Jeyamohan's Blog, page 939
August 5, 2021
வரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம்
அன்புள்ள ஜெ,
கடந்த சனிக்கிழமை ஜூலை 31 அன்று ஸ்டாலின் ராஜாங்கத்தின் மூன்று புத்தகங்களை ஒட்டி “வரலாறு என்னும் மொழி” என்று ஒரு கலந்துரையாடலை ஒருங்கிணைத்திருந்தேன். ஸ்டாலினின் வரலாற்றுப் பார்வை, வரலாறு எப்படி கட்டமைக்கப்படுகிறது, ‘எழுத்து’ மட்டுமே வரலாறா என்று பல புள்ளிகளை விவாதம் தொட்டுச் சென்றது. “பெயரழிந்த வரலாறு: அயோத்தி தாசரும் அவர் கால ஆளுமைகளும்”, “எண்பதுகளின் தமிழ் சினிமா”, “எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்” ஆகிய மூன்று நூல்களும் மூன்று வெவ்வேறு தளத்துக்கானவை ஆனால் மையச் சரடாக எழுத்து சார்ந்த வரலாறும் மக்களிடையே புழங்கும் வழக்காறும் எப்படி ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்று இருக்கும்.
நிகழ்ச்சியை அறிவித்ததுமே பேஸ்புக்கில் விவாதம் சூடு பிடித்தது. அயோத்திதாசர் சிந்தனையாளரேயல்ல, எழுத்து மட்டுமே வரலாறு, வழக்காறு என்பது கட்டுக் கதை என்றெல்லாம் காழ்ப்புடனே சுடுசொற்கள் வந்து விழுந்தன. சுடு சொல் வீசிய பலரும் ஸ்டாலினின் எழுத்தை வாசிக்காதவர்கள் (பெரும்பாலும்) அல்லது வாசித்தாலும் தங்கள் முன் முடிவுகளோடு நிற்பவர்கள். தலித் எழுத்தாளர்களை ஒதுக்குவது குறித்து உங்கள் தளத்திலும் சமீபத்தில் ஒரு கடிதம் வெளியானது ஒரு ரசமான ‘coincidence’.
இரண்டு மணி நேரம் என்று திட்டமிட்ட நிகழ்ச்சி மூன்றரை மணி நேரம் நீண்டது. சில இடங்களில் உணர்ச்சி மேலிடவே ஸ்டாலின் பேசினார் ஆனால் எந்த இடத்திலும் அவர் நிதான குணத்தையோ, காழ்பாற்ற சம நிலையையோ தவறவிடவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் தலித் எழுத்தாளர்கள் சந்திக்கும் புறக்கணிப்பு பற்றி ஒன்றிரண்டு நிமிடம் பேசினார், அதுவும் தன்னை முன்னிலைப்படுத்தாமல்.
சிலரின் மனத்தை மாற்ற முடியாது. அது வீண் வேலை. ஆனால் நிகழ்ச்சிக்குப் பின் இது வரை ஸ்டாலினின் எழுத்துப் பற்றியோ அவர் கருத்தியல் பற்றியோ அதிகப் பரிச்சயம் இல்லாதவர்கள் ஸ்டாலினை படிக்கவும், அறியவும் முற்பட்டிருக்கிறார்கள். என் மனைவி உட்பட. நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது பேராசிரியர் உதயராஜ், ஆய்வாளர் ஆதவன் ஆகியோரின் உரைகள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பேருதவிப் புரிந்தது நண்பர் ஏ.பி. ராஜசேகரன்.
அயோத்திதாசர், எம்.சி.ராஜா, ஸ்டாலின் ராஜாங்கம், ராஜ் கௌதமன் இவர்கள் எல்லோரையும் உங்கள் தளத்தின் மூலமாகத் தான் எனக்கும் பலருக்கும் அறிமுகம். அதேப் போல் தலித் வரலாறு பற்றி என்னிடம் இருக்கும் நிறைய புத்தகங்கள் காலச்சுவடு வெளியீடு தான்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் போது நீங்கள் என்னை குறித்து சொல்லும் விமர்சனம் நினைவுக்கு வந்தது. எழுதியச் சான்றுகள் குறித்த என் ஆணித்தரமான நம்பகத்தன்மைப் பற்றி சில மாதங்கள் முன் கூட கடலூர் சீனுவுக்கு எழுதிய பதிலில் குறிப்பிட்டிருப்பீர்கள். ஸ்டாலினின் வரலாற்றுப் பார்வை மேற்சொன்னது போல் வேறு வகை. ஸ்டாலினின் எழுத்தும், தன் தரப்பை முன் வைக்கும் நேர்த்தி ஆகியவை தான்.
உங்கள் தளத்தின் மூலம் உங்கள் வாசகர்களையும் இந்நிகழ்வும், அதன் மூலம் ஸ்டாலினின் எழுத்தும் சென்று சேர்வதற்காக இக்கடிதம்.
அரவிந்தன் கண்ணையன்
அன்புள்ள அரவிந்தன்,
ஸ்டாலின் ராஜாங்கத்தை அமெரிக்கன் கல்லூரியில் அவர் மாணவராக இருந்த காலம் முதல் அறிவேன். நண்பர் அலெக்ஸ் வழியாக நட்பும் அணுக்கமும் உருவாகியது. என்னை அண்ணன் என அழைக்கும் சிலரில் ஒருவர். தமிழில் நான் அணுகி வாசிக்கும், பெருமை கொள்ளும் ஆய்வாளர்களில் ஒருவர். ஆனால் எந்தவகையிலும் முன்கூட்டிய பாராட்டுணர்வுடன் அல்லது ஏற்புடன் நான் அவரை வாசிப்பதில்லை. ஐயத்துடன், பலசமயம் மறுப்புடன் மட்டுமே வாசிக்கிறேன். அவருடைய புறவயமான ஆதாரங்கள், தெளிவான முறைமை, நிதானமான நடை ஆகியவற்றின் வழியாக அவர் என் தர்க்கபூர்வ அணுகுமுறையை நிறைவடையச் செய்வதனால் மட்டும்தான் அவரை தமிழகத்தின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக வைக்கிறேன். ஐயமே இல்லாமல் சொல்லமுடியும், அவர் தன் தலைமுறையின் தலைசிறந்த ஆய்வாளர். நிகர்வைக்க இன்னொருவர் இன்றில்லை.
நவீனத்துவக் காலகட்டத்திற்குப் பின் உலகமெங்குமே வரலாற்றாய்வு உருமாற்றம் அடைந்திருப்பதை சற்று கூர்நோக்கு செய்பவர்கள் உணரமுடியும். சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன். ஓர் அறிவுத்துறை அதன் நோக்கத்தையும் அதற்குரிய ஆய்வுநெறிகளையும் மாறிலியாக வைத்துக்கொண்டுதான் செயல்பட முடியும். ஆனால் இன்று வரலாற்றாய்வு என்பது ஒரு பக்கம் ஆய்வை நிகழ்த்திக்கொண்டே அத்துறையின் நோக்கம் மற்றும் நெறிகளை மறுபரிசீலனையும் செய்கிறது. ஏறத்தாழ தத்துவத்திலும் இதுவே நிகழ்கிறது. ’பறக்கும்போதே விமானத்தை பழுதுபார்ப்பதுபோல’ என்று வரலாற்றாசிரியர் திரிவிக்ரமன் தம்பி வேடிக்கையாகச் சொன்னார். அறிவியல்துறைகளுக்கும், சமூகவியல் போன்ற துணைஅறிவியல் துறைகளுக்கும் இச்சிக்கல் இல்லை.
ஆகவே இன்றைய ஆய்வாளன் இருவகைகளில் செயல்பட வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் செவ்வியல் வரலாற்றாய்வு அணுகுமுறைக்குள் நின்றுகொண்டு தரவுகளை அடுக்கிச் செய்யும் ஆய்வுகளை முன்வைப்பவர்கள் ஒரு வகை. உதாரணம் அ.கா.பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியம், செ.இராசு போல. இன்னொரு பக்கம் செவ்வியல் முறைமைப்படி ஆய்வுகளைச் செய்யும்போதே வரலாற்றாய்வுத்துறையின் இலக்கு, நெறி இரண்டையும் மறுபரிசீலனை செய்பவர்கள். ஸ்டாலின் ராஜாங்கம் இரண்டாம் வகையானவர்.
அவருடைய ஆய்வுகளில் பெரும்பகுதி செவ்வியல் வரலாற்றாய்வின் நெறிகளை கொண்டதுதான். தமிழக தலித் இயக்கம், தமிழக தலித் கல்வி இயக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய ஆய்வுகள் மூலத்தரவுகளை தேடிச்சேர்த்து , இன்றுள்ள புறவயத் தர்க்கப்படி சீராக அடுக்கி உருவாக்கப்படுபவை. இன்னொரு பக்கம் அவர் இங்குள்ள வரலாறாய்வின் நோக்கம், நெறி ஆகியவற்றை உடைத்து ஆராயவும் முயல்கிறார். அயோத்திதாசரில் இருந்து தொடங்குவது அந்த பார்வை. அதாவது வரலாறு [History] வரலாற்றெழுத்தியல் [Historiography] இரண்டையுமே ஒருவர் ஆய்வுசெய்வது இது.
அவருடைய இந்த இரண்டு வகை ஆய்வுகளையும் பிரித்துத்தான் நாம் அணுகவேண்டும். இன்று உலகம் எங்குமுள்ள வரலாற்று ஆய்வுப்போக்குகளில் ஒன்று இது. தமிழ்ச்சூழலில் வரலாற்றாய்வுகளே பொதுவாக கவனிக்கப்படுவதில்லை.அவை பொதுவாகப்பேசப்படும் அன்றாட அதிகார அரசியலை, அல்லது எளிய சமூகநம்பிக்கைகளை எங்கே சீண்டுகின்றனவோ அங்கே மட்டுமே அவற்றின்மேல் கவனம் விழுகிறது. அதுவும் அக்கப்போர் சார்ந்த கவனம் மட்டுமே. அது வரலாற்றாய்வுக்கே எதிரான மனநிலை கொண்டது. வரலாற்றாய்வாளர்கள் அஞ்சுவது அதைத்தான். அக்கப்போர் போல வரலாற்றாய்வை மலினப்படுத்தும் வேறொன்றில்லை. அதிலும் அக்கப்போரே அறிவுச்செயல்பாடாக ஆன சமூகவலைச்சூழலில், எதையுமே தெரியாமல் எவரும் எதையும் சொல்லலாம் என்னும் களம் அமைந்திருக்கையில் வரலாற்றாய்வை ரகசியமாக நிகழ்த்துவதே நல்லது என்று சொல்லத் தோன்றுகிறது.
வரலாற்றாய்வின் நோக்கமும் வழிமுறையும் கேள்விக்குரியதாக்கப் படுவதென்பது இந்திய- தமிழ்ச்சூழலில் மிகச் சிக்கலானது. இன்றைய வரலாற்றெழுத்தியல் ’யார் எழுதிய, எவருக்கான, எந்தக்கோணத்திலான வரலாறு?’ என்னும் கேள்வியை முதன்மையாக எழுப்பிக்கொள்ளும். ஒற்றை வரலாறு என்பதை மறுத்து பல வரலாறுகள் இருப்பதாக புரிந்துகொள்ளும். வரலாற்றுத் தரவுகள் என்பவையேகூட புறவயமானவை அல்ல, அவற்றின் அகவயத்தன்மை எவை வரலாற்றுத் தரவுகள் என்று தெரிவு செய்வதில் உள்ளது என்று கண்டடையும்.மிகச்சிக்கலான சமூக அடுக்குமுறைகளும், மொழிக்குள்ளேயே வராத பல்லாயிரம் சமூகக்குழுக்களும் கொண்ட இந்தியத் தமிழ்ச்சூழலில் வரலாறு என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுச்சமரசப் புரிதலும், அதன் விளைவான ஆதிக்கமும் மட்டும்தான். ஒவ்வொரு எழுந்துவரும் புதிய சமூகமும் அந்த ஆதிக்கத்தை உடைத்துத்தான் தன் வரலாற்று இடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த முயற்சியில் எழுதப்பட்ட வரலாற்றை மோதி உடைக்கையில் எரிச்சல்களும் ஏளனங்களும் எழுவது இயல்பே. இங்கிருக்கும் வைதிக மேலாதிக்க வரலாற்றெழுத்தும் சரி, அதற்கு எதிராக உருவாக்கப்பட்ட திராவிட, தமிழிய வரலாற்றெழுத்தும் சரி, அடிப்படையில் ஒரே வகையான வாழ்க்கைநோக்கும் தர்க்கமுறையும் கொண்டவை. மிகக் குறைவான தரவுகள், அவற்றை கற்பனையால் இணைத்து உருவாக்கப்படும் பொற்காலச் சித்திரம், அதையொட்டிய பெருமிதங்கள் ஆகியவை அவற்றின் பொதுக்கூறுகள். இனி எழுதப்படும் வரலாறுகள் அந்த இயங்குமுறை கொண்டிருக்க முடியாது. பல்லாயிரமாண்டுகளாக எழுதப்படாத வரலாறுள்ள மக்கள்குழுக்களே இங்கு எண்ணிக்கையில் பெரும்பகுதி. அவர்கள் வரலாறற்றவர்களாக நீடிக்க முடியாது. பிறர் எழுதும் வரலாற்றினுள் அவர்கள் தங்கள் வரலாற்றை எழுதிக்கொள்ள முடியாது. பிறர் உருவாக்கும் ஆட்டவிதிகளுக்குள் நிற்கவும் இயலாது.
இன்றும்கூட தமிழ் வரலாற்றில் மிகச்சிறிய பகுதியே எழுதப்பட்டுள்ளது. அதுவும்கூட மிகமிகச்சிறிய அளவிலான ஆதாரங்களின் அடிப்படையில் மிகப்பெரும்பாலும் ஊகங்களின் வழியாக உருவாக்கப்பட்டது. நான் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரனின் ஆய்வுகளை வாசிக்கும்போது எண்ணிக்கொள்வதுண்டு. அவர் தொல்லியல் சான்றுகளையும் தொல்நூல்களையும் தரவுகளாகக் கொண்டு செவ்வியல்நோக்கில் ஆய்வுசெய்பவர். ஆனால் எத்தனை தாவல்கள், எத்தனை மிகையூகங்கள். அவை சுவாரசியமான திறப்புகளை அளிப்பவை, மேதமை வெளிப்படுபவை, எதிர்கால ஆய்வாளர்களுக்குரியவை. ஆயினும் அவை மிகையூகங்களே. வேறு வழியே இல்லை, அவ்வாறுதான் தமிழ் வரலாறு எழுதப்படலாகும்.
அந்த வரலாற்றெழுத்தின் போதாமைகளில் இருந்து தொடங்கும் ஸ்டாலின் போன்றவர்களின் வரலாற்றெழுத்துமுறை முக்கியமானது. தமிழகத்தின் இன்னமும்கூட ‘மக்கள் வரலாறு’ என்பது எழுதப்படவே இல்லை. இங்கே மாபெரும் குடியேற்றங்களும் புலம்பெயர்வுகளும் நிகழ்ந்துள்ளன. சாதிப்படிநிலைகள் மாறி மாறி வந்துள்ளன. அவை உருவாக்கும் சமூகப்பரிணாமச் சித்திரம் எழுதப்படவில்லை. அவை கீழிருந்தே எழுதப்படலாகும். அதற்கான முதல்தொடக்கம் வெளிப்படும் ஆய்வுகள் ஸ்டாலின் எழுதுபவை. ஸ்டாலின் ராஜாங்கத்தின் நவீன பௌத்த மறுமலர்ச்சி காலம், எழுதாக்கிளவி, பெயரழிந்த வரலாறு போன்றவை அவ்வகையில் மிக முக்கியமான நூல்கள்.
இங்கே பொதுவரலாறு பேசுபவர்கள் கிடைக்கும் சிறு ஆதாரங்களைக்கொண்டு நுண்புனைவுகள் செய்து களமாடுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். வரலாற்றை அரசியலாதிக்கக் கருவியாகக் காண்பவர்கள் புதிய வரலாற்றெழுத்துக்களை பூசல்கள் வழியாக அணுகுகிறார்கள். இவ்விரு தரப்புமே எழுந்துவரும் மாற்றுவரலாறுக்கு மறுதரப்பாக அமையும் தகுதி அற்றவை. எளிய அக்கப்போர்களாக எஞ்சுபவை அவை. ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்கள் இன்றைய நவீனத்துவத்திற்குப் பிந்தைய வரலாற்றெழுத்தின் அடிப்படை வினாக்களை அறிந்தவர்களுடன் விவாதிக்கவேண்டிய இடத்திலேயே இருக்கிறார்கள்.
ஆகவே தமிழ்ச்சூழலில் அவரைப்போன்றவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். இங்கே வரலாறும் பண்பாடும் பேசுபவர்களின் இயல்பான உரையாடலில் ஸ்டாலின் ராஜாங்கம் மேற்கோளாக்கப்படுவது அனேகமாக நிகழ்வதே இல்லை. இச்சூழலில் நீங்கள் எடுத்துள்ள இம்முயற்சி மிகமிக முக்கியமானது. என்னைப்போன்றவர்கள் வரலாற்றாய்வை கூர்ந்து ஆராய்ந்து தேவையான பண்பாட்டுச்செய்திகளை, கொள்கைகளை எடுத்துக்கொள்பவர்கள் மட்டுமே. வரலாற்றாய்வில் விவாதத்தரப்பாக அமையுமளவுக்கு ஆய்வுத்தகுதி எனக்கில்லை. வாசகனாக மட்டுமே ஸ்டாலினின் எழுத்துக்களை அணுகிவருகிறேன். என் வாழ்த்துக்கள்
ஜெ
கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு
சுவாமி ரமணகிரி- ஒரு முழுமை
அன்புள்ள ஜெ
வணக்கம்
உங்கள் வாசகர்களில் நிறையபர் தீவிரமான சாதகர்கள். அவர்களுக்கு இந்த இடம் உதவியாக அமையலாம். குட்லாடம்பட்டி ஸ்வாமி ரமணகிரி ஆஸ்ரமம் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் ,வாடிப்பட்டி அருகே ,தங்க நாற்கர சாலையின் இடதுபுறம், சிறுமலை இரு கரம் கொண்டு அரவணைத்ததைப்போன்ற செழுமையான மலைச்சரிவில், சிவனின் தலையில் கங்காதேவியை போல ரமணகிரியாரின் சிரசில் குட்லாடம்பட்டி அருவி அமைந்துள்ள அடர்ந்த காட்டில் உள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலர் சென்று வந்துள்ளனர். ஒரு நண்பர் இந்த ஆசிரமத்திலேயே சில மாதங்கள் தங்கியிருந்தார். எத்தனையோ முறை இவ்வழியாக மதுரை சென்றபோதும் செல்லும் வாய்ப்பு அமையவில்லை.
அலெக்ஸண்டர் வெஸ்டின் என்ற இயற்பெயரைக் கொண்ட சுவாமிகள் ஸ்வீடன் ராஜ குடும்பத்தை சார்ந்தவர். நாவலாக எழுத தக்க அளவு திருப்பங்களை கொண்ட வாழ்வு அவருடையது.
1921 ல் பிறந்த ஸ்வாமிகளின் இளமைக்காலம் பற்றி நிறைய தொன்மக் கதைகள் கூறப்படுகிறது. பெருவிபத்து ஒன்றில் இருந்து அதிசயத்தக்க அளவில் உயிர் பிழைத்து இருக்கிறார். அது சார்ந்த கேள்விகள் அவருக்கு தொடர்ந்து இருந்திருக்கின்றன. இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்றிருக்கிறார். ஒரு போரில் நேரடியாக பங்கு பெறுவது என்பது எத்தனை கேள்விகளை எழுப்ப வல்லது!
அதன்பின்பு இந்தியா வந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் கீழ் வேதங்கள், சமஸ்கிருதம் பயின்றிருக்கிறார். நேரு, இந்திரா உள்ளிட்ட உயர் மட்டங்களோடு தொடர்பு இருந்திருக்கிறது.
ஹடயோக சாதனையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இமயமலை முழுவதும் தேடலோடு அலைந்திருக்கிறார். எந்தப் புள்ளியில் தென்னகம் நோக்கி திரும்பினார் என்பது குறித்தும் பல்வேறு கதைகள் நம்பிக்கைகள் உலவுகின்றன. ரமண மகரிஷியை அறிந்த யாரோ ஒருவரின் மூலமோ, அல்லது எதிர்பாராத ஒரு சூழ்நிலையிலோ தென்னகம் வந்திருக்கிறார்.ரமணரை சந்தித்திருக்கிறார். ரமணரோடு சுவாமிகள் இருக்கும் பதிவுகள் கிடைக்கின்றன.
இவ்வளவு நீண்ட பின்னணி கொண்ட சாதகர் ஒருவருக்கு ரமணரை போன்ற ஞானதீபத்தின் அருகாமை எவ்வளவு உதவியாக இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. இடையில் உடல் நலம் கெட்டு இருக்கிறது. அதற்கு சிகிச்சை பெற வேண்டி மதுரை மற்றும் பெருந்துறையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்து சென்றிருக்கிறார்.
திண்டுக்கல் மதுரை சாலையில் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி என்ற சிறுமலை அடிவாரத்தில் கூரை வேய்ந்த மண் வீட்டில்தான் முக்தி பெறுவது வரை வாழ்ந்திருக்கிறார்.இப்போது ரமணகிரி ஆசிரமம் என்று அழைக்கப்படும் அந்த இடம் அடர்ந்த மாந்தோப்பு இல்லை மாங்காடு என்றே சொல்லலாம். 10 ஏக்கருக்கு மேல் நெருக்கமாக அமைந்த மாமரங்கள் மிக மிகக் குறைவான கட்டிடங்கள். சுவாமிகள் தனது கையாலேயே நட்டுவளர்த்த அரசமரம் மற்றும் அதன் அடியில் ஒரு பிள்ளையார் ஆலயம்.
தாடகை நாச்சியம்மன் அருவிக்கு நேரெதிரில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது ஆசிரமத்தின் ஓர் எல்லையில் அருவிநீர் ஓடுகிறது. சிவனுக்கு கங்கை போல் சுவாமிக்கு இந்த அருவி.
சுவாமி முக்தி அடைந்த பொழுது தலையில் ரத்தக் கசிவு இருந்ததாகக் கூறப்படுகிறது. சுவாமிகளின் பூதவுடல் ஆசிரமத்திலேயே சமாதி வைக்கப்பட்டு சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ ரமண லிங்கேஸ்வரராக வழிபடப்பட்டு வருகிறது.
எனக்கு தொடர்ச்சியாக ரமணானுபவ நாட்டமும் தேடலும் ஆர்வமும் இருப்பதால் இந்த ஆசிரம வளாகத்தில் சுவாமிகளின் சன்னிதியில் ரமணானுபவ நீட்சியை உணர முடிந்தது.
நாங்கள் சென்றிருந்த பொழுது அங்கே ரமேஷ் சுவாமிகள் நீண்ட மௌனத்தில் இருந்தார். அவரின் அருகிருப்பு இதமாக இருந்தது.
பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. மூன்று நாட்கள் வரை தங்க அனுமதிக்கிறார்கள். முன் அனுமதி பெற்று வரவேண்டும்.
ரமண மகரிஷி தனது கையாலேயே தேங்காய் ஓட்டில் செதுக்கி ரமணகிரியாருக்கு வழங்கிய பிச்சைப் பாத்திரம் இன்னமும் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது. ரமணகிரியாரின் போதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை இன்னொரு பதிவில் விரிவாக எழுத வேண்டும்.
சுவாமிகள் வாழ்ந்த சிறு குடிலை பார்த்தேன். அவர்கள் கையால் நட்டு வளர்த்திய அரசமரத்தருகே சிறிது நேரம் நின்றிருந்தேன்.
அவர்கள் சமாதியில் அமர்ந்து விட்டு எழுந்து வர முடியவில்லை. ஆசிரமத்தின் மற்ற இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பும் முன் மீண்டும் ஒருமுறை சமாதியில் சென்று அமர்ந்திருந்தேன்.
சாமிகள் குழந்தையாக இருந்த பொழுது குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள், இளமைக்காலப் படங்கள் ,தீவிர யோகசாதனை காலகட்டத்தில் எடுத்த ஆசனங்களில் அமர்ந்திருக்கும் படங்கள் இடுந்தன. ரமணரைச் சந்தித்தபின் நிறைவிலும் கனிவிலும் அவருள் எரிந்த நெருப்பு குளிர்ந்ததின் அடையாளமாக கண்கள் மலர்ந்திருக்க, தலையை லேசாக ஒரு பக்கம் சாய்ந்தவாறு கருணையோடு சாமிகள் இருக்கும் படமும் ஆலயச்சுவர்களில் கண்ணாடி சட்டமிட்டு அருள்பாலித்து வருகிறது.
ஸ்ரீ ரமணகிரியாரின் குளிர்ந்த நெருப்பு என்ற சொல் அங்கே சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்தது.அவர் கண்ட தரிசனம் அது.பெரும்பாறையில் சுரந்திருக்கும் ஈரம்.எரிமலையின் குளிர் அது.மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடர்.
ஓம் நமசிவாய….
கதிர்முருகன்
மு.கதிர் முருகன்
கோவை
தேசமற்றவர்கள் – கடிதம்
தேசமற்றவர்கள்
அன்புள்ள ஜெ
தேசமற்றவர்கள் என்ற சொல் திகைக்கச் செய்தது. ஒரு தேசம் அதில் பிறந்து வளர்ந்தவர்களை அன்னியர்களாக நினைக்கிறது என்பதைப்போல குரூரமானது ஏதுமில்லை. இங்கே தமிழியமும் ஈழ அரசியலும் பேசுபவர்கள் கூட ஈழத்து அகதிகளுக்காகப் பேசவில்லை. உண்மையில் அவர்கள் பேசினால்தான் பெரிய சிக்கல். அவர்கள் பொறுப்பில்லாமல் பேசும் தமிழ்த்தேசியப் பிரிவினை அரசியல்தான் ஈழத்து குடியேறிமக்கள் மேல் மைய அரசு அவநம்பிக்கை கொள்ள காரணமாக அமைகிறது.
மைய அரசுக்கு திபெத்தியர், வங்காளிகள் மேல் இருந்த நம்பிக்கை இவர்கள் மேல் இல்லை. ராஜீவ்காந்தி கொலை நடக்காமல் இருந்திருந்தால், இங்கே தமிழ்ப்பிரிவினை பேசும் கும்பல்கள் உருவாகாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஈழத்து அகதிகளும் குடியுரிமை பெற்றிருப்பார்கள். இங்கே தமிழ்ப்பிரிவினைவாதம் பேசுபவர்களுக்கும் ஈழ அகதிகள் இப்படி கைவிடப்பட்ட நிலையில் இருப்பதுதான் வசதி என நினைக்கிறேன்.
ஆர்.சண்முகம்
***
அன்புள்ள ஜெ
தேசமற்றவர்கள் குறிப்பு படித்தேன். பலமுறை எழுதியிருக்கிறீர்கள். பொறியியல்படிப்பு முடித்தபின் கூலிவேலைக்குச் செல்லும் ஈழ அகதிகள் பற்றி முத்துராமனே எழுதியதை ஞாபகம் படுத்திக்கொள்கிறேன். கசப்பும் துயரமும் ஏற்படுகிறது. என்ன செய்ய முடியுமென்று தெரியவில்லை. இத்தனை பெரிய தமிழகத்தில், இத்தனை வாய் உபச்சாரங்களுக்கு நடுவிலேதான் இந்த மாபெரும் அநீதியும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது
எஸ்.லட்சுமணன்
மனிதர்கள்“-சிறுகதைத் தொகுதி-நா.கிருஷ்ணமூர்த்தி-வாசிப்பனுபவம் -உஷாதீபன்
குறைந்தது பத்துக் கதைகளாவது இருக்கும் ஒரு சிறுகதைத் தொகுதியில். அதற்கும் குறைவாக இருக்குமேயானால் அந்தப் படைப்பாளியின் ஒரு குறுநாவலைச் சேர்த்துக் கொள்வார்கள்.அந்தப் புத்தகத்தை ஒரு குறிப்பிட்ட பக்கங்களுக்கான தொகுதியாக மாற்றுவார்கள்.
ஆனால் வெறும் ஆறே ஆறு கதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதி எனக்குத் தெரிய இப்போதுதான் வந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். கதைகளென்னவோ ஆறே ஆறு என்று இருக்கலாம். ஆனால் அது வெறும் ஆறு கதைகளல்ல. இந்த ஆறு கதைகள் அறுபது கதைகளுக்குச் சமம். ஒரேயொரு கதையை மட்டும் படித்துவிட்டு பட்டென்று புத்தகத்தை மூடிவிடுவதில்லையா? அந்தக் கதை ஏற்படுத்திய பாதிப்பிலேயே நாலைந்து நாள்கள் அலைவதில்லையா? ஆர்வ மிகுதியில் அதே கதையை எடுத்து திரும்பவும் படித்து ஆழ்ந்து போவதில்லையா?
ஆகையால் எண்ணிக்கை என்றுமே முக்கியமில்லை. எது நிற்கிறது, எத்தனை நிற்கிறது என்பதுதான் முக்கியம். ஒரு படைப்பாளிக்கு அவனது ஒரே கதை திரும்பத் திரும்பப் பலராலும் பேசப்பட்டுக்கொண்டேயிருக்குமானால் அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறெதிலும் கிடைப்பதில்லை. அப்படி நிறைய எழுத்தாளர்கள் நினைவு கூறும் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஒரேயொரு நாவலை மட்டும் எழுதிவிட்டுப் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும் பெருமையை அடைந்திருக்கிறார்கள். ஆகையால் எத்தனை படைப்பு என்பதை விட எழுதிய ஒன்றானாலும் அது என்ன சொல்கிறது, எப்படிச் சொல்கிறது என்பதே முக்கியம். அதுவே தரம். தராதரம். நிரந்தரம்.
எழுத்தாளர் திரு. நா.கிருஷ்ணமூர்த்தி பழம் பெரும் படைப்பாளி. கசடதபற- காலத்து எழுத்தாளர். 1965 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில் “கோணல்கள்” என்ற தொகுப்புக்காகவும், நடை, கசடதபற ஆகிய சிறு இலக்கிய ஏடுகளுக்காக
வும் அவரால் எழுதப்பட்ட ஆறு சிறுகதைகள் இப்போதுதான் தொகுப்பாக வந்திருக்கிறது.
க்ரியா பதிப்பகம் – படைப்பாளியை, படைப்பின் தரத்தை அறிந்து அவரை கௌரவிக்கும் விதமாக, அழகிய சிறு தொகுதியாக “மனிதர்கள்” என்ற தலைப்பிட்ட இத்தொகுதியைக் கொண்டு வந்திருக்கிறது.
ஒரு படைப்பாளிக்கு அவரது முதல் புத்தகம் வெளி வரும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை வார்த்தைகளால் சொல்லி முடியாது. இவருக்கு அவரது எண்பதாவது வயதில் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. எனக்குத் தெரிய இவ்வளவு வயதான காலத்தில் முதல் புத்தகம் வெளி வரும் முதல் எழுத்தாளர் இவராகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். இந்தச் செய்தியே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. அப்படியென்றால் படைப்பாளிக்கு எவ்வளவு திருப்தியளித்திருக்கும்? ஒரு இளைஞனின் மனநிலைக்கு சென்று அவர் உற்சாகமடைந்திருப்பார்தானே? என்ன ஆனாலும் மூத்தவர். பழைய மதிப்புமிக்க இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதியவர் என்கிற பெருமைக்குரியவர். அவரது இத்தொகுதியும் மிகுந்த மதிப்புக்குரியதாகத்தான் விளங்குகிறது.
மனிதர்கள் சுயநலமிக்கவர்கள் என்பது பொதுவான விதி. அதிலும் இக்கட்டான காலகட்டத்தில் அது விஞ்சி நிற்கும். அது மட்டுமே தலைதூக்கி செயல்படும். தான் எப்படித் தப்பிப்பது, தன்னை மட்டும் எப்படிக் காத்துக் கொள்வது, இக்கட்டிலிருந்து தன்னை எப்படி விலக்கிக் கொள்வது – இது எல்லா மனிதர்களுக்குமான இயல்பு.
இப்படியான கருத்துப் பொதிந்த ஒரு நிகழ்வே முதல் கதையாகியிருக்கிறது. “மனிதர்கள்” – இது தலைப்பு. புத்தகத்தின் தலைப்பும் இதுவே. மனிதர்கள் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இக்கதை. சொந்த அனுபவச் செழுமையும், பார்த்த, அனுபவித்த, மனதில் பதிந்த காட்சிகளுமே கதையாகுதல் நியாயம், அப்பொழுதுதான் அந்தப் படைப்பு முழுமையாக வெளிப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இவர். இந்தக் கதையின் அனுபவம் அவருக்கு ஏற்பட்டிருக்குமா தெரியவில்லை. பார்த்து, அனுபவித்த கொடுமையாய்க் கூட இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
அண்ணாமலை வலிய சிதம்பரத்தை தண்ணீருக்குள் இழுத்துப் போகிறான். வேண்டாம், வேலாயுதம் இறை கிணற்றில் தலை முழுகிக் கொள்கிறேன்…என்று சொல்கிறான் சிதம்பரம். அதே சமயம் அங்கு போனால் அவன் ரொம்பக் கிராக்கி பண்ணிக் கொள்வான் என்றும் அலுத்துக் கொள்கிறான். அதைவிட காட்டாற்று வெள்ளமாய் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய போதும் கூட அசராது அக்கரைக்குச் சென்று அநாயாசமாய்த் திரும்பிய அண்ணாமலை மீது அவனுக்கு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பயமும் போகமாட்டேனென்கிறது. அப்படி ஆபத்தை எதிர்நோக்கி போய்த்தான் ஆக வேண்டுமா என்று தன்னைத்தானே பலமுறை கேள்வி கேட்டுக் கொண்டும், தனக்குள்ளேயே – அதான்…அண்ணாமலை அண்ணாச்சி இருக்காருல்ல…அப்டி விட்டிடுவாரா நம்மள…என்கிற நம்பிக்கையும் ஊசலாட…அட…சும்மா பயப்படாம வாங்க…நா இருக்கன்ல…அப்டி விட்டிருவனா உங்கள….என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தண்ணீரில் இறங்கி விடுகிறார் அண்ணாமலை.
முழங்கால் முழுகி, இடுப்புக்கு வந்து, பின்பு மார்பு தொட்டு, வாய், மூக்கு, கண் என்று ஏறி, தலையே முழுகிவிடும் நிலையில் பயந்து போகிறான் சிதம்பரம். அதுநாள் வரை அத்தனை வேகமான, ஆழமான வெள்ளத்தைப் பார்த்திராத, அனுபவப்படாத அணாணமலையும்கூட கொஞ்சம் மலைக்கத்தான் செய்கிறான். இறுக்கிப் பிடித்த கையோடு எதிர்க்கரை நோக்கிப் பாய்கையில், அதையும் மீறிய தண்ணீரின் வேகம் அவர்களை நகர்த்திக் கொண்டே போகிறது. அண்ணே…உங்களை நம்பித்தான் இருக்கேன்…ஊசலாடும் நிலையில் சிதம்பரத்தின் கூக்குரல்.
இன்னும் பத்தடி போனால், முதலைபள்ளச் சுழலில் மாட்டிக்கொண்டு உள்ளே இழுத்து அமிழ்த்தி விடுமே என்கிற பயம் தலையெடுக்க, ஏதோவொரு உத்வேகம் உந்தித்தள்ள முன்னேறுகிறான் அண்ணாமலை. இனிக் கையைப்பற்றிப் பலனில்லை என்று கால்களைத் திடமாய்ப் பிடித்துக் கொள்கிறான் சிதம்பரம். எதிர்த்து முன்னேற, இழுத்து இழுத்துப் பிடித்தால் எப்படிக் கரையைத் தொடுவது? எப்படி எதிர்த்து நீந்துவது ?தண்ணீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இருவரும் தடுமாறுகிறார்கள். காலைப் பிடிக்காதே…விடுப்பா….காலை விடு….மேலே வந்து மூச்சு வாங்கி…கத்துகிறான் அண்ணாமலை.
கரையேறுவோமா, சுழலில் அமிழ்ந்து செத்துப் போவோமா என்கிற நம்பிக்கையற்ற தடுமாற்றத்தில், வெள்ளத்தின் ஆர்ப்பரிப்பும், வேகமும், சுழற்சியும் அவர்களைத் தடுமாறச் செய்ய, என்ன ஆனாலும் சரி…கால்களை விடுவதில்லை என்று அண்ணாமலையின் கால்களை நெஞ்சோடு சேர்த்து இரு கைகளாலும் பற்றிக் கொண்டு உயிருக்குப் போராடும் அந்தக் கணத்தில்…
அடப்பாவி…கொஞ்சமாச்சும் முன்னேறுவோம்னா…இவனே இழுத்து உள்ள அமுக்கிடுவான் போலயே….இந்தக் கதில எப்டிக் கரையைத் தொடுறது…? எமப்பிடியால்ல பிடிச்சிருக்கான்…. ஒரு கணம் நினைத்த அண்ணாமலை…ஏதோவோர் எண்ணம் பிடியாய் உந்தித்தள்ள….இருக்கும் சக்தியையெல்லாம் சேர்த்து, ஒன்று திரட்டி…..ஒரே உதை…….
கட்டிய வேட்டியோடு சேர்ந்து பிடி நழுவிப் போகிறது அந்தக் கணம்….வெள்ளத்தோடு வெள்ளமாய் சிதம்பரம்….
பய மவனே …உடும்புப்பிடியால்ல பிடிக்கிறான்….கொஞ்சம் அசந்திருந்தா…நம்மளையுமில்ல இழுத்துவிட்டுப் போயிருப்பான்….சுழித்தோடும் சுழல்களுக்கு நடுவே வெகு நேரத்துக்கு சிதம்பரம் எங்குமே தென்படவில்லை.
கதை முடிந்து போகிறது.
வெறும் கோவணத்தோடு,புளிய மரங்களும், இலுப்பை மரங்களும் நிறைந்த ஆற்றங்கரையோடே அண்ணாமலை நடந்து போய்க் கொண்டிருந்தான்.
இந்த அனுபவத்தில்-தைரியமுள்ளவர்கள் அண்ணாமலையாய்த் தங்களை வரித்துக் கொள்ளலாம். அல்லாதவர்கள், நாமளா இருந்தா இந்தக் கதிக்குத்தான் ஆளாகியிருப்போம் என்று சிதம்பரமாய்த் தங்களை நினைத்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். ஒரு வெள்ளத்தினூடே தாறுமாறாய் அல்லது ஏறுக்கு மாறாய்ச் சிக்கிக் கொண்ட அனுபவம் கிடைக்கிறது இந்தக் கதையில். கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு, அவர்கள் ஊர் ஆற்றில் பெரு வெள்ளத்தை அடிக்கடி கண்ட அனுபவம் உள்ளவர்களுக்கு…இந்தக் கதை ஒரு பயங்கரம்தான் என்பது திண்ணம்.
மனித சமூகத்தில் அநேகம் மாற்றம் ஏற்பட்டிருப்பினும், வாழ்வின் அடிப்படை குணாதிசயங்கள், மதிப்பீடுகள் அவ்வளவாக மாறிவிடவில்லை என்கிறார் ஐராவதம் ஆர்.சுவாமிநாதன். அதுதான் உண்மை என்பது இந்தக் கதையைப் படித்து முடிக்கும்போது சுள்ளென்று உறைக்கிறது.
மனித இழிநிலையைப்பற்றிப் பேசுவதால் இத்தொகுப்பின் சிறந்த கதையாகிறது இது என்று நடை இதழின் ஆசிரியர் திரு.கண்ணன் எடுத்துரைக்கிறார்.
ஒரு சோறு பதம் என்று இத்தொகுதியின் இந்த ஒரு படைப்பும், எழுத்தாளர் திரு.நா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படைப்புத் திறனும் வெளிப்பட உரைத்தது போதும் என்றே நினைக்கிறேன்.
உஷா தீபன்
வெண்முரசு, குருபூர்ணிமா உரையாடல்
அன்பு ஜெயமோகன்,
வெண்முரசு & குரு பூர்ணிமை நாளில் உங்களைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி.
கிருஷ்ண / பாரதக் கதைகளை மகள்களுக்குக் கூறும் போது, வெண்முரசின் கூறுமுறை அவர்களுக்கு மேலும் உவப்பாயிருப்பதைக் கவனிக்கிறேன். பாட்டி சொன்ன ஒரு அரக்கி என்பதைவிட குழந்தையை இழந்த பிச்சியாகவே பூதகி அவர்கள் நினைவில் வாழ்கிறாள்.
யுவால் நோவா ஹராரியின் “சேப்பியன்ஸ்” புத்தகத்தை குழந்தைகளுக்கான ஒரு கிராபிக் நாவலாக அவரும் சிலரும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். வாசிப்பு சுவாரசியமும் தகவல்களும் எளிமையாகவும் சிறப்பாகவும் உள்ளது. இதைப்போல் வெண்முரசையும் கொண்டுவரும் எண்ணம் உண்டா என்ற கேள்வியோடு காத்திருந்தேன். வரிசையில் இரண்டாவதாக இருந்தபோது யூடியூபில் மற்றொரு நண்பர் கிட்டத்தட்ட இதே கேள்வியை இன்னும் சிறப்பாகக் கேட்டிருந்தார். அதற்கு உங்கள் விரிவான பதிலையே எனக்குமாக விளங்கிகொள்கிறேன்.
இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நீண்ட உரையாடலில் மேலும் சிலர் வினாக்களோடு இருந்தமையால் உயர்த்திய கையை இறக்கிக்கொண்டேன். எனவே இந்நன்னாளில் உங்களைக் கண்டதும் உங்கள் உரையை கேட்டதும் தரும் மகிழ்ச்சியையும் எனது வணக்கங்களையும் தெரிவிக்க இந்தக் கடிதம்.
நன்றி ஜெயமோகன் .
என்றும் அன்புடன்,
மூர்த்தி
டாலஸ்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நேற்றிரவு குரு பூர்ணிமா நிகழ்வில் zoom இல் பங்கெடுத்து உங்கள் உரையாடலைகாண, கேட்க முடிந்தது மிக நிறைவாக இருந்தது. நிலவொளியில், உங்கள் பின்னால் வானில் நிலவுடன் நீங்கள் அமர்ந்து உரையாற்றியதும், கேள்விகளுக்கு பதில் அளித்ததும் காண ரம்மியமாக இருந்தது. நான் இன்றுவரை உங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட ஞானம், வழிகாட்டல்கள் அனைத்திற்கும்
குரு பூர்ணிமா நாளான இன்று நன்றி சொல்கிறேன்.
அன்புடன்,
வெண்ணி
சென்ற ஆண்டு சூம் சந்திப்புகள்
August 4, 2021
ஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கம்
அன்புள்ள ஜெ ,
தற்போதைய இந்த பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி ஆகிவிட்டது.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குடும்பங்களில் திறன் பேசி இல்லாத சூழலில் அவர்களுக்கு இணைய வழி வகுப்பு கூட சாத்தியம் இல்லாத ஒன்றாகவே உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் இணையத்திலேயே இருப்பதால் உடலியக்க செயல்பாடுகள் குறைந்து விட்டதாக சமீபத்தில் செய்தித்தாளில் வாசித்தேன்.
எங்கள் பள்ளியில் சமீபத்தில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் போது மாணவர்களின் கற்றல் திறனை பார்த்த போது மிகவும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.மாணவர்களின் கற்றலை மேம்படுத்த உங்களால் ஏதேனும் எங்களுக்கு (என்னை போன்ற பல ஆசிரியர்களுக்கு) வழி சொல்ல முடியுமா.
ஆவலுடன்,
செல்வா
திசையெட்டும்தமிழ்
பட்டுக்கோட்டை
***
அன்புள்ள செல்வராஜ்,
உண்மையில் மலைப்பகுதிகளிலும் சிறு ஊர்களிலும் ஆரம்பக்கல்வி கிட்டத்தட்ட அழிந்துவிட்டதையே காண்கிறேன். ஏற்கனவே மலைப்பகுதிகளிலும் சிற்றூர்களிலும் தமிழகக் கல்வியின் தரம் மிகக்கீழிறங்கியிருக்கிறது. ஒருபக்கம் கடுமையான போட்டிக்கு குழந்தைகளைத் தயார்செய்யும் தனியார்க்கல்விநிறுவனங்கள். மறுபக்கம் அரசுப்பள்ளிகளின் கைவிடப்பட்ட நிலை.அங்கே ஏழைகள் மட்டுமே படிக்கிறார்கள்.
கோவிட் நோய்த்தொற்றால் இரண்டு ஆண்டுகளாக கல்வியே நிகழவில்லை. ஆன்லைன் கல்வி என்பதெல்லாம் சரியான கணிப்பொறி வசதியும், இணையவசதியும், வீட்டில் கண்காணிப்பதற்கு பெற்றோரும் உள்ள நடுத்தரக்குடும்பங்களிலேயே ஓரளவு சாத்தியம். அது எந்த அளவுக்கு பயன் தருவது என்பது வேறொரு வினா.
பெற்றோர் அளிக்கும் கல்வி கிராமங்களில் அறவே இல்லை என்பதை கவனித்தேன். பெற்றோர் கூலிவேலை, தோட்டவேலை செய்பவர்கள் என்றால் அவர்களுக்கு பிள்ளைகளுக்குக் கற்பிக்க நேரமிருப்பதில்லை. தந்தையர் குடிப்பழக்கம் கொண்டவர்கள். அன்னையருக்கு புறவேலைக்கு மேல் அடுக்களை வேலை இருக்கும். கற்பிக்கும்படி வீட்டில் வசதி இருப்பதில்லை. கணிசமானவர்கள் கல்வியறிவில்லாதவர்கள். அனேகமாக எவருக்கும் கற்பிக்கவும் தெரியாது.
ஆகவே கல்வியின் மிக அடிப்படைப் பயிற்சியான எழுத்தறிவித்தல் அப்படியே நின்றுவிட்டது. குழந்தைகள ‘பாஸ்’ ஆக்குவது எளிது. அடிப்படைகளை கற்காமல் அவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்றால் அங்கே ஒன்றுமே கற்காமல் மேலும் பின்னடைவையே அடைவார்கள்.
மூன்றாம் அலை குழந்தைகளைத் தாக்குமென்ற ஐயமிருப்பதனால் அடுத்த டிசம்பர் வரைக்கும்கூட பள்ளிகள் இருக்க வாய்ப்பில்லை. அதற்கு அடுத்த ஜூனில்தான் ஒருவேளை பள்ளிகள் திறக்க வாய்ப்பு. அதற்குப்பின் இரண்டு ஆண்டுகள் பின்னடைவு கண்ட குழந்தைகளுக்கு கல்விகற்பிக்க ஆசிரியர்களிடம் சொன்னால் அது நடைமுறையில் கல்வியை மறுப்பதுதான். அக்குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வியைத்தான் அளிக்கவேண்டும்.
இன்றைய கல்வித்துறையில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. பல இடங்களில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களை முழுமையாக நியமித்தாலும்கூட இந்த இரண்டாண்டு விடுபடுதலை நம் கல்வித்துறை எதிர்கொள்ள முடியாது. ஏனென்றால் இங்கே பலசமயம் ஒரு வகுப்பில் ஐம்பது மாணவர்களுக்குமேல் உள்ளனர். ஆகவே ஆசிரியர் எந்தக்குழந்தைக்கும் தனியாகச் சொல்லிக்கொடுக்க முடியாது.
எழுத்தும் வாசிப்பும் அறிவித்தல் என்பது அடிப்படையில் ஒரு கடுமையான பயிற்சி. தனிப்பட்ட முறையில் தீவிரமாக, தொடர்ச்சியாக அளிக்கப்படவேண்டியது அது. அதை நம் கல்வியமைப்பின் குறுகிய வசதிகளைகொண்டு செய்யமுடியாது. ஆனால் அப்படி ஒரு தீவிரப்பயிற்சி அளிக்காவிட்டால் கிராமப்புறக் கல்வி தேக்கமுற்றுவிடும். நீண்டகால அளவில் தமிழகத்துக்குப் பேரிழப்பு ஏற்படும்.
அதை தவிர்க்க செய்யக்கூடுவது ஒன்று உண்டு. அதிகபட்சம் ஐந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என தமிழகம் எங்கும் எழுதப்படிக்கச் சொல்லிக்கொடுக்கும் ஒரு குறுகியகால எழுத்தறிவிப்பு இயக்கத்தை ஆரம்பிக்கலாம். மிகக்குறைவான செலவில் அதை நடத்த முடியும். தேவையென்றால் தனியார் நன்கொடைகளைப் பெறமுடியும்.
அவ்வியக்கத்திற்கு தற்காலிக சேவை ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். ஊதியமில்லாத தன்னார்வலர் கூடாது. அவர்கள் மேல் கல்வித்துறைக்கு கட்டுப்பாடு இருக்காது. அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அவ்வியக்கம் நிகழவேண்டும். பகுதிநேரப்பணியாக கல்லூரிமாணவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மாதம் மூவாயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கலாம்.
மூன்றுமாதம் நீண்டுநிற்கும் ஒரு அதிதீவிர எழுத்தறிவிப்பு இயக்கத்தை ஆரம்பிக்கலாம். குறைந்தது எழுபதுநாட்கள் நாளொன்றுக்கு மூன்றுமணி நேரம் வீதம் வகுப்பு நடக்கவேண்டும். கல்விக்கூடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். பிற அலுவலகங்களையும் பயன்படுத்தலாம். ஐந்து குழந்தைகள் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டால் அவர்கள் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுத்துக்களை எழுதவும் கூட்டிவாசிக்கவும் கற்றிருக்கவேண்டும் என்பது கட்டாயநிபந்தனை.
ஏற்கனவே அனைவருக்கும் கல்வி என்னும் நோக்குடன் இப்படி ஓர் இயக்கம் தொடங்கப்பட்டு தமிழகத்திலும் கேரளத்திலும் வெற்றிகரமாக நடந்துள்ளது. அந்த அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். ஐந்து மாணவர் – ஒர் ஆசிரியர் என்றால் மிக எளிதாக கற்பிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அப்படி ஓரு திட்டம் வருமென்றால் அது இந்த அரசுக்கும் அடிப்படை மக்களிடையே மிகுந்த மரியாதையை உருவாக்கி அளிக்கும். எம்ஜிஆருக்கு சத்துணவுத்திட்டம் அளித்த மரியாதைக்குச் சமானமாக. முதல்வர் ஸ்டாலின் வரலாற்றில் வாழ்வார். கிராமப்புற அன்னையர் அந்த அளவுக்கு மனமுடைந்துபோயிருக்கிறார்கள்.
ஜெ
தேசமற்றவர்கள்நிலவும் மழையும்- 4
குதிரேமுக் உடுப்பி சாலையில், பத்ரையின் கரையில்குதிரேமுக் பயணம் உடலை ஓயச்செய்திருந்தது. நாங்கள் எந்த அளவுக்கு துல்லியமாக திட்டமிட்டிருந்தோம் என்றால் மாலை மூன்றுமணிக்கே கீழிறங்கி, குளித்து உடைமாற்றி ஐந்து மணிக்கு கிளம்பி, நூறுகிலோமீட்டர் காரோட்டி உடுப்பிக்குச் சென்று அங்கே ஒரு விடுதியில் தங்குவது என்று. அங்கே அறைகளும் முன்பதிவுசெய்திருந்தோம்.
ஆனால் மலையேற்றம் முடிந்து வந்துசேரவே எட்டுமணி ஆகிவிட்டது. மேற்கொண்டு அறையில் இருந்து உணவுக்கூடம் வரை நடப்பதேகூட பலருக்கு மலையேற்றம் என்று தோன்றும் நிலை. உண்மையில் மோனநிலை என்றால் அதுதான். உலகில் எதுவுமே முக்கியமல்ல. தரையோடு தரையாக படிந்துவிடுவதே பேரின்பம் என்று தோன்றும் தருணம்
குதிரெமுக் உச்சியில் ஒரு படுகைஆகவே மறுநாள் காலையில் கிளம்பி நேராக உடுப்பி சென்றோம். தக்காணப்பீடபூமியில் இருந்து சுழன்று சுழன்று இறங்கிக்கொண்டிருந்தோம். பசுமை நிறைந்த மரங்கள் இருபுறமும். கானியலாளர் சொல்லும் ஒரு செய்தி, காடு கார்பன் டையாக்ஸைடும் புகையும் எழும் சாலைக்கு இருபுறமும் மிகையாக கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொள்ளும் தாவரங்களைச் செறியவைத்து புகையை கட்டுப்படுத்துகிறது என்று. ஒரு வடுவைச் சுற்றி தோல் கடினமாவதுபோல.
பசுமையின் வண்ணங்கள். மேலே எழுந்தோறும் ஒளிர்பசுமை. ஒளி குறைவான கானாழத்தில் அடர்பசுமை. கிட்டத்தட்ட நீலம். வழியில் சாலையோரமாக ஒரு சிறிய புதிய கற்கோயிலைப் பார்த்தோம். பழைய கோயில் இருந்த இடத்தில் புதிய கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். அங்கே கோயில்கொண்டிருந்தவர் முருகன். ஆனால் நாகராஜனின் மேல் வீற்றிருந்தார். நாகபடம் தலைக்குமேல் குடையென எழுந்திருந்தது
முருகனின் இப்படிப்பட்ட சிலை தமிழகத்தில் அரிது. புகழ்பெற்ற குக்கே சுப்ரமணியா ஆலயத்திலும் முருகன் இப்படித்தான் இருக்கிறான். வேலும் மயிலும் உண்டு. கர்நாடகத்தின் முருக வழிபாடு தனித்தன்மை கொண்டது. இப்படிப்பட்ட சிலையை பற்றி நான் எழுதிய மாமலர் [வெண்முரசு] நாவலில் குறிப்பு இருக்கிறது என்றனர். எனக்கு நினைவில்லை.
மழையில் நனைந்த மரங்களின் நடுவே அந்த நாகச்சிலையை பார்த்தபோது அப்பகுதியே ராஜநாகத்தின் ஆட்சியில் இருப்பது என்பது நினைவுக்கு வந்தது. ராஜவெம்பாலை என பழைய மலையாள இலக்கியங்கள் சொல்கின்றன. கிங் கோப்ரா என்பது அதன் மொழியாக்கம். அந்த நாகம்தான் தெய்வங்களுக்குரியது. தமிழகத்தில் உச்சிமலைகளில் தவிர எங்கும் ராஜநாகம் இல்லை. ஆகவேதான் நம் சிலைகளில் பாம்பு அத்தனை தத்ரூபமாக இல்லை. ராஜநாகம் நாகங்களின் அரசன். நாகராஜன். ராஜநாகம் பிற பாம்புகளை மட்டுமே உண்டு வாழ்வது. அரசனும் அப்படித்தான்.
உடுப்பி அருகே மல்பே கடற்கரையில் கொஞ்சநேரம். ஆனால் அது சரியான நேரம் அல்ல. சரியான பருவமும் அல்ல. மேற்குக்கடற்கரைகளில் மழையில் ஆறுகளில் நீர்பெருக்கெடுத்து குப்பைகளை கொண்டு கடலில் சேர்க்கிறது. கடலில் மிதக்கும் குப்பைகள் அனைத்தும் அப்படியே எழுந்து வந்து கடற்கரை முழுக்க பரவிக்கிடக்கின்றன.
மல்பே கடற்கரையில் ஒரு லெமன்சோடா குடித்துவிட்டு உடனே கிளம்பிவிட்டோம். நேராக ஆகும்பே. பலமுறை சென்ற ஊர். ஆனால் இம்முறை ஆகும்பே என்றதுமே அனைவரும் ஆடகம் கதையை நினைவுகூர்ந்தனர். ராஜநாகக் காப்பகம் அமைந்திருக்கும் ஊர்.
ஆகும்பேயில் வழக்கமான மல்யா விடுதியில் தங்கினோம். மழை பெரிதாக இல்லை. ஆனால் இருட்டி கனிந்து காத்திருந்தது. குளித்துவிட்டுச் நடை கிளம்பியபோது மழை விழத்தொடங்கியது. மழையிருட்டு நிறைந்த சாலையில் நடந்தோம். பக்கவாட்டில் திரும்பி நீர் பெருகிச்சென்ற ஓர் ஓடைவரை சென்றோம்.
பேச்சு பொதுவாகத் தொட்டுச்சென்றது. மழைக்கோட்டுகள் டிராக்குலாவின் லாங் கோட் போல இருந்தன. ஆகவே பேச்சு டிராக்குலாவை நோக்கிச் சென்றது. நான் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலாவைப் பற்றிப் பேசி ஒரு கட்டத்தில் டிராக்குலாவாக ஆங்கில வசனம் பேசி ஒரு பதினைந்து நிமிட ஓரங்கநாடகமே நடித்துக் காட்டினேன். அந்தி மயங்கும் வேளையில் அந்த கொலைத்தாகம் உற்சாகமளித்தது
டிராக்குலா கதை சொன்ன இடம்மல்யா விடுதியில் நண்பர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் என் பெயரைச் சொல்ல அங்கே சாப்பிட வந்த ஒரு மலையாள இளைஞர் என்னைப்பற்றி விசாரித்தார். என்னை வாசித்தவர். அவருடைய துணைவியை அறிமுகம் செய்தார். வாசகர்கள் இவ்வாறு எதிர்பாராமல் ஆசிரியரைச் சந்திக்கும்போது பொங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் பேசவே முடிவதில்லை.
அவருக்கு கீது மோகன்தாஸ் என்ற பெயர் [அப்பெயரில் ஒரு நடிகை உண்டு என்பதனால் பெயர் மறக்கவிலை] பயண எழுத்தாளர். ஆர்ட்டிக் பயணத்துக்காக ஒரு சர்வதேசக்குழுவால் தேர்வுசெய்யப்பட்டவர். ஆனால் கோவிட்டினால் பயணம் ஒத்திப்போடப்பட்டுள்ளது. பயணக்குறிப்புகள் மாத்ருபூமி யாத்ரா என்னும் இதழிலும் வந்துள்ளதாகச் சொன்னார். என்னுடைய லடாக் பயண அனுபவங்கள் அதில் வெளிவந்தன.
டிராக்குலா கதைகேட்ட பெங்களூர் கிருஷ்ணன்இரவு எங்கள் வழக்கமான கௌடசாரஸ்வத அந்தணரின் விடுதிக்குச் சென்று சாப்பிட்டோம். கொதிக்கும் சோறு, கர்நாடக சாம்பார். வீட்டுச்சாப்பாட்டின் சுவை. மறுநாள் காலை கிளம்புவதாகச் சொன்னோம். ஆறுமணிக்கே உணவு தயாரிப்பதாக அவரே சொன்னார்.
மல்யா விடுதியில் மழையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கீழே அவரே ஓர் உணவகம் வைத்திருந்தார். அதில் சங்கநாகின் படம் வரையப்பட்டிருந்தது. மலைநாட்டின் பிரியத்திற்குரிய கதைநாயகன். இன்றும் அவரை அங்கே வழிபாட்டுடன் எண்ணிக்கொள்கிறார்கள்
சங்கநாக் -அனந்தநாக் சகோதரர்கள் கன்னட நடுவாந்தர சினிமாவில் பெரும் பங்களிப்பாற்றியவர்கள். சங்கர்நாக் இளைஞர்களின் உள்ளம்கவர்ந்த நடிகன். சங்கர்நாக். கொங்கணி பேசும் குடும்பத்தவர் விடுதி உரிமையாளரும் கொங்கணி பேசும் பிராமணர்தான்
உத்தர கன்னடத்தில் ஹொன்னாவரம் அருகே 1954ல் பிறந்தவர் சங்கர்நாக்.கிரிஷ் கர்நாடின் ஒந்தானொந்து காலதல்லி என்னும் சினிமாவில் கதைநாயகனாக 1978ல் அறிமுகமானார். அந்த சினிமா கன்னட நவசினிமாவின் ஒரு செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது. 1978க்கான சிறந்த சினிமாவுக்கான தேசிய விருதையும், தேசிய திரைப்படவிழாவில் தங்கக்கமலம் விருதையும் பெற்ற படம் இது.
சங்கர் நாக் ஆர்.கே.நாராயணனின் மால்குடி தினங்கள் நாவலின் சின்னத்திரை வடிவை இயக்கி நடித்தார். அந்த படப்பிடிப்பின் நடுவே தாவண்கெரே அருகே ஒரு கார் விபத்தில் மறைந்தார். அப்போது அவருக்கு முப்பத்தாறு வயதுதான்.
அனந்த நாக் மலையாள சினிமாவிலும் நடித்திருக்கிறார். லெனின் ராஜேந்திரனின் சுவாதித்திருநாள் சினிமாவில் அவர்தான் சுவாதித்திருநாளாக நடித்தார். மால்குடி ஊராக அந்த தொலைத்தொடரில் காட்டப்பட்ட பெரும்பகுதி ஆகும்பேயில் படமாக்கப்பட்டது. மல்யா விடுதியில் மால்குடியை ஒரு சுவரில் படமாக வரைந்து வைத்திருக்கிறார்கள்.
கர்நாடகச் சுவை, உணவகம்காலையில் மழையில் ஊறிய ஆகும்பேயின் புல்நிலம் வழியாக நடந்தோம். ஆகும்பே வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. கட்டிடங்கள் வந்தபடியே உள்ளன. சில ஆண்டுகளுக்குள் பரபரப்பான சுற்றுலாமையமாக ஆகிவிடும். இன்று மழையின்பொருட்டு மட்டுமே அங்கே செல்லவேண்டும். இரவெல்லாம் மழை இடியோசையுடன் கொட்டிக்கொண்டே இருந்தது
பெரியவரின் ஓட்டலில் இட்லி, தோசை, நீர்த்தோசை சாப்பிட்டுவிட்டு கிளம்பி பத்ராவதி சென்றோம். ஹொய்ச்சால கோயில்களில் நாங்கள் தவறவிட்ட முக்கியமான கோயில் அது. தனியாக வேறுவழியில் இருந்தமையால் அதற்காக வழி திரும்ப முடியவில்லை. இம்முறை அதைப்பார்ப்பது என்று முடிவெடுத்திருந்தோம்.
உணவக உரிமையாளர்துங்கா பத்ரா என்னும் இரு நதிகள் இணைந்து துங்கபத்ராவாக ஓடி கிருஷ்ணா நதியில் கலக்கின்றன. இவ்வாறு இரண்டு இணையாறுகள் கலப்பது இந்தியாவில் வேறு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் பத்ராவதி ஆலயம் பத்ராவதியின் கரையில் அமைந்துள்ளது என்கிறார்கள்.
துங்கா ஆறு மேற்குமலைத்தொடர்களில் வராகமலையில் கங்காமூலை என்னும் இடத்தில் தோன்றுகிறது. பத்ரா ஆறு குதிரேமுக் மலையிலுள்ள கங்காமூலா என்னும் இடத்தில் தோன்றுகிறது. இவை கூட்லி என்னும் ஊரில் இணைந்து துங்கபத்ராவாகின்றன. ஹம்பி வழியாகச் செல்வது துங்கபத்ராதான்.
பத்ராவதி லக்ஷ்மிநரசிம்மர் ஆலயத்தில் எங்களுக்காக ஷிமோகா ரவி காத்திருந்தார். நாங்கள் வருவதை அர்ச்சகரிடம் சொல்லிவைத்திருந்தார். ஆனாலும் கிருஷ்ணன் வந்த கார் வந்து சேர்வதற்குத் தாமதமாகியது. அவர் உள்ளே நுழைய முடியவில்லை. நடை சாத்திவிட்டனர்.
பத்ராவதியில் உள்ள லட்சுமிநரசிம்மர் ஆலயம் ஹொய்ச்சாலர்களால் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஹொய்சால ஆலயங்களின் பாணியில் கரியசுண்ணக்கல்லால் கட்டப்பட்டது. மிகநுணுக்கமான சிற்பங்கள், அச்சில் சுழற்றி உருவாக்கி மெருகூட்டப்பட்ட கரிய அடுக்குத்தட்டுத் தூண்கள், கூரையில் சிற்பச்செறிவுகள் என்று ஒரு முதன்மை ஹொய்ச்சால ஆலயத்தின் எல்லா கலையழகும் கொண்டது இந்த ஆலயம்.
ஹொய்ச்சால ஆலயங்களை விரிவாக ஆராய்ந்த ஜெராட் ஃபொகேமா [Gerard Foekema] இந்த ஆலயத்தை பற்றியும் எழுதியிருக்கிறார். இதுவும் திரிகுடாச்சலம் என்னும் மூன்றுகோபுர அமைப்பு கொண்டது. இதன் அடித்தளம் முதல் கோபுர உச்சிவரை நட்சத்திர அமைப்பில் கூரிய மடிப்புகள் உள்ளன. அடித்தளத்தின் மேலுள்ள பீடம் நட்சத்திரமே புல்லிவட்டம் என விரிந்ததுபோல உள்ளது. மேலே ஆலயம் அல்லிவட்டம் போல குவிந்து எழுந்து நிற்கிறது.
கருமையின் மெருகை ஒளியென கசியவிட்டு நின்றிருந்த குளிர்த்தூண்களுக்குமேல் கவிழ்ந்த மலர் என குடைவுக்கூரை கொண்ட முகமண்டபம். உள்ளே மூன்று கருவறைகளும் திறக்கும் மையத்தில் அலங்காரத்தூண்களுடன் மண்டபம். மேலே தெரிந்த சிற்பங்களை அடையாளம் கண்டுகொள்வது ஹொய்ச்சால கோயில்களை அரிய அனுபவமாக ஆக்குகிறது. எத்தனை பார்த்தாலும் தீராத அளவுக்கு சிறுசிறு சிற்பங்கள் கரிய நீரில் இருந்து குமிழிகள் என எழுந்து வந்தபடியே இருக்கும்.
மையக்கருவறையில் லட்சுமியை மடியில் வைத்திருக்கும் நரசிம்மர் அமர்ந்திருந்தார். அவருக்கு அழகிய நரசிம்மர் என்று பெயருண்டு என்று அர்ச்சகர் சொன்னார். அழகியசிங்கர்! மிகக்கனிந்த முகபாவனையுடன் திருமகளை மலர் என சூடியிருக்கிறார். இருபக்க கருவறைகளில் ஒன்றில் கோபாலகிருஷ்ணன். இன்னொரு கருவறையில் நின்றிருக்கும் ஆயுதம்தாங்கிய விஷ்ணு புருஷோத்தமர் எனப்படுகிறார்.
வெளியே ஆலயத்தின் அத்தனை சிற்பங்களும் முகம் உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. ஹொய்ச்சாலப்பேரரசு வீழ்ச்சியடைந்தபின்னரும் ஆலயம் பேணப்பட்டிருக்கிறது. பின்னர் சுல்தானியப்படையெடுப்பில் எல்லா ஹொய்ச்சால ஆலயங்களைப் போலவும் இதுவும் சூறையாடப்பட்டு சிலைகள் உருவச்சிதைப்புக்கு ஆளாயின.
கோயிலைச் சுற்றி வந்து சிற்பங்களை கற்பனையில் முழுமை செய்துகொண்டிருந்தோம். விஷ்ணுவின் வெவ்வேறு தோற்றங்கள். உள்ளங்கையளவே உள்ள வராகமூர்த்தியின் மடியில் இருக்கும் பூதேவி நகைகளை அணிந்திருக்கும் நுட்பத்தை ஹொய்ச்சாலக் கலையில்தான் காணமுடியும். ஹொய்ச்சால கற்சிற்பங்கள் சிற்பத்தின் அழகியல் கொண்டவை அல்ல. அவை பொன்நகைகள் போல. அந்த ஆலயம் மாபெரும் கல்நகை.
பத்ராவதி கோயில் முன் அமர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மூன்று மணிக்கு பத்ராவதி காட்டுக்குள் ஓர் உலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். மதிய உணவுக்குப்பின் அங்கே சென்றோம்.
ஆனால் அது ஒரு மோசடி. ஆளுக்கு ஐநூறு ரூபாய் கட்டணம். ஆனால் எங்களை ஒரு பஸ்ஸில் ஏற்றி புலிகள் காப்பக எல்லைக்கு வெளியே உருவாக்கப்பட்டிருந்த தேக்குக்காடு வழியாக ஒரு காட்டுப்பங்களா வரை கொண்டு சென்றுவிட்டு திரும்பக் கொண்டுவந்தனர். உண்மையான கானுலா வழியே அது அல்ல.
அந்த வளர்ப்புக்காட்டிலேயே நிறைய புள்ளிமான்கூட்டங்களைப் பார்த்தோம். கீரிபோன்ற மூன்று பெரிய விலங்குகள் எதையோ கடித்து சண்டைபோட்டுக்கொண்டிருந்தன. mongoose என்பது என் எண்ணம். கீரியின் ஏதோ வகை. ஏனென்றால் அவை செத்த விலங்கு எதையோதான் தின்றுகொண்டிருந்தன.
பத்ராவதியில் இருந்து கிளம்பி அரிசிக்கெரே வந்தோம். அரசியின் ஏரி. ஏற்கனவே தங்கியிருந்த ஊர்தான். அந்த விடுதி கொரோனாவால் கைவிடப்பட்டு பரிதாபமாக இருந்தது. ஆகவே இரவில் அலைந்து இன்னொரு விடுதியை கண்டடைய வேண்டியிருந்தது.
மறுநாள் காலையில் எழுந்து டீக்கடை தேடிச்சென்றோம். முற்றிலும் புதிய ஊரில் காலையில் டீக்கடை தேடி நடப்பது எங்கள் பயணங்களில் என்றுமே இனிய அனுபவம். ஏனென்றால் அது அப்படி நடந்த பல நினைவுகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக்கொண்டே செல்கிறது. எத்தனை ஊர்களில் எத்தனை வண்ணங்களில் எத்தனை மணங்களுடன் விரிந்த காலைகள்!
டீக்கடையில் டீ நன்றாக இருந்தது. அது அந்த பகுதியின் ஒரு மையமாக இருக்கவேண்டும். ஏராளமான கல்பெஞ்சுகள் இருந்தன. டீக்கடை என்பது நமக்கு ஐரோப்பியர்களின் பப் களுக்கு சமானமான ஒரு கலாச்சார மையம். நாங்கள் டீக்கடைகளில் டீ அருந்துவதை ஒரு மதச்சடங்கு போலவே ஈடுபட்டுச் செய்வோம். டீக்கடைகளின் நைந்த தந்தி தாளை நான் விரும்பி படிப்பேன். கன்னட செய்தித்தாள் தந்தி போலிருந்தால் டீ டம்ப்ளருடன் அதை புரட்டி படம் பார்ப்பேன்.
அரிசிக்கெரே ஈஸ்வரன் கோயில் ஏற்கனவே நாங்கள் சென்றதுதான். ஹொய்ச்சால கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று. கரிய சுண்ணக்கல்லில் செதுக்கப்பட்ட அற்புதமான நுண்சிற்பங்களும் அடுக்குவட்டத் தூண்களும் கொண்டது. உள்ளே சிவன் இருந்தாலும் சுற்றுச்சிற்பங்கள் அனைத்தும் விஷ்ணுவைச் சித்தரிக்கின்றன.
அரிசிக்கெரேயில் இருந்து மதிய உணவுக்கு பெங்களூர் வந்துவிட்டோம். அரங்கசாமியின் இல்லத்தில் எல்லாவகை மாமிசங்களுடனும் ஒரு பெரிய விருந்து. மாலை ஐந்தரை மணிக்கு ஓசூர் சென்று நாகர்கோயில் ரயிலில் ஏறிக்கொண்டேன்.
மழைப்பயணங்கள் தொடங்கி பதினைந்தாண்டுகளாகப்போகின்றன. எத்தனை மழைகள், எத்தனை புல்வெளிகள். புல் முளைத்து காய்ந்து முளைத்து ஓர் ஆண்டென நிகழ்கிறது. அட்டைகள் தோன்றி குருதி உண்டு பெருகி மறைந்து மீண்டும் தோன்றுகின்றன.பதினைந்து தலைமுறைகள், பதினைந்து முழுமையான வாழ்க்கைகள்.
மழைப்பயணங்களுடன் கோயில்களை இணைக்கலாமா என்று தெரியவில்லை. இரவில் தூங்கும்போது மழையும் புல்லும் அட்டைகளும் காலமே அற்றவை என நின்றிருக்கும் சிற்பமுகங்கள் செறிந்த கோயில்களும் கலந்து ஒற்றைப்படலமாக நினைவுள் சுழித்துக்கொண்டே இருந்தன.
[நிறைவு]
வெண்முரசு, அருண்மொழி- கடிதம்
அன்பு ஜெயமோகன்,
அருண்மொழி அக்காவின் வெண்முரசு உரையாடல் இரண்டாம் பகுதி கேட்டேன். முதல் பாக உற்சாகம் மேலும் கூடியிருப்பதாகத் தெரிந்தது. வெண்முரசு நாவல்களை அவர் விரைவாக அறிமுகம் செய்ததை ஒரு பருந்துப் பார்வையாகவே கொள்ளலாம்.
உரையாடலின் ஓரிடத்தில் குருஷேத்திரப் போர் குறித்துப் பேசும்போது வேதங்கள் எதிர் வேதாந்தம்(வேதங்கள் முரணியக்கம் வேதாந்தம் என்பதே பொருத்தமான பதம்) என ஒரு திறப்பைச் சாதாரணமாகச் செய்திருப்பார். உரையை அங்கேயே நிறுத்திவிட்டு, அமைதியாக அமர்ந்திருந்தேன். சமீபமாய் கீதையைக் குறித்து பலநூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதால், அவரின் திறப்பை எளிதாகக் கடந்து போக இயலவில்லை
திரையில் உறைந்திருந்த அருண்மொழி அக்காவின் முகம் கண்களில் நிலைத்திருக்க, சிந்தனை கீதைக்குத் தாவியது. உலகியல் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான சடங்கு உத்திகளைக் கொண்ட பூர்வ மீமாம்சம் எனும் வேத வேள்வித்தரப்போடு பிரம்மம்(படிமம்) வழியாக உலகியல் கடந்த தரிசனத்தை வலியுறுத்தும் உத்தர மீமாம்சம் எனும் வேதாந்தத் தரப்பின் மோதலாகக் கீதையை விரித்த போது.. திணறலால் திணறினேன். இதுவரை கீதைக்குத் தரப்படிருக்கும் வியாக்கியானங்கள் அதை வைதீக அதிகாரப் பிரதியாக நிறுவும் தத்துவக்கருத்தியல்களில் மும்முரமாக இருக்க.. வைதீக முரணியக்க வரலாற்றுப் பரப்பின் பின்புலத்தைக் கருத்தியலாகச் சொல்லாமல் ஒரு தரிசனமாகக் காண்பதற்குத் தூண்டும் அக்காவின் வாக்கியம் எனக்குள் திமிறிக் கொண்டிருந்த பல அடைப்புகளை ஆசுவாசப்படுத்தியது.
உலகியல் விருப்பங்களை நிறைவேற்றுவதன் பொருட்டு மேற்கொள்ளப்படுபவை வேள்விகளும், யாகங்களும்(சடங்குகள்). அதாவது, புறவிளைவைக் கணக்கில் கொண்டு செய்யப்படும் வினைகளே பூர்வமீமாம்சச் சடங்குகள். இன்றுவரை உலகியல் பயன்களுக்காகவே அச்சடங்குகள் நடைபெறுவதைக் கவனிக்கலாம். பூர்வ மீமாம்சம் முழுக்க புறவயத்தை மட்டுமே கவனத்தில் கொள்கிறது. மானுடவரலாற்றின் துவக்க்கட்டம் அவ்வாறான அறிவுநிலையிலேயே இருக்க இயலும். காலமும் அறிவும் வரலாறும் தொடர்ந்து இயங்குவதன் காரணமாக உத்திர மீமாம்சம்(பூர்வமீமாமசச் சடங்குகளுடன் அறிவுத்தரப்பின் வளர்ச்சி கொள்ளும் முரணியக்கத்தால்) உருகொள்கிறது. உத்திர மீமாம்சம் முழுக்க முழுக்க அகப்பார்வைக்கு முக்கியத்துவம் கொடுப்பது. அதனால்தான், அது உலகியல் பயன்களைப் பின்னுக்குத் தள்ளி அகநிறைவை முதன்மையாக்குகிறது. சுருங்கச் சொல்வதாயின், புறவிளைவைக் காட்டிலும் அகமலர்ச்சியே உண்மையானது என்பதே உத்திரமீமாம்சம். இதை, விளைவைக் கருத்தில் கொள்ளாது அகமலர்ச்சிக்காகச் செயல்படுதல் எனலாம். நேரடியாகச் சொல்ல வேண்டுமானால் செயல்படுதலே பலன் அல்லது விளைவு.
கீதைப் பின்புலத்தை சமூகவரலாற்றுத்தளத்தில் வைத்து நோக்கும்போது பூர்வமீமாம்சம்(இனக்குழு காலம்) துவங்கி உத்திரமீமாம்சம்(நவீன காலம்) வரையிலான சமூக முரணியக்கங்களைத் தரிசனமாகக் கண்டடைய இயலும். சமூகவரலாற்று முரணியக்கங்களைத் தரவுகளாக அல்ல.. தரிசனங்கள் வழியாக நெருங்குதலே சிறப்பானதாக இருக்கும். தரவுகள் சார்புக்கு உட்படுத்தப்பட்டு குறுகல்வாதங்களாகவே எஞ்சி நிற்கும் தன்மை கொண்டவை. தரிசனங்களோ சார்பு-சார்பின்மை கடந்து வரலாற்று நிகழ்வுகளைக் காணும் வாய்ப்பைச் சாத்தியப்படுத்தும். காப்பியங்களையும், புராணங்களையும் தரிசனங்களாக நெருங்கும் வாய்ப்பை பகுத்தறிவுகால குறுகல்வாதங்களால் தவறவிட்டு விட்ட கொடுமை நிகழ்ந்திருக்கிறது. இங்கு, காப்பியங்களையும் புராணங்களையும் மதப்பிரதிகளாகப் பெருமிதம் கொள்வதும் குறுகல்வாதத் தரப்பே.
கீதைக்கான வியாக்கியானங்கள் மதத்தளத்திலும், சித்தாந்தத்தளத்திலும், அரசியல்தளத்திலும் அதை ஒரு ’புனிதநூலாகவே’ நம்பி மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றன. அதனாலேயே, கீதையில் இல்லாதது எங்கும் இல்லை என மதத்தரப்பினர் முட்டி தட்டுகின்றனர். சித்தாந்தத்தளத்தில் அது உளவியல் சிக்கல்களைச் சீர்படுத்தும் நெறிநூல் என்பதாக கண்ணாமூச்சி காட்டுகினற்னர். அரசியல் தளத்திலோ சொல்லவே வேண்டாம்.. மத, சாதி அதிகார நிறுவன அரசியலுக்கு கீதையே விதையிட்டு நீர் பாய்ச்சியது எனக் கொக்கரிப்பு. இவற்றுக்கு நடுவே அல்லல்பட்டு அவதியுறுவதைத் தவிர நமக்கு வேறு வழி? அருண்மொழி அக்கா கீதையை ‘புனிதநூல்’ எனும் பிம்பத்தில் இருந்து விடுவித்து நம் யோசனையைக் கிளறுகிறார்.
வேதங்கள் எதிர் வேதாந்தம் எனும் அக்காவின் பார்வை வழியாக கீதையின் புனிதநூல் பிம்பம் உடைபட்டு அது சமூகவரலாற்று வெளியின் விசாலத்தை உத்தேசிக்க உதவும் கருவியாகிறது. கீதையைப் பேசினாலே முகஞ்சுழிக்கும் அறிவுத்தரப்பாகி இருப்பவர்கள் கொஞ்சம் மனது வைத்து இக்கோணத்தில் யோசிப்பார்களானால் பல பயனுள்ள வரலாற்றுச் சாத்தியப்பாடுகளைக் கண்டடைய இயலும். அதன் வழி, உறையவைக்கப்ப்பட்டிருக்கும்(ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேற்பட்டு) மானுடச்சமூக வரலாற்றின் திரிபுப்பக்கங்கள் அம்பலமாகலாம்.
வேதாந்தம் என்பது பிரம்மத்தையே முதன்மைப்படுத்தினாலும் அதுவும் ஒற்றைத்தரப்பாக இல்லை. அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் என மூன்று கோணங்களில் பிரம்மம் அணுகப்படுகிறது. இங்கு ஒன்றை அழுந்தச் சொல்வது அவசியமாகிறது. பிரம்மம் என்பது பொருளன்று, கருத்தன்று; தரிசனக் குறியீடு. அதில் தெளிவாகாமல் வேதாந்தத்துக்குள் நுழையும் அறிவுஜீவிகளால் திரிபுக்கருத்தியல்களே அல்லது கருத்தியல்திரிபுகளே கால்கொள்ளும்.
மத்வம் தாமச குணமுள்ளவர்களுக்கும், விசிஷ்டாத்வைதம் ராஜச குணம் உள்ளவர்களுக்கும், அத்வைதம் சத்துவ குணம் உள்ளவர்களுக்கும் இணக்கமாக இருக்கும் என நான் கருதுவதுண்டு. என்றாலும், ஒருவருக்குள் இருக்கும் முக்குணங்களால் அவரால் மூன்று வகையான வேதாந்த அனுபவங்களையுமே வெவ்வேறு சூழல்களில் எதிர்கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
சைவசித்தாந்தத்தில் சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் எனச் சொல்வார்கள். பூர்வமீமாம்சம் என்பது சரியை மற்றும் கிரியை. உத்தரமீமாம்சம் என்பது யோகம் மற்றும் ஞானம். சரியை > கிரியை > யோகம் > ஞானம் என்பதான படிநிலைகளைச் சமூகக் கூட்டு நனவிலி வழியாக நோக்கும் ஒருவருக்கு வேட்டை > மேய்ச்சல் > வேளாண் > நவீனச் சமூக வரலாற்றின் நிகழ்வுகள் புலப்படக்கூடும். அந்நிகழ்வுகள் பல்வேறு சமூகக்குழுக்களின் முரணியக்க வெளிப்பாடுகளாகவும் விளங்கக் கூடும். அதன்வழி கட்சி அரசியல் சிந்தனை முறைமைகளின் தகிடுதத்தங்களும் அப்பட்டமாகலாம்.
பிரம்ம வேதாந்தம் எதிர் சைவ சித்தாந்தம் எனும் கூக்குரல் சமீபமாய் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. வேதாந்தம் இறுதியாக முன்வைக்கும் பிரம்மத்தை மனிதஅறிவால் நெருங்கிவிடவே முடியாது. சித்தாந்தம் முன்வைக்கும் சிவமும் அத்தகையதுதான். உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனும் பெரியபுராணப் பாடலை நினைவுக்குக் கொண்டு வருவோம். மேலதிக விளக்கங்களுக்கு, தத்துவ வியாக்கியான நூல்களை வாசிக்கலாம்.
பிரம்ம வேதாந்தத்தின் ஒரு கோணமான அத்வைதம் உலகைப் பொய் எனச் சொல்லவில்லை. மாறாக, தோற்றம் என்றே அறிவிக்கிறது. தோற்றம் என்றால் உண்மையும் இல்லை, பொய்யும் இல்லை; உண்மையும்தான், பொய்யும்தான். கானல்நீர் உருவகத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். பிரம்மத்தை மட்டுமே அத்வைதம் உண்மை என்கிறது. அதன் நோக்கில் மற்றவை எல்லாம் தோற்றங்களே. சைவசித்தாந்தத்தைப் பொறுத்தவரை, கடவுள்(சிவம்), உயிர்கள், அவற்றுக்கிடையேயான தொடர்பு எனும் மூன்றுமே உண்மைகள். எனினும், அங்கும் சிவமாகிய கடவுளே முழுமுதல் உண்மை; மற்றவை எல்லாம் பகுதி உண்மைகளே. சுருக்கமாய் வரையறுக்கப் பார்க்கிறேன். கால-வெளி எல்லைக்கு அப்பாற்பட்ட கோணத்தில் நின்று மானுட இருப்பை(கால-வெளி அமைப்பை) வியாக்கியானம் செய்வது அத்வைதம். மானுட இருப்பின்(கால-வெளி அமைப்பின்) கோணத்தில் இருந்து கால-வெளி எல்லை கடந்திருக்கும் சிவத்தை வியாக்கியானம் செய்வது சைவசித்தாந்தம்.
திராவிடக் கருத்தியலனாக இருந்தபோது தமிழ்ச்ச்மூகத்தை பிராமணன் எதிர் பிராமணர் அல்லாதோர் என்பதாகவே நம்பி இருந்தேன். பிறகு, தமிழ்த்தேசிய அறிமுகம், அப்பார்வை தமிழர் எதிர் தமிழர் அல்லாதொர் என உருமாறியது. மார்க்சியம் பக்கம் வந்தேன். சுரண்டப்படுவோர் எதிர் சுரண்டுவோர் எனும் பொருளியல் பார்வையானது. அம்பேத்கரியத்தைக் கவனித்த போது, தலித் எதிர் தலித் அல்லாதோர் எனும் கோணம் புலப்பட்டது. காந்தியிடம் வந்தால் கிராமம் எதிர் நகரமாக அப்பார்வை மாறியது. நவீன அறிவியலிடம் வந்தால் நிரூபணஅறிவு எதிர் மூடநம்பிக்கை எனும் பார்வை துலங்கியது.
திராவிட மையக்கருத்தியலின் அபத்தங்களை கோ.கேசவன் வழியேயும்(சாதியம் நூல்), தமிழ்த்தேசிய மையக்கருத்தியலின் அபத்தங்களை சேலம் தமிழ்நாடன் வழியாகவும்(தமிழன் என்றோர் இனமுண்டா என்பதான ஆய்வுக்கட்டுரை), மத மையக்கருத்தியலின் அபத்தங்களை வ.அழகுமுத்து வழியாகவும்(விதி என்றால் என்ன, நான் கடவுள் ஆன்மா பிரபஞ்சம் போன்ற நூல்கள்),ஆன்மீக மையக்கருத்தியலின் அபத்தங்களை ஓஷோ(பல நூல்கள்) வழியாகவும், மார்க்சிய மையக்கருத்தியலின் அபத்தங்களை கோவை ஞானி மற்றும் எஸ்.என்.நாகராசன்(பல நூல்கள்) வழியாகவும், அம்பேத்கரிய மையக்கருத்தியலின் அபத்தங்களை டி.தருமராஜ்(அயோத்திதாசர் நூல்) வழியாகவும், காந்திய மையக்கருத்தியலின் அபத்தங்களை ஜெயமோகன்(இன்றைய காந்தி நூல்) வழியாகவும், நவீன அறிவியலின் அபத்தங்களை பேராசிரியர் க.மணி(மனித ஜீனோம் உள்ளிட்ட பல நூல்கள்) வழியாகவும் விளங்கிக் கொண்டேன்.
தெளிவாகவே சொல்கிறேன். கருத்தியல்களின் வழியாகவே சமூக வரலாற்றின் முரணியக்கங்களை நெருங்க முடிந்தது. அவ்வகையில், கருத்தியல்கள் அவசியம். அவற்றில் ஏதேனும் ஒன்றை மையஅதிகாரமாக்கி அல்லது நிறுவனஅமைப்பாக்கி அதை அரசியல் செயல்பாட்டுக் களமாக நடைமுறைப்படுத்த்த் துடிக்கும் சர்வாதிகார அபத்தத்தை விளங்கிக் கொள்வது அதைவிட அவசியம்.
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்
தன்னறமும் செயலும் – கடிதங்கள்
ஆசிரியருக்கு வணக்கம்
உங்களுக்கு என் முதல் கடிதம், திண்டுக்கல் காந்திகிராம நிகழ்வில் நேரில் பார்த்தேன் என்னுடைய வாழ்நாளில் மிக முக்கியமான நாள், உங்களை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மற்றும் சிவராஜ் அண்ணா எல்லோரையும் பார்த்தது மன நிறைவைத் தந்தது. கல்லெழும் விதை நிகழ்விற்கு நேரில் வர இயலவில்லை. காணொளியில் இன்று பார்த்தேன், பெருந்தொற்று, வெறுப்பரசியல், போன்றவற்றிற்கு மத்தியில் தன்மீட்சி மற்றும் உங்களுடைய உரைகள் என்னை போன்றவர்களை சரியான பாதையில் வழி நடத்துகிறது.
தன்மீட்சி படித்தபோது மிகுந்த தெளிவு கிடைத்தது. அதுபோல் உங்கள் உரையும் நேர்மறையாக சிந்திக்க வைத்து செயல் நோக்கி என்னை செலுத்துகிறது. உங்களை அருகில் வந்து பார்த்து பேசியதில்லை, நீங்கள் மேகத்தை அளக்கும் ராஜாளி, கீழிருந்து நான் ஆச்சர்யமாக அண்ணாந்து பார்க்கிறேன். நீங்கள் பார்ப்பதற்கு, பழகுவதற்கு எளிமையாக தெரிந்தாலும், உங்கள் எழுத்து எங்களை கவர்ந்துவிடுகிறது, வேறு எதையும் படிக்க முடியவில்லை, என் நண்பர் சொல்லுவார், நீங்க ஜெயமோகன் பைத்தியமா என்று. கஷ்டப்பட்டு கூட ஏழாம் உலகம் படிக்கப் பிடிக்கிறது, வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்க முடியவில்லை. உங்கள் எழுத்திற்கு அடிமையாகிவிட்டேனா தெரியவில்லை. படிப்பதற்கு கடினமானதை மனம் விரும்புகிறது.
நன்றி
விக்னேஷ்
***
அன்புள்ள விக்னேஷ்
ஓர் எழுத்து நம்மை ஆட்கொள்கிறது என்றால் அது நம்மை அடிமைப்படுத்தவில்லை, மாறாக நம் உள்ளே உறங்கும் எண்ணங்களையும் கனவுகளையும் முளைக்க வைக்கிறது என்றே பொருள். நமக்கு அது பெரும் அறைகூவலாக அமைகிறது. அந்த அறைகூவலை நாம் வென்று கடக்கலாம், தவிர்த்துச் செல்லமுடியாது. நம்மை ஆட்கொள்ளும், நம்மை எடுத்துச்செல்லும் படைப்பாளிகளையே நாம் உண்மையில் முழுமையாக ஆழ்ந்து வாசிக்கமுடியும்.
ஜெ
***
அன்புள்ள ஜெ,
‘கல்லெழும் விதை’ நிகழ்வில் நீங்கள் ஆற்றிய உரையின் காணொளி வடிவை கண்டுகேட்டேன். நிறைவளித்தது. பலரும் பயனற்ற எதிர்ச்செயல் வீணடிப்புகளிலிருந்து மீண்டு நேர்மறை செயலூக்கம் பெற உதவக்கூடிய உரை.
கருத்தியல்பற்று (Idealogical Dogma) மற்றும் இலட்சியவாதம்(Idealism) ஆகியவற்றுக்கு இடையேயான நுட்பமான வேறுபாடுகளை விளக்கியுள்ளீர்கள். உரையின் நடுப்பகுதியில் “இலட்சியவாதம் என்பது உங்களுடைய பங்களிப்பை (தன்னறத்தை) நேர்மறையான உள்ளத்துடன் செய்வதுதான். நீங்கள் செய்யும் பங்களிப்பு என்னவென்று உங்களுக்கு இப்போது தெரியாது. உங்கள் செயலுக்கான நீண்டகால விளைவு திட்டவட்டமாக அறிந்துவிடமுடியாதது. நீங்கள் இன்று செய்யும் சிறிய விஷயம் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்டமான விஷயமாக மாறியிருக்கலாம்.நீங்கள் இன்று செய்யும் மிகப்பெரிய விஷயம் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பொருட்படுத்துமளவு எந்த விளைவுகளையும் உருவாக்காமல் போகலாம்” என்று பேசியுள்ளீர்கள்.
இதைக் கேட்டபோது மின்னல்வெட்டென கீதையின் ஒரு ஸ்லோகம் மனதில் எழுந்தது.
“கர்மணி ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசந
க்ஷ மா கர்ம பலஹேது:பூ:மா தே ஸங்க:அஸ்து அகர்மணி
(சாங்கியயோகம்,47வது ஸ்லோகம்)
இந்த ஸ்லோகத்திற்கு உயர்மெய்மையின் தளத்தில் ஆழ்ந்தகன்ற பொருள் இருப்பினும் சாமான்ய தளத்தில் இவ்வாறாக எளிய பொருள் கொள்கிறேன் “ஒருவன் செயலின்பத்திற்காகவே செயலாற்ற வேண்டும். அச்செயலின் எண்ணற்ற விளைவுச் சாத்தியங்கள் அறியத்தக்கவை அல்ல. செயலின் விளைவு முடிவிலியின் மடியில் இருப்பதை உணர்ந்து விளைவுபற்றி திட்டவட்டமான உறுதியான நம்பிக்கைகளை தவிர்த்துவிட்டு அச்செயல்தரும் நிறைவுக்காக மட்டுமே செயலாற்றவேண்டும்.”
விளைவுகள் உறுதியானவையல்ல என்று அறிந்தவன் செயல்படதயங்கி ‘ஏன் செயலாற்றாவேண்டும்?’ என்று கேட்கக்கூடும். அவனிடம் கூறவேண்டியது “நண்பா! இலக்கடைதல் மட்டுமல்ல, பயணமும் இன்பமே. ஆகவே செயலின்பத்திற்காக செயல்புரிக!” என்பதுதான். நீங்கள் உங்கள் உரையில் உணர்த்துவதும் அதையே என நினைக்கிறேன்.
வீரபத்ரன்
***
அன்புள்ள வீரபத்ரன்
சரியாகவே சொல்கிறீர்கள். நான் மிகுந்த விசையுடன் கூறுவது ஓர் எச்சரிக்கையை. இன்றைய சூழலில் அதை மீளமீளச் சொல்லவேண்டியிருக்கிறது. இன்று ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் பெரும் இலக்குகளை அளிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ‘ஆம்பிஷன்’ பற்றிய பேச்சாகவே இருக்கிறது. ’உன்னால் முடியும் தம்பி’ என அறைகூவிக்கொண்டே இருக்கிறார்கள். வரலாற்றில் எந்தக்காலத்திலும் இப்படி ஒவ்வொருவரும் சாதனையாளராக இருந்தாகவேண்டுமென்ற கட்டாயம் இருந்ததில்லை என நினைக்கிறேன்.
ஓர் எல்லைவரை இந்த ஊக்கம், இந்த இலக்கு தேவைதான். ஆகவே அதை நான் மறுக்கவும் மாட்டேன். இலக்குநோக்கிய விசையே செயலுக்கு அடிப்படை. ஆனால் இலக்கு மட்டுமே என்னும்போது பெரும்பாலானவர்களை அது சோர்வில் தள்ளுகிறது. ஒருவர் சாதிக்க ஆயிரம்பேர் ஏமாற்றத்திலும் கழிவிரக்கத்திலும் மூழ்கச் செய்கிறது. அத்துடன் ஒவ்வொருவரும் அவர்களின் இளமையில் அவர்களைப் பற்றிய மிகையான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அந்த மிகையான எண்ணத்திலிருந்து மிகையான இலக்கை மேற்கொள்கிறார்கள். அதை அடையமுடியாதபோது வாழ்நாளெல்லாம் கழிவிரக்கத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.
நான் செயல் என்பதிலுள்ள இந்த நஞ்சைப் பற்றியே சொல்கிறேன். செயல் ஒருவனை நம்பிக்கையிழப்புக்கும் சோர்வுக்கும் தள்ளக்கூடும். செயலில் உள்ள தோல்விகளும், செயலின் விளைவுகள் தெரியாமலிருப்பதும் அச்சோர்வுக்கான காரணங்கள். செயலை விசையுடன் செய்வதனால் காழ்ப்பும், வெறுப்பும், சினமும் கொண்டவர்களாக நாம் ஆகக்கூடும். நம் ஆளுமையே எதிர்மறைத்தன்மை கொண்டதாக ஆகக்கூடும்.
அவ்வாறு ஆகாமலிருப்பதற்கான வழியையே சொல்கிறேன். நேர்நிலைப் பார்வை கொண்டசெயல். செயலின் இன்பத்தையும் நிறைவையும் மட்டுமே அதன் பெறுபயனாகக் கொண்ட செயல், தன்னை வெளிப்படுத்தவும் தன்னை முழுமைப்படுத்தவும் தன்னியல்பாகச் செய்யப்படும் செயலே அந்த நஞ்சிலிருந்து நம்மைக் காப்பது. விளைவை எண்ணிச் செய்யப்படும் செயல் சோர்வை அளிக்கும், ஆணவத்தையும் காழ்ப்பையும் வளர்க்கும்.
ஜெ
***
இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 21ஆவது நாவல் ‘இருட்கனி’. கதிரவன் இந்தப் பூமிக்கு வழங்கிய பெருங்கொடைப்பழம் கர்ணன். ஒளியின் துளியே இனிய கனியானது போன்றவன் கர்ணன். பெரும்பலிகளையும் நீங்கா வஞ்சங்களையும் ஆகப்பெரிய கீழ்மைகளையும் கொண்டு ஊழால் வேலியிடப்பட்ட அந்தக் கனி, பிறருக்கு இருளில் இருக்கும் கனியாகத்தான் தெரியும்.
மிகக் குறைந்த ஒளியே இருள். மனிதர்கள் மிகக் குறைந்த ஒளியுடையவர்கள் என்பதால், அவர்களின் பார்வைக்குத் தெரிபவை அனைத்தும் இருள்தான். அவர்கள் இருள் என அறியும் அனைத்துமே ஒளிதான். அவர்கள் அறிந்த கர்ணன் இருளின் துளியே கசப்புக் கனியானது போன்றவன்.
“கனிகளில் இனிய கனி இது. அறமன்றிப் பிறிதிலாது மண்ணில் வாழ்ந்து நிறைந்தவன். உடல்முழுமை கொண்ட அழகன். கனிந்து தன்னை அத்தெய்வத்தின் பலிபீடத்தில் வைத்தவன்”.
கொடிக்குத் தெரியும் தன்னில் மலர்ந்த மலரின் மணம். மரத்துக்குத் தெரியும் தான் விளைவித்த கனியின் இன்சுவை. கதிரவனுக்குத் தெரியும் தன் மகனின் அகவொளி. அந்த ஒளிமகனின் உயிர்ச்சுடர் அகன்ற தருணத்தைப் பற்றி விவரிக்கிறது இந்த ‘இருட்கனி’ நாவல்.
நாட்டார் இலக்கியத்தில் ‘ஒப்பாரி’ என்ற ஒன்று உண்டு. சங்க இலக்கியத்தில் ‘கையறுநிலை’ என்ற ஒரு துறை உண்டு. இந்த இரண்டுக்கும் அகவயமாகப் பெரிய ஒற்றுமை உண்டு.
ஒப்பாரி என்பதை ஒப்பு + ஆரி என்று பிரித்து “ஒப்புச் சொல்லி அழுதல்” என்று பொருள் கொள்ளலாம். ஒப்பாரியைப் பிணைக்கானம், இரங்கற்பா, இழவுப்பாட்டு என்றெல்லாம் கூறுகின்றனர். இறந்தவர்களை நினைந்து நினைந்து, அவர்களின் குணவியல்புகளைப் பாராட்டியும் அவர்களின் இழப்பினை ஈடுசெய்யவே முடியாது என்று குறிப்புணர்த்தியும் அழுது அழுது பாடப்படும் பாடல்களே ஒப்பாரிப்பாடல்கள் ஆகும்.
கையறுநிலை (கை + அறு + நிலை); கை அறுபட்ட நிலை. அன்பு செய்த அரசன் இறந்துவிட, அவனைச் சேர்ந்தோர் அந்த இழப்பை குறித்து மனம் தளர்ந்து இரங்கலாகப் பாடுவது கையறுநிலை.
“வெருவரும் வாளமர் விளிந்தோன் கண்டு
கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று. ”
(விளிந்தோன் = இறந்தவன்; கையறவு = துன்பம்)
தங்களைப் பேணிய கரந்தையான் ஒருவன் ஆநிரை மீட்புப் போரில் இறந்ததனால் செய்வது இன்னதென்று அறியாத பாணர் வருந்தியதை உரைக்கின்ற துறையாதலின் கையறுநிலை எனப் பெற்றது. வாளினைக் கொண்டு போர் புரியும் போர்க்களம், அச்சம் வருவதற்குக் காரணமாக உள்ளது. இத்தகு போர்க்களத்தில் ஆநிரை மீட்கப் போரிட்ட கரந்தை மறவன் இறந்துபட்டான். அவன், மறவன் மட்டுமன்று; பாணர், பொருநர் முதலிய இசைக் கலைஞர்களான சுற்றங்களைப் பாதுகாத்த புரவலனும் ஆவான். அவனுடைய இறப்புப் பாண்மக்களைச் செய்வதறியாத நிலைக்குக் கொண்டு சென்றது. சென்ற அந்நிலையை உரைப்பது ‘கையறு நிலை’ என்னும் துறை ஆகும்.
“நாப்புலவர் சொல்மாலை நண்ணார் படைஉழக்கித்
தாப்புலி ஒப்பத் தலைக்கொண்டான் – பூப்புனையும்
நற்குலத்துள் தோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர்
கல்கொலோ சோர்ந்திலஎம் கண். ”
பகைவர் படையைப் புலிபோலக் கலக்கிய வீரன் வீழ்ந்து கிடக்கிறான். அதைக் கண்டும் நம் கண்கள் இற்றும் வீழவில்லை. கண்ணீரும் சோரவில்லை. அவை கல்லோ!”
வேள்பாரியின் நண்பரும் புலவருமான கபிலர், வேள்பாரியின் இறப்பிற்குப் பின் பறம்பு நாட்டின் அழிவைப் பற்றி மனம் வருந்தி இயற்றிய கையறுநிலைப் பாடல் புறநானூற்றின் 118ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது.
“அறையும் பொறையு மணந்த தலைய
எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ
கூர்வேற் குவைஇய மொய்ம்பிற்
றேர்வண் பாரி தண்பறம்பு நாடே.” (புறநானூறு : 118)
பாறைகளையும் சிறு குன்றுகளையும் கொண்ட இடமாக, எட்டாம் நாள் நிலவு போல வளைந்த கரையை உடைய தெளிந்த நீர் நிறைந்த சிறிய குளம், கூரிய வேல் ஏந்திய திரண்ட தோள்கள் கொண்டவனும், தேர்களைப் பரிசாகக் கொடுத்தவனுமான பாரியின் குளிர்ந்த பறம்பு மலை நாட்டில் இன்று பாதுகாப்பார் இன்றி உடைந்து கெட்டழிந்து போகின்றது.
இளங்கொடி தன்னுடைய பற்றுக்கோட்டினை இழந்து தவிக்கும் நிலையது. அந்த இளங்கொடி இதுநாள்வரை தனக்குப் பற்றுக்கோடாக இருந்த அந்த ஏணியின், பிடிமானத்தின் வலுவினை மனம்திறந்து எடுத்துரைப்பது போன்றது அது. கர்ணன் எண்ணற்றவர்களுக்குப் பற்றுக்கோடானவன். அவனின் எதிரிகளும் ஒருவகையில் தங்களின் உள்ளத்தில் ஓரத்தில் அவனை விரும்பத்தான் செய்தனர். அந்த அளவுக்குக் கருணையும் பேராண்மையும் கொண்டவன். இந்த நாவல் முழுக்கவே கர்ணனை நினைத்துப் பிறர் தம் மனத்தளவில் ஒப்பாரி வைப்பதாகவே எண்ண முடிகிறது. கர்ணனைச் சார்ந்தவர்களும் கர்ணனுக்கு எதிராக நின்றவர்களும் கையற்று வருந்தும் நிலையைக் காணமுடிகிறது.
போர் நெறிமுறைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுட நெறிகளையும் மீறி கர்ணன் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்டதனையும் அவனின் மரணத்தையொட்டி அவனைச் சார்ந்தோரின் உள்ளங்களில் நிகழும் அவனைப் பற்றிய நினைவுப் பெருக்கையும் கர்ணனின் நினைவுத் தடம் ஆழமாகப் பதிந்துள்ள இடங்களையும் முழுமையாகச் சொல்ல விழைந்துள்ளார் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள். இந்த ‘இருட்கனி’ நாவல் முழுக்கவே கர்ணனுக்காகப் பாடப்பட்ட மாபெரும் இரங்கற்பாவோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
பொதுவாகவே பெரும்ஆளுமைகளைப் பற்றிய குறும்படங்களை இயக்கும் இயக்குநர்கள் அந்தக் குறும்படத்தை ஆளுமைகளின் மரணத்திலிருந்தே தொடங்க விரும்புவர். ஆளுமைகளைப் பெரிய வட்டமாக உருவகித்துக்கொண்டால், மரணம் என்பது, அந்த வட்டத்தின் விளிம்பு. அவர்களின் ஆளுமை என்பது, அந்த வட்டத்தின் மையப்புள்ளி. விளிம்பிலிருந்து மையத்தை நோக்கிய நகர்வாகவே அந்தக் குறும்படங்கள் அமையும். இது ஓர் உளவியல்சார்ந்த உத்தி. அந்த ஆளுமையைப் பார்வையாளர்களின் மனத்தில் உறையச் செய்ய இந்த உத்தி பெரிதும் பயன்படும். மகாத்மா காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் ஆகியோரைப் பற்றிய குறும்படங்களை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.
இந்த நாவல் கர்ணனின் களவீழ்ச்சியிலிருந்து தொடங்கி, கர்ணன் எவ்வாறு அந்தப் பதினேழாம் நாள் போரினை எதிர்கொண்டான் என்பதை விரித்துச் சொல்லி, கர்ணனின் ஆகப்பெரிய கொடையாளுமையை நெருங்கிச் சென்று நிறைவு பெறுகிறது. அதனாலாலேயே இந்த நாவலின் நிறைவில் கர்ணன் நம் மனத்தில் பலமடங்கு உருப்பெற்று, நீங்கா இடம்பெற்றுவிடுகிறான்.
ஆம்! அவன்தான் மூத்த பாண்டவன். அவனே பேரறச்செல்வன். அவன்மட்டுமே பெருங்கொடையாளன். தன்னை நோக்கிவந்த அனைத்துக் கீழ்மைகளையும் தன் காலடியில் கிடத்தி, நசுக்கி, தன்னறத்தாலேயே, தற்கொடையாலேயே எழுந்து நின்றவன். இனி, என்றும் எல்லோர் நெஞ்சிலும் நிலைகொள்பவன் அவனே!.
போர்க்களத்தில் ஆயுதம் இழந்தவர்கள், ஊர்திகளை இழந்தவர்கள் பொழுதிடைகோருதல் ஒருமுறைமை. தேர்ச்சக்கரத்தை மீட்பதற்குப் பொழுதிடை கோரவில்லை. தன் வாழ்நாளில் யாரிடமும் எதையும் கோரிப்பெறாதவன் கர்ணன். அதனால்தான் அவன் போர்க்களத்தில் தன் தேர்ச்சக்கரம் பள்ளத்தில் புதைந்தபோதும் பொழுதிடை கோரவில்லை. ஆதலால், கர்ணன் தன் உயிரைக் கொடையாகத்தான் அர்சுணனுக்கு வழங்கினான் என்றே கருதமுடிகிறது.
அர்சுணனிடம் “ அவன் இறப்பை த் தேரவேண்டும் … விழையாது உயிர்துறப்பதில்லை சான்றோர் …” என்று இளைய யாதவர் கூறினார்.
விண்மீன்கள் சுடர வாய்ப்பளித்து சூரியன் தானே விரும்பித் தன் கதிர்களை ஒடுக்கிக்கொள்வதுபோலக் கர்ணன், இனி இவ்வுலகில் அர்சுணனே பெருவில்வீரனாகத் திகழ வேண்டுமென விரும்பி, அவனுக்கு வழிவிட்டுத் தன்னுயிரையும் கொடையாகவே கொடுத்தான்போலும்.
“சாத்யகி கர்ணனின் அம்புகளால் சிகண்டி எக்கணமும் உயிர்துறப்பார் என்று எதிர்பார்த்தான். திருஷ்டத்யும்னன் தன்னைக் கருதியபடி போரிட சிகண்டி எதையும் எண்ணா படைமடத்துடன் போரிட்டார்.”
என்ற ஒரு குறிப்பு இந்த நாவலில் இடம்பெற்றுள்ளது. அது என்ன ‘படைமடம்’?
புறநானூறின் 142 பாடலில் படைமடம் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. இது புலவர் பரணர் வையாவிக் கோப்பெரும் பேகனைப் பற்றிப் பாடிய பாடல்.
“அறுகுளத்து உகுத்தும் , அகல்வயல் பொழிந்தும் ,
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும் ,
வரையா மரபின் மாரி போலக் ,
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது ,
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.” (புறநானூறு – 142)
வயலிலும் குளத்திலும் களர்நிலத்திலும் வேறுபாடு இன்றி ஒரே தன்மையில் பெய்யும் மழை போன்று, இரவலர் எத்தகுதியினராயினும் வரையாது ஒப்பக் கொடுக்கும் இயல்பினன் பேகன். கொல் யானையும் வீரக்கழலும் உடைய அவன், கொடையின் கண்ணே இவ்வாறு மடமையுடையவன். ஆனால், போரில் தன்னொத்த வீரருடன் பொருபவனேயன்றித் தனக்குத் தகுதியற்றாருடன் பொருதும் மடமையோன் அல்லன்.
ஆம்! சிகண்டிக்குத் தன் அன்னையின் (அம்பையின்) ஆணையைத் தவிர வேறு எதுவும் பெரிதல்லவே. அவன் தன்னையும் கருதாதவன். கர்மமே கண்ணாகியவன். அவனால் தனக்குத் தகுதியுடைய யாருடனும் படைமடத்துடன் பொருதமுடியும்தான்.
அர்சுணனுக்கு இளைய யாதவர் குருஷேத்திரப் போர்க்களத்தில் தேர் ஓட்டுவதாலேயே பதினேழாம் நாள் போரில் கர்ணனுக்குச் சல்லியர் தேர் ஓட்டவேண்டும் என்று முடிவாகிறது. இளைய யாதவருக்குச் சல்லியர் இணையா? என்று உள்ளம் வினா எழுப்பினாலும் ஏதோ ஒரு புள்ளியில் இளைய யாதவரும் சல்லியரும் நெருங்கியமைகிறார்கள். அது எந்த இடம் என்பதை இந்த நாவலில் கண்டடைய முடிகிறது. அது போர்க்களத்தில் சல்லியர் கர்ணனுக்கும் வழங்கும் அறிவுப் பகுதி. அங்கேயே இளைய யாதவரும் சல்லியரும் விலகி அமையும் புள்ளியையும் காணமுடிகிறது. இளைய யாதவர் எதிர்காலத்தில் நின்று அர்சுணனுக்கு அறவுரைகளை வழங்குகினார். ஆனால், சல்லியரோ இறந்தகாலத்தில் நின்று கர்ணனுக்கு அறவுரைகளை வழங்குகிறார். ஆம், அவர்கள் விலகி நிற்பது இந்தக் கால வேறுபாட்டில்தான்.
சல்லியர் கர்ணனிடம், “நான் இங்குச் சொல்வன அனைத்தும் என் வாழ்நாளில் அறிந்தவை. தந்தையர் மைந்தரிடம் நூலில் கற்றவற்றை, பிறர் சொல்லி அறிந்தவற்றைச் சொல்வதில்லை. பட்டு உணர்ந்தவையே அவர்களிடம் சொற்களாகின்றன. இவை தந்தைசொல் என உளம்கொள்! நான் இவற்றை என்னுள் இருந்தே அறிந்திருக்கிறேன். நான் கொண்ட நடிப்புகள், நான் பூண்ட மாற்றுருக்கள், நான் வெளிப்பட்ட தருணங்கள் வழியாக நான் உணர்ந்தமைந்த மெய்மைகள் இவை. இவற்றைக் குருதிகொடுத்து அறிந்திருக்கிறேன்’’ என்றார்.
கர்ணனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவனைப் பின்தொடர்வது ‘சூதன்’ என்ற இளிவரற்சொல்தான்.
சிவதர் சுப்ரதரிடம், “ வாழ்ந்தநாள் வரை அரசரை ச் சூதர் என்றீர்கள். இப்போது அரசியை ச் சூதப்பெண் என்று சிறுமை செய்கிறீர்களா ?” என்றார்.
ஒருவகையில் அந்தச் சிறுமையைப் புறத்தள்ளும் வகையில்தான் கர்ணனின் முதல் மனைவியும் பட்டத்தரசி அல்லாதவருமான அரசி விருஷாலியின் உடன்கட்டை ஏறும் சடங்கு நிகழ்கிறது. அதை நிகழவிடாமல் தன் சூழ்ச்சிச் சொல்லால் தடுக்க நினைத்தார் சகுனி.
கர்ணனின் இளைய மகனும் அங்கநாட்டு இளவரசனுமான பிரசேனனிடம் சகுனி,
“ எண்ணி நோக்குக! இந்தச் சிதை வெறும் எரி அல்ல. இது ஓர் அரியணை. தேவர்களுக்குரிய பொன்னால் உருவாக்கப்படுவது . இதை அரசியிடம் சொல்க! அவர் அங்கநாட்டு அரியணையிலேயே அமரத் துணியாதவர். தேவர்கள் வாழ்த்தும் இந்த விண்ணக அரியணையில் அவர் அமர விரும்பமாட்டார் ”
என்றார். இதனை ஏற்ற பிரசேனன் சென்று தன் அன்னையின் விருப்பத்தை அறிந்துவந்து, தன் அன்னையின் முடிவுடன் தன்னுடைய முடிவினையும் இணைத்து, சகுனியிடம் அறிவிக்கிறான். அதற்குச் சகுனி மறுப்புத் தெரிவித்த போது,
“பிரசேனன் கூர்ந்த விழிகளுடன், “ எந்தை ஷத்ரியர் என்றால் அன்னையும் ஷத்ரியரே. அவருடைய உள்ளத்தமர்ந்த அரசி அவரே. உடன் சிதையிலும் அமரட்டும் ” என்றான். “ இங்கே அதற்கு ஒப்புதல் இல்லை …” என்றார் சகுனி. “ ஏன் ?” என்று பிரசேனன் கேட்டான். “ ஏனென்றால் அங்கரும் ஷத்ரியர் அல்ல , அவர் துணைவியும் ஷத்ரியர் அல்ல ” என்று சகுனி சொன்னார். “ அவர் ஷத்ரியர் என நான் உரைக்கிறேன். அதை மறுக்கும் எவரும் அங்கநாட்டுடன் போரிடலாம். அன்றி தனிப்போரில் என்னை எதிர்க்கலாம். எதிர்ப்பவரை வென்று நிறுவுகிறோம் , எந்தையும் எங்கள் குடியும் ஷத்ரியர்கள் என்று. நூல்கள் கூறும் நெறி அதுவே. ” சிறுவன் எனத் தெரிந்தவனில் வந்த மாற்றம் சகுனியை ப் பதறச்செய்தது. அவன் ஒருகணத்தில் கர்ணன் என ஆகிவிட்டதுபோல் தோன்றியது.”
ஆம்! கர்ணன் தன் மரணத்துக்குப் பின்னால் தன் இளைய மகனின் வடிவில் எழுந்து வந்து, தன்னை ஷத்ரியன் என்று நிறுவிச்சென்றதாகவே, நிலைநாட்டிச் சென்றதாகவே உணரமுடிகிறது.
மகாபாரதத்தில் பெரும்பாதி சிறியதும் பெரியதுமான போர்க்களங்கள்தான். ‘வெண்முரசு’ நாவல்தொடரிலும் செம்பாதி அவையே நிறைந்துள்ளன. நாம் நேரில் பார்த்திராத போர்க்களத்தை எத்தனை விதமாக உரைத்தாலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாதுதான். இதுபற்றிச் சுப்ரதர் சிவதரிடம் கூறும் ஒரு வரியையே நான் இங்கு எடுத்தாள விரும்புகிறேன்.
சுப்ரதர் , சிவதரிடம் “நான் எத்தனை சொன்னாலும் போரை நேரில் காணாத உமக்கு அது புரியாது. அதைப் பெருங்காவிய ஆசிரியர் ஒருவர் எழுதிக் காட்டலாகும்” என்றார்.
இந்தக் கூற்று உண்மைதான். ஆனால், போர்க்களக்காட்சியை வாசகருக்குத் தன் எழுத்தால் மனக்காட்சியாக்கியுள்ளார் எழுத்தாளர். ‘பெருங்காவிய ஆசிரியர் ஒருவர் எழுதிக்காட்ட முடியும்’ என்ற அந்த வரியை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் மெய்ப்பித்துள்ளார். ‘இக்காலத்துப் பெருங்காவிய ஆசிரியர் இவரே!’ என்பேன்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்
‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை
சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

