Jeyamohan's Blog, page 995
April 29, 2021
வண்ணக் கனவு-கடலூர் சீனு
இனிய ஜெயம்
பழையதொரு மாயம் பதிவு கண்டேன். என்னிடம் இந்த வண்ணப் படத்தின் dvd உண்டு. ஆம் முன்பெல்லாம் dvd player என்றொரு மின்னணு சாதனம் வழியே, எண்ம மொழியில் எழுதப்பட்ட குறுவட்டினை இயக்கி தொலைக்காட்சி வழியே படம் பார்க்கும் முறை வழக்கத்தில் இருந்தது. என்னிடம் இருந்த இந்த வரிசை dvd களில் முக்கியமான மற்ற இரண்டு dvd கள், உயர் வண்ணமும், 5.1 ஒலியும் சேர்க்கப்பட்ட பஸ்டர் கீடனின் தி ஜெனரல் மற்றும் ஆரிப் இயக்கிய மொகல் ஏ அஜாம். இரண்டு வண்ணமேற்றப் படங்களுமே இப்போது you tube இல் 1080 தரத்தில் காணக்கிடைக்கிறது.
எனக்கு தனிப்பட்ட முறையில் அந்த முகில் இந்த முகில் கதை மொத்தமும் மொகல் ஏ அஜாம் படத்துடன் இணைந்தே பொருள் கொண்டது. அந்த முகில் இந்த முகில் பாடல் உட்பட. காரணம் நான் ஸ்ரீ ராஜவிஜயேஸ்வரி படம் பார்த்ததில்லை. ஆனால் கதைக்குள் அந்த படம் குறித்து விவரிக்கப்படும் அத்தனை விஷயங்களும் ஒன்று விடாமல் நான் பலமுறை பார்த்த இந்த அஜாம் படத்துடன் இணைந்து காட்சி தரும் ஒன்று.
என் பால்யத்தின் இரவுகள் பெரும்பாலும் பஜாரில் எங்கள் பொடிக்கடை எதிரே பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தையா அரங்கில் கழிந்த ஒன்று. பிட்டு படங்கள் தொடர்ந்து போட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் பொற்காலங்களில் இடை நிறுத்தமாக பழைய மிகப் பழைய கற்காலத்து மழை பொழியும் படங்கள் திரை இடப்படும். அப்படி ஒன்றில் கண்டதே அக்பர் எனும் கருப்பு வெள்ளை (அது முகல் ஏ அஜாம் ஹிந்தி படத்தின் தமிழ் டப்பிங் என்பதை மிக பிந்தி அறிந்தேன்) படம். சிவாஜியின் தீவிர ரசிகரான என் அப்பாவே பல முறை பத்து சிவாஜி சேந்தாலும் ஒரே ஒரு ப்ரித்விராஜ் கபூர் இன் கம்பீர நடை உடல் மொழியை காட்டிவிட முடியாது என்பார்.
1990 களில் என் கூட்டுக் குடும்பத்தில் பழைய கதைகள் கேட்ட வகையில் இன்று இதை எழுதும் கணம் ஆச்சர்யமாக நினைவில் எழுவது, அன்று நெல்லை பகுதியில் குறிப்பாக சைவப் பிள்ளைமார் குடும்பங்களில் பெண்கள் இடையே
ஹிந்தி படங்கள் வழியே நர்கீஸ் மிக பிரபலமானவர் என்பது. அதே அளவு பிரபலம் கொண்டவர் மதுபாலா. அந்த காலங்களை பற்றி எரிய வைத்தவை இரண்டு ஹிந்தி படங்கள். ஒன்று முகல் ஏ அஜாம். மற்றது ஷோலே. ஆண்கள் எல்லோரும் ஷோலே பைத்தியம். பெண்கள் எல்லோரும் முகல் ஏ அஜாம் பைத்தியம்.
பின்னர் யோசிக்கயில் ஒன்று புரிந்தது, பெரும்பாலான அந்த கால கூட்டுக் குடும்பங்களில் பெண்களின் காதல் அந்த குடும்பத்து தட்டான் குரங்கால் முறிக்கப்பட்டு, வேறு எவருக்கோ வாழ்க்கைப் பட போனவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் அனார்கலி, திலீப் குமார் அவர்களின் கனவு காதலன். ப்ரித்விராஜ் கபூர்தான் அவர்கள் காதலை முறிக்கும் தட்டான் குரங்கு. முகல் ஏ அஜாம் படத்தில் அக்பர் காணும் எதிர்ப்பு என்றென்றும் அவர்களின் அந்தரங்க கனவு.
அப்பா அப் படம் குறித்து நிறைய கதை சொல்வார். படத்தில் மட்டுமல்ல உண்மையில் திலீப் குமாரும் மதுபாலாவும் காதலர்கள். திலீப் குமாருக்கும் மது பாலாவுக்கும் இடையே, முகில் நாவலின் ராமராவ் ஸ்ரீ பாலா உறவு போல ஒரு உறவு இருந்திருக்கிறது. வாழ்ந்து கெட்ட முஸ்லீம் குடும்பம் ஒன்றின் இறுதி வாரிசு மதுபாலா. வேற்று மதம். நோயாளி. இப்படி ஏதேதோ காரணம் மது மீது விலகலையும், அனைத்தையும் கடந்த காரணமற்ற ஒன்று மது மீது ஈர்ப்பையும் அளிக்க, இதே தத்தளிப்பில் இருந்த திலீப் குமார் மதுபாலா இடையிலான உறவு, அஜாம் படத்தின் ஆ ஏழு வருட படப்பிடிப்பில், உச்சம் கண்டு முறிவில் முடிந்தது.
ஆரிப் இயக்கிய ஒரே படம். அவரது சொந்தப் படம். இப்படத்தின் முதல் துவக்கம் நர்கீஸ் கதாநாயகியாக நடிக்க துவங்கபட்டு (இதில் சின்ன வயது சலீம் தபேலா பண்டிட் ஜாகிர் உசேன்) நாயகன் மரணத்தால் கால்வாசி படப்பிடிப்புடன், அனைத்தையுமே மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டும் என்ற நிலையில் வந்து நிற்க, இப்போது காணும் நடிகர் நடிகை கொண்டு படம் மீண்டும் துவங்கி 7 வருடம் படப்பிடிப்பு கண்டு நிறைவடைந்தது. உண்மையாகவே பணத்தை தண்ணீர் போல இறைத்து படம் எடுத்திருக்கிறார். போர் காட்சிக்கு உண்மையாகவே போர்க்களத்தை உருவாக்கி இயக்கி இருக்கிறார். பங்கு கொண்ட குதிரைகள் மட்டும் 4000.
ஒளிப்பதிவு சாத்தியமே இல்லை எனும் வகையில் எல்லா பக்கமும் சூழ்ந்த கண்ணாடி மாளிகை செட்டில்,ஒளிப்பதிவாளர் மதூர் படப்பிடிப்பு நிகழ்த்தியது அன்றைய நாளில் பெரிய சாதனையாம்.இசை நௌஷாத். என்றும் இனிய பாடல்கள். குறிப்பிட்ட சூப்பர் ஹிட் பாடல் ஒன்று (காதல் கொண்டாலே பயமென்ன) 100 முறை மீண்டும் மீண்டும் திருத்தி எழுதப்பட்டு 105 ஆவது முறை முழுமை கண்டிருக்கிறது. குறிப்பிட்ட பாடல் ஒன்று, அதன் reverb இவ்வாறுதான் வர வேண்டும் என்று, லதா மங்கேஷ்கர் சகிதம் சகல ஒலிப்பதிவு கருவியுடன் அந்தப் பாடல் ஒரு குளியல் அறைக்குள் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
படே குலாம் அலிகான் இப்படத்தில் ஒரே ஒரு பாடல் பாட 1955 இல் பெற்ற ஊதியம் 30,000 ரூபாய். சலீமை பீரங்கி வாயில் கட்டி சுடும் போது வரும் ஜிந்தாபாத் பாடலை பாடியவர் மொஹமத் ரக்பி சாப், அந்த பாடலை பாடி நடித்தவர் இசையமைப்பாளர் நௌஷத். இத்தனை வருட படப்பிடிப்பு கண்ட இப்படத்தில், கண்டினியுட்டி பிழைகள் மிக மிக குறைவு என்பது மற்றொரு சாதனை. சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் வசூல் சாதனை ஷோலே வெளியாகும் வரை முறியடிக்கப்படாத ஒன்றாக இருந்திருக்கிறது. அடுத்து ஒரு ஆங்கில படம் தயாரித்து இயக்கும் முனைப்பில் இருக்கையில் 47 வயதில் ஆரிப் இயற்கை எய்துகிறார்.
கடலூரில் பழைய புத்தக கடை வைத்திருக்கும் காதர் பாய் தனது இளமையில் மும்பயில் வாழ்ந்தவர். மதுபாலா வெறியர். வாரம் முழுக்க நண்பர்களுடன் ஒரு பக்கிட் நிறைய பைசா சேர்த்து, வார இறுதியில் முகல் ஏ அஜாம் படம் சென்று, பியார் கியா தோ டர்னா பாடல் வருகையில், பாடல் முடியும் வரை திரையில் சில்லறைகளை அள்ளி இறைப்பது என்பதை அவரது கொண்டாட்டங்களில் ஒன்றாக கொண்டிருக்கிறார்.
இந்தப் படம் தமிழில் அக்பர் எனும் பெயரில் மொழிமாற்றம் கண்டது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல் அளவே, இப்படத்தின் கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆனதே எனும் பாடல் அன்று எல்லா பெண்களையும் பித்தென பிடித்து ஆட்டி இருக்கிறது. எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். பாடல்களை எழுதியவர் கம்பதாசன். முகில் கதையின் ராமராவ் ஸ்ரீ பாலாவின் அதே கதை கம்பதாசன் உடையது. ஆராய்ச்சி மணி படப்பிடிப்பில் கம்பதாசன் கண்ட நடன சுந்தரி சித்ர லேகா. ( இவர் கேரளா கவி வள்ளத்தோள் மகள் என்கிறது கம்பதாசனின் விக்கி பக்கம்). பேய்த்தனமான காதல். தோல்விகரமான திருமண வாழ்வு. வறுமையில் தனிமையில் நோக்காடு பின்னர் சாக்காடு. அவரது கொதிப்பு மொத்தமும் அக்பர் படத்தின் பாடல் வரிகளாக வந்திருந்தது. இந்த முகல் ஏ அஜாம் தான் இந்திய அளவில் கருப்பு வெள்ளையில் இருந்து வண்ணத்துக்கும், dts ஒலி அமைப்புக்கும் மாற்றப்பட்டு 2004 இல் வெளியான (இப்போதும் சூப்பர் ஹிட்) முதல் படம். மாயா பஜார் வண்ணம் கொண்டு வெளியானது 2010 இல். ஷோலே 2015 இல் dts ஒலி கொண்டு முப்பரிமாணத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
எனக்குள் முகில் கதையை அந்தக் கதைக்குள் வரும் ஸ்ரீ ராஜ விஜயேஸ்வரி படம், அதன் நாயகன் ராமராவ் நாயகி பானுமதியை, முகல் ஏ அஜாம் படமாகவும், ராமராவ் ஸ்ரீ பாலாவை கம்பதாசன் சித்ர லேகா வாகவும் மாற்றிக் கொண்டேன். காமத்தை உதைத்து எழுந்து காதல் எனும் சப்லைம் நிலையை அடைவது. அங்கிருந்து காமத்தில் விழுவது. இந்த தத்தளிப்பின் இயங்கு முறை மர்மம் அதை யார் அறியக் கூடும். இந்த தத்தளிப்பின் இனிய துயரிலிருந்து ஏதோ ஒரு கணம் உணர்வுகள், காதலை உதைத்து எழுந்து ஆத்மீகமான ஒரு நிலையில் சில கணம் நின்று விடுகிறது. காதல் வழியே எய்த இயண்ற இரண்டற்ற தன்மை. அந்த நிலையைத்தான் முகில் கதைக்குள் அப்பாடல் வழியே இருவரும் எய்துகிறார்கள். அதன் பின்னர் காதல் பல மாற்று குறைவு, காமமோ தரை தளத்தில் கிடப்பது.
திலீப் குமார் மதுபாலா துவங்கி கம்பதாசன் சித்ரலேகா தொடர்ந்து இக்கதையின் ராமராவ் ஸ்ரீ பாலா வரை குருதி நெய் கொண்டு, காதல் தீ எரியும் இதயம் கொண்டு ஏதோ ஒரு கணம் அந்த இரண்டற்ற நிலையை ஒரு கணமேனும் எய்தி இருப்பார்கள். அவர்கள் சொல்வார்கள் மணிமுடிகள் எழும் விழும் இந்த பூமியே இன்றிருந்து நாளை மறையும். ஆனால் கொண்ட காதலோ என்றும் வாழும்.
கடலூர் சீனு
பொழுதுபோக்கின் எல்லைகள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
சென்ற உலக கோப்பை கால்பந்து விளையாட்டின் பொது சூதாட்டத்தில் ஈடுபட்டு நான் உணர்ந்தவற்றைச் சொல்கிறேன்.
சூதாட்டத்தில் இரண்டு அடுக்குகள் உள்ளன. உங்களை ஏமாற்ற வேண்டுமென்றால் உங்கள் பயத்தையோ அல்லது பேராசையையோ உபயோகிக்க வேண்டும் (பயத்திலிருந்தே ஆசை எழுகிறது, அது வேறு). முதல் அடுக்கில் உங்கள் பேராசை தூண்டப்படுகிறது. ஒன்றை வைத்து பலவற்றைப் பெறலாம். ஆனால் இது மட்டும் இருந்தால் அது நேரடி மோசடி, அதில் சுவை இல்லை.
இரண்டாவது அடுக்கில் உங்கள் ஆணவம் தூண்டப்படுகிறது. உங்களிடம் ஒரு சவால் முன்வைக்கப்படுகிறது. எல்லோரிடமும் நான் மற்றவரை விட சிறந்தவன் என்கிற எண்ணம் இருப்பதால் அந்த சவால் நமக்கு ஏற்புடையதாக இருக்கிறது.
இதில் உள்ள சூட்சுமம், அந்த சவால் நமக்கு வெல்ல இயன்றதாகத் தோன்ற வேண்டும் – மிகவும் கடுமையானதாக இருந்தால் நாம் அதில் ஈடுபட மாட்டோம் – மிகவும் எளிதாக இருந்தால் சூதாட்ட நிறுவனம் நஷ்டப்பட்டு விடும். உதாரணமாக, இந்தியாவிற்கு எதிராக பிரேசில் வெல்லுமா என்பது மிகவும் எளிதான சவால், ஆகவே அது கேட்கப்படுவதில்லை. 1-0ல் வெல்லுமா அல்லது 3-0ஆ, 4-1ஆ என்பவை சற்றுக் கடினமான கேள்விகள், ஆனால் நம் மூளையை பயன்படுத்தி விடை சொல்ல முடியும் என்ற நம்பிக்கையைத் தூண்டுபவை.
இதில் நிறுவனம் மிகவும் தேர்ந்து இருப்பதால், அதை சிலரால் சில சமயங்களில் வெல்ல முடியும், ஆனால் பலரால் பல சமயங்களில் வெல்ல முடியாது. இதுவே அவர்களின் பலம். இது எல்லா வகையான சூது வகைகளுக்கும் பொருந்தும். நம் முழு வாழ்க்கைக்கும் கூட இதை பொருத்தலாம். வெல்லவே முடியாது என்று தோன்றும் வாழ்க்கையை நாம் வாழ மாட்டோம் ஆனால் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையைக் கடைசி வரை அது கொடுத்துக் கொண்டிருக்கிறது.
சூதை புரிந்து கொள்வது என்பது நம் எல்லைகளை புரிந்து கொள்வது. இதை உணர்ந்தவர்களுக்கு சூது என்பது முடிந்து, இந்த விஷயம் நம்மால் முடியுமா, முடியாதா என்று சுருங்கி விடுகிறது. இதை உணர எனக்கு இரண்டாயிரம் ருபாய் செலவானது. என் நண்பனுக்கு பத்தாயிரம். இருந்தாலும் இது சல்லிசான விலையே.
சூதில் வரும் வெற்றி தோல்வி பொருட்டல்ல, அதன் சாகசமே பிரதானம் என்று அத்வைதமாக விளையாடுவது சிறப்பு.
அன்புடன்,
சொக்கலிங்கம்
***
அன்புள்ள ஜெ
பொழுதுபோக்கின் எல்லைகள் கட்டுரையை வாசித்தேன். என் அனுபவத்தைச் சொல்கிறேன். நான் இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் சினிமா பாக்க ஆரம்பித்தேன். ஒருநாளைக்கு மூன்று சினிமாக்கள் வரை. நாநூறு சினிமாவுக்குமேல் பார்த்தேன். சலித்துவிட்டது. ஒருநாளைக்கு பலமணிநேரம் நெட்ஃப்ளிக்ஸிலும் அமேசானிலும் சினிமாவை தேடுவதுதான் வேலை. அப்படியே கம்யூட்டர் கேம்ஸ் போனேன். சுூடுபிடித்துக்கொண்டது.மூன்றுமாதம் முழுநேரமாக விளையாடினேன். ஒருநாளுக்கு எட்டுமணிநேரம் வரைக்கும்கூட. ஆனால் அதுவும் சலித்துவிட்டது. அதன்பிறகு கம்ப்யூட்டர் கேமிலேயே போர்ன் விளையாட்டு. அதன்பிறகு ஜப்பானிய கொரிய சூதுவிளையாட்டு. கம்ப்யூட்டர் கேம் மாதிரியே.
நாலரைலட்சம் ரூபாய் இழந்தேன். உடனே சுதாரித்துக்கொண்டேன். அப்படியே தூக்கி அப்பால் வைத்தேன். உடல்களைக்க பேட்மிண்டன் விளையாட ஆரம்பித்தேன். ஒருமணிநேரம் படிக்கிறேன். மீண்டுவிட்டேன். நல்லவேளையாக பிசினஸும் முன்புபோல ஆரம்பித்துவிட்டது. பொழுதுபோக்கு எதுவானாலும் கடைசியில் சூதாட்டத்தில்தான் வந்து நிற்கும். எல்லா பொழுதுபோக்கிலும் சூதாட்டம்தான் உள்ளே ஒளிந்திருக்கிறது. சினிமாகூட நாம் பணம்வைக்காமல் ஆடும் ஒரு சூதாட்டம்தான்
ஆர்.கே
***
April 28, 2021
மீண்டும் நோய், மீண்டும் உறுதி
மீண்டும் ஒரு கோவிட் உச்சநிலைக் காலகட்டம். என் வீட்டிலேயே எனக்கும் என் மகனுக்கும் வந்து அகன்றுவிட்டது. எத்தனைபேருக்கு கொரோனா மெய்யாக வந்து தெரியாமல் சென்றது என்றே தெரியாத சூழல். தனிப்பட்ட முறையில் வரும் செய்திகள் பதற்றமளிப்பவை.
சென்ற கொரோனா அலையை தமிழகத்திலும், கேரளத்திலும் பொதுசுகாதாரத்துறை மிக வெற்றிகரமாக எதிர்கொண்டது. நோயாளிகளை கணக்கு வைத்துக் கொள்வது, தொடர்ந்து தொடர்புகொண்டு செய்திகளை பதிவுசெய்வது ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெற்றன. நான் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். என் மகனும் அங்கேதான். சிகிச்சை மிகச்சிறப்பாகவே இருந்தது.
நான் என் மகனிடமிருந்து அறிந்தவரை சென்ற பத்துநாட்களுக்கு முன்புவரைக்கும் கூட அரசு மருத்துவமனைச் சிகிழ்ச்சை நன்றாகவே இருந்தது. ஆனால் சென்ற ஐந்தாறுநாட்களாக நம் சுகாதாரத்துறை நெரிபடத் தொடங்கியிருப்பதை நண்பர்கள் சொல்லும் செய்திகள் காட்டுகின்றன. ஏனென்றால் எண்ணிக்கை திடீரென்று பெருகிவிட்டது. ஊழியர்களின் எண்ணிக்கை வரையறைக்கு உட்பட்டது. அதோடு அவர்கள் ஒரு முழு ஆண்டு உழைப்பால் சற்றே சோர்வும் சலிப்பும் அடைந்திருக்கிறார்கள்.
ஓர் உடலில் வழக்கமாக இருக்கும் நோய்கள் உடல் பலவீனமடையும்போது பெருகும். அதேபோல இந்த நெருக்கடிச் சூழலில் நம் சமூகத்திலுள்ள அரசியல் காழ்ப்புக்கள், சாதிக்காழ்ப்புக்கள் பெருகி ஆட்டம் போடுகின்றன. குற்றம்சாட்டல்கள் திரும்பக் குற்றம்சாட்டல்கள் நிகழ்கின்றன.
எதையுமே தங்கள் அரசியலுக்குக் கருவிகளாக மட்டுமே காண்பது, வேறெதையுமே காண மறுப்பது, அதையன்றி எதையுமே எப்போதுமே பேசாமலிருப்பது, அதை உச்சகட்ட காழ்ப்பும் கசப்புமாக மட்டுமே முன்வைப்பது நம் அரசியலாளர்களின் இயல்பு. வலதும் இடதும் இதில் ஒன்றின் இரு பக்கங்களே. நம்மைப் போன்ற பொதுமக்களுக்கு இவர்கள் உருவாக்கும் காழ்ப்பும் கசப்பும் நம் அன்றாடத்தை நச்சுமயமாக்கிவிடுபவை.
முதன்மைக் குற்றம் நம்மிடம். சென்ற சில மாதங்களில் கண்ணில்படும் முதியவர்களிடமெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா என்று கேட்டேன். அனைவருமே இல்லை என்றே சொன்னார்கள். ஊசி தேவையற்றது என்றும், கொரோனா போய்விட்டது என்றும் சொன்னார்கள். இரண்டு மாதங்கள் தொடர்ந்து பேசியும் முதியவர்களான என் மாமனார், மாமியாரை ஊசிபோட வைக்க என்னால் இயலவில்லை. சென்ற 13 ஆம் தேதிதான் அவர்கள் ஊசிபோட்டுக்கொண்டார்கள்.
சென்ற பல நாட்களாக ஆட்டோக்காரர்களிடம் கேட்கிறேன். எவருமே போடவில்லை என்பதுடன் போடத்தேவையில்லை என்றும் சொல்கிறார்கள். ஊசிக்குப் பின் வரும் காய்ச்சலை ’சைடு எஃஃபக்ட்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஊடகம் அவர்களை அச்சுறுத்திவிட்டிருக்கிறது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை உட்பட எங்கும் எவரும் முகக்கவசம் அணியவில்லை. கைகளை தூய்மை செய்துகொள்ளவில்லை. அதைப்பற்றிய பேச்சே கேலிக்குரியதாக இருந்தது. குடும்பவிழாக்கள், திருவிழாக்கள் மிகுந்த நெரிசலுடன் நடைபெற்றன. சிலநாட்களுக்கு முன் என் நண்பரின் தந்தை கொரோனாவினால் மறைந்தார். அவர் முக்கவசம் போடுவதை கிண்டல் செய்ததையும், தன் மகள் போடுவதை தடுத்ததையும், குடும்ப விழாக்களுக்குச் சென்றதையும் நண்பர் சொன்னார். வியப்பாக இருக்கவில்லை. என் உறவினர்களே அப்படித்தான் இருக்கிறார்கள்.
அத்துடன் தேர்தல் கொண்டாட்டம். தேர்தல் பிரச்சாரம் சென்ற பல மாதங்களாகவே நடைபெற்றது. ஊர்ச்சபைக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள். தெருவெங்கும் மக்கள் ததும்பிக் கொண்டிருந்தனர். கொரோனா பேருருக் கொண்டு திரும்பி வந்ததில் வியப்பே இல்லை. இத்தகைய மக்கள்தொகை மிக்க நாட்டில் மிகப்பெரும்பாலானவர்கள் இப்படி இருக்கையில் எந்த அமைப்பும் அதை தாக்குப்பிடிக்காது.
இன்று, கொரோனா உச்சமடைந்த பின்னரும்கூட தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் நிகழ்கிறது. நாகர்கோயிலில் நான் விசாரித்தபோது சிறுபான்மையினர் இந்த தடுப்பூசி சிறுபான்மையினருக்கு எதிரானது என்னும் எண்ணம் கொண்டிருப்பது தெரிகிறது. பல போஸ்டர்களும் கண்ணுக்குப்பட்டன. அவற்றை பகிரவிரும்பவில்லை.
இப்படி ஒரு சூழலை உருவாக்கியபின் நாம் நம் மருத்துவக் கட்டமைப்பை குற்றம்சொல்வதில் பொருளே இல்லை. அதற்கான தகுதி நமக்கில்லை. என் வாசகர்கள் நண்பர்கள் உட்பட பல மருத்துவ ஊழியர்கள் உச்சகட்ட வெறியுடன் களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தகட்டமாகவே நாம் அரசைக் குற்றம்சாட்டவேண்டும். முதல் அலைக்குப்பின் அரசு ஆழ்ந்த மெத்தனத்திற்குச் சென்றது, அடுத்த அலையை எதிர்பார்த்துத் திட்டமிடவில்லை என்பது உண்மை. நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் எந்தத்துறையிலும் மைய அரசு நிபுணர்களை கலந்தாலோசிப்பதோ, அவர்களின் கூற்றை ஏற்றுச் செயல்படுவதோ இல்லை. முழுக்கமுழுக்க முச்சந்தி அரசியல்வாதிகளாகவே மைய அரசின் பொறுப்பிலிருப்பவர்கள் நடந்து கொள்கிறார்கள்.
தேர்தல்பிரச்சாரத்தை இத்தனை பெரிய மக்கள்திரள்களுடன் நடத்த முடிவெடுத்தது மிகப்பெரிய பிழை. அதன் விலையையே கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலை திரள் இல்லாமல், மின்னணுப் பிரச்சாரங்கள் வழியாகவே நடத்தியிருக்க முடியும். உண்மையில் இப்போது தேர்தலுக்கு இந்த மாநாடு, ஊர்வலம், மக்கள்சபைக் கூட்டம் எதுவும் தேவையே இல்லை. அவை பிரச்சாரங்கள் அல்ல, பலம் காட்டல்கள் மட்டுமே.
கும்பமேளாவை அனுமதித்ததும் பெரும்பிழை. கும்பமேளா அடிப்படையில் ஒரு பெரிய வணிகப்பரப்பு. அதை நம்பி ஓர் பொருளியலே உள்ளது. ஆகவே எத்தனை அழுத்தம் வந்திருக்குமென ஊகிக்க முடிகிறது. ஆனால் நிபுணர்களின் ஆலோசனையை கேட்டிருக்கவேண்டும்.
தடுப்பூசி இருக்கையிலேயே இத்தனை பெரிய அலை வந்தது என்பது முழுக்க முழுக்க ஆட்சித்திறனின் வீழ்ச்சியே. ஊசியை கட்டாயப்படுத்தி உச்சகட்ட விசையுடன் போட்டிருக்கவேண்டும். பல மாதங்கள் மிகமெல்ல ஊசி போடப்பட்டது. விரும்பினால் போட்டுக்கொள்ளலாம் என்னும் கூற்றே இந்நிலைக்கு மிகப்பெரிய காரணம்.
இச்சூழலை அரசு சமாளிக்கவேண்டும், வேறு வழியில்லை. எதிர்க்கட்சிகள் அரசின் பிழைகளைச் சுட்டிக்காட்டி அழுத்தம் அளிக்கவேண்டும். அதுவே ஜனநாயகம். அவர்கள் அதைச் செய்யட்டும்.
ஆனால் பொதுமக்களாகிய நாம் அரசின் தரப்பையோ எதிர்த்தரப்பையோ எடுத்து காழ்ப்பைக் கக்கிக் கொந்தளிப்பதும், அறச்சீற்றத்தின் உச்சங்களை நடிப்பதும் தேவையற்றது. நம்மை நாமே கசப்பு நிறைந்தவர்களாக ஆக்கிக் கொளவது அது.
அதைச்செய்பவர்களுக்கு வேறு அறிவுலகம் இல்லை. அகவுலகும் இல்லை. ஆகவே அவர்களிடம் ஏதும் சொல்ல விரும்பவில்லை. நான் பேசுவது என்னைப்போன்ற பொதுமக்களிடம். இந்த தருணத்தை குறைந்தபட்ச துயருடன், கூடுமானவரை பயனுள்ளவர்களாக இருந்துகொண்டு கடந்துசெல்ல விரும்புபவர்களிடம்.
சென்ற ஆண்டு சொன்னவற்றைத்தான் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது.
அ. பதற்றமூட்டும், கசப்பூட்டும், ஐயங்களை கிளப்பும், எதிர்மறை மனநிலையை உருவாக்கும் செய்திகளை முற்றாகத் தவிர்த்துவிடுவோம். அவற்றைப் பற்றிப் பேசாமலிருப்போம். எதிர்வினைகூட ஆற்றவேண்டியதில்லை. நாம் எந்நிலைபாடு எடுத்தாலும் எந்த வேறுபாடும் உருவாகப்போவதில்லை. ஒரு வகை வதை -சுயவதை மட்டும்தான் அது
ஆ. கூடுமானவரை இந்தச்சூழலில் இடர் உறுபவர்களுக்கு உதவுவோம். அதற்கான அமைப்புக்களுடன் இணைந்துகொண்டு செய்வது நன்று. அல்லாதவர்கள் பொருளுதவிகளைச் செய்வோம்.
இ. ஆக்கபூர்வமான, நிறைவூட்டும் செயல்களில் ஈடுபடுவோம். ஒருவேளை இந்த நோயால் நாம் உயிரிழந்தோமென்றால்கூட நமக்குப் பிடித்த, நாம் நிறைவுகொள்ளக்கூடிய செயல்களைச் செய்துகொண்டிருக்கும்போது அது நிகழட்டும். அஞ்சி, கசந்து, ஒண்டியிருந்து நஞ்சுகக்குபவர்களாக நம்மை சாவு சந்திக்கவேண்டியதில்லை.
ஈ. எதுவும் நல்வாய்ப்பெனக் கொள்ளத்தக்கதே. நம் இடத்தை சுருக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே நாம் அகத்தை விரித்துக் கொள்ள முடியும். என் நண்பர்கள் பலர் வாசித்து தள்ளுகிறார்கள். எழுதுகிறார்கள். தங்களுக்குள் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இது அதற்கான தருணம் என அமையட்டும்.
இந்த இக்கட்டுக் காலத்தை நாம் சிறுமையடையாமல் கடந்தோம் என்று நாம் திரும்பிப் பார்க்கையில் நிறைவுகொள்ளவேண்டும். அதுவே இன்று நாம் கொள்ளவேண்டிய உறுதிமொழி.
நான் வாசிக்கிறேன். இம்முறையும் வரலாறும் புனைவும்தான். இந்த மனநிலைக்கு எளிமையான உற்சாகமான சாகசப்புனைவு ஒன்றை எழுதினாலென்ன என்று படுகிறது.
இனி கொரோனா பற்றி பேசுவது அது முற்றடங்கி பழைய நினைவென ஆன பின்னர்தான்.
ஜெ
சித்திரை- கடிதம்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலமே விளைக என்று பிராத்திக்கின்றேன். சித்திரை முதல் நாள் மதுரை நிகழ்ச்சி எனக்கு தனிப்பட்ட முறையில் மிக அவசியமான ஓன்றாக இருந்தது. ஊட்டி இலக்கிய முகாம் மற்றும் கோவை விஷ்ணுபுரம் விழா என குறைந்தது இரண்டு முறையாவது விழா மனநிலையோடு ஒரு ஆத்ம குளியில் போட்டு அடுத்த சில மாதங்களுக்கான உத்துவேகத்துடன் இருக்கும் வாய்ப்பினை நுண்தீமை நோய் காலம் சென்ற ஆண்டு அனுமதிக்காமல் போனது. இந்த ஆண்டு அதற்கான சாத்தியத்தை ஏற்படுத்திய முதல் சந்திப்பாக அதுவம் சித்திரை முதல் நாள் வருடம் முழுவதும் தன் செயலில் செயல்பட அதற்கான ஆற்றல் ஊக்கம் பெற அவசியமான நிகழ்ச்சியாக எடுத்துக்கொண்டேன்.
பல்லவன் விரைவு இரயிலில் சென்னையில் இருந்து காரைக்குடி வந்து சற்று தூங்கிவிட்டு அடுத்த நாள் விடியற்காலையே முழு உற்சாகத்துடன் மதுரை கிளம்பிவிட்டேன். காந்தி அருங்காட்சியகம் வந்து கல் மண்டபம் வந்தது தான் தாமதம் என்பது போல அங்கு முன்பே திருவிழா கோலம்! அங்கும் இங்கும் எங்கும் சிறு சிறு குழுக்களாக நண்பர்கள் மண்டபத்தை அலங்கரித்திருந்த வண்ணம் இருந்தார்கள். மண்டபம் கண்ணில் படும் இடத்தில் காதிக கொக்குகள் ஆகாய பந்தலேன கூட்டமாக சிறகடிக்க, துணி பதாகைகளும், பால் வண்ண பூக்களும், கோலமுமாக வரவேற்க, மண்டபத்தின் உள்ளே சுற்றிலும் நித்ய சைதன்ய யதி அவர்களின் படங்கள் பிரதிபலிக்கிறது.
ஆகாயத்தை மறைக்கும் ஓட்டு கூரையை நகைப்பது போல பனை ஓலை உருவங்கள் மேகங்களாக அலங்காரம், மண்டபத்தின் வெளிப்புற சுவற்றில் அகர்மா ஊறு கிணறு புணரமைப்பு இயக்கத்தின் புகைப்படங்கள் காற்றில் ஆடி அருகில் அழைக்கும். தன்னறம் நூல்வெளி புத்தகங்கள் விற்பனை அரங்கு என்று நிகழ்ச்சி மெருகேறிக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டின் ஊரடங்கு காலத்தில் குக்கூ நண்பர்களின் மனக்குகை ஓவியங்கள் இணைய குழு வாயிலாக, தொடர்ந்து ஆறு மாதங்கள் தினமும் கதை விவாதம், வாரம் ஒரு நாள் கவிதைகளும் என செயல்பட்ட நண்பர்களில் சிலர், திருச்சி சரவணக்குமார், திருவண்ணாமலை பாரதி, கோவை குமார் சண்முகம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
மரப்பாச்சி குழு நண்பர்கள் சிலம்பரசன், மதுரை டாக்டர் இரவிச்சந்திரன் அவர்களும் வந்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கும் நொடியிலிருந்து அந்த நிகழ்வு தன்னை தானே ஒழுங்கு படுத்திக்கொண்டது அழகு. இறைவணக்கம் பாடிய வயது முதிர்ந்த தேவதாஸ் காந்தி அவர்கள் எழுத்தாளர்களின் முன்பாக கல்லூரி மாணவர்களுடன் முன் வரிசையில் வந்து அமர்ந்தது, அத்தனை குழந்தைகள் கூடிய இடத்தில் அவர்கள் கூட்டத்தை கலைத்து அடுக்கும் விளையாட்டில்லாமல் மற்றொன்று ஆர்வமாக தெரியவே சபையை அதன் போக்கில் அனுமதித்தது, நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு என்று தீபத்துடனும் நீருடனும் துவங்கிய நிகழ்வு. ஊற்றாய் தொன்றி தரை இறங்கி நிலத்தில் பாய்ந்து கடலில் கலக்கும் நதி போல தனக்கான கடல் எதுவோ எங்கே கரைந்து போக வேண்டுமோ அதை தேடி கண்டடைந்து ஒன்றாகி போக செயல்படவது அவசியம் அந்த செயலின் பலன் நமக்கானதாக இருக்கவேண்டியதில்லை என்றாலும் அந்த செயல் அளிக்கும் நிறைவு தன்னம்பிக்கை பெரிது என்றும் இன்னும் சிறப்பான சாராம்சங்களுடன் ஆற்றிய உங்கள் உரை நிகழ்ச்சியின் மகுடம்.
குரு நித்ய சைதன்ய யதி அவர்களின் தத்துவத்தின் கனிதல், சின்ன சின்ன ஞானங்கள் மற்றும் நாராயண குருவின் அறிவு புத்தகங்களின் வெளியீடு. சின்ன சின்ன ஞானங்கள் மலையாளத்தில் தனக்கு கிடைத்தும் பல பயணங்களுக்கும் பிறகு 20 வருடங்கள் கடந்த முதன் முறையாக தமிழில் மொழிபெயர்த்து வெளியாகிறது என்று யூமா அவர்கள் சொன்னது புத்தகத்தின் சொற்களுக்கான நேரம் வந்துவிட்டது என்று தொன்றியது. யூமா அவர்களை சில வாரங்களுக்கு முன்பு சிவராஜ் அண்ணண் மற்றம் யாதும் பழனியப்பன் அவர்களுடன் சந்தித்த அன்று, குரு யதியிடம் ஒரு குழந்தை இறப்பு பற்றிய கேட்க அதற்கு அவர் ஒரு ரொட்டி துண்டை எடுத்து ஏழு பாகங்களாக பரிக்கப்பட்ட மேசையில் ஒவ்வொன்றாக கடந்து பின் அவர் வாயில் போட்டுக்கொண்டு ரொட்டி யதியின்டே அய்கியமாகி என்று விளக்கினார் என்று கூறுகையில் மனதில் ஓரு வித அமைதி இத்தனை எளிமையாகவும் சொல்லப்படலாம்.
மகனும் மகளும் இன்று வரை அதிகம் கதை கேட்டது யூமா அவர்களின் ஆக்கங்கள் தான். எண்ணங்களுக்கும் செயலுக்குமான இடைவேளியை குறைக்கும் அமைப்பாக தன்னறத்தை/குக்கூவை பார்க்கிறேன். அந்த வகையில் தொடர்ந்து செயல்படும் நண்பர்கள் மற்றும் செயலூக்கம் உடைய பலர் நிறைந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. அதே நேரத்தில் நமக்கான செயல் எது என்ற தவிப்பும் அலைச்சலும் நினைவிலிருந்துக்கொண்டே இருந்தது. யாருடைய சொல், எந்த வலிமை மிக்க சொல்லின் வெளிப்பாடக நமது செயல் இருக்கக்கூடும் தெரியாது ஆனால் செயல்படு என்ற எண்ணம் தத்தளித்துக்கொண்டே இருக்கிறது.
ஆசிரியரின் சொல் என்றும் வாழும், தர்க்க கருத்தியில் வாதத்திலிருந்து விலகி இலட்சியவாத செயலில் ஈடுபட அதன் வழியே நாம் அடையும் தன்னம்பிக்கையை பெற செயல்படு என்ற உரையின் சாரமும் அந்த மண்டபத்தில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். ஆசிரியரின் ஓரு சொல் என்ற உரை அங்கே கற்கலான மண்டபத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. நிகழ்வில் கலந்துக்கொண்ட ஒவ்வொருவரும் தனக்கான சொல்லை கண்டடைந்து முளைத்து வருவார்கள். தமிழ் வருடத்தின் முதல் நாள் நல்ல தொடக்கம் கொடுத்த நிகழ்வு – கல்லெழும் விதை. நன்றி!
நாராயணன் மெய்யப்பன்
அறம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
இந்த புகைப்படத்தை இன்று இணையத்தில் கண்டேன். வெயிலில் ஒளிரும் பனி அற்ற எவெரெஸ்ட் மலை முடி. சற்றே தேன் கலந்த பொன் போல! எனக்கு இது ‘பெருவலி’ சிறுகதையில் கோமல் கண்ட கைலாச மலை உச்சியை நினைவூட்டியது. இன்று காலை மீண்டும் படித்தேன்.
‘சட்டுன்னு கன்ணத்தெறந்தேன். என் கண்ணுமுன்னால பொன்னாலஆன ஒரு கோபுரமா கைலாசம் வானத்திலே தகதகன்னுநின்னுட்டிருந்தது. அதோட ஒருபக்கம் கண்கூசற மஞ்சளிலே மின்னுது.இன்னொருபக்கம் வளைவுகளிலே இருட்டோட புடைப்புகள் பொன்னா ஜொலிக்குது.பொன். ஆகாசத்துப்பொன். பரிசுத்தமான பொன்மலை. மனுஷன் அள்ள முடியாத செல்வம்… இன்னும்இருக்கு. இத்தனைக்கு அப்பாலும் அது அங்க இருக்கு. எப்பவும்இருந்துண்டேதான் இருக்கும்”
டி.கார்த்திகேயன்
அன்புள்ள ஜெ
அறம் வரிசைக் கதைகளில் அதிகம் பேசப்படாது போன கதை தாயார் பாதம். அந்தக்கதையில் மனிதாபிமான அம்சம் இல்லை, பதிலாக வாழ்வதன் கொடுந்துயரம் உள்ளது. ஆனால் அந்த துயர் மிக அமைதியாக போகிறபோக்கில் சொல்லப்பட்டுள்ளது.
அந்தக்கதை என் குடும்பக்கதை. சில மாதங்களுக்கு முன்பு என் பாட்டி பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு கல்யாணவீட்டில்வைத்து கூப்பிட்டதுமே ஓடி வரவில்லை என்பதனால் என் தாத்தா வெற்றிலைக்கோளாம்பியை எடுத்து அப்படியே பாட்டிமேல் கொட்டியதைச் சொன்னார்
“வேற என்ன செய்ய? குளிச்சு புடவை மாத்திட்டு வந்து சோலியப்பாத்தேன்”என்று சாதாரணமாகச் சொன்னார். அந்த வாழ்க்கையின் ஒரு பிரம்மாண்டம் தாயார் பாதத்தில் இருக்கிறது. தேன் அபிஷேகம் செய்த குரல். ஆனால் நடப்பது எச்சில் அபிஷேகம்
ஆர்.எஸ்.கணேஷ்
அன்புள்ள ஜெ
நான் அறம் கதைகளை முன்பே படித்திருந்தேன். இன்று வாழ்க்கையில் அதை ஓர் அனுபவமாக அடைந்தேன். நாங்கள் எட்டுபேர் என் ஆசிரியருக்கு அன்பான மாணவர்களாக இருந்தோம். எட்டுபேரில் சோடைபோனவன் நான். படிப்பை சரியாக முடிக்கவில்லை. வேலை சரியாக அமையவில்லை. இப்போது ஒரு கமிஷன் கடை வைத்து பிழைப்பை ஓட்டுகிறேன்.
சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஆசிரியரைப் பார்த்தோம். நான் அவரை சந்திக்காமல் ஒளிந்துகொண்டேன். நான் பெரிய சயண்டிஸ்ட் ஆக வருவேன் என அவர் நினைத்திருந்தார். மற்றவர்கள் அறிமுகம் செய்துகொண்டார்கள். நான் தலைகாட்டவில்லை
ஆனால் அவர் என்னை கேட்டுக்கொண்டே இருந்தார். நான் கிளம்புவதற்குள் என்னை பிடித்துவிட்டார். எதுவுமே கேட்கவில்லை. வாழ்த்தினார். மகிழ்ச்சியாக பேசினார். “அப்பப்ப வந்து பாரு” என்று மட்டும் சொன்னார். என் வாழ்க்கை ஒரு தோல்வி என்று சொல்லவில்லை. அப்படி நினைப்பதாகவே தெரியவில்லை
நான் வீடுவரைக்கும் மனசுக்குள் அழுதுகொண்டே இருந்தேன். மத்துறு தயிர் என வந்து சென்று இடை தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் பித்து என்பது என்ன என்று புரிந்தது
கே.அருணாசலம்
அறம் சிறுகதைகள்
உற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்
அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
அன்புள்ள ஜெ,
நீங்கள் எழுதிய ‘நம்பிக்கையாளன்’ சிறுகதை இன்று வாசித்தவுடன் மனதால் எளிதல் கடந்து செல்ல முடியவில்லை.கதை வேறொரு புனைவுக்களத்தை கொண்டிருப்பினும் கூட அதில் பகிரப்பட்டிருக்கும் பல தகவல்களையும் குறிப்பிட்டதோர் மதம்சார் கொள்கைகளுடன் ஒன்றித்துப்பார்க்க முடியுமாய் இருப்பதை உணர முடியும்.
கதையின் முடிவு அவனை நம்பிக்கையாளன்(?) ஆக காட்ட முனைவதாக இருப்பினும் கதையோட்டத்தில் அறிவியலின் கருத்துக்களோடு அவன் ஒத்தோடுகிறான்.ஓர் அறிவியல் புனைகதையாக கதை பிரஸ்தாபிக்க நினைப்பதை அது நிறைவு செய்திருந்த போதிலும், இளைஞனின் மனதில் ஏற்படும் நெருடல் எவ்வகையானது என்பதை விளக்கலாமா?
நன்றி
இப்படிக்கு,
ஷாதிர்.
அன்புள்ள ஷாதிர்
பொதுவாக கதைகள் நிலைகொள்ளாமை, இரண்டு எல்லைகளுக்கும் நடுவே நின்றிருக்கும் அலைக்கழிப்பு ஆகியவற்றையே சொல்லமுயலும். உறுதிப்பாட்டில் கேள்விகள் இல்லை, ஆகவே கதைக்கு வேலை இல்லை. அவன் எடுக்கும் முடிவென்பது அக்கணம் அளிக்கும் தாவல் மட்டுமே
பொதுவாக கதைகள், அந்தக்கட்டமைப்புக்குள் என்ன சொல்கின்றனவோ அதைத்தான் வாசகன் கொள்ளவேண்டும். அதிலிருந்து தன் கற்பனையை விரித்துக்கொள்ளவேண்டும். மேலதிகமாக ஆசிரியன் பேசக்கூடாது. அது கதை போதாமைகொண்டது என்பதாக ஆகிவிடும்
ஜெ
அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
அன்புள்ள ஜெ
இரு கதைகள் என்னை அலைக்கழிக்கின்றன. வாசித்து நீண்டநாள் ஆகியும் இன்னும் நினைவில் நின்று தொந்தரவு செய்யும் கதைகள். அதில் ஒன்று நம்பிக்கையாளன். இன்று உலகளாவிய சூழலில் அனைவருமே அந்த நிலையில்தான் இருக்கிறோம். நம்பிக்கையாளர்கள்தான் எல்லா திசையிலும். சஞ்சலம் கொண்டவன், கேள்விகள் கொண்டவன் என்ன செய்யவேண்டும். ஏதாவது ஒரு நம்பிக்கை பக்கமாக ஓடவேண்டும். அது தற்கொலைதான்
அதைவிட என்னை தொந்தரவுசெய்யும் கதை உற்றுநோக்கும் பறவை. இன்று நாமனைவருமே இரட்டை ஆளுமை கொண்டவர்களாக ஆகிவிட்டோம். நமது முகம் சமூக ஊடகங்களில் ஒன்று, குடும்பத்தில் இன்னொன்று. மதவெறியனாக இருப்பவன் ஒரு செக்யுலர் நிறுவனத்தில் ஊழியனாகவும் இருக்கிறான். நவீன அறிவியலில் ஈடுபடுபவன் மூர்க்கமான ஆசாரவாதியாகவும் இருக்கிறான். இரட்டை ஆளுமை என்பது ஒரு பண்பாட்டுக்கூறாக ஆகிவிட்டது
அந்தக்கதையை இன்றைய சூழல் உருவாவதற்கு முன்பு எழுதிவிட்டீர்கள். இருகதைகளும் இன்றைய சூழலுக்காக, இதையெல்லாம் அவதானித்து எழுதியவை போலவே உள்ளன. அவை கூர்மையான அரசியல்கதைகள். அறிவியல்கதைகள் என்றால் அவற்றில் ஆச்சரியமும் திகைப்பும் ஊட்டும் கற்பனை மட்டுமே இருக்கும் என்றே நான் நினைத்திருந்தேன்
சிவக்குமார் எஸ்
அடையாள அட்டை- கடிதம்
சொட்டும் கணங்கள்அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சொட்டும் கணங்களில் தாங்கள் கூறியது 100% உண்மை.
இந்தியாவின் இன்றைய அடையாள அட்டை அரசியலின் மிகப்பெரிய ஆபத்து ஒன்று மெல்லமெல்ல இனிமேல்தான் வரவிருக்கிறது. இங்கே இன்று நாடெங்கும் நிலையற்று அலையும் துறவிகளுக்கு அடையாள அட்டை தேவை என இந்த அரசு சொல்லிவிடும் என்றால் இந்து மதம் என்னும் அமைப்பின் கண்ணுக்குத்தெரியாத அடித்தளம் அழியும்.
2017 இல் கங்கோத்ரியில் இதனைப் பார்க்க நேர்ந்தது. எலும்பை ஊடுருவும் குளிரில் அனைவரும் பத்து பதினைந்து ஆடைகளோடு அலைய, இருவர் மட்டும் ஏறக்குறைய அம்மணமாய் பாகீரதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஒரு மக் (mug) தண்ணீரை கையில் வைத்துக் கொண்டு, அதைத் தலையில் ஊற்றிக் குளிப்பதைப் பற்றி நான் எனக்குள்ளேயே தேர்தல் நடத்திக் கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் பனிக்கட்டிகள் மிதந்து வரும் ஆற்றின் நடுப் பகுதிக்குப் போய் மூன்று முங்குகள் போட்டு விட்டு கரை ஏறிச் சென்றார்கள். அந்தக் கணம் மானஸீகமாய் அவர்கள் காலில் விழுந்தேன்.
அடுத்த நாள், கங்கோத்ரியில் இருந்து கோமுக் (நடந்து) செல்லும் போது வழியில் உள்ள காட்டிலாக்கா செக் போஸ்ட்டில் அனைவரின் ஆதார் அட்டைகளையும் வாங்கி வைத்துக் கொண்டனர். என் பின்னே, அவ்விருவரும் வந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு ஆதார் அட்டை இருக்குமா? என்று நான் யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில், இருவரிடமும் அதிகாரிகள் ஆதார் அட்டை இல்லாமல் விட மாட்டோம் என அவர்கள் ஏதும் சொல்வதற்கு முன்பே கறார் குரலில் சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்கள் தாம் கோவணம் போல் கட்டியிருந்த துணியில் இருந்து தங்களின் ஆதார் அட்டையைச் சமர்ப்பித்தனர். எனக்கு துணுக்கென்றிருந்தது. அதை அவ்விருவரும் எப்படியோ உணர்ந்து விட்டனர். நடக்கும் வழியில், “மகனே! எங்களிடம் அடையாள அட்டை கேட்பது, எங்கள் மேல் உள்ள கவலையால் அல்ல, உங்கள் மேல் உள்ள கவலையால்” என்றும் “நாங்கள் இந்த மலையில் காணாமல் போக அரை மணி நேரம் போதும். நாங்கள் அப்படிப் போனால் இவர்கள் வந்து எங்களைத் தேடுவார்கள் என நினைக்கிறாயா?” என்று சொல்லி விட்டுச் சென்றனர்.
அவர்கள் சொன்னது அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது புரிகிறது.
ஆனாலும் அவர்களிடம் ஆதார் அட்டை கேட்டதை ஜீரணிக்க முடியவில்லை.
ஸ்ரீனிவாசன்
April 27, 2021
அஞ்சலி-பெ.சு.மணி
நாளிதழ்களை வாசிக்காமையால் பெ.சு.மணி காலமானதை சற்றுப் பிந்தியே அறிந்தேன். வெங்கட் சாமிநாதன் அறிமுகம் செய்து அவருடன் நேரில் பழக்கமானேன். அவர் மகள் திருமணத்திற்கு வெ.சாவுடன் சென்ற நினைவு. ஆனால் அடிக்கடி சந்திக்கவோ பழகவோ நேரிட்டதில்லை.
அவரைச் சந்திப்பற்கு முன் அவருடைய நூல்களை வாசித்திருந்தேன். சென்னை நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள் வழியாகத் திரட்டப்பட்ட செய்திகளைக்கொண்டு தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர் பெ.சு.மணி. பாரதி, வ.வே.சு.அய்யர், வ.உ.சிராமகிருஷ்ண இயக்கம், பிரம்மஞான சங்கம் என தமிழகத்தின் நவீனச் சிந்தனைப்பரப்பு உருவாகி வந்த காலகட்டத்தின் சித்திரத்தில் ஒரு முக்கியமான பகுதியை எழுதியவர். ’இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ ‘தமிழ்நாட்டில் ராமகிருஷ்ண இயக்கம்’ ஆகிய இரண்டையும் அவருடைய முதன்மையான நூல்களாகச் சொல்லமுடியும்.
பெ.சு.மணி கொள்கைகளை உருவாக்குபவர் அல்ல. வரலாற்றின்மீதான அவதானிப்புகளை அவர் நூல்களில் காணமுடியாது. ஆனால் வெவ்வேறு மூல ஆவணங்களில் இருந்து திரட்டப்பட்ட செய்திகள் சீராக அவரால் அளிக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு ஆவணம்சார்ந்த நம்பகத்தன்மை இருக்கும். அக்காலத்தைய ஆளுமைகளின் இயல்புகளை உருவகித்துக்கொள்ள அவருடைய நூல்கள் எனக்கு உதவியிருக்கின்றன
தமிழகத்தின் முக்கியமான ஓர் ஆய்வாளரின் இறப்பை ஒட்டி இணையத்தில் தேடியபோது ஒரு விக்கிப்பீடியா பக்கம்கூட இல்லை என்பது திகைப்பளித்தது. ஒன்றை உருவாக்கியிருக்கிறேன். நண்பர்கள் விரிவாக்கலாம்
விழிநிறைக்கும் கலை
பிரம்மாண்டமான காட்சியமைப்பு கொண்ட படங்களை எதிர்மறையாகப் பார்க்கும் மனநிலையை திரைப்படச் சங்கங்கள் எழுபது எண்பதுகளில் அன்றைய ’தீவிரசினிமா’ ரசிகர்களான எங்களிடம் உருவாக்கின. பெரிய படங்களை ஆடம்பரக் கொண்டாட்டம் [bash] என்றும் அவற்றின் அழகியலை பரோக் பாணி [Baroque] என்றும் சொன்னார்கள். அன்றைய சொல்லாட்சி ‘ஆபாசமான பிரம்மாண்டம்.’
1987-ல் பெர்னடோ பெர்ட்லுச்சியின் The Last Emperor திருவனந்தபுரம் திரைவிழாவில் வெளியானபோது கடுமையான எதிர்விமர்சனங்கள் உருவானதை நினைவுகூர்கிறேன். திரைவிழாவின் ‘புனிதம்’ கெட்டுவிட்டது என்ற கண்டனம். ‘திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆறாட்டு விழாவை ஒளிப்பதிவு செய்தால் இதை விடப் பிரம்மாண்டமாக இருக்கும். இதை எதற்கு சினிமா அரங்கிலே காட்டவேண்டும்?” என்று ஓர் சினிமா விமர்சகர் எழுதினார். ‘இப்படியே போனால் கோலாட்டம் கரகாட்டமெல்லாம் சினிமாவாக வரத்தொடங்கும்.’
அப்படத்தை நான் திரைவிழாவில் தவறவிட்டேன். ஆனால் உடனே திரையரங்குகளில் வெளியாகி நூறுநாட்கள் ஓடியது. இருமுறை திரையரங்கில் அதைப் பார்த்தேன். எனக்கு என் அகத்தில் நிறைந்திருந்த கனவை விரித்த படமாக அது இருந்தது.
அகன்ற காட்சியமைப்பு கொண்ட பெரிய படங்களைப் பற்றிய அன்றைய விமர்சனங்கள் இவை.
அ. அந்தப் படங்கள் கண்களை காட்சிகளால் நிறைத்து கற்பனைவிரிவுக்கு இடமில்லாமல் செய்துவிடுகின்றன. சிந்திப்பதற்கு வாய்ப்பளிக்காமல் வியப்பு, திகைப்பு, விழிநிறைவிலேயே பார்வையாளனை வைத்திருக்கின்றன.
ஆ. சினிமா என்பது காட்சிப் படிமங்களால் பேசும் ஒரு கலை. காட்சிகள் படிமங்கள் ஆவதற்கு சினிமாவில் அவகாசம் அளிக்கப்படவேண்டும். அந்தப் படிமங்கள் சினிமாவின் ஆசிரியரான இயக்குநரால் பொருளேற்றம் செய்யப்பட்டிருக்கவேண்டும். பிரம்மாண்டப் படங்களில் காட்சிகள் உள்ளீடற்றவை, அவை படிமங்கள் அல்ல.
இ. பிரம்மாண்டமான படங்கள் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படுகின்றன. அவை பெரும்பொருள் ஈட்டியாகவேண்டும். ஆகவே அவை சராசரியான ரசிகனுக்காக தங்களை சமைத்துக்கொள்கின்றன. ஆகவே சராசரிப் படங்களாகவே நீடிக்கின்றன.
ஈ.பிரம்மாண்டப் படங்களில் ’ஆசிரியன்’ என ஒருவன் இல்லை. அங்கே இயக்குநர் ஒரு தொகுப்பாளர் அல்லது நிகழ்த்துநர் மட்டும்தான். அவரால் சினிமாவை தன் அகவெளிப்பாடாக கையாளமுடியாது. பிரம்மாண்டப் படங்கள் எவருடைய அகவெளிப்பாடும் அல்ல. கலை என்பது கலைஞனின் ஆன்மாவாகவே இருக்கமுடியும்.
இந்த குற்றச்சாட்டுக்களை அன்று நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சினிமா அன்றும் இன்றும் என் ஊடகம் அல்ல. அதில் நான் ஏற்பவர் சொல்லும் கருத்துக்களை நான் ஆழமாக ஆராய்ந்து பார்க்கவில்லை.
ஆனால் நான் ‘அகன்ற’ சினிமாக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அவை அளித்த கனவுநிகர்த்த அனுபவம் மிகத்தேவையாக இருந்தது. அன்றெல்லாம் அத்தகைய படங்களை பெரிய ஊர்களில், பெரிய திரைகளிலேயே பார்க்கமுடியும். அப்படி பெரிய படங்களைப் பார்ப்பதற்காக நான் மங்களூர், திருவனந்தபுரம், பெங்களூர் என்று சென்றுகொண்டிருந்தேன்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அன்றைய கிழக்கு ஐரோப்பிய ‘அரசியல் சினிமா’ சலிப்பூட்டத் தொடங்கியது. மைக்கேலாஞ்சலோ அண்டோனியோனியெல்லாம் நம்மூர் மேலாண்மைப் பொன்னுச்சாமிகள்தான் என்று தோன்ற ஆரம்பித்தது. இன்று ஒரு காலத்தில் ஒரு தொன்மவடிவாக கொண்டாடப்பட்ட அவர் பெயரை நான் சொன்னால் இளைய சினிமா ரசிகர்கள் என்னை கிழவன் என்பார்கள்.
அதன் பின் ‘சிந்தனை பொதிந்த’ படங்களை பார்ப்பது சலிப்பூட்டியது. மிகச்சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் அவை. மிக மெல்ல நகர்பவை. ஆசிரியனே ‘பார், நன்றாகப் பார்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பதுபோலிருக்கும். ஆனாலும் இன்று யோசிக்கும்போது அன்று நான் பார்த்த ‘கிளாசிக்’ கலைப்படங்களில் குறைவான படங்களில்தான் என் கனவிலும் நினைவிலும் நீடிக்கும் காட்சிப்படிமங்கள் வந்துள்ளன என்று தோன்றுகிறது.
இன்று இப்படித் தோன்றுகிறது. உச்சகட்ட பிரச்சாரம் வழியாக அன்றைய கலைப்படங்கள் ஒரு சிறு சராராரால் ஒரு சிறுவட்டத்தில் மிகமிகக் கூர்ந்து பார்க்கவைக்கப்பட்டன. அப்படிக் கூர்ந்து பார்த்தமையால்தான் அப்படிமங்கள் உள்ளே சென்றன. ஆனால் இயல்பாக பார்த்து கடந்துவந்த பல பெரிய படங்களின் காட்சிப்படிமங்கள் இன்றும் ஆழமாக நீடித்து வளர்ந்துகொண்டிருக்கின்றன.
இன்று, ஒரு சினிமா விமர்சகனாக அல்லாமல் ரசிகனாக, அகன்ற படங்களைப் பற்றிய என் எண்ணம் மாறிவிட்டிருக்கிறது. அந்தப்படங்கள் அன்றிருந்த தீவிரத் திரைவிமர்சகர்கள் சொன்னதுபோல உதிர்பவை [ephemeral] அல்ல. அவை புதிய தொழில்நுட்பத்தை எதிர்கொண்டு இன்றும் அதே பெருங்கனவுத்தன்மையுடன் நீடிக்கின்றன.
மாறாக அன்று கொண்டாடப்பட்ட அரசியல் சினிமாக்கள், அதிர்ச்சி சினிமாக்கள், சோதனை சினிமாக்கள், சமூகச்சித்தரிப்பு சினிமாக்கள், இருத்தலிய சினிமாக்கள், துளிச்சித்தரிப்பு மட்டும் கொண்ட சினிமாக்கள் முப்பதாண்டுகளுக்குள் பொதுப்பேச்சிலிருந்து மறைந்துவிட்டிருக்கின்றன. இன்றைய சினிமா ரசிகர்களால் நிராகரிக்கவும் படுகின்றன.
இன்று நான் அகன்ற சினிமாக்களைப் பற்றி மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களை எப்படி எதிர்கொள்வேன்?
அ.அகன்ற சினிமா கண்களை நிறைக்கிறது. அதன் வழியாக திரையரங்கில் அமர்ந்திருக்கும் நேரத்தை ஒரு கனவுநிகர் நிலைமையாக ஆக்குகிறது. அதன் வழியாக நம்முள் ஆழ்ந்துசெல்கிறது. நம் கனவை, ஆழுள்ளத்தை நேரடியாகச் சென்றடைகிறது. சிந்திக்க வாய்ப்பளிக்காமையே அவற்றின் பலம். அவை சிந்தனையால் தடுக்கப்படுவதில்லை. அவை தூய அகவய அனுபவமாக ஆகின்றன. நடுவே ஊடாடும் சிந்தனை கலையனுபவத்தை கலைப்பது. ஏனென்றால் உண்மையில் அது சிந்தனை அல்ல- நமக்கு ஏற்கனவே தெரிந்ததை புதிய அனுபவத்தின்மேல் போட்டுப்பார்ப்பதுதான்.
ஆ. அகன்ற சினிமா காட்டும் காட்சிப்படிமங்கள் தன்னியல்பானவை. ஆசிரியனால் சமைக்கப்பட்டு முன்வைக்கப்படுபவை அல்ல. அவை காட்டும் பிரம்மாண்டமான காட்சிச்சட்டகத்தை பார்வையாளன் தன் ஆழுள்ளத்தால் எதிர்கொள்ளும்போது அவை இயல்பாகவே படிமங்களாக ஆகின்றன. கிளியோபாட்ரா படத்தில் கிளியோபாட்ரா தோன்றும் இடத்தில் அந்த மாபெரும் ஊர்தி வெறும் ஆடம்பரம் அல்ல, பார்வையாளனுக்கு அது எகிப்துக்கே படிமமாக ஆகக்கூடும்.
இ. பிரம்மாண்டமான படங்கள் பெரும்பொருட்செலவில் எடுக்கப்படுவதனாலேயே, அவை பொதுவான ரசிகனை உத்தேசிப்பதனாலேயே, அவை பொதுவான ஆழுள்ளம் நோக்கி பேசவேண்டியிருக்கிறது. சமூகத்தின் கூட்டுநனவிலியை நோக்கிப் பேசுவனவாக, அவற்றை வெளிப்படுத்துவனவாக அவை எளிதில் தங்களை மாற்றிக்கொள்கின்றன. அவை சிந்திப்பவனுக்கு சமூகப்பொதுவான உணர்வுகள், கனவுகளுக்குச் செல்ல உதவுகின்றன. கூட்டுநனவிலியை அடைய வழியாகின்றன.
அறிவுஜீவி ரசிகனுக்காக திட்டமிட்டு எடுக்கப்படும் சினிமாக்கள் அவனை நோக்கி பேசுவதனாலேயே ஒரு நேரடித்தன்மை கொள்கின்றன. தொடர்ந்து அவற்றை அவன் பார்க்கையில் அந்த நேரடித்தன்மை சலிப்பூட்டும். அவன் ‘தற்செயலாக’ விரியும் கனவுகளை சினிமாவில் எதிர்பார்ப்பான். அவை அந்தவகை படங்களில் இருக்காது. அவன் அகன்ற படங்களிலேயே அந்த இயல்பான விரிதலை அடையமுடியும்.
பெரிய படங்களை சோதனை முயற்சியாக எடுக்க முடியாது. அவை ஏற்கனவே வெற்றிபெற்ற படங்களை கூர்ந்து கவனித்து அவற்றின் வளர்ச்சியாக தங்களை அமைத்துக் கொள்கின்றன. ஆகவே அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு பெரிய கதையாடலாக ஆகின்றன. அது ஒற்றைப்பெருங்காப்பியம்போல. அது ஒரு சமகாலப் பெருநிகழ்வு. ஆகவே ரசிகனுக்கு முக்கியமானது.
ஈ. பிரம்மாண்டப் படங்களில் ‘ஒரு’ ஆசிரியன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து ஒற்றை ஆளுமையாக அதன்பின் உள்ளனர். அதை ‘கூட்டு ஆசிரியர்’ [Collective Author] என்று சொல்லலாம். பெரிய செவ்விலக்கியங்களில் அவ்வண்ணம் கூட்டு ஆசிரியர் நிகழ்வதுண்டு. ஒரு கல்வியமைப்பு, ஓர் ஆசிரியர் மரபு இணைந்து ஒரு படைப்பை உருவாக்கலாம்.அப்படி பல நூல்கள் உள்ளன.
உதாரணமாக, நம் பேராலயங்கள் கூட்டு ஆசிரியரால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புக்கள். அவற்றுக்குப் பின் ஒரு மனிதனின் அகம் இல்லை, மாறாக ஒரு தொழிற்குழுவின் அகம் உள்ளது. அது பலநூற்றாண்டுகளாக உருவாகித் திரண்டு வருவது. இந்தப் படங்களை ஒரு கூட்டுப் படைப்பூக்க வெளிப்பாடாக கொள்ளலாம்
The Battle of Alexander at Issus (-1529) – Albrecht Altdorfer
இந்தப்படங்களின் முதன்மையான கொடை என்ன? நம்முடைய வரலாற்று அகச்சித்திரம் வெறும் சொற்களாலானது. அதை காட்சிப்படுத்தியாக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நமது சொந்த வாழ்க்கையையே நாம் காட்சியாக ஆக்கவேண்டியிருக்கிறது. அந்த காட்சிப்படுத்தலை சென்ற ஐம்பதாண்டுகளில் நிகழ்த்தியவை இந்தப் படங்களே. நாம் நம் வாழ்க்கையை நம்முள் அகவயச் சித்திரமாக ஆக்க இப்படங்களே வழிவகுத்தன.
அகன்ற படங்களை ‘ஒருவர்’ எடுக்கவில்லை என்பதே அவற்றை கலைப்படைப்பாக ஆக்குகிறது.அங்கே நிகழ்வது ஒரு கலைப்பரிமாற்றம்.ஒரு கூட்டுப்படைப்பியக்கம். அங்கே எழுத்தாளர்கள், சிற்பிகள், ஓவியர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசைக்கலைஞர்கள் என பலருடைய பங்களிப்பு நிகழ்கிறது. அவை ஒரு புள்ளியில் ஒன்றாக ஆகின்றன. ஒவ்வொருவரும் அவரிடம் இருந்ததை விட மேலான ஒரு கலைப்படைப்பு நிகழ்ந்து விட்டிருப்பதை காண்கிறார்கள்.
வின்சென்ட் வான்கோஇந்த அபூர்வமான அனுபவம் நிகழ்வதனால்தான் பெரும் திரைக்கலைஞர்கள் அகன்ற படம் மேல் மாளாத மோகம் கொண்டிருக்கிறார்கள். கனவை நிகழ்த்துவதே கலைஞனின் விழைவாக எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. அதன் சுவையை அறிந்தவன் எளிய அரசியல், எளிய உளவியல், எளிய சமூக உண்மைகளை பொருட்டாக நினைக்க மாட்டான்.
இன்று எவரானாலும் நிலம், வரலாறு, போர் முதலிய வாழ்க்கைக்களங்கள் ஆகியவற்றை இந்தவகை அகன்றவகைப் படங்கள் வழியாகவே தங்கள் அகத்துள் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அந்தரங்கமாகப் பார்த்தால் உணரலாம். இந்த அகன்ற சினிமாக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு மாபெரும் கனவு வெளியாக மாறி நம் கனவை, நம் கற்பனைப்பரப்பைச் சமைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்று இது.
The Death of Major Peirson, 1783 .John Singleton Copley.
இதற்கிணையான சென்றகால நிகழ்வுகள் உண்டா? இப்படி காலத்தை காட்சியாக சமைத்துக்கொண்ட கலை இயக்கங்கள் என்னென்ன?
முதலில் தோன்றுவது ஐரோப்பிய நவீனச் செவ்வியல் ஓவியமரபுதான். மைக்கேலாஞ்சலோ முதல் ரெம்பிராண்ட் வரை. தொன்ம நிகழ்வுகள், தொன்மநிலங்கள், தொன்ம மனிதர்கள் அவர்களால்தான் காட்சியாக ஆக்கப் பட்டன. மாபெரும் போர்க்களங்கள், கடற்கொந்தளிப்புக்கள், கட்டிடங்கள், நகர்ச்சதுக்கங்கள், பனிப்புயல்கள், வசந்தகாலப் பொலிவுகள், அலங்காரத் தோற்றங்கள் என வரைந்து குவித்திருக்கிறார்கள். அதனூடாக ஐரோப்பிய பண்பாடே ‘கண்ணுக்குத்தெரியும்’ ஒன்றாக ஆகியது.
ஐரோப்பிய இலக்கியம் செழுமையுற அந்த ஓவியமரபு அளித்த கொடை மிகப்பெரியது. சொல்லில் எழும் சித்தரிப்புகளை மிக எளிதாக கனவாக, காட்சியாக ஆக்கிக்கொள்ள ஐரோப்பியர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன அவை. உலகமே ஐரோப்பிய இலக்கியம் மீது நின்றுதான் தன் நவீன இலக்கியத்தை, நவீனக்கலையை உருவாக்கிக் கொண்டது. உலகமரபின் மாபெரும் கலைப்பேரியக்கம் ஐரோப்பிய நவீனச்செவ்விய ஓவிய மரபுதான் என்றுகூடச் சொல்லிவிடலாம்.
ஐரோப்பிய நவீனச் செவ்வியல் ஓவிய மரபின் நீட்சிதான் இன்றைய சினிமா. இன்றுகூட திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் பெரும் பித்துடன் ரெம்ப்ராண்டை பார்த்துக்கொண்டே இருப்பதை கவனித்திருக்கிறேன். ஐரோப்பிய நவீனச் செவ்வியல் ஓவிய மரபுக்கு அடுத்தபடியாக ஜப்பானிய நவீனச் செவ்வியல் ஓவிய மரபைச் சொல்லலாம்.
அந்த அளவுக்கு இல்லையென்றாலும் உலகில் பல காட்சிப்படுத்தல் இயக்கங்கள் வரலாற்றில் உள்ளன என்பதைக் காணலாம். சொல்லப்போனால் ஒரு பேரரசு தனக்கான காட்சிப்படுத்தல் முறை ஒன்றையும் உருவாக்கிக் கொண்டிருக்கும். ஏனென்றால் அது தனக்கான வரலாற்றை உருவாக்க முயல்கிறது. தனக்கு முன்னோடியாக ஒரு வரலாற்றை கட்டமைக்கிறது, தன் வரலாற்றை எதிர்காலத்துக்காகப் பதிவுசெய்கிறது.
தமிழ்வரலாற்றின் பேரரசுக்காலம் என்பது சோழர்களின் முந்நூறாண்டுகள். அவர்கள் இந்த ‘அகன்ற சினிமாவை’ கல்லில் உருவாக்கியிருப்பதை கோயில்கள் தோறும் காணலாம். ஆலயச்சுவர்களின் புடைப்புச்சிற்பங்கள் ஒருவகை கல்ஓவியங்கள். எத்தனை பிரம்மாண்டமானவை அவை. பெரும் போர்க்களங்கள், திருவிழாக்கள், அரச ஊர்வலங்கள் என எத்தனை பெரிய படச்சட்டகங்கள். கம்பராமாயணத்தின் யுத்தகாண்டத்தையும், கலிங்கத்துப் பரணியையும் அந்த காட்சிச்சட்டகங்கள் வழியாகவே பொருள்கொள்ள முடியும்.
அருண்மொழியின் தொடக்கம்
திருமணமாகும் முன்பு அருண்மொழி கொஞ்சம் கொஞ்சம் எழுதிக்கொண்டிருந்தாள். இளமை முதல் தீவிரமான வாசகி. எதையாவது எழுது என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் தீவிரவாசகர்களுக்கு உருவாகும் ஒரு தயக்கம் அவளுக்கு தடையாக இருந்தது. ‘எழுதினால் ஜானகிராமனில் இருந்து தொடங்கி மேலே செல்வதுபோல எழுதவேண்டும், நான் எழுதியதை நானே வாசித்தால் என்னுள் இருக்கும் ஜானகிராமனின், அசோகமித்திரனின் வாசகி கூச்சப்படக்கூடாது’ என்றாள்.
ஆனால் அப்படி கடந்துசெல்வதென்பது ஒரு கனவாகவே இளமையில் திகழமுடியும். எழுத்து வசப்பட எழுதியாகவேண்டும். அதற்கு எழுத்தின்மேல் மோகம் இருக்கவேண்டும். நம்பிக்கை இருக்கவேண்டும். எழுத்து தன்னளவில் ஒரு கொண்டாட்டமாக ஆகும்போது நாம் எழுதிக் கொண்டே இருக்கிறோம். எழுத்தினூடாக நாம் நம் எல்லைகளை கடந்து செல்கிறோம். நமது சாத்தியங்களைக் கண்டடைகிறோம். நம் மிகச்சிறந்த வெளிப்பாடுகளை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறோம்.
அதற்கு எழுதுவதை எழுத்தின் இன்பத்தின்பொருட்டு மட்டுமே செய்ய ஆரம்பிக்கவேண்டும். ஆணவமும் அங்கீகாரத்தேடலும் ஊடாக வரக்கூடாது. எழுத்தில் மட்டுமே முழுமையாக வாழ்பவர்களே எழுத்தாளர்கள் ஆகிறார்கள். எழுத்தில் புகுந்தால் தனக்கான உலகை உருவாக்கிக் கொள்பவர்கள். அதன்பொருட்டு வேறெதையும் விட்டுவிடுபவர்கள்.
அதை அருண்மொழிக்குச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அந்தத் தயக்கத்தைக் கடந்து அவள் எழுத கொரோனாக்கால தனிமை தேவைப்பட்டிருக்கிறது. அவளுடைய வலைப்பக்கம். இதில் தன் வாழ்வனுபவக் குறிப்புகளாக எழுத தொடங்கியிருக்கிறாள். வெறும் வாழ்க்கைக் குறிப்பு என்றாலும் புனைகதை எழுத்தாளரின் இரு பண்புகள் அழகுற வெளிப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களை விரைவான சொற்கோடுகள் வழியாக உருவாக்க முடிந்திருக்கிறது. புறவுலகை படிமங்களாக்கி அகம்நோக்கி கொண்டுசெல்ல முடிந்திருக்கிறது. இக்குறிப்பில் இருக்கும் காவேரி ஓர் ஆறு மட்டும் அல்ல.
அருண்மொழி எழுத்தில் இருக்கும் மகிழ்ச்சியை கண்டடைந்தால், அதன்பொருட்டு மட்டுமே எழுதத் தொடங்கினால், அவள் தான் மட்டுமே வாழும் ஒரு பொன்னுலகை சென்றுசேர்வாள். வாழ்த்துக்கள்
மரபிசையும் காவிரியும்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

