Jeyamohan's Blog, page 942

July 31, 2021

யசோதை – அருண்மொழிநங்கை

இயக்குநர் வசந்த் கூப்பிட்டிருந்தார். “என்ன அருண்மொழி ரொம்ப நல்லா எழுதாறாப்ல?அசோகமித்திரனுக்கு அப்டி ஒரு சிஷ்யை?”என்றார். அருண்மொழியின் ஆதர்ச எழுத்தாளர் அவர்தான். அவருக்கும் அவள்மேல் பிரியம் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப்பின் எழுதுகிறாள். அவர் இருந்தபோது சில விமர்சனக்கட்டுரைகளே எழுதியிருந்தாள்.அவற்றையே அவர் பாராட்டியிருந்தார். இக்கட்டுரை- கதைகளை மிக விரும்பியிருப்பார்.

மென்மையானவை இவ்வனுபவங்கள். யசோதை என்னும் கட்டுரை- கதையில் மையமாக உள்ள மனநிகழ்வு ஒரு சிறுமி அன்னையாகும் பரிணாமம்.தம்பி மைந்தனாகிறான். அதை யசோதை என்னும் தலைப்பில் மட்டுமே குறிப்பு வைத்து மிக இயல்பான ஓட்டத்துடன் சொல்லி நிறுத்தியிருக்கிறாள்.

லெனின் கண்ணன் எனக்கு மிக நெருக்கமானவன். திசைகளின் நடுவே தொகுதியை முழுக்க தன் கையால் நற்பிரதி எடுத்தவன். அத்தொகுதி முன்னுரையில் அவனுக்கு நன்றி சொல்லியிருப்பேன். அவன் வாழ்க்கை அவனாலேயே விதியின் போக்குக்கு விடப்பட்டது. எங்கள் எவராலும் அவனை மீட்கமுடியவில்லை. இக்கட்டுரை எனக்கு நெஞ்சை அழுத்தும் ஓர் அனுபவம்

அருண்மொழி இதை வரிக்கு வரி கண்ணீர்விட்டபடி எழுதினதாகச் சொன்னாள். ஆனால் கட்டுரையில் துயரமே இல்லை. புனைவின் மாயம் என்பது இதுதான். ஏன் மெய்யையே புனைவாக ஆக்கவேண்டும் என்பதும் இதற்காகவே.

யசோதை – அருண்மொழிநங்கை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2021 11:34

கல்வலைக்கோடுகள்,ஜெயராம் கடிதம்

கல்வலைக்கோடுகள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வழக்கம்போல இவ்வருடமும் தேசிய விருதுக்கு படைப்புகளை அனுப்ப எண்ணி பிறகு அது பற்றிய ஞாபகம் இல்லாமல் தவறிப்போனது. இப்போதைக்கு முழுமையாக கற்பதில் என்னை தயார்படுத்துவதில் தான் மனது ஊன்றியிருக்கிறது. விருதெல்லாம் சில இடங்களில் நமக்கு ஒரு அறிமுகத்தை அளித்து உதவும் என்றாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பு தான். ஆனால் என் ஆசானே என் படைப்பைப் பற்றி எழுதி விட்டாரே:) ஒரு வேளை விருது எதாவது கிடைத்தாலும் அவையெல்லாம் அதற்குப் பல படிகள் கீழ் தான்.

சென்ற இரண்டு வருடங்களில் நான் பயணித்த புதுக்கோட்டை தஞ்சாவூர் மதுரை போன்ற தமிழ் நாட்டின் சில முக்கியமான கோவில்கள் அருங்காட்சியகங்கள் போன்றவற்றில் எடுத்த புகைப்படங்களை உபயோகப்படுத்தி தான் இந்த ஓவியங்களை வரைந்தேன். என் ஆசிரியரில் ஒருவரான மறைந்த மதிப்பிற்குரிய கலை இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி தான் சொல்லிக் கொண்டேயிருப்பார். பெரிய தாள் நோட்டு தைத்து அதில் சிற்பங்களை வரைந்து பார்க்க வேண்டும் என்று. நிறைய பயணம் செய்ய சொல்வார். அவரது இளமைப் பருவத்தில் சிற்பங்களை தேடித் தேடி வரைந்தவர் அவர். கலை இயக்குநராக அவர் பணிபுரிந்த படங்கள்(பெருந்தச்சன், வைசாலி) கூட பெரும்பாலும் மரபு சார்ந்த படங்களாகவே இருக்கும்.

அவரது காலத்தைய கலைஞர்கள் பெரும்பாலானவர்கள் நிறைய வரைந்து தள்ளியவர்கள். ஆனால் இப்பயணத்தை அவரை சந்திப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே துவங்கியிருந்தேன். மாமல்லபுரத்தில் நேரடியாகச் சென்று ஒரு சில ஓவியங்கள் வரைந்தேன். ஆனால் அவைகள் பால்பாயின்ட் நீல பேனாவில் வரைந்தவை. பிறகு அது ஏனோ தடைபட்டது. புதுக்கோட்டை தஞ்சாவூர் போன்ற இடங்களில் நேரடியாக சென்று வரைந்தது சிலதை அவரிடம் காட்டியிருக்கிறேன். அவைகள் அவருக்கும் திருப்தி இல்லை. எனக்கும் பிடிக்கவில்லை. ஆட்கள் சுற்றி நின்று கொண்டிருக்கும் போது வரைவது பெரிய சிரமம். செல்பி எடுப்பவர்கள் முதல் ‘எனக்கு ஒரு டிராயிங் பண்ணிதரீங்களா’ என்று கேட்பவர்கள் வரை. முதலில் நன்றாக இருக்கும். நாம் ஒரு காட்சி பொருளாக மாறிக் கொண்டிருப்பதை அறியும் போதும் விடுமுறை எல்லாம் எடுத்து பயணம் செய்து வரும் போது பாதி நேரங்கள் இவற்றிற்கே செலவழிவதை உணரும் போதும் சலிப்பு வரும்.

சில மாதங்களுக்கு முன்பு கொரிய காமிக் ஓவியர் கிம் ஜங் கி(Kim Jung Gi) அவர்களின் காணொளி ஒன்றைப் பார்த்தேன். அதில் அவர் உபயோகித்த brush pen கவர்ந்தது. பேனா தான். மை ஊற்றி உபயோகப்படுத்தலாம். ஆனால் அதன் முனை தூரிகை. அதற்கென்ற பிரத்யேக மை. எல்லாம் கொஞ்சம் விலை அதிகம். ஆனால் உபயோகிக்க மிக இலகுவாக இருந்தது. கருப்பு மை மிகவும் பிடித்துவிட்டது.

அதாவது கரியை மேலும் எரித்து கரியாக்கி அதற்கு மேல் கருமையாக்க முடியாத அளவுக்கு கருமை கொண்ட மினுமினுப்பு கொண்ட கருப்பை தேடிக் கொண்டிருந்திருந்தேன் என்பதை இந்த மையை உபயோகப்படுத்த ஆரம்பித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்.  சூனியத்திற்கு நிறம் இருந்தால் அது கருப்பாகத் தான் இருக்கும். சூனியத்திலிருந்து தான்  எல்லாம் பிறந்தது என்றால் இங்குள்ள அனைத்திலும் சூனியத்தின் அம்சம் கருமையின் அம்சம் இருக்கிறது என்று தான் பொருள். அந்த இருட்டும் சூனியமும் உறைந்திருக்கும் கருப்பு மையை அழகிய உருவங்களாக மாற்றி வெள்ளை தாள்களில் பதிந்து கொள்கிறேன். வெள்ளை நிறத்திற்கு மிகவும் பொருத்தமான நிறம் கருமை தான் போல. எந்த நிறத்தையும் விட பளிச்சென்ற வெள்ளை நிறத்தின் மேல் வரையப்படும் முதல் தர கருப்பு நிறம் தான் நம் கண்ணுக்கு முதலில் தெரியும். இதில்லாமல் உடனே கண்ணுக்குத் தெரியும் மற்றொரு  நிறமென்றால் அது கருமையின் உச்சத்தின் மேல் வரையப்படும் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும். வெள்ளைத் தாள்களென்று சொல்லலாம் ஆனால் தூய வெள்ளை நிறத் தாள் என்பது இல்லை. எந்த வெள்ளை தாளை துணியை கூர்ந்து கவனித்தாலும் அங்காங்கே கொஞ்சம் அழுக்கோ சிறுகறையோ படிந்திருப்பதை பார்க்க முடியும். அதை பார்க்கத் தவறும் போது தான் முழுக்க வெள்ளை நிறம் என்று சொல்லிக் கொள்கிறோம். அப்படியென்றால் கருமையில் கூட எங்கேயோ வெள்ளை நிறம் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். அதையும் கூர்ந்து கவனித்தால் தெரியும் போல.

வெண்முரசின் முதற்கனலில் வரும் ஒளி-இருள்(கருப்பு-வெள்ளை) சமநிலை பற்றிய விவாதத்தைப் பற்றி இங்கே சொல்ல வேண்டியுள்ளது. யாராவது என் ஓவியங்களை பார்த்து பிறகோ அல்லது என்னுடன் உரையாட ஆரம்பித்த பிறகோ உன் முதன்மை ஆசிரியர் யார்? என்ற நேரடியான கேள்வியைக் கேட்டால் ‘ஜெயமோகன்’ என்ற பெயரை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. கேட்பவர்கள் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் உடனே ‘அவர் பெரிய ஆர்டிஸ்டா? என்று திருப்பிக் கேட்பார்களென்றால். ‘இல்லை அவர் பெரிய எழுத்தாளர். நான் எழுத்தாளர் ஜெயமோகனைப் பற்றி சொல்கிறேன்’ என்று விளக்க வேண்டி இருக்கும். கேட்பவர்கள் கொஞ்சம் குழப்பமடைவார்கள்.  முதற்கனலிலிருந்து நான் பெற்ற ஒளி-இருள் சமநிலையைப் பற்றிய படிமமும் சேரும் போது தான் இந்த கருப்பு-வெள்ளை ஓவியங்கள் என் மனதிற்கு அணுக்கமாகின்றன என்பதை விளக்க முயல்வது கொஞ்சம் சிரமம் தான். பலரும் கலையென்பதை மேலோட்டமான பயிற்சிகளாகவும் அல்லது தொழில்நுட்பங்களாகவும் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதைக் கற்றுக் கொள்வதற்கு இன்று  YouTube Videoகளே போதும். கலை முதலில் கலைஞனின் மனதிலிருந்து அவன் கனவுகளிலிருந்தும் ஆழ் உள்ளத்திலிருந்தும் தான் தோன்றும். அவற்றை சார்ந்த பயிற்சிகளுக்குத் தான் சிறந்த இலக்கிய படைப்புகளும் அதற்கு மேல் பேராசான்களின் அருகாமையும் தேவைப்படுகிறது. அக்கனவையும் அகத்தையும் வெளிப்படுத்துவதற்கே தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி.

இந்தக் கட்டுரையிலேயே நீங்கள் குறிப்பிட்ட சில உவமைகளைக் கொண்டே(1. கோட்டோவியங்களாகப் பார்க்கையில் அவை மெல்ல நெளிந்தாடுவதாக, கருந்தழலென கரியமலரிதழென ஒளியும் மென்மையும் கொண்டுவிடுவதாக எண்ணிக்கொள்கிறேன், 2. நெளியும் திரைச்சீலையில் வரையப்பட்டவை போல நடிக்கின்றன)என்னால் பல பாய்ச்சல்களை நிகழ்த்த முடியும். நீங்கள் குறிப்பிட்ட என் வரைகளில் இருக்கும் ஆவேசத்தை மிகச் சிலரே குறிப்பிட்டிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னால் நான் சந்தித்த கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நாடக நடிகர் என் ஓவியத்தில் தற்காப்பு கலை வீரர்களின் உடல்மொழிகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். அவர் அதை துல்லியமாக புரிந்து கொள்ள காரணம் அப்போது கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆசானிடம் அவர் களரி கற்றுக் கொண்டிருந்தார் என்பதே. டாய்ஜி போன்ற கலைகளும் பயின்றிருப்பதாகச் சொன்னார்.

நான் பத்து வருடங்கள் முறையாக தற்காப்புக் கலை(கராத்தே, பிறகு டாய்ஜி) பயின்றவன். கல்லூரி காலத்தில் பெரிய தாள்களின் மேல் பென்சிலைப் பிடித்து குறுக்கும் நெடுக்குமாகவும் வட்டமாகவும் வேகமாகவும் கையை அசைத்து வரைவது போன்ற தற்காப்புக் கலையையும் ஓவியத்தையும் இணைத்து சில விசித்திர பயிற்சிகளையெல்லாம் செய்து பார்த்திருக்கிறேன். தோள்பட்டை வலியால் பிறகு தீவிர பயிற்சிகள் செய்வதில்லை. மிதமான உடற்பயிற்சிகள் மட்டும் தொடர்கிறேன். பிறகு கொஞ்சம் நடனமும் பிடிக்கும். அதனாலேயே போருக்கு போகும் ஆயத்தத்தில் இருக்கும் வாள் வீசும் குதிரையில் பாயும் நடனமிடும் சிற்பங்கள் மிகவும் பிடிக்கும். அந்த அசைவின் மேல் இருக்கும் பெரிய பற்றே வரைகளில் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். காமம் காதலாகவும் பிறகு தூய அன்பாகவும் பரிணமிப்பதைப் போல வன்முறை வீரமாகவும் பிறகு கலையாகவும் மாறுகிறது என்று வைத்துக் கொள்ளலாம். என் மாஸ்டர் விஜயன் சொல்வார் கராத்தே என்பது அடிதடிக் கலையோ தற்காப்புக் கலையோ கூட அல்ல முதலில் அது ஒரு கலை என்று. தற்காப்பு என்பது கூட அவருக்கு இரண்டாம் பட்சம் தான்.

முதலில் இந்திய கலைகளை கற்றுப்புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் நம் சிற்பங்களின் வடிவங்களை நேர்த்திகளை வரைந்து பார்க்க வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். நான் ஏற்கனவே எனக்குப் பிடித்த கோணங்களில் எடுத்து வைத்திருந்த புகைப்படங்களைப் பார்த்து இவைகளை வரைந்தேன். பிறகு அதில் மூழ்கிப் போய், அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இருந்து அதை எனக்குப் பிடித்தது போல வரைந்து வெளிப்படுத்தி மட்டுமே கொள்வது என்ற இடத்திற்கு நகர்ந்தேன். அத்தருணத்தில் நான் தேர்ந்தெடுக்கும் புகைப்படத்தில் உள்ள சிற்பங்களின் அடிப்படை வடிவம் இருக்கும். ஆனால் அந்நேரத்தில் நான் எப்படி கிறுக்க விரும்புகிறேனோ அந்த தன்மை இருக்கும். எல்லா ஓவியங்களும் நிஜ சிற்பத்தை விட கருப்பாக்கப்பட்டிருக்கும். எந்த ஓவியமும் தாளுக்குள் சரியாகப் பொருந்தாமல் வெளியே நிற்கும். சிலவற்றின் முகம் மட்டும் தான் தெரியும். சில அரையுடல் வரை. சில சிற்பத்திற்கு முகம் அழகு சிலவற்றிற்கு கையில் ஆயுதம் வைத்திருக்கும் அதன் உயிர்ப்பு சிலவற்றிற்கு நடனமாடும் போது உருவாகும் அதன் வீச்சு. எது என்னை அப்போது கவர்கிறதோ அது. வரைந்த பிறகு மறுபடியும் எனக்குப் பிடித்த கோணங்களில் புகைப்படம் எடுத்து அதன் ஒளி-நிழல் தன்மையை மேலும் அதிகப்படுத்துவேன். அதாவது புகைப்படம்-ஓவியம்-புகைப்படம் என்ற வடிவம்.

நான் பெரும்பாலான சமகால ஓவியர்களைப் போல கணினி wacom tablet போன்றவைகள் உபயோகித்து டிஜிட்டலிலும் வரைபவன். அது எனக்கு மிகவும் பிடித்தது கூட. நிறைய வசதிகள் உள்ளன. ஆனாலும் கையில் தொட்டு வரைவதில் ஒரு வித இன்பம் இருக்கிறது.எங்களுக்கு கல்லூரியில் வரைவதற்கு ‘Model’ வைப்பார்கள். நிஜ மனித உருவங்களை அப்படியே பார்த்து வரைவதை விட கனவாக ஆக்கப்பட்ட இந்த வடிவங்களை வரைவது மிகவும் பிடித்திருக்கிறது.

இந்த சிற்பங்களை வரையும் போது அதை வடித்த சிற்பிகளை மானசீகமாக வியந்து வணங்கிக் கொண்டே இருந்தேன். கல்லில் வடிப்பதற்கு எவ்வளவு அர்பணிப்பும் நேரமும் தேவைப் பட்டிருக்கும். மாறாக நாம் ஒன்று முதல் நான்கு மணி நேரத்திற்குள் ஒன்றை வரைந்து முடித்து விடுகிறோம் என்று நினைக்கும் போது கொஞ்சம் பணிவு ஏற்படுகிறது. அந்த அர்ப்பணிப்பில் பாதி பங்கையாவது நாம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய சிற்பியின் உழைப்பில் இருபது சதவீதத்தை செலுத்தினாலே உலகின் பெரிய கலைஞன் ஆகி விடலாம். இது போன்ற பெரும் படைப்புகள் யாவும் ஸ்தூல வடிவ வெண்முரசு போல நின்று கொண்டிருக்கிறது.

எங்கள் அலுவலகத்தில் இருந்து சேவைச் செயல்பாடுகளில் ஈடுபடும் Outreach Volunteering-ன் பகுதியாக சென்னை பசுமைவழிச் சாலை(Greenways road) ரயில் நிலையத்தின் சுவர்களில் நாங்கள் பத்து பதினைந்து பேர் சேர்ந்து ஓவியங்கள் வரைந்து கொடுத்தோம். மொத்தச் செலவும் அலுவலகம் ஏற்றுக் கொண்டது. உழைப்பு எங்களது. இரு வாரங்கள் தொடர்ந்து வார இறுதி நாட்களை முழுமையாகச் செலவழித்து நின்று கொண்டும் ஏணியில் ஏறிக்கொண்டும் வரைந்து முடித்தோம். என் அலுவலகக்கிளை பக்கத்தில் என்பதால் இந்த ரயில் நிலையத்தில் இறங்கித் தான் நான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாட்களும் நாங்கள் வரைந்த ஓவியத்தின் மேல் யாராவது புதிதாகக் கிறுக்கி வைத்திருப்பதை பார்த்துக் கொண்டேயிருக்கவேண்டியிருந்தது. ‘ஐ லவ் யு’ முதல் கெட்ட வார்த்தைகள் வரை. இதற்கென்றே எடுத்து வந்த பெரிய பிரஷால் போட்டக் கோடு என்று சந்தேகிக்கும் அளவிற்கு தடிமனான கோடுகளைக் கொண்டே கூட கிறுக்கி இருந்தார்கள் அதன் மேல். கோவில்களிலும் புராதன படைப்புகளிலும் கிறுக்குபவர்கள் இவர்கள் தான்.

சிறு வயதில் இயற்கைகாட்சியை வரைந்து ரசித்தவனுக்கு சுற்றுலா போகும் காட்டை பாழ்படுத்தும் மனநிலை வராது என்று நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல நம் சிற்பங்களை கோவில் பிரகாரங்களை சிறுவயதில் குழந்தைகளுக்கு வரையக் கொடுத்துப் பழக்கினால் அக்குழந்தைகள் அவற்றின் அழகை ரசிக்கத் தொடங்கும். நாம் ரசிப்பவற்றை நம்மால் அழிக்க மனம் வராது. அவர்கள் வளரும் போது நம் அரும்படைப்புகளை காப்பவர்களாகவும் மாறுவார்கள். ஒவ்வொரு பெரும் கோவில்களை மையமாகக் கொண்டே அக்கோவில்களின் கலையமைப்புகளை சிற்பங்களை பார்த்து வரைவதற்கான பயிற்சி வகுப்புகளைக் கூட அவ்வப்போது நடத்தலாம். அது கோவில்கள் வழிபாட்டிடம் மட்டுமல்ல கலைக் களஞ்சியங்கள் கூட என்ற எண்ணம் மக்களிடம் வலுப்பெற உதவும். நான் என்னிடம் ஓவியம் கற்கும் சில குழந்தைகளுக்கு பழைய சிற்பம் மற்றும் ஓவியங்கள் வடிவமைப்புகளை அவ்வப்போது வரையக் கொடுக்கிறேன்.

பத்து வருடத்திற்கு முன்பு கவின் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது இந்திய சுற்றுப் பயணத்தின் பகுதியாக பேலூர் சென்றோம். அங்கே பிரகாரத்தில் இருக்கும் குளித்துவிட்டு ஈரந்தலையுடன் நிற்கும் ஒரு பெண்ணின் சிற்பத்தை எங்கள் வழிகாட்டி சுட்டிக் காட்டி விளக்கினார். தலைமுடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நீர்த்துளியைக் கூட நுணுக்கமாக சிற்பி வடித்திருப்பார். இதை அவர் சொல்லி முடித்தவுடன் நாங்கள் எண்பது பேர் கொண்ட கலைக்கல்லூரி கும்பல் நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த சிற்பிக்கு ஆரவாரம் செய்து கைதட்டினோம். எங்கள் கல்லூரி நாட்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய சில அரிதான அனுபவங்களில் ஒன்று அது. எங்களில் பெரும்பாலானவர்கள் பெரிய கலைக் குடும்ப பின்னணி கொண்டவர்கள் அல்ல. இரு வருடங்களாக  தொடர்ந்து அடிப்படையான கலைக் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள். தொடர்ந்து மற்றவர்கள் படைப்புகள் செய்வதைப் பார்க்கிறோம். நாமும் செய்து பார்க்கிறோம். அச்சூழலில் இருக்கிறோம். அதனால் அதன் அருமை தெரிய வந்ததால் தான் எங்களால் அப்படி கைதட்ட முடிந்தது. மனநிலை மாற்றம் என்பது எளிதில் நிகழும் என்று நினைக்கிறேன்.

வெள்ளை தாள்களின் மேல் வரையப்படும் கருப்புக் கோடுகளை இந்த இரு நிறக்கலவையை இப்போது மிகவும் விரும்புகிறேன். அதிலேயே மூழ்கி இருக்க பிடித்திருக்கிறது. அதனாலேயே வெண்முரசிலிருந்து நான் பெற்ற இந்த ஒளி-இருள் சமநிலை படிமமும் என்னில் மேலும் வளருமென்று நினைக்கிறேன். இந்தியா முழுவதும் மறுபடியும் சுற்றி பல கோவில்களை கட்டிடங்களை சிற்பங்களை எல்லாம் பார்க்க வேண்டும். இது எப்படியெல்லாம் என்னில் மாறி வரும் என்று தெரியவில்லை… ஆனால் எப்படியோ எங்கேயோ என் வருங்காலப் படைப்புகளில் எதிரொலிக்கும் என்றே நினைக்கிறேன்….

பணிவன்புடன்,
ஜெயராம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2021 11:33

ஜோனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல்

தை எந்த இடத்தில் ஆரம்பித்து எப்படிச் சொன்னால் சுவையாக இருக்கும் என்று இப்புத்தகத்தை அறிமுகப்படுத்துவதில் ஒரு உற்சாகம் ஆரம்பத்திலேயே என்னைப் பற்றிக்  கொள்கிறது. சீகல் பறவையின் வெற்றி ரகசியம் நம் முனைப்பைத் தூண்டி விடுவதாக அமைகிறது. ஒரு விஷயத்திற்காகத் தொடர்ந்து முயற்சிப்பவன், கீழே விழுந்து எழுபவன், கீழே விழுந்தாலும் தளராதவன், திரும்பத் திரும்ப எழுந்து ஓடுபவன், முயற்சித்துக் கொண்டேயிருப்பது என் வேலை, வெற்றி அது தானாக என்று வருகிறதோ வரட்டும் என்று ஓடிக்கொண்டேயிருப்பவன்…இவர்களை நினைவுபடுத்துகிறது. இந்த முயற்சிகளில் இருப்பவர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது என்று சொல்வேன். வெறும் எண்பது பக்கங்களில் இவ்வளவு உற்சாக டானிக் ஒருவனுக்கு அளிக்க முடியுமா? முடியும் என்கிறது இந்த ஜோனதன் சீகல்.

ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்….என்பது  ஒரு கடற்புறா.   ஒரு வகைக் கடல் சார்ந்து வாழும் பறவைச் சாதியின் பெயர்தான் இது என்கிறார் ஆசிரியர்.

எப்போதும் கீழிறங்கி வராமல் வெளியையும், ஒளியையும் புசித்து, வெட்ட வெளியில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அறியப்படும் ஞான குருவின் பெயர் “சியாங்”.

இந்த இடத்தில் சீனாவின் போதி தர்மர் உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டும்.ஒளியை விஞ்சும் வேகத்தைக் கடப்பதற்கு வழி காட்டுகிறது மெய்ஞ்ஞான குரு சியாங். ஜோனதனுக்கு வாய்த்த குருதான் இவர். நீ என்றும் நானென்றும் இரண்டில்லை என்ற ஞானச் சங்கமம்.  சீகல் என்ற பறவைச்சாதிக்கு விதிக்கப்பட்ட பறக்கும் எல்லையைக் கடக்க, ஜோனதன் என்ற பறவைக்கு உந்துதல் ஏற்பட்டு, விதி மீறியபோதுதான் எல்லையற்ற பிரபஞ்ச வெளியும், கட்டற்ற வேகமும் வேக ஞானமும் வாய்க்கின்றது. உயரப் பறக்க நினைத்து, தடுமாறி வீழ்ந்து, எழுந்து பறந்து சாதிக்கிறது.

மீன்பிடிப் படகுகள் கிளம்புவதற்கு முன்பாக சீகல் என்ற கடல் புறாக்கள் காற்றுடன் அலைந்து கொண்டிருக்கின்றன. வெகுதூரம் தள்ளி படகுகளோ கரையோ இல்லாத இடத்தில்  ஒரு பறவை மட்டும் தனியே பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் ஜோனதன் லிவிங்ஸ்டன் என்ற கடற்பறவை. காற்றடிக்கும் திசைக்குத் தகுந்தவாறு அலகை உயர்த்தி, சிறகைத் அதன் திசைக்குத் தகுந்தவாறு திருப்பித் திருப்பி, பயிற்சியை மேற்கொள்கிறது. சிறகுகள் மடிந்து கீழே விழுகிறது. சீகல் பறவைகள் கீழே விழுதல் அவமானம்.

பறந்து திரும்பும் போது கடல் மட்டத்தைத் தொட வேண்டும். நீர்ப் பரப்பின் மேல் தன் கால்களை அழுத்தமாய்ப் பதிக்கும் ஒரு தனித்த நிகழ்வாய் இருக்கும் ஜோனதனுக்கு. குளிர் காலத்தில் மற்ற பறவைகளைப் போல் இரை தேடுவது மட்டுமே என் வேலை இல்லை. வெறும் இறக்கையும் எலும்பும் மட்டுமல்ல நான். காற்றின் மீது எதைச் செய்தல் நலம், எதைச் செய்தல் ஆகாது என்பதை நான் அறிந்தே ஆக வேண்டும் என்று முயற்சிக்கிறது ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்.

கூட்டத்தோடு பறந்து உணவு தேடுவது மட்டும் என் வேலை அல்ல என்று பயிற்சி செய்து ஆயிரம் அடிகளுக்கு மேலாக இறகை நன்றாக விரித்துப் பறந்து வேகமாகத் தாழ்ந்து கீழுள்ள கடலின் அலைகளின் மீது மோதப் பழகிக் கொள்கிறது சீகல். சக்தியை அடக்கி செங்குத்தாய் அதிவேகத்தில் கீழே திரும்புகிறது. பயிற்சியில் காணும் தொடர்ந்த முயற்சி…நம்மை ஊக்குவிக்கிறது. வாழ்க்கையில் நம் முயற்சிகள் இவ்வாறாய் இருத்தல் வேண்டும் என்கிற தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. இரண்டாயிரம் அடியை எட்டுகிறது. இன்னும் வேகமாகப் பறப்பதற்கு வல்லூரைப் போன்ற சின்னஞ்சிறு சிறகுகள் வேண்டும் என்று உணர்ந்து தன் சிறகை மடித்து, மடித்து, நுனிப்பகுதியைக் கூர்மையாக வைத்துக் கொண்டு காற்றை எதிர்த்துப் பிளக்கிறது. இதோ பத்தே விநாடியில் தொண்ணூறு மைல் வேகம். உலக சாதனை. ஒரு சீகல் பறவையின் உச்ச வேகம்.

மணிக்கு நூற்று நாற்பது மைல்கள். முழுதாய்க் கட்டுப்பாட்டுக்குள். இரண்டாயிரத்தை எப்போது தாண்டுவது? இதுவே ஐயாயிரம் அடியாய் இருந்தால்?  பிறருக்குச் சொல்லும் வெறும் வார்த்தைகள் எனக்குத் தேவையில்லை. செயல்…செயல்…முயற்சி…முயற்சி…அது ஒன்றே வெற்றிக்கான வழி….இதோ தொட்டாயிற்று. ஐயாயிரம் அடிகளை. மேலிருந்து பார்த்தபோது மீன்பிடி படகுகள் தட்டையான நீலக் கடலில் சிறு புள்ளிகளாய்.

சீகல் பறவையின் வேகம் மணிக்கு இருநூற்றுப் பதினாறு மைல்கள். தனித்துப் பயிற்சி மேற்கொண்டு எட்டாயிரம் அடிவரை போய், பாதுகாப்பாய்க் கீழே திரும்பியாயிற்று.

ஜோனதனின் இந்த முயற்சி கேலி செய்யப்படாமலா இருந்தது. மூத்தபறவைகள் அதைக் கண்டித்தன. கூட்டத்தோடு கூட்டமாய் இல்லாமல் இதென்ன எடுத்தெறிந்த போக்கு? பொறுப்பில்லாத செய்கை…உனக்கென்று அதென்ன ஒரு தனி உலகம்? பொதுவான கௌரவம், மரபு இவற்றை மீறிய செய்கை எதற்கு உதவும்? உன்னைத் தனிமைப் படுத்தும். ஜோனதன் பதில் சொல்கிறது.

பொறுப்பில்லாத செய்கை என்றா சொல்கிறீர்கள்? வாழ்க்கையின் பெரும் பயனை அறிந்த ஒருவனைக் காட்டிலும் யார் பொறுப்பானவர்கள்? நம் வாழ்விற்கு அர்த்தம் வேண்டாம்? கற்றுக் கொள்ள, கண்டுபிடிக்க சுதந்திரம் வேண்டாமா? அதற்கு விடுதலையாக வேண்டாமா? உறவோ பாசமோ கிடையாது….உடைத்தாயிற்று அனைத்தையும். இனி எல்லாம் முயற்சிதான். பறத்தலின் பெருமையை அறியாது இருத்தல் கண்மூடித்தனமாகும். சோம்பல், பயம், கோபம் இவை நம் வாழ்நாளைச் சுருக்கி விடுகின்றன. கூட்டமாய் இருந்தால் எதையும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பேயில்லை. தனித்திருந்தே கற்றுக் கொள்தல்தான் முயற்சியின் தளராத் தன்மை. ஆனால் அதற்காகக் கொடுக்கும் விலை கணக்கிலடங்காதது. என் வாழ்நாளை ஏதும் செய்யாது முடங்கி, சுருக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

இருட்டிவிட்ட வானத்தை ஒரு முறை உயர்த்திப் பார்த்துக் கொண்டது. அழகான கரையோரம்…உயர்ந்த வானம்…வாழ்வைக் கற்றுக் கொடுத்த வானம். இருண்ட வானத்தில் நுழைந்து நுழைந்து பறக்கிறது ஜோனதன். பூமியில் இருந்து இரு இளம் பறவைகள் பறந்து வந்தபோது மேகங்களைத் தாண்டிய பொழுதில் தன் உடல் அவைகளை விடவும் நன்றாக ஒளிர்வதைக் கண்டு சீகல் பெருமை கொள்கிறது. இறக்கைகள் மிருதுவாகவும், மெருகேற்றிய வெள்ளியைப் போலவும் பளபளக்கின்றன.  வெற்றியைத் தொட்டு விட்டேனா…? வாழ்வின் முக்கிய நாள்….மறக்க முடியாத சூரிய உதயம்….  கரைக்குத் திரும்பி ஓர் அங்குலம் அளவுக்கு உயர்ந்து இறக்கைகளை அடித்துக் கொண்டு மணலில் வந்து அமர்கிறது..

ஜோனதன்…லட்சம் பறவைகளிலும் நீதான் சிறந்தவன்.நாங்களெல்லாம் மெதுவாய் நகர்கிறவர்கள். ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்துத் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை நீ இப்போதே தெரிந்து வைத்திருக்கிறாய்..

திறமையைக் கொண்டு தலைமைப் பொறுப்பை அடைகிறாய் நீ. எல்லாவற்றையும் முன்னரே கற்றுத் தேர்ந்த முதிர்ந்த பறவை நீ. ஜோனதன் சொல்கிறது.

சொர்க்கம் என்பது ஓர் இடம் கிடையாது. அது ஒரு நேரமும் கிடையாது. அது குறைவில்லாதது. அது ஒரு முழுமை.

நினைவின் வேகத்தில் எங்கு வேண்டுமானாலும் பறக்க என்ன செய்ய வேண்டும்?

“ஏற்கனவே அறிந்தவற்றிலிருந்து புதிதாய்த் தொடங்க வேண்டும்”

நேரம் என்பது தொலைவு அல்ல. அதற்கு எல்லைகள் கிடையாது.  இதுவே பறத்தலின் முறைமைகள்….

நாமும் முயற்சிப்போம். இந்த வாழ்க்கையை மற்றவர்களைப் போல் சாதாரணமாய் வாழாமல், உன்னதமான ஒன்றாக, அழகான ஒன்றாக, அற்புதமான ஒன்றாக, மாற்ற முயற்சி செய்வோம். இழப்புகள் ஒரு பொருட்டல்ல.  நம்மின் வாழ்க்கைப் பயணம் மற்றவர்களுக்கு நம்பிக்கை தரக் கூடிய ஒன்றாக இருக்கட்டும்.

ரிச்சர்ட் பாக்-கின் இந்த நூலை தமிழில் அவைநாயகன் மொழி பெயர்த்திருக்கிறார். ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் எனும் “ஞானப்பறவை”. வெறும் எண்பது பக்கங்களே கொண்ட இந்தப் புத்தகம் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள பேருதவி செய்யும் என்பது திண்ணம்.

உஷாதீபன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2021 11:31

ஒன் பை டூ- மீண்டும்

ஒன்றின் கீழ் இரண்டு

ஜெ

ஒன் பை டு படம் வந்து இத்தனை காலம் சென்று, இன்னும் பார்க்காதவர்களை பார்க்கத் தூண்டும் ரிவ்யு.

நாவல் போலவே பல்வேறு அடுக்குகள் என அமைந்த திரைக்கதை.ஒரு துப்பறியும் த்ரில்லர் கதை. ஒரு சைகாலஜிகல் த்ரில்லர் கதை. ஒரு காதல் கதை. ஒரு விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதை. அத்தனையும் சரிவிகித கலவையில் அமைந்த எமோஷனல் டிராமா.

என் புள்ளைய என்னய மீறி தொட விட மாட்டேன் என்று சொல்லும் அப்பா, அங்கே துவங்கும் இழுபறி, ஒரு பெரிய உணர்ச்சிக் கொந்தளிப்பான பல்வேறு பாத்திரங்களுடே ஆன பயணித்திருக்கும். பிறகு,சரி இப்போ என்னை அரஸ்ட் பண்ணிக்கோ என்று அந்த அப்பா பணியும் இறுதி காட்சியை நெருங்கும் போது, ஹய்யோ என்றொரு பெருமூச்சு எழுந்தது.

எனக்குப் பிடித்த லோகிததாஸ்  திரைக்கதைகளில் ஒன்று போல ஒரு பிரமாதமான உணர்ச்சிகரமான சுழற்றி அடிப்பு அனுபவம்.

Mx player இல் இலவசமாக காணக் கிடைக்கிறது. தளத்தில் லிங்க் கொடுங்க. உங்க வாசகர்கள் கிட்ட இந்த திரைக்கதை  அனுபவம் முழுசா போய் சேரட்டும்

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

ஒவ்வொரு திரைப்படம் வெற்றியடையும்போதும் எழுத்தாளர்களில் சிலர் ஒரு குமுறலை முன்வைப்பார்கள். சினிமாவுக்கு கிடைக்கும் இந்தக் கவனமும் கொண்டாட்டமும் பத்து சதவீதமாவது இலக்கியத்திற்குக் கிடைக்காதா என்ன? வாய்ப்பில்லை. ஏனென்றால் சினிமா ஒரு கூட்டுக்கொண்டாட்டம். இலக்கியம் ஓர் அந்தரங்க ரசனையுலகம். மிக அரிதாகவே இலக்கியப்படைப்புகள் கூட்டாகக் கொண்டாடப்படுகின்றன. அதுகூட ஒரு சிறு ரசனைவட்டத்திற்குள்தான்.

ஆம், மேல்நாட்டில் அப்படி சிலசமயம் இலக்கியப்படைப்புக்கள் கூட்டுக்கொண்டாட்டத்திற்கு ஆளாகின்றன. ஆனால் அந்தக் கொண்டாட்டம் பெரும்பாலும் பெரும்பதிப்பாளர்களால் உருவாக்கப்படுவது. வணிக,அரசியல், சமூகக் காரணங்களால் செயற்கையாக நிலைநிறுத்தப்படுவது. பெரும்பாலும் அக்காரணங்கள் இலக்கியத்திற்குப் புறம்பானவையாகவே இருக்கும். இலக்கியம் ரசனைவட்டங்களில் இருந்து ரசனை வட்டங்களுக்கு மெல்லமெல்லத்தான் பரவுகிறது.

சினிமாக்கள் மிக எளிதாக மறக்கவும்படுகின்றன என்பதை நாம் கவனிப்பதில்லை. இலக்கியப்படைப்புக்கள் இயல்பாக நூறாண்டுக்காலத்தை கடந்துசெல்ல மிகப்பெரும்பாலான சினிமாக்கள் ஓராண்டுக்குள்ளேயே மறக்கப்படுகின்றன. அரிதாக பத்தாண்டுகளைக் கடந்துசெல்கின்றன. நினைவுகூரப்படுபவை கூட ஒரு கடந்தகால நினைவாகவே மீட்டப்படுகின்றன. சமகால ரசனையுடன் மீண்டும் பார்க்கப்படுவதில்லை.

சினிமாவிலும் ‘காலம்கடந்த’ கிளாஸிக்குகள் உண்டு. ஆனால் அவைகூட சினிமாவைப் பயில்பவர்களால் ரசிக்கப்படும் அளவுக்கு பொதுவான சினிமாரசனையாளர்களால் பார்க்கப்படுவதில்லை. ஓடிடி தளங்களை ஆய்வுசெய்யும் நிபுணர்கள் சொல்வது பத்தாயிரத்தில் ஒருவர்கூட ஓரிரு ஆண்டுகளுக்கு முந்தைய சினிமாக்களை தேடிப்பார்ப்பதில்லை என்றுதான். ஆகவேதான் அவர்கள் பெரும்பொருட்செலவில் புதிய சினிமாக்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஒரு சினிமா ரசிகன் ஐம்பதாண்டுக்காலம் நாளும் பார்க்கவேண்டிய நல்ல படங்கள் அமேசானில் இருக்கும். ஆனால் அவன் புதிய சினிமாவை மட்டுமே தேடுவான்.

பல காரணங்கள். முக்கியமாக தொழில்நுட்பம். இலக்கியத்திற்கு தொழில்நுட்பம் முக்கியமல்ல. ஏட்டில் அல்லது மின்திரையில் வாசித்தாலும் வாசிப்பனுபவம் நிகழ்வது கற்பனையில்தான். சினிமா தொழில்நுட்பத்தை சார்ந்துள்ளது. இன்று கருப்புவெள்ளை படங்களை பார்ப்பவர் பல்லாயிரத்தில் ஒரு ரசிகர் மட்டுமே என்கின்றன கணக்குகள். ஸ்கோப் அல்லாத படங்களையே அனேகமாக எந்த சினிமாரசிகரும் இன்று பார்ப்பதில்லை.

அடுத்த காரணம், சினிமா ஒரு கூட்டுக் கொண்டாட்டம் என்பதே. இன்று கொண்டாடப்படுவதைச் சேர்ந்து ரசிப்பதே அனைவருக்கும் பிடித்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாளும் பேச்சாக இருந்த கேம் ஆஃப் த்ரொன்ஸ் இன்று மறக்கப்பட்டுவிட்டது. ஒரு கொண்டாட்டத்தை இன்னொன்று மறைக்கிறது. நேற்றை இன்று முற்றாக மூடிவிடுகிறது. ஆகவே சினிமாக்கள் மறக்கப்படுகின்றன. சினிமாக்காரர்களின் சொந்த நரகம் அவர்களின் சினிமாக்கள் அவர்களின் கண்முன்னால் முற்றாக மறக்கப்படுவது. அவ்வாறு மறக்கப்பட்ட படங்களின் மறக்கப்பட்ட ஆளுமைகளை சினிமாவில் அனேகமாக தினமும் சந்திக்கிறேன்.

ஆனால் சில படங்கள் மீண்டெழுகின்றன. பெரும்பாலும் தேர்ந்தவிமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, அதைப் பார்ப்பதற்கான வழிகள் விளக்கப்படும்போது. தமிழில் அவ்வாறு மீண்டெழுந்த படங்கள் என்றால் கன்னத்தில் முத்தமிட்டால், இருவர், ஹேராம் ஆகியவற்றைச் சுட்டலாம்.

மலையாளத்தில் நான் எழுதிய படம் ஒன் பை டூ. அன்றைய இளம்நாயகனாகிய ஃபகத் ஃபாசில் நடித்த படம். ஆனால் கதைநாயகன் அன்று புதுமுகமாக இருந்த முரளி கோபி. ஃபகத் ஃபாஸிலுக்காக வந்த கூட்டம் ஏமாற்றமடைந்ததனால் படம் அன்று சரியாக ஓடவில்லை. தொடக்க விசையால் தப்பித்தது.

அத்தோடு அது சிக்கலான கதையமைப்பு கொண்ட படம். நானே ஒரு சோதனை முயற்சியாக அதை செறிவாக எழுதினேன். அதை  இயக்குநர் மேலும் செறிவாக்கினார். திரையரங்கில் அமர்ந்து பார்த்தவர்களுக்கு அது ஒரு மூளைச்சுழலாக இருந்தது. சிலர் பாராட்டினர், பெரும்பாலானவர்கள் சிக்கலாக இருக்கிறது என்றனர்.விமர்சனங்களும் இரண்டுவகையாகவே இருந்தன.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப்பின் முக்கியமான மலையாள திரைவிமர்சகர் ஒருவர் மலையாளத்தின் மிகச்சிறந்த திகில்சினிமாக்கள் பத்தில் நான்காவதாக ஒன் பை டூவை சொல்லியிருந்தார். அதை பார்ப்பதற்கான வழிகளையும் எழுதியிருந்தார். அதன்பின் ஒன் பை டூ தொடர்ந்து பார்க்கப்படுகிறது. ஓடிடி தளம் அதற்கு உகந்தது. நிறுத்தி நிறுத்தி பார்க்கலாம். ஒருநாள் கழித்துக்கூட பார்க்கலாம்.  இன்று அதைப்பற்றி நிறைய பேசப்படுகிறது

இப்போது அதைப்போல ஒரு திரைக்கதை வேண்டும் என பலர் கேட்கிறார்கள். எனக்கு ஆர்வமில்லை. நான் கற்றுக்கொண்டது இதுதான். ஒரு கதை மருத்துவமனைகளில் நகர்வதை மக்கள் விரும்புவதில்லை. மருத்துவமனை எதிர்மறைத்தன்மை கொண்டது. உளவியல்சிக்கல்கள் கொண்ட படங்கள் அரங்கிலும் அழுத்தத்தை உருவாக்குகின்றன. ஒன் பை டூ ஓடிய அரங்கில் நெளிந்துகொண்டே இருந்தனர் பார்வையாளர்கள்.

அத்துடன் உளவியல் சிக்கல்களை துப்பறிவதன் உளவியல்சிக்கல் என்பதெல்லாம் வணிகசினிமாவுக்கு கொஞ்சம் அதீதம். நான் சினிமாவுக்காக அத்தகைய கவனத்தை அளிக்க விரும்பவில்லை. சினிமா எளிதான பொழுதுபோக்கு. அதற்கு எளிமையான விஷயங்களே போதும்.

யூடியூபில் ஒன் பை டூவின் தமிழ் விமர்சனம் பார்த்தேன். யாரென்று தெரியவில்லை. ஆனால் கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தது.  அது காலத்தை கடந்துவந்திருக்கிறது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2021 11:31

July 30, 2021

முகம் விருது விழா

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

செயல் வழியாக இச்சமூகத்திற்குத் தங்களுடைய அர்ப்பணிப்பை செலுத்தி, லட்சியவாதத்தின் தோற்றுவாயை நீட்சிப்படுத்தும் சாட்சிமனிதர்களுக்கு ‘முகம்’ விருதை அளித்துவருகிறோம். மானுடத்தை வழிநடத்தும் அவர்களுடைய வரலாற்றுப் பெருவிசையின் முன்பு இக்கெளரவிப்பு சின்னஞ்சிறிது என்பதையும் அறிந்திருக்கிறோம். ஆயினும்கூட, ‘கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக!’ என்கிற வேதாகமத்தின் வார்த்தைகளைச் சத்தியப்படுத்துகிற மனிதர்களை பொதுவெளியில் முன்னிறுத்துவதை முக்கியத்துவமெனக் கருதுகிறோம்.

முகம் விருதை இம்முறை தோழமை ஸ்ரீநிவாச கோபாலன் அவர்களுக்கு வழங்குவதில் நாங்களும் நண்பர்களும் பெருமகிழ்வு கொள்கிறோம். அழிசி பதிப்பகத்தினை நிறுவி இவர் முன்னெடுக்கும் அருஞ்செயலானது காலாகாலத்திற்கும் நிற்கப்போகிற பேருழைப்பு. அச்சில் இல்லாத பழமையான மற்றும் அண்மைய தமிழ்நூல்களை மின்நூல் பிரதிகளாக மாற்றி பதிவேற்றி, நவயுகத் தலைமுறைகளுக்கான வாசிப்பு வடிவத்தில் அவைகளைப் பத்திரப்படுத்தும் இவருடைய செயற்பணி நம் போற்றுதலுக்குரியது.

அய்யா வி.பி.குணசேகரன் அவர்களின் நற்கரங்களால் இவ்விருது அளிக்கப்படவுள்ளது. வி.பி.ஜி அவர்களுடன் முதன்முதலாக அந்தியூர் மலைப்பகுதிகளுக்குச் சென்றுவந்த பிறகுதான் குக்கூ அமைப்பைத் துவங்கினோம். குக்கூவின் முதல் நிகழ்வில், முதல் முகம் விருதை அய்யா வி.பி.ஜி அவர்களுக்கே அளித்தோம். தொண்ணூற்று எட்டு வயது முதியவரும், வள்ளலாரின் தொண்டராக இருந்து கல்விக்காகத் தன் வாழ்வினைத் தொண்டளித்த ‘குலசை குப்புசாமி’ அய்யா அவர்களால் வி.பி.ஜிக்கு அவ்விருது கைசேர்க்கப்பட்டது.

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காகத் தன் வாழ்வினை அர்ப்பணித்துச் செயல்படுகிற லட்சியவாதி வி.பி.குணசேகரன் என்கிற வி.பி.ஜி. இன்றிருக்கும் அறம்-மாந்தர்களில் நம் காலத்து இளையவர் கூட்டத்திற்கு நாம் துணிந்து சுட்டிக்காட்டத்தக்க ‘வழிகாட்டும் ஆசிரியர்’ என்கிற சொல்லிற்கு முழுத்தகுதியுடையவர். உங்களுடைய ‘அறம்’ தொகுப்பினை ஈரோட்டில் நிகழ்ந்த நிகழ்வில் அய்யா வி.பி.ஜி வெளியிட, மருத்துவர் ஜீவா அவர்கள் பெற்றுக்கொண்டதை இக்கணம் மனதில் நினைத்துக் கொள்கிறோம். மனிதர்களின் வாழ்க்கையினை மீட்டளித்துக் காக்கிற பெருந்தகையின் கரங்களால் ஸ்ரீநிவாச கோபாலன் அவர்களுக்கு முகம் விருது வழங்கும் வாய்ப்பினை காலம் அருளியுள்ளது.

ஸ்ரீநிவாச கோபாலன் அவர்களின் நேர்காணலை மிகத் தேர்ந்த முறையில் நிகழ்த்தி பதிவுசெய்தளித்த விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களான கவிஞர் மதார் மற்றும் தோழமை இரம்யாவுக்கு குக்கூவின் அன்புகூர்ந்த நன்றிகள். உங்கள் தளத்தில் முகம் விருது அறிவிப்பும், ஸ்ரீயின் நேர்காணலும் வெளியான போது, உலகில் எங்கெங்கிருந்தோ நண்பர்கள் அழைத்துத் தங்கள் வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்துகொண்டார்கள்.  முகம் விருதளிப்பு நிகழ்வானது காலச்சூழ்நிலைகளால், அந்தியூர் வனப்பகுதியில் உள்ள தாமரைக்கரையில் நிகழவிருக்கிறது. பெருந்தொற்றின் பேரச்சம் நீங்காத இடர்களினால், குறைந்தளவிலான நண்பர்கள் பங்குபெறும் சிறுநிகழ்வென இதைத் திட்டமிட்டிருக்கிறோம்.

நம் சமகாலத்தில், சமூகத்திற்கான செயல்விசையாக அமைந்து, எத்தனையோ படைப்புமனங்களுக்கான அகவிசையைத் தூண்டி, வரலாற்றுமனிதர்களின் நீட்சியைத் தீர்மானிக்கும் வெளிச்சவழியில் பயணிக்கும் அழிசி ஸ்ரீநிவாச கோபாலன் அவர்களுக்கு முகம் விருதைப் பணிந்தளிப்பதை எங்கள் தன்னறப்பாதை என்றே அகமேற்கிறோம்.

(சிற்பம் – ஒளிப்படம் : பெனிட்டா பெர்ஷியாள்)

நன்றிகளுடன்,
குக்கூ குழந்தைகள் வெளி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2021 22:03

ஆசிரியர் வேறு படைப்பு வேறா?

அன்புள்ள ஜெ

வணக்கம்.கடந்த இரு வருடங்களாகவே உங்கள் தளத்தினை வாசித்து வரும் ஆரம்ப கட்ட வாசகி நான்.உங்களது படைப்புகளை பற்றி சிலாகித்து கூறும் சிலரே உங்கள் கருத்துக்களையும் விமர்சிக்கிறார்கள்.நீங்கள் வேறு உங்கள் படைப்புகள் வேறு என்று என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.உங்கள் படைப்புகளும் உங்கள் உரைகளும் என்னுள் நிறைய திறப்புகளை ஏற்படுத்தியுள்ளன.இருந்தாலும்‌ உங்களை பற்றிய சில விமர்சனங்கள் என்னிடம் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. நான் எவ்வாறு உங்களை அறிந்து கொள்வது? நான் உங்களை சித்திரை திருநாள் அன்று மதுரையில் சந்தித்தேள்.அன்று நீங்கள் நிகழ்த்திய உரையும் என் அகத்தினுள் பெரும் திறப்பினை. நிகழ்த்தியது. உங்களை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளவே இக் கேள்வியை எழுப்பி உள்ளேன்.தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

மதுபாலா

அன்புள்ள மது,

நம்முடைய பொதுச்சூழலை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இளையதலைமுறை அதைப்பற்றிய ஒரு தெளிவை அடைந்தாலொழிய சிந்தனைத்தளங்களில் முன்செல்ல முடியாது. இது ஜனநாயக யுகம். இங்கே வாக்கரசியலே அதிகாரத்தைத் தீர்மானிக்கிறது. வாக்கரசியலில் முதன்மையான விசை என்பது ஒருங்குதிரட்டப்பட்ட கருத்துதான். ஆகவே மக்களை ஏதேனும் ஒரு கருத்துநிலை சார்ந்து ஒன்றுதிரட்ட அத்தனை அரசியல்தரப்புகளும் முயல்கின்றன. அதிகாரம் வேண்டுமென்றால் கருத்துக்களை முன்வைத்து மக்களை திரட்டியாகவேண்டும் என்பது ஜனநாயகத்தின் விதி.

ஆனால், இது ஊடகங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள காலகட்டம். அச்சு ஊடகங்கள், காட்சியூடகங்கள் பேருருவம் கொண்டுள்ளன. சமூகவலைத்தளங்கள், இணைய ஊடகங்கள் மேலும் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளன. ஆகவே நம்மைச் சுற்றி அரசியல் கருத்துக்கள் பெருங்கடல்போல அலையடிக்கின்றன. நமக்கு அது ஒரு பொழுதுபோக்காக முதலில் தெரிகிறது. நம் அன்றாடவாழ்க்கையின் சலிப்பை அது போக்குகிறது. மெல்லமெல்ல அதற்கு நாம் அடிமையாவதை நாமே அறிவதில்லை.

எதிர்காலக் கனவுகள் சார்ந்தோ, உயர்ந்த இலட்சியங்கள் சார்ந்தோ மக்களைத் திரட்டுவது எளிதல்ல. அது உயர்ந்த ஆற்றல்கொண்ட மாமனிதர்களால் மட்டுமே இயல்வது, காந்தி போல. மக்களை அன்றாடத் தேவைகளின் பொருட்டு ஒருங்குதிரட்டுவதுகூட எளிதல்ல. ஏனென்றால் அவை மாறிக்கொண்டே இருப்பவை. மக்களை ஒருங்குதிரட்ட விரும்புபவர்கள் தங்கள் அதிகாரவிழைவுக்காக அதைச் செய்பவர்கள். அவர்களுக்கு இயல்பான குறுக்குவழி மக்களை எதிர்மறை உணர்ச்சிகளின் அடிப்படையில் திரட்டுவதுதான். மக்களிடையே கசப்பையும் காழ்ப்பையும் உருவாக்குவது.

அந்த எதிர்மறை உணர்ச்சிகளின் ஆற்றல் அளவிறந்தது. மக்கள் தங்கள் துயர்களுக்கும் சிக்கல்களுக்கும் தங்களுடைய குறைபாடுகளே காரணம் என நம்ப விரும்புவதில்லை. எல்லா துயர்களும் சிக்கல்களும் எதிரிகளால்தான் தங்களுக்கு வருகின்றன என்று நம்பவே விரும்புவார்கள். அவ்வாறு ஒரு சில எதிரிகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டிவிட்டால் அவர்களை மிக எளிதில் ஒன்றாகத் திரட்டலாம். அந்த எதிரிமேல் காழ்ப்பை உருவாக்கவேண்டும். அவர்களை வசைபாடிக்கொண்டே இருக்கவேண்டும், அவ்வளவுதான். அந்த வெறுப்பின் அடிப்படையில் ஒருபெருந்திரள் ஒன்றாக கூடிவிடும்.

வெறுப்பின் அடிப்படையில் திரட்டுவதில் உள்ள வசதிகள் எல்லையற்றவை. எதற்கும் எந்த தர்க்கமும் சொல்லவேண்டியதில்லை. எல்லாம் எதிரிகளின் சதி, எல்லாம் அவர்களின் திரிபு என்று கூறிக்கொண்டே இருந்தால்போதும். தங்கள் தரப்பை எதிர்ப்பவர்கள் அல்லது சந்தேகப்படுபவர்கள் அனைவரையும் எதிரிகளின் தரப்பினர் என்று முத்திரை குத்திவிடலாம். எந்த அறிவார்ந்த விவாதமும் இல்லாமல் ஆழமான உணர்ச்சிகளின் அடிப்படையில் பல்லாயிரம்பேரை தொகுத்துவிடலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வாறு தொகுப்பதற்கு அடிப்படைகளாக இருப்பவை முதன்மையாகச் சாதி, அதன்பிறகு மதம், மொழி. குறைந்த அளவுக்கு வட்டார உணர்வுகள். எந்த அரசியல் மூர்க்கத்தைப் பார்த்தாலும், அவர்கள் சாதி ஒழிப்பு அல்லது மத எதிர்ப்பு என எது பேசினாலும், அடித்தட்டில் இருப்பவை மேலே கூறப்பட்ட அடையாள அரசியல்சார்ந்த உணர்வுகள்தான். அவைதான் மூர்க்கமாக, மிகையாக வெளிப்படுகின்றன.

பொழுதுபோக்குக்காக அரசியலைக் கவனிக்க ஆரம்பிப்பவர்கள் மிக எளிதாக அந்த மாபெரும் வலைக்குள் விழுந்துவிடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் ஈடுபடவேண்டும் என்றால் ஏதேனும் ஒரு தரப்பை எடுத்தே ஆகவேண்டும். அப்போதுதான் கட்சிகட்டி உணர்ச்சிக்கொந்தளிப்பை அடையமுடியும். தன் சாதி, மத, மொழி, இன அடிப்படையில் ஒரு தரப்பை எடுத்தபின்னர் அதை மெல்ல மெல்ல நம்ப ஆரம்பிக்கிறார்கள். எதிரிகளுடன் பூசலிடும்பொருட்டு தன் தரப்பை ஆணித்தரமாக வலியுறுத்துவார்கள். மெல்லமெல்ல அதை அவர்களே நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அதுவாகவே ஆகிவிடுவார்கள். நாடகத்தில் நடிப்பவன் கதாபாத்திரமாக ஆகிவிடுவதுபோல.

ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டு காலகட்டங்களில் பெரிய வெறுமை உருவாகிறது. முதலில் இருபதை ஒட்டிய வயதுகளில். அவன் சிறுவனாக இருந்து ஒரு கட்டத்தில் வளர்ந்தவனாக உணர்கிறான். ஆனால் அவனுக்கென எந்த அடையாளமும் இருப்பதில்லை. ‘நான் கவிஞன்’ ‘நான் ஒரு பொறியாளன்’ ‘நான் ஒரு கலைஞன்’ என்றெல்லாம் அவனால் நம்பிக்கையுடன் சொல்லமுடிவதில்லை. படித்திருப்பான், வேலையில் இருப்பான். ஆனால் அதிலெல்லாம் அவனுக்கு பெரிய இடம் ஏதும் இல்லை என அவனே நன்றாக அறிந்திருப்பான். அவனுக்கு அடையாளம் தேவை

அவன் தன்னை ஓர் ‘ஆண்மகன்’ ஆக உணரவேண்டியிருக்கிறது. அதற்குச் அடையாளம் இருந்தே ஆகவேண்டும். ஆகவே சட்டென்று அவன் அரசியல் அடையாளத்தைப் பிடித்துக்கொள்கிறான். தன்னை ஓர் இடதுசாரிப் புரட்சியாளனாக, தமிழ்த்தேசியனாக, திராவிடவாதியாக, இந்துத்துவப் போராளியாக கற்பனை செய்துகொள்கிறான். அப்போது அவனுக்கு ஒரு பெருமித உணர்வு உருவாகிறது. பெருந்திரளில் ஒருவனாக இருக்கும் உணர்வு ஏற்படுகிறது. அவனுக்கு ஒரு கும்பலும் கிடைக்கிறது. ஆகவே மிகையான ஆவேசத்துடன் அவன் அந்த அடையாளத்தை பொதுவெளியில் முன்வைக்கிறான்.

கவனியுங்கள், இப்படி தன்னை முன்வைக்கும் எவரும் எந்தத்துறையிலும் முக்கியமானவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு நல்ல மருத்துவர், நல்ல பொறியாளர், நல்ல எழுத்தாளர் இந்த வகையான மலிவான அடையாளம் ஒன்றை அரசியலில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

இரண்டாவது காலகட்டம் நாற்பதை ஒட்டிய வயதுகளில் வருகிறது. காமம், குடும்பம் எல்லாம் கொஞ்சம் சலிப்புற்றுவிட்ட காலம் இது. தொழிலில் பெரிய சாதனை எல்லாம் சாத்தியமில்லை என்று தெரியவந்திருக்கும். எந்தத்துறையிலும் தான் ஒரு சாதனையாளன் அல்ல, தனக்கென ஒரு இடம் இங்கே இல்லை என உணர்ந்திருப்பான். அப்போது மீண்டும் அரசியல்வெறி உருவாகிறது. சமூகவலைத்தளங்களுக்கு வருகிறான். அங்கே அரசியல்பூசல்களில் மெய்மறந்து திளைக்கிறான். டிவியில் அரசியல்சண்டைகளை நாடகம்போல ரசிக்கிறான்.

இது வாழ்க்கையின் மாபெரும் வெறுமையை அவன் நிரப்பிக்கொள்ளும் முறை. அவனுக்கு கலை, இலக்கியம் எதிலும் ஆழமான ஈடுபாடு இருக்காது. தத்துவம், வழிபாடு, சேவை என ஆன்மிகத்தின் எந்த தளத்திலும் ஆர்வமோ பயிற்சியோ இருக்காது. எந்த பண்பாட்டுப் பயிற்சியும் இல்லாத பெண்கள் நாளெல்லாம் சீரியல் பார்த்து எதிர்மறையான உணர்ச்சிகளில் திளைப்பதுபோலத்தான் இவனும் அரசியலில் ஈடுபட்டிருக்கிறான். ஆனால் தான் உருப்படியான ஒன்றைச் செய்வதாக நம்பிக்கொண்டு பெண்கள் பார்க்கும் சீரியல்களை பழிப்பான்.

பரிதாபத்திற்குரியவர்கள் இந்த ஆண்கள். இவர்களில் சிலருக்கு இலக்கியம் வெறும் செய்தியாக மட்டும்  தெரிந்திருக்கும். இலக்கியரசனையென ஏதும் இருக்காது. இலக்கியவம்புகள், அரசியல் சர்ச்சைகள் வழியாக இலக்கியவாதிகளைப் பற்றி ஓரிருவரி அபிப்பிராயங்களை தெரிந்துகொள்வார்கள். அதை தாங்களே வாசித்து உருவாக்கிக்கொண்ட பாவனையில் சொல்வார்கள். நீங்கள் குறிப்பிடும் நபர்கள் பெரும்பாலும் அத்தகையவர்களே. அவர்களை ஒருவகையான உளச்சிக்கல் கொண்ட மனிதர்கள் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு பொருட்படுத்தும்படியான தரப்பாக அல்ல.

இதற்கு அப்பால் மிகச்சிலர் என்னுடைய கருத்துக்களுடன் முரண்பட்டு என் படைப்புக்களில் ஈடுபாடு கொண்டு வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். எவ்வாறு என இலக்கியம் எப்படி எழுதப்படுகிறதென தெரிந்துகொண்டால் அது உங்களுக்குப் புரியும். இலக்கியப் படைப்பில் ஒரு படைப்பாளி முன்வைப்பது அவன் கற்று, தெளிந்து ஏற்றுக்கொண்டவற்றை அல்ல. அவனுடைய திட்டவட்டமான நிலைபாட்டை அல்ல. இலக்கியப்படைப்பு என்பது ஒருவகை கனவு என எடுத்துக்கொள்ளுங்கள். மொழியில் நிகழும் ஒரு கனவு. ஒரு படைப்பு என்பது அந்த எழுத்தாளன் மொழிவழியாக கண்ட ஒரு கனவு. நம் கனவு நம் கட்டுப்பாட்டில் இல்லை அல்லவா? நாம் நினைப்பதே நம் கனவில் இருக்கவேண்டும் என்பதில்லை அல்லவா?

எழுத்தாளன் எல்லாரையும்போல ஒரு அன்றாட உள்ளம் கொண்டவன். அவனுக்கு பல கருத்துக்கள் இருக்கும். அவை அவன் தன் வாழ்க்கையிலிருந்து பெற்றுக்கொண்டவையாக இருக்கும். அவனுக்கான ஓர் அரசியலும் இருக்கலாம். ஆனால் அவன் எழுதுபவை அப்படியே அந்த கருத்துக்களை வெளிப்படுத்துபவை அல்ல. சிலசமயம் நேர்மாறாகவும் இருக்கலாம். அவனே அறியாத நுட்பங்கள் அதில் வெளிப்படலாம். ஆகவே எழுத்தை எழுத்தாளனிடமிருந்து பிரித்தே பார்க்கவேண்டும். எழுத்து தன்னளவில் முழுமையான ஒன்று.

நான் என் எழுத்துடன் முரண்படாமல் வாழ முயல்பவன். முடிந்தவரை வெளிப்படையாக. ஆனால் சில எழுத்தாளர்கள் அவ்வண்ணம் இல்லாமல் இருக்கலாம். அவர்களுடைய தனிவாழ்க்கையில் அவர்கள் வேறொன்றாக இருக்கலாம். அதைக்கொண்டு அவர்களின் எழுத்தை மதிப்பிடக்கூடாது. இது இலக்கியவிமர்சனத்திலுள்ள விதிகளில் ஒன்று.

ஒருவர் அழுத்தமான அரசியல்நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம். அந்த அரசியல்நம்பிக்கையை நான் ஏற்காமல் இருக்கலாம். அந்நிலையில் அவர் என்னை மறுக்கலாம். ஆனால் என் எழுத்தை வாசிக்கும்போது அவர் அதில் ஆழமான இலக்கிய அனுபவத்தை அடையலாம். அவ்வாறு நிகழ்கையில் அவர் என்னை மறுப்பவராகவும் என் எழுத்தை ஏற்பவராகவும் ஆகலாம்

ஏனென்றால் இலக்கியப்படைப்புகள் அரசியல்வெளிப்பாடுகள் அல்ல. அரசியலைத் தவிர வேறொன்றும் தெரியாதவர்கள் இலக்கியப்படைப்புகளில் அரசியலை மட்டுமே பார்ப்பார்கள். இலக்கியப்படைப்புக்கள் பொதுவாக மானுடவாழ்க்கையின் தருணங்களையும், மானுடர்களின் நுண்ணிய இயல்புகளையும், அவர்களின் உள்ளத்தின் ஆழங்களையும், உணர்ச்சிகளையும்தான் பேசுகின்றன. வரலாற்றுப்பெருக்கை, இயற்கையின் பிரம்மாண்டத்தை, பிரபஞ்ச தரிசனத்தை முன்வைக்கின்றன. அவற்றுக்கும் இங்கே உள்ள எளிமையான அதிகார அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஒருவர் உண்மையிலேயே நுண்ணுணர்வு கொண்டவர் என்றால் எளிய அதிகார அரசியலை இலக்கியப்படைப்பின்மேல் போட்டுப்பார்க்கமாட்டார். அந்த அரசியல்நிலைபாடுகளை அப்பால் நிறுத்தி வாழ்க்கையை அறியும் ஆவலுடன் இலக்கியப்படைப்பை வாசிப்பார். அவ்வாறு வாசிப்பவருக்கு அந்த ஆசிரியரின் கருத்துக்கள் ஏற்பற்றவையாக இருந்தாலும் அவருடைய படைப்புக்கள் இலக்கிய அனுபவத்தையும் அறிதல்களையும் அளிப்பவையாகவே இருக்கும்.

அத்தகைய நுண்ணுணர்வு கொண்டவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும். அவர்கள் ஓர் இலக்கியப்படைப்பு எத்தனை அரிதானது என அறிந்திருப்பார்கள். அதை உருவாக்கும் படைப்பாளி என்னென்ன வகையான அகப்பயணங்கள் மற்றும் உணர்வுநிலைகள் வழியாக அதை சென்றடைந்திருப்பான் என உணர்ந்திருப்பார்கள். ஆகவே ஒருநிலையிலும் அவர்கள் இலக்கியப்படைப்பாளி மேல் காழ்ப்பும் கசப்பும் கொண்டிருக்க மாட்டார்கள். சில்லறை வசைகளையும் அற்பத்தனமான ஏளனங்களையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.அது பண்படாதவர்களின் இயல்பு என அறிந்திருப்பார்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2021 11:35

குகை, கடிதங்கள்

குகை வாங்க

 அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

குகை ஒரு கனவு.  சொந்தமாக வீடு கட்ட மனிதன் தெரிந்துகொள்ளுமுன் இயற்கை அமைத்துத் தந்த இலவச வீடு அல்லது தெரிந்து கொள்ள வாய்ப்பற்ற மற்ற விலங்குளுக்குத் தரப்பட்டு மனிதனால் ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்டது.  அல்லது ஒரு விலங்கை விதை எனப்பெற்று மனிதன் என்று புறம்தந்த புவி அன்னையின் கருப்பை அது.  குகையை விட்டு மனிதன் இடம் மாறிய பின் அது அங்கே கள்ளர் குகை ஆகியது இங்கே சித்தர் முனிவர் தவசிகள் இடம் ஆயிற்று.  பக்தரின் இதயக் குகையில் வாழும் சிங்கமென இறைவன் வர்ணிக்கப்பட்டான்.  தன் சொந்த குகையை சுமந்து சென்று உள்ளடங்கும் ஆமை புலன் அடக்கத்திற்கு உவமை காட்டப்பட்டது.

இக்கனவு எனக்கு மட்டும் அல்ல இது வேறு பலருக்கும் பொதுக்கனவு.  ஒரு கனவு பலருக்கும் பொது நிகழ்வாக இருக்குமா என்ன? ஏன் இருக்காது? ஒருவர் பாதையில் வர மற்றவர் நிழல் இருள் என மறைந்து விட வேண்டும் – நியதி.  வெளியேற வேண்டுமானால் ஒருவர் தானே தன் முடிவில் வெளியேற வேண்டும் ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்யக்கூடாது.

ஆழம் தூய்மையாக இருக்கிறது.  கிளறபடும் குப்பைகள் எப்போதும் மேற்பரப்பில் இருக்கிறது.உள்ளும் புறமும் ஒன்று.  விண்ணும் மண்ணும் ஒன்று.  யாவும் இருள் கொண்டு அறியப்படுகிறது..  ஒற்றை இருப்பாய், பேரருளாய்.  ஒரே சமயத்தில் ஏகமும் அனேகமுமாய்.  நானும் கூட பேரருளின் நிழல் என சிரித்துக் கொள்வேன், சரி…பேசாமல் இரு என்றும் சொல்லிக்கொள்வேன்.

இருள் பெருங்கருணை விண் என்று பேருருவாய் நின்றபோதும் புத்திசாலிகள் விண் நோக்கி செல்லவில்லை. அவ்வளவு தூரமும் காலமும் தேவையில்லை.  மண்ணில் புகுந்து இருள் கண்டார்கள்.  தூரமும் இல்லை காலமும் இல்லை.  இறங்கி இணைந்து கொண்டது விண்.  நுண்ணறிவு – பேரருள் – பேரிருள்.

விண்ணிலும் கூட ஒரே பேரிருளில் புதைந்துதிருத்து அவ்வப்போது மேலிட்டிப்பார்த்து ஒருமையில் மூழ்குகின்றனவோ விண்மீன்கள்?அருணாசலத்திற்குள் ஒரு பெருநகர் கண்டேன் என்று ஒரு முனிவன் தன் கனவைச் சொலி இருக்கிறான்.

பள்ளமெல்லாம் தோண்டமாட்டேன்.  போர்வையில் புதைந்து கண்களை மூடுவேன். அப்புறம் ஆகாயம்.  கனவுக்கு நன்றி.

இருந்தாலும் கதை முடிவு – அவன் கிறுக்கன் என்பதற்கு கதை தரும் புற ஆதரங்களை புறக்கணித்து விடுகிறேன்.  சித்தன் என்பதற்கு கதை தரும் அக ஆதாரங்களை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.  எனவே, செல்ல பழகியபின் அப்படியொன்றும் பறிபோய்விடக் கூடியது அல்ல ஆழம்.

அன்புடன்

விக்ரம்

கோவை

அன்புள்ள ஜெ,

குகை கதையை இப்போதுதான் மின்னூலாக வாசித்தேன். நான் 1998 வாக்கில் ஒரு சின்ன உளச்சிக்கலுக்கு ஆளானேன். அதை இப்போது பேசவிரும்பவில்லை. ஆனால் அது ஒரு ரகசிய அனுபவம். மண்ணுக்கு அடியிலேயே மண்புழு போல வாழ்ந்ததாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். அதை அப்படியே குகை என்ற கதையில் வாசித்தேன். அச்சு அசலாக அது என் அனுபவம். மனக்குகைதான்.

ஆனால் இன்றைக்கு அது ஒரு கொடுங்கனவாக இருந்தாலும்கூட அந்த அனுபவம் வழியாக நான் அடைந்த தெளிவும் சில புதிய புரிதல்களும் முக்கியமானவை. என் இன்றைய வாழ்க்கையை அதுதான் தீர்மானிக்கிறது

அனைவருக்கும் அப்படி ஒரு குகைவாழ்க்கை அனுபவமாகாது. அது நல்லதும் அல்ல. ஆனால் குகை போன்ற கதை வழியாக அதை அறியலாமென நினைக்கிறேன்

சாந்தகுமார்

குகை முன்னுரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2021 11:31

சிறுமை, கடிதங்கள்

சிறுமையின் ஆதங்கங்கள்

அன்புள்ள ஜெ

சிறுமையின் ஆதங்கங்கள் கட்டுரையை வாசித்தபோது நான் நினைத்ததையே சொல்லியிருப்பதாக உணர்ந்தேன். நான் என் நண்பர்களுடன் இலக்கிய விவாதங்களில் எப்போதுமே சொல்லிவருவது இதுதான். இந்த அரசியல்சார்ந்து எழுதும் கும்பல்களுக்கு ஒரு அசாதாரணமான மனநிலை உள்ளது. அதாவது அவர்கள் மட்டும் ஏதோ விசேஷமான ஒரு அறிவுத்திறனால் அரசியல்நுண்ணறிவை அடைந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அதெல்லாம் கிடையாது. வாசகர்களுக்கு இவர்கள் சொல்லும் அரசியல் எல்லாம் தெரியாது. இவர்கள் அவர்களின் கண்ணைத் திறந்துவிடும் புனிதகடமை கொண்டிருக்கிறார்கள்.

அது அப்படியே நம்மூர் மதப்பிரசங்கிகளின் மனநிலை. சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். தலைதலையாக அடித்துக்கொள்வார்கள். பார்க்கும்போதெல்லாம் முன்பு எரிச்சல் வரும். பிறகு இளக்காரம்தான். நல்ல இலக்கியவாசகன் வாசித்திருக்கும் நூல்களின் அட்டையைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு ஐம்பதுபக்கம் பொறுமையாகப் படிக்கவோ படித்ததைப் புரிந்துகொள்ளவோ அறிவிருக்காது. அறிவில்லாமலிருப்பதே ஒரு தன்னம்பிக்கையை அளித்துவிடுகிறது. ஆகவே எங்கும் எவரிடமும் துணிந்து கருத்துசொல்ல ஆரம்பிக்கிறார்கள். அறிஞர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். தங்களுக்கு புரியாதவற்றை பழிக்கிறார்கள். ஏளனம் செய்கிறார்கள். இந்த முட்டாள்கள் நம்மைச்சூழ்ந்திருக்கிறார்கள். இந்தச் சத்தங்களை கேட்காமலிருக்கவும் முடியாது. நம் காலகட்டத்தின் மிகப்பெரிய சிக்கலே இந்த சத்தங்களுக்குச் செவிகளை மூடிக்கொண்டு நம் வழியே செல்வதுதான்.

என்.ஆர்.ராஜ்

 

அன்புள்ள ஜெ

அரசியல்நம்பிக்கை மட்டும் போதும் எவரிடமும் எதையும் பேசலாம், எவரையும் ஆலோசனைசொல்லி வழிநடத்த முயலலாம் என்னும் எண்ணம் கொண்ட அறிவிலிகளால் முகநூல் நிறைந்திருக்கிறது. அந்தக்கும்பலுக்குச் செவிசாய்த்தால் நம் நேரம்தான் வீணாகும். அவர்களுக்கு எதுவும் தெரியாது. வாசிக்கமாட்டார்கள். வாசித்தால் புரியாது. ஒன்றும்செய்யமுடியாது. கற்பாறையில் ஏன் தலையை முட்டிக்கொள்ளவேண்டும்?

எம்.ராஜேந்திரன்

 

அன்புள்ள ஜெ,

நலம்தானே? சிறுமை பற்றிய கட்டுரை வாசித்தேன். இந்தக் கும்பலுக்கு இவர்கள் கக்கும் காழ்ப்புக்கும் கசப்புக்கும் இலக்கிய அங்கீகாரம் வேறு தேவைப்படுகிறது. இவர்கள் இலக்கிய வாசகனை என்னதான் நினைத்திருக்கிறார்கள்? இவர்கள் சொல்லும் நாலாந்தர அரசியல் காழ்ப்புகளை அப்படியே வந்து கவ்வி விழுங்குபவர்கள் என்றா? இவர்களைப்போல ஆயிரம் பதர்களைப் பார்த்தபிறகுதான் இலக்கியவாசகன் வாசிக்கவே ஆரம்பிக்கிறான். அவனுடைய வாசிப்பே இந்த தகரடப்பாக்குரல்கள் மேல் உருவாகும் ஒவ்வாமையிலிருந்துதான் தொடங்குகிறது. இலக்கியத்தில் அவன் எதிர்பார்ப்பது அம்மஞ்சல்லி அரசியலையும் காழ்ப்புகளையும் அல்ல. வாழ்க்கைச்சித்திரத்தையும் அதன் நுட்பங்களையும் மொழியின் அழகையும்தான். அதை இந்த கூட்டத்திடம் புரியவைக்கவே முடியாது

சத்யநாராயணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2021 11:31

கதைகள், கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு தமிழரசி எழுதுவது

எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் 14 வயசு வித்தியாசம். அம்மாவை 16 வயசுல கல்யாணம் முடிக்கும்போது அப்பாக்கு 30 வயசு. அம்மா தாய் தகப்பனில்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் வளர்ந்தவர்கள். அப்பா அவங்க வீட்டாருக்கு ஒரு காசு செலவு வைக்காமல் எல்லாம் தானே செய்து கல்யாணம் முடித்தார்கள். அப்பா லட்சிய கணவனோ, லட்சிய தகப்பனோ கிடையாது. எல்லா கல்யாண திருக்குணமும் உண்டு.
ஆனால் எங்கம்மாவுக்கு அப்பா மீட்பர். தெய்வத்துக்கு நிகர். அப்பா 82 வயதில் இறக்கும் வரை உள்ளங்கையில வைச்சி தாங்கியிருக்காங்க. அம்மா சொல்லுவாங்க மகராசன் எந்த  நேரத்துல என்கழுத்துல தாலி கட்டினாரோ அதுலயிருந்து என் வயிறு ஒரு நேரம் வாடுனதில்லை. ஒரு சபையில தலை குனிஞ்சது கிடையாது. இன்னார் பெண்டாட்டின்னு தலை நிமுந்து நின்னேன். இந்த பிறவி மட்டுமில்லை இனி வரும் பிறவியிலெல்லாம் என் தோலை செருப்பா தைச்சி போடுவேன் அப்படின்னு. அம்மாவை இப்படி குளிர வைத்தது எது ?

அதேதான் ஓலைக்காரியை தீயா எரிய வைச்சிருக்கு. அடிமையாயிருந்தவங்களை 400 ரூபாய் கொடுத்து மீட்டு வந்து கல்யாணம் முடித்த கணவர் மீது ஓலைக்காரி என்ன மாதிரியான நேசத்துடன் இருந்திருப்பாங்க. தலையிலயும் நெஞ்சிலயும் அடித்து ஓடிய அந்த கணம் கொதித்த கொதிப்பு 82 வயதில் சாகும் அவரை அடங்கவேயில்லை.

வார்த்தையா சொன்னாகூட ஆறிரும்னு வாயை இறுக்கி மூடி ஒரு வார்த்தை சொல்லாம எரிமலையா உள்ள கொதிக்க வைச்சியிருக்காங்க. அதுலயிருந்து வரும் அனல்தான் ஓலையை இழுத்து இழுத்து முடைய வைக்குது. ஓலையை விட்டுட்டு பனையோலை பெட்டி ,கொட்டான்னு மாறியிருந்தா கூட அவங்களும் கொஞ்சமாவது மாறியிருக்கலாம். அந்த தீயிலயிருந்து மாறாமயிருந்து அதுலயே பொசுங்கியிருக்காங்க. ஓலையை பலகையா மாத்தும் அளவு நெஞ்சுக்குள்ளயிருக்கும் கனம் விரல்ல விசையா வெளிப்படுது.

நன்றி.

தமிழரசி.

 

அன்புள்ள ஜெ

நூறுகதைகளையும் இப்போதுதான் வாசிக்கிறேன். முன்பு தொடராக வந்தபோது வாசித்தேன். இப்போது அவை மின்னூலாக தனித்தனி தொகுப்புகளாக கிடைக்கின்றன. மின்நூல்களாக வாசிக்கும்போது இன்னொரு அனுபவம் கிடைக்கிறது. ஒரேவகையான கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒரு நாவலை வாசிக்கும் அனுபவம் ஏற்படுகிறது. கதையின் வரலாற்றுச் சூழலும், கதையின் வடிவங்களும் அப்படியே நினைவில் நீடிக்கின்றன. ஒரு கதையில் இருந்து இன்னொரு கதைக்கு இயல்பாகச் செல்ல முடிகிறது

மிகச்சிறப்பான அனுபவமாக உள்ளது இந்த வாசிப்பு

ஆனந்த்குமார்

குமரித்துறைவி வான் நெசவுஇரு கலைஞர்கள் பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆனையில்லா முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2021 11:31

அட்டன்பரோவின் ‘லைஃப்!”

இனிய ஜெயம்

சென்ற வருடம் துவங்கிய முடக்க சூழல் நல்கிய அறை வாசத்தில் இன்றுவரை இரவுகளை ஒளிரச் செய்தவர்களில் முதன்மையானவர் டேவிட் அட்டன்பரோ. அவ்வப்போது, அவரது துவக்ககால ஆவணங்கள் துவங்கி அண்மையில் அவரது 95 வயதில் கடந்த 100 வருட சூழலியல் சரிவை சுட்டி, மீட்சிக்கான வழி வகைமைகள் குறித்து அவர் வெளியிட்ட life on our earth வரை பெரும்பாலானவற்றை மீண்டும் பார்த்தேன்.

கடந்த 15 வருடம் முன்பு நிகழ்ந்த dvd புரட்சிகளில் மிகவும் மகிழ்ந்த ஆத்மாக்களில் நானும் ஒருவன். பக்கத்து புதுவையில ஞாயிரு சந்தைகளில் 25 ரூபாய்க்கு dvd கள் பொலியும். நான் டேவிட் அட்டன்பரோவின் பெரும்பாலான ஆவணத் தொடர்களை அங்கேதான் சேகரித்தேன். இன்று மொபைலின் ott புரட்சி, மற்றும் you tubeம் இத்தகு ரசனைக்கு இன்னும் விரிவான தளம் அமைத்து தருகின்றன. முன்னர் you tube இல் அவ்வப்போது uplode ஆகும் அபூர்வ பைரேட்டட் பிரதிகள்காக இரவுகளில் துழாவிக் கொண்டிருப்பேன். இப்போது அந்த நிலையிலும் மாற்றம். Net flix, bbc போன்ற முக்கிய நிறுவனங்கள் சொந்த தளங்கள் வழியே பல அபூர்வங்களை இலவசமாக அனைவரும் காண அளிக்கிறது.

உதாரணமாக, இந்த சுட்டி.  bbc தனது தளத்தில் உயிர் சூழல் ஆவணங்களில் நிகழ்ந்த 50 தலையாய தருணங்களை தொகுத்து அளித்திருக்கிறது.

 

நம் காலத்து மெய்யாசிரியர்களில் முதன்மையானவர் டேவிட் அட்டன்பரோ. டார்வினின் உயிர் தளிக் கொள்கைக்கு ஆதரவாளர். Rise of animals மற்றும் டார்வினின் life of tree ஐ அவர் விளக்கிய ஆவணங்கள் அதன் அழுத்தமான சான்றுகள். கடந்த மாதங்களின் அட்டன்பரோ ஆவணங்கள் வழியே நிகழ்ந்த ஒட்டு மொத்த அனுபவம் எனக்குள் நேர்மாறான கருத்துப் பதிவையே அழுத்தம் பெற வைக்கிறது.

நாம் காணும் இந்த புற உலகின் உயிர்ச்சூழல் மண்டலம் முழுவதையும் தர்க்க ஒருமையுடன்  இன்டர்ப்ரேட் செய்யும் ஒரு பெருங்கதையாடல் என்னும் வகையில் டார்வினின் பரிணாம கொள்கை மானுட அறிவு பாய்ச்சலுக்கு பெரும் பங்காற்றி இருக்கிறது. அதற்கு வலிமை சேர்த்தது பிரபஞ்ச தோற்ற மூலம் என்ற big bang கொள்கை நோக்கி நிகழ்ந்த உயர் கணித சாதனைகள். ஸ்டீபன் ஹாக்கிங் அவரது  இறுதி காலங்களில் ஒரு மூட்டை உயர் கணித ஈவுககளை அறிவு துறை மேல் கவிழ்தி இதையே சொன்னார். அந்த தர்கத்தின் பகுதியாக பிசிர் இன்றி இணையக் கூடிய தர்க்கம் டார்வினுடையது.

எல்லாம் சரிதான் ஆனால் இது அந்த பேருண்மையின் ஒரு பகுதியாக மட்டுமே ஏன் இருக்கக் கூடாது? மற்றொரு தர்க்க வரிசை என்ற ஒன்று இல்லாத பேருண்மை உண்டா என்ன?. நிச்சயம் இருக்கும். ஆனால் உரிய தர்க்க முறைமை இன்றி மைய்ய சிந்தனை முறைமைக்கு வெளியே  விளிம்பில் இருக்கும். அது உரையாடலுக்கு வெளியே நிற்பதில் உள்ள முதல் சிக்கல் இந்த மையமான சிந்தனைக்கு எதிர் வாதம் முன் வைக்கும் எதுவும் கிறிஸ்துவ இறையியல் பின்புலம் கொண்டிருப்பதே.

ஆக இந்த மைய்ய சிந்தனைக்கு எதிர் வாதம் கொண்ட எதுவும் இத்தகு மத நம்பிக்கை போன்ற எளிய அடிப்படை வாதங்களுக்கு வெளியே மைய சிந்தனை கைக்கொள்ளும் அதே தர்க்க முறையில் இயங்க வேண்டும். அறிவு × நம்பிக்கை எனும் எதிர் நிலைக்கு பதில் அறிவு × அறிவு எனும் எதிர் நிலையில் உருவாகி வரவேண்டும்.

இதில் உள்ள சிக்கல் மேலை தத்துவ  பண்பாட்டில் உள்ள ‘தன்’ மைய்ய நோக்கு. அதில் எழுந்த எளிய எதிரிடை. உதாரணத்துக்கு மணிமேகலையில் உள்ள கணக்கர் திறம் கேட்ட காதை. இன்று மேலை அறிவியல் தத்துவ மரபில் இத்தனை பன்முகம் கொண்ட இன்டர்பிரேஷன் கு இடமே இல்லை எனும் வகையில் big bang, டார்வினிசம்,  உயர் கணிதம் என அனைத்தும் ‘நிறுவப்பட்ட’ உண்மை போல கவிந்து மூடிக் கிடக்கிறது.

தாராளவாதம் × பொருள்முதல் வாதம் என்ற இரு பொருளாதார எதிரிடை சக்திகள் வழியே முரண் இயக்கத்தில் உச்சம் தொட்ட பிரபஞ்ச அறிவியல் தேட்டங்கள், இன்று எதிர் நிலை என்ற ஒன்றே இன்றி, கிட்டத்தட்ட  இருக்கும் எல்லாமே கணித அடிப்படையில் நிறுபவப்பட்டு உறைந்த நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.

மேலை மரபில், பரிணாம விதி போல ஒவ்வொரு அலகிலும், எதிரான மாற்று சிந்தனைகள் தத்துவ பலத்துடன் எழ வேண்டிய சூழல் இன்று. பரிணாம கோட்பாட்டுக்கு எதிரான தரவுகளை பைபிளை முன் வைத்து தேடுவதை விடுத்து, அறிவு தர்க்கங்களை முன்வைத்து தேடலாம். இத்தனை பன்முகமும் ‘ஒரே’ மூலம் கொண்டதாக இருந்தே ஆகவேண்டும் என்ற விதி உண்டா என்ன? பரிணம கோட்பாடு இங்கே செயல்படும் பல்வேறு விதிகளில் ‘ஒன்று’ மட்டுமேயன்றி அதுவே சர்வ ரோக நிவாரணி அல்ல என்பதே, கடந்த மாதங்களில் கண்ட இந்த ஆவணங்கள் எனக்கு உருவாக்கிய அழுத்தமான பதிவு.

மனிதன் குரங்கிலிருந்து ‘பரிணமித்து’ வந்திருக்கலாம். ஆனால் பறவை மீனிலிருந்து ஊர்வனவாக பரிணமித்து அதிலிருந்து வளர்ந்து பறவையாக வளர்ந்தது என்பதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. மீனுக்குள் மீன் வகைமைக்குள், ஊர்வணவற்றில் ஊர்வன வகைமைக்குள், செடி கொடிகளில் அந்த வகைமைக்குள் என சிறிய எல்லகைக்குள் பரிணாமம் செயல்பட்டிருக்கலாம். ஆனால் ‘ஒன்றே’ தான் செடியாகவும் டினோசராகவும் பறவையாகவும் மனிதனாகவும் பரிணமித்தது என்று ஏன் கொள்ள வேண்டும்? பிரபஞ்சத்தின் படைப்புத்திறன் அவ்வளவு கஞ்சத் தனம் கொண்டதா என்ன? ‘முதல் உயிர்’ (இதுவும் இன்றுவரை யூகம்தான்) எனும் ரசாயன குழம்புக்கே குறைந்தது மூன்று ‘தனித் தனி’ களின் சேர்க்கை தேவைப் படுகிறது. இத்தனை ‘தனி’ கள் கூடி முதல் உயிர் தோன்றும் என்றால் ஏன் பல்வேறு ‘தனிக்கள்’ கூடி இப்போது நாம் காணும் உயிர் சூழல் பரிணமித்திருக்கக் கூடாது?

இன்ய ‘நிறுவப்பட்ட’ மேலை மரபின் பெருங்காதையாடலுக்கு எதிர் நிலையில், //முதல் முடிவு இல்லா ஆதி மகா இயற்கையான இந்த பிரபஞ்சம் அனேகாந்தம் கொண்டது//. என்ற நிலை ஒன்றும் ஏன் இருக்கக் கூடாது?  சமணத்திலும் பௌத்தத்திலும் உள்ள இக்கூறுகள் தான் இனி ஒற்றைத் தர்க்க மெய்மை நோக்கில்  உறைந்து கொண்டே போகும் மேலை அறிவியல் தத்துவ மரபின் எதிர்நிலையாக வளர சாத்தியம் கொண்ட விதைகள்.

தெரியும். இது எல்லாமே வெறும் விளையாட்டு சிந்தனைகள். ஆனாலும் சும்மா இப்படி சிந்திப்போமே என்பதைக்கூட இன்றைய அறிவியல் பாசிசம் ஒத்துக்கொள்ளாது. அது இன்று வலிமையானதொரு இணை மத பண்பாடு. ஆனால் இப்படி சிந்திப்பதன் வழியே இவ்வாவணங்கள் எனக்குள் ‘நிறுவிய’ ஒரு மையத்தை நானே கட்டவிழ்த்துக் கொள்கிறேன். இல்லையேல் இந்த ஆவண அனுபவங்கள் எல்லாமே என் உள்ளே உறை நிலைக்கு சென்று விடும். இரவுகளை நிறைத்த டேவிட் அட்டன்பரோவுக்கு முத்தங்கள் :).

கடலூர் சீனு

அன்புள்ள கடலூர் சீனு

அமெரிக்கா சென்றிருந்தபோது அட்டன்பரோவின் லைஃப் ஆவணப்படத்தின் முழுத்தொகுதியும் [36 டிவிடிக்கள்] பரிசாகக் கிடைத்தது. சில ஆண்டுகளாக கைவசமிருந்தும் முழுமையாகப் பார்க்கவில்லை. சென்ற ஊரடங்கின்போது தினம் ஒருமணி நேரம் வீதம் நானும் அஜிதனும் சைதன்யாவும் அதைப் பார்த்து முடித்தோம். ஒரு காவியம் வாசித்த நிறைவை அளித்தது. காவியமென்பது பிரபஞ்சமெய்மை, மானுட மெய்மை, அன்றாட உண்மை ஆகிய மூன்றையும் ஒன்றே என ஆக்கிக் காட்டுவது என்பார்கள். அத்தகைய ஓர் அனுபவம் அதை கண்டது.

அதிலும் பூச்சிகளின் உலகம். நாமறிந்த இந்த பூமியில் நாம் முற்றிலும் அறியாத மாபெரும் ஒரு உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பழைய நூல்களில் உலகங்கள் என்றே சொல்லப்படுகிறது. ஏன் என்று அன்று புரிந்தது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.