Jeyamohan's Blog, page 1001
April 18, 2021
முகில் கடிதங்கள்-7
அன்புள்ள ஜெ
அந்த முகில் இந்த முகில் போன்ற ஒரு படைப்பை ‘ஆராய’ முடியாது. அவரவர் அனுபவங்களைக்கொண்டு அதை உணரத்தான் முடியும். இளமை நமக்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கிறது ஜெ. நிறைய வாய்ப்புக்கள். நூற்றுக்கணக்கான வாய்ப்புக்கள். ஆனால் நாம் ஒன்றை மட்டும்தான் தேர்வுசெய்ய முடியும். இது மிகப்பெரிய அநீதி. ஆனால் ஒன்றும் செய்யமுடியாது.
எதை நாம் தேர்வுசெய்தாலும் சரிநாம் தேர்வுசெய்யாத எல்லாவற்றையும் நாம் இழந்துவிடுவோம். அற்புதமான மனைவியை அடைந்த ராமராவுக்கு இழந்த ஸ்ரீபாலாதான் பெரிதாக தெரிகிறர். நம் வாழ்க்கையும் அப்படித்தான்.
இளமையில் நாம் ஒரு முடிவை எடுப்பதற்குப் பல காரணங்கள். பயம், தாழ்வுணர்ச்சி ஆகியவற்றால் ஒரு முடிவை எடுப்போம். அதேபோல திமிர், மேட்டிமை உணர்ச்சி ஆகியவற்றாலும் இன்னொரு முடிவை எடுப்போம். எதுவானாலும் நாம் எடுக்கும் முடிவு நம் வாழ்க்கையை தீர்மானித்துவிடுகிறது. ஒன்றுமே செய்யமுடியாது.
வாழ்க்கையின் இனெவிட்டபிளிட்டியைச் சொல்லியதனால்தான் இந்நாவல் ஆழமான பாதிப்பை உருவாக்குகிறது. இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்திருக்கலாமே என்றெல்லாம் பேசலாம். ஆனால் வேறு என்ன செய்திருக்க முடியும் என்ற கேள்வியை ஆழமாக நாமே கேட்டுக்கொண்டால் நாம் வாழ்க்கையின் பாதையை உணரமுடியும்
அருண்குமார்.
மேகமாலைஅன்புள்ள ஜெ,
ஒரு அண்டை மொழியின்மேல் தீராத காதல் இருந்தால் ஒழிய இப்படியெல்லாம் பாடல்களை ரசிக்க முடியாது. இது வெறும் ஆர்வம் அல்ல. இந்த மண்ணின் மேல், மக்கள் மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு உங்களுக்கு. வரும் நாட்களில் இதற்க்காகவேனும் இந்த தெலுங்கு மண் உங்களை பெருமையுடன் நினைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் பயண குறிப்புகள், கோதையின் நாட்கள்… இவைகளிலெல்லாம் எத்தனை அணுக்கமாக இந்த மண்ணை பற்றி எழுதி இருக்கிறீர்கள்!
அவை அனைத்திற்கும் உச்சம்தான் ‘அந்த முகில் இந்த முகில்’. தெலுங்கில் இப்படி ஒரு பின்னணியுடன் இவ்வளவு ஆழமான நாவல் யாரும் எழுதியதில்லை. எழுத்தாளர் சலம் அவர்களுக்கு ஒரு தொடர்ச்சி இருந்திருந்தால், அந்த சரடை பின்தொடர்ந்து சென்றவர்களுக்கு உலக இந்திய இலக்கிய பரிச்சயமும், மரபின்மேல் பற்றும் தேர்ச்சியும் இருந்திருந்தால் இந்த மாதிரி ஒரு புனைவு வரும் வாய்ப்பு கிடைத்திருக்கும். என்ன செய்ய, இங்கு உள்ளவர்களுக்கு எல்லா ‘மாஸ்டர்ஸ்’ உடனும் உறவு அறுந்து விட்டது.
சலம்உங்களின் நாவலில் உள்ள புறத்தை, மிக நுணுக்கமான வர்ணனைகளை, அவற்றுக்கும் கதை மாந்தர்களின் உள் உணர்ச்சிகளுக்கும் இருக்கின்ற உறவை நீக்கிவிட்டு இந்த நாவலை மொழியாக்கம் செயது கொடுத்தால் ‘இது சலம் கதைதானே’ என்றுதான் எந்த தெலுங்கு வாசகனும் கேட்பான். இந்த புனைவைப்பற்றி நிறைய எழுதவேண்டும் சார்.
மேகமாலா பதிவில் மாலா என்றால் கருமை என்று இருக்குமோ என்று ஊகித்து இருந்தீர்கள். தெலுங்கில் அந்த அர்த்தம் இல்லை என்று சொல்லலாம். மாலா… சரம், ஆரம் என்ற அர்த்தத்தில் தான் இங்கும் இருக்கிறது. ஆனால், சம்ஸ்க்ருதத்தில் ‘விஷ்ணு’வின் பெயர்களில் மாலா(ஹ)-வும் ஒன்று. கறுப்பர் என்பதால் அப்படி குறிப்பிட்டு இருக்கலாம். இந்த மேக மாலா என்ற சொல் கூட சமஸ்க்ரிதத்தில் இருந்து வந்ததாகவும் இருக்கலாம். இதற்க்காக குறிப்புகளை தேடியபோது… தெலுங்கு நிகண்டுக்களில் சமஸ்க்ரித உதாரணத்தைத்தான் காட்டுகிறார்கள். தெலுங்கின் மறபு இலக்கியத்தின் உள்ளதாக எந்த நிகண்டுக்களிலும் இல்லை.
காளிதாசரின் ‘மேக சந்தேஸம்’ பாதிப்பில் சினிமா பாடலாசிரியர்கள் இதை உருவாக்கி எழுதி இருக்கலாம். இந்த பாடலே… அப்படி மேகத்தை நண்பனாக(கதாநாயகியின் பாடலில் தோழியாக) நினைத்து சற்று கேலியுடன் பாடுவது தான். மழை பொழிவதற்க்காக இடியும் மின்னலுமாக வரும் முகில்ச்சரத்தை பார்த்து ‘இங்கு தூங்கும் என் பச்சைக்கிளி பயந்து விடுவாள், அவளின் கனவு கலைந்து விடும்… ஆதலால் மெதுவாக, ஓசையில்லாமல் வாயேன்'(மெல்லகா, சல்லகா) என்று கேட்பது அழகான குழந்தைத்தனம்.
நாயகனின் பாடலில் கருமையான மேகம் என்று குறிப்பிட்டு சொல்வதற்காகவே ‘விநீலா’ என்ற சொல்லை அதிகமாக சேர்த்து இருக்கிறார் பாடலாசிரியர். அதற்காகவே பாடலின் மெட்டை சற்று அழகாக வளைத்து இருக்கிறார் இசை அமைப்பாளர் ராஜேஸ்வர ராவ். (இவரில் இருக்கும் மேற்கத்திய பாதிப்பு உங்களின் ‘மோட்டூரி ராமாராவ்’ சொல்வது வரையில் எனக்கு தோன்றவே இல்லை. ‘பியானோ மெட்டுக்கள் மாதிரி’… என்னவொரு சலிப்பு! )
நாயகி பாடும் போது வரும் அந்த ‘ஊருக்கோவே'(சும்மா இரேண்டீ!) என்ற சொல் மிக அழகானது. பி.லீலா-வின் அருமையான உச்சரிப்பு. இதில் இருக்கும் ‘வே’-வை சற்று இழுத்தாலோ குறைத்தாலோ பாடகிக்கு தெலுங்கு தெரியாது என்று காட்டி கொடுத்து விடும். லீலா அவர்கள் கேரளத்தை சேர்ந்தவர் என்றாலும் அதை மிக கச்சிதமாக உச்சரித்து இருக்கிறார்கள். பழைய தெலுங்கு பாடல்களின் மட்டும் அவர்கள் குரலை கேட்டு இருந்ததாலோ என்னவோ எனக்கு லீலா சரித்திர மாந்தராகவே மனதில் நிலைத்து விட்டார்… ஒரு கண்டசாலா, ஏ எம் ராஜா மாதிரி.
2004ல் நினைக்கிறேன்… பிரபல பாடகி ஜிக்கி அவர்கள் மறைந்தபோது பத்திரிக்கையாளனாக செய்தி சேகரிக்க சென்று இருந்தேன். யாரோ ‘லீலம்மா வந்தாங்க’ என்று சொன்னார்கள். ‘என்ன? அவங்க… இருக்காங்களா!’ என்று ஆச்சர்யப்பட்டேன். ‘ஏன் ..’ என்று கேட்டார்கள். ‘இல்ல சென்னையிலதான் இருக்காங்களான்னு…’ என்று சமாளித்தேன். பத்திரிக்கையாளனாக நம் அறியாமையை காட்டிக்கொள்ள கூடாதென்பது சீனியர்கள் கற்றுத்தந்த பாலப்பாடம் ஆயிற்றே!
அன்புடன்,
ராஜு
ஹைதராபாத்
அன்புள்ள ஜெ,
அந்த முகில் இந்த முகில் கதையப்பற்றி நண்பர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இரண்டுபேர் ஆவேசமாக ராமராவ் ஒரு கோழை, கோழையின் கதையை பாராட்டிச் சொல்கிறார், வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். நான் எப்படி இருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் எழுதுவதில்லை. எப்படி இருக்கிறது என்றுதான் எழுதுவார்கள் என்று சொன்னேன். அதிலும் 1950களில் உள்ள உலகம் அப்படிப்பட்டது. அன்றைக்குச் சினிமாக்காரர்களை எப்படிப்பார்த்தார்கள் என்று நாவல் சொல்கிறது என்று சொன்னேன்.
அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு நண்பர், கொஞ்சம் வயதானவர், சொன்னார். சரி. உங்களுக்கு தெரிந்தவர்களில் பாலியல் தொழிலாளியை திருமணம் செய்திருக்கும் ஒருவர் பெயரைச் சொல்லுங்கள் என்று. வாயடைந்துபோய்விட்டார்கள். நம் வாழ்க்கையில் இப்படி இருக்கிறது. ஆனால் நாம் இன்னொரு கனவுலகத்தில்தான் வாழ்கிறோம்.
டி.சிவக்குமார்
அன்புள்ள ஜெ
அந்த முகில் இந்த முகில் கதையில் பல கனவுகள் உள்ளன. கறுப்புவெள்ளை சினிமா என்ற கனவு. நிலவொளி என்ற கனவு. காதலின் கனவு. ஆனால் அற்புதமான கனவு என்பது ஹம்பியில் இருந்து அவர்கள் ராஜமந்திரி செல்லும் அந்தப் பயணம்தான். பலர் எழுதிய கடிதங்களிலும் அந்தக் கனவைப்பற்றி இல்லை. அவர்கள் ஒரு முழு வாழ்க்கையையே வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். முதலில் காதலின் கிளர்ச்சியும் பரபரப்பும், பிறகு பொறுப்புணர்வும் புரிதலும், பிறகு சரியாக இணைந்துபோவது, கொஞ்சம் சலிப்பு. இப்படியே ஒரு முழு வாழ்க்கையும் கனவுபோல சில நாட்களில் கடந்துசெல்கிறது.
எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை உண்டு. ஒரு பெண்ணுடன் இரண்டுநாட்கள் பயணம் செய்தேன். கைகளை பிணைத்துக்கொண்டோம். அதற்குமேல் உறவில்லை. ஆனால் அது மானசீகமான ஒரு முழுமையான குடும்ப வாழ்க்கையாக அமைந்தது. உண்மையில் அந்த வாழ்க்கை ஒரு முழுமையான குடும்ப வாழ்க்கைதான் என்பதை இந்நாவலை வாசித்தபோதுதான் என்னாலேயே உணரமுடிந்தது. நான் அழவில்லை. அழமுடியாத வயது. ஆனால் ஒருநாள் முழுக்க பிரமைபிடித்தவன் மாதிரியே இருந்தேன்.
வாழ்க்கையைப்போல அற்புதமான ஒன்று இல்லை. ஆகவேதான் இத்தனை துயரம். ஏனென்றால் எல்லாமே இங்கே நம் கையிலிருந்து நழுவிவிடுகின்றன இல்லையா?
எஸ்
கலாசியாக ஆவது- கடிதங்கள்
அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்,
நலமே சூழ்க.
நேற்று முகநூலில் உலவும்போது ஒரு காணொளியைப் பார்க்க நேர்ந்தது.அதில் நாகாலாந்தில் இஞ்சி ஏற்றிக்கொண்டு வந்த டிரக் ஒன்று நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்துவிட்டது.விபத்து நேர்ந்த இடத்தில் கிரேன் போன்ற எந்த வசதியும் இல்லாத நிலையில் எந்தவொரு இயந்திரத்தையும் உபயோகிக்காமல் மூங்கில் மற்றும் கயிறுகளை மட்டும் உபயோகித்து மேலே கொண்டுவரும் உத்தியைப் பார்த்தபோது எனக்குத் தங்களின் கதாகாலத்து(தங்கள் வாசகரின் சொல்லாடல்தான்) சிறுகதையான ‘பத்துலட்சம் காலடிகள்’ தான் நினைவிலெழுந்தது.
அக்கதையில் கேரளாவின் மாப்பிள்ளைக் கலாசிகள் கடலுக்குள் மூழ்கிய பத்தேமாரிகளை வெறும் புளியமரத் தடிகள் மற்றும் கற்றாழை நாரைப் பின்னி முறுக்கி உருவாக்கப்பட்ட கயிறுகளைக் கொண்டுவெளியே எடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும் அவ்வாறு மேலே இழுக்கும்போது ஒரு குறிப்பிட்ட தாளகதியில் இஞ்ச் இஞ்சாக இழுத்து மேலேற்றும் உத்தி பற்றியும் வரும்.அதே உத்தியைப் பயன்படுத்தி இங்கே ஊர்மக்கள் ஒன்றுகூடி ஒரு தாளகதியுடன் இழுப்பதைப் பார்த்த தருணத்தில் நான் ஒரு மாப்பிள்ளைக் கலாசியை என்னுள் ஆவாகனப் படுத்திக் கொண்டு காலத்தில் கொஞ்ச நேரம் அமிழ்ந்துவிட்டேன். அந்த அனுபவத்தைத் தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியதால் இக்கடிதம்.
நன்றி.
அந்தக் காணொளியின் இணைப்பு தங்களின் பார்வைக்கு.
விஜயன் ராமசாமி
அன்புள்ள ஜெ
சென்ற நூறு கதைகளையும் மீண்டும் ஒருமுறை வாசித்து முடித்தேன். பிரம்மாண்டமான ஓர் உலகம். எத்தனை வாழ்க்கைகள். எத்தனை மாயங்கள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகைநோக்கித் திறக்கிறது.
பொதுவாக நான் தமிழில் வாசித்தவரை கதை எழுதுபவர்களுக்குச் சில தனித்தன்மைகள் உள்ளன. அவர்கள் ஒன்று அவர்களின் வாழ்க்கையிலிருந்து சில விஷயங்களை எழுதுவதற்கு கண்டிருப்பார்கள். அவற்றை திரும்பத்திரும்ப எழுதுவார்கள். அந்த பேட்டர்ன் அவர்களுக்குள் இருக்கும். அவர்களிடம் அதையே எதிர்பார்ப்பார்கள்.
இன்னொரு சாரார், அவர்கள் வெளிநாட்டு இலக்கியத்தில் வாசித்த சிலவற்றை முன்னுதாரணமாக கொண்டிருப்பார்கள். இப்போது இதுதான் டிரெண்ட் என்று ஒன்றை நினைத்துக்கொண்டு அதை எழுதிப்பார்ப்பார்கள். அதில் எதையேனும் சிலர் பாராட்டிவிட்டால் அதையே எழுதிக்கொண்டிருப்பார்கள்.
இதில் முதல்வகையை விட இரண்டாம்வகை கீழானது என்பது என் எண்ணம். இரண்டாம்வகையினருக்கு அறிவுஜீவி தோரணை இருக்கும். சில ஆசிரியர்களை மேற்கோள்காட்ட முடியும். ஆனால் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாதவர்கள். வரட்சியானவர்கள். ஒருவகையில் பாவமானவர்கள்.
ஒருவர் ‘இப்படித்தான் அமெரிக்காவில் இப்போதெல்லாம் எழுதுகிறார்கள்’ என்று நினைத்தோ ‘இதெல்லாம்தான் ஐரோப்பாவில் சிந்தனையாக உள்ளது’ என்று நினைத்தோ அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு எழுதினாரென்றால் அவரைப்போல அறிவில்லாதவர் எவராவது உண்டா? உனக்கு என்ன எழுத இருக்கிறதோ அதை எழுது என்றுதானே வாசகன் அவனிடம் சொல்வான்?
இந்த நூறுகதைகளைப் பற்றிச் சொல்லவந்தேன். ஒன்று நூறுகதைகளுமே உங்களுக்கு அந்தரங்கமானவை. நீங்கள் எழுதியதைக்கொண்டு பார்த்தால் உங்கள் சுயம் இல்லாத ஒரு கதைகூட இல்லை. ஆனால் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. பின்நவீனத்துவ- நேர்கோடற்ற எழுத்துமுறை கொண்ட கதைகள். விளையாட்டுத்தனமான கட்டமைப்பு கொண்ட கதைகள். அனுபவங்களை நேரடியாகச் சொல்லும் கதைகள். தொன்மங்களை கையாளும் கதைகள். மாயக்கதைகள். கவிதைய்போலவே இருக்கும் கதைகள் என எல்லாவகையான கதைகளும் நூறுகதைகளுக்குள் உள்ளன.
மிகவித்தியாசமான கதை என நான் நினைப்பது எரிமருள். கவிதைக்கு மட்டுமே உரிய ஒரு அபாரமான பொருள்மயக்கம் உள்ள கதை அது. ஒர் உச்சம் அந்தக்கதை
ராஜ் மகேந்திரன்
புனைவுக் களியாட்டு-நூறு சிறுகதைகள் – தொகுப்புApril 17, 2021
விடுதலையின் முன்நெறிகள்
திரு ஜெயமோகன் அவர்களே
தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க – உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்
இந்த பாடலை எப்படி பொருள்கொள்வது? இணையதளங்களில் என்னை திருப்திப்படுத்தும் உரையை தேடிப்பிடிக்க முடியவில்லை.
இங்கு முப்பால் என்பது என்ன? முப்பால் ஒழுக்கினால் காணிக்கை செயல் முழுமையான ஈடுபாடு அறிவு ஆகியவற்றை எப்படி காப்பது/உய்ப்பது?
இந்த நான்கிற்கும் என்ன தொடர்பு ஏன் இந்த வரிசையில் சொல்லப்பட்டிருக்கிறது?
வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தும், தொடர்ந்து தமிழில் வாசிக்கும் பழக்கம் இருந்தும் (குறிப்பாக உங்கள் அனைத்து நூல்களையும், பதிவுகளையும்). யார் உதவியும் இன்றி ஏன் என்னால் இந்த பாடல்களை புரிந்துகொள்ள முடிவதில்லை?
பாடலுக்கு பொருள்கேட்டு கடிதம் எழுதுவது உங்களை எரிச்சலூட்டக்கூடும், இருந்தும் உங்களுக்கு தான் எழுததோன்றுகிறது.
நன்றி
சதீஷ் பாலசுப்ரமணியன்
***
அன்புள்ள பாலசுப்ரமணியன்,
இத்தகைய வரிகளை பொருள்கொள்ளும்போது அவ்வரிகளை மட்டும் தனியாக எடுத்து உளத்துக்குத் தோன்றும்படி பொருள்கொள்ள முடியாது. அந்நூல் ஒரு தொடர் உரையாடல். அந்த உரையாடலில் இந்த வரி எங்கே வருகிறது என்பது உசாவத்தக்கது. இந்த வரிகளிலுள்ள முப்பால் என்பது எதைக்குறிக்கிறது என்று அவ்வண்ணமே பொருள் கொள்ள முடியும்
அதைப்போல இந்த வரிகளிலுள்ள வைப்புமுறையை கருத்தில்கொள்ளாமல் அவை எதைக்குறிக்கின்றன என்று பொருள் கொள்வதும் பிழையானதாக முடியலாம். பழைய நூல்களை பொருள்கொள்ள வைப்புமுறை தவிர்க்கவே முடியாதது. பழையநூல்களில் சொற்களை பொருளின்றி அடுக்குவதில்லை.
ஆசாரக்கோவையில் இந்த வரிகள் ஒழுக்கநெறி நிற்றலைப் பற்றிச் சொல்லும் இடத்தில் வருகின்றன. முந்தைய பாடல் ஒழுக்கம் பிழையாதவருக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றிச் சொல்கின்றது. இப்பாடலுக்கு பிந்தைய பாடல் காலையில் எழுவது உட்பட்ட அன்றாட நெறிகளைப் பற்றிப் பேசுகிறது.
ஆகவே இப்பாடல் ஒழுக்கநெறிகளைப் பற்றியதே. ஆசாரக்கோவை ஒரு நெறிநூல். பழைய வாழ்க்கையின் ஆசாரங்களை தொகுத்துச் சொல்கிறது. வழிபாட்டு ஆசாரங்கள் முதல் அன்றாட ஆசாரங்கள் வரை. இதில் முப்பால் என்று சொல்லப்படுவது அறம்,பொருள், இன்பம் என்பதைப்பற்றித்தான்.
முப்பாலில் இல்லாத நாலாவது பால் வீடுபேறு. தர்மம் ,அர்த்தம் ,காமம், மோட்சம் என புருஷார்த்தங்கள் நான்கு என்றே சொல்லப்படுகிறது. இங்கே நான்காவது பாலான வீடுபேறு குறிப்பிடப்படவில்லை. அது ஏன் என்ற கேள்வியுடன் அந்த வைப்புமுறையை கவனிக்கலாம்.
ஒருவன் வீடுபேறு அடைவதற்குச் சொல்லப்பட்டுள்ள வழிகள் நான்கு. அவையே முதல் வரியில் உள்ளன.எளிய இல்லறத்தான் என்றால் கொடையே அவனுக்கான வழி. பழைய முறைகளின்படி விண்ணுலகிலுள்ள மூதாதையர், துறவியர், அந்தணர், புலவர், இரவலர் ஆகியோருக்கு அளிக்கும் காணிக்கையே வீடுபேறுக்கு போதுமானது. தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஐந்து பேரை புரத்தல் என்று அதை குறளும் சொல்கிறது.
அடுத்தபடியாக வீடுபேறுக்குரிய வழி வேள்வி. அந்தணர் இயற்ற மற்றவர்கள் இயற்றுவிக்கலாம். கொடை, வேள்வி இரண்டுமே உலகியலுக்குரியவை. ஒன்று எளிய அன்றாடத்திலும், இன்னொன்று சிறப்புநிலையிலும் செய்யப்படவேண்டியவை. எளிய குடிமகன் கொடையும் அரசர்கள் வேள்வியும் செய்யலாம் என்று சொல்லப்படுவதுண்டு. இரண்டுமே நிகரானவைதான் என்ற வரிகளை நாம் நெறிநூல்களில் காணலாம்.
வீடுபேறுக்குரிய எஞ்சிய இரு வழிகள் தவமும் கல்வியும். இங்கே தவத்துக்கு அடுத்த நிலையில் கல்வி சொல்லப்படுகிறது. ஆகவே அது மெய்ஞானக் கல்வியையே சுட்டுகிறது. ஊழ்கமும் தவமும் ஒருசாராருக்குரியது. ஞானமார்க்கம் இன்னொரு இயல்பினருக்குரியது. அவையிரண்டும் வீடுபேறின்பொருட்டு உலகியலை துறந்து செல்பவர்களுக்கானவை.
இந்நான்குமே வீடுபேறுக்கான வழிகள். இந்நான்குமே அவற்றுக்கு முந்தைய நிலைகளான அறம்,பொருள், இன்பம் ஆகியவற்றை முறைப்படி காத்து உய்பவர்களுக்கு உரியவை என்று ஆசாரக்கோவை சொல்கிறது. முப்பாலை காத்து விடுதலை பெறாதவர்களுக்கு மேலே சொன்ன நான்கில் எதுவானாலும் பயனளிக்காது என்கிறது.
அறம்பேணி, அதன்பொருட்டு பொருள்தேடி, அந்த அறத்தையும் பொருளையும் நிலைநிறுத்தும்பொருட்டு இல்லறமும் கொள்பவர்களே முப்பால் ஒழுக்கம் கொண்டவர்கள். அவர்கள் அதை தங்கள் வாழ்க்கையில் காத்துக்கொண்டு, அதன்வழியாக விடுதலைபெற்றபின் ஆற்றவேண்டியவை மேலே சொல்லப்படும் கொடை, வேள்வி, தவம், கல்வி என்னும் நான்கு வீடுபேறுக்கான வழிகளும். முப்பால் ஒழுக்கத்தை பேணாமல் செய்யப்படும் கொடையோ வேள்வியோ தவமோ கல்வியோ பயனளிப்பதில்லை என்று இப்பாடல் வலியுறுத்துகிறது.
ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தாலும் இது காலத்தால் மிகப்பிந்தையதாகவே இருக்கக்கூடும். இதன் நடையும் பேசுபொருட்களும் அவ்வாறாகவே காட்டுகின்றன. இது எட்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கும் பிற்காலத்தைய நூல். பெருவாயின் முள்ளியார் சொல்லும் ஒழுக்கநெறிகள் அன்றைய காலகட்டத்தைச் சேர்ந்தவை.
அது வடக்கத்திச் சமணத்தின் துறவை முன்வைக்கும் பார்வை மெல்ல பின்னடைவு கொண்டு தமிழ்ச்சமணத்தின் இவ்வுலகையும் கருத்தில்கொண்ட பார்வை மேலோங்கி வரும் காலகட்டம். உலகியலில் இருந்தே வீடுபேறை அடையும் வழியை நாடிய பக்தி இயக்கம் கருக்கொண்ட காலகட்டம். இந்தப் பாடலும் அதையே சொல்கிறது.
இப்பாடல் அறம் ,பொருள், இன்பம் மூன்றையும் வீடுபேறுக்கான நிபந்தனையாக வைக்கிறது. குறள் முன்வைக்கும் பார்வையும் ஏறத்தாழ இதுவே. குறள் வீடுபேறு பற்றிப் பேசாமல் முப்பாலையே முன்வைக்கிறது. ’வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார்’ தெய்வமாகும் வழிமுறையைச் சொல்கிறது.
’மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை” என்ற தேவாரப்பாடலின் உளநிலையின் இன்னொரு வடிவம் இப்பாடலில் உள்ளது. அதாவது மண்ணில் முறையாக வாழ்வதுதான் நற்கதிக்கான முன்நெறி.
ஜெ
நீயும் நானும் பிரிவதற்கில்லை.
என்.டி.ஆரின் பழைய படங்களில் ஒன்று. பாடல் வரிகள் மொழிதெரியாதபோது மயக்குகின்றன. பொருள் தெரியும்போது வெறும் தேய்வழக்கு. கல்பற்றா நாராயணன் ஒருமுறை சொன்னார். “மொழியின் மிக அழகான வெளிப்பாடு என்பது பெரும்பாலும் நாம் நன்கறியாத மொழியின் தேய்வழக்குதான்”
பூக்கும் கருவேலம். ஒரு பார்வை – பொன். குமார்
எழுத்தாளர் பூமணி எழுத்துலகில் இடையறாது இயங்கி வரும் ஓர் உன்னத படைப்பாளி. அவர் எழுத்து புனைவாக இருந்தாலும் படைப்பில் காணப்படும் மனிதர்கள் அசலாக இருப்பார்கள். கரிசல் காட்டு மனிதர்களே கதை மாந்தர்களாக உலா வருகிறார்கள். பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வார்ப்புகள், அஞ்ஞாடி உள்பட பூமணி பல்வேறு தொகுப்புகளைத் தந்துள்ளார்.கருவேலம் பூக்கள் என்னுமொரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
பூமணியின் புனைவுலகு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய தொகுப்பு ‘ பூக்கும் கருவேலம்’. எழுத்தாளர் ஜெயமோகன் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் சக படைப்பாளிகளைச் சலிக்காமல், சளைக்காமல் எழுத்தில் கொண்டாடும் கலைஞனாக விளங்குகிறார். பூமணியைக் குறித்து அவர் எழுதியிருக்கும் பூக்கும் கருவேலம் தொகுப்பே ஒரு சான்றாவணம்.
பூமணியின் புனைவுலகு குறித்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் பொருட்டும் 2011ஆம் ஆண்டு விஷ்னுபுரம் விருது பூமணிக்கு வழங்குவது முன்னிட்டும் இத்தொகுப்பு எழுதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். ஒரு படைப்பாளனுக்கு இதை விட வேறு என்ன விருது இருக்க முடியும்? வெகுமதி வழங்க இயலும்?
எழுத்தாளர் பூமணியின் சந்திப்புடனே தொகுப்பு தொடங்கியுள்ளது. பூமணியின் வயதான தோற்றம் ஜெயமோகனை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கோவில்பட்டி உருவான வரலாற்றைக் கூறியுள்ளார். கோவில்பட்டியில் உள்ள இடைசெவல் பகுதி கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி என்னும் இரண்டு ஆளுமைகளைத் தந்ததையும் கரிசல் இலக்கியம் என்னும் சொல்லாட்சி உருவானதையும் அவ்வகையான கரிசல் எழுத்தாளர்களில் ஒருவரே பூமணி என்று அடையாளப்படுத்துகிறார்.
தலித் என்றாலும் தலித் எழுத்தாளர் என பூமணி தன்னை அறிவித்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் பின்புலத்தை விரிவாக எழுதி அவர்களும் நிலவுடைமையாளர்களே என்கிறார். நில அடிமைகளை எழுதாமல் வறட்சியாலும் வேறுகாரணங்களாலும் கூலி வேலைக்குச் செல்லும் நில உடைமையாளர்களே பூமணியின் கதை மனிதர்கள் என்கிறார். சமூக மோதல்களைக் கூட மனித வாழ்க்கைக்குள் கொண்டு வந்து உறவுகளின் சிக்கலாக மட்டுமே காட்டுவது பூமணியின் சிறப்பம்சம் என்கிறார். சாதியினருக்கான ஒரு நுட்பமான மோதல் இருந்தாலும் அது நிலவுடைமையாளர்களுக்கும் கூலிகளுக்குமான மோதலாகக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார் ஜெயமோகன்.
ஒரு நல்ல புனைவு எழுத்தாளரான பூமணி தன் அம்மாவைப் பற்றிய உண்மைச் சித்திரம் ‘ எலேய்’. அம்மாவிடம் எட்டு வயது வரை பால் குடித்த கடைக்குட்டி பூமணி. அம்மா ஒரு முழுமையான ஆளுமையாக கட்டுரையில் காட்டி இருந்தாலும் புனைவுலகில் அம்மா போன்ற பாத்திரங்களை உருவாக்கவில்லை என்பது ஜெயமோகனின் விமர்சனம். அப்பா இறந்த பிறகு தனியாளாக நின்று ஆறு பிள்ளைகளை வளர்த்த பாட்டையும் விவரித்துள்ளார். அம்மா இறந்தாலும் பூமணியின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது ‘ எலேய்’ என்பது நெகிழ்ச்சியான பதிவு.
பூமணியின் புனைவுலகுக்குள் தீண்டாமையைக் காண முடியாது என்கிறார் ஜெயமோகன். பூமணியின் நினைவுகளில் சாதி சார்ந்த ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் சகஜமான சாதியச் சித்தரிப்பை எதார்த்தத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிவித்துள்ளார். தாமரைப் போன்ற இதழ்களில் எழுதினாலும் முற்போக்கு முகாமுக்கு வெளியேயே இருந்துள்ளார் பூமணி என்று அவரின் எழுத்து நிலைப்பாட்டைக் காட்டுகிறார். வாசிப்பவனே சமூகச் சித்திரங்களாக விரித்துக் கொள்ள முடியும் என்கிறார்.
தாழ்த்தப்பட்ட சாதிக்குள் இருந்து தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து எழுதினாலும் படைப்புக்கு வெளியிருந்து பெறப்பட்ட புரட்சிக்கர யதார்த்தங்களை பூமணி முன்வைக்க வில்லை என்றும் கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவமில்லை என்றும் அறிவித்தவர் தமிழ் மட்டுமல்ல இந்திய மொழிகளிலும் இதுவோர் ஆச்சரியமே என வியந்துள்ளார்.
பூமணியின் புனைவுலகம் வெற்றிப் பெற அவர் வாழ்வில் கதை சொல்லிகள் இருந்துள்ளனர். முதலில் அம்மா ஒரு தேர்ந்த ஒரு கதை சொல்லி. கல்லூரி சென்ற போதோ மு. வரதராசன் அறிமுகமானார் பின்னர் சி. என். அண்ணா துரை அறிமுகம். எனினும் இரண்டாம் வழிகாட்டி சி. கனகசபாபதி. முன்னத்தி ஏராக கி. ராஜநாராயணன் இருந்துள்ளார். எழுத்துப்பயணத்தைத் தொடங்கி ‘ அறுப்பு’ முதல் சிறுகதை வெளியானதைக் குறிப்பிட்டுள்ளார். கி. ரா. வுடனான நெருக்கமும் அதிகரித்தது.
பூமணியின் இலக்கிய வட்டமும் எழுத்து உலகமும் 1500 பக்கங்கள் கொண்ட ‘அஞ்ஞாடி’ என்னும் நாவலை எழுத வைத்திருக்கிறது என்கிறார். இத்தொகுப்பு வெளிவரும் போது அஞ்ஞாடி நாவல் வெளியாகவில்லை. ‘ தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்’ என பூமணி தன்னம்பிக்கையுடன் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். பூமணியின் வாழ்நாள் சாதனையாக அஞ்ஞாடி இருக்கும் என நம்பிக்கையுடன் ஜெயமோகன் தெரிவித்தது போல சாகித்திய அகாதெமியின் விருதும் பெற்றது.
பூமணி எழுத்தாளராக இலக்கிய உலகம் அறியப்பட்டாலும் கூட்டுறவுத்துறையில் தணிக்கையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரின் பணிக்காலம் இடமாற்றங்கள், விசாரணைகள் என்றே கழிந்துள்ளது. எழுத்துக்குப் பணி இடையூறாகவே இருந்துள்ளதையும் தெரிவித்துள்ளார். இருந்தும் பணிக்காலத்திலேயே படைப்புகள் பல தந்துள்ளார்.
ஒரு தாத்தா, ஒரு தாத்தி, ஒரு சிறுவன் களத்து மேட்டில் உழைத்த காட்சியே ‘ பிறகு’ நாவல் எழுத காரணமாயிற்று என்றவர் ஒவ்வொரு படைப்பைப் பற்றிக் கூறும் போதும் உணர்ச்சிக் கொந்தளிப்பு அடைகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் பூமணி ஒரு கவிஞராகத்தான் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். தீபம் இதழில் வெளியானது. கருவேலம் பூக்கள் என்னும் திரைப்படத்துக்கான குறிப்பையும் கவிதையாகவே எழுதி வைத்துள்ளார் கவிதையை வாசிக்கத் தந்துள்ளார். திரைப்படம் வெற்றிப்பெறவில்லையாயினும் விருது பெற்றது ‘ யோக்கியமான’ படம் என சுஜாதாவால் பாராட்டப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
கரிசல் காட்டு எழுத்தாளர்கள் என ஒரு பட்டியலே உள்ளது. கரிசல் மனிதர்களைக் காட்சிப்படுத்துபவர்கள் குறைவு. கி. ரா. முதன்மையானவர் என்றாலும் பூமணி அவரிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார் என்பதைக் காட்டியுள்ளார். கி. ரா. வினுடையது கற்பனாவாத எதார்த்தம், பூமணியினுடையது இயல்புவாதத் தன்மைமிக்கது என்கிறார்.
கி. ரா. வின் எதார்ரத்தத்திற்கு நேர் எதிரானது பூமணியின் எதார்த்தம் என்று எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் கூறியதாகவும் ஒரு பதிவு உள்ளது.
கரிசல் மண்ணில் எது விளைகிறதோ இல்லையோ இலக்கியம் நன்றாக விளைந்துள்ளது. கரிசல் மண்ணில் கி. ரா. உள்பட பல படைப்பாளிகள் இலக்கியத்தை அறுவடைச் செய்திருக்கிறார்கள். கரிசல் இலக்கியவாதிகளுக்கு நன்றாக கை கொடுத்துள்ளதோ. இலக்கியத்திலிருந்து கரிசலைப் பிரித்தால் எதுவும் மிஞ்சாது.
கரிசலே பூமணியின் மொழியாகவும் இலக்கியமாகவும் ஆகியிருக்கிறது என்றும் கரிசலின் சுவையை அவரின் படைப்புலகத்திலும் காண முடிகிறது என்கிறார் ஜெயமோகன். கரிசல் மண்ணைத் தமிழ் இலக்கியத்தில் ஒர் உயிர்ப்படலமாகப் பரப்புவதில் வெற்றி கொண்ட கலைஞர் பூமணி என்று பாராட்டியுள்ளார்.
கரிசலின் இரு கதை சொல்லிகள் கி. ராஜநாராயணனும் பூமணியும் என்றவர் மிக நெருக்கமானவர்கள், மிக தூரமானவர்கள் என்று கூறியதைச் சிந்திக்க வேண்டியதாக உள்ளது. மேலும் ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொள்ளும் இரு கலைஞர்கள் என இருவரையும் ஒரு சம அளவில் வைத்துப்பார்த்துள்ளார். கரிசலைத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறச் செய்த இவர்கள் தமிழ் இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளனர் என்பது முக்கியத்துவமானது.
சிற்றிதழ் உலகில் மட்டுமே வெகுவாக அறியப்பட்டவர் பூமணி. சிற்றிதழ்கள் வழியாகவே அவரின் படைப்புகளும் வெளியாயின. பேசவும் பட்டன. பொது வாசகர்களும் அவரின் படைப்புகளை அறிந்துள்ளனர் என வியந்துள்ளார் ஜெயமோகன்.
பூமணியின் சிறுகதைகள் குறித்த கட்டுரையில் அவர் சிறுகதைகளை எல்லாம் ஆய்வுச் செய்து எழுதி அவரின் முடிவுகளை ஆங்காங்கே பதிவிட்டுள்ளார். 1. சிறுவர்கள் பெரும்பாலான கதைகளில் இடம் பிடித்துள்ளனர். 2. தேவையற்ற வார்த்தைகள் தேடினாலும் தென்படாது. 3. கதாபாத்திரத்தின் மீது கருத்துகளையும் உணர்வுகளையும் ஏற்றிச் செல்லும் தன்மை இல்லை. 4. தீவிரமான மானுட அவலம் கதைகளில் தவறாது காணப்படும். இறுதியில் இன்னொரு கரிசல் எழுத்தாளரான பா. செயப்பிரகாசம் அவர்களின் கூற்றை எடுத்துக் காட்டியுள்ளார். ” கரிசலின் மணம் கொண்டவை பூமணியின் கதைகள். கரிசலில் பெய்யும் புதுமழையின் மணம் கொண்டவை கி. ராஜநாராயணனின் கதைகள்” என்பதாகும் அது.
பூமணியின் நாவல்கள் குறித்தும் விரிவாக அலசியுள்ளார். அவரின் நாவல்களில் முதன்மையானது ‘பிறகு’. தமிழில் எழுதப்பட்ட செவ்விலக்கியப் பிரதி பூமணிக்கு அடையாளம் தந்த ஒரு வரலாற்று நாவல் என்கிறார். ஒரு பகடையை நாயகனாக்கிய முதல் நாவல். வெக்கை நாவல் வடிவம் மொழி ஆகிய தளங்களில் நவீனத்துவ தன்மைக் கொண்டது. குறுநாவல் என்றே கூற முடியும். இலக்கியக் கலையை உருவாக்குவதில் தகவல்களுக்கிருக்கும் பங்கு என்பதைக் காட்டும் படைப்பு. நைவேத்யம் படைப்பூக்கம் பெறவில்லை என்று கூறியவர் வாய்க்கால்கள், வார்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை. அச்சில் இருந்த அஞ்ஞாடி ஓர் ஆவணம் என்று தெரிவித்துள்ளார்.
பூமணியின் வழியில் அடுத்த தலைமுறையினரின் புனைவுலகு உருவாகி வந்திருக்கிறதென உறுதியாகக் கூறியுள்ளார். கரிசலின் வாழ்வும் வரலாறும் இலக்கியமாகும் அளவிற்கு வளமிக்க தஞ்சை பாடல் பெறவில்லை என்கிறார்.
பூமணியின் பிறகு நாவல் குறித்த எழுத்தாளர் பாவண்ணனின் கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. கல்வியின் பிறகாவது அடித்தள உழைப்பாளி மக்களின் வாழ்க்கையில் வெளிச்சம் படரக் கூடும் என்னும் நம்பிக்கையைக் காணமுடிகிறது என்பது நாவல் குறித்தான பார்வை.
பூமணியின் குடை என்னும் ஒரு சிறுகதையை வைத்து அ. ராமசாமி ஒரு கட்டுரையில் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் லஞ்சம் வாங்காதவராக இருப்பதுடன் உடன் பணிபுரிபவர்களையும் வாங்காமல் இருக்கச் செய்ய வேண்டும் என்று கதை சொல்கிறது என்று சொல்கிறார். . பூமணி கூட்டுறவுத்துறையில் தணிக்கையாளராக இருந்தும் லஞ்சம் பெறாதவர் என்பது குறிக்கத் தக்கது.
செந்தில் குமார் தேவன் என்பவர் பூமணியைச் சந்தித்து விட்டு வீட்டுக்குச் சென்று அவர் தாயிடம் தங்களுடன் பணிபுரிந்த மாணிக்கவாசகம் சாரைச் சந்தித்ததாக கூறுகிறார். அவர் தாய் அவரை நன்றாகவே தெரியுமே என்று சொல்லி விட்டு ஆமாம் பூமணியைத்தானே சந்திக்கப்போவதாக சொன்னாய் என்பதுடன் கட்டுரை நிறைவடைகிறது. பூ. மாணிக்கவாசகம் என்னும் அதிகாரிக்கும் பூமணி என்னும் எழுத்தாளருக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
பூக்கும் கருவேலம் என்னும் தொகுப்பு மூலம் பூமணி குறித்த ஒரு சித்திரத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் இதன் வாயிலாக பூமணியை மேலும் வாசகன் கண்டடைய வேண்டும் என்பது எழுத்தாளர் ஜெயமோகனின் வேண்டுகோள். பூமணியின் புனைவுலகிற்குள் மிக எளிதாக பிரவேசித்து புனைவின் பல்வேறு பரிமாணங்களை வாசகர்கள் அறியச் செய்துள்ளார். பூமணியின் பூர்வீகத்தில் தொடங்கி அவர் எழுத்து பயணிக்கும் திசையை அறியச்செய்துள்ளார்.
கரிசல் மண்ணிலேயே பூமணியின் புனைவிற்கான வேர்கள் உள்ளது என்கிறார். பூமணியின் எழுத்துகளுடன் பல்வேறு எழுத்தாளர்களைத் தொடர்பு படுத்தி பேசினாலும் கி. ரா. விற்கும் பூமணிக்குமான ஒப்பீடாக இத்தொகுப்பை அமைத்துள்ளார். இருவரையும் விட்டுக்கொடுக்கவில்லை.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுத வேண்டும் என்பதற்காக எழுதியதாக தெரியவில்லை. ஒரு படைப்பாளியை எப்படி வாசிக்க வேண்டும், எப்படி உள்வாங்க வேண்டும், எப்படி விமர்சிக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்தவராக ஜெயமோகன் உள்ளார் என்பதையும் காட்டுகிறது. எழுத்தாளர் ஜெயமோகனைத் தவிர எவர் ஒருத்தராலும் பூமணியைப் பூரணமாகக் காட்ட முடியாது. எழுத்தாளர் பூமணிக்கு விருதை விட பூக்கும் கருவேலம் பெருமையளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
– பொன் . குமார்
பூமணியை தொடர்தல்… வெக்கை,அசுரன்,பூமணி- கடிதம் பூமணி- மண்ணும் மனிதர்களும் விடலையும் குடும்பனும் – பூமணியின் அஞ்ஞாடி பூமணி விழா காணொளி பூமணி- சொல்லின் தனிமை பூமணி- எழுத்தறிதல் பூமணி- உறவுகள் பூமணியின் வழியில்
முகில் கடிதங்கள்-6
அன்புள்ள ஜெ
அந்த முகில் இந்த முகில் கதையில் மோட்டூரி ராமராவுக்கும் மெல்லி இரானி சீனியருக்குமான ஒப்புமைதான் ஆச்சரியமானது. இடிந்து சரிந்த ஒரு கடந்தகாலம். மொட்டைவெயில் எரிக்கும் மதியம். அவர் அதில் ஃபில்டர் போட்டு ஒரு கடந்தகாலத்துக் கனவையும் நிலவொளியையும் உருவாக்க முயன்றுகொண்டே இருக்கிறார். மோட்டூரி ராமராவும் அதைத்தான் செய்கிறார்
ஆனால் அத்தனைபேரும் அதையேதான் செய்கிறோம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப்பின் நினைவுகளால் ஓர் உலகத்தை உருவாக்கிக்கொள்ள முயல்கிறோம். மத்தியான்னத்தில் நிலவைக்கொண்டுவரும் முயற்சிதான் அது
எஸ்.ஆர்.என்.கிருஷ்ணன்
அன்புள்ள ஆசானுக்கு,
தளத்தில் புதிய பதிவுகள் இங்கே (அமெரிக்காவின் மேற்கு கரையோரத்தில்) சரியாக காலை 11:30 மணிக்கு தென்படத்துவங்குகிறது, முதல் பார்வையில் ஒன்றிரண்டு இடுகைகள் மட்டும் தான் இருக்கிறது, அரை நிமிடம் கழிந்து உலவியில் பக்கத்தை புதுப்பித்தால் அன்றைய நாளுக்கான அனைத்து இடுகைகளும் கண்முன் வந்து விழும்.
இதெல்லாம் ‘முகில்’ வாசிக்கத் துவங்கியபின் நிகழ்ந்த அவதானிப்புகள், பொதுவாக இப்படி புதிய இடுகைகளுக்காக காத்து நிற்கும் வழக்கம் என்னிடம் இல்லை, ஏனென்றால் காலை பதினொன்றை என்பது இங்கே அலுவல் சம்பந்தமான சந்திப்புகள் மும்முரமாக நிகழும் தருணம். ஆனால் ‘முகில்’ உள்ளே இழுத்துக்கொண்டது. சரியாக அந்த நேரத்தில் தளத்தைப் பார்க்க முடியவில்லை என்றால் ஒரு நிலைகொள்ளாமை, பரபரப்பு. கை விரல்கள் நடுங்குகிறதா என்று ஒரு சின்ன சந்தேகம், ஹெராயின் முதல் முகநூல் வரை போதை அடிமையரை பார்த்திருக்கிறேன், கடைசியில் நானும் விழுந்து விட்டேனா? :)
“அந்த நுரைக்கு என்ன மதிப்பு? … கற்பனாவாதம் வாழ்க்கையை அறிய, வாழ்க்கையை பயனுறச்செய்ய எவ்வகையிலும் உதவாதுதான்”
இருக்கட்டுமே ஆசானே, பயனற்றதாகவே இருந்துவிட்டுப் போகட்டும், அப்படி நுரைத்துக் கொப்பளிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துதான் என்ன கிடைக்கப்போகிறது? வாழ்க்கைக்கு அப்படி ஏதேனும் பயன் இருந்தேதான் ஆகவேண்டுமா? இப்படியெல்லாம் என்னுள்ளிருக்கும் ‘முகில்’ வாசகன் இன்னும் கிறக்கம் நீங்காத கண்களுடன் உங்களை எதிர்க் கேள்வி கேட்க்கிறான், அவனை என்ன செய்ய?
நிலவு பொழிந்து வழிந்த அந்த இரவில் கதைமாந்தர்கள் பேசிப்பேசி அணுகி அதன் முடிவில் பாடியும் கரைந்தபடி சைக்கிளில் போனபோது நிலவொளியில் நனைந்தபடி அவர்கள் அறியாமல் அவர்களைத் தொடர்ந்த கந்தர்வர்களுடன் அவனும் இருந்தான். கதைசொல்லி நிலவொளியை முகத்தில் வாங்கி அனைத்தில் இருந்தும் விடுதலை அடைந்த உணர்வை அடைந்தபோது அவனும் அதே உணர்வை அடைந்தான்.
அனால் உண்மையில் நிலவொளி நம்மை விடுதலை செய்த கையோடு வேறு ஒரு மாயப் பித்தில் சிக்கவும் வைத்து விடுகிறது போல, அதனால்தான் எதையும் தர்க்கம் வழியே அணுகும் மேற்கத்திய கலாச்சாரம் மனப்பிறழ்வை நிலவின் பெயரால்(Luna, Lunar, Lunacy, Lunatic) குறிக்கிறது என நினைக்கிறேன்.
ராமராவுக்கும் அதுவே நிகழ்கிறது, ஸ்ரீபாலாவை வண்டிஏற்றி விட வந்தவன் அவளுடன் கிளம்பி விடுகிறான் (நான் எல்லா அவசர அலுவலக வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு இப்படிக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்), பித்தேறிய ராமராவ் மேகங்களை பார்க்கிறான் பித்து முழுமையடைகிறது, “அந்த மேகத்தை பார்த்தாயா?” என்று ஆரம்பிக்கிறான், அப்படிக் கேட்பவன் முற்றிலும் வேறு ஒருவன், என்னளவில் இதுவே இந்த கதையின் உச்சம், மேகத்தைக் குறிக்க தெலுங்கு மொழியில் மிகப் பொருத்தமான ஒரு ‘தமிழ்’ வார்த்தையைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
தர்க்கரீதியாக பார்த்தால் அந்தத் தருணத்திலிருந்து தான் கதைசொல்லி மலைச்சரிவில் பற்றிக்கொள்ள எதுவும் சிக்காமல் உருண்டு விழும் ஒரு பாறையைப் போல சரிந்து சரிந்து கீழிறங்குகிறான், ஆனால் தர்க்கத்தை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு பார்த்தால் இரக்கமே அற்ற லவுகீக விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே வாழவேண்டிய இந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டது மேலே மேலே பறக்கிறான், இரண்டுமே உண்மைதான், அதுவும் ஒரே சமயத்தில். புறவயமாக பார்த்தால் அவன் செய்தது வெறும் இரண்டு நாள் பயணம், ஹம்பியிலிருந்து ராஜமந்திரிக்கு. ஆனால் அகவயமாக திரும்ப இயலாத தொலைவிற்கு சென்று விடுகிறான், அவன் மொத்த வாழ்வும் மாற்றி அமைக்கப்பட்டு விடுகிறது.
இப்படியெல்லாம் வாழ்க்கையின் களியாட்டத்தை கொண்டாட்டத்தை அதன் அடர் வண்ணங்களுடன் அப்படியே சொற்களில் அள்ளி எடுத்து வைத்து ஒரு படைப்பை எழுதி முடித்த அடுத்த நாளே “கற்பனாவாதம்” என்றெல்லாம் சொல்லி இந்தப் படைப்பை ஒரு சட்டகத்துக்குள் அடைக்கும் ஆசிரியர் குறிப்பு, நீங்கள் எழுதிக் குவிக்கும் வேகம் திகைக்க வைக்கிறது என்றால் எழுதி முடித்தவற்றில் இருந்து விலகிச் செல்லும் வேகம் அதைவிட பெருந்திகைப்பை ஏற்படுத்துகிறது.
கதையின் முடிவில் கூட அப்படி ஒரு விலக்கத்தை வாசிக்கிறேன். இந்த கதை உருவாக்கிய உணர்வு வெளியில் மிதந்து கொண்டிருக்கும் வாசகரிடம் கருணையே இல்லாத யதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது முடிவு, மலை உச்சியிலோ அல்லது உயரமான கட்டிடத்திலோ இருந்து விழுவது பறப்பதை போல சுகமாகத்தான் இருக்கும், நிலத்தில் உடல் வந்து அறையும் இறுதிக்கணம் வரை என்று சொல்கிறது, பிரபஞ்சத்தை இயக்கும் இயற்பியல் விதிகள் கருணையற்றவை என்று சொல்கிறது முடிவு.
ஒரு வேளை சேர்ந்து வாழ அவளை அழைத்திருந்தால் கூட அவள் ஒத்துக்கொண்டு இருப்பாளா? என்னதான் அவலமான வாழ்க்கை என்றாலும் அவளுக்கும் வாழ்க்கை பற்றி ஒரு கனவுகள் இருந்திருக்கும், அவள் உடல் மீது மட்டும்தான் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், ஆன்மா சுதந்திரமாக இருக்கிறது, யாருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவள் அல்ல அவள், இந்த பித்தை ஏற்றுக்கொள்வது என்பது அவள் அகத்தின் மேல் அவன் ஆக்கிரமிப்பை அனுமதிப்பது போல தானே? அவள் அகம் அனுபவிக்கும் கட்டற்ற விடுதலையை இந்த இரண்டு நாள் பித்துக்கு ஈடாக கொடுப்பாளா?
அப்படியானால் இந்தமாதிரி பித்து மனநிலை என்பது தர்க்கவாதிகள் சொல்வது போல ஒரு மாதிரி மனப்பிறழ்வு மட்டும்தானா? தவிர்க்கப்பட, கட்டுப்படுத்தப்பட, குணப்படுத்தப்பட வேண்டியது மட்டும்தானா? இந்த வாழ்க்கையில் அதற்கு பொருள் ஏதும் இல்லையா? இயற்கை பயனற்ற எதையும் படைப்பதில்லையே.
சிறிய விஷயங்களால் தூண்டப்பட்டு மனிதனில் எழும் இந்த பித்தை திசைமாற்றி அவன் அடையக்கூடிய அந்த மாபெரும் உச்சத்தை நோக்கிய ஒன்றாக சீரமைத்து அதற்கு தான் ‘பக்தி’ என்று பெயர் கொடுத்து சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர் என நினைக்கிறேன். It is the ultimate hacking of life itself. தன் கண்ணை அகழ்ந்து எடுத்து சிவம் என உருவேற்றம் செய்யப்பட்ட கல்லின்மேல் வைத்த கண்ணப்ப நாயனாரை செலுத்தியது எது?
சிறைப்பட்ட சுண்ணாம்புக் காளவாயை ‘தென்றல் வீசும் பொய்கை’ யாக நாவுக்கரசரை உணர வைத்தது ஒரு உன்னதமான பித்தகாகத்தான் இருக்க முடியும். இதையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதைகள் என்றுதான் என் தர்க்க மனம் அணுகும், ஆனால் இந்த இணைய யுகத்தில் எல்லாவற்றுக்கும் சான்றுகள் உண்டு, தான் உலகிற்கு சொல்ல விழையும் செய்திக்கு வலுசேர்க்க உயிர்க்கொடை செய்த இந்த வியட்நாமிய பிக்கு உடல்பற்றி எரியும்போது அசையாமல் தன் ஆசனத்தில் நிலைக்கிறார் (https://www.youtube.com/watch?v=VCEWSSVjrTw , https://en.wikipedia.org/wiki/Th%C3%ADch_Qu%E1%BA%A3ng_%C4%E1%BB%A9c), இதை தர்க்க மனம் எப்படி எதிர்கொள்ளும்? அப்படியே சத்தமின்றி கடந்து செல்லும், ஆவணப்படுத்தும், ஆவணப்படுத்திய புகைப்படகாரருக்கு புலிட்ஸர் பரிசு வழங்கும், மறுபடியும் அதை பித்து என்று பிடிவாதமாக வகைப்படுத்தும், அப்படியானால் குணப்படுத்தப்பட வேண்டியவை எவை? நம் தர்க்க முறைமைகள் தானா?
நிற்க, எங்கோ போய்விட்டேன், மறுபடியும் முகிலுக்கு வருகிறேன், இந்த நாவலில் எப்படியோ தெலுங்கின் அழகும் அந்த மொழி புழங்கும் மண்ணின் வாழ்க்கையும் அனுபவ பட்டுவிடுகிறது, உரையாடல்கள் கூட தெலுங்கிலிருந்து மொழிபெயர்த்தது போல ஒரு உணர்வு, அவற்றை எனக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கை வைத்துக்கொண்டு தெலுங்கிலேயே மனதில் நிகழ்த்திக் கொண்டேன், “கண்ணீரைப் பின்தொடர்தல்” முன்னுரையில் தெலுங்கில் இலக்கிய வாசகன் புரட்டிப் பார்க்கும் தகுதி பெற்ற நாவல்கள் ஒன்றுகூட தட்டுப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள், ஆனால் இந்த நாவலில் வரும் மேற்கோள்கள், பாடல்கள் அதன்மூலம் உங்களால் அள்ளப்பட்ட அந்த மொழியின் அழகு எல்லாம் நீங்கள் சொன்னதற்கு மறுதரப்பாக உங்களாலேயே வைக்கப்படுகிறது.
இந்த நாவலில் வரும் திரைப்பாடல்கள் பற்றி, அவை எப்படி காதலின், அது உருவாக்கும் பித்தின் தவிர்க்க முடியாத பாகமாக, சில சமயம் அந்த பித்தையே உருவாக்குவதாக இருக்கிறது என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் நீங்கள் இந்த கடிதத்தை பிரசுரிக்க வாய்ப்புண்டு, இந்த தளத்தை மிக சிறந்த இசை கலைஞர்கள் வாசிக்கிறார்கள் என்று தெரியும். அவர்கள் என் திரையிசை ‘ரசனையை’ புஷ்பா தங்கத்துரையின் மாத நாவல்களை இலக்கியமாக ரசிக்கும் ஒரு வாசகனை பார்ப்பதை போல மேட்டிமை நிறைந்த சின்ன சிரிப்புடன் பார்ப்பார்கள் என்பதால் தவிர்த்துவிடுகிறேன். ‘பரிசுக்கு போ’ வில் சாரங்கன் இதைப்பற்றி சொல்வது வேறு நினைவுக்கு வருகிறது
“.. நமது புராதன சங்கீதம் உயர்வானதும், மேற்கத்திய சங்கீதம் உயர்வானதும் நவீனமானதும் ஆகும். நமது தற்கால வாழ்க்கையின் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருப்பதாக நீங்கள் சொல்லும் சினிமா சங்கீதம் ஓர் ‘இசை சோரமே’ தவிர வேறல்ல….” (பக் 294, 12ஆம் பதிப்பு, மீனாட்சி புத்தக நிலையம்).
இது எழுதப்பட்டு 55 ஆண்டுகள் கடந்துவிட்டன, அரை நூற்றாண்டுக்கும் மேல். மகா கணம் பொருந்திய இசை மேதைகள் ஒரு மறுபரிசீலனைக்கு காலம் வந்துவிட்டது என்று கருணை காட்டுவார்களா?
இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் இப்படித்தான் ஸ்வாமிகளா, எனக்கு இசை என்றாலே திரையிசை தான். தாலாட்டு, Therapy Session எல்லாமே அதுதான். ‘சேற்றில் உழலும் பன்றியின் ரசனை’ என்றெல்லாம் என் இசை ‘ரசனையை’ பற்றி சொன்னாலும் இதே பதிலைத்தான் சொல்வேன். ‘ஆமாம் சேறு தான், ஆனால் என் தோலில் ஓட்டுகிறது, சொர்க்கம் போல இருக்கிறது, அப்படியே உழன்ற படி இந்த சிறு வாழ்க்கையை கடந்துவிடுகிறேனே’.
தோலில் ஓட்டுகிற, வாழ்வின் கொண்டாட்டங்களில் கலந்திருக்கும், தனிமையில் துணையிருக்கும், பித்தேறிய மனதை மேலும் மேலும் பித்தேற வைக்கும் திரைப்பாடல்கள் அதே வண்ணம் இந்த நாவலில் பிரதிநிதித்துவ படுத்தப்பட்டுள்ளது. திரைஇசையும் பித்தும் உந்திச் செலுத்த கதைசொல்லி மேற்கொள்ளும் அலைதல் மிகுந்த அகப்பயணத்தின் ஒரு கட்டத்தில் இரு பாடல்கள் ஒன்றாக மாறி கலந்துவிடுவது இந்த நாவலின் கவித்துவ உச்சம்.
இந்த நாவல் கடந்து சென்று விட்ட ஒரு காலகட்டத்தின் காதலை சொல்கிறது, மொத்த வாழ்க்கையையும் பலியாக கோரும் காதல். இன்று நாம் வாழும் நிகழ்காலத்தில் Tinder செயலியில் பக்கங்களை புரட்டுவது போல முகங்களை மேய்ந்து கட்டைவிரலை மட்டும் அசைத்து சொடுக்கி விருப்பை பதிவு செய்யலாம் என்று தெரிகிறது, அது பரஸ்பரமாக விருப்பமாக இருக்கும் பட்சத்தில் செயலி உரையாடலை அனுமதிக்கும்.
இந்த இரு உலகங்களுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தூரம் திகைக்க வைக்கிறது, அல்லது தூரத்தை நாம்தான் கற்பனை செய்து கொள்கிறோமா? கதை சொல்லி ஸ்ரீபாலாவை நடனப் பெண்களின் நடுவே அவர்களில் ஒருவளாகத் தான் முதல் முதலில் பார்க்கிறான், நீண்ட மருட்சி நிறைந்த கண்கள், நீளமுகம், நெற்றியில் விழும் முடிச்சுருள் இதெல்லாம் தான் அவனை ஈர்க்கிறது, அதுதான் இன்று Tinder வழியாகவும் நடக்கிறதா? தெரியவில்லை. எந்த சிறு விஷயமும் காலத்தின் முன் வைக்கப்படும் போது கலையாகிறது என நீங்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது, வருங்காலத்தில் Tinder காதல் கதைகளும் வரலாம், காத்திருப்போம்.
நீங்கள் தருமபுரியில் வாழ்ந்த காலத்தில் அருண்மொழி அக்காவுக்கு தினம் ஒரு கடிதம் எழுதுவீர்கள் என்று படித்திருக்கிறேன், எவ்வளவு தான் கற்பனை திறன் கொண்ட படைப்பாளி ஆனாலும் அந்த நிலவொளி படாமல் இப்படி ஒரு படைப்பை எழுத முடியாது என நினைக்கிறேன். இரவில் கடிதம் எழுத துவங்கினேன், கிட்டத்தட்ட விடிகாலை ஆகிவிட்டது. வாழ்க்கையில் கடைசியாக இப்படி விடிய விடிய விழித்திருந்து எழுதியது என் மேல் நிலவொளி பட்ட அந்த கொந்தளிப்பான இனிமையான நாட்களில் தான், அந்த நாட்களை அந்த நிலவொளியில் என்னைப்போல பல வாசகர்களை மீண்டும் வாழச் செய்த உங்களுக்கு நீங்கள் உருவாக்கிய கலைக்கும் என் வணக்கங்கள் ஆசானே.
அன்புடன்
ஷங்கர் பிரதாப்
இன்று காலை இந்த ஆ மப்பூ ஈ மப்பூ பாடலையும் அவர்கள் சைக்கிளில் செல்லும் பேரழகையும் காட்சிப்படுத்தியுள்ளது நெஞ்சையள்ளி ஏதோதோ நினைவுகளை கொண்டுவந்து குவிக்கிறது.
அதிலும், நுண்கலைகளோடுகூடிய புத்திகூர்மையும் சரளமும் ஒருங்கே அமைந்து விட்ட இளம்பெண்ணோடு அளாவளவும் பேச்சின்பம் அபாரமானது.
1984ல் சிவில் சர்வீஸ் பரிட்சைக்கு படிக்க ரெகுலராக கன்னிமாரா லைப்ரேரிக்கு போகும் வழக்கமுண்டு. ரோமீளா தாப்பரின் அசோகா புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க உட்கார்ந்த போது அருகில் வந்தமர்ந்த பெண் புத்தக தலைப்பை பார்த்து நானும் இப்புத்தகத்தைத்தான் தேடிவந்தேன் என்றாள். ரெபரன்ஸ்க்காக எடுத்துள்ளேன், பார்த்துவிட்டு கொடுத்து விடுகிறேன் அதுவரை வேறு எதாவது படித்துக்கொண்டிருங்களேன் என்றேன்.சரி,என்று வேறு புத்தகத்தை தூக்கி வந்து அருகமர்ந்து படிக்கத்தொடங்கினாள்.
அவசர அவசரமாக குறிப்பெடுத்துவிட்டு கொடுக்கும்போது பதினோரு மணியாகியிருந்தது.சிறிய எழுத்துக்களை பார்த்து தலைவலிக்கிறது,காபி குடிக்கனும் போலிருக்கு, நீங்களும் வருகிறீர்களா? என கேட்டேன். சரி என்றதால் இருவரும் வெளியே கேப்டீரியாவுக்கு போய் கண்ராவியான காபியை குடித்தோம். அதல்ல மேட்டர். அப்போது பேசும்போது ஹிஸ்டரி மேஜர் எடுத்ததில் ஆரம்பித்து மொஹல் கல்சர்,மினியேச்சர் ஓவியங்கள்,யூனானிவைத்யமுறை,சூஃபி தத்துவம்,உருது கவ்வாலி என பேச்சு சங்கிலி பின்னலாய் தொடர காரணமானது அந்த பெண்ணின் விசாலமான நாலெட்ஜ்.
மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து பேசினோம் பேசினோம் சாயங்காலம் வரை.அந்த பெண் டெல்லி சர்வகலாசாலையில் படிக்கிறாளாம்.அதன் பின் பார்க்கவில்லை. ஆனால் அந்த நாள் என்றும் மறக்காது.
விருமாண்டி யில் அன்னமும் சண்டியரும் கொடைக்கானலுக்கு போகும் காட்ரோட்டில் சைக்கிளில் போகும்’ ஒன்னை விட ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்லா’இந்த கதையின் இன்றைய பார்ட்டை படிக்கும்போது ஞாபகத்துக்கு வந்து படுத்துகிறது.இரவில் முழுநிலவின்போது டூ வீலரில் போகும்போது பார்க்கும் அழகே தனி…
காதலில் பெரும்பாலும் பெண்கள், ஒப்புநோக்கும்போது சமநிலை தவறுவதில்லை. மோட்டூரி ராமாராவ் இப்போது அழைத்திருந்தாலும் அவள் வந்திருக்கப்போவதில்லை. தன் வாழ்வு சார்ந்து அவள் தெளிவாயிருக்கிறாள்.
மோட்டூரிராமாராவ்தான் சற்று நிலைதடுமாற்றத்தில் இருந்திருக்கிறார் அப்போது. அவரும் அவளை அழைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.அன்று பஸ் ஸ்டாண்டில் அழைப்பேன் என எதிர்பார்த்தாயா? எனத்தான் கேள்வியாக கேட்டு தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிறார்.
வாழ்வில் முடிவெடுக்க வேண்டிய தருணங்கள்தான் எத்தனை கொடியது?
To be or not to be?
என மருண்டு மயங்கி பொசுங்கவேண்டியுள்ளது.
Bridges of Madison County யில் இதேபோல பிரான்செஸ்கா அன்பான குடும்பமா? இரு நாள் சூறாவளி உறவில் அறிமுகமான போட்டோகிராபரா என கணவனோடு காரில் அமர்ந்தவாறே கார் கதவை திறக்க ஹேண்டிலை அழுத்தும் அழுத்து…நானெல்லாம் செத்தே போனேன்.
நிகர் வாழ்க்கையை வாழ வைக்கும் எழுத்துக்கு சொந்தமான அத்தனை கைகளுக்கும் அன்பு முத்தங்கள்.
விஜயராகவன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முரசு’ நாவல் தொடரில் எட்டாவது நாவல் ‘காண்டீபம்’. என்னைப் பொறுத்தவரை ‘காண்டீபம்’ என்பது, நெடும் பயணத்திற்கான உந்துவிசை. எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘காண்டீபம்’ என்பதை முடிவற்ற ஆற்றலுக்குக் குறியீடாகவே இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார். அர்சுணனின் உள்ளமும் காண்டீபமும் ஒன்றே.
அர்சுணனின் உள்ளமே அவனை எங்கும் எத்தகைய தடையையும் தகர்த்தபடியே முன்னோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. காண்டீபமும் தன்னுள் ஏற்றப்படும் அம்பினை அவ்வாறே பாயச் செய்கிறது. ‘காண்டீபம்’ நாவல் முழுக்க முழுக்க அர்சுணனின் அதிதிறமை பற்றியும் பிறரால் அடைய முடியாத அரிய மகளிரையும் எண்ணற்ற தடைகளைத் தன் மனஉறுதியாலும் உடல் வலிமையாலும் தகர்த்து, திருமணம் புரியும் விதங்கள் குறித்தும் பேசுகிறது.
தொடக்கத்திலும் இறுதியிலும் சிறார்களின் கனவுலகம் பற்றி விரியும் இந்த நாவலின் அடுத்தடுத்த அத்யாயங்கள் ‘காமிக்ஸ்’ தன்மை கொண்டு திகழ்கின்றன. வாசகரைச் சிறார்களின் மனநிலைக்குக் கொண்டுவராமல், அவர்களைச் சிறார்களின் கனவுலகத்துக்குள் இழுத்துச்செல்ல முடியாது என்பதற்காகவே எழுத்தாளர் இவ்வாறு அமைத்துள்ளார். அர்சுணன் மேற்கொள்ளும் நெடும் பயணங்கள் அனைத்துமே சாகஸக்காரருக்குரியவைதான். அதனாலேயே அந்தப் பயண வழியில் அர்சுணன் எதிர்கொள்ளும் அனைத்தும் எழுத்தாளரின் சொற்களின் வழியாக அதிகற்பனையில் விளைந்த ‘செவ்வியல் காமிக்ஸா’க மாறிவிடுகின்றன.
அர்சுணன்-உலூபிக்கு அரவான் பிறப்பதும், அர்சுணன் ஃபால்குனையாக மாறி சித்ராங்கதனை அடைந்து, ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறி பப்ருவாகனைப் பெற்றெடுப்பதும் ஐந்து தேவகன்னியர்கள் ஐந்து முதலைகள் போல வடிவெடுத்து வந்து, அர்சுணனைத் தாக்குவதும் அவர்களை அர்சுணன் எளிதில் வெல்வதும் ஏரியில் மிதக்கும் அதிசய நகரத்தைப் பற்றிய சித்திரமும் மீகற்பனைகளே என்றாலும் கூட, வாசகர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் எழுத்தாளர் காட்சிகளை அமைத்துள்ளார்.
எழுத்தாளரின் இனிய சொற்களால் கட்டுண்டு, அவற்றோடு இணைந்து, மிதந்து செல்லும் வாசகர்கள் அனைவருமே எது கற்பனை, எது அதிகற்பனை என்று பிரித்தறிய இயலாதவாறு அந்த அத்யாயங்களைக் கனவில் நடப்பதுபோல நடந்து, கடந்துவிடுவர். இது எழுத்தாளரின் எழுத்தாற்றலுக்கான பெருவெற்றி.
அர்சுணனின் அதிதிறமை வெளிப்படும் வகையில் ஒவ்வொரு அத்யாயத்தையும் ‘செவ்வியல் காமிக்ஸா’க வடிவமைத்துள்ளார் எழுத்தாளர். இது தமிழ் வாசகர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைத் தரவல்லதே! ‘வெண்முரசு’ தொடர் நாவல்களில் ‘மாயா யதார்த்தம்’ ஆங்காங்கே மிளிர்ந்தாலும் இந்தக் ‘காண்டீபம்’ நாவலில் அது பெருகி, உச்சம் கொண்டுள்ளது எனலாம். அதனாலேயே அது ‘காமிக்ஸ்’ தன்மையைப் பெற்றுள்ளது. ஒருவகையில் ‘காண்டீபம்’ நாவலை ‘ஆன்மிக காமிக்ஸ்’ வகையைச் சார்ந்தது எனலாம்.
இந்த நாவலில் சில அத்யாயங்களில் உள்ளும் புறமுமாகச் சமண (அருகர்) சமயத்தைப் பற்றி விரிவான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அக்காலச் சமுதாயத்தில் சமண சமயத்தின் தாக்கம் பற்றியும் இனக்குழு மக்களிடையே சமணம் பெற்றிருந்த செல்வாக்குக் குறித்தும் அறிய இந்தப் பகுதிகள் உதவுகின்றன.
இதுவரை சமணம் பற்றி அறியாத வாசகரும் அந்தச் சமயத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளும் வகையிலும் மகாபாரத மாந்தர்களிடையே சமண சமயத்தின் ஊடாட்டம் பற்றிச் சிந்தித்து உணர்ந்துகொள்ளும் முறையிலும் அவற்றை நிரல்படுத்தி அமைத்திருக்கிறார் எழுத்தாளர். எளிய மக்களிடையே இருக்கும் சமண மதம் சார்ந்த பற்றுதலும் விலகலும் சில காட்சிகளின் வழியாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
சமண மதம் மட்டுமல்ல எந்த மதமும் எளிய மக்களிடையே இத்தகைய பற்றுதலோடும் விலகலோடும்தான் இருக்கும் என்பதை இக்காலச் சமுதாயத்தில் உள்ள எளிய மக்களை முன்னிறுத்தியும் நாம் உணர்ந்துகொள்ள முடியும்தான். அருகநெறியும் கருணைமொழியும் கொண்டவராக அரிஷ்டநேமியைப் படைத்து, அவரையும் இளைய யாதவருக்கு நிகரானவராகக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.
‘வெண்முரசு’ நாவல் வரிசை ஒவ்வொன்றிலும் வாசகர்கள் விதவிதமான அதிமானுடரைக் காணமுடியும் என்பதுதான் ‘வெண்முரசு’ நாவல் வரிசைகளின் பலமும் சிறப்பும் ஆகும். அந்த வகையில்தான் இந்தக் ‘காண்டீபம்’ நாவலில் அரிஷ்டநேமி இடம்பெற்றுள்ளார்.
இவர் இளைய யாதவரையும் வென்றவராகவும் இந்திரனின் வெள்ளையானையின் மீதேறி விண்ணகம் செல்பவராகவும் காட்டப்பட்டுள்ளார். ‘வெண்முரசு’ நாவல் வரிசைகளில் பெரும்பாலும் சைவமும் வைணவமும் இரண்டறக் கலந்துள்ளன. அவற்றோடு, அவற்றுக்கு நிகராகச் சமண சமயமும் பிணைந்துள்ளது என்பதற்கு இந்தக் ‘காண்டீபம்’ நாவலே சாட்சி.
துவாரகையிலிருந்து அர்சுணனும் சுபத்திரையும் தப்பிச் செல்லும் காட்சி சில அத்யாயங்கள் வரை நீள்கின்றன. அந்த அத்யாயங்களில் எழுத்தாளர் பயன்படுத்தியிருக்கும் சொற்றொடரமைப்பின் வழியாக அர்சுணனும் சுபத்திரையும் செல்லும் யவனத்தேரின் அதிவேகமும் துவாரகையின் ஒவ்வொரு குறுக்குத் தெருவின் காட்சியும் நம் கண்முன் துலங்குகின்றன.
சுபத்திரையின் திறமையும் அர்சுணனின் வலிமையும் துவாரகையின் நகர்விரிவும் என மூன்றையும் இணைத்து, அவற்றை வாசகருக்கு உணர்த்தும் வகையில் அந்த அத்யாயங்களின் சொற்களைத் தேர்ந்து எழுதியுள்ளார் எழுத்தாளர். வாசகர்களைத் தன் சொற்தேரில் ஏற்றிக்கொண்டு, துவாரகையைச் சுற்றிக்காட்டி, அர்சுணனுடனும் சுபத்திரையுடனும் வாசகரும் துவாரகையின் கோட்டைவாயிலைக் கடந்துசெல்லுமாறு செய்துவிடுகிறார் எழுத்தாளர்.
‘இந்திரப்பிரஸ்தம்’ பற்றிய விரிவான விவரிப்பு இந்த நாவலில்தான் இடம்பெற்றுள்ளது. ‘வெண்முகில் நகரம்’ நாவலில் ஒரு வரைபட அளவில் மட்டுமே காட்டப்படும் ‘இந்திரப்பிரஸ்தம்’ இந்த நாவலில்தான் அது எவ்வெவ்வகையில் துவாரகையைவிடச் சிறந்தது, வேறுபட்டது என்பது பற்றியெல்லாம் விளக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஊடாக ‘இந்திரப்பிரஸ்தம்’ குறித்த எதிர்மறை விமர்சனமும் இழையோடுகிறது.
பெண்களின் அதிகாரங்கள் நிறைந்த அந்தப்புரங்கள்; ஆண்களின் விழைவுகள் நிரம்பிவழியும் அரசவைகள்; வணிகர்களின் பேராசைகளால் மிளிரும் வணிகப் பெருநகரங்கள் என மூன்று தரப்புகளால் ‘காண்டீபம்’ நாவல் முப்பட்டை ஊசிபோலத் திகழ்கிறது. ‘அரசு’ என்பது, ‘வணிகத்தால் உருவாக்கப்படுவதே தவிர, படைக்கலங்களால் அல்ல’ என்ற கருத்தினை ‘வெண்முரசு’ நாவல் வரிசைகளில் தொடர்ந்து காணமுடிகிறது.
அர்சுணன்-உலூபி பற்றிய தகவல்களில் இடைவெட்டாக ஆண், பெண் பாலின மாற்றத்தால் ஏற்படும் உடலியல், உளவியல் சார்ந்த நெகிழ்வுகளை நுண்சொற்களால் விளக்கியுள்ளார் எழுத்தாளர். அர்சுணன் உடலளவிலும் மனத்தளவிலும் சிவயோகியாக மாற்றம்கொண்டு ரைவத மலைக்கும் இந்திரப்பிரஸ்தத்துக்கும் நுழையும் காட்சிகளில் பிறிதொரு அர்சுணனை வாசகர்கள் கண்டடைகின்றனர். அந்த அர்சுணன் குருதியை வெறுக்கும் அர்சுணன்; படைக்கலங்களைப் புறக்கணிக்கும் அர்சுணன். அத்தகைய அர்சுணனையே சுபத்ரை விரும்புவதாக எழுத்தாளர் காட்டியிருப்பது ஒருவகையில் ஒட்டுமொத்த கதையோட்டத்தில் ஏற்படும் துள்ளல்தான்.
பெண்மீது முடிவற்ற விழைவுகொண்ட அர்சுணனையே அனைத்துப் பெண்களும் விரும்பும்போது, சுபத்ரை மட்டும் சிவயோகி வேடமிட்ட அர்சுணனை விரும்புவது ஒரு முரண்தான். இதற்குச் சுபத்ரைக்கு ஷத்ரியர்களைப் பிடிக்காது என்பது, ஒரு காரணமாக இருந்தாலும் இயல்பாகவே சுபத்ரையிடம் குடிகொண்டுள்ள இறுமாப்புதான் முதன்மைக்காரணமாக இருக்கும்.
ஒருவகையில், ‘திரௌபதியின் மற்றொரு வடிவம்தான் சுபத்ரை’ என்ற நோக்கில் நாம் சிந்தித்தால், சுபத்ரையின் இந்த இறுமாப்புக்குரிய அடிப்படைக் காரணத்தை நம்மால் உய்த்தறிய இயலும். அந்த இறுமாப்பினைத் தகர்ப்பதற்காகத்தான் திரௌபதி இந்திரப்பிரஸ்தத்துக்குள் நெடுநாட்கள் கழித்து நுழையும் அர்சுணன் ‘தன்னையே முதலில் சந்திக்க வேண்டும்’ என்று விரும்பி, அவனை அழைத்துச் சந்திக்கிறாள்.
அர்சுணன்-சுபகைக்கு இடையிலான உறவிலிருந்துதான் இந்தக் ‘காண்டீபம்’ நாவல் தொடக்கம் பெறுகிறது. அந்த உறவின் உண்மைத்தன்மையை வாசகருக்கு விளக்கிய பின்னரேதான் இந்த நாவல் நிறைவுறுகிறது. சுபகை-அர்சுணன் உறவில் சுபகை அர்சுணனுக்குத் தன்னை ஆத்மார்த்தமாக முழுதளித்தாள் என்பதே எழுத்தாளரின் அழுத்தமான கருத்தாக இருக்கிறது. அதனாலேயே அர்சுணனுக்குப் பிற பெண்களைவிட அவளே அகவயமாகிறாள். அவள் விழைவதும் அதைத்தான். அதை அவள் எய்துவிடுகிறாள். ஆம்! அவள் காண்டீபத்தில் பொருத்தப்பட்ட அம்பு. ஆனால், என்றைக்கும் எய்யப்படாதவள். ஆனாலும், தன்னிலக்கை அடைந்தவள். இத்தன்மையே அவளை வாசகரின் நெஞ்சில் நிறுத்திவிடுகிறது.
இதுநாள் வரை வாசகர்கள் ‘காண்டீபம்’ பற்றி நினைத்திருக்கும் கற்பனைப் படிமத்தைத் தகர்த்துள்ளார் எழுத்தாளர். ‘காண்டீபம்’ கனமானது, யாராலும் அதைத் தூக்க இயலாது, அது வடிவில் மிகப்பெரியது, மிகப் பெரிய அம்புகளைப் பொருத்தி எய்யப் பயன்படுவது என்றெல்லாம் நாம் நினைத்திருந்தோம்.
ஆனால், இந்தக் ‘காண்டீபம்’ நாவலில் எழுத்தாளர் ‘காண்டீபம்’ பற்றிக் கூறும்போது, காண்டீபத்தைக் குறிப்பிட்ட பகுதியைப் பிடித்துத் தூக்கினால் எளிதில் தூக்கிவிட முடியும் என்றும் அதைச் சுருக்கி சுருக்கி முழங்கை அளவுக்கு மாற்றிவிடலாம் என்றும் அதில் மிகச் சிறிய அம்பினைப் பொருத்தி எய்ய முடியும் என்றும் கூறுவது பெருவியப்பளிக்கிறது. தற்காலத்தில் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் அலுமினியக் கைத்தடியைப் போலச் சுருக்கிக்கொள்ளும் தன்மையுடையது என்று அறியும்போது, ‘காண்டீபம்’ பற்றிய நமது தொல்படிமம் சிதறி, புதிய நவீனச் செவ்வியல் படிமம் ஒன்று நம் மனத்தில் குடியேறிவிடுகிறது.
இந்த நாவலில் யாதவப்பெருங்குடிகளின் வல்லமையும் இயலாமையும் யாதவர்களின் வாய்மொழியாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இளைய யாதவர் அவர்களை ஒன்றுதிரட்ட விழையவில்லை எனில் அவர்கள் வெறும் இனக்குழு மாந்தர்களாவே வாழ்ந்து மடிந்திருக்கக் கூடும்.
குலத்தலைவர்களின் அதிகார எல்லைகளையும் புலங்கு நில வரம்புகளையும் விரித்து, அவர்களை அரசாட்சி வட்டத்துக்குள் இழுத்துவந்து, அவர்களின் தகுதிநிலையை உயர்த்திய பெருமை இளைய யாதவரையே சாரும். அந்தணர், ஷத்ரியர், வணிகர், வேளாளர் என்ற நாற்பெருங்குடிக்கு இடைநிகர்த்தவராக யாதவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களை மையமாக்க முயலும் இளைய யாதவரின் திட்டமான ‘யாதவப் பேரரசு’ உருவாக்கம் என்பது, ஒட்டுமொத்த பாரதவர்ஷத்துக்கே விடுக்கப்பட்ட அறைகூவல்தான்.
இந்திரப்பிரஸ்தத்தில் மாபெரும் நகரணிவிழாவும் இளைய யாதவரை முதன்மை வேள்விக்காவலராக நிறுத்தி ராஜசூய வேள்வியும் நடத்துவதன் வழியாக மற்றொரு அறைகூவல் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து திரௌபதியால் பாரதவர்ஷத்துக்கு விடுக்கப்பட உள்ளது. ஒருவகையில் துவாரகையும் இந்திரப்பிரஸ்தமும் இணைநகரங்கள்தான். இரண்டுமே யாதவப் பேரரசுகளாகவேதான் மக்களின் முன் நிறுத்தப்படுகின்றன. இந்த இரண்டு நகரங்களும் விடுக்கும் அறைகூவல்கள் ஒட்டுமொத்த பாரதவர்ஷத்துக்குத்தான். அந்த அறைகூவல்களுக்குப் பின்னணியில் இருப்பவை சக்கராயுதமும் காண்டீபமும்தான்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன் ‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன் முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்
April 16, 2021
தனிமையில் பெருகுவது
[புனைவுக் களியாட்டுக் கதைகளில் பத்து கதைகள் கவிஞர் பி.ராமன் மொழியாக்கத்தில் மலையாளத்தில் மாத்ருபூமி வெளியீடாக வரவிருக்கின்றன.அந்நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை]
சின்னக்குழந்தைகளை அடிக்கடி கவனிப்பேன், அவற்றால் ஒரு நாற்காலியில் மட்டும் அமரமுடியாது. ஒரு நாற்காலியில் அமர்ந்தால் உடலை வளைத்து இன்னொரு நாற்காலியில் கைகளையும் தலையையும் வைக்க அவை முயலும். ஒரேசமயம் இரண்டு நாற்காலிகளில் அமரவே முடியாது என்று அவை விழுந்து எழுந்தும், அடிகள் வாங்கியும் கற்றுக்கொள்கின்றன. அதன்பின்னரே கதைகளில் அவை ஆர்வம் கொள்கின்றன. கதைக்குள் நாம் ஒரே சமயம் நூறு, ஆயிரம் நாற்காலிகளில் அமரமுடியும்.
ஐம்பது வயது கடந்த பின்னர், அரசியல் தத்துவம் ஆன்மிகம் என்று ஏராளமாக எழுதிக் கடந்துவந்த பின்னர் நான் என்னை இப்போது ஒரு கதைக்காரனாக மட்டுமே கண்டடைகிறேன். கதையை உருவாக்குவது, கதையில் திளைப்பது மட்டுமே எனக்கு இயல்பாக இருக்கிறது. என் மெய்யான மகிழ்ச்சி அதில்தான் இருக்கிறது. அதற்காகவே கதைகளைச் சொல்கிறேன்.
எதற்காக கதைசொல்கிறேன் என்று கேட்டால் நான் வேளைக்கொரு பதிலைச் சொல்லக்கூடும். மெய்மையை தொட்டறியும் பொருட்டு, அறிவியக்கத்தில் ஊடுருவி என் கருத்தைப் பதிவுசெய்யும் பொருட்டு, இந்த வாழ்க்கையின் துயரங்களை கொஞ்சமேனும் மாற்றும்பொருட்டு, மகத்தான இலட்சியக்கனவுகளை நிலைநிறுத்தும் பொருட்டு, மாமனிதர்களை தலைமுறை நினைவுகளுக்கு கொண்டுசெல்லும் பொருட்டு, பண்பாட்டின் ஓட்டத்தை அறுபடாது முன்கொண்டு செல்லும் பொருட்டு…
இதெல்லாமே உண்மைதான். ஆனால் அடிப்படையில் நான் கதையில் திளைப்பதற்காகவே எழுதுகிறேன். ஒரு கதை வடிவம்கொண்டு எழும்போது ஒரு பெரிய பரவசம் உருவாகிறது. ஐந்து பக்கமும் திசைகள் திறந்துகொண்டே இருக்கின்றன. பறந்தலைந்து மீண்டு வரும்போது ஒரே உடலில் இருந்துகொண்டு பல்லாயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்தவனாக உணர்கிறேன். மெய்யாகவே கதைகளை அதற்காகவே எழுதுகிறேன்.
ஆகவே இன்று கதைகளின் முதற்பெரும் தகுதி வாசிப்பின்பம்தான் என்று உணர்கிறேன். எதிர்காலத்தில் நுண்ணுணர்வும் கற்பனையும் உள்ள வாசகர்களுக்குக் குன்றாத வாசிப்பின்பத்தை அளித்த எழுத்தாளன் என்று அல்லாமல் வேறெவ்வகையிலும் நான் நினைவூரப்பட விரும்பவில்லை.
பி.ராமன்வெண்முரசு ஏழாண்டுக்காலம் என்னை கதைகளில் பெருகிப்பெருகி பேருருவம் கொண்டு வாழச்செய்தது. அந்த இருபத்தாறாயிரம் பக்கங்களில் ஆயிரத்துக்கும் மேல் துணைக்கதைகள் உள்ளன. மரபில் இருந்து எடுத்து விரிவாக்கப்பட்ட கதைகள், அக்கதைகளின் நீட்சியாக உருவாகிவந்த புதிய கதைகள்.
வெண்முரசு எழுதும் நாட்களில் உலகின் நான்கு கண்டங்களிலாக பலநாடுகளில் பயணம் செய்தேன்.இந்தியாவில் மலைகளிலும் காடுகளிலும் பாலைகளிலும் அலைந்தேன். பல படங்களுக்கு எழுதினேன். ஆனால் அந்த ஒட்டுமொத்தப் புறவாழ்க்கையும் மிகச்சிறியது. நான் அகத்தே வாழ்ந்த வாழ்க்கை, வெண்முரசின் களத்தில் நான் நிகழ்ந்தது பலமடங்கு பெரியது.
வெண்முரசு முடிவை நெருங்கும்போது மிகப்பெரிய வெறுமையை அடையலானேன். என் வாசகர் ஒருவர் சொன்னார், வெண்முரசு முடிந்தபின் ஆறுமாதம் எதையும் வாசிக்கவில்லை என்பதோடு என்னுடைய புகைப்படத்தைப் பார்ப்பதையேகூட தவிர்த்ததாக. அந்த வெறுமையை உணரமுடிகிறது என்னாலும். நான் அதிலிருந்து வெளியேற கண்டடைந்த வழியே கதைகள்.
செறிவான படிமமொழியும், தத்துவ கனமும் கொண்ட நவீனநாவல்களான வெண்முரசுக்கு மாறாக எளிமையான நேரடியான கதைகள் இவை. கற்பனையில் விரியும் நிலமும் சூழல்களும் கொண்டவை. இன்றுநான் திரும்பிப் பார்க்கையில் ஓரிரு கதைகளை தவிர அனைத்துமே வாழ்க்கையின் அரிய தருணங்களை, உயரிய உளநிலைகளை முன்வைப்பவை. இயல்பாக அப்படி நிகழ்ந்தது. நான் நிறைய கடந்து வந்துவிட்டிருக்கிறேன் என்று உணர்ந்தேன்.
சென்ற ஆண்டு கொரோனா பரவி, வீடடங்கு அறிவிக்கப்பட்ட காலம். என்னுடைய 15 வயதிலிருந்து நான் தொடர்ச்சியாக வீட்டில் பதினைந்து நாட்களுக்குமேல் இருந்ததில்லை. வாசிப்பு எழுத்து பயணம் மூன்றுமே என் வாழ்க்கை.பி.எஸ்.என்.எல் ஊழியராக இருந்த காலகட்டத்தில் அதிகாரபூர்வ விடுப்பு, சம்பளமில்லா விடுப்பு ஆகியவற்றை சேர்த்தால் ஆண்டில் நூறுநாட்கள் பயணத்தில்தான் இருந்திருக்கிறேன். வீடடங்கு எனக்கு தனிமைச்சிறைதான்.
ஆனால் அதை ஒரு சோர்வாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவுசெய்தேன். அதையும் கொண்டாடலாம் என்று திட்டமிட்டேன். இது என் வழக்கம் என்பதை நண்பர்கள் அறிவார்கள். தமிழகத்தில் கோடை கடினமானது. ஆனால் நான் ஒவ்வொரு கோடையிலும் கோடைக் கொண்டாட்டத்தை அறிவிப்பேன்.வெயிலையும் வெயிலால் அழகுகொள்ளும் நிழல்களையும் கொண்டாட ஆரம்பிப்பேன். வெயிலில் அலைவதற்காகவே பயணங்களைத் திட்டமிடுவேன்.
கொரோனா காலகட்டத்தை கொண்டாடுவதைப் பற்றிய ஓர் அறிவிப்பை மார்ச் மாதம் 26 ஆம் தேதி என் இணையதளத்தில் வெளியிட்டேன். அதன் விதிகள் இவை:
1- கொரோனா தொற்று பற்றி தேவையான செய்திகளை தெரிந்துகொண்டுவிட்டோம், ஆகவே மேற்கொண்டு நோய்த்தொற்றின் கணக்குகள், அதுபற்றிய செய்திகளை அறிந்துகொள்வதை முற்றாக தவிர்த்துவிடவேண்டும்.
2- கொரோனா காலம் முழுக்க குடும்பத்துடன் இருப்பது. ஆனால் மிகநெருக்கமாக இருப்பதனால் உரசல்கள் வரலாம். ஆகவே குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் எதன்பொருட்டும் எவ்வகையிலும் விமர்சனம் செய்யக்கூடாது.
3- ஒரு வீட்டில் இருப்பதனால் அதிகமான நெருக்கம் உருவாகும் . அதை தவிர்க்கவேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் அவரவர் இடங்களை அளிக்கவேண்டும். குறிப்பிட்ட பொழுதில் மட்டும் சந்தித்தால்போதும்.
4 -கலையிலக்கியம் என நமக்கு உகந்தவற்றில் முழுவெறியுடன் ஈடுபடவேண்டும்.
2020 மார்ச் மாதம் 18 ஆம் தேதி புனைவுக்களியாட்டு என்று ஒன்றை அறிவித்தேன். ஊரடங்கு நாட்கள் முழுக்க கதைகளை எழுதுவது. பிறரும் எழுதலாமென அறிவித்தேன். நான் எழுதத் தொடங்கினேன். அவ்வாறுதான் இக்கதைகள் உருவாயின.
இவற்றை தொடங்கும்போது பத்துப்பதினைந்து கதைகள் என்னும் எண்ணம் இருந்தது. ஆனால் எழுத எழுத கதைகள் விரிந்து வந்துகொண்டே இருந்தன. உண்மையில் ஒரு கதையை எழுதி முடித்து எழுந்து ஒரு டீ குடிப்பதற்குள் அடுத்த கதை எழுந்துவந்தது. நிறுத்தவே முடியவில்லை என்பதுதான் உண்மை.
ஏனென்றால் வெளியே உள்ள உலகம் மிகச்சிறியது, சிக்கலற்றது. அதில் இயற்கை இல்லை, வாழ்க்கை நேர்கோட்டில் சென்றது. புனைவின் உலகம் பிரம்மாண்டமானதாக இருந்தது.. ஒரு சிறிய இடைவேளையுடன் நாள்தோறும் ஒரு கதை என்றவகையில் நூறுகதைகள்.
நான் நீண்டநாட்களாக எழுதாமலிருந்த உலகங்கள் என் எழுத்தில் எழுந்துவந்தன. நான் பிறந்துவளர்ந்த கிராமச்சூழலை இப்போதுதான் இத்தனை விரிவாக எழுதுகிறேன். இக்கதைகளில்தான் என் அப்பா மறைந்த பாகுலேயன் பிள்ளையும் அவர் நண்பர்களும் அத்தனை பிரகாசமாக எழுந்து வருகிறார்கள். இத்தனைகாலம் அவர்கள் எங்கோ கனிந்து கனிந்து காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
நான் முப்பதாண்டுகளாக ஆராய்ச்சி செய்யும் திருவிதாங்கூர் சரித்திரப்பின்னணி கொண்ட கதைகள், நான் நெடுங்காலம் பித்துகொண்டிருந்த திபெத் பௌத்தப் பின்னணி கொண்ட கதைகள், என் உள்ளத்திற்கு மிக உகந்த நண்பர்களின் நிலமான மலபாரின் பின்னணி கொண்டகதைகள், நான் துறவுபூண்டு வாழ்ந்த காசி பின்னணிகொண்ட கதைகள் எல்லாம் முதல்முறையாக இப்போதுதான் என்னால் எழுதப்படுகின்றன– ஏறத்தாழ இருநூறு சிறுகதைகளும் பத்து நாவல்களும் நான்கு தன்வரலாறுகளும் எழுதிய பிறகு!
எழுதி எழுதி நூறுகதைகளானபோது நானே நிறுத்திக்கொண்டேன். உண்மையில் வலுக்கட்டாயமாக நிறுத்திக்கொண்டேன். மிகவும் ஓடிவிடக்கூடாது என்பதற்காக. அத்துடன் செப்டெம்பர் ஒன்றாம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஒன்றாம் தேதியே கிளம்பி பயணம் மேற்கொண்டேன். ஈரோடு மாவட்டத்தின் கற்காலத்துச் சின்னங்கள தேடி பயணங்கள். அதன்பின் குடகுப்பயணம். இன்றுவரை பயணம் தொடர்கிறது.
இந்தக்கதைகள் முழுக்க என் இணையதளத்தில் வெளியாயின. பல்லாயிரம்பேர் அவற்றை ஒவ்வொருநாளும் படித்தனர். உண்மையாகவே ஒரு கதைத்திருவிழாவாக இருந்தது. தொடர்ந்து ஏராளமான படைப்பாளிகள் வெவ்வேறு தளங்களில் எழுதத் தொடங்கினர்.நவீனத் தமிழிலக்கியத்தின் நூறாண்டுகால வரலாற்றில் மிக அதிகமாகக் கதைகள் எழுதப்பட்ட ஆண்டு 2020தான்.
இக்கதைகள் அடைந்த வாசிப்பும் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. இலக்கிய வாசகர்கள் முதல் எளிமையான கதைவாசகர்கள் வரை இவற்றை விரும்பினர். ஏனென்றால் குறியீட்டு ஆழங்கள், நுண்ணுணர்வு நிலைகள், நவீன இலக்கியத்தின் அழகியல் கொண்டிருந்தாலும் அடிப்படையில் இவை அழகான வாழ்க்கைக் கதைகள். பெரும்பாலான கதைகள் கற்பனையை விரியச்செய்து உள்ளம் மலரவைக்கும் தன்மை கொண்டவை. வாழ்வின் விசித்திரங்களை, உச்சதருணங்களை, ஆழ்ந்த கண்டடைதல்களை நிகழ்த்துபவை.
இக்கதைகள் பல்வேறு வடிவில் மறுபிறவி எடுத்தன. நண்பர்களும் வாசகர்களும் இக்கதைகளை வாசித்தும், நிகழ்த்துகலை போல சொல்லியும் இணையத்தில் வெளியிட்டனர். நாடக வடிவங்களும் வந்தன. மேலும் பல வடிவங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அறம் வரிசை கதைகள் 2011ல் வெளிவந்த காலகட்டத்திற்குப் பின் சிறுகதைகளுக்கு இத்தனை தீவிரமான தொடர்வாசிப்பு தமிழில் நிகழவில்லை. இக்கதைகளில் பலவற்றுக்கு திரைப்பட வடிவுக்கான முன்பணம் அளிக்கப்பட்ட வகையில் மட்டுமே பலலட்சம் ரூபாய் என் கைக்கு வந்தது.
ஆனால் இன்றுவரை எந்தக்கதையும் அச்சில் வரவில்லை. மலையாளத்தில்தான் அச்சுவடிவில் இந்நூல் வரவிருக்கிறது. என் அன்புக்குரிய பி.ராமன் இவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். கவிஞனின் மொழியில் என் கதைகள் மறுவடிவம் கொண்டிருக்கின்றன.
ஜெ
தனிமைநாட்கள், தன்னெறிகள். தனிமையின் புனைவுக் களியாட்டுஓஷோ, தகவல்பொறுக்கிகள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
தகவல்பொறுக்கிகள் என்று அழகாகச் சொன்னீர்கள். ஒரு நண்பர் என்னிடம் ஜெமோ தப்பாகச் சொல்கிறார். ஓஷோ புக்கே எழுதவில்லை. அவர் சொன்னவைதான் புத்தகமாக வெளிவந்தன என்று சொல்லி ஒட்டுமொத்த உரையையும் நிராகரித்தார்
நான் அவரிடம் ஒன்று, ஓஷோ புத்தகமாக எழுத எண்ணியவற்றை உரைகளாக ஆற்றினார். அவற்றை எழுதி எடுத்து சரிபார்த்து நூலாக ஆக்கினார்கள். நித்ய சைதன்ய யதியும் அவருடைய அத்தனை நூல்களையும் அப்படித்தான் எழுதியிருக்கிறார் என்று ஜெமோ சொல்லியிருக்கிறார் என்று சொன்னேன்.
ஓஷோ தன் உரைகளை முன்னதாகவே தயாரிப்பார், எழுதிக்கொள்வதும் உண்டு என்று பலர் பதிவுசெய்திருக்கிறார்கள் என்றேன். அவை ‘எழுதப்பட்ட’ நூல்கள்தான். ஆனால் உரைகளாகவும் ஆற்றப்பட்டன. எமர்சன், டி.எஸ்.எலியட் போன்றவர்களின் நூல்களும் அப்படித்தான். அவை குறிப்புகளாகவோ விரிவாகவோ முதலில் எழுதப்பட்டு, பிறகு உரைகளாக ஆற்றப்பட்டு, மீண்டும் எழுதி எடுக்கப்பட்டு நூல்களாக ஆகின்றன. உலகம் முழுக்க உள்ள வழக்கம் இது. அவற்றை நூல்கள் என்றுதான் சொல்கிறார்களே ஒழிய உரைகள் என்று அல்ல. எழுதப்பட்டவை என்றுதான் சொல்கிறார்களே ஒழிய பேச்சுக்கள் என்று அல்ல. எனென்றால் அவை எழுத்து வடிவில் வந்துவிட்டன. உலகில் அப்படி ஏராளமான நூல்கள் உள்ளன.
ஓஷோ உரையிலேயே ஓஷோ சொல்லி எழுதவைத்தமையால் பல நூல்கள் நீர்த்துப்போய்விட்ட நடையில் இருப்பதாக சொல்கிறீர்கள். அந்த தகவல் பொறுக்கியிடம் அதை சொன்னேன். அப்போதுதான் தெரிந்தது அவர் உரையை கேட்கவே இல்லை. சும்மா அங்கே இங்கே கேட்டிருக்கிறார். நானும் அறிவுஜீவிதான் என்று காட்டுவதற்காக அப்படிச் சொல்கிறார்
இந்த சமூகவலைத்தள உலகில் இந்த தகவல்பொறுக்கிகள் மிகப்பெரிய சீர்கேடுகள்
என். மகாதேவன்
அன்பின் ஜெ,
துளித்துளியாக, இடைவெளிகளினூடாகத்தான ‘ஓஷோ உரை‘ கேட்க முடிந்தது. முதலிலேயே சொல்லி விடுகிறேன் – நான் ஓஷோவின் ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை. ஆனாலும் பல விதங்களிலும் அவர் பெயர் அவ்வப்போது கண்ணில் தென்பட்டுக் கொண்டே இருக்கிறது – மேற்கோள்களாக, குட்டிக்கதைகளாக… பத்திரிக்கைகள் குறித்து நீங்கள் சொன்ன அந்த ‘அண்டா உருட்டி’ உதாரணம் மிகச்சரியான ஒன்று.
நீங்கள் அந்த உரையில் சொன்ன விஷயம் – தினத்தந்தி ஓஷோவிற்கு ‘செக்ஸ் சாமியார்‘ என்ற அடைமொழி கொடுத்தது. அது உங்களின் மிகச் சரியான அவதானம் என்றே நினைக்கிறேன் (அதை நீங்கள் நமட்டு சிரிப்புடன் சொன்ன விதம், அதுவே அந்த அடைமொழிக்குப் பின் அந்த கட்டுரையாளர் உத்தேசித்த தொனி, அது உங்களை எப்படி அப்போது எரிச்சல் படுத்தியிருக்கும் என்றெல்லாம் துல்லியமாகக் காட்டியது).
இந்த உரையைக் கேட்கும் வரை எனக்கு ஓஷோவைப் பற்றிய மனப்பதிவு அதுதான். உவத்தல் காய்த்தலற்று சிந்திக்கத் தொடங்கி, ஒரு அறிவியக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் வரை ஒரு பொது வாசகன், வாரப்பத்திரிக்கைகள் உருவாக்கும் இது போன்ற மாய்மாலங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது அவசியம் என்றே நினைக்கிறேன் (அது மிகவும் சிரமமும் கூட).
ஓஷோ சொன்னதாக நீங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் எந்தவொரு செயலில் நாம் ஈடுபடும்போது நம்மிடம் thought இல்லாமல் போகிறதோ அது தியானம் என்று (அப்படித்தான் நான் புரிந்துகொண்டது, பிழையிருந்தால் மன்னிக்கவும்). சமீபத்தில் இதை இரண்டு புதிய முயற்சி/பயிற்சிகளில் ஈடுபடும்போது உணர்ந்தேன் :
1. கிரந்த லிபியில் வேதம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். ஒரு ஸூக்தம் அல்லது ஒரு மந்த்ரம் முதன்முதலில் எனது குரு முதல்நாள் சொல்லத்துவங்கும்போது, அவர் சொல்வதை மனதில் கொண்டு தப்பில்லாமல் (அக்ஷரம்+ஸ்ருதியுடன்) அந்த வாக்கியத்தை (ஷாகை) இருமுறை திரும்பச் சொல்வதில்தான் எனது கவனம் முழுக்க இருக்கிறது. கிரந்த எழுத்து முறையே புதியது என்பதால் ஒரு நொடி கவனம் வேறெங்கோ திசை திரும்பினாலும் அக்ஷரம்/ஸ்ருதி பிசகி விடுகிறது, திட்டு வாங்குகிறேன். ஆனால் ஒரு நான்கு/ஐந்து நாள் ஒரே மந்த்ரத்தை அவர் சொல்லிக்கொடுக்கயில் முதல்நாள் இருந்த கவனம் நம்மையுமறியாமல் நான்காவது/ஐந்தாவது நாள் அகன்று விடுகிறது; ஒரு ‘மெக்கானிகல் தன்மை’ வந்து விடுகிறது; விளைவாக சில சமயம் உச்சரிப்பு (மூன்றாவது ‘ப’வுக்கு பது நான்காவது ‘ப’ இப்படி) வழுக்கி விடுகிறது.
2. சென்ற மாதம் பத்து நாள் கார் டிரைவிங் கற்றுக் கொண்டோம். அப்போதும் அப்படித்தான். முதல் இரண்டு/மூன்று நாள்கள் கார் ஓட்டத் தொடங்கும்போது நம் முழு கவனமும் அதிலேயேதான் இருக்கிறது; வேறெதையும் சிந்தனை செய்ய நமக்கு அவகாசமோ/சுதந்திரமோ கிடையாது.
இது ஓஷோ சொன்ன thoughtlessness க்கு நெருக்கமாக வருவதாய் நம்புகிறேன்.
உங்கள் கீதை, குறள் உரைகள் போல, தனித்தனியாக (பட்டிமன்ற பேச்சாளர்கள் பாணியில்) உதாரணம் காட்டாமல் ஓஷோவை அணுக வேண்டிய context-ஐ உருவாக்குவதில்தான் உங்கள் உரை பெருமளவு முயன்றது. ஓஷோ எந்தச் சூழலில் கொண்டாடப்பட்டார், ஏன் அவசியப்பட்டார் போன்ற விவரங்கள் இனிமேல் வாசிக்கத் தொடங்குபவர்களுக்கும், தவறான புரிதலுள்ளவர்களுக்கும் நிச்சயம் ஒரு கொடை. தனித்தனியாக உதாரணம் காட்டுவதைக் காட்டிலும் இதுவே அவசியம் என்று நம்புகிறேன் (மற்றும் ஆறு மணி நேர உரையில் இந்த ரீதியில் அமைவதுதான் வாசகனை மேலே வாசிக்கத் தூண்டும்).
மற்றபடி மற்ற மதங்களைப் பற்றிய ஓஷோவின் பார்வை, அவர் ஏன் ஆசார வாதங்களை விமர்சிக்கிறார் (இது மிகவும் மென்மையான சொல்), ஓஷோ வழிபாடிகளின் அபத்தங்கள், நம்பூதிரி நகைச்சுவைகள் போன்றவை ஒரு ஜெயமோகன் உரையில் மட்டுமே காணக்கிடைக்கும் தனித்துவங்கள். செறிவான ஒரு உரைக்கு நன்றி.
அன்புடன்
வெங்கட்ரமணன்
அன்புள்ள ஜெ
ஓஷோ உரையை ஒரு குறிப்பிட்ட வகையான உரை என்று சொல்வேன். ஒரு காட்டில் கட்டிடம் ஒன்று இருக்கிறது. அதைச் சூழ்ந்திருக்கும் புதர்கள், முட்களை அகற்றினால் அந்த கட்டிடம் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. அதைப்போல.
ஓஷோ பற்றி ஓஷோவின் பக்தர்களும் பரப்புநர்களும் எதிரிகளும் உருவாக்கிய சிலவகையா பொய்யான நம்பிக்கைகளை இந்த உரை அகற்றுகிறது. அதுதான் முக்கியமானது. ஓஷோ சுத்த சுயம்புவானவர், அவர் சொன்னதை வேறெவரும் சொல்லவே இல்லை, ஓஷோவுக்கு மதங்கள் எல்லாமே எதிரானவை இப்படி பல மாயைகள் ஓஷோ மரபினரிடம் உண்டு. ஓஷோ இந்திய மரபில் எங்கே வருகிறார், அவர் முரண்படும் இடங்கள் எவை, அவர் ஏற்கும் இடங்கள் என்னென்ன ஆகியவற்றை தெளிவுபடுத்தியதுமே ஓஷோ திட்டவட்டமாக தெரிய ஆரம்பித்துவிட்டார்
அதோடு ஓஷோவை அவருடைய வரலாற்றுச்சூழலில் வைத்து அவர் சொன்னவை ஏன் எவரிடம் சொல்லப்பட்டவை என விளக்குகிறீர்கள். எழுபது எண்பதுகளின் புரட்சிகரம்-ஹிப்பி மனநிலை- இருத்தலியம் ஆகிய மூன்று தளங்களை விளக்கி அந்தச் சூழலில் ஓஷோ பேசியதை குறிப்பிடுகிறீர்கள். அந்த பின்னணிப்புரிதல் இன்று ஓஷோ பற்றி பேசுபவர்களுக்கு இல்லாதது. மிகமிக அவசியமானது. இளைய தலைமுறைக்கு சொல்லவேண்டியது
ஓஷோ பற்றி எதிரிகள் உண்டுபண்ணிய செக்ஸ் சாமியார் போன்ற அசட்டுத்தனமான புரிதல்களையும் உடைக்கிறீர்கள். ஓஷோ அளித்த கொடை என்ன என்பதை திட்டவட்டமாக நிறுவுகிறீர்கள். அவருடைய மரபு எப்படியெல்லாம் வளர்ந்தது என்கிறீர்கள்
அதன்பின்னர் ஓஷோ சொன்னவற்றை சில கருத்துமையங்களாகத் தொகுத்துக்கொள்ள முயன்று சில புள்ளிகளை அளிக்கிறீர்கள். 750 நூல்களாக தொகுக்கப்பட்டிருக்கும் அவருடைய உரைகளை புரிந்துகொள்ள அவசியமானவை இந்த புள்ளிகள்.
ஜெயக்குமார் ரவிச்சந்திரன்
குயில்களின் தன்மீட்சியில் கல்லெழும் விதை..
அன்புள்ள ஜெ வணக்கம்…
சித்திரை திருநாள் அன்று யதி தத்துவத்தில் கனிதல்,சின்ன சின்ன ஞானம், மற்றும் அறிவு என மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவும் தன்மீட்சி நண்பர்கள் சந்திப்பும் மனதில் சுகத்தையும் அகத்தில் நிறைவையும் பெருகச்செய்தது.
செயல் துடிப்பும் நல்லெண்ணமும் கலை மனமும் கொண்ட இத்தனை இளைஞர்களை ஒருங்கிணைத்ததில் சிவராஜ் அவர்களின் பங்கு மகத்தானது.
சிவராஜ் அவர்களை சற்றேறக்குறைய 20 ஆண்டுகளாக நான் அறிவேன்.நம்மாழ்வார் ஐயா டாக்டர் ஜீவா போன்ற ஆளுமைகளுடன் இணைந்து நாங்கள் பயணித்திருக்கிறோம்.
மாபெரும் கனவும் அதை செயலாக்கும் அக வல்லமையும் நிறைந்த உங்களைப் போன்ற பேராளுமைகளை அடையாளம் கண்டு கொண்டு உங்களைப் போன்றவர்களுடன் இணைந்து பயணிப்பதோடு சமுதாயத்தில் தேவைப்படும் நண்பர்களுக்கு பரிந்துரைப்பதுடன் இதை பரப்பும் செயலை தொடர்ந்து முன்னெடுப்பது சிவராஜின் இயல்பு.
இச்செயல்பாட்டில் நீண்ட அனுபவமிருப்பதால் தன்னுடைய தளராத தொடர் செயல்பாட்டினால் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறார். தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த மாபெரும் முன்னெடுப்பாக இதை நான் பார்க்கிறேன் .
பொதுவாக தமிழகத்தில் நடக்கும் கூட்டங்களில் ஒரு பேச்சாளர் இருப்பார் ஓரிரு முக்கியஸ்தர் இருப்பர் அல்லது ஏதாவது சாதனை புரிந்த, சமூக சேவை செய்கிற , அல்லது துறை சார்ந்த பிரபலங்கள் நிகழ்வில் இருப்பார்கள்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட இருநூறு பேரில் எவ்வளவு குறைத்தாலும் ஐம்பது பேர் மிக மிக முக்கியமானவர்கள்.
கைத்தறி நெசவினில் தனி முத்திரையை பதித்த சிவகுருநாதன்,அழிந்து போன கருப்பட்டி கடலை மிட்டாயை மீட்டெடுத்த ஸ்டாலின் பாலுசாமி, தூர்ந்து போன கினறுகளை மீட்டெடுத்த நண்பர்கள்(ஏழு கினறுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பிரதமர் வரை பாராட்டு பெற்றுள்ளனர்), நேர்த்தியான அழகிய ஒளி மிகுந்த வடிவமைப்பு மூலம் தமிழ் புத்தக பதிப்பில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திவரும் தன்னறம் பதிப்பக குழுவினர், பெரும் வருவாய் தரும் வேலைகளை விட்டுவிட்டு பருத்தி துணி பை தயாரிக்கும் தம்பதியர், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் உடைகள் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தற்சார்பு வாழ்வியலை முன்னெடுக்கும் யாதும் குழுவினர், இனியா என்னும் சுவையான உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் குமார் சண்முகம், புகைப்பட துறையில் பல்வேறு உச்சங்களை தொட்ட தனித் திறன் வாய்ந்த கலைஞர்கள், இந்த மண்ணில் இருந்து மறைந்துபோன யாழிசையை மீட்டெடுத்தவர், சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கிழைக்கும் பிளக்ஸ் க்கு மாற்றாக துணியில் கைகளால் பதாகைகளை எழுதிய ஓவியர், தன்மீட்ச்சி குறித்து மிக சிறந்த கட்டுரைகளை எழுதிய இரம்யா விக்னேஷ் ஹரிஹரன் பிரசன்னா உள்ளிட்ட பதிமூவர், இந்த மண்ணின் நீதியின் சுடரை அணையாமல் காக்கும் பெருமதிப்பிற்குரிய நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் ஐயா என இன்னும் நிறைய சாதனைகளை புரிந்தவர்கள்,புரிய இருப்பவர்கள் எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் பார்வையாளர்களாக இருந்தனர். அரிதினும் அரிதான கூடுகை இது…
நிறைய பேர் தங்கள் மனைவி குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின சராசரி வயது முப்பதுக்கு கீழேதான்… ஒருகணம் திருமண விழா போலவும் மறுகணம் ஒரு கல்லூரியில் இருப்பது போலவும் இருந்தது.
காந்தி மியூசியத்தின் இரும்பு சிமெண்ட் பயன்படுத்தாது கற்களைக் கொண்டு செம்மண் பயன்படுத்தி கட்டப்பட்ட ஓடு வேய்ந்த ஒளியும் காற்றும் நிறைந்த விழா கூடம் இதுபோன்ற விழாக்களுக்கான சரியான தேர்வு. அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் வளாகம் முழுவதும் நிறைய இடங்களில் நித்யாவின் புகைப்படங்களும் ஓவியங்களும் மனதிற்குள் ஒரு பெரும் சமாதானத்தை தந்து கொண்டே இருந்தது.
யூமா அவர்கள் குருவை நீங்கள் அவருக்கு அறிமுகப்படுத்திய கதையையும் இந்த மொழிபெயர்ப்புக்கான விதை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதைப் பற்றியும் உரை நிகழ்த்தி நல்ல துவக்கத்தை தந்தார்கள்.நண்பர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டதும் கண்ணாடி சட்டமிட்ட யதியின் புகைப்படங்கள் தான்.
உங்களுடைய உரை மிக முக்கியமானது. இக்காலகட்டத்தின் சிக்கலான இலட்சிய வாதத்திற்கும் கருத்தியல் சாய்வு களுக்குமான வேறுபாட்டை வரையரருப்பதாக பெரும் திறப்பாக அமைந்தது.
உங்களுடைய பெரும்பாலான கூட்டஙகளுக்கு தொடர்ந்து வருபவன் என்ற முறையில் ஒன்றை அவதானித்தேன் இத்தனை நூல்களுக்கு நீங்கள் கையெழுத்திட்டது சமீப ஆண்டுகளில் இன்றுதான் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு மேல் கையெழுத்திட்டுக் கொண்டே இருந்தீர்கள்.நானும் நான்கு நூல்களில் பெற்றுக்கொண்டேன் ஒரு எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும்j இதைவிட ஒரு புத்தாண்டுப் பரிசு வேறு என்னவாக இருந்துவிட முடியும் :)
அனைவருக்கும் மோரும் பாயாசமும்,காகிதப் பையில் பொதிந்த நாட்டு சர்க்கரையும் மரக்கன்றுகளும் கொடுத்தனர்.
விழாவுக்கு வந்திருந்த தங்களின் முன்இளமையிலேயே உங்களை அடையாளம் கண்டு கொண்ட இளைஞர்களை காண்கையில் எல்லாம் எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது நானும் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் உங்களை சந்தித்து இருக்கலாம் என…
விழாவுக்கு வரும்பொழுது காலையிலேயே நல்ல வெய்யில் இருந்தது மதியம் விழா முடிந்து அரங்கை விட்டு வெளியேறும் பொழுது லேசாக மழை தூறியது கோவையை நோக்கி வர வர மழை வழுத்து முற்றிலுமாக நனைந்து வீடு வந்து சேர்ந்தேன் …
நன்றியுடன்
மு.கதிர் முருகன்
கோவை
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

