கனடா – கடிதம்

மீண்டும் சந்திக்கும் வரை… காலம் செல்வம்- பேட்டி

காலம் செல்வம்- பேட்டி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

தங்களின் காலம் செல்வத்துடனான ”மீண்டும் சந்திக்கும் வரை” கட்டுரை எனக்கு இலங்கை நாட்களை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டது. குறிப்பாய் கொஞ்சும் இலங்கைத் தமிழ்

அங்கு பேசப்படும் தமிழும், கடைத்தெருவிலும் ரயில் நிலையங்களிலும் ’’புகையிரத நிலையம்‘’ போன்ற  தூய தமிழிலான பெயர்ப்பலகைகளும், மக்களின் பெயர்களும் அத்தனை அழகாக இருக்கும். எங்குமிருக்கும்   தென்னைமரங்களும், சிரட்டைகளில் அரைலிட்டர் பால் ஊற்றி வைக்கலாம் போல் அளவில் மிகப்பெரிதான தேங்காய்களும்,  நினைத்துக்கொண்டாற்போல மழையும் இளவெயிலுமாக மாறி மாறி வருவதும், எல்லா வீட்டிலும் இருக்கும் பச்சைப்பசேல் தோட்டங்களுமாக கொழும்பு எனக்கு பெரிது பண்ணப்பட்ட கேரளம் போலவே இருக்கும்.

நீங்கள் சொல்லியிருந்தது போல நண்பர்களின் வீடுகளுக்கு போகையில் ‘நின்னுட்டு போறதுதானே?’ என்பார்கள்.  பிரியமான மனிதர்கள். ’’வெளிக்கிட்டு ‘’ பல வருடங்களுக்கு  முன்னர் கேட்டது மீண்டும் பின்னர் இப்போதுதன் வாசிக்கிறேன். அவர்கள் சொல்லும் ”வந்தனன்’’ அத்தனை நன்றாக இருக்கும் கேட்க. அப்படி ஒரு அழகுத்தமிழை வேறெங்கும் கேட்கவே முடியாது.

நடுவில் தாமரைக் குளமுடனிருந்த உதய தென்னக்கோனின் நாலுகட்டுவீடு, மசாலா மணக்கும் மரவள்ளிக்கிழங்கு கறி, சம்பலுடன் இடியாப்பம், யாழ்ப்பாணத்தின் பனை உணவுகள், அசங்க ராஜபக்ச’வின் வீட்டில் இருந்த பெரும் ரம்புத்தான் மரத்திலிருந்து நாளெல்லாம் சாப்பிட பழங்கள், அசங்க’வுடன் சென்ற மிகப்பழமையான புத்தரின் குகைக்கோவில்கள். அசைவ உணவகம் ஒன்றில் சைவக்காரியான நான் தயி்ர் சோற்றை வெங்காயம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதை  ஒரு அம்மாள் எழுந்தே வந்து என்னருகில் நின்று  வேடிக்கை பார்த்தது, வாளிப்பான பெண்கள், குதிகால் வரை நீண்டிருக்கும் அவர்களின் அடர்ந்த கூந்தல், பலர் லுங்கியுடனேயே அலுவலகம் செல்வது, சரண் அப்பாவும் இந்தியாவின்  நைட்டியைப் போலவே (இப்போது இங்கு அது பகல்டி) பூப்பூவாக போட்டிருக்கும் பல நிற லுங்கி கட்டியிருந்தது, அங்கு அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த வீட்டருகே இருந்த பெரும் ஏரி , அதன் அருகிருந்த மரக்கூட்டங்களில் எப்போதும் கேட்கும் பறவைகளின் கூச்சல்,   சந்தன நிற மலர்கள் செறிந்திருந்த ப்ளுமீரியா மரங்களின் அடியில் அமர்ந்து வாசித்த ஏராளமான புத்தகங்கள், மண்சட்டியில் துணிவேடுகட்டி கிடைக்கும் சுவையான எருமைத்தயிர், இன்னும் மனதில் இனித்துக்கொண்டிருக்கும் வட்டாலப்பம் என்று  பொங்கி வந்த பழைய நினைவுகளில் ஆழ்ந்துவிட்டேன் கட்டுரை இலங்கைக்கே என்னை மீண்டும் கொண்டுபோனது

இலங்கை மக்களின் பெயர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும. சரண் அப்பா  கொழும்பில் வேலைக்கு சேர்ந்த புதிதில் அடிக்கடி தொலைபேசியில் மஞ்சுளா என்னும் பெயரை சொல்லத்தொடங்கியிருந்தார். ”நானும் மஞ்சுளாவும் போனோம், வந்தோம், மஞ்சுளாவோடுதான் மதியம் சாப்பிட்டேன்” இப்படி. விகல்பமாய் நினைக்காமல் அங்கெல்லாம் அப்படித்தான் போல என்றெண்ணிக்கொள்வேன். குர்கானில் இவர் பணி புரிந்த நாட்களில் ஷேர் ஆட்டோவில் பெண்கள் இவர் மடியிலேயே உட்கார்ந்து வந்தெதெல்லாம் பார்த்திருக்கிறேனே! அப்படி நான் போகாத ஊர்களின் பழக்கங்களில் ஒன்றாக இருக்குமென நினைத்துக்கொள்வேன்

எனினும் ஒருமுறை தானும் மஞ்சுளாவும் நீச்சல் குளத்தில் இருக்கிறோம் என்ற போது கொஞ்சம் திடுக்கிட்டேன். அப்போதும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த தேவியை  படித்த  தேவி கடிந்துகொண்டாள், ”ஏன் இப்படி பத்தாம் பசலித்தனமாக இருக்கிறாய்” என்று

பின்னர் முதல்முறையாக இ்லங்கை சென்று பண்டார நாயக சர்வதேச விமான நிலையத்தில்  மகன்களுடன் காத்திருந்த என்னை  நீலஅல்லி மலர் கொத்தும், முகம்கொள்ளாத சிரிப்புமாக எதிர்கொண்டார்  அவரின் நண்பர் “மஞ்சுள ரண துங்க ”.

அங்கிருந்த 6 வருடங்களில் யாழ்ப்பாணம், ஜாஃப்னா, நுவரேலியா எல்லாம் பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் கண்டியை மறக்கவே முடியாது. ”தி்லங்க” என்னும் ஒரு மரவிடுதியில் அதிகாலை ஜன்னலை திறந்ததும் கண்ணில் பட்ட மலைமுகடுகளும், அவற்றின் அடியிலிருந்த இளநீல ஏரியும், விடுதியிலிருந்த மாபெரும் நாகலிங்க மரத்தில் இரண்டு உள்ளங்கைகள் அளவிற்கு பூத்திருந்த மலர்களும், மனதை நிறைத்த அவற்றின் சுகந்தமுமாக, அங்கேயே அக்கணத்தின் நிறைவில் செத்துப்போய்விடலாம் என்றேயிருந்தது. இப்போதும் நாகலிங்கமலர்களின் நறுமணம்  என்னை கண்டிக்கு அழைத்துச்செல்லும்

நான் செல்லவிரும்பும் நாடுகளின் பட்டியல் நீளமாக காத்திருக்கின்றது. ஆனால் என் இறுதிக்காலத்தில் நான் இலங்கையில்தான் இருக்க விரும்புகிறேன். அழகுப்பெயர்ளுடன் இருக்கும் மனிதர்களும், ஆர்க்கிட்மலர்களும் தென்னையும், ரம்புத்தானும், ஏரியும், பறவைகளும், நாகலிங்க மலர்களின் மணமும் சூழ இருக்கும் இறுதிக்கணமென்பது ஒரு கொடுப்பினைதான்.  அக்கொடுப்பினை எனக்கு இருக்கின்றதாவென தெரியவில்லை. கட்டுரை வாசித்ததும் இலங்கை செல்ல கொதியாகிவிட்டது. நன்றி

அன்புடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.