Jeyamohan's Blog, page 948
July 21, 2021
பொன்னியின் செல்வன், ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு முடியப்போகும் செய்தி அறிந்து நிறைவடைந்தேன். பலகாலமாக பலரும் எடுக்க நினைத்த சினிமா அது. இப்போது பெரும்பாலும் நிறைவேறியிருக்கும் கனவு.
இன்று சிலருக்கு அந்தக்கதையை அப்படியே எடுக்கமுடியுமா என்ற சந்தேகமெல்லாம் வந்தது. அப்படியே எடுக்கமுடியாது. அதற்குச் சீரியல்தான் எடுக்கவேண்டும். ஆறுமணிநேர சினிமா என்றாலும்கூட சுருக்கியாகவேண்டும்.
பொன்னியின்செல்வன் கதை ஒரு கதாபாத்திரம் வழியாகச் சென்று கொஞ்சதூரம் போனபின் இன்னொரு கதாபாத்திரம் வழியாகச் செல்லும். அதில் பல சரடுகள். பல இடங்களில் அது மூலக்கதையை விட்டுவிட்டுச் செல்லும். அதை அப்படியே சீரியலாகக்கூட எடுக்கமுடியாது. அது நாவலின் இயல்பு. சினிமாவும் சீரியலும் கதையோட்டம் திசைதிரும்பாமல் அமையவேண்டியவை. ஆகவே சினிமா வேறு நாவல் வேறுதான்.
நாவலில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் எவரோ எவரிடமோ சொல்வதுபோலத்தான் வரும். போர்கள் கூட சுருக்கமாகச் சொல்வதாகவே இருக்கும். நேரடி வர்ணனையாக, காட்சியாக போரே வராது. பேச்சுதான்.ஆனால் சினிமாவில் அப்படி வசனமாக காட்டமுடியாது.
நாவலில் குணச்சித்திரங்கள் கொஞ்சம்கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கும். நந்தினி, பழுவேட்டரையர் கதாபாத்திரங்கள் அப்படி மாறும். அதேபோல சின்னக்கதாபாத்திரங்களான மணிமேகலை, கந்தமாறன் எல்லாம் சட்டென்று பெரிசாகும். அதையும் அப்படியே எந்தச் சினிமாவும் காட்டாது.
ஆகவே சினிமாவேறு நாவல் வேறுதான். நாவலில் இருந்து எடுத்துக்கொண்டு சினிமாவாக ஆக்கப்படுகிறது. அதை ஏன் சினிமாவாக எடுக்கவேண்டும்? நாவல் என்னதான் வாசிக்கப்பட்டாலும் தமிழகத்தில் அதை வாசித்த ஐந்துலட்சம்பேர் இருந்தால் அதிகம். சினிமா அதை பலகோடிப்பேருக்கு கொண்டுசென்று சேர்க்கிறது. சின்னக்குழந்தைகளுக்கு கொண்டுசேர்க்கிறது. இந்தியா முழுக்க உலகம் முழுக்க கொண்டுசெல்கிறது.
நம் வரலாற்றை சினிமாவாக எடுப்பது ஏன் தேவையென்றால் அந்தக்காலகட்டத்தின் அரண்மனைகள், நகைகள், ஆடைகள் என எல்லாவற்றையும் காட்சியாக காட்டுவதற்காக. நம்முடைய இறந்த காலம் எப்படி இருந்தது என்று காட்டுவதுதான் நோக்கம். இறந்தகாலப்பெருமிதம் இல்லாத சமூகத்துக்கு தன்னம்பிக்கை இருக்காது.
சினிமா வழியாகத்த்தான் தமிழகத்தின் ஒரு பொற்காலம் இளைஞர்களின் மனதிலே நிலைகொள்ளும். அந்த வாழ்க்கை அப்படியே நிலைகொள்ளும். ஹாலிவுட் சினிமாக்களெல்லாம் அப்படித்தான் பழைய ஐரோப்பாவை உருவாக்கி கண்முன் காட்டின.அதேபோல ஜப்பானியப்படங்கள். அகிரா குரசோவா எடுத்தவை. இப்போது சீனப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் நிஜத்தை அப்படியே காட்டமுடியுமா? உண்மையை காட்டமுடியுமா? உண்மை என்னவென்று நமக்கு தெரியாது. நம்மால் ஊகிக்கத்தான் முடியும். அந்த ஊகத்தைக்கொண்டு ஒரு குளோரியஸ் பிக்சரைத்தான் நாம் உருவாக்கவேண்டும். ஆய்வுகளில் அது தேவையில்லை, உண்மைதான் முக்கியம். ஆனால் இது இளையதலைமுறைக்கானது. இது ரொமான்ஸ். ஆகவே இதில் கனவுதான் முக்கியம்
இது எல்லாவகையிலும் புனைவுதான். நம் இறந்தகாலப்பெருமையை நாம் புனைகிறோம். ஹாலிவுட் ஜப்பான் சீனா எல்லாம் புனைந்ததும் அப்படி கற்பனையான குளோரியைத்தானே ஒழிய அப்பட்டமான யதார்த்தத்தை அல்ல.
சோழர்களின் காலம்தான் தமிழ்ப்பண்பாட்டின் உச்சக்கட்ட காலம். சங்ககாலமெல்லாம் தொடக்கம்தான். சோழர்காலத்தில் நாம் ஒரு பேரரசை உருவாக்கினோம். தமிழக எல்லையை விட்டு வெளியே சென்றோம். கோயில்கலை, காவியங்கள், இசைக்கலை ,சிற்பக்கலை எல்லாமே உச்சத்தை அடைந்தன. அது தமிழ் வீரக்குடிகளின் வெற்றியாகும்.
அந்தப் பேரரசின் தொடக்கமென்ன என்று காட்டும் ஒரு நாவல் பொன்னியின் செல்வன். ஆகவே அது புகழுடன் இருக்கிறது.ஆனால் அதை அது வெறும் சித்திரமாகக் காட்டவில்லை. சாகசநாவலாக காட்டுகிறது. விளையாட்டுத்தனமும் வீரமும் கொண்ட நாவல். குழந்தைகள் விரும்பிப்பார்க்கும் சினிமாவாக அதை ஆக்கமுடியும். தமிழர்களின் ஒளிமிகுந்த காலகட்டம் குழந்தைகளுக்கு தெரியவரும்.
அந்த குளோரியஸ் சித்திரத்தை சீரியலாக எடுக்கமுடியாது. அதற்கு சீரியலில் பட்ஜெட் இருக்காது. மணிரத்னம் நினைத்தால்தான் அந்த பட்ஜெட் கொண்டுவர முடியும். சாதாரணமான ஸ்டண்டுகளுக்கெல்லாம் பட்ஜெட்டை கோடிக்கணக்கில் போடுபவர்கள் நாம். இந்த மாதிரி நம் பாரம்பரியப்பெருமையை காட்டும் படங்களுக்கு எத்தனை பட்ஜெட் போட்டாலும் தகும்.
இந்த வகையில் நம் பெருமையை எடுத்து நாமே பார்க்கமட்டும் செய்தால் போதாது. இந்தியாவே பார்க்கவேண்டும். உலகமே பார்க்கவேண்டும். அப்போதுதான் நம் பெருமை நிலைநாட்டப்படும். நம் பிள்ளைகளிடம் நாம் இதைக் கொண்டு சேர்க்கவேண்டும். உலகம் முழுக்க உள்ள நம் வம்சாவளியினரிடம் கொண்டுசென்று சேர்க்கவேண்டும்.
நாவலாக இருந்தால் இதெல்லாம் சாத்தியமாகாது. சினிமா மக்களிடம் சேர்ந்தபின் நாவலை இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். இன்னும் விரிவான சித்திரம் கிடைக்கும். அதற்கு மாறாக நாம் வாசித்த நாவல் நாவலாகவே இருக்கவேண்டும், சினிமா எடுத்தால் நாவல்போலவே எடுக்கவேண்டும், நாவலையே சினிமாவில் காணவேண்டும் என்று சொல்வதெல்லாம் அசட்டுத்தனமாகும்.
பொன்னியின் செல்வன் ஐரோப்பிய சினிமா போல இருக்க முடியாது. வீரபாண்டியக் கட்டப்பொம்மன் போல அடுக்குமொழி வசனமாகவும் இருக்கமுடியாது. நவீனத் தொழில்நுட்பத்துடன் இன்றைய ரசிகர்களின் பார்வைக்காக எடுக்கப்பட்ட பொழுதுபோக்குச் சினிமாவாகவே இருக்கமுடியும். அப்போதுதான் அந்த நோக்கம் நிறைவேறும்.
தமிழ்நாட்டில் சோழப்பேரரசு என ஒன்று இருந்தது என்பதையே வட இந்தியர்களிடம் சொல்ல முடியாது. எவருக்குமே தெரியாது. அவர்கள் இந்தியாவிலிருந்த பேரரசுகள் எல்லாமே மௌரியர், குப்தர் என்று சொல்வார்கள். வட இந்தியாதான் தென்னிந்தியாவை எல்லா காலத்திலுமே ஆட்சி செய்தது என்று சொல்வார்கள். பெரிய அறிஞர்கள், ஐஏஎஸ் காரர்கள்கூட ஆத்மார்த்தமாக நம்பி அதைச் சொல்வதை கேட்டிருக்கிறேன்.நான் ராணுவத்தில் இருந்த காலத்தில் ராஜராஜனை தெரிந்த ஒரு வட இந்தியரைக் கண்டதே இல்லை.
நம்முடைய புலிக்கொடியை இந்தியா முழுக்க வாழும் இளைய தலைமுறை பார்க்கவேண்டும். சோழர்களின் வெற்றியை அவர்கள் அறியவேண்டும்.ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா அதைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதுபோல வேறெந்த ஊடகமும் செய்யமுடியாது.
அதற்கு நாம் நம் பாரம்பரியத்தை, தமிழ்ப்பெருமையை தூக்கிப்பிடிக்கவேண்டும். நாம் அதைக் கொண்டாடவேண்டும். அந்தச் சினிமாவின் நோக்கமென்ன, அந்த சினிமா எப்படி இருக்கமுடியும் என்பதெல்லாம் நமக்கு கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும். அற்பமான காழ்ப்புகளால் இத்தகைய பெரிய முயற்சிகளை எதிர்ப்பதும் அறிவுஜீவி என்று காட்டுவதற்காக மட்டம் தட்டுவதும் நமக்கே நாம் புழுதிவாசி பூசிக்கொள்வதுபோல.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் சமூகவலைத்தளங்களில் பரவும் காழ்ப்பைக் கண்டுதான். யாரோ ஒருசிலர் ஒரு ஃபேன் மேட் டிரையிலர் செய்து வெளியிட்டிருந்தனர். வெறும் ஆர்வம். அதில் வேறுபடங்களிலுள்ள கிளிப்பிங் சிலவற்றை சேர்த்திருந்தனர். அதில் விக்ரம் முகத்தில் விபூதி இல்லை என்றும், மணிரத்தினம் இந்து மரபை அவமதிக்கிறார் என்றும் வசைபாடித்தள்ளியது ஒரு கும்பல். அது ஃபேன் மேட் டிரையிலர் என்று சொன்னபோதும் வசைதான்.
இன்னொருபக்கம் அறிவுஜீவிகள். ஒருவர் என் நண்பர். அவர் விளம்பரத்திலிருக்கும் வாளில் கைப்பிடி தப்பாக இருக்கிறது என்று முன்பு எழுதினார். நீங்கள் தொல்பொருள் ஆய்வாளரா என்று கேட்டேன். இல்லை. சாதாரண அரசு அதிகாரி. அது குத்துவாள், வீசி எறியும் வாள், அதற்கு பிடி அப்படித்தான் இருக்கும் என்று நான் விளக்கினேன். உடனே சீண்டப்பட்டு கண்டபடி பொன்னியின்செல்வனையே திட்ட ஆரம்பித்துவிட்டார். நாம் வெளிவந்தாகவேண்டியது இந்த மனநிலையில் இருந்துதான்.
அழகர் ஆறுமுகம்
துவந்தம், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
துவந்தம் ஒரு சிறந்த கதை. உண்மையில் அக்கதையை நீங்கள் அளித்த ஒரு மானசீகச் சட்டகப்படி வாசித்தபோதுதான் கதை எவ்வளவு ஆழமானது என்ற எண்ணம் ஏற்பட்டது, அகம் புறம். இரண்டிலும் துவந்தம் நடந்துகொண்டிருக்கிறது. பெண் புறத்தை வென்று காட்டுகிறாள். அகத்தில் அவளை வெல்லமுடியாது என்று நிறுவிவிடுகிறாள். வேட்டை விலங்குகளின் உலகம். அதில் இரையாக அல்ல வேட்டைவிலங்காகவே இருக்கப்போவதாக அவள் நிறுவிவிடுகிறாள்.
இந்தக்கதையில் புறவுலகத்தில்தான் அத்தனை விரிவு. அகவுலகத்தில் சுருக்கமான சித்திரம்தான். ஆனால் அந்தப் புறவுலகச் சித்தரிப்பைக்கொண்டு அகவுலகை விளக்கி விரிவாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கற்பனைக்கான வாய்ப்புதான் இதை அபாரமான கதையாக ஆக்குகிறது. திருச்செந்தாழைக்கு என் அன்பு
ஆர்.ராகவ்
அன்புள்ள ஆசிரியருக்கு,
தங்களின் அறிமுகத்தால் ஒரு நல்ல கதை படித்தேன். கதை ஆசிரியரின் நடையும், இடையிடையே எடுத்தாளப்பட்டிருக்கிற உவமைகளும், இடியெனவும், சில்லெனவும் இதயத்தில் இறங்கியபடியே இருந்தன. இந்த மனம்தான் எத்தனை விசித்திரமானது. ஒரு கணம் “நாடோடிக்குக் கிடைக்கிற இறைச்சித் துண்டு”என எச்சில் கூட்டுகிறது. அதுவேதான் வியாபாரியின் கடைவாய்ப் பற்களுக்குக் கூழாகிவிடுகிற பயமும் கொள்கிறது.
தனது மதிப்பிட முடியாத உணர்வுகள் கரிசனத்துக்கான முதலீடாக விலைபோகும் ஆதங்கம் கொள்வதும், “கெட்டியான கொய்யாக்காய் நெற்றி” என மறுகணமே குறுகுறுப்பதுமாய், கதைக்குள்தான் எத்தனை ஆடல்கள், ஆட்டுவித்தல்கள். கொன்றைமரம் அப்படியே நின்றிருக்க, வானம்தான் வெளுத்துவிட்டது. ஆனால், சீக்கிரமே இருள் கவிவதும் அதே வானத்தில்தானே.
இப்படித்தான் கதை முடிந்தபின்னும், ரயில் கடந்தபின்னும் எனக்குள் என்னென்னவோ கடக் கடக் தடக் தடக்குகள். பொதுவாக ஒரு நல்ல கலைஞனுக்கு இன்னொரு கலைஞனைப் பிடிக்காது என்று தமிழ்த்திரை இசையுலகின் ஒரு முக்கிய ஆளுமை ஒரு பேட்டியில் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். முரணாக, மிகத் திறந்த மனதோடு பிற எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்கிற உங்களின் பரந்த மனம் கண்டு வியக்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி
ப. சரவணமணிகண்டன்
வாழும் வள்ளுவம்
***
அன்புள்ள ஜெ,
தமிழில் எழுதப்பட்ட நல்ல கதைகளில் ஒன்று துவந்தம். வழக்கமாக இந்தவகையான புறவுலகங்கள் எழுதப்படும்போது இடதுசாரிப்பார்வையில் சுரண்டல், துக்கம் என்ற அளவிலேயே எழுதப்படும். அதில் ஒரு டிராக் இருக்கும். ஏழைவிவசாயியின் துயரம். இங்கே எல்லாமே ஒருவரை ஒருவர் வெல்வது வெல்லப்படுவது என்ற அளவிலேயே நிகழ்கிறது. நா ஹன்யதே என்று கீதை சொல்வதுபோல. கொலைக்களம், ஆனால் எவரும் கொல்லப்படுவதில்லை. திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருக்கிறார்கள்.
இத்தகைய உலகத்தை எழுதவேண்டுமா என்ற கேள்வி உள்ளது. நம்மைச்சுற்றி பல்வேறு தொழிலுலகங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் எழுதியாகவேண்டுமா? அதற்கான பதில் இதுதான். இந்த தொழில் உலகங்களில் உண்மையில் வெளிப்படுவது மனிதனின் உச்சம் என்றால் அதை எழுதியாகவேண்டும். அது மேன்மையோ கீழ்மையோ. சங்ககாலத்தின் போர்க்களம்தானே இப்படி உருமாறியிருக்கிறது?
இரண்டு போர்க்களங்களும் அருமையாக ஒன்றையொன்று அர்த்தப்படுத்தும்படி எழுதியிருக்கிறார் திருச்செந்தாழை. புதிய கலைஞருக்கு என் வாழ்த்துக்கள்.
அர்விந்த்குமார்
***
வெண்முரசில் நிறைநிலவு- சுபஸ்ரீ
நிறைநிலவு கிளர்த்தும் நினைவுகள் அநேகம். இரு வருடங்களுக்கு முன் சித்திரை முழுநிலவு தொடங்கி பங்குனி முழுநிலவு வரை ஆண்டின் ஒவ்வொரு முழுநிலவும் ஒவ்வொரு இடத்தில், பலவேறு தேசங்களில் காண நேர்ந்தது. கங்கையின் மடியில், நீலக்கடல் அலைகளில், நகர நெரிசல்களுக்கு மேலே, அடர் மரங்களுக்கு இடையே, மணல் வெளியில் எனப் பல சித்திரங்கள் நிறைந்தது மனது. முழுநிலவினால் ஆனதோர் ஆரம் ஒன்றைத் தொடுத்துக் கொண்ட ஆண்டு. சென்ற ஆண்டு வெண்முரசு முழுமையடைந்த நாளில் வியாச பூர்ணிமை என்றும் அறியப்படும் குரு பூர்ணிமை வெண்முரசு தினமாக மலர்ந்தது. அந்த நினைவு வெண்முரசின் வெண்ணிலவுக் கணங்களை கோர்த்துப் பார்க்கும் எண்ணத்தை அளித்தது.
வெண்முரசை மீண்டும் இதற்கென வாசிப்பதன் முன்னரே முதலில் மனதில் எழுந்த வரி சித்திரை முழுநிலவு குறித்தது. வெண்முரசு துவங்கியதிலிருந்து எங்கிருப்பினும் சித்திரை முழுநிலவன்று வெண்முரசில் இடம்பெறும் இவ்வரிகள் நினைவில் எழுந்து அந்நாள் முழுவதும் உடனிருக்கும்.
“ அது சித்திரை மாதம் முழுநிலவு நாள். இனி என்றென்றும் ஞானம் விளையும் தருணமாகவே அது எண்ணப்படும் என்றார் பைலர். இந்த நாளில் பேராசிரியரின் பாதங்களைப் பணிந்து அவரளித்த ஞானத்திற்கு கைமாறாக தங்களை முழுதளிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். “இச்சொல் இங்கு வாழவேண்டும். இது இந்நிலத்தின் விதைக்களஞ்சியம்” என்றார் ஜைமினி.”
முதற்கனலில் வியாசவனத்தில் நிகழும் ஒரு சித்திரை முழுநிலவில் வியாசரின் மாணவர்கள் ஒன்று கூடி சொல்லும் வரி இது. மீண்டும் இமைக்கணத்தில் இத்தருணம் வரும்.
இன்றைக்கு ஒரு தலைமுறை முன்னர் வரை கூட பௌர்ணமியையும் அமாவாசையையும் வெவ்வேறு திதிகளையுமே வாழ்வின் முக்கிய தினங்களின் நினைவையொட்டி கூறி வந்திருக்கிறோம். அன்றாட மாற்றங்களோடு அகலாது உடன் வரும் விண்ணின் விழி. வெண்முரசு என்னும் காவியத்தின் ஒளியில் அதைக் காணும்பொழுது, நிலவு எந்த அளவுக்கு நமது வாழ்வின் முக்கிய தருணங்களை அடையாளப்படுத்தி வந்திருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.
நிறைநிலவுநிகழ் மங்கலங்கள்
உதாரணமாக மங்கல நிகழ்வுகளாகிய மணநிகழ்வுகள் (பாண்டவர்-திரௌபதி மணமங்கலம் – பங்குனி முழுநிலவு, அரிஷ்டநேமியின் நிறைவுறா மணமங்கலம்), சுயம்வரங்கள்(தமயந்தியின் மணத்தன்னேற்பு -ஆவணி முழுநிலவு), அரச உரிமை அறிவிப்புகள் (புரூரவஸ் மைந்தன் ஆயுஸ் முடிசூட்டல், அஸ்தினபுரியின் இளவரசுப் பட்டம் குறித்த அறிவிப்பு), குருநிலைகளில் மாணவர்களின் வித்தையை பரிசோதிக்கும் பயிற்சிகள்(அக்னிவேசரின் குருகுலத்தில் நிகழும் பயிற்சிமுதிர்வு நிகழ்வுகள்) நிறைநிலவு நாட்களில் நிகழ்ந்திருக்கின்றன. இம்மாபெரும் காவியத்தின் முதற்கனலை ஏற்றும் காசி இளவரசிகளின் சுயம்வரம் வைகாசி மாதம் முழுநிலவு நாளில் நடக்கிறது. சுபத்திரையின் சுயம்வரமும் அதேபோல ஒரு வைகாசி முழுநிலவில் திட்டமிடப்படுகிறது.
போர் போன்ற ஷாத்திரம் கோரும் நிகழ்வுகளோ முழுநிலவுக்குப் பின்னர் நிகழ்கின்றன. மாபெரும் குருஷேத்திரப் போர் முழுநிலவுக்கு அடுத்த நாளில் துவங்கப்படுகிறது. ஆடிமாதம் தேய்பிறை முதல்நாள் கலி முழு வடிவுகொண்டு எழும் பொழுது என சகதேவன் துரியனுக்கு போருக்கான நாள் குறித்துத் தருகிறான்.
கல்வியின் நிறையொளி
ஆசிரியர் அளிக்கும் படைக்கலப் பயிற்சிகள் நிறைவடைந்து கச்சையும் குண்டலமும் அணியும் தருணமே ஒரு க்ஷத்ரியன் வீரன் என்னும் அடையாளத்தை முதலில் அணிகிறான். குருகுலத்து இளவரசர்களுக்கு சிராவண மாதம் முழுநிலவு (ஆவணி முழுநிலவு) நாளில் கச்சையும் குண்டலமும் அணிவித்து படைக்கலம் தொட்டுக்கொடுக்கும் சடங்கு நிகழ்கிறது. விண்ணேகிய பெருங்குருநாதர்கள் மண்ணை நோக்கி இளையோரை வாழ்த்தும் நாள் என்று வாழ்த்துகிறார்கள். பகற்பொழுதில் முழுநிலவு உதிப்பது தீர்க்கசியாமர் யாழ்தொட்ட நாளில் நிகழ்ந்த ஒரு அரிய நிகழ்வாக மக்கள் நினைவில் இருக்கிறது. முழுநிலவு நாளில் வேதச் சொல்லாய்வு போன்ற நிகழ்வுகள் நிகழ்வதை சொல்வளர்காட்டில் அறியலாம்.
குறிப்பாக சித்திரை முழுநிலவும் ஆஷாட மாதத்து முழுநிலவான குரு பூர்ணிமையும் பல முக்கிய நிகழ்வுகளின் சாட்சிகள்.
சித்திரை பூர்ணிமை
இந்திரப்பிரஸ்தத்தின் சுடர் ஏற்றும் விழா சித்திரை முழுநிலவில் நிகழ்கிறது. மண்ணில் இதுவரை எழுந்திராத ஒரு மாபெரும் நகரத்தை உருவாக்கி அதற்கு ஒளியேற்றும் நாளுக்கு சித்திரை முழுநிலவைத் தேர்கிறார்கள். “இருள்நிலவுப்பகுதியும் ஒளிர்நிலவுப்பகுதியும் நீண்டவை. முழுநிலவோ ஒரே ஒரு நாளுக்குமட்டும்தான்” என்ற வரிக்கு ஒப்ப மாபெரும் மனித உழைப்பில் வளர்ந்து அதன் உச்ச தருணம் அந்த முழுநிலவின் சுடரேற்று விழா. அதன் பின்னர் கைவிடப்பட்டு இந்திரப்பிரஸ்தம் ஒளியிழக்கும் தேய்பிறைக்காலமும் வருகிறது.
சித்திரை முழுநிலவின் சிறப்பு மீண்டும் மீண்டும் வெண்முரசில் வருகிறது. எட்டு மங்கலங்களும் நிறைந்த சித்திரை முழுநிலவு நன்னாள் என்கின்றனர் நிமித்திகர். அரிஷ்டநேமியை ஏற்றி அழைத்துச் செல்லும் மங்கலக்குறிகள் நிறைந்த சுப்ரதீபம் எனும் யானை சித்திரை முழுநிலவு நாளில் மண் நிகழ்கிறது. சித்திரை முழுநிலவு நாளை ஆசிரியரிடமிருந்து மாணவர்கள் இறுதிச் சொல்லை பெற்றுக்கொள்ள உகந்தது என கர்ணனுக்கு உரைக்கிறார் பரசுராமர். சித்திரை மாத முழுநிலவு கந்தர்வர்களுக்கு உரியது என்பதால் இல்லங்களிலோ தெய்வங்கள் பதிட்டை செய்யப்பட்ட காடுகளிலோ அன்றி வேறெங்கும் மானுடர் நடமாடலாகாது என்றும் பிறநிலங்கள் அனைத்திலும் கந்தர்வர்கள் களியாட்டு நிகழுமென்றும் மூதாதையர் சொல்கிறார்கள். தனது நிஷாத அடையாளங்களாகிய கலி மற்றும் காக வழிபாட்டை துறந்து இந்திரனை முதற்தெய்வமாக அறிவிக்கும் பொருட்டு கிரிப்பிரஸ்தத்தின் மீது சித்திரை மாதம் முழுநிலவு நாளில் இந்திரனின் பெருஞ்சிலையை நளன் நிறுவுகிறான்.
நிலவென்னும் அமுதம்
மலைவெளிகளில் முழுநிலவு சித்தத்தை அழியச் செய்யும் அனுபவம். நிழல் ஒளி விளையாட்டில் இருளின் வெவ்வேறு அடுக்குகள் நிலவின் ஒளியில் வெவ்வேறு கருமையின் அடர்த்தியில் வெண்பூச்சு கொண்டு துலங்குவது மானுடன் வரைய முடியாத ஓவியம். ஓரிரவு துங்கநாத் மலையின் அடிவாரத்தில் கூடாரத்தின் பாதுகாப்பில் அமர்ந்து கொண்டு துங்கநாத் சிகர நுனியில் சற்றே படர்ந்திருந்த பனிவிரிப்பு மெல்ல மெல்ல நிலவொளியில் விரிந்து மலர்வதை இரவு முழுவதும் அவ்வப்போது கண்விழித்து பார்த்திருந்த இரவு நினைவில் வருகிறது. அதுபோன்ற ஒரு பனிமலையின் நிறைநிலவுப்பொழுதை அர்ஜுனனை கருக்கொண்ட நிறைவயிறோடு குந்தி அனுபவிக்கிறாள். அவள் சதசிருங்க நாட்களில் நந்ததேவி அருகே இருக்கும் சரத்வான் ஆசிரமத்தில் நள்ளிரவில் ஒரு அழைப்பை உணரும் காட்சி. ஒளியில் அவள் கரைந்து போகும் உணர்வின் உச்சத்தில், அவ்வெண்ணிற ஒளியே உடலெடுத்து வந்தது போல ஒரு வெண்ணிறச் சிறுத்தைப்புலியை எதிரில் கண்டு மயங்கிவிடுவாள். அது ஒரு ஃபால்குன மாதத்து(பங்குனி) பௌர்ணமி. அந்த அத்தியாயமே இமயத்தின் மடியில் உலவித்திரியும் கனவைக் கிளர்த்தும் பகுதி.
“கதவைத்திறந்து பனிவெளிக்குள் இறங்கினாள். தரையெங்கும் வெண்பனி விரிந்திருந்தாலும் காற்றில் பறந்து உதிர்ந்துகொண்டிருந்த பனித்துகள்கள் முழுமையாக நிலைத்திருந்தன. அதிதூய காற்றுவெளி அசைவில்லாது நின்றது. வானம் மேகமற்று விரிந்திருக்க மேற்குச்சரிவில் முழுநிலவு இளஞ்செந்நிற வட்டமாக நின்றிருந்தது. அதைச்சுற்றி வானத்தின் ஒளிவட்டம் விரிந்திருந்தது…
கண்கள்தான் தெளிந்து வருகின்றனவா இல்லை ஒளி கூடுகிறதா என்று குந்தி வியந்துகொண்டாள். இல்லை ஒளி அதிகரிப்பது உண்மைதான். நிலவொளி ஒரு குறிப்பிட்டகோணத்தில் விழும்போது அங்கிருந்த பனிச்சரிவுகள் அதை முழுமையாக எதிரொளிக்கின்றன போலும். ஒளி மேலும் கூடியபோது அப்பகுதியே வெண்ணிறமான கண்கூசாத ஒளியலைகளாக மாறியது. ஒளியாலான மலைகள் , ஒளியாலான சரிவுகள் , ஒளியாலான வானம். தன் உடலும் அமர்ந்திருந்த பாறையும் எல்லாம் ஒளியாக இருப்பதை உணர்ந்தாள். ஒளியில் மிதந்து கிடப்பதைப்போல , ஒளியில் தன் உடல் கரைந்து மறைவதுபோல அறிந்தாள். ”
முழுநிலவுநாட்களில் பனிமலைச்சிகரங்களில் விண்ணவர்கள் வந்து இறங்குவதாக ஒரு நம்பிக்கை. சரத்வான் நந்ததேவியை சூழ்ந்த பனிச்சிகரங்களை பற்றி இவ்விதம் குறிப்பிடுகிறார். பால்ஹிகர் தான் வாழும் பனிச்சிகரங்களில் பொழியும் முழுநிலவில் இருந்தே தனது உயிராற்றலை பெற்றுக் கொள்வதாக கூறுகிறார். பால் பொழிவு போலிருக்கும் வெண்ணிற பொழுதுகளில் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் அந்த அமுதை அருந்தியவராய் இறப்பை பல ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக சொல்கிறார். “கீழிருப்பவர்கள் உண்ணுவதும் உயிர்ப்பதும் நஞ்சு. ஆகவே நாள்தோறும் அவர்கள் நலிகிறார்கள்.” – இது ஒவ்வொருமுறையும் மலைமக்களின் உடற்திறனை காணும் போது உண்மையென்றே தோன்றுகிறது.
நிறைநிலவின் நறுமணம்
உலகெங்கும் நிலவுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு பண்டைய காலம் தொட்டே ஏதோ ஒரு விதத்தில் அறியப்பட்டிருக்கிறது. நிறைநிலவில் வான் மீது பித்தெழும் அலைகடலென உளம் பொங்குவதை உணர்ந்திருக்கலாம். முழுவெண்திகிரி உணர்வுகளை கட்டின்றி பெருக்கும் காட்சிகளை நீர்க்கோலத்தின் கரவுக்காட்டிலும் நீலத்தின் கன்னியிடமும் காணலாம். தன்னிருப்பைக் கரைத்து விடும் பிரேமையின் ஒளி நிலவொளியில் மேலும் சுடர்கொள்கிறது.
நிறைநிலவில் நீலம் பித்தின் நிலம், பிரிவற்ற காதலின் நிலம், மண்மேல் ஒவ்வொன்றும் மலர்ந்திருக்கும் நிலம். வசந்த கால இரவில் எழும் முழுநிலவு ஆயிரம் சுனைகளில் ஆம்பலைத் தழுவுவது அபாரமான படிமம். மண்ணில் உயிர்கொண்டு வந்ததனைத்தையும் அணைக்கும் ஒற்றைப் பேரருள், பல நூறு கோபியருடன் திகழும் நீலனின் பிருந்தாவனத்து ராசலீலை என முழுநிலவில் மலர்கிறது.
நிலவணிந்த நீலக்கடம்பு நிலவன்றி ஓரணியும் சுமையாகும் உணர்வு நிலையைப் பேசுகிறது. நிலவொளி போல் உடைந்து சிதறி வெளியெங்கும் நிறைந்திடத் துடிக்கும் சித்தம். பரவெளியில் கலந்திடத் துடிக்கும் சிறுதுளி.
“ பனியீரம் நனைந்த முழுநிலவு. அது தொட்டு வருடி சொட்டி வடியும் இலைப்பாளங்கள். ஒளிகொண்ட ஓடைகள். வெள்ளித்தகடான சுனைகள். மணியாகி சுடர் எழுந்த கூழாங்கற்கள். மண்ணில் வழிந்தோடிய பெருமோனம். ”
முழுமையை அடைதல்
அருகநெறியினருக்கும் முழுநிலவு மிக முக்கிய தினமாக இருப்பதை வெண்முரசில் வரும் பல கதைகளில் அறியலாம். கஜ்ஜயந்தபுரியை ஆண்ட ரைவதகர், அருகர்களின் முதல்தாதை ரிஷபரின் கதையை வணிகர்கள் வாயிலாக அறிகிறார். ரிஷபர் அயோத்தியை ஆண்ட இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர். இருபத்தியெட்டு ஆண்டுகாலம் அருந்தவம் இயற்றி சௌராஷ்டிர மண்ணில் அமைந்த பாலிதானம் என்னும் குன்றில் ரிஷபர் சித்திரை முழுநிலவு நாளில் மெய்மையை அடைகிறார்.
ஆண்டில் ஒருமுறை சித்திரை முழுநிலவு நாளில் யாதவர்கள் மந்தரமலைக்கு நோன்பு கொண்டு செல்லும் வழக்கமிருக்கிறது. மந்தரமலை எனும் சொல் விடுத்த அழைப்பை ஏற்று அரசு துறந்து செல்கிறார் ரைவதகர். அருகநெறியினருக்கு அவர்களின் பனிரெண்டாவது தீர்த்தங்கரரான வசுபூஜ்யரின் பதிட்டை மந்தர மலையில் இருக்கிறது. வசுபூஜ்யர் ஆஷாட மாதத்தின் முழுநிலவு நாளில் மந்தரமலையில் விண்ணுலகை அடைந்தவர். ரைவதகர் அங்கே சென்று மலையுச்சியில் முழுமையில் நிறைகிறார். பின்னர் அருக நெறியினராக பன்னிரெண்டு ஆண்டுகாலம் கஜ்ஜயந்தநாட்டின் ஊர்களில் அலைகிறார். வைகாசி முழுநிலவில் ரைவத மலையேறி வடக்கிருந்து உயிர்துறக்கிறார். சௌராஷ்டிர நிலத்து யாதவர்கள் அந்த நாளில் விழவெடுத்து வணங்குகிறார்கள். அகிம்சையின் முதல் விதை ஒரு சமூகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சௌராஷ்ட்ரத்தில் தொடங்குவதைக் காண்டீபத்தின் இப்பகுதியில் காணலாம். சௌராஷ்டிரத்தின் மக்கள் அருகநெறியை ஏற்று ரைவதகர் விண்நிறைந்த சித்திரை முழுநிலவு நாளில் படைக்கலங்கள் அம்மண்ணில் தேவையில்லை என முடிவெடுக்கிறார்கள்.
முழுமையில் அமர்தல்
நமது இந்திய மரபில் குரு பௌர்ணமி மகா வியாசரின் தினமாகப் போற்றப்படுகிறது. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் அக்குருதிக் களத்திலிருந்து விலகும் பொருட்டு வியாசர் இப்பாரத நிலமெங்கும் அலைகிறார். அறுதியாக குமரிமுனை வந்தடைந்து தன்னுள் அலைமோதும் அத்தனை சொற்களும் விலக, எஞ்சி நின்ற “மா” என்னும் முதற் சொல்லை அடைகிறார். அந்த நாளே ஆடிமாதம் முழுநிலவு என்று வியாச பூர்ணிமையாக வணங்கப்படுகிறது.
“அன்று பரதகண்டத்தின் எட்டு எல்லைகளிலும், அத்தனை குருநிலைகளிலும் எங்கள் ஆசிரியனின் அழியாச் சொல் ஓதப்படுகிறது. அதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் குருபூர்ணிமை நிறைநாள். அன்று தொல்மலைகள் எட்டிலும் சென்று அழியாப் பெருங்காவியத்தை முற்றோதுவது எங்கள் வழக்கம்” என்று இமைக்கணக்காடு (நைமிசாரண்ய ) குருநிலையை சேர்ந்த, வியாசர் மாணவர்களில் உக்ரசிரவஸ் என்னும் சூததேவரின் மாணவனாகிய சீர்ஷன் தென்திசை பாண்டியன் அவையில் சொல்கிறான்.
ஆடி மாதம் தட்சிணாயணத்தில் வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமை. உத்தராயணத்தில், இப்புவி ஆண்தன்மை வாய்ந்ததாகத் திகழ்வதாகவும், தட்சிணாயனத்தில் பெண்தன்மை நிரம்பியதாக, உள்வாங்கும் தன்மை கொண்டதாக விளங்குவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த தட்சிணாயனத்தில் வரும் ஆஷாட மாதத்து முழுநிலவு நாளில் அனைத்தையும் கடந்த சிவம், ஞான தாகம் கொண்டு தன்னை நாடி வந்த சப்த ரிஷிகள் மேல் கருணை கொண்டு ஞானம் அருளிய நாளாகவும் வணங்கப்படுகிறது. இவ்வுலகின் எதுவும் சென்று தொடமுடியாத பேரிருப்பு கருணை கொண்டு ஆசிரியராக, குருவாக அமர்ந்த முழுநிலவு. அறிதலின் பாதைக்கான உறுதியை மேற்கொள்ளவும், அதிலே மனம் அமைந்திருக்கவும், குருவின் அருள் பெறவும் சிறந்த நேரம்.
குரு எனும் வார்த்தைக்கு “இருளை அகற்றுபவர்” என்று பொருள். தேடுதலில் இருப்பவரின் அக இருளை நீக்கி, ஒளியை உணர வழி செய்பவர். இந்திய மரபில் குருபௌர்ணமி அன்று, தேடுதலில் இருப்பவர்கள் தம் நன்றியை வியாசன் முதலாகிய ஆசிரிய நிரைக்கு, தத்தமது குருவிற்கு வெளிப்படுத்தி ஆசி பெறும் நாள். துறவின் முதல் சங்கல்பத்திற்கும், யோக சாதனைகளில் ஈடுபடவும், ஊழ்கத்தில் அமரவும் குருபௌர்ணமி உகந்த நாள்.
ஜனமேஜயனின் சர்ப்பசத்ர வேள்வியில் வியாச காவியநிறைவை ஒட்டி உளம் எழ, ஆஷாடமாதம் முழுநிலவு காவியம் முழுமைகொண்ட நாள் என்பதால் வியாசபூர்ணிமை என்றும், இக்காவியத்தை நூல்தொட்டு பயில்வோர் ஒவ்வொருவரும் குருபூர்ணிமை என்றும் கொண்டாடவேண்டும் என அறிவிக்கிறான். வியாசனின் பாதங்களைத் தொட்டு எழுதப்பட்ட வெண்முரசு என்னும் காவியம் நிறைவுற்ற நாளும் இதுவே. “வியாசன் முதல் நித்யா வரையிலான ஆசிரியர்களை நினைத்துக்கொள்ளும் நாள்” என்ற ஆசிரியரின் சொல்திகழ வெண்முரசு தினத்தில் அருள் கனிந்த ஆசிரிய நிரையை வணங்குகிறோம்.
குருபூர்ணிமைக்கு வெண்முரசின் வாழ்த்து: “மெய்மை அறிந்தோர் சொல்லும் வார்த்தையில் கலைமகள் வந்தமரும் நன்னாள். மந்திரங்கள் உயிர் கொள்ளும் தருணம்.”
ஓம் அவ்வாறே ஆகுக!
July 20, 2021
நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்
வேதாந்தமும் இறைவழிபாடும்
அன்புள்ள ஜெ
நாட்டார் தெய்வங்கள் பற்றி அத்வைதம் கொண்டிருக்கும் கருத்தை விளக்கி நீங்கள் அனுப்பிய கடிதநகலைப் பார்த்தேன். என்னுடைய கேள்விக்கும் அதில் பதில் இருந்தது.
ஆனால் நான் அந்தக்கேள்வியைக் கேட்பதற்கான காரணம் நாராயணகுரு நாட்டார் தெய்வங்களை நீக்கம் செய்தார், அத்தெய்வங்களின் சிலைகளை தூக்கி வீசிவிட்டு அங்கே வேறு பெருந்தெய்வங்களை அமைத்தார் என்ற செய்திதான். அவர் அத்வைதியானதனால்தான் அதைச் செய்தார் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றித்தான் விளக்கம் கோரினேன்.
சுந்தர்
அன்புள்ள சுந்தர்,
பழங்குடித் தெய்வங்கள் மற்றும் நாட்டார் தெய்வங்களையும் பற்றிய பார்வையில் வந்த மாற்றங்களை ஆன்மீகரீதியாக பொருள் கொள்வதை விட சமூகரீதியாக பொருள் கொள்வதே உகந்ததாக இருக்கும்.
நெடுங்காலமாக இந்தியாவில் இந்து, சமண, பௌத்த மதங்கள் மூன்று அடுக்குகளாகவே இருந்து வந்துள்ளன. உச்சியில் தத்துவார்த்தமான ஒரு மதம். அதற்கடியில் பெருந்தெய்வங்களால் ஆன ஒரு வழிபாட்டு மதம். அதற்கடியில் நாட்டார் பழங்குடி வழிபாடுகளின் தொகை ஒன்று. இந்த அமைப்பு இன்று இந்து மதத்தில் அவ்வாறே நீடிக்கிறது.
நாட்டார் தெய்வங்களும் பழங்குடித் தெய்வங்களும் பல்வேறு உள்ளூர் வழிபாடுகள், குலக்குறிகள், ஆசாரங்கள் ஆகியவற்றுடன் இணைந்தவை. ஒரு குலமோ, இனக்குழுவோ பௌத்த, சமண, இந்து மதங்களுக்குள் வரும்போது அவர்களின் தெய்வங்களும் உள்ளே வந்து உள்ளே அந்த மதங்களின் மையத்தரிசனத்திற்கு இயைப சற்று உருமாறி அமைகின்றன.
காலப்போக்கில் அந்த தெய்வங்களுக்கு ஒரு தத்துவார்த்தமான விளக்கம் சிலபோது அளிக்கப்படுகிறது. புராண உருவாக்கத்தினூடாக அச்சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களின் உலகில் அமையச் செய்யப்படுகின்றன. அவற்றுக்குரிய வழிபாட்டு முறைகள் அந்த மதத்தின் மைய நம்பிக்கைக்கேற்ப உருமாற்றம் செய்யப்பட்டு ஏற்பு கொள்ளப்படுகின்றன. உதாரணமாக பௌத்த, சமண மதத்தில் நுழைந்த தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இல்லாமலாகியது.
இந்துமதத்தில் தொடர்ந்து மூவாயிரம் ஆண்டுகளாக பழங்குடி, நாட்டார் தெய்வங்கள் உள்ளே நுழைந்து இவ்வாறு ஒர் ஒட்டுமொத்த அமைப்பில் பொருந்திக்கொண்டே இருந்திருக்கின்றன. இந்துமதம் ஒரு பிரம்மாண்டமான உரையாடல் மற்றும் தொகுப்புச் செயல்பாடினூடாக இடைவிடாது நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒரு மெய்ஞான செயல்பாடு. ஒரு பண்பாட்டுப் பரிணாமம். இவ்வாறு இந்துமதத்திற்குள் நுழைந்த நாட்டார் தெய்வங்கள் காலப்போக்கில் தாங்களும் பெருந்தெய்வங்களாவது உண்டு.
ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த ஊருக்கான நாட்டார்த் தெய்வ வழிபாடு இந்துமதத்திற்குள் இருப்பதைப் பார்க்கலாம். வடஇந்தியாவில் ஏகவீரன் போன்ற தெய்வங்கள். தமிழ்நாட்டில் முனியசாமி, சுடலைமாடன் போன்ற தெய்வங்கள், கன்னி தெய்வங்கள், மூத்தார், நீத்தார் உருமாறிய தெய்வங்கள். இந்துமதத்தின் தத்துவக் கட்டமைப்பும் பெருந்தெய்வ வழிபாட்டுக் கட்டமைப்பும் இச்சிறுதெய்வங்களுக்கும் உள்ளே இடமளிப்பதாகதான் எப்போதும் இருந்துள்ளன.
ஏனென்றால் இந்துமதத்தின் அடிப்படை தத்துவ தரிசனமாகிய வேதாந்தம் எந்நிலையிலும் சிறுதெய்வங்களுக்கு இடமளிக்கிறது. வேதாந்தத்தின் சிறப்பே அனைத்தையும் தன்னுள் கோக்கும் அந்த மையத்தரிசனம்தான். ஒரு பொற்பட்டுநூல் போல பல்லாயிரம் மணிகளைக் கோத்து இந்துமதத்தை உருவாக்கியிருப்பது அதுதான்.
இந்துமதத்தின் மையச் சடங்கு முறைமைகளான வேள்வி மரபும் சரி, ஆலய வழிபாட்டு மரபும் சரி, நாட்டார் பழங்குடி தெய்வங்களை உள்ளே அமைத்துக்கொள்ளும் தன்மையுடன்தான் இருந்திருக்கின்றன. இன்றும் அவ்வாறே. நம் கண்ணெதிரிலேயே அந்த இணைவுச்செயல்பாடு நடந்துகொண்டிருக்கிறது.
[இந்துமத எதிர்ப்பாளர்கள் அஞ்சுவது அந்த இணைவுச்செயல்பாட்டைத்தான். அவர்கள் அதை அழித்தொழிக்கும் செயல்பாடு என திரித்து வசைபாடுகிறார்கள். ஆனால் அழித்தொழிக்கும் கொள்கை கொண்ட மதங்களை ஆதரிக்கிறார்கள். அழித்தொழிக்கும் கொள்கை கொண்ட மதங்கள் இந்துமதம் நாட்டார்- பழங்குடிப் பண்பாடுகளை அழிக்கிறது என கூக்குரலிடுகின்றன]
ஆனால் இந்துமத மறுமலர்ச்சிக் காலம் என்று நாம் சொல்லும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த நாட்டார் தெய்வங்களைப் பற்றிய ஒரு மாற்றுப் பார்வை உருவாகி வந்தது. நாட்டார்- பழங்குடி தெய்வங்களும் சடங்குகளும் இந்துமதத்தின் மையமாக இருக்கும் தத்துவ தரிசனத்துடன் முரண்படுபவை அல்லது தொடர்பற்றவை இவை என்ற புரிதல் உருவாகியது. இவை பின்பட்ட மதநம்பிக்கைகள் என்றும் பண்படாதவை என்று மதஅறிஞர்கள் எண்ணத்தலைப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் மதச்சீர்திருத்த நோக்கம் கொண்டவர்கள்.
இந்துமதச் சீர்திருத்தம் என்பது அடிப்படையில் இந்துமதம் ஐரோப்பாவுடன் உரையாடியதன் விளைவு என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்துமதத்தின் பழமையான கட்டமைப்புகள் அவ்வுரையாடலுக்குள் இல்லை. இந்து மதம் கிறிஸ்தவப் போதகர்கள் வழியாகவும் சுதந்திர சிந்தனையாளர்கள் வழியாகவும் ஐரோப்பாவின் அறிவு மரபுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டது. அதுவே இந்துமதச் சீர்திருத்ததின் அடிப்படை.
கிறிஸ்தவப் பார்வையை இங்குள்ள மிகச் சிறுபான்மையினரான சிலர் கருத்தில் கொண்டனர். ஆனால் ஐரோப்பாவில் அறிவொளி காலத்தில் உருவாகிவந்த தனிமனிதவாதம், ஆன்மீக சுதந்திரம் குறித்த பிரக்ஞை, தத்துவத்தின் தனித்த இயக்கம் குறித்த புரிதல், மனித உரிமை, அடிப்படை மானுட அறம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை இங்குள்ள கற்ற பெரும்பான்மையினரிடம் பெரும் செல்வாக்கை செலுத்தின.
இந்துமதத்தை அந்த புதிய பார்வையின் அடிப்படையில் மறுஅமைப்பு செய்வதற்கான முயற்சியை ஒட்டுமொத்தமாக இந்து மறுமலர்ச்சி என்கிறோம். பலநூறு மதச் சீர்திருத்தவாதிகளால் ஆன ஓர் அறிவியக்கம் இது. தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், வள்ளலார், நாராயண குரு என அந்த சீர்திருத்தவாதிகளின் பட்டியல் மிக நீண்டது.
அவர்களின் பார்வையில் பழங்குடி, நாட்டார் வழிபாடுகள் பண்படாதவையாக, காலத்தால் பிற்பட்டவையாக, தோன்றின. ஏனென்றால் அத்தனை மதச்சீர்திருத்தவாதிகளும் மதத்தை அதன் மையத்திலுள்ள தத்துவத்தின் அடிப்படையில் மறுதொகுப்பு செய்யவே முயன்றார்கள். மையமே உண்மை, விளிம்புகள் திரிபுகள் அல்லது விலகல்கள் என புரிந்துகொண்டனர்.
வேதாந்த தரிசனத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த இந்துமதத்தையும் மறுவரையறை செய்வதற்கு ராஜாராம் மோகன்ராய் முயன்றார் என்றால் வேதவேள்வி மரபின் அடிப்படையில் மொத்த இந்துமதத்தையும் மறுஅமைப்பு செய்வதற்கு தயானந்த சரஸ்வதி முயன்றார். இவ்வாறு முயன்றவர்கள் அந்த மையத்துடன் நாட்டார், பழங்குடி பண்பாடுக்கு வெகு தொலைவிருப்பதை உணர்ந்தனர்.
நாட்டார் பழங்குடி மரபில் இருக்கும் பலிச்சடங்குகள், கொடைச்சடங்குகள், தன்னை வருத்திக்கொள்ளும் வழிபாட்டு முறைகள், பலவகையான நோன்புகள், விலக்குகள் ஆகியவற்றை வெறும் மூடநம்பிக்கைகள் என்றும், மதத்துடன் தொடர்பற்ற பழங்குடிப் பண்பாட்டுக் கூறுகள் என்றும் அவர்கள் எண்ணினார்கள். ஆகவே ஆரம்பகட்ட மதச்சீர்திருத்தவாதிகள் அவற்றை நிராகரித்து பேசியிருக்கிறார்கள், தடை செய்ய முயன்றிருக்கிறார்கள்.
சமூகசீர்திருத்தப் பார்வையில் பழங்குடி நாட்டார் வழிபாடுகளை அணுகியவர்கள் அத்தெய்வங்களின் குறியீட்டுத் தன்மை மக்களிடம் உருவாக்கும் உளச்செல்வாக்கை கருத்தில் கொண்டனர். நாராயண குரு அதைப் பற்றிப் பேசியிருக்கிறார். உதாரணமாக, ஒரு போர்க்குடி உக்கிரமான போர்த்தெய்வங்களை தங்கள் குலதெய்வமாகவும் குடித்தெய்வமாகவும் வழிபடலாம். ஆனால் போர் யுகம் முடிந்துவிட்டது. சமாதானத்தின், ஜனநாயகத்தின் யுகம் வந்துவிட்டிருக்கிறது. இன்று போர்த்தெய்வங்கள் அளிக்கும் உளவியல் செல்வாக்கு என்பது அக்குடியை வெறும் வன்முறையாளர்களாக கலகக்காரர்களாக மாற்றிவிடக்கூடும்.
வாளேந்திய தெய்வம் குடித்தெய்வமாக இருக்குமென்றால் அக்குடியில் குருதி சிந்துவதைத் தடுக்க முடியாது என்று நாராயண குரு சொன்னார். ஆகவே புத்தகத்தை ஏந்திய தெய்வம், ஒளிச்சுடரை ஏந்திய தெய்வம், அருள்புரியும் தெய்வம் மட்டுமே வழிபடப்படவேண்டுமென்று அவர் அறிவுரைத்தார். அக்காரணத்தால்தான் தாங்கள் செல்லும் இடத்தில் எல்லாம் அங்கிருந்த நாட்டார் தெய்வங்களை நீக்கம் செய்து அங்கு பெருந்தெய்வங்களை நிறுவும் பணியை அவர் செய்தார்.
ஈழவர்கள் வழிபட்டு வந்த அறுகொலை, மருதா, குளிகன் போன்ற பலி தெய்வங்களையும் பல்வேறு ஆவி தெய்வங்களையும் நாராயணகுரு விலக்கினார். அவற்றை வழிபடக்கூடாதென்று தடுத்தார். பல இடங்களில் வழிபடப்பட்டு வந்த சிலைகளை தன் கையால் தொட்டெடுத்து அருகில் இருந்த கிணற்றில் போட்டு மூடிவிட்டு அங்கு வேறு தெய்வங்களை நிறுவி அவர்களை வழிபடச் செய்தார். அத்தெய்வங்களுக்கு ரத்தபலி கொடுப்பதை உறுதியாக மறுத்தார். உடலை வருத்திக்கொண்டு செய்யும் நோன்புகளை நிராகரித்தார்.
இதற்கான சமூகக் காரணங்கள் உண்மையானவை என்றுதான் நான் நினைக்கிறேன். இன்றும் கூட எந்தக் குடி, வன்முறை வெளிப்பாடு கொண்ட குடித்தெய்வங்களை வழிபடுகிறதோ அந்தக் குடியில் இருந்து வன்முறை அகல்வதில்லை. வன்முறை என்பது இந்த நூற்றாண்டில் ஒரு உயர்பண்பல்ல. தவிர்க்கப்படவேண்டிய ஒன்று அது
வன்முறைப்பண்பு குறுகிய காலஅளவில் உலகியல் வெற்றியையோ பொருளாதார நன்மையையோ அளிக்கலாம். ஆனால் அவ்வன்முறை குடும்பத்துக்குளேயேதான் பெரும்பாலும் செயல்படும். வன்முறைத்தன்மை கொண்ட சாதிகளில் உச்சகட்ட வன்முறைக்கு ஆளாவது அக்குடும்பத்தின் உறுப்பினர்களாகிய பெண்களும் குழந்தைகளும்தான். இது கண்கூடான உண்மை.
இது நான் பிறந்த ஜாதியிலேயே அரைநூற்றாண்டுக்கு முன்புவரை இருந்த ஒரு நிலைமை. படிப்படியாக போர்த்தெய்வங்களை அகற்றி, அருள் புரியும் தெய்வங்களை, வித்யா தெய்வம் என்று சொல்லக்கூடிய கல்வித் தெய்வங்களை ஏற்றுக்கொண்ட பின்னரே நான் பிறந்த போர்க்குடியிலேயே உளவியலில் பெரும் மாற்றங்கள் வந்தன.
நூறாண்டுகளுக்கு முன்பு எங்கள் சாதியில் ஒவ்வொரு குடியிலும் தலைமுறைக்கு ஓரிருவர் பூசலில் கொல்லப்பட்டிருப்பார்கள். ரத்தம் சிந்தாமல் ஒரு பொதுச்சடங்கு நடக்கும் வாய்ப்பே இல்லை என்பார்கள். குடும்ப உறுப்பினர்களே வெட்டிக்கொண்டு சாவார்கள். நீதிமன்றங்களில் சீரழிவார்கள். அச்சூழல் முழுக்க மாறியது வழிபாட்டு முறையில் வந்த மாற்றத்தினால்தான். அதற்கு சட்டம்பி சாமி முதன்மைக் காரணம்
இன்னும் சொல்லப்போனால் தெய்வங்களுக்கு ரத்தபலி கொடுப்பது என்பது குறியீட்டுரீதியான நடவடிக்கையாக தவிர்க்கப்படவேண்டிய ஒன்றுதான். அதன் உளவியல் விளைவுகளை நம்மால் எளிதில்தாண்டமுடியாது. ஆகவே நாராயண குருவோ சட்டம்பி சுவாமியோ வள்ளலாரோ சிறுதெய்வங்களை விலக்கியதும் பழித்ததும் புரிந்துகொள்ளத்தக்கதுதான். மறைமலை அடிகள் போன்ற சைவக்குரவர்கள் சிறுதெய்வங்களுக்கு எதிராக மிகக் கடுமையாக எழுதி பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். சைவ மதமே மிக அதிகமான சிறுதெய்வங்களை உள்ளடக்கியது என்னும் போது அந்த எதிர்ப்பு இன்னும் கவனத்துக்குரியது.
ஆனால் இன்று சிறுதெய்வங்களைக் குறித்த நமது பார்வை இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. இன்று தொடர்ச்சியாக நாம் கல்வி, பொருளியல் சூழலில் மேம்பட்டிருக்கிறோம். மிக வேகமாக உலகமயமாகிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தனிஅடையாளங்கள் முழுக்க கரைந்தழிந்து சர்வதேச அளவில் எங்கும் காணப்படும் ஒரு பொதுவான அடையாளம் அமைந்துகொண்டிருக்கிறது. வெறும் நுகர்வோனாக நாம் மாற்றப்படுகிறோம். இச்சூழலில் நம்முடைய கலாச்சார வேர்களை ஆழ ஊன்றிக் கொள்வது, நம்மை நம் மண்ணுடன் பிணைத்துக் கொள்வது நம்முடைய அடையாளத்தை மீட்டுத் தக்க வைத்துக் கொள்வதற்கு உதவியானது.
நம்முடைய முன்னோர்களின் நீண்ட உணர்வுச்சரடில் நம்மைத் தொடுத்துக்கொள்ளவேண்டிய தேவை இன்றுள்ளது. அதற்கு நாட்டார் தெய்வ வழிபாடு இன்று வழிவகுக்கிறது. இன்று நமது மூதாதையர் நாட்டார் தெய்வங்களுடன் கொண்டிருந்த ஆழ்ந்த உளரீதியான உறவு நமக்கில்லை. ஆகவே ஒருவேளை அத்தெய்வங்கள் நம்மைத் தீவிரமான குறியீட்டுரீதியான பாதிப்புக்கு உள்ளாக்காமல் போகலாம். அத்துடன் இன்று மிகப் பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் உருமாறிவிட்டிருக்கின்றன. கண்கூடாக சென்ற இருபத்தைந்து ஆண்டுகளிலேயே சுடலைமாடன்களும் முத்தாலம்மன்களும் சைவ தெய்வங்களாக, அருள்மிகு தெய்வங்களாக மாறியிருப்பதை காண்கிறேன். அதன்பின் அத்தெய்வங்களை வழிபடுவதற்கான பழைய தடைகள் பொருளில்லாமலாகி இருக்கின்றன.
இன்று நாம் நமது வேர்களை நிறுவிக் கொள்வதற்காக நமது குலதெய்வங்களை வழிபட்டே ஆகவேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறோம். அத்தெய்வங்களை கைவிட்டுவிட்டால் நாம் வேரிழந்து நீரில் மிதந்தலையும் பாசிகளைப் போலாகிவிடக்கூடும். பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள் இரண்டுமே வெவ்வேறு வகையில் நமக்கு இன்று தேவைப்படுகின்றன. ஒரு இந்துவுக்கு இன்று அவனுடைய குலதெய்வவழிபாடு காவல்தெய்வ வழிபாடு ஊர்த்தெய்வ வழிபாடு முக்கியமானது, பெருந்தெய்வவழிபாடும் முக்கியமானது. தத்துவ தெய்வத்தைப் பற்றிய அறிதலும் ஊழ்கமும் முக்கியமானது.
மூன்று நிலையிலும் ஒருவன் இந்துவாக இருந்தால் மட்டுமே மெய்யாகவே ஒரு இந்து தன் ஞானத்தை அடைகிறான் என்று பொருள். அத்வைதம் உருவாக்கும் தத்துவத் தெய்வ உருவகம் சுடலைமாடனை வழிபடுவதற்கு எந்த வகையிலும் தடையாவதில்லை என்பது மட்டுமல்ல அதைப் போற்றுகிறது, அதற்கு இடம் கொடுக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். சுடலைமாடனையும் சுசீந்திரம் தாணுமாலயனையும் பிரபஞ்ச வெளியின்இ நுண்பொருளாகத் திகழும் பிரம்மத்தையும் ஒரேசமயத்தில் வழிபடும்போதுதான் நான் ஓர் இந்துவாக அமைகிறேன்.
ஜெ
***
ஒரு புதிய வீச்சு
’காதலெனும் கலையை சிவன் பார்வதிக்குக் கற்பித்தான். குருதட்சிணையாக அக்கல்வியையே அவனுக்கு அவள் அளித்தாள்’ என்ற காளிதாசனின் வரியை சம்ஸ்கிருத அறிஞர்கள் மேற்கோளாக்குவதுண்டு. ஆணும்பெண்ணும் கொள்ளும் ஆடலில் உள்ள நுட்பங்கள் அளவிறந்தவை. மீளமீள உலக இலக்கியங்கள் எழுதிக்காட்டும் லீலை. பா.திருச்செந்தாழையின் இக்கதை முற்றிலும் புதிய ஒரு சூழலில் அதை மீண்டும் நிகழ்த்துகிறது.
தானியவணிகம் நிகழும் சூழல். நாம் எண்ணுவதற்கு மாறாக அது வணிகர்களும் விவசாயிகளும் நிகழ்த்தும் ஆடலால் ஆனது. அந்தக் களத்தின் உளவியல் நுட்பங்கள் இதுவரை தமிழில் எழுதப்படாதவை. தானியவணிகத்தில் ஒரு பெண் வந்தமர்ந்து இயல்பாக ஏன் என்று கேட்கும்போதே அங்குள்ள சூழ்ச்சிகள் சிதறிவிடுவது, சார் என்னும் சொல்லினூடாகக் கடத்தப்படும் கூரிய தாக்குதல்.
அந்த வணிகக்களத்தினூடாக ஆடையில் சரிகை என ஒரு காமத்தின் இழை ஓடுகிறது. அதிலும் ஓர் ஆடல். ஆண்பெண் ஆடலின் களத்தில் நிகழும் ஓர் உச்சப்புள்ளியை தானியவணிகத்தின் உச்சப்புள்ளியுடன் சரியாக இணைத்து கதையை நிகழ்த்திவிட்டிருக்கிறார் ஆசிரியர். பெண் வென்று செல்கிறாள், அது எப்போதுமே அப்படித்தானே?
பா.திருச்செந்தாழையின் கதைகள் எல்லாமே தொடர்ச்சியாக சிறப்பாக வெளிவந்துகொண்டிருப்பது வியப்பூட்டுகிறது. இது அவருடைய ஒரு ஆழ்ந்த புனைவுக்காலகட்டம். இத்தகைய ஒன்று கந்தர்வனுக்கு நிகழ்ந்தது. மிகக்குறுகிய காலகட்டத்தில் எழுதிய எல்லாமே சாதனைக் கதைகளாக நிகழ்த்திக் கடந்து சென்றார். அன்று அக்கதைகளை உடனடியாக அடையாளம் கண்டு நான் எழுதிக்கொண்டே இருந்தேன். இன்றும் அதைச்செய்ய விரும்புகிறேன்.
இத்தகைய காலகட்டம் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. வருவதைப்போலவே மறைந்துவிடவும்கூடும். முடிந்தவரை அதைப் பேணிப் பெருக்கவேண்டும். அதிலேயே திகழவேண்டும். எவ்வகையிலும் அவர் அதைத் தளரவிடக்கூடாது. இரண்டு வகைகளில் அந்த விசை தளரும். ஒன்று, ஆசிரியர் தானாகவே வேறேதும் உலகியல் காரணங்களால் அதை ஒத்திப்போடுதல். இன்னொன்று, கலையுணர்வற்றவர்கள் உள்ளே புகுந்து அரசியலையோ வேறெதையாவதையோ சுட்டிக்காட்டி அபத்தமான விவாதங்களினூடாக ஆசிரியரின் தன்னம்பிக்கையை குலைத்து திசைதிருப்புதல்.
இரண்டுக்கும் எதிராக திடமான நிலைபாடு தேவை. முற்றிலும் புதியதோர் உலகம், இன்றுவரை சொல்லப்படாத கூர்மையுடன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இக்கதைகளில். வாழ்த்துக்கள்.
த்வந்தம் – பா.திருச்செந்தாழைபொன்னி,கோதை – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
உண்மையில் பொன்னியின்செல்வன் விளம்பரத்தைப் பார்த்தபோது நான் எலமஞ்சலி லங்காவைத்தான் நினைத்துக்கொண்டேன். அப்போது நீங்கள் எழுதுவது பொன்னியின்செல்வன் திரைக்கதை அல்லவா என்று ஒரு மின்னஞ்சல் போட்டிருந்தேன். நீங்கள் அதை புன்னகையுடன் தவிர்த்துவிட்டீர்கள். நான் ஊகித்துவிட்டேன் என்று பதில்போட்டேன். கூகிள் மேப்பிலேயே அந்த இடத்தையும் அடையாளம் கண்டு அனுப்பியிருந்தேன். 2013ல் நானே நண்பர்களுடன் அங்கே சென்று அதே இடத்தில் கோதாவரியில் நீராடினேன். அதையும் எழுதியிருந்தேன். அற்புதமான இடம் அழகான நினைவுகள். ஆனால் அதற்குள் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அதுதான் திகைப்பூட்டுவதாக இருக்கிறது. அன்று 11 வயதான என் மருமான் என்ன ஏது என்று கேட்டுக்கொண்டே இருப்பான். அவன் இன்றைக்கு வெண்முரசு வாசகன்.உங்களுக்கு கடிதமும் போட்டிருக்கிறான்
ஜி.சரவணன்
அன்புள்ள ஜெ
எலமஞ்சிலி லங்கா பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். அங்கே கோதாவரிக்கரையில் அமர்ந்தபடி பானுமதி, கண்டசாலா பாடிய பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்ததையும் எழுதியிருந்தீர்கள். அந்தமுகில் இந்தமுகில் நாவலுக்கான கரு அங்கேதான் விழுந்திருக்கவேண்டுமென நினைக்கிறேன்
வி.அர்.சந்திரசேகர்
அன்புள்ள ஜெ
எலமஞ்சலி லங்கா புகைப்படங்களும் குறிப்பும் அழகாக இருந்தன. அன்று எனக்கு உங்களைத் தெரியாது. நான் இரண்டு ஆண்டுகளாகவே உங்கள் தளத்தை வாசிக்கிறேன். வாசிக்க வாசிக்க எனக்கிருக்கும் நிறைவோ கொந்தளிப்போ என்னவென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதுதான்.எத்தனை ஊர்கள். எத்தனை மனிதர்கள். மகிழ்ச்சியாக வாழவேண்டுமெனறால் மகிழ்ச்சி முக்கியம் என்று முடிவெடுக்கவேண்டுமென எழுதியிருக்கிறீர்கள். அதை நினைத்துக்கொண்டேன்
ராஜி மகாதேவன்
அன்புள்ள ஜெ,
கோதாவரியின் கரை எனக்கும் பிடித்தமான ஊர். என் அப்பாவின் பூர்விகம் அங்கேதான். இரண்டு வாசல் வைத்த அகலமான வீடுகள். தென்னந்தோப்பு. எங்கே பார்த்தாலும் மென்மையான வண்டல் மண். அழகான நதி. கண்கூசும் நீர்ப்பரப்பு. ஆந்திராவின் களஞ்சியம் அது. கோதாவரி பத்து காவேரிக்குச் சமமானது.
நீங்கள் பல இடங்களில் கோதாவரி பற்றி எழுதியிருக்கிறீர்கள். கோதைப்பித்து எனக்கும் உண்டு. உங்கள் படங்களைப் பார்க்கையில் உங்களுடனேயே இருந்துகொண்டிருக்கிறேன். மானசீகமாக நீங்கள் செல்லும் எல்லா பயணங்களிலும் இருக்கிறேன்.
சுகன்யா ராம்
சாதி ஓர் உரையாடல்

தமிழ்ச்சூழலில் ஒரு விசித்திரமான முரண்பாட்டைக் காணலாம். இங்கே பொதுவெளியில் அனேகமாக அனைத்து அறிவுஜீவிகளும் சாதிக்கெதிராகவே பேசுவார்கள். சமூக ஊடகங்களைக் கொண்டு பார்த்தால் தமிழ்ச்சமூகமே சாதிக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருப்பதான சித்திரமே எவருக்கும் எழும். இங்குள்ள அரசியல்கட்சிகளில் சாதிக்கட்சிகள் சில தவிர எல்லாமே சாதியெதிர்ப்புக் கொள்கை கொண்டவை. இங்கே போற்றப்படும் சிந்தனையாளர்கள் பலர் சாதியை ஒழித்தமைக்காக அந்த புகழை அடைந்தவர்கள்.
ஆனால் தமிழ்ச்சமூகம் மூர்க்கமான சாதி மனநிலை கொண்டது. அத்தனை தேர்தல்களும் சாதியக்கணக்குகளுடனேயே நிகழ்கின்றன. தொழிற்சங்கங்கள், கூட்டுறவு அமைப்புக்கள் கூட சாதிய அடிப்படையிலேயே பிரிந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு அலுவலகத்திலும் சாதிக்குழுக்களாகவே வேலை நடைபெறுகிறது. ஒவ்வொரு வணிகமும் சாதிகளாகப் பிரிந்துள்ளது.
ஆனால் அதைப்பற்றி இங்கே பேச்சே எழுவதில்லை. அந்தச் சங்கடமான தலைப்பை அப்படியே உள்ளே மறைத்துக்கொள்வார்கள். சாதி இன்றி இங்கே ஒன்றுமில்லை. அந்த உண்மையை மழுப்புவதற்கான ஒரு பொது உத்தியாகவே இங்கே சாதியொழிப்பு பொதுவெளியில் பேசப்படுகிறது. அது ஒரு கூட்டுப்பாவனை மட்டுமே. எந்த அளவுக்கு அனல்கக்குகிறார்களோ அந்த அளவுக்கு ஏற்பு உண்டு. எவரும் தனிவாழ்க்கையில் அவர் எப்படி சாதிக்கு அப்பாற்பட்டவராக வாழ்ந்தார் என்று கேட்கப்போவதில்லை. அந்தக் கேள்வியே இங்கே சங்கடமான ஒன்று.
அதேபோன்று இன்னொரு முரண் இங்குள்ள இடைநிலைச் சாதி அரசியல். இங்கே இன்றைய அரசியலதிகாரம் முழுக்கமுழுக்க இடைநிலைச் சாதிக்குரியது என அனைவருக்கும் தெரியும். அரசதிகாரம், நிலவுடைமை, சமூகத்தலைமை மூன்றுமே அவர்களிடம்தான். அவர்கள்தான் எண்ணிக்கையில் பெரும்பான்மை என்பதனால் ஜனநாயகத்தில் அதுவே இயல்பானது.
ஆனால் அத்தனை களங்களிலும் ஆதிக்கம் கொண்டு சுரண்டும் இடைநிலைச் சாதிகள் தங்களை சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்களாக ஒரு பாவனையை கொண்டுள்ளார்கள். அறிவுஜீவிகள்கூட பொதுவெளியில் அவ்வண்ணம் நடிக்கிறார்கள். அவர்கள் சாதியை கற்பித்ததன் பழியை பிராமணர் மேல் போடுவார்கள். ஆனால் சாதியை தங்கள் அடையாளமாகவும் வைத்திருப்பார்கள். அதைக்கொண்டே அதிகாரத்தையும் அடைவார்கள். இந்த முரண்பாடு பற்றி இங்கே பேசப்படுவதே இல்லை.
இங்குள்ள இடைநிலைச் சாதி அரசியல் இருமுகம் கொண்டது. ஒரு பக்கம் அது பிராமணர்களிடம் நீங்கள்தான் சாதியைக் கற்பித்தீர்கள் என்று சொல்லி இழித்தும் பழித்தும் ஒடுக்க முயல்கிறது. இன்னொரு பக்கம் அது தலித்துக்களிடம் உங்களிடமிருக்கும் குறைந்த பட்சக் கல்விகூட நாங்கள் போட்ட பிச்சை என்கிறது. தமிழக இடைநிலைச் சாதியினர் எந்தக் காலகட்டத்திலும் தலித் விடுதலைக்காக ஏதும் செய்ததில்லை, அவர்கள் போராடியதெல்லாம் தங்களுக்காக மட்டுமே. தலித்துக்களுக்கான இட ஒதுகீடு, கல்வி முதலியவை பெரும்பாலும் இங்கே பிராமணர் உட்பட முற்போக்கு எண்ணம்கொண்ட சில உயர்சாதியினரின் பங்களிப்பால் அமைந்தவை. அந்த வரலாற்று உண்மை இந்தப்பேச்சால் மறைக்கப்படுகிறது.
சாதிபற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் இங்கே அப்பேச்சுக்கள் எழுந்த சென்றநூற்றாண்டின் வரலாற்றுப் புரிதலின் அடிப்படையில் அமைந்தவை. அதற்குப்பிந்தைய வரலாற்றுக்கொள்கைகள், சமூகவியல் கொள்கைகளை கருத்தில் கொள்ளாதவை. மிகமிக உள்நோக்கம் கொண்டவை. அரசியல் உள்நோக்கம், அதற்குள் தன் சாதி- மதம் சார்ந்த உள்நோக்கம்.
இக்கட்டுரைகள் வெவ்வேறு காலகட்டங்களில் சாதி குறித்து என் வாசகர்கள், நண்பர்களுடன் நிகழ்ந்த உரையாடல்களின் தொகுப்பு. ஓர் அறிவார்ந்த உரையாடலுக்கான அடிப்படையாக இவை அமையலாம். இதை நண்பர் மயிலாடுதுறை பிரபுவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெ
***


ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை
வான்நெசவு முன்னுரைமலைபூத்தபோது முன்னுரை

ஐந்து நெருப்பு முன்னுரை
தேவி – முன்னுரை
பொலிவதும் கலைவதும் முன்னுரை

குமரித்துறைவி முன்னுரை
எழுகதிர் முன்னுரைமுதுநாவல் முன்னுரை

ஆனையில்லா! முன்னுரைதங்கப்புத்தகம் முன்னுரைஅந்த முகில் இந்த முகில் முன்னுரை

பத்துலட்சம் காலடிகள் முன்னுரை
இருகலைஞர்கள் முன்னுரை
உடையாள் முன்னுரை
ஞானி முன்னுரை
கதாநாயகி முன்னுரை
யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’- அனங்கன்
சூடுவதற்க்காக பூப்பதில்லை எல்லா மலர்களும்
நாவில் கரையவென்று கனிவதில்லை எல்லா கனிகளும்
எந்த நதியின் நீரும் மொத்தமாய் சென்று சமுத்திரம் சேர்வதில்லை
பாடப்படாத சங்கீதத்திற்கு ஈடு இணையும் இல்லை.
இந்த நான்கு வரிகள் தான் யுவன் சந்திரசேகரின் “கானல் நதி” நாவல்.ஜெயமோகன் அரசியலே அற்ற எழுத்து அவருடையது என்று சொல்லிருந்தார். அவர் எழுத்தை வாசிக்கும் அனைவரும் உணரக்கூடிய ஒன்று இது. நானூறு பக்கம் இருக்கும் இந்த நாவலில் எந்த விதமான ஒரு எதிர் குரல் கூட எனக்கு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் தன் இசை வாழ்க்கை, உலகியல் வாழ்க்கை என்று அனைத்துவகையிலும் வெற்றியே அற்றவனாக இருக்கும் மையபாத்திரம் தான் தனஞ்சய் முகர்ஜி.
நாவலுக்குள் ஒரு நாவல் கதாபாத்திரமாகத்தான் தனஞ்சய் முன்னுரையுடன் அறிமுகமாகிறார். நாவலின் ஒளியாலான தனஞ்சயின் பால்ய காலம் நமக்குள்ளும் பைரவியாக பொழிகிறது. வங்காளத்தின் மாமுட்பூர் கிராமத்தில் காரி நதியும் நெல் வயலும் கடுகு பயிர்களும் பரந்த விரிந்த உருளைக் கிழங்குச் செடியும் வீரேஸ்வர் கோஸ்வாமியின் நந்தவனமும் கால்பந்து மைதானமும் என்று சுதந்திரத்திற்கு பின்னான வங்காள கிராமம் நமக்குள் விரிகின்றது. இசை தனஞ்சயில் இயல்பாகவே இருக்கிறது. வேப்பமரத்தில் காற்று வீசுவது போல இயல்பாகவே இசை அவனிடத்தில் இருக்கிறது. இசையை பெண்ணாக கண்டுகொண்டனோ என்று தோன்றுகிறது. அன்னை ஜயா, அத்தை மித்தாலி , ஸரயு , சண்டாளியான காஞ்சனா தேவி , அனைவரும் அவனுக்கு இசையே, இந்த வழியாக அவன் தன் குரு பிஷ்னுகாந்தை ஒர் அன்னையாக உணர்வது அவன் அடையும் தரிசனம். சாஸ்திரிகள், இசையை தனஞ்சயனுக்கு கனிவுடனும் பாசத்துடனும் நீட்டிய கரம், அவன் அடைந்த பேரருள். அது அவனுடன் கடைசி வரைக்கும் உடனிருந்தது. என்றுமே இசை அவனுக்குள் பெண்ணாகவே எழுந்து வருகிறது. பால்யத்தில் அன்னையாகவும், வாலிபத்தில் ஸரயுவாகவும் முகம் சூடியபடி இசை அவனை இழுத்து சென்று கொண்டே இருக்கிறது . முகங்கள் வழியாக அவன் முகமற்ற இசை சாந்நித்யமே அனல் வடிவமாக உருமாறிய முகத்தை சென்றடைகிறான். அனல் வடிவ ரூபத்திற்கு பதில் வேறொரு முகம் அவன் அடைந்திருந்தால், காற்றடிக்கும் போது கம்பத்தில் கட்டப்படாமால் விட்ட கொடிதுணிபோல் நழுவி பறந்திருக்க மாட்டான்.
ஆண்களுடன் என்றுமே இசைந்து வாழமுடியவில்லை தனஞ்சயனுக்கு. தந்தை இசை வந்தவுடன் அன்னியமாகிறார் ,அண்ணன் சுப்ரதோ இவனிடம் என்றும் நெருங்கவே முடியாத வஞ்சத்துடன் இருக்கிறான் . குருசரண் தாஸ் அவன் புரிந்துகொள்ள முடியாத, வென்று மேலேறி செல்ல முடியாத உலகியல் முகமாகத்தான் தெரிகிறான். குருசரண் காட்டும் அன்பும் அரவணைப்பும் தனக்கு தேவை பட்டாலும் அதில் சகஜமாக இருக்க முடியவில்லை. அவனால் எப்பொழுதெல்லாம் குருசரணை குத்திகிழிக்கமுடியுமோ அப்பொழுதெல்லாம் அதை தன்னியல்பாக செய்கிறான். குரசரண் தாஸ் என்றும் தனஞ்சயன் ஏங்கும் சமநிலையுடையவன், உலகியலை வென்று மேலேருபவன் தன்னை பலவிதமாக பகுக்கத்தெரிந்தவன், இசையுடன் இச்சமநிலைத் தான் தனஞ்சயன் தேடிக் கொண்டிருந்தானோ என்னவோ.
ஸரயு தனஞ்சனுக்கு கனவின் இசை பூபாலி . பால்யத்திலிருந்து அவன் தன்னுள் வளர்த்தெடுத்த ஆனந்தத்தின், வாலிபத்தின், காமத்தின் இசை. இசையில் ஸ்ருதி சேராதது போல் அவளுடனான அவன் வாழ்க்கை அபஸ்வரமாகிவிட்டது. அவள் ஒர் இடத்தில் நிராகரிக்கவே செய்கிறாள் இவனை, இவன் எந்த அளவு உலகியலில் வெற்றியடை முடியும் என்று அவள் உள்ளூர சந்தேகித்துக் கொண்டுதான் இருக்கிறாள். தனஞ்சயனுக்கு அவள் கிடைக்கவில்லை என்பதை அவனுடைய உலகியல் தோல்வியாகத்தான் எடுத்துக்கொள்கிறான். அவளை கடைசிவரை அனுபவிக்காமல் இருந்து முட்டாளாக இருந்ததற்கு வருத்தமடைகிறான். மீண்டும் அவளை வேசியாகப் பார்க்கும் போது உள்ளூர மகிழ்ந்து அவளுக்கு வாழ்க்கை தர முன் வந்த போதிலும் அவள் மீண்டும் அவனை கையாலாகதவனாகவே பார்த்து வசை பொழிகிறாள். அந்த கனவின் இசை முகத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியாமலேயே போகிறது தனஞ்சயனுக்கு.
தன்னை மீண்டும் வாழ்க்கையில் பொருத்திகொள்ள முயற்சி செய்கிறான். பிபாஸ் ராகத்தின் அலைக்கழிப்பின் உச்சியில் அன்னையும் தந்தையும் காண தன் ஊருக்கு போகும் தனஞ்சயன், தன்னுடைய சுழியில் அவர்களையும் இழுக்க மனமில்லாமல் ஊரை விட்டு கிளம்பிப்போகிறான். விஷ்ணுகாந்த் சாஸ்த்திரியின் வீட்டின் முன் சில நிமிடம் நின்று சென்றுவிடுகிறான். அவன் ஒரு வேளை உள்ளே நுழைந்திருந்தால் அவனின் வாழ்வு வேறுவிதமாக மாற வாய்ப்பிருக்கிறது. அவன் இசை மூலமாக சென்றடைய வேண்டிய எல்லை ஜனாப் அஸ்லாம் கான். ஆனால் கசப்பின் மூலமாகவும் கழிவிரக்கத்தின் மூலமாகவும் சென்றடைகிறான். அனைவரிடத்திலும் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டும் அஸ்லாம் கானை தன்னில் கண்டடைந்தவுடன் தன் இறுதியை அடைகிறான் தனஞ்சயன்.
ஆம் பாடப்படாத சங்கீதத்திற்கு ஈடு இணையும் இல்லை.
அனங்கன்
July 19, 2021
பொன்னியும் கோதையும்
பொன்னியின் செல்வனின் முதல் விளம்பர அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இந்தப்படம் எத்தனை கட்டங்களைக் கடந்து வந்துசேர்ந்திருக்கிறது என்னும் திகைப்பே இந்த தருணத்தில் ஏற்படுகிறது.
பொன்னியின் செல்வனை சினிமாவாக ஆக்கும் எண்ணம் பலருக்கு இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் அதன் உரிமையை வாங்கினார் என்றும், கமல் முயன்றார் என்றும் சொல்லப்படுகிறது. மணிரத்னம் இளமையிலேயே படமாக ஆக்க விரும்பிய கதைகளில் ஒன்று.
ஆனால் கல்கி இதை படமாக்க முடியுமென நினைக்கவில்லை. இதன் அமைப்பு பெரியது, எங்கும் மையம்கொள்ளாமல் ஓடிக்கொண்டிருப்பது கதை. ஆகவே அவர் சிவகாமியின் சபதம் நாவலைத்தான் சினிமாவாக ஆக்கவேண்டுமென நினைத்தார். எஸ்.எஸ்.வாசனிடம் அதற்காக கோரிக்கையும் வைத்தார் என்கிறார்கள். அது நிகழவில்லை.
மணிரத்னம் முதலில் என்னை அணுகியதே இதன் திரைக்கதைக்காகத்தான். 2011 மார்ச் மாதம் இதை எழுதுவதற்காக பிரம்மாவரம் அருகே உள்ள எலமஞ்சிலி லங்கா என்னும் சிற்றூரில், கோதாவரிக்கரையில் ஆற்றுப்பெருக்கை பார்க்கும்படி அமைந்த விருந்தினர் மாளிகையில் சென்று தங்கியிருந்தேன்.ஒருமாதம் தங்கி இதை எழுதினேன். அன்று மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்த தனா எனக்கு உதவியாளராக வந்தார். அவர் பின்னாளில் படைவீரன், தேஹி,வானம் கொட்டட்டும் போன்ற படங்களை இயக்கினார்.
எலமஞ்சிலி லங்கா ஓர் அழகான சிற்றூர். ஆந்திரமாநிலத்தின் வளம் மிக்க பகுதி. எல்லையில்லாதவைபோல விரிந்த தென்னந்தோப்புக்கள். என் விருந்தினர் மாளிகையும் தென்னந்தோப்புகள் நடுவே பன்னிரண்டு அடி உயரமான தூண்கள்மேல் அமைந்திருந்தது. ஐந்து கிலோமீட்டர் அகலத்தில் நீர் பெருகிச்செல்லும் கோதாவரியைப் பார்த்தபடி திறந்திருக்கும் மிகப்பெரிய உப்பரிகை. அதில் அமர்ந்து எழுதுவேன்.
அங்கே எல்லா நண்பர்களும் வந்து கோதையில் நீந்திக் கொண்டாடியிருக்கிறார்கள். யுவன் சந்திரசேகர் வந்து ஒரு வாரகாலம் உடன் தங்கியிருந்தான். விஷ்ணுபுரம் நண்பர்கள் வந்தனர். ஒவ்வொரு நாளும் படகுச்சவாரி. மீன்சாப்பாடு.
பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆலயங்களில் படப்பிடிப்பு நடத்தமுடியாத நிலைதான் காரணம். வரைகலை வளர்ச்சியடைந்தபின் மீண்டும் அந்த கனவை மணிரத்னம் கையிலெடுத்தார். நடுவே நோயச்சக் காலகட்டம். ஆனால் விடாப்பிடியாக உள உறுதியுடன் எண்பது சத படப்பிடிப்பை முடித்துவிட்டார். இரண்டு மூன்றுமணிநேரப் படங்கள். இன்னும் ஓராண்டில் படம் அரங்குகளுக்கு வரக்கூடும்.
ஏறத்தாழ பத்தாண்டுகள். ஒரு பெருங்கனவுடன் சேர்ந்தே வந்திருக்கிறேன் என்னும் உணர்வை அந்த விளம்பரம் அளிக்கிறது. கோதையின் மடியில் அமர்ந்து பொன்னியைப் பற்றி எழுதிய அந்நாள் நினைவில் எழுகிறது.
கோதையிடமிருந்து பிரிந்து…அறிந்து முன்செல்பவர் வழிபடலாமா?
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் எனக்கு கோவிட் நோய் வந்த 5 ஆவது நாளில், என் மகனுக்கும் வந்து விட்டது. என் வரையில் நோய் என்று அறிந்த போது, ஒரு விதத்தில் சின்ன சந்தோஷம் தான் இருந்தது.. ஆகா 15 நாள் முழுவதுமாக வாசிப்பில் முழுகி விடலாம் என்று. ஆனால் மகனுக்கு நோய் என்று தெரிந்த உடன், ஒன்னும் செய்ய தோன்றவில்லை. வேண்டிக்கொண்டதை தவிர.
எனக்கு எப்போதும் கடவுள் நம்பிக்கை என்பது, சிறு வயதில் அப்பா அம்மா ஆரம்பித்த பழக்கத்தில் இருந்து உள்ளதே ஒழிய, முழு முற்றாக சிவன், முருகன், பெருமாள் என்று ஆழ்ந்த பக்தி, பூஜை, வேண்டுதல் என்று எல்லாம் செய்வதில்லை. இவை அனைத்தும் பிரம்மம் என்னும் ஒன்றின் குறியீடுகள் என்ற எண்ணம் உள்ளவன் ( இந்த தளத்தில் என் கருத்துகளை நான் அடைய பெரிதாக influence செய்த்தது நீங்கள் தான் என்றும் சொல்வேன்).
பகவத் கீதையில் பெரும் ஈர்ப்பு உண்டு. ஆனால் மகனுக்காக தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்பது, முருகனிடம் தினமும் வேண்டிக் கொள்வது என்று இதுவரை இல்லாத தீவிரத்துடன் செய்து கொண்டிருந்தேன். இது ஏன் என்று என்னையே கேட்டு கொள்கிறேன். இப்படி ஒரு இக்கட்டு இல்லாத போதும் இந்த மன நிலை இருப்பதை தான் ( கடவுள் நம்பிக்கையில்லோ, இல்லை வேறு கருத்துக்களிறளோ?) நீங்கள் சொல்வதாக புரிந்து கொள்கிறேன்.
இரண்டாவது உதாரணம் என் குமரத்துறைவி வாசிப்பு. முழு நேரமும் மீனாட்சி கல்யாணம் இரண்டு விக்கிரகங்கள் இக்கு நடந்த விழா என்ற எண்ணம் வரவே இல்லை. மீனாட்சி அம்மன்னும், சுந்தரரும் தெய்வ பிறவிகளாக இருந்து மணம் முடிப்பதாகவும் அதை பார்த்து கொண்டிருப்பதாகவும் தான் மன நிலை இருந்தது. இன்றும் குமரத்துறைவி பற்றி நினைத்தால் அந்த எண்ணமே வருகிறது..
கேள்விகள் சரியானவையா, நான் சரியாக எழுதினேனா என்று தெரியவில்லை.. தவறு இருப்பின் மன்னிக்கவும்.
அன்புடன்
வெண்ணி
***
அன்புள்ள வெண்ணி,
ஞானம்- பக்தி இரண்டுக்குமான முரண்பாடு என்பது எப்போதுமே பேசப்பட்டுக் கொண்டிருப்பது, தீராத வினா அது. எனென்றால் அதற்கு ஒவ்வொரு மெய்யியல் மரபும் ஒவ்வொரு விடை சொல்கிறது. நான் சொல்வது என் மரபின் பதில்.
ஞானம் எனப்படுவது ஒரு மெய்த்தரிசனத்தை தர்க்கபூர்வமாக அறிந்துகொள்ளல். கற்றுக்கொள்ளல், புரிந்துகொள்ளல், ஏற்றுக்கொள்ளல் என மூன்று படிகள் முதலில். பின்னர் அதைக் கொண்டு உலகை நோக்குதல், அதை ஊழ்கப்பொருளாக்குதல், அதுவென்றே ஆதன் என மூன்று நிலைகள்.
நாம் பிரம்மம் அல்லது மகாதர்மம் அல்லது பவசக்கரம் போன்ற பிரபஞ்ச விழுப்பொருள் பற்றி அறியும்போது முதல்படியில்தான் நிற்கிறோம். ஆழ்ந்து கற்றுக்கொள்வதும் ஐயமறப் புரிந்து தெளிந்து ஏற்றுக்கொள்வதும் அடுத்த படிநிலைகள். அடுத்த மூன்றுநிலைகளும் சாதனா எனப்படுகின்றன. ‘ஆதற்பயிற்சி’ என அதைச் சொல்லலாம். அதைச்செய்வோர் சிலர் மட்டுமே. அதற்குரிய பயணம் நீண்டது.
ஒன்றை அறிந்துகொண்டதனாலேயே நாம் அதை கற்றுவிட்டோம், தெளிந்து ஏற்றுவிட்டோம் என பொருள் அல்ல. நாம் அதை அறிந்துகொள்ளத் தொடங்கிவிட்டோம் என்று மட்டும்தான் பொருள்.அது நம் ஆளுமையாக ஆகவில்லை.
அறிதலின் வழி ஒரு தனிச்சிறப்புப் பார்தை [விசேஷம்]. அது நம் ஆழ்ந்த அகவயத்தேடல் சார்ந்தது. நமக்கு மட்டுமே உரியது. நம் வாழ்க்கை முழுக்க மெல்ல அறிந்து, அமைந்து நாம் சென்றடைய வேண்டிய இலக்கு கொண்டது. நாம் கேள்விகள் கொண்டவர் என்பதனால், அறிந்து தெளிவதே நம் பாதையென நம் இயல்பு நமக்கு காட்டுவதனால், எளிய நம்பிக்கையும் சடங்குகளும் மட்டும் நமக்கு போதாது என நாம் உணர்வதனால் நாம் அறிவிவின் பாதையைக் கடைப்பிடிக்கிறோம்.
ஆனால் நாம் இங்குதான் வாழ்கிறோம். உலகியலில்தான் இருந்துகொண்டிருக்கிறோம். மெய்யறிதலின் பொருட்டு உலகியல் வாழ்க்கையை நாம் துறக்கவில்லை. ஆகவே இங்கே நமக்கு துன்பங்களும் பதற்றங்களும் உள்ளன. அவற்றுக்கு நம் அறிதல் உடனடியாக எந்த ஆறுதலையும் அளிப்பதில்லை. அதை ’அன்றாட’ தளம் எனலாம். [சாமானியம்] அங்கே நமக்கு தற்காலிகமாக பக்தியும் சடங்கும் உதவலாம். அவற்றை கைக்கொள்வதில் தவறில்லை.
அன்றாடத்தில் பக்தியோ சடங்கோ எவ்வகையிலும் அறிந்துசெல்லும் பாதைக்கு முரணானவை அல்ல. அறிந்து அமைந்தபின் அவை தேவையில்லாமலாகி அகன்றுசெல்லும் ஒரு நிலை இயல்பாக அமையலாம். அதுவரை அவை நமக்குத் தேவையாகவே உள்ளன. அறிவதறிந்து அமைந்த ஞானியர் கூட இறைபக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். ஆலயங்களை நிறுவியிருக்கிறார்கள். அது இதன்பொருட்டுத்தான்.
ஆகவே இதை முரண்பாடாகக் கொள்ளவேண்டியதில்லை. தூயஅறிவைச் சார்ந்து மட்டுமே அன்றாடத்தை நிகழ்த்துமளவுக்கு நாம் அறிவில் தெளிந்து அறிவென்றே ஆகிவிடவில்லை.
ஆனால் ஒரு ‘வெறும் பக்தர்’ நம்பிக்கை மட்டுமே கொண்டு இறைவழிபாடும் சடங்கும் செய்வதற்கும் நமக்கும் வேறுபாடுள்ளது. அது நம் இயல்பு, நாம் அதற்கு ஒன்றுமே செய்யமுடியாது. நாம் செய்வதை. நாம் எண்ணுவதை நாமே கவனித்துக்கொண்டிருக்கிறோம். அறிந்துகொண்டிருக்கிறோம். ஆகவே நம் அறிவுதேடலின் களங்களும் கருவிகளும்தான் இவையெல்லாம்.
இன்னொன்று உண்டு. கலையும் இலக்கியமும் நிறைக்கும் ஓர் இடம் நம்முள் உண்டு. அழகுணர்வு மற்றும் உணர்ச்சிகர தேவைகள். அவற்றை நிறைப்பவையே தெய்வங்களும் சடங்குகளும். பக்திமரபு அளிக்கும் இசை, தொன்மங்கள், கவிதை மற்றும் கலைகள் இல்லையென்றால் நாம் மிகப்பெரிய வெற்றிடம் ஒன்றை அடைவோம்.
நாம் உணர்வுகளால் ஆனவர்கள். உணர்வுகளுக்கு கலையும் இலக்கியமும் இன்றியமையாதது. அவை எப்படி ஆழ்ந்த குறியீட்டுச் செயல்பாடுகளோ அதைப்போலவே சடங்குகளும். தெய்வங்களும்தான்.
அறிந்தமைந்த அத்வைதிக்கு அவை தேவையில்லை. அவர் இன்னும் பெரிய நிலையில் இருக்கிறார். ஆனால் நாம் உலகியலில் நின்றிருக்கிறோம். உலகியல் என்பது குடும்பம் அல்லது தொழில் மட்டும் அல்ல. மானுடவாழ்க்கை சார்ந்த எதுவும் உலகியலே. மானுடத் துயரும் மானுடக் களிப்பும் உலகியலே. அவற்றை முற்றாக உதறிக் கடக்காதவரை நாம் உலகியலிலேயே இருக்கிறோம். யோகசாதகர் கூட முற்றாக விடுபடும் வரை உலகியலிலும் இருக்கிறார்கள்.
ஆகவே ‘நான் ஞான மார்க்கி, எனக்கு எதற்கு பக்தியும் தெய்வமும்?’ என்ற கேள்வி தேவையில்லை. அது குறைவாக அறிந்தமையால் எழும் வெறும் ஆணவம் மட்டுமே. நாத்திகரின் தன்முனைப்புக்குச் சமானமானது அது. நாம் சாதாரண மானுடர். சாமானிய வாழ்வில் வேண்டுதலும் வழிபடுதலும் நமக்கு உரியவை. கூடவே நாம் அகத்தே அனைத்தையும் அறிந்து கடந்துகொண்டும் இருக்கலாம்.
ஜெ
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

