Jeyamohan's Blog, page 986

May 15, 2021

வீகன் உணவுப்பழக்கம்

அன்புள்ள ஜெயமொகன் அவர்களுக்கு,

மிகுந்த பொருட்செலவுடனும், “வீ கேர் அனிமல்ஸ்”, ”சேவ் அனிமல்ஸ்” போன்ற எரிச்சலூட்டும் வாசகத்துடனும் பிரச்சாரம் செய்யப்படும் இந்த வீகன்(Vegan) உணவு முறை, அதன் அரசியல், வர்த்தகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அவர்கள் தம் தரப்பை நியாயப்படுத்துவது, உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுகின்றன, பாலுக்காகவும், முட்டைக்காகவும் பண்ணைகளில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன போன்றவை. நாகரீகம் வளர்ச்சி அடையும் போது உணவு பழக்கம் மேம்படுவது வரவேற்கத்தக்கது. மனிதர்களைத் தாண்டி விலங்குகளையும் நேசிப்பது என்பது மகத்தானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் உண்மையில் இவர்களின் நோக்கம் என்ன?

ஏன் இந்த சந்தேகம் என்றால் சமூக தளங்களில் இதை ப்ரமோட் செய்பவர்களை பார்க்கும் போது நமக்கு கோபம் தான் வருகிறது. எந்த சமூக புரிதலும் இல்லாமல் அசைவம் உண்பவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ காட்டுமிராண்டிகள் போல் சித்தரிப்பது, அனைத்து வகை தொற்று வியாதிகளுக்கும் இறைச்சி உண்பதுதான் காரணம் என்றும் சந்தடி சாக்கில் பரப்பி விடுகிறார்கள். சக மனிதன் மீது அக்கறை இல்லாத இவர்கள் விலங்குகள் மீது அக்கறை கொள்வது என்பது சந்தேகத்திற்கு இடமானதே.

சமீபத்தில் ஜேம்ஸ் கேமரூன், ஜாக்கி சான், அர்னால்டு போன்ற பிரபலங்கள் சேர்ந்து தயாரித்து வெளிவ்ந்த ‘கேம் சேன்சர்ஸ்’ என்ற ஆவணபடத்தை பார்க்க நேர்ந்தது. தன் விருப்பத்திற்கு ஏற்ப அறிவியலை திரித்து வேகன் உணவே ஆரோக்கியமானது என்று நிறுவப் பார்க்கிறார்கள். அந்த பிரபலங்கள் வேகன் ஆக மாறிவிட்டார்கள். இதே போல் இந்திய பிரபலங்கள் பலரும் வேகன் உணவு முறைக்கு மாறிவிட்டதாக பெருமையுடன் அறிவித்திரிக்கிறார்கள். ஒரு வயதுக்கு பிறகு சைவ உணவுக்கு மாறுவது உடலுக்கு ஆரோக்கியமானது தான். அதை ஏன் இவ்வளவு மெனக்கெட்டு எல்லாருக்கும் என பிரச்சாரம் செய்ய வேண்டும். அது போக வேகன் உணவு முறை செலவேறியது. முட்டை, இறைச்சி, பாலில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை வேகன் உணவு முறையில் இருந்து பெறுவது செலவேறியது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இதை முன் வைக்கிறார்களா? இவர்களின் நோக்கம் தான்
என்ன?

ஞானசேகர்

***

அன்புள்ள ஞானசேகர்

வீகன் உணவுப்பழக்கம், புரோட்டீன் மட்டும் உண்ணும் உணவுப்பழக்கம், காலைக்கும் மாலைக்கும் இடையே முழு உணவையும் முடித்துக்கொள்ளும் உணவுப்பழக்கம், ஒருவேளை மட்டும் திடஉணவு உண்ணும் பழக்கம்,  வேகவைக்காத உணவை மட்டுமே உண்பது என உணவுப்பழக்கங்களில் சோதனைகள் பல நிகழ்கின்றன.

சிந்திக்கும் மனிதன் தன் உடலைப்பற்றி கூர்ந்த கவனம் கொண்டிருப்பான் என்று காந்தி எழுதினார். எனக்கும் இந்த உணவு, உடல்நலச் சோதனைகளில் ஆர்வமுண்டு. நானும் புரோட்டீன் மட்டும் உணவு பழக்கத்தில் இருந்து கடுமையாக எடை குறைந்திருக்கிறேன். 1988ல் வேகவைக்காத உணவை மட்டுமே உண்டு ஓராண்டு இருந்திருக்கிறேன். அதுபற்றிய நூலை மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

இவற்றை தேவையானவர்கள் செய்து பார்க்கவேண்டியதுதான். பொதுவாக மிகை எடை கொண்டவர்களுக்கு புரோட்டீன் மட்டும் உணவு [பேலியோ] மிக பயன்தருகிறது. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும் அது அருமருந்தாக அமைகிறது. அதனால் கெடுதல்கள் இருக்கலாம் என்கிறார்கள் – நோயால், மிகு எடையால் வரும் அவதிகளுக்கு அது மேல்.

அப்படி ஒரு நல்ல உணவுமுறையை தான் கண்டுகொண்ட ஒருவர் அதை தேவை என்று நினைப்பவர்களுக்குச் சொல்வதிலும், அதை பரப்ப முயல்வதிலும் பிழையில்லை. ஆனால் ஒருவகை ஓர் உணவுப்பழக்கத்தை முழுமையான ஒரு தத்துவக்கொள்கையாக, உலகதரிசனமாக முன்வைப்பதும் சரி; அதை மதம்போல பிரச்சாரம் செய்வதும், அதைவைத்து மற்றவர்களை இகழ்வதும் சரி; கீழ்த்தரமான செயல்பாடுகள். வெறுக்கத்தக்க பண்பாடின்மைகள்.

உலகம் முழுக்க எல்லாவகையான உணவுப்பழக்கங்களும் வரலாற்றின்போக்கில் உருவாகி வந்துள்ளன. எல்லாமே நிகரானவைதான். வெறுக்கத்தக்க உணவுமுறை என ஏதுமில்லை என்பதுதான் என் புரிதல். நான் எந்த உணவையும் அருவருத்ததோ வெறுத்ததோ இல்லை – ஈசல் பாம்பு, முதலை எல்லாமே சாப்பிட்டிருக்கிறேன். இன்று எனக்கு ஒத்துக்கொள்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பேன்.

ஒரு குறிப்பிட்ட உணவை மட்டும் நாகரீகமானது, மேலானது, அதை உண்பதனால் தாங்கள் மேலானவர்கள் என நினைப்பது ஒருவகை அறியாமை. ஆன்மிகமான இருளறை அது. அந்த குருட்டுத்தனம்தான் மானுடர் பிற மானுடரை இழிவென நினைக்க, ஒடுக்க அடிப்படை அமைத்து அளித்தது. நவீன மனிதன் அருவருக்கவேண்டியது அந்த மனநிலையைத்தான்

உலகம் முழுக்க மனிதன் வெவ்வேறு சூழல்களில் பரிணாமம் கொண்டு வந்திருக்கிறான். வெவ்வேறு உணவுகளுக்குப் பழகியிருக்கிறான். தேவை சார்ந்தும், கிடைப்பதை ஒட்டியும் பண்பாடுகள் உருவாகியிருக்கின்றன. வசுதைவ குடும்பகம் என்பது உலகை தன் குடும்பமாக மாற்றிக்கொள்ள முயல்வது அல்ல, தன்னை உலகக்குடிமகனாக எண்ணிக்கொள்வது.,

உணவையே எண்ணி, உணவையே பேசி, உணவையே அடையாளமாக ஆசாரமாகக் கொண்டு, உணவின் அடிப்படையில் மேட்டிமை கொண்டு, உணவின் அடிப்படையில் சகமனிதனை இழிவுசெய்த அந்த பழைய ஆசாரவாதத்தின் நவீன முகமாக இந்த புதிய உணவுக்கொள்கைகள் ஆகிவிடக்கூடாது. மற்றபடி எந்தச் சோதனையும் தேவையானவர்களுக்கு உதவினால் நல்லதுதான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2021 11:36

மனம்

“நம்ம பூனை மறுபடியும் நான்குசட்டகத்துக்கு வெளியே வந்து சிந்திச்சிருக்கு”

முன்பு குருகுலத்தில் ஒரு தியான வகுப்பு நடந்தது. அன்று ஒரு வெள்ளைக்காரர் நடத்தினார். ‘Mind Your Business’ என்பது நிகழ்ச்சிக்கு பெயர். செல்லும் வழியெங்கும் அவரே கடுமையாக உழைத்து கார்ட்டூன் பேனர்கள் வைத்திருந்தார். எல்லாமே மனம் என்பதைப் பற்றிய பொதுவான கிண்டல்கள்.

ஆனால் அரங்கு ஆரம்பித்ததுமே ஆளாளுக்குப் பேச ஆரம்பித்துவிட்டனர். பெரும்பாலானவர்களுக்கு நகைச்சுவை புரியவில்லை. ஆகவே அவ்வரிகளை அப்படியே எடுத்துக் கொண்டார்கள். சிலருக்கு அவை புண்படுத்தும் வரிகளாகத் தோன்றின. சிலருக்கு அவை ஆப்தமந்திரங்கள் போல தோன்றின. டைரியில் குறித்து கொண்டார்கள்

மனதை படிப்பவர்: ”மனசையெல்லாம் எந்த மடையனாவது படிக்க முடியுமா? அதானே இப்ப நினைச்சே?”

வெள்ளையரிடம் பேசி அவரையே குழப்பிவிட்டார்கள். மனதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது, அது சீரியஸான விஷயம் என்று ஒருவர் அவருக்கே உபதேசம் செய்தார். வேடிக்கையாக எடுத்துக் கொண்டால் அதன் ஆழத்தை நாம் அடையமுடியாது என்றார். ஒருவருக்கொருவர் கருத்து தெரிவித்துக் கொண்டனர். “மெண்டல் விசயங்களை அப்டி நாம ஈஸியா எடுத்துக்கக்கூடாதுங்க. இல்லேன்னா நம்மள மெண்டல்னு சொல்லிருவாங்க”

ஏன் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வெள்ளையர் கேட்டார். நம் முன்னோர் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளவில்லையே என்றார்கள். நமக்ச்சுவையாக எடுத்துக் கொள்வது பொறுப்பின்மை என்றார்கள். ஒருவர் கடைசியாகச் சொன்னார். “நகைச்சுவை எல்லாம் அதெல்லாம் சின்னவயசில். இப்போது நாம் முதிர்ந்து விட்டோம்.”

கடைசியாக ஒருவர் சொன்னார் “வேடிக்கை, நகைச்சுவை எல்லாம் வேணும்தான். எனக்கேகூட அதெல்லாம் பிடிக்கும். ஆனா நாலுபேரு சிரிக்கிற மாதிரி ஆயிடக்கூடாது”

”நிலைமை கைமீறி போயிட்டிருக்கு. மன அழுத்தத்தை போக்குற பயிற்சிக்கு ஒரு கம்ப்யூட்டர் விண்ணப்பம் அனுப்பியிருக்கு”

கொஞ்சநேரம் கழித்து நித்யா அந்த அரங்கை தொடங்கிவைக்க வந்தார். “தியானத்திற்கு நகைச்சுவை நல்லது. ஏனென்றால் நல்ல நகைச்சுவை என்பது நம்மை நாம் எளிதாக்கிக் கொள்வது. அண்டர்வேரின் முடிச்சை அவிழ்த்துவிட்டு தியானத்தில் அமர்வதுபோல அது.” என்றார். ”ஆப்த மந்திரங்கள் நல்ல நகைச்சுவைகள். தத்வமசி. அது நீதான். எவ்வளவு வேடிக்கையான வரி.”

அரங்கு திகைத்தது. ஒருவர் “குரு அதற்குத்தானே ஆதிசங்கரர் விரிவாக உரையை எழுதினார்?” என்றார்.

“ஆமாம், பாருங்கள். அது இன்னும் பெரிய நகைச்சுவை.”

”இளமைக்காலத்தைப் பத்தி நினைக்கப்போய் ரொம்ப பின்னாடி போய்ட்டார்”

அன்று முதல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இயல்பாகச் சிரிக்காத தியான வகுப்புகளில் கெட்ட வாயுவை வெளியேற்றும் முகபாவனைகள் திகழ்கின்றன. அவர்களின் ஆசிரியர்கள் வெளியேற்றி மீண்ட புன்னகையை காட்டுகிறார்கள். பாதிப்பேர் தியான பயிற்சி முடிந்தபின் “நல்ல ரிலீஃப் இருக்கு சார்’ என்கிறார்கள். நான் ஒருவரிடம் கேட்டேன். “கொஞ்சம் ரிலீஃப் ஆனபிறகு நீங்க தியானத்தை ஆரம்பிச்சிருக்கலாமோ?” .முறைத்தார்.

மனம் என்ற இந்த ஒன்றை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப்பாடு படுகிறோமே, இதைவிட பெரிய நகைச்சுவை இருக்கமுடியுமா என்ன? நாம் எதுவாகப் பார்க்கிறோமோ அதுவாக ஆகிறது. எந்த விடையை விரும்புகிறோமோ அதையே தருகிறது.

”சரி போயி வெளையாடு. ஆனா சாக்கடையிலே விழுந்திரக்கூடாது”

மோகன்லால் ஒரு படத்தில் சொல்வார். “உண்டா என்று கேட்டால் உண்டு. ஆனால் ‘உண்டா’ என்று கேட்டால் அப்படிச் சொல்லமுடியாது.”

இப்படிச் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் மனம் என்பது என்ன? அதை கைவசப்படுத்திக்கொண்டால் உடனே அது சொல்லிவிடுகிறது, கைவசப்படுத்தப்பட்டது அல்ல கைவசப்படுத்தியதுதான் மனம் என்பது. அப்படியென்றால் கைவசப்படுத்தப்பட்டது? அது மனம் என நினைக்கப்படும் ஒன்று. நினைப்பது யார்? மனமேதான்.

சின்னவயசிலே எங்கம்மா என் வாயிலேயே துப்புவாங்க”

மேலைநாட்டு மனம் பற்றிய ஜோக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லாமே உளவியலாய்வு கோணத்தில்தான். நம் மரபில் மனம் என்பது ஆத்மாவின் ஒரு மாயை. தவளை தண்ணீருக்குள் அமர்ந்து விட்டுக்கொண்டிருக்கும் நுரைக்குமிழி.

நித்யாவிடம் ஒரு கேள்வி. “மனதை என்ன செய்யவேண்டும் குரு?”

நித்யா சிரித்து “அடக்கவேண்டும்”

“எப்படி?”

“மனதை வைத்துத்தான். அதற்கு இன்னும் கொஞ்சம் பெரிய மனம் வேண்டும்.”

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2021 11:35

கதாநாயகி-8

கோரனுடன் சென்றுகொண்டிருக்கையில் நான் அந்த இரட்டைப்பாறையை தொலைவிலேயே பார்த்து ஒரு கணம் நின்றேன். பின்னர் மீண்டும் காலெடுத்துவைத்து நடந்தபடி “அங்கே புலி இருக்கிறது இங்கேயே தெரியுமா கோரா?” என்றேன்.

”வெளியே நின்னா தெரியும்” என்றான்.

சட்டென்று எரிச்சல் வந்தது, உடனே சிரிப்பும் எழுந்தது, அதை அவன் நையாண்டியாகச் சொல்லவில்லை. அவர்களுக்கு நாம் நினைப்பது போன்ற நகைச்சுவை உணர்ச்சி கிடையாது என்று முன்னரே கண்டிருந்தேன். அவர்கள் எவரையும் நையாண்டி செய்வதில்லை, உட்பொருள் வைத்து எதையும் சொல்வதோ ஊகித்துச் சிரிப்பதோ இல்லை. நாம் பேசும் நகைச்சுவை எல்லாமே ஒன்றை மறைத்துச் சொல்லி கண்டுபிடிக்கும் விளையாட்டு. அவர்கள் மொழியை எதையும் மறைக்க பயன்படுத்துவதில்லை.

நேற்று வீட்டுக்கு உள்ளிருந்து கயிறை எடுத்துக்கொண்டு பின்னாலிருந்த கிணற்றுக்குச் சென்றேன். “கயறு எட்டுமாடே கோரா?” என்றேன்.

“நீளம் இருந்தா எட்டும் ஏமானே” என்றான்.

அவன் முகத்தை சீற்றத்துடன் ஏறிட்டுப் பார்த்தேன். அவன் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறான் என்று தெரிந்தது. சிரிப்பு வந்துவிட்டது.

அதற்கு முன்பு ஒருமுறை  “காப்ரியேல் நாடாரின் கடையில் கருப்பட்டி கிடைக்குமாடா கோரா?” என்று கேட்டேன்.

 “கடையில் இருந்தா கிடைக்கும் ஏமானே” என்று சொன்னான்.

ஆனால் அவர்களுக்கு வேறுவகையான நகைச்சுவை உண்டு. அதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள். ஒருவன் தடுக்கிவிழுந்தால் அவர்கள் சிரிப்பதே இல்லை, அதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று அவர்களுக்குப் புரிவதில்லை. ஆனால் ஒரு பொருள் என எண்ணி நாம் இன்னொன்றை எடுத்துவிட்டால் சிரித்து சிரித்து குப்புற விழுவார்கள். ஒருமுறை நான் கல் என்று தவளை ஒன்றை எடுக்கப்போனேன். கோரன் மதியம் வரை சிரித்துக்கொண்டிருந்தான்.  ஒரு பொருள் இன்னொன்றாகத் தெரியும் வேடிக்கையை அவர்கள் ரசித்து முடிப்பதே இல்லை. அதை தெய்வங்களின் விளையாட்டு என்று கோரன் சொன்னான்.

அந்தப்பாறையை கடக்கும்போது நான் உள்ளே பார்த்தேன், பார்க்கவேண்டிய தேவையே இல்லை. அங்கே புலி இல்லை என உள்ளுணர்வே சொல்லியது.

கீழே பள்ளிக்கூடத்தின் முன்னால் குழந்தைகள் நின்றிருந்தனர். என்னை கண்டதும் ஆர்வத்தில் பிரபு “வாத்யார் வருந்நே! கூஹேய்!” என்று ஓசையிட்டான். மற்ற குழந்தைகளும் சேர்ந்து ஓசையிட்டன.

நான் செல்வதற்குள் ஏழெட்டு குழந்தைகள் ஓடி வந்தன. முதலில் வந்த பெண்குழந்தை “புலி புலி புலி” என்றது.

“எங்கே?” என்று நான் சொன்னேன்.

“இந்நலே புலி வந்நு மாந்தி… புலி” என்றான் இன்னொருவன்.

“சரி எல்லாம் அமைதியா இருங்க. மானிட்டர் சொல்லட்டும்” என்றேன்.

உச்சன் சுருக்கமாக நடந்ததைச் சொன்னான். முந்தையநாள் இரவு புலி வந்து பள்ளிக்கூடத்தில் நாங்கள் புதைத்த இடத்தை முகர்ந்து நகத்தால் கொஞ்சம் பிராண்டிவிட்டு சென்றிருக்கிறது. அங்கே நாலைந்து சொட்டு சிறுநீரும் கழித்திருக்கிறது. “நான் மோந்து பாத்தேன்… மோந்து நோக்கியேன்” என்று அவன் சொன்னான்.

“சரி” என்று நான் சொன்னேன். ஒரு விசிலை அங்கே அலுவலகத்தில் இருந்து கண்டெடுத்திருந்தேன். அதை எடுத்து காட்டி “இதை நான் ஊதினா எல்லாரும் வந்திடணும்… எல்லாம் வந்து வரிசையா நிக்கணும். சத்தம்போடக்கூடாது” என்றேன்.

நாலைந்து குழந்தைகள் விசிலை வாங்கிப் பார்க்க ஆவலோடு வந்தன.

“இது வாத்யார் விசிலு… வேற ஆளு தொடக்கூடாது” என்றேன்.

“வாத்யார் விசிலு” என்று ஓடிவந்த ஒருவன் சொன்னான்.

எல்லாரும் சேர்ந்து “வாத்யார் விசிலு” என்றனர்.

நான் மீண்டும் விசில் அடித்தேன். அனைவரும் அமைதியடைந்தனர்.

“எல்லாரும் வாங்க… கிளாஸுக்கு வாங்க” என்றேன். ”மானிட்டர், கிளாஸை உக்கார வை.”

உச்சன் கிளாஸில் அனைவரையும் உட்காரவைத்தான். அவர்கள் இயல்பாகவே இரண்டு குழுக்களாக அமர்ந்தனர். முந்தையநாள் அமர்ந்துகொண்டதுபோல. அவர்களில் ஒழுங்கு தண்டனை வழியாக நிலைநிறுத்தப்படுவதல்ல. ஆகவே அதை மீறும் எண்ணமே அவர்களிடமில்லை. அதை தங்களுடைய இயல்பாக எடுத்துக்கொண்டனர். சின்னக்குழந்தைகள் ஓசை போடாமல் அமர்ந்திருந்தன.

நான் பெரிய குழந்தைகளுக்கு மீண்டும் ஆனா ஆவன்னா எழுதினேன். ஆறு எழுத்துக்களையும் எழுதியபின் அவற்றை வாசிக்கும்படி அவர்களிடம் சொன்னேன். அப்போது துப்பன் வந்து நின்றான்.

“எனக்கு ஆ ஆ” என்று அவன் சொன்னான்.

“வா வந்து உக்காரு” என்றேன். “ஆனா தனியா அந்த எடத்திலே உக்காரணும்… நீ படிக்கிறது வேற ஆ, சரியா?”

“வேற ஆ” என்றான்.

அவன் ஆர்வத்துடன் அமர்ந்துகொண்டான். மற்றவர்கள் படிப்பதை கூர்ந்து பார்த்து மெல்ல உதடுகளை அசைத்து ஆ ஆ இ ஈ என்று சொல்லிக்கொண்டான்.

நான் சின்னப்பிள்ளைகளுக்குக் கதை சொன்னேன். இம்முறை ஊரின் கதை. பஸ்ஸில் எப்படி ஏறுவது, எப்படி இறங்குவது, பஸ் எந்த ஊருக்கெல்லாம் செல்லும். குழந்தைகள் திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தன.

அப்போதுதான் ஒன்றைக் கண்டுகொண்டேன். வழக்கமான பாடத்திட்டங்களில் இருக்கும் விஷயங்களை அவர்களுக்குச் சொல்லக்கூடாது. ஊரிலுள்ள குழந்தைகள் காட்டையே பார்த்ததில்லை. அவர்களுக்கு விலங்குகளை தெரியாது. ஆகவே அந்தக்கதைகளை விரும்பிக் கேட்கின்றன. காட்டில் அதைச் சொல்வதில் பொருளில்லை. காட்டிலுள்ள குழந்தைகள் அறிய விரும்புவது பஸ்ஸை, மின்சாரவிளக்கை, ஆகாயவிமானத்தை.ஆனால் அவர்களுக்கு அதைச் சொல்ல பாடத்திட்டத்தில் அனுமதியில்லை.

மதிய உணவுக்குப்பின் நானும் கோரனும் நீராவி நிறைந்திருந்த காற்றை உந்தி உந்தி கிழிப்பவர்கள் போல பங்களா நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நான் வீடு திரும்பியதுமே கோரனிடம் சில பொருட்களை வாங்கிவரச்சொல்லி நாடாருக்கு ஒரு குறிப்பு கொடுத்தனுப்பினேன்.

அதன் பின் சற்றுநேரம் வெறுமே படுத்திருந்தேன். பிறகு எழுந்து அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். You will see, my dear Sir, that I was mistaken in supposing I should write no more from this place, where my residence now seems more uncertain than ever. இந்த மொழி முதலில் சிக்கலான முடிச்சுகளான ஒரு கூடை போல முறுக்கமாக இருக்கிறது. பிறகு எப்படியோ அந்த முடிச்சுகளை அவிழ்க்க நம் அகம் பழகிவிடுகிறது. அதன்பின் நாம் உள்ளே செல்கிறோம். எங்கோ நாம் வாசித்துக் கொண்டிருப்பதை மறந்துவிடுகிறோம்.

அப்படி மறக்கும்போதுதான் புத்தகத்தின் பக்கங்களில் இருந்து மனிதர்கள் மெய்யாக எழுந்து வரத்தொடங்குகிறார்கள். புத்தகங்களில் எழுத்துக்களாக, சொற்களாக அவர்கள் கட்டுண்டிருக்கிறார்கள். அந்த கண்ணிகள் உடையவேண்டியிருக்கிறது. அதன்பின் அவர்கள் கண்முன் நின்றிருக்கிறார்கள். முழுமையான மனிதர்களாக.

பேய்களும்கூடத்தான் எழுந்து வருகின்றன என்று எண்ணிக்கொண்டேன். புன்னகை வந்தது. அறைக்குள் பார்த்தேன், ஜன்னல்களின் வெளிச்சம் விழுந்து கிடந்தது. காற்றில் ஆடும் மரங்களின் இலைகள் வீழ்த்திய நிழல்கள் தரையில் பரவி அலைகொண்டன. ஆனால் அங்கே நான் ஓர் இருப்பை, துணையை உணர்ந்தேன்.

புத்தகங்களின் பக்கங்களில் கட்டுண்ட பேய்கள். அந்த எண்ணமே ஒரு பரபரப்பை ஊட்டியது. மனிதர்கள் இங்கே வாழ்ந்து மறைகிறார்கள். முற்றாக மறைந்துபோக எவருக்குமே விருப்பம் இல்லை. அது இயல்பானதே. அது இயற்கையின் மிகப்பெரிய முரண்பாடு.  ஒவ்வொரு உயிரிலும் இயற்கை தங்கிவாழும் விழைவை நிறைத்து வைத்திருக்கிறது. அதுதான் அந்த உயிரை போராடி வாழச்செய்கிறது. சாவை அஞ்சவைக்கிறது. ஆனால் அதுவே அந்த உயிரை இறுதிமுடிவென்னும் இயற்கையின் நெறியை ஏற்கமுடியாமலாக்குகிறது.

எவ்வண்ணமேனும் எஞ்சிவிட விழைகிறார்கள் மனிதர்கள். எதையாவது செய்து, எதையாவது மிச்சம் வைத்து, எவர் நினைவிலாவது நீடித்து. பிள்ளைகள் அதற்கான இயற்கையான வழிகள். வாழ்ந்து முதிர்ந்த கிழடுகள் கூட பேரப்பிள்ளைகளை வருடி வருடி மகிழ்கின்றன. எஞ்சாமல் போய்விடுவோம் என எண்ணி திடுக்கிடாத மனிதர்கள் எவருமில்லை.

எஞ்சவிட்டுச் செல்வதில் மிகச்சிறந்தது கதைதான். அது அழியாமல் நீடிக்கும். எங்களூரில் புலிபிடுங்கி சிதம்பரம்பிள்ளை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாணல் பிடுங்கப் போனபோது புலியின் வாலைப் பிடித்தார். புலி அவரைப் பிடித்தது. அவருடைய கொள்ளுப்பேரன்கள் இன்றைக்கும் அவரால் அறியப்படுகிறார்கள். கதையாக மாறிய முத்துப்பட்டனும் மாயாண்டிச்சாமியும் இன்றும் கோயிலில் அமர்ந்திருக்கிறார்கள்.

கதையை எழுதிவைத்தால் என்றுமிருக்கலாம். ஷேக்ஸ்பியர் அழியவில்லை. அவரால் எழுதப்பட்டவர்களும் அழியவில்லை. காரியும் ஓரியும் அழியவில்லை. கபிலரும் பரணரும் வாழ்கிறார்கள். கதைகளெல்லாம் நினைவுச்சின்னங்கள். எல்லா நூல்களும் கல்லறைகள்தான். அவற்றில் இறந்தவர்கள் அடக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் மேல் ஒருவர் என. ஒருவருடன் ஒருவர் பிணைந்து. அடுக்கடுக்காக.

அவர்கள் ஒரு தொடுகைக்காக காத்திருக்கிறார்கள். கண்விழித்து புன்னகைக்கிறார்கள். நீண்டநாள் காத்திருப்பு போல பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் நம்மை எடுத்துக்கொள்கிறார்கள். நம் உலகை ஆக்ரமித்து தங்களை நிறுவிக்கொள்கிறார்கள். எல்லாவற்றையும் அவர்களுக்கேற்ப மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களை தொட்டு எழுப்பிவிட்டோம் என்றால் நாம் நம் உலகை எந்தப்பாதுகாப்பும் இல்லாமல் அவர்களிடம் ஒப்படைக்கிறோம் என்று பொருள்.

நான் பித்தெழுந்த கண்களுடன் வாசித்துக்கொண்டிருப்பதை நானே தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன் என்று படுகிறது. ஏனென்றால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு நினைவில் இருப்பது என்னை தொலைவிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருக்கும் கோணம்தான். அப்போது என் முகத்தைப் பார்க்கும் எவரும் எனக்கு பேய் பிடித்திருப்பதாகவே நினைப்பார்கள். ஒருவகையில் அது உண்மை, கதைகளை வாசிப்பவன் பேய்களால் ஆக்ரமிக்கப்பட்டவன்.

கடந்தகாலப் பேய்கள், வரலாற்றுப்பேய்கள். வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல, வாழ்ந்தவர்களில் வாழ்ந்தவர்களும்கூட. பேய்களில் அந்த வேறுபாடில்லை. ஃபிரான்ஸெஸ் பர்னிக்கும் ஈவ்லினாவுக்கும் வேறுபாடில்லை. இருவரும் ஒரே பரப்பில், ஒரே இயல்புகளுடன் வாழ்கிறார்கள். இருவருக்கும் சாவில்லை.

சாவு உண்டு, இந்த நூலை எவருமே வாசிக்காமலானால் அவர்கள் அழிந்துவிடுவார்கள். அப்படி எத்தனையோ ஆயிரம் புத்தகங்கள் மறைந்திருக்கும். பாப்பிரஸ் தாள்களில், ஓலைச் சுவடிகளில். அதற்கு முன் களிமண் பலகைகளில். ஆனால் இன்னமும் வாசிக்கப்படாத நூல்கள் உள்ளன. எகிப்தின் சித்திர எழுத்துக்களை வாசித்துவிட்டார்கள். ஆகவே அரசி நெஃப்ரிடிட்டி உயிர்த்து எழுந்து வந்து உலகை நோக்கி புன்னகைக்கிறாள். சிந்துவெளியில் இருந்து இன்னமும் எவரும் எழவில்லை. ஆறாயிரம் ஆண்டுகளாக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த நூலை எவரும் வாசிக்காமலாக வாய்ப்புண்டா? தொழில்நுட்பம் எல்லாவற்றையும் பாதுகாக்கிறது. இது அச்சிடப்பட்டுவிட்டது. எங்கோ ஒரு புத்தகம் எஞ்சியிருக்கும். எங்கோ ஒருவர் அதை வாசிக்க வாய்ப்பிருக்கிறது. அதுவரை இந்தப் பேய்கள் உறங்கும் லோகஸ்டுகள் பாலைவெளியில் மழைகாத்து முட்டைகளின் வடிவில் கிடப்பதைப்போல.

என் உள்ளம் ஒரு பக்கம் பீரிட்டுக்கொண்டிருந்தது. மறுபக்கம் நான் அதைப் படித்துக்கொண்டும் இருந்தேன். ஈவ்லினாவின் கசப்பும் நஞ்சும் தோய்ந்த வரிகள். It was some time ere she could give, or I could hear, the account of her visit; and then she related it in a hasty manner; yet, I believe I can recollect every word. அவள் நிகழ்வுகளினூடாக எண்ணங்களைக் கலப்பதில்லை. ஆனால் கடிதங்களில் அவள் வெளிப்படுகிறாள்.

காப்டன் மக்கின்ஸி இன்று அவர் மனைவியை கூட்டிவந்தார். அந்தப்பெண் இங்கே ஒரு ரொட்டிக்கடைக்காரரின் மகள். இங்கே இருக்கையில் அவளுக்கு மிஞ்சிப்போனால் நான்கு நல்ல ஆடைகள் இருந்திருக்கலாம். வெளியே போகும்போது அணிவதற்காக ஒரு ஜோடி நடுத்தர மதிப்பு கொண்ட ஷூக்கள். நாலைந்து பட்டுக் கையுறைகள், ஒரு சில நகைகள். வைரம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இன்று அவள் அணிந்திருக்கும் நகைகளில் எல்லாமே உயர்தர வைரங்கள் இருந்தன. அவளுடைய ஷூக்களுக்காக இங்குள்ள உயர்குடிக் கன்னியர் ஏங்குவார்கள். அவளுடைய லேஸ்கள் எல்லாமே அசல் சீனப்பட்டுக்கள்.

அவள் பெயர் ஹெலனா. குடும்பப்பெயர் என ஏதுமில்லை. எனக்கு மக்கின்ஸி அவளை அறிமுகம் செய்யும்போது ஹெலனா என்று மட்டும்தான் சொன்னார். அவளை நான் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். கோடைநாடொன்றில் வாழ்ந்தமையால் அவள் கன்றிப்போய் வாதுமை நிறத்துக்கு வந்திருந்தாள். அவளுடைய பூர்வீகம் போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடாக இருக்கலாம். கூரிய, சற்று மேலேந்திய மூக்கு. ஒடுங்கிய கன்னங்களுடன் ஆப்பு வடிவ முகம். பச்சைக்கண்கள். சிவப்புக்கூந்தல்.

அவளை மதிப்பிட எனக்கு நீண்டநேரம் ஆகியது. முதலில் அவள் மென்மையான அசைவுகளுடன் ஒரு வெண்ணிற இறகு மிதந்து பறந்து வருவதுபோல உள்ளே வந்தபோது,கையுறைகளை இயல்பான நளினத்துடன் கழற்றியபோது, பெரிய கோட்டை கழற்ற உதவிய சேவகனிடம் மிதமான புன்னகையுடன் நன்றி சொன்னபோது, எதிர்ப்பட்டு அவளை வரவேற்ற ஆர்வில் பிரபுவிடம் தன் கையை இனிய புன்னகையுடன் அளித்து அவரால் முத்தமிடப்பட்டடதும் இடைதாழ்த்தி ”எவ்வளவு இனிமை!”என்றபோது பிறவிச் சீமாட்டி போலிருந்தாள். நான் ஏமாந்துவிட்டேன்.

அதன் பின் உள்ளே வந்து அங்கிருந்த பெண்களை அறிமுகம் செய்துகொண்டபோது அவள் செயற்கையான ஒரு மிடுக்கை பாவனைசெய்தாள். அது கொஞ்சம் மிகையாக இருந்தது. மிகக்குறைவாகப் பேசினாள். உபச்சாரச் சொற்கள் மட்டும். விருந்துகளில் செய்யவேண்டிய ஒவ்வொரு சிறுசெயலையும் மிகச்சரியாக செய்தாள். கணப்பருகே அமர்ந்தபோது கவுனின் கீழ் அலைகளை மிகச்சரியாக எடுத்துவிட்டுக்கொண்டாள். ஒயின் கொண்டுவரப்பட்டபோது கோப்பையை மலர்கொய்வதுபோல எடுத்துக் கொண்டு கையில் உள்ளங்கை சூடு அதில் பரவுவது வரை வைத்திருந்து விட்டு, மூக்கருகே தூக்கி சற்றே முகர்ந்து, பாராட்டும் பாவனையில் தலையை அசைத்தபின் ஒரு சொட்டு அருந்தி, உடனே அதிலிருந்து கவனத்தை விலக்கி அருகே திருமதி மிர்வின் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு “ஆமாம், எவ்வளவு உண்மை!”என்றாள்.

எல்லாமே மிகச்சரியாக இருந்தன. எல்லாமே முற்றிலும் பிழையற்றதாக இருந்தன. அதுவே எனக்கு அவள் எவள் என்று காட்டியது. இவை இவளுடைய இயல்புகள் அல்ல, இவள் இவற்றை பயின்றிருக்கிறாள். இவற்றை நடித்துக்கொண்டிருக்கிறாள். எங்கோ ஒரு பிழை நிகழும், ஒரு விரிசல் விழும். அதை நான் எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன்.

திருமதி மிர்வின் ஏதோ நாவல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். கிரிஸ்ப் ஒரு செய்திக்கட்டுரை பற்றிச் சொன்னார் பேச்சு ஒன்றையொன்று தொடாத பற்சக்கரங்கள் போல ஓடிக்கொண்டிருந்தது. காப்டன் மக்கின்ஸியும் ஆர்வில் பிரபுவும் உள்ளே சென்றனர். அவர்கள் அங்கே கடினமான மது அருந்தப்போகிறார்கள். அதன்பின் அவர்கள் எதையும் கவலைப்பட மாட்டார்கள். டையை நெகிழ்த்துவிட்டு கோட்டின் பித்தான்களை கழற்றிக்கொண்டு உரக்கச் சிரிக்கலாம். கூச்சலிட்டுப் பேசலாம், எவரிடமும் எதையும் சொல்லலாம். எல்லாம் மதுவின் கணக்குக்குப் போய்விடும்

ஆண்களுக்குப் பிரச்சினையே இல்லை. மக்கின்ஸி தன்னை ஒரு நிலக்கரித்தொழிலாளியின் மகனாக, கடுமையாக படித்து அடிப்படைத் தேர்ச்சி அடைந்து ராணுவப்பள்ளியில் சேர்ந்து, பர்மாவிலும் மலேயாவிலும் ராணுவப்பணி செய்து, போர்க்களங்களுக்குப் போய் பதவி உயர்வு பெற்று நாற்பது வயதில் காப்டனாக ஆனவராக வெளிப்படையாகவே காட்டிக்கொள்ளலாம். “மன்னிக்கவேண்டும், நான் களத்திலிருந்து வந்த படைவீரன். கொஞ்சம் கரடுமுரடானவன். எனக்கு இதெல்லாம் தெரிவதில்லை, புரிவதுமில்லை”

அதற்கு இந்த உயர்குடி வரவேற்பறைகளில் ஒரு மதிப்பிருக்கிறது. அதை ஒரு செல்லுபடியாகும் நாணயமாகவே நிறுவி விட்டார்கள். “நாம் இங்கே உயர்தர ஒயினுடன் கணப்பின் முன் அமர்ந்திருக்கையில் நம் வீரர்கள் அங்கே கொட்டும் மழையில் கொடுங்காடுகளிலும் பாலைவனத்தின் எரியும் வெயிலிலும் காட்டுமிராண்டிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறர்கள்”  என்று எப்போதும் எவரோ ஒரு கிழவர் சொல்வார். அவர் ஓர் ஓய்வுபெற்ற ஜெனரலாக இருப்பார். அல்லது படைப்பணி செய்த பிரபு. அவருக்கு சட்டென்று இந்த போலிச்சொகுசு வாழ்க்கை அளிக்கும் குற்றவுணர்வில் இருந்து தப்ப ஒரு வழி அது.

அந்த வழியை அத்தனைபேரும் பற்றிக்கொள்வார்கள். ”ஆம், நாம் அவர்கள் மேல் அமர்ந்திருக்கிறோம்” என்பார்கள். “அவர்கள் நம் அடித்தளக் கற்கள்” என்பார்கள். அந்த கொடியைப் பற்றிக்கொண்டு ‘படைவீரன்’ மேலேறிவிடுவான். “அதை நான் சொல்லக்கூடாது, ஆனால் நிலைமைகள் உண்மையிலேயே மோசம்தான். இப்படித்தான் சென்ற ஜனவரியில் மலேயாவின் காட்டில்..” என ஆரம்பிக்கவேண்டும். ஒரு மயிர்க்கூச்செறியும் கதையைச் சொல்லவேண்டும். அந்தக்கதை பலசமயம் பலரால் அவர்களின் அனுபவமாகச் சொல்லப்பட்டதாகவும் இருக்கும்.

எப்படியானாலும் அதற்கு இங்கே பெரும் மதிப்பு உண்டு. அந்தக் கதையால் அல்ல, அந்தக் கதைக்குப் பின் ஒவ்வொருவருக்கும் தங்களை வெளிப்படுத்த வாய்ப்பு அமைகிறது என்பதனால். தேசபக்தையாக நடிக்கலாம். வன்முறையே அறியாத உயர்குடி மெல்லியளாக பாவனை செய்யலாம். பட்டுக்கைக்குட்டையால் கண்ணீரை மெல்ல ஒற்றிக்கொள்ளலாம். அரிதாகச் சிலர் போர்க்களத்தில் இருக்கும் உறவினரை நினைத்து கண்ணீர்விடுவதும் உண்டு.

கிரிஸ்ப் ஏதோ சொன்னார். அவருடன் வந்த அந்தச் சிறுபெண் அதை கேட்டும் கேளாதவள் போலிருந்தாள். அவள் பெயர் ஃப்ரான்ஸெஸ். அவள் எழுதும் நாட்குறிப்புகளை அவர் உயர்குடிச்சூழலில் புழக்கத்திற்கு விடுகிறார். அவளை கண்டடைந்தவர் தானே என்று காட்டிக்கொள்கிறார். அவளுடய வரிகளை எவரேனும் பாராட்டினால் அவர் அந்தப்பாராட்டை ஏற்றுக்கொண்டு பெருமிதம் தோன்ற புன்னகை செய்கிறார். அப்போது அவள் வேறு எவரைப்பற்றியோ எவரோ பேசுவதுபோல் இருக்கிறாள்.

அவர் அந்தப் பாவனையை அப்போது ரசிக்கிறார் என்று தோன்றும். ஆனால் அவர் கொஞ்சம் கிழட்டுத்தன்மை கொண்ட ஏதாவது நகைச்சுவையைச் சொல்லும்போதும் அவள் அதே பொருட்டின்மையைக் காட்டுகிறாள். அது அவரை கொந்தளிக்கச் செய்கிறது. அவர் முகத்தில் அது தெரிவதில்லை. கண்களில் மட்டும் கண்ணாடித்துண்டை மெல்லத் திருப்பியதுபோல ஒன்று அசைகிறது. ஒரு வன்மம், ஒரு கொலைவெறி என்றே அதை நான் சொல்வேன். ஆமாம், கொலைவெறியேதான்.

இந்த உலகம் தன்னைவிட்டு அகன்றுவிட்டதென்று கிழவர்களுக்குத் தெரியும். அவர்களே அதை அவ்வப்போது சொல்லிக்காட்டவும் செய்வார்கள். ஆனால் நாம் அதை மறுக்கவேண்டும். அவர்களை நம்முடன் இழுத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பது அதை. அதில் நாம் சிறு உதாசீனம் காட்டினால்கூட அவர்கள் அதை அவமதிப்பாக எடுத்துக்கொள்வார்கள். கொலைவெறிதான் அடைவார்கள்.

ஆனால் அதை வெளிப்படுத்தாமலிருக்க சிலரால் முடியும். அவர்கள் மிதமிஞ்சிய கர்வம் கொண்டவர்கள். அந்த வெளிப்பாடே ஒரு மன்றாட்டுதான் என நினைத்துக்கொள்பவர்கள். அவர்களுக்குள் அப்போது நுரைக்கும் நஞ்சு இந்த லண்டனையே பொசுக்கிவிடும் சக்தி கொண்டது.

அதை அவர் கண்களில் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று அவருக்குத்தெரியும். அவர் என்னை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு கண்களை என்னிடமிருந்து அப்பால் விலக்கி, கழுத்தை இறுக்கியிருப்பார். ஆனால் அவர் என்னை உடலால் நோக்கிக் கொண்டிருக்கிறார் எனறு எனக்குத்தெரியும். ஆகவே நான் அவரை பார்ப்பேன். அவர் என்னை பார்க்கவேண்டும் என்றால் என் பார்வையை விலக்கிக் கொள்வேன். நான் அவரை பார்க்கவில்லை என்று காட்ட சில அசைவுகளைச் செய்வேன். கோப்பைகளை இடம் மாற்றுவேன். கவுனின் அடுக்குகளைச் சீரமைப்பேன்.

எப்போது என்று அறியாமல் அவர் அறியாமல் திரும்பி என்னைப் பார்ப்பார். அப்போது என் உதடுகளில் நான் ஒரு நச்சுப்புன்னகையை வைத்திருப்பேன். ஏளனம் அல்ல. ஏளனத்தை அவர் எதிர்கொள்வார். கனிந்த முதியவரின் குனிந்து சின்னப்பிள்ளையைப் பார்க்கும் பாவனை போதும் அதற்கு. இது ஒரு பிரியமான புன்னகை. சிறுவர்களுக்கு அன்னை அளிக்கும் புன்னகை. அது அவரை பற்றி எரியச்செய்யும். அவருடைய நரம்புகள் பொசுங்கி சுருங்கும்.

அதை அந்தப்பெண் அறிந்திருந்தாள். ஃப்ரான்ஸெஸ். அவள் தனக்கு ஃபேன்னி என்று பெயரிடவிருப்பதாக கிரிஸ்ப் ஒருமுறை சொன்னார். ஃபேன்னி ஹில் கௌரவமானவர்கள் படிக்காத பழைய பாலியல் நாவல். ஆனால் அத்தனைபேரும் கௌரவமானவர்களாக இல்லாமலிருக்கும் தனியறைகளில் அதைப் படித்திருப்பார்கள். ஃபேன்னி என்ற பெயரில் அவள் எழுதினாளென்றால் மிகப்புகழ்பெற்றுவிடுவாள். விற்பனை மிகுந்து அவளுக்கு நிறையவே பணம் கிடைக்கும்.

அவள் என் மறுபக்கம். அவளுக்கு என் ஆடல் தெரியும். நாங்கள் கண்களால் சந்தித்துக் கொள்வோம். ஆச்சரியமாக என் கண்களும் அவள் கண்களும் ஒரு சொல்லைக்கூட இதுவரை பரிமாறிக்கொண்டதில்லை. அத்தனை சாமர்த்தியமானவளா அவள்? இல்லை, உண்மையில் எங்கள் நடுவே ரகசியமென்பதே இல்லை. எவராவது தங்கள் கண்ணாடிப்பிம்பத்தை ரகசியமாக கண்ணோடு கண் பார்த்துக்கொள்வார்களா என்ன?

கிரிஸ்ப் மீண்டும் ஏதோ சொன்னார்.  ஹெலெனா “ஆமாம், மனசாட்சி நம்மை கோழைகளாக்குகிறது” என்றாள்.

அந்த ஷேக்ஸ்பியர் மேற்கோள் இங்கே நைந்த காலணிபோல. ஷேக்ஸ்பியரே ஒரு பழைய மேஜைநாற்காலி போல. மரியாதையும் ஏளனமுகாக கணப்பருகே தூக்கி உட்காரவைக்கப்பட்ட கிழவர் அவர். அதை அந்த அவையில் சொல்வதென்பது அந்த அவையில் பழகியவள் அல்ல அவள் என்பதை காட்டுவது. அந்த அவையில் பேசுவதற்காக தயாரித்துக்கொண்டு வந்த ரொட்டிக்காரன் மகள்தான் அவள் என்பதை அறிவிப்பது.

நான் அவள் கண்களைப் பார்த்து புன்னகைத்து “எவ்வளவு உண்மை!” என்றேன். “ஆனால் நாம் மனசாட்சிக்குப் பழகிவிட்டிருக்கிறோம்” என்றேன்.

டோலாவே சீமாட்டி என்னை நோக்கி குறும்பாக உதடுகளை இறுக்கி புன்னகை செய்து “மெய்தான்…. பிரிட்டிஷாரின் மனசாட்சியே அவர்களை சிலசமயம் தோற்கடிக்கிறது” என்றாள்.  

ஹெலெனா புரிந்துகொண்டுவிட்டாள். அந்த வரி அங்கே சம்பிரதாயமான ஒரு அசட்டுச் சொற்றொடர். அதை எப்படி கடந்து செல்வதென்று அவளுக்கு தெரியவில்லை. அவள் முகம் வியர்த்து சிவந்துவிட்டது.

அவள் அங்கே ஏதாவது செய்து தப்பிவிடுவாள் என்று தோன்றியது. விடக்கூடாது என்று நான் மேலும் ஓர் அடி முன்னால் எடுத்து வைத்தேன். “நாம் இங்கே சொகுசாக அமர்ந்துகொண்டு மனசாட்சி பற்றிப் பேசுகிறோம். நம் நாட்டின் எளிய மக்களிடமே பிரிட்டிஷ் மனசாட்சி உள்ளது. கொல்லர்கள், கசாப்புக்கடைக்காரர்கள், தையற்காரர்கள், ரொட்டிக்காரர்கள், தோல்வேலைக்காரர்கள்…’ என்றேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் சூழலே புரியாமல் உள்ளே வந்த மரியா மிர்வின் “ஆமாம், நானும்கூட அதைச் சொல்வதுண்டு. நம் வேலைக்காரர்களின் நீதியுணர்ச்சிகூட சமயங்களில் நம்மிடம் இருப்பதில்லை” என்றாள்.

அது முட்டாள்தனமான பேச்சு, ஆனால் அங்கே அனைத்தையும் விடக்கூர்மையானதாக ஆகியது.

ஹெலெனாவின் கண்கள் என்னைப் பார்த்தன. அவற்றில் இருந்தது கசப்பும் கடும் சினமும். அக்கணம் அவளிடம் உடைவாள் இருந்தால் என் கழுத்தில் பாய்ச்சியிருப்பாள். நான் அவளிடம் மிக மென்மையான சிரித்து “நீங்கள் இந்தியாவில் எவ்வளவு ஆண்டு இருந்தீர்கள்?”என்று கேட்டேன்.

அவள் உதடுகள் மெல்ல வளைந்தன. மிகமிக ஒவ்வாமை கொண்டால் மட்டுமே பெண்களின் உதடுகள் அப்படி வளையும். அதை அவர்கள் கூடுமானவரை மறைத்துக்கொள்ள முயல்வார்கள். அதை மீறி முகத்தில் வெளிப்படுவது அது.

“இரண்டு ஆண்டுகள்” என்று அவள் சொன்னபோது குரல் அடைத்திருந்தது.

டோலாவே சீமாட்டி “அங்கே ஒரு சாதாரண ராணுவ அதிகாரிக்குக் கூட பத்துப்பதினைந்து வேலைக்காரர்கள் கிடைப்பார்கள் என்கிறார்கள். காலணிகளைப் போட்டுவிடுவதற்கே ஒருவன் இருப்பானாம். என் செவிலியின் தம்பி அங்கேதான் வேலைபார்க்கிறான். மாவட்ட நீதிபதியாக இருக்கிறானாம். அவனுக்கு மட்டும் பதினேழு வேலைக்காரர்கள். சமையல்காரர்கள் மட்டும் நான்குபேர்… அங்கே அத்தனை பேரும் பிரபுக்களுக்குரிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்” என்றாள்.

“ஆமாம், அவர்களின் சம்பளம் குறைவுதான். ஆனால் தங்கச்சுரங்கத்தில் வேலைசெய்பவனுக்கு சம்பளம் எதற்கு?”என்றாள் நெவில்ஸ் சீமாட்டி.

“அங்கே எல்லாம் சரிதான், ஆனால் அந்த வெயில்நாட்டு நோய்கள்.. என் சமையற்காரியின் நான்கு தம்பிகள் பர்மாவில் அம்மைநோயில் இறந்தார்கள்” என்றாள் மெர்ட்டன் சீமாட்டி.

“ஆனால் அத்தனை வேலைக்காரர்கள், பிரம்மாண்டமான பங்களா, அதைச்சுற்றி பெரிய தோட்டம், சாரட் வண்டிகள்… அவர்கள் நாம் இங்கே வாழ்வதை விட ஆடம்பரமாக வாழ்கிறார்கள். இங்கே கிடைப்பதைவிட பட்டு அங்கே பாதிவிலைக்கு கிடைக்கும். ஒரு கவுனை பத்தில் ஒருபங்கு விலையில் அங்கே தைக்கமுடியும்…”

“ஆனால் தரமாக இருக்குமா?” என்றாள் செல்மா பிராங்டன்.

“இங்கே நாம் பயன்படுத்தும் லேஸ்கள் எல்லாம் அங்கிருந்து வருபவைதான். அங்குள்ள பெண்கள் மிகத்திறமையான கைவேலைக்காரர்கள்”

“எத்தனை வேலையாட்கள் இருந்தாலென்ன? அவர்களெல்லாம் கரிய மனிதர்கள். பழக்கப்படுத்தப்பட்ட இருபது கொரில்லாக் குரங்குகளை வீட்டுவேலைக்கு கொடுக்கிறோம் என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வோமா?”என்று திருமதி மிர்வின் சொன்னாள்.

“ஆனால் கொரில்லாக்களுக்கு நாம் லேஸ் பின்னுவதற்கு கற்பிக்க முடியும். அவை கூடவே பகற்கனவுகள் காண்பதோ அரட்டையடிப்பதோ இல்லை. ஆகவே லேஸ்கள் தரமானவையாகவே இருக்கும்” என்றாள் மரியா மிர்வின்

அத்தனைபேரும் சிரித்தார்கள். அப்போது சிரித்துக்கொண்டிருப்பது ஒன்றே ஹெலெனா செய்யவேண்டியது. ஆனால் அவள் தலைகுனிந்து வெள்ளிக்கரண்டியை விரல்கள் நடுவே வைத்து உருட்டிக்கொண்டிருந்தாள். அதைச் செய்யவே கூடாது. அவள் மறந்துவிட்டாள். அவளுடைய அத்தனை பயிற்சிகளையும் இழந்து அவள் ரொட்டிக்காரன் மகளாக ஆகிவிட்டாள். நான் அவள் கண்களை மீண்டும் சந்திக்க விரும்பினேன்.

காப்டன் மக்கின்ஸியும் ,ஆர்வில் பிரபுவும், காப்டன் மிர்வினும் வெளியே வந்தனர். அவர்கள் முழுமையாகவே போதையேறியிருந்தனர். காப்டன் மக்கின்ஸி உரத்த குரலில் “இங்கே என்ன நடக்கிறது? சீமாட்டிகள் நடுவே என் மனைவி எப்படி இருக்கிறாள்?”என்றார்

மரியா மிர்வின் “அவளைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அவள் லண்டனின் சீமாட்டிகளை விட ஒரு படி மேலாகவே சீமாட்டியாகத் தெரிகிறாள்” என்றாள்.

நான் அந்தப் பேச்சை அப்போது ரசிக்கவில்லை. நான் எடுத்துப் போட்ட பந்து, ஆனால் அதை அவர்கள் ஆடி வெல்லக்கூடாது.

மெர்ட்டன் சீமாட்டி “அங்கே நிலைமைகள் எப்படி? கடும் வெயிலா?”என்று கேட்டாள்.

”நாங்கள் இருக்குமிடத்தில் வெயில் குறைவுதான். ஏப்ரல் மே மாதத்தில் கொஞ்சம் வேயில் இருக்கும். ஆனால் மழைவந்தால் அதுவும் இல்லை… நாங்கள் இருக்குமிடம் மலபார் கடற்கரை. அங்கே மழை மிகுதி… பலநாட்கள் வானம் மூடி மழை கொட்டிக்கொண்டே இருக்கும்” என்றார் காப்டன் மக்கின்ஸி. “மழைக்காலத்தில் மழையால் நோய் வரும், வெயில்காலத்தில் வெயில்கால நோய்கள்…” என்று சொல்லி உரக்கச் சிரித்தார்.

“நீங்கள் இருக்கும் இடத்தின் பெயர் என்ன?”என்றாள் ஃப்ரான்ஸெஸ்

“டிரிவான்கூர். அவர்கள் கொஞ்சம் வேறுமாதிரி உச்சரிக்கிறார்கள். அது ஒரு கடலோரப்பகுதி. தென்மேற்கே கடல், வடகிழக்காக உயர்ந்த மலைகள், அடர்ந்த காடு…அங்குள்ள முதிய மகாராஜா இப்போதுதான் இறந்தார்.இன்னொருவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். ஆட்சிக்குழப்பங்கள் நிறைய உள்ளன…”

“ஆட்சிக்குழப்பங்கள் நமக்கு நல்லது”என்றார் ஜெனரல் மில்லர். “நாம் எளிதாக ஊடுருவ முடியும்”

”உண்மையில் எங்கள் ராணுவத்தின் தலைவர் கர்னல் மெக்காலே அப்படித்தான் நினைக்கிறார். அவர் இந்த ஆண்டோ அடுத்த ஆண்டோ அந்த நாட்டின்மேல் முழுமையாக ஆதிக்கம் செலுத்திவிடுவார்”

“அவரை அங்கே ரெசிடெண்ட் என்றுதானே அழைக்கிறார்கள்?”என்று கிரிஸ்ப் கேட்டார்.

“ஆமாம்” என்று காப்டன் மக்கின்ஸி சொன்னார்.

”ரெசிடெண்ட் என்று சாத்தானையும் சொல்வதுண்டு. அவன் நம் ஆத்மாவில் உறைகிறான்” என்று சொன்ன கிரிஸ்ப் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவள் வழக்கமான உதாசீன முகம் காட்டினாள்.

“நாம் அவர்களுக்குச் சாத்தான்கள்!”என்று சொல்லி காப்டன் மக்கின்ஸி சிரித்தார்.

“இந்த கர்னல் காலின் மக்காலே, இவனை எனக்கு இங்கிருக்கும்போதே தெரியும். இங்கிருக்கும்போது அவன் சாதாரண செகண்ட் லெஃப்டினெண்ட், அங்கே போனபிறகு காப்டன். இப்போது ஒரு மகாராஜாவை அவன் ஆணையிட்டு கட்டுப்படுத்துகிறான்” என்றார் ஜெனரல்.

“கீழைநாடுகளில் அவர்கள் ஏணிகளில் ஏறுவதில்லை.சிறகுடன் பறக்கிறார்கள்”என்று டோலாவே சீமாட்டி சொன்னார்

கிரிஸ்ப் எரிச்சலடைந்திருந்தார். அவர் “அங்கே தொடர்புகள்தான் முன்னேற்றத்திற்கான வழி. தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதும் எளிது. ஜெனரலும் ,காப்டனும் ,செகன்ட் லெப்டினெண்டும் ஒரே இடத்தில் மதுவை பகிர்ந்துகொள்வார்கள். அங்கே இருக்கும் வெள்ளையர்களே குறைவு…ஆகவே அது ஒரு சின்ன கூண்டுபோலத்தான்”

டோலாவே சீமாட்டி கூரிய நஞ்சு தெரிந்த கண்களுடன் “அதனால்தான் அங்கே வேலைசெய்பவர்கள் அழகான பெண்களை இங்கிருந்து மணம் செய்து கொண்டுபோகிறார்களா?”என்றாள்.

கிரிஸ்ப் அதைப் பிடித்துக்கொண்டார். ஆனால் வேறெதையோ கேட்பவர் போல “அங்கே உங்களுடைய காவல்தேவன் யார் காப்டன்? நீங்கள் கர்னல் மெக்காலேவுக்கு நெருக்கமா?”என்றார்.

“இல்லை, அவர் மிகவும் கண்டிப்பானவர். அவருடைய லண்டன்மிஷன் பற்று அவரை மதவெறியராகவும் ஆக்கியிருக்கிறது”என்று காப்டன் மக்கின்ஸி சொன்னார். அங்கே அவர் தன்னுடைய முன்னேற்றப் பாதையைச் சொல்லியாகவேண்டும் என்ற கட்டாயம் உருவாகிவிட்டது. அடுத்தமுறை அவரே ஒரு கர்னலாக அங்கே வர வாய்ப்பிருக்கிறது என்பது மதிப்பு மிக்க ஒரு செய்தி. அத

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2021 11:34

இன்று- கடிதங்கள்

இன்றிருத்தல்…

அன்புள்ள ஜெ,

இன்றிருத்தல் வாசித்தேன். எப்போதும் போலவே வீட்டில் இருக்கிறேன். சென்ற ஆண்டை விட இப்போது மகிழ்வாக உள்ளேன். உடன் ஆக்கப்பூர்வமாக வாசித்து கொண்டும் இருக்கிறேன். தொடர்ச்சியாக வெண்முரசை வாசித்து கொண்டிருப்பது பேரின்பம். ஒரு நாவலுக்கு ஒரு நாவல் மூன்று நாட்கள் இடைவிட்டால் தான் அடுத்து தொடங்க முடிகிறது. ஆனால் வாசிக்கும் நாட்களில் கனவின் பெரும்பயணம் போதையளிப்பது. சமீபத்தில் வாசித்த கிராதம் கனவின் பேராழத்தை மின்னல் கீற்றென திறந்து காட்டியது. குருஜீயிடம் (சௌந்தர் ஜி) பகிர்ந்து மகிழ்ந்தேன். அதை சரியாக சொல்லாக்க முடியுமென்ற  நம்பிக்கையில்லாததால் எழுத முடியவில்லை.

இந்த கடிதத்தில் முதன்மையாக கேட்க நினைத்தது. இன்றைக்கு பதிவில் தினமும் ஏதேனும் ஒரு வாசகரிடம் 40 நிமிடங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றிருந்தீர்கள். ஏற்கெனவே கடந்த ஜனவரியில் செந்தில் குமார் அவர்களின் இசூமியின் நறுமணம் புத்தக வெளியிட்டு விழாவின் போது காளி அண்ணா என்னை அழைத்து வர கேட்டிருந்த போது நோய் தொற்று என்பதால் வேண்டாம் என்றீர்கள். அதே போல தன்மீட்சி வாசிப்பனுபவம் எழுதும் போதும் உங்களை சந்திக்கலாம் என்ற ஆவல் இருந்தது. அதுவும் தொலைவு கொரானா காலம் ஆகியவற்றால் தவிர்க்கப்பட்டது. இந்த 40 நிமிடத்தில் என்னிடம் பேசுவீர்களா.

உண்மையில் எனக்கு இது வெறும் ஆசையாக மட்டுமே உள்ளது. அப்புறம் 40 நிமிடம் என்பது எனக்கு தயக்கத்தை கொடுக்கிறது. மதிப்பானவை என என்னிடம் பேச நிறைய விஷயங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உங்கள் நேரத்தை வீணடித்து விடுவேனோ என்ற ஐயம் உள்ளது. அப்புறம் நான் இன்னும் முதிராவும் இல்லை என்று தயக்கம் உள்ளது. உங்களை நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று ஆசை. கடந்த சித்ரா பௌணர்மி அன்று காளி அண்ணாவின் உதவியால் நீங்கள் நண்பர்களுடன் பேசியதில் கலந்து கொண்டது போலிருந்தால் எனக்கு தயக்கமே இருந்திருக்காது. ஒரமாக உட்கார்ந்து உங்களை பார்த்து கொண்டும் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம்.. ஆனால் இப்படி என்றால் ஆசையாகவும் அதே சமயம் தயக்கமும் இருக்கிறது. என் விருப்பத்தை சொல்லிவிட்டேன். உங்கள் முடிவு எதுவானாலும் மகிழ்வே.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்,

இந்தவகையான தயக்கங்களை கடப்பதற்காகவே இந்தச் சந்திப்பு. பொதுவாகப் பேசுவதில் தயக்கம் கொண்டவர்களுக்காகவே இந்த தனிப்பட்டச் சந்திப்பு. நாம் முயலாதவரை நமது சாத்தியங்கள் நமக்கு தெரியாது. நமது பிரச்சினைகளும் நமக்குத்தெரியாது

ஜெ

***

இனிய ஜெயம்,

முன்பு கரோனா முதல் அலை விஷயத்தில் அன்றைய சுகாதார அமைச்சரை  நீங்கள் பாராட்டி எழுதியதில் இரண்டு நாள் இலக்கிய வாசகர் -கம்- தி மு க தொண்டர்கள் போனில் வந்து குமுறினார்கள்.

இப்போது இன்று நீங்கள் முதலமைச்சரை பாராட்டி எழுதிய வகையில் தீவிர இலக்கிய வாசகர்- கம் -இந்துத்துவ -அண்ட்- அ தி மு க தொண்டர்கள் கொதித்து அழைத்து அழுகிறார்கள் சற்று முன் மூன்றாவது அழைப்பு.

உண்மையில் இவங்களுக்கு என்னதான் பிரச்சனை?

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு,

அதனால்தான் உங்கள் எண் கொடுக்கப்பட்டுள்ளது இணைய தளத்தில். என் போன் எண் ரகசியம் அல்ல. ஆனால் ஒருமுறை ஒரு சலிப்பூட்டும் அழைப்பு வந்தால், ஒரு ஃபார்வேட் வாட்ஸப் அனுப்பப்பட்டால் முப்பது செகண்டுகளுக்குள் நிரந்தரமாக பிளாக் செய்துவிடுவேன்.

உங்களை அழைத்தவர்களின் மனநிலையை நான் முப்பதாண்டுகளாகக் கண்டுவருகிறேன். இரண்டு வகையான உளவியல் சிக்கல்கள் அவை.

ஒன்று, தான் ஒரு விஷயத்தை நம்பினால் அதுவே முழு உண்மை என கருதி, அதற்கான தரவுகளையும் தர்க்கங்களையும் சேகரித்துக்கொண்டு, அதையே பேசி எழுதி கொந்தளித்து, சதிக்கோட்பாடுகளை பின்னி அதிலேயே வாழ்வது. அதற்கு வெளியே எதைக்கேட்டாலும் ஆவேசமாவது, கொந்தளிப்பது. இந்த ஒற்றைக்கண் பார்வைக்கு தன்னைக் கொடுத்தவருக்குரியதல்ல இலக்கியம். இடதோ வலதோ.

இலக்கியம் இந்தவகையான மூர்க்கங்களுக்கு அப்பால் நிலைகொள்ள முயல்பவர்களுக்கு உரியது. அன்றாட யதார்த்தத்தையும், அதன் முடிவில்லாத அனுபவ விரிவையும், அதன் நுணுக்கமான உளவியல் சிக்கல்களையும், அதன்மேல் கவியும் வரலாற்றையும் தத்துவத்தையும் பார்ப்பவர்களுக்குரியது. எப்போதும் எதற்கும் மறுபக்கம் உண்டு என்றும், எப்போதும் காண்பதற்கு அப்பால் உண்மை உண்டு என்றும் அறிந்தவர்களுக்குரியது. மற்றவர்கள் இங்கே தேவையில்லாமல் நுழைந்து நோயை உண்டுபண்ணும் வைரஸ்கள்.

இரண்டு, தான் வாசிக்கும் ஓர் எழுத்தாளர் தன் அரசியல், மத, சாதி நம்பிக்கைகள் கொண்டவர் அல்ல என்றால் அவரை வெறுப்பது. அவரை வசைபாடுவது. அவர் தன் அரசியல் அணியில் வந்து நின்று தன்னைப்போலவே கூச்சலிடும் ஒருவராக இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பது.

ஓர் எழுத்தாளர் உங்களுக்கு அளிப்பது ஒரு புனைவுலகை. ஒரு கருத்துலகை. அதனூடாக கற்பனையாலும் சிந்தனையாலும் பயணம் செய்பவனே இலக்கியவாசகன். வாசகன் என்பவன் இலக்கியவாதியை நோக்கிச் செல்பவன், இலக்கியவாதியை தன்னை நோக்கி இழுக்க முயல்பவன் அல்ல.  அரசியலையும் மதத்தையும் சாதியையும் வைத்து இலக்கியத்தை மதிப்பிடுபவருக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமில்லை.

இன்று பொதுவாக எதிர்மனநிலைகள் உச்சமடைந்துள்ளன. எல்லாருமே மனநோயாளிகளின் நிலையில் உள்ளனர். ஆகவே எங்கும் இதெல்லாம் கண்ணுக்குப் படுகிறது.

முன்பு நான் இந்த மனச்சிக்கல்களை கொஞ்சம் பொறுத்துக்கொண்டேன், இவர்களிடம் கொஞ்சம் உரையாட முயன்றேன். இன்று இந்த உளநோயாளிகளை நான் ஏன் கருத்தில் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். உங்களை அழைத்தவர்கள் எவர் என்று சொன்னால் அவர்களுடன் வாழ்நாள் தொடர்பை முறித்துக் கொள்வேன்.

ஏனென்றால் அந்த உளநோய் கொண்டவர்களில் நூறில் ஒருவர் கூட குணமாக வாய்ப்பில்லை. எஞ்சிய தொண்ணூற்றொன்பது பேருடன் போராடி நாம் உளநோயாளி ஆகிவிடுவோம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2021 11:32

மோட்சம்- கடிதம்

மோட்சம்

அன்புள்ள ஜெ,

தாங்கள் பகிர்ந்த ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் மோட்சம் சிறுகதையை வல்லினத்தில் வாசித்தேன். மிகவும் காத்திரமான, வாசிப்பில் வலியின்பம் தரும் கதை. பொதிகைமலை விளிம்புகளில் குடிகள் அமைந்த நிலமென்பதே நானறியாத வெளி. அதன் சேரிகள், மனிதர்கள், தெய்வங்கள் (சொற்கேளா வீரன், குருந்துடையார் அய்யனார், சூட்சமுடையார் சாஸ்தா) அனைத்துமே ஒரு கனவுத்தன்மையைக் கூட்டின. உயிர் காக்கும் மருத்துவரையும் காறி உமிழ்ந்து கடந்து செல்லும் மனிதர்கள் நம் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பன போன்ற சாதிய அடக்குமுறை சார்ந்த கொடுமைகளின் ஆலாபனையுடன் கதைக்குள் நுழைந்தேன். இது கழுவேற்றம் பற்றிய கதை என்று ஆசிரியர் இரண்டாவது வரியிலேயே உறுதி அளித்து விடுகிறார்.  கழுவேற்றத்துக்கான அத்தனைத் தயாரிப்புகளையும் , கழுவேற்ற நிகழ்வையும் கூடத் துல்லியமாகவும், பீபத்ஸ சுவையுடனும் விவரித்து கிலி ஏற்படுத்துகிறார். கதைகளின் வழியே மட்டும் கேட்டிருந்த கழு நிஜத்தில் நிகழ்கையில் அது அங்கிருந்தவர்களிடம் ஒரு கொண்டாட்ட மனநிலையையே உருவாக்குகிறதென்பதைக் காண்கிறோம். ஒவ்வொருவரும் அதன் தயாரிப்பு குறித்து எழுச்சியுற்ற மனநிலையில் விவரிக்கிறார்கள். 

கதைசொல்லியின் நண்பனான கழுவேற்றப்படும் மாரனுக்கு ஏன் அந்தப் பெயர் என்று ஒருவர் பின்னூட்டத்தில் விளக்கியதை வாசித்து வியந்தேன். பின்னர் வருகிறது கணியான் கூத்து கர்ணமோட்சம். இதுவும் நானறியாத கதையே. என் கருத்தில், ஒரு நல்ல படைப்பில், அதில் வரும் நிகழ்வுகள், எந்தப் புற விளக்கமுமின்றியே வாசகனிடத்துத் தம்மை நிறுவிக்கொள்ளும் ஆற்றல் மிக்கவை. இக்கதையிலும் அவ்வண்ணமே நிகழ்ந்திருக்கிறது. கர்ணமோட்சத்து துரியன்–பொன்னுருவி– கர்ணன் கதையை எந்தப் பின்புல உதவியுமின்றியே அனுபவித்து மகிழ்ந்தேன். பொன்னுருவி என்ற பெயரே உணர்வுகளைக் கிளறுகிறது. கணியாங்குளம் முத்தம்பெருமாளின் பாடல்கள் மட்டுமின்றி, கர்ணன், பொன்னுருவி, துரியன் உரையாடலையும் ஆசிரியர் எழுதியிருந்த விதம் அவர் எழுத்துத் திறனின் தேர்ச்சிக்கான சான்று. அந்நிகழ்வுகளை வாசிக்கையில் ஒரு கணம் அவை உரைநடை என்ற அடையாளத்தை இழந்து ஒரு கிராமத்துக் கிழவியின் சொற்களின் இசை இழைந்து கேட்கும் கதை போல மாறி விடுகிறது.   

நீ தொட்டால் நான் தீட்டாவேன் . உன் கைபட்டால் நான் தீயிற்கே இரையாவேன் . உன்னோடு ஒரு சொல்லும் இனி எனக்கில்லை . என் பெயரைச் சொல்லும் அருகதைக்கூட குலமிலியே உனக்கில்லை .”

மாரனின் மாறாப்புன்னகை நம்மையும், கதைசொல்லியையும் என்னவோ செய்கிறது.  இரு இணைகோடுகளாகப் பயனித்த கர்ணமோட்சத்துக் கதையும், மாரனின் கதையும் பின் மெல்ல மெல்ல இடைவெளி குறைந்து உச்சம் அடைந்து இணைகின்றன.

கதையை நான் மிகவும் வியந்தேன். இதுவே நான் வாசிக்கும் நவீனின் முதல் கதை. தனித்த நடை. அணிகளற்ற, அதே நேரம் நம்பிக்கை மிகுந்த கதை சொல்லல். சிறுகதையின் நுட்பங்களை லாவகமாகக் கையாளும் திறன். உரையாடல் எங்கு அமைக்க வேண்டும் என்ற தெளிவு. முடிவின் திருப்பத்தை திடீரென்று இல்லாமல், மெல்ல, மெல்ல அவிழ்த்து கண்முன் உருள விடும் வல்லமை. எல்லாம் இணைந்து இவரை கவனிக்கத்தகுந்த எழுத்தாளராக்குகிறது. நிறைய எழுதியிருக்கிறார். இவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வல்லினத்தில் இவர் படைப்புகளைத் தேடியபோது, அவர் உங்கள் நூறு சிறுகதைகளைப் பற்றி எழுதிய நீண்ட கட்டுரையையும் வாசித்தேன். உங்கள் நூறுகதைகளுக்குள் நுழையும் வாயிலாக அவை இருக்கும்.

ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்

எதற்கு இவ்வளவு நீளமான இனிஷியல் என்பதைத் தவிர நவீனிடம் குறைபட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. 

 

அன்புடன்

ஜெகதீஷ் குமார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2021 11:31

வெண்முகில்நகரம் – வாசிப்பு

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது நாவல். வெண்முரசு – இன் அனைத்து நாவல்களும் தன்னளவில் முழுமை கொண்டது என்பதால், வெண்முகில் நகரம் – நாவலை இவ்வாறு பிரித்தறிய முயற்சிக்கிறேன்.

அ. திரெளபதி – இந்திரபிரஸ்தம் நகரை அமைத்தல்

ஆ. இருதரப்பினரும் போருக்கு ஆயத்தமாக தங்கள் தரப்பில் படைகளைத் திரட்டுதல்

இ. மலைக்குடிகள் – சிறிய குலங்கள் தங்கள் பாதுகாப்பின் பொருட்டு எடுக்க நேரிடும் முடிவுகள் அதன் விளைவுகள்

ஈ. பானுமதியின் கருணை கொண்ட விழிகள்

வெண்முரசின் ஐந்தாவது நாவலான பிரயாகை, திரெளபதி – பாண்டவர்கள் திருமண நிகழ்வுடன் நிறைவு பெற்றது. அதிலிருந்து தொடங்குகிறது வெண்முகில் நகரம். சாத்யகி மற்றும் பூரிசிரவஸ் – இருவர்களின் வழியாகவே வெண்முகில் நகரம் – கட்டப்படுவதற்கான சூழல் உருவாதை பார்க்கிறோம். சாத்யகி கிருஷ்ணனின் அணுக்கன். பூரிசிரவஸ் மலைக்குடியில் இருந்து வந்து துரியோதனனின் அணுக்கனானவன்.

முந்தைய நாவலான வண்ணக்கடல் – பிரயாகை இரண்டும் உணர்ச்சி பெருகி ஓடிய வெள்ளம் என்றால் வெண்முகில் நகரம் அவ்வப்போது சுழலில் முட்டி ஒழுகும் நதி. நதியின் இரு கரைகளாக பூரிசிரவஸ் மற்றும் சாத்யகி. இரு கரைகளில் இருந்து சுழலை எப்படி பார்க்க வேண்டும் என கிருஷ்ணன் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

அனைத்தையும் தள்ளி நின்றே பார்க்கிறான் கிருஷ்ணன். எதிலும் பங்கெடுத்துக் கொள்வதில்லை. ஆனால் எல்லாம் அவனால் நடத்தப்படுகிறது. கோட்டைக் காவலனின் பெயரை செல்லி அவனை தழுவும் கிருஷ்ணனிடம், சாத்யகி “ஒற்றர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள் ” என்றதும் “அதில் என்ன பிழை, கோட்டைக்குள் இருப்பவரைப் பற்றி தெரிந்து கொண்டு தான் வருகிறோம் இல்லையா, அதை போல் தான்.

நான் இவர்களால் எனக்கு ஏற்படும் நன்மை குறித்து எல்லாம் சிந்திப்பதில்லை, அறிதலில் மகிழ்கிறேன்” ( என் நினைவில் இருந்தே இதை எழுதுகிறேன், குறிப்பு எடுத்தேன் – நான் என்றும் நினைவில் நிறுத்த வேண்டியது – அதனால் குறிப்புகளைப் பார்க்கவில்லை ) ஏன் கிருஷ்ணன் அனைவருக்கும் வழிகாட்டியாக குழந்தையாக இருக்கிறான் என்பதற்கான ஆதார வரிகள் இவை. எந்த செயல் செய்தாலும் அதில் மட்டுமே முழுமையான ஈடுபாட்டோடு செய்பவன்.

கிருஷ்ணன் வரும் பகுதிகள் எப்போதும் மகிழ்ச்சிக்குரிய தருணங்கள் தான். இல்லை அத்தருணங்கள் மகிழ்ச்சிக்குரியதாக கிருஷ்ணனால் மாற்றப்படுகிறது. எரிமாளிகை நிகழ்விற்கு பிறகு துரியன் – யுதிஷ்டிரன் முதல் சந்திப்பு என்பது பெரிய சங்கடம் கொடுக்க கூடிய ஒன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். கிருஷ்ணன் அச்சந்திப்பை ஒருங்கிணைத்து கொண்டு சென்ற விதம் ஒரு மேலாண்மை கதை.

பேரரசுகள் வணிகத்தால் நிலைநிறுத்தப்படுகின்றன. வணிகம் – அஸ்தினாபுரியில் எப்படி நிகழ்கிறது, துவாரகை எப்படி தன் வணிகத்தை பொருக்கி கொள்கிறது. இந்திரபிரஸ்தம் எப்படி வணிகத்தை கையாளத் திட்டமிட்டிருக்கிறது, மலை வணிகம் எப்படி நடைபெறுகிறது என முழுமையான வணிகச்சித்திரத்தையும் அளிக்கிறது வெண்முகில் நகரம்.

நாவலில் வந்த அனைத்து விஷயங்களும் பானுமதியின் கருணைமுன் பஞ்சாகின்றன. பானுமதி எப்படி மாறப்போகிறாள், அந்த நிகழ்வுகள் யாவை என்பது நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அவர்கள் மாறாமல் அதே கருணையுடன் இருக்க வேண்டும்.

வாசிக்கும் போது நீண்ட கடிதம் எழுதவே திட்டமிட்டேன். ஆனால் பானுமதி கதாபாத்திரம் என்னை முழுமையாக அதனுள் இழுத்துக் கொண்டது. அதற்குள்ளேயே சில நாட்கள் இருக்க வேண்டும்.

நன்றி

பலராம கிருஷ்ணன்

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் வெண்முகில் நகரம் வெண்முகில் நகரம்: முன்னுரை பெண்களின் நகரம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2021 11:30

May 14, 2021

இன்றிருந்தேன்…

இன்றிருத்தல்…

இன்று காலை வழக்கம்போல ஏழுமணிக்கு எழுந்து காபி போட்டுக் குடித்துவிட்டு ‘கதாநாயகி’ நாவலை எழுத ஆரம்பித்தேன். அது நாவல் என்று தெரியாமலேயே ஆரம்பித்து விட்டேன். எழுதிய முதல் அத்தியாயம் எட்டாம் தேதி இரவு 1130க்கு முடிந்தது. அரைமணி நேரத்தில், ஒன்பதாம் தேரி 05 மணிக்கு வெளியாகிவிட்டது. அது ஒரு சவால், எனக்கு நானே விடுத்துக்கொண்டது, என்ன வருகிறதென்று பார்ப்போம் என்று நினைத்து.

கே.எஸ்.புணிஞ்சித்தாயா என்ற மங்களூர் ஓவியரை என் 25 வயது காலத்தில் பார்த்திருக்கிறேன். திரையில் வண்ணங்களை கலந்து விசிறியடிப்பார். அவை வழிந்து வரும்போது அந்த வழிதலையே ஒரு கத்தியால் நீவி நீவி ஓவியமாக்குவார். அவரும் அந்த வண்ணங்களின் வழிதல்களில் உள்ள ஒரு மாயக்கரமும் இணைந்து ஓவியத்தை உருவாக்கும்.

அன்று அவர் மேடையிலேயே ஓர் ஓவியத்தை வரைந்து காட்டினர். திகைப்பாக இருந்தது. அன்று பலர் கேள்விகள் கேட்டனர். அதில் ஒரு கேள்வி கவிஞரான வேணுகோபால் காசர்கோடு கேட்டது. ‘இது உங்கள் இன்ஸ்பிரேஷனுக்கு தடையாக இல்லையா? இந்த வண்ணங்களின் சாத்தியங்களை மட்டுமே நீங்கள் வரைய முடியும் என்று தோன்றவில்லையா?”

அதற்கு புணிஞ்சித்தாய சொன்ன பதில் மிக ஆழமானது. “எது இன்ஸ்பிரேஷன் என நம்மால் சொல்லிவிடமுடியாது. எனக்கு இந்த வண்ணங்கள் வழிவதிலுள்ள முடிவில்லாத சாத்தியக்கூறுகள்தான் தூண்டுதல். அவை என் கனவை கிளறுகின்றன. பலநூறு ஓவியங்கள் தோன்றுகின்றன. அவற்றிலொன்றை நான் வரைகிறேன். வரையாதவை கைநழுவிப்போகின்றன”

“இந்த ஓவியம் ‘ஆர்கானிக்’ ஆனாது, இது மேகங்களைப்போல, இத்தருணத்தில் உருவானது. இது நேரடியாக என் ஆழ்மனதில் இருந்து வருகிறது. என் ஆழ்மனதை இந்த வண்ணங்களின் வழிதல் தூண்டுகிறது. இயற்கையிலுள்ள எந்த தன்னிச்சையான அசைவையும் கூர்ந்து பார்த்தால் நாம் மெஸ்மரைஸ் ஆகிவிடுவோம். நம்மிடமிருந்து கலை உருவாகும். சிந்தனைசெய்து, திட்டமிட்டு, வடிவங்களையும் உருவகங்களையும் உருவாக்கி வரைவதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார் புணிஞ்சித்தாய.

பின்னர் மோகன் லால் தன்னிடம் சொன்னதாக மணிரத்னம் சொன்னார். காட்சியை முழுக்க ‘கம்போஸ்’ செய்து அளிப்பது லாலுக்குப் பிடிக்காது. அப்படி அளித்தாலும் அவர் கொஞ்சம் கலைத்துக்கொள்வார். தற்செயல்கள் நடக்கவேண்டுமென நினைப்பார். ‘கடவுளுக்கும் ஒரு ரோல் அதில் வேண்டும்’ என்று லால் சொன்னார். சாலையில் செல்லும் ஒரு கூட்டத்தை பாடியபடியே முறித்துக் கடந்து மறுபக்கம் செல்லவேண்டும். அதற்கு திட்டமிட்டு கொடுத்த இடத்துக்கு சற்று அப்பால் லால் முறித்துக் கடந்தார். நடிகர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. அந்த குளறுபடியின் எல்லா அசைவுகளையும் இயல்பாக அவர் சமாளித்து கடந்துசென்றார். அந்த எதிர்பாராத தன்மையே அதன் அழகாக ஆனது.

நாவல் அன்றன்று வருவதைப்போல் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருநாளும் என்ன வருகிறதோ அதை எழுதிய பின்னரே நான் அறிகிறேன். ஆனால் வடிவம் திரண்டபடியே வருகிறது. ஒத்திசைவும் முழுமையும் கொண்ட வடிவம். ஏனென்றால் கலை என்பது கைகளில், தர்க்கத்தில் இல்லை. அது கனவில் இருக்கிறது. வடிவமுழுமை இல்லாத கனவுகளே இல்லை.

ஓர் அத்தியாயம் எழுதினேன். மூவாயிரம் வார்த்தைகள். அச்சில் என்றால் 15 பக்கம். பின்னர் அ.வெ.சுகவனேஸ்வரனின் பிரம்மசூத்திரம் உரையை இன்னும் இரு உரைகளுடன் ஒப்பிட்டேன். சங்கரர், ராமானுஜர், மத்வர் உரைகளை சேர்த்துப் படித்தேன். அதைப்பற்றிக் கொஞ்சம் எழுதினேன் ஆயிரம் வார்த்தைகள்.

இன்று முதல் வாசகர்களிடம் ‘லைவ் சேட்’ உரையாடுவதாகச் சொல்லியிருந்தேன். ஒரு வாசகருக்கு நாற்பது நிமிடம் வீதம் நான்கு வாசகர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகம். ஒருவருக்கு ஆலோசனைகள். ஒருவரிடம் விவாதங்கள். இருவரிடம் அனுபவப்பதிவு. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம். உற்சாகமான பேச்சு, சிரிப்பும்.

முடிந்ததுமே சூம் மீட்டிங்கில் நண்பர்கள் சந்தித்தோம். ராஜகோபாலன், ஸ்டாலின் பாலுச்சாமி ஆகியோர் பேசினார்கள். அரங்கசாமி ஓர் தன்நடிப்பு நாடகத்தை நடத்தினார். சிரிப்பு வேடிக்கை என்று இரண்டு மணிநேரம்.

இந்த வகையான சந்திப்புகளில் நான் உத்தேசிப்பது ‘தன் வெளிப்பாடு’ என்பதை. அதாவது கற்பனையில் சென்று தன்னை முன்வைப்பதை. அன்றாட உரையாடல்களை அல்ல. நாம் வெளியே செய்வனவற்றை அல்ல. அரங்கா அந்த நாடகத்தை பயிற்சி எடுத்து மனப்பாடம் செய்து தயாராவதற்கு எடுத்துக்கொண்ட நேரமே தன்னுடைய பெரும் கொண்டாட்டம் என்றார். மனநிலையே மாறிவிட்டது. முகம் மலர்ந்துவிட்டது. அதைப் பார்த்ததுமே சந்திப்பின் பொதுவான உற்சாகமே பலமடங்காக ஆகிவிட்டது.

ஆம், நடுவே அத்தனை பிரச்சினைகள். பண உதவி செய்த சிலருக்கு சென்று சேரவில்லை, அவர்களின் தொடர் அழைப்புகள். மருத்துவமனைக்கு உதவ சிலர் ஓடிக்கொண்டிருந்தனர். சாவுச்செய்தியும் ஒன்று இருந்தது. அதனாலென்ன?

இன்னுமிருக்கிறது நாள். இனி சாப்பாடு, அதன்பின் குடும்ப அரங்கம். அதில் சிரிப்பு மட்டுமே. அதன்பின் பத்தில் இருந்து பன்னிரண்டு மணிவரை மேலும்  கொஞ்சம் வேதாந்தம். ஓரிரு பாடல்கள். ஒரு நாள் நிறைவுறும்.

வீணடிக்காமலிருந்தால் ஒரு நாள் எத்தனை பெரிதாகிறது, எவ்வளவு செய்தாலும் நேரம் மிஞ்சுகிறது. முடியும்போது ஒரு முழு வாழ்க்கையை முடித்த நிறைவு உருவாகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தனிவாழ்வென வாழ்பவர்களே உண்மையில் வாழ்கிறார்கள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2021 11:35

மிகுபுனைவுகள்,கனவுகள்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

நான் தங்களது இளம் வாசகன்.தாங்கள் எழுதிய சிறுகதைகளில் கையளவு , முதற்கனல் இரு பகுதிகள், நீலம் கொஞ்சம், விஷ்ணுபுரம் கொஞ்சம் வாசித்திருக்கிறேன்.

மற்றபடி நான் அதிகம் வாசித்தது தங்கள் கட்டுரைகளை தான்.இலக்கிய புனைவுக்கு இன்னும் பழகிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம், நாவல் குறித்த தங்கள் பார்வைகள், வாதங்கள் ஓர் அளவுக்கேனும் புரிந்திருக்கிறது.

நாவல் என்பது கதையளக்கும் பகல் கனவாகவும் இல்லாமல், தகவல்களின் ஆவணத்தொகுப்பாகவும் இல்லாமல் நிகர்ஆவணமாக வரலாறுடன் பிணைந்த புனைவாக இருக்க வேண்டும் என புனைவில் வரலாற்றின் முக்கியத்துவத்தை சொல்லி இருக்கிறீர்கள் (தாங்கள் ஒரு இடத்தில் சொன்னவற்றை நான் புரிந்துகொண்டவாறு)

புனைவில் வரலாறை பின்புலமாக கொண்டிருக்கும் தல்ஸ்தோயின் “போரும் அமைதியும்”, தஸ்தயேவஸ்கியின் ” கரம்ச்சோவ் சகோதரர்கள்” இவற்றை, உதாரணத்திற்குரிய சிறந்த நாவல்களாக (பிரபலமானவை) குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

கனவுரு புனைவு நாவல்  (High and Epic Fantasy fiction)போன்ற வகைகளில் இருக்கும் நாவல்கள் பலவற்றை அறிந்திருப்பீர்கள். அதன் உதாரணங்களாக  ஜெ கே ரௌலிங்-இன் “ஹார்ரி பாட்டர்” தொடர், ஜே ஆர் ஆர் டோல்கியின்-இன் “லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்” தொடர். ஹார்ரி பாட்டர் epic low fantasy. நிகழ் உலகோடு தொடர்புடைய கற்பனை உலகில் நடைபெறும் பெரும் புனைவு.

‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ epic and high fantasy. முற்றிலும் கற்பனையால் எழுப்பப்பட்ட வேறு ஒரு உலகில் நடைபெறும் பெரும்புனைவு .

இந்த படைப்பு டோல்கியின்- இன் பிரம்மாண்ட பகல்கனவு. வெண்முரசு போல் காலம் காலமாய் இயங்கிய தொன்மத்தின் வரலாற்றின்  பின்புலமும் கிடையாது.

‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ வரலாறு என எதுவும் இல்லாதது. ஆயினும் பிரிட்டன், அதன் அரசியல், வரலாறு, கிறித்தவ மதம், நிலஅமைப்பு ஆகியவை கனவுருமாறி- ‘அதிகார மோகம்’ எனும் அதன் கதைக்கருவில் கலந்து, உச்சக்கட்ட கற்பனை எழுவித்த மாபெரும் உலகமாக, அதன் யுத்தமாக வெளிப்பட்டிருக்கும். வரலாற்றை முற்றாக அது துறக்கவில்லை. அதிகாரமோகத்தின் படிமமாக அந்த கதையை நகர்த்தும் ஒரு மோதிரம் அமைந்திருக்கும். நாவலுக்குரிய அம்சங்கள் நிறைய அதில் அமைந்திருக்கும்.(நினைக்கிறேன்)

அதேபோல்,

உர்சுலா கே ல கென் (Ursula K le Guin)

-இன் “எ விஸார்ட் ஆஃப் எர்த்ஸீ ” சமநிலை, தாஓயிச தத்துவங்களை கருவாக கொண்டிருக்கும் ஒரு high fantasy புனைவு. இதிலும் வரலாறு விடுபடுகிறது. எனக்குப்பட்டவரைக்கும் நாவல்-இன் பல அம்சங்களையும் இது கொண்டிருக்கிறது.

முடிவாக,

தாங்கள் நாவல் குறித்து கூறிய “வாழ்க்கையை தொகுத்துக் காட்டி பார்வையை அளித்தலை”, கற்பனை எழுவித்த இரண்டாம் உலகத்தில் டிராகன்கள், கோட்டைகள், குள்ளர்கள், மந்திரவாதிகள், மாயசக்திகள், மாயகாடுகள்- இவை மூலம் செய்யலாமா? அது மேலைப்படிமங்கள் என்றால் நம் கலாச்சார படிமங்களைக்கொண்டு படைக்கலாமா?அது எந்த அளவுக்கு realist நாவல்கள் செய்யும் தாக்கத்தை ஏற்படுத்தும்? முழு கற்பனை என்பதால் படைப்பாக்கம் மற்றும் கற்பனையாலான படிமங்களின் சாத்தியங்கள் அதிகமாகுமா?

அன்புடன்,

சஃபீர் ஜாசிம்

அன்புள்ள சஃபீர்

முதல் கேள்வி மிகுபுனைவு [Fantasy] எதற்காக எழுதப்படுகிறது? முன்னரே இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். உலக இலக்கியத்தில் நமக்கு கிடைக்கும் படைப்புக்களில் பெரும்பகுதி மிகுபுனைவுகளே. யதார்த்தவாதம் என்பது இருநூறாண்டுகள் வரலாறுள்ள ஒரு குறிப்பிட்ட வகையான அழகியல் மட்டும்தான்.

யதார்த்தவாதம் ஏன் உருவானது? அது நவீன ஜனநாயகத்துடன் சேர்ந்தே தோன்றியது. இதுதான் வாழ்க்கை என்று அது காட்ட விரும்பியது. அன்றாடத்தை, அதை இயக்கும் விசைகளை தொகுத்து முன்வைக்க முயன்றது. ஆகவே  ‘உள்ளது உள்ளபடி’ என்னும் பாவனையில் அது புனைவை அமைக்கலாயிற்று.

அதற்கு முன்னும் பின்னும் மிகுபுனைவுகள் ஏன் எழுதப்பட்டன? அவற்றுக்கு இதுதான் வாழ்க்கை என்று காட்டும் நோக்கம் இல்லை. மாறாக இதுதான் வாழ்க்கையின் சாரம் என்று காட்ட அவை விரும்பின. விழுமியங்களை, தரிசனங்களை இலக்கியம் வழியாக முன்வைக்க முயன்றன. அதற்குத் தேவை அன்றாடச் சித்திரம் அல்ல. குறியீடுகள், படிமங்கள். அவற்றை உருவாக்கும் ஒரு களமாகவே அவை மிகுகற்பனையைக் கண்டன.

மிகுகற்பனை வாழ்க்கையை குறியீடாக்குவதனூடாக உருவாவது. வாழ்க்கையின் காட்சிகள், நிகழ்வுகள், ஆளுமைகள் மேல் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் ஏற்றிவைக்கும்போது அவை குறியீடாக ஆகின்றன. அவ்வாறு அர்த்தமேற்றப்பட்ட அடையாளங்களையே நாம் படிமங்கள் என்கிறோம்.

மிகுகற்பனை பலவகை. மிகுகற்பனை இயல்பாகச் செல்லுபடியாகக்கூடியது சென்றகாலக் கதைகளில்தான். ஆகவேதான் வரலாறு மிகுகற்பனைகளால் ஆனதாக மாறியது. அதில் தொன்மங்கள் விளைந்தன. மாறாக அன்றாடத்தையே மிகுகற்பனையாக ஆக்குவதை நாம் மாயயதார்த்தம் என்கிறோம்.

மிகுகற்பனை பலவகை. தொன்மங்களில் இருந்து உருவாக்கப்படும் மிகுகற்பனைகளையே நாம் பெரும்பாலும் காண்கிறோம். விஷ்ணுபுரம், வெண்முரசு போன்றவை அத்தகையவை.அன்றாடத்தில் இருந்து உருவாக்கப்படுபவை மாயயதார்த்தம் எனப்படுகின்றன. அறிவியல் புனைகதைகளில் அறிவியலின் சாத்தியங்களைக்கொண்டு மிகுகற்பனைகள் உருவாக்கப்படுகின்றன. அறிவியல்புனைகதைகளில் ஒரு பகுதியாகிய எதிர்காலத்தன்மை கொண்ட கதைகளும் ஊகக்கதைகளும்கூட மிகுகற்பனைகளே.

நவீன இலக்கியம் தோன்றியபோதே இவை அனைத்துக்கும் முன்மாதிரிகள் உருவாகிவிட்டன. ராபின்ஸன் குரூசோ [ டானியல் டீஃபோ] பிராங்கன்ஸ்டைன்[மேரி ஷெல்லி] நிலவுக்குப் பயணம் [ஜூல்ஸ் வெர்ன்] போன்றவை வெவ்வேறு வகையான அறிவியல் மிகுபுனைவுகளை உருவாக்கின.  கலிவரின் பயணங்கள் [ஜோனத்தன் ஸ்விப்ட் ] ஆலிஸின் அற்புத உலகம் [லூயி கரோல்] போன்றவை மிகுகற்பனை புனைவுகளின் முன்மாதிரிகள்.

இவற்றில் நவீன இலக்கியம் உருவாக்கிய மிகைக்கற்பனைக் கதைகளை நவீனப்புராணங்கள் எனலாம். அவற்றில் முன்னோடியானது பிராம் ஸ்டாக்கரின் ‘டிராக்குலா’. அதிலிருந்து தொடங்கி ஏராளமான மிகுபுனைவுகள் மேலை இலக்கியத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றுக்குள்ளேயே பல உட்பிரிவுகளும், காலகட்டங்களும் உண்டு. அந்த வகையில் உருவானவையே லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஹாரி போட்டர் போன்றவை.

அவை நாம் நவீனப் புராணங்கள். நாம் எண்ணுவதுபோல அவை வேரற்றவை அல்ல. அவை அந்தரத்திலும் உருவாகவில்லை. அவற்றுக்கு ஐரோப்பிய நிலத்தில் பண்பாட்டு முன்வடிவங்கள் உண்டு. அவை உருமாற்றப்பட்ட தொன்மங்கள்தான்.

ஐரோப்பியநிலம் ஒரு காலத்தில் செழிப்பான ‘பாகன்’ பண்பாடு கொண்டதாக இருந்தது. பாகன் பண்பாடு என்பது பழிக்கும் கோணத்தில் கிறிஸ்தவம் இட்ட பெயர். உண்மையில் அது ஒன்றல்ல. தத்துவச்செழுமை கொண்ட கிரேக்கமதம் முதல் நாட்டார்மதங்கள் வரை அதில் பல நிலைகள் உண்டு.

வரலாற்றை நோக்கினால் பாகன் பண்பாடு கிபி ஐந்தாம்நூற்றாண்டுக்குள் ஐரோப்பாவில் முழுமையாக அழிக்கப்பட்டது. ஆனால் எந்தப் பண்பாடும் முழுமையாக அழியாது . பாகன் பண்பாட்டின் ஒருபகுதி உருமாறி கிறிஸ்தவத்திற்குள் குறியீடுகளாக சடங்குகளாக விழாக்களாக நீடித்தது. இன்னொரு பகுதி ரகசியமாக நீடித்தது.

அந்த ஒளிந்திருந்த பாகன் பண்பாட்டிற்கு எதிராக ஐரோப்பியக் கிறிஸ்தவம் நிகழ்த்திய கொடிய ஒடுக்குமுறை மானுடகுலத்தின் இருண்ட பக்கங்களில் ஒன்று. சூனியக்காரிகளை கொல்வது, மதவிசாரணைகள் பல நூற்றாண்டுகள் அந்த வன்முறை நீடித்தது. அந்த மறைந்திருந்த பாகன் பண்பாடு கொடிய பேய்களின் உலகமாக சித்தரிக்கப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டின் இறுதி முதல் பாகன் பண்பாட்டை பேய்களின், மந்திரங்களின் உலகமாக காட்டி எழுதப்பட்ட இலக்கியங்கள் உருவாயின. பொதுவாக அவை கோதிக் இலக்கியம் எனப்பட்டன. அவற்றின் மிகச்சிறந்த உதாரணம் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா. டிராக்குலா பிரபு உண்மையில் ஒரு பாகன் தெய்வத்தின் கொடிதாக்கப்பட்ட வடிவம்தான். அதைப்பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கிறிஸ்தவத்தின் வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் உருவான சீர்திருத்தவாத கிறிஸ்தவம் ஒரு திருப்பு முனை. கடவுளின் புவிசார் உருவமாகவே திகழ்ந்த திருச்சபை என்னும் அமைப்பின் அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டது. அதேபோல இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு உருவான அறச்சிக்கல்கள் இரண்டாவது திருப்புமுனை. யூதப்படுகொலைகளுக்குப் பின் கிறிஸ்தவ மதிப்பீடுகள் என்பவை பொய் என ஐரோப்பியர்களில் கணிசமானோர் உணரத் தலைப்பட்டனர்.

அவர்கள் கிறிஸ்தவத்தால் ஒடுக்கப்பட்ட பாகன் பண்பாடுகளை தேடிச்சென்றனர். ஏற்கனவே சீர்திருத்தவாதக் கிறிஸ்தவத்தின் எழுச்சியின்போது கிரேக்க, ரோமானிய பண்பாடுகள் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டன. ஐம்பதுகளுக்குப் பின் ஐரோப்பாவின் பிற பாகன் பண்பாடுகள் மேல் தீவிரமான ஈடுபாடு உருவானது.

அந்த ஈடுபாட்டின் விளைவே லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஹாரிபாட்டர் போன்றவை. அவற்றுக்கு வெவ்வேறு பாகன் தொன்மங்களுடனான உறவு நிறைய எழுதப்பட்டுள்ளது. ஹாரிபாட்டர் தெளிவாகவே ஒரு  ‘புதைந்த’ உலகுக்கு கூட்டிச் செல்கிறது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஒரு இணைப்புராணத்தை உருவாக்கிக் காட்டுகிறது.

ஆனால் லார்ட் ஆஃப்த ரிங்ஸ், ஹாரிபாட்டர் இரண்டுக்குமே இலக்கியமதிப்பு இல்லை. அவை சிலதலைமுறைகளை கடந்துசெல்ல முடியுமென்றால் வெறும் தொன்மமாக நீடிக்கும்- டிராக்குலா போல.

ஏனென்றால் இவை அந்த பாகன் தொன்மங்களின் நீட்சிகளை, நிழலுருக்களைக் கொண்டு ஒரு கேளிக்கையுலகையே கட்டமைக்கின்றன. அடிப்படையான வினாக்களை எழுப்பவில்லை. விழுமியங்களை மறு ஆக்கம் செய்யவில்லை. இலக்கியத்தின் இலக்கு என்பது வாழ்க்கைசார்ந்த, காலம் வெளி சார்ந்த அடிப்படை தத்துவ வினாக்களை, மெய்யியல் புதிர்களை எழுப்பிக்கொள்வதும் விழுமியங்களை மறுவரையறை செய்வதும்தான்.

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் வழக்கமாக பழைய புராணங்களில் இருக்கும் அதிகாரம், அதற்கு எதிரான போராட்டம், நன்மைதீமை முரண்பாடு என்னும் எளிய சூத்திரங்களுக்குள்ளேயே சுழல்கிறது. ஹாரிபாட்டர் இன்னும் ஒரு படிகீழே. இலக்கியத்திற்கு இன்னும் ஒரு படி மேலே செல்லவேண்டியதுண்டு. அது புதிய புராணங்களை மட்டும் உருவாக்கினால் போதாது, அந்த புதிய புராணங்கள் குறிப்புணர்த்தும் புதிய தரிசனங்களை, தத்துவங்களை, உணர்வுநிலைகளையும் உருவாக்கவேண்டும்.

அதற்கு உதாரணமாகச் சொல்வதென்றால் யோஸ் சரமாகோவின்  பிளைண்ட்னெஸ் [ Blindness ,José Saramago]ஐ குறிப்பிடலாம். அது வெறும் நவீனப்புராணம் மட்டுமல்ல. அது ஒரு இந்த வாழ்க்கை பற்றிய புதிய கேள்விகளை, தரிசனங்களை உருவாக்குகிறது. உலகமெங்கும் பலமொழிகளில் அந்நாவலின் மையத்தொன்மத்தை தழுவியும் விரித்தும் நாவல்கள் வந்துள்ளன. மலையாளத்தில் ஒரு சினிமாவே வந்தது குரு.

இந்தியாவில் நாம் பழைய புராணங்களின் மறு ஆக்கமாக மிகுகற்பனைக் கதைகளை எழுதலாம். நவீனப்புராணங்களை உருவாக்கலாம். அவற்றில் நம் கற்பனையை பறக்கவிடலாம்- ஆனால் எப்படிப் பறந்தாலும் அதன் வேர் இங்குள்ள பழைய தொன்மங்களில் இருக்கும். மறைமுகமாக அல்லது தலைகீழாக.

எழுதுவதன் நோக்கமே முக்கியமானது. அதனூடாக ஆசிரியனாக நீங்கள் இலக்காக்குவதென்ன? வெறுமொரு புனைவு வெளியா? எனில் நீங்கள் இலக்கியத்துள் நுழையவில்லை. அப்புனைவுவெளியில் நீங்கள் புதிய படிமங்களை, உருவகங்களை, தொன்மங்களை உருவாக்கி அதனூடாக மெய்யியல், தத்துவ, விழுமிய வினாக்களை எழுப்பிக்கொள்கிறீர்கள், மறுவரையறை செய்கிறீர்கள் என்றால் மட்டுமே அதற்கு இலக்கிய மதிப்பு

உண்மையில் இந்தவகை மிகுபுனைவுகளை நோக்கி நாம் செல்லவேண்டிய காலம் வந்துள்ளது. ஏனென்றால் இன்று அன்றாடத்தில் எழுத பெரிதாக ஒன்றுமில்லை. புறவாழ்க்கை ஊருக்கு ஊர் இடத்திற்கு இடம் பெரிதாக மாறுபடுவதில்லை. உறவுகளும், வாழ்க்கைத் தருணங்ளும், உணர்வுநிலைகளும் ஏறத்தாழ ஒன்றுபோலவே உள்ளன ஆகவே யதார்த்தவாத எழுத்து சலிப்பூட்டுகிறது. காமம் வன்முறை ஆகியவற்றைக்கொண்டே அவற்றை நிறைக்கவேண்டியிருக்கிறது

யதார்த்தச்சூழலில் இருந்து படிமங்களை உருவாக்குவது கடினமாகிக்கொண்டே செல்கிறது. புழக்கப்பொருட்கள் கொஞ்சம் அகன்றால் மட்டுமே அவற்றை படிமங்களாக ஆக்கமுடியும். அந்த விலக்கம் நமக்கு இன்று அவற்றுடன் இல்லை.

அத்துடன் இன்றைய அதிநுகர்வுச்சூழல் எல்லா பொருட்களையும் வணிகப்படிமங்களாக ஆக்கி ஊடகங்கள் வழியாக நிலைநிறுத்துகிறது. அந்தப் படிமங்களை உடைத்து நம்மால் புதிய ஒரு படிமத்தை பொருட்களில் இருந்து உருவாக்க முடியாது.

ஆகவே மிகுபுனைவு நமக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஒரு கனவு வெளி அது.

ஜெ

விரிவெளி மரபை மறுஆக்கம்செய்தல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2021 11:35

கதாநாயகி-7

முந்தைய நாளிரவு நான் அஞ்சி அந்தப்புத்தகத்தை எடுத்து டிராயருக்குள் வீசி, காலால் ஓங்கி அதை மிதித்து மூடிவிட்டு, எழுந்து சென்று கதவைத்திறந்து வெளியே  கொட்டும் மழையைப் பார்த்தபடி நின்றது நினைவிருக்கிறது. மழைச்சாரல் என் உடலை நனைக்கத்தொடங்கியதும் கதவை மூடி உள்ளே வந்தேன். ஈர உடையுடன் அறைக்குள் நடந்தேன். பின்னர் வேறு உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் வந்தமர்ந்தேன்.

என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று எனக்கு சரியாக புரியவில்லை. ஒவ்வொரு நாளும் மிகக்கொஞ்சமாக எல்லைகள் தாண்டப்படுவதை உணர்ந்தேன். சமையலறைக்குச் சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டேன். குப்புறப்படுத்து கம்பளிப் போர்வையை என்மேல் போட்டுக்கொண்டு தலையணையில் முகத்தை அழுத்தி கண்களை மூடி என்ன நிகழ்ந்ததென்று ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப்பார்த்தேன்.

இந்த மனச்சிக்கல்கள் மிகச்சிறிய அளவில் அந்தப்புத்தகத்தை நான் கண்ணால் பார்த்தது முதலே தொடங்கியிருக்கின்றன.  அதுவரைக்கும் ஒன்றுமில்லை. இல்லை அதற்கு முன்னரே என்னைப் பார்க்க வைப்பதற்காக ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. எங்கிருந்தோ எனக்குள் அந்தப்புத்தகத்தை எடுக்கும் விழைவு ரகசியமாகச் செலுத்தப்பட்டிருக்கிறது.

இல்லை, அதை வேறு பாதையில் யோசிக்கவேண்டும்.இப்படி இருக்கும், அந்த மேஜையைப் போல் ஒரு மேஜையை எங்கோ ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். அதில் ஒரு ரகசிய அறை உண்டு என்பது அப்போதும் என் மனதில் பதிந்திருக்கிறது. இந்த மேஜையை பார்த்ததுமே அந்த நினைவு வந்து அதற்குள் இணைந்துவிட்டது. ஆனால் மிக ஆழமான நினைவாகையால் அது ஒரு சின்னக்கனவு வழியாகத்தான்  எனக்குள் அது நிகழமுடிந்தது.

உண்மையிலேயே அங்கு ஒரு அறை இருந்து, அதற்குள் ஒரு பழைய புத்தகமும் இருந்தபோது என்னுடைய கற்பனைகள் பெருக ஆரம்பித்தன. ஒவ்வொன்றாக நானே உருவாக்கிக் கொண்டேன். இது என்னுடைய மனப்பிறழ்வன்றி வேறல்ல ஒவ்வொன்றும் ஆரம்பகட்ட மனப்பிறழ்வின் எல்லா இலக்கணங்களுக்குள்ளும் முழுமையாக ஒத்துப்போகிறது. பொருட்களின் மேல் கற்பனைகளை ஏற்றிக்கொள்ளுதல், கற்பனைகளை வளர்த்து பின்னர் அக்கற்பனை வழியாக பொருளை வந்து அடைதல் மனச்சிக்கல் உள்ளவர்களுக்கு எப்போதும் நிகழ்வது. அதுதான் இங்கே நிகழ்ந்திருக்கிறது. இப்போது என்னுடைய ஒவ்வொரு அன்றாட நிகழ்வுகளும் அந்தப்புத்தகத்திலிருந்து வரத்தொடங்கியிருக்கின்றன்.

நான் புரண்டு படுத்தேன். ஒவ்வொரு அன்றாட நிகழ்வும் என்று எப்படி சொல்ல முடியும்? இன்று வாசித்தது முற்றிலும் தற்செயலாக இருக்கலாம். எந்த வகையிலும் இன்றைய நாளுடன் தொடர்பற்றது இந்த இடத்துடன் தொடர்பற்றதும் கூட. இல்லை ஆனால் அந்த வரிகள்  மிக உண்மையானவை. அந்த வர்ணனை தெளிவாகவே திருவிதாங்கூர் சமஸ்தானத்தைத்தான் குறிக்கின்றது. திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் ரெசிடெண்ட் ராணுவத்தில் இருந்த காப்டன் ஒருவன் இங்கு வந்து இதே பங்களாவில் தங்கி இதே இடத்தில் புலியைப்பார்த்திருக்கிறான். நான் பார்த்த அதே இடத்தில் அதே கோணத்தில் அதே மழையில்.

அந்தக்கோணம் எப்படி அந்த நூலுக்குள் வரமுடியும்? அது எனக்குள்ளிருந்து மட்டுமே அங்கே செல்கிறது. நான் இன்று முழுப்புலியையும் பார்த்திருந்தால் அந்தப் புத்தகத்திலும் அப்படித்தான் எழுந்தப்பட்டிருக்கும். இப்பொழுது எழுந்து சென்று அதைப் பார்த்தால் ஈவ்லினாவின் அந்தக்குறிப்புகள் இருக்காது. மெக்கன்சி என்ற காப்டனே இருக்க வாய்ப்பில்லை. இல்லை என்றே எண்ணிக்கொண்டு சென்று பார்ப்போம். எழுந்து பார்த்துவிடுவோம்.

ஆனால் நான் எழவில்லை. எழுந்து மீண்டும் அந்தப்புத்தகத்தை பிரித்து பார்த்து என்னை சோதனை செய்துகொள்ள எனக்கு தைரியம் வரவில்லை. ஏதோ ஒன்று தவறாக ஆகும். ஆகாமலும் இருக்கலாம். ஆனால் தவறாக ஆகுமென்றால் அதை நான் எப்படி எதிர்கொள்ள முடியும்? நான் நம்ப ஏதுமிருக்காது. எஞ்சியிருக்கும் இந்த தர்க்கமே என்  கடைசிப் பிடிமானம்.

அப்போது தான் ஒன்று தோன்றியது. மனிதன் முற்றிலும் தனியாக எவருடைய எந்த உதவியும் இல்லாமல் கைவிடப்படுவது சித்தப்பிரமைகளின்போது மட்டும்தான் என்று. வேறு எந்த நோய்க்கும் மருத்துவரோ செவிலியரோ உறவினரோ உதவ முடியும். மனச்சிக்கல்களுக்கு வெளியிலிருந்து ஒருவர் எந்த உதவியும் செய்ய முடியாது. வெளியிலிருந்து எவருமே அது நிகழும் இடத்திற்கு வந்து சேரவே முடியாது. தனக்குத்தானே ஒருவர் தன்னைச் சீரமைத்துக் கொள்ளவேண்டும்.

மெய்யும் பொய்யும் எல்லை அழிவது போல அனைத்தையும் சிதறடிப்பது வேறில்லை. அது ஒரு பூகம்ப அதிர்வு. அதில் தன்னைச் மீட்டுச் சீரமைத்துக்கொள்ள உதவும் சீரான ஒரு மூலை ஒருவனிடம் எஞ்சுமென்றால் அதைக்கொண்டு அவன் பிற மீறல்கள், சிதைவுகள், சிக்கல்கள் அனைத்தையும் எதிர்கொள்ளலாம். ஆனால் அது ஆற்றுவெள்ளத்தில் கரைந்துகொண்டிருக்கும் ஒரு சிறிய மணல் திட்டு. கண்கூடாகவே காலடியில் நிலமில்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறது. தர்க்கத்தின் அந்த சின்ன பகுதியும் கரைந்து போய்விட்டதென்றால் அதன்பிறகு மீளவே முடியாது.

உள்ளத்தின் எல்லாப்பகுதிகளும் சிதைவடைந்தால் உள்ளமென்றே ஒன்று இருக்காது. அஞ்சிப்பதறி, ஒன்றையொன்று கொத்தி, வானத்தில் சுழலும் பறவைக்கூட்டம் போலாகிவிடும் மனம். மனம் சிதைந்தவர்கள் ஒவ்வொரு முறையும் நமக்கு அளிக்கும் பயம் அதனால்தான், ஒரு கணத்துக்கு மேல் நாம் அவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சிலகணங்களுக்கு மேல் அவர்களுடன் உரையாடவும் முடிவதில்லை. மிக நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்கள் உயிர் துறந்தால் நாம் துயருறுவதில்லை. அவர்கள் ஏன் உயிர் வாழவேண்டும் என்றே நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஏனெனில் மனம் சிதைந்தவர்கள் நம்முடைய உள்ளத்தின் ஒரு பகுதியும் சிதைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறார்கள். நாம் அதைக்கொண்டே அவர்களை புரிந்துகொள்கிறோம். அத்தனை உள்ளங்களிலும் ஒரு பகுதி சிதைந்திருக்கிறது. எஞ்சும் பெரும்பகுதி சிதைய வாய்ப்பு கொண்டதாக இருக்கிறது. மெல்லிய கோடு ஒன்றின் மேல்நடந்து செல்வது போல ஒவ்வொரு கணமும் சமநிலையை தேடியபடி சென்று கொண்டிருக்கிறோம்.  அந்த தரிசனம் திகிலூட்டுவது.

நான் எழுந்து பார்த்தேன். என் தலைக்குள் என்ன நிகழ்கிறது. இப்போது நான் என்ன செய்யவேண்டும். எனக்கு நானே சொல்லிக்கொள்ள வேண்டும், இது தேவையில்லை என்று .இவற்றை நான் ஒன்றாகக் கலந்துகொள்ளக் கூடாது என்று. இரும்பு அச்சு போல என்னுடைய பிரக்ஞையை வகுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த அச்சில் என்னுடைய உணர்ச்சிகளை. கனவுகளை. உள்ளத்தின் ஆழத்தில் எல்லாம் போட்டு அழுத்தி செறிவாக்கி அதன் நகல்களாக்கிக் கொள்ளவேண்டும் .முற்றிலும் சமநிலை உள்ளவன் பிரக்ஞையும் கனவும் ஆழுள்ளமும்  ஒன்றேயானவன்.

அது சாத்தியம் தானா? ஆனால் அவனே அலைக்கழிப்பில்ல்லாதவன் .அவன் முட்டாளாக இருக்கலாம் கொடியவனாக இருக்கலாம். கஞ்சனாகவும் அற்பனாகவும் இருக்கலாம். ஆனாலும் அவன் அலைவற்றவன். அவனுக்கு எத்தனை பெரிய துயரமும் வரலாம். இந்த கொப்பளிப்பும் வெறுமையும் இருக்காது இதைவிடப்பெரிய நரகம் ஒன்றில்லை.

ஆனால் நான் எண்ணியது போல முழுஇரவும் துயிலின்றி புரண்டு கொண்டிருக்கவில்லை. சீக்கிரத்திலேயே தூங்கிவிட்டேன். காலையில் கோரன் எழுப்பியபோது புத்துணர்வுடன் எழுந்தேன். உடல் உழைப்பைப் போலவே உள்ளத்தின் அலுப்பும் நன்றாகத் தூக்கத்தைத் தருகிறதா? என் கண்கள் நன்கு தெளிந்திருந்தன. அதற்கேற்ப காலை துல்லியமான கண்ணாடியில் வரையப்பட்ட ஒளியும் தெளிவும் கொண்டிருந்தது.

கையில் டீக்கோப்பையுடன்  வெளியே வந்து நின்றபோது காட்டிலிருந்து வந்த காற்று இதமாக இருந்தது. காடு ஆழ்ந்த பசுமையுடன் ஒளியுடன் இருந்தது. மரகதக்காடு என்று  இதை வெள்ளையர்கள் சொல்கிறார்கள். திரும்பத் திரும்ப அந்த உவமையை பயன்படுத்துகிறார்கள். அதைப்போல மழைக்காட்டை சொல்வதற்கு இன்னொரு சரியான உவமை கிடையாது. ஆனால் நாம் சொல்வதில்லை, ஏனென்றால் நம்மில் மரகதத்தைப் பார்த்தவர்கள் குறைவு.

மரகதம் பச்சை நிறமானதல்ல. அரை வெளிச்சத்தில் அது கருப்பு நிறமாகவே இருக்கும். பச்சை என்று நினைத்துக்கொண்டு பார்த்தால் பச்சை போலவும் இருக்கும். வெயிலில் கொண்டுவைத்தால் மெல்ல ஒளிகொண்டு பச்சை நிறமாகும். நல்ல ஒளியில் வைத்தால் இளந்தளிரின் நிறத்தை அடைந்து சுற்றியிருக்கும் அனைத்தையும் பசுமையாக்கும். ஒளி ஊடுருவும்தோறும் தெளிந்து கிளிப்பச்சை நிறத்தை அடையும்.

அந்தக்காலையில் அத்தனை தளிர்களும் பச்சை நிறமான சுடர்கள் போலிருந்தன. காட்டுக்குள்ளிருந்து காட்டு ஆடுகளும் மான்களும் எழுப்பும் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. நான் நடந்து காட்டின் விளிம்பு வரைக்கும் சென்றேன். சரிவில் ஒரு மான்கூட்டம் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன்.  ஒரு மான் திரும்பி என்னைப்பார்த்தது. அத்தனை மான் தலைகளும் திரும்பி என்னைப்பார்த்தன. அத்தனை காதுகளும் என்னை நோக்கி மடிந்தன. கண்கள் என்மேல் நிலைத்திருந்தன. நான் பார்த்துக்கொண்டே நின்றேன். கைகளை சொடக்கு விட்டு ஒலியெழுப்பினேன் அவற்றின் காதுகள் அனைத்தும் அவ்வொலிக்கு திடுக்கிட்டு அசைந்தன. காலால் ஒரு தட்டு தட்டினேன். அம்புகள் போல எழுந்து காற்றில் வளைந்து இறங்கி மறைந்தன.

நான் அன்று பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது உற்சாகமான மனநிலையில் இருந்தேன். காலையில் இருந்தே எனக்குள் நிறைந்த அந்த மகிழ்ச்சி எதனால் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் முந்தைய நாள் இரவில் எந்த தீர்வும் இல்லாத கேள்விகளோடு, ஆழமான நெருக்கடிகளுடன்தான் தூங்கியிருக்கிறேன். காலையில் எழுந்தவுடன் இரவு முறுகி முறுகி உச்சத்தை அடைந்த அந்தச் சுருள்வில்லின் இறுதித் தெறிப்பில் தான் விழித்திருக்கவேண்டும். சோர்வும் கசப்பும் அடைந்திருக்கவேண்டும். அப்படியே எழுந்து ஓடி ஊரைவிட்டே அகன்றிருந்தாலும் கூட இயல்புதான்.

ஆனால் முழுமையாக அதெல்லாம் மறந்துவிட்டது. எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது போல .எண்ணவோ குழம்பவோ ஏதுமில்லாதது போல. அத்தனை உள அழுத்தம் தீவிரமான தூக்கத்தைத் தந்தது. தூக்கம்  தலையை தெளிய வைத்துவிட்டது. தலை தெளிந்தவுடன் எல்லா சிக்கல்களும் இல்லாமல் ஆகிவிட்டன. உண்மையில் அவ்வளவுதான். உடல் அல்லாமல் மனிதனுக்கு இருப்பென்று ஒன்றில்லை. பசியை உணவன்றி வேறேதும் தீர்க்க முடியாது என்பது போல இந்த பருவடிவ விடைகளன்றி எதுவும் உண்மையில்  தீர்வுகளே அல்ல.

ஏனென்றால் நாம் வாழ்வது பருவடிவ உலகில்தான்.பருவடிவு கொள்ளாத சிக்கல்கள் எதுவும் சிக்கல்களும் அல்ல. புறவுலகத்திலிருந்து வராத எந்த சிக்கலும் உண்மையில் நாமே நமக்கு வரவழைத்துக்கொள்வதுதான். நாமே விரும்பி அவற்றை நிகழ்த்திக்கொள்கிறோம். நமது அன்றாடச் சலிப்பிலிருந்து கடந்து செல்வதற்காக. நமது வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தமுண்டு என்று நாமே நிறுவிக்கொள்வதற்காக. ஆனால் நம்மை கைவிடபோகும் அளவுக்கு அவற்றை நாம் உருவாக்கிக் கொள்வதுண்டு.

நாம் உருவாக்கிய பூதங்கள் நம்மை துரத்தி வந்து கவ்விக்கொள்வதுண்டு பிடித்து வாயிலிட்டு மென்று தின்றுவிடுவதுண்டு. தெருக்களில் அலையும் பைத்தியங்களில் பெருவாரியானவர்கள் தங்கள் ஆடைகளை தாங்களே தீக்கொளுத்திக்கொள்வது போல தங்கள் உள்ளங்களை அழித்துக்கொண்டவர்கள். பைத்தியம் என்பது ஓர் உளவியல் தற்கொலை அதை நான் செய்யக்கூடாது.

இங்கே இந்தக்காடு இத்தனை பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது ஒவ்வொரு உயிர்த்துளியிலும் இங்கே வாழ்வின் விசைதான் இருக்கிறது. செழிப்புறாத ஒரு செடி கூட இங்கில்லை. இன்னொரு தாவரத்தை உந்தி விலக்கி மேலெழும் திமிறல் கொண்டிராத ஒரு தளிர் கூட இங்கில்லை. திகழ்வதும் இருப்பதும் வளர்வதும் ஒன்றேயான இந்த வெளியில் அருவமான ஏதோ சிலவற்றுக்காக நான் என்னைக் கொடுத்துக்கொண்டு சோர்வும் சலிப்பும் அடைவேன் என்றால் அது போல அறிவின்மை வேறில்லை. அதை செய்யக்கூடாது.

சொல்லிச் சொல்லி என்னை நானே உறுதிப்படுத்திக்கொண்டேன். அது என்னை நிலைநிறுத்தியது. மண்ணில், உறுதியான காலடிகளுடன், தெளிந்த புலன்களுடன்

நானும் கோரனும் அந்த இரட்டைப்பாறையை அடைந்தபோது நின்று “அங்கே புலியிருக்கா பாரு” என்றேன்.

அவன் உடலை வளைத்து மூக்கை கூர்ந்து மணம் பிடித்து “இல்லை” என்றான்.

“அது தினமும் அங்கு வந்து படுக்கிறதில்லையா?” என்று கேட்டேன்.

“அதினு நிறைய இடம் உண்டு ஏமானே. ஒரு புலிக்கு ஒரு மலை. ஒரு மலையில் நூறு இடம்!” என்று அவன் நான்கு விரல்களைக்காட்டினான். பிறகு குனிந்தபடியே மெதுவாகச்சென்று அந்த மாடன்கல்லுக்குப் பின்னால் எட்டிப்பார்த்தான்.  திரும்பிப் பார்த்து “நெலத்தில் முடி இல்ல”என்றான்.

“அதனாலே என்ன?” என்று நான் கேட்டேன்.

“முடி இல்லெங்கில் அது ராத்திரி கிடக்கிணில்லா” என்றான்.

”ஓ” என்று நான் சொன்னேன்.

அவன் அந்த பொந்துக்குள் கைவிட்டு புலி படுத்த இடத்திலிருந்து மண்ணை மேலோட்டமாக அள்ளிக்கொண்டான். ”பள்ளிக்கூடத்தில் அரி குழிச்சிட்ட இடத்தில் இது இடணும்” என்றான்.

“ஆமாம்” என்று நான் சொன்னேன். அங்கு ஏற்கனவே புலியின் சிறுநீர்கலந்த மண் விரிக்கப்பட்டிருக்கிறது.

நாங்கள் மலைச்சரிவில் இறங்கினோம். கோரன் என்னிடம் பற்கள் தெரிய சிரித்து, “வல்ய பள்ளிக்கூடம்” என்று சுட்டிக்காட்டினான்.

ஒவ்வொரு முறையும் அந்தப்பள்ளிக்கூடத்தை பார்க்கும்போது அவன் அவ்வாறு சொல்லாமல் இருப்பதில்லை. அவனுக்கு அந்தப் பள்ளிக்கூடத்தின் மேல் அத்தனை பெருமிதம் எழுந்தது நான் அவனைப்பார்த்து புன்னகைத்தேன்.

அவன் மீண்டும் கையை விரித்து “வல்ய பள்ளிக்கூடம்!” என்றான்.

“ஆமா” என்றேன்.

நாங்கள் அங்கு சென்றபோது இருபது குழந்தைகளும் வந்திருப்பதை பார்த்தேன். ஒன்றிரண்டு கூடுமோ என்று கூடத்தோன்றியது. எண்ணிப் பார்த்தேன் நான்கு குழந்தைகள் கூடுதலாக இருந்தன.

கைக்குழந்தைகளை அவர்கள் யாரும் கொண்டுவரவில்லை. அங்கே அதை நான் கவனித்திருக்கிறேன். காணிக்காரர்கள் நடக்க ஆரம்பிப்பது வரை குழ்ந்தையை அன்னையின் கையிலேயே வைத்திருக்கிறார்கள். மூத்த பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்புவதில்லை. வயதானவர்களிடம்கூட ஒப்படைப்பதில்லை. அது தாயின் உடலின் மேல் ஒரு உண்ணி போல எப்போதும் ஒட்டியிருக்கும். அங்கேயே சாப்பிட்டு அங்கேயே தூங்கும். அதன் கால்கள் கூட அதற்கேற்ப நண்டுக்கால்கள் போல வளைந்திருக்கும். இவர்கள் வளர்ந்தபின் மரங்களுக்குமேலெயே பெரும்பாலான நேரம் இருக்கிறார்கள். அந்த குழந்தைக்காலம் அவர்களுக்குள் அவ்வாறு நீடிக்கிறதுபோல.

அங்கு வந்திருந்த எல்லாக்குழந்தைகளுமே பேசவும் நடக்கவும் கற்றவைதான். நான் போய் நின்றவுடன்  “மானிட்டர் எங்கே?” என்றேன்.

உச்சன் வந்து நின்றான். அவன் தயங்கி திரும்பி மற்றவர்களைப் பார்த்தான். உடல் காற்றில் செடிபோல வளைந்தது.

“நான் கூப்பிட்டதும் இப்படி வரக்கூடாது. இப்படி வரணும்” என்று நான் மிடுக்கான நேர்நடை நடந்து காட்டினேன். “வந்து என் முன்னால் இப்படி நிக்கணும். நில்லு பாப்போம்” என்றேன்.

அவன் நான் சொல்வது போலவே வந்து நின்றான். பின்பக்கமாக வில்போல் உடலை வளைத்திருந்தான்.

“யெஸ் ஸார் என்று சொல்லு”என்றேன்.

அவன் திரும்பி மற்ற குழந்தைகளைப் பார்த்தபின் ”யெஸ் ஸார்” என்றான்.

மற்ற குழந்தைகளெல்லாம் அதே போன்று சேர்ந்து ”யெஸ் ஸார்” என்றன.

“எல்லாரும் சொல்லக்கூடாது. யெஸ் ஸார் என்று மானிட்டர் மட்டும் தான் சொல்லணும்” என்றேன். அவனிடம் “நீ மட்டும் தான் சொல்லணும் என்ன?” என்றேன்.

அக்கணமே அவனில் பொறுப்பும் அதிகாரமும் குடியேறுவதைக் கண்டேன். ”நான் மட்டும் யெஸ்ஸு” என்றான். திரும்பி பக்கம் நின்ற குழந்தைகளிடம்  “சத்தம் இடருது…நானாக்கும் யெஸ்ஸு”என்றான்.

“சரி போ. திரும்பி வந்து எஸ் சொல்லு” என்றேன்.

அவன் பழைய இடத்திலிருந்து மிடுக்காக நடந்து வந்து என் அருகே வந்து நின்று நிமிர்ந்து “யெஸ் ஸார்” என்றான்.

“சரி, பிள்ளைங்களை பிரிச்சு உக்கார வை .சின்னக்குழந்தைகள் தனியா பெரிய குழந்தைகள் தனியா ”என்றேன்.

மூன்றாகப் பிரிக்க வேண்டிய தேவை இல்லை என்று தெரிந்தது. அங்கு எந்தக் குழந்தைக்குமே எழுத்தும் படிப்பும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவனிடம் அவனுடைய நெஞ்சுக்குழியைக் காட்டி ”இத்துகு கீழே உள்ள குழந்தைங்க அங்க. இதுக்கு மேலுள்ள குழந்தைக்க இங்கே” என்றேன்.

அவன் தன்னுடைய மார்பில் கையை வைத்து அளவைப் பார்த்துக்கொண்டான். ஒவ்வொரு குழந்தை பக்கத்திலும் சென்றுநின்று அதன் உயரத்தை அளந்து சில நேரங்களில் அதை இரண்டு அணியாகப் பிரித்துவிட்டான்.

“ஒரு கூட்டம் அங்கே இருக்கணும் இன்னொரு கூட்டம் இங்கே இருக்கணும்” என்றேன்.

இரண்டு வகுப்புகள் உடனே உருவாகிவிட்டன. கரும்பலகை வேண்டும். நாற்காலி வேண்டும். ஒரு பள்ளியாக இதை மாற்றுவதற்கு இன்னும் என்னென்னவோ பொருட்கள் வேண்டும் .ஆனால் எளிதில் உருவாக்கிவிடலாம். கரும்பலகைக்கு பதிலாக நாகர்கோயில் செல்லும்போது சுருட்டக்கூடிய தாள்பலகையைக் கொண்டு வருவது நல்லது. கரும்பலகையை இங்கே வைத்தால் அது பழுதடைந்துவிடும். ஆனால் இங்குள்ள மழையில் தாள் நீண்டநாள் இருக்காது. நல்லது எது என்று கேட்டுப்பார்க்கவேண்டும்.

நான்  “சின்னக் குழந்தைங்க எல்லாம் அமைதியாக இருக்கணும்” என்றேன். வாயில் கைவைத்து  “உஸ்’ என்றேன். சில குழந்தைகள் அவர்களும் வாயில் கைவைத்து “உஸ்ஸ்” என்றன. ஆனால் அமைதியடைந்தன. கண்கள் மட்டும் வெள்ளைக்கல் போல மின்னி மின்னி தெரிந்தன.

அவர்களுக்கு அந்த விளையாட்டு பிடித்திருந்தது. இந்தப்பிள்ளைகளிடம் நாம் சொல்வதை மீறிச் செல்லும் வழக்கமே இல்லை. அதட்டி சொல்லும்போது அவர்கள் அஞ்சுகிறார்கள். நட்பாக சொல்லும்போது எதையுமே உடனடியாக செய்கிறர்கள் என்பதை கண்டு கொண்டேன். ஏனென்றால் அவர்களுடைய பெற்றவர்களோ பெரியவர்களோ அவர்களை அதட்டுவதில்லை. குழந்தைகளை அதட்டும் வழக்கமே அங்கே இல்லை.

அவர்கள் குழந்தைகளிடம் செயற்கையான குரலில் பேசுவதில்லை. பெரியவர்களிடம் பேசும் அதே குரல்தான். கொஞ்சலும் இல்லை, அதட்டலுமில்லை. அவர்கள் அக்குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் தான் சொல்கிறார்கள். அவற்றை மீறவேண்டும் என்ற எண்ணமே குழந்தைகளுக்கு வருவதில்லை. தாங்கள் அவற்றை செய்வதற்காகவே இருப்பதாகத்தான் எண்ணிக்கொள்கிறார்கள். ஒருபோதும் குரலை உயர்த்தி அவர்களை அதட்டவோ தண்டிக்க முற்படவோ கூடாதென்று தெரிந்துகொண்டேன்.

பெரிய குழந்தைகளுக்கு தமிழில் அ ஆ இ ஈ உ ஊ ஆகிய ஆறுஎழுத்துக்களையும் ஈரத் தரையில் ஒரு குச்சியால் எழுதி அவர்கள்  அந்த எழுத்துக்களின் முன்னால் அமரச்சொன்னேன். உச்சனிடம் குச்சியை கொடுத்து ஒவ்வொரு எழுத்தை சுட்டி அந்த ஒலியை உரக்க கூவவேண்டும் என்று சொன்னேன்.

அ ஆ இ ஈ என்று அவன் சுட்டிக்காட்ட அவர்கள் அதை கூவத்தொடங்கினார்கள். ஒருசிலர் கூர்ந்து பார்க்கும்பொருட்டு எழுந்து அருகே வர உச்சன் அவர்களை அப்பால் போகும்படிச் சொன்னான். அவர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டனர்

அதன் பிறகு நான் சிறு குழந்தைகளிடம் சென்றேன். அவர்கள் மீண்டும் ஆவலுடன் என்னைப் பார்த்தார்கள் நான் வந்து நின்றதும் அவர்களும் ஆ என்று கூச்சலிட ஆரம்பித்தார்கள். ஓரிரு குழந்தைகள் எழுந்து நின்று கூச்சலிட்டன.

“இல்ல்லல…உங்களுக்கு ஆ கிடையாது” என்றேன்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஒரு பெண் “ஆ இல்ல” என்று கைவிரித்தாள். அவர்களுக்கு ஆ என்றால் சாப்பாடு என்று அர்த்தம் என்று எனக்குத் தெரிந்தது.

“சோறு உண்டு… தரையில் ஆ இல்லை” என்றேன்.

“சோறு உண்டு” என்று அந்தப் பெண்குழந்தை சொன்னாள். “ஆ இல்லை…’

“ஆ இல்லை” என்று எல்லா குழந்தைகளும் சேர்ந்து சொல்லின. அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்ததன் மகிழ்ச்சி அது. அவர்கள் ஒன்றை புரிந்துகொண்டால் அதைத் திருப்பிச் சொல்வார்கள்.

“உங்களுக்கு கதை தான் சொல்லப்போறேன்” என்று சொன்னேன். இம்முறை நானே ஒரு கதையைப் புனைந்து சொன்னேன். ஒரு யானைக்குட்டி எப்படி குழியில் விழுந்தது. அதனால் ஏறிவரமுடியவில்லை. அதை ஊர்க்காரர்கள் எப்படி வெளியே எடுத்தார்கள் என்று சொன்னேன்.

நாலு பக்கம் இருந்தும் மண்ணை கொட்டி குழியை நிரப்பி அவர்கள் யானையை வெளியே எடுத்த கதையை சொல்லி முடித்ததுமே எல்லாக் குழந்தைகளும் உற்சாகத்துடன் கூச்சலிட்டபடி எழுந்து விட்டனர். ஒவ்வொருவரும் அவர்கள் யானைக்குட்டியை பார்த்த கதையை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரையாக நிறுத்தி  ‘நீ சொல்லு ..நீ சொல்லு” என்று எல்லாரையுமே பேசவிட்டேன். பேசும்போது அவர்கள் உடலையே வளைத்து ஊசலாட்டி நெளித்தனர். கைகள் அலைபாய்ந்தன. கண்கள் உருண்டன. அந்த ஆர்வம் என்னை புன்னகைக்கச் செய்தது.

அவர்களிடம் இருந்த கற்பனைத்திறன் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது.  அவர்கள் பொய்யை உருவாக்கவில்லை. யானைக்கு மனித குணத்தை கொடுக்கவில்லை. எந்த நீதியையும் அந்தக் கதைக்குள் கொண்டுவரவில்லை. ஆனால் யானையின் உடல்மொழியையும் அறிவையும் செயல்பாடுகளையும் மிகக்கூர்ந்து  கவனித்திருந்தார்கள். யானையின் துதிக்கையை பாம்பு என்று ஒருவன் சொன்னான். யானைக்குட்டியை பெரிய  பனங்கொட்டை என்று ஒருவன் சொன்னான். இன்னொருவன் அதை வண்டு என்று சொன்னான்.

சற்று நேரத்திலேயே அவர்கள் உருவாக்கிய அந்த உலகிற்குள் நான் சென்றுவிட்டேன். அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதை பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த மேதமையை பள்ளிக்கூடம் அழித்துவிடுவா என்று சந்தேகப்பட்டேன். அன்று நான் கற்ற பாடத்தை என்றுமே மறந்ததில்லை.

அவர்கள் பேசிமுடிந்தபின் என்னைச் சுற்றி கூடிக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் என்னை தொட விரும்பினார்கள். நான் அவர்கள் ஒவ்வொருவரையும் தழுவி முத்தம் கொடுத்தேன். காணிக்காரர்கள் குழந்தைகளை குரங்குகள் போல கொஞ்சிக்கொண்டே இருப்பவர்கள் என்பதை பார்த்திருக்கிறேன். அவர்களை தொட்டு வருடியபோது அவர்களின் உடல்கள் நாய்க்குட்டிகள் போல அதை ஏற்றுக்கொண்டன.

அதன் பிறகு “நீங்க எல்லாரும் போய் விளையாடுங்க’ என்று சொல்லி அனுப்பிவிட்டு மீண்டும் பெரிய குழந்தைகள் வகுப்புக்கு வந்தேன். ஒவ்வொருவராக எழுந்து வந்து அந்த எழுத்துக்களை சுட்டி அது என்ன ஒலி என்று சொல்லவேண்டும் என்று சொன்னேன். அதன்பின் நானே குச்சியால் அந்த எழுத்துக்களை மாற்றி மாற்றி சுட்டிக்காட்டினேன். ஓரு சிலர் தவறுகள் செய்தாலும் கூட அத்தனை பேருமே நான்கு எழுத்துக்களையும் அடையாளம் கண்டுகொண்டார்கள்.

“இன்னைக்கு இது போதும்” என்றேன். எனக்கே நிறைவாக இருந்தது.

கோரன் அவனே அரிசி மூட்டையை எடுத்து சோறு பொங்கியிருந்தான். நாங்கள் வெளியே வந்தபோது என்னிடம் “முயல் கிட்டி! நாலு முயல்!”என்றான்.

“எங்கேருந்து?” என்றேன்.

அப்பால் நின்றிருந்த ஒருவன் எழுந்து வந்து  “குட்டிகளுக்கு முயல்… குட்டிகளுக்கு முயல் துப்பன் தந்நு” என்றான்.

“இவன் யார்?” என்று அவனிடம் கேட்டேன்.

“துப்பன்!” என்று அவன் சொன்னான்.

குழந்தைகள் சாப்பிடுவதற்காக அவன் முந்தைய நாள் பொறிவைத்துப் பிடித்த நான்கு முயல்களை கொண்டுவந்திருந்தான். கோரன் அதன் இறைச்சியை துண்டு போட்டு கஞ்சியுடன் சேர்த்து சமைத்திருந்தான். உண்மையாகவே கறிக்கஞ்சியின் மணம் பசியை எழுப்புவதாக இருந்தது.

நான் அனைவரும் வட்டமாக அமர்ந்து இங்கேயே சாப்பிடவேண்டும் என்று சொன்னேன். வீட்டுக்கு கொண்டு போகக்கூடாது.

“ஏன்?” என்று உச்சன் கேட்டான்.

“இது ஸ்கூல் கஞ்சி, ஸ்கூலில் தான் குடிக்கணும்” என்றேன்.

“ஸ்கூல் கஞ்சி” என்று அவன் சொன்னான்.

குழந்தைகள் அனைவரும் வட்டமாக  அமர கோரனும் நானும் துப்பனும் அமர்ந்துகொண்டோம். கஞ்சி குடிப்பதற்கு முன் ஒரு சிறு பிரார்த்தனையை செய்தேன். “வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று!. விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பது அரிது. நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு”.

அவர்கள் என்னை திகைப்புடன் பார்த்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மந்திரவாதிதான் தெய்வ வடிவம். மந்திரமே தெய்வம். அவர்கள் என்னை வணங்க வேண்டுமென்றால் மந்திரம் தேவை என அங்கு வந்த அன்றே கோரனிடம் பேசி கண்டுபிடித்திருந்தேன்.

அதன் பிறகு கஞ்சியை சாப்பிட ஆரம்பித்தோம் தொன்னைகளை வீசிவிட்டு அனைவரும் ஓடையில் இறங்கி கைகழுவினார்கள். உச்சன் என்னிடம் “சாரு நாளைக்கு வருமோ?” என்றான்.

“நான் தினமும் வருவேன்” என்று நான் சொன்னேன்.

“எந்நுமா?” என்று அவன் கேட்டான்.

“ஆமாம்” என்று நான் சொன்னேன்.

அத்தனை குழந்தைகளும் உற்சாகத்துடன் குரலெழுப்பி என்னை சூழ்ந்துகொண்டன.  ஒருவன்  “நான்  நாளைக்கு வரும்! நாளைக்கு வரும்!” என்றான்.

அவர்கள் “நாளைக்கு வரும் நாளைக்கு வரும்” என்று கூச்சலிட்டனர்

“எல்லாரும் நாளைக்கு வரணும்” என்றேன்.

துப்பன் என்னிடம் “நான் நாளைக்கு வரும்” என்றான்.

நான் ”முயல் கொண்டு வா” என்று சொன்னேன்.

“நாலு முயல்” என்று அவன் விரல்களைக் காட்டினான்.

“சரி நாலு  முயல்” என்று நான் சொன்னேன்.

“நான் அ ஆ படிக்கும்” என்று அவன் ஆவலுடன் சொன்னான்.

“சரி  நீ மட்டும் நாளைக்கு வந்து படிச்சுக்கோ” என்றேன்

கோரன் சீற்றத்துடன் “போடா! மூத்தோர்  ஆ ஆ படிக்க பாடில்ல” என்றான். அவனுக்கு அதில் ஏதோ ஒவ்வாமை தோன்றியது.

நான் அவனிடம் “அது வேற ஆஆ. மூத்த ஆ ஆ” என்றேன்.

கோரன் குழப்பத்துடன் தலை அசைத்தான்.

“அதை தனியாக சொல்லிக்கொடுக்கலாம். அவன் முயல் கொண்டு வாறானே?” என்று நான் கோரனை மேலும் சமாதானப்படுத்தினேன்.

நாங்கள் கிளம்பியபோது இருபது குழந்தைகள் எனக்குப் பின்னால் வந்தார்கள். “யாரும் ஒப்பம் வரக்கூடாது. எல்லாரும் இங்க இருங்க” என்றேன்.

“நாளையும் வரும்! நாளையும் வரும்!” என்று எல்லாக் குழந்தைகளும் கூச்சலிட்டன

நான் அவர்களைப் பார்த்து “நாளை வருகிறேன்” என்று சொல்லிவிட்டு திரும்பி மெல்ல நடக்கும்போது அத்தனை மகிழ்வாக அத்தனை நிறைவாக உணர்ந்தேன்.

மீண்டும் பங்களாவை நோக்கி நடக்கும்போது நான் எண்ணிக்கொண்டேன், ஒன்றையே திரும்ப திரும்ப செய்துகொண்டிருக்கிறோம் என்று. எத்தனை முறை இப்படி இந்த பங்களாவிலிருந்து பள்ளிக்கும் ஊருக்கும்  கிளம்பிச்சென்றேன், எத்தனை முறை திரும்பி வந்தேன். இருபக்கங்களிலிருந்தும் பங்களாவை நோக்கி வந்திருக்கிறேன். ஆனால் ஒரே போல அது நிகழ்வதாக தோன்றியது.

அப்போது ஒன்று தோன்றியது. எப்போதுமே இனிமையானவை இப்படி திரும்பத் திரும்ப நிகழ்பவைதான். புதிய நிகழ்வுகளில் ஒரு களியாட்டம் இருக்கிறது, திகைப்பு இருக்கிறது, நிலைகுலைவு இருக்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் நாம் செய்பவற்றில்தான் மென்மையான, நீடிக்ககூடிய, உறுதியான இன்பம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் முதல் டீ, துவைத்து மடித்த சட்டையை எடுத்து போட்டுக்கொள்ளுதல், நன்றாக விரிப்பு பரப்பிய படுக்கை மேல் களைப்புடன் படுத்துக்கொள்ளுதல், குளித்தபின் ஈரத்துடன் தலை சீவ வருதல்… இன்பமான அனைத்துமே நான் திரும்ப த்திரும்ப செய்து கொண்டிருப்பவைதான்.

இன்று இந்த பங்களாவை அணுகும்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்விலிருக்கிறேன். ஆனால் மெல்ல மெல்ல இது பழகும். நான் இங்கிருக்கும் காலம் முழுக்க இப்படி வந்துகொண்டே தான் இருப்பேன். என் மனதில் இந்த வருகையின் சித்திரம் இனி என்றுமே அழியாது.

தொலைவிலிருந்து பங்களாவை அணுகியபோது அதன் முற்றத்தில் யாரோ நிற்பதைப் பார்த்தேன். யாரென்று திடுக்கிட்டபின் கூர்ந்து பார்த்தபோது ஒரு சிறிய அசைவு போலத் தெரிந்தது .யாரோ முற்றம் வழியாக வீட்டுக்குள் நுழைந்தது போல.

காட்சி மயங்குவதற்கான எந்தக் காரணமும் இல்லை. பளிச்செனும் வெயில் இருந்தது. பார்வையை எதுவும் மறைக்கவில்லை. ஆனாலும் அந்த உருவத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அது விரைந்து உள்ளே செல்வது கரைந்து கரைந்து புகை செல்வது போலத்தான் இருந்தது.

நான் கோரனைப்பார்த்தேன். கோரன் என்னிடம் ”அவிடே” என்றான். திருத்திக்கொண்டு “அங்கே’ என்றான்.

“என்ன” என்று நான் அவனிடம் கேட்டேன்.

“அங்கே ஆரோ நிக்குணு எந்நு தோந்நி” என்றான்.

“யார் நிக்கிறா?” என்றேன்.

“அதாணு கோரன் நோக்கியது…” என்றபின் அவன் சுட்டிக்காட்டினான் “கதவு சிரிக்குந்ந வெளிச்சம்”

”ஓ” என்று நான் நினைத்துக்கொண்டேன். கதவு காற்றில் திறந்து கிடந்தது. அதன் வழியாக செங்குத்தான ஒளி முற்றத்தில் விழுந்திருந்தது. அதைத்தான் நான் அசைவாக பார்த்திருக்கிறேன்.

கதவு சிரிப்பது. கோரன் மட்டுமல்ல அவர்கள் அனைவருமே எளிதாக ஒரு சொல்லாட்சியை கண்டடைந்துவிடுகிறார்கள். அந்த வரி என்னை மீண்டும் இயல்பான புன்னகைக்குக் கொண்டுசென்றது.

வீட்டை நெருங்கியபோது தெரிந்தது, காலையில் அரிக்கேன் விளக்கை அணைக்காமல் சென்றுவிட்டிருந்தோம். அந்த வெளிச்சம்தான் கதவு வழியாக வெளியே  விழுந்திருந்தது.

நான் வீட்டுக்குள் நுழைந்தபின் எதற்கும் இருக்கட்டும் என்று அந்த அறையை நன்கு பார்த்தேன் .பொருள் வைக்கும் அறையையும் சமையலறையையும் இயல்பாகச்சென்று பார்த்துவிட்டு வந்தேன். யாருமில்லை.

கோரன் டீ வைக்க தொடங்கிவிட்டான். நான் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன். டிராயரை திறந்து அந்தப்புத்தகத்தை வெளியே  எடுத்தேன். உடனே அந்த எண்ணம் வந்தது. அன்று முழுக்க எனக்கு வந்த உல்லாசம் ஏன் என்று. நான் நேற்று அவ்வளவு அஞ்சி விட்டிருந்தேன். அந்த அச்சம் நீடித்திருந்தால் அந்த புத்தகத்தை கையிலேயே எடுத்திருக்க மாட்டேன் .அதை நான் எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மகிழ்ச்சி. இப்போது இதோ எந்த தயக்கமும் இல்லாமல் அதை எடுக்கிறேன். மீண்டும் வாசிப்பு. இந்தப்புத்தகம் இதிலிருந்து எவரையும் தப்ப விடாது. இது என்னை தேர்ந்தெடுத்திருக

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2021 11:34

இன்று- கடிதங்கள்

இன்றிருத்தல்…

அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் இப்போதெல்லாம் உங்களின் பல பதிவுகளை தவறவிடுகிறேன்.(ஆனால் அலுவலக மேலாளர்களுக்கு நான் இருக்கிறேன் என்று தெரியப்படுத்திக் கொள்வதற்கு online-ல் இருந்தாக வேண்டுயிருப்பதால், அலுவலகப் பணிகள் ஆரம்பித்தவுடன் online-ல் என்னைக் காண்பித்துக் கொண்டே நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் தளத்திலேயே மூழ்கி இருப்பேன். பெரும்பாலும் அன்றன்றைய பதிவுகளை விட கண்ணில் படும் சுவாரஸ்யமான பதிவுகள் அது சார்ந்த பதிவுகள் என்று போய்க் கொண்டேயிருக்கும்)

ஓவியம் தவிர இந்திய கலை தத்துவ மற்றும் ஞான மரபைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஆனந்த குமாரசாமியின் ‘சிவ நடனம்‘ கட்டுரைகளை படித்துக் கொண்டே அதில் தோன்றும் ஐயங்களிலிருந்து விடுபட அடிப்படை களிலிருந்து தொடங்குவோம் என்று ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்‘ வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உங்கள் தளத்தை திறந்து பார்க்கும் போதெல்லாம் உங்களின் அனுபவப் பகிர்வுகள் இருந்தால் பெரும்பாலும் தவறவிடுவதில்லை. அவைகள் அனைத்துமே நேர்நிலையானவை. செயல்படவைப்பவை. ‘இன்றிருத்தல்‘ பதிவும் அப்படியே.

நான் நீங்கள் பதிவில் தெரிவித்திருப்பவற்றை என்றும் பின்தொடர்கிறேன் என்றே நினைக்கிறேன். சமீபத்தில் கொரோனா வந்து அரசால் அதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட  Covid care centre-ல் ஏழு நாட்கள் இருந்தேன். அதற்கு முன்பு நான்கு நாட்கள் மட்டும் காய்ச்சல் வயிற்றுப்போக்கு என்று கொஞ்சம் சிரமப்பட்டேன். கொரோனா தனிப் பிரிவில் சென்று சிகிச்சை பெற்றவுடன் மூன்று நாட்களில் பழைய நிலைக்குத் திரும்பினேன். அதன் பிறகு கலை இலக்கியச் செயல்பாடுகள் தான். நண்பர்களுடன் குமரித்துறைவி பற்றியான விவாதம் கூட இந்த சமயத்தில் தான் நடந்தது. மூன்று வேளையும் உணவு வந்தது. இடையில் பழச்சாறு சுக்கு காப்பி டீ. கொஞ்சம் சொகுசு தான்.

நான் முதன் முதலாக ஒரு அரசு ஏற்படுத்தியிருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிட்சை பெறுகிறேன். எனக்கு அலுவலகத்தில் இருந்து தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிட்சை பெறுவதற்கான காப்பீடு கூட உள்ளது. இருந்தாலும் என்னை பலரும்–அலுவலக நண்பர்களே கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைத்தார்கள். ஒரு அரசு நிறுவனம் அதுவும் அரசு மருத்துவமனை மேல் இவ்வளவு நம்பிக்கை எல்லா தரப்பு மக்களிடமும் ஏற்பட்ட காலத்தை நான் பார்த்ததில்லை. ஊடகங்கள் அதை கெடுக்காமல் இருந்தால் சரி.

அரசு கூட கொரோனா முடிந்தாலும் இது போல அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிட்சைகளை விரிவுபடுத்தி மக்களின் நம்பிக்கையை பெறலாம்.(அதற்காக நடுத்தர உயர் வர்கத்திடம் கொஞ்சம் பணம் பெற்றாலும் தவறில்லை). இதே தரப்படுத்தலை பள்ளிக் கல்வி மற்றும் பிறத் துறைகளுக்கும் கூட பரிந்துரைக்கலாம். அதன் மூலம் தனியார்களின் ‘பணம் புடுங்கி‘த்தனத்திலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் தரமணி கேம்பசை தற்காலிக சிகிட்சை மையமாக மாற்றப்பட்டிருக்கும் இடத்தில் தான் சிகிச்சை பெற்றேன். சுகாதாரம் கூட இங்கே பல தனியார் மருத்துவமனைகளிலும் இல்லாத வகையில் இருந்தது. ஒரு அறையில் இரு படுக்கைகள் தான். அதாவது இரண்டு பேருக்கு ஒரு அறை. குளிக்கப் பயன்படுத்தும் பக்கெட் ஜக் தலைதுவட்டும் துண்டு படுக்கை விரிப்புகள் கூட அனைவருக்கும் தனித்தனியாகவும் புதிதானவையாகும் இருந்தன.

நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் தொடர்ந்த உழைப்பால் கொஞ்சம் சோர்ந்தும் சிலர் அதன் சிடுசிடுப்புடனும் இருந்ததைக் கண்டேன். எங்களை அழைத்துச் சென்ற மருத்துவஊர்தி ஓட்டுநர் பிறகு அலைபேசியில் யாரிடமோ காலையில் இருந்து சாப்பிடவில்லை என்று  புலம்பிக் கொண்டிருந்தார். அவர் இதைச் சொல்லும் போது மாலை நேரம் 3:30 மணி. அங்கே சென்றவுடன் மருத்துவரைப் பார்ப்பதற்கு முன்பு சில குளறுபடிகளும் ஊழியர்களின் சிடுப்புகளும் இருந்தன. எல்லாம் நிறைய நோயாளிகள் ஒரே நேரத்தில் வந்து குவிந்ததால் ஏற்பட்டது. ஆனால் கோவிட் சிகிட்சை மையத்தில் சேர்க்கப்பட்டவுடன் ஊழியர்களிடமோ சிகிட்சை மற்றும் வசதிகளிலோ எந்த குறைபாடும் இருக்கவில்லை.

குறைபாடுகள் நம் மக்களிடம் தான் இருந்தது. உணவை நம் அறையிலேயே எடுத்து வந்து கொடுப்பார்கள். ஆனால் பழச்சாறு மற்றும் டீ சுக்கு காப்பி போன்றவை பொதுவாக சில இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். அதை ஒலி பெருக்கியில் அறிவிப்பாளர்கள். நம் மக்களில் ஒரு சாரார் எல்லா நோயாளிகளுக்கும் சேர்த்து தான் அவைகள் வழங்கப்படுகின்றன என்பதைக் கூட பொருட்படுத்தாது அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வரும் பெரிய டம்ளர் ப்ளாஸ்க் களில் பிடித்து கொண்டு சென்று விடுவார்கள். பிறகு வருபவர்களுக்கு கிடைக்காமல் போகும்.

நோயாளிகள் பல விதம். சில பேர் தீவிர அறிகுறி உள்ளவர்கள். சிலர் தொடக்க நிலை அறிகுறிகள் மட்டும் கொண்டவர்கள். தீவிர இருமல் சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் உள்ளவர்கள் கூட உள்ளனர். அதனால் இடைவெளி விட்டு வரிசையில் நிற்க பரிந்துரைப்பார்கள். ஆனால் மக்களில் ஒரு பிரிவினர் எப்போதுமே சரியான வரிசையை இடைவெளியை பேண மாட்டார்கள். ஏதோ வாழ்க்கையின் கடைசி பழச்சாறை டீயை அருந்தப் போவது போல சிலர் நடந்து கொண்டது கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியது. கேட்க போனால்   சண்டையில் தான் முடியும். பரம ஏழைகள் எல்லாம் இல்லை. பெரும்பாலானவர்கள் நம் நடுத்தர வர்க்கம் தான். யாரோ நம்மவர் கழிவறைக்கு வெளியில் மலம் கழித்து வைத்ததை ஒரு சுகாதாரப் பணியாளர் புலம்பிக் கொண்டே சுத்தம் செய்தார்.

இவையனைத்தையும் நம் மருத்துவப் பணியாளர்கள் சுகாதார ஊழியர்கள் அனைவரும் மிகப் பொறுமையுடன் மன்னித்து மக்களுக்காகப் பணிபரிகிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கும் நம் அரசுக்கும் தான் நன்றி கூற வேண்டும்.


ஜெயராம்

அன்புள்ள ஜெயராம்,

அரசு மருத்துவமனைகளைக் கண்காணிக்கவேண்டும். தேவையானபோது உரியமுறையில் புகாரும் கொடுக்கலாம். ஆனால் இங்கே நிகழ்வது வசை. அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்குள்ள 90 சதவீத சீர்கேடுகளுக்கும் காரணம் நோயாளிகளும், நோயாளிகளின் உறவினர்களும் என்று காணலாம். நான் அஜிதனை பார்க்க ஆஸ்பத்திரி சென்றபோது நாலுபேர் கொண்ட ஒரு கும்பல் குடித்துவிட்டு வந்து ஆஸ்பத்திரிக்குள் சென்று அவர்களின் நண்பனைப் பார்க்கவேண்டும் என்று சலம்பிக்கொண்டிருந்தது.

தூய்மையாகச் சூழலை வைத்திருக்கும் வழக்கம் நமக்கில்லை. அதைப் பற்றி எவர் எதைச் சொன்னாலும் ’பொதுமக்கள்’ என்ற புனித தெய்வங்களை பழி சொல்லிவிட்டான், அவர்கள் பாவம் என்ன செய்வார்கள் என்று ஒரு போலிக்கும்பல் பொங்கிவரும்- அவர்கள் எவரும் இந்தப் பொதுமக்களுடன் ஒருநாள் கூட புழங்குபவர்கள் அல்ல.

நமது மருத்துவ அமைப்பு திணறிச்செயலிழந்துகொண்டிருக்கிறது. அதை விரைவில் சீரமைக்கவேண்டும். செய்யவேண்டியது அதுதான். அது நடைபெறுகிறது.

ஜெ

அன்புள்ள ஜெ

நீங்கள் கொரோனா கால மனநிலை பற்றி எழுதியிருந்தீர்கள். இன்று எழுதுபவர்களில் வாசகர்கள்மேல் நம்பிக்கையும் பரிவும் கொண்டு எழுதுபவர் நீங்களே. பெரும்பாலானவர்கள் இச்சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்ரீதியாக ‘எதிரியை’ வீழ்த்த இதைப் பயன்படுத்துகிறார்கள். தனிப்பட்ட காழ்ப்புகளை அரசியலாக மடைமாற்றி கக்குகிறார்கள். நோய்வந்த நாய்கள் போல கடித்துக்கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உரையாடலுக்கும் வெளிப்பாட்டுக்கும் நீங்கள் உருவாக்கியிருக்கும் வெளி மிகப்பெரியது. அதை நண்பர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

எஸ்.ஆர்.ராமநாதன்

 

அன்புள்ள ராம்,

அது அத்தனை எளிதல்ல. உளச்சோர்வும் கசப்பும் சூழலில் இருந்து மழைபோல பெய்கிறது. எதிர்மறை உணர்வுகளுக்கு ஒரு போதை உண்டு. அவை நம் அட்ரினலை கொப்பளிக்கச் செய்கின்றன. பரபரப்பாக்குகின்றன. ‘பொழுது போவதற்கு’ மிகச்சிறந்த விஷயம் எதிர்மறை உணர்வுகளே. போதைகளில் மிக உச்சமான போதை அட்ரினல் பொங்கும் தருணங்கள் அளிப்பவையே. அவற்றில் சுவை வந்துவிட்டால் நாம் அழிந்தாலும்கூட அதை நாடியே செல்வோம். கோபவெறி- சலிப்பு- மீண்டும் கோபம் என அலையிலேயே இருப்போம்.

கோபத்தை நீட்டிக்க வேண்டும். கோபத்தின் போதைக்காகவே அடையும் கோபம் அது. ஆனால் அதை பெரிய அறக்கோபமாக,  ‘அரசியல்புரட்சிக்’ கோபமாக கற்பனை செய்துகொள்வோம். சதிக்கோட்பாடுகளை கண்டுபிடிப்போம். அதில் நம் மூளை உச்சகட்ட விழிப்புடன் கணக்குகளைப் போடும். நக்கல்கள் நையாண்டிகள் செய்வோம். எதிரிகளை கண்டுபிடிப்போம். நண்பர்களைக்கூட எதிரிகளாக ஆக்கிக் கொள்வோம். அதன்பின் அவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும், ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து பார்ப்போம். அவற்றை திரித்து நமக்கேற்றபடி பொருள்கொண்டு கொந்தளிப்போம்.

அந்த மாயப்போதையில் இருந்து ஒருவன் திட்டமிட்டு, அறுத்துக்கொண்டு, வெளிவந்தாலொழிய மீளமுடியாது. எந்தப்போதையுமே அப்படித்தான். எந்தப்போதைக்கும் மிகச்சிறந்த நியாயங்கள் கற்பிக்கப்பட்டிருக்கும். உச்சகட்ட தர்க்கபூர்வ விளக்கங்களும் இருக்கும். அதை மீறி அந்த போதையின் அழிவை காணவேண்டும். அதை வெட்டி வெளியேற முயலவேண்டும்.

ஆக்ரமிக்கும் எதிர்மறையுணர்வுகள் ஆயிரம் பல்லாயிரம் மடங்கு ஊடகவல்லமையும், வீச்சும் கொண்டவை. எதிர்மறையான எதுவும் நேர்நிலையானவற்றை விட நூறு மடங்கு ஆற்றல் கொண்டது. அதற்கு எதிராக என்னுடைய சொற்களுக்கு ஓரளவே எதிர்வினை இருக்கும். இவற்றை ஏற்க மனம் வராது. இயல்பாகவே நிராகரிக்கவும், ஏளனம் செய்யவும்தான் தோன்றும்.

ஆகவே நான் மிகச்சிலரையே எதிர்பார்க்கிறேன். அப்படி ஒரு வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடாது, ஒரு வாசலை திறந்துவைத்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்போம், தெரிவு அவர்களுடையதாக இருக்கட்டும் என்று மட்டுமே நினைக்கிறேன்

ஜெ 

 

வாழ்தலின் பரிசு

மழைப்பாடல் வாசிப்பு இரு கடிதங்கள் நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்? சஷி தரூர் பேச்சும் பயிற்சியும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2021 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.