாதம் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம்போல நீங்கள் ஒரு கட்டுரை எழுத, அதை பலரும் பலவாறாக திரிக்க, நீங்கள் அழுத்தமான விளக்கங்கள் அளிக்க, அதன்பின் பேச்சே இல்லாமல் அப்படியே அது ஒருவகை ஏற்பைப் பெற்றுவிடுவது நடந்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் எல்லாம் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுவது பிழை.  இங்குள்ள ஆலயங்களில் மன்னர்களால் கட்டப்பட்டவை மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. பல்லாயிரம் குலதெய்வ, ஊர்தெய்வ, சாதிதெய்வக் கோயில்கள் தனியார் அறக்கட்டளைகள், அறங்காவலர் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அவையே கோயில்களில் 80 சதவீதம்.

அந்த ஆலயங்களில் என்னென்ன சண்டைகள், வம்பு வழக்குகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்று பார்த்தாலே ‘பக்தர்களிடம் ஆலயங்களை ஒப்படைப்பது’ என்றால் என்ன பொருள் என்று புரியும். தமிழக தனியார் ஆலயங்களின் வழக்குகள் ஆயிரக்கணக்கில் நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன. சண்டை வழக்குகள் இல்லாத தனியார் ஆலயங்களே இல்லை என்பதுதான் நிலைமை

ஆர்.என்.ராஜ்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2021 11:33

பேசாதவர்கள், கடிதங்கள்-2

பேசாதவர்கள்[சிறுகதை]

அன்புள்ள ஜெ,

பேசாதவர்கள் கதையை இன்னொரு முறை படிக்க முடியவில்லை. அந்த கொடிய சித்திரவதைக் கருவிகள். அந்த தூக்கு கூண்டை நான் பத்மநாபபுரம் அரண்மனையில் பார்த்திருக்கிறேன். அதை கவசம் எனறு நினைத்தேன். தூக்கு போடுவது என்றார்கள். பத்மநாபபுரம் அரண்மனையிலுள்ள சித்திரவதைக் கருவிகளே கொடூரமானவை.

பேசாதவனாகிய டம்மி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தூக்கில்போடப்படுகிறது. பேசாமலிருந்ததுதான் அது செய்த பிழை.

 

ஆஸ்டின் ராஜ்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்

நலம்தானே பேசாதவர்கள் சிறுகதை படித்தேன். இதுவரை தமிழ் வாசகர்கள் காணாத முற்றிலும் மாறுபட்ட தளம். அதனாலேயே கதை எல்லாருக்குமே வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கும். தூக்கில் போடுவதில் இத்தனை சடங்குகள் இருக்கும் என்று பெரும்பாலும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக அந்த டம்மி பொம்மை. வயதானவர்கள் எப்பொழுதும் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்; கண்ணீர் விட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பது மிகவும் யதார்த்தம்.

சித்ரவதைகளில் காதுகளின் அருகே ஒலி எழுப்புவதும், கண்களுக்கருகே ஒளி பாய்ச்சுவதும் உண்மையில் பயங்கரமானவை. அந்தப் பழைய அறை உள்ளே தானப்பன் போகும்போதே இது ஒரு புதுமாதிரியான கதை எனப் புரிந்துவிடுகிறது. அதுவும் அந்தப் பொம்மையைக் காட்டியவுடன் இதில் அமானுஷ்யம் வரும் என்றும் உணர்ந்துவிட்டேண். ஆனால் அதை மிக அளவுடன் பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதனாலேயே கதை வெற்றி பெறுகிறது.

உண்மையில் பண்டிட் கறம்பன் அதனுள் புகுந்து குடிகொண்டிருக்கிறான். அதனாலேயே மருத்துவருக்கு நாடித்துடிப்பு கேட்கிறது. வாசகன் இதை ஊகித்து உணர்கிறான். ஒரு நல்லவனை செல்வந்தர்கள் தூக்கில் போடவைத்தது அதுவும் அவன் ஒரு குற்றமும் செய்யாமல் இருந்ததால் அவன் ஆவி ஓர் இடம் தேடி அங்கே குடிகொண்டு விட்ட்து. அப்பொம்மையைக் கொளுத்தி மலையத்தி அதற்கு விடுதலை அளிக்கிறாள். தங்களின் அண்மைக்கதைகளில் புதுமாதிரியான அற்புதமான சிறுகதை இது.

 

வளவ துரையன்

 

அன்புள்ள ஜெயமோகன்,

பேசாதவர்கள் கதையைப்படித்து மனம் கலங்கியது. கொடுமையான வதைக்கூடங்கள் ஹிட்லரின் ஜெர்மனியில் தான் இருந்து என்று வசதியாக எண்ணி இருந்ததற்கு மாறாக நமது நாட்டில் நமக்கு மிக அருகிலேயே இருந்திருக்கின்றன என்ற அறிவு அச்சமூட்டியது. உலகம் முழுவதும் இத்தகைய வதைக்கூடங்கள் காலம் காலமாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு மனிதன் செய்த அல்லது செய்யாத குற்றத்திற்கான தண்டனையாக அவன் உயிரை ஒரு நொடியில் பறித்து விட இயலும் போது அணு அணுவாய் சித்திரவதை செய்து கொல்லுவதற்கான குரூரத்தை சகமனிதன் எங்கிருந்து பெறுகிறூன்? மனித மனதின் அடி ஆழத்தில் எப்போதுமே இவ்வியல்பு மறைந்து உள்ளது போலும்.

ஆராய்ந்து பார்த்தால் எங்கெல்லாம் அதிகாரம் குவிந்துள்ளதோ அங்கெல்லாம் குருரம் எனும் பேய் உறைந்துள்ளது. அது மனிதனை ஆளுகிறது. மானுட இயலபையே சிதைத்து அவனையும் ஒரு பேய் போலாக்கி விடுகிறது.

பேய்கள் வாழும் உலகம் !

நெல்சன்

பேசாதவர்கள்- திருச்செந்தாழை

பேசாதவர்கள் கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2021 11:31

துவந்தம், கடிதங்கள்

ஒரு புதிய வீச்சு

அன்புள்ள ஜெ

துவந்தம் அழகான ஒரு கதை. நாம் வழக்கமாக கொண்டாடும் கதைகளெல்லாமே தனிவாழ்க்கையைப் பற்றியவை. அவற்றைத்தான் எழுதவேண்டும் என்னும் ஒரு எண்ணம் நம் மனதிலே ஊறியிருக்கிறது. ஆண் பெண் உறவைப்பற்றி அவ்வளவு எழுதியிருக்கிறோம். ஆனால் மனிதவாழ்க்கையில் ஒருவனின் வெற்றி தோல்வி, சிறுமை பெருமை வெளிப்படும் இடங்களில் புறவுலகமே மிகுதி. தொழில்சூழலில் ஆபீஸ் மட்டுமே கொஞ்சம் எழுதப்பட்டுள்ளது. அரசாங்க உலகம். அதிலும்கூட அங்குள்ள உண்மையான சிக்கல்கள் எழுதப்படவே இல்லை.

தமிழில் வணிகம், தொழிற்சூழலைப் பின்னணியாக்கி எழுதப்பட்ட நல்ல நாவல் ஒன்று இதுவரை இல்லை.கொஞ்சமாவது சொல்லப்படவேண்டியது ஒரு புளியமரத்தின் கதைதான். சுந்தர ராமசமி துணிக்கடை பின்னணியில் எழுதிய சில கதைகள். பி.வி.ஆர் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். கோர்ட், ஆஸ்பத்திரி பின்னணியில் [ மிலாட், ஜி.எச்.] அவையெல்லாம் சுவாரசியமான கதைகள்

ஆச்சரியமான விஷயம் இது. ஆனால் பலகோடிப்பேர் அதில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவன் ஒரு தொழிற்சூழல் வழியாக அவனுடைய பெர்சனாலிட்டியை உருவாக்கிக்கொள்ளும் சித்திரம் எங்கும் எழுதப்படவில்லை. ஆனால் அது நம் அன்றாடவாழ்க்கை.

திருச்செந்தாழை கதையில் அந்தக் கதைசொல்லியான வேட்டைநாய் அல்லது நரி அற்புதமான கூர்மையுடன் காட்டப்பட்டிருக்கிறான். அவன் அந்த முதலாளிக்குச் சிலவற்றை கற்றுக்கொடுப்பது இறைச்சுத்துண்டுகளை வீசி வலைவிரிப்பதுதான். வலையில் முதலைச் சிக்கிக்கொள்கிறது. விலாங்கு லாகவமாக நழுவிவிடுகிறது. கதையின் பூடகத்தன்மையை காட்டுவது அந்த கதைசொல்லும் முறையிலுள்ள சிக்கல்தான். அழகான கதை

 

எம்.ராஜேந்திரன்

 

அன்புள்ள ஜெ,

 

பா திருச்செந்தாழையின் பல சிறிய கதைகளை முன்பும் வாசித்திருக்கிறேன். அக்கதைகளில் அவர் சிக்கலான அலங்காரமான உரைநடைக்கு முயல்வதாகத் தோன்றும். அலங்காரமான நடை என்பது வாசகனுக்கு உடனடியாக ஒரு விலக்கத்தை அளித்துவிடுகிறது. இந்த ஆசிரியன் உண்மையைச் சொல்லவில்லை, நமக்காக வித்தை காட்டுகிறான் என்று தோன்றிவிடும். ஆகவே அக்கதைகள் எனக்கு ஆர்வமூட்டவில்லை. ஆனால் இப்போது நீங்கள் சுட்டிகொடுத்துள்ள மூன்று கதைகளுமே முக்கியமானவை. நேரடியான மொழி கொண்டவை. ஆனால் எண்ணி விரியும் கதையாழம் கொண்டவை. வெளியே உள்ள உலகம் என்பது எத்தனை சொன்னாலும் தீராதது. வால்ஸ்டிரீட் ஓநாய்களைப்பற்றி வெள்ளைக்காரன் நிறையவே எழுதியிருக்கிறான். நம்மூர் ஓநாய்களைப் பற்றி நாம் இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறோம். அற்புதமான கதை. திருச்செந்தாழைக்கு என் வாழ்த்துக்கள்.

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெ

துவந்தம் வித்தியாசமான கதை. நாம் திரும்பத்திரும்ப வாசிக்கும் குடும்பக் கதை, கிராமியக் கதைகளிலிருந்து மாறுபட்டு ஓர் அசலான உலகம். “சட்டைப் பாக்கெட்டில் சரியாக வைக்காத ரூபாய்த்தாள் எதிர்காற்றில் படபடத்தபடி இருந்தது. இப்படி அசிரத்தையாகக் கையாளப்படும் எந்த விஷயத்தைப் பார்க்கும்போதும் எனக்குள் பரவி விடுகிற பதட்டமும் கோபமும் இப்போதும் வந்தது.” என்று மிகச்சுருக்கமாக கதைசொல்லியின் குணச்சித்திரம் சொல்லப்பட்டுள்ளது. பல உள்நுட்பங்களுடன் விரிகிறது. அதிபுத்திசாலி வியாபாரிகளின் உலகம். அதில் அப்பாவியான அடுத்த தலைமுறை இளைஞன். அவன் மகன் அதைவிட மோசம். ஆட்டிசம் கொண்டவன். ஆனால் அந்தப்பெண் அதனாலேயே அத்தனை ஜாக்ரதையானவளாக ஆகிவிடுகிறாள். அவளை எவரும் ஜெயிக்கமுடியாது

எஸ்.பாஸ்கர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.