Jeyamohan's Blog, page 991
May 7, 2021
வெள்ளிநிலம்- சிறுமியின் விமர்சனம்
பெயர் : ரியா ரோஷன்.வகுப்பு: ஏழாம் வகுப்பு.வயது :12, இடம்: சென்னை
இந்த புத்தகத்தை விடுமுறையில் படிப்பதற்காக என் அம்மா எனக்கு வாங்கி கொடுத்தார். ஜெயமோகன் அவர்கள் எழுதிய புத்தகங்களில் நான் படிக்கும் முதல் புத்தகம் இது. அவர் என் மாமாவிற்கும், பாட்டியிற்கும் பிடித்த எழுத்தாளர். புத்தகத்தில் மொத்தம் 28 chapters. படித்து முடிக்க ஒரு மாதம் ஆனது. கதை என்னவென்று சுருக்கமாக கொடுத்து இருக்கிறேன்.
கதை : டிபெட்டில் ஒரு பௌத்த மடாலயத்திற்கு அருகில் தோண்டும் போது ஒரு மம்மி கிடைக்கிறது. மம்மியை ராணுவத்தை சேர்ந்த கேப்டன் பாண்டியன் பாதுகாக்கிறார். அதை திருட திருடர்கள் திட்டம் போடுகிறார்கள். கேப்டன் பாண்டியனுடன் சேர்ந்து டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், சிறுவன் நோர்பா, அவனுடைய நாய்க்குட்டி நாக்போ என்று ஒரு team உருவாகும். மற்றும் அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இந்த கதையே.
History+Geography +Mystery +GK எல்லாம் சேர்ந்த கதை இது.
History- பௌத்த மதம், பான் மதம் அதன் தெய்வங்கள், சீன எழுத்துக்கள் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
Geography – பனிமலை பிரதேசத்தில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் அவர்களின் உடை, உணவு,நிலப்பரப்பு, சூரியன் உதிப்பது, Climate போன்ற செய்திகள் இருந்தது.
GK- ஒவ்வொரு chapter யிலும் ஒரு புகைப்படத்துடன் GK facts இருந்தது.Spyware, Drone போன்ற சுவாரசியமான தகவல்கள்.
கதாபாத்திரங்கள்:
கேப்டன் பாண்டியன்: இவர் தான் இந்த கதையின் ஹீரோ. இவர் பனிமனிதன் என்ற புத்தகத்திலும் வருவாராம், ஆனால் பனிமனிதன் இனிமேல் தான் நான் படிக்க வேண்டும்.
டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் :
இவர் ஒரு புத்திசாலியான ஆராய்ச்சியாளர்.
நோர்பா:
அட்டைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி சிறுவன் இவன்தான். இவனுக்கு வரையும் talent உண்டு.
நாக்போ : இவன் நோர்பா வளர்க்கும் நாய்க்குட்டி. கதை முழுவதும் காமெடியனாக இருந்துவிட்டு கிளைமாக்ஸில் ஹீரோ வேலை செய்யும் cute and smart நாய்க்குட்டி.
இவர்கள் எல்லாம் சேர்ந்த ஒரு mystery கதையே வெள்ளி நிலம்.
கதையில் விதவிதமான உணவு பண்டங்கள் இருந்தது. துக்பா நூடுல்ஸ், Chowmein, Momos. Kashmiri kahwa என்ற டீ.கேக் மாதிரியான ஒரு பிஸ்கட்.
இந்த கதை குளிரான இடத்தில் நடப்பதால் இந்த வெயில் காலத்தில் படிப்பதற்கு சுகமாக இருந்தது.
நன்றி
ரியா ரோஷன்
வெள்ளிநிலம்- கடிதம் வெள்ளிநிலம் -குழந்தை வாசிப்பு வெள்ளிநிலம் நாவல் சுட்டிவிகடன் -வெள்ளிநிலம் பற்றி வெள்ளிநிலத்தில்…உரைகள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெமோ,
இலக்கிய படைப்புகளுக்கு ஒலிவழி என்பது என் தேர்வாக எப்போதும் இருப்பதில்லை. படித்தல் வழி மெதுவாக நமக்குள் இறங்கி, புரிதலாக நம்மோடு கலக்க அதற்ககு தேவைப்படும் நேரத்தை இந்த ஒலிநூல்கள் நமக்கு கொடுப்பதில்லை என்பது என் எண்ணம். இறுதியில் ஒரு இலக்கியப் படைப்பில் கதையை “தெரிந்து” கொள்கிறோம், அவ்வளவுதான். எனவே இலக்கியத்துக்கு ஓலிநூல்களை யாருக்கும் பரிந்துரைக்கக்கூட மாட்டேன். ஆனால் தகவல்கள் மற்றும் கருத்துக்களை “தெரிந்துகொள்வதை” முதன்மையாக வைக்கும் அபுனைவுகளை ஒலிவழி கேட்பதில் எனக்கு பிரச்சனை இல்லை.
இதில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும், இலக்கியமாக இருந்தாலும் மீள் வாசிப்பிற்கு ஒலி நூல்கள் நன்றாகவே இருக்கிறது. வெண்முரசை மீண்டும் முதலில் இருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்து அது தள்ளிபோய்க் கொண்டே இருந்தது. அப்போது நமது காயத்ரி சித்தார்த் வெண்முரசை ஒலிநூலாக கொண்டுவர, ஒரு விலகல் மனநிலையில்தான் அதை கேட்க ஆரம்பித்தேன். ஒன்றை கேட்க ஆரம்பித்து பின் தொடர்ச்சியாக எல்லாவற்றையும் கேட்டேன். அதில் கதையோடு பயணம் செய்ய எனக்கு எந்த சிரமமும் இல்லை, காயத்ரியின் கதை சொல்லல் தேவையான நிதானத்துடன், மிக தெளிவாக இருந்தது. மிக சிறப்பான பணி. எனவே மீள் வாசிப்பிற்கு ஒலிநுல்கள் சரி போல்தான் தோன்றுகிறது.
ஆனால் முனைவர் ஆய்வுக்கே கூட எவரும் எதையும் வாசிப்பதில்லை என்று ஒருவர் சொன்னதாக சொன்னீர்கள், ஆச்சர்யமாக இருந்தது. வாசிக்காத எதுவும் அறிவாக சேகரமாவது இல்லை அல்லது “முழுமை” கொள்வது இல்லை. அறிவியல் உலகில் மேலதிக கேள்வி கேட்பது, தவறுகளை சுட்டுவது, விவாதிப்பது என்பது மிக அவசியமான ஒவ்வொருநாள் நடைமுறை என்பதால் எப்போதும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பொதுவில் பிரசண்ட் பண்ணுவது என்பது வழமை, எனவே டேட்டா பிரசண்ட் பண்ணுவது, கருத்தரங்குகள் இயல்பானது, இப்போது கோவிட் காலம் என்பதால் அவை இணைய உரைகளாக இருக்கின்றன. ஆனால் இன்றும் ஆராய்ச்சி பிரிவில் இது ஒரு சிறு பகுதிதான், அவரவர் துறை சார்ந்த தற்போதைய ஆராய்ச்சி கட்டுரைகளை, தரவுகளை, மூலக் குறிப்புகளை தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பது என்பதுதான் பெரும்பகுதி.
உண்மையில் இணைய காணொளி/ஒலிகளில் தொடர்ந்த கவனம் சாத்தியமில்லாததாகத்தான் இருக்கிறது. மனம் கவனப்பிசகாகி பின் திரும்ப அதை கூட்டிக் கொண்டு வரணும். ஒரு குறிப்பிட்ட சிறு சிறு இடைவெளிகளில் இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உங்கள் உரைகள் எல்லாமே மிகத் தெளிவானவை, ஜெமோ. உங்கள் உரைகளுக்கும் ஒரு அமைப்பு, வடிவம் உண்டு. முன்தயார் செய்யப்பட்டதற்கான கோர்வை உண்டு, ஆனால் மிக கவனமாக தயார் செய்யப்படும் உரைகளில் இருக்கும் ஒரு “உறுதித்தன்மை” rigidity இருப்பதில்லை, இலகுவாக இருக்கிறது, எனவே அவை சலிப்பதில்லை, உங்கள் உரைகளை கேட்க்கும்போது அதன் தகவல்கள் வழி பயணம் செய்ய முடிகிறது. அதனால் உரை முடிந்தவுடன், முழுவதையும் திரும்ப சொல்லச் சொன்னால் கூட அதன் வடிவ ஒழுங்கால் திரும்ப சொல்லுவது சாத்தியமானதுதான்.
உங்கள் உரைகளை ஒலிவடிவில் Podcast ல் ஏற்றி வைத்திருக்கிறேன்.
விருப்பமானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Apple Podcast
https://podcasts.apple.com/sg/podcast/jeyamohan-audio/id1562533731
Google Podcast
https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy81NjQxNTljOC9wb2RjYXN0L3Jzcw
Spotify
https://open.spotify.com/show/2hNLeSj2mU5WbHXM47SRow
Radio Public
https://radiopublic.com/jeyamohan-audio-Wx2N2o
அன்புடன்
சரவணன் விவேகானந்தன்
May 6, 2021
ஆடை களைதல்
வணக்கம் ஜெமோ
மிச்சக்கதைகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரையை இந்த இரவில் கேட்டுக்கொண்டிருந்தேன் .அதை பாதியிலேயே நிறுத்துவிட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற எனது நீண்டநாளைய ஆசையை இப்போது செய்துகொண்டிருக்கிறேன் .
நாட்டாரியல் _ செவ்வியல் குறித்து நீங்கள் முன்வைத்ததைக் கேட்ட பிறகு மனம் சும்மா இருக்கமாட்டேன் என்கிறது . யோசனை எங்கெங்கோ அறுத்துக்கொண்டு ஓடுகிறது.முத்தாரம்மன் பாடல் கேட்டு சுரா ஓடினார் அல்லவா அதே மனநிலையில்தான் நீண்டகாலமாக இருக்கிறேன் . நவீன இலக்கியத்தின் அறிமுகத்திற்கு முன்பாகவே கன்னியாகுமரியில் முதன் முதலாக கடல்பார்த்தபோது ஒரு பிரமாண்டமான போதாமையும் , தனிமையுணர்ச்சியும் வெறுமையும் உண்டானது .
அதன் பிறகு விவேகானந்தர் , ராமகிருஷ்ணர் , கண்ணதாசன் என புரிந்தும் புரியாமலும் படித்தேன் . நாஞ்சிலின் ஒரு கட்டுரையின் மூலம் நவீன இலக்கியம் அறிமுகமானது .தொடக்கமே நகுலனும் , சுராவும் , அசோகமித்திரனும்தான் . சுராவின் ஜே.ஜே வும் , நகுலனின் நினைவுப்பாதையையும் படித்துவிட்டு நான்குமாதம் வேலைக்கு போகாமல் திரிந்தேன் இனி இந்த வாழ்க்கையில் அடையவேண்டியது என ஏதுமில்லையென .
பிறகு சாரு படித்தேன் . சாருவின் எழுத்து அதிர்ச்சியோ ஆச்சரியமோ அளிக்கவில்லை . ஆனால் சிந்தனை ரீதியாக அடுத்த தளத்தை நோக்கி நகர்த்தியது சாருவுடைய எழுத்து . பிறகு மனுஷ்யபுத்திரனின் கவிதை உலகம் எனது எல்லா ஸ்திதிகளையும் குலைத்தது . அதன்பின்பு நகுலன் , ஆத்மாநாம் , பெருந்தேவி , குமரகுருபரன் ஆகியோருடைய கவிதையுலகம் ஏழுவருடங்களுங்கு முன் கன்னியாகுமரியில் கடல்பார்த்தபோது உண்டானன உணர்வுகளை மேலதிகமாய் பெருக்கின .
இப்போது கொஞ்சம் கவிதைகளும் எழுதுகிறேன் .சமீபத்தில் எனது கவிதைகள் குறித்து இரு மூத்தக் கவிஞர்கள் பேசினார்கள் . எனது சொற்களில் இருக்கும் துயரமும் கசப்பும் எரிச்சலும் நவீன இலக்கியம் – சு.ரா போன்ற முன்னோடிகளின் மேலைத்தேய சிந்தனை மரபு அல்லதே கலை மரபு – கையளித்தது என . வறட்சியான மனநிலை சிறுவயதிலிருந்தே இருந்துவந்திருக்கிறது . அதை என்காலம் எனக்கு கையளித்திருப்பதாக உணர்கிறேன் .புலம்பெயர்வின் உதிரி வாழ்க்கைமுறை .
சென்றவருடம் அபிக்கு விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தேன் . கவிஞர் பெருந்தேவியின் அமர்வில் நீங்களும் இருந்தீர்கள் . பெருந்தேவியிடம் சு.வேணுகோபாலும் , லட்சுமி மணிவண்ணனும் கேட்ட கேள்விகள்
1 .உங்கள் கவிதைகளில் மரபு எங்கே இருக்கிறது ?
2 . நிக்கனார் பார்ராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் ?
3 . இது ஒருமாதிரியான மேலைநாட்டு இலக்கிய மோகத்தால் எழுப்படுவதுபோல இருக்கிறது ?
4 . நகுலன் கவிதைகளில்கூட மரபு இருக்கிறது . உங்கள் கவிதைகளில் ஏன் இல்லை ?
இந்த கேள்விகளுக்கான பதில்களை பெருந்தேவி அளித்தார். ஆனாலும் அங்கிருந்து திரும்பி பிறகு மரபு குறித்து யோசித்துக்கொண்டே இருந்தேன் . இந்த நாள்வரை அப்படித்தான் இருக்கிறேன் .
நகுலனின் ஒரு கவிதையில் குடிக்க அமரந்திருப்பார்கள் இரு நண்பர்கள் .அதில் கடைசிவரி. ” இந்த சாவிலும் சுகமுண்டு ” என ஒரு வரி வரும். ஒருவனுக்கு தன் நண்பனுடன் இருக்கும்போது வாழ்க்கையைப்பற்றிய கனவுகளின் வண்ணங்கள் அல்லவா மிளிர வேண்டும் ? . மாறாக ஏன் சாகத் தோன்றுகிறது. எனக்கும் என் காதலி அருகில் இருந்தால் கூட சில கணங்களிலேயே மனம் முற்றாய் அங்கிருந்து விலகி ஒருவிதமான இருண்மையில் ஸ்திதி கொள்கிறது . இது ஏன் இப்படி நிகழ்கிறது என்பதும் தெரியவில்லை .
ஆனால் நீங்கள் மரபும் நவீனமும் என்ற ஒரு உரையில் ” இனி நாகர்கோவில் கவிதை , தஞ்சாவூர் கவிதை என எழுதமுடியாது ” என்றும் நவீனத்துவத்தின் அத்தியவசியமான கூறுகளையும் நிறுவினீர்கள் . ” மரபை ஏற்பதும் மறுப்பதும் ” என்ற உரையில் நீங்கள் சொன்ன பண்பாட்டு மரபும் , குருதி மரபும் பெரும் வெளிச்சமாக இருந்தது .இருந்தும் இதுசார்ந்த இத்தனை பேச்சுகளுக்கு அப்பாலும் அது புகைமூட்டமாகவே இருக்கிறது . சமயங்களில் பாவனையாகக்கூட தோன்றுகிறது.
ஏனெனில் ஒருநாளில் பெரும்பாலான நேரம் எனை ஓர் தனித்த உயிரியாக உலகில் முதல் தோன்றிய ஒரு உயிரியின் தனிமையுடன் உணர்கிறேன். இதையெல்லாம் சொல்லி உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும் ஆசானே .என் ஒரே கேள்வி இதுதான் நான் என்னை உதிரியாக நினைக்கவில்லை உறுதியாகவே உணர்கிறேன் ரத்தமும் சதையுமாக. எனை ஒருபோதும் எதன் தொடர்ச்சியாகவும உணர முடியவில்லை . தமிழ் கூட பழக்கத்தின் காரணமாக அல்லது சூழலில் காரணமாக மட்டுமே இருப்பதாக மனதார உணர்கிறேன்.
ஆனால் இந்தத் தன்மையை நவீன இலக்கியம்தான் கையளித்ததா ? அல்லதுஇந்த உணர்வில் இவ்விலக்கியங்கள் கூடுதலான அழுத்தங்களை கையளிக்கிறதா? மேலும் யாருடைய எழுத்தும் எந்தக் கலையும் இந்த வெற்றிடத்தை நிரப்பவியலாத போதாமையுடன் இருப்பதாகவும் சமீபமாக உணர்கிறேன் . உண்மையில் நீங்கள் கூறியதுபோல இந்த ஆதித்தனிமையின் தகிப்பை பதிலீடு செய்யத்தான் இவ்வளவுமா ?
சரியா தவறா என்றெல்லாம் தெரியவில்லை ஆசானே .ஆசான் என மனதார வேண்டி நிற்கிறேன் . வாழ் ஞானத்தை கையளிக்கவும் . .
சியர்ஸுடன்
சதீஷ்குமார் சீனிவாசன்
அன்புள்ள சதீஷ்குமார்,
என் படைப்புக்களில் ‘அதிநவீனத்துவ’ வாசகர்கள் பெரும்பாலும் வாசிக்காத ஒரு படைப்பு விஷ்ணுபுரம். அவர்கள் தங்களை நவீனமானவர்கள் என்று எண்ணிக்கொள்வதனால் அதை பழையது, புராணம் என உருவகித்துக் கொள்கிறார்கள். அவர்களில் பலருக்கு வரலாறு, தொன்மம் சார்ந்து ஆரம்ப அறிமுகம்கூட இருப்பதில்லை. பெரும்பாலானவர்களால் இருநூறு பக்கங்களுக்குமேல் படிக்க முடிவதில்லை.
ஒரு கட்டத்திற்குமேல் குடி. இந்தியாவின் மதுவகைகளை ஓராண்டுக்குமேல் குடிப்பவர்களால் மூளையுழைப்பு செலுத்த முடியாது. கண்ணுக்கும் உடலுக்குமான ஒத்திசைவு இல்லாமலாகும். சில பக்கங்கள் படிக்கையிலேயே மூளைக்களைப்பும் அதிலிருந்து எரிச்சலும் உருவாகும். இங்கே கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும் கவிதையை பழகுவதை விட குடியைப் பழகியிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் விஷ்ணுபுரம் பற்றிய செவிவழிச்செய்தியையே அறிந்திருப்பார்கள்.
விஷ்ணுபுரத்தின் முக்கியமான பேசுபொருட்களில் ஒன்று, அல்லது மொத்தநாவலுமே அதைப்பற்றித்தான், ‘தேடலும் பாவனைகளும்’ தான். மெய்மையை தேடுபவர்கள் தலைமுறை தலைமுறைகளாக தோன்றிக்கொண்டே இருப்பதைச் சொல்கிறது அந்நாவல். அவர்களிடமிருக்கும் பாவனைகள் அனைத்தையும் எடுத்து வைக்கிறது. இன்றைய இலக்கியவாதி, அறிவுஜீவி எதில் திளைக்கிறானோ அந்த பாவனைகளின் பெருங்கடல் விஷ்ணுபுரத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
மெய்மையை நாடுபவனின் இயல்புகளில் முதன்மையானது தன்னுணர்வு. அதை அவன் ஆணவமாக ஆக்கிக்கொள்கிறான். நான் ‘மற்றவர்களை’ போல அல்ல , நான் வேறானவன் என்ற தன்னுணர்வே அவனுடைய அடிப்படை விசை. ஆகவே அவன் தன்னை வாழ்வதைவிட வாழ்க்கையை அறிவதை தலைக்கொள்பவன் என்று சித்தரித்துக் கொள்கிறான்.
அதன் பின் அந்த மெய்நாடுவோர் அனைவரும் செய்வது தங்களைத் தாங்களே ‘சித்தரித்துக்கொள்வது’ தான். அதை நடிப்பு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அது பொய் அல்ல. அது ஒருவகை உண்மை. ஒருவன் தன்னை ஒருவகையாக முன்வைத்துக்கொண்டே இருக்கையில் உண்மையாகவே அப்படி தன்னை ஆக்கிக்கொண்டும் இருக்கிறான். அப்படியே திகழ்கிறான்.
அதாவது பொதுவாக மனிதனின் இருப்பு என்பது அவனுடைய வெளிப்பாடுதான். அதற்கு அப்பால் அவனுக்கு ஓர் இருப்பு உண்டு என்றால் அதை அறிவதும் அதுவாக ஆவதும் அத்தனை எளிதல்ல. அதையே யோகம் என்கிறார்கள். யோகம் என்றால் இரண்டின்மை. இரண்டின்மை என்பது இங்கே இருத்தலும் வெளிப்பாடும் ஒன்றே என ஆகும் நிலை.
விஷ்ணுபுரத்தில் தத்துவவாதிகள், கவிஞர்கள், ஞானப்பயணிகள் கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட பாவனைகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றிய விமர்சனங்களும் கிண்டல்களும் கூட உள்ளன. அவற்றை எழுத என்னால் இயன்றது ஏனென்ன்றால் நான் அவற்றில் சிலவற்றினூடாக சென்றிருக்கிறேன். பலவற்றை கற்பனையில் நிகழ்த்தியிருக்கிறேன். ஏராளமானவற்றை கண்டிருக்கிறேன்.
விஷ்ணுபுரத்தில் ஒருவர் ‘ஞானத்தை தேடிச்சென்று முடிவிலியில் கரைபவர்’ என்ற வேடத்தை நடிப்பார். ஒருவர் ‘ஞானத்தின் பொருட்டு கடைசியில் செத்துக்கிடப்பவர்’ என்பதை நடிப்பார். “ஞானமென ஒன்றில்லை, அது பொய்’ என்ற பாவனையை ஒருவர் நடிப்பார். ‘ஞானத்துக்கு எதிரான பொறுக்கி’ என ஒருவர் தன்னை ஆக்கிக்கொள்வார். எதுசெய்தாலும் அது ஒரு பாவனையாகவே ஆகிவிடும் நச்சுச் சூழல் அந்நாவலில் உள்ளது.
முடிந்தால் அதைப் படியுங்கள். அதன்பின் அப்படியே அதை நம் சமகால வாழ்க்கைக்குக் கொண்டுவாருங்கள். நாம் எங்கிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளுங்கள். இன்றைய சூழல் ஏதோ இப்போது உருவான ஒரு அரியுநிகழ்வு என்று எண்ணிக்கொள்கிறோம். இது இப்படியே மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் இருந்துகொண்டிருக்கிறது.
நான் சொல்ல வருவது, நாம் என நாம் முன்வைக்கும் ஆளுமையை நாம் அப்படியே நம்பிக்கொள்ளத்தான் வேண்டுமா என்றுதான். கலகக்காரனாக, நம்பிக்கையிழந்தவனாக, புரட்சியாளனாக, பிடிப்பற்றவனாக, தீவிரநம்பிக்கையாளனாக, இன்னும் என்னென்னவோ ஆக. இதெல்லாம் நாம்தானா? இவற்றை இங்கே இவர்கள்முன் வைத்துவிட்டு இதற்குள் ஒளிந்திருக்கிறோமா?
சர்க்கஸ் கோமாளியாக வேடமிட்டு தெருவில் ஆடும் ஒருவரை இளமையில் எனக்கு அறிமுகமிருந்தது. ‘சீரியசான’ ஆள் அவர். சிடுசிடுப்பானவர். ஆனால் அந்த கோமாளிமுகத்தை வேடமிட்டுக்கொண்டதும், வாயில் அந்தச் செயற்கை இளிப்பு பொருத்தப்பட்டதும், உற்சாகமான கோமாளி ஆகிவிடுவார். அந்தர்பல்டி அடிப்பார். மெய்யாகவே வெடித்துச் சிரிக்கவைக்கும் நகைச்சுவைகளைச் செய்வார்.
நாம் அணிந்துகொள்ளும் முகங்களை நாமே ஈவிரக்கமில்லாமல் பார்க்கவும் பரிசீலிக்கவும் முடிந்தால் மட்டுமே நாம் எழுத்தாளர், கவிஞர்.எந்த வகையான தத்துவச்செயல்பாடும், இலக்கியச்செயல்பாடும், ஆன்மிகச் செயல்பாடும் முதன்மையாக தன்னைக் கண்டடைதல்தான். தன்னுள்ளே ஆழ்ந்துசென்று வரலாற்றையும் பண்பாட்டையும் கண்டடைதல். இயற்கையையும் விசும்பையும்கூட தன்னுள் செல்வதனூடாகக் கண்டடைதல்.
அதற்கு மிகப்பெரிய தடையாக அமைவதென்ன? தன்னை தான் தேடத் தொடங்குவதற்கு முன்னரே தன்னை வரையறைசெய்துகொள்ளுதல். தன்னை முற்றாக கட்டமைத்துக்கொள்ளுதல். தன்னை அப்படி முன்வைக்க தொடங்குதல். படிப்படியாக அதற்குரிய வாழ்க்கைமுறையையும் அதற்குரிய உளநிலையையும் உருவாக்கிக் கொள்ளுதல்.மீளமுடியாதபடி அந்த வேடத்திலேயே சிக்கிக் கொள்ளுதல்.
இளையோர், குறிப்பாக கவிதை எழுதுவோர், அவ்வாறு சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முகமூடிகளுடன் என் முன் வந்து நின்றிருப்பதை காண்கிறேன். எங்கும் அந்த முகங்களுடன் சென்று தங்களை நிறுத்துகிறார்கள். பார்ப்பவர் எவரும் அதை முழுக்க நம்பப் போவதில்லை. அது அவர்களுக்கும் தெரியும், ஆகவே அதைக் கொஞ்சம் மிகையாகவே நடிக்கிறார்கள்.ஜேம்ஸ்பாண்டும் நம் நவீனக்கவிஞர்களும் தான் licensed to overkill.
உங்களைப் பற்றி நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொள்கிறேன். உங்களுக்கு செவ்வியல்,நாட்டார் மரபுகளில் ஈடுபாடில்லை. எந்த இடத்திலும் வேர்கள் இல்லை. எங்கும் உதிரியாக புறனடையாக உணர்கிறீர்கள். சரி, அவ்வாறு ஒருவர் இருப்பது இயல்பானது. அவ்வாறு அவர் தீவிரமாக மொழிவடிவங்களில் வெளிப்பட்டால் அது இலக்கியம்தான்.
ஆனால் அதுதான் நீங்கள் என இப்போதே ஏன் வகுத்துக்கொள்கிறீர்கள்? அதுதானா நான் என திரும்பத் திரும்ப, முடிவில்லாமல், உசாவவேண்டியதல்லவா கலைஞனின் வேலை?
உண்மையிலேயே நீங்கள் அப்படி என்றால் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பெருமிதமோ சிறுமையுணர்வோ கொள்ளவேண்டியதில்லை. அது ஓர் ஆளுமையியல்பு. அப்படி ஏராளமான ஆளுமைத்தன்மைகள் இலக்கியத்தில் வெளிப்படுகின்றன
அப்படி அல்ல என்று எப்போது தோன்றுகிறதோ அக்கணமே அதுவரை அடைந்த அனைத்தையும் தூக்கிவீசி அப்போது நீங்கள் எவர் என்று தோன்றுகிறதோ அவராக ஆனால்தான் நீங்கள் கலைஞர். நீங்களொன்றும் இந்த வேடத்தை நடித்துக்கொடுக்க முன்பணம் வாங்கி இங்கே வரவில்லை அல்லவா?
ஓர் உதிரி உதிரியாக இருப்பதனாலேயே, உதிரிவாழ்வை எழுதுவதனாலேயே எந்த தகுதியும் வந்துவிடுவதில்லை. அதுபோல ஓரு நிலப்பிரபு அவ்வாறே வெளிப்படுவதனால் எந்த தகுதிக்குறைவும் இலக்கியத்தில் அமைவதில்லை. ஃபாஸிஸ்டுகளை ஆதரித்த பேரிலக்கியவாதிகளின் பெருநிரை உலக இலக்கியத்தில் உண்டு.
இலக்கியம் தேடுவது மெய்மையின் வெளிப்பாட்டை மட்டும்தான். ஒரு வாழ்க்கையின் அகஉண்மை வெளிப்படுகிறதா என்றுதான். அந்த அகஉண்மையினூடாக மானுடத்தின் மெய்மைகளில் ஒன்று வெளிப்பாடு கொள்கிறதா என்பதை மட்டும்தான்.
ஆகவே இலக்கியவாதி என இயங்கும் எவரிடம் சொல்ல எனக்கு ஒன்றே உள்ளது. எது ஒன்றாகவும் ’ஆக’ முயலாதீர்கள். எதுவாகவும் சித்தரித்துக் கொள்ளாதீர்கள். எதுவாக இருக்கிறீர்களோ அதுவாக வெளிப்படுங்கள். அதுவே இலக்கியம். இதைச் சொல்ல எனக்கு நிறைய தகுதி உண்டு. பலவாக ஆக முயன்று கொஞ்சகாலம் என்னை வீணடித்து சுயமாக கண்டுகொண்டவன் நான்.
இலக்கியவாதிக்கு அவன் இருப்பு எதுவாக இருப்பினும் அது ஒரு சவால்தான். கால்பந்தாட்டக்காரனுக்கு பந்து அவனுக்கு அவன் தன்னிலை, அவனுடைய உள்ளம். அதை உதைத்து உதைத்துத்தான் அவன் தன் வெற்றிகளை எய்த முடியும். வேறுவழியே இல்லை. இலக்கியவாதிக்கு அவன் அகம்.
இங்கே ஒவ்வொரு உயிர்க்குலத்திற்கும் மாளாத்தனிமையை இயற்கை அளித்துள்ளது. தெருவோரம் நோயுற்றுச் சாகும் நாய் ஒன்றை பாருங்கள். கூவிக்கூவி அழுது அழுது நைந்து அது சாகிறது. அத்தனை பெரிய தனிமை. அந்த தனிமை மனிதனுக்கும் உண்டு. அதை வெல்லவே சமூகம், குடும்பம், உறவுகள் என உருவாக்கினான். மதங்கள், அரசு, கொள்கைகள் என உருவாக்கினான்.
சாமானியர்கள் குளிருக்குப் போர்த்திக்கொள்வதுபோல அவற்றை ஒன்றன்மேல் ஒன்றென எடுத்து போர்த்திக்கொள்கிறார்கள். ஒரு தேர்தலரசியல் உருவாக்கும் கூட்டுக்களிவெறிக்கு தன்னைக் கொடுக்கும் இலக்கியவாதி அங்கே பாமரனாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். மெய்யான இலக்கியவாதிக்கு அந்த எந்தப்போர்வையும் உகக்காது. அவன் வெட்டவெளியில் நிற்கவேண்டியவன்.
அந்த வெட்டவெளித் தனிமை வதைதான். கைவிடப்பட்ட நிராதரவான இருப்புதான். விளக்கங்கள் அற்ற வெற்றுநிலைதான். ஆனால் அது எவருக்கும் உரியது. ஒன்றுமே செய்ய முடியாது. சரி, திரும்பச்சென்று விடலாமென்றால் அங்கே திரும்ப வாசலே இல்லை.
விஷ்ணுபுரத்துக்கே திரும்ப வருகிறேன். அதில் பிங்கலன் என்னும் கதாபாத்திரம் வினாக்களுடன் கிளம்பிச்சென்று அந்த வெறுமையில் திகைத்து மூளைக்கொதிப்படைந்து தன் ஆசிரியரிடமே திரும்ப வருகிறது. ’என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள், நான் பழைய பக்தனாக ஆகிவிடுகிறேன்’ என்கிறது. ’நீ கேள்விகள் கேட்டுவிட்டாய், இனி திரும்பவே முடியாது’ என்று ஆசிரியர் பதில் சொல்கிறார்.
என் இளமைமுதலே அந்த தனிமையை, விலக்கத்தை, எதிலும் முழுதுற அமையாத அலைதலை அறிந்துகொண்டிருக்கிறேன். இன்றுவரை மேலும் மேலும் கூர்மையாக அந்த தேடல் முன்சென்றுகொண்டேதான் இருக்கிறது. தீவிரம் மேலும் தீவிரம் என. நீள்கையில் மேலும் கூர்கொள்ளும் வாள் என. அத்துன்பத்தில், வலியில், தவிப்பில் ஒரு துளியும் கிடைக்காமல் தவறிவிடக்கூடாது என்றே நான் எண்ணுகிறேன்.
ஆனால் இந்த கொந்தளிப்பை அடைவது என் அகம். அங்கே எரியும் நெருப்பு என் சொத்து. என்னை கலைஞனாக்குவது அது. என் சொற்களில் எரிவதும் அதுவே. அதன்மேல் நான் நீரை அள்ளிக்கொட்டி அணைக்க முயலமாட்டேன். தன் மூளையை மதுவூற்றிச் சேற்றில் சிக்கவைத்து அசைவற்றதாக்கும் கலைஞர்கள் எவர் மேலும் எனக்கு பெரிய மதிப்பில்லை. அதில் எழும் எல்லா பேய்களையும் நேருக்குநேர் நின்று பார்ப்பவர்களே எனக்குரிய கலைஞர்கள்.
குடி ஒரு சாக்கு. முதலில் எளிய அல்லல்களில் இருந்து தப்ப, கூட்டாளிகள் நடுவே இருக்கவேண்டுமென்ற விழைவால், அன்னியனாக தன்னை காட்டிக்கொண்டாகவேண்டும் என்பதனால் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன்பின்னர் அவர்களுக்கு இருப்பது ஆன்மிகச்சிக்கல் அல்ல, தத்துவச்சிக்கல் அல்ல, அழகியல் சிக்கல் அல்ல, இருத்தலியல் சிக்கல் அல்ல, குடி உருவாக்கும் சிக்கல்கள் மட்டுமே.
பொருளியல் சிக்கல், உறவுச்சிக்கல், உடல்நிலைச்சிக்கல் என குடி சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அதை ஆன்மிகச்சிக்கலாக, தத்துவச்சிக்கலாக, அழகியல் சிக்கலாக, இருத்தலியல் சிக்கலாக உருமாற்றிக் காட்டும் பாவனைகளை கற்றுக்கொண்டால் கலகக்கலைஞனாக வாழ்ந்து மடியலாம். நான் இலக்கியத்தில் வந்து முப்பதாண்டுகளாகின்றன. அப்படி இரண்டு மூன்று தலைமுறையினரை கண்டுவிட்டேன்.
ஆகவே உங்களிடம் என்ன சொல்வேன்? எதிர்கொள்க. போதையால், பாவனைகளால் அதை தவிர்க்கவேண்டியதில்லை. எது உங்களுக்குள் உள்ளதோ அதை அப்படியே எதிர்கொள்க. அதை மொழியாக ஆக்கும் பயிற்சியில் இடைவிடாது திகழ்க. வெளிப்பாடு கொள்கையில் அது தன்னியல்பாக இருக்குமென்றால், உங்களை மீறி நிகழுமென்றால் அதுவே கலை.
அவ்வண்ணம் கலை வெளிப்பட்டதென்றால் அக்கணமே அதை ஆமை தன் குஞ்சுகளை கைவிடுவதுபோல விட்டுவிடுங்கள். அடுத்ததற்குச் செல்லுங்கள், மேலும் மேலும் செல்லுங்கள். எழுதியவை உங்களை வரையறை செய்யக்கூடாது. எழுதவிருப்பவற்றை தடுக்கும் மிகப்பெரிய சக்தி அந்த வரையறைதான்.
எழுதும்போதிருக்கும் பரவசம், வெளிப்பாட்டிற்குப்பின் சிலகணங்கள் எழும் தன்னிறைவும் தருக்குதலும் மட்டுமே இந்த வாழ்க்கையில் எதிர்பார்க்கத்தக்க இன்பம். அந்தப் பயணம் கனிந்து தன்னை கண்டடைதலாக, அமைதலாக ஆகுமென்றால் அதுவே எதிர்பார்க்கத்தக்க மீட்பு.
சியர்ஸ் – சுக்குக்காப்பி என்றால் மட்டும்.
ஜெ
கையறு: ஒரு முக்கியமான மலேசிய நாவல்
ஜப்பானியர்கள் 1941 முதல் 1945 வரை ஆடிய கோர தாண்டவமே நாவல் நிகழும் காலகட்டம். பிரிட்டிஷ் அரசின் பிரஜைகளாக இருந்த இந்திய மக்கள் கடல் கடந்து வந்த பின்னர் ஒரே இரவில் அனாதரவாகி தங்களை ஆள்வது யார்? யாருக்கு தாங்கள் அடங்கி இருக்க வேண்டும்? என்று தெரியாத குழப்பத்துடன் கொலைகளுக்கும் வன்புணர்ச்சிக்கும் சூரையாடல்களுக்கும் வற்புறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் பயந்து ஒடுங்கி முடங்கிப்போகின்றனர். எந்தப் பிடியும் கிடைக்காமல் அந்த இல்லாத பெருங்கடலின் இருளில் தத்தளிக்கும் மனநிலையுடன் திணறும் இந்த மக்களின் வாழ்வே கையறு.
கோ.புண்ணியவான்‘கையறு’ எனும் பதம் இந்த நாவலின் தலைப்பு மட்டுமல்ல; நாவலின் ஆன்மாவும் அதுதான். அதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாயிலாகவும் கோ.புண்ணியவான் நிறைத்துச்சென்றுள்ளார்.
கையறு: இல்லாத கடலின் இடையறாத இருள்
இலையின் கதை- கடிதம்
ராய் மாக்ஸம்
ராய் மாக்ஸாம்- மூன்று நூல்கள்
வழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்
கிழக்கு வெளியீடாக சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பில், ராய் மாக்ஸம் எழுதிய தே: ஒரு இலையின் வரலாறு முக்கியமான நூல். 1650 இல் டச்சு வணிகர்கள் வழியே சீனாவின் தே பிரிட்டனுக்கு அறிமுகமாகி, 1750 இல் பிரிட்டனுக்கு தே பைத்தியம் முற்றியது தொடர்ந்து உலக அரங்கில், தே வணிகம் வழியே நிகழ்ந்த மாற்றங்களை விவரிக்கும் நூல்.
பிரிட்டன், சீனா,ஜப்பான், இந்தியா, இலங்கை,ஆப்ரிக்கா என சுற்றி சுழலும் நூல். பிரிட்டன் அரச குடும்பத்துக்கு பரிசாக உள்ளே வந்த தே, 1750 துவங்கி லண்டனில் காபி க்ளப்புகள் வழியே பரவுகிறது. காபி க்ளப்புகளிலும் பல படித்தரங்கள். உயர் பண்பாட்டு மனிதர்கள் அருந்தும் தே வை சாதாரண தொழிலாளியும் அருந்தும் நிலை பெரிய சங்கடங்களை ஆண்டைகளுக்கு உருவாக்கி இருக்கிறது. ஆண்கள் தே குடித்தால் ஆண்மை போய்விடும், வீரம் போயிடும் , கலவி செய்யவோ போர் புரியவோ முடியாது என்ற வகையிலான ஆய்வுகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இதன் மத்தியில்தான், பிரிட்டனில் 1750 இல் 15,000 டன் ஆக தே இறக்குமதி வெறும் 25 ஆண்டில் 50,000 டன் என உயர்ந்திருக்கிறது.
துவக்க அத்தியாயம் முழுக்க பிரம்மாண்ட கடல் கொள்ளையர் வலையும், அவர்கள் வசமிருந்து அதன் முதல் இலக்கான தே அது எவ்வாறு காப்பாற்ற படுகிறது, கொள்ளையருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என விரிகிறது. கொள்ளைக்கு துணை நின்றவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனை. கொள்ளையருக்கு அதிக பட்ச தண்டனை. குறைந்த பட்ச தண்டனையாவது தூக்கு. தூக்கில் போட்டு உயிர் போனதும் உடனடியாக உடலை உறவுகள் வசம் ஒப்படைத்து விடுவார்கள். அதிக பட்ச தண்டனை தூக்கில் போட்டு அந்த உடலை ஊர் மத்தியில் அப்படியே பல நாள் தொங்க போட்டு விடுவார்கள்.
எல்லாமே சீன பண்டைய அரசர்களின் குசும்பிலிருந்து துவங்குகிறது. சீனாவில் ஒரு அரசர். அவர் வருடம் ஒரு முறை முக்கிய தே திருவிழா கொண்டாடுகிறார். அந்த விழாவுக்கு அவர்க்கு தயாராகும் தே, அதன் இலைகள் உண்மையாகவே ஏழு கடல் தாண்டி,ஏழாவது மலையில் விளையும் தே செடியில் இருந்து வருகிறது. அதுவும் குறிப்பிட்ட ஒன்பது மரத்தில், வருடம் ஒரே ஒரு முறை பறிக்கப்படும் 90 இலைகள் மட்டும். அந்த இலையும் தளிர் இலைகள். அதை பட்டுக் கையுரை போட்டு, தங்க கத்திரி கொண்டு வெட்டி எடுக்கிறார்கள். பிறகு அது தே ஆக மாறி பரிமாறப்படும் ராஜ உபசாரம் அது தனி. இதையெல்லாம் மேன்மை தங்கிய பிரிட்டானிய அரியணை விட்டு வைக்குமா என்ன? மொத்தமாக ஒப்பியம் வழியே மொத்த சீனாவையும் அடிமை செய்து ஈடாக தே இலைகளை கரக்கிறது பிரிட்டன். ஒப்பியம் போர்கள், போஸ்டன் தே விருந்து, என நூலின் மத்திய பாகம் முழுக்க தே வணிகத்துடன் இணைந்த போர்க்கள காட்சிகள்தான்.
இந்தியாவுக்குள் தே வரும் தருணம் இந்த நூலின் முக்கிய பகுதி. இண்டிகோ உற்பத்தியை நிறுத்தி சீன தே பயிரிட முயற்சி நடக்கும் சூழலில், அசாமில் காட்டுக்குள் ஒரு ஆங்கிலேயே தாவரவியலாளர் அசாம் மண்ணுக்கு சொந்தமான தே மரத்தை கண்டு பிடிக்கிறார். அங்கே துவங்குகிறது அசாமில் மாற்றம். பர்மியர்கள் படையெடுத்து மொத்த அசாமும் அழிந்து மீண்டும் அது காடாக நிற்கும் சித்திரத்தை நூல் அளிக்கிறது. அசாமியர் ஜனத்தொகையில் சரி பாதியை பர்மியர்கள் படையெடுத்து குறைத்திருக்கிறார்கள். மீண்டும் வனமாக மாறிக்கொண்டிருக்கும் அசாம் மெல்ல மெல்ல தே தோட்டங்களாக மாறும் சித்திரம் வருகிறது. காட்டுக்குள் போனால் புலி அடிக்கும். ஆகவே கண்ணில் படும் புலி எல்லாம் ஆயிரக் கணக்கில் கொல்லப் படுகின்றன. காட்டுக்குள் பயணிக்க அங்குள்ள யானைகள் மொத்தமும் இலவச உழைப்பாளிகளாக மாற்றப் படுகிறது. மொத்த அசாமின் தே தோட்டங்களும் வெறும் 20 வருடங்களில் அங்குள்ள யானைகளால் மட்டுமே உருவாக்கி வளர்த்து எடுக்கப்படுகிறது.
இப்படி இலங்கை, ஆப்ரிக்கா என உலகெங்கும் காலனி தேசங்களில் பிரிட்டன் கொத்தடிமைகளாக கொண்டு வந்த லட்சங்களை தொடும் பஞ்சம் பிழைக்க வந்த இந்தியர்களின் எண்ணிகை அவர்களின் உயிர் குடித்து வளர்ந்த தோட்டங்கள், கிழக்கிந்திய கம்பெனி, ப்ரூக்பொண்ட்,லிப்டன் நிறுவனங்களின் வணிக வெறி, என இரண்டாம் உலகப்போரின் இறுதி வரை தே வணிகம் வழியே பிரிட்டன் நிகழ்த்தியவற்றை விவரிக்கும் நூல். முழுக்க முழுக்க இரும்புத் தனமான அல்லது பிரிட்டிஷ் தனமான இந்த வரலாற்று நூலில், ஒரு சிறிய தீற்றலில் வாசனை கற்பனை சாத்தியங்களுக்குள் தள்ளி விடும் சித்தரிப்புகளும் உண்டு. உதாரணமாக ராய் மலாவி தே தோட்டத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடம் முடிய, அவர் சில மாதம் ஓய்வில் பிரிட்டன் செல்ல விடுமுறை கிடைக்கிறது. அது அவரது 22 ஆவது பிறந்த நாள். நண்பர்களுடன் அங்கே பெண் நடத்தும் விடுதியில் மது கொண்டாட்டம். நன்கு அலங்கரிக்கப்பட்ட மது விடுதி. நன்கு அலங்கரிக்கப்பட்ட காசாளர் மேஜை. அலங்காரங்கள் மத்தியில், ஒரு கண்ணாடி கூஜா நிறைய சாம்பல். அது வேறொன்றும் இல்லை, அந்த விடுதியை நடத்தும் பெண்ணின் கணவரின் அஸ்தி தான் அது :).
கடலூர் சீனு
தே ஓ ர் இலையின் வரலாறு வாங்கபயணம்,பெண்கள் – கடிதம்
அன்புள்ள ஜெ,
சித்திரைப் புத்தாண்டை ஒட்டிய விடுமுறையில் ஒரு பயணம் திட்டமிட்டோம். இங்கு ஏப்ரல் மாதத்தில் சுடர் கொள்ள தொடங்கிய வெம்மையில் இருந்து தற்காலிகமான தப்பித்தலாக நாகர்கோயில் மற்றும் கேரளத்தின் காடுகளை நோக்கி ஐந்து நாட்கள் பயணம். முதலில் நேராக திருவனந்தபுரம் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கொரானா இரண்டாம் அலையில் இ-பாஸ் முதலிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என்பதால், நாகர்கோயில் வந்து அங்கிருந்து பயணத்தைத் தொடங்க முடிவு செய்திருந்தோம்.
முதலில் அன்பரசி சென்னையில் இருந்து திருச்சி வந்து ரயில் நிலையத்தில் எங்களுக்காக காத்திருந்தாள். பிறகு நானும் செல்வராணியும் சேர்ந்துக் கொண்டோம். திருச்சியில் இருந்து வைகை எக்ஸ்பிரஸில் மதுரை. அங்கிருந்து புனலூர் எக்ஸ்பிரஸில் நாகர்கோயில் வந்து இறங்கிய போது விடியற்காலை 4.30 மணி. அதிகாலையில் பயணம் தொடங்குவதன் பரபரப்பு மனதை நிறைக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கோவையில் இருந்து வந்த ரயிலில் மகேஸ்வரி இறங்கினாள். ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து செல்ல சுப்ரமணியன் சார் காருடன் வந்திருந்தார். ஷாகுல் சாரின் நண்பர் மற்றும் தங்களது வாசகர் என்று செல்வா அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு வகையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவே.
முதலில் சென்றது காளிகேசம். காளிகேசம் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தின் முக்கியமான வனப்பகுதி. வழியெங்கும் வாழை ரப்பர் மற்றும் கிராம்பு தோட்டங்களைப் பார்த்து கொண்டு வந்தோம். ரப்பர் தோட்டங்களில் அதிகாலையில் பால் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களைக் காண முடிந்தது. சுப்ரமணியன் அங்கிருந்த வனத்துறை சூழியல் முகாமில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். அறையில் பைகளை வைத்ததும் நேராக காளிகேசம் அருவியை நோக்கி சென்றோம்.
காலை நேரத்தில் முற்றிலும் ஆட்கள் இல்லாது அமைதியாக ஓடிக் கொண்டிருந்த ஓடைகளின் வழியே ஓரமாக உள்ளாக நடந்து சென்றோம். இந்த ஆறு இங்குள்ள மலைச் சரிவுகளில் விழுந்தோடி, சிறு சிறு சரிவுகளில் பாறைகளைக் குடைந்தும் அறுத்துக் கொண்டும் செல்கிறது. சரிந்து அமைந்த கற்பாறைகள். பாறைகள் வழுக்கலாக இருப்பதால் கொஞ்சம் ஆபத்தானவை. கவனமாக செல்ல வேண்டி இருந்தது.
ஆங்காங்கு சரிவுகளில் தனியாகவும் சிறு குழுக்களாகவும் ஒரே சமயம் குளிக்கலாம். அருவியில் நல்ல தண்ணீர் இருந்தது. அந்த நேரத்தில் அங்கு நாங்கள் மட்டுமே. பசுங்காட்டின் மணம். அருவியின் சீரான ஓசை. சுற்றிலும் மலைகள் முழுக்க பசுமை சூடி நின்றிருக்க அந்த அருவி நீரில் நின்றிருந்தது உண்மையில் ஒரு அபூர்வமான அனுபவம். அலுப்பூட்டும் அன்றாடம் எங்கோ தொலைவில் இருந்தது. நீரில் இறங்கியவுடன் எங்களையும் மீறி ஒரே சந்தோசக் கூச்சல். கண்களை மூடி உச்சியில் அருவி நீர் விழுவதை உணர்ந்த படி நெடு நேரம் அருவியில் நின்றிருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக உடல் குளிர தொடங்கியதுமே நேரம் செல்வதை உணர்ந்து வெளியில் வந்தோம்.
அருவியில் குளித்து முடித்து வந்து அங்கிருந்த காளி கோயிலுக்கு சென்றோம். அருவிக்கு செல்லும் வழியில் இந்த காளி கோயில் உள்ளது. அருகில் இருந்த மலைக்குன்றுக்கு மேல் காளியின் உறைவிடம். அதற்கு கீழாக தாந்திரீக மரபில் காளி வழிபாட்டின் தடயங்கள் இருந்தன. நாங்கள் சென்ற போது சித்ரா பௌர்ணமியை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கான கொடை விழாவைப் பற்றிய அறிவிப்பைக் கண்டோம்.
மதிய உணவிற்குப் பின், மாறாமலை செல்வது என முடிவானது. அங்கிருந்த காணிக்காரர் ஒருவர் ஜீப்புடன் வர நாங்கள் எல்லாரும் கிளம்பினோம். சரளைக்கற்களும் குழியும் ஆங்காங்கு பெரும் கற்களுமாக இருந்த அந்த மலைப் பாதையில் ஜீப் மேலேறி சென்றது. ஜீப்பை ஓட்டிய காணிக்காரர் மேலே ரப்பர் எஸ்டேட்டில் வேலை செய்கிறார். முன்பொருமுறை அந்த பாதையில் இரவில் ஜீப்பில் வந்த போது புலி குறுக்காக நடந்து சென்றதைப் பார்த்த அனுபவத்தையும் அந்த இடத்தையும் சுட்டி காட்டினார். மேலே ரப்பர் தோட்டம் வரை ஜீப்பில் சென்றதும் இறங்கினோம். ஜீப்பை முன்னால் இறங்கி கொஞ்ச தூரத்தில் நிற்க சொல்லி விட்டு அங்கிருந்து ஒரு நடை சென்றோம். முகில்கள் இறங்கிய வானத்தில் மழை வருவதன் சாயல். இரு பக்கமும் பசுமரச்செறிவு.
அன்பரசி இந்த பயணத்தின் முதலில் இருந்தே அரிய வகை பறவைகளைத் தேடி காமெராவும் கையுமாக சுற்றிய படி இருந்தாள். அவள் சேலம் பறவையியல் கழகம் மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு குழுமம் ஒருங்கிணைக்கும் “தமிழ் பெண்களின் சிறகு பேச்சு” (SOF Sunday Talkies) நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறாள். இந்த பயணம் முழுவதும் பறவைகளைப் பற்றிய தனது அனுபவங்களையும் மற்றும் பல புதிய தகவல்களையும் சொல்லிய படி வந்தாள். ஒரு கட்டத்தில் நாங்கள் எல்லாரும் எங்கே புதிதாக பறவை தென்படுகிறதென்று சுற்றியும் பார்க்க ஆரம்பித்தோம். மாறாமலையில் இரண்டு புதிய வகைகளைக் கண்டோம். துடுப்பு வால் கரிச்சான் (Rocket tailed drongo) மற்றும் வெண்வயிற்று வால் காக்கை (White bellied treepie). இவை இரண்டும் பொதுவாக ஒன்றாக அடர் காடுகளில் காணக் கிடைப்பவை. திரும்பி ஜீப்பில் வரும் போது செந்தலை பஞ்சுருட்டானை (Chestnut-headed bee-eater) கண்டோம். மிளிரும் சிவப்பு நிறத்திலான தலையும் மஞ்சள் நிறத்திலான தொண்டையும் உடைய சிறிய அழகிய பறவை. இவற்றை மீண்டும் மாலை நடையின் போது பெருஞ்சாணி அணையின் கரையோரப் பகுதிகளில் அதிகமாகக் காண முடிந்தது. இப்பகுதி நாங்கள் தங்கியிருந்த வனத்துறை சூழியல் முகாமின் பின்பகுதியில் தொடங்கி அதன் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அடர் காடுகள் வழியே உள்ளே செல்கிறது.
நாங்கள் கரையோரமாக நீர் குறைந்த மணல் மேடுகள் மற்றும் புல்வெளிகளில் நடந்து சென்றோம். இங்கு சில நேரங்களில் நீரருந்த வரும் மிளாக்கள் உள்ளிட்ட வன விலங்குகளை காண நேரலாம். அப்படியே உள்ளே நடந்து சென்று ஒரு மணல் திட்டில் ஒளிரும் நீர்நிலைகளைப் பார்த்தவண்ணம் சும்மா அமர்ந்திருந்தோம். தூரத்தில் கோடுகளாக மலைகளின் உச்சி முனைகள். ஆற்றின் மறு கரையில் தென்னை மரங்கள் சூழ்ந்த கிராமங்கள். வட்டமான தீவாக நீரில் நீந்தித் திளைக்கும் மாடுகள். கூட்டம் கூட்டமாக வெண்கொக்குகள், நாரைகள் மற்றும் பல வித நீர்ப்பறவைகள். சிறு கூட்டங்களாக பறவைகள் கிளம்பி நீருக்கு மேலே தளர்வாக பறந்து மறுபக்கம் சென்றன.அந்தி அணைவது வரை அங்கிருந்தோம். இந்த நேரங்களில் பார்க்கும் நிலக்காட்சிகள் வெகு நாட்களுக்கு நம்மில் நீடிப்பதுண்டு.
அறைக்கு வந்ததும் இரவுணவு. செல்வா இரவுணவு உண்பதில்லையாதலால், அறைக்கு சென்றதும் உறக்கத்திலாழ்ந்தார். அருவியில் குளித்த பிறகு வரும் இனிய உறக்க மயக்கம். ஒரு வழியாக அவரையும் எழுப்பிக் கூட்டிக்கொண்டு இரவு வெளியில் வந்தோம். பின்பகுதியில் காடுகளை ஒட்டி அமர்வதற்கு பச்சை மூங்கில்களில் செய்யப்பட்ட வட்ட வடிவிலான மூங்கில் அமர்வுகள். காடுகள் முழுக்க இருட்டி நிலவின் ஒளி மேல் எழுந்தது. இரவில் காடு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. விதவிதமான பறவைகள் பூச்சிகளின் ரீங்காரம். மகேஸ்வரியும் அன்பரசியும் அங்கு நெடுநேரம் தனித்து கூவியபடி இருந்த பறவையின் குரலை கண்டுப்பிடிக்க முற்பட்டார்கள். தூரத்தில் புதர்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு வன விலங்கின் சாயல். சுப்ரமணியன் மொபைல் டார்ச்சை அடித்தபோது சுடரும் இரு கண்களைக் காண முடிந்தது. மிளாவாக இருக்கலாம். சரியாக பார்க்க முடியவில்லை.
அங்கிருந்த வனக்காவலர் பெயர் காந்திராஜன். அந்த சூழியல் முகாம்களை நடைமுறைப்படுத்துவதற்கான தன்னுடைய பல்வேறு முயற்சிகளை பகிர்ந்து கொண்டார். நாங்கள் மாலை நடை சென்ற ஆற்றுக்கு எதிர்ப்பக்கமாக ரப்பர் மரங்கள் செறிந்த காட்டிற்குள் சிறிது தொலைவு சென்றால் வன விலங்குகளைப் பார்க்க முடியும் என்று சொன்னார். அந்த காட்டிற்குள் ராஜநாகங்கள் மிகுதி. அவரும் சுப்ரமணியனும் இரவு வெகு நேரம் அந்த காட்டினைப் பற்றி பேசி கொண்டிருந்தார்கள். நாங்கள் அறைக்கு சென்று படுத்தோம். இரவு நாங்கள் அறைக்கு சென்று உறங்கும் வரையிலும் மறுநாள் காலை எழுந்த பிறகும் கூட அந்த பறவையின் தனித்த குரல் ஒலித்து கொண்டேயிருந்தது.
மறுநாள் அங்கிருந்து கிளம்பி வாகமன் சென்றோம். ஏறத்தாழ பெரும்பகுதி நாள் கார்ப்பயணத்தில் சென்றது. இந்த பயணத்தின் நீண்ட கார்ப்பயணங்கள் அனைத்துமே உற்சாகமானவை. சுப்ரமணியன் சாரின் சுவாரஸ்யமான கதைகள். செல்வாவின் தேர்வில் இனிய பாடல்கள். கொஞ்சம் இலக்கியம். நிறைய சிரிப்பு. ஒரு கட்டத்திற்கு மேல் எங்கள் சிரிப்பு சத்தத்தையே கேட்டுக் கொண்டிருந்தோம். மகிழ்ச்சிகரமான தருணங்கள்.
வாகமனில் சுப்ரமணியன் சார் தன் நண்பர் மூலம் தெரிந்த ஒருவர் நடத்தி வரும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் அங்கு சென்று அவர் வருவதற்காக காத்திருந்தபோது, அருகிலிருந்த மலைக்குன்றின் மீதிருந்து ஒரு ஜீப் வளைந்து சரிவின் சிறிய பாதையில் வெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்தது. அதை எங்களுக்கு சுப்ரமணியன் சார் சுட்டிக்காட்ட நாங்கள் அனைவரும் கொஞ்சம் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் நாங்கள் ஏறிய ஜீப்பும் அந்த மலைக்குன்றின் பக்கமாக திரும்பி மேலே அதே பாதையில் ஏற ஆரம்பிக்க எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்தோம். பிறகு தான் தெரிந்தது நாங்கள் தங்க போகும் விடுதி அந்த மலைக்குன்றின் மேலே இருந்தது. மலைச்சரிவில் வெட்டி உருவாக்கப்பட்ட பாதையின் ஏற்ற இறக்கங்களையும் சக்கரங்களின் அதிர்வுகளையும் மிக அருகில் ஒரு பக்கமாக தெரிந்த மலைச்சரிவின் முனைகளையும் உணர்ந்தபடி சென்ற அந்த ஜீப் பயணத்தை மறக்கவே முடியாது. விடுதி கட்டிடம் குன்றின் உச்சியில் இருந்தது. அதற்கும் இடப்பக்கமாக மேலே கூடார முகம் ஒன்று. அங்கும் சிலர் தங்கி இருந்தனர். அதன் எதிர்புறமாக மலை உச்சியை சமப்படுத்தி சிறிய ஹெலிபேட் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டிருந்தது
அந்த விடுதியை நடத்தி வந்த சிபி சேட்டன் அருகிலிருந்த மூன்று மலைக்குன்றுகளுக்கு உடைமையாளர். தன்னுடைய பதினைந்து வயதில் இருந்து இந்த மலைப்பாதைகளில் ஜீப் ஓட்டுவதாகவும், அந்த குன்றின் மேல் வேறு வாகனங்கள் செல்ல முடியாதாகையால் அந்த ஜீப்பில் மட்டுமே தேவையான கட்டுமானப் பொருட்களை பெரும்பாலும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுச்சென்று இந்த விடுதியை கட்டிய கதையையும் கூறினார். இன்னும் இந்த விடுதி மற்றும் அருகில் இருந்த இரு மலைக்குன்றுகளையும் விரிவாக்கம் செய்யும் திட்டங்கள் வைத்திருந்தார். அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருந்த இன்னொரு மலைக்கு ரோப் கார் விடும் திட்டங்கள் உட்பட. உண்மையில் அவருடைய இந்த முயற்சிகள் மற்றும் ஈடுபாடுகள் அனைத்தையும் வைத்து இன்னொரு தனி கட்டுரை எழுதலாம்.
அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கிருந்து அருகில் ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்த மலையுச்சி வரை காலை மற்றும் மாலை நடை. அங்கிருந்த பாறை முனையில் அமர்ந்து அந்தி அடங்குவதையும் மறுநாள் புலரி எழுவதையும் கண்டோம். அவ்விடத்தை சுற்றிலும் பசுமை போர்த்திய மேகங்களில் மூழ்கிய மலைச்சரிவுகள். எதிரில் உருண்டு திரண்டு நின்றிருந்த மலைகளின் உச்சிப்பாறைகள். அதற்கும் மேலாக வானைத் தொடும்படி நின்றிருந்த சிறு மரங்கள். கீழிருந்து ஏறி வந்த மேகக் கூட்டங்கள். சில நிமிடங்கள் நின்றிருப்பது அவற்றின் நடுவிலா என்று புரியாத மயக்கம். மேகங்கள் திரண்டு சட்டென்று மழைத்துளிகளை அள்ளி வீசியபடி காற்றடிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் நல்ல மழை. வீசிய காற்றில் மழைத்துளிகள் வானில் நீண்ட பெரும் கோடுகளாக நடந்து செல்வதைக் காண முடிந்தது. தூரத்தில் தெரிந்த மலைச்சரிவில் மழை நீர் வழிந்து அருவி கொட்டிக் கொண்டிருந்தது.
அந்த மலைமுகப்பில் அமர்ந்து சுற்றிலும் விரித்திருந்த பச்சைப் பெருவெளியைப் பார்த்தவாறு நண்பர்களுடன் அரட்டை. சுப்ரமணியன் சாரின் பணி அனுபவங்கள், செல்வாவின் இமயமலை பயணம், இலக்கிய உரையாடல்கள். சிறந்த சுவையான கேரள உணவு. புட்டு, கடலைக்கறி, மரவள்ளி கிழங்கு, சம்பா அரிசிக் கஞ்சி, தேங்காய் மாங்காய் சம்மந்தி, சிக்கன் குழம்பு என இரண்டு நாட்களும் சேட்டன் அருமையாக சமைத்தார். மகேஸ்வரி பயம் தெளிந்து அதன் பிறகு ஜீப் கீழே பொருட்கள் வாங்க செல்லும் போதெல்லாம் நானும் வருகிறேன் என்று ஆர்வமாக செல்லலானாள். அன்பரசி பறவைகளைத் தேடி கீழே மலைச்சரிவில் இறங்கத் தொடங்கினாள். இந்த முறை மூன்று புதிய பறவைகள் கிடைத்தன என்று அவற்றின் படங்களைக் காட்டினாள். சீகார்ப் பூங்குருவி (Malabar whistling thrush), குங்குமப் பூச்சிட்டு (Orange Minivet), சுடர் தொண்டைச்சின்னான் (Flame-throated bulbul). இவற்றுள் அடர் ஆரஞ்சு நிற உடலும் நீண்ட வாலும் கொண்ட குங்குமப் பூச்சிட்டு மிக அழகிய காட்டுப் பறவை.
அங்கிருந்து மறுநாள் திரும்பி வரும் வழியில் மொட்டகுன்னு வியூ பாயிண்ட் வந்தோம். பெரிய மரங்கள் இல்லாத முற்றிலும் மலை உச்சிகளாலும் புல்வெளி மூடிய பள்ளத்தாக்குகளாலும் ஆன அழகிய நிலம். மாலைக்குள் வற்கலை செல்லும் திட்டமிருந்ததால், மொட்டகுன்னுவின் புல் மடிப்புகளில் சிறிய நடை சென்று விட்டு விரைவில் கிளம்பிவிட்டோம். கோட்டயம் கொல்லம் வழியாக வற்கலை சென்று சேரும் போது கிட்டத்தட்ட மாலை ஆறு மணி.
சென்ற முறை செல்வா அங்கு வந்திருந்த போது தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றார். அந்த விடுதியின் மேலாளர் செல்வராணியை அடையாளம் கண்டுகொண்டார் (2019 நவம்பரில் வந்திருந்தீர்கள் அட்வொகேட்.) அந்த விடுதி கடற்கரையை ஒட்டி இருந்த மலைக்குன்றின் மேலே இருந்தது. அங்கிருந்து செங்குத்தாக கீழிறங்கும் நிலம் ஆழத்தில் கடற்கரையைத் தொடுகிறது. சுத்தமான வெண்மணல் விரிந்த கடற்கரை. நெடிய தென்னை மரங்களின் ஓலை அசைவுகள். பருந்துகள் வட்டமிட்ட வானம். கூட்டமாக பறந்த கரும்பருந்துகளையும் (Indian spotted eagle) செம்பருந்துகளையும் (Brahminy Kite) பார்த்தோம். நாங்கள் இருந்த மேட்டில் இருந்து பருந்துக்கூட்டங்களை அருகில் பார்க்க முடிந்ததால் அன்பரசி பரவசமானாள்.
இரவில் கீழே விரிந்து பரந்திருந்த நீரலைகளையும் அப்பால் தூரத்தில் சுடர்களென தெரிந்த கப்பல்களையும் பார்த்தவாறு முதல் தளத்தில் இருந்த அறையின் வெளியில் அமர்ந்திருந்தோம். காலை எழுந்து கடற்கரையில் ஒரு நீண்ட நடை. கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் செம்மண் நிறத்தில் சாய்ந்த குன்றுகள். நிறைய வெளிநாட்டவர்கள். இளைஞர்கள். கடலுக்குள் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். மதியத்திற்கு மேல் வற்கலையில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வந்தோம்.
அன்று ஊர் திரும்புவதாக ஏற்பாடு. வழியில் கரிக்ககம் சாமுண்டிகோயிலுக்கு சென்றோம். 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சாமுண்டி மூன்று வெவ்வேறு வடிவங்களில் வழிபடப் படுகிறார். விஷு பண்டிகை நாளாகையால் அன்று பரதநாட்டியம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சாமுண்டியின் மூன்று வடிவங்களையும் வெளிப்படுத்தி பெண்கள் ஆடிய நடனம் சில வினாடிகள் முழுமையாக ஆட்கொண்டது. நேரமாகியதால் மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். அன்பரசி கிருஷ்ணகிரிக்கு பஸ் ஏறினாள். என்னையும் செல்வராணியையும் மகேஸ்வரியையும் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சுப்ரமணியன் சார் விடைபெற்றார். மகேஸ்வரி கோவைக்கும் நானும் செல்வாவும் திருச்சிக்கும் ரயில் ஏறினோம்.
இந்த கடிதத்தை ஒரு வகையில் முழுப் பயணத்தையும் மொழி அனுபவமாக நினைவில் தொகுக்கும் பொருட்டே எழுதினேன். அங்கிருந்தோம் ஜெ. இன்று எண்ணும் போது மனதில் எழும் வரி அதுவே. பயணம் முடிந்து இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் கனவில் நிறைந்திருப்பவை அந்த மலைமுடிகளும் வானை நிறைத்து பரந்து நின்ற மேகக்கூட்டங்களும் தான். இந்த பயணத்தை சாத்தியப்படுத்தியதில் பெருமளவு செல்வாவுக்கும் சுப்ரமணியன் சாருக்கும் பங்குண்டு. இருவருக்கும் எனது நன்றிகள்.
– ம.பிரதீபாதேவி
அன்புள்ள பிரதீபா
பெண்கள் தாங்களே சேர்ந்து ஏற்பாடுசெய்துகொண்டு நிகழ்த்தும் பயணங்கள் பற்றி எப்போதுமே எழுதிவந்திருக்கிறேன். அந்தப்பயணங்களில் மட்டுமே இன்றைய சூழலில் பெண்கள் உண்மையான சுதந்திரத்தையும் கொண்டாட்டத்தையும் அடையமுடியும். பெண்கள் குடும்பத்துடன் செய்யும் எல்லா பயணங்களிலும் அவர்களுக்கு பொறுப்பு என்னும் சுமை வந்தமைகிறது
ஜெ
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
வெண்முரசு’ நாவல் தொடரில் 10ஆவது நாவல் ‘பன்னிருபடைக்களம்’. என்னைப் பொருத்தவரை இது தெய்வங்களின் ஆடலரங்குதான். நற்தெய்வங்களும் தீத்தெய்வங்களும் சூழ்ந்து நின்றாடும் பெருங்களம் இது. அவற்றின் ஆடலுக்கு ஏற்ப மானுட எண்ணங்கள் தொடர்ந்து அலையாடுகின்றன.
மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் சூதாட்ட நிகழ்வே மையப்புள்ளி. ஏறத்தாழ வெண்முரசிலும் இதுவே மையமாகிவிடுகிறது. 26 நாவல்களைக் கொண்ட இந்த வெண்முரசில் 10ஆவது நாவலான இந்தப் ‘பன்னிருபடைக்களம்’ நாவலில்தான் சூதாட்டக்களம் அமைந்து, தொடங்கி, நிறைவுறுகிறது. ஒட்டுமொத்த மகாபாரதக் கதைமாந்தர்களின் எண்ணவோட்டம் திசைமாறும் பெருந்திருப்புமுனையாக இந்தச் சூதாட்டக்களமே அமைந்துவிடுகிறது.
இதுவரை ‘வெண்முரசு’ நாவல்தொடர்களின் வழியாக வாசகருக்கு அறிமுகமாகி, வளர்ந்து, தனித்தனி மனிதர்களாக உடலாலும் உள்ளத்தாலும் உருக்கொண்டு, வாசகரின் நெஞ்சில் பண்பாளர்களாக, அன்பாளர்களாக அமர்ந்திருந்த அனைத்துக் கதைமாந்தர்களும் தங்களின் உள்ளத்தையும் பண்புநலத்தையும் மாற்றிக்கொள்ளும் ஓர் ஒப்பனையறையாகவே இந்தப் ‘பன்னிருபடைக்களம்’ நாவல் அமைவுகொள்கிறது. ஆம்! மாபெரும் ஒப்பனைதான். உலகமே மாபெரும் ஒப்பனைக்கூடம்தானோ?
இந்த நாவலில்தான் தேசிநாட்டரசர் சிசுபாலனின் முழு வாழ்வும் கூறப்படுகிறது. ஒருவகையில் அவன் பூரிசிரவஸ் போலத்தான் இருக்கிறான். தன்னடையாளம் பெற விழையும் பெருந்துடிப்பும் தன்னைப் பற்றிய மிகைநம்பிக்கையும் நுண்ணறிவற்ற செயல்பாடுகளும் என அவன் பல வகையில் பூரிசிரவஸாகத்தான் எனக்குத் தெரிகிறான்.
திருதராஷ்டிரர் தொட்டும் நுகர்ந்தும் பிறரின் உள்ளத்தை அறிபவர். அதனால்தான் அவரால் சிசுபாலனின் தலையைத் தொட்டதும் அவனின் மனநிலையை உய்த்தறிந்துகொள்கிறார்.
“சிசுபாலன் வணங்கியபோது அவன் தலைமேல் கைவைத்த திருதராஷ்டிரர் விழிகள் அதிர சுட்டவர் போல உடனே கையை திரும்ப எடுத்துக்கொண்டார். “ உன் தலை அதிர்கிறது ” என்றார். “ அரசே! ” என்றான். “ உன் தலை தொடுகையில் வெட்டுக்கிளியை தொடுவதுபோல் உணர்கிறேன். அதிர்ந்துகொண்டிருக்கிறது ” என்றார் திருதராஷ்டிரர். “ ஏற்கெனவே உதிர்ந்து சிலந்தியிழையில் தவிக்கும் இறகு என்று தோன்றுகிறது …” சிசுபாலன் “ என்ன சொல்கிறீர்கள் ?” என்றான். “ உனக்கு உடல் நலமில்லையா என்ன ?” சிசுபாலன் “ இல்லை , நன்றாக இருக்கிறேன் ” என்றான் குழப்பத்துடன். “ கனவுகள் காண்கிறாயா ?” என்றார் திருதராஷ்டிரர். “ ஆம் , நான் எப்போதும் கனவுகளில் உழல்கிறேன். ” திருதராஷ்டிரர் “ அறியேன். நீ நலமாக இல்லை. உன்னுள் ஏதோ நிகழ்கிறது. நீ அதிர்ந்து கொண்டிருக்கிறாய் ” என்றார். ”
ஆம்! இந்த அதிர்வு அவன் பிறந்தபோதிருந்தே தொடங்கிவிட்டது. இறுதியாக இளைய யாதவரின் படையாழியால் கழுத்தறுபட்டபோதுதான் அந்த அதிர்வு நின்றது. வாழ்க்கை முழுக்க புறத்தால் வலிப்புநோய்கொண்டவனாகவும் அகத்தால் அதிர்பவனாகவுமே இருந்துவிட்டான் சிசுபாலன்.
இந்த நாவலில் மற்றொரு சிறப்பு ‘இரட்டையர்கள்’. சமக்ஞை-சாயை, ரம்பன் – கரம்பன், நரன் – நாரணன், ஹம்சன் – டிம்பகன், சலன் – அசலன், அணிகை – அன்னதை, அஸ்வினி தேவர்கள் என இந்த நாவல் நெடுகிலும் இரட்டையர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வரலாறும் வாழ்வும் அதிகற்பனையாக மாறி வாசகரைத் திகைக்கச் செய்கின்றன.
சகுனியின் நாற்பதாண்டுக்காலத் தவமும் கௌரவர்களின் ஒட்டுமொத்த விழைவுகளும் இணைந்து உருவான இந்தப் பன்னிருபடைக்களத்தில், ஊழின் பெருங்கூத்து நிகழ்கிறது. அதைத் தள்ளி நின்று கவனிப்போருக்கு அது ஒரு பெருங்களியாட்டு. அதில் களமிறங்கியவர்களுக்கோ அது ஒட்டுமொத்த வாழ்க்கைப்பாடு.
காலந்தோறும் ‘சூதாட்டம்’ ஒரு பெரும்போதைதான். நிறைவடைய முடியாத, கடந்துசெல்ல முடியாத பேராசைப்போதை. சூதாட்டத்தை மகிழ்வுக்காக ஆடினாலும் வஞ்சத்தின் பொருட்டு ஆடினாலும் அது போதையைத் தரக் கூடியதுதான். இனிப்புக்கட்டியை எந்தப் பக்கமிருந்து கடித்தாலும் இனிக்கவே செய்யும். அதுபோலத்தான் சூதாட்டமும்.
சூதாட்டத்தில் ஒருமுறை வென்றவர் மீண்டும் களமாடுவார். சூதாட்டத்தில் ஒருமுறை தோற்றவர் தான் வெற்றிபெறும்வரை மீண்டும் மீண்டும் களமாடிக்கொண்டே இருப்பார். சூதாட்டத்திலிருந்து முற்றாக வெளியேற வேண்டுமெனில், இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று தன்னிடமிருப்பன அனைத்தையும் இழக்க வேண்டும். இரண்டு தனக்கு எதிர்நின்றாடுபவரிடம் இருக்கும் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும்.
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘சூதாடி’ நாவலின் வழியாக நாம் மிகத் துல்லியமாகச் சூதாடியின் உளப்போக்கினை அறியலாம். சூதாட்டத்தின் வரையறைகளுக்குத் தர்மர் மட்டும் என்ன விதிவிலக்கா? தருமரின் உள்ளத்தையும் சூதாட்டம் தன்போக்கில் ஈர்த்துக்கொள்கிறது. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’. உண்மைதான். ஆனால், இங்கோ இங்குத் தர்மமே தன் தலையைச் சூதின் வாய்க்குள் திணித்துக்கொண்டது.
ஒவ்வொரு சிறு சிறு விஷயத்துக்கும் மணிக்கணக்காக அரசுசூழும் தர்மர், இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்த விதுரர் அவரிடம், ‘அஸ்தினபுரிக்கு வந்து கௌரவர்களோடு சூதாடு’ என அழைக்கும்போது உடனே ஒப்புக்கொள்கிறார்.
விதுரர் தர்மரைச் சந்திக்கும் விநாடிக்கு முன்புவரை தருமரின் நெஞ்சு பெரும்போரைத் தவிர்க்கும் வழிமுறைகளைப் பற்றியே எண்ணி, ஏங்கிக் கொண்டிருந்தது. அதனால்தான் விதுரரின் இந்தச் சொற்கள் தருமரின் எண்ணச் சுழலுக்குப் பெருவிடுதலையைத் தந்துவிடுகிறார். அது விடுதலையா? அல்லது சிறையா? என்பதைச் சற்றும் சிந்திக்காமல், ‘மறு எண்ணம் இல்லாமல் உவகைப் பெருக்குடன்’ ஒப்புதல் தருகிறார். சிங்கத்தின் வாயிலிருந்து தப்புவதற்காகப் புலியின் வாயில் விழுந்த கதையாகிவிடுகிறது.
இந்தப் பெரும் நிகழ்வை, ஒட்டுமொத்த மகாபாரதக் கதைக்கும் திருப்புமுனையாகத் திகழும் இந்தத் தருணத்தை, எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ஐந்தே வரிகளில் கடந்துவிடுகிறார். காரணம், இந்த ஐந்துவரிகளே வாசகரின் மனத்துக்குள் ஐந்நூறு வரிகளாக விரிந்தெழும் என்று அவர் நம்பியிருக்கிறார். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை.
“விதுரர் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்து அவைமுகமன் பெற்றபின் தருமரை மந்தண அறையில் சந்தித்து பீஷ்மரும் துரோணரும் கிருபரும் திருதராஷ்டிரரும் ஒப்புக்கொண்ட வழி என்று பன்னிரு பகடைக்களம் ஆடுவதைக் குறித்து சொன்னதும் மறு எண்ணம் இல்லாமல் உவகைப் பெருக்குடன் அவர் கைகளை பற்றிக்கொண்டு “ ஆம் , மூத்தோரின் சொல். அதுவே எனக்கு இறையாணை ” என்றார். ”
தர்மர் தான் முடிவெடுத்த பின்னர் அது பற்றி, மற்றவர்களிடம் தன் முடிவை நியாயப்படுத்தி, அவர்களையும் ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும் என்பதற்காகவே அவர் பலரிடம் இது பற்றிச் கருத்துக் கேட்கிறார்.
அவர்கள் தன் கருத்துக்கு முரணான கருத்தைத் தெரிவிக்கும்போதெல்லாம் தன்னுடைய வாழ்நாள் அறத்தாலும் பகடையில் இதுநாள்வரை தான் பெற்ற வெற்றியினால் அடைந்த இறுமாப்பினாலும் நீக்கி, அவர்களை அமைதியடையவும் தன்னுடய முடிவுக்குக் கட்டுப்படவும் வைத்துவிடுகிறார். ஆனால், நகுலன் மட்டும் தர்மரிடம் தயக்கத்தோடு தன் கருத்தை முன்வைக்கிறான்.
“நகுலன், தர்மரிடம் “ இளைய யாதவரிடம் சொல்சூழ்ந்த பின்னர் முடிவெடுத்திருக்கலாம் , மூத்தவரே !”.
என்கிறான். ஊழின் திரை அங்கிருந்த பலரின் கண்களை மறைத்துவிடுகிறது. அதனால், அவர்களுள் யாருக்குமே இளைய யாதவரைப் பற்றிய நினைவு எழவேயில்லை. ஊழின் திரையால் விழி மறைக்கப்படாத, நகுலனுக்கு மட்டுமே அந்தத் தருணத்தில், இளைய யாதவர் நினைவுக்கு வருகிறார். ஆனாலும், காலம் கடந்துவிடுகிறது. எல்லாவற்றையும்விட ஊழ் வலியதுதானே!.
‘தருமரின் உண்மையான அறத்தையும் மறத்தையும் அறிந்தவர் பீமன் மட்டுமே’ என்றுதான் எனக்குக் கூறத் தோன்றுகிறது. ஆம்! அவர் ‘காட்டாளர்’ அல்லவா? காடழித்துத்தானே நாடாக்குகிறார்கள்?. ‘இந்திரப்பிரஸ்தம்’ நிற்பது அழிக்கப்பட்ட பெருங்காட்டின் மீதுதானே! அதனால், காடழிக்கும் அவர்களின் அறமும் மறமும் பீமனுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது!
‘தர்மர் சூதாட்டத்தில் தோற்பது உறுதி’ என்பதைப் பலமுறை கூறுகிறான் பீமன். அதைத் தர்மரிடமும் நேடியாகவே கூறுகிறான். ஆனால், தர்மர் அதை மறுத்து, ‘பெரும்போர் நடக்காமல், துளிக்குருதியும் சிந்தாமல், இந்தச் சூதாட்டத்தின் வழியாகவே நீ வெற்றி பெறுவாய்’ என்று தன் உள்ளம் தனக்குத் தந்த தவறான வாழ்த்தையே பீமனிடம் திடமாகக் கூறுகிறார்.
தருமர் தன்னுடைய அறத்தின் மீதும் பகடையாடும் திறனின் மீதும் அதீத நம்பிக்கைகொண்டுள்ளார். எப்போதுமே நமது அதீத நம்பிக்கை நம்மை நோக்கியே அறைகூவல் விடுக்கும். அந்த அறைகூவல் விதுரரின் மீதேறிவந்து தருமருக்கு முன்பாக நின்றது. அதற்குத் தருமர் செவிசாய்த்தார். அதன் பின்னர் அவர் வேறு எவர் பேச்சையும் உள்வாங்கிக் கொள்ளும் திறனை இழந்துவிட்டார். தர்மர் பிறிதொருவராக மாறிவிட்டார்.
துரியோதனன் எப்படி இந்திரப்பிரஸ்தத்தில் திரௌபதியின் முன் விழுந்து, அஸ்தினபுரிக்குத் திரும்பியதும் பிறிதொருவராக மாறினானோ அதுபோலவே, இங்குத் தர்மர் மாறிவிட்டார். துரியோதனனின் மாற்றத்துக்குக் காரணம் ‘ஊழ்’ என்றால், தருமரின் மனமாற்றத்துக்குக் காரணமும் ‘ஊழ்’ என்றே கொள்வோம். மானுடர் மனம்செய்யும் தவறுகளை எல்லாம் ஊழ்மீது ஏற்றுவதுதானே மானுடர் செய்யும் பெருந்தவறு! ஆம்! அதையேதான் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களும்,
“ அது ஊழின் கணம். ஒரு துளியேனும் எண்ணம்பிறழாமல் எடுத்த முடிவு. வாழ்வில் ஒரு முறை கூட அத்தகைய ஒரு உடன்முடிவை எடுத்ததில்லை. அதன் பின் நூறு கோணங்களில் எண்ணி , சூழ்ந்த பின்னரும் அம்முடிவன்றி பிறிதெதும் உகந்ததென்று தோன்றவுமில்லை.”
என்று தருமர் தனக்குள் நினைத்துக்கொள்வதாக எழுதியுள்ளார்.
ஊழ், ‘தருமரின் விழிகளைப் பெரும் புழுதிப்புயல்போலச் சூழ்ந்துகொள்கிறது’ என்று கருதநேர்கிறது. அவருக்கு வேறு வழியில்லை. அவர் சூதாடவே நினைக்கிறார். அந்த எண்ணமே அவரைச் சூதாட்டத்தில் இப்போதே வெற்றிபெற்றுவிட்டவராக உளமயக்குகொள்ளச் செய்கிறது. அந்த மயக்கத்தில் அவர் தலைநிமிர்ந்து செல்கிறார்.
அந்த மயக்கம், அவர் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து நின்ற பின்னரே தெளிவடைகிறது. மயக்கம் தெளிவடைந்தபின்னர் அவர் தன் தலையை நிமிர்த்தவே இல்லை.
விப்ரர் தன்னால் இயன்ற இறுதிச் சொல்லையும் எடுத்துக் கூறி, விதுரரிடம் சூதாட்டத்தைத் தவிர்க்குமாறு கூறுகிறார். திருதராஷ்டிரரும் சூதாட்டத்தை விரும்பவில்லை. விப்ரரின் பின்வரும் இறுதிப் பேச்சு முக்கியமானது.
“மானுடவாழ்வென்பது நேற்றிருந்தோரின் நீட்சி. நாளைவருபவர்களின் தொடக்கம். அதை அறிந்து வாழ்பவர்களே முழுமையாக வாழ்கிறார்கள். தானென்று எண்ணித் தன்னதென்று இவ்வாழ்வைக் காண்பவன் துயரை அன்றிப் பிறிதை அடைவதில்லை.”
இது எல்லோருக்குமானது. இந்த நாவலில் விப்ரரின் இறப்பு ஒரு திருப்புமுனை என்றே கூற வேண்டும். அதுவரை தன் நிலையழியாது இருந்த திருதராஷ்டிரர் மனம் மாறிவிடுகிறார். சூதாட்டத்திற்கு ஒப்புக்கொள்கிறார்.
சூதாட்டக் களத்தில் கௌரவர் விகர்ணனுடன் மகிடன் முதலானவர்கள் மனத்தளவில் உரையாடுவதும் தர்மருடன் தெய்வங்கள் மாறி மாறி உரையாடுவதும் மிகச்சிறந்த நாடகீயம்.
ஒரு மனிதர் தன் வாழ்நாளில் பெற்ற மேன்மைகளையும் கீழ்மைகளையும் அறத்தையும் அறமீறல்களையும் எண்ணிப் பார்த்து, தனக்குள் பலவாறாகப் பிரிந்து நின்று பேசத் தொடங்கும் உளவியல் உரையாடல் அது.
ஒரு மனிதனின் தன் மனவோட்டத்தை எப்படியெல்லாம் பின்தொடரலாம் தன்னைத்தானே எப்படிப் பித்தேற்றிக் கொள்ளலாம் என்பதற்குச் சிறந்த சான்று. அதேபோல திரௌபதையை இழுத்துவருவதற்காகச் செல்லும் காவலர்கள் அடையும் உளமயக்கமும் எழுத்தாளரால் மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
விதுரரின் மனைவி இறப்பதற்கு முன்னால் அவர் காணும் சிறுகனவுநிலைகளும் அவரின் மனைவி இறந்த பின்னர் அவர் அடையும் பெருந்துயரமும் மனநிலையழிவும் எழுத்தாளரால் சொல்லெண்ணிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
திரௌபதியின் ஆடைபறிப்பு நிகழ்வையும் திரௌபதியின் மானம் காக்கப்படும் தருணத்தையும் ‘மாயங்கள்’ இன்றி இயல்பாகவும் பொதுஅறிவுக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்ற வகையிலும் எளிய மற்றும் நுட்பமான வாசகர்களும் ஒப்புக்கொள்ளும் விதத்திலும் எழுத்தாளர் இந்த நாவலில் காட்டியிருக்கிறார்.
திரௌபதியின் ஆடைபறிப்பு நிகழ்வில், திரௌபதி வேறு வழியின்றி, இறுதியாக, தன் ஆடையைப் பிடிக்காமல் தன்னிரு கைகளையும் உயர்த்தி இளைய யாதவரைக் கூவியழைக்கிறாள். அத்தருணத்தில் உப்பரிகைமேடையிலிருந்த அசலை தன்னுடைய ஆடையைக் களைந்து, அதைத் திரௌபதியின் மீது வீசுகிறாள். திரௌபதியின் மானம் காக்கப்படுகிறது.
ஆம்! எங்கும் தெய்வம் நேரில் வந்து நின்று அருள்வதில்லை. தெய்வத்தின் அருள் எளிய மானுடர்களின் உடலிலிருந்தே வெளிப்படுகிறது. காலந்தோறும் தெய்வம் தான் நின்றாடும் களமாகவும் நின்றருளும் பீடமாகவும் எளிய மானுடரையே தேர்ந்தெடுக்கிறது. இந்த அற்புதமான, மெய்யான கருத்தோட்டத்தை மிக இயல்பாகவும் அழுத்தமாகவும் எழுத்தாளர் காட்டிவிடுகிறார்.
இந்த நிகழ்வைப் போலவே, ‘வெண்முரசு’ நாவல் தொடரில் பல முக்கிய தருணங்களை எழுத்தாளர் பொது அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்ற வகையில், மாயங்களுக்கு இடந்தராமல் எழுதியிருக்கிறார். அதனாலேயே நாம் மகாபாரதத்தை ‘அது மிகைக்கற்பனைப் புனைவு அல்ல; அது ஓர் உண்மைப்பெருவாழ்வு’ என்று நம் மனம் உறுதியுடன் ஏற்கத் துணிகிறது. அதற்காகவே, நான் எழுத்தாளரை மிகவும் பாராட்ட விழைகிறேன். இத்தகைய எழுத்துமுறைக்காகவே நாம் அவரைக் கொண்டாட வேண்டும்.
‘பன்னிருபடைக்களம்’ மானுட மனங்கள் கொந்தளிக்கும் பெரும்பாழ்ப்பரப்பு. இது ஒட்டுமொத்தத்தில், பெருந்துயர நாடகத்தின் கொதிநிலைப் புள்ளியாக நின்று, நம்மை உற்றுநோக்குகிறது. நாம் திகைத்து, அதனிடம் ‘நீதி, நேர்மை, அறம், தர்மம், மேன்மை, சான்றாண்மை என்பன அனைத்தும் எதன் பொருட்டுத் தொழிற்படுகின்றன?’ என்று கேட்டு, வெறுமனே நிற்கிறோம். அதற்கு இந்தப் பன்னிருபடைக்களம் அல்ல, காலமே நமக்குப் பதிலளிக்கக் கூடும்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை ‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை ‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன் ‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன் முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன் வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்May 5, 2021
கனவெழுக!
அன்புள்ள ஜெ
நான் உங்களுக்கு ‘ம்’ வாசகன்.உங்களது புனைவு,அ-புனைவு எழுத்துக்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் வாசித்திருக்கிறேன்(வெண்முரசு உட்பட). இலக்கியம், ஆன்மீகம்,தத்துவம்,வரலாறு,மானுடவியல்,அறிவியல்(உளவியல்,மரபணுவியல்,பிரபஞ்சஇயற்பியல்) போன்ற பலதுறைநூல்களை வாசித்துவருகிறேன்.உலக-மாற்று சினிமா கலையிலும் ரசனை ஈடுபாடு உண்டு. எனது தனிநபர் புத்தகசேகரிப்பாக மூன்றாயிரத்துக்கு அதிகமான நூல்களை வைத்திருக்கிறேன்.அச்சில் வந்த உங்களது அனைத்து நூல்களையும் தனிஅலமாரியில் பொக்கிஷமென வைத்துள்ளேன்.(அந்த அலமாரியின் படம் உங்களுக்கு வாட்சாப்பில் அனுப்பினேன் உங்கள் பிறந்ததினம் அன்று).
உங்களது புனைவுகள் என் அகத்திற்கு மிகநெருக்கமானவை.நெருப்பில் ஒளியும் வெப்பமும் எவ்வளவோ நெருங்கியவையோ அவ்வளவு நெருக்கம் எனலாம். முதல் கடிதம் என்பதால் என்னைப் பற்றி விரிவாக அறிமுகப்படுத்திக் கொள்கிறேன் எனக்கு இடப்பட்ட பெயர் வீரபத்ரன்.தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஒரு அழகிய கிராமத்தை என் வாழிடமாகப் பெற்றுள்ளேன்.அறிதலுக்கு அப்பாற்பட்ட அந்த அலகிலியின் அருளால் 24வருடங்களாக புவியாடும் இவ்வுயிர்ப்பெருநடத்தில் ஒரு சிறுஅசைவென நிகழ்ந்துவருகிறேன். ஆரோக்கியமற்ற உடலையும் தகித்தெரியும் மனதையும் சிறுவயது முதலே கொண்டுள்ளேன்.17வயதில் நடைபெற்ற குடல்வால்நீக்க அறுவைசிகிச்சையை தொடர்ந்து வந்த உயர்-ரத்தஅழுத்த பிரச்சனை, இதயபலகீனம்,நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் உளவியல் பிரச்சனைகளோடு பலகாலம் போராடி இப்போது அவற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளேன்.
கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டேன்.தற்போதைக்கு எந்த பொருளீட்டல் வழிகளிலும் ஈடுபடவில்லை.கடந்த ஐந்து வருடங்களாக முழுநேரமாக அறிதல் சார்ந்த செயல்பாடு தவிர்த்து பெரிதாக எதிலும் ஈடுபடவில்லை. என் இயல்பை பற்றி சொல்லவேண்டுமானால் நான் ‘நான் இன்னார்’ என உணரத்துவங்கியது முதலே எதிலும் நீடித்து அமைந்து நிறைவடைய முடியாதவனாக இருந்துவருகிறேன்.மேலும் அதிகமாக உள்ளொடுங்கிய சுபாவம் கொண்டிருப்பதால் வெற்றிகரமான மக்கள் தொடர்பு கைவரப்பெறவில்லை.அதனால் எந்தக்கூட்டத்தின் மத்தியிலும் தனியனாக உணர்கிறேன்.
சிறுவயதில் ‘எனக்கும் மரணம் வரும்’ என்று அறிந்துகொண்டபோதும் ‘மரணம் என்றால் முற்றான முடிவு’என்ற தவறான நம்பிக்கையாலும் ஒரு பயமும் ஏக்கமும் எனக்குள் இருந்தது.எங்கு பார்த்தாலும் மரணம் தான் தெரிந்தது. “மரணத்தின் முன் இந்த வாழ்வென்பது என்ன?” “ஏன் பிறக்கிறோம்?” “இந்த பெரிய இருப்பில் நான் யார்?” “கடவுள் உண்டா?” “இருப்பதற்கு இல்லாமலாவதற்கும் என்ன பொருள்?” போன்ற அடிப்படை கேள்விகள் தெளிவற்றுவாறு உதித்தன.பின் பதின்வயது துவங்கியதும் எரியத்துவங்கிய பெருங்காமம் இந்த உலகை முன்பில்லா பேரெழிலோடு காட்டியது. அது அந்த கேள்விகளின் தீவிரத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தின.வாழ்வை சற்று தள்ளிநின்று வேடிக்கை பார்த்தவனை உள்ளே இழுத்துகொண்டது.தீவிரமான ‘லட்சிய’காதல்கள் வந்து கடந்தன.மனித உறவுகளை பின்னும் இழைகள் திட்டவட்டமாக அறிந்துகொள்ளக்கூடியவை இல்லை என்று புரிந்தது.
அடுத்ததாக என் வாசிப்பின் படிநிலைகளை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இன்று சில ஆயிரம் நூல்களை வாசித்துவிட்ட எனக்கு எனது எட்டாவது வயது முதலே வகுப்பு பாடநூல்களை தவிர்த்த வேறு நூல்கள் அறிமுகமாகியின. பேச்சுபோட்டிகளுக்கான தயாரிப்பிற்காக தான் அது துவங்கியது. பள்ளிக்கு பின்னாலிருந்த ஒரு சிறுநூலகத்தில் எனது ஆசிரியை எனக்காக புத்தகங்கள் எடுத்துதருவார்.அவை மிகச்சாதாரணமான ‘தலைவர்கள் அறிமுகம்’ போன்ற எளிய நூல்கள் தான்.அவற்றை படிப்பது ஒரு ஆணவச்செயல்பாடாகவே இருந்ததுள்ளது(அந்த குழந்தை மனதிற்கும் கூட)என்பதை இப்போது உணரமுடிகிறது.’அவன் நிறைய நல்லா படிக்கிறான் பாருங்க’ என்று சகமாணவர்கள் முன் ஆசிரியர் சொல்லும்போது ஏற்படும் குட்டியான ஒரு பெருமித உணர்வுக்காகவே வாசிக்க துவங்கினேன் எனலாம்.
ஆனால் பின்னர் குட்டியான கதைகள் வாசிக்க துவங்கியதும் வாசிப்பு என்பது எனக்கான முதன்மை இன்பம் என்பதாக மாறிப்போனது.மூன்று பக்க குட்டிக்கதைகளை கூட மனதில் முப்பது பக்கம் வருமளவான கதைகளாக கற்பனையில் விரித்து வளர்க்க முடிந்தமையால் அந்த வயதில் விளையாட்டை விடவும் வாசிப்பது தான் எனக்கு பேரின்பத்தை தந்தன. பின் அறிதல் என்பதே என் தலையாய இன்பமானது.தேடல் முறைப்பட்டவுடன் சிறந்த நூல்களை தேடித்தேடி வாசித்தேன்.இப்போது எந்தவொரு சிறந்தநூலையும் ஆழமாக உள்வாங்கிகொள்ளும் நுண்வாசிப்புத்திறனை பெற்றுவிட்டதாக உணர்கிறேன்.
உங்களை 16வயதில் தான் கண்டடைந்தேன்.அப்போது முதல் உங்கள் அகத்தோடு தொடர்பு கொண்டுள்ளேன்.அதனால் தான் இந்த கடிததத்தை உங்களோடான முதல் ‘புற’த்தொடர்பு என்று சொன்னேன்.
இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத காரணம் நான் இப்போது ஒரு தடுமாற்றத்தில் உள்ளேன். இனி நான் புனைவுகளும், அபுனைவுகளும் தொடர்ந்து எழுதவேண்டும் என விருப்பப்படுகிறேன்.எழுதுவதே என் தன்னறம் என உணர்கிறேன்.பிறிதொன்றிலாமல் அதற்கு மட்டுமென என்னை முழுதளிப்பதால் மட்டுமே என் நிறைவு அமையும் என நம்புகிறேன்.எழுதி கண்டடைவதன் மூலம் மட்டுமே இந்த பெருலீலையின் இன்ப-துன்ப சலனங்களுக்கு அப்பாலுள்ள பெருவெளி எனக்கு கிட்டும் என உணர்கிறேன்.எழுத்தின் பொருட்டு பிற அனைத்தையும் இழக்கவும் தயாராக இருக்கிறேன்.எழுத்தினால் என் அகம் அடையப்போவதை விட நான் இழக்கப்போகும் மற்றவை அரிதல்ல,பெரிதல்ல என நன்றாக அறிந்துள்ளேன்.
ஆனால் ஒரு பெரும்தடையும் ஒரு பெருந்தடுமாற்றமும் எனக்குள்ளது.அவற்றைக் கடக்காமல் நான் எதையும் எழுதமுடியாது என நினைக்கிறேன். “இதுவரை எழுதப்படாதவற்றை என்னால் எழுதிவிடமுடியுமா?இதுவரை திறக்கப்படாத கோணங்களை என்னால் திறந்துவிடமுடியுமா?எங்கும் முரண்களாய் காட்சிதரும் முழுமையை எழுத்தில் சாத்தியப்படுத்திவிட முடியுமா?அல்லது தவறிப்போய் நான் அன்றாடத்தின் துளிகளை என் கலையாக முன்வைத்துவிடுவேனா?” போன்ற கேள்விகள் தரும் தயக்கம் தான் எனக்கு பெருந்தடுமாற்றமாக உள்ளது.
இரண்டாவதாக,தினமும் என்னை நானே மறுத்து உதறி முன்செல்லும் காலகட்டமாக எனக்கு இப்பருவம் உள்ளது.எப்போதெல்லாம் ஒரு புதிய கருத்து அல்லது ஒரு தரிசனம் அல்லது ஒரு தத்துவநிலைப்பாடு என்னுள் பரிணமித்துப்பெருகி நிற்கிறதோ அப்போது அதற்கு சமமான மறுக்கும் தரப்பு ஒன்றும் என்னுள் பெருகிநிற்பதை உணர்கிறேன்.இந்த நிலைத்து நிறைவடையாத்தன்மை தான் எனது பெருந்தடையாக உள்ளது. இவற்றை எப்படி நான் கடப்பது? இத்தடுமாற்றத்தையும் தடையையும் வெல்லும் படைக்கலமாக தங்களது வார்த்தைகளை வேண்டி அருகமர்கிறேன்.
பேரன்புடன்,
வீரபத்ரன்
அன்புள்ள வீரபத்ரன்
உங்கள் கடிதத்தை வாசித்தபோது எனக்கு ஒரு புன்னகைதான் உடனடியாக வந்தது. ஒருவன் பேரிலக்கியவாதியாக ஆவதற்குரிய அனைத்தையும் கொண்டிருக்கிறீர்கள். ஒரு நற்கொடையாகவே அவை அமைந்துள்ளன. நீங்கள் உங்கள் சிக்கல்கள் எனச் சொல்லியிருப்பவை எல்லாமே மிகப்பெரிய நல்லூழ்விளைவுகள் என்பதை நீங்கள் கொஞ்சம் உலக இலக்கிய வரலாற்றை கூர்ந்து வாசித்தால் அறிந்துகொள்ள முடியும்.
உலக அளவில் இலக்கியத்தில் மட்டுமல்ல தத்துவத்திலும் கூட உடற்சிக்கல்கள் கொண்டவர்கள் ஒரு சாதகமான நிலையில் இருக்கிறார்கள். பொருளீட்டுதல், உலகியல் வெற்றியை அடைதல் போன்ற எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு இளமையிலேயே இல்லாமலாகிவிடுகின்றன. அவர்கள் வணிகம், அரசியல் என திசைதிரும்பி நாட்களை வீணாக்காமல் தேறிவிடுகிறார்கள். சூழலில் இருந்தும் அத்தகைய நெருக்கங்கள் அவர்களுக்கு இல்லை.
அவர்களின் ‘அசாதாராணத் தன்மை’ அவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஒரு தனிமையை அளிக்கிறது. ‘வாடா மச்சி’ கும்பல் அவர்களைச் சுற்றி சேர்வதில்லை. அவர்கள் நம்மிடமிருந்து பிடுங்கி எடுத்துக்கொள்ளும் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி மிச்சமாகிவிடுகிறது.
தமிழ்ச்சூழலில் ஒருவன் வாசிக்க ஆரம்பிப்பது 25 வயதுக்குமேல்தான். தீவிர இலக்கியம் அறிமுகமாவது 30க்கு மேல். அது ஒரு தவறான வயது. குடும்பம் தொழில் என சுமை தனிமனிதன் மேல் ஏறிவிடும் காலகட்டம் அது. அவனுக்கான நேரமே குறைவாகத்தான் கிடைக்கும்.
அதைவிட அவன் தன் வாழ்க்கையின் சிறந்த ‘முதல்முறை’ அனுபவங்களை பெறும்போது நல்ல இலக்கியம் படித்து தன் புலன்களை தீட்டிக்கொள்ளாதவனாக இருப்பான். ஒருவன் காதலிக்கும்போது வைரமுத்து வாசகனாக இருப்பதற்கும் வண்ணதாசன் வாசகனாக இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு.
அத்துடன் முப்பது வயதுகளில் பெரும்பாலானவர்கள் மூர்க்கமான அரசியல் நிலைபாடு கொண்டிருப்பார்கள். அறுதியான அரசியல் நிலைபாடு கொண்டவர்களால் அதையன்றி வேறெதையும் யோசிக்க முடியாது. அவர்களுக்குரியது அல்ல இலக்கியம். தத்துவமும், சிந்தனையின் எந்த தளமும் அவர்களுக்கு வசப்படுவதில்லை. ஏன் அரசியல்கோட்பாடே கூட அவர்களுக்கு கைவராது.
உங்கள் வாழ்க்கையில் உரிய அகவையில் வாசிக்க வந்துள்ளீர்கள். தமிழ் எழுத்தாளர்களில் எனக்குள்ள மேலதிகத் தகுதி என்பது மிகமிக இளமையிலேயே நான் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தவன், அதற்கான சூழல் எனக்கு இருந்தது என்பதுதான். நீங்கள் இன்று வாசித்துக்கொண்டிருக்கும் தளம் தமிழ்ச்சூழலில் மிக அரிதானது. ஒரு பெருஞ்செல்வம்.
அந்த வாசிப்புடன் அனுபவங்கள் வழியாகக் கடந்துசெல்கிறீர்கள். அறிதல்களை சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அனைத்துமே எழுத்துக்கான விதைகள்தான். உங்கள் களத்தையும் உங்களையும் நீங்களே ஒருக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஒன்றை எண்ணிக்கொள்ளுங்கள், எழுத்தாளர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பின்னாளில் வாழ்க்கை முழுக்க எழுதுவதற்குண்டான மூலப்பொருட்களைத்தான் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் என நினைக்கிறேன். அவை விதைகள். உங்கள் களஞ்சியம் விதைகளால் நிறைந்துகொண்டிருக்கிறது.
கடைசியாக, உங்கள் இரண்டு அகப்பிரச்சினைகள். ஒன்று, சாதாரணமாக ஒன்றை எழுதிவிடுவோமா என்ற அச்சம். அது பெரிய எழுத்தாளனுக்கு தேவையான ஒன்று. அது ஒரு கவசம். அவன் இயல்பாக ஆவதற்கும், விளையாட்டாகவும் எழுதிப்பார்ப்பதற்கும், மேலும் கால்நூற்றாண்டு தாண்டவேண்டும். அதுவே இயல்பானது.
நீங்கள் உள்ளுணர்ந்து எழுதினால், எழுத்து உங்களைக் கடந்து உங்களை வெளிப்படுத்தினால், அதாவது உங்களூடாக எழுத்து நிகழ்ந்தால், அது அசலானதாகவே இருக்கும். அதை இன்னொருவர் இப்புவியில் எழுதியிருக்க மாட்டார்கள். ஆகவே வேறெவரோ எழுதிவிட்டார்களா என்ற ஐயமே தேவையில்லை. அறைகூவல், எழுத்துக்கு உங்களை அளிப்பதே,
இது எழுதுபவர்கள் மட்டுமே பகிர்ந்துகொள்ளத்தக்க ஒர் அகநிலை. எழுத்து அது நிகழும்போக்கில் உங்களை தன் கையில் எடுத்துக்கொள்ளும். உங்களை கருவியாக்கி அது நிகழும். அது நிகழ்ந்ததுமே அதை நீங்கள் உணர்வீர்கள். அதை உணர்ந்தபின் எழுத்து என்றால் என்ன என்று ஐயமே படமாட்டீர்கள். அது நிகழாதவரை எழுத்தும் ஒரு தொழில்நுட்பமே, ஒரு பயிற்சியே என்று அதை அறியாதோர் சொல்வது போல நீங்களும் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்.
ஆனால் அது ‘தன்னிச்சையாக’ நிகழ்வதில்லை. அது நிகழ்வதற்கு ஒரு புள்ளி உள்ளது. அதுவரை நீங்கள்தான் சென்று சேரவேண்டும். அது தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் புள்ளி. பயின்று எழுதுவோர் நடந்து நடந்து வந்தடையும் சிகரமுனையில் இருந்துதான் அது பறந்தெழவே தொடங்குகிறது.
ஆகவே அதுவரை எழுத்தைப் பயிலவேண்டும். எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு, சலிப்புகளை சோர்வுகளை மீறிச்சென்று, எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். எழுத்தை தீ என பொறியாக எழுப்பி, விசிறி தழலாக்கி, பெருந்தழலாக்கி, அதில் நீங்கள் பாய்ந்து ஆகுதியாகவேண்டும்.
ஆகவே பயில்க. பயிற்சியிலேயே இருங்கள். உங்கள் எழுத்துமுறை என்ன என்று எவரும் இப்போது சொல்லமுடியாது. எண்ணிப்பாருங்கள், நீங்கள் எழுதவிருப்பது பெருநாவல் என்றால் அதை ஓரிரு ஆண்டுகளில் அடைவீர்களா என்ன? பல ஆண்டுகளாகும் அல்லவா?அதற்கான தேர்ச்சியை அடைய கொஞ்சம் தவம் தேவைப்படும் அல்லவா?
முரண்படுதல் குறித்துச் சொன்னீர்கள். முதலில் சொன்னதேதான், அது உங்களுடைய சிறப்பியல்பு. சிந்திக்கும் எவரும் தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். அந்த முரண்பாடு உருவாக்கும் உள்விவாதத்தையே சிந்தனை என்கிறோம். மிகச்சிறிய அளவில் சிந்திப்பவர் அனைவரிடமும் இருக்கும் இந்த உள்மோதல் அடிப்படைச் சிந்தனையாளர்களிடமும் கலைஞர்களிடம் உச்சமடைகிறது.
இந்த உள்மோதல் இல்லாதவர்களே எதையாவது முற்றாக ஏற்றுக்கொண்டு விசுவாசத்தை அளிக்கிறார்கள். கட்சிக்கொடியை தன் முகப்படையாளமாக வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்யும் எளிய உள்ளங்களை இணையத்தில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் விசுவாசிகள், இலக்கியம் அவர்களுக்குரியது அல்ல.
இலக்கியம் முரண்படுபவர்களுக்கு, முரண்டிக்கொண்டே இருப்பவர்களுக்கு உரியது. மலையிறங்கும் நதி போல நூறு, ஆயிரம் பாறைகளில் மோதி மண்டை உடைத்துக்கொண்டு கொந்தளிப்பவர்களுக்கு உரியது. அவர்களில் தெளிவும் திடமும் உருவாவது அவர்களே தங்களுக்குரிய மெய்மைகளை ஓரளவேனும் கண்டடைந்தபின்னர்தான். அது ஒரு நீண்ட பயணத்துக்குப் பின். நீண்ட காலம் கழித்து.
வெவ்வேறு மதிப்பீடுகள், கருத்துநிலைகள், தரிசனங்கள் இணையான ஆற்றலுடன் ஒருவனுக்குள் மோதிக்கொண்டு கொந்தளிப்பதே உயர்நாடகீயத்தன்மை. அதுவே உணர்ச்சிநிலைகளில் உச்சமானது. அதுவே முதல்நிலை புனைவுகளுக்குரிய பண்பு. அதைத்தான் பேரிலக்கியங்களில் காண்கிறோம்- கம்பனானாலும் தஸ்ஸ்தயேவ்ஸ்கியானாலும். அந்த கொந்தளிப்பை கவனியுங்கள். அந்த மோதலையும் கொந்தளிப்பையும் அவ்வாறே எழுதிவிட முடியுமா என்று பாருங்கள்.
உங்கள் கடிதத்தில் இருந்து தெரிவது, உங்கள் உலகம் பெரும்பாலும் தத்துவம் சார்ந்தது என்று. ஆனால் தத்துவத்தை தத்துவப்பாடநூல்களில் இருந்து கற்கவேண்டாம். தத்துவப்புனைவுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். கூடவே தத்துவத்தை வரலாற்றுடன் இணைத்துக்கொள்ளுங்கள். தத்துவம் வரலாறு வாழ்க்கைச்சித்திரம் மூன்றும் பிணைந்தெழும் பெருநாவல்களை கனவுகாணுங்கள்.
ஒருநாள் நீங்கள் எழுதுவீர்கள்.அந்த பயணத்தின் அல்லல்கள் இவை
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஜெ
அன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்
ஒரு பேட்டி முழுவதும் ஹிந்தியில் நடக்கிறது. பால்கனியில் , ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறார். மெல்ல ஆடியபடியே பேசிக்கொண்டிருக்கும் அவர் முகத்தில் அஸ்தமன சூரியனின் ஒளி விழுகிறது. அவர் பேசும் ஒரு வார்த்தை கூட எனக்கு புரியவில்லை. ஆனால் மதிமயங்கி , புலனழிந்து கேட்டுக் கொண்டிருந்தேன். ஹிந்தி மொழிக்கு இவ்வளவு அழகுண்டா? அவர் பேசுவதனாலேயே அத்தனை அழகாகிறது அம்மொழி. கலைஞனின் மனம் கண்களில் வெளிப்படும் அல்லவா? அந்தக் கண்கள் என்னை வெகுவாக மயக்கின. உள்ளேயுள்ள கலையின் கடலாழம் தன்னை கண் வழியே சிறிய அலைகளாக நிகழ்த்திக் கொண்டிருந்தது.
அன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்– அருண்மொழிநங்கையானை டாக்டர் புதிய பதிப்பு
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
“இந்திய யானைகள் சில நேரங்களில் விம்மி அழுவதாகச் சொல்கிறார்கள்’ என்கிற சார்லஸ் டார்வினின் ஓர் வாக்கியத்தை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. மனது முழுக்க அவ்வரி மழைநனைந்த இலையீரம் போல ஒட்டிக்கொண்டது. யானைகள் விம்மி அழுகிற சித்திரத்தை மனதுள் காட்சிப்படுத்தவே அச்சமாகவே உள்ளது.
ஆனாலும், யதார்த்தத்தில் ஏதோவொருவகையில் மாதத்திற்கு குறைந்தது இரண்டு செய்திகளாவது ஏதாவதொரு யானையின் உயிரிழப்பு பற்றியதாக இருக்கிறது. ஓர் பேருயிர் இனம், இந்த பூமியில் தன்னினத்தைச் சுருக்கிக்கொள்ளும் அபாயகாலத்தின் சாட்சிகளாக நாம் இருந்துவருகிறோமோ என்கிற பதட்டமும் அடிக்கடி அகத்தில் வந்தெழுந்து அமிழ்கிறது.
அதேபோல, அண்மையில் தெருவில் நடக்கையில் விநாயகர் கோவிலின் ஒலிபெருக்கியில் ஒரு பக்திப்பாடல் ஒலிப்பதைக் கேட்க நேர்ந்தது, “வானத்தின் மேகத்தில் தோன்றியது ஒரு யானை முகம், நானதன் உருவத்தில் கண்டேன் ஒரு குழந்தை முகம்”. எளிமையான ஒரு இசைவரி, ஆனால் யானைகளின் முகத்தில் இயல்பில் குடிகொண்டிருக்கும் ஓர் குழந்தை முகத்தை திரும்பத் திரும்ப மனதுக்குள் இவ்வரி உருவகிக்கிறது.
நவீன அறிவியலின் எல்லா அறிதலோடும் பழக வாய்ப்பு கிடைத்த ஒரு குழந்தைக்குள்ளும் ‘யானை’ என்பது வியந்து அதிசயக்கத்தக்க கானுயிர் என்றே சிந்தைக்குள் நிலைகொள்கிறது. இக்கடிதம், உங்களுடைய ‘யானை டாக்டர்’ கதையின் அச்சுநீட்சி தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாசிப்பு மனங்களைச் சென்றடைந்து வருகிறது என்பதை உங்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவிக்கும் பொருட்டே.
நல்விழைவின் நிறைவேறலாக, யானை டாக்டர் புத்தகம் தன்னறம் நூல்வெளி மூலமாக மூன்றாம் பதிப்பு அடைந்து வெளிவந்துள்ளது. ஒவ்வொருமுறை பதிப்பு அடைந்து வெளிவரும்போதும் இந்நூல் உருவாக்கும் மனவெளி என்பது பட்சிகளும் பூச்சிகளும் நிரம்பிய வனவெளி போல இயற்கையின் எல்லையின்மைக்குள் இட்டுச் செல்கிறது. ஒவ்வொரு வாசிப்பிலும், டாக்டர் ‘கே’வும், யானைகளும் வெவ்வேறு விதமாக மனதுக்குள் துலங்கிவருவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.
ஒரு கதை, கிட்டத்தட்ட காலம் படிந்த தொன்மமென உருவாகுவதை சமகாலத்தில் நாங்கள் யானை டாக்டர் வழியாகத்தான் நேரிலறிகிறோம். பிறந்தநாள் அன்பளிப்பாக, திருமணவிழா தாம்பூலப்பையோடு ஒரு புத்தகமாக, சூழலியலுக்குள் அறிமுகமாகும் முதல்கட்ட வாசகர்களின் பெருந்திறவுவாசலாக, பள்ளிக்கல்வியில் பாடத்திட்டமாக, சொல்லப்போனால் பாணர்கள் பாடும் வாழ்வுக்கதை போல ஏதோவொருவிதத்தில் யானை டாக்டரின் கதை மீளமீள தமிழ்ச்சூழலில் முளைவிட்டு வனமாகிக்கொண்டே இருக்கிறது.
யானைக்கும் மனிதனுக்குமான உறவுபற்றி இனி தமிழில் எழுதப்படுகிற கதைகளுக்கு இருக்கும் சவாலே, இக்கதையின் தாக்கத்தையும் தழுவலையும் கடந்து வாசக மனதில் பதிவதுதான். இந்த நூற்றாண்டின் இணையற்ற நூறு கதைகளில் ஒன்றென இக்கதை, இந்திய மொழியின் பிராந்திய மொழிகளில் அச்சாகி நிலைபெறும் நற்கனவு ஒன்று எங்களுக்கு உள்ளது. எதிர்வரும் காலம் அது நிச்சயம் நிகழும்.
இம்மூன்றாம் பதிப்பிற்கான யானைகள் சார்ந்த ஒளிப்படங்களாக, சர்வதேச ஒளிப்படக்கலைஞர் செந்தில்குமரன் அவர்கள் காட்சிப்படுத்திய யானை ஒளிப்படங்களை இந்நூலில் பிரசுரித்துள்ளோம். யானைகளைப்பற்றி செந்தில் அண்ணன் அறிந்துவைத்துள்ள அனுபவக்கதைகளின் தொகுப்பும் யானை டாக்டர் அளவுக்கு இன்றியமையாதவை என்றே கருதுகிறோம்.
யானை – பாகன் உறவு, யானை – மனித வாழ்வெல்லை மோதல் உள்ளிட்ட காட்சிச் சித்திரங்களை ஆவணரீதியாகவும் இவர் ஒளிப்படமாக்கி வருகிறார். தன்னுடைய ஒளிப்படக்கலைக்காக சர்வதேச விருதுகள் பல வென்றுள்ளார். இப்புத்தகத்திற்காக ஒளிப்படங்களை தந்துதவிய அவரின் நிறையன்புக்கு என்றைக்கும் தன்னறத்தின் நன்றிகள் சென்றடைக.
வரலாற்றில் சிலசமயம் மனிதர்களே விழுமியங்களாக எஞ்சுவதுண்டு. அவ்வாறாக, மனமெஞ்சிய நற்பெருமனிதர் டாக்டர்.கே அவர்களின் வாழ்வையொட்டி எழுதப்பட்ட இக்கதை, தமிழ்ச்சூழலில் மிகவும் அதிகமாக பகிரப்படும் மக்கள்பிரதியாக வரமடைந்துள்ளது. தமிழில் நிறைய பதிப்பகங்கள் தன்னளவில் இக்கதையைத் தங்கள் சித்தாந்த இடரெல்லைகளையும் கடந்து பொதுசன வாசிப்புக்கான நல்லாக்கம் என கட்டமைத்து வருகிறார்கள்.
இப்புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருத்தர் உள்ளத்திலும் ஓர் உருப்பெருங்காடு விதைவிட்டெழுகிறது. தமிழில் இப்படைப்பு நிகழ்வதற்கான காரணகர்த்தாவாக இருந்த உங்கள் புனைவுமனத்தின் கனவெழுச்சி என்றும் எங்களின் வணக்கத்திற்குரியது.
இப்படிக்கு,
சிவராஜ்
தன்னறம் நூல்வெளி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

