லீனா மணிமேகலையின் ’மாடத்தி’ – கடலூர் சீனு

இனிய ஜெயம்

சில வருடம் முன்னர் திரு செழியன் இயக்கிய டு லெட் திரைப்படம் வெளியான போது, தமிழ் தீவிர இலக்கியம் மற்றும் கலைச்சினிமா ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்த மௌனம் நாமறிந்தது. கேரளம் வங்காளம் இவற்றில் உள்ளது போல, சினிமா இயக்குனர் எனும் தனித்த கலைஞன் தனது திரைப்படங்கள் வழியே பொது மனதுக்கு வெளியில் நிற்கும் தனித்த கலை மனங்களுடன் உரையாடும் வெளி தமிழில் இல்லை. பின்புலமாக பல பண்பாட்டுக் காரணங்கள். கேரளத்தில் மாற்று சினிமா எனும் இயக்கத்தை செய்து காட்டியும் பேசிப் பேசியும், (அரசு அமைப்பு போன்றவற்றின் ஒத்துழைப்பும் இணைய) முன்னெடுத்த அடூர் கோபால கிருஷ்ணன் போல இங்கே  தமிழ் நிலத்தில் எவரும் உருவாகவில்லை. அப்படி உருவாக சாத்தியம் கொண்டிருந்த திரு செழியன் போன்ற  ஒன்றிரண்டு ஆளுமைகளையும், கம்பீர மௌனம் வழியே செயலிழக்கச் செய்தோம்.

செழியன் எதை பேசினாரோ அதை முயன்றார். செய்தும் காட்டினார். கலா பூர்வமாக அப்படத்தில்  எத்தனையோ குறைபாடுகளும் பின்னடைவுகளும் இருக்கலாம். அது இரண்டாம் பட்சம். அப்படி ஒரு படம் நிகழ்ந்திருக்கிறது என்பது நிச்சயம் தமிழின் பெருமை. முதலில் அது ஏகோபித்த முறையில் தீவிர தளத்தில் வரவேற்கப்பட்டிருக்க வேண்டும். அதன் அடுத்த நிலையில் மாற்று சினிமாவும் தீவிர இலக்கியம் எதிர்கொள்ளும் விமர்சன உரை கல்லில் உரைத்துப் பார்க்கப்பட ஒன்றே என்ற அடிப்படையில் காய்தல்  உவத்தல் இன்றி கறாராக விமர்சிக்கப்பட்டிருக்க வேண்டும்.  கறார் விமர்சனத்தை முன்வைத்து புறக்கணிக்கவும் கூட உரிமை உண்டு. (என் நோக்கில் அது மேக்கிங்கில் சற்று பழையபாணிப் படம்). ஆனால் அனைத்துக்கும் முதலாக நமது பெருமிதம் என அது வரவேற்கப் பட்டிருக்க வேண்டும். இங்கு நிகழ்ந்து என்ன? மௌனம்.நேரெதிராக கர்ணன், ஜகமே தந்திரம், போன்ற வணிக கேளிக்கை பண்டங்களை அதில் உள்ள குறியீடுகளை கிண்டி மாய்ந்து மாய்ந்து பேசுவது, ஈழ அரசியல் போன்றவை எந்த அளவு பிற்போக்கு தனமாக ‘காட்சிப்படுத்தபட்டிருக்கிறது’ என பேசிப் பேசி மாய்வது. இந்த நிலை நாம் எந்த அளவு பண்பாட்டு சொரணை இன்றி இருக்கிறோம் என்பதன் சாட்சியம்.

இந்தப் பின்னணியில் வெளியாகி இருக்கும் மற்றொரு மாற்று சினிமா லீனா மணிமேகலை அவர்கள் இயக்கிய மாடத்தி. க்ரௌண்டு ஃபண்டிங் முறையில் உருவாகும் இத்தகு மாற்று சினிமாக்களை ott ஓடை எந்த அளவு பொருட்படுத்துகிறது என்று தெரிய வில்லை. அந்த ஓடை துணை நின்றால், தமிழில் மாற்று சினிமா வுக்கான களத்தை உருவாக்கும் ஆளுமைகள் அடுத்தடுத்து உருவாகி வர வாய்ப்பு உண்டு. அந்த சாத்தியத்தை பயன்படுத்தி நீ ஸ்ட்ரீம் ott இல் படத்தை வெளியிட்டு இருக்கிறார் லீனா.

நூறு நாற்காலிகள் நாயாடிகள் போல வாழும் தீண்டா வண்ணார் சமூகம் ஒன்றில், தனது பதின் பருவ வயது மகள் யோசனா வை வயிற்றில் நெருப்போடு பொத்தி வளர்க்கும் அம்மா. தாண்டக் கூடாத கோடு ஒன்றை தாண்டி விடுகிறாள் யோசனா. பிறகு? ஊரே புறக்கணிக்கும் யோசனா எனும் புதிரை சமூக இளம்பெண் ஊரே வணங்கும் மாடத்தி எனும் சாமியாக மாறுகிறாள். பொதுவாக சாதி, இளம்பெண், காம வெறிக் கண்கள், ஆண்டை என்ற வரிசையை உருவாக்கி விட்டாலே போதும், முழுக்க முழுக்க ஆர்ட்டை பின்னால் தள்ளிவிட்டு கிராஃப்ட் வழியே பார்வையாளனை சுரண்டி, விருதுகளை சுரண்டி கிராஃப்ட் விளையாட்டை ஆர்ட் என நிறுவி விட, எந்த கலை மனம் அற்ற ஆசாமிகளாலும் முடியும். (மலையாளத்தில் இப்படி நிறைய உண்டு). கலைஞர்கள் மட்டுமே எது கலையோஅதை செய்து காட்டி, அந்த வெளிப்பாடு நல்கும் கம்பீரம் வழியே இவற்றிலிருந்து விலகி ‘தனித்து’ நிற்க முடியும். லீனா மணிமேகலை அவர்கள் இப்படம் வழியே கம்பீரம் கொண்டு சொன்னவண்ணம் செயல் வழியே நிற்பவராக தனித்து நிற்கிறார்.

மாடத்தி படம் குறித்து அது தீவிரமும் உண்மையும் கொண்ட மாற்று சினிமா என்பதற்கு மேலே நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. அதை வரவேற்பதும், விமர்சன கத்தி வீசி நிறை குறைகளை நிறுவவதும், மாற்று சினிமா வரிசையில் தமிழில், இந்திய அளவில், உலக அளவில் இப் படத்தின் பெறுமதி என்ன என்றெல்லாம் விவாதிப்பதும் கலை விமர்சகர்கள் பணி. டூ லெட் இல் திகழ்ந்த கம்பீர மௌனம் இப்போதும் நிகழ்ந்து விடக் கூடாது. கவனம் பெற்று விமர்சன உரையாடலுக்கு ஆளாகவேண்டிய படம். நிச்சயம் இப்படம் தமிழின் மாற்று சினிமாக்களில் மிக முக்கியமானதொரு பெருமிதம் கொள்ளத்தக்க வரவு. லீனா மணிமேகலை அவர்களுக்கு இந்த எளிய சினிமா ரசிகனின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2021 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.