Jeyamohan's Blog, page 950

July 16, 2021

சின்னஞ்சிறு மலர்- அருண்மொழி நங்கை 

ஹோமியோபதி மருந்து போல மிகக்குறைவாக மட்டுமே கலக்கவேண்டிய ஒன்று எழுந்துவந்து முழுமைசெய்யும் கட்டுரை அருண்மொழி எழுதிய சின்னஞ்சிறு மலர். எவருக்கும் தெரியாமல் பூத்து மறைந்துவிட்ட ஒன்று. அதை முடிந்தவரை மெல்லிய ஊசிக்கீறலாகச் சொல்லிச் செல்லவும் அவளால் இயன்றிருக்கிறது.

சின்னஞ்சிறு மலர்- அருண்மொழி நங்கை 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2021 11:34

இரு கலைஞர்கள்

ஆளுமைகள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் வாழ்க்கையை தழுவி எழுதப்படும் கதைகள் ஏராளமாக மற்ற மொழிகளில் உள்ளன. தமிழில் புனைகதைகள் எழுதப்பட்ட காலம் முதலே அத்தகைய சில கதைகள் எழுதப்பட்டுவிட்டன. பெரிய அளவில் சொல்லும்படி இல்லை என்றாலும் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழில் அதிகம் எழுதப்பட்ட வாழ்க்கை ஜி.நாகராஜனுடையது.

மரபிலக்கியத்தில்கூட கலைஞர்களைப் பற்றிய கதைகள் ஏராளமாக உள்ளன. அவை காலப்போக்கில் தொன்மங்களாகிவிடுகின்றன. தியாகையரை வாழ்த்த சீதையுடன் ராமன் வந்ததும், பீர்முகம்மது அப்பா சப்பாத்திக்கள்ளி சதையை கறியாக்கி சமைத்து சதக்கத்துல்லா அப்பா அவர்களுக்கு பரிமாறியதுமெல்லாம் அவ்வாறு இலக்கியமாகத் தோன்றி தொன்மமாக ஆன கதைகளாகவே இருக்கவேண்டும்.

இவ்வாறு ஆளுமைகள் கதைகளுக்குள் முளைத்தெழ என்ன காரணம்? பெருஞ்செயல்புரிபவர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் விதைகளைப்போல. அவர்களிடமிருந்து செயலும் கலையும் சிந்தனையும் உருவாகின்றன. அந்த ஊற்றுமுகம் பற்றி நமக்கு ஒர் ஆர்வம் இருக்கிறது. அவர்களின் ஆளுமையை கொண்டு அவர்களின் செயல்தளத்தை, அவர்களின் புனைவுலகை புரிந்துகொள்ள முடியுமா என்று பார்க்கிறோம். அவர்களின் புனைவில் இல்லாத எதையாவது கண்டடைய முடியுமா என்று பார்க்கிறோம்.அதற்கும் புனைவையே பயன்படுத்துகிறோம்.

அரிதாக ஆளுமைகளை உடைக்க சிலர் புனைவை பயன்படுத்துவதுண்டு. அது ஒரு அசட்டுச்செயல்பாடு என்பதே என் எண்ணம். பறக்கும்போது பறவை என்னவாக இருக்கிறதென்பதே நமக்கு முக்கியம். நான் ஆளுமைகளின் வாழ்க்கையை அவர்களின் உச்சங்களைக் கொண்டு மட்டுமே அறிய முயல்கிறேன். அவர்களை இழுத்து நம்மைப்போல் ஆக்கி மகிழும் சிறுமையில் எனக்கு ஈடுபாடில்லை. அவர்கள் எங்கே கனிகிறார்கள், எங்கே கூர்கிறார்கள், எப்படி வெளிப்படுகிறார்கள், எவை வெளிப்படாது எஞ்சுகின்றன என்பதே எனக்கு முக்கியம்.

இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதியமானைப் பாடிய ஔவையாரின் கண்களே நான் கோருவன.

சுகா

பிரியத்துக்குரிய நண்பர் சுகாவுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்.எங்கள் நட்புக்கு பதினைந்தாண்டுகள் ஆகப்போகிறது. சேர்ந்து சிரித்த தருணங்களாலானது அது.

ஜெ

இரு கலைஞர்கள்

***

வான்நெசவு முன்னுரை

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரைமலைபூத்தபோது முன்னுரைதேவி – முன்னுரைஐந்து நெருப்பு முன்னுரைபொலிவதும் கலைவதும் முன்னுரைகுமரித்துறைவி முன்னுரைஆனையில்லா! முன்னுரைமுதுநாவல் முன்னுரை அந்த முகில் இந்த முகில் முன்னுரை

தங்கப்புத்தகம் முன்னுரை

பத்துலட்சம் காலடிகள் முன்னுரை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2021 11:33

பேசாதவர்கள், ஒரு குறிப்பு

பேசாதவர்கள்[சிறுகதை]

தருமபுரி இளவரசனின் மரண புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இறந்துவிட்ட மகனின் செருப்பணிந்திருக்கும் காலை நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி அவரது அம்மா அலறுகின்ற புகைப்படம். யார் பார்த்தாலும் பார்க்கின்ற அந்த நொடியில் சாதிய பாகுபாடுகள் மறைந்து, சட்டெனெ ஒரு நொடி மனிதத்திற்குத் திரும்பவைக்கின்ற புகைப்படம். இளவரசனின் மரணத்தின்போது மறக்கப்படுவதற்காகவே மறைக்கப்பட்ட பலவிசயங்களைப்போலவே, மனிதத்தின் அடிப்படைக் கருணைக்குக்கூட யாரும் திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவே நாளிதழ்களால் புறக்கணிக்கப்பட்ட புகைப்படம்.

அடிப்படையான சமூகநீதி என்பது ஒருவன் மற்றொருவன்மீது காட்டும் கருணையில் இருந்து உருவாகக்கூடாது என்பது என் புரிதல் அல்லது விருப்பம். சமூகநீதி என்பது சமூகமாவதற்கான ஒத்துழைப்பை இரு மனிதர்கள் ஏற்றுக்கொண்டவுடன் இயல்பாக உருவாகவேண்டிய ஒரு விசயமும்கூட.

தாழ்த்தப்பட்டவர்களின் மீதான தண்டனைகளின்போது மட்டும் ஒரு இடைநிலைச் சமூகம் ஏன் குரூர திருப்தியும், சூழல் புனரமைக்கப்பட்டு விட்டதான ஒரு சுயமைதுனத்தையும் மனதுக்குள் நிகழ்த்திக்கொள்கிறது.

இந்த திருப்தி என்கின்ற கண்ணுக்குப் புலனாகாத வஸ்துவை அப்போது அவர்களது மனதில் வேறுவேறு ஊடகங்களின் வழியாக யார் உருவாக்குகிறார்கள் என்கின்ற அரசியலும் மிக முக்கியமானது.

தூக்கில் போடுவதற்கு முன்பான ஒத்திகைக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதபொம்மை குறித்த ஜெமோவின் கதை “பேசாதவர்கள்” சமீபத்தில் நீலம் இதழில் வந்துள்ளது.

திரும்பத் திரும்ப எவ்வித முகாந்தரமுமின்றி தூக்கில்போடப்படுகின்ற ஒரு பொம்மையின் உடலில் இருக்கின்ற துடிப்பின் கேவல். எந்த கேள்வியும் கேட்காமல் அதனைத் தூக்கில் போட்டு,போட்டு அதன் உறுப்புகளற்ற முகத்தில் வந்துவிடுகின்ற மரத்த தன்மை. சற்றே சில நிமிடங்கள் அதனை வெறுமையாகப் பார்க்கின்ற மனிதன் ஒருவனிடம் அந்த பொம்மை உணர்த்துகின்ற, நானும் ஒரு உயிர்ப்பொருள் என்கின்ற புலன்தொடுகையை அது நிகழ்த்தும்போது அந்த சிறை அதிகாரி தனக்குள் உணர்கின்ற குற்றவுணர்ச்சி எனப்போகின்ற சிறுகதை.

தூக்கில் போடப்பயன்படுத்தும் டம்மி மனிதபொம்மை என்பது நமது சமூக நீதியில் தாழ்த்தப்பட்டவர்களின் இடம் என்பதற்கான துல்லிய உருவகம். சர்வாதிகாரமும், அடக்குமுறையும் லத்தீன் அமெரிக்காவில் மிகுந்திருந்த காலத்தில் அங்கிருந்து எழுந்த பல கதைகள் இதுபோன்ற உருவகங்களின் வழியாக தங்களது சமூகச்சீரழிவை ஆட்சியாளர்கள் அறியாவண்ணம் ரகசியமாக இலக்கியபிரதிக்குள் புதைத்துவைத்து வெளி உலகிற்கு அளித்துவந்திருக்கின்றன என்பதை ஆர்.சிவக்குமார், அமரந்தா மொழிபெயர்த்த பல லத்தீன் அமெரிக்கக் கதைகளின் வழியாக நாம் அறிகிறோம்.

நம் சூழலில் ஜெயமோகன் எதிர்ப்பதற்கோ, ஆதரிப்பதற்கோ முக்கியமான வலுகொண்ட எழுத்தாளர். வெளிவந்து இவ்வளவு நாளாகியும் அவர் எழுதியிருக்கும் இந்த சிறுகதை குறித்து யாரேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா எனத்தேடி அயர்ந்துவிட்டேன்.

இந்த சிறுகதை மீதான சூழலின் மௌனமும், அமைதியும் கவனிக்கவேண்டிய ஒன்று. பத்து லட்சம் காலடிகளை அவர் எழுதியபோது பெருமிதமும்,காதலுமாக அதனை பகிர்ந்த நல்லுள்ளங்கள் எங்கேயெனத் தெரியவில்லை.

பெருவாரியான சமூகம் தனது எந்த புள்ளியில் ஒருமித்த அன்பையும்,விருப்பையும் அளிக்கின்றதோ,அதற்கு வெளியே யாராலும் கவனிக்கப்படாத மீச்சிறு உலகின் மனிதர்களிடம் செல்வதே கலையின்,கலைஞனின் தன்னியல்பென நான் நம்புகிறேன்.

அவ்வகையில் ” பேசாதவர்கள் ” முக்கியமான சிறுகதைகளில் ஒன்று.

பா.திருச்செந்தாழை [முகநூல் குறிப்பு]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2021 11:31

திசைதேர்வெள்ளம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

திசைதேர் வெள்ளம் செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் இந்தவாரம் கிடைக்கப்பெற்றேன்.  இந்தக் கொரோனாக் காலத்திலும் செம்பதிப்பு வெளிவருவது மகிழ்ச்சி, நன்றி.

இந்த நாவலில் எந்த அத்தியாயத்தைத் தனியாக எடுத்து வாசித்தாலும் ஒரு சிறுகதை வாசிப்பதைப் போலவே வாசிக்க முடிகிறது. போர்ச்சூழ்கைகள், ஆயுதங்கள், பல நாடுகள் குலங்களின் பங்களிப்பு, வீரர்களின் தனித்திறன்கள், தயக்கங்கள், இருள் எழும் தருணங்கள், இழப்புகள், போருக்குத்தேவையான உணவு விலங்குகள் ஆயுதங்களை நிர்வகித்தல்,  காயம்பட்டோருக்கான மருத்துவம் என போரைப்பற்றிய மிக விரிவான வர்ணனைகளோடும் நுண் தகவல்கலோடும்  விரியும் நாவல் பீஷ்மரின் வீழ்ச்சியோடு முடிகிறது.

வெண்முரசைப் பற்றிய என் நினைவுகளில் தவிர்க்கமுடியாத ஒரு பகுதி திசைதேர் வெள்ளத்தில் உள்ளது:

அர்ஜுனன் தேரிலேறும் முன் அவனை நோக்கினான். அவன் ஏதோ சொல்ல விழைவதை விழிகளில் கண்டுவிட்டிருந்தான்.

சுபாகு “மூத்தவரே” என தாழ்ந்த குரலில் அழைத்தான். “என் மைந்தன் சுஜயன், உங்களுக்கு அவன் முகம்கூட நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவன் தந்தையென உங்களையே உளம்கொண்டிருந்தான்.” அர்ஜுனனின் முகம் உறைந்திருந்தது. “நீராடுகையில் அவனுக்காக ஒரு கைப்பிடி நீரள்ளி விடுங்கள், மூத்தவரே. சென்று நிறைக மைந்தா என ஒரு சொல் உரையுங்கள். இப்புவியில் இருந்து இனி அவன் எதிர்பார்க்க வேறேதுமில்லை.” கண்ணீர் கோக்க சுபாகு விழிகளை தாழ்த்திக்கொண்டான். அர்ஜுனன் வெறுமனே தலையசைத்துவிட்டு தேரிலேறிக்கொண்டான்.

பின்னர் பார்பாரிகனிடமிருந்து சுஜயன் விண்ணேகிய தருணத்தை சுபாகு அறிந்து கொள்வது தத்துவார்த்தமாக இருந்தாலும், இந்தப்பகுதி எப்போது வாசித்தாலும் மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது.

நான் வெண்முரசை வாசிக்க ஆரம்பித்தது பன்னிரு படைக்கலத்தில் இருந்துதான்.  எனவே ஜூலையில் வெண்முரசின் நிறைவிற்குப்பின்,  முதற்கனலில் ஆரம்பித்து வெய்யோன் வரை எஞ்சியிருந்த 9 நாவல்களையும் 3 மாதங்களில் படித்து முடித்தேன். அதன் பிறகு ஒரு இடைவெளி.  மனதிற்குள் தினமும் நிகழும் உரையாடல்களில், சிந்தனையில், மகாபாரதத்தைப் பற்றிய பிள்ளைகளின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் என்று வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக வெண்முரசு இருந்தாலும், மறுவாசிப்பு என எதுவும் செய்யவில்லை. இப்போது திடீரெனச் செம்பதிப்பு கையில் கிடைத்ததும் மீண்டும் வெண்முரசின் உலகிற்குள். நன்றி.

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை

அன்புள்ள ஜெ,

திசைதேர் வெள்ளம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்நாவலை இன்னும் முழுசாக வாசிக்கவில்லை. ஆனால் இந்த தலைப்பு என்னை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. என் வயது 60. இளமையில் மார்க்சியம் தொழிற்சங்கம் என்று எவ்வளவோ பார்த்துவிட்டேன். வாழ்க்கை இன்னொரு கரைக்கு வந்துவிட்டது. ஆக ஒட்டுமொத்தமாக என்ன என்ற கேள்வி நிறைந்திருக்கிறது கண்முன். திசைதேர்வெள்ளம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். திசையை வெள்ளம் தேர்வுசெய்ய முடியாது. நிலம் அதை கொண்டுசெல்கிறது. ஆனால் வெள்ளத்தின் வழிந்தோடும்தன்மை, விசை எல்லாம் சேர்ந்துதான் அந்த திசையை தீர்மானிக்கின்றன. மகாபாரதம் என்னும் மாபெரும் வரலாற்று பெருவெள்ளத்திற்கு இதைவிட சரியான சொல் இருக்கமுடியாது

ஆர்.ராகவன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2021 11:30

July 15, 2021

தளிர்வலையோ?

எழுபதுகளில் கேரளத்தை ஆட்கொண்ட பாடல்களில் ஒன்று  “தளிர்வலையோ?” இன்றும் அந்த மயக்கம் நீடிக்கிறது. இன்றைய குஞ்சாக்கோ போபனின் அப்பா குஞ்சாக்கோ இயக்கிய தோல்விப்படமான சீனவலையில் வரும் இப்பாடல் பின்னர் தொலைக்காட்சி வழியாக பெரும்புகழ்பெற்றது. காரணம் ஒளிப்பதிவாளராகிய பாலு மகேந்திரா.

சீனவலை செம்மீனுக்கு போட்டியாக எடுக்க முனைந்த ஒரு படம். ஆகவே பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். செம்மீனின் மார்க்கஸ் பட்லேவுக்கு சமானமாகவே இருந்தது பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு. கடலும் காயல்கரைகளும் அற்புதமான காட்சியெழிலுடன் இருந்தன. பூந்துறையில் அரையன்றே பாட்டில் ஒழுகிச்செல்லும் காயல்கரை ஒரு கனவு போலிருந்தது அன்று. இந்த ஒளிப்பதிவில் இயற்கையாகவே கொண்டுவரப்பட்டிருக்கும் வண்ணச்சேர்க்கையும் அன்று ஒரு சாதனை.

அத்துடன் அண்மைக்காட்சிகள். அன்று அவை மிக அரிது. அதிலும் ஒப்பனையில்லாத முகம் கொண்ட கதைநாயகியின் மிக அண்மைக்காட்சியிலேயே ‘பூந்துறையில் அரையன்றே’ பாடலை பெரும்பாலும் கொண்டுசென்ற பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு அன்று மிகவும் வியக்கப்பட்டது.

டெலிஸூம் வைத்து எடுக்கப்பட்டது அக்காட்சி. படகில் செல்பவர்களை இன்னொரு படகில் இருந்து எடுக்க முடியாது. காமிரா அசையும். மிகத்தொலைவில் ஆழமாக சேற்றில் நடப்பட்ட மேடையில் காமிரா அசையாமல் நிறுத்தப்பட்டு அக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. ஆகவே ஜெயபாரதி இயல்பாக மிகையே இல்லாமல் நடிக்கிறார். ஆனால் டெலிஸூம் காட்சிகளில் இருக்கும் துல்லியமின்மை, சீரற்ற ஒளி ஆகியவை இக்காட்சிகளில் இல்லை.

பாலு ரசித்துக் கொண்டாடி ஜெயபாரதியை படம்பிடித்திருப்பதை பாலுவை அறிந்தவர்கள் புன்னகையுடன் உணர முடியும். அதை நான் பின்னர் பாலுவிடம் சொன்னேன். “தோஸ் ஆர் த டேய்ஸ் மேன்” என்றார்.

தளிர்வலயோ தாமரவலையோ
தாலிப்பொன்
வலையோ
நின்
சிருங்காரச் சிப்பியில் வீணது
ஸ்வப்ன
வலயோ புஷ்பவலயோ?
வேம்பநாட்டு காயல்கரையில்
வெயில்பிறாவு
சிறகுணக்கும்
சீனவலைக்கு
அரிகில்
அரிகில்
அரிகில் சீனவலைக்கரிகில்
ஆடிவா
அணிஞ்ஞு வா பெண்ணாளே
நாளே
ஆரியங்காவில் நம்முடே தாலிகெட்டு
ஆயிரம்
பூபாலிகையிலே சிந்தூரம்
சூடிவராம்.
போயி வராம்

வெள்ளிபூக்கும் ஆற்றின் கடவில்
விளக்கு
மாடம் கண்ணெறியும் பூந்தோணிப் படவில்
படவில்
படவில் பூந்தோணிப்படவில்
பாடிவா
பறந்நுவா பெண்ணாளே
நாளே
பாதிரா மணலில் நம்முடே ஆத்ய ராத்ரி
ஆயிரம்
ராவுகள் தேடிய ரோமாஞ்சம்
சூடி
வராம், போயி வராம்

ஏசுதாஸ்

எம்.கே.அர்ஜுனன்

வயலார் ராமவர்மா

தளிர்வலையோ தாமரை வலையோ
தாலிப்பொன் வலயோ
உன் சிருங்கார சிப்பிமேல் விழுந்தது
சொப்பன வலையோ புஷ்ப வலையோ?

வேம்பநாட்டு காயல்கரையில்
வெயில்புறா சிறகு உலர்த்தும்
சீனவலைக்கு அருகே
அருகே அருகே சீனவலைக்கருகே
ஆடிவா அணிகொண்டு வா பெண்ணே
நாளை ஆரியங்காவில் நமது தாலிகட்டு
ஆயிரம் பூத்தாலங்களிலுள்ள செந்தூரத்தைச்
சூடிவருவோம் போய் வருவோம்.

வெள்ளிபூக்கும் ஆற்றின் படித்துறையில்
தூண்விளக்கு கண் சுழற்றும் பூந்தோணித் துறையில்
துறையில் துறையில் பூந்தோணித் துறையில்
பாடிவா பறந்நுவா பெண்ணே
நாளை நள்ளிரவு மணல்வெளியில் நம் முதலிரவு
ஆயிரம் இரவுகள் தேடிய மெய்சிலிர்ப்பை
சூடிவருவோம் போய் வருவோம்…

பூந்துறையில் அரையன்ரே பொன்னரயத்தி

புஞ்சிரி கொண்டொரு பொட்டு குத்தி

ஈ புஞ்சிரி ஈ புஞ்சிரி கொண்டொரு பொட்டு குத்தி

புடவையும் மாலயும் வாங்ஙும் மும்பே

புருஷன்றே சூடுள்ள முத்து கிட்டீ

பூகொண்டு மூடிய புறம் வேலி உள்ளொரு

புழக்கரை அம்பல நடையில்

இந்நு கல்விளங்கின்றே கண்முன்பில் நம்முடே கல்யாணம்

பின்னே எல்லாம் கழிஞ்ஞு வருந்நதோர்க்கும்போள்

எங்ஙாண்டு எங்காண்டு வருந்நுண்டொரு நாணம்

காயலின் பொக்கிளில் கைவிரல் ஓடிச்சு

களிவஞ்சி துழவும் நிலாவே

நின்றே கல்யாண யாத்ரயும் உல்லாச யாத்ரயும் இந்நாணோ

பின்னே நாளே உறக்கச்சடவுமாய் காலத்து

நாலாளு காணும்போள் களியாக்கும்

[தமிழில்]

பூந்துரை மீனவனின் பொன்னான மீனவப்பெண்

புன்னகையால் ஒரு பொட்டுவைத்துக் கொண்டாள்

புன்னகையால் புன்னகையால் ஒரு பொட்டு வைத்துக் கொண்டாள்.

புடவையும் மாலையும் வாங்குவதற்கு முன்னரே

புருஷனின் சூடான முத்தை பெற்றுக்கொண்டாள்.

பூவால் மூடிய புறவேலி உள்ள ஒரு

ஆற்றுக்கரை ஆலய முகப்பில்

இன்று கல் விளக்கின் கண் முன்னால் நம் கல்யாணம்

பின்னர் எல்லாம் முடிந்து வருவதை நினைக்கையில்

எங்கிருந்தோ எங்கிருந்தோ வரும் ஒரு நாணம்

காயலின் தொப்புளில் கைவிரல் சுழித்து

களித்தோணி ஓட்டும் நிலாவே

உனது கல்யாண யாத்திரையும் உல்லாச யாத்திரையும் இன்றா என்ன?

பின்னர் நாளை உறக்கக் களைப்புடன் காலையில் வந்து

நாலுபேர் காண்கையில் கேலிசெய்வார்களே?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2021 11:34

பத்துலட்சம் காலடிகள்

பத்துலட்சம் காலடிகள் வாங்க

ஔசேப்பச்சனை எங்கே சந்தித்திருக்கிறேன்? பலமுறை சந்தித்திருக்கிறேன் என்றே சொல்லவேண்டும். நான் நன்கறிந்த மூவரின் கலவை. அவர்களில் ஒருவர் மெய்யாகவே போலீஸ் உயரதிகாரி. துப்பறிவாளர். அந்தக் கதாபாத்திரத்தில் கேரள சிரியன் கிறிஸ்தவர்களுக்குரிய அலட்சியமான உலகப்பார்வை, இயல்பான கிண்டல், ஆண்மை மிக்க நல்லுணர்வு ஆகிய பண்புகள் உள்ளன.அந்தக் கதாபாத்திரம் இத்தனை புகழ்பெற்றது இயல்பானதுதான்.

இளமையிலேயே நான் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளின் பெரிய வாசகன். துப்பறியும் கதைகள் பல வந்துவிட்டன என்றாலும் ஹோம்ஸ் கதைகளின் முதன்மை குறையவில்லை. அதற்கு பலகாரணங்கள். ஹோம்ஸ் கதைகளின் நடை, குற்றத்தை ஹோம்ஸ் விவரிக்கும் முறை ஆகியவை வசீகரமானவை.

அதைவிட ஹோம்ஸ் கதைகள் பெரும்பாலும் துப்பறிந்து சென்றடையும் இடமென்பது எளிய குற்றம் அல்ல. மனித உள்ளத்தின் ஆழத்தில், உறையும் நஞ்சு. சுயநலம், பிறரை வெல்வதிலும் அழிப்பதிலும் இன்பம் காணுதல், ஒளிந்திருக்கும் மகிழ்ச்சி ஆகிய பல்வேறு நோக்கங்களுக்காக குற்றங்கள் செய்யப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக மீறிச் செல்வதற்காக. எது ஒன்று நிபந்தனையாக்கப் படுகிறதோ அதைக் கடத்தலில் இருக்கும் அடிப்படையான மானுட சாகசத்துக்காக.

இந்தக்கதைகள் அவ்வகையில் மானுட ஆழம் நோக்கிச் செல்லவேண்டும் என்று எண்ணினேன். இவை மானுடனை துப்பறியும் கதைகள் என்பேன். துப்பறியும் கதை என்பதே ஓர் அழகிய வடிவம். ஒரு சிறு தொடக்கத்தில் இருந்து விரிந்து விரிந்துசெல்லும் அவ்வடிவில் நாம் வரலாறு, பண்பாடு, மானுட உளவியல் என எல்லாவற்றையும் இயல்பாக உள்ளே கொண்டுவந்துவிட முடிகிறது.

இந்தக் கதைகள் வெளிவந்தபோது மிக உற்சாகமான வாசக வரவேற்பைப் பெற்றன. அதற்கு இக்கதைகளில் இருக்கும் விளையாட்டுத்தனம் ஒரு காரணம். சாதி மத எல்லைகளைக் கடந்து ஒருவருக்கொருவர் கேலிசெய்துகொள்கிறார்கள். நான் மலபாரில் இருந்த நாட்களில் அதைக் கண்டு ஆரம்பகட்ட துணுக்குறலை அடைந்திருக்கிறேன். இன்றும் கேரளத்தின் நட்புக்கூடல்களில் அது மிக இயல்பானது.

சராசரி தமிழர்களால் அதை கற்பனைசெய்ய முடியாது. அவர்கள் விழிப்புநிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசிக்கொள்வார்கள். தன்னிலை மறைந்ததும் வசைபாடிக்கொள்வார்கள். இயல்பான நட்பார்ந்த கிண்டல் இங்குள்ள நட்புக்கூடல்கள் எதிலும் இருப்பதை நான் கண்டதில்லை.

ஆகவே இந்தக் கதைகளிலுள்ள சாதி-மதக் கிண்டல்கள் இங்குள்ள போலி முற்போக்கினரின் விமர்சனத்துக்கு ஆளாயின. அவற்றின் மெய்யான பொருளைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதையும் நேர்ப்பொருளில் மட்டுமே எடுத்துக்கொள்பவர்கள். நகைச்சுவை என்பதே வளைந்து பொருள் கொள்வதென்றுகூட அறியாத எளிய உள்ளத்தவர் என்றே அவர்களைக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்னும்கூட சில ஔசேப்பச்சன் கதைகளை நான் எழுதலாம். ஏனென்றால் அந்த நட்புக்கூடலின் அரட்டை, அதிலிருக்கும் உற்சாகம் எனக்கு பிடித்திருக்கிறது.

இந்த நூலை இயக்குநர் பாலாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

ஜெ

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரைமலைபூத்தபோது முன்னுரை ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரைமுதுநாவல் முன்னுரை ஆனையில்லா! முன்னுரைதங்கப்புத்தகம் முன்னுரைஅந்த முகில் இந்த முகில் முன்னுரை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2021 11:32

செயலும் கனவும் – கடிதம்

அன்புள்ள ஜெ,

நீங்கள் தன்னறம் உரையை ஆற்றியபோது அங்கே நானும் இருந்தேன். பயன்நோக்காமல் செய்யும் நேர்நிலையான செயல் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் நான் இலக்கியத்தில் பெரிய கனவுகளுடன் இருக்கிறேன். என் சாதனைகளையே ஒவ்வொரு நாளும் நான் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அவ்வாறு திட்டமிடுவது தவறா? அந்தக் கனவை நோக்கி நான் செல்லக்கூடாதா?

நிவேதன்

***

அன்புள்ள நிவேதன்,

நான் பெருங்கலைஞன் என நம்பும் ஒரு நண்பருக்கு எழுதிய கடிதம் இது.

’உங்கள் உள்ளம் செல்லும் திசைகளை அறிகிறேன். அதன் அலைக்கழிப்பும் கண்டடைதல்களும் ஆழமானவை. ஆனால் இத்தருணத்தில் ஒன்று சொல்வேன். கலைஞனுக்கு ‘ஆம்பிஷன்’ எனப்படும் ‘இலட்சியசாதனைகள் பற்றிய கனவுகள்’ இருக்கலாகாது. அவன் சாதனைகளை நிகழ்த்தும்போதுகூட.

இன்றைய சூழல் ஒவ்வொருவரையும் சாதனையாளராக அறைகூவுகிறது. அவ்வண்ணம் சாதனையாளராக ஆகமுடியாதவர்களுக்குச் சோர்வை அளிக்கிறது. சாதனையை நிகழ்த்த முடியுமா என்னும் ஐயமே சோர்வாக ஆகிறது. கலையும் இலக்கியமும் சோர்வுறுத்துவனவாக ஆவது அவ்வாறுதான்.

தன் கலைச்சாதனை அங்கீகரிக்கப்படவேண்டும் என்னும் வேட்கையையும் சாதனை குறித்த முன்முடிவே உருவாக்குகிறது. அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற ஐயமும், அங்கீகரிக்கப்படவில்லை என்னும் சீற்றமும் எழுகிறது. ஏமாற்றமும் காழ்ப்பும் விளைகின்றன.

கலையின் முதன்மைச் சாதனை என்பது முழுக்க முழுக்க நம்மை அதில் ஈடுபடுத்தி வைத்திருப்பதுதான். அதுவே என வாழ்வது. அதில் திளைப்பது. நாம் அடைவதல்ல, நாம் இருப்பதே நம் சாதனை. திரும்பிப் பார்க்கையில் ஒவ்வொரு நாளையும் கலைவேட்கையுடன் கலைநிகழ்வுடன் செலவிட்டிருந்தால் நாம் வென்றோம். ஒருநாள்கூட வீணாகாத வாழ்க்கையையே கலைவாழ்க்கை என்கிறோம்.

வெல்வதும் தோற்பதும் நம் கணக்கே அல்ல. காலத்தில் நிற்பதும் மறைவதும் நாம் அறியக்கூடுவன அல்ல. பெருங்கனவுகள் அல்ல அன்றாடத்தில் ஒவ்வொரு கணமும் கலையில் இருத்தலே கலைஞனுக்கான வழியாக இருக்க முடியும்’

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2021 11:31

நஞ்சின் வரலாறு.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

தாவர நஞ்சுகள் குறித்து ஒரு கட்டுரை எழுதுவதற்கு, நிறைய தேடித்தேடி வாசிக்கையில், கிடைக்கும் தகவல்களின் சுவாரஸ்யத்தில் கட்டுரை எழுதுவதை மறந்து வாசித்துக்கொண்டு மட்டும் இருக்கிறேன். நஞ்சூட்டிக் கொல்லுவது, நஞ்சுண்டு தற்கொலை செய்து கொள்வது, கத்தியின் ஒரு பக்கத்தில் மட்டும் நஞ்சை தடவி அதில் வெட்டப்பட்ட மாமிச உணவில் மருமகளை கொல்லுவது, செருப்பில் உள்ளாடையில், நீரில், உணவில், மெழுகுவர்த்தியில். மதுவில் நஞ்சு கலப்பது, முத்தமிடப்படுவதற்கு முன்னர் கன்னங்களிலும், உதடுகளிலும் நஞ்சை தடவிக்கொள்ளுவது, அர்த்தசாஸ்திரத்தின் விஷக்கன்னியர்கள், பண்டைய சீனாவின் விஷப்பிராணிகளை ஒரே பெட்டியில் அடைத்து வைத்து, அவை ஒன்றையொன்று கொன்று தின்ற பின்னர் மிஞ்சியிருக்கும் கடைசி உயிரின் விஷத்தை கொலை ஆயுதமாக பயன்படுத்துவது என்று திகைப்பூட்டும் தகவல்கள் கிடைக்கிறது. ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி நஞ்சூட்டப்பட்டது குறித்த இந்த சமீபத்திய கட்டுரையை வாசித்தேன். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் சம்பவங்களும் விசாரணைகளுமாக இருக்கிறது.

https://en.wikipedia.org/wiki/Poisoning_of_Alexei_Navalny

அன்புடன்

லோகமாதேவி

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2021 11:31

அனந்தத்தை அறிந்தவன் – கடலூர் சீனு

அனந்தத்தை அறிந்தவன் வாங்க

அன்று உயர்ந்து அடைய சாத்தியம் கொண்ட இறுதி சிகரம். FRS. தென்னிந்தியாவில் இருந்து கேம்பிரிட்ஜ் சென்று அதை அடைந்த மனிதன். கணிதத்தை தனது சாதகமாக கொண்டவர். அந்த தெய்வம் கேட்டால் அதன் பொருட்டு தலையும் அளிக்க துணிந்தவர். நோய்ப் படுக்கையில் கிடக்கிறார். அவரைக் காண அவரது நண்பரும், ஆசிரியரும், சக கணித ஆய்வாளருமான ஹார்டி வருகிறார்.

நண்பனை பார்க்கிறார். முதல் சொல்லே நண்பனை உற்சாகம் கொள்ள செய்யும் பொருட்டு தேர்வு செய்கிறார்.

“உங்களை பார்க்க நான் வந்த காரின் எண் 1729. வழியெல்லாம் சும்மா மூளையில் வைத்து உருட்டிக்கொண்டு வந்தேன். ஒன்றுமில்லை அது ஒரு சாதாரண எண்தான்”.

அறியா நோயில் உருகிக்கொண்டு இருக்கும் உடலில் இருந்து சட்டென பதில் எழுகிறது. “இல்லை ஹார்டி, அது மிக விசேஷமான எண். மடங்குகள் கொண்ட எண்களின் கூட்டு சமன்பாடு வழியே சொல்ல முடிந்த தொகை எண்களில், இரண்டு விதமான மடங்குஎண்களின் கூட்டு வழியே சொல்ல முடித்த முதல் எண் வரிசை அது மட்டுமே.”

ஹார்டி மனதில் கணக்கிட்டு பார்க்கிறார். உதாரணமாக எண் 35. இரண்டின் மூன்று மடங்கு, 8 + மூன்றின் மூன்று மடங்கு, 27 = 35. இதே போல 35 எனும் எண்ணுக்கு மற்றொரு சமன்பாடு உருவாக்க முடியாது. ஒவ்வொரு எண்ணாக சோதித்துக்கொண்டே வந்தால், எண் தொடரின் வரிசையில் 1729 எனும் எண்ணைத்தான் இருவேறு மடங்கு கூட்டு சமன்பாடு வழியே சொல்ல முடியும். பன்னிரண்டு அதன் மூன்று மடங்கு + ஒன்றின் மூன்று மடங்கு சேர்ந்தால் 1729. அதே போல பத்தின் மூன்று மடங்குடன், ஒன்பதின் மூன்று மடங்கை கூட்டினால் விடை 1729. ஒன்று முதல் துவங்கும் எண் வரிசையில் இந்த சாத்தியம் கொண்ட முதல் எண் இதுவே.

சொன்னவர் பெயர் ராமானுஜன். அவரது பெயராலேயே அழைக்கப்படும் இந்த எண் ராமானுஜன் எண் மிக்க புகழ வாய்ந்தது. அது அக்கணம் அவ்வாறு கேட்கப்படாது இருந்திருந்தால், அந்த எண் சமன்பாடு தன்னை வெளிக்காட்ட இன்னும் பல ஆண்டுகள் கூட எடுத்திருக்கலாம். ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல கேள்வி கேட்ட அந்த நொடியே அந்த பதில் வந்தது. அப்படி ராமானுஜனை தூண்டும் முன்னிலையாக அமைந்தவர் ஹார்டி. ராமானுஜனின் உள்ளுணர்வின் மேதைமையை தனது தர்க்கம் கொண்டு முதன் முதலாக அடையாளம் கண்டவர். ஒருவர் இன்றி ஒருவர் இல்லை எனும் வகையில் கணிதத்தின் தெய்வம் அவர்களை பிணைத்தது. ஹார்டியின் தர்க்க ஒழுங்கும் ராமானுஜனின் உள்ளுணர்வின் பாய்ச்சலும் இணைந்ததே ராமானுஜனின் புகழ்பெற்ற பல கணித ஆய்வுகள்.

தமிழில் ராமானுஜன் வாழ்வு குறித்து வாசிக்க குறைந்தது ஒரு டஜன் நூல்களாவது உண்டு. அவை அனைத்தையும் துலாவின் ஒரு தட்டில் வைத்து மறு தட்டில் ராபர்ட் கனிகல் எழுதிய ராமானுஜன் வாழ்க்கை சரிதை நூலை வைத்தால் ராபர்ட் நூல் உள்ள தட்டு கீழிறங்கும். காரணம் இந்த நூல் கொண்ட ஒட்டு மொத்த பார்வையும் முழுமை நோக்கும். ராபர்ட் அறிவியல் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதும் எழுத்தாளர். ராமானுஜன் நூற்றாண்டு கொண்டாட்டதையொட்டி அவரது பதிப்பாளர், ராமானுஜன் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை எழுதித் தர முடியுமா என்று கேட்க, ராபர்ட்டின் முதல் கேள்வி “யார் ராமானுஜன்” என்பதே. அங்கே துவங்கி அவர் எழுதியதே =அனந்தத்தை அறிந்தவன்; கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை= எனும் முக்கியமான நூல்.

இது ராமானுஜன் வாழ்க்கை வரலாற்று நூல் மட்டுமல்ல, அவருடன் பிணைந்த ஹார்டி அவர்களின் வாழ்க்கை அறிமுக நூலும் கூட. இந்த நூலின் முக்கியத்துவம் என்பதே நான் முன்னர் சொன்ன முழுமை நோக்கிய அதன் யத்தனதில் தான் உள்ளது. இந்த நூல் பேசும் காலமான 1900 வை மையமாக கொண்ட முன் பின் இருபது வருடங்கள் எனும் காலத்தின் தமிழக, வட இந்திய, சமூக, இந்திய சூழல் முழுமை அதே போல லண்டன் மேலை தேயம் முழுமை நிலையை பகைப்புலமாக உருவாக்கி அதன் ஒரு பகுதியாக ராமானுஜன் ஹார்டி இருவரின் வாழ்வையும் பொருத்தி விவரித்துக் காட்டுகிறது. ஒரு புனைவைப் போல விரிவான நில, அகச்சித்தரிப்புகள் கொண்டு, ஒரு காலகட்டம் சூழல் சார்ந்த பரிசீலனைகளையும் இந்த நூல் மேற்கொள்ளுகிறது.

இந்த நூலை புனைவு போல வாசிக்க வைக்கும் மற்றொரு முக்கிய அம்சம் இதில் உள்ள நாடகீய மோதல். தர்க்கத்துக்கும் உள்ளுணர்வுக்குமான மோதல். மேலை மெய்காண் முறைக்கும், கீழை மெய்காண் நிலைக்குமான முரண், மேலை கீழை பண்பாட்டு முரண். இதன் பின்னணியில் தீபாவளி வான வெடி போல, இருள் துளைத்து விண்ணேகி, வண்ணம் கொண்டு சிதறி, கரியாகி கீழே விழும் குச்சி போல ராமானுஜனின் எழுச்சியும் வீழ்ச்சியும்.

ராமானுஜனின் குடும்ப பின்புலம், பால்யம், கல்வி, பால்ய விவாகம், மேற்படிப்பில் தொடர் தோல்வி, இந்திய கணித ஆய்வு சஞ்சிகை வழியே அவர் கணித மேதமை முதலில் வெளிப்பட்டது எல்லாம் நாமறிந்ததே ஆனால் இத்தகு தகவல் உண்மைகள் இவற்றுக்கு வெளியே இந்த நூல் ராமனுஜனை குருதியும் தசையும் உயிரும்கொண்டு உலவும் மனிதனாக, நுண்விவரணைகள் வழியே (சிலேட்டில் எழுதி எழுதி அழித்து அழித்து அவரது வலது கை மணிக்கட்டு துவங்கி முழங்கை முழுவதும் கருத்து காப்பு காய்த்து இருக்கும் என்பதை போல) வாசகர் முன்பு நிறுத்துகிறது. குல ஆசாரங்கள் அனைத்தையும் உதறி ராமனுஜனை லண்டன் இழுத்தது, அவரை அவரது சூத்திரங்களின் வலிமையை புரிந்து கொண்ட ஒரே ஒரு சக கணிதரான ஹார்டி எனும் அங்கிலேயரின் அழைப்பு. அதற்கு ஹார்டி செய்த முழு முயற்சி.

நூலில் ஹார்டி குடும்ப சூழல், அவர் வளர்ந்த சூழல், அங்கிருந்து உலகின் அன்றைய நிகரற்ற உயர் கல்வி மையமான கேம்பிரிட்ஜ் வரை அவர் சென்ற வகைமை எல்லாம் விரிவாக விளக்கப்படும் அதே சமயம், ஹார்டி எனும் தனி மனிதரின் குணாம்சமும் விவரிக்கப்படுகிறது. ஹார்டிக்கு கண்ணாடி பார்க்க பிடிக்காது. தன்னை சுற்றி எங்கே முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தாலும் அதை திரை போட்டு மூட சொல்லி விடுவார். விக்ட்டோரிய ஒழுக்கவியல் யுகத்தில் தன்பால் உறவு விருப்பம் கொண்டவர் எனும் நிலைக்கான தடயங்களை நிறைய விட்டு சென்றவர். இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாதவர். இணையற்ற கணித மேதை. பெட்ரண்ட் ரஸ்ஸல் அவரது சக மாணவர். செயற்கை அறிவின் முன்னோடிகளில் முதல்வர் ஆலன் டூரிங் குடன் தொடர்பில் இருந்தவர், மரபியல் துறையின் முன்னோடிகளில் முதல்வர் கிரிகோர் மன்டெல் உருவாக்கிய கோட்பாட்டுக்கு கணித வடிவில் (ஹார்டி சமன்பாடு ) நிரூபணம் அளித்தவர். என அக்காலத்தின் உயர் மனங்கள் அணைத்துடனும் தொடர்பிலும் உரையாடலிலும் இருந்தவர். மரபார்ந்த மத நம்பிக்கைகளுக்கு எதிரான நாத்திகர். எதையும் தர்க்கம் வழியான நிரூபணம் வழியே அணுகுபவர்.(எல்லமே ராமானுஜனுக்கு நேரெதிர்) அதே நேரம் எதிர் தரப்பில் உள்ள வாதங்களை முற்றிலும் திறந்த மனதுடன் அணுகி பிரிசீலிப்பவர். அனைத்துக்கும் மேலாக கணிதம் என்பது பயன்பாட்டு கணிதமாக “சுருங்கி” இயற்பியல் போல பிற துறைகளின் உண்மைகளை நிரூபிக்க துணை நிற்கும் “சிறிய” வேலைகளை செய்யும் வேலைக்காரனாக மாறிக்கொண்டே செல்வதை எதிர்த்து, அதன் விரியும் தன்மையை, அறியாமைக்குள் விரியும் அறிவு எனும் அதன் அழகியலை, வடிவ போதம் வழியே கணித சூத்திரங்கள் எய்த முயலும் முழுமையை முன் நிறுத்தி வாதாடியவர். அதற்காக தீவிரமாக செயலாற்றியவர். அதன் ஒரு பகுதியாக உலகின் உச்ச தேர்வுகளில் ஒன்றான கேம்பிரிட்ஜ் ட்ரைபாஸ் தேர்வுகளை ( அதில் முதல் தரம் ஹார்டி என்றால் ஏழாம் தரம் ரஸ்ஸல்) அதன் முடம் நீக்கி சீரமைப்பு செய்தவர். இத்தகு ஆளுமை வசம்தான் (இருவர் ஏற்கனவே கண்டுக்கொள்ளாமல் விட்ட) தயை கூர்ந்து பரிசீலிக்க சொல்லி தமிழ்நாட்டிலிருந்து ராமானுஜனின் நெடிய சமன்பாடுகள் அடங்கிய பல பக்க கடிதம் வந்து சேர்ந்தது.

1,2,3, என்று தொடரும் எண் வரிசைகளில் ஒவ்வொரு எண்ணையும் பகுபடும் எண் பகா எண் என்று பிரிக்கலாம். அப்படி பிரித்துக் கொண்டே செல்கையில் ஒரு கணித மர்மம் எழுகிறது. உதாரணமாக (லட்சங்களை நூறாக சுருக்கி) 100 குள் வரும் பகா எண்களின் எண்ணிக்ககை 60 எனக் கொண்டால், 100- 200 குள் வரும் பகா எண்களின் எண்ணிக்கை 59 ஆக இருக்கிறது. இப்படி எண்தொடர் வளர வளர, பகா எண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது எனில் முடிவிலி கொண்ட எண் தொடரில் பகா எண்களின் தொடருக்கு முடிவு உண்டு என்பதுதானே தர்க்கம். அந்த முடிவுவான பகா எண் எது? அன்றைய உலக கணித மேதைகள் அனைவரையும் ஆட்டிப் படைத்த இந்த புதிருக்கு விடை காண புதிய புதிய சூத்திரங்கள் வழியே உயர் மனங்கள் எல்லாம் முயன்று கொண்டிருந்த சூழலில், அந்த எண்ணை தான் கண்டுபிடித்து விட்டதாக அறிவிக்கிறார் ராமானுஜன். ராமானுஜனின் பல கூற்றுக்களில் ஒன்றான இந்த கூற்றுத்தான் ஹார்டியை ராமானுஜன் வசம் ஈர்த்தது. கும்பகோணம் கடந்து சென்னை கருப்பர் நகரம் வந்து அங்கிருந்து வெள்ளையர் நகர தொடர்புகள் பெற்று, தனது ஆச்சாரங்கள் துறந்து, தமிழ்நாட்டின் தலை நகரிலிருந்து, உலக தலைநகர் நோக்கி அங்கிரும்கும் ஹார்டி நோக்கி என பயணிக்கிறது ராமானுஜனின் வாழ்வு.

இந்த வாழ்க்கைவரலாற்று நூலின் தனித்தன்மைகளில் மற்றொரு கூறு, 1900 கள் வரை நிகழ்ந்த கணித சாதனைகளை, கணித வரலாற்றின் பின்புலத்தில் வைத்து பேசி, அதில் 1900ன் அறிவதிகார போட்டியில் ஜெர்மன் மற்றும் பிற ஐரோப்பிய தேசங்களுடன் பிரிட்டன் கொண்டிருண்த போட்டி, இந்த சூழலில் வந்து ராமானுஜனின் கணித சூத்திரங்கள் நிகழ்த்திய புதிய திறப்புகள் என இந்த பரிணாமத்தை, ராமானுஜனின் கணித சூத்திரங்களை கொண்டே விவரிக்கிறது. அனைவரையும் திகைக்க வைத்தது ராமானுஜனின் ‘சுயம்பு’ எனும் நிலை. உயர் கணித சிகரத்தில் உலவும் மேலைதேய மனங்கள், அந்த சிகரத்தின் ஒளியோ நிழலோ கூட வந்து சேர வழி இல்லாத அடிமை தேசத்தை சேர்ந்த கருப்பன் ஒருவன், இத்தனை மேதைகள் வழியே வளர்ந்த உயர் கணிதத்தை சுயமாகவே கற்று, அதிலிருந்தும் உயர்ந்து இன்றைய மேதைகள் துழாவிக் கொண்டிருக்கும் உயர் கணித சிக்கக்களுக்கு விடை தருவதை நம்ப இயலாமல் பார்த்துக் கொண்டு நின்றன.

இந்த நிலையை வந்து தொட ராமானுஜனின் முன் இருந்த சிக்கல் இரண்டு. ஒன்று அவர் சுயம்புவாக கற்ற வகையில், உயர் கணித வரலாற்றில் பன்னெண்டுங்காலமாக பயன்பாட்டில் இருந்த குறிகளை அறியாது, அவரே உருவாக்கிய குறிகள் வழியே அவர் கட்டுரைகளை எழுதி இருந்தார். தர்க்க ஒழுங்கு கொண்டு வளர்ந்து ஹென்ஸ் ப்ரூவ்ட் முறையில் நிறுவப் பட வேண்டிய சூத்திரங்களை, தட்ஸ் இட் முறையில் வெளிப்படுத்தி இருந்தார். ஹார்டியின் வாழ்நாள் சாதனை என்பது ராமானுஜனின் மேதமயை உள்ளுணர்ந்தது. வாழ்நாள் பணி என்பது ராமானுஜனின் பாய்ச்சலை நெறிப்படுத்தி தர்க்க ஒழுங்குக்குள் அவரது ஆய்வுகளை கொண்டு வந்தது. ராமானுஜனின் உள்ளுணர்வுக்கு சிதைவு நேராமல் அவரை டொமஸ்டிகேட் செய்தது. அர்ஜுனனும் கிருஷ்ணனும் போன்றதொரு கூட்டணி இது. இது நிகழ்ந்ததன் பின்னுள்ள வாழ்வெனும் மர்மம் நிகழ்த்திய நிகழ்தகவுகளை சுவாரஸ்யமாக பேசுகிறது நூல்.

கும்பகோண காவிரிக் கரை காட்சிகள் துவங்கி, லண்டன் கேம்பிரிட்ஜ் காட்சிகள் வரை 1900 வை துல்லியமான சித்திரம் வழியே முன்வைக்கும் இந்த நூலின் விவரனை உச்சம் கொள்ளும் இடம் உலகப் போரில் கேம்பிரிட்ஜ் மெல்ல மெல்ல உருமாறும் சித்திரம். கூட்டத்தில் கொட்டாவி வந்தால் நாசுக்கு கருதி அதை மூக்கால் வெளியிடும் பல்கலை ஆசிரியர்கள் மாதா கோவில் துக்க ப்ரார்தனைகளில் கதறி அழுகிறார்கள். தனது அறிவின் வருங்கால நம்பிக்கை என ஒவ்வொரு ஆசிரியரும் நம்பிய மாணவர் அனைவரும் உடல் சிதறி, உயிர் இற்று, உடலமாக பல்கலை கழகம் திரும்புகிறார்கள். அத்தகு சூழலில்தான் ராமானுஜன் தன்னில் திளைத்து தனித்துக் கிடந்திருக்கிறார். துயரில் சரிந்திருக்கிறார். தற்கொலை முனைவரை சென்றிருக்கிறார். Frs வென்றிருக்கிறார். நோயுற்று ஊர் மீள்கிறார்.

ராமானுஜன் தனது கைரேகையை அவரே ஆய்ந்து நண்பர் வசம் சொன்னது. ‘ நான் 35 ஆவது வயதை பார்க்கப்போவதில்லை’ அவர் மேல் பேய் போல பாசம் வைத்த அவரது அம்மா, அதன் காரணமாகவே மருமகளை வாழ விடாமலேயே செய்த அம்மா, ராமானுஜன் நோயுற்று ஊர் திரும்பிய சூழலில் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடர்வசம் காட்டுகிறார். ஜோதிடர் சொல்கிறார் ‘உலக புகழ், ஆனால் அற்ப ஆயுள்’ பின்னர் கேட்கிறார் யார் ஜாதகம் இது. அம்மா சொல்கிறார் FRS வென்று வந்த ராமானுஜனின் ஜாதகம் இது. ஜோதிடர் பதறி ‘ஐயையோ ராமானுஜன் வீட்டுக்கு இதை சொல்லி விட வேண்டாம் ஆமாம் நீங்கள் யார், அவர் ஜாதகம் உங்கள் கையில் எப்படி’ என் வினவ, நான்தான் ராமானுஜனின் அம்மா என்று பதில் சொல்கிறார்.

நூலை வாசித்து முடிக்கையில் எழும் மகத்தான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து முடித்த ஆயாசம், அதுவே இந்நூல் அளிக்கும் வாசிப்பின்பம். ஆற்றுவன ஆற்றிப் பின் இயற்கை எய்திய ராமானுஜனின் கணித சூத்திரங்கள் அன்றும் இன்றும் என்றும் இணையற்ற மர்மம் கொண்டது. அவரது கனவில் குறுதிக் கடலில் மிதந்து வந்த ஓலைகளில் சில சமன்பாடுகள் இருந்ததாக (பல மிஸ்டிக் கதைகளில் இதுவும் ஒன்று) ராமானுஜன் சொல்லி இருக்கிறார். ஒட்டு மொத்த ராமானுஜனின் மேதமையை அடிக்கோடிடும் உருவகம் இது. குருதிக் கடல் கடைந்தெடுத்த சூத்திரங்கள். நேஷனல் புக் ட்ரஸ்ட் காக முனைப்புடன் அக்கரையுடன் சரளமாக வாசிக்கும் வண்ணம் மொழியாக்கம் செய்திருக்கிறார் வாஞ்சிநாதன்.

பின்குறிப்பு:

நூல் வாசித்து முடித்துவிட்டு அது சார்ந்து மேலதிகமாக வாசிக்க தேடியதில் இரண்டு சுவாரஸ்யங்கள் கிட்டியது.

ஒன்று: இந்த நூலின் ஆசிரியர் ராபர்ட் கன்னிகல் அவர்களை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் நேர்காணல் செய்திருக்கிறார்.

அதுவாகவே வந்தது

இரண்டு: இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு வெற்றித் திரைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

The Man Who Knew Infinity(2015)

கடலூர் சீனு

***

ஜானகியின் காதல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2021 11:31

July 14, 2021

கலையில் தனியுண்மை என்று இருந்தாகவேண்டுமா?

ஜெ,

ஓர் இலக்கிய படைப்பில் ஒரு uncommon wisdom, அரிய மெய்மை வெளிப்பட்டாகவேண்டும் என கூறீனீர்கள். கூடவே, எனது வாசிப்பில் இருந்து, ஒரு இலக்கிய படைப்பு. படைப்பு செயல்பாடு என்பது எழுத்தாளனின் பிரக்ஞையை தாண்டி நிகழ்வது, அவனை மீறி நிகழ்வது என்ற கருத்தையும் அடைந்துள்ளேன். அப்படி என்றால், ஒரு எழுத்தாளன் எழுதுவது எப்படி?

ஒரு கரு தோன்றினால், அதிலிருந்து எழுவது அரிய மெய்மையா என புறவயமாக யோசித்து, பிறகு எழுதுவதா, வேண்டாமா என முடிவு செய்ய முடியுமா? இல்லை அவனை மீறி எழுவதை எழுதி முடித்தப்பின் அதில் அரிய மெய்மை இல்லையென்றால் நிராகரித்துவிட வேண்டுமா? அல்லது, எழுத்தாளனை மீறி எழுபவை படைப்பின் முடிவோ தரிதசனமோ அல்ல.. அதன் form and techniques மட்டுமே. அதன் தரிசனம் புறமனதின் scrutiny கடந்து வந்தது என புரிந்துகொள்ளலாமா?

எனது புரிதலில், அல்லது இந்த இரு கருத்தை தொகுத்துக்கொண்ட விதத்தில் ஏதோ தவறு இருக்கிறது.. என்ன எனதெரியவில்லை. என்றோ ஒரு நாள் நான் எழுத நேரலாம், இன்று ஒரு வாசகனாக, புனைவுச்செயல்பாட்டை புரிந்துக்கொள்ளவிரும்பும் ஒருவனாக மட்டுமே இதை கேட்கிறேன்.

அன்புடன்,

ரியாஸ்

***

அன்புள்ள ரியாஸ்,

நான் கூறியது ஓர் இலக்கிய விமர்சன அளவுகோலே ஒழிய இலக்கிய ஆக்கத்தின் வழிமுறை அல்ல. இலக்கியப் படைப்பை மதிப்பிடும்போது அதில் வழக்கமான உலகியல்பார்வை, அரசியல்பார்வை, ஆன்மிகப்பார்வை வெளிப்பட்டிருக்கிறதா அல்லது தனக்கே உரிய ஒரு புதியபார்வை வெளிப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். படைப்பு கலையெழுச்சி அடைந்திருந்தால் அது ஒரு தனியுண்மையை, அசாதாரணமான மெய்வெளிப்பாட்டை இயல்பாகவே கொண்டிருக்கும்.

ஆனால் எழுதும்போது ஒருவன் இதோ நான் தனியுண்மையை அடையப்போகிறேன், அசாதாரணமான மெய்வெளிப்பாட்டை கண்டுகொள்ளப்போகிறேன் என திட்டமிட்டு அங்கே செல்லமுடியாது. அவன் செய்யக்கூடுவது தன் மொழியாக ஆழுள்ளத்தை தூண்டுவது, அந்த எழுச்சிக்கு தன்னை ஒப்புக்கொடுப்பது, அது வெளிப்படும்படி இலக்கியப் படைப்பின் வடிவத்தையும் மொழியையும் அமைத்துக் கொள்வது மட்டுமே.

அதில் தனியுண்மை வெளிப்படுவதும் அசாதாரணமான மெய்மை எழுவதும் அவனிடம் இல்லை. அதை முயன்று அடையவும் முடியாது. அது நிகழவேண்டும். ஆனால் ஒரு படைப்பு கலைத்தன்மையுடன் இருந்தால், அது ஒருவனிடமிருந்து நேர்மையுடன் வெளிவந்தால் அது தனியுண்மை வெளிப்படுவதாகவே அமையும்.

தனியுண்மையை ஏன் வலியுறுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது என்றால் கலையில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் மாயங்கள் மிகுதி என்பதனால்தான். நாம் நம்மை அறியாமலேயே வெளியே ஒலிக்கும் குரல்களை ஏற்று எதிரொலிக்க தொடங்கலாம். பிறருடைய கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் நாம் முன்வைக்க ஆரம்பிக்கலாம். ஏனென்றால் நம் சூழலென்பது அத்தகைய ஆற்றலுடன் நம்மை வளைத்திருக்கிறது. பேரொலியுடன் பல ஊடகங்கள் நம்மை நோக்கி பேசிக்கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்கள் வழியால பலநூறுபேர் நம்மிடம் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் நமக்கு புகழ், சமூக ஏற்பு ஆகியவை சார்ந்த ஆசைகள் இருக்கலாம். அந்நிலையில் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை நாம் அவர்களுக்கு அளிக்க ஆரம்பிக்கக் கூடும். நம்மையறியாமலேயே நாம் சமைத்துப் பரிமாறுபவர்களாக மாறிவிடுவோம். அவ்வாறு மாறுவது மிக நுட்பமாக நடைபெறுவதனால் நாம் உண்மையில் நம்மைத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நம்பிக்கொண்டும் இருக்கநேரிடலாம்.

ஒருவர் தன் படைப்பை எழுதும்போது தன் தனிப்பட்ட தேடலுக்காக, தன் ஆழ்ந்த தவிப்பிற்காக எழுதிச்செல்வார் என்றால் அது எதைக் கண்டடைகிறது, எதை தவறவிடுகிறது என்று அவருக்கே தெரியும். உதாரணமாக, ஒரு பெருந்துரோகம் ஒன்று உங்களுக்கு இழைக்கப்படுகிறது. அல்லது நீங்கள் அப்படி ஒரு நிகழ்வை அறிந்து உளக்கொந்தளிப்பு அடைகிறீர்கள். நீங்கள் எழுத ஆரம்பிக்கையில் துரோகம் என்றால் என்ன என்பதை தேடிச்செல்கிறீர்கள். அதை ஒருவகையில் புரிந்துகொள்கிறீர்கள். அது அப்படைப்பில் இருக்கிறது. அது தனியுண்மை கொண்டது என தெரிந்துவிடும் உங்களுக்கு.

மாறாக நீங்கள் துரோகம் என்பதை எழுத ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் ஆழமாக உசாவிச்செல்லவில்லை. துரோகம் பற்றி பொதுவாக அனைவரும் என்ன நினைப்பார்கள் என்றே உங்கள் உள்ளம் கணக்கிடுகிறது. எதைச்சொன்னால் வாசகர்கள் கதையில் தீவிர ஈடுபாடுகொள்வார்கள் என்று நீங்கள் திட்டமிட்டு எழுதுகிறீர்கள். இதை நீங்கள் உங்களை அறியாமலேயே செய்தாலும்கூட உங்கள் படைப்பில் அது உங்கள் சொந்தக் கேள்வியும் கண்டடைதலும் இல்லை என்று உணர்ந்துகொள்வீர்கள்.

இந்த வேறுபாடு எப்போதும் நமக்கே தெரியும். முழுமையாக நம் ஆழுள்ளத்திற்கு நம்மை ஒப்படைத்து எழுதவேண்டியது மட்டுமே நாம் செய்யவேண்டியது. அது கலையென நிகழ்ந்தால் அதில் கலைக்குரியதென நான் சொல்லும் இயல்புகள் இருக்கும். சிலசமயம் வடிவச்சிக்கல்களால் அது முழுமையடையாமல் போகும். அந்நிலையில் நான் சொல்லும் அந்த தனியுண்மை அதில் துலங்காமல் போகும். அது நமக்கே தெரியும், அது கூர்கொள்ளவில்லை என. கூர்கொண்டு வந்த ஒரு படைப்பைத்தான் நாம்  ‘இதோ இது என் படைப்பு’ என முன்வைப்போம் அல்லவா?

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2021 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.