Jeyamohan's Blog, page 959
June 30, 2021
இலக்கிய மேற்கோள்கள்
அன்புநிறை ஜெ,
“எழுதுவதற்கான முதன்மை நோக்கம் ஒன்றே, நம்மை வெளிப்படுத்துவது. இங்குள்ள ஒவ்வொரு உயிருக்கும் வெளிப்பாடு கொள்வதே உண்மையான இன்பமாக உள்ளது. ஏனென்றால் இருக்கிறேன் என்பதையே நாம் வெளிப்பாடு என்கிறோம். நாம் எப்படி வெளிப்படுகிறோமோ அதுவே நம் இருப்பு.” – ஜெ
ஒரு வாக்கியத்தை அல்லது சில வாக்கியங்களை மேற்கோளென குறிப்பிடுகிறோம். நீங்கள் எழுதியவற்றுலிருந்து(நாவல்கள், கதைகள், கட்டுரைகள்) மட்டுமே 400க்கும் மேற்பட்ட மேற்கோள்களை தனியாக சேமித்திருக்கிறேன். அவை அனைத்திலும் உள்ள ஒரு பொது தன்மை ‘கவித்துவம்’. ஒரு கூற்றாக காலவெளியில் அவை நீண்ட காலம் நிற்கக்கூடும். நான் மேற்கோள்கள் வழியாக டால்ஸ்டாய், ஹியூகோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, டாஸ்டாவ்ஸ்க்கி ஆகியோர்களின் படைப்புகளில் நுழைந்தவன்.
நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ படைப்புகளில்(நாவல், கவிதை, கதை) மேற்கோள்களென குறிப்பிடும் படியான வாக்கியங்கள் அரிதாகவே காணப்படுகிறது. இங்கே தனிமனிதனாக ஒருவனின் எண்ணங்கள் வெளிப்படுவதால் பொதுவான ஒன்றை கவித்துவதுடன் கூற முடியவில்லையா? கதைசொல்லி பேர்மனம் கொள்ளுதல் அரிதாகிவிட்டது என நான் கருதுவது பிழையானதா? மனதை மின்தொடுகையென வருடும் மேற்கொள்கள் தற்கால தமிழ் படைப்புகளில் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. கற்பனைக்கே இடமளிக்காத தட்டையான சொற்களை இங்கு மேற்கோள்களாக கூறுகிறார்கள், இணையவெளி எங்கும் அத்தகைய வரிகளே நிறைந்துள்ளது.
நீங்கள் மேற்கோள்களுக்காக ஏதேனும் வரையை அல்லது சட்டகம் வைத்துள்ளீர்களா? இயற்கையை கூர்ந்து அவதானிக்கும் ஒருவராக இருப்பதினால்தான் இத்துணை ஆயிரம் கவிவரிகளை, தத்துவ சொற்றொடர்களை எழுத முடிந்ததா?
(16-05-2021, இன்று கதாநாயகி நாவலிலிருந்து:
மனிதர்கள் இங்கே வாழ்ந்து மறைகிறார்கள். முற்றாக மறைந்துபோக எவருக்குமே விருப்பம் இல்லை. அது இயல்பானதே. அது இயற்கையின் மிகப்பெரிய முரண்பாடு. ஒவ்வொரு உயிரிலும் இயற்கை தங்கிவாழும் விழைவை நிறைத்து வைத்திருக்கிறது. அதுதான் அந்த உயிரை போராடி வாழச்செய்கிறது. சாவை அஞ்சவைக்கிறது. ஆனால் அதுவே அந்த உயிரை இறுதிமுடிவென்னும் இயற்கையின் நெறியை ஏற்கமுடியாமலாக்குகிறது.
எவ்வண்ணமேனும் எஞ்சிவிட விழைகிறார்கள் மனிதர்கள். எதையாவது செய்து, எதையாவது மிச்சம் வைத்து, எவர் நினைவிலாவது நீடித்து. பிள்ளைகள் அதற்கான இயற்கையான வழிகள். வாழ்ந்து முதிர்ந்த கிழடுகள் கூட பேரப்பிள்ளைகளை வருடி வருடி மகிழ்கின்றன. எஞ்சாமல் போய்விடுவோம் என எண்ணி திடுக்கிடாத மனிதர்கள் எவருமில்லை.
(பிகு: ‘பேர்மனம்’, மு.தளையசிங்கத்தின் படைப்புக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.)
நன்றி
-ஆனந்த் குரு
அன்புள்ள் ஆனந்த் குரு,
மேற்கோள்கள் என்பவை ஒரு புனைவின் பரப்புக்குள் இருந்து வெளியே எடுத்தாலும் தனித்து நின்று பொருள்படும் வரிகள். இயற்கை, மனித வாழ்க்கை, மானுட உள்ளம் குறித்த அவதானிப்புகளுக்கு மேற்கோளாகும் தன்மை உள்ளது.தரிசனங்கள் வரிகளில் வெளிப்படும்போது மேற்கோளாகின்றன.
பொதுவாகச் செவ்வியல் படைப்புகளிலேயே அவ்வாறு நேரடியாக ஒரு பார்வை ஆசிரியர் கூற்றாகவோ, கதைமாந்தர் கூற்றாகவோ வெளிப்படுகிறது. செவ்வியலின் அழகியலே அதுதான். அதை கற்பிக்கும்தன்மை [didactic] தன்மை என விமர்சனத்தில் குறிப்பிடுகிறார்கள்.
செவ்வியல்தன்மை கொண்ட தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி,செகாவ், ரோமென் ரோலந்து, விக்டர் ஹ்யூகோ, தாமஸ் மன், ஹெர்மன் மெல்வில், நிகாஸ் கஸண்ட்ஸகிஸ், ஹெர்மன் ஹெஸ் போன்றவர்களின் ஆக்கங்களில் இருந்தெல்லாம் அத்தகைய மேற்கோள் வரிகள் ஏராளமாக உள்ளன.
இது ஏன் என்றால்
அ. செவ்வியல் படைப்பு அடிப்படையான விவாதத்தை தன் வடிவத்திற்குள் நிகழ்த்துகிறது
ஆ. தன் மொழியுடல் முழுக்கவே அந்த விவாதம் பரவியிருக்கச் செய்கிறது
இ. விவாதத்திற்குரிய மொழியை அது கைக்கொள்கிறது
என்பதனால்தான். இத்தன்மை இல்லாத செவ்வியல்படைப்பு இல்லை. செவ்வியல் படைப்பின் அடிப்படையே இதுதான் என்று சொல்லும் விமர்சகர்களும் உண்டு.
செவ்வியலுக்கு எதிராக எழுந்தது என்பதனாலேயே நவீனத்துவம் நேரடியான விவாதங்களை தவிர்த்தது. உரையாடல்களை எளிமையாகவும், அன்றாடத்தன்மை கொண்டதாகவும் அமைத்தது. ஆசிரியரின் இடையீடே இல்லாமல் புனைவை அமைத்துக் கொண்டது. மேற்கோள் காட்டும்படி புனைவுக்குள் இருந்து வரிகள் எழுந்துவிடலாகாது என்றே கவனம் கொண்டது. அதை புனைவின் வடிவ ஒருமையை மீறும் செயலாக கண்டது.
ஆனால் அதையும் மீறி நவீனத்துவப் படைப்புகளில் இருந்தே ஏராளமான மேற்கோள்கள் உருவாகி நிலைகொண்டன. உதாரணம், ‘நரகம் என்பது பிறர்தான்’ என்பது போன்றவரிகள். சார்த்ரின் நோ எக்ஸிட் [தமிழில் -மீளமுடியுமா?] என்னும் நாடகத்திலுள்ள வசனம் அது. ஃபாக்னர், சாமுவேல் பெக்கெட், காஃப்கா, காம்யூ போன்றவர்களின் புனைவுகளிலிருந்து பல வரிகள் மேற்கோள்களாக மட்டுமே நினைவுகூரப்படுகின்றன.
இது எப்படி நிகழ்கிறது என்றால் என்னதான் தனிவரியாக நிலைநிற்காதபடி எழுதப்பட்டாலும் அந்த மூலப்புனைவை நினைவுகூர்ந்து அர்த்தம் கொள்ளும்படி ஆனால் அவ்வரியை மேற்கோளாக்கிக் கொள்ளமுடியும் என்பதனால்தான்.
பின்நவீனத்துவம் உருவானபோது அது நவீனத்துவத்திற்கு எதிரான எல்லா பண்புகளையும் முன்வைத்தது. நவீனத்துவம் ஐயத்துடன் விலக்கிய உன்னதமாக்கல் [sublime] கற்பித்தல்தன்மை [didactic] ஆகிய இரண்டும் பின்நவீனத்துவத்தால் முன்வைக்கப்பட்டன. ஆகவே பின்நவீனத்துவப் படைப்புகளில் அந்த நேரடி விவாதத்தன்மையும் மேற்கோளாகும் தன்மையும் இருந்தன.
மிலன் குந்தேரா, உம்பர்ட்டோ எக்கோ, இடாலோ கால்வினோ போன்றவர்களின் ஆக்கங்களில் இருந்து பல வரிகள் மேற்கோளாக ஆகியிருக்கின்றன. அப்படைப்புகளின் கட்டமைப்புக்குள் இருந்து அவை மேலெழுந்து அர்த்தமளிக்கின்றன.
ஆனால் பின்நவீனத்துவப் படைப்புகள் எவையும் இன்னும் மிகப்பரவலாக மக்களால் வாசிக்கப்படவில்லை. அவை கல்வித்துறை வாசிப்பையே பெரும்பாலும் பெற்றுள்ளன. ஆகவே அவற்றிலிருந்து மேற்கோள்கள் குறைவாகவே எழுந்து புழக்கத்தில் உள்ளன.
செவ்வியல் படைப்புகளின் மேற்கோள்களுக்கும் பின்நவீனத்துவ மேற்கோள்களுக்கும் என்ன வேறுபாடு? செவ்வியல் படைப்புகளின் மேற்கோள்கள் ஒட்டுமொத்தப்பார்வையை முன்வைப்பவையாக, பொதுவான விழுமியங்களையோ கருத்துக்களையோ கூறுபவையாக இருக்கும். பின்நவீனத்துவ நூல்களின் மேற்கோள்கள் ஒருபக்கப் பார்வையை முன்வைப்பவையாக இருக்கும்,அதன் மறுபக்கம் அந்நூலில் இருக்கும். அல்லது திரிபுபட்ட பார்வையை கூறுவனவாக இருக்கும்.
ஆனால் செவ்வியல் நாவல்களில் இருந்து எடுக்கும் மேற்கோள்களே கூட உண்மையில் ஒருபக்கப் பார்வையை முன்வைப்பவையாக, மறுபக்கம் நாவலில் கூறப்பட்டவையாகத்தான் இருக்கும். கரமஸோவ் சகோதரர்களில் இவான் கூறும் ஒரு வரியை அருகிலேயே அல்யோஷா கூறும் இன்னொரு வரி நிகர்செய்திருக்கும்.
அப்படியென்றால் இலக்கியப் படைப்புக்களில் இருந்து காட்டப்படும் மேற்கோள்களை எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்?
அ.அவற்றை அந்த ஆசிரியரின் கருத்துக்களாக கொள்ளக் கூடாது. அவை அந்த இலக்கிய ஆக்கத்திலுள்ளவை மட்டுமே. அந்த இலக்கியப்படைப்பு உருவாக்கும் சொற்களனுக்குள் மட்டும் நிலைகொள்பவை
ஆ. அவற்றை அறுதி உண்மைகளாகக் கொள்ளக்கூடாது. சிந்தனையைத் தூண்டும் வரிகளாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். அவை அளிக்கும் சீண்டல், தொடக்கம் மட்டுமே முக்கியமானது
இ. அவற்றை அந்தப் படைப்பின் சுவையை, இயல்பை, பேசுபொருளைக் காட்டும் ‘சாம்பிள்’ துளிகளாக எடுத்துக்கொள்ளலாம்.
ஈ. அந்த ஆசிரியரின் நடை, அழகியல் ஆகியவற்றைக் காட்டும் உதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம்
பொதுவாகச் செவ்வியல் நாவல்களில் இருந்தே மேற்கோள்கள் மிகுதியாக உள்ளன. நவீனத்துவ, பின்நவீனத்துவ நாவல்களில் எவை புகழ்பெற்றுள்ளனவோ அவற்றிலிருந்தே மேற்கோள்கள் உருவாகியிருக்கின்றன. ஏனென்றால் மேற்கோள்களை அறிஞர்கள், விமர்சகர்கள் உருவாக்குவதில்லை. வாசகர்கள் உருவாக்குகிறார்கள். அவர்களே அவற்றை பரப்பி நிலைநிறுத்துகிறார்கள்.
மேற்கோள்கள் உருவாகவேண்டுமென்றால் ஒரு படைப்பு அதிகமானவர்களால் வாசிக்கப்படவேண்டும், அந்த வாசகர்கள் கூர்ந்த இலக்கிய வாசகர்களாக இருக்கவேண்டும், அவர்களை அப்படைப்பு பாதிக்கவேண்டும், அதைப்பற்றி அவர்கள் பேசவேண்டும், அதைப்பற்றிப் பேசும்பொருட்டு அதிலுள்ள வரிகளை அவர்கள் மேற்கோள் காட்டவேண்டும், அந்த மேற்கோள்கள் மேலும் பலருக்கு பிடித்தமானதாக ஆகி மேற்கோள்களாகவே பலரால் கூறப்படவேண்டும், அவை ஒரு தலைமுறைக்குமேல் கடந்துசெல்லவேண்டும்.
செவ்வியல் படைப்புகளுக்கே அவ்வாய்ப்பு அதிகம். அதிகம் பேசப்பட்ட படைப்புகளுக்கும் அவ்வாய்ப்புண்டு. கணிசமான நவீனத்துவ, பின்நவீனத்துவ நாவல்கள் குறைந்த வட்டத்திற்குள் வாசிக்கப்படுபவை. அவற்றை கல்வித்துறையிலும் இலக்கிய ஆர்வலர்வட்டத்திலும் மட்டுமே வாசிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்பால் அவை வாசிக்கப்படுவதே இல்லை.ஆகவே அவற்றிலிருந்து மேற்கோள்கள் உருவாவதில்லை.
மேற்கோள்கள் எப்போதுமே கருத்து ஆக இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு படைப்பு கூர்ந்து வாசிக்கப்படுகையில் எல்லா வரிகளுமே மேற்கோளாகும் வாய்ப்பு கொண்டவையாக உள்ளன. “பேசுபவர் பேச்சில் ஆழ்ந்த உறுதியுடன் அதை முழுக்க முழுக்க நம்பிப் பேசினால் நம்மால் அச்சொற்களில் இருந்து கவனத்தை விலக்க முடிவதில்லை” என்ற வரி இரவு நாவலில் இருந்து மேற்கோளாக சமூக ஊடகங்களில் சுற்றிவந்தது. இது ஓர் அவதானிப்பு மட்டுமே. ஆனாலும் அதிலுள்ள கூர்மை, அது வாசகனில் அளிக்கும் வியப்பும் ஏற்பும் காரணமாக அது மேற்கோளாகிறது. அது அப்படைப்பின் மீதான வாசிப்புக்கு மட்டுமே சான்று.
ஜெ
மாடத்தி – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
மாடத்தி பார்த்தேன். அது ஒரு மிகச்சிறிய படம். பொருளியலில். ஆகவே அதன் எல்லைகளும் மிகமிக குறுகியவைதான். வெளிநாடுகளில் பெரும்பொருட் செலவில் எடுக்கப்படும் படங்களுக்கும் இந்தப்படங்களுக்குமான வேறுபாடு இங்கே பலருக்கும் தெரியவில்லை. எளிமையும், வெளிப்பாட்டின் நேர்மையும், வடிவ நேர்த்தியும்தான் இந்தவகையான சினிமாக்களின் அழகுகள். அந்தவகையில் மாடத்திக்கு தமிழ்ச் சினிமா வரலாற்றில் மிகமிக முக்கியமான இடம் உண்டு.
லீனா இந்தப் படம் வழியாக தமிழின் முதன்மையான கலைப்பட இயக்குநர் என்ற இடத்தை அடைந்துவிட்டார். இனிமேல் உன்னைப்போல் ஒருவன் [ஜெயகாந்தன்] தாகம் [பாபு நந்தங்கோடு] சிலநேரங்களில் சில மனிதர்கள் [ஏ.பீம்சிங்] உச்சிவெயில் [கே.சேதுமாதவன்] டுலெட் [செழியன்] ஆகியோர் வரிசையில் லீனாவையே முதலிடத்தில் வைக்கவேண்டும் என நினைக்கிறேன்.
மாடத்தி ஒரு நிறைவான அனுபவம். அதன் சிறப்பு என நான் சொல்வது முழுக்கமுழுக்க அது காட்சிவடிவாக அமைந்திருப்பதும், கச்சிதமான வடிவ ஒழுங்குடன் இருப்பதும்தான். அதன் அமைப்பில் ஒரு எளிமையான நேர்த்தி இருக்கிறது. படத்தை பலரும் பார்க்கும் தருணம், ஆகவே விரிவான பகுப்பாய்வுகள் தேவையில்லை. ஆனால் இதை வாழ்க்கையின் ஒரு துண்டு என்று பார்க்கவேண்டும் என்பதை மட்டும் சொல்லவிரும்புகிறேன்.
சினிமா என்ற வணிக இலக்கணப்படி பரபரப்பான அகன்ற காட்சிகள் திருப்பங்கள் ஆகியவற்றையும் எதிர்பார்க்கக் கூடாது. உலகக் கலைப்படங்களின் இலக்கணங்களைக் கொண்டு பெரிய தத்துவஞானச் சிக்கல்களையும் படிமச்செறிவையும் எதிர்பார்க்கக் கூடாது. இது நம் வாழ்க்கையின் அடித்தளத்தில், எருவில், இருந்து ஒரு புதிய தளிர் முளைத்து எழுந்து நிற்பதைக் காணும் பரவசத்தை அளிக்கும் படம்.
இங்கே கலைப்படம் என்றால் ‘கருத்துசொல்லும் படம்’ என்று எழுதி நிறுத்திவிட்டார்கள். மையக்கருத்து ‘நாங்கள் நினைக்கும் முற்போக்காக’ இருந்தால் கொண்டாடுவோம் என்று ஒரு தரப்பு சொல்லிக்கொண்டே இருக்கிறது. அவர்களின் குரலுக்கு சூழலில் மதிப்பு இருக்கிறது. ஏனென்றால் அதைச் சொல்பவர்களுக்கு கலையின் அழகியலோ உள்விரிவோ தெரியாது. பருவெட்டான கருத்துக்களே தெரியும். அதை கேட்பவர்களுக்கு அவ்வளவுதான் உள்ளே ஏறும். மேற்குத்தொடர்ச்சிமலை போன்ற கொடிய அனுபவங்களெல்லாம் அப்படித்தான் நமக்கு அமைகின்றன. எல்லாருக்கும் தெரிந்த ஒன்றை மீண்டும் சொல்வது கலையின் வேலை அல்ல, புதிய அகஉலகை கண்டடையாவிட்டால் அது கலையே அல்ல.
இந்தப்படமும் அடிப்படையில் பெண்விடுதலை பேசுவதுதான். ஆனால் அது இந்தப்படத்தின் தனிச்சிறப்பு அல்ல. அதை மட்டும் பேசியிருந்தால் இது சினிமாவும் அல்ல. இது வளரிளம்பெண்மையின் போராட்டத்தை, தன்னைக் கண்டடைதலை நுட்பமாகச் சொல்கிறது. இதன் பெண்ணியக் கருத்துநிலையை மட்டும் சிலாகித்துப் பேசுபவர்கள்தான் இன்று இப்படத்தின் பெரிய தடைகள். இது கலைப்படைப்பு
லீனா இன்றுவரை அடையாத ஒரு கலைநிகழ்வு இது. அக்கலை நிகழ்ந்திருப்பது இந்தப்படம் அவருடைய பிரக்ஞாபூர்வமான கருத்துக்களைக் கடந்து சென்று மாடத்தியாக அவர் ஆன சில தருணங்களை அடைந்திருப்பதனால்தான். சிந்தனை கலை அல்ல, சிந்தனையை கடந்துசெல்வதே கலை. அது நிகழ்ந்திருக்கிறது. லீனா அதை மீண்டும் மீண்டும் அடையவேண்டும்.
எம்.பாஸ்கர்
அன்பின் ஜெ,
நலம்தானே?
லீனாவின் “மாடத்தி” பார்த்தேன். பல மாதங்கள் காத்திருந்து பார்த்தேன் என்பதுதான் உண்மை.
படம் ஆரம்பிக்கும்போது மூன்று க்ளோஸ்-அப் ஷாட்கள்: டூ வீலர் ஓட்டிக்கொண்டிருக்கும் ஆக்ஸிலேட்டர் பிடித்திருக்கும் கையில் தங்க மோதிரம். பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் காதில் தொங்கும் தங்க ஜிமிக்கி கம்மல். இடுப்பைச் சுற்றி பிடித்திருக்கும் கையில் தங்க வளையல்கள். புதிதாய் திருமணமான கிராமத்து இளம் ஜோடி, டி.வி.எஸ் 50-ல். அங்கு தொடங்கிய காட்சிகளின் மீதான ஈர்ப்பும், கவனமும் இறுதிக்காட்சி வரை நீடித்தன.
தார் சாலையிலிருந்து பிரிந்து “மாடத்தி கோயில்” என்றெழுதப்பட்ட மைல் கல் அருகே டி.வி.எஸ் 50-ல் காட்டிற்கிடையிலான மண்சாலையில் புதுமணத் தம்பதிகள் திரும்பும் காட்சி, இன்னும் புலராத அந்த வைகறை இருட்டில், வேணி, ரயில்வே ட்ராக் ஓரத்தில், கடந்து செல்லும் ரயிலின் வெளிச்சத்தில் உவர்மண் எடுக்கும் காட்சி, தூரத்தில் அம்மாவும் அப்பாவும் முயங்கும் ஒலிகள் கேட்டு படுத்திருக்கும் யோசனா உறக்கத்தில் தண்ணீருக்குள் நீந்துவதாக கனவு காணும் காட்சி, மழைக்கு ஒதுங்கிய வண்ணார்கள் உட்கார்ந்திருக்கும், மழையில் நனையும் அந்த பழைய மண்டபக் காட்சி, வேணியும் அவள் கணவனும் துணி துவைக்கும் அந்த தொரப்பாடு, ஊரில் சாவு விழ, அதை அடக்கம் செய்ய குழி தோண்டி காரியங்கள் செய்ததற்காக ஊர்க்காரர்கள் தரும் கள்ளைக் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சுடலையிடம் மாமியார் பற்றி வேணி புகார் செய்ய, ‘அதைப் போயி நாலு மிதி மிதிச்சிட்டு வாரேன்’ என்று அம்மா வீட்டிற்குப் போகும் சுடலை அங்கு சென்று அம்மாவிடம் கறிச்சோறு சாப்பிடும் காட்சி, யோசனா மேலிருந்து பார்க்கும்போது தூரத்தில் கீழே நடந்து செல்லும் மனிதன் டிரான்ஸிஸ்டரில் கேட்கும் ‘அடி என்னடி ராக்கம்மா’ பாடல், சாமி செய்ய கல் தேர்ந்தெடுத்து பழங்கள் வைத்து பூஜை முடித்தபின் கல் தூக்கி அவர்கள் சென்றுவிட, அங்கு வரும் யோசனா அந்த பழங்களை குரங்கு நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடும் காட்சி, கிராமத்து இளைஞர்கள் கபடி விளையாடும் காட்சி, கோவில் திருவிழாக் காட்சிகள் (முளைப்பாரியும், கும்மியும்), அந்த உரையாடல் “விளையாடாதடா, இது சாமி. தொட்டுக் கும்பிடணும்”, ஊர் மக்களின் கண்களில்லாத, குறிப்புணர்த்தும் அந்த ஓவியம்…
படத்தின் எந்தக் காட்சியும் மனதில் பதியாமல் நகரவில்லை. இறுதிக் காட்சியில் இருளில், லட்சுமணனையும் வரிசையில் கண்டு, மற்றவர்களுக்கும் அவனுக்கும் துளியும் வித்தியாசமில்லை என்பதை அறிந்து அந்த சக்தி கொள்ளும் அதிர்ச்சி, அதிகரிக்கும் அழுகை…மனதறுப்பது.
***
கோவையின் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்த, பல வீதி நாடகங்களில் நடித்த அனுபவமுள்ள செம்மலர் அன்னம் சிறப்பாக நடித்திருக்கிறார்.பல இடங்களில் ரஃபிக் இஸ்மாயிலின் உரையாடல்களை மிகவும் ரஸித்தேன்.சில வருடங்களுக்கு முன் படித்த இமையத்தின் “கோவேறு கழுதைகள்” நினைவுகளில். ஆரோக்கியமும், மேரியும் மனதில் மேலெழுந்தார்கள்.
லீனாவிற்கும் குழுவிற்கும் வாழ்த்துக்களும் நன்றியும் அன்பும்.
வெங்கடேஷ் சீனிவாசகம்
இனிய ஜெயம்,
மாடத்தி படத்துக்கான வரவேற்பையும் எதிர்வினைகளையும் கண்டேன். பரவாயில்லை டூ லெட் வெளியானபோதான நிலைக்கு இந்த நிலை தேவலாம் :).
எதிர்வினைகள் முற்றிலும் எதிர் எதிர் நிலைகளிலாக, படத்தின் ஜாதிய பெண்ணிய சொல்லாடல்களை முன்வைத்து பூச்சொரிதல் என்றும், இது கலையே அல்ல சுயாதீன மாற்று சினிமா எனும் பெயரில் நிகழும் ‘எதையும்’ குறித்து ஏன் பேச வேண்டும், என்றும் நிகழ துவங்கி இருக்கின்றன
2000 இல் தமிழ்நாடு கண்ட dvd புரட்சியில் நிகழ்ந்த சாபக்கேடுகளில் ஒன்று உலக கலை சினிமா மற்றும் விமர்சகர்களின் பெருக்கம். நிகழ்ந்த ஒட்டுமொத்த தமிழ்த் திரைக்கலாச்சார ஓட்டத்தையும், அதன் கலாச்சார உரையாடல் என்ன என்றே அறியாமல் மொத்தமாக இழிவு படுத்துவது அங்கிருந்து துவங்கியது. மணிரத்னம் கிட்ட என்ன பிரச்னைன்னா என்றோ, கமல் ஓவர் ரேட்டட் என்றோதான் தமிழ் சினிமா குறித்த மதிப்பீட்டு கட்டுரை துவங்கும். இந்தக் கோமாளிகள் பேச்சை அவ்வாறே ஏற்று மொழிய துவங்கியது அடுத்து வந்த ஹைடெக் இளம் மனங்கள்.
நமதே ஆன கலாச்சார மேன்மைகள், சிக்கல்கள், நாம் சென்றடைந்த இன்மைகள், அனைத்தையும் ஏற்றும் மீறியும் உருவானதே நமது தமிழ் படங்கள். ( ஸ்டாலின் ராஜங்கம் எழுதிய, நீலம் பதிப்பக வெளியீடான எண்பதுகளின் தமிழ் சினிமா இந்த இழையை அணுகி அறிந்து கொள்ள முக்கியமான நூல்). இப்படி உருவான நமதே ஆன படங்களில் இந்த நூறு வருடத்தில் குறைந்தது நமது படம் என்று உலகம் முன்பு வைக்க, இருவர் ஹேராம், வெயில் உள்ளிட்ட 25 நல்ல படங்களேனும் நிச்சயம் நம் வசம் உண்டு. நிச்சயம் அவை நமது பெருமிதங்கள்.
நாம் போக வேண்டிய தூரம் அதிகம்தான் ஆனால் இந்தியாவுக்கு வெளியே பார்த்து நம்மை ஒப்பு நோக்கி நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வது பேதைமை. உலக அரங்கில் உயிர் தொழில் நுட்பம், குவாண்டம் இயற்பியல் என எதில்தான் நாம் ‘அவர்களை’ மிஞ்சி இருக்கிறோம்? முதலில் இங்கே ராமானுஜன் போதிய அளவு நம்மால் கொண்டாடப் பட்டிருந்தால் அந்த ஒளியில் அந்த பாதையில் இங்கே எவரேனும் நம்பி முன்வருவர். அதில் நூறில் ஒருவர்கு குவாண்டம் இயற்பியலில் சாதனை நிகழ்த்தும் திறப்பு ஒன்றை அளிக்க சாத்தியம் வாய்க்கும். நமது கலாச்சார யதார்த்தம் இவ்வாறு இருக்க ஏன் நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றான தமிழ் சினிமா மேல் இத்தனை காழ்ப்புணர்ச்சி பொழிய வேண்டும்?
இதன் ஒரு பகுதியே தமிழில் மாற்று சினிமா எனும் களமும். ஜெயகாந்தன் முயற்சிகளை தவிர்த்துப் பார்த்தால் அப்படி நிகழ்ந்த ஒரு கை விரல்களுக்குள் அடங்கும் எண்ணிக்கை கொண்ட முயற்சிகள் தாண்டி, மாற்று சினிமா மரபு எனும் நிலையே தமிழில் இல்லை. அது இனி தான் துவங்கபட வேண்டும். நூற்றாண்டு தொட்டுவிட்ட சூழலில்த்தான் தமிழில் உலக சிறந்த கலை படங்கள் இயக்குனர்கள் எனும் பட்டியல் வெளியாகும் நிலையே வந்திருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் மிக மிக நீண்டது. இந்தப் பின்புலத்தில்தான் செழியன் லீனா போன்றவர்களின் சுயாதீன முயர்ச்சி முக்கியத்துவம் கொள்கிறது.
இதில் நாம் மிக மிகத் துவக்க நிலையில் இருக்கிறோம். சுயாதீன மாற்று சினிமா என்றாலுமே கூட, அதற்கான திரையிடல் களம் கோரும் சூத்திரங்கள் பல உள்ளது. தமிழ் கேளிக்கை சினிமா வுக்கு என்னென்ன சூத்திரம் சார்ந்த கோரிக்கை உண்டோ அதற்கு சற்றும் குறையாது அது. தாத்தா பேரன் உறவு, தேசத்தால் மதத்தால் ஒடுங்கும் பெண்ணியம், அகதி வாழ்வு, மனித உரிமை மீறல், அரசியல் நெருக்கடி, சாதி, உடல் அரசியல், பாலியல் பேதம், உள்நாட்டு போர், பின்நவீனப் பாய்ச்சல், சமகால உளவியல் முக்கல், என ஒரு பத்துப் பதினைந்து சூத்திரங்களுக்குள் சிக்கி தள்ளாடிக் கொண்டிருப்பதே இன்றைய உலக அளவிலான மாற்று சினிமா, அந்த லேபில் அதுதான் உலக மாற்று சினிமாச் சரடின் வணிகக் கூறுகளை நிர்ணயிக்கும் முதல் காரணி.
தமிழில் இப்போதுதான் முளை விடும் சூழலில், பொதுஜன சினிமாவுக்கு எதிர் நிலையான மாற்று சினிமா, உலக மாற்று சினிமா ஒழுக்கில் நுழைய அது கோரும் சூத்திரங்களை அடி ஒற்றி தகவமைவது தவிர்க்க இயலாதது. இத்தகைய சூழல் பின்புலத்தில் தமிழில் நிகழும் எந்த சுயாதீன மாற்றுச் சினிமா முயற்சியும் முதலில் மாற்றுக் கருத்தே இன்றி நிச்சயம் அடையாளம் கண்டு வரவேற்கப்பட வேண்டும்.
இதன் அடுத்த படியே விமர்சன நோக்கு. முற்றிலும் கலாப்பூர்வமற்ற படமே எனினும் கூட, அப்படம் விரிவான விமர்சன உரையாடலுக்குப் பிறகே நிராகரிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு நிலையும் ‘அய்யா உலக கலை சினிமா விமர்சன மேதைகளே கொஞ்சம் பாத்து செய்யுங்கய்யா’ என்பதன் பகுதி அல்ல. சொந்த அரிப்புக்கான சொறிதல் கருவியாக அன்றி மெய்யாகவே கலைச்சினிமாவை தனது பாதையில் ஒன்றெனக் கண்டவர் இயல்பாக ஆற்றவேண்டிய பணி இது.
மாடத்தி மீது இந்த இரண்டு எல்லைகளில் இருந்தும் வெளியேறிநிற்கும் ஆக்கப்பூர்வ விமர்சனங்கள் இனிமேல் வரும் என்று நினைக்கிறேன். லீனா அவருக்கு வசதியான பெண்ணிய புளகாங்கித உரையாடல்களில் இருந்து வெளியேறி இப்படத்தின் கலாப்பூர்வ பெறுமதியை கத்தி வீச்சு போல முன்வைக்கும் விமர்சனங்களை நோக்கி நகர்வது, அவரது பாதையை செப்பணிட்டுக்கொள்ள உதவும். அவரது உண்மையும் தீவிரமுமே அவரை இங்கு வரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அவரது படங்களை தொடர்ந்தவன் என்ற வகையில் இப்போதான் லீனா துவங்கவே செய்திருக்கிறார் என்று சொல்வேன். மாடத்தியில் துவங்கி கலை நோக்கி மென் மேலும் உயர லீனாவுக்கு வாழ்த்துக்கள்.
கடலூர் சீனு
வெண்முரசும் அருண்மொழியும்- கடிதம்
அன்புநிறை ஜெ,
வெண்முரசு ஒரு நுழைவாயில் – அருணா அக்காவின் காணொளிப் பேட்டி இரு பகுதியையும் பார்த்து ரசித்தேன். மிக அழகான பேச்சு.
வெண்முரசு வாசித்திராத நண்பர்களுடன் அதுகுறித்து ஏதாவது பேசும்போது, அவர்கள் “மகாபாரதக் கதைதானே, அதற்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாய்?” என்பது போலவோ அல்லது மிக எளிதாக “அப்படி என்ன இருக்கு வெண்முரசில்?” என்பது போலவோ ஒற்றைவரியில் கேட்கும்போது, ஒருபுறம் அதை எடுத்துச் சொல்லும் ஆவேசமும் மறுபுறம் இவர்களுக்கு எப்படி இதை உணர்த்துவது என்ற மலைப்பும் வழக்கமாக வரும். வெண்முரசை அறிமுகம் செய்யும் காணொளி என்றதுமே எப்படி என்ற ஆர்வம் எழுந்தது. இவ்வளவு அழகாக அமைந்தது மகிழ்வாக இருக்கிறது.
நிகழ்காலத்தில் கண்முன் மலர்ந்த பேரிலக்கியத்தை, என்றைக்கும் உலக இலக்கியங்களின் நிரையில் தமிழின் தாழாக் கொடியாக நிற்கப்போகும் மாபெரும் செவ்விலக்கியப் படைப்பை, வெண்முரசை, அதன் 26 நாவல்களை இந்தப் பேட்டியில் அறிமுகப்படுத்தும் விதமாக, மின்னும் விழிகளோடு, கையசைப்பும் பாவனைகளுமாய், ஒவ்வொன்றாய் தொட்டுத் தொட்டுத் தொட்டுப் பேசிக் கொண்டே சென்று ஒரு எழுச்சியின் புள்ளியில் சிறிய புன்னகையோடு இதற்கு மேலே எப்படி சொல்வேன், வாசித்தே பாருங்கள் என்பதுபோல விழியொளியோடு அருணாக்கா பேசும்போது இதை இப்படித்தானே சொல்ல முடியுமெனத் தோன்றியது.
நவீன காலத்திற்கு மகாபாரதத்தை மறுஉருவாக்கம் செய்து எழுதுவதில் உள்ள சவால்கள் எனத் தொடங்கி தடைகளேதுமின்றி சரளமாக வெண்முரசின் களத்தை, வரலாற்றுப் பின்புலத்தை, வணிக, சமூகவியல் ஊடுபாடுவுகளை, இதில் பேசப்படும் தத்துவ சிந்தனைகளை, ஒரு மாபெரும் செவ்விலக்கியப் படைப்பின் உருவெளிக்கோட்டுச் சித்திரத்தை தீர்க்கமாக அறிமுகம் செய்து செல்கிறது முதற்பகுதி பேச்சு.
இரண்டாம் பகுதியில் மேலும் மேலும் மெருகேறிவிடுகிறது நடை. முதலில் கிரேக்க புராணங்களோடு வெண்முரசின் பாத்திரங்களை, தருணங்களை நிகர் வைத்தும், வேற்றுமைகளைத் தொட்டும் தொடங்கும் பேச்சு பிறகு மனதுக்கு அணுக்கமான மற்றொரு பேரிலக்கியமான தல்ஸ்தாயின் போரும் அமைதியும் நாவலோடு அருகருகே வைத்துப் பேசும்போது வேறொரு தளத்துக்கு செல்கிறது.
அருணாக்கா தீவிரமான வாசகி என்பதும் ஆழமான வாசிப்புடையவர் என்பதும் தெரியுமென்றாலும் இந்தப் பேட்டி முழுவதிலும் மிக அழகாக, படிமங்களை, நிகர் இலக்கிய ஓப்பீடுகளை மிகையாகவோ வலுக்கட்டாயமாகவோ திணிக்காமல் எளிய நீரோடை போல அதே சமயம் ஆழமாக சொல்லிச் செல்கிறார்கள். உதாரணமாக போரும் அமைதியும் நாவலின் ப்ரின்ஸ் ஆண்டரூ மரணத்தருணத்தில் காணும் ஒரு கனவை “ஒரு கனவில் இறந்தேன், மற்றொரு கனவில் விழிக்கக்கூடும்” என்ற வரியை அழகாகத் தொட்டெடுத்து கசனின் இரண்டு வாழ்வுகள் குறித்த பகுதியை நிகர் வைத்து ஆச்சரியப்பட வைத்தார்கள்.
தனிப்பட்ட முறையில் வெண்முரசு வாசிப்பு தனக்களித்தது என்ன என்று சொல்லும்போது அதன் மிக சாராம்சமான புள்ளியை சொன்னார்கள். இமயச்சிகரம் போல, பிரபஞ்சவெளி போல ஒரு பேரிருப்பின் முன்னர் நமது சிற்றிடத்தை உணர்தல். அதிலும் ‘எனது தர்க்கம் என்னும் சிறு கரண்டி எவ்வளவு அள்ளிக்கொள்ளுமோ அவ்வளவு உண்மையைத்தானே என்னால் அள்ளிக்கொள்ள முடியும்!” என்ற திகைப்பு, அதையேதானே நானும் அடைந்திருக்கிறேன் என எண்ணிக்கொண்டேன். வெண்முரசுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய சில அறிதல்களை, அது அவரவர் வாழ்வில் நிகழ்த்திக்கொண்டே இருக்கும் அகத்திறப்புகளை உண்மையான மாற்றங்களை எழுத்தில் புறவயமாக்குதல் இயலாதெனத் தோன்றுகிறது.
உரையைப் பார்த்து முடித்ததும் மீண்டும் மீண்டும் ‘அழகான’ என்ற வார்த்தைதான் மனதில் தோன்றியது. அழகிய பெரிய கண்களில் ஒளியுடன், மிக இயல்பான “நான் என்ன சொல்றேன்னு புரியுதா” என்ற உறுதிபடுத்திக்கொள்ளுதலுடன், மாறாத சிரிப்புடன், தலையை சாய்த்து நினைவுபடுத்திக் கொள்ளுதலும் கையசைவுகளுமாக அவ்வளவு அழகான பேட்டி இது. அது வைரத்தில் ஒளியைப் பாய்ச்சி நீரோட்டம் காண்பது போல பேரிலக்கியங்களின் வாசிப்பின் ஒளியில் வெண்முரசை ஆழமான வாசிப்பு செய்ததன் பயனாய் எழுந்துவரும் அழகும்கூட.
“பெண்கள் அணிகளாலோ ஆடைகளாலோ தன்னை முன்னிறுத்தக்கூடாது என்றெண்ணினாலும் நகை அணியும்போது, அணி செய்து கொள்ளும்போது ஒரு பெண்ணென உணரும் மகிழ்ச்சியை என்ன சொல்வது? அதை வெண்முரசே எனக்கு உணர்த்தியது” எனக்கேட்டு சிரிப்பது, ஆங்காங்கே உள்ளம் நிறைந்த உவகையோடு “இயற்கை வர்ணனை என்றால் ஜெயனுக்கு அல்வா சாப்பிடுவது போல”, “பிற எழுத்தாளர்கள் பாதுகாப்பாக கடந்து போக முற்படும் களங்களில் குதித்து இறங்கி அடித்து விளையாடுவார்” போன்ற வரிகளில் முகத்தில் விரியும் பெருமிதமான மலர்ச்சி.
நிறைவாக தல்ஸ்தாயோடு நிகர் வைப்பதன் முன்னர் “சரி போனால் போகட்டும் வாய்விட்டு சொல்லிடறேன்” என்பது போல ஒரு பெரிய சிரிப்போடு, போர்ப் பகுதியைச் சொல்லும் வெண்முரசின் 5 நாவல்கள் மட்டும்தானே போரும் அமைதியும் நாவல், இன்னும் நாலு தல்ஸ்தோயை வெண்முரசில் உள்ளே வைக்கலாமே என்று சொல்லி ஒரு பெரிய அழகான சிரிப்புடன் நிறைவு செய்தது என இனிமை இனிமை.
மிக்க அன்புடன்,
சுபா
ஆலயம் கடிதம்
அன்புள்ள திரு ஜெயமோகன்,
ஆலயங்களில் இப்போது ஏற்படும் சீரழிவுகள் பற்றி கான்கிரீட் போர்டிகோவில் ஆரம்பித்து நீங்கள் போட்டிருக்கும் பெரிய பட்டியலை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் பக்தர்களோ அறங்காவலர்களோ அல்ல. இன்றைய தேதியில் பெரும்பாலான தமிழக ஆலயங்களுக்கு அறங்காவலர்கள் கூட இல்லை. இத்தனை மரபு மீறல்களும் ஆலயங்களை நிர்வகித்துக் கொண்டிருக்கும் அறநிலையத் துறையால் தான் செய்யப்படுகிறது.
நிலைமை இப்படி இருக்கும்போது, அவர்கள் செய்யும் சீர்கேடுகளை எல்லாம் பட்டியலிட்டுவிட்டு, அந்தப் பழியை பக்தர்கள் மேல் போடுகிறீர்கள்.
அறங்காவலர்கள் பக்தர்கள் சொல்வதை எல்லாம் யாரும் கேட்டுக் கொண்டு திருப்பணி செய்வதில்லை. ஆதீனங்கள் தங்கள் நிர்வாகத்தில் உள்ள ஆலயங்களில் அவர்கள் பணத்தில் திருப்பணி செய்வதாக இருந்தாலும் கூட 5லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யவேண்டுமென்றால் அறநிலையத்துறை அங்கீகாரம் இல்லாமல் செய்ய முடியாது.
ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் அல்ல, பண்பாட்டு மையங்கள் என்கிறீர்கள். உண்மைதான். அதற்காக துளிகூட கடவுள் பக்தி இல்லாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆலய அறங்காவலர்களாக நியமிக்கப்பட கூடாது என்பதால்தான் பக்தர்கள் பராமரிப்பில் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
தஞ்சை நாகை மாவட்டங்களில் ஆலய நிர்வாகத்தின் பெரும்பகுதி ஆதீனங்களைச் சார்ந்தது. அறநிலையத்துறை அதில் ஓரளவு அதிகாரம் செலுத்துகிறது. அத்தகைய சமய நிறுவனங்கள் ஆலய நிர்வாகங்களில் முதன்மைப் படுத்தப்பட வேண்டும்.
“இன்று இணையம் இருக்கிறது, ஒருநாளைக்கு காலையில் ஐந்நூறு, மாலையில் ஐந்நூறு என்று ஆயிரம் பேரை மட்டும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அனுமதிக்கலாம். அவர்களிடம் ஆயிரமோ இரண்டாயிரம கட்டணம் வாங்கலாம். ஒரு சினிமாவுக்கு ஆயிரம் ரூபாய் செலவழிப்பவர்கள் மெய்யான பக்தர்கள் என்றால் ஆலயத்திற்கும் செலவழிப்பார்கள்.
தமிழகத்தில் பல ஆயிரம் ஆலயங்கள் இருக்கின்றன. சில ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் ஆட்கள் குழுமும்போது சில ஆலயங்களில் ஆண்டுமுழுக்க எவருமே வருவதில்லை. அனைத்து ஆலயங்களுக்கும் இணையாக பக்தர்களை செல்ல வைப்பதற்கு, ஒவ்வொரு ஆலயத்திலும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதே சிறந்த வழி”
இதைவிட விசித்திரமான ஆலோசனையை யாரும் தரவே இயலாது. மெய்யான பக்தர்கள் என்பதை ஆயிரம் ரூபாய் கட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. மாதமொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியாதவர்கள் கூட பக்தர்களாக இருப்பார்கள்.
ஆலயங்கள் எழுப்பிய அரசர்கள் கலைச் செல்வங்களை அங்கே வைத்ததன் காரணமே அவர்கள் கொண்ட பக்தியின் அடிப்படையில் தான். இல்லையென்றால் தனி அருங்காட்சியகம் அமைத்து வைத்திருப்பார்கள்.
எனவே ஆலயங்களில் முதல் உரிமையும் முழு உரிமையும் பக்தர்களுக்கே உண்டு. இன்னார் மட்டும் இந்த தேதியில் வழிபடவேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.
மரபின் மைந்தன் முத்தையா
அன்புள்ள மரபின் மைந்தன்,
உங்கள் கடிதம்.
நான் என் தரப்பில் சொல்ல இரண்டு விஷயங்களே. ஆலயங்களின் ‘திருப்பணிகள்’ முழுக்கமுழுக்க அறநிலையத்துறையால் செய்யப்படுவதில்லை. பெரும்பாலும் பக்தர்களின் கொடையால், பக்தர்களின் அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன. கண்காணிப்பதே அறநிலையத்துறையின் வேலை. திருவட்டார் ஆலயத் திருப்பணி டிவிஎஸ் நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளது.
அறநிலையத்துறைக்கு ஆலயம் பற்றி ஒன்றும் தெரியாது, அது வெறும் அதிகார- நிர்வாக அமைப்பு. பக்தர்களுக்கு ஆலயம் அழிவதைப் பற்றி அக்கறையே இல்லை, ஏனென்றால் அதன் அருமை அவர்களுக்கு தெரியாது. அது அவர்களுக்கு வெறும் வழிபாட்டுக் கட்டிடம்தான். நான் சுட்டிக்காட்டியது அதையே. அதை பல ஆண்டுகளாக சொல்லிவருகிறேன். அக்கட்டுரைக்குக் கீழே உள்ள கட்டுரைகளைச் சொடுக்கிப் பாருங்கள்.
பக்தர்களோ பண்பாட்டு ஆர்வலர்களோ எவரானாலும் ஆலயங்களின் தொன்மை, அடையாளம் ஆகியவற்றின்மேல் மதிப்பு கொண்டவர்களாக இருக்கவேண்டும். அவ்வளவே நான் சொல்வது. பக்தர்கள் என்பதனால் மட்டும் அவர்கள் ஆலயக் காவலர்கள் என நினைப்பது மாபெரும் பிழை என்பது கண்கூடு. நாத்திகர்களானாலும் தமிழ்ப்பண்பாட்டின்மேல் பெருமிதம் கொண்டவராக இருந்தால் ஆலயங்கள் காக்கப்படும்.
நம் ஆலயங்களின் கட்டமைப்பு பல்லாயிரம்பேர் புழங்குவதற்குரியது அல்ல. புழங்கினால் ஆலயங்கள் அழிவதை தடுக்க முடியாது. அதைத்தடுக்கும் வழி ஒன்றைச் சொல்கிறேன். உள்ளே செல்பவர்களை கட்டுப்படுத்தவேண்டும். சரி, பணம் தேவையில்லை என்றால் கட்டணமில்லாமல் நன்கொடை மட்டும் பெறலாம். இலவசமாக அனுமதிக்கலாம். நான் சொல்லவருவது அது அல்ல. எண்ணிக்கை பற்றி மட்டுமே.
பக்தர்களை வேறெவரோ கட்டுப்படுத்தவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பக்தர்கள் தங்களை வரைமுறைப் படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறேன்.
ஆலயங்கள் ஒரே நேரத்தில்பல்லாயிரம் பேர் வந்து வழிபட்டுச் செல்வதற்குரியவை அல்ல என்பதனால்தான் தெய்வம் திருச்சுற்று வருவது, வெளிமண்டபங்களில் கோயில்கொண்டு காட்சியளிப்பது, பலவகை திருவிழாக்கள் போன்ற பல முறைகளை முன்னோர் உருவாக்கினார்கள். அவற்றை மேலும் கூட்டலாம். ஆகம முறை அதற்கு அனுமதிக்கிறது.
இதையெல்லாம் சொல்லவேண்டியவர்கள் உண்மையில் பக்தர்கள்தான். பல்லாயிரம் பேர் வந்துசெல்லும் வசதிக்காக ஆலயங்களுக்குள் கட்டப்பட்ட கம்பித்தடுப்புகள், உபரி கட்டுமானங்கள் எல்லாமே ஆகமவிரோதமானவை. சிற்ப அமைப்புக்கு எதிரானவை. ஓர் ஆலயம் மாற்றியமைக்கப் படுவது ஒரு மந்திரம் சொற்சிதைவு செய்யப்படுவதேதான். அது நலம்தருவதற்குப் பதில் தீங்கும் தரலாகும். இதை பத்தாண்டுகளுக்கு முன் அறிதலாகச் சொல்லிவந்தேன். இன்று அதற்கப்பால் ஓர் இடத்தில் இருந்து உறுதியாகச் சொல்கிறேன்.
சிற்ப சாஸ்திரப்படி ஆலயம் என்பது ஓரு மானுட உடல். க்ஷேத்ரபுருஷன். ஆலயத்தில் சிற்பவரைமுறையை மீறி கட்டிடங்கள் கட்டுவதும் கம்பி வேலி கட்டுவதும் மனித உடலில் கூடுதலாக கைகளையும் கால்களையும் வைத்து தைப்பது போல. ஆலயம் அழிகிறது. ஆகம- சிற்பசாஸ்திர நெறிகள் மீறப்படுவதனால் ஆலயம் என எதை நம்பிச் செல்கிறார்களோ அந்த நுண்ணமைப்பே அழிகிறது. அதை பக்தர்கள் பக்திக்காகச் செய்கிறார்கள் என்றால் அது கேலிக்கூத்து.
ஆலயத்தில் முதலுரிமை பக்தர்களுக்கு என்றால் அதில் மறுப்பில்லை. முழுஉரிமை பக்தர்களுக்கு என்றால் அது மிகையான உரிமைகோரல். ஏற்கத்தக்கது அல்ல. அது அனுமதிக்கப்பட வாய்ப்பும் இல்லை.
ஜெ
வெண்முரசு ஆவணப்படம்- விர்ஜீனியா

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
வெண்முரசு ஆவணப்படம், கடந்த வாரம் சனிக்கிழமை ஜூன் 12ஆம் தேதி 2:30 மணிக்கு, ஃபேர்பாக்ஸ், வெர்ஜினியாவில் உங்கள் வாசகர் விஜய் சத்யா முன்னெடுப்பில் வெளியிடப்பட்டது. இதற்காக இரண்டு, மூன்று வாரங்களாக விஜய் சத்யா,நெருங்கிய நண்பர்கள், தமிழ் சங்கம் உறுப்பினர்கள், தமிழ் பள்ளி நண்பர்கள், உறவினர்கள், மற்றும் பலரையும் கூடி பேசி தன்னலமற்று கடுமையாக உழைத்தார். ராஜன் பரிந்துரையின் படி, ஃபேர்பாக்ஸில் உள்ள மிகப்பெரிய திரையரங்கு ஒன்றை தேர்வு செய்து வெளியிடும் நாளும் முடிவானது. திரையரங்கு அருகில் இருக்கும் வாஷிங்டன் டி.சி மற்றும் மேரிலாந்து மாநிலத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கும் வசதியாக இருந்தது. அகண்ட திரை, ஒளி, ஒலி துல்லிய வசதிகள், சிறந்த இருக்கைகள் என மிக வசதியான தாகவும் பெரியதாகவும் அரங்கு இருந்தது.இதற்கு நண்பர்கள் பலர் கூடி உதவி புரிந்தனர்.
மதியம் 2:00 மணி முதலே நண்பர்கள் திரையரங்குக்கு வர ஆரம்பித்து விட்டனர். ஓராண்டுக்கு பின் மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருப்பதால், படம் பார்க்கும் முன் உற்சாகம், நண்பர்கள் கூடுதல், புது நண்பர்கள் சந்திப்பு, சிரிப்புகள், வெண்முரசு பட ஆவணம் குறித்து பேச்சு, வெண்முரசு நாவல்கள் பற்றிய பேச்சுகள், விசாரிப்புகள், புகைப்படங்கள் எடுத்தல் என்று குதூகலமாய் இருந்தது. பதின் வயது குழந்தைகளும் வந்திருந்தனர். இளவேனிற் காலமானதால், திரையிடலுக்கு முன் இரு நாள் சதா இடியுடன் கூடிய மழை இருந்தது, இருப்பினும் வெண்முரசு ஆவணப்பட இசையமைப்பாளர், ராஜன் சோமசுந்தரம் வட கரோலினாவில் இருந்து ஐந்து மணி நேரம் பிரயாணம் செய்து வந்து, நண்பர் விஜய் சத்யா உடன் வந்தது நிகழ்ச்சிக்கு மணிமகுடம் சேர்த்தார் போல இருந்தது. ராஜன் வந்து சிறிது நேர அளவாளவிர்க்குப் பின் திரையிடல் ஆரம்பமானது.
ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் இமைக்கணம் கூட கவனம் பிசகவில்லை. மெய்மறந்து, ரசித்துப் பார்த்தோம். இசைஞானி இளையராஜா, கமல்ஹாசன் போன்ற சினிமாத் துறை பெரும் ஆளுமைகள் தங்களின் நாவல்களைப் பற்றி உரையாடியதை கேட்க ஆனந்தமாகவும், உவகையாகவும் இருந்தது. தமிழின் மூத்த இலக்கிய ஆளுமைகளான, ஆ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், அசோகமித்ரன் வெண்முரசு குறித்த கருத்துக்களை கூற கேட்டு அரங்கில் கர ஒலி, உங்கள் பெரும் உழைப்பு அதற்கு பின் இருந்த உங்கள் மனநிலையும், அர்ப்பணிப்பும் பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது .
தளத்தில் உரையாடும் பல நண்பர்களை நேரில் பார்த்த உணர்வு, அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகளை ஆமோதிப்பது, நண்பர்களின் உணர்வுப் பூர்வமான பகிர்தல் எல்லாவற்றையும்விட வெண்முரசு தங்கள் வாழ்வில் உண்டாக்கிய கருத்துருவாக்கத்தை, வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தினை பார்வையாளர்கள் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். உங்களை கண்ட போதும், பல நண்பர்கள் பேசும் இடத்திலும் , கண்கள் மற்றும் மனம் கசிவதை தடுக்க முடியவில்லை. இவர்கள் உரையாடல்களுக்கு ஆபரணம் சேர்த்தார் போல் ஓவியர் சண்முகவேலின் ஓவியங்கள் காட்சிகளுக்கு மெருகூட்டியது. மிகச்சரியான இடத்தில் ராஜனின் இசையமைப்பில், நீலம் நாவலில் வரும் பாடலை கமல்ஹாசன் ஆரம்பித்து, ஸ்ரீராம் பார்த்தசாரதி தொடர்ந்து சைந்தவி பாட, ரிஷப் சர்மாவின் சிதார்,பரத்வாஜின் புல்லாங்குழல் இசையும் மெய்சிலிர்க்க வைத்தது. மனதை அள்ளியது ராஜனின் கூரிய, தேர்ந்த,பிரம்மாண்டமான இசை. இவை அனைத்தையும் இந்த கோவிட் தொற்று நோய் காலத்தில் சிறந்த இசை கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர் வெளி கொண்ட விதம் மிகச்சிறப்பு. காட்சி ஒருங்கிணைப்பு மிகத்துல்லியமாக இருந்தது.
வெண்முரசு எனும் பெரும் காவியத்தை, இதிகாசத்தை, அதன் பிரமாண்டத்தை, இன்றைய நவீன காலகட்டத்தில், வாழ்க்கை முறையில் தமிழில் அதை படைத்த ஆசிரியருக்கு இது ஒரு சிறுதுளி நன்றிக்கடன் மட்டுமே. அது செவ்வனே எங்களையும், எங்கள் நண்பர்களையும் சென்று அடைந்தது பார்க்க முடிந்தது.
திரையிடல் முடிந்தவுடன் எங்கள் பகுதிக்கு சிறப்பு வருகை புரிந்த ராஜனுக்கு எல்லோரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி, பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தார்கள். விஜய் சத்யாவின் சிறு உரையாடல், தொடர்ந்து ராஜன், அவரின் செறிவான இசை மற்றும் ஆவணப்படம் உருவாக்கிய அனுபவம், அதற்கு உதவி புரிந்த நண்பர்கள் குறித்த உரையாடல் நிகழ்த்தினார். அதன் பின் தமிழ் சங்க ஆர்வலர்கள், தமிழுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்து உரையாடினர். இதற்குப் பின் திரையரங்குக்கு வெளியில் நண்பர்கள் பலர் ராஜனை சந்தித்து,பேசி, அவரின் இசையை பாராட்டினார்கள். பாடல் இடம்பெற்ற நீலம் நாவலின் அழகை, தன்மை குறித்து சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்தனர். பதின் வயது குழந்தைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்திருந்தால் இன்னும் புரிந்து கொண்டிருக்கலாம் என்றும், தமிழ் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியத்துவமும், உங்கள் பணியும், பல துறைகள் சார்ந்த ஆழ்ந்த நுண்ணறிவும், மிகப் பிரம்மாண்டமாய் இருப்பதாகவும் கூறினர். புதிய நண்பர்கள் பலர் வெண்முரசு படித்த/படித்துக்கொண்டிருக்கும் நண்பர்களிடம் நாவல்கள் பற்றிய தகவல்கள், சந்தேகங்கள் கேட்டு நெடுநேரம் உரையாடிக்கொண்டு இருந்தனர். மிகப்பெரிய வரலாற்று நிகழ்வில், மகத்தான பெரும் பணியில் துளியாய் கலந்த, கனிந்த நிறைமையுடன் வீடு சென்று சேர்ந்தோம்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமெரிக்க நண்பர்களிடம் எங்கள் அனுபவங்களையும்,சந்தோஷத்தையும், பாராட்டையும், மேற்கொண்டு சாத்தியங்களையும் பகிர்ந்து கொண்டோம். ஆவணப்படம் பார்த்து சில நாட்கள் ஆகியும் நண்பர்கள் இதனை பற்றி பேசுவது தொடர்கிறது. சூழ்நிலையால் வர இயலாத நண்பர்கள் ஆவலாய் படம் குறித்து விசாரிப்பதும், மற்ற நண்பர்கள் நாவல் குறித்து கூறிய அபிப்பிராயங்களை கேட்டு கொண்டு, வெண்முரசு படிக்க ஆரம்பித்ததையும், ராஜன் மற்றும் ஆஸ்டின் சௌந்தர் அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
வெண்முரசு ஆவணப்படத்தை குறுகிய கால இடைவெளியில் செவ்வனே சாத்தியப்படுத்திய நண்பர்கள் ஆஸ்டின் சௌந்தர், ராஜன் சோமசுந்தரம் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி!!!
உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றியும், வாழ்த்துக்களும், வணக்கமும்!!
இந்த அற்புதமான பேர் அனுபவத்திற்கு வித்திட்ட உங்கள் வலிமையான எழுத்திற்கு மிக்க நன்றி!!!
அன்புடன்,
சுவர்ணா ரவி.
June 29, 2021
ஆலயம் எவருடையது?
[திரிபுவனம் கம்பஹரேஸ்வரர் ஆலயம்- பழைய படங்கள்]
அன்புள்ள திரு ஜெயமோகன்,
வணக்கம். கோயில்களையும் அதன் சொத்துக்களையும் அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் நிர்வகிப்பதிலிருந்து விலக வேண்டும் என்றும் அவற்றை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு குரல் சன்னமாக எழுந்து இன்று ஜக்கி வாசுதேவ் வழியாக பெரிய அளவில் பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது.
இந்து மதம் போன்ற நிறுவனமதமல்லாத தொகை மதத்தில் இவர்கள் குறிப்பிடும் “பக்தர்கள்” யார்? என்கிற கேள்வி அந்தரத்தில் நிற்கிறது. நீங்கள் பல முறை பேராலயங்கள் அன்றைய அரசர்கள் மக்களிடம் பெற்ற வரிவருவாயிலிருந்து கொடையளித்து எழுப்பப்பட்டவை என்பதால் அவை சமூகத்தின் சொத்து என கூறியிருக்கிறீர்கள் இந்த நிலையில் ஜக்கி முன்னெடுக்கும் இந்தக்கோரிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அறிய விழைகிறேன்.
நன்றி.
அன்புடன்,
இரா.முருகானந்தம்.
அன்புள்ள முருகானந்தம்,
இந்து ஆலயங்கள் பராமரிப்பு பற்றி குறைந்தது இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருபவன் நான். இந்தத் தளத்திலேயே எப்படிப் பார்த்தாலும் ஐம்பது அறுபது கட்டுரைகள் அவற்றைப் பற்றி எழுதப் பட்டிருக்கும்.
முதலில் தொடங்கவேண்டியது, இந்து ஆலயங்களின் உரிமை எவருக்குரியது என்பதுதான். ‘இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டு இடங்களா? வரலாற்றுச் சின்னங்களா?’ என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் இதில் முன்னகர முடியாது.
இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டு இடங்கள் மட்டுமல்ல. அவை வரலாற்றுச் சின்னங்கள், பண்பாட்டு மையங்கள். வழிபாட்டு இடங்கள் என்ற வரையறைக்குள் வைக்கும் போது மட்டும்தான் இந்துக்கள் அவற்றில் முழு உரிமையைப் பெறுகிறார்கள். அவை வரலாற்றுச் சின்னங்கள் என்றால், பண்பாட்டு மையங்கள் என்றால் இந்திய மக்கள் அனைவருக்கும் அதில் உரிமை உள்ளது. பொறுப்பும் உள்ளது. அதற்கப்பால் மானுடகுலத்திற்கே அதில் உரிமையும் பொறுப்பும் உள்ளது.
இன்று தாரசுரம் உட்பட இந்தியாவின் பிரம்மாண்டமான பேராலயங்கள் பல பேணப்படுவதும், மீட்டுக் கட்டப்படுவதும் யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புக்களின் வழியாக உலகமக்களின் கொடையால் என்பதை நாம் மறக்க கூடாது. அவை இந்துக்கள் ‘சாமிகும்பிடும்’ இடங்கள் என்பதனால் அந்நிதி வரவில்லை. அவை மானுடப்பண்பாட்டின் மகத்தான அடையாளங்கள் என்பதனால்தான் நிதி வருகிறது.
தங்களுக்கு வழிபாட்டுக்குத் தேவையில்லை என்பதற்காக, தங்கள் மதம் மறுக்கிறது என்பதற்காக பாமியான் சிலைகளை பீரங்கி வைத்துத் தகர்த்த தாலிபானின் செயலை உலகம் ஏன் அதிர்ச்சியுடனும் வெறுப்புடனும் பார்த்ததென்றால் அவை அந்நாட்டுக்குரியவை அல்ல, அம்மக்களுக்கு உரியவை அல்ல, மானுடகுலத்துக்குரியவை என்பதனால்தான். அது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாபெரும் ஆலயத்திற்கும் பொருந்துவதே ஆகும். அந்தப் பார்வை மத அரசியல் செய்பவர்களிடம், மதவாதிகளிடம் இல்லை.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் வழிபடுவதற்காக மட்டும் உரியதல்ல. அப்படியென்றால் ஆகம முறைப்படி அங்குள்ள இறைச்சான்னியத்தை வெளியே எடுத்து ஒரு புது ஆலயத்தைக் கட்டி அங்கு வழிபடலாம். அதில் எந்த பிழையும் இல்லை. அது தமிழர்களின் ஈராயிரம் ஆண்டுப் பண்பாட்டின் ஒரு மையம். இந்திய வரலாற்றின் ஒரு அடையாளம். உலகின் கலைச் சொத்து. ஆகவேதான் அது மாற்றமின்றி அழிவின்றி பேணப்படவேண்டுமென்று சொல்கிறோம். அது சிதைவது மானுடத்துக்கு இழப்பு என்று சொல்கிறோம்.
ஆலயங்கள் தங்கள் மதச்சொத்து என்றும், அவற்றைப் பேண வேண்டும் என்றும் சொல்லும் பக்தர்கள் ஆலயங்களை தங்கள் வழிபாட்டின் வசதியின் பொருட்டு இடித்து அழிப்பதையும் உருமாற்றுவதையும் சிதைப்பதையும் நாம் காண்கிறோம். தமிழகமெங்கும் இந்த கண்மூடித்தனமான ‘நுகர்வு’ நடந்துகொண்டிருக்கிறது. ஆலயங்கள் அழிவதற்கு முதன்மைக் காரணமாக அமைவது இதுதான்.
தெளிவான உதாரணம் சொல்கிறேன். திருபுவனத்தில், கம்பஹரேஸ்வரரின் பிரம்மாண்டமான கலையழகு மிக்க ஆலயத்தில் எந்தக் கலைநயமும் இல்லாமல், எந்த சிற்ப ஒத்திசைவும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் கான்க்ரீட் மண்டபங்களை நீங்கள் பார்க்கலாம். காரணம், அங்குள்ள சரபேஸ்வரர் ஒரு பரிகார தேவதையாக திடீரென்று புகழ்பெற்றார். பல்லாயிரம் வழிபாட்டாளர்கள் சரபேஸ்வரரை வழிபட அங்கு வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கவும், அவர்களுக்கு ஓய்வெடுக்கவுமான இடங்கள் கட்டித்தள்ளப் படுகின்றன.
கான்க்ரீட் கட்டிட அமைப்புகள் ஆலயத்தின் கல்கட்டுமானத்துடன் இணைத்துக் கட்டப்படும்போது உண்மையில் ஒரு நோய்க்கட்டி போல ஆலயத்தை அழிக்கின்றன. கான்க்ரீட் அதிகபட்சம் ஐம்பது அறுபது ஆண்டுகள் நீடிக்கக்கூடியது. அது கம்பியால் கட்டப்பட்ட ஒற்றைக் கட்டிட அமைப்பு ஆகையால் காலப்போக்கில் மண்ணில் இறங்கிச் சரியும்.
மாறாக கல்கட்டுமானம் கற்களை எடுத்து அடுக்கி வைத்து கட்டப்பட்டது. கல்கட்டுமானத்தின் எடையே அதை ஒன்றாக நிறுத்தியிருக்கிறது. மண்ணில் அழுந்தினாலும் சற்று சரிந்தாலும் அது தன்னை தகவமைத்துக்கொண்டு நிலைநிற்கும்.கான்கிரீட் கட்டிடம் கல்லால் ஆன ஆலயத்துடன் சேர்த்துக் கட்டப்படும்போது கல்லையும் இழுத்து சரிக்கும்.
ஐயமுள்ளவர்கள் நேரில் சென்று கம்பஹரேஸ்வரர் ஆலயத்தைப் பார்க்கலாம். ஆலயத்தின் கல்அமைப்பு கான்கிரீட் மண்டபங்களால் இழுக்கப்பட்டு மொத்த ஆலயத்திலும் கல்தூண்களுக்கும் கூரைக்கும் இடையே நீண்ட விரிசல்கள் விழுந்திருப்பதை கண்கூடாகவே பார்க்கமுடியும்.
ஆலய அழிவு என்பது அரசாலோ எதிரிகளாலோ மட்டும் நடத்தப்படுவதல்ல. இன்றைய பக்தர்களாலும் நடத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் திருப்பணி என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெறும் ஆலய அழிவுக்கு நிகராக எந்த அழிவையும் பிறர் எவரும் நிகழ்த்தியதில்லை.
அவற்றுக்கெதிராக ஒரு சிறு குரலைக் கூட நாம் இன்று எழுப்ப முடியவில்லை. எழுப்பினால் ஆலயத்துக்குத் தாங்கள் மட்டுமே உரிமையாளர்கள் என்ற தோரணையில் பக்தர்கள் அதற்கு பதில் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஆலய வரலாறோ, அதன் சிற்பக்கலையோ, அதன் பண்பாட்டு முக்கியத்துவமோ தெரியாது. அக்கறையும் இருப்பதில்லை. அவர்களே தேவைக்கேற்ப உருவாக்கிக்கொண்ட சில சமகாலத் தொன்மங்களே இருக்கும். அவர்களுடையது வெறும் உலகியல் பக்தி, காரியபக்தி மட்டுமே
அவர்களிடம் நீங்கள் வழிபடும் ஆலயம் அவர்களின் ‘திருப்பணிகள்’ மூலம் அழிகிறதென்றால், ‘வழிபடுவதற்குத்தான் ஆலயம் இருக்கிறது, இடிந்தால் இன்னொன்று கட்டிக்கொள்வோம்’ என்ற பதிலை எளிதாகச் சொல்கிறார்கள். சென்ற காலங்களில் நான் ஆலய அழிவு பற்றி எழுதியபோதெல்லாம் எனக்கு அப்படிப்பட்ட பதில்களே வந்தன.
தமிழகம் எங்கும் இதே நிலைதான். பேரூர் ஆலயத்தில் முகப்பில் ஒரு கான்க்ரீட் போர்டிகோ கட்டப்பட்டிருக்கிறது. எதற்கென்று கேட்டால் காரில் வருபவர்கள் மழையில் நனையாமல் இறங்கி ஆலயத்திற்குள் செல்வதற்காகவாம். ஆலயங்களுக்குள் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. ஆலயங்களுக்குள் இரும்பு தடுப்புக் கம்பிகள் அமைக்கப்படுகின்றன. ஆலயத்திற்குள் துளைகள் இடப்பட்டு ஏர்கூலர் வசதிகள் செய்யப்படுகின்றன. சிற்பங்களையே துளைத்து கம்பிகளை நடுகிறார்கள். இவையனைத்தும் உருவாக்கும் ஆலய அழிவுதான் இன்று மிகக் கவலை தரக்கூடியது.
மேலதிகமாக ஒன்றை சொல்லவேண்டுமென்றால் சீரமைப்பு என்ற பெயரிலே மணல் வீச்சு முறைப்படி ஆலயங்களில் சிற்பங்களைத் ’தூய்மைப்’ படுத்துவத்தைச் சொல்லலாம். ஆலயச் சிற்பங்களின் அத்தனை அழகுகளும் செதுக்கு நுட்பங்களும் மழுங்கி மொத்தையாக ஆகி விடுகின்றன. சமீபத்தில் திருவட்டாறு ஆலயத்தில் செய்த மணல் வீச்சு முறைப்படி அனைத்து சிற்பங்களின் மூக்குகளும் மழுங்கிவிட்டன.
தமிழகம் முழுக்க ஆலயங்களுக்கு சென்று வந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆலயத்திலும் மணல் வீச்சு முறைப்படி சிற்பங்கள் மழுங்கடிக்கப் படுகின்றன. அதற்கெதிராக நீதிமன்றம் செல்லும் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் தர்மகர்த்தாக்கள், உள்ளூர் பக்தர்கள் ஆலயம் மணல் வீச்சு முறைப்படி தூய்மைசெய்யப்பட்டு பளிச்சென்றிருப்பதை விரும்புகிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று அரிய சிற்பங்களுக்கு மேல் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. அகோரவீரபத்ரனுக்கு பட்டாபட்டி அண்டர்வேர் அணிவிக்கப்படுகிறது. எண்ணைச் சாயங்கள் கற்சிற்பங்களின் மேல் பூசப்படுவதென்பது அவற்றை அழிப்பதுதான். சில ஆண்டுகளில் அவ்வண்ணங்கள் மங்கி உதிரும்போது தேய்த்து அவற்றை எடுக்கவேண்டியிருக்கும். இரண்டுமுறை தேய்த்த பிறகு அங்கிருப்பது சிற்பமல்ல. இவற்றை எந்த பக்தருடைய கவனத்துக்கும் கொண்டு செல்ல முடியவில்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி இந்தியா டுடேயின் ஆசிரியராக இருந்த வாஸந்தி அவர்களிடம் நான் முறையிட்டு இதை மக்கள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென்று கேட்டேன். அவர் பெருமுயற்சி எடுத்து தமிழகம் முழுக்க அழிக்கப்படும் ஆலயங்களின் புகைப்படங்களை சேகரித்து ஒரு தனி இணைப்பு மலராக வெளியிட்டார்.
அதன் அட்டையிலேயே பதினாறு கைகளோடு நின்றிருக்கும் பத்திரகாளி ஒரு தையல்கடைக்காரரின் கடைக்குள் நிற்கும் ஒரு சிற்பம் இருக்கும். பதினாறு கைகளிலும் அவர் தைத்த துணிகளைத் தொங்கவிட்டிருப்பார் தையல்காரர். அந்த இதழ் வெளிவந்த பிறகு வாஸந்தி எனக்கு தொலைபேசியில் சொன்னார், இந்தியா டுடேயில் வழக்கமாக எந்த ஒரு கட்டுரை வெளியிட்டாலும் குறைந்தது நூறு கடிதங்கள் வரும். சிற்பங்களின் அழிவைப் பற்றி ஐந்து தபால் கார்டுகள் கூட வரவில்லை. இதுதான் தமிழகத்துடைய அக்கறை நிலை.
இந்த ‘இந்து பக்தர்களிடம்’ , இவர்களைப் பிரதிநித்துவப் படுத்தும் அறங்காவலர்களிடம், அரசியல் குழுக்களிடம், மொத்த ஆலயங்களையும் கொடுப்பதென்பது ஆலயங்களை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளுவதற்கு சமம்தான். ஒருபோதும் அத்தகைய ஒரு செயலுக்கு நான் என்னுடைய ஒப்புதலை கொடுக்கமாட்டேன். அதற்கெதிராக போராடவும் தயங்கமாட்டேன்
ஆலயங்களை அரசு அடிமைப்படுத்தியிருக்கிறது என்று ஓர் இயக்கம் இன்று தொடங்கி இருக்கிறது. அவர்கள் உண்மையில் ஆலயங்களின் சிக்கல் என்ன என்றே உணர்ந்திருக்கிறார்களா என்பது ஐயத்திற்குரியது.நடைமுறையை அறிந்து, உரிய பண்பாட்டு விழிப்புடன், நிபுணர்களின் ஆலோசனைகளுடன் செய்யவேண்டியவற்றை எளிய கோஷங்களாக ஆக்குகிறார்கள்.
ஆலயங்கள் பேணப்படுவது தமிழகத்தைப் போன்ற ஒரு நிலத்தில் மிகச் சிக்கலான ஒரு பணி. ஏனென்றால் இங்கு பல்லாயிரக்கணக்கில் ஆலயங்கள் உள்ளன. அனைத்தையும் பேணுவதென்பது பெரும் நிதிச்சுமை கொண்டது. ஆனால் அதை அரசு செய்தே ஆகவேண்டும்.
ஆலய ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை அளித்தாகவேண்டும். ஆலயப் பராமரிப்பை முறைப்படுத்த வேண்டும்.ஆனால் இங்கே ஆலயங்களுக்கு அரசு பணம் செலவிட்டால் ‘மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது’ என்று கூச்சலிடும் ஒரு கூட்டம் உள்ளது.
மன்னர்களாலும் புரவலர்களாலும் ஆலயங்கள் பேணப்படுவதற்காக அளிக்கப்பட்ட பெரும்செல்வம் இன்று இல்லை. அரசர்களும் பிறரும் மானியமாக அளித்த ஆலயநிலங்கள் உழுவோருக்கு நிலம் சொந்தம் என்னும் சட்டம் வந்தபோதே பெரும்பாலும் கைவிட்டுச் சென்றுவிட்டன. அதைச் செய்தது அரசு. அதற்கு பதிலாகவே ஆலயங்களை அரசு தன்னிடம் எடுத்துக்கொண்டது. ஆகவே அரசுக்கு ஆலயங்களை தன் பணத்தைச் செலவிட்டு பேணியாகவேண்டிய அறக்கடமை உண்டு.
ஆலயங்கள் பண்பாட்டின் அடையாளங்கள். ஆகவே ஆலயங்களை அரசு நிதி ஒதுக்கி பேணியே ஆகவேண்டும். அது மக்களின் வரிப்பணத்தை மதத்திற்குச் செலவிடுவது அல்ல. ஒரு பண்பாடு தன் தனியடையாளங்களை பேணிக்கொள்வதுதான்.
ஆலயத்தின் சொத்துக்களை தனியார் சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்கு உரிய வாடகையையும் குத்தகையையும் அளித்தாலே ஆலயங்களைப் பேண முடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை. அவர்கள் யாரும் ஆலயங்களின் எதிரிகள் அல்ல, பெரும்பாலும் ஆலயபக்தர்களேதான். அவர்களுக்கு அதில் எந்தக் குற்றவுணர்வும் இல்லை.
ஆலயங்களை அரசு சுரண்டுவதும் உண்மை. ஆலயங்கள் அதிகாரிகளாலும் அரசால் நியமிக்கப்படும் அரசியல்வாதிகளான அறங்காவலர்களாலும் தங்கள் வசதிக்கேற்ப சுரண்டப்படுவதையும், அழிக்கப்படுவதையும் நாம் காண்கிறோம். அதற்கெதிராகக் குரல்கொடுக்கவேண்டும். ஆலயங்கள் முறைப்படி பேணப்படவேண்டும் என்று போராட வேண்டும்
ஆலயங்களில் இருந்து அரசு வெளியேறினால் ஆலயங்களின் பொறுப்பு யாருக்கு வரும்? திருப்பணி என்ற பெயரில் ஆலயங்களை சீரழிக்கும் இந்த மாபெரும் பக்த கும்பல்களிடம் ஆலயங்கள் செல்ல வேண்டுமென்றால் அதைவிட அரசிடமே இருக்கலாம். அரசுக்குக் குறைந்தபட்சம் நீதிமன்றத்துக்குக் கட்டுப்படவேண்டிய கட்டாயமாவது உள்ளது.அதை குடிகள் எவரும் கேள்விகேட்கலாம்.
ஆலயங்கள் வெறும் வழிபாட்டுமையங்கள் அல்ல, பண்பாட்டுச் செல்வங்கள் எனும்போது அனைவருக்கும் பொதுவான பேராலயங்களை எந்த அடிப்படையில் எவரிடம் விட முடியும்? அதற்கான ஜனநாயக அமைப்பு எங்குள்ளது இங்கு? அப்படி ஒரு அமைப்பை உருவாக்குவது, அதில் ஆண்டுதோறும் அல்லது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்களை செய்து முறையான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது எல்லாம் எளிய செயலா என்ன?
அவ்வாறு ஒரு ஜனநாயக அமைப்பு உருவானால் கூட இன்றைய அரசியல் கட்சிகளும் பெருமுதலாளிகளும் மதத் தலைவர்களும் அந்த அமைப்பைக் கைப்பற்றிக்கொண்டு அதைத் தங்கள் அதிகாரமாக்கிக் கொள்ளமாட்டார்கள் என்று யார் கண்டது? இன்று கூட்டுறவுத்துறை எப்படி இருக்கிறது? அதில் எவர் கோலோச்சுகிறார்கள்?
பிரச்சினை இருப்பது ஆலயங்களைப் பற்றிய மனநிலையில். அவை நம் பண்பாட்டு செல்வங்கள், அவை அழியாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற எண்ணம் நமக்கிருக்க வேண்டும். அது நமக்கு இல்லை என்பதே முதன்மைச் சிக்கல். ஆலயங்கள் பேணப்படவேண்டும் என்ற எண்ணம் முதலில் அவற்றை பயன்படுத்தும் பக்தர்களுக்கு வரவேண்டும். அவை நம் பண்பாட்டுச்செல்வங்கள் என்ற எண்ணம் இந்துமதப் பக்தர்கள் அல்லாதவர்களுக்கும் வரவேண்டும்
தமிழக ஆலயங்களுடன் மத்தியத் தொல்லியல்துறை நிர்வாகத்திலுள்ள ஆலயங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். மத்திய நிர்வாகத்தில் இருக்கும் ஆலயங்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக பேணப்படுகின்றன. அவற்றில் பழுதுபார்ப்போ, திருப்பணியோ நடக்கும் போது ஏற்கனவே அங்கு இருக்கும் அதே சிற்ப அமைப்பில்தான் செய்யப்படுகிறது. அதே கற்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
[மணற்பாறைக் கல்லால் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தில் கருங்கல் ஊடாக பயன்படுத்தப்பட்டாலே அந்த ஆலயம் சிதைவடைய ஆரம்பிக்கும். திருப்பணிகள் ஆலயம் கட்டப்பட்ட அதே கல்லில் செய்வதை நீங்கள் சாஞ்சியில் இருந்து தாராசுரம் வரைக்கும் பார்க்க முடியும்]
மத்தியத் தொல்லியல்துறை இங்கே வெற்றிகரமாகச் செய்து வருவதை அப்படியே மாநிலத் தொல்லியல்துறையும் செய்தால் போதும். நாத்திகர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பெரும்பாலும் ஆட்சிசெய்யும் கேரளத்திலுள்ள அறநிலையத்துறை ஆலயங்களை பேணும் தரத்திலாவது நம் ஆலயங்கள் பேணப்பட்டால் போதும். அவர்கள் கொண்டுள்ள நெறிகள், வழிமுறைகளை அப்படியே கடைப்பிடித்தால் போதும்.
அரசு ஆலயங்களை விட்டு வெளியேறினால் வெறும் சுயநலமிகளின் கைகளுக்குத்தான் ஆலயங்கள் செல்லும் என்பது இதுவரைக்குமான அனைத்து அனுபவங்களைக் கொண்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அவ்வ்வாறு கைமாற்றம் செய்யப்பட்டால் வெறும் வழிப்பாட்டிடங்களாக மட்டுமே சுருங்கிவிடக் கூடும். வழிப்பாட்டின் பொருட்டு அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகிவிடக்கூடும். ஏற்கனவே இந்தியாவின் புகழ்பெற்ற பேராலயங்களுக்கு எல்லாம் அந்தக் கதி இருக்கிறது. பூரியோ, உடுப்பியோ, இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்றால் அவை மூர்க்கமாக பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு சீரழிக்கப்படுவதை நாம் காணலாம். அவற்றை ஒரு பூசகக்கும்பல் கைப்பற்றி வைத்து கொள்ளைமையமாக ஆக்கியிருப்பதைக் கண்டு கொதித்துப்போவோம்.
செய்யவேண்டியவை என்ன? அரசை வெளியேற்றிவிட்டு வேறுசிலரிடம் ஆலயங்களை ஒப்படைப்பதெல்லாம் நடைபெறப்போவதில்லை. நடைபெறவும்கூடாது. ஆனால் ஆலய நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கலாம். அதில் அரசுத்தரப்புடன் ஆன்மீகத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அறிவுஜீவிகள், சிற்பிகள் ஆகியோரும் இடம்பெறலாம். அந்தக் கண்காணிப்புக்குழு ஓர் ஆணையம் போலச் செயல்படலாம். அதற்கு சட்டபூர்வமான அதிகாரங்கள் வழங்கப்படலாம்.அத்தகைய குழுவுக்குக் கட்டுட்பட்டு அரசு நிர்வாகத்தில் ஆலயங்கள் இருப்பதுதான் சரியானது.
இன்று நம் ஆலயங்களைப் பற்றி விழிப்புணர்வு உருவாக வேண்டியிருக்கிறது. நமது ஆலயங்கள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் வந்து பார்த்து செல்வதற்கானவை அல்ல. அவற்றின் கட்டமைப்போ அவற்றின் பொருட்களோ அதற்குரியவை அல்ல. பல ஆலயங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அவற்றை ஒருநாளைக்கு பல்லாயிரம் பேர் வந்து பார்த்து செல்வது என்பது அந்த ஆலயங்களை விரைவிலேயே அழிவுக்குக் கொண்டு செல்வது. திருவிழாக்களின்போது பல்லாயிரக்கணக்கானவர்களை ஆலயத்துக்குள் அனுமதிப்பது ஆலயத்தை அழித்து மகிழ்வதேதான்.
முதன்மையாகச் செய்ய வேண்டியது தமிழகத்தின் புகழ்பெற்ற ஆலயங்களில் வருகையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். உதாரணமாக மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் நாளொன்றுக்கு பத்தாயிரம் பேர் வருகிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டம். அக்கூட்டத்தை கட்டுப்படுத்த ஊழியர்கள் இல்லை. ஆகவே கம்பித்தடுப்புகளால் நிறைந்துள்ளது ஆலயம். ஆலயத்தில் பெரும்பகுதி நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான சிற்பங்களை இன்று பார்க்கவே முடியாது
இன்று இணையம் இருக்கிறது, ஒருநாளைக்கு காலையில் ஐந்நூறு, மாலையில் ஐந்நூறு என்று ஆயிரம் பேரை மட்டும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அனுமதிக்கலாம். அவர்களிடம் ஆயிரமோ இரண்டாயிரம கட்டணம் வாங்கலாம். ஒரு சினிமாவுக்கு ஆயிரம் ரூபாய் செலவழிப்பவர்கள் மெய்யான பக்தர்கள் என்றால் ஆலயத்திற்கும் செலவழிப்பார்கள்.
தமிழகத்தில் பல ஆயிரம் ஆலயங்கள் இருக்கின்றன. சில ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் ஆட்கள் குழுமும்போது சில ஆலயங்களில் ஆண்டுமுழுக்க எவருமே வருவதில்லை. அனைத்து ஆலயங்களுக்கும் இணையாக பக்தர்களை செல்ல வைப்பதற்கு, ஒவ்வொரு ஆலயத்திலும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதே சிறந்த வழி.
அதற்கான ஒரு இணையதளத்தை உருவாக்கலாம். அதில் எல்லா ஆலயங்களுக்கான தகவல்களும் இடம்பெறச் செய்யலாம். அந்தச் செய்தியின் அடிப்படையில் எல்லா ஆலயங்களுக்கும் மக்கள் செல்ல ஆரம்பித்தாலே ஒட்டுமொத்தமாக ஆலயங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கூடுமே ஒழிய குறையாது. ஆலய வருமானமும் பெருகும். ஒரே ஆலயத்தில் மிதமிஞ்சிய நெரிசல் ஏற்படுவதும் அழிவு ஏற்படுவதும் குறையும்.
அவ்வாறு செய்தால் ஆகமங்களுக்கும் சிற்ப முறைகளுக்கும் விரோதமாக ஆலயங்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் கம்பித்தடுப்புகள், மாபெரும் உண்டியல்கள், சற்றும் அழகுணர்வில்லாத குளிர்விக்கும் அமைப்புகள், தீயணைக்கும் அமைப்புகள் போன்ற பலவற்றை நீக்கிவிடலாம். ஆலயங்களைத் தொன்மையான அழகுடன் பேணலாம். ஆலயம் செல்பவர்கள் நெரிசலில் சிக்காமல், தரிசனம் செய்ய வாய்ப்பின்றி அலைமோதாமல், நிறைவாக முழுமையாக இறைவழிபாடு செய்து மீளலாம்.
அவ்வண்ணம் வருகையாளர் கட்டுப்படுத்தப்பட்டால் இன்று ஆலயங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சிற்ப அழிவுகள் தடுத்து நிறுத்தப்படும். இன்று அல்லது நாளை இப்படி ஒரு தீர்வை எடுத்தே ஆகவேண்டும். இல்லையேல் இந்து ஆலயங்கள் அழிவுக்கு செல்வதை எவராலும் தடுக்க முடியாது.
பராமரிக்கப்படாத, கைவிடப்படாத ஆலயங்கள் இருக்கின்றன. அந்த ஆலயங்களைப் பராமரிப்பதற்கு ஒரு பொது நிதியை உருவாக்கலாம். அதற்கு மக்களிடம் இருந்து நன்கொடைகளை வரவழைக்கலாம். அந்நிதியை கண்காணிப்புக் குழு வழிகாட்டலின் பேரில் ஆலயங்களை சீரமைக்க ஒரு அறக்கட்டளையைக் கொண்டு செலவிடச்செய்யலாம்.கண்காணிப்புக்குழு ஆலயங்களுக்கு குவியும் நிதி ஆலயப்ராமரிப்புக்கு மட்டும் பயன்படும்படி அரசிடம் கட்டாயப்படுத்தலாம். . அதன் வழியாக அத்தனை சிற்றாலயங்களையும் முறையாக சீரமைத்துப் பராமரிக்கலாம்.
ஆலயத்துக்காக ஒருங்கிணைந்த ஒரு நீதி நிர்வாக அமைப்பை உருவாக்கலாம். ட்ரிபியூனல் போன்ற அதிகாரத்துடன். அந்த நீதி நிர்வாக அமைப்பினூடாக வெவ்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அரசு சொத்துக்களை மீட்கலாம். நிலுவையில் இருக்கும் அரசு வருவாய்த் தொகைகளை செய்யலாம். அவற்றை ஆலயத்தை பழுது பார்க்க பயன்படுத்தலாம்.
தர்க்கபூர்வமாக யோசிக்கும் எவரும் செய்யக்கூடுவது இதுதான். மாறாக ‘அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு’ என்று கூக்குரலிடுவது ‘இதில் உள்ளே வருவது யார்? எவர் பொறுப்பில் ஆலயங்கள் செல்லப்போகின்றன?’ என்ற கேள்வியை எழுப்பும். ஆலயங்கள் வழிபாட்டுக்குரியவை மட்டுமே என்ற வரையறை ஆலயங்களின் உரிமையாளர்களான இந்தியர்களை, உலகக் குடிமக்கள் அனைவரையும் வெளியே செலுத்துவதும் அவ்வகையில் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகும்.
இன்றைய தேவை ஆலயத்தைப் பற்றிய விழிப்புணர்வு. ஆலயத்திற்குச் சேவைசெய்வதற்கான உளநிலை.அதற்குப் பதிலாக ஆலயத்தின் மீதான அதிகாரத்துக்காக குரல்கொடுக்கிறார்கள்.
ஜெ
திருபுவனம் கம்பஹரேஸ்வரர் ஆலயம் பற்றி
https://drbjambulingam.blogspot.com/2016/10/blog-post_22.html
=======================================================
ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள்
நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
லீனா மணிமேகலையின் ’மாடத்தி’ – கடலூர் சீனு
இனிய ஜெயம்
சில வருடம் முன்னர் திரு செழியன் இயக்கிய டு லெட் திரைப்படம் வெளியான போது, தமிழ் தீவிர இலக்கியம் மற்றும் கலைச்சினிமா ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்த மௌனம் நாமறிந்தது. கேரளம் வங்காளம் இவற்றில் உள்ளது போல, சினிமா இயக்குனர் எனும் தனித்த கலைஞன் தனது திரைப்படங்கள் வழியே பொது மனதுக்கு வெளியில் நிற்கும் தனித்த கலை மனங்களுடன் உரையாடும் வெளி தமிழில் இல்லை. பின்புலமாக பல பண்பாட்டுக் காரணங்கள். கேரளத்தில் மாற்று சினிமா எனும் இயக்கத்தை செய்து காட்டியும் பேசிப் பேசியும், (அரசு அமைப்பு போன்றவற்றின் ஒத்துழைப்பும் இணைய) முன்னெடுத்த அடூர் கோபால கிருஷ்ணன் போல இங்கே தமிழ் நிலத்தில் எவரும் உருவாகவில்லை. அப்படி உருவாக சாத்தியம் கொண்டிருந்த திரு செழியன் போன்ற ஒன்றிரண்டு ஆளுமைகளையும், கம்பீர மௌனம் வழியே செயலிழக்கச் செய்தோம்.
செழியன் எதை பேசினாரோ அதை முயன்றார். செய்தும் காட்டினார். கலா பூர்வமாக அப்படத்தில் எத்தனையோ குறைபாடுகளும் பின்னடைவுகளும் இருக்கலாம். அது இரண்டாம் பட்சம். அப்படி ஒரு படம் நிகழ்ந்திருக்கிறது என்பது நிச்சயம் தமிழின் பெருமை. முதலில் அது ஏகோபித்த முறையில் தீவிர தளத்தில் வரவேற்கப்பட்டிருக்க வேண்டும். அதன் அடுத்த நிலையில் மாற்று சினிமாவும் தீவிர இலக்கியம் எதிர்கொள்ளும் விமர்சன உரை கல்லில் உரைத்துப் பார்க்கப்பட ஒன்றே என்ற அடிப்படையில் காய்தல் உவத்தல் இன்றி கறாராக விமர்சிக்கப்பட்டிருக்க வேண்டும். கறார் விமர்சனத்தை முன்வைத்து புறக்கணிக்கவும் கூட உரிமை உண்டு. (என் நோக்கில் அது மேக்கிங்கில் சற்று பழையபாணிப் படம்). ஆனால் அனைத்துக்கும் முதலாக நமது பெருமிதம் என அது வரவேற்கப் பட்டிருக்க வேண்டும். இங்கு நிகழ்ந்து என்ன? மௌனம்.நேரெதிராக கர்ணன், ஜகமே தந்திரம், போன்ற வணிக கேளிக்கை பண்டங்களை அதில் உள்ள குறியீடுகளை கிண்டி மாய்ந்து மாய்ந்து பேசுவது, ஈழ அரசியல் போன்றவை எந்த அளவு பிற்போக்கு தனமாக ‘காட்சிப்படுத்தபட்டிருக்கிறது’ என பேசிப் பேசி மாய்வது. இந்த நிலை நாம் எந்த அளவு பண்பாட்டு சொரணை இன்றி இருக்கிறோம் என்பதன் சாட்சியம்.
இந்தப் பின்னணியில் வெளியாகி இருக்கும் மற்றொரு மாற்று சினிமா லீனா மணிமேகலை அவர்கள் இயக்கிய மாடத்தி. க்ரௌண்டு ஃபண்டிங் முறையில் உருவாகும் இத்தகு மாற்று சினிமாக்களை ott ஓடை எந்த அளவு பொருட்படுத்துகிறது என்று தெரிய வில்லை. அந்த ஓடை துணை நின்றால், தமிழில் மாற்று சினிமா வுக்கான களத்தை உருவாக்கும் ஆளுமைகள் அடுத்தடுத்து உருவாகி வர வாய்ப்பு உண்டு. அந்த சாத்தியத்தை பயன்படுத்தி நீ ஸ்ட்ரீம் ott இல் படத்தை வெளியிட்டு இருக்கிறார் லீனா.
நூறு நாற்காலிகள் நாயாடிகள் போல வாழும் தீண்டா வண்ணார் சமூகம் ஒன்றில், தனது பதின் பருவ வயது மகள் யோசனா வை வயிற்றில் நெருப்போடு பொத்தி வளர்க்கும் அம்மா. தாண்டக் கூடாத கோடு ஒன்றை தாண்டி விடுகிறாள் யோசனா. பிறகு? ஊரே புறக்கணிக்கும் யோசனா எனும் புதிரை சமூக இளம்பெண் ஊரே வணங்கும் மாடத்தி எனும் சாமியாக மாறுகிறாள். பொதுவாக சாதி, இளம்பெண், காம வெறிக் கண்கள், ஆண்டை என்ற வரிசையை உருவாக்கி விட்டாலே போதும், முழுக்க முழுக்க ஆர்ட்டை பின்னால் தள்ளிவிட்டு கிராஃப்ட் வழியே பார்வையாளனை சுரண்டி, விருதுகளை சுரண்டி கிராஃப்ட் விளையாட்டை ஆர்ட் என நிறுவி விட, எந்த கலை மனம் அற்ற ஆசாமிகளாலும் முடியும். (மலையாளத்தில் இப்படி நிறைய உண்டு). கலைஞர்கள் மட்டுமே எது கலையோஅதை செய்து காட்டி, அந்த வெளிப்பாடு நல்கும் கம்பீரம் வழியே இவற்றிலிருந்து விலகி ‘தனித்து’ நிற்க முடியும். லீனா மணிமேகலை அவர்கள் இப்படம் வழியே கம்பீரம் கொண்டு சொன்னவண்ணம் செயல் வழியே நிற்பவராக தனித்து நிற்கிறார்.
மாடத்தி படம் குறித்து அது தீவிரமும் உண்மையும் கொண்ட மாற்று சினிமா என்பதற்கு மேலே நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. அதை வரவேற்பதும், விமர்சன கத்தி வீசி நிறை குறைகளை நிறுவவதும், மாற்று சினிமா வரிசையில் தமிழில், இந்திய அளவில், உலக அளவில் இப் படத்தின் பெறுமதி என்ன என்றெல்லாம் விவாதிப்பதும் கலை விமர்சகர்கள் பணி. டூ லெட் இல் திகழ்ந்த கம்பீர மௌனம் இப்போதும் நிகழ்ந்து விடக் கூடாது. கவனம் பெற்று விமர்சன உரையாடலுக்கு ஆளாகவேண்டிய படம். நிச்சயம் இப்படம் தமிழின் மாற்று சினிமாக்களில் மிக முக்கியமானதொரு பெருமிதம் கொள்ளத்தக்க வரவு. லீனா மணிமேகலை அவர்களுக்கு இந்த எளிய சினிமா ரசிகனின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
கடலூர் சீனு
தெலுகு கவி பிங்கலி சூரண்ணா
பிங்கலி சூரண்ணா பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவிஞராம். கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு சில பத்தாண்டுகள் பிற்பட்டவர்.
ப்ரபாவதி ப்ரத்யும்னமு என்ற கவிதை நூலின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பின் பேர் Demon’s Daughter.மொழிபெயர்த்தவர்கள் வெல்செரு நாராயணராவ் மற்றும் டேவிட் ஷுல்மன்.
தெலுகு கவி பிங்கலி சூரண்ணாஅரசியலைத் தவிர்ப்பது
அன்பு ஜெ,
அன்றாட அரசியலலைப் பின்தொடர்வது எனது நேரம், ஆற்றல் மற்றும் மனநிலையை பாதிக்கிறது. பல பல சுய முயற்சிகளை சோதனை செய்து பார்த்து விட்டேன். சிறிய அளவில் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து நீட்டிக்க முடியவில்லை. பல நாட்கள் தவத்தை, காற்றில் வரும் ஒரு சிறிய செய்தி கலைத்து அன்றாட அரசியல் சுழலுக்குள் இழுத்துக் கொள்கிறது.
அனைத்தையும் துறந்தவருக்கு இந்த அரசியலை மட்டும் துறக்கவியலாது போலும் என்று விதுரன் சார்வாகனைக் கேட்பார்.
இந்த அன்றாட அரசியல் அடிமையில் சிக்காமல் நீங்கள் எப்படி கடந்து செல்கிறீர்?
நீங்கள் கையாளும் வழிமுறைகள் அல்லது பரிந்துரைகளை விளக்கினால் என் போன்ற சிலருக்குப் பேருதவியாக இருக்கும்.
அன்புடன்,
சக்தி, கோவை.
***
அன்புள்ள சக்தி,
அன்றாட அரசியலில் இருந்து முற்றிலும் விடுபடுவது எளிதல்ல. அது இன்றியமையாததும் அல்ல. நீங்கள் ஆன்மிகப்பயணத்தில் இருந்தால், அல்லது ஆழ்ந்த கலைப்பயணத்தில் இருந்தால் மட்டுமே அது உகந்தது. மற்றபடி நாம் அரசியலை கவனிக்கவேண்டும் நமக்கான புரிதல்களும் இருக்கவேண்டும்.
ஆனால் இங்கே அரசியல் என்பது உச்சகட்ட பிரச்சாரத்தாலானது. முன்பு அப்பிரச்சாரம் தேர்தல்களை தவிர்த்தால் நாளிதழ்களில் மட்டுமே இருந்தது. டீக்கடை அரட்டைகளில் கொஞ்சம் இருக்கும். அவ்வளவுதான். இன்று சமூகவலைத்தளச் சூழலில் பெரும்கூச்சலாக மாறி நம்மைச் சூழ்ந்திருக்கிறது. நாம் வேறேதும் சிந்திக்க முடியாதபடி நம்மை ஆக்ரமித்திருக்கிறது. அதைக் கவனித்தோமென்றால் நமக்கென சிந்தனையோ, நமக்கென ரசனையோ உருவாகாது. நாம் அவர்கள் திரட்டும் மொண்ணைக்கும்பலில் ஓர் எண்ணாகச் சுருங்கிவிடுவோம்.
சமூகவலைத்தளத்தில் அரசியல் பேசப்படும்போது முதல்முறையாக தொண்டர்களின் குரல்கள் மிஞ்சி ஒலிக்கின்றன. எவர் கடுந்தொண்டரோ அவருடைய குரல் மேலோங்குகிறது. அதில் தர்க்கமோ தகவலோ இருப்பதில்லை. வெறும்பற்று, வெறும் கூச்சல் மட்டுமே. அதன் உள்ளடக்கமாக இருப்பது எப்போதுமே சாதி- மதக் காழ்ப்பு. அதை அரசியல்கோட்பாட்டுச் சார்பாக உருமாற்றி முன்வைக்கிறார்கள். அந்த உலகம் எதிர்மறை உணர்வுகள் நிறைந்தது. நம்மை இருட்டால் நிறைப்பது.
அதைத்தவிர்க்கும் வழி அதை கவனிக்காமலிருப்பதே. அரசியலில் எது தேவையோ அதை மட்டும் கவனிப்பது. ஒருநாளில் பதினைந்து நிமிடம் அரசியல் செய்திகளைக் கவனித்தால்போதும். அதற்குமேல் அரசியலென இங்கே ஏதுமில்லை. நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை அரசியலைக் கவனித்தாலே கூட போதுமானது.
அத்துடன் ஏதேனும் கருத்தை உருவாக்கிக் கொள்வதாக இருந்தால், கருத்தைச் சொல்வதாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டுவாரம் எடுத்துக்கொள்ளலாம். இன்றைய சூழலில் ஒருவாரத்திற்குள் பேசி கொப்பளித்து சொற்களை கழித்துவிட்டு கடந்துசென்றிருப்பார்கள். தேவையானவற்றை வாசித்து என்ன என்று முடிவுசெய்ய அரைமணிநேரம் ஆகும். அவ்வளவுதான் விஷயம் இருக்கும். அதற்குள் அதன் சூடும் ஆறியிருக்கும். மெய்யாக அதன் பெறுமதி என்ன என்பதும் தெரிந்திருக்கும். மாறாக அந்தவிவாதங்களுடன் கூடவே சென்றால் முழுநாட்களும் அதற்கே செலவாகும்.
என் வழி இதுதான். குறைவாக அரசியலை கவனிப்பது. ஏதேனும் கருத்தை உருவாக்கிக் கொள்வதென்றால் முழுச்சூடும் அடங்கும் வரை காத்திருப்பது
ஜெ
கார்கடல்
அன்புள்ள ஜெ,
கார்கடல் செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன், நன்றி!
ஓவியங்களற்ற 885 பக்க நாவல். மற்ற வெண்முரசு நாவல்களின் சராசரி அளவுதான் ஆனாலும் கருநீலவண்ண அட்டை ஓவியமோ, நூலின் உள்ளடக்கமோ, பார்த்தவுடன் ஒரு எடை மிக்க புத்தகமாகத் தெரிந்தது.
நீங்கள் குறிப்பிட்டபடி மகாபாரதப் போரின் உச்சங்கள் நிகழும் நாவல் இது. மேலும் மகாபாரதம் என்றதும் நினைவுக்கு வரும் பல பிரபலமான நிகழ்வுகளும். பொற்தேரில் போர்க்களம் புகும் கர்ணன், கர்ணனின் நாகவாளிப் பிரயோகம், குந்தி கர்ணனைச் சந்தித்து வரம் கேட்பது, சுப்ரதீகத்தில் வந்து போரிடும் பகதத்தர், அவரது நாராயணாஸ்திரம் செயலிழப்பது, அபிமன்யு பத்ம வியூகத்தில் சிக்கி உயிரிழப்பது, அர்ஜுனன் ஜெயத்ரதனைக் கொன்று வஞ்சம் தீர்ப்பது, பூரிசிரவஸ் சாத்யகியால் கொல்லப்படுவது, கடோத்கஜனின் பெரும் போரும் வீழ்ச்சியும், துருபதனும் விராடரும் களம் படுவது, இறுதியில் துரோணரைக் கொல்வதற்காக அஸ்வத்தாமன் கொல்லப்பட்டானென்று யுதிஷ்டிரர் சான்றுரைப்பது. போர் முழுவதுமே யுதிஷ்டிரரை ஒரு பார்வையாளராகவே நடத்தும் பாண்டவர் தரப்பு, அவர்கள் வாழ்வதும் முற்றழிவதும் அவர் சொல்லும் பொய்ச்சான்றில் இருக்கிறது என்னும் ஒரு நெருக்கடி நிலையில் அவரை முடிவெடுக்க வைக்கிறார்கள். போர் ஒவ்வொருவரையும் அவர்களது எல்லைக்குத் தள்ளுகிறது.
வெண்முரசு முதற்கனல் இவ்வாறு ஆரம்பிக்கிறது: “வேசரதேசத்தில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரே மகன் ஆஸ்திகனை மடியில் அமரச்செய்து கதை சொல்ல ஆரம்பித்தாள்..”
கார்கடலும் அதே வாசகங்களுடன் ஆரம்பிக்கறது “வேசரநாட்டில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தன் குலத்து மகள் விஷஹாரியின் வயிற்றில் பிறந்த சிறுமகள் மானசாதேவியை மடியில் வைத்துக்கொண்டு கதைசொல்ல அமர்ந்தாள்..”
வெண்முரசு நாகர்களின் கொடிவழியில் மீண்டும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கிச் சொல்லப்படுவதுபோல் உள்ளது.
நன்றி.
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

