Jeyamohan's Blog, page 994
May 1, 2021
குமரி ஆதவன்
வட்டார அறிவியக்கம் என ஒன்று உண்டு. அதை நாம் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை, எனக்கே அதைப்பற்றிய தெளிவு குமரி மாவட்டத்திற்கு 1998ல் வந்த பின்னர்தான் உருவாகியது. அதைப்பற்றிய மதிப்பும் அதன் வரலாற்று இடமும் உருவாக மேலும் பலகாலம் ஆகியது.
ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு, நிலப்பரப்பு வட்டத்திற்குள் மட்டுமே நிகழும் அறிவியக்கம் என வட்டார அறிவியக்கத்தைச் சொல்லலாம். அது மாநில அளவில், பொதுவான மொழிச்சூழலில் அறியப்படாமலிருக்கும். மாநில அளவில் அளிக்கப்படும் விருதுகளும் ஏற்புகளும் அதற்கு அமையாமலிருக்கும். ஆனால் அது ஓர் உயிர்ப்புள்ள இயக்கம்
குமரிமாவட்டத்தில் நானறிந்தவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. குமரிமாவட்டத்திற்குள் மட்டும் புழங்குபவை அவை. மதம்சார்ந்த வெளியீடுகள் மேலும் நூறு இருக்கும், அவற்றை இங்கே சேர்க்கவில்லை. இச்சிற்றிதழ்களில் கவிதைகள், கதைகள், சிறுகட்டுரைகள், வட்டாரச் செய்திகள் வெளிவருகின்றன. இவற்றுக்கு இங்கே ஒரு வாசிப்புச்சூழல் உண்டு.
சதங்கை சிற்றிதழ் இவ்வாறு வனமாலிகையால் வெளியிடப்பட்ட இதழ்தான். அ.கா.பெருமாள் பூதப்பாண்டியில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த கைவிளக்கு என்னும் சிற்றிதழில்தான் தன் ஆரம்பகால எழுத்துக்களை எழுதிக்கொண்டிருந்தார். பூதை சொ அண்ணாமலை நடத்தி வந்தார். பூமேடை ராமையா ‘மெய்முரசு’ என்னும் சிற்றிதழை நடத்திவந்தார். நான் தக்கலையில் வேலைபார்த்தபோது முதற்சங்கு என்ற சிற்றிதழ் தக்கலையில் இருந்து வெளிவந்தது. சிவனி சதீஷ் அதை நடத்திவந்தார்.
இந்த இதழ்களும் இவற்றில் எழுதுபவர்களும் ஒர் இரண்டாம்கட்ட அறிவுக்களத்தை உருவாக்குகிறார்கள். அறிமுக எழுத்தாளர்கள் எழுதவும் ஆரம்பகட்ட வாசகர்கள் அறிவியக்கத்தை அறிமுகம் செய்துகொள்ளவும் இவர்கள் உதவுகிறார்கள். இந்த அறிவியக்கத்தை ஓர் அடித்தள இயக்கம் என்றெ சொல்லமுடியும். லக்ஷ்மி மணிவண்ணன், குமாரசெல்வா போன்ற படைப்பாளிகள் இந்த அறிவியக்கத்தில் இருந்து வந்தவர்களே.
சென்ற கால்நூற்றாண்டாக குமரியின் வட்டார அறிவியத்தின் முதன்மை முகங்களில் ஒருவர் குமரி ஆதவன். தக்கலையில் நான் வேலைபார்த்தபோது அவர் அருகே ஒரு சிறிய ஊரில் ஆசிரியர். கடுமையான இளமைப்பருவம் வழியாக வளர்ந்து வந்து முதுநிலை ஆசிரியராக ஆனவர். அவர் அடைந்த எதிர்மறைச் சூழல்களில் பாதியளவு அடைந்தவர்கூட கசப்பும் கோபமும் நிறைந்தவராக ஆகியிருப்பார். குமரி ஆதவன் நன்னம்பிக்கையும் பேரன்பும் மட்டுமே நிறைந்த மனம் கொண்டவர். நான் அறிந்தவரை கிறித்தவ ஆன்மிகம் உருவாக்கும் நேர்நிலைப் பண்புகளின் உருவம் அவர்.
குமரி ஆதவன் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார். சமீபத்தில் அவர் கொரோனா பாதித்திருந்ததை வாட்ஸப்பில் தெரியப்படுத்தியபோது நான் அடைந்த பதற்றம் நான் அவரை என் இளவலாகவே நினைத்திருந்தேன் என எனக்குக் காட்டியது. எந்த சூழலிலும் எவருக்கும் உதவத் தயாராக இருப்பவர் அவர். அவரைப்போன்ற தளராத நன்னம்பிக்கை கொண்ட இலட்சியவாதிகள்தான் சரியான ஆசிரியர்களாக இருக்க முடியும்.
குமரி ஆதவனின் இலக்கியப் பணி என்பது அவருடைய ஆசிரியப் பணியின் நீட்சி. அவர் தன்னை சமூகம் நோக்கிப் பேசுபவராக, விழுமியங்களின் பிரச்சாரகராகவே முன்வைக்கிறார். அந்த நேரடித்தன்மையே அவர் படைப்புகளின் அழகியல். தெளிவான குரல்கொண்ட பேச்சாளராக குமரி மாவட்டம் முழுக்க அவர் அறியப்பட்டிருக்கிறார். அமுதசுரபி இலக்கிய இயக்கம் என்னும் அமைப்பை நடத்தி வருகிறார்.ஆத்மார்த்தமான அவருடைய கவிதைகளை இருபதாண்டுகளாக வாசித்துவருகிறேன். சமீபத்தில் பல இளைய கவிஞர்களின் தொகுதிகளில் குமரி ஆதவனின் முன்னுரையை காண்கையில் அவர் ஓர் இயக்கமாக ஆகியிருப்பது தெரிகிறது.
குமரி ஆதவன் அவருடைய பணி எல்லையை குமரிக்குள் நிறுத்திக்கொண்டவர். இந்த கொரோனா காலத்திற்கு முன்புவரை அவருடைய குரல் குமரியில் எங்கேனும் ஒர் இலக்கியமேடையில் ஒலித்துக் கொண்டேதான் இருந்தது. அவருடைய படைப்புக்களும் அறிமுகக்குறிப்புகளும் குமரியின் இதழ்களில் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. பண்பாட்டை நாம் ஒரு மரம் எனக்கொண்டால் ஆணிவேர்களுக்கு நிகரான ஆற்றல்கொண்டவை சல்லிவேர்த் தொகைகள். குமரியின் பண்பாட்டு வேர்களில் ஒன்று குமரி ஆதவன். அடிப்படை இலட்சியவாதம் ஒன்றை சலிக்காமல் முன்வைத்துக்கொண்டே இருப்பது அவர் குரல்.
அம்மாவும் வெண்கல செம்பும்குலை தள்ளிய வாழைக்குக்காற்றுத் தடுப்பாய்க்கம்பு நாட்டஒத்தையாய்ச் சுமந்து களைத்துப் போன கால்கள்.அண்ணன் சுமக்காமல்என் தலையில்ஏற்றி விட்ட வெறுப்பின் சுமை.திரும்பத் திரும்பக் காயப் போட்ட கருவாடு போல்வரண்டு போன நாவோடுதாகத்தில் விக்கலெடுக்கமீண்டும் சுமட்டிற்காய்த் தட்டுத் தடுமாறி வீடு வந்தேன்.பழைய கஞ்சித் தண்ணியைவெண்கல செம்பில் நீட்டினாள் அம்மா.இதயத்தை இறுக்க மாக்கியிருந்தஎன் கோபத்தின் உச்சத்தில்வெங்கலச் செம்புவிழுந்து சப்பியதுஇப்போதும்தாகம் இருக்கிறதுவிக்கல் வருகிறதுஅம்மாவையும் வெண்கல செம்பையும் தான்காணவில்லை![குமரி ஆதவன்]வனவாசி- வாசிப்பு
”நாவல் இருமையமும் குவிதலும் உள்ளதாக இருக்கலாகாது. நாவலின் நகர்வு ஒரே திசை நோக்கியதாக இருக்கக்கூடாது. வலைபோல நாலாபுறமும் பின்னி பின்னி விரிவடைவதாக இருக்க வேண்டும். நாவலின் ஆகிருதி ஒரே பார்வையில் இருக்கக் கூடாது” (நாவல் கோட்பாடு) என்ற வரையரைக்கு பொறுந்திய அபாரமான நாவல் வனவாசி. விபூதி பூஷண் வந்த்யோபாத்யாயாவால் எழுதப்பட்டது.
சத்தியசரணாவின் நாட்குறிப்பை போலத்தான் நாவல் பரந்து விரிகிறது. வனம் விவசாயி நிலங்களாக மாற்றப்பட்ட சித்திரத்தை விரிவாக பதிவு செய்கிறது. இன்று நாம் விவசாய நிலங்களை நகரமாகவோ தொழிற்சாலைகளாக மாற்றும் காலத்தில் உள்ளோம். வனத்தின் அழகில் ஆழ்ந்தவனையே ஒரு கருவியாக கொண்டு வனம் அழிக்கப்படுகிறது.
சத்தியசரணா கல்லூரி முடித்து வேலைக்காக தேடி அழைந்து கொண்டிருக்கிறான். அவனது நண்பன் அவிநாசனுக்கு (ஜமீன் வம்சத்தை சேர்ந்தவன்) சொந்தமான முப்பாதாயிரம் பிகா நிலத்தை (சுமார் 10 ஆயிரம் ஏக்கர்). பிரித்துக்கொடுக்கும் பொறுப்பு கதைநாயகனுக்கு வருகிறது. அவனும் ஆரம்பத்தில வனத்திலிருந்து வெளியேறிவிடவே முயற்சி செய்கிறான். அப்போதே கோஷ்ட சககரவர்த்தி என்ற குமாஸ்தா கொஞ்சம் காலம் கொடுங்கள் வனம் உங்களை இழுத்துவிடும் என்ற கூற்றே உண்மையாகிறது. அவ்வாறே சத்தியசரணா வனத்தின் அழகில் ஆழ்ந்து போகின்றான். அதே வேளையில் வனத்தை விவசாயநிலமாக மாற்றும் பணியும் தொடர்கிறது. இந்த நாவலின காலகட்டம் தோரயமாக 1940 முதல் 1950க்குள் என ஊகிக்கலாம். தான் ஆறு வருடத்தில் வனத்திலிருந்ததை ஒரு ஞாபக குறிப்பாக பதினைந்து வருடம் கழித்தே எழுதுகிறார்.
பூர்ணியா மாவட்டத்திற்கு அருகில் உள்ள லப்டுலியா, புல்கியா போன்ற வனப்பகுதிகளே கதைகளம். கதைசொல்லி பரந்த கலைஅவதானிப்புகளும் தேர்ந்த இலக்கிய வாசிப்பும் கொண்டவர். தன்னுடைய அனுபவ பகிர்வுகளை கலை இலக்கியத்தோடு சேர்ந்தே பதிவு செய்துள்ளார்.
கதை நாயகன் தொடர்ச்சியாக தனிமையில் வனத்தோடு பல மணி நேரம் செலவிடுகிறான். காலை மாலை அந்தி என வனத்தின் பல்வேறு தோற்றங்களை அனுபவத்தை நமக்கும் கடத்துகிறார்.
லப்டுலியா போன்ற அடர்நத வனத்தில் கூட கிராண்ட் துரையில் பெயரிலிருக்கும் ஆலமரம் ஆங்கிலேயர்கள் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளார்கள் என்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
இந்த நாவல் பல்வேறு வனச்செடிகள், மரங்கள் , மலர்கள் என விரித்து அதோடு சேர்த்து பல்வேறு சமூகங்கள், ஆளுமைகள், நிகழ்வுகள் மற்றும் நுண் தகவல்கள், இயற்கை சித்தரிப்புகள் என வலையாக பின்னி பின்னிச் செல்கிறது.
பிபூதிபூஷன்
சந்தாலிகள்
கதைகளமான காடு சந்தாலி என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்த இடமாகும். வேட்டையாடுதல் அவர்களின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது. ஆங்கிலேயர்களின் வரவுக்கு பிறகு நிலம் பொருளாதார நோக்கிலான பார்வையால் சந்தாலிகளை அப்பகுதியிலிருந்து விரட்டி காட்டை அழித்து விவசாயநிலமாக மாற்றுகிறார்கள். அதற்கு ஜமீன்தார்களும், வட்டித்தொழில் (சாவுகார்கள்) செய்பவர்களும் துணைபுரிகிறார்கள். (இந்த சந்தாலிகள் திராவிடமக்களின் தொடர்பு கொண்வர்களாக உள்ளனர். உபயம் – விக்கிபிடியா).சந்தாலி கிளர்ச்சி முதல் இந்திய சுதந்திரப்போர் நடக்கும் காலகட்டத்தில்தான் நடக்கிறது.
சூரிய வம்சத்தை சேர்ந்த அரசே இல்லாத அரசர் தோப்ரூபன்னா. ஈட்டி வேல் போன்ற நேரடியாக கையால் கையாளும் ஆயுதங்களை தவிர வில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஒரு படி குறைவாக நினைக்கும் அரசர் தோப்ரூபன்னா. பானுமதி (இளவரசி), ஜகரூபான்னா (இளவரசன்). சத்தியசரணாவிற்கு பானுமதிக்கு உள்ள உறவை நவீன காலத்திற்கு ஒரு தோல்வி அடைந்த அரசுக்கு உள்ள உறவாக பிரதிபலிக்கிறது. கயை, முங்கோர், பான்னா என ஐந்து ஆறு மைல்களுக்குள் வாழும் பானுமதி போன்றவர்களின் பார்வையில் நிலப்பரப்பு ரீதியாக இந்திய தேசத்தை பற்றிய பார்வைகள் யோசிக்க வேண்டியவையே?
இந்த நாவலில் வரும் மைதிலி பிராமணர்கள் – உழவுத்தொழில் ஈடுபடும் பிராமணர்கள்.சற்று அகங்காரம் மிகுந்தவர்களானாலும் நேர்மையானவர்கள.
இந்த நாவலில் வரும் பல்வேறு நுண் தகவல்கள் நம்மை அந்த சூழலோடு ஒன்றச் செய்கிறது
ஹரிஹரசத்திரத்துச் சந்தையில் விற்கப்படும் குதிரைகள். அந் குதிரைகளின் குதியாட்டமும் (ஜமைதி, ஃபனைதி) ஜமைதி குதியாட்டமாடும் குதிரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
பண்டமாற்று முறையில் ஒரு சோப் ஐ 7 மடங்கு விலைக்கு விற்கும் வியாபாரிகள். ஒரு வகையில் இன்றைய நவீன கார்ப்ரெட்களின் முன்னோடியோ? என எண்ண வைக்கிறது கட்டுப்படுத்தும் விசையாக அரசு இல்லாத போது வியாபாரிகளின் கொள்ளை லாபத்தை நினைவுபடுத்துகிறது.
டான்டோபாரோ என்ற காட்டெருமைகளை பாதுகாக்கும் தொன்ம தெய்வங்கள்
இந்த நாவலில் வரும் நிகிழ்வுகள் சில் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.
விருந்தினர்களே இருப்பை எண்ணெய் குளியலும் அவர்களே சமைத்து சாப்பிடுவதும் விநோதம்.பொது சந்தையில் தான் பிறந்த ஊர்காரர்களை பார்க்கும் போது அழுகும் வித்தியாசமான சமூக பழக்கவழக்கங்கள்.பிக்கானீர் கற்கண்டு நுகர்வை சமூக அந்தஸ்தாக பார்க்கும் ராஜபுத்திரர்கள்.பயிற்றந்தாழை கொடியை போர்வையாக பயன்படுத்து காங்கோக என்ற வேளாண் குலத்தினர்.இயற்கை குறித்த எவ்விதமான அவதானிப்புகளும் இல்லாமல் வனப்பயணத்திற்கு குடும்பத்தோடு வரும் டெபுட்டி மாஜிஸ்டிரேட் போன்றவர்கள் இன்றைய காலகட்டத்திலும் தொடர்கிறார்களோ?இந்த நாவலில் வரும் கவனிக்க வைத்த சிலர்.
5-ஆம் எண் உள்ள இரும்புக் கடாயே வாழ்கை லட்சியமாக கொண்டமுனேசுவர்.யுகல் பிரசாத்எவ்வித லௌகீக பலன்களையும் எதிர்பார்க்காது வனத்தின் மேல் காதல் கொண்ட ஒரு நபர். வித்தியாசமான செடிகள் , மலர்கள் போன்றவற்றை வனம் முழுவதும் விதைத்துக்கொண்டே செல்கிறார். யுகல் பிரசாத்துக்கும் சத்தியசரணாவிற்கும் உள்ள வித்தியாசமே கலை, இலக்கியம் தான். யுகல் பிரசாத் தன்னுடைய அனுபவத்தை அருகிலுள்ளவர்களுக்கு மட்டுமே கடத்துகிறான். அதிலும் சிலர் அவனை பிழைக்கத்தெரியாத பைத்தியகாரனாகவே பார்கிறார்கள். ஆனால் கதைநாயகனோ நாவலாக காலத்திற்குமானதாக படைத்துள்ளார்.தாதுரியாஅடிப்படைத்தேவைகளுக்கேகூட போராடும் சூழ்நிலையிலும் கலையின் மீதான ஆர்வம் அதிசியக்க வைக்கிறது. சக்கர்பாஜி நடனத்தை கற்பதற்காக அவனுடைய தேடுதல் முயற்சியும் கலைதாகம் கூட ஒருவிதமான அடிப்படை தேவை தானோ?. இருப்புப்பாதையில் அவனுடைய மரணம் நவீனத்தால் வனம் சந்திக்கும் அழிவை சித்திரப்படுத்துகிறது.வேதாந்த பண்டிதர்மடுகநாத பாண்டே – தன்னுடைய வேதாந்த அறிவை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் முயற்சி. வழி நூலாக முக்த போதம் பயன்படுகிறார். தன்னுடைய தேவைகளையும் மீறி வேதாந்த கல்வியை முக்கியமாக பார்க்கும் வித்தியாசமான ஆளுமை. இவர்களை போன்றவர்களால்தான் நம்முடைய வேதம் பல்லாயிரம் வருடங்கள் கடந்தும் இன்றும் அவை நிலைத்து நிற்கிறது.காட்டு யானைகளை பற்றி விவரிக்கும் மஞ்சி அவளது கணவன் நக்சேதி. வெந்நீர் ஊற்று இருக்மிடத்தில் மஞ்சி நடத்தப்படும் விதம். சாதிய பாகுபாடுகளை பதிவு செய்கிறது.தாசியின் மகள் குந்தா – மைஷண்டி சந்தையில் கதைசொல்லி சந்திக்கும் கிரிதாரிலால் என்ற வேளாண் (காங்கோத) குலத்தவன். குந்தவிற்கு கிரிதாரிலாலுக்குமுள்ள உறவு.ராஜு பாண்டே சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் பற்றிய அபார நம்பிக்கையும் அதற்கான தர்க்க முறைமைகளும் பிரமாதம்.தாவ்தால் ஸாஹீ – வட்டித் தொழில் செய்பவன்.குதிரையை பயிற்சி செய்த நம்பிக்கையில் கணு மாஹாதோ மற்றும் சட்டுசிங் – டோல்பாஸ்யா காட்டில் காட்டெருமையை பிடித்து பழக்குவதற்கு செய்து தோல்வியில் முடியும் முயற்சிமிசி ஆற்றின் வடகரை காட்டில் வாழும் துறவி. விவசயமயமாக்கல் காட்டுவிலங்குகளுக்கு மட்டுமான பிரச்சனையா? இவரை போன்ற துறவிகளின் இன்றைய நிலை ?இந்த நாவலில் குறிப்பிட்ட மலர்கள், செடிகள்,மரங்கள் பறவைகளில் பெரும்பாலானவை நமக்கு பெயர்களால் மட்டுமே அறிமுகமானவை. இருந்தாலும் இந்த நாவல் நம்மை வனத்தில் வாழ வைத்தது.
துத்லி என்ற ஒரு வகை காட்டுபூ, தாதுப மலர்கள்., தேவுடிப்பூ, குசும்பா மலர் வாட்டர் க்ரோ ஃபுடட் நீர் பூச்செடி. குட்மி- காட்டுபழம், லதானே என்ற காட்டுச்செடி, சேபாலிகை மரங்கள், பகாயின் காட்டு மரம், மஞ்சம புல், பிம்யோரா என்ற பம்பரகொடி, , க்ரேஃபுட் சீமைச்செடிகள்.
மோகன்பரா காடுகள் , மகாலிகாரூப மலைகள் , சரஸ்வதி குண்டம் (ஏரி)
சரஸ்வதி குண்டத்தை சுற்றியுள்ள பறவைகள் கரிக்குருவி, வாலாட்டிக் குருவி, காட்டுக் கிளி, ஃபீஸண்ட் க்ரோ என்ற புதுவகைப்பறவை காடை கவுதாரி பலவகைகப் புறாக்கள் எல்லாம் இருந்தன.
நா.சந்திரசேகர்
இந்த நாவலின் வாசிப்பிலிருந்து வெளிவந்தாலும் அந்த வனத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிற உணர்வில் நம்மை வைத்திருக்கிறது. இறுதியாக ஆசிரியர் எழுப்பும் கேள்வி நம்மில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
”மனிதனுக்கு வாழ்வில் வேண்டியது என்ன? முன்னுக்கு வருவதா? மகிழ்ச்சியா? முன்னுக்கு வந்தும் மகிழ்ச்சி இராவிட்டால் அதனால் என்ன பயன்? முன்னுக்கு வந்திருக்கும் எத்தனையோ பேரைப்பற்றி எனக்குத் தெரியும்; ஆனால் அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பாதாகத் தெரியவில்லை. அளவுமீறி இன்பம் நுகர்ந்தததால் அவர்களுடைய மனப்போக்கு, கூர்மையெல்லாம் போய் மழுங்கிவிட்டது. இப்போது எதிலும் அவர்களுக்கு இன்பம் கிட்டுவதில்லை; வாழ்வு, அவர்களைப் பொறுத்தவரையில் ஒரே மாதிரியாக, ஒரே நிறங்கொண்டதாயும், பொருளற்றதாயும் மாறிவிட்டது. மனதில் எவ்விதமான சுவைக்கும் இடம் இராது போயிற்று; அதன் கூர்மை மழுங்கிவிட்டது. ” (பக்கம் 331)
சந்திரசேகர்
ஈரோடு
வெள்ளையானை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
ஒரு கதையை வாசிக்க தொடங்கும் முன் எந்த வித முன்முடிவுகள் இன்றி வாசிப்பதே சரியான முறையாக நான் நினைப்பதுண்டு. ஆனால், “வெள்ளை யானை” என்ற தலைப்பு பல்வேறு கற்பனைகளை இயல்பாகவே மனதில் ஊற செய்தது. “வெள்ளை யானை” என்பது என்னவாக இருக்கும்? என்ற கேள்வியின் ஊடாக நான் அடைந்த கற்பனைகளின் தொகுப்பே ஒரு தரிசனத்திற்க்கு உரியவை. இறுதியில் அது ஒரு பெரும் பனிக்கட்டியின் சித்திரம் என்பதை அறிந்த போது ஒரு நிமிடம் ஏற்பட்ட திகைப்பு, என்னால் விவரிக்க இயலாதது என்றே கூற முடியும்.
கதை ஒரு குற்றத்தை விசாரிக்கும் தன்மையை கொண்டு அதன் பின் உள்ள அரசியல் அதை கொண்டு அவர்கள் கட்டமைக்கும் வியாபாரம், அதன் மூலம் இதை எதையுமே அறியாத, அறிய முடியாத தொலைவில் உள்ள மக்கள் அடையும் கொடூரங்கள் என்று ஒரு சாதாரண மனிதனின் மனசாட்சியை உலுக்க கூடிய, கேள்வி கேட்க கூடிய ஒரு பெரும் தொகுப்பாக என்னுள் ஒரு வித தடுமாற்றத்தை உணர்ந்தேன். அந்த உணர்வு இன்னும் ஏதோ ஒரு ஓரத்தில் எப்பொழுதும் இருக்கும் என்றே தோன்றுகிறது.
பாதிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடங்கள் பற்றிய சித்தரிப்பில், ஏய்டன் மனதிற்குள் தோன்றும் “நரகம் என்பது ஓர் இடுங்கிய இடம்” என்ற வரி அந்த குடியிருப்பின் மொத்த அழுத்தத்தையும் ஏற்று இருப்பது போல் தோன்றுகிறது. அதை தொடர்ந்து அவன் பயணிக்கும் பஞ்சம் பாதிக்க பட்ட பகுதிகள் தோற்றுவிக்கும் கற்பனைகள் என்றென்டும் மனதிலிருந்து அகலாத துர்கனவுகளுக்கு உரியவை. கண்ணீரின்றி அதை கடப்பது என்பது இயலாதது என்றே தோன்றுகிறது. அந்நிகழ்வின் சித்தரிப்பிற்கு பிறகு வாசிப்பு வேறொரு கோணத்தை அடைந்ததாக நான் நினைக்கிறேன்.
வாசிப்பில் ஒரு வித பதற்றம் ஒட்டி கொண்டதாகவே எண்ணுகிறேன். இந்த அத்தனை நிகழ்விற்கும் ஏதோ ஒரு வகையில் அந்த பாதிக்கப்பட்ட ஐஸ் ஹவுஸ் தொழிலாளிக்கு நீதி கிடைத்து விட வேண்டும் என்ற பதட்டமாக அது இருக்கலாம் என்று இப்பொழுது நினைக்கும் பொழுது தோன்றுகிறது. ஆனால், இறுதியில் நிகழ்ந்தது ஒரு சாதி மேட்டிமையின், பல காலங்களாக ஊறிப்போன ஒரு ஆழ்ந்த வெறுப்பின் அல்லது ஒட்டுமொத்த கீழ்மையின் வடிவமாக நிகழ்ந்த ஒன்று. யாரொருவன் அவர்களின் நலனுக்காக தன்னை நிகழ்த்தி கொண்டானோ அவனே அவர்களுக்கு எதிராக நிற்கும் நிலைமை உருவாகிறது. அது அவ்வாறுதான் நிகழும் என்ற நிதர்சனம் ஒரு வலியை ஏற்படுத்தியது. ஆனால், இவை எல்லாவற்றிக்கும் மேலாக அவர்கள் தங்களுக்கான ஒரு சிறு அடியை முன் எடுத்து வைப்பதற்கு தயாராகி விட்டார்கள் என்பது ஒரு பளிச்சிடும் வைரக்கல்.
நரேந்திரன் ரமேஷ்பாபு
அன்புள்ள ஜெ
வெள்ளையானை நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். கொற்றவை, விஷ்ணுபுரம் போன்ற நாவல்களில் இல்லாத இன்னொரு மொழி. பல இடங்களில் மொழியாக்கமோ என்று தோன்றுமளவுக்கு ஒரு நடை. ஆனால் மிகச்சரளமாக, ஒரே விசையுடன் வாசித்து முடிக்குமளவுக்கு இருந்தது நாவல்.
நாம் அறியாத ஒரு உண்மையை காட்டுகிறது. அது நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது. இந்தியாவின் மாபெரும் பஞ்சங்களில் நமது உயர்வர்க்கம் அந்தப்பஞ்சத்தை உருவாக்கிய வெள்ளைக்காரர்களுடன் கொஞ்சிக்குலவி, அவர்களிடமிருந்து இச்சகம் வாங்கி தின்றுகொண்டிருந்தது. மதவாதிகள் ஆசார உலகங்களில் வாழ்ந்தனர். வரலாற்றை பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறது. அத்தனை சிற்றரசர்களும் கொள்ளைக்காரர்களாக இருந்த காலம் அது. அன்றிருந்த நிலபிரபுக்கள் எல்லாருமெ ஈவிரக்கமற்ற கொடியவர்கள். வணிகள் மோசடிக்காரர்கள். நம்முடைய ஆன்மிகமான சீரழிவே அப்பஞ்சத்தை நாம் எதிர்கொள்ள முடியாமலாக்கியது
மறுபக்கம் வெள்ளை ஆட்சி இங்கே எதைக்கொண்டுவந்தது என்றும் காட்டுகிறது இந்நாவல். அவர்கள் இங்கே ஒழுங்கையும் கல்வியையும் கொண்டுவந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இல்லை, மாபெரும் பஞ்சங்களைத்தான் கொண்டுவந்தார்கள் என்று இந்நாவல் அப்பட்டமாக காட்டுகிறது. வெள்ளைய ஆட்சியின் கொடூரம் பற்றி தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இது.
இருசாராரையும் ஈவிரக்கமில்லாமல் கிழித்துக்காட்டும் இந்நாவலை மனசாட்சியை கொண்டுமட்டுமே வாசிக்கமுடியும். நாம் விரும்பும் அரசியலை முன்வைக்கவேண்டும் என்று எண்ணி வாசிக்கமுடியாது. வெள்ளையர் இங்கே ஒழுங்கையும் நல்லாட்சியையும் கொண்டுவந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இடதுசாரிகளுக்கும் அவர்கள் இல்லாவிட்டால் நாம் உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தோம் என்று சொல்லும் வலதுசாரி மத- சாதி வெறியர்களுக்கும் எதிரானது இந்நாவல். வெள்ளையர் ஆட்சியே தங்கள் விடுதலைக்கு வழிவகுத்தது என்று நம்பும் தலித் அறிவுஜீவிகளுக்கும் பெரிய அடி. அவர்களை பெருந்திரளாகச் சாகவிட்டது அந்தப்பஞ்சமே என்றும், அப்பஞ்சம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் பெரும்பான்மையினராகக்கூட தலித்துக்களே இருந்திருப்பார்கள் என்றும் காட்டுகிறது.
அரசியலால் வாசிக்கமுடியாத, மனசாட்சியால் வாசிக்கவேண்டிய நாவல்
எம்.ராம்குமார்
வெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன் கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி… வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை வெள்ளை யானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம் அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை வெள்ளையானை – பலராம கிருஷ்ணன் வெள்ளையானை – கடிதம் வெள்ளையானை கடிதங்கள் வெள்ளையானை -சிவமணியன் வெள்ளையானை -கடிதங்கள் வெள்ளையானையும் உலோகமும் வெள்ளையானையும் கொற்றவையும் வெள்ளையானை- சுரேஷ் பிரதீப் வெள்ளையானையும் மீட்கப்பட்ட கப்பலும் வெள்ளையானை -கடிதங்கள் வெள்ளையானை – ஒரு விமர்சனம் வெள்ளையானை – அதிகாரமும் அடிமைகளும் வெள்ளையானை -அடக்குமுறையும் சாதியும் வெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன் வெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதிகடிதங்கள்
ஜெ
கட்டுரைக்கு நன்றி.
ஒரு சந்தேகம். நான் மனதின் குரல் என்றுதான் அனுப்பியிருந்தேன். நீங்கள் ‘த்’ சேர்த்ததன் காரணம் என்னவோ?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
**
அன்புள்ள கிருஷ்ணன்
மனம் என எடுத்துக்கொண்டால் மனத்தின் குரல்தான் சரி. மனது என எடுத்துக்கொண்டால் மனதின் குரல் சரி. நான் மனம் என எடுத்துக்கொண்டிருக்கலாம். நான் திருத்தியது நினைவில்லை. வெட்டி ஒட்டியபோது இயல்பாகவே திருத்தம் விழுந்திருக்கலாம்.
ஜெ
***
கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்அன்புள்ள ஜெ,
இன்றைய தங்களின் ‘கதை திகழும் புள்ளிகள்’ கட்டுரையில் இந்த வரிகளை படித்தேன்.
“அதில் ஒரு பிரபஞ்சவிதி உள்ளது. அதன் தீராமர்மத்தைச் சுட்டிக்காட்டும் அரிய கதை இது. நான் தமிழில் இன்று பெருகி எழவேண்டிய கதைகள் எவை என நினைக்கிறேனோ அவ்வகைப்பட்டது.”
இந்த வரிகள் எனக்கு ஒரு பெரிய திறப்பினை அளித்தது, உங்கள் கதைகளையே மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள அது உதவுகிறது என்று எண்ணினேன். மர்மங்களை திறக்கும் முயற்சியாகவே தங்கள் கதைகளை எழுதுகிறீர்கள் என்றே இதுவரை நம்பியிருந்தேன். அது திறக்காத/திறக்கப்படாத சமயங்களில் எனக்கு குழப்பம் எழுந்ததுண்டு.
ஆனால், மேற்சொன்ன கட்டுரை வரிகளை படித்தவுடன் “அட…! ஜெ. சொல்ல விரும்புவதும் சுட்ட விரும்புவதுமே அந்த மர்மத்தை மட்டும்தான் போல, அதை திறக்கும் சாவியை வாசகன் வைத்திருந்தால் திறந்து கொள்ளட்டும். அல்லது கிடைக்கும் வரையான தேடலில் இருக்கட்டும் என்பதே அவர் எத்தனம் போலவே…!” என்று எண்ணிக்கொண்டேன்.
என்னுடைய இந்த புரிதல் சரியா…?
அன்புடன்,
மதி
***
அன்புள்ள மதி
கதைகள் வாசகனுக்கு எதையும் சொல்வதில்லை. அவன் அகத்தில் ஏற்கனவே இருக்கும் அனுபவப்புள்ளிகளைச் சீண்டுகின்றன. அவனே ஓர் உலகைக் கற்பனைசெய்துகொள்ளச் செய்கின்றன. அவன் தேடும் விடைகள் அவனுடையவை. அவன் கண்டடைவதும் அவனுடைய அனுபவத்தின் சாரத்தையே
ஜெ
சூல்கொண்ட அருள்அன்புள்ள ஜெ
குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் எஸ்.ஜானகி பாடியது
முத்துக்கிருஷ்ணன்
April 30, 2021
இரைகளும் இலக்கணமும்
1985 ஆம் ஆண்டுதான் ஜி.அரவிந்தனின் சிதம்பரம் படமும் கே.ஜி.ஜார்ஜின் இரகள் படமும் வெளியாயின. சிதம்பரம் மிகச்சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கேரள அரசு விருதும் பெற்றது. அந்தப் படத்துக்காக ஜி.அரவிந்தன் சிறந்த இயக்குநருக்கான விருதை மூன்றாவது முறையாக பெற்றார்.இரகள் எல்லா வகையிலும் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டது. அதற்கு தேசியவிருதுகள் கிடைக்கவில்லை. கேரள அரசின் இரண்டாவது நல்ல படத்துக்கான விருது கிடைத்தது. ஸ்ரீவித்யாவும் திலகனும் இரண்டாவது நல்ல நடிகர்களுக்கான விருதுகளைப் பெற்றனர். ஜார்ஜ் திரைக்கதைக்கான விருதை மட்டுமே பெற்றார்.
அது அன்றே ஒரு விவாதத்தை உருவாக்கியது. கலைப்படம் என்ற இறுக்கமான இலக்கண விதிகளின்படி சில சினிமாவிமர்சகர்கள் விருதுகளை முடிவுசெய்வதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பத்மராஜன், பரதன் போன்றவர்களின் படங்கள் நிராகரிக்கப்படுவதாக பேசப்பட்டது. ஜார்ஜுக்கு திரைவிமர்சகர் சங்க விருது அளிக்கப்பட்டது. ஆனால் முக்கியமான ஒரு நிகழ்வாக இலக்கியத்திற்கு அளிக்கப்படும் முக்கியமான விருதுகளில் ஒன்றாகிய முட்டத்துவர்க்கி விருது அந்த ஆண்டு முதல்முறையாக திரைக்கதைக்கு வழங்கப்பட்டது. திரைக்கதை ஓர் இலக்கிய வகைமை என்றும் அதில் இரகள் ஒரு சாதனை என்றும் குறிப்பிடப்பட்டது.
1985ல் இரகள் வெளிவந்தபோது அது ஒரு பெரிய தோல்விப்படம். ஆகவே திரையரங்குகளில் ஓரிரு நாட்களுடன் மறைந்தது. அதைப்பற்றிய ஓரிரு பேச்சுக்கள் அங்கிங்காக இருந்தபோதிலும் அது பெரிய அளவில் நல்ல சினிமா ரசிகர்களலேயே பார்க்கப்பட்ட படம் அல்ல. உண்மையில் பின்னர் வீடியோ டேப், சிடி வடிவங்களில்தான் அது நிறைய பார்க்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் சென்ற இருபதாண்டுகளில் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. அதை தயாரித்த நடிகர் சுகுமாரன் [இப்படத்தில் சன்னி. நடிகர் பிருத்விராஜின் அப்பா] மிகப்பெரிய நஷ்டமடைந்ததாகச் சொல்லப்பட்டது.
ஜி.அரவிந்தன்சிதம்பரம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. ஆனால் ஃபிலிம் சொசைட்டிகள் திரையிட்டன. 1986ல் அதை நான் காசர்கோடு ஃபிலிம் சொசைட்டியில் பார்த்தேன். அதைப்பற்றி நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டன. அன்று வந்துகொண்டிருந்த ஃபிலிம் மாகஸீன் என்னும் இதழ் சிதம்பரம் படத்துக்காக ஒரு சிறப்பிதழே வெளியிட்டது.
இரகளை நான் பார்த்தது 1992 ல் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இன்னொரு ‘மாற்று சினிமா’ விழாவில். அதற்கு ஜார்ஜ் விருந்தினராக வெளிவந்திருந்தார். அவருடைய ஈ கண்ணி கூடி என்ற படம் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து மிக மோசமான கருத்துக்களைப் பெற்றிருந்தது. தொடர்ச்சியான தோல்விகளால் சோர்ந்து கசந்திருந்தார். 1998ல் மம்மூட்டி அவருக்கு தேதி கொடுத்து இலவங்கோடு தேசம் என்ற படம் வெளிவந்தது. ஜார்ஜ் படம் இயக்கவேண்டியதே இல்லை என்ற முடிவை அவருடைய தீவிர ரசிகர்கள்கூட சொல்லவைத்த படம் அது. அதன் பின் அவர் படம் இயக்கவில்லை.
இன்று முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. மீண்டும் யூடியூபில் இருபடங்களையும் தொடர்ச்சியாகப் பார்த்தேன். சினிமா பற்றிய ஒரு தீராத விவாதம் அவ்விரு படங்களையும் தொட்டுக்கொண்டு மீண்டும் நிகழமுடியும் என்று தோன்றியது. இரகள் இப்போது பகத் ஃபாசில் நடித்து ,திலீஷ் போத்தன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஜோஜி என்ற படத்துக்கு முன்னோடியான படம் என்ற வகையில் பரவலாகப் பேசப்படுகிறது. ஜோஜியை விட ஒரு படி கலையம்சமும் ஆழமும் கூடிய படமாக சொல்லப்படுகிறது.
ஒரு தலைமுறைக்குப் பின் இரு படங்களும் எப்படி பொருள்படுகின்றன என்று பார்ப்பதற்கு முன் அன்றைய விவாதங்களைக் கவனிக்கவேண்டும். அன்றைய கலைவிமர்சகர்கள் இரகளை ஒரு வழக்கமான ’கிரைம்திரில்லர்’ படம் சற்றே மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், நேர்த்தியான திரைக்கதையுடன் எடுக்கப்பட்டுள்ளது என்றுதான் மதிப்பிட்டனர். ஆனால் சிதம்பரம் என்றென்றும் நிலைகொள்ளும் கலைப்படைப்பு, வருங்காலத் தலைமுறைகளால் கொண்டாடப்படுவது என்றனர். “ஐந்தாண்டுகளுக்குப்பின் இரகளை எவராவது நினைவுகூர்வார்களா? கூர்ந்து பார்ப்பவர்களுக்கு அந்தப் படத்தில் பார்ப்பதற்கு ஏதாவது உண்டா?” என்று அன்று ஒரு விமர்சகர் எழுதினார்.
ஆனால் முப்பத்தைந்தாண்டுகளுக்குப் பின் சிதம்பரம் ஒரு சிறுவட்டத்துக்குள் நினைவுகூரப்படும், பார்க்கப்படும் படமாக உள்ளது. அந்த வட்டம் முக்கியமானது என்பதில் ஐயமில்லை. இரகள் அது வெளிவந்த ஆண்டைவிட பத்து மடங்கு பார்வையாளர்களை இந்த ஆண்டு பெற்றிருக்கிறது. இன்று இரண்டாவது தலைமுறை அன்றைய திரை ஆர்வலர்கள் அதில் கண்டடைந்ததை விட பலமடங்கு நுட்பங்களை, ஆழங்களை அதில் அறிந்துகொண்டிருக்கிறார்கள். வெளிவந்தபோது அதன் தோல்விக்குக் காரணமாக அமைந்தது அதன் முடிவுதான்.
இரகள் திரைப்படத்தை பார்த்த போது எனக்குப் பிடித்திருந்தது.நான் அக்காலத்தில் கே.ஜி.ஜார்ஜுக்கு நீண்ட கடிதம் ஒன்றும் எழுதியிருக்கிறேன். பிறகு ஒரு கட்டுரையும் எழுதினேன்.ஆனால் நான் என்னை தீவிர சினிமா விமர்ச்கானாக முன்வைப்பதில்லை என்பதனால் ஒரு பொது சினிமா ரசிகனாக எனக்கு அது உகந்த படம் என்றே எண்ணினேன். அது ஒரு நல்ல திரில்லர் என்றே நானும் நினைத்திருந்தேன், கலைப்படம் என கருதவில்லை.அது சினிமா என்னும் கலைவடிவிலேயே ஒரு சாதனை என எனக்கு சொன்னவர் தமிழினி வசந்தகுமார்- 1998 ல். அதன்பின்னர் சிடியில் அந்தப் படத்தை 2001ல் பார்த்தேன். உண்மையில் அப்போதுதான் கவனித்துப் பார்த்தேன்.
இரகள் ஏன் அன்று ஒரு படி கீழாக மதிப்பிடப்பட்டது? அன்று குற்றம், வன்முறை ஆகியவை கலைச்சித்தரிப்புக்கு ஏற்றவை அல்ல என்று பொதுவாக நம்பப்பட்டது. அவை வணிகசினிமாவின் கவற்சிக்கூறுகள் என்று நினைத்தனர். அன்று கொலையோ சாவோ இல்லாத வணிகப்படங்களே இல்லை என்ற நிலை இருந்தது என்பதனால் தீவிர சினிமா அவற்றை முழுமையாகத் தவிர்க்கும் நிலைபாட்டை எடுத்தது.
பொதுப்போக்கு சினிமாவின் எல்லா கூறுகளையும் முழுமையாகவே கலைப்படங்கள் தவிர்க்கவேண்டும் என்ற பார்வை அன்றிருந்தது. ஆகவே பரபரப்பான நிகழ்வுகள், நாடகீயமான நிகழ்வுகள் ஆகியவை முழுமையாகவே தவிர்க்கப்பட்டன. நிகழ்வுகளின் தொடர்ச்சியைக்கூட ஜி.அரவிந்தன் தவிர்ப்பதைக் காணலாம். பரபரப்பு, நாடகீயத்தன்மை, நிகழ்வுத்தொடர்ச்சி ஆகியவை கதையோட்டத்தை கவனிக்க வைத்துவிடும் என்றும், விளைவாக காட்சிகளை பார்ப்பதில் இருந்து ரசிகனை விலக்கும் என்றும் அரவிந்தன் கருதினார்.
சினிமாவின் அந்தந்த காட்சிகளை அடுத்த காட்சி என்ன என்பதை எண்ணாமலேயே முழுமையாகப் பார்க்கும் பார்வையாளனே சினிமாவுக்கு தேவை, அவனிடமே சினிமா காட்சிப்படிமங்களாக உரையாடமுடியும் என்பது அரவிந்தனின் எண்ணம். காட்சிப்படிமங்களேகூட ஓவியம்போல அமையலாகாது. அது வெறும் காட்சியின்பம் மட்டுமே. அங்கே அன்றாடத்தில் காணக்கிடைக்கும் காட்சிகளே இருக்கவேண்டும். அதில் இருக்கும் காட்சிக்கோப்பு, கதைமாந்தரின் உடல்மொழி, முகத்தில் வெளிப்படும் மிகக்குறைவான உணர்ச்சிகள் ஆகியவற்றை மட்டுமே பார்வையாளன் கவனிக்கவேண்டும். அதன் வழியாக மட்டுமே அவன் அந்தச் சினிமாவை அறியவேண்டும்.
சிதம்பரம் உள்ளிட்ட படங்கள் அந்த இலக்கணப்படி அமைந்தவை. ஏறத்தாழ இந்தப் பார்வையை அடூர் கோபாலகிருஷ்ணன், கிரீஷ் காசரவள்ளி, மிருணாள் சென் உட்பட அன்றைய இந்திய கலைப்பட இயக்குநர்கள் பெரும்பாலானவர்களிடம் காணலாம். அவர்களின் பார்வையில் இரகள் பரபரப்புத்தன்மை கொண்டது. நாடகீயமான காட்சிகள் கொண்டது. அந்த இயல்புகள் சினிமாக்கலைக்கு எதிரானவை. ஆசிரியன் உருவாக்கும் கதைக்கோப்பை ரசிகன் மேல் சுமத்துபவை. ஒற்றைப்படையான அர்த்தப்படுத்துதலுக்கு பார்வையாளனைச் செலுத்துபவை.
ஏறத்தாழ இதேவகையான சில ‘இறுக்கங்கள்’ அன்றைய சிற்றிதழ் சார்ந்த இலக்கியச் சூழலிலும் இருந்தன. ஒரு துப்பறியும் கதையை, பேய்க்கதையை, கொலைக்கதையை அன்றைய தமிழ்ச் சிற்றிதழ்களில் வெளியிட்டுவிட முடியாது. அன்றைய சிற்றிதழ்க்கதை என்பது அரவிந்தனின் சினிமாபோல அன்றாடத்தைக் கொண்டே ஒரு பூடகத்தன்மையை உருவாக்குவது. அதை நுட்பமாக வெளிப்படுத்துவதே கலை என நம்புவது
ஆனால் தொண்ணூறுகளில் அந்த இலக்கணங்கள் உடைந்தன. அரவிந்தனும் அடூரும் மிருணாள் சென்னும் அவரைப் போன்றவர்களும் உடனடியாகக் காலாவதியானார்கள். மேலும் சிலகாலம் அந்த அலை மலையாளத்தில் மட்டுமே நீடித்தது. அதை மேலும் கொண்டுசெல்ல முயன்றவர்கள் டி.வி.சந்திரன், ஷாஜி என் கருண் போன்றவர்கள். ஆனால் அவர்களுக்கு அடுத்த தலைமுறையின் ஆதரவு இருக்கவில்லை. அவர்களின் படங்கள் எந்த கவனிப்பையும் பெறவில்லை.
இலக்கியமும் சினிமாவும் அடைந்த இலக்கண மாற்றம் என்ன? அதுவரை அவை ஓர் எதிர்நிலையாக தங்கள் இலக்கணத்தை அமைத்துக் கொண்டிருந்தன. வணிக எழுத்து, வணிக சினிமா ஆகியவை எவற்றைக் கொண்டிருக்கின்றனவோ அவற்றுக்கு நேர்மாறான ஒன்றே இலக்கியம், கலைப்படம் என்ற கோணம் அவற்றுக்கு இருந்தது. தொண்ணூறுகளில் உருவான உலகமயமாக்கமும் அதன் விளைவான ஊடகப்பெருக்கமும் அவற்றின் கோட்ப்பாட்டு வெளிப்பாடான பின்நவீனத்துவப் பார்வைகளும் அவ்விலக்கணத்தை உடைத்தன.
எல்லாவகையான புனைவுகளும் எல்லாவகையான வெளிப்பாடுகளும் கலையாகக்கூடும் என்ற புரிதலே தொண்ணூறுகளின் திருப்புமுனை எனலாம். அவை கலையாவது அவற்றின் அர்த்த அடுக்குகள் எத்தனை தூரம் விரிகின்றன என்பதன் வழியாகவே. அவை எந்த அளவுக்கு வாசகனின், பார்வையாளனின் ஆழுள்ளத்தை ஊடுருவுகின்றன என்ற அடிப்படையிலேயே. துப்பறியும் கதை உயர்தர இலக்கியமாகலாம். கலைப்படத்தில் திகிலும் கொந்தளிப்பும் இருக்கலாம். அவற்றை கலையாக்குவது அவற்றின் உள்விரிவு மட்டுமே.
அவ்வாறுதான் ஜார்ஜ் மேல் புதியபார்வை உருவானது. அவருடைய இரு படங்கள் விமர்சகர்களால் மறுகண்டடைவு செய்யப்பட்டன. ஒன்று ‘யவனிக’ இன்னொன்று ‘இரகள்’. யவனிகா ஒரு துப்பறியும் படம். இரகள் ஒரு பரபரப்புப் படம். இரண்டுமே அந்தந்த கதைவகைமைக்குரிய கட்டமைப்பு கொண்டவை. ஆனால் யவனிக துப்பறிவது கொலையாளியை அல்ல, கொலையாக மாறும் உணர்வுகளையும் அவற்றுக்கு வழிவகுக்கும் மானுடத்தருணங்களையும்தான். இரகள் பரபரப்பாக காட்டுவது அடுத்தது என்ன என்னும் ஆர்வத்தை மட்டுமல்ல, ஓரு திரிபுபட்ட உள்ளம் கொள்ளும் துன்பங்களை, தன்வதைகளை, அவற்றை அது பிறரை வதைப்பதனூடாக தீர்த்துக்கொள்ளும் புரிந்துகொள்ள முடியாத ஊடாட்டத்தைத்தான். அதனாலேயே அவை அர்த்தங்கள் தொடர்ந்து விரியும் தன்மை கொண்டிருக்கின்றன. அதனாலேயே அவை கலையாகின்றன.
கே.ஜி,ஜார்ஜ்இரகள் பல அடுக்குகள் கொண்டு விரியும் படம். முதல் அடுக்கு அதில் இருக்கும் சமூக யதார்த்தம். ஐம்பதுகளில் கேரளத்தின் கிறித்தவர்கள் மலைகளில் குடியேறி, காட்டை ‘வெட்டிப்பிடித்து’ ரப்பர்த் தோட்டங்களாக்கினர். விலங்குகளை கொன்று, காட்டை அழித்து கஞ்சா பயிரிட்டனர். பெரும் செல்வம் ஈட்டினர். அது ஓரு வன்முறை. அது அவர்களை வன்முறையாளர்களாக ஆக்கியது. அந்த வன்முறை அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெளிப்பட்டது. அவர்கள் பிறரை அழித்தனர், அல்லது தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டனர்.
இந்தப் படத்தில் மாத்யூஸ் என்னும் மாத்துக்குட்டி [திலகன்] பற்றிச் சொல்லும் போது அவருடைய அப்பா பாப்பி சொல்கிறார். ‘வெள்ளைக்காரன் துப்பாக்கியை தந்துவிட்டு போனான். நான் துப்பாக்கியால் எந்த உயிரையும் கொல்லவில்லை. மாத்துக்குட்டி கொன்றுகொண்டே இருந்தான். ஏகப்பட்ட விலங்குகளைக் கொன்றான். இப்போது எங்கும் ரப்பர். எந்த பறவைகளும் விலங்குகளும் இல்லை’. இரகளின் வன்முறையின் தொடக்கம் இதுதான்.அந்த விரிவான சித்திரம் இந்த சினிமாவில் உள்ளது.
ஏற்கனவே ஏறத்தாழ இதே சித்திரத்தை அளிக்கும் அரநாழிக நேரம் [பாறப்புறத்து] விஷகன்யக [பொற்றேக்காடு] ஆகிய நாவல்கள் வெளிவந்துள்ளன. அவை சினிமாவும் ஆகியிருக்கின்றன. மலையாளத்தில், கேரளக் கிறிஸ்தவக் குடியேற்றப் பின்னணியில் இதே வகைமையில் பத்து நாவல்களையேனும் குறிப்பிடத்தக்கவையாகச் சொல்லமுடியும். ஏனென்றால் இது ஒரு சமூக யதார்த்தம்.
விரிவான பார்வையில் இந்த எழுச்சி -வீழ்ச்சியின் கதை இந்திய இலக்கியத்தில் பலமுறை சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இதேபோன்ற கதைக்கட்டமைப்பு கொண்ட நாவல்கள் உள்ளன. சதுரங்கக்குதிரைகள் [கிரிராஜ் கிஷோர்] இந்த வரிசைப் படைப்புக்களில் முதன்மையானது.
ஜார்ஜ் அந்த சமூக யதார்த்தத்திற்கு தன் விரிவாக்கத்தை அளிக்கிறார். இந்தப் படத்தில் வன்முறை பாவத்தை நோக்கி ஈர்க்கிறது. உலகியல்வெறி மாத்துக்குட்டியிடமிருந்து அவருடைய வாரிசுகள் இருவரிடம் குடியேறி ஆட்டிப்படைக்கிறது. பணத்தாசையாக மூத்த மகன் கோசியிடம். காமமாக மகள் ஆனியிடம். அந்த விஷவட்டத்தில் இருந்து வெளியேற முயன்று முடியாமல் அழிபவன் இன்னொரு மகன் சன்னி. கதைநாயகன் பேபியில் அது வன்முறையாக வெளிப்படுகிறது.
அந்த வன்முறை வெளிப்படும் விதங்களே இந்தப்படத்தை இத்தனைக் கூர்மையானதாக்குகின்றன. அவற்றை விரித்து விரித்து எழுதலாம், ஆனால் அதை பார்வையாளனுக்கு விட்டுவிடுவதே உகந்தது. பேபியின் வாழ்க்கையில் அன்பின்மையை, பாவத்தின் நச்சுச்சூழலை, வன்முறையை அளிப்பவர்கள் குடும்ப உறுப்பினர்கள். ஆனால் அவர்களை அவன் கொல்வதில்லை. கொல்லும் விழைவு வந்து வந்து செல்கிறது. அவன் தாக்குவதெல்லாம் சம்பந்தமே இல்லாத எளிமையான ‘இரைகளை’த்தான்
அவன் தன் வன்முறையின் முதல் ஊற்றுக்கண்ணாகிய தந்தையை நோக்கி வருவது இறுதியில்தான். அதுவரை தனக்குள் குமுறி, கொந்தளித்து, வன்முறைகள் வழியாக அவன் அந்தப் புள்ளி நோக்கி வந்துகொண்டே இருக்கிறான். அந்தப் புள்ளியில் விழுகிறான். அவனுடைய விடுதலை இருப்பது தந்தைக்கொலை [patricide] யில்தான். நேரடிக் கொலையாக அல்ல. அவன் தன்னுள் உள்ள மாத்துக்குட்டியை கொன்றிருந்தால்போதும். அவனுக்கு விடுதலை கிடைத்திருக்கலாம். அவன் அதை அடையாளம் கண்டுகொள்கிறான். அதை வெளியே, நேரடியாக நிகழ்த்த வந்து பலியாகிறான்.
படத்தில் எளிய விவசாயிகிய பாப்பி அவருடைய கண்முன் வன்முறை வழியாக எழுந்து வந்த ஒரு சாம்ராஜ்யம் வன்முறையால் சிதைந்து கிடப்பதைப் பார்க்கிறார். அதுவரை அவர் உயிர்வாழ்கிறார். அவருக்கும் பேபிக்குமான உறவு முக்கியமானது. பேபிக்கு அணுக்கமானவர் அவர்தான்.
பலதளங்களில் இன்றைய தலைமுறை இளைஞர்கள் இரகள் படத்தின் நாயகனுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவர்கள் அவனை மேலும் மேலும் அர்த்தம் அளித்து வளர்க்கிறார்கள். பேபி வாழும் அந்த வாழ்க்கைச்சூழல் இன்னும் பல மடங்கு பெரிதாகி இன்றைய இளைஞர்களைச் சூழ்ந்துள்ளது. ஆகவே இரகள் இன்று பார்க்கப்படுகிறது. அது எழுப்பும் கேள்விகள் கே.ஜி.ஜார்ஜே உத்தேசிக்காதவை. பாவம், மீட்பு, தந்தைமகன் உறவு என பலவாறாக விரிகிறது இந்தப்படம்.
இன்று ஒப்பிடும்போது சிதம்பரம் அதன் நுண்ணிய சில காட்சிச் சித்தரிப்பின் வழியாக கலையம்சம் கொண்டதாக தோன்றினாலும் கலை எழுப்பவேண்டிய அடிப்படையான வினாக்களுக்குள் செல்லமுடியாமல் தொட்டு நழுவுவதாகவே தோன்றுகிறது. அது ஒரு கலைத்தீற்றல் மட்டுமே. சிதம்பரம் படத்தை அன்றைய பொதுச்சினிமாச்சூழலுக்கு அளிக்கப்பட்ட எதிர்வினை என்ற அளவிலேயே கருத்தில்கொள்ள முடியும். மாறாக, இரகள் ஒரு முழு உலகம். தன்னளவில் நிறைவானது. பார்வையாளனில் வளர்வது.
இரு சிறுகதைகள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
உங்கள் இணையதளத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்க அளவுக்கு சிறுகதைகள் மட்டுமே வாசிக்கக் கிடைக்கின்றன. எத்தனைபேர் வாசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நான் நேற்று ஒரு கணத்துக்கு அப்பால் கதை வாசித்தேன். ஒரு நிலைகுலைய வைக்கும் அனுபவம் அக்கதை. இன்றைய எழுத்தாளர்களில் மிகச்சிலர்தான் இன்றைய உண்மையான பிரச்சினையை எழுதுகிறார்கள். ஒரு அல்ஷெமிர் நோயாளியின் பிரச்சினை அவருக்கு நிகழ்காலத்தில் இருத்தல் இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான். அவருடைய வாழ்க்கை இங்கே இருந்து நழுவி விடுகிறது.
இந்தக்கதையில் அந்த அப்பா இரண்டு வகையில் தவிக்கிறார். இங்கே இருந்து நழுவி அவர் கடந்தகாலத்தில் வாழ்கிறார். எழுபதுகளில் ராஜேஷ் கன்னாவின் உலகத்தில். இங்கே ஒரு தொடர்புக்கொக்கியை உருவாக்கிக்கொள்வதற்காக அவர் போர்ன் தளங்களை நாடுகிறார். காமம் நிகழ்காலத்துடன் அவரை பிணைக்கமுடிகிறது. அந்த ஒரு கொக்கி மட்டும்தான்
உண்மையில் அல்ஷெமிர் நோயாளிகளுக்கு இசை, போர்ன் இரண்டும் மட்டுமே ஆழமாக சென்று பாதிக்கிறது. நினைவுகளை கிளறுகிறது. இருத்தல் என்பது அர்த்தமற்றுப்போகும் இடம் அதுதான். அந்த வெறுமையையும் தவிப்பையும் அளித்த கதை
ஒரு கண்ணாடிப்பரப்பில் புழு நெளிவதுபோல தோன்றியது. நெளிந்துகொண்டே இருக்கிறது. நகர முடிவதே இல்லை
அர்விந்த்
அன்பு ஜெ,
திருமுகப்பில் சிறுகதை படித்தேன் ஜெ. அதில் நீங்கள் காட்டிய விஷ்ணு சயன தரிசனம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. ‘இருளை உருக்கி வார்த்து வடித்தது’ என்ற படிமச் சொற்களை காட்சிப் படுத்தி பரவசமடைந்தேன். நீங்கள் ஒவ்வொரு வாசல்களையும் விளக்கும்போது விஷ்ணுபுரத்தின் மூன்று வாசல்களை ஓட்டிப்பார்த்தேன். ஸ்ரீபாதம், கெளஸ்தூபம், மணிமுடி.. அங்கே பயங்கரமும் சாந்தியும் ஒன்றாய்கூடிய அறிநகை என்று சொன்னீர்களே… அங்கு மயிற்கூச்செரிந்தது.
பின்னும் பிரபஞ்ச தோற்றத்தை விளக்கும் வரிகளில் தியானித்திருந்தேன். பிரபஞ்ச தோற்றத்தை விளக்குவதற்கு என பல அறிவியல் கோட்பாடுகளை மனிதன் “arm chair theory” வடிவில் சொல்லி வைத்துள்ளான். பல மதங்களிலும் பிரபஞ்ச தோற்றுவாயை படித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் விளக்கும் தோற்றுவாய் மட்டுமே என்னை அதிரச் செய்கிறது. காலம் என்ற பரிமாணத்திற்கு முன் நீங்கள் செல்லும்போதே பரவசமடைந்துவிடுகிறேன். இந்தக் கதையில் வரும் இந்த வரிகளின் துணை கொண்டு காலத்திற்கு அப்பால் பயணித்தேன்.
“இங்கேயுள்ள மூர்த்தி மலந்து கைவிரிச்சுப் படுத்திருக்கு. இதுக்கு சாஸ்திரத்திலே மகாயோக நிலைண்ணாக்கும் பேரு…. மகாயோகநிலைண்ணாக்க வேற ஒண்ணுமே இல்லாத பெருநிலைண்ணு அர்த்தம். அப்ப தெய்வங்கள் பொறக்கேல்ல. பிரபஞ்சமும் பொறக்கல்ல. காலம்கூட உண்டாகல்லண்ணாக்க வேற என்ன? விஷ்ணுமட்டும்தான் இருந்தாரு. வேறு ஒண்ணுமே இல்ல. காலம் இல்லேண்ணா எல்லாமே சூனியம்தானே? சூனியத்திலே காலம் பிறந்துவருது. காலத்துக்க பீஜம். கருத்துளி. அங்கு பாஷை இல்ல. சித்தம் இல்ல. சித்தத்துக்கு அப்பால் உள்ள துரியம் இல்ல. துரியாதீதமும் இல்ல. விஷ்ணுஇல்லாம வேற ஒண்ணுமே இல்ல. அப்படிண்ணாக்க விஷ்ணுவ ஆரு காணுயது? அவரு எப்டி இருந்தாரு? அதுனால அவரும் சூனியவடிவமாக இருந்தார்.. சூனியம் என்றால்? இல்லாமை. இருட்டு. இருப்பது போலத்தெரியும். கைகளை நீட்டிப்பார்த்தால் தொட முடியாது.
துரியம் என்றால் என்ன?நினைப்பு. நினைத்து நினைத்து போய் ஒன்றுமே இல்லாமல் ஆகுமே அது. “
காலம் என்பதை பரிமாணமாக வைத்து பல அறிவியல் புனைவுப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதையும் தாண்டிய ஐந்தாம் பரிமாணமாக ஈர்ப்பு விசையை வைத்த இன்டர்ஸ்டெல்லார் என்ற படம் காலம் என்னும் பரிமாணத்தை பகடி செய்வதைக் கண்டேன். இன்னும் கண்டறியப்படாத பரிமாணங்களின் மேல் புனைவை ஏற்றி அதன்பின் களித்திருந்தேன். இங்குதான் சூனியத்திலிருந்து உண்டாகும் முதல் விசையின் மேல் காதல் கொண்டேன். அதை நீங்கள் விளக்கும்போது பரவசமடைவதும் அதனால் தான்.
இறுதியில் “அவர் அன்று கண்டதைப் பத்துவருடம் கழித்துதான் நான் கண்டேன்.” என்று எழுதியிருந்தீர்கள். நீங்கள் கண்டதை உங்கள் எழுத்துக்களின் வழியாக உடலால் பயணிக்காமலேயே கண்டடைந்தாற் போல இந்த சிறுகதை அமைந்தது.
சிறுகதை படித்ததும் அந்த காளிசரணை இணையத்தில் தேடி கண்டடைந்தேன். சமீபத்தில் மும்பை சென்றபோது நீங்கள் டெண்டுல்கர் அவர்களை அடையாளம் காண முடியாதிருந்தது நினைவிற்கு வந்தது. பாவம் நீங்கள் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டநாயகனை எங்ஙனம் அடையாளம் காணுவீர்கள். சிரிப்பு வந்தது. காளிசரண் அவர்கள் மேலும் பரிதாபம் வந்தது. சிறுகதை நெடுகவே உங்களுக்கேயுரிய நகைச்சுவை நிரம்பியிருந்தது. அவர் உங்களை மறந்திருக்க வாய்ப்பேயில்லை. உங்களைப்போலவே.
அன்புடன்
இரம்யா.
மனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள ஜெ.,
பொதுவாக காலையில் ஒலிக்கத் தொடங்கி அன்று முழுதும் ‘மனதின் குர’லாக ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பாடல் அவ்வப்போது மனிதனின் குரலாகவும் வெளிப்பட்டு விடுவதுண்டு. இன்றைய ஸ்பெஷல் ‘கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்’. ஒன்று எம்.எல்.வசந்தகுமாரி எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் ‘ஏழை படும் பாடு’ (1950) படத்தில் பாடியது. இன்னொன்று ஜி.ராமநாதன் இசையில் எஸ்.ஜானகி ‘தெய்வத்தின் தெய்வம்’ (1962) படத்தில் பாடியது. ஒரே பாட்டை வெவ்வேறு மெட்டுக்களில் அமைப்பது பாரதி பாட்டுக்களுக்கே அதிகம் நடந்திருக்கிறது.
காதலினால் தவிதவிக்கும் பெண்ணின் உள்ளத்தை ஒரு ராகத்தில் வெளிப்படுத்துவது பொருந்தாது என்று நினைத்தோ என்னவோ இருவருமே ‘ராகமாலிகை’ யில் போட்டிருக்கிறார்கள். பாரதி இப்பாடலை ‘கோனார் வீட்டுப் பெண்களிடம் காட்டுகிற வேலையை என்கிட்ட வெச்சுக்காதே’ என்று மறப்பெண்ணொருத்தி பாடுவது போல வைத்திருக்கிறார். அந்தப் ‘பாவம்’ ஒப்புநோக்க முதல் பாடலிலேயே சிறப்பாகக் கூடி வந்திருக்கிறது. பின்னது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் எந்தக் கோபிகையும் பாடியிருப்பது. முன்னது ஒப்புநோக்க எளிமையான பாடல். பின்னதில் இசைக்கோர்வைகளையும், ஜானகியின் குரலையும் கொண்டு உயர்தரமான ஒரு பாடலைச் செதுக்கியெடுத்திருக்கிறார் ஜி.ராமநாதன். அது தேனில் ஊறிய பலா என்றால் இது அந்தப் பலா ஊறிய தேன். அல்லது இது அது, அது இது.முதல் பாடலில் அந்தக் காலத்து அழகு பத்மினியின் நடனம் கண்ணுக்கு விருந்து என்றால் பின்னதில் சிட்டிபாபுவின் வீணை இசை காதுக்கு. ‘டொய்ங்’ ‘டொய்ங்’ என்று அங்கங்கே தீர்மானம் கொடுத்துக்கொண்டே போகிறார். கூடவே ஷெனாய் வேறு. பின்னதில் கண்ண்ண்ண்ண்ணன்… என்ற நீட்டலுக்குப் பின் குழலாக ஒலிக்கும் இசை பின் வீணையாக, நடுநடுவே ஷெனாயாகவும் மாறி வர்ண ஜாலம் பண்ணுகிறது. தன் மணிக்குரலோடு எம்.எல்.வி கம்பீரமாகவும் லகுவாகவும் பாடலினூடே மிதந்து செல்கிறார். ஜானகியின் குரலோ பதனீராய், இளநொங்காய் தித்திக்கிறது. சுருள் பிருகாக்களிலும், நிரவல்களிலும் ‘ரோலர் கோஸ்டெ’ராய் உருளுகிறது பிரளுகிறது. ‘பாவி மனுசா…கேக்காமப் போய்ட்டியே’ என்றுதான் தோன்றியது. இந்தக் கண்ணும் காதும்தான் எவ்வளவு கொடுத்து வைத்தவை.
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)
ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் – எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)
சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே – அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக் குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் – மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் – அதைப்
பற்றி மறக்கு தில்லை பஞ்சை உள்ளமே.
நேர முழுதிலும் அப்பாவி தன்னையே – உள்ளம்
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
***எம்.எல்.வி பாட்டுhttps://www.youtube.com/watch?v=8bXUZER_zWo எஸ்.ஜானகி பாட்டுhttps://www.youtube.com/watch?v=sThF6ACfJw4நன்னம்பிக்கை- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,
வணக்கம். என் பெயர் சரண்ராஜ். வயது 23. கல்லூரி முடித்தவுடன் படித்த துறைக்கு செல்ல விரும்பாமல் புகைப்படகலை ஆர்வத்தினால் புகைப்படத்துறையில் சேரலாம் என்று விரும்பினேன். பெற்றோர் திட்டுவார்கள் என்று பயந்து அவர்கள் சொன்னபடி அரசுத்துறை தேர்வுக்கு பயிற்சி செய்தேன். ஆனால் அதற்கு போதிய கவனம் என்னால் செலுத்த இயலவில்லை. வீட்டில் சண்டை போட்டு கொண்டு ஒரு போட்டா ஸ்டுடியோ வில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு வீட்டில் பிரச்சனை(என் அண்ணன் சினிமாவில் இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்) அதிகமாகவே நான் இருக்கும் பாண்டிச்சேரியிலேயே ஒரு கணினி துறையில் குறைவான வருமானதுக்கு வேண்டா வெறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
சிறுவயதிலிருந்தே எதன்மிதும் பிடிப்பில்லாத குணம், துணிவோடு எதையும் செய்ய முடியாத கோழையாகவே இருந்திருக்கிறேன். கல்லூரி வரை அக்குணத்தின் வெளிப்பாடு என்னுள் பெருஞ்சோர்வையும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாக்கியது. என் இறுக்கத்திலிருந்து மீட்பதற்கு புகைப்பட கலை உதவியாக இருந்தது. அண்ணாவிடம் கேமிரா வாங்கி கற்றுக்கொண்டிருந்தேன். என் வாழ்வில் கல்லூரி முடித்த பிறகு தான் நான் தனியாக வெளி ஊர்களுக்கு பயனம் செய்தேன் புகைப்படத்திற்காக. வீட்டில் சண்டை போட்டு தான் வெளியே செல்வேன். கலை பற்றிய சிந்தனை எனக்கு வாழ்வின் மீது பிடிப்பை உண்டாக்கியது என்றாலும் என் இயல்பான மனச்சோர்வு என்னை வாட்டியது.
இப்படி இருந்த நிலையில் தான் குக்கூ சிவராஜ் அண்ணாவை பார்க்கச் சென்றேன். என்னுள் இருந்த அத்தனை தவிப்புகளையும் அண்ணாவிடம் சொன்னேன். அண்ணா எனக்கு ஆறுதல் அளித்தார். நம்பிக்கை ஊட்டினார். பிறகு ‘தன்மீட்சி’ என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்து “இந்த புத்தகத்த திரும்ப திரும்ப படியுங்க சரண். எல்லாம் சரியாயிடம்” என்று சொன்னார்.
அப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். என்னுள் இருந்த கேள்விகளுக்கும், பெரும் பயங்களுக்கும் உங்கள் எழுத்து விடையாக இருந்தது. மருந்தாகவும்.
உங்கள் எழுத்து மேலும் என்னை உத்வேகபடுத்தியது. என்னுடைய நடவடிக்கைகளில், சிந்தனை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படுத்தியது. உற்சாகம் அளிக்க கூடிய சிந்தனையை சித்தித்தும், செயலை ஓரளவுக்கு செய்தும் வருகிறேன். வாழ்வின் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது ஐயா. கனவுலோகத்திலிருந்து கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.
மீண்டும் சோர்வு ஏற்படும்போதெல்லாம் உங்கள் எழுத்தையே மீண்டும் மீண்டும் வாசிப்பேன். யூடியூபில் உங்களது உரையாடலை கேட்கும்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.
நேற்று “இலக்கியமும் வாசிப்பும்” என்ற தலைப்பில் யூடியூபில் பேசிய உரையாடலைக் கேட்கும்போது பல புரிதல்கள் ஏற்பட்டது ஐயா. அதில் ஒரு கருத்தை உருவாக்குவதற்கும், அதை மறுத்து வேறு கருத்தை நிலைநாட்டுவதற்கான திறன் நம்மூர் பல படித்த மனிதற்களுக்கே இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். ஆமாம் ஐயா அப்படிபட்ட கல்வி முறையில் நானும் படித்திருக்கிறேன். ஒரு படைப்பை உருவாக்குவதற்கான சிந்தனையை ஆசிரியர்களும் ஊக்கபடுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை. இப்படி உங்கள் உரையாடலும் என் சிந்தனையை மாற்றியிருக்கிறது.
தன்மீட்சியை தொடர்ந்து தங்களின் ‘அறம்’ புத்தகத்தை வாசித்தேன். அதில் வரும் கதைகள் ஏதோவொரு வகையில் மனிதர்களின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது. சக மனிதர்களிடமே நெருங்கி பேச தயங்குகிற நான் இன்று நண்பர்களிடம் நீண்ட நேரம் பேசுகிறன், புதிய மனிதர்களிடமும் பேசுகிறன். தற்போது ‘காடு’ நாவலை படித்து கொண்டிருக்கிறேன்.
கொரானா ஊரடங்கு காரணமாக எல்லாரும் வீட்டிலேயே இருக்கும் சமயத்தில் மனகசப்பை ஏற்படுத்தும் செய்தியில் மனதிற்கு இடம் கொடுக்காமல் புத்தகங்களை வாசிக்கிறேன். தங்களுடைய பொற்கொன்றை கட்டுரை மனதுக்கு நம்பிக்கை அளித்தது ஐயா.
என் வாழ்வில் நான் எழுதும் முதல் கடிதம். பிழையிருப்பின் மன்னிக்கவும் ஐயா. நன்றி.
சரண்ராஜ்
பாண்டிச்சேரி
***
அன்புள்ள சரண்,
நீங்கள் வாசிக்கும் நூல்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள உதவுகின்றன என்பதில் நிறைவு. உங்களுடன் விளையாடும் நூல்களை அல்ல, உங்களை இட்டுச்செல்லும் நூல்களை தெரிவுசெய்து வாசியுங்கள். இக்காலகட்டத்தில் உளச்சோர்வு என்பது ஒரு வைரஸ் போல சூழலை நிறைத்துள்ளது. அதிலிருந்து உங்கள் இலட்சியங்களும் கனவுகளும் உங்களை மீட்க எழுத்து உதவட்டும்
ஜெ
April 29, 2021
சிதம்பரம்
மலையாள எழுத்தாளர்களில் சி.வி.ஸ்ரீராமன் தனித்தன்மை கொண்டவர். திரிச்சூர் அருகே போர்க்குளம் என்னும் ஊரில் 1931ல் பிறந்தார். சட்டப்படிப்பு படித்தபின் அந்தமான் நிக்கோபாரில் வங்காளப் போர் அகதிகளை மறுகுடியேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் ஊருக்கே திரும்பி குன்னங்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றினார்
ஒருங்கிணைந்த கம்யூனிஸ்டுக் கட்சியிலும், பின்னர் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் உறுப்பினராக இருந்த சி.வி.ஸ்ரீராமன் போர்க்குளம் பஞ்சாயத்து தலைவராகவும்,சொவ்வன்னூர் பிளாக் பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றியவர். பின்னர் கேரள சாகித்ய அக்காதமி தலைவராகவும் பணியாற்றினார்.
சிறுகதைகள் மட்டுமே எழுதியவர் சி.வி.ஸ்ரீராமன். மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். நேரடியான உணர்ச்சிகரமான கதைகள் அவை. ஆகவே அவை மிகப்பெரிய வாசகவட்டத்தையும் அடைந்தன.
சி.வி.ஸ்ரீராமன்சி.வி.ஸ்ரீராமன் கேரளக் கலைப்பட இயக்கத்துக்கு அணுக்கமானவர். அவருடைய பல கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. வாஸ்துஹாரா [ஜி.அரவிந்தன்] புருஷார்த்தம் [கே.ஆர்.மோகனன்] பொந்தன்மடா [டி.வி.சந்திரன்] போன்றவை அவருடைய கதைகள். ஷாஜி என் கருண் இயக்கிய பிறவி படத்தில் தோணிக்காரராக நடித்திருக்கிறார்
சி.வி.ஸ்ரீராமனின் புகழ்பெற்ற கதை சிதம்பரம். அதை ஜி.அரவிந்தன் சினிமாவாக எடுத்தார். அரவிந்தனே தயாரிப்பாளர். மிகக்குறைந்த செலவில், முற்றிலும் இயற்கை ஒளியில் ஏழெட்டுநாட்களில் படம் தயாரிக்கப்பட்டது, திரைவிமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பல கேரள திரைவிருதுகளையும் பெற்றது. ஒளிப்பதிவு ஷாஜி என் கருண்.
உயர்தரப் பதிவாக யூடியூபில் கிடைக்கிறது. ‘சப்டைட்டில்’ இல்லை. ஆனால் தேவையில்லை. அரவிந்தனின் படங்களில் வசனங்கள் பெரும்பாலும் பொருளற்ற அன்றாட வார்த்தைகள் மட்டும்தான். கணிசமான வசனங்கள் தமிழ். கோபி, ஸ்மிதா பாட்டில் நடித்திருக்கிறார்கள். அன்று இளம் நடிகராக இருந்த ஸ்ரீனிவாசன் முக்கியமான கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்
ஜி.அரவிந்தன்மூலக்கதையில் ஒரு வரி வரும். ’பாவத்துக்கு பிராயச்சித்தம் உண்டு என்பது ஒரு பொய். இரண்டும் வேறுவேறு, ஒன்று இன்னொன்றால் எப்படி இல்லாமலாக்கப்படும்?’ அதுதான் கதையின் மையம். குற்றவுணர்வும் தனிமையும் கொண்டு அலையும் மையக்கதாபாத்திரமான சங்கரன் வானம் முடிவில்லாதது, ஒட்டுமொத்தமாக மானுடவாழ்க்கையே மிகச்சிறியது, அதில் பாவமும் துளியினும் துளியே என உணர்வதுதான் கதையின் உச்சம்.
கதையின் இறுதித்தருணம் சிதம்பரத்தில் சங்கரன் காணும் ஓர் உருவெளிக்காட்சி. ஒரு கணநேரக் கண்மயக்கம். அதைநோக்கிச் செல்லும் ஏழெட்டுப் பக்க அளவுள்ள கதை அது. அதை அரவிந்தன் திரைவடிவில் கொண்டுவந்திருக்கிறார்
படம் வெறும் காட்சிகள் வழியாகவே செல்கிறது. வசந்தத்தின் பொன்னொளி நிறைந்த மாட்டுப்பெட்டி. அங்கே மிரண்ட மான் போல வந்துசேரும் சிவகாமி. விலக்கப்பட்ட எல்லைகள். அவற்றை அவள் கடக்கும் மர்மமான தருணங்கள்.மூன்று கதாபாத்திரங்களின் உடல்மொழியில் உள்ள நுட்பமான வெளிப்பாட்டை நம்பியே படம் அமைந்துள்ளது. சிவகாமியின் மிரட்சியும், மலர்வும். சங்கரனின் அகக்கிளர்ச்சி. முனியாண்டியின் எச்சரிக்கை. அவை தொடர்ச்சியாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கோபி, ஸ்மிதா பாட்டில், ஸ்ரீனிவாசன் மூவருமே அதை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்
இந்தப்படம் இன்று முதன்மையாக ஸ்மிதா பாட்டிலின் அழகான பாவனைகளுக்காகத்தான் பார்க்கப்படவேண்டும். மிரட்சி, கிளர்ச்சி, மலர்வு, மயக்கம் என அவர் இந்தப் படத்தினூடாக உருமாறிக்கொண்டே இருக்கிறார்.
இப்போது பார்க்கையில் சினிமா அச்சிறுகதையை தவறவிடும் இடம் சங்கரன் கொள்ளும் அகக்கொந்தளிப்பை, கைவிடப்பட்ட நிலையை படத்தால் போதுமான அளவுக்குக் காட்ட முடியவில்லை என்பதுதான். நிகழ்வுகளை முழுமையாக தவிர்த்துவிடுவது அரவிந்தனின் பாணி. வெறும் ‘அன்றாடப் புழக்கம்’ மட்டுமே அவர் கதைகளில் இருக்கும். உரையாடல்கள், உணர்வு வெளிப்பாடுகள், கதாபாத்திர மோதல்கள் முற்றாக தவிர்க்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் சங்கரன் கொந்தளிப்புடன் ஓடுவதும், சிதம்பரத்தில் அவன் அலைவும் நீண்டநாட்களுக்குப் பின்னரும் கண்களில் நிற்பவை. ஆனாலும் எனக்கு கதை ஒரு படிமேல் என்றே படுகிறது
101 மலையாளத் திரைப்படங்கள்இலக்கியத்தில் சண்டைகள்
அன்புள்ள ஜெ
வணக்கம்
நான் ஒரு இளம்வாசகன்
நேற்று உங்களுடைய அறம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள பெருவலி என்ற கதையை படித்தேன், இன்று உடையார் என்ற நாவலின் நான்காம் பாகத்தின் முதல் அத்தியாத்தினைப் படித்தேன். இரண்டிலும் கைலாசமலை பற்றிய குறிப்பு இருந்தது, அதன் பிரமிப்பை நீங்கள் இருவரும் கிட்டதட்ட ஒரே மாதிரிதான் பதிவு செய்துள்ளீர்கள்..
கேள்வி. நீங்கள் ஏன் யோகிராம் சுரத்குமாரிடம் பாலகுமாரன் குப்பை என்று கூறினீர்? பாலகுமாரன் தன் பெருமையை பவா செல்லதுரையிடம் ஏன் சொல்ல வேண்டும் பிறகு உங்களை ஏன் கெட்டவார்தையால் திட்ட வேண்டும்?
யோகிராம் சுரத்க்குமார் பற்றி பவா பேசிய காணொளி பார்ததில் இருந்து மனம் நெருடலாக இருந்தது அதன் காரணமாக இந்த மின்னஞ்சல்.
உங்கள் பதில் வேண்டி காத்திருக்கும் நான்.
விஷ்ணுபிரபு
***
அன்புள்ள விஷ்ணு
நீங்கள் இளம்வாசகர் என்பதனால் இதைச் சொல்கிறேன். இதை முன்னரும் பலமுறை எழுதியிருக்கிறேன்
இலக்கியத்தில் ஓர் ஆணவ அம்சம் எப்போதும் உண்டு. நாம் எழுதுவதைப்பற்றிய நம்பிக்கை நமக்கு இல்லையேல் எழுதமுடியாது. அதை கொஞ்சம் அழுத்தி ஆணவமாக ஆக்கிக்கொள்ளாவிட்டல் அவ்வப்போது உருவாகும் சூழல் பற்றிய நம்பிக்கையிழப்பை, நம்மைப்பற்றிய நமது ஐயங்களை நம்மால் கடக்கவும் இயலாது. ஆகவே எழுத்தாளர்கள் எல்லாருமே கொஞ்சம் ஆணவம் கொண்டவர்களே. அந்த ஆணவம் கம்பன் காளிதாசன் முதல் இன்றுவரை நீடிக்கும் ஓர் அடிப்படை உணர்வு
அதோடு இலக்கியம் என்பது ஒரு சூழலில் உள்ள கருத்தியல்கள் தங்கள் கூர்முனைகளால் சந்தித்துக்கொள்ளும் ஒரு வெளி. எல்லா அரசியல், சமூகவியல், அழகியல் கருத்துநிலைகளும் இலக்கியத்தில் உண்டு. அவையெல்லாமே மிகத்தீவிரமான உணர்வுநிலைகளுடன் இலக்கியத்தில் செயல்படுகின்றன. ஏனென்றால் உணர்வுகள் இல்லையேல் இலக்கியம் இல்லை.
அந்த மோதல் இலக்கியத்தின் எல்லா தளங்களிலும் எப்போதும் நிகழ்ந்தபடியே இருக்கிறது. அந்த மோதல் வழியாகவே இலக்கியம் முன்னகர்கிறது. இலக்கியத்தின் தளத்தில் அது நிகழும்போது பலசமயம் எல்லைகள் மீறப்படுகின்றன. ஏனென்றால் இலக்கியவாதிகள் உணர்ச்சிகரமானவர்கள், தங்கள் தரப்பை ஆழ்ந்து நம்புபவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையையே ஒரு நம்பிக்கையின்பொருட்டு அர்ப்பணிக்கிறார்கள். ஆகவே அதன்பொருட்டு ஆழ்ந்த வேகத்துடன் நிலைகொள்வார்கள். அவர்களின் ஏற்பும் மறுப்பும் ஆவேசமானதாகவே இருக்கும்.
இன்று முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் இருப்பதனால் இந்தப் பூசல்கள் அப்படியே அங்கே வெளிப்படுகின்றன. முன்பு சிற்றிதழ்களுக்குள் வெளியாகிக்கொண்டிருந்த பூசல்கள் இணையம் வழியாக எல்லார் பார்வைக்கும் வருகின்றன. மேலும் இன்று அச்சிதழ்களில் ஒருசாரார் இலக்கியவாதிகளின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் அவர்களின் பூசல்களை மட்டுமே பொதுவெளியில் வைக்கிறார்கள்.
இலக்கியச்சூழலுக்கு அறிமுகமாகும் புதியவர்களுக்கு எப்போதும் இது ஒரு திகைப்பை அளிக்கிறது. என்ன இது என்று அவர்கள் குழம்புகிறார்கள். இலக்கியம் நற்பண்புகளை வளர்க்கும், இலக்கியவாதிகள் பண்பானவர்களாக இருப்பார்கள் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தது அடிபடுகிறது. அது அவர்களை இலக்கியம் மீதே அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது
இலக்கிய அறிமுகம் போதிய அளவுக்கு இல்லாதவர்கள், முகநூல் வழியாக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொள்ளும்போது முதலில் இந்தப்பூசல்களைத்தான் காணநேர்கிறது. அவர்கள் இலக்கியவாதிகளை வசைபாடவோ குறைகூறவோ ஆலோசனை சொல்லவோ ஆரம்பிக்கிறார்கள்
ஆரம்பகட்ட வாசகர்கள் இலக்கியவாதிகளிடம் அவர்கள் எப்படி ‘பண்பட்ட மனிதர்களாக’ இருக்கவேண்டும் என்று சொல்வதைக் காணலாம். ‘எழுதுறதெல்லாம் அப்றம், முதல்ல நல்ல மனுஷனா இருங்க’ என்று எழுத்தாளர்களிடம் பாமரர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப்பற்றி நான் ஒரு கதை கூட எழுதியிருக்கிறேன்
இலக்கியச் சூழலிலேயே இலக்கியத்தின் வேகத்தையும் அதன் அடிப்படையான விசைகளையும் தெரிந்துகொள்ளாத மொண்ணைகள் உண்டு. அவர்கள் எல்லா பூசல்களையும் ஒன்றென்றே கருதுவார்கள். பூசல்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டிக்கொள்வார்கள், ஆனால் பூசல்களை மட்டுமே கவனிப்பார்கள். எல்லா கருத்துப்பூசல்களையும் வெறும் ’சண்டைகளாக’ சித்தரிப்பார்கள். அவர்களுக்கு அவ்வளவுதான் பிடிகிடைக்கும். அதை வாசிக்கும் இளம்வாசகனும் அவ்வண்ணமே எண்ணத்தலைப்படுவான்.
இன்னொருபக்கம் எழுத்தாளர்கள் மேல் அரசியல்நிலைபாடு கொண்டவர்கள் சீற்றமும் கசப்பும் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் எந்த நல்ல எழுத்தாளனும் ஏதேனும் ஓர் அரசியல்தரப்பின் குரலாக ஒலிக்க மாட்டான். ஆகவே இலக்கியவாதிகளை அரசியல்வாதிகள் பழிக்கிறார்கள். ஒன்று, அவர்களை தங்கள் எதிர்த்தரப்புடன் சேர்த்து வசைபாடுவார்கள். அல்லது, ஒட்டுமொத்தமாக இலக்கியவாதிகளே அயோக்கியர்கள், பண்படாதவர்கள் என்பார்கள்
புதிய இலக்கியவாசகர்கள் இலக்கியப்பூசல்களைக் கண்டு அடையும் பதற்றத்தை இந்த நாலாந்தர அரசியல்வாதிகள் ஊதி வளர்த்து இலக்கியத்தின்மேலேயே கசப்பாக மாற்றிவிடுகிறார்கள். இது முகநூல்சூழலில் அதிகமாக உள்ளது. ‘அப்படி இலக்கியவாதிகளை தவிர்த்துவிட்டு நீங்கள் ஏற்றுக்கொள்வது யாரை? அல்லும்பகலும் எதிரிகளை உருவகித்து கசப்பையும் காழ்ப்பையும் கக்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையா? தங்கள் தரப்பின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்தும் அந்தக் கயவர்களையா ?’ என்று நான் ஒருமுறை ஒருவரிடம் கேட்டேன்
இலக்கியவாதியின் தீவிரமான பற்று, தீவிரமான உணர்ச்சிநிலைகள் அவனை ஒரு ‘சமநிலையுள்ள’ மனிதனாக , ‘ஜெண்டில்மேனாக’ இல்லாமலாக்குகின்றன. ஆனால் சமநிலையும் பண்பும் உடைய ஜெண்டில்மேன்கள் சொல்லமுடியாதவற்றை அவனே சொல்கிறான். அவனே அவர்கள் காணமுடியாதவற்றைக் காண்கிறான். அவனுடைய இடம் அதுவே. அவனை நாம் கவனிப்பது அந்த தனிப்பார்வைக்காகவே. அவன் ஜெண்டில்மேனாக இருப்பதனால் அல்ல, அவன் எழுத்தாளனாக கலைஞனாக இருப்பதனால்தான் அவனை நாம் வாசிக்கிறோம்.
உலகமெங்கும் இந்த கருத்துப்பூசல் இலக்கியவாதிகள் நடுவே என்றும் இருந்ததுண்டு. நாம் அறிந்த புகழ்பெற்ற எல்லா எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும் பூசல் சார்ந்த எழுத்துக்கள் உண்டு. பதிவாகாமல் போன பூசல்கள் பலமடங்கு.
இதேயளவுக்குக் கருத்துப்பூசல் தத்துவவாதிகள் நடுவிலும் உண்டு. ஹெகல், ஹோப்பனோவர், மார்க்ஸ், நீட்சே போன்ற அத்தனை தத்துவஞானிகளின் எழுத்திலும் கணிசமான பகுதி இத்தகைய கருத்துப்பூசல்களே. பலசமயம் அவை பொதுநாகரீக எல்லையை கடக்கின்றன, தனிப்பட்ட தாக்குதல்களாகவும் ஆகின்றன.
நம் மரபிலும் கவிஞர்கள் நடுவே நிகழ்ந்த பூசல்களை கதைகளாக அறிகிறோம். சங்ககாலத்தில் இன்னொரு மோசமான கவிஞனுக்கு தந்த அதே கொடையை தனக்கும் தந்தமைக்காக சினம் கொண்டு கவிஞர்கள் அரசனின் கொடையை மறுத்திருக்கிறார்கள். அதை ‘பரிசில்மறுத்தல்’ என்று ஒரு தனித்துறையாகவே பாடிவைத்திருக்கிறார்கள். கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் நடுவே நிகழ்ந்தபூசல் கம்பனின் சாவுவரை சென்றது என்கின்றன கதைகள். எல்லாரும் கவிஞரே, எல்லாம் எழுத்தே என்ற நிலை தமிழ் வரலாற்றில் எப்போதுமே இருந்ததில்லை.
தத்துவவரலாற்றிலும் இதே வகையான பூசல்கள் உண்டு, இன்னமும் கூர்மையாக. சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் நாம் மதத்தரப்புகள் நடுவே மிகக்கடுமையான மோதல்கள் நிகழ்ந்ததை காண்கிறோம். சைவ வைணவ தத்துவங்கள் நடுவே பூசல்கள் நிகழ்ந்துள்ளன. ராமானுஜர் போன்ற தத்துவஞானிகளுக்கு எதிராக கருத்துப்பூசல்கள் நிகழ்ந்துள்ளன. வள்ளலார் வரை அது தொடர்கிறது
ஆகவே, மிக எளிமையாக இலக்கியமும் தத்துவமும் ‘பொதுப்பண்பாட்டுடன்’ நிகழலாமே, பண்பாடுதான் முக்கியம் போன்ற கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளவேண்டாம். கருத்துச்செயல்பாட்டில் கருத்தே முக்கியம். பண்பாடு தேவைதான், ஆனால் எப்போதும் அது அறுதியான ஆணையாக இருக்குமென சொல்லமுடியாது.
எங்கே பண்பாடுமீறுதல் எல்லைகடக்கிறது? ஒன்று தனிப்பட்ட தாக்குதல்களாக ஆகிவிடும்போது. நாகரீகச் சொற்களின் எல்லைகள் கடக்கப்பட்டு மொட்டைவசைகளாக ஆகும்போது. அவதூறுகள் சொல்லப்படும்போது. அவற்றை தவிர்க்கலாம்
அத்துடன் இத்தகைய பூசல்கள் நிகழ்வது உண்மையான இலக்கியவாதிகள், தத்துவவாதிகள் நடுவே. அதைக்கண்டு ஊடேபுகுந்து வெற்றுவேட்டுகளும் கூச்சல் போடுவதுண்டு. அவர்களின் கூச்சலில் சிந்தனையின் சாராம்சம் இருக்காது. விலங்கின் ஊளைபோல வெறும் மொட்டையான ஆவேசம் மட்டுமே இருக்கும்.
இலக்கியவாதியின், தத்துவவாதியின் பூசலில் சாராம்சமான கருத்துக்களும், நிலைபாடுகளும் இருக்கும். அந்தப்பூசல் வசையாக ஆனாலும்கூட வாசகன் அதிலிருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கும். இலக்கியப்பூசல்கள், தத்துவப்பூசல்கள் உலகம் முழுக்க ஏன் நூல்களாக தொகுக்கப்படுகின்றன என்றால் அவற்றில்தான் அடிப்படையான கருத்துமோதல்கள் நிகழ்ந்து புதியசிந்தனைகள் உருவாகியிருக்கும் என்பதனால்தான்.
தமிழில் நிகழ்ந்த புகழ்பெற்ற இலக்கியப்பூசல்களை வாசிக்க தொடங்கியபின் தெரிந்துகொள்ளுங்கள். பாரதி இலக்கணத்தை மீறி எழுதுகிறார் என்றபூசல் நிகழ்ந்தது. பாரதிக்கும் அயோத்திதாசருக்கும் தலித் அ்டையாளம் சார்ந்த பூசல் [பெயர் சொல்லியும் சொல்லாமலும்] நிகழ்ந்தது.
கல்கி எழுதுவது தழுவல் என்ற கோணத்தில் புதுமைப்பித்தன் சொன்ன விமர்சனத்தை ஒட்டி பூசல்கள் நிகழ்ந்தன. மு.அருணாச்சலம் அவர்களின் தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கியவாதிகள் பலர் விடுபட்டிருக்கிறார்கள் என்பதனால் ஒரு பூசல் நிகழ்ந்தது. புதுமைப்பித்தன் ‘மூனா அருணாச்சலமே முச்சந்தி கும்மிருட்டில் பேனாக்குடைபிடித்து பேயாட்டம் போடுகிறாய்’ என்று வசைக்கவிதை எழுதினார்.
ராஜாஜி புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் போன்ற கதைகள் புராணத்தை மாற்றுகின்றன என்று விமர்சித்து அதற்கு அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று எழுத புதுமைப்பித்தன் ‘நாமக்கல் கவிஞர் நல்லகவி தான் என்று சேமக்கலத் தலையன் சொல்லிவிட்டான். ஆமக்கா அப்பளக்காரி அம்முலுவின் அத்தைமகன் அப்படித்தான் சொன்னான் அன்று’ என்று வசை எழுதினார்.
டி.கெ.சிதம்பரநாத முதலியார் கம்பராமாயணத்தில் மிகைச்செய்யுட்கள் என சிலவற்றை ஒதுக்கிவைத்தார். அதையொட்டி உக்கிரமான விவாதங்கள் நிகழ்ந்தன. எஸ்.வையாபுரிப்பிள்ளை அகராதியில் சம்ஸ்கிருதமூலம் உள்ள சொற்களை சேர்க்கிறார் என்று சொல்லி தேவநேயப்பாவாணர் கடும் பூசலை உருவாக்கினார்.
தமிழில் புதுக்கவிதை உருவானபோது அதை மரபுக்கவிஞர்கள் எதிர்த்து மிகக்கடுமையாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் நவீனஇலக்கிய எழுத்துக்கு க.நா.சு.போட்ட பட்டியல்களை எதிர்த்து பூசல்கள் பல ஆண்டுகள் நடைபெற்றன. க.நா.சு ஜானகிராமனின் அம்மாவந்தாள் நாவலுக்கு எதிராக கடுமையாக எழுதினார். ஜெயகாந்தனின் படைப்புக்களை நிராகரித்தார்.
அகிலனுக்கு ஞானபீடம் அளிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக்கடுமையாக விமர்சனம் புரிந்து எழுதினார். அகிலனின் எழுத்து ‘ரெக்காட் டான்ஸ்காரி தொடையை காட்டும்போது அதில் சங்கராச்சாரியின் படம் ஒட்டப்பட்டிருப்பதுபோல’ வெறும் கேளிக்கைக்குமேல் சுதந்திரப்போர் மாதிரியான விழுமியங்கள் ஏற்றப்பட்டு எழுதப்பட்டது என்று சொன்னார்.
க.கைலாசபதி போன்ற மார்க்ஸியவிமர்சகர்களுக்கும் வெங்கட் சாமிநாதன் போன்ற அழகியல்விமர்சகர்களுக்கும் இடையே பெரும் பூசல் பல ஆண்டுகள் நிகழ்ந்தது. வானம்பாடி கவிஞர்கள் என்னும் சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதிய அணியை மற்றவர்கள் அழகியல் நோக்கில் நிராகரித்து எழுதிய பல விவாதங்கள் நடைபெற்றன. மார்க்சியர்களை ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ என்று வெங்கட் சாமிநாதன் நிராகரித்து எழுதினார்.
வணிக இதழ்களில் எழுதுவதற்கு எதிராக வெங்கட் சாமிநாதன் எழுதியதற்கு அசோகமித்திரன் ‘அழவேண்டாம், வாயைமூடிக்கொண்டிருந்தால்போதும்’ என்று பதில் அளிக்க ஒரு பூசல் நடைபெற்றது.
இப்படி ஐம்பது முக்கியமான இலக்கியப்பூசல்களை பட்டியலிடலாம். இவற்றின்வழியாகவே நம் சூழலின் இலக்கியக் கருத்துக்கள் தெளிவடைந்து கூர்கொண்டு வந்திருக்கின்றன
நான் எழுதவந்தபோதே நாவல் வடிவம் குறித்துச் சொன்ன கருத்துக்களால் விவாதம் உருவாகியது. அன்றிலிருந்து வெவ்வேறு விவாதங்கள் என்னைச் சூழ்ந்து நிகழ்கின்றன. நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன், விமர்சிப்பதும் உண்டு
இனி பாலகுமாரன் விஷயம். அதில் நான் பாலகுமாரனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏதும் சொல்லவில்லை. அவருடைய ஆளுமை பற்றி ஏதும் சொல்லவில்லை. அவர் எழுதியவற்றைப் பற்றியே பேசுகிறேன். அன்று வணிக எழுத்து – இலக்கியம் என்னும் பிரிவினை மிக தீவிரமாக முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஏனென்றால் அன்று எழுத்து என மக்கள் அறிந்திருந்ததெல்லாம் வணிக எழுத்துபற்றி மட்டுமே. இலக்கியம் பற்றி எதுவும் எவருக்கும் தெரியாது.
அன்று இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழில் அன்று இலக்கியம் வெளிவந்துகொண்டிருந்தது. கல்லூரிகள், இதழ்கள் எங்கும் இலக்கியம் என்றால் வணிக எழுத்தையே அனைவரும் முன்வைத்தனர். ஞானபீடமே ஒரு வணிக எழுத்துக்குத்தான் அளிக்கப்பட்டது. இலக்கியம் தன் இடத்துக்காக முழுமூச்சாக போராடிக்கொண்டிருந்தது.
ஆகவே எல்லா இடங்களிலும் வணிக இலக்கியத்த்தை நிராகரித்து இலக்கியத்தின் அழகியலை முன்வைத்தாகவேண்டியிருந்தது. அதை க.நா.சு தொடங்கிவைத்தார். வெங்கட் சாமிநாதனும் சுந்தர ராமசாமியும் முன்னெடுத்தனர். நான் அந்த மரபில் வந்தவன். அன்றுமின்றும் இந்த வேறுபாட்டினை தமிழ்ச்சூழலில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இந்த தளத்திலேயே ஐம்பது அறுபது கட்டுரைகளை அதைச்சார்ந்து எழுதியிருக்கிறேன்.
நீங்கள் இன்று இலக்கியம் என ஒன்றை வாசிக்கிறீர்கள் என்றால், இன்னின்ன எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் என அறிந்திருக்கிறீர்கள் என்றால் அது க.நா.சு தொடங்கி மூன்று தலைமுறைகளாக சலிக்காமல் முழுத்தீவிரத்துடன் செய்யப்பட்ட கருத்துச் செயல்பாட்டால்தான்.
நான் அன்று யோகி ராம்சுரத் குமாரிடம் பேசியது சுந்தர ராமசாமியிடமிருந்து பெற்றுக்கொண்ட குரலை. அன்று, வணிக எழுத்தின்மேல் வெறுப்பு இருந்தது. அதை அழிக்கவேண்டுமென்ற வெறி இருந்தது. ஆகவே யோகியிடம் வணிகநோக்கில் பாலியலை எழுதுபவரை நீங்கள் உங்கள் மாணவர் என்று சொல்லலாமா என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னது இன்னொரு பெருநிலையில் நின்றுகொண்டு ஒரு பதிலை. ’அவர் என் தந்தையின் மைந்தர், என் தந்தை அவருக்கு அருள்வார்’
நான் கேட்டது நான் நின்றிருந்த கருத்தியலில் இருந்து ஒரு விமர்சனக்கருத்தை. யோகி சொன்னது கருத்துநிலைபாடுகளுக்கு அப்பால் நின்று ஒரு மெய்யியல்நோக்கில் அடைந்த நிலைபாட்டை. அந்த முரண்பாட்டை புரிந்துகொண்டால் அந்த வினாவும் விடையும் முக்கியமானவை என்று உணர்வீர்கள்.
பாலகுமாரன் அந்தக்கேள்வியை அறிந்ததும் சீற்றம் அடைந்தது இயல்பே. அவருடைய இலக்கியவாழ்க்கையை முழுமையாக நிராகரிப்பது அந்த கேள்வி. ஆனால் அதில் உண்மையும் இருந்தது. தமிழ்ச்சூழலில் ஒருவர் வணிகநட்சத்திரம் ஆகவேண்டுமா இலக்கியம் படைக்கவேண்டுமா என்ற இரு வாய்ப்புகளில் ஒன்றையே தேர்வுசெய்ய முடியும். ஏனென்றால் இங்குள்ள வாசக லட்சங்கள் மிகமிகச் சாதாரணமான ரசனையும் அறிவுத்திறனும் கொண்டவர்கள். பாலகுமாரன் முதல் வழியை தேர்வுசெய்தார். இரண்டாவது அவருக்கு அமையாது. பின்னாளில் அவரே அதை கொஞ்சம் உணரவும் செய்தார்.
ஜெ இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும் எழுத்தாளரின் பிம்பங்கள் வசைபட வாழ்தல் மலேசியா- ஓர் இலக்கியப்பூசல் இலக்கியமதிப்பீடுகளின் எல்லைகள் சுராவும் சுஜாதாவும் சிங்கைப்பூசல்கள் -ஒரு விளக்கம் பெண்ணிய வசை நகுலனும் சில்லறைப்பூசல்களும்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

