Jeyamohan's Blog, page 946

July 24, 2021

வெய்யோன்,பன்னிரு படைக்களம்-பலராம கிருஷ்ணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு – நாவல் வரிசையில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது நாவல்களான ‘வெய்யோன் மற்றும் பன்னிரு படைக்களம்’ கெளரவர்கள் தரப்பில் இரு முக்கிய ஆளுமைகளான துரியோதனன் மற்றும் கர்ணனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் அம்மாற்றங்களால் அவர்களின் குணங்களில் ஏற்படும் நிலைத்தன்மையையும் விவரிக்கிறது.

ஆதிக்க விருப்புறுதி அற்றவனாக இருந்த கர்ணன் தனக்கான இடத்தை, தனக்கான விருப்பத்தைக் கண்டறியும் இடமும் காலமும் நிகழ்வது வெய்யோன் நாவலில்.

எரிமாளிகை நிகழ்வின் காரணமாகத் திருதராஷ்டிரரிடம் அடி வாங்கியபின் அலைமோதிக் கொண்டே இருக்கும் துரியோதனன் தன் வாழ்நாள் விழைவை கைக்கொள்ளும் தருணம் நிகழ்வதும் வெய்யோனில் தான். அவ்விரு தருணங்களுக்கு பிறகு இருவரும் நிலைத்தன்மைப் பெறுகின்றனர். நாகர்களின் வஞ்சத்தை கர்ணன் ஏற்கிறார், திரெளபதியின் ஏளனத்துக்கு உள்ளாகிறார் துரியோதனன். அதுவே அவர்களின் நிலைத்தன்மைக்கு காரணமாக அமைகிறது.

வெண்முரசில் ஏதேனும் ஒரு பாத்திரத்தை நல் படிமங்களால் மூழ்கடிக்க முடியுமென்றால் அது கர்ணனாகத் தான் இருக்கும். சூரிய புத்திரன் – கருணையுள்ளம் கொண்டவன் – நிகரற்ற வீரன் – வஞ்சிக்கப்பட்டவன் என சாகச நாகயனுக்கு உரிய அனைத்து பண்புகளையும் கொண்டவர். வாசிக்கும் அனைவரும் ஏதோவொரு கணத்தில் “நானும் கர்ணன் தான்” என உணரும் பல ஏற்ற இறக்கத் தருணங்கள் சூழ்ந்தவர். இதற்கு மாறாக துரியோதனன் எதிர்மறை படிமங்களையே கொண்டிருக்கிறார். அஸ்தினாபுரிக்கு அழிவைக் கொண்டு வரும் மதக்களிறு, இந்திரபிரஸ்தத்தில் இருந்து கரும்பாசிகளை கொண்டு வந்தவர் என மக்களால் எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறார்.

முதல் மனைவியான விருஷாலிக்கு கர்ணன் அவள் தகுதிக்கு மீறிய கணவன். இரண்டாவது மனைவிக்கு வெறும் குதிரைச் சூதன். திரெளபதியிடம் கொண்ட காதலும் காமமும் கர்ணனிடம் எஞ்சியுள்ளதை இருவரும் கண்டு கொள்கின்றனர். அவர்களின் வெறுப்பு அதனுடன் நெருங்கிய தொடர்ப்பு கொண்டது. அவர்களுக்காக அறையின் வாசலில் காத்திருக்கும் போது அங்கே இல்லாத இராதையுடன் உரையாடுகிறான்.

துரியோதனனின் மனைவியும் காசி நாட்டு இளவரசியுமான பானுமதியும் கூட துரியோதனன் திரெளபதியிடம் கொண்ட வஞ்சத்தை கண்டு கொள்கிறார். பன்னிரு படைக்களம் – நாவலில் கர்ணனிடம் பானுமதி, திரெளபதியின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பை என்னவர் மீது ஏற்ற வேண்டாம் என்கிற அளவிற்கு – கர்ணனிடம் திரெளபதி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். வெய்யோன் நாவல் முழுவதும் பானுமதியின் சொல்லுக்கு செயல் என்று இருந்த துரியன், திரெளபதியின் ஏளனத்துக்கு பிறகு, பானுமதியை அறையும் அளவிற்கு நிலை கொள்ளாதிருக்கிறார்.

துகில் உரிக்கப்படும் நிகழ்வே இருவரின் ஆணவத்திற்கும் ஆத்திரத்திற்கும் முடிவாக அமைகிறது.

வெய்யோன் நாவல் வரை வெண்முரசு மனித மனங்களை பிரதானப்படுத்தியிருந்தது. பன்னிரு படைக்களம் – வேதத்தை ஏற்பவர்களை ஒரு தரப்பாகவும் வேதமுடிவு ஏற்பவர்களை மறுதரப்பாகவும் நிறுத்துகிறது. நாகர்கள், ஜராசந்தன், சிசுபாலன், கெளரவர்கள், ஜயத்ரதன், அஸ்வத்தாமன் என வேத ஏற்பாளர்கள் ஒருபுறம் அவர்களுக்கு எதிராக இளைய யாதவர் மற்றும் பாண்டவர்கள்.

வெண்முரசின் மைய தரிசனமாகக் எடுத்துக் கொள்ள வேண்டிய இந்த விவாதம், பன்னிரு படைக்களத்தில் நேரடியாக தொடங்குகிறது. இளைய யாதவரே மறுதரப்பில் விவாதம் செய்கிறார். ஜராசந்தனிடமிருந்து தொடங்கும் விவாதம் – சிசுபாலன் வரை நீடிக்கிறது.

துகில் உரியும் நிகழ்விலேயே பாண்டவர்கள் நேரடியாக வேதமுடிவை ஏற்கிறார்கள். பீமனின் சொற்களிலும் அர்ஜுனனின் சொற்களிலும் அது வெளிப்படுகிறது. அதுவரை நிலத்திற்கு – அரசிற்கு என நடந்து கொண்டிருந்த பூசல்கள் தத்துவத்திற்காக நடைபெறப் போகும் போர்ராக மாறுகிறது. அந்நிகழ்விற்கு முன் அவர்கள் இளைய யாதவரிடம் அது குறித்த விவாதங்களில் ஈடுபடுவதில்லை. சிசுபாலன் மரணத்தின் போதும் அவர்களின் தத்துவ தரப்பு வெளிப்படுவதில்லை. விவாதங்களை கேட்கும் இடத்திலேயே இருக்கிறார்கள்.

துரியோதனனோ – கர்ணனனோ இந்த தத்துவ விவாதங்களில் நேரடியாகப் பங்கேற்பதில்லை. இருவருக்கும் அவர்களின் மன உணர்ச்சிகளும், அவர்களின் சிறுமைகளுமே அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு காரணமாக அமைகிறது.

கர்ணன் – வேதமுடிவு என்பதை நோக்கியே நகர்ந்து இருக்க வேண்டும். ஆனால் துரியோதனன் மீது அவன் கொண்ட பாசமும் பற்றும் – இயல்பில் தத்துவத்தின் மீது அவருக்கு ஈடுபாடு இல்லாததும் அவனை கெளரவர்கள் பக்கம் நிறுத்துகிறது. மறுமுனையில் அர்ஜுனன் தன் தத்துவ ஈடுபாட்டால் கேள்வி கொண்டே இருக்கிறார். வண்ணக்கடல் – நாவலில் பீமன் அவரிடம் ‘நீ அடைய விரும்புவது ஒரு ஞானயாசிரியனை’ என சொல்லும் பகுதியும் வருகிறது.

தன்னை காட்டாளன் என அழைத்துக் கொள்ளும் பீமன் – தத்துவம் மூலம் தன் அககேள்விகளுக்கு விடைபெற முயலாவிட்டாலும், துகில் உரியும் நிகழ்வில் பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர் எடுக்கும் முடிவுகளால் வேதமுடிவு என்ற இடத்தை நோக்கி நகர்கிறார்.

துரியோதனனும் கர்ணனும் தங்கள் சிறுமையை இகழ்ச்சியை தீர்க்க உதவியாதால் மட்டுமே வேத ஏற்பு தரப்பை எடுக்கின்றனர். மெய்மை நோக்கிய பயணம் அவர்களிடத்தில் இல்லாதது அதற்கு காரணமாக அமைகிறது. வேத ஏற்பு தரப்பின் தத்துவ மூகமாக பன்னிரு படைக்களம் முன்னிறுத்துவது சிசுபாலனையும் – பீஷ்மரையும் – சகுனியையும் – கணிகரையும் மட்டுமே. அவர்களே அதை தத்துவார்த்த உரையாடலாக மாற்றுகின்றனர்.

ஜராசந்தன் தங்கள் நண்பர் என்பதால் மட்டுமே துரியோதனனும் கர்ணனும் போருக்கு தயாராகிறார்கள். கணிகர் நாகர்களின் வஞ்சம் குறித்து தத்துவ ரீதியாக கர்ணனிடம் கேள்வி கேட்கும் போது, தடுமாறும் கர்ணன் தன் மனம் கொண்ட அன்பாலும் பற்றாலும் – துரியோதனன் முடிவே தன் முடிவு என்பதை தெளிவாக்கி விடுகிறான்.

பன்னிரு படைக்களம் நாவலில் துரியோதனன் நிழலாகவே கர்ணன் மாறுகிறார். வெய்யோன் நாவலில் வரும் கர்ணனிடம் காந்தாரி ‘நீ மூத்தவன் என கெளரவர்களை வழி நடத்த வேண்டும்’ என கூறுகிறாள். பன்னிரு படைக்களம் நாவலில் இருவரும் நிலைத்தன்மை அடைந்த பின் காந்தாரி கர்ணனிடம் ‘என் மகனை காப்பாய் என்று நினைத்தால் நீயே அவனை வெள்ளத்தில் தள்ளுகிறாய்’ என கடிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

வெண்முரசில் மன எழுச்சியாலும் – துயராலும் – சிறுமையாலும் முன்நகரும் கதாபாத்திரமாகவே துரியோதணனும் கர்ணனும் இருக்கிறார்கள். அணி சேரல்கள், படை நகர்வுகள் அதன் பொருட்டே அவர்களிடம் முக்கியத்துவம் பெறுகிறது. தத்துவத்தின் பொருட்டு அல்ல.

வெய்யோன் நாவலில் – கர்ணன் இளைய கெளரவர்களிடமும் அவர்களின் குழந்தைகளிடமும் கொஞ்சி விளையாடும் இனிய தருணங்கள் பல உண்டு. பன்னிரு படைக்களம் – நாவலின் பேசு பொருள் தன்னியல்பில் கொண்ட எடைமிகு நிகழ்வுகளால் இனிய தருணங்கள் அற்றது. எடைமிகுந்தது.

இப்படிக்கு

பலராம கிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2021 11:30

July 23, 2021

மாற்றுக்கல்வி எதுவரை?

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்.

கடந்த 30/10/2020 அன்று  உங்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி.  நீங்கள் கையெழுத்துத்திட்டு கொடுத்த கொடுத்த தெருக்களே பள்ளிக்கூடம் புத்தகத்தை படித்து முடித்தேன்.

மூன்றாண்டுகள் Bsc. Zoology  படித்து கிடைக்காத  அனுபவம் இதில் கிடைத்தது.  அப்படியானால் பயிற்சியை பெற்ற ராகுல்  அல்வரிஸ் ன்  அனுபவம் எத்தனை சிறப்பானதும், பயனுள்ள தாகவும்  இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்து முடிவு செய்ய  எனக்கு  அனுபவம்  இல்லை.

பக்கம் 156, இந்தத் தகவல்களையெல்லாம் ந்தவொரு தேர்வுக்காகவும் நான் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கவில்லை, இருந்தாலும் நான் வாசித்த  எந்த ஒரு விசயமும் என் தலையை விட்டுப் போகவில்லை! ”

இந்த வரிகளை  ஆசிரியர்கள் மனதில் கொள்ள வேண்டிய வரி.
ஆனால் இதிலிக்கும் உண்மையை பேசத் துணிந்த போதெல்லாம் அறிவுரையும், அறிவுரை போன்ற மிரட்டலும், அதைத் தொடர்ந்து choose the correct answer, Fill in the blanks,  2 mark questions, Detail answers இவற்றிற்குள்ளேயே மூழ்கிப்  போக வேண்டும்.

எல்லாவற்றிலும் எதிர் பக்கம் நின்று சிந்திப்பது  என்ற ஒன்று  எனக்குள்  இருக்கிறது. தேவையா? தேவையற்றதா? என்று விளங்கவில்லை.

படிப்பிலிருந்து ஓராண்டு இடைவெளி எடுத்து பயிற்சி பெற மிகப்பெரிய பின்பும் தேவைப்படுகிறது. ராகுல்  அல்வரிஸுக்கு அது கிடைத்திருக்கிறது. ஆனால் விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று காசு சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம்  உள்ள மாணவர்கள்  அதிகம்.

நீங்கள் இந்து தமிழ் நாளிதழில், கல்வி பற்றி  எழுதிய போது உங்கள் மகன் வகுப்பு சக மாணவர்கள்  அந்த நிலையில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். என்னுடைய மாணவப் பருவமும் அப்படியே  இருந்தது.  அதனால்  எத்தனை பேருக்கு படிப்பிலிருந்து ஓராண்டு இடைவெளி எடுத்து பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கும். அப்படி கிடைத்தாலும் அவர்கள்  இயற்கை சார்ந்த விசயங்களை கற்றுத்தேற விரும்புவார்கள? வேறு தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள நினைத்தால்  அது போருக்கான நுட்பம் தானே?  என்ற கேள்வியே மனதில்  எழுகிறது.

இந்த அருமையான புத்தகம் உங்கள் கையெழுத்தோடு என் புத்தக  அடுக்கில் இருப்பது கர்வமா இருக்கிறது.

நன்றியும்
அன்புடனும்
சி . ஜவஹர்.

தெருக்களே பள்ளிக்கூடம்

அன்புள்ள ஜவகர்

மாற்றுக்கல்வி பற்றிய பேச்சுக்கள் எப்போதுமே உள்ளன. அவை வழக்கமான கல்வியில் இருக்கும் போதாமைகளைச் சுட்டுகின்றன. மாற்றுக்கல்வி அனைவருக்கும் உரியது அல்ல. அப்படி ஒரு தனிப்பாதையை தேர்வுசெய்ய ஒரு துணிச்சல் வேண்டும். கொஞ்சம் பின்னணி வலிமையும் வேண்டும். சாமானியர்களுக்கு அது உகந்தது அல்ல என்பது உண்மைதான்.

பொதுக்கல்வி என்பது உலக அளவிலேயே இருநூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒன்று. அதாவது அனைவருக்கும் ஒரே கல்வி என்பது. ஐரோப்பாவிலிருந்து அது நமக்கு வந்தது. அதற்கு முன் உலகமெங்கும் இருந்தது தொழில்சார் கல்வியும் உலகியல்கல்வியும் அதற்குரிய எளிய அறக்கல்வியும் மட்டுமே. பொதுக்கல்விக்கு பல சாதகமான அம்சங்கள் உள்ளன. முதன்மையாக அது அனைவருக்கும் ஒரே வகை அகப்பயிற்சியை அளித்து ‘சராசரி’ குடிமகனை உருவாக்குகிறது. அடிப்படைக் கல்விக்குப் பின் எவரும் எத்தொழிலையும் தேர்வுசெய்யலாம் என்னும் வாய்ப்பை அளிக்கிறது. பிறப்பின் அடிப்படையில் ஒரு தொழிலில் மாட்டிக்கொள்ளும் ஊழ் அமையாமல் காக்கிறது. ஆகவே அதுவே நவீன காலகட்டத்துக்கான கல்வி. அதுவே ஜனநாயகத்தின் அடிப்படை.

டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி

ஆனால் அனைவருக்கும் ஒரே கல்வி என்னும்போது அது அனைவரையும் சராசரி அளவுகோலைக் கொண்டு பார்க்கவும், அனைவரையும் பொதுமைப்படுத்தி ஒரேதரமாக ஆக்கவும் வாய்ப்புள்ளது. தனித்திறன்களை அது அழிக்கக்கூடும். அதற்கு எதிராகவே உலகமெங்கும் மாற்றுக்கல்வி முறைகள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழில் வெளிவந்த ‘டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி’, ருஷ்ய நூலான ‘குழந்தைகள் வாழ்க’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்நூலும் அவ்வகையில் ஒன்று.

இத்தகைய நூல்கள் இன்றுள்ள கல்விமுறையை விமர்சிக்கின்றன, மாற்றுகளை முன்வைக்கின்றன. ஆனால் நாம் மரபான கல்வி அமைப்புக்குள் நின்றுகொன்டு உடனடியாக இவற்றை அப்படியே எடுத்துக்கொள்ள, செயல்படுத்த இயலாது. பொதுக்கல்விக்கு இருநூறாண்டு வரலாறு உன்டு. அது மாபெரும் அமைப்பு. அதை நம் விருப்பப்படி மாற்றமுடியாது. வெளியுலகம் இந்த பொதுக்கல்விக்கு உகந்த முறையில் அதன் நெறிகளை வடிவமைத்துக் கொண்டிருக்கையில் அப்படி கல்விமுறையை ஒரு சிலருக்காக மட்டும் மாற்றுவதும் உகந்தது அல்ல.

குழந்தைகளை கொன்டாடுவோம் அமனீஷ்விலி

ஆனால் இந்த மாற்றுக்கல்வி முறையின் சில அம்சங்களை இன்றிருக்கும் பொதுக்கல்விமுறைக்குள் கலந்து பார்க்கலாம். மெல்ல மெல்ல அறிமுகம் செய்யலாம். விளைவுகளை கூர்ந்து பார்த்தபடி, எச்ச்சரிக்கையுடன் சில மாறுதல்களைச் செய்யலாம். அப்படித்தான் இதுவரை நடந்துள்ளது. நம் கல்விமுறையில் இன்றுள்ள எல்லா மாற்றங்களும் இப்படி மாற்றுக்கல்வி முறைகளை கூர்ந்து கவனித்து அவற்றில் இருந்து பெற்றுக்கொண்டமையால் வந்து சேர்ந்தவைதான் 

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2021 11:34

மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்

 

அந்த செய்தியை அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை  கேட்டதுமே எனக்கு படபடப்பாய் இருந்தது. கண்கூட இலேசாக இருட்டிக் கொண்டு வந்தது. உடனே ஜோதி டீச்சரின் முகம்தான் மனதில் வந்தது. போய் அவரிடம் சொல்லவேண்டும். அவர் எப்படி இதை எதிர்கொள்கிறார் என்று பார்க்கும் குரூர ஆசை ஒன்றும் மனதில் முகிழ்த்து அடங்கியது.

மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2021 11:33

வணிக இலக்கியம்

வணிக இலக்கியம் நூல் வாங்க

தமிழில் இலக்கியம் வாசிக்கத் தொடங்கும் எவரும் சந்திக்கும் முதல் பிரச்சினை என்பது இலக்கியத்தையும் கேளிக்கை எழுத்தையும் பிரித்துப் பார்ப்பது. எல்லாமே எழுத்துதானே என்றுதான் இங்கே பொதுப்புத்தி சொல்லிக்கொண்டிருக்கிறது. உனக்கு எதைப் பிடித்திருக்கிறதோ அதைப் படி என்று சொல்கிறது. இலக்கியம், இலக்கியம் அல்லாதது என்று பிரிக்கும் அதிகாரம் எவருக்கு உள்ளது என்று கேட்கிறது. அப்படிப் பிரிப்பது ஓர் அதிகாரம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் அப்படி ஒரு பிரிவினையை உருவாக்கிக் கொள்ளாமல் இலக்கியத்தை வாசிக்கவே முடியாதென்பதுதான் உண்மை. ஏனென்றால் வணிக இலக்கியம் வணிக நோக்கம் கொண்டது. அங்கே வாசகன் ஒரு நுகர்வோன் மட்டும்தான். நுகர்வோனுக்கு தன் நுகர்பொருள் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும் அதிகாரம் உண்டு. ஆனால் இலக்கிய ஆக்கம் நுகர்பொருள் அல்ல. அதன்மேல் வாசகனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அது ஓர் ஆசிரியனின் அகவெளிப்பாடு. அதைநோக்கி செல்ல வாசகன் முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்தச் சிறிய விஷயம் தெரியாத காரணத்தாலேயே வணிக எழுத்தினூடாக வரும் வாசகர்கள் பேரிலக்கியங்களைக்கூட எளிதாக தூக்கிவீசிவிட்டுச் செல்வதை காணலாம். ஒர் இலக்கியப்படைப்பை வாசிக்க தேவையான சில பயிற்சிகள், சில மனநிலைகளை அறிந்துகொண்டாலேகூட அவர்களின் வாசிப்பில் மிகப்பெரிய மாற்றம் வந்துவிடும். அதற்கு அவர்கள் முதலில் இலக்கியம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ளவேண்டும். வணிக இலக்கியம் எப்படி அதிலிருந்து வேறுபடுகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

நம் பொதுச்சூழல் இந்த வேறுபாட்டை மழுப்புவதில் தீவிரமாக உள்ளது. ஏனென்றால் பொதுச்சூழல் சராசரிகளால் ஆனது. அது தீவிரங்களை அஞ்சி தவிர்க்க முயல்கிறது. சராசரிகளைக் கொண்டாடுகிறது. ஆகவே அது வணிக எழுத்தாளர்களையே ஏற்று முன்னிறுத்தும். இலக்கியத்தை முன்வைப்பதென்பது சமூகத்தால் ஏற்றுக் கொண்டாடப்பட்ட ஆளுமைகளையும் மதிப்பீடுகளையும் மறுத்து இன்னொன்றை முன்வைப்பது. ஆகவே அதை மறுக்கவும் மழுப்பவுமே பொதுச்சூழல் முயலும்.

இத்தகைய சூழலில் இருந்து எழும் கேள்விகளே இந்நூலில் உள்ளன. அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் வழியாகவே இலக்கியம் என்றால் என்ன, வணிக இலக்கியத்தில் இருந்து அது எப்படி வேறுபடுகிறது, வணிக இலக்கியத்தின் இடம் என்ன என்னும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தன் வாசிப்பைக் கூர்மையாக்கிக்கொள்ள விழையும் எந்த வாசகருக்கும் தேவையான புரிதல்கள் அவை.

இந்நூலை நண்பர் பழனிஜோதிக்கும் மகேஸ்வரிக்கும் சமர்ப்பிக்கிறேன்

ஜெ

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரைமலைபூத்தபோது முன்னுரைஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரைமுதுநாவல் முன்னுரைஆனையில்லா! முன்னுரைதங்கப்புத்தகம் முன்னுரைஅந்த முகில் இந்த முகில் முன்னுரைபத்துலட்சம் காலடிகள் முன்னுரை இருகலைஞர்கள் முன்னுரை உடையாள் முன்னுரை ஞானி முன்னுரை கதாநாயகி முன்னுரை வாசிப்பின் வழிகள் முன்னுரை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2021 11:33

ஜெயகாந்தன், கி.ரா,அ.முத்துலிங்கம் – சில முயற்சிகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். வெண்முரசு ஆவணப்படம், அமெரிக்க நகரங்களில் நல்ல வரவற்பை பெற்று , வெண்முரசின் சிறப்பை சொல்லி, நிலை நிறுத்தி, வடக்குமுகமாக நகர்ந்து எழுத்தாளர் முத்துலிங்கம் அய்யா உதவியுடன், கனடாவிலும் திரையிடப்பட இருக்கிறது.

அடுத்து, ராஜனும், நானும் , விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களின் உதவியுடன்  மூன்று பெரும் தமிழ் ஆளுமைகளுக்கு இசை சமர்ப்பணம் செய்யலாம் என்று உள்ளோம்.

1) அ. முத்துலிங்கம் அவர்களின் கடவுள் தொடங்கிய இடம் நாவலுக்கு ஒரு இசை சமர்ப்பணம். புலம்பெயர்ந்து வாழும் மக்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக அதை அமைக்கலாம் என்று நினைத்திருக்கிறோம். நாவல் தொட்டுச் சென்ற விஷயத்தை கொண்டாடும் வகையில் இருக்கும்.

2) எழுத்தாளர்  ஜெயகாந்தனின் கவிதை ஒன்றுக்கு இசையமைத்து வெளியிட இருக்கிறோம். சித்தர் மரபில் வந்த நவீன எழுத்தாளர்.

3) எழுத்தாளர்  கி.ராஜ நாராயணன் கோபல்ல கிராமம் நாவலில், பல நூறாண்டுகளாக பாடப்பட்டு வரும் ஒரு கும்மிப் பாட்டை குறிப்பிட்டிருக்கிறார். கரிசல்  நிலத்தில் குடியேறிய மக்கள் எப்படி கடின உழைப்பால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலத்தை வாழத் தகுந்த நிலமாக மாற்றினார்கள் என்று பாடும்  பாடல். அதற்கு  இசை அமைத்து அவருக்கு ஒரு இசை வணக்கம்.

தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

அன்புடன்,

சௌந்தர்.

அன்புள்ள சௌந்தர்

மிக முக்கியமான முயற்சிகள். இன்றைய ஊடகமென காட்சியூடகத்தையே சொல்லவேண்டும். இலக்கியம் அதன் அடிக்கட்டுமானமாகவே நிலைகொள்ள முடியும். இலக்கியத்தை காட்சியூடகம் வழியாக அறிமுகம் செய்தாகவேண்டிய சூழல் இன்றுள்ளது. அதை நீங்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் செய்வது மிகுந்த ஊக்கமளிக்கும் செயல்.

இந்தியச்சூழலில் ஒரு விந்தையான பிளவு நிகழ்ந்துள்ளது. எல்லா மொழிகளிலும். குழந்தைகள் இளமையிலேயே தொழில் – வணிகக் கல்விக்கு தயார்செய்யப்படுகிறார்கள். கடுமையான போட்டிச்சூழல் காரணமாக அப்பயிற்சி இரவுபகலாக நிகழ்கிறது. அதில் அக்குழந்தைகள் வென்று வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அப்பயிற்சி காரணமாக பண்பாட்டுக்கல்வி அனேகமாக முற்றாகவே கைவிடப்படுகிறது. ஆகவே உயர்தரத் தொழில் – வணிகக் கல்வி பெற்று பெரியநிலையில் இருப்பவர்களின் பண்பாட்டுப்பயிற்சியும், ரசனைத்தரமும் அடிமட்டத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. பாமரர்களின் ரசனைக்கொண்டாட்டத்தையே அவர்களும் கொண்டிருக்கிறார்கள். இலக்கியம், கலை, இசை, சினிமா எதிலும் அவர்களின் தரம் அதுவே. அரசியல்கூட பாமர அரசியலே.

இந்த பிளவு காரணமாக பெற்றோர் பண்பாட்டுத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையையும் அவர்கள் அவ்வண்ணமே வளர்க்கிறார்கள். இந்தியச் சூழலில் கலையிலக்கியம் இரண்டுமே நடுத்தர வர்க்கத்தவர்களால் மட்டுமே பேணப்படுகின்றன. அதாவது அந்த வெறிமிக்க போட்டியில் ஈடுபடாத மிகச்சிறுபான்மையினரான நடுத்தரவர்க்கத்தவரால். ஆகவே இங்குள்ள இலக்கியவெற்றிகள், கலைவெற்றிகள் எவையுமே நம் சமூகத்தின் பெரும்பான்மையினருக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு அவற்றை அறிமுகம் செய்யவேண்டிய சூழல் இன்றுள்ளது. இல்லையேல் இன்னும் ஓரிரு தலைமுறையில் தமிழ் மறக்கப்பட்டுவிடும்

இந்தியாவிலும் புலம்பெயர்ந்த மறுநாடுகளிலும் நம்மவர் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் நம் இலக்கியத்தை, இலக்கியவாதிகளைக் கொண்டுசெல்லும் முயற்சி ஒரு மாபெரும் பணி. வாழ்த்துக்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2021 11:30

‘கார்கடல்’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

கார்கடல் வாங்க

‘வெண்முரசு’ நாவல்தொடரில் 20ஆவது நாவல் ‘கார்கடல்’. இங்குக் ‘கார்’ என்பதை ‘மழை’ என்ற பொருளில் கொள்ளாமல், ‘கருமை’ என்ற பொருளில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தீரா வஞ்சங்களால் உருப்பெற்ற கருங்கடல் அலையாடாமல் உறைநிலையில் இருக்கத்தான் செய்கிறது.

மனிதர்களின் மன ஆழங்களில் குடியிருக்கும் இருள்சூழ்ந்த கீழ்மைகள் வஞ்சங்களாகிச் சுழித்துப் பொங்கி, அலையாடி அலையாடி அவரவர்களுக்குத் தேவையான தருணங்களில் சீற்றத்துடன் வெளிப்படும். அந்தத் தருணங்களைக் காட்சிப்படுத்தி அடுக்கிவைத்த களமாக இந்தக் ‘கார்கடல்’ நாவல் அமைந்துள்ளது. என்னைப் பொருத்தவரை ‘கார்கடல்’ என்பது, கீழ்மைகளின் கடல்தான்.

மனிதர்கள் தங்களுக்கான மாற்றறத்தைத் தாமே இயற்றி, அவற்றைப் பேரறத்துக்கு நிகராகவும் பதிலீடாகவும் நிறுவ முயற்சிசெய்யும் போதெல்லாம் அவர்கள் தங்களுக்குள் வீழ்ப்படிவாகத் தங்கியிருக்கும் கீழ்மைகளைச் சுரண்டி, வெளியே எடுக்கின்றனர். அவர்களின் மாற்றறங்கள் அனைத்தும் அந்தக் கீழ்மைகளின் பசையால் தற்காலிகமாக நிலைநிறுத்தப்படுகின்றன.

அறம் தவறியவர்களை அழித்து, அறத்தைக் காப்பதற்காக எழுந்த குருஷேத்திரப் போர் இருதரப்பினராலும் அறத்தைக் கொல்லும் போராக மாறிவிட்டது. இரண்டு தரப்பிலும் அறம் தவறியவர்கள் படைக்கலம் ஏந்த, இடையில் சிக்கித் சிதறுகிறது பேரறம்.

அறமும் மாற்று அறமும் அறமீறலும் இணைந்தே பேரறத்தைச் சிதைக்கின்றன. இனிவரும் யுகத்தில் எல்லாக் காலத்துக்குமான பேரறம் எழ வேண்டுமெனில், இத்தருணத்தில் இந்தப் பேரறத்தின் இத்தகைய சிதைவு தேவைதான் போலும்!

வெண்முரசு நாவல் தொடர்களில் அர்சுணனின் ‘காண்டீபம்’ என்ற வில் பற்றித்தான் விரிவான பேச்சு இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த நாவலில் கர்ணனின் ‘விஜயம்’ என்ற வில் நுண்சொல்லிலிருந்து பருப்பொருளாகச் செய்யப்பட்ட வரலாறு கூறப்பட்டு, அந்த வில் ஒருவகையில் காண்டீபத்தை விடவும் மேலானது என்று சுட்டப்பட்டுள்ளது.

குருஷேத்திரப் போர் ஒவ்வொருநாளும் ஓர் உச்சத்தைத் தொட்டே தணிகிறது. போர் தொடங்குவதற்கு முந்தைய நிமிடங்கள் மிக முக்கியமானவை. இருதரப்பினரும் தம் வஞ்சங்களை மீண்டுமொருமுறை திரட்டித் தொகுத்துக்கொள்ளும் தருணமது. அந்தத் தருணத்தில் படைகளின் ஒட்டுமொத்த நிலையை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் சொல்லாக்கியுள்ளார்.

“காத்திருக்கும் படைகள் எனக்கு எப்போதுமே விந்தையானதோர் உளஎழுச்சியை உருவாக்குகின்றன. அவர்கள் உள்ளங்கள் முன்னரே எழுந்து போர்கலந்துவிட்டிருக்கின்றன. உடல்கள் அங்கே செல்லத் தவித்துத் ததும்பி நின்றிருக்கின்றன. எடையென்றும் இருப்பென்றும் ஆன பிறிதொன்று உடலென்று ஆகி அவர்களை அங்கே நிறுத்தியிருக்கின்றது. அணைகட்டி நிறுத்தப்பட்ட நீருக்குள் பாய்ச்சல் ஒளிந்திருப்பதுபோல. அவர்கள் ஒவ்வொருவரின் உடலிலும் அந்த நிறுத்தப்பட்ட விசையைக் காண்கிறேன். கதைகளைப் பற்றிய கைகளில் அது முறுகுகிறது. உடைவாள் உறைகளின் செதுக்குகளில் அலையும் விரல்களில் அது ததும்புகிறது. புரவிகளில் செருக்கடிப்பாகவும் குளம்புமாற்றலாகவும் யானைகளில் செவிநிலைப்பாகவும் துதிக்கைநுனித் தேடலாகவும் அது எழுகிறது.”

போர் தொடங்குவதற்கு முன்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் நீண்டிருக்கும் ‘வெற்றிடம்’ அன்றைய பொழுதில் களம்படவுள்ளவர்களின் பெயர்களால் முன்பே எழுதி நிரப்பப்பட்டுவிடுகிறது. ‘அதில் தம்பெயர் இருக்கிறதா?’ என்றறியும் முயற்சிதான் ‘போர்’ போலும். இருதரப்பும் பொருதும் அந்த வெற்றுநிலம் பற்றி எழுத்தாளர் சிறப்பாக வர்ணித்துள்ளார்.

“இரு படைகளுக்கும் நடுவே இருக்கும் அந்த நீண்ட வெற்றிடம் ஒரு நதி போலிருக்கிறது. அது உச்ச அழுத்தத்தில் அதிர்ந்துகொண்டிருக்கின்றது. அங்கு ஒரு விரல் வைத்தால் அறுந்து தெறித்துவிடும். பல்லாயிரம் உள்ளங்கள் எழுந்து அங்கே போரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. அத்தனை தெய்வங்களும் அங்கே ஏற்கெனவே செறிந்தமைந்துவிட்டன. அங்கே பறக்கப்போகும் அம்புகள் முன்னரே முனைகள் விழிகொள்ள எழுந்துவிட்டன. அங்கே நிகழும் போர் பிறிதொன்று. பல்லாயிரம் நுண்படைக்கலங்கள். பல்லாயிரம் சொல்லிலா வஞ்சங்கள். பல்லாயிரம் பருவிலா விசைகள். இங்கிருந்து பார்க்கையில் அந்த இடைவெளி தெய்வங்களின் கையில் சாட்டை போலிருக்கிறது. அல்லது பெருநாகமா ? செங்குருதி ஒழுக்கா ? ஒரு புண்வடுவா ? அனலா ?”

இந்த நாவல் முழுக்க நிகழும் போரை முற்றிலும் நிகழ்த்துவன நாகங்களே!. நாகங்களே படைக்கலமாகின்றன. அந்தப் படைக்கலத்தை ஏந்திய வீரர்களாக நாகங்களே அமைகின்றன. இருள்செறிந்த பாதாளத்தில் அலையாடும் இருட்கடலிலிருந்து அலையலையாக நாகங்கள் வெளிப்படுகின்றன.

நாகங்கள் மண்ணுக்கு மேல் தலைநீட்டும் பசும்புல்போல நிலம்முழுக்க நிறைகின்றன. குருஷேத்திரப் போர்க்களம் முழுவதுமே நாகங்களால் ஆளப்படும் நிலமாகிவிடுகிறது. வஞ்சத்தையே தம் நஞ்சாகக் கொண்ட எல்லா வகையான நாகங்களும் கௌரவர்களின் தரப்பில் அணிவகுத்து விடுகின்றன. அவற்றுக்குத் தலைமையேற்கிறார் கர்ணன்.

 “கர்ணனின் அம்பறாத்தூணி பாதாளப் பேருலகம் நோக்கித் திறக்கும் ஆழி என்றிருந்தது. அதனூடாக எழுந்து வந்தன மண்நடுங்கச் செய்யும் நாகப்பேருடல்கள். புயல்பட்ட கடலின் அலைகளென நிவர்ந்தன அவற்றின் முடிவிலாச் சுழிப்புகள். கார்முகில் எனப் பெருகி அவை இருளைச் சமைத்தன. அர்ஜுனரின் ஆவநாழி விண்ணுக்குச் செல்லும் முகில்சுழியாக இருந்தது. அதனூடாகப் பறந்திறங்கி வந்தன விண்ணாளும் வெளியாளும் பறவைகள். வெண்ணிற யானைகள். விண்ணும் மண்ணும் அக்களத்தில் ஒன்றுடன் ஒன்று பொருதிக்கொண்டன. ஒன்றையொன்று கண்டுகொண்டன.”

நாகருலகம், கர்ணனுக்கும் நாகருக்குமான தொடர்பு, நாகநச்சு அம்பினைக் கர்ணன் பெறுதல், கர்ணனின் மனைவியை நாகினி அழைத்துச் செல்லுதல் என இந்த நாவலில் கர்ணனுக்கும் நாகருக்குமான பிணைப்பு விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகருக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு மண்ணுலகத்துக்கும் பாதாள உலகத்துக்குமான அறுக்க இயலாத தொடர்பாகக் காட்டப்பட்டுள்ளது. மரத்தின் வேரென மனிதர்களின் வஞ்சம் நாகங்களாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. விதையின் இளந்தளிரென மனிதர்களின் அகவிழைவுகள் நாகங்களாக மண்ணைக் கீறி வெளிப்படுகின்றன.

போரை முன்னின்று நிகழ்த்தும் நாகங்களை எதிர்க்க இருளுலகிலிருந்து பறந்து வருகின்றன பறவையினங்கள்!. பறவைகளுக்கும் நாகங்களுக்குமான போரில் அவற்றைத் தாங்கியிருக்கும் அடிமைகளாக மாறிவிட்டனர் மனிதர்கள். இந்தப் பறவையினங்களுக்குத் தலைமையேற்கிறார் அர்சுணன்.

“அர்ஜுனரின் ஆவநாழியின் இருண்ட ஆழத்திலிருந்து சீற்றம்கொண்டு எழுந்துவரும் பறவைகளைக் காண்கிறேன். வலுத்த அலகுகொண்ட நாரைகள். நாகக் கழுத்துகொண்ட அன்னங்கள். கன்னங்கரிய காகங்கள். கூர்வளைந்த அலகுடன் பருந்துகள். கவ்வும் கால்களுடன் கழுகுகள். கொலைத்தொழில் வல்லூறுகள் , அறைகூவும் கூகைகள். தாவும் பனந்தத்தைகள். மிதந்து நிற்கும் சிட்டுகள். இத்தனை பறவைகளால் ஆனதாக இருந்ததா அந்த ஆவநாழி ? இவற்றின் முட்டைகளே மணல்பருக்களாக அமைந்த பாலை ஒன்றை அதற்குள் அவர் சுருட்டி வைத்திருந்தாரா என்ன ?”

அர்சுணனுக்கும் கர்ணனுக்குமான போர் என்பது நாகங்களுக்கும் பறவையினங்களுக்குமான போராக மாறிவிடுகிறது. ஒருவகையில், பாதாள உலகத்தை ஆளும் நாகங்களுக்கும் வானத்தை அளந்துதிரியும் பறவையினத்துக்குமான போர் என்று இதனைக் கூறலாம். அவை ஒன்றையொன்று எதிர்க்கும் களமாகக் குருஷேத்திர நிலம் அமைவுகொள்கிறது.

இந்த நாவல் முழுக்க நால்வரின் நோக்குநிலையில் கூறப்பெற்றுள்ளன. பார்பாரிகன் இடும்பர்களுக்கும் அரவான் நாகர்களுக்கும் ஏகாக்ஷர் பேரரசி காந்தாரிக்கும் சஞ்சயன் பேரரசர் திருதராஷ்டிரருக்கும் குருஷேத்திரக் களத்தின் நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றனர். அவர்கள் அனைவருமே தெய்வமேறியவர்களைப் போல, போரையும் போரிடுவோரின் உளநிலையையும் சேர்த்தே பிறருக்கு உரைக்கின்றனர்.

பத்மவியூகத்தில் அகப்பட்டு உயிர்விடும் அபிமன்யூ, மாயத்தால் பொழுதணையச் செய்து ஜயத்ரதனைக் கொல்லுதல், அனுமதிபெற்று ஊழ்கத்தில் அமர்ந்த பூரிசிரவஸ் சாத்யகியால் படுகொலைசெய்யப்படுதல், கர்ணன் ஏவிய நாகநச்சு அம்பால் கடோத்கஜன் உயிர்விடுவது, பொய்ச்செய்தி அளிக்கப்பட்டுக் களத்தில் வீழ்த்தப்படும் துரோணர் என இந்த நாவலில் எண்ணற்ற அறமீறல்கள் பொங்கி எழுந்துள்ளன.

இந்த நாவலில் புதிய உத்தியை எழுத்தாளர் கையாண்டுள்ளார். நடந்து முடிந்தவற்றை மீண்டும் நிகழ்காலத்தில் நீட்டி உரைக்கும் உத்தி. களம்பட்டவர்கள் எவ்வாறு போரிட்டு மாண்டனர் என்பதை ஒருவகையிலான ‘பின்னோக்கு உத்தி’யால் வாசகருக்குக் காட்டிச் செல்கிறார் எழுத்தாளர்.

ஆனால், இது பிற எழுத்தாளர்கள் பயன்படுத்தும் ‘அச்சு அசலான பின்னோக்கு உத்தி’ அல்ல. அதனால்தான் நான் இந்த உத்தியை ‘ஒருவகையிலான பின்னோக்கு உத்தி’ என்றும் ‘புதிய உத்தி’ என்றும் சுட்டுகிறேன். இந்த உத்தியின் வழியாகப் போர்க்களத்தின் அன்றைய ஒட்டுமொத்த காட்சியையும் வாசகர் அறியும்படிச் செய்துவிடுகிறார் எழுத்தாளர்.

இதுநாள் வரையிலும் தங்களின் வஞ்சங்களைப் பெருக்கி பெருக்கித் தம் எதிரிகளைப் பகற்கனவுகளில் எதிர்கொண்டு பொருதிய பெருவீரர்கள், இன்று தம் வஞ்சங்களே தாமாக மாறி, தம் எதிரிகளை நேரெதிர்கொண்டு, பொருத உள்ளனர். இதனை எழுத்தாளர்,

“ஒவ்வொருவரும் தங்கள் ஆழுளத்து எதிரியை நேரிலும் கற்பனையிலும் சந்தித்து போரிட்டுப் போரிட்டுத் தங்கள் திறன்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முதன்மை எதிரி அளவுக்கே ஒவ்வொருவரும் எழுந்துவிட்டிருக்கிறார்கள். போர் ஒரு பயிற்சிக்களம் என மாறி அனைவரையுமே அவர்கள் கொண்டுள்ள தடைகளிலிருந்து எழச் செய்திருக்கிறது.”

என்று குறிப்பிட்டு, தடையற்ற மனநிலையோடு ஒவ்வொருவரும் தம் எதிரியை எதிர்கொள்வதாகக் கூறியுள்ளார். ‘தடையற்ற மனநிலை’ என்பதும்கூடப் போருக்கான உயரிய படைக்கலமே! அது படைக்கலத்தை உந்தும் விசை. அந்த விசையின்றிப் போருக்கு எழாதோர் வெற்றிபெறுவதில்லை.

பாண்டவர்கள் தொடங்கிவைக்கும் இரவுப்போர் இந்த நாவலில் மிகச் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை பகலில் நடைபெற்ற குருஷேத்ரப் போரை அணுவணுவாகச் சித்தரித்த எழுத்தாளர், அந்திக்குப் பின்னர் முடிவுறாது, இரவிலும் தொடரும் போரின் மீது தம் எழுத்தால் புதியஒளியைப் பாய்ச்சி வாசகருக்குத் துலங்க வைக்கிறார். இடும்பர் நிகழ்த்தும் இரவுப்போரை எதிர்கொள்ள வழிதெரியாமல் கௌரவப்படை சிதறி அழிகிறது.

“வளைகழை முனையில் எழுந்து வண்டெனத் தெறித்து இருளில் மிதந்து சென்று தூண்டில் முனைபோல் இறங்கி காந்தார தேர்ப்படைகளைத் தாக்கி உடைத்துச் சிதறடித்துவிட்டு துள்ளி இருளினூடாக எழுந்த இடத்திற்கே கடோத்கஜன் வந்திறங்கினான். தேர்மகுடங்களின்மேல் விண்ணிலிருந்து பெரும்பாறைகள் உதிர்வதுபோல் இறங்கி அவ்விசையிலேயே கதைகளால் அடித்து உடைத்து சிதர்களாகத் தெறிக்கச் செய்து , வில்லேந்திய வீரர்களையும் மழுவும் கதையும் பாசமும் ஏந்திய மல்லர்களையும் தலையுடைத்தும் உடல் சிதைத்தும் கொன்று , என்ன நிகழ்கிறது என்று அவர்கள் உணர்ந்து ஒருங்கிணைத்துக் கொள்வதற்குள் மீண்டும் கழை பற்றி ஏறித் தன்னைத் தெறிக்கச்செய்து மையநிலைக்கே மீண்டு , ஒருவரோடொருவர் ஒலியிலா ஒற்றைச்சொல்லில் மீண்டு வந்ததை அறிவித்து , மறுபடியும் நாற்புறமும் தங்களை எய்துகொண்டனர் இடும்பர்.

‘வெண்முரசு’ தொடர்நாவல்கள் சிலவற்றுள் ‘அமலையாடுதல்’ என்ற சொல்லாட்சி கையாளப்பட்டுள்ளது. அந்த அமலையாடுதலின் குரூரத்தை இந்த நாவலில்தான் காணமுடிகிறது.

‘அமலை’ என்றால், ‘மிகுதி’ என்று திவாகரநிகண்டு குறிப்பிட்டுள்ளது. போரில் களம்பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்துநின்று வீரர் திரண்டு ஆடும் ஆட்டம் ‘அமலை’ எனப்படும்.

“அட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும்”

(தொல்காப்பியம், பொருளதிகாரம், 72).

வீரர்கள் வெற்றிக் களிப்பால் ஆடும் பலவித ஆடல் இயல்புகளைப் போர்த் திணைகள் கூறுகின்றன. வெட்சிப் போரில் ஆநிரை கவர்வோரும் கரந்தைப் போரில் ஆநிரை மீட்போரும் உழிஞைப் போரில் மதிலைக் கைப்பற்றுவோரும் வெற்றி மகிழ்ச்சியில் ஆடியது குறித்து சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

தும்பைப் போரிலும் இதுபோன்ற வெற்றிக் களிப்புகள் கூறப்படுகின்றன. தும்பைப் போரிலே வென்ற மன்னனது படைவீரர்கள் போர்க் களத்திலேயே வெற்றியைக் கொண்டாடி மகிழ்வர். வெற்றி பெற்ற மன்னனது தேரின் முன்னேயும் பின்னேயும் ஆடுதல், அரசனுடன் சேர்ந்து ஆடுதல், களிற்றைக் கொன்று அதன் கீழ்ப்பட்டவனைப் பாராட்டுதல், வெற்றி பெற்ற அரசனை இருபக்க வீரர்களும் பாராட்டுதல் என வெற்றிக் கொண்டாடப்படுகிறது.

இதை முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை, பேய்க் குரவை, களிற்றுடன் நிலை, ஒள்வாள் அமலை, தானை நிலை முதலான துறைகள் சுட்டுகின்றன. வாள் வீரர்கள் ஆடுதலை ‘ஒள்வாள் அமலை’ எனப்படுகிறது. இந்த நாவலில் திருஷ்டத்யும்னன் ஆடும் அமலையாட்டத்தை ‘ஒள்வாள் அமலை’ என்று குறிப்பிடலாம்.

“வலிகெழுதோள் வாய்வயவர்

ஒலிகழலான் உடன்ஆடின்று

(தும்பைத்திணை, கொளு-21)

குருஷேத்திரப் போர்க்களத்தில் துரோணரின் நெஞ்சில் ‘ஸ்வம்’ என்ற அம்பினைப் பாய்ச்சி அவரைக் களம்வீழ வைக்கிறான் அர்சுணன். அப்போது திருஷ்டத்யும்னன் அறமற்ற செயலைச் செய்கிறான். அதன் தொடர்ச்சியாக அமலையாடுகிறான்.

“அத்தருணத்தில் படைகளுக்குப் பின்னாலிருந்து புரவியில் விரைந்தோடிவந்த திருஷ்டத்யும்னன் அதே விசையில் குதித்து துரோணரின் தேர்த்தட்டில் ஏறினான். தோல்பட்டையால் கொண்டையாகக் கட்டப்பட்ட துரோணரின் தலைமுடியைத் தன் கையால் பற்றி வலக்கையிலிருந்த வாளால் ஓங்கி அவர் தலையை வெட்டி தூக்கி எடுத்தான். அதை மேலே காட்டியபடி துருபதரின் வஞ்சம்! இதோ துருபதரின் வஞ்சம்! பாஞ்சாலத்தின் வஞ்சம் இதோ! பழி கொண்டது பாஞ்சாலக்குருதி! பழி கொண்டது பிருஷதனின் குருதிமரபு! என்று கூவினான். பாண்டவப் படையிலிருந்து முதிய வீரன் ஒருவன் கீழ்மகன்! என்று கூவி திருஷ்டத்யும்னனை நோக்கி ஓங்கி துப்பினான். இழிமகனே , உனக்கும் உன் குலத்திற்குமாக இது! என்று கூவியபடி ஓடிவந்து தன் கழுத்தை வாளால் வெட்டிக்கொண்டு முகம் திரும்ப கால்கள் மடிந்து உடல் முன்படிந்து விழ துடித்தான். கீழ்மகனே , கீழ்மகனே என்று கூவியபடி இன்னொரு வீரன் அவ்வண்ணமே ஓடிவந்து தன் தலை கொய்து வீழ்ந்தான். பழிகொள்க! உன் குடி அழியாப் பழிகொள்க! என்று கூவியபடி மேலும் மேலும் பாண்டவ வீரர்கள் வந்து தலைகொடுத்து விழுந்தனர். திகைத்து நின்ற திருஷ்டத்யும்னன் ஆம் , நான் பழிகொள்கிறேன்! இப்பழியை நானே கொள்கிறேன்! நான் இதன்பொருட்டே பிறந்தேன். எந்தை என்னை ஈன்றதும் வளர்த்ததும் இதற்காகவே! என்று கூவினான். திருஷ்டத்யும்னன் வெட்டுண்ட தலையைத் தூக்கி தன் முகத்திலும் மார்பிலும் குருதியை வீழ்த்தியபடி அமலையாடினான். நான் காலன்! நான் ருத்ரன்! நான் காளன் , சண்டன் , பிரசண்டன்! என்று ஆர்ப்பரித்தான். என் குடி அழிக! என் கொடிவழி முற்றழிக! என் முன்னோர் பழிசூடுக! என் தெய்வங்கள் எரிந்தெழுந்து அகல்க! நான் நாணவில்லை. இது எந்தைக்காக என் கடன்! என்று கூவினான். துரோணரின் தலையை தூக்கி வீசிவிட்டு தேரிலிருந்து இறங்கி தன் புரவிநோக்கி சென்றான்.

வஞ்சினம்கொண்டு போரைத் தொடங்கியவர்கள் ஏதாவது ஒருவகையில் அந்தப் போரில் வெற்றிபெற்றவுடன் அவர்களின் அகவுடல் விடுதலையைப் பெறுகிறது. அந்த விடுதலைக்காக அவர்களின் புறவுடல் கொண்டாடும் கொண்டாட்டமே அமலையாக வெளிப்படுகிறது.

இந்த நாவலில் இடம்பெற்றுள்ள மிகவும் அகவயமான தருணம் என்று நான் சுட்டவிரும்புவது யாதவ அரசி குந்திதேவிக்கும் கர்ணனுக்கும் இடையே நிகழும் உரையாடலைத்தான். பேரரசி சத்தியவதியையும் திரௌபதியையும்விடச் சூழ்ச்சிகளிலும் சொல்வீச்சிலும் எண்ணியதை முடிக்கும் திறமையிலும் கைத்தேர்ந்தவர் யாதவ அரசி குந்திதேவிதான் என்பதை நாம் இந்த உரையாடல் வழியாக உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. யாதவ அரசி குந்திதேவியால் எந்த நிலையிலும் தருக்கி நிற்கவும் முடிகிறது; எந்த நிலைக்கும் தாழ்ந்து செல்லவும் முடிகிறது. அந்த இருநிலையான மனநிலைதான் அவரைத் தன்னுடைய அனைத்துச் செயல்களிலும் வெற்றிகொள்ளச் செய்கிறது.

தந்தை – மகன் பற்றுறவு இந்த நாவலில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. பிருஹத்காயர், அர்சுணன், பீமன், துச்சாதனன், துரோணர், சாத்யகி, பூரிசிரவஸ், திருஷ்டத்யும்னன்  ஆகியோர் தம்முடைய இரத்தவுறவுடைய மைந்தர்களிடம், மூத்த அல்லது ஒரே மைந்தரிடம் கொள்ளும் பற்றுறவு வாசகரை நெகிழச் செய்கிறது.

ஆனால், இவர்களின் வரிசையில் துரியோதனனும் இருக்கிறார்தான். லட்சுமணன் களம்பட்ட பின்னர் அவர் கொள்ளும் மனத்துயர் எழுத்தாளரால் விரிவாகக் காட்டப்படவில்லை. துரியோதனன் இந்தப் பற்றுறவுகளைத் தாண்டித் தன் மனத்தை நிலைநிறுத்தியிருக்கிறார் போலும். அல்லது எல்லா மைந்தரும் தம் மைந்தர் என்று கருதும் உளவிரிவாக இருக்கலாம். அவருக்கு அபிமன்யுவும் லட்சுமணனும் ஒன்றுதான் போலும். காரணம், துரியோதனன் மாபெரும் உளவரிவுகொண்ட பெருந்தந்தை திருதராஷ்டிரரின் மைந்தர்.

தந்தையர் நிறைவுகொள்வது மைந்தரின் புகழில்தான்போலும். மைந்தரைக் காப்பதே தந்தையரின் வாழ்நாள்கடன் போலும் என்று கருதி, வியக்க முடிகிறது. தந்தையருக்கு ‘இந்த உலகம்’ என்பது, தம் மைந்தரின் நல்வாழ்விலிருந்தே பொருள்படுகிறது போலும். தந்தையர் தம் வாழ்நாளைத் தம் மைந்தரின் வாழ்வினுடாகவே நீட்டித்துக் கொள்கின்றனர் போலும். மைந்தரின் மரணம் தந்தையரின் வாழ்நாட்களுள் வாழமுடியா வெற்று நாட்களாகவே நீட்சிபெறும் போலும். மைந்தரை இழந்து தவிக்கும் தந்தையரின் உள்ள நிலையை எழுத்தின் வழியாக உணர்த்திவிட இயலாதுதான். ஆனாலும், அதைப் பல்வேறு கோணத்தில் எழுதி எழுதி வாசகரின் உள்ளத்தில் பதியச் செய்துவிடுகிறார் எழுத்தாளர்.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘வெண்முரசு’ நாவல் தொடரை எழுதி முடித்தபின்னர் அதிலிருந்து முற்றிலும் விடுபடுவதற்காகவே பல்வேறு இலக்கிய வகைமைகளை எழுதினார். தன்னை ‘வெண்முரசு’க்கு ஒரு வாசகனாகவே அமைத்துக்கொண்டார். இந்த நாவலில் இடம்பெற்றுள்ள நான்கு வரிகளைக் கொண்டு இந்த எழுத்தாளருக்கும் ‘வெண்முரசு’ நாவல் தொடருக்கும் இடையே உள்ள உறவினைச் சுட்ட முயற்சி செய்கிறேன்.

இயற்றியவன் இயற்றப்பட்டவற்றிலிருந்து முற்றாக விலகி நிறைவுகொள்கிறான் எனில் , இங்கிருக்கும் எதிலும் இவற்றை இயற்றியோன் இல்லை. இவை அவனுடைய ஒரு தருணம் மட்டுமே. இவை அவனை நோக்கிச் சுட்டும் அடையாளம் மட்டுமே.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களுக்கு ‘விஷ்ணுபுரம்’ நாவல் ஓர் அடையாளம். ‘வெண்முரசு’ நாவல் தொடரோ மாபெரும் அடையாளம்.

முனைவர் . சரவணன், மதுரை

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2021 11:30

July 22, 2021

வெண்முரசு ஆவணப்படம் – சாக்ரமாண்டோ, போர்ட்லாண்ட், டொராண்டோ

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம். ஆவணப்படம் இதுவரை எட்டு அமெரிக்க நகரங்களில், வாசக நண்பர்களின் உதவியுடன் திரையிடப்பட்டு வெண்முரசுவின் மகத்துவம் மக்களின் உரையாடலில் இடம்பெற்றுள்ளது. படம் முடிந்ததும் எங்களிடம் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளுள் ஒன்று , வெண்முரசுவின் செம்பதிப்பை இந்தியாவிலிருந்து எப்படி தருவிப்பது என்பதுதான். தளத்தில் இலவசமாக வாசிக்கலாமே என்று சொன்னால், இல்லை, நண்பர்கள், திரையிடலின்போது வைத்திருந்தார்களே, அதுதான் வேண்டும் என்பார்கள். வெண்முரசு புத்தகங்களை , சில முக்கிய நகரங்களுக்கு பத்து பத்து செட்டாக தருவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டுள்ளோம்.

அடுத்து திரையிடப்படவிருக்கும் அமெரிக்கா மற்றும் கனடா  நகரங்களின் விபரங்கள் கீழே.

ஆகஸ்ட், 1, ஞாயிற்றுக்கிழமை, 2:45 PM – 4.45 PM, சாக்ரமாண்டொ, கலிபோர்னியாCentury Roseville 14 and XD1555, Eureka Road, Roseville, CA 95661தொடர்புக்கு– அண்ணாதுரை கோவிந்தசாமி, Phone: 1-916-396-4702ஆகஸ்ட், 7 – சனிக்கிழமை, 5.00 PM – 7.00 PM,போர்ட்லாண்ட், ஆரிகன்Clinton Street Theater2522, SE Clinton St, Portland, OR 97202தொடர்புக்கு– பிரபு, prabumrgm@gmail.com, Phone:971-717-4223

ஆகஸ்ட், 15, 2021 – ஞாயிற்றுக்கிழமை, 5:00 PM, டொராண்டோ, கனடா – ஏற்பாடுகள் நடந்துகொண்டுள்ளன.

தொடர்புக்கு – vishnupuramusa@gmail.com

 

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 18:30

அ.முத்துலிங்கத்தின் கலை

அன்புள்ள ஜெ

தற்போது உங்களின் ‘அ.முத்துலிங்கமும் ஈழப்போரும்’  கட்டுரையை வாசித்தேன். அ.முத்துலிங்கம் எனக்கும் பிடித்தமான எழுத்தாளர். அவரது கதைகளிலும் கட்டுரைகளிலும் ஒரு மனிதனால் இத்தனை அனுபவங்களை அடைய முடியுமா என்கிற கேள்வியே மேலோங்கி இருக்கும். சமயங்களில்  கதைக்கும் கட்டுரைக்கும் ஊடாக அவர் எழுதியிருப்பதை ரசித்தும் வாசித்துள்ளேன்.

இங்கு எனது நண்பர் ஒருவருக்கு அ.முத்துலிங்கம் கதைகள் பற்றி பேசினேன். ஆனால் அதனை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை. சில மாதங்களில் நீங்கள் அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரையை எழுதியிருந்தீர்கள். அதன் பின்னரே அந்நண்பர் அவரின் கதைகளை  வாசிக்க ஆரம்பித்தார். அதோடு நில்லாமல் தானே அ.முத்துலிங்கம் என்கிற எழுத்தாளரை கண்டுகொண்டதாக பேசவும் செய்தார். அதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. தன்னை முன்னிலைப்படுத்தும் பலரும் இப்படி செய்வதைப் பார்த்து  பழகிவிட்டது.

ஆரம்பத்தில் எனக்கும் ஒரு கேள்வி இருந்தது, இவரின் கதைகளில் ஈழப்போர் குறித்தும் அச்சூழல் குறித்தும் அதிகமாக இருக்கவில்லை. ஆனால் தன் நிலம் விட்டு வேறொரு நிலத்தில் குடிப்புகும் மக்களின் சிக்கல் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்தும் எழுதியிருப்பதைப் புரிந்துக் கொண்டேன். அதில் அவர் காட்டும் அங்கதம், வாசித்தப்பின் ஒரு வெறுமையை விட்டுச்செல்வதாக இருந்தது. அன்றைய என் கேள்விக்கு இன்றைய உங்கள் பதிலில் முழுமையான பதில் கிடைத்தது. நன்றி.

உங்கள் பதிலை வாசித்ததில் ஓரிடத்தில் எனக்கு சின்னதாய் நெருடல் ஏற்பட்டது. அது குறித்து கேட்க நினைக்கிறேன்.

‘அ.முத்துலிங்கம் ஈழ எழுத்தாளர்களில் முதன்மையானவர். பிற எவரும் அவரைவிட பல படிகள் கீழேதான்’. இப்படி சொல்லத்தான் வேண்டுமா? ஒருவரை முதன்மையானவர் என சொல்வதற்கு, பிற எவரும் பல படிகள் கீழேதான் என சொல்லத்தான் வேண்டுமா? அப்படிச் சொல்வதால்தான் நாம் சொல்லவந்ததை முழுமையாகச் சொல்ல முடியுமா? இது சாதாரண கேள்வியாக இருக்கலாம். ஆனால் இதனை வாசித்ததும் என் மனதில் ஏதோ சுருக்கென்றதை மறைக்க விரும்பவில்லை.  மேற்கொண்டு நீங்கள் ஆ.முத்துலிங்கத்தின் கதைகளில் இருப்பது முதன்மையான பண்பாடுகளுக்கு இடையேயான முரண்பாட்டை என சொல்லி சிறு தெளிவை கொடுத்துள்ளீர்கள்.

சமீபத்தில் அகரமுதல்வனின் ‘இரண்டாம் லெப்ரினன்ட்’ என்கிற சிறுகதை தொகுப்பை வாசித்தேன். இதுவரை செய்திகளாக பார்த்து கேட்டறிந்தவற்றை ஆழமான கதைகளாக்கியிருந்தார். எனக்கு தெரிந்த செய்திகளில் இருந்து தெரியாத களத்தையும் மனித அவலத்தையும் அகரமுதல்வனின் கதைகளில் வாசித்தேன். அப்படியான கதைகளும் அவசியம் தானே. புலம்பெயர்வு எவ்வளவு முக்கியமோ அவ்வாறே அந்நிலத்திலேயே உயிர் விட துணியும் மனிதர்களின் வாழ்வை பதிவு செய்வதும் முக்கியம் தானே?

இவற்றை உங்களிடம் பகிர நினைத்தேன். பகிர்ந்துள்ளேன். பதில் கிடைக்குமா என தெரியவில்லை. இருந்தும் உங்கள் கவனத்திற்கு வந்தாலே போதும். அன்பும் நன்றியும்.

– தயாஜி

அ.முத்துலிங்கமும் ஈழப்போரும்

அன்புள்ள தயாஜி,

பொதுவாக இலக்கிய உரையாடல்களில் சொற்கள் அச்சூழலின் உளநிலைகளை ஒட்டியே கூறப்படுகின்றன. அவற்றை நேர்ச்சொல்லாகப் பொருள்கொள்ளலாகாது. அ.முத்துலிங்கத்தைப் பற்றிய என் கருத்தை 1992ல் அவர் எவரென்றே தெரியாத காலம் முதல் அழுத்தமாக முன்வைத்துவருகிறேன். என் கூற்று அம்மதிப்பீட்டின் இன்னொரு வெளிப்பாடு.

இலக்கியத்தில் இரண்டு வகைமை உண்டு. புறவயமான, திட்டவட்டமான அரசியலையோ சமூகஉண்மையையோ உணர்வுகளையோ சொல்பவை ஒருவகை. அன்றாடவாழ்க்கையில் சாதாரணமாக நிகழாத, ஆனால் கனவுள்ளத்தில் திகழ்ந்து நம்மை ஆட்டிவைக்கும் நுண்மைகளை முன்வைப்பவை இன்னொரு வகை.

முதல்வகை கதைகளுக்கே வாசகர்கள் மிகுதி.ஏனென்றால் அவை அத்தனை வெளிப்படையானவை. அவற்றுக்குக் கூர்ந்த கவனம் தேவையில்லை. ஏற்கனவே பேச்சில் இருந்துகொண்டிருப்பவற்றைத்தான் அவை மீண்டும் சொல்கின்றன. அந்த அரசியலை அல்லது சமூகவியலை அல்லது உணர்வுநிலைகளை நாம் முன்னரே நன்கறிந்திருக்கிறோம். ஆகவே எளிதாக ரசிக்கிறோம்.

இரண்டாவது வகை கதைகள் பூடகமானவை. அப்படித்தான் அவற்றைச் சொல்லவே முடியும். மேல்தோற்றத்துக்கு அவற்றில் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். அவற்றை கூர்ந்து வாசிக்கவேண்டும். அவற்றிலுள்ள கவித்துவக் கூறுகளை கருத்தில்கொள்ளவேண்டும். அவற்றைக் கற்பனையில் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கான கவனத்தை வாசகர்களிடம் உருவாக்கவே இலக்கியவிமர்சனம் எப்போதும் முயல்கிறது.

ஆனால் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய நுட்பமான கதைகள் புரிவதில்லை. அவர்களுக்கு இவை உதவியானவையும் அல்ல. அவர்களுக்குப் பிடித்தவை ’தரப்பு’ உள்ள கதைகள். [தரப்பு இல்லை என்றாலும் அவற்றை உருவாக்கி எடுத்துக்கொள்வார்கள்] அப்பட்டமான கதைகள். ஆகவே அவர்கள் அப்பட்டமான பிரச்சாரம், ஏளனம், பகடி , உணர்வெழுச்சிகள் கொண்ட கதைகளை முன்வைப்பார்கள்.

அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அவர்கள் ‘கொத்திக் கொத்தி முறத்திலிருப்பதையும் கொத்த’ ஆரம்பிக்கும்போது எதிர்வினையாற்றியே ஆகவேண்டும். இல்லையேல் இலக்கியமென்னும் கலை அழிந்துவிடுவிடும். எச்சூழலிலும் இலக்கியத்தில் முதன்மையான கதைகள் இரண்டாம் வகைக் கதைகளே. ஏனென்றால் இலக்கியமென்னும் கலையே இந்தவகையான அகநுண்மைகளை எழுதும்பொருட்டு உருவானதுதான். இலக்கியத்தில், கலையினூடாக மட்டுமே இவற்றைச் சொல்லமுடியும்.

இலக்கியத்தில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு. வெறும்சித்தரிப்புகளும் அரசியல்வெளிப்பாடுகளும் இலக்கியமே. அவை சுவாரசியமாக, கூர்மையாகச் சொல்லப்பட்டிருந்தால் அவற்றுக்கு இலக்கியமதிப்பும் உண்டு. ஆனால் இலக்கியத்தின் படிநிலைகளில் நுண்மைவெளிப்பாடு கொண்ட கதைகள் மிக மேலே நிற்பவை. நான் சுட்டுவது அதையே.

யோசித்துப் பாருங்கள், போரின் கொடுமையை எந்தக் கதையைவிடவும் இன்று ஓர் ஆவணப்படம் அழுத்தமாகக் காட்டிவிடமுடியும். ஒரு செய்தியிலேயே நம்மை வெடித்துச்சிரிக்கவைக்கும் பகடி வெளிப்படமுடியும். அதற்குமேல் இலக்கியம் என்ன செய்கிறது?

ஆனால் இலக்கியம் நிகழ்வது அகத்தில் என்றால், வாசகனின் கற்பனையில் என்றால், அது தனக்கே உரிய வழியினூடாக வேறெந்த ஊடகமும் தொடாத ஓர் இடத்தை தொட்டுவிடுகிறது.

ஓர் உதாரணம், அ.முத்துலிங்கத்தின் ‘விருந்தாளி’ என்னும் சிறுகதை. கதை வெறும் ஒரு நிகழ்வு என்று தன்னை பாவனை செய்கிறது. ஆப்ரிக்கநாடொன்றில் மரமறுக்கும் தொழிற்சாலையில் ஈழத்தமிழர் ஒருவர் பணிபுரிகிறார். அவ்வழியாகச் செல்லும் நாடோடி ஒருவர் அவருக்கு விருந்தாளியாக அமைகிறார். ஒருநாள் தங்கிச் செல்லும் அவருக்காக தன் விலையுயர்ந்த ஒயினை எடுத்து உபசரிக்கிறார் ஈழத்தவர்.அந்நாடோடிக்கு மதுவின் அருமை தெரிய வாய்ப்பில்லை என அவர் நினைக்கிறார், ஆனால் அவருக்கு அவ்வாறு அளிப்பது நிறைவளித்தது.

விடைபெற்றுச் செல்லும் நாடோடி திரும்ப அருகே வந்து சொல்கிறார். “இதுதான் உங்களைப் பார்ப்பது கடைசித்தடவை என்று நினைக்கிறேன். இனிமேல் இதைச் சொல்வதற்குச் சந்தர்ப்பமும் கிடைக்காது. பலவருடங்களுக்குப் பிறகு உங்கள் தயவில் ஓர் உயர்ரக வைனைப் பருக முடிந்தது. முகம் தெரியாத எனக்கு நீங்கள் செய்த இந்த மரியாதை மிக அதிகமானது. என் நிதிநிலைமையில் இப்படியான வைனை நான் இனிமேல் அருந்துவது சாத்தியமில்லை. சாகும்வரை இதை மறக்கமாட்டேன்”

இவ்வளவுதான் கதை. ஆனால் இக்கதையினூடாக ஒரு நுட்பமான வாசகன் செல்லும் தொலைவு மிக அதிகம். ஒயினை அளிப்பவரும் புலம்பெயர்ந்தவர். பெறுபவரும் அவ்வாறே. அவர்கள் மிக அந்தரங்கமாக பரிமாறிக்கொள்ளும் மிகமென்மையான, மிக உயர்வான ஒன்று அந்த ஒயின். இரு உள்ளங்கள் தொட்டுக்கொண்டு ஒன்றையொன்று அறிகின்றன. ஆறுதலோ தேறுதலோ சொல்லும் இடத்தில் அவர்கள் இல்லை. அதற்கப்பால் ஓர் உரையாடல் நிகழ்கிறது. ஒயின் என்னும் ஒற்றைச் சொல்கொண்ட ஒரு மொழியில். அவ்வாறு ஒன்று நிகழவேண்டுமென்றால் நிலத்தை, மொழியை, உறவை இழந்து வெறும் மனிதர்களாக இருவரும் எங்கோ அயல்மண்ணில் சந்தித்துக்கொள்ளவேண்டும்.

அந்த ஒயினை நாம் வேறொன்றாக உணர்கிறோமே, அந்த தருணத்தில் நாம் அடையும் உயர்நிலை ஒன்றிருக்கிறதே, அதுதான் இலக்கியத்தின் உச்சம். அதை திரும்பத்திரும்பச் சுட்டியாகவேண்டும். அதை எய்துவதை உச்ச இலக்காகக் கொள்ளவேண்டும். அதன்முன் அரசியலும் சமூகவியலும் எல்லாம் மிகமிகச் சாதாரணமானவை. அதை நமக்கு நாமே சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இலக்கியமென்பதே அந்த உச்சத்தை சென்றடைவதற்காகத்தான். இலக்கியம் ஒரு பண்பாடு தன் மிகநுண்மையான ஒன்றை நிகழ்த்திக்கொள்ளும் தருணம். ஓங்கி எழுந்த மாபெரும் மரத்தின் தளிர்நுனி மிகமிக மென்மையானது. அதைப்போல.

அந்நிலையில் நுண்ணுணர்வில்லாதவர்கள் அந்த உச்சத்தின்மேலேயே தாக்குதல் நடத்தும்போது, அதை மறுத்து வெறும் அப்பட்டங்களை முன்வைக்கும்போது ஆணித்தரமாக அந்த வேறுபாட்டைச் சொல்லவேண்டியிருக்கிறது. என் சொற்களை நான் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறேன். அ.முத்துலிங்கம் எழுதும் கதைகளின் கலைத்தளம் பிறர் எழுதும் கதைகளின் கலைத்தளங்களை விட பல படிகள் மேலானது. அதுவே என்றும் இலக்கியத்தின் இலக்கும் கனவும்.

ஜெ

அ முத்துலிங்கம் இணையதளம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 11:34

கத்தியின்றி வென்ற யுத்தம் – இரண்டு செய்திக் குறிப்புகள்!

இந்தியாவில் நடந்த அகிம்சைப் போராட்டங்களின் உச்சம் என ஒரு போராட்டம் உள்ளதெனில், அது 1930 முதல் 1934 வரை நடந்த உப்புச் சத்தியாக்கிரகமாகும். முழுமையான வரலாற்றுப் பார்வையும், தகவல்களும் இருந்து, இந்தப் போராட்டம் பற்றி ஒருவர் எழுதினாலும், அது குறைபட்ட சித்திரமாகத்தான் இருக்கும். இந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பதை விடவும் பெரிய இடத்தை, இந்தப் போராட்டம், வருங்கால வரலாற்றில் அடையும். எனினும், இதை மேலும் புரிந்து கொள்ள, 1930 ஆம் ஆண்டு போராட்டம் பற்றிய இரண்டு செய்திக் குறிப்புகளை இங்கே தருகிறேன் (ரிச்சர்ட் பார்லெட் க்ரெக்)

வெப் மில்லர் என்னும் முக்கியமான பத்திரிகையாளர், நியூயார்க் டெலிகிராமுக்காக அனுப்பிய நீளமான பத்திரிக்கைக் குறிப்பின் ஒரு பகுதியை மட்டும் இங்கு பார்க்கலாம்,  பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரை விடவும், அமெரிக்கப் பத்திரிக்கையாளர், நடுநிலையாகவும், முழுமையாகவும் இந்தப் போராட்டத்தைப் பற்றிய செய்திகளைத் தருவார் என்பது என் நம்பிக்கை. எனவே நான் வெப் மில்லரின் செய்திக் குறிப்பைத் தருகிறேன்.

வெப் மில்லர், 1920

தரசானா கேம்ப், சூரத் மாவட்டம், பம்பாய் மாநிலம் மே-22 (தபால் வழியாக)

நேற்று, காவலர்களின் கடுமையான கட்டுப்பாடுகளை மீறி, 2500க்கும் மேற்பட்ட காந்தியத் தொண்டர்கள், தரசானா உப்பளங்களுக்குள் செல்ல முயன்ற போது, நம்பவே முடியாத சம்பவங்களைக் காண நேரிட்டது.

இன்று வெளியான, அரசாங்க அறிவிப்பு, சுமார் 170 பேர் காயமுற்றார்கள்; அவர்களில், சிலர் படுகாயமுற்று கவலைக்கிடமாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சி அளித்த தகவல் சொன்னதாகக் குறிப்பிடுகிறது.

நேற்று மதியம், காங்கிரஸ் கட்சி அமைத்திருந்த தாற்காலிக மருத்துவமனைக்குச் சென்று, காயமுற்றவர்களைக் கண்டேன்.. எனது எண்ணிக்கையின் படியே, 200 க்கும் அதிகமானோர் காயமுற்று அங்கே வரிசையாகப் படுத்திருந்தார்கள்..  காயமுற்றோரின் எண்ணிக்கை 320 என, சில பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

வன்முறைக்குப் பதில் வன்முறை எனப் போர்களையும், கலவரங்களையும், பார்த்துப் பழகிய மேற்கத்திய மனநிலைக்கு, நேற்று தரசானவில் நடந்த அகிம்சை மறியல், குழப்பமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. நூற்றுக்கணக்கான அடிகள் அகிம்சைப் போராட்டக்காரர்கள் மீது வீழ்ந்தன.. ஆனால், போராட்டக்காரர்கள், ஒரு அடி கூடத் திருப்பி அடிக்கவில்லை.

காந்தியத் தொண்டர்கள், காந்தியின் அகிம்சைப் போராட்ட விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடித்தார்கள். தன் மீது விழும் அடிகளைத் தடுக்கக் கூட, அகிம்சைப் போராட்டக்காரர்கள், தங்கள் கைகளை உயர்த்தவில்லை. காவலர்களால், அடித்து வீழ்த்தப்படுகையில், அவர்களிடமிருந்து அலறல்கள் கேட்கவில்லை.. காவலர்களின் வன்முறைக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்ட உடல்களில் இருந்து முனகல்கள் மட்டுமே கேட்டன.

அகிம்சைப் போராட்டக்காரர்களின் நோக்கம், காவலர் தங்கள் மீது வன்முறைத் தாக்குதலை நிகழ்த்தத் தூண்டுவதாகவே இருந்தது. காவலர்களின் அச்சுறுத்தலைக் கண்டு கலைந்து போகாமல், உப்பளங்களை முற்றுகையிட முன்னேறும் காந்தியர்களின் படையை எப்படி எதிர்கொள்வது என்னும் சிக்கலில், காவல் துறை மாட்டிக் கொண்டு திகைத்துப் போனது.

முன்னேறும் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில், காவலர்கள் தங்கள் கைகளில் உள்ள லத்திகளை ஓங்கி மிரட்டுகிறார்கள்.. ஆனால், அதற்கு அஞ்சாமல், போராட்டக்காரர்கள், உறுதியுடன் முன்னேறுகிறார்கள்.. பின் வாங்க மறுக்கும் அவர்களின் உடல்களை லத்திகள் பதம் பார்க்கின்றன.. போராட்டக்காரர்களின் உடல்கள், அந்த அடிகளை எதிர்க்காமல் வாங்கிக் கொள்கின்றன.. ரத்தம் வழிய அடிபட்டுக் கீழே விழும் உடல்களை, ஸ்டெரச்சர்கள் எடுத்துச் செல்கின்றன. அடுத்து முன்னேறக் காத்திருக்கும் போராட்டக்காரர்கள், ஓடோடிச் சென்று, அடிபட்டு வீழ்ந்து களத்தை விட்டு வெளியேறும் போராட்டக்காரர்களைப் பாராட்டி விட்டு வருகிறார்கள். காயம்பட்டவர்கள், தங்கள் காயங்களைப் பெருமிதமாகக் கருதுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ‘இந்தப் போராட்டக்காரர்கள் தேசத்துக்காக தங்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள்’, என ஒரு தலைவர் சொல்வதைக் கேட்டேன்.

‘பெரும்பாலான நேரங்களில், உள்ளூர்க் காவலர்கள் போராட்டக்காரர்களை அடிக்கத் தயங்குவதைக் கண்டோம்.. போலீஸ் உயரதிகாரிகளின் கவனம் வேறு இடத்துக்குச் செல்கையில், முன்ணணிக் காவலர்களின் வன்முறைப் போக்கு குறைவதையும், மீண்டும் உயரதிகாரிகள் வரும் போது மிரட்டலும், அடிகளும் அதிகரிப்பதையும் கண்டேன். பல இடங்களில், தங்களுடன் சேர்ந்து போராடுமாறு போராட்டக்காரர்கள், காவலர்களிடம் வேண்டுகோள் விடுத்ததையும் கேட்டேன்’.

’ஒரு சில சமயங்களில், காவலர்கள் கோபமுற்று, கடுமையாகத் தாக்கினார்கள். தரையில் அமர்ந்தோ, படுத்துக் கொண்டோ, வெளியேற மறுக்கும் போராட்டக்காரர்களை காவலர்கள் உதைத்தார்கள்; லத்தி முனையால் அவர்கள் வயிற்றில் குத்தினார்கள்’.

ஒரு சமயத்தில், அடித்துச் சாக்கடையில் வீழ்த்தப்பட்டு, சேற்றில் சிக்கிக் கொண்ட ஒரு போராட்டக்காரரை, ஒரு காவலர் கோபத்தில் மேலும் அடிப்பதைக் கண்டேன்.. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற போராட்டக்காரர்கள், பெரும் கொந்தளிப்பை அடைந்தார்கள்.

‘காவலர்கள், போராட்டக்காரர்களின் மீது நிகழ்த்திய இந்த வன்முறையைக் கண்ட போது, வாயில்லா ஜீவன்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவது போல, கோபத்திலும், அவமானத்திலும் அருவெறுப்பாக உணர்ந்தேன். நான் எழுதிய இந்த வரிகளை, பம்பாய் சென்சார் அதிகாரிகள் கடுமையாக ஆட்சேபித்தார்கள். அரசுத் தரப்புக்கும் பிரச்சினைகள் இருந்தன. காங்கிரஸ் தொண்டர்கள் சட்டத்தை மீறினார்கள், போராட்டத்தை விலக்கிக் கொள்ளக் காவலர்கள் கேட்ட போது மறுத்தார்கள். தடுப்பரண்களை கயிறுகள் கட்டி, இழுத்து விலக்க முயன்றார்கள்’.

‘நான், கடந்த 18 ஆண்டுகளில், 22 நாடுகளில், பல்வேறு சமூகப் பிரச்சினைகளை, கலவரங்களை, வீதிச் சண்டைகளை, கிளர்ச்சிகளை நேரில் கண்டுள்ளேன்.. ஆனால்,  தரசானா உப்பளத்தில் காங்கிரஸ் போராட்டக்காரர்களுக்கு நடந்த வன்முறையைப் போன்ற கொடூரத்தை வேறெங்கும் கண்டதில்லை. வன்முறையை வன்முறையால் எதிர்கொள்வதை, போரை ஒரு மேற்கத்திய மனம் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால், மனிதர்கள், மிகவும் அமைதியாக, ஒரு நோக்கத்துடன் முன் சென்று, எந்த வித தற்காப்பு முயற்சிகளும் செய்யாமல், தங்கள் உடல் மீது செலுத்தப்படும் வன்முறைத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளும் காட்சியைக் கண்டு என் மனம், குழம்பித் தடுமாறிப் போனது. சில சமயங்களில் அதைக் காணச் சகிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்’.

‘என்னை மிகவும் வியப்படைய வைத்த இன்னொரு விஷயம், போராட்டக்காரர்களின் ஒழுக்கம்..அவர்கள் அனைவருமே, காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கியவர்கள் போலிருந்தார்கள்.. போராட்டக்குழுத் தலைவர்கள், போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.. காந்தியின் ஆன்மா, நம்முடன் உள்ளது எனச் சொல்லிப் போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

Negley_Farson

சிகாகோ தினசரிச் செய்தி, தனது சிறப்பு நிருபர் நெக்லே ஃபார்சன் (Negley Farson) வழியே பெற்று வெளியிட்ட அறிக்கை:

 

ஜூன் – 21, பம்பாய்

தங்கள் மீது மழை போல் பொழியும் லத்தி அடிகளால் ரத்தம் கொட்டிய நிலையிலும், தங்களைக் காத்துக் கொள்ள, தங்கள் கிர்பான்களை (புனித வாள்) எடுக்காமல், அடிகளை வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றார்கள் வீரம் நிறைந்த சீக்கியர்கள்

தியாகத்தைக் குறிக்கும் ஆரஞ்சு நிற உடையணிந்த இந்து இளம்பெண்கள், காங்கிரஸ் போராட்டக்காரார்களைத் தாக்க வரும் குதிரைப்படைக்கு முன்னால், விழுந்து மறித்தார்கள்.

ஸ்வ்ராஜ்யக் கொடியை ஏந்தியப் பெண்களைச் சுற்றி, உறுதியாக, பின்வாங்கும் நோக்கம் எதுவுமின்றி, காங்கிரஸ் போராட்டக்காரர்கள், அமைதியாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள்.. காயம் ஏற்பட்டால், அவர்களை எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சருடன் ஒரு குழு அருகில் தயாராக இருந்தது.

மும்பை எஸ்ப்ளனேட் பகுதியில், கடலை நோக்கிய ஒரு அழகிய பூங்காவில், ஆறு நாட்களாக, மகாத்மா காந்தியின் தொண்டர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே பெரும் போராட்டம் நடந்தது.  மேலே சொன்னவை அங்கே நடந்த காட்சிகளில் சில.

காவல் துறையின் தாக்குதல், நம்பவே முடியாத அளவுக்கு கொடூரமாகவும், முட்டாள்தனமாகவும் இருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் அதை அமைதியாக, மன உறுதியுடன் ஏதிர்கொண்டவிதம் வீரம் நிறைந்த ஒன்றாக இருந்தது.

போராட்டத்தின் முதல் காட்சி, காலை ஆறு மணிக்கு, எஸ்ப்ளனேடுக்கு வெளியே, பூங்காவுக்கு எதிரே உள்ள காவல் நிலையத்தில் தொடங்குகிறது. தொப்பியும் சீருடையும் அணிந்த சில ஆங்கிலேயே சர்ஜெண்ட்ஸ்களின் ஆணைக்கு அடிபணிந்து, பயமுறுத்தும் மூங்கில் லத்திகளுடன், மஞ்சள் தலைப்பாகை அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மராத்திக் காவலர்கள், வெறுங்கால்களில், பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காலை 6:45 மணிக்கு, மரங்களடர்ந்த சாலையில், தொண்டர்களின் முதல் பகுதி, அணிவகுத்து வருகிறது. காக்கி உடையில், சட்டையில் செஞ்சிலுவைச் சின்னங்களை அணிந்து, முதலில் வரும், சிறுவர்களும் இளைஞர்களும் அடங்கிய இந்தக் குழு, ஆம்புலன்ஸ் அணியாகும். அவர்கள், காத்திருக்கும் காவலர் படையைக் கடந்து சென்று, தங்கள் ஊர்திகளை நிறுத்தி விட்டு, ஸ்ட்ரெச்சர்களை வெளியே எடுத்து வைத்தார்கள்.  அந்தக் காட்சி, அறுவை சிகிச்சைக்காக, செவிலியரும், உதவியாளர்களும், அறுவை சிகிச்சை அறையைத் தயார் செய்வது போல இருந்தது.

சரியாக 7 மணிக்கு, வெள்ளை உடை அணிந்து, கைகளில், சிவப்பு, பச்சை வெள்ளைநிறங்களில் பதாகைகளை ஏந்தி, போராட்டக்காரர்கள், ‘இந்தியா எங்கள் தாய்நாடு; ஸ்வராஜ்யத்தை அடைந்தே தீருவோம்’, என்னும் பாடலைப் பாடிக் கொண்டு ஊர்வலமாக வரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு அணியையும், ஆரஞ்சு நிற உடை அணிந்த பெண்கள் குழு முன்னின்று வழிநடத்தியது. அவர்களில் பலர் கழுத்தில் மல்லிகை மாலைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள், காவலர்களைக் கடந்து சென்று, அங்கே ஆம்புலன்ஸ் அணி வைத்திருந்த ஸ்ட்ரெச்சர்களுக்குப் பின்னால் சென்று அமைதியாக அணிவகுத்து நின்றார்கள்.

அதையடுத்து நடந்த நிகழ்ச்சிகள் என்னால், என்றுமே மறக்க முடியாதவை. வெள்ளை சர்ஜெண்ட்களால் வழிநடத்தப்பட்ட, மஞ்சள் தலைப்பாகை அணிந்த கரிய மராத்திக் காவலர்கள், அங்கே காத்துக் கொண்டிருந்த போராட்டக்காரர்களின் கூட்டத்தை நோக்கிச் நடக்கத் தொடங்கினர். கூட்டத்தை, நெருங்க நெருங்க, காவலர்கள் நடக்கும் வேகம் அதிகரித்தது. மரணத்துக்குத் தயாராக இருந்த போராட்டக்காரர்கள், வன்முறையினால் விளையப்போகும் விளைவுகளை எதிர்பார்த்து, மருண்ட விழிகளுடன் எதிர் வரும் காவலர்படையை நோக்கினார்கள். காவலர் படை, தடியடியைத் தொடங்கியது.

சிலர் வீதிகளில் இறங்கி ஓடத் தொடங்கினார்கள்.. ஆனால், பெரும்பாலான போராட்டக்காரர்கள் அசையாமல் அங்கேயே நின்றார்கள். லத்திகள் மனித உடலில் இறங்கும் சத்தம் எங்கும் கேட்டது. கூட்டம் கலையத் தொடங்கியது. அடிபட்டுக் கீழே விழுந்த மனிதர்களின் பின்னால், ஆரஞ்சு உடையணிந்த பெண்கள் குழு மட்டும் அமைதியாக நின்றிருந்தது.

காங்கிரஸ் ஆம்புலன்ஸ் குழுவின் மணிச்சத்தம் பலமாகக் கேட்டது. ஸ்ட்ரெச்சரை எடுத்துக் கொண்டு தொண்டர்கள், அங்குமிங்கும் ஓடினார்கள்.. லத்திகள் மனித உடலில் இறங்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.

சில நிமிட அமைதிக்குப் பின்னர், போராட்டக்காரர்களின் அடுத்த அணி பதாகைகளை ஏந்தி வரத் தொடங்கியது. மராத்தியக் காவலர் படை அவர்களை எதிர்நோக்கி அணிவகுத்து நடக்கத் தொடங்கியது. மீண்டும் மோதல் தொடங்கியது. பயந்த சிலர் சிதறி ஓட, பெரும்பாலான மனிதர்கள், காவலர்களின் லத்தியடிகளை எதிர்ப்பின்றி, வாங்கிச் சரிந்தார்கள். அவர்களின் பின்னே, ஆரஞ்சு நிற உடையணிந்த பெண்கள், இந்திய ஸ்வராஜ்யக் கொடியை ஏந்தியபடி, அமைதியாக நின்றார்கள்.

இன்னொருபுரம், ஒரு சிறு குழுவினர், வெளியேற மறுத்து, தங்கள் தலைகளைக் குனிந்து கொண்டு அமைதியாக, மயங்கி விழும் வரை, காவலர்களின் லத்தி அடிகளை வாங்கிக் கொண்டிருக்கிருந்தார்கள். அப்படி விழும் போராட்டக்காரர்களை எடுத்துச் செல்ல சில அடிகள் தொலைவில் ஸ்ட்ரெச்சர்கள் காத்துக் கொண்டிருந்தன.

அடுத்ததாக, 50 பேர் கொண்ட ஒரு சீக்கியக் குழு வந்தது. சீக்கியர்கள் போர் மரபினர். அவர்கள் தம் தலைமுடியைப் பெண்கள் போல நீளமாக வளர்த்து, அதை முடிந்து, அதன் மீது தலைப்பாகை கட்டியிருப்பார்கள்.இவர்கள், அகாலிகள் என்னும் அடிப்படைவாதப் பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்கள் கிர்பான் என்னும் புனித வாளை ஏந்திய வண்ணம்  வந்தனர்.

அவர்களுடன் 15 சீக்கியப்  பெண்களும் வந்தனர். அவர்கள் பருத்தி கால் சராய்களை அணிந்து, அதன் மீது இந்துப் பெண்களைப் போலவே ஆரஞ்சு நிறச் சேலையை உடுத்தியிருந்தனர். ஆண் சீக்கிய வீரர்களைப் போலவே கிர்பான்  ஏந்தி வந்தனர். அழகான அந்த சீக்கியப் பெண்கள், இந்துப் பெண்கள் போல உரக்கப் பேசாத மென்மையான குரலை உடையவர்களாக இருந்தனர். ஆபத்தை விரும்பி ஏற்றுக்கொண்டு வருவது போலப் புன்னகையுடன் வந்தனர்.

அதில் ஒரு பெண், தன்னிடம் இருந்த குழந்தையை, காவலரை நோக்கி உயர்த்தி, வந்து பார் எனச் சவால் விட்டார். இது போன்ற போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது ஆபத்தானது என நான் சொன்னது அவருக்கு மொழிபெயர்க்கப்பட்டது. அதைக் கேட்ட அவர் சிரித்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த சீக்கியர்கள், ‘புனித வாளான கிர்பானை தற்காத்துக் கொள்ளப்பயன்படுத்த மாட்டோம்.. ஒரு போதும் போராட்டக்களத்தை விட்டு வெளியேறவும் மாட்டோம்’, எனச் சூளுரைத்தார்கள்.

‘ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்.. மரணம் வந்தால், ஏற்றுக் கொள்வோம்’, என்னும் அவர்களின் போர்க்குரல், இந்துச் சகோதரர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது. காவலர்கள், சீக்கியர்களைத் தாக்கத் தயங்கினார்கள்.  போராட்டக் களத்தை விட்டு வெளியேறுமாறு,  சீக்கியப் பெண்களை வேண்டினார்கள்.

சீக்கியப் பெண்கள், ‘எங்கள் ஆண்களை விட்டுப் போக மாட்டோம்.. அவர்களுடனே சாவோம்’, எனப் பதிலுரைத்தார்கள்.

குதிரை மீதமர்ந்து, களத்தில், போராட்ட வீரர்களின் தலைகளைக் கண்மண் தெரியாமல் அடித்து உடைத்து முன்னேறிய காவலர் படை, நடுவே நீல நிறத் தலைப்பாகைகளை அணிந்த சீக்கியர் குழுவைக் கண்டு திகைத்து நின்றது.

‘சீக்கியர்கள் வீரமிகுந்தவர்கள்; அவர்களை எப்படித் தாக்குவது?.

காவலர்கள் குரலில் இருந்தது பயமல்ல, மரியாதை!

சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு, சீக்கியர்களை களத்தை விட்டு வெளியேற்றியாக வேண்டும் என முடிவெடுத்த காவலர்கள், சீக்கியப் பெண்களைத் தவிர்த்து, அங்கே நின்றிருந்த ஆண்களைத் தாக்கத் தொடங்கினார்கள்.  சீக்கியர்களின் குழுத்தலைவர் அடிகளை வாங்கத் தொடங்கியிருந்தார்.. நான் அவரிடம் இருந்து ஐந்து அடிகளே தள்ளியிருந்தேன். அவர் கொஞ்சம் உயரம் குறைவானவர், ஆனால், கட்டுமஸ்தான உடல் கொண்டவர்.

காவலர்கள் அடிக்கத் தொடங்கினர். அவர் அசையாமல் நேராக நின்றார். தலைப்பாகை தட்டிவிடப் பட்டது. நீண்ட கருங்கூந்தல் அவிழ்ந்து வீழ்ந்தது. கண்களை மூடிக் கொண்டார். அமைதியாக அடிகளை வாங்கிக் கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் சரிந்து விழுந்தார்.

க்ரெக்

மற்ற சீக்கியர்கள் அவரைப் பாதுகாக்க முயலவில்லை.. மாறாக போர்க்குரல் எழுப்பிக் கொண்டே, அவர் வாயில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தார்கள்.. இந்துச் சகோதரர்கள், அவர் கண்களைச் சுற்றியிருந்த காயங்களின் மீது வைக்க ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.  அந்தச் சீக்கியர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். மேலும் டிகளை வாங்கிட எழுந்து நின்றார்.

காவலர்கள் சோர்ந்து போய் அடிப்பதை நிறுத்தி விட்டார்கள்.. ’எதிர்த்து, மரம் போல நிற்பவனை எவ்வளவு நேரம்தான் அடித்துக் கொண்டேயிருப்பது?’.

(ரிச்சர்ட் பார்லெட் க்ரெக் எழுதிய ‘அகிம்சையின் வலிமை’, நூலில் ஒரு பகுதி)

ரிச்சர்ட் பார்லெட் க்ரெக் , சில எண்ணங்கள்- பாலசுப்ரமணியம் முத்துசாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 11:33

வெண்முரசு எழுதிய பின்…

வியாசர்

அன்பான ஜெ,

நேற்று வெண்முரசின் மீள் வாசிப்பின் போது வேழாம்பல் தவத்தில் விதுரன், பெரும்போரொன்று வரவிருக்கிறது என்று பீஷ்மரிடம் சொல்லிக்கொண்டிருப்பதை படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென,  கரிபடிந்து கிடக்கும் கடைசிநாளின் குருஷேத்திரம் நினைவில் வந்தது.  ஏனோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது.

ஒரே ஒரு கேள்விதான். வெண்முரசு உங்களை மீறி நிகழ்ந்திருந்தாலும் கூட, அது அழைத்துச் சென்ற தூரத்தை பின்னர் கண்ட போது நீங்கள் அவ்விதம் ஏதேனும் உணர்ந்தீர்களா. நீங்கள் அடைந்தது நிறைவா, வெறுமையா அல்லது வேறேதேனுமா.

என்னை சமன் செய்து கொள்ளவும் தான் கேட்கிறேன்.

அன்புடன்

நாகராஜன்.

முடிச்சூர்.

***

அன்புள்ள நாகராஜன்

விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் இரண்டுமே நிறைவடைந்ததும் வெறுமையை, தனிமையை அளித்தன. கொற்றவை எழுதி முடித்ததும் நிறைவை அளித்த நாவல். வெண்முரசு வழியாக நான் வேறொருவனாக ஆனேன். கண்டடைந்தேன், தெளிந்தேன், கடந்து வந்தேன். வெண்முரசு ஒரு தீவிரமான யோகச்செயல்பாடு.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.