Jeyamohan's Blog, page 970
June 10, 2021
எது நவீன கவிதை- ஓர் உரை
எது நவீன கவிதை? – திரு ஜெயமோகன் 2016 ஜூலை 31 கவிதை திருவிழா 2016 – சிங்கப்பூர். வலையேற்றியவர் பாரதி மூர்த்தியப்பன்
நகைச்சுவை- கடிதங்கள்
வணக்கம் ஜெ
தொடர்ந்து நகைச்சுவை பற்றி எழுதிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.
சென்ற வருடம் உலகம் வீடுறைவில் இருந்தபோது அச்சோர்விலிருந்து மீள பல ஆன்லைன் போட்டிகள் விளையாட்டுகள் நடத்தபட்டன. லண்டனின் தி நேஷனல் கேலரி அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ப்பெற்ற ஓவியங்களை பகடி செய்து அனுப்பசொல்லியிருந்தனர். நான் கரவாஜ்ஜியோவின் ஒரு ஓவியத்தை இப்படி அனுப்பியிருந்தேன். சலோமிடம் ஜான் பேப்டிஸ்ட்டின் வெட்டிய தலையை ஒரு அகலமான தட்டில் வைத்து கொடுப்பர். ‘புரியாத மொழியில் எழுதப்பட்ட
மெனுவிலிருந்து ஆர்டர் செய்தால் இப்படித்தான்’. இதை அவர்கள் பக்கத்திலும் பகிர்ந்திருந்தனர்.
இவ்வகையான ஒரு நகைச்சுவை, நம் கடவுள்களை பற்றியோ மதம், மரபை பற்றியோ செய்தால் அதை ஒப்புக்கொள்வார்களா தெரியவில்லை. சிறுவயதில் எனக்கு பிடித்த ஒரு விளம்பரம், இராவணணின் பத்து தலையிலும் வலி மற்றும் ஜலதோஷம் பிடித்து அவதிப்படுவார்; தைலம் தடவியப்பின் சரியாகிவிடும். ஒரு சிறுவனின் மனதுடன் பார்த்தால் அது நல்ல நகைச்சுவை. ஆனால் அந்த விளம்பரத்திற்கு எதிர்வினைகள் வந்ததை பின்னர் அறிந்தேன்.
அதே சமயம், ரிக்கி ஜெர்வேய்ஸ் என்ற பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ஒரு அமெரிக்க விருது விழாவில் சொன்னது அமெரிக்கா முழுதும் பேசுபொருளாகியது. விழா முடிவில் ஒவ்வொருவருக்காக நன்றி சொல்லி வந்து இறுதியில், “நன்றி, கடவுளே, என்னை நாத்திகராக்கியதற்கு” என்று கூறி முடித்தார். அமெரிக்காவின் சில சர்ச்சுகள் ரிக்கி ஜெர்வேய்ஸிர்காக சிறப்பு பிரசங்கம் நடத்தின.
கமலின் விஸ்வரூபம் படத்தில் ஒரு காட்சி: விஸாமின் மனைவியை அமெரிக்க காவலர் இன்டராகேட் செய்வார். அப்போது “உன் கடவுளும் அல்லாவா?” என அக்காவலர் கேட்பார்.
“அது என் கணவரின் கடவுள். என் கடவுள்…அவருக்கு நான்கு கைகள் இருக்கும்,” என மனைவி சொல்வார்.
“நான்கு கைகளா? நான்கு கைகள் உள்ள கடவுளை எப்படி சிலுவையில் அறைவீர்கள்?”
“எங்கள் கடவுளை சிலுவையில் அறையமாட்டோம்.”
“பின்னே?”
“கடலில் மூழ்கடித்துவிடுவோம்.”
ஸ்ரீராம்
வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,
இன்று தளத்தில் வந்த உங்களின் கல்வி குறித்த நகைச்சுவை கட்டுரையை படித்து, சிரித்து, வயிறு புண்ணாகிவிட்டது.
அப்படியே ஒரு நாற்பது ஆண்டுகள் பின்னாடி போய் என்னுடைய ஆரம்பப் பள்ளி நாட்களை அசை போட்டுக் கொண்டேன். அன்றைய நாட்களில் நமக்கெல்லாம் இருந்த சுதந்திரம் கூட இன்றைய பள்ளிக் குழந்தைகளுக்கு இல்லை என்பதே வேதனை. இதில் இந்த ஆன்லைன் படிப்பு என்பது அவர்களின் மீதான மிகப் பெரிய சாபக்கேடு.
பள்ளி என்பது வெறும் கல்விக்கூடம் மட்டுமல்ல வாழ்க்கை அனுபவத்தை பயில்வதற்கான ஒரு பயிற்சிக் களமும் கூட. இன்றைய ஆசிரியர்களும் கல்வித் தந்தையர்களும் இதை சுத்தமாக மறந்துவிட்டார்கள் போலும். ஆட்டுமந்தை போல அடைத்துவைத்து கல்வி என்ற பெயரில் எதை எதையோ திணிக்கிறார்கள்.
உங்களைப்போலவே எனக்கும் பல உன்னதமான ஆசிரியர்கள் ஆரம்பப் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கிடைத்திருந்தார்கள். பொறியியல் கல்லூரியில் வாய்த்த ஆசிரியர்கள் எல்லோரையும் உன்னதக் கணக்கில் எல்லாம் வைக்க முடியாது. ஆனாலும் அதிலும் கூட ஒருசில விதிவிலக்குகள் இருக்கவும் செய்தன.
இலக்கிய மற்றும் கலை ஆர்வம் உள்ள நம்மைப் போன்ற கிறுக்கல்லாத கிறுக்குகளை அந்த இளவயதில் சமாளிப்பது ஆசிரியர்களுக்கு உண்மையிலேயே பெரும்பாடுதான்.
என்னுடைய பதினோராம் வகுப்பில் சுதந்திர தினத்தன்று பள்ளி இலக்கிய மன்ற பேச்சுப் போட்டியில், எங்கே உள்ளது உண்மையான சுதந்திரம் என பேசத் துவங்கி, உண்மைச் சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்பது கள்ளுக் கடைகளிலும் விபச்சார விடுதிகளிளும் மட்டுமே உள்ளது, எனவே அவற்றை ஜாதி மத பேதமற்ற உணர்வை வளர்க்கும் பொருட்டு நான் ஆதரிக்கிறேன் என பேசப் போக தலைமையாசிரியர் என்னை தனியாக அழைத்து டின் கட்டிவிட்டார். வகுப்பில் முதல் மாணவன், மற்றும் மிக நன்றாக படிக்கின்ற மாணவன், ஒரு ஆசிரியரின் மகன் என்கின்ற காரணத்தால் அன்று என்னை சும்மா விட்டார்கள்.
அதற்கு அடுத்த இலக்கியக் கூட்டத்தில் தலைமையேற்று காணாமல்போன தலைமையாசிரியர் அவர்களே என எனது நண்பன் ஒருவன் பேசப் போக அவனை இரண்டு வாரம் பள்ளியை விட்டு தூக்கி விட்டார்கள். அதன்பிறகு பேச்சுக்களை எழுதி தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கிய பிறகே பேச வேண்டுமென சட்டம் எல்லாம் போட்டு, எங்கள் இலக்கிய வானில் நாங்கள் சுதந்திரமாக பறக்க முடியாதபடி வலை கட்டி விட்டார்கள்.
பன்னிரண்டாம் வகுப்பில் நாட்டு நலப்பணி திட்டத்தில் பத்துநாள் முகாமாக ஒரு அருகாமை கிராமத்தில் இருக்கின்ற பழமையான சிவன் கோயிலை தூய்மை செய்வதற்காக 30 மாணவர்கள் அந்தக் கோயில் வளாகத்திலேயே முகாமிட்டு இருந்தோம். தினந்தோறும் இரவில் மூன்று மணி நேரம் கலை நிகழ்ச்சிகளின் கொண்டாட்டம். அந்த கிராமத்து மக்கள் எல்லாம் கூடிவிடுவார்கள் எங்கள் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு. தினம் ஒரு நாடகம் என பத்து நாட்களுக்கு பத்து வகையான நாடகங்களை இயற்றி ஒரு ஐந்து நண்பர்கள் நடித்து அரங்கேற்றிக் கொண்டிருந்தோம். என்னுடைய இலக்கிய கைவண்ணத்தை காட்டுவதற்கு அது ஒரு பெரும் வாய்ப்பாக இருந்தது. கொஞ்சம் ஆர்வக்கோளாறு காரணமாக, பத்தாவது நாள் நாடகத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்த ஒரு நாடகத்தை இயற்றி கொஞ்சம் காரசாரமாக வசனங்களை எழுதி நானே கதாநாயகனாக நடித்து வீராவேசமாக பேசினேன். என்னுடைய போறாத காலம், நான் வைத்திருந்த வசனங்களின் காரணமாக உயர் ஜாதி மற்றும் கீழ் ஜாதி என இரண்டு ஜாதி மக்களும் எங்கள் குழுவிற்கு எதிராக திரும்பி பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. அந்த ஊரில் ஏற்கனவே ஆந்திர ராஜூகளுக்கும் ஆதிதிராவிட பறையர் இன மக்களுக்கும் நீண்டகால ஜாதி பிரச்சனை பெரிய தகராறு ஆக இருந்துள்ளது. அங்கே காதல் கலப்புத் திருமணம் காரணமாக வெட்டுக்குத்துகளும் நடந்துள்ளன. இதை அறியாமல், நான் பாட்டுக்கு ஏதோ நாடகம் எழுதி கலப்புத் திருமணத்தை ஆதரிக்க போக நிலைமை சிக்கலாகிவிட்டது. ஒருவழியாக சமாளித்து மீண்டோம். இளமைக் காலங்கள் எவர் வாழ்விலும் பொற்காலங்கள் தானே! அதுவும் உங்களைப் போன்ற படைப்பாளிக்கு அது கற்பனைகளின் தங்கச்சுரங்கம் அல்லவா?
எங்கள் பள்ளியில் எங்களைப் பொருத்தவரை ஒரு ஆசிரியருக்கும் உண்மை பெயர் கிடையாது. நாங்கள் பெயர் வைக்கின்ற விதங்களும் எளிதில் அறிய முடியாதது. உதாரணத்துக்கு சில பெயர்கள், பசி வாத்தி, பட படா, ஆகவே எனவே, You See, சென்ட், கைமுட்டி, கார பக்கோடா, கார் முகில், சைடு பார்வை, மினுக்கி, வாத்து முட்டை, மோட்டார் மூக்கி, extra fitting, போண்டா கோழி, பொடி, என பலப்பல. இவற்றிற்கெல்லாம் காரணம் நான் எழுதினால் நீங்கள் என்னுடைய இமெயில் முகவரியை குவாரண்டைனில் போட்டு விடுவீர்கள். அப்புறம் என் கடிதங்களை தளத்தில் பார்த்து ஆனந்தப் படுகின்ற அந்த ஆனந்தம் இல்லாமல் போய்விடும். ஆனந்த் சுவாமி என்ற எனது பெயரை நானே கெடுத்துக் கொண்டதாகவும் ஆகிவிடும். ஆகவே அவற்றுக்கான ஊகங்களை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
இந்த சில நாட்களாக நீங்கள் எழுதிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு பகடைப் பதிவும் வெகு அற்புதம். அதுவும் அந்த மெய்யியல் குறித்த பதிவுகள் வேற லெவல். எம்மை எல்லாம் சிரிக்க வைத்து, மூளை கொதிக்க முயன்று சிந்திக்கவேண்டிய அவசியமே இல்லாமல், எங்களுக்கெல்லாமும் சேர்த்து சிந்திப்பதற்கு என உங்களை கொடுத்த எல்லாம் வல்ல பெருங்கருணைக்கு மிகவும் நன்றி!
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
விஷ்ணுபுரம் கடிதம் – கார்த்திக்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
கடந்த ஏப்ரல் மாத நற்றுணை கலந்துரையாடலுக்கு பிறகு விஷ்ணுபுரம் நாவலை இரண்டாம் முறை வாசித்தேன். அந்த அனுபவத்தை உங்களிடம் முடிந்த வரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் :)
ஸ்ரீபாதம்
முதலில் விஷ்ணுபுரநகர், கோவில், மூல விக்ரகம், அதன் கோபுரங்கள் மற்றும் சோனா நதியின் வர்ணனையே திகைப்பூட்டுவதாக இருந்தது. அதை படித்துவிட்டு சிறுது நேரம் நகரின் விரிவை கற்பனை செய்ய முயன்றேன். அடுத்ததாக கதையில் உள்ள பல்வேறு விதமான கதாபாத்திரங்கள் என்னை மிகவும் ஈர்த்தது. பிங்கலன், திருவடி, சங்கர்ஷணன், சாருகேசி, லலிதாங்கி, லட்சுமி, வல்லாளன், ஆழ்வார், வீரநாராயணர், நரசிங்கர் என எத்தனை விதமான கதாபாத்திரங்கள்!! இவர்களில் குறிப்பாக சிந்திக்கும் மனது உடையவர்களான பிங்கலன் மற்றும் சங்கர்ஷணனின் அலைக்கழிப்பை மிக நன்றாக உணர முடிந்தது. இவை தவிர்த்து சிரவண மகாபிரபு மற்றும் அக்கார அடையின் வாடையை வெறுக்கும் வீமன் ஆகியோரும் நினைவில் நீங்காமல் உள்ளனர். ஆனால் வீரன் யானையின் மரணம் தான் வலி மிகுந்த அனுபவமாக இருந்தது.
அடுத்ததாக இவ்வளவு பெரிய நகரின் நிர்வாகத்தில் உள்ள அரசியல் விளையாட்டு மிகத்தெளிவாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. சூர்யதத்தருக்கும் பாண்டியனுக்கும் இடையில் நடக்கும் ஈகோ போர், வல்லாளனின் தந்திரங்கள், அதில் அவன் அடையும் பின்னடைவு, திருவடி ஆழ்வார் ஆன பின்பு அவனை(அவரை) பயன்படுத்த நினைக்கும் பீதாம்பரம் மாமா என அந்த விளையாட்டு நீள்கிறது.
மேலும் இதில் உள்ள mystical ஆன அம்சம் பெரும் வசீகரிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நகர் வாசிகளே தாங்கள் ஒரு பாணன் சொல்லும் கதையின் ஒரு பகுதி என அவ்வப்போது உணருவது. அந்த மூல விக்கிரகம் பற்றிய ஒவ்வொரு கதையுமே பெரும் பரவசத்தை அளித்தது. சித்திரை, சிற்பி ப்ரசேனர் மற்றும் மஹாகாஷ்யபர் ஆகியோரின் ஆளுமையில் உள்ள மர்மம் அவர்கள் மீது பெரும் ஈர்ப்பை உண்டுபண்ணியது. மஹாகஷ்யபர் எப்படி அவ்வளவு ஆண்டு வாழ்கிறார் ? அவருடன் ஒட்டி இருக்கும் அந்த இளைஞனுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன.
கௌஸ்தூபம்
இந்த பகுதியில் வரும் ஞானசபை விவாதத்தின் மூலம் நமது மரபில் உள்ள பல்வேறு தரிசனங்களை அறிய முடுந்தது. “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ” நூலில் படித்த விஷயங்கள் இந்த விவாதத்தின் மூலம் இன்னும் தெளிவு பெற்றது. அத்துடன் பௌத்த தரிசனம் பற்றிய புரிதலும் ஏற்பட்டது. ஒவ்வொரு ஞானகுருவும் தன் தரிசனத்தை முன்வைக்கும் போது அந்த தரிசனம் தன் அளவில் சிரியானது என்றே என்னால் உணர முடிந்தது.
ஊட்டுப்புரை நிகழ்வு பற்றிய வர்ணனை பெரும் புன்னகையை வரவழைத்தது. எனது சொந்த அனுபவத்தில் இருந்து அது உண்மை தான் என்பதை உணரவும் முடிந்தது. ஞானசபையில் உள்ள பலருக்கு அந்த விவாதங்கள் புரியாமல் இருப்பதையும் அவர்களின் அகங்காரத்தையும் நீங்கள் குறிப்பிடாமல் இல்லை.
சித்தனுக்கும் காஷ்யபனுக்கும் உள்ள குரு சீட உறவு நெகிழ்வூட்டுவதாக இருந்தது. அதில் எவ்வளவு அன்பு !! குட்டி காஷ்யபனை உங்கள் வர்ணனைகள் மூலமாக கற்பனை செய்து பார்ப்பதே மகிழ்ச்சி தருவதாக இருந்தது. அதிலும் குறிப்பாக அந்த நடனம் மற்றும் அதை ஒட்டிய சித்தனின் பாடல் பெரும் கிளர்ச்சியை அளித்தது.
மணிமுடி
இந்த பகுதியில் நீங்கள் படிப்படியாக அந்த பெரும் பேரழிவை நோக்கி இட்டுச்சென்ற விதம் மிகவும் கவர்ந்தது. விஷ்ணுபுரநகர் முழுக்க வஞ்சகமும், கசப்பும், சோர்வும் நிறைந்த மக்களே உள்ளனர். ஊரே பெரிய இடிபாட்டுக் குவியலாய் கிடக்கிறது. அந்த பாம்பு இறக்கும் விதமும், பறவைகள் கூட்டமாக கோட்டை சுவற்றில் மோதுவதும் பிறகு அவற்றின் உடலை மாபெரும் மீன்கள் உண்பதும் ஒரு பயம் கலந்த mystical அனுபவமாக இருந்தது. விஷ்ணுபுரத்தின் கடைசி மஹாவைதிகன் பற்றிய சிற்பமும் அந்த வினோத மிருகம் பற்றிய தொன்மமும் அந்த அனுபவத்தை மேலும் விரிவாக அளித்தது.
இந்த நிலையிலும் தேடல் கொண்டவர்கள் நகரில் இருக்கிறார்கள். பத்மன், பாவகன், யோகாவிரதர் போன்றோர் பிங்கலனும் சங்கர்ஷணனும் அனுபவித்த அதே அலைக்கழிப்பை அனுபவிக்கிறார்கள். அவர்களின் உரையாடல் மூலமாக தொன்மம் உருவாகும் சிக்கலான முறையையும் உணர முடிந்தது. சூர்யதத்தர் தொன்மத்தால் தெய்வ அம்சம் நிறைந்தவராக சித்தரிக்கப்படுகிறார். கோபிலர் சங்கர்ஷணன் மற்றும் திருவிக்ரமரின் காவியங்கள் காலப்போக்கில் ஒன்றாகின்றன. அத்ரி சுமந்திரர் போன்றோர் பின்னாளில் பெரும் ஞானாசிரியர்கள் ஆனது பெரும் வியப்பை அளித்தது.
மனித மனத்தின் நுண்ணிய தளங்களையும் மிக அழகாக சித்தரித்திருந்தீர்கள். இறக்கும் தருவாயில் மஹாவைதிகருக்கு வேததத்தன் மீது அன்பும் பத்மன் மீது கசப்பும் எழுவது, பாட்டியை கைவிட்டுச்செல்லும் ப்ரியையின் குடும்பம், திருவடி மடத்தின் சீடனின் ஒரு வித வஞ்சகம் கலந்த விவேகம் ஆகியவை உதாரணங்கள். ஆனால் நீலி மட்டும் உயிர் துடிப்புடன் இருக்கிறாள். இறுதியில் அவளே தெய்வம் ஆகி தன் தோழிகளை மீட்கிறாள்.
நாகர்கோவிலில் மே மாதம் நிலவிய வானிலை மற்றும் ஊரடங்கினால் நிலவிய அமைதி இந்தப்பகுதியை படிக்க மிக உகந்ததாய் இருந்தது. கடைசி chapter ஐ முடித்ததும் பெரும் வெறுமையே மனதில் நிறைந்தது. ஆனால் அடங்கலில் கிரீஷ்மன் பாணன் மீண்டும் கதை சொல்ல ஆரம்பித்ததும் எல்லாம் கால சுழற்சியின் ஒரு பகுதியே என்ற ஆசுவாசமும் ஏற்பட்டது.
விஷ்ணுபுரம் பற்றிய உரையாற்றிய சீனு அவர்களுக்கு மிக்க நன்றி. முதல் வாசிப்பை விட இரண்டாம் வாசிப்பில் நிறைய கிரகிக்க முடிந்ததற்கு அவரின் உரையே காரணம். மே மாத கலந்துரையாடலுக்கு பிறகு கொற்றவையை இரண்டாம் முறை வாசிக்க எத்தனித்துள்ளேன். விரைவில் வெண்முரசையும் ஆரம்பிக்க வேண்டும்.
இந்த முறை கிருஷ்ணன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. ஆனால் அதை விட மிக பிரம்மாண்டமான ஸ்ரீபாத விழாவை அனுபவிக்க வைத்ததற்கு மிகவும் நன்றி.Lockdown முடிந்தவுடன் திருவட்டாறு கோவிலுக்குச்செல்ல வேண்டும்!!
அன்புடன்
கார்த்திக்
கிருஷ்ணன்கோவில், நாகர்கோயில்
விஷ்ணுபுரம் பற்றி சரவணன் சந்திரன்
ஒளி,நீலம் – கடிதங்கள்
ஜெ,
இது வரை எழுதாத அளவிற்கு ஒரு நீண்ட கடிதம், ஒரு நாடகத்திற்கு எழுத வேண்டுமா என தோன்றினாலும், இவ்வகை உரையாடல்கள் மூலமாக தானே படைப்புகளின் பல்வேறு பரினாமங்களும், முழு சாத்தியங்களும் வெளிப்படுகின்றன…
பல வருடங்களாக அலுவலக வாழ்வின் வாழ்வின் ஒரு பகுதியாகவும்… ஒரு வருடமாக அலுவலகமாகவும் மாறியுள்ள காணொளி ஊடகம் திடிரென ஒரு மேடையாக உருமாறிய பிரமிப்பு அகலும் முன்பே நாடகம் என்னை உள்ளிழுத்துக்கொண்டது…
சூம் போன்ற செயலிகளில் மெய்நிகர் பின்னனி அமைப்புகள் கொண்டு வேறு இடத்தில் இருப்பதாக ஒருவர் காட்டிக்கொள்ள முடியும்… அப்படி எதுவும் இல்லாமல், நடிகர்கள் தங்கள் அறைகளையே மேடைகளாக மாற்றி, ஒளி அமைப்பு உட்பட கச்சிதமாக அமைத்திருந்ததால் இணைய சந்திப்பு என்ற பிரக்ஞையே எழவில்லை… யார் எந்த திசை நோக்கி அமர்வது… யாருக்கு close shot, யாருக்கு தொலைவாக என அனைத்து நுணுக்கங்களையுமே சரியாக அமைத்திருந்தார் இயக்குநர்.
சூம் செயலி பேசுபவரை, தானே, காட்டும் என்றாலும், ஒருவர் பேசத்தொடங்கிய பின், அவர் பேசுகிறார் என உணர்ந்து திரையை மாற்றும்… எனவே பெரும்பாலும் ஒருவரின் வசனம் முடிந்து சில நொடிகள் அவரது பாவனைகளை காட்டி, மற்றவர் பேசத்தொடங்கிய பின் அவரது முகத்தை காட்டியது. இது வழமையான தொகுப்பித்தலுக்கு மாறாக புதுமையாக இருந்தது, நாடகத்திற்கு இயல்புத்தன்மையை கூட்டியது…
நண்பர்களின் தேர்ந்த நடிப்பு, லாவகமான உடல் மொழி பேன்றவற்றை பலரும் பாராட்டி இருந்தனர். பொதுவாகவே நடிப்பில், குறிப்பாக நாடகங்களில், ஏற்படும் சிக்கல்கள் வசனங்களை மறந்து விடுதல், மற்றவர்கள் முடிக்கும் முன்பே தனது வசனங்களை தொடங்கி விடுதல் போன்றவை. சில சமயம் ஒரு வசனத்திற்கு பதில் அதற்கு அடுத்த வசனத்தை கூறிவிட்டால், நாடகத்தின் ஒரு பகுதி விட்டுப்போய்விடும். அதற்கு ஏற்றார் போல் மற்ற நடிகர்கள் தங்கள் வசனங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். முக்கியமாக இவற்றில் எதோ ஒன்று நிகழ்ந்தது என்பது அவர்களின் நடிப்பில் வெளிப்பட கூடாது. இந்த தடைகள் ஏதும் இல்லாமல் நண்பர்கள் நிபுணத்துவமான நடிப்பை வெளிக்காட்டினர்.
ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, ‘ஒளி’ கூறுவது என்ன??
இந்த நாடகம் இயல்பாகவே சில படிநிலைகளை கொண்டுள்ளது … அங்கு அடைப்பட்டபின் அவர்கள் எப்படி உணர்கிறார்கள், அந்த சூழல் அவர்களுக்குள் என்ன மாற்றங்களை உண்டாக்கியது… அவர்கள் தங்கள் தனித்தன்மையால் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்.. அங்கிருந்து வெளியேறுவதை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்… அங்கு எதற்காக அடைக்கப்பட்டார்கள்… வெளியே இருக்கும் சமுகத்தை குறித்து என்ன நினைக்கிறார்கள்.. பிரபாகர் முன்வைக்கும் ஒளி மீது அவர்களால் எவ்வளவு நம்பிக்கை வைக்க இயல்கிறது என்ற கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டே நாடகம் முன்னகருகிறது. இந்த படிநிலைகளை வைத்தே ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அனுக முயன்றேன்.
ஆனந்த்.. மற்றவர்களை விட வித்தியாசமானவர்… மனிதர்களுக்கு தானே எல்லை, மலைகளுக்கு ஏது எல்லை என யோசிக்கிறார்… எல்லைகளை கடந்து வாழ்கிறார்… சிறையை விட்டு வெளியேறுவது குறித்த எந்த எதிர்பார்ப்பும் அவரிடம் இல்லை.. சிறை அவரை மாற்றியது என்பதற்கும் எந்த குறிப்பும் இல்லை. சிறையின் சுவர்களை அவர் பொருட்படுத்தவில்லையோ என்ற எண்ணம் தான் எழுகிறது. மலையேற்றம் குறித்து எழுதுவதை தொழிலென கூறும்பொழுதே சமூகத்தின் எல்லைகளை கடந்தவர் என அறியலாம்.. இந்த கட்டிட எல்லைகளா அவரை சிறைபடுத்தும்?
சுதந்திரம் குறித்து பேசும்பொழுதும் தர்க்கபூர்வமாகவே அதை அணுகிறார். அதன் சாத்தியங்களை கேள்வி கேட்கிறார். தனக்கான சுதந்திரம் என அவர் யோசிக்கவில்லை… பெருங்கனவுகள் கொண்டவனாகவும், அவநம்பிக்கையின் நாவுகள் தீண்டாதவனாகவும் இருக்கிறான்.
ரீனா.. நகைச்சுவை உணர்வு கொண்ட துடிப்பான பெண்.. கலைக்கு கட்டுப்பாடு இல்லை என நம்புகிறாள்… சிறை அவளுக்கு உண்மையான விடுதலை என்பதென்ன என காட்டுகிறது. சுதந்திரத்தை நம்புகிறாள்.. மக்களுக்கு அது புரியவில்லை என எணனுகிறாள்… மக்களிடம் அதை கொண்டு சேர்க்க என்ன செய்யமுடியும் என யோசிக்கிறாள். சிறையில் அவள் கண்டடைந்த சுதந்திரம் அவளை உயிர்ப்புடனும், நம்பிக்கையுடனும் வைத்திருக்கிறது.
முகுந்தன், இயல்பாக நாம் அனைவரும் தொடர்புருத்தும் கதாபாத்திரம். ஆசைகள் எதிர்பார்ப்புகள் அற்றுப்போய், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்ற புரிதலுக்கு வந்த மனிதன். புதிய சாத்தியங்கள் தென்படும் போதும், இதனால் என்ன பயன், ஏமாற்றம் தானே எஞ்ச போகிறது என நினைக்கிறான். கனவுகளின் இடையே நாம் தனிமையில் இருக்கிறோம் என்ற யதார்த்தத்தின் குரலாய் ஒலிக்கிறான். சுதந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை, ஆனால் மக்கள் எப்பொழுதோ அடிமையாக தொடங்கிவிட்டார்கள் என சமாதனம் செய்துக்கொள்கிறான்.
பிரபாகர்.. ஒளி ஏந்தி வருபவன்… தனியன்… தன் தனிமையை எதுவும் மாற்றாது என அறிதிருப்பவன்… தனியன் என கூறிக்கொண்டாலும் அந்த தனிமைக்கு மற்றவர்களும் அவசியம் என அறிந்தவன்… யாருமில்லாத இடத்தில் தனித்திருப்பதற்கு என்ன பொருள்?! “Sometimes you protest just to register a public objection to policies you have no hope of changing” வெல்லவில்லை என்றாலும், அடக்குமுறைக்கு எதிராக ஒரு குரல் எழுந்தது என வரலாற்றில் பதிவதற்காகவேனும் குரல் எழுப்ப வேண்டும் என்று நம்புபவன். வெளியே உள்ள சூழலில் தன்னால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என உணர்ந்தாலும், அதில் உழலாது தனியாக இருக்க வேண்டும்… சுதந்திரத்தின் குறியீடாக தன் வாழ்க்கை இருக்க வேண்டும் என விரும்புகிறான், வாழ்கிறான். இங்கு சிறைக்கு வந்தபின்.. மற்றவர் போலவே அங்கு அடைந்திருந்தால் அவனது வாழ்க்கை அர்த்தமிழந்து போகும். அப்படி வாழ்ந்தால் சுதந்திரத்தை கைவிட்டவனாவான்.அவனது குரல் வெளியே கேட்காது எனும் பொழுது, உள்ளிருப்பவர்களிடம் பேசுகிறான்… சுதந்திரத்தின் விதைகளை எழ செய்கிறான்.
அனைத்தையும் ஏற்று வாழும் உலகில், குகையில் வாழ்வதன் மூலமாகவே எவரும் நிராகரிக்க இயலாதவனாக இருக்கிறான். இங்கு சிறையில், சுதந்திரம் பற்றிய பேச்சுகள் சலித்துப்போன சூழலில், தனது மரணத்தின் மூலம் மட்டுமே தனது தரப்பை நிராகரிக்க இயலாததாக மாற்ற முடியும் என உணர்ந்து செயல்படுகிறான். தான் இல்லாமல் போவதால் மட்டுமே அச்சூழலில் சுதந்திரத்தின் குறியீடாக தான் நிலைக்கமுடியும் என முடிவு செய்கிறான். லட்சியவாதி என்ற ஒரு வார்த்தை அவனை விவரிக்கும்.
சேகர்… இவர்கள் அனைவரிடமிருந்தும் மாறுபட்டவன். சுதந்திரத்திற்காக இல்லாமல் காழ்ப்பையும் கசப்பையும் கக்கியதால் சிறை வந்தவன். வெளியேறுவது குறித்து எந்த நம்பிக்கையும் இல்லாதவன். இன்னும் நீண்ட நாள் வாழக்கூட மாட்டேன் என எண்ணுபவன். பிரபாகரின் நம்பிக்கை வார்த்தைகளை அவநம்பிக்கையால் எதிர்கொள்பவன். பகடியால் அனைத்தையும் கடந்துசெல்ல முயல்கிறான்.
ஆனால் அவன் தான் பிரபாகரின் விதைகளுக்கு வடிவமளிக்கிறான். தனது அக நம்பிக்கையிலிருந்து பிரபாகர் முன்வைப்பவற்றை வரலாற்றில் பொருத்தி பார்கிறான்.
இவ்விரண்டையும் இணைத்து பார்க்கையில் கிடைக்கும் சித்திரம் ஆர்வமூட்டுவது. நம்பிக்கை கொண்டவனால் தான் நம்பிக்கை இழக்க முடியும். ஒரு மாபெரும் கனவை நம்பி, அதைப்பற்றி பேசி அதற்காகவே தன் வாழ்வை அர்பணித்தவன், ஒளி மிக்க எதிர்காலத்திற்காக தனது நிகழ்காலத்தை விட்டுக்கொடுத்தவன்.அவர்கள் வாக்களித்த எதிர்காலத்திலும் ஒரு தலைவனுக்கு அடிமையாக இருக்க நேரும் அபத்தம், அவனது முழு வாழ்வையும், நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது. அனைத்தையும் கேள்வி கேட்கிறான். அவநம்பிக்கையாளன் ஆகிறான்.
ஆனால் அவன் முன், தன் ரத்தத்தால் பிரபாகர் அடிகோடிட்ட ஒளியை சேகர் எப்படி எதிர்கொள்வான்?
எனக்கென்னவோ, தன்னை முன் வைத்த தலைவர்களுக்கு மத்தியில், தன்னை மாய்த்து கருத்தை முன்வைக்கும் பிரபாகர் சேகரை மீண்டும் நம்பிக்கை கொண்டவனாக மாற்றுவான் என்றே நினைக்கிறேன். சேகர் மீண்டும் பேசி பேசி பிரபாகரை சரித்திரத்தில் நிறுத்தினாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.
இந்த ஒரு கட்டமைப்பு கிடைத்தவுடன், அந்த ஒரு நாளுக்கு முன், பின் என அந்த ஐவரும் நம்முள் வளர்ந்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க. இந்த நாடகம் என்னுள் விட்டுச்செல்லும் கேள்விகள் இரண்டு
1) பாஸிசம், தனி மனித வழிப்பாடு போன்றவற்றை கொண்டு சமகாலத்துடன் இதை இணைத்து பார்க்கிறார்கள். ஆனால், உண்மையில் இன்று அரசுக்கு எதிராக எழும் குரல்களைப்போல் தானே அந்த புரட்சியும் அன்று இருந்திருக்கும்? ஒரு மக்கள் அமைப்பு, எந்த புள்ளியில் திசை மாறுகிறது? தனிமனிதன் சார்ந்த இயக்கமாக மாறுகிறது? கனவுகள் ஏன் மறக்கப்படுகின்றன? எதை நம்பி இன்று ஒருவன் மக்கள் எழுச்சியில் பங்கேற்க முடியும்? வரலாற்றில் திரும்ப திரும்ப எழும் இந்த கேள்விகளை பின் தொடரும் நிழலின் குரல் நாவல் மேலும் விரிவாக பரிசீலிக்கிறது என எண்ணுகிறேன். (என்னால் இன்னும் அந்த நாவலுக்குள் நுழைய இயலவில்லை)
2) பிரபாகர் விட்டுச்செல்வது ஒரு விதை… ஒரு கனல். அது வளருமா? எப்படி வளரும்? என்ன ஆகும்? புரட்சி மூலம் அமைந்த அரசை எதிர்த்து இன்னொரு புரட்சி வெடிக்குமா? இந்த சுழற்சி எங்கு நிறைவடையும்? Ideal உலகம் சாத்தியம் தானா?
ஒட்டுமொத்த பார்வையில் இவற்றை முன் வைத்தாலும், இதை தாண்டியும் பல விஷயங்களை தொட்டுச்செல்கிறது இந்த நாடகம்… தனது வாசகர் தான் தேடி வந்துள்ளானோ என எண்ணும் சேகர், ஒருவன் என்னை நினைவில் வைத்திருந்தால் போதும் வரலாற்றில் வாழ்வேன் என குறிப்பிடுவது, வரலாற்றில் இவ்வளவு காலம் அழியாமல் இருப்பது மதம் மட்டுமே, அனைவரையும் ஏற்கசெய்யும் தர்கம் எதுவும் இல்லை என பல. இவை ஒவ்வொன்றைக்குறித்தும் விரிவாக பேசிக்கொண்டே செல்லலாம்.
ஒன்றுமில்லை என நாம் எண்ணும் வெள்ளை ஒளி, பட்டகத்தில் பட்டதும் பல்வேறு வண்ணங்களாக முடிவற்று விரிவது போல்… இந்த சிறு நாடகம் வாசிக்க வாசிக்க விரிவடைந்துக்கொண்டே இருக்கிறது… இதை முழுவதுமாக பேசி முடிப்பது சாத்தியமா என தெரியவில்லை.
(எனது புரிதலில் over reading / தவறான வாசிப்பு இருந்தால் அவசியம் சுட்டிக்காட்டவும்)
அன்புடன்
லாஓசி
அன்புள்ள ஜெ
ஒளி நாடகம் சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியது. நாம் சென்ற ஐம்பதாண்டுகளாக மதம், அமைப்பு, நம்பிக்கை,சடங்குகள் ஆகியவற்றை எதிர்மறையாகவே பார்க்கப் பழகிவிட்டிருக்கிறோம். அதெல்லாம் இல்லாத ‘பகுத்தறிவுள்ள’ உலகத்தைக் கனவுகாண்கிறோம்.
இந்நாடகம் மதம்தான் நீடிக்கும் அமைப்பு. நம்பிக்கையுடம் சடங்குகளும்தான் உண்மையில் ஒரு நிலையான மாற்றத்தை உருவாக்கக்கூடியவை. மற்றவை வெறும் அறிவுப்பயிற்சிகள் என்று சொல்கிறது. அந்த எதிர்க்குரல் மிக முக்கியமானது. இன்றைய சூழலில் யோசிக்கவேண்டிய ஒன்று
ஆர்.குமார்
அன்புள்ள ஜெ
நீலம் பகுதியை சுபஸ்ரீ நடித்தது மிக அழகாக இருந்தது. புகைப்படம் வந்ததுமே யதார்த்தபாணி ஓவியமான லேன்ஸ்கேப், போர்ட்ரெயிட் இல்லாமலாகியது. ஆனால் புகைப்படம் ஓர் எல்லைக்குச் சென்று அதன் உச்சம் என்ன என்று தெரிந்ததுமே போர்ட்ரெயிட், லேன்ஸ்கேப் ஓவியம் திரும்பி வந்துவிட்டது. அதேபோல நாடகமேடையில் ஸ்டைலைஸ்ட் நடிப்பு, நீண்ட வசனம் கொண்ட dramatic monologue எல்லாம் யதார்த்தபாணி ஸ்டனிஸ்லாவ்ஸ்கி [ Stanislavski] பாணி நடிப்பால் மறைந்தது. ஆனால் இன்று சினிமா என்பது யதார்த்த நடிப்பின் எல்லா சாத்தியங்களையும் பார்த்துவிட்டது. ஆகவே நாடகம் திரும்பவும் டிரமாட்டிக் மொனலாக், rhetoric காலத்துக்கு திரும்பிப்போகவேண்டியிருக்கிறது. அது பெரிய ஒரு அனுபவமாக இருக்கிறது. நீலத்தின் அழகான வசனங்களை உணர்ச்சியுடன் கேட்பது ஓர் அரிய அனுபவமாக உள்ளது
கிருஷ்ணகுமார்
அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்
உலகத்தால் கைவிடப்பட்டதான பாவனை அல்லது எல்லாப் பெண்களாலும் காதலிக்கப்படுவதாக ஒரு ஃபேண்டசி அல்லது தானும் இளைஞன் எனக்காட்டிக் கொள்ளும்பொருட்டு சிலர் எழுதும் போலி எழுத்துகள் என சமகால கவிதைகள் சற்று அலுப்பூட்டினாலும் நமக்கையூட்டும் சில நல்ல கவிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .
அப்படி நம்பிக்கையூட்டும் கவிஞர்களில் ஒருவர்தான் ” மதார் “இவரது வெயில் பறந்தது கவிதை நூல் பரவலான வரவேற்பைப் பெற்ற நூலாகும்.போலித்தனமற்ற சிடுக்குகளற்ற இயல்பான குரலில் இக்கவிதைகள் அமைந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.
விழிப்புணர்வுடன் இருந்தால் காற்றில் பறக்கும் சிறு இலை கூட அரிய மெய்ஞான தரிசனம் அளித்து விடும் என்பார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.ஒரு கவிஞன் அன்றாட சம்பவங்களில்கூட இந்த அரிய கணத்தை கண்டு கொள்கிறான
பலூன் இளைக்கும்போது கேட்கிறது
அகக்காற்றை அழைத்துப் போகும்
புறக்காற்றின் அவசரம்
என்று ஒரு கவிதை.
ஒரு கணத்தை ஒரு தருணத்தை படம் பிடித்துக் காட்டுகிறார். இது நம்மை எடுத்துச் செல்லும் உயரங்கள் அதிகம்.
நதி கடலில் சங்கமிக்கச் செல்லும்போது கடல் சில அடிகள் முன்,நகரந்து நதியை தன்னுள் இழுத்துக் கொள்ளும் . காதல் காமம் ஆன்மிகம் என அனைத்துக்கும் பொதுவான சங்கமம் , அழிவின்மை , சாஸ்வதத்தன்மை என பலவற்றை இந்த சில வரிகள் நினைவு படுத்துகின்றன
எங்கிருந்தோ
ஒரு பந்து வந்து
கைகளில் விழுந்தது
தான் இன்னாருக்குச் சொந்தம்
என்று அறிவித்துக்கொள்ளாத
பந்து
பூமியைப் போலவே இருந்தது
உள்ளங்கையில்
பொதிந்திருந்த பந்து
ஒருமுறை
ஒரேயொரு முறை
சிரித்தது
எங்கிருந்தோ வந்து விழும் பந்து வழியாக கவிஞன் காணும் தரிசனமும் அதை அந்த பந்தும் அக்னாலட்ஜ் செய்வதும் கவிதையும் யதார்த்தமும் படைப்பாற்றலும் கைகுலுக்கும் அழகான இடம்
அமைதியான ஒரு அறை
சுற்றி இருட்டு
ஒரு மெழுகுவர்த்தி தரும்
நம்பிக்கையில்
அமர்ந்திருக்கும் பெண்
திரியில் விளக்காடுவதை
அவள் எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டிருப்பாள்
‘ஒரு பனிக்காலத்து மாலை
தரையில் கண்டெடுத்த
தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதின் அவசியம் இப்போது புரிகிறது’
என அவள் தனது டைரியில் எழுதுகிறாள் எழுதி முடித்ததும்
அறைச்சுவர் நான்கும்
அவளை நெருங்கி வந்து அமர்கின்றன
இந்தக்கவிதையில் வரும் பெண்ணும் , பனிக்கால”மாலையும் , இருளில் ஒளிரும் மெழுகுவர்த்தியும் அழகான காட்சிப்படிமங்களாக மனதில் தைத்துவிடுகின்றன
தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதன் அவசியம் என்பது சுவாரஸ்யமான வரிகள்.நல்லவேளை , தேவையற்ற பொருள் என ஒதுக்கிவிடாமல் பத்திரப்படுத்தினோமே என ஆறுதல் பெருமூச்சு விடுகிறாள். பத்திரப்படுத்தாமல் போனோமே என வருந்துகிறாள் என்ற இரு சாத்தியங்களுமே கவிதைக்குள் உள்ளன. உண்மை என்ன என்பது ஒருபோதும் வெளிவரமுடியாத,ரகசியம் என்பதை கடைசி வரிகள் சொல்கின்றன.
இது பூடகமான கவிதை என்றால் அடுத்து சற்று வெளிப்படையான கவிதை
நதிக்கு ஓடும் பைத்தியத்தை
சொந்த ஊருக்குத் திரும்பியவன் பார்க்கிறான்
பைத்தியம் தெளிபவனின்
மண்டையில் நிகழும்
மாற்றங்களுக்கு
ஒப்பானது அது
இந்த அனுபவம்,பலருக்கும் கிடைத்திருக்கும்..
மரத்தின் உச்சிக்கொம்பில்
அமரும் அது
தனது ஒற்றைப் பார்வை
வாயிலாகவே
மாநகர் முழுவதையும்
கூர்மையாகப் பார்க்கிறது
நான் வெறுமனே
காகத்தின் கண்களை
கூர்மையாகப் பார்க்கிறேன்
உலகை அளக்கும் காக்கையின் கண்கள் வழியே உலகைக்காணல் என்பது அழகான பார்வை..
முகத்திற்குத்
தண்ணீர் ஊற்றினேன்
வெயில் கழுவினேன்
மீண்டும் ஊற்றினேன்
வெயில் கழுவினேன்
வெயில் என்ற அருவம், உருவமாக மாறும் தருணம்
கதவும் நானும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்
ஞாபகப்படுத்திச் சொன்னேன் ‘மரம்தானே நீங்க’
கதவு சொன்னது
ஏ! குட்டிப் பயலே’
கல்லைக் கண்டால் நாயைக்காணோம் நாயைப்பார்த்தால் கல் தெரியாது
நாற்காலி , கதவு என பார்ப்பவர்களுக்கு அவை வெறும் ஜடப்பொருட்கள்தான். அவை எல்லாம் மரங்கள் என அடையாளம் கண்டு கொள்ளவும் சிலர் உண்டு என்பதைவிட அப்படி அடையாளம் கண்டுகொள்வதற்கு எப்படிப்பட்ட மனம் தேவை என்பதுதான் கவிதை.. இயற்கையை நாம் அறியும்போது இயற்கையும் நம்மை அறிகிறது என்ற ஜென் கணம் கடைசிவரியில் சரேல் என நிகழ்கிறது
நமத்துப் போன தீக்குச்சி
ஒன்றுக்கும் உதவாது
எனச் சபித்து எறிகிறாய்
அது அமைதியாக விழுகிறது
எரியாத காட்டின்
பறவைக்கூட்டிற்குக் கீழ்
மிகப்பெரிய சாத்தியக்கூறு ஒன்று நிகழாமல் போவதன் காட்சி வெளிப்பாடு
சரியான கண்கள் பார்வை இருந்தால் அன்றாட கணங்களும் அற்புதம்தான் , வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்தான் என்ற இக்விதை தொகுப்பின் சாரத்தை இக்கவிதை சுட்டுகிறது
சன்னலைத் திறந்ததும்
ஒரு பெரும் ஆச்சர்யம் –
ஆகாசத்தின் கதவா
என் எளிய சன்னல்
மதார் அவர்களுக்கு வாழ்த்துகள்.வெயில் பறந்தது கவிதை நூல் தவறவிடக்கூடாத ஒன்று
http://www.pichaikaaran.com/2021/06/blog-post_8.html?m=1
பீஷ்மரும் திருதராஷ்டிரரும்
அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.
மீண்டும் ஒரு சிறு முயற்சி. மழைப்பாடலில் எனக்குப் பிடித்த கதை மாந்தர்கள் பீஷ்மரும், திருதராஷ்டிரனும். கதையின் ஆரம்பத்தில் இருவரும் இருவேறு நிலைகளில் இருக்கின்றனர். அனைத்தையும் துறந்து செல்ல விழைபவராக பீஷ்மர் இருக்கிறார். ஆணவம் மிகுந்தவனாக, அனைத்தையும் இறுகப் பற்றிக் கொள்ள விழைபவனாக திருதராஷ்டிரன் இருக்கிறான். இருவரும் பெரு மல்லர்கள். இருவரும் சந்திக்கும் இடம் மல்யுத்த களமாக இருப்பது சிறப்பு. முடிவில் தோற்று ஆணவம் உடைந்து அனைத்தையும் இழந்து பீஷ்மரின் பாதங்களில் விழுகிறான் திருதராஷ்டிரன். அவனை ‘குழந்தை’ என அழைத்து மெய் தழுவி அதுவரை தான் துறந்தவற்றை மறந்து அவன் அன்பெனும் பிடிக்குள் வருகிறார் பீஷ்மர். வெண்முரசில் எனக்குப் பிடித்த உச்ச தருணங்களில் இதுவம் ஒன்று.
அன்புடன்
தண்டபாணி
இளையராஜா-கலை, மனிதன்
நண்பர் முதல்வன் முதல்வன் மீடியா என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். மறைந்த நண்பர் வே.அலெக்ஸின் நண்பர். இலக்கிய ஆர்வம் கொண்டவர். அந்த யூடியூப் பக்கத்தில் தொடர்ச்சியாக இளையராஜா பற்றிய நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். என்னிடம் ராஜா பற்றி பேசும்படிச் சொன்னார். எனக்கு அவருடைய இசைக்கொடையை மதிப்பிடும் தகுதி இல்லை என்று நான் சொன்னேன். அவர் வலியுறுத்தியமையால் கலைக்கும் அதற்கு தன்னை அளித்த தனிமனிதனுக்குமான உறவைப் பற்றிப் பேசலாமென்று ஏற்றேன்
June 9, 2021
குமரகுருபரன் விஷ்ணுபுரம் – விருதளிப்பு நிகழ்வு
இன்று காலை (09/06/2021) எழுத்தாளர் தேவிபாரதியின் இல்லத்தில் வைத்து மதாருக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது. ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன், சிவா, சந்திரசேகர், பிரபுவுடன் நானும் ஒரு வாகனத்தில் கிளம்பினோம். திருப்பூரிலிருந்து ராஜமாணிக்கம், செந்தில், அந்தியூர் மணி, பாரி ஆகியோர் வந்திருந்தனர். ஈஸ்வர மூர்த்தி தனியாக பைக்கில் வந்தார். (அனைத்து வாகனங்களும் தனித்தனியாக ஈபாஸ் எடுத்திருந்தோம்).
தேவிபாரதியின் வீடு திருப்பூர் மாவட்டம் புது வெங்கரையாம் பாளையம் (நத்தகடையூர்) என்ற ஊரில் இருந்தது. ஈரோடு திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்த அழகிய ஊர். ஊரை நெருங்கியதில் இருந்து கிருஷ்ணன் முன்பு வந்த பயணத்தில் இவ்வழியை தவறவிட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார். கொரோனாகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வழக்கம் போல் வழியை தவறவிடுதல் என ஒவ்வொன்றாக நிகழ்ந்தது. வண்டியை ஆற்றுக்கு அப்பால் ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு, நொய்யல் ஆற்றைக் கடந்து தேவிபாரதியின் வீட்டிற்கு செல்லும் படியாகியது.
ஈஸ்வர மூர்த்தியின் சொந்த ஊர் என்பதால் அவர் வந்ததும் வீடு கண்டுபிடிக்கும் படலம் எளிதானது. விழாவிற்கு அவர் தன் தங்கை, தங்கையின் குழந்தைகளுடன் வந்திருந்தார். பின்னாலேயே ராஜமாணிக்கத்தின் காரும் வந்து விட்டது. ஆக எல்லோரும் திட்டமிட்டது போல் தேவிபாரதியின் வீட்டிற்குக் காலை 10:30 சென்று சேர்ந்தோம்.
முகமது மதார் முன்னரே வந்து, தேவிபாரதியுடன் அவரது நாவலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். தேவிபாரதியின் நண்பர் குற்றாலம் தர்மராஜனும் உடன் இருந்தார். அவர் குற்றாலம் பட்டறையில் உங்களுடனான நினைவுகளை மீட்டி எங்களிடம் அறிமுகம் செய்து கொண்டார். எல்லோரும் ஒன்று சேர, தேவிபாரதியின் வீட்டில் விருது விழா மனநிலை உருவாகியது. இத்தனை பேர் வருவோம் என தேவிபாரதி எதிர்பார்க்கவில்லை. இத்தனை முகங்களைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தார்.
முதலில் மதாருக்கு சால்வையை அணிவித்து விருதையும் தேவிபாரதி வழங்கினார். அதன்பின் தேவிபாரதி மதாரின் கவிதைகள் தனக்கு அறிமுகமானது குறித்தும், பாளையங்கோட்டையுடனான தன் நெருக்கத்தைப் பற்றியும், அங்கிருந்து வந்த கவிஞர் என்பதால் மதார் தனக்கு எத்தனை நெருக்கமாகிறார் என்பதைப் பற்றியும் கூறினார். மதாரின் வாசிப்பார்வத்தை பற்றியும், முதல் தொகுப்பான வெயில் பறந்தது தொகுப்பில் அவரது கவிதைகள் அடைந்த வெற்றி குறித்தும் சிறிய உரை ஆற்றினார்.
கிருஷ்ணன் நாளை சூம் சந்திப்பில் பேசப்போகும் உரையின் முன்வரைவாக சின்ன விவாதத்தை முன்னெடுத்தார். மதாரின் தத்துவ இலக்கற்ற ஆன்ம தேடல் கவிதையை எங்குத் தொடுகிறது என்பதைப் பற்றிப் பேசினார்.
இடையனைத் தொலைத்த ஆடு
பாத வடிவில்
மேய்கிறது புல்லை
****
பாத வடிவம் முடியும் இடத்தில்
காண்கிறான்
பாத வடிவில் புல்லை
மேயும் ஆட்டை
தேவதச்சன் சென்று தொடும் ஒத்திசைவு மதாரின் கவிதைகளில் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றிப் பேசினார்.
சந்திரசேகர் மதார் கவிதையில் ஏற்படுத்திய விளையாட்டுத் தனங்களை ஒட்டி பேசினார். ராஜமாணிக்கம் தன்னறம் குழுவோடு மதார் கவிதைகளை ஒப்பிட்டுக் கொண்டு அடைந்த வாசிப்பனுபவத்தை முன்வைத்தார்.
ராட்டினம் ஏறும்போது
செருப்பு வியக்கிறது
பறவைகள் காலணி அணியும்
நாள் வந்துவிட்டது
இறங்கும்போது நினைக்கிறது
சோம்பேறிப் பறவை
இடை விடாத சுற்றுகளில்
முடிவு செய்கிறது
கிறுக்குப் பறவை
குற்றாலம் தர்மராஜன் பேசும் போது மதார் கவிதைகளில் பிரயத்தனமே இல்லாமல் பயின்று வரும் தொன்மங்களையும், தேவதச்சன் கவிதைகளை சென்று தொடும் இடங்களையும் பற்றிச் சொன்னார். பாரி குழந்தையின் கள்ளமின்மையை தொடும் கவிதைகளை முன்வைத்து, முகுந்த் நாகராஜன் குழந்தைக் கவிதைகளோடு மதாரின் கவிதைகளை ஒப்பிட்டு பேசினார். கவிதை விவாதத்தில் ஊட்டி குருகுலத்தில் சுவாமி வியாசப் பிரசாத் எடுத்த தத்துவ வகுப்புகளை அந்தியூர் மணி மீட்டெடுத்தார்.
இறுதியாக மதார் பேசினார். அவர் கவிதைகளை ஒவ்வொருவரும் வாசித்த விதம் குறித்தும், அக்கவிதைகள் எழுதிய தருணங்களின் நினைவுகள் குறித்துமாக அவர் தன் பேச்சை அமைத்தார். மதாரின் நன்றி உரையோடு வழக்கமான நம் குமரகுருபரன் விழா போல் நடந்து முடிந்தது இன்றைய நிகழ்வு.
நன்றி,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
குமரகுருபரன் விஷ்ணுபுரம் -விருதளிப்பு நிகழ்வு
அன்புள்ள ஜெ,
இன்று காலை (09/06/2021) எழுத்தாளர் தேவிபாரதியின் இல்லத்தில் வைத்து மதாருக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது. ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன், சிவா, சந்திரசேகர், பிரபுவுடன் நானும் ஒரு வாகனத்தில் கிளம்பினோம். திருப்பூரிலிருந்து ராஜமாணிக்கம், செந்தில், அந்தியூர் மணி, பாரி ஆகியோர் வந்திருந்தனர். ஈஸ்வர மூர்த்தி தனியாக பைக்கில் வந்தார். (அனைத்து வாகனங்களும் தனித்தனியாக ஈபாஸ் எடுத்திருந்தோம்).
தேவிபாரதியின் வீடு திருப்பூர் மாவட்டம் புது வெங்கரையாம் பாளையம் (நத்தகடையூர்) என்ற ஊரில் இருந்தது. ஈரோடு திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்த அழகிய ஊர். ஊரை நெருங்கியதில் இருந்து கிருஷ்ணன் முன்பு வந்த பயணத்தில் இவ்வழியை தவறவிட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தார். கொரோனாகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வழக்கம் போல் வழியை தவறவிடுதல் என ஒவ்வொன்றாக நிகழ்ந்தது. வண்டியை ஆற்றுக்கு அப்பால் ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு, நொய்யல் ஆற்றைக் கடந்து தேவிபாரதியின் வீட்டிற்கு செல்லும் படியாகியது.
ஈஸ்வர மூர்த்தியின் சொந்த ஊர் என்பதால் அவர் வந்ததும் வீடு கண்டுபிடிக்கும் படலம் எளிதானது. விழாவிற்கு அவர் தன் தங்கை, தங்கையின் குழந்தைகளுடன் வந்திருந்தார். பின்னாலேயே ராஜமாணிக்கத்தின் காரும் வந்து விட்டது. ஆக எல்லோரும் திட்டமிட்டது போல் தேவிபாரதியின் வீட்டிற்குக் காலை 10:30 சென்று சேர்ந்தோம்.
முகமது மதார் முன்னரே வந்து, தேவிபாரதியுடன் அவரது நாவலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். தேவிபாரதியின் நண்பர் குற்றாலம் தர்மராஜனும் உடன் இருந்தார். அவர் குற்றாலம் பட்டறையில் உங்களுடனான நினைவுகளை மீட்டி எங்களிடம் அறிமுகம் செய்து கொண்டார். எல்லோரும் ஒன்று சேர, தேவிபாரதியின் வீட்டில் விருது விழா மனநிலை உருவாகியது. இத்தனை பேர் வருவோம் என தேவிபாரதி எதிர்பார்க்கவில்லை. இத்தனை முகங்களைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தார்.
முதலில் மதாருக்கு சால்வையை அணிவித்து விருதையும் தேவிபாரதி வழங்கினார். அதன்பின் தேவிபாரதி மதாரின் கவிதைகள் தனக்கு அறிமுகமானது குறித்தும், பாளையங்கோட்டையுடனான தன் நெருக்கத்தைப் பற்றியும், அங்கிருந்து வந்த கவிஞர் என்பதால் மதார் தனக்கு எத்தனை நெருக்கமாகிறார் என்பதைப் பற்றியும் கூறினார். மதாரின் வாசிப்பார்வத்தை பற்றியும், முதல் தொகுப்பான வெயில் பறந்தது தொகுப்பில் அவரது கவிதைகள் அடைந்த வெற்றி குறித்தும் சிறிய உரை ஆற்றினார்.
கிருஷ்ணன் நாளை சூம் சந்திப்பில் பேசப்போகும் உரையின் முன்வரைவாக சின்ன விவாதத்தை முன்னெடுத்தார். மதாரின் தத்துவ இலக்கற்ற ஆன்ம தேடல் கவிதையை எங்குத் தொடுகிறது என்பதைப் பற்றிப் பேசினார்
இடையனைத் தொலைத்த ஆடு
பாத வடிவில்
மேய்கிறது புல்லை
****
பாத வடிவம் முடியும் இடத்தில்
காண்கிறான்
பாத வடிவில் புல்லை
மேயும் ஆட்டை
தேவதச்சன் சென்று தொடும் ஒத்திசைவு மதாரின் கவிதைகளில் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றிப் பேசினார்.
சந்திரசேகர் மதார் கவிதையில் ஏற்படுத்திய விளையாட்டுத் தனங்களை ஒட்டி பேசினார். ராஜமாணிக்கம் தன்னறம் குழுவோடு மதார் கவிதைகளை ஒப்பிட்டுக் கொண்டு அடைந்த வாசிப்பனுபவத்தை முன்வைத்தார்.
ராட்டினம் ஏறும்போது
செருப்பு வியக்கிறது
பறவைகள் காலணி அணியும்
நாள் வந்துவிட்டது
இறங்கும்போது நினைக்கிறது
சோம்பேறிப் பறவை
இடை விடாத சுற்றுகளில்
முடிவு செய்கிறது
கிறுக்குப் பறவை
குற்றாலம் தர்மராஜன் பேசும் போது மதார் கவிதைகளில் பிரயத்தனமே இல்லாமல் பயின்று வரும் தொன்மங்களையும், தேவதச்சன் கவிதைகளை சென்று தொடும் இடங்களையும் பற்றிச் சொன்னார். பாரி குழந்தையின் கள்ளமின்மையை தொடும் கவிதைகளை முன்வைத்து, முகுந்த் நாகராஜன் குழந்தைக் கவிதைகளோடு மதாரின் கவிதைகளை ஒப்பிட்டு பேசினார். கவிதை விவாதத்தில் ஊட்டி குருகுலத்தில் சுவாமி வியாசப் பிரசாத் எடுத்த தத்துவ வகுப்புகளை அந்தியூர் மணி மீட்டெடுத்தார்.
இறுதியாக மதார் பேசினார். அவர் கவிதைகளை ஒவ்வொருவரும் வாசித்த விதம் குறித்தும், அக்கவிதைகள் எழுதிய தருணங்களின் நினைவுகள் குறித்துமாக அவர் தன் பேச்சை அமைத்தார். மதாரின் நன்றி உரையோடு வழக்கமான நம் குமரகுருபரன் விழா போல் நடந்து முடிந்தது இன்றைய நிகழ்வு.
நன்றி,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
தத்துவவாதிகளின் கால்பந்தாட்டம்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு ,
தங்களின் சமீபத்தைய உயர்தத்துவ, ஆன்மிக கேலிச்சித்திரப் பதிவுகள் மற்றும் நடைமுறை வாழ்கையை ஒட்டிய மனதை இலகுவாக்கும் காட்சித் துளிகளைக் காணும்போது எனக்கு Monty Python குழுவினரின் ‘தத்துவவாதிகளின் கால்பந்தாட்டம்’ சார்ந்த காணொளித் துணுக்கு நினைவுக்கு வந்தது.
இவை சிலபோது அறிவார்ந்த எள்ளலாகவும் சிலபோது அதைக் கலைத்துப் போடும் அசட்டு விளையாட்டாகவும் தோன்றுகின்றன. இவர்களின் படைப்புகள் இழையோடும் வரலாறு மற்றும் தத்துவம் சார்ந்த உள்ளடக்கத்துக்காகவும், அன்றைய உலகளாவிய பின் நவீனத்துவ அலையின் கூறுகளை இனம் காண இடம் அளிப்பதாலும் இங்கே பகிர விரும்புகிறேன்.
Surreal/Absurdist humour வகைமையிலான இவர்களின் நகைச்சுவைத் துணுக்குகள் பிரிட்டிஷ் வரலாறு, மேலைச்சமூக விழுமியங்கள், அன்றாட அரசியல், அறவியல் மீதான பகடிகளோடு இடையீடாக கட்டற்ற கனவு போன்ற அனிமேஷன் காட்சிகளில் தீவிர வன்முறை மற்றும் மனப்பிறழ்வுகள் போன்ற அம்சங்களையும் கலந்து உருக்கொண்டவை. இந்த வடிவமீறலினாலேயே இவர்களை இவ்வகைமையின் முன்னோடிகளாகக் கருதமுடிகிறது. இவர்களின் திரைக்களங்களும் அதையே உறுதிப்படுத்துகின்றன (கிறிஸ்துவின் அண்டையில் அதே தினத்தில் பிறந்த ப்ரையனின் அடையாளக் குழப்பங்கள்-Life of Brian & பிரிட்டிஷ் அரசரான ஆர்தரின் சாகசக் கதையாடலின் பகடி- Monty Python and the holy grail ). அன்றைய பீட்டீல்ஸ் தலைமுறையின் மனநிலையால் இது சாத்தியப்பட்டிருக்கலாம்.
தாங்கள் ஏற்கனவே இவற்றைக் கண்டு, கடந்தும் போயிருக்கலாம். ஆயினும் சில துணுக்குகள் நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
தத்துவவாதிகளின் கால்பந்தாட்டம் ( The Philosophers’ Football Match )
வாத சிகிச்சையகம் (Argument Clinic)
அபத்த நடை அமைச்சகம் (Ministry of Silly Walks)
கிளிமஞ்சாரோ மலையேற்றம் (Kilimanjaro Expedition)
ஓர் உற்சாக சிலுவை கீதம் (நமக்கும் சேர்த்தே) – (Always Look On The Bright Side of Life-Monty Python’s Life Of Brian )
(பி.கு இவர்களைக் கொண்டே இன்று பரவலாக அறியப்படும் python நிரலாக்க மொழி வழங்கப்படுகிறது.இவர்களின் காட்சித் துணுக்கு ஒன்றின் வழியாகவே நம் மின்னஞ்சலை வரம்பின்றி நிறைக்கும் spam கலைச் சொல் உருவாகியது.)
வணக்கங்களுடன்
சே.தோ.ரெங்க பாஷ்யம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


