Jeyamohan's Blog, page 941
August 2, 2021
மகாஸ்வேதா தேவியின் ‘காட்டில் உரிமை’- கா.சிவா
நாடோடியாக வாழ்ந்த மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு இடத்தில் நிலை கொள்ள ஆரம்பித்தபோதே இந்தப் பிரச்சனை தொடங்கியிருக்கும். தன் இடம் என ஒரு நிலத்தை எண்ணும்போதே அதன்மீது பற்று உருவாகி, பின் அதன் மீது தனக்கு மட்டுமே உரிமை உள்ளதென உறுதி ஏற்படுகிறது. பிறர் அவ்விடத்திற்குள் நுழைவது அத்துமீறலாக ஆகிறது.
ஒருவருக்கு உரிமையென ஆன நிலத்தில் நுழையக் கூடாதென்ற கட்டுப்பாட்டை பணமும், அதன் மூலம் பெற்ற அதிகாரமும் தன் செருக்குடன் உடைத்தெறிந்து உள் நுழைகிறது. அப்போது எளிய உயிர்களும் அவர்தம் உடைமைகளும் சிதைந்து அழிவதை வரலாறு முழுக்கக் கண்டு வருகிறோம்.
ஆங்கிலேயர்கள் தனி மனிதனுக்கான உரிமைகளை வழங்கும் பேரரசின் பிரதிநிதிகளாகவும், அப்பேரரசின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்டு இந்தியா உள்பட உலகின் பெரும்பான்மையான நாடுகளை ஆக்கிரமித்தார்கள். அந்த ஆக்கிரமிப்பில் சிக்கி மீளாத் துயரில் அவதியுறுபவர்கள் அதிலிருந்து வெளிவர முயன்றால் என்ன நடக்கும் என்பதை “காட்டில் உரிமை” என்ற நாவல் காட்டுகிறது.
மகாசுவேதா தேவி வங்க மொழியில் எழுதி சு.கிருஷ்ணமூர்த்தியால் தமிழில் மொழியாக்கம் பெற்ற இந்நாவல், மத்திய இந்தியாவின் சோட்டா- நாக்பூர் பகுதியில் வசித்த பாண்டாக்களின் உரிமைப் போராட்டத்தை களமாகக் கொண்டுள்ளது. இழந்த தங்கள் பரம்பரை நிலங்களுக்காக பாண்டாக்கள் போராட்டம் தொடங்குவதையும் அதன் விளைவுகளையும் கண்முன் காட்டுவதுபோல விவரிக்கிறது.
இந்தப் பகுதிக்கு சோட்டா- நாக்பூர் எனும் பெயர் உருவாக காரணமாக இருந்தவர்கள் முதன்முதலாக இங்கு முளையூன்றிய இரு பாண்டாக்களே. இந்தப் பூர்வகுடிகள் காட்டிலிருந்து பெறும் பொருட்களிலிருந்தே தங்கள் வாழ்வை நிறைவாக வாழ்ந்தார்கள். இயற்கையோடு இயைந்த இவர்களின் சீரான வாழ்வை குலைக்க வருகிறார்கள் திக்குகள் என இவர்களால் அழைக்கப்படும் வேற்று நிலத்தவர்கள். திக்குகளுக்கு காடுகளுடன் உணர்வுப் பூர்வமான எந்த உறவும் கிடையாது. பாண்டாக்களுக்கும் காடுகளுக்குமான அன்னை பிள்ளைகள் உறவும் அவர்களுக்குப் புரியாது. அவர்கள் பாண்டாக்களின் வெள்ளந்தியான அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஒட்டுண்ணியைப் போல அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிச் செழிக்கிறார்கள். திக்குகள், தங்களை சுரண்டிக் கொழிக்கிறார்கள் என்பதைக் கூட அறியாமல் வாழும் பாண்டாக்கள் தொடர்ந்து மழையில்லாமல் வறட்சி ஏற்படும்போது திக்குகளிடம் கையேந்தும் நிலைக்குச் செல்கிறார்கள். சிலர் அடிமை பத்திரம் எழுதிக் கொடுத்து கூலியில்லாமல் உணவுக்காக மட்டும் பணியாற்றுகிறார்கள். பலர் லேவா தேவிக்காரர்களிடம் கடன் வாங்கி வட்டிக்கு ஈடாக நிலத்தை இழக்கிறார்கள். மிகச் சிலபேர் கங்காணிகள் மூலம் தோட்ட வேலைக்குச் சென்று திரும்பி வராமலாகிறார்கள். இதன் காரணமாக இவர்கள், தங்களின் பூர்வீக நிலத்தைவிட்டு இடம் பெயரவேண்டிய நிலை ஏற்படுகிறது.
அப்போது, சட்டப்பூர்வமான ஆட்சியென்ற பிரகடனத்துடன் நாட்டை ஆண்டது ஆங்கிலேயர்கள். தன் நிலத்தை கைப்பற்றிக் கொண்டாரென திக்குகளின் மேல் வழக்குத் தொடர்ந்த ஒரு பாண்டாவின் நிலத்தை திக்குவிற்கே அளித்ததுடன் அந்நிலத்தில் மாடு மேய்த்ததற்காக பாண்டாவிற்கு அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் ஆங்கிலேய நீதிபதி. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு போவார்களாயென்ன?.
மூத்த பாண்டாவான கானி என்பவர்தான் பாண்டாக்களிடம் அவர்களின் ஆதி தெய்வத்தைப் பற்றியும், பாண்டாக்களுக்கென ஒரு பகவான் தோன்றுவான் என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை பாண்டாக்கள் யாரும் நம்பாததுடன், அவர் பேச்சை கேட்கவேண்டாம் என்று இளைஞர்களையும் தடுக்கிறார்கள்.
தாய் தந்தையர்களின் கடினமான வாழ்வுச் சூழலின் போது வானில் மூன்று நட்சத்திரங்கள் ஒளிர தேவதூதனென பிறக்கிறான் பீர்ஸா. இவன், சுரைக் குடுவையில் உருவாக்கிய டுயிலாவை மீட்டியும் குழல் ஊதியும் அனைவரையும் கவரும் கரு நிறத்தவனாக விளங்கினான்.
குறைந்த வருமானத்தில் உண்பதற்கான வாய்கள் அதிகமாக இருந்ததால் பீர்ஸாவின் தாய் இவனை தன் தந்தை வீட்டிற்கு அனுப்புகிறாள். அங்கிருந்து பள்ளிக்குச் சென்று படித்துக் கொண்டிருந்தவன், உடனிருந்த சித்திக்கு மணமானபோது அவளுடனேயே சென்று அந்த வீட்டு வேலைகளை செய்ததுடன் மாடுகளையும் மேய்த்து வருகிறான்.
குழலிசைப்பது, மாடுகள் மேய்ப்பது, அனைவரையும் ஈர்க்கும் குணத்தவனாய் இருப்பது என விளங்கும் பீர்ஸாவின் பாத்திரப் படைப்பு பெரும்பாலும் கிருஷ்ணனின் பாத்திரத்தை ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது. இதன் மூலம், பிறகு இவனால் நடக்கப் போகும் அழிவுகளை ஆசிரியர் கோடிட்டுக் காட்டுவதாகக் கருதலாம்.
செய்த சிறிய தவறுக்கு சித்தியின் கணவரிடம் பெரிதாக அடி வாங்கிய மீர்ஸா இதையே சாக்காக வைத்து அவ்வீட்டிலிருந்து வெளியேறி மிஷன் பள்ளியில் சேர்ந்து படிக்கிறான். முண்டாக்களை மிஷன்காரர்கள் படிக்க வைப்பதும் பஞ்ச காலங்களில் உணவிடுவதும் மத மாற்றம் செய்வதற்காகத்தான்.
சில வருடங்களில் ஏற்படும் வறட்சியில் முண்டாக்கள் அடையும் பெரும் துயரை காண்கிறான் பீர்ஸா. கானி முண்டா கூறி, தான் உதாசீனம் செய்த சொற்களின் பொருள்கள் துலக்கம் பெற்றன. திக்குகள்,லேவாதேவிக்காரர்கள், மிஷன், அரசாங்கம் அனைவராலும் முண்டாக்கள் கசக்கிப் பிழியப்படுவதை உணர்கிறான். பெருந் துயருடன் காட்டிற்குள் செல்பவனுக்கு காடெனும் அன்னை தன்னை மீட்கக் கோரும் வேண்டுதல் கேட்கிறது. முண்டாக்களை, அவர்களைப் பயன்படுத்தி கொழிப்பவர்களிடமிருந்து விடுவிப்பதின் மூலமே காட்டை மீட்க முடியும் என தெளிவடைகிறான். என்ன செய்ய வேண்டுமென முடிவு செய்கிறான். கானி முண்டா கூறிய பகவான் தான்தான் என அவன் முண்டாக்களிடம் கூறியபோது எவருமே அதனை மறுக்காமல் ஐயப்படாமல் ஏற்கிறார்கள்.
முண்டாக்கள் அனைவருடனும் பேசி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கிறான். இவர்களுடைய ஆயுதம் வில்லும், அம்பும் கூட கொஞ்சம் எட்டிக்காய் விஷம். ஆனால், உலகையே ஆளும் பேரரசிடம் துப்பாக்கியும் குண்டுகளும் உள்ளதே. மிக எளிதாக பெரும் குருதி சிந்த வைத்து போராட்டத்தை ஒடுக்குகிறார்கள். கைது செய்யப்படும் பீர்ஸா முண்டாவை விசாரனை முடியும் முன்னே மர்மமாக கொல்கிறார்கள். போராட்டம் முடிந்துவிட்டது. ஆனால் தனல் முண்டாக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கிறது, பீர்ஸாவுக்கு சாவு இல்லை என நாவல் முடிகிறது.
இந்நாவலில் சில பாத்திரங்கள் அமரத்துவம் வாய்ந்தவை. கானி முண்டா என்ற பெயருடன் முண்டாக்களின் பூர்வீகம் பற்றியும் அவர்களின் தொன்ம தெய்வங்களைப் பற்றியும் இளையவர்களிடம் கூறிக்கொண்டே இருக்கிறார். மிகவும் வயதானவராக காட்டப்படும் இவர் நாவலில் சிரஞ்சீவியாக நீடிக்கிறார்.
பீர்ஸா முண்டாவின் தாயார் கர்மி. அவதார புருசர்களை பெற்றவர்கள் பட்டபாடுகளை இவரும் படுகிறார். மகனை நினைத்து உவகை அடைவதும், அவன் எதிர் நோக்கும் ஆபத்தை எண்ணி மருகுவதும் நாவலுக்கு ஒரு உயிரோட்டத்தை அளிக்கிறது.
இன்னொருவரை மணந்து கொண்ட போதிலும் பீர்ஸாவின் மேல் பெரும் ஈர்ப்பும் மரியாதையும் கொண்ட பெண்ணாக சாலி படைக்கப்பட்டுள்ளாள். மணம் செய்துகொள்ள வாய்ப்பில்லாத போதும், இவளின் மகனை தன் தத்துப்பிள்ளையாக அறிவிப்பதன் மூலம் சாலியின் நேசத்திற்கு அங்கீகாரம் அளிக்கிறான் பீர்ஸா.
பீர்ஸாவுடன் மிஷன் பள்ளியில் படித்த நண்பன் அமூல்யாபாபு. இவன் முண்டாவாக இல்லாவிட்டாலும் பீர்ஸாவின் மேல் ஏற்பட்ட அன்பின் காரணமாக பாண்டாக்களைப் பற்றி தெரிந்துகொண்டு அவர்கள் மேல் பரிவுடன் இருக்கிறான். பெரியதாக உதவ இயலாதபோதும் இயன்றவற்றை செய்கிறான். முண்டா கலகம் எனப்படும் இப்போராட்டத்தினை பற்றி எழுதி ஆவணப்படுத்துகிறான்.
பீர்ஸாவின் பாத்திரம் சிறந்த தலைவனுக்கு உதாரணமாகப் படைக்கப்பட்டுள்ளது. அவன் தான் எடுத்த முடிவு சரியானதா என்பதை ஐயப்படுவதுடன், உடன் வருபவர்களிடம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறான் அழிவு வரக்கூடும். முடிவை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம் என. முடிவை மாற்ற எவரும் சம்மதிக்காத நிலையில் அவர்களுடனேயே சிறையில் துயருற்று மடிகிறான். இக்குணம் இப்போதைய தலைவர்களுக்கு இல்லாததாகும்.
சற்று பிசகினாலும் வரலாற்று நூலாக மாறிவிடக் கூடிய அபாயத்தை மேற்குறிப்பிடப்பட்ட பாத்திரங்களைப் படைத்ததன் மூலம் கடந்து, நல்ல நாவலாக ஆக்கியிருக்கிறார் மகாசுவேதா தேவி. நீதி முறைக்காக சிலரால் பாராட்டப்படும் ஆங்கில ஆட்சியின் நீதிமன்ற செயல்பாடுகளில் காணப்படும் போலித் தனத்தை அப்பட்டமாக விவரித்துள்ளார். நாவலில் பதினான்கு பக்கங்களில் விரியும், பெங்கால் பத்திரிக்கையில் வெளிவந்ததாக கூறப்படுகிற நீதிபதிக்கும் பாண்டாக்களின் வழக்குரைஞருக்கும் இடையேயான உரையாடல் இதை தெளிவாக்குகிறது. பல்லாயிரம் பேர் விசாரிக்கப் படாமல் விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் இப்போதும் நம் சிறைக்குள் அடைபட்டிருப்பதற்கான அடிப்படை நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஆறு மாதங்களாக இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சிறையில் கிடப்பவர்கள் மீதான குற்றம் என்னவென்று நீதிமன்றத்தில் கேட்கும்போது காவல்துறை கூறுகிறது “இன்னும் ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் கூறிவிடுகிறோம்” என்று. கைது செய்தபின் ஆறுமாதங்களாக தேடியும் சாட்சியம் எதுவும் கிடைக்கவில்லை, என்ன குற்றம் சுமத்தலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 482 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இரும்புச் சங்கிலிகளோடு பிணைக்கப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருத்தவர்களில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப் பட்டவர்கள் 98பேர் மட்டுமே. இருபது பேர் சிறைக்குள்ளேயே மரணித்துவிட்டார்கள், மற்றவர்கள் வெளிவந்தார்கள் என்ன குற்றம் புரிந்தோம் என்று தெரியாமலேயே.
இந்த நாவல் வாசித்தபோது பாலமுருகன் எழுதிய “சோளகர் தொட்டி” நாவலின் களம் நினைவில் எழுந்து முதுகெலும்பைச் சொடுக்கியது. சந்தன மரக் கடத்தல்காரனை தேடும் போது அவன் கிடைக்காத நிலையில், எந்தக் குற்றமும் புரியாத எளியவர்களை அதிகாரம் உள்ளதென்ற தினவில் மிருகங்களை விட கொடுமையாக வதைத்த அதிகாரி, எண்பது வயதிற்கும் மேலாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் சுகமாக. இவற்றைப் பார்க்கும் போது அறங்களை போதிப்பவர்கள் மீது சலிப்பும் சினமும் எழுவதை தடுக்கமுடிவதில்லை. இவ்வாறு, ஈவிரக்கமின்றி மிருகங்கள் கூட அஞ்சும் தீமைகளை செய்பவர்கள் அடையப்போகும் தண்டனை என்னவென்பது ஒருபுறமிருக்க, இத்தனை எளியவர்கள் பட்டபாட்டிற்கு என்னதான் பொருள் என்பதும் புரியாமல் மனம் துடிக்கிறது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற “காட்டின் உரிமை” எனும் இந்நூலை சு.கிருஷ்ணமூர்த்தி எப்போதும்போல சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். இது ஒரு பழங்குடி இனத்தின் வரலாறு மட்டுமல்ல. உலகெங்கும் வாழ்ந்த பல்லாயிரம் பழங்குடிகள் அழிக்கப்பட்டதன் எளிய சித்திரம். எளிமையானதாக உள்ளதாலேயே இந்நூல் வாசகனின் கற்பனையைத் தூண்டி மனதைக் கனக்கச் செய்கிறது.
கா.சிவா
இளையராஜாவின் பின்னணியிசை
இளையராஜா அமைத்த பின்னணி இசைகளில் எனக்குப் பிடித்தவை பெரும்பாலும் மலையாளத்தில்தான் என்று சொல்லும்போது என் நண்பர்கள் பலர் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் மென்மையான மெட்டுகளில் உச்சகட்டங்களை அமைக்கும் வாய்ப்பு அவருக்கு மலையாளத்திலேயே அதிகமும் அமைந்தது. அவருடைய நினைக்கப்படும் பின்னணி இசைக்கோவைகளின் ஒரு தொகுதி
கார்கடலில்…
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
கார்கடல்-16. கர்ணனும் துரியோதனனும் காதலனும் காதலியுமாகத் தோன்றுகின்றனர். கலிக்கு முற்றளித்த துரியோதனன், ஆண் என பானுமதியின் கண்களில் பெருங்காதலைத் தோற்றுவித்த துரியோதனன் அல்ல இவன். இக்கணத்தில் கர்ணன் முன் பெண்ணாகிறான். பெருந்தந்தை என்று எவரையும் சொல்வதும் கூட அபத்தம் என்றே தோன்றுகிறது, ஆண் அன்னை என்று ஆகிறான், அதிலென்ன பெருந்தந்தை என்று எண்ணம் எழுகிறது. “என் பிள்ளையை மட்டும் கரித்துக்கொட்டுகிறாள். அவள் குழந்தைகளும்தான் இங்கு வந்து விளையாடுகிறார்கள்.”
நான் அவர்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யவில்லை என் இளையோரைக் கொல்ல அவனால் எப்படி இயன்றது?
ஒரு பெண் அன்னை ஆகிறபோது பெரும்பாலும் தன் குழந்தைகளுக்கு மட்டுமே அன்னை ஆகிறாள், ஆனால் ஒரு ஆண் அன்னை என்று ஆவது அரிது என்றபோதும் அவ்வாறு ஆகிறபோது அனைவர்க்கும் அன்னையாக பேரன்னையாக ஆகிவிடும் சாத்தியம் அதிகம் உள்ளது. அங்கு பேரன்னை பெருந்தந்தை என்பவை வெறும் சொல் வேறுபாடுமட்டுமே என்று எண்ணுகிறேன்.
பெண்ணாகி மீண்டபின் நாணுகிறான். கர்ணனிடம் மட்டுமே அவன் அவ்வாறு ஆகமுடியும். பேரன்பில், பக்தியில், தன்னைப் பொருட்டல்ல என்று எண்ணும் அளவில் ஒன்றை நேசிக்கையில் எந்த ஆணும் பெண்ணாகிவிடுகிறான் என்று கருதுகிறேன்.
அன்புடன்
விக்ரம்
கோவை
***
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
விழிமயக்கா என்று அறியவில்லை ‘கார்ப்பெருங்கடல்’ என்று கண்டேன். கார்கடலின் 15-ஆம் அத்தியாயத்தை வாசித்து முடித்துவிட்டு முதல் அத்தியாயம் முதல் நினைவில் கொண்டு தொகுத்துக்கொள்ள முயன்றேன். ஆமை அல்லது நாகம், வேழம், செம்பருந்து. நாகர், அசுரர், வைதீகஞ்சார்ந்தவர். மேற்கே ஆப்கனிஸ்தான் கிழக்கே மியான்மரின் அரக்கன் யோமா மலைத்தொடர், வடக்கு-தெற்காக பாயும் ஐராவதி நதி, ஒரு பெரும் பரப்பை மனம் கற்பித்துக் கொண்டது. பருந்து நாகத்தையும் யானையும் உண்டு தன்வயப்படுத்தி விண் எட்டுகிறது, உண்மையில் அத்தனை உயரத்தை முன்னிரண்டும் எட்டுவது என்பது பருந்துடன் இணைந்து அதுவென்று ஆகிவிடுவதன் மூலமே சாத்தியம். முன்பொருநாள் எகிப்தியவியல் அறிஞரான ஒரு கருப்பு மனிதர் பேசுவதை YouTube-இல் கேட்டிருந்தேன். பைபிளின் அடிப்படையான பல பண்டைய எகிப்திய சமயத்தில், பண்பாட்டில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை என்று விளக்கிக் கொண்டு இருந்தார். நெல்சன் மண்டேலாவிற்கு பண்டைய ஆப்ரிக்க பண்பாட்டைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை, தெரிந்திருந்தால் இந்தியாவின் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கை அவருக்கு வியப்பளித்திருக்காது, ஏனெனில் உலகில் அஹிம்சை கொள்கையை முன்னமே கொண்டிருந்தவர் நாம் என்று கூறினார். எவ்வாறோ எவையும் தன்வயப்படுத்திக் கொண்டவற்றின் வாயிலாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
கர்ணனின் பொற்தேர் பற்றி துச்சாதனன் விமர்சிக்கிறான், களத்தில் மறைவு அற்று துலங்கக் கூடியது என்கிறான். அது அவன் எதிர்வினை என்றும் அவனது ஆணவத்தை தான் அறிவேன் என்றும் துரியோதனன் கூறுகிறான். உண்மையில் இன்று அவன் கதிரோனாகவே எழுகிறான். யாவற்றின் மையம் எனத் துலங்குவது அதன் இயல்பு. மறைந்து கொள்ளும் அவசியம் ஒருபோதும் இல்லை கதிரோனுக்கு. மேகங்கள் மறைப்பதும், பலரும் கொள்ளும் கருத்துக்களும், விருப்பு-வெறுப்புளும், யாவைக்கும் ஒருசம்பந்தமும் இல்லாமல் உயர்ந்து எழுவது கதிர். இங்கு கர்ணன் அவ்வாறே எழுகிறான் என்று கருதுகிறேன். கர்ணனை சூழ்ந்த சிறுமைகளும் அவன் உள்ளத்தில் கொண்ட சிறுமைகளும் ஒன்றுமில்லை என எழுவான், உயர்ந்து தகித்து, கடமை முடித்து மோனமும் ஊழ்கமும் அருளும் ஞானச் செங்கதிர் போல் கார்கடலில் சரிவான் என்று கருதுகிறேன்.
இன்னொன்றும் சொல்லவேண்டும், காலையில் தற்செயலாக – வாங்கி வைத்து இதுவரை வாசிக்கத் துவங்காமல் இருக்கும் பகவான் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ கையில் எடுத்தேன். அதன் கீழ்காணும் வரிகள் – வெண்முரசு – ஆசிரியர் – குறுநகை. நாஸ்தென்காவிடம் கதை நாயகன் கூறுகிறான்,
“…..எல்லா ஆசைகளும் அப்பாற்பட்டவன் அவன். ஏனெனில் யாவும் கிடைக்கப் பெற்றுள்ளான். அவன் வேண்டியமட்டும் கரைத்துவிட்டுச் சலிப்படைப்பவன், தானே தனக்கு வேண்டியதைப் படைத்தளிக்கும் கலைஞனாக இருக்கிறான். தன் மனத்துள் எழும் புதுப்புது மோகங்களுக்கு ஏற்ப மணிக்கு மணி தனக்கு அவன் புதுப்புது உலகங்களை அல்லவா சிருஷ்டித்துக்கொள்கிறான்! இந்த மாயக்கற்பனை உண்மையில் மாயையென நினைக்க முடியாதபடி அவ்வளவு சுலபமாகவும் இயற்கையாகவும் அதைப் படைத்துக்கொள்ள முடிகிறதே!”
அன்புடன்
விக்ரம்
கோவை
***
August 1, 2021
நிலவும் மழையும்-1
இவ்வாண்டு குருபூர்ணிமை அன்று வெண்முரசுநாளை நேர்ச்சந்திப்பாக நிகழ்த்தவேண்டுமென எண்ணியிருந்தேன். கோவிட் தொற்று அதற்கு உடன்படுமா என்னும் ஐயமிருந்தது. ஆனால் நல்லூழாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஜூலை 23 அன்று மிகக்குறைவாக, உள்ளூர் நண்பர்கள் மட்டும் கூடி இவ்வாண்டு சந்திப்பை நிகழ்த்தினோம்.
முழுநிலவு தெரியும்படி வெட்டவெளியில் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. ஆனால் மழைக்கார் வானை மூடியிருந்தது. பெருமழை வரக்கூடும் என்னும் வானிலை அறிவிப்பும் இருந்தது. குளிர்காற்று காலைமுதலே இருந்தது. மழையை எதிர்பார்த்து கொட்டகையும் போட்டிருந்தோம். ஆனால் மாலையில் வானம் தெளிந்தது. அந்தியிலேயே முழுநிலவு எழுந்தது.
நிலவில் அமர்ந்து உலகமெங்குமிருந்து சூமிலும் யூடியூபிலும் கூடியிருந்த நண்பர்களுடன் உரையாடினேன். வெண்முரசு முடிந்தபின் இது இரண்டாவது உரை. வெண்முரசு பற்றிய உரையாடல்கள் உலகின் பல மூலைகளில் இன்று நிகழ்கின்றன. வெண்முரசின் அடுத்த தலைமுறை வாசகர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். அவர்களின் குரல்களைக் கேட்டது நிறைவளித்தது
சந்திப்பு முடிந்ததும் அப்படியே ஒரு மழைப்பயணம் என கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். ஜூலை 24 அன்று மதியம் கிளம்பி கர்நாடக எல்லையில் ஹசனூர் அருகே ஒரு வனவிடுதியில் தங்கினோம். மழை அங்கேயே தொடங்கிவிட்டது. நிறைந்து ஒளிகொண்டிருந்த ஏரிகள். எங்கும் சுடர்விட்ட பசுமையில் பூமியே ஒரு தளிரென தெரிந்தது. மாலையில் காட்டினூடாக ஒரு சுற்று காரில் உலவி வந்தோம்.
காடுகளில் எல்லாமே மூங்கில் பூத்து காய்த்து விதைபரப்பிவிட்டு காய்ந்து மட்கி நின்றிருந்தது. சென்ற ஆண்டே மூஙீகில் பூத்துவிட்டது. கோடையில் காய்ந்துவிட்டிருந்தது. காய்ந்த மூங்கில்பத்தைகள் மேல் இப்போது கொடிகள் எழுந்து முற்றாகப் போர்த்தி பசுமையென காட்டின.
மறுநாள் காலை திம்பம் சாலையில் காலையிலேயே ஒரு யானைஜோடியைப் பார்த்தோம். சாலையில் இயல்பாக நின்றுகொண்டிருந்தன. காரை நிறுத்திவிட்டு அப்பால் நின்று பார்த்துக்கொண்டிருந்தோம். எவரையும் பொருட்படுத்தவில்லை. முகத்தில் ஒரு சாந்தபாவம் இருந்தது.
வழக்கமாக மழைப்பயணம் கேரளத்தில் நிகழும். சென்ற ஆண்டு குடகு சென்றோம். இவ்வாண்டும் குடகு வழியாக தென்கனரா வரை. கர்நாடகம் சுற்றுலாவுக்கு உகந்ததாக இருப்பது இரண்டு காரணங்களால். ஒன்று, பசுமை. இன்னொன்று இன்னும் சிற்றூர்கள் அதிகம் மாறாமல் பண்பாட்டு அடையாளங்களுடன் இருக்கின்றன.
கர்நாடகத்திற்குள் நுழைந்துவிட்டோம். தக்காணபீடபூமிக்குரிய விரிந்த நிலச்சுற்று. சிறிய மரங்கள். வளைந்து சூழ்ந்த வானம். உருளைக்கற்கள் கொண்ட சிறிய குன்றுகள்.
ஹலேஆளூர் என்னும் கோயிலுக்குச் சென்றோம். அங்குள்ள அர்க்கேஸ்வரர் ஆலயம் கங்கர்களின் ஆரம்பகட்ட கலைக்கட்டுமானங்களில் ஒன்று. கிபி பத்தாம் நூற்றாண்டில் தக்கோலம் போரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இரண்டாம் புத்துகனால் கட்டப்பட்டது. தக்கோலத்தில் ராஷ்ட்ரகூடர்கள் சோழர்களை வென்றனர்.கங்கர்கள் ராஷ்ட்ரகூடர்களுடன் இணைந்து போரிட்டனர்
பிற்கால ஹொய்ச்சால ஆலயங்களைப்போல நுட்பமான, சிக்கலான செதுக்குகள் கொண்டதல்ல இக்கோயில். ஆனால் அந்தக் கலைமரபின் தொடக்கத்தைக் காணமுடிகிறது. அலங்கரிக்கப்பட்ட வாசல்முகப்பும் தோரணச்செதுக்குகளும் கொண்டது.
ஆலயத்தைச் சுற்றி ஏராளமான சிற்பங்களை வெளியே இருந்து கொண்டுவைத்திருந்தனர். அவற்றில் பெரும்பாலானவை சப்தமாதாக்களின் சிலைகள். அகோரவீரபத்ரர், காலபைரவர் சிலைகளும் மகிஷாசுரமர்த்தனி சிலைகளும் இருந்தன
ஆனால் சிலைகளில் ஆர்வமூட்டியது சதிமாதாவுக்கான சிலை. ஒரு மடிக்கப்பட்ட கையில் எலுமிச்சை. கீழே கணவனும் மனைவியும் நின்றிருக்கும் காட்சி. புடைப்புச்சிலை. நடுகல்லாக நாட்டப்பட்டது. அப்பகுதியின் அக்காலகட்டப் பண்பாட்டுக்குரிய தனித்தன்மை கொண்ட சிலை அது.
அன்றே குடகுக்குள் நுழைந்தோம். மழை விட்டுவிட்டு தூறிக்கொண்டிருந்தது. குடகுக்குள் சென்றதும் நல்ல மழை பொழியத்தொடங்கியது. குடகில் ஒரு வீட்டுத்தங்கலுக்கு பதிவுசெய்திருந்தோம். பழையபாணி ஓட்டுவீடு. அனைவரும் அங்கே தங்கினோம். வீடு காற்றிலேயே நனைந்து குளிர்ந்திருந்தது.
மழையில் ஒரு மாலைநடை சென்றோம். மழை காற்றுவெளியை இருண்ட நீலநிறம் கொள்ளச் செய்துவிட்டிருந்தது. மாயவெளி ஒன்றில் நடக்கும் அனுபவம். ஒரு கரிய நாய் உடன் வந்து எங்களுக்கு காவல்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால் அதற்கு கார்களின் விசை புரியவில்லை. பெரும்பாலான கார்களை மறித்து நிற்க முயன்றது. எங்களுடனேயே வந்து எங்கள் தங்குமிடத்திலேயே அதுவும் தங்கிக்கொண்டது.
நடைசெல்லும் வழியில் விந்தையான பெரிய நத்தை ஒன்றைப் பார்த்தோம். இதைப்பற்றித்தான் இப்போது சூழியலாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நூறாண்டுகளுக்கு முன் ஆய்வாளர் ஒருவரால் தன் தோட்டத்தில் விடப்பட்ட இந்த நத்தை இன்று இந்தியாவெங்கும், மழைவளம் மிக்க பகுதிகளில் பரவி பெரிய அளவில் விளைச்சலை அழித்துக்கொண்டிருக்கிறது. இதை இன்று கட்டுப்படுத்த முடியவில்லை.
நத்தைகளை கட்டுப்படுத்துவது நத்தைகொத்தி நாரை என்னும் பறவை. நத்தையோடுகளை உடைப்பதற்கான தனி அலகு கொண்டது அது. அந்தப்பறவை இன்று குறைந்துவருவதும் இந்த நத்தை பல்கிப்பெருகுவதற்கு காரணங்களில் ஒன்று
இரவெல்லாம் மழையின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. இரவு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். நீண்ட பயணம். முற்றிலும் புதிய ஊர். துயில் பிந்தவேண்டும். ஆனால் மழையின் ஓசை போல தாலாட்டு வேறேதுமில்லை. நான் எதையுமே உணராமல் தூங்கிவிட்டேன்.
[மேலும்]
சர்பட்டா என்னும் சொல்
அன்புள்ள ஜெ
சர்பட்டா பரம்பரை என்ற பெயரை இணையத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சார் பட்டா என்று பிரித்து நான்கு பட்டாக்கத்திகள் என்ற சொல்லில் இருந்து வந்தது என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். இல்லை, சர் பட்டாபிராமன் என்ற ஒரு பிராமணரின் மாணவர்கள்தான் அப்படி அழைக்கப்பட்டார்கள், அவர் பெயர் மறைக்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். சர்பட்டா எப்படி சார் பட்டாக்கத்தி ஆகும் என்று தெரியவில்லை. வரலாற்றில் இந்தப் பெயர் இருக்கிறதா?
அஸ்வின்
அன்புள்ள அஸ்வின்,
உங்கள் அபிலாஷை தெரிகிறது. அது எவரோ பகடியாக கிளப்பிவிட எவரோ ஆதங்கத்தில் நம்ப விரும்புவது. கடந்துவாருங்கள்.
வெள்ளையானைக்கான ஆய்வில் நான் எடுத்துவைத்த குறிப்புகளில் ஒன்று சென்னையின் குத்துச்சண்டை மரபு. மல்யுத்தம்தான் இந்திய மரபு. குத்துச்சண்டைக்கு இந்திய மரபு இல்லை. அது ஐரோப்பியவரவு.வெள்ளையர் வருவதற்கு முன்னரே சென்னையில் குத்துச்சண்டையை முன்னெடுத்தவர்கள் ஆர்மீனியர்கள். ஆர்மீனிய வாள்வீச்சுக்கலையும் அன்று புகழ்பெற்றிருந்தது.அக்கால சர்க்கஸ்களிலும் ஆர்மீனியர்கள் நிறைய இருந்தனர்.
சென்னை கோட்டையை ஒட்டி ஆர்மீனியர்கள் குடியிருந்தனர். ஆர்மீனிய தெருவும் அங்கே ஆர்மீனிய தேவாலயமும் உள்ளது. இந்தியாவிலேயே பழைய தேவாலயங்களில் ஒன்று அது. ஆர்மீனிய வம்சாவளியினரும் சென்னையில் உள்ளனர். வெள்ளையர் வருகைக்குப்பின் ஆர்மீனியர்கள் வலுக்குறைந்து குறுங்குழுவாயினர்.
குத்துச்சண்டை அவர்களிடமிருந்து சென்னையின் துறைமுகங்களுக்கு குடிவந்த தலித் பூர்வகுடிகளுக்குப் பரவியது. தலித் மக்கள் போர்க்கலை பயில அனுமதிக்கப்படாதிருந்த காலம். ஆகவே அவர்கள் அதை விரும்பிக் கற்றுக்கொண்டனர். குத்துச்சண்டை கோஷ்டிகளும் போட்டிகளும் உருவாயின.
ஆர்மீனிய மொழியிலும் ஐரோப்பிய மொழிகளிலும் புழங்கிய ஸ்கார்பெட்டா [Scarpetta] என்ற சொல் பூட்ஸ்,காலடி, காலடிவைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் ஸ்டெப்ஸ். அதிலிருந்து சர்பட்டா என்ற சொல் வந்திருக்கிறது என்பதே என் ஊகம்.
பழைய பம்பாய் சர்க்கஸ்களிலும் எனக்கு ஆர்வமுண்டு. சில கதைகளும் எழுதியிருக்கிறேன். அவற்றிலும் ஆர்மீனியர்களின் பங்களிப்பு உண்டு. சர்க்கஸில் ஸ்டெப்ஸ் வைத்து போடும் சண்டைக்கு சர்ப்பட்டா என்ற பெயர் உண்டு. கோமாளியும் சர்ப்பட்டா போடுவதுண்டு. சர்ப்பட்டா செல்லப்பன் என்ற பழைய கோமாளி நடிகர் ஒருவர் புகழ்பெற்றவர்
சர்பட்டா என்பது காலடிகளை வைத்து ஆடும் குத்துச்சண்டை முறையாக இருக்கலாம்.
ஜெ
தேசமற்றவர்கள்
அன்புள்ள ஜெ
உங்கள், அருண்மொழி மேடம், அஜிதன், சைதன்யா அனைவர் நலமே விழைகிறேன். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த வியாழன் மதியம் அகல்யா சந்தித்தேன். ஆரணி அகதிகள் முகாம்வாசி. ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு செவிலியர் கல்லூரியில் சேர வேண்டும், உதவ இயலுமா என முகாம் அண்ணா ஒருவர் வழி அறிமுகமானாள்.
முகாம் மாணாக்கர்க்கு அரசு கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பு இல்லை என்பதால் செவிலியர் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு மட்டுமே சாத்தியம்.
ஏறக்குறைய ஆண்டொன்றிற்கு ஒன்றரை லட்சங்கள் தேவை. பாதி அளவு உதவினால் போதும் என அகல்யா வீட்டார் கேட்டுக் கொண்டனர். முழுமதி அறக்கட்டளை, எங்களது ‘100 பேர் குழுமம்’, எனது மிகச்சிறு பங்களிப்பில் நான்கு ஆண்டுகள் செவிலியர் கல்வி முடித்து கடந்த ஒன்றரை ஆண்டுகள் ‘நாராயணா ஹ்ருதாலயா’ மருத்துவமனை பெங்களூருவில் பணி புரிந்து வருகிறாள்.
பணிக்குச் சென்ற பின்பு முதன்முறையாக இப்போது தான் சந்திக்கிறேன். தூரத்தில் பார்த்து கையசைத்து அருகில் வந்து ‘ரொம்ப ஒல்லியாய்ட்டீஙக. உடம்பு சரியில்லையா’ என்றாள்.
‘டேய் எப்போதும் போலத்தான் இருக்கிறேன்’
‘இல்லயில்ல. எனக்குத் தெரியாதா.’
ஒரு மருத்துவவியலராக அகல்யா அவ்விதம் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.
உணவு விடுதிக்குச் சென்றோம். என்னை இழுத்து அமரச் செய்து பணம் செலுத்தி வாங்கி தந்த உணவு ஆழ்ந்த நிறைவளித்தது. தன் கல்வியால், உழைப்பால் தன் சமுக, பொருளாதார தேவைகளை கையாளும் இடத்திற்கு வந்துவிட்டாள்.
ஆனால் தொடர்ந்த நான்கு மணி நேர உரையாடலில் அகதியர் வாழ்வியல் குறித்து உங்களிடம் மட்டுமே பகிர்ந்துக் கொள்ள இயலும் எனத் தோன்றியது. அகல்யாவிற்கு நேர்காணலின் போது மாதம் பதினைந்தாயிரம் ஊதியம் எனவும் ஓராண்டு நிறைவுற்றதும் ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருபது மாதங்கள் ஆன பின்பும் ஊதியம் வழஙண்கப்படவில்லை. அவளுடன் பணியில் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதால் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் சார்ந்த பொது பிரச்சனை தான். அகதியர் அரசு மருத்துமனையில் பணிபுரிய இயலாது என்பதால் அகல்யா போன்றவர்கள் இந்நெருக்கடியை எப்போதும் எதிர் கொண்டேயாக வேண்டும்.
கடந்த நான்கு மாதங்களாக மேலும் இரண்டாயிரம் கிடைக்கும் என இரண்டாம் அலை ‘கோவிட் டூட்டி’ பார்த்துக் கொண்டிருக்கிறாள். ‘அவசர சிகிச்சைப் பிரிவு’ பணிகள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தும் இன்னும் வாய்க்கவில்லை எனத் தெரிவித்தாள். அக்டோபர் இறுதி வரையிலும் பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் வேலை தேடவிருக்கும் முடிவை பகிர்ந்துக் கொண்டாள்.
அகதியர் குறித்த புரிதல் உள்ள மருத்துவமனை கிடைத்தால் நல்லது என புரிந்துக் கொண்டேன். அவர்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு கிடைக்கும் குறைந்த ஊதியம் ஒரு காரணம். இரண்டு தலைமுறை இளையோர் கற்றும் உடலுழைப்புத் தொழில் தான் என்பதனால் கல்லூரி படிப்பைத் தவிர்த்து விட்டிருக்கின்றனர்.
பவானி சாகர் முகாம்வாசி இளங்கலை கணினி கல்வியில் எண்பத்தைந்து சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தாள். முதுகலை வகுப்பில் சேரத்து விடுவதாகச் சொன்னேன். வீட்டுச்சூழல், திருமண செலவினம் என பல்வேறு காரணங்களுக்காக அருகாமை கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். பனிரெண்டு மணி நேர பணி. பத்து மணி நேரம் நின்றுக் கொண்டே செய்ய வேண்டிய பணி. இரண்டு ஆண்டுகளில் ஒன்றரை சவரன் வாங்கியதாகத் தெரிவித்தாள். உயர்கல்வியில் மேலும் சிறந்த மதிப்பெண் பெறும் தகுதி வாய்ந்த மாணவி. அகல்யா இப்போது கேட்ட கேள்வியை இரண்டு ஆண்டுகளுக்கு யுகவதினி கேட்டிருந்தாள். ‘எங்க அப்பா, அம்மா அங்கிருந்து வந்தவங்க. நான் இங்க தானே பிறந்தேன். எனக்கு ஏன் குடியுரிமை தர மாட்டேங்க்றாங்க?’
கல்வி சார்ந்து ஈடுபாடும், நம்பிக்கையுமாக நான் சந்தித்துக் கொண்டே இருக்கும் அப்பதின் பருவத்தினர் கல்லூரி முடித்துக் கேட்கும் கடந்த பல ஆண்டுகளாக நான் எதிர்கொள்ளும் ஒரே கேள்வி. வெளிநாட்டில் உறவினர்கள் இருப்பவர்கள் இலங்கை சென்று அங்கிருந்து வெளிநாடு சென்று காலப்போக்கில் குடியுரிமை பெற்று விடுகிறார்கள். அகல்யா போன்றவர்கள் இலங்கையில் உறவினர் என யாரும் இல்லாததால் இங்கேயே இவ்விதமே வாழ்வது மட்டுமே சாத்தியம்.
இங்கிருந்து அவர்களால் வெளிநாடு செல்ல இயலாது. இலங்கை செல்ல மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அவர் வழி மறுவாழ்வுத் துறைவழி வட்டாட்சியர்க்கு அனுப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு இறுதியாக உளவுத்துறை – க்யு ப்ராஞ்ச் விசாரித்து வழக்குகள், குற்றங்கள் ஏதுமில்லை என சான்றழிக்கப்பட்டு இலங்கை தூதரகம் வழி விண்ணப்பித்தே இலங்கை செல்ல முடியும். இந்நடைமுறைகளுக்காக உரிய அலுவலகங்களுக்கு அலைந்து, அசைத்து அசைத்து தான் சான்றிதழ்கள் பெற இயலும்.
பின் இலங்கையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து விண்ணப்பித்து வெளிநாடு செல்ல வேண்டும். இலங்கையில் தற்போது இந்நடைமுறைகள் சற்று எளிது தான் என்கிறார்கள். இலங்கையில் உறவினர்கள் இல்லாதவர்கள் அங்கேயும் செல்ல இயலாது இங்கேயும் நிரந்தரமின்றி…
வாழ்தல் பயனற்றது எனும் முடிவுக்குத் தான் வர வேண்டியுள்ளது. இவ்வாழ்க்கை பழகிப் போனவர்கள் ஏற்றுக் கொண்டு இவ்வெல்லைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கல்லூரி வகுப்புத் துவங்கிய பெருங்கனவு இறுதி நாளன்று இவ்வாழ்வை சோர்வுக்குரியதாக மாற்றுவதை துளித்துளியாக உணர்ந்து இவ்வெறுமைக்குள் கரைந்து போக தயாராகிக் கொள்கின்றனர். எவ்வித நெருக்கடியான வாழ்விலும் உருவாகும் கொண்டாட்டங்களும் அடியுறைந்த கசப்புமாக வாழ்வு நீடித்துக் கொண்டிருக்கிறது.
தாம் ஈடுபடும் தொழில் நேர்த்திக் குறித்து என் நண்பர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். சிறு கட்டுமானம், மின்சாரம் , குடிநீர் குழாய் சார்ந்த பணிகள். நேர்த்தி மூலம் பெறும் நன்மதிப்பு அவர்களுக்கான வாய்ப்புகளை பெருக்கியபடியே உள்ளது. பிறரை சார்ந்திராது தம் நேர்த்தி, நட்பு மூலம் இணையானவர்களாக மாற்றிக் கொள்கின்றனர்.
நீண்ட காலம் அவர்கள் நம்பிய, எதிர்பார்த்துக் கொண்டிருந்த குடியுரிமை குறித்து அச்சமும், வெறுமையுமே அவர்களது தற்போதைய மனநிலை. அகல்யாவின் எதிர்காலம் அவளைப் புரிந்து உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மருத்துவமனை அல்லது ஒரு இந்தியக் குடிமகனுடன் வாழ்வை பகிர்ந்துக் கொள்ளுதல் வழி சாத்தியப்படும்.
இந்திய குடிமகனை திருமணம் செய்வதன் வழி குடியுரிமை பெற்று அரசு வேலைவாய்ப்பு மேலும் தனியார் என்றாலும் பணி பாதுகாப்பு பெற இயலும். அத்திருமண வாழ்வு சார்ந்தும் சரிபாதி மாற்றுக் கருத்து முகாமில் நிலவுகிறது. மிகவும் நிறைவாக வாழும் பெண்களும் உள்ளனர். பெண்களின் உடை கலாச்சாரம், மிக இயல்பாக எல்லோருடனும் பழகுதல் சார்ந்து உருவாகும் நெருக்கடிகள் காரணமாக முகாமிற்கு திருப்பி அனுப்பப்படும் சூழல்.
ஒரு இந்தியக் குடிமகனை திருமணம் செய்வதன் மூலம் முகாம் பதிவு உட்பட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டு விடும். திருமண வாழ்வின் தோல்விக்குப் பின்பு மீண்டும் அவற்றைப் பெற குழந்தைகளுடன் அப்பெண்ணும் உறவினரும் வதையுடன் போராட வேண்டும். கடந்த ஆண்டு இறந்த, முகாம் சார்ந்து நேரிலும் அலைபேசி வாயிலும் அடிக்கடி உரையாடும் அய்யா ‘ கழுத்து வரை மண்ணுக்குள்ள புதைஞ்சிருந்தாக் கூட நம்பிக்கையோடு போராடி வெளியே வந்து குழிய திரும்பிப் பார்த்து மண்ணத் தொடச்சுக்கிட்டு வாழத் துவங்கலாம்.மண்ண மிதிக்க முடியாது, மண்ணில புரள முடியாது இரண்டு மூணு அடி உயரத்துல மிதந்து அலைந்து வாழ்றது சாபண்டா’
சபிக்கப்பட்டவர்கள் என்பது போன்ற சொற்களில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் வாழ்வியல், உளவியல் இவ்விதமே அமைந்திருந்தாலும் அச்சொல்லை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.
உங்கள் பேரன்பும் ஆசியும் என் போன்றவர்களுக்கு மட்டுமின்றி என்னை ‘பெரியப்பா’ என அழைக்கும் அகல்யா போன்ற என் மகள்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்..
எக்கணத்துளியிலும்
அன்புடனும் நன்றியுடனும்
முத்துராமன்
அன்புள்ள முத்துராமன்,
இந்த தருணத்தில் சந்திரசேகரை எண்ணிக்கொள்கிறேன். அவர் மறைந்தாலும் அவர் செய்த சேவைகள் நீடிக்கின்றன. நெஞ்சில் வெண்முரசுடன் அவர் மண்ணில் மறைந்த காட்சியை மறக்க முடியவில்லை.
உங்கள் அர்ப்பணிப்பும் சேவையும் மகத்தானவை. நம் நண்பர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள் என்று சொல்ல மாட்டேன். உங்களுக்கு கடன்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை அகதிகளின் விஷயத்தில் இந்திய அரசு காட்டும் பாராமுகம் கொடூரமானது. உலகின் பண்பாடுள்ள எந்த நாட்டிலும் நிகழாதது. நேருவின் காலத்தில் திபெத்திய அகதிகளுக்கும், இந்திராவின் காலகட்டத்தில் வங்காள, இலங்கை அகதிகளுக்கும் இந்தியா அடைக்கலமளித்தது. குடியுரிமை அளித்து கௌரவம் செய்தது. அந்தப்பெருந்தன்மையை நாம் இழந்திருக்கிறோம். சிறியோரால் ஆளப்படுகிறோம்.
ஒரு மண்ணில் பிறந்து வளர்ந்த தலைமுறைக்கு அம்மண்ணில் குடியுரிமை இல்லை என்பது போல மானுடநிராகரிப்பு வேறில்லை. எந்தமண்ணிலும் குடியுரிமை இல்லாது வாழ்ந்து மடிவதென்பது மானுடர் அடையும் துயர்களில் முதன்மையானது. இலங்கை அகதிகள் படிக்க முடியாமல், படித்தும் வேலையில்லாமல் வாழும் நிலை நாம் அனைவருமே நாணப்படவேண்டிய ஒன்று. நாம் செய்யும் உதவிகள் எல்லாமே நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வன.
பலமுறை எழுதிவிட்டேன். ஈழ அரசியல் பேசி லாபம் அடையும் தமிழக அரசும் அரசியல்வாதிகளும் இதை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. இன்றைய திமுக அரசின்மேல் இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் அநீதியாகப் பழிசுமத்தி வருகின்றனர். அப்பழியை அழிக்க முதன்மை வழி என்பது இந்த அகதிகளுக்கு குடியுரிமைக்காக திமுக குரலெழுப்புவதுதான். அத்துடன் உடனடியாக அவர்களுக்கு அரச உதவிகள், வேலை முன்னுரிமைகள் ஆகியவற்றை வழங்குவது. அரசின் செவிகளுக்கு இது சென்று சேரவேண்டும்
ஜெ
அஞ்சலி: சந்திரசேகர்துவந்தம், கடிதங்கள்
ஒரு புதிய வீச்சு
வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
படைப்பாளர் திரு திருச்செந்தாழை அவர்களின் த்வந்தம் கதையை குறித்த உங்களின் பரிந்துரையை கண்டு அந்தக் கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. உங்கள் பரிந்துரைகள் என்றுமே இம்மி பிசகாத துலாக்காரனின் கராரான நேர்மையோடு தமிழ் இலக்கிய உலகில் பெரும் பங்காற்றுகின்றன.
எந்தப் பெண்ணையும் எந்த ஆணாலும் ஒருபொழுதும் வெல்லவே முடியாது. இயற்கையின் படைப்பில் ஆண் ஜெயிப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. இயற்கையே ஆணை இழப்பவனாகவும் பெண்ணை பெறுபவளாகவும் படைத்திருக்கிறது. அப்படியானால் இங்கே என்னதான் ஆணுக்கு வழி என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஆணுக்கு முன்பாக இருக்கின்ற தீர்வு அவளை சரணடைந்து அவளோடு வாழ்வது அல்லது அவளை துறந்து முற்றாக அவளிடமிருந்து விலகி விடுவது. பெரிய பெரிய மகான்களும் துறவிகளும் கூட பெண்ணிடம் இருந்து முற்றாக விலக முடியாமல் தவித்து அவளை முழுதாக சரண் அடைவதை செய்திருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கின்ற பொழுது குடும்ப வாழ்வில் இருக்கின்ற ஆண்களுக்கு பெண்ணிடம் முற்றாக சரணடைவதை தவிர வேறு வழியே இல்லை. இந்தக்கதையில் கதை சொல்லி தன்னால் ஜெயிக்கவே முடியாது என்று ஆகிவிட்ட பெண்ணிடமிருந்து முழுமையாய் விலகி அவளை முற்றாகத் துறந்து செல்கின்ற வழியை தேர்ந்தெடுக்கிறான்.
மிக அருமையான கதை. புத்தம் புதிய களத்தில் எழுதப்பட்ட ஆண் பெண் ஆடலின் வசந்தோற்சவம், திருவூடல். அவள் மீது கொண்ட ஏக்கம் அவனின் அவளையே துறத்தல் என்பதான ஞானத் துறவில் நிறைகிறது. அவளோ அவனிடமிருந்து பெற்ற ஞானத்தின் துணைகொண்டு துணைவி என, அன்னை என, இல்லத்து அரசி என, தேர்ந்த வியாபாரி என பொலிந்து செல்வாள். வென்றது இருவருமே!!.
ஆணின் வெற்றி துறத்தலில். பெண்ணின் வெற்றி அன்னை என அனைத்தையும் அரவணைத்து பொங்கிப் பொலிதலில்.
கவி மொழியில், உணர்வுகளை கட்டிப்போட்ட நடையில், ஒரே மூச்சில் வாசிக்க வைத்த உன்னதமான படைப்பு. ஆசிரியர் திருச்செந்தாழை அவர்களுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். மேலும் மேலும் என அவர் படைப்புக்களை எதிர்நோக்குகிறோம்!
சரியான கதையை பரிந்துரை செய்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
திருவண்ணாமலை
***
அன்புள்ள ஜெ
திருச்செந்தாழையின் துவந்தம் நல்ல கதை. கதை நடக்கும் களம் கதைக்கு ஆழத்தைக் கூட்டுகிறது. நான் சந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் நினைப்பேன். இங்கேதானே வாழ்க்கை கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. எத்தனை நூறுகதைகள் இங்கிருந்து வரமுடியும் என்று. திருப்பூரை வைத்தே நூறு கதைகள் எழுதலாம். எழுச்சியும் வீழ்ச்சியும் நடந்துகொண்டே இருக்கும் பரமபதம் இது. இந்தக்கதையும் பரமபதம்தான். விழுங்குவதற்காக ஏணியில் ஏற்றிவிட்டு வாய்திறந்து வருகிறது பாம்பு. அதிலிருந்து இன்னொரு பாம்பாக மாறி தப்பித்துக்கொள்கிறாள்
ஆர்.ராஜேஷ்
***
தீயின் எடை- முன்பதிவு
குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலைக் கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னைத் தன்னைக்கொண்டே மூடிக்கொள்கிறது. மாபெரும் வயிறென ஆகிறது. அனைத்தையும் செரித்துக் கொள்ளத் தொடங்குகிறது.
எஞ்சுவதென்ன என்பது குருஷேத்ரம் எழுப்பும் வினா. எஞ்சியவை வஞ்சமும் ஆறாத்துயரும் மட்டுமே. வெற்றியும் தோல்வியும் பொருளற்றவை ஆயின. உயிர்க்கொடையும் அருந்திறல்நிகழ்வும் வீணென்றாயின. மானுடரை சருகு என எரித்து அங்கே தன்னை நிறுவிக்கொண்டது ஒரு பேரனல். தீயின் எடை அந்த அனலைப்பற்றிய நாவல்.
தீயின் எடை – செம்பதிப்பு – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்திரண்டாவது நாவல்.
574 பக்கங்கள் கொண்ட நாவல் இது. விலை ரூ 800
இந்நூலை முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஆகஸ்ட் 15, 2021.விபிபி கிடையாது.
ஆர்டர் செய்ய: https://dialforbooks.in/product/theeyin-edai-classic/
வாட்சப் மூலம் ஆர்டர் செய்ய: 9500045609
முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:
* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.
* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறாதவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.
* ஆசிரியரின் கையெப்பம் வேண்டுமெனில் குறிப்பில் தெரிவிக்கவும்.
* முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.
* செப்டம்பர் 2ம் வாரம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.
* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 044-4959 5818 ஐ அழைக்கலாம்.
* எம் ஓ, டிடி, செக் மூலம் பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.
* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது cs@dialforbooks.in என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்.
* Paypal மூலம் பணம் அனுப்ப விரும்புவர்கள் badri@nhm.in என்ற paypal அக்கவுண்ட்டுக்கு பே பால் மூலம் பணம் அனுப்பவும். பணம் அனுப்பிய விவரத்தை cs@dialforbooks.in என்ற முகவரிக்குத் தெரியப்படுத்தவும்.
* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும். ஷிப்பிங் சார்ஜ் தொகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது அறிந்துகொள்ளலாம்.
* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் cs@dialforbooks.in என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.
அந்தப் புன்னகை.
பிரயாகை நாவலில் விதுரர் மக்கள் திரளின் மனநிலையையும், கண்ணனின் அந்தப் புன்னகையும் அறியும் தருணம் திறப்பாக அமைந்தது ஜெ. பாஞ்சால நாட்டு இளவரசியை அஸ்தினாபுரிக்கு மணம் முடிக்கத் தடையாயிருப்பது விதுரரே எனும் எண்ணத்தை மக்கள் அடையும் புள்ளி ஒன்று நாவலில் வருகிறது. வெறும் ஐயத்தைக் கொண்டு இது நாள் வரை விதுரர் செய்த அனைத்து நல்ல செயல்களையும் அவரின் நீதியின் நிழலை அடைந்த மக்களே உடைக்கிறார்கள்.
விதுரரை ஏற்கனவே கண்ணன் தன் வார்த்தையால் உடைத்திருப்பான். “இவ்வரசில் சூதரான நீங்கள் இருக்கும் இந்த இடமே உங்களுக்கு எதிரானது.”; ”உங்கள் ஒருதுளிக் குருதிகூட இப்புவியில் எஞ்சவிட மாட்டேன்.” என்று கண்ணன் கூறி அவரை நடுங்கச் செய்திருப்பான். அதில் விதுரர் காயம் அடைந்திருப்பாரே தவிர தன்னிலையை உணர்ந்திருக்க மாட்டார். அவர் நெஞ்சத்தில் ஆழ்ந்த அவமானமும் வெறுப்புமே நிறைந்திருக்கும். “அறிவின் நிழல் ஆணவம். முதுமையில் நிழல் பெரிதாகிறது” என்று அதை முதன் முறையாக அவருக்கு முற்றுணர்த்தியது பீஷ்மர் தான்.
“அஸ்தினபுரியின் படைகளுக்கு நீயே ஆணையிட வேண்டும் என்று யாதவனிடம் சொன்னாய் அல்லவா? எந்த நெறிப்படியும் அமைச்சருக்கு அந்த இடம் இல்லை. அப்படியென்றால் ஏன் அதைச் சொன்னாய்? நீ விழையும் இடம் அது. அத்துடன் உன்னை யாதவன் எளிதாக எண்ணிவிடலாகாது என்றும் உன் அகம் விரும்பியது. மைந்தா, அவன் முன் நீ தோற்ற இடம் அது. அச்சொல்லைக் கொண்டே உன்னை அவன் முழுமையாக புரிந்துகொண்டுவிட்டான். உன் ஆணவத்தையும் விழைவையும் மதிப்பிட்டான். நீ புகழை இழப்பதை இறப்பைவிட மேலாக எண்ணுவாய் என்று உணர்ந்துகொண்டான். உன் நிலையை நீ பெருக்கிக் காட்டுவதற்கான அடிப்படை உணர்வு என்பது சூதன் என்ற உன் தன்னுணர்வே என்று கணித்துக்கொண்டான். அனைத்தையும் சொற்களால் அறுத்து வீசினான்.” என்று பீஷ்மர் எடுத்துக் கூறியும் விதுரர் தன்னிலையை முழுவதுமாக உணராமல் இருந்தார்.
”உன் ஆற்றல் இருந்தது நீ மாபெரும் மதியூகி என்ற தன்னுணர்வில்தான். அது அளிக்கும் சமநிலையே உன்னை தெளிவாக சிந்திக்கவைத்தது. அவன் அதை சிதைத்துவிட்டான். சினத்தாலும் அவமதிப்புணர்வாலும் சித்தம் சிதறிய விதுரனை அவன் மிக எளிதாக கையாள்வான்… அவன் வென்றுவிட்டான். அதை நீ உணர்வதே மேல். உன் அறிவாணவத்தை அவன் கடந்துசென்றுவிட்டான்” என்று மிகத் தெளிவாகக் கூறியும் விதுரர் அதை உணரவில்லை. ”நாட்டைக் காப்பது, தன் கடன், பொறுப்பு” போன்ற வார்த்தைகளால் கட்டுண்டிருந்த விதுரரை நோக்கி ”அறிவின் ஆணவம் மூன்று வழிகளில் வெளிப்படுகிறது. நான் அறிவேன் என்ற சொல். என் பொறுப்பு என்ற சொல். இது ஒரு தருணம், நீ உன்னை மதிப்பிட்டுக்கொள்ள. இல்லையேல் உனக்கு மீட்பில்லை.” என்று பீஷ்மர் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
நீதியின் மைந்தனாக, மதியூகியாக, எந்நேரத்திலும் சம நிலை குலையாதவராக, அறிஞனாக, காவியங்கங்களை விரும்பும் இலக்கிய வாசகனாக, சூத அரசியின் மைந்தனாகப் பிறந்தும் அஸ்தினாபுரியின் முடிசூடா மன்னனாக, ஒரு போதும் பதவியை விரும்பாதவராக என ஒட்டுமொத்தமாக நல்லவைகளையெல்லாம் விதுரரின் மேல் ஏற்றி வைத்து அழகு பார்த்திருந்தேன். அதை முதலில் உடைத்த பெருமை கண்ணனையே சாரும். அப்படி உடைத்த காரணத்திற்காகவே யாவரும் விரும்பும் கண்ணனை விதுரர் வெறுக்கிறார். பீஷ்மர் இத்துனை தெளிவாக எடுத்துக் கூறியும் அவர் தன்னை உணர மறுக்கிறார். தன்னை யாதவனாகக் கருதிக் கொண்டும் கண்ணனை வியந்து புகழும் தன் மகன் சுசரிதனை விதுரர் கடிந்து கொள்கிறார்.
அஸ்வதந்தம் என்ற அந்த சிறிய வைரத்தை எடுத்துப் பார்க்கும் அவரின் அக ஆழத்தை காணித்திருந்தீர்கள். அதை கண்டு கொண்ட அவரின் மனைவி சுருதையிடம் “விளையாடுகிறாயா? நான் மதியூகி. என்னிடம் உன் சமையலறை சூழ்ச்சிகளை காட்டுகிறாயா?” என்று கடிந்து கொள்கிறார். அவள் முதல் முறையாக தன் அகம் திறந்து அவரின் குறைகளையெல்லாம் சுட்டி ”உங்களால் முடியாது. உங்களிடமில்லாதது அதுதான்… ஷாத்ரம். நீங்கள் இவ்வுலகில் எதையும் வென்றெடுக்க முடியாது. அதை என்று உணர்ந்து உங்கள் ஆசைகளை களைகிறீர்களோ அன்றுதான் விடுதலை அடைவீர்கள்” என்கிறாள். “அந்த ஆசைகள் அனைத்தும் உங்களில் நிறைந்திருக்கும் அச்சங்களாலும் தாழ்வுணர்ச்சியாலும் உருவானவை. நீங்கள் எவரென்று உங்கள் எண்ணங்களும் செயல்களும் திட்டவட்டமாகவே காட்டுகின்றன. அதற்குமேல் ஏன் எழவிரும்புகிறீர்கள்? தன் நீள்நிழல் கண்டு மகிழும் குழந்தைக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?” என்று அவரை கேள்விக்குள்ளாக்குகிறாள். அப்போதிலிருந்தே அலைக்கழிந்தவராக விதுரர் தென்படுகிறார். வடக்கு உப்பரிகையில் அமர்ந்து சிவையயும், சம்படையயும் நினைத்துக் கொள்கிறார்.
இன்று மக்கள் ஒரு திரளாக நின்று விதுரரை அஸ்தினாபுரிக்கு அநீதியாளராக, யாதவர்களுக்கு நன்மை செய்பவராக சித்தரிக்கும் போது மக்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை அவர் அடைகிறார். ”அனைத்தையும் உணர்வெழுச்சியால் மறந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படித்தானா? அவர்கள் இந்தத் தருணத்தை எதிர்நோக்கி இருந்தார்களா? அவரது நீதியுணர்ச்சியையும் கருணையையும் உணரும்போதே அவர்கள் உள்ளத்தின் ஒரு மூலையில் இக்கசப்பு ஊறத் தொடங்கிவிட்டதா?” என்று தன்னையே வினவிக் கொள்கிறார்.
”பெருந்தன்மை சினமூட்டுகிறது. கருணை எரிச்சலை அளிக்கிறது. நீதியுணர்ச்சி மீறலுக்கான அறைகூவலை அளிக்கிறது. மானுடன் தன்னுள் உறையும் தீமையை நன்கறிந்தவன். இன்னொருவனின் தீமையை காண்கையில் அவன் மகிழ்கிறான். அவனை புரிந்துகொள்ள முடிகிறது. அவனை கையாள முடிகிறது. பிறன் நன்மை அவனை சிறியவனாக்குகிறது. அதை புரிந்துகொள்ளமுடியாத பதற்றம் எழுகிறது. சீண்டப்படும் சீற்றம் எழுகிறது. எளியமனிதர்கள் என்றால் சிறிய மனிதர்கள் என்றே பொருள். மக்கள்! மானுடம்! ஆனால் ஒருவருடன் ஒருவர் முரணின்றிக் கலக்கும் மிகச்சிறிய மனிதர்களின் திரள் அல்லவா அது? அதன் பொதுக்குணம் என்பது அந்தச்சிறுமையின் பெருந்தொகுதி மட்டும்தானா?” என்று வியக்கிறார்.
”மக்களை வெறுக்காமல் ஆட்சியாளனாக முடியாது’; ‘கடிவாளத்தை விரும்பும் குதிரை இருக்கமுடியாது. அது பொன்னாலானதாக இருந்தாலும்’; ‘எங்கோ ஒருமூலையில் கணவனை வெறுக்காத பத்தினியும் இருக்கமுடியாது.’ என்ற முன்பு எப்போஒதோ சொன்ன செளனகரின் சொல் வந்து அவர் முன் நிற்கிறது.
”மக்களுக்காக வாழ்பவர்கள் பெரும்பாலும் மக்களை அறியாதவர்கள். அவர்களைப்பற்றிய தங்கள் உணர்ச்சிமிக்க கற்பனைகளை நம்புபவர்கள். அந்நம்பிக்கை உடையாத அளவுக்கு வலுவான மடமை கொண்டவர்கள். புனிதமான மடமை. தெய்வங்களுக்குப் பிடித்தமான மடமை. அந்த மடமையில் சிக்கி தெய்வங்களும் அழிகின்றன.” என்று நினைத்துக் கொள்கிறார்.
”ராகவ ராமன் தெய்வத்தின் மானுட வடிவம் என்கிறார்கள். அவன் மக்களின் மாண்பை நம்பியவன். அவர்கள் விரும்பியபடி வாழ முயன்றவன். அவர்கள் துயரையும் அவமதிப்பையும் மட்டுமே அவனுக்களித்தனர். அவன் செய்த பெரும் தியாகங்களை முழுக்க பெற்றுக்கொண்டு மேலும் மேலும் என்று அவனிடம் கேட்டனர். மனைவியை மைந்தரை இழந்து வாழ்ந்தான். சரயுவில் மூழ்கி இறக்கையில் என்ன நினைத்திருப்பான்? இதோ ஏதுமில்லை இனி, அனைத்தையும் அளித்துவிட்டேன் என்று அவன் அகம் ஒருகணம் சினத்துடன் உறுமியிருக்குமா? சரயுவின் கரையில் நின்றிருப்பார்கள் மக்கள். அவன் உண்மையிலேயே தன்னை முழுதளிக்கிறானா என்று பார்த்திருப்பார்கள். ஏதும் எஞ்சவில்லை என்று கண்டபின் மெல்ல, ஐயத்துடன், “என்ன இருந்தாலும் அவன் இறைவடிவம்” என்றிருப்பார்கள்.”
”அந்த ஒரு வரியில் இருந்து அவனைப்பற்றிய கதைகளை சூதர்கள் உருவாக்கத் தொடங்கியிருப்பார்கள். அக்கதைகளை கேட்டுக்கேட்டு தன் குற்றவுணர்வை பெருக்கிக்கொள்வார்கள் மக்கள். அக்குற்றவுணர்வின் கண்ணீரே அவனுக்கான வழிபாடு. அவன் தெய்வமாகி கருவறை இருளின் தனிமையில் நின்றிருப்பான்.” என்ற விதுரரின் எண்ணங்களாக வரும் அவரின் வரிகள் வரலாற்றை நோக்கி பல திறப்புகளைத் தந்தது.
இப்படி நாம் தெய்வமாக்கி வைத்திருக்கும் பல தலைவர்கள் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன். காந்தியைப் பற்றி படிக்கும் போது அவரை மக்கள் ஒரு கட்டத்தில் தெய்வத்தன்மையாக்கி வழிபட்டார்கள் என்ற செய்தியை பாடப்புத்தகத்தில் படித்தது சட்டென நினைவுக்கு வந்தது. காந்தி சென்ற இடமெல்லாம் அவரைக் காண மக்கள் கூட்டம் அலை மோதியது. அவரைத் தொட்டாலே நோயெல்லாம் குணமாகிறது என்ற வதந்தி பரவியது. மக்கள் அலையலையாக் அவருடைய சால்வையின் நுனியைத் தொட எத்தனித்ததாக ஒரு செய்தித்தாள் குறிப்பு கூறியிருந்தது நினைவிலெழுந்தது. ஒரு விவசாயி தன் நிலத்தில் விதைத்திருந்த கோதுமை கடுகாக மாறினால் தான் மகாத்மாவை நம்பும் எண்ணம் கொண்டவராக இருந்ததாகவும் அவருடைய நிலம் கடுகாக மாறியதால் நம்பியதாக குறிப்பிடுகிறார். அதே போல அவரை எதிர்க்கத் துணிந்தவர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில் அழிவைச் சந்தித்ததாகவும் மக்கள் நம்பினார்கள். ஒரு நவீன இந்தியாவிலேயே இத்துனை மாய நம்பிக்கைகள் உலா வந்திருக்கிறது. இதனை அன்று படிக்கும் போது சிரிப்பாக இருந்தது. ஆனால் இன்று வெண்முரசில் தான் மக்கள் திரளின் நம்பிக்கையின் கண் கொண்டு அவற்றைப் புரிந்து கொண்டேன். காந்தி விரும்பப்படுபவராகவும் அதே சமயம் எளிதில் வெறுக்கப்பட்டதற்கான காரணத்தையும் அறிந்தேன். இந்த தெய்வத்தன்மையை அடைய அவர் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை என்று நினைத்துக் கொண்டேன். கோட்சேவால் சுடப்படும் தருணத்தில் அவரும் ராமனைப் போல இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்று நினைந்திருக்கக் கூடுமா? ஒரு வேளை காந்தி மீதுள்ள குற்ற உணர்வினால் தான் அவரை நாம் மேலும் மேலும் பெருக்கி புனிதப்படுத்திக் கொள்கிறோமா? இன்னும் ஆயிரமாண்டுகள் தாண்டி காந்தி கண்டிப்பாக ’என்ன இருந்தாலும் அவன் இறைவடிவம்’ என்று கூறப்பட்டு தெய்வமாகி கருவறை இருளின் தனிமையில் நின்றிருப்பாரா? என்ற கேள்விகளை என்னுள் எழுப்பிக் கொண்டேன். காந்தி மட்டுமா? ஏசுவும் நபிகளும் விவேகானந்தரும் இன்னும் தங்கள் செயலுக்காக முழுதளித்தவர்களும் யாவரும் இப்படித் தானே என்று நினைத்துக் கொண்டேன். உங்களையும் தான்.
இத்தகைய நிலையில் தான் விதுரர் கிருஷ்ணனைத் தானே கண்டடைகிறார். ”மக்களைப்பற்றி இத்தனை அறிந்த ஒருவன் வேறில்லை. ஆனால் அவன் மக்களை விரும்புகிறான். அவர்களுக்காக தன் வாழ்க்கையை அளிக்கிறான். ஒவ்வொரு கணமும் முழுமையாக மன்னித்துக்கொண்டே இருந்தாலொழிய அது இயல்வதல்ல.” என்று உணர்கிறார். தன்னுடைய இந்த கையறு நிலையை கிருஷ்ணன் எங்ஙனம் எதிர் கொண்டிருப்பான் என்று விதுரர் யோசித்துப் பார்க்கிறார். “இவர்கள் அவனை கல்லால் அடித்துக் கொன்றிருந்தால் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பான்? அப்போதும் அவன் இதழ்களில் அந்தப் புன்னகை இருந்திருக்கும்.”
”ஆம், புன்னகைதான் செய்திருப்பான். அந்தப்புன்னகை. ஆம், அந்தப் புன்னகை. தெய்வங்களே, அந்தப்புன்னகையை எப்படி காணத் தவறினேன்? இத்தனை காவியம் கற்றும் அதை காணமுடியவில்லை” என்று தன்னை சூழ்ந்திருந்த வெற்று ஆணவக்குவையை நினைத்து மனம் நொந்து கொள்கிறார். கிருஷ்ணனின் அந்தப் புன்னகை என்னும் பேரோவியத்தை விதுரர் தரிசிக்கும் தருணமே விதுரரின் அகக்கட்டுகள் அவிழ்கின்றன. ஒரு வகையில் அந்தப்புன்னகை நம்முள்ளும் ஆழ ஊடுருவி அக இருளை கட்டவிழ்க்கின்றன. ஆம், அந்தப் புன்னகை. மாயப் புன்னகை.
பிரேமையுடன்
இரம்யா
July 31, 2021
வாசிப்பு, இலக்கியம், சில ஐயங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..
ஒரு வழியாக quarantine காலம் முடிந்து இயல்பு வாழ்வு திரும்புகிறது Fever நீடித்ததால் ஒரு வாரம் கூடுதல் ஓய்வு.
இந்த 20 நாளில் அண்மை காலங்களில் வேலை பளுவால் படிக்காமல் வைத்திருந்த உங்களின் பதிவுகளை வாசிக்க முடிந்தது ஒரு வரப்பிரசாதம்!. மிக உன்னத வாசிப்பு குமரத்துறைவி வாசித்தது தான். வாசித்த பல இடங்களில் தொண்டை அடைககத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். முடிவில் கண்ணீர் வழியும் கன்னங்களுடன்.
ஜூன் 4 சந்திப்பிற்கு முன் மனதில் 2 கேள்விகள் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். கடந்த 15 நாளில் மேலும் சில கேள்விகள் மனதில் வந்து ஒரு மாதிரி தொகுத்து கொள்ள முயன்று கீழே அனுப்புகிறேன்.
என் முந்தைய கடிதத்தில் சொன்னது போல், இந்த அருமையான வாய்ப்பை தவற விட மனதில்லை. உங்கள் சந்திப்புகள் இன்னும் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தால், எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்க முடியுமா?. என் கேள்விகளை கூறிவிடுகிறேன்..
இலக்கிய வாசிப்பு தளத்தில், புனைவு வாசிப்பு, அபுனைவு வாசிப்பு இரண்டுக்கும் வாசகனின் ஆன்மீக , உணர்வு அனுபவத்தில் வேறுபாடு இருக்குமா? இல்லை இந்த ஒப்பீடே தவறா?. என் கேள்வி என் வாசிப்பு அனுபவத்தில் இருந்து எழுந்தது. அபுனவு வாசிக்கும் போது மனதில் தோன்றும் கற்பனை எண்ணங்கள் வாசிக்கும் போதே , தானாகவே எழும் அதே நேரத்தில், புனைவு வாசிக்கும் போது, வாசித்தபின், அந்த புனைவை பற்றி முனைப்பாக மீண்டும் யோசிக்கும் போது தான் கற்பனை சாத்தியங்கள் தோன்றுகின்றன. இது என் வாசிப்பில் குறையா?என்னுடைய வாசிப்பு ஆர்வம் பல துறைகளில் உள்ளது, இலக்கியம், பரிணாமம், நரம்பியல், பண்பாடு, காந்தி, இயற்பியல், ஆன்மீகம், மரபியல் என்று.. இவை எதிலுமே அதிக ஞானம் என்று ஒன்றும் இல்லை. சமீப காலங்களில், எல்லாவற்றையும் வாசிக்க இயலாது, ஒன்றையோ இரண்டயோ மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.. எப்படி தேர்ந்தெடுப்பது?. இது சரியான கேள்வியா என்று தெரியவில்லை.. இது போன்ற தேர்வு, வாசிப்பவனின் ஆர்வத்தை பொறுத்து தான் பெரும்பாலும் அமையும் என்றாலும், எப்போது நம் தேர்வுகளை குறுக்கி கொள்வது? ஒவ்வொரு புத்தகம் வாசித்து முடித்தவுடன், அடுத்து எதை எடுப்பது என்ற குழப்பம் எப்போதும் உள்ளது..வாசிப்பு மட்டுமே செய்து கொண்டிருப்பது தவறா? இலக்கிய வாசகன் கண்டிப்பாக எழுதவும் வேண்டுமா?.. எனக்கு எழுத ( இப்போதைக்கு படித்த புத்தகங்களை பற்றிய என் எண்ணம்) பிடிக்கும் என்றாலும் , என் திருப்திக்கு எழுதி முடிக்க நேரம் நிறைய ஆகிறது. மேலும் எப்போதும் வாசிப்பதில் தான் ஆர்வம் அதிகமாக உள்ளது..நீங்கள் ஒரு கட்டுரையில் குரு/ஆசிரியன் – சிஷ்யன் உறவு பற்றி பேசுகையில், ஒரு தளத்திற்கு மேல், சீடன், தன் சொந்த தர்க்கம், நம்பிக்கைகள், பகுத்தறிவு அனைத்தையும் கைவிட்டு விட்டு குரு சொல்வதை முற்றுமாக நம்ப வேண்டும் ( blind faith) என்று கூறி இருப்பீர்கள். குரு நித்யாவும் ஒரு காணொளியில் if you want to be a true Christian you must fully believe that Mary was a virgin when Jesus was born . Not just accept it but believe it as Truth. என்று கூறியிருப்பார். என் கேள்வி, இந்த நிலையை அடைய என்ன வழி?.மீண்டும் ஒரு முறை, எனக்கு இன்னுமொரு வாய்ப்பு அளிக்க வேண்டுவதோடு இந்த கடிதத்தை முடிக்கிறேன். இந்த வாரம் பயணங்கள் இருப்பதால் July 2க்கு பின் எந்த நாள், நேரம் என்றாலும் மகிழ்ச்சி அடைவேன்.
வெண்ணி
***
அன்புள்ள வெண்ணி,
நான் மீண்டும் பயணங்கள் தொடங்கிவிட்டேன். தனிப்பட்ட பயணங்கள், சினிமா வேலைகள். ஆகவே இனிமேல் சூம் சந்திப்பு இயல்வதல்ல. 160 பேருக்கு நாள் கொடுத்திருந்தேன். பத்துபேரிடம் பிறகு பேசுவதாகச் சொல்லிவிட்டு கிளம்பவேண்டியிருந்தது. இது இந்த ஊரடங்குக்காலத்திற்குரிய ஒரு நிகழ்வே ஒழிய தொடரமுடியாது. என் நேரம் மிகமிக செறிவாக திட்டமிடப்பட்டது. நான் பல தளங்களில் செயல்பட்டுவருபவன். பிறிதொருமுறை சந்திப்போம்.
புனைவிலக்கிய வாசிப்பும் அறிவுத்துறை வாசிப்பும் வேறுவேறானவை. புனைவிலக்கியம் முதன்மையாகக் கற்பனையால் வாசிக்கப்படுகிறது, அக்கற்பனையை நிகழ்த்தும் களமெனவே அறிவுத்தளம் செயல்படுகிறது. அறிவுத்துறை வாசிப்பு நம் தர்க்கத்தால் நிகழ்த்தப்படுகிறது. அதில் கற்பனை ஒரு துணைப்பொருள். அறிந்தவற்றை காட்சியாகவோ நிகழ்வாகவோ உருவகித்துக் கொள்வதற்கு உதவுவது.
ஒருவர் இயல்பில் கற்பனை நிறைந்தவர் என்றால் அவருக்குரியது இலக்கியம். தர்க்கபுத்தி ஓங்கியவர் என்றால் அறிவியக்க வாசிப்பு. இவை வேறுவேறு மூளைத்திறன்கள். இலக்கியத்தை நோக்கி தர்க்கபுத்தியை வைப்பவர் அதன் வெறும் கூடை மட்டுமே அடைகிறார். அறிவியக்கத்தை வெற்றுக் கற்பனையில் அணுகுபவர் மேலோட்டமான உணர்ச்சிகளை மட்டுமே அடைவார்.
இலக்கியவாசிப்பும் அறிவியக்க வாசிப்பும் ஒன்றையொன்று நிறைவுசெய்ய முடியும். ஆகவே வாசகன் இரண்டையும் வாசிக்கலாம். ஆனால் நீங்கள் எவர் என நீங்களே முடிவுசெய்யவேண்டும். உங்கள் வினாக்களை நிறைவுசெய்வது எது, மேலும் முன்கொண்டுசெல்வது எது? புனைவே என கண்டுகொண்டீர்கள் என்றால் நீங்கள் புனைவை வாசிக்கவேண்டியவர். புனைவை நிறைவுற வாசிக்கும் தேவைக்காக அறிவுத்துறை வாசிப்பை நிகழ்ந்த்துங்கள்.
புனைவை வாசிக்கும்போதே நிகழும் கற்பனை அப்புனைவை மெய்யனுபவமாக ‘நிகழ்த்திக்கொள்வதற்காக’. புனைவை வாசித்தபிறகே அதிலிருந்து பல திசைகளுக்கு நீளும் கற்பனைகள் எழவேண்டும். இரண்டுமே தேவைதான். இரண்டுமே சற்று கவனமாகப் பேணி வளர்க்கப்படவேண்டியவை. புனைவை காட்சிவடிவமாக ஆக்க அதை அவ்வாறுதான் வாசிக்கவேண்டுமென்ற புரிதல் நமக்கு இருந்தாலே போதும்.
வாசிப்புக்கு இரண்டு படிநிலைகள். முதல்படிநிலை ‘கண்டதை’ வாசிப்பது. வாசிப்பினூடாக அலைந்து திரிவது. அது தேவை, அப்போதுதான் நாம் நமக்குரியதை கண்டடைகிறோம். ஒரு கட்டத்தில் நாம் நம்முடைய வினாக்கள் தேடல்களுக்கு ஏற்ப வாசிப்பை குவித்துக் கொள்கிறோம். அது நம்மை ஒருங்கமையச் செய்கிறது. அந்த பரிணாமம் இயல்பாக நிகழவேண்டும். முதல் நூல் உருவாக்கும் மேலதிகக் கேள்வி அடுத்த நூலை நோக்கிக் கொண்டுசெல்வதே உகந்த வழி.
வாசிப்பவர் அனைவரும் எழுதியாகவேண்டும் என்பதில்லை. எழுத உந்துதல் உள்ளவர் மட்டும் எழுதினால்போதும். ஆனால் வாசித்தவற்றை தெளிவாக உள்ளத்தில் நிறுத்த நமக்காக மட்டும் எழுதிக்கொள்வது ஒரு நல்ல வழி. அது நம் சிந்தனைகளைச் சீர்ப்படுத்துவது. நம் அகமொழியை கூராக்குவது.
நித்யா சொல்வது ‘நம்பிக்கையே மெய்யறிவிற்கான வழி’ என்று அல்ல. அது குருசீட உறவிலுள்ள நம்பிக்கை. அதாவது ஒரு குருவை தெரிவுசெய்யும் வரை அவநம்பிக்கை இருக்கலாம், பரிசீலனை இருக்கலாம். தெரிவுசெய்தபின் அவரிடம் நம்மை முற்றளிக்காமல் எதையும் கற்கமுடியாது. விவாதித்து அறியும் தன்மை கொண்டவை அல்ல கலை, மெய்யறிதல் இரண்டும். அங்கே விவாதித்தால் நாம் நம்மை வந்தடைவனவற்றுக்கு எதிராக நம் ஆணவத்தையே முன்வைக்கிறோம்.அது அறியாமையையே அளிக்கும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


