Jeyamohan's Blog, page 989
May 10, 2021
அறம்- கடிதம்
வணக்கம் அண்ணா.
கவிதை என்கிற வட்டத்தைத் தாண்டி கதைகள், கட்டுரைகள் பக்கம் வந்த போது நாளிதழ்கள் வெளியிடும் சிறப்பு மலர்கள் மூலமாக உங்களின் கதைகள் எனக்கு அறிமுகமானது. அந்த இதழ்களில் இருக்கும் பிற கதைகளைப் போல உங்கள் கதையில் மனம் ஒட்டாது. கடந்து விடுவேன். எனக்கிருந்த வாசிப்பு பயிற்சியின்மை அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். உங்கள் கதைகளை அணுகுவது என்னளவில் சிரமமாக இருந்த சமயத்தில் நண்பர் ஒருவர் ஏழாம் உலகம் நாவலை தந்தார். சில பக்கங்கள் மட்டுமே கடந்த நிலையில் இன்றும் அந்நாவல் வாசிப்பிற்க்காக காத்திருக்கிறது. இந்த சூழலில் அறம் கதைகள் வந்தது. உங்களின் இணைய பக்கத்தில் வாசித்தேன்.
நேரடி கதைகள் என்பதால் அதனோடு என்னால் ஒட்ட முடிந்தது. அந்தக் கதைகள் என்னுள் ஏற்படுத்திய அக எழுச்சி முன் எப்போதும் நான் உணராதது. அந்தக் கதைகளும், மாந்தர்களும் உறங்கவிடாமல் செய்தனர். இன்றும் கூட எங்கேனும் அறம் சார்ந்த நிகழ்வுகளை அல்லது அதை தன்னளவில் நிறைவேற்றும் மனிதர்களைக் காணும் போதெல்லாம் அறம் தொகுப்பு நினைவில் வந்து விடுகிறது. பலமுறை தொகுப்பை வாசித்த போதும் முன்பு வாசித்த கதைகள் தானே என்ற உணர்வை அவைகள் தந்ததேயில்லை. ஒவ்வொருமுறையும் அது எனக்குள் ஏதோ ஒன்றை ஊடேற்றிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், இவை குறித்தெல்லாம் எழுத ஏதோ ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.
சமீபத்திய அறுவை சிகிச்சையால் கிடைத்த முழு ஓய்வையும், வலியையும் தின்று செரிக்க மீண்டும் அறம் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அறம், சோற்றுக் கணக்கு, வணங்கான், யானை டாக்டர், நூறு நாற்காலிகள், ஓலைச் சிலுவை ஆகிய கதைகளில் வரும் கதை மாந்தர்களை என் பால்யத்தில் வேறு வேறு களங்களில் கண்டிருக்கிறேன். அவர்களை இவர்களோடு ஒப்பிட்டு பார்த்து வியக்கிறேன். சில கதைக் களங்கள் என் மண் சார்ந்தவைகளாக அமைந்திருக்கின்றன. எங்கும் வியாபித்துக் கிடக்கும் அறம் சார்ந்த மனிதர்களை அறத்தின் உண்மை முகத்தோடு வாசிக்கத் தந்திருக்கிறீர்கள்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு கதையை வாசித்து விடுவேன். அந்தக் கதையை பவா சொல்லியிருந்தால் அதையும் கேட்டு விடுவேன். இந்த சமூகம் எப்படியான கூர்மையோடு பிசகின்றி தன்னை நகர்த்தி வந்திருக்கிறது. அதைக் கொண்டு செலுத்திய மனிதர்களின் மிச்ச சாயல்கள் இன்று இல்லாமல் போய்விட்டதா? அல்லது வேக வாழ்க்கையில் நமக்கான அறத்தையும் தொலைத்து அப்படியான மனிதர்களையும் கண்டுணராது போய்விடுகிறோமா? என்ற கேள்வி பின்னிரவு வரை என்னுள் ஓடிக் கொண்டே இருக்கும்.
உண்மை தரும் சூட்டை கைமாற்ற மொழியில்லாத போதும் அறம் எனக்குள் கிளர்த்திக் கொண்டிருக்கும், நீர்த்துப் போகாது நிறைந்திருக்கும் அக எழுச்சியை பதிவாக்கிவிட வேண்டும் என நினைக்கிறேன். மீதி கதைகளையும் மீள் வாசிப்பு செய்து செய்வேன். உங்களின் கதைகளுக்குள் நுழைவதற்கான வாசல் “அறம்” கதைகள் என நீங்கள் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. சரடைக் கண்டு கொண்டேன். இனி அதன் வழி உங்களின் இதர படைப்புகளுக்குள்ளும் நுழைய முடியும் என நம்புகிறேன்.
சிநேகமாய்
மு. கோபி சரபோஜி
அன்புள்ள கோபி,
அறம் கதைகளின் முக்கியமான சிறப்பம்சம் என்ன? சாதாரணமாக கதைகளை வாசிக்கையில் பொதுவாசகன் ‘இது கதைதான்’ என்னும் தன்னுணர்வு கொண்டிருக்கிறான். கேளிக்கை எழுத்துக்களை வாசித்துப் பழகியவர்களால் அதை கதை மட்டுமே என்று பார்க்கும் உளநிலையில் இருந்து வெளிவர முடிவதில்லை. அறம் கதைகள் கதைகள் அல்ல, மெய்யான மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து எழுந்தவை. ஆகவே அந்த நம்பிக்கையின்மை இல்லாமலாகிறது. கதைகளை உணர்வுபூர்வமாக வாசிக்க முடிகிறது ஆகவே இலக்கியத்திற்கு அவை நுழைவாசல்கள்.
ஆனால் தேர்ந்த இலக்கியவாசகன் ஒன்றை அறிவான். இலக்கியம் என்பது கதைதான், ஆனால் பொய் அல்ல. நம் வாழ்க்கையில் நாம் உண்மை என நம்பும் பலவிஷயங்கள் புனைவுகளே. வரலாறு, சமகால அரசியல், கொள்கைகள் என பலவும். இன்று பொருளியலேகூட புனைவுகள்தான். இலக்கியம் இன்னொரு புனைவு. புனைவு என்பது பொய் அல்ல, உண்மையை செறிவாக சொல்லி கற்பனையில் அதை நிறுவும் ஒரு வழிமுறை மட்டுமே. ஆகவே அவன் இலக்கியத்தை ’புனைவுண்மை’ என்றுதான் எடுத்துக்கொள்வான்
ஜெ
அறம்- கடிதங்கள் அறம்- கடிதங்கள் அறம்- கடிதங்கள்வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு
அமெரிக்கா சந்திப்பிற்கு பின் எழுதும் முதல் கடிதம் இது. இன்று ராலே நகரில் வெண்முரசு திரையிடல் மிகுந்த கொண்டத்துடன் முடிந்தது. கடந்த ஜூன் 2020 இல் . நண்பர் ராஜனுடன் ஜோர்டான் ஏரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். தொடர்ந்து 2 மணி நேரம் உரையாடலுக்கு பிறகு சிறு அமைதி. ஏரியின் சிறு அலை எங்கள் கால்களை அவ்வப்போது வந்து நனைத்துக்கொண்டிருந்தது. அப்போது ராஜன் முதலாவிண்னிலிருந்து சில வரிகளை காண்பித்தார். “கண்ணானாய் காண்பதானாய் கரு நீலத் தழல்மணியே”. இது பாடலாக வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். ஆவணப்படத்தின் முதல் வித்து தொடங்கியது அங்குதான்.
பாடல் பதிவு முடிந்தவுடன். முழுநீள ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் முடிவு செய்தார்கள். இதோ இன்று திரையில் பிரமாண்டமாக உயர்தரமான இசையில் அந்த பாடல் வரும் போது வாசகர்கள் எல்லோரும் ரசித்தோம். கலைஞன் தான் காலத்தில் நின்று பேசுகிறான். அவனுடைய கலை மொழியின் செயல்பாடு. மாபெரும் பண்பாட்டின் அடையாளம் . மூதாதையர்களின் குரல். வெண்முரசை மூதாதையரின் குரலாக 6 1/2 வருடங்கள் தொடர்ந்து எழுத்தில் நீங்கள் எழுதியதை அதே குரலுடன் திரையில் ஒலிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நண்பர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இதில் பல்வேறு வாசகர்கள், மூத்த எழுத்தாளர்கள், அமெரிக்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள்,தமிழ் திரைப்பட ஆளுமைகள், இந்திய குடிமைப்பணியில் உயர் பதவியிலிருப்பவர்கள், பல்வேறு நிலப்பரப்பில் வசிப்பவர்கள் எல்லோரும் வெண்முரசை அவர்களின் பார்வையில் சிறப்பாக பேசியிருக்கிறார்கள்.
கடலூர் சீனு “அத்வைதிகள் பண்பாட்டு ரீதியான ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது. ஜெமோ அவ்வழியில் வந்தவர். மேலும் வெண்முரசை இந்தியப்பெருமிதம்” என்று கூறினார்.
நாஞ்சில் அவர்கள் இதை மொழிக்குள் நடந்த சாதனையாக பார்க்கிறேன். மேலும் தோராயமாக எவ்ளவு சொற்களை பயன்படுத்தியிருக்கக்கூடம். இது ஒருவகையான தவம் என்றார்.
லட்சுமி மணிவண்ணன் கூறும் போது “ஜெயமோகனின் இடம் என்பதே தன்னிகரற்ற இடம் என்றுக் கூறினார்”. முத்துலிங்கம் அய்யா பேசும் போது “கனடா எழுத்தாளர்களுக்கு நான் ஜெயமோகனை அறிமுகம் செய்யும் போது இவரை தமிழில் நோபல் பரிசு பெறத்தகுதியான எழுத்தாளர் என்று தான் அறிமுகம் செய்கிறேன்” என்றார்.
இயக்குனர் வசந்த பாலன் “இதை வானளாவிய கலைக் கோபுரமாக பார்க்கிறேன் என்றுக் கூறினார்”. ராம்குமார் அவர்கள் வெண்முரசின் படிமங்களை பழங்குடி சமுதாயத்தின் பார்வையில் பேசினார். சுபஸ்ரீ “நாம் அறிந்த மகாபாரதம் மட்டும் இல்லை வெண்முரசு. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்வையும் வேறொரு கோணத்தில் அணுகி பார்க்க முடியும் என்றுக் கூறினார்”. மீனாம்பிகை “வெண்முரசு தன்னை தொடர்ந்து செப்பனித்துக்கொள்ள எப்படி உதவியது என்றார்.
சுதா அவர்கள் வெண்முரசில் சில நெகிழுச்சியான தருணங்கள் வழியான பயணத்தை உணர்வு பூர்வமாக பேசினார். சுசித்ரா “வெண்முரசு மூலம் எனக்கான இளையாதவன் கிருஷ்ணனை நான் எப்படி மறுஅறிமுகம் செய்துகொண்டேன் என்றார்”. ராதா சௌந்தர் பேசும் போது வெண்முரசு எப்படி தனக்கு நடைமுறை வாழ்க்கையின் சாராம்சத்தை படிமங்களாக வெண்முரசு கொண்டிருக்கிறது என்று விளக்கினார்
லோகமாதேவி ,மஹேஸ்வரி ஆகியோர் “வெண்முரசு தங்கள் குழந்தைகளின் ஆளுமையில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை விளக்கினார்கள்”. அருண்மொழி அக்கா வெண்முரசு உன்னதமாக எழுதப்பட்ட தருணங்களையும் . உலக இலக்கியத்தில் வெண்முரசு தனிப்பெரும் இடத்தை வகிப்பதை குறித்து அருமையாக பேசினார்கள்.
ஷாஹுல் பேசும் போது “வெண்முரசு தனக்கு எப்படி இந்தியாவின் மொத்த சித்திரத்தை அளித்தது என்றார். தொடர்ந்து வெண்முரசுடன் தினமும் பயணிப்பதாக கூறினார் “. நண்பர் சிஜோ பேசும் போது “வெண்முரசை பைபிளில் வரும் சில சம்பவங்களுடன் ஒப்பிட்டு பேசினார். காளிபிரசாத் பேசும் போது தர்க்கரீதியாக வெண்முரசை அணுகாமல் எப்படி பண்பாடு ரீதியாக புரிந்துக்கொள்வது என்று விளக்கினார்
ராஜகோபாலன் “இந்தியப் பண்பாட்டின் ஒட்டுமொத்தமான படைப்பு உரைநடையில் வந்திருப்பது வெண்முரசு மட்டுமே என்றார்” நண்பர் பழனி ஜோதி வெண்முரசு கதாபாத்திரங்களின் தேடல்களில் வரும் மெய்மையை அடையும் போது. மெய்மையை நாமும் எப்படி அடைகிறோம் என்று தன் பார்வையை முன்வைத்தார். தேடலில் வரும் மெய்மையின் மொத்த தரிசனம் தான் வெண்முரசு என்றார். நண்பர் வேணு “ஒப்பீட்டளவில் வெண்முரசு போன்ற நாவல் இது வரை உலகத்தில் வேறெந்த மொழியிலும் எழுதப்படவில்லை” என்றார்.
கிருஷ்ணன். “பெருவாழ்வு வாழ்வு வாழ வேண்டும் என்றால். வரலாற்றின் நிகழ்வுகளில் பங்கேற்க வேன்றும் என்றால் வெண்முரசை படிக்க வேண்டும் என்றார்”. அரங்கா 2013 டிசம்பர் மாதம் நடந்த விஷ்ணுபுரம் விழாவை தொடர்ந்து உங்களின் வெண்முரசு பெரும்செயலின் திட்டத்தை நீங்கள் விளங்கியதை கூறினார்.
Dr.Pamela Winfield “Professor of Religious Studies” பேசும் போது “I would characterize Mr.Mohan as humanist”என்றார்
ஆவணப்படம் பிரமாண்டமாக வந்திருக்கிறது. தரத்தை பார்க்கும் போது . எவ்வளவு உழைப்பை கோரும் பணி என்று தெரிகிறது. ராஜனுக்கும் . சௌந்தர் அண்ணா மற்றும் விஷ்ணுபுர இலக்கியவட்ட நண்பர்கள் மிகப் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்கள். பெரும் செயல் ஆற்றும் போது தடைகள் நமக்குள் இருந்து தானே வரும். ஒரு சிறுதுளி சந்தேகம் அல்லது “ஏன் தேவை” என்றாலும் நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது. நம் முழு ஆளுமையும் பரிசோதிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவோம். மேலும் இனைந்து பணியாற்றுவது என்பது ஒருவகையான சவால். பிடியை கடைசி வரைக்கும் கொண்டு செல்ல வேண்டும். தேர்ந்த வாத்தியார்கள் அவசியம். அதை சௌந்தர் அண்ணா செய்திருக்கிறார்.
கலையின் பிரமாண்டமே அதற்கு செலவிடும் நேரமும்தான். அர்ப்பணிப்பும் . ஒரு சின்ன செயலுக்கு ராஜன் மற்றும் சௌந்தர் அண்ணா மணிக்கணக்கு போராடுவார்கள். இதில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள். ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்களின் சிறப்பை வாங்குவதற்கு திட்டமிடுதல். நொடிப்பொழுதில் யோசிக்கும் திறன் அவசியம்.
பாடல் மற்றும் இசைக்கோர்வையை தனியாக நண்பர்கள் கேட்க வேண்டும் . ஆவணப் படம் முழுவதும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டது. இதில் உள்ள ஆளுமைகள்/கலைஞர்கள் இந்திய மற்றும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றவர்கள். அவர்களின் நேரத்தை கோருவதும் அதை சிறப்பாக பயன்படுத்துவதும் எவ்வளவு சவால் என்று. மிகுந்த கவனத்துடன் “Detailing” செலுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக “Editing”/மற்றும் இசைக்கோர்வை செய்யப்பட்டுள்ள முறை. நண்பர்கள் பார்த்து புரிந்து கொள்ளலாம். நம் குழு நண்பர்கள் “subtilte” சிறப்பாக செய்துள்ளார்கள். அவர்களின் மிகப்பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார்கள். ஆவண படத்தின் தரத்தை “subtilte” இன்னும் உயர்த்துகிறது.
“கண்ணானாய் காண்பதானாய் கரு நீலத் தழல்மணியே” பாடலுக்கு மிக அருமையாக ராஜன் இசை அமைத்திருக்கிறார். இதில் கமல். ஸ்ரீராம் பார்த்தசாரதி. சைந்தவி போன்ற திறமையான கலைஞர்கள் முழுஅர்பணிப்பை கொடுத்திருக்கிறார்கள். சிதார் கலைஞர் ரிஷாப் ரிக்கிறாம் (இவர் ரவி சங்கர் அவர்களின் கடைசி மாணவர்) சிதார் இசை ஒரு விதமான “transcendental state” நம்மை அழைத்து செல்கிறது.
சென்னை/நியூயார்க்/ஜெர்மனி/ராலே போன்ற பல இடங்களில் இசைகோவை செய்யப்பட்டுள்ளது. சைந்தவி இப்பாடலை மிகவும் உணர்வுபூர்வமாக பாடியிருக்கிறார்.
“சிறுதண்டை சுழன்ற மென்கால்மலரே.
சற்றென விலகி விரிமலரின் முதலிதழோ எனத் தோன்றும் பெருவிரலே.
இளம்பாளை தளிரென்ற பாதப்பரப்பே.
அதிலெழுந்த ஆழிச்சங்குச் சுழியே.
அமுதுண்ணும் களிப்பில் நெளியும் சிறுகுமிழ் விரல்களே.
அமைக என் தலைமேல்!
அமைக இப்புவிமேல்!
அமைக திருமகள் மடிமேல்!
அமைக இக்ககனவெளிமேல்!
அமைக காப்பென்று அமைக!”
என்ற வரிகள் தன்னை மிகவும் பாதித்ததாக கூறினார்”.
இதில் பங்குபெற்ற வாசகர்கள். கலைஞர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி. மிகப்பெரிய அனுபவத்தை உருவாக்கி தந்த ராஜன். சௌந்தர் அண்ணா. விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்கு அன்பும். பாராட்டுகளும்.!!
விவேக் சுப்ரமணியன்
May 9, 2021
இஸ்லாமிய வெறுப்பா?
அன்புள்ள ஜெ,
நான் ஓர் இஸ்லாமியன். என் இஸ்லாமிய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் உங்களை இஸ்லாமின் எதிரி என்றார். உங்கள் எழுத்துக்கள் எதையும் படித்திருக்கவில்லை. ஆனால் உச்சகட்ட வெறுப்புடனேயே இருந்தார். தொடர்ச்சியாக நாலைந்து சொற்றொடர்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவை அவருக்கு இணையம் வழியாகக் கிடைத்தவை.
ஒன்று, நீங்கள் இஸ்லாமியரை இழித்து எழுதுகிறீர்கள். இரண்டு, நீங்கள் ஓர் இஸ்லாமியன் அருகே அமரப்பிடிக்கவில்லை என்று எழுதினீர்கள். ஆகவே நீங்கள் இஸ்லாமிய எதிரி. இதை நம்ப அவர் விரும்புகிறார். நான் எத்தனை விளக்கினாலும் இந்நிலைபாட்டில் மாற்றமில்லாமல் இருந்தார்.
சரி, படித்துப்பார் என்று படையல், முதுநாவல் என்ற இரு கதைகளை கொடுத்தேன். நீங்கள் இஸ்லாமிய இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இரண்டை கொடுத்தேன். படிப்பதே பாவம் என்று சொல்லி தள்ளிவைத்துவிட்டார். வருத்தமாகவும் சலிப்பாகவும் இருந்தது
எம்.சலீம்
முதுநாவல்[சிறுகதை] படையல் [சிறுகதை]அன்புள்ள சலீம்,
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல இந்துக்கள், கிறிஸ்தவர்கள், மார்க்ஸியர்கள், திராவிட இயக்கத்தவர் என அனைத்து ’நம்பிக்கையாளர்’களிடமும் உள்ள மூர்க்கம் இது. ஒரு நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய அவர்கள் முயல்வதே இல்லை—கூடுமானவரை அதைப் பேணிக்கொள்ளவே முயல்வார்கள். பொதுவாக நம்பிக்கையின் வழி அது.
நம்பிக்கையின் மறுபக்கம் வெறுப்பு. தன் தரப்பை ஆழமாக பற்றியிருக்கும் பொருட்டே தன் தரப்பு அல்லாதவற்றின்மேல் வெறுப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘நான் இதை நம்புகிறேன்’ என நம்பிக்கையாளர் திரும்பத் திரும்ப தன்னிடமே சொல்லிக்கொள்கிறார். கூடவே ‘நான் இதல்லாத எல்லாவற்றையும் வெறுக்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டிருப்பார்.
இஸ்லாமியர் மட்டுமல்ல இந்துத்துவர்களும், கிறிஸ்தவர்களும், மார்க்ஸியர்களும், திராவிட இயக்கத்தவரும் அவர்களை நான் வெறுத்து இழிவுசெய்கிறேன் என்று நம்பி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் பிராமண விரோதி என்ற கூக்குரல் ஆண்டுக்கொருமுறை உக்கிரமாக சில வட்டங்களில் எழுவதுண்டு. அதை நம்பும் ஒரு பெரிய கூட்டம் உண்டு. அனேகமாக ஒவ்வொருநாளும் அவர்களிடமிருந்து வெறுப்பு மின்னஞ்சல் வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இணையத்தைச் சுற்றிவந்தாலே அதைக் காணலாம். இதற்கு நான் என்ன செய்யமுடியும்?
எந்த மக்கள்திரளிடமும், எந்த தரப்பிடமும் வெறுப்பை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என எனக்கே ஆணையிட்டுக் கொள்கிறேன். எழுத்தாளர்கள் அனைவரிடமும் அதையே சொல்வேன். ‘நல்லவன்’ ஆக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. வெறுக்கும் ஒன்றை நம்மால் அறியமுடியாது என்பதற்காக. அறிவை எந்நிலையிலும் எந்த புகைமூட்டமும் இல்லாமல் வைத்துக்கொள்வது எழுத்தாளனின் தேவை என்பதற்காக.
எந்தப் போதையாலும் மூளையை மழுங்கடித்துக் கொள்வதில்லை, எந்நிலையிலும் எதையும் அனுபவிப்பதை திசைதிருப்பிக் கொள்வதில்லை, வெறுப்பாலும் விருப்பாலும் எதையும் மூடிக்கொள்வதில்லை என்பது நானே எனக்கு போட்டுக்கொண்ட நெறி – என் நெறி என்பது அத்வைதம். தூய அறிவே அதன் பாதை.
இஸ்லாம் பற்றி முப்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கேரள இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்திற்கு ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இஸ்லாமியப் பண்பாட்டை கூர்ந்து அறிந்துமிருக்கிறேன். என் ஆதர்ச எழுத்தாளர்களான இஸ்லாமியர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அனைத்துக்கும் மேலாக காசர்கோட்டில் பணியாற்றிய காலம் முதல் இன்றுவரை நான் என் இஸ்லாமிய நண்பர்களுக்கு அணுக்கமானவன்.
நானே எனக்கு விதித்துக்கொண்ட சில நெறிகள் உண்டு:
அ. இஸ்லாம் பற்றி நம் சூழலில் புழங்கும் எந்த எதிர்மறையான பொதுச்சித்திரத்தையும் என் எழுத்தில் முன்வைப்பதோ ஆதரிப்பதோ இல்லை. இஸ்லாமிய மதத்தை தீவிரவாதத்துடனோ வன்முறையுடனோ இணைத்து எதுவுமே எழுதியதில்லை. இஸ்லாமியர் பற்றிய எந்த வகையான அரசியல் வகைப்படுத்தல்களையும் ஏற்பதில்லை.
ஆ. இஸ்லாமியர் குறித்து எதிர்மறை உணர்வுகள் கொந்தளிக்கும் தருணங்கள் பல அமையும். பாராளுமன்றத் தாக்குதல், இலங்கை தேவாலயத் தாக்குதல், தப்லீக் ஜமாஅத் செய்திகள் போன்றவை. அப்போதெல்லாம் உடனடியாக எந்தக் கருத்தையும் சொல்வதில்லை. சம்பிரதாயமான கண்டனத்தைக் கூட தெரிவிப்பதில்லை. ஏனென்றால் அப்போதிருக்கும் பொது உணர்வுகளுடன் இணையக்கூடாது என உறுதிகொண்டிருக்கிறேன்.
இ. இஸ்லாம் என்றல்ல எந்த மதநம்பிக்கையாளரின் எந்த மதநம்பிக்கையையும் எதிர்த்தோ இகழ்ந்தோ எழுதுவதில்லை. எந்த பண்பாட்டுக்கூறையும் எதிர்மறைத் தன்மையுடன் எழுதுவதில்லை.
ஈ.இஸ்லாமியர்களை ஒரு தனி மக்கள் திரள் என்று பார்ப்பதில்லை. அவர்களின் பண்பாட்டையோ இலக்கியத்தையோ சிறப்புக் கரிசனமோ, தட்டிக்கொடுக்கும் தோரணையோ கொண்டு அணுகுவதில்லை. அவர்கள் இயல்பாகவே இந்த மண்ணின் பண்பாட்டின் ஒருபகுதி என்றே அணுகுவேன்.
*
இஸ்லாமியப் பண்பாட்டில் எனக்கு ஈடுபாடுள்ள ஓர் அம்சம் உண்டு—அது சூஃபி மரபு. இந்தியாவெங்கும் அலைந்து நான் சூஃபி தர்காக்களுக்குச் செல்வதுண்டு. இன்றும் செல்வதுண்டு. ஓச்சிற உப்பா போன்ற சில சூஃபிகளை சந்தித்ததுண்டு. [மகாபாரத நாவல் தொடரான வெண்முரசு நூல்களில் ஒரு நாவல் ஓச்சிற உப்பாவுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அதற்காகவும் எனக்கு வசைகள் வந்தன].
சூஃபி வழிபாடு என் ஆன்மிகப் பயணத்தின் ஒரு பகுதி. அதில் நான் அடைந்த பல உன்னதத் தருணங்கள் உண்டு. அவற்றில் பெரும்பகுதியை பொதுவெளியில் பகிர முடியாது. புனைவிலக்கியத்தில் முயல்கிறேன் – முதுநாவல், படையல் போன்றவை அத்தகைய முயற்சிகள்.
ஆனால் இஸ்லாமிய மதத்திற்குள் இன்று உருவாகியிருக்கும் தூய்மைவாத, அடிப்படைவாத இயக்கங்களுடன் எனக்கு எந்த விதமான உடன்பாடும் இல்லை. அவை இஸ்லாமை ஓர் அரசியலாக மட்டுமே ஆக்குகின்றன, இஸ்லாம் முன்வைக்கும் ஆன்மிகத்திற்கு அவை எதிரானவை என நினைக்கிறேன். அதை நான் ஏற்கவில்லை. அதையே அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன். அதையே இந்து அடிப்படைவாதம் பற்றியும் குறிப்பிடுகிறேன். அது இந்துமதத்திற்கு எதிரானது என்று.
அந்த அடிப்படைவாதத்தின் முகமாகிய ஜவஹருல்லா போன்றவர்களுடன் என்னால் இணையாக மேடையில் அமரவியலாது, அமரவிருந்த ஒரு தருணத்தில் ஓர் அச்சத்தை உணர்ந்தேன் என்று எழுதியிருந்தேன். அதையே திரித்து இஸ்லாமியர் அருகே வந்தால் அச்சம் ஏற்படுகிறது என்று நான் எழுதியதாகச் சொல்லிச்சொல்லி பரப்பினர். உங்கள் நண்பர் நம்புவது அதையே.
அர்ஜுன் சம்பத்திடமும் எனக்கு இருப்பது அதே விலக்கமே. நான் பேசிய ஓர் அமைப்பு சில ஆண்டுகளுக்குப் பின் அர்ஜுன் சம்பத்தை அழைத்தது என்பதனால் அந்த அமைப்புடனான எல்லா உறவையும் துண்டித்து, அந்நண்பர்களையும் விலக்கிவிட்டேன். அதை என் தளத்திலேயே காணலாம்.
இஸ்லாமியர்களில் சிலர் இன்றிருக்கும் உளநிலை என்பது இஸ்லாமிய அடிப்படைவாதம் சார்ந்தது. அந்த அடிப்படைவாதத்தை அப்படியே ஏற்று இஸ்லாமியர்களை கண்மூடித்தனமாகப் புகழ்பவர்களே தங்களவர் என அவர்கள் நினைக்கிறார்கள். அந்தவகையான பசப்புகள் அரசியல்வாதிகளுக்கு இயல்பானவை. எழுத்தாளர்கள் அதைச் செய்யமுடியாது. ஏற்பும் விலக்கமுமாகவே எதையும் அவர்கள் அணுகுவார்கள். அதைப் புரிந்துகொள்ளும் சில இஸ்லாமியர் இருப்பார்கள், அவர்களே என் வாசகர்கள். அவர்களையே நான் கருத்தில்கொள்ள முடியும்.
ஆனால் நான் இந்து என்பதனால் இந்துமத ஆசாரவாதத்தையும், அடிப்படைவாத அரசியலையும்தான் நேரடியாக எதிர்க்கிறேன். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஏற்பதில்லை என்று தெளிவுபடுத்துவதுண்டு, தொடர்ந்து அதை எதிர்த்து எழுதுவதில்லை. அதை அவர்களில் உள்ள தெளிவுள்ளோரே செய்யவேண்டும் என நினைக்கிறேன்.
இந்து அடிப்படைவாதத்தை எதிர்ப்பதனால் இந்துவிரோதி என்று நான் வசைபாடப்படுகிறேன். ஆசாரவாதத்தை எதிர்ப்பதனால் பிராமணவிரோதி எனப்படுகிறேன். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஏற்காததனால் இஸ்லாமிய விரோதி என சிலர் சொல்லக்கூடும். என்ன செய்ய முடியும்?
அடிப்படைவாதிகள் எப்போதும் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் ஏற்காதவர்களை எதிரிகள் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களை அப்படியே ஏற்று, அவர்களின் மேடைகளிலும் தோன்றுபவர்கள் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றவர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.வி.ராஜதுரை தஸ்லீமா நஸ்ரீன் ஹைதராபாத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் ஒரு மேடையில் தாக்கப்பட்டதை கண்டித்தார். உடனே அவர் இஸ்லாமிய எதிரி என வசைபாடப்பட்டார். அ.மார்க்ஸ் ஒருமுறை ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய கொலைகளை கண்டித்தார், ஒருமுறை எகிப்தின் எர்டோகனை கண்டித்தார். மறுகணமே இஸ்லாமியர் மேல் காழ்ப்பு கொண்டவர் என வசைபாடப்பட்டார். இந்த வசையில் இருந்து எவரும் தப்ப முடியாது.
*
இங்குள்ள சூழல் ஒன்றுண்டு. தனிப்பட்ட இலக்கியக் காழ்ப்புகளும் கூடவே அரசியல் காழ்ப்புகளும் கொண்ட ஒரு சிறு கும்பல் மிகுந்த வெறியுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மொண்ணையான இலக்கியவாதிகள். நான் இலக்கியக் கருத்துக்களை சமரசமில்லாமல் சொல்லி, தெளிவான அளவுகோல்களை முன்வைப்பதனால் உருவாகும் காழ்ப்புதான் அது.
ஆனால் அவர்கள் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர், இஸ்லாமிய ஆதரவாளர் , தலித் ஆதரவாளர், ஈழ ஆதரவாளர் எனப் பற்பல வேடங்களை பூண்டு காழ்ப்புகளை கக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சில்லறை எழுத்தாளர்கள், உதிரிக்கட்டுரையாளர்கள். இவ்வாறன்றி எவ்வாறும் எந்த அடையாளத்தையும் பெறும் தகுதி அற்றவர்கள்.
அவர்களின் வழி என்பது என் கட்டுரைகளில் இருந்து ஒற்றை வரியை எடுத்து அதை முடிந்தவரை எதிர்மறையாகத் திரித்து, திரும்பத்திரும்ப சலிப்பில்லாமல் சொல்லி காழ்ப்பை நிலைநாட்டுவது. அதில் ஒன்றே மேலே சொன்னதுபோல இஸ்லாமியர் அருகே இருக்க எனக்கு பிடிக்கவில்லை என்று நான் சொன்னதாக செய்யப்படும் திரிபு. அவ்வாறு பலவகை திரிபுகள் வழியாக இஸ்லாமியர் உட்பட பல தரப்பினரை ‘தூண்டிவிட்டு’ தங்கள் ஆயுதமாக்கிக் கொள்வது அவர்களின் உத்தி.
இப்படி பல உண்டு. ‘ஈழத்தில் பேரழிவு நடைபெற்றது, அது அநீதியானது கொடியது. ஆனால் ஈழத்தில் புலிகள் ஓர் ஆயுதமேந்திய ராணுவமாகச் செயல்பட்டனர். அவர்களும் போரிட்டனர். அந்நிலையில் அதை போர்க்குற்றமாக சர்வதேச அளவில் கொண்டுசென்றால் மட்டுமே உலகநாடுகளின் ஏற்பு கிடைக்கும். இனப்படுகொலை என்று சொல்லிக்கொண்டால் நமக்கு கொந்தளிப்பாக இருக்கும். ஆனால் உலகநாடுகளின் ஆதரவு கிடைக்காது. ஏனென்றால் உலகில் எந்த நாடும் உள்நாட்டில் உருவாகும் ஆயுதக்கிளர்ச்சியை இலங்கை எதிர்கொண்டதுபோலத்தான் எதிர்கொள்ளும். இந்தியாவே நக்சலைட் எழுச்சியை அப்படித்தான் எதிர்கொள்கிறது.’ இது நான் சொன்ன கருத்து.
உண்மையில் இதுதான் நடைபெறுகிறது. இனப்படுகொலை என்ற நிலைபாட்டை உலகில் எந்நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. போர்க்குற்றம் என்ற சொல்லையே இன்று பொதுவெளியில் சொல்லவும் முடிகிறது. ஆனால் நான் சொன்னதை ‘ஈழத்தில் படுகொலைகளே நிகழவில்லை என்று ஜெயமோகன் சொல்கிறார்’ என்று திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு நாளுக்கு நான்குபேராவது நீங்கள் அப்படிச் சொன்னீர்களா என்று எனக்கு எழுதுகிறார்கள்.
இலங்கையில் கவிதை எழுதுபவர்களில் சிறந்தவர்கள் என ஒரு எட்டுபேரை ஒரு விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன். மு.பொன்னம்பலம் என்ற மூத்த கவிஞர் அங்கே சிறப்பாகக் கவிதை எழுதுபவர்கள் என நூறுக்கும் மேற்பட்டவர்களின் பட்டியலை எழுதிப் பிரசுரித்திருந்தார். அதை நையாண்டியாக ‘இலங்கைபோன்ற சின்னஞ்சிறு சூழலில் நூறுக்குமேல் கவிஞர்கள் அலைந்தால் அது சட்ட ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்காதா? கவிஞர்தொல்லைக்கு பூச்சிமருந்து அடிக்கவேண்டும்’ என்று சொன்னேன்.
அது தராதரம் அறியாமல் பட்டியலிடும் போக்குக்கு எதிரான நையாண்டி. சு.வில்வரத்தினம், சேரன் போன்ற இலங்கையின் பெருங்கவிஞர்களைப் பற்றி தமிழில் நீண்ட கட்டுரைகளை நான் மட்டுமே எழுதியிருக்கிறேன். இளைய கவிஞர்கள் பலரை கவனப்படுத்தியிருக்கிறேன். ஆனால் ஈழக்கவிஞர்களை எல்லாம் நஞ்சூட்டிக் கொல்லவேண்டும் என்று ஜெயமோகன் சொல்கிறார் என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை நம்பவும் ஒரு கும்பல் உண்டு.
தமிழில் அம்பேத்கரின் மெய்யியல், அறவியல், வரலாற்றுப் பங்களிப்பு பற்றி விரிவாக பேசும் மிகச்சிலரில் நான் ஒருவன். ஆனால் அம்பேத்கரை அவதூறு செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். என்ன அவதூறு என்றால் அம்பேத்கரைப் பற்றி இவர்கள் சொல்லும் எதையாவது நான் சொல்லவில்லை என்பதுதான்.
இதேதான் இஸ்லாமியர்களை குறித்தும் செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இஸ்லாமியர்களில் ஒருசாரார் இந்துக்களிடம் கொள்ளும் விலக்கம் பற்றி எழுதியிருந்தேன். அது இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் உருவாக்கப்படுவது. இந்துக்களையும் இஸ்லாமியரையும் விலக்குவது இரு தரப்பிலும் உள்ள அடிப்படைவாதிகளின் தேவை. அந்த வலையில் இஸ்லாமியர் விழக்கூடாது, இந்துக்களுடனான அணுக்கமே அவர்கள் அடிப்படைவாதத்தை எதிர்ப்பதற்கான வழியாக இருக்கமுடியும். இது நான் எழுதியது.
இதையே இஸ்லாமியர் இந்துக்களை வெறுக்கிறார்கள் என்று அவர்களை நான் குற்றம்சாட்டுவதாக திரித்து சொல்லிச்சொல்லி பரப்பினார்கள் காழ்ப்பாளர்கள். முகநூல் போன்ற ஓர் அமைப்பின் பிரம்மாண்டமான அவதூறுப்பெருக்கை எவரும் எதிர்கொள்ள முடியாது. ஓராண்டுக்குப் பின் அவதூறு பரப்பியவர்களே நான் சொன்ன அதே கருத்தை சொன்னார்கள் என்பதும் வரலாறு.
இவர்கள் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் மறுப்பு அளிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்த மறுப்பும் விளக்கமும் எழவில்லை என்பதுபோல அதையே மீண்டும் சொல்வார்கள். மீண்டும் அதைச்சொல்லியே கட்டுரைகள் எழுதுவார்கள். இந்த வகையான காழ்ப்புகளையும் பரப்புகிறார்கள். இதற்கு ஒன்றும் செய்யமுடியாது. நாம் சொல்வதைச் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.
இந்த ஒட்டுமொத்த அவதூறு இயந்திரமும் தரமான எழுத்தாளர்களை நோக்கி மட்டுமே செயல்படுகிறது, அத்தனை அரைகுறைகளும் இவர்களுடன் சேர்ந்துகொள்கிறார்கள், அத்தனை போலிகளும் இவர்களால் கொண்டாடப்படுகிறார்கள். அதை மட்டும் நீங்கள் கவனித்தாலே போதும், இதன் பொருளென்ன என்று புரிந்துவிடும்.
*
எந்த எழுத்தாளனும் சமூகம் மீதான விமர்சனத்தை முன்வைக்காமல் இருக்க மாட்டான் – ஏனென்றால் அந்த விமர்சனத்தில் இருந்தே அவன் எழுத வருகிறான். ஆகவே சமூகத்தின் எந்தப் பகுதியைப் பற்றிச் சொன்னாலும் அவனுடைய விமர்சனமும் அதில் இருக்கும். தன் சமூகமானாலும் பிற சமூகமானாலும். ஓர் எழுத்தாளன் சமூகத்தின் ஒரு பகுதியைப் பற்றி விமர்சனமே இல்லாமல் புகழ்மொழிகளை சொல்லிக்கொண்டிருக்கிறான் என்றால் அவன் போலியானவன்.
எழுத்தாளன் புகழ்மொழி அன்றி எதைச் சொன்னாலும் அவன் தன் சமூகத்தின் எதிரி என நினைப்பது ஒரு நோய்க்கூறு. அத்தகைய காழ்ப்புகளை தனிநபர் பகைமையினால் பரப்பும் இலக்கியவாதிகள் இஸ்லாமிய சமூகத்திற்கு பெருந்தீங்கு இழைக்கிறார்கள். அவர்களை தங்கள் தனிப்பட்ட பூசல்களில் ஆயுதங்களாக, வெறும் கைப்பாவைகளாகப் பயன்படுத்துகிறார்கள். அதுதான் ஒரு சமூகத்தையே கீழ்மை செய்தல்.
இங்கே அறிவுச்சூழலில் ஒரு பழக்கம் உண்டு. அரசியல் சரிநிலைகளை கணக்கிட்டு இஸ்லாமியர்களைப் பற்றியோ மற்ற சிறுபான்மையினரைப் பற்றியோ ஒரு சிறுசொல் கூட விமர்சனமாகச் சொல்ல மாட்டார்கள். வழக்கமான டெம்ப்ளேட் புகழ்மாலைகள் மட்டும்தான் இருக்கும். தன் சாதியைப் பற்றி ஒரு சொல் எதிர்மறையாகச் சொல்ல மாட்டார்கள். தன் சாதி கௌரவக்கொலைகள் செய்யும்போதுகூட கௌரவக் கொலைகள் தப்பு என்று பொதுவாகவே பேசுவார்கள். ஆனால் அத்தனைபேரும் சேர்ந்து பிராமணர்களை தாக்குவார்கள். ஏனென்றால் அது இங்கே முற்போக்கு என்று சொல்லப்படுகிறது. இந்தவகை ‘அச்சடிக்கப்பட்ட’ முற்போக்குகளில் ஒருவன் அல்ல நான்.
எனக்கு முப்பதாண்டுகளாக இஸ்லாமிய வாசகர்கள், நண்பர்கள் பலர் உண்டு. அந்தரங்கமான குடும்ப நண்பர்களே உண்டு. தனிப்பட்ட முறையில் இதுவரை என் இலக்கிய நண்பர்களில், தனிப்பட்ட நண்பர்களில் எந்த இஸ்லாமியரிடமிருந்தும் ஒவ்வாதன ஏதும் சந்திக்க நேர்ந்ததில்லை. ஆனால் அணுக்கமாக இருந்த பிற சாதியினரான ஒரு சில நண்பர்களிடமிருந்து நம்பமுடியாத அளவு மேட்டிமைத்தனம், சிறுமை, காழ்ப்புகளை காணநேர்ந்தது. இஸ்லாமியர்களில் என்னை அறியாதவர்களிடமிருந்து மட்டுமே காழ்ப்பு வெளிப்படுகிறது.
இரண்டு நிலைகளிலும் நான் சொல்லிக்கொள்ளுவது ஒன்றே. மனிதர்களை அவர்களின் திரள் அடையாளங்களைக் கொண்டு ஒட்டுமொத்தமாக விரும்புவதும் வெறுப்பதும்போல அறிவுக்கு எதிரான ஏதுமில்லை. அது எழுத்தாளனின் நுண்ணுணர்வின் அழிவு. நாளும் அசட்டு மேட்டிமையையும் சிறுமையையும் கக்கிக் கொண்டிருக்கும் சிலரைக் கொண்டு நான் அவர்களின் சமூகத்தை வகுப்பதில்லை. இஸ்லாமியர்களில் அடிப்படைவாதிகள் சிலரின் காழ்ப்பினால் இஸ்லாம் குறித்தும் எந்த எதிர்மறை எண்ணத்தையும் உருவாக்கிக்கொள்ளப் போவதில்லை.
ஏற்கனவே பலமுறை எழுதியதை மீண்டும் அப்படியே பதிகிறேன். இஸ்லாம் இந்தியப் பண்பாட்டின் ஒரு பகுதி. வரலாறு அப்படித்தான் உருவாகி வந்துள்ளது, எவரும் அதை மாற்ற முடியாது. இஸ்லாமியருக்கு இடமில்லாத அரசோ, அரசியலோ, இலக்கியமோ, தத்துவமோ இந்தியாவில் இருக்க முடியாது. எந்நிலையிலும் இஸ்லாமியருடன் இணைந்து மட்டுமே பிற இந்தியர் வாழமுடியும். அந்நல்லுறவே நம் பண்பாடாக இருக்கமுடியும்.
ஜெகதாநாயகி-2
அந்த நாவலை எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. அதன் தாள்களை புரட்டிக்கொண்டிருந்தேன். நான் வாழும் காலத்தில் இருந்து இருநூறாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வேரூன்றத் தொடங்கிய காலகட்டம். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் உலகை விழுங்கத் தொடங்கியிருந்தது. பிரிட்டிஷ் இலக்கியம் வலுவான தொடக்கத்தை அறிவித்துவிட்டிருந்தது.
நான் நிறைய வாசிப்பவன் அல்ல. கையில் கிடைத்ததை வாசிக்கும் வழக்கம் இருந்தது. நாகர்கோயில் முனிசிப்பல் நூலகத்திற்குச் சென்று அமர்ந்து அங்கே ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருப்பேன். அன்றெல்லாம் அங்கே பெரும்பாலான புத்தகங்கள் மிகப்பழையவை. நாகர்கோயிலில் இருந்த வெள்ளையர் கிளப்புகளிலும் மகாராஜாவின் சேமிப்பிலும் இருந்த நூல்களே மிகுதி. நான் அவற்றில் அலக்ஸாண்டர் டூமாவின் நாவல்களையும் வால்டர் ஸ்காட்டின் நாவல்களையும் வாசித்திருந்தேன்.
ஆனால் அவையெல்லாம் கற்பனையுலகை உருவாக்குபவை. அந்த நாவல் ஒருவகையான நாட்குறிப்பு போல தோன்றியது. அதை எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. அதில் நீளமான ஒரு முன்னுரை இருந்தது. ஏறத்தாழ அறுபது பக்கம் அளவுக்கு பெரிய முன்னுரை. ஒரு குட்டி நூலாகவே போடலாம். ஈஸ்டன் ஃபிளெச்சர் என்பவர் எழுதியது. அதை படிக்க ஆரம்பித்தேன். மிகச் சம்பிரதாயமான மொழியில் ஆசிரியையை அறிமுகம் செய்திருந்தார்.
ஃபேன்னி பர்னி என்னும் புனைபெயரில் நாவல்களை எழுதிய ஃப்ரான்ஸெஸ் பர்னி 1752ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி பிரிட்டனில் லின் ரெஜிஸ் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய தந்தை இசைக்கலைஞரான சார்ல்ஸ் பர்னி. தாய் எஸ்தர் ஸ்லீப்பி பர்னியின் ஆறுகுழந்தைகளில் மூன்றாமள் ஃப்ரான்ஸெஸ். சிறுவயதிலேயே கொஞ்சம் நுரையீரல் நோய் இருந்தமையால் அதிகம் வெளியே செல்லாமல் வீட்டிலேயே வாழ்ந்த ஃப்ரான்ஸெஸ் தனித்தவராகவும், சிடுசிடுப்பானவராகவும், கனவு காண்பவராகவும் இருந்தார். வீட்டிலேயே ஆசிரியர்களை வைத்து எழுத்துக்கல்வி அளிக்கப்பட்டது. பத்துவயதிலேயே கவிதைகளும் நாட்குறிப்புகளும் எழுத ஆரம்பித்தார்.
ஃப்ரான்ஸெஸ் பர்னியின் குடும்பமே முறையான கல்வியும் அறிவுத்தளச் செயல்பாடும் கொண்டதாக இருந்தது. அவருடைய அண்ணன் ஜேம்ஸ் பர்னி கடற்படைத் தளபதியாகி பசிபிக் தீவுப்பகுதிகளுக்கு கடல்வழி கண்டடைந்தவரான காப்டன் குக்கின் இரண்டு கடல்பயணங்களில் கப்பலை நடத்தினார். அவருடைய தம்பி சார்ல்ஸ் பர்னி முக்கியமான அறிஞர், ஆய்வாளர், நூல் சேகரிப்பாளர். அவருடைய நாளிதழ்ச் சேகரிப்பு பின்னால் பர்னி நூலடைவு என்ற பேரில் ஆய்வாளர் நடுவே புகழ்பெற்றது.
ஃப்ரான்ஸெஸ் பர்னியின் தங்கை சூசன்னா கடற்படைத் தளபதியான மோல்ஸ்வொர்த் பிலிப்ஸின் மனைவியானார். அவருடன் காப்டன் குக்கின் கடற்படையில் பயணம் செய்தார். லண்டனை உலுக்கிய கோர்டான் கலவரத்தைப் பற்றிய அவருடைய நேரடிப் பதிவுகள் முக்கியமான இலக்கிய ஆவணங்களாகக் கருதப்படுகின்றன. பிரிட்டிஷ் படையில் கத்தோலிக்கர்கள் இரண்டாம் தரமாக நடத்தப்படுவதற்கு எதிராக வெடித்த கலவரம் இது. இன்னொரு தங்கை சாரா ஹாரியட் பர்னியும் புகழ்பெற்ற நாவலாசிரியையாக மலர்ந்தார். சாரா ஏழுநாவல்களை வெளியிட்டிருக்கிறார்.
ஃப்ரான்ஸெஸ் இளமையில் நாடகங்களை எழுதி தன் இல்லத்திலேயே உடன்பிறந்தாருடன் இணைந்து நடித்தார். அவருடைய இல்லம் அவருடைய தந்தையின் நண்பர்கள் ஒவ்வொரு நாளும் வந்துகூடும் இடமாக இருந்தது. அந்த சூழல் சிறுமியான ஃப்ரான்ஸெஸுக்கு வீட்டுக்குள் உலகைக் கொண்டுவந்து காட்டியது. பிற்காலத்தில் அதை அவர் விரிவாக எழுதியிருக்கிறார். “மது, உணவு, மகிழ்ச்சிச் சிரிப்புகள், நடனங்கள், ஆழ்ந்த உரையாடல்கள், இரவெல்லாம் நீளும் இசை. என் இளமையில் நான் வாழ்க்கையின் சாரமாகக் கண்டதே அவற்றையெல்லாம்தான். ஆனால் வளரவளர அவர்கள் ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்தார்கள் என்று உணர்ந்தேன். அந்த நடிப்பை சிறுமியாகிய நான் கூர்ந்து நோக்கி அறிந்திருப்பதையும் உணர்ந்தேன்”
ஃப்ரான்ஸெஸ் குடும்பத்திற்குள் கொந்தளிப்புகளும் கசப்புகளும் இருந்தன. அத்தகைய குடும்பங்களுக்குள் அவ்வாறு இல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம். ஏனென்றால் அவை பெரிய குடும்பங்கள். பெரும்பாலான நேரம் உறுப்பினர்கள் வரவேற்பறை, உணவறை, தோட்டம் என்று அங்கேயே சுற்றிச்சுற்றி வாழ்ந்தனர். பெரும்பாலும் அனைவருமே கடும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை கொண்டவர்கள். “மனிதர்கள் நிறைய உரையாடிக்கொண்டால் பூசல்களே எழும். கசப்புகளே பெருகும். பேசப்பேச மனிதர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாதவர்கள் ஆகிறார்கள். ஏனென்றால் பேச்சு என்பது நாம் நம்மை காட்டிக்கொள்வது. நம்மை நாம் புனைந்துகொள்வது. நமக்கு சுற்றும் நாம் அமைக்கும் வேலி அது” என்று பின்னர் ஃப்ரான்ஸெஸ் எழுதினார்.
ஃப்ரான்ஸெஸின் அம்மா பிரிட்டனுக்கு அகதியாக குடிபெயர்ந்த ஒரு பிரெஞ்சுக்காரரின் மகள். ஆகவே அவருக்கு கணவன் இல்லத்தில் ஒரு சிறுமை இருந்தது. விருந்துகளில் எப்போதும் அது வெளிப்பட்டது. பேச்சினூடாக பிரான்ஸ் நாட்டை வம்புக்கிழுப்பது, மட்டம் தட்டுவது, அதைவிட மோசமாக போலியான அனுதாபம் காட்டுவது அன்றைய பிரிட்டிஷாரின் இயல்பு. ஒவ்வொரு சொல்லும் எஸ்தரை விஷமுள்ளாக சென்று தைத்தது. ஆகவே அவர் நரம்புத்தளர்ச்சி கொண்டவராகவும் தனிமையில் அழுபவராகவும் இருந்தார். தன் குழந்தைகளில் எஸ்தர் ஃப்ரான்ஸெஸ்ஸிடம் மட்டுமே அணுக்கம் கொண்டிருந்தார். அதற்குக் காரணம் அவருடைய பெயர்.
1760ல் ஃப்ரான்ஸெஸின் தந்தை லண்டனுக்கு குடிபெயர்ந்தார். லண்டனுக்குச் செல்வதில் அவர் அன்னை எஸ்தருக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. லண்டனின் உயர்குடி மிதப்பு கொண்ட சூழலில் தனக்கு மேலும் அவமதிப்புகள் இருக்குமென அவர் நினைத்தார். ஆனால் சார்ல்ஸ் பர்னி அதை பொருட்படுத்தவில்லை. லண்டனில் அவருக்கு பெரிய கனவுகள் இருந்தன. அவர் உள்ளூர் வீட்டையும் சொத்துக்களையும் விற்றுவிட்டு லண்டனில் உயர்குடிகள் ஸோகோ பகுதியில் போலந்து தெருவில் ஒரு பெரிய மாளிகையை விலைக்கு வாங்கி அங்கே குடிபோனார்.
சார்ல்ஸ் பர்னி லண்டனில் உயர்குடி நட்புவட்டத்தை உருவாக்கும் பொருட்டு தொடர்ச்சியாக விருந்துகளை அளித்தார். நாளடைவில் பெருங்கடனாளியானார். ஆகவே சிடுசிடுப்பும் கசப்பும் கொண்டவராக ஆகி மனைவியை சித்திரவதை செய்தார். எஸ்தர் ஏற்கனவே லண்டனின் மேனாமினுக்கிச் சீமாட்டிகளால் நையாண்டியும் நக்கலும் செய்யப்பட்டு ஆத்மா குதறப்பட்டிருந்தார். அவர் அபின் உண்ணத் தொடங்கினார். மூச்சிளைப்பு நோய்க்கு அபின் சிறந்த மருந்தாக அன்றைக்குக் கருதப்பட்டது.
மிகச்சீக்கிரத்திலேயே அழகியும் நாசூக்கானவளும் பிரெஞ்சு, லத்தீன் மொழிகளில் கல்விகொண்டவளும் இசைக்கலைஞருமான எஸ்தர் பர்னி கண்கள் பழுத்து, முகம் வரண்டு, உதடுகள் வெடித்து கிழவியாக ஆனாள். அதோடு சார்ல்ஸ் பர்னி அவளை முழுக்க தவிர்க்கலானார். கடன்காரராக ஆகி நாலாபுறமும் நெருக்கப்பட்ட அவர் ஒரு விதவையின் காதலராக மாறினார். ஓர் ஒயின் வணிகரின் மனைவியாக இருந்த எலிசபெத் ஆலன் மிகப்பெரிய கோடீஸ்வரி. ஆனால் குலப்பெருமை இல்லாதவள். நாகரீகமும், உயர்குடிப் பழக்கமும் அவளுக்கு இல்லை. அவள் லண்டனில் தனக்கான இடத்தை தேடிக்கொண்டிருந்தாள். அவள் சார்ல்ஸ் பர்னியை கவ்விக்கொண்டாள்.
லண்டன் வந்த இரண்டு ஆண்டுகளில் எஸ்தர் மறைந்தார். ஐந்தாண்டுகள் சார்ல்ஸ் பர்னி தடித்த புஜங்களும், பெரிய முலைகளும், தொங்கும் தாடைகளும், களைத்து தழைந்த கண்களும், கமறிக் கமறிப்பேசும் குரலும், எப்போதும் அதிருப்தி தெரியும் முகபாவனையும் கொண்டவளான எலிசபெத்தின் காதலனாக நீடித்தார். எலிசபெத் கருவுற்றதும் அவள் சார்ல்ஸ் பர்னி தன்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினாள். தன்னுடன் தன் மாளிகைக்கே வந்துவிடவேண்டும் என்று அவள் ஆணையிட்டாள். வேறுவழியில்லாமல் 1767ல் சார்ன்ஸ் பர்னி தன் குடும்பத்தை கைவிட்டு இரண்டாம் மனைவியுடன் சென்று குடியேறினார்.
அப்போது ஃப்ரான்ஸெஸ்ஸுக்கு பதினைந்து வயது. தன் பெரிய மாளிகையில் அவர் உடன்பிறந்தவர்களும் இரண்டு செவிலிகளுமாக குடியேறினார். தந்தை அவ்வப்போது அளிக்கும் சிறிய தொகைகள் மட்டுமே வருமானம். குடும்ப நண்பர்கள் சிறிய தொகைகளை அவ்வப்போது அளித்தார்கள். லண்டனின் உயர்நடுத்தர வாழ்க்கையை வேறுவழியில்லாமல் தொடரவேண்டியிருந்தது.
இந்தக் காலகட்டத்தைப் பற்றி ஃப்ரான்ஸெஸ் எழுதிய குறிப்புகள் இன்று கிடைப்பதில்லை. ஆனால் மிகச்சிக்கலான ஒரு விஷயம் ஆய்வாளர்களால் சில குறிப்புகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃப்ரான்ஸெஸ்யின் மூத்த அண்ணனாகிய ஜேம்ஸ் பர்னி தன் சகோதரியான சாராவுடன் பாலுறவு கொண்டிருந்தான். அதை ஃப்ரான்ஸெஸ் பார்த்து கண்டித்தமையால் அவர்கள் இருவரும் ஃப்ரான்ஸெஸ்ஸை மனநோயாளியாகச் சித்தரித்தார்கள். அது ஃப்ரான்ஸெஸ்ஸை மேலும் கொந்தளிக்கச் செய்து மனநோயின் விளிம்புக்கே தள்ளியது. வசைகளையும் ஆபாசமான சொற்களையும்கூட ஃப்ரான்ஸெஸ் எழுதியிருக்கிறார்.
ஆனால் குடும்ப நண்பர்களின் உதவியுடன் ஜேம்ஸ் பர்னி கடற்படைப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். அவர் கடற்படை அதிகாரியாக ஆவது வரை குடும்பத்தில் வெளியே தெரியாத வறுமை நீடித்தது. ஜேம்ஸுக்கு சாராவுடனான தகாத உறவும் முடிவுக்கு வந்தது என்று ஃப்ரான்ஸெஸ் பதிவுசெய்கிறார். ஆனால் ஃப்ரான்ஸெஸ் வாழ்நாள் இறுதிவரை சாராவுடன் நெருக்கமாக இருந்தார். இறுதிக்காலத்தில் பணவுதவி செய்தார். அந்த அணுக்கம் ஏன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
சார்ல்ஸ் பார்னி குடும்பத்தை கைவிட்டபின் ஜேம்ஸ் கடற்படை அதிகாரியாக ஆவது வரைக்குமான காலகட்டம் ஃப்ரான்ஸெஸ் பர்னியின் வாழ்க்கையில் மிக மிக கடுமையானது. அன்றைய பிரிட்டிஷ் பிரபு குடும்பங்களில் பெண்கள் சீராட்டப்பட்டார்கள் என்னும் தோற்றம் இருக்கும். ஆனால் அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் என்பதே இல்லை. தந்தை வழிச் சொத்து கொண்ட பெண்கள் அனைத்து கொண்டாட்டங்களையும் அடைந்தனர். மற்றபெண்கள் எவரேனும் ஆண்களைச் சார்ந்தே வாழவேண்டியிருந்தது. ஃப்ரான்ஸெஸ்ஸின் உள்ளம் கசப்பு நிறைந்ததாக ஆகியது. அவர் எழுத்தில் கடைசிவரை இருந்த கேலியும் நையாண்டியும் இந்தப் பருவத்தில் எழுந்ததே.
ஃப்ரான்ஸெஸ்யின் குடும்ப நண்பர்களில் முதன்மையானவர் சாமுவேல் கிரிஸ்ப் [Samuel Crisp]. பயணியும் எழுத்தாளருமான அவர் ‘அப்பா கிரிஸ்ப்’ என்றுதான் ஃப்ரான்ஸெஸ்ஸின் அக்காலத்தைய எல்லா டைரிக்குறிப்புகளிலும் தென்படுகிறார். சாமுவேல் கிரிஸ்பை தவிர்த்து ஃப்ரான்ஸெஸ்ஸின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வது கடினம்.
1707ல் பிறந்த சாமுவேல் கிரிஸ்ப் ஆரம்பகால பிரிட்டிஷ் நாடகாசிரியர்களில் ஒருவர். புகழ்பெற்ற இறையியலாளரான தோபியாஸ் கிரிஸ்பின் பேரன் அவர். கிரிஸ்ப் அலைபாயும் ஆர்வம் கொண்டவர். இத்தாலிக்கு இசை பயிலச் சென்றார். கொஞ்சகாலம் பிரான்ஸில் ஓவியமும் பயின்றார். 1740ல் லண்டன் திரும்பி அங்குள்ள உயர்குடிச்சூழலில் புழங்குபவராக ஆனார். அலைபாயும் ஆர்வங்கள் கொண்டவர்கள் பொதுவாக நல்ல உரையாடல்காரர்கள். அவர்களால் எதையும் வித்தாரமாகப் பேசி அனைவரையும் கவர முடியும்.
கிரிஸ்ப் விர்ஜீனியா என்னும் நாடகத்தை எழுதினார். ரோமப்பேரரசின் காலத்தைச் சேர்ந்த ’ஆப்பியஸும் விர்ஜீனியாவும்’ என்ற கதை அக்காலத்தில் பலராலும் எழுதப்பட்டு நடிக்கப்பட்டது. அதை புதிய கோணத்தில் எழுதுவதாக எண்ணி அன்றைய அரசசபை அரசியலை எல்லாம் சேர்த்து இழுத்து நீட்டி எழுதப்பட்ட கிரிஸ்பின் விர்ஜீனியா நாடகம் காவெண்டரி சீமாட்டியின் நிதியுதவியுடன் லண்டனின் ட்ரூரி லேன் ராயல் தியேட்டரில் அரங்கேறியது. வெறும் பதினான்கு காட்சிகளே நடிக்கப்பட்டது. கடைசிநாட்களில் கேலிசெய்வதற்காக வந்தவர்களே அரங்கில் இருந்தனர்.
ஆனால் கிரிஸ்ப் அது ஒரு கிளாஸிக் என்று நம்பி திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருந்தார். அது ஒருநாள் அங்கீகாரம் பெறும் என நம்பினார். அந்த பிடிவாதத்தால் அவர் வேறெதையும் எழுதவில்லை. தன் நாடகத்தை அவர் நூலாக வெளியிட்டார். வாசித்த அத்தனைபேராலும் அது வசைபாடப்பட்டு எள்ளிநகையாடப்பட்டது. அவர் ’விர்ஜின் கிரிஸ்ப்’ என்று லண்டன் சூழலில் நையாண்டி செய்யப்பட்டார். அதற்கு மோசமான உள்ளர்த்தமும் இருந்தது. அது அவரை மேலும் இறுக்கமானவராகவும், கசப்பானவராகவும் ஆக்கியது. அவர் மனிதகுலத்தையே ஒட்டுமொத்தமாக வெறுத்தார்.
கிரிஸ்ப் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடைய உறவுகளின் ரேகைகளை பின்னர் வந்த வரலாற்றாசிரியர்கள் பூடகமாகவே எழுதியிருக்கிறார்கள். கிறிஸ்டோபர் ஹாமில்டன் என்னும் நண்பருடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது. ஹாமில்டனின் சகோதரியும் திருமணமாகாதவருமான சாராவுடனும் உறவிருந்தது.
சார்ல்ஸ் பர்னி குடும்பத்தை கைவிட்டுவிட்டுச் சென்ற எட்டு ஆண்டுகளில் கிரிஸ்ப் ஒவ்வொருநாளும் ஃப்ரான்ஸெஸ்யின் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். பல நாட்கள் அங்கேயே அவர் தங்கியிருந்தார். ஃப்ரான்ஸெஸ்ஸின் மொழிநடையிலும் உலகப்பார்வையிலும் கிரிஸ்ப் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தினார். 1773ல் சார்ல்ஸ் பர்னி தன் குடும்பங்களை இணைத்தார். அவர்கள் வெஸ்ட்மினிஸ்டரில் இருந்த செயிண்ட் மார்ட்டின்ஸ் ஸ்ட்ரீட்டுக்கு குடிபோனார்கள். அந்த வீட்டில்தான் முன்பு சர் ஐசக் நியூட்டன் வாழ்ந்தார்.
சார்ல்ஸ் பர்னி குடும்பத்துக்குத் திரும்பி வந்ததும் கிரிஸ்ப் தன் நண்பர் கிறிஸ்டோபருடன் லண்டனுக்கு வெளியே இருந்த செஸ்ஸிங்டன் என்னும் சிற்றூரில் குடியேறினார். அதன்பின் அவருக்கும் ஃப்ரான்ஸெஸ்ஸுக்கும் பெரிய தொடர்பேதும் இருக்கவில்லை. கிறிஸ்டோபரின் மரணத்துக்குப்பின் அந்த வீட்டில் சாராவும் அவரும் குடியிருந்தார்கள். கிரிஸ்ப் 1783ல், தன் 76 ஆவது வயதில் மறைந்தார்.
சார்ல்ஸ் பர்னிக்கு தன் மகள்களான எஸ்தர், சூசன்னா இருவருமே சூட்டிகைகள் என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் இருவரையும் பாரீசுக்கு அனுப்பி கல்வி கற்கச்செய்தார். கற்றல்குறைபாடும் நரம்புச்சிக்கலும் கொண்டிருந்த ஃப்ரான்ஸெஸ் வீட்டிலேயே தங்கி கல்விகற்றார். சார்ல்ஸ் பர்னியின் இல்லத்திலேயே ஒரு மிகச்சிறந்த நூலகம் இருந்தது. ஃப்ரான்ஸெஸ்ஸும் அவள் தம்பி சார்ல்ஸும் அங்கே ஒருநாளில் பல மணிநேரம் வாசித்துக்கொண்டிருந்தார்கள்.
ஃப்ரான்ஸெஸ் பர்னி தன்னிச்சையாக உருவாக்கிக்கொண்ட எழுத்துமுறை அக்காலத்து பிரிட்டிஷ் இலக்கியத்தின் தனித்தன்மை கொண்ட வடிவங்களில் ஒன்றின் முன்னோடியாக அவரை ஆக்கியது. இளமையிலேயே ஒவ்வொரு நாளும் தான் கண்டதையும் கேட்டதையும் சிந்தித்ததையும் டைரிகளாக எழுதிவைக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது. அந்த டைரிகள் பெரும்பாலும் அப்பா கிரிஸ்ப் அவர்களுக்கு எழுதப்பட்டவை. அவர் அவற்றை படித்து திருத்தங்களும் மதிப்புரைக்குறிப்புகளும் எழுதினார்.
பின்னர் அதையே ஃப்ரான்ஸெஸ் ஒர் எழுத்துவகையாக மாற்றிக்கொண்டார். இந்த நாட்குறிப்புகள் உண்மையான செய்திகளில் இருந்து வாசித்தவை, கற்பனை செய்தவை என விரிந்தன. நவீன இலக்கியப்புனைவின் முதல்வடிவங்களாக ஆயின. இன்றைய நாவல் எழுத்துமுறையே இந்த வகையான நாட்குறிப்பு எழுத்தில் இருந்துதான் தொடங்கியது. பிற்காலத்தைய பல நாவல்கள் நாட்குறிப்பு, தன்னொப்புதல் பாணி கொண்டவை. குறிப்பாகப் பெண்கள் எழுதியவை. தன்னிலையுரைக் கதாபாத்திரச் சித்தரிப்பே இன்றும் இலக்கியத்தின் மையநெறியாக உள்ளது.
ஃப்ரான்ஸெஸ் பர்னியின் நாட்குறிப்புகள் பின்னர் நூல்களாக பிரசுரமாகி இலக்கிய அந்தஸ்து பெற்றன. நமக்குக் கிடைக்கும் முதல் நாட்குறிப்பு 1768 மார்ச் 27ஆம் தேதி தொடங்குகிறது. அது ‘Nobody’ [யாருக்குமில்லை] என்று உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிறைய குறிப்புகளில் கிரிஸ்ப் தன்னை ’நோபடி’ என்றே கையெழுத்து போட்டிருக்கிறார். முதலில் குடும்ப உறுப்பினர் நடுவே சுற்றிவந்த இக்குறிப்புகளை கிரிஸ்ப் வெளியே கொண்டு சென்றார். லண்டன் உயர்குடிகளின் விருந்துகளில் இவை வாசிக்கப்பட்டன. ஃப்ரான்ஸெஸ் தன் தங்கை சூசன்னாவுக்கு நாட்குறிப்புகளை நகலெடுத்து கடிதங்களாகவும் அனுப்பிக் கொண்டிருந்தார்.
சார்ல்ஸ் பர்னி குடும்பத்தை விட்டு போய் எலிசபெத் ஆலனை திருமணம் செய்துகொண்டபோது ஃப்ரான்ஸெஸ் கொந்தளிப்புடனும் கசப்புடனும் எழுதியிருக்கிறார். முதலில் எழுதியவற்றை எரித்துவிட்டு கொஞ்சம் நிதானத்துடன் மீண்டும் எழுதியிருக்கிறார். உண்மையில் அவருடைய எந்த நாட்குறிப்பும் நேரடியானது அல்ல. பலமுறை திருப்பி எழுதப்பட்டவை அவை. ஆகவே அவற்றை நாட்குறிப்புகள் என்றே சொல்லமுடியாது. அவை ஒருவகையான இலக்கியப் பதிவுகளே. வடிவப்பிரக்ஞையும் வாசகர்கள் பற்றிய உணர்வும் கொண்டவை.
இந்தக் காலகட்டத்தில் தன்னை சீமாட்டிக்குரிய மாண்புகள் அற்றவளாக, கீழ்மையான பெண்ணாக உணர்ந்ததாக எழுதுகிறார். ‘என் மொழி இத்தனை கீழ்மையை அடைய முடியுமா?’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘எழுதப்பட்ட ஒரு காகிதத்தை எரிக்கும்போது என்னில் ஒரு பகுதியை பொசுக்குகிறேன். அதன் வழியாக விடுதலையை அடைகிறேன்‘ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ’எரியும் காகிதம் மாமிசம் பொசுங்கும் வாசனையை வெளியிடவேண்டும் என்றால் அதில் நீங்கள் ரத்தத்தால் எழுதவேண்டும். அல்லது மலத்தால் எழுதவேண்டும். கண்ணீரை தீ அறியாது, அது வெறும் உப்பு.’
இக்காலகட்டத்தில் ஃப்ரான்ஸெஸ் எழுதியவற்றில் பெரும்பகுதி அவரால் எரித்து அழிக்கப்பட்டது. மிகச்சில பகுதிகள் ஃப்ரான்ஸெஸ்ஸின் தங்கைக்கு அனுப்பப்பட்ட கடிதங்களாகவும், கிரிஸ்பின் சேகரிப்பிலும் இருந்து பின்னாளைய தொகுப்பாளர்களால் கண்டடையப்பட்டன. அவற்றை எங்கு பொருத்தி அர்த்தம் கொள்வதென்பது பெரிய சிக்கல்தான்.
ஒருகட்டத்தில் நாட்குறிப்புகளில் தன்னால் பொய்களையே எழுதமுடிகிறது என்று ஃப்ரான்ஸெஸ் கண்டுகொள்கிறார். புனைவுக் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கினால் அந்த கதாபாத்திரத்தின் வாழ்வாக உண்மையைச் சொல்லமுடியும் என்று எண்ணுகிறார். “நாட்குறிப்பில் புனைவும் புனைவில் நாட்குறிப்பும் உள்ளன. உண்மை என்று பொய்யையே நம்மால் சொல்ல முடியும். பொய் என்று சொல்லிவிட்டால் எந்த உண்மையையும் சொல்லிவிட முடியும்” என்கிறார்.
அவ்வாறுதான் கரோலின் ஈவ்லின் என்னும் கதாபாத்திரத்தை ஃப்ரான்ஸெஸ் உருவாக்கினார். கரோலினின் நாட்குறிப்புகளை முதலில் எழுதினார். கரோலின் ஈவ்லினின் மகள் ஈவ்லினாவின் வாழ்க்கையை பின்னர் எழுதலானார். அவளே ஈவ்லினா என்னும் முதல்நாவலின் கதைநாயகியாக உருவானாள். ஃபேன்னி பர்னி என்ற புனைபேரில் அவர் நாவல்களை எழுதி வெளியிட்டார்.
ஃபேன்னி என்ற பெயரை ஏன் ஃப்ரான்ஸெஸ் தேர்வுசெய்தார் என்பதும் முக்கியமானது. ஆங்கில இலக்கியத்தில் Memoirs of a Woman of Pleasure என்ற புனைகதை புகழ்பெற்றது. அது ஒரு பாலியல் படைப்பு. தன்கூற்றுத் தன்மை கொண்டது. அது அதன் கதாநாயகியான ஃபேன்னி ஹில் [ Fanny Hill ] பெயரில் பரவலாக அறியப்பட்டது. ஜான் க்ளீலேண்ட் [John Cleland] என்னும் ஆசிரியர் கடனாளிகளுக்கான சிறையில் இருந்தபோது பணத்துக்காக அதை வேறொரு பெயரில் எழுதினார்.
1748ல் லண்டனில் வெளியான இந்நூல் இன்றுவரை பாலியல் நூல்களுக்கு அழகியல் முன்னோடியாக உள்ளது. இதில் கெட்டவார்த்தைகளோ, உடலுறுப்புகளுக்கான வார்த்தைகளோ பயன்படுத்தபடவில்லை. மாறாக மறைச்சொற்கள் உருவகச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடியுதடு [nethermouth] என்று பெண்குறி சொல்லப்பட்டது. பார்க்காத கண் என்றும் வர்ணிக்கப்பட்டது.
‘பெண்குறியை கீழ்வாய் என்று சொல்வது ஒர் அரிய ரகசியத்தை கண்டறிந்து சொல்வதுபோல எனக்கு அன்று தோன்றியது. அது பேசிக்கொண்டிருக்கிறது. முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. உதடுகளை இறுகமூடிக்கொண்டிருக்கையில் அது வன்மமும் கசப்பும் நிறைந்ததாக இருக்கிறது. அது உண்பதையும் உமிழ்வதையுமே உலகம் அறிந்திருக்கிறது. நான் ஃபேன்னி ஹில்லாக என்னை உணர்ந்ததுண்டு.’
ஃபேன்னி ஹில் அன்றைய பிரிட்டிஷ் சீமான்களின் அவையில் பேசப்பட்ட, இல்லத்தில் வைக்கப்பட்ட நூல் அல்ல. ஆனால் இளமையில் அந்நூலை பைபிளைப்போல மீண்டும் மீண்டும் வாசித்ததாக ஃப்ரான்ஸெஸ் குறிப்பிடுகிறார். அந்நூல் போல மொழியின் அழகையும் சாத்தியங்களையும் தனக்கு காட்டிய இன்னொரு இலக்கியப் படைப்பே இல்லை என்கிறார். பிரிட்டானிய இலக்கியத்தின் உச்சம் என்றே சொல்கிறார். அதை அவருக்கு கிரிஸ்ப் கொண்டுவந்து கொடுத்தார் என்று ஊகிக்கவேண்டியிருக்கிறது.
ஃப்ரான்ஸெஸ் நெடுங்காலம் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமண வாழ்க்கைமேல் அவருக்கு கசப்பு இருந்தது. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர்களில் பலர் திருமண வாழ்க்கையை வெறுத்தவர்கள். மேரி கெரெல்லி, ஜார்ஜ் எலியட் என்று பல உதாரணங்களைச் சொல்லமுடியும். அவர்களெல்லாம் கொஞ்சம் கிறுக்குகளுக்கூட ‘திருமணத்தை ஏன் வெறுத்தேன் என்று தெரியவில்லை. ஆனால் அது ஓர் அருவருப்பான விவகாரம் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது’ என்கிறார் ஃப்ரான்ஸெஸ். ‘ஆனால் நான் திருமணத்தை விதவிதமாகக் கற்பனை செய்துகொண்டும் இருந்தேன். அதுதான் என் அந்தரங்கப் பகற்கனவு.’
ஃப்ரான்ஸெஸ்ஸுக்கு கிடைத்த முதல் திருமணத்திற்கான கோரிக்கை அவருடைய இருபத்து மூன்றாம் வயதில் தாமஸ் பார்லோ என்பவரிடமிருந்து. குரூரமான ஒரு விளையாட்டாக ஃப்ரான்ஸெஸ் அதை ஆக்கிக் கொண்டார். அவருடைய கோரிக்கையை மறுக்கவில்லை, ஏற்கக்கூடும் என்று காட்டிக்கொண்டார், அவர் தனக்காக ஏங்கி பித்துப்பிடித்து அலையச் செய்தார். அவரை முடிந்தவரை கீழ்மைப்படுத்தி லண்டன் வட்டாரத்தில் கேலிக்குரியவராக ஆக்கி கடைசியாக அவரை நிராகரித்தார்.
தாமஸ் பார்லோ தன் வாய்க்குள் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளும் எல்லை வரைக்கும் சென்றபின் விலகிச் சென்றார். ஸ்காட்லாந்துக்கு ஓடிய அவருக்கு கடிதமெழுதி மீண்டும் வரவழைத்தார் ஃப்ரான்ஸெஸ். பலமுறை அவர் விலகிச் சென்றபோது ஃப்ரான்ஸெஸ் அவரை விடவில்லை. துரத்திச்சென்று மீண்டும் அழைத்து, மீண்டும் நம்பிக்கை அளித்து, மீண்டும் நிராகரித்தார்.
இத்தனைக்கும் ஃப்ரான்ஸெஸ் அழகியோ செல்வச்செழிப்பு கொண்டவரோ அல்ல. தாமஸ் பார்லோ அன்று வணிகத்தில் மேலேறி வந்துகொண்டிருந்தவர். தாமஸ் பார்லோ ஃப்ரான்ஸெஸ்ஸின் இலக்கியத்திறமையினாலேயே கவரப்பட்டவர். அவருடைய இலக்கியச்சிறப்பு தனக்கு லண்டன் உயர்வட்டாரத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என ஒருவேளை நம்பியிருக்கலாம். ஆனால் ஃப்ரான்ஸெஸ் அதை முற்றிலும் வேறுவகையில் தன் நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்
1782ல் ஃப்ரான்ஸெஸ்ஸின் முதல் நாவல் Evelina or the History of a Young Lady’s Entrance into the World வெளியாகி அவருக்கு புகழ்சேர்த்தது. லண்டன் வட்டாரங்களில் அறியப்பட்ட ஆளுமையாக மாறினார். 1781ல் சாமுவேல் கிரிஸ்ப் இறந்தார். அதன்பின்னரே ஃப்ரான்ஸெஸ் திருமணம் செய்யும் எண்ணத்தை அடைந்தார். தன் முப்பத்து மூன்றாவது வயதில் அவர் பாதிரியான ஜார்ஜ் ஓவென் கேம்பிரிட்ஜ் என்பவரிடம் காதல் கொண்டார். ஆனால் ஃப்ரான்ஸெஸ்ஸின் கிறுக்குத்தனங்களை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அந்த உறவு முறிந்தது.
ஒரு பாதிரியாரை ஏன் காதலித்தேன்? நான் அவரிடம் பாவமன்னிப்பு கேட்க விரும்பினேன். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் பாவமன்னிப்பு கேட்டேன். அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து அவர் கைகளை முத்தமிட்டுவிட்டு அப்போது தோன்றும் பாவங்களை சொல்ல ஆரம்பிப்பேன். கொடியவை, கேட்பவரைக் கூசிச் சுருங்க வைப்பவை, நாற்றமெடுப்பவை. அவருடைய கால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை காண்பேன். அவர் பாவமன்னிப்பு அளித்தபின் தளர்ந்து நாற்காலியில் அமர்ந்துவிடுவார்.
1785ல் மேரி கிரான்வில் டெலானி என்னும் சீமாட்டியின் உறவு ஃப்ரான்ஸெஸ்க்கு உருவானது. அவர் லண்டன் அரசகுடியுடன் தொடர்புடையவர். அவர் வழியாக பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் ஜார்ஜுக்கும் அரசி சார்லட்டுக்கும் நெருக்கமானவராக ஆனார். அரசி அவளுக்கு ‘அரசியின் ஆடை காப்பாளர்’ என்னும் பதவியை அளித்தார்.
அது ஒரு கௌரவப்பதவி. நம்மூர் அடைப்பக்காரர் மாதிரி. அரச சபையில் அரசி அணியும் நீண்ட அங்கியின் முனையை பிடித்துக்கொள்ள வேண்டும். அது சடங்கு சார்ந்த வேலை. மற்றபடி அரசியின் சந்திப்புகளை ஒருங்கமைத்தல், அரசியின் விருந்தினர்களை உபசரித்தல், அரசிக்கான உரைகளை எழுதி அளித்தல் ஆகியவைதான் அன்றாடவேலைகள். ஆண்டுக்கு இருநூறு பவுண்ட் ஊதியம்.
அந்த வேலை தன் தனிமையை அழிக்குமோ என்று ஃப்ரான்ஸெஸ் அஞ்சினார். ஆனால் அன்று அந்த தொகை பெரியது. ஆகவே வேலையை ஒப்புக்கொண்டார். அரசவை வாழ்க்கை முசுட்டுத்தனமும் நக்கலும் கொண்ட ஃப்ரான்ஸெஸ்ஸுக்கு கடினமானதாகவே இருந்தது. அதேசமயம் அவர் மிக தந்திரமானவர். ஆகவே அரசியுடன் மிக அணுக்கமான நட்பை பேணிக்கொண்டார்.
ஃப்ரான்ஸெஸ் அரசவையிலும் தொடர்ந்து நாட்குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்தார். அவற்றை சூசன்னாவுக்கும் பிற தோழர்களுக்கும் அனுப்பினார். அவற்றில் முக்கியமான அரசவை நிகழ்வுகளை விவரித்திருக்கிறார். இந்தியாவின் வைஸ்ராய் ஆக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு மீது முன்வைக்கப்பட்ட ஊழல், அத்துமீறல் குற்றங்களைப் பற்றிய விசாரணைகளை விரிவாக பதிவுசெய்திருக்கிறார். அந்தக் குறிப்புகளில்தான் புகழ்பெற்ற பேச்சாளரான எட்மண்ட் பர்க் ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற பொதுத்தலைப்பில் ஆற்றிய ஆற்றல்மிக்க உரைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இக்காலகட்டத்தில் ஃப்ரான்ஸெஸ் யாராவது ஒரு பிரபுவை மணந்துகொள்ள விரும்பி தீவிரமாக முயன்றார். கர்னல் ஸ்டீபன் டிக்பி என்பவருடன் அணுக்கமான உறவு இருந்தது. ஆனால் அவர் இன்னொரு பணக்காரப் பெண்ணை மணந்துகொண்டார். அது ஃப்ரான்ஸெஸ்ஸின் கசப்பை கூட்டியது. அக்கால நாட்குறிப்புகளிலும் புனைகதைகளிலும் அதை நையாண்டியாகக் கொட்டி வைத்திருக்கிறார்.
“அவருடைய ஆணவம் அவருக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு பெண்ணிடம் மட்டுமே பாலுறவு கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்கியது. பாலுறவுக்கு முன் நீண்ட, கண்ணீர் மல்கும் உரையாடலும், நெகிழ்வும், அணைப்பும், நாடகீய வசனங்களும் தேவை அவருக்கு. அவற்றை நான் அவருக்கு அளித்தேன். மனிதர்களால் பொய்களின் மேல் படுத்துத்தான் உடலுறவு கொள்ளமுடியும் என அறிந்திருந்தேன். ஆட்டுக்குடலால் ஆன ஆணுறையை அவரே கொண்டுவருவார். அவரே தன்னை அப்படி ஓர் ஆணுறைக்குள் வைத்திருந்தார்.
ஆனால் மனிதர்கள் பொய்யில் மூழ்கி மூழ்கிச்சென்று உண்மையில் அறைந்து நின்றுவிடுகிறார்கள். அவர் சென்று முட்டியது பணத்தில். உண்மையில் அத்தனை ஆண்களும் சென்று நிற்பது அங்கேதான். அதுதான் உண்மை என அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால் அவர்களின் உலகம் வெளியே இருக்கிறது. பணத்தாலான உலகில். பெண்களைப்போல உள்ளறைகளின் இருட்டில் அவர்கள் வாழ்வதில்லை. அந்த அப்பட்டத்தை தாளமுடியாமல் அவர்கள் நடிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பாவம் ஸ்டீவ். அவர் அந்தப் பணக்கார விதவையின் காலடியில் அமர்ந்திருப்பதை கற்பனை செய்கிறேன். காலடிநாய்தான். கழுத்தில் தோல்பட்டை உண்டுதான். ஆனால் தலையை நிமிர்த்தி தாடையை சற்றே தூக்கி கம்பீரமாக, ஆண்மையுடன் அவர் அமர்ந்திருப்பார். அதில் இழிவும் இல்லை. ஏனென்றால் இங்கே பெரும்பாலான ஆண்களின் வாழ்க்கை அதுதான்.”
இக்காலகட்டத்தில் ஃப்ரான்ஸெஸ் தன் அன்னையைப் போலவே அபினை மிதமிஞ்சி சாப்பிட ஆரம்பித்தார். வேலையை துறந்து தன் தந்தையின் இல்லத்துக்கே வந்தார். அங்கே அரசி அளித்த நூறு பவுண்ட் ஆண்டு ஓய்வூதியத்துடன் வாழ்ந்தார்.
1790 முதல் ஃப்ரான்ஸெஸ் நாடகங்களை எழுதலானார். நான்கு செய்யுள் நாடகங்களை எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு நாடகமே நடிக்கப்பட்டது. அது படுதோல்வி அடைந்தது. சோர்வும் தனிமையுமாக தன் தந்தையின் இல்லத்தில் வாழ்ந்த ஃப்ரான்ஸெஸ்ஸுக்கு ஊக்கம் அளித்தது 1789ல் நடந்த பிரெஞ்சுப்புரட்சி பற்றிய செய்திகள். தாய்வழியில் பிரெஞ்சு வேர்கள் கொண்டிருந்த ஃப்ரான்ஸெஸ் பிரெஞ்சுப்புரட்சியின் ஆதரவாளராக ஆனார்.
பிரெஞ்சுப்புரட்சி வீழ்ந்த பின் அதன் ஆதரவாளர்கள் பலர் லண்டனில் அடைக்கலம் புகுந்தனர். அவர்களில் பல தரப்பினர் இருந்தனர். அரசியல் விடுதலை, சமூகசமத்துவம், ஜனநாயக அரசு போன்ற புதிய கருத்துக்களால் ஊக்கம் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அன்று லண்டனில் தங்களை கற்றவர்கள் என காட்டிக்கொள்ள விரும்பிய பிரபுக்களின் சபைகளில் ஒரு வரவேற்பு இருந்தது.
லண்டனில் ஜுனுப்பர் ஹால் என்னுமிடத்தில் அவர்களின் கூட்டுத்தங்குமிடம் ஒன்று இருந்தது. அந்த இடம் இருந்த சர்ரே என்னும் பகுதியில்தான் ஃப்ரான்ஸெஸ்யின் தங்கை சூசன்னா குடியிருந்தாள். அவள் பிரெஞ்சு தெரிந்தவள், பிரான்ஸில் கற்றவள். அங்கே செல்லத்தொடங்கிய ஃப்ரான்ஸெஸ் அந்த கூட்டுக்குடியிருப்புக்கு நெருக்கமானவளாக ஆனாள்.
அங்குதான் ஜெனரல் அலக்ஸாண்டர் டி ஆர்ப்ளெ [General Alexandre D’Arblay]யை ஃப்ரான்ஸெஸ் அறிமுகம் செய்துகொண்டார். குதிரைப்படை வீரரான ஆர்ப்ளே பிரெஞ்சுப்புரட்சியில் கலந்துகொண்டு ஜெனரல் லாஃபாயட் [Lafayette]ன் மெய்க்காவலராகவும் இருந்தவர். ஒரு நேர்மையான, எளிமையான, அப்பட்டமான மனிதர். கொஞ்சம் முதியவர்.அத்தகைய ஒருவர்தான் ஃப்ரான்ஸெஸ் போன்ற ஒரு பெண்ணுக்கு சரியாக அமைய முடியும்.
ஆர்ப்ளேயின் நட்பு ஃப்ரான்ஸெஸ்ஸின் அகத்தை திறந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக நம்பிக்கையும் கனவும் கொண்ட இலட்சியவாதிகளுடன் அவருக்கு உறவு ஏற்பட்டது. எதன்பொருட்டு வாழவேண்டும் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது. டைரியில் ஃப்ரான்ஸெஸ் எழுதினார். ‘இந்த உலகில் இந்த உலகின் பொருட்டு வாழ்
செவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்
தமிழ் வாசிப்பு உதவி மென்பொருள்
அன்புள்ள ஐயா,
ஆசிரியரைப் பெயர் சொல்லி அழைக்கத் தயக்கமாய் இருக்கிறது. நான் எனது முப்பதுகளில் அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்துதான் பாடப் புத்தகங்கள் தாண்டி, வணிக இதழ்கள் படிக்கத் தொடங்கினேன். காரணம், பிரெயிலில் பாடப்புத்தகங்கள் அச்சடிப்பதே பெரும் சவால். தன்னார்வலர்களின் உழைப்பால் உருவான ஒலிப்புத்தகங்கள் வழியே ஜெயகாந்தனின் சில கதைகளைப் படித்திருக்கிறேன். மற்றபடி பெரும்பாலான ஒலிக்கோப்புகள் நல்வழி கொன்றை வேந்தன் ரகம்தான். அதனால் அயர்வே மிஞ்சியது.
இணையத்தில் விகடன் இதழ்களை வாசிக்கத் தொடங்கிய பின்புதான் S. ராமகிருஷ்ணன் எனக்கு அறிமுகமானார். திரு. எஸ்ரா அவர்களின் எழுத்துகள் என்னை வெகுவாகப் பாதிக்கத் தொடங்கின. அரசியல் நிலைப்பாடு என்பது, வைக்கோவிலிருந்து கலைஞர் என வந்து நிற்கிறேன். சில ஆண்டுகளில் விகடனும் சலித்துவிட்டது. எழுத்தாளர் சாருவைக் கொஞ்சம் தேடிப் படித்தேன். என்னை அதில் பொருத்திக்கொள்ள முடியவில்லை. எஸ்ராவின் எழுத்துகளில் பெருகிய ஆதூரம் அவர் எழுத்துகளில் எனக்கு வாய்க்கவில்லை. திரு. இமயம் அவர்களின் எழுத்துகள் கவர்ந்தது என்றாலும், எஸ்ரா எழுத்துகள் போல, அவருடைய எழுத்துகள் திரைவாசிப்பானுக்கு உகந்த முறையில் கிடைப்பதில்லை.
இந்த சமயத்தில்தான், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்களின் ‘நவீன தமிழ் இலக்கிய வரலாறு’ மற்றும் ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்ற இரண்டு புத்தகங்களையும் கிண்டிலில் வாசித்தேன். இதுவரை நான் தேடிக்கொண்டிருந்த கேள்விகளுக்கு ஒவ்வொரு விடையாகக் கண்டடையத் தொடங்கினேன். பிறகு நான் வாசித்த உங்களின் பயண நூலான ‘அருகர்களின் பாதை’ முரட்டு நாத்திகம் பேசிக்கொண்டிருந்த என் கன்னத்தில் அறைந்து கோவில்களின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்த்தியது. அதற்குப் பிறகு இதுவரை நான் கடந்து வந்த சிந்தனைப்பாதையில் ஒரு பெருந்திருப்பத்திற்கு உள்ளாகத் தொடங்கியிருக்கிறேன் என்பது மட்டும் எனக்குப் புரிகிறது.
இப்போது உங்கள் இணையத்தில்தான் கிடைக்கிற நேரம் அத்தனையிலும் வாசம் செய்கிறேன். அரசியல் விவாதங்களையே யூட்டூப் தளங்களில் தேடிக்கொண்டிருந்த நான், இப்போது உங்களுடைய உரைகளைத் தேடித்தேடிக் கேட்கிறேன். ஆழ்ந்து இல்லையென்றாலும், ‘கொற்றவை, ஏழாம் உலகம்’ ஆகிய நாவல்களை கிண்டிலில் வாசித்து முடித்தேன். கவனமாகமீண்டும் வாசிக்க வேண்டும். உங்கள் தளத்திலுள்ள கதைகளைத் தினமும் படித்துவருகிறேன். அவற்றுள், இருநோயாளிகள் என்ற கதையைப் படித்துவிட்டு, நான் எழுதியிருந்த கடிதத்தை உங்களின் தளத்திலும் வெளியிட்டிருந்தீர்கள். அந்தக் கடிதத்தில் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு, கடிதம் எழுதுவேன் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால், முடியவில்லை. காரணம், கடிதம் எழுதிய அன்று, இரவு என் மனைவிக்கு, ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் கொண்டாட்டம் மற்றும் பொறுப்புகளிலேயே சில நாட்கள் போய்விட்டன. ஆயினும் உங்கள் தளத்தைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.
இப்போது உங்கள் தளத்தில் வெண்முரசும், கிண்டிலில் விஷ்ணுபுரமும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். புரட்சி, முற்போக்கு என ஐம்பது பக்கங்கள்கூடத் தாண்டாத தங்கள் பிரச்சார நூல்கள் எங்கே நகல் எடுக்கப்பட்டுவிடுமோ என அஞ்சி, அவைகளைக் கிண்டிலில்கூட வெளியிடத் தயங்குகிற பலருக்கு நடுவே, 26000 பக்கங்கள் கொண்ட வெண்முரசு என்ற மகாக்காவியத்தையே திறந்த தளத்தில் படிக்கத் தந்திருக்கிறீர்கள் என்பதை நீனைத்து வியக்கும்போதெல்லாம், “உலகத்தில் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் தலைசிறந்த பத்து எழுத்தாளர்களில் நானும் ஒருவன் என்று நீங்கள் சொல்வதையே பதிலாக எடுத்துக்கொள்கிறேன்.
தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும், பார்வையற்ற எங்களால் நினைத்த நேரத்தில், நினைத்த புத்தகங்களை, சமகால படைப்பாக்கங்களைப் போகிற போக்கில் படிக்க முடியவில்லையே என நான் உள்ளுக்குள் ஏங்குவேன். அதனால், நான் சந்திக்கும் பார்வையுள்ளவர்களிடம் “அதுமட்டும்தான் எனக்கு இந்தப் பிறவியில் வாய்த்துவிட்ட மிகப் பெரிய குறை. ஆகவே, தாங்கள் வாசிக்கும் எந்த ஒரு புத்தகமானாலும், அதை அப்படியே வாய்விட்டுப் படித்து, அதைப் பதிவு செய்து, ஒலிப்புத்தகமாக்கி, உங்களுக்குத் தெரிந்த பார்வையற்ற ஒருவருக்கு வழங்குங்கள்” எனச் சொல்லிக்கொண்டே இருப்பேன். அந்தக் குறையில் பெரும்பகுதியைத் துடைக்கும் பணியை உங்கள் தளம் கடந்த 2008 லிருந்து செய்து வருவதை அறியாது போய்விட்டேன். எப்படிநன்றி சொல்வதென்று தெரியவில்லை. காலத்தின் முன்னால், எத்தனை பெரிய அரிய பொக்கிஷம் உங்கள் தளம் என்பதை நினைக்கும்போது மெய் சிலிர்க்கிறேன்.
எனக்கு ஒரு கேள்வி மற்றும் ஒரு வேண்டுகோள். கேள்வி: அன்றாடம் நான் எதிர்கொள்ளும் எல்லா வினாக்களுக்கும் பகுதியளவேனும் ஒரு திறப்பை உங்கள் தளம் தருகிறது. உங்கள் கதைகள் படிக்கிறேன். கட்டுரைகள் படிக்கிறேன். ஆனால், ஒரு மாணவனாக, உங்களைப் படிப்பதில் நான் எங்கிருந்து தொடங்க வேண்டும்? அதன் படிநிலைகள் எவ்வாறு அமைவது சரியானதாக இருக்கும்?சொல்லுங்களேன். வேண்டுகோள்: இன்றுதான் நான் உங்களின் கீதை உரைகளின் முதற்பாகத்தை யூட்டூபில் கேட்டேன். ஐயா சுகிசிவம் அவர்களின் கீதை உரையைக் கேட்டதிலிருந்துதான் பிறர் சொல்வதைப்போல கீதை பகுத்தறிவுக்கு ஒவ்வாத நூல் அல்ல, என்பதை உணர்ந்தேன்.
ஐயா, மகாபாரதத்தை வெண்முரசு என்ற காப்பியமாக எழுதியதைப்போல, கீதையையும், ஒவ்வொரு பாடலாகவோ, அல்லது அத்தியாயங்களாகவோ நீங்கள் எழுதினால், அது மேலும் ஒரு புதிய திறப்பை உங்கள் மாணாக்கர்களுக்கு அழிக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. இன்னும் ஏதேதோ எழுத விரும்புகிறேன். எண்ணங்கள் சொற்களாகாமல் முட்டி நிற்பதால் இத்தோடு முடிக்கிறேன்.
இப்படிக்கு,
ப. சரவணமணிகண்டன்.\
அன்புள்ள சரவண மணிகண்டன்,
2010 முதலே என் இணையதளத்தை பார்வையற்றவர்கள் கேட்டு வாசிப்பதற்கான மென்பொருளை அளித்துவிட்டேன். இப்போது மிகச்சிறந்த உச்சரிப்பில் அழகாக வாசிக்கும் மென்பொருட்கள் வந்துவிட்டன. கூடவே யூடியூபில் பல நண்பர்கள் என் கதைகளை வாசித்துப் பதிவிட்டிருக்கிறார்கள்.
எவருக்காயினும் அகவாழ்க்கையே மெய்யான வாழ்க்கை. பார்வைக்குறைபாடு என்பது அகவாழ்க்கைக்கு ஒரு தடை அல்ல. அதை எளிதில் கடக்கமுடியும். அதை கடந்து ஓர் அரிய அகவாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்
என் புனைவுகளை அறம் வரிசைக் கதைகளில் இருந்து தொடங்கினால் எளிதாக இருக்கும். என் கதைகள் இணையதளத்திலேயே தனிப்பகுதியாக உள்ளன. இரவு, கன்யாகுமரி போன்ற நாவல்களும் தொடங்குவதற்கு உகந்தவை
கீதையை எழுதும் எண்ணம் உண்டு பார்ப்போம்.
குழந்தை பிறந்தமைக்கு வாழ்த்துக்கள். குட்டிக்கு என் முத்தங்கள்
ஜெ
அகமறியும் ஒளி
வெண்முரசு ஆவணப்படம்- கடிதம்
ஆசிரியருக்கு வணக்கம்,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
வெண்முரசு நிறைவை சிறப்பிக்கும் விதமாய் ‘வெண்முரசு ஆவணப்படம்’ திரையிடல் அறிவிப்பை கண்டேன். நான் மிக மகிழ்ந்த தருணம் .கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த பணியை மூத்தவர் ஆஸ்டின் சௌந்தர்,நண்பர் ராஜன்சோமசுந்தரம் தலைமையில் ‘விஷ்ணுபுரம் அமெரிக்க’ நண்பர்கள் துவங்கியதை நானறிவேன்.
ஆஸ்டின் சௌந்தருடன் வாரம் ஒருமுறை போனில் பேசிவிடுவேன் முன்பெல்லாம்.இந்த ஆவணப்பட வேலையை அவர்கள் துவங்கியதிலிருந்து எங்களது உரையாடல் இல்லாமல் போயிற்று. எப்போது நான் முயற்சித்தாலும் அவர்கள் பிஸி.
கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக வெண்முரசு ஆவணப்படதிற்காக கடுமையாக உழைத்துள்ளனர்.அதிக பொருட்செலவும் செய்துள்ளனர்.நேற்று தளத்தில் ஆவணப்படம் திரையிடல் அறிவிப்பு கண்டதும்.அதற்கு முதுகெலும்பாய் உழைத்த ராஜன் சோமசுந்தரம்,ஆஸ்டின் சௌந்தரை வாழ்த்து சொல்ல போனில் அழைத்தேன்.ராஜன் ராலே திரையரங்கில் திரையிடலுக்கான கடைசிகட்ட பணியில் பிசி பேச முடியவில்லை.சௌந்தர் அண்ணா “ஷாகுல் பத்து நிமிடம் மட்டும் பேசலாம்” என அழைப்பை ஏற்றார்.
அவர் சொன்னார் கடந்த எட்டுமாதமாக தனது பணிநேரம் போக தினமும் சனி,ஞாயிறு உட்பட மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் உழைத்ததாக.நிகழ் காவியமான வெண்முரசு எழுதிய ஆசானுக்காக இதை செய்துள்ளனர்.பூமி பந்தின் எதிர் முனையில் வாழும் தமிழ்பேசும் மிக சொற்பமானவர்களே வாழும் தேசத்தில் மிக சொற்பமான ஜெயமோகன் வாசக நண்பர்கள் கூட்டாக இணைந்து பெருமுயற்சி செய்து இதை சாதித்துள்ளனர்.
அதன் தரம் எப்படி இருக்கும் என்பது திரையிடலுக்கு பின் உலகம் அறிந்துகொள்ளும்.வெண்முரசை உலகறிய செய்யவேண்டும் என்பதே அவர்களின் பேரவா .அதிலும் அதன் முதல் திரையிடல் அமெரிக்காவில்.இன்று ராஜன் சோமசுந்தரத்தை அழைத்து வாழ்த்து சொன்னேன்.அதிக பட்சம் தொண்ணூறு பேருக்குதான் திரையரங்கில் அனுமதி.ராலே திரையிடல் முன்பதிவு முடிந்துவிட்டதாக(ஹவுஸ்புல்) மகிழ்ச்சியுடன் சொன்னார்.
ஆவணப்படம் திரையிடல் அன்று அமெரிக்காவின் பிலேதெல்பியா துறைமுகப்பில் நின்றுகொண்டிருப்பேன்.மானசீகமாக நானும் திரையரங்கில் இருப்பேன் .
வெண்முரசு படைத்த உங்களுக்கு வணக்கமும் ,வாழ்த்துக்களும்.
ஷாகுல் ஹமீது .
பெண்களின் அரசு
மனிதர்களால் உருவாக்கப்படும் ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் பின்னால் பெண்களின் விழைவே உள்ளது. அது எளிய வீடோ பெரிய மாளிகையோ அல்லது பெரு நகரமோ என்றாலும், அதை ஆண்கள் தான் பெரும்பாலும் உருவாக்கியிருப்பார்கள் என்றாலும், ஒரு பெண்ணின் பெரு விழைவு அவற்றின் அடித்தளமாக இருக்கவே செய்யும். அல்லது குறைந்த பட்சமாக ஒரு பெண்ணை ஈர்க்க வேண்டும் என்ற காரணமாவது இருக்கும்.
பெண்களின் அரசு:May 8, 2021
கதாநாயகி- 1
இது ஒரு பழையகதை. பழைய கதைகள் நமக்குள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.நாம் கற்பனைசெய்து வளர்த்துக் கொள்கிறோம். பிறரிடம் சொல்லும்போது வளர்கிறது. நம் கனவுகளில் வளர்ந்து நினைவுகளுடன் கலந்துவிடுகிறது. ஒருமுறை இறங்கிய ஆற்றில் இன்னொரு முறை இறங்க முடியாது என்று சொல்வார்கள். ஒருமுறை சொன்ன கதையை திரும்பச் சொல்ல முடியாது.
ஆகவே நான் சொல்லும்போது கதை வளர்ந்துகொண்டே இருக்கும். அது எங்கே போய் நிற்குமென்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் இது நடந்த கதை. இதன் மையச்சம்பவங்கள் எவையும் பொய்யல்ல. இதன் நுட்பங்கள்தான் வளர்கின்றன. இதன் தகவல்கள் மேலும் துல்லியமாகின்றன. கதைகளை தீ என்று சொல்லலாம். வளராத தீ அணைய ஆரம்பிக்கிறது.
சரி, கதைக்கு வருகிறேன். இது 1981 ல் நான் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சென்றபோது நடைபெற்றது. சரியாகச் சொன்னால் 1984 ஜூன் 28 ஆம் தேதி. நான் தென்தாமரைக்குளத்தில் ஒரு சின்னக் குடும்பத்தில் பிறந்தவன். பெயர் மெய்யன் பிள்ளை. என் அப்பா குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்துவந்தவர். இரண்டுவேளை சோறும் கஞ்சியுமாக ஒப்பேற்றிக் கொண்டிருந்த குடும்பம். இரண்டு தங்கைகள், ஒரு தம்பி.
நான் பூதப்பாண்டி சி.பி.ராமசாமி அய்யர் மாடல் ஸ்கூலில் பழைய எஸ்.எஸ்.எல்.சி. படித்தவன். மேலே படிக்க வசதியில்லை. அப்படியே டீச்சர் டிரெயினிங் போனேன். அதற்கும் பணமில்லைதான். ஆனால் அப்பா எஞ்சிய ஒரே நகையாகிய அம்மாவின் தாலிக்குண்டுகளை விற்று என்னை பாளையங்கோட்டைக்கு படிக்க அனுப்பினார். அங்கே ஒரு துணிக்கடையில் பகுதிநேர வேலைசெய்து கொண்டு, சொந்தக்காரர் ஒருவர் வீட்டு திண்ணையில் அந்தியுறங்கியபடி, படித்து முடித்தேன். படித்துவிட்டு வந்த ஏழாம் மாதத்திலேயே வேலை கிடைத்துவிட்டது. அன்றெல்லாம் மலைப்பகுதிகளில் ஆரம்பப்பள்ளிகளை திறந்துகொண்டே இருந்தார்கள். ஆசிரியர்களுக்கான தேவை ஆண்டுதோறும் கூடிக்கூடி வந்தது.
வேலைக்கான உத்தரவு வந்த அன்று அப்பா தலைசுற்றி திண்ணையில் படுத்துவிட்டார். உப்புபோட்ட கஞ்சிநீர் கொடுத்தபோது எழுந்து அமர்ந்து கண்ணீருடன் குடித்தார். நான் காலைத் தொட்டு கும்பிட்டேன். ”நல்லா இருடே நல்லா இருடே மக்கா” என்று சொன்னவர் குரல் உடைந்து தேம்பி அழத் தொடங்கினார்.
இரண்டுநாட்கள் வீடே திருவிழாக்களையுடன் இருந்தது. என் தங்கைகள் முகங்கள் அத்தனை பொலிவுடன் பார்த்ததில்லை. என் அம்மா குரல் அத்தனை எழுந்து நான் கேட்டதில்லை. அப்பா திண்ணையில் நிமிர்ந்து அமர்ந்ததை கண்டதே இல்லை. பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் நலம் விசாரிக்க வந்துகொண்டிருந்தனர். சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள். பாதிப்பேர் வயதுக்குவந்த பெண் வைத்திருந்தவர்கள். அம்மா இரண்டு குமருகளையும் கரையேற்றியபிறகுதான் எல்லாம் என்று சொல்லிவிட்டார்.
எனக்கு அப்போது இருபது வயதுதான். பட்டுமீசை, ஒல்லியான உடல், குரல்வளை பெரிதாக இருக்கும். அக்கால வழக்கப்படி காதுமறைய தலைமுடி வளர்த்திருந்தேன். ஆசிரியர் பயிற்சிக்குச் சென்றபோது பட்டாளக் கிராப் வெட்டச் சொல்லிவிட்டார்கள். அதன்பின் முடிவளர்ப்பதற்குள் வேலை கிடைத்துவிட்டது.
உள்ளூரில் சிங்கப்பூரிலிருந்து கடத்தலில் வரும் பாலிஸ்டர் துணிகளை விற்கும் டெய்லர் கண்ணப்பனிடமிருந்து துணிவாங்கி ஆட்டுக்காது காலர் வைத்த, பட்டைமடிப்பில் பட்டன் வரிசை கொண்ட, நான்கு சட்டைகள் தைத்துக்கொண்டேன். சந்தன நிறம், மரநிறம், இளஞ்சிவப்பில் பட்டை. நீலம், தவிட்டு நிறங்களில் இரண்டு பாண்ட். அவை காலடியில் சிறிய பாவாடை போல காற்றாடும் அளவுக்கு பெரிய பெல்பாட்டம் கொண்டவை. சட்டை இடுப்பை இறுக்கிப் பிடிக்கும். கையை முழங்கையளவுக்கு பெரிய பட்டையாக மடித்துவிட்டுக்கொள்ளவேண்டும்.
மீசை தடித்திருந்தால் தலைகீழ் ப வடிவில் வைத்திருக்கலாம், வாய்ப்பில்லை. கிருதாவும் இறங்கவில்லை. முகவாயில் மட்டும் கொஞ்சம் முடி இருந்தது அப்போது. பிளாட்ஃபார்ம் செருப்பு என்று சொல்லப்பட்ட உள்ளே மரக்கட்டை வைத்து வெளியெ ரெக்சின் தைத்த கருப்பு செருப்புகள் வாங்கிக்கொண்டேன். இதெல்லாம் என் நெடுங்காலக் கனவுகள். ஒரு வாட்ச் வாங்கவேண்டுமென்ற கனவை ரகசியமாக வைத்துக்கொண்டேன்.
பழுப்பு ரெக்ஸின் பையில் சட்டைகளையும் பாண்ட்களையும் அடுக்கிக்கொண்டேன். போர்வை, துண்டு, சோப்பு டப்பா, பௌடர் டப்பா, டூத் பிரஷ், கோல்கேட் டூத் பவுடர் [டூத் பேஸ்ட் விலைகூடுதல் என ஒரு கணக்கு] ஆகியவற்றுடன் எனக்கு வேலை அளிக்கப்பட்டிருந்த கொன்னமேடு என்ற ஊருக்குக் கிளம்பினேன். அங்கே போவதெப்படி என்று விசாரித்திருந்தேன். அதனால் மேலும் குழப்பம் அடைந்திருந்தேன். குலசேகரம் வழியாக கோதையாறு லோயர்காம்ப் போகவேண்டும். அங்கிருந்து அக்கரைப்பங்களா என்ற இடத்திற்குச் சென்றால் அதற்கப்பால் விசாரித்துக்கொள்ளலாம்.
நாகர்கோயில் சி.இ.ஓ ஆபீஸிலேயே ஜாயினிங் ரிப்போர்ட் எழுதிக்கொடுக்கச் சொன்னார்கள். அங்கே சென்றபின் இன்னொரு வர்க்கிங் ரிப்போர்ட் கொடுக்கவேண்டும். நான் ஒருநாள் முன்னரே கிளம்பினேன். அதிகாலை நாகர்கோயில் வந்து பஸ் பிடித்து கோதையாறு சென்று சேரவே மதியம் ஆகிவிட்டது.
கோதையாறு நான் நினைத்ததை விட ஜனநடமாட்டத்துடன் இருந்தது. அங்கே அத்தனைபெரிய நீர்மின்சக்தி திட்டம் இருக்குமென்றும், கூடவே ஊழியர் குடியிருப்பு ஒரு சிறு கிராமம் அளவுக்கு இருக்குமென்றும் நான் அறிந்திருக்கவில்லை. மலைமேல் தண்டவாளம் போல ஏறிச்சென்ற விஞ்ச் ரயிலை வியந்து பார்த்து நின்றுவிட்டேன்.
கோதையாறு எஞ்சீனியர் அலுவலகத்திற்குச் சென்று அக்கரைபங்களா பற்றி கேட்டேன். நான் ஆசிரியர் என்றதும் “வாத்யாரா? ஏலே அதுக்கு அங்க ஸ்கூல் இருக்காலே?”என்றார் எஞ்சீனியர் நமச்சிவாயம் பிள்ளை. ”கோரனை விளி. அவன்கிட்டே கேப்போம்…”
கோரன் குள்ளமான இறுக்கமனா கரிய உடல்கொண்ட மலைக்காணி. அவனிடம் “ஏலே, அக்கரை பங்களாவிலே ஸ்கூல் உண்டாலே? ஸ்கூலு நடத்துகதுக்கு அங்க ஊரு ஏது?”என்றார் நமச்சிவாயம் பிள்ளை
கோரன் “ஏமானே, அக்கரைப் பங்களாவுக்க அந்தாலே மலையிருக்குல்லா? கொந்நமேடு…அவ்விடம் ஊரு உண்டு. ஸ்கூலும் உண்டு… ” என்றான்
“ஆமா, கொன்னமலைக்கு அந்தாலே வேற காட்டு வழி உண்டு…அதுக்கு எதுக்கு இங்க வந்தீக?”என்றார் நமச்சிவாயம் பிள்ளை.
“தெரியாதுல்லா? நான் எங்கூர்லே ஒரு ஆளிட்டே கேட்டேன்” என்றேன்
“ஏலே அங்க முன்ன இருந்த வாத்தியாரு ஆருலே?”என்றார் நமச்சிவாயம் பிள்ளை.
“ஞானகுணம் சாரு…அவரை ஆனை சவிட்டிப்போட்டுதுல்லா?” என்றான் கோரன்
நான் திகைத்து “ஆனையா?”என்றேன்
“ஓம், அதினு முன்பே இருந்ந வாத்தியாரு ஏசுவடியான். அவரை பாம்பு கடிச்சுபோட்டு…அவருக்கு முன்பே…”
”போரும்” என்றேன். எனக்கு கொஞ்சம் மூச்சுத்திணறியது.
“அதொண்ணும் இல்லை…மக்க மனுசங்க உள்ள ஊருதான். ஒரு வருசம் பிடிச்சு இருந்துபோடும். அதுக்குமேலே சாதியிலே வல்ல அரசியல்வாதியையும் பிடிச்சு டிரான்ஸ்பர் வாங்கிப்போடலாம்” என்றார் நமச்சிவாயம் பிள்ளை. “சர்க்காரு காசாக்கும். வேண்டாம்னு சொன்னா பின்ன துபாய்க்கு போகணும்”
நான் கோரனுடன் அக்கரைப் பங்களாவுக்கு கிளம்பினேன்.கோரன் வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தான். கொஞ்சம் மூக்குக்குரல். அரைமணிநேரம் கேட்டால் தமிழ்போலவே தோன்றும்.
முந்தைய ஆசிரியர் மறுபக்கம் மலைப்பாதை வழியாக கீழே இறங்கியிருக்கிறார். அது குறுக்குவழி, சாயங்கால நேரம். யானை அடித்துவிட்டது. “இங்கே யானை வருமா?”என்றேன், நம்பிக்கையுடன்
“எந்நும் வருமே” என்றான் கோரன். “போய ஆழ்ச்சையாக்கும் குமாரன் நாயை வாலுமுறுக்கன் அடிச்சு கொன்னது”
“வாலுமுறுக்கன் ஆரு?”
”ஆனை… வலிய ஆனை… கொம்பு தோணி மாதிரி இரிக்கும்”
நான் அக்கரை பங்களாவை அடைந்தபோது மழை கறுத்து காடு இருண்டுவிட்டிருந்தது. காட்டுக்குள் இருந்து உரத்த ஓலம் போல சீவிடுகளின் ஓசை எழுந்தது.
“மழைவருமா?”என்றேன்
“ஏமானே, காட்டில் எந்நும் வைகுந்நேரம் மழை உண்டு”
தினமும் மழை. நான் பெருமூச்சுவிட்டேன்.
அக்கரைப் பங்களா காப்டன் பீட்டர் டார்னெல் என்ற பிரிட்டிஷ் பிளாண்டரால் 1890 வாக்கில் கட்டப்பட்டது. பங்களா என்று பெயர், ஆனால் இரண்டே அறைகள்தான். ஒரு பெரிய கூடம் போன்ற அறை, அதையொட்டி இன்னொரு சிறிய அறை பொருட்கள் வைத்துக்கொள்ள. மேலே ஓட்டுக்கூரை. ஆனால் மிக உயரமாக இருந்தது. தடிமனான கருங்கல்கட்டுச் சுவர்கள். மண்ணாலான தரையோடுகள் வேய்ந்த தரை. ஆளுயரமான சன்னல்கள், அவற்றில் சிறிய சிறிய சதுரங்களாக கண்ணாடி. படிகள் வெட்டி எடுக்கப்பட்ட கருங்கல்லால் ஆனவை.
நாங்கள் உள்ளே நுழைந்ததுமே மழை ஓங்கி அறைந்தபடி பெய்தது. அது உடைந்து தலைமேல் விழத்தொடங்கிய பின்னரே அதற்கு முன் அருவி போல கேட்ட ஓலம் மழை அணுகும் ஒலி என புரிந்துகொண்டேன். உள்ளே சென்று நின்றுகொண்டு மழையை திகைப்புடன் பார்த்தேன். அதுபோல ஒரு மழையை பார்த்ததில்லை. அது மழைதானா அல்லது வேறேதும் இயற்கைநிகழ்வா என்று தோன்றியது. மழைத்துளிகளே இல்லை. செங்குத்தான ஒரே பெருக்கு. தரையில் செந்நிற நீர்க்கொந்தளிப்பு. இலைகள் அறைவாங்கி துள்ளித் துடித்தன. அருகே இருந்த மரத்தின் இலைகளின் ஈர ஒளி மட்டுமே தெரியுமளவுக்கு இருட்டு.
கோரன் கையை தோளில் வைத்தபடி அமர்ந்துவிட்டான். நான் அங்கிருந்த உயரமான நாற்காலியில் அமர்ந்தேன். அக்கரை பங்களா என்பது ஓர் ஊர் அல்ல, அது மெய்யாகவே ஒரு பங்களா. ஆனால் அதைச்சுற்றி காடுதான் இருந்தது. அதுவும் பச்சைநுரை போல அடர்ந்து செறிந்த காடு. காடு அப்படியிருக்கும் என்பதை நினைத்தே பார்க்கமுடியவில்லை.
“கொன்னமேடு எங்கயாக்கும்?”என்றேன்.
அவன் கைகாட்டி “அங்க” என்றான்.
“பள்ளிக்கூடம் அங்கயா இருக்கு?”
“ஓம்”
“அப்ப நாம அங்க போக வேண்டாமா?” என்றேன்
“ஏமானே, அங்க இனி போக முடியாது. இனி போனா ஆனை வந்நு கொல்லும்” என்றான். “வெளுப்பான் காலத்து போகாம்”
“அதுவரை இங்கயா இருக்கணும்?”
“இவிடம்தான் வாத்யாரு இரிக்கும்… இதாக்கும் வீடு…”
“இங்கயா?”
“ஓ” என்றான்.
“நான் கொன்னமேட்டிலே ஸ்கூலிலே இருந்துகிடுதேன்…இந்த எடம் வேண்டாம். இங்க யாருமே இல்லியே” என்றேன். “இங்க யானை வந்தா என்ன செய்ய?”
“ஏமானே. கொந்நமேட்டிலே வீடு இல்ல. கொந்நமேட்டில் எல்லாம் மாடமாக்கும். மரத்துக்குமேலே கெட்டின மாடம்… அங்கே நாட்டாளு இரிக்க முடியாது…”
நான் “அப்ப ஸ்கூல்?”என்றேன்.
”ஸ்கூல் முளை நிறுத்தி ஓலைக்கூரை மாத்திரமாக்குமே. ராத்திரி ஆனை வருமே”
ஆக ஒருமாதிரி நிலைமை புரிந்தது. ஒருவகையில் நல்லது. அந்த பங்களா உறுதியானது. உள்ளே இருந்தால் யானையை பயப்படவேண்டியதில்லை.அந்த மழையில்கூட அது ஒழுகவில்லை.
நான் அந்த பங்களாவை சுற்றி வந்து பார்த்தேன். அகலமும் நீளமும் கொண்ட ஒரு கட்டில் இருந்தது. ஆனால் கடைசல்கள் ஏதுமில்லாத மோட்டாவான மரச்சாமான் அது. அருகே ஓர் எழுதுமேஜை. ஆனால் பழையபாணியிலானது. சைன்போர்டு மேஜை என்பார்கள். கீழே இரண்டு அடுக்காக டிராயர்கள். கீழிருந்து இழுத்து மடியில் சாய்த்துக்கொள்ளத்தக்க எழுது பலகை கொண்டது. அதன்மேல் காகிதம், பேனாக்கள், குண்டூசிகள் வைப்பதற்குரிய மரத்தாலான பேழை, மைக்கூடு வைப்பதற்கான வளையங்களுடன். இரண்டு நாற்காலிகள். மேஜையும் நாற்காலியும் உயரமானவை, வெள்ளையர்களுக்குரியவை. மேஜையையும் கட்டிலையும் நகர்த்தி பல ஆண்டுகளாகியிருக்கும். நாலைந்துபேர் மெனக்கெடாமல் அசைக்க முடியாது.
சிறிய அறையில் ஒரு பழைய அலமாராவில் நான்கு கம்பிளிகளும் நாலைந்து போர்வைகளும் இருந்தன. ஒரு அரிக்கேன் விளக்கு, கூஜாவடிவ கண்ணாடி கொண்ட மண்ணெண்ணை விளக்குகள் இரண்டு. ஒரு தகரடின்னில் ஒரு லிட்டர் மண்ணெண்ணையும் இருந்தது. இன்னொரு கள்ளிப்பெட்டிக்குள் அலுமினியப் பாத்திரங்கள், அரிசி, பருப்பு, சீனிம் டீத்தூள், பலசரக்குப் பொருட்கள். கரண்டிகள், அகப்பைகள் எல்லாம் இருந்தன.
நான் ஸ்டவ் இருக்கிறதா என்று பார்த்தேன். அதற்குள் கோரன் “சாயை இடாம் ஏமானே” என்றான்.
அந்த பங்களாவை ஒட்டி பின்னால் ஒர் ஓடுபோட்ட சாய்ப்பு இருப்பதை அப்போதுதான் கண்டேன். அங்கே விறகடுப்பு இருந்தது. காட்டில் வெட்டிக்கொண்டுவந்த விறகு அடுக்குப்பு அருகே அடுக்கப்பட்டிருந்தது. ஒரு பழைய தகர பீப்பாய், ஒரு மண்குடம்.
கோரன் அலுமினிய பாத்திரத்தை கூரைமடிப்பில் இருந்து அருவி போல கொட்டிய நீரில் கழுவினான். அந்த மழைநீரை பிடித்து கொண்டு சென்று அடுப்பு பற்றவைத்து டீ போட்டான்.
நான் அரிக்கேனை கொளுத்தி அதற்கென்றிருந்த கம்பிக்கொக்கியில் மாட்டினேன். அறைக்குள் பரவிய சிவப்பு வெளிச்சம் கொஞ்சம் கதகதப்பை அளிப்பதுபோலிருந்தது. காற்றில் ஒளி ஆட நிழல்கள் சுழன்றாடின.
அதற்குள் நன்றாக குளிர ஆரம்பித்திருந்தது. நான் ஒரு கம்பிளியை போர்த்திக்கொண்டு மழையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கோரன் அலுமினிய டம்ளரில் டீ கொண்டுவந்தான். பாலில்லாத சூடான டீ அத்தனை ருசியானது என்று எண்ணியிருக்கவே இல்லை. நான் வயிற்றுப்போக்கின்போது மட்டும்தான் பாலில்லாத டீ குடித்திருந்தேன்.
“கஞ்ஞி வைக்கட்டே?”என்றான்.
“வை” என்றேன்.
அவன் அலுமினியப் பாத்திரத்தை கழுவி தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்றான். மழை எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே பெய்துகொண்டிருந்தது. ஏற்ற இறக்கமே இல்லாத முழக்கம். கூர்ந்து கேட்டால் அந்த ஓசை அலையலையாக இருப்பதுபோலத் தோன்றியது. கொஞ்சநேரத்தில் அரிசி கொதிக்கும் இனிய மணம் எழுந்தது.
கொதிக்கும் சிவப்பரிசிக் கஞ்சி. அதற்கு தொட்டுக்கொள்ள உப்பு, புளி, வற்றல்மிளகாய், வெங்காயம் சேர்த்து நசுக்கி கொஞ்சம் தேங்காயெண்ணை ஊற்றிக் குழைத்த ஒருமாதிரியான சட்டினி. ஆனால் எனக்கு மூக்கு முட்ட குடிக்கவேண்டும் போலிருந்தது. கோதையாறிலிருந்து அக்கரைப் பங்களாவுக்கு ஏழெட்டு கிலோமீட்டர் தொலைவு இருக்கும். மேலேறும் பாதை வேறு. நடப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டது.
சாப்பிட்டுவிட்டு மழைநீரிலேயே கைகழுவினேன். கட்டிலில் பனையோலைப் பாயை விரித்து, அதன்மேல் கம்பிளியை பரப்பி, அதன்மேல் போர்வையை விரித்து இன்னொரு கம்பிளியால் போர்த்தியபடி படுத்துக்கொண்டேன்.
கோரன் கதவுகளை மூடி, அரிக்கேன் திரியை தாழ்த்திவிட்டு, ஒரு கம்பிளியை போர்த்திக்கொண்டு சுவர் மூலையில் சாய்ந்து அமர்ந்தான். “பாய் இல்லையா?”என்றேன்.
“இல்லை ஏமானே.நான் இருந்நே உறங்குவேன்”
“ஏன்?”
“மாடத்தில் இருந்நல்லோ உறக்கம்?”
அவர்கள் அனைவருமே இரவில் சுருண்டு அமர்ந்துதான் தூங்கினார்கள். அதை நான் அதன் பிறகுதான் உணர்ந்தேன். குரங்குகள் போல. பழகிவிட்டால் எளிதுதான் போல. உண்மையில் அது அவர்கள் உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவியது. கமுகுப்பாளையை சேர்த்து தைத்த தோல்போர்வை போன்ற ஒன்றை வைத்திருப்பார்கள். அதைப் போர்த்திக்கொண்டு கொட்டும் மழையிலேயே அமர்ந்து இரவு தூங்கிவிடுவார்கள்.
நான் தூங்குவதற்கு முன் பொழுதைப் பார்த்தேன். மாலை ஆறுதான் ஆகியிருந்தது. ஆனால் வெளியே கண்ணே இல்லையென்றாக்கும் இருட்டு. அதில் அதே ஓசையுடன் அதே பெருக்குடன் அப்படியே நின்றிருந்த மழை. ஏதோ ஒரு வெறிகொண்ட தெய்வம்போல.
நான் மிக விரைவிலேயே நன்றாக தூங்கிவிட்டேன்.அந்த மழையோசை, காட்டின் அலறல் எல்லாமே எனக்கு அன்னியமானவை. தூக்கம் வராமல் தடுப்பவை.ஆனால் நம்மை நன்றாகத் தூங்கவைக்கும் ஓர் உணர்வு உண்டு, அதை ஒருவகையான பாதுகாப்புணர்வு என்பேன். பதுங்கியிருக்கும் உணர்வு. கதகதப்புணர்வு என எதுவேண்டுமென்றாலும் சொல்லலாம். நம்மை கருக்குழந்தை போல உணரச்செய்வது. மலைக்குளிரில் கம்பிளிக்குள் மட்டுமே அதை உணர முடியும்.
நான் எவரோ என் அருகே நிற்பதுபோல உணர்ந்தேன்.என்னை கூர்ந்து பார்க்கிறார்கள். கதவை திறந்து வெளியே பெய்யும் மழையைப் பார்க்கிறார்கள். அறைக்குள் நடமாடுகிறார்கள். மீண்டும் என்னருகே வந்து என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நான் விழித்துக்கொண்டேன். அரிக்கேன் விளக்கின் ஒளி இன்னும் துல்லியமாக இருப்பது போலிருந்தது. அறை மூடியிருந்தது. கோரன் ஓரமாக அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்.
அந்தக் கனவை எண்ணியபடி எழுந்து சோம்பல் முறித்தேன். சிறுநீர் கழிக்கவேண்டும். கதவைத் திறந்து வெளியே செல்வதா? கதவு மிகக்கனமானது. யானை முட்டினாலும் எளிதில் உடையாதது. இரும்பலான கீல்கள் ஓசையே எழுப்பாதவை. கதவை திறப்பது ஆபத்து, அறியாத காடு வெளியே. கோரனை எழுப்பலாம். அதற்கு முன் பின்பக்கச் சமையலறையை ஒரு முறை பார்த்துவிடலாம்.
சமையலறையின் ஒரு மூலையில் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு கழுவுமிடம் இருந்தது. வெளியே இருந்து பாம்பு ஏதும் வராமலிருக்க மரக்கட்டை வைத்து மடையை மூடியிருந்தனர். அதை இழுத்து திறந்தபின் அதன் அருகே சிறுநீர் கழித்தேன்.
திரும்பி வந்தபோது மீண்டும் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. உள்ளம் புத்துணர்ச்சியுடன் இருந்தது. மேஜைக்கு அடியில் தள்ளப்பட்டிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன். நெடுநேரம் கதவும் சன்னல்களும் மூடியிருந்தமையால் அறைக்குள் மென்மையான கதகதப்பு இருந்தது. போர்வை தேவைப்படவில்லை.
மழை அப்படியே நின்றிருந்தது. அது அப்படியே பலநாட்கள் பல வாரங்கள் பல மாதங்கள் பெய்யக்கூடும் என்று தோன்றியது. மழையின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்தேன். அதிலிருந்த அச்சுறுத்தும் தன்மை மறைந்து ஒரு இணக்கமான உணர்வு தோன்ற ஆரம்பித்திருந்தது.
அந்த பேப்பர் பெட்டியை எடுத்துப் பார்த்தேன். அதில் ஒன்றுமில்லை. டிராயர்களை இழுத்தேன். இரண்டு டிராயர்களுமே காலியாக இருந்தன. நெடுங்காலமாக அவற்றை எவரும் திறந்திருக்கவில்லை. புழுதியில்லை, ஆனால் புழுதிபோல ஒரு வாசனை.
டிராயரை மூடிவிட்டு எழுந்தேன். படுக்கையை நோக்கி நடந்தபோது எனக்கு ஓர் உணர்வு ஏற்பட்டது. அந்த டிராயர்களுக்குல் நான் எதையோ பார்த்துவிட்டிருந்தேன். எதை? திரும்பி வந்து அமர்ந்தேன். டிராயர்களை திறந்து பார்த்தேன். ஒன்றுமில்லை. கையால் துழாவியும் பார்த்தேன்.
பின்னர் மூடிவிட்டு கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன். மழையின் ஓசை ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த மாற்றமில்லா ஓசை தூங்கவைப்பது.நான் மெல்ல தூங்கிவிட்டேன். ஆனால் நான் தூங்குவதை நானே உணர்ந்திருந்தேன். அப்படியென்றால் அது தூக்கமில்லை. என் பிரக்ஞை கட்டில்லாத ஒழுக்காகச் சென்றுகொண்டிருந்தது.
நான் ஒரு ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். கறுப்புவெள்ளை படம். நாகர்கோயில் பயோனியர் சரஸ்வதி தியேட்டரில். அதில் ஒரு பெண் ஒரு பழைய மாளிகையில் ஒரு மேஜையின் கீழிருந்த டிராயரை திறக்கிறாள். அதன் கீழே இருந்த பலகையை கையால் அழுத்தி பின்னால் நகர்த்துகிறாள். அதற்கு அடியில் ஒரு ரகசிய அறை இருக்கிறது. அதில் ஒரு டைரி இருந்தது.
நான் விழித்துக்கொண்டேன். என் குரட்டையின் கடைசித்துளியை நான் கேட்டேன். எச்சில் வழிந்திருந்தது. வாயை துடைத்தபடி அந்த டிராயரைப் பார்த்தேன். அது கனவுதான். ஆனால் அந்த மேஜை இதைப்போன்றது.
நான் டிராயர்களை திறந்தேன். மேலிருந்த டிராயரின் அடிப்பலகையை பலவாறாக அழுத்திப் பார்த்தேன். ஒன்றுமில்லை. இரண்டாவது டிராயரின் அடிப்பலகையை அழுத்தினேன். ஒன்றுமில்லை. இரண்டாம் முறை முயன்றபோது அது நகர்ந்தது. உந்தியபோது விலகிக்கொண்டது. அங்கே ரகசிய அறை இருந்தது.
உள்ளே டைரி இருக்கவில்லை. ஒரு பழைய புத்தகம் இருந்தது. மிகப்பழையது. நூறாண்டுகளுக்கு முன்பிருந்த பைண்டிங். நாகர்கோயில் முனிசிப்பல் லைப்ரரியில் ஒரு பீரோ முழுக்க அப்படிப்பட்ட பழைய நூல்கள் உண்டு. அவையெல்லாம் பழைய பிரிட்டிஷ் கிளப்பில் இருந்தவை. அக்கால வெள்ளைக்காரர்கள் படித்தவை. பின்னர் நூலகத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன. தோலுறையிடப்பட்ட அட்டைமேல் எழுத்துக்கள் பொன்னிறத்தில் அழுத்தி அச்சிடப்பட்டிருக்கும். உள்ளங்கை அகலம்தான் இருக்கும். அன்றைய பிரிட்டிஷார் அவர்களின் கோட்டுக்குள் அவற்றை போட்டுக்கொள்ள முடியும்,
அந்த வினோதமான சூழலால் ஏற்கனவே என் மனம் ஒருவகையாக ’மெஸ்மரைஸ்’ ஆகியிருக்கலாம். இல்லாவிட்டால் அந்தச் சூழலில் எனக்கு படபடப்பும் நடுக்கமும் வந்திருக்கவேண்டும். இன்னும் சரியாகச் சொல்லவேண்டும் என்றால் நான் அப்போது என்னை வேறொருவனாக பார்த்துக்கொண்டிருந்தேன். மெய்யன் பிள்ளை என்ற நான் என் ஊரில் இருந்தேன். என் கற்பனையில் அங்கே அந்த முன்பின் அறியாத இடத்திலிருக்கும் காட்டுப் பங்களாவில், ஆங்கிலப்படங்களில் வருவதுபோன்ற சூழலில் ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த கற்பனை அளித்த விலக்கம் என்னை நிதானமாக இருக்கச் செய்தது.
அந்த புத்தகத்தை கையிலெடுத்தேன். மென்மையாக தூசி படிந்திருந்தது. அதை ஊதி பறக்கவைத்தேன். மூக்குப்பொடி போட்டதுபோல தும்மல் வந்தது. அதை காற்றில் வீசியும் உதறியும் தூசியை அகற்றினேன். மேஜைமேல் வைத்து என்ன புத்தகம் என்று பார்த்தேன். Evelina: Or the History of a Young Lady’s Entrance into the World. நாவல்தான். பதினெட்டாம் நூற்றாண்டு நாவல் என்று தோன்றியது. Fanny Burney எழுதியது.
நான் அந்த புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன். பழங்காலத்தைய கெட்டியான தாள். ஆனால் உறுதியானது. பனையோலைச் சுவடி போலவே ஆகிவிட்டிருந்தது.1882 ல் Thomas Lowndes பதிப்பித்தது. அப்படியென்றால் நூறாண்டுகள் கடந்த புத்தகம். தாள்களில் பூச்சிகளின் துளைகள் இருந்தன. சில இடங்களில் புழுக்கள் வெட்டிய பள்ளங்கள் ரகசிய அறைகள் போல் இருந்தன. நீர் ஊறியதுபோல பலவகையான வடிவங்களில் செந்நிறக் கறைகள் படிந்திருந்தன.
ஐநூற்றி எண்பது பக்க புத்தகம். பழையபாணி ஈயவெட்டு எழுத்துக்கள். மரவெட்டு ஓவியமாக ஆசிரியை ஃபான்னி பர்னியின் படம். பதிப்பாளர் முன்னுரை சற்றுப் பெரிய எழுத்துருவில் இருந்தது. கைக்கடக்கமான புத்தகம். எளிதாகக் கொண்டுசெல்லவும் ஒற்றைக்கையிலேயே வைத்துப் படிக்கவும் உகந்தது. அதன் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தேன். நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று எனக்கு கொஞ்சம் பிந்தித்தான் தெரிந்தது. அதில் ஏதோ ஒரு மர்மத்தை அல்லது ஒரு கதையை தேடுகிறேன். மடித்துவைக்கப்பட்ட ஒரு கடிதம். ஓரு குறிப்பு. ஏதேனும் அடையாளங்கள்.
ஆனால் ஒன்றுமே இல்லை. வெறும் புத்தகம்தான். அதன் பழுப்புநிறமான தோல் அட்டையை நெம்பி அதன் இடைவெளிக்குள் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தேன். ஏதுமில்லை. ஏமாற்றத்துடன் அதை மேஜையில் வைத்துவிட்டு மீண்டும் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன். பின்னர் எழுந்து சென்று சமையலறையில் கோரன் பிடித்து வைத்திருந்த நீரில் கைகளை கழுவிக்கொண்டேன்.
அங்கே நின்று அந்த புத்தகத்தைப் பார்த்தேன். அதில் ஏதோ ஒன்று நிகழும் என்பதுபோல. திரும்பி வந்து அமர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். தூக்கம் வரவில்லை. மணி விடியற்காலை மூன்று. எட்டு மணிநேரம் தூங்கிவிட்டேன். மீண்டும் தூங்க முடியாது. என்னிடம் வேறு புத்தகம் ஏதுமில்லை. இப்படி ஓர் இடம் இது என்று நினைக்கவே இல்லை. இதையே படித்தால் என்ன?
நான் அந்த புத்தகத்தை எடுத்து புரட்டிப்பார்த்தேன். அறைக்குள் சென்று குவளைவடிவ மண்ணெண்ணை விளக்கை எடுத்து பற்றவைத்து மேஜையில் வைத்துக்கொண்டு அதைப் படிக்க ஆரம்பித்தேன்
[மேலும்]
இடுக்கண் வருங்கால்…
”இந்த வாசிப்பு விளக்கு வாங்கின நாளிலே இருந்து ஒரு வார்த்தை வாசிச்சதில்லை”ஜிம் உங்கரின் ஹெர்மன் காமிக்ஸை ரசிக்க நமக்கு ஐம்பது வயது தாண்டியிருக்கவேண்டும். இவை கொஞ்சம் புன்னகைக்கவைப்பவை, அவ்வப்போது ‘என்ன பெரிய ஜோக் இதிலே?’ என்று சலிப்படையவும் வைப்பவை. ஆனால் மெய்யான நகைச்சுவை என்பது அவ்வப்போது இதிலுள்ள சில வேடிக்கைகளைப் பார்த்து அவை யதார்த்த உண்மைகள்தானே என நாம் நினைக்க நேர்வது.
ஹெர்மன் சிரிப்புகள் எங்கே தொடங்குகின்றன? ஏழாண்டுகளுக்கு முன் நான் நாகர்கோயில் மணிமேடையில் மெல்ல வளைந்து திரும்பிய ’பார்வதிபுரம் முதல் பார்வதிபுரம்’ பஸ்ஸில் ஏற முயன்றேன். நான் உத்தேசித்த இடத்தில் பஸ்ஸின் கைப்பிடியும் கால்படியும் இருக்கவில்லை. தவறி உயிரின் ஆவேசத்துடன் இன்னொன்றை பற்றிக்கொண்டு உயிர்தப்பினேன். அப்போது தெரிந்தது, அவ்வளவுதான், ஒரு காலகட்டம் முடிந்தது என்று.
”அந்த புது ஆளு எனக்கு ஹெல்ப் பண்ணிட்டு இங்கதான் இருந்தான்…”அதன்பின் நாம் நம்மை முதியவர்களாக நினைக்க ஆரம்பிக்கிறோம். கால்வைக்கும் முன் படிகளை ஒருமுறை பார்த்துக்கொள்கிறோம். ஏறுவதற்கு முன் உயரமென்ன என்று கணித்துக்கொள்கிறோம். பிறர் உடல்நலம் பற்றிச் சொல்லும்போது செவிகொடுக்கிறோம். சில்லறைச்சிக்கல்களைப் பற்றி நிறையநேரம் யோசிக்கிறோம்.[சீப்பில் ஆணியை வைத்து பற்றிக் கொண்டு ஆணியடிக்கும்போது சுத்தியல் தவறி பட்டுவிட்டால் சீப்பு உடைந்துவிடாதா?- என்கிற மாதிரி]
நமக்கு ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. நெருக்கமான சமவயதினர் சிலர் போய்ச்சேர்கிறார்கள்.நாம் பொறுமையாக கல்யாணங்களுக்கு போய் வரிசையில் நின்று மொய் வைக்கிறோம். சாவு வீடுகளில் தேய்வழக்குகளை உசிதமான முறையில் சொல்கிறோம். “இந்த லேண்ட்லாம் நான் பாக்க சும்மா கெடந்தது, இப்பல்லாம் பிளாட் போட்டுட்டான், என்னா வெலைங்கிறீங்க?” என்று பேசிக்கொள்கிறோம். ”எங்க காலத்திலே ஒரு ஃபோன் பேசணுமானா போஸ்டாப்பீஸுக்கு போகணும்” என்று தொழில்நுட்பத்தை வியக்கவோ பழிக்கவோ செய்கிறோம்.
”அப்டி பாக்காதே, நான் பாலீஷ் பண்ணிட்டிருந்தேன், அவ்ளவுதான்”ஹெர்மன் அமெரிக்க நடுத்தர வர்க்க, நடுவயது கடந்த, குடிமகனின் வாழ்க்கையை காட்டுகிறது. ஜெர்மனிய வம்சத்தவராக இருக்கலாம். பிரம்மாண்டமான உடலும் செங்குத்தான மூக்கும் கொண்டவர். கோட்டு போட்டுக்கொண்டு வேலைக்குச் சென்று அடிக்கடி வேலையிழப்பவர். பெட் பிராணிகள் வளர்ப்பது, ரெஸ்டாரெண்டுகளில் சாப்பிடுவது, ஹாலிடே செல்வது, கண்டபடி ஷாப்பிங் செய்வது ஆகியவை பற்றிய அமெரிக்க கனவுகள் கொண்டவர். அங்கே சிக்கல்களில் மாட்டிக்கொள்பவர்.
அமெரிக்க மொழியில் ’ஸிக் ஜோக்’ எனப்படும் நையாண்டிகள்தான் பெரும்பாலும். கணிசமான கதைகள் வெள்ளெழுத்துக் கண்ணாடி போட்டபிறகு நிகழும் குட்டிக்குட்டி விபத்துக்கள், ஆஸ்பத்திரி அனுபவங்கள், பல்பிடுங்குதல், கண் பரிசோதனை செய்தல். மனைவியின் உடம்பு பூதாகரமாக ஆகிவிடுகிறது, கூடவே அவள் சமையல் சகிக்கமுடியாமலாகிறது. அன்றாட வாழ்க்கையிலேயே இருத்தலியல் துயர் மிக்க கணங்கள் அமைகின்றன
”ஃப்ரிட்ஜிலேதான் முட்டைய வைச்சேன். எப்டி பொரிச்சுதுன்னு தெரியலை”ஹெர்மனுக்கு அமெரிக்காவின் ‘சிஸ்டமும்’ சிக்கல்தான். போலீஸ்காரர்கள், வாசல்காவலர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் எல்லாரும் கொஞ்சம் பயமுறுத்துகிறார்கள். ”உலகம் இத்தனை வேகமாக மாறினால் நான் எப்படி மாறுவது?” என்ற பரிதவிப்பு அவருக்கு உண்டு. தள்ளுபடியில் தேவையில்லாத பொருளை வாங்குவது, நாமே செய்துகொள்ளும் கருவிகளை வாங்கிவந்து தப்பாகச் செய்து பிரச்சினைக்காளாவது, செய்திகளை வேறுகோணத்தில் புரிந்துகொண்டு திகைப்பது என அல்லாடுகிறார்.
இந்தவகையான கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு ஒரு டெம்ப்ளேட் இருக்கும். திரும்பத்திரும்ப அதுவே நடக்கும். நடக்கப்போவதென்ன என்று நமக்கு தெரியும். ஆனால் பார்க்கும்தோறும் அதன் நுட்பங்கள் தெரிய ஆரம்பிக்கும். அமெரிக்காவின் ஒரு நடுத்தர வார்க்கையின் முழுச்சித்திரத்தையே இவை உருவாக்கி அளித்துவிடுகின்றன.
ஜிம் உங்கர் [Jim Unger] பிரிட்டனில் பிறந்த கனடிய கேலிச்சித்திரக்காரர். பதினெட்டு ஆண்டுகள் ஹெர்மன் என்ற தலைப்பில் கார்ட்டூன்களை வரைந்தார். 1937ல் பிறந்தவர் 2012ல் மறைந்தார். தன் அண்ணன் பாப்பின் சாயலில் ஹெர்மனை படைத்ததாக ஜிம் சொல்லியிருக்கிறார்.
ஹெர்மனை அணுக்கமாகப் புரிந்துகொள்ளுந்தோறும் அதிலிருக்கும் நகைச்சுவை மறைந்துவிடுகிறது. பக்கத்துவீட்டுக்காரரிடம் அவருடைய அன்றாடத்தை கேட்டு தெரிந்துகொள்வதுபோல ஆகிவிடுகிறது. நாமே இந்தப்பக்கம் இன்னொரு ஹெர்மனாக இருந்தால்தான் மெய்யாகவே இதை ரசிக்கமுடியும்.
”இந்த மாத்திரைகளை ஒரு கப்பு தண்ணியொட தூங்கி முழிக்கிறதுக்கு அரைமணிநேரம் முன்னாடி சாப்பிடுங்க”நான் ஷேவிங் க்ரீம் வைத்து பல் துலக்கியிருக்கிறேன்.சூடான டீக்கோப்பையை என் தொடைமேலேயே வைத்துக் கொண்டிருக்கிறேன். அண்டாவுக்குள் நீர் இருக்கிறதா என சட்டைப்பைக்குள் செல்போனுடன் குனிந்து பார்த்திருக்கிறேன். கடுகு பொரியும் எண்ணை கொண்ட வாணலியில் கருவேப்பிலை வெங்காயத்தை போட்டபோது அந்த தட்டில் நிறைய தண்ணீர் இருந்திருக்கிறது.
நான் ஷேவ் செய்துகொண்டால் ஆஃப்டர்ஷேவ் பயன்படுத்துவதுண்டு. ஆனால் அவசரத்துக்கு கைக்குச் சிக்காது. ஸ்பிரிட்தானே எல்லாம் என்னும் அடிப்படையில் ஹேண்ட்சேனிடைசரையும் போட்டுக்கொள்வேன். அதுவும் கைக்குக் கிடைக்கவில்லை என்றால் டியோடரண்டை ஸ்ப்ரே செய்துகொள்வேன். அதுவும் ஸ்பிரிட்தான்.நான் மதுவருந்துவதில்லை என்பதனால் அது ஸ்டாக் இருப்பதில்லை.
“இனி சிகிச்சைன்னா மறுபிறப்புத்தான்”அவசரமாக சென்னை கிளம்பவேண்டும். வீட்டில் அருண்மொழி இல்லை, நான் மட்டும்தான். ஷேவ் செய்துவிட்டு வந்து சட்டையைப் போட்டு ஜீன்ஸை போட்டுக்கொண்டே ஆஃப்டர் ஷேவுக்காக தேடினேன். ஸ்ப்ரே அகப்பட்டது. எடுத்து சர் சர் சர் என நான்கு வீச்சு. ஏதோ விபரீதமாக நடந்துவிட்டதென்று தெரிந்தது. என்ன என்று தெரிவதற்குள் நான் பற்றி எரிய ஆரம்பித்துவிட்டேன்.
அது சுளுக்கு , தசைவலிக்கு அடிக்கும் ’மூவ்’ மருந்து ஸ்ப்ரே. விக்ஸையும் அமிர்தாஞ்சனத்தையும் வற்றல்மிளகாயுடன் கலந்து அடித்தது போல ஏரிய ஆரம்பித்தது [இதை பெண்கள் தற்காப்புக்காக பெப்பர் ஸ்ப்ரே ஆக பயன்படுத்தலாம், நான் அனுபவ உண்மையாகச் சொல்லமுடியும்] முட்டாள்தனமாக தண்ணீர்விட்டு கழுவப்போக மேலும் எரியத் தொடங்கியது. வாசலில் ஆட்டோக்காரர் ஜான் ஹார்ன் அடித்தார்.
”அப்பா, உனக்கு சரியாகலைன்னா நான் என்னோட அக்குபங்சரை பண்ணிப்பாக்கவா?”ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. நாகர்கோயிலே பற்றி எரிந்துகொண்டிருந்தது. நடுவே என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த இலக்கிய சிந்தனைகளும் அனல் பறந்தன. ரயில்நிலையத்தி இறங்கி பெட்டியுடன் சென்றபோது எதிர்பட்ட ஒரு வாசகர் புன்னகைத்து நலம் விசாரித்தார். நானும் புன்னகைத்து நலம் கூறினேன். என் முகம் அப்போதிருந்த வடிவை எழுத்தாளர்களின் பொதுவான முகமாக அவர் நினைக்காமலிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
நான் ஹெர்மனை பார்த்தால் அவர் என்னைப் பார்த்து அணுக்கமாகப் புன்னகை புரிவார் என நினைக்கிறேன்.
”புது கோட்டு வாங்கி குடுத்தே. இப்ப சிங்கம் இருக்கிற காட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கே? உன்னோட உத்தேசம் என்ன?”
”உங்க மருமான் இங்க இல்ல, உங்க இறுதிச்சடங்குக்கு போயிருக்கார்”
”வாசிக்க முடியலை டாக்டர், அவ்ளவு கிட்டக்க காட்டினா என்னாலே வாசிக்க முடியாது’”
“ஏய், இந்த முட்டைய எந்தக்கடையிலே வாங்கினே?”
”கூலா இருக்க டிரை பண்ணுங்க. அதுக்கு பயத்தோட வாசனை தெரியும்”
”எந்திரிங்க, பூனை உங்க பல்செட்டை கவ்விட்டுது”
பிரசவ ஆஸ்பத்திரி “இந்த குழந்தை என்னோடதுதான்னு உறுதியா சொல்லமுடியுமா?”
விமானநிலையத்தில்: “பெட்டி வந்திட்டுது, உங்க மனைவிதான் டோக்கியோ போயிட்டாங்க”
”அந்த இடது காலை ரெண்டு நாளைக்கு ஊணாதீங்க”
”காத்துக்காக கதவ தெறந்து வைச்சாச்சு, இப்ப ஓக்கேதானே?”
”ஒண்ணுமில்ல, புது கப்பு. என் மனைவி கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கா”
”இந்த சுத்தியல் இடதுபக்கம் ரெண்டு இஞ்சு தள்ளியே அடிக்குது”
”அதாவது உங்க கணவர் ஃபர்னிச்சரை நகத்துறப்ப நீங்க உதவி செஞ்சீங்க, அப்டியா மாட்டி நின்னுட்டுது…”
”இதுக்கு மேலே அது தந்திரமா இருக்க வாய்ப்பிருக்குன்னு தோணலை?”
”உணவே நாம்னு ஒரு பழமொழி இருக்கு”
”இந்த தொற்றுநோய் பரவாம இருக்கத்தான் நான் டிரைபண்ணணும், நீயே சொல்லு சரிதானே?”
விழிநிறைக்கும் கலை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
விழிநிறைக்கும் கலை கட்டுரை ஒரு புதிய கோணத்தை முன்வைக்கிறது. பொதுவாகவே நமக்கு கலை என்பது சிறுபான்மையினருக்கு உரியது என்னும் எண்ணம் உள்ளது. அது உண்மையும்கூட. சிறுபான்மையினருக்கான கலை சிறிய பட்ஜெட்டில்தான் இருக்கும். ஆகவே கலைப்படம் என்றால் சிறியபடம் என்று புரிந்துகொண்டிருக்கிறோம்.
அத்துடன் நாம் கலையை ஒரு கலைஞனின் ஆன்மவெளிப்பாடாக நினைக்கிறோம். அது கூட்டுக்கலை என்றால் நமக்கு அது கலை அல்ல ஒரு ஏற்பாடுதான் என்று நினைக்கிறோம். ஆகவே பெரிய படங்கள்மேல் நமக்கெல்லாம் ஓர் ஒவ்வாமை உள்ளது
நாம் பெரிய படங்களில் இயக்குநரின் ஆன்ம உண்மையை தேடுகிறோம். பெரும்பாலும் அது அங்கே இருப்பதில்லை. அங்கே பொதுவாக திரண்டுவந்த உண்மையே உள்ளது. ஆனால் இந்த நூறாண்டுகளில் இந்த பெரிய படங்கள் உருவாக்கிய வரலாற்றுச்சித்திரம் என்ன என்பது மிகமிக முக்கியமான ஒன்று. எந்த கலைப்பட இயக்கத்தைவிடவும் இது முக்கியமானது.
ஜி.கணேஷ்
அன்புள்ள ஜெ,
விழிநிறைக்கும் கலையை ஆச்சரியத்துடன் படித்தேன். படித்தபின் தலைகீழாக யோசித்தேன். சோழர்கால புடைப்புச்சிற்பம் முதல் இன்றைய சினிமா வரை. நானே அஜந்தா ஓவியங்களில் திருவிழா, ஊர்வலம் ஆகியவற்றைப் பற்றி ஒரு குறிப்பை எழுதியபோது அது 70 எம்எம் படம் போல இருக்கிறது என்று எழுதியிருந்தேன்.
இந்த விழிநிறைக்கும் கலை என்பது குகையோவியங்களில் இருந்தே தொடங்குகிறது என நினைக்கிறேன்.
எம்.சரவணன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

