Jeyamohan's Blog, page 977
May 30, 2021
கல்வி
”அவ்ளவு விசயம் தெரிஞ்சவங்கன்னா ஏன் உங்கள டீவியிலே காட்டல?”
என் வீட்டுச் சபைகளில் அடிக்கடி நிகழும் ஒரு சோகம், குடும்பத்திலேயே குறைவான கல்வித்தகுதி கொண்டவன் நான் என்பதுதான். அதைவிடச் சோகம் நம் நண்பரவைகளில் பெரும்பாலும் குறைவாகப் படித்தவன் நான். அப்போதெல்லாம் ஆர்.சுந்தரராஜன் சொன்னதாக ஒரு நகைச்சுவை நினைவுக்கு வரும்.
இப்ராகீம் ராவுத்தர் கம்பெனியில் ஆர்.சுந்தர்ராஜன் படம் செய்தபோது ஒரு பையன் சாம்பார் ஊற்ற வந்திருக்கிறான். அவனிடம் சுந்தர்ராஜன் கேட்டார். “டேய், என்னடா படிச்சிருக்கே?”
“அண்ணே ரெண்டாம் கிளாஸ்ணே”
“சரி, ஆனா இந்த ஆபீஸ்லேயே ஜாஸ்தி படிச்சவன்கிற திமிர் என்னிக்குமே உனக்கு வரக்கூடாது…பாத்து நடந்துக்கோ,போ”
”எங்க டீச்சர் சொன்னாங்க, பொண்ணுகள் நினைச்சா என்ன வேணுமானாலும் ஆகலாம்னு. நீங்க ஏன் கிளவியானீங்க?”
கல்விக்கூடங்கள் என்றைக்குமே நகைச்சுவையின் பிறப்பிடமாகவே இருந்திருக்கின்றன.உலகிலேயே மகிழ்ச்சியான செயல்பாடு என அரிஸ்டாட்டில் சொல்வது கற்றுக்கொள்வதுதான். அது அத்தனை துயரமானதாக ஆவது எப்படி? அதை அப்படி ஆக்கியதுதான் நவீன நாகரீகத்தின் உச்சகட்ட நகைச்சுவை என நினைக்கிறேன். அதை நகைச்சுவையால்தானே எதிர்கொள்ளவேண்டும்?
நான் பள்ளிநாளில் படிக்கையில் உருவாக்கிய நகைச்சுவைகள் பல உண்டு. அவற்றையெல்லாம் பகிரமுடியாதபடி நாகரீகமானவனாக ஆகிவிட்டேன். ஆனால் பல வெண்பாக்கள் இப்போதும் புழக்கத்தில் உள்ளன என்று தெரிந்துகொண்டேன்.
இது பாலா ஜோக். சிங்கம்புலி சொன்னது, ஆகவே பொய்யாகத்தான் இருக்கும். நான்கடவுள் படத்தில் எடுக்கப்பட்ட, பின்னர் படத்தில் இல்லாத ஒரு காட்சி. தாண்டவனின் அறிமுகம். அவன் மேல் ஒரு வாத்தியார் புகார் அளித்திருக்கிறார். அவனை வரவழைத்து ’விசாரணை’செய்கிறான்.
”நீதான் புரிஞ்சுகிடணும். அவன் அன்புக்குறைபாட்டு மனசிக்கல் உள்ள குழந்தை”
வழக்கமாக வில்லனை கொடூரமானவனாக அறிமுகம் செய்யும் காட்சிதான். வாத்தியாரை சிக்ஸ்பேக் வைத்த மொட்டைராஜேந்திரன் அடித்து தூக்கி பஞ்சாமிர்த அண்டாவில் போட்டு அங்கிருந்து தூக்கி விபூதி குண்டானில் போட்டு அங்கிருந்து தூக்கி குங்கும தொட்டியில்போட்டு…
அதற்கு பன்னிரு ரீடேக். கடைசியில் அடிவாங்கியவரின் கால்முறிந்து விட்டது. என்ன கொடுமை என விசாரித்தபோது தெரிந்தது, பயனர் பாலாவின் முன்னாள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர். ஓய்வுபெற்றபின் கலைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்பி வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
“ஃபோன் பண்ணிப் பாருங்க சார்” என்றார் சிங்கம்புலி. அழைத்தால் ஆஸ்பத்திரியிலிருந்து ஆசிரியரின் ரிங்டோன். “கலையே என் வாழ்க்கையின் நிலைமாற்றினாய்!”
”தாத்தான்னு சொல்லிக்குடுத்தேன். டேட்டான்னு சொல்லுது”
நான் என் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை அவ்வப்போது சந்திப்பதுண்டு. அவர்களில் பலர் எண்பது வயதானவர்கள். ஆனாலும் அவர்கள் என்னை மறக்கவில்லை. ஒருவர் தன் மனைவியிடம் சொன்னார். “ஆழமான டவுட்டெல்லாம் கேப்பான். ஏழும் மூணும் கூட்டினா பத்து வரும்னு சொல்லிக் குடுத்தேன். இங்கிலீஷ்லே எழுதி கூட்டினாலும் அதுதான் வருமான்னு கேக்கிறன்”
“பொறவு என்ன சொன்னீங்க?”
“அதுதான் வரும்னு சொன்னா அடுத்த டவுட்டு. அப்ப ஏன் கஷ்டப்பட்டு இங்கிலீஷ்லே எழுதணும்? கணக்கிலேயே எழுதினா போருமேன்னுட்டு. கணக்குங்கிறது ஒரு பாசை இல்லைன்னு சொல்லி புரியவைக்க எனக்கு ஏலில்ல. ஒரு தட்டு தட்டி இருத்தி வைச்சேன்”
”ஸ்ஸ்… இதை எப்டி ஆன் பண்றதுன்னு தெரியுமா?”
என்னை பிற்பாடு நெடுநாள் சந்திக்காத ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைச் சந்திக்கும்போது அவர்கள் கொஞ்சம் துணுக்குறுவதை கண்டிருக்கிறேன். “லே, என்ன செய்யுதே?”
“போனாப்பீஸ் வேலை சார்”
”என்ன வேலை?” குழி தோண்டுகிறானோ என நினைத்துக்கொள்வார்கள் என எனக்குத் தெரியும்.
“கிளார்க்கு”
அவர்கள் ஐயமாக இருபக்கமும் பார்த்து “உனக்கா? நீ என்ன படிச்சே?”
“பீயூசி பாஸ்”
“நீயா?”
”டேய், அதை ஸூம் பண்ண முடியாது”
நான் ஆரம்பப் பள்ளியில் கற்றல்குறைபாடு, அறிவுக்குறைபாடு, நாணயக்குறைபாடு மற்றும் அடக்கக்குறைபாடு போன்ற பல கொண்டவனாக கருதப்பட்டிருக்கிறேன். எனக்கு நினைவுச்சிக்கல் உண்டு என நம்பிய ஆசிரியர் ஒருவர் நான் ’பித்தா பிறைசூடி பெம்மானே அருளாளா’ என்னும் மெட்டில் அல்லது ’பிற்போக்கு, வகுப்புவாத,ஃபாசிச, தரகுமுதலாளித்துவ, பூர்ஷுவா,ஏகாதிபத்திய…’ மெட்டில் “லே, நாறத்….” என ஆரம்பித்து இருபது கெட்டவார்த்தைகளை வரிசையாகச் சொல்வதைக் கண்டு திகைதிருக்கிறார்கள்.
நான் படிக்கும் காலங்களில் பாடமெல்லாம் எளியது. கணக்குகள் எல்லாம் எட்டும் எட்டும் பதினாறு மாதிரி எளிமையானவைதான். அறிவியல் இல்லை, இயற்கைப் பாடம். புவியியல் இல்லை, பூகோளம். கணக்கு தவிர புத்தகங்களை எல்லாம் பள்ளி திறந்த முதல்வாரத்திலேயே ஆர்வமாக வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவேன். அன்றெல்லாம் முழுநாளும் திருவிழாக்கள், சந்தைகள், கபடி விளையாட்டுப் போட்டிகள், காட்டில் மாடுமேய்ப்பது, ஊருக்கும் ஊருக்குமான மானச்சண்டைகள்… தேர்வுக்கு முந்தையநாள் அவசரமாகப் புரட்டிப் பார்ப்பேன். எழுதுவேன்.
“ஹோம்வர்க்கை ஹேக் பண்ணிட்டாங்க மிஸ்”
அன்றெல்லாம் வீட்டிலும் எதுவும் கேட்கமாட்டார்கள். பாஸானால் போதும். எந்த ஊருக்கு போயிருப்பான் என ஊகிக்கும்படி இருந்தால்போதும். மார்க் பட்டியலை அப்பா பார்த்ததே இல்லை. “அவனுக்கு வேணுமானா அவன் படிக்கணும்.அவனவன் பிள்ளைய அவனவன் உண்டாக்கிக்கணும்” என்னும் கொள்கை கொண்டவர். [ஊரில் பலபேர் அப்படி இல்லை என்பதும் அவருக்கு தெரியும்] மார்க் குறைவைப் பற்றி அவர் கேட்டதே இல்லை. அவர் பள்ளியில் மிகச்சிறந்த மாணவர். மிகச்சிறந்த ஆங்கில அறிவுள்ளவர். ஆகவே நான் பின்னர் பள்ளி முதல்மாணவனாக வென்றபோதும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
நல்ல ஆசிரியர்கள் இருந்தார்கள். எதையும் எம்ஜியார் படங்களின் கதைகளில் இருந்து ஆரம்பிப்பவர்கள். ”நான் காற்று வாங்க போனேன், ஆக்சிஜன் வாங்கி வந்தேன்!’. கல்கியின் பொன்னியின்செல்வனை ஐந்துநாட்களில் முழுமையாகச் சொல்லி முடித்த அறிவியல் ஆசிரியர். ஜெயகாந்தனுக்கு கடிதமெழுதி அவர் அளித்த பதிலை வகுப்பில் காட்டி கண்கலங்கிய அண்ணாமலை சார், நேஷனல் ஜியாக்ரஃபிக்கில் வெட்டி ஒட்டிய படங்கள் கொண்ட ஆல்பத்தை வகுப்பில் காட்டி பெருமிதம்கொண்ட ஞானஸ்டீபன் சார்….
பண்படுதல்
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி வரும்வழியில் வேறுபள்ளி மாணவர்களின் போராட்டம். நின்று வேடிக்கை பார்த்தேன். அவ்வழியாக என் ஆசிரியர் முத்தையா நாடார் பஸ்ஸில் போனதை பார்க்கவில்லை. வகுப்பில் அவர் ஒரு கதை சொன்னார். ராமன் சீதையை மீட்டு கொண்டுவந்தபின் வானரங்கள் அத்தனைபேருக்கும் அயோத்தி பாணியில் ஒரு சாப்பாடு போட்டார். ராமன் ஒரு நாயர் ஆனதனால் அது கேரள பாணி ‘சத்யவட்டம்’. ஏழுவகை பிரதமன் உண்டு.
குரங்குகளுக்கு அதெல்லாம் பழக்கமில்லை. எப்படி சாப்பிடுவதென்று தெரியாது. ஆகவே ஒரு மூத்த குரங்கைப் பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டன. அப்போது மூத்தகுரங்கு பாயசத்தில் ஊறிய முந்திரிப்பழத்தை கைசுருட்டிஅள்ள அது பிதுங்கித் தெறித்தது. குரங்கியல்பால் அந்த பழத்தை பிடிக்க குரங்கு தாவிக்குதித்தது. அதைக்கண்டு மொத்த குரங்குகளும் தாவிக்குதித்தன.
அழிந்துவரும் உயிரினம்
முத்தையா நாடார் என்னை எழச்செய்து “கைய நீட்டுலே” என்றார். நீட்டியதும் “உனக்க முந்திரிய நீ பிடிலே” என்று சொல்லி மூன்று அடி வைத்தார்.
அடி வாங்கியபின் நான் சொன்னேன். “நான் முந்திரி பிடிக்கல்ல சார், கொசுவாக்கும் அடிச்சேன்”
சிரித்துவிட்டார். “செரிலே மக்கா, மூணு அடி உனக்க அக்கவுண்டிலே நிக்கட்டு. அடுத்த அடியிலே குறைச்சுகிடுதேன்”.
அவர் என் அப்பாவின் தோழர். அப்பாவிடம் “உம்ம பயலுக்க அக்கவுண்டிலே மூணு அடி மிச்சம் நிக்குதுவே” என்றார்.
“அவன் விடமாட்டான். அதை வாங்குறதுக்கு இனி கடுமையாட்டு உளைப்பான்” என்று அப்பா சொன்னார். மறுநாளே வசூல் செய்துவிட்டேன்.
”ஸ்கூலுக்கு ஏன் போகலைன்னா? அதுக்கு தனியா ஒரு ஆப் வைச்சிருக்கேன்”
நான் கல்லூரியில் பியூசி என்னும் புகுமுகவகுப்பு [அதை ஜகபுக வகுப்பு என்போம்] படிக்கையில் எகனாமிக்ஸும் காமர்ஸும் மாறிமாறிச் சொல்லித்தருவார்கள். அடிப்படைகள். எகனாமிக்ஸில் “வாட் இஸ் எ எக்கனாமிக் பிராப்ளம்?”என்பது முதல்பாடம். சோஷியல்பிராப்ளம், பொலிடிக்கல் பிராப்ளம், மாரல் பிராப்ளம் எல்லாம் எகனாமிக் பிராப்ளம் அல்ல என்ற தெளிவை அடையவைப்பார்கள். மோடி என்ற ஒரே மனிதர் நான்கு பிராப்ளமாகவும் ஒரேசமயம் ஆகமுடியும் என்று உணர லைசாண்டர் சார் உயிருடன் இல்லை.
காமர்ஸ் வகுப்பில் அக்கவுண்ட் என்பதன் விதிகள் சொல்லித்தரப்படும். ஒரு கணக்கை முதலில் கதையாக எழுதவேண்டும். ’ராமசாமி என்பவர் ஜனவரி 22 அன்று மருதமுத்துவுக்கு நூறு ரூபாய் கொடுத்தார்’ இதில் ’என்பவர்’ என்பது தேவையில்லை. ஆகவே அதை தவிர்க்கலாம். ’கொடுத்தார்’ என்பது தேவையில்லை அதை தவிர்க்கலாம். “It is unimportant, hence it must me omitted” இப்படி தவிர்த்துத் தவிர்த்து அவசியச் செய்தி மட்டுமே ஆனதுதான் கணக்கு.
லைசாண்டர் சார் கேட்டார் “What is an economic problem?”. நாங்கள் ஜெயபாரதியின் ரதிநிர்வேதம் படத்தின் கவற்சி ஸ்டில்லில் கருத்தழிந்து இருந்தமையால் கவனிக்கவில்லை. “கமான், டெல்மி ராதாகிருஷ்ணன்”
ராதாகிருஷ்ணன் எழுந்து அனிச்சையாக இருபாடங்களையும் ஒருங்கிணைத்து “An economic problem is unimportant, hence it must me omitted” என்றான்.
லைசாண்டர் சார் பெருமூச்சுடன் “அதாம்லே எனக்க அபிப்பிராயமும்” என்றார்.
”ஸ்கூல் கம்யூட்டரை ஹேக் பண்ணி என் மார்க்லிஸ்டை அழிச்சுட்டேன். அவங்க என் கம்ப்யூட்டரை இப்ப ஹேக் பண்ணியிருக்காங்க”
ரதிநிர்வேதம் வந்த ஆண்டு அது. அதில் தன்னைவிட பத்து வயது மூத்த பெண்ணை பதினாறு வயதுப் பையன் காதலித்து உறவும் வைத்துக் கொள்வான். படம் முழுக்க ஜெயபாரதியை கிருஷ்ணசந்திரன் என்னும் பயல் அன்பாக ரதிச்சேச்சி என்று அழைப்பான் .நான் அந்தப்படத்தில் உணர்ச்சிபூர்வமாக ஈடுபட்டு ஸ்ரீலக்ஷ்மி என்னும் எம்.ஏ மாணவியை “ரதிச்சேச்சி! ரதிச்சேச்சி!” என அழைத்துவிட்டு ஓடிப்போய்விட்டேன்.
மறுநாள் அடிவாங்க சித்தமாக கல்லூரிக்குச் சென்றாலும் ஒன்றும் நடக்கவில்லை. பத்துநாள் வரை அடிவாங்கும் மனநிலையில் நீடித்தேன். அதன்பின் நான் அவள் நேர் எதிரில் வந்தேன். என்னை பார்த்து ”டேய் செறுக்கா, என்ன வெளையுறே? அடி வேணுமா உனக்கு?”என்றாள்.
நான் மங்கலான சிரிப்புடன் பம்மி நின்றேன்.
“இந்தா இந்த புக்கை கொண்டுபோயி லைப்ரரியிலே போட்டு கார்டை வாங்கி என் கிளாசுக்கு கொண்டுவா… அங்க இங்க வாய் பாத்துட்டு நிக்காதே… ஓடு”
நான் அக்கணமே பையனாக மாறி அவளுக்கு பணிவிடை செய்பவனாக ஆனேன். அதன்பின் ஸ்ரீலக்ஷ்மியுடன் நெருக்கமாகி அவளுக்கு முட்டத்துவர்க்கி நாவலெல்லாம் கொண்டுபோய் கொடுத்தேன்.
”உலகம் சிக்கலாய்ட்டே போகுது மிஸ்,பழைய எளிமையான விடைகளுக்கெல்லாம் இப்ப இடமில்ல”
முப்பதாண்டுகளுக்குப் பின் ஒருநாள் திருவனந்தபுரம் ரயில்நிலையத்தில் ஒர் அம்மாள் என்னிடம் “டேய் நீ ஜெயன்தானே?”என்றாள்.
“ஆமாம்” என்றேன். ஆளைத் தெரியவில்லை.
“நான்தான் ஸ்ரீலக்ஷ்மி!” என்றாள். கூட அவள் மகன், அவனுக்கே இளநரை.
ஒருவழியாகத் தப்பித்துக் கடந்து வந்ததுவிட்டதனால்தான் கல்விக்கூடங்கள் அழகானவை.
இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்
ராஜஸ்தானில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு மண்ணுள்ளிப் பாம்பைப் பார்த்தோ. சேண்ட் போவா என்று அழைக்கப்படும் இந்தப் பாம்பு தலையும் வாலும் இணையான அளவுள்ளது. லாடம்போல கிடக்கும். தலை எது வால் எதுவென எதிரிகளையும் இரைகளையும் குழப்பமடையச்செவது அதன் உத்தி.
அன்று அதன் பாதி உடல் ஒரு வளைக்குள் இருந்தது. அதைப்பிடித்து ஓட்டுநர் இழுத்தார். நானும் இழுத்துப்பார்த்தேன். வரவில்லை. உள்ளே எதையோ விழுங்கி தலைபெருத்திருந்தது என்று தெரிந்தது. விட்டுவிட்டோம்.
பாம்புகளுக்கு நிகழும் விபத்துகளில் முக்கியமானது இது. முன்பு பரம்பிக்குளத்தில் ஒரு ராஜநாகம் சாரை ஒன்றை தொடர்ந்து சென்று விழுங்கிவிட்டது. அந்த உடலே வயிறாகி வீங்க அந்த சிறிய கல்வளையில் இருந்து வெளிவர முடியவில்லை. செத்து மட்கியிருந்தது. அதை வெளியே எடுத்துப் போட்டார்கள். எலும்புக்கூட்டுக்குள் ஓர் எலும்புக்கூடு. யார் யாரைக் கொன்றது?
சதீஷ்குமார் சீனிவாசனின் இக்கவிதை அந்த நினைவுகளை மட்டுமல்ல அந்நினைவுகள் உருவாக்கிய எண்ணங்களையும் ஒட்டுமொத்தமாக இழுத்துவந்தது. கவிதைவாசிப்பில் அது முக்கியமானது. ஆங்கிலத்தில் evocation என்பார்கள். ஆனால் கவிதையின் உயிரிலிருந்து நீளும் எண்ணங்களே அவ்வாறு சொல்லத்தக்கவை. அதன் செய்திகளிலிருந்து விரியும் எண்ணங்களை association fallacy என்று சொல்லவேண்டும். அது பிழைவாசிப்பு
உன் எறும்புகள்இறந்துகொண்டிருக்கின்றன
தனிமையும் காமமும் புற்றென
வளர்ந்துகிடந்தது
புற்றிலுள்ள
காத்திருப்பின் சர்ப்பங்கள் உண்ண
உன்னையே புற்றுக்குள் திணித்தாய்
பாதி உள் நுழைந்தும்
பாதி பிதுங்கியும்
விபரீதமாய் இருந்தது அந்தக் காட்சி
மூச்சுத்திணறி இறந்தும் போனாய்
சாக்லேட்டை உண்பதுபோல
உன்னை உண்டன எறும்புகள்
பிறகு வெகுகாலம் நீ பிறக்கவில்லை
இந்தப் பிறவியில்தான்
நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்
ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த
உன் எறும்புகள்
நிச்சயமின்மையின் மழையில்
இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன
சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை
புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்
தெளிவான படிமங்களின் காலகட்டத்தில் இருந்து குழம்பும் படிமங்களின் காலகட்டத்திற்குக் கவிதை வந்திருப்பதைக் காட்டும் படைப்பு இது. அதை பிரித்து அடுக்க முற்படுவது வாசிப்பல்ல. தவிப்பை உண்டவை பசியறாது பிறந்து மீண்டும் தவித்தலைகின்றன. தவிப்பு தன்னை உணவாக்கி உண்டவைகளாக உருமாறி தவிப்பெனப் பரவியிருக்கிறது.
மறுபக்கம் மிக எளிமையான நேரடிக் கவிதைகளையும் சதீஷ்குமார் சீனிவாசன் எழுதியிருக்கிறார். இத்தகைய கவிதைகளில் மொழியின் வசீகரமும் வீச்சுமே அவ்வுணர்ச்சிவெளிப்பாட்டைக் கவிதையாக்குகின்றன. கூடவே வரும் படிமங்கள் எளிமையானவையாக இருக்கவேண்டும். இரவென பெருகும் மௌனத்தில் இரவென பெருகும் கூந்தலுடன் வருபவளைப்போல.
இந்த இரவின் அற்புதமே
இல்லாத வாழ்க்கையைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தோம்
அடம்பிடிக்கும் ஒரு சிறுமியை
சமாதானப்படுத்துவது போல
எங்களது துயரங்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்
ஒரு குரல்
‘ஆமாம் எனக்கும் அப்படி நடந்திருக்கிறது ‘
இன்னொரு குரல்
‘ ஆமாம் எனக்கும் நடந்திருக்கிறது .
ஆனால் வேறு மாதிரி ‘
கோடையின் இரவு காற்றால் குளிர்ந்துகொண்டிருந்தது
கெஞ்ச நேரத்திலேயே
சொல்லவும்
கேட்கவும் ஒன்றுமில்லை
இனியும் ஏன் என்ற கேள்வி
அழ முடியாமல்
பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்
மௌனம் ஒரு மோசமான இரவைப்போல பெருகிக்கொண்டிருந்தது
எங்களது அபத்த இருப்பின்
நேரெதிர் திசையில்
நாயுடன் ஒருத்தி வாக்கிங் வந்தாள்
அவளது கூந்தல்
இரவென அசைந்தது காற்றில்
அது அற்புதம் போல இருந்தது
இந்த இரவின் அற்புதமே
எனக்கு வாழ வேண்டும்
இந்த இரவின் அற்புதமே
நானுனை இந்த ஒரு கணம் காதலித்துக்கொள்ளவா ?
எனக்கு வாழ வேண்டும்
எப்போதும் அழுதுகொண்டும் மௌனத்துடனும் அமர்ந்திருக்க முடியாது
ஒளி- கடிதங்கள்
‘ஒளி’ ஒரு சூம் நாடகம்
அன்புள்ள ஜெ,
ஒளி நாடகம் பார்த்தேன். நீங்கள் சொன்னதுபோல இத்தகைய செயல்பாடுகள் வழியாகவே மீண்டாகவேண்டும். எங்கிருந்தாலும் நாம் நம்மை திரட்டி முன்வைத்தாகவேண்டும். ப.சிங்காரம்சொல்வதுபோல “மனதை இழக்காதது வரை நாம் எதையும் இழப்பதில்லை”
சிறந்த நாடகம். இச்சூழலில் வழக்கமாக ஒரு நகைச்சுவை நாடகத்தையே பலரும் நாடுவார்கள். ஆனால் இது சீரியஸான நாடகம். ஆனால் எப்படியோ இச்சூழலை அது காட்டுகிறது. பலவகையிலும் நம் அனைவருடைய ஏக்கத்தையும் எதிரொலிக்கிறது.
எதிர்மறையான மனநிலைகளில் இருந்து ஒளி நோக்கி திரும்புபவர்களின் கதை. தன்னை எரிபொருளாக்கி பற்றவைத்துவிட்டுச் செல்கிறான். அவன் தோற்கவே மாட்டான்.
எம்.ராஜேந்திரன்
அன்புள்ள ஜெ
ஒளி அருமையான நாடகம் 17 நிமிடங்கள்தான். சுருக்கமான வசனங்கள். ஆனால் கதையின் சுருள்கள் விரிவானவை. மற்ற நால்வரும் சோஷியலானவர்கள். பலவகை திறமைகள் கொண்டவர்கள். ஆனால் அவர்களை எழுப்ப ஒரு தன்னந்தனியன்தான் வரவேண்டியிருக்கிறது. அறிவுஜீவி, இசைக்கலைஞன், நடனக்கலைஞர், மலையேறுபவர் ஆகியவர்கள் தங்கள் எல்லைகளை மீறியவர்கள். எல்லைக்கு அப்பால் நின்றிருந்தவன் அவன். அத்தகையவர்கள்தான் மீட்புக்கு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் நால்வருமே சமரசம் செய்துகொண்டார்கள். அவன் ஒரு நாள்கூட அங்கிருக்கமாட்டேன் என்கிறான். அவனிடமிருந்தே ஒளி தொடங்குகிறது
ஐந்துபேருமே இயல்பாக, தயக்கங்கள் இல்லாமல் நடித்தனர். காமிராக் கோணங்கள் இல்லை. குளோஸப் இல்லை. ஆனால் உணர்வுகளை அருமையாகக் கடத்திவிட்டார்கள். சட்டென்று முடிந்ததுபோலிருந்தது. அருமையான நடிப்பு.
அர்விந்த்குமார்
அன்புள்ள ஜெ,
ஒளி இந்தச் சூழலுக்கு உகந்த நாடகம். நாடே சர்வாதிகாரம் நோக்கி செல்கிறது. பொய்யான ஒளி ஒன்று மேலே முன்வைக்கப்படுகிறது. ஒளி வேண்டுமென்றால் ஒரு தலைவனை வழிபடு என்கிறார்கள். அவன் அதிகாரத் தலைவன் அதற்கு நேர் எதிரானது கீழே நிகழ்கிறது. மெய்யான ஒளி. அதற்கு தன்னை தியாகத்தால் அளிக்கும் மெய்யான தலைவன், ஒரு மெய்யான வழிகாட்டி.
சிறப்பான நாடகம்
ஆர்.ராகவ்
கதாநாயகி, கடிதங்கள் -8
அன்புள்ள ஜெயமோகன்,
கதாநாயகி சிறுகதையைப்பற்றி வந்த கடிதங்கள் பெரும்பாலும் ஆண்களிடமிருந்தே வந்துள்ளது.இக்கதை முக்கியமாக எழுப்பி உள்ள பெண்களின் மன ஓட்டஙகளைப்பற்றி பெண் வாசகர்களின் மௌனம் வியப்பளிக்கிறது.
நெல்சன்
அன்புள்ள நெல்சன்
அது ஒரு நல்ல கேள்விதான். ஆனால் பெண்கள் எவருமே எழுதவில்லை
ஜெ
வணக்கத்திற்கும் பேரன்பிற்குமுரிய ஜெயமோகன்,
நல்லதொரு நாவலை அளித்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி.
இதுபோன்றதொரு கதைக்கருவை வைத்து வேறு எவரேனும் இப்படி இதுவரை தமிழில் கதை எழுதி இருக்கிறார்களா என தெரியவில்லை. ஒரு மிகப் புதுமையான கதைக்களம். உங்களுக்கே உரிய செறிவான நடை.
இந்த நாவலைப் படித்து முடித்து பல புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன். முதலாவதாக பெண்களின் ஆழ்மன சிந்தனைப் போக்கு மற்றும் எண்ண ஓட்டங்கள், அடுத்ததாக ஏன் எல்லா விதமான சமூக அமைப்பிலும் ஒவ்வொரு முறையும் மென்மையானவர்கள் பலியிடப்படுகிறார்கள், மூன்றாவதாக ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் எப்படி ஒரிடத்தின் ஒட்டுமொத்த மலைவாழ் சமூக மாற்றத்திற்கு வழிகோலமுடியும் என்பது.
ஒரு பேய்களின் கதை என்பதையும் தாண்டி இந்தக் கதையை நான் மன அடுக்குகளை, உள்ளத்து ஆசைகளை, ஆழ்மன இடுக்கின் அழுக்குகளின் வெளிப்பாடுகளை காட்சிப்படுத்தும் ஒரு உன்னத கலைப்படைப்பாகவே கண்டேன்.
அமானுஷ்யமும் ஆன்மீகமும் அடிப்படையில் மனம் என்கின்ற கட்டமைப்பின் விந்தை இயல்புகளைச் சார்ந்தே இயங்குகின்றன. ஒருவகையில் பார்த்தால் இரண்டுக்குமே மன ஒர்மையும், ஆழ்ந்த ஈடுபாடும், நம்பிக்கையும் கொஞ்சம் கிறுக்குத்தனமும் தேவைப்படுகின்றன.
ஆன்மீக சாதனைகளின் பொழுதுஉருவெளிக் காட்சிகள் கிடைப்பதாக பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். சிலருக்கு கடவுளர்கள்,தேவதைகள், பிசாசுகள், பேய்கள், யட்சிகள், கந்தர்வர்கள் என பல்வேறு விதமான காட்சி அனுபவங்கள் கிடைத்திருப்பதாகவும் 100 சதவீத நம்பிக்கையோடு கூறியிருக்கிறார்கள். வேறு சிலருக்கு முன்னோர்கள், குருமார்கள், தான் வணங்கும் ஞானிகள் மற்றும் தன்னோடு வாழ்ந்து மறைந்தவர்கள் என மனிதர்களின் ஸ்தூல தரிசனம் இன்றளவும் கிடைத்துக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
யதார்த்த உலகத்தைப் போலவே நிகரான ஒரு அமானுஷ்ய உலகத்தை மிகத் தீவிரமாக தாங்களே உருவாக்கி அதற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் சிலரை நான் அறிவேன். எந்த வகையிலும் இது ஒரு மனச்சிதைவு நோய் என்று நம்மால் அவர்களுக்கு புரியவைக்க முடியாது. அதுவும் முக்கியமாக ஆன்மீக சாதகர்களுக்கு இதைப் புரிய வைத்தல் சாத்தியமே இல்லை.
தங்களுக்கு அடிக்கடி கடவுளின் தரிசனம் கிடைத்துவிட்டதாக அல்லது கிடைத்துக் கொண்டிருப்பதாக மார்தட்டிக் கொள்வார்கள். அத்தகைய தரிசனங்களை அவர்களைத் தவிர வேறு யாருக்கேனும் அவர்கள் காட்ட முடியுமா என்றால், முடியாது என்றே பதில் வரும். பேய்கள் பிசாசுகள் போன்றவற்றை மறுத்து வாதிடுவதைப் போல அத்தனை எளிதாக கடவுள்கள் மற்றும் தேவதைகளின் காட்சி வெளிப்பாடுகளை சுலபத்தில் நம்மால் மறுத்து வாதிடமுடியாது. கடவுள் காட்சிகளும் கூட மனச் சிதைவின் அடையாளமே என நம்மால் அவர்களிடம் கூறிவிட முடியாது.ஏனென்றால் இது அவர்களின் ஆன்மிக சாதனையின் ஒரு பகுதி, இந்தப் பகுதியைக் கடந்து, அவர்கள் அரூப சாதனையை நோக்கியும், அதைக் கடந்து உருஅரு கடந்த உயர்தள தத்துவ தரிசனத்தை நோக்கியும் நகர முடியும். எனவே அவர்களிடத்தில் எதையும் வாதிக்காமல் விட்டுவடுவதே நாம் செய்யக்கூடியது. நமது பாரம்பரியமான ஆன்மீக சாதனை மரபுகளும் கூட இவற்றை அறிந்தே அனுமதித்துள்ளன. இவற்றை ஆன்மிக சாதனையின் படிநிலைகள் என புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டால் போதுமானது. மற்றபடி அறிவியல்பூர்வமாக அணுகுகிறேன் என்று உடைத்துப் போடத் துவங்கினால் விரக்தியே மிஞ்சும்.
இன்னும் ஒருபடி மேலே போய் சுல்பா, சரஸ், கஞ்சா, மேஜிக் மஷ்ரூம், வேறு சில ஆயுர்வேத மூலிகைகள் என பலவற்றை உட்கொண்டு, வலிந்து தாமே உருவாக்கிக் கொள்கின்ற உருவெளி புலன்காட்சி மயக்க சாதனை முறைகளும் கூட மனதின் அடுக்குகளை கலைத்துப் போட்டு மீளுருவாக்கம் செய்ய ஆன்மிக சாதனையின் துவக்க கால கட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பலர் இந்த முறைகளில் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் போதை அடிமைகளாகவும், பைத்தியங்கள் ஆகவும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய இரவு நாவலில் ஓரளவுக்கு இவற்றை தொட்டுக்காட்டி சென்றிருப்பீர்கள்.
பல நேரங்களில் சித்த விருத்தி நிரோதத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்படுகின்ற சாதனைகள் கட்டுக்கடங்காத சித்த விருத்தியில் ஆழ்த்தி விடுவதுண்டு. சரியான குருவின் வழிகாட்டுதலும், உறுதுணையும் இல்லாதவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு சிதைந்து அழிந்து போகிறார்கள். நல்லவேளையாக மெய்யன் பிள்ளைக்கு ஒரு நல்ல மருத்துவர் கிடைத்தார், அதனால் அவர் மனச் சிதைவு நோயிலிருந்து விடுபட்டார். ஆனால் முற்றிலுமாக விடுபட்டாரா என்றால், இல்லை என்றே கதையின் முடிவு காட்டுகிறது. நீங்களே சொன்னது போல, அளவான அத்துமீறாத மனச்சிதைவும் கூட, செயற்கரிய செய்வதற்கு அவசியம்தான் போலும்.
கதாநாயகி புனைவில் உண்மையில் கதாநாயகி மெய்யன் பிள்ளையின் மனம்தான். தான் கண்டது கேட்டது படித்தது என அனைத்தையும் வைத்து அனைத்து கதாநாயகி வேடங்களையும் அந்த மனமே, உண்மை கற்பனை என இரண்டையும் கலந்து புனைந்துகொள்கிறது. தான் புரிந்து கொண்டவற்றை உருவெளிக் காட்சிகளாக மிக சாமார்த்தியமாக வடித்து அவற்றை ஐம்புலன்கள் வழியாக அனுபவம் பெறுவதாகவும் தனக்குத் தானே ஒரு உலகை சமைத்துக் கொள்கிறது.
தனக்கு மனச்சிதைவு நோய் இருக்கிறது என்பதை அறிந்தும், அதற்கான மருத்துவம் செய்து அதிலிருந்து ஓரளவு விடுபட்ட பின்பும் கூட, மெய்யன் பிள்ளையின் மனது பேய்களின் இருப்பை நம்ப விழைவதும், அவைகளை உருவெளி காட்சிகளாக காப்டன் மக்கின்சி மற்றும் கர்னல் சாப்மென் என அவ்வப்போது சமைத்து கொள்வதும் விந்தைதான். இயற்கை பரிணாமத்தின் உச்சத்தில் விளைந்த அற்புத கனியான மனித மனத்தை அத்தனை சுலபமாக விளங்கிக் கொள்ள முடியுமா என்ன.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தளத்தில் இந்த கதை தொடராக வந்து கொண்டிருக்கின்ற போதே சுக்கிரி குழுமத்தில் slack app இல் நாங்கள் நண்பர்கள் ஒரு பதினைந்து இருபது பேய்களை குறித்த அவரவர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். என்னை அமுக்கிய பேய் பெரியதா உன்னை அமுக்கிய பேய் பெரியதா, அந்த நான்கு வெள்ளைக்கார பேய்களில் எனக்குப் பிடித்த பேய் இதுவா அல்லது அதுவா என்கின்ற அளவிற்கு விவாதம் களைகட்டி விட்டது. உங்கள் கதையில் வந்த நான்கு கதாநாயகி பேய்களை விட எங்கள் சுக்கிரி குழுமத்தில் வந்து விளையாடிய பேய்கள் கொஞ்சம் பயங்கரமானவைகளாக இருந்தன. கதாநாயகி கதை ஒரு கொண்டாட்டம் என்றால் அதை குறித்த சுக்கிரியின் உடனடி அன்றாட விவாதங்கள், பகடைகள், அனுபவப் பதிவுகள் மற்றுமொரு நிகர் கொண்டாட்டம். எல்லாப் புகழும் ஜெயமோகன் என்கின்ற கதாநாயகி பேய்களை படைத்து உலவ விட்ட இலக்கிய பிரம்மாவிற்கே!
இந்த கூத்திற்கு நடுவே ஆஸ்திரேலியா கலா மேடமும் நம் வைஜயந்தி மேடமும் விஜயலட்சுமி மேடமும் நாங்களெல்லாம் இருக்கின்ற பொழுது எங்களை விட்டுவிட்டு அது எப்படி வேறு பேய்களைப் பற்றி நீங்கள் பேசலாம் என்று மிக அன்பாகவும் உரிமையோடும் எங்களைக் கடிந்து கொள்கின்ற அளவிற்கு சென்று விட்டது நிலைமை… சிட்னி கார்த்திக் சுக்கிரியில் வெளிப்பட்ட அனுபவ பேய்களை கண்டு பயந்துபோய் கொஞ்ச நாள் குழுவுக்கு வருவதையே நிறுத்திவிட்டார். இரவோடும் பேயோடும் எங்களை எல்லாம் நீங்கள் படுத்தி வைக்கின்ற பாடு கொஞ்ச நஞ்சமல்ல… நாலு பேயோடு இந்த மனுஷன் எப்படி ஐய்யா தினம் காட்டு பங்களாவில் குடும்பம் நடத்துகிறார் என்று எங்களை வியக்க வைத்து விட்டீர்கள்….. இவைகள் போதாதென்று மெய்யன் பிள்ளை பார்த்த புலி உண்மை புலியா? அல்லது பேய் புலியா? . உண்மை புலி எனில் அது எத்தனையாவது தலைமுறை புலி? என மிக ஐயம் கொண்டு கேள்வி வேறு கேட்கப்பட்டது!
அந்த முகில் இந்த முகில், குமரித் துறைவி மற்றும் இந்த கதாநாயகி என ஒவ்வொரு குறு நாவலும் ஒவ்வொரு தளத்தில் நின்று வாழ்க்கையை, மனித மனத்தை, அதன் இயங்குதளங்களை அது உருவாக்கிக் கொள்ளும் வெவ்வேறு வகையான உலகங்களை வெகு அற்புதமாக வடித்து காட்டுகின்றன. நீங்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பெருவரம்.
உங்களுள்ளும் எங்களுள்ளும் அந்த அளவான, கிறுக்குத்தனம் மற்றும் கொஞ்சம் மனச்சிதைவு இருந்துவிட்டுதான் போகட்டுமே….என்ன குறைந்து விடப் போகிறது….
அப்போதுதானே நீங்கள் இலக்கியம் படைக்கவும் நாங்கள் அதை தூக்கம் கெடுத்துக்கொண்டு நள்ளிரவில் எழுந்து ஆழ்ந்து படித்து, குழம்பி தவித்து, மீனாட்சியோடும், ஸ்ரீ பாலாவோடும், கதாநாயகி பேய்களோடும் நிகர் வாழ்வு வாழ்ந்து அனுபவிக்கவும் முடியும்…. எல்லோரும் சித்தவிருத்தி நிரோதம் செய்து முக்தி அடைந்து விட்டால் யார் கதையை எழுதுவது, யார் படிப்பது!
ஆகவே…….
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
அன்புள்ள ஜெ,
ஸ்கிஸோபிரினியா போன்ற உளச்சிதைவுகள் இலக்கியத்தில் அடிக்கடிப் பேசப்படுகின்றன. நான் முதலில் வாசித்து மிரண்டது பின்தொடரும் நிழலின் குரல் நாவலில்தான்.அதன்பின் பல கதைகளில் வாசித்திருக்கிறேன். அது ஓர் உச்சநிலை, மிக கிரியேட்டிவானது என்று கதாநாயகியில் மெய்யன் சொல்கிறான். அதுதான் இலக்கியம் அதை பொருட்படுத்திப் பேச காரணமாக இருக்கமுடியும்.
சகஜநிலை என்பது ஒரு இறுக்கமான நிலை. அதை உடைக்காமல் மனித உள்ளத்தை அறியமுடியாது. அந்த சகஜநிலைகள் இல்லாமலாகும் சூழல்களையே கதைகள் எப்போதும் தேடிக்கொண்டிருக்கின்ரன
ஆர்.நாகராஜ்
கதாநாயகி கடிதங்கள்- 7 கதாநாயகி- கடிதங்கள் -5 கதாநாயகி கடிதங்கள்-4 கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1சிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன்
எரிந்த திரியின் நுனிக்கரியை விரல்களால் நசித்து நெற்றியில் அப்பிக்கொண்டு கூந்தலை விரித்து நின்று இன்மையூறும் திசைநோக்கி உச்சாடனம் செய்யும் அவள் மந்திரங்களோ பிறருக்கும் கேட்காது. அவள் பாடும் பாடல்களின் அர்த்தம் மொழிக்கும் தெரியாது. மந்திரங்களும் மர்மங்களும் ஆச்சியின் விலா எலும்புகளால் இக்கிராமத்தின் குருதியிலேயே எழுதப்பட்டதென்பாள் என்னுடைய அம்மா.
மழையும் நிலமும்
மழைப்பாடல்மழையைப் பற்றி ஜெ குறிப்பிடும்போது அதை வள்ளுவனின் வரிகளில் “விசும்பின் துளி” என்று குறிப்பதையே மிகவும் விரும்புவார். ஆம்! அத்தகைய விசும்பின் துளி நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ஓர் பறவையாக அஸ்தினாபுரி இந்த நாவலில் காணக்கிடக்கிறது. மழையின் போது எழும் தவளைகளின் சத்தமே அதன் பாடலாக இருக்க முடியும். தவளைகளைப் பற்றி சத்யவதி கூறும்போது, “கங்கைக்கரையின் கோடானுகோடி தவளைகளின் நாவில் வேதம் எழும்போது விண்ணோர் இரங்கியாகவேண்டும். தவளைக்குரல் எழும் நாட்டிடம் வருணனும் இந்திரனும் கனிவுடனிருக்கிறார்கள்” என்கிறாள். அத்தகைய தவளையின் பாடலை நோக்கி அஸ்தினாபுரி ஏங்கி நிற்கும் தருணமாக மழைப்பாடலின் துவக்கம் அமையப் பெறுகிறது
‘அன்னை தன் நான்கு கைவிரல்களால் நான்கு தாயக்கட்டைகளைச் செய்தாள். திரேதம், கிருதம், துவாபரம், கலி என்னும் அக்கட்டைகளை சிரித்தபடி உருட்டி அவள் ஆடத்தொடங்கினாள்’ என்றே நாவல் துவங்குகிறது. கிராதம் என்னும் பகடையாக பரசுராமன் பிறந்து, ஷத்ரியர்களின் அரச மோகத்தால் உயிரிழந்த மூதாதையர்களின் கண்ணீர்த்துளிகளுக்கு பலியாக, ஷத்திரிய குலங்களை அழித்தொழிக்கிறான். மூன்றாவது பகடையான துவாபரம் விண்ணவர்களான சூரியனுக்கும் இந்திரனுக்குமான போர்ச்சூழலை மூளவைத்து அதன் காரணகர்த்தவாக தான் இருப்பது கண்டு சிரித்துக் கொண்டிருக்கையிலேயே சக்கரங்களில் மோதித் தெரித்து மேருவில் முட்டி உடைகிறான். உடனே விண்ணவர்கள் “இனி நம் ஆடல் அந்த மண்ணில்” என்று சிரிப்பதாக சூதரின் வெறிகொண்ட பாடலுடன் மழைப்பாடல் நம்மை அத்தியாயத்திற்குள் அழைத்துச் செல்கிறது. துவாபார யுகத்தின் இறுதிக் கட்டத்தை நாவல் எடுத்தியம்புவதாக விண்ணின் தேவர்கள் யாவரும் மண்ணில் பிறந்து தங்களின் ஆடலை நிகழ்த்துவதற்கான களத்தை ஒருக்குவதாக இந்த நாவல் அமையப்பெறுகிறது
பகுதிகளின் வழியாக மழைப்பாடல்:
பதினேழு பகுதிகளைக் கொண்டிலங்கும் மழைப்பாடல் நாவல் ’வேழாம்பல் தவம்’ எனும் பகுதி கொண்டு தொடங்குகிறது. ’வேழாம்பல்’ என்ற சொல்லே உச்சரிபதற்கு இனிமையாக இருக்கிறது. வேழாம்பல் என்பது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் இருவாட்சி பறவையே தான். தொல் குடிகளான பழம் மக்களுக்கு இன்றளவிலும் அது குறியீடாக இருந்து வருகிறது. நாகர்கள் இதை உண்பதில்லை. அஸ்தினாபுரம் எனும் மிக உயரமான பாதுகாப்பான இடத்தில் கூட்டைக் கட்டி தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் ஒரு பெண் வேழாம்பலான சத்தியவதியின் தவம் இது. வேழாம்பலில் ஆண் தான் கூட்டைப் பாதுகாப்பதும், இரையைக் கொணர்வதுமான வேலையைச் செய்கிறது. அஸிதினாபுரி எனும் முதிராக் குழந்தைகளுக்கான பசியைப் போக்கும் இரையாக காந்தாரமும் மர்க்காவதியும் எழுகிறது. அதைக் கொணர்ந்து கொடுக்கும் ஒரு ஆண் பறவையாக பீஷ்மர் திகழ்கிறார். அஸ்தினாபுரி எனும் குழந்தையின் தந்தையாக பீஷ்மர் இருந்து அந்த வேலையைச் செய்து அதை வளர்த்தெடுக்கிறார்.
கானல் வெள்ளி: ’கானல் நீர்’ தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு இரண்டாம் பகுதியில் ஆசிரியர் காணிப்பது கானல் வெள்ளியை. எங்கோ தொலைவில் இருக்கும் வெள்ளி ஒரு கானல் நீரைப் போலவே மின்னி மின்னி தான் நம் கண்களுக்குத் தெரிகின்றது. காட்சிபிழையெனவே நம் கண்களை நிறைக்கும் அழகைக் கொண்டவை அவை. திருதிராஷ்டிரனுக்கான அரியணை என்பதும் கூட அப்படியான ஒரு கட்சிப்பிழையாய் அமைந்துவிடுவதை பகுதி எடுத்தியம்புகிறது. ஹஸ்தியின் அரியணையில் அமரும் பெருந்தோள் வல்லமை கொண்டவனான திருதிராஷ்டிரன் அரியணைக் கனவு கொண்டிலங்குகிறான். தன் தோள்வலிமையின் மீதான முற்றாணவம் அழிந்தபின் பீஷ்மர் முன் முகம் குப்புற விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லும் அவனைத் தன் மகனாக ஏற்கிறார். அவனை அரியணை ஏற்றுவேன் எனும் சபதத்தையும் எடுக்கிறார்.
புயலின் தொட்டில்: எவ்வழி நோக்கினும் புயல் அழிவின் ஒரு சக்தியே. ஆனால் அது இயற்கையின் ஒரு இன்றியமையாத நிகழ்வும் கூட. பூமி தன்னை மழை தேவன் வருவதற்கு முன் தூய்மையாக்கிக் கொள்ளும் கருவியாகவும் புயல் அமைகிறது. மாபெரும் புயல்களின் பிறப்பிடமாக இந்த மண்ணில் இருப்பது பாலை நிலமே. சப்தசிந்துவையும் கூர்ஜரத்தையும் தாண்டி அமைந்த ஒரு பெரும்பாலை நிலப்பரப்பின் சித்திரத்தை ஆசிரியர் நம் கண்களுக்கு இங்கே கட்சிப்படுத்துகிறார். சந்திரகுல யாயாதியின் இரண்டாவது மைந்தன் துர்வசு தன் தந்தையால் தீச்சொல்லிடப்பட்டு நாடு துறந்தபோது அவன் கண்டடைந்து உருவாக்கிய பாலை அரசே காந்தாரம். புயலின் தொட்டிலான காந்தாரம் அஸ்தினாபுரியுடன் எவ்வாறு இணைகிறது என்பதை இந்தப் பகுதி எடுத்தியம்புகிறது. மனிதன் எத்தனையோ திட்டங்களைத் தீட்டி தன் எதிர்காலத்தைக் கனவு காண்கிறான். ஆனால் நிகழும் நிகழ்வுகள் அந்த திட்டத்தை முறியடித்து தெய்வத்தின் ஆடலுக்கான களத்தை ஒருங்கு செய்கிறது. அப்படித்தான் மகதத்தின் நட்பை விரும்பிய சகுனியின் திட்டம் ’அவமானம்’ எனும் கருவியால் முறியடிக்கப்பட்டு அஸ்தினாபுரியோடு இணைந்து வரலாற்றை உருவாக்க அவனை உந்தித் தள்ளுகிறது. அஸ்தினாபுரியின் ஒவ்வொரு பெரு நிகழ்விலும் செயல் தந்தையாக இருக்கும் பீஷ்மர் காந்தாரத்திற்குச் சென்று திருதிராஷ்டிரனுக்காகப் பெண் கேட்கிறார். அவரின் கண்கள் வழியே தான் நாம் பாலை நிலத்தையும் காந்தாரத்தையும் காண்கிறோம். இங்கு காணிகப்படும் ”இறந்தவர்களின் நகரம்” மற்றும் அதன் வர்ணனை நம்மை காலத்தைக் கடந்த வரலாற்றுக்குப் புலப்படாத ஒன்றை நோக்கி உந்தித் தள்ளுகிறது. காந்தாரி வசுமதியின் முதல் அறிமுகம் இங்கு தான் காணக்கிடக்கிறது. பேரழகியாகவும், அரசியல் வியூகம் தெரிந்த ஷத்ரியப் பெண்ணாகவுமே அவளை நமக்கு ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார். “ஷத்ரியர்களும் விழியற்றவர்கள்தான்” என்று கூறி அவள் தன்னை திருதிராஷ்டிரனின் மனைவியாக, அஸ்தினாபுரியின் அரசியாக முடிசூட்டிக் கொள்வதற்கு ஒப்புக் கொடுக்கும் தருணம் சகுனியை மட்டுமல்ல நம்மையும் நெகிழத்தான் செய்து விடுகிறது. இங்ஙனம் இந்தப் பகுதியில் அஸ்தினாபுரத்திற்கான புயலின் தொட்டில் காந்தாரத்தில் ஒருக்கப்படும் விதத்தை ஆசிரியர் எடுத்தியம்புகிறார்.
பீலித்தாழம்: ”பீலித்தாழம்” என்ற வார்த்தையே புதுமையாக இருந்தது. அது ஒரு சடங்கின் குறியீடு. அதன் வர்ணனையிலேயே நம்மை அது சிலிர்க்கவைக்கிறது. மனிதர்கள் தங்களை குடும்பமாக குலமாக பிரித்துக் கொண்டு ஒரு நிலத்தைத் தேர்ந்தெடுந்து ஒரு இடத்தில் அமைந்தொழுகத் தொடங்கி தனக்கான சடங்குகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். சடங்குகள் நமக்கு நம் மூதாதையர்களை, நம் குல வரலாற்றை அவர்களின் நம்பிக்கைகளை நினைவுகூறச் செய்கின்றன. அங்ஙனம் இந்தப் பகுதி முழுவதுமாக லஷ்கர்கள் எனும் பழங்குடிகளின் சடங்குகளும் நம்பிக்கைகளும் என நிரம்பித் ததும்புகிறது. காந்தாரத்தின் ஆதி மூத்தவரிகளின் ஒப்புதலை திருதிராஷ்டிரன் எங்ஙனம் பெறுகிறான் என்பதையும், அவனுக்கும் காந்தாரி வசுமதிக்கும் நடைபெறும் திருமண நிகழ்வு மற்றும் அதையொட்டிய சடங்குகளும் விளக்கப்படுகிறது. சடங்குகளின் குறியீடாக, பூத்த பீலிப்பனையின் ஓலையில் சுருட்டப்படும் தாலி அமைகிறது. சடங்குகளின் முற்றில் காந்தாரி தன்னை காந்தாரம் என்ற கட்டிலிருந்து விடுவித்து அஸ்தினாபுரியைத் தழுவிக் கொள்ளும் உணர்வை அவளுக்கு அளிப்பதாக இந்தப்பகுதி அமைகிறது.
முதல்மழை: மழைப்பாடல் நாவலின் முதல்மழை நிகழும் பகுதியாக இது அமைந்தொழுகிறது. காந்தாரியின் நகர் நுழைவுக்கு முன் ருத்ராணிருத்ரை எனுமிடத்தில் பெய்த முதல் மழை பல வகைகளிலும் சிறப்பானது. அந்தப் பாலை நிலத்தில் ஏழு வருடங்களுக்கு முன் பெய்த மழை அன்று பூத்தது என்பதாலும், அது கூழங்கல் போன்ற கனத்தில் பெய்த குருதி மழை என்பதாலும், காந்தாரியின் நகர் நுழைவின் போது அது நிகழ்ந்ததாலும், அஸ்தினாபுரிக்கு மூன்று மாதமாகப் பிந்தியிருந்த மழை காந்தாரியின் வருகையின் போது பெய்திருந்தமையாலும், அவளின் லஷ்கர் பாலை நில வாசனையை அது கழுவிவிடுமென சத்யவதி சொன்னமையாலுமென இந்த முதல் மழை சிறப்பு பெற்றதாக அமைகிறது. மழையைப்பற்றி ஜெ சொல்லும்போது “மழையோ ஒற்றைப்பெரும்பொழிவென திகழ்ந்தது. மழையோசை ஒன்றையே சொல்லும் முதல்மந்திரம். ஆயிரம் இலைநாவுகள் சுழித்தெழும் நாதம். பல்லாயிரம் நீர்த்தந்திகள் அதிர்ந்தெழும் நாதம். நிலமுரசின் விம்மல். நதியாழின் மீட்டல். மேகச்சல்லரியின் குமுறல். மழைத்தலின் பேரிசை.” என்னும் சித்தரிப்பில் முதல் மழையை நமக்கு அணுக்கமாக்கிவிடுகிறார்.
தூரத்துச் சூரியன்: சூரிய தேவனின் ஆற்றல் நிரம்பிய விந்துவால் குந்தி போஜனுக்குப் பிறந்த கர்ணன் அஸ்தினாபுரியை விட்டும் யாதவ குலத்தை விட்டும் கால நிகழ்த்தகவில் விலகிச் சென்று சூதரான அதிரதனுக்கும், ராதைக்கும் மைந்தனாக அமையப்பெறும் விதத்தை இந்த தூரத்துச் சூரியன் எனும் பகுதி எடுத்தியம்புகிறது. யதுவின் வழித்தோன்றல்களாக உருவாகி விரியும் யாதவர்களின் குலவரலாறு விரிக்கப்படுகிறது. சூத்திரர்களான அவர்கள் காலப்போக்கில் பல்கிப் பெருகி நூற்றியெட்டு குலங்களாக விரிந்து ஷத்ரியர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள எத்தனிக்கும் ஒரு இடத்தில் நமக்கு ஆசிரியர் பிருதையை அறிமுகப்படுத்துகிறார். பாலாலும், நெய்யாலும், பொன் விளையும் யாதவ நிலத்தை அஸ்தினாபுரியுடன் இணைப்பதற்கான முதல் விதை இங்கு தான் நிகழ்கிறது. இந்த அரசியல் ஆட்டங்களின் மத்தியில் தன் சூரியனை யமுனையில் எங்கோ தொலைத்து விட்டு காலத்திற்கும் ஆறாத வடுவொன்றை சுமப்பவளாக இங்கே குந்தி அமைந்துவிடுகிறாள்.
பால்வழி: பால் போன்ற வெண்மை நிறமும், விசித்ரவீரியன், தேவாபி வரிசையில் அவர்களின் ஆடிப்பிம்பமாக உடற்குறையும் கொண்ட பாண்டுவின் முழுமையான அறிமுகம் இந்தப் பகுதியில் நமக்குக் கிடைக்கிறது. பிருதையை மணம் புரிந்து அஸ்தினாபுரி மற்றும் யாதவ அரசுகளின் அரியணைக் கனவை நிறைவேற்றும் கருவியாக பாண்டுவின் மர்க்காவதிப் பயணம் விரிக்கப்படுகிறது. விதுரன் பிருதையை சந்திக்கும் முதல் தருணமொன்று இந்தப்பகுதியில் நம் மனதை வருடிச் செல்கிறது.
மொழியாச்சொல்: யாதவ அரசியான குந்தி தன் உதிரத்திலிருந்து உதித்த முதல் மகவைப் பற்றி பாண்டுவிடம் சொல்ல எத்தனித்து மொழியாமல் விட்ட சொல்லை எடுத்தியம்புவதாக இந்தப் பகுதி அமைகிறது. தன்னேற்பு மணத்தில் வென்று பாண்டு குந்தியை மணக்கும் நிகழ்வு நிகழ்கிறது.
அனல்வெள்ளம்:
மண்மகளின் மீது விழுந்த சூரிய தேவனின் ஒளிவெள்ளத்தால் அவள் அனல்வெள்ளம் போல சலனமடைந்து மழை பொழிகிறது. அஸ்தினாபுரியின் இரு அரசியர்களின் வருகைக்குப் பின்னும், ஹஸ்தியின் அரியணைக்குகந்த மன்னனின் முடிசூட்டு விழாவுக்கு முன்னரும் நிகழும் மழை இந்தப்பகுதியில் நிகழ்கிறது. பெருமழையான அது நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன் அஸ்தினாபுரியில் நிகழ்ந்த பெரு மழையை ஒத்து நகரையே சூரையாடுகிறது. பெய்த பெருமழையால் நகரும் அரண்மனையும் தன்னை புதுப்பித்து இனி நடைபெறும் நிகழ்வுக்காக மீண்டும் பிறந்தழுவது போன்ற சித்திரமாக அமைகிறது. இயற்கையன்னை பொழிவித்த பெருமழையைப் போலவே காந்தாரத்திலிருந்து பரிசில்களும் செல்வங்களும் அனல் வெள்ளம் போல நகரைச் சூழ்ந்து அதை ஸ்தம்பிக்கச் செய்கிறது. “பெண்களுக்கிடையே விளையும் சிறுபொறிகூட பெருநெருப்பாகிவிடும்”
என்ற ஜெ –வின் வரிகளைப் போலவே இங்கு அஸ்தினாபுரியின் அரண்மனைக்குள்ளும் பெண்களால் அனல் மூழ்கிறது. காந்தாரிகளுக்கும் இசையறிந்த பிரகதிக்கும் மூளும் அனல், குந்தி அரண்மனை நுழையும் போது அவள் ஷத்ரியர் குலம் அல்லாதவளாதலால் காந்தாரிகள் அவளை முறையாக வரவேற்பு செய்யாமல் செய்த முதல் அவமதிப்பின் நிமித்தம் மூளும் அனல், அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் தன் மைந்தர்களை அரியணை ஏற்றும் ஆசையில் மூழும் கனல், இவையனைத்தின் தாக்கத்தினால் துக்கமுறும் சத்யவதி மற்றும் விதுரனின் மனதில் எழும் அனல், இறுதியாக ஒரு சார்வாகனால் திருதிராஷ்டிரன் அரியணை அமர்வதற்கு எதிராக தீச்சொல் சொல்வதால் ஹஸ்தியின் அரியணையில் மூளும் அனல் என அஸ்தினாபுரி அரண்மனை அகத்திலும் அனல் வெள்ளம் நிரம்பி வழியும் பகுதியாக அமைகிறது.
முதற்களம்:
ஹஸ்தியின் அரியணை ஏறும் நிகழ்வே பின்னர் நிகழவிருக்கும் அனைத்துக்குமான முதற்களமாக மாறுவதை இந்தப்பகுதி எடுத்துரைக்கிறது. மனிதன் ஆயிரம் திட்டங்கள் வகுத்தாலும் இயற்கை தன் திட்டத்தை தான் செயல்படுத்துகிறது. திருதிராஷ்டிரன் அரியணை ஏறும் நாளன்று நிகழ்ந்த அமங்கல நிகழ்வினால் குலமூத்தோர் அவனை ஏற்க மறுத்து பாண்டு அதில் அமர்கிறான். போர்ச்சூழல் மூளாமல் இந்த நிகழ்வை விதுரன் முடித்துக் காட்டுகிறான். திருதிராஷ்டிரனை அரியணை ஏற்றுவேன் என்று மொழிந்திருந்த பீஷ்மர் அதில் தோற்றுப்போகவே விசனமுடனிருந்த சகுனியை அவர் ஆற்றுப்படுத்துகிறார். அடுத்த பதினெட்டு ஆண்டுகள் திருதிராஷ்டிரனின் குருதியில் பிறக்கும் மகன் அரியணை ஏறும் வரை அவனை அஸ்தினாபுரியிலேயே இருக்கச் செய்து அது நிகழவும் உறுதியளிக்கிறார். அதன் பின் சகுனி காந்தாரிகளை ஆற்றுப்படுத்துவதும், தங்களுக்கான ஆட்டத்தையும் சேர்த்து தான் விளையாடுவதாகச் சொல்லும் குந்தியிடம், பாண்டுவும் அம்பாலிகையும் தங்களை முழுதளித்து ஒப்படைப்பதுமென களம் அனலாகி முதற்களமாக உருவெடுக்கிறது.
விதைநிலம்:
செழுமையான நிலத்தில் ஊன்றப்பட்ட உயிர்ப்புள்ள விதைகள் முளைத்துப் பூத்து காய்த்து கனியை நல்குகிறது. தன் அடுத்த தலைமுறையை நோக்கி அஸ்தினாபுரி எனும் விதைநிலம் காத்து நிற்கிறது. மாத்ரி கலப்பைக் கொடியுடன் அஸ்தினாபுரியின் பாண்டுவுக்கு ஷத்ரிய அரசியாவதும், விதுரனுக்கு உத்தரமதுராபுரியின் சுருதையை மணமுடிப்பதும், பாண்டு தன் அரசியருடன் வனம் புகுந்து கானக வாழ்வு சென்றடைவதுமென விதைகள் முளைத்தெழ நிலம் உழவு செய்யப்படுகிறது.
தனிப்புரவி:
வியாசருடன் மனம் இணைந்து மதி நிறைந்த விதுரனைப் பெற்ற சூதப் பெண்மணியான சிவையைப் பற்றிய சித்திரம் இந்தப் பகுதியில் காணக்கிடக்கிறது. முதல் நாவலில் எல்லா அரண்மனை சூதப் பெண்களைப் போலவே பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிந்த அவள் குழந்தை பெற்ற பின் தனித்து விடப்பட்டவளாய், ஒற்றைச் சாளரத்தையே இருப்பிடமாகக் கொண்டு தனிப் புரவியாய் திரிந்தலைபவளாக இருக்கிறாள். அவளை ஆற்றுப்படுத்தி அணைத்துக் கொள்பவளாக விதுரனின் துணைவி சுருதை அமைந்து அவனுக்கு இணக்கமாவதை இந்தப் பகுதி எடுத்தியம்புகிறது.
களிற்றுநிரை:
காந்தாரிகள் களிற்றுநிரை ஒன்றை அஸ்தினாபுரிக்கு தரவிருப்பதன் துவக்கம் இங்கு நிகழ்கிறது. காந்தாரியின் கருவில் உருவாகப்போகும் அத்தகைய பெரு வல்லமை கொண்ட உயிர் வருவதற்கான நிமித்தங்கள் காணிக்கப்படுகிறது.
கலி தெய்வத்தின் கோவிலிலிருந்து நரி நூறாகப் பெருகி ஊருக்குள் நுழைதல், திருதராஷ்டிரன் சாளரத்துக்குக் கீழே ஒரு மதகளிறு பிளிறுதல், முதுபெரும் களிறான உபாலனின் இறப்பு, அந்த யானையை அடக்கம் செய்யும் இடத்தில் கண்டடைந்த எடைமிக்க கதை, சகுனியுடன் ஒரு கரிய இருள் பகடை ஆடி அவனை வெல்லுதல், தன்னை முழுங்கிய மலைப்பாம்பை பிளந்துகொண்டு யானை வெளியே வரும் கனவையே காணும் காந்தரி என நிமித்தங்களால் நிறைகிறது இந்தப்பகுதி.
தென்றிசை மைந்தன்: அஸ்தினாபுரியில் காந்தாரியின் வழி பிறக்கப் போகும் குழந்தைக்கான நிமித்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க, குந்தியின் வழி பிறக்கப் போகும் தென்றிசை மைந்தனும் அறமுதல்வனுமாகிய தருமனுக்கான நிமித்தக் குறிகள் இங்கு சொல்லப்படுகின்றன. நிமித்திகரின் வரிகளின் வழி இங்கு மண்ணில் நிகழவிருக்கும் சதுரங்க ஆட்டத்திற்கான காய்களாக பிறக்கவிருப்பவர்களைப் பற்றியும், அதை ஆட்டுவிப்பவனுமாகிய அவனின் பிறப்பையும், ஒரு யுகத்தின் முடிவையும் பற்றிய செய்தியை நமக்குக் கடத்துகிறார். துர்வாசரிடமிருந்து சக்தி வாய்ந்த மந்திரத்தை கொடையாகப் பெற்ற குந்தி அது கொண்டு தர்ம தேவனை தன் கருவில் ஏந்துகிறாள். அஸ்தினாபுரியின் முதல் வாரிசைப் பெற்றெடுக்கிறாள்
இருள்வேழம்:
மதங்க கர்ப்பத்தில் துரியோதனன் எனும் இருள் வேழத்தை காந்தாரி பெற்றெடுக்கும் நிகழ்வு விரிக்கப்படுகிறது. அவனுக்கான பெயர் சூட்டும் நிகழ்வில் பீஷ்மர் ‘சுயோதனன்’ என்ற பெயரை அவனுக்கு இட்டழைக்கிறார். அனசூயைக்கு நிகரான கற்பைக் கொண்டிலங்கும் காந்தாரியின் தவப்பலனை முது நாகினியின் அறிவுரைப்படி தன் மகனுக்கு அளிக்கத் தலைப்படுகிறாள். ஆனால் இடைக்குக் கீழேயான தொடையைப் பார்க்கத் தவறிவிட்டதை உணர்ந்து அவனைக் காக்க காந்தாரிகள் மகன்களைப் பெற்றெடுக்க ஆணையிடுகிறாள். இருள்வேழங்கள் பல பிறக்கப் போவதற்கான வித்தாக இந்தப்பகுதி அமைகிறது,
புதிய காடு: குருகுலத்தின் காலனாக, தன்குலத்துச் சோதரர்களைக் கொல்பவனாக குறைப் பிரசவத்தில் பிறந்த குந்தியின் இரண்டாவது மகனை குரங்குகள் கையிலெடுத்து முலையூட்டி மீட்கச் செய்கிறார் பலாஹாஸ்வர். அவரே அவனுக்கு பீமன் என்ற பெயரையும் சூட்டுகிறார். மண்ணிலுள்ள அத்தனை அன்னத்தையும் தின்றாலும் அடங்காத பெரும்பசி கொண்ட விருகோதரனாக வளர ஆசியளிக்கிறார். தருமனுக்கும் பாண்டுவுக்குமான இணக்கமான உறவொன்று இந்தப் பகுதியை நிறைக்கிறது. குந்தியும் பாண்டுவும் தங்கியிருந்த இடம் காட்டுத்தீயால் அழிதலுக்கு உட்பட அவர்கள் புதிய காடான புஷ்பவதியை நோக்கிச் செல்லும் பயணம் நிகழ்கிறது. அங்கு இந்திரனின் மைந்தனாக அர்சுனனைப் பெற்றெடுக்க குந்தி விழைகிறாள். அதன் பின் தன் வயிற்றின் கரு நிறைவை அடைந்துவிட்ட அவள் தாய்மைக்காக ஏங்கும் மாத்ரிக்கு அந்த மந்திரத்தை அளிக்கிறாள். அதன் மூலம் மாத்ரி நகுலனையும் சகாதேவன்னையும் பெற்றெடுக்கிறாள். யாவும் நிகழ்ந்து நிறைவுடன் வாழும் பாண்டு ஒரு நாள் தான் காட்டில் கண்ட சாதகப் பறவையின் கூட்டை மத்ரிக்கு காட்ட விரும்பி அழைத்துச் சென்று களியுருகிறான். அங்கிருந்த செண்பக வனத்தில் தன் காதல் அனைத்தையும் காட்ட விரும்பியவன் காமத்தால் அவளை புனர முற்பட்டு அதன் முழுமையை அடையாது இறக்கிறான்.
மழைவேதம்: பாண்டுவின் இறப்பிற்குப் பின்னர், முன்பு நிமித்திகர் சொன்ன வரிகளைப் புரிந்து கொண்டவளாய், பாண்டுவிற்கான விண்ணக வாயில்களை தானே திறந்து வைக்க முடியும் என்றுணர்ந்து சிதை புகுகிறாள் மாத்ரி. அஸ்தினாபுரியின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய சத்யவதி அங்கு தொடந்து நிகழும் தீய நிமித்தங்களினால் அலைக்கழிந்து எதிர் காலத்தையே அஞ்சுபவளாக ஆகியிருந்தாள். அவளின் இடத்தையும் இட்டு நிரப்பிக் கொண்டிருந்த விதுரன் வேலைகளில் மூழ்கியிருந்தான். சியாமையின் இறப்பிற்குப் பின்னர் அவனுக்கும் சுருதைக்கும் சுபோத்யன், சுசரிதன் எனும் இரு மகன்கள் பிறந்திருந்தனர். சகுனி தன் மருமகன்களுடன் ஆயுதப் பயிற்சியிலேயே மூழ்கியிருந்தார். பீஷ்மர் மீண்டும் வனம் புகுந்திருந்தார். இது போன்ற ஒரு தருணத்தில் தான் பாண்டுவின் இறப்பு செய்தி விதுரனை வந்தடைகிறது. திருதிராஷ்டிரன் பாண்டுவுக்காக அரற்றி அழுவதும், பகையெண்ணம் நீங்கி அம்பிகை அம்பாலிகையைத் தேடிச் சென்று கட்டித் தழுவுவதும், இருவரும் கானகம் புக முடிவெடுப்பதும், சத்யவதி அனைத்து பொறுப்புகளையும் துறந்து வனம் புகுவதும் சடசடவென மழை போல நிகழ்ந்து முடிகிறது. தன் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் அனல் கொண்டு காத்திருந்த அஸ்தினாபுரியின் மேல் மழை பெய்யத் தொடங்குகிறது. தவளைகளின் ஒலி கேட்கத் தொடங்குகிறது. ‘மழை! மழை! மழை! மழை! என முழங்கி துவாபரயுகம் சாரலாகி வெளுத்து முடிவுக்குச் சென்று கலியுகம் மண்ணில் இறங்கும் மழை வேதமாக நாவல் முடிவு கொள்கிறது.
மழைப்பாடலின் கதாநாயகர்கள்:மழையின் போது எழுந்து வரும் முதல் தவளைச் சத்தத்திற்குப் பின்னர் பெருகி வரும் வெள்ளம் போல அதன் சத்தங்கள் நிறம்பித் ததும்பும். அதுபோலவே இந்த நாவல் வரிசையை முன் நகர்த்திச் செல்லும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவராக இந்த மண்ணில் தன் காலடியை எடுத்து வைக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதையே ஆசிரியர் ”கண்ணுக்குத்தெரியாத கை ஒன்று சதுரங்கக் களம் ஒருக்குவதுபோல ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குரிய சதுரங்கக்காய்கள் மெல்லமெல்ல வந்து அமைகின்றன. ஆட்டத்தை நடத்தவிருப்பவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மேடை நிறைந்துகொண்டிருக்கிறது.” என்று குறிப்பிடுகிறார்.
அங்ஙனம் இந்த நாவலில் புதிய காதைமாந்தர்களாக துரியோதனன் மற்றும் நூற்றுவர்களான கெளரவர்கள், தர்மன், பீமன், அர்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் எனும் பாண்டவர்களும், விதுரனின் மைந்தர்களான சுபோத்யன், சுசரிதன் என அடுத்த தலைமுறை அஸ்தினாபுரியின் மைந்தர்கள் பிறக்கின்றனர்.
முதற்கனலில் வியாசரிடம் அம்பிகை, அம்பாலிகை மற்றும் சிவைக்குப் மைந்தர்களாகப் பிறந்தவர்கள் முறையே திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோரைச் சுற்றியே நாவல் சுழல்கிறது. அவர்கள் மூவரும் வளர்ந்து பதின் வயதை கடக்கும் விளிம்பில் நிற்கிறார்கள். முதற்கனலில் தோன்றி அஸ்தினாபுரியின் நலனுக்காகவே செயல் செய்யும் அதன் பெருந்தந்தையான பீஷ்மர் இங்கும் கதையை முன்னகர்த்தும் பெருஞ்செயல்களின் நாயகராகிறார். அரசுசூழ் பெருங்கனவு கொண்டவனும், சகோதரப்பாசம் மிக்கவனுமான சகுனியின் அறிமுகம் கிடைக்கிறது. யாதவ அரசின் பெருஞ்செயல்திட்டதின் ஒரு கூராக வசுதேவன் காட்சியளிக்கிறான். சிறிய பாத்திரமே ஆனாலும் இந்த நாவலில் நம் மனதில் நிற்பவர்களாக திருதிராஷ்டிரனின் விழியான சஞ்சயன், அவனின் இசை ஆசிரியரான தீர்க்கசியாமர், கர்ணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதன், மதுராபுரியின் கம்சன், திருதிராஷ்டிரன் அரியணை ஏறுவதை எதிர்த்து முழங்கிய சார்வாகன், குந்திக்கு மந்திரங்களை போதித்த துர்வாசர், தன்னேற்பு மணத்தின் போது குந்தியின் முடிவே இறுதி என கம்சனை எதிர்த்து நின்றவனாகிய சல்லியன் ஆகியோர் அமைகின்றனர்.
மழைப்பாடலின் திருதிராஷ்டிரன்: பீஷ்மருக்கு நிகரான உடல்வாகு கொண்டவனாக, முரடனாக, பீஷ்மரிடம் ஹரிசேனன் அவனைப் பற்றி சொல்லும் விதமாக திருதிராஷ்டிரனைப் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. கண்கள் இல்லாதவனாயினும் வீரத்தில் சிறந்து விளங்கும் திருதிராஷ்டிரனை முதன் முதலில் பீஷ்மர் சந்திக்கும் இடம் மட்போரிலேயே. புற உலகைக் காண இயலாதவனாகிய திருதிராஷ்டிரனுக்கு ஒரு சிறு விடயமும் அவனை அவமதிப்பு செய்ததாகக் கருதும் குணம் இருப்பதில் ஆச்சரியமில்லை. தன்னை பீஷ்மர் வந்து சந்திக்காமல் விதுரனை முதலில் கண்டது தெரிந்து அவருடன் போர் செய்து தன்னை நிறுவும் எண்ணம் வருகிறது. இறுதியில் பீஷ்மர் அவனை வீழ்த்தி அவனுக்கான பாடத்தை கற்பிக்கிறார். அவன் அழுது துவண்டு அவர் கால்களில் சரணடைந்து அவரைத் தந்தையாக குருவாக ஏற்கிறான். பாண்டுவின் மேலும் விதுரனின் மேலும் அவன் வைத்திருக்கும் பாசம் அளப்பரியது. முதலிரவில் காந்தாரி அவனுக்கு விருப்பமானவர் யார் என்று வினவுகையில் தன் அன்னைக்கு அடுத்தபடியாக விதுரனைக் கொணர்ந்து நிறுத்துகிறான். தான் இறந்துவிட்டால் விதுரன் உயிரோடு இல்லாமல் இருப்பதே அவனுக்கு நலம் பயக்குமென நினைக்கும் அந்த இடம் மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைகிறது. தன் முதல்காதல் பித்தான காந்தாரியை தன் தோள்வலிமையை நிறுவி, மணந்து, அவள் கைத்தலம் பற்றும் இடம் சிலிர்க்கச் செய்கிறது. இசையின் மீது தீராத நாட்டம் கொண்டவனாக, யாழை வாசிப்பவனாக, இசையிலே மூழ்குகையில் கந்தர்வனைப் போல்வனாக அவனுக்கே உரிய உலகத்தை இசையின் மூலம் சமைத்துக் கொள்பவனாக அமைகிறான். இசையினால் அவனுக்கு அணுக்கமானவர்களாக தீர்க்கசியாமர் மற்றும் பிரகதி அமைகின்றனர். ஒரு பாதி நாவல் வரை விதுரனே திருதிராஷ்டிரனின் கண்களாக அமைந்து அணுக்கமாக இருக்கிறான். ஆனால் பணிச்சுமை காரணமாக மதி நிறைந்த சஞ்சயன் எனும் சிறுவனை அவனின் கண்களாக நியமிக்கிறான் விதுரன். காலப்போக்கில் சஞ்சயனைத் தன் கண்களாக மாற்றிக் கொண்டு நெருக்கமாக்கிக் கொள்ளும் விதத்தை ஆசிரியர் நெகிழ்வுடன் படைத்திருக்கிறார். பாண்டுவின் இறப்பின் போது கதறி அழும் சகோதரனாக, தீய நிமித்தங்களை முன்னிட்டு அனைவரும் பயந்து வெறுப்பவனாகிய தன் மகன் துரியோதனை ஒரு போதும் கைவிடுவதில்லை என்று உரைப்பதும், பாண்டுவின் மகன்களின் பிறப்பை தன் மகன்களின் பிறப்பு போல் கொண்டாடுபவன் என ஓர் அன்பனாக நம் நெஞ்சில் நிலைத்துவிடுகிறான் திருதிராஷ்டிரன் எனும் பேருருவன்.
மழைப்பாடலின் பாண்டு: முதற்கனலில் பிறந்து, மழைப்பாடலில் வளர்ந்தவனாகி, வாழ்ந்து இந்த சதுரங்க ஆட்டத்தின் மையக் கதாப்பாத்திரங்களான பாண்டவர்கள் பிறப்பதற்கு காரண கர்த்தாவாகி மறைந்து விடுகிறான். வெளிறி வெண்ணிறமாக பாளைக்குருத்து உடல் கொண்டவனாக, அன்னையின் விளையாட்டுப்பாவையாகவும், அந்தப்புரம் விட்டு வெளிவராதவனாகவும், அன்னையுடனும், சேடியருடனும் பெண்களைப்போல மலர்கொய்தும் நாணலால் மீன்களைப் பிடித்தும், மரக்கிளைகளில் ஆடியும் பகலெல்லாம் விளையாடுபவனாகவும் பாண்டு முதலில் நமக்கு அறிமுகமாகிறான். அந்தப்புரமெங்கும் தான் காண முடியாத வெளிச்ச உலகை திரைகளில் வண்ணங்களால் நிறைக்கும் சித்திரனாக இருக்கிறான். உடற்குறை கொண்டவனாக ஆனால் பல கனவுகளில் மூழ்கித்திழப்பவனாக இருக்கிறான். ஆசிரியர் பாண்டுவைக் குறிக்கும்போது ”ஆடிப்பிம்பங்கள் காலந்தோறும் தனக்கான உடலைக் கண்டு அதனுள் ஏறிக் கொள்வது போல குரு வம்சத்தில் தேவாபி பின்னர் விசித்ர வீரியன், அதன் பின் பாண்டு” என சென்று கொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஆணமைக் குறைவு கொண்ட பாண்டுவின் காதலை நிறைவு செய்பவளாக ஷத்ரிய அரசியாக, சல்லியனின் தங்கை மாத்ரி வருகிறாள். அவர்கள் இருவருக்குமிடையேயான அந்தக் காதல் உடலைக் கடந்த ஒன்றாக அமைந்தொழுகுகிறது. அவளுடனான முதல் இரவில் காமம் சாத்தியப்படாத ஒன்றாக அமைந்து, அதுவே அவனுடைய உயிருக்கு ஆபத்தாய் முடிகிறது. அதன்பின் குந்தி மற்றும் மாத்ரியுடன் வனம் புகுந்து நிறைவாழ்வு வாழ்கிறான். அவனுடைய வர்புறுத்தலின் பேரில் தான் குந்தி துர்வாசர் தனக்கு நல்கிய மந்திரத்தைப் பயன்படுத்த விழைகிறாள். ’தர்மன், பீமன், அர்ஜுனன்’ ஆகியோரைப் பெற்றெடுப்பவளாக குந்தியும், ’நகுலனையும், சகாதேவனையும்’ பெற்றெடுப்பவளாக மாத்ரியும் உருவாவதற்கு காரணமாகிறான். தருமனை எந்நேரமும் தோளில் தூக்கி வைத்து அலைபவனாக, ஐவரிடமும் அன்பைப் பொழிந்து ஒரு தந்தையாக நிறைவு கொள்கிறான். தன் காமத்தை முழுமை செய்யவியலாது செண்பக வனத்தில் இறந்துபட்டு தன்னுடன் சிதையேறிய மாத்ரியுடன் மண் நீங்குகிறான். அவன் இறப்பினாலேயே சத்யவதி, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் வனம் புகுந்து தங்களை மழைப்பாடலில் நிறைவு செய்து கொள்கின்றனர்.
விதுரன் எனும் அறிஞன்: கிருஷ்ணதுவைபாயன வியாசனே இளம் வடிவுகொண்டது போல்வனும், காவியங்கள் வாசிக்கும் இலக்கியவாதியாகவும், முதல் சந்திப்பிலேயே “நீ ஒரு சிறந்த அறிஞன்” என்று பீஷ்மரால் சொல்லப் பெறுபவனும், திருதிராஷ்டிரனின் கண்களாக, அவன் அகம் உணரும்படி உரைக்கும் நல்ல அமைச்சனாகவும், அரசியல் மதியூகியாகவும் விதுரன் நமக்கு அறிமுகமாகிறான். பீஷ்மர் தன்னை வந்து சந்திக்கவில்லை என்று கோபம் கொண்டு அவரை பகைத்துக் கொள்ள நினைக்கும் திருதிராஷ்டிரனுக்கு அவருடன் ஓர் மற்போர் ஏற்பாடு செய்து வைத்து அவரின் திறத்தை அறியச் செய்கிறான். பாண்டுவுக்கு உரிமையான பாதி நிலத்தை வைத்து திருதிராஷ்டிரனின் அரியணை ஏறும் நிகழ்வை நிறுத்த எத்தனித்த அம்பாலிகையின் திட்டங்களை மதியூகத்தால் முறியடிக்கிறான். பின்னாளில் நிகழப்போகும் மிகப்பெறும் சச்சரவுக்கான முதல் வித்தாகவும் அவன் செயல் அமையும் என்பதில் ஐயமில்லை. திருதிராஷ்டிரன் அரியணை ஏறுவதற்கு மறுப்பு எழுந்தபோது பாண்டு அரியணை ஏறும் நிகழ்வை அவனின் மேலான சம்மதத்துடன் நிகழ்த்திக் காட்டுகிறான். விதுரனின் காதல் தருணங்களாக அவன் முதல் முறை குந்தியை சந்தித்த தருணமும், சுருதையுடன் அணுக்கமாகும் நிகழ்வுகளும் அமைகின்றன. பேரரசியான சத்யவதியின் கனவுகளையும் குறிக்கோள்களையும் ஏந்தியவனாக அவளிடமிருந்து அதற்கான ஞானத்தையும் பெற்றவனாகத் திகழ்கிறான். அவளின் திட்டங்களையெல்லாம் செய்ல்படுத்தும் நல் அமைச்சனாகவும், அஸ்தினாபுரியை நேரடியாக ஆளும் விதியைப் பெறவில்லையெனினும் அவனின் மதியூகத்தாலேயே ஆள்கிறான். மழைப்பாடலில் சத்தியவதியின் மூப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவற்றைப் போக்கும் அருமருந்தாக அவள் சார்பாக அனைத்தையுமே முடிவெடுக்கும் செயல்படுத்தும் நல் அமைச்சனாக அறிவுத் திறம் வாய்ந்தவனாக விதுரன் அமைகிறார். மழைப்பாடலின் ஒவ்வொரு முக்கியமான நகர்விலும் விதுரரின் முடிவுகள் இருக்கின்றன. இறுதியில் சத்யவதி வனம் புகும் நிகழ்வில் ஒரு பேரிழப்பு மன நிலை நிகழாதிருப்பதற்குக் காரணம் நாவலின் பாதியிலேயெ அவன் ஒரு ஆண் சத்யவதியாக அவளின் இடத்தை நிரப்புவதே காரணமாகிறது.
சகுனி எனும் மதியூகி: காந்தார அரசின் எதிர்காலத்தின் மேல் உயரிய கனவுகள் கொண்டு அதற்கான செயல்திட்டமும் கொண்டிருக்கும் மதியூகியாக சகுனி நமக்கு அறிமுகமாகிறான். மகதத்துடன் நட்பாக்கிக் கொள்ள விழைந்தவனை அவர்கள் அவமதித்த காரணத்திற்காகவே அஸ்தினாபுரத்துடன் இணையும் முடிவுக்கு இசைகிறான். தன் சகோதரி காந்தாரி அரியணை ஏறும் நிகழ்வுக்காக காந்தாரத்தின் செல்வங்களையெல்லாம் அனல் வெள்ளம் போல அஸ்தினாபுரிக்கு எடுத்து வந்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்கிறான். அவனுக்கும் காந்தாரிக்குமிடையேயான சகோதரப்பாசம் அளப்பரியது.
May 29, 2021
‘ஒளி’ ஒரு சூம் நாடகம்
[அரங்கசாமி]
இன்றிருத்தல்…இன்றிருத்தல் கட்டுரையில் ஒரு விஷயம் சொல்லியிருந்தேன். நண்பர்களின் ஒரு குழுமம் ஒன்றை உருவாக்கி அதில் பலவகை வெளிப்பாடுகளை மட்டுமே நிகழ்த்துவதாக. ஏற்கனவே சுக்கிரி, நற்றுணை, சொல்முகம், ஈரோடு வாசிப்புவட்டம் என பல குழுமங்கள் நம் நண்பர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. வெண்முரசு விவாதக்குழுமங்களே பல உள்ளன. இது இலக்கிய விவாதத்திற்காக அல்ல. வாரம் இருமுறை சந்திப்பது, நண்பர்கள் வெவ்வேறுவகையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
வாசிப்பு, சினிமா பார்த்தல், பாட்டு கேட்டல் எல்லாம் passive ஈடுபாடுகள். அவை முக்கியம்தான். ஆனால் இத்தகைய சூழல்களில் போதுமானவை அல்ல. எழுதுவது, நடிப்பது, பாடுவது, வரைவது தான் active ஈடுபாடுகள். நாமே ஈடுபடுபவை. அவை நம்மை நம்மையறியாமலேயே மாற்றியமைக்கின்றன. நம்மை நாம் விரும்பும் மனநிலைக்கு மாற்றிக்கொள்ள ஒரே வழி என்பது அதுதான். அதற்காகவே அந்த குழுமம்.
முதல் நாள் முதலே நண்பர்கள் பங்கு கொண்டு சுவாரசியமான நிகழ்ச்சிகளை நடத்தினர். காளிப்பிரசாத், குக்கூ ஸ்டாலின், ராஜகோபாலன், சந்திரசேகர்,சக்தி கிருஷ்ணன், செல்வேந்திரன் என பல நண்பர்கள் ‘உரைநகைச்சுவை’ நடத்தினர். ராஜகோபாலன் நடத்திய வடை கதாகாலட்சேபம் ஓர் உச்சம்.
[சுசித்ரா]
ரம்யா ஒரு கதைசொல்லல் நிகழ்வை நடத்தினார். சுபஸ்ரீ நீலம் நாவலின் சிலபகுதிகளை மிகச்சிறந்த தனியுரை நடிப்பாக வழங்கினார். ஒவ்வொன்றுமே சிறப்பாக அமைந்தன.
நான் தனிநடிப்பு நாடகங்கள் இரண்டை எழுதினேன். அவை பத்துநிமிட நகைச்சுவைகள் எனலாம். அரங்கசாமி, டோக்கியோ செந்தில் ஆகியோர் அவற்றை நடித்தனர். ஒரு சந்திப்பு ஒன்றரை மணிநேரம். நிகழ்ச்சிகள், அவற்றைப்பற்றிய உரையாடல்கள் சிரிப்புகள் என நிறைவடையும்.
இச்சந்திப்புகள் தொடங்கியபோது நான் ஒரு நாடகம் எழுதினேன். ’சூம் நாடகம்’ எனலாம். சூம் என்னும் செயலியின் எல்லைக்குள் நின்று, அதன் சாத்தியக்கூறுகளைக் கொண்டு எழுதப்பட்ட ஓரங்கநாடகம். மணிரத்னத்தின் உதவியாளரும் படைவீரன், தேகி, வானம்கொட்டட்டும் படங்களின் இயக்குநருமான தனா இயக்கினார்.
[நவீன்]
முற்றிலும் புதிய ஊடகம். முற்றிலும் புதிய வடிவம். இதன் சாத்தியங்கள் என்னவென்றே தெரியவில்லை. முக்கியமாக சூம் செயலியின் காமிரா என்பது கம்ப்யூட்டரிலுள்ள காமிராதான். அதை அசைக்கவோ திருப்பவோ முடியாது. அதன் காட்சிவட்டத்திற்குள் நிகழ்பவைதான் நாடகத்தில் வரமுடியும். அதன் ஒலிப்பதிவுதான் பயன்படுத்தப்பட முடியும்.தனியான ஒளியமைப்பு கிடையாது. செட்டிங் கிடையாது.
அதைவிட கதாபாத்திரங்கள் தனித்தனியாகவே இருக்கமுடியும். அவர்கள் ஒருவரையொருவர் பார்ப்பதாகவே காட்டமுடியாது. வேறுவேறு இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பேசுவதை இன்னொருவர் மறித்துப்பேசினாலே சூம் செயலி குழம்பிவிடும்.
இத்தனை எல்லைகளுடன் இந்நாடகத்தை தனா இயக்கினார். முக்கியமாக இயற்கையான நடிப்பை கொண்டுவரவும் பேசுபவர்கள் எத்திசைநோக்கிப் பேசுகிறார்கள் என்பதை வரையறை செய்யவும் பெரும் சிரத்தை தேவைப்பட்டது. அனைவருக்குமே முதல் நாடக அனுபவம்.
[சிவசங்கர்]
நேற்று முன்தினம் [28- 5-2021, வெள்ளி ] 6 மணிக்கு ஐம்பதுபேர் இருந்த சூம் கூட்டத்தில் நாடகம் நடைபெற்றது. நடிகர்கள் தவிர அனைவரும் மியூட் பண்ணப்பட்டனர். ஐந்து பெட்டிகளில் ஐந்து நடிகர்கள். நரேன் கோவையில். அரங்கசாமி பெங்களூரில். நவீன் ஈரோட்டில். சிவசங்கர் காஞ்சீபுரத்தில். சுசித்ரா சுவிட்சர்லாந்தில். வெவ்வேறு நாடுகளில், காலநிலைகளில். இந்த வாய்ப்பு இந்நூற்றாண்டிற்கு மட்டுமெ உரியது.
இந்நாடகத்தின் ஆச்சரியம் இதன் ‘எடிட்டிங்’ என்பது சூம் செயலியால் தானாகவே செய்யப்பட்டது. பேசும்போது பேசுபவரை அது காட்டும். ஆகவே ஒருவர் வசனம் பேசும்போது அது அவரைச் சரியாக திரைக்கு கொண்டுவந்தது.உரையாடல்கள் மாறிமாறி ஒலித்தபோது சினிமாவுக்கு நிகராக அது எடிட் செய்து அளித்தது.
இது இத்தனை சிறப்பாக அமையும் என நினைக்கவே இல்லை. கணிப்பொறியின் ஒலிப்பதிவு என்பதனால் சில இடங்களில் ஒலிக்குறைபாடு உள்ளது. இணையத்தின் வேகத்திற்கு ஏற்பச் சில இடங்களில் காட்சியும் மங்கலாகிறது. ஆனால் இக்குறைகளை இனி திருத்திக்கொள்ள முடியும். நாடகத்தின் உணர்வுநிலையும், தரிசனமும் சிறப்பாகவே வெளிப்பட்டன.
இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனிதர்களைக் கொண்டு ஒளிப்பதிவு செய்து அனுப்பி நல்ல எடிட்டர் தொகுத்து குறும்படமாகவும் ஆக்கலாம். அப்படிப்பட்ட முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் நாடகம் முற்றிலும் வேறு. நாடகம் ஒரே விசையில் நடைபெறுகிறது. ‘நாடகநேரம்’ ‘நாடகவெளி’ என ஒன்று உண்டு. அங்கே நடிகர்கள் கதாபாத்திரங்களாக மாறும் மாயம் நிகழ்கிறது. அதற்கு நிகர் வேறில்லை. நடிப்புக்கலையில் நாடகமே உச்சமானது.
[நரேன்]
மேலும் இதை முதன்மையாக பங்கெடுப்பவர்களின் மனமகிழ்ச்சிக்காகவே ஏற்பாடு செய்தோம். நான் அந்த அறிவிப்பை வெளியிட்டபோது என் மனதிலிருந்தது இதுதான். என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாட்களில் இளமையில் நாடகங்கள் போட்டதும் உண்டு. நாடகம் அளவுக்கே உற்சாகமானவை நாடக் ஒத்திகைப்பொழுதுகள். மெல்லமெல்ல நாம் ஒரு நாடகத்தில் நுழைந்து, கதாபாத்திரமாக ஆகிறோம். பெரும் பரவசம் அளிப்பது அந்த பரிணாமம். நாடகமல்ல ஒத்திகையே பேரின்பம் என்றுகூடத் தோன்றுவதுண்டு.
சினிமா இயக்குநரின் கலை. மற்றவர்கள் பங்களிப்பாளர்கள் மட்டுமே. என்ன நிகழ்கிறதென்றே பிறருக்குத் தெரியாது. நாடகம் நடிகர்கள் இயக்குநர் அனைவரும் சேர்ந்து ஒன்றாக உருவாக்கும் கலை. ஆகவே இது நாடகமாக நிகழ்த்தப்படவேண்டும் என நினைத்தேன்.
தனாநடித்தவர்கள் ஒவ்வொருவரும் இந்நாடகத்துக்குள் நுழைந்ததன் பரவசத்தைப் பற்றிப் பேசினார்கள். பார்வையாளர்களும் ஓர் உச்சநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். நாடகம் முடிந்த பின் இருந்த மகிழ்ச்சிக் கொப்பளிப்பும் சிரிப்பும் பேச்சும் இந்த தொன்மையான கலை அடைந்த புதுவடிவை கொண்டாடுவதாக அமைந்தது
இவ்வடிவில் பிறரும் எழுதலாம், நடிக்கலாம், இந்த வீடடங்குநிலையை மீறி படைப்பாற்றலால் விடுதலையை அடையலாம்.
ஒளி- தமிழின் முதல் ஸூம் நாடகம்
பழம் கிழம்
”ஒரு நிமிஷம், ஜிபிஎஸை செட் பண்ணிக்கறேன்”
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நான் அடிக்கடிக் கவனிப்பவர்கள் முதிர்ந்த ஜோடிகள். எண்பது தொண்ணூறு கடந்தவர்கள். கிழடும் கிழடும் முணுமுணுவென்று பேசிக்கொண்டே அலுமினிய தடிகளை ஊன்றியபடி மிகமெல்லச் சென்றுகொண்டிருப்பார்கள். இந்தியா போல நாம் எவரையும் முட்டித்தள்ளி மேலே செல்லமுடியாது. நமக்கு முன்னால் இவர்கள் வந்தால் நமக்கும் நூறு வயதாகி விடுவதாக உணர்வோம்.
அங்கே கிழவர்கள் உயரமானவர்கள், வயதாகும்போது அவர்களின் முதுகு நன்றாகவே கூன்விழுந்துவிடுகிறது. நிலம்நோக்கிய நாணநடையை அங்கேதான் இப்போது பார்க்கமுடிகிறது. மூக்கு பெரிதாகப் புடைத்து காரட் போல சிவப்பாக இருந்தாலும் அவர்கள் எவர் விஷயத்திலும் மூக்கைநுழைப்பதில்லை. உதடுகள் உள்ளே மடிந்து சிவப்பு கோடாகக் கூட தெரிவதில்லை. வாயே இல்லாதவர்கள். பேச்சும் பெரும்பாலும் இருக்காது. மனிதர்கள் நடக்கும்போது கழுத்துத் தசை அலைபாய ஆடுவதை அங்குதான் கண்டிருக்கிறேன்.
”சீக்கிரம் சாப்பிட்டிரு….பத்து நிமிஷத்திலேநம்ம டயட் கண்ட்ரோல் புத்தாண்டு சபதம் ஆரம்பிச்சிரும்”
கிழவிகள் பெரும்பாலும் குண்டு. இடுப்புத்தசை அகன்று தொய்ந்து தனியாக ஆடும் – தானாடாவிட்டாலும். ஆண்களை விட பெண்களுக்குத்தான் அங்கே முகச்சுருக்கம் அதிகம். பாலிதீன் தாளை நீரில் நனைந்து கசக்கியதுபோல கண்டபடி சுருங்கியிருக்கும். முகத்தில் +, ^,< > என எல்லா அடையாளங்களையும் காணமுடியும். கூர்ந்து கவனித்தால் L, X.Z,A,Y T,V,F,W போன்ற எழுத்துக்களையும் காணமுடியும். பெரும்பாலான பிராமி எழுத்துக்கள் தெரியும்.
வாயைச் சுற்றிய சுருக்கங்கள் ஒரு சுருக்குப்பையின் முடிச்சு இறுக்கியதுபோல. அவை ஓயாது அசைந்து சொல்லுதிர்த்துக்கொண்டிருக்கும். சுருக்குப்பை விரிந்தால் உள்ளே பொய்ப்பற்கள். அவற்றை நொறுநொறுவென கடித்துக்கொண்டிருப்பார்கள். நுரைபோல வெண்மயிர்.
”ரெண்டுபேருக்குமே மெமரி லாஸ் இருக்கு. அதனாலே தினசரி புதிய ஆளோட படுக்கிறமாதிரி இருக்கு… அப்டியே இருக்கட்டும்”.
நான் பெரும்பாலும் கோடையில்தான் மேலைநாடுகளில் பயணம் செய்திருக்கிறேன். கோடையில் கிழவர்கள் காரேமூரே என பூப்போட்ட சட்டையும் காக்கி கால்சட்டையும் அணிந்திருப்பார்கள். கிழிந்த அரை ஜீன்ஸ் அணிந்தவர்கள்கூட உண்டு. கையில் வாட்ச் கட்டுபவர்கள் அவர்கள் மட்டுமே.
கிழவிகள் நம்மூர் நைட்டிகள் போன்ற கவுன்கள், பாவாடைகள் அணிந்திருப்பார்கள். பாசிமணி மாலைகள், கல் தொங்கும் காதணிகள், களிமண் நகைகள், மரநகைகள், சிப்பி நகைகள் என பயணம்செய்யும்போது வாங்கிய சகலத்தையும்கொண்டு அலங்காரமும் செய்துகொண்டிருப்பார்கள். லிப்ஸ்டிக் போட்டிருப்பதனால் அவர்களுக்கு வாய் தெரியும்.
நம்மூர் போல மூத்தோர் வழிபாடு அங்கில்லை. அதாவது அவர்களை எவரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அமெரிக்காவே ஒரு வேகத்தில் செல்ல அவர்கள் இன்னொரு வேகத்தில் வேறொரு காலப்பரிமாணத்தில் வாழ்கிறார்கள். நத்தைகளும் பூச்சிகளும் வேறு வேறு உலகில் வாழ்வதுபோல
அவர்கள் பெரும்பாலும் பஸ்ஸில்தான் பயணம் செய்கிறார்கள். பஸ்ஸில் அவர்கள் ஏறுவதற்குரிய தாழ்வான சிறப்புப் படிகள் ஓட்டுநரால் இறக்கி தரப்படும். பஸ்ஸில் நின்று பயணம் செய்யவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் பெரும்பாலும் வெளியே பார்ப்பதில்லை. பேருந்து காத்திருக்கும் இடத்தில் நாளிதழில் குறுக்கெழுத்துபோடுவது கிழவர்கள் மட்டுமே. கைநடுங்க அவர்கள் எழுத்துக்களை தேடும்போது நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
”என்னோட ஞாபகமறதி ஜாஸ்தியாயிட்டே போகுது”
“எவ்ளவு ஜாஸ்தி?”
“எது?”
பெரும்பாலும் கடைகளின் முன் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் கையில் ஒரு பீருடன் அமர்ந்திருப்பார்கள். ஒருமுறை நான் எதற்கோ காத்திருந்தேன். ஒரு கிழவரும் கிழவியும் நாற்பது நிமிடங்களில் ஒருமுறைகூட பீரை உறிஞ்சிக்கொள்ளவில்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்கள். பீரை நறுமணப்பொருளாக பயன்படுத்தலாமென அன்று அறிந்தேன். பறவைகள் வரிசையாக மின்கம்பிகளில் அமர்ந்திருப்பதுபோல மால்களில் தென்படுகிறார்கள். சதுக்கங்களில் அமர்ந்திருக்கிறார்கள். சர்ச்சுகளில் ஓரிருவர் அமர்ந்திருப்பதுண்டு.
நமக்கு அத்தகைய இணைகளை பிடித்திருக்கிறது. ஏன் என்று சிந்தனை செய்தால் நீண்ட அன்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என நினைக்கிறோம். நீண்ட மாரத்தானில் மறு எல்லைவரை வந்துவிட்டவர்கள்.
”சே, டிவியிலே மறுபடியும் அதே பழைய சமையல் நிகழ்ச்சிய போடுறான்”
“அது மைக்ரோவேன் அடுப்பு… அந்தாலே போங்க”
அந்நம்பிக்கையை அந்நாட்டு நண்பர் ஒருவர் உடைத்தார். “இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐந்தாறு ஆண்டுகளுக்குள் திருமணம் செய்துகொள்பவர்கள்… எண்பது வயதுக்குப் பிறகுகூட திருமணம் செய்துகொள்வார்கள்”
”ஏன்?”என்றேன் பீதியுடன்.
“தனிமை தாங்காமல்தான்”
தனிமை என்றால் என்ன என்று உடனடியாகப்புரியவில்லை.
“எண்பது வயதுக்குள் அவர்கள் தங்கள் சொந்தங்களிலிருந்து முழுமையாக தனிமைப்பட்டுவிடுவார்கள். அவர்கள் நாலைந்து முறை மணந்து பிரிந்திருப்பார்கள். ஆகவே மனைவிகளுடனோ கணவர்களுடனோ தொடர்புகளே இருக்காது.பிள்ளைகளையும் பதினெட்டு பத்தொன்பது வயதுக்குமேல் இங்கே கவனிப்பதில்லை. அவர்கள் சுதந்திரமாக வாழ்வார்கள். அவர்களுடன் மேலோட்டமான தொடர்பே இருக்கும், தொடர்பே இல்லாமலிருக்கவும் வாய்ப்புண்டு. பிள்ளைகள் இருக்கும் வரைத்தான் அந்தத் தொடர்பும். பிள்ளைகளுக்கே அறுபதாகியிருக்கும். பேரப்பிள்ளைகளுடன் ஒரு ஹலோ என்ற அளவில்தான் தொடர்பிருக்கும். வேறென்ன?”
”நீங்க என்னைய செல்லமா ஹனின்னு கூப்பிட்டது நல்லா இருக்கு”
”சட்னு பேரு மறந்துபோச்சு, அதான்”
நான் பீதியுடன் தலையசைத்தேன்.
“சேமிப்புகளுடன் ஓய்வுபெற்றிருப்பார்கள். வீட்டை விற்று அப்பார்ட்மெண்டில் வாழ்வார்கள்.பிறகு அப்பார்ட்மெண்டை விற்றுவிட்டு முதியோர் விடுதிக்கு வந்துவிடுவார்கள். இனி சாவு வரை வாழவேண்டும். கிழங்களின் உலகம் வித்தியாசமானது. பொதுவாக கிழங்கள் சகமனிதர்களை சந்தேகப்படுகின்றன. மிகநெருக்கமாகச் சிலரை விட எஞ்சியவர்களுடன் தொடர்புகொள்ள விரும்புவதில்லை. ஆகவே தனிமை. அந்த தனிமைக்குத் துணை இப்படி இன்னொரு கிழத்தை மணந்துகொள்வதுதான்… ”
“ஓகோ” என்றேன்.
”நான் என்ன சொன்னாலும் நீங்க சரியா கவனிக்கிறதில்ல!”
“தேங்க்ஸ் டியர், சீனி கொஞ்சம் ஜாஸ்தி போட்டிரு”
“ஒரு கிழம் செத்த்தால் இன்னொரு கிழத்துக்குச் சொத்து கிடைக்கும். அத்துடன் சண்டைபோட உடல்வலு இருக்காது. ஆகவே ஒற்றுமையாக இருப்பார்கள்” என்றார் நண்பர் “ஆனால் விவாகரத்துகளும் நடக்கும். சண்டைகளும் நடக்கலாம். ஆனால் அவர்களை யாரும் கவனிப்பதில்லை. யாரும் கவனிக்காத சண்டை நடக்காத சண்டைதானே?”
ஆனால் கிழவாழ்வின் சுகம் என்பதே அனத்தல்தானே? “என்னமோ போங்க, நான் சொல்றதைச் சொல்லியாச்சு. எங்க காலத்திலே இப்டி ஒண்ணும் கெடையாது. நாங்களும்தான் வாழ்ந்தோம். அப்பல்லாம் ஒரு பொண்ணு இப்டி கூடத்துக்கு வந்து பேசிர முடியுமா? நான்லாம் ஏழாவது பிள்ளை பிறந்த பிறகுதான் புருசன் மூஞ்சியையே பாத்தேன். மூத்தபய சாடையிலே இருக்கிறதுதான் புருசன்னு கண்டுபிடிச்சப்ப அப்பிடி ஒரு சந்தோசமா இருந்தது தெரியுமா” என்றெல்லாம் திண்ணைமூலையில் கேட்கும் குரல் அல்லவா குடும்பத்தை முழுமைப்படுத்துகிறது?
”இங்க பாருங்க, சாக்லேட் பாரை வைச்சுகிட்டு சேனல் மாத்த முடியாது…”
“மூத்தபய சாடையிலே பக்கத்துவிட்டு தாத்தா இருந்தா என்ன செஞ்சிருப்பே?”என்று கேட்கும் கொள்ளுப்பேரனை “கட்டேலே போக. நாசமத்து போக. என்ன பேச்சு பேசுதான் பாரு. இவன்லாம் என்னத்தை படிச்சு என்னத்தை வெளங்கி… நான் ஒண்ணையும் பாக்காம தெக்காலே போனாப்போரும்”
“தெக்க உனக்கு ஆரு இருக்கா பாட்டி?”
“உம்? உன் தாத்தன்… போடா” கிழவிகளின் ஓசை குடும்பங்களின் மங்கலத்தை கொஞ்சம் கூட்டத்தானே செய்கிறது.
”நான் சொன்னதிலே உனக்கு கோவம் வந்தா நான் வேற அர்த்தத்திலேதான் அப்டி சொன்னேன்”
கிழங்கள் குடும்பங்களின் பிரிக்கமுடியாத அம்சங்களாக இருந்தன. குடும்பம் என்ற அமைப்பு கடைசியாக எங்கே கொண்டுசேர்க்கும் என்ற எச்சரிக்கை கட்புல உண்மையாக இருப்பது ஒரு சமநிலையை கொண்டுவருகிறது. “அந்தக்காலத்திலே காலம்பற மூணுமணிக்கு தோசை ஊத்தணும். ஒம்பதுக்கே மதியச்சோத்துக்கு அரிசி களையணும்… ராத்திரிச்சோறு முடிய பத்தாயிரும்…அதுக்குமேலே பாத்திரம் களுவிட்டு…”
கிழங்கள் இல்லாத ஊர்களை நினைத்தே பார்க்கமுடியவில்லை. சிற்றூர்களில் இறங்கி “இங்க ராதாகிருஷ்ணன்னு ஒருத்தரு…” என்று ஆரம்பிப்பதற்குள்ளாகவே “சுவருமுட்டி ராதாகிஸ்னன்தானே? மூலத்தெரு நாகம்மை இப்பதான் தண்ணிபிடிக்கப் போனா. இவன் பொறத்தாலே போயிருப்பான்… அங்க போயி பாரு… இல்லேன்னா அவனுக்க பெஞ்சாதி இந்தா சாணிஅள்ள போனா அவகிட்டே கேளு. அவளுக்க ஒப்பம் பேசிட்டு நிக்குறது ஆறாம்வெரல் நாராயணனாக்கும்…” என்று முழுச்சித்திரத்தையே அளித்துவிடுவார்கள்.
“என்னை வாழ்க்கை முழுக்க சந்தோஷமா வைச்சுக்கிறேன்னு சொன்னீங்க”
“இவ்ளவு நீளமான வாழ்க்கைன்னு நினைக்கலை”
நண்பர் சொன்னார். “கிழங்களை உள்ளே இடம்கொடுத்து வைத்திருக்கும் சமூகங்கள் தேங்கிப்போனவை. படகில் பெரிய எடையை தூக்கி வைத்துக்கொண்டிருப்பதுபோல. படகு அலைகளில் ஆடாது. ஒரே இடத்தில் நின்றிருக்கும். மீன்பிடிக்க அப்படிச் செய்வதுண்டு. ஆனால் விரைவான சமூகங்கள் அவர்களை வைத்திருக்காது. உரிய மரியாதை வசதிகளுடன் ஒதுக்கிவிடும். அமெரிக்கா ஒரு டைனமிக் நாடு. மோட்டார் போட் மாதிரி”
“இந்தியாவும்தான் டைனமிக் ஆகிக்கொண்டிருக்கிறது” என்று நான் சொன்னேன்.
“வைரஸ்களை குவாரண்டைன் செய்வதுபோல நாம் வயசாளிகளை ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்துவிடுகிறோம். அவர்கள் வலுக்குறைந்த வைரஸ்களைப்போல தடுப்பு சக்தியாகவும் செயல்படுகிறார்கள்” என்று நண்பர் சொன்னார்.
”வயசானா பார்வை கொஞ்சம் மங்கும், மத்தபடி ஒண்ணுமில்லை”
மனநோயர்கள் கூட்டங்களை நாடுகிறார்கள். கிழங்கள் இளைஞர்களை நாடுகின்றன. உற்று கவனிக்கின்றன. ஏதாவது சந்து கிடைத்தால் உள்ளே நுழைய முயல்கின்றன. அதற்காக அவர்கள் வேடிக்கையாகப் பேசும்போதுதான் அவை அபத்தமாக ஆகின்றன. அந்த முண்டியடித்து நுழைதலில் உள்ள உயிர்வேட்கை அபாரமானது.
அக்காலத்தில் அபிலாஷா நடித்த ’மேற்படி’ படம் ஒன்றுக்கு ஒரு கிழம் வந்தது. பிந்தி வந்ததனால் இருட்டில் கண் தெரியாமல் அலைமோதி “கண்ணு தெரியல்லியே…”என்றது
”நம்ம காதலுறவெல்லாம் ஏன் இப்டி ஆச்சு?”
”ஆமா ஒருத்தர்கூட லெட்டர் போடுறதில்ல”
அமர்ந்திருந்த இளைஞன் “பாட்டா வயசானா வீடடங்கி கிடக்கப்பிடாதா?”என்றான்
“ஏலே நீயெல்லாம் பெண்ணு கெட்டலாம். எனக்கு இந்த வயசிலே இனி அது நடக்குமாலே? இது நாங்க பாக்குற படம், நீயெல்லாம் வீட்டுக்குப்போலே”
அது நியாயம் என இளைஞன் கருதியது அவன் எழுந்து பாட்டாவை கைபற்றி அமரச்செய்ததில் தெரிந்தது.
கதாநாயகி கடிதங்கள்- 7
அன்புள்ள ஜெ
இந்தத்தளத்தில் வெளிவரும் கதைகள் , அதிலும் குறிப்பாகச் சென்ற ஓராண்டில் வெளிவந்த 120 கதைகளும் பொதுவாக கதை வாசிக்கக்கூடிய அனைவருமே வாசிக்கவேண்டியவை. எவரையும் ஏதேனும் ஒருவகையில் நிறைவடையச் செய்பவை. நுட்பங்களுக்குள் செல்வதெல்லாம் அடுத்தபடி.\
ஆனால் கதாநாயகி வேறுவகையானது. அது இலக்கியவாசகனுக்கு மட்டும் உரியது. கதையோட்டம், நிகழ்ச்சிகள், உணர்ச்சிகள் ஆகியவற்றுக்காக வாசிக்க வருபவர்களுக்கு ஏமாற்றம் வரும் என நினைக்கிறேன். அதிலும் பேய்க்கதை என்று நினைத்து வந்தால் ஏமாற்றம் உறுதி.
ஏனென்றால் இது பேய்க்கதை அல்ல. அந்த ஃபார்மாட்டில் சொல்லப்பட்ட ஒரு இலக்கியக்கதை. இலக்கியத்தை வாசிக்கும்போது நாம் அந்த உலகில் நுழைகிறோம். அந்தக் கதாபாத்திரமாகவே ஆகிறோம். வாசகன் கதைக்குள் நுழையமுடியுமென்றால் கதாபாத்திரம் வாசகனுக்குள் நுழைந்து சமகாலத்திலும் வரமுடியாதா என்ன? அதுதான் கதைக்குள் நிகழ்கிறது.
ஒரு கியூரியாசிட்டியாக ஆரம்பிக்கும் வாசிப்பு மெல்ல உள்ளிழுத்துக்கொண்டு எப்படியெல்லாம் ஆட்கொண்டு பித்துப்பிடிக்கவைக்கிறது என்பது பல படிநிலைகளாகச் சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஆர்வம் வருகிறது. அதன்பிறகு ஒரு விலகல் வருகிறது. தவிர்க்க நினைக்கிறான். ஆனால் அது உள்ளே இழுத்து வைத்துக்கொள்கிறது.
பெண்கள் பெண்களுக்காக எழுத ஆரம்பித்தது உலக இலக்கியத்திலேயே எவ்வளவு பெரிய திருப்புமுனை. முதல்முறையாக விர்ஜீனியாவின் தரப்பு அப்படித்தானே இலக்கியத்தில் பதிவாகியது.
ஆனால் நாவலில் ஈவ்லினா உலக இலக்கியத்தில் பெரும்பகுதி ஆண்கள் ஆண்களுக்காக எழுதிக்கொண்ட வெற்றுப் பெருமிதப்பேச்சுக்கள் அல்லவா? என்கிறாள். அவள் படிப்பது Foxe’s Book of Martyrs . இன்னொரு பெண்மணி முகம் சுளிக்கிறாள். அவள் படிக்கும் புத்தகம்.. The Worth of Women: Wherein Is Clearly Revealed Their Nobility and Their Superiority to Men.
நான் இந்தப் புத்தகங்கள் உங்கள் கற்பனையா என்று சந்தேகப்பட்டேன். இணையத்தில் தேடினேன். இரண்டு நூல்களுமே ஏறத்தாழ ஒரே காலத்தில் வெளிவந்திருக்கின்றன. இருசாராருமே எதிரெதிர் நின்றிருக்கிறார்கள். அந்த முரண்பாடுதான் இந்த கதாநாயகி நாவலுக்கே ஆதாரம். கிரிஸ்ப் எழுதிய விர்ஜீனியா என்ற நாடகமும் ஃப்ரான்ஸெஸ் எழுதிய ஈவ்லினா நாவலும் மோதிக்கொள்வதுதானே இந்தக் கதை? கடையில் வெல்வது ஈவ்லினாதான். அவள் இன்னொரு பெண் வழியாக நீடித்துவிட்டாள்.
சிவக்குமார் எஸ்
அன்புள்ள ஜெ
கதாநாயகி ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் சுழற்றிக்கொண்டே சென்ற கதை. முதல் நாலைந்து அத்தியாயங்கள் கதை எங்கே செல்கிறதென்றே தெரியவில்லை. சுற்றிக்கொண்டே இருப்பது போலிருந்தது. புத்தகம், மறுபக்கம் காடு. காடும் புத்தகமும் சம்பந்தப்படவுமில்லை. புத்தகத்திற்குள் இருந்து இழுத்து உள்ளே கொண்டுசெல்லும் பேய்களை உணரமுடிந்தது. நல்ல வாசகர்கள் அனைவருமே அதை எப்படியோ உணர்ந்திருப்பார்கள்.
கடந்தகாலப் பேய்கள், வரலாற்றுப் பேய்கள். வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல, வாழ்ந்தவர்களில் வாழ்ந்தவர்களும்கூட. பேய்களில் அந்த வேறுபாடில்லை. ஃபிரான்ஸெஸ் பர்னிக்கும் ஈவ்லினாவுக்கும் வேறுபாடில்லை. இருவரும் ஒரே பரப்பில், ஒரே இயல்புகளுடன் வாழ்கிறார்கள். இருவருக்கும் சாவில்லை.
அதுதான் கதாநாயகி நாவலின் அடிப்படை. புத்தகங்களில்தான் இந்த உலகை ஆட்டிப்படைக்கும் உண்மையான பேய்கள் நிறைந்திருக்கின்றன. கடந்தகாலத்தில் ஓர் அநீதி நிகழ்ந்தால் அந்த அநீதியை யார் சரி செய்ய முடியும்? அதற்காகத்தான் பேய்கள் வருகின்றன. அவை பழிவாங்குகின்றன.ஆனால் உண்மையில் பேய்கள் அதைச் செய்வதில்லை. புத்தகங்கள்தான் அதைச் செய்கின்றன.
நான் இதை வாசிக்கும்போது பின்தொடரும் நிழலின் குரல் நாவலை நினைவுகூர்ந்தேன். அந்நாவலும் இதேபோல ஒரு பேய் ஒரு வாசகன் வழியாக எழுந்து வந்ததுதானே? அன்னா புகாரினா, புகாரின், வீரபத்ரபிள்ளை எல்லாமே கடந்தகாலத்தின் பேய்கள். அவர்கள் நீதிகிடைக்காதவர்கள். அவர்களுக்கு நீதியை அளித்தது புத்தகங்கள்தானே?
செந்தில் முருகேசன்
அன்புள்ள ஜெ.,
Memento என்ற படத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். Short Term Memory Loss குறைபாடுடைய ஒருவனை மையமாகக் கொண்ட கதை.படம் முடியும் போது எனக்கே கொஞ்சம் ஞாபகங்கள் குழம்பியது போல் ஒரு மயக்கம் ஏற்பட்டது.
கதாநாயகி கதையைப் படிக்கும் போது நானும் அப்படித்தான் மாறிப் போனேன். என்னையும் அந்தப் புத்தகம் உள்ளிழுத்துக்கொண்டது.
சொல்லப்போனால், கடைசி அத்தியாயத்தில் வரும் ஞானாம்பாளும், அந்த மலைக்காட்டின் மாற்றமும் கூட நிஜமா அல்லது கதாநாயகனின் உளப்பிறழ்வின் ஒரு பகுதியா என்று கூட எனக்கு ஒரு சந்தேகம்.
மற்றபடி, அந்தப் புத்தகத்தின் கதாநாயகி யார், ஹெலனா என் அதன் பின் வரவில்லை என்றெல்லாம் இனிதான் யோசிக்கவேண்டும்.
நன்றி
ரத்தன்
மயில்கழுத்தும் தாயார்பாதமும்- கடிதம்
அன்புள்ள ஜெ..
அறம் சிறுகதை தொகுதியில் ஒவ்வொருவருக்கும் சில கதைகள் சற்று கூடுதலாகப்பிடிக்கும். எனக்கு அதிகம் பிடித்த கதை மயில் கழுத்து.
இந்த கதையையும் தாயார்பாதம் கதையையும் juxtapose செய்து பார்த்தால் கூடுதலாக சில திறப்புகள் நிகழ்வதாக தோன்றுகிறது
குரு பக்தி , தந்தை மீதான பாசம் போன்ற உயரிய அம்சங்கள் மிகப்பெரிய தீமைக்கு வழி வகுப்பதையும் , நஞ்சு என கருதப்படும் ஒன்று மேல்நிலைக்கு உயர்த்துவதையும் இக்கதைகளில் கவனிக்கிறோம்
ஒருசேரப்படிக்கும்போது நமக்கு கிடைக்கும் புரிதல் , தனியாக படிப்பதில் இருந்து சற்றே வேறுபட்டது
இப்படி இரு கதைகளை ஒப்பிட்டு வாசிப்பது சரியான வாசிப்பா ?
http://www.pichaikaaran.com/2021/05/blog-post_27.html
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

