Jeyamohan's Blog, page 981

May 24, 2021

எஸ்.செந்தில்குமாரின் ‘’கழுதைப்பாதை’ – கடலூர் சீனு

இனிய ஜெயம்,

இந்த 2020 இலும் கூட்டுக் குடும்ப வாழ்வு கொண்ட  சொந்தங்கள் வசமிருந்தும், வேறொரு கூட்டுக் குடும்ப வாழ்வான நண்பர்கள் என்ற உறவுகள் வசமிருந்தும் அனேகமாக நாளுக்கொரு துயர செய்தி என்று வந்த வண்ணம் இருக்கிறது.

கலையில் ஈடுபாடு இருந்து, பின்னரும் துயர் கொண்டோர் செய்வதற்கு உள்ளதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். மூன்று நாள் உண்ணாமல் உறங்காமல் துயர் காத்துவிட்டு, அழுது தீர்த்துவிட்டு, அத்துடன் முற்ற முடிவாக உங்களை இறந்த காலத்துடன் இருந்து துண்டித்துக் கொண்டு, இன்றைய நாளில் நிலைத்து விடுவது.

முடிந்த வரை கைகளால் அல்லது முழு உடல் ஆற்றல் கொண்டும் செய்ய முடிந்த ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபடுவது. ஹரிப்ரஸாத் செளராஸ்யா குழல் இசை போல எண்ணங்களை நனைந்து படிய வைக்கும் ஏதேனும் ஒன்றை செவிக்கு அளிப்பது. இக்கணம் இழந்த நமது இறந்தகாலம் கிளர்த்தும் துயர் கடல் எனும் மாயையை, அதை துளி என்றாகும் ஏதேனும் செவ்வியல் புனைவுகளில் மீண்டும் தோய்வது. உதாரணம் பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது. பைரப்பாவின் சொந்த வாழ்வே ஒரு கடல் தான். ஓநாய்ப் பசியுடன் மீண்டும் இலக்கியக்துக்கு மீளுங்கள் என்று மட்டுமே சொல்வேன். நிகர் வாழ்வில் இருந்து தப்பிக்க இலக்கியத்துக்குள் முகம் புதைக்கும் வேலை இல்லை இது. காரணம், இலக்கியமும் வாழ்வும் வேறு வேறல்ல. இலக்கியத்திலிருந்தும் கலைகளிலிருந்தும் வாழ்வுப் பயணத்தை மீண்டும் துவங்குவோம்.

உண்மையில் இந்த நாட்களில் கனவுகளில் வீறு கொண்டு எழுகிறார்கள் நஞ்சம்மா சென்னிகராயர் என பற்பலர். அவர்கள் எல்லாம் இன்று இந்த நோய் வெளியில் வெவ்வேறு ரூபம் கொண்டு மீண்டும் பிறந்து வந்திருக்கிறார்களா என்ன? செய்திகள் வந்து தொட்டு, எண்ண எண்ண எழுந்து எங்கெங்கோ பறக்கத்துவங்கும் எண்ணங்களை மீண்டும் புனைவுகளில் கொண்டு தளைக்கிறேன். சமீபத்தில் படித்த புனைவுகளில் இரண்டு குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. முதலாவது எஸ். செந்தில்குமார் எழுதிய கழுதைப்பாதை எனும் நாவல்.

போடி பகுதியில் கழுதையில் சுமைகளை மலை ஏற்றி இறக்கும் குழுக்கள் ஒன்றின் இரண்டு தலைமுறை வாழ்வை சித்தரித்து கிட்டத்தட்ட 1950 வாக்கில் நிறையும் நாவல். 300 கழுதையை வைத்து மேய்த்து, மலை மேல் இருக்கும் செட்டியார்களின் காப்பி தோட்டத்து சுமைகளை கிழே தரைக்கு கொண்டு வந்து சேர்க்கும் தொழிலில் இருக்கும் மூவண்ணா பெருமாள், மற்றும் அவரது தம்பி சுப்பண்ணா இருவரின் எழுச்சி வீழ்ச்சிக்குப் பகைப்புலமான வாழ்க்கைத் தருணங்களை சித்தரிக்கும் புனைவு.

 

கிட்டத்தட்ட 100 ஆட்களை வைத்து மலை மேல்  சுமை ஏற்றி இறக்கும் முத்துசாமி நாயக்கன் அவன் வசம் தணிந்து போக விரும்பாத காப்பி தோட்ட முதலாளி செளடையா செட்டியார்,  தரையில் இருந்து மலை தோட்டத்துக்கு கழுதைகளை கொண்டு சுமை ஏற்ற (அதற்கு புதிய பாதை போடப்பட்ட வேண்டும்) மூவண்ணா சகோதரர்களின் அப்பா முத்தனை அணுகுகிறார்.  முத்துசாமி நாயக்கனின் தொழிலை முடித்து மேலேறி வரும் மூவண்ணா வாழ்க்கை சுழிப்பின் இறுதியில் தனது தொழிலை இழந்து வெறும் கையுடன் போடிப்பட்டியை விட்டு வெளியேறுகிறார்.

மலையின் முதுவா குடிக்கும் தரை காட்டு குடிகளுக்கும் இருக்கும் சாதிய ஏற்ற தாழ்வு, சுமை கழுதை முதலாளிகளுக்கும், சுமை அடிமை முதலாளிகளுக்கும் உள்ள முரண், காப்பி தோட்ட முதலாளிகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான ஆண்டான் அடிமை உறவு, போன்ற பல்வேறு இருமை நிலைகள் வழியே சுழிக்கிரது இந்த நாவல் சித்தரிக்கும் வாழ்வு.

முதுவாகுடிக்கு கங்கம்மா ராகப்பன் சாமிதான் கண்கண்ட தெய்வம். சுமை கழுதை முதலாளிகளும் கழுதைகள் காலிடறி பள்ளத்தில் விழாமலோ, சொன்னாய் போன்ற மிருகங்களின் இடைஞ்சல் வராமல் இருக்கவும், திருடர்கள் குறுக்கே வராமல் இருக்கவும் கங்கம்மாவை வழிபட்டபிறகே கழுதை பாதைக்குள் காலடி எடுத்து வைப்பார்கள்.

நாவலின் போக்கில் தர்மன் பச்சைக்கிளி இணையர் வழியே முதுவா குடியின் திருமணம் முதல் உணவு கலாச்சாரம் தொடர்ந்து இறப்பு சடங்குகள் வரை விவரிக்கப் படுகிறது. வரலாற்றுப் போக்கில் அந்த மலை எவரெவர் ஆட்சியின் கீழ் வந்தது, அதில் காபி தோட்ட செட்டியார்கள் நிலைத்த விதம், காட்டின் தெய்வத்தின் கதைகள் தொன்மக் கதைகள் எல்லாம் நாவலுக்குள் செவ்வந்தி போன்ற கதை சொல்லிகள் வழியே பேசப் படுகிறது.  இவர்களுடன் பின்னிப் பிணைந்ததே சுமை கழுதை முதலாளிகள் வாழ்வு.

மொத்த நாவலும் துரோகங்களின் தருணங்கள் வழியாகவே நகர்கிறது. மலைக்காட்டு ராக்கப்பன் தரைக்காட்டு கங்கம்மா காதலுக்கு முதுவாக்குடி செய்யும் துரோகம், முத்துசாமி நாயக்கனின் தொடுப்பான வெள்ளையம்மா, தெம்மன்னாவுக்கு செய்யும் துரோகம். முலையில் நஞ்சு தடவி முத்துசாமி நாயக்கனுக்கு செய்யும் துரோகம். நாயக்கணின் மனைவி நாகவல்லி, நாயக்கனின் செல்வாக்கு பணம் அடிமைகள் மீதான அதிகார மோகத்தில் ஏர்ராவுக்கு இழைக்கும் துரோகம்.

சுப்பண்ணா தனது அண்ணி உடனான உறவு வழியே அண்ணனுக்கு இழைக்கும் துரோகம். சுப்பண்ணனின் இரண்டாவது மகன் மணிப்பயல் சரசு வுக்கு செய்யும் துரோகம். என இந்த நாவலின் ஒட்டுமொத்த செயற் களத்தையும் முன் நகர்த்தும் விசை என காமமும் பிறழ்உறவுகளும் துரோகமும்  அமைகிறது. இந்த துரோகத்துக்கு இது என தனக்கான விதி வந்து பற்றும் சூழல் ஒவ்வொன்றிலும் அந்த பாத்திரங்கள் அதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்கிறது.

நாவலுக்குள் சொல்லப்படும் பல கதைகளில் ஒன்று ராவுத்தர் ராஜா முகமது கதை மொத்த நாவலின் வாழ்க்கை பார்வையையும் திரட்டி ஒரே அத்தியாயத்தில் நிகழும் கதை. அடுத்த கதை 100 அடிமைகளும் வருடம் ஒரு முறை கிடைக்கும் இட்லி சாம்பார் எனும் ‘பெரு விருந்துக்காக’ எச்சில் இலை போடும் இடம் அருகே வரிசையாக குத்தவைத்து அமர்ந்து காத்திருக்கும் கதை. இறுதி அடிமை வரிசையின் முடிவுக்கு இட்லி வராமல் தீர்ந்து போகுமோ எனும் பதட்டத்தில் ‘எனக்கு இட்லி வேணும்’ என பெருங்குரலெடுத்து அழுகிறான். இறுதியிலும் இருதியாக கொஞ்சம் குடிக்க சாம்பார் கேட்ட வகையில், அத்தனை பேரும் கொதிக்கும் சுடுநீர் குளியல் வாங்கி உடல் வெந்து ஓடுவதில் முடிகிறது அந்த விருந்து. காட்டுத் தீயில் மொத்த சுமை கழுதைகளும் நகர முடியாமல் நின்ற இடத்திலேயே எறிந்து அடங்கும் நாவலின் இறுதி அத்தியாயம் தமிழ் கண்ட யதார்த்தவாத நாவல்களின் சித்தரிப்புகளின் வரிசையில் ஒரு இணையற்ற தருணம் என்பேன்.

இச்சைகளால் அலைக்கழிந்து காம க்ரோத மோகங்களின் விசையால் சுண்டி எறியப்பட்டு வெறுமையின் சரிவில் இறங்கி பாழில் சென்றொடுங்கும் வாழ்வை சித்தரித்துக் காட்டும் இந்த  நாவல் நல்ல வாசிப்பனுபவம். அழுத்தமான பதிவை உருவாக்குவது. ஆயினும் சற்று இலக்குதவறியது என்றும் சொல்லலாம்.

காரணம் நாவலுக்குள் தொழிற்படும் வடிவ போதம். உத்வேகமான ஓட்டமும் கச்சிதமான வடிவமும்தான் (320 பக்கம்) இந்த நாவலின் அடிப்படைத் தடை.  நிலத்தை சித்தரித்துக் காட்டுவதில் உள்ள முப்பரிமாணத் தன்மையை நாவல் பொழுதுகளையும் சீதோஷ்ண நிலைகளையும் சித்தரிப்பதில் தவறி விடுகிறது. அந்த மலையும் தரையும் கோடையில், மழையில், வேனிலில், குளிரில், எப்படி இருக்கும், ஒவ்வொரு பருவ காலத்திலும் காலையும் மாலையும் இரவும் எப்படி இருக்கும் என சீதோஷ்ண நிலைகளை வாசகர் இக் கணம் தனது சருமத்தால் உணரும் நிலையை அளிக்க நாவல் தவறி விட்டது.

எனவே இந்த நிலமும் பொழுதும் மனிதரில் கிளர்த்தும் உணர்வு சித்தரிப்புகள் என நாவலுக்குள் எதுவுமே இல்லை. மனிதர்களை அவர்களின் உணர்வு நிலைகளை வாழ்க்கை தருணங்களை சித்தரித்துக் காட்டும் இப் புனைவு, ‘வெறுமனே சித்தரித்துக் காட்டி’ அங்கேயே நின்று விடுகிறது. தனித்துவம் மிளிரும் மனித நடத்தைகள், மனித அகத்தின் ஆழத்திலிருந்து எழுந்து வெளிப்படும் நாமறியா மனோ நிலைகள் என ஏதும் இல்லை. உதாரணமாக ஒரு குடும்பம் சிதைக்கிறது நாவலின் இறுதியில் சென்னிகராயர் தனது மகன் விசு தன்னை விட்டு   இந்த ஊரைவிட்டுப் போவதை வெறுமனே பார்த்தபடி மரத்தடியில் அமர்ந்திருப்பார், அவருக்கு விசுவை அழைக்க தோன்றும் ஆனால் வாயில் உள்ள தாம்பூலம் தடுக்கும். எத்தனை தீவிர தருணம், இப்படி எத்தனையோ தருணம் நிகழ சாத்தியம் உள்ள இந்த கதைக் களம் அந்த சாத்தியங்களை தவற விட்டிருக்கிறது.

ஒரு குடும்பம் சிதைக்கிறது போலவோ, மீஸான் கற்கள் போலவோ மண்ணையும் மனிதர்களையும் வலிமையாக சித்தரித்து இந்திய செவ்வியல் நாவல் வரிசையில் சேர்ந்திருக்க வேண்டிய ஒரு நாவல், வடிவத்தால் எல்லை கட்டப்பட்டு, அதன் காரணமாக நிகழ வேண்டிய கற்பனைகள் எல்லை கட்டப்பட்டு, அதன் காரணமாக நாவல் கலை சென்று தீண்ட வேண்டிய உள்ளுணர்வின் ஆழத்தை சென்று தீண்டத் தவறி விட்டது. ஆயினும் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான புனைவு என்றே இந்த நாவலை மதிப்பிட முடிகிறது.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2021 11:31

வெண்முரசு திரையிடல், ஆஸ்டின் பதிவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நேற்று மாலை ஆஸ்டினில் வெண்முரசு திரையிடல் நல்லமுறையில் நடந்தேறியது. ஆனந்தசந்திரிகை ஆசிரியரும், தங்களது வாசகருமான நண்பர் இராம்கி, அவரது மனைவி சுஜாதா, அறம்  நூலின் வழி தளத்தின் வாசகியாகிய குணமொழி அவரது கணவர் ஹரி, திரைமறைவில் இதுவரை தெரியாமல் இருந்த வாசக நண்பர்கள் பாலாஜி பழனிசாமி, மூர்த்தி ஆகியோர் டாலஸிலிருந்து நான்கு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தனர்.

ஹூஸ்டனிலிருந்து நண்பர்கள் சிவசுப்ரமண்யன், சிவா அய்யனார்,  லாவன்யா, பாரதி கலை மன்றத்தின் சார்பாக அதன் இயக்குனர் தேவி அவரது கணவர் பிரபு மற்றும் குழந்தைகள் இஷா, குரு ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர்.  இரண்டு பெரு நகரிலிருந்தும்  நேற்று பயணம் செய்தவர்கள் ஐந்து அடிக்கு முன்னால் செல்லும் கார் கண்ணில் தெரியாத ஒரு பெருமழையின் ஊடே புகுந்து வந்திருந்தார்கள்.

ஆஸ்டின் நகர் நண்பர்களில் அலுவலக நண்பர்கள், வாசக நண்பர்கள், தமிழ் அல்லாது வேறு மொழி பேசும் நண்பர்கள் என்று எல்லாவகையினரும் ஒரு எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். தமிழ் பேசாத  நண்பர்கள் சிலர், விக்கிபீடியாவில், தங்களைப் பற்றியும் வெண்முரசைப் பற்றியும் வாசித்து அறிந்து, இந்தப் படம் ஒரு வரலாற்றுச் சாதனையை சொல்லவிருக்கிறது என்று தெரிந்தே வந்திருந்தார்கள்.

படம் ஆரம்பிக்கும் முன்னர், ஒரு பதினைந்து நிமிடம் அவகாசம் கொடுக்கும்படி திரையரங்கினரிடம் கேட்டிருந்தோம். எழுத்தாளர் கி. ராஜ நாராயணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் (அமெரிக்கா) செயல்பாடுகளை அறிவித்துக்கொள்ளவும், தொலைதூரத்திலிருந்து வந்திருந்த நண்பர்களை விஷ்ணுபுர இலக்கிய வட்டம் நண்பர்களின் சார்பாக மலர்ச்செண்டு கொடுத்து சிறப்பிக்கவும் கிடைத்த நிமிடங்களைப் பயன்படுத்திக்கொண்டோம்.

படம் முடிந்ததும், பலத்த கைதட்டலுக்குப்பின் பலமுனையிலிருந்தும் பல கேள்விகள் எழுந்தன. வெண்முரசு  நாவல் வரிசையின் 26 நாவல்களையும் எங்கு வாங்குவது? 500,000 unique வார்த்தைகள் என்று எப்படிக் கணக்குப் போட்டீர்கள்? எந்த நாவலை வேண்டும் என்றாலும் முதலில் வாசிக்கலாமா? வெண்முரசை ஒலி வடிவில் கேட்பதற்கு என்ன செய்வது ? ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் இருக்கிறதா? திரைப்படம் எடுக்கும் எண்ணம் உள்ளதா? குழந்தைகள் பார்ப்பதுபோல் இதில் இருக்கும் கதைகளை அனிமேஷனுடன் கூடிய வீடியோக்களாக கொடுக்கும் யோசனை உண்டா?

அனைவரும் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல திரையரங்களியே மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்தோம். அடுத்த படம் ஆரம்பிக்கவிருக்கிறது என்று திரையரங்கினர் விரட்டுவார்கள் என்பதாலேயே பிரிந்து சென்றோம் எனலாம்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2021 11:30

அஞ்சலி எஸ்.என்.நாகராஜன்

எஸ்.என்.நாகராஜன்

எஸ்.என்.நாகராஜன் -விக்கி

கீழைமார்க்ஸியம் என்று அவருடைய நண்பரும் மாணவருமான ஞானியால் பெயரிடப்பட்ட ஒரு தனித்துவம் கொண்ட பார்வையை முன்வைத்தவர் எஸ்.என்.நாகராஜன். வேளாண் அறிஞர், பொருளியல் ஆய்வாளர், மார்க்ஸிய ஆய்வாளர். தமிழகத்தில் இருந்து மார்க்ஸிய சிந்தனைக்கு அசலான ஒரே கொடை என்பது எஸ்.என்.நாகராஜனின் கீழைமார்க்சியம் என்னும் கருத்தாக்கமே. ஆகவே அவரை இந்நூற்றாண்டின் தமிழகத்து முதற்சிந்தனையாளர்களில் ஒருவராக முன்வைப்பது என் வழக்கம்.

எஸ்.என்.நாகராஜன் பெரும்பாலும் ஏதும் எழுதியதில்லை. உரையாடலே அவருடைய வழி. அவருடன் உரையாடியவர்கள் வழியாக அவர் தன் சிந்தனைகளை நிகழ்த்தினார். அவருடைய பிற்காலத்தைய பேட்டிகள் அவருடைய சிந்தனைகளை முன்வைப்பவை. கோவை ஞானியில் அவர் வெளிப்பட்டார். அவர் எழுதிய குறிப்புகள், கடிதங்களின் தொகுப்பாக ஞானி வெளியிட்ட கீழைமார்க்சியம் என்னும் நூலே அவருடைய சிந்தனைகளின் ஒரே ஆவணமாக நிலைகொள்கிறது.

பெரும்பாலான முதல் சிந்தனையாளர்களைப்போல எஸ்.என்.நாகராஜனும் அலைமோதியவர். சீராக, முறையான தத்துவ- தர்க்கக் கட்டமைப்புடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவரால் இயன்றதில்லை. வெவ்வேறு புள்ளிகளை தொட்டு தொட்டு இணைத்துச் செல்லும் அவருடைய சிந்தனை என்பது பலசமயங்களில் தர்க்கமற்ற தாவல்களாகவும், ஊகங்களாகவும், உருவகங்களாகவுமே இருந்துள்ளது. ஆனால் அவருடன் விவாதித்து, தானாகச் சிந்தனைசெய்பவர்களுக்கு பெருந்திறப்புகளை அளிப்பவை அவை.

எஸ்.என்.நாகராஜன் மார்க்ஸியத்தின் செவ்வியல்வடிவத்தின் மேல் ஆழமான ஐயங்களையும் விமர்சனங்களையும் 1970கள் முதல் முன்வைத்தவர். எளிமையாக அதை இப்படிச் சொல்லலாம். மேலைமார்க்ஸியம் ’ஆண்தன்மை’ கொண்டது. ஆகவே தாக்கும்தன்மை, தன்முனைப்பு ஆகியவை கொண்டது. அவர் ஆண்தன்மையை ஓர் எதிர்மறைப் பண்பாகக் கண்டார்.

மேலைமார்க்ஸியம் இயற்கையின்மேல் ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது, மையப்படுத்தும் தன்மை கொண்டது, அதிகாரத்தின் வழியாக மாற்றத்தைக் கொண்டுவரும் இயல்பு கொண்டது என்பது எஸ்.என்.நாகராஜனின் கருத்து.

அதற்கு மாற்றாக எஸ்.என்.நாகராஜன் முன்வைத்தது கீழை மார்க்ஸியம். அது ’பெண்தன்மை’கொண்டது. ஆகவே படைப்புச்சக்தி கொண்டது. இயற்கையுடன் ஒத்திசைந்துசெல்லுதல், பரவலாக்கப்பட்ட பன்மையாக்கப்பட்ட மையமற்ற தன்மை, சேவையினூடாக சமூகமாற்றம் ஆகியவை அதன் இயல்புகள் என்றார்.

மார்க்ஸியம் ஒரு மண்ணில் அங்கிருக்கும் மெய்ஞான மரபுகளின் நீட்சியாகவே உருவாகமுடியும். அவ்வண்ணம் ‘மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்’ உருவானால் மட்டுமே அந்தச் சமூகத்துடன் அது மெய்யான உரையாடலை நிகழ்த்தும்.  ‘மார்க்சியத்தை மொழிபெயர்க்கக்கூடாது’ என்பது எஸ்.என்.நாகராஜனின் தரப்பு.

இந்தியாவின் மரபில் மார்க்ஸியத்திற்கான முன்தொடர்ச்சிகள் என்னென்ன என்று அவர் ஆராய்ந்தார். இந்தியாவின் நாத்திகமரபையும் இந்தியாவின் சேவை அல்லது பிரபத்தி சார்ந்த மரபையும் அவ்வாறு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றார். இந்திய மார்க்சியர்களில் ஈவேராவை முதலில் மார்க்ஸிய முன்னோடியாக கருதியவர் அவர்தான். அதேபோல ராமானுஜரையும் வள்ளலாரையும் முன்னோடியாக கருதினார்.

எஸ்.என்.நாகராஜன் வைணவத்தின் ‘பிரபத்தி’ என்ற கருதுகோள் மிகமுக்கியமானது என்றார்.மக்களை அவர்களுக்குச் செய்யும் சேவையினூடாக அறிதல் என்பது அதன்வழி. மக்களிடமிருந்து விலகிநின்று அவர்களை ஆராய்ந்து அறியும் அறிஞர்களின் பார்வை ஆணவம் கொண்டது, அது பிழையாகவே ஆகும் என வாதிட்டார். ‘அறிவுக்குப் பதிலாக அன்பை ஓர் அறிதல்முறையாகக் கொள்ளவேண்டும்’ என அவர் சொன்னார்.

அந்நம்பிக்கையே அவரை நடமாடக்கூடிய ஆற்றல் இருக்கும் வரை தமிழகம் முழுக்க அலையவைத்தது. பெரும்பாலும் அவர் விவசாயிகளின் நடுவிலேயே இருந்தார். விவசாயிகளிடம் பேசிக்கொண்டிருந்தார். வேளாண் அறிஞர் என்பதனால் அவர் விவசாயிகளுக்கு உதவியானவராகவும் அவர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருந்தார்.

அறிஞர்கள், மார்க்ஸியக்கூச்சல்கார்களிடம் பேசுவதை விட அவரால் விவசாயிகளிடம் எளிதில் பேசமுடிந்தது. நாம் மார்க்சியர் என நம்பும் ஆளுமைகள் எவராலும் விவசாயிகளிடமோ தொழிலாளர்களிடமோ ஐந்துநிமிடம் பேசமுடியாது என்பதை நாம் எண்ணிக்கொள்ள வேண்டும். அவர்களால் இன்னொரு மார்க்ஸியரிடமே உரையாடமுடியும்.

எண்பதுகளில் வேதசகாயகுமார் எஸ்.என்.நாகராஜனை குமாரகோயில் அருகே ஒரு விவசாயிகளின் கூட்டத்திற்குப் பேச அழைத்துச்சென்றார். எஸ்.என்.நாகராஜன் வந்து நின்றதுமே விவசாயிகள் அவர்மேல் ஒவ்வாமை கொண்டனர். எஸ்.என்.நாகராஜன் ஆரம்பித்தார். “நீங்க வெள்ளாமைய சிறப்பாச் செஞ்சா என்ன ஆகும்?”.  “வெளைச்சல் கூடும்” என்று பதில். “வெளைச்சல்கூடினா நெல்லு நிறைய வரும். பொருள் சந்தைக்கு நிறைய வந்தா விலை கூடுமா குறையுமா?” விவசாயிகள் ஸ்தம்பித்துவிட்டனர்.

“நிறைய விளைய விளைய விலை குறைஞ்சிட்டே இருக்கும். நிறைய விளைய வச்சா மண்ணு உரமும் பூச்சிமருந்தும் கூடுதலா கேக்கும். அதெல்லாம் வெலை ஏறும். எங்கோ ஒரு எடத்திலே விவசாயம் நஷ்டமா ஆயிரும்” என்று அவர் பேச ஆரம்பித்தார். அவர்கள் அக்கணமே அவரை தங்களவர் என ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல விவசாயிகளிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். தக்கலை குமாரகோயில் பகுதியில் விவசாயிகள் வயலில் எருவிட்டு அதை நொதிக்கவைத்து சிவப்பாக ஒரு பாசி படரச்செய்தார்கள். சதுப்புவிவசாயத்தின் வழி அது. அதை வயல்பூப்பது என்றார்கள். அது ஒருவயலில் இருந்து இன்னொரு வயலுக்கு கொண்டுசென்று பரப்பப்பட்டது. வயலின் தரத்தை அது மிகுதியாக்கியது.

அது நுண்பூஞ்சை. எஸ்.என். நாகராஜன் அதை வேளாண்விஞ்ஞானிகளிடையே கவனப்படுத்தினார். பின்னாளில் அஸோஸ் பைரில்லம் போன்ற நுண்பூஞ்சை உரங்கள் சந்தைக்கு வந்தன. பேச்சிப்பாறை பகுதியில் ஆழ்களி நிலத்தில் வேய்மூங்கிலை தறித்துப்போட்டு உள்ளே காற்றோட்டம் உருவாக்கி விவசாயம் செய்யும் வழிமுறையை அவதானித்து எழுதியிருக்கிறார்.  ‘மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்பது அவருடைய கோஷங்களில் முக்கியமானது.

துரதிர்ஷ்டவசமாக எவரையும் பிறப்புசார்ந்த அடையாளத்தால் அன்றி வேறெவ்வகையிலும் பார்க்க முடியாத சாதிக்குறுகல் கொண்டவர்களாகவே நம் அறிவுச்சூழல் அன்றும் இன்றும் இருக்கிறது. எஸ்.என்.நாகராஜனை அவருடைய பிராமண -வைணவச் சாதி அடையாளத்தை கொண்டு வசைபாடி இழிவுபடுத்தி அப்படியே கடந்துசென்றனர் இங்குள்ள மார்க்சியர். அந்த வசையையே அவருடைய அடையாளமாக நிலைநாட்டுவதிலும் வெற்றிபெற்றனர்.

எஸ்.என்.நாகராஜன் ராமானுஜரின் பிரபத்தியை முன்வைப்பதைக்கொண்டு அவரை சாதிநோக்கில் வசைபாடினர். ஆனால் மிகச்சில ஆண்டுகளிலேயே எந்தக் கோணத்தில் எஸ்.என்.நாகராஜன் ராமானுஜரை பார்த்தாரோ அந்தப்பார்வையே தமிழில் பொதுவாக நிலைகொண்டது. மு.கருணாநிதி ராமானுஜரைப் பற்றி நூல் எழுதியபோது ஒரு குரல்கூட எதிராக எழவில்லை. ஆனால் எஸ்.என்.நாகராஜனுக்கு சாபவிமோசனம் கொடுக்கப்படவுமில்லை.

இங்கே அன்று மார்க்ஸியம் ஒரு மதமாகவே இருந்தது. மார்க்ஸை மேற்கோள் காட்டுவது தவிர மேற்கொண்டு சிந்திப்பதே பிழை என கருதபட்டது. மார்க்ஸை கடந்துசிந்திப்பது துரோகமேதான். இன்னும் வியப்பூட்டுவது ஒன்றுண்டு, அதை கோவை ஞானியே ஓர் உரையாடலில் சொன்னார். எவரெல்லாம் ‘தூயமார்க்ஸியம்’ பேசி எஸ்.என்.நாகராஜனை வசைபாடினார்களோ அவர்களெல்லாம் அப்படியே சாதிவாத, இனவாத, பண்பாட்டு அடிப்படைவாத சிந்தனைகளுக்குள் சென்று குடியேறி அப்படியே நீடிக்கிறார்கள்.

சோவியத் ருஷ்யாவின் உடைவைப் பற்றி எழுபதுகளின் தொடக்கம் முதலே கணித்துச் சொல்லிக்கொண்டிருந்தார் எஸ்.என்.நாகராஜன். அப்போது அதன்பொருட்டு வசைபாடவும்பட்டார். அந்த வீழ்ச்சி இன்றியமையாதது, ஏனென்றால் சோவியத் ருஷ்யாவின் ஆக்ரமிப்பு- ஆதிக்கம் சார்ந்த போக்கின் முடிவு அது என்று அவர் நினைத்தார். அதனால்தான் மாற்று மார்க்சியத்தை முன்வைத்தார்.

ஆனால் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி அவரை அழுத்தமாகப் பாதித்தது என இப்போது காணமுடிகிறது. அதற்குப்பின் வந்த மாற்றங்கள் அவரை நம்பிக்கையிழக்கச் செய்தன. கீழைமார்க்ஸியத்தின் விளைநிலம் என அவர் நம்பிய சீனா ஓரு அரசுமுதலாளித்துவப் பேரரசாக மாறியது, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிகளில் வந்த முதலாளித்துவத்துடன் ஒத்துப்போகும் தொழிற்சங்கவாதம், இடதுசாரித் தீவிரக்குழுக்களில் ஏற்பட்ட பிளவுகளும் அவர்களின் பரஸ்பர வசைகளும், தமிழகத்தில் சட்டென்று மீண்டும் பேருருக்கொண்டு எழுந்த இனவாத- சாதியவாத அரசியல் ஆகியவை அவரை அன்னியமாக்கி அமைதியாக்கின.

அவருடன் தொடர்பும் உரையாடலும் 1986 முதல் எனக்கு இருந்தது. கீழைமார்க்ஸியம் நூல் தொகுப்பிலும் சிறுபங்காற்றினேன். அவரைப்பற்றிய ஒரு குறிப்பை நான் மலையாளத்தில் எழுதியபோது அவருக்கு அனுப்பியிருந்தேன். 2017ல். அப்போதுதான் அவருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது முதுமையால் பேச்சில் ஒத்திசைவும் இல்லாமலாகியிருந்ததாகத் தோன்றியது. கடைசியாக அவர் குரலை கேட்டது அப்போதுதான்.

மார்க்ஸியம் ஒரு சிந்தனையாக தமிழகத்தில் இனி எவ்வகையில் நீடிக்கும், நீடிக்குமா என்பதெல்லாமே கேள்விகள்தான். இன்று மார்க்ஸியம் பேசுபவர்கள் எல்லாமே மார்க்ஸியத்தை ஓரத்தில் தொட்டுக்கொண்டு பண்பாட்டு அடிப்படைவாதம், இனவாதம், சாதியவாதமே பேசுகிறார்கள். அவை மார்க்ஸியத்திற்கு நேர்எதிர்க் கொள்கைகள். ஆனால் அந்தப்பேச்சில் ஓரத்தில் மார்க்ஸை எல்லைச்சாமிக்கல் போல அமரச்செய்கிறார்கள்.

மார்க்ஸியத்தை ஒரு தத்துவமாக, இலட்சியமாக அதன் தூயவடிவில் ஏற்று முன்சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர் எஸ்.என்.நாகராஜன். இன்று அந்த தலைமுறை இல்லை, இன்றிருப்பது அன்றாட அரசியலின் காழ்ப்புகளை மார்க்ஸியத்தின்பெயரால் கொட்டும் ஒரு கூட்டம். ஓர் அரசியல்கும்பலாக அல்லாமல் மெய்யான சிந்தனைக்களமாக மார்க்ஸியம் தமிழகத்தில் உயிர்கொண்டு எழுமென்றால் எஸ்.என்.நாகராஜன் மீண்டும் பேசப்படுவார். ஞானியும்.

பசுமை முகங்கள் அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1

அசிங்கமான மார்க்ஸியம் – எரிக் ஹாப்ஸ்வம்

ஞானி-3

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2021 00:51

May 23, 2021

பகடை பன்னிரண்டு

”பத்து பவுண்ட் ஏறின பிறகு ஆம்புளைங்க வரிசையிலே நிக்கிறாங்க” விளம்பரம்.

”பத்து பவுண்ட் ஏறின பிறகு ஆம்புளைங்க வரிசையிலே நிக்கிறாங்க” விளம்பரம்.

என் அண்ணாவுக்குப் பெண்பார்த்த கதையை நாற்பதாண்டுகளுக்கு முன் பெரியம்மா சொன்னார். பெண்ணுக்கு கழுத்தில் நெக்லஸ் போட்டால் பதிந்து நிற்கவில்லை. கழுத்தெலும்பின்மேல் குழித்துறை பாலம் போல நெக்லஸ் நின்றது.வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.நினைத்ததுபோல குண்டான அண்ணிதான் வந்தார்.

“நெக்லஸ் போட்டா வரைஞ்சு வச்சது மாதிரி பதிஞ்சிருக்கணும்…”என்றார் பெரியம்மா. அப்படித்தானே அத்தனை கோயில்சிலைகளிலும் இருக்கிறது?. கழுத்தெலும்பை எந்த கோயில்சிலையிலாவது செதுக்கியிருக்கிறதா என்ன? எந்தக் கவிஞனாவது பாடியிருக்கிறானா?

கழுத்தெலும்புக்கு தமிழ்ப்பண்பாட்டிலேயே இடம்கிடையாது. அக்காலப் பெண்களுக்கு கழுத்தெலும்பு உடைந்தால் சிகிழ்ச்சையே கிடையாது, ஏனென்றால் சித்தமருத்துவப்படி அப்படி ஒரு எலும்பே கிடையாது.

என்னது குண்டாயிட்டியா? இருபது பவுண்டு குறைச்சிரு கண்ணம்மா” விளம்பரம்

ஆனால் பத்தாண்டுகளுக்கு முன் ஓர் அண்ணா புலம்பினார். அவர் மகளுக்கு பையன்பார்த்தபோது. “பெண் கொஞ்சம் குண்டு. அதனாலே வேண்டாம்கிறாங்க. நாயர் பெண் குண்டாத்தானே இருக்கும்? என்ன அநியாயம் பண்றானுங்க” அவர் அம்மா சட்டையில் பித்தான் போலத்தான் வாசல்களுக்குள் நுழைவார்.

சம்பா அரிசிச்சோறில் தேங்காய் கறிவிட்டு சாப்பிட்டால் வேறுவழியே இல்லை. ஆயுர்வேத மருந்துகள் எல்லாமே நெய்யில் செய்பவை. மானசீகமாக மோகன்லாலுக்கு இணையாக நினைத்துக்கொண்டாலும் எடை ஏறும்.ஏஷியாநெட் பார்ப்பதும் குண்டாக்குகிறது என்பது பொதுக்கூற்று.

அக்காலத்தில் கல்யாணத்திற்கு முன்பு கல்லாயணரக்ஷை என்னும் ஆயுர்வேத சிகிழ்ச்சை உண்டு. பெண்ணுக்கு பத்துகிலோ கூட்டும் சடங்கு. அதன்பின் பிரசவரக்ஷை. மேலும் பத்துகிலோ. பதினான்கு பதினைந்து பெற்றுக்கொள்வார்கள். கல்யாணரக்ஷை தொடங்கும்போதே எழுபதுகிலோ இருப்பார்கள். குண்டான பெண்களை மேலும் குண்டாக்கிக் காட்டுவது பழைய முண்டும்நேரியதும் என்னும் ஆடை. அதை அணிந்தால் கதகளி வேடத்துக்கு உகந்த பின்னழகு அமையும்.

”என்னது எளைச்சிட்டியா? ரப்பர் வச்சுக்கோ செல்லம்” விளம்பரம்

இப்படி அழகியல் மதிப்பீடுகள் மாறுவது எப்படி? அதை எங்கோ எவரோ முடிவுசெய்கிறார்கள். இலுமினாட்டிகளாக இருக்கலாம். வேற்றுலகவாசிகளாக இருக்கலாம்.எகிப்திய பிரமிடுகளுக்குள் உறையும் மர்மமான சக்திகளாக இருக்கலாம். ஆனால் ஏதோ நடந்துகொண்டிருக்கிறது. பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எல்லாமே மாறிவிடுகின்றன.

ஆண்களுக்காவது சட்டைதான் மாறுகிறது. மிஞ்சிப்போனால் மயிர் மாறுகிறது. நானெல்லாம் ஆட்டுக்காது சட்டைபோட்டு கேரா வைத்து ஸ்டெப் கட்டிங் அடித்து திரிந்தவன்தான். ஆனால் மூக்கு குத்திக்கொள்ளுதல், அலகுகுத்திக்கொள்ளுதல் போன்ற பேஷன்கள் இல்லை. பதினாறுவயதினிலே வெற்றிபெற்றபோது எவரும் ஒற்றைக்காலை உடைத்துக்கொள்ளவில்லை. பெண்களுக்குத்தான் ஆளே மாறவேண்டியிருக்கிறது.

”வெக்கவேண்டிய எடத்திலே வைக்கணும்” விளம்பரம்

அந்த முடிவுகளை அவர்கள் எப்படிச் செயல்படுத்துகிறார்கள்? பாடநூல்கள், அரசியல், மதம் வழியாக அல்ல. விளம்பரங்கள் வழியாகத்தான். சென்ற நூறாண்டுகளில் விளம்பரங்கள் வழியாக பெண்களிடம் அவர்களின் உடல் எப்படி இருக்கவேண்டும், அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

”வீரமா இருக்கணும் கண்ணம்மா” விளம்பரம்

சரி, அதை ஏன் பெண்கள் கேட்கிறார்கள். மிக எளிமையானது. அதை பெண்ணுரிமை என்றபேரில் சொன்னால்போதும். திருப்பூரில் பனியன் துணி விற்பனையில் ஒரு சரிவு வந்தபோது லெக்கிங்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது, ஆமாம், பெண்ணுரிமையின் பேரில். அதை பழையபாணி ஆண்கள் கண்டிக்க புதுமைப்பெண்கள் அணிய, நவீன ஆண்களுக்கு நல்ல லாபம். அதற்கு முன் நைட்டி என்னும் இரவுடைகள்.

இதற்கு இட்லி டெக்னிக் என்று பெயர். சின்னப்பிள்ளைகள் இட்லி சாப்பிடாது. ஊட்டிவிட்டால் துப்பிவிடும். சைதன்யாவின் முன் இட்லியை வைத்து “தொட்டா கைய முறிச்சிருவேன். பேசாம இரு” என்று சொல்லிவிட்டு அரைமணிநேரம் கழித்து வந்து பார்த்தால் இட்லி காலியாக இருக்கும். சவால்விடும் முகத்துடன் செல்லம் அமர்ந்திருக்கும். நாலைந்து இட்லி கூட ஊட்டிவிட முடியும். “மறுபடியும் சொல்றேன் பாப்பு, இட்லி மேலே கையை வைக்காதே. ஆமா”

”பொறியிலே மாட்டிக்காதடா மாப்ள” விளம்பரம்

பெண்களை போட்டு சுழற்றி விளையாடியிருக்கிறார்கள் மன்னன்கள். பழைய விளம்பரங்களில் ’குண்டாக இருந்தால் நீ எவ்ளவு அழகி தெரியுமா? நீ மட்டும் குண்டாக இருந்து பாரு, அவனவன் செத்திருவான்”. அதன்பின் அடுத்த விளம்பரம் “குண்டாக இருக்கியா? அழகே இல்லியா? சீச்சீ பைத்தியம், இதுக்கா கவலைப்படுறே? இந்தா மெலியுறதுக்கான வழிகள்”

சரி என மெலிந்தால் “என்ன ஒட்டுமொத்தமா மெலிஞ்சுட்டே? நல்லாவே இல்லியே.ஒரு பேச்சுக்குச் சொன்னா அப்டியே மெலிஞ்சுடறதா? ஆம்புளைங்க உன்னை பாக்கவேண்டாமா? இந்தா பஞ்சு வச்சு பெரிசாக்கிக்கோ”.

ஆனா சாயங்காலம் ரெண்டு பெக்குக்கு மேலே நாலு சாத்து சாத்தினா அவள்களுக்கு புடிக்கும்” விளம்பரம்

கூந்தலை சுருட்டும் எந்திரங்கள் விற்பனை உச்சமடைந்தபின் சுருண்ட கூந்தலை இஸ்திரிபோட்டு தேய்த்து குச்சியாக்கும் இயந்திரங்கள். பெண் என்றால் மெல்லியலாள் என ஒரு விளம்பரம், கொஞ்சநாள் கழித்து “பொம்புளைன்னா ரஃப்பா இருக்கவேணாம்? என்ன நீ?”என்று இன்னொரு விளம்பரம்.

இந்தியாவில் “மின்னும் சிவப்பழகை உமதாக்கும்” கிரீம். அமெரிக்காவில் “வெயிலில் அழகாக கருமையை அடையும்” பொருட்டு பூசப்படும் கிரீம். இரண்டும் ஒரே கம்பெனியின் ஒரே கிரீம் என்பது புரிந்துகொள்ளத் தக்கதுதான்.எங்களூரில் அக்காலத்தில் அரசு மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு காய்ச்சல் எல்லாவற்றுக்கும் ஒரே மிக்சர்தான் மருந்து. மனச்சள்ளைக்குக்கூட கிழவிகள் அதை வாங்கிக்குடிக்கும்.

 பொம்புளைங்கள்லாம் திறந்துகிடவே முடியாது, அவ்ளோ ஸ்ட்ராங்!- விளம்பரம்

இப்போதெல்லாம் “பெண்ணுரிமை பேசுங்க தோழி. அதான் இப்ப பேஷன். ஒரு சின்ன புக்கு அனுப்பிச்சிருக்கேன், படியுங்க. பெண் ஏன் அடிமையானாள். பைத வே, உங்க லிப்ஸ்டிக் நல்லாருக்கு” என்பது ஒரு மரபு

கொஞ்சநாள் கழித்து “அடிமைப்பெண்ணே அழகு. ஆனல் ஆலன் தொந்திஸ் என்னும் என்னும் ஆய்வாளரின் அரிய கருத்து” சந்தைக்கு வரலாம்.அதை நம்மூர் ஆய்வாளர்கள் கட்டுரைகளாக எழுத, ஓய்வாளர்கள் வாட்ஸப் ஸ்டேட்டஸ்களாக பரப்ப, அவை கல்ட்களாக ஆகி, ஃபேஷன்களாக உருமாறி ,டாபூக்களாக நிலைகொள்ளலாம்.

உன்னாலே முடியும் தங்கச்சி- விளம்பரம்

“டேய், நான் என் பாட்டுக்கு இருக்கேன், இப்ப இன்னாங்கிறே?”என்று வரலாற்றில் எந்தப் பெண்ணும் இதுவரை கேட்கவில்லை. கேட்டால் அந்தக் கேள்விக்கு ஏற்ற பொருட்களை தயாரித்து விற்கவேண்டியதுதான்.

“நீ உன் பாட்டுக்கு இரு தாயி. ஆனா இந்த ஸ்டாக்கிங்ஸை இப்டி போட்டா நீ உன் பாட்டுக்கு இருக்கிற டைப்புன்னு நாலுபேருக்கு தெரியுமே? அதுக்குச் சொன்னேன்”.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2021 11:35

ரிஷிமூலம்

அன்புள்ள  ஜெ அவர்களுக்கு,

Taboo எனும் தடை செய்யப்பட்ட தகாத உறவுமுறைப் பற்றிய ரிஷி மூலம் குறுநாவல் படித்தேன். 70களிலேயே அப்படி ஒரு முயற்சி என்னை அதிர்ச்சி க்கு உள்ளாக்கியது. இதை ஒப்பிட்டால் அக்னிபிரவேசம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. இது ஒரு வகை யான Freud ய பார்வை எனவும் படித்தேன். இறுதியில் அத்வைதமும்.

இந்த படைப்பைப் பற்றி தங்களது கருத்தை அறிய விழைகிறேன். இது ஜெயகாந்தனின் ஒரு experiment படைப்பு என எடுத்துக் கொள்ளலாமா?  .

பணிவுடன்,
கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

ஜெயகாந்தன் அன்று பொதுவாக எழுத்தாளர்கள் தொடாத பல இடங்களுக்கும் சென்று எழுதியிருக்கிறார். அதற்கு முதன்மைக்காரணம் அவர் எழுத வந்தபோதே அடித்தள மக்களின் உலகை எழுதக்கூடியவராக, உளச்சிக்கல்களை எழுதுபவராக, அவ்வகையில் எல்லைகளை மீறிச்செல்பவராக அறிமுகமானார் என்பது. புதுமைப்பித்தனின் பொன்னகரம் என்னும் கதைதான் ஜெயகாந்தனின் தொடக்கப்புள்ளி என்று சொல்லலாம்.

ஜெயகாந்தன் எல்லா வகையான தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள்ளும் இயல்பாகச் சென்றிருக்கிறார். ’எங்கோ யாரோ யாருக்காகவோ’ போன்ற கதைகளில் ஒழுக்கக் கண்டனம் இல்லாமல் இயல்பாக விபச்சாரத்தைச் சொல்லியிருக்கிறார்.

ரிஷிமூலம் ஜெயகாந்தனின் மெய்யியல் தேடல் வெளிப்பட்ட கதைகளில் ஒன்று. ஒருவன் மெய்மையை தேடிச் செல்லவேண்டும் என்றால் அவன் உலகியலில் இருந்து உந்தி வெளியேற்றப்பட வேண்டும். ஒரு கல் ஏதாவது ஒன்று அதன்மேல் படுவதுவரை அங்கேயே ஊழிக்காலம் வரை இருக்கும் என்று சொல்வதுபோல. அந்த நகர்வின் கணத்தை ஜெயகாந்தன் வகைவகையாக எழுதிப் பார்த்திருக்கிறார்.

சுயதரிசனம், குருபீடம் போன்ற கதைகள் எல்லாம் அத்தகைய ‘அடிவிழும்’ கணங்களைப் பற்றிப் பேசுபவைதான். அத்தகைய ஒரு கதைதான் ரிஷிமூலம். நாம் உணர்ந்துகொண்டிருக்கும் நமது பிரக்ஞைநிலைக்கு அடியில் நமது காமமும் வன்முறையும் ஆணவமும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. நிலம் விரிசலிட்டு எரிமலைக்குழம்பு வெளிவருவதுபோல அந்த ஆழம் வெளிப்படும் ஒரு கணம் அக்கதையில் நிகழ்கிறது. அது அவனுக்கு ஒரு சுயதரிசன தருணமாக ஆகிறது. அவன் தன்னைத் தேடி கிளம்பச் செய்கிறது.

இக்கதை வெளிவந்தபோது கடுமையான விமர்சனம் எழுந்தது. தினமணிக்கதிரின் ஆசிரியர் சாவி அதை பலவாறாக வெட்டிச் சுருக்கித்தான்  வெளியிட்டார். கண்டனங்கள் வந்தபோது அதை வெளியிட்டதற்காக வருந்துகிறேன், இனிமேல் இத்தகைய கதைகள் வெளிவராது என அறிவித்தார். அது ஜெயகாந்தனைச் சீற்றமடையச் செய்தது. ஆனால் தனக்கும் வாசகர்களுக்குமான ஊடகமாக இருந்த வணிக இதழ்களை கண்டிக்கவும் அவர் தயங்கினார்.

ஜெயகாந்தனின் கதையை சாவி வெட்டிச் சுருக்கியதை கண்டித்து வெங்கட் சாமிநாதன் ஒரு கடுமையான கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரைக்குப் பதிலாக அசோகமித்திரன்  ‘அழவேண்டாம், வாயை மூடிக்கொண்டிருந்தால்போதும்’ என்று ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு வெங்கட் சாமிநாதன் ஒரு மறுமொழி எழுதினார். இது அக்காலத்தைய ஒரு இலக்கியப் பூசலாக நிகழ்ந்தது. சுந்தர ராமசாமி உடபட பலரும் அதில் பங்கெடுத்தனர்

இலக்கியத்திற்குரிய வெளிப்பாட்டு உரிமையை பேரிதழ்கள் மறுக்கின்றன, தங்களுக்குத்தேவையானவற்றை எழுத்தாளனைக்கொண்டு எழுதச் செய்கின்றன என்று ஒருசாரார் குறிப்பிட்டனர். எழுத்தாளனின் படைப்பை தங்கள் விருப்பப்படி ஆசிரியர் வெட்டலாமென்றால் அங்கே படைப்பியக்கம் என என்ன உள்ளது என்று வினவினர்.

ஆனால் சிற்றிதழ்களில் எழுதுவது மெய்யான வாசகர்களுக்கே சென்று சேர்வதில்லை, இன்னொரு எழுத்தாளரே அதை வாசிக்கிறார், அவர் வாசகரே அல்ல என்று அதற்கு பதில் சொல்லப்பட்டது. எழுத்தை கொண்டுசென்று சேர்க்க ஊடகம் தேவை. அந்த ஊடகத்தை ஓர் அமைப்பே நடத்தமுடியும். அந்த அமைப்புக்கு சில சமரசங்கள் தேவையாகும். அதை புரிந்துகொண்டே ஆகவேண்டும், கட்டற்ற எழுத்து என ஏதும் உலகில் இல்லை என்றனர்.

வணிகஎழுத்து- தீவிர எழுத்து பற்றிய விவாதமாக அந்த உரையாடல் நடந்தது. எழுத்தாளன் சமூகத்தின் ஒழுக்க- அறக் கோட்பாடுகளை எந்த அளவுக்கு சீண்டலாம் என்ற விவாதமும் தொடர்ந்தது.

ஜெயகாந்தனின் கதைகள் அவை வெளியான காலகட்டத்தில் அவை உருவாக்கிய அதிர்ச்சிகள், விவாதங்களால் மறைக்கப்பட்டவை. ஆழத்தை அலை மறைப்பதுபோல என்று சொல்லலாம். ரிஷிமூலமும் அப்படிப்பட்டது. அது உண்மையில் வாசிக்கவே படாத கதை.

ஜெயகாந்தனின் கதைகள் பிரசங்கம் செய்பவை, அப்பட்டமானவை, தாங்கள் மிக நுட்பமனாவர்களாகையால் அந்த அப்பட்டத்தன்மை பிடிக்காமலாயிற்று என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தரப்பு நம் சூழலில் உண்டு. அவருடைய குருபீடம், ரிஷிமூலம் போன்ற கதைகள் உண்மையில் என்ன சொல்ல வருகின்றன என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று அப்படிச் சொன்ன பலரிடம் கேட்டிருக்கிறேன். தத்துப்பித்து என்று ஏதாவது சொல்வார்கள்.

தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் நுட்பம் என்றால் பூடகமாகச் சொல்லப்பட்ட ஆண்பெண் உறவு மட்டும்தான். அதாவது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று ஒரு கதையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். அதை ஊகித்துவிட்டால் நுட்பவாசிப்பு. இந்த வெட்கமில்லாத பந்தாவை இரண்டு தலைமுறைகளாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

இன்று ரிஷிமூலம் அன்று உருவாக்கிய  ஒழுக்கம் சார்ந்த அதிர்ச்சியை அளிப்பதில்லை. ஆகவே அந்த அலையைக் கடந்து அக்கதையை வாசிக்கலாம். அக்கதை என்னதான் சொல்கிறது? எதை உணர்த்தி நிற்கிறது?

மிக எளிமையான ஒரு பொதுவாசிப்பே அன்று சிற்றிதழ்ச்சூழலில் இருந்து ரிஷிமூலத்திற்கு வழங்கப்பட்டது. ஏனென்றால் அன்றைய சிற்றிதழ்ச்சூழல் நவீனத்துவப் பார்வையால் மூடப்பட்டிருந்தது. அதற்குத் தெரிந்ததெல்லாம் முதிரா மார்க்ஸியமும், வேகாத ஃப்ராய்டியமும், அரைகுறை இருத்தலியமும் கலந்த ஒரு ஆராய்ச்சிநோக்குதான். உலகையே அதைவைத்து விளக்கிவிடலாம் என்னும் ஆணவமும் அதற்கு இருந்தது.

ஆகவே அன்று ரிஷிமூலம் ஃப்ராய்டிய கோணத்தில் குதறப்பட்டது. மறுபக்கம் பிரபல இதழ்களின் வாசகர்களுக்கு அது என்ன கதை என்றே புரியவில்லை. ஜெயகாந்தன் அக்கதையை அவர் கண்டு அறிந்த அன்றைய வாழ்க்கையில் இருந்து எழுதினார். அவர் அதற்கு விளக்கம் அளிக்கவில்லை, சொல்லப்போனால் அவரால் விளக்கப்பட முடியாத ஒரு புதிர் அது. அவர் அதை எழுதி அப்படியே கடந்துசென்றார். விவாதிக்கவும் விளக்கமும் முயலவில்லை.

இன்றும் நவீனவாசகனின் வாசிப்பைக் கோரி ஓர் அறைகூவலென நின்றிருக்கிறது ரிஷிமூலம். தமிழில் அவ்வாறு ஒரு தலைமுறைக்குப் பின்னரும் ‘வாசிக்கப்படாமல்’ எஞ்சியிருக்கும் கதை புதுமைப்பித்தனின் கபாடபுரம் மட்டும்தான்.

அது ராஜாராமனின் கதை. அவன் அசாதாரணமான அறிவாற்றலும் நுண்ணுணர்வும் கொண்டவன். அத்தகையோரின் கற்பனையும் அடிப்படை இச்சைகளும்கூட ஆற்றல் மிக்கவையே. அவை மிக எளிதாக எல்லை கடக்கும். அப்படி கடக்கும் ஒருகணம் அக்கதையில் அமைகிறது. அவன் தன்னுள் எழுந்து பேருருக்கொண்டு நிற்கும் மானுடஇச்சையை காண்கிறான். கற்கால மானுடனில் இருந்து வந்துகொண்டிருக்கும் ஒரு மாபெரும் பெருக்கை. அதை சாமானியன் தன்னில் கண்டடைய முடியாது. நாம் அறிந்த கதைதான் அது. வான்மீகி வன்முறையிலும் அருணகிரிநாதர் காமத்திலும் கண்ட விஸ்வரூபம். ரிஷிமூலம் கதைக்கும் அருணகிரிநாதர் கதைக்கும் உள்ள ஒற்றுமையும் தொடர்பும் நானறிந்து பேசப்பட்டதே இல்லை.

அந்த அலைக்கழிப்பும் தேடலும் ஆணுக்குத்தான் உள்ளது. ராஜாராமன் அந்த அடியால் தூக்கி வீசப்படுகிறான். அவன் எங்கெங்கோ முட்டி ஏதேதோ ஆகிறான். ஆனால்  சாரதா மாமி இயல்பாக அன்னையென நின்று அசைவிலாதவளாக இருக்கிறாள். ஆவுடை பீடமென அமைந்திருக்கையில் சிவம் அனலுருவென விண்தொட்டு பாதாளம் தொட்டு விரிகிறது. ராஜாராமனை நிலையழியச் செய்த அந்த நிகழ்வைப்பற்றிச் சொல்லும்போது ஓர் அன்னை குழந்தையை உணர்வதுபோல் அவனை உணர்ந்தேன் என்று அவள் சொல்லுமிடம் ரிஷிமூலத்தின் முதல் தளம்.

ரிஷிமூலம் கதையின் மாளாப்புதிர் ராஜாராமன் விடுபட்டுவிட்டானா, அடுத்தநிலை நோக்கிச் சென்றுவிட்டானா என்பது. ஆம் என்கிறது கதை. அவன் ரிஷி, மெய்யறிந்து அதில் அமர்ந்தவன். ஆனால் மறுபக்கம் அன்னையின் பார்வையில் ஒர் எளிய குழந்தை. ஆணவத்தாலோ அறியாமையாலோ தன்னை ஏமாற்றிக்கொள்ளும் ஒருவன். அதுவும் உண்மை. இரண்டுமே உண்மையாக இருக்கமுடியும் என்று கதை சொல்கிறது. ஏசு அவர் அம்மாவுக்கு ஒர் அசடாக, ஆணவம்கொண்ட சிறுவனாகத் தோன்றினால் அது பிழையா? அவளுக்கு அது உண்மை, அவள் நிலையிலிருக்கும் அத்தனை அன்னையருக்கும் அது உண்மை. உண்மை ஒன்றே என நிலைகொள்ளவேண்டிய தேவையில்லை.

மீண்டும் கதைக்குள் செல்கையில் அன்னையை முழுவுருவில் கண்ட ராஜாராமனின் அத்தருணம் அல்லவா ஆதிசங்கரரின் சௌந்தரிய லகரி என சொல்லலாம். அது ஒழுக்கவியலில் கொந்தளிப்பான ஒர் உச்சம். இக்கதையில் ராஜாராமன் பற்றி சொல்லும் எல்லா ஃப்ராய்டிய ஆய்வுகளையும் சௌந்தரிய லகரியை முன்வைத்து சங்கரரைப் பற்றியும் சொல்லலாம். ஆனால் அது பெருந்தரிசனமாகி அவரை முழுமைகொள்ளச் செய்தது.

அப்போதும் ரிஷிமூலம் எஞ்சுகிறது. மெய்யாகவே விடுபட்டுவிட்டவன் என நாவலில் வரும் ராஜாராமன் சாரதா மாமியின் முன் மட்டும் ஒரு நடிகன்போல பொய்யென வெளிப்படுகிறான். “இவன் என் மகன் அல்ல, எவர் மகனும் அல்ல” என உணரும் சாரதா மாமி அவனை கடந்துசெல்லக்கூடும். அவனால் கடந்துசெல்லமுடியுமா என்று கதைக்குள் இல்லை.

காமகுரோதமோகங்களை இந்திய மெய்மரபு விரித்து விரித்து பேசிக்கொண்டே இருக்கிறது. அறிதலும் துறத்தலும், அடைதலும் கடத்தலும் நிகழும் கணங்களை எழுதி எழுதி பார்த்திருக்கிறது. அந்த தருணத்தின் முடிவிலாத மர்மத்தை எழுதிப்பார்த்த கதை ரிஷிமூலம்.நம் நவீனத்துவ வாசிப்புச்சூழல் அதன் முன் மிக அற்பமானது. நவீனத்துவச்சூழலுக்கு மேலைத்தத்துவ அறிமுகமும் இல்லை, இந்திய தத்துவத் தொடர்ச்சியும் இல்லை. இன்று புதியதாக உருவாகிவரும் தலைமுறை, ஆழ்ந்த வாசிப்பினூடாக அக்கதையை மீண்டும் கண்டடையக்கூடும்.

ஜெ

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1

”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-3 ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2 ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.

நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்

கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்

சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா

ஜெயகாந்தன் வாசிப்புகுறித்து

கலைஞனின் உடல்மொழி ஜெயகாந்தன் ஆவணப்படம்

ஜெயகாந்தன்

ஜெகே இரு கடிதங்கள்

ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா?

ஜெயகாந்தனும் வேதமும்

இருசந்திப்புகள்

மூன்று சந்திப்புகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2021 11:35

ரத்தம் படிந்த காலம்- கிருஷ்ணன் சங்கரன்

தென்னாட்டுப்போர்க்களங்கள் விக்கி

தென்னாட்டுப் போர்க்களங்கள் வாங்க

‘மங்கலஇசை மன்னர்கள்’ என்ற நூலில் ஒரு புகழ்பெற்ற நாகஸ்வரவித்வானுக்கு குழந்தை பிறக்கிறது. அவருக்கு வீட்டிற்கு வந்து குழந்தையைக் காண நேரமில்லாத அளவிற்கு தொடர் கச்சேரிகள். ஒரு நாள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ரயிலில் கச்சேரிக்கு சென்று கொண்டிருக்கும்போது நாகஸ்வரவித்வானின் ஊரில் ரயில் நிற்கும் அந்தச் சிறியஇடைவெளியில் குழந்தையைக் கொண்டுவந்து காட்டுகிறார்கள்.

அநேகமாக இது போன்ற காட்சிகள் அன்று போர்க்களத்தில் நடந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று ‘அமைதிப்பூங்கா’ என்று அடிக்கடி குறிப்பிடப்படும் தமிழகத்தைப் பெரும்போர்களால் அன்று உழுது போட்டிருக்கிறார்கள் மன்னர்கள். வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை என்று போருக்காகப் பறந்தலைந்திருக்கிறார்கள். எதிரி நாடுகளைக் கைப்பற்ற, எதிரியிடமிருந்து நாட்டைக் காத்துக்கொள்ள, குலப்பழி தீர்க்க என்று பலகாரணங்களால் பெரும்போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதுபோக பெண்கொடுத்த வகையிலும், எடுத்தவகையிலும் நேர்ந்த குடும்பத் தகராறுகளை வைத்து மன்னர்கள் செய்த ஆணவப்போர்கள் வேறு.

கா. அப்பாத்துரை

சங்ககாலப் போர்களில் இருந்து ஆங்கிலேயர்கள் நடத்திய போர்கள் வரை நூற்றுக்கணக்கான போர்களையும், அதன் பின்னணியையும் விரித்துச் சொல்கிறார் ஆசிரியர் கா.அப்பாத்துரை தன்னுடைய ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூலில். மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு.  ஏதோ இன்றைய ஐபிஎல் விளையாட்டுப்போட்டிகள் போல, பிக்பாஸ் போல சேவூர் போர் ஒன்று, இரண்டு, மூன்று…….எனவும், பாண்டிய சாளுக்கியப்போர் ஒன்று, இரண்டு…பத்து.. வரை வரிசையாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். இத்தகைய பெரும்போர்ச் சமூகத்தின் நடுவே முகிழ்ந்தெழுந்தவைதான் இன்று நாம் காணும் கலைப்பொக்கிஷங்கள் என்பது மிக ஆச்சரியமான ஒன்று.

இதுவரை நாம் அறிந்திராத பல பழம்பெரும் மன்னர்களின் வரலாற்றினை விரித்துரைக்கிறது இந்நூல்.  பாரதப்போரில் பாண்டவர்கள் சார்பாக கலந்துகொண்ட தமிழக மன்னன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனைப் பற்றிய முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலை குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

அலங்குளைப் புரவி ஐயரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

‘அலைந்தாடுகிற பிடரி மயிரினை உடைய குதிரைகளைக் கொண்ட ஐவருடன் (பாண்டவருடன்) சினம்கொண்டெழுந்து, அவரிடமிருந்து நாட்டைக் கைக்கொண்டு அழகிய தும்பை மலர் சூடிப் போருக்கெழுந்த நூற்றுவரும் (கௌரவரும்) களத்தில் போரிட்டு அழிவுற்ற சமயத்தில் இருசாராருக்கும் பெருவிருந்து கொடுத்த அரசனே!’ எனபது இதன் பொருள். பாரதப்போரில் பெருஞ்சோறு அளித்ததாலேயே ‘பெருஞ்சோற்றுதியன்’ என்று வழங்கப்படுகிறான் இம்மன்னன். இது குறித்த மேலதிகச் செய்திகள் நூலில் இல்லை.

பஃறுளியாறு கடல் கொள்ளுமுன் அவ்வாற்றின் கரையிலே இருந்து ஆண்ட முதல் சங்ககாலத்துப் பாண்டியன் நெடியோன்.  பஃறுளியாறு கடல் கோளால் அழிந்த பின் புதிதாகத் தோன்றிய இமயம், கங்கைச் சமவெளியையும் கையகப்படுத்தி ‘இந்தியா’ என்று இன்றழைக்கப்படும் பகுதியை ஒரே அரசாக ஆண்டிருக்கிறான்  நெடியோன் . அப்படி ஆண்ட ஒரே பேரரசனும் அவன்தான் என்கிறார் ஆசிரியர். கடலிலிருந்து தோன்றிய புதுநிலப் பகுதியாகிய சிந்து, கங்கை, யமுனைச் சமவெளி, இமயம் போன்றவற்றைத் தமிழகத்திற்குத் தந்ததாலேயே ‘நிலந்தரு திருவிற்பாண்டியன்’ என்று பெயர் பெற்றவன் நெடியோன் . இதையே

‘பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்’

என்று சிலப்பதிகாரமும்

‘தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத்
தொன்று மொழிந்து தொழில்கேட்ப’

என்று ‘மதுரைக் காஞ்சி’யில் மாங்குடி மருதனாரும் கூறியுள்ளனர்.

கடல்கோளால் தப்பி வந்த அகதிகளை இமயம்வரை குடியமர்த்தி இந்திய நிலப் பகுதி முழுதும் தமிழ் ஒலிக்கச் செய்திருக்கிறான் பாண்டியன் நெடியோன். பாரதம் முழுதும் ஒரு குடைக்கீழ் ஆண்டதாக இதிகாச புராணங்களில் கூறப்படும் ‘பரதன்’ இவனே என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்தியப் புராணங்களில் காணப்படும் ‘ஆதி மனு’ வரலாறு மட்டுமின்றி, விவிலியத்தில் கூறப்படும் ‘நோவா’ வரலாறும், அது போன்ற பிற இனங்களின் ஊழி வெள்ளக் கதைகளும் இவனுடைய பழம்பெரும் புகழ் மரபில் வந்தவையே என்று உலகப்பெரும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் என்கிறார் ஆசிரியர்.

மேலும் அவன் மன்னன் மட்டுமல்ல, கடல் மறவன், பரதவன். முதன்முதலாக கடல் கடந்து படை செலுத்தி கடாரம் கொண்டது இவனே.

‘வானியைந்த இருமுந்நீர்ப்
பேஎநிலைஇய இரும்பெளவத்துக்
கொடும்புணரி விலங்கு போழ–
சீர்சான்ற உயர்நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!’

என்று தம்முடைய காலத்திலும் பழம்பெரும் செய்திகளாக விரித்துரைக்கிறார் மாங்குடி மருதனார்.

‘உயர் நெல்லின் ஊர்’ சாவகம் அல்லது சுமத்ராத் தீவிலுள்ள சாலியூர் என்கிறார் ஆசிரியர். சீர்விசயப் பேரரசின் (Srivijaya Empire) தலைநகரான ‘பாலம்பாங்’ (மலேசியா) கின் அருகில் உள்ளது இந்த ‘சாரி’ என்றழைக்கப்படும் சாலியூர். முதலாம் இராசேந்திரசோழன்  கடாரம் கொண்டபோது அவன் எதிர்கொண்ட சீர்விசய மன்னன் சீர்மாற சீர்விஜயோத்துங்கன். ‘மாற’ என்பதிலிருந்து அவன் பாண்டியர் வழி வந்தவன் என்று தெரிந்து கொள்ளலாம். அவர்கள் கொடியும் மரபுக்கேற்ப மீன்கொடியாகவே இருந்தது. வடிம்பலம்ப பாண்டியன், முந்நீர் விழவின் நெடியோன் போன்ற பெயர்கள் கடற்பேரரசன் என்ற முறையில் கடல் கடந்த நாடுகளில் அவன் நடத்திய கடல் விழாக்களைக் குறிக்கின்றன. அதில் பாறையில் அவன் தன் அடிகளைப் பொறித்து அதன் மீது கடலலைகள் வந்து அலம்புமாறு செய்ததாக அறிகிறோம். அந்நாட்டில் இன்றும் முடிசூட்டுவிழா மரபாக உள்ள ஆற்றின் நடுவே உள்ள பாறையில் நீர் தொட்டுச் செல்வதுபோல் கால்தடம் பதிக்கும் விழா இதன் தொடர்ச்சியே என்கிறார் ஆசிரியர்.  நெடியோன் மற்றும் தொல்காப்பியர் காலங்கள் கி.மு.500 க்கும் பல நூற்றாண்டுகள் முன்னதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பின்னாளில் இமயத்தில் தடம் பொறித்த ‘இமயவரம்பன்’ நெடுஞ்சேரலாதனை வாழ்த்திப்பாடும்போதும்,

‘ஏம மாகிய சீர்கெழு விழவின்
நெடியோன் அன்ன நல்லிசை
ஓடியா மைந்த!’

என்று நெடியோனின் புகழை நினைவூட்டி அதற்கு அவன் உரியவனாகட்டும் என்று ‘பத்துப்பாட்’டில்  வாழ்த்திப் பாடுகிறார் குமட்டூர்க் கண்ணனார்.

நெடியோன் போன்ற பழங்கால அரசர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் யார் என்று நூல் குறிப்பிடவில்லை. அநேகமாக அவர்கள் உதிரி இனக்குழுக்களாகவே இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் அது பேரரசுகள் உருவாகியிருக்காத காலம். எனவே புது நிலங்களை ஆக்ரமித்து குடிகளை அமர்த்துவதே ஆகப்பெரும் சவால். அந்த வகையில் புது நிலங்களைப் பண்படுத்தி மக்களை விதைத்து, பின்னாளில் பேரரசுகள் தோன்றக் காரணமாக இருந்தவன் நெடியோன்.

தமிழகம் செய்த முதற்பெரும்போராக ஆசிரியர் கூறுவது செருப்பாழிப் போர். மைசூர் வரை தன்னுடைய எல்லையை விரிவு படுத்தியிருந்த அசோகனின் மௌரியப்பேரரசு தொடர்ந்து சேர,சோழ,பாண்டியர்களை தொல்லை செய்து வந்தது. ஆங்காங்கிருந்த குறுநில மன்னர்களோடு மோதி வெற்றி பெற்றபோதிலும் அதற்கு கடும் எதிர்ப்பும் இருந்திருக்கிறது. இதை உணர்ந்துகொண்ட சோழப்பேரரசன் இளஞ்சேட்சென்னி சோழநாட்டெல்லையிலேயே பெரும்படையோடு எதிர்கொண்டு மௌரியப்படைகளை முறியடித்தான். அதோடு விடாமல், துளுவ (குடகு) நாட்டுக்குள் புகுந்த அவர்களுடைய படையை விடாது துரத்திச்சென்று, அவர்கள் ஒளிந்துகொண்ட பாழிக்கோட்டையையே தரை மட்டமாக்கினான். அசோகன் சமயப்பற்றைக் கைக்கொள்ள, தமிழகத்தைப் போரால் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை இதன் மூலம் தகர்ந்ததே, முக்கியக் காரணம் என்கிறார் ஆசிரியர். செருப்பாழி எறிந்த இளஞ்சேட்  சென்னியின் வெற்றி இடையன்சேந்தன் கொற்றனாரால் பாடப்பட்டது.

இளஞ்சேட்சென்னியின் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்றும் சிபி, முசுகுந்தன், காந்தன், தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் முதலியோர் அவனுக்கு முந்தைய சோழ அரசர்கள் என்றும், அவனுக்குப்பின் மனுநீதிச்சோழனும் முதலாம் கரிகாலனும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டினர் என்றும், புகழ்பெற்ற இரண்டாம் கரிகாலன் கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்றும் முனைவர் ராசமாணிக்கனார் கூற்றாகக் கூறுகிறார் ஆசிரியர்.

களப்பிரர் என்போர் கடலோரமாக முத்திசையிலும் வளர்ந்த தமிழ் நாகரிகத்தின் ஒதுங்கிவிட்ட, திருப்பதிக்கு வடக்கேயுள்ள காடுகளில் ஆடு,மாடுகளை மேய்த்து வாழ்ந்த தமிழின மலங்குடி மக்களே என்கிறார் ஆசிரியர். களப்பிரரின் குடியெழுச்சி கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை. ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு பேரரசாக முறையே சோழ,பல்லவ,பாண்டிய அரசுகளை அடிபணியவைத்து தமிழகத்தை முந்நூறாண்டுகள் ஆண்டனர். ஆறாம் நூற்றாண்டில்தான் பல்லவன் சிம்மவிஷ்ணு ஒரு புறமும் பாண்டியன் கடுங்கோன் மறுபுறமுமாக களப்பிரரைத் துரத்தியடித்து தத்தம் பேரரசுகளை நிலைநாட்டிக்கொண்டனர். இச்செயலை இருவரும் ஒன்றுபட்டே செய்திருக்கலாம் என்று கருதப் படுகிறது. அதற்கடுத்த மூன்று நூற்றாண்டுகளும் பாண்டிய பல்லவப் போட்டியாகவே இருந்திருக்கிறது. சிற்றரசர்களாக ஆட்சி செய்த சோழர்களும், வடக்கில் சாளுக்கியரும் தெற்கில் கங்கரும் தவிர கடம்பர்,பாணர்,வைடும்பர், நுளம்பர், தெலுங்கச் சோடர் போன்றோரும் ஒவ்வொரு தரப்பிலும் பங்கு கொண்டனர். சாளுக்கியர்களை வடக்கே சிந்து கங்கைச் சமவெளியில் 4-5 ஆம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசும், 7 ஆம் நூற்றாண்டில் ஹர்ஷரின் தானேஸ்வரப் பேரரசும் இருந்தன. கரிகாலனும், சேரன் செங்குட்டுவனும் வடக்கே சென்று வெற்றிக்கொடி நாட்டியதுபோல வெற்றிஉலாப் புறப்பட்ட சமுத்திரகுப்தனை கி.பி.4 ஆம் நூற்றாண்டிலிருந்த பல்லவமன்னன் விஷ்ணுகோபன் காஞ்சியில் துரத்தியடித்திருக்கிறான். மூன்று முதல் ஏழாம் நூற்றாண்டுவரை களப்பிரர் – சோழர்,களப்பிரர் – பல்லவர், களப்பிரர்-பாண்டியர், ஹர்ஷ-சாளுக்கியர், சாளுக்கியர்-பல்லவர்,பல்லவர்- பாண்டியர் போன்று பலதிசைப் போட்டிகளும், அதனால் ஏற்பட்ட போர்களும், பேரழிவுகளுமாக இருந்திருக்கிறது.

கல்வெட்டுகள் மன்னர்களின் வெற்றிகளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. மகேந்திரவர்மனின் கல்வெட்டு புள்ளலூரில் சாளுக்கியர்களை பல்லவர்கள் முறியடித்த வெற்றியை மட்டுமே பேசுகிறது. புலிகேசியின் ‘ஐஹொளே’ கல்வெட்டுகள் பல்லவர்களிடமிருந்து சாளுக்கியர்கள்  வேங்கை நாட்டினை (கிருஷ்ணா கோதாவரிக்கு இடைப்பட்ட பகுதி) வெற்றிகொண்ட நிகழ்வைப் பேசுகிறது. நடந்தது என்னவென்றால் சாளுக்கியப் படைகள் கங்க மன்னன் துர்வினீதனோடு கூட்டாக பல்லவ நாட்டைத் தாக்கி சூறையாடியிருக்கிறது. தென்திசையில் சோழ,பாண்டியப் படைகளும் வடக்கே சாளுக்கியப்படைகளும் ஒருங்கே தாக்கியதில் மகேந்திரவர்மன் காஞ்சிக் கோட்டைக்குள் சரணடைய நேர்ந்தது. இதனைப் பயன்படுத்தி சாளுக்கியர்கள் பல்லவர்களின் வடஎல்லையிலிருந்த வேங்கை நாட்டைக் கைப்பற்றினர். ஆனால் முடிவில் கோட்டையை விட்டு வெளியே வந்த மகேந்திரவர்மன் புள்ளலூரில் முகாமிட்டிருந்த சாளுக்கியப்படைகளைப் போரிட்டு துரத்தியடித்தான். துர்வினீதனின் கல்வெட்டு இரண்டுபக்க வெற்றி தோல்விகளையும் காட்டுகிறது.

முதலாம் கரிகாலனும் பெருஞ்சேரலாதனும் மோதிய வெண்ணிப் பறந்தலைப் போரில் பெருஞ்சேரலாதனுக்கு முதுகிலும் காயம் பட்டுவிட்டது. ‘முதுகிற் புண்’ என்பது கோழமையின் சின்னம். ஆனால் உண்மையில் அப்படி அல்ல என்ற போதும் அப்படி ஒரு பேச்சுக்கு இடமேற்பட்டது கண்டு,போரை நிறுத்தி வடக்கிருந்து மானத்துடன் உயிர்விடத் துணிந்தான் சேரன்.

மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப
இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப
கரும்பார் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,–
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்                             (புறம் 65)

என்று சேர நாட்டு நிலையையும் மன்னன் விழுமிய நிலையையையும் புறநானூற்றுப் பாடலில் நம் மனக்கண் கொண்டு நிறுத்துகிறார் கழாத்தலையார்.

போர் நடந்த வெண்ணியைச் சேர்ந்த பெண்பாற் புலவர் ஒருவர் கரிகாலனின் வெற்றியைப் பாடி இன்னும் ஒருபடி மேலாக மானம் நாடி மாளத் துணிந்த சேரனின் நிலையையைக் கொண்டாடுகிறார்.

‘நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகமெய்திப்
புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே!’     (புறம் 66)

சேரன் வடக்கிருந்து உயிர் விடத்துணிந்த செய்தி தமிழகம் எங்கும் பரவ, மன்னனுடன் வடக்கிருந்து உயிர்விடும் பேற்றினை அடைய சான்றோர் பலர் போர்க்களத்திற்கு வந்து குவிந்தனர் என்று பாடுகிறார் மாமூலனார்.

வேறொரு போரில் கணைக்கால் இரும்பொறை போரில் பிடிபட்டு சிறையிடப்படுகிறான். சிறையில் குடிநீர் கேட்கிறான். காவலர்கள் கொடுக்காமல் தாமதம் செய்கிறார்கள். பட்டினி கிடந்து மானத்தோடு சாக முடிவெடுத்து வரலாற்றில் நிலைபெறுகிறான். இவனும் சேரமன்னனே.

போரிலிருந்து புறமுதுகிட்டு ஓடுவதும், பதுங்குவதும் ‘ராஜதந்திரமா’க மனதளவில் கூட ஏற்றுக்கொள்ளப்படாதிருந்த காலம் அது. போரென்றால் ‘வெட்டிமடிந்து வீரசொர்க்கம்’ என்பது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சோழன் வேம்பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி மற்றும் குடக்கோ நெடுஞ்சேரலாதன் இடையே நடைபெற்ற போரின் முடிவில் ஒரே ஒருவர் கூட மிஞ்சவில்லை. இரண்டு மன்னர்களின் தேவியரும் அவரவர் கணவர் மார்பில் விழுந்து அழுது புலம்பியதே நடந்தது. வெற்றி கூற்றுவனுக்கும் கழுகு,பருந்துகளுக்குமே கிட்டியது என்கிறார் ஆசிரியர்.

எல்லா மன்னர்களுக்கும் காலம் கடந்த புகழ் தேவைப்பட்டிருக்கிறது. தென்நாட்டு மன்னர்களுக்கு வடதிசைப் படையெடுப்பு, இமயத்தில் கால்பதித்தல் முதலியன.  வடநாட்டு மன்னர்களுக்கு தென் திசைப் படையெடுப்பு.    ‘புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்’ போன்ற வரிகளைப் பாடுவதை விட ‘பரணி’ பாடுவது நிறைய பணம் தந்திருக்கிறது புலவர்களுக்கு. மன்னனின் எடைக்கு எடை தங்கம். கிராமங்கள் என்று பெரும் பரிசுகள். எதிரி மன்னன் வாரிசுகள் மீது போர்செய்வதற்காகவே பிள்ளை பெற்றிருக்கிறார்கள் மன்னர்கள். எதிரிப் படையினரிடம் தலைகொடுக்கவே  பிள்ளை பெற்றிருக்கிறார்கள் மக்கள். போருக்கு நடுவே கொஞ்சம்போல வாழ்வு.  அன்றைய போர்ச்சூழலில் மனிதன் நாற்பது வயதுவரை உயிர்வாழ்வதே சாதனைதான். குழந்தை மணம், பலதார மணம் போன்றவற்றை அந்தப் போர்ச்சூழலின் பின்புலத்திலேயேதான் புரிந்துகொள்ளவேண்டும் போல. அறமீறலின் மொத்த உருவமாய்த் திகழ்ந்திருக்கிறார்கள் மன்னர்கள். அவன் வீட்டின் மாமரத்தின் கிளையிலிருந்து ஆற்றினுள் விழுந்த பழம் அடித்துச் செல்லப்படுகிறது. அதை ஒரு சிறுமி எடுத்துத் தின்றுவிட்டாள் என்பதற்காக அவளைக்கொலை செய்திருக்கிறான் ‘பெண் கொலை புரிந்த’ நன்னன். இத்தனைக்கும், ஈடாகப் பெரும் செல்வம் கொடுப்பதற்கு அக்குழந்தையின் பெற்றோர்கள் தயாராக இருந்தும் ஏற்றுக்கொள்ளாமல் புரிந்த கொலை அது. எறிபறந்தெடுத்தல், நீர்நிலை உழந்தெடுத்தல் போக எதிரி நாட்டுப் பெண்டிரின் சிகையினைக் கொண்டு பிரிசெய்து யானையை இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.  அரிதாக அசோகன், கண்டராதித்தன் போல மெய்மை நாட்டமோ, மகேந்திரவர்மன் போல கலைநாட்டமோ கொண்ட மன்னர்கள் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் பின்பற்றியவர்கள்தான் மிகக்குறைவு.

அன்றைய அறமீறலுக்குச் சற்றும் குறைந்தவையா இந்த இருபதாவது நூற்றாண்டில் நடந்த யூதர் இன ஒழிப்பும், ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சும், இலங்கை தமிழினப் படுகொலையும், இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனப்போரும்.  இன்றும் ‘பட்ஜெட்’ டில் ராணுவத்திற்கே பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியக் குடியரசு தினவிழாவில் அண்டை நாட்டுத் தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்து நம் ராணுவத் தளவாடங்களைக் காட்டி பயமுறுத்தும் நிகழ்ச்சி வருடம்தோறும் நடந்து வருகிறது. இஸ்ரேல் தருகிற திடக்கழிவு மேலாண்மைத் தொழில் நுட்பத்தை விட, அவர்களுடைய ஏவுகணைத் தொழில் நுட்பத்தை வாங்கவே இன்று பல நாடுகளும் போட்டி போடுகின்றன. கால்பந்து விளையாட்டில் இன்றும் வீரர்கள் ‘கோல’டித்துவிட்டு காட்டுகிற வெறியும், உடல்மொழியும் அன்றைய சோழனின் தலைகொண்டு பந்தாக உதைத்து விளையாடிய வீரபாண்டியனையும், ‘பாண்டியன் தலைகொண்ட கேசரி’யான சோழனையும் நினைவுபடுத்துவதாகவே உள்ளது.

யார் யாருடன் எப்படியெல்லாம் போர்செய்தார்கள் என்று போரின் நுண்விவரணைகளைச் சொல்லும் ‘சஞ்சய’ப் பார்வையோடு எழுதப்பட்ட நூலல்ல. போரின் காரணங்களையும் ஓரளவு பின்புலத்தையும் கூறும் பரந்துபட்ட வரலாற்றுப் பார்வையோடு எழுதப்பட்ட நூல். கே.கே.பிள்ளையின் ‘தென்னிந்திய வரலாறு’ நூலோடு இணையாகப் படிக்கக் கூடியது இந்நூல்.

கிருஷ்ணன் சங்கரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2021 11:32

நியமம்- மயிலன் சின்னப்பன்

நான் அங்கு பணிக்குச் சேர்ந்திருந்த இரண்டாவது மாலையின் காட்சி அது. வாகனம் நிறுத்துமிடத்தில் தன் காருக்குள் அமர்ந்து நந்தினி அழுதுகொண்டிருந்தாள். ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தும் பொருட்படுத்தியாகத் தெரியவில்லை. பொது இடத்தில் தன்னிரக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத அந்தப் பலவீனத்தோடு அக்கணமே ஒரு பிணைப்பு உண்டாகிவிட்டது.

நியமம்- மயிலன் சின்னப்பன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2021 11:32

கதாநாயகி- கடிதங்கள்-1

இனிய ஜெ.

கதாநாயகி, சந்தேகம் இல்லாமல் உங்கள்  மற்றுமொரு உச்சம்.

கடந்த 15 தினங்களாக காலை  எழுந்தவுடன்(சில தினங்கள் அதிகாலை 3 மணி)  செய்த முதல் வேலை. என்னவென்று தெரியாத ஏதோ ஒன்று நம்முள் நுழைந்து, இதனை முதல் வேலையாக செய்ய வைத்ததோ, இல்லை ஒரு வேளை இதுதான் மலைவாதையோ என்ற ஒரு எண்ணம் தோன்றுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

நிறுத்தி நிதானமாக  கடந்த 14 நாட்கள்  சென்றதற்கு நேரெதிராக 15 வது அத்தியாயம்  மிக விரைவாக சென்று நிறைவை நாடியது.

இன்னுமொருமுறை இக்கதையை நீங்கள் சொல்வதற்காக காத்திருபேன், அது நிச்சயமாக புதிய கதையாகவே இருக்கும்.

அதுவரை, இன்றிரவும்  நான் விழித்துக்கொள்வேன்,  மீண்டும் அதைப் படிப்பேன். இதில் நான் நேற்றிரவு படித்த வரிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.

அன்புடன்
சங்கர்

அன்புள்ள ஜெ

கதாநாயகி பற்றி அதிகம் வாசிப்புகள் வராது என்று நினைக்கிறேன். நான் பேசியவரை நண்பர்கள் சுவாரசியமாக வாசித்தாலும் குழம்பிப் போயிருக்கிறார்கள். இரண்டு உலகங்கள் . ஒன்று யதார்த்தம், ஒன்று மாயை. இரண்டும் தனித்தனியாக வந்து கடைசியில் முட்டிக்கொள்கின்றன. அது எப்படி நிகழ்கிறது என்ற விளக்கம் கதையின் கடைசி அத்தியாயத்தில்தான் உள்ளது. அதுவரை அவை தனித்தனியாகவே வந்தன. ஒன்றின் சின்ன ஊடுருவல் இன்னொன்றில் இருந்தது, அவ்வளவுதான். அந்த இரு கதைகளையும் இணைத்துக்கொள்ள முடியாத தவிப்பு வாசகர்களிடம் இருந்தது என நினைக்கிறேன்,

அந்த மாய உலகமும் பல அடுக்குகளால் ஆனது. ஒரு தொன்மக்கதையின் நாயகி [விர்ஜீனியா] ஒரு ஆசிரியை [ஃபேன்னி பர்னி] ஒருகதாபாத்திரம் [ஈவ்லினா] ஒரு வாசகி [ஹெலெனா] ஆகியோர் ஒரு புள்ளியில் ஒன்றாகிறார்கள். ஒன்றாகும் இடம் ஒரு புத்தகம். அதை வாசிப்பவன் அதை ஒன்றாக்கிக் கொள்கிறான். அந்த காலாதீதத்தன்மை வாசிப்பின்போது நிகழ்கிறது. வாசிப்பு என்பது வரலாற்றை ரோமாபுரி முதல் கோதையாறு வரை ஒரே கோட்டில் இணைத்துவிடுகிறது. ஒன்றன்மேல் ஒன்றாக இணையும் இந்த அடுக்குகள் கதைக்குள் வந்தபடியே இருக்கின்றன. வாசிக்கும்போது சிக்கலாக இருந்தாலும் சிந்தித்துப் பார்க்கையில் மிகத்தெளிவாகவே இருக்கின்றது.

ஒரேகதை என்று எடுத்துக்கொண்டால் அது மிகத்தெளிவாகவே ஒரு பழிவாங்கும் கதை. பெண் தன்னை மறுஅடையாளம் அளித்து மீட்டுக்கொண்ட கதை. விர்ஜீனியா அமைதியாக சாகிறாள். ஃபேன்னி பர்னியும் ஈவ்லினாவும் எக்ஸ்ப்ளாய்ட் செய்யப்படுகிறார்கள். தங்களை சினிக்குகளாக மாற்றிக்கொண்டுதான் அவர்களால் அதற்கு பழிதீர்க்கமுடிகிறது. ஈவ்லினா கசப்புடன் இருக்கிறாள். ஃபேன்னி தன் பெண் அடையாளத்தை அழித்து மீள்கிறாள். ஆனால் ஹெலெனா தங்கள் நால்வருக்காகவும் சேர்த்துப் பழிவாங்கிவிடுகிறாள். விர்ஜீனியாவின் கொலைக்கு கோதையாறில் வழிவாங்கல் நடைபெறுகிறது.

இந்தக்கதையில் ஒன்றின்மேல் ஒன்றாகப் படியும் கதைகளின் விளையாட்டு அபாரமான ஒரு வாசிப்பனுபவம். மெய்யான நூல்பகுதிகள், கற்பனையான நூல்பகுதிகள் இரண்டும் கலந்து வருகின்றன. ஹெலெனா பங்களாவுக்குள் நுழையும்போது அங்கே எதிர்காலத்தில் வாசித்துக்கொண்டிருக்கும் மெய்யனைப் பார்த்துவிடுகிறாள்.[ஆனால் அதெல்லாமே மெய்யனின் கற்பனைகள் என்னும்போது அது சாத்தியம்தான்] ஈவ்லினா என்ற புனைவுக் கதாபாத்திரத்தை ஹெலெனா நேரில் சந்திக்கிறாள்.ஒருவரின் கதை இன்னொருவரின் கதையாக ஆகிறது. விர்ஜீனியஸ், சாமுவேல் கிரிஸ்ப், ரெவெரெண்ட் வில்லர்ஸ், கர்னல் சாப்மான் அனைவருமே இணையும் ஒரு கோடு உருவாகிறது,

எளிமையின் பேரழகு கொண்டது என்று குமரித்துறைவியைச் சொல்வேன். சிக்கலின் அழகு என்று கதாநாயகியைச் சொல்வேன். அதை இந்தன் வழியாக கடந்து செல்கிறீர்கள்.

ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ,

நீங்கள் சொன்னதுபோல வீசியெறியப்பட்ட வண்ணங்கள் இணைந்து இணைந்து கடைசி அத்தியாயத்தில் ஒரே ஓவியமாக ஆகிவிட்டன. காணிக்காரர்களுக்கான பள்ளிக்கூடமும், பதினெட்டாம்நூற்றாண்டின் லண்டனும் ஒரேகதையில் அழகாக ஒன்றாக மாறியிருக்கின்றன. ஒருவனின் இரண்டு மனநிலைகள், இரண்டு உலகங்கள் அவை. அவன் ஒன்றை வைத்து இன்னொன்றை சமன்செய்திருக்கிறான்.

அவன் காணிக்காரர்களின் நடுவே வாழும்போது கடைசிவரை அந்த பதினேழாம்நூற்றாண்டு ஊடுருவிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த லண்டனின் உலகம்  மிகப்பெரியது. அது ரோமில் தொடங்கி லண்டன் வழியாக திருவனந்தபுரம் வரை வருகிறது. அதிகாரம், ஆணவம், அடக்குமுறை, சுரண்டல் எல்லாம் கொண்டது. இந்த காணிக்காரர்களின் உலகம் எளிமையானது. இரண்டும் ஒன்றுக்கொன்று காம்ப்ளிமெண்டரியாக உள்ளன.

அந்த லண்டனின் உலகம் இவனுடைய மாயையாக இருக்கலாம். ஆனால் அது வரலாறு. அந்த வரலாற்றின்மேல்தான் இந்த அன்றாட உண்மைகள் இருந்துகொண்டிருக்கின்றன

மகாதேவன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2021 11:31

செந்நா வேங்கை -கடிதம்

அன்புள்ள ஜெ

கடந்த வாரம்தான் செந்நாவேங்கை முடித்தேன். வெண்முரசின் வாசிப்பில் மிகவும் பின் தங்கியுள்ளேன், மன்னிக்கவும். முதற்கனலில் முதல் நாளில்  உங்கள் எழுத்தை என்னால் பின் தொடரமுடியவில்லை. இந்தவகையான செறிவான எழுத்துக்கு தக்க வாசிப்பு பயற்சி எனக்கு அப்போது இல்லை. நாவல் புத்தகங்களாகவரும் வரைக்கும் காத்து நின்று படிக்க தொடங்கினேன்.

இப்பொழுது நினைத்து பார்த்தல் முதற்கனல் ஒருவகையில் எனக்கு சரியான வாசிப்பு பயிற்சியை தந்தது என்றே சொல்வேன். ‘நீலம்’ வாசித்து அந்த தமிழைசுவைத்த நாட்களை இன்றும் இனிமையாக நினைத்துக்கொள்கிறேன். அதில் உள்ள ஆன்மிக, யோக, தத்துவார்த்தமான தளங்களை நான் தொடமுடியவில்லை தான்னா. ஆனாலும் அந்த பித்து பிடித்தது போன்றகவிதைதன்மை, கதை இறுதியில் வரும் அந்த நாடகீயதருணம் நெஞ்சில் எப்பொழுதும் நிற்பது.

ஒரு  வாசகனாக நான் பெருமைக்கொள்ளும் புத்தகம் அது. இருந்தாலும், இது ஆமை நடைதான். அப்படி வந்துசேர்ந்ததுதான்… செந்நாவேங்கை. ‘குருதிச் சாரல்’ பாரதத்தை பிள்ளைகளின் பார்வையில் சொன்னால்… செந்நாவேங்கை தந்தையரின்பார்வையில் தொடர்கிறது. ஸ்வேதனும், சங்கனும் விதிவிலக்கு என்றாலும் அது விராடரின் பிறழ்வுகளைநுணுக்கமாக சொல்லி செல்கிறது.

முதல் அத்யாயம் சாத்யகியில் இருந்து. அவர் கண்ணனுக்கு என்னதான்அணுக்கமானவராக இருந்தாலும்… உள்ளுக்குள் தானொரு சேவகன் என்றே நினைப்பவர். தனது தலைவனுடன்தனக்கு இருக்கும் அந்த அண்மை காரணமாக பிள்ளைகள் ஆணவம்க்கொண்டு விடுவார்களோ என்றுபயப்படுகிறார். யாதவ கிராமத்தில் இருந்து வந்த பட்டிக்காட்டு பிள்ளைகளுக்கு இங்குள்ள ராஜ நடைமுறைகள்தெரியாது என்ற பதட்டத்தின் கீழ் இருப்பது அந்த பயம்தான். திருஷ்டத்தியும்னனின் மகளுக்கு தனது மகனைமுடித்து வாய்க்கும் தருணங்களிலும் அந்த நெஞ்சு படபடப்பு கேட்கமுடிகிறது. ‘யுத்தத்தில் இந்த பிள்ளைகள்வாழ்வார்களா. இந்த நல்வாழ்த்துக்களில்தான் எத்தனை அபத்தம்!’ என்ற  உண்மை மனதைஅறைந்துக்கொண்டே இருக்கிறது.

நாவேலில் பூரிஸ்ரவஸின் பிள்ளைகள் தோன்றும் இடங்களிலும் இதேநெருடல். பிறகு பாரதத்திற்க்கே பெரும் தந்தையாக பால்ஹிகர். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாசிறுபிள்ளை மனதுடன் அஸ்தினபுரியில் நுழைகிறார். இங்கு குண்டாசி திருதராஷ்டிரரின் மீது கசப்பையெல்லாம்கொட்டி வைக்கிறான். துரியனின் மீதும். அவனும் தந்தை வடிவம் தான் என்பதனால் தானா? ஏனோ தெரியவில்லை வெண்முரசுவின் நாயகன் துரியன் என்றே தோன்றும் எனக்கு. துகிலுறிப்பின்சந்தர்பத்தில் தவிர வேறு எங்கும்   கீழ்மை அண்டாவாதவனாகதான் வருகிறான். மாசிலா கருமணியாக. சுத்ததங்கமாக. அந்த மெருகு இந்த நாவலில் மேலும் கூடி இருக்கிறது.  ஒரு பாச தெய்வமாகவே மிளிர்கிறான்.

அரவானை பார்க்கும் வேளையிலும் சரி, சகதேவனை சந்திக்கும் நாளிலும் சரி… துரியனின் அந்த தந்தைக் குணம்விம்மலை வரவழைத்து விட்டது. பானுமதியை துரியன் சந்திக்கும் நிகழ்வு அலாதி. ஆண் பெண் நுண்ணிய ஆடலை பற்றி  எவ்வளவு  சொன்னாலும் உங்களில் ஒரு கடல் அளவிற்கு மிச்சம் இருக்கும் போலும்.  ‘பின் தொடரும் நிழலின் குரல்’, விஷ்ணுபுரம்,  வெண்முரசின் எல்லா நாவல்களிலும் சொற்கள் இல்லாத இந்த ஆடலை காண்பித்துக்கொண்டேவருகிறீர்கள். பானுமதி-துரியனின்  சந்திப்புக்கு ஒரு படி மேலாக துச்சாதனன்- அசலையின் சந்திப்பு. பெரும்கொந்தளிப்பாக, கண்ணீர் அரற்றலுடன் நிகழவேண்டியது மிக மென்மையாக புன்னகையுடன் கடந்துசெல்கிறது. முக்கியமாக அந்த இறுதி வரிகள்…

முன்பே சொன்னதைப்போல ‘நம் பிள்ளைகளில் வாழ்பவர்கள் யார், வீழ்பவர்கள் யார்…’ என்ற தந்தையரின்கொந்தளிப்பாகவே இந்த நாவலை நான் பார்க்கிறேன். அதற்கு உச்சம் அரவானின் சுயபலி. ஸ்வேதனின்கண்கள் வழியாக எவ்வளவு துல்லியமாக அவனை காண்பித்து இருப்பீர்கள்! அரவம் மாதிரியே நளினம்… ஆனாலும் உள்ளுக்குள் ஆலாகாலத்தின் அனல். மனிதர்களை முதல் முறையாக பார்க்கும் குழந்தையின் தவிப்புஅவனில். அர்ஜுனனிற்கு முதல் பார்வையிலேயே தெரிந்து விடுகிறதா அவன் முடிவு அதுவென்று?

அரவானின்கதை கேள்விப்பட்டது தான்! ஆனால், அந்த உச்ச நிகழ்வுக்கு கொண்டு செல்ல நீங்கள் சமைத்திருக்கும்நிகழ்வுகள், காரண காரியங்கள்   இது புனைவல்ல… வரலாறு என்று நினைக்கும் அளவிற்கு தர்க்கங்களுடன்அமைந்து இருக்கின்றன. யார் கண்டது நாளை எவரேனும் வெண்முரசு நிகழ்வுகளையே ’மூடி மறைக்கப்பட்டபாரத வரலாறு’ என்று எழுதலாம்! நாவலின் கடைசி அத்தியாயத்தில் பெரும் தந்தை என்ற தன் அடையாளத்தை வீசி எறிகிறார் பீஷ்மர்! இளம்குழந்தைகளின் குருதியில் திளைக்கிறார். தந்தைகளில் கரந்து உறங்கும்  அந்த வஞ்சத்துடன் நாவல்முடிகிறது.

‘திசை தேர்வெள்ளம்’ சித்தமாக இருக்கிறது. இதில் துரியனின் இறப்பு நிகழ்ந்து விடுமோ என்று பதைப்பாகஇருக்கிறது.

வெண்முரசில் ஒரு நிகழ்வு மனதில் நீண்ட நாட்களாக தங்கி இருக்கிறது. துரியனும் பானுவும் கர்ணனின் தாய் தந்தையர் வீட்டுக்கு வருவார்கள். அங்கு, கர்ணனின் தந்தை அஸ்வ சாஸ்திரத்தைபற்றி விலாவரியாக சொல்லிக்கொண்டு இருப்பார்.  நகைச்சுவையான காட்சிதான் ஆனால் மரியாதை கருதி பானுவுக்கு அங்கு நகைப்பது பிடிக்காது. சிரிக்காவிட்டாலும் துரியோதனின் முகத்தில் புன்னகை. ஏன் அப்படிஎன்று கேட்பாள் பானு. சற்று கடுகடுப்புடன். ‘என்ன செய்ய எல்லாரும் நகைக்கும் பொழுது முகம் அப்படி ஆகிறதே!’ (மன்னிக்கவும் உங்கள் சொற்கள்அல்ல. என் மனதில் உள்ளவை  இவை) என்பான் துரியன் வெள்ளந்தியாக. எனக்கு வெண்முரசு காட்டும் துரியோதனன்   அவன் தான்!

ராஜு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2021 11:30

May 22, 2021

சிரிக்கும் ஏசு

ஒரு மலையாளப் படத்தில் சர்ச் உதவியாளரான இன்னொசெண்ட் ஒரு கிறிஸ்து சிலையை தூக்க முயல அது சரிந்துவிடும். அவர் தூக்கியபடியே முனகுவார். “ஆசாரியானா அந்த வேலையச் செஞ்சுட்டு பேசாம இருந்திருக்கணும்…”.

அத்தகைய ஏராளமான வேடிக்கைகள் மலையாள சினிமாவிலுண்டு. பாதிரியாராக வந்து காமெடி செய்தால்தான் நல்ல நகைச்சுவை நடிகர் என்றே பெயர் அமையும். ஜெகதி ஸ்ரீகுமார் மட்டும் பத்துப்பதினைந்து முறை பாதிரியாராக வந்திருக்கிறார். அடுத்தபடியாக நெடுமுடி வேணு.

 

”இரு இந்த புக்க படிச்சுட்டு வந்துடறேன்”

ஒருமுறை ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு நண்பர் அலெக்ஸ் கேட்டார், கிறிஸ்து மற்றும் பாதிரியார் பற்றிய ஜோக்குகள் மலையாள சினிமாவில் மலிந்துகிடக்கின்றன. ஏன் தமிழில் இல்லை? ஏன் சாத்தியமே இல்லை என்ற நிலை இருக்கிறது?

நான் சொன்னேன், அங்கே கிறித்தவம் வந்து பல தலைமுறைகளாகிறது. பெரும்பாலானவர்கள் பத்து தலைமுறை கிறித்தவர்கள். ஆகவே அவர்களுக்கு ஒரு வகையான இயல்புநிலை உள்ளது. இங்கே அது புதியமதம். ஆகவே ஆவேசமாக உள்ளது. அத்துடன் இங்குள்ள முற்போக்காளர்கள் பொதுவாக மரமண்டையர்கள், நகைச்சுவையை மதவன்மம் என்று அவர்களிடம் சொல்லி தூண்டிவிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

நேர்ப்பேச்சில்கூட அங்கே கிறிஸ்தவர்கள் ஏசுவையும் கிறிஸ்தவக் கொள்கைகளையும் நக்கலடிப்பார்கள். இரண்டுநாட்களுக்கு முன் ஒரு மலையாள இதழாளர் என்னை அழைத்தார். என் எண்ணை அளித்தேன். “save செய்தாச்சா?”என்றேன். “You are saved. இனி நீ கிறித்தவன்” என்றார்.

”சொர்க்கத்திலேதான் இனிமே நிரந்தரமா இருக்கப்போறான்னு பலமுறை சொல்லிட்டேன். இருந்தாலும் ஒரு செல்பி எடுத்து வைச்சுக்கிடறேன்னு சொல்றான்”

என்றும் நான் அகத்தே கிறிஸ்தவனும்கூட. இணையத்தில் கிறிஸ்துவச் செய்திகளைப் பார்ப்பது, பாடல்களைக் கேட்பதும் எனக்குப் பிடித்தமானவை. கிறிஸ்துவும் புத்தரும் அணுக்கமானவர்கள். வேண்டிக்கொள்வதும் உண்டு. அதிலும் கொரோனா நாட்களில் வேறுவழியில்லை.

கிறிஸ்துவை மேலும் அணுக்கமாக ஆக்குவது அவர் பற்றிய நகைச்சுவைகள். இணையத்தில் கிடைக்கும் கிறிஸ்து பற்றிய நகைச்சுவைகள் இரண்டுவகை. நாத்திகர்களால் உருவாக்கப்பட்ட எதிர்மறைத்தன்மையும் கசப்பும் கொண்ட நகைச்சுவைகள். கிறிஸ்துவின் மேல் பிரியத்துடன், அவரை சாமானியர் எதிர்கொள்ளும் முறைமீதான நையாண்டியுடன் வரையப்பட்டவை.

”என்னை யாரும் சிலையா வடிக்கக்கூடாதுன்னு நானும் சொல்லியிருக்கணும். எல்லா இடத்திலயும் என்னை குண்டா செஞ்சு வச்சிருக்கானுக’

“இதச் சொல்றீங்க ரெண்டாயிரம் வருசமா என்னைய வெள்ளக்காரனா மாத்தி வச்சிருக்கானுக”

முதல்வகை வேடிக்கைகளில் எனக்கு ஈடுபாடில்லை. அப்படி எதையும் வேடிக்கையாக்கலாம். அப்படி அரியவற்றை உடைத்துக்கொண்டுவிட்டோமென்றால் எஞ்சுவது ஏதுமில்லை. அப்படி சிலையுடைக்க அலைபவர்கள் தங்கள் சிலைகளை ஆவேசமாக பொத்திப்பிடித்துக்கொண்டிருப்பதையும் காணலாம்.

உதாரணமாக ஓஷோ எல்லா சிலைகளையும் உடைத்தார் என பொங்கிப் பரவசமாகும் கூட்டம் ஓஷோ பற்றி ஒரு சிறு விமர்சனத்துக்கே பொங்கி கண்ணீர் மல்குவதைச் சமீபத்தில் கண்டேன்.

உயிர்த்தெழுந்து குகையிலிருந்து கிறிஸ்து வெளியே வருகிறார்- கொஞ்சம் காலம் பிந்திவிட்டது.

நான் விரும்பும் நகைச்சுவை என்பது மென்மையானது, சிரிக்கவைக்காமல் புன்னகைக்க வைப்பது. கிறித்தவ மெய்யியலை அறிந்தவர்களுக்கு மேலும் புன்னகையை கொண்டுவருவது. ஒரு கோணலான பார்வை வழியாக அந்த மெய்யியல் கொள்கையை மேலும் துலங்கவைக்கவும் அந்நகைச்சுவையால் இயலும். அத்தகைய நகைச்சுவைகள் எப்போதுமே தத்துவ – ஆன்மிகக் கல்வியில் முக்கியமானவை.

அவை நினைவில் நின்றிருக்கின்றன. ஏனென்றால் அவை மிகமென்மையாக நம்முடைய இயலாமையையும் சிறுமையையும்தான் சுட்டிக்காட்டுகின்றன. நாம் சிக்கிக்கொண்டிருக்கும் உலகியலை.

ஷ்ரோடிங்கரின் கிறிஸ்து. “உள்ள இருக்கிறவரை கிறிஸ்து ஒரேசமயம் செத்துட்டார் , இருக்கார்ங்கிற ரெண்டு நிலையிலேயும் இருக்கார்”

சில கிறிஸ்தவ அமைப்புகளின் தியான மையங்களில்கூட இயல்பாக இத்தகைய நகைச்சுவைகளை பரிமாறிக்கொள்கிறார்கள். மலையாள இறையியலாளர் ·பாதர் ஜோசஃப் புலிக்குந்நேல் அவர்களின் உரையில் அத்தகைய நகைச்சுவைகள் நிறைந்திருக்கும். அவருக்கும் நித்ய சைதன்ய யதிக்குமான உரையாடல்களும் நையாண்டிகள் நிறைந்தவை.

கோவாவின் இறையியலாளர் ஆண்டனி டி மெல்லோவின் நகைச்சுவைகளும் ஆன்மிகத்தின் புன்னகை எனச் சொல்லத்தக்கவை. அவருடைய தவளையின் பிரார்த்தனை ஒரு முக்கியமான நூல்.

”ஆளு யார்னு தெரியல. தண்ணிதான் கேக்குறார். ஒயினா மாத்தி குடிச்சுகிட்டே இருக்காரு” 

நண்பர் காட்சன் சாமுவேல் அளித்த கிறிஸ்துவைப்பற்றிய ஒரு ஓவிய நூலை நான் முன்பு எழுதியிருந்தேன். ஏசுவை கறுப்பராகவும், திராவிடச் சாயலிலும் வரைந்த பல அரிய ஓவியங்கள் அதில் இருந்தன. மிகமுக்கியமான ஓர் ஓவிய முயற்சி. பெங்களூர் பதிப்பாளர் ஒருவர் பெருஞ்செலவில் அதை வெளியிட்டார்

ஆனால் மரபான கிறிஸ்தவர்களால் அந்நூல் விரும்பப்படவில்லை. அவற்றை விற்க நானும் சிறு முயற்சி எடுக்கவேண்டியிருந்தது. நம்பிக்கையின் வழி பலசமயம் சிரிப்புக்கு மாற்றுக்கு இடமற்றது.

மோசஸ்: மேலேருந்து விழுறது கடவுள் குடுக்கிற மன்னாங்கிற சாப்பாடு. ஒண்ணு மட்டும் காக்கா எச்சம், ஜாக்ரதை”

கிறிஸ்து நகைச்சுவைகளுடன் இணைந்து எப்போதுமே நினைவுக்கு வருபவர் மறைந்த ஜான் ஆபிரகாம். “நான் கிறிஸ்து. கார்ட்டூன் கிறிஸ்து. கிறிஸ்து தண்ணியிலே நடந்தார். நானும் ஃபுல்டைம் தண்ணியிலேதான் நடப்பேன்”. அவருக்கு கிறிஸ்துவுடனான உறவென்ன என்பது சிக்கலானதுதான். பெரும்பிரியமும் நையாண்டியும் கலந்த ஓர் உறவு

பால் ஸகரியாவும் கிறிஸ்துவின் ஆள்தான். ஏசுகதைகள் என அவர் எழுதிய ஒரு தொகுதியே தமிழில் வெளிவந்துள்ளது. அவர் எழுதிய ஏசுகதைகளிலேயே சிறந்தது ’அன்னம்ம டீச்சர் ஒரு நினைவுக்குறிப்பு’ ஆனால் சகரியா எழுத்தில் கிறிஸ்துவை பகடி செய்ததில்லை.

உலகிலேயே சுருக்கமான வம்சாவளி

கிறிஸ்தவ இறையியல் இங்கே பொதுவாக எவருக்கும் தெரியாதது என நினைக்கிறேன். நான் கிறிஸ்தவ இறையியல் கொள்கைகளைக் கொண்டு எழுதிய கதைகளுக்கு பொதுவாசகர்களிடமிருந்து எதிர்வினைகள் இருக்காது. ஏசுகிறிஸ்துவின் ரத்தம், பலிநிறைவேற்றம் போன்ற கருத்துக்கள்கூட பொதுவாக எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

கடல்படம் வெளிவந்தபோது எழுதப்பட்ட விமர்சனங்களிலிருந்து நான் அறிந்துகொண்டது பெரும்பாலும் எவருக்குமே அடிப்படை கிறிஸ்தவ தொன்மங்கள் அறிமுகம் இல்லை என்பதே. ஆகவே அவற்றைப்பற்றிய வேடிக்கைகள் மேலும் குறைவாகவே புரியுமென நினைக்கிறேன்.

இந்தச் சட்டைய போட்டுக்கிட்டா எனக்கு பஸ்லே ஃபுல் சீட்டும் கிடைச்சிரும்

சிரிக்கும் ஏசுவின் படம் எனக்கு எப்போதுமே பிரியமானது. மிக அரிதானது அது. ஏசு தியாகத்தின் கனிவின் முகம். அம்மா முகம் போல. சிரிக்கும் அம்மா சிலர் நினைவில்தான் இருப்பார்

ஆனால் எனக்கு மேலும் பிடித்தமான கார்ட்டூன் இதுதான். பல்முளைக்க ஆரம்பிக்கும் குழந்தை ஏசு உலகையே கரம்பிப்பார்க்கும் ஆவலுடன் மேரியின் இடையில் அமர்ந்திருக்கிறார். ஒரு வழிபடு சிற்பத்தின் தரத்துக்கு கார்ட்டூன் சென்றுவிடும் நிலை அது. குழந்தை அளவில்லாத பசிதாகம் கொண்டது. அன்பும் அப்படித்தான்.

 

                                                                                     

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 22, 2021 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.