Jeyamohan's Blog, page 961
June 27, 2021
வெண்முரசின் உணவுகள்- கடிதம்
ஓவியம்: ஷண்முகவேல்வணக்கம்.
சித்திரை பவுர்ணமி அன்று காணொழி மூலம் தங்களை காண வாயப்பு கிடைத்தத. அந்த இரவு என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரவாகும். 11.30. முதல 1:40 வரை இணைந்திருந்தேன். நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை, அமைதியாக தங்களுடைய உரையாடலை கவனித்துக் கொடிருந்தேன். ஓர் இனிய இரவாக இருந்தது.
குமரித்துறைவி பற்றி பலர் கேட்டனர், நானும் உங்களிடம் ஓர் விடயத்தை கேட்கலாம் என்று இருந்தேன் ஆனால் சற்று அமைதியாக இருக்க மூளை ஆணையிட்டது.
வெண்முரசில் நீங்கள் பல நில வர்ணைனைகளையும தத்துவங்களைப் பற்றியும் வந்து கொண்டே இருக்கிறது, அதற்கு நிகராக உணவைப் பற்றியும் வருகிறது எப்படி அத்தனை வகை உணவுகளைப் பற்றி தெரிந்து கெண்டீர்கள், உங்கள் வலை தலத்திலும் பல உணவு வகையைப் பற்றிய குறிப்புகளும் கதைகளும் உள்ளன அவற்றை பற்றி கூறுங்கள்
உங்கள் வலைதலத்தில இயன்ற வரை தேடிக் கொண்டிருக்கிறேன் இது வரை கிட்டவில்லை.(நேரம் இருந்தால் சற்று விடை அளிக்கவும், ஒரு உணவு பிரியனின் ஆசை)
நீலம் நாவலை வாசித்து முடித்துவிட்டேன். பிரயாகை நாவலை படித்து கொண்டிருக்கிறேன். நான் வெண்முரசு ரீடரில் நாவல்களை வாசித்து வந்தேன், கடிதங்களை நீலதிற்கு முன்பு வாசித்ததில்லை நீலம் வாசித்த பின்பு ஒவ்வொரு கடிதமாய் வசிக்கிறேன. புதிய வாசல்கள். திறந்து கொண்டே இருக்கிறது.
படித்து முடித்தவுடன் என் டைரியில் எழுதினேன். அதை படித்து பார்த்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது. அதை பிற கடி தங்கள லுடன் ஒப்பிடும்போது நான் எங்கிருக்கிறேன் என்று உணர்கிறேன். சற்று அந்தரங்கமான ஒரு குறிப்பாக இருந்தது பொது தன்மை இல்லாமல் இருந்தது. கிட்ட தட்ட இரண்டு மாதமாய் நீலத்தையே படித்தேன். வேறு. எதுவும் சொல்ல என்னால் இயல வில்லை அல்லது என்னுடைய அனுபவத்திற்கு மேல் உள்ளது நீலம்.it is larger than my life .ஒருவேளை காதலித்தால் அந்த நிலை புரியலாம்.
இப்பொழுது ரீடரில் வாசிக்காமல் நாள் வரிசையில் வாசிக்கிறேன், அந்தந்த பதிவிற்கான எடிர்வினையுடன் விரித்து வாசிக்கிறேன். துறுவனின் கடையை கேட்டு அன்று மொட்டைமாடியில் நின்று கடும் முயற்சி செய்து துறுவனை பாக முயற்சி செய்தேன் முடிய வில்லை. மேகமூட்டம் இருந்ததாலும் நிலவினாலும் பர்க முடியவில்லை, தினமும் முயற்சி செய்கிறேன், அமாவாசை அன்று பார்த்து விடுவேன் என்று நினைக்கிறேன்.
மற்றொரு சிறு சந்தேகம்.தங்கள் வலை தளம் மூலமாக காந்தி today வலைதளம் எங்கு அறிமுகமானது அதிலும் தினமும் சென்று படிப்பேன், ஆனால் சென்ற மூன்று வாரமாக அந்த இணைய தளம் error என்று வருகிறது திரக்க முடிய வில்லை என்ன என்று தெரிய வில்லை. இதை தங்கள் பார்வைக்கு கொண்டுவரவே எழுதுகிறேன்.
தங்களின் நேரத்தை சற்று அதிகமாக எடுத்து கொண்டதற்கு மன்னிக்கவும்.
அன்புடன்
சோழராஜா
***
அன்புள்ள சோழராஜா
ஒரு நாவலில் வரும் செய்திகள் திட்டமிட்டுச் சேர்ப்பவை அல்ல. திட்டமிட்டு ஆராய்ச்சி செய்து சேர்க்கும் செய்திகளும் ஏராளமாக உண்டு. ஆனால் நுண்செய்திகள் வாழ்க்கை முழுக்க அறியாமலேயே உள்ளே சென்று நனவிலியில் சேர்ந்துகொண்டிருப்பவை. அவை அங்கிருப்பதையே நாம் அறிவதில்லை. புனைவு உருவாகும் உளஎழுச்சியின்போது அவை அறியாமலேயே வந்து நிறைகின்றன. படைப்புத்திறன் என்பது அசாதாரணமாக விரியும் நினைவுத்திறன், மொழியில் உருவாக்கிக் கொள்ளும் கனவு.
கனவில் நாம் அறிந்தே இராத நிலங்களும் உணவுகளும் வருகின்றன இல்லையா? அவற்றை நாம் எங்கோ கண்டிருப்போம். மறந்திருப்போம். அல்லது ஒன்றைக் கண்டு இன்னொன்றென கற்பனையில் விரித்திருப்போம். கனவில் அவை எப்படி இணைகின்றன, எப்படி தர்க்கபூர்வமாக ஒருமைகொள்கின்றன என்று கண்டடைவது கடினம். அப்படித்தான் இலக்கியம் எழுதப்படும் கணத்திலும் நிகழ்கிறது.
ஜெ
June 26, 2021
நவீன இலக்கியம் வரையறை
பேரன்புள்ள திரு. ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம், நலந்தானே? எனக்கொரு சந்தேகம். தமிழில் Modern literature என்பது எந்த வரையரைக்குள் உட்பட்டது ? எல்லைகள் ஏதாவது உண்டா?
பாரதியையும் நவீனம் என்கிறார்கள், திரு. ஜெயகாந்தனையும், தற்போது எழுதும் எல்லாம் நவீன இலக்கியம் என்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் வெவ்வேறு காலகட்டமல்லவா. நான் சந்திக்கும் சிலர், எனக்கு contemporary literature தான் பிடிக்கும் என்கிறார்கள். இதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஆங்கில இலக்கியத்தில் உள்ளது போல் தமிழில் ஏதாவது காலவரையறை நவீனத்திற்கு உள்ளதா. நவீன இலக்கியம் பற்றிய தங்களது கருத்துக்கள் அறிய ஆவல்.
என்றென்றும் அன்புடனும், நட்புடனும்
கி.பா. நாகராஜன்
வ.வே,சு.அய்யர்அன்புள்ள நாகராஜன்
இந்த கேள்விக்கான பதில் எல்லா இலக்கிய வரலாற்று நூல்களிலும் உள்ளதுதான், ஆனால் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் வாசகர்களுக்கும் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது.
நவீன இலக்கியம் என்பது நவீன காலகட்டத்திற்குரிய இலக்கியம். நவீன காலகட்டம் என்று நாம் சொல்வது சில அடிப்படைகள் கொண்டது. அவற்றை தோராரயமாக இவ்வாறு வரையறை செய்யலாம்.
அ. ஜனநாயக அரசியல். அதாவது மக்கள் அரசியலில் பங்கேற்றல். அரசியல் மாற்றங்களை மக்கள் தாங்களே முடிவுசெய்தல்.
ஆ. பொதுக்கல்வி. அனைத்து மக்களுக்கும் ஒரேவகையான கல்வியறிவு கிடைப்பது
இ. நவீனத்தகவல் தொழில்நுட்பம். இந்தப் பூமியில் உருவான முதல் நவீன தொழில்நுட்பம் என்பது அச்சுதான். அச்சு இயந்திரமே செய்திகளை மிக விரைவாக அனைவருக்குமாக கொண்டுசென்று சேர்த்தது.
ஈ. நவீன உற்பத்திமுறை. அதாவது கைத்தொழில், கிராமத்தொழில்களுக்குப் பதிலாக மக்கள் கூட்டாக இயந்திரங்களின் உதவியுடன் உற்பத்திகளைச் செய்யும் தொழிற்சாலைகள்.
பி.ஆர்.ராஜம் அய்யர்இந்நான்கும் உருவானதுமே உலகின் முகமே மாறிவிட்டது. அதற்கு முன்பிருந்தவை மன்னரும் மதகுருக்களும் மக்களின் தரப்பை அறியாமலேயே ஆட்சிசெய்த காலம். ஒவ்வொரு தொழிற்குழுவும், இனக்குழுவும் வேறுவேறு கல்விகளைப் பெற்ற காலம். செய்திகள் சென்றடைவது மிகமிகக்குறைவாக இருந்த காலம். உற்பத்தியும் வினியோகமும் மிகக்குறுகிய அளவில், சிறியவட்டத்திற்குள் நிகழ்ந்த காலம்.
ஐரோப்பாவுக்கு பதினெட்டாம்நூற்றாண்டின் இறுதிதான் நவீன காலகட்டத்தின் தொடக்கம். இந்தியாவுக்கு பத்தொன்பதாம்நூற்றாண்டின் இறுதி. நூறாண்டுகள் நாம் நவீனமடைதலில் பின்னடைவு கொண்டிருந்தோம் என்று தோராரயமாகச் சொல்லலாம்.
நவீன காலகட்டத்திற்குரிய இலக்கியமே நவீன இலக்கியம். நவீன காலகட்டத்தின் வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு உருவாகி வந்தது அது. அதன் இயல்புகள் என்னென்ன?
மாதவையாஅ. நவீன இலக்கியம் நேரடியாக வாசகர்களால் வாசிக்கப்படுவது. அச்சு ஊடகம் வழியாக நேரடியாக வாசகர்களைச் சென்றடைவது. பண்டைய இலக்கியம் அப்படி அல்ல. அது ஆசிரிய- மாணவ மரபு வழியாகவே கற்கப்பட்டது.
ஆ பண்டைய இலக்கியம் அனைவருக்கும் உரியதாக இருக்கவில்லை. அது கல்வியை தன் வாழ்க்கையாகக் கொண்டவர்களுக்கு உரியது. அதாவது கல்விமான்களே இலக்கியத்தைக் கற்றனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் இலக்கியத்தைக் கற்கவில்லை
இ.நேரடியாக மக்களிடம் பேசும்தன்மை கொண்டிருந்தமையால் நவீன இலக்கியம் அதற்குரிய வடிவை தேர்வுசெய்தது. பண்டிதர்களால் ரசிக்கப்பட்ட பூடகப்பேச்சுக்கள், வடிவச்சிக்கல்கள், மொழிவிளையாட்டுக்களை அது தவிர்த்தது.
ஈ. நவீன இலக்கியம் மக்களிடம் பேசுவது. ஜனநாயகம் மக்களின் அதிகாரம். ஆகவே நவீன ஜனநாயகத்தின் ஊடகமாக நவீன இலக்கியம் அமைந்தது. பண்டைய இலக்கியம் அடிப்படையான அறவிழுமியங்களையும் தத்துவங்களையுமே பேசும்.நவீன இலக்கியம் அரசியலையும் சமூகப்பண்புகளையும் நேரடியாகப் பேச ஆரம்பித்தது.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
இந்நான்கு அம்சங்களையும் கருத்தில்கொண்டால் தமிழில் நவீன இலக்கியத்தின் தொடக்கம் என்பது பாரதியில் இருந்து என்று கருதலாம். நவீன இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் பாரதி முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார். அவர் காலகட்டத்தில் இருந்த மாம்பழக் கவிசிங்கராயர் போன்றவர்களெல்லாம் பண்டைய இலக்கியமரபைச் சேர்ந்தவர்கள்.
நவீன இலக்கியம் அச்சு ஊடகத்தில் வெளிவந்தமையால் உரைநடை மையப்போக்காக உருவாகியது. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற வடிவங்கள் உருவாயின. இந்த ஒவ்வொன்றிலும் முன்னோடிகள் தமிழில் உள்ளன. நாவலுக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவையா, ராஜம் அய்யர் ஆகியோர் முன்னோடிகள். சிறுகதைக்கு வ.வெ.சு.அய்யர் முன்னோடி. இவர்களனைவரும் நவீன இலக்கியத்தின் முன்னோடிகள்.
இவர்களின் காலத்தைக் கொண்டு பார்த்தால் 1880 முதல் 1925 வரையிலான காலகட்டம் நவீன இலக்கியத்தின் தொடக்க காலகட்டம். அதன்பின் 1950 வரையிலான காலகட்டம் வளர்ச்சிக் காலகட்டம். இன்றுவரையிலான இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக நவீனக் காலகட்டம் என்கிறோம்.
சமகால இலக்கியம் [contemporary literature] என்பது நவீன இலக்கியத்திலுள்ள நிகழும் தலைமுறை காலம். பொதுவாக ஒருவர் தான் வாழும் காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை சமகால இலக்கியவாதிகள் என்றும் அவர்களின் எழுத்தை சமகால எழுத்து என்றும் சொல்லலாம்.அது அவருடைய தெரிவு. அதை அனைவருக்குமாகப் பகுக்க முடியாது.
இதனுடன் குழப்பிக்கொள்ளக்கூடாத ஒரு சொல் உண்டு. நவீனத்துவம் [modernism] என்பது முற்றிலும் வேறு. நாம் பேசிக்கொண்டிருப்பது நவீனத்தன்மை [,modernity] நவீனக் காலகட்டம் [modern period] பற்றி. இது புதியகாலம் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் கலைச்சொல். ஆனால் நவீனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட உலகப்பார்வையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் கலைச்சொல்.
எதிலும் தனிமனிதப்பார்வையைக் கொண்டிருத்தல், தர்க்கபூர்வ அணுகுமுறைமேல் நம்பிக்கை, கச்சிதமான புறவயமான மொழிநடைமேல் நம்பிக்கை, இலக்கியத்தை அதன் வடிவ அழகால் மதிப்பிடுதல், உலகளாவிய பொதுக்கருத்துக்கள் மேல் நம்பிக்கை கொண்டிருத்தல் போன்ற சில பார்வைக்கோணங்களைக் கொண்ட ஒரு காலகட்டத்தை விமர்சனரீதியாக நவீனத்துவம் என்கிறார்கள். அது காலப்பிரிவினை அல்ல, உள்ளடக்கம் சார்ந்த பிரிவினை
ஜெ
தேர்வுசெய்யப்பட்டவர்கள் – கடிதம்
அன்பின் ஜெ,
வணக்கம்!.
காரைக்குடியில் கனரா வங்கியின் “நூற்றாண்டு அறக்கட்டளை” மூலம் நூறு சதவிகித நிதியுதவியுடன் செயல்படும் கைவினைக் கலைஞர்கள் பயிற்சி மையத்தை, சென்ற வார இறுதியில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
கற்றலில் ஆர்வமுடையவர்களுக்கு 18 மாத கால இலவச பயிற்சி அளிக்கிறார்கள். மற்ற மையங்களிலிருந்து இம்மையம் தனித்துவமாக தெரிய காரணம்,

அ) : குருகுல பயிற்சி முறை.
ஆ) : தமிழக அளவில் சிற்பக் கலைக்கெனெ பிரத்யோக பயிற்சி மையம்.
இ) : மாணவர்களுக்கு தங்குமிடம்,உணவு, சீருடை, சிற்பங்கள் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்திற்கான செலவீனங்களையும் முழுமையாக பயிற்சி மையமே ஏற்றுக்கொள்கிறது.
ஈ) : விற்கப்படும் சிற்பங்களின் வெகுமதியில் இருபத்தி அய்ந்து சதவிதம், சிற்பத்தை செய்த மாணவனுக்கு அளிக்கபடுகிறது.
நான்கு விதமான [மரம்,சுதை,கல் மற்றும் உலோகம்] சிற்பக்கலை பயிற்சிகளில், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற பிரிவை தெரிவு செய்துகொள்ளலாம்.
மிகச்சிறந்த கட்டமைப்பு, அனுசரணையான நிர்வாகம், அர்பணிப்போடு செயல்படும் பயிற்றுனர்கள், வருடம் முழுமைக்கும் எப்போதுவேண்டுமானாலும் பயிற்சியில் சேர்ந்துகொள்வதற்கு வாய்ப்பு.
சரி… இதை உங்களுக்கு இப்போது ஏன் எழுதுகிறேன்?
வார இறுதி இருநாட்கள் பயணத்தில் சென்ற பகுதிகள் அனைத்திலும், பெரும்பாலான இளைஞர்கள் கைபேசியிலிருந்து கண் எடுக்காமல் தலை குனிந்தவண்ணம் இருக்க,
கையில் சிறு உளியோடும் முழு கவனக்குவிப்போடும் தலை குனிந்தமர்ந்திருக்கும் சிறு இளைஞர் குழுவை பயிற்சி மையத்தில் சந்தித்தபோது, உங்கள் எழுத்தின் மூலம் அறிமுகமாகிய தருணம் நினைவிற்கு வந்தது.
மனிதர்கள் எல்லோரும் சமம் அல்ல. இயற்கையில் சமம் என்ற கருத்துக்கே இடமில்லை. சிலர் பிறவியிலேயே அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். அவர்களுக்கு தகுதியும் பொறுப்பும் உண்டு. ஆகவே அவர்கள் தியாகங்கள் செய்தாகவேண்டும். அறிஞர்களும் இலட்சியவாதிகளும் ரத்தமும் கண்ணீரும் சிந்தி உருவாக்கும் பண்பாட்டை சுவைத்து களித்து அதை அறியாமல் அதன் மேல் வாழ்வார்கள் பாமரர்கள். தேனீக்கூட்டை பாதுகாப்பதற்காக, தேன் சேகரிப்பதற்காக உயிர்விடுவதற்கென்றே ஒரு தேனீ பிரிவை இயற்கை உருவாக்கியிருக்கிறது. அவர்களைப்போன்றவர்களே இந்தச் சிறுபான்மையினரும். அவர்கள் ‘விதி சமைப்பவர்கள் ‘ (டெஸ்டினி மேக்கர்ஸ் ) என்றார் நித்யா.
”விதி சமைப்பவர்கள்” வந்தவண்ணம் இருக்கிறார்கள்!
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.
கழுமாடன் கடிதம்
வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் நகைச்சுவை பதிவுகள் எனது ஒவ்வொரு நாளையும் இனிமே மிக்கதாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. தங்களின் தனிமை குறித்த ஒரு வாசகக்கடிதக் கேள்விக்கான பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மிகப்பெரிய திறப்பை அளித்தது. சிந்தையை அடக்கி சும்மா இருப்பதை விட்டு தேவையில்லாமல் இலக்கிய வாசிப்பு மற்றும் உரையாடல்கள் என எண்ண ஓட்டங்களில் மூழ்கிக் கிடக்கின்றேனோ என்ற ஐயம் அவ்வப்போது வரும். அந்த பதிலுக்காக உங்களுக்கு மிகவும் நன்றி. எனினும் கூட காலம் மட்டுமே இது குறித்த ஒரு நல்ல தெளிவை இனி வரும் நாட்களில் எனக்கு அளிக்கக் கூடும் என நம்புகின்றேன்.
ஒரு கேள்விக்கு உங்களின் கருத்தை கேட்டு இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.
இன்று சுக்கிரி இலக்கிய உரையாடல் குழுமத்தில் கழு மாடன் கதை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அந்தக் கதையின் நாயகன் கழு ஏறுவதற்கான முடிவை எடுத்ததில் ஓங்கி நிற்பது அவனது ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான விடுதலைக்கான அறைகூவலே என்று ஒரு தரப்பும், தனக்கு பகவதி மற்றும் தேவகி இளையம்மை குடும்பத்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கும் தனிப்பட்ட வஞ்ச உணர்ச்சியே என்று ஒரு தரப்பும் தீவிரமாக விவாதித்தது. இவை இரண்டுமே காரணம் என்று அனைவரும் ஏற்றுக்கொண்ட போதிலும் எது மிக முக்கியமான காரணம் என்பதில் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் தீவிரமாக எடுத்துரைக்கப்பட்டன. ஒரு இலக்கிய படைப்பாளியாக தாங்கள் இந்தக் கதையை எழுதும்போது எந்தக் காரணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.
பதினேழு குழந்தைகளில் மிஞ்சிய, அன்னைக்கு ஒரே மகனாக இருந்த போதும்,கரியாத்தன் கழு ஏறுவதற்கான முடிவை எடுப்பதற்கான எல்லா காரணங்களையும் பட்டியலிட்டுப் பார்ப்போமே.
1.செய்யாத தவறுக்காக தண்டிக்கப் படுவதால் எழுந்த அறச்சீற்றம்.
2.தேவகியின் நடத்தை மீதான வெறுப்பு
3.பகவதி பிள்ளையின் செய்கை மீதானா கோபம் மற்றும் வஞ்சம்
4.ஒடுக்கப்பட்டவனாக பிறந்து கொடுந்துயர் அனுபவிப்பதால் விளைந்த சமூக அமைப்பின் மீதான சீற்றம்
5.கழு மாடனாக நின்று பழி வாங்க வேண்டும் என்ற வெறி.
6.கழு மாடனாக நின்று ஒடுக்கப்பட்ட இனத்திற்கான முதல் விடுதலைக் குரல் எழுப்பும் ஆவல்.
7.அத்தனை சித்திரவதைகளையும் அனுபவித்து விட்ட பிறகு உயிர் வாழ்ந்து என்ன பயன் என்ற விரக்தி.
8.தொடவில்லை என்று சத்தியம் செய்துசொன்ன பிறகும் விடுதலை கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் இன்மை.
9.மீண்டும் தேவகி பிள்ளை தொல்லை தர மாட்டார் என என்ன நிச்சயம் என்ற எதிர்கால கேள்வி.
10.கழுவேற்றா விட்டாலும் வேறு ஏதோ வகையில் தன்னை பிறகு கொல்ல மாட்டார்களா என்ன? என்பதான உயிருக்கான உத்திரவாதம் இன்மை.
இவைகள் எனக்குத் தோன்றியவை. வேறு ஏதேனும் விட்டுப் போயிருந்தால் இணைத்து எழுதுங்கள்.
தங்களுக்கு நேரமிருப்பின் இதுகுறித்து தங்கள் மேலான கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
அன்புள்ள ஆனந்த் சுவாமி அவர்களுக்கு,
கதை எழுதப்பட்ட பின் நான் என்ன உத்தேசித்தேன் என்பதற்கு இடமில்லை. அதை நான் சொல்லவும் கூடாது. ஒரு கதை ஒரு வாழ்க்கையின் துண்டு. வாழ்க்கைநிகழ்வொன்றை சொல்லக்கேட்டால் நாம் எப்படி பலதரப்பட்ட முடிவுகளை அடைகிறோமோ அப்படித்தான் கதையிலும் அடைகிறோம். எல்லா வாசிப்புக்கும் இடமளிப்பதே நல்ல கதையின் இலக்கணம். இரண்டு வாசிப்புமே சரியானதுதான்
ஜெ
***
குமரித்துறைவி
வான் நெசவுஇரு கலைஞர்கள்
பொலிவதும் கலைவதும்
தங்கப்புத்தகம்
“
ஆனையில்லா
”
முதுநாவல்
ஐந்து நெருப்பு
மலைபூத்தபோது
தேவி
எழுகதிர்
ஆரோக்யநிகேதனம் – படிமங்கள்
இனிய ஜெயமோகன் அவர்களுக்கு,
அன்புள்ள ஜெயமோகன்
‘ஆரோக்கிய நிகேதனம் ‘ நாவலை உங்களின் பரிந்தரையால் இரு மாதங்களுக்கு முன் வாசித்தேன்.சில சமயம் அதை பற்றிய சிந்தனை வரும்,ஜீவன் மஷாய் நடந்து வருவது போல்,தோற்செருப்பின் ஒலியுடன்.இன்று காலை முதல் ஒருவித நகர்தலை மனதில் உணர்ந்தேன்.
அதை நினைக்கும் போதெல்லாம்.வாசிக்கும் போது என்னை அதன் கூறுமுறை வெகுவாய் கவர்ந்தது.அதிர்வில்லாத ஆனால் பெரும் உளமாற்றத்தை அவ்வபோது உருவாக்கி கொண்டு இருந்தது.எனக்கது செயற்கையோ என தோன்றிற்று.நீங்கள் வெகுவாய் உயர்த்தி பேசியதால் உண்டான உணர்வோ என்று!
ஆனால் மலையை எந்த தடங்கலும் இன்றி கூர்ந்து அவதானித்தால் வருமே,ஆளில்லா ஆற்றில் தனியாய் அலாதியாய் வெகு நேரம் நீராடி அதன் அகண்டு விரிந்த உருவை பார்த்தால் வருமே,அதெல்லாம் போல ஒரு பிரம்மாண்ட நகர்வு மனதுள்.நகர்வென்னும் வார்த்தை நியாயமானதா என தெரியவில்லை.காலத்தின் பேருருவை மஞ்சரியின் வசீகர சரிவு எனக்கு உணர்த்துகிறது.கனவு போல் இருக்கிறது.இதோரு விந்தையான அனுபவம்.வாசிப்பின் ஆரம்ப படிகளில் இருப்பதால் எனக்கு இதொரு நிமர்வை அளித்தாலும்,வார்த்தைகள் இன்றி குழப்பம் கொள்கிறேன்.
மண்வாசத்தின்,இருண்ட மழை வானின் நெருக்கத்தை அளிக்கறது.இயற்கையின் ஒரு உருவாக என் அகத்துள் நிறைகிறது ஏனோ.நெகிழ்வென கூறவா,உயிர்ப்பென கூறவா,ஐயுறுகிறேன்.ஆனால் ஒருவித பாதிப்பு.
இவ்வளவு நாட்களழித்து ஏன் இந்த உணர்வு?இது மெய்யாகவே வாசிப்பில் நான் வளர்ந்து வருவதற்கான அறிகுறியா?ஆரோக்ய நிகேதனம் என் அகத்தில் கரைய தொடங்கிவிட்டதா?விறுவிறுப்பு கண்டடைதல் எல்லாவற்றையும் மீறி இது வேறொரு உணர்வென மட்டுமே தற்போதைக்கு புரிகிறது.மேலும் தெளிவுற ஆவல்.விளக்கம் தந்தால் என் வாசிப்பை சிறப்பாய் மேம்படுத்துவேன்.
அன்புடன்
பாலா
***
அன்புள்ள பாலா
பேரிலக்கியங்களில் மூன்று கூறுகள் உள்ளன. கதைத்தருணங்கள், சிந்தனைகள், படிமங்கள். கதைத்தருணங்கள்தான் உடனடியாக ஆழமான பாதிப்பை உருவாக்குகின்றன.ஏனென்றால் அவை உணர்ச்சிகரமானவையாக இருக்கும். தீவிரமான மோதல்களை அளிக்கும். கதைமாந்தரின் ஆளுமை நம்மை கவரும். சிந்தனைகள் முதலில் தடையென தோன்றும். ஆனால் வாசித்து முடிக்கையில் நம்மில் நிறைந்திருக்கும். நாம் மேலே யோசிக்கவைக்கும்.
படிமங்கள் நம் அறிதலுக்கு எதையும் அளிப்பதில்லை. சிலசமயம் நீங்கள் சொன்னதுபோல அவை வேண்டுமென்றே செய்யப்பட்டவை என்றும் படும். ஆனால் அவை நம் ஆழுள்ளத்துக்கு நேரடியாகச் சென்றுவிடுகின்றன. அங்கிருந்து நம் கனவை ஆள்கின்றன. நம்மில் வளர்கின்றன. நம்மை மாற்றுகின்றன. உங்களுக்கு நிகழ்ந்தது அதுதான்
ஜெ
’எடிட்டர்’- கடிதம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் லெட்டர். நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். ஓரளவு வாசிப்பு பழக்கம் உண்டு. இப்போதுதான் நவீன இலக்கியத்திற்குள் வந்திருக்கிறேன். சிங்கப்பூர் இலக்கியத்தில் இருப்பவர்களை ஓரளவுக்குத் தெரியும். சமீபத்தில் இலக்கிய விவாத சண்டை ஒன்றில் வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விவாதம் பாதி புரிந்தது. மீதி புரியவில்லை. உங்களுக்கு எழுதினால் தெளிவாண பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு இளம் வாசகராக இந்த லெட்டரை எழுதுகிறேன்.
அது சிங்கப்பூரில் வெளியான கவிதை நூல் பற்றிய விவாதம். அந்த நூலில் இருக்கும் கவிதைகளை தமிழ்நாட்டில் இருக்கும் யாரோ பெரிய கவிஞர் எடிட் செய்ததாகவும் அது கிட்டத்தட்ட Ghostwriter வேலை போலதான் என்று பேசினார்கள். ஒரு கவிதைத் தொகுப்பை எடிட் செய்ய கொடுப்பது தப்பா? இதே போல ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கும் நடந்திருப்பதாக சொன்னார்கள். ஒரு பெண்னால் எழுதப்பட்ட அந்தத் தொகுப்பு தமிழ்நாட்டின் பிரபல ஆண் எழுத்தாளரால் எடிட் செய்யப்பட்டது. வாசித்தவர்கள் இது பென் எழுத்து இல்லை ஒரு ஆணிண் எழுத்து என்று குற்றம்சாட்டி இருக்கிறார்கள். ஒரு புத்தகத்துக்கு எடிட்டிங் முக்கியமில்லையா? இந்த குற்றச்சாட்டுகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து விளக்கவும்.
கிருஷ்ணன்
சிங்கப்பூர்
***
அன்புள்ள கிருஷ்ணன்
ஒரு கவிஞர் தான் எழுதிய கவிதைகளை புறவயமான ஒரு பார்வைக்காக இன்னொரு கவிஞர் அல்லது விமர்சகரிடம் கொடுப்பது தமிழில் எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருப்பதுதான். அக்கவிஞரால் தன் கவிதையை புறவயமாக பார்க்க முடியாது. இன்னொருவர் பார்த்துச் சொல்லும்போது அந்த கவிதைகளை சரியாக அணுகமுடிகிறது
படைப்புகளின் வடிவத்தை அவ்வாறு சரிபார்க்கலாம். வெட்டியும் கூராக்கியும் செம்மைசெய்யலாம். எந்தெந்த படைப்புகள் வெளியிடத்தக்கவை என முடிவெடுக்கலாம். கவிதைகளைப் பொறுத்தவரை அதை இன்னொரு கவிஞரே செய்ய முடியும். ஆகவே தமிழில் எப்போதுமே ஒரு கவிஞரின் கவிதையை இன்னொருவர் செம்மையாக்கிக்கொண்டேதான் இருக்கிறார்.
சிங்கப்பூரில் அதை திருட்டு எழுத்து என்கிறார்கள் என்றால் அது அறியாமையால்தான். ஆனால் ஒரு கவிஞர் இன்னொரு கவிஞரின் மொழியை தன்மொழியாக ஆக்கினால், அவருடைய பார்வையை தன் பார்வையாக மாற்றினால் அது அத்துமீறல்.
ஜெ
June 25, 2021
கடவுள்,தொன்மம்,சில வினாக்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் கடந்த சில நாட்களாக உங்கள் வலைதளத்தில் கீதை, அத்வைதம் குறித்த உங்களது பழைய கட்டுரைகளை படித்து வருகிறேன். எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை, அவ்வளவு தெளிவான விளக்கங்கள். எனினும் சில ஐயங்கள். தெளிவுபடுத்த இயலுமா?
கடவுள்/இறைவன் போன்ற கருதுகோளில் நம்பிக்கை அற்ற சாங்கிய, யோக தரிசனங்களை நாத்திக தரிசனங்கள் என்று சொல்ல முடியுமா?செயலின்மையை உண்டு பண்ணுவதில் ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று ஒரு இடத்தில் சொல்லி இருப்பதை கண்டேன். ரமணரை விடவா?ஜே.கே பள்ளிகள் அவரது பங்களிப்பு தானே?கயிலாய மலையை காணும் போது ஏன் உணர்ச்சிவசமாகிறார்கள்? அத்வைதியான உங்களுக்கே அனுபவம் வந்ததாக வாசித்த நினைவு. வெறும் காட்சி வழியாக பிரம்மத்தை உணரும் ஒரு தருணமாக அதை எண்ணுகிறீர்களா?அன்புடன்
முருகேஷ்
***
அன்புள்ள முருகேஷ்,
அ. கடவுள் இறைவன் போன்றவற்றில் நம்பிக்கையற்று இயற்கையையும் பிரபஞ்சத்தையும் பொருள்முதல் நோக்கு கொண்டு அணுகும் தரிசனங்கள் பல. அவற்றில் சாங்கியத்தின் முதல்வடிவமும், அதன் நீட்சியாக அமைந்த யோகமும், வைசேஷிகமும், அதன் நீட்சியான நியாயமும் முக்கியமானவை.
வேதாந்தம் இறைவனை ஏற்றுக்கொண்டதுதான். அருவமான பிரம்மத்தை அது இறைவடிவாக முன்வைக்கிறது. அதன் உருவ வெளிப்பாடுகளை வழிபடுவதையும் மறுக்கவில்லை.
இவற்றை ‘நாத்திக’ தரிசனங்கள் என்று சொல்ல முடியாது. நாத்திகம் என்பது மறுப்பு. இறைமறுப்பை அடிப்படையாகக் கொண்ட தரிசனங்களையே அவ்வாறு சொல்லமுடியும். சார்வாக தரிசனம் அப்படிப்பட்டது.
இறை அல்லது முதற்பொருள் என்னும் முடிவு இல்லாமல் பிரபஞ்சத்தையும் இயற்கையையும் விளக்கும் தரிசனங்களை ஜடவாதம் [பொருள்முதல்வாதம்] லோகாயதம் [உலகியல்வாதம்] பிரகிருதி வாதம் [இயற்கைவாதம்] என்று வரையறுக்கிறார்கள்.
ஆ. ரமணர் தொன்றுதொட்டு இங்கிருக்கும் ஒரு ஞானமரபின் முகம். அது ‘சிந்தையடக்கிச் சும்மா இருப்பதே சுகம்’ என்னும் தரிசனம் கொண்டது. ஒருமைக்குள் ஆமை போல் புலன்களை அடக்குவது அதன் வழி. ஆனால் அது அனைவருக்கும் உரியது அல்ல. யோகிகளின் பாதை. கடுமையான தன்னொடுக்கம் மற்றும் உலகத்துறப்பினூடாக அடையவேண்டியது அது.ரமணர் அல்லது அவரைப்போன்றோர் சொல்லும் சும்மா இருத்தலென்பது ஒரு யோகநிலை, சாதகர்களுக்குரியது.
ஜே.கிருஷ்ணமூர்த்தி அதை எளிமையாக்கி அனைவருக்கும் சொன்னார். இல்லறத்தோர் உலகியலோர் அனைவருக்கும் அதை ஒரு வாழ்க்கைமுறையாக உபதேசித்தார். ஒழுகிச்செல்லுதல், செயலற்றிருத்தல், எதையும் மாற்றாமலிருத்தல், எதன்மேலும் உள்ளத்தையோ விசையையோ செலுத்தாமலிருத்தல் என அவர் சொன்னது செயலின்மையை உருவாக்கியது. அது உலகியலோருக்கு தீங்கானது
கீதை உச்சத்தில் மோட்சசன்யாச யோகத்தையும் விபூதியோகத்தையும்தான் முன்வைக்கிறது. ஆனால் உலகியலில் செயலின்மை என்பது இந்துமெய்மரபின் வழி அல்ல,
இ. கங்கை, கயிலை, குமரி, அண்ணாமலை போன்ற ஆறுகள் மலைகள் கடற்துறைகள் போன்றவை நம் ஆழுள்ளத்தை நிறைத்திருக்கும் குறியீடுகள். ஆழ்படிமங்கள் எனலாம். அவை நம் முன்னோரால் பல்லாயிரமாண்டுகாலமாக வழிபடப்பட்டவை. ஆழமான சில விழுமியங்களின், சில உணர்வுநிலைகளின், சில தரிசனங்களின் குறியீடுகள் அவை. ஆகவே அந்த உணர்வெழுச்சி உருவாகிறது.
உலகமெங்கும் எல்லா பண்பாட்டிலும் அந்த குறியீட்டுத்தன்மை இடங்களுக்கும் மலைகளுக்கும் உண்டு. அவற்றை இழந்தால் அப்பண்பாடு தன்னை அழித்துக்கொள்கிறதென்று பொருள்
ஜெ
வெண்முரசு ஒரு நுழைவாயில்
அருண்மொழி வெண்முரசு குறித்து பேசியிருக்கும் இரண்டு காணொளிகள் வெளியாகியிருக்கின்றன. இரண்டாவது காணொளி இன்று வெளியாகியிருக்கிறது. இதிலுள்ள எந்தக் கருத்தையும் என்னிடம் இதுவரை சொன்னதில்லை. திருமணமான ஆரம்பகாலங்களில் அதிதீவிரமான இலக்கியவிவாதங்கள் செய்திருக்கிறோம். அதன்பின் சின்னவிஷயங்கள், கேலி கிண்டல் மட்டும்தான். அவள் வாசித்தவற்றை கேட்டு தெரிந்துகொள்வேன். அவள் சான்றிதழ் அளித்த நூல்களை மட்டுமே வாசிப்பது என்று நெடுங்காலம் இருந்தேன். இப்போது மேலும் சிலர் அவ்வரிசையில் இருக்கிறார்கள். அருண்மொழி பொதுவாக மிகமென்மையாக தன் கருத்துக்களைச் சொல்வதுபோலிருக்கும். கடுமையாகச் சொல்லியிருக்கிறாள் என கொஞ்ச காலம் கழித்து தெரியும்.நல்ல வேளையாக இதில் நல்லவிதமாகச் சொல்லியிருக்கிறாள்…
அறிவின்பாதை, கனவின் பாதை- கடிதம்
அன்புள்ள ஜெ
கனவெழுக என்ற கட்டுரையை வாசித்தேன். அதில் வீரபத்ரன் என்னும் எழுத்தாளருக்கு அவருடைய கலை என்பது அறிவார்ந்ததாக தத்துவம் சார்ந்ததாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை எப்படி முடிவுசெய்கிறீர்கள்? அதைவிட பொதுவாக இங்கே இலக்கியம் பற்றிப் பேசுபவர்கள் எல்லாமே கலையை இன்னொசெண்ட் ஆக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். தத்துவச்சுமை இல்லாமலிருக்கும் எழுத்து என்றெல்லாம் சில எழுத்துக்களைக் கொண்டாடுகிறீர்கள். ஆகவே கேட்டேன்.
சம்பத்குமார்
***
அன்புள்ள சம்பத்குமார்,
எழுத்தாளன் எழுத்தினூடாகச் சென்றடையவேண்டியது பிரபஞ்சத்தின், இயற்கையின், மானுட வாழ்க்கையின் உண்மையை. அதை எவ்வகையில் சென்றடைந்தாலும் அது இலக்கியமே. ஆகவே அறிவார்ந்த பேரிலக்கியங்கள் உள்ளன. எளிமையான பேரிலக்கியங்களும் உள்ளன.
ஆனால் காப்பியங்கள் அறிவார்ந்தவையாக மட்டுமே இருக்க முடியும். தத்துவ தேடல் இல்லாத காப்பியம் இல்லை. காப்பியத்தின் தடம்தேடும் நாவலும் அவ்வாறே. ஆழ்ந்த தத்துவ உசாவல் இல்லாத பெருநாவல் இல்லை.
ஒருவருக்கு வாழ்க்கையனுபவங்களும் அதன் கொந்தளிப்பும் கண்டடைதலும் இருந்தால் அவர் வாழ்க்கையைக் கொண்டே இலக்கியம் படைக்கக் கூடும். ஒருவர் தன் கள்ளமின்மையால் இயற்கையுடன் இயைந்திருப்பவராக இருந்தால் அதுவே இலக்கியமாக ஆகக்கூடும்.
அவ்வியல்புகளற்ற ஒருவர் நூல்களினூடாக, அறிவுத்தொகையினூடாக அதேபோல மெய்மையை நோக்கிச் செல்லமுடியும். அதை இலக்கியமாக ஆக்கமுடியும். நான் குறிப்பிட்ட வீரபத்ரன் வெளியுலக அனுபவங்களுக்கு அவருக்கு இருக்கும் தடையைப் பற்றிச் சொன்னார். ஆகவே அவருடையது அறிவுத்தொகையினூடாகச் செல்லும் பயணமாகவும் இருக்கலாம் என்றேன்.
இலக்கியத்திற்குத் தேவை அனுபவம். அந்த அனுபவம் நேரடி வாழ்வனுபவமாக இருக்கலாம். புனைவுகளினூடாகப் பெறும் வாழ்வனுபவமாகவும் இருக்கமால். வாழ்வனுபவமா வெறும் தெரிந்துகொள்ளலா என்பதுதான் முக்கியம். உணர்வுபூர்வ அறிதலா வெறும் தர்க்கபூர்வ அறிதலா என்பதே கேள்வி.
மார்க்யூஸிடம் இருப்பது ஒருவகை உலகம். போர்ஹெஸிடம் இருப்பது இன்னொன்று. மார்க்யூஸிடம் கள்ளமற்ற சிறுவனின் வழி உள்ளது. போர்ஹெஸ் வாழ்ந்ததே நூலகத்தில்தான்
ஜெ
சோர்பாவும் நித்யாவும்- கடிதம்
சோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை அன்புள்ள ஜெயமோகன்
சோர்பா என்னும் கிரேக்கன் படித்து முடித்துவிட்டு, உங்கள் தளத்தில் அந்த புத்தகத்தை பற்றி வந்துள்ள கட்டுரைகளை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு இடத்தில, நித்யாவிற்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் சோர்பா எனவும், அவரின் மாணவன் ஒருவருக்கு சோர்பா என்று பெயர் வைத்ததாகவும் சொல்லி இருந்தீர்கள்.சிறிது விந்தையாக இருந்தது. சோர்பா ஒரு ஹெடோனிஸ்ட். நித்யாவிற்கு சோர்பா மேல் ஏன் ஓர் ஈர்ப்பு இருந்தது என்று யோசித்தபோது ஒருவாறாக புரிந்து கொள்ள முடிந்தது.. நித்யா என்றுமே வறட்டு வேதாந்தத்தை நிராகரித்தவர்.. நீங்கள் சோர்பா என்னும் கிரேக்கன் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்று சொல்லியிருந்தீர்கள். இருந்தாலும் கேட்க வேண்டும் என்று தோன்றியது.
என்றும் அன்புடன்
தத்தா பிரசாத்
அன்புள்ள தத்தா,
நித்யா ஹிப்பி இயக்கத்துடன் நெருக்கம் கொண்டிருந்தவர். நடராஜகுருவுக்கும் ஹிப்பி இயக்கத்திடன் அணுக்கம் உண்டு. அவர்கள் ஹிப்பிகளை வகுக்கப்பட்ட நெறிகளில் இருந்து மேலே செல்பவர்கள், படைப்பூக்கம் கொண்டவர்கள் என்று நம்பினார்கள். அவர்களின் தன்வரலாறுகளில் ஹிப்பிகளைப் பற்றிய அவர்களின் எண்ணங்கள் உள்ளன.
ஹிப்பிகளின் நூல் என்ற அளவிலேயே ஒரு காலத்தில் சோர்பா தி கிரீக் வாசிக்கப்பட்டது. ஹெடோனிஸம் என்பது ஒரு தத்துவச் சொல். அதைக்கொண்டு சோர்பாவை அறுதியாக வகுத்துவிட முடியாது. சோர்பா ஒரு கட்டற்ற வாழ்க்கைப் பயணி, அவ்வளவுதான். அந்தச் சுதந்திரம் ஆன்மிகமானது. அவன் எய்தியதென்ன என்பது இரண்டாம் கேள்வி. அவ்வழி ஏற்கத்தக்கதா என்பது மூன்றாம் கேள்வி. முதல் கேள்வி அவன் சுதந்திரமானவனா என்பது. சுதந்திரமே ஆன்மிகப்பயணத்தின் முதல் நிபந்தனை.
அவ்வகையில் சோர்பா நித்யாவுக்கு பிடித்தமான கதாபாத்திரம்
ஜெ
அருண்மொழிநங்கை இணையதளம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

