Jeyamohan's Blog, page 998
April 23, 2021
ஏழாம் உலகம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஏழாம் உலகம் கதையை இன்று வாசித்து முடித்தேன். ஒரு பாதாளா உலகத்துக்குள் சென்ற அதிர்ச்சியை முதலில் அடைந்தேன். என்ன வாழ்க்கை இது என்ற திகைப்பு. ஆனால் கூடவே இது நான் அன்றாடம் காணும் உலகம்தானே என்ற எண்ணமும் ஏற்பட்டது. பதற்றம் எரிச்சல் என்று வாசித்துச் செல்லும்போது ஒரு நிறைவு வந்துகொண்டே இருப்பதைக் கண்டேன்
அந்த பாதாள உலகம் நாம் வாழும் உலகமேதான் என்ற எண்ணம் ஓர் இடத்தில் உருவானது. நாமும் எங்கோ எவருக்கோ விற்றுக்கொண்ட ‘உருப்படி’கள்தான். எங்கள் கம்பெனி அதன் இரண்டு கிளைகளை அப்படியே இன்னொரு ஃபினான்ஸ் கமபெனிக்கு விற்றுவிட்டது. அமாம், எங்களையும் சேர்த்து விற்றுவிட்டார்கள். நாங்கள் உருப்படிகள்தான். எங்களை கல்விக்கூடத்தில் உற்பத்தி செய்கிறார்கள்.
அந்த ஏழாம் உலகில்கூட பாசம் இருக்கிறது. ஒரு கனிந்த முதியவர் இருக்கிறார். ராமப்பன். ஒரு கள்ளமில்லாத ஆள் இருக்கிறான். குய்யன். ஒரு பத்தினியான குடும்பப்பெண் இருக்கிறாள். ஓர் உண்மையான அறிவுஜீவி இருக்கிறான். ஒரு மெய்ஞானியும் இருக்கிறார். மாங்காண்டிச்சாமி. ஒரு முழுமையான உலகம்.
ரவி குமரேசன்
இந்த விற்பனை உலகத்திலும்
அன்புநிறை குருவிற்கு,
மீட்பில்லா வாழ்க்கை வாழும் உயிர்கள். அங்கே நோக்கும் விழிகளில் அருவெறுப்பு, ஒவ்வாமை, கோவம் நிறைகிறது. அவர்களின் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை துளியும் ரசிக்க இயலவில்லை. இவர்களின் வாழ்க்கை வழியே அடையப்போகும் ஞானம் என்ன? மனதை கொந்தளிக்க வைத்து அடையும் தரிசனம் என்ன?
கழிவுநீர் ஓடும் பாதையில் மலர்களைக் காண்கையில் ஒரு மின்னதிர்ச்சி கணநேரம் உடலில் பரவிச்செல்லும். பெற்ற கல்வியனைத்தையும் கொண்டு மனம் அத்தருணத்தில் தழுவிய பரவசத்தை விளக்கமுற்பட்டு பலமுறை தோற்றிருக்கிறேன். உயிர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வெளி அத்துணை தாக்கத்தை ஏற்படுத்தும்.
மனம் பாதாளத்தில் வாழும் வாழ்க்கை, பிறரிடமிருந்து அம்மலக்குவியலை மறைப்பது, சமூக வலைப்பின்னலால் மட்டும் கரையில்லா புற ஆடை அணியும் பழக்கம் என அனைத்தும் வாழ்பனுவபமாக தரப்படும் போது மொத்த உயிரும் மீட்ச்சிக்காக தவிக்கிறது. பின்பு மெல்ல மெல்ல நிலவின் ஒளி இருளை மோகம் கொள்ள செய்வது போல, மனம் வாழ்வை கொண்ண்டாட பணிக்கிறது.
வேதாளம் தலைகீழாக தொங்குவதன் அவசியம் என்ன? மனிதர்களின் வாழ்விடங்களைச் சுற்றிலும் வவ்வால்கள் இருக்கின்றன. நேர் தலைகீழான உலகம் இவ்விருவுயிர்களுக்கும் இடையே. விழி நோக்கலும், விளக்களும், வியத்தலும், வெறுத்தலும் ஒன்றையொன்று அணுகும்போது நிகழலாம். இருப்பினும் இருளில் கரிய மின்னல் ஒன்றை காணும் பரவசத்தை அவைகள் அளிக்க தவறுவதில்லை.
ஏழாம் உலகத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.
– ஆனந்த் குரு
முகில் -கடிதங்கள்11
அன்புள்ள ஆசிரியர்க்கு,
“அவர்களின் சட்டைப்பையில் விவேகானந்தர் இருப்பார்” இந்த வரியை படித்தவுடன் சிரித்துவிட்டேன். நானும் அப்படித்தான் இருந்தேன். இந்த நாவலின் ஒரு பகுதியை வாழ்ந்திருக்கிறேன், அதன் உச்ச தருணங்களை அடைந்திருக்கிறேன். அவளை நான்கு முறை நேரில் பார்த்திருக்கிறேன், ஒருமணி நேரத்துக்கும் குறைவாகவே பேசியிருக்கிறேன்,நேரில் பேசியதேயில்லை. ஆனால் இதை வைத்துக்கொண்டு ஏழு வருடங்கள் ஒவ்வொரு நாளுமென கடந்துகொண்டிருக்கிறேன். உறவுப்பெண்தான், சில ஜோதிட நம்பிக்கைகள், அது சார்ந்த அச்சம் காரணமாக அம்மா வேண்டாம் என்றார்கள். அம்மாவை மீறமுடியவில்லை.
மூன்று வருடங்களுக்கு முன்பு இனி இல்லை என்றபோதுதான் அவளிடம் பேசினேன். அப்போதுதான் அவள் தன் காதலை ஒத்துக்கொண்டாள். நான் எழுதிய கடிதத்தை ஒவ்வொரு நாளுமென வாசிப்பதாகவும் நிறையமுறை அழுதிருப்பதாகவும் சொன்னாள். “அதெல்லாம் இப்போது எதற்கு?” இந்த வரியைக்கூட அப்படியே சொன்னாள். எங்காவது சந்திப்போம் என்று முடித்துக்கொண்டேன்.
அவளை சந்தித்த அந்நாட்களில் வெறுமனவே நிலவை பார்த்துக்கொண்டு மனதுக்குள் பேசிக்கொண்டிருப்பேன். இரு மாதங்களுக்கு முன்பு பௌர்ணமி இரவன்று வெள்ளியங்கிரி மலையேறினேன். மூன்று வருடங்களுக்கு பிறகு அன்றுதான் அத்தனை மகிழ்ச்சியாக நிறைவாக இருந்தேன். அவளை என் அருகிலென உணர்ந்தேன். அவள் இல்லையென்ற ஏக்கம் துளிகூட அப்போதில்லை.
நாவலின் கடைசி பகுதியை வாசிக்கும்போது கட்டுப்பாடுகளை இழந்து கதறி அழுதேன். அவள் பெயரை உள்ளுக்குள் அரற்றிக்கொண்டேன். என் அன்னை அவள். அங்கு இருந்தது நானும் அவளும்தான். ஒரு காதலின் வழியாக நான் அடைந்தது என்னளவில் மிக உயர்ந்த இடம். அது இல்லையெனில் கீழானவனாக இருந்திருப்பேன். வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களாகவே இதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன், அந்த காதலை மீண்டும் அடைவேனா? தெரியவில்லை.
என் வாழ்வின் உச்ச தருணங்களை மீண்டும் என்னுள் நிகழ்த்தியமைக்காக நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஆர்.எம்
***
அன்புள்ள ஜெ
அந்த முகில் இந்த முகில் கதையை வாசிக்கும் ஏராளமானவர்களுக்கு ஒரு கதை சொல்வதற்கு இருக்கும். பெரும்பாலும் பிரிவின் கதைதான் அது. ஏன் பிரிந்தோம் என்று தெரியாமல்தான் அந்த பிரிவு நிகழ்கிறது. இங்கே திருமணம் என்பது வேறு காதல் வேறு. காதல் என்பது இரண்டுபேரின் அந்தரங்கம். திருமணம் சமூக நிகழ்வு. இந்தியாவில் தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான மோதல் மிகமிக அதிகம். திருமணம் ஆனால்கூட காதல் தம்பதிகள் சமூகத்தை தொடர்ந்து சமாளிக்கவேண்டும். அவர்கள் தங்கள் சொந்தப்பெண்களின் திருமணத்தின்போதும் அந்தச் சிக்கலை சமாளிக்கவேண்டும்.
என் காதல் உடைந்தது. உடைத்துக்கொண்டது நானேதான். ஏனென்றால் எனக்கு இரண்டு தங்கைகள். அவள் இன்னொருவனை மணந்தாள். அந்த கல்யாணத்துக்கு நான் போயிருந்தேன். அதன்பின்னர் அடிக்கடி சந்திப்போம். கண்களால் புன்னகை புரிந்துகொள்வோம். ஆரம்பத்தில் பெரிதாக தெரியவில்லை. ஏனென்றால் அன்றைய நினைப்பு சுமைகளைப்பற்றி மட்டும்தான். ஆனால் எல்லாம் முடிந்து கொஞ்சம் உட்கார்ந்தபோது, இனிமேல் என்ன வாழ்க்கை என நினைத்தபோதுதான் மிகப்பெரிய வெறுமை. வாழ்க்கையில் மிக அழகான ஒன்றை இழந்துவிட்டோம் என்ற எண்ணம்.
இன்றுவரை அந்த வெறுமை குறையவில்லை. எனக்கு 51 வயது. இப்போதுகூட அந்த கண்ணீர் மிச்சமிருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கையில் நமக்கெல்லாம் அரியவை என அப்படி எதுவும் பெரிதாக அளிக்கப்படவில்லை. நல்லவை இனியவை என்பதெல்லாம் ரொம்பவே கொஞ்சம்தான். அதையெல்லாம் இழந்துவிட்டால் பிறகு மிச்சம் ஏதுமில்லை.
தமிழ்ச்சூழலில் யாருக்கானாலும் காதலுடன் சினிமாப்பாடல்களும் கலந்திருக்கும். எனக்கும்தான். என்ன அழகு எத்தனை அழகு என்ற பாட்டை எப்போது கேட்டாலும் நெஞ்சை ஒரு கை வந்து பிடித்துக் கசக்குவதுபோலிருக்கும்
நினைவுகளைச் சொல்ல எல்லாருக்கும் நிறையவே இருக்கும். பல கதைகள் அந்நினைவுகளை தூண்டுபவை. ஆனால் அந்த முகில் இந்த முகில் அப்படி ஒரு எளிமையான காதல்கதை அல்ல. அந்த மனநிலையின் மெக்கானிசம் என்ன என்பதையே அது சொல்கிறது. ஆர்வமும் தயக்கமும் உருவாகும் விதம் அப்படியே நுட்பமாக சொல்லப்பட்டுள்ளது. அதைவிட ஒரு காதல் அவ்வளவு தீவிரமாக இருக்க முக்கியமான காரணம் அதன் வழியாகத்தான் ஒரு சிறுவன் ஆணாக மாறுகிறான் என்பது. அதை இத்தனை ஆழமாகச் சொன்ன நாவல் தமிழில் இதுதான்[ துர்க்கனேவின் மூன்று காதல்கதைகள் மாதிரி]
அவன் இழந்தது யதார்த்தத்தை. பெற்றது துயர்நிறைந்த கனவை. ஒரு பெரிய சுமையை வாசகன்மேலும் ஏற்றிவைக்கும் கதை
என்.விஜயகுமார்
***
அன்புள்ள ஜெ
அந்த முகில் இந்த முகில் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதைப்பற்றி வாட்ஸப் குழும பேச்சும் போய்க்கொண்டிருந்தது. நானெல்லாம் காதலிக்காத காதலன். ஸ்ரீபாலா ஒரு லட்சியக்காதலி. அவளைப்போன்ற ஒரு பெண்ணை காதலிக்கலாம் என்று நினைப்பவன். ராமராவின் வாழ்க்கையை எடுப்போம். அவன் அடைந்த மனைவி ஒரு லட்சிய மனைவி. மிகமிக அன்பானவள். பொறுமையும் பொறுப்பும் கொண்டவள். அவனுக்கும் அவள்மேல் அன்புதான்.
ஆனால் ஸ்ரீபாலா அவனுக்கு வேண்டியிருக்கிறது. ஏன் என்றால் மனைவி வேறு காதலி வேறு என்பதுதான். காதலி என்பவள் ஒரு தோழி. ஜானகி தோழி அல்ல. ஸ்ரீபாலா தோழி. அந்த வேறுபாடு முக்கியம். கலைமனம் கொண்டவனுக்கு இணையான மனம்கொண்ட தோழி மிகமிக இன்றியமையாத ஓர் உறவு. அதற்கு சமானம் வேறு ஏதுமில்லை. ஜானகி அல்ல நூறு ஜானகி வந்தாலும் ஸ்ரீபாலாவுக்கு சமானம் அல்ல
ராமராவுக்கு மனைவி காதலி இரண்டுமே இலட்சியவடிவம். ஆனால் காதலியை இழந்துவிட்டார். ஏனென்றால் காதல் ரொம்ப பெரிதாக வேண்டுமென்றால் அது இழந்தாகவேண்டும்
எஸ்.ராஜ்கண்ணன்
எழுதுவதை பயில்தல்-கடிதம்
பாருக்கே தெரியும் நான் பயந்தவனென்பது. ஊரார் ஓர்ந்து அறிவிக்கும் முன்னரே என் ஊர்தலைக் குறைத்துக்கொண்டு வீடடங்கிக் கிடந்தேன். ஆரம்ப கட்ட உற்சாகத்தில் ஓரிரு நூல்களை எழுதி கிண்டிலில் வெளியிட்டேன். சில கட்டுரைகள் எழுதினேன். படங்கள் பார்த்து, புத்தகங்கள் படித்து, கவிதைகள் மேய்ந்து, வெப்பினார்களில் உரையாற்றி ‘ஆத்தா நான் ரைட்டராயிட்டேன்…’
துவக்கத்தில் வேகமெடுத்தவன் எளிதில் களைப்படைவான் என டூன்ஸ் மணற்குன்று ஓட்டப்பந்தயத்தில் கவிழ்ந்தடித்து விழுந்த செந்தில் கவுண்டர் சம்பவத்தின் மறைஞானமாக உணர்ந்திருந்தாலும், அதை மறந்து தினமும் இரண்டு மணி நேரம் ஷட்டில் வேறு விளையாண்டு உடல் இளைத்தேன் என்றால் உங்களைப் போன்ற விஷநாயர்கள் அதை நம்பத் தலைப்பட மாட்டீர்கள். தெரியும். போட்டு. இப்போ மூட்டு வலி. இதமாக இருக்கிறதென்று நவரத்ன தைலத்தை தேய்த்துக்கொண்டிருக்கிறேன்.
இளவெயினி பிறப்பதற்கு முன்பு அறிவித்த நாவலை மீண்டும் ஆரம்பித்து 200 பக்கங்களை நெருங்கும்போது தோன்றியது. வாசிக்க படுசுவாரஸ்யமாக இருக்கிறது. கதையோட்டம் பாய்கிறது. கதைப் பின்னல் இல்லை. அகச்சித்தரிப்பிற்கு மொழி போதவில்லை. அத்தியாயங்களில் யாருடைய கண்ணோட்டத்தில் கதை சொல்லப்பட வேண்டுமென்பதில் குழப்பங்கள். தரிசனமெல்லாம் லெளகீகத்தின் எல்லைக்குள்ளே. வியாபாரிக்குப் பல பாதைகள் தெரியும். அந்தப் பாதைகள் எதுவும் அவனை எங்கும் கொண்டு சேர்க்காது எனபது புரிந்தது.
இலக்கியத்தின் அடிப்படைகளை, வகைமைகளை, கதைத் தொழில்நுட்பத்தை மீண்டும் ஐயம் திரிபற ஒரு மாணவனைப் போல தலைகீழாக நின்று பாடம் பயிலாமல் மேற்கொண்டு எழுதலாகாது என முடிவெடுத்தேன். இலக்கியம் அடிப்படையில் ஓர் அபாயகரமானப் பணி என்கிறார் பொலான்யோ. எழுதுகிறவன் என்னவெல்லாம் கற்றுத் தேற வேண்டியிருக்கிறது. மேதைகளின் ஆக்கங்கள், தத்துவப் பரிச்சயம், மானுடவியல், பண்பாட்டு அசைவுகள், பிறதுறை அறிவு, ஞானமரபு, மரபிலக்கியங்கள், கருத்தியல்கள், கோட்பாடுகள், இயற்கை அறிதல், தொன்மங்களில் ஈடுபாடு, இலக்கணம், பிற கலைவடிவங்களில் ரசனை, முரணியக்கக் கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்திருத்தல், கவிதை, தியானம், நவீன வரலாற்றுவாதம், உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம் பட்டியலிட பட்டியலிட பெருகும் பட்டியல்.
மொன்னைத்தனங்கள், தற்காலிகப் புகழ், கட்டற்ற தகவல்தொடர்புகள், அமைப்புச் செயல்பாடுகள், லெளகீக நப்பாசைகள் ஆகியவற்றிலிருந்து முற்றாக விலகி எனக்கு ‘அறிதல்’ போதும். வேறு மயிரெழவுகள் வேண்டாமெனும் துணிவு இருந்தால்தான் நான்காவது பாராவில் இருப்பவை சாத்தியம் எனத் தோன்றுகிறது. அமர்ந்தாலே கதை பெருகும் உங்கள் விரல்களுக்குப் பின்னால் இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக முண்டியடித்துக்கொண்டு நிற்பதால் புனைவுக்களியாட்டு 60 கதைகளைத் தாண்டியும் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கிறது. இந்தக் கதைகள், வெண்முரசு அத்யாயங்கள் தாண்டி நிச்சயம் கடிதங்களுக்குப் பதில்கள், சினிமா வேலைகள், மதிப்புரைகள் என நீங்கள் மேலும் எழுதிக்கொண்டிருப்பீர்கள். வெண்முரசு பற்றி யாராவது வியந்தால் நீங்கள் பல்ஸாக்யாவின் – பால்சாக்கை ஃப்ரெஞ்சில் அப்படித்தான் சொல்லவேண்டுமாம் – தி ஹ்யூமன் காமெடியை சொவதைக் கண்டிருக்கிறேன். அவர் பகலில் 1 மணிக்குத் துவங்கி மறுநாள் காலை 5 மணி வரை எழுதுபவர். கட்டங்காபியை அண்டா அண்டாவாக குடிப்பவர். இரு மிருகங்கள் மூர்க்கமாய் மோதிக்கொண்ட நிலம் போல இருக்குமாம் அவரது சாப்பாட்டு மேஜை. ஏழாள் உணவைத் தின்றுவிட்டு பத்தாள் வேலையைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார். உலகெங்கிலும் அசலான எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுதித்தள்ளியிருக்கிறார்கள். மாங்காய்ப் பால் உண்டு மலைமேல் ஏறுவது சரிப்படாதென நினைப்பவர்கள் தேங்காய்ப் பால் உண்டு தெருவழியே நிற்கும் இடம் ஃபேஸ்புக். ரப்பர் மட்டுமே வெளிவந்திருந்த சூழலில் நீங்கள் கொடுத்திருந்த பேட்டியை – ஏற்கனவே பலமுறை வாசித்திருந்தாலும் – நேற்றிரவும் வாசித்திருந்தேன். ஃபீட்பேக் என்பது எழுத்தாளனை அவனறியாமல் மாற்றிவிடக் கூடியது என்று அன்றே சொல்லியிருக்கிறீர்கள். எத்தனை நிஜம். நான் மிஷ்கினைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். மூவாயிரம் பேர் வாசித்திருக்கிறார்கள். நான்காயிரம் கருத்துக்கள் வந்துள்ளன. மறுநாளே ஹூலியஸ் கொர்த்தஸாரின் ஒரு சிறுகதை பற்றி எழுதினேன். பதினாறு லைக்குகள். அதில் ஆறு ஃபேக் ஐடிக்கள் என்னுடையவை. ‘நெஞ்சு கிழிஞ்சுருச்சே எங்க முறையிடலாம்…’
மீண்டும் விஷயத்துக்கு வருகிறேன். மீண்டும் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், நாவல் கோட்பாடு, எழுதும் கலை, இலக்கிய முன்னோடிகள் போன்ற நூல்களை வாசித்தேன். உரைகள் பொழுதன்னிக்கும் காதில் கருஞ்சரடு மாட்டி கேட்பது. முடிந்த மட்டும் இலக்கியத்திற்குள்ளேயே இருப்பதற்கு யூடியூப் உரைகள் ஒரு வரப்பிரசாதம். ஆன்லைனில் மேலைத்தத்துவம், புனைவிலக்கியம் பயிலும் வகுப்புகளில் சேர்ந்தேன். அதில் ஒன்று மாஸ்டர் க்ளாஸில் பணம் கட்டி பயின்ற டான் ப்ரவுனின் புனைவிலக்கிய வகுப்பு. கதை என்பது செய்யப்படக் கூடியதும், நேர்த்தியாக சொல்லப்பட வேண்டியதும் என்பதில் டான் உறுதியாக இருக்கிறார். கிராஃப்ட் கைகொடுக்காமல் என்ன எழுதியும் பிரயோசனம் இல்லை என்பதை உதாரணங்களுடன் வாதிடுகிறார். புதியவர்களின் ஆக்கங்களில் பெரும்பான்மை நம்மை வதைமுகாமுக்குள் இட்டுச் செல்வதன் காரணங்களுள் ஒன்று தொழில்நுட்பத்தில் பிசிரடிப்பதும். ஒரு பாராவிற்குள்ளே மூன்று பார்வைக் கோணங்களெல்லாம் வைத்து நியூ கைண்ட் ஆஃப் சித்திரவதை செய்கிறார்கள்.
மீண்டும் உங்களது அந்நாளைய பேட்டிக்கு வருகிறேன். நிர்வாகத்தில் FTR என்று சொல்வார்கள் First Time Right. எதையும் முதல் முறை செய்யும்போதே சரியாகச் செய்துவிடுவது. ஒரெயொரு வாசகன் படைப்பின் ஆழத்தை நெருங்கி வராவிட்டால் கூட கவலையற்று இருப்பது, நாவலுக்கு அடிப்படை விஸன் / தரிசனம், எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய ஆன்மீக நாட்டம், ஸ்பிரிச்சுவல் தொடர்புகள், தத்துவப் பரிச்சயம், மன இயக்கத்தை வெளிப்படுத்தும் மொழிபுகள், இலக்கியமென்பதே அறிமுதல் முறை – என நீங்கள் இதுகாறும் சொல்லிவந்தவற்றிற்கான அடிப்படைகளை அன்றே மிகத் தெளிவாக உருவாக்கி இருக்கிறீர்கள். இத்தனைக்கும் தமிழின் முன்னுதாரண முன்னத்தி ஏர்கள் இல்லாத சூழலின் மேல் நின்று.
பல ஆயிரங்கள் கட்டி தத்துவம், வரலாறு, புனைவிலக்கிய வகுப்புகளில் பயிலும்தோறும் நொடிக்கு நொடி எனக்குத் தோன்றுவது ‘இதத்தானய்யா என் வாத்யாரு பத்து பைசா வாங்காம வருஷம் பூரா சொல்லிக்கொடுத்தாரு..’ நமக்கு எந்த பண்டமும் ஐரோப்பா லேபிள் போட்டு வந்தால்தான் திருப்தி. இவ்வளவு முடிஞ்சும் நாவல் நல்லா இல்லைன்னா சோத்துல ரசம்தாண்டி உனக்கு என மிரட்டுகிறாள் திரு. இலக்கியம் தெரிஞ்சவளோடு வாழ்வது சிரமம்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்
April 22, 2021
இரண்டு காதலியர்
ஊட்டியில் மழைக்காலம் மிகவும் உக்கிரமானது. மரங்கள் மீது சாந்தியடையாத சினம் கொண்ட ஆவிகள் ஏறிக்கொண்டதுபோல, ஒரு விபரீத வரத்தால் அவை ஆவேசமான விலங்குகளாக ஆகிவிட்டதுபோல் இருக்கும். தலைசுழற்றி அவை ஊளையிடும். மார்பிலறைந்துகொண்டு தரையில் இருந்து வேர் பெயர்த்து எம்ப முயலும். ஒரு கட்டத்தில் கட்டிடங்கள் கூட உயிர்கொண்டு விடும். மிரண்ட மாபெரும் மிருகங்கள் போல அவை முனகும். விம்மும். உதடுகள் துடிக்க சிறகுகள் படபடக்க அதிரும்.
ஊட்டியில் மழையென்றாலே மின்சாரம் போய்விடும். ஆனால் நல்ல மழை பெய்யும்போது குளிர் சற்று குறைந்து இதமான ஒரு கதகதப்புகூட தோன்றும். குருகுலத்திற்குள் ஸ்வெட்டருக்குள் கைகளை இறுக்கிக் கொண்டு கண்ணாடிச் சன்னலை முற்றாக முட்டிவிட்டிருக்கும் மழையைப் பார்ப்பதென்பது கிளர்ச்சியூட்டும் அனுபவம். மண்ணில் மிக ஆன்மீகமான ஏதோ நடந்துகொண்டிருக்கிறது என்று தோன்றிவிடும். மிக மகத்தான ஒன்று. எத்தனை சிந்தனைசெய்தாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. மண்ணில் மனிதன் பேசத்தொடங்கிய நாள்முதலே வர்ணித்தும் தீராத ஒன்று…

ஊட்டி குருகுலம்
நித்யா உள்ளிருந்து வந்தார். அவருடன் ஜோதி அவரைப்பற்றிக்கொண்டு வர உஸ்தாத் ஷௌகத் அலி அவர் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்துடன் வந்தார். டாக்டர் தம்பான் [சுவாமி தன்மயா] நித்யா அமரும் இருக்கையை சரிசெய்தார். என்னுடன் தாமஸ் ஜேப்பக் இஎருந்தார். அன்று மாலைக்கூட்டத்துக்கு வேறு எவரும் இல்லை. நித்யா நாற்காலியில் அமர்ந்து தலையணை ஒன்றை முதுகுக்கு வைத்துக்கொண்டதும் என்னை நோக்கி புன்னகைசெய்தார்.
தகரக்கூரைமீது அருவி போல கொட்டியது மழை. சாட்டையால் மாறி மாறி வீறியபின்னரும் எழுவதற்கு அடம்பிடிக்கும் சண்டிமாடு போல குருகுலக்கட்டிடம் அமர்ந்திருதது. திரைச்சீலைகள் மீது ஈரம் சீனித்துளிகள் ஒட்டியிருப்பது போல மெல்லிய துளிப்படலமாக புல்லரிக்க ஆரன்பித்திருந்தது. நான் நித்யாவின் காலடியில் அமர்வதற்கான குட்டி மெத்தை ஒன்றை போட்டு அமர்ந்துகொண்டேன்.
எண்ணைவிளக்குகளின் ஒளியில் நிழல்நித்யா எழுந்து கட்டிடத்தின் கூரைமீது வளைந்து அவரையே குனிந்து நோக்கினார். அவரை விலக்கி விரிந்து அந்த நிழலுருவை நோக்கி மடிந்திருந்தன எங்கள் நிழல்கள். நித்யா என்னிடம் ”மழையைப்பற்றி உங்கள் கவிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றார்” நான் புன்னகைத்து ”பெயல்கால் என்று கபிலர் சொல்கிறார். மழையின் கால்கள் என்று. பெயல்கால் மறைத்தலின் நிலம் காணலரே என்கிறார். மழையின் பல்லாயிரம் கால்கள் ஊன்றி மறைத்து மண் தெரியாமலாகிவிட்டிருக்கிறது என்று…”
நித்யாவின் மனம் கொளுத்தப்பட்டு விட்டது என அறிந்தேன் ”அருமையான வார்த்தை. இத்தனை களங்கமின்மை ஒரு பழங்குடிமனத்துக்கே வரமுடியும்….அது மாபெரும் விவேகங்களையும் ஞானங்களையும் புல் நுனியில் இருந்து பனித்துளியை கைவிரலில் எடுப்பது போல ஒற்றி எடுக்கும்…”
.”எனக்கு மழை ஒரு பறவையின் சிறகு என்று படுவதுண்டு. இந்த பெரிய முட்டையை அந்தப்பறவை தன் சிறகால் மெல்ல மூடிப்பாதுகாக்கிறது. சிலசமயம் தோன்றும் மேலே நீலமாக விரிந்திருப்பதும் ஒரு கடல்தான் என. நாம் அதை தொடுவதில்லை. சில சமயம்தான் அதன் அலை எல்லை மீறிவந்து மண்ணை அறைந்துசெல்கிறது… கடற்பாறை போல பூமி அடிவாங்கி சிலிர்க்கிறது”
”வேதங்களில் மழையைப்பற்றி நிறையச் சொல்லப்பட்டிருக்கிறது” என்று பொதுவாகச் சொன்னார் சுவாமி தன்மயா. நித்யாவை உரைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன். ”மழையை வேதகால மனம் ஒரு பெரும் லீலையாகக் கண்டது. மண்ணில் உள்ள அனைத்தையும் பிறப்பிக்கும் ஒரு மகத்தான காதல்லீலை. வானத்தின் விந்துவே மழை என்றுணர்வது ஒருதனிமனித மனத்தில் முதன்முதலாக தோன்றிய கணம் எத்தனை பயங்கரமாக இருந்திருக்கவேண்டும். புல்லாக மரங்களாக புழுப்பூச்சிகளாக ஆறாக காடாக மனுக்குலங்களாக ஊர்களாக நகரங்களாக சிந்தனைகளாக முளைத்தெழும் அந்த விந்து யாருடையது! அந்த எண்ணம் தன்னுள் வந்த அக்கணம் அவன் உடல் திறந்து இறக்காமல் அதைச் சொல்லாக ஆகியதே ஆச்சரியம்தான்…”
நித்யா தொடர்ந்தார். ”இந்து மரபில் எந்நிலையிலும் காமத்தை அருவருப்பானதாக, விலக்கவும் மறைக்கவும்படவேண்டிய ஒன்றாக, உருவகித்ததில்லை. மாறாக இந்தப்பிரபஞ்சத்தை அறிந்துகொள்வதற்குரிய வழியாகவே அதை ரிஷிகள் கண்டார்கள். இப்பிரபஞ்சத்தின் சாரமான ஆற்றல் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தருணங்களில் ஒன்று அது. அதில் இருந்தே லீலை என்ற சொல் பிறந்தது. இந்தப்பிரபஞ்சமே ஒரு மாபெரும் விளையாட்டு. சாதாரண விளையாட்டல்ல காதல் விளையாட்டு. ஏனென்றால் பிறவிளையாட்டுகளில் இல்லாத முழுமையான லயம் காதல் விளையாட்டில் உள்ளது. விளையாடும் இருவரும் ஒருவரை ஒருவர் நிரப்புகிறவர்கள். ஒருவரை ஒருவர் முழுமை செய்துகொள்பவர்கள். விளையாட்டின் உச்சியில் இருவரும் தங்களை ஒருவரில் ஒருவர் இழந்து ஒன்றாகிறார்கள். அந்துவரை இல்லாதிருந்த ஒன்று அவர்களை தங்கள் கருவியாக்கி தன்னை நிகழ்த்திக்கொள்ளும் ஒன்று உருவாகிறது”

”வானகமும் மண்ணகமும் கொள்ளும் லீலையெ இவ்வுலகம் என்று உணர்ந்தனர் ரிஷிகள். ஒளி ஒரு லீலை. காற்று ஒரு லீலை. அருவம் உருவத்துடன் ஆடுவதும் லீலையே. கருத்து பருப்பொருளுடன் ஆடுவதும் லீலையே. அளவிறந்த ஆற்றல்வெளியுடன் ஆக்கும்கருத்து ஆடுவதும் லீலையே. சிவசக்தி நடனத்தை நான் பார்த்து நிற்பதுண்டு. ஆற்றலை அன்னையாக்க வேண்டுமென எந்த மூதாதைக்கு முதலில் தோன்றியது? ஏனென்றால் அது தன்னளவில் முழுமை கொண்டது என்பதனாலேயே. அதற்கு சிருஷ்டியின் நடனம் தேவையில்லை. அதன் ஆழத்தில் உள்ளது எல்லையில்லாத கருணையும் காதலும் மட்டுமே. அந்தக் கருணையையும் காதலையும் தொட்டு எழுப்பி அதனி சிருஷ்டிவெளியாக ஆக்க ஒரு கருத்தாற்றல் தேவை. சிவம், அது ஒரு நடனம். ஏன் அது நடனமிடுகிறது என்றால் நடனத்திற்காகவே….”
”லீலை என்றால் வேறு எதற்காகவும் இன்றி அந்தச் செயலின் இன்பத்திற்காக மட்டுமே நிகழ்வதாகும். ஏன் ஏன் என்று இந்தப்பிரபஞ்சத்தை கேட்டுக்கொண்டே சென்றால் கட்டகக்டைசியில் அந்த கேள்விகள் எல்லாம் ஒன்றாகி, கோடானுகோடி ரிஷிகளின் கோடானுகோடி கேள்விகள் எல்லாம் இலைசொட்டும் துளிகளே கடலாக ஆனதுபோல திரண்டு ஒற்றைப்பெரும் கேள்வியாக எழுந்து நிற்கும். ஏன்? அதற்கு ஒரே பதில்தான். லீலை! அலகிலாத காதல் விளையாட்டு. அந்த களிநடனத்தை முதலில் தன் அகத்தரிசனமாகக் கண்டவன் யார்? மரவுரி உடுத்து மாமிசம் உண்டு குகையில் வாழ்ந்தானா? அவனுக்கு சுட்டுத்தின்ன தெரிந்திருந்ததா? அவனால் பேச முடிந்ததா, இல்லை நடனமாடித்தான் தன்னை வெளிப்படுத்தினானா? எத்தனை மகத்தானவன். அவனுடைய மாபெரும் மெய்ஞானத்தின் நிழலில் அல்லவா நாம் நின்றுகொண்டிருக்கிறோம்?” நித்யா சொன்னார்.
பின்னர் எப்போதோ துறவு முதல் விழுமியமாகியது. சமணமே அதைக் கண்டுபிடித்தது என்று படுகிறது. துறவு ஒரு மாபெரும் கருதுகோள்தான். அதை துறவியாகிய நான் உறுதியாகச் சொல்லமுடியும். இந்தா இந்தா என்று மண்ணுலகமே மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது இல்லை எனக்கு எதுவும் தேவையில்லை என்று மனிதன் சொல்வானென்றால் அதுவும் மகத்தானதல்லவா? காதல் லீலையாக உள்ள இப்பிரபஞ்சத்திற்கு நேர் எதிரான ஒன்று துறவு. மகத்தான ஒன்றுக்கு இணையான மகத்துவம் உள்ள ஒன்றே எதிராக இருக்க முடியும். ஆனாலும் அது எதிரானதே. அது தலைகீழானதே.
சமணம் துறவை நேர்நிலையாக ஆக்கியது. லீலையை எதிர்நிலையாக ஆக்கியது. அந்த தரிசனத்தை பௌத்தம் எடுத்துக்கொண்டது. பட்டுப்பாதையில் சமண வணிகர்கள் மேற்கே பாரசீகத்துக்கும் சுமேரியாவுக்கும் எகிப்துக்கும் மாசிடோனியாவுக்கும் கிரேக்கத்திற்கும் சென்றார்கள். உலகமெங்கும் துறவைக் கொண்டுசென்றார்கள். துறவு ஒருபெரிய வாள் போல ஒருவனை இந்த பிரம்மாண்டமான கூட்டு நடனத்தில் இருந்து அறுத்து வெளியே தள்ளிவிடுகிறது. அவன் அதன்பின்னர் இந்த மொத்த நடனத்தையும் விலகியமர்ந்து பார்ப்பவனாகிறான். அவன் பார்க்கும் அந்த பெருநடனத்தை அதில் ஆடுபவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை. ஆகவே விலகியவர்கள் ஞானிகளானார்கள். ஞானத்தில் அதிகாரம் துறவை மண்ணுலகமெங்கும் நிலைநாட்டியது
ஆனால் துறவென்பதே இந்தக் காதல்லீலையைக் காண்பதற்கான கண்பெறும் தவம்தான் என்று பலர் புரிந்துகொள்வதில்லை. இங்கே முன்பொரு துறவி இருந்தார். கொஞ்சநாள் அலைந்து திரிந்துவிட்டு இங்கே வந்தார். மாபெரும் சம்ஸ்கிருத அறிஞர். அவரது இளமையில் அவர் மிகச்சிறிய குடிலில் வாழ்ந்தார். தீண்டாமைக்கு உள்ளான சாதியைச் சேர்ந்தவர். அவர்களின் குடிசைகள் ஒரே அறை கொண்ட ஓலைமாடங்களாக இருக்கும். நிலையான வீடுகளை அவர்கள் கட்டிக்கொள்வது தடுக்கப்பட்டிருந்த காலகட்டம் அது. அவர்கள் எட்டுபேர். அத்தனைபேரும் ஒரே குடிசைத்தரையில் தரையில் போடப்பட்ட வைக்கோல் மீது ஒட்டி ஒட்டி படுத்துக்கொள்வார்கள்.
ஒருநாள் அவர் கண்விழித்துப் பார்த்தபோது அவரது அன்னையும் தந்தையும் உடலுறவு வைத்துக்கொண்டிருந்தார்கள். இருளில் ஒரு மின்னலில் அவர்களின் லீலையை அவர் கண்டார். நிர்வாணமாக இருவர் உடல்களும் பிணைந்திருப்பதை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஒருவரை ஒருவர் மட்டுமே உணர்ந்தபடி அவர்கள் இருப்பதை. ஒருகணத்தில் அவரது மனம் அதிர்ந்தது. அந்த அசாதாரணமான காட்சியில் இருந்து அவர் விடுபடவே இல்லை. ஆரம்பத்தில் ஆழமான மனக்கசப்பு குமட்டிக் குமட்டி வந்தது. ஒவ்வாத ஏதோ ஒன்றை உண்டுவிட்டவர் போல.

நித்ய சைதன்ய யதி
பின்னர் அவர் வீட்டை விட்டுக்கிளம்பி நாடோடியானார். பல பெண்களுடன் உறவு கொண்டார். ஆனால் அவருள் ஒரு கேள்வி இருந்தது. உடலுறவை கூர்ந்து கவனிப்பவனால் அதில் தன்னை மறந்து ஈடுபட இயலாது என்பார்கள் உளவியலாளர்கள். அவர் துறவியானார். குருகுலங்களில் கற்றார். ஏதோ ஒரு புள்ளியில் தியானத்தில் அவரது கேள்விக்கு பதில் கண்டுபிடித்தார். லீலை. அந்தக் கணத்தில் அவ்விருவரும் பிரபஞ்சத்தை நிகழ்த்தும் ஆற்றலின் கையில் இருந்தார்கள். அந்த தரிசனம் வழியாக அவர் மேலும் மேலும் தன்னைக் கண்டடைந்தார். இந்த மழையை தாய்தந்தையின் முயக்கமாக சிவசக்தி லீலையாக காண நம்மால் முடியுமென்றால் அந்தக் கணங்களில் அழிவற்ற உண்மையொன்றின் வாசலில் நாம் நிற்கிறோமென்று பொருள்.
காமத்தை வெறுக்கவும் அருவருக்கவும் கற்பித்தது சமணம். அதிலிருந்து உலகமெங்கும் சென்றது அந்த ஒழுக்கவியல். மானுடனுக்குச் சாத்தியமான ஒரு மாபெரும் படிமத்தை அதன் மூலம் அவன் இழந்தான். எத்தை எத்தனை ஞானிகள் அதன் வழியாக சென்று அந்த முதல்முழுமையின் கணத்தை தொட்டிருக்கிறார்கள். நான் ஒருமுறை அமெரிக்காவின் ஓர் கிறித்தவ தேவாலயத்தில் பேசும்போது சாலமோனின் பாடல்களை மேற்கோள் காட்டினேன். அங்கிருந்த பல பெண்களுக்கு அந்த வரிகள் அதிச்சியை அளித்தன என்று சொன்னார்கள். ஏனென்றால் அந்த வரிகளை அவர்கள் தந்தையின் காமம் போல பார்த்தார்கள். அது இல்லாமல் நாம் வந்திருக்க முடியாது. ஆனால் அதை நாம் சிந்திப்பதில்லை. நம் மனம் கூசி உறைந்து விட நாம் எண்ணங்களை திருப்பிக்கொள்கிறோம். ஆனால் பைபிளின் ஆக அழகான வரிகளாக சாலமோனின் பாடல்கள் நின்றுகொண்டிருக்கின்றன.”
நித்யா சாலமோனின் பாடல்களை பற்றிச் சொன்னார். பழைய ஏற்பாட்டில் உன்னத சங்கீதம் என்று சொல்லப்பட்டிருக்கும் இப்பாடல்கள் தொல்காலம் முதலே யூதர்களால் பாடப்பட்டவை. மொத்தம் இருபத்தெட்டு பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உண்மையில் நெடுங்காலமாக இந்தப்பாடல்களை வெட்டிக்குறைத்தபடியே இருந்து மக்கள் மனதில் தங்கிப்போனதனால் சிலவற்றை மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள். யூதர்களின் திருமணங்களிலும் வசந்தகால விழாக்களிலும் பாடப்பட்டவை என்பது ஓர் எளிய விளக்கம். ஆனால் ஏன் அவை இறைநூலில் சேர்க்கப்பட்டன என்பதற்கும் ஏன் அவை சாலமோனின் சொற்களாகச் சொல்லப்பட்டன என்பதற்கும் இது விளக்கம் அளிப்பதில்லை.
யூத மரபின் மாமன்னர்களில் ஒருவர் சாலமோன். அவரது ஆண்மையையும் வெற்றிச்சிறப்பையும் நிர்வாகத்திறனையும் யூதபுராணங்கள் வாழ்த்துகின்றன. சாலமோனுக்கு எழுநூறு மனைவியரும் முந்நூறு ஆசைநாயகிகளும் இருந்தார்கள் என்கிறது யூத புராணம். யூதர்களுக்கு அவர் ஒரு பிதாவடிவம். ஆனால் அவர் இப்பாடல்களில் தன்னை பெண்ணாக, காதலனுக்காக ஏங்கும் பேதையாக கற்பனைசெய்துகொண்டிருக்கிறார் என்பதில்தான் ஆன்மீகமான சாராம்சம் உள்ளது.
மாமன்னர்களை ஆணாகவும் அவர்கள் ஆண்ட மண்ணை பெண்ணாகவும் உருவகப்படுத்துவது எங்கும் உள்ள வழக்கம். அந்த மண் விளைநிலம், அவர்களோ ஆக்கும் ஆற்றல். அந்த உலகியல் சார்ந்த தளத்திற்கு நேர் எதிரானது ஆன்மீகமான தளம். அங்கே சாலமோனின் மனமே விளைநிலம். அங்கே முளைக்கவேண்டிய விதைகள் விண்ணிலிருந்து வரவேண்டும். ஆகவே விண்நோக்கிக் காதலுற்றுக் காத்திருக்கும் கன்னிநிலமாக அவர் தன்னை உணர்கிறார். அந்த உணர்வையே இக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
பெண்ணாக ஆகாத மனம் பிறிதொன்றை உள்வாங்கிக் கொள்வதில்லை. தன்னில் இருந்து எதையும் பிறப்பிப்பதும் இல்லை என்பதே சாலமோன் பாடல்கள் நமக்குக் காட்டும் உண்மை என்றார் நித்யா. தன் ஒவ்வொரு துளி இருபபலும் பிறிதொன்றுக்காக காத்திருக்க, தன்னை வந்தடையும் ஒரு சிறு தொடுகையில் பூரித்து கண்விழித்தெழ, தன்னுள் விழும் ஒரு துளி உயிர்த்தூண்டலை தன் மொத்த ஆன்மாவையும் உணவாகக் கொடுத்து உருவாக்கி எடுக்க பெண்மையாலேயே முடியும். உடலிலும் உள்ளத்திலும் உறுதியாகிவிட்ட ஆண்மையின் இறுக்கத்தை கரைத்து பெண்மையாகி நெகிழ எத்தனை தவம் எத்தனை கண்ணீர் தேவைப்பட்டிருக்கும்!
ஞானவாத கிறித்தவ மரபுகளின்படி சாலமோன் அவரது நூறு வயதுக்குமேல்தான் இந்த உன்னதசங்கீதப் பாடல்களை எழுதியிருக்கிறார்! அன்று நாமறியாத பலவகையான சடங்கு முறைகள் இருந்திருக்கலாம். இப்பாடல்கள் அந்தச் சடங்குகளுடன் பிணைந்தவை என்று படுகிறது என்றார் நித்யா. பத்தாம் நூற்றாண்டுவரைக்கூட ஞானவாத கிறித்தவர்கள் இதற்கான தாந்த்ரீகச் சடங்குகளைச் செய்து வந்தார்கள்.தொடர்ச்சியான ஒடுக்குமுறைகள் காரணமாக அவை பொதுத்தளத்தில் இருந்து முற்றாக மறைந்தன
சாலமோனின் காதல்பாடல்களை இன்று பார்க்கும்போது அவற்றில் அழிவற்ற ஒன்றை தன்னுள் வாங்கி முளைத்தெழுப்ப அவர் மனம் கொள்ளும் எத்தனிப்பையே காண்கிறோம். லீலையை. அதன் ஏக்கத்தை எதிர்பார்ப்பை வலிகளை ஆனந்தங்களை. அந்த வரிகளை மெய்மையை உள்வாங்கும் நிலைகள் என்று புரிந்துகொண்டால் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு மலர்களாக விரிய ஒரு நறுமணசோலையில் நாம் உலவமுடியும் என்றார் நித்யா
சாலமன்
பாடல் 1. தலைவிகூற்று
தம் வாயின் முத்தங்களால்
அவன் என்னை முத்தமிடுக!
ஆம், உனது காதல்
திராட்சை ரசத்தினும் இனிது.
உனது உடலின் நறுமணம்
இனிமையானது.
உமது பெயரோ உன் வாசனையைவிட
மேலாக எங்கும் பரவியுள்ளது
எனவே இளம்பெண்கள்
உன்னைக் காதலிக்கிறார்கள்.
உன்னோடு என்னைக் கூட்டிக்கொள்
நாம் ஓடிவிடுவோம்
அரசே என்னை உன் அறைக்குள் கொண்டுசெல்
நாம் மகிழ்ந்தாடுவோம்
நான் உன்னில் களியாட்டமிடுகிறேன்
திராட்சை ரசத்தைவிட மேலானது
உனது காதல்
திராட்சை ரசத்தை விட தூயது
உன்னுடைய காதல்.
*
பாடல் 25 தலைவி கூற்று
கிச்சிலி மரத்தடியில் நான் உன்னை எழுப்பினேன்
அங்கேயல்லவா உன் அன்னை உன்னை வலித்து பெற்றாள்?
உன் நெஞ்சில் முத்திரையாய் என்னை பொறித்துக்கொள்!
உன் கைகளின் இலச்சினையாய் என்னை அணிந்துகொள்!
ஆம் காதல் சாவைப்போலவே மகத்தானது!
அன்பின் வேகம் பாதாளம் போல் பொறாதது!
அதன் பொறி எரிக்கும் நெருப்பாகும்.
அதன் கதிர்களோ பொசுக்கும் சுவாலையாகும்.
பெருங்கடலும் அணைக்காது பெருங்காதலை.
பெருவெள்ளமும் மூழ்கடிக்காது அதை.
காதலுக்காக ஒருத்தி தன்
செல்வங்களையெல்லாம் துறந்துவிடுவாள்
ஆயினும் அவள் ஏளனத்துக்குள்ளாகிறாள்.
ஆன்மீகச் சாரமுள்ள காதல்பாடல்களிலெல்லாம் இரண்டு மையக்கருத்துக்கள் பயின்றுவருவதைக் காணலாம் என்றார் நித்யா. என்னைக்கூட்டிச்செல், நாம் இங்கிருந்து ஓடிவிடுவோம் என்று பெண் ஏங்குகிறாள். இங்கே என் பெற்றோர் இருக்கிறார்கள். என்னுடைய தோழிகள் இருக்கிறார்கள். நான் இதுவரை அறிந்து உணர்ந்து விரும்பி சேர்த்த எல்லாமே இருக்கின்றன. ஆனால் இவையனைத்தையுமே உனக்காக விட்டுவிட்டு நான் உன்னுடன் வருகிறேன். நீ எங்கு கொண்டுசென்றாலும் நான் உன்னுடன் மகிழ்ச்சியுடன் வருவேன். உன் கைகளைப் பற்றிக்கொண்டு, உன் மொழிகளைக் கேட்டுக்கொண்டு, நீ என்னை கொண்டுசெல்லும் அறியாத உலகங்களுக்கு விருந்தாளியாக வருவேன்.
போதும் இந்த சிறிய கூண்டு. இங்கே நான் சலித்துவிட்டேன். இது இனி எனக்குக் கொடும் சிறை. ஆனால் காதல் கோண்ட என் மனதுக்கு சிறை ஒரு பொருட்டே அல்ல. சுவர்களும் காவல்களும் ஒரு தடையல்ல. நீ என்னை அழைத்தால் நான் எபப்டியும் தப்பி வந்துவிடுவேன். ஏனென்றால் நீ மட்டுமே என் இருப்புக்குப் பொருள் அளிக்க முடியும். என் உடலும் ஆத்மாவும் உனக்காகவே உருவாக்கபப்ட்டவை. நீ என்னை அழைக்கும் கணத்திற்காகவே நான் பிறந்த கணம் முதல் அவை காத்திருக்கின்றன. நீ உன் காதல் மொழியை என்னை நோக்கிச் சொன்னால் அந்தக் கணமே இந்த குளிர்ந்த மலர்ச்சுனை தடையில்லாத காட்டாறாக ஆகும். வருக என் தேவனே, என்னை ஆளும் என் இறைவனே, என் காதலனே! மீண்டும் மீண்டும் மன்றாடுகின்றன தெய்வீகக் காதல்பாடல்கள்.
அவனுடனான கூடலை தன்னை அழித்து முழுதாக மறையும் அனுபவமாகவே அவை எப்போதும் சொல்கின்றன. உன் முத்தங்களால் என் உடலின் சுனைகளை எழுப்பு. என் ஆன்மாவின் அக்கினியை மூண்டெழச்செய்து என்னை பற்றியெரியச்செய். நான் என எதுவும் எஞ்சக்கூடாது. நான் நீயாக வேண்டும். உன்னுடைய உடலாக உன் ஆன்மாவாக நான் ஆகிவிடவேண்டும். என்னை அணிந்துகொள் என்னை உண்டுவிடு என அவை மன்றாடுகின்றன
கலவியும் மரணமும் ஒன்றேயான ஒரு உச்சத்தையே அவை பாடுகின்றன. அவனுடைய காதல் சாவைப்போலவே மகத்தானது. சாவைப்போல முழுமையானது, மிச்சம் மீதியேதும் இல்லாதது. நீ என்னைக் கொல் என்று அவை வீரிடுகின்றன. நான் இன்றி நீ மட்டுமே இருக்கும் ஒருதருணமாக அதை ஆக்கு. என் அன்பே, நான் அளிப்பதை மிச்சமில்லாமல் ஏற்றுக்கொள். தூய கன்னியொருத்தியின் ஆத்மாவின் பொங்கியெழுதலாக அன்றி அந்த மனஎழுச்சியை எப்படிச் சொல்லிவிடமுடியும்?
”நெடுங்காலம் கழித்து ஒருவர் மீண்டும் சாலமோனின் பாடல்களை தன் ஆத்மாவால் பாடியதை நாம் கேட்கிறோம்” என்றார் நித்யா. ஸ்பெயினின் புனித ஜான் (St.John of Cross). நெருப்பாகவும் பனியாகவும் உருகிவழியும் அவரது பாடல்களை இன்றும் அம்மொழி தன் மிகமெல்லிய இதயத்தசையால் பேணி வைத்திருக்கிறது. ஸ்பானிஷ் மொழியின் இலக்கிய உச்சமெனக் கருதப்படுபவை புனித ஜானின் பாடல்கள். பலநூறு விளக்கங்களுக்கும் ஆய்வுகளுக்கும் உள்ளானவை அவை.

புனித ஜான்
இருண்ட இரவு
ஓர் இருண்ட இரவில்
காதலால் எரிந்தபடி
நான் என் வீட்டை விட்டுச் செல்கிறேன்.
எத்தனை இனிய வாய்ப்பு !
என் இல்லம் அமைதியாக இருந்தது
இருளின் மறைப்பில் பாதுகாப்பாக
நான் இறங்கிய ரகசிய ஏணியினால்
இருளையே ஆடையாக அணிந்துகொண்டு
உயரத்தை அளந்தேன்.
எத்தனை இனிய வாய்ப்பு !
என் வீடு அமைதியில் துயின்றுகொண்டிருந்தது.
ஆசீர்வதிக்கப்பட்ட அவ்விரவில்
ரகசியமாக எவராலும் பார்க்கப்படாமல்
எவரையுமே நானும் பார்க்காமல்
என் இதயத்தின் சுடரன்றி
வேறு துணையோ விளக்கோ இல்லாமல்
நான் விலகிச்சென்றேன்
இந்த வழிகாட்டி ,இந்த அழியாச்சுடர்,
மதிய சூரியனைவிட ஒளிமிக்க இந்த கதிர்,
என்னைக் கொண்டுசேர்க்கும்
என்னைக்காத்திருக்கும் ஒருவனிடம்.
நான் நன்கறிந்தவன். என் உள்ளத்திற்கு இனியவன்.
எவருமே இல்லா இடத்தில் காத்திருப்பவன்.
இரவே, என் வழிகாட்டியே,
விடியலைவிட பிரியமானவளே,
காதலிப்பவர்களை துணையுடன் சேர்ப்பவளே,
மெலிந்து வெளிறிய பெண்ணை
இனிய காத்லியாக உருமாற்றுபவளே!
அவனுக்காகவே நான் கொண்ட
மலரணிந்த என் இளமுலைகள் மீது
அவன் இதோ உறங்குகிறான்.
அவனை நான் வருடுகிறேன்
தேவதாருக்கள் எங்கள் மீது தென்றலை வீசுகின்றன
அவன் குழல்கற்றைகளுடன் விளையாடும்
தேவாலயக்கோபுரத்தின் குளிர்காற்றை
நான் அருந்துகிறேன்
அவனுடைய கரம்
மிக மென்மையாக
என் தொண்டையை வெட்டிச் செல்கிறது.
என் உணர்வுகள் குருதியென வழிந்தோட
நான் நினைவிழந்தேன்
என்னை இழந்தேன் எனினும் எஞ்சுகிறேன்
என் தலைவன் தோள் சாய்ந்து என்னை உணர்கிறேன்
இதோ எல்லாம் மறைகின்றன
எஞ்சியவை எல்லாம்
என் ஆசைகள் முழுக்க.
ஏன் நானேகூட!
நான் இறந்த அந்த லில்லிமலர் வெளியில்
அனைத்துமே தொலைந்து போயின!
ஸ்பெயின் நாட்டில் 1542 ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர் புனித ஜான். அவரது உண்மையான பெயர் யுவான் டி ஈப்ஸ் ஆல்வாரிஸ் [ Juan de Yepes Alvarez] இளம் வயதிலேயே ஏழை நெசவாளியான தந்தை மறைந்த பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்ற இவர் வெள்ளை அடிப்பது, தச்சு வேலை, தையல் வேலை என்று கிராமங்கள் தோறும் அலைந்தார். கல்விக் காலத்தை உழைப்பில் செலவிட நேர்ந்தது. இளமைப்பருவத்தில் குடும்பம் மெடினாடெல் கேம்பஸிற்குக் குடிபெயர்ந்தபோது சஒசைட்டி ஆ·ப் ஜீஸஸ் அமைப்பின் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்தார். அது ஏழைகளுக்காக நடத்தப்பட்ட ஒரு சேவை அமைப்பு. மருத்துவமனைக்காக தெருவில் பிச்சையெடுத்தார். கூடவே பள்ளியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
21ஆம் வயதில் கத்தோலிக்க கார்மலைட் பிரிவின் பாதிரியானார். பின்பு 1564இல் புகழ்பெற்ற சாலமான்கா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். இங்குதான் அவர் ·ப்ரேலூயிஸ் டி லியோனின் (Frey Luis de Leon£) பாதிப்பைப் பெற்றிருப்பார் என்று நம்பப்படுகிறது. டி லியோன் ஒரு மனிதாபிமானி-கவிஞர். பழைய ஏற்பாட்டின் ஹீப்ரூ மூலத்திலிருந்து சாலமோனின் ‘உன்னத சங்கீதம்’ பகுதியை நேரடியாக மொழிபெயர்த்தமைக்காக பாழுஞ் சிறையில் அடைக்கப்பட்டவர். அன்றைய சூழலில் மத அடிப்படைவாதிகளால் சமூக விரோதியாகச் சித்தரிக்கப்பட்டவர்.
புனித ஜானின் மனதில் இந்த மொழிபெயர்ப்பு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ‘இருண்ட இரவு’ போன்ற கவிதைகளில் உள்ள பாலுணர்வைத் தீண்டும் படிமங்கள் அனைத்துமே சாலமனின் பாடலில் உள்ளவையே. இந்தச் சமயத்தில்தான் கார்மலைட் பிரிவில் அவிலாவின் புனித தெரஸா செல்வாக்கு செலுத்தத் தொடங்கியிருந்தார். புனித ஜான் அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இதனால் கார்மலைட் மதத் தலைவர்களுக்கு ஜானின்மீது துவேஷம் ஏற்பட்டது.
1577இல் அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று டோலிடா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது. தரையில் அவர் மண்டியிட்டிருக்க அவரைச் சுற்றி பாதிரிகள் அவரது வெற்று முதுகில் சவுக்கால் அடித்துக்கொண்டே நடப்பார்கள். இதனால் அவரது முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் முடவனாகவே இருக்க நேர்ந்தது.
1578இல் சிறையிலிருந்து தப்பினார். வெளியில் தலைமறைவாக வாழத் தொடங்கிய அவர் இக்காலகட்டத்தில் அழுத்தமான ஆன்மீகத்திறப்புகளுக்கு ஆளாகி கவிதைகள் எழுதத் தொடங்கினார். ஸ்பெயினின் கிராமங்களுக்குச் சென்று சிறிய மடாலயங்களை அமைத்தார்.இவரது எதிரிகள் பல்வேறு சதிவேலைகளில் இறங்கினார்கள். ஒரு கன்னியாஸ்திரியை ஜன்னல் கிராதிகளின் வழியே முத்தமிட்டார் என்று குற்றம் சாட்டினார்கள். அவரை காமத்தில் அறிவிழந்தவர் என்று சொல்லி வேட்டையாடினார்கள். பொதுமக்களும் அவரை பித்தன் என்றும் காமுகன் என்றும் எண்ணினார்கள்.
இறுதிநாள்வரை அவரை வெறுப்பை மட்டுமே சந்தித்து வாழ்ந்தார் புனித ஜான். குடல் புற்றுநோய் உடலின் பெரும்பகுதியை சிதைக்க 1590 டிசம்பர் 14இல் மரணமடைந்தார். இறந்த பிறகும்கூட அவரது உடலுக்கு சாந்தி கிட்டவில்லை. உபேடா என்ற ஊரில் மக்கள் அவரை துறவி என்று எண்ணி அவரது உடலை ஒரு பள்ளியில் கிடத்தியிருக்க கும்பலொன்று நுழைந்து அவரது உடைகளையும், காயங்கலைக் கட்டியிருந்த துணிகளையும், தசைகளையும்கூட கிழித்தெடுத்துச் சென்றது. அவர் அவரசரமாக மேலோட்டமாக புதைக்கப்பட்டார். இருமுறை சடலம் மேலெழவே மீண்டும் புதைக்கப்பட்டார்
ஆறு மாதங்களுக்குப்பிறகு அவரை காமக்குற்றவாளி என்று தீர்ப்பளித்த சகோலியா நகர மன்றம் அவரது உடலுக்கு உரிமை கொண்டாடியது. எனவே அது தோண்டியெடுக்கப்பட்டது. அவரது உடல் பீரங்கி வாயில் வைத்து வெடிக்கப்பட்டு மீண்டும் துண்டு துண்டாக்கப்பட்டது. ஆனால் மரணத்திற்கு பின்னர் புனித ஜான் பொதுமக்களால் புனிதராக அடையாளம் காணப்பட்டு வழிபடப்பட்டார். 1618ல் அவரது கவிதைகள் வெளியிடப்பட்டன.
1726 ல் பாப்பரசர் பதிமூன்றாம் பெனடிக்ட் புனித ஜானை கத்தோலிக்க மதத்தின் புனிதர்களில் ஒருவராக அறிவித்தார். அவரது சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு உபேவாவுக்கு ஒரு காலும், மேட்ரிட் நகருக்கு ஒரு காலும் தரப்பட்டது. விரல்கள் பல புனித இடங்களில் வைக்கப்பட்டன.
எத்தனை மகத்தான அனுபவம். அவனது அன்பின் கரம் கூரிய வாளாக மாறும் பொற்கணம். அவள் கழுத்தை அது வெட்டிச்செல்கிறது மிக மிக இனிமையாக குருதி வழிய அவள் அங்கே இறக்கிறாள். மிச்சமில்லாமலாகிறாள். அவனை தீர்க்கதரிசிகளின் சொற்கள் ஒரு வாள் என்றுதானே சொல்கின்றன. லில்லி மலர் வெளியில் அவளை மிச்சமின்றி கொண்டு உண்டு செல்கிறது அது.
”புனிதஜானை அக்காலகட்டம் புரிந்துகொள்ளாததில் வியப்பில்லை” என்றார் நித்யா ‘நம்முடைய கால்கள் லௌகீகத்தில் ஊன்றியிருக்கும்வரை நாம் ஒருபோதும் அவரை உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவரது ஆன்மா எதற்காக தவிக்கிறதோ அதை நாம் மண்ணில் வைத்துப் புரிந்துகொள்கிறோம். இடுப்புக்குக் கீழே இருக்கும் சில தசைநார்களின் தினவுக்காகவா இத்தனை சொற்கள்? இத்தனை கண்ணீர் ? இத்தனை கனவுகள்? மனித ஆத்மா என்றும் ஏங்கும் ஒரு புனிதமான கூடல் உண்டு. எங்கிருந்து வந்ததோ அங்கே செல்வது. எதுவாக இருந்ததோ அதுவாக ஆவது. எது பிரபஞ்சத்தை நிகழ்த்துகிறதோ அதனால் ஆளப்படுவது. அந்த உத்வேகத்தை காமத்தின் கணங்களினூடாக அடையாளம் காண்கிறது ஞானியர் உள்ளம்”
இந்த மலைச்சரிவுக்கு
ஆடுகளை மேய்க்க வந்தவள்நான்
என் ஆடுகளெல்லாம் சென்றுவிட்டன
நானே மந்தையைப்பிரிந்து தவிக்கும்
ஆடானேன்
என் மேய்ப்பனை தேடுகின்றேன்
என் பழைய உலகம் இன்று விலகிச்சென்றுவிட்டது
என் தலைவனுக்காக மட்டுமே
தவமிருப்பவளானேன்
அவனது நினைவெனும் மணிகளை
என் காதல்சரடால் கோர்த்துக்கொண்டிருக்கிறேன்
புனித ஜானின் பாடல்களில் தேடப்படும் அந்த மேய்ப்பனை எத்தனை காலமாக எத்தனை ஆத்மாக்கள் வழியாக மானுடம் தேடிக்கொண்டிருக்கிறது. இந்தவரிகளை ஒரு கோபிகை பாடியிருக்க முடியும். ஜெயதேவரின் அஷ்டபதியில் அல்லது சைதன்யரின் பகுள் பாடல்களில் இவ்வரிகளை நாம் காண முடியும்.
எது தேடப்படுகிறதோ அந்த அளவுக்கே பெரிதாகிறது தேடல். கடலை தேடும் தாகமும் முடிவின்மை கொண்டதே. இந்த மலர்வனத்தில் தனித்த இரவில் தன் அனைத்தையும் உதறியவளாக வந்து நின்று வந்து நின்று அவனுக்காக ஏங்கும் இக்காதலியின் காதல் அவனளவுக்கே பியது, அவனளவுக்கே மகத்தானது, அவனைப்போலவே அழிவற்றது” என்றார் நித்யா.
”இன்று நவம்பர் இருபத்துநான்காம் நாள். இன்று புனிதஜானுக்கான தினம் இது என்கிறது கத்தோலிக்க தேவாலயம். என் நண்பர் பௌலோஸ் மார் கிரிகரியோஸ¤க்கு அளிப்பதற்காக நான் இன்று புனித ஜானின் பதினைந்து பாடல்களை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தேன். உஸ்தாத் அதை வாசிக்கட்டும்”
உஸ்தாதின் குரல் மிகவும் கனத்தது. அவரது முன்னோர்கள் எவரோ இந்துஸ்தானிபாடகர்கள். நித்யாவின் மலையாளம் சம்ஸ்கிருத ஆதிக்கம் கொண்டது. அவரது முன்னோர் சம்ஸ்கிருதபண்டிதர்கள் என்பதனால். சம்ஸ்கிருத உச்சரிப்பை உஸ்தாத் ஷௌகத் அலி அளவுக்கு துல்லியமாக குறைவானவர்களிடமே கண்டிருக்கிறேன். புனித ஜானின் காதல் அவரது குரல் வழியாக உருகி வழிய ஆரம்பித்தது
வெளியே மழை ஓய்ந்துவிட்டது. லீலை முடிந்த மயக்கம்
ஓர் எளிய கூழாங்கல் கடவுளின் மைந்தன் இருவர்மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jan 15, 2010
நற்றுணை’ கலந்துரையாடல் -4
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்
‘நற்றுணை’ கலந்துரையாடலின் (https://www.jeyamohan.in/142878/) நான்காம் அமர்வு வரும் ஏப்ரல் 25 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ‘விஷ்ணுபுரம்’ நாவலின் மூன்றாம் பாகமான ‘மணிமுடி’ பகுதி குறித்து கடலூர் சீனு பேசுவார். அடுத்தடுத்த மூன்று அமர்வுகளாக நிகழும் விஷ்ணுபுரம் கலந்துரையாடலின் மூன்றாவது மற்றும் இறுதி அமர்வின் அறிவிப்பு இது
இது வழக்கம் போலவே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -4
நாவல் – விஷ்ணுபுரம்
பாகம்:- மணிமுடி
கலந்துரையாடல் நாள்:- 25-04-21
நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை
Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
தொடர்புக்கு: 9965315137
(லா.ஓ.சி. சந்தோஷ் )
நாவல் குறித்து உரையாடுபவர்:- கடலூர்சீனு
(எழுத்தாளரும் இலக்கிய திறனாய்வாளருமான கடலூர் சீனு அவருடைய கட்டுரைகள் / உரைகள் வாயிலாக வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். பாண்டிச்சேரி வெண்முரசு கூடுகையை தொடர்ச்சியாக நடத்தி வருபவர்.
நன்றி!!!
அன்புடன்,
சென்னை விஷ்ணுபுர நண்பர்கள்
முகில்- கடிதங்கள் 10
அன்புநிறை ஜெ,
விமானப் பயணங்களின் போது மணிக்கணக்காக மேகங்களைப் பார்த்தபடி பயணிப்பது மிகவும் விருப்பமான ஒன்று. அமெரிக்கப் பயணம் போன்ற பல மணி நேரங்கள் நீளும் பயணங்களில் கூட விமானமே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாலும் மேகங்களைப் பார்த்துக் கொண்டே வந்து பக்கத்து இருக்கையினரின் முணுமுணுப்புக்கு ஆளானதுண்டு. பல பயணங்கள் அதனோடு தொடர்புடைய மேகக் காட்சிகளாகவே மனதில் பதிந்திருக்கின்றன.
விரிகடலைத் தாண்டும் போது காற்றின் திசையில் திசை தொட்டு நீளும் நெடுஞ்சாலை போல மேகங்கள் அணிவகுத்திருப்பதை காணலாம். பாலை நிலங்களைக் கடக்கும் போது அனேகமாக மேகங்களே இருப்பதில்லை. அதிகாலை வேளைகளில் மொத்தமும் கண்ணுக்கெட்டும் தொலைவு வரை பஞ்சுப் பொதிகளாய் வானம் இருக்கும். நிலவு கனிந்த இரவுகளில் மண்ணுலகு அறியாத மிக ரகசியமான பயணம் போல ஒளிபெற்ற மேகங்களுக்கு மேலே பறந்த இரவுகள் சில.
கைகளால் அள்ளிப் பற்ற முடியாதது, கணத்துக்கு கணம் மாறிக் கொண்டே இருப்பது,பார்ப்பவரின் கண்களுக்கு ஏற்ப தோற்றம் கொள்வது, ஒளிமிக்க வானை இருண்டு விட்டதாய் பூமிக்கு நடிப்பது, நிறமற்ற வெளியில் பல வண்ணங்கள் கொண்டு மிதந்தலைவது, பலகாதம் சுற்றி மூலத்திலேயே சென்று சேர்வது, இயற்கையின் விசைகளால் சமைக்கப்படுவது, எங்கிருந்தோ வந்து ஒன்று பலவாகி மீண்டும் ஒன்றாகி மறைவது, முன் கணமும் மறுகணமும் இல்லாதது – இவை மேகங்கள் மட்டுமா? மனித மனதுக்கும் அதன் அத்தனை நாடகங்களையும் உணர்வுக் கொந்தளிப்புகளையும் சேதியாய் சுமந்து செல்ல முகில்கள் போல வேறொன்றில்லை என்றே தோன்றுகிறது.
‘அந்த முகில், இந்த முகில்’ குறுநாவலில் இரண்டு தளங்களில் கதை நகர்கிறது. எத்தனையோ கைகள் இணைந்து உருவாக்கும் திரைப்படத்துறையின் உள் இயக்கங்கள், அது குறித்த நுண்தகவல்கள், ஆளுமைகள், அவர்களின் அனுபவங்கள் ஒரு புறம்.
மற்றொன்று கலை நிகழும் கணம். முப்பரிமாண செட்டில் பின்னால் இரட்டைப் பரிமாண சித்திரம் ஒன்றிணைந்து புடைப்புருவமாகி விடுவது, மெல்லி இரானி கறுப்பு வெள்ளையில் வண்ண மாறுபாடுகளைக் காட்டுவதற்கான முயற்சிகள், வரலாற்று எச்சங்களோடு புதியவற்றை இணைத்து ஒன்றாக்கி நேற்றின் உலகை மீளுருவாக்கம் செய்வது, என எல்லாரும் காணும் வெளியிலிருந்து கலையைப் பிரித்து எடுக்கும் கலைஞனின் கண்கள் வழி வரும் காட்சிகள்.
அதே போல ஸ்ரீபாலாவுக்கும் மோட்டூரி ராமராவுக்கும் இடையிலான கதையும் இரண்டு தளங்களில் நிகழ்கிறது. ஒன்று ரத்தமும் கண்ணீருமாக ஸ்ரீபாலாவின் வாழ்வு, அதன் சிறுமைகளின் ஒரு தாளவியலாத தருணத்தில் திசைமாறி ராமராவோடு அவள் இருக்க நேரும் சில நாட்கள், அவளைத் தேடும் படலத்தின் பதட்டம், அந்த நீண்ட அழகிய பயணத்துக்குப் பிறகு இருவரும் சொல்லிக் கொள்ளாத சொற்களோடு பிரிந்து செல்வதும், சந்திப்பதுமான சம்பவங்கள்.
இன்னொரு புறம் ராமராவின் முதல் காதல் அனுபவம், அதன் பிறகான கனவும் பரவசமும், எதிர்பாராது அவர் கைகளிலேயே அவள் அடைக்கலம் புகுந்த பின்னான மன எழுச்சியும், அனைத்துக்கும் உச்சமான அந்த நிலவெரியும் இரவும், அதைத் தொடரும் பயணத்தின் பாவனைகளும், மீள்சந்திப்பின் நினைவு மீட்டல்களும் – முற்றிலும் அகத்தில் நிகழ்பவை.
அடுத்ததாக கதையின் நில வர்ணனைகள். இக்குறுநாவலின் ஐந்தாம் பகுதியில் வரும் ஹம்பியின் காட்சிகள் அனைத்தும் அருமை. அந்த ஒரு அத்தியாயம் கதையை மேலே வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது. மேகங்களே அற்ற துல்லிய வானம் கொண்ட மையநிலம் ஹம்பி. அங்கு எப்போதாவது வழிதவறி அலையும் மேகங்கள் வெகு அழகாகிவிடுகின்றன. இது போன்ற மேகங்களே அற்ற நீல வானம் இனி ‘வான் பொட்டல்’ என்றே எப்போதும் நினைவில் எழும்.
புனரமைப்பு வேலைகள் நிறைவடைந்திறாத பழைய சரிந்த ஹம்பி. 2002-ல் முதல் முறை ஹம்பி சென்று வந்த எனது அனுபவத்தை எண்ண வைத்தது. அதன் பின்னர் சில முறை சென்றுவிட்டாலும், முதல் முறை பார்த்த அனுபவம், திசையெங்கும் கற்குவியல்களாலான வெளியும், ஆங்காங்கே சிதிலமான மண்டபங்களும், வெயிலென்றே ஆன நிலமும் நீண்ட நாட்கள் மனதில் நிறைந்திருந்தது. கண்ணை மூடினாலும் அந்தக் காட்சிகள் அறாது கண்ணில் இருந்தது.
கதையில் அங்கு கேட்கும் தேனீக்களின் ரீங்காரத்தை இறந்தகாலத்தில் இருந்து வரும் சாவின் நாதம் என்றது அந்த நகரின் சில இடங்களில் உணரக் கூடிய அமானுடத் தன்மையை உடனே நினைவுறுத்துகிறது. தெய்வமொழிந்த கருவறைகளில் ஒரு அழுத்தமான இருப்பு குடிகொள்கிறது. உருவத்தை அருவமாக்கி உணர்வது போல. அதன் இல்லாமையே அதன் இருப்பை மேலும் உணர்த்துகிறது போலும். இழந்தவை நின்ற பீடங்களில் வேறொன்று அதனினும் பெரிதாக குடியேறிவிடுகிறது. கதைசொல்லியின் அகவாழ்வு போல.
சரிந்த நகருக்கருகே நில்லாத நதி குறித்த வரிகள். மொத்த ஹம்பியே அசைவிழந்து கிடக்க நதி ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் இரு வரும் அந்த ஒற்றைத் திரைப்படத்தில் நின்றுவிட, ஓட்டத்தை நிறுத்த இயலாத வாழ்வு போல.
பார்க்கப் பார்க்க நிழல்கள் மாறிக்கொண்டே இருந்தன. காட்சியை எவரோ மாற்றிக்கொண்டே இருப்பதுபோல. மெல்ல ஓடும் ஒரு சினிமா அது என நினைத்தேன்– ஒரு டைம் லேப்ஸ் வீடியோவை பார்ப்பது போல ஆனால் அதிநிதானமாக, எப்படி அந்தக் காட்சியை ஓரிரு வரிகளில் கொண்டுவர முடிகிறது!
ஹம்பி விருபாஷர் ஆலயத்துக்கு முன் நீளும் தெருவில் கல்மண்டபங்களில் சாக்குப் படுதாவை கட்டி குடித்தனம் நடத்தும் மக்கள், வாசற்படிகளாகக் கிடக்கும் சிற்பங்கள் என உன்னதமாக்கப்பட்டவற்றை எல்லாம் உடைத்து சராசரியாக்கி விடும் காட்சிகள் எதுவும் ஒரு கலை மனதை அதிரச் செய்துவிடுபவை. ஆனால் எத்தனை உடைந்தாலும் சிற்பம் மீண்டும் கல்லாவதில்லை என்ற வரி, அதுதானே இத்தனை கலை மனங்களின் நம்பிக்கை. காலத்தின் முன்நின்று கல்நிற்றலுக்கு மானுடன் காணும் இடையறாத கனவும் இதைத்தானே பற்றிக் கொள்ள முடியும்.
மோட்டூரி ராமராவ் கலைகளுக்கான கண் கொண்டவன். ஹம்பியை வெளியுலகம் அறிந்திராத நாட்களில் சூரி ரங்காராவை வாசித்து அதைக் காணும் விழைவோடு செல்பவன். அனைவருக்கும் வெறும் பாழடைந்த நகரமாய் இருக்கும் அந்த சரிந்த நகரம் அவனுக்குப் பெரும் மன அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ஒவ்வொன்றையும் அழகாக்கிவிட கனவு காணும் உள்ளம் மண்ணின் அழுக்கான நிதர்சனங்களிலிருந்து தூயவற்றைப் பிரித்தெடுத்துக் கொண்டு உன்னதமாக்கிக் கொள்கிறது.
அவனுக்கு வண்ணத் திரைப்படங்கள் மீதிருக்கும் ஒவ்வாமை குறித்த வரிகளில் இதை அறியலாம். “கறுப்பு வெள்ளை என்பது பூடகமானது. உண்மையில் அது எங்குமில்லாத ஓர் உலகம். ஒரு கனவு அது.”
எங்குமில்லாத ஒன்றை, ஒரு நிகர் உலகை படைத்து அதில் நிறைவு காணத்தானே இத்தனை கலைகளால், படைப்புகளால் முயற்சி செய்து கொண்டே இருக்கிறது மானுடம். மெல்லி இரானி அத்திரைப்படத்திற்காக ஃபில்டர்களை மாற்றி மாற்றி அமைத்து கறுப்புவெள்ளையில் செக்கச்சிவப்பையும் பொன்வண்ணத்தையும் கண்டுபிடிக்க முயற்சிப்பது போலத்தான், அவனது முயற்சியும். எந்த ஒரு குறிப்பிட்ட நபருக்குமல்லாத பெயரற்றவர்களுக்கான உடை தைக்கும் தையல் வேலையும், இயக்குனராகி விடும் கனவில் அத்தனை அவமானங்களையும் சூடிக் கொள்ளும் உதவி இயக்குனர்களும், நடிகையாகிவிடும் கனவில் தங்கள் ஆன்மாவையே சிதைத்து விடும் எல்லை வரை செல்லும் துணை நடிகைகளும் சூழ்ந்த வாழ்விலிருந்து அந்தத் தூய பிரேமையினால் சிறகு கொண்டு மேலெழ அவன் முயற்சிக்கிறான். முதற்காதலின் பேரனுபவம் குறித்த எண்ணங்களில் கூட அவன் எண்ணிக் கொள்வது அதையே – “காதலென்பது ஒரு பெண்மேல் வருவது. பிரேமை என்பது அப்பெண்ணின் வடிவில் வந்த பெண்மை என்னும் தெய்வீகமான ஒன்றின்மேல் வருவது. அதிலிருந்து அவனுக்கு விடுதலையே இல்லை”. அவன் விழைவது திரைப்பட வாழ்வில் உழலும் விஜயலட்சுமியை அல்ல, அழுக்குகளுக்கு அப்பாற்பட்ட ஸ்ரீபாலாவை, ஒரு தேவியை.
அவளைக் குறித்த கனவுகளில் கீறலும் காயங்களுமான அவளது நிதர்சன உடலில் இருந்து விடுபட்டு மாநிறக் கன்னங்களும் காதோரம் ஆடும் குறுமயிர்களுமாக வண்ணங்களை வடிகட்டிவிட்டு கறுப்பு வெள்ளையின் அப்பழுக்கற்ற அழகாக மாற்றிக் கொள்கிறான். மாபெரும் கோவிலின் நிழலைக் காண துளை அமைத்த அந்த ஹம்பியின் சிற்பி போல.
அவளுக்கு ஒரு ஆபத்து என்றதும் அவனிடம் அடைக்கலம் புகுவது அவனுள் ஒன்றை நிறைவு செய்கிறது, ஒரு பெண் முழுமையாய் அடைக்கலாமாகும் போது ஆண் கொள்ளும் நிறைவு. அதன் பிறகான சம்பவங்கள் அனைத்தையும் கையாள்வதற்கான துணிவையும் தெளிவையும் அது தருகிறது. அந்த இரவு அவளுக்கு நிகழ்ந்தவற்றை கேட்டு அவனுள் ஒரு கசப்பு நிறைகிறது, அவை அவனது கனவுக்கு ஒவ்வாதவை. தலைமுடியைப் பற்றித்தான் அனைவரும் அடிப்பார்கள் எனும் போதும் அவனுள் ஏற்படும் ஒவ்வாமை, அதைக் கேட்கவே வேண்டாம் என அவன் சொல்லிவிடுகிறான்.
அவளுக்கோ அவனுடைய அருகாமை என்பது, முகத்தில் எச்சில் உமிழ்பவர்களுக்கு மத்தியில் அவளை அத்தனை அக்கறையோடு பார்த்த ஒரே உறவு.
“வாழ்க்கையில் எதுவுமே முக்கியம் இல்லை. ஆனால் எதையாவது முக்கியமாக நினைத்துக்கொண்டால்தான் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு” என்று நரசிங்கன் சொல்கிறான். அப்படி முழு வாழ்க்கைக்கும் அர்த்தம் கொடுத்துவிடக் கூடிய ஒரு அனுபவமாக அந்த பிரேமையை வடிகட்டி எடுத்துக் கொள்ளவே அவன் விழைகிறான். அவள் தன்னை அவனுக்கு கொடுக்க முன்வரும்போது அருவருப்பாய் இருக்கிறது என விலக்கிவிடுகிறான். அது முற்றிலும் உண்மையும் அல்ல பொய்யும் அல்ல. அவனது வாழ்வுக்கான தூய்மையான ஒரு பேரனுபவத்தை இல்லாமல் ஆக்கி விடக்கூடிய சிதைவு அது. அதைச் சொன்ன பிறகு உருகுவது இளைஞனாக முதல் காதலில் விழுந்திருக்கும் ராமராவ். அவளே தனக்கானவள் என்பதை அறிந்த ஆண். அந்த தருணத்துக்குப் பிறகான மன ஊசல்களை நடித்தபடி அதிலிருந்து விலகி எழுவது அவனுள் இருக்கும் கலைஞன்.
அவள் தன் வாழ்வு குறித்த தெளிவுள்ளவள். அவனது அக்கறை தரும் மகிழ்வின் தருணங்களை மனதார அனுபவித்து தன்னுள் நிரப்பிக் கொள்கிறாள். வேறு எதிர்பார்ப்புகளை கனவு காணாத கால்களைத் தரையில் ஊன்றிய பெண். எனவேதான் கிளம்பும் இரவில் குளிப்பதாக தன்னுடலை அவனுக்கு முழுமையாக முன்வைக்கவும் அந்த நிலவெரியும் இரவின் நெடும் பயணத்தை அவளால் இயன்றவரை அழகாக்கிவிட்டு அதிலேயே அவளுக்கான நிறைவின் தேன்துளிகளை அள்ளி சேகரித்துக் கொள்ளவும் அவளால் முடிகிறது.
சைக்கிளில் அவர்கள் செல்லும் அந்த இரவு நிலவொளியால் வடிகட்டப்பட்டதாக இருக்கிறது. இருவரும் அவர்களது மேலான சுவைகளைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்கிருப்பது ஒரே இரவு எனும்போது இருவருமே புவ்வுல சூரிபாபு, தேவுலப்பள்ளி எனத் தங்களது மிகச் சிறந்த நுண்சுவைகளை முன்வைக்கிறார்கள். மேகங்களே இல்லாத மையநிலத்தின் வானம், அதில் நிலவொளி பட்டு ஒளிரும் இரு முகில்கள். அந்த இரவுதான் அவர்களது சராசரி வாழ்வின் அதிஉன்னத கணம். அதை இருவருமே அறிந்திருக்கிறார்கள். உரையாடலில் அவனது ஒற்றை ‘ஓ’ என்ற சொல்லில் அவனது சலிப்பை உணர்ந்து கொள்ளும் நுண்ணர்வு கொண்டவள்தான் அவளும்.
அந்தப் பயணத்தின் அத்தனை பாவனைகளும் அதற்காகத்தான்.ஒரு முழுவாழ்வை மூன்று மணிநேரத் திரைப்படமாக்கி விடுவது போல பயணத்தில் இருவரும் நடந்து கொள்கிறார்கள். அதே பாவனைகளை, சிணுங்கல்களை, அணுக்கங்களை வாழ்நாள் முழுவதுக்கும் நீட்டி நடிப்பது வேறொரு வகையான வாழ்வு. நம்முடையதே ஆன வீட்டுக் கிணற்றடியில் நின்று நிதானமாக இறைத்து இறைத்து குளிப்பது போல; ஜானகியுடனான அவனது வாழ்வு போல. அன்றாடங்களில் காண முடியாத பேரருவி ஒன்றின் அடியில் திளைத்து நிற்கக் கிடைக்கும் சில மணித்துளிகளின் வாழ்வு முதல்வகை. அதன் பேருவகை சில நிமிடங்களே, அதில் வாழ்வுக்கும் நிற்க முடியாது. ஆனால் அந்த அனுபவத்தை மேலும் மேலுமென உள்ளே வளர்த்து அதில் திளைக்க முடியும். மொத்த கங்கையே விரிந்து ஓடினாலும் நம் குடத்தளவே அள்ளிக்கொள்வது போல இருவரும் அவ்விரவை அள்ளிக் கொள்கிறார்கள்.
அதன் பிறகான ராமராவ் வாழ்வின் கொந்தளிப்பான ஓர் ஆண்டும், அதைத் தொடர்ந்து குளிரக் குளிர ஓடும் நதி போன்ற மனைவியும் அந்த ஒரு சில நாட்களை அந்த ஒரு இரவை தங்கத்தை நெருப்பிலிட்டு பதங்கமாக்கி அவனுள் நிறுத்திவிடுகிறது.
இருபத்தேழு வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீபாலாவைத் தொலைத்துவிட்ட விஜயலட்சுமியை அவர் சந்திக்கும்போதும் அந்த சிரிப்பில் இருந்த ஸ்ரீபாலாவையே கண்டு கொள்கிறார்.
“செய்யவேண்டியதை செய்யாவிட்டால் அது ஒரு பள்ளமாகிவிடுகிறது. அது இறந்தகாலத்தில் இருக்கிறது, நிகழ்காலத்தை வைத்து அதை நிரப்பவே முடியாது” என்பது அவர் குறிப்பிடும் வரி. ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் அதைச் சொல்லாது ஏற்படுத்திய அந்தப் பள்ளம்தான் அவருக்குத் தேவையாயிருந்தது. அதை நோக்கியே அந்தப் பயணம் நடந்தது. அதை இட்டு நிரப்பிக் கொள்ளவே அவர் வாழ்வு முழுவதும் செல்கிறது. இது போலத் தாங்கள் நிரப்பிக் கொண்டாக வேண்டிய பள்ளங்களைக் கண்டடையாதவர்கள் அன்றாடத்தில் சிதறிப் பரந்து கரைகிறார்கள்.
அவளது வாழ்வில் நினைத்து அழ எத்தனையோ இருக்கும் போது உன்னதமான ஒன்றின் இழப்பை எண்ணி அழுவது ஒரு நிறைவைத் தருகிறது என அறிந்தவள். அந்த ஒரு இரவை அவன் வாழ்நாளுக்கு மறக்கமுடியாது செய்துவிட எண்ணியவள். அது நிகழ்ந்துவிட்டதை அறிந்து கொள்ளும் பேறு பெற்றவள். அவளுக்கு இனி துயரங்கள் இல்லை.
மேகங்கள் இணைந்திருந்தாலும் திசை வெளியில் கரைந்திருக்குமென அவர்கள் இருவருக்குமே தெரியும். பயணத்தின் முடிவில் அவன் அழைத்திருந்தாலோ அவள் திரும்பிப் பார்த்திருந்தாலோ அதற்குப் பின்னான வாழ்வு
பறக்காத போது பார்க்க நேர்ந்து, தாங்கள் விழைந்த பறவையல்ல தங்கள் கைவசப்பட்டது என்று தரையில் உதிர்ந்திருக்கும்.
அவர்கள் தாங்கள் கரைந்த பின்னும் எஞ்சும் வானாகிவிட ஆசைப்பட்டவர்கள் என்பதால் இப்பாதை. கலை என்பதும் அதுதானே.
“கறுப்பு-வெள்ளையை கடவுளின் வண்ணங்கள் என்பேன். இந்த வண்ணங்களெல்லாம் நமது மாயைகள், நம் ஆசாபாசங்கள், நமது அசட்டுத்தனங்கள்.” இந்த வடிகட்டியால் பொங்கும் உணர்வுகளை வடிகட்டிவிட்டு இக்கதையை வாசித்தால் அன்றாடங்களை மேம்பட்டதாக்கி உன்னதமாக்கிக் கொள்ள விழையும் கலைஞனின் யத்தனம் என்றே இக்கதை மனதில் நிற்கிறது.
மிக்க அன்புடன்,
சுபா
என் பார்வை இதில் முக்கியமாக ஜானகி ராமராவை திருத்தும் விதம் இவ்விதம் அதீத காமம் காமம் பொறுத்து கொண்டு வழிக்கு கொண்டு வருதல் அருமையாக சொல்லப்படுகிறது.காமம் ஒரு வடிகால் ஆக்கப்படுதல் ,வழியாக கிறுக்கு நீக்கப்படுகிறதுஅந்த அம்மா சொல்வது பொறுத்த்துக்கொள் முழு விஷமும்
இறங்கட்டும். ஜானகிக்கு அதன் பொருள் விளங்கிக்கொள்ளப்பட்டு
அவனை திருத்த்தும் பொறுப்பை சுமையாக அல்லாமல் சுவையாக ஏற்று கொள்கிறாள் இது பெரிய விடயம்.
மேலும் ஏன் அவளை பாலாவை எரிந்து விழுகிறான் என்பது உளவியல் சார்பானது அதாவது காமம் தடை படும் போதுஎரிசால் வருகிறது அதன் மெய் தன்மையே திட்டுவது தனக்கான பொருள் சில நேரம் சில போது கிடடவில்லை எனில் இப்படி நிதரிசன வெளிப்பாடு ஆகும்
அதாவது இந்த கதை காதல் காமத்தை வித்தியாசமாகவிளங்கி கொள்ள செய்கிறது தி ஜானகிராமனின் மோகமுள்பாபுவை ஜமுனாவை இணையச் செய்ய வைத்தது.ஆனால் இதில் பாலாவோ ராமராவோ உடல் இணைப்பைவிரும்பினாலும் விலகியே இருந்து வசப்படுகின்றனர்காதல் என்பது இதுவே பலர் காமமானதை காதல் என அர்த்தப்படுத்திக்கொள்ளுவது நடக்கிறது ஆனால் இதில் அது இல்லைஇதுவே அமரக்காதல் வாச மலர் வாடும் வாசம் வாடுவதில்லை
அன்புடன்
ஆரா
எழுத்தின் இருள்- கடிதங்கள்-2
அன்புள்ள ஜெ
இரண்டுவகையான எழுத்துக்கள் உண்டு. ஒருவகையான எழுத்து ஆசிரியன் வெளியே பார்த்து எழுதுவது. அது ஒருவகையில் வேடிக்கைபார்த்து எழுதுவது. அவனுக்கு கதாபாத்திரங்களெல்லாமே ‘பிறர்’தான். அந்தவகையான எழுத்தின் மாடல்களை வணிக எழுத்தில் நிறையவே பார்க்கலாம். நாம் அந்தவகையான எழுத்துக்குத்தான் பழகியிருக்கிறோம்
இப்படி வெளியே பார்த்து எழுதுபவர்கள் கதாபாத்திரங்களை கொஞ்சம் கொஞ்சமாக டைப் ஆக ஆக்கிக்கொள்வார்கள். வழக்கமான கதாபாத்திர மாதிரிகளுடன் கொஞ்சம் வேறுபாட்டை கலந்து எழுதுவார்கள். அந்த வேறுபாட்டை கவனப்படுத்துவார்கள். நீங்கள் பாலகுமாரனைப்பற்றிய கட்டுரையில் இதைச் சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நாஞ்சில்நாடன், பாலகுமாரன் – இலக்கியம், வணிகஎழுத்து
இந்த வேறுபாடுகளை மட்டுமே நாம் கவனிப்பதனால் இவர்கள் விதவிதமான கதாபாத்திரங்களை அப்ஜெக்டிவாக எழுதியிருப்பதாக நினைத்துக்கொள்கிறோம். உண்மையில் இவர்களின் கதாபாத்திரங்கள் டைப் கேரக்டர்கள் என்பதும், அந்த டைப் என்பது ஏற்கனவே இருப்பது என்பதும் நமக்கு தெரிவதில்லை.
ஆனால் அந்த வாசிப்பிலிருந்து நாம் டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கிக்கோ அல்லது நகுலனுக்கோ சென்றால் அதிர்ச்சி அடைகிறோம். டாஸ்டாயெவ்ஸ்கியின் எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுபோலவே பேசுகிறார்கள் என்று தோன்றும். டால்ஸ்டாயின் எல்லா கதாபாத்திரங்களுக்குள்ளும் அவரே இருக்கிறாரோ என்று தோன்றும். ஆனால் அதுதான் இலக்கியம் என்று புரிய மேலும் வாசிக்கவேண்டியிருக்கும்
கதாபாத்திரங்களை காட்டுவது இலக்கியத்தின் வேலை அல்ல. அதற்குள் செல்வதுதான் இலக்கியத்தின் வேலை. ஆசிரியன் கதாபாத்திரங்களுக்குள் செல்ல ஒரே வழி அவனே அந்தக் கதாபாத்திரமாக நடிப்பதுதான். அங்கே எல்லாமே ஆசிரியனின் அகம்தான். ஒரு கதாபாத்திரத்திற்கும் இன்னொன்றுக்குமான வேறுபாடு தூலமானது அல்ல, நுட்பமானதுதான். இதை வார் ஆண்ட் பீஸ் வாசிக்கும்போது அறியலாம்.
வாசகன் அந்த வழியே சென்று அவனும் கதாபாத்திரமாக நடிக்கிறான். கொடியவனாகவும் கீழானவனாகவும் அவனே நடிக்கிறான். ஆகவே வாசிக்கையில் வாசகன் எல்லா கீழ்மைகளையும் கொடூரங்களையும் அவனே அனுபவிக்கிறான். அதன் வழியாக வெளியேறுகிறான்
இதைத்தான் கதார்ஸிஸ் என்று சொல்கிறார்கள். இதுதான் இலக்கியம் நமக்கு அளிக்கிறது. இங்கே ஒன்று உண்டு. எவ்வளவு கீழ்மகனாக நாம் இலக்கியத்திலே நடித்தாலும் நாம் கீழ்மகன் அல்ல. ஏனென்றால் நமக்கு நாம் எவர் என்பதும் தெரியும். இலக்கியத்தில் நுழைந்து எல்லா கீழ்மைகளையும் செய்து, அனுபவங்களை மட்டும் அடைந்து, பழியே ஏற்காமல் வாசகன் வெளியேறிவிடுகிறான். இதுதான் இலக்கியவாசிப்பின் இயல்பு.
டாஸ்டாயெவ்ஸ்கியின் Humiliated and Insulted நாவலில் Prince Valkovsky நீண்ட உரை ஒன்றை ஆற்றுகிறார். சுயநலம், பழிபாவத்துக்கு அஞ்சாத தன்மை ஆகியவற்றை நியாயப்படுத்தும் உரை அது. அதை அங்கே டாஸ்டாயெவ்ஸ்கியே ஆற்றுகிறார். அவருடைய வாழ்க்கையில் அவர் அதை எங்கேயாவது சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். பிறகு அவருடைய வாழ்க்கையை வாசித்தபோது இளம்வயது டாஸ்டாயெவ்ஸ்கி ஒரு அறிவார்ந்த அயோக்கியனாகவே அவருடைய சமகாலத்தவரால் கருதப்பட்டிருந்ததை அறிந்தேன். அது இயல்புதான், அதுவும் அவர்தான்
நீங்கள் எழுதிய எழுத்தின் இருள் என்ற கட்டுரையை வாசித்தபின் இதை எழுதுகிறேன். இதை நானே சிறுகுறிப்பாக முன்பு எழுதியிருக்கிறேன். ஆழமாக எழுத்தில்செல்லும் எழுத்தாளர்கள் எல்லா கதாபாத்திரங்களிலும் தாங்களே நடிக்கிறார்கள். ஆகவே எல்லா தீமையையும் கீழ்மையையும் அவர்கள் அவர்களுக்குள்ளே இருந்தே எடுத்துக்கொள்கிறார்கள். அந்த தீமையையும் கீழ்மையையும் அவர்கள் உலகவாழ்க்கையில் எடுத்துக்கொள்ளாமலிருக்கலாம். அவர்களுக்குள் அதை நிகழ்த்துகிறார்கள்
அதைத்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் இதெல்லாமே ஆன்மிகத்திலும் உண்டு அல்லவா? புத்தர் தியானம் செய்யும்போது அவரைச்சுற்றி பாம்புகளும் டெவில்களும் நிற்பதைப்பற்றிய ஒரு படம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஞானி அவற்றை கடந்துவிட்டான் எழுத்தாளன் கடப்பதில்லை என்று வேண்டுமென்றால் சொல்லாலாம்
ஆர்.ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ
ஒரு வரி என்னை அதிரவைத்தது. புக்கோவ்ஸ்கியை படிப்பவன் நேர்மையானவனாக இருந்தால் அவனுக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படாது. ஏனென்றால் அவனுடைய அகத்தில் ஏற்கனவே அவன் கண்ட கீழ்மையையும் கொடுமையையும்தான் அவர் எழுதியிருப்பார். இது உண்மை. நான் 26 வயதானவன். எனக்கு வாழ்க்கை அனுபவமே இல்லை. ஆனால் எல்லா கீழ்மையும் எனக்கு ஏற்கனவே தெரியும். எதுவுமே என்னை பெரிதாக நிலைகுலைய வைப்பதில்லை. ஆச்சரியமாக இருந்தது உங்களுடைய அந்த வரி
தமிழ்ச்செல்வன் மாணிக்கவாசகம்
எழுத்தின் இருள்- கடிதங்கள்வேலைகிடைத்ததால் தற்கொலை
அன்புள்ள ஜெ.,
நாகர்கோயில் அருகே எறும்புக்காடு என்னும் ஊரைச் சேர்ந்த நவீன்(32) என்னும் பொறியியல் பட்டதாரி வாலிபர் வேலை கிடைத்து மும்பைக்குச் சென்றவர் (இந்த மும்பை மோகம் இன்னும் தீரவில்லையா?) ஊருக்குத் திரும்பிவந்து நேர்த்திக் கடனைச் செலுத்தியிருக்கிறார், புத்தேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை வைத்துப்படுத்து உயிர்கொடுத்து. வேலை கிடைத்ததும் உயிர் விடுவதாக கடவுளிடம் ஒப்பந்தம். போன வாரம் பத்திரிகையில் இந்தச் செய்தியைப் படித்தவுடன் சிறிது நேரம் மூளை மரத்துவிட்டது. இந்திய அளவில் கேரளாவிலும்(அதை ஒட்டிஇருப்பதால் குமரி மாவட்டத்திலும்), உலக அளவில் ஜப்பானிலும் தற்கொலை அதிகஅளவில் நடப்பதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.
வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும் தவறாகப் போகிற ஒரு காலகட்டம் அநேகமாக எல்லோருக்கும் வருவதுண்டு. நான் திருமணம் ஆகி, முதல் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபின்பு ஒரு மேலாளரின் அராஜகத்தினால் வேலையிழந்தேன். திரும்ப வேறிடத்தில் முயன்று ஒரு சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத வேலை. மூன்றே மாதத்தில் ஒரு சிறிய காரணத்திற்காக மறுபடியும் வேலையிழப்பு.
பிளாட்டில் ‘என்ன பைக்கையே ரொம்ப நாளா எடுக்கக் காணும்’ என்று விசாரணை வரத்தொடங்கியதும் காலையில் சாப்பிட்டுவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு நேர்முகத்தேர்வு ஏதாவது இருந்தால் செல்வேன். இல்லையென்றால் நேரே எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் தஞ்சம். அங்கிருப்பவர்களெல்லாம் அநேகமாக என்னைப்போலத்தான் என்று நினைத்துக் கொள்வேன். ரெண்டு நாளைக்கு ஒரு நாவலாக படித்துத் தள்ளினேன். ஸம்ஸ்காரா, மதிலுகள், எரியும் பனிக்காடு, எத்தனையோ புத்தகங்கள்….நரகத்திலே இளைப்பாறல்தான். உள்ளே உலைமேல் அரிசியாக மனது கொதித்துக்கொண்டிருக்கும். கைபேசிஒலித்தால், நேர்முகத்தேர்வுக்கான அழைப்போ என, வெளியேபோய்ப் பேச விலுக்கிட்டு எழுந்து ஓடுவேன். ‘ஒங்க எக்ஸ்பீரியன்ஸுக்கு இப்ப எதுவும் ஓப்பனிங் இல்லை’ , ‘எம்.டி அவுட் ஆஃப் ஸ்டேஷன். அடுத்தவாரம் வந்து பாருங்க’, ‘சார், இன்னொரு ரவுண்டு இருக்கு, கால் பண்ணுவோம் கொஞ்சம் பொறுமையா இருங்க’ எத்தனைவிதமான மறுதலித்தல்கள்.
ரயில்பெட்டியில் உறவினர்களைக்காண நேரிட்டால் அடுத்தபெட்டியில் போய் ஏறிக்கொள்வேன். பொய் சொல்லவேண்டிய பல சூழ்நிலைகள். என்னை மிகக்கீழாக உணர்ந்தகாலம். மனைவியின் உறுதுணையோடு எப்படியோ சேமிப்பைக் கொண்டு சமாளித்தேன். ஒரு ஆறுமாதம் நரகவாழ்க்கை. என்னசெய்வதென்று தெரியாமல் மறுபடியும் பழைய கம்பெனிக்கே சென்று வேறுபிரிவில் வேலை கேட்டேன். பழைய மேலாளரின் சம்மதம் இருந்தால்தான் எடுத்துக்கொள்வேன் என்றார்கள். வேறுவழியில்லாமல் சென்று கேட்டேன். அவருக்கும் உள்ளூர உறுத்தியிருக்கலாம், உடனே சம்மதம் சொல்லிவிட்டார். என் வாழ்க்கையின் மிகமகிழ்ச்சியான நாள் என்றால் அதைத்தான் சொல்வேன். அப்பிடி ஒரு வேலைகிடைத்த பின்பு உயிரை விடுவதென்றால்? நவீன் செய்துகொண்டது தற்கொலை, ஆனால் அவர்தன் வயதான பெற்றோர்களைச் செய்தது கொலையல்லவா? நவீனைச் செலுத்தியது எது?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
***
அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்
ப.சிங்காரம் அவருடைய புயலிலே ஒரு தோணி நாவலில் ஒரு வேடிக்கையான நாட்டார்பாடலின் ஈரடியைச் சொல்கிறார். அதன் மூலவடிவம் இது
நாட்டரசன்கோட்டையிலே நல்லகண்ணு மாரியாத்தா
கண்ணு சரியாகவேணும் கண்ணான மாரியாத்தா
கண்ணு சரியானா கண்ணான மாரியாத்தா
கண்ணுரெண்டும் குத்தித்தாறேன் கண்ணுபாரு மாரியாத்தா
அந்த மாதிரி ஒரு செயல் இது. வேலைகிடைத்தால் தற்கொலைசெய்துகொள்கிறேன் என்று வேலைகிடைக்காமல் நொந்துபோய் வேண்டிக்கொண்டு வேலை கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்றுவது
குமரிமாவட்டம் கேரளத்தின் பண்பாடு கொண்டது. கேரளம்போலவே இங்கேயும் தற்கொலை மிகுதி. இரண்டு காரணங்களை ஆய்வாளர் சொல்கிறார்கள். ஒன்று, கூட்டமாக குழுவாக வாழும் வழக்கம் ஒழிந்து மக்கள் தனியர்களாக வாழ்கிறார்கள். இரண்டு, கல்வியால் மக்களுக்கு வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பும் கனவுகளும் மிகுதி. கல்விக்குச் சமானமாகப் பொருளியல் வளரவில்லை
அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு, இங்கே சமூக அழுத்தம் மிகுதி. தமிழகம்போல ஒழுக்கவியல் கெடுபிடி இல்லை. தமிழகம் போல வம்பு புறம்பேச்சும் இல்லை. தமிழகம் அளவுக்கு உறவுச்சிக்கல்களும் இல்லை. ஆனால் தமிழகம் நினைத்தே பார்க்கமுடியாத அளவுக்கு உலகியல் நோக்கு உண்டு. வெறும்பணமே எல்லாவற்றுக்கும் அளவுகோல். ஆகவே அந்த கெடுபிடி சமூகத்திலிருந்து வந்து மென்னியைப்பிடிக்கிறது
பொதுவாக தற்கொலை எண்ணம் போன்றவை வைரஸ் போல. சூழலில் மிதக்கின்றன, பலவீனமானவர்களை தொற்றிக்கொள்கின்றன.
ஜெ
April 21, 2021
அறுபதும் அன்னையும்
இன்று என் 59 ஆவது பிறந்தநாள். அறுபது வயதுக்குள் அடியெடுத்து வைக்கிறேன். பொதுவாக பிறந்தநாட்களை கொண்டாடியதில்லை. இளமையில் அம்மா கொண்டாடுவதுண்டு. அம்மாவின் இறப்புக்குப்பின் அவ்வழக்கம் இல்லாமலாகியது. இப்போதெல்லாம் காலையில் எழுந்து மின்னஞ்சல் பார்க்கையில் எவராவது வாழ்த்து தெரிவித்திருப்பதை கண்டுதான் பிறந்தநாள் நினைவுக்கே வருகிறது. முகநூலில் இல்லை என்பதனால் வாழ்த்துக்கள் வருவதும் குறைவுதான்.
ஆனால் இந்தப் பிறந்தநாள் ஒரு வகையான அமைதியின்மையாக நினைவில் இருக்கிறது. ஏனென்றால் சிலநாட்களுக்கு முன்னரே இது நினைவில் எழுந்ததும் அறுபது தொடங்கவிருக்கிறது என்னும் எண்ணம் எழுந்தது. அறுபது! நம் மரபில் ஓரு வட்டத்தின் நிறைவு அது. அதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆகவேதான் நான் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோருக்கு அறுபதாண்டு மலர்களை வெளியிட்டேன்.
இன்று எனக்கு அறுபது அணுகிவிட்டபிறகு கொண்டாட்டமோ, தொகுத்துக்கொள்ளுதலோ பெரிதல்ல என்று தோன்றுகிறது. இதை ஒரு நிறைவாக நினைக்க முடியவில்லை. ஒரு தொடக்கமாகவே கொள்கிறேன். ஆனால் எங்கே, எத்திசையில்? அது தெளிவாக இல்லை. முற்றிலும் மூடியிருக்கவுமில்லை, குழப்பம் அதனால்தான். இக்குழப்பங்களை பகிர்ந்துகொள்ள முடியாது. எனக்கே தெளிவாக ஆனபின் மாணவநிலையில் உள்ள எவரிடமேனும் எப்போதேனும் பகிர்ந்துகொள்ளலாகும்.
சென்னையில் ஜி.ஆர்.டி கிராண்டின் அறையில், பெரும்பாலும் தனிமையில் இருந்தேன். நட்சத்திர விடுதிகள் எல்லாமே ஓய்ந்து கிடக்கின்றன.அங்கிருந்து கிளம்பவேண்டும் என்று தோன்றியது. ஊட்டி செல்லலாம், அதுவே முதல் தெரிவு. குருவின் அருகே இருக்கவேண்டும். ஆனால் அங்கு செல்ல பல நிபந்தனைகள். வற்கலை செல்லவும் அவ்வாறே. ஆகவே ஏதோ ஓர் இடம் என முடிவு செய்தேன். முற்றிலும் தனியாக, என்னை உற்றுநோக்கியபடி, இரண்டுநாட்கள் இருக்கவேண்டும். இங்கு வந்திருக்கிறேன்.
உற்றுநோக்குதல் என்கிறேன். ஆனால் அது ஒரு விளையாட்டுதான். அப்படி உற்றுநோக்க முடியாது. ஆயிரம் செயல்கள் வழியாக நம்மை நாமே தவிர்ப்பதுதான் நாம் செய்வது.அதுவே நல்லதும்கூட. அந்த செயல்களின் ஊடே சட்டென்று வெளிப்படும் தோற்றமெனவே நாம் நம்மை உண்மையில் காணமுடியும். நேருக்குநேர் நோக்க ஆரம்பித்தால் நமக்கு நாமே நடிப்போம். நம் மனமே நம்மை மறைக்கும் திரை ஆகிவிடும்.
பொதுவாக பிறந்த நாளில் வாழ்த்துகளுக்குச் சமானமாக எனக்கு வசைகளும் வருவதுண்டு. ஆகவே அன்று மின்னஞ்சல்கள் பார்ப்பது இல்லை. செல்பேசியை தொடுவதுமிலை. நாளைதான் மீண்டும் நாள் தொடங்குகிறது.
இன்று, இந்த சிறிய நாவலை முழுமையாக வெளியிடுகிறேன். இதை சில நாட்களுக்கு முன்னரே எழுதிவிட்டேன். வரும் ஏப்ரல் 24 அன்று மதுரை மீனாட்சி திருக்கல்யாணம். அதற்கு முன் நிறைவுறும்படி 18 ஆம் தேதி முதல் தொடராக வெளிவரும்படி அமைத்திருந்தேன். ஆனால் இணையதளத்திற்குள் புகுந்து வாசிக்கும் அரங்கசாமி இதை முழுமையாகவே வெளியிடவேண்டும், இதில் ஒற்றை அனுபவம் மட்டுமே உள்ளது, கதை இல்லை என்றார். அதுவும் சரிதான் என்று தோன்றியது.
ஒரே நாளில் 150 பக்கம் வரும் இந்நாவலை வாசிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தமிழ்வாசகர்களில் என் வாசகர்கள் மிகமிக குறைவானவர்கள். ஒரு படி மேலே தகுதி கொண்டவர்கள். அப்படி வாசிப்பவர்களை மட்டுமே என் வாசகர்களாக கொள்கிறேன். வாசிப்பதை முட்டி முட்டி, துளித்துளியாகச் செய்பவர்கள் என் வாசகர்கள் அல்ல. என் வாசகர்கள் வெண்முரசின் 26000 பக்கங்களை வாசித்தவர்கள்.
இந்தச் சிறுநாவலை ஏதோ ஒரு உந்துதலில், பெரிய திட்டமேதும் இல்லாமல், இரண்டே நாட்களில் எழுதி முடித்தேன். இதன் அழகியல்முழுமை குறித்தே நான் கவனம் கொண்டேன். இதன் மெய்ப்பொருள் என்ன என்று எனக்கு இன்னமும் தெளிவு இல்லை. ஆனால் இந்தத் தருணத்துடன் எவ்வகையிலோ தொடர்புகொண்டுள்ளது என்று நினைக்கிறேன்.
***
குமரித்துறைவி [குறுநாவல்] – 6
[ 18 ]
நான் இருட்டில் நெடுந்தொலைவு சென்று அதன்பின்னரே குதிரையின் விரைவைக் குறைத்தேன். மூச்சிரைத்துக் கொண்டிருந்தேன். பின்னர் இறங்கி அங்கிருந்த கற்பாறைமேல் அமர்ந்தேன். உடல் மிக தளர்ந்திருந்தது. சிந்தனை ஓடாமல் அங்கிருந்தபடி கீழே விரிந்துகிடந்த செவ்வொளிப்புள்ளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான் சொற்களை விட்டுவிட்டேன் என்று தெரிந்தது. ஏன் அதைச் சொன்னேன்? ஆணவம் அல்ல. உண்மையில் நான் அஞ்சிக்கொண்டிருந்தேன். எங்கோ ஏதேதோ பிழைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று அறிந்திருந்தேன். பிழையில்லாமல் இந்தப் பெரிய திருவிழாவை நடத்தி முடிக்க முடியாதென்று நன்றாக உணர்ந்திருந்தேன். ஆனாலும் சொன்னேன். என் நாக்கிலிருந்து என்னை மீறி அச்சொற்கள் வந்தன.
நான் களைத்திருந்தேன். தொடர்ச்சியான துயில்நீக்கம். அத்துடன் அத்தருணத்தின் எரிச்சல். அதைவிட மேலாக பிழை பிழை என எண்ணி எண்ணி தேடிச் சலித்த என் அகம். ஏதோ அவ்வாறு சொல்ல நேர்ந்துவிட்டது. ஆணவம் அல்ல. வேறேதோ ஒன்று. ஒளிந்து விளையாடும் பிழைக்கு நான் ஓர் அறைகூவல் விடுத்திருக்கிறேனா? நான் கண்களை மூடிக்கொண்டேன். அலையலையாக இருட்டும் செவ்வொளிகளும் கண்களுக்குள்ளும் நெளிந்தன. நடுவே ஒரு முகம். மீனம்மையின் சின்னஞ்சிறிய மாந்தளிர் நிறமான நீள்முகம். நீள்மூக்கு, நீள்விழிகள், குமிழுதடுகள், மென்சிரிப்பு. குறும்பு செய்வதற்கு முந்தைய சிறுமியின் பாவனை.
என் மெய் சிலிர்த்தது. அதுதான், நான் அம்மையைத்தான் அறைகூவியிருக்கிறேன். என்னுடன் விளையாட வா என அழைத்திருக்கிறேன். அவள் வந்தேயாகவேண்டுமென்றால் நான் என் உயிரை பணயம் வைத்தாக வேண்டும். அதைத்தான் செய்திருக்கிறேன். விளையாட வாடி சிறுக்கி என்று கூவியிருக்கிறேன்.
என்ன நடக்கும்? ஒருவேளை நாளை அந்தியில் நான் இருக்கமாட்டேன். இருக்கவேண்டுமென்றால் மீனாம்பாள் நினைக்கவேண்டும். அவளுடைய குறும்புச்சிரிப்பு என்னைக் காக்கவேண்டும். நான் புன்னகைத்தேன். என் எல்லா பதற்றங்களும் அகன்றன. அவள் என்னை கைவிட்டாலும் என்ன? அவள்பொருட்டு உயிர் விடுவதும் நிறைவே. நல்லது, நான் அவளுக்கு முன் என் பகடையை உருட்டிவிட்டேன். இனி அதை எடுத்து ஆடுவது அவள் பொறுப்பு. ஆடட்டும் பார்க்கிறேன். ஆம், ஆடட்டும் அவள். அச்சொல்லை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். என் உள்ளம் மலர்ந்துகொண்டே இருந்தது.
நான் எழுந்து குதிரைமேல் ஏறி ஆரல்வாய்மொழி எஜமானனின் அரண்மனைக்குச் சென்றேன். அங்கே என்னைப் பார்த்ததும் எஜமானன் ஓடி வந்து “மகாராஜா அங்கேயா இருக்கார்?” என்றார்.
“தூங்கிட்டிருக்கார்… தூங்கட்டும், காய்ச்சல் இருக்கு. தூங்கினால் காய்ச்சல் குறைஞ்சிரும்” என்றேன்.
“இன்னும் ஒரு நாழிகையிலே பிரம்ம முகூர்த்தம்… பூஜைகள் தொடங்கிரும்.”
“அப்ப எந்திரிச்சிருவார். எந்திரிச்சதுமே தேவி முகத்தைப் பாக்கிறது நல்லது. நான் இங்கே குளிச்சு ஒருங்கணும். அவரு எந்திரிச்சதுமே சம்பிரதி செல்லப்பன் பிள்ளையை அனுப்பி கூட்டிட்டு வந்திருங்க. இங்கே கொஞ்சம் சாப்பிட்டு குளிச்சு ஒருங்கி அவர் அங்கே வாறதுக்கு சரியா இருக்கும்.”
நான் குளித்தபோது நெஞ்சுக்குள் தேவி மந்திரத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அதை தலைதுவட்டும்போதுதான் உணர்ந்தேன். “யாதேவி சர்வபூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா!”. குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி விட்டுக்கொண்டேன். இவ்வ்வுலகமெங்கும் ஏழுலகங்களிலும் அன்னை வடிவமாக அமைபவளே! ”யாதேவி சர்வ ஃபூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா”
ஆடைகளை அணிந்து வெளியே வந்தேன். கருக்கிருள் கூடியிருந்தது. ஒவ்வொன்றும் இருளில் இருந்து உயிர்கொண்டு எழுந்து வந்து இன்னொன்றைச் சந்தித்து இணைந்து இணைந்து காலையை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஒளியால் தங்களை ஒன்றாக்கிக்கொண்டிருந்தன. ஒளியில்லை. இது மெல்லிய மிளிர்வு. இது ஒரு துலக்கம் மட்டுமே. காகங்களின் ஓசைகள் கேட்டன. கோழி ஒன்று ஊருக்குள் கூவியது.
நான் குதிரையில் ஏறி ஆரல்வாய்மொழி கோட்டையின் கீழே சென்றேன். காவலர்கள் ஈட்டிமாற்றிக் கொண்டிருந்தனர். சென்றவர்களும் களைப்புடன் இல்லை. நிலம் நிறைத்து அமர்ந்து அரைத்தூக்கத்திலிருந்த மக்கள் கலைந்து கலைந்து ஓசையிட்டபடி எழுந்துகொண்டார்கள். அவர்கள் நீராடுவதற்கு காட்டுக்குள் சிறுகுளங்கள் வெட்டப்பட்டிருந்தன. அங்கே நிரைநிரையாக நின்று பனையோலை தொன்னைகளால் நீர் அள்ளி ஊற்றி குளித்துக்கொண்டிருந்தனர்.
நேற்றைய கூட்டத்தில் நூறில், ஆயிரத்தில் ஒரு பங்குகூட இல்லை. பெரும்பாலானவர்களை அனுப்பிவிட்டேன். இன்று உண்மையில் மக்களை விட படைகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் இருப்பவர்கள் அன்னை கிளம்புவதை காணாமல் திரும்பிப் போகக்கூடாதென்று இருந்துவிட்டவர்கள். இருபது கல் தொலைவு சுற்றி மீண்டும் ஆரல்நகருக்குள் வந்தவர்கள்.
ஊட்டுபுரைகளில் நான்கு மட்டும் இன்று காலையும் மதியமும் இயங்கும். அவற்றில் புகை எழத்தொடங்கிவிட்டது. ஒவ்வொன்றும் இயல்பாக அமைந்துவிட்டிருந்தன. இரவுயிர்கள் ஒடுங்க ,காலை உயிர்கள் எழ, காட்டில் பொழுது மாறுவதுபோல ஒவ்வொன்றும் நிகழ்ந்துகொண்டிருந்தது. இவ்வண்ணமே என்றும் எவ்வகையிலும் என.
மணப்பந்தலுக்குச் சென்றேன். அங்கே நெய்விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. கொண்டையத் தேவர் குடியைச் சேர்ந்த மறவர்கள் புதிய வெள்ளை ஆடையும் புதிய தலைப்பாகைகளுமாக ஓரிடத்தில் கூடியிருக்க அவர்கள் நடுவே ஒரு முதியவர் பேசிக்கொண்டிருந்தார். நான் அவர்களருகே சென்றேன்.
முதியவர் என்னை நோக்கி புன்னகையுடன் வணங்கி “இன்னைக்கு அம்மைகூட கெளம்புறோம் உடையதே. அதைச் சொல்லிட்டிருந்தேன்.”
”எல்லாரும் கிளம்பல்லை இல்லியா?” என்றேன்.
“அதெப்டி? இந்த மண்ணுலேதானே பிறந்தோம். இந்த மண்ணுக்காக இன்னும் நூறு தலைமுறைக் காலம் எங்க ரத்தம் விளணும்லா? அங்கேருந்து எத்தனைபேரு வந்தோமோ அதிலே ஏழுபேரு கூடுதலா திரும்பிப் போகணும்னு ஏற்பாடு.”
“மதுரைக்கா?” என்றேன்.
“மதுரைக்கும் எங்களுக்கும் என்ன? நாங்க போறது கயத்தாறிலே எங்க ஊருக்கு. கயத்தாறு பக்கம் உசிலங்குளம்.”
”அங்க யாரு இருக்காங்க?”
“யாருக்கு தெரியும்? நாங்க விட்டுட்டு அம்மைக்கு காவலா வந்து எளுவது வருசமாச்சு. அப்ப வந்தவங்களிலே மாயாண்டிச்சாமி பாட்டன் மட்டும்தான் இப்ப இருக்காரு. வயசு எம்பத்தெட்டாச்சு… செவி கேக்காது. அவருக்கு ஊரும் தடமும் தெரியும். மூத்து வயசானப்ப அவரு முழுசா அங்கேயே போயிட்டாரு. அங்க இருந்த மரமும் செடியும் பாறையும்கூட ஞாபகத்திலே வருது. அதனாலே தெளிவா கேட்டுத் தெரிஞ்சுகிட்டோம். அங்க ஒண்ணுமில்லை. கருவாக்காடு. மொட்டைப்பாறை. ஊரிலே இந்த பஞ்சகாலத்திலே மக்கமனுச யாரும் இல்லாம இருக்கத்தான் வாய்ப்பு. போனதுமே குடிசை போட்டு சுவரு கட்டி ஊரை எளுப்பணும்.”
“பொண்டுக கூட வாறாளுகல்ல?”
“எட்டு பேரு உண்டு வாறதுக்கு… அங்க போயி காசு குடுத்து வேற கூட்டத்திலே பொண்ணு எடுத்துக்கிடுவோம்.”
“அங்க அப்டி கஷ்டப்பட்டு எதுக்கு?” என்றேன்.
“சாமி, அது எங்க நிலம்லா? அங்கதானே எங்க கருப்பசாமியும் மாயாண்டிச்சாமியும் நின்னுட்டிருக்கு?”
நான் தலையசைத்தேன். “வேண்டது கையிலே இருக்கும்ல?” என்றேன்.
“மூணு தலைமுறை நின்னு வாழுற பொன்னு இருக்கு. கேட்டுக்கேட்டு மகாராஜா குடுத்திருக்கார். அதை விட மீனாட்சி குடுத்திருக்கான்னு சொல்லணும். எங்க பாட்டன் அம்மைக்கு தோள் குடுத்த அந்த நாளிலே இருந்து இந்நாள் வரை எங்க குடியிலே ஒரு குழந்தை சோறில்லாம இருந்ததில்லை. இனிமேலும் அப்டித்தான்.”
நான் வணங்கிவிட்டு மேலே சென்றேன். கன்யாகுமரி திருமஞ்சனக்காரர்களையும் பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். அவர்கள் இவர்களைப்போல அல்ல. அவர்களுக்கு அரசர்கள் ,கோயில்கள் எதனுடனும் தொடர்பில்லை. அவர்களின் நிலம் வேறு. அவர்களின் அரசமுறையும் தெய்வங்களும் வேறு.
பரகோடி கண்டன்சாஸ்தா கோயில் முன்னால் ஒரு கொட்டகையில் அவர்கள் இருந்தனர். பாதிப்பேர் நீராடி வந்திருந்தனர். எஞ்சியவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். அவர்களில் மூத்தபட்டக்காரருக்கு செண்பகராமன் பட்டம் இருந்தது. மெய்யன் கண்டன் செண்பகராமன் மணக்குடி அருகே பொழிக்கரையைச் சேர்ந்தவர்.
நான் சென்றதும் அவர்கள் வணங்கினர். பெரிய சிவப்புத்தலைப்பாகையும் குண்டலங்களும் சிப்பிமணி மாலையும் அணிந்திருந்த மெய்யன் கண்டன் செண்பகராமன் “அம்மை எறங்கினதுமே நாங்க கிளம்புறதா இருக்கோம்” என்றார். “அம்மைக்கான மங்களங்கள் முடிஞ்சாச்சு. எங்க மக விட்டுட்டு போறா. புருசன்கூட அவ நிறைஞ்சு வாழணும்”
“அம்மை போன பிறகு இங்கே என்ன சடங்குகள்?” என்றேன்.
“நாங்க மஞ்சனம் கொண்டுவந்த நீரிலே அம்மையை குளுப்பாட்டியாச்சு. இப்ப அம்மை நீராடின தண்ணியை அந்த மஞ்சனக்கலங்களிலே நிறைச்சு குடுப்பாங்க. அதை திரும்ப கொண்டுட்டுப் போவோம். அதை ஏழுநாள் ஊர்களிலே வைச்சு கும்பிடுவோம். பிறவு கடலிலே விடுவோம்” என்றார் மெய்யன் கண்டன் செண்பகராமன். “அவ தென்கடலிலே பிறந்தவ. தென்கடலரசின்னு அவளுக்கு பேரு”
“உங்க குடிக்கு செம்பகராமன் பட்டம் எப்ப வந்தது?” என்றேன்.
“அது பண்டு ஆய்ராஜாக்கள் காலத்திலே வந்ததாக்குமே” என்றார்.
“நானும் செம்பகராமன்தான்” என்றேன்.
அவர் புன்னகைத்து “தெரியும்” என்றார்.
“இங்கே குறையொண்ணும் இல்லியே?”
“நிறை மட்டுமே சொல்லுறதுக்கு இருக்கு…” என்றார்.
“குறையிருந்தா சொல்லுங்க.”
“நிறைஞ்ச மனசுதான் இருக்கு சர்வாதிக்காரரே. ஆனா இன்னைக்கே விட்டுப் போகணும், அது ஒண்ணுதான் குறை.” என்றார் மெய்யன் கண்டன் செண்பகராமன்.
நான் வணங்கி விடைபெற்றேன். இனி குறைகளை தேடவேண்டியதில்லை. குறையிருந்தால் எனக்குக் காட்டவேண்டியது அவள் பொறுப்பு.
மணப்பந்தலில் வெளித்திரைகள் போடப்பட்டிருந்தன. காலையின் காற்றில் வெளிறி வந்த வானின் பின்னணியில் ஏழுநிலைப் பந்தல் மெல்லிய ஆட்டத்துடன், சன்னதம் எழப்போகும் பூசாரியைப்போல நின்றிருந்தது. ஏழுநிலை கொண்ட கோட்டை. ஏழுநிலை மாடம். ஆனால் அது எனக்கு வானில் ஒரு கருமுகில் ஒளிகொள்ளக் காத்திருப்பதுபோல தோன்றியது.
எங்கோ ஆரல்மலைத் தொடர்களில் கொடுங்காற்று ஒன்று கருக்கொண்டிருக்கிறதா? புலிபோல கண்மின்ன காத்திருக்கிறதா? எண்ணாதே. விலக்கு. இங்கே இரு. எண்ணி எண்ணிச் செல்லுமிடம் தொலைவு, வழியிலா முடிவிலா செலவு.
திரைக்குள் மீனாக்ஷிக்கும் ,சுந்தரேசனுக்கும் ,பரகோடி கண்டன் சாஸ்தாவுக்கும் சிவாச்சாரியார்கள் திருமஞ்சனம் முடித்து பூசைக்கான அலங்காரங்கள் செய்துகொண்டிருந்தனர். ஆதிகேசவனுக்கு நம்பி அலங்காரம் செய்தார். பண்டாரங்கள் பிள்ளையாருக்கும் முதுநாடார் முத்தாலம்மைக்கும் அலங்காரம் செய்தனர்.
அலங்காரம் செய்யும்போது பூசகர்களின் முகம் பிறிதொன்றாக மாறிவிடுகிறது. அதில் பக்தி இருப்பதில்லை. பணிவு தென்படுவதில்லை. தெய்வம் குழந்தையாக மாற, அவர்கள் அன்னையாகி விடுகிறார்கள். மீனாட்சியின் கன்னத்தை இறுகப் பிடித்துதபடி நெற்றிப்பொட்டை சரிசெய்யும் சிவாச்சாரியார் அவள் அசைந்தால் ஓர் அடி போடுவார் என்று தோன்றியது. செல்லமாகப் பேசியபடி, ஒருவருக்கொருவர் கேலிச்சொல் உரைத்தபடி அவர்கள் அணிச்செயலில் ஈடுபட்டிருந்தனர்.
கீழே மணப்பந்தலின் முகப்பில் முல்லமங்கலம் நம்பூதிரி ஹோமகுண்டத்தை ஒருக்கிக் கொண்டிருந்தார். ஓரு நம்பூதிரி இளைஞன் அரணிக்கட்டையை சரடு கட்டி தயிர் கடைவதுபோல இழுத்து தீ எழுப்பிக்கொண்டிருக்க சமித்துகளை ஒருவர் சீராக ஒடித்துக் கொண்டிருந்தான். அரணிக்கட்டை புறாபோல ஒசை எழுப்பியது. ஹோமப்பொருட்களை முதிய நம்பூதிரி தொட்டுத்தொட்டு எண்ணினார்.
அவர்கள் அனைவருமே காலைநீராடி புதிய ஆடைகள் அணிந்திருந்தனர். மகாராஜாவின் சிம்மாசனம் வெள்ளை துணி போர்த்தப்பட்டிருந்தது.அங்கே குரல் எழக்கூடாதென்று ஒருவர் இன்னொருவரை சைகையால் அழைத்துப் பேசிக்கொண்டனர். ஆகவே கலங்கள் முட்டும் ஓசையும் நீரின் ஓசையும் உரக்கக் கேட்டன. எவரிடமும் பேசவேண்டுமென்று தோன்றவில்லை. சட்டென்று தீ பற்றிக்கொண்டது. பஞ்சு எரியும் மணம். கற்பூரம் பற்றிக்கொள்ளும் புகை மணம்.
வெளியே இருந்து உள்ளே கிண்டியில் நீருடன் வந்த ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் என்னை பார்த்து நின்றார். நான் அருகே சென்றேன். அவர் தாடியில் நீர்மணிகள் ஒளியுடன் தெரிந்தன.
“காலைப்பூசை முடிஞ்சதும் அம்மனுக்கு புறப்பாடு அலங்காரம். அம்மைக்கு புறப்பாட்டுக்கு உடுக்க வேண்டிய பட்டும் போடவேண்டிய நகையும் கொண்டு வந்திருக்கு. பையன் பொண்ணு ரெண்டுபேருக்கும் பூர்ணாலங்காரம்…” என்றார்.
“காலைபூஜைக்கு மகாராஜா வந்திருவார்” என்றேன்.
“எல்லாம் மங்களமா முடியும்” என்றபின் அவர் உள்ளே சென்றார்.
நான் வெளியே சென்று புதியகாற்றில் நின்றேன். விடிவெள்ளி தெரிந்தது. உடனே நெஞ்சில் ஓர் அமைதி எழுந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தபோது அதை மையமாக்கி வானம் சுழல்வதுபோலத் தோன்றியது.
சம்பிரதி செல்லப்பன் நாயர் வந்து “அங்கே மணவாளன் வீட்டிலே எல்லாரும் ஒருக்கம் ஆயாச்சு. படைகள் எல்லாம் ஒருங்கியாச்சு. தளவாயும் ராயசமும் அலங்கராம் பண்ணிட்டிருக்காங்க” என்றார்.
நான் “திவானும் தளவாயும் அங்கதான் இருக்காங்களா?” என்றேன்.
“இல்லை, அவங்க ரெண்டுபேரையும் உடனே வெளியே போகச்சொல்லிட்டாரு தளவாய். திவான் நேரா தோவாளைக்குப் போனாரு. தளவாய் நாராயணக் குறுப்பு எங்க போனார்னு தெரியல்லை.”
“சரி” என்றேன். அவர் போகலாமென்று கைகாட்டினேன்.
எதையாவது சாப்பிடவேண்டும் என்று தோன்றியது. அவ்வெண்ணம் முதலில் வந்தது. அதன் பின்னரே பசி ஓர் அலையென எழுந்து அறைந்தது.
நான் முதல் ஊட்டுபுரைக் கொட்டகைக்குச் சென்றேன். சேவூர் கிருஷ்ணன்குட்டி நாயர் அங்கே அரிவைப்பு. அவருடைய உதவியாளன் செல்லப்பன் நாயர் என்னை கண்டதும் ஓடிவந்தான். நான் நேற்று மாலை அருந்திய பிரதமன் நினைவுக்கு வர “பிரதமன் மிச்சமுண்டாடே?” என்றேன்.
“உண்டு… சூடாக்கிக் கொண்டு வாறேன்.”
முந்தையநாள் பிரதமன் சற்றே நொதித்து, அதன்பின் சரியாகச் சூடாக்கப்பட்டால் ஓர் அற்புதமான மணம் வரும். ஆனால் புளித்திருக்கக் கூடாது. அதற்கு ஒரு படி முன்னரே நின்றுவிட்ட நொதிப்பு வேண்டும். நினைவில் என் இளமைப்பருவ சுவைகள் எழுந்து வந்தன. என் உள்ளம் இந்தக் காலையில் மலர்ந்திருக்கிறது. இளமைநினைவுகள் அந்த மலர்வை கொண்டுவருகின்றனவா, அந்த மலர்வால் இளமை நினைவுகள் எழுகின்றனவா?
அவன் கையில் கொண்டுவந்த தொன்னையிலிருந்து அந்த இனிய மணம் எழுந்தது. என்னை அறியாமலேயே நான் எழுந்து அதை வாங்கிவிட்டேன்.
அதை துளித்துளியாகக் குடித்தேன். ஒவ்வொரு சொட்டும் உள்ளே நறுமணமாகி மூக்கிற்குள் நிறைந்தது. சுவையில் நாக்கு திளைத்தது. முறுகிய தேங்காய்ப்பாலும் கருப்புவெல்லமும் பசுநெய்யும் பச்சரிசி அடையும் கலந்து உருவான சுவை, அவை சரிவர இணையும்போது தோன்றி அந்நான்குக்கும் அப்பால் நின்றிருக்கும் ஒன்று.
“நேத்து சத்யைவட்டம் சாப்பிட வருவீங்கன்னு நினைச்சேன்…” என்று அவன் சொன்னான். “ஆசான் நாலஞ்சு தடவை கேட்டுட்டார்.”
“இதோ இதுதான் சத்யவட்டத்திலேயே உத்துங்க சிகரம்… இந்த ருசியை அறியணுமானா நாலஞ்சு கல்யாணத்தை நின்னு நடத்தியிருக்கணும்.”
அவன் சிரித்து “உள்ளதாக்கும், ஆசான் இதை மட்டும்தான் குடிப்பார். இது அவருக்கு எடுத்துவைச்சது” என்றான்.
நான் மீண்டும் மணப்பந்தலுக்கு வந்தேன். மகாராஜா கீழிருந்து கிளம்புவதை அறிவித்து எரியம்பு எழுந்தது. மங்கல ஓசைகள் காற்றில் அலையலையாகக் கேட்டன. அவருடன் வந்தவர்கள் தூக்கிப்பிடித்திருந்த ஐந்துகொத்து எண்ணைப்பந்தங்கள் வரிசையாக மேலேறின. அவருடைய பல்லக்கு குலுங்கியபடி மேலே வருவதைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.
மணப்பந்தலின் முகப்பில் போடப்பட்டிருந்த திரை அகற்றப்பட்டது. மேலும் சில எண்ணைப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. செவ்வொளி பெருகிப் பெருகி புலரி என்னும் எண்ணத்தை உருவாக்கியது.
மேலே ஏறி வந்த சம்பிரதி கிருஷ்ணப்பையர் என்னிடம் ஓடிவந்து “இங்கே நிக்கிறேளா? மகாராஜாவுக்கு நல்ல காய்ச்சல் இருக்கு. காலம்பற எந்திரிக்கவே முடியல்லை. வராம இருக்கக்கூடாதேன்னு கூட்டிட்டு வாறோம்” என்றார்.
“நல்லா தூங்கினாரே?” என்றேன்.
”ஆமா, காலையிலே இங்கே எந்திரிச்சப்ப நல்லாத்தான் இருந்தார். நடந்தே கீழே போகலாம்னு சொன்னார். நான்தான் நேரமில்லைன்னு குதிரையிலே கூட்டிட்டுப் போனேன். ஆனா அங்க போனதுமே மறுபடி மூதேவி பிடிச்சுக்கிட்டா. உடனே கிளம்பி உச்சிமாகாளி கோயிலுக்குப் போகணும்னு சொன்னார். நான் கெஞ்சி காலிலே விழுந்து குளிக்க வைச்சேன். குளிச்சு வந்தா நடுக்கம், காய்ச்சல். சூனியமா இருக்கு சுவாமி, மகாசூனியமா இருக்கு, செத்திடலாம்னு தோணுதுன்னு அரற்றல். என்னத்தைச் செய்ய?”
“பாப்போம், இன்னும் கொஞ்ச நேரம்தானே?”
“சூக்ஷிக்கணும். இப்ப அவரு இருக்கிற நெலைமை சரியில்லை. அங்கே நாலஞ்சுவாட்டி உடைவாளை உருவிட்டார். ஆயுதங்கள் இருக்கிற இடத்துக்கே கொண்டு போகாம கூட்டி வந்தேன். செத்திருவேன், செத்திருவேன்னு சொல்லிக்கிட்டே இருக்கார்”
“அதுக்கு என்ன பண்ண? அவருதான் மங்கள ரக்ஷகர்த்தா. அரையிலே வாளில்லாம மகாராஜா இருக்க முடியுமா?”
“பக்கத்திலேயே ஆளிருக்கணும். அதைச் சொல்ல வந்தேன். மெய்கண்ணான ஒரு அப்பியாசி இருக்கணும். அவரு மனசிலே மூத்தவ கேறி முத்தி வாளை உருவிட்டாருன்னா உடனே அதை பிடிச்சு தடுக்கப்பட்டவன்…” என்றார் கிருஷ்ணப்பையர் “நான் பிராமணன், எனக்கு அது வசமில்லை”
“யாரு எங்க உக்காரணும்னு இருக்கு. அப்டி மாத்திர முடியாது” என்றேன்
“அப்ப?”
“நடக்கிறது நடக்கட்டும். மீனாக்ஷி நினைக்கிறது என்னமோ அதுதான் நடக்கும். நாம என்ன செய்ய?”
“அவ வெளையாட்டுச்சிறுக்கி… நாமதான் கவனமா இருக்கணும்” என்றார் கிருஷ்ணப்பையர்.
என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஊர்வலம் முற்றத்திற்கு வந்து நின்றது. பந்தக்காரர்களும் முழவும் கொம்பும் ஒலித்தவர்களும் விலக பல்லக்கு வந்து இறங்கியது. “நீச்சே! நீச்சே” என்று பல்லக்குக்காரன் ஆணைகளை இட்டான். பல்லக்கு தரையில் அமர்ந்தது.
மகாராஜா வெளியே இறங்கியபோது கால் தளர்ந்து விழப்போனார். கிருஷ்ணப்பையர் ஓடிப்போய் பிடித்துக்கொண்டார். பின்னர் பிடித்தது தெரியாமல் மகாராஜாவின் பின்னால் நின்றார். மகாராஜா கைகூப்பியபடி நடந்தபோது எக்கணமும் மீண்டும் விழப்போகிறவர் போலிருந்தார். கால்களும் கைகளும் குளிரில் என நடுங்கின. தோள்கள் ஒடுங்கியிருந்தன. கண்களுக்குக் கீழே ஆழ்ந்த கருமையும் வீக்கமும் தெரிந்தது. முகம் வெளுத்து உதடுகள் விரைத்திருந்தன.
“மகாராஜா நல்ல நிலைமையிலெ இல்லை” என்று என்னருகே நின்ற சண்முக சிவாச்சாரியார் சொன்னார்.
“அம்மை பாத்துக்கிடுவா” என்றேன்.
மகாராஜாவை மகாப்பிராமணனான ஆரியன் நம்பூதிரிப்பாடு வந்து எதிர்கொண்டு பந்தலுக்குள் அழைத்துச் சென்றார். மகாராஜா முதலில் கணபதியையும் முத்தாலம்மனையும் வணங்கிவிட்டு ஆதிகேசவன் முன் நீளவிழுந்து வணங்கினார். அதன்பின் மீனாட்சியையும் சுந்தரனையும் வணங்கிவிட்டு மூன்று பிராமணர்களும் நான்கு குடித்தலைவர்களும் இட்டுச்செல்ல தொய்ந்த உடலுடன் சென்று சிம்மாசனத்தில் அமர்ந்தார். நம்பூதிரிகள் அவருக்கு மணிமுடியை சூட்டி, நீர் தெளித்து மஞ்சளரிசி இட்டு வாழ்த்தினர்.
அதன்பின்னர் கொம்புகள் முழங்கின. அவைக்குள் மாடம்பிகள் வரத்தொடங்கினர். ஒவ்வொருவராக வந்து மகாராஜா முன் வாள்தொட்டுப் பணிந்து வணங்கி தங்கள் இருக்கைகளுக்குச் சென்றனர். குதிரைகளிலும் பல்லக்குகளிலும் அவர்கள் வந்துகொண்டே இருந்தனர். எட்டுவீட்டுப் பிள்ளைமார் வந்தனர். அதன்பின் குடித்தலைவர்கள் வந்தனர்.
மகாராஜாவால் கைகளை தூக்கவே முடியவில்லை. அவருடைய தோள்கள் நடுங்கியமையால் கைகளை தொடைக்குக் கீழே ஊன்றியிருந்தார். ஊன்றிய கைகளின் மூட்டுகள் நடுங்க தலைகுனிந்து அமர்ந்திருந்தார். தலையின் எடை கூடிக்கூடி வருவதுபோல குனிந்துகொண்டே சென்றார்.
அனைவரும் அவரைக் கவனித்தார்கள். ஆனால் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் அனைவருமே அவ்வாறு காய்ச்சல் வந்தவர்கள்போல, களைத்தவர்கள் போலத்தான் இருந்தனர். சட்டென்று ஜரை என்னும் முதுமையின் தெய்வம் வந்து அத்தனை பேரையும் தொட்டு கிழவர்களாக ஆக்கிவிட்டதுபோலத் தோன்றியது. நானும் அப்படித்தான் இருந்திருப்பேன்.
தளவாய் நாராயணக் குறுப்பும் திவான் நாகமையாவும் ஒரே பல்லக்கில் வந்திறங்கினர். அவர்கள் அத்தனை பிந்தியதை மற்றவர்கள் கவனித்தனர். முறைமை வணக்கம் செய்துகொண்டே அவர்கள் இருவரும் சென்று மகாராஜாவின் இருபக்கமும் நின்றனர். இருவர் முகங்களும் இறுக்கமாக இருந்தன. இருவரும் நான் அங்கே இருப்பதையே அறியாதவர்கள் போல நடித்தனர்.
கொம்புகளும் குழல்களும் முழங்கின. மணவாளனின் சொந்தக்காரர்கள் அவர்களின் கொட்டகைகளில் இருந்து ஊர்வலமாக வந்தனர். தவுலும் நாதஸ்வரமும் முழங்க, தாலமேந்திய தாசிகளும் கொடிப்பட்டங்கள் ஏந்திய அணிக்காரர்களும் தொடர்ந்து வர, நீண்ட நான்கு நீரைகளாக வந்து முற்றத்தை அடைந்தனர். ராயசம் விஜயரங்கய்யாவும் தளவாய் வெங்கப்ப நாயக்கரும் நாராயணப் பட்டாச்சாரியாரும் நடுவே கைகளைக் கூப்பியபடி வந்தனர்.
திவான் நாகமையாவும் தளவாய் நாராயணக் குறுப்பும் ஸ்தாணுலிங்கச் சிவாச்சாரியாரும் சென்று அவர்களை வாசலிலேயே வரவேற்று உள்ளே அழைத்து வந்து அமரச்செய்தனர். அவையினர் அவர்களுக்கு வாழ்த்தொலி எழுப்பினர்.
அவர்கள் அனைவரும் அமர்ந்ததும் வட்டப்பாறை அச்சு மூத்தது எழுந்து கைகூப்பி உரக்க “வேணும் சுபம்!” என்றார். ஓசைகள் அடங்கின. “எந்தெந்நால், இப்ப இங்கே அம்மைக்கும் அப்பனுக்கும் அவளுடே சகோதரனுக்கும் இளையவனுக்கும் தோழிக்கும் குட்டிக்கும் பூசைகள் நடக்கப்போகுது. புண்ணியபூஜைகள் முடிஞ்சதும் அம்மைக்க அணுக்கக் குடிகளான கன்யாகுமரி மீனவப் பட்டக்காரங்களுக்கும், கயத்தாறு கொண்டையாத் தேவர் வகையறாவுக்கும் மகாராஜா முறை செய்வார். அந்தச் சடங்குகள் முடிஞ்சதும் அம்மை ஆடை மாற்றி ஆபரணம் சூடி கைப்பிடிச்ச மணவாளன் கூட புகுந்தவீட்டுக்கு கிளம்புவா. அம்மைக்க ஆசீர்வாதம் வேணாட்டு மண்ணிலே எப்பவும் இருக்கும். அவளுக்க கனிவு இங்க மழையா பொழியும். அவளுக்க சிரிப்பு பூவா மலரும். அவளுக்க முலைப்பால் அன்னமா விளையும். ஓம் தத் சத்.”
அனைவரும் “ஜய! ஜய! ஜய!” என்ற வாழ்த்தொலியை எழுப்பினர். ஆனால் ஏதோ மந்திரத்தை உச்சரிப்பதுபோல அந்த பந்தல் ஓங்கார ஓசையையே எழுப்பியது.
[19]
பூஜைகள் நடந்துகொண்டிருந்தபோது நான் வெளியே சென்றேன். பூஜைகள் மிக விரிவாக, மிக நிதானமாகத்தான் நடக்கும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒருவகை பூஜை. அம்மைக்கும் அப்பனுக்கும் கணபதிக்கும் சைவாகம பூஜை. ஆதிகேசவனுக்கும் சாஸ்தாவுக்கும் மலைநாட்டு தாந்த்ரீக விதிப்படி பூஜை. முத்தாலம்மைக்கு காட்டுமுறைப்படி பலி பூஜை. அதன்பின் அரசரிலிருந்து குடிகள் வரை ஒவ்வொருவரும் வந்து வணங்கி அம்மை அருள் பெற்று சென்று அமரவேண்டும்.
வெளியே விடிந்துகொண்டிருந்தது. முற்றத்தின் செம்மண் துலக்கம் கொண்டது. கூழாங்கற்கள் இளங்கன்னி முகத்தின் முகப்பருக்கள்போல முழுத்தெழுந்தன. நான் நிறைவாக, உல்லாசமாக உணர்ந்தேன். என் மனதில் தேவிஸ்துதியின் சொற்களை அறிந்தேன். தேவி, ஏழுலகங்களிலும் சக்தி வடிவாக அமைந்தவளே!
வெளியே மணப்பந்தலை ஒட்டிய உபவிதானத்தின் கீழே நீண்ட தாடியும் சடைமுடிக் கொண்டையுமாக நீலகண்ட சிவாச்சாரியார் நின்றிருந்தார். “அம்மைக்கு ஆபரணங்களெல்லாம் ஒருக்கமா?” என்று கேட்டேன்.
“ஒருக்கி வைச்சுக்கிட்டு நின்னுட்டிருக்கேன்” என்று அவர் சொன்னார். “எந்தெந்த நகைகளைப் போடணும்னு ஒரு பேச்சு நேத்து இங்க ஓடிச்சு. அவங்க கொண்டுவந்த நகைகளை அம்மைக்குப் போடணுமான்னு குழப்பம். பாண்டிநாட்டு முறைன்னாக்க மணவாளன் வீட்டு நகைகளையும் போடலாம். இங்க நம்ம வேணாட்டு முறைன்னா பொண்ணுவீட்டு நகை மட்டும்தான் போடணும். பொண்ணுவீட்டு சீரு என்னான்னு கணக்கு போடுற நேரம்லா? கடைசியிலே பேசிப்பேசி ஒரு உடன்பாடு வந்தாச்சு. மணவாளன் கொண்டுவந்த நகைகளிலே நாலஞ்சு வளையலையும் ஒரு மாலையையும் போட்டுக்கிடட்டும். மிச்சமெல்லாம் வேணாட்டு நகை. பொண்ணு சுமக்க முடியாம நகை சுமந்துகிட்டுத்தான் போகணும். அதாக்கும் முறை.”
“ஆமாம், அதான் நம்ம ஊரு வளமை” என்றேன். சிரித்தபடி “நகையாலே கழுத்துவலி வரணும்னு பாட்டிலே இருக்கே?”
”நம்ம ஊருன்னு சொல்லுதேன். ஆனா நம்ம மூதாதை மருதையிலே இருந்து வந்தவங்க. நான் பறளியாத்துத் தண்ணிகுடிச்சு வளந்தவன்” என்று அவர் சிரித்தார். “பறளியும் வைகையும் ஒண்ணாகுத ஒரு உடம்பு இது. அம்மைக்க அருள்”
நான் மணப்பந்தலின் பின்பக்கம் சென்று மலைச்சரிவில் கீழிறங்கினேன். கீழே சாலையில் வேணாட்டுச் சீர்வரிசையாக அளிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்ட நூற்றெட்டு வண்டிகள் நிரையாக நின்றிருந்தன. அத்தனை வண்டிகளும் புதிதாக வண்ணம் பூசப்பட்ட மூங்கில்பாய்களால் செய்யப்பட்ட கூண்டு கொண்டிருந்தன. எல்லா காளைகளுமே நல்ல வெண்ணிறமான உடலும் பெரிய அரக்குநிற கொம்பும் கொண்டவை. அவற்றுக்குள் அரிசி, பருப்பு, வெல்லம், நெய் என ஒரு பெண் வாழ்நாள் முழுக்க குடும்பம் நடத்த தேவையான அடுக்களைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
அனைத்தையும் கிருஷ்ணன்கோயில் கொட்டாரம் ராயசம் சாமிநாத பிள்ளை கோட்டாறு கம்போளத்தில் இருந்தும் மணக்குடி துறைமுகத்தில் இருந்தும் தேர்வு செய்து நான்கு நாட்கள் முன்னரே வண்டியில் ஏற்றினார். சீர்வரிசைகளில் அடுக்களைக் காரியங்களுக்கு அவர் பொறுப்பு. அவரால் மீனாக்ஷி திருமணத்திற்கு வரவே முடியவில்லை. வாழைத்தார்களும் காய்கறிகளும் பழங்களும் மட்டும் அன்று காலையில்தான் வடசேரிச் சந்தையில் இருந்து வந்தன.
கோலத்துநாட்டு வீராளிப் பட்டு, காஞ்சிபுரம் சரிகைப்பட்டு, சீமைக்காப்பிரி நாட்டு பருத்தி துணிகள், சோனகநாட்டு பாலாடைத்துணிகள் பலவகை துணிகள். ஒரு வகையிலும் ஒன்று விடுபட்டுவிடக் கூடாது. கூடவே உள்ளூரில் நெசவு செய்யப்பட்ட ஆடைகள். புளியிலைக்கரை, வேப்பிலைக்கரை, முறுக்குக்கரை வேட்டிகள். மாம்பழச் சரிகைக்கரை, யானைச்சரிகைக்கரை, மயில்சரிகைக்கரை நேரியதுகள். செம்பு, பித்தளை, ஓடு என எல்லா வகை உலோகங்களிலும் அடுக்களைப் பாத்திரங்கள். பலவகையான குத்துவிளக்குகள், அடுக்குநிலை விளக்குகள், தூக்கு விளக்குகள் என ஒரு பெரிய வரிசை. பித்தளையில் கோளாம்பிகள், எண்ணைதூக்கிகள், தூண்டிக்கலங்கள், கெண்டிகள், அகவிகள், முகவிகள், கால்போணிகள், உழக்குப்போணிகள்,குத்துப்போணிகள், வங்கங்கள் என எல்லாவகையிலும் பாத்திரங்கள்.
சிற்றகப்பைகள், கோரகப்பைகள், கண்ணகப்பைகள், மரத்தவிகள், கோருவைகள், அரிப்பைகள், சல்லரிகள், சட்டுவங்கள், மத்துவகள், வரிச்சைகள் என ஒரு வரிசை. புதிய மண்கலங்களே நூற்றுக்கும் மேலே. வண்ணப்பாய்கள், சுருட்டுப்பாய்கள், பனைநார்ப்பெட்டிகள், பிரம்புக்கூடைகள். முருக்கு மென்மரத்தால் செய்யப்பட்டு உள்ளே உள்ளே என வைக்கும் அடுக்குபெட்டிகள், துணிவைக்கும் மரப்பெட்டிகள், பித்தளைப் பூணிட்ட கால்பெட்டிகள், உள்ளே மெத்தை வைத்த நகைப்பெட்டிகள், மாக்கல்லில் குடைந்த பெட்டிகள், பளிங்கில் குடைந்த பெட்டிகள், அரக்கில் வார்த்த பெட்டிகள் என எல்லா வகையிலும் பெட்டிகளும் பேழைகளும்.
என்னென்ன தேவை என தேடித்தேடி சேர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் பொறுப்பு. சம்பிரதி கிட்டன்குட்டி நாயர் சின்னச் சின்னப் பொருட்களுக்குப் பொறுப்பு. துருவக்கட்டைகள், அரிவாள்மணைகள், விதவிதமான குடுவைகள், கோருவைகள். நீறும் மாவும் வைக்கும் பூசணி மற்றும் சுரைக்காய் குடுவைகள். பல்வேறு அளவுகளில் சீனத்து ஜாடிகள், சீமைநாட்டு கண்ணாடிக் குடுவைகள். யானைத்தந்தத்தில் செதுக்கப்பட்ட சிமிழ்கள், சீப்புகள், நகைவைக்கும் கையடக்கப் பெட்டிகள். மான்கொம்பில் செதுக்கப்பட்ட சீப்புகள் தனியாக. அரக்கிலும் கெம்பிலும் செய்யப்பட்ட குங்குமச் சிமிழ்கள், நகைச்சிமிழ்கள்.
எருமைக்கொம்புகளில் செதுக்கப்பட்டு தேனால் ஆனவை போல ஒளி ஊடுருவும் கோப்பைகள். எருமைக்கொம்பை பனையோலை தடிமனுக்குச் செதுக்கி அமைத்த விசிறிகள். சந்தன மிதியடிகள், கொம்பு மிதியடிகள், யானைத்தந்த மிதியடிகள். அரக்கில் வடித்த மிதியடிகள், அரக்கில் சிற்பச்செதுக்குகளுடன் செய்யப்பட்ட மரப்பொருட்கள், சந்தனக் கடைசலில் செய்யப்பட்ட மரப்பொருட்கள். பல வகைகளில் ஆறன்முளைக் கண்ணாடிகள். முத்துச்சிப்பி மூடியாகக் கொண்ட சந்தனப்பேழைகள். கடலாமையோட்டால் மூடியிட்ட பெரிய ஆமாடப்பெட்டிகள். எருமைக்கொம்பில் கடைந்த உடைவாளுறைகள், காளைக்கொம்பில் கடைந்த குத்துவாள் உறைகள்.
வேணாட்டுக்குரிய ஆயுர்வேத மருந்துகள் ஒரு வண்டி நிறைய இருந்தன. குருமிளகு, கிராம்பு, சுக்கு, ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்கள். பலவகையான மருந்து எண்ணைகள், லேபனங்கள், லேகியங்கள், சூரணங்கள், அரிஷ்டங்கள். எல்லா உடல்நிலைக் குறைவுக்கும் உரிய மருந்துகள். அவைபோக வாற்றுவடிகள் என்னும் உள்ளூர் பழம் வடித்த மதுவகைகள்.பலாக்காயின் சுளைகளைக் கொண்டு செய்யப்பட்ட மதுவகையான ராஜமதுரம். மாம்பழச்சாறில் வாற்றப்பட்ட மதுவான சுவர்ணம். சீமை மதுப்புட்டிகளே ஐநூறு. மலைத்தேன் நிறைக்கப்பட்ட பானைகள் நூறு. அவற்றில் நெல்லிக்காய் ஊறிய மலைத்தேன், ஜாதிக்காய் ஊறிய மலைத்தேன் என பலவகை. சிறுதேன் புட்டிகள் நூறு.
“ஒண்ணும் குறையக்கூடாது. கூடட்டும், குறைஞ்சிரப்பிடாது. இதில்லாம ஒருத்தி எப்டி குடும்பம் நடத்துவான்னு ஒரு சொல் வந்திரப்பிடாது” என்று மகாராஜா பலமுறை சொன்னார்.
ஒவ்வொருவரும் பட்டியலிட்டுக் கொண்டு தேடினார்கள். கடைசிநாளில் எட்டு வகை கிழங்குகளில் நனகிழங்கு இல்லை என்று கண்டுகொண்டு அதற்காக சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். சாதிக்காய், சாம்பிர
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


