தாண்டிக்குடி கல்வட்டங்கள்- ராஜமாணிக்கம்-2

தாண்டிக்குடி கல்வட்டங்கள்- ராஜமாணிக்கம்-1

தாண்டிக்குடியின் கல்வட்டங்களில் இருக்கும் கற்குவைகள் ஒரு தனித்த அடையாளச்சின்னம். கல்வட்டங்களில் நான்கு வகை உள்ளது.

கல் வட்டங்கள் ( stone circle)குத்துக்கல் வட்டங்கள் ( stone henge )வட்டக்கற்குவைகள் ( cairn circles )தனித்த கற்குவைகள் ( cairn heap )

Stone circleகள் என்பவை கற்களை வட்டமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு. இதன் நடுவே சிஸ்ட்கள் , அல்லது டால்மென்கள் இருக்கும். சில முக்கியமான இடங்களில் குத்துக்கல் எனும் மென்ஹிர் இருக்கும். ஆப்ரிக்காவிலிருந்து , அரேபியா, ஐரோப்பா, ரஷ்யா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து வரை இந்த பண்பாட்டு சின்னத்தின் தொடர்ச்சி இருக்கிறது. வட்டம், சுருள் எல்லாம் பிரபஞ்ச பேரதிசயம், இறைவடிவம் என்பது முது மூதாதைகளின் அறிதல். அதனால் வணங்கத்தக்கது அனைத்தும் , அழிவில்லாத அனைத்தும் வட்ட வடிவில் இருக்கும். இவை அனைத்தும் பெருங்கற்கால பண்பாட்டின் துவக்கம் முதலே இருக்கிறது. பாரதம் முழுக்கவும், ஸ்காண்டினேவிய, நாடுகளில் காணக்கிடைப்பது அனைத்தும் பெருங்கற்கால கல் வட்டங்களே.

Stone henge கள் குத்துக்கல்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். பழைய ஹெலனிக் பாகன் ஆலயம் போல இருக்கும். இவைகளை பொது யுக துவக்கத்திற்கு 5500 ஆண்டுகளுக்கு முன்பு முதல் பொ. ஆ 1300 வரை 8 பிரிவுகளாக பிரித்து சொல்வது பிரிட்டிஷ் தொல்லியலாளர்களின் வழக்கம். கல்வட்டங்கள் பற்றி மிக அதிகமாக எழுதி இருப்பவர்கள் ஆங்கிலேய நிலவியலாளர்கள் தான். கிரேக்க வரலாற்றாய்வாளர்கள், பாகனிய பின் தொடர்வர்கள், அக்கல்டிஸ்ட்கள் , வானியலாளர்கள் , கீழை நாகரீக ஆய்வாளர்கள் இது பற்றி எழுதி இருக்கிறார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தில் முதன்மையாக இந்த ஸ்கீரின் சேவர் இருப்பதை அனைவரும் பார்த்திருப்பார்கள். இவைகளில் 360 அடி விட்டமுடைய கல் வட்டம் வரை கண்டறியப்பட்டுள்ளது. கற் கோடாரிகள் முதல் இரும்புக்காலம் வரை இந்த ஸ்டோன் ஹெஞ்ச்கள் கண்டறியப்பட்டுள்ளது. 70% மானவை உலோககாலம் துவங்குவதற்கு வெகு முன்பாகவே நிலை நிறுத்தப்பட்டவை. இவைகள் astronomical observatories of pre historic period என்று ஒரு தரப்பும். இது வெறும் burial monument என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இவை யுகங்களுக்கு இடையே சென்று வர இருக்கும் ரகசிய கால சாளரம் என்றும் வாதிடும் தரப்புகள் இருக்கிறது.

வட்டக்கற்குவைகள்.( cairn circle )

மலைகள் மீது வழி காட்டப்படுவதற்காகவும், மைய வட்டக்கற்களை குறிப்பதற்காகவும் வைக்கப்படும் கல்லால் அடுக்கப்பட்ட வட்ட வடிவ குவைகள் இவை. கற்கள் குவியலாகவும் , வட்டமாகவும் அடுக்கப்படும் முறையால் இது தனித்தன்மையானது. போருக்கு சென்று விட்டு உயிர் மீண்டு வர பிரார்த்த்தித்து கட்டுகிறார்கள் . இமயமலைப்பகுதிகள் பலவற்றில் இப்படியான கல் குவியல் அடுக்குகளை நாம் பார்த்திருக்கிறோம். இதன் பின் தொடர்ச்சியாக கல் சாங்கியம் என்ற பெயரில் இன்றும் நீத்தார் சடங்கில் இடம் பெற்றிருப்பதை பார்க்கலாம். இது கெய்ர்ன் சர்க்கிள் எனப்படும். கிரேக்கவியலாளர்களுக்கு முந்தைய இயற்கையிலாளர்கள் இந்த கற்குவைக்கு முன்பு வணங்கும் ஓவியங்களை பார்த்திருப்போம். கிரேக்க கடவுளான ஹெர்மிஸ்ஸின் வழிபாட்டிடம் கெய்ர்ன் சர்க்கிள் போல இருப்பதை ஒப்பிட்டு நினைவில் கொள்ளுங்கள்.

Cairn heap தனித்த கற்குவை மாடங்கள்.

கற்களை கொண்டு வட்டவடிவில் அடுக்கி குன்று போல அடுக்கமாக கொண்டு சென்று உச்சியில் ஒரு குத்துக்கல் வைத்து முடித்திருப்பார்கள். இது போன்ற கற்குவைகள், மலைகளின் குறியீட்டு வடிவம் .மலைகள் வானோர்களுக்கும் மண்ணோருக்குமான பாலம் என்ற நம்பிக்கையை குறிப்பது. தமிழகத்தில் கல்வராயன் மலை, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் எளிதில் காணக்கிடைக்கிறது. போரில் உயிர் நீத்த மூத்தோருக்காக செய்யப்படும் கல் ஆலயம் இவைகள். இதுவும் ஆஸ்ட்ரலாய்டு, நீக்ராய்டு மக்களின்  பரவல் இருந்த இடங்கள் முழுக்க பரவி இருக்கிறது. கெய்ர்ன் ஹீப்பின் க்ளாசிக்கல் வடிவம் தான் மைதாம் என்றும், மைதாமின் நியோ கிளாஸிக்கல் வடிவமே பிரமிடுகள் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வட்டம் போலவே, முக்கோணமும், இன்ன பிற ஜியோமிதி சின்னங்களும் இறைவனால் நேரடியாக மனிதனுக்கு உணர்த்தப்பட்டவை. மனித மூளையால் அணுகி உருவாக்க முடியாதவை என்பது கிரேக்கர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த அனைத்து கல்வட்டங்களும் அதன் raw and classical art form அனைத்துமே ஈமச்சடங்குகள், ஈமச்சின்னங்களோடு தொடர்புடையவை. இவற்றின் மையத்தில் தாழியில் முழு உடலையோ,அல்லது எரி மிச்சத்தையோ வைக்கும் பழக்கம் அனைத்து பகுதிகளிலும் இருக்கிறது. அவை நிலத்தில் புதைக்கப்பட்ட cist அல்லது மலை மீது தருக்கி நிற்கும் dolmens களாகவோ இருக்கலாம். இது தவிரவும் நெருப்பை வணங்கும் ஆக்னேய மார்க்கத்தவர்கள், ஜெராதுஷ்ட்ரா சமயத்தவர்கள், கிரேக்க இயற்கை வழிபாட்டாளர்கள் ஆகியவர்கள் இறப்பிற்கு பின் மலை மீது வைக்கப்படும் உடல் 48 நாளில்  பின்னப்பட்ட பின் மீதம் உள்ளதை தாழிகளில் இட்டு அதோடு இறந்தவர்களின் ஆசைக்குரிய பொருள்கள், ஆயுதங்கள், அணிகலன்கள், கொள்கலன்கள், நீர், விளக்கு , பணியாட்களோடு சேர்த்து கற்குவைகளில் வைக்கும் வழக்கமும் இருக்கிறது .

தாண்டிக்குடியின் மலை முகட்டின் நடுவில் கற்குவைகளால் சூழப்பட்ட கல் பதுக்கைகள் காணக்கிடைக்கிறது. இது பாதி சிதைந்தும், உடைந்தும், ஆனால் கட்டுமான நேர்த்தியால் வடிவ ஒழுங்கை தக்க வைத்துக்கொண்டும் இருக்கிறது. இந்த கெய்ர்ன் ஹீப் சர்க்கிளில் நடுவே இரண்டு தடுப்புகள் கொண்ட ஒரு பதுக்கையும், நான்கு தனித்த அறை கொண்ட பதுக்கையும் திசைக்கொன்றாக இருக்கின்றன. இதன் cap stone தான் வழி சொல்லும் முக்கிய அடையாளம் . தமிழகத்தில் இது போன்ற கற்குவை அடையாளங்கள் கல்வராயன் மலை, கொல்லிமலை, கருமந்துறை, சித்தேரி, ஆதனூர், முள்ளுக்குறிச்சி, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

பெருங்கற்கால நாகரீகத்தின் ஈமச்சின்னங்களில் கல் ஆயுதங்கள், வேட்டைக்கருவிகள், மண்பாண்டங்கள், மனித எலும்பு மிச்சங்கள்,கிடைத்திருக்கிறது. சில கற்குவை மாடங்களில் வாள்கள், வேல் முதலியவையும் கிடைத்திருக்கிறது. இவைகளை பொதுவாக கல்வீடு, பாண்டியன் வீடு, பாண்டவர் வீடு , குள்ளர்கள் வீடு என்றெல்லாம் அழைக்கிறார்கள். பெருவெள்ளம், பெருங்காற்று ஆகியவைகளையும் சமாளித்து நிற்கும் அளவு வடிவ நேர்த்தியோடும், கட்டுமான நுட்பத்தோடும் இந்த குவைகள் அடுக்கப்பட்டுள்ளன. கற்களை கலவையின்றி சிறிய அளவில் கூட நீர் புகாமல் அடுக்கும் கலை தெரிந்த கல் கட்டிட மேஸ்த்திரிகள், மண்ணையும் சுண்ணத்தையும் அரைத்து கலவை வைக்கப்பட்டதே தெரியாமல் கருங்கல்லை கட்டி அடுக்கும் சுண்ணாம்பு போயர்கள் இன்றும் இருக்கிறார்கள். அது போலவே இந்த பண்பாட்டு சின்னங்களை எழுப்பியவர்கள் ஒரு தனிக்குழுவாக, ப்ரீமேசன்கள் போல கல்ட்களாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

ஹீப்கள் பற்றியும், பிற பண்பாடுகளில் இவை என்னவாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் நீங்கள் தத்துவவியலாளர் பர்மநைட்டின் ஆதரவாளர் ஆவது தவிர வேறு வாய்ப்புகள் இல்லாமல் போகும். கிரேக்க தொன்மங்களில் இருக்கும் ஹெர்மிஸ் தான் . ஹெர்மிஸ் தான் நனவுலகிற்கும், கனவுலகிற்கும், புவர் உலகிற்கும் சென்று வரக்கூடிய ஆற்றல் உடையவர். தெய்வங்கள், தேவதைகள், சாத்தான்களோடு மனிதர்களுக்காக பேசுபவர். மனிதர்களின் கனவை, விழைவை தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் ஏன் சில நேரங்களில் பாதாளத்தில் வீற்றிருக்கும் இருள் தேவதைகளுக்கும் எடுத்து சொல்பவர். மனது தான் இவரின் கருவி, காம, குரோத, மோகம் மூலம் மனித மனங்களை கட்டுபடுத்துவது ஹெர்மிஸ். Pre hellanic ஹெர்மிஸ் இன்னும் சுவாரஸ்யமானவர், அவர் மீறலின் வழியாக மனிதர்களை தன் ஆளுகைக்கு உட்படுத்துபவர். பயணம், சாகசம், வணிகம், சூது, கட்டற்ற பெருங்காமம் , கனவு, ஆற்றல்,  விழைவு இவைகளின் தெய்வம். ஹெர்மிஸின் ஆளுகைக்குட்பட்டதே கற்களும் , மலைகளும், நம் இந்திரன் போல. இன்னும் தெளிவாக சொன்னால் இந்திரன், சந்திரன், மன்மதன் போல. இவரை அழைக்க  பயணம் செய்து மலை ஏறி வழிபடலாம். அல்லது கல்குவையை சிகரமாக உருவகித்து அதன் மூலம் வழிபடலாம். இந்த ஆர்க்கிடைப் எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மாற்றமின்றி வருகிறது பாருங்கள்.

தாண்டிக்குடியின் இந்த கற்குவைகளை தமிழ் பண்பாட்டு அடையாளம் என பெருமிதப்படலாமா? கல் தோன்றி முன் தோன்றா காலத்தே வாழ்ந்த முது மூத்த பண்பாடு தமிழ் பண்பாடு எனலாமா? என்றால், இந்த வகை கற்குவைகள், கல்வட்டங்கள், மற்றும் இன்ன பிற ஈமச்சின்னங்கள், முது மக்கள் தாழி அனைத்தும் மானுட குலத்திற்கு பொதுவானதாக இருக்கிறது. இந்த கனவை நாம் மட்டும் காணவில்லை, இதே காலத்தில் ஜார்ஜியாவிலிருந்தும்,எகிப்திலிருந்து , எதியோப்பியாவில் இருந்து, சாலிஸ்பரியில் இருந்து எரித்திரியா வரை பலரும் இதே போன்ற கனவை காண்கிறார்கள். அதன் வழி நடக்கிறார்கள். இந்த ஒருங்கிணைந்த மானுட பண்பாட்டு படலத்தோடு தமிழன், ஆங்கிலேயன், ஆப்ரிக்கன், ரஷ்யன் , ஆஸ்ட்ரலாய்டு, சைவன், இந்து, பாகனியன், இயற்கையிலாளன், ப்ரி சாக்ரட்டேரியன், அத்வைதி, சைவ சித்தாந்தி, என்று எதேதோ குறியீட்டு அடையாளத்தை நம்மீது நாமே சூட்டிக்கொண்டாலும், நம் மனங்கள் சூப்பர் ஈகோவின் அடிப்படையில் ஒன்றாக இருக்கிறது. கார்ல் யூங்கிலிருந்து , மண்டன மிஸ்ரர் வரை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் நாம் பல்வேறு வியாக்யானங்களை நியாய, வைசேஷிக சாஸ்திரங்கள், யோக சிந்தனைகள், அதர்வண வேதங்கள், உப நிஷதங்களிலிருந்து கார்ல் யுங்கின் நவீன மனம் மெய் பற்றிய கோட்பாடுகள் ,கூட்டு மனம் ( super conscious), கூட்டு நனவிலி ( collective consciousness/ sub consciousness) வரையிலும் விிரிவாான அறிதல்  ஆகியவைையின் துணையோடு ஆழ் படிமங்களை நம் பண்பாட்டு சட்டகங்கள் பின்புலத்தோடும் , தொன்மங களின்  துணையோடும் தேடினால் நாம் அனைவரும் ஒரு கனவை கண்ட முது மூதாதையின் பின்தொடர்வர்கள்.

கல் வட்டங்கள், பதுக்கைகள், திட்டைகள், குத்துக்கல்களின் நிமித்த காரணம் என்ன? என்ற கேள்வியும், இவைகள் வெறும்  காலத்தை நோக்கி சொல்லப்பட்ட குறிப்புகள் மட்டும் தானா. அல்லது காலாதீதமாய் ( காலம் கடந்தும் ) நிலை பெற வேண்டும் என்ற உந்துதலா? பிரபஞ்சத்தை நோக்கிய ஆதாரமான கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாய் சொல்லப்பட்ட புதிர் விடைகளா? அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில், ஆகாசத்தை பூமியில் உள்ள பொருட்களை கொண்டு அளவிட்டு, புரிந்து கொள்ள செய்த முயற்சியா? நம் முன்னோர்கள் பிரபஞ்சத்தை அறிந்து கொள்வதற்காக, செய்த முயற்சியா? பிற கோள்களோடு பேச செய்த முயற்சியா? இதன் நிமித்த காரணம் என்ன? என்றும் மீண்டும் மீண்டும் வினாக்களுடன் தேடுகிறேன்..

வீர ராஜமாணிக்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.