விகடன் பேட்டி – கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஆனந்த விகடன் உரையாடல் பார்த்தேன். வழக்கமான ஸ்டுடியோ பேட்டிகளில் இருக்கும் செயற்கையான சிரிப்பு, பாவனைகள் இல்லாத பேட்டியாக இருந்தது. பேட்டிகண்ட இருவரும் இயல்பாக இருந்தனர். பட்டிமன்றம் ராஜா கேள்விகளில் மெல்லிய நகைச்சுவையும் பாரதி கேள்விகளில் உங்கள் படைப்பை விரிவாகப் படித்திருந்த சான்றும் இருந்தது. பல கேள்விகள் ஏற்கனவே தெரிந்தவை. பதில்களும்தான். ஆனாலும் மீண்டும் கேட்கமுடிந்தது. அந்த உற்சாகமான முகபாவனைகளுக்காகவும் குரலுக்காகவும்.

அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

சாந்தி. ஆர்

அன்பு ஜெ,

உங்களுடைய விகடன் பேட்டியை பார்த்தேன். மிக நேர்த்தியான ஒளி ,ஒலி மற்றும் மொழி.

திருமதி பாரதி பாஸ்கர் கேள்விகள் அறிமுகம் மற்றும் அவ்வபோது அவர் முகம் காட்டிய பூரிப்பு அதை உள்வாங்கி அனுபவித்து நீங்கள் சொன்ன பதில்கள் அனைத்தும் ரசனைக்கு உரியவை. கொன்றைப்பூ வெண்முரசு பற்றிய காணொளியில mute  செய்து முகத்தை பார்ப்பது என ரசிக்கத்தக்க பகிர்தல்கள்.

உங்கள் குரு நித்யா வின் சோப்பு நுரை என்ற விளக்கம் பிரமிப்பை உள்ளாக்கியது. அந்த நுரை ஒரு அறையை மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வாசகர்களின் மனதையும் நினைக்கக்கூடிய நிறையாகவும் இருந்து வருகிறது..

துறவிகளைப் பற்றி நீங்கள் கொடுத்த விளக்கங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு உரியவை. அதை போகிறபோக்கில் சொல்லியது இனிமை.

நிறைவாக காந்தியை பற்றி உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி சொல்லும்போது சிறப்பாகவே இருந்தது.

இப்போது நீங்கள் காந்தியைப்பற்றி எப்போது சொன்னாலும் எழுதினாலும் உடனடியாக என்னை போலவே பலருக்கு அந்த சிலிர்ப்பான அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஒருவேளை உங்களை நேரில் பார்த்து இப்படி ஒரு கேள்விக் கணைகள் இருந்திருந்தால் இவ்வளவு இயல்பாக பேசி இருப்பீர்களா என்று தெரியவில்லை.

இயல்பான அனுபவங்கள் இயல்பான மனிதர்கள் . அத்தகைய விஷயங்கள் மனதைக் கவர்வது இயற்கைதானே.

மற்ற பாகங்களுக்கு காத்திருக்கிறோம்.

நடராஜன்

கோவை

அன்புள்ள ஜெ,

விகடன் பேட்டி நன்றாக இருந்தது. அது வெவ்வேறு இடங்களை எதிர்பாராதபடித் தொட்டுச் செல்கிறது. காந்தியைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறீர்கள். ஆனாலும் இந்தப்பேட்டியில் சொல்லப்பட்டுள்ளவை புதியதாகவும் சிந்தனையை தூண்டிவிடுவனவாகவும் இருந்தன. இயல்பான உரையாடலும் புன்னகையும் அழகாக இருந்தன.

ராஜ்குமார்

அன்புள்ள ஜெ

விகடன் பேட்டி பார்த்தேன். சிறப்பான அழகான பேட்டி. ஆனால் சமீபகாலமாக உங்களைப் பற்றிய எந்த பதிவு இருந்தாலும் கணிசமான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வந்து வசைகளை எழுதிவிட்டுச் செல்கிறார்கள். அதிலும் திரும்பத்திரும்ப ஒரே வார்த்தை. ஒரே விஷயம். வேறு எதுவும் உங்களைப் பற்றி தெரியாது. சம்பந்தப்பட்ட பதிவைக்கூட வாசித்திருக்க மாட்டார்கள். இலக்கியம் கலை பற்றி எந்த புரிதலும் இருப்பது தெரியாது.

அப்படியென்றால் எப்படி இந்தவகையான பேட்டிகளுக்கு வருகிறார்கள்? உங்கள் பெயரை வைத்து தேடிக்கொண்டிருக்கிறார்கள். பதிவுகளைக் கண்டதும் வந்து வசையை எழுதிவிட்டுப் போவதை ஒரு கடமை போலச் செய்கிறார்கள். இந்த மதக்காழ்ப்பை இப்படி வெளிப்படுத்திக் கொள்வதில் அவர்களுக்கு வெட்கமே இல்லை. மதக்காழ்ப்புக்கு அடிப்படை என்பது எங்காவது எவராவது சொன்ன சில அவதூறுவரிகள்  மட்டும்தான்.

இங்கே இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் நடந்துகொள்ளும் முறை அருவருப்பானது. எந்த அறிவுப்பழக்கமும் இல்லாமல் காழ்ப்பை மட்டுமே கக்குகிறார்கள். கொஞ்சம் வாசிப்பவர்கள், யோசிப்பவர்கள் கூட மதக்காழ்ப்புடன் இருப்பதில் வெட்கம் கொள்வதே இல்லை. நீங்கள் ஜமாலன் என்பவர் பற்றி பாராட்டி எழுதியிருந்தீர்கள். அவர் எழுதியவற்றைச் சென்று வாசித்தேன். மார்க்ஸியம் பின்நவீனத்துவம் எல்லாவற்றையும் கலந்துகட்டி எழுதியிருந்தார். அது பரவாயில்லை. ஆனால் அவருடைய அடிப்படையான பார்வை அப்பட்டமான மதவெறியும் காழ்ப்பும் மட்டும்தான். அவரெல்லாம் தன்னை முற்போக்கு என நம்பும் சூழல் இங்கே உள்ளது.

இந்து கிறிஸ்தவர் முஸ்லீம் எவரானாலும் மதக்காழ்ப்புடன் இருப்பதற்கு கொஞ்சமேனும் வெட்கப்பட்டாலொழிய அவர்மேல் எந்த மதிப்பும் வரவில்லை. மதக்காழ்ப்பும் கட்சிக்காழ்ப்பும் எதையுமே புரிந்துகொள்ளாதபடிச் செய்துவிடுகின்றன. புனைபெயர்களில் இயங்கும் பலர் மதச்சிறுபான்மையினர் என்பதை அவர்களின் ஐடியை தொடர்ந்தால் கண்டுபிடித்துவிட முடியும். காழ்ப்பு காரணமாக அடிப்படையான புரிதலே அவர்களுக்கு இருப்பதில்லை. உதாரணமாக இந்த விக்டன் பேட்டியிலேயே நீங்கள் விவேகானந்தர் ஆகிவிடலாமா என முனைந்ததை நையாண்டியாகச் சொல்கிறீர்கள். மதக்காழ்ப்பு கொண்ட ஒருவர் கீழே வந்து உங்களை விவேகானந்தருடன் ஒப்பிடுகிறீர்கள் என்று சொல்கிறார். அவருடைய புரிதல்திறனை மதக்காழ்ப்பு அந்த அளவுக்கு மழுங்கடிக்கிறது.

இவர்களை காணாமல் பேட்டிகளையும் பேச்சுக்களையும் மட்டுமே கேட்டுவிட்டு வருவதே நல்லது. ஆனால் கண்ணில்பட்டு தொலைக்கிறது.

எம்.பாஸ்கர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.