பறக்கும் வெயில்- சக்திவேல்

’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021

இந்த கவிதை தொகுதியை வாசித்து முடித்தவுடன் நீங்கள் சொன்ன இனிய எடையின்மை என்ற வார்த்தையே உளம் நிறைத்தது ஜெ. நான் அதிகமும் கவிதை வாசிப்பவன் அல்ல. அதில் அத்தனை எளிதாக நுழைந்துவிட முடிவதில்லை எனக்கு. அந்த தயக்கத்தாலேயே பெரும்பாலும் அந்த பக்கம் செல்வதில்லை. ஆனால் ஒன்றிரண்டு கவிதைகளை வேறு எப்பொழுதேனும் படித்து அவை திறக்கையில் பெரும் பரவசத்தை உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் இத்தொகுதியும் ஒன்று.

இதன் இனிமையை வாசகனாக குறிப்பிட வேண்டுமெனில் ஏதென்றிலாது எங்கென்றிலாது இருத்தலுமற்று இறகென மிதந்தலைவதன் உவகை என்பேன். இந்த தொகுப்பிலுள்ள எல்லா கவிதையும் அதை தருகின்றன. வாசித்து முடிக்கையில் குளிர் நீராடி எழுந்த புத்துணர்ச்சியை, அதிகாலையின் தொடுவானத்து சூரியனின் முதற்கதிர் எழுந்து முகம் வருடுகையில் நாம் கொள்ளும் மலர்வை, அந்த மென்பனியில் நன்மணம் வீசும் நித்தி மல்லி போல் என்பேன்.

சமவெளியில் ஆடு மேய்க்கும் சிறுவன்

மானசீகமாக கும்பிடுகிறான்

அதிகாலைப் பனியை

ஆடுகள் தங்களது காலை உணவில்

சேர்த்து விழுங்குகின்றன

மேய்ப்பாளனின் கடவுளை

மேய்ப்பரும் கர்த்தா

மேய்வதும் கர்த்தா

இந்த கவிதை காட்சியென எழுந்து பரவசப்படுத்துகையிலேயே கவிதையென தித்திப்பது அந்த ஈற்றடிகளையும் சேர்த்து தான். முதல் நோக்கில் கள்ளமில்லா சிறுவன் கொள்ளும் அழகனுபவமாக விரிந்து அங்கிருந்து மேய்ப்பரும் மேய்வதும் மேயப்படுவதும் ஒன்றென்றாவதன் விந்தையை சொல்கையில் கவிதை மலர்ந்து எழுகிறது.

எங்கிருந்தோ

ஒரு பந்து வந்து

கைகளில் விழுந்தது

 

விரிந்த மைதானத்தின்

நட்டநடு வெளியில்

நிற்கும் எனக்கு

இப்பந்தின் உரிமையாளர்

குறித்து அறிவது

அரிதான காரியம்

யாருடைய பெயரும்

எந்தவொரு விதமான

மை கிறுக்கல்களும்கூட

இப்பந்தின் உடம்பில் இல்லை

 

தான் இன்னாருக்கு சொந்தம்

என்று அறிவித்துக்கொள்ளாத

பந்து

பூமியைப் போலவே

இருந்தது

 

உள்ளங்கையில்

பொதிந்திருந்த பந்து

ஒருமுறை

ஓரேயொரு முறை

சிரித்தது

 

இந்த கவிதையும் எங்கிருந்தோ வந்த விளையாட்டு பந்தை கைகளில் உருட்டி பார்த்து மகிழும் அந்த சின்னஞ்சிறு பிஞ்சின் இனித்தலை காட்டி நம்மை முகம் மலர்கையில் பூமியைப் போலவே என சொல்லி அது எத்தனை மகத்தான என காட்டிவிடுகிறது. ஒருமுறை ஓரேயொரு முறை சிரித்தது என்ற வரிகளில் அந்த தரிசனம் முழுமை பெறுவதுடன் தன் குழந்தை சொற்களால் பேருவகையில் ஆழ்த்துகிறது. 

 

காலை, வாலை மிதிப்பது தவி்ர

வேறெதற்கும் உசும்பாமல்

படுத்திருக்கிறதிந்த கருப்பு வெள்ளை நாய்

தொடர்வண்டி பிடிக்க ஓடும்

எந்தச் செருப்பும்

எழுப்பவில்லை

ரயில் வருகிறதென

ஒலி எழுப்பும்

எந்திர குரல்காரியாலும் முடியவில்லை

ஒரு காதை பூமிக்கும்

இன்னொரு காதை வானுக்கும் கொடுத்து

ஒருகளித்துத் துயிலும் இது

பூமியின் இதயம் வேகமாகத்

துடிப்பதை கேட்கிறது

தகக் தசக் தடக் ததக் தபக் தரக்

செப்பல் அணிந்து குழந்தையொன்று

நடந்து வந்தால் கேட்கிறது

தஙக் தஞக் தணக் தநக் தமக் தனக்

 

மிக எளிய காட்சி சித்திரத்தின் வழியே உயிர்கள் இரண்டு சந்தித்து குலாவும் இனிமையை காட்டி விடுகிறது. வறண்ட நிலத்தில் புதுமழைக்கு பின் இளந்தளிர் எழுவது போல். அந்த செப்பல் ஒலிகள் பூமியின் இதயம் எனும் போது எழுகிறது கவிதை.

 

கதவைத் திறந்ததும்

ஒரு பெரும் ஆச்சர்யம் –

ஆகாசத்தின் கதவா

என் எளிய சன்னல்

 

கவிஞனுக்கே உரிய குழந்தைமையின் வியப்பை கொட்டும் இது, பனி துளியில் பனையை காட்டுவதே தான். அந்த சன்னலெனும் மனத்தை திறந்து கொள்ள ஒவ்வொரு முறையும் குழந்தையென உலகை காணும் கவி உள்ளம் எழுந்து வரவேண்டியிருக்கிறது.

மதாரின் அத்தனை கவிதைகளும் கள்ளமில்லா குழந்தைத் தனத்தில் வெளிப்பட்டு ஒளிவிடுகின்றன. ஒவ்வொன்றையும் எழுதலாமென்றாலும் முதன்மையாக ஒன்றுண்டு. நீங்கள் பிறிதொன்று கூறலில் கவிதை வாசிக்கையில், என் அறையில் குண்டூசி விழும் ஓசையே இடியோசையின் ஒலி என்று கூறியிருந்தீர்கள் ஜெ. இந்த கவிதைகள் அனைத்துமே கவிஞன் தன் அந்தரங்கத்தின் மிக மெல்லிய பகுதியை திருப்பி வைப்பவை. நமது தன்னந்தனிமையில் தனித்தினித்து சுவைக்க வேண்டியவை.

மதாருக்கு வாசகனாக என் வாழ்த்துக்களும் அன்பும்.

 

அன்புடன்

சக்திவேல்

வெயில் பறந்தது தபாலில் பெற :

https://azhisi.myinstamojo.com/product/289695/veyil-parandhathu/அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :7019426274கிண்டிலில் படிக்க :https://cutt.ly/9njlmdN

மதார்- கடிதங்கள் 6

மதார்- கடிதம் -5

மதார் கடிதம்-4

மதார் கடிதங்கள்-3

மதார்- கடிதங்கள்-2

மதார்- கடிதங்கள்-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.