Jeyamohan's Blog, page 943
July 29, 2021
மதப்பெருமை பேசுதல்
அன்புள்ள ஜெ
இந்திய மரபில் இருந்து தவிர்க்க முடியாத தத்துவம் “சிவம்”. அவன் தத்துவமே. இதிகாசங்களிலும் சிவம் இன்றி முடிவு இல்லை. பாரதத்தில் அவனை நோக்கியே தவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இராமகாதையில் ஜனகனால் தவம் செய்து பெறப்படும் சிவதனுசு உடைக்கப்படுகிறது. இராவணன் சொல்லவே வேண்டாம், சிவபக்தன். அதில் அவனே இலக்குவனுக்கும். இவை மிகச்சில உதாரணங்களே. இதன் பட்டியல் இன்னும் அதிகம்
ஆக யுகம் தோறும் முடிவிலா பிரணவம் அவன். இவை அனைத்தும் இடைச்செருகல்கள் என புலம்பிப் புறம் தள்ளுவோரும் ஏற்கக் கூடிய பரம் “சிவம்”. பண்பாட்டுத்தளத்தில் அவன் லிங்கமாக இருப்பைப் பெற்று விட்டான். அந்த விரிசடை பித்தனே, நாட்டார் வழக்கிலும் வெவ்வேறு உருக்கொண்டு நடம் புரிகிறான்.(சுடலையாடி, தாண்டவகோன்).
வேதங்களில் கூறம்படும் பரத்தின் பொருள் வடிவமாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளான். Cult எனப்படும் வழிபாட்டு அல்லது வாழ்வியல் முறை வரை ஆக்கிரமித்து பலவகையாக உள்ளவன். இன்றைய ஆதியோகி வரை. அவன் ஏகன். (The Ultimate/Ultimaum). இதன் பின்னும் பல உருவங்களை எப்படியேனும் கொள்வான்.
இத்தகைய தத்துவ உருமாற்றம்/உள்வாங்கல் என்பது வேறு ஏதும் பண்பாட்டினில் உள்ளதா? சுருக்கமாக ஒரே தத்துவம் பல கோணங்களில் பரிணமிக்கும் பண்பாடு/ வாழ்வியல் உலகத்தின் வேறு பகுதிகளில் உள்ளதா? இது குறித்து நாம் அடையவேண்டிய இறுதி தரிசனம் என்ன?
நாராயணன்
திருநெல்வேலி
உங்கள் கடிதத்தின் சுவாரசியமான முரண் முதலில் எனக்கு தெரிகிறது- நாராயணன் என்ற பெயருடன் சிவன் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.
முதலில் நான் அறிய விரும்புவது ஒன்று உண்டு. நீங்கள் சிவம் மீது கொள்ளும் பற்றி எதற்காக? நீங்கள் ஒரு பக்தராக, சைவராக அணுகுகிறீர்கள் என்றால் சிவவுருவங்கள் எப்படி எழுந்தன எவ்வண்ணம் பரவின என்னும் ஆய்வுநோக்கே தேவையில்லாதது. அது திசைதிருப்புவதும், ஒன்றுவதை தடுக்கும் தர்க்கமும் ஆகும்.
எங்குமில்லாதது என் தத்துவம் என்னும் பெருமையில் என்ன இருக்கிறது? என் தத்துவமே எங்குமுள்ளது என்பது இன்னும் பெரிய தன்னுணர்வு அல்லவா? இங்குள்ள எல்லாமே சிவன் என உணர்வதற்கு என்றால் இந்தத் தர்க்கங்கள் எதற்கு? இந்த வரலாற்றாய்வு எதற்கு? பற்றுக, போற்றுக, ஊழ்கம் கொள்க. அதுவல்லவா சைவத்தின் பாதை?
சரி, ஆய்வாளராக ஆவதுதான் இலக்கு என்றால் அதற்கு இந்தப் பற்று மிகமிக எதிரானது. பற்றுள்ள ஆய்வுக்குப் பயனில்லை, அது ஆய்வே அல்ல. சைவம் உங்களுக்கு ஆய்வுப்பொருள் மட்டுமே. அதன் பெருமையில் உங்களுக்கு மகிழ்வேதும் இருக்கலாகாது.
அவ்வண்ணம் ஆய்வுசெய்வதாக இருந்தால் வரலாற்று நோக்கில் வேதங்களின் ருத்ரம் முதல் சைவக்கருத்து எவ்வண்ணமெல்லாம் விரிந்திருக்கிறது என ஆய்வுசெய்து எழுதியவர்களின் நூல்கள் உள்ளன. மலைவழிபாடு, குறிவழிபாடு, அனல்வழிபாடு என பலவகை வழிபாடுகளின் தொகை சிவருத்ர வழிபாட்டுடன் இணைந்ததை விளக்கும் நூல்கள் உள்ளன
குறியீடுகளையும் படிமங்களையும் பொருள்கொள்வதற்குரிய முறைமைகள் பல உண்டு. வரலாற்றிலிருந்து பண்பாட்டுப் பரிணாமத்தை உய்த்தறியவேண்டிய வழிமுறைகளும் உண்டு. அவற்றை பயிலலாம். ஆனந்தக்குமாரசாமி முதல் பல்வேறு ஆய்வாளர்களை கருத்தில்கொள்ளலாம்.
அவர்கள் சொன்னவற்றை பயின்றபின், அவற்றுக்கு மேலதிகமாகச் சொல்ல உங்கள் கண்டுபிடிப்பு உண்டென்றால் ஆய்வாளர்களுக்குரிய மேடையில் அதை முன்வைக்கலாம். தர்க்கபூர்வமாக நிலைநாட்டலாம். என்னைப் போன்றவர்கள் அந்த ஆய்வுக்களத்தில் இருந்து, அங்கே நிறுவப்பட்ட உண்மைகளை எடுத்துக் கொள்வோம்.
இருவகைப் பாதையிலும் நீங்கள் இப்போது கொள்ளும் இந்த உணர்ச்சிக்கு பொருளேதுமில்லை. இது மிக எளிதாக மதப்பெருமிதம் நோக்கிக் கொண்டுசெல்லும். அது மதச்சழக்காளராக ஆக்கும். மதச்சழக்கே மதத்தில் இருந்து நாம் அடையும் முதன்மைத் தீங்கு.
ஜெ
சாதியும் நீட்சேவும்
ஜெமோ,
வெண்முரசிற்குப் பிறகும் அதைவிட அதிகமான ஆற்றலோடு இயங்கி வருகிறீர்கள். தொடர் சிறுகதைகள், குறுநாவல்கள், பேருரைகள் மற்றும் சினிமாப் பணிகள் என. உங்களுடைய செயலூக்கம் எப்போதுமே என் போன்றவர்களுக்கு உற்சாக டானிக்தான்.
குறிப்பாக, கி.ரா. அவர்களின் மிச்சக் கதைகள் நிகழ்வின் போது உங்களிடமிருந்த பூரிப்பு, எங்கிருந்து இதற்கான ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று எண்ணாமலிருக்க விடவில்லை. நித்யாவிடம் நீங்கள் கண்ட அதே குழந்தையின் பூரிப்பாகவும் இது இருக்கலாம். தங்களின் இலக்கியப் படைப்புக்களே உங்களை நோக்கி ஈர்த்தாலும், அந்த படைப்பாளியை கட்டமைத்தவைகளை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்று மட்டுமல்ல. அவசியமான ஒன்றும் கூட என எண்ணுகிறேன். இதற்கான பதில்கள் உங்களுடைய இணைய தளம் முழுவதும் கொட்டிக் கிடந்தாலும், அதற்கு தன்மீட்சி, நலமறிதல், ஜெ.சைதன்யாவின் கல்விச் சிந்தனைகள் மற்றும் சமீபத்திய யதி தத்துவத்தில் கனிதல் என மிகச் சிறந்த வடிவங்களில் அதனை அள்ளி எடுத்திருக்கிறது தன்னறம் நூல்வெளி. தமிழினி உங்களை கட்டமைத்தது என்றால், தன்னறம் அதை வெளிப்படுத்தி இருக்கிறது எனலாம்.
உங்களுக்கு கிடைத்திருக்கும் குருமரபே உங்களுடைய இந்த ஆளுமைக்கு காரணம் என்ற முடிவுக்குத் தான் நான் செல்கிறேன். முற்போக்கு என்று சொல்லிக் கொள்ளும் பொருள்முதல்வாத தரப்பால் முழுவதுமாக உதாசீனப்படுத்தப்படும் சுருதியின் (மரபின் அறிவுக்கொடை) அருமையறிந்த, தன் உள்ளுணர்வுகளுக்கான காரணங்களை அறிய முடிந்துகொண்ட உங்களுடைய கருத்துமுதல்வாதத் தரப்புதான் உங்களுடைய ஆளுமையை தொடர்ந்து செம்மைப் படுத்துகிறது என்பதாகவும் புரிந்து கொள்கிறேன்.
நான், பிறர் என்பதை தொடர்ந்து கட்டமைக்கும் ஒரு கூட்டத்தால் அந்த பிறர் என்ற ஒன்று இல்லாமல் முன்னகரவே முடியாது என்பதைத் தான் தற்போதைய பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும் தொடர்ந்து நிரூபிக்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த பெரும் கொடைகளான பெரியாரையும், அம்பேத்கரையும் பிராமண எதிர்ப்பு, மற்றும் இந்து மத எதிர்ப்பு என்ற ஒரு சின்ன வட்டத்தில் தங்களுடைய வசதிக்கேற்ப ஒடுக்கிக் கொண்டு நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்கிறார்கள். அத்தி பூத்தார் போல் இக்குறையைச் சுட்டிக்காட்ட மார்க்சியம் தெரிந்த மார்க்சியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழினியில் கிடைத்த இவ்விரு புத்தகங்களையும் தொடர்புபடுத்தி, எனக்குக் கிடைத்த புரிதல்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
அன்புடன்
முத்து
மலையாளப் படங்கள் கடிதங்கள்
வணக்கம்,
இந்த கட்டுரையை [ஆடைகளில்ல்லாத தெய்வம்] படித்து நான் கண்ணீர் தான் சிந்தவில்லை. மிகவும் நன்றாக Scroll கூட பண்ணவிரும்பாமல் நான் படித்த கட்டுரை. நிர்மால்யம் திரைபடம் நான் முன்னவே பார்த்துவிட்டு தான் இக்கட்டுரையை வாசித்தேன்.படம் பார்க்க ஆவல் குறைந்திருக்கும் அல்லவா.
எனக்கு உங்கள் கதையை விட கட்டுரையை படிக்க தான் பெரும் ஆசை. உங்கள் எழுத்தில் பொதிந்து இருக்கும் அந்த அர்த்தத்தை படிப்பதை விடவும், அதற்க்கு இடையில் பொதிந்து உள்ள அர்த்தமுள்ள அமைதியை கடக்காமல் போகமுடியவில்லை. பிராமணர்கள் தலித்துகளும் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல வட இந்தியாவிலும் மகாத்மா காந்தி போன்றோர்களால் ஒதுக்கப்படுகிறார்களோ என்ற எண்ணம் வருகிறது. காந்தி அதை தெரிந்து செய்தார, தெரியாமல் செய்தாரா என்று தான் ஆச்சரியம். உங்களின் கட்டுரை அது எதுவாக இருந்தாலும் வாசிப்பேன். எனக்கு அதில் என்ன விசயம் என்பதில் ஆர்வம் இல்லை. அந்த எழுத்தின் மீது தான்.
இப்படிக்கு,
இராம்ஜி
அன்புள்ள ஜெ
உங்கள் தளத்தில் நீங்கள் சில மலையாள படங்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். அவற்றைப் பார்க்க ஒரு பயிற்சி தேவையாகிறது. மிகமெல்ல செல்லும் சினிமாக்கள் அவை. அவற்றில் டிராமா இல்லை. திரைக்கதையில் தொடர்ச்சி இல்லை. நிகழ்ச்சிகள் மட்டும்தான். ஆனால் அப்படி பரபரப்பான கதை இல்லாமலிருக்கும்போதுதான் நாம் அந்த நடிகர்களின் முகபாவனைகளை அவ்வளவு கூர்ந்து கவனிக்கிறோம். அவர்களைச் சுற்றி நடப்பவற்றை கவனிக்கிறோம். அவை நம்முள் ஆழமான பாதிப்பை உருவாக்குகின்றன. இந்த மலையாளப்படங்களை மிகுந்த பொறுமையுடன் பார்த்தேன். ஆனால் இன்றைக்கு கண்ணிலேயே காட்சியாக நிற்பவை அவைதான். பரபரப்பான பல படங்கள் மறந்துவிட்டன. மாட்டுப்பெட்டியின் இளவெயிலும் திருவனந்தபுரத்தின் ஓலைக்கூரைவீடும்தான் நினைவில் எஞ்சியிருக்கிறது
ஆர்.ஸ்ரீகாந்த்
கல்வலைக்கோடுகள்- கடிதம்
அன்பு ஜெ,
புதிய வாசகர் சந்திப்பின் போது தான் ஜெயராம் அவர்களைச் சந்தித்தேன். சில தனித்துவமான அங்க அடையாளங்கள் கொண்டிருப்பவர்களை நம்மால் மறக்க முடியாது. அப்படித்தான் ஜெயராம் எனக்கு. முதன் முதலில் பார்த்தபோது ஒரு அனிமேஷன் கதாப்பாத்திரம் போல மனதில் பதிந்திருந்தார். சுருள் மண்டைகளில் இப்படி ஒரு வகையா என்று நினைத்திருந்தேன். இவர் ஓவியம் வரைவார் என்று தெரிந்தபோது கூட இவரையே ஓவியமாகக் கற்பனை செய்து கொண்டேன்.
இரண்டு மாதங்களுக்கு முன் டிவிட்டரில் எதேச்சையாக இவருடைய ஓவியங்களைப் பார்த்தேன். ’இந்தியா டுடே’ விற்காக இவர் வரைந்திருந்த கொரனா கார்ட்டூன்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். மோனாலிசாவை கொலை செய்யாத குறையாக ’டீ ஆத்தும் நோனாலிசா, வீரப்பன் மோனாலிசா, சீமண்ணெய் விளக்கு மோனாலிசா, மண்டையில் வாழைமரம்/குருவிக்கூடு முளைத்த மோனாலிசா என சிரிப்பு மூட்டுவனவாகவும் ஆச்சரியப்படுத்துபவனாகவும் அவர் வரைந்து வைத்திருந்தார். ஒரு படி மேலே போய் மோனாலிசாவின் கைகளின் அவரின் குழந்தைப் பருவத்தை வரைந்து தவழ விட்டிருந்தார். அவரைக் குழந்தையாக சுமந்திருந்த மோனாலிசா மட்டும் அவர் சாயலில் இருப்பதாகப் பட்டது. அதன் பின் மோனாலிசாவே ஜெயராம் தான் என்று நினைத்துக் கொண்டேன்.
பார்க்கும் படங்கள் தோறும் அவரே இருப்பது போல தோன்றியது. அவருடைய ஏதோ ஓர் தருணத்தின் உச்ச உணர்ச்சியைத் தவழ விடுவது போல இருந்தது. இரண்டு சுவரோவியங்கள் (WALL ART) அவர் வரைந்து வைத்திருந்தார். ஒன்று புத்தர், இன்னொன்று உணவு சாப்பிடும் நபர். இரண்டிலுமே நான் ஜெயராமைத்தான் பொருத்திப் பார்த்தேன். அதைத் தாண்டி அந்த சுவர் ஓவியங்களில் அவர் பயன்படுத்திய கோடுகள் வியக்கச் செய்தன. புத்தருக்கு உள்ளும் புறமும் என ஆற்றலை அள்ளித் தெளித்திருந்தார். அந்த வளைவுகள் அதன் போக்குகள் என ஒரு ஜூவாலையை சுவற்றில் பரப்பியிருந்தார்.
எல்லாவற்றையும் தாண்டி ஜெயராமையும் மறந்து அவரை உருவற்றவொருவராகக் கண்டது ’ஸ்கெட்சஸ்’ என்று அவர் தலைப்பிட்டு வரைந்த கல்வலைக்கோடுகளைத்தான். இந்த இரண்டொரு மாதங்காளாக அவ்வபோது இவற்றை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த கற்சிலைகள் உணர்வு கொண்டு பேசுவது போல, சிரிப்பது போல, கோபங்கொள்வது போல, சொல்லவியலா உணர்வுகளைக் கடத்துவதுபோலத் தோன்றியது. அவருடைய கோடுகளிலுள்ள அதீதத்தன்மை தான் அவ்வுணர்வெழுச்சியைச் தூண்டுகிறதோ? என்று கேட்டுக் கொண்டேன். எது? எது? இதனை இத்துனை உயிருள்ளதாக்கிக் காட்டுகிறது என்று சிந்தித்திருந்தேன். இன்று உங்கள் வரிகளில் தான் அவற்றைக் கண்டடைந்தேன்.
”சிற்பம் என்பது அதன் மொத்தக் கல்வடிவமும் அல்ல. அதில் நாம் காணும் விசையும் உணர்வும்தான் அது. அந்த நுண்மைகளை மட்டும் வைத்து அக்கல்வடிவத்தின் திரளலை தவிர்த்து கோட்டோவியமாக ஆக்கிவிடலாம். அதில் சிலைக்குப் பதில் சிலையென்றானவை திகழத்தொடங்குகின்றன. உள்ளமும் கலந்த கல். கனவிலெழுந்த கல்.” என்று நீங்கள் சொன்ன வரிகளைக் கொண்டு இன்று மீண்டும் அந்த கல்கோட்டு ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆம்! அது கனவிலெழுந்த கல்லே தான்.
“கல் நீர்த்துளிபோல திரண்டு சொட்டிவிடக்கூடுமென காலத்தில் நின்றிருப்பதை கோட்டோவியங்களே காட்டுகின்றன.” என்ற வரிகளால் எனக்கான ஒரு கலையின் பார்வையை திறந்து வைத்தமைக்காக நன்றி ஜெ.
அன்புடன்
இரம்யா
உணவு எனும் தெய்வம்
அன்பின் ஜெ, நலம்தானே?
2004 அல்லது 2005-ம் வருடமாக இருக்கலாம். ஓசூரிலிருந்த போது, தளிக்கு அருகில் உப்பனூர் ஏரிக்கருகில் அமைந்திருந்த சுவாமி சஹஜானந்தா நிறுவிய அதீத ஆஸ்ரமத்திற்கு நானும், அம்முவும் இயலைக் கூட்டிக்கொண்டு அடிக்கடி போய்வருவது வழக்கம். வார இறுதி நாட்களில் முழு நேரமும் அங்கு கழிப்பதுண்டு. ஆஸ்ரமம் இயற்கை சூழ்நிலையில் பசுமையாக மரங்களடர்ந்து வனப் பகுதியில் இருப்பது போல் இருக்கும். உள்ளே ஒரு நூலகம் உண்டு. ஓஷோவின் பகவத் கீதை உரைகள், சஹஜானந்தா சுவாமிகளின் சிஷ்யையான மா ராஜி என்ற ராஜலட்சுமியின் தமிழ் மொழிபெயர்ப்பில்தான் தமிழில் 18 பாகங்களாக அதீத ஆஸ்ரம் மூலம் வெளிவந்தது.
நான் ஒரு முறை ராஜி மா-வைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறேன். ஆஸ்ரமத்தை நிர்வகிக்கும் அதீத மாஜியும், கலாம்மாவும், அங்கு வேலை பார்க்கும் ராதாக்காவும் நெருங்கிய நண்பர்களாயிருந்தனர். ஆஸ்ரமத்தில் அடிக்கடி ”ஆரோக்கிய முகாம்”கள் நடக்கும். ஓஷோவின் தியான முகாம்களும் வருடம் ஒருமுறை நடப்பதுண்டு. ஆரோக்கிய முகாம்களை அதீத மா-தான் நடத்துவார்கள். குழந்தைகளுக்கு தனியாக, பெரியவர்களுக்கு தனியாக என்று நடக்கும். பெரியவர்கள் முகாம் பத்து அல்லது பனிரெண்டு நாட்கள் நடக்கும். யோகாசனம் மற்றும் ப்ரானிக் ஹீலிங் பயிற்சிகள், தியானம், ஃபாஸ்டிங் சில நாட்கள், மிதமான உணவு, வாசிப்பு என்று நிகழ்வுகளிருக்கும். கலந்து கொள்பவர்கள் ஆஸ்ரமத்தின் குடில்களில் தங்கியிருப்பார்கள்.
என் உடல் எடை, 1997-க்குப் பிறகு மளமளவென்று ஏறி தொண்ணூறை நெருங்கிக் கொண்டிருந்தது. அதீத மா-வைச் சந்திக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் ஏதேனும் ஒரு ஆரோக்கிய முகாமில் கலந்து கொள்ளுமாறு. தட்டித் தட்டி கழித்து கடைசியில் ஒருமுறை கலந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது, முகாம் நிகழ்வு எதுவும் வரவில்லை. அதீத மாஜி ”பரவாயில்லை. வந்து ஆஸ்ரமத்தில் தங்கிக்கொள். பெரும்பாலும் ஃபாஸ்டிங்-தான் இருக்கும். சின்னச் சின்ன பயிற்சிகள் இருக்கும். நான் சொல்லித் தருகிறேன். உனக்கு இருக்கவே இருக்கிறது நூலகம்” என்றார்கள்.
அம்முவையும், இயலையும் ஓசூர் நேரு நகர் வீட்டில் விட்டுவிட்டு, பத்து நாட்களுக்கான துணிகளை பையில் எடுத்து வைத்துக்கொண்டு, டிவிஎஸ் 50-யில் ஆஸ்ரம் போனேன்.
”ஃபாஸ்டிங் ஆரம்பிக்கலாம் வெங்கடேஷ். பத்து பதினோரு நாள் வரைக்கும் தாராளமா ஃபாஸ்டிங் இருக்கலாம். பார்ப்போம் நீ எத்தனை நாள் தாக்குப் பிடிக்கிறேன்னு. தண்ணி எவ்வளவு வேணா குடிச்சிக்கலாம். ரொம்ப டயர்டா இருந்தா, வேற ஏதாவது ப்ராப்ளம்னா சொல்லு, சர்க்கரை போடாம லெமன் ஜூஸ் அல்லது வேற ஏதாவது ஜூஸ் தரச் சொல்றேன். படிக்கலாம். கோவிலுக்கு வரலாம் (ஆஸ்ரமத்தினுள்ளேயே சிவன் கோவிலும் சிறிய விநாயகர் கோவிலும் இருந்தது). சஹஜா ஹால்ல தியானம் பண்ணலாம்” என்று அறிமுகம் கொடுத்துவிட்டு ராதாம்மாவிடம் சஹஜா ஹால் பின்புறமிருந்த குடில்களில் ஏதேனும் ஒரு குடிலை ஒதுக்கி தருமாறு சொல்லி, ”நாளைக்கு காலையில 5 மணிக்கு விநாயகர் கோவில்ல பூஜை இருக்கும். அங்க பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு சஹஜானந்தாவின் சில புத்தகங்களை படிக்கக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
ஒரே ஒரு அறை கொண்ட ஓலைக்கூரை போட்ட வட்ட வடிவக் குடில். பாத்ரூம்கள் குடிலுக்குப் பக்கத்தில் நாலைந்து வரிசையாயிருந்தன. இரவு கவியக் கவிய குடிலைச் சுற்றியிருந்த மரங்களில் பறவைகளின் கீச்சுக் குரல்கள் அதிகமிருந்தன. தூரத்தில் மயில்களின் அகவல்களும் கேட்டன. முன்னிரவிலும், அதிகாலையிலும் உடல் நடுக்கும் குளிர். முதல் நாள் காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கிளம்பி குடிலுக்கு முன் நிறுத்தியிருந்த டிவிஎஸ் 50-ஐ எடுத்துக்கொண்டு விநாயகர் கோவிலுக்கு சென்றேன். அந்த வைகறையில், கவியும் பனியின் அமைதியில் டூவீலரின் ஒலி அச்சூழலுக்கு அந்நியமாய் இருந்தது.
ஐந்து மணிக்கு அதீத மா வந்தார். முதல் அரை மணி நேரம் விநாயகர் கோவிலில் பூஜை. அடுத்து சிவன் கோவிலில். அடுத்து சஹஜா ஹாலில் தியானம். மதியம் “சோவா” ஹாலில் வாசிப்பும், ப்ரானிக் ஹீலிங் பயிற்சியும். மாலையில் மறுபடியும் சிவன் கோவிலில் அந்தி பூஜை. முன்னிரவில் ”சோவா” ஹாலில் கிளாஸிகல் இசையோ, மாஸ்டர் “கோக் சுய்”யின் உரையோ கேட்பது. தோட்டத்தில் வேலை செய்யும் ராமு அண்ணா குடிலுக்கு எனிமா கப் ஒன்றைக் கொண்டுவந்து தந்து மறுநாளிலிருந்து உபயோகிக்கும்படி சொல்லி கொடுத்துவிட்டுப் போனார்.
முதல் நாள் ஒன்றும் தெரியவில்லை. உற்சாகமாகவே இருந்தது. இரண்டாம் நாள் சிறிது களைப்பாக உணர்ந்தேன். ஆஸ்ரமத்தின் எல்லா இடங்களிலும் (சஹஜா ஹால், சோவா ஹால், சிவன் கோவில், குடில்) மண்பானையில் நீர் வைக்கப்பட்டிருந்தது, மேலே டம்ளருடன். மூன்றாம் நாள் கமலாம்மாவிடம் கேட்டு இரண்டு கிளாஸ் லெமன் ஜூஸ் குடித்தேன், மதியமும் இரவும். முதல் இரண்டு நாட்கள் புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன்.
மூன்றாம் நாள் அதீத மா, “டயர்டாயிருந்தா புக் படிக்கவேண்டாம் வெங்கடேஷ்” என்றார்.
நான்காம் நாள் அதிகாலை மூன்று மணிக்கே விழிப்பு வந்தது. பக்கத்து மரங்களில் துயிலெழும் பறவைகளின் விதவிதமான கீச்சொலிகள். அப்பா! எத்தனை விதமான குரல்கள்! பாத்ரூம் போவதும் குளிப்பதும் வழக்கத்தைவிட மிக நிதானமாக நடந்தது. சுற்றிலும் பறவைகளின் ஒலிகள் சூழ்ந்திருந்தாலும், மனம் ஏதோ ஆழத்தில் ஒலியில்லாத மௌனத்தில் அமிழ்ந்தது போல் இருந்தது. விடிய விடிய வெளிச்சம் வர வர மனதில் ஏதோ பதட்டமோ அல்லது இனம் புரியாத பயம் ஒன்றோ மெல்ல மெல்ல உருவாகி ஆக்ரமிப்பது போல் இருந்தது. பதினோரு மணி வரை அந்த உணர்வை சகித்துக்கொண்டிருந்தேன். அதற்கு மேல் அந்த பயம் அதிகரிக்கவே அதீத மா-விடம் சொல்லலாம் என்று முடிவு செய்து மாஜியைத் தேடினேன்.
அதீத மா, ராதாக்காவுடன் ”சோவா” ஹால் பக்கமிருந்த டைனிங் ஹாலில் பேசிக்கொண்டிருந்தார். நான் அறைக்குள் நுழைந்ததும் “வாங்க வெங்கடேஷ். உட்காருங்க. “The Monk who sold his Ferrari” படிச்சு முடிச்சிட்டிங்களா? எப்படி இருந்தது? ஃபாஸ்டிங் எப்படி போயிட்டிருக்கு?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
நான் தலைகுனிந்து அங்கிருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்தேன். என் மனநிலையை எப்படி மாஜியிடம் சொலதென்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து “என்னன்னு தெரியல மாஜி. ஏதோ பதட்டமா, பயமா இருக்கறது மாதிரி இருக்கு” என்றேன்.
”என்ன பண்ணுது? ஜூஸ் கொஞ்சமா குடிக்கறீங்களா? ஃபாஸ்டிங் போதும்னா கொஞ்சமா ஃப்ருட்ஸ் ஸ்டார்ட் பண்ணிக்கலாம்” என்றார்.
நான் மறுபடி தலைகுனிந்து உட்கார்ந்திருந்தேன். மனதில் இருக்கும் உணர்வை உற்றுப் பார்க்க முயன்றுகொண்டிருந்தேன். அது பிடிபடாமல் நழுவிக்கொண்டிருந்தது. ராதாக்கா எழுந்து சென்று சமையலறைக்குப் போய் ஒரு ஆப்பிளை ஏழெட்டு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து என் எதிரில் வைத்தார் (அதீத மா அவரிடம் சைகையில் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்). நான் என் முன்னால் தட்டிலிருந்த ஆப்பிள் துண்டுகளை மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்கள் நிறைந்து அழுகை வரும்போல் இருந்தது. ஏன் அழுகை வருகிறது? ஏன் உணவைக் கண்டதும் மனம் இத்தனை விம்முகிறது?
ஆப்பிள் துண்டுகளின் தோலில் அக்னியின் சிவப்பு. ”அன்னமே! இறையே! தழலே!” என்று மனம் அரற்றியது. “சாப்பிடுங்க” என்று ராதாம்மா சொன்னதும் வெடித்து அழுகை வந்தது. கன்னங்களில் நீர் வழிந்தது.
“என்னாச்சு என்னாச்சு” ராதாம்மா பதட்டமானார்.
அதீத மா “ஒண்ணுமில்ல” என்று சொல்லி ராதாம்மாவை அமைதிப்படுத்தினார்.
நான் பத்து நிமிடம் அழுது ஓய்ந்தேன்.
“சாப்பிடுங்க வெங்கடேஷ்” அதீத மா சொன்னதும் ஒரு ஆப்பிள் துண்டை கையில் எடுத்து உற்றுப் பார்த்தேன். வாயில் இட்டு அதக்கினேன். உமிழ்நீர் சுரந்து அதைச் சூழ்வதை உணர்ந்தேன். அந்த ஏழெட்டு துண்டுகளை சாப்பிட்டு முடிக்க இருபது இருபத்தைந்து நிமிடங்கள் ஆனது.
“இன்னிக்கு சாயந்திரம் சஹஜா ஹால்ல நாடி சுத்தி பண்ணுங்க வெங்கடேஷ்” என்றார் அதீத் மா.
பத்தாம் நாள் மாலை அதீத மா-விடம் ஆசி வாங்கிவிட்டு, தளி ஆஸ்ரமத்திலிருந்து கிளம்பி ஓசூர் வந்தேன். அன்று இரவுணவிற்கு அம்மு எனக்குப் மிகப்பிடித்த புளியோதரையும், சாம்பாரும் செய்திருந்தார். தட்டில் புளியோதரை ஒரு கரண்டி போட்டு அருகில் சாம்பார் ஊற்றி தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த என் முன்னால் வைத்தார். உணவைக் கண்டதும் மனது நெகிழ்ந்தது. “மஹா ப்ரசாதே தேவி!” என்று மனம் கைகூப்பியது. நிமிர்ந்து அம்முவைப் பார்த்தேன். அந்த நமஸ்காரம் அம்முவிற்கும் சேர்த்துத்தான்.
வெங்கடேஷ் சீனிவாசகம்
July 28, 2021
மதிப்புரை எழுதுவது…
வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி?
அன்புள்ள ஜெயமோகன்,
தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே தங்களைக் கண்டடைந்தேன். சிறுபிள்ளைத் தனமாக அன்றொரு மதிப்புரை எழுதினேன் (மதிப்புரை என்றால் என்னவென்றே தெரியாமல்).
இப்பெருந்தொற்றுக் காலத்தில் காந்தி அவர்கள் குறித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், கடிதங்களையும்(தங்கள் சிபாரிசின் பேரில் முக்கியத்தும் உணர்ந்து) வாசித்தேன். காந்தியை bottom-up approachல் விளங்கிக்கொண்டேன். தற்போது புனைக்களியாட்டு கதைகளை வாசித்துக்கொண்டுக்கிறேன். நண்பர்களுக்கு “யாதேவி சர்வ பூதேஷு சக்தி…” கதைகள் பிடித்திருந்தன. “ஆனையில்லா” கதை உறவுக்காரர்கள் மத்தியில் கொடி பரவ விட்டிருந்தது. எனக்கு இந்த இரண்டு மாதமாக “மாடன் மோட்சம்” அனுதினமும் நினைவிலிருந்து கொண்டேயிருக்கிறது.
வெண்முரசு குறித்த கடிதங்களை கடந்த இரண்டு மாதங்களக வாசித்துவருகிறேன். வெண்முரசைத் தொடர்ந்து வாசித்து/வாழ்ந்து இரசிக்கவேண்டும் என்ற பெருங்கனவொன்று துரத்திக்கொண்டிருக்கிறது. ஆகையால் முதற்கனல் வண்ண ஓவியத்துடன் கூடிய செம்பதிப்பை பெற எண்ணி ஒருவாரமாக பல தளத்தில் துலாவினேன். கிடைத்த பாடில்லை. Collectors edition தான் வாங்கி வாசித்து இன்புற்று பிறருக்கும் கொடுக்க வேண்டுமென்று விடாப்பிடியாக இருக்கிறேன். இணையத்தில் out-of-stock என்றுள்ளது. முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஓவியத்துடன் கூடிய செம்பதிப்பு நூல்களை வாங்க வழியொன்றிருப்பின் பகிரவும். சிவகாசியிலிருந்து மதுரை சென்று வாங்கிக்கொள்ளமுடியும் என்னால். செம்பதிப்பு அங்கே கிடைக்குமெனில் முகவரியை பின் இணைக்கவும்.மற்றும் நூறு கதைகளையும் புத்தகவடிவில் கொணர்க.
இவ்வருடம் முதல் நவீன தமிழிலக்கியத்தை வாசித்து மதிப்புரை எழுத பழகிக்கொண்டிருக்கிறேன். தி.ஜா, , வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், ஜெய்காந்தன், பெருமாள் முருகன் என படைப்புகளைத் தொட்டிருக்கிறேன்.முதல்நிலை வாசகனுக்கு மதிப்புரை எழுத, தெளிவாக புரிந்துகொள்ள, *சிந்திக்க* உதவுமாறு விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
நீடூழி வாழ்க.
என்றும் பேரன்புடன்,
தி.ராம்குமார்
அன்புள்ள ராம்குமார்
வாழ்த்துக்கள்.
மதிப்புரை எழுதுவதற்கான அடிப்படை வடிவம் ஒன்றுதான். அந்நூலின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கமான அறிமுகம். தேவை என்றால் அவ்வாசிரியர் பற்றியும் ஓர் அறிமுகம். அந்நூலுக்கு சூழலில் என்ன இடம், அதன் முக்கியத்துவம் என்ன என்று ஒரு விளக்கம். அந்நூல் பற்றி உங்கள் தரமதிப்பீடு என்ன, அல்லது அதிலிருந்து நீங்கள் அடைந்தது என்ன என்று ஒரு குறிப்பு. இம்மூன்றும் இணைந்ததே மதிப்புரை. இம்மூன்றும் சரியான விகிதத்தில் அமைந்திருந்தால்போதும்.
மதிப்புரைக்குறிப்பில் சொந்த வாழ்க்கை அனுபவங்கள், வேறுநூல்களை வாசித்த அனுபவங்கள், சொந்த சிந்தனைகள் இடம்பெறலாகாது. ரசனைக்கட்டுரை என இன்னொரு வகைமை உண்டு. அதில் இவை இடம்பெறலாம். அத்தகைய கட்டுரைகள் சிறுகதையின் வடிவை கொண்டிருக்கவேண்டும். கவரும் தொடக்கம், ஒழுக்கும் கூர்மையும் உள்ள நடை, முத்தாய்ப்பு ஆகியவை வேண்டும். அவற்றில் சொந்த அனுபவம், சொந்தக்கருத்து ஆகியவை மூன்றிலொன்றும், அந்நூலின் உள்ளடக்கம் மற்றும் அந்நூல் பற்றிய மதிப்பீடு மூன்றில் இரண்டு பங்கும் இருக்கலாம்
மதிப்புரை சுருக்கமாக இருக்கலாம். ஒரு பத்திகூட இருக்கலாம். ஆனால் அதற்குள்ளும் இந்த மூன்றங்க அமைப்பு இருக்குமென்றால் அது வாசகனுக்குப் பயனுள்ளது. நமக்கு இன்று வாசிப்புக்கு இணையாக இலக்கியம், அறிவியக்கம் பற்றிய உரையாடலும் தேவை. தொடர்ந்த குறிப்புகள், மதிப்புரைகள், ரசனைக்கட்டுரைகள் வழியாகவே இலக்கியம் ஓர் இயக்கமாக நிலைகொள்ள முடியும். அனைவருமே எழுதும் சூழலிலேயே அது அமையும்.
ஜெ
பிகு: நூறு கதைகளும் பிறகு எழுதிய முப்பது கதைகளும் தனித்தனி நூல்களாக வெளிவந்துள்ளன. இப்போது மின்னூல்களாக. விரைவில் அச்சில் வெளிவரும்
goodreads, amazon போன்ற தளங்களில் நூல்களைப் பற்றிச் சுருக்கமாக மதிப்புரைக்குறிப்பு எழுதலாம்.
சீவகசிந்தாமணி, உரையாடல்
பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு
அன்புள்ள ஜெ
காவியங்களை வாசித்தல் சீவக சிந்தாமணி உரை உங்களுடைய எல்லா உரைகளையும் போல சிறப்பாக இருந்தது. சீவக சிந்தாமணி என்றல்லாமல் பிற காவியங்களை வாசிக்க பேருதவியாக இருக்கும். இந்த வாரம் சீவக சிந்தாமணி குறித்து கொஞ்சம் வாசிக்கலாம் என்பதற்காக குழுமத்தில் கேட்ட போது சில நூல்களை பரிந்துரைத்தார்கள். கதை அறிமுகத்திற்காக ராம் சுரேஷ் நாவல் வடிவிற்கு மாற்றிய கிழக்கு பதிப்பாக வெளியிடாக வந்த நாவலை வாசித்தேன். ஆனால் அதை வாசித்து பின் நண்பரிடம் உரையாடிய பொழுது தான் நேரடியாக வாசிக்காது பயனில்லை என உணர்ந்தேன். ஆனால் ஒரு மிகை கற்பனை கதை கொடுக்கும் துள்ளலுக்காக பதின்பருவத்தில் வாசிக்கலாம். பின்பு செவ்வியலாக்கம் நோக்கி வர ஒரு விதையாக அமையும். நீங்கள் செய்யுள்களை வாசித்து காட்டி, அது இன்றைக்கு வழங்கப்படும் தமிழ் பண்பாட்டில் இருந்து எத்தனை தூரம் விலகியிருக்ககிறது என்பதை உணர முடிந்தது. இந்த உரை வடிவ நாவலே இன்றைக்கேற்ப பல இடங்களில் உருமாற்றப்பட்டு இருக்கிறது. ஒரு அறிமுகம் என்ற அளவில் இளம் வயதில் வாசிக்கலாம்.
அதை தாண்டி வாசித்தவுடன் அதன் கூறுமுறை, வெளிப்பாடு என எல்லாவற்றையும் நவின நாவல் வடிவத்தோடு குழப்பி கொண்டேன். பின்னர் நண்பர் ராஜகோபாலன் அவர்களிடம் தொடர்பு கொண்டு விளங்கிய பிறகு தான் ஒரு புரிதல் வந்தது. காவியங்களுக்கென்று ஒரு அழகியல் உள்ளது. அவை அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு புருஷார்த்தங்ககளை பேச வேண்டும். அவற்றிற்கு பேசப்படும் கதைகள் பொதுவான சூழலிலிருந்து எடுத்து கொள்ளப்படலாம். எனவே தர்க்க ஒழுங்கு குலையாதபடி பேசுவது அவற்றின் நோக்கம் அல்ல. மிகை கற்பனைகளை குறியீட்டு பொருள் கொண்டவையாக பார்க்கலாம் என்றெல்லாம் புரிந்து கொண்டேன்.
இந்த உரை மிக விரிவாக சீவக சிந்தாமணிக்கு எப்படியெல்லாம் நவீன வாசிப்பை கொடுக்கலாம் என்பது என் போன்ற மரபிலக்கியம் வாசிக்கதவனுக்கு மிக உதவியானது. எட்டு திருமணங்களை எட்டு பிறவிகள் என,ஆதி நாதரின் தொன்மத்தோடு இணைத்து மனித வாழ்க்கையின் எட்டு வளர்ச்சி நிலைகளென, அதே போல அஷ்ட பரிக்ரேயா என்ற கருத்துருவோடு இணைத்து புரிந்து கொள்ளுதல் என்பவை ஒரு நவீன வாசிப்புக்கான திறப்புகள்.
இந்த கிருஷ்ணனின் எட்டு மனைவியர் என்பது மட்டும் மேலோட்டமான கதை வாசிப்பின் போது தோன்றியது.அதன் விரிவை தாங்கள் சொன்னதன் மூலம் அதை தேடிச் சென்று விரித்தெடுக்க புதுவாயில் கிடைத்துள்ளது.
அதே போல உரையின் தொடக்கத்தில் சீவக சிந்தாமணி ஏன் வாசிக்கப்படவில்லை என்பது இக்காப்பியத்திற்கு மட்டுமல்லாது ஒரு செவ்விலக்கியம் ஒரு பண்பாட்டில் எவ்வண்ணம் நிலைகொள்கிறது என்பதற்கான விளக்கமாகவும் இருந்தது. அதை என்னளவில் இப்படி சொல்லி பார்க்கிறேன். எந்த செவ்வில்லக்கியமும் காவிய வடிவில் இருந்து பேச்சு வடிவிற்கு வந்தால் தான் நிலைக்கொள்ளும். அதே போல அப்பண்பாட்டில் உள்ள அக்காவியத்தின் மதத் தொடர்ச்சி அதை எப்போதைக்குமான வாயிலாக அமையும். உதாரணமாக கம்பராமாயணத்திற்கு தமிழகத்தில் உள்ள வைணவ பண்பாட்டு தொடர்ச்சி.
சீவக சிந்தாமணி தன் அடித்தளமாக கொண்டுள்ள தமிழ் சமணம் ஏறத்தாழ காணமலே ஆகிவிட்டது. அதன் விளைவாக அதன் பேச்சு வடிவங்களும் இல்லை. எனவே சீவகத்தை அணுகுவதற்கான மரபான வாயில்கள் நமக்கு இல்லை. அதற்கு பதிலாக ஐரோப்பா மறுமலர்ச்சி காலத்தில் தன் பண்பாட்டு தொகையான ஒடிசி, இலியட் ஆகியவற்றை எடுத்து முற்றிலும் புதிய கோணத்தில் தன்னுடைய பண்பாட்டு தொகையின் வளர்ச்சியை அறிவதற்கு, வேர்களை நீட்டி மறு ஆக்கம் செய்தது போல் நாம் சீவக சிந்தாமணிக்கு ஒரு வாசிப்பை உருவாக்கி கொள்ள வேண்டும். ஏனெனில் சீவக சிந்தாமணி வடக்கே இருந்து தன் கதையை பெற்று கொண்டிருந்தாலும் கற்பனை இடங்களை கொண்டிருந்தாலும் அது பேசுவது அன்றிருந்த தமிழ் பண்பாட்டை தான். இன்றை அறிய கட்டாயம் அன்றை அறிந்து தான் ஆக வேண்டும்.
இதை விளக்க சீவக சிந்தாமணியின் அகத்துறை பாடல்களும் போர் வர்ணனைகளும் சங்க பாடல்களின் அதே நீட்சியை கொண்டுள்ளன என்பதை விளக்கியும், ஒரு வாசகன் ஏன் இவற்றை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என் போன்றவனுக்கெல்லாம் முக்கியமாக தேவைப்படுகிறது. ஏனெனில் பழைய காப்பியங்களை வாசிக்க தொடங்கலாம் என நினைக்கும் போது சில தானே முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. அங்கு ஆசிரியர்கள் வந்து சொல்ல வேண்டியிருக்கிறது. இலக்கியம் என்பதே அறுபடாத தொடர்ச்சி தான் என்று.
அதே போல நீங்கள் சொன்ன நுண்தகவல்களில் அணிகளில் பறவையின் நிழல் முன்வினைக்கு உவமையாவது நினைத்து நினைத்து வியந்தேன். இவற்றை படிக்க நுனிவிரல் தொட்டுள்ளேன். இந்த உரை அவற்றிற்கு தொடக்கமாக அமைந்து மரபிலக்கியத்தில் என்னை செலுத்துவதாக.
இந்த கடிதத்தை கேட்டவற்றை எனக்கு நானே நினைவு கொள்வதற்காகவே எழுதினேன். ஆரம்பத்தில் பெரிதாக ஏதும் வரவில்லை. எழுத எழுத சொற்கள் வந்து நிறைத்துவிட்டன. சில இடங்களில் நானே போட்டவையும் வருகின்றன. இன்னும் நிறைய சம்பவங்கள் துணுக்குகளாக உள்ளன. இவை விதைகள் நீருற்றி வளர்ப்பது வாசகனாக என் கடமை. இவ்வருமையான உரைக்கு நன்றி ஜெ.
அன்புடன்
சக்திவேல்
ஏற்றுக் கொள்ளுதலும் அதுவாதலும்- கடிதம்
வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
ஈரட்டி காட்டின் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளின் இனிமையை துய்த்தபடி நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இன்று வெண்ணி அவர்களின் கேள்விக்கு நீங்கள் அளித்திருந்த பதில் மிகவும் அற்புதமானது. “அறிந்து முன் செல்பவர் வழிபடலாமா?” என்ற தலைப்பே வாசகர்களின் மீதான பேரன்பினால் மிகச்சரியாக அளிக்கப்பட்டுள்ளது. மரபான அத்வைத பரம்பரை குருகுலங்களில் முழுமைப் பேறு அடையும்வரை துணையாக பக்தியை கைக்கொள்ளுதல் எப்பொழுதும் வலியுறுத்தப்படுகிறது. யோக மரபிலும்கூட “ஈஸ்வர பிரணிதான” என்று முழுமை நிலை எய்தும் வரை அந்த முழுமுதற் பேராற்றலின் துணையை ஆதாரமாக பற்றி நின்றபடி யோக சாதனைகளை முறையாக செய்தல் வலியுறுத்தப்படுகிறது. முற்றும் உணர்ந்த முழுமை நிலையில் பக்தியும் ஞானமும், பக்தி செய்யப்படுவதும் பக்தி செய்பவனும் ஒன்றே என்ற புரிதல் கைவல்யமாகி அங்கு இருமை முற்றாக மறைந்து விடுகிறது என்கிறது யோக சூத்திரம். அதுவரையில் ஒரு முழுமுதற் பொருளை சரணடைந்து கடமைகளையும் சாதனைகளையும் சரியாக செய்து வருவதே அனைவருக்குமான பாதுகாப்பான பாதை என அறிந்த மகான்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தாயுமானவர், அருட்பிரகாச வள்ளலார், இரமணர், நாராயண குரு, வேதாத்திரி மகரிஷி என அனைத்து அத்வைத ஞானிகளும் முழுமை நிலை எய்தும் வரை
அந்தப் பேராற்றலை, பேரறிவை, அதன் பேரறத்தை துணை கொள்வதையே வலியுறுத்துகிறார்கள். அப்படி கைக்கொள்ளாத பட்சத்தில் வழிதவறிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் இந்தப் பாதையில் மிக அதிகமாகவே உள்ளன. இறைமறுப்பு கொள்கை கொண்ட பௌத்தமும் கூட தம்மம் சரணம் என்று பேரறத்தை முற்றாக சரணடைந்து சாதனைகள் செய்வதையே மிக முக்கியமாக வலியுறுத்துகிறது.
கடந்த பல மாதங்களாக இந்த நோய்த்தொற்று காலகட்டத்தில் பெரும்பாலான நண்பர்களிடமிருந்து வந்த அழைப்புகள் மரண பயத்தை எதிர்கொள்வதை குறித்த தாகவே இருந்தது. எத்தனை வேதாந்தம் படித்திருந்தும், அதை புரிந்து ஏற்றுக் கொண்டிருந்த பொழுதும் ஏன் மரண பயத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பதே அவர்களின் கேள்வியாக இருந்தது. நான் அவர்களுக்கெல்லாம் பதிலாக எதைச் சொல்லிக் கொண்டிருந்தேனோ அதையே நீங்கள் கட்டுரையாக வடித்து இருந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
மேலும் இதே பேசுபொருள் தொடர்பாக சிங்கப்பூர் கணேஷ் பாபு அவர்களின் “விடுதலை” என்ற கதையை வல்லினம் இதழில் இன்று வாசிக்கும் பேறும் கிடைத்தது.
பலரின் இந்தக் கேள்வியையே கணேஷ் பாபு அவர்கள் மிகச்சிறந்த வகையில் சிறுகதையாக ஆக்கியுள்ளார். அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு அருமையான கதை இது. இந்தக்கதையின் அழகே அது முடிந்த பிறகு நம்மை மேலும் மேலும் சிந்திக்க வைப்பதே. வேதாந்தம் முடிவாக எதைக் காட்டுகிறதோ அதுவாக ஆகாதவரை புரிதலும் ஏற்றுக் கொள்ளுதலும் முற்றாக பயன் தருவதில்லை. அதுவென்றே ஆவதற்கு எதை செய்யவேண்டும் என்பதை நீங்கள் முத்தாய்ப்பாக உங்கள் கட்டுரையில் கூறியுள்ளீர்கள். இன்றைய உங்கள் கட்டுரையும் இந்தச் சிறுகதையும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் பொருட்டே இந்தக்கடிதம்.
அனுதினமும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது மெய்யியல் சார்ந்து உங்கள் தளத்தில் வெளிவருவது மட்டிலா மகிழ்ச்சிஅளிக்கிறது.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
திருவண்ணாமலை
விஷ்ணுபுரம், கடிதம்
விஷ்ணுபுரத்தை ஒரு வாரத்தில் படித்து முடித்தேன். இதுவே என் முதல் வாசிப்பு, இடைவெளிகள் விட்டு வாழ்க்கை முழுவதும் வாசிக்க வேண்டிய புதினம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஞானம் எனும் பெயரில் இதற்கு முன் கட்டிவைத்த மனக் கோவிலை இடித்து தகர்த்து விட்டது விஷ்ணுபுரம். பலமுறை மேற்கொண்டு வார்த்தைகளை கடக்க முடியாமல் புத்தகத்தை கவிழ்த்துவிட்டு விலகினேன். என்னையே தடை செய்கிறாயா என்ற அகங்காரத்துடன் மீண்டும் தொடர்ந்தேன். இறுதியில் பேசுவதற்கு எதுவும் இல்லாமல் வெறுமையில் சஞ்சரிக்கும் அனுபவம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் மிக வேகமாக படித்த நான் புனைவு முடிய முடிய முடிக்க மிகவும் சிரமப்பட்டேன். முன்னும் பின்னும் பல முடிச்சுகள் உள்ளது. அதில் சிலவற்றை மட்டுமே அவிழ்க தெரிந்த அற்ப வாசகன் நான்.
வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் அது ஒரு வகையில் அதை இயற்றியவர்க்கு வாசிப்பவன் அளிக்கும் துரோகமே. இவ்விதி சிறந்த படைப்புகளுக்கு மட்டும்தான். என்னை பொருத்தவரை விஷ்ணுபுரம் ஒரு தரிசனம். மனிதனால் புரிந்துகொள்ள முடிந்த பிரபஞ்ச பார்வையையும் தத்துவ எல்லையையும் தனிமனிதனாக எதிர்கொண்டு அதை ஒரு காவிய வடிவில் அளித்தமைக்கு நன்றி.
இக்காவியத்தை இயற்றியவர் எவ்வளவு ஒரு உண்மையான தேடல் இருந்திருந்தால் இப்படி எல்லாம் அவரால் எழுத முடிந்திருக்கும் என்ற வியப்பு ஒருபக்கம். நான் பிறந்த வருடம் நீங்கள் விஷ்ணுபுரத்தை எழுத ஆரம்பித்து உள்ளீர்கள், எனக்கு ஏதோ ஒரு உண்மை தேடல் உள்ளதனால் என் கையில் இது இப்பொழுது கிடைத்திருக்கும் வியப்பு மறுபக்கம்.
காலம் எவ்வளவு வியப்பானது என்றால் அதைவிட வியப்பு மொழி. அதை எழுத்து வடிவில் பதிவு செய்யும் ஒரே காரணத்தினால் காலங்களை (எதிர்காலம் என்னும் ஒரு திசையை நோக்கி) கடக்கிறது. இதை கண்டுபிடித்த மனிதனும், அவன் தேடலும், அடையும் ஞானமும், அதை பகிர்ந்து கொள்ளும் எண்ணமும், இந்த நாடகம் நடக்கும் பிரபஞ்ச எல்லை என்னும் சிறு வெளி தொட்டியில் நீந்தும் மீனாக நானும், மனிதனுக்கு வரையறுக்கப்பட்ட எல்லையை ஏதோ ஒரு கணத்தில் தாண்டி மீண்டும் எல்லையில் விதிக்கப்பட்டிருக்கும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு எழுத்துகளின் வழியாக வெளிக்காட்டிக் கொள்ளும் நீங்களும், இவ்வாறு எது உலர வைக்கிறதோ அதுவும்.. அனைத்தும் ஓர் எல்லை இல்லா ஆச்சரியம்தான்.
தேடல் என்னும் பெயரில் வேஷம் போடுபவர்கள் மத்தியில், என் தேடல் உண்மையானது. என் ஊடகம் எழுத்து. ஒரு கதை வடிவில் கூறுகிறேன் முடிந்தால் புரிந்துகொள். நான் சென்ற தூரத்தை பகிர்ந்து கொள்கிறேன். வேண்டுமென்றால் எடுத்துக்கொள் என்று நீங்கள் எழுதியுள்ளதாக நான் எண்ணுகிறேன்.
உங்களை உங்கள் எழுத்துக்களை நான் இதுவரை கடந்ததை வைத்து என்னால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இந்த நூற்றாண்டில் ஒரு ஆன்மீக தரிசனம் பெற்ற ஒருவன் மடம் அமைப்பது சீடர்களை பெருக்கிக் கொள்வது ஒரு குழுவாக மாறுவது அதையே ஒரு அடையாளமாக மாற்றிக் கொள்ளவதெல்லாம் தேடலை திசை திருப்பும் செயல் என்றுதான் நினைக்கிறேன்.
ஆன்மீகம் ஒரு அந்தரங்கமான விஷயம். ஒருவர் கூறவேண்டும் அவர் காலடியில் வெள்ளை காகிதமாக மாறி அக்கணத்தில் புரிந்து கொள்வதை மற்றொருவர் கிறுக்கி கொள்ள வேண்டும். அந்த கிறுக்கல்களை எதிர்காலத்தில் அர்த்தப் படுத்திக்க முடியுமென்றால் அவன் உண்மையான சீடன். அர்த்தப்படுத்திக்க முடிவதுபோல் கிறுக்கல்கள் அமையுமாறு ஒருவர் கூறினார் என்றால் அவர் ஒரு உண்மையான குரு. இது எப்பொழுதும் எக்காலத்திலும் குழுவில் நிகழ வாய்ப்புகள் மிகவும் அரிதே என்று நம்புகிறேன்.
அவ்வகையில் பார்த்தால் நீங்கள் எழுத்தை உங்கள் காண்டீபமாக கடந்த காலத்தில் எடுத்திருந்தாலும் அது இப்பொழுது புல்லாங்குழல் ஆக மாறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்தாளன் என்னும் போர்வையில் என்னால் கிருஷ்ணரை தான் பார்க்க முடிகிறது. புத்தக வடிவில் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் உபசரிக்க முடிவதனால் உங்களை வாசிக்கும் ஒவ்வொருவரும் அர்ஜுனனே.
ஜெயமோகன் என்னும் எழுத்தாளன் எனக்கு தெரியவில்லை. ஏதோ பிழை உள்ளது போல என் கண்களில். எனக்குத் தெரிவதெல்லாம் இதுவரை மனிதன் கடந்துவந்த அறிவை பருகிய, நிகழ்காலத்திற்கு பொருந்தும் கச்சிதமான எழுத்தாளன் என்னும் வேஷத்தில் வாழும் ஞானியே! பிரபஞ்ச மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகனை உண்மையில் அந்த நடிகர் யார் என்று தெரிந்து கொண்டதில், அந்த நடிகனின் அகத்தை கண்டடைந்தததில் இந்த பார்வையாளன் மகிழ்ச்சி கொள்கிறான். உன் புரிதல் தவறு என்று அந்த நடிகனே சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இந்த பார்வையாளன் என்னும் கோமாளிக்கு அறிவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாம் பிரபஞ்ச லீலை, ஒன்றும் செய்வதற்கில்லை.
30 வருடங்களில் உங்கள் எண்ணங்கள் எவ்வளவு மேம்பட்டு இருக்கும், அதை என்னும் போதே மயிர்க்கூச்சல் ஏற்படுகிறது. அவைகளை எதிர்கொள்ளும் தகுதி எனக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலும் வெண்முரசு படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். தத்துவ குட்டையில் நீந்தும் இச்சை கொஞ்சம் உள்ளது. தீர்ந்த வேகத்திற்கு இலக்கியக் கடலில் குதித்து விடுவேன். இத்திசை காட்டியமைக்கு நன்றிகள் குருவே.
உங்களை இவ்வயதில் அறிந்து கொண்டதே நான் அடைந்த வெற்றிதான். வாழ்க்கை படகு உண்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அத்திசையில் முன்னோடியாக சென்றுவிட்டு ஒரு கொடியை கரையில் ஏற்றி உள்ளீர்கள். எந்தக் கேள்வியும் இல்லாமல் அதை நோக்கி சென்று கொண்டிருக்கும்
அன்பு
விஜய் கிருஷ்ணா.
அன்புள்ள விஜய் கிருஷ்ணா,
விஷ்ணுபுரம் வெவ்வேறு வகையில் என்னை தொடர்ந்து வருகிறது. விஷ்ணுபுரம் ஓர் எல்லை என்றால் இந்தப்பக்கம் வெண்முரசு இன்னொரு எல்லை. அலைச்சல்களும் தேடல்களும் விஷ்ணுபுரத்தில் தொடங்கி வெண்முரசில் நிறைவுற்றிருக்கின்றன என்று உணர்கிறேன். விஷ்ணுபுரத்தில் தவிப்பும் கொந்தளிப்பும் இருக்கின்றன. அவை மெல்லமெல்ல தொகுக்கப்படுகின்றன. வெண்முரசு அவற்றை விரித்துக்கொண்டிருக்கிறது.
ஜெ
விஷ்ணுபுரம் வாசிப்பு- மஞ்சுநாத்
விஷ்ணுபுரம் கடிதம் – கார்த்திக்
விஷ்ணுபுரம் பற்றி சரவணன் சந்திரன்
‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 19ஆவது நாவல் ‘திசைதேர்வெள்ளம்’. இத்தலைப்பினை நாம் ‘திசையைத் தேர்ந்தெடுக்கும் வெள்ளம்’ என்று பொருள்கொள்ள வேண்டும். இந்த நாவலில் போரிடுபவர்களின் மனங்களே வெள்ளமாக உருவகிக்கப்படுகிறது. அந்த வெள்ளம் ‘வீரசுவர்க்கம்’ எனும் திசையைத் தேர்ந்தெடுக்கிறது.
போர்க்களத்தில் வீரர்கள் அணிமாற விரும்பும் மனநிலையையும் இறப்பு குறித்த படைவீரர்களின் உளநிலையையும்கூட நாம் ‘வெள்ளமாக’உருவகித்துக் கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை இந்த நாவல் விழைவுகளின் வெள்ளம்தான். இந்த விழைவுகளுள் தெய்வங்களின் விழைவுகளும் மானுடர்களின் விழைவுகளும் உள்ளடங்கியுள்ளன.
இந்த நாவல் முழுக்கவே போரைப் பற்றியதுதான். மகாபாரதப்போரில் பீஷ்மரின் தலைமையில் நிகழும் முதற்பத்துநாட்போர்தான் இந்த நாவலின் களம். பீஷ்மரின் அறமும் அறமீறலும் அவர் அடையும் வியக்கத்தக்க வெற்றிகளும் அவர் அடையும் வெறுக்கத்தக்க பின்னடைவுகளும் இந்த நாவலில் சுட்டப்பட்டுள்ளன. ஒருவகையில் பார்த்தால் இந்த நாவலின் ஒட்டுமொத்த நாயகன் ‘பீஷ்மர்’ என்றுதான் கருதத் தோன்றுகிறது.
பீஷ்மர் தனியொருவராகப் பாண்டவர்படையின் பாதியை அழித்து விடுகிறார். அவர் நடத்தும் கொலைத்தாண்டவத்தைப் பொறுக்க இயலாமல் இளைய யாதவர் தன் படையாழியை எடுக்க முயல்கிறார். அந்த அளவுக்குப் பீஷ்மரின் விற்திறம் மிளிர்கிறது. ‘தனக்கு முன் ஆயுதம் ஏந்தி நிற்பவர்கள் எவரானாலும் அவர்கள் தனக்கு எதிரியே!’ என்பதில் துளியும் ஐயமின்றியுள்ளார் பீஷ்மர். அதனால்தான் அவரால் இளையோரையும் முதியோரையும் கொன்று முன்னேற முடிகிறது. இது போர்நெறிதான். பாண்டவர் தரப்பினர் பீஷ்மரின் இந்த ஐயமற்ற போக்கினை எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால், அவர்கள் ‘எந்த வகையில் பீஷ்மரைக் கட்டுப்படுத்தலாம்’ என்று சிந்திப்பதிலேயே, திட்டமிடுதலிலேயே பத்துநாட்கள் கடந்துவிடுகின்றன.
பீஷ்மரின் கொலையாடலைக் கண்டு சகிக்காத பீமன் தன்னை அறமிலியாக, காட்டாளனாக அறிவித்துக்கொண்டு, தன் முழுத்திறனைக் கொண்டுக் கௌரவர்களின் படைகளை அழித்தொழிக்க முயற்சிசெய்கிறார். அனைத்து அறங்களையும் மீறி, தன்னால் இயன்றவரை கௌரவர்களையும் உபகௌரவர்களையும் கொன்றொழிக்கிறார். ஆனால், பீமனின் இந்தப் போக்கினைத் தருமர் ஒருபோதும் ஏற்கவில்லை. சிகண்டியை முன்னிறுத்திப் பீஷ்மரைக் கொல்லவேண்டும் என்று இளையாதவர் சூழ்ச்சி செய்யும்போது அதற்கு முதல் எதிர்ப்பினைத் தெரிவிப்பவர் பீமன்தான். ஆனால், அதற்கு முதல் ஏற்பினைத் தெரிவிப்பவர் தருமர்தான். இந்த முரணைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
இந்த நாவலில் எண்ணற்ற கொலைகளை நம் கண்முன் காட்டிச்செல்லும் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் அவற்றுக்கு இடைவெட்டாகவும் நாவலின் வாசிப்பு ஒழுக்குக்காகவும் மூன்று மணநிகழ்வுகளையும் பின்கதைச் சுருக்கமாகக் காட்டிச் சென்றுள்ளார். ஒன்று – கலிங்க அரசியைக் கர்ணனுக்குக் கவர்ந்து வருதல். இரண்டு – அசங்கன், சௌம்யையின் திருமணவாழ்வு. மூன்று – கடோத்கஜன், அகிலாவதி திருமணம். வாசகர்கள் இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் ரத்தத்தால் நனைந்திருந்த வேளையில், இந்த மூன்று அகவாழ்வுச் சித்தரிப்புகளும் மனத்துக்கு இதமாகத்தான் இருக்கின்றன.
இந்த நாவலில் அபிமன்யூவின் திறமை முழுமுற்றாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இளமைக்கே உரிய எல்லைமீறலையும் எழுத்தாளர் அபிமன்யூவின் செயல்கள் வழியாகக் காட்டியுள்ளார். சான்றாக, பீஷ்மரிடம் தோற்று அர்சுணன் பின்டையும்போது, அபிமன்யூ பீஷ்மரைத் துரத்திச் சென்று போரிடும் காட்சியைக் குறிப்பிடலாம். பொதுவாகவே, இளையோர் தருணம் வாய்க்கும்போது தனக்கு முன்னோரையும் மூத்தோரையும் முந்திச் செல்லவே விரும்புவர். அதற்காகத் தன்னுயிரையும் இழக்க அவர்கள் தயார்நிலையில் இருப்பர். இதனை எழுத்தாளர்,
“இளமை எப்போதுமே தன்னைச் சற்று மிகையாகவே மதிப்பிட்டுக் கொள்கிறது , தனக்குரிய வாய்ப்புகள் அமையாதுபோகுமென்று அஞ்சுகிறது. வாழ்வு கண்முன் விரிந்து கிடக்கையில் அதைப் பணயம் வைத்தாடி , வாழ்வுக்கு அப்பாலென எதையோ அடையத் துடிக்கிறது.”
‘வாழ்வுக்கு அப்பாலென’ அபிமன்யூ அடையத் துடிப்பதுதான் என்ன? தன் நடுகல்லோ!
ஒட்டுமொத்த இளமையின் துடிப்புக்கும் விழைவுக்கும் தலையில் ஒரு ‘குட்டு’ (கொட்டு) வைப்பதுபோலப் பின்வரும் வரியை எழுதியிருக்கிறார் எழுத்தாளர்.
“பிறர் நினைவில் நின்றிருக்க வேண்டுமென்று ஒன்றைச் செய்வதைப் போல் பொருளற்ற பிறிதொன்று இருக்க இயலுமா ?”
இது, இளயோருக்கு மிகவும் பொருந்தும் என்றாலும் எல்லா வயதினருக்கும் இது பொருத்தமுடையதுதான் என்பது என் கருத்து.
களம்பட்ட வீரர்களின் உடல்களுக்கு இறப்புச்சடங்குகள் (செல்கைச் சடங்குகள்) நடைபெறும் காட்சியை எழுத்தாளர் விளக்கும்போது, ‘பாணர் எருமைமறம் பாடினர்’ என்ற தகவலைத் தெரிவித்துள்ளார்.
“முந்தையநாள் இறந்தவர்களுக்கான செல்கைச் சடங்குகள் அரசர்களின் பாடிவீடுகளின் முற்றங்களிலேயே நிகழ்ந்தன. களத்திலிருந்து அவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு முற்றங்களில் நிரையாக வைக்கப்பட்டிருந்தன. ஷத்ரிய முறைப்படி வெண்கூறைக்குமேல் வாளும் வேலும் சாத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவ்வுடல்களுக்கு இறந்தவர்களின் தந்தையர் வாய்க்கரிசியிட்டு வணங்கினர். அவர்களின் களப்போர்த்திறத்தையும் வெற்றியையும் போற்றிப் பாணர் எருமைமறம் பாடினர். அங்கிருந்து உடன்பிறந்தார் தொடர அவ்வுடல்கள் எரிகளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன….. தழைந்த தோற்பரப்பில் விரல்கள் குழைந்தாட பருபருத்த குரலில் பாணர் பாடிய எருமைமறப் பாடல்கள் கேட்டவர்களை விழிநீர்விடச் செய்தன. அத்துயர் சொல்லில்லாமல் கடுங்குளிர் எனப் படையில் பரவியது.”
‘மறம்’ என்னும் துறை புறப்பொருளைச் சார்ந்தது. இந்தமறத்துறை பல வகையாகக் கூறப்பெறும். சான்றுகள் – எருமைமறம், தானேமறம், தேர்மறம், யானைமறம், குதிரைமறம்.
புறத்துறைகளுள் ஒன்றான ‘எருமைமறம்’, வீரன் பகைவர் படையைத் தனியனாய் நின்று தாக்குவதைக்குறிக்கும். அதாவது, தன் படை முதுகிடும்போது தான் மட்டும் அஞ்சாமல் பகைவர் படையை எதிர்த்து நிற்பதைக் குறிக்கும்.அந்த வீரனைப் புகழ்வதற்காகப் பாணர்கள் பாடப்படுவதே ‘எருமைமறம்’ ஆகும். இது குறித்த பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
“கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
திணிநிலை அலறக் கூழை போழ்ந்து தன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
ஓம்புமின்ஓம்புமின்இவண்என ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.” (புறநானூறு, 275)
வளைந்த மாலையும், வளைத்துக் கட்டப்பட்ட ஆடையும் அரசன் விரும்புவதைக் கூறி, அவனைத் தன் வசப்படுத்தும் இயல்பும் இவனிடம் பொருந்தியுள்ளன. மனவலிமையையுடன் போர்புரியும் படைவீரர்கள் அஞ்சி அலறப் படையைப் பிளந்துகொண்டு தான் செல்லும் திசையை நோக்கி, நன்கு செய்யப்பட்ட, சிறந்த, கூரிய வேலின் இலைமுகத்தை ஏந்திச் செல்கிறான். “இவனை இங்கேயே தடுத்து நிறுத்துங்கள்” என்று வீரர்கள் கூறித் தடுத்தாலும் அவர்கள் தடுப்பதைக் கடந்து, தளைபூட்டப்பட்ட யானைபோல், இறந்த வீரர்களின் குடல்கள் காலைத் தடுக்க, தன் கன்றை விரும்பும் பசுவைப் போல் பகைவரின் முன்னணிப் படையிரனால் சூழப்பட்டிருக்கும் தன் தோழனைக் காப்பாற்றச் செல்கிறான்.
‘சக்ரதனுஸ்’ தன்னுடைய எருமைமறத்தைக் காண தேவர்களை அழைப்பதாக ஓர் இடத்தில் எழுத்தாளர் காட்சிப்படுத்தியுள்ளார்.
“சக்ரதனுஸ் “ நமது குடித்தெய்வம் இங்கு வந்துள்ளதா ?” என்றார்.
“அனல்காற்றுகளின் தேவனாகிய விஸ்வம்பரன். அனைத்தையும் உண்ணும் ஃபுஜ்யு. பாலைமணலில் உறையும் பர்ஹிஸ். தேவர்களே! எங்குள்ளீர்கள்? என்னைச் சூழ்க! என் எருமைமறம் கண்டு மகிழ்க!” என்று சக்ரதனுஸ் சொன்னார்.
அக்கணம் காற்று ஒன்று புழுதியுடனும் எரிமணத்துடனும் வீசி அவர் ஆடைகளையும் கொடியையும் படபடக்கச் செய்தது. அவர் கைக்கூப்பி “ அருள்க! என்மேல் கனிக! ” என்றார். ”
பெருவீரர்களுக்கு இறுதியில் எஞ்சுபவை எருமைமறமும் நடுகல்லும்தானோ! இதற்குத்தானா இத்தனை வஞ்சமும் கொலைகளும்?
கடோத்கஜனின் மகன் பார்பாரிகன் துரியோதனனின் மகன் லட்சுமணனிடம் பேசும்போது, லட்சுமணனின் பொதுவான போர்நெறியைப் பின்பற்றி அவனைப் போரிலிருந்து விலக்குவது நம்மை வியக்க வைக்கிறது. ‘பார்பாரிகன் தன்னுடன் இருந்தால் நாலு பீமனைக்கூட வெல்லலாம்’ என்ற வாய்ப்பு இருக்கும்போது, லட்சுமணன் போர்மாண்பைப் பின்பற்றி, அவனைப் போரிலிருந்து விலக்குவது நம்மைத் தடுமாறச் செய்கிறது. தாதையிடமும் (திருதராஷ்டிரன்) தந்தையிடமும் (துரியோதனன்) இருக்கும் அதே உளவிரிவு லட்சுமணனின் குடிகொண்டுள்ளது என்றே கருதமுடிகிறது.
“துருமசேனன் “ நீ உன் குடியுடன் போரிடுவாயா ?” என்றான்.
“ என் தந்தையுடனும் போரிடுவேன். எதிர்கொண்டு மோதினால் கொல்வேன். அது களநெறி ” என்றான் பார்பாரிகன்.
“ அவரை வெல்ல இவனால் எளிதில் இயலும் ” என்று அலம்புஷன் நடுவே புகுந்தான்.
“ இவன் நகரில் நிகழும் அனைத்துப் போர்களிலும் தன் தந்தையைக் கைக்குழவி என தூக்கி அறைந்திருக்கிறான். இவன் வல்லமை அவரைப் போல நால்வருக்கு நிகர். ”
துருமசேனன் “ மெய்யாகவா ?” என்றான்.
“ ஆம் , தந்தையே. என்னால் எந்தையை மிக எளிதில் வெல்லமுடியும். தாதை பீமசேனரையும் இடரின்றி வெல்வேன். நேர்ப்போரில் என்னிடம் எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவர் பால்ஹிகர் மட்டுமே. இளைய யாதவரும் அங்கநாட்டரசர் கர்ணனும் மட்டுமே என்னை வெல்லக்கூடும் என எந்தை சொன்னார் ” என்றான் பார்பாரிகன்.
லட்சுமணன் முகம் சுளித்து தலையைத் திருப்பிக்கொண்டு “ உன் அகவை என்ன ?” என்றான்.
“ பதின்மூன்று , ஆனால் …” என அவன் தொடங்க , “ நீ களம்புகலாகாது. இது என் ஆணை! ” என்றான் லட்சுமணன்.
“ தந்தையே , நான் …” என அவன் சொல்லத் தொடங்க , “ என் சொல் … அதை என் மைந்தர் மீறலாகாது ” என்று லட்சுமணன் உரக்க சொன்னான்.
“ நீ மேற்குமூலை காவல்மாடத்தில் அமர்ந்துகொள்க! அங்கிருந்து போரை நோக்கு. ஒவ்வொருநாளும் போரில் என்ன நிகழ்கிறதென்பதை உள்ளத்தில் பதித்து அன்று மாலை என்னிடம் வந்து விரிவாகச் சொல். ”
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் எழுத்தாற்றலுக்குரிய பல்வேறு சிறப்புக்கூறுகளுள் ஒன்றாக, ‘வாசகர் படிக்கும் போதே அந்தக் காட்சியைத் தம் மனத்துள் காணச் செய்யும்நுட்ப’த்தைக் குறிப்பிடலாம். காட்சியை எழுத்தாக்கும் எழுத்தாளரின் மாயவித்தைக்கு ஒரு சான்று –
“அரைக்கணம் என பீஷ்மரின் பார்வை அபிமன்யூவைத் தொட வந்தது. அதன் பொருளை உணர்ந்த பிரலம்பன் தன் தேரிலிருந்து எழுந்து அபிமன்யூவின் தேரை நோக்கிப் பாய்ந்து, அந்தப் பேரம்பைத் தன் நெஞ்சில் வாங்கி, அபிமன்யூவின் மேல் விழுந்தான். அபிமன்யூ குனிந்து அவனைத் தூக்க, பிரலம்பன் நீருக்குள்ளென அவன் முகம் கலங்கித் தெரிவதை இறுதியாகப் பார்த்தான்.”
இத்தனை அழிவுகளுக்குப் பின்னர் பாண்டவர்தரப்போ அல்லது கௌரவர் தரப்போ சமாதானத்துக்கு முன்வரும் என்று இருதரப்புப் படைவீரர்களும் எதிர்பார்க்கின்றனர். ‘முற்றழிவை எந்த மன்னரும் விரும்புவதில்லை’ என்ற காரணத்தால்தான் அவர்கள் இந்தப் பொதுவான மனநிலையை எய்தி, எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை கௌரவர்களோ பாண்டவர்களோ சமாதானத்துக்கு முன்வந்தாலும்கூட அதைத் தடுக்கும் முதல்மனிதராக இளைய யாதவரே இருப்பார் என்பதை எழுத்தாளர் அழுத்தமாகக் காட்டிவிடுகிறார். இளைய யாதவர் சேகிதானனிடம் கூறும் கருத்துகள் முதன்மையானவை.
“ இளைய யாதவர் “ முழு நாட்டையும் அளிப்பார்கள் என்றாலும் இந்நிலத்திலிருந்து தன் உற்றாருடன் முழுமையாகவே விலகி பிற நிலம் ஒன்றுக்குச் செல்வதாக அவர் ஒப்புக்கொண்டாலும்கூடப் போர் ஒருகணமும் பின்னடைய நான் ஒப்பமாட்டேன். அவர்கள் இங்கே களத்திலிருந்து தப்பி ஓடினால் அவர்கள் செல்லுமிடமெங்கும் துரத்திச் செல்லச் சொல்வேன். பாரதவர்ஷத்தைவிட்டு அயல்நிலங்களில் அவர்கள் குடியேறினால் அங்கும் படைகொண்டு அவர்களை அழிப்பேன். கௌரவக் குடியின் இறுதித்துளி இந்நிலத்திலிருந்து முற்றாக அழிவது வரை இப்போர் முடியாது ” என்றார்.
இளைய யாதவர் இந்த முடிவினைப் போர்முனையில் எடுக்கவில்லை என்பதையும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
“இளைய யாதவர், “ பாண்டவர்களில் இருவர் என்னைவிட்டு அகலமாட்டார்கள். இன்றுள பாண்டவப்படையில் இந்திரப்பிரஸ்தத்தினரும் பாஞ்சாலரும் விராடரும் மட்டுமே என்னைவிட்டுச் செல்வார்கள். எஞ்சியோரை என் ஆணை கட்டுப்படுத்தும். கௌரவர்களை நானே வெல்வேன். என் வஞ்சத்திலிருந்து அவர்கள் எங்கும் ஒளியமுடியாது. வேள்விச்சாலையிலோ மூதாதையர் ஆலயத்திலோ சென்று ஒளிந்து கொண்டாலும்கூட உட்புகுந்து வெளியே இழுத்து இட்டு கொல்வேன் ” என்றார். “இந்த முடிவு என்று அவர்களின் வேள்விச்சாலையிலிருந்து என் கால்பொடியைத்தட்டி உதறி அஸ்தினபுரிக்கோட்டை முகப்பை கடந்தேனோ அன்று எடுக்கப்பட்டது. எடுத்த முடிவுகளை நான் எந்நிலையிலும் மாற்றுவதில்லை ” என்றார் .”
ஆக, கௌரவர்களுக்கு முதன்மையான எதிரி பாண்டவர்கள் அல்லர்; இளைய யாதவர்தான். தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள பாண்டவர்களைத் தன் கருவியாகப் பயன்படுத்துகிறார் இளைய யாதவர்.
ஒருவகையில் பார்த்தால் எல்லாவற்றையும் மிகவும் திட்டமிட்டு நடத்துவது இளைய யாதவரே என்பது புரிந்துவிடுகிறது. ‘ஊழி’ன் மானுட வடிவாகத் திகழ்கிறார் இளைய யாதவர். இதனை அவரே வெளிப்படையாகத் தெரிவிக்கவும் செய்கிறார்.
சேகிதானன் பெருமூச்சுவிட்டான். பின்னர் , அவர் கையிலிருந்த சுவடியைப் பார்த்தான். அவன் விழியசைவை நோக்கிய இளைய யாதவர், “ விருத்திர வைஃபவம். இனிய பாடற்சுவை கொண்டது. இந்திரனும் விருத்திரனும் அவர்களுக்கு அப்பாலிருக்கும் தெய்வங்களால் களத்தில் ஆட்டுவிக்கப் படுவதைக் கூறுவது. இங்குள எவரையும் களம்செல்லவேண்டாம் என்றோ , வஞ்சமொழிய வேண்டுமென்றோ நான் ஆணையிட மாட்டேன்! இவர்களாக விரிந்து எழுந்து போரிடுபவன் நானே. அனைத்து வஞ்சங்களும் என்னுடையவை ” என்றார். ”
துரியோதனன் எதையும் எண்ணித்துணிவதில்லை. துணிந்த பின்னர் பின்னடைவதுமில்லை. இதனைத் துரியோதனன் பல தருணங்களில் உரைத்துள்ளான். துரியோதனன் தன்னுள் உறைந்த உள்ளொளியின் வெளிச்சத்தில் செயல்படக்கூடியவன். அவனுக்கு அவனே இருள், அவனே ஒளி. இருளுக்கும் ஒளிக்கும் வேறுபாடு அறியாத தந்தையின் மைந்தன் அவன். அவன் ஒவ்வொரு முறையும் எழுவதும் விழுவதும் ஒளியென மயங்கி அவன் கால்வைத்த இருளில்தான்.
தன்னுடைய வாழ்முறையையே துரியோதனன் ருக்மியிடம் அறிவுரையாகப் பகர்கிறான்.
“ காலத்தின் பொருட்டும் , குடியின் பொருட்டும் , சொல்லின் பொருட்டும் ஒருவன் வாழ்வானெனில் அவன் இருளையே சென்றடைவான். உள்ளிருக்கும் ஒளியின் பொருட்டு வாழ்க! ” என்றான் துரியோதனன். ”
திருதராஷ்டிரனுக்கு உரிய தனித்துவமான குணநலன்களுள் ஒன்று எல்லையற்ற உளவிரிவு. அதில் பாதியையாவது துரியோதனன் பெற்றிருக்கிறான் என்பதும் அவற்றை அவ்வப்போது செயல்படுத்துகிறான் என்பதும் வாசகருக்குப் பெரிய ஆறுதலைத் தருவனவாக உள்ளன.
“அன்றே அவர் தன் படைகளை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரியின் படைகளுடன் சென்று சேர்ந்துகொண்டார். காரூஷநாட்டுப் படைகளில் பெரும்பகுதியினர் அவருடன்தான் வந்தனர். ஏனென்றால் அரசருக்குரிய கணையாழியால் ஆணையிட அவரால் இயன்றது. அந்த ஓலைக்கு காரூஷநாட்டின் பதினாறு படைத்தலைவர்களும் கட்டுப்பட்டார்கள். அவர்கள் அஸ்தினபுரியின் படைகளை அடைந்தபோது அது குருக்ஷேத்ரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கௌரவ அவையில் அவரை வரவேற்ற சகுனி “ மைந்தருக்கு எதிராகக் களம்நிற்கப் போகிறீர்கள் ” என்று சொன்னார்.
அச்சொல்லின் உள்ளுறை புரியாமல் “ அவர்கள் என் மைந்தர்கள் அல்லர். என் சொல்லைத் தட்டியதுமே என் எதிரிகளாகிவிட்டனர். நான் என் அன்னையின் ஆணையை ஏற்று இங்கே வந்தவன் ” என்றார் க்ஷேமதூர்த்தி.
துச்சாதனன் “ ஆனால் , இங்கிருந்து அங்குச் செல்லவும் உங்கள் அன்னையல்லவா ஆணையிட்டாள் ?” என்றான். அவையில் எழுந்த சிரிப்பின் ஒலி க்ஷேமதூர்த்தியைக் கூசச் செய்தது. ‘வந்திருக்கலாகாதோ!’ என்னும் எண்ணம் எழுந்தது. ஆனால், துரியோதனன் “ எவ்வண்ணமாயினும் என்ன ? நம்மை நாடி வந்துவிட்டார். அவையமர்க , காரூஷரே! நம் வெற்றியில் மைந்தரும் வந்து இணையட்டும் ” என்றான். அவர் விழிநீர் வழிய “ இந்தப் பெருந்தோள்களுக்காகவும் அகன்ற உள்ளத்துக்காகவும்தான் இங்கே வந்தேன் ” என்றார் க்ஷேமதூர்த்தி. ”
நேரத்துக்கு ஏற்ப அணிமாறும் படையினரையும் அரவணைக்கும் பேருள்ளம் துரியோதனனிடம் இருக்கிறது. ஆனால், பாண்டவர் படையில் சேர்வதற்காகச் செல்லும் க்ஷேமதூர்த்தியைப் பீமன் புறக்கணிக்கிறார்.
‘பீமனைத் துரியோதனனின் ஆடிப்பாவை’ என்றுதான் எழுத்தாளர் முன்பு பலமுறை குறிப்புணர்த்தியிருந்தார். ஆனால், அந்த ஆடிப்பாவையில் மெய்ப்பாவையின் முதுகு தெரியாதுதானே! மெய்ப்பாவையின் எல்லாக் குணங்களையும் நாம் ஆடிப்பாவையிடம் எதிர்பார்ப்பது நமக்கு ஏமாற்றத்தையே தரும். ‘கௌரவர்கள் நூற்றுவரும் நூறு உடல்கள்; ஆனால், ஒரே மனம்’ என்றுதான் எழுத்தாளர் குறிப்புணர்த்தினார். ஆனால், துரியோதனனுக்கு உள்ள விரிந்த உள்ளம் துச்சாதனனிடம் சில விழுக்காடுகள்கூட இல்லை என்பதையும் நாம் இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.
சில எழுத்தாளர்கள் காட்சிகளை வாசகருக்குக் கவித்துவமாக விளக்க ஒலிக்குறிப்புகளைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இந்த எழுத்தாளர் ஒட்டுமொத்தப் போர்க்களத்தையும் ஒலிக்குறிப்புகளாக மாற்றிக் காட்டியுள்ளார்.
“சர்வதனும் சுதசோமனும் வருவதற்குள்ளாகவே பீமசேனரும் கௌரவர்களும் கடும்போரில் இறங்கிவிட்டிருந்தார்கள். துச்சலனும் துர்மதனும் இருபுறமும் நின்று அம்புகளால் தாக்க, துச்சகனும் சுபாகுவும் நேரெதிரில் நின்று போரிட்டனர். பீமசேனரின் இருபக்கங்களையும் பாஞ்சாலப் படையின் பரிவில்லவர் காத்தனர். அம்புகள் உரசிச்செல்லும் உலோகக் கிழிபடலோசை செவிகூச ஒலித்தது. அம்புமுனைகள் முட்டிய பொறிகள் கண்முன் வெடித்து வெடித்து சிதறின. பரிவில்லவர்கள் இருபுறமும் அலறி விழுந்துகொண்டிருந்தனர். அவ்விடத்தை நிரப்பிய பரிவில்லவர்கள் குளிர்நீரில் குதிக்கும் இளையோர்போல உரக்க கூச்சலிட்டனர். இரும்பின் ஓசைகளாகச் சூழ்ந்திருந்தது காற்று. அம்புகளின் ஓசை , கவசங்களின் ஓசை , சகடங்களின் ஓசை. அங்கே ஒரு மாபெரும் கொல்லப்பட்டறைச் செயல்படுவதுபோலத் தோன்றியது. ”
இந்த நாவலின் தொடக்கத்திலேயே அம்பையும் கங்காதேவியும் அருவுருவாகப் போர்க்களத்துக்குள் நுழைவதுபோலக் காட்டியுள்ளார் எழுத்தாளர். அம்பை பீஷ்மரைக் கொல்லும் நோக்கோடும் கங்காதேவி தன் மகன் பீஷ்மரைக் காக்கும் நோக்கோடும் ஒருவருக்கொருவர் போட்டியாகச் செயல்படுகின்றனர். பெருவீரர்களின் உள்ளங்களில் நுழைந்து மீள்கிறார்கள். ஒருவருக்கொருவர் சூளுரைக்கிறார்கள்.
இந்த நாவலின் இறுதியில் பீஷ்மர் களம்வீழ்கிறார். அம்பை திரௌபதியின் உடலைத் தன் வாகனமாக்கி, அதில் உட்புகுந்து, பீஷ்மரின் களவீழ்ச்சி பற்றிப் பேசுகிறார், கொண்டாடுகிறார். பீஷ்மரின் களவீழ்ச்சி பற்றியச் செய்தியை யாதவப்பேரரசிக்கும் (குந்திதேவி) பாஞ்சாலத்து அரசிக்கும் (திரௌபதி) தெரிவிப்பதற்காகத் தூது செல்கிறார் பூரிசிரவஸ். தூதுச் செய்தியைக் கேட்ட பாஞ்சாலத்து அரசி திரௌபதியின் நடவடிக்கை பற்றிப் பூரிசிரவஸ் சுபாகுவிடம் கூறுகிறார்.
“அவர் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. முகம் காய்ச்சல் கண்டது போலிருந்தது. “ஆம்! அவன் வீழ்ந்தான். என் மைந்தனின் கையால் வீழ்ந்தான். வென்றது என் வஞ்சம். ‘பெண்பழி நின்றுகொல்லும்’ என்று அறிக இவ்வுலகு” என்றார். நான் திகைப்புடன் யாதவப் பேரரசியை பார்த்தேன். அவரும் திகைத்தது போலிருந்தார். ஆனால், விரைவிலேயே தன்னை மீட்டுக்கொண்டு எழுந்துசென்று, பாஞ்சாலத்து அரசியைத் தோள் பற்றி மெல்ல உலுக்கி, “பாஞ்சாலத்து அரசி, உன் சொற்கள் எதிர்நோக்கப்படுகின்றன” என்றார். பாஞ்சாலத்து அரசி துயில்கலைந்து விழித்துக்கொண்டவர்போலச் சிறு அதிர்வுடன் மீண்டு, என்னை நோக்கினார்.”
அம்பைக்குப் பீஷ்மர் மீது தீரா வஞ்சம். திரௌபதிக்குக் கௌரவர்களின் மீது தீரா வஞ்சம். ஆனால், இவர்களைவிடக் குந்திதேவிக்குத்தான் திருதராஷ்டிரர் உட்பட ஒட்டுமொத்த கௌரவர்களின் மீதும் வஞ்சம் இருக்கிறது. ஆனால், அம்பை திரௌபதியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். ஒரு வஞ்சநெஞ்சம் பிறிதொரு வஞ்ச நெஞ்சத்தைத்தான் தன் ஊர்தியாகக் கொள்ளும். ஆவியாக வந்தாலும் அம்பை குந்திதேவியை விலக்கி, திரௌபதியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். இது சிந்தனைக்குரியது.
சுபாகு தன் மகன் சுஜயனைக் கொன்ற அர்சுணனிடம் ‘சுஜயனின் விண்வாழ்வுக்காக வேண்டிக்கொள்க’ எனக் கோருவதும் கௌரவர்கள் தங்களால் களத்தில் பெரும்புண்பட்ட அர்சுணனின் மகன் அபிமன்யூவுக்குத் தங்களின் தரப்பிலிருந்து தென்னக மருத்துவர்குழுவை அனுப்புவதும் வியப்புக்குரியதாக உள்ளது. ‘விம்பிள்டன்’ விளையாட்டின் இறுதியில் இருதரப்பு வீரர்களும் வெற்றி-தோல்வி என்ற மனநிலைக்கு அப்பால், தங்களுக்குள் நட்புறவோடு கைக்குலுக்கிக் கொள்வதுபோன்ற ஒரு பெருந்தன்மையினை இங்குக் காணமுடிகிறது.
இந்த நாவலில் போர்க்களத்தின் பாடிவீடுகளில் தங்கியிருக்கும் படைவீரர்களுக்கு இரவில் வந்துபோகும் கொடுங்கனவுகள் பற்றிய சித்திரங்கள் வாசகரின் உள்ளத்தைப் பதைபதைக்கச் செய்கின்றன. தம் தரப்புப் பாடுவீடுகளையும் ஒட்டுமொத்த வீரர்களின் நிரைகளையும் பாதுகாக்கும் காவற்பணியாளர்களின் செயல்பாடுகள் நம்மை வியக்க வைக்கின்றன. அவர்களின் பகற்காவல் பணிகளும் இரவுக்காவல் பணிகளும் எத்தனை வலியுடையது என்பதை அறிய முடிகிறது. அவர்கள் போரிடவில்லை; ஆனால், தங்களுக்குள் ஒவ்வொரு கணமும் போரை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த நாவலில் எனக்குப் பிடித்த இரண்டு வசனங்கள் பின்வருமாறு –
“ பொறுப்புகளிலிருந்தே பெருஞ்செயல்கள் எழுகின்றன. பெருஞ் செயல்களால் மானுடர் சான்றோரும் வீரரும் ஆகிறார்கள். ” 2. “ பிறர்போல் இருப்பது ஒரு விடுதலை. தனித்தன்மை என்பது பொறுப்பு ”மிகுந்த பொறுப்புணர்வோடு ‘வெண்முரசு’ தொடர்நாவல்களை எழுதிய பெருஞ்செயலால்தான் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் உலக அளவில் தனித்துவமான எழுத்தாளராகத் திகழ்கிறார். ‘வெண்முரசு’ முழுமையாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் காலக்கட்டத்தில் என்னுடைய இந்தக் கருத்தினை உலகம் ஒருமனதாக ஏற்கும்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்
‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை
சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

