Jeyamohan's Blog, page 983
May 21, 2021
கண்ணீரும் கனவும்
சிலசமயம் பின்னிரவின் தனிமையில், எனது மேஜை விளக்கொளியில் , மதுரையின் வேனிற்கால இரவில், பீட்டர்ஸ்பர்க்கின் உறைபனியின் குளிரை உணரும், கந்தலாடை அணிந்த நெல்லியாக நான் உருமாறியிருக்கிறேன். ஒருகட்டத்தில் மனம் உருகி கண்ணீர் நாவலின் பக்கங்களில் சிதறும். எட்டுவயது அருண்மொழியின் கண்ணீரும், இருபது வயது அருண்மொழியின் கண்ணீரும் ஒன்றுதான், ஒரே அடர்த்திதான்
கண்ணீரும், கனவும்டேனியல் லாபெல்
இனிய ஜெயம் ,
சிறு வயது தொட்டே சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன், முதல் ஜாக்கி சான் வரை அவர்கள் நிகழ்த்திக் காட்டும் ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவைகளின் ரசிகன் நான். குறிப்பாக சாப்லினை கழுத்தைப் பிடித்து ஏதேனும் குண்டன் தூக்கி உலுக்கும் காட்சிகள் எல்லாம் இப்போதும் ஆச்சர்யம்தான். கழுத்தை இறுக்கும் கரத்துக்கு மேலே தலை கிடு கிடு என்று நடுங்க, கரத்துக்கு கிழே உடல் பெண்டுலம் போல ஆடும் அந்த நிலையை சாப்ளின் சிரமமே இன்றி அனாயாசமாக செய்வது உண்மையில் அதிசயம்தான்.
சாப்ளின் கீட்டன் இருவரில் இருந்து தனக்கான ஸ்லாப்ஸ்டிக் முறையை உருவாக்கிக் கொண்டவர் ஜாக்கி சான். கட்டிப் புரண்டு சண்டை போடுகயில் ஒரே கோட்டுக்குள் இருவர் சிக்கிக் கொள்வது போன்ற பல விஷயங்கள் அவரது தனித்துவம்.
அதே நேரம் ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவையில் குறைவது என்ன எனில் வித விதமான மனித நடத்தை உடல் மொழிகளை அதில் உருவாக்கி காட்ட இயலாது அதற்கு அவர்கள் பயின்ற உடல் அசைவு சாத்தியங்களே எல்லைகட்டும் என்பது. எல்லா படத்திலும் ஸ்லாப்ஸ்டிக்ல் வெளிப்படுவது ஒரே சாப்ளின்தான். ஒரே கீட்டன் தான். தருணங்கள் மட்டுமே வேறுபடும்.
இதிலிருந்து மாறுபட்டு ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவையில் வித வித மான மனிதர்கள் நடத்தை வினோதங்களை கொண்டு வருபவராக டேனியல் லா பெல்லி இருக்கிறார். நகைச்சுவை வரிசையை தேடிப்பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த வரிசையில் ai வழியே இவர் வந்து சேர்ந்தார்.Daniel LaBelle
திருமண புகைப்பட கலைஞர். டிக் டாக் அலையில் தனது அரை நிமிட ஒரு நிமிட ஸ்லாப்ஸ்டிக் துணுக்குகள் வழியே உலகெங்கும் ரசிகர்கள் கொண்டவர். சிறு புன்னகை இன்றியோ வெடித்து சிரிக்கும் ஒரு தருணம் இன்றியோ இவரது துணுக்குகளை கடந்து விட முடியாது.
புதிதாக ஜிம்முக்கு போகும் யுவன் எப்போதும் செட்டைகளை விரித்துக் கொண்டே திரியும் உடல் மொழி, அதன் அபத்தங்கள், சிறுவர் முதல் முதியவர் வரை தாகத்தில் அவசரத்தில் மேலே கொட்டி கவிழ்த்தி நீர் அருந்துவது, கண்டிப்பான அம்மா, காதலி முன் ‘ஸீன்’போடும் காதலன், என வித விதமான குணாதிசய உடல் மொழிகளை வெறும் ஒரு நிமிடத்திர்க்கும் குறைவான துணுக்குகள் வழியே நிகழ்த்தி காட்டுகிறார்.
எனக்கு பிடித்த பலவற்றில் ஒன்று, தோட்டத்தில் ஓடும் வித விதமான மனிதர்கள்.
இறுதியாக ஓடிவந்து விளக்கு கம்பத்தில் முட்டிக் கொள்ளும் அந்த பகல் கனவாளன் நான்தான் :)
இதே அளவு தீவிரத்தோடு முன்னர் உண்யாகவே புத்தகம் வாசித்திருக்கிறேன். இப்போது வயதாகி விட்டதால் கனிந்து விட்டேன். பின் தொடரும் நிழலின் குரல் அருணாச்சலம் போல புஸ்தகம் இல்லாமலேயே வாசிக்க துவங்கி இருக்கிறேன். டேனியல் லா பெல்லி you tube சானல் உங்கள் பார்வைக்கும் :).
கடலூர் சீனு
May 20, 2021
ஊதிப்பெருக்கவைத்தல்

ப்ரியமுள்ள ஜெ,
உபயகுசலோபரி.
அகில லோகமும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் சாக்ஷாத் இதே போன்றதொரு நாவல் எழுதினால் உங்கள் ஆப்தர்களுக்கு எத்தனை ஸௌகரியமாய் இருக்கும் . சீக்ரமாக விக்ஞாபனம் விடுக்கவேணும் என்று அபேக்ஷை.
நமஸ்காரங்களுடன்
ஶ்ரீனிவாஸன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,
சமீபத்தில் இந்த புத்தக அட்டையை பார்த்தேன். இறந்தவர்கள் எப்படி பேசமுடியும்? பழைய புத்தகங்கள் வழியாகத்தான், வேறெப்படி? அவர்கள் வாழும் நிலை என்ன? பழைய கதைகளில்தான். புதிய உலகம் மாறிவிட்டதை தெரியாமல் இருந்துகொண்டே இருக்கலாம். முடிவில்லாமல் காதலிக்கவேண்டுமென்றால் புத்தகத்தில் கதாபாத்திரமாக ஆகவேண்டும். ஆனால் ஜானகிராமன் மாதிரியானவர்களிடம் சிக்கலாகாது. கடைசிப்பக்கத்தில் இதுக்காகத்தானா என முடித்து எஞ்சிய நாள் முதல் இதுக்குத்தானா என அமரவைத்துவிடுவார்கள்.
அந்தக்காலத்திலேயே புத்தகங்களுக்கு சந்தோஷ சாகரத்தில் மூழ்குதல், கவலைகளை மறக்கடித்தல், ஓய்வுக்காலத்தை ஸுகமாக கழித்தல் போன்ற பயன்கள் இருந்திருப்பது ரோமாஞ்சத்தை உண்டுபண்ணுகிறது. ஆனால் காதலர்கள் உத்ஸாகமாக இருப்பதற்கும் மேற்படி வஸ்து பயன்பட்டிருக்கிறது என்பது ரோமஹர்ஷத்தை அளிக்கிறது. அப்படி உத்ஸாகமாக இருந்த காதலர்களைப் பற்றி மேலதிகச் செய்திகள் ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை. பாவம், கிழடுகட்டைகளாகி மண்டையைப்போட்டிருக்கவே வாய்ப்பு.
எவ்வளவு கலைச்சொற்கள்! இது ஓர் அனுபவ ஆசிரியரால் எழுதப்பட்டது. இப்படிச் சொல்லும் துணிவு தமிழில் சாரு நிவேதிதாவுக்கும் இருக்கிறதா? நவரசாலங்கிர்தம். ஓர் அற்புதமான கலைச்சொல். இனிமேல் இலக்கியவிமர்சனங்களில் பயன்படுத்தப்படலாம்.நாவலபிமானியும் நல்ல சொல்தான். தட்பவெப்பமானி மாதிரி.
சிறந்த கலவை. காதற்சொற்பொழிவுகளுடன் கூடிய துப்பறியும் நாவல்.ஊணுறக்கம் முதலிய எவ்வித தேகபாதைகளும் இல்லாமல் படிக்கலாம். வேறுவகை தேகபாதைகளுக்கு கேரண்டி உண்டு.ஒருமுறை படிப்பின் சதா மகிழ்ந்து மகிழ்ந்து உள்ளம் நெகிழத்தக்கது!

அந்தக்கால புத்தகங்களை பார்க்கையில் வியப்பு. மூலிகைஜாலரத்தினம் நூலுக்கு ஆசிரியர் பெயர் இருந்த அதே பாணியில் நவீன இலக்கியத்திற்கு ஆசிரியர் பெயர் இருந்தால் எப்படி இருக்கும்? புதுமைப்பித்தன் என்கிற திருநெல்வேலி சொ.விருத்தாஜலம் பிள்ளை மரபில் வந்த கந்தாடை நாராயணஸ்வாமி ஸுப்ரஹ்மணிய அய்யரவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு நாகர்கோயில் வேப்பமூடுவாஸி ஸ்ரீ ஸுந்தரராமஸ்வாமி அய்யரவர்கள் எழுதிய மனோரஞ்சிதமான கல்பனாகிரந்தம் ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள்’. அபூர்வமான கதாபாத்ரவிசேஷங்களும் ஹாஸ்யங்களும் அனேக ஜீவிததத்வரஹஸ்யங்களுமடங்கியது”.
அந்தக்காலத்தில் அமெரிக்காவில் புத்தக விளம்பரங்கள் பரவலாகவே இருந்திருக்கின்றன. எழுத்தாளர்களின் நினைவகங்களில் அவர்களின் புத்தகங்களின் விளம்பரங்களின் நகல்களைக் கண்டேன். “Almost everyone has read!!!” என்று ஒரு விளம்பரம். பஞ்சாங்கமோ பாடப்புத்தகமோ அல்ல. நாவல்! ஜான் ஸ்டைன்பக்கின் The Grapes of Wrath பற்றியது என்று ஞாபகம். அத்தனைபேரும் படித்தபின் நான் ஏன் படிக்கவேண்டும், நாலுபேரிடம் விசாரித்துக் கொள்கிறேன் என்றுதான் நினைக்கத் தோன்றும்.
ஓர்மையுண்டோ ஈ முகம்?மை நேம் இஸ் மெய்லர், நார்மன் மெய்லர்
அந்த பொற்காலம் நீடிக்கவில்லை. நீடித்திருந்தால் இன்றைக்கெல்லாம் எப்படியெல்லாம் விளம்பரம் செய்திருக்கலாம். “உங்கள் வீட்டை தலைகீழாகப் புரட்டிப்போட்டு மறுபடி அடுக்கவே முடியாதபடிச் செய்யும் டிரான்கிரேஸிவ் எழுத்து!!!”. எழுத்தாளர்கள் கூட ‘வழங்கும்’ போட்டுக்கொள்ளலாம். புரட்சிக்கதிர் ‘சு.வெங்கடேசன் வழங்கும் வேள்பாரி” நெல்லைப் பக்கம் இந்நாவலை வேய் பாரி என அழைக்கிறார்கள் என்பது உண்மையல்ல.
நார்மன் மெய்லரின் புத்தகத்தின் அடியில் மலச்சிக்கல் வந்த முகத்துடன் இருக்கும் கோட்டுச்சித்திரம் யாருடையது? படித்து கருத்து தெரிவித்த ஃபிலடெல்பியா இன்குயரர் இதழின் விமர்சகராக இருக்குமோ? அவர் நேக்கட் ஆக இல்லை. ஆகவே டெட் ஆக இருக்க வாய்ப்புண்டு. ஆலீஸ் இன் ஒண்டர்லேண்டை பிரட் ஜாமுடன் படிக்கவேண்டும் என விளம்பரம் செய்திருக்கிறார்கள். பிரட் ஜாம் இலவச இணைப்பு. ஊசிப்போனால் திரும்ப பெற மாட்டாது.

சில விளம்பரங்களைப் பார்த்தால் என்ன இது மொக்கையாக இருக்கிறது என்று தோன்றுகிறது. ஏர்னஸ்ட் ஹெமிங்வே என்றாலே ஸ்பானிஷ் எருதை பச்சைகுத்திக் கொண்ட ஒரு stud என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நியூயார்க்கில் ஒரு ‘பொம்மை’க் கடையில் வெவ்வேறு மெய்யான ஸ்டார் ஆண்களின் ஆண்குறிகளை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்ட டில்டோக்களை வைத்திருந்தார்கள். [குறியீட்டியல்].ஒரு நண்பர் சொன்னார், முன்பொருநாள் ஒரு அதிதீவிர இலக்கியவாசகி வந்து ஹெமிங்வேயின் மாடல் இருக்குமா என்று கேட்டாள் என்று.அப்பேற்பட்ட ஹெமிங்வேயின் நாவலின் விளம்பரத்தின் லட்சணம் இது. படியவாரிய தலை,டையெல்லாம் கட்டி, பொட்டுவைத்து பொங்கல் சாப்பிடுகிற மாதிரி. விளங்குமா அந்தப்புத்தகம்?
மேலே சொன்ன ரமாமணி புத்தக விளம்பரத்தின் முன்னோடியாக சில விளம்பரங்களைச் சொல்லலாம். இப்போதுகூட இந்த விளம்பரத்தின் பாணியில் நம் நாவல்களை விளம்பரம் செய்யலாம். “உங்கள் பார்வை சமூக யதார்த்தங்களை ஊடுருவட்டும்! எக்ஸ்ரே கண்களை அடைய வாசியுங்கள் செஞ்சோற்று செந்தோழர் எழுதிய ரத்தப்பூக்கள்!”

மேற்கண்ட எக்ஸ்ரே கண்ணாடி மிகப்பெரிய வியாபாரமாக இருந்திருக்கிறது. தொடர்ச்சியாக நிறைய விளம்பரங்கள் கண்ணுக்கு தட்டுப்பட்டுக்கொண்டெ இருக்கின்றன.ஆனால் எதிர்ப்படுபவர்களை எலும்புக்கூடுகளாகப் பார்ப்பதில் என்ன இன்பம் என்று தெரியவில்லை. எலும்புக்கூடுகளை தசைகளுடன் பார்க்கும் கண்ணாடி இருந்தாலாவது திரிஷாவையெல்லாம் ரசிக்கமுயலமுடியும். ஆனால் ஒன்று, எக்ஸ்ரேயில் எல்லாரும் சிரித்த முகமாக இருப்பார்கள்.
ஆனால் இலக்கியவிளம்பரத்திற்குச் சிறந்த மாடல் என்பது இதுதான். ”ஊதிப்பெருக்கப்பட்ட கன்னிகள்!” அதுவே ஒரு நல்ல தலைப்பு. ஆனால் பின்னாளில் அந்த எழுத்தாளர் காலத்திரைக்குள் மறையும்போது “அன்னாரின் எழுத்து ஊதிப்பெருக்கப்பட்டது” என்று எவராவது அஞ்சலிக்குறிப்பு எழுதவும் நேரும்
ஆனால் ஒன்று, அந்த ரமாமணி நாவலை எழுதிய ஆசிரியர் யார்? ஆவியாக இருக்குமோ?
ஜெ
உரையாடுதல்
அன்புள்ள ஜெ,
நண்பர் சக்திவேல் என் மனதில் இருந்ததையே அப்பட்டமாக சொல்லிவிட்டார். அவருடைய கடிதத்தைப் படிக்காமல் இருந்திருந்தால் இதைக்கூட எழுதி இருக்கமாட்டேன். எனக்குக் கூட உங்களோடு பேச ஆசை தான். ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பயம். சித்ரா பௌர்ணமி அன்று நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் zoom சந்திப்பில் இணைய முயற்சித்தேன். இடம் கிடைக்கவில்லை. அப்படிக் கூட்டத்தில் இருந்தபடி உங்களைப் பார்ப்பது வசதியானது.
ஆறு வருடங்கள் முன்பு வாசக நண்பர் த. ராஜனோடு பா. வெங்கடேசன் அவர்களைச் சந்தித்து தாண்டவராயன் கதை புத்தகம் வாங்கச் சென்றிருந்தேன். ராஜனும், அவர் நண்பரும், பா. வெ.வும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு வார்த்தை பேசாமல் அவர்களோடு நடந்து சென்று வந்தேன். அங்கிருந்து கிளம்பும்போது இரக்கத்தோடு பா.வெ. சொன்னார் “நீங்கள் நன்றாக கவனிக்கிறீர்கள்”. உண்மையில் அவர் பேசியதைக் கூட ஒழுங்காக கவனிக்கவில்லை. ராஜன் மகள், நீல வீதி போன்ற கதைகள் எழுதிய மனிதர் இவர் என்ற பிரம்மிப்பு தான் மனம் முழுக்க இருந்தது. என்னை அழைத்துச் சென்ற வாசக நண்பர்களின் உடல் மொழியையும் பேசும் விதத்தையும் தான் கவனித்துக் கொண்டிருந்தேன். ‘ஓ.. இப்படித்தான் ஒரு எழுத்தாளரோடு பேச வேண்டுமா’ என..
இது மேடைப்பயம் இல்லை என்று தோன்றுகிறது. அரசுப் பணித் தேர்வுக்குப் படிப்பவர்களுக்கு வகுப்புகள் எடுத்திருக்கிறேன். அப்போது வராத தயக்கமும் பயமும் இப்போது வருகிறது. இந்த இடத்தில் என் தகுதி என்ன என்ற கேள்வியில், சந்தேகத்தில் வரும் தயக்கம்.
பேசுவதில் மட்டும் இல்லை. வாசிப்பிலும் அந்தத் தயக்கம் உண்டு. Godel, Escher and Bach புத்தகம் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். ‘இதெல்லாம் ஆசான் படிக்கும் பெரிய புஸ்தகம்’ என்று எண்ணிக் கடந்துவிட்டேன். பிறகு வாசக நண்பர் ஒருவர் உங்களுக்கு எழுதிய கடிதத்திலும் அந்தப் புத்தகத்தைக் குறிப்பிட்டிருந்தார். இப்போது அதைப் படிக்கும்போது தான் தெரிகிறது கல்லூரிக் காலத்தில் இப்படி ஒரு புத்தகத்தைத் தான் தேடிக் கொண்டிருந்தேன் என.
ஏதோ ஒரு தைரியத்தில் எழுதிவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து அனுப்பலாம் என்று ஒத்திப்போட்டால் அனுப்பாமலே விட்டுவிடுவேன். அதனால் பிழை திருத்தம் கூட செய்யவில்லை. கடிதத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்,
பன்னீர் செல்வம்.
அன்புள்ள பன்னீர்செல்வம்,
பா.வெங்கடேசன் எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன், கோணங்கி, யுவன் சந்திரசேகர் என நீளும் ஒரு பட்டியலில் வருபவர். அதாவது அவரிடம் எவரும் எந்த தயக்கமும் கொள்ளவேண்டியதில்லை. எழுத்தை வாசிக்காமல் முருங்கைக்காய் பற்றியோ சைக்கிள் ரிப்பேர் பற்றியோகூட பேசலாம். மிகச்சுவாரசியமாக உரையாடுவார்கள். நாம் எப்படி எதை வெளிப்படுத்தினாலும் எரிச்சலடைய மாட்டார்கள், நாம் எரிச்சலடையாமல் இருக்க அவர்கள் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் அதற்கப்பால் சென்று உரையாடினால் அவர்கள் எழுத்தில் இருப்பதை விட கூடுதலாக உரையாடலில் சொல்வார்கள். நாஞ்சிலிடம் பழந்தமிழ் இலக்கியம் பற்றியோ பா.வெங்கடேசனிடம் நவீன அறிவியலின் கணிதம் சார்ந்த கொள்கைகள் பற்றியோ, அழகியல்கொள்கைகள் பற்றியோ யுவன் சந்திரசேகரிடம் நவீன இயற்பியலின் கொள்கைகளைப் பற்றியோ, இந்துஸ்தானி இசை பற்றியோகூட உரையாடலாம்.கோணங்கிக்கு தெரிந்த தமிழகச் சமூகவியல் ஓர் ஆய்வாளனால் நினைத்தே பார்க்கமுடியாதது.
ஏன் உரையாடவேண்டும்? முதன்மையாக அது நல்ல நினைவு. நான் என் இளமையில் எல்லாரையும் தயங்காமல் சென்று சந்தித்திருக்கிறேன். இன்று அனைவருமே வரலாற்றின் அடையாளங்கள் ஆகிவிட்டனர். அந்நினைவுகள் பெரும் செல்வமாக உள்ளன. க.நா.சு, சி.சு செல்லப்பா போன்றவர்களை நான் சந்தித்திருக்கிறேன். பஷீர், தகழி,சிவராமகாரந்த் ஆகியோரைச் சந்தித்திருக்கிறேன். இதெல்லாமே ஒருவகை வாழ்நாள் சாதனைகள்தான்.
அதற்கு அப்பால் உரையாடல்கள் வழியாக நம்மில் பல விஷயங்கள் தொடங்கப்படும். பல விஷயங்கள் திறக்கும். அது அப்போது தெரியாது, பின்னாளில் அங்கிருந்தே அதன் தொடக்கம் என்பது தெரியவரும். நான் அடைந்த உண்மையான அறிதல்கள் நேரில் கேட்டறிந்தவையே. அவை என்னில் வளர்ந்தன. முப்பதாண்டுகளுக்குப் பின்னரே கோவிந்தனும் நித்யாவும் என்ன கற்பித்தார்கள் என்பது புரிகிறது.
எழுத்தாளர்களில் ஒரு சாரார் அவர்களின் ஓர் அகவையில் ஆசிரியர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். ஆசிரியர்களாக எண்ணி அவர்களை அணுகுபவர்களுக்கு அவர்கள் உதவியானவர்கள். நூல்களின் வழியாக மிகச்சுற்றிச்சென்று நாம் அறிவன பலவற்றை அவர்கள் எளிதாக உணர்த்திவிடமுடியும். அதைவிட நாம் நூல்கள் வழியாக அடைந்திருக்கும் பல பிழையான புரிதல்களை நீக்கக்கூடும். நாம் தட்டித்தட்டி தளர்ந்திருக்கும் பல வாசல்களை அவர்கள் திறக்கக் கூடும். இப்போது கி.ரா ஏன் இத்தனை கொண்டாடப்படுகிறார்? ஏனென்றால் அவர் எழுத்தாளர் மட்டும் அல்ல, ஆசிரியரும்கூட. அவரிடம் அமர்ந்து பயின்றவர்களின் மூன்று தலைமுறை இங்குள்ளது. கோணங்கி அதனாலேயே அவரை முன்னத்தி ஏர் என்றான்.
ஆனால் தன்னை கருவிலேயே திரு என எண்ணி ஆணவத்தை ஆசிரியர்களை நோக்கி திருப்பி வைப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது. எந்த எழுத்தாளனும் அவர்களை கையாள கற்றிருப்பான். சிரித்துவிட்டு அப்படியே சென்றுவிடுவார்கள். யுவனிடம் பேசினால் அவன் அந்த ஆணவத்தை அப்படியே பணிவுடன் ஏற்று கும்பிட்டு உபசரித்து அனுப்பிவிடுவான். ஆணவத்துடன் செல்பவன் யுவன் சந்திரசேகரை வென்றுவிட்டேன் என நிறைவுடன் திரும்பிச் செல்வான். பத்தாண்டுகள் யுவனுடன் நெருக்கமாக இருந்து, ஆனால் அவன் என்ன நினைக்கிறான் என்பதையே தெரிந்துகொள்ளாமல் தன் கருத்துக்களை அவனிடம் வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தவர்களை எனக்குத் தெரியும்.
நம் தோரணைகளை அகற்றிவிட்டு அணுகவேண்டும். நம்மைப்பற்றிய மிகையான பொய்யான பாவனைகளைக் காட்டக்கூடாது. முடிந்தவரை அச்சந்திப்புக்கு தயாரித்துச் செல்லவேண்டும். வேண்டுமென்றே எந்த தயாரிப்பும் இன்றி செல்லக்கூடாது. கூடுமானவரை கூரிய கவனத்துடன் ’கேட்க’ வேண்டும். அதுபோதும். நாமும் ‘ஒரு ஆள்’ என ஆனபிறகுதான் எழுத்தாளரைச் சந்திக்கவேண்டும், இல்லாவிட்டால் மதிக்க மாட்டார்கள் என எண்ணிக்கொள்வதெல்லாம் நம்முடைய அகந்தை மட்டுமே. நாம் இருக்கும் இடத்தை நாமே மதிப்பிட்டு, அதை ஏற்றுக்கொள்ளாமல் எப்படி அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்?
இது இயல்பான சந்திப்புக்கு. அடுத்த நிலை என்பது இயல்பான கண்டனங்களுக்கும், சிலதருணங்களில் அவமதிப்புகளுக்கும் தயாராக இருப்பது. நம்மை சிறுமைகொள்ளச் செய்யாத, அதன் வழியாக நம்மை ஆழமாகப் புண்படுத்தாத நல்ல ஆசிரியர் இருக்க முடியாது. ஏனென்றால் நாம் வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் அத்தருணத்திற்குரிய தர்க்கநிலைபாடுகள், நம்பிக்கைகள், உணர்ச்சிநிலைகளை உருவாக்கி கொண்டிருப்போம். அது ஓர் உறைநிலை. அந்த கான்கிரீடை உடைக்காமல் அடுத்த நகர்வு சாத்தியமில்லை.
அந்த உடைவை நிகழ்த்தி அதன் வழியாகவே ஒர் ஆசிரியர் மெய்யான கல்வியை அளிப்பார். அந்த கான்கிரீட்டின் ‘சிமிண்ட்’ என்பது நம் ஆணவமே. ஆகவே மெய்யான ஆசிரியர்கள் ஆணவத்தின்மேலேயே தாக்குவார்கள். ஆகவே புண்படுத்தல் இருக்கும். பத்துக்கு ஒன்பதுபேர் ஆணவமே பெரிது என எண்ணி ஆசிரியரை விலக்கிவிட்டுச் செல்வார்கள். ஆசிரியரை நிராகரிக்கத் தேவையான எல்லா தர்க்கங்களையும் உருவாக்கிக் கொள்வார்கள். நித்ய சைதன்ய யதிக்கே இதுதான் நிலைமை.
ஆகவே பிரச்சினை என்பது உண்மையில் நம் தாழ்வுணர்சியா அல்லது ரகசிய ஆணவமா என்றுதான் பார்க்கவேண்டியிருக்கிறது. இப்படித்தான் பேசவேண்டும் என்ற எந்த வழிமுறையும் இல்லை. எப்படியும் பேசலாம், மெய்யாக பேசினால் போதுமானது. நீங்கள் பா.வெங்கடேசனைச் சந்திக்கும் வாய்ப்பிருப்பவர் என்றால் அதை பயன்படுத்திக்கொள்ளவும். அது உங்களுக்கு பெரிய திருப்புமுனையாக அமையும்.
*
எழுத்தாளர் அல்லது அறிவுஜீவிகளைச் சந்திப்பதற்கான சில நெறிகளை வகுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஒன்றுமில்லை, இப்படி வகுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கும் என்பதனால்.
வெங்கட் சாமிநாதன்அ.எல்லா துறை அறிவியக்கவாதிகளையும் சந்திக்கவேண்டும். ஒரு பொது அறிவுஜீவிக்கு, இலக்கியவாசகனுக்கு, ஒரு தொல்லியலாளரைச் சந்திப்பதும் இதழ்சேகரிப்பாளரைச் சந்திப்பதும் எல்லாமே பயன்தருவதுதான். தனக்கு ஆர்வமிருக்கக்கூடிய துறையில் உள்ளவர்களை மேலதிகமாகச் சந்திக்கலாம்.
ஆ. நீண்ட கால உறவு தேவை. ஓர் அறிவியக்கவாதியுடனான நீண்டகால உறவே நமக்கு உண்மையில் உதவுவது. அவர் இயல்பாகி, எளிதாகி பேச ஆரம்பிக்கவேண்டும். உண்மையில் உரையாடல் அல்ல உடனிருத்தலே முக்கியமானது. நித்ய சைதன்ய யதியிடம் ‘நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள்’ என்று நான் கேட்டேன். ’எதையும் கற்பிப்பதில்லை, அவர்களை உடனிருக்க அனுமதிக்கிறேன்’ என்று சொன்னார்.
ஓர் அறிவியக்கவாதி சிந்திக்கும்போது உடனிருந்தால் நம்மையறியாமலேயே அந்தச் சிந்திக்கும் முறையை கற்றுக்கொள்கிறோம். கற்கவேண்டியது அதுதான். சிந்தனைகள் நூல்களில் குவிந்திருக்கின்றன, சிந்தனைமுறையே ஆசிரியரிடமிருந்து கற்கவேண்டியது. ஆகவே கூடுமானவரை அடிக்கடி ஆசிரியரைச் சந்திக்கவேண்டும். நம்மில் அவருடைய முந்தைய சந்திப்பின் அலை அடங்குவதற்குள் மீண்டும் சந்திக்கவேண்டும்
எம்கோவிந்தன்
இ. விவாதங்களை தவிர்க்கவும். ஆசிரியர் நிலையிலுள்ள முன்னோடியான அறிவியக்கவாதியுடன் ஆரம்பத்திலேயே விவாதிக்கக் கூடாது. என்ன ஆகுமென்றால் நாம் நம்மை முன்வைக்கும்பொருட்டு விவாதிப்போம். அது ஒரு பாவனைதான். ஆழமாக விவாதிப்பதாகக் காட்டிக்கொள்வோம். அல்லது அவர் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் நாம் அதுவரை அறிந்த அனைத்தைக் கொண்டும் எதிர்வினை ஆற்றுவோம். அதற்காக அறிந்த அனைத்தையும் அங்கே இழுத்துவருவோம்.
இதன் விளைவாக நிகழும் ஒரு பெரும் சிக்கல் உண்டு. நாம் எங்கோ நம் ஆணவத்தை வளர்த்துக் கொள்வோம். புண்படுவோம். புண்பட்டால் நம் தரப்பை இறுக்கிக்கொள்வோம். அது ஒரு கோட்டையாக ஆகி நம்மை சிறையிடும். நம்மைநோக்கி எதுவும் வராமலும் தடுக்கும். நம் கருத்துக்கள் நம்முடைய சொந்த தேடலால், நம் கண்டடைதல்களால் உருவாகவேண்டும். எதற்கும் எதிர்வினையாக உருவாகக்கூடாது.
ஆற்றூர்விவாதம் நம்மையறியாமலேயே நாம் எடுக்கும் தரப்பை நம்முடைய் தரப்பாக நாம் நம்பச் செய்கிறது. உண்மையில் அது நம் தரப்பே அல்ல. நாம் ஒரு விவாதத்தில் நிற்கும்பொருட்டு எடுத்ததாக இருக்கும். விவாதித்துக் கற்கலாம், விவாதிக்கும் இடத்தை நாம் அடைந்துவிட்டோமா என்பதை அந்த ஆசிரியர்தான் முடிவுசெய்யவேண்டும், நாமல்ல.
சில ஆசிரியர்கள் விவாதத்தையே விரும்பாதவர்கள். சுந்தர ராமசாமியிடம் விவாதிக்கலாம், ஜெயகாந்தனிடம் விவாதிக்கவே முடியாது. எம்.கோவிந்தனிடம் விவாதிக்கலாம், ஆற்றூர் ரவிவர்மாவிடம் விவாதிக்கமுடியாது. விவாதிக்க முயன்றால் அவர்களை முழுக்கவே இழந்துவிடுவோம்.
ஈ.பின்னணி வாசிப்பு தேவை. ஓர் ஆசிரியருடன் பேசினால் அவர் சொல்வனவற்றை உடனே பிறநூல்களில் தேடி வாசிப்பவனே அந்த உரையாடலால் பயனுறுகிறான். அந்த் வாசிப்பு இல்லாமல் அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பவன் அருவி விழும் கல் போன்றவன் ஆயிரம் ஆண்டு ஆனாலும் அப்படியே அமர்ந்திருப்பான்.
ஓர் ஆசிரியரிடம் நாம் கற்கவேண்டியது அகவயமான கல்வியை. அதை வெளியே நூல்களில் கற்கமுடியாது. நூற்கல்வியும் உடனிருந்தால் அதில் எது விடுபடுகிறதோ அதை ஆசிரியரிடம் கற்போம். பொதுவாக கற்பதில் உள்ள பிழைபுரிதல்களை [fallacy]களை களைவதைத்தான் ஆசிரியர்களிடம் கற்றுக்கொள்கிறோம். எஞ்சிய கல்வி நாமே அடைவதே.
உ.அரசியல்வாதிகள் அறிவியக்கத்தின் ஆசிரியர்களாக முடியாது. இது சட்டென்று எதிர்க்கத்தோன்றும் கருத்து. ஆனால் அனுபவ உண்மை. நான் மகத்தான அரசியலியக்கத்தவரைச் சந்தித்து அடைந்த மெய்மை இது.
அரசியலைக் கற்க எவருடனும் பழக வேண்டியதில்லை.அது புறவயமாக பொதுவெளியில் உள்ள கருத்துநிலைபாடு மட்டுமே.அந்தரங்கமாக, நுட்பமாக, கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றும் அதில் இல்லை. நான்கு புத்தகங்களே போதும். அந்தரங்கமாக கற்கவேண்டியவை கலை, இலக்கியம், தத்துவம், மெய்யியல் போன்றவை. இவற்றில்தான் புறவயமாகக் கற்கவேண்டியவற்றை விட கூடுதலாக அகவயமாகக் கற்கவேண்டியவை உள்ளன. ஒருவர் கற்றது இன்னொருவருக்கு பயன்படாது என்னும் அளவுக்கு அகவயமானவை அவை.
எத்தனை மகத்தானவராக இருந்தாலும் அரசியலில் மூழ்கியிருப்பவர் எவ்வகையிலும் அறிவியக்கத்திற்கான ஆசிரியர் அல்ல. அவர் முன்வைக்கும் அந்த அரசியலுக்கே கூட அவர் ஆசிரியர் அல்ல. அவர் மூர்க்கமான வேகத்துடன் ஓர் அரசியலை முன்வைக்கிறார். நாம் எதிர்க்கமுடியாத நிலையில் இருக்கிறோம், ஆகவே அவருக்கு அடிப்படுகிறோம். நம்மையும் ஒற்றைப்படையானவர்களாக ஆக்கிக் கொள்கிறோம்.
அத்துடன் அவர் நம்மை கடுமையான விருப்பு வெறுப்புகளுக்குள் தள்ளுகிறார். அந்த விருப்புவெறுப்புகள் கற்கோட்டையாக மாறி நாம் எதையுமே கற்கமுடியாமல் ஆக்குகின்றன. நமக்கு வளர்ச்சியோ மாற்றமோ நிகழமுடியாது. நாம் சட்டென்று அந்த அரசியல்கருத்தின் தளம் வரை வளர்கிறோம். அடுத்து வாழ்நாள் முழுக்க அங்கேயே நிற்கிறோம். கற்சிலை போல.
அத்துடன், என்றேனும் நம் சொந்த அனுபவத்தால் நாம் மாற ஆரம்பித்தால், வளர்ந்தால் துரோகிப் பட்டம் சூட்டப்படுவோம். அதுவரையிலான நண்பர்களை இழப்போம். கசப்புகளால் சூழப்பட்டு அவற்றுக்கு எதிர்வினையாற்றி நாமும் கசப்பு நிறைந்தவராவோம்.
அரசியல் நிலைபாடு என்பது நமக்கு ஒருவேளை நாமே கண்டடைந்து வரலாம். ஆனால் அரசியலை நம்பி ஏற்று அதன்வழியே சிந்திப்பவன் அறிவியக்கவாதி அல்ல, அரசியல்வாதி மட்டுமே. அவனுக்கு என்றாவது அதிகாரம் கிடைத்தால் அது அவனுக்கு லாபம். கிடைக்காவிட்டால் அவனுக்கும் லாபமில்லை, மற்றவர்களுக்கும் நன்மை இல்லை.
ஊ. பொதுவெளியில் விவாதிக்காதீர். ஓர் ஆசிரியருடனான உரையாடல்களை பொதுவெளியில், குறிப்பாக சமூக வலைத்தளத்தில் விவாதிப்பது பெரும்பிழை. அவை தனி உரையாடல்கள். உங்களுக்காகச் சொல்லப்பட்டவை. அவற்றை நீங்கள் தகுதியற்றவர்களுடன் பகிர்கிறீர்கள். அவர்களில் ஒருசாரார் வேண்டுமென்றே உளச்சிக்கல்களை உருவாக்கலாம். உங்கள் ஆணவத்தை தூண்டிவிட்டு கசப்பை உருவாக்கலாம். நீங்கள் புரிந்துகொண்டவற்றை திரித்து குழப்பங்களை உருவாக்கலாம்
நித்யாவின் சொற்கள்- ‘சரஸ்வதிக்குத்தான் எதிரிகள் மிகுதி’ ஒருவன் மெய்யான கல்வியில் ஈடுபட்டான் என்றால் அவனுக்கு தடையாக குடும்பம், நண்பர்கள், சமூகம், அரசு என எல்லாமே அணிவகுப்பதைக் காணலாம்.
ஜெ
எழுத்தாளரைச் சந்திப்பது ”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை” எழுத்தாளர்களை அணுகுதல் எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்கதாநாயகி-13
𝟙𝟛நான் என்னருகே இருந்த ப்ரெஸ்லெட் மெல்ல அசைவதை பார்க்காமலேயே உணர்ந்தேன். அல்லது என் ஓரவிழி அதைக் கண்டது. என் கழுத்தை இறுக்கிக்கொண்டு அசைவில்லாமல் அமர்ந்திருந்தேன். திரும்பினால் அது நின்றுவிடும் என அறிந்திருந்தேன். ஆனால் திரும்பாமல் இருப்பது அத்தனை எளிதல்ல. நான் பார்ப்பதையே அது அறியக்கூடாது. எது? அந்த ப்ரெஸ்லெட்தான். அதில் செயல்படும் அது.
சட்டென்று திரும்பிப் பார்த்தேன். அசைவில்லாமல் இருந்தது. ஒன்று தோன்றியது. எழுந்து சென்று சாக்பீஸ் எடுத்துவந்து அது இருக்கும் இடத்தை அடையாளப்படுத்திக் கொண்டேன். பின்னர் சாக்பீஸை டிராயரில் போட்டேன். உள்ளே அந்த செயின் கிடந்தது. அதை ஏனோ சற்றுநேரம் பார்த்தேன். பின்பு டிராயரை மூடிக்கொண்டு புத்தகத்தை கையிலெடுத்தேன்.
ஈவ்லினாவின் வரிகள். The invitation is accepted, and we expect her every moment. But to me, it is very strange, that a woman who is the uncontrolled mistress of her time, fortune, and actions, should choose to expose herself voluntarily to the rudeness of a man who is openly determined to make her his sport. நான் அந்த முதல் வரியை வாசித்தேன். அழைப்பு ஏற்கப்பட்டது. அவளை எந்நேரத்திலும் எதிர்பார்க்கிறேன். அது தற்செயலா? அல்லது இங்கே எல்லாமே ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டனவா?
கர்னல் சாப்மான் என்னிடம் அவர் வேட்டைக்குச் செல்வதைப் பற்றிச் சொன்னார். வழக்கமாகச் செல்வதுதானே என்று நான் பேசாமலிருந்தேன். “மெக்கின்ஸிதான் ஏற்பாடு செய்கிறான். நீயும் வருகிறாய்” என்றார்.
நான் திடுக்கிட்டு “நானா?” என்றேன்.
“ஆமாம், நீயேதான். உன்னை கூட்டிச்செல்லும்படி லண்டனில் இரு சீமாட்டிகள் சொன்னதாக மெக்கின்ஸி பேசும்போது சொன்னான். உன்னை கட்டாயப்படுத்தியதாகவும் நீ வரவில்லை என்றும் சொன்னான். ஏன் வந்தாலென்ன?”
“எனக்கு வேட்டை பிடிக்காது.”
“நீ எத்தனை வேட்டைக்குப் போயிருக்கிறாய்?”
“நான் வேட்டையையே பார்த்ததில்லை.”
“சரிதான். நாவல்களில் படித்திருப்பாய். ஒருமுறை வந்து பார். விடவே மாட்டாய். வேட்டை என்பது இயற்கைக்கும் நமக்குமான சண்டை. இயற்கையில் மற்ற மிருகங்களில் இருந்து நாம் எப்படி மேம்பட்டவர்கள் என்று நமக்கே காட்டித்தருவது. அதைப்போல தன்னம்பிக்கையும் நிறைவும் அளிக்கும் செயல் வேறு இல்லை.”
அவள் தலை திருப்பிக்கொண்டு “அப்படி ஒரு தன்னம்பிக்கை எனக்கு தேவையில்லை” என்றாள்.
“நீ ஏன் இசை மீட்டுகிறாய்? ஏன் நாவல் வாசிக்கிறாய்? ஏன் ஓவியம் வரைகிறாய்?” என்று அவர் கேட்டார். ஆழ்ந்த தத்துவ ஞானியின் பாவனையில் இவற்றைக் கேட்பது அவருடைய வழக்கம். “இதெல்லாமே நம்மால் ஒரே காரணத்துக்காகத்தான் செய்யப்படுகின்றன. நம்மை நாம் மிருகம் அல்ல என நிரூபிக்க விரும்புகிறோம். நம் வாழ்க்கையின் பெரும்பகுதியில் மிருகமாகவே இருக்கிறோம். காமம், கோபம் எல்லாவற்றிலும். அப்படி அல்ல என்று நிறுவிக்கொள்கையில் நாம் மேலே செல்கிறோம்.”
அவர் சுருட்டை பற்றவைத்து இழுத்து நீலப்புகையை வெளியே விட்டார். “ஆனால், வேட்டையின் போதுதான் நாம் உண்மையில் விலங்கு அல்ல என்று உணர்கிறோம். விலங்குகளின் அரசன் கூட நம் முன் மிகச்சிறிய உயிர்தான். புலியை நீ பார்த்திருக்கிறாயா?”
“இல்லை.”
“புலியை காட்டில் பார்க்க வேண்டும். அந்த நடையின் கம்பீரம், பளிங்குத்துண்டுக் கண்கள், பொன்னிற உடல். ஆணவத்துடன் எழுந்த நீண்ட வால். அலட்சியமாக அசையும் காதுகள். கூர்ந்த மூக்கு. அதுதான் விலங்குகளின் அரசன். ஒரு மகத்தான நடனக்கலைஞனின் அசைவுகள் அதற்கு. நாம் லண்டனில் காணும் பேரரசருக்குக் கூட அத்தகைய முழுமையான ஒத்திசைவு கொண்ட அசைவுகள் இல்லை. அது இங்கே மிக மகத்தான ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும், வெறும் இருத்தல் வழியாகவே. ஓர் உடல் கொள்ளும் அழகின் உச்சமென்ன என்று அது கடவுளுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது.”
அவர் சிரித்தபடி மீண்டும் சுருட்டை ஆழமாக இழுத்து “ஆனால் ஒரு துப்பாக்கி வேட்டின் ஓசை போதும், அக்கணமே அது அஞ்சிய பூனையாக ஆகிவிடும். அது பதறியடித்து ஓடுவதை நீ பார்க்கவேண்டும். நாம் துரத்திச் சென்றால் அது தன் வளையை அடைந்து பதுங்கி அமர்ந்துகொண்டு முகத்தைச் சுளித்து மீசை விடைக்க வெண்பற்களைக் காட்டி சீறும். அது ஒரு அபத்தமான சிரிப்பு போலிருக்கும். அஞ்சியவர்கள் வீராப்பு காட்டும்போது வரும் சிரிப்பு அது. அதைக்காண்கையில் நான் ஒவ்வொரு முறையும் வெடித்துச் சிரித்துவிடுவேன்.”
நான் கடுமையான ஒவ்வாமையை அடைந்தேன். ஆகவே ஒன்றும் பேசாமலிருந்தேன்.
“நீ வருகிறாய், வேட்டையைப் பார்க்கிறாய். இம்முறை நான் புதிய ரைஃபிள் ஒன்றுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆர்சிஏ 19, அற்புதமான ரைஃபிள். ஸ்மூத்தி என்று பெயர். ஒரு காமம் கொண்ட பதினெட்டு வயது கன்னி போல நம் கைகளில் குழைவாள் என்று சொன்னான் அதன் வியாபாரி… ஹஹஹஹா.”
நானும் புன்னகைத்தேன். அவர் ஒயின் ஊற்றிக்கொண்டார். “நான் இம்முறை உன்னை கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்லி ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். உனக்கு எந்த வசதிக்குறைவும் ஏற்படாது. நீ கூடுமானவரை சாரட்டில் வரலாம். அதன்பின் குதிரைகளில் போகலாம். கடுமையானதாக இருந்தால் உன்னை சப்பரம் கட்டி தூக்கிச் செல்லவும் அங்கே ஆட்கள் உண்டு.”
“ஓ டியர்” என்று நான் ஒயிலாகச் சொன்னேன். வேண்டுமென்றே என் கைகளை தூக்கி கூந்தல் முடிச்சை சீரமைத்தேன். “நான் வரமுடியும் என நினைக்கவில்லை. எனக்கு அது மாதத்தின் கடினமான நாட்களாக இருக்கலாம்.”
“இருக்கட்டும். நீ வருகிறாய்” என்று கர்னல் சாப்மான் சொன்னார். அவர் கண்கள் மாறிவிட்டன.
நான் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. அந்த எல்லைக்குமேல் என்னால் அவர் பேச்சை மீறமுடியாது என்று அறிந்திருந்தேன்.
முதலில் காட்டுக்குச் செல்வதும் விலங்குகளைக் கொல்வதும் நினைப்பதற்கே எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல எனக்கு ஓர் ஆர்வம் உருவாகியது. காடு, அதிலும் நிலநடுக்கோட்டுப் பகுதி மழைக்காடு, எப்படி இருக்கும்? நான் லண்டனிலேயே காட்டுக்குள் சென்றதில்லை. கதைகளில் காடு என படித்து கற்பனை செய்துகொண்டதெல்லாம் சர்ச்சுக்குப் பின்னாலிருக்கும் சிறிய பிர்ச், பைன் மரத்தோட்டத்தைத்தான்.
நான் காட்டுக்குச் செல்வது அதற்குள் பரவிவிட்டது. ஆஃபீசர்ஸ் கிளப்பில் மரியா என்னிடம் “வேட்டைக்கா செல்கிறாய்? உனக்கு துப்பாக்கி பிடிக்க தெரியுமா?” என்றாள்.
“அதனாலென்ன, கர்னல் சொல்லிக் கொடுப்பார்” என்றாள் எலிஸா.
நான் புன்னகைத்தேன். அப்பேச்சுக்களில் நஞ்சு இருந்தாலும் அதற்கு அடிப்படை வெறும் பொறாமையே என அறிந்திருந்தேன். அதைவிட்டுவிடுவதே என் வழக்கம்.
கிளம்புவதற்கு முந்தையநாள் வரை ஊக்கத்துடன் இருந்தேன். இரவு பதற்றத்தில் நெடுநேரம் தூக்கம் வரவில்லை. வெளியே போய் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தேன். மெக்கின்ஸி வீட்டில் இருந்தார். ஆனால் மது அருந்திவிட்டு எட்டுமணிக்கே தூங்கிவிட்டார்.
நான் நள்ளிரவு கடந்த பிறகுதான் தூங்கினேன். முதல்விடியலிலேயே என்னை மார்த்தா எழுப்பிவிட்டாள். அதற்குள் மெக்கின்ஸி எழுந்து ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். வீடெங்கும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பாரஃபின் எரியும் வாசனை நிறைந்திருந்தது.
நான் எழுந்து சென்று நீராடி வந்தேன். மார்த்தா என் பொருட்களை எடுத்து கட்டிவைத்தாள். என்னென்ன எடுக்கவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அறைக்கும் கூடத்திற்குமாக நடந்தேன். மெக்கின்ஸியிடம் “என்னென்ன எடுக்கவேண்டும்?” என்றேன்.
“உனக்கு ஒன்றும் தெரியாது. நான் எல்லாவற்றையும் மார்த்தாவிடம் சொல்லிவிட்டேன்” என்றார். “நீ வந்து இங்கே பேசாமல் இரு. வண்டிகள் வந்ததும் கிளம்பலாம்.”
“ஆனால் எனக்கு சேற்றில் நடக்கும் சப்பாத்துக்கள் இல்லை.”
“எல்லாம் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருக்கிறது. நீ நகைகள் ஏதும் போட்டுக் கொள்ள வேண்டியதில்லை. பிற எல்லாமே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”
“சாரட்டா வரப்போகிறது?”
“இல்லை, குதிரைவண்டிதான்.”
“அது எதுவரை போகும்?” என்றேன்.
“வழியைச் சொன்னால் உனக்குப் புரியுமா? பேசாமலிரு.”
அதன்பிறகு நான் ஒன்றும் சொல்லவில்லை. காலையில் வெளிச்சம் எழுவதற்கு முன்னரே வண்டிகள் வந்துவிட்டன. நான் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டேன். கூட எவருமில்லை. வண்டியின் திரையை விலக்கி வெளியே பார்க்கமுடியும். இன்னொரு வண்டியில் பொருட்கள். அவையெல்லாம் மரப்பெட்டிகளில் அடுக்கப்பட்டிருந்தன. தோல்பைகள் ஏழெட்டு.
மெக்கின்ஸியும் எட்டு வீரர்களும் குதிரைகளில் வந்தார்கள். இரண்டு குதிரைகள் முன்னால் போக மற்றவை பின்னால் வந்தன. நாங்கள் கிளம்புவதற்கு மேலும் பொழுதாகியது. ஒவ்வொன்றாகச் சரிபார்க்க வேண்டியிருந்தது. துப்பாக்கிகளும் ரவைகளும் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை பலமுறை எண்ணிப் பார்த்தார்கள்.
கிளம்பும்போதும் இருட்டு இருந்தது. நீண்ட பயணம்தான் அது. சென்று சேரவே மூன்று நாட்களாகும். நான் ஏற்கனவே வரைபடத்தில் வழியை பார்த்திருந்தேன். டிரிவாண்ட்ரம் பாலராமபுரம் நெய்யாற்றின்கரா வழியாக நாகர்கோயில் செல்லும் சாலை.
பாதை நான் நினைத்தது போல் இல்லை. மாட்டுவண்டிச் சாலை என்று வரைபடத்தில் போட்டிருந்தது. ஆனால் கல் பரப்பப்பட்டதோ இறுக்கப்பட்ட மண்ணோ அல்ல. வண்டிகள் சென்று சென்று சாலை புழுதிக்குளமாக இருந்தது. வண்டிச்சக்கரங்கள் பல இடங்களில் புதைந்தன. பல இடங்களில் சாலையை அறுத்துக்கொண்டு நீரோடைகள் சென்றன. ஏராளமான மரப்பாலங்கள். அவற்றில் மிகமெல்ல ஒவ்வொரு வண்டியாகத்தான் போகமுடியும். ஒவ்வொரு இடத்திலும் எங்கள் வண்டிகளை படைவீரர்கள் கூச்சலிட்டுக் கொண்டும் பாட்டுபாடிக் கொண்டும் தூக்கிவிட்டார்கள்.
இங்கே வண்டிகள் வழியாகச் சரக்குகள் கொண்டு வரப்படுவது மிகக்குறைவு. பெரும்பாலும் நீர்வழிப்பாதைதான். அஞ்சுதெங்கு முதல் மணக்குடி வரை படகுகள் சென்றன. பூவாறு, குளச்சல், தேங்காய்ப்பட்டினம் போன்ற ஊர்களை படகுகளே இணைத்தன.
கர்னல் சாப்மான் இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்று குழித்துறை அருகே லண்டன் மிஷனுக்கு சொந்தமான ஒரு பங்களாவில் தங்கியிருந்தார். நாங்கள் முழுப்பகலும் பயணம் செய்து இரவில் அங்கே சென்று சேர்ந்தோம். அவரை அன்று சந்திக்கவில்லை. பயணக் களைப்பில் குளிக்கவும் தோன்றாமல் தூங்கிவிட்டோம்.
மறுநாளும் விடியலுக்கு முன்னரே கிளம்பினோம். வண்டிப்பாதை உண்ணாமலைக்கடை வழியாக திருவட்டாறு சென்றது. வழியில் ஒரு மேட்டை ஏறி இறங்குவதற்குள் குதிரைகள் நுரை கக்கிவிட்டன. திருவட்டாறு அருகே ஆற்றைக் கடக்க பெரிய மூங்கில் தெப்பங்கள் இருந்தன. வண்டிகளையும் குதிரைகளையும் தனித்தனியாக ஏற்றிக்கொண்டார்கள் ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்ட வடத்தில் தெப்பம் பிணைக்கப்பட்டிருந்தது. மூங்கில்கழியாக் உந்தியும் கயிற்றை பிடித்து இழுத்தும் தெப்பத்தைச் செலுத்தினர். குதிரைகள் மறுகரைக்குச் சென்றதும் கால்களை உதறிக்கொண்டு நின்ற இடத்திலேயே நடப்பதுபோல அசைந்தன. செவிகளை பின்னுக்குச் சரித்து ஆற்றில் எழும் ஓசைகளை கூர்ந்தன. ஒவ்வொருவராக மறுகரைக்கு வந்தபின் மீண்டும் பயணம்.
அன்று மாலை குலசேகரம் வந்துசேர்ந்தோம். அது அரசரின் பெயரால் அமைந்த ஒரு சந்தையும்,சுங்கசாவடியும் அதைச்சூழ்ந்த நூறு ஓலைக்குடிசைகளும் ஒரு ஓட்டுக்கட்டிடமும்தான். ஆனால் அங்கே லண்டன் மிஷனின் விருந்தினர் மாளிகை இருந்தது. அங்கேதான் நாங்கள் தங்க ஏற்பாடாகியிருந்தது. நாங்கள் படுத்தபிறகுதான் கர்னல் சாப்மானும் அவருடைய காவலர்களும் வந்தார்கள் என்று தெரிந்தது.
மறுநாள் காலையில் அங்கிருந்து குதிரைகளில் கிளம்பினோம். நான் ஏறிக்கொண்டது பெரிய வெள்ளைக்குதிரை. ஓயாமல் செருக்கடித்துக் கொண்டும் சினைத்துக் கொண்டும் இருந்தது. அதிலிருந்து கிளர்ச்சியூட்டும் வியர்வை வாடை எழுந்தது. விந்தையான ஒரு மாமிசவாடையும். அதன் செவிகள் மிகச்சிறியவையாக இருந்தன. அதன் கழுத்தை தடவி என்னை அதற்கு பழக்கப்படுத்திக் கொண்டே இருந்தேன். கழுதைகளில் எங்கள் பெட்டிகளும் பொதிகளும் சென்றன. துப்பாக்கிகள் மற்றும் பொருட்களை தலையில் ஏற்றிக் கொண்டு சுமையாட்கள் சென்றனர். அதன்பின்னரே நாங்கள் கிளம்பினோம். கர்னலும் அவருடைய கூட்டத்தினரும் கிளம்பவில்லை.
மழைநீர் சிவப்பாக பெருகிச்சென்ற ஒரு காட்டாறை ஒட்டி பாதையை அமைத்திருந்தனர். காட்டுக்குள் செல்ல அது மட்டுமே வழி. காட்டாறு மலைகளை அறுத்து அந்த பாதைக்கான இடைவெளியை உருவாக்கியிருந்தது. மழைக்காலத்தில் ஆற்றில் நீர் பெருகிச்சென்றால் அந்தப்பாதை பயன்படுமா என்று தெரியவில்லை. ஆனால் அது தொடர்ச்சியான சரிவு. ஆகவே நீர் பக்கவாட்டில் மிகவும் மேலேற வாய்ப்பில்லை.
ஆங்காங்கே பாறைகள்மேல் பலகைகளைப் போட்டு பாலங்களை அமைத்திருந்தனர். சில இடங்களில் மரத்தடிகளை நட்டு அதன்மேல் பலகைகளைப் போட்டு உருவாக்கப்பட்ட பாலங்கள். அது கோடைகாலம். ஆனால் அன்று விடியற்காலையில் கூட மழை பெய்திருந்தது. நிலம் ஈரமாக இருந்தது. காட்டுக்குள் இலைகளில் ஈரமில்லை. ஆனால் பசுமையில் நீரின் இருப்பை உணரமுடிந்தது.
சாலையில் மணல் தெறித்துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. கீழே குனிந்து கூர்ந்து பார்த்தேன். பல்லாயிரக்கணக்கான தவளைக்குஞ்சுகள். ஒரு சிறு கூழாங்கல் அளவானவை. அவை இடப்பக்கமிருந்து தெறித்து அலையலையாக மேலே சென்று கொண்டிருந்தன. குதிரையின் கால்களில் தவளைக்குஞ்சுகள் உண்ணிகள் போல ஒட்டியிருந்து உதிர்ந்தன.
கோதையாறை நாங்கள் அடைந்தபோது உச்சிப்பொழுது கடந்துவிட்டிருந்தது. அங்கே சற்றுநேரம் காத்திருந்தோம். நான் ஒரு மரத்தடியில் விரிக்கப்பட்ட பனையோலைப் பாயில் படுத்தேன். குதிரைப்பயணம் நடப்பதற்கு சமமாகவே உடலுக்கு அலுப்பூட்டுவது. என் எலும்புகள் இனிய ஓய்வை உணர்ந்தன.
மெக்கின்ஸி பீர் புட்டியுடன் என்னருகே அமர்ந்தார். “பசுமையான காடு… இந்த பசுமை நம்மூர் பசுமை போல அல்ல. இங்கே ஒரு கைச்சுற்று அளவுக்குள் நூறுவகை தாவரங்கள் உண்டு. அதேயளவுக்கு உயிர்களும் உண்டு” என்றார்.
நான் புன்னகை செய்தேன். உண்மையில் அச்சூழல் என்னை மிகவும் ஈர்த்துவிட்டிருந்தது. அதுவரை இருபுறமும் அடர்ந்த பசுமையாக வந்துகொண்டிருந்தது காடு. பெரிய இலைகள் கொண்ட தாழ்வான மரங்கள். அவற்றுக்குமேல் சிறிய இலைகள் கொண்ட உயரமான மரங்கள். அவற்றுக்கும் மேல் வானைநோக்கி விரிந்த கிளைகளுடன் மிக உயரமான மரங்கள் என மூன்று அடுக்கு. கீழே செடிகளும் அதேபோல மூன்றடுக்கு. தரையில் கடும்பச்சை நிறமான புற்கள், கூம்பிலைப் பூண்டுகள்.
நான் உணர்ந்து கொண்டிருந்தது அதைத்தான். உயிர். அங்கே உயிர் நிறைந்திருந்தது. நம்முள் ஒரு சிறிய நுரைக்குமிழி போலிருக்கும் உயிர் திமிறிப்பெருகி நிறைந்து சூழ்ந்திருந்தது. அதைப் பார்க்கவே நம்முள் இருந்து உயிர் துள்ளுவதை, அது சென்று அப்பெருக்குடன் இணைந்து கொள்வதை, அதுவாகி ஓங்கி நின்று தருக்குவதை உணரமுடிந்தது.
நான் சொற்களை கோத்துக் கொண்டிருந்தேன். அங்கே சென்றதுமே டைரியில் எழுதவேண்டும். டைரியை எடுத்துக் கொண்டேனா? என் ஓவியப் புத்தகத்தையும் வண்ணங்களையும் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இவர்கள் வேட்டைக்குச் செல்வார்கள், குடிப்பார்கள். நான் செய்வதற்கு ஒன்றுமிருக்காது.
ஆனால் இருந்தால்கூட எல்லாம் பெட்டிகளுக்குள்தான் இருக்கும். ஒன்றும் செய்வதற்கில்லை. ஒருக்களித்துப் படுத்து காட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கரிய மெழுகுக்குச்சி நகர்ந்து வருவதைக் கண்டு கூச்சலிட்டபடி எழுந்துவிட்டேன். ஒருவன் வந்து அதை கையால் எடுத்து அப்பாலிட்டான்.
மெக்கின்ஸி “அது அட்டை. இங்கே அவை கொஞ்சம் மிகுதி. எந்த தீங்கும் செய்வதில்லை” என்றான்.
அந்தப் பகுதியெங்கும் அவை மிகமெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. கரிய வளையங்களை அடுக்கி உருவான உடல். கீழே பொன்னிறத்தில் அலையலையாக கால்கள். விந்தையான உயிர். அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
காட்டுக்குள் இருந்து குரங்குகள் கூட்டமாக வந்து மரங்களில் அமர்ந்தபடி எங்களைப் பார்த்தன. அவை எங்களைப் போன்றவர்களை முன்பு பார்த்திருக்கவில்லை என்று தெரிந்தது. கைகளில் குழந்தையுடன் இருந்த தாய்க்குரங்குகள் கீழிறங்கி வந்து தரையில் அமர்ந்து முகம் சுளித்து பார்த்தன. குட்டிகளின் கண்கள் மின்னி மின்னி இமைத்தன. முகம்சிவந்த பெரிய ஆண்குரங்கு இறங்கி கையூன்றி நடந்து அருகே வந்து அமர்ந்து கொண்டு எங்களைப் பார்த்தது. சலிப்புடன் மற்ற குரங்குகளிடம் ஏதோ ஆணையிட்டது.
“அவை மனிதர்களைப் போல இருக்கின்றன” என்று நான் சொன்னேன்.
மெக்கின்ஸி “அவற்றை இங்கே வால்மனிதர்கள் என்றுதான் சொல்கிறார்கள். அவர்களின் தெய்வங்களிலும் குரங்குகள் உண்டு” என்றார்.
குரங்குகள் எங்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. எங்களை அறிந்துகொள்ளவே முயன்றன. கிளைகளில் காற்று வருவதுபோல இலைகள் ஓசையிட்டன. நிறைய குரங்குகள் வந்திறங்கி வரிசையாக அமர்ந்து எங்களை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.
குதிரைக் குளம்படிகள் கேட்டன. பாதையில் கர்னல் சாப்மானும் அவருடைய வேலைக்காரர்களும் வந்தனர். சாப்மானின் ஏடிஸியான செகண்ட் லெஃப்டினெண்ட் ஜான் ஃப்ரெஸர் அவருக்கு பின்னால் பிரிட்டிஷ் ராணுவத்தின் அடர்சிவப்புச் சீருடை அணிந்து வந்தான். அந்த கூட்டத்தில் அவன் மட்டும்தான் சீருடை அணிந்திருந்தான்.
குரங்குகள் திரும்பி குதிரைகளை வேடிக்கை பார்த்தன. கர்னல் சாப்மான் காக்கி சட்டையும் காக்கி கால்சட்டையும் அணிந்து உயரமான சப்பாத்துகள் அணிந்திருந்தார். தோள்பட்டைக்கு குறுக்காகச் சென்ற சிவப்பு பெல்டில் உறையில் பிஸ்டல், தோளுக்குப் பின்னால் ரைபிளின் முனை தெரிந்தது.
மெக்கின்ஸி எழுந்து கைவீசினார். நான் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். கர்னல் சாப்மான் வேகத்தை குறைக்காமலேயே வந்தார். அருகே வந்ததும் சட்டென்று பிஸ்டலை எடுத்து அந்த பெரிய ஆண்குரங்கைச் சுட்டார். வெடியோசை காட்டில் பல இடங்களில் எதிரொலித்தது. ஆண்குரங்கு பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. அப்போதுதான் அதைத்தான் சுட்டிருக்கிறார் என்று தெரிந்தது. நான் அலறியபடி எழுந்துவிட்டேன்.
சிரித்தபடியே கர்னல் சாப்மான் இன்னொரு குரங்கைச் சுட்டார். அது விழுந்த பின்னரும்கூட மற்ற குரங்குகளுக்கு அவற்றை அவர் தாக்குவது புரியவில்லை. அவை கலைந்து ஓசையிட்டபடி அங்கேயே நின்றன. இரு குரங்குகள் விழுந்துகிடந்த குரங்கை அணுகி தூக்க முயன்றன.
கர்னல் சாப்மான் ஒரு தாய்க்குரங்கைச் சுட்டார். அது மரக்கிளையில் இருந்து ஓசையுடன் கீழே விழுந்தது. அதன் குட்டி விழுந்து உருண்டு எழுந்து நின்று கிளிபோல குரலெழுப்பியது.
அப்போதுதான் குரங்குகளுக்குப் புரிந்தது. அவற்றில் மூத்த பெண்குரங்கு உரக்க ஓசையிட்டு அமர்ந்திருந்த கிளையை உலுக்கியது. சாப்மான் அதை குறிவைத்தார். நான் எழுந்து ஓடிப்போய் அவருடைய கைகளை தட்டினேன். அவர் சிரித்துக்கொண்டே மீண்டும் குறிவைத்தார். அதற்குள் குரங்குகள் பாய்ந்து மரங்களுக்குள் சென்று மறைந்தன.
மூன்று குரங்குகள் மட்டும் விழுந்து கிடந்தன. குட்டிக் குரங்கு மட்டும் குழப்பமும் தயக்கமுமாக ஆண்குரங்கை அணுகியது. அதன் வாலைப்பிடித்து இழுத்தது. சாப்மான் அதைச் சுட்டார். ஓசையே இல்லாமல் அது சரிந்து விழுந்தது. அதன் வால் மட்டும் நெளிந்துகொண்டிருந்தது.
“அவற்றுக்கு நம் மீது அச்சம் வேண்டும்” என்று சாப்மான் சொன்னார். ”ஏனென்றால் இவை காட்டை காவல் காக்கின்றன. நம்மைப் பார்த்தாலே இவை நெடுந்தொலைவு ஓடிப்போய்விட வேண்டும். இல்லாவிட்டால் நாம் காட்டுக்குள் நுழைந்ததுமே இவை ஓசையிட்டு எச்சரிக்கை அளித்துவிடும். அதன்பின் ஒரு வேட்டைவிலங்கு கூட கண்ணுக்குப் படாது”
நான் பதறிக்கொண்டிருந்தேன். என் கைகள் நடுங்கவே குடையை இறுகப் பற்றிக்கொண்டேன். என் முகத்தை பிறர் கவனிக்காமலிருக்க தரையை பார்த்தேன். இவர்களின் சூழலில் அஞ்சுவதும் பதறுவதும்கூட தாழ்ந்த குடியின் இயல்புகளாக கருதப்படலாம்.
“நாம் மேலே செல்வோம்… வேட்டைப் பங்களா அங்கேதான் இருக்கிறது. எல்லா ஏற்பாடுகளும் அங்கே செய்யப்பட்டிருக்கின்றன” என்றார் மெக்கின்ஸி.
“ஆம், செல்வோம்…” என்றபின் என்னை நோக்கி திரும்பிய கர்னல் சாப்மான் “உன்னால் நடக்க முடியாது. நீ குதிரையிலேயே வரலாம்” என்றார்.
ஆனால் அங்கிருந்த வழிகாட்டியான பழங்குடி இளைஞன் ஏதோ சொல்ல அதை ஓர் இந்திய படைவீரன் “குதிரையில் போக முடியாது. மரக்கிளைகள் தடுக்கும்” என்றான்.
“நான் நடக்கிறேன்” என்று நான் மெல்லிய குரலில் சொன்னேன்.
“கழுதைமேல் ஏறிக்கொள்” என்றார் கர்னல்.
“இல்லை, வேண்டாம். இந்த சப்பாத்துக்கள் சௌகரியமானவை.”
“அப்படியென்றால் சரி.”
நாங்கள் அந்த காட்டுப் பாதையில் நடந்தோம். என்னிடமிருந்த எல்லா ஆர்வமும் வடிந்துவிட்டது. காடு என்னைச் சூழ்ந்திருந்தது. இருண்ட கொடிய காடு. அது உறுமிக் கொண்டும் ஊளையிட்டுக் கொண்டும் இருந்தது. பகைகொண்ட மாபெரும் விலங்குபோல.
கர்னல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே வந்தார். “இம்முறை நாம் புலியோடு போகப்போகிறோம்” என்று என்னிடம் சொன்னார்.
நான் தலைகுனிந்து நடந்தேன்.
“உன்னிடம் புலி கைகுலுக்கும்…. நான் சொல்கிறேன்” என்றார். அதன்பின் உரக்கச் சிரித்து “ஆனால் அதற்குமுன் அதன் உடலுக்குள் நாலைந்து ஈயம் பாய்ந்திருக்கும்” என்றார்.
மக்கின்ஸியும் வெடித்துச் சிரித்து “ஈயம் புலிக்கு மிக நல்லது” என்றார். “அது புலியை நாகரீகமானதாக ஆக்குகிறது.”
அவர்களின் பேச்சு என் தலைமேல் அடிப்பது போலிருந்தது. என் கண்கள் அவ்வப்போது மங்கலடைந்தன. பலமுறை நின்றேன். அவர்கள் என்ன என்று கேட்டபோது ”தண்ணீர்” என்றேன்.
“இப்படி தண்ணீர் குடிக்கக்கூடாது. காட்டில் தண்ணீர் மிக அரிய பொருள்…” என்று கர்னல் சொன்னார். “சகாரா பாலைவனம் போலவே இந்த மழைக்காட்டிலும் தண்ணீர் அரிதானது… ஓடைத்தண்ணீரை குடித்தால் மறுநாளே மலேரியா வந்துவிடும்.”
நாங்கள் அந்த வேட்டைப் பங்களாவைச் சென்றடைந்தோம். புத்தம் புதிய பங்களா. காட்டுக்குள் அப்படி ஒன்றை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கருங்கல்லால் ஆன சுவர்கள். சரிந்திறங்கிய ஓட்டுக்கூரை. கருங்கல்லால் ஆன படிகள். முற்றத்தில் ஏற்கனவே நாலைந்து கருப்பு வேலைக்காரர்கள் நின்றிருந்தனர்.
கர்னல் “அட்கின்ஸன் பங்களா… அவனுடைய ரசனை எனக்குப் பிடிக்கும்” என்றார். “இங்கே தேவையில்லாமல் சுதைத்தூண்களெல்லாம் இல்லை. ஆங்கிலோ சாக்ஸன் பாணி என்று சொல்லி தூண்களாகக் கட்டிவைத்து சலிப்பூட்டுகிறார்கள்” என்றார்.
நான் கல்படிகளில் ஏறினேன். அகன்ற கூடம். ஒட்டி ஒரு சிறு அறை. அப்பால் நீளும் ஒரு சமையலறை இருக்கலாம். கூடத்தின் மூலையில் ஒரு சைன்போர்டு மேஜை. அருகே நாற்காலி. அதில் அமர்ந்து ஓர் இளைஞன் ஏதோ படித்துக் கொண்டிருந்தான். அவனை நான் எங்கோ பார்த்திருந்தேன். ஆனால் இந்திய இளைஞன்.
கர்னல் உரக்கச் சிரித்தபடி உள்ளே வந்தார். “இந்தப் பயல்களுக்கு துப்பாக்கியை கையாளத் தெரியாது. கற்றுக்கொடுப்பதும் கஷ்டம். மைசூர் போரில் நான் கண்ணால் பார்த்தேன். போர் தொடங்கியதுமே பாய்ந்துபோய் கட்டையால் எதிரியை அடிக்க ஆரம்பித்துவிட்டனர். சுடுங்கள் சுடுங்கள் என்று நான் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தேன். யார் கேட்கிறார்கள்? ஆனால் நல்லவேளையாக நாங்கள் ஜெயித்தோம். சுடாமல் சண்டை போட்டவர்களை கூப்பிட்டு விசாரித்தேன். ஒவ்வொரு குண்டாக துப்பாக்கியில் போட்டு சுடும் நேரத்தில் பத்துபேரை அடிக்கலாம் என்கிறார்கள். சரிதான், ஜெயித்துவிட்டோமே” என்றபின் என்னிடம் “என்ன இங்கே நிற்கிறாய்? அந்தச் சிறிய அறை உனக்கு ஆடைமாற்றிக்கொள்ள” என்றார்.
அந்த இளைஞன் யார் என்று பார்க்க நான் திரும்பினேன். அவன் அங்கே இல்லை. அங்கிருந்து செல்ல எந்த வாய்ப்பும் இல்லை. என் தலை எடைகொண்டு வருவதுபோலிருந்தது. என்னதான் நிகழ்கிறது? நான் என்னவாக மாறிக்கொண்டிருக்கிறேன்?
அவன் கையில் இருந்தது ஃபேன்னி பர்னி எழுதிய புத்தகம். ஆம், நான் தெளிவாகவே அதைப் பார்த்தேன். அப்போதுதான் உணர்ந்தேன், நான் நாலைந்து நாட்களாகவே அந்த புத்தகத்தை மறந்துவிட்டிருந்தேன். அதை எடுத்துக்கொண்டு வரவுமில்லை.
மேஜைமேல் புத்தகம் ஏதுமில்லை. அவன் அங்கிருந்த தடையமே இல்லை. நான் திரும்பி மெக்கின்சியிடம் “என் பெட்டிகளை அங்கே கொண்டு வைக்கச்சொல்லுங்கள்” என்றேன்.
“அங்கேதான் இருக்கிறது” என்று அவர் சொன்னார்.
கர்னல் வேலைக்காரர்களிடம் மதுப்புட்டிகள் அடங்கிய பெட்டிகளை எப்படி பத்திரமாகக் கொண்டு வருவது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் சென்று ஆடைமாற்றிக் கொண்டேன். எளிமையான பருத்தி கவுன் அணிந்தேன். அங்கே நீராவியும் குளிரும் இருந்தது. காற்று அசைவில்லாமலிருக்கும் போது வெக்கை, காற்றில் குளிர். வெளியே மரக்கூட்டங்களின்மேல் இருட்டு கவியத் தொடங்கியது.
“பொழுதென்ன ஆகிறது?” என்று நான் கேட்டேன்.
“நான்கு”என்றார் மக்கின்ஸி.
“அதற்குள் அந்திபோல ஆகிவிட்டது” என்றேன்.
“இங்கே அப்படித்தான்.”
நான் மேஜைமேல் அந்த புத்தகம் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்.
நான் அலறியிருக்க வேண்டும். மெக்கின்ஸி திரும்பி “என்ன? என்ன? பாம்பா?” என்றார்.
“இந்தப் புத்தகம்… இது எப்படி இங்கே வந்தது?”
அவர் “உனக்கென்ன கிறுக்கா? நீதான் கொண்டு போனாய்” என்றார்.
“இல்லை, நான் கொண்டுவரவில்லை” என்றேன்.
“நீ கையில் அந்தப் புத்தகத்துடன்தான் போனாய். நானே நினைத்துக் கொண்டேன், அந்தப்புத்தகம் உன்னை விடவே விடாது என்று.”
நான் நடுங்கியபடி அமர்ந்திருந்தேன். அந்தப் புத்தகத்தை பார்த்தேன். மெய்யாகவே அது என்னை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறதா?
மெக்கின்ஸி “நான் சொல்லியாகவேண்டும். நீ அந்த புத்தகத்தையே படித்துக் கொண்டிருக்கிறாய். அதைத் தூக்கி வீசு. இல்லாவிட்டால் அதுதான் உனக்கு கல்லறை.”
நான் விம்மி அழுதபடி தலைகுனிந்தேன்.
கர்னல் உள்ளே வந்து மெக்கின்ஸியை பார்த்தார். பிறகு என்னிடம் “என்ன?” என்றார்.
நான் பட்டுக்கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.
சட்டென்று கர்னல் கோபம் அடைந்தார். “அவளை இங்கே அழைத்து வந்தவன் நான். அவள் அழுவது எனக்கு இழப்பு…. நான் அதைப் பொறுத்துக் கொள்ள போவதில்லை” என்றார்.
”மன்னிக்கவேண்டும், மன்னிக்கவேண்டும்” என்று மெக்கின்ஸி சொன்னார்.
“வெளியே போ. அங்கே அவர்கள் கூடாரம் கட்டுகிறார்கள். அவர்களுக்கு உதவு” என்றார். “ஃப்ரேசர் அங்கிருக்கிறான், அவனுடன் இரு.”
“எஸ் சர்” என்றார் மெக்கின்ஸி.
“அங்கேயே நீயும் தங்கு… உன் பொருட்களையும் அங்கே கொண்டுபோ. இங்கே நான் அழைத்தால் மட்டும் நீ வந்தால் போதும்.”
“எஸ் சர்” என்று மக்கின்ஸி சொன்னார்.
கர்னல் தணிந்து, என்னைப் பார்த்து “அழாதே அன்பே… இந்த மூடன் களைப்பில் ஏதாவது சொல்லியிருப்பான்” என்றார்.
மக்கின்ஸி மௌனமாக சல்யூட் வைத்துவிட்டு வெளியே சென்றார்.
“நீ நகைகளைப் போடவேண்டாம் என்று நான்தான் சொன்னேன். ஆனால் அந்த பிரெஸ்லெட்டை போடாமல் வந்துவிடுவாயோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதைப் போட்டுக்கொண்டே வந்திருக்கிறாய். எனக்கு உன் அழகான கைகளைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கர்னல் சொன்னார். “தந்தத்தால் செய்யப்படும் பொருட்களுக்கு பொன்னால் பூண் அமைப்பது மிகச்சிறப்பாக பொருந்துகிறது. இந்தியப் பொற்கொல்லர்களுக்கு அது தெரியும்.”
நான் அரைக்கண்ணால் அந்த பிரெஸ்லெட்டைப் பார்த்தேன். அது நான் சாக்பீஸால் அடையாளப்படுத்திய அதே இடத்தில்தான் இருந்தது. அதை சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தைப் பார்த்தேன். இப்போது நான் வாசித்தவை அதிலுள்ள வரிகள் தானா? நான் வாசித்துக் கொண்டிருந்தது நடுவே உள்ள பக்கம். இந்தப்பக்கங்களை முன்னரே வாசித்துச் சென்றிருந்தேன். அப்போது இந்த வரிகளை வாசிக்கவில்லை.
லண்டனில் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியா என்ற பெயரை மட்டுமே அறிந்திருந்த ஒருபெண் எழுதிய முழுக்க முழுக்க லண்டன் பற்றிய நாவலில் எப்படி இந்தியா, அதுவும் திருவனந்தபுரம் வரமுடியும்? அதைவிட கோதையாறில் இந்த பங்களா எப்படி வரமுடியும்? ஹெலெனா பற்றி மெய்யாக அந்நாவலில் ஒன்றுமே இல்லை. அந்நாவலில் நான் வாசித்த எதுவுமே அதில் இல்லை. அது மிகச்சாதாரணமான ஒரு பெண்ணுகலச் சித்தரிப்பு மட்டுமே.
Once, indeed, I thought there existed another,-who, when time had wintered o’er his locks, would have shone forth among his fellow-creatures with the same brightness of worth which dignifies my honoured Mr. Villars; a brightness how superior in value to that which results from mere quickness of parts, wit, or imagination! a brightness, which, not contented with merely diffusing smiles, and gaining admiration from the sallies of the spirits, reflects a real and a glorious lustre upon all mankind! Oh, how great was my error! how ill did I judge! how cruelly have I been deceived!
மீண்டும் மீண்டும் அந்த நீண்ட வரியையே வாசித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சுழல்பாதை போலிருந்தது. அதற்குள் சென்றுவிட்டால் திரும்ப வரவே முடியாது. இந்தப்புத்தகமே ஒரு சுழற்பாதை. இதற்குள் முன்பு சென்று அங்கே சுற்றிக் கொண்டிருப்பவர்களைக்கூட நான் பார்க்கமுடியும். ஹெலெனா அப்படிப்பட்டவள். அவள் என்னை பார்க்கிறாள். நூற்றாண்டுகளைக் கடந்து வந்து என்னை அவள் இந்த அறையில் கண்டாள். How cruelly have I been deceived! How cruelly have I been deceived! How cruelly have I been deceived!
புத்தகத்தை வைத்துவிட்டு எழுந்து சென்று படுத்துக்கொண்டேன். மென்மையான மழை பெய்துகொண்டிருந்தது. அந்த பழைய பங்களாவில் நான் தன்னந்தனிமையில் இருந்தேன். கோரன் வெளியே அவனுக்கு வசதியான குடிலில் இருந்தான். இங்கே அவன் இருந்தபோது அவனால் எந்தப் பயனும் இல்லை என்றாலும் மானசீகமாக ஒரு துணையை உணரமுடிந்தது.
நான் தூங்கிவிட்டேன். விழித்துக் கொண்டபோது மழை நிலையாகப் பெய்து
இரவு- ஒரு வாசிப்பு
அன்புள்ள ஜெ
இரவு நாவலை வாசித்து முடித்தேன். வாசிக்க ஆரம்பிக்கும் போதே இதை இரவில் மட்டும் படிக்க வேண்டும் ெவளிச்சம் எதுவும் இல்லாமல் குறைந்த செல்பேசியின் ஒளி கொண்டே படிக்க வேண்டும் என்று தீர்மானித்துதான் படிக்க ஆரம்பித்தேன். ஒரு இரவில் எவ்வளவு படிக்க முடியுமோ படித்து மீண்டும் மறுநாள் இரவில் இருந்து படிக்கத் தொடங்கினேன்.
உண்மையில் அது ஒரு வித்யாசமான அனுபவம் தான். இரண்டாவது நாள் படிக்கும் தீவிரத்தில் மனதில் இரவை ருசிக்க ஆரம்பித்து விட்டேன். இல்லையென்றால் அப்படி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
அதில் இரவு வாழ்க்கை வாழக்கூடிய அனைவரும் மிகு புனைவு வாதிகளாக தெரிந்தார்கள். யாராவது இந்த இரவு மோசம் என்று சொல்ல மாட்டார்களா, அப்படி, எப்படி இரவில் சந்தோஷமாக வாழ முடியும், இது பொய் இது வெறும் பிதற்றல் என்று மனம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்தது. எனக்கே வித்யாசமாக இருந்தது. ஏன் இப்படி மனதில் தோன்றிக் கொண்டு இருந்தது என்று தெரியவில்லை.
ஆனால் உள்ளூர ஒரு ருசி உருவாகியிருந்தது இரவின் மேலே. அந்த ருசியை மனதால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பல தர்க்கங்களை சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருந்தது.
கடைசியில் மேனன் சரவணை பார்த்து இந்த இரவு வாழ்க்கை வேண்டாம் நீ போய் விடு என்று சொன்ன போது இந்த வார்த்தைக்குத் தான் என் மனம் ஏங்கிக் கொண்டு இருந்திருக்கிறது. அதை அவர் சொன்னபோது பார்தையா அவர் சொல்வது தான் உண்மை, என்று அப்போது வரை நெருடல்களும், ஒரு வகையான ஏக்கமாக இருந்த மனம் சட்டென்று மகிழ்ச்சி அடைந்தது. நானே கொஞ்சம் திடுக்கிட்டேன்.
ஆனால் அதன் பின் மீண்டும் மீண்டும் கற்பனையில் இரவை நானே உருவகித்துக் கொண்டேன்.
சரவணன் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு போய் விட்டானோ என்று தான் நினைத்தேன். ஆனால் அவன் வேறொரு நிலைக்கு போய்யிருந்தான். அவன் இரவை கனவாக எண்ணவில்லை. மாபெரும் தேடலுக்கான ஊற்றாக நினைத்திருக்கிறான்.
சாக்த வழிபாடு பற்றி வரும் போது என் மனதில் தேவி சுக்தத்தில் யா தேவி சர்வ பூதேஷி சாயா ரூபேண சமஸ்ஸிதா என்ற வரி மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. அவள் எங்கோ ஒளி முன்னே நின்று கொண்டு, அவளுடைய நிழலைத்தான் இரவாக ஆக்குகிறாளோ என்று..
மேலும் அந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திர முகங்களும் துல்லியமாக மனதில் உருவகித்துக் கொண்டேன். ஆனால் சரவணனை மட்டும் நாவலாசிரியராக எண்ணிக் கொண்டேன். எனக்கே அப்பதமாக இருந்தது. ஆனால் மனம் ஒரு முகத்தை உருவகித்துக் கொண்டால் அது சரிதான் என்பதற்கு நியாயங்கள் தான் தேடுகிறதே தவிர மாற்றவில்லை. நானும் சரி இருந்து விட்டு போகட்டுமே, என்று விட்டு விட்டேன்.
இரவு பெண் போல, உக்கிரமும், அழகும், ஆவேசமும், கனவும், என்று எல்லாம் கலந்தும் நிறைந்தும் இருக்கிறது. சில நேரங்களில் “சாயா” வாகவும் தான்…..
முத்துமாணிக்கம்
வெண்முரசு ஆவணப்படம் – அனுபவம்
அன்புள்ள ஜெமோ,
பொதுவாகவே ஆவணப்படங்கள் பார்ப்பது என்பது அந்தரங்கமான அனுபவம். ஒரு புத்தகம் வாசிப்பது போல், அந்தி வானில் ஒழுகும் ஒளிகளை விழி வழியாக உள்ளம் ஏந்துவது போல், ஓடும் நதியில் நின்றிருப்பதை போல், மலையின் உச்சியில் மேகத்தில் மறைவது போல்.
திரையரங்கில் வெண்முரசு சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று ராஜன் அழைத்தபோது ஒரு நிமிடம் புரியவில்லை. அந்த எண்ணம் விளைந்த நிலம் எதுவென்று தெரியாது ஆனால் அது விஸ்வரூபம் எடுத்து விருட்சமாய் தெரிந்தது அப்படத்தை அங்கே கண்ட போது. கோயிலை சுற்றி இருக்கும் மாடவீதிகள் போன்று ராலேக்கு பக்கத்தில் சார்லட் இருப்பது ஒரு சுக சௌகரியம்.
திரையிடல் நாள் காலையிலே உங்கள் ஓஷோ உரையோடு கிளம்பிவிட்டேன். தனியாக செல்லும் நீண்ட பயணங்களில் பாடல்கள் தான் உற்ற தோழமை. மாறுதலுக்கு இந்த புதிய முயற்சி நல்ல பலனை கொடுத்தது என்றே சொல்லவேண்டும். மதியம் ராஜன் வீட்டில் உணவோடு ஒட்டிய உரையாடலில் பெரும் ஆர்வத்தை பரிசோதிக்கும் தருணங்களைப் பகிர்கையில் – கடைசி இரு தினங்களில் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய நண்பர்கள் கூடி இறுதியில் திரையரங்கில் தங்கி சரி செய்ததை நகைச்சுவையோடு தெளித்து கொண்டிருந்தார். கடும் உழைப்பை கோரும் நிகழ்வுகள் சிறிது நாட்களுக்கு பிறகு கேளிக்கையாய் தான் நினைவில் தங்கும்.
அரங்கிற்கு சென்றதுமே விழா மனநிலை பற்றிக் கொண்டது. நண்பர்கள் சூழ இருத்தலே இனிமை சேர்க்கும். இதில் வெண்முரசிற்காக என்பது இன்னும் இனிமையை கூட்டியது. இந்த கோவிட் காலத்தில் இணைய வழி கூடுகை தொடர்ச்சியாக நிகழ்ந்திருந்தாலும் நேரில் காண்பது என்பது தனிச்சுவை தான். ஆவணப்படத்திற்காக மொழியால், இசையால், காட்சியால் உதவி நல்கிய நண்பர்கள் மூவருக்கு மலர் நன்றியுடன் திரையிடல் தொடங்கியது.
ஒரு பாடல், நாவலை பற்றி பலரின் பதிவு என 90 நிமிடங்கள் நீளும் இப்படத்தை நாவலை பற்றி முழுவதும் அறிமுகம் இல்லாதவர்கள், சிறிது தெரிந்து தெரியாது இருப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்ற சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் மிக சிறந்த வணிக சினிமாக்களின் நேர்த்தியும், கலையின் ஆழத்தை அழகை சிறிதும் சமரசம் இல்லாது படைக்கப்பட்ட உன்னத படைப்பு. தொடக்கத்தில் வரும் அந்த title card பெரிய திரைக்கு உரியது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுதிய இப்படைப்பை குறித்து உலகம் முழுவதும் சேகரித்த நன்மணிகளில் நயமானதை பார்த்து பார்த்து எடுத்து செய்த அணிகலன். சக எழுத்தாளர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்கள் மத்தியில் வாசக நண்பர்களுக்கு பெரும் இடத்தை இப்படம் அளித்திருக்கிறது.
வெற்று புகழுரை எல்லாம் இல்லை, தான் புரிந்து கொண்டது, பிறவற்றோடு உண்டாக்கும் தொடர்பு, தன்னளவில் அது எப்படி ஒரு பயணத்தை தொடங்கி வைத்திருக்கிறது, தன் சுற்றத்தில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் என ஒவ்வொருவரின் பதிவுகளும் இயல்பான நெருக்கத்தை அளித்தது. இருபது மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாய் சுருக்குவது என்ற சவாலை எதிர்கொண்ட உழைப்பை படத்தொகுப்பு எஞ்ஞான்றும் பறைசாற்றும். விட்டுப் போனவைகளை சிறிது நாட்கள் கழித்து பகுதி பகுதிகளாய் வலையேற்றம் செய்யலாம்.
நிறைவாய் முழு நாவலையும் ஐந்து நிமிட இசைக்கோர்வை மொத்தமாக அள்ளி அனைத்திருக்கிறது. அஸ்தினாபுர வாயில், அம்பையின் அனல், தன்னோடு சமர் செய்யும் பீஷ்மர், துவாரகையின் அலைகள், இளநாகனின் மீட்டல், கள்வனின் குழல், பகடைகள் வஞ்சினம், எல்லாம் தின்றும் தீரா தழல் என்று 26 நாவல் வரிசையை மின்னல் ஒளியில் ஒரு கணம் தெரியும் மலை முகிடு என கொண்டு வந்திருக்கிறார்.
[image error]
ஆவணப்படங்களுக்கான நல்லதொருஅளவுக்கோலை நிறுவியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் இருள் முடிந்து இயல்பு திரும்பியதும் அங்கே ஒரு திரையிடல் இருக்கும் என்றே நம்புகிறேன்.கொண்டாட்டத்தோடு கூடுகை மீண்டும் தொடரட்டும்.
இத்தகைய ஒரு கருத்தை முன்னெடுத்து, தன் எல்லையின் முனை வரை சென்று, மிக சிறப்பான ஆவணப்படத்தை உருவாக்கி பெரும் அனுபவத்தை அளித்த ராஜன், சௌந்தர் மற்றும் திரைமறைவில் இவர்களுக்கு உறுதுணையாய் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். –
வி.வெங்கட பிரசாத்
வெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- நியூஜெர்ஸி
அன்புள்ள நண்பர்களுக்கு,
வெண்முரசு ஆவணப்படம் அவரவர் நகரங்களில் திரையிட, வாசக நண்பர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தவண்ணமுள்ளன. ஒவ்வொரு நகரிலும் தற்போதைய சூழ்நிலை அறிந்தும் ஏற்பாடு செய்யும் நண்பர்களின் மற்ற அலுவல்களை ஆலோசித்தும் திரையிடுகிறோம்.
நியூ ஜெர்ஸியில் வசிக்கும் வாசகரும் நண்பருமான பழனி ஜோதி அவரது நகரில் திரையிடவிருக்கிறார். அவருடன் துணைக்கு நின்று, திரையிடலுக்கான அடுத்தடுத்த பணிகளை செய்யும் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்களது நன்றிகள்.
முகவரி :
Reading Cinemas
180 N Main St, Manville, NJ 08835
23 May 2021 Sunday 3 PM
மேலும் விபரங்களுக்கு, நியூ ஜெர்ஸி வாசகர்களும் நண்பர்களும் pazhani.jothi@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
May 19, 2021
குப்பைநெருக்கடி
அன்புள்ள ஜெ..
உங்கள் கட்டுரையின் சில வரிகள் நீங்கள் உத்தேசித்திருந்தைவிட அதிகமாக −சில சமயம் வேறோரு கோணத்தில்/ தளத்தில் − விவாதத்துக்குள்ளாவதுண்டு. உதாரணமாக இன்ஃபெர்னோ கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறீர்கள்
“”பால்கனிகளில் துருப்பிடித்த பொருட்களை சேமிப்பது மும்பையின் பண்பாடு. ஆகவே பத்தடுக்கு மாளிகை என்பது இருநூறடி உயரமான துருப்பிடித்த பொருட்களின் குவியல்தான்.””
இந்த வரியை என் நண்பர்களுடன் வெகு நேரம் விவாதித்தேன். ஒரு காலத்தில் வீட்டில் இருக்கும் எதையும் தூக்கி எறிய விரும்பாத மனநிலையை இங்கும் பார்க்க முடிந்தது. துணி பழையதானால் தூக்கி எறிந்து விட மாட்டார்கள். தம்பிக்கு கொடுக்க வீடு துடைக்க தலையணையாக பயன்படுத்த முயல்வர்
டூத்பிரஷ் அதன் பழையதானால் ஜன்னல் கம்பியை சுத்தப்படுத்த, சைக்கிள் சக்கர மைய அச்சை சுத்தப்படுத்த என பலவாறாக உழைத்து ஓடாக தேய்ந்தபின்பே ஓய்வு பெறும்.தினசரி காலண்டர் பேப்பரைக்கூட பவுடர் திருநீறு மடிக்க, பேப்பரின் பின்புறம் மளிகைப்பட்டியல் எழுத பயன் படுத்துவார்கள். இட்லி மீதமானால் அதை வைத்து உப்புமா செய்வார்கள்.மறு சுழற்சி என்பது ஒரு வாழ்க்கை நெறியாக இருந்தது.இன்று அதெல்லாம் பழைய கதை
ஒன்று, எதற்கு சேர்க்கிறோம் என தெரியாமலேயே ஓட்டை உடைசல்களை − நீங்கள் குறிப்பிட்டதுபோல −வீட்டில் குவித்து வைக்கிறார்கள்.அல்லது அனைத்தையுமே யூஸ் அண்ட் த்ரோ ஆக்கிவிட்டனர்.ஒரு பொருளை பழுது பார்ப்பதற்கான செலவைவிட அதை கடாசிவிட்டு புதிதாக வாங்குவது மலிவானது என்ற சூழலை பெரு நிறுவனங்கள் உருவாக்கி , புதிதாக வாங்கிக் கொண்டே இருக்கும் நுகர்வுவெறியை ஊக்குவிக்கின்றன
நவீன வகை தொலைக்காட்சிப் பெட்டிகளை பழுது பார்ப்பதைவிட தூக்கி எறிந்து புதிதாக வாங்குவது மலிவு என்பதால் ஏராளமான தொகா பெட்டிகள் ஆண்டுதோறும் குப்பைக்கு செல்கின்றன.
அலைபேசி கருவிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களால் சேரும் குப்பை மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது
சில ஆண்டுகள் முன்புகூட , தண்ணீரை தேத்தாங்கொட்டை மூலம் சுத்தப்படுத்தி அதை பயன்படுத்துவார்கள். வெளியே சென்றால் தண்ணீரை எடுத்துச்செல்வர் .இன்று எங்கெங்கும் யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக். தண்ணீர் குளிர்பானங்களை குடித்துவிட்டு எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் ஏற்படுத்தும் பேரழிவு பலருக்குப் புரியவில்லை
அறுந்து விட்டால் தைத்து பயன்படுத்தும் செருப்புகள் இன்று அருகிவிட்டன. பழுது என்றால் தூக்கி எறிய வேண்டியதுதான்
காந்திய வாழ்வியலில் மறுசுழற்சிக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஆண்டு தோறும் பசியால் மடியும் கோடிக்கணக்கான இந்தியர்களைப் பற்றி கற்பனைக்கதை எழுதுவோர் (குமரப்பாவும் மொண்ணைப்பொருளியலும்) அன்றாடத்தில் காந்திய வாழ்வியல் குறித்துப்பேச வேண்டிய அவசியம் இன்று இருக்கிறது
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
***
அன்புள்ள பிச்சைக்காரன்,
விவசாய வாழ்க்கையில் சிறியபொருட்களை சேமிக்காமல் இருக்க முடியாது. மாடு வைத்திருந்தால் மாட்டுக்கு பயன்படும் பொருட்களை சேர்த்தாகவேண்டும். ஏன் சாணியையே எடுத்து எடுத்து ஓரிடத்தில் சேர்த்தாலொழிய எரு உருவாகாது.
ஆகவே விவசாயப்பின்னணியில் இருந்து வருபவர்கள் எல்லா பொருட்களையும் பாதுகாப்பார்கள். எதற்காவது எப்போதாவது பயன்படுமென நினைப்பார்கள். பெட்டிகள், புட்டிகள், சாக்குகள், காகிதங்கள், கம்பிகள், நூல்கள், கயிறுகள் எல்லாம் திரும்பத்திரும்ப பயன்படுத்தப்படும். விவசாயம் இன்றும் அப்படியே நடைபெறுகிறது
ஆனால் விவசாயக்களத்தில் அதற்கு இடம் இருக்கிறது. அதே மனநிலையை நகரங்களின் சிறிய இல்லங்களில் தொடரும்போது வீடு குப்பைமலையாக ஆகிவிடுகிறது. அதிலும் இன்றுள்ள பெரும்பாலான பொருட்கள் பயன்படுத்தியதும் தூக்கி எறியும் தன்மையில் உருவாக்கப்பட்டவை. அவற்றை பயன்முடிந்தபின் சேர்த்துவைப்பது கிறுக்குத்தனம்.
இன்று ‘பேக்கிங்’ பொருட்கள் மலிந்துவிட்டன. முன்பெல்லாம் நானே பிளாஸ்டிக் டப்பாக்களை வீசிவிடமாட்டேன். இன்று ஒரே ஒரு சாப்பாடு வரவழைத்தால் ஏழெட்டு பிளாஸ்டிக் டப்பாக்கள் வந்துசேர்கின்றன
இவை இன்றைய காலத்து வழக்கமாக ஆகிவிட்டன. இவற்றை செய்யக்கூடாது என்று சொல்லமுடியாது. ஆனால் நீங்கள் சொல்வது போல மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்யலாம். மறுபயன்பாடு செய்வது என்பது சேர்த்துக்குவித்து வைப்பது அல்ல. தேவையானவற்றை பிரித்து பகுத்து வைப்பது. தேவையற்றவற்றை உடனே மறுசுழற்சிக்கு அளித்து விடவேண்டும். பகுத்து பிரித்து அளிப்பதுதான் மறுசுழற்சிக்கு உதவும், வீசிவிடுவது அல்ல.
மறுசுழற்சியும் ஆற்றல்,நீர்,உழைப்பு ஆகியவற்றை வீணடிப்பதே. ஆகவே குறைந்த அளவு நுகர்வே வழி. அதற்கு சில நிபந்தனைகளை நாமே கொள்ளலாம். கூடுமானவரை ஒருமுறைப்பயன்பாடுகொண்ட பொருட்களை பயன்படுத்தாமலிருக்கலாம். நான் அதை எப்போதுமே கடைப்பிடிக்கிறேன். தூக்கிவீsaவேண்டியவற்றை வாங்குவதில்லை.
உதாரணமாக இன்று சீனாவிலிருந்து வரும் வீட்டுப்பயன்பாட்டு பொருட்கள் பல சில ஆண்டுகளிலேயே தூக்கி வீசப்படவேண்டியவை. நான் ஒரு சோபா வைத்திருந்தேன். நான்காண்டுகளில் தளர்ந்துவிட்டது. அதன் அடிப்பகுதியில் சுருள்வில்லுக்குப் பதிலாக ரப்பர்நாடாக்களை கட்டியிருந்தனர். நான்காண்டுகளில் தளர்ந்து குழியாகிவிடும். அதன்பின் மரத்தாலான சோபாக்களை வாங்கினேன். ஐம்பதாண்டுகள் உழைப்பவை.
ஓரிருமுறை பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி போட்டு அவற்றின் விலையை கூட்டலாம் என்று நினைக்கிறேன். தூக்கிவீசும் பொருட்களை கூடுமானவரை குறைத்துக்கொள்வதொன்றே செய்யக்கூடுவது.
ஆனால் உலகின் குப்பைநெருக்கடியை மறுசுழற்சியோ மறுபயன்பாடோ கொண்டு நிறுத்திவிடமுடியாது. உலகம் அதை பொருட்படுத்தாமல் முன்சென்றுகொண்டே இருக்கிறது. ஒரு முட்டுச்சந்து வந்தபின்புதான் பொருட்படுத்தி யோசிக்கத் தொடங்கும்.
ஜெ
கதாநாயகி -12
[image error]
𝟙𝟚காலையில் நான் கிளம்பியபோதுதான் கவனித்தேன், கோரன் களைப்புடன் இருந்தான். நான் அவனிடம் “என்ன?”என்றேன்.
“எந்தா?”என்று அவன் என்னிடம் கேட்டான்.
”ஏன் களைப்பா இருக்கே? காய்ச்சலா?” என்றேன்.
“நான் நாளைக்கு குடிலிலே உறங்கும்” என்றான்.
“எந்தக் குடிலில்?”
அவன் கொஞ்சம் யோசித்து முற்றத்தைக் காட்டி “இந்த மரத்தின்மேல் நான் மாடம் கெட்டுவேன்” என்றான்.
“ஏன்?” என்று நான் கேட்டேன்.
“அங்கே வங்களாவில் உறக்கம் வரல்லே”
“ஏன்?”என்று நான் மீண்டும் கேட்டேன்.
“நான் ஆரையோ கண்டேன்”
”யாரை?” என்றேன்.
அவன் பேசாமல் வந்தான்.
“சொல்லு, யாரை?”
அவன் விசும்பி அழ ஆரம்பித்தான். நான் அவன் தோளைப் பிடித்து “சொல்லு, யாரைப்பாத்தே?” என்றேன்.
“நான் சொப்பனம் கண்டேன்”
“என்ன சொப்பனம்?”
“ராத்திரி சொப்பனம்” என்றேன். “ஏமான் ஒரு பெண்ணினோடு பேசிக்கொண்டு இருக்குந்ந கண்டு”
நான் “அது வெறும் சொப்பனம்”என்றேன். “நான் புக்கு வாசிச்சேன். சத்தமா வாசிச்சேன். அதைக்கேட்டு நீ அப்படி நினைச்சிட்டே”
அவன் அதை பொருட்படுத்தவில்லை. தலையில் கரும்பலகையுடன் மௌனமாக நடந்து வந்தான். நாங்கள் இரட்டைப்பாறை மேல் ஏறியபோது எதிரில் தோளில் ரைஃபிளுடன் காக்கிக் நிஜாரும் சட்டையும் அணிந்த ஒருவர் அங்கே நிற்பதைக் கண்டேன். கரிய தடித்த உடல், பெரிய மீசை.
“வாத்தியாராக்குமா?”என்றார். உரத்த குரல் வெடித்து எழுவதுபோல ஒலித்தது. “இதென்ன பிளாக்போர்டா?”
“ஆமா”என்றேன்.
‘நான் ஃபாரஸ்டுகார்டு, ஞானப்பன்னு பேரு” என்றார். “கோதையாறிலே சொன்னாவ, சாரு வந்திட்டுண்டுன்னு… ”
நான் புன்னகைத்தேன்.
“இந்தவழியா போறீக?”
“ஆமா”
“இது புலிமடையாக்கும்”
“நான் ஒரு தடவை புலிய பாத்தேன்”
“எப்பமும் இருக்காது. இபடி அதுக்க ஏரியாவுக்குள்ள பத்து முப்பது எடம் வச்சிருக்கும். அதுக்கு ஒரு கணக்கு உண்டு. அதுக்கு தோணுத நேரத்திலே வரும். மழை, வெயிலு, குளிருன்னு சீசன் கணக்கு உண்டு அதுக்கு” என்றார். “இந்த மடை எல்லாம் தலைமுறை தலைமுறையா புலிகள் பயன்படுத்துறது. நம்மளை மாதிரியே அப்பன் கிட்டே இருந்து புள்ளை எடுத்துக்கிடும்… என்ன, அப்பனை அடிச்சு கொன்னுட்டுத்தான் புள்ளை பட்டத்துக்கு வரும். இந்த ஏரியாவுக்கு ஒண்ணு இப்ப இருக்கு. நாங்க மங்கோல்னு பேரு வச்சிருக்கோம்.இருபது வயசு ஆயிருச்சு. ஆளு பாக்க ஜம்னு இருப்பான். நல்ல பெரிய மண்டை, நீளமான மீசை. ஜூவிலே வளருத புலி மாதிரி தொப்பை கிப்பை கெடையாது. நடந்தா நடை நூல்பிடிச்ச மாதிரி நேரா இருக்கும்… இந்த இந்த மாதிரி சில்லி கிளையிலே நுனிக்கு வந்து அங்கேநுது அந்த கிளைக்கு தாவிருவான்…”
“ஆளைக் கொன்னதுண்டா?” என்றேன்.
“இவன் இதுவரை ஆளை கொன்னதில்லை… அதுக்கு இங்க வெளியாளு வாறதுமில்லை. காட்டிலே புலியடிச்சு சாகிறவன் ரொம்ப அபூர்வம். ஆனையடிச்சு மாசத்துக்கு ஒண்ணு விளுந்திரும்… ஆனைதான் அபாயம். புலி பெரிசா ஒண்ணுமே பண்ணாது. அதுக்கு நாம ஒரு காரியமில்லை. சல்லிப்பயக்கன்னு நினைக்கும்போல. நான் அம்பது அறுவது தடவை பாத்திருக்கேன். என்னையும் அதுக்கு தெரியும். ஒரு மயிராட்டு கூட வகை வைக்காது… சார், எவ்ளவுநாளு இங்க?”
“நான் இங்கதான் இருப்பேன்”
“இந்த வங்களாவிலேயா?”
“ஆமா” என்றேன் “இங்க வேற எடமில்லை இல்லியா?”
“இங்க தங்கலாம்தான்… ஆனா இந்த வளியா தனியா போறப்ப கையிலே ஒரு கம்போ மற்றோ வச்சுகிடணும்… ஆனை மாதிரியே இங்க பாம்பும் பெரிய ஆபத்தாக்கும்”
“பாத்துக்கிடுறேன்”
“இவனை கூட வச்சுக்கிடுங்க. இவனுகளுக்கு காடு நல்ல வசமாக்கும்” என்றார் ஞானப்பன் “அதானே ஸ்கூலு?”
“ஆமா”
“நல்ல வசமான எடமாக்கும். நான் நாலஞ்சுதடவை அங்க மளைக்கு ஒதுங்கியிருக்கேன்”
“இங்க பண்டு ஆரையாவது புலி பிடிச்சிருக்கா?”
“புலியா? இங்கயா? நானறிய இல்ல”
“இப்ப இல்ல . இருநூறு வருசம் முன்ன”
“இருநூறு வருசம் முன்ன நம்ம மூத்தப்பனை புலி பிடிச்சிருந்தாலே நமக்கு தெரியாது. என்ன கேக்குறீக?”என்றார். பிறகு “ஆனா இப்ப நீங்க கேக்குறதனாலே ஞாபகம் வருது. பண்டு ஒரு வெள்ளைக்காரத் துரையை புலி பிடிச்சிருக்கு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்”
“அவருபேரு கர்னல் சாப்மானா?”
“அப்டியா? தெரியாதே?”
“அவருகூட ஒரு லேடி இருந்தாளா?”
“ஆரு சொன்னா? நல்ல கதையா இருக்கே” என்றார். பிறகு யோசிச்சு “ஆனா கேட்ட ஞாபகம் இருக்கு. ஒரு லேடி வந்தா. அவ காணாம போயிட்டா. இங்கே இருந்து…”
“இந்த பங்களாவிலே இருந்தா?”
“ஆமான்னு நினைக்கிறேன். அவளையும் புலி பிடிச்சிருக்கலாம்னு சொல்லி கொஞ்சநாள் தேடினாங்களாம். கிடைக்கல்ல”
நாங்கள் இறங்கி சென்றோம். பள்ளிக்கூடம் அருகே துப்பன் நின்றிருந்தான். என்னைக் கண்டதும் உரத்தகுரலில் “இ!”என்று கூவி தரையில் அமர்ந்து இ என்னும் எழுத்தை வரைந்தான். அதை அவன் என்ன சொல்லப்போகிறான் என்று நான் நினைத்தேன்.
“தலையிலே பாளையிட்ட எளுத்து” என்றான். காணிக்காரர்கள் தலையில் கமுகுப்பாளையை சேர்த்துத் தைத்து அதை மழைக்கு போட்டுக்கொண்டு போவார்கள். அந்த எழுத்து மெய்யாகவே மழைக்கு தலையில் பாளையை வளைத்திருந்தது.
“இவன் ஆரு? நல்ல சூடா இருக்கானே? எளவு, எளுத்து படிச்சு போடுவான் போல இருக்கே” என்றார் ஞானப்பன்.
“படிக்கான்”என்றேன்.
துப்பன் தரையில் இ என்ற எழுத்தை பலமுறை எழுதினான். வெறியுடன் எழுதிக்கொண்டே இருந்தான். கூடவே “இ !இ !இ !”என்ற கூச்சல்.
“சரஸ்வதி தலைக்கு அடிச்சுப்போட்டா. இனிமே வேற வளியில்லை”என்றார் ஞானப்பன் சிரித்தபடி “செரி வாறேன்… நாலு மலை ஏறி எறங்கணும் இனிமே”
உச்சனிடம் நான் விசிலை கொடுத்தேன். அவன் அங்கே இங்கே கூச்சலிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளை விசில் ஒலித்து திரட்டி பள்ளிக்கூடத்திற்குள் கொண்டு சென்றான்.
கோரன் பள்ளிக்கூடத்தின் உள்ளிருந்து வந்தான். “ஏமானே, அரியில் முயலு”என்றான்
“என்னது?”என்றேன்.
அவன் என்னை அழைத்துச் சென்று காட்டினான். அவன் அரிசிச்சாக்கை தோண்டி எடுத்திருந்தான். அதை தரைக்கு அடியிலேயே முயல்வளை வந்து அடைந்திருந்தது. ஆனால் அதிக அரிசியை எடுத்திருக்கவில்லை.
“எடம் மாற்றி வைக்கணும்… மண்பானை வேணும்” என்று உச்சன் சொன்னான்.
“மண்பானையா?” என்று நான் சொன்னேன்.
துப்பன் ஆர்வமாக “கூனை உண்டு…நல்ல கூனை உண்டு” என்றான்.
“கொண்டுவா”என்று நான் சொன்னேன்.
அவன் உடனே வெளியே ஓடினான்.
“மண்பானையை முயல் ஓட்டைபோடாதா?”என்றேன்.
“போடாது”என்று கோரன் சொன்னான். பிறகு குரல்தாழ்த்தி மனக்குறையுடன் “துப்பன் இ படிச்சான்”என்றான்.
”அது வேற இ”என்று நான் சொன்னேன்.
அரிசியுடன் கோரன் வெளியே போனான். அவன் முகத்தில் அதிருப்தி இருந்தது.
புதிய கரும்பலகையில் நான் நான் எழுத்துக்களை சாக்பீஸால் எழுதினேன். அத்தனை குழந்தைகளும் அந்த வெண்ணிற எழுத்துக்களை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தன.
அவர்களிடம் எழுத்துக்களைச் சொல்லி கத்தவைத்தேன். துப்பன் ஒரு பெரிய பானையை சுமந்து கொண்டுவந்தான். காணிக்காரர்களே செய்த பானை. நல்ல எடையுடன் கோணலான வட்டம் கொண்ட வாயுடன் இருந்தது. ஆனால் உள்ளே இருபதுமுப்பது கிலோ அரிசி வைக்கமுடியும். அதற்கு மூடியும் இருந்தது.
“இதிலே போட்டு வை”என்று நான் கோரனிடம் சொன்னேன். பிறகு துப்பனிடம் ‘நீ ஒரு குழி வெட்டு”என்றேன்
துப்பன் உடனே கீழே இருந்த மாடங்களை நோக்கிச் சென்றான். சற்றுநேரத்திலேயே சிறிய மண்வெட்டியுடன் வந்து குழிவெட்ட ஆரம்பித்தான்.
நான் கதை சொல்லிக் கொண்டிருந்தபோது துப்பன் வந்து உடலை முழுக்க ஊசலாட்டி கைகளை வீசி ஏதோ சொன்னான். அவன் உச்சகட்ட வேகத்தில் இருந்தமையால் என்ன சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை.
நான் உச்சனிடம் குழந்தைகளுக்கு கதை சொல்லும்படிச் சொன்னேன். ஏற்கனவே நான் சொன்ன கதையை அவன் திரும்பிச் சொல்வான். மற்றபிள்ளைகளிடம் எழுத்து சுட்டிப் படிக்கச் சொல்லிவிட்டு துப்பனுடன் வெளியே சென்றேன்.
வெளியே துப்பன் தரையில் இடையளவு ஆழத்தில் ஒரு குழி எடுத்திருந்தான். அந்த குழிக்குள் இறங்கி அவன் சுட்டிக்காட்டினான். ஒரு ஜோடி சப்பாத்துக்கள் இருந்தன. தோல் சப்பாத்துக்கள். மட்கியிருந்தாலும் உருவழியாமல் இருந்தன.
”வெளியே எடு” என்றேன்.
அவன் கிழங்குபோல மண்ணோடு பிடுங்கி வெளியே எடுத்துப் போட்டான். உள்ளே மண்ணைக் கிண்டியபோது இரும்பாலான ஏதோ கிடைத்தது. துருப்பிடித்து மண்ணுடன் சேர்ந்து ஒரு கட்டியாக இருந்தது. வெளியே எடுத்துப் போட்டபோது மண் உடைந்து விழுந்தது. நான் அதை எடுத்து தரையில் தட்டினேன். அது ஒரு துப்பாக்கி. ஆனால் துருவும் மண்ணும் ஒன்றாகி ஒரு மொத்தையான வடிவில் இருந்தது.
சில எலும்புகள் இருந்தன. ஒன்று பெரியது, தொடையெலும்பு என்று தோன்றியது. நான் அவற்றைப் பார்த்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அவற்றை மேலே எவருக்குத் தெரிவிப்பது?
“திரும்பப்போட்டு அப்படியே மூடிரு…அந்தப்பக்கம் தோண்டு”என்று துப்பனிடம் சொன்னேன்.
அவன் என்னை புரியாமல் பார்த்தான்.
“வேண்டாம்… இந்த இடம் வேண்டாம்.. அதோ அங்கே தோண்டு” என்றேன்.
அவன் மண்வெட்டியுடன் மேலேறினான். நான் அந்த இடத்தைப் பார்த்தேன். மேலிருந்து மண் சரிந்துவிழுந்து மூடியிருக்கலாம். புலி கொன்ற கர்னல் சாப்மானின் உடலின் பகுதிதான் அது. அவருடைய துப்பாக்கிதான். சந்தேகமே இல்லை. அங்கே கொன்றிருக்கலாம், அல்லது வேறெங்கிருந்தாவது வந்திருக்கலாம். அங்கே மண் சரிந்து வந்து மூடிக்கொண்டிருந்தது.
“இதை உள்ளே போட்டு மூடிட்டு அங்கே போ”என்றேன்.
அவன் சரி என்று தலையை அசைத்தான்.
நான் குழிக்குள் மீண்டும் கூர்ந்து பார்த்தேன். “ எல்லா மண்ணையும் அள்ளி மேலே வை” என்றேன்.
அவன் குழிக்குள் இறங்கி அங்கிருந்து மண்ணை அள்ளி மேலே வைத்தான்.மட்கிய துணிப்பகுதிகள், பெல்ட் என்று சொல்லத்தக்க சில மட்கிய தோல்பட்டை, களிம்பேறிய வெண்கலக் கொக்கிகள், பித்தான்கள், ஒரு சங்கிலி.
நான் அதை எடுத்துப் பார்த்தேன். தங்கம் என்று தோன்றியது. கடிகாரத்தை கோத்து சட்டைப்பைக்குள் வைப்பதற்கான சங்கிலி. அவன் இன்னும் கொஞ்சம் மண்ணை தோண்டி வைத்தான். ஒரு சிறிய சங்கிலி. பூரான் போலிருந்தது. அதை தட்டி மண்ணை நீக்கினேன். அது ஒரு பிரெஸ்லெட். தங்கம்தான்.
அவனிடம் மறுபடியும் கொஞ்சம் மண்ணைத் தோண்டும்படிச் சொன்னேன். அவன் அள்ளிவைத்த மண் சேறாக இருந்தது. இரு சங்கிலிகளை மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் உள்ளே போட்டு புதைக்கச் சொல்லிவிட்டேன். அவற்றை என் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டேன்.
அன்று சாப்பாடு முடித்து கிளம்பினோம். கோரன் கரும்பலகையை தூக்கி கூரையோடு ஒட்டியதுபோல சேர்த்துக் கட்டிவைத்து , அண்டாவை மரத்தின் மேல் கட்டி தொங்கவிட்டு, கிளம்புவது வரை நான் அந்தச் சங்கிலியையே பார்த்துக் கொண்டிருந்தேன். கீழிறங்கிச் சென்று ஓடையில் அவற்றை கழுவினேன். தங்கம் என்பது உறுதியாகியது. ப்ரெஸ்லெட் மூன்று பவுன் இருக்கும். சங்கிலியும் இரண்டுபவுன் இருக்கும்.
திரும்பி வரும்போது கோரன் “நான் குடில் கெட்டுவேன்” என்றான்.
நான் அவன் காலையில் விளையாட்டுக்குச் சொல்வதாகவே நினைத்திருந்தேன். ஆனால் அவன் தீவிரமாக இருந்தான். நான் ஒன்றும் சொல்லவில்லை.
பங்களாவுக்குச் சென்றதுமே கோரன் ஒர் அரிவாளுடன் வெளியே கிளம்பிவிட்டான். மூங்கில் வெட்டிக்கொண்டு அவன் போடுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். டீயை நானே போட்டுக்கொண்டேன். அந்தசெயினை மேஜை டிராயரில் போட்ட்டுவைத்தேன்.
அவன் காட்டுக்குள் இருந்து மூங்கில்கள் கொண்டுவந்து போடுவதை வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த பெருமழையை தாங்கும்படி அவனால் மாடம் கட்டிவிடமுடியுமா? ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவர்கள் பிள்ளைக் குட்டிகளுடன் மாடங்களில்தான் வாழ்கிறார்கள், தலைமுறைகளாக.
எனக்கு தூக்கம் வந்து அழுத்தியது. உள்ளே சென்று படுத்துக்கொண்டேன்ஆனால் படுத்ததும் தூக்கம் போய்விட்டது. நினைவுகளும் எண்ணங்களும் கலந்து கொப்பளித்தன. கடந்த சிலநாட்களாகவே என் தூக்கம் குறைந்துகொண்டே வந்தது. நேற்றிரவெல்லாம் நான் அரைமணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டேன். அமர்ந்தபடியே தூங்க முடியும். படுத்தால் உள்ளம் விழித்தெழுந்து ஓட ஆரம்பிக்கும்.
உள்ளம் என்பதை அப்படி ஒரு தீவிரமான பெருக்காக நான் உணர்ந்ததே இல்லை. அதை ஒரு பருவடிவப் பொருளாக, எடையும் அழுத்தமும் வெப்பமும் வேகமுமாக அறியமுடிந்தது. தொட்டுவிடலாம் என்பது போல. அதன்மேல் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அது முட்டிமோதி பெருகிச்சுழித்து சரிவிறங்கும் காட்டாறுபோலச் சென்றுகொண்டே இருந்தது.
உள்ளத்தின் ஓட்டத்தை நான் முன்பும் கவனித்ததுண்டுதான். ஆனால் ஒரேசமயம் ஒன்றுடனொன்று சம்பந்தப்படாத பல எண்ணச்சரடுகள் என்னுள் ஓடுவதை கவனித்ததில்லை. சரடுகள் என்கிறேன், அர்த்தமுள்ள எண்ணங்களின் கண்ணிகள் அல்ல அவை. ஒன்றையொன்று உந்திவிடும் ஒன்றோடொன்று தொடர்பே அற்ற எண்ணங்கள்.
ஆனால் ஒருகணம் நின்று அவற்றை கவனித்தால் அத்தருணத்தில் நின்று அவை வெற்றுச் சொற்களென தங்களைக் காட்டின.அப்போது உருவாகும் துணுக்குறல் என் உடலை உலுக்கும். என்னவென்றே தெரியாத சொற்கள். வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து நம் வீட்டைத்திறந்து உள்ளே நுழைந்தால் என்னவென்றே தெரியாத பொருட்கள் நிறைந்திருப்பதைக் கண்டால் எப்படி இருக்கும்?
சொற்கள் எங்காவது பொருந்தாவிட்டால் எத்தனை அபத்தமானவை. ஒன்றுடனொன்று இணைந்து சொற்றொடர் ஆகாத சொற்கள் வெறும் கூழாங்கற்கள். இதோ இக்கணம் என் மனம். நாய், கமுகுப்பாளை, திங்கள்கிழமை, யானை, வீடு, அம்மா, அக்பர், அலக்ஸாண்டர் கிரகாம்பெல், ராமாயணம் என ஒரு சொற்கூட்டம் அங்கே உறைகிறது. ஒரு கணம் அஞ்சினால் உடனே அச்சொற்களும் பயந்த பறவைகளை போல கலைந்து சுழன்று கொப்பளிக்க ஆரம்பித்துவிடும்.
எத்தனை வேகம், எத்தனை வெறி. அரிதாக கோபவெறி கொள்ளும்போது மட்டும்தான் என் உள்ளம் இத்தனை வேகத்துடன் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அதுவும் கொஞ்சநேரம். அந்த வேகம் தாளாமல் உடல் மட்டுமல்ல உள்ளமும் களைத்துவிடும். கடுமையான அவமானங்களின்போது இப்படி உள்ளம் வெறிகொண்டிருக்கிறது. விதவிதமாக கற்பனைசெய்து வெவ்வேறு வகையாக நடித்து கத்தி கூச்சலிட்டு ஆடி அடங்கியிருக்கிறது. ஆனால் இப்போது விழித்திருக்கும்போது முழுக்க அது கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. தூங்கும்போதுகூட தூக்கத்தின் அடியில் கொந்தளித்து பெருக்கெடுக்கிறது. எவரையோ வெறியாவேசத்துடன் வசைபாடுவதுபோல, எவரிடமோ கண்ணீருடன் மன்றாடுவதுபோல, எதையோ கடைசியாகச் சொல்லிக்கொண்டிருப்பதுபோல.
என் முகம் வஞ்சத்துடன் எதையோ எண்ணிக்கொள்பவரின், கடுஞ்சினத்துடன் எவரையோ தாக்கப்போகிறவரின் பாவனை கொண்டிருக்கும் போல. தூங்கும்போதும் அப்படியே என் முகம் உணர்ச்சியலைகளுடன் இருந்துகொண்டிருக்கும். இது தூக்கமே இல்லை. இது மேல்மனம் கொஞ்சம் மயங்குவதுதான். விழித்திருக்கையில் எல்லாம் நான் என்னை மீறி பேசிக்கொண்டிருக்கிறேன்.அருகே எவரோ நின்றிருப்பது போல. அப்பேச்சொலியை நானே கேட்கிறேன். அது என்னையே துணுக்குறச் செய்கிறது. அதுதான் கோரனை அச்சுறுத்திவிட்டிருக்கிறது.
என்னருகே அவள் வந்து நின்றாள். நான் “நீயா?”என்றேன். “விர்ஜீனியா?”
”இல்லை, நான் ஃப்ரான்ஸெஸ் பர்னி”
“இல்லை, நீ விர்ஜீனியா என்றாய்”
“அப்படி அப்போது இருந்தேன். இப்போது நான் ஃபேன்னி பர்னி” என்று அவள் தன் சட்டையை கழற்றினாள். இரு முலைகளும் சீவி எடுக்கப்பட்டிருந்தன. பளபள்ப்பான தழும்பு உருகிய மெழுகுத்தடம் போலத் தெரிந்தது. “நான் விடுதலைபெற்றவள்…”
“ஓ” என்றேன். அந்த தழும்புகள் தீயால் பொசுக்கப்பட்டதன் வடுக்கள் என்று தோன்றின.
“உள்ளிருந்த வெம்மையால் உருகிய கலம்”என்று அவள் சொன்னாள்.
நான் “ஆம்”என்றேன்
“எனக்கும் இப்படித்தான், சொற்கள் உடைந்து பெருகி ஓடிக்கொண்டிருக்கும்”
“நான் என்ன செய்வது?” என்றேன் “என் உள்ளம் கொந்தளிக்கிறது. நானும் உருகி விடுவேன் என்று நினைக்கிறேன்”
”அவையே அடங்கட்டும்… நீ தூங்கு”
நான் “ஆம், தூங்கியாகவேண்டும்” என்றேன். “நேற்று தூங்கவில்லை. நேற்று விர்ஜீனியாவை கண்டேன். ரோமாபுரியின் கன்னிப்பெண்”
“அவள் ரோமிலிருந்து வரவில்லை”
“பிறகு?”
“லண்டனில் இருந்துதான்…”
“அப்படியா?”
“ஆமாம், அவளும் அந்த ஈவ்லினாவும் பேசிக்கொண்டிருப்பதை நான் ஒருமுறை பார்த்தேன்”
“ஓ”என்றேன்
”தூங்கு…நான் அருகே இருக்கிறேன்”
“இந்த வார்த்தைப் பெருக்கை கொஞ்சநேரம் நிறுத்த முடியுமா?”
“நானா?”
“ஆம், நீதான் அவற்றை உருவாக்கினாய்”
”நான் பார்க்கிறேன்” அவள் என் நெற்றிப்பொட்டில் தொட்டாள் சட்டென்று வெப்பம் குளிர்வதுபோல அத்தனை எண்ணங்களும் விரைத்து அசைவிழந்து நின்றன. ஆயிரம் கிலோ எடையை என்மேலிருந்து எடுத்ததுபோல இருந்தது.
நான் விழத்தொடங்கினேன். மிக ஆழமான ஒரு குகைக்குள். இருண்ட, அடியில்லாத குகை. அதில் தலைகீழாகச் சென்றுகொண்டிருந்தேன். நன்றாக குளிர்ந்தது. ஓசைகள் மழுங்கிச்சுழல சென்றுகொண்டே இருந்தேன். ஆனால் படுத்திருப்பதையும், என் கைகால்கள் சில்லிட்டிருப்பதையும் உணர்ந்தேன்.
நான் மூன்று மணிநேரம் தூங்கியிருப்பேன். விழித்துக்கொண்டபோது மிகமிக நன்றாக தூங்கியிருப்பது தெரிந்தது. பின்னரும்கூட அத்தகைய ஆழ்ந்த தூக்கத்தை நான் அடைந்ததில்லை. உள்ளம் அதன் உச்சங்களை அடைந்தபின் சட்டென்று திரும்பி ஓய்வெடுக்கையிலேயே அத்தகைய தூக்கம் நிகழ்கிறது. கடும் நெருக்கடிகளுக்குப் பின்புள்ள முறுக்கவிழ்தலில். வலியும் நோயும் சற்று தணியும்போது. சாவு வீட்டில் அப்படி ஒரு தூக்கம் வருவதை பார்த்திருக்கிறேன். சித்தப்பிரமையின் இடைவெளிகளில் அந்த தூக்கம் வரும். ஏனென்றால் சித்தப்பிரமை என்பது நம் மூளை அதன் வேகத்தின் உச்சத்தை அடைந்து உரசிச் சூடாகி உருகித் திரவமாக ஆகிவிடும் நிலை.
என் உள்ளம் தெளிந்திருந்தது. கைகால் புதிதாக பிறந்து வந்தவை போலிருந்தன. எழுந்து வெளியே சென்றேன். கோரன் குடிலைக் கட்டி முடித்துவிட்டிருந்தான். கமுகுப்பாளைகளை கண்டடைந்து அவற்றைச் சேர்த்து தைத்து கூரைபோட்டிருந்தான். கவிழ்க்கப்பட்ட கூடைபோன்ற கூரை. மூங்கில்களை வளைத்து, வில்போல தெறிக்கச்செய்து, கூரைச்சட்டகத்தை அமைத்திருந்தான். ஆகவே கூரை நன்றாக இழுபட்டு விரைப்பாக நின்றிருந்தது. மூங்கிலால் ஆன தூண்களின் மேல் கூரை. அதன் தரை பிளக்கப்பட்ட மூங்கில் பரப்பி மேலே கமுகுப்பாளை பரப்பியது. அதைப்பார்த்ததுமே தெரிந்தது, அது எந்த மழையையும் தாங்கும்.
அவன் அதில் நிம்மதியாக இருப்பான் என்று தோன்றியது. அந்த குடிலுக்குள் அவன் படுக்குமளவுக்கே இடமிருந்தது. அது ஒரு கூடுதான். அவன் அதில் அமர்ந்தே தூங்குவான். ஆகவே அதற்குள் அவனுடைய பொருட்களை வைக்கக்கூட இடமிருக்கும். அவன் இத்தனை பெரிய பங்களாவில்கூட ஓர் ஓரத்தில்தான் தூங்கினான், அவன் அவ்வளவு இடத்தை மட்டுமே எடுத்துக்கொண்டான். அவனுக்கு அவ்வளவு போதும். மனிதனுக்கு நிறைய இடம் வேண்டியதேயில்லை.
அவன் என்னை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்து “கட்டியாய், மாடம் கட்டியாய்”என்றான்.
“நல்லா இருக்கு ” என்றேன்.
“நான் இப்ப வந்நு கஞ்ஞி வைக்கும்”என்றான்.
பொழுதடைந்துகொண்டிருந்தது. காட்டில் வெம்மை இல்லை. மழை வருமா என்று சொல்லத்தெரியவில்லை. காற்றும் இல்லை.
கோரன் வந்து சமைக்க ஆரம்பித்தான். நான் காட்டைப் பார்த்தபடி படியில் அமர்ந்திருந்தேன். காட்டில் என்னென்னவோ நிகழ்ந்துகொண்டிருந்தன. ஒரு கீரி முற்றத்தை கடந்து குறுக்காக ஓடியது. தொடர்ந்து இன்னொன்று ஓடியது. ஒரு மான் முற்றத்தின் விளிம்புவரை வந்துவிட்டுச் சென்றது. காட்டுப்புதர்களுக்குள் மேலும் மான்கள் இருப்பது தெரிந்தது. அப்பால் ஒரு யானையின் பிளிறலோசை கேட்டது.
இன்னொரு மான்கூட்டம் மறு எல்லையில் வந்து நின்றது. தலைமை மான் முற்றத்தை அணுகி காதுகளை கோட்டி என்னைப் பார்த்து ‘நான் இப்ப ஓடிருவேன்’ என்னும் பாவனையில் நின்றது. நான் கைநொடிக்க எண்ணியதுகூட அதற்குத்தெரிந்தது. கைநொடித்ததும் பாய்ந்தோடி மறைந்தது.
இங்கே மான்கள் கூடுதலாகக் கண்ணுக்குப் படுகின்றன என நினைத்தேன். பொதுவாக அவை மனிதர்கள் வாழுமிடங்களை அணுகி வருகின்றன, ஏனென்றால் அங்கே புலியும் சிறுத்தையும் ஓநாயும் வருவதில்லை. இந்த பங்களா இருநூறாண்டுகளாக காட்டில் இருக்கிறது. ஆனால் அது இன்னும்கூட காட்டின் ஒரு பகுதியாக ஆகவில்லை.
இருட்டிவிட்டது. கோரன் சமைத்துவிட்டு வந்து அழைத்தான். நான் சூடான கஞ்சியையும் காணச்சுண்டலையும் சாப்பிட்டேன். கோரன் சாப்பாட்டை கையில் எடுத்துக்கொண்டு மரத்தின்மேல் தொற்றி ஏறி மேலே சென்றுவிட்டான். அங்கே அவன் இருப்பதே தெரியவில்லை.
மழை வருவதுபோல தெரியவில்லை. அந்தக் காட்டில் மழையின் ஓசை ஒரு திரை, அது மற்ற ஓசைகளை மறைத்துவிடுகிறது. அந்த ஓசையை போர்வைபோல போத்திக்கொண்டு தூங்கமுடிகிறது. மழையின் ஓசையில்லாதபோது காட்டின் ஓசைகள் எழுந்துகொண்டே இருந்தன. அவை புலன்களை திடுக்கிட வைததன. ஆடுகளின் இருமல் ஓசை. மான்களின் விம்மல்போன்ற ஓசை. யானைக்குரல். மிக அப்பால் எங்கோ ஓர் இனந்தெரியாத உறுமல்.
நான் படுக்கையில் படுத்துக்கொண்டேன். சற்றுநேரம் நெளிந்துகொண்டிருந்தேன். தூக்கம் வருவதுபோல தெரியவில்லை எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்தேன். மீண்டும் வந்து படுத்துக்கொண்டேன். கண்களை மூடினால் மனம் அத்தனை அமைதியாக இருந்தது. ஒரு சொல் எஞ்சியிருக்கவில்லை. துடைத்த கண்ணாடிப் பரப்பு. அதில் வழுக்கி வழுக்கிச் செல்லும் மண்புழு போல ஓர் இருப்புணர்வு.
அறைக்குள் அவளை உணர்ந்தேன். அவளுடைய நிழல். அவளுடைய அசைவுகள். பின்னர் அவளை தெளிவாகவே பார்த்தேன். சிவப்புக்கூந்தல் கொண்ட, இளநீலநிற கவுன் அணிந்த வெள்ளைக்காரப் பெண்.
அவள் மெல்லச் சென்று மேஜையின் டிராயரை திறந்தாள். அந்த இரு தங்கச் சங்கிலிகளையும் எடுத்துப் பார்த்தாள். ப்ரெஸ்லெட்டை எடுத்து இடக்கையில் அணிந்து கையை தூக்கிப் பார்த்தாள். கையை விதவிதமாக அசைத்தாள்.
நான் எழுந்தேன். என் அசைவைக் கண்டு திடுக்கிட்டு நகையை கழற்றி மேஜைமேல் வீசிவிட்டு எழுந்தாள்.ஆனால் நான் அதன் பிறகுதான் விழித்துக்கொண்டேன். எழுந்து பார்த்தேன். அறைக்குள் எவருமில்லை. அரிக்கேன் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. நிழல்களும் ஆடின.
நான் மேஜைக்குச் சென்று பார்த்தேன். அந்த ப்ரெஸ்லெட் மேஜைமேல் வீசப்பட்டிருந்தது. அரைவாசி திறந்த டிராயருக்குள் செயின் இருந்தது. நாற்காலியில் அமர்ந்தேன். கைகளை கட்டிக்கொண்டு புத்தகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அத்தனை மனத்தெளிவுடன் நான் அதைப் பார்த்ததில்லை.
அதை எடுத்துப் பிரித்தேன். கைபோனபோக்கில் ஒரு பக்கத்தை எடுத்தேன். I have since been extremely angry with myself for neglecting so excellent an opportunity of apologizing for my behaviour at the ridotto: but, to own the truth, that affair never once occurred to me during the short tete-e-tete which we had together. ஈவ்லினா எழுதினாள். அவளுடைய அந்த பழமையான மொழி. மொழி பழையதாகும்போது உள்ளங்கள் பழையதாகிவிடுகின்றனவா? பிரச்சினைகளும் உணர்ச்சிகளும் கூட பழையனவாகத் தெரிகின்றனவா?
இந்த நாளில் இத்தனை சலிப்பாக, இத்தனை சோர்வாக ஏன் உணர்கிறேன்? பொதுவாகப்பார்த்தால் எனக்கு என்ன சிக்கல்? இந்த அரண்மனை, வேலையாட்கள், செல்வங்கள், இதெல்லாம்தானே என்னைப்போன்ற ஒரு பெண் ஆசைப்படவேண்டியது? ஆமாம், நான் இதைத்தான் இளமை முதல் கனவு கண்டு வந்தேன். முதிரா இளமையிலேயே இந்தக் கனவுக்குள் வந்துவிட்டேன். ஆனால் கனவை அடைந்தபின் ஒருநாள்கூட மகிழ்ச்சியாக இல்லை.
மகிழ்ச்சியாக இருந்ததெல்லாம் மேடம் பியூமாண்டின் வீட்டில் தங்கி சீமாட்டியாவதற்கான பயிற்சியை எடுத்துக்கொண்டிருந்த நாட்களில் மட்டும்தான். எத்தனை எதிர்பார்ப்பு, எத்தனை பதற்றம். ஒவ்வொருநாளும் இன்னும் எத்தனை நாள் என்று கண்விழிக்கும் ஆவல். எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிட்டன. அப்பா மகிழ்ச்சியானவராக ஆகிவிட்டார். அம்மாவின் முகம் தெளிந்துவிட்டது. தங்கைகளுக்கு உடைகளும் நகைகளும் கிடைத்துவிட்டன. அவர்களும் நல்ல ஆண்களை கண்டடைய முடியும். எல்லாமே ஒரு மாயக்கோலால் தீண்டப்பட்டு இனிமையாக ஆகிவிட்டன.
பயணம்கூட மகிழ்ச்சியானதுதான். என் முதல் கடற்பயணம். முதல் பதினைந்து நாள் உடலில் எதுவுமே தங்கவில்லை. குமட்டி உமிழ்ந்துகொண்டே இருந்தேன். ஆகவே அந்தக் காமமும் பெரிய வதையாக இருந்தது. முன்பே அறிந்திருந்ததுதான், மெக்கின்ஸி ஒரு மூர்க்கமான விலங்கு. அவருடையது விலங்குக் காமம். அவர் பழகியதே அப்படித்தான். அவருடைய மகிழ்ச்சிகளும் அப்படியானவைதான்.
ஆனால் லண்டனில் அந்த எதிர்பார்ப்பிலும் பரபரப்பிலும் அது இனியதாக இருந்தது. அதில் திளைக்க முடிந்தது. என்னையும் ஒரு மிருகமாக ஆக்கிக்கொண்டேன். ஆனால் அதை நான் காட்டக்கூடாது. என்னைப்போன்ற சீமாட்டிக்கு உடலுறவில் உச்சமே வரக்கூடாது, வந்தால் ஆண் அதை அறியக்கூடாது. ஆங்கிலப்பெண்கள் அதை இன்னொரு பெண்ணிடமே வெளிப்படையாக அடையவேண்டும்.
அது பிழை அல்ல, வழக்கமானதுதான் என்றாள் மேடம் ஃப்யூமாண்ட். மெக்கின்சி சென்றபிறகுதான் நான் என் உடலை அடையாளம் கண்டேன், மேடம் ஃப்யூமாண்ட் அதில் தேர்ந்தவள். கப்பலின் ஆட்டத்திலும் தலைசுற்றலிலும் மெக்கின்ஸியின் மூர்க்கம் இன்னும் கொடிதாக இருந்தது. ஆனாலும் நான் மெல்ல மகிழ்ச்சியானவளாக ஆனேன்.
டான்ஜியர் துறைமுகத்தை கண்டபோது குதித்து கூச்சலிட்டு கைக்குட்டையை காற்றில் வீசி மகிழ்ந்தேன். மசகு எண்ணை நாற்றமடிக்கும் சிறிய ஊர். இடுங்கலான தெருக்கள். தெருக்கள் மேலேயே பால்கனிகள் துருத்தி நிற்கும் மரத்தாலான வீடுகள். தெருவெங்கும் குதிரைச்சாணி. கடல்நீரின் உப்பு உடலில் படிந்தபடியே இருக்கும். முகத்தில் சாயம்பூசி ரத்தச்சிவப்பு ஆடையணிந்த உள்ளூர் விபச்சாரிகள். நோயுற்ற குதிரைகளுடன் கடகடத்துச் செல்லும் வண்டிகள். சவுக்கொலிகள், கூச்சல்கள்.
எங்கேயும் எதையேனும் விற்றுக்கொண்டே இருந்தனர். ”மதாம் உயர்ரகமான வெள்ளிக் காலணிகள்… வெள்ளிப்பூச்சல்ல, தூயவெள்ளியிலேயே செய்யப்பட்டவை”. கூவியபடியே பின்னால் வந்தார்கள். “மேடம், இந்த கற்கள் வைரங்களுக்குச் சமானமானவை. பாலைவனத்தில் மட்டுமே கிடைப்பவை. பாலைவனத்தில் எப்போதாவது விழும் மழைத்துளிகள் இப்படி வைரங்களாக மாறிவிடுகின்றன!”
”எதையும் வாங்காதே” என்று மெக்கின்ஸி சொன்னார். ”எல்லாமே போலியானவை. இங்கே போலிப்பொருட்களைச் செய்து விற்பதற்கென்றே ஒரு பெரிய பின்னணி உலகம் இயங்குகிறது”
ஆனாலும் மலிவாக இருக்கிறதே என்று நான் இரண்டு சந்தனக் காலணிகள் வாங்கிக்கொண்டேன். மரத்தாலான ஒரு இடைச்சரடும் வெள்ளியாலான நான்கு வளையல்களும் வாங்கினேன். பத்துநாட்கள் அந்த வினோதமான நகரத்தில் இருந்தேன். இந்தியா வந்தபிறகுதான் சந்தனத்திற்கும் அந்த காலணிகளுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்துகொண்டேன்.
அங்கே லண்டனை விட மகிழ்ச்சியாக இருந்தேன். லண்டனில் நான் சீமாட்டியாக நடித்துக்கொண்டிருந்தேன். மிகக்கவனமாக, மிகமிக கூர்மையாக அவதானித்தபடி. அங்கே நான் இயல்பாகவே சீமாட்டியாக இருந்தேன். செல்வம் கொண்டவளாக, பெருந்தன்மையும் கருணையும் கொண்டவளாக, இனிய மென்மையான நாசூக்கான பெண்ணாக. தாராளமாகவே பிச்சை அளித்தேன். எல்லாவற்றையும் கண்டு மிகையாக வியந்தேன். நினைத்தால் அந்நகரத்தையே விலைக்கு வாங்கிவிடுபவளாக உணர்ந்தேன்.
மதராஸும் எனக்குப் பிடித்திருந்தது. அங்கும் நான் வெற்றிகளையே கண்டேன். கவர்னருடன் நடனமாடினேன். கர்னல்களின் மனைவியரின் பொறாமைக்கண்களால் சூழப்பட்டிருந்தேன் .இங்கே டிரிவாண்டிரத்திலும் நான் வெற்றியைத் தவிர எதையும் காணவில்லை.
இந்த இடம் ராணுவ முகாம். முன்பு ராணுவ முகாம் அஞ்செங்கோவில் இருந்தது. அங்கே இடமில்லை. ஆகவே இந்த விரிந்தகன்ற பகுதியை மகாராஜா அளித்தார். இதன் பெயர் பாங்கோட். இது சுற்றிலும் காடு செறிந்த நிலம். நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் அணுகும் தொலைவில் இருந்தன. ராணுவத்திற்குத் தேவையான எல்லாமே அந்த ஊர்களில் இருந்துதான் வந்தன.
அந்தியில் இங்கே ராணுவ முகாமுக்கு வெளியே பெரிய சந்தைகள் கூடுகின்றன. காய்கறிகளில் இருந்து குதிரைக்குத் தேவையான பசும்புல் வரை. நான் சந்தையை பலமுறை சென்று பார்த்திருக்கிறேன். மூங்கில்கூடைகள் பின்னுபவர்கள் பின்னியபடியே விற்பார்கள். பெண்கள் மார்புகளை மறைப்பதில்லை. கரிய மார்புகள், கொப்பரையின் பளபளப்பு கொண்டவை. வெண்கூழாங்கல் போன்ற பெரிய கண்கள் கொண்ட குழந்தைகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட கிழங்குகள் போல மண்படிந்தவை.
கீழ்க்குடிகள் அனைவருமே முடியை பெரிய கொண்டையாகக் கட்டியவர்கள். உயர்குடிகள் சந்தைகளுக்கு வருவதில்லை. அவர்கள் சீன ஜாடியின் மூடியின் மேலுள்ள கைப்பிடி போல தலையில் சற்று முடியை முடிச்சுபோட்டு விட்டு எஞ்சியதை மழித்திருப்பார்கள். ஆனால் அவர்களிலும் எந்தப்பெண்ணும் மார்புகளை மறைப்பதில்லை.
முதல்முறை அரண்மனைக்கு ஒரு விருந்துக்காகச் சென்றபோது அரசியை பார்த்தேன். கிழவி. அவள் பட்டுச்சால்வையை போர்த்தியிருந்தார். ஆனால் அத்தனை சேடிப்பெண்களும் திறந்த மார்புகளுடன் இருந்தனர். ஆனால் பட்டு இடையாடை அணிந்திருந்தனர். பொன்னாலான நகைகள் அணிந்திருந்தனர்.அந்த இடையாடை முழங்கால்வரைத்தான். அதன்மேல் பொன்னாலான தடித்த பெரிய இடைநகை. அதை என்னவென்று சொல்வது? பழங்கால கிர்டில் போல.
அவர்கள் நயத்தக்க நாகரீகம் கொண்டவர்கள். மென்மையாக முறைமைச்சொல் பேசினார்கள். அரசி ஆங்கிலம் நன்றாகவே பேசினாள். அவளால் பிரெஞ்சும் பேசமுடியும். உள்ளூர் மொழிகள் நான்கு அவளுக்குத் தெரியும். அவள் அரசரின் மனைவி என நினைத்தேன். அவள் அரசரின் தமக்கை. இங்குள்ள முறைப்படி அரசியே உண்மையான ஆட்சியாளர். அரசர் அவ்வரசியின் பிரதிநிதி மட்டும்தான்.அரசரின் மனைவிகள் அரசி ஆவதில்லை. அரசியின் தங்கையோ அவள் மகளோதான் அடுத்த அரசி.
இப்போதிருக்கும் அரசரை தர்மராஜா என்கிறார்கள். அறம் வழுவ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

