அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்

உலகத்தால் கைவிடப்பட்டதான பாவனை அல்லது  எல்லாப் பெண்களாலும் காதலிக்கப்படுவதாக ஒரு ஃபேண்டசி  அல்லது தானும் இளைஞன் எனக்காட்டிக் கொள்ளும்பொருட்டு சிலர் எழுதும் போலி எழுத்துகள் என சமகால கவிதைகள் சற்று அலுப்பூட்டினாலும் நமக்கையூட்டும் சில நல்ல கவிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .

அப்படி நம்பிக்கையூட்டும் கவிஞர்களில் ஒருவர்தான்  ” மதார் “இவரது வெயில் பறந்தது கவிதை நூல் பரவலான வரவேற்பைப் பெற்ற நூலாகும்.போலித்தனமற்ற  சிடுக்குகளற்ற இயல்பான குரலில் இக்கவிதைகள் அமைந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

விழிப்புணர்வுடன் இருந்தால்  காற்றில் பறக்கும் சிறு இலை கூட அரிய மெய்ஞான தரிசனம் அளித்து விடும் என்பார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.ஒரு கவிஞன் அன்றாட சம்பவங்களில்கூட இந்த அரிய கணத்தை கண்டு கொள்கிறான

பலூன்  இளைக்கும்போது கேட்கிறது 

அகக்காற்றை அழைத்துப் போகும் 

புறக்காற்றின் அவசரம்

என்று ஒரு கவிதை.

ஒரு கணத்தை ஒரு தருணத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.  இது நம்மை எடுத்துச் செல்லும் உயரங்கள் அதிகம்.

நதி கடலில் சங்கமிக்கச் செல்லும்போது கடல் சில அடிகள் முன்,நகரந்து நதியை தன்னுள் இழுத்துக் கொள்ளும் . காதல் காமம்  ஆன்மிகம் என  அனைத்துக்கும் பொதுவான  சங்கமம் ,  அழிவின்மை , சாஸ்வதத்தன்மை என பலவற்றை இந்த சில வரிகள் நினைவு படுத்துகின்றன

எங்கிருந்தோ 

ஒரு பந்து வந்து 

கைகளில் விழுந்தது  

தான் இன்னாருக்குச் சொந்தம் 

என்று அறிவித்துக்கொள்ளாத 

பந்து 

பூமியைப் போலவே இருந்தது 

உள்ளங்கையில்

பொதிந்திருந்த பந்து

 ஒருமுறை 

ஒரேயொரு முறை 

சிரித்தது

எங்கிருந்தோ வந்து விழும் பந்து வழியாக கவிஞன் காணும் தரிசனமும் அதை அந்த பந்தும் அக்னாலட்ஜ்  செய்வதும் கவிதையும் யதார்த்தமும் படைப்பாற்றலும் கைகுலுக்கும் அழகான இடம்

அமைதியான ஒரு அறை 

சுற்றி இருட்டு 

ஒரு மெழுகுவர்த்தி தரும்

 நம்பிக்கையில் 

அமர்ந்திருக்கும் பெண்

 திரியில் விளக்காடுவதை 

அவள் எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டிருப்பாள்

 ‘ஒரு பனிக்காலத்து மாலை 

தரையில் கண்டெடுத்த 

தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதின் அவசியம் இப்போது புரிகிறது’ 

என அவள் தனது டைரியில் எழுதுகிறாள் எழுதி முடித்ததும் 

அறைச்சுவர் நான்கும் 

அவளை நெருங்கி வந்து அமர்கின்றன

இந்தக்கவிதையில் வரும் பெண்ணும் , பனிக்கால”மாலையும் , இருளில் ஒளிரும் மெழுகுவர்த்தியும் அழகான காட்சிப்படிமங்களாக மனதில் தைத்துவிடுகின்றன

தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதன் அவசியம் என்பது சுவாரஸ்யமான வரிகள்.நல்லவேளை ,  தேவையற்ற பொருள் என ஒதுக்கிவிடாமல் பத்திரப்படுத்தினோமே என ஆறுதல் பெருமூச்சு விடுகிறாள்.  பத்திரப்படுத்தாமல் போனோமே என வருந்துகிறாள் என்ற இரு சாத்தியங்களுமே கவிதைக்குள் உள்ளன.  உண்மை என்ன என்பது ஒருபோதும் வெளிவரமுடியாத,ரகசியம் என்பதை கடைசி வரிகள் சொல்கின்றன.

இது பூடகமான கவிதை என்றால் அடுத்து சற்று வெளிப்படையான கவிதை

நதிக்கு ஓடும் பைத்தியத்தை 

சொந்த ஊருக்குத் திரும்பியவன் பார்க்கிறான் 

பைத்தியம் தெளிபவனின்

 மண்டையில் நிகழும் 

மாற்றங்களுக்கு 

ஒப்பானது அது

இந்த அனுபவம்,பலருக்கும் கிடைத்திருக்கும்..

மரத்தின் உச்சிக்கொம்பில் 

அமரும் அது 

தனது ஒற்றைப் பார்வை 

வாயிலாகவே

 மாநகர் முழுவதையும் 

கூர்மையாகப் பார்க்கிறது 

நான் வெறுமனே

 காகத்தின் கண்களை 

கூர்மையாகப் பார்க்கிறேன்

உலகை அளக்கும் காக்கையின் கண்கள் வழியே உலகைக்காணல் என்பது அழகான பார்வை..

முகத்திற்குத் 

தண்ணீர் ஊற்றினேன்

 வெயில் கழுவினேன் 

மீண்டும் ஊற்றினேன் 

வெயில் கழுவினேன்

வெயில் என்ற அருவம், உருவமாக மாறும் தருணம்

கதவும் நானும் 

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் 

ஞாபகப்படுத்திச் சொன்னேன் ‘மரம்தானே நீங்க’ 

கதவு சொன்னது

ஏ! குட்டிப் பயலே’

கல்லைக் கண்டால் நாயைக்காணோம் நாயைப்பார்த்தால் கல் தெரியாது

நாற்காலி ,  கதவு என பார்ப்பவர்களுக்கு அவை வெறும் ஜடப்பொருட்கள்தான்.   அவை எல்லாம் மரங்கள் என அடையாளம் கண்டு கொள்ளவும் சிலர் உண்டு என்பதைவிட  அப்படி அடையாளம் கண்டுகொள்வதற்கு எப்படிப்பட்ட  மனம் தேவை என்பதுதான் கவிதை..   இயற்கையை நாம் அறியும்போது இயற்கையும் நம்மை அறிகிறது என்ற ஜென் கணம் கடைசிவரியில் சரேல் என நிகழ்கிறது

நமத்துப் போன தீக்குச்சி 

ஒன்றுக்கும் உதவாது 

எனச் சபித்து எறிகிறாய்

 அது அமைதியாக விழுகிறது

 எரியாத காட்டின் 

பறவைக்கூட்டிற்குக் கீழ்

மிகப்பெரிய சாத்தியக்கூறு ஒன்று நிகழாமல் போவதன் காட்சி வெளிப்பாடு

சரியான  கண்கள் பார்வை இருந்தால் அன்றாட கணங்களும் அற்புதம்தான் ,  வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்தான் என்ற இக்விதை தொகுப்பின் சாரத்தை இக்கவிதை சுட்டுகிறது

சன்னலைத் திறந்ததும்

 ஒரு பெரும் ஆச்சர்யம் –  

ஆகாசத்தின் கதவா

 என் எளிய சன்னல்

மதார் அவர்களுக்கு வாழ்த்துகள்.வெயில் பறந்தது கவிதை நூல்   தவறவிடக்கூடாத ஒன்று

http://www.pichaikaaran.com/2021/06/blog-post_8.html?m=1

 

மதார்- கடிதங்கள் 6

மதார்- கடிதம் -5

மதார் கடிதம்-4

மதார் கடிதங்கள்-3

மதார்- கடிதங்கள்-2

மதார்- கடிதங்கள்-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.