Jeyamohan's Blog, page 999

April 21, 2021

குமரித்துறைவி [குறுநாவல்] – 5

[ 16 ]

சேவகன் என்னை எழுப்பியபோது நான் எங்கிருக்கிறேன் என்பதையே உணரமுடியவில்லை. “யார்? என்ன?” என்றேன். என் அருகே ஒரு எண்ணைவிளக்குச் சுடர் தயங்கி ஆடியது. என் நிழல் எனக்குப்பின்னால் எழுந்து ஓலைச்சுவரில் வளைந்து நின்றது.

அவன் இரண்டுமுறை சொன்னபின்னர்தான் நான் இருப்பது ஆரல்வாய்மொழியில் மலையடிவாரத்துச் சிறுகொட்டகை ஒன்றில் என்று தெரிந்தது. எழுந்து அமர்ந்தேன். படுத்திருந்த கயிற்றுக்கட்டிலின் வரித்தடம் என் உடலெங்கும் இருந்தது.

“திவான் வந்திருக்கார். உங்களுக்காக காத்திருக்கார்” என்று அவன் சொன்னான்.

“திவானா, இங்கேயா?” என்று நான் எழுந்து நின்று முகத்தை துடைத்தேன். முகம் கழுவ நீர் கொண்டுவரும்படி ஆணையிட்டேன். ஏனத்தில் கொண்டுவரப்பட்ட நீரில் முகம் கழுவி தலைப்பாகையை எடுத்து அணிந்துகொண்டு மேலாடையை அள்ளிப்போட்டபடி வெளியே சென்றேன்.

இலவமரத்தடியில் திவான் நின்றிருந்தார். சற்று அப்பால் மரத்தில் ஒரு சட்டிவிளக்கு புன்னைக்காயெண்ணை மணத்துடன் எரிந்தது. காற்றுக்கு எதிர்ப்பாக சட்டிவிளக்கின் பாளை திருப்பி வைக்கப்பட்டிருந்தமையால் அதன் நிழல் ஒருபக்கத்தை முழுக்க இருட்டாக்கியிருந்தது. அங்கே தழல்வடிவாக ஒரு தெய்வம் தோன்றி நின்றிருப்பதாக எண்ணிக்கொண்டேன்.

நான் அருகே சென்று வணங்குவதற்குள் திவான் “மகாராஜா எங்கே?” என்றார்.

“தோவாளை அரண்மனையில்…” என்றேன், குழப்பமாக. அவர் கேட்பதென்ன என்று எனக்கு புரியவில்லை.

“அவரு தோவாளைக்குப் போகவே இல்லை. இங்கே நமஸ்காரங்கள் முடியறதுக்கே மூணாம்சாமம் முடிஞ்சிட்டுது…” என்றார் திவான். “அதெல்லாம் முடிஞ்சு நான் பாத்தா மகாராஜா இல்லை. எங்க போனார்னு யாருக்கும் தெரியல்லை. இதை நாலுபேர் கிட்டே கேக்க முடியுமா? என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு எனக்கு பதைக்குது. நீரு  இங்க வந்து படுத்துக்கிடக்கிறீர்”

“அதுவரைக்கும் இருந்தாரா?” என்று நான் வேண்டுமென்றே நிதானமாகக் கேட்டேன். என் நிதானம்தான் என்னை இங்கே காக்கும். நான் கொஞ்சம் பதறினால் திவான் என்மேல் ஏறி தாண்டவம் ஆடிவிடுவார். சிறிய மனிதர்களுக்கு இக்கட்டுகளில் அதிலிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்று மட்டுமே தோன்றும். அதற்கு அவர்களுக்குத் தேவை பழிசுமத்த ஒருவர். அவர் அதற்காகவே என்னை தேடிவந்திருந்தார்.

“ஆமா, கடைசி ஆளும் வந்து அம்மைக்கு திரைபோடுறவரை இருந்தார். அப்டியே தோவாளை வரை போனாலும் உடனே காலம்பற அம்மையெறக்கத்துக்கு வந்தாகணும். அதனாலே ஆரல்வாய்மொழி கோட்டை எஜமானன் மாளிகையிலேயே தங்க ஏற்பாடு செய்திருக்காங்க…”

“யாரு ஏற்பாடு செய்தது?”

திவான் குன்றி, உடனே அதை சமன்செய்து, “அங்கே ராயசம்தான் ஏற்பாடு செஞ்சது. நான் மதுரை தளவாய் கூடவே போனேன். அங்கே அவங்களுக்கு வேண்டியதை நானே செஞ்சுகுடுக்க வேண்டியிருந்தது. நாளைப்பின்னை ஒரு பேச்சு வந்தா நல்லா இருக்காது. மதுரை சாம்ராஜ்யம் நம்ம எஜமானன் ஆக்குமே”

“எஜமானன் மாளிகையிலே இப்ப மகாராஜா இல்லை, இல்லியா?”

“இல்லை, அவர் அங்க போய் ஒருவாய் பாலன்னம் சாப்பிட்டிருக்கார். குமட்டுது போதும்னு சொல்லியிருக்கார். படுக்கிறீங்களான்னு படுக்கை ஒருக்கியிருக்காங்க. படுத்தவர் உடனே எந்திரிச்சிட்டார். நாண் இழுத்து அம்பு தொடுத்துவைச்ச வில்லு மாதிரி இருக்குடே மனசுன்னு சொல்லியிருக்காரு. வெளியே திண்ணையிலே வந்து உக்காந்திட்டிருந்தாராம். அதை பாத்திருக்காங்க… பிறகு அவரை பார்க்கமுடியல்லை.  எங்க போனாருன்னு ஆருக்கும் தெரியல்லை.”

“அதெப்படி ஆருக்கும் தெரியாம?” என்றபோதும் என் அகம் முழுக்க விழித்துக் கொள்ளவில்லை. நான் அவரை அப்போதும் மணப்பந்தலில் வைத்தே எண்ணிக்கொண்டிருந்தேன்.

“அப்டித்தான்… இப்ப மகாரஜாவை காணல்லை… நான் தேடாத இடமில்லை.”

“அவருடைய அணுக்கன் யாரு? அவன் என்ன சொல்றான்?” என்றபோது நான் சட்டென்று முழுமையாக விழிப்புகொண்டேன். “அங்கே உள்ள கொட்டாரம்  சம்பிரதி யாரு?”

“சம்பிரதி முண்டத்தூர் செல்லப்பன் பிள்ளை அவன்கிட்டே மகாரஜா வெளியே போறதாச் சொன்னாராம். ராயசம் கிருஷ்ணப்பையரும் கூடப்போயிருக்கார்.”

நான் நிம்மதி அடைந்து “அப்படின்னா சரி…” என்றேன். “சொல்லிட்டுப் போனார்னா கிட்டக்கே எங்கியாம் இருப்பார். பார்ப்போம்.”

திவான் மெய்யாகவே பதறி பலவகையான ஐயங்களை உருவாக்கி விட்டுவிட்டார். மகாராஜாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று நான் பயந்துவிட்டேன். எட்டுவீட்டுப் பிள்ளைமாரின் முழு பட்டாளமும் வந்து சூழ்ந்திருக்கும் இடம்.  மகாராஜாவுக்கு ஏதாவது ஆனால் ஒருநாழிகைக்குள் வாளேந்த இன்னொரு மகாராஜா வேண்டும். வேணாட்டு மகாராஜாக்கள் மீதான கொலைத்தாக்குதல்கள் பெரும்பாலும் இத்தகைய அனுஷ்டானங்களின்போதுதான் நடக்கும்.

“மகாராஜாவை இப்ப எப்டி கண்டுபிடிக்கிறது?” என்றார் திவான். அவர் நிம்மதி அடைந்துவிட்டது தெரிந்தது

“அதை நான் பாத்துக்கிடுறேன். நீங்க போய் வேலைகளை பாருங்க” என்றேன்

“இன்னைக்கு தேவி மதுரைப் புறப்பாடு.” என்றார் திவான். அவருடைய வழக்கமான குரல் மீண்டுவந்துவிட்டது. “ஏற்பாடுகள் எல்லாம் நடந்திட்டிருக்கு. தளவாய் வெங்கப்பா எங்கிட்டே நேரிலே எல்லாத்தையும் விசாரிச்சார். அவருக்கு சில மனக்குறைகள் இருக்கு. அதெல்லாம் எங்கிட்டே சொன்னார். அப்பாலே நான் அதைச் சொல்றேன். ஏன்னா இப்ப நாம மகாராஜாவை தேடிப்புடிக்கணும்.”

“காலையிலேதானே அம்மையெழுந்தருளல்? அதுக்குள்ளே பாத்திடலாம். நான் பாத்துக்கிடுறேன்.”

“அங்கே வெங்கப்பா ஆயிரம் கேள்வியா கேக்காரு. என்னாலே பதில் சொல்ல முடியல்லை. எல்லாத்தையும் நான் ஒருத்தனே பாத்துக்கிடுறதானா கொஞ்சம் கஷ்டமாக்கும்.”

திவானின் குரலில் வந்த மாறுதல் எனக்கு எரிச்சலூட்டியது. ஆனாலும் அதை வென்று இறுக்கமான தணிந்தகுரலில் “சரி, நான் பாத்துக்கிடுறேன்” என்றேன்.

அவர் திரும்பும்போது “சசிவோத்தமருக்கு ஒண்ணு சொல்லணும். மகாராஜாவை நான் கண்டுபிடிச்சுகிடுதேன். அதை அங்க இங்க சொல்லி பரப்பவேண்டாம். உங்க வேலை எதுவோ அதைச் செய்யுங்க.” என்றேன்.

அவர் தலையசைத்தார். அதன்பின்னர்தான் அவருக்கு சீற்றம் வந்தது.“நான் இங்க திவானாக்கும். எங்கிட்டே எண்ணிப்பேசணும்?”

”வேணுமானா தலையை எண்ணியும் பேசுற குடும்பம் எனக்கது. கேட்டுப்பாருங்க.” என்று அவர் கண்களை கூர்ந்து நோக்கிக்கொண்டு சொன்னேன்.

அவர் நடுங்கிவிட்டார். முகம் வலிப்பு போல இழுபட்டது. உதடுகள் கோணலாயின.

“மதுரைக்காரங்ககிட்டே நீங்க பேசிய ஒவ்வொரு வாக்கும் சிந்தாம சிதறாம எங்கிட்டே வந்திரும். என் காதில்லாத இடம் இங்கே இல்லை” என்றேன். மேலும் தணிந்த குரலில் “பிரம்மஹத்தியை நான் பயப்படமாட்டேன். எங்கிட்டே சொன்னதைச் செய்ற பாண்டிப்பிராமணனுங்க பலபேருண்டு…”

அவர் நடுங்கிக்கொண்டே நின்றார். அறியாமல் கைகள் நெஞ்சில் கூப்பிக்கொண்டன. வாய் கீழ்நோக்கி இழுபட்டு அதிர்ந்தது.

“இது மங்கலநாள்… மங்கலமாத்தான் முடியும். புரியுதா?”

“புரியுது” என்றபோது அழுவதுபோல இருந்தார்.

“போங்க” என்றேன்.

அவர் நடக்கும்போது கால்கள் தள்ளாடி, எதிலோ தடுக்கி விழப்போகிறவர் போலிருந்தார். கொஞ்சம் தள்ளி அவருடைய அணுக்கன் சம்பிரதி ஹொன்னப்பையன் நின்றிருந்தான். அவன் திகைப்புடன் அவர் அருகே வந்தான்.

நான் இருட்டை பார்த்தபடி ஒருகணம் நின்றேன். இவர் சொல்வதில் ஒரு பங்கு உண்மை, மெய்யாகவே மகாராஜா எங்கோ மறைந்திருக்கிறார். அவரை கண்டுபிடிக்கவேண்டும். இதற்குள் இவருடைய வாயிலிருந்து செய்தி பரவியிருக்கும். அது மக்கள் செவிகளை அடைவதற்குள் அவரை கண்டுபிடித்தாகவேண்டும்.

நான் அங்கே மலைப்பாறை விளிம்பில் நின்றபடி கீழே பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அரளி பூத்த புதர் போல சிவந்த ஒளிகள் நிறைந்த கரிய வெளி. கோட்டையின் மேல் வரிசையாக பந்தங்கள் ஏற்றப்பட்டிருந்தமையால் அந்த ஒளி மட்டும் வரிசையாக தெரிந்தது. வெளிச்சங்கள் நிரைகொண்டு நகரும் பாதைகளையும் காணமுடிந்தது. மற்றபடி அள்ளி வீசப்பட்டதுபோன்ற ஆயிரக்கணக்கான சுடர்கள்.

என் உடலெங்கும் ஏதோ எரிச்சல் பரவியிருந்தது. திவானிடம் அப்படிப் பேசியதனால் வந்த எரிச்சலா? அல்லது அந்த எரிச்சலால்தான் அப்படிப் பேசினேனா?

மகாராஜா எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்கவேண்டும். சம்பிரதி செல்லப்பன் பிள்ளையிடம் சொல்லிவிட்டு, சம்பிரதி கிருஷ்ணப்பையருடன் சென்றிருக்கிறார் என்றால் அருகில்தான் எங்கோ இருக்கிறார். அவரை கண்டுபிடிப்பது அல்ல, அவர் எந்த உளநிலையில் இருக்கிறார் என்பதுதான் சிக்கல்.

நான் கீழிறங்கி ஒரு குதிரையை வாங்கிக்கொண்டு புதர்காடுகளின் நடுவே சென்ற ஒற்றையடிப்பாதை வழியாக ஆரல்வாய்மொழி கோட்டை முகப்பில் இருந்த கோட்டை எஜமானனின் மாளிகை நோக்கிச் சென்றேன்.

கோட்டைமேல் பந்தங்கள் வரிசையாக வானில் தீக்கோடு போல அசைந்துகொண்டிருந்தன. மக்களின் முழக்கம் எழுந்து கோட்டையில் முட்டி அலையலையாக எழுந்துகொண்டிருந்தது. எங்கும் மக்கள். படுத்துக்கிடப்பவர்கள், அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள், அங்குமிங்கும் சிறு கூட்டங்களாக சேர்ந்துவிட்டவர்கள்.

மாளிகை முகப்பிலேயே கோட்டை எஜமானன் நின்றிருந்தார். என்னைக் கண்டதும் கவலையுடன் ஓடிவந்தார். “மகாராஜாவ காணல்லேன்னு சொல்றாங்க… நான் இங்கே இல்லை, கோட்டைக்காவலுக்காக மேகோட்டைக்கு போனேன்… இப்பதான் வந்தேன்.”

“பயம் வேண்டாம். நான் கண்டுபிடிச்சுடறேன்” என்றேன். “முதல்ல எனக்கு மகாராஜா பள்ளிகொண்ட அறையை காட்டுங்க.”

“பள்ளிகொண்டது இங்கேதான்” என்று எஜமானர் அவரே என்னை அழைத்துச் சென்றார்.

ஓலைவேய்ந்த தாழ்வான கூரைகொண்ட அறை. ஆனால் அகலமானது. பெரிய கட்டில். அறைமூலையில் கொசுவுக்காக குந்திரிக்கம் புகைந்துகொண்டிருந்தது. மேலே பனையோலை தூக்குவிசிறி காட்டிலிருந்து வந்த காற்றில் ஆடியது. அதை இழுப்பவன் கைகூப்பியபடி நின்றிருந்தான்.

“நீ என்னடா பாத்தே?” என்றேன்

“நான் தூக்குவிசிறி கயித்தை இளுத்திட்டிருந்தேன்… தம்புரான் போனதே எனக்கு தெரியாது உடையதே” என்று அவன் அழுகைக்குரலில் சொன்னான். கரிய முகத்தில் அச்சம் நிறைந்த கண்கள். அவனுக்கு மெய்யாகவே ஏதும் தெரிந்திருக்காது.

நான் கண்ணைமூடி அங்கே நின்றேன். அங்கே ஒரு வெறுமையை என்னால் உணரமுடிந்தது. மிகப்பெரிய ஒன்றை எடுத்துவிட்டபின் எஞ்சுவதுபோன்ற ஒன்று. வெறும் அறை. வெள்ளைச்சுண்ணம் பூசப்பட்ட சுவர்கள். இரும்புக் கம்பியிட்ட சாளரங்கள்.

சட்டென்று திரும்பி “இங்கே பக்கத்திலே கோயில் ஏதாவது இருக்கா?” என்றேன்.

“கோயில்னா பலது இருக்கு…”

“கொஞ்சம் உக்ரமான கோயில். துடியான கோயில். சுடலையோ இசக்கியோ இருக்கிற கோயில்?”

“இருக்கு, ஆனா இங்க எல்லாம் பாத்தாச்சு.”

“கொஞ்சம் தள்ளி? கொஞ்சம் பயங்கரமான கோயில்னா?”

“பக்கத்திலே பெருமாள்புரம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் இருக்கு… கொஞ்சம் போகணும்.”

“நான் அங்கே போய் பாக்கிறேன்… நான் மட்டும் போறேன்”

“மகாராஜா அங்க எப்டி போனார்?”

“அவருக்குமேலே வந்து கூடின மூதேவியை விட்டு தப்பி ஓடியிருக்கார்” என்றேன்.

எஜமானன் என்னை திகைப்புடன் பார்க்க நான் “என் மேலேயும் அதுதான் வந்து கூடுது… ஓடிப்போயி தீயிலே குதிச்சு குளிச்சு சுத்தமாகணும்னு எனக்கும் வெறி வருது” என்றேன்

எஜமானன் மேலும் திகைப்புடன் பார்த்தார். வாய் திறந்திருந்தது. நான் அவரை தவிர்த்துவிட்டு வெளியே சென்று குதிரைமேல் ஏறிக்கொண்டேன்.

“என்னை ஒருத்தன் குதிரையிலே வழிகாட்டி கூட்டிட்டுப் போகணும்” என்றேன்.

“டேய், பூதத்தான். கூட்டீட்டுப் போடா” என்றார் எஜமானன்.

பூதத்தான் என்ற வீரன் குதிரையில் விரைய நான் பின்னால் சென்றேன். ஊரெங்கும் நிறைந்திருந்த மக்கள் நடுவே குதிரைகள் ஊடுருவியும் பிளந்தும் முட்டிமோதியும் சென்றன. மகாராஜா குதிரையில்தான் சென்றிருக்கவேண்டும்.

ஊரிலிருக்கும் அத்தனை வீடுகளும் திறந்திருந்தன. எல்லா வீடுகளிலும் விளக்குகள் எரிய மக்கள் நடமாடுவதன் நிழல்கள் ஆடின. எல்லா வீடுகளும் பேசிக்கொண்டிருந்தன. பினபக்க தொழுவங்களில் மின்னும் கண்களுடன் மாடுகள். முற்றங்களில் சுருண்டு கிடந்த நாய்கள் குரைப்பதை கைவிட்டுவிட்டிருந்தன.

பெருமாள்புரம் உச்சிமாகாளி அம்மனின் கோயிலில் அப்போது வெளியே தீபம் ஏதும் இருக்கவில்லை. மூங்கில்கள் நாட்டி வேலியிடப்பட்ட ஓலைக்கூரை வேய்ந்த சிறிய கோயில். கோயிலைச் சுற்றி கிளைதழைந்த கள்ளிப்பாலைகளும், கொத்து இலைகளுடன் காட்டிலஞ்சிகளும் காடு போலச் செறிந்திருந்தன. அப்பகுதியிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. உச்சிமாகாளி அம்மனை மக்களுக்கு அத்தனை பயமிருக்கிறது.

இலஞ்சி மரத்தடியில் இரண்டு குதிரைகளைக் கண்டுவிட்டேன். பூதத்தானை அங்கே நிற்கச் சொல்லிவிட்டு என் குதிரையையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு நடந்து அருகே சென்றேன்.

என் காலடியை கேட்டதும் இலஞ்சி மரத்தின் வேர்களின்கீழே ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்த கிருஷ்ணப்பையர் எழுந்து “ஆரு? ஆருன்னு கேக்கேன்ல? நான் பிராமணனாக்கும்” என்றார்.

“சுவாமி, இது நாந்தான்…”

“சர்வாதிக்காரரா? அம்மாடி, தப்பிச்சேன். இன்னைக்கு இந்த பேய்க்கோயிலிலே இருந்து உயிரோடே திரும்பிப் போவேன்னு நினைக்கல்லை.”

“மகாராஜா எங்கே?”

“அங்கே உள்ள அம்மன் சன்னிதியிலே இருக்கார்” என்றார். கிருஷ்ணப்பையர் “என்னைய இங்கே நிக்கச்சொல்லிட்டு உள்ளே போனார்.”

“சரி” என்று நான் உள்ளே சென்றேன்.

“நான் உள்ள வரல்லே. நான் நிஷ்டையுள்ள பிராமணன் இல்லே. அம்மன் கோவிச்சுகிட்டா புள்ளைகுட்டிகளுக்கு தீம்பு..”

“வேண்டாம்” என்றேன்.

கவிழ்க்கப்பட்ட நார்ப்பெட்டி போன்ற கூரைகொண்ட ,மண்சுவர்களால் ஆன கோயில். அதன் சாணிமெழுகப்பட்ட ஒட்டுத்திண்ணையில் மகாராஜா அமர்ந்திருந்தார். அவர் கைமுட்டுகளை தொடைமேல் ஊன்றி தலையை கையில் ஏந்தி குனிந்து அமர்ந்திருப்பது தெரிந்தது. தலையில் தலைப்பாகை இல்லை. முடி சரிந்து விழுந்து முகத்தை மூடியிருந்தது.

அவருக்குப் பின்னால் மூங்கில் அழியிட்ட கருவறைக்குள் உச்சினி மாகாளியின் சுடுமண்ணாலான ஆளுயரச் சிலை. எட்டு கைகளிலும் ஆயுதங்கள், கபால மாலை, திறந்த வாயிலிருந்து தொங்கிய நீண்ட நாக்கு, வெறித்து உருண்ட துறுகண்கள். அவள் முன்னால் கல்லகலில் ஒரு விளக்குச் சொட்டு செவ்வொளி கசிய அசைவில்லாமல் நின்றது.

நான் அருகணைந்ததை மகாராஜா அறியவில்லை. நான் வணங்கி மெல்ல குரல்தீட்டும் ஓசையை எழுப்பினேன்.

“ம்ம்?” என அவர் விழித்தார் “யாரு சர்வாதிக்காரரா? என்ன?”

“அடியேன், ஊரெல்லாம் தேடினோம்.”

மகாராஜா ஒன்றும் சொல்லவில்லை.

“அடியேன், இங்க இப்டி இருக்கிறது சரியில்லை. இது ஆளில்லா இடம்…”

”தேவி இருக்கா.”

”அடியேன், அவ எங்கும் இருப்பா.”

“என்னாலே அங்கே இருக்க முடியல்லை. பயம், சூன்யபோதம்… ஒண்ணுமே பண்ண முடியல்லை. அப்டியே செத்திடுவேன் போல இருந்தது… அப்ப முன்னாடி இங்க வந்த ஞாபகம் வந்தது. கிளம்பிட்டேன். இங்க வந்ததும் பயம் போச்சு. சூன்யபோதம், அது இருக்கு. அது சீக்கிரத்திலே போகாது.”

நான் அவர் பேசுவதற்காக காத்திருந்தேன்.

“என்னதுன்னே தெரியல்லை மார்த்தாண்டா. எல்லாம் முடிஞ்சாச்சுன்னு தோணிட்டுது. உண்மையிலே எப்டி நான் வாளை எடுத்து என் சங்கை அறுத்துக்கிடாம இருந்தேன்னே தெரியல்லை. என் கையிலே சக்தி இல்லை. உடம்பே நடுங்கிட்டிருந்தது. அதனாலே மட்டும்தான் நான் இதோ இருந்திட்டிருக்கேன்…” அவர் கையை விரித்தார். “எல்லாம் போச்சு. எல்லாம் போச்சு. இனி எனக்கு ஒண்ணுமே இல்லை. இங்க எனக்கு ஒண்ணுமே இல்லை. நான் ஜீவிச்சிருக்கிறதுக்கு காரணம்னு ஒண்ணுமே இல்லை.”

நான் “அடியேன், இப்ப இங்க இருக்கிறது சரியில்லை. இங்க இருக்கிறது தெரிஞ்சா கூட்டம் கூடிரும். அரண்மனைக்கு போவோம். அங்க கொஞ்சம் ஏதாவது சாப்பிடுங்க. கொஞ்சம் படுத்திருங்க”.

“இல்லை, எனக்கு அங்க பயமா இருக்கு. அங்க இருக்கிற மூதேவியை என்னாலே தாள முடியல்லை.”

“அடியேன், அப்ப வேற எங்கயாவது போவோம்.”

“வேண்டாம். நான் இங்க இருக்கேன்”

என் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. “அடியேன், ஏன் இங்க இருக்கணும்? கொஞ்சம் படுத்துக்கிடணும்னுதானே அரண்மனைக்கு வந்தீங்க. படுக்கலைன்னா மேலே போவோம். மீனாக்ஷியம்மை காலடியிலே உக்காருவோம்.”

“வேண்டாம்… என்னால் அங்கே இருக்கமுடியாது.”

“அடியேன், இப்ப அங்க நாம இருந்தாத்தான் உண்டு. இன்னும் கொஞ்ச நேரம்தான். பொழுதுவிடிஞ்சிரும். அம்மை எறங்கிருவா. பிறகு நாம பாக்கணுமானா மதுரை போகணும்… மகாராஜா மதுரை போறதுன்னா அது ராஜாங்க காரியம். ஆயிரம் கணக்குகள் இருக்கு. ஒருவேளை இனிமே நாம நம்ம கண்ணாலே அம்மையை பாக்கமுடியாமக்கூட ஆகலாம்…”

அவர் திடுக்கிட்டு என்னைப் பார்த்தார். கண்கள் நீர்படிந்து வெறித்திருந்தன. உதடுகள் இறுக தலை ஆடியது.

“அடியேன், நாம ஏன் நேரத்தை வீணாக்கணும்? நேரம் இப்ப பொன்னுபோலே. ஒவ்வொரு நிமிசமும் வைரமணிபோலே. எண்ணி எண்ணி செலவிடணும். நாம அங்க போயி அம்மை காலடியிலே இருப்போம். இப்ப அங்க யாருமில்லை. அம்மை இருக்கிற இடத்திலே பயமில்லை. சூனியமும் இல்லை. மகாமங்கலை அவ.”

“ஆமா” என்றபடி மகாராஜா எழுந்துகொண்டார். “எதுக்கு இங்கே இருக்கேன். கிளம்புவோம்.”

அவர் மேலாடையை எடுத்து சுற்றிக்கொண்டு நடக்க நான் “அடியேன். உச்சினி மாகாளிக்கிட்டே உத்தரவு வாங்கிக்கிடுங்க” என்றேன்.

மகாராஜா திரும்பி உச்சினி மாகாளியை வணங்கி “தம்புராட்டி, உன் காலடியிலே தலைவைச்சு பயமில்லாம இருந்தேன்” என்றார்.

அவர் நடக்க நான் பின்னால் சென்றேன். கிருஷ்ணப்பையர் குதிரைகளின் அருகே நின்றிருந்தார். மகாராஜா குதிரையில் ஏறிக்கொண்டு அதை உதைத்து பெருநடையில் சென்றார்.

“அரண்மனைக்குத்தானே?” என்றார் கிருஷ்ணப்பையர் என்னிடம்.

“நீங்க அங்க போய் இருங்க. மகாரஜா மீனாக்ஷியம்மை சன்னிதிக்கு போறார்.”

“அவருக்கு நல்ல காய்ச்சல் இருக்கு. தேகத்தை தொட்டா அனலா இருக்கு”

நான் அந்த வெம்மையை உணர்ந்திருந்தேன். அது நீர் குறைந்ததனால் வந்தது. சென்றதுமே ஏதாவது குடிக்கக் கொடுக்கவேண்டும்.

நானும் பூதத்தானும் மகாராஜாவின் பின்னால் சென்றோம். அவர் அந்த எளிய தோற்றத்தில் இருப்பதை எவரும் எண்ணியிருக்கவில்லை என்பதனால் எவரும் அவரை அடையாளம் காணவில்லை.

ஆள்கூட்டத்தின் நடுவே முட்டி ததும்பி, பல இடங்களில் ஒழுகும் நிரைகளை உடைத்து, அப்பால் சென்று மேலேறி மணப்பந்தலை அடைந்தோம். பந்தலுக்கு வெளியே அந்த வேளையிலும் மறுநாள் காலைப்பூசனையை காண்பதற்காக மக்கள் இருட்டில் குவியல் குவியலாக உடல் செறிந்து மலைச்சரிவை நிரப்பி அமர்ந்திருந்தனர்.

பந்தலில் திரை போட்டிருந்தார்கள். வெளியே சம்பிரதி கொச்சுகிருஷ்ண குறுப்பு நின்றிருந்தார். அவர் குதிரையில் வந்திறங்கிய மகாராஜாவை எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன ஏது என உணர்வதற்குள் மகாராஜா உள்ளே சென்றுவிட்டார்.

நான் பின்னால் சென்றேன். சம்பிரதி “என்ன என்ன?” என்றார்.

“ஒண்ணுமில்லை. மகாராஜா இங்கே இருக்கிற செய்தி வேறே தெரியவேண்டாம்” என்றேன்.

மகாராஜா பந்தலுக்குள் சென்று திரையிடப்பட்டிருந்த தெய்வங்களுக்கு முன் நின்றார். நான் கூடவே சென்றேன். அங்கே சிவாச்சாரியார்கள் இருவர் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தனர்.

“சுவாமி, சுவாமி” என்றேன்.

ஒருவர் கண்விழித்து என்னைப் பார்த்தார். “யாரு?” உடனே மகாரஜாவை அடையாளம் கண்டு எழுந்துவிட்டார்.

“தம்புரான் தேவிதர்சனம் பண்ணணும். திரையை நீக்குங்க”

“அம்மை அணியில்லாக் கோலத்திலே இருக்கா.”

“இருக்கட்டும்.”

“அணியில்லாம இருக்கிறப்ப—”

“வந்திருக்கிறது அவளுக்க பெத்த அப்பன்… பெண்ணைக்குடுக்கிற கலி நிறைஞ்ச மனசோட வந்திருக்காரு”

மகாராஜாவைப் பார்த்தபின் அவர் எழுந்து திரையை விலக்கினார். உள்ளே மீனாம்பாளின் செம்புச்சிலை மெல்லிய சுடர் வெளிச்சத்தில் இதமான மிளிர்வுடன், அணிகளோ மலர்களோ இல்லாமல், இளமஞ்சள் பட்டு உடுத்தி அமர்ந்திருந்தது.

கைகூப்பியபடி நின்ற மகாராஜா விம்மி அழத்தொடங்கினார். நான் திரும்பி சம்பிரதியிடம் ஒரு பீடத்தை எடுத்துப் போடும்படிச் சொன்னேன். அதற்குள் மகராஜா அப்படியே தரையில் அமர்ந்தார். நான் அறியாமல் அவரைப் பிடித்தேன். அவர் உடல் வெந்நீர்க்கலம் போல சூடாக இருந்தது. வியர்வையே இல்லாத வெப்பம். காற்றில்பறக்கும் துணிபோல அது அதிர்ந்தது.

அவர் தேவி காலடியில் தரையில் அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டார். மேலே பார்த்துக்கொண்டு கண்ணீர் விட்டார். நான் மெல்ல விலகி சம்பிரதியிடம் ”வெல்லநீர் கொண்டு வாரும். சுக்கு மிளகு ஒண்ணும் வேண்டாம். நல்ல இளநீரிலே வெல்லம்போட்ட பானக்கம்” என்றேன்.

அவர் வெல்லநீரை ஒரு செம்பில் கொண்டுவந்தார். நான் சிவாச்சாரியாரிடம் அதை அம்மனின் காலடியில் வைத்துப் படைத்து எடுத்து மகாராஜாவுக்கு கொடுக்கும்படிச் சொன்னேன்.

அவர் அவ்வாறே அதை அம்மையின் காலடியில் படைத்து, மலர் தொட்டு வீழ்த்தி வணங்கி இருகைகளாலும் எடுத்து மகாராஜாவிடம் கொடுத்தார்.

“என்ன?” என்றார் மகாராஜா.

”அடியேன். தேவி தீர்த்தம்” என்றேன். “குடிக்க வேணும். மறுக்கக்கூடாது, அம்மை தாறதாக்கும்.”

“முடியாது, எனக்கு இறங்காது”

“பெத்த மக தாறது. இனி அவ கையாலே ஒருவாய் தண்ணி குடிக்க முடியாம போகலாம்”

அவர் அதை வாங்கிக்கொண்டார். நிமிர்ந்து பார்த்து “அம்மே!” என்று உடைந்த குரலில் கூவினார். இருகைகளாலும் செம்பை வாங்கி வேகமாகக் குடித்தார். ஒழிந்த செம்பை அருகே வைத்துவிட்டு மீண்டும் மேலே பார்த்தார். அவர் விழிகள் உருண்டுகொண்டே இருந்தன.

நான் அங்கேயே நின்றேன். சற்று நேரத்திலேயே அவர் தூங்கிவிடுவார் என நினைத்தேன். அதேபோல அவர் உடல் தளர்ந்தது. கையை தரையில் ஊன்றினார். பின்னர் வெறுந்தரையிலேயே படுத்தார். சம்பிரதி அவர் படுக்க பாய் ஏதாவது கிடைக்குமா என்று சுற்றிலும் பார்த்தார். நான் வேண்டாம் என்று கைகாட்டினேன்.

மகாராஜா நிலத்தில் உடல் பதித்துக் கிடந்தார். மெல்ல மூச்சொலி வலுத்தது. அவருடைய மெலிந்த நெஞ்சு மூச்சில் ஏறியிறங்கியது. முகம் அமைதி கொண்டிருந்தது. முலைகுடித்தபின் உறங்கும் மகவு என நினைத்துக்கொண்டேன்.

[ 17 ]

நான் மணப்பந்தலை விட்டு வெளியே வந்தபோது தளவாய் நாராயணக் குறுப்பு என்னை நோக்கி வந்தார். அவர் அப்பால் மகிழமரத்தடியில் காவலர்தலைவன் பிறுத்தாக் குட்டி நாயரிடம் பேசிக்கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. அவர் “நில்கணும் சர்வாதிக்காரரே” என்றபோதுதான் கண்டேன். ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கினேன்.

அவர் அருகே வந்து “நான் சிலது பேசணும்” என்றார்

“பேசுங்க” என்றேன். அறிவு குறைந்தவர்கள் தீவிரம் கொள்ளும்போது முகம் அசட்டுத்தனமாக தோற்றமளிக்கிறது. அதைப்போல எரிச்சலூட்டுவது வேறில்லை.

“திவான்கிட்டே என்ன சொன்னீங்க?” என்றார்.

“என்ன சொன்னேன்னு அவர் சொன்னார்?” என்றேன்.

“அதாக்கும் நான் கேட்டது. அவர்கிட்டே சர்வாதிக்கார் சொன்னது என்ன?”

“நான் சொன்னது எதுவா இருந்தாலும் அதை நான் திரும்பச் சொல்லமுடியாது. திவானுக்கு இருக்கிற ஹர்ஜி என்னன்னு சொல்லட்டும்.”

ஹர்ஜி என்ற சொல் தளவாயைக் குழப்பியது. சுல்தான்கள் ஆட்சியில் பயன்படுத்தப்பட்டது அது. அலுவலகச் சொல். அவர் அதை கேட்டதுமே எல்லாம் அரசர் முன்னிலையில் பேசப்படவிருக்கிறது என்ற உணர்வை அடைந்தார். அது அவருடைய கோபத்தை சிதறடித்து சூழ்ச்சி மனநிலையை உருவாக்கியது

“திவான் புண்யபிராமணன், இந்த தேசத்துக்கு அமாத்யன். அவர்கிட்டே பேசத்தெரியலைன்னா சர்வாதிக்கார் பதவி எதுக்கு?” என்றார் தளவாய். “ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை இருக்கு. அந்த நிலைக்குண்டான பேச்சு வேணும்… அது தெரியாதவனுக்கு சர்வாதிக்கார் பதவி இருக்கப்பிடாது”

நான் புன்னகைத்து “சர்வாதிக்கார் கிட்டே கெட்ட பேச்சு வாங்குறவருக்கு திவான் பதவி எதுக்குன்னுல்ல கேட்டிருக்கணும்?” என்றேன்.

தளவாய் என் கேள்வியை ஒருகணம் கழித்தே புரிந்துகொண்டார். சட்டென்று கடும் கோபத்துடன் “நானாக்கும் இங்க தளவாய். இப்பவே, இந்த இடத்திலேயே நான் உன்னை பிடிச்சு துறுங்கிலே அடைக்க முடியும்” என்று கூச்சலிட்டார்.

“செய்யுங்க பாப்போம்” என்று நான் புன்னகையுடன் சொன்னேன்.

”இப்ப சொல்லுறேன். இதோ என்னுடைய ஆணை… டேய்” என்று திரும்பினார் தளவாய்.

பிறுத்தாக்குட்டி நாயர் “தளவாய் தம்புரானே, அதெல்லாம் வேணாட்டிலே நடக்காது. வேணாட்டுப் பட்டாளத்துக்க எட்டு பிரிவிலே நாலுக்கு இரணியசிங்கநல்லூர் தம்புரான்மாராக்கும் தலைமை. படையோடே அவங்க கிளம்பி வந்தா வேணாடுக்கு வேறே தளவாயை பாக்கவேண்டியிருக்கும்” என்றார்.

நான் புன்னகையுடன் “நான் மகாராஜாவுக்கு மட்டும் கடமைப்பட்டவன். மற்ற யாருடைய அதிகாரத்திலேயும் நான் கை கடத்த மாட்டேன். ஆனா அவங்கவங்களுக்குள்ள இடத்திலே இருந்துகிடணும். திவானா இருந்தாலும் தளவாயா இருந்தாலும்” என்றேன். “வேணாட்டு திவானும் தளவாயும் மதுரைக்கு அடைப்பக்கார வேலை செய்யக்கூடாது.”

“நானும் பதினெட்டு களரி முடிச்சவன்தாண்டே” என்றார் தளவாய்

“அப்ப கழுவிலே ஏத்தப்பிடாது. ஆனைக்காலிலே விட்டு இடறணும்” என்றேன்.

அவர் உடலில் ஓரு துடிப்பு பரவியது. பிறகு கைகால்கள் பலவகையாக உதற “என்ன? என்ன?”என்றார். உடைந்த குரலில் “இதை எப்டி முடிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்” என்று கூவியபடி மூச்சிரைக்க திரும்பிச் சென்று குதிரையில் ஏறி அதைச் சவுக்காலடித்து விரட்டிச் சென்றார்.

”கொஞ்ச நேரமா இதையே சொல்லிட்டிருக்காரு” என்று பிறுத்தாக்குட்டி நாயர் சொன்னார். “அந்த பரதேசப் பிராமணனை எதைக்கண்டு திவானா வைச்சார் மகாராஜான்னு தெரியல்லை. அவருக்கு மதுரை நாயக்கர்களைக் கண்டதும் மண்டையிலே அடிபட்ட மாதிரி ஆயிட்டுது. சர்வாதிக்காரர் தன்னை அவமானம் பண்ணிப்போட்டாருன்னு போயி மதுரை தளவாய் வெங்கப்ப நாயக்கர் கிட்டே சொல்லி கண்ணீர் விடுதாரு… என்ன படிப்பு படிச்சாரோ?”

“படிச்சது சாஸ்திரங்கள், தெலுங்கு, சம்ஸ்கிருதம், தமிழு, மலையாண்மை எல்லாம். படிக்காதது சகஜபுத்தி. அது ஏடு படிச்சா வராது. தானா வரணும்” என்றேன்.

பிறுத்தாக்குட்டி நாயர் “காலையிலே முதல் வெளிச்சத்திலே அவங்க கிளம்பறதுக்குண்டான ஏற்பாடுகளைச் செய்யணும். அவங்க யாரும் இந்த ராத்திரியிலும் கண்ணுறங்கல்லை. வெங்கப்ப நாயக்கர் பந்தலிலே இப்பவும் வெளிச்சம் தெரியுது” என்றார்.

நான் அந்த வெளிச்சத்தைப் பார்த்தேன். சிறுபொழுது தூங்கியதனாலேயே நான் நல்ல தெளிவை அடைந்திருந்தேன். மேற்கொண்டு தூங்கவேண்டியதில்லை என்று தோன்றியது. படுத்தாலும் தூங்க முடியாது. இத்தகைய உச்சகட்ட விசைகொண்ட நாட்களில் சிலநாழிகைப் பொழுது தூங்கினாலே உடலும் உள்ளமும் முழுமையாக மீண்டுவிடுகின்றன.

நான் மீண்டும் பந்தலுக்கே செல்லலாமா என்று எண்ணியபோது பிறுத்தாக்குட்டி நாயர் “வலிய சர்வாதிக்கார் இப்ப போயி தளவாய் வெங்கப்ப நாயக்கர் கிட்டே சரசமா நாலு வார்த்தை சொல்லுறது உசிதமா இருக்கும்னு அடியேனுக்கு தோணுது. இந்த பரதேசிப்பிராமணனும் படைக்குறுப்பும் அங்க என்னென்ன சொல்லி வச்சிருக்காங்கன்னு தெரியாதே” என்றார்

“மதுரை தளவாய் மனசு நிறைஞ்ச மனுஷன்… எல்லாம் அவருக்கு தெரியும்”

“ஆமா, ஆனா நம்ம திவான் சூட்சுமம் அறிஞ்சவர். நாலுபேருக்கு முன்னாலே நின்னு தன்னை அவமானம் பண்ணிப்போட்டாங்கன்னு கண்ணீரு விட்டாருன்னா அது அப்டி சும்மா விடமுடியுற காரியமில்லை. ஸ்ரீவிஜயநகர நாயக்கருங்களுக்கு பிராமண பக்தி உண்டு. சிருங்கேரி மடாதீசன் உண்டுபண்ணின ராஜ்யமல்லவா?”

அது உண்மை என்று எனக்கு தோன்றியது. திவான் நாலைந்து நியோகிப் பிராமணர்களும் மற்ற உயர்நிலை நாயக்கர்களும் இருக்கும் சபையில் போய் அழுதியிருந்தால் அது பிரச்சினைதான்.

“நமக்கு ஒரு நாள் கடந்து கிட்டணும்… சொல்லப்போனா ஒரு காலை வேளை போயிக்கிட்டணும். அது வரை பிரச்சினை இருக்கக்கூடாது” என்றார் பிறுத்தாக்குட்டி நாயர்

நான் தலையசைத்தேன். என் குதிரையில் ஏறிக்கொண்டு மணவாளன் குழுவினருக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை நோக்கிச் சென்றேன். தளவாய் வெங்கப்ப நாயக்கருக்கும் ராயசம் விஜயரங்கய்யாவுக்கும் அரண்மனைகளின் வடிவில் தனித்தனியான சிறு கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. வியாசராஜ மடத்து சுவாமி நாராயண பட்டாச்சாரியர் தனியாக ஒரு சிறுகுடிலில் தங்கியிருந்தார். எஞ்சிய அனைவரும் பெரிய கொட்டகையில் தங்கியிருந்தனர். படைவீரர்கள் பலர் அந்த கொட்டகையைச் சூழ்ந்து வெட்டவெளியிலும் மரத்தடிகளிலும் அமர்ந்தும் படுத்தும் தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் படுத்தும் அமர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான் தளவாய் வெங்கய்யாவின் கொட்டகை முன் குதிரையிலிருந்து இறங்கினேன். அங்கே நின்ற சம்பிரதி என்னை கண்டு தலைவணங்கினான். “தளவாய் கண்ணு உணர்ந்திருக்கிறாரா?” என்று நான் கேட்டேன்.

“பேசிட்டிருக்கார்… உள்ளே ராயசம் இருக்கார்.”

”நான் வந்த செய்தியைச் சொல்லு.”

நான் பேசிக்கொண்டிருக்கையிலேயே தளவாய் வெங்கப்ப நாயக்கர் எழுந்து வந்தார். “வாங்க, வாங்க… இன்னும் வேலை முடியலையா?” என்றார்.

“வேலை எப்ப முடியறது? நான் இப்ப சும்மா பாத்திட்டுப்போக வந்தேன்.”

”சந்தோஷம்…வாங்க” என்றார்.

அவர் என் கைகளைப் பற்றிக்கொண்டார். நான் அவருடைய பெரிய கைகளை இறுகப்பிடித்தேன். எப்போதுமே நம்மைத் தொட்டுப் பேசுபவர் அவர். நானறிந்த அரசகுடியினரில் அனைவரையும் தொடுபவர் அவரே. ஒருவேளை அது நாயக்கர்களின் வழக்கமாக இருக்கலாம். அவர்கள் அத்தனைபெரிய படையை உருவாக்கி தென்னகத்தையே பிடித்தமைக்கு அதுதான் காரணமாக இருக்கலாம்.

ராயசம் விஜயரங்கய்யா உள்ளே எழுந்து நின்று கைவிரித்து என்னை வரவேற்றார். “வாங்க… திருவிழான்னா இதுதான் திருவிழா. இத்தனை நாளுக்குள்ளே இப்டி ஒரு திருவிழாவை நடத்திக்காட்டுறது பத்து ராஜ்ஜியங்களை படைகொண்டு பிடிச்சது மாதிரி” என்றார்.

“குறைகள் ஒண்ணு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2021 11:35

குமரித்துறைவி [குறுநாவல்] – 4

[ 13 ]

மணப்பந்தலுக்குள் நான் மீண்டும் நுழைந்தபோது திவான் வரவேற்புரை முடித்து அமர்ந்து விட்டிருந்தார். ஸ்ரீமீனாம்பாளை அமரவைக்க வேண்டிய பீடத்திற்கு பூசை நடந்துகொண்டிருந்தது. மாடம்பிகள் மெல்ல அவர்களுக்கிடையே இருந்த பூசல்களிலிருந்து விடுபட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருந்தமையால் அவையில் அமைதி நிலவியது. பெண்கள் பகுதியிலிருந்து மட்டும் பேச்சொலி சொற்களற்ற மென்மையான முழக்கமாக கேட்டது. நான் என் இரு மனைவியரையும் அப்போதுதான் கண்டேன். அவர்கள் பீடத்தை நோக்கி கூப்பிய கைகளுடன் அமர்ந்திருந்தனர்.

நான் என் சிற்றப்பனை அணுகி அவர் கால்தொட்டு வணங்கினேன். அவர் தலையில் கைவைத்து வாழ்த்திவிட்டு, “மகாராஜா வாற நேரமாச்சுல்லாடே?” என்றார்.

“வரப்போறார்” என்று நான் சொன்னேன்.

“இன்னைக்கு சர்வமங்களமான நாள். சாகிற காலத்துக்குள்ளே இப்டி ஒரு நாளிலே நானும் வந்து இருந்துபோட்டேன்…இது போதும்டே.”

திவான் எழுந்து என்னை நோக்கி வந்து “ராஜா வாறதுக்குண்டான அறிவிப்பை போட்டிடலாமா?” என்றார்.

அவர் என்னை நோக்கி வந்தது சிற்றப்பனுக்கு நிறைவளித்தது. நான் அவரைப் பார்க்காமல் திவானிடம் “கொம்புபோட சொல்லிடலாம்” என்றேன்.

திவான் கைதூக்கியதும் கொம்புகள் முழக்கமிட்டன. மறுபக்கம் மன்னரின் கொட்டகை முகப்பில் நின்ற அணிப்படையிலிருந்து கொம்போசை எழுந்தது. மன்னர் கிளம்பிவிட்டதை அறிவித்து முரசொலி எழுந்தது. அவையிலிருந்த அனைவரும் எழுந்து நின்றனர். நான் மறுபக்க வாசலில் சென்று நின்றேன். பஞ்சவாத்திய மேளம் ஒலிக்க மாரார் குழு முதலில் வந்தது. வேணாட்டின் சங்குக்கொடியுடன் கொடிவீரன் தொடர்ந்து வந்தான். சரிகைமேலாடையை மார்பில் கட்டி, திறந்த தோள்களின்மேல் சரப்பொளிமாலையும் பதக்கமாலையும் அணிந்து, தோள்வளைகளும் கைவளைகளும் காப்புகளும் மின்ன, விசிறியடுக்கு வெள்ளை ஆடை அலைபாய, பாத்ரமங்கலம் தாசிகள் தாலப்பொலி ஏந்தி வந்தனர்.

பட்டு விதானத்தை இருவர் ஏந்தியிருக்க அதன் கீழே மகாராஜா நடந்துவந்தார். அவருக்குப்பின்னால் இருபக்கமும் மயில்கண்வடிவ ஆலவட்டங்களை இருவர் வீச அவர் பொன்வண்ணச் சிறகுகளுடன் பறந்து வருவதுபோலத் தோன்றியது. அவரைத்தொடர்ந்து கவச உடையணிந்த வீரர்கள் வந்தனர். திவான் முன்னால் சென்று மகாராஜாவை தலைவணங்கி முகமனுரைத்து வரவேற்றார். தளவாய் அவர்முன் வாளை உருவி கால்நோக்கி தாழ்த்தி உடல் வளைத்து வணங்கினார். அவர்கள் அவர் முன் நடந்து அழைத்து வலப்பக்க வாசல் வழியாக அவைக்குள் கூட்டி வந்தனர்.

மகாராஜா அவைக்குள் நுழைந்ததும் கோல்காரன் சிறியமேடைமேல் ஏறி நின்று உரத்தகுரலில் “ஸ்ரீ ஆதிகேசவ பாததாசன், வேணாடு இருந்தருளும் மகிபதி, சேரகுல உத்துங்க சீர்ஷன், சத்ருபயங்கரன், சவ்யசாஜி, பிரியநந்தனன், ஆதித்ய வரகுண சர்வாங்கநாதப் பெருமாளுக்கு ஜயமங்களம்!” என்று கூவினான். “ஜயவிஜயீஃபவ!” என்று அவையிலிருந்தோர் கைதூக்கி வாழ்த்துக்களைக் கூவினர்.

வாழ்த்தொலிகள் நடுவே மகாராஜா கைகளைக் கூப்பியபடி வந்து அவை நடுவே நின்று மூன்றுபக்கமும் உடல்வளைத்து வணங்கினார். அவையிலிருந்து ஒவ்வொரு குடிக்கும் ஒரு குடிமூத்தவர் என பன்னிரு முதியவர்கள் வந்து மகாராஜாவை அழைத்துச் சென்று தாழ்வான ஆய் குலத்துச் சிம்மாசனத்தில் அமரச்செய்தனர். சங்கொலியும் முழவொலியும் கொம்பொலியும் மணியொயொலியும் முரசொலியும் எழுந்து அவையை நிறைத்தன.

அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரி தலைமையில் ஏழு நம்பூதிரிகள் வந்து வேதம் ஓதியபடி பொன்னாலான கிண்ணங்களில் இருந்து கங்கைநீரை மாவிலையால் தொட்டு அவர்மேல் தெளித்து மஞ்சளரிசியிட்டு வாழ்த்தினர். மகாராஜா கைகளைக் கூப்பியபடி அமர்ந்திருந்தார்.

முறைப்படி கோல்காரன் சொல்லி அழைக்க, ராமனாமடத்துப் பிள்ளை, மார்த்தாண்ட மடத்துப் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப் பிள்ளை, செம்பழஞ்சிப் பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை என எட்டு கோயிலதிகாரிகளும் அவர் முன் வந்து வாள்தொட்டு தலைவணங்கினர்.

அதன்பின் மாடம்பிகள் எழுவர் பாறசாலை கண்டன் வலியத்தான் தலைமையில் வந்து வாளை உருவி அவர் காலடியில் தாழ்த்தி வணங்கினர். மற்ற மாடம்பிகள் அவரவர் இடங்களில் நின்றவாறே வாளை உருவி தாழ்த்தி வணங்கினர். “வேணாடுக்கு ஜயம்!” என்றார் கண்டன் வலியத்தான்.  “ஜயம்! ஜயம்! ஜயம்!” என்று சபையினர் வாழ்த்தொலி எழுப்பினர்.

சிவீந்திரம் வட்டப்பாறை மடம் அச்சு மூத்தது அவை முன் வந்து வணங்கி ”வேணாடு உடைய ஸ்ரீ ஆதிகேசவ மூர்த்திக்கு சாஷ்டாங்க பிரணாமம்” என்றார். அவருடைய மெல்லிய குரல் கேட்குமளவுக்கு அவை அமைதி அடைந்தது. “எந்தெந்நால் இவ்விடம் இன்னைக்கு ஒரு மகாமங்கல கர்மம் நடக்கப்போகுது. மதுரை அரசி ஸ்ரீமீனலோசனி அம்மையை லோகேஸ்வரனாகிய திரிலோசனன் சுந்தரேசனுக்கு வதுவைமங்கலம் செய்துகொடுக்க தீர்மானமாகியிருக்கு. இந்த சித்திரை மாதம் பதினொன்றாம் நாள் துவாதசியில் காலை முதலொளிப் பொழுது குறிச்சிருக்கு. வரும் சித்ராபௌர்ணமி நாளில் அம்மையும் அப்பனும் மதுரைக்கு யாத்ரையாகவும் நாள் பார்த்திருக்கு. அதுக்கு வேணாடு முழுமையும் வந்து இருந்த இந்த சபை அனுக்ரகமளிக்க வேணும்” என்றார்.

அவையிலிருந்தவர்கள் கை தூக்கி “சுபம் சுபம் சுபம்” என்று வாழ்த்தளித்தனர்.

“எந்தெந்நால், ஸ்ரீமீனாக்ஷி இந்த கன்யாகுமரி மண்ணில் கடல்புறத்தில் மீன்குலத்தில் பிறந்தவள். இந்த மண்ணுக்கு ராஜனாகிய ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளுக்கு சொந்த அனுஜத்தியானவள். தங்கையை கைப்பிடிச்சு கொடுக்க ராஜாதிராஜனும் புவனமகாராஜனுமாகிய ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் இங்கே வந்து சேர்ந்திருக்கிறார். மகாராஜா இப்போ அவ்விடம் போய் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை இந்த கல்யாணசபைக்கு ஸ்வீகாரம் செய்து கூட்டிவருவார். வேணும் சுபமங்களம்” என்றார் அச்சு மூத்தது.

அவையிலிருந்தவர்கள் கை தூக்கி “சுபம் சுபம் சுபம்” என்று வாழ்த்தளித்தனர்.

முரசுகள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கின. திவானும் தளவாயும் இருபக்கங்களிலாக நிற்க மகாராஜா எழுந்து கைகூப்பியபடி முகப்புவாசலை நோக்கிச் சென்றார். பக்கவாட்டு வாசல் வழியாக வெளியே சென்று முகப்பு வாசலை அடைந்து மகாராஜாவுக்கு முன்னால் விரைந்தேன்.

கீழே ஆதிகேசவப் பெருமாளை சப்பரத்துடன் நிறுத்தி வைத்திருந்தார்கள். அவரை எதிரேற்று அழைத்துவந்த பரகோடி கண்டன்சாஸ்தாவின் சப்பரம் அருகே நின்றிருந்தது. ஏற்கனவே வலப்பக்க வாசல் வழியாக மகாராஜா நுழைந்ததும் பந்தலைச் சுற்றிக்கொண்டு முன்னால் வந்து நின்றிருந்த மாரார்களும் தாசிகளும் முன்னால் நடக்க மகாராஜா தொடர்ந்து சென்றார். அவர் வருவதைக் கண்ட ஆதிகேசவனுடன் வந்த வாத்தியக்குழு முழக்கமெழுப்பியது. இரு மங்கல ஓசைகளும் இணைந்தன.

மகாராஜா சென்று முதலில் பரகோடி கண்டன் சாஸ்தாவை வணங்கிவிட்டு ஆதிகேசவனை வணங்கி மணப்பந்தல் காண வரும்படி மும்முறை சைகை காட்டி அழைத்தார். அதன்பின் ஆதிகேசவனின் சப்பரம் முன்னால் செல்ல அவர் பின்னால் நடந்தார். சப்பரத்தை ஏற்றிவந்த நாயர்கள் அதை நடனம்போல முன்னும் பின்னுமாக ஊசலாட்டினர். ஆதிகேசவன் களிநடமிட்டபடி பந்தலில் நுழைவது போலிருந்தது. கூடவே பரகோடி கண்டன் சாஸ்தாவும் நடனமிட்டார்.

ஆதிகேசவன் உள்ளே நுழைந்ததும் அத்தனை வாத்தியங்களும் இணைந்து உச்ச ஓசையெழுப்பினர். கொம்புகளின் ஓசை யானைக்கூட்டத்தின் பிளிறல் போல ஓங்கி ஒலித்தது.

சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரி தலைமையில் ஏழு நம்பூதிரிகள் வேதம் ஓதியபடி வந்து ஆதிகேசவனை எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். சப்பரத்திலிருந்து ஆதிகேசவனின் செம்பாலான உற்சவமூர்த்தி சிலையை எடுத்து அவருக்காக அமைக்கப்பட்டிருந்த கல்பீடத்தில் அமர்த்தினர். அருகே வலப்பக்கம் பரகோடி கண்டன் சாஸ்தா அமர்ந்தார்.

ஆதிகேசவனின் சப்பரத்துடன் திருவட்டாறிலிருந்து வந்த இளைய நம்பி ஆதிகேசவனுக்குரிய பூசைகளை தொடங்கினார். இடைக்கா மட்டும் ஒலித்துக்கொண்டிருக்க பூசைச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன.

நான் எழுந்து வெளியே வந்தேன். சட்டென்று வெளியே விரிந்திருந்த வெளிச்சம் என் கண்களைக் கூசவைத்தது. குனிந்து தரையைப் பார்த்தேன். கண்ணீர் வழிந்துகொண்டிருந்ததை மேலாடையால் துடைத்தேன். என்னை நோக்கி நூற்றுவர் தலைவன் மல்லன் சங்கரன் ஓடிவந்தான்.

நான் அவனிடம் “மணவாளன் மனையிலே எல்லாம் ஒருக்கம்தானே?” என்றேன்.

“நாலுமுறை பாத்தாச்சு உடையதே” என்றான்.

“இன்னொருமுறை பாரு… எந்த தப்பும் நடக்கப்பிடாது” என்றேன். “இப்ப ஆதிகேசவனுக்கு பூசை முடிஞ்சதும் கொம்புவிளி வரும். உடனே மணவாளன் தன் ஆளுகளோடே கிளம்பி பந்தலுக்கு வரவேண்டியது”

“சொல்லிடறேன் உடையதே” என்றான்.

“அவங்க பெண்ணுக்கான நகை, புடவை, சீர் எல்லாம் எடுத்து வைச்சாச்சா?” என்றேன்.

”அங்கே ஒரு பேச்சு வந்தது உடையதே” என்றான் மல்லன் சங்கரன். “அதிலே ஒருத்தன் ராயசம் கிட்டே கேட்டான், இங்கே இதெல்லாம் மலையாளத்துக் கல்யாணமா இருக்கே. தொடங்கினதும் தெரியாம முடிஞ்சதும் தெரியாம இருக்கு. மணவாளன் ஊர்க்கோலம், நலுங்காட்டம்னு நூறு சம்பிரதாயங்கள் இருக்கேன்னு… அதை ராயசம் தளவாய்கிட்டே சொன்னப்ப அவரு சிரிச்சுக்கிட்டு அதையெல்லாம் அங்கே நாம நடத்துவோம், இது அவங்க ஊரு. அவங்க பொண்ணுன்னு சொன்னாரு. இருக்கட்டும், ஆனா மணவாளன் நம்மூரு, நம்மாளுன்னு ராயசம் சொன்னாரு. அப்டி பேச்சு ஓடிச்சு. கடைசியிலே தளவாய் இது என்னமோ பொண்ணு களவாங்கிக்கிட்டு வாறது மாதிரி இருக்குன்னு சொன்னாரு. சரி, மருதைக்காரன்தானே மணவாளன். மறவக்குடி பழக்கமும் கொஞ்சம் இருக்கட்டுமேன்னு தளவாய் சொன்னப்ப ராயசம் சிரிச்சுப்போட்டாரு.”

நான் புன்னகைத்து “ஒண்ணு சொல்லுதேன் கேட்டுக்க. இவனுக இப்ப இந்த கல்யாண வைபோகத்தைப் பார்த்துட்டானுக. இனிமே விடவே மாட்டானுக. இதே கல்யாணச்சடங்கை இவனுக மதுரையிலே இதைவிட நூறுமடங்கு பெரிசா ஆண்டோடாண்டு நடத்தத்தான் போறானுக” என்றேன்.

”ஆமா உடையதே, எனக்கும் அப்டித்தான் தோணிச்சு” என்றான் மல்லன் சங்கரன். “கூட்டத்தைப் பாத்துட்டு தளவாய் சொன்னாரு. என்ன ஒரு பரவசம் பாத்தீங்களா சசிவோத்தமரே. இந்த அளவுக்கு ஒரு பரவசத்தை எங்கயும் பாத்ததில்லைன்னு. ராயசம் சொன்னாரு, இல்லாம இருக்குமா? கைலாசத்திலே நடக்குற சடங்கு இங்கே மண்ணிலே நடக்குது. அம்மையும் அப்பனும் கல்யாணம் பண்ணிக்கிடுததை பிள்ளைங்க பாக்குறது சாதாரண பாக்கியமான்னு. அதுவரை நான்கூட அப்டி யோசிக்கல்லை”

நான் சிரித்து “இனிமே அவங்களோட விளையாட்டு இது” என்றேன். “நூறாண்டு காலமாச்சுல்லா? அத்தனை மங்கலமும் அணைஞ்சு இருண்டு கிடந்த தென்னாடு தீபமும் பூவுமா மலர்ந்துட்டு வருதுல்லா? இனி ஊரூரா திருவிழாதான். தலைமைத் திருவிழா மதுரையிலே நடந்தாகணும்… இனிமே அது மீனாக்ஷி கல்யாணம்தான். எல்லாம் அம்மை அருள்” என்றேன்.

சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்றபோது மீனாக்ஷியன்னையுடன் முத்தாலம்மனும் பிள்ளையாரும் வந்து சற்று அப்பால் பந்தலித்து நின்ற ஆலமரத்தின் அடியில் காத்து நிற்பது தெரிந்தது. நான் அருகே சென்றதும் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் என்னை நோக்கி வந்து “அங்கே ஆதிகேசவனுக்கு முறைபூசைகள் முடிஞ்சதும் மகாராஜா மட்டும்தானே வணக்கம் நடத்துறது? அத்தனைபேரும் வணக்கம் சொல்றதுன்னா அதுவே விடியவிடிய ஆயிரும்” என்றார்.

“இல்லை, ஒண்ணுரெண்டு தாந்த்ரீகச் சடங்குகள் மட்டும்தான். மகாராஜாவும் சிவீந்திரம் பெரிய நம்பூதிரியும் மட்டும்தான் வணக்கம் நடத்துற சம்பிரதாயம்… இப்ப முடிஞ்சிரும்” என்றேன்.

முத்தாலம்மை சிவப்புப் பட்டு கட்டி பெரிய மூக்குத்தியும் வட்டப்பொட்டும் அரளிமாலையுமாக மங்கலக்கோலத்திலும் உக்கிரமாக இருந்தார். பிள்ளையார் சிலை சிறியது. குழந்தைப்பிள்ளையார். பொல்லாப்பிள்ளையார் என்று ஊரில் சொல்வார்கள். எதையுமே அறியாமல் தன் தீனியில் மூழ்கி குனிந்து அமர்ந்திருப்பவர் போலிருந்தார். “இங்க கிடந்து கண்ணீரு விடுதேன், நீ தின்னுட்டே இரு” என்றுதான் பக்தர்கள் சமயங்களில் அவரை வசைபாடுவார்கள்.

மணப்பந்தலில் இருந்து கொம்போசை எழுந்தது. நான் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியாரிடம் “அழைப்பு வந்தாச்சு, போலாம்” என்றேன்.

ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் கைகாட்ட மீனாக்ஷியம்மனின் முன்னால் நின்றிருந்த மாரார்கள் வாத்தியங்களை இசைத்தனர். குட்டியானைகள்போல கொம்புகள் முழங்கின. மலைக்குரங்குக் கூட்டம்போல் முழவுகள். மணியோசை இலைத்தாள ஓசை. சங்கொலிகள். மணமகளின் முன்னால் முத்தாலம்மை செல்ல பின்னால் பிள்ளையார் சென்றார். அவர் அப்போதும் எதையும் கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

மணப்பந்தலுக்கு வெளியே அம்மை தயங்கி நிற்க, முத்தாலம்மை நின்று அம்மையை அழைத்து ஊக்கப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றாள். அம்மை உள்ளே நுழைந்ததும் வாத்தியங்களின் முழக்கம் எழுந்தது. உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பெருங்குரலில் “அம்மே! மகாமாயே! தேவீ!” என்று கூவினர். தாசிப்பெண்கள் குரவையிட்டனர்.

சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரியும் ஏழு நம்பூதிரிகளும் முன்னால் வந்து அம்மையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். அம்மையை அவளுக்கான பீடத்தில் சிவாச்சாரியார் எடுத்து அமரச்செய்தார். அம்மைக்கு வலப்பக்கமாக முத்தாலம்மனும் சற்று பின்னால் பொல்லாப்பிள்ளையாரும் அமர்த்தப்பட்டார்கள்.

சிவீந்திரம் வட்டப்பாறை மடம் அச்சு மூத்தது எழுந்து அவையை வணங்கியதும் ஓசைகள் அணைந்தன. “சுபமங்களம்! எந்தெந்நால் இங்கே இன்றைக்கு மதுரை ஸ்ரீ மீனலோசனித் தாயாருக்கான கல்யாண மங்கல மகா உத்சவம் நடக்கப்போகிறதாலே உடைய தம்புரான் வேணாடுடைய மகாராஜா தலைமையிலே வேணும்பூஜைகளும் முறைபோலே நடக்க ஆவன ஒருக்கியிருப்பதனாலே ஒவ்வொருத்தரும் அவரவர் குலமுறைப்படியான பூஜைகளை கல்யாண மங்கலங்கள் முடிஞ்ச பின்னாலே செய்துகொள்ள வேணுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேணும் சுபமங்களம்” என்று அவர் சொல்லி கைகூப்பினார்.

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் தங்கை மீனாம்பிகைக்கு ஐவகைப் பழங்களும், ஏழுவகை காய்களும் ,பன்னிருவகை மலர்களும்  அண்ணன் சீராகக் கொண்டுவந்திருந்தார். பொற்தாலங்களில் வைத்து அவற்றை அவளுக்கு அளித்தார். மூன்று தாலங்களில் மூன்று வண்ண வீராளிப் பட்டும் வைரம் பதித்த பொன்நகைகளும் அவரால் அலங்காரச்சீராக அளிக்கப்பட்டன. அதன்பின் சேரநிலத்து முறைப்படி அஷ்டமங்கலங்களும் தசபுஷ்பமும் அளித்து வாழ்த்தினார்.

மகாராஜாவும் சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரிப்பாடும் ராமனாமடத்துப் பிள்ளை, மார்த்தாண்ட மடத்துப் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப் பிள்ளை, செம்பழஞ்சிப் பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை என எட்டு கோயிலதிகாரிகளும் பதினெட்டு மாடம்பிகளும், பதினெட்டு பிடாகைத்தலைவர்களும் அம்மைக்கு வணக்கம் செலுத்தியதும் சிவாச்சாரியார்கள் அம்மையின் முன் தாலத்தில் இருந்து மலரும் நீரும் எடுத்து கூட்டத்தின்மேல் வீசி பூஜை முடிந்ததை அறிவித்தனர்.

கொம்புகள் முழங்கின. அதைக்கேட்டு மணவாளன் மனையின் முன்னால் நின்ற கொம்புகள் எதிர்முழக்கமிட்டன. வெளியே நின்றிருந்த அத்தனை மாரார்களும் செண்டைகள், திமிலைகள், முழவுகள், இடைக்காக்கள், கொம்புகள், இலைத்தாளங்கள் என முழக்க அப்பகுதியின் காற்றிலேயே தாளத்தை அலையலையென கண்ணால் பார்க்கமுடிந்தது. தொலைதூரத்து மலைகளின் கரும்பாறைப் பரப்புகள் தோல்படலங்கள் என விதிர்த்துக்கொண்டன.

நான் வெளியே சென்று சற்று விலகி அங்கே நிகழ்வன அனைத்தையும் பார்க்கும்படி நின்றேன். ஒவ்வொன்றையும் விழிகளால் தொட்டுத் தொட்டு எல்லாம் முறையாக நிகழ்கின்றனவா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளில் தீவிரம்கொண்டு பிறரை மறந்து செயல்பட அனைத்தும் ஒருங்கிணைந்து ஒற்றைச் செயல்பாடாக நடந்துகொண்டிருந்தது.

ஆதிகேசவப்பெருமாளின் சப்பரம் முதலில் மணப்பந்தலை விட்டு வெளியே வந்தது. தொடர்ந்து பரகோடி கண்டன் சாஸ்தாவின் சப்பரமும் வெளிவந்தது. ஆதிகேசவனின் கருடக்கொடியுடன் ஒருவன் முன்னால் சென்றான். அவனைத்தொடர்ந்து வாத்திய மேளங்களுடன் மாரார்கள். பின்னர் முன்நெற்றியில் முடிசுற்றிக் கொண்டை கட்டி, அவற்றின்மேல் பொற்சரடுகள் சுற்றிச் சரித்து, ஆரங்களும் மாலைகளும் மார்பிலணிந்த பட்டுமுலைக்கச்சைமேல் துவள, பட்டுத்துகிலை ஒட்டியாணத்தால் இறுக்கிய பாத்ரமங்கலம் தாசிகள் தாலப்பொலி ஏந்தியபடி சென்றனர். அவர்களுக்குப் பின்னால் நம்பூதிரிகளும் பரதேசப் பிராமணர்களுமாக இரண்டு நிரை வைதிகர்கள். அதன்பின் பொன்மின்னும் சப்பரத்தில் ஆதிகேசவன் எழுந்தருளினார்.

ஆதிகேசவனுக்குப் பின்னால் யானைக்கொடியுடன் பரகோடி கண்டன் சாஸ்தாவின் முன்னோட்டன் சென்றான். தொடர்ந்து சாஸ்தாவின் சிறிய சப்பரம் சென்றது. தாசிகளும் சிவாச்சாரியார்களும் இரு நிரைகளாகச் சென்றனர். பரகோடி கண்டன் சாஸ்தாவுக்கு பின்னால் மகாராஜாவின் தூதர்களாக திவான் நாகமையாவும் உருவிய வாளுடன் தளவாய் நாராயணக் குறுப்பும் நடந்தனர். குடிமுறையின் பிரதிநிதிகளாக பதினெட்டு மாடம்பிகளும், எட்டு கோயிலதிகாரிகளும் உருவிய வாளை ஏந்தியபடி நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் பதினெட்டு குடிகளின் நூற்றெட்டு தலைவர்களும் கைகளில் மங்கலவரிசைகளுடன் சென்றனர்.

மணவாளன்மனையின் முன்னால் திருநெல்வேலியில் இருந்து வந்த மதுரைப்படை அணிவகுத்து நின்றிருந்தது. வேணாட்டுப் படைகளைப் போல அன்றி அவர்கள் மார்புகளில் தேய்த்து தெளிநீர் போல மின்னிய இரும்புக் கவசங்களும், பட்டாலான தலைப்பாகைகளும் அணிந்திருந்தனர். கைகளில் ஒளியாலான கூர் கொண்டவை போன்ற ஈட்டிகள். யானைகளே கூட பொன்னணி கொண்டு மிகப்பெரிய வண்டுகள் போல ஒளிர்ந்துகொண்டிருந்தன. முகப்பில் நின்ற பெரிய பிடியானை தங்கத்தால் ரேக்கிடப்பட்டது போலிருந்தது. பழுதுகுறை இல்லாத முழுமைகொண்ட வெண்புரவிகள் முகிலால் ஆனவைபோல தோன்றின. அவை வெள்ளிப்பட்டைகளும் வெண்கொக்கு இறகால் குஞ்சலங்களும் அணிந்து மின்னல்கோத்த உச்சிமேகங்கள் போலிருந்தன.

மதுரையின் கோல்காரன் கைகாட்டியதும் அங்கே வாத்தியங்கள் முழக்கமிட்டன. அவர்கள் அனைவரும் பாண்டிநாட்டிலிருந்து வந்தவர்கள். பன்னிரு தவில்கள் இடியோசை ஒத்திசைவு கொண்டு தாளமென்றானதுபோல் முழக்கமிட்டன. ஆறு நாதஸ்வரங்கள், அவற்றுடன் ஒத்து ஊதும் பன்னிரண்டு சுதிக்காரர்கள். கைமணி இசைப்பவர்கள் பன்னிருவர். அந்த இசை மயில்கள் அகவுவதுபோல, கன்று குரலெழுப்புவதுபோல, கன்னிப்பெண் கொஞ்சுவதுபோல  ஓங்கி எழுந்து தழைந்து குழைந்து ஒழுகியது. இசையை வெள்ளிச்சரடு போல கண்ணால் பார்க்க முடியும் என்பதை அப்போதுதான் கண்டேன்.

அவர்களின் தாசிகள் கொண்டையை பின்னால் கட்டிச் சரியவிட்டிருந்தனர். அனைவருமே பச்சைப்பட்டுச் சேலைகளை சுற்றி உடுத்திருந்தனர். கொண்டைகளிலிருந்து முத்தாரங்கள் சரிந்தன. பொற்தாலங்களில் மலரும் கனிகளும் மற்ற மங்கலப்பொருட்களும் ஏந்தியிருந்தனர். அனைத்துமே தூயபொன் என சுடர்விலிருந்து தெரிந்தது. அவர்களுக்குப் பொன் என்பது அள்ள அள்ள குறையாமல் எங்கிருந்தோ கிடைப்பதுபோல. ஒவ்வொரு அசைவிலும் அவர்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தவர் என தெரிந்தது.

முகப்பில் சுந்தரேசனின் நந்திக்கொடி பொன்மூங்கிலில் ஏந்தப்பட்டு இளங்காற்றில் எழுந்து சிறகடித்து துவண்டபடி வந்தது. விஜயநகரத்தின் பன்றிக்கொடியும் பாண்டியநாட்டின் மீன்கொடியும் தொடர்ந்து வந்தன. அவர்களின் அணியூர்வலம் வெயிலில் ஒளிரும் ஆறுபோல, பொன்னும் வெள்ளியும் உருகி வழிந்து அணுகுவதுபோல நெருங்கி வந்தது. ஆதிகேசவனின் ஊர்வலம் அவர்களை முன்னர் வகுத்த இடத்திலேயே சந்தித்தது. வாத்தியங்கள் அடங்கி அமைதி உருவாகியது. சங்கொலி மும்முறை எழுந்தடங்கியது. ஒற்றை முழவு மட்டும் சீரான ஓசையெழுப்பிக்கொண்டிருந்தது.

ஆதிகேசவனின் நம்பி சப்பரத்தின்மேல் எழுந்து நின்று கைகளை வீசி சைகை செய்து சுந்தரேசனை வேணாட்டுக்கு வரவேற்றார். பின்னர் ஆதிகேசவனின் சப்பரத்தில் இருந்து வைரப்பதக்கத்துடன் கூடிய பொன்மாலை ஒன்றை சுந்தரேசனுக்கு அளித்தார். அதை சுந்தரேசனுக்குச் சூட்டிய சிவாச்சாரியார் வைரம் பதித்த கணையாழி ஒன்றை ஆதிகேசவனுக்கு எதிர்மரியாதையாக அளிக்க இளையநம்பி அதை ஆதிகேசவனுக்கு அணிவித்தார். ஆதிகேசவன் அளித்த பொற்பட்டு சுந்தரேசனுக்குப் போர்த்தப்பட்டது.

பரகோடி கண்டன் சாஸ்தா முன்னால் வந்து சுந்தரேசனுக்கு ஒரு மணிமாலையை அளித்தார். அவருக்கும் ஒரு கணையாழி அளிக்கப்பட்டது. சாஸ்தா அதை மகிழ்ச்சியுடன் எல்லா கைவிரல்களிலும் மாறி மாறி அணிந்தார். கூட்டத்தினர் சிரித்து கூச்சலிட்டு அதை கொண்டாடினர். சிவாச்சாரியார் கண்டன் சாஸ்தாவின் சார்பில் “கொன்றைச் சுடர் அணையாத என் காட்டுக்கு வருக” என்று அழைத்தார். சுந்தரேசர் ”ஆகுக” என்று சொல்லி கையசைத்ததும் மூவருமாக மணப்பந்தல் நோக்கிச் சென்றனர்.

வெடித்தெழுந்ததுபோல் அத்தனை வாத்தியங்களும் முழக்கமிட்டன. “தென்னாடுடையோனே போற்றி. மூவிழிமுதல்வனே போற்றி! அழகனே போற்றி! அத்தா போற்றி! ஆடவல்லானே போற்றி!” என்று வாழ்த்தொலிகள் சூழ சுந்தரேசர் மீனாளை மணம்கொள்ள மணப்பந்தல் நோக்கிச் சென்றார்.

 [14 ]

நான் மணப்பந்தலைச் சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்றேன். உள்ளே வாழ்த்தொலிகளும் மேளங்களும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தன. அந்த பந்தலே ஒரு முரசாக மாறிவிட்டதுபோல. பின்பக்கம் நூற்றுவன் காளன் பெருமல்லன் என்னை நோக்கி வந்தான். “எல்லாம் ஒழுங்கா நடந்திட்டிருக்காடே?” என்றேன்.

“ஒருகுறையில்லை. இதுவரை சர்வமங்களம்” என்று அவன் சொன்னான்.

“ஆமா, இதுவரை” என்று நான் சொன்னேன்.

“அது என்ன பேச்சு உடையதே? இதுவரை நடத்தித் தந்த அம்மை இனி நம்மை கைவிடுவாளா?”

“அதில்லடே” என்றேன். “நான் மூணு யுத்தம் நடத்தியிருக்கேன். பத்திருபது உத்சவங்கள் நடத்தியிருக்கேன். நாலு கோட்டை கட்டியிருக்கேன். இப்டி மானுஷ யத்னங்கள் நடக்கிறப்ப நமக்கு ஒரு கர்வபங்கம் கண்டிப்பா உண்டு. பாத்துப்பாத்துச் செய்வோம். ஆனா கண்ணுக்கு முன்னாடி எதையோ காணாம விட்டிருப்போம். நான் நான்னு நினைச்சு நிமிருற நேரத்திலே சரியா அது வந்து பூதமா முன்னாலே நின்னுட்டிருக்கும். நம்மளைப் பாத்து இந்த பிரபஞ்சம் சிரிக்கிறதுதான் அது. நீ என்னடே மயிரு, சின்னப்பூச்சி. நான் ஏழுகடலும் ஒற்றைத் துளியா ஆகிற பெருங்கடலாக்கும்னு சொல்லுது அது… சரி பாப்போம்.”

“ஒண்ணும் நடக்காது” என்று அவன் சொன்னான்.

”நடக்கும். என்னமோ நடக்கும். கண்டிப்பா நடக்கும். நடக்காம இருக்கவே இருக்காது. அதைத்தான் பாத்திட்டிருக்கேன். நான் தெய்வத்தை தேடுறது அங்கேயாக்கும். ஒரு தப்பு, அதிலேயாக்கும் தெய்வம் முகம் காட்டுறது” என்றேன்.

கணேச சிவாச்சாரியார் வெளியே வந்தார். என்னை நோக்கி ஓடிவந்து “அங்கே சடங்குகள் இப்ப முடிஞ்சிரும். கன்யாகுமரி திருமஞ்சனநீர் வந்தாச்சா?” என்றார்.

”வந்தாச்சு…” என்றேன். ஆனால் அதை மறந்துவிட்டிருந்தேன். திரும்பி மல்லனிடம் “ஓடு, ஓடிப்போயி கன்யாகுமரி மஞ்சனநீர் எங்கேன்னு கேளு” என்றேன்.

நானே அவன் பின்னால் ஓடினேன். அவன் முன்னால் ஓடி திரும்பி வந்து “உடையதே, அதெல்லாம் வந்து அங்கே தெக்குபந்தலிலெ இருக்கு. மீனவக்குடியிலே ஏழு பட்டக்காரங்களும் வந்து காத்திருக்காங்க…” என்றான்.

”நீ இங்கே நில்லு… இந்த மஞ்சனநீர் ஏற்பாட்டை நீ பாத்துக்கோ” என்றேன்.

“உத்தரவு” என்றான்

நான் மீண்டும் உள்ளே நுழைந்தபோது மணப்பந்தலில் ஆதிகேசவனும் பரகோடி கண்டன் சாஸ்தாவும் அமர்ந்திருந்தனர். அப்பால் சுந்தரேஸ்வரர் நின்றிருக்க அவருக்கு முன்னால் சிவீந்திரம் ஆரியன் நம்பூதிரி நின்று பூஜைகள் செய்துகொண்டிருந்தார். சபையினர் எழுந்து நின்று வாழ்த்தொலி எழுப்பினர். மகாராஜா கைகூப்பி நின்றார்.

பூஜைகள் முடிந்ததும் சுந்தரேஸ்வரர் இருக்கை கொண்டார். மகாராஜாவின் இருபக்கமும் அவருடைய மைந்தர்களாக ஆதிகேசவனும் பரகோடி கண்டன் சாஸ்தாவும் நிலைகொள்ள அவர் அரியணையில் அமர்ந்திருந்தார்.

வாத்தியங்கள் அடங்கின. வாழ்த்தொலிகள் தணிந்து அமைதி உருவாகியது. சுந்தரேஸ்வரர் எழுந்து வந்து மகாராஜாவை வணங்கி,  நவமணிகளும் ,தங்கம் வெள்ளி செம்பு என முப்பொன்னும், மலரும் கனிகளும் படைத்து, வில்லும் வாளும் தாழ்த்தி அவர் மகளை மணம்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

மகாராஜா “உன் பெயர் என்ன? உன் குலமென்ன? உன் பெற்றோர் யார்? உன் தகுதிகள் என்னென்ன?உன் இல்லம் எங்கே?” என்றார். அதை அவர் அருகே நின்ற பூசகர் அவர் பொருட்டு சைகை காட்டி கேட்டார்

“என் பெயர் அழகேசன். நான் குலமிலி. பெற்றோர் எனக்கில்லை. என் தலையில் நிலவும் காலடியில் மானும் கைகளில் உடுக்கும் தீயும் உள்ளது. நான் வாழுமிடம் சூரையங்காடு” என்று சுந்தரேசர் பதில் சொன்னார்.

மகாராஜா மகளை அளிக்கமுடியாது என்று மறுத்தார். கைகளை வீசி மகடூ மறுத்து ‘செல்க செல்க’ என்று காட்டினார்.

செல்வதில்லை, பெண்ணுடனேயே செல்வேன், மணமகளைப் பெறவில்லை என்றால் மடலூர்வேன் என்று சுந்தரேஸ்வரர் சொன்னார். அவை சைகைகள் வழியாகச் சொல்லப்பட்டன. ஆகவே அனைவராலும் விழிகளால் கேட்கப்பட்டன.

“உனக்கு என் பெண்ணை தரவேண்டுமென்றால் ஒரு சிறப்பையேனும் சொல்” என்றார் மகாராஜா. பீடத்தில் தளிர்வாழைப் பூபோல செப்புச்சிலையாக அன்னை தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அங்கு நிகழ்வன எதையுமே அறியாதவளாக. பொல்லாப்பிள்ளையாருக்கு அதிரசம் தீர்ந்துவிடவே அவர் கைநீட்டினார். ஒரு சிவாச்சாரியார் தட்டுடன் அதிரசங்களை படைத்தார்.

சுந்தரேஸ்வரர் தன்னுடைய சிறப்பைச் சொல்லும்படிச் சைகைகாட்ட அவருடன் இருந்த ஓதுவார்கள் கைக்கழியால் தாளக்கட்டையை தட்டியபடி மணமகனின் குலம், கொடிவழி, மலைச்சிறப்புகள், ஆகியவற்றை பாடினர்.

முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி

     முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்

வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்

      வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்

துளைத்தானை, சுடுசரத்தால் துவள நீறாத்

      தூமுத்த வெண்முறுவல் உமையோசு ஆடித்

திளைத்தானைத், தென்கூடல் திரு ஆலவாய்ச்

      சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!

விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை

      மேல் ஆடு புரம் மூன்றும் பொடி செய்தானை

பண் நிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானை

       பசும் பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை

உள்நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து

     உமையோடு உடன் ஆகி இருந்தான் தன்னை

தெள்நிலவு தென்கூடல்திரு ஆலவாய்ச்

      சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

மகாராஜா தன் மகள் மீனாம்பிகை தேவியின் சிறப்பைச் சொல்லும்படி பாணர்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் சிறுபறையை மீட்டியபடி பாடினர்.

ராஜமாதங்கி சியாமளே! மகாசாகர ஹரிதவர்ணே!

மரகதவல்லி தடாதகே! அபிஷேகவல்லி மகாமாயே!

அபிராமவல்லி, கற்பூரவல்லி, ஸ்ரீ மதுராபதி நிலையே!

தடாதகே மீனாக்ஷி சமுத்ரஜன்யே! தேவீ நமஸ்துப்யம்!

என்று ஒரு பாணன் மலையாண்மையில் பாடி முடித்ததுமே இன்னொருவர்

குமரித்துறை மலர்ந்த மலரே, கோமகளே, சுந்தரவல்லி அன்னையே!

பாண்டிநிலத் தலைவி மதுரை நிலையமர்ந்த மாதரார்க்கரசி தாயே,

மாணிக்க மணிமானே மும்முலை திருவழுதி மகளே,

ஆலவாயழகர் உளம்கவர் கன்னி அங்கயற்கண் அழகியே வாழ்க!”

என்று தொடர்ந்து பாடினார். சம்ஸ்கிருதத்திலும் மலையாண்மைத் தமிழிலுமாக மாறிமாறி அன்னையின் பெருமையைப் பாடினார்கள்.

மகாராஜா “என் மகளுக்கு என்ன சீர் செய்வீர்கள்?” என்று கேட்டார்.

“வெள்ளிப்பனிமலை முடி ஒன்று மணிமுடியாக. வீழும் கங்கைப்பேராறு ஒன்று மேலாடையாக. கூனலிளம்பிறை ஒன்று  கூந்தல் மலராக. மானுண்டு மழுவுண்டு காவலாக” என்றார் ஓதுவார்.

“என் மகளுக்கு என்ன கொண்டு வந்தீர்கள்?”என்றார் மகாராஜா.

“விண்ணில் இருக்கும் இருசுடரும், மண்நிறைய ஓடும் பன்னிரு பேராறுகளும் பனிமலையும் நடுமலையும் தென்மலையும் என கொடுமுடிகள் மூன்றும், பாதாளமும், அங்கு ஊறிய நஞ்சும் கொண்டு வந்தோம், ஏற்றருளல் வேண்டும்” என்று ஓதுவார் சொன்னார்.

மகாராஜா ஆதிகேசவனைப் பார்க்க அவர் ஏற்றுக்கொள்ளும்படி கைகாட்டினார். பரகோடி கண்டன் சாஸ்தாவும் ஆகுக என்று சைகை காட்டினார்.

மகாராஜா சீர்களைப் பெற்றுக்கொள்ளஒப்புக்கொண்டார். சிவாச்சாரியார்கள் கைகாட்ட வாத்தியங்களும் குரவையொலியும் வாழ்த்தொலிகளும் மீண்டும் முழக்கமிட்டன.

சுந்தரேஸ்வரர் அளித்த சீர்களை மகாராஜா பெற்றுக்கொண்டார். மகாராஜா கைகாட்ட பரகோடி கண்டன் சாஸ்தா சென்று மணப்பந்தலில் பீடத்தில் அமர்ந்திருந்த மீனாக்ஷியன்னையிடம் மணவறைக்கு வரும்படிச் சொன்னார். அன்னை நாணத்தால் மறுக்க முத்தாலம்மன் அவள் முகவாயை பிடித்து கொஞ்சியும் கெஞ்சியும் எழச்செய்தாள். முத்தாலம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2021 11:34

குமரித்துறைவி [குறுநாவல்] – 1

[ 1 ]

சித்திரை மாதம், வளர்பிறை நாலாம் நாளாகிய இன்று, வேணாட்டின் இரண்டாம் தலைநகராகிய இரணியசிங்கநல்லூரில் இருந்து அரசர் கொடிகொண்டிருந்த தலைநகரான திருவாழும்கோட்டுக்கு ஒற்றைக்குதிரையில் தனியாகச் சென்றுகொண்டிருக்கும் என் பெயர் தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன். என் முன்னோர்கள் இரணியசிங்கநல்லூரின் அரசன் பூதலவீர உதயரவி பாஸ்கர ரவிவர்மனின் படைத்தலைவர்களாக இருந்தனர். பதினெட்டு படைநிலங்களில் முதல்நின்றனர், பட்டனர், வென்றனர்.

சோழர்களால் இரணியசிங்கநல்லூர் வெல்லப்பட்டு பாஸ்கர ரவிவர்மன் கொல்லப்பட்டபோது நாங்கள் வேளிமலை வழியாக தென்மலைகளுக்கு குடியேறினோம். மலைக்குடிகளாகவே எழுபதாண்டுகள் வாழ்ந்தோம். சோழன் குலோத்துங்க நிருபதியின் ஆட்சிக்காலத்தில் எங்களுடன் அவர்கள் சமரசம் செய்துகொண்டார்கள். இரணியசிங்கநல்லூர் அருகே நட்டாலத்தில் எங்களுக்குரிய குடிநிலமும் ஆலய உரிமைகளும் திரும்ப அளிக்கப்பட்டன. நாங்கள் இரணியசிங்கநல்லூருக்கே திரும்பி சோழர்களுக்குக் கீழே செண்பகராமன் என்னும் பட்டத்துடன் ஆட்சியதிகாரிகளும் கோயிலதிகாரிகளும் ஆனோம்.

பின்னர் சோழர்கள் மறைந்தனர். பாண்டியர்கள் வந்தனர். மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனையும் தென்காசியை ஆண்ட வீரபாண்டியனையும் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவர் மாலிக் காஃபூர் வென்றார். தென்னகத்தை அவருடைய படைகள் சூறையாடின. பாண்டியர் கோல்கொண்ட மாநகர் மதுரை எரியூட்டப்பட்டது, மீனாட்சியும் அவள் உளம்கவர்ந்த அழகனும் குடிகொண்ட பேராலயம் கற்குவியல்களாக ஆகியது. திருநெல்வேலி தென்காசி திருக்கணங்குடி வழியாக வந்த அவர்களின் படைகளில் ஒரு பிரிவு ஆரல்வாய்மொழி வழியாக உள்ளே நுழைந்து தெக்கன்கூர் என்னும் இந்த வேணாட்டை ஓராண்டுக்காலம் முழுமையாக கொள்ளையடித்தது.

பொலிவுகொண்டிருந்த இரணியசிங்கநல்லூரும் திருவாழும்கோடும் கேரளபுரமும் அழிந்தன. திருப்பாப்பூர் நாடும் சிறவா நாடும் வீழ்ச்சி அடைந்தன. அனந்தபுரியில் மக்கள் குடியொழிந்து மீண்டும் காடு படர்ந்தது. ஆலயங்களில் அன்னப்படையலும் தீபமும் இல்லாமலாகி வௌவால்கள் மண்டி அவை புதர்மேடாயின. திருக்கணங்குடியிலும் திருநெல்வேலியிலும் சீவில்லிப்புத்தூரிலும் காவல்படைகளை நிறுத்திக்கொண்டு மதுரையை சுல்தான்கள் ஆட்சிசெய்தனர். சிராப்பள்ளி அரசே அவர்களுக்குரியதாகியது. அவர்கள் தஞ்சையையும் செஞ்சியையும் தாக்கிப் பிடித்துக் கொண்டனர். காஞ்சியையும் அப்பால் வேலூரையும் அவர்கள் பிடித்து அங்கெல்லாம் படைநிறுத்தி ஆட்சி செய்தனர்.

ஆனால் அவர்கள் தங்களுக்குள் போரிட்டு போரிட்டு கொன்றழித்துக் கொண்டனர். ஏனென்றால் அவர்கள் அனைவருமே சமமான குலமும் குடியும் கொண்டவர்கள். நாழி நாழிக்குள் நுழைவதில்லை என்பது அரசநீதி. மாமனை மருகன் கொன்றான். அவனை மைத்துனன் கொன்றான். மதுரையின் ஆற்றல் குன்றியபோது திருப்பாப்பூர் அரசு முதலில் கப்பம் அளிப்பதை நிறுத்தி தனியரசாகியது. சிறவா அதன்பின் தனியரசாகியது. சேரன்மாதேவி முதல் நெடுமங்காடு பாறசாலை வரை நிலம்விரிந்துகிடந்த வேணாடும் தனியரசாக மாறியது. எல்லைகளைக் காக்கும்பொருட்டு எட்டு படைகள் உருவாக்கப்பட்டன. இரண்டு படைகள் அனந்தபுரியில் சிறவா நாட்டு எல்லையிலும் இரண்டு படைகள் பாறசாலையில் திருப்பாப்பூர் எல்லையிலும் நின்றன.

பாண்டிநாட்டு எல்லைகளை பேணும்பொருட்டு நான்கு படைகள் அமைக்கப்பட்டன. ஒன்று சேரன்மாதேவி எல்லையிலும் இன்னொன்று திருக்கணங்குடி கூன்மலை அடிவாரத்தில் அழகியநம்பி ஆலயத்தின் அருகிலும் நிலைகொண்டது. இரண்டாம் தலைநகரான இரணியசிங்கநல்லூரில் இருந்துகொண்டு அந்த இரண்டு படைகளையும் நான் தலைமை தாங்கினேன். கோட்டாறிலும் களக்காட்டு எல்லையிலும் மணக்குடி காயல் கரையிலும் சிவீந்திரத்திலும் புலியூர்க்குறிச்சி உதயகிரிக் கோட்டையிலும் நூற்றுவர் கொண்ட விரைவுக் குதிரைப்படைகள் காவலிருந்தன.  புதருக்குள் புலியின் வாடையை அறிந்துவிட்ட யானைபோல் வேணாட்டு மண் விழிப்புற்று காத்திருந்தது.

மதுரை வீழ்ச்சியடையும்போது வேணாட்டை  ஆட்சி செய்த மகாராஜா ராமவர்ம குலசேகரன் பிரியதர்சன உடையவர் மகாவீரர். சங்காரமித்திரன் என்று பாண்டிய மன்னரால் பட்டம் அளிக்கப்பட்டவர். மாறவர்ம குலசேகர பாண்டியனின் மகள் நூபுரவல்லி சுந்தரத்தாள் பெருந்தேவி நாச்சியை மணந்தவர். அவர் ஆண்ட காலகட்டத்தில் இங்கே பாண்டியர்களின் கோல் ஓங்கி நின்றது. அவருக்குப்பின் அவர் மருமகன் பரசுராமப்பிரியன் வீரமார்த்தாண்ட வர்மன் கோல்கொண்டு அமர்ந்தார். அவருடைய ஆட்சியில் மதுரை சுல்தான்களுக்கும் அவர்களின் பெயர் சொல்லி வந்த அத்தனைபேருக்கும் கப்பம் அளித்து நாடு வறண்டு பஞ்சத்தில் ஆழ்ந்தது.

அவருக்குப் பின்னால் ஆட்சி செய்ய வந்த மகாராஜா சக்ரவாகன் பிரியநந்தனன் வீரகேரள வர்மனின் ஆட்சிக்காலத்தில் இங்கே உட்பூசல்களே நிறைந்திருந்தன. கோயிலதிகாரிகள் அரசர்கள்போல நடந்துகொண்டனர். மாடம்பிகள் அவர்களுடன் சேர்ந்துகொண்டு கப்பமும் வாரமும் அளிக்காமலாயினர். திருப்பாப்பூரும் சிறவாயும் தொடர்பற்றுச் சென்றன. திரும்பாம்பரம் நாட்டைக் கைப்பற்ற மகாராஜா அனுப்பிய சிறியபடை நெடுமங்காடு செல்லும் வழியிலேயே தோற்கடிக்கப்பட்டது. அதில் தப்பியவர்கள் நெடுமங்காடு மலையில் ஏறி மறைய திருப்பாம்பரம் அம்மராணி வலிய சிருதை தம்புராட்டியின் படைகள் பாறசாலை ஆலயம் வரை வந்து கொள்ளையடித்துவிட்டு சென்றன.

மகாராஜா வீரகேரள வர்மா தனிமையானவர். தோல்வி அவரை மேலும் தனிமையாக்கியது. ஆகவே குடியில் விழுந்தார். அவரை  அரண்மனையில் எவரோ நஞ்சூட்டி கொன்றனர். அவர் மருமகன் ரவிவர்ம குலசேகரன் ஆட்சிக்கு வந்து முப்பத்துமூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

ஆட்சி செய்தார் என்று சொல்லமுடியாது, திருவாழும்கோட்டு அரண்மனைக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டார் என்று சொல்லவேண்டும். அவர் சூலை நோய் கண்டு மறைந்தபோது அவர் மருமகன் வீரகேரளன் வரகுணன் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு அப்போது இருபத்தொரு வயதுதான். அவர் எட்டாண்டுகளே ஆண்டார். அவர் மறைந்தபின் அவருடைய நான்கு மருமகன்களும் தங்களுக்குள் போரிட்டு ஆற்றலழிந்தனர். நாடு எருமை பூசலிட்ட ஆம்பல்குளமென கிடந்தது.

மதுரையில் சுல்தான்களின் அரசு சீரழிந்திருந்தது. திருக்கணங்குடியில் நின்றிருந்த சுல்தான்களின் படைத்தலைவன் அன்வர் கான் மதுரைக்கே சென்றுவிட்டான். அவனுக்கு சுல்தானாக வேண்டுமென ஆசையிருந்தது. செல்லும்வழியில் அவனுடைய வாள்தாங்கியாகிய சொந்த மருமகன் அகமதுகான் கழுகுமலை பாளையத்தில் வைத்து சங்கறுத்துக் கொன்று படைத்தலைமையைக் கைப்பற்றிக் கொண்டான். அவனை எதிர்த்து அன்வர்கானின் தளபதி அஸம் கான் போரிட்டான். திருக்கணங்குடி படைகள் இரண்டாகி ஒன்றோடொன்று போரிட்டன.

ஆறுமாதப் போருக்குப்பின் சிதறியழிந்த படைகள் திண்டுக்கல்லுக்கும் சிவகங்கைக்குமாக பரவின. ஆங்காங்கே எஞ்சிய உதிரி சுல்தான் படைகளை கயத்தாறுப் பாண்டியர்களும் தென்காசிப் பாண்டியர்களும் களக்காடு பாண்டியர்களும் தாக்கி அழித்துக் கொண்டிருந்தனர். அதன்பின் அவர்களுக்குள்ளே பூசல் வந்தது. அத்தனை பாண்டியர்களும் அவர்களே முதன்மைப் பாண்டியர்கள் என நினைத்தனர். ஆகவே பூசல் உச்சமடைந்து ஒருவரை ஒருவர் கொன்றழித்தனர். களக்காடு பாண்டியன் அதிராஜவீர பாண்டியனை கயத்தாறு பாண்டியர்கள் நால்வர் சூழ்ந்துகொண்டு சிறைப்பிடித்து கழுவிலேற்றினர். களக்காடு எரியூட்டப்பட்டது. தென்காசிப் பாண்டியன் சூரப்புலிப் பாண்டியன் கொல்லம் ஜெயத்துங்க நாட்டின் உதவியுடன் கயத்தாறு பாண்டியர்களை தாக்கி மூவரை கொன்றான். எஞ்சியவர்கள் மலையேறி தப்பினார்கள்.

இவ்வண்ணம் ஒவ்வொன்றும் சீரழிந்து கிடக்கும்போது சிவீந்திரம் ஆலயத்தின் தலைமை நம்பி சிறமடம் ஸ்ரீகண்டன் நம்பூதிரி வலிய திருமேனி தேவப்பிரஸ்னம் வைத்துப்பார்த்து வேணாட்டுக்கு ஒற்றை அரசர் வேண்டும் என்று தாணுமாலையன் ஆணையிடுவதை தெரிவித்தார். ஒற்றை அரசன் ஒருமுடிதாங்கி ஒருகோல் ஏந்தி வந்து பூஜை அளித்தாலன்றி இனி அன்னம் கொள்ளப்போவதில்லை என்று தாணுமாலையன் அறிவித்தார். முன்னுதித்த நங்கை சன்னிதியில் வேலேந்தி துள்ளிய பெருவண்ணான் அச்சுதன் மலையன் இனி ஒருகோலேந்திய முடிமன்னன் அளித்தாலொழிய படையல் ஏற்பதில்லை என அம்மை சொல்லிவிட்டதை கூறினார்.

வேணாடெங்கும் பலவகை நிமித்தைங்கள் தோன்றலாயின. ஊருக்குள் இருமுறை புலி புகுந்தது. திருவட்டாறு ஆதிகேசவன் சன்னிதியில் படமெடுத்த ராஜநாகம் தோன்றியது. கொடுங்கோடையில் வள்ளியாற்றிலும் தாமிரவர்ணியிலும் பெருவெள்ளம் வந்து ஊர்களைச் சூழ்ந்தது. ஆங்காங்கே தேவப்பிரஸ்னமும் நாட்டுகுறியும் வைத்துப் பார்த்தபோதும் அதுவே திரும்பத்திரும்ப தெய்வங்களால் சொல்லப்பட்டது. ஆகவே வேணாட்டின் நூற்றெட்டு கரைமாடம்பிகளும் ஏழு ஸ்வரூபங்களின் அம்மச்சிகளும் திருவாழும்கோடு ஆலயத்தின் அரசமர முற்றத்தில் கூடி மறைந்த மன்னரின் மருமகனாகிய ஆதித்ய வர்மனை அரசன் என தேர்வுசெய்து வில்லடையாளம் அளித்து முடிசூட்டினர். அவர் ஆதித்ய வரகுணன் சர்வாங்கநாதன் என்னும் பெயரில் அரசரானார்.

மகாராஜா ஆதித்ய வரகுணன் ஏழே மாதங்களில் போரிட்டுக் கொண்டிருந்த மருமகன்களை சிறைப்பிடித்து நாட்டில் அமைதியை உருவாக்கினார். அவர்களுக்கு ஆளுக்கொரு அரண்மனை கட்டிக்கொடுத்து என் தந்தையின் தனிப்பொறுப்பில் விட்டார். அரண்மனையில் அச்சிகளுடன் அவர்கள் அரசமுறைப்படி சிறையிருந்தனர். திருவட்டாறு கோயிலில் சுல்தான் படைகள் இடித்தழித்த பகுதிகளை மகாராஜா மீண்டும் கட்டினார். வடசேரிக் கிருஷ்ணன்கோயிலையும் திருவாழும்கோடு மகாதேவர் ஆலயத்தையும் எடுத்துக் கட்டி முழுமை செய்தார். கேரளபுரம் ஆலயத்தை பழுது நீக்கினார். ஆலயங்களுக்கு நிவந்தக் கொடைகள் வழங்கி அன்றாட பூசைகளும் நாளொழுங்குகளும் முறையாக நடைபெற வழிவகுத்தார். வள்ளியாற்றிலும் தாமிரவர்ணியிலும்  உடைந்த கரைகள் சீரமைக்கப்பட்டன. நூற்றைம்பது குளங்கள் தூர்வாரப்பட்டன.

வேணாட்டு மகாராஜா வலிய உடையது ஆதித்யவர்ம பொன்னுதம்புரான் முப்பத்தாறு ஆயுதங்களை இரண்டு கைகளாலும் ஏந்திப் போரிடும் பெருவீரர். சவ்யசாஜி என அவரை படைக்குறுப்புகள் புகழ்ந்தனர். கல்விதேர்ந்து, மலையாண்மையிலும் தமிழிலும் அழகிய செய்யுட்களை இயற்றுபவர். ஆதிகேசவப்பெருமாளைப் பற்றிய கேசவபதாம்புஜம் என்னும் நூறு பாடல்களை இயற்றி சென்ற ஆண்டு ஆலயத்தின் ஸ்ரீமுகமண்டபத்தில் அறிஞர் நடுவே அரங்கேற்றினார். சொல்விளங்கும்பெருமாள் என்றும் படைதிகழ்ந்த பெருமாள் என்றும் புலவர்களால் பாடப்பட்டார்.

அவரை பார்க்கச் சென்றுகொண்டிருக்கும் வலிய சர்வாதிக்காரர் தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் என்னும் நான் அவர் சற்றும் விரும்பாத ஓலை ஒன்றை என் கையில் வைத்திருந்தேன்.

[ 2 ]

திருவாழும்கோடு நகரைச் சுற்றி ஓடும் பெரிய கோட்டை காலஞ்சென்ற மகாராஜா ராமவர்ம குலசேகரன் பிரியதர்சனன் காலத்தில் கட்டப்பட்டது. சரிவான பரப்பு கொண்ட கோட்டைச்சுவர் கீழே எட்டடி அகலமும் மேலே ஆறடி அகலமும் கொண்டது. இரண்டு ஆள் உயரமானது. அதன்மேல் ஓலைக்கூரை கவிந்திருந்தது. நூறடிக்கு ஒன்று என பெருந்தேக்கு மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு, அவற்றின்மேல் காவல்மாடங்கள் அமைந்திருந்தன. அவற்றில் இருந்து நூலேணி தொங்கியது. மேலே ஈட்டியுடனும் வில்லம்புகளுடனும் காவலர்கள் அரைத்தூக்கத்தில் அமர்ந்திருந்தனர். கோட்டையின் பின்பக்கம் வில்லவர் ஏறி நின்று வெளியே பார்த்து அம்புவிடுவதற்கான படிக்கட்டுமேடைகள் இருந்தன.

அந்த ஒளி பொருந்திய காலை வேளையில் தொலைவில் இருந்து பார்க்கையில் கோட்டைக்குள் இருந்து வீடுகளின் சமையல்புகை எழுந்து வானில் கரைந்துகொண்டிருந்தது. புகை கரைவதிலிருந்த நிதானம் அந்நகரமே அமைதியில் ஆழ்ந்திருப்பதாக தோன்றச் செய்தது. உள்ளே செறிந்திருந்த தென்னை மரங்களால் அக்கோட்டை வளாகம் ஒரு பசும்புல் நிறைந்த கூடை போல தோன்றியது. வீடுகள் எல்லாம் அந்த பசுமைக்குள் மறைந்திருந்தன. கோட்டைக்குள் எல்லாமே ஓலைக்கூரைகொண்ட இல்லங்கள்தான். அரண்மனை மட்டும்தான் மரப்பட்டைக்கூரை கொண்ட இரண்டு அடுக்கு மாளிகை. அதைக்கூட அணுகிய பின்னரே காணமுடியும்.

நான் குதிரையை பெருநடையில் செலுத்தி கோட்டையை அணுகினேன். அதன்பின் கோட்டையின் மாறாத தன்மை என் விசையை குறைத்தது. பொதுவாகவே மலைகள், கோட்டைகள், ஏரிகள் போன்ற அசைவிலாப் பேரிருப்புகள் நம்மருகே இருக்கையில் நாம் கொள்ளும் விரைவு ஒருவகை அறிவின்மை என்று தோன்றிவிடுகிறது.  கோட்டை ஒரு மாபெரும் இல்லத்தின் சுவர் போல என் இடப்பக்கம் வந்துகொண்டே இருந்தது. சிலதருணங்களில் அது சேறுமூடிய காட்டுயானையின் உடல் என்று தோன்றியது. அரைக்கண்ணால் பார்த்தபோது அங்கே கலங்கிய நீருடன் ஓர் ஆறு ஓடுவதுபோல தோன்றியது.

வெறுஞ்சேற்றைக் குழைத்து உருட்டி வைத்துக் கட்டும் இந்த ஊரின் சுவர்களை அன்னிய நாட்டார் கண்டு வியப்பதுண்டு. குளங்களில் இருந்து களிமண்ணை வெட்டி எடுத்து மணலுடன் சேர்த்து மிதித்துப் பிசைந்து, எட்டுநாள் ஊறவைத்து, கொஞ்சம் சுண்ணாம்புடன் கலந்து மீண்டும் பிசைந்து உருட்டி மேலே மேலே வைத்து, விளிம்புகள் வெட்டி ஒதுக்கி கட்டப்படும் இந்தச் சுவர்கள் இங்கே நாநூறு ஐநூறு ஆண்டுகளாக அசைவிலாமல் நின்றிருக்கின்றன. சுவர்களின்மேல் மழைநீர் வழிந்தாலும் பெரிதாகக் கரைவதில்லை. மேலே ஓலைக்கூரை போட்டு ஆண்டுக்காண்டு புதுப்பித்தால் கட்டியதுபோலவே காலாகாலமாக நீடிக்கும். மண் கல்லாகிக்கொண்டே இருப்பது. அப்படியே விட்டுவிட்டால் மேலும் மேலுமென இறுகி மணற்கல்லாகவே மாறிவிடும். இரணியசிங்கநல்லூரின் பழையகோட்டை கல்லாக மாறிவிட்ட ஒன்று.

நான் கோட்டை வாசலை அடைந்தபோது காவல்மாடத்தில் இருந்தவன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். கொடிக்காரனும் கோல்காரனும் காவலர்களும் இல்லாமல் நான் தனியாக வந்தமை அவனை திகைப்புறச் செய்திருந்தது தெரிந்தது. அது நான்தானா என அவன் இன்னொருவனிடம் கேட்பதைக் கண்டேன். கோட்டைவாசல் திறந்து கிடந்தது. கோட்டையின் கதவுகள் இருபக்கமும் விரிந்து மண்ணில் புதைந்து கிடந்தன. அவற்றை மூடி இருபது முப்பதாண்டுகள் இருக்கலாம்.

கோட்டைக்கதவின் முகப்பில் இருந்த கஜலட்சுமிகள் மழையில் கருமைகொண்டிருந்தனர். கதவின் மேல் விளிம்பிலிருந்த நாகபந்தமும் யாளியும் கல்லென்றே தோற்றம் கொண்டிருந்தன. பித்தளை பிறைவடிவ பிடிகளும் இரும்புச் சங்கிலிகளும் எல்லாமே கல்லால் ஆனவைபோல மாறியிருந்தன. அந்தக் கதவே மெல்லமெல்ல கல்லாகிக்கொண்டிருந்தது என நினைத்துக்கொண்டேன்.

முன்பு கதவே இருக்கவில்லை. மகாராஜா வீரமார்த்தாண்ட வர்மா உடைய தம்புரான் காலத்தில்தான் அந்தக் கதவு அமைக்கப்பட்டது. ஆனால் அதை மூட வாய்ப்பே வரவில்லை. வேணாட்டின்மேல் படைகொண்டுப் வருபவர்கள் சேரன்மாதேவி கோட்டையைத்தான் முதலில் கைப்பற்றுவார்கள். போர் நடக்கும் அல்லது சமாதானம் உருவாகி கப்பம் வழங்கப்படும். பெரும்பாலும் இரண்டாவதுதான் நடக்கும். ஆனால் எல்லாமே அங்கேயே முடிந்துவிடும். ஆரல்வாய்மொழி மலைக்கணவாய் தாண்டி ,அத்தனை ஆறுகளையும் ஓடைகளையும் கடந்து, திருவாழும்கோடு வரை வந்தும் பயனில்லை. திருவாழும்கோட்டில் ஆறுமாதம் உண்பதற்கான நெல் அன்றி எதுவும் இருப்பதில்லை.

கோட்டைக்குள் நெல்லும், விளைபொருட்களும் கொண்டுசெல்லும் காளைவண்டிகள் சகடங்கள் ஓசையிட வெட்டுகல் பரப்பப்பட்ட பாதையில் அசைந்தசைந்து சென்றுகொண்டிருந்தன. நாலைந்து சோம்பேறிக் கிழவர்கள் அப்பால் ஓர் அரசமரத்தின் அடியில் இடப்பட்ட கற்களில் அமர்ந்து ஆர்வமின்றி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுங்க மாளிகையின் முகப்பில் நின்ற குந்தக்கார நாயர்கள் இருவர் ஒவ்வொரு வண்டியிலும் இருக்கும் சரக்குகளை கைகளால் தொட்டுப்பார்த்து தீர்வையை அறிவித்தார்கள். அவற்றை செம்புநாணயங்களாக பெற்றுக்கொண்டு வண்டிகளை மேலே அனுப்பினார்கள்.

தீர்வை எல்லாம் இங்கே ‘கண்டுசொல்லல்’ முறையில்தான். தீர்வை மிகக்குறைவு. மணக்குடி சந்தையில் பாண்டியர்களின் கோலதிகாரம் கொண்ட அரையர் தலைவர்கள் வண்டிக்கு நான்கு செம்பு பெற்றுக்கொள்கையில் இங்கே இரண்டுதான். மகாராஜா ஆதித்ய வரகுணன் குறைவாக விதிக்கப்படும் வரியே கஜானாவை நிரப்பும் என்ற கொள்கைகொண்டவர். அது உண்மையாகவும் இருந்தது.

வரி நிறைய விதிக்கப்பட்டால் குடிமக்கள் தங்கள் செல்வத்தையும் ஊதியத்தையும் மறைப்பார்கள். ஆகவே அவற்றை வாங்கும் அதிகாரிகள் அவர்களை தேடித்தேடி கண்காணிக்கவும் வேட்டையாடவும் வேண்டும். அதற்கு நிறைய அதிகாரிகள் வேண்டும். அந்த அதிகாரிகள் மெல்ல மெல்ல ஆற்றல் பெற்றவர்களாக ஆவார்கள். அவர்கள் ஆற்றல்பெற்றதும் தாங்களும் மாடம்பிகளோ கரைநாயர்களோ ஆகவேண்டுமென ஆசைப்படுவார்கள். வரிப்பணத்தை திருடத் தொடங்குவார்கள். அவர்களைப் பிடிக்க மேலும் தீர்வைநாயகங்களை நியமிக்கவேண்டும். விளைவாக எட்டுபணம் திரட்ட பத்துபணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

தீர்வைக்காரர்களின் எண்ணிக்கை பெருகினால் அவர்கள் ஒரு தனி ராஜாங்கமாக ஆகிவிடுவார்கள். படைதிரட்டுவார்கள். இடங்களைப் பிடித்துக் கொண்டு கலகம் செய்து போரிடுவார்கள். அவர்களை வெல்ல மேலும் போர்ப்படைகள் வேண்டும். அந்தப் படைகளுக்கு ஊதியம் கொடுக்கவேண்டும். அவர்கள் மேலும் அதிகாரம் கொண்டவர்களாக ஆனால் அவர்களும் திருடவும் கொள்ளையடிக்கவும் தொடங்குவார்கள்.

‘திருடன் மூத்தால் திருவுடை அரசன்’ என்ற சொல் ஏற்கனவே இருந்தது. அதை மகாராஜா சொன்னபோது நான் சிரித்துக் கொண்டிருந்தாலும் அது எத்தகைய உண்மை என்று அறிந்துமிருந்தேன். வேணாட்டில் அரசாங்கம் இருப்பதே தெரியாது. ஆகவே வரிகொடுப்பதும் தெரியாது. வேணாடு என்று ஒன்று இருப்பதே வேணாட்டினருக்கு பொதுவாக தெரியாது. திருவட்டார் ஆறாட்டுவிழாவில் வாளுடன் முன்னால் செல்லும் கூன்விழுந்த மனிதர்தான் அரசர் என்பதை மூத்தவர் சொல்லி இளையோர் அறிந்துகொள்வார்கள்.

அப்பால் எட்டு காவல்படைவீரர்கள் மடியில் ஈட்டிகளுடன் மரநிழலில் வெற்றிலை போட்டு வாயை பூட்டிவைத்தபடி அமர்ந்திருந்தனர். காற்றில்லாத வானில் கொடிகள் துவண்டு கிடந்தன. அங்கே எல்லாமே அரைத்தூக்கத்தில் என நடந்துகொண்டிருந்தன. தலையில் பனைநார்க் கடவங்களில் காய்கறிகளுடன் சென்ற பெண்கள்கூட நீந்தும் மீன்கள் போல காலையின் ஒளியில் அசைந்தனர். நானறிந்தவரை திருவாழும்கோடு எப்போதுமே அப்படித்தான். அதற்கு எதுவுமே ஒரு பொருட்டல்ல. அது யானை, அதன் செவியாட்டலும் உடலூசலாட்டமும் மிகமிக நிதானமானவை. ஏனென்றால் அதைச்சுற்றி செழித்த காடு இருந்தது.

எனக்காக சங்கொலி எழுந்தது. உடனே வேறு இரு இடங்களில் சங்கொலிகள் எழுந்து அச்செய்தியை பெற்றுக்கொண்டமையை அறிவித்தன. சுங்கமாளிகையிலிருந்து தீர்வைநாயகம் அருமந்தூர் செல்லக்குட்டிப் பிள்ளை வெளியே வந்து என்னை கண்டு தலைவணங்கினான். நான் அவனிடம் “என்னடே?” என்று கேட்டு புன்னகைத்துவிட்டு மேலே சென்றேன். அவன் கண்களில் வியப்பு இருந்தாலும் எதையும் கேட்கக்கூடாது என்று அறிந்திருந்தான்.

நான் சிவந்த வெட்டுகல் பாவியிருந்த சாலையில் குதிரையின் குளம்புகள் நிதானமாக தாளமிட நடந்தேன். எனக்குப் பின்னால் குதிரையின் வாலில் சுழலல் எனக்கே ஒரு சிறிய சிறகு முளைத்ததுபோல உணரச்செய்தது.  சுண்ணம்பு பூசப்பட்ட சுவர்களின் மேல் மழையில் கருகிய ஓலைக்கூரை சரிந்து இறங்கி வந்து தாய்க்கோழி முட்டையை அடைகாப்பதுபோல மூடியிருந்தது. தெருக்களில் நாலைந்து பால்காரிகள் சென்றனர். ஒரு குதிரைவீரன் வந்து என்னை கண்டதும் பணிந்து முகமன் உரைத்தான்.

நான் அரண்மனையின் உள்கோட்டை வாசலை அடைந்தேன். அதன் முகப்பிலிருந்த கொட்டியம்பலத்தின் மரப்பட்டைக் கூரையின்மேல் தேன்மெழுகு பூசப்பட்டு கருமையாக மின்னியது. காவலர்கள் என்னை கண்டதும் தலைவணங்கினர். அவர்கள் முகத்தில் சற்றுமுன்பு வரை பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தமை தெரிந்தது. ஒருவன் வாயில் வெற்றிலையை தேங்கவைத்திருந்தான்.

நான் வருவதை முன்னரே சங்கோசையால் அறிந்திருந்த சம்பிரதி முண்டத்தூர் செல்லப்பன் பிள்ளை கொட்டியம்பலத்தில் இருந்தார். எழுந்து வந்து என்னை வரவேற்றார். வாளில் தொட்டு தலைவணங்கி “இரணியசிங்கநல்லூர் வாழும் வலிய சர்வாதிக்காரர் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் அவர்கள்க்கு சுஸ்வாகதம்” என்றார்.

நான் குதிரையை படைவீரனிடம் அளித்துவிட்டு இறங்கி அருகே சென்று வழக்கமாக கேட்பதுபோல “என்னடே?” என்று அவர் தோளில் தட்டியபின் “தம்புரான் சவிதம் வேணுமே” என்றேன்.

“திருக்கண் பார்க்கணுமானா உச்சியாகணும்… காலைநேரத்துள்ள பூஜாசம்பிரதாயங்கள் சபாவந்தனங்கள் முடிச்சுட்டு திருக்கண் வளரணும்னு இப்பதான் பள்ளியறைக்குப் போனார்” என்றார் சம்பிரதி செல்லப்பன் பிள்ளை.

“எழுப்பணும்” என்றேன். “பெரிய வார்த்தை உண்டு”

“அசுபமோ?” என்றார் சம்பிரதி.

“அசுபம் அல்ல, சுபவார்த்தைதான். ஆனா அஹிதம் என்று சொல்லலாம்.”

“ஓ” என்றார். “நான் கொட்டாரம் ராயசம் கிருஷ்ணப்பையர் சவிதம் காரியம் என்னதுன்னு சொல்லுறேன். அவரு பாத்து ஏற்பாடு செய்யலாம்… பள்ளியறையிலிருந்து தம்புரானை எழுப்புறது இங்கே அபிகாம்யம் இல்லைன்னு தெரியுமே?”

“தெரியும், வேற வழியில்லை.”

“பூமுகத்தில் இருந்து கொஞ்சம் சம்பாரம் குடிச்சு தாம்பூலம் போட்டு இளைப்பாறணும்.. அதுக்குள்ளே நான் ஏற்பாடு செய்றேன்.”

”நல்லது, கொஞ்சம் க்ஷீணம் இருக்கு” என்றேன். “காலமே, புலரிக்கு முன் இரணியசிங்கநல்லூரிலே இருந்து கிளம்பினேன்… நேற்று ராத்திரியும் தூக்கமில்லை.”

பூமுகத்தில் மரத்தாலான திண்ணையில் அமர்ந்தேன். குளிர்ந்த சம்பாரம் வந்தது. கருப்பட்டியுடன் பழம்புளி சேர்த்து சுக்கும் மிளகும் சேர்த்து கலக்கியது. அதை குடித்தபின், தாம்பூலத்தை வாயில் அதக்கியபடி கண்மூடி அமர்ந்தவன் தூங்கிவிட்டேன். காலடியோசை கேட்டு எழுந்தேன். தாம்பூலம் என் மார்பில் சொட்டியிருந்தது.

சம்பிரதி செல்லப்பன் பிள்ளை “சொல்லியாச்சு. அங்கே தம்புரான் வந்து ஆசனத்தில் இருந்ததும் அழைப்பு வரும்” என்றார். பின்னர் சற்று தயங்கி “அவ்வளவுக்கு முக்கியமா செய்தின்னு ராயசம் கேட்டார். அப்டீன்னு சொல்லியிருக்கார்னு நான் சொன்னேன்.”

நான் தலையசைத்தேன். வாயை கழுவ நீர் கொண்டுவரும்படி ஏவலனிடம் சைகை காட்டினேன். வாய் கழுவி முகத்தையும் கழுவி மேலாடையால் துடைத்துக்கொண்டிருக்கும்போது ஏவலன் வந்து தலைவணங்கி “ஸ்ரீவாழும்கோடு எழுந்தருளும் மகாராஜா சவிதம் ஹிதம்” என்றான்.

[ 3 ]

நான் மேலாடையை சீராகப் போட்டுக்கொண்டு நடந்து இடைநாழியை கடந்து சிறிய வாசல் வழியாக நன்றாகக் குனிந்து உள்ளே சென்றேன். ஒற்றைச்சாளரம் மட்டுமுள்ள பெரிய அறையில் கிழக்குநோக்கி போடப்பட்ட மஞ்சக்கட்டிலில் மெத்தைமேல் சாய்ந்தபடி மகாராஜா ஆதித்ய வர்மா வரகுண சர்வாங்கநாதப் பெருமாள் உடைய தம்புரான்  அமர்ந்திருந்தார். அவர் அருகே கொட்டாரம் ராயசம் கிருஷ்ணப்பையர் நின்றிருந்தார். தோள்களை குறுக்கி சால்வையை நன்கு போர்த்திக்கொண்டு என்னை சந்தேகம் நிறைந்த கண்களால் பார்த்துக்கொண்டிருந்தார்.

மகாராஜா பாதி தூங்கி எழுந்தமையால் நன்றாகக் களைத்திருந்தார். வெண்ணிற வேட்டி அணிந்து வெள்ளிச்சரிகை இட்ட மஞ்சள்பட்டுச் சால்வையை போர்த்தியிருந்தார். கண்களுக்குக் கீழே தசைகள் சுருங்கி மடிந்திருந்தன. வெற்றிலைபோட்டு சிவந்த உதடுகள் சற்று மடிந்து தொங்கியிருந்தன. தொங்குவது போல புடைத்த மூக்கின் உள்ளிருந்து சிறிது முடி எட்டிபார்த்தது. முன்குடுமி நெற்றியின் மேல் சரிந்து நின்றது. ஓரிரு நரைமுடிகள் ஓடிய தாடியை கைகளால் வருடிக்கொண்டிருந்தார்.

நான் அருகே சென்று உடைவாள் மேல் கையை வைத்து “ஸ்ரீவாழும்கோடும் பாண்டியமும் இருந்தருளும் சேரகுலாதிப, கேரளகுலோத்துங்க, குலசேகர கிரீடபதி, ஆதித்ய வர்ம வரகுணன் சர்வாங்கநாதப் பெருமாள் சவிதம் பூர்ணாங்க சேவிதம்” என்று சொல்லி வணங்கினேன்.

“சுபமஸ்து” என்றார் மகாராஜா. அவர் குரல் தளர்ந்தது. பேசிப்பேசிக் களைத்திருப்பதுபோல.

நான் ராயசம் கிருஷ்ணப்பையரைப் பார்த்ததும் மகாராஜா கைகாட்ட கிருஷ்ணப்பையர் தலைவணங்கி விலகிச்சென்றார். மகாராஜா கைகாட்ட நான் எனக்குரிய தாழ்வான பீடத்தில் அமர்ந்தேன்.

“பெரிய காரியமாக்குமா?” என்றார்.

“அடியேன், அனர்த்தம் ஒண்ணுமில்லை. ஆனால் அஹிதம் பிரதீக்ஷிதம்” என்றேன்.

“பாண்டிநாட்டு வார்த்தையோ?”

“அடியேன், ஆமாம்”

“வேணுமானால் திவானும் பெரிய தளவாயும் வரட்டும்” என்றார் மகாராஜா.

“அடியேன், அவங்களும் வரவேணும். அதுக்கு முன்னாலே தம்புரான் சவிதம் சில விஷயங்கள் உணர்த்திக்க வேணும்” என்றேன். “என் கையிலே ஒரு ஓலை இருப்புண்டு. இது என்னுடைய ஒற்றுகாரன் சேவுகப்பெருமாள் செட்டி சிராப்பள்ளியிலே இருந்து கொடுத்தனுப்பியது… இதிலுள்ள விஷயங்கள் சுபசூசகமானவை. ஆனால் மகாராஜா சவிதம் அது அஹிதமாகவும் கூடலாம்… அதனால் சுருக்கமாகச் சொல்லிடறேன்.”

“ம்ம்” என்று மகாராஜா கைகாட்டினார். அவர் உடல் வெயில்படாத வெளிறல் கொண்டிருந்தது. முதுமையின் தொடக்கம் மார்புத் தசைகளின் தொய்வில் தெரிந்தது. பெரும்பாலும் அமர்ந்தே இருக்கிறார். அரியணையில், பீடங்களில், மஞ்சல்களில், பல்லக்குகளில், வண்டிகளில். அவர் அதிகமான நேரம் அமர்ந்திருப்பது தெய்வங்களுக்கு முன்னால்தான். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அவர் செய்யவேண்டிய பூசைகளும் சடங்குகளும் பலநாழிகைப் பொழுது நீள்பவை. திருவாழும்கோட்டில் அரசப்பதவி என்பது ஒருவகை பூசக வேலைதான். அவருடைய கூன் விழுந்த தோள்களில் இருந்து மணிமாலைகள் தொங்கி ஊஞ்சல்போல் ஆடின.

“அடியேன், எழுபது வர்ஷம் முன்பு மதுரையின் ராஜ்யநிலைமை எப்படின்னு தம்புரான் சவிதம் அறிந்திருக்குமென்று அடியேன் அறியுக உண்டு. மதுரை சுல்தான்கள் ஒரு கூண்டில் அடைச்சுப்போட்ட ஓநாய்கள் மாதிரி ஒருவரை ஒருவர் கடிச்சு கீறி ரத்தம்குடிச்சு கிடந்தார்கள். அவர்களின் க்ரூர கிருத்யங்களாலே அங்கே ராஜ்யம் நானாவிதமாகி நாசமாகிக்கொண்டிருந்தது. அது அடி உளுத்த மரம் போலே ஆடிக்காற்றிலே விழுமுன்னு ஊர்ஜிதமாகி இருந்தது.”

“ம்” என்று மகாராஜா சொன்னார்.

“அடியேன். அதே நேரம் அங்கே வடக்கே துங்கபத்ரை நதிக்கரையில் ஸ்ரீவிஜயநகரம் என்று ஒரு சாம்ராஜ்யம் உருவாகி ஸ்திரப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி பலவாறாக தம்புரான் சவிதம் அடியேன் உணர்த்தியதுண்டு என்றாலும் மறுபடியும் அதையெல்லாம் உணர்த்துவதுக்கு அருளப்பாடு உண்டாகணும்” என்றேன். அரசரிடம் எதையும் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும் என்பது அவைநெறி. அவர் தனக்கு நினைவிருக்கும் என்றால் சொல்லவேண்டாம் என்று சொல்வார்.

மகாராஜா கையசைத்ததும் சொல்லலானேன். “அடியேன், சுல்தான்படைகளால் ஆனைக்குந்தி என்கிற யாதவநிலத்திலிருந்து வடக்கே பிடித்துக்கொண்டு போகப்பட்ட இரண்டு யாதவப்பிள்ளைகள் முஸ்லீம்களாக மாறியதனாலே டில்லி சுல்தான் அல்லாவுதீன் கிலிஜியின் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாறினாங்க.. அவங்க பூர்விக நிலம் அப்போ நானாவித கலகங்களுக்கு உள்ளாகி டில்லி சுல்தானுக்கு கிஸ்தியும் வாரமும் வராமலிருந்த காரணத்தால் அந்நிலத்தை அவங்களே ஆட்சி செய்தால் நல்லது வேணுமென்று சொல்லி சுல்தான்கள் அவங்களை அங்கேயே திருப்பி அனுப்பினாங்க. ஆனைக்குந்தியின் சுல்தான்களாக அவங்களையே நியமனம் பண்ணினாங்க. மதம் மாறி தொப்பியிட்டு பேரும் மாற்றி ரெண்டு பேரும் அவங்க பூர்விகர் ஆட்சி செய்த ஆனைக்குந்தி ராஜ்யத்துக்கே திரும்பி வந்தாங்க”

“அடியேன், அவ்வண்ணம் ஆனைக்குந்தி ராஜ்யத்துக்கு திரும்பி வந்தவங்களை சிருங்கேரி மடத்து ஜகத்குரு வித்யாரண்ய சங்கராச்சாரிய மகாஸ்வாமிகள் சந்திச்சு மறுபடி தீக்ஷை பண்ணுவித்து யுக்தமான முறையிலே வைஷ்ணவாச்சாரத்திற்கு கொண்டுவந்தார். அவர்களுக்கு பூர்விகர்களின் ஒரு பெரிய புதையலையும் எடுத்துக்கொடுத்தார். அவர்கள் அந்த மகாசம்பத்தைக் கொண்டு துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு கல்கோட்டையை கட்டி அதுக்குள்ளே ஒரு ராஜ்யத்தை நிர்மாணிச்சாங்க. அதுக்கு ஸ்ரீவிஜயநகரம்னு பேரு போட்டு பரிபோஷிச்சாங்க…”

“ம்” என்றார் மகாராஜா.

“அடியேன், அவ்வண்ணம் திரும்பிவந்து ராஜ்யஸ்தாபிதம் பண்ணின ரெண்டு சகோதர்களின் நாமங்கள் இவ்விதமாகும். மூத்தவர், ஹரிஹரர் இளையவர் புக்கர். புக்கரின் மகன் குமாரகம்பண உடையார்” என்றேன். ”குமாரகம்பண உடையார் கிரீடதாரணம் செய்த காலம் முதல் மதுரையை சூக்ஷ்ம வீக்ஷணம் பண்ணி வந்தார் என்பது தீர்த்தும் ஸ்வாபாவிகமே. மதுரை சுல்தான்கள் இவ்வண்ணம் க்ஷீணித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் சிராப்பள்ளி மதுரை எல்லைகளை ஆக்ரமித்து அனேகம் கோட்டைகளை கைப்பற்றிக்கொண்டார். செஞ்சியும் வேலூரும் அவருக்கு வசமாகும்வரை மதுரை சுல்தான்கள் தங்களுக்குள் யுத்தம்செய்து கொண்டிருந்தாங்கள். செஞ்சியும் வேலூரும் கைவிட்டு போனபின்னால் குமார கம்பண ராஜாவை எதிர்க்க அவர்களாலே முடியாமலாகிப் போச்சுது.”

“அடியேன், இவ்வண்ணம் ஒரு கதை சொல்லுகிறாங்க. குமாரகம்பண பெரிய நாயக்கர் காஞ்சிபுரத்திலே தன் மகாபத்னியாகிய கங்கம்மா தேவியுடன் வாசம் செய்கிற நேரத்திலே மகாராணி கங்கம்மாதேவி ஒரு மதுரசொப்பனம் கண்டார். அதில் எட்டுமங்கலங்கள் கொண்ட சாரதவர்ணியான சின்னப்பெண் ஒருத்தி சிற்றாடை கட்டி தோளிலே கிளியுடன் வந்து முற்றத்திலே நின்று என் வீட்டுக்கு நான் போவதெப்போ என்று கேட்டாளாம். சொப்பனம் கலைஞ்ச மகாராணி அமாத்யர்களை விளித்து எல்லாம் சொல்லி விசாரிச்சாங்க.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2021 11:31

April 20, 2021

கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 4

நண்பர்களுக்கு வணக்கம்.

சொல்முகம் வாசகர் குழுமத்தின் நான்காவது வெண்முரசு கூடுகை 24-04-21 அன்று கோவையில் நிகழவுள்ளது.

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான “மழைப்பாடல்” – இன் கீழ் வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

தூரத்துச் சூரியன்

 நீள்நதி பால்வழி மொழியாச்சொல்அனல்வெள்ளம்முதற்களம்விதைநிலம்

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நாள் : 24-04-21, சனிக்கிழமை

நேரம் : காலை 9:30

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

நரேன்                      – 73390 55954

பாலாஜி பிருத்விராஜ் – 9894729945

Naren M

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2021 23:36

வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி?

ஜெ,

பள்ளிப் பருவத்தில் இருந்தே நான் வாசிக்கிறேன். இலக்கிய வாசிப்பு சற்று தாமதமாக வந்தது. தொடர்கிறது. ஆனால் படைப்பை ரசிக்க முடிகிறது. இனம் புரியாத உணர்வு (உங்களுடைய கொற்றவை, ஊமைச் செந்நாய், வெள்ளை  யானை, சங்கச் சித்திரங்கள் போன்றவை படித்த போது) ஏற்படுகிறது. அது மனதை ஏதோ தொந்தரவு செய்கிறது. ஆனால் அதைக் கடந்து வாசிப்பின் ஆழத்திற்குள் செல்ல முடியவில்லை.  நுட்பமாக படைப்பை விமர்சிக்கும் தகுதி வர மறுக்கிறது. அதையும் மீறி விமர்சித்தால் அது மேலோட்டமானதாக இருப்பதை என்னாலேயே உணர முடிகிறது.

சமீபத்தில் அஞ்ஞாடி  படித்தேன். அதை  படித்து முடித்த உடன்  நாவலை அசை போட்டு பார்த்தேன்.  நாவலில் மாரி – ஆண்டியின்  வாழ்க்கையில் இருக்கும் புனைவுத் தன்மையின் மையம் தோள் சீலை போராட்டம்,  கட்ட பொம்மு -மருது சகோதரர்கள் வரலாறு, நாடார்கள் வேதத்துக்கு மாறுவது, கழுகு மலை கலவரம், சிவகாசி கலவரம் போன்றவற்றில் ஒட்டவில்லை என்று பட்டது. ஆனால் இக்கருத்தை முன்வைக்கும் துணிவு வெளிப்படவில்லை.  வாசகன் எப்போது விமர்சகனாக முடியும்? ஆழ்ந்த  நுணுக்கமான வாசிப்பு இல்லாத வரை அது சாத்தியமில்லையா?

ஒரு படைப்பை உடற்கூறாய்வு  செய்யும் பணி வாசகனுடையது அல்ல என்றாலும், வாசகன்  அடுத்த படிநிலைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுவதால் இக்கேள்வியை எழுப்புகிறேன். படைப்பை விமர்சிக்கும் தகுதி ஏற்படுவதற்கு முன் அதை வெளிப்படுத்தும் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என நினைக்கிறேன்.

அன்புடன்,

பா.இரமேஷ்.

***

அன்புள்ள பா இரமேஷ்,

நீங்கள் வாசிப்பதும், விமர்சன நோக்கு கொண்டிருப்பதும் நிறைவூட்டுகிறது. ஒரு விதியாகவே சொல்ல முடியும், விமர்சன நோக்கு இல்லாமல் வாசிப்பு இல்லை. ரசனை என்பதே நுட்பமான விமர்சனம்தான். ஆகவே விமர்சிப்பது இயல்பானது. நாம் பேசுவது அந்த விமர்சனத்தை வெளிப்படுத்துவது பற்றித்தான்.

தொடக்க காலகட்டத்தில் ஒரு விமர்சனத்தை முன்வைக்கையில் நமக்கு ஒருவகையான தயக்கம் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை ஆரோக்கியமான ஒன்றாகவே கருதுகிறேன். ஏனென்றால் அந்த தயக்கம் இல்லாதவர்கள் மொண்ணையான விமர்சனங்களை மிகையான பாவனைகளுடன் முன்வைக்கிறார்கள். அவர்களை அவர்களே கோமாளிகளாக காட்டிக்கொள்கிறார்கள். அதைவிட அவர்களுக்கே தீங்கான ஒன்றுண்டு, தாங்கள் சொல்லும் விமர்சனங்களுக்கு தாங்களே ஆட்பட்டுவிடுகிறார்கள். அவர்கள் சொன்னதே அவர்களுக்கான சுற்றுமதிலாக ஆகி சிறையிட்டு விடுகிறது.

அதாவது, தாங்கள் சொன்னவற்றுக்கு முரணாக மீண்டும் சொல்லக்கூடாது என்பதனாலேயே சொன்னவற்றை வளர்த்து ஒரு தரப்பாக ஆகிவிடுகிறார்கள். அதன்பின் புதியன எவையும் உள்ளே நுழைவதில்லை. அது ஒரு பெரிய அகழி. பல இளையோர் அதற்குள் மாட்டிக்கொண்டிருக்க நேர்கிறதென்பதைக் காண்கிறேன். ஏனென்றால் இன்றைய ‘எதுவும் பிரசுரமாகும்’ சூழல் எண்ணியவை உடனே பதிவாகச் செய்கிறது. இது சென்ற இருபதாண்டுகளில் உருவாகியிருக்கும் ஒரு நச்சுச்சூழல்.

ஆகவே விமர்சன அணுகுமுறை நல்லது. அவற்றை வெளிப்படுத்துவதற்கான தயக்கம் அதைவிட நல்லது. இளையவாசகர்கள் விமர்சனங்களை வெளிப்படுத்துவதற்குரிய சில வழிமுறைகளை நான் தொகுத்துச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

. முதலில் சற்றுகாலம் உங்களை பாதித்தவற்றைப் பற்றி மட்டுமே எழுதுங்கள். அதாவது மதிப்புரைகளை அல்ல ரசனையுரைகளை. ஆங்கிலத்தில் appreciation என்று அதைச் சொல்வார்கள். மதிப்புரை [review] விமர்சனம் [criticism] ஆகியவை அடுத்த தளத்தில் நம் ரசனையும் கருத்துநிலையும் தெளிவாக உருவானபின்னர், நம் ஆளுமையும் அடையாளமும் திரண்ட பின்னர் செய்யவேண்டியவை.

.பாதிக்காதவை, பிடிக்காதவை பற்றி எழுதவேண்டாம். ஏனென்றால் முகமுக்கியமான பல படைப்புக்கள் இந்த ஆரம்ப காலகட்டத்தில் உங்களுடைய ரசனைத் தகுதியின்மை, வாசிப்புப் பயிற்சியின்மை காரணமாக உங்களை பாதிக்காமல் போகலாம். உங்களுக்கு பிடிக்காமலும் ஆகிவிடலாம்.

. ஒரு படைப்பு ஏன் பிடித்தது, எவ்வாறு பாதித்தது என்று உங்களையே ஆராய்ந்து எழுதுங்கள். இது காலப்போக்கில் உங்கள் ரசனை என்ன என்பதை உங்களுக்கே காட்டும். உங்கள் ரசனை வளர்ந்து வருவதையும் உங்களால் காணமுடியும். உங்கள் ரசனைக்குரிய அளவுகோல்கள் உருவாகி வரும். உங்கள் பார்வை துலங்கி வரும்.

.வாசகனாக எப்போதும் உங்களை எழுத்தாளனை விட ஒருபடி கீழாக வைத்துக்கொள்வது இன்றியமையாதது. இன்றைய நவீன விமர்சனம் வாசகனை இணைபடைப்பாளியாக, எழுத்தாளனுக்கு நிகரானவனாக முன்வைக்கிறது. ஆனால் அது சரியான வாசிப்பை அளிக்கும் வழி அல்ல. இது சமீபமாக உருவான ஒரு அசட்டுப்பார்வை. பெரும்பாலும் கல்வித்துறை ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது. அந்த உளநிலைகளை பயின்றவர்கள் பெரும்பாலும் அசட்டு வாசகர்களாகவே இருப்பார்கள். நவீன மொழியியல் – பின்நவீனத்துவ விமர்சக வாசகனைப்போல அசட்டு வாசகனை உலக இலக்கிய மரபு ஈராயிரம் ஆண்டுகளில் கண்டதே இல்லை. இதற்கு சில உதாரணங்கள் தமிழிலும் உள்ளன.

*

ஏன் வாசகன் வாசிப்பின்போது நூலாசிரியனைவிட ஒரு படி கீழாக இருக்கவேண்டும்?

ஏனென்றால் அவன் பெற்றுக்கொள்பவன். அங்கே அவன் இடம் அதுதான். அந்த தணிவு இல்லையேல் அவனால் பெற்றுக்கொள்ள முடியாது. பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டு விவாதிக்க முற்படுவதுபோல அசட்டுத்தனம் வேறில்லை.

அந்த தணிவு ஏன் தேவை என்றால், அறிவாணவம் என்னும் வகுக்கமுடியாத ஒரு பெருஞ்சிக்கல் வாசிப்பின் ஊடாக வந்துவிடுகிறது என்பதனால்தான். நாம் நம் இயல்பான அறிவால் அடைந்த தன்னுணர்வு, அதுவரை நாம் வாசித்தவை ஆகியவற்றால் நமக்கு அறிவாணவம் உருவாகிவிடுகிறது. அது வாசகன் என்னும் நிலையில் நமது ஏற்புத்தகுதியை இல்லாமலாக்கிவிடுகிறது. வாசகனாக நாம் அதை ரத்துசெய்துவிட்டே வாசிக்கவேண்டும்.

ஆகவே எழுத்தாளனுக்கு ஆலோசனை சொல்லுதல், எழுத்தாளனை வழிநடத்துதல், திருத்தியமைத்தல் ஆகிய அபத்தங்களை ஒருபோதும் செய்யலாகாது. அவனுடைய எழுத்து உங்களுக்கு என்ன அளித்தது என்று மட்டும் எழுதுங்கள். என்ன அளிக்கவில்லை என்பதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருங்கள்.

*

ஏன் பாதித்தவை பற்றி எழுதவேண்டும்? ஏன் நம் ரசனையை நாமே வைத்துக்கொள்ளக்கூடாது? ஏனென்றால்–

1. அது சூழலில் நூல்களைப் பற்றிய பொதுவான விவாதம் உருவாக வழிவகுக்கிறது.

2. உங்கள் வாசிப்பனுபவத்தை இன்னொருவர் தன் வாசிப்பினூடாக நிரப்ப வழியமைகிறது.

3. உங்கள் எண்ணங்களைச் சீராக வெளிப்படுத்துவதன் வழியாக உங்கள் மொழியை பழக்குகிறீர்கள். மொழியைப் பழக்குவது என்பது சிந்தனையை பழக்குவதுதான். சிந்தனையை பழக்க மொழியை பழக்குவது மட்டுமே வழி.

4. உங்கள் அகநிகழ்வுகளை எழுதுவதன் வழியாக புறவயமாக ஆக்கிக்கொள்கிறீர்கள். சில அக எழுச்சிகள் எழுதும்போது குறையும், சில கூடும். அவை ஏன் நிகழ்கின்றன என்று பார்ப்பது உங்களையே பார்ப்பதற்கு நிகர்.

5. எழுதுவது உங்கள் எண்ணங்களை என்பதனால் நீங்கள் எழுதியவற்றை நீங்கள் மறக்கவே மாட்டீர்கள். அவை உங்களுக்குள் என்றுமிருக்கும்.

*

இவ்வண்ணம் எழுதி- விவாதித்து முன்செல்லும் பயணத்தில் என்றோ ஒருநாள் மெல்ல மெல்ல உங்கள் ஆளுமை உருவாகி வந்திருக்கும். நீங்கள் ஒரு விமர்சகனாக நிலைகொள்ளும் அளவுக்கு விரிந்த பின்னணி வாசிப்பும், தொடர்ச்சியான விவாதப்பயிற்சியும், தனித்த பார்வையும் உடையவராக ஆகியிருப்பீர்கள். அன்று உங்கள் குரல்பற்றி உங்களுக்கே தன்னம்பிக்கை வரும். நீங்கள் பேசினால் பிறர் கவனிப்பார்கள். அன்று விமர்சனங்களை முன்வையுங்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2021 11:35

முகில் கடிதங்கள்-9

அன்புள்ள ஜெயமோகன் ,

தினமும் அந்த முகில் இந்த முகில் வாசித்து, குறுநாவலின் முடிவில் மோட்டூரி ராமராவுக்கும் ஸ்ரீபாலாவுக்குமான அமரக்காதலின் உணர்வெழுச்சியில் ஒரு நாள் முழுவதும் இருந்தேன். எத்தனை அபாரமான தருணங்கள் நிறைந்த கதை. சில நாட்களில் அன்றைய அத்தியாயத்தை படித்துவிட்டு அதோடு இணைக்கப்பட்டுள்ள காணொளிகளையும் இசையையும் கேட்டு முடித்தால் தூக்கமே இல்லாமல் இரவின் அமைதி சிறிது நேரம் நெஞ்சை அடைக்கும்.

முதலில் வந்த நான்கு அத்தியாயங்களை தினமும் வாசித்தபோது கொஞ்சம் “போச்சுடா” என்றுதான் உண்மையிலேயே நினைத்தேன். அந்த அத்தியாயங்கள் முழுக்க நீங்கள் செதுக்கி கொண்டுவந்த ஸ்டூடியோ சினிமா உலகமும், மோட்டூரி ராமராவின் ஒருதலைக்காதல் மனஓட்டங்களும் கொஞ்சம் சாதாரணமாக போய்க்கொண்டிருந்தது. அந்த உலகிற்குள் என்னால் இருக்க முடியவில்லை. அது ஒரு கரைந்த நிழல்கள் உணர்வு நிலையிலேயே, ஆன்மா உறிஞ்சி வெளியே எடுக்கப்பட்ட மனிதர்களின் சித்திரமாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால், ஏதோ ஒரு புள்ளியில், சட்டென்று, அது நிகழ்ந்ததே நமக்குத் தெரியாத நொடியில், இந்த கதை பறக்கத் தொடங்கிவிடும் என்று நம்பினேன்.

இப்போது யோசித்துப் பார்த்தால், கதை ஹம்பிக்கு நகர்ந்த உடனே அது நிகழ்ந்துவிட்டது. கதையில் வரும் மனிதர்களைப் போலவே ஹம்பிக்கு போனவுடன் கதையும் முற்றிலும் வேறொன்றாக மாறிவிட்டது. அதற்கு பிறகு எத்தனை தருணங்கள், எத்தனை வரிகள், எத்தனை மன ஓட்டங்கள். அவற்றை எல்லாம் வரிவரியாக எடுத்து எழுதவோ, இது எனக்கு பிடித்திருந்தது என்று ஒரு வரியை மட்டும் மேற்கோளாக சுருக்கவோ எனக்கு விருப்பமில்லை. அந்த தருணங்களில் இருக்கும் கவித்துவத்தை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவே இல்லை. ஆனால் வாசித்து மூன்று நாட்களுக்குப் பிறகு இரண்டு எண்ணங்கள் இப்போது எழுந்து வருகிறது. ஒன்று, அந்த பாடல் வரிகள், இரண்டு, மெல்லி இரானி சீனியர்.

1. “முகில்கள் மறைந்துவிடும், அன்பே வானம் அங்கிருக்கும் அல்லவா?” என்ற வரியில்தான் எத்தனை அழகு. எத்தனை ஆழம். இப்போது கதையை நினைத்தால், இந்த வரியில் இருந்துதான் நீங்கள் மொத்த கதையையும் விரித்திருப்பீர்களோ என்றுதான் தோன்றுகிறது. மோட்டூரி ராமராவும், ஸ்ரீபாலாவும் எத்தனை சாதாரணமானவர்கள். அமரர் அசோகமித்திரனையும், உங்களையும் தவிர இவர்களை வேறு யாரும் சீண்டக்கூட மாட்டார்கள். அவ்வளவு சாதாரணமானவர்கள். ஆனால் அவர்களின் காதல் கதையை இத்தனை அழகாக மாற்றியிருப்பது அந்த வரிகள்தான்.

அந்த வானம் இல்லையென்றால், இந்த முகில்கள் வெறும் நீராவிதானே? பறவைகளின் தடங்களோ, முகில்களின் தடங்களோ, வானத்தில் பதிவதே இல்லை. ஆனால் அவற்றை அந்த வானம் அறியும். அந்த வானம் அங்கிருக்கும்வரை அந்த முகில்கள் கூடிய பொழுது இருக்கும். கதையில், இரண்டு சாதாரண மனிதர்களின் காதலுக்கு சாட்சியென, வானமென மாறுகிறது அந்த வெள்ளித்திரை. ஸ்ரீராஜவிஜயேஸ்வரி உள்ளவரை அந்த முகில்கள் கூடிய பொழுதுக்கான சாட்சி இருக்கும். அதை அந்த இருவர் மட்டுமே அறிவர். ஆனால் அந்த வெள்ளித்திரையில் ஸ்ரீராஜவிஜயேஸ்வரி இருக்கும்வரை, பானுமதிக்கு பின்னால் ராமராவ் தனியாக உள்ளே துணி வைத்து தைத்துக் கொடுத்த  உடைகளை அணிந்த ஸ்ரீபாலா இருப்பாள். அந்த முகில்கள் சந்தித்த தருணத்திற்கான சாட்சியாக. அது போதும் அவர்களை ஒரு அமரக்காதலின் பகுதிகளாக்க. ஒரு சாதாரண காதல் கதையை ஒரு நிமிடத்தில் வேறொன்றாக மாற்றிவிட்டன அந்த வரிகள்.

2. இரண்டாவதாக மனதில் நிற்பது மெல்லி இரானி சீனியர். அவர்மீதான ராமராவின் ஈர்ப்பும், அவரைப் பற்றிய விவரணைகளும் எனக்கு முதலில் பொருள்படவே இல்லை. ஆனால் கதையின் முடிவில் நான் அதை உணர்ந்தேன். Sir, அது நீங்கள்தான். ராமராவும் ஸ்ரீபாலாவும் அந்த இரவில் கண்ட முகில்களும், நிலவும் கரைந்துவிட்டது. அவை மீண்டும் வரப்போவதே இல்லை. அதை அவர்களால் மீட்டெடுக்கவே முடியாது.

ஆனால் மெல்லி இரானி பகலில் உருவாக்கிய அந்த முகில்களும் நிலவும்தான் அவர்களின் அந்த இரவுக்கான ஒரே சாட்சி. அவர் உருவாக்கித்தந்த அந்த கேமரா பில்டர் இரவு வழியேதான் அவர்கள் அந்த ஒரு இரவை மீட்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மெல்லி இரானி வராமல் போயிருந்தால், அவர்களின் அந்த இரவுக்கும் அந்த முகில்களுக்கும் என்ன சாட்சி? காலப்போக்கில் அவர்கள் அந்த இரவை மறந்திருக்க முடியும். அது அவர்களின் நினைவுகளில் ஒரு மங்கிய பழைய நினைவாக மாறியிருக்கும்.

ஆனால் இப்போது மெல்லி இரானியின் அந்த இரவு அவர்களின் இரவாக மாறிவிட்டது. அவர்களின் நினைவின் இரவென்பதே மெல்லி இரானியின் கேமரா இரவுதான். அதை வைத்து அவர்களால் அந்த ஒரு இரவை துல்லியமாக விரித்தெடுக்க முடியும். அந்த ஒரு இரவின் வழியே அந்த முழு வாழ்வையும். கருப்பு வெள்ளையில்தான் எத்தனை சாத்தியங்கள்? மெல்லி இரானி உருவாக்கித்தந்த அந்த ஒரு இரவும் அவர் படம் பிடித்த ஸ்ரீபாலாவுக்கான ஒரு குளோஸ் அப்பும், ஸ்ரீராஜவிஜயேஸ்வரியும் உள்ள வரை ராமராவுக்கும் ஸ்ரீபாலாவுக்கும் அந்த வாழ்வின் அத்தனை சாத்தியங்களும் திறந்தே இருக்கும். அவர்கள் அந்த ஒரு இரவின் வழியே அவர்கள் வாழ்வை எண்ணற்ற விதங்களில் மனதுக்குள் வாழ்ந்து திளைக்கலாம்.

மெல்லி இரானியை போல்தான் நீங்களும். இந்த ஒரு குறுநாவலின் வழியே அவர்களையும் அவர்களைப்போன்ற எண்ணற்ற ராமராவ்களையும் ஸ்ரீபாலாக்களையும் அமரர்களாக்கிவிட்டீர்கள். இந்த ஒரு குறுநாவலின் வழியே அவர்கள் அவர்களின் முகில்கள் கூடிய இரவுகளை துல்லியமாக மீட்டெடுக்க முடியும். அந்த வாழ்வின் சாத்தியங்களை மனதில் வாழ்ந்து திளைக்க முடியும். முகில்கள் கூடிய பொழுதுகளை மீட்டெடுக்க முடியாத ராமராவ்களின்/ஸ்ரீபாலாக்களின் வாழ்வுதான் எத்தனை சூனியமானது.

எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களால், இசை, காணொளிகள், போன்றவற்றோடு இணைத்து இலக்கியங்களை உருவாக்கும் முறைகள் பிறக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள். புனைவுக் களியாட்டின்  சிறுகதைகளிலேயே சில கதைகளில் சில காணொளிகளையும், இசையையும் இணைத்திருந்தீர்கள். இப்போது இந்த குறுநாவலின் வழியே அந்த முறையின் சாத்தியங்களை அற்புதமாக நிகழ்த்திக் காட்டிவிட்டீர்கள். இணைக்கப்பட்ட பாடல்களையும், இசையையும் சேர்த்து அந்த அத்தியாயங்களை வாசித்தபொழுது எழுந்த உணர்வெழுச்சிதான் எத்தனை அலாதியானது.

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

****

அன்புள்ள நண்பரும் ஆசிரியருமான ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம். செயலின்மையின் இனிய மதுக்கோப்பையின் விளிம்பிலிருந்து  திருவேங்கடம். உங்கள் புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்ட பழைய வாசகன். எங்களை மீண்டும் தொடர்கதைகளின் பொற்காலத்தில் வாழ வைத்ததற்கு நன்றி. ஓவ்வொரு நாளும் ஒரு வாரத்தைப் போலவே கடந்தது. மூன்று காதல்கள். ஒன்று திரைப்பட கதையில். இரண்டாவது பானுமதி ராமாராவ் இடையில். மூன்றாவது கதைசொல்லியின் காதல். முதல் காதல் நடிப்பு மட்டுமே. இரண்டாவது காதல் காட்சி அமைப்பினால் ஏற்பட்ட நெருக்கத்தினால் உருவாகி இருக்கலாம். ஆனால் சூழ்நிலை காரணமாக முழுமை அடையவில்லை.

கதைசொல்லியின் காதல் அந்த சிறிய தயக்கத்தை உடைத்திருந்தால் முழுமை அடைந்திருக்க கூடியது தான். ஆனால் வழக்கமான, ஆயிரத்தில் ஒரு  காதல் கதையாக முடிந்திருக்கும். ராஜமந்திரியில் ஸ்ரீபாலா பிரிந்து செல்லும் போது ஆரம்பித்து கடைசியில் படம் பார்த்த பின் பேசிவிட்டு திரும்பி பார்க்காமல் செல்லும் போதும் இருவருக்கும் அதே மனநிலை தான். இரண்டு கட்டத்திலும் ஒரு வார்த்தை அவன் கூப்பிட்டு இருந்தால் இணைத்திருப்பார்கள். முதல் முறை எது தடுத்ததோ அதுவே இப்போதும் அவனை தடுக்கிறது.

இருபத்தேழு வருடத்திற்கு பிறகும் அவன் அந்த மன நிலையில் மாற்றமில்லாமல் உறைந்திருக்கிறான். ஸ்ரீபாலா இப்போதும் அவன் கூப்பிடும் குரலுக்காக காத்திருப்பதாவே படுகிறது. என்னுடைய மற்றுமொரு கதைக்கருவை கலைத்துவிட்டீர்கள். மாரத்தான் ஓட்டத்தையே sprint வேகத்தில் ஓடி கொண்டு இருக்கிறீர்கள். மீண்டும் நன்றி. என்னையும் கடிதம் எழுத வைத்ததற்கு.

அன்புள்ள

திரு

***

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் பற்றிப் பேசும்போது மோட்டூரி ராமராவின் அந்த தயக்கம் பற்றி பேசுகிறார்கள். அந்தத் தயக்கம் மட்டுமில்லை என்றால் அவர் வாழ்க்கை இன்னொன்றாக ஆகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால் நாம் வாழ்க்கையில் அடையும் ஒவ்வொரு தயக்கமும் மிகமிக ஆழமானது. எளிதில் மீற முடியாதது. உதாரணமாக நான் பிராமணன். என்னால் ஒரு அடல்ட்டை கையை ஓங்கி அடிக்கவே முடியாது. இந்த தடை என் பிறப்புச்சூழலில் இருந்து வந்தது. இது எனக்கு நிறைய பாதுகாப்பை அளிக்கிறது. நிறைய வேலிகளை போடுகிறது. உணவுப்பழக்கம், பேசும் முறை, வாழ்க்கைச்சூழல் எல்லாமே இப்படித்தான் உருவாகின்றன. அந்த சூழலில் இருந்தே தயக்கங்கள் உருவாகின்றன. ஒரு கொலை செய்ய நாம் ஏன் தயங்குகிறோம்? அதே தயக்கம்தான் இதுவும். அத்தனை எளிதாக கடந்து செல்ல முடியாது. எல்லா மனிதர்களும் இந்த தயக்கங்களால் ஆன வேலிகளுக்குள் வாழ்பவர்கள்தான்

எம்.சந்தானம்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2021 11:34

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்- பரிந்துரை

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்- பரிந்துரைவிவேக்

[குறிப்பு: இது வாசிப்பின் மூலமாக நான் கண்டடைந்த கருத்துக்களே ஒழிய புத்தக மதிப்புரை அல்ல, மேலும் இக்கடிதம் ஆங்கிலவழிக்கல்வி  மூலமாக பள்ளி பயின்று தமிழிலக்கியத்தினுள் நுழையவிரும்பும் ஆரம்பநிலை வாசகர்களுக்கு உதவும் பொருட்டு எழுதப்பட்டது, ஏற்கனவே ஏதாவது ஒரு வழியில் தமிழிலக்கிய அறிமுகம் உள்ளவர்களுக்கு இக்கருத்துக்கள் பொருத்தப்படாமல் போகலாம்.]

இலக்கியம் என்றால் என்ன? தமிழிலக்கியத்தில் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது? அறிவியல், தத்துவம், வரலாறு போன்ற அறிவுத்துறைகளிலிருந்து இலக்கியம் எவ்வாறு வேறுபடுகிறது? கதைக்கும், சிறுகதைக்கும், கவிதைக்கும், நாவலுக்கும் என்ன வேறுபாடு? இலக்கியத்திற்கும் கலைக்கும் என்ன தொடர்பு? ஒரு கலையை உணர்வதால் ஒருவர் அடையும் புரிதல்கள் எத்தகையது?  பொது வெளியில் நாம் சகஜமாக கேள்விப்படுவதுபோல் போல பாரதியார் கவிதைகள், திருக்குறள், கம்பராமாயணம், புராணக்கதைகள், நீதிபோதனை கதைகள் மட்டும் தான் தமிழிலக்கியமா? நவீனத் தமிழிலக்கியம் என்றால் என்ன? தமிழில் வாசிப்பதற்கு என்ன கிடைக்கும்? தமிழில் யாரெல்லாம் இலக்கியம் எழுதுகிறார்கள்? எங்கிருந்து வாசிக்க தொடங்குவது? தீவிர இலக்கிய சிந்தனைகள் தமிழில் உண்டா? போன்ற கேள்விகளுக்கும் மற்றும் பல ஆழமான தேடல்களுக்கும் இப்புத்தகம் விடை அளித்துள்ளது. தகவல்சுமை அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் கூட இப்புத்தகம் மூலம் கண்டடையும் நவீனத் தமிழிலக்கியம் பற்றிய உண்மைகளை இணையத்தில் எங்குமே கண்டடைடைய முடியாது என்பது இப்புத்தகத்தின் சிறப்பம்சம்.

தமிழிலக்கியம் என்பது  நம் பள்ளிக்கல்வியில் பயின்றதைப்போன்று மனபாடச்செய்யுள், கோவலன் – கண்ணகி கதை, கோப்பெருஞ்சொழன் – பிசிராந்தியர் நட்பு, முல்லை – பாரி தேர், அகத்திணை – புறத்திணை, தேமா – புளிமா, தலைவன் – தலைவி, போர் வீரம் போன்றவற்றைப்பற்றி உரைப்பது (!) போன்ற எண்ணத்தையும், சொல்லப்போனால் பாடபுத்தகத்தையும் தொழில்சார் புத்தகங்களை  மட்டுமே  வாசித்து இருக்கும் அனைவருக்கும் பொதுவாக  தமிழ் இலக்கியத்தின் மீது இருக்கும் ஒரு அபிப்ராயத்தை இப்புத்தகம் நேர்மாறாக மாற்றியமைக்கும்.

ஒருவர் தொடர்ந்து தமிழ் வாரஇதழ்கள் வாசித்தாலும் அதிலிருந்து கிடைக்கப்பெறுவது பொதுவாக தொடர்கதைகள் அல்லது மக்களுக்கு சுவாரசியம் சேர்க்கும் செய்திகள் மட்டுமே. நவீன இலக்கியம் அறிமுகமாகும் சூழல் இங்கு மிகக்குறைவே

இலக்கியம் எனும் அறிதல் முறையும், இலக்கியப்பயிற்சி ஏன் தேவை- போன்ற அத்தியாயங்களும் அளிக்கும் புரிதல்கள் ஆச்சர்யமளிக்கும். இந்த கோணத்திலேயே,இப்புத்தகமும் இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் மகத்துவம் பெறுகிறது.

தமிழில் அச்சிடப்பட்டு எளிதாககிடைக்கப்பெறும் வாரஇதழ்கள், நாளேடுகள் மற்றும் இணையதள வலைப்பதிவுகள் போன்றவற்றில் கேட்காமலே கிடைக்கும் தகவல்களையும், யாரோ முன் பின் தெரியாத ஆசாமி எழுதிவைத்த கட்டுரைகளையும் படித்துவிட்டு இதுதான் தமிழில் கிடைக்கப்பெறும் சிந்தனை/இலக்கிய சூழல் என என்னும் எண்ணம்கொண்ட யாராயினும் இந்தப்புத்தகத்தை நிச்சயமாக வாசிக்க வேண்டும்.

நம் சமூகத்தில் நன்கு படித்து, நல்ல வேலையில் உள்ள பெரும்பாலானோர் கூட தமிழ் இலக்கிய அறிமுகம் சிறிதும் இல்லாமலிருப்பதின் காரணம் நம் சமுக சூழலில் இலக்கிய அடிப்படைகளை பற்றிய அறிமுகமோ விழிப்புணர்வோ கொஞ்சம் கூட இல்லாமலரிருப்பதுதான். இக்குழப்பத்தின் அடிப்படை ஆணிவேராக இருப்பது இன்று நிலவும் சமூகசூழல் மற்றும் கல்விப்பின்புலம், எந்த ஒரு இலக்கிய அறிமுகப்பயிற்சியும் அளிக்கப்படாமல் தொழில்துறை சார்ந்த தகவல் அறிவை மட்டுமே நாம் சென்றைடைகிறோம்

வாசிப்பின் படிநிலைகள் அத்தியாயத்தை வாசித்தாலே தெரிந்துவிடும் நாம் இன்னும் கரையில் நின்றகொண்டு கடலை அறிய முயற்சிசெய்துகொண்டிருக்கின்றோம் என.

சென்னை புத்தக திருவிழா, ரயில்/விமான நிலங்களில் உள்ள புத்தக குவியலை பார்க்கும்போதெல்லாம் தமிழில் அதிகமாக கண்ணில் தென்படுபவை அதிக பிரசுரங்களை கொண்டு பெரும்பான்மையான மக்களுக்காக கணிசமாக விற்பனையாகும் புராணங்கள், சமையல் குறிப்பு, வாழ்க்கைக்கு வழிகாட்டி, தத்தும், அரசியல், மதக்கோட்பாடு, சுயமுன்னேற்றம், பிரபல ஆங்கில புத்தகங்களின் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் போன்றவையே.

அப்போதெல்லாம் யோசித்ததுண்டு. ஒருவேளை இதுமட்டும்தான்  தமிழ் இலக்கியம் போல என்று. ஆனால் இப்புத்தகத்தை வாசித்துமுடித்தவுடன் தான் தெரிந்தது – தமிழில் இதுமட்டுமில்லாது ஆகச்சிறந்த இலக்கிய படைப்பாளிகள் வாழ்ந்திருக்கிறார்கள்… முன்பைவிட இப்பொழுது இன்னும் தீவிரமாக சிந்தித்து எந்த ஒரு விளம்பரமுமின்றி,லாப நோக்கத்தைப்பற்றியெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று. அவர்கள் அனைவருமே வெகுஜனத்தை ஆட்கொண்டிருக்கும் எல்லா ஊடகங்களுக்கும் வெளியே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், மேலும் அவரவர் தம் இலக்கிய வாசகர் வட்டத்திற்கு வெளியே அதிகம் பரிச்சயம் இல்லாதவர்கள். இப்புத்தகம் அத்தகைய படைப்பாளிகளை அடையாளம் காட்டி அவர்களது படைப்புகளை அறிமுகப்படுத்திவைக்கிறது.

தமிழிலக்கியம் பாரதியின் வருகைக்குப்பின் உரைநடையில் இத்தனை உன்னதமான படைப்புகள் வந்துள்ளன, அவை சிற்றிதழிலிருந்து வளர்ச்சி பெற்று இன்று எவ்வளவு முயற்சிகளைக்கடந்து பல கதை வடிவங்களை அடைந்து…நாவல் வடிவம் வரை…பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று இப்புத்தகம் சிறப்பாக விளக்கிக்காட்டுகிறது. வெறும் தகவல் குவியலாக நிகழ்வுகளை தொகுத்து பாடப் புத்தகம் போல இல்லாமல், நவீனத்த தமிழிலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியை அழகாக காட்டுகிறது அணைத்து அத்தியாயங்களும்.

இலக்கியம் ஒரு கலை, அது தர்க்கத்தை (logic) மையமாகக் கொண்டியங்கும் அறிவுசாரியக்கத்திற்கு (intellect) அப்பால் நிற்கும் நுண்ணுணர்வு (sensibitliy) சார்ந்தது…அதன் வரையறைகள் புறவறமானது அல்ல(outwardly , objective) என்பதை ஜெயமோகன் மிக நேர்த்தியாக உணர்த்தியுள்ளார்

தமிழில் மட்டுமல்ல எந்த மொழிலியாயினும் வாசிப்பின் தேடுதல் மூலம் மேம்பட நினைக்கும் எவராயினும் குதூகலமாக வந்தடைந்து நம்பிக்கையுடன் தங்களின் வாசிப்பு பயணத்தை தொடங்க வேண்டிய மிக முக்கியமான இடம் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம். இப்புத்தகத்திலுள்ள வரிகளின் நேர்மையும் கூர்மையும் அதற்கு சாட்சி.

தமிழில் இலக்கிய வாசிப்பு அறிமுகமில்லாதவர் என்றால் இப்புத்தகம் வாசிக்க சில எளிய வழிமுறைகள்

1.Get to know Jeyamohan by reading any of his books as a beginning so that you get introduced to his style of writing and thought process. Then read his website, listen to his speeches in YouTube…because this website consists his response to his readers and speeches available in internet are mostly for his readers who knows him and understand the context/meaning of his speech. If you do not have any background and directly reading letters/watching videos will misdirect you.

2.முதலில் ஒரு முறை புத்தகத்த்தை முழுமையாக வாசித்துமுடித்துவிடவும்,சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைமுதல் முறையிலேயேபுரிந்துகொள்ள பெரும்பாலும் தொடர் வாசிப்பு பயிற்சி தேவைப்படுகிறது, இல்லையெனில் இரண்டாம் முறை வாசிப்பின் பொழுது கருத்தக்களை எளிதில் புரிந்துகொள்ளாம்.

3.சொற்கள் பெரும்பாலும் நம் அன்றாட வாழ்க்கைச்சூழலில் புழங்கும்வாய்மொழிச்சொல்லாகவோ, தொலைக்காட்சி, செய்தி, நாளிதழ் சொற்களாகவோ இல்லாமலிருப்பதால் வாசிக்கும்பொழுது கவனமும், கொஞ்சம்முயற்சியும், பயிற்சியும் தேவை

4.சில சொற்கள்இலக்கியத்தின்கலைச்சொற்கள் (technical words)  – உதாரணமாக: குறியீடு, படிமம், தொன்மம், ஊடுபாவு, நனவிலி. அவற்றையும் ஆசிரியரே பின்னிணைப்பாக 308 பக்கத்தில் கொடுத்துள்ளார். தேவைப்பட்டால் இச்சொற்களை கலைச்சொற்கள்  இணையதளத்திலும்  வாசித்துக்கொள்ளலாம். அப்படியும் சில சொற்களை புரிந்துகொள்ளத்தடை இருந்தால் jeyamohan.in  இணையதளத்தில் உள்ள தேடும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்

5.அறிமுகமில்லாத/அர்த்தம் புரியாத பிற தமிழ்ச்சொற்களை https://www.crea.in/ என்ற தமிழ் மொழிக் களஞ்சியத்தை உபயோகப்படுத்தி புரிந்துகொள்ளலாம். Avoid using google translate, because sometimes it just transliterates rather than translation, so meanings get misinterpreted and mislead you

6.இப்புத்தகத்துடன் ஜெயமோகன் எழுதியுள்ள நாவல் – கோட்பாடு என்ற சிறிய அளவிலான மிகக்குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகத்தையும் தொடர்ந்து வாசித்தால் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் சற்று ஆழமாக விளங்கும்.

இதன் தொடர்ச்சியாக தேவைப்பட்டால்  இலக்கியம் என்பது என்ன?   

இப்புத்தகம் எழுதப்பட்டது 1995ஆம் ஆண்டுவாக்கில் என்றாலும் கூட , 2011ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்திற்காக மறு-பதிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இதில் உள்ள கருத்துகள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளது.

ISBN :978-81-8493-689-6 (paperback  edition).

கிழக்கு பதிப்பகத்தின் முதல் பதிப்பு: 2011.

மொத்த பக்கங்கள்: 341.

விலை: Less than Monthly broadband subscription

புத்தகம் வாங்க :

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

கிழக்கு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2021 11:34

அறம்- கடிதங்கள்

அறம் திருவிழா

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

‘அறம்’ தொகுப்பு வாசித்தேன். வாழ்வில் தொடர்ந்த படியேயிருக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களுக்கும் இடையிலான மகத்தான தன்மைகளில் ஒளிந்துள்ள உணர்வுநிலைகளின் ஆகச்சிறந்த சாராம்சத்தையே ஒற்றைக்குறிக்கோளாகக் கொண்ட கதைமாந்தர்களின், கதைகளின் தொகுப்பு இது. சலனமற்றுக் கிடக்கும் தினசரிக்கான மனநிலையிலிருந்து அலைதலின் வழியே அதன் அனுபவப்பரப்பை மிக விசாலமானதாக மாற்றிக்காண்பிக்கும் நுட்பமும் அழகியலும் கொண்ட சொற்கள் இவை. வாழ்வின் எல்லாச் சாளரங்களிலிருந்தும் நிகழ்வுகளின் தொடர்புகளிலிருந்தும் அறம் சார்ந்த அடிப்படை செயலாக்கங்களை ஒற்றைப்புள்ளியில் உணர்த்துவதான தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கதைகளை வாசித்த பின் விரிந்திடும் மனவெழுச்சிகளின் நெருக்கங்கள் ஆழமான தியானங்களின் அமைதியையும் மற்றும் அதன் மன நெகிழ்வுகளையும் ஏற்படுத்துவதாகயிருக்கின்றன.

மிக நீண்ட நாட்களுக்கு முன்பு வாசித்த தங்களின் ‘நிழல்வெளிக் கதை’களின் தீவிரத்தன்மையில் நிறைய்ய நாட்கள் இருந்திருக்கிறேன். பயத்துடன், மனப்பிறழ்வுகளின் சிக்கலுடன், உள்ளும் புறமுமான தேடல்களுடனான அக்கதாப்பாத்திரங்களின் தூரங்களை மனதில் நிறைய்ய நாட்கள் அளந்திருக்கிறேன். அவைகளுக்குப்பிறகு இக்கதைகளில் படர்ந்திருக்கும் நிஜங்களின் நெருடல்களால் வாழ்விற்கு மிகஅருகில் உணர்ச்சிவசத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிறைய்ய நாட்களுக்கு நிச்சயமாக இருந்திடுவேன். மிகுந்த மனச்சோர்வகளின் பிடியிலிருந்த இத்தருணத்தில் இத்தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது மிகத்தற்செயலானது என நம்புவதற்கில்லை, அகத்தின் இடைவெளிகளில் இவை உண்டாக்கியிருக்கும் புத்துணர்ச்சிகளே புதிய தேடல்களை உருவாக்கித்தருகின்றன. மேலும் வாசித்தலென்பதே அதுதானே. ‘என்ன ஒரு டிவைன் ஸ்டோரிஸ் சார்…’

மிக்க அன்பும் நன்றியும்,
ஜீவன் பென்னி.

***

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம்.

அறம் சிறுகதைத் தொகுப்பில் முதல் சில சிறுகதைகளைப் புத்தாண்டில் படித்த பிறகு எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். உண்மை மனிதர்களின் கதைகள்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக என்னை பாதித்தன. வியப்பில் ஆழ்த்தின.

வணங்கான், யானைடாக்டர் மற்றும் சோற்றுக்கணக்கு படிக்கும்போது பல  இடங்களில் கண்களையும் புத்தகத்தையும் மூடிக்கொண்டு அதே நினைப்பில் இருந்தேன். கண்கள் நிறைந்தன.

அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற உந்துதலை  நான் உணர்ந்தேன். ஏனென்றால் இவை அதிகப்படியான  தமிழ் படிக்காத மற்ற வாசகர்களை அடைய வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உண்மையில் உங்கள் எழுத்து அனைத்துமே எல்லா மொழி வாசகரையும் சென்று சேர வேண்டும். திரு S L Bhyrappa அவர்களின் படைப்புகளைப்போல.

உங்கள் வாசிப்புக்காக  முதல் இரண்டு கதைகள், அதாவது அறம் மற்றும் வணங்கான் ஆகியவை இங்கு இணைக்கப்பட்டுள்ளன.  அறம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளையும் தங்கள் அனுமதியுடன் மொழிபெயர்க்க விழைகிறேன், மேலும் ஆங்கில வாசகர்களை சென்றடைய பொருத்தமான ஊடகத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன்.

உங்கள் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்
ராஜ் ஸ்வரூப்
சிங்கப்பூர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2021 11:31

சொல்வளர்காடு- வாசிப்பு

அன்புள்ள ஜெ,

பன்னிரு படைக்களம் வாசித்து முடித்தவுடன், உள்ளம் சொல்லொண்ணா நிலையழிவை கொண்டிருந்தது. குறிப்பாக அதன் இறுதிக்கட்ட நிகழ்வுகள், அதுவரை இருந்த நம்பிக்கைகள், முடிவுகள், உள்ளத்தின் பாவனைகள் என்றனைத்தையும் ஓர் அசைவிற்கு உள்ளாக்கி இருந்தன. கிட்டத்தட்ட அவை இறந்த சடலங்கள் என்று எங்கோ சித்தத்திற்கு அப்பாற்பட்டு கிடந்தன. அதன் விளைவால் பெரும் உளச்சோர்வை அடைந்தேன். அது அந்த நாள் முழுதும் என்னை ஆக்கிரமித்திருந்தது. அந்த சோர்வை கடப்பதற்கு ஒரே வழியாக நான் கண்டுகொண்டது மேற்கொண்டு தொடர்ந்து வாசிப்பது என்றே. ஆதலால் பன்னிரு படைகளைத்தை தொகுத்து கொள்ளாமல், தொடர்ந்து சொல்வளர்க்காடை வாசிக்க தொடங்கி இருந்தேன். அது ஒரு இனிய கனவாக, இனிய அதிகாலை பயணமாக, ஒரு தோழனாக இரு கைகள் விரித்து என்னை அணைத்துக்கொண்டது.

காடு என்றுமே என் அகத்திற்கு மிக நெருக்கமானது. ஓர் கனவாக, கற்பனையாக என்னுள் நிலைகொண்டது. உங்கள் காடு நாவலில் இருந்தே அந்த கனவை பெற்றுக்கொண்டேன் என்று இப்பொழுது தோன்றுகிறது. ஈரம் சொட்டும் இலைகள், அதன் மேல் விழும் கதிரொளி என்று பல்கிப்பெருகிய பல படிமங்களை என் இனிய கற்பனைகளில் நான் கோர்த்து வைத்திருக்கிறேன். ஆதலால், ஓர் இனிய பயணமாகவே இந்த வாசிப்பை தொடங்கினேன்.

பன்னிரு படைக்களத்தின் இறுதியில் சகுனியுடன் தோற்று கொண்டிருக்கையில், ஒரு கட்டத்தில் தன் உளக்கற்பனையான கானகக்குடிலுக்குள் சென்று தருமர் அமர்ந்து கொள்கிறார். அங்கு அவர் தன் அமைதியை உணர்ந்து, முழுவதுமாக அந்த உச்சகட்ட பதற்றத்தில் இருந்து வெளிவருவதாக ஒரு காட்சி வரும். அதில் இருந்து, அவர் தன்னை காடுகளில் உள்ள வேதம் பயிலும் மாணவனாகவே தன்னை கற்பனை செய்து கொள்கிறார் என்று தோன்றுகிறது. அதுவே, அவரை பொறுத்தவரை பெரும் உவகை தரும் ஒன்றாகவே உள்ளது. ஆதலால் தான், அவரை காடேக சொல்லுகையில் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். மிக்க களிப்புடன் தன் பயணத்தை மேற்கொள்கிறார்.

வேதம் ஆராயும், பயிற்றுவிக்கும் ஒவ்வொரு காடாக அவர் செல்லும்பொழுது, அவரினுள் சொற்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. தன்னை சொற்களினுள் மூழ்கி அமிழ்த்துவதில் பெரும் விருப்பம் கொண்டவராக உள்ளார். ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் அந்த சொற்களின் பெருக்கு, அதன் ஆழம் தன்னை மூச்சதிரவைக்கும் என்ற உள்ளுணர்வும் அவருள் உள்ளது என்றே நினைக்கிறேன். அதனால் தான், என்னோவோ எங்கும் நிறைவு கொள்ளாமல் ஒவ்வொரு காடாக சென்று கொண்டிருக்கிறார். மெய்மையை நோக்கிய அவரின் பயணம் சொல்லறுத்தலின் வழியாகவே நிறைவடையும் என்ற புரிதலும் அவருள் நிகழ்கிறது. அதை புறந்தள்ள முயற்சிக்கையில், குழப்பம் நிறைந்த, நிலையழிதல் மிக்க ஒரு மானிடனாக மற்றவர் கண் முன் தோன்றுகிறார்.

ஊடாக வந்து செல்லும் அஸ்தினபுரி நிகழ்வுகள், பீமனின் வஞ்சினம் திருதாஷ்டிரின் உள்ளத்தில் ஏற்படுத்திய பாண்டவர்கள் மீதான ஒரு விலக்கம், ஒரு அரசர் இயல்பாகவே தந்தை பாசத்திற்குள் கட்டுண்டது போன்றவை மானுட இயல்பின் சாதாரணங்கள்.

தன் குல சண்டைகளால் தன் நாட்டை காப்பாற்ற போராடும் இளைய யாதவர், யாருக்காக தன்னை உணர்ந்தாரோ அவர்களாலேயே காட்டி கொடுக்கப்படுவது, அவற்றில் இருந்து அவர் மீண்டு வந்த விதம், அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் அனைத்தும் ஓர் அரசனின் தன்னறத்தை பறைசாற்றுவது.

தருமர், இளைய யாதவரிடம் உரையாடியபின், தருமரை அவர் மைத்ரேய காட்டிற்கு செல்ல சொல்லுவது சொல்லறுத்தலுக்கான முதல் புள்ளி என்றே கொள்கிறேன். அங்கு சென்ற அவர் அடுமனையில் பணி செய்ய செல்லும்பொழுது, தன் இளையவர்கள் எவ்வித சிரமும் இன்றி பணிசெய்வதை நோக்கும்பொழுது சிறு வியப்பொன்றை தன்னுள் உணர்கிறார். உண்மையில் அவருக்கு அங்கு செய்யப்படும் எந்த பணிகளிலும் பரிச்சயம் இல்லை என்பதை அந்த வியப்பு உணர்த்துகிறது. ஏதோ ஒரு நிகழ்வில் இயல்பாக அந்த வேலையில் அவர் நுழையும் பொழுது, அவற்றில் விரைவின் காரணமாக தன்னுள் ஓயாமல் உள்ளோடி கொண்டிருக்கும் சொற்பெருக்கை இல்லாமல் ஆவதை உணர்கிறார். அங்கிருந்து நீராடி தன்னை கூர்ந்து நோக்கும் பொழுது இதுவரை கற்ற சொற்கள், தானாய் உருவாக்கி வைத்திருந்த சொற்கள் எங்கோ தொட்டறிய முடியாத தொலைவில் இருப்பதாக அவருக்கு தோன்றும். அங்கிருந்தே அவரின் உண்மையான மெய்மைக்கான தேடல் நிகழ்கிறது என்றே கொள்கிறேன்.

இறுதி காடுகளை யாருடைய தூண்டலும் இல்லாமல், தன் அகத்தின் வழியாக ஏற்படும் உள்ளுணர்வின் தொடர்புகொண்டே நிகழ்த்தியது அதற்கான ஒரு தொடக்கம். யட்சவனத்தில் நிகழும் கதைகள் சிறுவயதில் பலவிதமான வெவ்வேறு கதைகளின் வழியாக அறிந்த ஒன்றாகவே இருந்தது. ஆனால், அவை எல்லாம் சிறுவர் கதைகள் என்றமட்டிலும் முக்கியமானது என்று இப்பகுதியை படித்த பின்னரே உணர்ந்தேன். இங்கு நீங்கள் அதை எடுத்து சென்ற விதம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அந்த முதுயட்சகர் ஒரே ஒருவனை உயிர்த்தெழச்செய்ய ஓப்புக்கொள்ளும் பொழுது, தருமர் நகுலனை குறிப்பிடும் காட்சி, ஓர் பேரரத்தின் முன்னால் கண்ணீருடன் வழிப்பட்டு நிற்பது போல் உணர்ந்தேன்.

இறுதியாக அவர் தனியாக அனல் கக்கும் எரிமலை நோக்கி செல்லும் அவர் பயணம், இத்தனை வருடங்களாக அவருள் நிகழும் அலைக்கழிப்புகள், அதன் மூலம் அவர் தன்னுள் பெருக்கி வைத்திருந்த சொற்கள் என்றனைத்தையும் எரிய செய்வதற்கான, உயிரை துச்சமென மதிக்கும் ஒரு நேரடியான மெய்மை நோக்கிய பயணம். இந்த பகுதிகளை இரண்டு, மூன்று முறை வாசித்து அகத்தில் அந்த பயணத்தை நிகழ்த்திக்கொள்ள முற்பட்டேன். உண்மையில் நிகரனுபவமாக உணரச்செய்த தருணங்கள் அவை. அதை தொடர்ந்து, அவர் அடையும் மெய்மை, கற்பனை வழியாக நானும் அடைந்ததாக உணர்ந்தேன். அவர் சூரியன் முன் நின்று தண்ணொளியாக தன்னை ஒளிர செய்யும் பகுதியை, அதிகாலை பொழுதில் வாசித்து கொண்டிருந்தேன். அந்நொடியில் விசை ஏற்பட்டு சூரிய உதயத்தை வெளியில் சென்று நோக்கினேன். அங்கு உணர்ந்த சூரிய ஒளியை இதுவரை இவ்வளவு நெருக்கத்துடன் உணர்ந்ததில்லை.

அன்புடன்,

நரேந்திரன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2021 11:30

April 19, 2021

புறவயத்தர்க்கவாதமும் மெய்மையும்

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் ஓர் உரையில் நீங்கள் லாஜிக்கல் பாஸிட்டிவிசத்திற்கு ஆதரவாகப் பேசியிருந்தீர்கள். உங்கள் ஆசிரிய மரபு எஸென்ஷியலிசம் சார்ந்தது. அப்சல்யூட்டிசம் என அதில் இருந்து ஒன்றை உருவாக்கிக்கொண்டது. நீங்களேகூட பாஸிட்டிவிசத்தை எதிர்த்து எழுதியிருக்கிறீர்கள். ஆகவே இந்த மாற்றம் ஆச்சரியம் அளித்தது.

இந்த கேள்வியில் நான் ஆங்கிலக் கலைச்சொற்களையே பயன்படுத்தியிருக்கிறேன். தமிழில் இவற்றை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை

ஆர். மகாலிங்கம்

அன்புள்ள மகாலிங்கம்,

இரண்டு விஷயம், நான் தத்துவம் சார்ந்த விவாதங்களை எப்போதும் சிறிய வட்டத்திற்குள் நடத்த விரும்புபவன். இணையப்பொதுவெளி அதற்கு உகந்தது அல்ல. ஒரு வகையான அடிப்படை அறிதலும் இல்லாதவர்கள், கூகிள்கூட பார்க்க தெரியாதவர்கள் , வந்து கருத்துசொல்லியும் கேள்விகேட்டும் எல்லாவற்றையும் குழப்பி கொஞ்சம் தெரிந்து கொள்ள முயல்பவர்களைக்கூட பைத்தியமாக ஆக்கிவிடுவார்கள்.

சமீபத்தைய ஓஷோ உரைக்குப்பின் இணையவெளியால் ஏதாவது பயன் உண்டா என்ற எண்ணத்திற்கே சென்றுவிட்டேன். ஆகவே இது விவாதத்திற்காக அல்ல. ஒரு சிறிய விளக்கக் குறிப்பு மட்டுமே.

தத்துவம் சார்ந்த விவாதம் நிகழவேண்டுமென்றால் அதற்கான தமிழ்ச்சொற்களுடன் மட்டுமே நிகழ முடியும். ஒரு கலைச்சொல்லுக்கு தமிழ்வடிவம் இல்லை என்றால் அந்த சிந்தனை தமிழுக்கு வரவில்லை என்பதே உண்மை. இது தியடோர் பாஸ்கரன் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லும் கருத்து.

கலைச்சொல்லாக்கத்தில் நாம் கவனிக்கவேண்டிய சில உண்டு. பலமுறை இங்கே நான் இதை எழுதியிருக்கிறேன். இலக்கியம், தத்துவத்தில் எந்தக் கலைச்சொல்லும் நேரடியாக அந்த கருத்துக்கு பிரதிநிதித்துவம் கொள்வதில்லை. அதாவது அச்சொல்லை வைத்து அந்தக் கருத்தை புரிந்துகொள்ள முடியாது.

லாஜிக்கல் பாஸிடிவிசத்தை வைத்தே இதைச் சொல்லியிருக்கிறேன். பாஸிட்டிவிசம் என்றால் இறையியலில் கண்முன் காண்பதை மட்டுமே நம்புவது. அதிலிருந்து தத்துவத்திற்கு வந்தது அக்கலைச்சொல். ஆனால் தத்துவத்தில் அதற்கு புறவயமாக தர்க்கபூர்வமாக நிறுவப்பட்டவை மட்டுமே உண்மை என்று எண்ணும் தத்துவநிலைபாடு என்றுதான் பொருள்.

தத்துவத்திலும் இலக்கியத்திலும் பெரும்பாலான கலைச்சொற்கள் இடுகுறித்தன்மை கொண்டவைதான். ஒரு கருத்துக்கு ஒரு பெயர் போடப்படுகிறது. பின்னர் அக்கருத்துநிலை அப்பெயரை கடந்தும் வளரும். இன்னொன்றாக ஆகும். உடனே பெயரை மாற்றிவிடமாட்டார்கள். அந்தக் கருத்துநிலைக்கு அதுதான் பெயராக நீடிக்கும். பெரும்பாலான பெயர்கள் பெயர்கள் மட்டுமே. அப்பெயர் அச்சிந்தனையை குறிக்கவேண்டும், அவ்வளவுதான்.

ஆகவே ஆரம்பத்தில் ஒரு கலைச்சொல்லாக்கம் நிகழ்ந்துவிட்டால், பரவலாக அது ஏற்கப்பட்டுவிட்டதென்றால், அதை அப்படியே பயன்படுத்துவதே சரியானது. அந்தச்சொல்லின் பொருள்தான் அந்தக் கருத்து என எடுத்துக்கொள்வது பாமரத்தனம். எந்த அறிமுகமும் இல்லாதவர்கள் அதைச் செய்வார்கள். அதை மன்னித்துவிடலாம்.

ஆனால் அந்த கருத்து கொள்ளும் அர்த்தமாற்றத்திற்கு ஏற்ப அந்தச் சொல்லை மாற்றிக்கொள்ள வேண்டும் என முயல்வது மொத்த விவாதத்தையே தொடர்ச்சியறச் செய்து அபத்தமாக ஆக்கிவிடும். பொதுவாக கலைச்சொற்களை எடுத்துக்கொண்டு ‘சரியான தமிழாக்கத்துக்கு’ முயல்வது எந்த விவாதத்தையும் உருப்படியாக நடத்த முடியாதவர்கள் செய்யும் ஒரு பாவனையாக இங்கே உள்ளது.

தமிழ்ச்சூழலில் பொதுவாக ஐரோப்பிய தத்துவம் மார்க்ஸிய விவாதங்கள் வழியாகவே வந்தது. ருஷ்ய மொழியாக்கங்களிலேயே கலைச்சொற்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. பெரும்பாலும் அவை சரியானவை. ஐம்பதாண்டுகளாக அவை புழக்கத்திலும் உள்ளன. அவற்றை எல்லா தரப்பும் கையாள்வதே சரியான வழியாகும். லாஜிக்கல் பாஸிடிவிசம், பாஸிடிவிசம் என்பது புறவயத் தர்க்கவாதம் என்றுதான் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது ஏறத்தாழ சரியான மொழியாக்கமே.

நேர்க்காட்சிவாதம் என்ற மொழியாக்கமும் சில மார்க்ஸியர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அதை வேறுவேறு ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு மாற்றாக பயன்படுத்துகிறார்கள். ஆகவே அது பலவகை குழப்பங்களை உருவாக்கிவிட்டது. மேலும் இந்திய ஞானமரபில் பிரத்யக்ஷவாதம் என்று ஒன்று உண்டு. அதன் நேரடி மொழியாக்கம் நேர்க்காட்சிவாதம் என்ற சொல். ஆகவே அது குழப்பங்களை அளிப்பது.

இதில் சிலவகையான அபத்தங்கள் உள்ளன. விக்கிப்பீடியா போன்றவற்றில் இச்சொற்களை அவற்றுக்கான ஆங்கிலச் சொற்கள் அடைப்புக்குள் இல்லாமல் வலையேற்றி வைத்திருக்கிறார்கள். அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்பதோடு சம்பந்தமே இல்லாமல் அவற்றைப் பயன்படுத்தவும் அவை வழிவகுக்கின்றன என்னும் சிக்கலும் உள்ளது.

*

நான் பாஸிட்டிவிஸம்- புறவயத்தர்க்கவாதம்- வரலாற்றாய்வில் தேவையான ஒன்று என அம்பேத்கர் சொல்வதைப் பற்றி மட்டுமே சொன்னேன். நான் வரலாற்று ஆய்வாளன் அல்ல. என்னால் வரலாற்றாய்வை செய்ய முடியாது. உணர்ச்சிகரமான ஈடுபாடு இல்லாமல், குறியீட்டு ரீதியான விரிவாக்கமும் மீபொருண்மை [metaphysical] விளக்கமும் இல்லாமல் என்னால் எதையும் ஆராய முடியாது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

அவ்வுரையில் அம்பேத்கர் சொல்லும் வழி அது, அவர் வழியை தொடர்பவர்கள் வரலாற்றாய்வில் அதை ஒரு நிபந்தனையாகக் கொள்ளவேண்டும் என்றுதான் சொல்கிறேன். அது புதிய கருத்தும் அல்ல. அம்பேத்கரின் அந்தப்பார்வை வரலாற்றாளார் நடுவே சென்ற  ஐம்பதாண்டுகளாகவே ஆதரிக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருவதுதான். பி.கே.பாலகிருஷ்ணன் அந்தப்பார்வையின் கடுமையான மறுப்பாளர்.

*

நான் முன்னரே சொல்லிவருவதுபோல புறவயத்தர்க்கவாதம் [லாஜிகல் பாஸிடிவிசம்] என்பது ஒரு தத்துவக்கொள்கை அல்ல, அது தத்துவத்திற்கு எதிரான ஒரு தத்துவக் கொள்கை. தத்துவம் என்பதே பார்வைகளை தொகுத்து அவற்றிலிருந்து ஒரு புதிய தாவலை நிகழ்த்துவதுதான். தொகுத்துப்பார்ப்பது, காரணம் தேடுவது, முழுமையுடன் பொருத்துவது ஆகிய மூன்று தளங்களில் இந்த தாவுதல் நிகழ்கிறது. இதை முழுமையாகவே தவிர்த்துவிட்டு புறவயமான தரவுகள் மற்றும் தர்க்கமுறைகளின் படியே மட்டும் முன்னகரும் ஒரு தத்துவம் இருக்க முடியாது.இருந்தால் அது தத்துவம் அல்ல, அந்த தரவுகளை ந்த அறிவுத்துறை உருவாக்குகிறதோ அந்த அறிவுத்துறையின் ஒரு கிளை மட்டுமே.

தத்துவதரிசனம் என்கிறோம். தத்துவத்தில் தரிசனம் இருந்தேயாகவேண்டும். தத்துவம் அப்படி கண்டடைந்த பல தரிசனங்கள் பிற்காலத்தில் பொய்யென ஆகியிருக்கின்றன. அபத்தமாகவும் மாறியிருக்கின்றன. ஆனாலும் அந்த தரிசனவேட்கையை தத்துவம் தவிர்க்கமுடியாது. வில் டியூரண்ட்  தத்துவத்தை அறிமுகம் செய்து எழுதிய நூலின் முகவுரைக் குறிப்பிலேயே இதைச் சொல்லியிருக்கிறார். [The Story of Philosophy.Will Durant]

இல்லாத ஒன்றை கற்பனைசெய்வது, சாத்தியங்களின் உச்சத்தை கனவுகாண்பது தத்துவத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அப்படி தத்துவத்தால் கனவுகாணப் பட்டவையே ஜனநாயகம், அனைவருக்குமான நீதி, மக்கள்நலம்நாடும் அரசு போன்ற இன்றைய  பல நடைமுறை உண்மைகள். பல கனவுகள் பொருளற்றும் போயின. அந்தக் கனவை தவிர்த்துவிட்டு தத்துவத்தை  புறவயத் தர்க்கத்தை மட்டுமே நெறியாகக் கொண்ட ஒன்றாக ஆக்கினால் எஞ்சுவதென்ன?

புறவயத்தர்க்கவாதம் அறிவியல் மேல் பெரும் மோகம் எழுந்த காலகட்டத்திற்கு உரிய ஒரு பார்வை. எல்லாமே புறவயமாக இருக்கவேண்டும், புறவயமானதே உண்மை என்ற நம்பிக்கை அந்நாளில் கல்வித்துறையை ஆட்டிப்படைத்தது. அறிவியலின் ஏவல்பணி செய்ய தத்துவத்தை கொண்டுசென்று நிறுத்துவதுதான் அது. ஆனால் பின்னாளில் அறிவியலே புறவயத்தர்க்கவாதத்தை தூக்கிவீசிவிட்டு அதற்குரிய மீபொருண்மை நோக்குகளை உருவாக்கிக்கொண்டது

எந்த தத்துவ தரிசனத்தையும் புறவயமாகப் பேசு என கூச்சலிட்டே ஓய்த்துவிடமுடியும். பிரம்மம், பேருண்மை போன்ற தரிசனங்களை மட்டுமல்ல ஓருலகம், மானுடம் போன்ற தரிசனங்களையேகூட அப்படி அடித்து நொறுக்கினார்கள் புறவயத்தர்க்கவாதிகள்

[image error]ப்ரியன் மேகி

லாஜிக்கல் பாஸிட்டிவிஸம் ஒரு ‘கல்ட்’ ஆக இருந்தபோது பிரிட்டிஷ் பல்கலைகளில் தத்துவத்துறை எப்படி இருந்தது என்பதை நாம் பிரியன் மேகி எழுதிய தத்துவவாதியின் தன்வெளிப்பாடு [Confessions of a Philosopher. Bryan Magee] என்ற நூலில் காணலாம்.

நடராஜகுருவும், நித்ய சைதன்ய யதியும் புறவயத்தர்க்கவாதத்திற்கு நேர் எதிரானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் அதற்கு எதிராக சாராம்சவாதத்தை, முதல்மையவாதத்தைத்தான் முன்வைத்தனர். விரிவான மறுப்புகளை எழுதியிருக்கிறார்கள். நடராஜ குருவின் மேலைத்தத்துவ மரபு என்பது ஹென்றி பெர்க்ஸனுடையது. அந்தமரபு புறவயத்தர்க்கவாதத்தை மறுப்பது

நான் ஏற்றுக்கொண்டிருப்பதும், தத்துவ சிந்தனையின் சரியான பாதை என எண்ணுவதும் அதுதான். தத்துவத்தின் நோக்கம் மையங்களை உருவாக்கி நிலைநிறுத்துவதுதான்.  அதன்பொருட்டு இவ்வாழ்க்கையின், இப்பிரபஞ்சத்தின் மையத்தை உள்ளுணரவால், கற்பனையால் கண்டறிவதுதான்.

அக்கண்டடைதல் தத்துவத்தின் விளிம்பில், பெரும்பாலும் தத்துவத்திற்கு அப்பால் இருப்பதனால் தத்துவத்தில் இருந்து ஒருபோதும் மீபொருண்மைநோக்கு விலகிச் செல்ல முடியாது என நான் நம்புகிறேன். தத்துவம் அறிவியலுக்கு அல்ல, மெய்யியலுக்குத்தான் அணுக்கமானதாக இருக்கமுடியும். அம்பேத்கரின் வரலாற்றுப்பார்வை புறவயத்தர்க்கத் தன்மை கொண்டதாக இருக்கலாம். உலகப்பார்வை அப்படிப்பட்டது அல்ல என்பதற்கு புத்தரும் அவரது தம்மமும் சான்று

இன்றைக்கும் அமெரிக்கப் பல்கலைகளில் புறவயத்தர்க்கவாதமே தத்துவப்பார்வையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆகவே தத்துவம் என்பது வெறும் தர்க்கவியலாக குறுகிவிட்டது. அதில் எந்த பாய்ச்சலும் நிகழவில்லை. சொல்லப்போனால் தத்துவம் என்பதே இறந்துவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜிதன் அமெரிக்க புறவயத்தர்க்கப்பார்வையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராஜ ஏ.ஜே.அயர் ஒரு டிவி உரையாடலில் பேசும் யூடியூப் இணைப்பை அளித்தான். அந்த முழு உரையாடலில் புறவயத்தர்க்கவாதம் எப்படி தத்துவத்தின் மரபான வழிமுறைகளை அழித்து, மேற்கொண்டு ஒன்றும் நிகழாமல் ஆக்கியது என்பதை அயரே சிரித்துக்கொண்டு சொல்கிறார். ‘உடைத்தோம், எதையும் கட்டமுடியவில்லை’ என்கிறார்.

ஜெ

தத்துவம் மேற்கும் கிழக்கும் விவாதங்களின் எல்லை… காடு, நிலம், தத்துவம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2021 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.