Jeyamohan's Blog, page 992
May 5, 2021
நவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்
பி.ஏ.கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள்’
இனிய ஜெயம்
நேற்று வழமை போல நள்ளிரவு 12.30 கு அன்றைய நாளின் உங்கள் தளம் முழுதும் வாசித்துவிட்டு அதன் பிறகு அந்த பக்கம் போகவில்லை. ஆகவே உங்களின் பௌர்ணமி இரவு உரையாடல் அழைப்பை நான் பார்க்க வில்லை.
மேலை ஓவியங்கள் சார்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று முக்கியமான அறிமுக நூல்கள் கடந்த சில வருடங்களில் வெளியாகி இருக்கிறது.
அ. யாவரும் வெளியீடாக ஓவியர் கணபதி சுப்ரமணியம் எழுதிய ஓவியங்கள் : தேடுதல்கள், புரிதல்கள் முதல் பாகம். வெளியான போது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் பரிசளித்தது. இப்போதுதான் வாசித்தேன். கோட்டோவியங்களில் அதற்கும் முதலாக வெறும் கோடுகளில் துவங்கி, இன்றைய அரூப ஓவியங்கள் வரை, இலக்கியத்துக்கான மீமொழியை பயில்வது எவ்வளவு அவசியமோ அப்படி, நவீன ஓவியம் என்பதன் மீமொழியை அறிமுகம் செய்யும் நூல். முழு வண்ணத்தில் 1500 ரூபாயில் மிக அழகிய கலக்டர்ஸ் எடிஷன் னும் இந்த நூலுக்கு உண்டு.
போதிவனம் வெளியீடாக, சி. மோகன் எழுதிய நவீன ஓவியம்: புரிதலுக்கான பாதைகள் எனும் நூல். தடம் இதழில் தொடராக வந்து, இப்போது வண்ணப் பதிப்பாக முழு நூலும் வந்திருக்கிறது. போஸ்ட் இம்ப்ரஷனிசம் துவங்கி நவீன ஓவியங்களை அதன் கொள்கைகள் அலக்கியல்கள் வழியே அறிமுகம் செய்யும் நூல்.\
காலச்சுவடு வெளியீடாக பி. ஏ. கிருஷ்ணன் அவர்கள் எழுதிய இரு பாகங்கள் கொண்ட நூலான மேற்கத்திய ஓவியங்கள் நூல். லக்சாஸ் குகை ஓவியம் துவங்கி, கிரேக்கம், ரோம், கிறிஸ்துவ எழுச்சி, மறுமலர்ச்சி காலம் வரை மேலை ஓவிய மலர்ச்சி குறித்து பேசும் முதல் பாகத்தை கிண்டியில் வாசித்தேன். இது எனக்கு கட்டுப்படி ஆகாது என்று அறிந்து இரண்டாம் பாகத்தை நூல் வடிவில் கலெக்ட்டர்ஸ் எடிஷன் வாங்கி விட்டேன். வண்ண மயமான அந்த நூல் பிரெஞ்சு புரட்சி காலம் துவங்கி இன்று வரை வந்து நிறைகிறது. அந்த இரண்டாம் பாதியில் பாதி வரை வந்திருக்கிறேன்.
பி.ஏ.கிருஷ்ணன்மூன்று நூல்களும் வெவ்வேறு தனித்தன்மைகள் கொண்டவை. முதல் நூல் எழுதியவர் அவரே ஓவியர். ஓவிய உலகுக்குள் நுழையும் சக ரசிகருக்கு தனது பாதை வழியே தேடி அடைந்தவற்றை பகிர்ந்து கொள்ளும் பாங்கில் அமைந்த நூல் அது. இரண்டாம் நூல் எழுதிய சி. மோகன் அவர்களின் ஓவியங்கள் மீதான ஈடுபாடு யாவரும் அறிந்ததே. வாசிப்பவர் மூளையை கிச்சடி கிண்டும் இசங்கள் கோட்பாடுகள் அனைத்தையும் மிக இலகுவான வகையில் அதன் தீவிரம் குன்றாமல் அறியத் தருகிறார். மூன்றாவது நூல் எழுதிய கிருஷ்ணன் அவர்கள் இளம் வயதிலேயே மேலை ஓவியங்கள் மீது ஈடுபாடு அடைந்தவர். தேடித் தேடி அது குறித்து வாசித்தவர். பின்னர் உலகம் சுற்றி தேடித் தேடி பல ஓவியங்களை நேரடியாக தரிசித்தவர். அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு அறிமுக ரசிகனுக்காக ரசனைப் பகிர்வாக எழுதப்பட்ட நூல் இது.
சி.மோகன்ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தையும் குறிப்பிட்ட ஒரு ஓவியம் வழியே அதை ஆக்கிய மேதையின் வாழ்க்கை குறிப்பு வழியே, அவரது வாழ்வு சூழல், சமூக சூழல்,அரசியல் ஆத்மீக பின்புலம் இந்த பகைப்புலத்தில் வைத்து அறிமுகம் செய்கிறார். மேலை ஓவியம் ஒன்றின் நிலக் காட்சியை ஸ்லைடு காட்சி மாற்றுவது போல நெல்லை தாமிரபரணிக் கரைக் காட்சியுடன் இணைத்து விடுகிறார். மோனாலிஸா புன்னகையின் மர்மத்துக்கு இணை சொல்ல கம்பன் கவிதையில் சீதையின் புன்னகை குறித்த கவிதையை தொட்டு எடுக்கிறார். ஆம் எந்த எல்லையில் கலை தனது நிலம் கலாச்சாரம் சார்ந்த எல்லைக் கோடுகளை அழித்து மானுடப் பொதுவாக எழுகிறதோ அந்த எல்லையில் நின்று p.a.k மேலை ஓவியங்களை அறிமுகம் செய்கிறார்.
நூல்களின் பின்னிணைப்பாக மிக்கப் பயனளிக்கும் பெயரடைவுப் பட்டியல் உண்டு. ஒவ்வொரு பெயர் கொண்டும் இணைய வெளியில் ஒரு கடலையை திறக்க முடியும். தொடர் வாசிப்புக்குத் தேடுகயில் மேலை ஓவியங்கள் குறித்த இந்த கலைக்களஞ்சிய தளம் கண்டேன்.
ஐயாயிரம் வருட அறுபடாத வளமான கலைப் பாரம்பரியம் கொண்ட இந்தியாவில், இப்படி ஒரு சொடுக்கில் இலவசமாக நமது கலைச்செல்வங்களை அறிமுகம் செய்யும் ஒரு கலைக்களஞ்சியம் கிடையாது. எங்கள் ஆயா குத்தும் உலக்கைக்கு வயசு ஐநூறு. மோனாலிஸா வயசு வெறும் நானூறு எனும் வகையிலான பெருமிதங்கள் மட்டுமே நம்மிடம் உண்டு.
கடலூர் சீனு
மேற்கத்திய ஓவியங்கள்- பி ஏ கிருஷ்ணன் வாங்கசிதம்பரம்- கடிதம்
அன்புள்ள ஜெ
இணைப்பில் அளிக்கப்பட்டிருந்த சிதம்பரம் படத்தைப் பார்த்தேன். அந்தப்படம் ஒரு அப்ஸ்ட்ராக்ட் கலைக்காக முயல்கிறது. சினிமாவை கதையாக, அல்லது நாடகவெளிப்பாடாக பார்க்காதவர்கள் அந்த சினிமாவின் அழகான தருணங்களை ரசிப்பார்கள்.. அதுதான் சினிமா என்னும் கலை
நீங்கள் சொல்லியிருந்ததுபோல மிகமெல்ல ஸ்மிதாபாட்டீல் நடிக்கும் தமிழ்ப்பெண்ணாகிய சிவகாமியின் கதாபாத்திரம் மலர்வதுதான் அந்த சினிமாவின் அழகே. அவள் பயந்த பெண்ணாக வருகிறாள். எருமைகள்போல பயந்துகொள்கிறாள். அந்த புகைப்படம் வழியாக இன்னொரு உலகம் அறிமுகமாகிறது. அந்த பூக்களை அவள் பார்க்குமிடத்தில் உருமாறிவிடுகிறாள். ஸ்மிதா பாட்டீலை பார்ப்பதே அழகாக இருக்கிறது. அத்தனை டைட் குளோஸப்பில் அவ்வளவு இயல்பாக வெளிப்படுவது ஒரு பெரிய நடிகையால்தான் முடியும்.
அதேபோல கோபி. அவருடைய வெறுமை முதலில் அவருடைய நடத்தை வழியாகவே வெளிப்படுகிறது. சிவகாமியை கண்டு புகைப்படம் எடுக்கிறார். அது அவருடைய ரகசியக் கண். அதன்பின் தலைசீவும்போதே அவருடைய மனம் கிளர்ச்சிகொண்டிருப்பது தெரியவருகிறது
சங்கரனும் சிவகாமியும். அது ஒரு ஆடல். அது சிதம்பரத்தின் வெட்டவெளியில் சென்று முடிகிறது. சினிமாவிலும் இத்தனை நுட்பமான பூடகமான கலை சாத்தியம்தான், நம்புங்கள் ஜெ
எஸ். அர்விந்த்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சிதம்பரம் என்கிற உங்கள் கட்டுரை பழைய நினைவுகளைத் தூண்டுகிறது. சிதம்பரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது சரியல்ல. ஃப்ர்ண்ட் லைன் பத்திரிக்கையில் சிதம்பரம் பற்றி படித்துவிட்டு நானும் என் நண்பனும் கோவையிலிருந்து பாலக்காடு சென்றோம். அங்கே கோட்டை மைதானம் என்கிற இடத்தில் இறங்கினோம். பாலக்காடு செல்வது அதுதான் முதல் முறை. ஓருவரிடம் அந்த படம் எங்கே ஓடுகிறது என்று கேட்டோம். அந்த படத்தைப் பார்ப்பதற்காக தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்களா என்று ஆச்சரியமாக கேட்டு விட்டு நீண்ட தூரம் கூடவே தியேட்டர் வரை நடந்து வந்து வழி காண்பித்தார். தியேட்டர் பெயர் சரியாக ஞாபகமில்லை. அரோமா என்று நினைக்கிறேன். படம் பார்த்து விட்டு ஸ்மிதாவைப் போலவே மூனாறின் அழகில் வீழ்ந்தோம். அடுத்த வாரமே மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மூணாறு சென்றோம். மாட்டுப்பட்டியின் புல் தரையில் மணிக்கணக்காய் சிதம்பரத்தை நினைத்துக்கொண்டு கிடந்தோம். அது ஒரு வயது….
இன்றும் சிதம்பரம் ஒரு மாஸ்டர்பீஸ் என்று நினைக்கிறேன். அதற்கான ரசிகர்களை அது எப்போதும் கொண்டிருக்கும்.
நன்றி.
அன்புடன்
ராமகிருஷ்ணன்.
அன்புள்ள ஜெ.,
அன்றைக்கெல்லாம் அதாவது எண்பதுகளின் மத்தியில் சிறு நகரங்களில் காலை பதினோரு மணிக்காட்சி மட்டும்தான் மலையாளப் படம் போடுவார்கள். எல்லாமே ‘போர்ன்’ படங்கள். ‘கிளு கிளு’ காட்சிகள் நிறைந்தது என்ற வரி இல்லாத விளம்பரச் சுவரொட்டிகளே இருக்காது.
‘பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்க, மலையாளப் படத்துக்கெல்லாம் போறானாம்’ போன்ற புகார்கள் சாதாரணம். இதிலே வேடிக்கை என்னவென்றால், மாங்கு மாங்கென்று சைக்கிளை மிதித்துக்கொண்டு பத்து கிலோமீட்டர் தள்ளி பக்கத்து ஊரில் போய்தான் படம் பார்ப்பது. தமிழனுக்கு மானம் முக்கியம் அல்லவா?
அப்பிடியும் தியேட்டரில் அப்பாவும் மகனும், ஆசிரியரும் மாணவனும் நேருக்கு நேராக சந்திக்கும் நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகளும் நடந்திருக்கிறது.
பாவம் கொடூரன், பிடிகிட்டாப் புள்ளி, அஞ்சரைக்குள்ள வண்டி, உக்கான் ஓர்மிக்கான், மழு (இதற்கு தமிழக சினிமா வினியோகஸ்தர்கள் வைத்த பெயர் ‘மாமனாரின் இன்பவெறி’) என்று ஒரு பெரும் கலாசாரப்பரிவர்த்தனையே நடந்து கொண்டிருந்தது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லையென்றால் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும்.
திரையில் பளிச் பளிச் என்று இரண்டு முறை விளக்கு அணைந்து எரியும். ‘பதறாதே திகையாதே நான் உன்னுடனேயே இருக்கிறேன்’ என்று ‘ஆபரேட்டர்’ கொடுக்கும் சமிங்ஞை அது. சரியான ‘பிட்’ டைப் போட்டு அனைவரையும் மலர்ந்த முகத்தோடு அனுப்பி வைப்பார் ‘ஆபரேட்டர்’ என்கிற ‘கிரியேட்டர்’.
‘கேப்டன் ராஜ் இருக்காப்ல. கன்பார்மா இருக்கு?’ என்று அழைத்த நண்பனைப் பொருட்படுத்தாமல் மதுரை சக்தி தியேட்டரில் வழக்கமான ‘எதிர்பார்ப்புகள்’ இல்லாமல் நான் போய்ப் பார்த்த முதல் மலையாளப் படம் ‘சிதம்பரம்’. தியேட்டரில் நானும், ஆறு பேர் கொண்ட மலையாளக் குடும்பம் ஒன்றும். இத்தனை குறைந்த பேர்களுக்கும் சினிமா ஓட்டுவார்கள் என்று அன்றுதான் தெரிந்து கொண்டேன்.
”பதினாறு வயதினிலே’ க்கு அவார்ட் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் அந்த வருஷம் கோபிக்கு கிடைத்தது. ‘கொடியேட்டம்’ பார்த்தவுடன் அவருக்குக் கொடுத்தது சரிதான் என்று தோன்றியது” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் கமல். இன்றைக்கு இத்தனை வருடம் கழித்து அந்தப் படத்திலிருந்து நினைவில் நிற்பது சீனிவாசன் புல் ‘மப்’பில் பாடும் ‘மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுது ஐயே’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரப் பாடலும், உச்சகட்டக் காட்சி நடக்கும் சிதம்பரம் கோயிலும் தான். முதல் சிதம்பரம் கோயில் தரிசனம் அப்படிதான் கிட்டியது.
அதன்பிறகு அரவிந்தன், பரதன், சிபிமலயில், சத்யன் அந்திக்காடு, ஷாஜி கருண்,ப்ரியதர்ஷன் என்று ஒரு பெரிய அலை எழுந்துவந்து மம்முட்டி, மோகன்லால் துணையோடு மலையாள சினிமாவின் நிறத்தையே மாற்றிக்காட்டியது வரலாறு. உங்கள் கட்டுரை சிறந்த ஒரு மீட்டெடுப்பு. திரும்ப படிக்கவும்,பார்க்கவும் வேண்டும்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
May 4, 2021
ஆன்மிகமும் சிரிப்பும்
வாழ்க்கையோட அர்த்தம் என்ன. அரைமணிநேரத்திலே சொல்லுங்க. ஒரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்குஒரு குறிப்பிட்ட ஆன்மிக வழியை மதிப்பிடுவதற்கு உகந்த கேள்வி “‘நீங்கள் ஜோக் அடிப்பது உண்டா?” என்பது. அதன்பொருள் “உங்கள் ஆன்மிக, தத்துவக் கல்வியில் உங்கள் வழிமுறைகளையும் அடையாளங்களையும் கொள்கைகளையும் கேலி செய்துகொள்ள அனுமதி உண்டா?” என்றுதான்.
ஆசாரங்களையும், நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட மரபுகளில் அது முற்றிலும் அனுமதிக்கப்படுவதில்லை. அனுமதித்தால் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் அப்படியே மறைந்துபோகும். மாற்றமற்ற உறுதிப்பாடுகள் வழியாக நிலைகொள்பவை அவை.
’ஞானம் கிடைச்சதுமே ஒத்தக்கைய மட்டும் தட்டுங்க”தத்துவத்தையும் தரிசனங்களையும் அடிப்படையாகக் கொண்ட மரபுகளில் மட்டுமே அத்தகைய நகைச்சுவை அனுமதிக்கப்பட முடியும்.ஏனென்றல் அறிவார்ந்த உசாவல்கள், மறுபரிசீலனைகள் ஆகியவற்றுக்கு அங்கே இடமுண்டு. நகைச்சுவை அறிவுசார்ந்தது.
ஆசாரவாதம் ஏன் நகைச்சுவையை அனுமதிப்பதில்லை? ஏனென்றால் அது மறுபரிசீலனைக்கு இடமில்லாதது. முழுஏற்பு அதன் நிபந்தனைகளில் ஒன்று. ’நான் மறுப்பின்றி ஏற்றுக்கொள்கிறேன், என்னை முழுமையாக அளிக்கிறேன்’ என்பது அதன் முதல் வரி.
”எப்பவாச்சும் எல்லாத்தையும் கடாசிட்டு அக்கடான்னு கன்சூமரிசத்திலே குதிச்சிடணும்னு தோணுறதுண்டா?”ஆனால் மானுடர் எவராயினும் எதையும் முழுமையாக ஏற்பது அத்தனை எளிதல்ல. ஏனென்றால் பாதுகாப்புணர்வு என்பது ஒரு விலங்காகவே மானுடனுக்கு இயல்பானது. ஆகவே அவன் ஐயப்படுவான், பரிசீலனை செய்தபடியே இருப்பான்.
அந்த ஐயம் அவனுடைய ஏற்பின்மேல் வலுவாக முட்டிக்கொண்டிருக்கும். ஆகவே அதை அவன் அழுத்தி உள்ளே செலுத்துகிறான். அவன் ஆழுள்ளத்தில் புதைக்கிறான். அது இல்லையென எண்ணிக்கொள்கிறான். அதை மறந்தால் அதை கடந்தோம் என்று கருதுகிறான்.
கடைசியா கெளம்பிப் போறவர் ஞானஒளிய அணைச்சுட்டு போகவும்ஆசாரவாதம் அந்த ஆழுள்ளத்து ஐயத்தை இரண்டு வழிகளில் கடக்கிறது. ஒன்று, மாறாத அன்றாடச் செயல்பாடுகளை [அனுஷ்டானங்களை] அது வலியுறுத்துகிறது. சந்தியாவந்தனம், குளியல் மற்றும் பூஜைகள், மந்திர உச்சாடனங்கள், கூட்டுப் பிரார்த்தனைகள், தனிநபர் ஜெபங்கள், ஐவேளை தொழுகைகள் என பலவற்றை அது கண்டடைந்துள்ளது.
இரண்டாவது, அது உணர்ச்சிகரமான ஈடுபாட்டை உருவாக்கிக் கொள்கிறது. கண்ணீர்மல்கச் செய்யும் பிரார்த்தனைகள், உக்கிரமான கதைகள், ஆழமான தொன்மங்கள், தீவிரமான அழகுணர்வுகொண்ட நிகழ்வுகள் என அது அந்த உணர்ச்சிகரத்தை விரிவாக்கிக்கொண்டே செல்கிறது. பக்தி என்று நாம் சொல்வது அந்த உணர்ச்சிகர ஈடுபாட்டைத்தான்.
ஞானத்தோட உயரம் ஜாஸ்தி ஆகிறப்ப ஆக்ஸிஜன் மாஸ்க் அதுவா விழுந்திரும் இங்கஇவ்விரண்டிலும் ஓடிக்கொண்டிருக்கும் பொதுக்கூறு என்பது ’நான் உறுதியாக நம்புகிறேன்’ என்னும் அறிவிப்புதான். ஆசாரங்களிலும் பக்தியிலும் ‘நான் நம்புகிறேன், நான் ஏற்றுக்கொள்கிறேன், பிறிதொன்று எனக்கில்லை, என்னை அர்ப்பணிக்கிறேன்’ என்ற சொற்கள் மீளமீள ஒலிக்கின்றன. பக்திப்பாடல்கள் அனைத்துமே இந்தக் கருப்பொருள் கொண்டவை. பிரார்த்தனைக்கான அழைப்புக்கள், வழிபாட்டுக்கான மூலநூல் வாக்கியங்கள் எல்லாமே நான் நம்புகிறேன் என்னும் தன்னறிவிப்புகளே.
அந்த தன்னறிவித்தல் போதாது என நினைப்பவர்கள் புறத்தாரிடம் ஆவேசமாக வாதிடவும் புகுகிறார்கள். அந்த வாதிடுதல் முழுக்க முழுக்க அவர்கள் தங்களை தாங்களுக்கே நிறுவிக்கொள்ளும் முயற்சிதான். ‘இதுவே உண்மை, பிற எல்லாம் பொய்’ என்பது ஓர் உளநிலையின் இரண்டு பக்கங்கள்.
ஜென் பிறந்தநாள் வாழ்த்து அட்டை. ‘உன்னைப்பத்தின நினைப்பின்மையோட இருக்கேன்’அவர்களுக்கு நேர் எதிரானது நகைச்சுவை. அவர்கள் இயல்பில் நகைச்சுவை உணர்ச்சிகொண்டவர்களாக இருக்கலாம். அவர்கள் உலகிலுள்ள அனைத்தைப்பற்றியும் வேடிக்கைபேசி சிரிக்கலாம். அவர்களின் அந்தரங்கமான நம்பிக்கை நகைச்சுவைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும். அதை ஒரு வர்மமுடிச்சு போல பாதுகாப்பார்கள். அதில் மெல்லத் தொட்டால்கூட உச்சகட்ட வலி கொள்வார்கள்.
உலகம் முழுக்க ‘மதப்புண்படுதல்’ வருவது அங்கிருந்துதான். ஒருவர் தன் நம்பிக்கையைப் பற்றி மறுத்தோ கேலியாகவோ ஏதேனும் சொல்லிவிட்டால் ஒருவர் உச்சகட்ட கோபவெறியோ துயரோ அடைவது அடிப்படையில் ஓர் அபத்தமான செயல்பாடு. என் நம்பிக்கையை நீ பேணவேண்டும் என இன்னொருவரிடம், பலசமயம் நேர் எதிரானவர்களிடம் கோருவதிலுள்ள பொருளின்மை அதை முன்வைப்பவர்களுக்கு உறுத்துவதே இல்லை.
ஜென் ஜிபிஎஸ். 1. உன்னோட ஆனந்தத்தை ஃபாலோ பண்ணு 2. தடையே உனது பாதை 3. அதைத் தேடிப்போனா நீ அதிலே இருந்து விலகிப்போறேமறுப்பவர், கேலிசெய்பவர் தன் தரப்பைச் சொல்கிறார். தேவையில்லை எனில் முற்றிலும் உதாசீனம் செய்யத்தக்கச் செயல்பாடு அது. ஆனால் நம்பிக்கையாளர்கள் எப்போதும் மறுப்பாளர்களைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அஞ்சுகிறார்கள், ஆகவே சீற்றம் கொள்கிறார்கள்
ஏனென்றால், உண்மையில் மறுப்பாளர்களின் வசை,கேலி, மறுப்பு ஆகியவற்றை தங்கள் ஆழத்திலிருந்து எழுந்துசென்று சந்திக்கும் ரகசியக் கண்ணும் காதும் தங்களுக்குள் இருப்பதை நம்பிக்கையாளர் அறிவார்கள்.முருகனைப் பற்றிய ஒரு கேலியை உடனடியாகக் கவனிப்பவர் முருகபக்தர்தான். அவருள் இருந்து ஒரு ஆழ்மனம், ஒரு அழுத்தப்பட்ட இருள், அந்த கேலியை உடனே தானும் செய்கிறது. மறுகணமே குற்றவுணர்வுகொண்டு கூசுகிறது. அந்த குற்றவுணர்ச்சியில் இருந்தே அது சீற்றம் கொள்கிறது.
ஞானம் கிடைச்ச பிறவு நீ உன் ஃப்ரண்ட்ஸ் கூட வெளையாடப்போகலாம்…இனிமேல் கவனியுங்கள், நீங்கள் முருகனைக் கேலிசெய்தால் அந்தக் கேலிக்கு அரைக்கணம் ஒரு முருகபக்தர் புன்னகைப்பதை நீங்கள் காண்பீர்கள். மறுகணம்தான் அவர் சீறி எழுகிறார். இது யோகம் பயிலும் எவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உண்மை. நம் உள்ளம் பலவாறாகப் பிரிந்து ஒன்றையொன்று மறுத்தே இயங்க முடியும்.
அறிவின் வழி அல்லது ஞானத்தின் வழி என்பது பலவாறாகப் பிரிந்து பிரிந்துசெல்லும் கிளைகளின் பின்னலால் உருவாவது. ஏற்கப்படுவதை உடனே அகம் மறுக்கிறது. ஏற்பும் மறுப்பும் முரண்பட்டு ஒரு சமரசமாகவே நிலைபாடு உருவாகிறது. உடனே அதற்கான மறுப்பு நம் அகத்தில் உருவாகிறது. எதுவும் மாறாமல் நிலைகொள்வதில்லை. எதுவும் உறுதியாக நீடிப்பதுமில்லை.
”எப்ப பாத்தாலும் இதை கடிச்சுக்கோ, அதை கடிக்காதே. இதப்பாத்து குரை அதைப்பாத்து குரைக்காதே. இதை தின்னு, அதை தின்னாதே.என்னோட இருத்தலே வெறும் தெரிவுகளா ஆயிட்டுது, சே”இந்த அகவிவாதம் எப்போதுமே நம்முள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த அகவிவாதத்தை எளிதாக்க, இனிதாக்க நகைச்சுவை இன்றியமையாதது. நகைச்சுவை இன்றி அந்த அகவிவாதம் நிகழுமென்றால் அது கொந்தளிப்பாக, அகவன்முறையாகவே இருக்கும். அது அறிவார்ந்த மெய்யியல் தேடலுக்கு மிகமிக ஆபத்தானது.
அத்தகைய கொந்தளிப்பு நிலை தேவையில்லாத மிகையுணர்ச்சிகளை அகத்தில் நிறைக்கிறது. சிந்தனைக்குத் தேவைப்படும் சமநிலையை இல்லாமலாக்குகிறது. ஒரு சிந்தனையை மிகையாக தூக்கி இன்னொன்றை தூக்கிவீசுகிறது. நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் வன்முறை அது.
நான் இப்ப நினைக்காததைத்தான் நீங்களும் நினைக்காம இருக்கிறீங்களா?அகவிவாதத்தில் நகைச்சுவை ஓர் உயவுப்பொருள். எண்ணங்கள் உரசிக்கொண்டு அனல்கொள்வதை அது தடுக்கிறது. இயல்பான எளிதான இயக்கம் நிகழச்செய்கிறது. நகைச்சுவை உள்ளதா என்பதே ஒர் அறிவார்ந்த அகவிவாதம் நிகழ்கிறதா என்பதற்கான சோதனைக் கேள்வி.
இரண்டு வகையில் நகைச்சுவை பயனளிக்கிறது. ஒன்றின்மேல் நமக்கு ஏற்படும் மிகையான ஈடுபாட்டை அது குறைக்கிறது. தேவையான விலக்கத்தை உருவாக்கி அதை தெளிவாகப் பார்க்கச் செய்கிறது. அதாவது ‘செண்டிமெண்ட்’ களை இல்லாமலாக்கி நம்மை மெய்யின் ஒளியில் ஆராயவைக்கிறது.
ஒரு போன் தன்னைத்தானே செல்பி எடுக்கலேன்னா அது எப்டி ஸ்மார்ட் ஆகும்?இன்னொன்று மேலும் நுட்பமானது, ஒன்றை நாம் ஆழமாக ஏற்கவேண்டும் என்றால் அதை நகைச்சுவையாக, கேலியாக ஆக்கிக்கொள்வது உதவுகிறது. நகைச்சுவையில் எப்போதுமுள்ளது எதிர்மறைத்தன்மை. அது எப்படி ஏற்பை அளிக்கும் என்பது ஒரு கேள்விதான். ஆனால் நடைமுறையில் அளிக்கிறது என்பது ஓர் உண்மை
அறிவார்ந்த அகம் கொண்ட ஒருவர் முன் ஒரு கருத்து அல்லது ஒரு படிமம் முன்வைக்கப்பட்டால் உடனே அவருக்குள் அதற்கு எதிரான ஓர் எண்ணமும் உருவாகிறது. அதை தர்க்கபூர்வமாக மறுக்க அவர் இயல்பாகவே முயல்கிறார். அந்த எதிர்ப்பை முறியடித்து அக்கருத்து அல்லது படிமம் தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும். ஆனால் எந்நிலையிலும் அவருள் அது ஒரு ஏற்பு-மறுப்பு நிலையிலேயே இருக்கும்.
‘’நான் யார்?” “இவன் யார்?”ஏனென்றால் அந்த மறுப்பின் அடிப்படையாக இருப்பது அவருடைய தன்னிலை. தன்னிலை உச்சமடைந்தால் ஆணவம். அதை அவர் விடவே மாட்டார், விட்டால் அவர் தன் தனித்தன்மையை இழப்பதுபோல. ‘அருமையான கருத்துதான், ஆனா…’ என்பதே நம்மில் பெரும்பாலானவர்கள் தங்கள் ஏற்பைக்கூட முன்வைக்கும் சொற்றொடராக இருக்கிறது.
ஒவ்வொரு கருத்துடனும் படிமத்துடனும் இணைந்து அதை ஆற்றலிழக்கச் செய்யும் ‘ஏற்பவனின் ஆணவம்’ என்னும் அந்த நச்சுத்துளியை வீரியமிழக்கச் செய்யும் ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு. ஒரு கருத்தை நாம் வேடிக்கையாக ஆக்கும்போது நம்முள் இருக்கும் அதன் மீதான மறுப்பையே வெளிப்படுத்துகிறோம். அதாவது நாம் நம் ஆணவத்தால் செய்வதை விளையாட்டாக மாற்றிச் செய்கிறோம். அது அந்த ஆணவத்தை சிதறடிக்கிறது, கரைத்தழிக்கிறது. அக்கருத்து கலங்காமல், சிதையாமல் நம்மை வந்தடைய வழிவகுக்கிறது.
”வாழ்க்கைநெடுஞ்சாலையிலே அவசரமா போறப்ப அப்பப்ப கொஞ்சம் நின்னு வழியிலே பூத்திருக்கிற அழகான ரோஜாக்களையும் தின்னுடணும்”ஒன்றை எதிர்கொள்ளும்போது நம்மிடமிருந்து எழும் அதை வெளியே தள்ளும் விசையை சிரிப்பாக ஆக்கிக்கொண்டு அதை எதிர்கொள்கையில் இன்னும் இயல்பானவர்களாக நாம் ஆகிறோம். இன்னும் இனியதாக அந்தக் கல்வி மாறிவிடுகிறது. அதிலிருந்து கசப்பு மறைகிறது. வெப்பம் குளிர்கிறது
ஆனால் இரு எச்சரிக்கைகள் தேவை. அந்த நகைச்சுவையே வன்மமும் கீழ்மையும் கொண்டதாக இருக்கலாம். எனில் இருக்குமென்றால் நாம் கீழ்மை நோக்கிச் செல்கிறோம். மூர்க்கமான நிராகரிப்பே அதன் வழி என்றால் பலசமயம் நமக்கு எதுவுமே எஞ்சாமலாகிறது.
”குருவெல்லாம் ஓல்ட் ஃபேஷன். இப்ப எங்க பேரு ஞான ஆலோசகர்”அந்நகைச்சுவை அச்சிந்தனையை அல்லது படிமத்தை ‘சல்லிசாக்குவது’ என்றால் அதுவும் அழிவுச்செயல்பாடுதான். வேதாந்தக் கல்வியில் trivializing என்பது மிகப்பெரிய எதிர்மறைச் செயல்பாடாகச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் இங்கே கற்கப்படுவது மிக நுட்பமானது. அதை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தே பெரிதாக்கி கையாளவேண்டியிருக்கிறது. அதை சில்லறைத்தனமாக அணுகினால் அது இல்லையென்றே ஆகிவிடும்.
ஆகவே எதிர்மறைப் பண்பு இல்லாத, சிறுமையாக்காத நகைச்சுவையே உகந்தது. பலசமயம் அத்தகைய நகைச்சுவை மிக ஆழத்தில் ஒரு கவித்துவத்தை கொண்டிருக்கிறது. ஓர் அற்புதமான உதாரணம் போல அந்தக் கருத்தை விளக்கி நிற்கிறது. அக்கருத்தை இன்னொருவருக்குச் சொல்ல மிகமிக உகந்த வழியாக தெரிகிறது
”கொஞ்சம் அந்த செகண்டிலே அப்டியே இருந்திட்டிருங்க. இந்த காலை பேசிடறேன்”வேதாந்தமும், பௌத்தமும்தான் சிரிப்புக்கு பெருமளவு இடமளிப்பவை. அன்றும் இன்றும் மிகச்சிறந்த நகைச்சுவைகள் அவை சார்ந்தே உள்ளன. ஏனென்றால் சிரிக்கச் சிரிக்க அவை அளிக்கும் மெய்ஞானம் பெருகுகின்றது. அவற்றின் ஆதாரமான கொள்கைகள் ஒரு நகைச்சுவையாலும் விளக்கத்தக்கவை.
ஒருவேளை ஒருவகை நகைச்சுவைதானோ என்னவோ. இல்லாத ஒன்று இப்படியெல்லாம் ஆகவேண்டும் என்றால் அதற்கு நல்ல நகைச்சுவையுணர்ச்சி இருக்கவேண்டும்.
கல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்
தாண்டிக்குடி கல்வட்டங்கள்- ராஜமாணிக்கம்-2
தாண்டிக்குடியின் கல்வட்டங்களில் இருக்கும் கற்குவைகள் ஒரு தனித்த அடையாளச்சின்னம். கல்வட்டங்களில் நான்கு வகை உள்ளது.
கல் வட்டங்கள் ( stone circle)குத்துக்கல் வட்டங்கள் ( stone henge )வட்டக்கற்குவைகள் ( cairn circles )தனித்த கற்குவைகள் ( cairn heap )Stone circleகள் என்பவை கற்களை வட்டமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு. இதன் நடுவே சிஸ்ட்கள் , அல்லது டால்மென்கள் இருக்கும். சில முக்கியமான இடங்களில் குத்துக்கல் எனும் மென்ஹிர் இருக்கும். ஆப்ரிக்காவிலிருந்து , அரேபியா, ஐரோப்பா, ரஷ்யா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து வரை இந்த பண்பாட்டு சின்னத்தின் தொடர்ச்சி இருக்கிறது. வட்டம், சுருள் எல்லாம் பிரபஞ்ச பேரதிசயம், இறைவடிவம் என்பது முது மூதாதைகளின் அறிதல். அதனால் வணங்கத்தக்கது அனைத்தும் , அழிவில்லாத அனைத்தும் வட்ட வடிவில் இருக்கும். இவை அனைத்தும் பெருங்கற்கால பண்பாட்டின் துவக்கம் முதலே இருக்கிறது. பாரதம் முழுக்கவும், ஸ்காண்டினேவிய, நாடுகளில் காணக்கிடைப்பது அனைத்தும் பெருங்கற்கால கல் வட்டங்களே.
Stone henge கள் குத்துக்கல்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். பழைய ஹெலனிக் பாகன் ஆலயம் போல இருக்கும். இவைகளை பொது யுக துவக்கத்திற்கு 5500 ஆண்டுகளுக்கு முன்பு முதல் பொ. ஆ 1300 வரை 8 பிரிவுகளாக பிரித்து சொல்வது பிரிட்டிஷ் தொல்லியலாளர்களின் வழக்கம். கல்வட்டங்கள் பற்றி மிக அதிகமாக எழுதி இருப்பவர்கள் ஆங்கிலேய நிலவியலாளர்கள் தான். கிரேக்க வரலாற்றாய்வாளர்கள், பாகனிய பின் தொடர்வர்கள், அக்கல்டிஸ்ட்கள் , வானியலாளர்கள் , கீழை நாகரீக ஆய்வாளர்கள் இது பற்றி எழுதி இருக்கிறார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தில் முதன்மையாக இந்த ஸ்கீரின் சேவர் இருப்பதை அனைவரும் பார்த்திருப்பார்கள். இவைகளில் 360 அடி விட்டமுடைய கல் வட்டம் வரை கண்டறியப்பட்டுள்ளது. கற் கோடாரிகள் முதல் இரும்புக்காலம் வரை இந்த ஸ்டோன் ஹெஞ்ச்கள் கண்டறியப்பட்டுள்ளது. 70% மானவை உலோககாலம் துவங்குவதற்கு வெகு முன்பாகவே நிலை நிறுத்தப்பட்டவை. இவைகள் astronomical observatories of pre historic period என்று ஒரு தரப்பும். இது வெறும் burial monument என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இவை யுகங்களுக்கு இடையே சென்று வர இருக்கும் ரகசிய கால சாளரம் என்றும் வாதிடும் தரப்புகள் இருக்கிறது.
வட்டக்கற்குவைகள்.( cairn circle )
மலைகள் மீது வழி காட்டப்படுவதற்காகவும், மைய வட்டக்கற்களை குறிப்பதற்காகவும் வைக்கப்படும் கல்லால் அடுக்கப்பட்ட வட்ட வடிவ குவைகள் இவை. கற்கள் குவியலாகவும் , வட்டமாகவும் அடுக்கப்படும் முறையால் இது தனித்தன்மையானது. போருக்கு சென்று விட்டு உயிர் மீண்டு வர பிரார்த்த்தித்து கட்டுகிறார்கள் . இமயமலைப்பகுதிகள் பலவற்றில் இப்படியான கல் குவியல் அடுக்குகளை நாம் பார்த்திருக்கிறோம். இதன் பின் தொடர்ச்சியாக கல் சாங்கியம் என்ற பெயரில் இன்றும் நீத்தார் சடங்கில் இடம் பெற்றிருப்பதை பார்க்கலாம். இது கெய்ர்ன் சர்க்கிள் எனப்படும். கிரேக்கவியலாளர்களுக்கு முந்தைய இயற்கையிலாளர்கள் இந்த கற்குவைக்கு முன்பு வணங்கும் ஓவியங்களை பார்த்திருப்போம். கிரேக்க கடவுளான ஹெர்மிஸ்ஸின் வழிபாட்டிடம் கெய்ர்ன் சர்க்கிள் போல இருப்பதை ஒப்பிட்டு நினைவில் கொள்ளுங்கள்.
Cairn heap தனித்த கற்குவை மாடங்கள்.
கற்களை கொண்டு வட்டவடிவில் அடுக்கி குன்று போல அடுக்கமாக கொண்டு சென்று உச்சியில் ஒரு குத்துக்கல் வைத்து முடித்திருப்பார்கள். இது போன்ற கற்குவைகள், மலைகளின் குறியீட்டு வடிவம் .மலைகள் வானோர்களுக்கும் மண்ணோருக்குமான பாலம் என்ற நம்பிக்கையை குறிப்பது. தமிழகத்தில் கல்வராயன் மலை, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் எளிதில் காணக்கிடைக்கிறது. போரில் உயிர் நீத்த மூத்தோருக்காக செய்யப்படும் கல் ஆலயம் இவைகள். இதுவும் ஆஸ்ட்ரலாய்டு, நீக்ராய்டு மக்களின் பரவல் இருந்த இடங்கள் முழுக்க பரவி இருக்கிறது. கெய்ர்ன் ஹீப்பின் க்ளாசிக்கல் வடிவம் தான் மைதாம் என்றும், மைதாமின் நியோ கிளாஸிக்கல் வடிவமே பிரமிடுகள் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வட்டம் போலவே, முக்கோணமும், இன்ன பிற ஜியோமிதி சின்னங்களும் இறைவனால் நேரடியாக மனிதனுக்கு உணர்த்தப்பட்டவை. மனித மூளையால் அணுகி உருவாக்க முடியாதவை என்பது கிரேக்கர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த அனைத்து கல்வட்டங்களும் அதன் raw and classical art form அனைத்துமே ஈமச்சடங்குகள், ஈமச்சின்னங்களோடு தொடர்புடையவை. இவற்றின் மையத்தில் தாழியில் முழு உடலையோ,அல்லது எரி மிச்சத்தையோ வைக்கும் பழக்கம் அனைத்து பகுதிகளிலும் இருக்கிறது. அவை நிலத்தில் புதைக்கப்பட்ட cist அல்லது மலை மீது தருக்கி நிற்கும் dolmens களாகவோ இருக்கலாம். இது தவிரவும் நெருப்பை வணங்கும் ஆக்னேய மார்க்கத்தவர்கள், ஜெராதுஷ்ட்ரா சமயத்தவர்கள், கிரேக்க இயற்கை வழிபாட்டாளர்கள் ஆகியவர்கள் இறப்பிற்கு பின் மலை மீது வைக்கப்படும் உடல் 48 நாளில் பின்னப்பட்ட பின் மீதம் உள்ளதை தாழிகளில் இட்டு அதோடு இறந்தவர்களின் ஆசைக்குரிய பொருள்கள், ஆயுதங்கள், அணிகலன்கள், கொள்கலன்கள், நீர், விளக்கு , பணியாட்களோடு சேர்த்து கற்குவைகளில் வைக்கும் வழக்கமும் இருக்கிறது .
தாண்டிக்குடியின் மலை முகட்டின் நடுவில் கற்குவைகளால் சூழப்பட்ட கல் பதுக்கைகள் காணக்கிடைக்கிறது. இது பாதி சிதைந்தும், உடைந்தும், ஆனால் கட்டுமான நேர்த்தியால் வடிவ ஒழுங்கை தக்க வைத்துக்கொண்டும் இருக்கிறது. இந்த கெய்ர்ன் ஹீப் சர்க்கிளில் நடுவே இரண்டு தடுப்புகள் கொண்ட ஒரு பதுக்கையும், நான்கு தனித்த அறை கொண்ட பதுக்கையும் திசைக்கொன்றாக இருக்கின்றன. இதன் cap stone தான் வழி சொல்லும் முக்கிய அடையாளம் . தமிழகத்தில் இது போன்ற கற்குவை அடையாளங்கள் கல்வராயன் மலை, கொல்லிமலை, கருமந்துறை, சித்தேரி, ஆதனூர், முள்ளுக்குறிச்சி, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
பெருங்கற்கால நாகரீகத்தின் ஈமச்சின்னங்களில் கல் ஆயுதங்கள், வேட்டைக்கருவிகள், மண்பாண்டங்கள், மனித எலும்பு மிச்சங்கள்,கிடைத்திருக்கிறது. சில கற்குவை மாடங்களில் வாள்கள், வேல் முதலியவையும் கிடைத்திருக்கிறது. இவைகளை பொதுவாக கல்வீடு, பாண்டியன் வீடு, பாண்டவர் வீடு , குள்ளர்கள் வீடு என்றெல்லாம் அழைக்கிறார்கள். பெருவெள்ளம், பெருங்காற்று ஆகியவைகளையும் சமாளித்து நிற்கும் அளவு வடிவ நேர்த்தியோடும், கட்டுமான நுட்பத்தோடும் இந்த குவைகள் அடுக்கப்பட்டுள்ளன. கற்களை கலவையின்றி சிறிய அளவில் கூட நீர் புகாமல் அடுக்கும் கலை தெரிந்த கல் கட்டிட மேஸ்த்திரிகள், மண்ணையும் சுண்ணத்தையும் அரைத்து கலவை வைக்கப்பட்டதே தெரியாமல் கருங்கல்லை கட்டி அடுக்கும் சுண்ணாம்பு போயர்கள் இன்றும் இருக்கிறார்கள். அது போலவே இந்த பண்பாட்டு சின்னங்களை எழுப்பியவர்கள் ஒரு தனிக்குழுவாக, ப்ரீமேசன்கள் போல கல்ட்களாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
ஹீப்கள் பற்றியும், பிற பண்பாடுகளில் இவை என்னவாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் நீங்கள் தத்துவவியலாளர் பர்மநைட்டின் ஆதரவாளர் ஆவது தவிர வேறு வாய்ப்புகள் இல்லாமல் போகும். கிரேக்க தொன்மங்களில் இருக்கும் ஹெர்மிஸ் தான் . ஹெர்மிஸ் தான் நனவுலகிற்கும், கனவுலகிற்கும், புவர் உலகிற்கும் சென்று வரக்கூடிய ஆற்றல் உடையவர். தெய்வங்கள், தேவதைகள், சாத்தான்களோடு மனிதர்களுக்காக பேசுபவர். மனிதர்களின் கனவை, விழைவை தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் ஏன் சில நேரங்களில் பாதாளத்தில் வீற்றிருக்கும் இருள் தேவதைகளுக்கும் எடுத்து சொல்பவர். மனது தான் இவரின் கருவி, காம, குரோத, மோகம் மூலம் மனித மனங்களை கட்டுபடுத்துவது ஹெர்மிஸ். Pre hellanic ஹெர்மிஸ் இன்னும் சுவாரஸ்யமானவர், அவர் மீறலின் வழியாக மனிதர்களை தன் ஆளுகைக்கு உட்படுத்துபவர். பயணம், சாகசம், வணிகம், சூது, கட்டற்ற பெருங்காமம் , கனவு, ஆற்றல், விழைவு இவைகளின் தெய்வம். ஹெர்மிஸின் ஆளுகைக்குட்பட்டதே கற்களும் , மலைகளும், நம் இந்திரன் போல. இன்னும் தெளிவாக சொன்னால் இந்திரன், சந்திரன், மன்மதன் போல. இவரை அழைக்க பயணம் செய்து மலை ஏறி வழிபடலாம். அல்லது கல்குவையை சிகரமாக உருவகித்து அதன் மூலம் வழிபடலாம். இந்த ஆர்க்கிடைப் எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மாற்றமின்றி வருகிறது பாருங்கள்.
தாண்டிக்குடியின் இந்த கற்குவைகளை தமிழ் பண்பாட்டு அடையாளம் என பெருமிதப்படலாமா? கல் தோன்றி முன் தோன்றா காலத்தே வாழ்ந்த முது மூத்த பண்பாடு தமிழ் பண்பாடு எனலாமா? என்றால், இந்த வகை கற்குவைகள், கல்வட்டங்கள், மற்றும் இன்ன பிற ஈமச்சின்னங்கள், முது மக்கள் தாழி அனைத்தும் மானுட குலத்திற்கு பொதுவானதாக இருக்கிறது. இந்த கனவை நாம் மட்டும் காணவில்லை, இதே காலத்தில் ஜார்ஜியாவிலிருந்தும்,எகிப்திலிருந்து , எதியோப்பியாவில் இருந்து, சாலிஸ்பரியில் இருந்து எரித்திரியா வரை பலரும் இதே போன்ற கனவை காண்கிறார்கள். அதன் வழி நடக்கிறார்கள். இந்த ஒருங்கிணைந்த மானுட பண்பாட்டு படலத்தோடு தமிழன், ஆங்கிலேயன், ஆப்ரிக்கன், ரஷ்யன் , ஆஸ்ட்ரலாய்டு, சைவன், இந்து, பாகனியன், இயற்கையிலாளன், ப்ரி சாக்ரட்டேரியன், அத்வைதி, சைவ சித்தாந்தி, என்று எதேதோ குறியீட்டு அடையாளத்தை நம்மீது நாமே சூட்டிக்கொண்டாலும், நம் மனங்கள் சூப்பர் ஈகோவின் அடிப்படையில் ஒன்றாக இருக்கிறது. கார்ல் யூங்கிலிருந்து , மண்டன மிஸ்ரர் வரை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் நாம் பல்வேறு வியாக்யானங்களை நியாய, வைசேஷிக சாஸ்திரங்கள், யோக சிந்தனைகள், அதர்வண வேதங்கள், உப நிஷதங்களிலிருந்து கார்ல் யுங்கின் நவீன மனம் மெய் பற்றிய கோட்பாடுகள் ,கூட்டு மனம் ( super conscious), கூட்டு நனவிலி ( collective consciousness/ sub consciousness) வரையிலும் விிரிவாான அறிதல் ஆகியவைையின் துணையோடு ஆழ் படிமங்களை நம் பண்பாட்டு சட்டகங்கள் பின்புலத்தோடும் , தொன்மங களின் துணையோடும் தேடினால் நாம் அனைவரும் ஒரு கனவை கண்ட முது மூதாதையின் பின்தொடர்வர்கள்.
கல் வட்டங்கள், பதுக்கைகள், திட்டைகள், குத்துக்கல்களின் நிமித்த காரணம் என்ன? என்ற கேள்வியும், இவைகள் வெறும் காலத்தை நோக்கி சொல்லப்பட்ட குறிப்புகள் மட்டும் தானா. அல்லது காலாதீதமாய் ( காலம் கடந்தும் ) நிலை பெற வேண்டும் என்ற உந்துதலா? பிரபஞ்சத்தை நோக்கிய ஆதாரமான கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாய் சொல்லப்பட்ட புதிர் விடைகளா? அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில், ஆகாசத்தை பூமியில் உள்ள பொருட்களை கொண்டு அளவிட்டு, புரிந்து கொள்ள செய்த முயற்சியா? நம் முன்னோர்கள் பிரபஞ்சத்தை அறிந்து கொள்வதற்காக, செய்த முயற்சியா? பிற கோள்களோடு பேச செய்த முயற்சியா? இதன் நிமித்த காரணம் என்ன? என்றும் மீண்டும் மீண்டும் வினாக்களுடன் தேடுகிறேன்..
வீர ராஜமாணிக்கம்
யானைடாக்டர்- கடிதம்
திரு.ஜெயமோகன் அவர்கட்கு,
வணக்கம். ‘யானை டாக்டர்’ கதையை மீண்டும் ஒருமுறை படித்தேன். ‘யானை டாக்டர்’ தொன்மம் என்ற தங்கள் பதிவு குறித்த எனது கேள்வியுடன் அனுப்பிய சிறு கடிதம் எவ்வளவு அபத்தமானது என்று எனக்கே புரிகிறது. மன்னியுங்கள். அக்கதையை சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. கடிதம் எழுதும் முன் மீண்டும் ஒருமுறை படித்திருக்க வேண்டும்.
காட்டில் வீசப்படும் மது குப்பிகளால் யானைகள் பாதிக்கப்படுகின்றன என்ற ஒற்றைச் செய்தியைச் சொல்லும் அல்லது வலியுறுத்தும் ஒரு கதை இல்லை அது. பலரால் அவ்வாறு புரிந்து கொள்ளப்படலாம். நான் உட்பட அப்படித்தான் புரிந்து கொண்டேன்.
அது மட்டும்தான் நோக்கமாக இருந்திருந்தால், யானை டாக்டர் குறித்து உங்கள் ஒரு கட்டுரையே போதும். காட்டில் வாழ்ந்து காட்டை நேசித்து அதில் ஒரு அங்கமாக மாறிவிட்டார் டாக்டர்.கே. அவரும் அந்தக் காட்டின் ஒரு துளி.
நடிப்பில் சாதிப்பது பற்றி ‘காவியத் தலைவன்’ படத்தில் ஒரு உரையாடலில் எழுதியுள்ளீர்கள் காளி கூறுவான் ‘கைதட்டல் எல்லாம் வேண்டாம், அந்த இடத்திற்கு போய்விட்டேன் என்று எனக்குத் தெரிந்தால் போதும்’. அந்த இடத்தில் வாழ்ந்தவர்தான் டாக்டர்.கே. அந்த இடத்தில்தான் நீங்களும் வாழ்ந்து கொண்டு இருக்குறீர்கள். நீங்களும் ஒரு ‘யானை டாக்டர்’தான்.
“ வலிகளை கவனிக்கறது ரொம்ப நல்ல பழக்கம் . அதைமாதிரி தியானம் ஒண்ணும் கெடையாது . நாம யாரு , நம்ம மனசும் புத்தியும் எப்டி ஃபங்ஷன் பண்ணறது எல்லாத்தையும் வலி காட்டிரும் . வலின்னா என்ன ? சாதாரணமா நாம இருக்கறத விட கொஞ்சம் வேறமாதிரி இருக்கற நிலைமை . ஆனால் பழையபடி சாதாரணமா ஆகணும்னு நம்ம மனசு போட்டு துடிக்குது …
அதுதான் வலியிலே இருக்கற சிக்கலே….பாதி வலி வலிய கவனிக்க ஆரம்பிச்சாலே போயிடும்” ரமண மகரிஷி ‘யாருக்கு வலினு’ கவனினு சொன்ன போதனையை நினைவுபடுத்தியது.
“ உண்மையிலே மனுஷன்தான் இருகக்றதிலேயே வீக்கான மிருகம் . மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும்”
உண்மைதான் உலகம் தோன்றியதில் இருந்து விலங்களும் செடி கொடிகளும் எப்படி வாழ்ந்தனவோ அப்படியே வாழ்ந்து வருகின்றன. ‘ஆறாம் அறிவு’ மனிதனை இயற்கைக்கு எதிராகவே போரிட வைக்கிறது. மரபணு மாற்றம் செய்து கொண்ட ஒரே பிராணி மனிதன்தானே. தனக்கு மட்டுமல்ல மற்ற ஜீவராசிகளுக்கும் மனிதன் மரபணு மாற்றம் செய்ய விழைகிறான். இயற்கை விதிகளுக்கு எதிராக இயங்க மனிதனால் மட்டுமே முடியும்.
நான் யோசித்துப் பார்த்து இருக்கிறேன். உலகின் மொத்த மனித இனத்தையும் அழித்துவிட்டால் உலகம் காடுகளால் விலங்குகளால் நிரம்பும். உலகம் அதன் முழு கொள்ளவில் வாழும். தன் மீட்சி பெரும். பூமிபந்துக்கு அந்நியமாய் மாறிவிட்ட ஒரே உயிரி மனிதன். அவன் ஒரு செல் உயிரிக்கும் கீழானவன்.
“ புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம் … அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம் . பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும் , அப்டியே உதுந்துடும் . ..”
உண்மைதான். வலி, பயம், அவமானம், பெருமை, புகழ் அனைத்தும் மனதின் உருவகங்களே அன்றி உண்மையில்லையே.
“ நான் என்ற நினைப்பே என்னை கூசச்செய்தது . என் உடம்பே அழுக்குபட்டு நாறிக்கொண்டிருப்பது போலிருந்தது . அழுக்குச்சட்டையை கழற்றிவீசுவதுபோல என்னை உதறிவிட்டு நான்குகால்களுடன் அந்த அதிதூய பசுமைவெளியில் பாய்ந்துசெல்லவேண்டும் . இந்த காற்றும் இந்த வெயிலும் என்னை அன்னியமென ஒதுக்காமல் அணைத்துக்கொள்ளும் . அங்கே வலி உண்டு நோய் உண்டு மரணம் உண்டு . ஆனால் கீழ்மை இல்லை . ஒருதுளிகூட கீழ்மை இல்லை . ’ உன்னை நன்கறிந்த எவரும் அருவருத்து விலகுவர் . உயிர் கொண்ட கீழ்ததரப் புழுதியே நீ ’”
இயற்கையை பார்த்து வியந்து ஒருவன் மேற்கண்ட வரிகளை உணர்ந்தால் அவனது வாழ்வு அந்த இடத்தில் வேறு திசையில் பயணப்படும். யானை டாக்டர் இயற்யாகவே மாறிவிட்ட மனிதப் பிரக்ஞையின் உச்சம். அதனை இயற்கையும் மற்ற உயிர்களும் சுவீகரித்துக் கொள்ளும். அந்த மனிதப் பிரக்ஞை இயற்கையால் ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கப்படாமலோ அன்றி தன்னில் ஒரு அங்கமாகவே சேர்த்துக் கொள்ளப்படும். யானைகள் வாழ்வு குறித்து எளிமையாக எழுதப்பட்ட சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய கதை என்று சொன்ன எனது கீழ்மையை மன்னியுங்கள். இது அறியாமை.
எனது கடிததிற்கு வழக்கமான எழுத்தாளர்களைப் போல் ‘நன்றி. தொடர்ந்து என் கதைகளை படியுங்கள்’ என்று நீங்கள் இரண்டு வரி பதில் எழுதியிருந்தால் நான் உங்களை கடந்து போயிருப்பேன் என் அறியாமையை உணராமல். நின்று உங்களையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். தினமும் உங்கள் வலைதளத்தில் உங்கள் எழுத்துக்களை வாசித்து கொண்டே இருக்கிறேன். எத்தனை கோணங்களில் எத்தனை பதிவுகள். ஒன்றில் இருந்து ஒன்று அதிலிருந்து ஒன்று என்று பின்தொடர்ந்து கொண்டே செல்லலாம். உங்களோடு மனதில் உரையாடிக் கொண்டே இருக்கிறேன்.
நான் இமயமலை முன்பு நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். பெரிய மலை என்று பார்க்காமலே கேள்விப்பட்டேன். தூரத்தில் இருந்து பார்த்து அப்படி ஒன்றும் பெரியமலை இல்லை என்கிறேன். ஏறிவிடலாம் என்று நினைக்கிறேன். சிறிது பக்கத்தில் பார்த்து வியக்கிறேன். அருகே வந்து இரு கைகூப்புகிறேன். இது கடந்து விடமுடியாதது என்று புரிகிறது. என் அவதானிப்புகள் இமயமலைக்கு ஒரு பொருட்டே அல்ல. ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்பது போல் உங்கள் எழுத்தை புரிந்து கொள்ள என்னை தாங்கள் ஆசிர்வதிக்க மனதாற வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆர்.பிரேம் ஆனந்த்.
அன்புள்ள பிரேம் ஆனந்த்
அத்தனை பெரிய சொற்களெல்லாம் தேவையில்லை. பொதுவாக ஆழமாக எழுதப்பட்ட எந்தக்கதையும் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் கொண்டிருக்கும். அந்தக்கதை யானையைப் பற்றியது என்றால் ஏன் புழுக்கள் அத்தனை பேசப்பட்டிருக்கின்றன, ஏன் செந்நாய்கள் வருகின்றன. அது யானைடாக்டரைப்பற்றிய கதை என்றால் ஏன் விலங்குகளும் காடும் அந்த அளவுக்கு பேசப்பட்டுள்ளது? அந்தக்கேள்விகள்தான் கதையின் அடுத்த தளத்துக்கு கொண்டுசெல்பவை. எப்போதும் எளிய வாசிப்பிலிருந்து அந்த மேலதிக வாசிப்பைநோக்கிச் செல்லவே நான் வாசகர்களை தூண்டுவேன்
ஜெ
வெண்முரசும் குழந்தையும்
ஓவியம்: ஷண்முகவேல்அன்புள்ள ஜெ,
பிறந்த நாள் வாழ்த்துகள்.
இம்மடலுடன் அமுதினி உங்கள் பிறந்த நாளுக்கென வரைந்த ஓவியம் ஒன்றை இணைத்திருக்கிறேன். உடன் ஓவியத்திற்கான காயத்ரியின் விளக்கத்தையும்…
சித்தார்த்
குழந்தைகளுக்கு வெண்முரசை வாசித்துக் காண்பிப்பதில்லை. கீர்த்துவுக்கு 7 வயது தான் ஆகிறது. வெண்முரசின் மொழிவனத்திற்குள் அவளால் நுழைய முடிவதில்லை. அதனால், இரண்டு மூன்று அத்தியாயங்களாக நான் வாசித்து வைத்துக் கொண்டு, குஞ்சுகளுக்கு உணவூட்டும் தாய்ப்பறவை போல தினமும் இரவில் கதை சொல்வேன். அறையில் விளக்கணைந்ததும் அவர்களின் மூடிய கண்களுக்குள் அஸ்தினபுரியின் கதவுகள் விரியத் திறக்கும். துவாரகை, அலைத்துமிகளின் நடுவே வானுரசி எழத் தொடங்கும். காந்தாரம் சுடுமணல் பரப்பில் ஆவியெழ விரிந்திருக்கும். ஒவ்வொரு நாளும் தரைக்கீழ் பூமி, தலைக்கு மேல் வானமென வெண்முரசும் அவர்களுடனேயே வாழ்வதும் வளர்வதுமாயிருக்கிறது.
இரு நாட்களுக்கு முன்பாக வெண்முகில் நகரம் – 83 வது அத்தியாயத்தில் கீழ்வரும் பத்தியை வாசிக்கும் போது தோன்றியது, இதைச் சொல்ல முடியாதென. இதுவென் சொல்லில் முடியாதென.
படிப்பதை நிறுத்தி விட்டு, “அம்மு இதைக் கேளேன். கீர்த்து நீயும் தான்” என்றபடி வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தேன்.
பால்ஹிக இளவரசன் பூரிசிரவஸ் முதன் முதலாய் கண்ணன் குழலூதுவதைக் கேட்கிறான்.
“அதன்பின்னர்தான் அவன் குழலிசையை செவிகொண்டான். அது குங்கிலியச்சுள்ளியின் புகை என சுருளாகி எழுந்து மெல்லப்பிரிந்து பரவிக்கொண்டிருந்தது. அவன் நடை தயங்கியது. நீரில் விழுந்த குருதித்துளி. அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம். கொடிவழியாக செல்லும் செவ்வெறும்பு நிரை. இளவெயிலில் ஆடும் சிலந்திவலை. மலைமடியில் விழுந்த முகில்பிசிறு. பாலையில் தன்னந்தனியாக ஓடும் வெண்புரவி. குட்டியானையின் குறுவால் சுழற்சி. பனிப்புகை படரும் மலைச்சரிவுகள். தேவதாரு. தனித்த பசுங்கோபுரமென எழுந்த தேவதாரு. அது சூடிய ஒளிமிக்க வானம். தனிமையென விரிந்த வானம். தித்திக்கும் வானம். மென்மையான குளிர்ந்த வானம். நெடுநேரமென காலம் சென்றபின்னர் மீண்டபோது அவன் திகைப்புடன் உணர்ந்தான், அந்த இசையை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.”
வாசித்து நிறுத்தியதும் அம்மு, மெய்சிலிர்த்துக் கைகளை முன்னால் நீட்டிக் காண்பித்தாள். “வாவ்! அம்மா எனக்கு goosebumps வருது. நான் ஜெயமோகன் மாமாவை நேர்ல பார்த்து congratulate பண்ணனும். எப்டி இப்டிலாம் எழுத முடியுது?” என்றாள்.
பினாத்தலுக்கு பக்கத்தில் வரும்படியாக இரண்டு நாட்களுக்கு இந்தப் பத்தியையே சிலாகித்துக் கொண்டிருந்தவள், இன்று அவர் பிறந்தநாள் என்று தெரிந்ததும் இதை பரிசாக்கிக் கொடுத்திருக்கிறாள். கலைமகள் கைப்பொருளாயிருக்கும் அவர் எழுத்திற்கும் அவருக்கும் அன்புடனும் வணக்கங்களுடனும் எங்களது மனம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
காயத்ரி
அஞ்சலி:டிராஃபிக் ராமசாமி
அடிப்படையில் திரள்மனநிலையும், தலைமை வழிபாடும் கொண்ட தமிழ்ச்சூழலில் பொதுப்பணிகளுக்கு தன்னந்தனியாக இறங்குபவர்கள், ‘முதற்குரலர்களாக’ திகழ்பவர்கள் ஒருவகை களப்பலிகள். அவர்களின் அனல் இச்சமூகத்தின் ஆழத்தில் இருந்து எழுவது, எப்போதும் அணையாதது.
அஞ்சலி
May 3, 2021
காந்தி, இந்துத்துவம், கியூபா
அன்புள்ள ஜெமோ
உங்களுக்கு நான் புதியவன் .உங்களுடைய “இன்றைய காந்தி” நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக ஒரு நூலைப் படித்து முடிக்காமலேயே பாதியில் திறனாய்வு செய்வது முறையற்ற என்பதையறிவேன். இனி எழுதப் போவது திறனாய்வல்ல இரண்டு கருத்துக்கள் மட்டுமே என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.
“வெறுப்புடன் உரையாடுதல்” கட்டுரையில் கம்யூனிஸ்டுகளையும் மாவோயிஸ்டுகளையும் எடுத்துக்காட்டாக நீங்கள் முன்வைத்தாலும் பக்கங்கள் 145 மற்றும் 146 லுள்ள அனைத்து வரையறுப்புகளும் இன்றைய சூழலில் பாஜகவினருக்கு தான் பொருந்துகின்றன.
இரண்டாவதாக ஆயுத எழுச்சி பற்றி எழுதும்போது எந்த நாட்டையாவது உதாரணம் காட்ட முடியுமா என்று வினவுகிறீர்கள். தென்னாபிரிக்காவை கூட காந்தியத்தின் வெற்றிக்கு நீங்கள் உதாரணம் காட்டுகிறீர்கள். ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வீழ்ச்சி என்பதாகவும் நீங்கள் எழுதி செல்கிறீர்கள். ரஷ்யா சீனாவை விடுங்கள். நீங்கள் முன்வைக்கும் கோட்பாடுகள் மற்றும் அறம் சார்ந்து கியூபாவை ஆய்வுக்கு உட்படுத்துவீர்களா?
ஆம் உண்மைதான் தென்னாப்பிரிக்காவில் மாண்டலா காந்திய வழிமுறையில் ஆட்சிக்கு வந்தார். இன்றைய கியூபாவின் சமூக நிலை என்ன? மக்களின் வாழ்க்கைத் தரம் என்ன ? தென்னாபிரிக்க சூழலுடன் நீங்கள் ஒப்பிட இயலுமா? இன்றைய மாபெரும் சிக்கலான கோரோனா நுண்தீயுயிரி(வைரஸ்) கொள்ளை நோயையே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால் உலகில் உள்ள மற்ற நாடுகளின் நிலை என்ன? கியூபாவின் நிலை என்ன? இங்கே எந்த தத்துவம் அறம் சார்ந்து உள்ளது?
ஐயா , காந்தீய விழுமியங்கள் குறித்து எனக்கு பெருமிதம் உண்டு. காந்தியை நான் திறனாய்வுடன்தான் அணுகுவேன். நிற்க!
உங்களது நிழலும் பின்தொடரும் மற்றும் வெள்ளையானை ஆகியவைகளை ஏற்கனவே படித்துள்ளேன். மீண்டும் எழுதுவேன் .
என்றென்றும்
அன்புடன்
நித்தில வாணன்.
அன்புள்ள நித்திலவாணன்
அழகியபெயர். முத்துக்களின் தலைவன். உங்கள் அப்பா போட்ட பெயர் என்றால் ரசிகர் அவர்
காந்தியைப்பற்றிய உச்சகட்ட அவதூறுகள், வசைகள், பழிப்புக்கள் இன்று இந்துத்துவர்களிடமிருந்தே வருகின்றன. நாளும் காதில் விழுந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்நூல் 2008- 2009 ல் என் தளத்தில் கட்டுரைகளாக எழுதப்பட்டது. அன்று தமிழ்ச்சூழலில் இந்த்துவர்களின் குரல் இத்தனை வீரியமானதாக இருக்கவில்லை. அன்றுவரை தமிழகத்தில் காந்திமீதான பழிகளைச் சுமத்திக்கொண்டிருந்தவர்கள் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர், தலித் தரப்பினரே.
அந்நூல் இயல்பாக எழுதப்பட்டது. நான் எழுதிய காந்தியைப் பற்றிய ஒருவரிக் கருத்துக்கு எதிராக மிகமிகக் கடுமையான கண்டனங்கள் வந்தன. ஆதாரமில்லாத வெறுப்புமொழிகள் அவை. அன்றெல்லாம் இணையச்சூழலில் காந்தி ஒரு பொதுஎதிரியாகவே கருதப்பட்டார். அத்தனை தீமைக்கும் உறைவிடமானவராக. காந்திமேல் இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர் போன்றவர்களுக்கு நல்லெண்ணம் வந்தது இந்துத்துவர்களின் எதிரியாக காந்தி ஆனபோதுதான்.
அந்த வசைகளுக்கு நான் மறுமொழி அளித்தேன். ஆனால் எழுத எழுத மேலும் ஐயங்களும் அவதூறுகளும் வந்தன. காந்தியை வெறுப்பவர்கள், காந்திமேல் ஆர்வம்கொண்டவர்கள், காந்திமேல் நம்பிக்கை இருந்தாலும் கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என மூவகையினர் இருந்தனர். அவர்களின் கேள்விகளுக்கு விடையாக எழுதப்பட்டதே பின்னர் நூலாகத் தொகுக்கப்பட்டது. அந்த எல்லா கேள்விகளும் மேலே சொன்ன திராவிட, இடதுசாரிக் கருத்தியல் தரப்புகளிடமிருந்து வந்தவையே. இந்துத்துவத் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எவையும் அன்று எழவில்லை.
இந்துத்துவ தரப்பு வலுவடைந்து முதன்மை எதிர்க்குரலாக ஆகத்தொடங்கியது மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 2010 முதல்தான். இன்னும் சொல்லப்போனால் 2014ல் அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர்தான் அவர்களின் குரலில் பெரும் மாற்றம் வந்தது. பிரச்சாரம் செய்வதனால் உடனடி அரசியல் லாபம் உண்டு என்னும் நிலையும் வந்தது. நாம் காணும் உயரழுத்தப் பிரச்சாரமெல்லாம் அதன்பின்னர்தான்
2014ல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த சிலநாட்களிலேயே, ஆம் மிகச்சில நாட்களிலேயே, உருவான மாற்றம் என் வாழ்க்கையின் மிகமுக்கியமான ஒரு பாடம். அதுவரை ஒரு முகம் காட்டி அணுக்கமாக இருந்த ஒருசில நண்பர்கள் சட்டென்று இன்னொரு முகம் காட்டலாயினர். சாதிப்பழமைவாத முகம், ஆனால் அதை அரசியல்முகமாக காட்ட ஒரு வெளி அமைந்தது அவர்களுக்கு. அஞ்சிக்கொண்டிருந்தவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தது. முந்தைய நிலைபாடுகளை உதறினர். நல்ல நட்புகளை உதறினர்.
நான் நம்பி விரும்பிய நண்பர்களிடமிருந்து காழ்ப்பையும் எள்ளலையும் வசைகளையும் சந்திக்க நேர்ந்தது.உண்மையில் இங்கே சாதி வகிக்கும் பங்கென்ன, அரசியல் அதில் ஊடுருவும் விதம் என்ன என்பதை புரிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அந்த கசப்புகள் என்னை எதிர்மனநிலை கொண்டவராக ஆக்கிவிடலாகாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
இன்றைய காந்தி இன்று இந்துத்துவர் முன்வைக்கும் வாதங்களுக்கும் உரிய பதில்தான். பின்னர் எழுதிய உரையாடும் காந்தி போன்ற நூல்களில் மேலும் விரிவாக அப்பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன.
*
வன்முறையின் வெற்றி குறித்து தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். வன்முறையால் ஓர் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் அதை வன்முறையால் மட்டுமே நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அந்த நிலத்தில் நேரடி வன்முறை ஓர் அரசியல் கருவியாக நிலைகொள்ளும். அது அடக்குமுறை அரசையே உருவாக்கும். உலகவரலாறு காட்டுவது அதையே.
வன்முறையில்லாமல் நிகழும் ஆட்சிமாற்றம் இழப்புகள் அற்றது. அது வன்முறையற்ற அரசியலுக்கான வாய்ப்பை வழங்குகிறது. அதை அந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அல்லது பிழையாக பயன்படுத்திக்கொண்டால் அது அந்த அரசியல் வழிமுறையின் தோல்வி அல்ல. வன்முறைப்பாதையில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கவேண்டும் என்பதற்கான சான்றும் அல்ல. அந்த மக்களின் தோல்விதான். வன்முறை அரசியல் மக்களுக்கு அந்த வாய்ப்பையே அளிப்பதில்லை என்பதுதான் நான் சொல்லவருவது.
ஜனநாயகத்தின் சிறப்பு என்பது அது தன்னைத்தானே சீரமைத்தபடி முன்னகர்கிறது என்பதே. ஜனநாயகத்தில் எல்லா தரப்பும் தன்குரலை முன்வைக்க, அரசியல் சக்தியாக மாற, ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் அளிக்க இடமிருக்கிறது. ஒரு ஜனநாயகத்தில் நிகழும் எல்லா போராட்டங்களும் அந்த ஆட்சி தன்னை சரியான சமநிலையில் வைத்திருப்பதற்காகச் செய்யும் முயற்சிகள்தான். ஜனநாயகம் எதிர்ப்புகள் போராட்டங்கள் உள்முரண்கள் வழியாக, தொடர் சமரசங்கள் வழியாகவே முன்னகர்கிறது.
ஜனநாயகத்தில் இருக்கும் இந்த அம்சமே அதன் வல்லமை. அது அனைவருக்கும் இடமளித்தேயாகவேண்டும். சமரசங்கள் செய்தேயாகவேண்டும். பிழைகளைக் களைந்து முன்செல்ல அதில் இடமிருக்கிறது. அதில் ஒரு குழப்பநிலை, ஒரு முட்டிமோதல் இருப்பதுபோல தெரியும். ஆனால் குழப்பநிலை, முட்டிமோதல் இருந்தால் ஜனநாயகம் ஆக்கபூர்வமாகச் செயல்படுகிறது என்றுதான் பொருள்.
வன்முறை வழியாக ஆட்சிக்கு வந்தவர்களிடம் வன்முறையால் நிகழும் ஆட்சிக்கைப்பற்றல் குறித்த அச்சம் எப்போதுமிருக்கும். ஆகவே அவர்கள் சர்வாதிகாரத்தையே ஆட்சிமுறையாகக் கொள்வார்கள். தங்களுக்கு எதிரான சிறு விமர்சனங்களைக்கூட தங்களை அழிக்கும் முயற்சியாக பார்ப்பார்கள். எதிர்க்குரல்களை முற்றாக நசுக்குவார்கள். விளைவாக விமர்சனமற்ற ஓர் அரசியல், எதிர்நிலைகள் இல்லாத ஓர் அரசு உருவாகிறது. அரசின் பிழைகள் சுட்டிக்காட்டப்படுவதில்லை. நீண்டகால அளவில் பிழைகள் பெருகி பேரழிவு உருவாகிறது.
சர்வாதிகாரத்தில் ஜனநாயகத்திலுள்ள குழப்பநிலை இருப்பதில்லை. அங்கே ‘அமைதி’ நிலவுவதுபோல தோன்றும். அங்கே ஒற்றைப்படையான கருத்துநிலை நிலவுகிறது. அங்கே ஆதிக்கம் என்ன சொல்கிறதோ அதுவே மேலோட்டமாகத் தென்படுகிறது. அதுவே அந்நாடு பற்றி நாம் அடையும் சித்திரமாக உள்ளது. அது உண்மை அல்ல
கியூபா மிகச்சிறிய நாடு. அதன் பொருளியல் ருஷ்யா போன்ற பெரிய நாடுகளின் பேணலில் தாக்குப்பிடிப்பது. அமெரிக்காவுக்கு நேர் கீழே ஒரு ஆயுதத்தளம் தனக்குவேண்டும் என்ற ருஷ்யாவின் நோக்கமே க்யூபாவின் நிலைநிற்புக்கான ஆதாரம். மற்றபடி அது எந்த தளத்திலும் எந்த வெற்றியும் பெற்ற ஒரு நாடு அல்ல. அங்கே புரட்சிக்குப் பின் இருந்தது சர்வாதிகார ஆட்சி மட்டுமல்ல, பரம்பரை ஆட்சியும்கூட. காஸ்ட்ரோவுக்குப் பின் அவர் தம்பி பதவிக்கு வந்தார். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்காலம் ஒரே அரசு, மறுகேள்வி இல்லாத ஆட்சி. எந்தவகையான உரிமைகளுமில்லாத மக்கள் அரைநூற்றாண்டாக ஒரே ஆட்சியின்கீழ் வாழ்கிறார்கள்.
அந்த ஆட்சி அங்கே நல்லாட்சி அளிக்கிறது என்பதை நாம் நம்பவேண்டும் என நமக்கு அந்த அரசு சொல்கிறது. உண்மையில் அங்கே நல்லாட்சி நடைபெறுகிறது என்றால் அங்கே பலகட்சி தேர்தல் நடந்து, மக்களின் முன் பல வாய்ப்புகளில் ஒன்றாக ஆளும் ட்சியும் போட்டியிட்டு, பெருவாரியான ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமரட்டுமே. ஏன் அஞ்சுகிறார்கள், ஏன் ஒடுக்குகிறார்கள்?நினைவில்கொள்ளுங்கள், 1988ல் பெரிஸ்த்யாய்க்கா -கிளாஸ்நோஸ்த் வருவதற்கு முன்பு ருஷ்யா பற்றி இதைவிட வண்ணம் மிக்க சித்திரமே இடதுசாரிகளால் அளிக்கப்பட்டது. அதற்குரிய எல்லா புள்ளிவிவரங்களும் கிடைத்துக்கொண்டிருந்தன.
உண்மையிலேயே அங்கே நல்லாட்சி நிகழ்கிறது என்றால்கூட அந்த முறையை உலகிலுள்ள மற்றநாடுகளுக்கு நீங்கள் சிபாரிசு செய்வீர்களா? கியூபா மிகச்சிறிய நாடு. அந்த ஆட்சியை ஒரு சிறு புரட்சியாளர் குழு அதிரடியாக கைப்பற்றிக்கொண்டது. அப்படி ஆட்சியை கைப்பற்றிக்கொண்ட ஒரு குழு அரைநூற்றாண்டாக வாரிசுரிமையாக ஒரு நாட்டை ஆண்டதென்பது ஒரு நல்ல அரசியல்முறை என சொல்வீர்களா? எதிர்க்குரலே இல்லாமல் அரசுக்கு முன் மக்கள் அடிபணிந்து வாழ்வது நலம் பயக்கும் அரசியல் என்கிறீர்களா? அங்கே எல்லாம் நல்லபடியாக நிகழும் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?
ஆம் என்று சொல்வீர்கள் என்றால் நீங்கள் இன்றைய காந்தியை கொஞ்சம் முதிர்ந்தபின் மீண்டும் படியுங்கள் என்றே சொல்வேன்.
ஜெ
காந்தியும் தலித் அரசியலும் -கடிதம்
கே.ஜி.ஜார்ஜ்- ஆவணப்படம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களுக்கு கே ஜி ஜார்ஜ் அவர்களை குறித்து ஒரு கடிதம் எழுதவேண்டும் என்றெண்ணி, தங்களது வலைத்தளத்தை திறந்தேன் , ஆச்சர்யமாக அதில் முதல் கட்டுரையே அவரை பற்றி நீங்கள் எழுதியதாக இருந்தது. (இரைகளும் இலக்கணங்களும்)
நான் சொல்ல வந்தது என்னவென்றால் சில நாட்களுக்கு முன்பு அவரை பற்றிய ஒரு முழு நீளஆவணப்படம் ” 8 1/2 INTERCUTS LIFE AND FILMS OF KG GEORGE” மலையாளத்தில் வெளியாகியுள்ளது.
தங்கள் தளத்தின் மூலமே அவர் படங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. மேலும் யவனிகா, இரகள் மேளா, ஆதாமிண்டே வாரியெல்லு போன்ற படங்களை பார்த்துள்ளேன்.
மலையாளத்தின் மிகப்பெரிய ஆளுமைகளும், சினிமா பிரபலங்களும் அவர் படைப்புகளை மிக அருமையாக அலசி ஆராய்கிறார்கள். ஒரு விறுவிறுப்பான சினிமா போல் இந்த ஆவணப்படத்தை ரசிக்கும்படியாக எடுத்துள்ளார்கள்.
இந்த ஆவணப்படம் குறித்த தங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்
அன்புடன்
பா. சரவணகுமார்
நாகர்கோயில்
அன்புள்ள ஜெ
கே.ஜி.ஜார்ஜ் பற்றி இன்று ஒரு கவனம் உருவாகியிருப்பதும், அதைப்பார்க்க அவர் இருப்பதும் ஒரு நல்ல விஷயம். நல்ல படங்களை எடுத்த காலகட்டத்தில் அவர் கவனிக்கப்படவில்லை. அதற்கு தனிப்பட்ட காரணம் இல்லை. அன்றைய தேடல் சினிமா என்ற கலையின் சாத்தியக்கூறுகளைப் பற்றித்தான். சினிமாவின் பேசுபொருள் அன்று பெரிதாக கவனிக்கப்படவில்லை
அவர் கவனிக்கப்படாததில் அவருக்கும் பங்குண்டு. அவர் எடுத்த படங்களில் மற்றொராள்,இரைகள் ,யவனிக ,கோலங்கள் ,உள்க்கடல் ஆகியவை மட்டுமே நல்ல படங்கள். பஞ்சவடிப்பாலம் ஒரு முயற்சி. மற்றவை மோசமான படங்கள். சில படங்களை உட்கார்ந்து பார்க்கவே முடியாது.
கே.ஜி.ஜார்ஜ் திரைப்படம் என்ற கலைமேல் அழுத்தமான பற்று இல்லாத கலைஞர். அவருடையது ஒரு நவீனத்துவ மனம். அந்த மனதை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாக அவர் சினிமாவைக் கண்டார். ஆகவே அவருடைய படங்களெல்லாம் சினிமாக்களாக முழுமை பெறாதவை – அவருடைய நல்ல படங்களெல்லாம் திரைக்கதையின் வலிமையால் நிலைகொள்பவைதான்.
ஜார்ஜுக்கு நாடகக்கலையில் ஈடுபாடுண்டு. அவர் தொடர்ந்து மேடைநாடகத்தில் இருந்து நடிகர்களை சினிமாவுக்குக் கொண்டுவந்தார்- திலகன் போல. ஆனால் அடூர் போன்றவர்கள் அப்படி அல்ல. அவர்கள் சினிமாவுக்கான முகங்களையே தேடிச்சென்றார்கள். இந்த நாடக அம்சம் ஜார்ஜின் படங்களில் உண்டு. அது சிறப்பாக வெளிப்படும்போது படம் நன்றகா அமைகிறது. இல்லாதபோது சலிப்பூட்டுகிறது
ஜெயராமன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

