Jeyamohan's Blog, page 944
July 27, 2021
வெண்முரசு நடையும் அறிவியல்புனைவும்
அன்புள்ள ஜெ
உங்கள் மொழியின் சாயலுடன் எழுதப்பட்ட சில கதைகளைப் பற்றி ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இளம் படைப்பாளிகளில் உங்கள் மொழியின் சாயல் இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எஸ்.ராஜ்குமார்
அன்புள்ள ராஜ்
சுந்தர ராமசாமியின் ’அக்கரைச் சீமையில்’ என்ற முதல்சிறுகதை தொகுதி வெளிவந்தபோது அன்றிருந்த ஒரு விமர்சகர் புதுமைப்பித்தன் எழுதியதில் சிந்தியதுபோல உள்ளது என்று எழுதினார் – அவரே புதுமைப்பித்தன் சாயலில் எழுதியவர்தான்.
இன்று அக்கதைகளை நீங்கள் பார்க்கலாம், புதுமைப்பித்தன் அப்படியே தெரிவார். ஒரு புளியமரத்தின் கதையிலேயே புதுமைப்பித்தனின் நடை தெரியும். கவனித்துப்பாருங்கள் அந்த முதல் பத்தி அப்படியே புதுமைப்பித்தனுடையது. அதில் ஊடாடும் ஆசிரியர்குரல், அந்த பகடி எல்லாமே.
ஜெயகாந்தனின் முதல்காலகட்டக் கதைகளில் எல்லாம் புதுமைப்பித்தன் தெரிவார். அவருடைய முதல்கதையாக கருதப்படும் டிரெடில் அப்படியே ஒரு புதுமைப்பித்தன் பாணிக் கதை- மனித யந்திரம் கதையின் சாயல்கொண்டது. கு.அழகிரிசாமியின் தொடக்கமும் அப்படியே.
அன்று இதைப்பற்றி சுந்தர ராமசாமி க.நா.சுவிடம் கேட்டபோது க.நா.சு சொன்னார். “நீ புதுமைப்பித்தன் அல்லது மௌனியிலே ஆரம்பிச்சுத்தான் மேலே போகமுடியும். இல்லேன்னா கல்கியிலேயோ கி.வா.ஜவிலேயோ அண்ணாத்துரையிலேயோ ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம துணி வியாபாரம் பண்ணலாம்”
மொழிநடை என்பதை சற்றேனும் ஆராய்பவர் ஒன்றை உணரமுடியும், எந்த எழுத்தாளரும் வெட்டவெளியில் இருந்து நடையை கண்டெடுக்க முடியாது. முன்னோடியின் மொழியிலிருந்தே ஒருவரின் நடை திரண்டுவர முடியும். மொழிநடை என்பது வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு மனிதர்கள் வழியாக உருமாற்றங்களுடன் சென்றுகொண்டே இருக்கும் ஒன்று.
ஏனென்றால் மொழிநடை என்பது மொழிசார்ந்தது அல்ல, அதற்கப்பால் உள்ள அகம் சார்ந்தது. ஒருவருக்கு அவருக்கான அகம் என ஒன்று உண்டு. ஆனால் அது அக்காலகட்டத்தின் பொதுவான அகம் ஒன்றின் பகுதிதான் அது. தனித்தன்மை என்பது அந்த பொது அகத்தின் ஒரு கூர்முனை மட்டுமே.
எந்த எழுத்தாளரும் முற்றிலும் தனித்தன்மை கொண்டவர் அல்ல. ஆகவே எந்த எழுத்துநடையும் முற்றிலும் தனித்தன்மை கொண்டது அல்ல. இலக்கியத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று இது. தனித்தன்மை என்பது உண்டா? உண்டு, ஆனால் அது மிகச்சிறியது
நூறாண்டுகளுக்குப் பின் ஒரு காலகட்டத்தின் நல்ல இலக்கியங்களை தொகுத்துப் பார்த்தால் ஒருவரே எழுதியதுபோலத் தோன்றும். கூர்ந்து பார்த்தால்தான் வேறுபாடு தெரியும். புறநாநூறு ஒருவரே எழுதியதாக இருக்கலாம் என சுஜாதா முன்பொருமுறை சொல்லி ஒரு விவாதத்தைக் கிளப்பினார். தமிழினிக்காக ராஜமார்த்தாண்டன் தொகுத்த நவீனத் தமிழ்க்கவிதைகளின் பெருந்தொகுதியைப் பாருங்கள் [கொங்குத்தேர் வாழ்க்கை]. அத்தனை கவிதைகளும் ஒருவரே எழுதியதுபோல சட்டென்று ஒரு பிரமை உருவாகும். வேறுபாடுகள் பிறகே தெரியவரும்.
ஒரு மொழிச்சூழலுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு பொதுத்தன்மை உண்டு. அதற்குள் வெவ்வேறு மொழியொழுக்குகள் உண்டு. தமிழில் புதுமைப்பித்தனின் மொழிநடையின் தொடர்ச்சியை கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன் என்று தலைமுறைகள் வழியாக பார்க்க முடியும். கு.ப.ராவுக்கு, ந.பிச்சமூர்த்திக்கு இப்படித் தொடர்ச்சி உண்டு. கு.ப.ரா முதல் தி.ஜானகிராமன் வழியாக பாலகுமாரன் வரை ஒரு கோடு இழுக்க முடியும். புதுமைப்பித்தனின் முன்தொடர்ச்சி பாரதிக்குச் செல்லும். சின்னச்சங்கரன் கதை படித்துப்பாருங்கள் தெரியும், புதுமைப்பித்தன் பாரதியை இமிட்டேட் செய்தாரா என்றே ஐயம் கொள்வோம்
இதற்குள்தான் தனித்தன்மைகள் உருவாகின்றன. புதுமைப்பித்தனில் இருந்து சுந்தர ராமசாமி அவருடைய நடை நோக்கிச் செல்லும் பயணத்தை அவருடைய காலவரிசைப்படுத்தப்பட்ட கதைகளில் காணலாம். ஆனால் கடைசிக்காலகட்டக் கதையான பிள்ளைகெடுத்தாள் விளையில்கூட உள்ளே புதுமைப்பித்தன் இருக்கிறார். இருந்துகொண்டேதான் இருப்பார். அது புதுமைப்பித்தன் அல்ல. ஒரு மொழிக்கூறு.
நான் எழுதவந்தபோது சுந்தர ராமசாமியின் மொழிநடையே தமிழில் வலுவானதாக இருந்தது. அன்று வண்ணதாசன், நாஞ்சில்நாடன், ஜெயகாந்தன், சுஜாதா என பலர் எழுதிக்கொண்டிருந்தனர். சுந்தர ராமசாமியில் இருந்து நான் தொடங்கினேன். என் கதைகளில் சுந்தர ராமசாமி என்னுடைய வட்டாரவழக்கால் கொஞ்சம் மறைந்திருப்பார். கட்டுரைகளில் தெளிவாகவே வெளிப்படுவார். அன்று விமர்சகர்கள் என் நடையிலிருந்த சுந்தர ராமசாமிச் சாயலை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இன்று என் நடை தனித்துவமானது என கருதப்படுகிறது. பிறரில் செல்வாக்கு செலுத்துகிறது என்கிறார்கள். உண்மை, நான் என் நடையை முப்பதாண்டுகளில் உருவாக்கிக் கொண்டேன். ஆனால் உள்ளூர இன்றும் சுந்தர ராமசாமி இருக்கிறார். என் நடையால் பாதிப்புற்று எழுதும் ஒருவரிலும் சுந்தர ராமசாமி சென்று சேர்கிறார். இந்தத் தொடர்ச்சி வெட்கப்படவேண்டிய ஒன்றல்ல, வெறுத்து ஒதுக்கவேண்டியதும் அல்ல, இது ஒரு மரபு, ஒரு பண்பாட்டு நிகழ்வு, ஓர் அகத்தொடர்ச்சி.
முந்தைய தலைமுறையின் முக்கியமான எழுத்தாளருடைய மொழிநடை, பாணிக்கு அணுக்கமாக ஆரம்பிக்காத ஒருவர் நல்ல எழுத்தாளரே அல்ல. எந்த இடத்தில் அவர் கடந்துசெல்கிறார் என்பதுதான் கேள்வி.
சென்றதலைமுறையின் ஆற்றல்மிக்க நடைக்கு அணுக்கமாக ஆரம்பிக்காத ஒருவர், அதை உள்வாங்கிக் கடந்துசெல்லாத ஒருவர் இரண்டுவகை நடைகளையே அடைவார். ஒன்று பொதுநடை. அது சூழலில் இருந்து வந்து சேர்வதுதான். செய்திகள், கேளிக்கைகள் வழியாக ஒரு மொழிநடை அது எவரும் முயலாமலேயே உள்ளே நுழைந்து உள்ளமாக ஆகிறது. சாதாரணமாக எழுத்தில் வெளிவருகிறது.
இன்னொரு வகை பாதிப்பு வணிக எழுத்து நடை. நாம் புனைவுகளை இளவயதிலேயே வாசிக்க ஆரம்பிக்கிறோம். அவை பெரும்பாலும் வணிக எழுத்துக்கள். அந்த வணிகஎழுத்தின் நடை மெல்ல உள்ளத்தில் படிகிறது. இப்போது முகநூலில் உள்ள அக்கப்போர்நடை நம் உள்ளமாக ஆகிவிடுகிறது. அதுவும் ஒருவகை வணிகநடையே.
இந்த இரண்டுநடையிலும் எவரும் எதையும் பெரிதாக அடைய முடியாது. சிந்தனைகளை, நுண்ணுணர்வுகளை இந்த நடைகளில் எழுத முடியாது. ஏனென்றால் இவை அவற்றுக்கான நடைகள் அல்ல. சிந்தனைகளை இவை அக்கப்போர்களாக ஆக்கும். நுண்ணுணர்வுகளை தேய்வழக்குகளாக ஆக்கும். இவை ஒருவகை தொற்றுக்கள் போல. இவற்றை எப்படிக் கடப்பது என்பதே இன்றைய எழுத்தாளனின் மிகப்பெரிய அறைகூவல்.
இந்த நடைகளில் எழுத ஆரம்பிப்பவர் மிகமிக விரைவில் வெளிவந்தாகவேண்டும். கொஞ்சம் உள்ளம் அதில் அமைந்துவிட்டால் அதன்பின் அவருக்கான தனிநடையே உருவாக முடியாது. வாழ்நாள் முழுக்க அதற்கு வாய்ப்பே இல்லை. தனிநடை இல்லாத எழுத்தாளன் ஒருவகையில் எழுத்தாளனே அல்ல என்றுகூடச் சொல்லலாம். அது மாபெரும் இழப்பு.
எழுத்தாளர்களில் மிகச்சிலரையே நாம் நினைவில் வைத்திருக்கிறோம். பலருக்கு மொழியடையாளமே இல்லை. காரணம் இதுதான். இன்றைய இளம் எழுத்தாளர்கள் மிகமிக ஜாக்ரதையாக இருக்கவேண்டிய இடம் அது. எந்த அளவுக்கு பொதுப்பெருக்கில் இருந்து விலகி நிற்கிறார்களோ அந்த அளவுக்கே தனித்தன்மை அமையும். அரசியல், மொழி எதிலும்.
ஆனால் இன்றைய முகநூல் சூழலில் அது மிகக்கடினம். சென்ற முப்பதாண்டுகளுக்கு முன்புவரை எழுத்தாளனுக்கு இலக்கியவிமர்சகனின் எதிர்வினை வரும். இலக்கிய நண்பர்களின் எதிர்வினையும் வாசகனின் எதிர்வினையும் வரும். இன்று எந்த இலக்கிய அடிப்படையையும் அறியாத பாமரர்களின் எதிர்வினை அதிகமாக வருகிறது. அது மிகப்பெரிய சுமை.
இன்றைய முகநூல் சூழல், பொதுவாசிப்புச் சூழல், எழுத்தாளனிடம் கோருவதென்ன? பொதுநடையில் எழுது, அக்கப்போர் நடையில் எழுது, அதைமட்டுமே ரசிப்போம் என்றுதான். கொஞ்சம் முயற்சி எடுத்து எழுதினாலும் எதிர்ப்பார்கள், ஏளனம் செய்வார்கள், ஆலோசனை கூறுவார்கள், அல்லது புறக்கணிப்பார்கள். அவர்களை நோக்கி எழுத ஆரம்பிக்கும் எழுத்தாளன் தனக்கான நடையை அடையவே முடியாமலாவான்.
என்னுடைய எழுத்துநடையை அடைய நான் முப்பதாண்டுக்காலம் மொழியில் பயணம்செய்திருக்கிறேன். இன்று எழுதவரும் ஓர் எழுத்தாளன் முதல்கதையிலேயே முதிர்ந்த தனிநடையுடன் வருவான் என எண்ணுவதுபோல அறிவின்மை வேறில்லை. அவன் என் நடைவழியாக தன் நடை நோக்கிச் செல்கிறான். நான் சுந்தர ராமசாமியிலிருந்து என் நடைக்கு வந்ததுபோல.
இங்கே இன்னொன்று உண்டு. செயற்கையாக மொழிநடைக்கு முயல்வது. அது அபத்தமான மொழிநடையையே உருவாக்கும். நடை என்பது அந்த ஆசிரியனின் ஆளுமையேதான். அவனுடைய தரிசனம், அவனுடைய ரசனை, அவனுடைய வாசிப்பு எல்லாமே அதிலிருக்கும். ஓர் எழுத்தாளனின் வாழ்க்கைப்பார்வை முதிர்ந்து, ரசனை கூரடைந்து, வாசிப்பு முழுமையடையும்போதே அவன் நடையும் தனியடையாளம் கொண்டு உருவாகி வருகிறது.
என்னுடைய நடையில் வெண்முரசுநடை தனித்தன்மை கொண்டது. அது கொற்றவையில் உருவாகி வெண்முரசில் முழுமைகொண்ட ஒன்று. நான் அதை பிற புனைவுகளுக்குப் பயன்படுத்தவில்லை. அந்நடையின் செல்வாக்கு இன்றுள்ள பல படைப்பாளிகளிடமிருக்கிறது. அது இயல்பே. அது ஒரு மாபெரும் படைப்பு. அந்தச் செல்வாக்கை அது உருவாக்கியே தீரும்.
தமிழில் இதற்கு முன்னரும் படைப்புக்களின் மொழிநடை ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. மோகமுள்ளின் நடை, ஜே.ஜே.சிலகுறிப்புகளின் நடை. அவற்றுடன் ஒப்பிட நூறுமடங்கு பெரியதும் தீவிரமானதுமாகும் வெண்முரசு.
அத்துடன் இன்னொன்று உண்டு. தமிழில் இதுவரையிலான நவீன இலக்கியத்தில் வரலாறு, தொன்மம், புராணம் ஆகியவற்றை கையாண்ட புனைவுகள் சொல்லும்படி வேறேதுமில்லை. தத்துவசிந்தனைக்குரிய உருவக மொழியை, ஊழ்கநிலையைச் சொல்வதற்கான தாவும்மொழியை கையாண்ட எத்தனை படைப்புக்கள் தமிழில் உள்ளன?
அன்றாட யதார்த்தத்தையே தமிழின் பெரும்பாலான புனைகதைகள் பேசின. அவற்றின் அகம் என்பதுகூட அன்றாடம் சார்ந்த உளநிலைகள்தான். ஆன்மிகம் சார்ந்த, மெய்யியல் சார்ந்த ஆழம் தமிழ்ப்புனைவுலகில் கையாளப்பட்டதே இல்லை.
மீபொருண்மை [மெட்டஃபிஸிக்ஸ்] சார்ந்து எத்தனை புனைவுகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன என்று பாருங்கள். அவை நவீன இலக்கியமே அல்ல என்ற நிலைபாடுதான் சென்ற இருபதாண்டுகள் வரை இருந்தது இல்லையா? இன்றும் அவை தேவையற்றவை என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா?
வெண்முரசு இந்தத் தளங்களிலெல்லாம் விரிந்து செல்லும் ஒரு புனைவுப்பெருந்தொகை. தமிழில் இவற்றை கையாள்வதற்கு வெண்முரசுதான் முன்னுதாரணம். எல்லாவகையான அதீதநிலைகளுக்குமான மொழிநடை அதிலுள்ளது.
அறிவியல் புனைவு எழுத வருபவர் அன்றாடத்தை எழுதவில்லை. அவர் எழுத வருவது ஒரு வகை மீமெய்மையின் உலகம். மிகைபுனைவின் உலகம். அதற்கு அவர் தமிழ் நவீன இலக்கியத்தில் பெரும்பாலும் அனைவருமே எழுதிய அன்றாட யதார்த்தத்தின் மொழியை கையாள முடியாது.ஆகவே அவர் இயல்பாக வெண்முரசின் மொழிநடையை நோக்கிச் செல்கிறார்
இன்றைய அறிவியல்புனைவுகளைப் பற்றி இங்கே வாசகர்களுக்கு தெரியவில்லை என புரிகிறது. கம்ப்யூட்டர்கள், ரோபோக்கள், விண்வெளிப்பயணங்கள், தொழில்நுட்பங்கள்தான் அறிவியல்புனைவு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்குரிய ‘ஹைடெக்’ மொழிதான் அறிவியல்புனைவுக்குரியது என நம்புகிறார்கள்.
அறிவியல்புனைவு இன்று தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல. காலம்,வெளி பற்றிய கருத்துக்களை மாற்றி அடுக்கி ஆராயும் ஒரு தளம். காட்சி, இருத்தல், மெய்மை,வெறுமை என்னும் கருத்துருக்களை ஆராயும் புனைவுலகு. அதற்கு பழைய ‘ஹைடெக்’ செயற்கைமொழி உதவாது. மெய்யியல், தத்துவம், தொன்மம் ஆகியவற்றைக் கையாளும் மொழி அதற்குத் தேவையாகிறது. ஒருவகையான மீஉருவக மொழி அது. ஒரே மொழி கம்பரையும் வள்ளுவரையும் ஆயிரமாண்டுகளுக்கு பின்னர் வரும் உலகையும் இணைக்கவேண்டும். அத்தகைய நடை.
அதை எழுதும் புதியபடைப்பாளிகள் அதற்கான முன்னுதாரணமாக வெண்முரசின் நடையை கொள்கிறார்கள். ஏனென்றால் வெண்முரசுதான் அந்த மீமெய்நிலைகளை கையாண்டிருக்கிறது. ஆனால் அந்நடையை அவ்வாறே அவர்கள் பயன்படுத்தவில்லை. அக்கதைகளை கொஞ்சம் கவனித்துவாசிப்பவர்கள் அதைப்புரிந்துகொள்ளலாம். அவர்கள் அந்நடையில் இருந்து மேலே செல்கிறார்கள்.
வெண்முரசின் நடையை வைத்து அவர்கள் அறிவியல்புனைவில் விளையாடுகிறார்கள் என்று படுகிறது. அதைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இன்னும் கூர்மையாகச் சொல்லப்போனால் அருவமாக ஆக்கிக்கொள்கிறார்கள். அதனூடாகக் கடந்துசெல்கிறார்கள். புதியதொரு மொழியை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
புதியவை உருவாகி வரும்போது பெரும்தடையாக அமைபவர்கள் இருவர். பழையபாணி விமர்சகர்கள். தேங்கிப்போன வாசகர்கள்.
ஜெ
குகை
2013 ஜனவரியில் நாங்கள் நண்பர்கள் ஆந்திரா, சட்டிஸ்கர், ஒரிசா பகுதிகளிலுள்ள குகைகளைப் பார்க்கும்பொருட்டு ஒரு பயணம் சென்றோம். ஆந்திரத்தில் உள்ள பெலம் போன்ற மாபெரும் நிலக்குகைகள், சட்டிஸ்கரின் மலைக்குகைகள். பல குகை ஓவியங்களையும் பார்த்தோம். அவை குகைகளின் வழியே என்னும் நூலாக வெளிவந்துள்ளன.
குகைகளுக்குள் செல்லும்போது நான் நிம்மதியிழந்து இருந்தேன். தலைக்குமேல் காடுகள், மலைகள், ஊர்கள். அடியில் ரகசியமாக நான் இருந்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன். புழுக்களின் வாழ்க்கை. பாதாள நாகங்களின் வாழ்க்கை. குகையை நம் மரபு சொல்லும் பாதாள உலகங்களுடன் இணைக்காமல் இருக்கவே முடியவில்லை.
குகை நம் மரபில் ஆழ்ந்த குறியீட்டு பொருளிலேயே தொடக்கம் முதல் இருந்து வந்துள்ளது. சம்ஸ்கிருதத்தில் குகா என்னும் சொல்லின் வேரில் இருந்தே குஹ்யம் [மறைந்திருப்பது] என்ற சொல்லும் வந்தது. உள்ளம் குகை எனச் சொல்லப்படுகிறது. சிவன் குகேஸ்வரனாக வழிபடப்படுகிறான்.
2019ல் ஒருநாள் முன்பு நான் வடகேரளத்தில் தொலைதொடர்புத் துறையில் வேலைசெய்தபோது நிகழ்ந்த ஓர் அனுபவத்தை நினைவுகூர்ந்தேன். கோழிக்கோட்டில் தொலைபேசி அமைக்க தோண்டியபோது ஊழியர்கள் ஒரு ரகசியக் குகைப்பாதையை கண்டடைந்தனர். சாமூதிரி ஆட்சியின்போதோ , போர்ச்சுக்கீசியர் ஆட்சியின்போதோ அமைக்கப்பட்டது. கைவிடப்பட்டு மறக்கப்பட்டது. அது நகரின் அடியில் பல கிளைகளுடன் நெடுந்தொலைவு செல்வதாகச் சொல்லப்பட்டது. அதை செய்தியாக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்
மன்னராட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட பலநூறு சுரங்கவழிகள் நம் கால்களுக்கு அடியில் இன்றும் புதைந்துள்ளன. அவை தூர்ந்துவிட்டிருக்கலாம். அல்லது ரகசிய அறைகளாக அங்கே இருந்துகொண்டும் இருக்கலாம். அங்கே நாமறியாத உயிர்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம். அல்லது வெறுமையும் இருளும் நிறைந்திருக்கலாம்.அந்த எண்ணம் என்னை தூண்ட உடனே எழுத ஆரம்பித்த கதை இது.
இந்தக்கதை நம்முள் உள்ள, நாம் மட்டுமே அறிந்த குகைவழிகளைப் பற்றியது. இதை என் பிரியத்திற்குரிய கவிஞர் அபி அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ
அன்புடன்
கவிஞர் அபி அவர்களுக்கு
***
ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை
வான்நெசவு முன்னுரைமலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை
தேவி – முன்னுரை
பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை
எழுகதிர் முன்னுரைமுதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரைதங்கப்புத்தகம் முன்னுரைஅந்த முகில் இந்த முகில் முன்னுரை
பத்துலட்சம் காலடிகள் முன்னுரை
இருகலைஞர்கள் முன்னுரை
உடையாள் முன்னுரை
ஞானி முன்னுரை
கதாநாயகி முன்னுரை
வாசிப்பின் வழிகள் முன்னுரை
வணிக இலக்கியம் முன்னுரைஇலக்கியத்தின் நுழைவாயிலில் முன்னுரைஒருபாலுறவு முன்னுரை
பேசாதவர்கள், கடிதங்கள்-3
அன்புள்ள ஜெ
ஊமையை தூக்கிலிடுதல் என்ற ஒற்றை வரியாக நான் பேசாதவர்கள் கதையை புரிந்துகொண்டேன். சிலசமயங்களில் பெரிய நிகழ்வுகளை விட இதைப்போன்ற படிமங்கள் ஆழமான வடுவாக நெஞ்சிலே நின்றுவிடுகின்றன. வெறுமே தூக்கில்இடுதல் அல்ல. முச்சந்தியில் ஒரு வசைச்சொல் போல நிறுத்துதல். முச்சந்தியில் தொங்குபவன் எந்த தெய்வத்திடம் முறையிடுவான்? மொத்தச் சமூகமே அவனை அப்படி தொங்கவிட்டுவிட்டது.
இப்படி அழிக்கப்பட்டவர்கள் தெய்வமாகிறார்கள். அதை முந்தைய கதைகளில் சொல்லிவிட்டீர்கள். வேறுவழியே இல்லை. மலையத்தி வருவது ஒரு தெய்வத்திடமிருந்து கருக்கொள்ள. அந்த தெய்வம் சொல்லாத அத்தனை சொற்களையும் பெற்றுக்கொள்ள. எத்தனை ஆயிரம் சொற்கள் வழியாக இனி வரலாற்றில் அதைச் சொல்லிச் சொல்லி முடிக்கவேண்டியிருக்கிறது!
தமிழ்க்குமரன்
அன்புள்ள ஜெ,
என்றாவது நாம் அனைத்தையும் எரித்து விட்டு வெளிவர வேண்டி இருக்கிறது. அது மலரும் நினைவுகள் ஆனாலும் சரி, மோசமான அனுபவங்கள் சார்ந்த நினைவுகள் ஆனாலும் சரி. ஒரு பீடிக்கப்பட்ட நிலையில், வெளிவர முடியாத அல்லது வெளிவர தோன்றாத ஒரு மீளா சூழலில் நம்மை சிக்க வைத்து விடக்கூடிய பெரும் அபாயங்கள் நிறைந்தது அந்த நினைவுகள் என்று தோன்றுகிறது. அந்த சிறையில் தென்படும் சித்திரவதை கருவிகள், அந்த டம்மி அனைத்தும் வெறும் பொருள்கள் என்ற நிலை மட்டும் தான் அவற்றிற்கு இந்த பரு உலகில். ஆனால், அதன் மீதெல்லாம் ஏற்றி வைக்கப்படும் அந்த பயங்கரம் அல்லது அமானுஷ்யம் அனைத்தும் நம் நினைவுகளில் இருந்தும் அல்லது வழிவழியாக சொல்லப்பட்டு வரும் யாரோ ஒருவரின் நினைவில் இருந்தும் கொடுக்கப்பட்டவை என்றே நினைக்கிறேன். அவை நம் கற்பனைகளின் வழியாக மேம்படுத்தப்பட்டு வேறொருவனுக்கோ அல்லது வேறொரு தலைமுறைக்கோ கடத்தப்படுகிறது. இந்த கதையில் தன் பாட்டனின் நினைவை வாங்கி செல்லும் அந்த பேரன் அதனை இன்னொரு பரிணாமத்திற்கு இட்டு செல்லலாம்.
இதனை அந்த மலைமகள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் தான் குஞ்ஞன் இறந்ததை அறிந்தும் அவன் உடல் எரிவதை பார்க்காத அவள் மனம் அவன் இறப்பை ஒப்புக்கொண்டிருக்காது. அவன் நினைவுகளில் இருந்து அவள் வெளிவர வேண்டும் என்றால் அவன் நினைவின் உருவமாக ஏதோ ஒன்றை அவள் அழிக்கவேண்டும். அந்த ஒன்றாக தான் அந்த டம்மியை அவள் வேறொரு நிலையில் பார்த்திருக்க கூடும். அவள் அதை எரித்து விட்டு செல்லும் போது, தன் நினைவுகளை மட்டுமில்லாமல் அதுவரை அதன் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை நினைவுகளையும் சாம்பலாக்கி சென்றுவிடுகிறாள். அங்கே தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டதை, ஓய்வுபெற்றதாக நம்பியிருக்கும் தாணப்பன் பிள்ளை வாழ்கிறார். ஆனால், வேலையில் இருந்து நீக்கப்பட்டதை தாங்கமுடியாத கருணாகரக் கைமள், அதில் இருந்து விடுபட முடியாத நினைவினால் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார். கடந்து வருவதில் ஒரு பெரும் விடுதலை இருக்கிறது, ஆனால் மனிதன் பற்றிக்கொண்டிருக்க மட்டுமே விரும்புகிறான். இதுவே அவனது ஆதி குணமாக இருந்திருக்க கூடும். ஒரு பெரும் தரிசனம் நோக்கி மறுபடியும் அழைத்து சென்றதற்கு பெரும் நன்றி.
பேரன்புடன்,
நரேந்திரன்.
பேசாதவர்கள், ஒரு குறிப்புதலித் அறிவுஜீவிகளை இழிவுசெய்பவர்கள் – கடிதம்
இலக்கியம், இடதுசாரிகள், தலித்தியர்
அன்புள்ள ஜெ
தலித்துக்கள் மீதான இடைநிலைச் சாதியினரின் மனநிலை பற்றிய உங்கள் குறிப்பை வாசித்தேன். என் எண்ணத்தில் எழுந்தவற்றையே எழுதியிருக்கிறீர்கள். நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. பேரா.ஸ்டாலின் ராஜாங்கம், பேரா.தர்மராஜ் போன்றவர்களின் கல்வித்தகுதியும் அவர்கள் எழுதிய நூல்களின் தரமும் தமிழில் தலைசிறந்த அறிஞர்களில் அவர்களைச் சேர்க்கின்றன. ராஜ்கௌதமன் போன்றவர்கள் பி.டி.சீனிவாச ஐயங்கார், ந.மு.வெங்கடசாமி நாட்டார் போன்றவர்களின் வரிசையில் வைக்கப்படவேண்டியவர்கள்.
ஆனால் அவர்களை இன்று இடைநிலைச் சாதியைச் சேர்ந்த குஞ்சுகுளுவான்களெல்லாம் அலட்சியமாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்களின் தகுதியை மட்டம் தட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்லவேண்டுமென நினைக்கிறார்கள். அது வேண்டுமென்றே செய்வது இல்லை. உண்மையிலேயே அவர்களுக்கு அந்த தெனாவெட்டு இருக்கிறது. நம்பித்தான் செய்கிறார்கள்.
அந்த தோரணையுடன் பேசுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட புலியூர் முருகேசன், யமுனா ராஜேந்திரன், யுவகிருஷ்ணா, தமிழ் ஸ்டுடியோ அருண் போன்றவர்கள் அவர்களெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன ஆய்வுசெய்திருக்கிறார்கள்? என்ன வாசித்திருக்கிறார்கள்? வெறும் முகநூல்வம்பாளர்கள். பழங்காலத்தில் ஐம்பது வயதான தலித் முதியவரை பத்துவயதான ஊர்க்காரப் பையன் அடா புடா என அழைப்பான். அதே மனநிலைதான் இது.
இந்த கூட்டம் மறந்தும் இந்த தலித் ஆய்வாளர்களின் நூல்களை குறிப்பிடுவதில்லை. அவற்றைப்பற்றி ஒருவரி எழுதுவதில்லை. அவர்கள் ஆய்வுசெய்கிறார்கள் என்பதையே மறைத்துவிடுவார்கள். தங்கள் பட்டியல்களில் அந்தப்பெயர்களை மறைத்து தொ.பரமசிவம் போன்ற தங்களுக்கு வேண்டியவர்களையே முன்வைப்பார்கள்.
யோசித்துப்பாருங்கள். தொ.பரமசிவம் நூல்களையும் ராஜ் கௌதமன் நூல்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள். தொ.பரமசிவம் எந்த ஆய்வுமின்றி நினைவில் இருந்தவற்றை கற்பனை கலந்து அடித்துவிட்டவர். ஆய்வுலகில் அவரை அம்பலப்படுத்திக்கொண்டே இருந்தனர். ஆனால் அவர் இவர்களுக்கு ஹீரோ. ஏனென்றால் அவர் இடைநிலைச்சாதி ஆய்வாளர். ராஜ் கௌதமன் ஆய்வு முறைமையில் நின்று முழுமையான வாசிப்புடன் பெரும் ஆய்வுநூல்களை எழுதியவர். ஆனால் அவரை கண்டுகொள்ளவே மாட்டார்கள். அவர் அப்படியே மறக்கப்படவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
அவரை உங்களைப்போன்ற எவரேனும் கண்டுகொண்டு கௌரவித்தால் உடனே அவரை பார்ப்பன அடிவருடி என முத்திரைகுத்தி வசைபாடுவார்கள். ராஜ் கௌதமன் தன் தொடக்கம் முதலே சுந்தர ராமசாமிக்கு நெருக்கமானவர். சுந்தர ராமசாமி அவரை தொடர்ந்து முன்வைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் எதிரெதிர் கோணங்கள் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
இவர்களின் நோக்கம் ஒன்றுதான். தலித் அறிவியக்கம் தனக்கான சிந்தனையாளர்களுடன் முன்னெழக்கூடாது. இவர்களின் பிற்படுத்தப்பட்டோர் அரசியல் மட்டுமே இங்கிருக்கவேண்டும். தலித் அறிவுஜீவிகளை இவர்கள் புறக்கணிப்பார்கள். வேறெவரும் அவர்களை கண்டடையவும்கூடாது. இவர்கள் நினைப்பது இதுதான். காலச்சுவடு நூலாக போடாவிட்டால் ஸ்டாலின் ராஜாங்கம் எங்கே இருந்திருப்பார். ஸ்டாலின் ராஜாங்கம் இன்று ஆய்வாளராக கருதப்படுவது காலச்சுவடு அவர் நூல்களை வெளியிட்டு கல்வித்துறை முழுக்க கொண்டுசென்று சேர்த்ததனால்தான். அந்த வயிற்றெரிச்சல்தான் இப்படி எழுதவைக்கிறது.
இதிலுள்ள கசப்பூட்டும் அம்சம் புலியூர் முருகேசன், யமுனா ராஜேந்திரன், யுவகிருஷ்ணா, அருண் போன்ற மொக்கைகளுக்கு இருக்கும் அந்த தன்னம்பிக்கைதான். அது எங்கிருந்து வருகிறது? கேவலமான சாதிமேட்டிமைப்புத்தி. அதன்மேல் துளிகூட தன்விமர்சனம் இல்லாமல் திரிகிறார்கள். அறிவுலகத்தின் பூஞ்சைக்காளான்கள் இவர்கள். இவர்களால் தொடர்ந்து தலித் சிந்தனையாளர்கள் இழிவுசெய்யப்படுகிறார்கள்.
ஆ.பாரி
புதிய எழுத்தாளர்களுக்கு– கடிதங்கள்
மதிப்பிற்குரிய ஜெ. அவர்களுக்கு அன்பு வணக்கம்.
என் பெயர் சரவணன். நான் எழுதிய ஒரு சில கதைகள், கட்டுரைகள் பிரசுரமானபோதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று இவ்வளவு நாளும் நின்று யோசித்ததில்லை.
உங்களது இந்த சிறு கட்டுரை நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னைப் பிடித்து உலுக்கி தெளிவாக்கி விட்டது.நான் படித்த கல்லூரி ஆண்டு மலரில் 2000 வது ஆண்டு முதல் கதை பிரசுரமானது. 2003ஆம் ஆண்டு திருச்சி மாலைமுரசு பொங்கல்மலர், 2003, 2007 தினமலர் டிவிஆர் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு,2010ல் இரண்டாம் பரிசு, 2018 ல் முதல் பரிசு,தமிழக அரசு குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு மையமும், ராணி வாரஇதழும் நடத்திய போட்டியில் 2006 மே மாதத்தில் முதல் பரிசு,அமுதசுரபி வார இதழில் முத்திரை சிறுகதையாக தேர்வு பெற்ற சிறுகதை 2006 ஆம் ஆண்டு இலக்கியச்சிந்தனை சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
சமீபத்தில் வானவில் பண்பாட்டு மையம் நடத்திய பாரதி சிறுகதைப்போட்டியில் பிரசுரத்திற்கு உரிய கதையாக தேர்வு பெற்ற சிறுகதை கல்கி வார இதழில் வெளிவந்துள்ளது.இந்த சிறுகதைகள் எல்லாம் ஏதோ ஒரு விஷயம் இருப்பதால்தான் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் அவற்றை பிரசுரத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஆக, இனி நான் செய்ய வேண்டியது தங்கள் கட்டுரையில் கூறியுள்ள மேற்கூறிய வரிகளை மனதில் கொண்டு செயல்படுவதுதான் எனக்கும், இலக்கியத்துக்கும் நல்லது என்பதை புரிந்து கொண்டேன்.
நான் எதைப்பற்றி சிந்திக்க வேண்டும், என்ன செய்யவேண்டும் என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
அன்புடன்
ஆரூர் சரவணா
(க.சரவணன், திருவாரூர்)
அன்புள்ள ஜெ
புதிய எழுத்தாளர்கள் செய்யவேண்டியதென்ன என்பதைச் சொல்லியிருந்தீர்கள்.முக்கியமான கருத்து அது. பலபேர் பிளாக்கில் எழுதிவிட்டு அதன் இணைப்பை அனுப்புகிறார்கள். ஃபேஸ்புக்கில் போட்டு லிங் அனுப்புகிறார்கள். தெரிந்த சிலபெர் வாசிக்கலாம். ஆனால் இலக்கியத்தின் உண்மையான சவால் சரியான வாசகர்களிடம் செல்வதுதான். அதற்கு பலரும் வாசிக்கும் இதழ்கள் தேவை. சு.வேணுகோபாலோ யுவன் சந்திரசேகரோ எழுதும் ஒரு இதழில் அருகே நம் கதை வெளியானால்தான் அதை இலக்கிய உலகம் கவனிக்கும். அதுதான் நமக்கு மரியாதை. நாம் அந்த வரிசையில் வருகிறோம் என்று பொருள்.
அவ்வாறு வெளியாவது ஒரு தடையை தாண்டுவதுதான். இதழ் நல்ல இதழாக இருந்தால் அவர்களுக்கு தடை அதிகம். தமிழினி அதிகம் கவனிக்கப்படுவது ஏன் என்றால் அவர்கள் நிறைய கதைகளை வெளியிடுவதில்லை. தேர்ந்தெடுத்த ஒன்றிரண்டு கதைகளைத்தான் வெளியிடுகிறார்கள். ஆகவே அந்தக்கதைகளுக்கு இயல்பாகவே ஒரு முக்கியத்துவம் வந்துவிடுகிறது. யாவரும் தளம் ஏராளமான கதைகளை வெளியிடுகிறது. பல கதைகள் அமெச்சூர் கதைகள். அங்கே ஒரு கதை வெளிவந்தால் வாசகர்கள் எவராவது சுட்டிக்காட்டாவிட்டால் வாசிக்க மாட்டார்கள்.
இன்றைய எழுத்தாளன் இந்த இதழ்களில் வெளிவருவதை தனக்கான ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளவேண்டும். அந்தக்கதை கவனிக்கப்படுவதை இன்னொரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தச்சவால்கள் அவனை பண்படுத்தும். கதையின் உள்ளடக்கம் பற்றிய அரசியல் விவாதங்களை தவிர்க்கவேண்டும். உள்ளடக்கம் அவனே கண்டுபிடிக்கவேண்டியது. விவாதித்து பொதுக்கருத்தாக உண்டாக்கபப்டும் உள்ளடக்கம் இலக்கியத்தில் எந்த அர்த்தமில்லாதது. ஆகவெ கதையின் அரசியல், சமூகவியல் பற்றி பேசுவதை அவன் செவிகொள்ளக்கூடாது. ஆனால் கதையின் வடிவம் பற்றிய பேச்சு அவனில் இருந்துகொண்டே இருக்கவேண்டும். கதை சரியாகச் சென்று சேர்கிறதா என்று கவனிக்கவேண்டும். மற்ற மாஸ்டர்கள் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பர்க்கவேண்டும். கதையை தன்னைப்போன்றவர்களுடன் விவாதித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
நான் என்னைப்பற்றிச் சொல்கிறேன். நான் ஒரு வாசகன் மட்டுமே. ஓர் ஆசிரியனின் நான் வாசித்த இரண்டு மூன்று கதைகள் அமெச்சூர்த்தனமாக இருந்தால் அதன் பின் அவனை வாசிக்கவே மாட்டேன். என் நேரம் வீணாகிறதென நினைப்பேன். என் வாசிப்புக்கு நல்ல கதைகள் மாத்திரமே வரவேண்டும். இதை எல்லா எழுத்தாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்
ஸ்ரீனிவாஸ்
July 26, 2021
பழமைச்சரிதம்
அன்புள்ள ஜெ.,
உங்களுடைய கேரள பண்பாட்டினைப் பின்னணியாகக் கொண்ட கதைகளை (உங்கள் கதைகளைச் சிறுகதைகள் என்று நினைத்துப் பார்க்கவும் முடியாத விராட உருவை அடைந்து நிற்கின்றன) படிக்கையில் என் மனதில் படைக்கலன்களின் உலோக உரசல்களோடும், குதிரைக் குளம்படிகளோடும்
ஆரம்பமாகும் இந்தப்பாடல்தான் பின்னணியில் ஒலிக்கும். மலையாளப் பண்பாட்டின் குரல் வடிவமான ஜேசுதாஸ், பருந்தைப் போலத் தொடரும் வயலின் மற்றும் மிருதங்கத்தின் ஒலிகளோடு நம்மைப் பாட்டுக்குள் உறிஞ்சி எடுத்துக்கொண்டு விடுவார்.
அவர் சொல்லுகிற அந்தக் ‘கேரளப் பழம சரிதம்’ என்பது நீங்கள் காட்டுகிற சரித்திரத்திற்கெல்லாம் முந்தையதாக இருக்கும் என்று நினைக்கிறேன். எந்தாக்கும் அது? நீங்கள் சொல்லுகிற மலையாண்மை என்கிற மொழி குறித்தும் இதில் வருகிறது. ரவீந்திரன் மாஸ்டரின் வசந்தகீதங்கள்(1984) என்கிற தொகுப்பில் உள்ளது இந்தப்பாடல்.
மாமாங்கம் பலகுறி கொண்டாடி….
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
அங்கம் என்றால் அரங்கம். அரங்கில் நடக்கும் போர் அங்கக்களி எனப்படுகிறது. அங்கத்தட்டு என்றால் விளையாட்டுப்போர் நடக்கும் மேடை. மாமாங்கம் என்றால் பெரிய விளையாட்டுப்போர். அது கேரளத்தின் பல ஆலயங்களில் நிகழ்வதுதான். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை.
கேரளத்தின் 56 அரசுகளும் சோழர்காலத்தில் உருவாக்கப்பட்ட நாடு என்னும் அமைப்பின் நீட்சிகள். அவர்கள் நடுவே போர் நிகழாமலிருக்க சோழர் காலம் முதல் உருவாக்கப்பட்டது பதிலிப்போர் என்னும் அமைப்பு. கோழிச்சண்டை போலத்தான். இங்கே மனிதர்கள் போரிடுவார்கள்.
இரு அரசர்கள் நடுவே நிலம், பெண், கௌரவங்கள் சார்ந்து பூசல் என்றால் பேசி முடிவுசெய்து ‘அங்கம் குறிக்கப்படும்’ [நாள், இடம்] போரில் இருதரப்பினரும் பயின்ற ஆட்களை கொண்டுவருவார்கள். இரு தரப்பிலும் இணையான எண்ணிக்கையில் வீரர்கள் போரிடுவார்கள். வெல்லும் தரப்பை மற்ற தரப்பு ஏற்றுக்கொண்டாகவேண்டும்,
இதற்கென தனிப்பயிற்சி பெற்ற வீரர்கள் உண்டு. அவர்கள் அங்கச்சேகவர் என்று அழைக்கப்படுவார்கள். குறுப்பு என தெற்கு கேரளத்தில். அவர்கள் குடும்ப பாரம்பரியமாக நிலைநிறுத்தப்படுவார்கள். மானியங்கள் உண்டு. மற்றநாட்களில் அவர்கள் போர்க்கலைப் பயிற்சி அளிப்பார்கள். அது களரி எனப்படும். அங்கக் களரி என்பது போட்டிப்போருக்கான தனிப்பயிற்சி.
மாமாங்கங்களில் தலையாயது நிளா அல்லது பாரதப்புழா ஆற்றின் கரையில் திருநாவாய என்னும் இடத்தில் நடந்து வரும் மாமாங்கம். இது ஒரு திருவிழா. மகர மாதம் [மார்கழி] மகம் நட்சத்திரத்தில் நிறைவுபெறும்படி 28 நாட்கள் நடைபெறும். ஆகவே இதற்கு மகாமகம் என்றும் பெயர் உண்டு. இது உண்மையில் கும்பமேளா போல ஒரு பெருவிழா. சௌர மதத்தில் வேர்கள் கொண்டது.சரித்திர காலம் முதல் நடந்துவருவது. கிபி 800 முதல் இது நடந்துவந்தமைக்கான சான்றுகள் உள்ளன
திருநாவாய மாமாங்கத்தின் காவலனாக அமர்பவரே பழைய சேரன் செங்குட்டுவனின் வழித்தோன்றலென கருதப்படுவார். அதற்கு கோழிக்கோடு சாமூதிரி அரசர், கொச்சி அரசர், கொடுங்கல்லூர் அரசர் ஆகியோர் போட்டியிடுவார்கள். அதை முடிவுசெய்ய ஒவ்வொரு மாமாங்கத்தின்போதும் ஒரு போட்டிப்போர் [அங்கம்] நிகழும். வெல்பவர் செங்கோலேந்தி அமர்வார். அடுத்த 12 ஆண்டுகள் அவருடைய சடங்குகளுக்கு அவரே சேரமான் பெருமாள் என்னும் தகுதி கொண்டவர்
இந்த அதிகாரத்துக்காக ஆயிரமாண்டுகள் போர் நடந்துள்ளது. கோழிக்கோடு சாமூதிரி கடல்வணிகம் வழியாக செல்வம் ஈட்டி அதிகாரம் கொண்டவராக ஆனபோது முந்நூறாண்டுகள் மாமாங்கத்தில் அரசனாக செங்கோலேந்தி அமர்ந்தார். அதற்கு எதிராக கொச்சி நாடு போராடிக்கொண்டே இருந்தது. 12 ஆண்டுகள் பயிற்சி எடுப்பார்கள், மாமாங்கத்தில் போரிடுவார்கள். ஆனால் வெல்லமுடியவில்லை.
இறுதியாக மாமாங்கம் நடந்தது 1756ல் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மைசூர் சுல்தான் ஹைதர் அலி கோழிக்கோட்டை கைப்பற்றி சாமூதிரியை சிறைப்பிடித்தமையால் அவர் தன் அரச அதிகாரத்தை கைவிட்டார். ஹைதர் அலியின் படையெடுப்பை அஞ்சி கொச்சி அரசரும் அமைதிகாத்தார். அதன்பின் கோழிக்கோடு திப்புசுல்தானால் தாக்கப்பட்டது. திப்பு சுல்தான் பிரிட்டிஷாரால் வெல்லப்பட்டபோது கோழிக்கோடு சென்னை ராஜதானியாகியது.
2010ல் மாமாங்கத்தை கேரளச் சுற்றுலாத்துறை மீட்டமைக்க முயன்றது. ஆனால் போதிய நிதி இல்லாமல் அது சிறப்பாக நிகழவில்லை.
நான் எழுதியிருக்கும் கேரளச் சரித்திரக் கதைகள் முழுக்க முழுக்க திருவிதாங்கூர் சார்ந்தவை. அவற்றுக்கும் மாமாங்கத்திற்கும் சம்பந்தமே இல்லை. அங்குள்ள அங்கக்களரி என்னும் பதிலிப்போர் முறையே இங்கே கிடையாது. திருவிதாங்கூர் மன்னர் மாமாங்கத்தில் பங்கெடுப்பதுமில்லை.
நான் எழுதும் திருவிதாங்கூர் வரலாற்றுக் கதைகள் 1700 களில்தான் தொடங்குகின்றன. ஓரளவு தெளிவான வரலாறு 1730 களில் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூரை ஆட்சி செய்ய தொடங்கிய பின்னரே கிடைக்கிறது. நான் எழுதிய கதைகளில் ஆயிரம் ஊற்றுக்கள் மார்த்தாண்ட வர்மா ஆட்சிக்கு சற்று முன் உமையம்மை ராணியின் காலத்தில் [1677-1684] நிகழ்கிறது. பிற எல்லா கதைகளும் அவருக்கு பின், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான்.
ஆனால் குமரித்துறைவி 1377-78 ல் நிகழ்கிறது. அக்காலத்தைய திருவிதாங்கூர் வரலாறு தெளிவற்றது. ஆட்சியாளர்களின் பெயர்களும் உதிரிச் செய்திகளும் மட்டுமே கிடைக்கின்றன.
ஜெ
குமரித்துறைவி
வான் நெசவுஇரு கலைஞர்கள்
பொலிவதும் கலைவதும்
தங்கப்புத்தகம்
“
ஆனையில்லா
”
முதுநாவல்
ஐந்து நெருப்பு
மலைபூத்தபோது
தேவி
எழுகதிர்
அந்த முகில் இந்த முகில்
ஒரு கனவு நிலம் தேவை…
அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
இது எனது முதல் கடிதம். தங்கள் படைப்புகளை கடந்த பத்து வருடங்களாக படித்து வருகிறேன். விஷ்ணுபுரம் படித்து முடித்து அது தந்த நிலையற்ற தன்மை என்ற கசப்பான மன நிலையை மாற்ற ஒரு வாரம் ஆனது.
தங்களின் நடுநிலைத்தன்மை கொண்ட கட்டுரைகள் என்றும் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று.
அறம் தொகுப்பு ஒரு மணிமகுடம். வெண்முரசு படிக்க ஆரம்பித்து, நீலம் சில பக்கங்கள் தாண்டி நிறுத்தி, பின் பன்னிரு படைகளம் தொடங்கி கடைசி வரை முடித்தேன். இதை முழுமையாக ஒரு முறை படிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது.
கடந்த இரு வாரங்களாக தங்களின் புறப்பாடு தொகுப்பு படித்தேன். தங்களின் தொடர்ச்சியான பயணங்களின் தொடக்கம் மற்றும் முக்கியத்துவம் புரிந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் ஒரு அரைமணி நேரம் உங்கள் தளத்தில் உலாவுவது என் கணிப்பொறி துறை சார்ந்த வேலையில் இருக்கும் அழுத்தத்தில் இருந்து வெளியே வர உதவுகிறது.
இந்த கடிதம் எழுத முதன்மை காரணம் என் மகள். நான் பனிமனிதன் எனும் சிறு பொறியை கொடுக்க, அவள் உடையாள் வரை வந்து பின், கிட்டத்தட்ட வாரம் இருமுறையாவது என்னிடம் தங்களின் அடுத்த சிறுவர் நூல் எப்போது என்று அணையா ஆர்வ நெருப்போடு வந்து நிற்பாள்.
இதை தீர்க்கும் பொருட்டு, இதன் முதன்மை காரணமான உங்களுக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று கூறினேன். அவள் முதலில் சற்று தயங்கி, பின் தங்களின் நூல் படிக்கும் ஆசை மேலெழும்பியதால் எழுத ஒப்புக் கொண்டாள். நான் ஒரு ஐந்து சதவீதம் மட்டும் சரி செய்ய வேண்டி இருந்தது. கீழே அவளின் கடிதம் உள்ளது. இனி இது உங்கள் இருவருக்கான ஆட்டம் மட்டுமே…
அன்புடன்,
ச.விஜயகண்ணன்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம் ஐயா. என் பெயர் வி.சுமனா. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு நீங்கள் எழுதும் சிறுவர் நாவல்கள் மிகவும் பிடிக்கும்.
நான் உங்கள் நாவலை எப்படி படிக்கத் துவங்கினேன் என்றால்….
ஒரு முறை 2019 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். நிறைய புத்தகங்கள் அங்கு இருந்தன. என் அப்பா நீங்கள் எழுதிய பனி மனிதன் என்னும் நாவலை வாங்கித் தருகிறேன் என்றார். (அது தான் எனக்கு முதல் நாவல்.) அதை என் அப்பா வாங்கித் தந்தவுடன் அந்த நாவலை படிக்க வேண்டும் என்று என் மனதில் ஆர்வம் உண்டாகியது.
வீட்டிற்கு சென்றவுடன் படிக்க ஆரம்பித்தேன். அந்த நாவலின் அட்டையில் இருந்த மிகப்பெரிய பனி மனிதன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் ராணுவ அதிகாரி பாண்டியன், டாக்டர் திவாகர் மற்றும் கிம்சுங் ஆகிய மூவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.
அடுத்து நாவல் வெள்ளி நிலம் ஆகும். என் அப்பா உங்கள் நாவல்களை பல வருடங்களாக வாசித்து வருகிறார். என் அப்பா அந்த நாவலை இணைய தளத்தில் வாங்கி கொடுத்தார். அந்த நாவலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் அதே ராணுவ அதிகாரி பாண்டியன், சிறுவன் நோர்பா, நாய் நாக்போ மற்றும் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் ஆகிய அனைவரும் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்திரம் ஆகும். அது மிகவும் சுவாரசியமான கதை. அடுத்த நாவலுக்காக காத்திருந்தேன்.
பிறகு நான் படித்தது தான் உடையாள். அதில் வந்த நாமி என்னும் சிறுமி என்னை மிகவும் ஆனந்தம் அடைய செய்தாள். அவளுடைய வாழ்க்கை மிகவும் போராட்டமானது. இந்த நாவல் நம் எதிர் காலத்தை எனக்கு உணர்த்தியது.
பிறகு அடுத்த நாவலுக்கான காத்திருந்தேன், காத்திருந்தேன், காத்துக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் என் அப்பா இணையத்தில் உங்கள் கதைகளை படிக்கும்பொழுது அவரிடம் சென்று ‘அப்பா… ஜெயமோகன் அவர்கள் சிறுவர் நாவல் ஏதாவது எழுதியுள்ளார் உள்ளாரா’ என்று கேட்பேன். அவர் எப்பொழுதும் இல்லை என்று கூறுவார். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.
அதனால் சிறுவர்களுக்காக குறைந்தது ஒரு ஆயிரம் பக்கம் உடைய ஒரு துப்பறியும் அல்லது பிரபஞ்சத்தை பற்றிய நாவலை எழுத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் வாசகி,
வி.சுமனா.
அன்புள்ள சுமனா,
அப்படி ஒன்றை எழுதுவதைப் பற்றி எண்ணியிருக்கவில்லை. ஆனால் இப்போது எழுதினாலென்ன என்னும் எண்ணம் வருகிறது. ஏனென்றால் என் படைப்புகள் எல்லாமே மொழிசார்ந்த செறிவு கொண்டவை. எளிதான மொழியில் நிகழ்வுகளை மட்டுமே எழுதிச்செல்லும் சில கதைகளையே எழுதியிருக்கிறேன். சற்று வாசிப்புவேகம் குறைவானவர்கள் கூட வாசிக்கும்படி எழுதவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. ஒரு குழந்தைகள் நாவல், விரிந்த புலத்தில் எழுதுவது சிறந்த எண்ணம்தான். முயல்கிறேன்.
குழந்தைகள் நாவலை எழுதும்போதுள்ள வினாக்கள் பல உண்டு. அவற்றில் முதன்மையானது அவற்றில் ஒரு கனவுநிலம் தேவை என்பதுதான். ஆகவே அது நம் அன்றாட நிலமாக இருக்க முடியாது. அப்படியொன்றை கண்டடைந்ததும் எழுதவேண்டியதுதான்
ஜெ
சிறுகதை – மின்னூல்கள்- கடிதங்கள்
பெருமதிப்புற்குரிய ஜெயமோகனுக்கு,
பத்துலட்சம் காலடிதடங்கள் -நான் சமீபத்தில் அதிக முறை வாசித்த கதைகளில் ஒன்று. துப்பறியும் அம்சம் படிக்கும் பொழுது கிளர்ச்சி அடையச் செய்தாலும் ஆனால் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுவது எம்.ஏ.அப்துல்லாவின் பாத்திரமும், மாப்பிளைச் சமூக சித்தரிப்பும். இந்த ஐந்து கதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும், மிக முக்கிய காரணம் இந்த ஐந்தும் பிறருக்கு சொல்வதற்கு மிகவும் ஏற்றமுடையவை.
வீட்டில், என் மனைவியிடம் பத்துலட்சம் காலடிதடங்கள், ஓநாய்யின் மூக்கு, வேட்டு இம்மூன்றும் பலமுறைச் சொல்லி இருக்கிறேன். பத்துலட்சம் காலடிதடங்கள் கதையை ஒரு நாள் நண்பர்களிடம் மது அருந்தி கொண்டுஇருக்கும் போது சொன்னேன், கதை முடியும் வரை அந்த அறையில் இருந்த அமைதியில் என்னை ஔசேப்பச்சனாக எண்ணி ஒருகனம் பெருமை அடைந்தேன்.எதோ நானே அந்த சம்பவங்கள் அனைத்திலும் நேரடியாகா பங்குபெற்று என் அனுபவங்களை சொல்வது போல இருந்தது.எனக்குள் திரும்ப திரும்ப எழும் கேள்வி இது எழுதுவது எப்படி உங்களுக்கு சத்தியமாகிறது, எத்தனை விழிகள் இருந்தால் இவ்வளவு விஷயங்களை அவதானிக்க முடியும். கிண்டிலில் இந்த தொகுதியை பார்த்தவுடன் துள்ளி குதித்து வாங்கி விட்டேன்.மீண்டும் மீண்டும் இதை படிப்பேன், என்னை ஔசேப்பச்சானாக உணர வைக்கும் எந்த ஒரு தருணத்தையும் இழக்க கூடாது என்ற என்
சுயநலத்திற்காக மட்டுமே இக்கதைகளை மீண்டும் மீண்டும் நிச்சயம் சொல்லுவன்.
நன்றி
ராம்பிரசாத்
அன்புள்ள ஜெ
என்னுடைய பிரியத்திற்குரிய கதைகள் மின்னூல்களாக வருவதை அறிந்தேன். அந்த போஸ்டர்களை வாட்ஸப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து மகிழ்ந்தேன். உண்மையில் நிறைவாக இருக்கிறது. ஜெயமோகன்.இன் தளம் எனக்கு ஒரு போதிமரம் போல. சென்ற ஐந்தாண்டுகளில் நான் அடைந்த தன்னம்பிக்கை, மொழித்திறன், சிந்தனை எல்லாமே அதிலிருந்து வந்ததுதான். ஆனால் அதை முழுக்கமுழுக்க இலவசமாக வாசிக்கிறோம் என்னும் தயக்கம் இருந்தது. நீங்கள் இதற்கு ஒரு கட்டணம் வைக்கலாமே என நினைத்து ஒரு கடிதத்திலும் அதைச் சொல்லியிருந்தேன். இந்தப்பதிப்பகம் நீங்கள் நடத்துவது என நினைக்கிறேன். இந்த மின்னூல்களை வாங்குவது உங்கள் தளத்திற்கு நான் அளிக்கும் கட்டணம், உங்கள் பணிகளுக்கான என் காணிக்கை என எண்ணிக்கொள்கிறேன்
மாதவ்
[விளம்பர வடிவமைப்பு கீதா செந்தில்குமார்]
இலக்கியத்தின் நுழைவாயிலில்
இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க
இலக்கியத்தை அறிமுகம் செய்துகொண்டு வாசிக்கத் தொடங்கும் வாசகன் தொடர்ச்சியாகச் சிக்கல்களிச் சந்தித்துக்கொண்டே இருக்கிறான். உதாரணமாக ’இலக்கியம் வாசிப்பதன் பயன் என்ன?’ என்னும் கேள்வி. அதை அவன் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும், தனக்குத்தானேயும்கூட விளக்கியாகவேண்டும்.
இலக்கியம் பற்றிய அடிப்படையான குழப்பங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இலக்கியத்தை அரசியல் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தலாமா? இலக்கியம் மக்களை மாற்றுமா? இலக்கியத்தால் ஆன்மிக விடுதலை சாத்தியமா? இந்த வினாக்கள் எல்லாவற்றுக்கும் இலக்கியவாசகன் விடை கண்டடையவேண்டியிருக்கிறது
அதற்கு அவன் முன்னோடிகளின் இலக்கியக் கருத்துக்களை நாடலாமென்றால் அவை முரண்படுகின்றன. அலங்காரங்களில்லாததே நல்ல எழுத்து என்று ஒருவர் சொல்வார். அலங்காரம் மண்டிய ஒர் எழுத்து பெரிதாகக் கொண்டாடப்படுவதையும் காணலாம். எளிமையே எழுத்துநடைக்கு அவசியம் என ஒருவர் சொல்வார். ஒரு மேதையின் எழுத்து மொழிச்சிக்கல் அடர்ந்ததாக இருக்கும்
தன் வாசிப்பைக்கொண்டே முடிவுகளை எடுக்கலாமென்றால் தன் வாசிப்பு சரிதானா என்ற ஐயம் எழுகிறது. நான் என் சொந்த ரசனையையும் சொந்த பார்வையையும் நம்பி குறுகலான ஒரு உலகை உருவாக்கிக் கொள்கிறேனா என்னும் ஐயம் எழுகிறது
இதைக் களைய ஒரே வழி விவாதிப்பதுதான். மூத்த வாசகர்கள் மற்றும் படைப்பாளிகளிடம். சக வாசகர்களிடம். அவ்வண்ணம் விவாதிக்கும்போது பலகோணங்கள் திறக்கின்றன. இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதல் உருவாகிறது. இலக்கியத்தின் கொள்கைகள், செயல்முறைகள் பிடிபடுகின்றன
அத்தகைய விவாதங்களின் பதிவுகள் இக்கட்டுரைகள். இவற்றில் கேள்விபதில்கள், உரைகள் இடம்பெற்றுள்ளன. இலக்கிய வாசிப்பின் அடிப்படைகள் பேசப்பட்டுள்ளன. இலக்கியவாசிப்பை தொடங்கும் வாசகனுக்கு உதவியானவை இந்த கருத்துக்கள்.
ஜெ
சமர்ப்பணம்அந்தியூர் மணிக்குஅன்புடன்***
ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை
வான்நெசவு முன்னுரைமலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை
தேவி – முன்னுரை
பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை
எழுகதிர் முன்னுரைமுதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரைதங்கப்புத்தகம் முன்னுரைஅந்த முகில் இந்த முகில் முன்னுரை
பத்துலட்சம் காலடிகள் முன்னுரை
இருகலைஞர்கள் முன்னுரை
உடையாள் முன்னுரை
ஞானி முன்னுரை
கதாநாயகி முன்னுரை
வாசிப்பின் வழிகள் முன்னுரை
இலக்கியத்தின் நுழைவாயிலில் முன்னுரைஒருபாலுறவு முன்னுரை
இந்திய இலக்கியத்தை அறிய…-கடலூர் சீனு
இனிய ஜெயம்
இந்திய இலக்கிய வரைபடம் பதிவு கண்டேன். அன்றைய தலைமுறையில் ‘இந்திய இலக்கியங்கள்’ எனும் தலைப்பில் க.நா.சு எழுதிய இந்திய நாவல்கள் குறித்த ரசனைப் பரிந்துரை நூல் ஒரு முன்னோடி எனக்கொண்டால், ஜெயமோகன் எழுதிய ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ இன்றைய தலைமுறைக்கு ஒரு முக்கியமான பரிந்துரை நூல். இந்த நூல் அளித்த தாக்கத்தின் பொருட்டே வனவாசி, நீலகண்ட பறவையைத் தேடி, ( அரை நூற்றாண்டு கடந்து மறுபதிப்பு) மண்ணும் மனிதரும் போன்ற இந்தியப் புனைவுகள் மறுபதிப்பு கண்டன. நீங்கள் எனக்கு முதன் முதலாக எழுதி கையெழுத்திட்டு அளித்த நூலும் கூட அதுதான்.
ஆனால் அதற்கு முன்பாகவே ‘ இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ எனும் தலைப்பில் சிவசங்கரி அவர்கள் தொகுத்த நான்கு பாக தொகுதியில் ஏதோ ஒன்றினை வாசித்திருந்தேன். அந்த நான்கு பாக தொகுப்பு ஒரு முக்கியமான முன்னோடி முயற்சி என்று சொல்லுவேன். 97 இல் துவங்கி எட்டு வருடங்கள் உழைத்து, பல பயணங்கள் செய்தும், பல இந்திய எழுத்தாளர்களை நேரில் கண்டு நேர்காணல் செய்தும், சிவசங்கரி அவர்கள் கொண்டு வந்த அந்த நான்கு பாக தொகுதியின் செயல்திட்டம் என்பது, 18 இந்திய மொழிகளிலும் இலக்கியதில் இன்று வரை நிகழ்ந்தவற்றை ஒரு நெட்டோட்டமாக தமிழில் அறிமுகம் செய்வது. (இதன் ஆங்கில மொழியாக்கமும் உண்டு). 18 இல் ஒவ்வொரு மொழியிலும் தேர்வு செய்யப்பட்ட சில சிறுகதைகள், கவிதைகள், அந்த மொழியின் எழுத்தாளர்கள் சிலரின் நேர்காணல், ஒட்டு மொத்தமாக அந்த மொழியில் இன்று வரையிலான இலக்கியப் போக்குகள் குறித்த கட்டுரை என அமைத்த நான்கு தொகுப்புகள்.
இது ரசனை மதிப்பீட்டின் வழியே உருவான தொகுப்பு அல்ல.சிறந்த ஆளுமைகள் படைப்புகளுடன், ஒரு சூழலில் எவையெல்லாம் மேலெழுந்து வந்ததோ அவையும் குறிப்பிடப்பட்ட தொகுப்பு. (உதாரணமாக பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகனும் ஜோ டி க்ரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு இரண்டும் சூழலில் பேசப்பட்டு எழுந்து வந்த சூழலில் இரண்டுமே இடம் பெறுவதை போல). இதில் உள்ள வங்க இலக்கிய அறிமுகத்தில் மகாசுவேதா தேவி, சுனில் கங்கோபாத்யாயா தெரியும், நபரூன் பட்டாச்சார்யா வை இதில்தான் முதன் முதலாக கேள்விப்படுகிறேன். முன் சுவடில்லா புதிய பாதையில் முன்னோடி முயர்ச்சி என்ற வகையில் குறைகள் நிகழவே செய்யும். அதை விலக்கி வாசகர்கள் இலக்கியத்தில் இந்திய அளவில் தொடக்க நிலையில் ஒட்டுமொத்த முதல் வரைவை உருவாக்கிக்கொள்ள, (சுருக்கமான நேபாளி நவீன இலக்கிய அறிமுகம் , மணிப்பூரி இலக்கிய வரலாறு இப்படி) இந்த தொகுப்புகள் கொண்டுள்ள உள்ளடக்கம், புரிதல் வழிகாட்டியாக உதவலாம்.
கீழ் கண்ட வாடகை மின் நூலகத்தில் இந்த நான்கு தொகுப்புகள் வாசிக்கக் கிடைக்கிறது.
https://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
இப்பதிவினை எழுதிய பிறகு என்வசமிருந்த தொகுதியை தேடினேன். கிடைத்தது. முதல் தொகுப்பு. அன்றைய நிலவரப்படி பழைய புத்தக கடையில் வாங்கிய கசங்கிய தொகுப்பு. ஆந்திரம், கர்நாடகம், மலையாளம், தமிழ் அடங்கிய தொகுப்பு.
மலையாளத்தில் பஷீர், எம்டிவி, தகழி, சேது, இவர்களின் விரிவான நேர்காணல், இவர்களின் கதை, கவிதைக்கு சுகுத குமாரி அவரது விரிவான நேர்காணல், மலையாள நவீன இலக்கிய வரலாறு குறித்து ஐயப்ப பணிக்கர் அவர்களின் கட்டுரை.
கன்னடத்தில் பைரப்பா, சிவராம காரத், அனந்த மூர்த்தி இவர்களின் நேர்காணல் கதைகள் நவீன கவிதை, மற்றும் கன்னட நவீன இலக்கிய வரலாறு குறித்த கட்டுரை.
தமிழில் ஜெயகாந்தன், இந்திரா பார்த்த சாரதி, பிரபஞ்சன், நேர்காணல்கள் கதைகள், திராவிட இலக்கியம் குறித்து தமிழ்க் குடிமகன், இடதுசாரி இலக்கியம் குறித்து பொன்னீலன் நேர்காணல், கவிதைகள் குறித்து அப்துல் ரகுமான், நவீன தமிழ் இலக்கிய வரலாறு குறித்து நீல பத்மநாபன் கட்டுரை. முன்னுரை குஷ்வந் சிங்.
ஆக ஒரு நிலத்தில், அதன் கலாச்சார சூழலின் பிரதிநிதியாக முன் நிற்கும் தரப்புகளின் முன்னணி முகங்கள் வழியே உருவான தொகுப்பு என்று இதைக் கொள்ள முடியும். இடரற்ற மொழி பெயர்ப்பும் கூட. இப்படியே பிற மூன்று தொகுப்பும் இருக்கும் எனில் நிச்சயம் இது தீவிர இலக்கியத்துக்கு வெளியே அன்றைய வெகுஜன பொது இலக்கியத்தின் நட்சத்திர முகங்களில் ஒருவரான சிவசங்கரி அவர்களின் தீவிர இலக்கிய நோக்கிலான தவிர்க்க இயலா முக்கிய முன்னோடி முயர்ச்சி என்றே கொள்ளவேண்டும்.
கடலூர் சீனு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


