Jeyamohan's Blog, page 1000
April 19, 2021
முகில்- கடிதம்-8
அன்புள்ள ஜெ,
ஒரு கற்பனாவாதக் கதை என நான் அந்த முகில் இந்த முகில் நாவலை நினைக்கவில்லை. ஏனென்றால் அது ஆழமாக யதார்த்தத்தில் வேரூன்றியிருக்கிறது. குறிப்பாக ஸ்ரீபாலா அவருடைய அம்மாவைப்பற்றிச் சொல்லும் இடம். அம்மா கோதாவரிக்கரையில் வாழ்பவள். மறுகரை தெரியாத ஆற்றின் கரை. மகள் சென்னையில் ஒரு பக்கெட் தண்ணீரில் குளிக்கிறாள். அம்மா அங்கே குடம் குடமாக இறைத்து ஊற்றிக்கொள்கிறாள். ஆனால் இரண்டுமே ஒரே அழுக்கை கழுவிக்கொள்வதற்காகத்தான்.
ஸ்ரீபாலா ஆசைப்படுவதெல்லாம் மீண்டும் கோதாவரிக்கரைக்குச் செல்லத்தான். அங்கே நீந்தி குளிக்கும் இளமைக்குத்தான். அது நிகழவே இல்லை. முனிப்பள்ளிக்குச் சென்ற நாலாம் நாளே அம்மா தண்ணீர் இல்லாத பெல்காமுக்கு அனுப்பிவிட்டாள். அவ்வளவுதான் அவள் வாழ்க்கை. இதுதான் யதார்த்தம். இதைச் சொல்லுவதுதான் இலக்கியம். நிறையச் சொல்லிச் சொல்லி செறிவாக வைத்திருப்பதுதான் நல்ல இலக்கியம்.
செந்தில் முருகேசன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
அந்த முகில் இந்த முகிலை வாசித்துவிட்டு தினமும் அடுத்து எப்படி கதை தொடரும் என்று பற்பல சாத்தியங்களை மனதில் நிகழ்த்திப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
ராமாராவ் என்பவரை பற்றி நீங்கள் எழுதிய கதை மட்டும் அல்ல இது, நீங்களே அவராக இருந்து தான் அதை எழுதியிருக்கிறீர்கள். ஹம்பியின் இடிபாடுகளுக்குள் விழுந்து நீளும் நிழல்களில் கருப்பு வெள்ளை சினிமாவை பார்க்கும் ராமாராவ் நீங்கள் தான். இந்த 13 நாளும் வேறு எதையும் நினைக்க முடியாமல் அந்த முகில்களிலேயே மிதந்து கொண்டிருந்தது மனம்
சினிமா படபபிடிப்பென்னும் மாபெரும் வலையை, அதன் நுட்பங்களை இந்த கதையில் தெரிந்துகொண்டேன். பேபி வாங்கிக் கொள்ளுதல் பற்றி தெரிந்து கொண்ட பின்னர் அதற்கெனவே சில பழைய படங்கள் பார்த்தேன். மெல்லி இரானியை குறித்து இணையத்தில் தேடி வாசித்தேன்
நீங்கள் சினிமாவில் இருப்பதால் தான் இப்படி படப்பிடிப்பு குறித்த விஷயங்களை விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள் என்றில்லை, ஏனெனில் இதற்கு முன்பும் செல்போன் டவர் அமைப்பதை,தொலைபேசி கேபிள்களை, தென்னை ஓலை பின்னுவதை என்று பலவற்றை குறித்து விளக்கமாக பல கதைகளில் எழுதியிருக்கிறீர்கள். இப்படி கதாபாத்திரங்களாகவே இருந்து வாசிப்பவர்கள் மறக்க முடியாத கதைகளை எழுதுவது, தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பதேல்லாம் அசாத்தியம் உண்மையில் நீங்கள் கதை எழுதுகிறீர்கள் என்று சொல்வதைக் காட்டிலும் கதைகள் உங்கள் மூலமாக தங்களை நிகழ்த்திக் கொள்கின்றன போலும்.
நான்கு காதல்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது, என் டி ஆரை பாவா என்றழைக்கும் பானுமதி– என் டி ஆரின் காதல் (இப்படியான ஒன்றை தமிழில் சிவாஜி பத்மினிக்கும் சொல்ல கேட்டிருக்கிறேன்), மோட்டூரி ராமராவ்- ஸ்ரீபாலாவின் காதல், விஜயேஸ்வரி நல்லமராஜூ காதல், ராமாராவ் மீதான ஜானகியின் காதல்.
ராமராவின் உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது, எந்த பித்தில் அவன் சிக்கி இருக்கிறான் என்பதையெல்லாம் அறிந்துகொள்ள முயலாமல் அவனை அத்தனை வருஷம் பாடுபட்டு மீட்டெடுத்த ஜானகியின் காதலும் எனக்கு இவற்றில் மிக முக்கியமானதாக தெரிந்தது. இக்கதையை ஜானகியின் கோணத்திலிருந்து, ஸ்ரீபாலாவின் கோணத்திலிருந்து, ராமராவின் தாய்மாமா கோணத்திலிருந்து எல்லாம் விரிவாக நானே மனதில் நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.
பல வண்ணங்களில் பெயிண்ட் சிதறிக்கிடந்த, ஆனால் இருளில் வண்ணமே தெரியாத அந்த சைக்கிளில், கருப்பும் வெள்ளையுமாக நிலவின் புலத்தில் ஹம்பியிலிருந்து ராஜமுந்திரி வரை பாட்டு பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் அவர்கள் இருவரும் சென்ற அந்த பயணம், ஒருவரை ஒருவர் சார்ந்து கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு, எச்சில் வழிய மடியில் படுத்து தூங்கி, ,காற்றில் தலைமுடி முகத்தில் பொழிய, அது ஒரு முழு வாழ்நாளுக்கான பயணம்.
ராமராவ் ஸ்ரீ பாலாவுடன் வாழவில்லை என்றாலும் அந்த பயணமே அவர்களின் வாழ்வு, அதைத்தான் இருவரும் அத்தனை முறை கருப்பு வெள்ளை திரைப்படத்தில் மீள மீள பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வாசித்தவர்கள் அவரவர் இறந்த காலத்தை , கடைசி வரை சொல்லாமல் போனவற்றை குறித்த ஏக்கங்களை எண்ணி எண்ணி ஏங்க வைத்து, பலரும் பலவற்றை மனதில் அசைபோட வைத்தகதை இது.
என்னுடன் ஆய்வு மாணவியாக இருந்த தோழி ஒருத்தி கருத்தரங்கிற்கு புது தில்லி செல்கையில் ரயிலில் சந்தித்த ராணுவ வீரரை காதலித்தாள், அவர்களின் கடைசி சந்திப்பில் இருவரும் ஒரு சாலை விபத்தில் சிக்கினர். அப்போது அவர் அவளை கவனித்துக்கொண்டதே அவர்களின் முழுவாழ்வுக்குமான அனுபவம் ஆகிவிட்டிருந்தது. அந்த ஒரே நாள் தான் அவர்களின் காதல் வாழ்வு.
நானும் அவளும் கோவையில் அவர்கள் திருமணம் முடிந்து தங்கவிருந்த ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்கு ஒரு முறை சென்று வீடுகள் எப்படி இருக்கும் என்று கூட பார்த்திருந்தோம்
ஜாதி மொழி என பல காரணங்களால் அந்த காதல் கைகூடாமல் அவளுக்கு வேறு ஒருவருடன் கட்டாயத் திருமணம் நடந்தது, காதலனோ அமிர்தசரஸ் பொற்கோவில் பாதுகாப்பு பணிக்கு விருப்ப மாறுதல் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
இத்தனை வருடங்களாக எந்த தொடர்பும் இல்லை. சென்ற மார்ச் மாதம் நோய் தொற்று குறித்து கவலையுற்ற அந்த காதலர் இவள் தொடர்பு எண்ணை எப்படியோ கண்டுபிடித்து அழைத்தபோது அந்த ஹலோவில் அவர் குரலை இவளால் அடையாளம் காண முடிந்திருக்கிறது.
இவளுக்கோ தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள், அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. ஆனாலும் ஒரு வாரத்துக்கு மேல் அந்த தொடர்பை அவள் தொடர விரும்பவில்லை அப்படியே முறித்துக் கொண்டாள்.
முகிலை வாசித்த பின்னர் இறந்த காலத்தில் உண்டான பள்ளங்களை நிகழ்காலத்தில் நிரப்ப முடியாது, நிரப்ப வேண்டாம் என்றுதான் அவளும் நினைத்திருக்க கூடும் என்று தோன்றுகிறது.
ஜானகியுடன் ராமராவின் புறவாழ்வைபோல இவளின் இப்போதைய குடும்ப வாழ்வு. இவளும் அவருமாக அந்த ராணுவ குடியிருப்பில், அந்த விபத்து நடந்த நாளின் நினைவுகளில் வேறு ஒரு கனவு வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பார்களாயிருக்கும். அந்த விபத்து இந்தியா கேட்டின் முன்பு நிகழ்ந்திருக்கிறது வருடா வருடம் அவர் அதே இடத்தை சென்று பார்த்துக் கொண்டிருக்கிறார்
ராமராவின் பித்தை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. என் தோழியும் அதே நிலையில் இருந்தாள் சாலையில் தனக்குத் தானே பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தவளை பலமுறை உறவினர்கள் பார்த்து வீட்டில் சேர்ந்திருக்கிறார்கள்
அவர்களிருவரும் கண்ட கள்ளமற்ற முதல் பேரின்பம் அது.. முதற்காதலுக்கு பிறகு காதல் இல்லை தான். முதல் காதலின் பொருட்டு ஒருவனோ ஒருத்தியோ அணு அணுவாக அழிவார்கள் என்றால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான், வாழ்க்கையை தூசெனெ உதற செய்யும் ஒன்றை அடைந்தவர்கள் ராமராவும், ஸ்ரீ பாலாவும், என் தோழியும், அந்த ராணுவ வீரரும்.
ஸ்ரீபாலாவுக்கும் அவருக்குமான அந்த கடைசி சந்திப்பு அப்படி முடிந்ததுதான் நல்லதென்று தோன்றியது. கருப்பு வெள்ளை திரைப்படங்களை போல காலத்திற்கும் அழியாத பழைய நினைவுகள் அவை. 13 நாட்களும் கதையுடன் வந்த முகில்களும் அழகு
சில வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 14 அன்று பொள்ளாச்சியில் இருந்து திருச்சூருக்கு சென்றுகொன்டிருந்தோம் அப்போதுதான் இளையவன் தருண் புகைப்பட கலையை கற்றுக் கொண்டிருந்தான். அன்று வானில் இதய வடிவில் ஒரு முகிலை படம் பிடித்தான் அந்த புகைப்படம் அன்று காதலர் தினமாகையால் அவனுக்கு பெரும் மகிழ்வை தந்தது. அந்தப் படம் இப்போதும் இருக்கிறது, ஆனால் அந்த முகில் அப்போதே கலைந்திருக்கும்,அல்லது எங்கோ மழையாக கூட பொழிந்திருக்கலாம் எவரின் தாகத்தையோ தணித்திருக்கலாம், எவரையோ குளிர் வித்திருக்கலாம், சில விதைகளை முளைக்க வைத்திருக்கலாம், ஆனால் அந்த புகைப்படத்தை தவிர வேறெங்கும் அந்த முகில் இல்லை அப்படித்தான் அந்த காதலும் அது அவர்களுக்குள்ளே மட்டும் இருக்கிறது,
125 கதைகளையும் தாண்டி மேலே சென்று மிதந்து கொண்டிருக்கிறது முகில்.
அன்புடன்
லோகமாதேவி
அன்புள்ள ஜெ
அந்த முகில் இந்த முகில் எனக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. அதற்கு காரணம் அந்த கறுப்புவெள்ளை உலகம். அப்படி ஓர் உலகம் எனக்கும் இருந்தது. அப்போது கறுப்புவெள்ளை சினிமாக்களாக பார்த்து தள்ளினோம். நான் சென்னையில் வேலைபார்த்த காலம். பிரிவு. அன்றெல்லாம் காதல் என்றாலே 99 சதவீதம் பிரிவுதான். அதன்பின்னர் திருச்சிக்கு வந்துவிட்டேன்.இன்னொரு வாழ்க்கை.
இந்த வாழ்க்கை வந்தபோதே சினிமாவில் கலர் வந்துவிட்டது. கலர்ஃபுல் வாழ்க்கைதான். ஆனால் அந்த கறுப்புவெள்ளை ஒரு நிலாவெளிச்சம் மாதிரி கனவாக இன்னும் இருக்கிறது. இப்போதுதான் இன்னும் அழுத்தமாக இருக்கிறது. இப்போது தனிமையாகிவிட்டேன். பிள்ளைகள் எல்லாம் ஆகிவிட்டார்கள். பேரப்பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். நான் நினைக்கும் யாருமே இப்போது உயிருடன் இல்லை. வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் என்ன என்று பார்க்கும் வயசு. கொரோனா வாசல் வரை வந்துவிட்டது. எல்லாம் முடிந்துபோகும்.
ஆனால் நினைக்கும்போது அந்த நிலவொளிக்காலம் ஒரு பெரிய கொடுப்பினை என்று தோன்றுகிறது. இந்நாவல் வழியாக அந்த கனவுக்காலத்திலே வாழ்ந்தேன். என்னைப்போன்ற ஒரு வயதான பெண்ணுக்கு இந்த கனவு அளிக்கும் ஒரு பெரிய வாழ்க்கை வரம் போல இருக்கிறது. ஏறத்தாழ இந்த வரி கொல்லப்படுவதில்லை நாவலில் வரும். மைத்ரேயி தேவி எழுதிய நாவல். வயதானபின் நினைவில் வரும் காதல்போல அழகான ஒரு கனவு கிடையாது
ஜி.எஸ்
தஞ்சை வெண்முரசு கூடுகை – சனி மாலை
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் வெண்முரசு நாவல்களை தொடர் கலந்துரையாடலாக ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை அன்று நடத்துகிறோம். வெண்முரசு கூடல் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அன்புடன் அழைக்கிறோம்.
ஞாயிறு லாக்டவுன் என்பதால் இரண்டாம் கலந்துரையாடல் கூட்டம் 24/4/21 சனிக்கிழமை அன்று மாலை 5:00க்கு தொடங்குகிறது.
நாவல் “முதற்கனல்”
பகுதி ஆறு “தீச்சாரல்” இருந்து கடைசி பகுதி பத்து “வாழிருள்” வரை.
இடம்:
வீரா எசன்ஸ் அக்குபங்ச்சர் சிகிச்சை மையம்,
MIG குடியிருப்பு, புதுக்கோட்டை சாலை
(மெர்ரி பிரௌன் அருகில்)
ஆலமரத்தடி பேருந்து நிறுத்தம், தஞ்சாவூர்
நாள் நேரம்: 24/4/21 மாலை 5:00 முதல் 7:30 வரை
வீ. கலியபெருமாள்
சு. பார்த்திபன்
தொடர்பிற்கு:
94435 49113
90037 00123
77084 85026
தஞ்சை வெண்முரசு விவாதக்கூடுகை
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் வெண்முரசு நாவல்களை தொடர் கலந்துரையாடலாக ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை அன்று நடத்துகிறோம். வெண்முரசு கூடல் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அன்புடன் அழைக்கிறோம்.
இரண்டாம் கலந்துரையாடல் கூட்டம் 25/4/21 ஞாயிறு அன்று மாலை 5.30க்கு தொடங்குகிறது.
நாவல் “முதற்கனல்”
பகுதி ஆறு “தீச்சாரல்” இருந்து கடைசி பகுதி பத்து “வாழிருள்” வரை.
இடம்:
வீரா எசன்ஸ் அக்குபங்ச்சர் சிகிச்சை மையம்,
MIG குடியிருப்பு, புதுக்கோட்டை சாலை
(மெர்ரி பிரௌன் அருகில்)
ஆலமரத்தடி பேருந்து நிறுத்தம், தஞ்சாவூர்
நாள் நேரம்: 25/4/21 மாலை 5.30 முதல் 8.00 வரை
வீ. கலியபெருமாள்
சு. பார்த்திபன்
தொடர்பிற்கு:
94435 49113
90037 00123
77084 85026
விஷ்ணுபுரம் -கடிதம்
நலமா?
இந்த ஊரடங்கில் விஷ்ணுபுரம் நாவல் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
வாசிப்பில் பிரம்மிப்பும், பல மனத்திரப்புகளும் கிடைத்தது. அந்த அனுபவத்தை சொற்களில் விளக்க கடினம்தான். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
இந்த கடிதத்தை எழுத நினைத்த போது, இன்னொரு மனம் சில கேள்விகள் எழுப்பியது. “புத்தகம் படித்த கர்வத்தால் இந்த கடிதமா? நாவல் கூறும் அனைத்து பொருளையும் விளங்கிக்கொண்டது போல் கடிதம் எழுத எனக்கு தகுதி இருக்கிறதா?”. இப்படி ஒரு மனப்பழக்கத்தை இந்த நாவல் கற்றுத்தந்தது. முக்கியமாக கௌஸ்தூப பகுதி. மனம் கேள்விகள் எழுப்பியபடியே இருக்கிறது.
இந்த நாவலில் நான் அடைந்த பிரமிப்புகளை பட்டியலிட ஒரு முயற்சி. சில மட்டும் தொகுத்துள்ளேன்.
விஷ்ணுபுரத்தின் பிரம்மாண்டம். கற்பனை நகரம் எனினும், வர்ணனைகளால் நேரில் சென்று பார்த்தது போல சோனா நதியும், விண்ணை முட்டும் கோபுரங்களும், புத்த பிட்சுவின் வரைபடங்களும் மனதிற்குள் பதிந்து விட்டது.சங்க கால வழக்குகள். உப்பு வணிகர்கள் மூலம் செய்தி கேட்பது, யுவன மது, பாணர்கள், மலைவாழ் மக்களின் குழுக்கள் (குலங்கள்). இந்த வழக்குகளை வேல்பாரி நாவலின் மூலம் நான் தெரிந்து கொண்டவை. இதை நுண்ணிய விவரணைகளாக நாவலில் அங்கங்கு கூறும்போது தங்களின் அறிவின் ஆழம் பிரமிக்க வைக்கிறது.நாவலின் கட்டமைப்பு. பகுதிகளை காலகட்டங்களில் முன்னும் பின்னும் அமைத்தது. கௌஸ்துபமும் மணிமுடியும் வாசிக்கும் போது ஸ்ரீபாதத்தில் பல பகுதிகளை மறுவாசிப்பு செய்தேன். புள்ளிகளை இணைக்கும் போது கிடைத்த தெளிவு. ஏற்கனவே அறிமுகமானவர் பற்றிய செய்திகள் தந்த மன எக்களிப்பு.தருக்கம். பவதத்தரின் அஜிதரின் சம்பாஷணைகள். நூறு சதம் புரிந்தது என்று சொல்ல முடியாது. அனால் அவ்விவாதங்களின் சாரத்தை அனுமானிக்க முடிந்தது. இந்த தருக்கத்தை தங்கள் மனதில் பல வருடங்கள் நிகழ்த்தி அதற்கு மொழி வடிவம் கொடுத்துள்ளீர்கள் என்று நம்புகிறேன். அதை எளிமையாக்க எடுத்துக்கொண்ட உதாரணங்கள் (விறகு/நெருப்பு, நீரின் பிரதிபலிப்பு, etc.). அந்த பேருழைப்பிற்கு எனது நன்றிகள்.போகமண்டபத்தில் பிராமணர்கள் உண்ணும் காட்சி. அனுபவத்திற்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும், அந்த கற்பனைக்கு பல தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக தோன்றுகிறது.இந்த நாவல் பல முறை வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூல். ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய அனுபவங்களும், புதிய தகவல்களும் கிடைப்பது உறுதி.
நாவலில் வரும் ஒரு வாக்கியம் மனதை நிறைத்தது. “வாழ்கிறவர்கள் வாழ்க்கையை அறிந்ததில்லை. வாழ்க்கையை அறிந்தவர்கள் வாழ்ந்ததில்லை“.
உங்களின் உழைப்பு நிகரற்றது. தமிழுக்கு நீங்கள் அளித்த கொடை எண்ணிலடங்காது. என்போன்ற வாசகர்கள் வாழ்நாள் முழுதும் படித்து நெகிழ பல படைப்புகள் படைத்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றி,
பாலா
கே.கே.பிள்ளை- கடிதங்கள்
வணக்கம் ஜெ
கே.கே.பிள்ளையின் புகைப்படத்தையே நான் இப்போதுதான் பார்க்கிறேன். இதற்குமுன் இணையத்தில் தேடி கிடைக்கவில்லை. தமிழக வரலாறு நூல் ஒரு முழுமையான வாசிப்புக்குரிய தொடக்கக்கட்ட நூலாகும். அவருடைய பல நூல்கள் தற்போது அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை.
சங்ககாலம் முதல் இருபதாம் நூற்றாண்டு காலம் வரையிலான தமிழகத்தின் சுருக்கமான வரலாற்றை சொல்கிறார் பிள்ளை. குறிப்பிட்ட சில விஷயங்களைப் பற்றிய செய்திகள் முக்கியமானவை. குறிப்பாக ராஜராஜ சோழனின் ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி’, வலங்கை இடங்கை விவகாரம், தேவரடியார்கள் போன்றவை. காந்தளூர்ச் சாலை விஷயத்தில் பொதுவாகக் கருதப்படும் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஊர் என்பதையும், ‘கலமறுத்து’ என்பதை ‘கல்விச்சாலையை அழித்து’ அல்லது ‘கப்பற்படையை அழித்து’ என்ற பொருளில் ராஜராஜனின் செயல்கள் விளக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும் கருநந்தடக்கனின் செப்பேட்டின் அடிப்படையில் அச்சாலை ஒரு கல்விச்சாலையாக இருக்கலாம் என்றும் ஊகிக்கிறார்.
மேலும் இவ்விவகாரத்தை ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் வேறு ஒரு கோணத்தில் ஆராய்கிறார். ‘கலமறுத்து’ என்பதனை ‘வில்லங்கத்தை தீர்த்து வைத்து’ என்ற பொருளிலும், காந்தளூர் என்பது மலபார் பகுதியிலுள்ள ஊர் என்பதனையும் விளக்குகிறார்.
பிள்ளை, வலங்கை இடங்கை பிரிவினரின் தோற்றம் பற்றி நிலவிய புராணக் கதைகளை விவரிக்கிறார். வரலாறை சோர்வளிக்கும் விதமாக சம்பவங்களின் வரிசையாக மட்டும் சொல்லிச்செல்லாமல், ஆய்வு நோக்கில் விவரிப்பது இந்நூலின் சிறப்பாகும்.
விவேக் ராஜ்
தமிழ் இணைய நூலகம்- கே கே பிள்ளை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி- இராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
கே.கே.பிள்ளை பற்றிய அறிமுகமும் நூல்மதிப்புரையும் சிறப்பாக இருந்தது. நூலைச் சுருக்கி அளிக்கவில்லை. ஆனால் அந்நூல் எழுதப்பட்ட பின்புலம், அந்நூலாசிரியரின் தனித்தகுதி மற்றும் ஆய்வுமுறை, அந்நூலின் உள்ளடக்கத்தின் சிறப்புக்கூறுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி முழுமையான மதிப்புரையாக எழுதியிருந்தீர்கள். ஒரு நூல்மதிப்புரை எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கான முதன்மை உதாரணம். கே.கே.பிள்ளை மக்கள் வரலாற்றையும் கலந்துகொள்கிறார், வரலாற்றின் சிறுதகவல்களையும் சேர்த்து எழுதுகிறார். பண்பாட்டின்மேல் ஆர்வமூட்டும் கேள்விகளை முன்வைக்கிறார். பண்பாட்டு புதிர்களைச் சுட்டிக்காட்டுகிறார்—இவ்வளவும் சுருக்கமான உதாரணங்கள் வழியாக அம்மதிப்புரையில் சொல்லப்பட்டுள்ளன.
நன்றி
ஆர், கிருஷ்ணசாமி
யானை டாக்டர்- கடிதங்கள்
இன்று காலை(29 may 2020) எனது கடையின் அருகிலிருந்து ஒருவர் மலையாள மனோரமா வாசித்துகொண்டிருந்தார் .அதில் யானைக்கு ஒருவர் உணவூட்டும் படத்தை கண்டு அவரிடம் அது குறித்து கேட்டேன். “கோட்டூர் ஆன டாக்டர், ரிட்டேர் ஆகி போகுந்து, ஆனயும், அவரும் தம்பில் நடந்த சம்பாஷன, ஆன டாக்டரோடு போவண்டாம் எந்நு பறஞ்சு” என்றார் .
பின்னர் மாலையில் அந்த நாளிதழைப் வாங்கி நண்பரிடம் சொல்லி படித்து காட்ட சொன்னேன் .
ஈஸ்வரன் எனும் டாக்டர் கோட்டூரில் உள்ள முகாமில் யானைகளை பராமரித்து வந்துள்ளார். நேற்று ஓய்வு பெறும் நாள். அங்குள்ள பதினைத்து யானைகளில் மூத்த யானையான சோமனுக்கு (எழுபத்தி எட்டு வயது ) வாயில் உணவூட்டியபின், சோமனின் காதில் நான் போய் வருகிறேன் என்றிருக்கிறார். சோமன் போகாதே என அவரிடம் சொல்லியிருக்கிறது .
அங்குள்ள குழந்தையான ஆறு மாத ஸ்ரீ குட்டியும் துதிக்கையை உயர்த்தி “ஈஸ்வரன் போவண்டாம்” என்றிருக்கிறது. பின்னர் கனத்த மனதுடன் அடிக்கடி எங்களை வந்து பாருங்கள் என சொல்லி யானைகள், மருத்துவர் ஈஸ்வரனை வழியனுப்பி வைத்துள்ளன.அவரும் அடிக்கடி வருகிறேன் என சொல்லிவிட்டே சென்றிருக்கிறார்.
வெண்முரசில் பீஷ்மர் சிலகாலம் வனம் சென்றுவிட்டு அஸ்தினபுரிக்கு வந்தபின் அங்குள்ள யானை கொட்டிலுக்கு செல்லும்போது மூத்தவன் உபாலன் தான் முதலில் அவரை அடையாளம் கண்டு துதிக்கையை உயர்த்தி பிளிறல் ஓசை எழுப்பியபின் தான் பிற யானைகளும் பீஷ்மரை அடையாளம் கண்டு கொண்ட நினைவுகள் என மனதில் தோன்றி மறைந்தது.
டாக்டர் கே தொடர்ச்சியாக உலகம் முழுவதும் பிறந்து, வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கப்பல்காரனின் கடையில் ஜெயமோகனின் (மலையாள) ஆன கிடைக்கும் என தகவல் நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன் .ஆம் எனது எண்ணை கடையில் நூறு சிம்காசனங்கள் ,ஆன டாக்டர் போன்றவை வைத்துள்ளேன் .
ஷாகுல் ஹமீது ,
நாகர்கோயில்.
அன்புள்ள ஜெ
இன்று மலையாள நாளிதழ் ஒன்றில் யானைடாக்டர் பற்றிய ஒரு குறிப்பை வாசித்தேன். என் அலுவலக நண்பர் என்னிடம் ‘யானை டாக்டர் வாசித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். வாசித்திருக்கிறேன் என்று சொன்னேன். அது தமிழில் வந்தது என்று சொன்னால் அவருக்கு நம்பிக்கை இல்லை. அது ஒரு unique ஆன மொழிநடைகொண்ட மலையாள எழுத்து என்று சொல்லிக்கொண்டிருந்தார். குறிப்பாக அதிலுள்ள soliloquyதான் மலையாளத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்தது என்று சொன்னார் ஆச்சரியமாக இருந்தது. என்னால் மலையாளத்தை சரளமாக வாசிக்க முடியாது, அவர் வாசிக்க கேட்டேன். தமிழில் அது ஓர் உணர்ச்சிமிக்க பேச்சாக இருந்தது. மலையாளத்தில் இன்னும் வேகமாக ஒருவகையான ஷேக்ஸ்பீரியன் தன்மையுடன் இருந்தது
ராஜ் கணேஷ்
April 18, 2021
புதுவை வெண்முரசு கூடுகை 42
ஓவியம்: ஷண்முகவேல்அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் ,
நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 42 வது கூடுகை
24.04.2021 சனிக்கிழமை அன்று
மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை
நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம்
கூடுகையின் பேசு பகுதி
வெண்முரசு நூல் வரிசை 5 “பிரயாகை” ,
பகுதி மூன்று. இருகூர்வாள் 1 முதல் 6 வரை பகுதி நான்கு.
அனல்விதை 1 முதல் 6 வரையிலான பகுதிகள்
குறித்து நண்பர் திருமாவளவன் உரையாடுவார்
இடம்:- கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி ,
புதுவை -605 001
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
இருவேறியற்கை
பத்து நாட்களாக வீட்டில் தனியாக இருந்தேன். ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட சோம்பல். ஒன்று மொட்டைவெயில் அல்லது மழை. மேலும் பசிப்பதற்கு அரைமணிநேரம் முன்னர்தான் எனக்கு சாப்பாடு நினைவே வருகிறது. உடனே கீழே வந்து அவசரமாக சப்பாத்தி மாவை உருட்டி சுட்டு, அல்லது அவசரச்சோறு பொங்கி கூடவே எதையாவது சேர்த்து சாப்பிட்டுவிட்டு மாடி ஏறிவிட்டேன்.
கோவை நண்பரும், குக்கூ குழுமத்தினருமான குமார் ஷண்முகம் [shanmukumar@gmail.com] பலவகை சாப்பாட்டுப் பொடிகள் செய்கிறார். பருப்புப்பொடி, முருங்கைக்கீரைப்பொடி, இட்லிப்பொடி வகையறா. அவற்றில் ஏதாவது ஒன்றை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாகவே இருக்கிறது. சோறு பொங்கினால் கூட அதையும் சேர்த்துப் பிசைந்தால்போதும். ஆந்திராவில் இருக்கும் மெல்லிய நிறைவும் அமைகிறது. மொத்தத்தில் குறையொன்றுமில்லை.
வழக்கம்போல ஆவேசமாக எழுதிக்கொண்டிருந்தேன். கதை ஒன்று, திரைக்கதை ஒன்று. ஆவேசமாக வாசித்துக்கொண்டிருந்தேன். மதுரை நாயக்கர் வரலாறு, பண்டைய திருவிதாங்கூரின் வரலாறு. பண்டைய திருவிதாங்கூர் வரலாறு என்பது ஓர் அற்புதமான புனைவு. எண்ணிபார்த்தால் ஏழெட்டு பெயர்கள் சில கல்வெட்டுகளில் தெரிவதை தவிர சான்றுகளே இல்லை. ஆனால் எழுதிவிட்டார்கள் மன்னன்கள். திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்கள் நினைத்தால் எல்லாமே வரலாறுதான். திருவிதாங்கூர் எந்தப் போரிலும் தோற்றதில்லை – தந்திரபூர்வமாக பின்வாங்கியிருக்கிறது, அவ்வளவுதான்.
வீட்டில் அருண்மொழி இருப்பதன் முதன்மையான பயன் என்ன என்பதை அடிக்கடி உணர்வதுண்டு, அவள்தான் காலத்தை உருவாக்குபவள். காலஜனனி, காலிகை, காலாபானி என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம். அவள் இல்லாமலிருந்தால் காலையுணவை பற்றிய சிந்தனை நமக்கு வரும்போது மதியம் ஆகிவிட்டிருக்கிறது. சரி ,ஒரு மாலைநடை போய் வருவோம் என்று வெளியே வந்தால் நள்ளிரவு. காலையில் கண்விழித்தால் அறைக்குள் வெயில். வழக்கமாக காலையை அறிவிக்கும் காகங்கள், பூனைகள் எவையுமே அவள் இல்லாவிட்டால் வருவதில்லை.
வீட்டை முன்பு சிலமுறை பூட்டாமலேயே இரவு தூங்கிவிட்டேன். ஆகவே சென்ற பல ஆண்டுகளாக பகலும் இரவும் வீட்டை மொத்தமாக பூட்டி சாவிகளை தொங்கவிட்டுக் கொண்டே உள்ளே இருப்பேன். வேண்டுமென்றால் திறக்கலாம். ஆனால் அதற்கு சாவி தேடவேண்டும். அது கையில் கிடைக்க ஒருமணிநேரம் வரை தோராயமாக ஆகும். அதற்குள் சலித்து வெளியே போகவேண்டாம் என்ற மனநிலையை வந்தடைந்து விடுவேன்.
சென்னை கிளம்பவேண்டும். அருண்மொழி வந்ததுமே ‘வீடு கிடக்குற கிடை’ என ஆரம்பிப்பாள். ஆகவே பாத்திரங்களை கழுவி, சமையலறை கூடம் உட்பட எல்லாவற்றையும் துடைத்து ஒருமாதிரி மானுடன் புழங்கிய இடம் போல ஆக்கினேன். நடுவே ஒரு போன். அதைப்பேசி முடித்தபோது ஆட்டோ வந்துவிட்டது.
சென்றமுறை அவசரமாகச் சென்னை கிளம்பியபோது பெல்ட் எடுத்துக் கொள்ளவில்லை. ரயிலில் டிராக்சூட் அணிவது வழக்கம். சென்னை வந்தால் பெல்ட் இல்லை. ஆஸ்பத்திரிக்கும் ஓட்டலுக்குமான அலைச்சலில் பெல்ட் விற்கும் கடைகளும் கண்ணுக்குப் படவில்லை. இடுப்பில் ஒரு கையை வைத்து ஜீன்ஸை அள்ளிப்பிடித்தபடித்தான் அலைந்தேன். எவருக்காவது இரண்டு கையால் கும்பிடு போட்டால் நிர்வாணநிலை கூடியிருக்கும். கடைசிநாள் சண்முகத்திடம் சொல்லி ஒரு பெல்ட் வாங்கிக்கொண்டேன். திருவாரூரில் பலரை கும்பிட வசதியாக இருந்தது.
இந்தமுறை மறக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டேன். அவசரவெறியிலும் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தேன். பெல்ட் மறக்காமல் வைத்துவிட்டேன். சென்னை வந்து விடுதியில் பெட்டியை திறந்தேன். பெல்ட் இருந்தது. அப்பாடா!
ஆனால் ஜீன்ஸ் இல்லை. சட்டைகள் மட்டும்தான். நல்லவேளையாக ஒரு வேட்டி இருந்தது. முதல் நாளில் நூற்பு சிவகுரு அளித்த கைத்தறிக்கதர் சட்டையும் வேட்டியுமாக பொன்னான வாக்குகள் நாடும் அரசியல்வாதியின் தோற்றத்தில் இருந்தேன். மறுநாள் சண்முகம் இரண்டு ஜீன்ஸ் வாங்கிக்கொண்டுவந்துவிட்டார்
அருண்மொழி ஊர்திரும்பி விட்டாள். சென்றதுமே சைதன்யா ஒரு படம் அனுப்பியிருந்தாள். ‘அம்மா அதிர்ச்சியில்’. எனக்கே அந்த இடம் என்ன என்பது கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. அது அருண்மொழியின் படுக்கையறை. அது ஏன் அப்படி இருக்கிறது? நான் கடைசியாக அங்கேதான் எல்லாவற்றையும் ‘பேக்’ செய்தேன். எஞ்சியவை அறையில் நிறைந்து கிடந்தன.
தத்துவார்த்தமாக இதை நாம் பார்க்கவேண்டும். கலைந்து சிதறிக்கிடப்பதுதான் பொருட்களுக்கு உண்மையில் பிடித்திருக்கிறது. மலைகள் முதல் கூழாங்கற்கள் வரை, மரங்கள் முதல் சருகுகள் வரை எந்த ஒழுங்குமின்றித்தான் இருக்கின்றன. எந்த காட்டிலாவது சருகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனவா? அடுக்கி வைப்பதென்பது மானுட ஒழுங்கு. அதற்கு பின்னாலிருப்பது மானுட விருப்பம்.
பொருட்களை ஏன் அவற்றின் விருப்பத்துக்கு விட்டுவிடக்கூடாது? அவற்றை நாம் எப்படி அடுக்கி வைத்தாலும் அவை திமிறி அவற்றின் விருப்பமான வடிவக்கலைவுக்குச் சென்றுகொண்டுதானே இருக்கின்றன?.
ஆனால் ‘இயற்கையான’ அந்த அறையை பார்க்க எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
காற்று தோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு? இப்ப தெரிஞ்சாகணும்! பத்தினியின் பத்துமுகங்கள் சிங்கப்பூரில் அன்று சுவையாகி வருவது…
கனடா – கடிதம்
காலம் செல்வம்- பேட்டி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
தங்களின் காலம் செல்வத்துடனான ”மீண்டும் சந்திக்கும் வரை” கட்டுரை எனக்கு இலங்கை நாட்களை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டது. குறிப்பாய் கொஞ்சும் இலங்கைத் தமிழ்
அங்கு பேசப்படும் தமிழும், கடைத்தெருவிலும் ரயில் நிலையங்களிலும் ’’புகையிரத நிலையம்‘’ போன்ற தூய தமிழிலான பெயர்ப்பலகைகளும், மக்களின் பெயர்களும் அத்தனை அழகாக இருக்கும். எங்குமிருக்கும் தென்னைமரங்களும், சிரட்டைகளில் அரைலிட்டர் பால் ஊற்றி வைக்கலாம் போல் அளவில் மிகப்பெரிதான தேங்காய்களும், நினைத்துக்கொண்டாற்போல மழையும் இளவெயிலுமாக மாறி மாறி வருவதும், எல்லா வீட்டிலும் இருக்கும் பச்சைப்பசேல் தோட்டங்களுமாக கொழும்பு எனக்கு பெரிது பண்ணப்பட்ட கேரளம் போலவே இருக்கும்.
நீங்கள் சொல்லியிருந்தது போல நண்பர்களின் வீடுகளுக்கு போகையில் ‘நின்னுட்டு போறதுதானே?’ என்பார்கள். பிரியமான மனிதர்கள். ’’வெளிக்கிட்டு ‘’ பல வருடங்களுக்கு முன்னர் கேட்டது மீண்டும் பின்னர் இப்போதுதன் வாசிக்கிறேன். அவர்கள் சொல்லும் ”வந்தனன்’’ அத்தனை நன்றாக இருக்கும் கேட்க. அப்படி ஒரு அழகுத்தமிழை வேறெங்கும் கேட்கவே முடியாது.
நடுவில் தாமரைக் குளமுடனிருந்த உதய தென்னக்கோனின் நாலுகட்டுவீடு, மசாலா மணக்கும் மரவள்ளிக்கிழங்கு கறி, சம்பலுடன் இடியாப்பம், யாழ்ப்பாணத்தின் பனை உணவுகள், அசங்க ராஜபக்ச’வின் வீட்டில் இருந்த பெரும் ரம்புத்தான் மரத்திலிருந்து நாளெல்லாம் சாப்பிட பழங்கள், அசங்க’வுடன் சென்ற மிகப்பழமையான புத்தரின் குகைக்கோவில்கள். அசைவ உணவகம் ஒன்றில் சைவக்காரியான நான் தயி்ர் சோற்றை வெங்காயம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதை ஒரு அம்மாள் எழுந்தே வந்து என்னருகில் நின்று வேடிக்கை பார்த்தது, வாளிப்பான பெண்கள், குதிகால் வரை நீண்டிருக்கும் அவர்களின் அடர்ந்த கூந்தல், பலர் லுங்கியுடனேயே அலுவலகம் செல்வது, சரண் அப்பாவும் இந்தியாவின் நைட்டியைப் போலவே (இப்போது இங்கு அது பகல்டி) பூப்பூவாக போட்டிருக்கும் பல நிற லுங்கி கட்டியிருந்தது, அங்கு அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த வீட்டருகே இருந்த பெரும் ஏரி , அதன் அருகிருந்த மரக்கூட்டங்களில் எப்போதும் கேட்கும் பறவைகளின் கூச்சல், சந்தன நிற மலர்கள் செறிந்திருந்த ப்ளுமீரியா மரங்களின் அடியில் அமர்ந்து வாசித்த ஏராளமான புத்தகங்கள், மண்சட்டியில் துணிவேடுகட்டி கிடைக்கும் சுவையான எருமைத்தயிர், இன்னும் மனதில் இனித்துக்கொண்டிருக்கும் வட்டாலப்பம் என்று பொங்கி வந்த பழைய நினைவுகளில் ஆழ்ந்துவிட்டேன் கட்டுரை இலங்கைக்கே என்னை மீண்டும் கொண்டுபோனது
இலங்கை மக்களின் பெயர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும. சரண் அப்பா கொழும்பில் வேலைக்கு சேர்ந்த புதிதில் அடிக்கடி தொலைபேசியில் மஞ்சுளா என்னும் பெயரை சொல்லத்தொடங்கியிருந்தார். ”நானும் மஞ்சுளாவும் போனோம், வந்தோம், மஞ்சுளாவோடுதான் மதியம் சாப்பிட்டேன்” இப்படி. விகல்பமாய் நினைக்காமல் அங்கெல்லாம் அப்படித்தான் போல என்றெண்ணிக்கொள்வேன். குர்கானில் இவர் பணி புரிந்த நாட்களில் ஷேர் ஆட்டோவில் பெண்கள் இவர் மடியிலேயே உட்கார்ந்து வந்தெதெல்லாம் பார்த்திருக்கிறேனே! அப்படி நான் போகாத ஊர்களின் பழக்கங்களில் ஒன்றாக இருக்குமென நினைத்துக்கொள்வேன்
எனினும் ஒருமுறை தானும் மஞ்சுளாவும் நீச்சல் குளத்தில் இருக்கிறோம் என்ற போது கொஞ்சம் திடுக்கிட்டேன். அப்போதும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த தேவியை படித்த தேவி கடிந்துகொண்டாள், ”ஏன் இப்படி பத்தாம் பசலித்தனமாக இருக்கிறாய்” என்று
பின்னர் முதல்முறையாக இ்லங்கை சென்று பண்டார நாயக சர்வதேச விமான நிலையத்தில் மகன்களுடன் காத்திருந்த என்னை நீலஅல்லி மலர் கொத்தும், முகம்கொள்ளாத சிரிப்புமாக எதிர்கொண்டார் அவரின் நண்பர் “மஞ்சுள ரண துங்க ”.
அங்கிருந்த 6 வருடங்களில் யாழ்ப்பாணம், ஜாஃப்னா, நுவரேலியா எல்லாம் பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் கண்டியை மறக்கவே முடியாது. ”தி்லங்க” என்னும் ஒரு மரவிடுதியில் அதிகாலை ஜன்னலை திறந்ததும் கண்ணில் பட்ட மலைமுகடுகளும், அவற்றின் அடியிலிருந்த இளநீல ஏரியும், விடுதியிலிருந்த மாபெரும் நாகலிங்க மரத்தில் இரண்டு உள்ளங்கைகள் அளவிற்கு பூத்திருந்த மலர்களும், மனதை நிறைத்த அவற்றின் சுகந்தமுமாக, அங்கேயே அக்கணத்தின் நிறைவில் செத்துப்போய்விடலாம் என்றேயிருந்தது. இப்போதும் நாகலிங்கமலர்களின் நறுமணம் என்னை கண்டிக்கு அழைத்துச்செல்லும்
நான் செல்லவிரும்பும் நாடுகளின் பட்டியல் நீளமாக காத்திருக்கின்றது. ஆனால் என் இறுதிக்காலத்தில் நான் இலங்கையில்தான் இருக்க விரும்புகிறேன். அழகுப்பெயர்ளுடன் இருக்கும் மனிதர்களும், ஆர்க்கிட்மலர்களும் தென்னையும், ரம்புத்தானும், ஏரியும், பறவைகளும், நாகலிங்க மலர்களின் மணமும் சூழ இருக்கும் இறுதிக்கணமென்பது ஒரு கொடுப்பினைதான். அக்கொடுப்பினை எனக்கு இருக்கின்றதாவென தெரியவில்லை. கட்டுரை வாசித்ததும் இலங்கை செல்ல கொதியாகிவிட்டது. நன்றி
அன்புடன்
லோகமாதேவி
கொற்றவை, மானுட அழிவின் கதை
அன்புள்ள ஜெ. வணக்கம்.
அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.
கொற்றவை நாவல் படித்து முடித்தேன். முடித்தவுடன் ஒரு பெரும்பயணம் சென்றுவந்த களைப்பு. உண்மையில் கொற்றவை ஒரு தாத்தா தன் பேரனை இட்டுச்சென்ற ஒரு பயணம் என்றே தோன்றுகிறது. கடல் நெருங்கி வர தொல்மக்கள் மேல்நிலங்களுக்கு செல்கிற பயணம்.கான்வரியின் பெரும் பயணம் .கடலின் கருமையில் திரிந்தலையும் பரதவர்களின் பயணம் புகார் தெருக்களில் காற்றின் ஓயாத பயணம் ஐம்பெரும் நிலங்களில் நீலியுடன் கண்ணகி சென்ற பயணம் .எரித்தளித்துவிட்டு மலை எரிய கன்னியின் பயணம் செங்குட்டுவனின் விழவுப்பயணம். இளங்கோவின் தேடல் பயணம் மேகலையின் கடல் கடந்த பயணம்….. நான் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்ற அறுநூறு பக்கங்கள்.
இரண்டாவதாக கதையில் வரும் ஓயாத மனித பலிகளும் அதன் குருதி வாடையும். புகாரில் துவங்கி ஒவ்வொரு நிலத்திலும் மனித பலிகள் நிகழ்ந்துகொண்டே செல்கின்றது. (மருத நிலத்தை தவிர : அங்கே அடிமைச்சந்தை) மதுரை எரிந்தது எந்த சலனத்தையும் ஏட்படுத்தவில்லை. ஆனால் கதையெங்கும் வெட்டிச்செல்லும் வாட்களும் குருதியும், ஒவ்வொருமுறையும் உளம்அதிர வைத்தது. அந்த காட்சிகள் எஞ்சி கனவுகளில் தொடர்ந்தது. எவ்வளவு முயன்றும் பலிகளை புரிந்துகொள்ள முடியவில்லை. ரத்தமும் சதையுமான இந்த நாவலுக்காக பணிந்து வணங்குகிறேன்,
ஜெ. ஒரு கேள்வி : வரலாற்றில் மனித பலிகளை பற்றி விரிவாக பேசும் நூல்கள் அல்லது ஆய்வுகள் உள்ளனவா? இந்த கேள்விக்கு ஏற்கனவே பதிலளித்திருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
அசோக்
அன்புள்ள அசோக்,
நாம் புறநாநூறை பார்க்கையில் அங்கே மனிதபலிகளைத்தானே காண்கிறோம்? எரிபரந்தெடுத்தல் என்ற பெயரில் படையெடுப்புகளில் மக்களை கொன்று குவிக்கிறார்கள். ஊர்களை எரிக்கிறார்கள். நீர்நிலைகளை அழிக்கிறார்கள். அறுத்து எறியப்பட்ட தாலிகள் மலையாக குவிந்தன என்று புறநாநூறு சொல்கிறது. அன்று அது வெற்றி என்றும் வீரம் என்றும் கருதப்பட்டது. இன்றைய பார்வையில் அது அழிவு என்று மட்டுமே தோன்றுகிறது
வீரயுகம் என்று சொல்லப்படுவது இனக்குழுக்கள், சிறிய அரசுகள் நடுவே கொடும்போர் நிகழ்ந்ததன் வரலாற்றையே காட்டுகிறது. டிராய் போரானாலும் சரி, மகாபாரதப்போரானாலும் சரி, சீனாவின் முப்பெரும் அரசுகளின் போரானாலும் சரி மானுடப்பேரழிவுகள் தான். அதன்பின் பேரரசுகளின் காலம், அவை பெரும்படையெடுப்புகளின் கதைகளால் ஆனவை.சந்திரகுப்த மௌரியர், சமுத்திரகுப்தர், ஜெங்கிஸ்கான்,தைமூர், அகமதுஷா அப்தாலி, மாலிக் காபூர் என படையெடுப்புகளையே வரலாறாக படித்து வருகிறோம். அதன் பின் காலனியாதிக்க காலம். திட்டமிட்ட பஞ்சங்கள், நோய்பரப்பல்கள் ஆகியவையும் போர் உத்திகளாயின. நவீன ஆயுதங்கள் வந்தன. இரண்டாம் உலகப்போர் வரை மானுட வரலாறென்பதே அழிவுகளின் நிரை மட்டும்தான்.
ஒரு நூல் என்று சொல்லமுடியாது. இந்த காலகட்டங்கள் எதைப்பற்றியானாலும் அழிவைப்பற்றிச் சொல்லும் நூல்களே மிகுதி
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


