Jeyamohan's Blog, page 987

May 14, 2021

கதை சொல்லல்

வணக்கம் ஐயா,

நான் கடந்த வருடம் வீடுருத்தல் நாட்களில், தங்களின் புனைவு களியாட்டு சிறுகதைகளையும், வெண்முரசு மாமலரையும், என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சொல்லவதற்காக, இந்த சேனலை ஆரம்பித்து, கதைகளைபதிவேற்றினேன்.அந்த பதிவுகளில், நான் வாசிப்பது போலல்லாமல், சொந்தமாக பேசியே சொல்லியுள்ளேன்.https://youtube.com/channel/UCfSRqaf7r3cI-5AuFPbpXpAஎனவே, அந்த கதைகளில் எதாவது ஒன்று நல்ல தரத்தில் இருக்குமென்று நம்புகிறேன்.எனவே, தாங்கள் மதிப்பிட்டால் அதை விட ஒரு கௌரவம் வேறொன்றும் எனக்கு கிட்டாது.நன்றிவணக்கம்ராஜசேகரன் பாலன்அன்புள்ள ராஜசேகரன்,பாராட்டத்தக்க முயற்சி. வாழ்த்துக்கள்என்னுடைய சில பரிந்துரைகள்அ. கதை சொல்பவரின் வீடியோ இருக்கவேண்டும். அது நல்லது. முகபாவனைகள் கதையை ஈர்ப்பாக கேட்பதற்கு உதவுகின்றன.ஆ. முகம் காட்ட விரும்பவில்லை என்றால் கொஞ்சம் படங்களுடன் ஒரு சின்ன வீடியோ செய்யலாம்இ. குரல் கொஞ்சம் ஓங்கியதாக, தெளிவாக இருக்கவேண்டும். சாதாரணமான பேச்சு அளவு இருந்தால் கதைகேட்பதற்கு உகந்ததாக இல்லைஈ. கதையை தொடங்குவது முக்கியம். ‘இப்ப நான் ஒரு கத சொல்லப்போறேன்’ என்பது போன்ற தொடக்கங்களை தவிர்த்துவிடலாம். சிறுகதைகளை தொடங்குவதுபோலவே ஒரு காட்சியில், நிகழ்ச்சியில் தொடங்கலாம். ‘அன்றைக்கு அஸ்தினாபுரியில் நல்ல மழை. அன்றைக்குத்தான் குந்தி திருமணமாகி நகரத்திற்குள் வந்தாள்” என்பது போன்ற தொடக்கங்கள்தான் வாசகர்களை உள்ளே ஈர்க்கும்உ. கதாபாத்திரமாக தன்னை முன்வைத்து ‘நான்’ என்றவகையில் ஆரம்பிப்பது, கொஞ்சம் மெய்யான நடிப்புடன் என்றால் மேலும் நல்லதுஊ. நிலக்காட்சிகளையும் உணர்ச்சிகளையும் கொஞ்சம் விரிவாகச் சொல்லவேண்டும். வெறுமே நிகழ்ச்சிகளை மட்டும் சொன்னால் போதாதுஜெ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2021 11:31

முகில்நகர்

நீங்கள் எழுதிவரும் வெண்முரசு நாவல்களின் ஒட்டுமொத்த சித்திரம் எவ்வகையிலும் எதனுடனும் நிகரற்றது. என்னால் இதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. இதை ஒரு மனிதன் எழுதினான் என்பதே காலத்தில் மிகப்பெரிய ஆச்சரியமாக நிச்சயம் நிலைகொள்ளும். எழுதிச் செல்லும் இறையின் கைகளே கருவியைத் தேர்ந்தெடுக்கின்றன என்று தத்துவத்தின் வழியே நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுவீர்கள்.

முகில்நகர்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2021 11:30

May 13, 2021

இன்றிருத்தல்…

அனைத்து சுயத்தடைகளையும் மீறி சில விஷயங்கள் கண்ணுக்குப் பட்டுவிடுகின்றன. அதிலொன்று, நேற்று நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை பற்றி ஒரு தொலைக்காட்சி திரும்பத் திரும்ப காட்டிய செய்தி. அச்செய்தியை வாட்ஸப் வழியாக பரப்பினார்கள். பரப்புபவர்கள் உடனடியாக நம்மால் பிளாக் செய்ய முடியாதவர்கள் என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

அந்தச் செய்தியை பார்த்தேன், ஒரு பெண்மணி இறந்துவிட்டார். அருகே நின்று ஒருவர் உள்ளக்கொந்தளிப்புடன் மருத்துவமனையையும் டாக்டர்களையும் வசைபாடுகிறார். மிரட்டுகிறார். குமரிமாவட்டத்தில் இது எப்போதுமுள்ள வழக்கம். நோயாளி எதன்பொருட்டு இறந்தாலும் டாக்டரை அடிக்கப் பாய்வதென்பது ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. இங்கே பெரும்பாலும் அந்த டாக்டரை உடனே ஒளித்து வைத்து விடுவார்கள்.

அந்த மனிதரின் துயரை, குமுறலைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் என் மகன் சென்ற ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பொதுவார்டில் இருந்தான். மூன்றுவேளை இலவச உணவு, மருந்து, கவனிப்பு எல்லாம் இருந்தது. நோயாளிகள் முழு அலட்சியத்துடன் நடந்துகொண்டமையால் கழிப்பறையும், கழுவுமிடமும் தூய்மையற்றிருந்தன. அவற்றை எத்தனைமுறை தூய்மைசெய்தாலும் போதாது. எத்தனை முறை சொன்னாலும் தன் படுக்கைக்கு கீழேயே எஞ்சிய சோற்றை கொட்டிவைக்கும் நோயாளியை திருத்தவும் முடியாது.

நடுவே என்ன ஆயிற்று? ஆஸ்பத்திரி கொள்ளாத அளவுக்கு நோயாளிகள். அதுவும் மிகக்கவனமாக கையாளவேண்டிய தொற்றுநோயாளிகள். ஊழியர்கள், இடம், மருத்துவக்கருவிகள் எல்லாமே அதேதான். அதிலும் தனியார் மருத்துவமனைகள் சற்று நோய் முற்றிவிட்டால்கூட உடனே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவிடுகின்றன. ஆகவே நெருக்கடி நிலை நோயாளிகள் மிகுதி. அதற்கே முதல்கவனம் அளித்தாகவேண்டும்.

’ஆமா, நல்ல நகைச்சுவை உணர்ச்சி உள்ள ஹஸ்பெண்ட் வேணும்னு விளம்பரம் பண்ணியிருந்தேன்…ஆனா…”

கூச்சலிட்டு கொந்தளிப்பவர் ஒருமணிநேரம் ஆகியும் டாக்டர் வந்து பார்க்கவில்லை என்பதைத்தான் உச்சகட்ட புகாராகச் சொல்கிறார். சாதாரண நிலையில் அது டாக்டர்களின் பிழைதான், இன்றைய நிலையில் அது துயரத்திற்குரியது, ஆனால் புரிந்துகொள்ளத் தக்கது. நானறிந்த மருத்துவ ஊழியர்கள் பலரும், மருத்துவ மாணவர்களும்கூட, ஆஸ்பத்திரியிலேயே பல மாதங்களாக வாழ்கிறார்கள்.

இச்சூழலில் அந்த ஊடகம் ஆஸ்பத்திரியின் முறைகேடுகள் என அந்த சிறிய செல்போன் பதிவை திரும்பத்திரும்ப காட்டவேண்டிய தேவை என்ன? ஆஸ்பத்திரியில் குறைபாடுகள் இருந்தால் அதை உரியவர்களிடம் உரியமுறையில் கொண்டுசெல்லவேண்டிய நேரம் இது. அதை பரபரப்புச் செய்தியாக்கி இவர்கள் அடைவதுதான் என்ன? ஆஸ்பத்திரிகளுக்கு இன்று தேவை வசைகள் அல்ல, நிதி, ஆட்கள், உதவிகள்.

இத்தகைய செய்திகளால் நிறைந்திருக்கின்றது சூழல். நண்பர் ஒருவர் சொன்னதுபோல டிவி பார்த்தால் மார்ச்சுவரிக்குள் அமர்ந்திருப்பதுபோல் இருக்கிறது. முகநூல் மனநோய் விடுதிக்குள் இருப்பதுபோல் இருக்கிறது.

நான் செய்திகளுக்கு வெளியே வாழ்பவன் அல்ல. நாளிதழ், டிவி செய்திகளை நம்பவேண்டிய இடத்தில் நான் இல்லை. மெய்யான செய்திகளை செய்திகளின் ஊற்றிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். தெரிந்துகொண்டுதான் இருக்கிறேன்.

“நான் நம்பிக்கைவாதியா இல்ல அவநம்பிக்கைவாதியான்னு தெரியல்ல. ஆனா இந்த கிளாஸ் பாதி சுத்தமா இருக்கு”

மிகப்பெரிய தோல்வி மத்திய அரசின் தரப்பில் இருக்கிறது. இந்த தேசம் கூட்டுப்பொறுப்பால், அதிகாரப் பரவலால்தான் ஆட்சி செய்யமுடியும். மையப்படுத்தப்பட்ட அதிகாரம் நெருக்கடிகளில் செயலிழக்கும். இப்போது இதற்குமேல் கசப்பான எதிர்வினைகளை முன்வைக்க விரும்பவில்லை.

இப்போது நம்பிக்கையூட்டும் அம்சம் புதிய மாநில அரசு மிகத்தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது. தேர்தல் நடத்தப்பட்டது முதன்மையான குளறுபடி. அதன் விளைவாக ஒருமாத காலம் அரசு இயந்திரம் திசைதிரும்பியது. மக்கள் தெருக்களில் அலைமோதினர். இன்னொரு மாதம் காபந்து அரசு அமைந்து முதன்மை முடிவுகள் எடுக்க முடியாத நிலை இருந்தது. அது அகன்று வருகிறது

புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரிரு நாட்களிலேயே முழுமையாகவே ஒருங்கிணைந்த நிர்வாகத்திற்குள் அனைத்தும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அரசுக்கு உள்ளிருந்து பார்ப்பவர்களில் இந்த அரசின் கடும் விமர்சகர்கள் என நான் நினைப்பவர்களேகூட மிகச்சிறந்த, மிகத்திறமையான செயல்பாடுகள் என்றே சொல்கிறார்கள். மிக விரைவிலேயே நிலைமை கட்டுக்குள் வரக்கூடும்.  இந்நடவடிக்கைகள் தொடர்ந்தால் ஓரிரு மாதங்களிலேயே மீளவும் முடியலாம்.  இதற்காகவே ஸ்டாலின் தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர்களில் ஒருவராக நினைக்கப்படுவார். நம்பிக்கையுடன் இருப்போம்.

”இப்ப நீங்க பாதிக்கப்பட்டிருக்கிறது உயர் இருத்தலியல் அழுத்தத்தாலே. அதுக்கு நான் ஒரு ஃபுல் டோஸ் நடைமுறைவாதத்தை முறிமருந்தா எழுதி தாறேன்”

இங்கே பலரைப் பார்க்கிறேன். அவர்கள் சோர்வை விரும்புகிறார்கள் என்று தோன்றும். சோர்வூட்டும் விஷயங்களைத் தேடித்தேடி படிக்கிறார்கள். அதில் மூழ்கியிருக்க விரும்புகிறார்கள்.பலர் சவரம் செய்துகொள்வதில்லை. காரணம், வீட்டிலிருந்தே வேலை. ஆனால் நம் முகத்தை நம் குடும்பம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள். நல்ல ஆடைகளையே அணிவதில்லை. பலர் வேடிக்கையான உரையாடல்களில் ஈடுபடுவதில்லை. சாப்பாட்டு நேரத்தில் கூட எதிர்மறை அரசியல் மற்றும் கொந்தளிப்புகள்.

நம்மை சூழ்ந்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன உலகை அளிக்கிறோம் என்று யோசித்தாகவேண்டும். ஒருபோதும் சோர்வை வெளிக்காட்டவேண்டியதில்லை. நேற்று நான் என் வீட்டில் பழையகால எம்ஜிஆர் – கருணாநிதி மேடைப்பேச்சுக்களை மிமிக்ரி செய்தேன். சிரித்து மகிழ்ந்தோம். அதுதான் இன்று செய்யவேண்டியது.

என் தெரு நாகர்கோயிலிலேயே அதிகமாக கரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்று என்று போகன் சங்கர் அழைத்துச் சொன்னார். நண்பர்கள் பலர் நோயில் இருக்கிறார்கள். ஆகவே அனைத்து எச்சரிக்கைகளையும் எடுத்துக் கொள்கிறேன். முதன்மையான எச்சரிக்கை என்பது தேவையில்லாத பதற்றங்களை அடையாமல் இருப்பது. எதிர்மறைச் செய்திகளில், அரசியல் விவாதங்களில் ஊடாடாமல் இருப்பது. ஆகவே எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு வேதாந்த நூல். ஒரு நாவல். கூடவே கட்டுரைகள், கடிதங்கள்.

நாம் செய்வதற்கு இருப்பது இதுவே. இத்தருணத்தில் கூடுமானவரை பிறருக்கு உதவுவோம். அதுவே முதன்மையானது. நோய்ச்செய்திகளை தேவையில்லாமல் பரப்பாமல் இருப்போம். கூடுமானவரை உற்சாகமாக, நம்பிக்கையுடன் இருப்போம்.

அருண்மொழியை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவள் வீட்டில் தம்பியின் இறப்பு. பெற்றோர் தனியாக இருக்கிறார்கள். அவள் இங்கே வீட்டுக்குள்ளேயே இருக்கிறாள். ஆனால் படைப்புவிசை அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. ஒருநாளில் ஆறுமணி நேரம் இசை கேட்கிறாள். கட்டுரைகள் எழுதுகிறாள். நாவல் எழுதும் கனவுடன் இருக்கிறாள். அவளிடம் எப்போதுமே எழுது எழுது என்றே சொல்லிக்கொண்டிருக்கிறேன். இன்று அவள் அதைக் கண்டுகொண்டிருக்கிறாள்.[https://arunmozhinangaij.wordpress.com/blog/]

வெளிப்பாடு போல ஊக்கமளிப்பது வேறில்லை. வாசிப்பு, இசைகேட்பு எல்லாம் முக்கியம், ஆனால் கூடவே எப்படியேனும் வெளிப்படுங்கள். அதையே ஒவ்வொருவரிடமும் சொல்கிறேன். எதையாவது செய்யுங்கள். வேலைக்கு வெளியே நீங்கள் வெளிப்படும்படியாக.

“ஆனந்தம் வேணுமா? உள்ளே தேடுங்க” “வாசல் எங்கே இருக்கு?”  “வாசலே கெடையாது “

அருண்மொழி செய்வதையே நண்பர்களுக்கும் விரிவாக்கலாம் என்று தோன்றியது நண்பர்களுக்கான ஒரு குழுமம் அமைத்து அதில் பத்துநிமிட உரை, குறுநாடகங்கள், ஸ்டேண்டப் காமெடிகள், கவிதை வாசிப்பு என்று நிகழ்த்தும் எண்ணம் ஒன்றை சொன்னேன். ஆரம்பித்துவிட்டோம். அதற்கென்றே ஒரு சிறு நாடகம், ஒரு தன்நடிப்பு நாடகம் ஆகியவற்றை எழுதினேன். ஒரு கூட்டுக்குடும்பத்தின் கூடம் போல அது இருக்கவேண்டும்.

அதை அணுக்கமான வாசகர்களுடன் சேர்ந்துகூட அமைக்கலாமென்று தோன்றுகிறது. வாசகர்கள் அவ்வாறு அமைத்துக்கொண்டால் நான் சேர்ந்துகொள்கிறேன்.

அத்துடன் ஒன்று, நாளை முதல் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வாசகருடன் 40 நிமிடம் தனிப்பட்ட முறையில் சூம் அல்லது கூகிளில் உரையாடலாமென நினைக்கிறேன். உரையாட விரும்பும் வாசகர்கள் தொடர்பு கொள்ளலாம். நோய், அதுசார்ந்த கவலைகள் தவிர எல்லாவற்றையும் பேசலாம்.

இந்த தருணத்தை கைகோத்து ஊக்கத்துடன் கடந்துசெல்வோம்

ஜெ

jeyamohan.writerpoet@gmail.com

ஒரு போட்டி

இந்த கொரோனா காலத்தில் எதையேனும் செய்ய விரும்புபவர்களுக்காக ஒரு போட்டி. வெண்முரசு நாவலின் ஏதேனும் ஒரு பகுதியை அதிகபட்சம் 40 நிமிடங்களுக்குள் அமையும்படி கதையாகச் சொல்லுங்கள். வாசிப்பது கூடாது. சொல்லவேண்டும். நடிப்புடன், குரல் ஏற்ற இறக்கத்துடன் சொன்னால் நல்லது. குழந்தைகளுக்காகச் சொன்னாலும் நல்லது. அதை யூடியூபில் ஏற்றி அனுப்புங்கள். சிறந்த பதிவுக்கு வெண்முரசு நூல்கள் பரிசாக அளிக்கப்படும்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2021 11:35

கதாநாயகி-6

மறுநாள் நான் காலையில் சற்றுப் பிந்தித்தான் எழுந்தேன்.  முந்தைய நாளிரவு நல்ல தூக்கமில்லை என்பதுபோல் எனக்குக் கண்கள் உளைந்தன. வாய் கசந்தது. எழுந்து நின்றபோது தலை சுற்றுவது போல் இருந்தது. மெதுவாக நடந்து படிகளில் வந்தமர்ந்து முற்றத்தில் பெய்து கொண்டிருந்த வெயிலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மழை வெயில் இரண்டும் மாறி மாறி அங்கே மண்ணை அறைந்துகொண்டே இருந்தன. அவற்றுக்கு இடையே ஒரு போட்டி நிகழ்வதுபோல

கோரன் என்னை வந்து பார்த்துவிட்டு சென்று டீ கொண்டு வந்து தந்தான். பாலில்லாத டீயின் மணத்துக்கு நான் பழகி விட்டிருந்தேன். அந்த மணமே என்னை இனிய மனநிலைக்குக் கொண்டு சென்றது. கோரன் டீ போட நன்றாகவே கற்றிருந்தான். மிகக்குறைவாகவே அவன் டீத்தூள் போடுவான். வெளியே டீக்கடைகளில் பாலில்லாத டீ கேட்டால் கஷாயத்தைத்தான் தருவார்கள்.காணிக்காரர்கள் துளசி முதலிய பல இலைகளைப் போட்டு வெந்நீர் போடுவதுண்டு, அந்தப் பக்குவம்தான் சரியாகப் பாலில்லாத டீயின் முறையும்.

டீ குடித்து சற்று நேரம் கழிந்தபோது ஓரளவு ஊக்கம் கொண்டவனானேன். அதன்பிறகுதான் எழுந்து பின்னால் சென்று முகத்தை கழுவிக்கொண்டேன். ஊக்கத்தை வரவழைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். உடல் ஓய்ச்சலும் குடைச்சலும் கொண்டிருந்தது. காய்ச்சல் வந்து சென்ற உடல்போல தோலில் அதீதமான மென்மையுணர்வு, குளிர்போல ஒரு கூச்சம்.

உடற்பயிற்சி போல் ஏதாவது செய்தால் மீண்டுவிடுவேன். ஆனால் இன்னும் சற்று நேரத்திற்குள் நான் பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் அங்கு சென்று சேர. அந்த நடை போல இன்னொரு உடற்பயிற்சி கிடையாது. மதியத்திற்கு மேல் மீண்டும் இரண்டு மணி நேரம் நடந்து திரும்பி வரவேண்டும். நடக்கும்போது தூக்கம் விலகிவிடும் என்று தோன்றியது.

கோரன் காலை உணவாக கஞ்சி சமைத்திருந்தான். அவனுக்குத்தெரிந்த ஒரே சமையல் அது. எதைக்கொடுத்தாலும் வேக வைத்து உப்பும் மிளகாய்ப்பொடியும் தூவவும் தெரியும் பூசணிக்காய், கிழங்குகள், இறைச்சி அனைத்தையுமே அவன் அவ்வாறு தான் சமைத்தான். ஆதிவாசிகள் புளியையும் மிளகாயையும் பயன்படுத்துவதில்லை. அவர்களின் உணவென்பது காய்கறிகள், தானியங்கள், இறைச்சி ஆகியவற்றின் இயல்பான சுவையுடன் கொஞ்சம் உப்பு கலப்பது மட்டும்தான். பெரும்பாலும் சுட்டார்கள், அரிதாக வேகவைத்தார்கள். அவர்கள் உணவில் எண்ணைக்கும் இடமில்லை.

ஆனால் அந்தக்காட்டில் எல்லாமே சுவையாகத்தான் இருந்தன. அவையனைத்துமே புத்தம் புதியவை என்பது ஒரு காரணம். அத்தனை தூரம் நடந்து கொல்லும் பசியுடன் இருக்கையில் வெறும் சோறும் மணமும் சுவையும் நிறைந்ததாகத்தான் இருக்கும். நான் பசியையும் ருசியையும் அங்கே உணர்ந்ததுபோல் எங்கும் உணர்ந்ததில்லை.

ஊரில் என் வீட்டில் எப்போதுமே பழையசோறோ கஞ்சியோ மரவள்ளிக்கிழங்கோதான். எப்போதாவது கல்யாணங்களில் விருந்து உணவு உண்டு. அதை எண்ணி எண்ணி காத்திருப்பேன். ஆனால் இலைமுன் அமர்ந்து அத்தனை உணவுகளையும் அவற்றின் கலவை மணத்துடன் நேரில் பார்த்ததுமே பசியும் சுவையுணர்வும் அடங்கிவிடும். பின்னர் கலைத்துப்போட்டுவிட்டு எழுவதுதான் நடக்கும்.

நான் குளித்து ஆடைமாற்றிக் கொண்டேன். ஒரு வாரத்திற்கு ஒருமுறைதான் சவரம் செய்வது வழக்கம். முந்தையநாள் மழித்திருந்தாலும் அன்றும் முகத்தை நன்றாக மழித்தேன்.  தலையை திரும்பத் திரும்ப சீவியபடி கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். என் கண்கள் கீழிமைகள் வீங்கி தூக்கமின்மை தெரிய இருந்தன. உதடுகள் கூட சற்று உலர்ந்தவை போல் தெரிந்தன.

மெய்யாகவே நான் இரவில் நன்கு தூங்கவில்லையா? தூங்கியிருந்தேன். இரவு இரண்டு மணிவரை தூங்கினதாக எடுத்துக்கொண்டாலும் கூட  ஏழு மணி நேரத்திற்கு மேலாகவே தூங்கியிருக்கிறேன். எத்தனை மணிநேரம் படுத்துக்கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை எப்படி மூன்று நான்கு மணிநேரம் படுத்திருப்பேன். விடியற்காலையில் காகங்களின் குரல் கேட்ட நினைவிருக்கிறது.

இரவில் எழுந்து அந்த புத்தகத்தை படித்துக்கொண்டே மேசைமேல் குப்புற விழுந்து தூங்கிக்கொண்டிருந்தேன்.  அசைந்து அமர்ந்த போது  விழிப்படைந்து மேஜைமேல் விழுந்திருப்பதை உணர்ந்து எழுந்து சென்று படுக்கையில் படுத்துக்கொண்டேன். அப்போது மழை நின்றுவிட்டிருந்தது. காற்று ஓலமிட்டுக்கொண்டிருந்தது. ஜன்னலின் கண்ணாடிக் கதவுகள் விம்மி விம்மி அதிர்ந்துகொண்டிருந்தன.

அப்போது நான் பேசிக்கொண்டிருந்தேன் என்பதை நினைவுகூர்ந்தேன். யாரிடம்? என் அருகே வேறெவரோ இருந்தார்கள். பேசிக்கொண்டே படுக்கைக்கு செல்லும் என்னை நானே தொலைவிலிருந்து பார்க்கையில் மெல்லிய நிழலுரு ஒன்று என்னைத் தொடர்வதை என்னால் காணமுடிந்தது ஆனால் வெறும் நிழல்தான். கரைந்து உருவழிந்த நிழல் .மனித உருவம் கூட அல்ல.

நான் படுத்த பிறகு அந்நிழல் என் காலடியில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. அது என் கனவுகளுக்குள் வந்திருக்கவேண்டும். கனவுகளுக்குள் நான் ஈவ்லினாவைப் பார்த்தேன். பதினேழாம் நூற்றாண்டு உடையணிந்தவள். மிகப்பெரிய வட்ட விளிம்பு கொண்ட தொப்பி. அதன்மேல் மலர்கள்.மென்பட்டாலும் மஸ்லினாலும் செய்யப்பட்ட துணிமலர் முடிச்சுக்கள். தோள்கள் விரிந்து அகன்ற கவுன். மெல்லிய கழுத்தும் முதிரா மார்புகளும் கழுத்து வெட்டினூடாக வெளியே தெரிந்தன. மெலிந்த கைகள், நீண்ட விரல்கள். சுருண்ட பொன்னிறக்கூந்தல் அலைநுரை போல இருந்தது.

அவள் ஒரு மேஜைமேல் கையை ஊன்றி தலையை கையில் சாய்த்து சரிந்த விழிகளுடன் எதையோ நினைத்து அசையாது அமர்ந்திருந்தாள். இடக்கையால் அந்த மேஜைமேல் மெல்லத் தாளமிட்டுக் கொண்டிருந்தாள். எண்ணங்கள் தீவிரமடையும்போது தாளம் நின்றது. பின்னர் மீண்டும் தொடங்கியது. அவள் முகம் துயரத்திலிருப்பது போல எதையோ எண்ணி ஏங்குவது போல இருந்தது.

அந்த அறைக்குள் எவரோ வந்தார்கள். கதவு திறந்து மூடும் ஓசை அவள் எழுந்து தன் கவுனின் கழுத்தை இழுத்துவிட்டு அதன் இடைமடிப்புகளை சீரமைத்தபடி சுவரோரமாக சென்று நின்றாள். அந்த அறைக்குள் வந்தவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவள் அவரைப்பார்த்த பார்வையிலிருந்து அவர் முதியவர் மதிப்புக்குரியவர் என்று தெரிந்தது. அவர் அவளிடம் கண்டிப்பான குரலில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

உண்மையில் அந்தக்குரலைக்கூட என்னால் கேட்க முடியவில்லை. ஈவ்லினாவின் விழியசைவுகள் முக மாறுதல்களிலிருந்தே அவர் கண்டிப்பாக ஏதோ சொல்கிறார் என்று தெரிந்தது. அவள் அவருக்கு அளித்த முகபாவனைகளையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஈவ்லினா பணிவும் பதவிசும் கொண்ட ஒரு பெண்ணாகத் தெரிந்தாள் உலகம் தெரியாத, ஆனால் முழுநம்பிக்கையுடன் உலகத்தை எதிர்கொள்ளகூடிய, எங்கும் இயல்பாகவே பணியக்கூடிய, எவருக்கும் பணிவிடை செய்யத்தயாராக இருக்ககூடிய, அத்தகைய சிறுமிகளை நாம் எங்கும் பார்த்திருப்போம். நம்முடைய வீடுகளிலெல்லாம் உள்ளறைகள் முழுக்க அத்தகைய பெண்கள்தான். குழிமுயல்கள் போல அஞ்சுபவர்கள், ஓசையில்லாமல் நடமாடுபவர்கள், இருளில் ஒளிரும் கண்கள் கொண்டவர்கள்.

அந்தப்புத்தகத்தில் நான் வாசித்த கடிதங்களையும் டைரிக்குறிப்புகளையும் அவள் தான் எழுதினாள் என்றால் எவராலும் நம்ப முடியாது. ஆனால் அவள் உண்மையானவளல்ல. அவள் ஒரு கதாபாத்திரம் அவளே எழுதியது ஃபேன்னி. ஃபேன்னி என்பதுகூட புனைபெயர்தான். ஃபேன்னி ஹில் என்ற காமக்கதாநாயகியின் பெயருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இன்னொரு பெண். ஃப்ரான்ஸிஸ் பர்னி. விந்தைதான் ஃப்ரான்ஸிஸ் பர்னிக்குப் பின்னால் வேறெவரோ ஒளிந்திருக்கலாம். அவளுக்குப் பின்னால்  இன்னும் பூடகமான யாரோ.

நான் அப்படி உதிரியாக யோசித்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. நெடுநேரம் அரைத்தூக்கத்திலேயே இருந்திருப்பேன். நன்றாக வெயில் வந்து கண்ணாடி சன்னலினூடாக அந்த பெரிய கூடத்தில் ஒளிச்சட்டங்களாக விழுந்து கிடப்பதை கண்டு கொண்டுதான் காலையில் எழுந்தேன் ஆனாலும் தூக்கக்கலக்கம்.

கோரன் வீட்டைச் சாத்திக்கொண்டு வந்தான். நாங்கள் இருவரும்  மலைப்பாதையில் ஏறிச்சென்றோம்.

நான் கோரனிடம்  “கப்ரியேல் அங்கு அரிசிகொண்டு சேர்த்திருப்பாரா?” என்று கேட்டேன்.

“சேர்த்திரிக்கும்… நாடார் அரி கொண்டுவரும்” என்று அவன் சொன்னான்.

இருபது கிலோ அரிசியும் அதைப் பொங்குவதற்கான அலுமினியப் பானைக்கும் சொல்லியிருந்தேன். ஆனால் கோரனால் அவ்வளவு சமைக்க முடியுமா என்று தெரியவில்லை.

“நீ சோறு வைப்பியா? நெறைய பேருக்கு?”என்று கேட்டேன்.

“சோறு வைக்கும் நான். நிறைய சோறு வைப்பேன்” என்றுஅவன் சொன்னான்.

“சமைத்தால் உனக்கு ஒரு ரூபாய் தருகிறேன்” என்று நான் சொன்னேன்.

அவன் சந்தேகத்துடன் “ஒரு ரூபாயா?” என்று அவன் ஒரு விரலைக் காட்டினான். மேலும் சந்தேகம் கொண்டு  “சோறு! வயிறு நிறைய சோறு” என்றான்.

“ ஆமா, ஒரு ரூபா தரேன். அது சம்பளம் வயிறு நிறையச் சோறு வேற”.

அவன் முகம் மலர்ந்து  “நிறைய சோறு” என்றான்.  அங்கேயே அமர்ந்து தரையில் வட்டம் வரைந்து குவியல் போலக்காட்டி  “இவ்வளவு சோறு” என்றான்.

“ஆமாம்  அவ்ளவு சோறு” என்று நான் சொன்னேன்.

நாங்கள் பள்ளிக்கூடத்தை அணுகியபோது அங்கே ஏற்கனவே இரண்டு பையன்கள் நின்றிருந்தார்கள். முந்தைய நாள் வந்தவர்கள் அல்ல. வேறு இருவர் . என்னைப் பார்த்து அவர்கள் ஓடவில்லை.

அவர்களில் பெரிய பையன் என்னிடம்  “நீங்ங வாத்யாரா?” என்றான்.

“ஆமாம்” என்றேன். அவனுடைய துணிவு ஆச்சரியம் அளித்தது.

“நான் இந்தப்பள்ளிக்கூடத்தில் படிச்சேன்” என்று அவன் சொன்னான்.

“என்ன படிச்சே?” என்றேன்.

“ஒண்ணு ரெண்டு மூணு” என்றான். அதன்பின் யோசித்து ”அ, ஆவும் படிச்சேன்” என்றான்.

“உன்னால் காகிதம் படிக்க முடியுமா?” என்று கேட்டேன்.

“அ ஆ படிப்பேன்” என்று அவன் சொன்னான். அதன்பிறகு  “இவிடே வாத்தியார் ஆரும் வரல்ல, அதனால் நான் காட்டுக்குப்போனேன். எனக்கு ஆ ஆ எல்லாம் சொல்லிக் குடுக்குமோ?”

நான்  “சொல்லிக் குடுப்பேன். அதுக்குத்தான் வந்திருக்கேன். படிக்க வார பிள்ளங்களுக்கெல்லாம் சோறு உண்டு” என்று நான் சொன்னேன்.

அவன்  “சோறா?” என்றபின் கைசுட்டி  “அதுவா?” என்றான்.

சற்று அப்பால் காலையில் கப்ரியேல் நாடாரின் கழுதைகள் கொண்டு வந்து இறக்கிய இரண்டு மூட்டை அரிசியும் ஒரு பெரிய அலுமினிய அண்டாவும் இருந்தன. நான் அருகே சென்று பார்த்து  “இதுதான். இது பள்ளிக்கூடத்து அரிசி” என்றேன்.

”பள்ளிக்கூடத்து அரிசி” என்று அவன் சொன்னான். அவர்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள அந்த வார்த்தையை அப்படியே திருப்பிச் சொல்கிறார்கள்.

நான் கோரனிடம்  “இதை எங்கே வைக்க?” என்று கேட்டேன்.

கோரன்  “மழைத்தாள் உண்டு” என்றான்.

என்ன சொல்கிறான் என்று தெரியவில்லை. அவன் அந்த மூட்டைகளுக்கு அடியிலிருந்து இரண்டு பெரிய பாலீதீன் பைகளை எடுத்தான்.

“மண்ணில் குழிச்சிடும், பள்ளிக்கூடத்தில் குழிச்சிடும்” என்று அவன் சொன்னான். என்ன சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை.

“அரி அளந்து தா” என்று அவன் கேட்டான்.

நான் முதல் மூட்டையைப் பிரித்து அதிலிருந்து பத்து பிள்ளைகளுக்கு சாப்பிடத் தேவையான் அளவுக்கு அரிசியை என் வெறும் கையாலேயே அள்ளி அந்தக் குண்டாவில் போட்டேன். பிறகு இன்னும் கொஞ்சம் இருக்கட்டுமே என்று மீண்டும் மூன்று முறை அள்ளிப்போட்டேன்.

எஞ்சியதை அவன் அந்த பாலிதீன் பைகளுக்குள் போட்டு அதன் விளிம்புகளை  சேர்த்து நன்றாகக் கட்டினான்.  பள்ளிக்கூடத்திற்குள் சென்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

“என்ன செய்றே?” என்றேன்.

“குழிக்கணும்” என்றான். “ஏடா தூம்பா கொண்டுவா”

ஒரு பையன் ஓடி சிறிய மண்வெட்டி ஒன்றை கொண்டு வந்தான் கோரன் பள்ளிக்கூடத்திற்குள்ளேயே வேகமாக குழி பறிக்கத் தொடங்கினான். விரைவிலேயே இடுப்பளவு ஆழத்திற்கு குழி எடுத்துவிட்டான் அதற்குள் இரு மூட்டைகளையும் வைத்து மேலே மண்ணை மூடி இறுக்கினான். அதன்பின் புலி சிறுநீர் கழித்திருந்த மர இடுக்கிலிருந்து மண்ணை கையால் அள்ளிக்கொண்டு வந்தான் அதைப்புதைத்த இடத்திற்கு மேலே வீசி காலால் அழுத்தினான்.

“புலி மூத்திரம் நாறினா தோண்டான் நாய் வரில்லா” என்றான்.

எனக்கு புன்னகை வந்தது. உண்மைதான். புலி தவிர எந்த மிருகமும் இனி அங்கே தோண்டிப் பார்க்கப் போவதில்லை. புலிக்கு அரிசி தேவையும் இருக்காது.

நான் வெளியே வந்து அந்த பெரிய பையனிடம் மாணவர்களைக் கூட்டிவரச் சொன்னேன்.

“பிள்ளையளையோ?” என்று அவன் கேட்டான்.

“எல்லாப்பிள்ளைகளையும் கூட்டிவா எல்லாருக்கும் சோறு உண்டு” என்றேன்.

அவன்  “சரி” என்று சொல்லி ஓடிப்போனான்.

கோரன் மூன்று பெரிய கற்களை உருட்டிக்கொண்டு வந்து அடுப்பு செய்தான் அதன்மேல் அந்த அண்டாவை வைத்து அதில் அரிசியைக் கொட்டி வைத்தான். தண்ணீர் மொண்டு வருவதற்கு அருகிலேயே மரத்தின்மேல் இருந்து கமுகுப்பாளையில் கோட்டி உருவாக்கிய பெரிய தோண்டி ஒன்றை எடுத்துக்கொண்டான்

கீழே ஓடிய ஓடையிலிருந்து தண்ணீரை மொண்டு கொண்டுவந்து அண்டாவில் கொட்டி அந்தப்பகுதியில் இருந்தே காய்ந்த விறகுகளை சேகரித்து தீப்பொருத்தினான். பெரும்பாலும் காய்ந்த மூங்கில். அது மழையில் ஊறாமலிருந்தது. விரைவிலேயே எரிந்து வெடித்து தெறிக்க ஆரம்பித்தது.

சோறு வேகத்தொடங்கியது. அது ஒரு நல்ல அறிவிப்புதான் என்று எனக்குத்தோன்றியது. மெய்யாகவே சோறு போடப்போகிறார்கள் என்ற செய்தி மாணவர்களை அங்கு வரவழைக்கும்.

புதர்களுக்குள் ஓசைகள் கேட்டன. ஆங்காங்கே குழந்தைகள் தோன்றி என்னை நோக்கி வரத்தொடங்கின. அத்தனை குழந்தைகள் அங்கிருப்பதே ஆச்சரியமாக இருந்தது. கோரன் சென்று கூப்பிட்டால் அவர்கள் வந்திருக்க மாட்டார்கள். அவர்களில் ஒருவனான அந்த பெரிய பையன் சென்று அழைத்தபோது அவர்கள் வந்தார்கள்.ஒருவரை ஒருவர் பார்த்து இன்னும் நிறைய பேர் வந்தார்கள்.

சற்று நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து சேர்ந்ந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து புன்னகைத்து ”எல்லாரும் வரியாய் இருங்க” என்றேன்.

அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு ஒரு ததும்பும் பரப்பாக அசைந்தபடி  ஒற்றைத்திரளாக அங்கே நின்றார்கள்.

”ஸ்கூலுக்கு வாங்க” என்று நான் கூப்பிட்டேன். அவர்கள் எவரும் வரவில்லை.

அந்த மூத்த பையனிடம்  “உன் பெயரென்ன?” என்று நான் கேட்டேன்.

உச்சன்” என்று அவன் சொன்னான்.

“உச்சன் நீதான் மானிட்டர்” என்றேன்.

அவன் என்னைத் திகைப்புடன் பார்த்தான்.

“மானிட்டர்! மானிட்டர்னா மூப்பன் மாதிரி .பிள்ளைகளுக்கு நீதான் மானிட்டர்” என்றேன். ”சர்க்கார் உன்னை மானிட்டரா வெச்சிருக்கு”

அவன் தன் நெஞ்சைத்தொட்டு  “மானிட்டர்” என்றான்.

“ஆமாம்” நான் அவனை அழைத்து  “நீ மானிட்டர் நீதான் இவங்களுக்கு எல்லாம் சொல்லணும். நீ சொல்றத இவங்கள்ளாம் கேக்கணும். தெரியுதா?” என்றேன். அவன் தலையசைத்தான்.

எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது என் பையிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து அவனுக்குக் கொடுத்தேன். ”இது மானிட்டருக்குக் கூலி” என்று சொன்னேன்.

“கூலி” என்று அவன் புரியாமல் சொன்னான்.

“இதை நீ வெச்சுக்கோ மானிட்டருக்கு ஒரு ரூபா கூலி சர்க்கார் கூலி” என்றேன்.

அவன் புன்னகையுடன் அந்த நாணயத்தை புரட்டி புரட்டி பார்த்தான். மற்ற பிள்ளைகளெல்லாம் ஆவலுடன் அதைப்பார்க்க அவன் அவர்களையெல்லாம் அதட்டி துரத்தி அதை தன்னுடைய கமுகுப்பாளைக் கோமணத்துக்குள்ளே வைத்தான்.

“எல்லாரையும் உள்ளே கூட்டி வா” என்று சொல்லி நான் உள்ளே சென்றேன்.

“நா இப்பக் கூட்டி வாரேன்” என்று அவன் சொன்னான்.

அவன் அவர்களை ”ஒச்செண்டாக்காண்டே, ஒச்செண்டாக்காண்டே ,வரீ ,வரீ, வரீனேய்…” என்று ஆணையிடுவது கேட்டது. அந்த மொழியே வேறு. அவர்கள் நம்மிடம் நமது மொழியைத்தான் பேசுகிறார்கள்.

அதன்பிறகு குழந்தைகள் வரிசையாக முயல்கள் போல பள்ளிக்கூடத்திற்குள் வந்தன. ”எல்லாரும் உக்காருங்க” என்று நான் சொன்னேன்.

“இரீயின் இரீயின்” என்று அவன் அவர்களை நோக்கி சொன்னான். அவர்கள் கூட்டமாக அமர்ந்துகொண்டனர்.

எனக்கு அங்கே அமர்வதற்கு நாற்காலியில்லை. ஒன்று செய்துகொள்ள வேண்டும் என நினைத்தேன் அங்கே நிறைய மூங்கில் இருந்தது. அவர்களிடமே சொன்னால் சேர்த்துக்கட்டி ஒரு நாற்காலி செய்துகொடுப்பார்கள்.

நான் நின்றபடி  அவர்களிடம் சொன்னேன்.  “இது பள்ளிக்கூடம். இங்கே எல்லாருக்கும் உச்சைக்கு சோறு உண்டு. இங்க வந்தா எழுத்து படிப்பு சொல்லித்தருவேன் .எழுத்து படிப்பு படிச்சா பெரிய ஆளாயி சட்ட போடலாம் .சட்ட போட்டா சர்க்கார் ரூபா தரும்”

உச்சன் கை தூக்கி  “ஒரு ரூபா” என்றான்.

“ஆமா ஒரு ரூபா!” என்றேன்.

“கோரனுக்கு ஒரு ரூபாய்” என்று அவன் சொன்னான்.

“ஆமாம் கோரனுக்கு ஒரு ரூபாய். அத்தன பேருக்கும் ஒரு ரூபா” என்றதும் அவர்களெல்லாம் கலைந்து பேசத்தொடங்கினார்கள்.

“இப்ப இல்ல, நாளைக்கு” என்று நான் சொன்னேன். ”நீங்கள்ளாம் எழுத்து படிப்பெல்லாம் படிச்ச பிறகு! சரியா?” .

அவர்களில் ஒரு சிறுவன்  “கதை சொல்லு” என்றான்.

ஆச்சரியமாக இருந்தது  “கதையா?” என்று நான் கேட்டேன்.

“பெரிய கதை ஆனை கதை” என்று அவன் கேட்டான்.

அவர்கள் தந்தையரிடமிருந்து கதைகளைக் கேட்டுக்கேட்டு வாழ்பவர்கள் என்பதை பின்னர்தான் தெரிந்துகொண்டேன். அவர்களுக்கு இருக்கும் ஒரே கல்வி என்பது தந்தையும் தாயும் சொல்லும் கதைதான். பெரும்பாலும் அவர்களுக்கு அம்மாக்கள் தான் கதை சொல்கிறார்கள்.

நான் அவர்களுக்கு தந்திரக்கார நரியின் கதையைச் சொன்னேன். ’காக்கா நீ நன்றாகப் பாடுகிறாய்’ என்று சொல்லி வடையை அது கொண்டுபோய்விடுகிறது. ஆனால் அவர்கள் எந்த எதிர்வினையையும் காட்டவில்லை. விழித்துப் பார்த்துக்கொண்டு வெறுமே அமர்ந்திருந்தார்கள்.

நான் இன்னொரு கதை சொல்லலாம் என்று எண்ணி நினைவில் துழாவி தேடி தந்திரக்கார நரியின் வாயில் இருந்து சிக்கிக்கொண்ட முள்ளை எடுத்த கொக்கின் கதையைச் சொன்னேன். அதற்கும் அவர்கள் விழித்துப்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

“என்ன கதை புரிஞ்சுதா?”என்று நான் கேட்டேன்.

“நரி ஆரு?”என்று ஒருவன் கேட்டான்.

”நரி எவிடே?”என்றான் இன்னொருவன்.

ஒரு பெண்குழந்தை “நரி இல்ல” என்றது.

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. அவர்களால் பேசும் நரியையும் காகத்தையும் கொக்கையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் காகம் கல்லைப் பொறுக்கிப்போட்டு கூஜாவில் தண்ணீர் குடித்த கதையைச் சொன்னேன். அவர்கள் சேர்ந்து ஓசையிட்டார்கள். சிலர் உத்வேகம் தாளாமல் எழுந்துவிட்டார்கள்.

ஒருவன் “காக்கா இலையிலே வெள்ளம் குடிக்கும். வேற கொம்பில் இருந்நு குடிக்கும்” என்றான்

அவன் சொன்னதென்ன என்று எனக்கு புரிந்தது. இலையில் தேங்கிய நீரை சிந்தாமல் குடிக்கும்பொருட்டு காகம் இன்னொரு கிளையில் அமர்ந்து எட்டி அலகை நீட்டி குடிக்கிறது என்கிறான்.

“காக்கா கல்லு கொண்டுபோகும்!”

“காக்கா வெள்ளாரங்கல்லு கொண்டு வந்நு இடும்”

அவர்கள் காகங்களைப் பற்றி மாறி மாறிச் சொன்னார்கள். ஒவ்வொருவரும் காகங்களைப் பற்றி ஏராளமாக அறிந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக பேசட்டும் என்று விட்டேன்.

கடைசியாக ஒரு பெண் குழந்தை திக்கித் திக்கி “காக்கா! காக்கா! காக்கா!” என்றது.

அனைவரும் சிரித்தனர். வகுப்பு உயிர்த்துடிப்புடன் தொடங்கிவிட்டது. அரிசி வெந்த சோற்றின் மணமும் வந்துவிட்டது.

ஆனால் எவரிடமும் பாத்திரங்கள் இல்லை. அனைவருக்கும் அலுமினியப் பாத்திரங்கள் கொடுக்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

நான் அறிவிக்காமலேயே கோரன் வந்து “சோறு தின்னான் வரீ புள்ளா” என்று அவர்களை அழைத்தான். அத்தனைபேரும் ஓ என இரைந்தபடி வெளியே ஓடினார்கள்.

அவர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தேன். கோரன் கமுகுப்பாளைகளை பொறுக்கி கொண்டு வந்து வைத்திருந்தான். கத்தியால் அவற்றை வெட்டித் திருத்தினான். அவர்களில் வளர்ந்த பையன்கள் அவர்களே தொன்னை கோட்டிக்கொண்டார்கள். சிறு குழந்தைகளுக்கு கோரன் தொன்னை கோட்டிக் கொடுத்தான்.

வெறும் கஞ்சிதான். அதைத்தான் சோறு என்கிறான். ஆனால் தண்ணீர் ஓரளவு வற்றியிருந்தது. அவன் அதை அள்ளி குழந்தைகளின் தொன்னைகளில் ஊற்றினான்.

நான் திகைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றேன். எந்தக்குழந்தையும் முண்டியடிக்கவில்லை. தனக்கு மேலும் வேண்டும் என்றுகூட கேட்கவில்லை. சின்னக்குழந்தைகளுக்கு கொடுக்கும்படி பெரிய குழந்தைகள் கேட்டன. “அவிடே கொடு, அவிடே” என்றுதான் மாறிமாறி சுட்டிக்காட்டின.

கஞ்சி கிடைத்ததுமே அவை தொன்னைகளை சுமந்தபடி காட்டுக்குள் சென்றன.

”எங்க போறாங்க?”என்றேன்.

“மற்றுள்ளோருக்கு கொடுக்கானாக்கும்” என்றான் கோரன்.

அங்கே வராத பிறருக்கு கொடுக்க கொண்டுசெல்கின்றன. அவர்கள் பகிர்ந்துதான் உண்பார்கள். ஒருவர் உண்ண ஒருவர் பட்டினி கிடக்கும் வழக்கமே அவர்களிடமில்லை. பின்னர் அதை பலமுறை கண்டேன், ஆனால் முதல்முறை கண்டபோது சட்டென்று நான் கண்ணீர்மல்கிவிட்டேன்.

கோரன் தனக்கான கஞ்சியை எடுத்து தொன்னையில் வைத்தான். எனக்கும் கொஞ்சம் தந்தான். நான் அதை ஒரு சரிந்த மரத்தில் அமர்ந்து குடித்தேன். அவன் அந்த அண்டாவை ஓடைக்கு கொண்டுசென்று கழுவினான்.

அவன் திரும்ப வருவதற்குள் நான்கு குரங்குகள் வந்து கஞ்சியை அள்ளி குடிக்க ஆரம்பித்தன. ஒரு குரங்கு சூடுக்கு கை பொறுக்காமல் அருகே நின்ற மரத்தில் இருந்து இலையை பறித்து அதைவைத்து சோற்றை அள்ளியது. அதன் முகபாவனை என்னை புன்னகை புரிய வைத்தது. என்ன செய்ய, எப்படியாவது சாப்பிடவேண்டியதுதான் என்னும் பாவனை.

நான் “போ போ” என விரட்டினேன். அது என்னைப்பார்த்து கண்ணைச் சிமிட்டியது. அது மனிதர்களை பயப்படுவதில்லை. அங்கே எவரும் குரங்கை வேட்டையாடுவதில்லை.

கோரன் திரும்பிவந்து சோற்றை உண்ணும் குரங்குகளைப் பார்த்துக்கொண்டு நின்றான். மண்நிறமான பற்கள் தெரிய சிரித்து என்னைப்பார்த்து “குரங்கு…சோறு தின்னுணு” என்றான்.

“ஆமா” என்றேன் .”உனக்கு இல்லியே”

“குரங்கு சோறு தின்னும்…குரங்குக்கு சோறு இஷ்டம்” என்றான் கோரன்.

குரங்குகள் வாய் நிறைய அதக்கி கையிலும் அள்ளிக்கொண்டு சென்றன. அவன் அருகே சென்று எஞ்சிய கஞ்சியை கையில் எடுத்துக்கொண்டான்.

“அய்யே, அதையா சாப்பிடுறே?” என்றேன்.

அவன் என்னை வியப்புடன் பார்த்தான். நான் அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை.

நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். கோரன் என்னிடம் மகிழ்ச்சியுடன் “பள்ளிக்கூடம் நல்லது” என்றான். “பள்ளிக்கூடம் கொள்ளாம்” என்று சொல்லி கைவிரித்து “பெரிய பள்ளிக்கூடம்” என்றான்.

நாங்கள் மேலேறி வந்தபோது ஒவ்வொரு கணமும் என இருட்டிக்கொண்டே வந்தது. கோரன் “மழை வருணு” என்றான்.

“ஆமாம், மழைக்கு முன்னாடி போயிரமுடியும்ல?”என்றேன்.

“மழை இப்ப வரும்” என்று அவன் சொன்னான்.

நான் சுற்றிலும் இருண்டு இருண்டு வந்து கரிய நிழற்குவைகளாக ஆகிவிட்டிருந்த காட்டை பார்த்துக்கொண்டு நடந்தேன். காடு முழக்கமிடத் தொடங்கியது. அதற்குமுன் நான் அந்த ஓசையை கேட்டதில்லை. மொத்தமாக ஒரே மழையோசையாகவே உணர்ந்திருந்தேன். அது காட்டிலுள்ள பல்லாயிரம்கோடி பூச்சிகளும் தவளைகளும் சேர்ந்து எழுப்பிய ஓசை.

நான் அதைக்கேட்டபடி நின்றுவிட்டேன். தொலைவில் மழை மண்ணை அறையும் ஓசை எழுந்தது. பெரிய படை ஒன்று அணுகுவதுபோல வந்தது.

நான் திரும்பி அங்கிருந்த இரட்டைப்பாறையை பார்த்து ஓடினேன்.

கோரன் எனக்குப் பின்னால் ஓடிவந்தபடி “ஏமானே, அவ்விடம் போகாதே… அவ்விடம் வேண்டா!” என்றான்

நான் அந்தப் பாறை வெடிப்பை அடைந்து மூச்சிரைக்க நின்றேன். அங்கே மலைமாடன் சாமியின் உருளைக்கல் அமைந்திருந்த இருபாறை இடுக்குக்குப் பின்னால் இருவர் ஒண்டிக்கொள்ள குகைபோல இடமிருப்பதைக் கண்டிருந்தேன். சரியான நேரத்தில் அது நினைவுக்கும் வந்தது.

கோரன் பின்னால் வந்து நின்று “அது மலைமாடன் சாமிக்க மடை… ஏமானே அங்கே போகப்பிடாதே” என்றான்.

”என்ன?” என்றேன்.

அதற்குள் மழை பொத்திக்கொண்டு பெய்து அவனை நீர்த்திரையால் மூடியது. அதற்கு அப்பால் அவன் கைகளை ஆட்டி உடலை அலைபாயச் செய்து என்னிடம் கூச்சலிட்டுக்கொண்டிருப்பதை கண்டேன்.

இன்னொரு உணர்வு ஏற்பட்டு நான் திரும்பிப் பார்த்தேன். முதலில் நான் என்ன பார்த்தேன் என்றே எனக்குப் புரியவில்லை. என் கைகால்கள் நடுங்கின, என் மனம் திமிறித்துடித்தது. நான் எதை அஞ்சினேன் என்று நான் அப்போதும் பார்த்திருக்கவில்லை. சூழ்ந்த மழையின் ஓசை, நீர்த்திரை, அத்தருணத்தில் என் உள்ளம் இரண்டாகப்பிரிந்து பாதி பின்னால் கோரன் மேல் இருந்தமை எல்லாம் சேர்த்து என்னைச் சிதறடித்திருந்தன.

அதன்பின் என் தன்னுணர்வின் கூர்முனையால் நான் அதைச் சென்று தொட்டேன். மலைமாடன் கல்லுக்குப் பின்னால் இரு கூர்ந்த காதுகள் தெரிந்தன. இரு மஞ்சள் மலரிதழ்கள் போல. அந்த காட்சியின் வசீகரத்தால் மெய்மறந்தவன் போல நான் பார்த்துக்கொண்டே நின்றேன். மழையினூடாக நான் வேறெதையோ பார்க்கிறேனோ என்னும் ஐயம் அதற்கிடையே ஊடாடியது. அல்ல, அதுதான், அதுவன்றி வேறல்ல என்று இன்னொரு உள்ளம் கூவியது

பின்னர் உடல் தாறுமாறாக உதறிக்கொள்ள நான் பாய்ந்து சரிவில் இறங்கி ஓடினேன்.கோரனும் என்னுடன் ஓடினான். நான் அவன் வருகிறானா என்றுகூட பார்க்கவில்லை. மழையின் எனக்குப் பாதையும் தெரியவில்லை. காலில் இருந்த பாதையின் நினைவாலேயே ஓடினேன்.

நெடுந்தொலைவு ஓடியிருப்பேன். என் நெஞ்சுக்குள் மூச்சு கல்லென்றாகி இறுகி நின்றபோது தள்ளாடி முன்னால் சரிந்து சேற்றில் முகம்பொத்தி விழுந்தேன். புரண்டு எழுந்து அமர்ந்தபோது மழைத்தாரை என் மேல் அறைந்து அக்கணமே முழுக்க கழுவிவிட்டது.

கோரன் என்னருகே வந்து அமர்ந்தான். அவனும் மூச்சிரைத்துக்கொண்டிருந்தான்.

நான் கைவீசி “புலி…அங்கே, அது புலிக்குகை” என்றேன்.

அவன் “புலி!” என்றான்.

சட்டென்று அவனை ஓங்கி அறையவேண்டும் போலிருந்தது. காட்டிலேயே இருக்கிறார்கள். ஆனால் எங்கே புலி இருக்குமென்றுகூட தெரியாமல் இருக்கிறார்கள். மடையர்கள். ஆனால் என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

பின்னர் மெல்ல நடந்தோம். மழையையே தோளில் சுமந்தபடி நடப்பது போலிருந்தது. குனிந்துகொண்டால் முகத்துக்கு கீழே மழையில்லாத ஒரு இடம் உருவாகிறது. அது மூச்சுவிட உகந்தது என்று தெரிந்தது.

காடு நன்றாக இருட்டியிருந்தாலும் கண் பழகியிருந்தது. நீர்த்தாரைகளின் வழியாக ஒருவகை ரகசிய ஒளி கீழே இறங்கி எல்லாவற்றையும் வடிவம்துலங்கச் செய்திருந்தது. நீர் நிரம்பிச்சென்ற தரை ஒளிகொண்டு அனைத்துக்கும் பகைப்புலமாக அமைந்து நிழலுருவை தெளியச்வைத்தது.

எவ்வளவு நேரம் நடந்தோம் என்று தெரியாது. நாங்கள் பங்களாவை வந்தடைந்தபோது ஒவ்வொரு காலடியையும் உயிரின் கடைசிவிசையால் தூக்கி வைப்பவர்கள் போலிருந்தோம்.

உள்ளே நுழைந்ததுமே நான் அப்படியே ஈர உடையுடன் வெறுந்தரையில் படுத்துவிட்டேன். கோரன் அப்படியே உள்ளே சென்றான். சற்று நேரத்தில் அவன் சூடான டீயுடன் வந்தான். அதுவரை நான் எனக்குள் ரத்தம் கொப்பளித்து ஓடி, மெல்ல அடங்கி, குமிழிகளாகி ,அவை பறந்து அலைந்து ஒவ்வொன்றாக மறைவதை கண்களுக்குள் பார்த்துக்கொண்டிருந்தேன்.

டீயை குடிப்பதற்கு முன் எழுந்து ஆடைமாற்றிக்கொண்டேன். தலை துவட்டவேண்டியிருக்கவில்லை, காய தொடங்கியிருந்தது. டீயை குடித்தபின் மேஜைக்கு அருகே நாற்காலியில் அமர்ந்தேன். வெளியே வெட்டிய மின்னலில் கண்ணாடிச்சன்னல்களின் ஒளிவடிவம் அறைக்குள் தரையில் விழுந்து துடித்துச் சென்றது. கூரை இடியோசையால் அதிர்ந்தது.

நான் அந்தப் புத்தகத்தை பார்த்தேன். அது முந்தைய நாள் இரவு நான் வைத்த இடத்திலேயே இருந்தது. சட்டென்று எனக்கு புன்னகை எழுந்தது. இருவேறு உலகங்கள். ஒன்றுடன் ஒன்று தொடர்பே அற்றவை. அந்தப்புத்தகம் உலகின் வேறேதோ மூலையை இந்த காட்டுமூலையுடன் இணைத்துக்கொண்டு அங்கிருந்தது.

நான் புத்தகத்தை எடுத்தேன். விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன்.  OH, Sir, Lord Orville is still himself! still what, from the moment I beheld, I believed him to be-all that is amiable in man! and your happy Evelina, restored at once to spirits and tranquillity, is no longer sunk in her own opinion, nor discontented with the world;-no longer, with dejected eyes, sees the prospect of passing her future days in sadness, doubt, and suspicion!-with revived courage she now looks forward, and expects to meet with goodness, even among mankind:-though still she feels, as strongly as ever, the folly of hoping, in any second instance, to meet with perfection.

என்ன மொழி இது என்ற சலிப்பு ஏற்பட்டது. இப்படித்தான் பேசினார்கள் என்றால் எத்தனை பொய் அது. இப்படித்தான் எண்ணங்களும் ஓடின என்றால் அந்த மொழி ஒரு பெரிய வண்ணத்த்திரை. அதைக்கிழித்துக்கொண்டு வரும் அவர்களின் கனவுகள் மிக மூர்க்கமாக இருக்கவேண்டும். அவற்றை அஞ்சி மீண்டும் மீண்டும் அவர்கள் இந்த மொழியில் அடைக்கலம் தேடியிருப்பார்கள்.

ஈவ்லினா அந்த மொழிநடையை நன்றாகக் கற்றுத் தேர்ந்திருந்தாள். அவளால் ஒரு சரிகைநூலை சுழற்றுவதுபோல அதை கையாளமுடிந்தது. ஒரு பட்டுத்துவாலையை போல அதை பிறர்மேல் போட்டு இழுக்க முடிந்தது. ஒரு தங்கக் கம்பியைப்போல அதை எப்படிச் வளைத்து மடித்தாலும் அது ஓர் ஆபரணமாக மாறியது.

ஆங்கிலப்பேரரசின் மொழி. உலகமெங்கும் அவர்கள் அதைக் கொண்டுசென்றனர். அரசுமொழியாக, வரலாற்றின் மொழியாக, வரவேற்பறை மொழியாக அதை உருமாற்றிக் கொண்டே இருந்தனர். உலகை அந்த மொழி இணைத்தது.  உலகை ஆட்சி செய்தது. அதட்டும்போதும் அவைமரியாதையை பேணியது. தூக்குமேடைக்கு அனுப்பும்போதும் பெருந்தன்மையின் தோரணை கொண்டிருந்தது. ஒவ்வொன்றையும் முடிவிலா எதிர்காலம் நோக்கிப் பேசும் பாவனை கொண்டிருந்தது.

ஆர்வில் பிரபு என் மேல் காதல்கொண்டிருக்கிறார். அதை நான் அறிவேன். ஆனால் அவர் தயங்கிக்கொண்டிருக்கிறார். தயங்கும் ஆண்கள் பெண்களுக்குப் பெரிய அறைகூவலை விடுக்கிறார்கள். அவர்கள் பெண் அம்சம் கொண்ட ஆண்கள். அந்தப் பெண் அம்சத்தால் அவர்கள் பெண்களை மேலும் அணுக்கமாகப் புரிந்துகொள்கிறார்கள். அவ்வாறு புரிந்துகொள்ளப்படுந்தோறும் பெண்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2021 11:34

கதாநாயகி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

கதாநாயகி கதை நினைக்க முடியாதபடி வளைந்து வளர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இத்தனை எழுதிய பிறகும் டெம்ப்ளேட் என எதுவுமே இல்லாமல், உங்கள் தீவிர வாசகர்கள்கூட கொஞ்சம் கூட ஊகிக்க முடியாமல் கதை சென்றுகொண்டிருப்பது ஆச்சரியமானதுதான்.

இப்போது இந்தக்கதையில் இரண்டு ஓடைகள் உள்ளன. ஒன்று, கதைசொல்லியின் கதை. அவன் ஒரு மலைக்குச் சென்று அங்கே ஆதிவாசிகளுக்கு ஒரு பள்ளி அமைப்பது. இன்னொரு கதை ஒரு புத்தகம், அதைப்பற்றிய பிரமைகளின் கதை. அல்லது பேயின் கதை. இரண்டு கதைகளும் இதுவரை சந்திக்காமலேயே சென்றுகொண்டிருக்கின்றன.

புத்தகத்தின் கதை மூன்று அடுக்குகளாக உள்ளது. ஃபேன்னி என்ற கதாசிரியையின் கதை. அவள் வாழ்க்கையிலுள்ள சில மர்மங்கள், அவள் அதை எதிர்கொண்ட விதம். அவள் எழுதிய நாவலில் உள்ள கதாநாயகி ஈவ்லினா. அவளுடைய கதை இன்னொரு அடுக்கு. ஈவ்லினா ஃபேன்னியின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறாள். கூடவே அவள் தன் வாழ்க்கையை பற்றியும் சொல்கிறாள். மூன்றாவது அடுக்கு அதை வாசிப்பவனின் உணர்ச்சிகள்.

இந்த மூன்று அடுக்கும் ஒன்றாகக் கலந்துவிடுகிறது. ஈவ்லினா ஒருபக்கம் ஃபென்னி பற்றி பற்றி பேசுகிறாள். மறுபக்கம் வாசிப்பவன் உலகிலும் அவள் வருகிறாள்

சுவாரசியமான பல கதைகளாக போகிறது.

ஆர்.சரவணன்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

அதிகாலை தளத்தை திறந்ததும் கதாநாயகி 1 என்று கதைத்தலைப்பு  கண்ணில் பட்டதுமே அடைந்த நிம்மதியை எப்படிச்சொல்வதென்று தெரியவில்லை.  தொற்று குறித்த செய்திகள், வதந்திகள், மரணச்செய்திகள், ஊதிபெரிதாக்கப்பட்ட பொய்கள் என எத்தனை தள்ளியும் ஒதுங்கியும் இருந்தாலும் மேலேவந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது.

முன்னனுபவம் இருப்பதால் அச்சமூட்டும் முழு ஊரடங்கு நாளையிலிருந்து, கதை இன்றிலிருந்து.

உங்கள் கதைகளை இந்த அசாதாரண நாட்களில் வாசிப்பதுஉள்ளத்துக்கு பெரும் விடுதலையாக, சிகிச்சையாக இருக்கிறது.பலமணிநேர மின்தடைக்குப்பின்னர் மின் விசிறி ஓடத்துவங்குவதை போல ,அக்னி நட்சத்திரவெயிலில் முந்தாநாள் திடீரெனகுளிர குளிர பெய்த மழையைப்போல, மூச்சுக்காற்றுக்கு புழுங்கித்தவிக்கையில் கதவும் ஜன்னலும் திறந்து காற்றும் வெளிச்சமும் உள்ளே நிறைந்ததைப்போலவெல்லாம் உணர்கிறேன்.

சாதாரணமாக ஊரில் துவங்கும் கதை தீடீரென காட்சிமாறி காடு, மலை, அமானுஷ்யமென மாறியதில் இனி வேறொன்றையும் நினைக்காமல் அடுத்தென்ன நிகழுமென்று மட்டும் மனதில் நினைத்துக்கொண்டிருக்கலாமென்பதே  ஊரடங்குகாலத்தில் சுவாரஸ்யமான விடுதலை.

கிரியின் காட்டை நினைவூட்டும் சூழல். அந்த பங்களா, காட்டுமழை எல்லாம் விசேஷமென்றாலும் அந்த எழுத்து மேசை ஆர்வமூட்டியது. பஸ்ஸை பிடித்து போய் அதை வாத்தியாரிடம்கேட்டு வாங்கிவரலாமென்று கூட நினைத்துக்கொண்டேன்.அப்படி ஒரு மேசை பலஆண்டுகளாக கனவு எனக்கு.

நான் பார்த்தேயிராத கணக்குப்பிள்ளையாயிருந்த என் அம்மாவின் அப்பா புழங்கிய. ஒருமேசையை குறித்து அச்சு அசலாக இப்படியேதான் அம்மா பலமுறை விவரித்திருக்கிறார்கள். அதனுடன் அவர் உபயோகித்த ஈட்டி மர ரூல்தடி என்னிடம் விநோதமான முறையில் சமீபத்தில் வந்துசேர்ந்தது. இப்போது 80 வயதாகும் அம்மா தன் திருமணத்துக்கு பிறகுபிறந்த வீட்டு வாசற்படியை மிதிக்கவேயில்லை. ஆனாலும் அந்த குளிர்ந்த ரூல்தடி எனக்கு தாத்தாவின் ஆசிகளைப்போல வந்து சேர்ந்திருக்கிறது.

உங்களின் எல்லாக்கதைகளும் எனக்கு எங்கோ பழைய கனலை விசிறிவிடுகிறது.

மழைநீரில் கோரன்  போட் டீ ஏக்கமூட்டுகிறது.மலைக்குளிரில் கம்பளிக்குள் கதைசொல்லி உணரும் பாதுகாப்பையும்  கத கதப்பையும் உங்கள் கதைகள் எனக்கும் அளிக்கின்றன.

கதை தலைப்பிற்கு பின்னிருக்கும் 1 என்னும் எண்  இனி கதை தொடருமென்பதை சொல்லி பெரும் நம்பிக்கை அளிக்கிறது. நெருப்பைப்போல அணையாது வளரும் கதைகளுக்கான நன்றிகளுடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2021 11:31

பித்தப்பூ- பிரவீன்

பித்தப்பூ வாங்க

அன்புள்ள ஆசானுக்கு,

க.நா.சுப்ரமண்யம் அவர்களின் ‘பித்தப்பூ’ குறுநாவல் வாசித்தேன். இதுவே நான் வாசிக்கும் க.நா.சு வின் முதல் நாவல். மனநலம் பற்றிய நாவல் இது. ‘பைத்தியம்’ என்பதன் அர்த்தத்தை அறிய முயலும் முயற்சியே இந்நாவல்.

கதை தியாகராஜன் (எ) தியாகுவைப் பற்றியது. கதை கூறுபவர் (க.நா.சு) தியாகுவின் குடும்ப நண்பர். தியாகுவிற்கும், கதை கூறுபவருக்கும் (க.நா.சு)  நடக்கும் உரையாடல்கள் ஒரு பகுதி விட்டு விட்டு வருகிறது. முதல் பகுதியில் உரையாடல் என்றல் இரண்டாம் பகுதியில் காட்சிகளும், சம்பவங்களும் , பிறகு மீண்டும் மூன்றாம் பகுதியில் உரையாடல்கள். இந்த உரையாடல்கள் பெரும்பாலும் தியாகு தன் மனவோட்டங்களையும், தன் மீது பிறர் வைத்திருக்கும் அபிப்பிராயத்தையும் உடையது.

கதையில் சில “பைத்தியம்” அடைந்தவர்களின் சூழ்நிலைகள் கூறப்பட்டுள்ளது. தன் மனைவியின் செயலால் திடீரென்று “பைத்தியம்” ஆகுபவர், தந்தி கொடுக்கும் தபால்காரன் பைத்தியம் ஆவது, போன்ற சிறு கிளை கதைகள் வருகின்றன. உண்மையில் பைத்தியம் என்பது என்ன? தியாகுவின் அப்பாவையும் அண்ணனையும் கூட சிலர் பைத்தியம் என்கிறார்கள். பொதுவான மனித செயல்களை செய்யாமல் தனியே செய்பவரை உலகம் காலம் தோறும் பைத்தியம் என்று தான் சொல்லிக்கொண்டு வருகிறது. மக்கள் தன்னால் செய்ய இயலாததை, பிறர் செய்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், அதை செய்வோரை பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுகிறது. இது ஒரு வகையான “பைத்தியத்தின்” வரையறை.

அவனின் தந்தை பெரிய பணக்காரராக இருந்து தான தர்மத்தால் தன் சொத்தினை முக்கால்வாசிக்கும் மேல் இழந்தவர். அவரின் இரண்டாம் மனைவியின் கடைசி மகன் தான் தியாகு (பத்தாவது பிள்ளை).  தன சிறு வயது முதலே படிப்பிலும், ஓவியத்திலும் படு சுட்டி. காலேஜ் படிக்கும் போது அவன் கலை இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டான். அதிலேயே அவன் எப்போதும் திளைத்திருந்தான்.

கதை கூறுபவரும்(க.நா.சு) ஒரு பைத்தியம் என்றே மக்கள் நினைப்பர். தன் வாழ்நாள் முழுதும் “எழுத்து” மட்டுமே நம்பி வாழ்பவரை உலகம் எப்படி சொல்லும். தியாகு தான் ஒரு பைத்தியமோ என்று எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு விபத்தில் சிக்கி அவன் காதலியயை இழந்த பின்னர் அவன் இன்னும் அந்த எண்ணத்தில் மூழ்கிவிட்டான். அவன் தொடர்ச்சியாக “தான் ஒரு பைத்தியமா இல்லையா” என்பதைப் பற்றியே தன் வாழ்நாள் முழுதும் போராடிக்கொண்டிருந்தான்.

தியாகு இறுதியில்  “electric shock” மருத்துவத்தின் கொடுமையால் உயிரிழக்கிறான். தன் மனைவியும் மகளும் வெளியூரில் இருக்க, தான் மட்டும் தனியே வாழ்ந்து மனச்சோர்வுடனே இறந்தும் போனான்.

“நான் பைத்தியமா?” என்ற கேள்வி பெரும்பாலும் தன் வாழ்க்கையில் எல்லோரும் ஒருமுறையாவது சிந்தித்திருப்போம். மனச் சோர்வு உடையவர்கள், அதில் உள்ளே சென்று தங்களை இழக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக அவரவர் சுற்றமும் நட்பும் எப்போதும் இருக்க வேண்டும். இன்று “மனநோய்” பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் மேலை நாடுகளில் இருந்தாலும், இன்றளவும் நம்மிடையே அதை ஒரு stereotype செய்து ஒதுக்கியே வைத்துள்ளோம். மனம் குன்றினாலும், மனம்  இல்லாவிட்டாலும் அனைவரும் ஓர் உயிரினமே. அடிப்படை அன்பும், பரிவுமே நாம் கொடுக்கும் மருந்து.

அன்புடன் ,

பிரவின்,
தர்மபுரி

சக்கரவர்த்தி உலா

க.நா.சுவின் தட்டச்சுப்பொறி சர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம் க.நா.சு.கடிதங்கள் க.நா.சுவும் வெங்கட்சாமிநாதனும் சொல்வனம்-க.நா.சு சிறப்பிதழ் க.நா.சு.கடிதங்கள் க.நா.சு

ரசனையும் பட்டியலும்

இலக்கியவாதிகளும் அமைப்புகளும் பொய்த்தேவு- கண்டடைதல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2021 11:31

மலைகளின் மடி-கனவும் இலட்சியமும்

வெண்முகில் நகரம் தோன்றி மலைகளின் மடி வரும்வரை ஒரு நெருப்பு நதியின் கரையில் நடந்த உணர்வு இருந்தது. உடம்பில் அந்த அனலின் வெம்மை தகித்துக்கொண்டே இருந்தது. மலைகளின் மடிவந்தபோது திரௌபதி என்னும் அனல்நதியின் பிடியில் இருந்து வெளிப்பட்டு வெட்டவெளியில் விழுந்த மீனின் துள்ளல். இது பரவசம் என்று சொல்லமுடியாது மாறாக இடம்மாறியதன் சுவாச இம்சையாக இருந்தது. முற்றும் வெறுமையில் விழுந்ததுபோல முற்றும் புதிய கண்காணாத இடத்தில் எறியப்பட்டதுபோல, முற்றும் புதிய நிலத்தில் புடுங்கி நட்ட நாற்றுபோல வாடி வதங்கவேண்டியதாக இருந்தது. ஏன் இந்த மாற்றம்? உச்சத்திற்கு பிறகு வரும் சூன்யம்.

மலைகளின் மடி-கனவும் இலட்சியமும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2021 11:30

May 12, 2021

தன்னேற்பு

எழுதுவது, வாசிப்பது என வீட்டிலிருக்கிறேன். நெருக்கமானவர்களின் நோய்ச்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சோர்வுறக்கூடாது என எனக்கே சொல்லிக்கொண்டிருக்கிறேன். நடுவே இளைப்பாறலுக்காகச் சில சினிமாக்கள்.

ஆனால் இன்றைய படங்களில் விரிந்த காட்சித்தன்மை கொண்ட சில சினிமாக்களை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. பலர் பரிந்துரைக்கும் பெரும்பாலான படங்கள் உளத்திரிபு, வன்முறை, பாலியல்மீறல் ஆகிய மூன்று கருப்பொருட்களைச் சார்ந்தவை. அவற்றில் அதிர்ச்சியோ படபடப்போ அடைந்தால் மட்டுமே அவற்றில் ஈடுபாடு கொள்ள முடியும். எனக்கு அவை சலிப்பும் அலுப்பும் ஊட்டுகின்றன. அதுதான் தெரியுமே, மேற்கொண்டு சொல்லு என்கிறேன். மீண்டும் மீண்டும் பூச்சாண்டி காட்டுகிறார்கள். சரிதான் போடா என்று சொல்லி மூடிவிடுகிறேன்.

சமீபத்தில் அப்படி சொல்லி கணிப்பொறியை அணைத்தது கிம் கி டுக் படம் ஒன்றைப் பார்த்து.அவர் ஐரோப்பாவின் அறிவுஜீவி பாவனை கொண்ட முதிரா உள்ளங்களுக்கு என்ன தேவை என்று அறியும் திறன் கொண்ட சாமர்த்தியசாலி, அவ்வளவுதான்.

சரி, வழக்கமான வணிகக்கேளிக்கைச் சினிமாக்களுக்குச் செல்லலாம் என்றால் அவையும் பத்துநிமிடங்கள் தாங்கவில்லை. ஆகவே திரும்பத் திரும்ப பார்த்தவை மிஸ்டர் பீன் வகை காமெடிகள். அவ்வாறு துழாவிக் கொண்டிருக்கையில்தான் பழைய மலையாளக் கலைப்படங்களை இணையத்தில் கண்டடைந்தேன். பெரும்பாலும் முன்னர் பார்த்தவை. மெல்ல நகரும் இப்படங்களை எப்படி பார்க்கமுடியும் என்று பலமுறை கடந்தபின் ஏதோ ஒரு பலவீன நிமிடத்தில் பார்த்தேன். ஆச்சரியமாக அவை உள்ளிழுத்துக் கொண்டன.

இலக்கியமறிந்த ஒருவனுக்கு, இலக்கியவாதிக்கு, சினிமாவில் காட்டப்படும் வன்முறைகளும் காமமும் எந்த பெரிய ஈடுபாட்டையும் உருவாக்காது. அவனுடைய கற்பனைக்கு மிகக் கீழேதான் அவை நின்றிருக்கும். சினிமாவில் வெளிப்படும் தத்துவமும் தரிசனமும் அவன் தத்துவயியலிலும் இலக்கியப் படைப்புக்களிலும் அறிந்தவற்றின் ஒரு படி குறைவான வெளிப்பாடுகளாகவே இருக்கும் – நான் சினிமாவின்  ‘மாஸ்டர்ஸ்’ எனப்படுபவர்களை பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். அதன்பின் சொல்லும் கருத்து இது. எந்த சினிமாவும் சிந்தனைக்குப் புதிதாக எதையும் எனக்குத் தந்ததில்லை.

அதற்கப்பாலும் இலக்கியவாதிக்குச் சினிமாவில் ஆர்வமளிப்பது என்னவாக இருக்கும்? முதன்மையாக காட்சிகள். இலக்கியவாதி நேரடியாக வாழ்க்கையை பார்த்துக் கொண்டே இருக்கிறான். சினிமா மேலும் செறிவாக்கி, சட்டகமிட்டு வாழ்க்கையை காட்டுகிறது. மிக இயல்பாகக் காட்டப்படும் ஒரு காட்சி இலக்கியவாதியை மிகப்பெரிய கற்பனைகளுக்கு தள்ளிவிடும். நிலக்காட்சிகள், நகர்க்காட்சிகள், மனித முகங்கள்.

மனித முகங்களில் வெளிப்படும் மெல்லிய உணர்வுமாற்றங்களை சினிமாவில் காண்பதுபோல எங்குமே நாம் காணமுடியாது. எத்தனை நெருக்கமானவர்களாக இருந்தாலும் நாம் எவர் முகத்தையும் இத்தனை கூர்ந்து, இத்தனை அணுக்கமாகப் பார்ப்பதே இல்லை.

அத்துடன் ஒளிநிழலாட்டத்தை இணைக்கிறது சினிமா. ஓசைகளை தெரிவுசெய்து பின்னால் பரப்புகிறது. படத்தொகுப்பு வழியாக காட்சிகளை பொருத்துகிறது. தருணங்களை உருவாக்கி, தொடர்ச்சியை உருவாக்கி ஓர் உலகை கட்டமைக்கிறது. எத்தனை சாத்தியங்கள். முடிவிலி வரைச் செல்லும் கலைவாய்ப்பு உள்ளது சினிமாவில். எ

என்னைப் பொறுத்தவரை சினிமாவின் காட்சிகளே போதும், அர்த்தங்களை நான் உருவாக்கிக் கொள்வேன். படிமங்களாக நானே மாற்றிக்கொள்வேன். மெய்வாழ்க்கையிலிருந்து எப்படி உணர்ச்சிகளை, கதையை, தரிசனத்தை அடைகிறேனோ அப்படி.

அடுத்தபடியாகவே இயக்குநர் உருவாக்கும் காட்சிப்படிமங்களைச் சொல்வேன். என்னை மிகப்பெரிய தொலைவுக்கு எடுத்துச்சென்ற காட்சிப்படிமங்கள் சினிமாவில் உள்ளன. அவை அந்தப் படத்தின் எல்லைக்குள் இருந்து எழுந்து என் ஒட்டுமொத்தக் கனவையும் பாதித்திருப்பதை இன்று உணர்கிறேன். சினிமா மெய்யாகவே எனக்கு எதையாவது அளித்திருக்கிறதென்றால் இதைத்தான் சொல்வேன். காட்சிகளை, புறத்தே விரியும் ஒரு கனவை.

ஆகவே கலைப்படங்கள் என்னை மீண்டும் அதே தீவிர உளநிலைக்கு இட்டுச்செல்வதை, முற்றிலும் ஆழ்த்தி வைத்திருப்பதைப் புரிந்துகொள்கிறேன். அதை எளிமையான கேளிக்கைப் படங்கள் செய்ய முடியவில்லை. இவை வெறும் யதார்த்தச் சித்தரிப்புகள், இவற்றில் என்ன இருக்கமுடியும் என்றே சென்ற இருபதாண்டுகளாக எண்ணிவந்தேன். ஆனால் இப்போதும் இவைதான் பார்க்கச் செய்கின்றன.

மாறாக பலரும் கொண்டாடும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் அரைமணிநேரம் பார்க்க முடியவில்லை. அந்த மிகைவண்ணமும், மின்னிச்செல்லும் காட்சிவேகமும், செயற்கையான வசனங்களும் அதைவிடச் செயற்கையான உச்சகட்டக் காட்சிகளும், ஆங்கிலப்படங்களுக்கே உரிய ’டெம்ப்ளேட்’ திரைக்கதையும், போலிக்கதாபாத்திரங்களும் இணைந்து ஒருவகை ஒவ்வாமையையே உருவாக்கின. அவற்றிலிருந்து தப்பச்செய்தவை இந்த கலைப்படங்கள்தான்.

அடூர் கோபாலகிருஷ்ணனின் முதல் படமான சுயம்வரம் 1972ல் வெளிவந்தது. இன்று எழுபதுகளில் வந்த புகழ்பெற்ற கேளிக்கைப் படங்களில் பாட்டுக்களைத் தவிர எதையுமே பொருட்படுத்த முடியவில்லை. ஆனால் சுயம்வரம் இன்று பார்க்கையில் முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது. அதற்குக் காரணம் இது கலைப்படைப்பு என்று ஆவணப்படுத்தப்பட்டமையால், விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்பட்டமையால் நான் இதை கூர்ந்து பார்த்ததா என்று என்னால் சொல்லமுடியவில்லை.

அதைவிட இதில் காட்டப்படும் திருவனந்தபுரம். மண்குழைத்துக் கட்டப்பட்ட சுவர்களும், கறைபடிந்த காரைப்பூச்சும், தென்னையோலைக் கூரையும் கொண்ட வீடுகள். அக்கால உடைகள், பேச்சுமொழி. அதுவும் எனக்கு ஈர்ப்பாக அமைந்திருக்கலாம். அது காட்டும் கலாச்சாரப் பிரச்சினையும் எனக்கு அணுக்கத்தை அளித்திருக்கலாம், ஓர் அயல்நாட்டுப் படம் தராத ஒன்று.

[image error]

1972ல் அடூருக்கு வயது 32. அதற்குமுன் பல குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் எடுத்திருந்தார். சுயம்வரத்தின் திரைக்கதையுடன் மூன்று ஆண்டுகள் அலைந்தார். அவருடைய நண்பரும், அவருடன் திரைப்படச் சங்க இயக்கத்தில் பணியாற்றிய முன்னோடியுமான குளத்தூர் பாஸ்கரன் நாயர் தயாரிக்க படத்தை தொடங்கினார். பின்னர் கேரள ஃபிலிம் டெவெலப்மெண்ட் கார்ப்பரேஷனின் நிதியுதவி கிடைத்தது.

பலவகையிலும் சத்யஜித் ரே ‘பாதேர் பாஞ்சாலி’யை எடுத்த வரலாறுதான். சுயம்வரமும் பதேர்பாஞ்சாலியைப் போலவே திரையரங்கில் வெளியாகி போதிய எதிர்வினையைப் பெறவில்லை. அதைப்போலவே தேசிய விருது கிடைத்ததும் உடனே கவனிக்கப்பட்டு வணிகவெற்றியை ஈட்டியது. அதன்பின் உலகம் முழுக்க கவனிக்கப்பட்டு அடூரை இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக ஆக்கியது.

பாதேர் பாஞ்சாலி வெளிவந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த படம் சுயம்வரம். பாதேர் பாஞ்சாலி போலவே விட்டோரியா டி சிகாவின் புதுயதார்த்தவாத அழகியல் கொண்டது. வாழ்க்கையை  ‘அப்படியே’ காட்டுவதான கலைப்பாவனையுடன் வெளிப்பட்டது. பாதேர் பாஞ்சாலி போலவே மலையாள திரையுலகில் ஒரு கலைப்பட இயக்கத்தை தொடங்கிவைத்தது.

[அடூர் கோபாலகிருஷ்ணன், சுயம்வரம் படப்பிடிப்பின் போது]

மகிழ்ச்சியும் மனநிறைவுமாக நகரத்தில் நுழையும் ஒரு காதல்ஜோடி வாழ்க்கையில் சந்திக்கும் துயர், இழப்பு, அவளுடைய கடைசி உறுதிப்பாடு ஆகியவற்றின் சித்தரிப்பு. திரைக்கதையே இல்லையோ என்பதுபோலத் தோன்றும் சர்வசாதாரணமான அன்றாடத்தையே படம் காட்டிச் செல்கிறது. நிகழ்ச்சிகள் என நாம் சொல்லும் எதுவுமில்லை. அது அப்படித்தான் என அறிந்து அந்தந்த காட்சிகளில் நின்று பார்க்கும் பார்வையாளனுக்குரியது இப்படம்.

முதல் காட்சி முதல் இறுதி வரை என் கண்கள் அமைந்திருந்தது சாரதாவின்மேல். அத்தனை இயல்பான திரைத் தோன்றுதல். பேருந்தில் புதுக்கணவனுடன் வரும்போதிருக்கும் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும், விடுதியில் படுத்திருக்கும் கணவனைப் பார்க்கையில் கண்களில் மட்டும் தெரியும் காமம், தன் இல்லத்தை மெல்ல அமைத்துக்கொள்ளும் பொறுப்பு, அத்தனை வறுமைக்கு நடுவிலும் ஒரு வீடு தனக்கென அமைந்ததின் சுதந்திரம் வெளிப்படும் உடல்மொழி.

அத்தனை சிறிய கதாபாத்திரங்களும் மிக இயல்பான மனிதர்களாக தெரிகிறார்கள். அருகே வாழும் உற்சாகமான, கள்ளமில்லாத விபச்சாரி. தன்னியல்பாகவே உதவும் அண்டைவீட்டுக் கிழவி. பக்கத்துவீட்டுப் பையன் தன் தங்கையை தூக்கிச் செல்லும் காட்சியை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். புதுயதார்த்தவாதம் என்பது ஒரு சாளரத்தை திறந்து வைக்கும் அளவுக்கே புனைவுக்கு இடமளிப்பது. சாளரச்சட்டகமும் அதில் தெரியவேண்டியதென்ன என்ற தெரிவும் மட்டுமே அதன் கலைப்பங்களிப்புகள்.

ஓளிப்பதிவாளர் மங்கட ரவிவர்மா, ஒலிப்பதிவாளர் தேவதாஸ் இருவரும் அடூரின் படைப்புவாழ்க்கை முழுக்க உடன் வந்தவர்கள். அவர்களின் கூட்டு இந்தப்படத்தில் தொடங்குகிறது. முகங்களிலும் கதைக்களத்திலும் தேவையான இடங்களில் மட்டும் ஒளிவிழும் ரவிவர்மாவின் காட்சியமைப்புகளும், இயல்பான ஒலிகளாலேயே சூழலை உருவாக்கும் தேவதாஸின் ஒலித்தெரிவுகளும் படத்தை ஒரு மெய்யனுபவமாக ஆக்குகின்றன.

மனிதர்களை அருகிருந்து நோக்கும் அனுபவமே புதுயதார்த்தவாதத்தின் மிகப்பெரிய அழகியல்கூறு. அர்த்தங்களை உருவாக்கிக் கொள்வது முக்கியமே அல்ல. சொல்லப்போனால் அர்த்தத்தை, கதைத்தொடர்ச்சியைக்கூட உருவாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. சிந்தனையை அகற்றிவிட்டு வெறுமே அவர்களை பார்ப்பதனூடாக நம் ஆழுள்ளம் அந்தக் காட்சிகளால் நிறைய அனுமதிப்பதும், அது தன்னிச்சையாக உருவாக்கிக்கொள்ளும் அர்த்தங்கள் என்னென்ன என்று பின்னர் மதிப்பிடுவதுமே நாம் செய்யவேண்டியது.

முதல் காட்சிகளில் வரும் சீதா [சாரதா] உயர்குடிப்பெண் என்பது அவள் அந்த உயர்விடுதியை இயல்பாக அணுகுவதிலிருந்து தெரிகிறது. அவளுடைய தொடர்வீழ்ச்சியின் கதை இது. அவள் அவனுடன் தங்கிய மறுநாள் காலையில் வெளியே ஒலிக்கும் பஜனைப் பாடலை கேட்டுக்கொண்டு கணவனை அவ்வப்போது காமத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கும் காட்சியை இப்படத்தின் கலையின் உதாரணமாகச் சொல்வேன். அந்தப் பஜனைப் பாடல் நம் உள்ளத்தில் பதியவேண்டும் என இயக்குநர் நேரமெடுத்துக்கொண்டு காட்டுகிறார்.

அப்போது அது ஏன் என தெரியவில்லை. ஆனால் அனைத்தையும் இழந்தபின் தாக்குப்பிடித்து வாழும் அவள் அந்த நாளை நினைவுகூர்கையில் அந்த பஜனையின் ஒலியை அத்தனை துல்லியமாக நினைத்திருப்பாள் என்று தோன்றுகிறது. அவளால் அந்த ஓசைகளிலிருந்து நினைவைப் பிரிக்கவே முடியாது. அவ்வாறு எண்ணியபடி மீண்டும் அக்காட்சியைப் பார்க்கையில் அது அமைக்கப்பட்டிருக்கும் விதத்திலுள்ள படைப்புசக்தி வியப்பூட்டுகிறது.

https://adoorgopalakrishnan.com/

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2021 11:35

கதாநாயகி-5

[image error]

[image error]நான் விடியற்காலையில் படுத்து கொஞ்சம் வெயில் வந்தபிறகுதான் கண்விழித்தேன். எப்போது படுத்தேன் என்று நினைவிருக்கவில்லை. ஆகவே காலையில் விழிப்பதே அப்போதுதான் என என் மனம் எண்ணிக்கொண்டது. உடலில் கொஞ்சம் தூக்கக்குறைவின் அசதிபோல் இருந்தது. கைகால்களை நீட்டிக்கொண்டு முதுகை நெளித்தேன். குளிரில் போர்வைக்குள் தூங்குவதன் பிரச்சினைகளிலொன்று நாம் உடலை இரவெல்லாம் குறுக்கி வைத்திருப்போம் என்பது. உடலை நெளித்தால் கிடைக்கும் இன்பத்திற்காகவே அப்படித் தூங்கலாம்.

சட்டென்று இரவில் நிகழ்ந்தவை நினைவுக்கு வர திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். போர்வையை தள்ளிவிட்டுக்கொண்டு ஓடிச்சென்று அந்தப்புத்தகத்தை எடுத்துப்பார்த்தேன். அது அப்படியே நான் வைத்த இடத்தில் இருந்தது. இரவு நான் வாசித்துவிட்டு வைத்த பகுதியில் தீக்குச்சி அடையாளம் இருந்தது. அதைப் புரட்டிப் பார்த்தேன். The die is thrown, and I attend the event in trembling!  ஈவ்லினா ரெவெரெண்ட் வில்லர்ஸுக்கு எழுதிய கடிதம் தொடங்கியது. அந்த கடிதத்திற்கு முந்தைய கடிதத்தில் ரெவெரெண்ட் வில்லர்ஸ் இப்படி எழுதி முடித்திருந்தார். you shall leave it for ever; and once again restored to my protection, secure your own tranquillity, and make, as you have hitherto done, all the happiness of my life. அதேதான் அங்கேதான் முடித்தேன்.

நான் புத்தகத்தை புரட்டிக்கொண்டே இருந்தேன். நேற்று வாசித்தவற்றை மீண்டும் வாசித்தேன். என் உள்ளம் எதை தேடியது? நான் வாசித்தவை அங்கிருக்கவேண்டும் என்றா, இருக்கலகாது என்றா? இருந்தால் நான் இந்த பதற்றத்தில் இருந்து விடுபடுவேன். இல்லை என்றால் என்னால் புரிந்துகொள்ள முடியாத எதையோ எதிர்கொள்கிறேன். உண்மையைச் சொன்னால் நான் அங்கே அந்த வரிகள் இருக்கலாகாது என்றே விரும்பினேன்.

புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து சென்று முற்றத்தில் நின்றேன். வெயில் ஒளியுடன் விழுந்துகொண்டிருந்தது. முந்தையநாள் மழையை முற்றத்தின் மென்மணல் வரிகளிலிருந்து மட்டுமே உணரமுடியும். இன்னும் சற்றுநேரத்தில் தோலை எரியச்செய்யும் வெயில் விழத்தொடங்கும். உடல் வியர்த்து வழியும். நீராவியால் மூச்சுத்திணறும். இந்தக் காட்டில் பகலுக்கும் இரவுக்கும் தொடர்பே கிடையாது. பகலில் இங்கே இரவில் நிகழ்ந்தவற்றை தொடர்பு படுத்திப்பார்க்கவே முடியாது.

நான் கேளாமலேயே கோரன் டீ கொண்டுவந்து தந்தான். அவனிடம் “இங்கே அரிசி எங்கே வாங்கிறது?”என்றேன்

“அரி, கோதையாறு கடையில்…” என்றான்.

“இப்போ போனா வாங்க முடியுமா?”

“இப்போ இல்ல… நாளை”

நான் யோசித்துவிட்டு “சரி, இன்னைக்கு ஸ்கூல் வேண்டாம். கோதையாறுக்கு போவோம்” என்றேன்.

“ஓ, கோதையாறு… அவ்விடம் கரண்டு உண்டு… ” என்று அவன் சொன்னான். கைகளை விரித்து உத்வேகத்துடன் “பெரிய கரண்டு… புலியை காட்டிலும் பெரிய கரண்டு” என்றான்

நானும் அவனும் கோதையாறுக்குச் சென்றோம். அவன் செல்லும் வழியில் புலியையும் கோதையாற்றின் மின்சாரத்தையும் பற்றி மாற்றி மாற்றி ஏதோ சொல்லிக்கொண்டே வந்தான். அவன் என்ன சொல்கிறான் என்று நான் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. இயல்பாகவே அச்சொற்கள் என்னுள் பொருள் கொள்ள ஆரம்பித்தபோது வியப்படைந்தேன்.

அவன் காட்டின் தலைமையை புலியிடமிருந்து மின்சாரம் எடுத்துக்கொண்டதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான். மின்சாரம் கொடுமையானது, ஒரே அடியில் ஆளைக்கொன்றுவிடும். சண்முகம், மாதேவன் பிள்ளை, அம்புரோஸ் ஆகியோரை அதுதான் கொன்றது. நாகராஜன், வறுவேல், காமராஜ் ஆகியோருக்கு நல்ல அடி விழுந்தது. அவர்களின் கைகால்கள் உடைந்தன. புலி அப்படி அல்ல. நீண்ட நாட்களுக்கு முன்பு தூப்பன் என்பவனை அது கொன்ன்றிருக்கிறது. ஏனென்றால் தூப்பன் கெட்டவன், அவன் கடுத்தா சாமிக்கு பலி கொடுக்கவில்லை.

மின்சாரத்தை புலி அஞ்சுகிறது. புலி வரும் வழிகளில் மின்சாரக் கம்பிகளால் கோடு போட்டு வைத்திருக்கிறார்கள். மின்சாரம் புலியை ஒருமுறை அடித்து தூக்கி எறிந்துவிட்டது. அதன்பின் கோதையாறுக்கு புலி வருவதில்லை. அங்கே மின்சாரம்தான் அரசன். மின்சாரத்தில் பூ பூக்கும். மரங்களை நட்டு பூ மலரச்செய்வார்கள். பெரிய சிவப்புப் பூக்கள். இரவில் அந்தப்பூக்கள் வெளிச்சம் வீசும்.

தீ போல அவை எரியும். ஆனால் பற்றிக்கொள்வதில்லை. எரிவதுடன் சரி. புகையும் வராது. ஏனென்றால் அது தீயல்ல, ஒரு பூதான். பகலில் அந்தப் பூ வாடிவிடும். அந்தப் பூவில் தேனெடுக்க சிறிய பூச்சிகள் முட்டிமுட்டி அதைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும். ஆனால் அந்தப் பூவைக் கண்டால் புலி அஞ்சிவிடும். அந்தப் பகுதிக்கே அது வராது. நம் பங்களாவில்  மின்சாரத்தை கொண்டுவந்து பூ மலரச்செய்துவிட்டால் போதும், புலியை நாம் அஞ்சவேண்டியதில்லை.

ஆனால் மின்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்களை புலி பார்த்துக்கொண்டிருக்கும். அதற்கு நினைவிருக்கும். காட்டில் தனியாகப் போனால் பின்னால் வந்து கவ்வி கொண்டு சென்றுவிடும். புலி மனிதனைக் கொல்வதுடன் சரி, தின்பதில்லை. ஏனென்றால் மனிதனின் மேல் மலைவாதைகள் கூடியிருக்கின்றன. அவை இருட்டானவை. மனிதனின் வாய்க்குள் பார்த்தால் இருட்டு தெரியும். அந்த இருட்டை புலி தின்பதில்லை.

அவனுடைய உலகம் எனக்கு வியப்பாக இருந்தது. அவன் அவ்வளவு பேசுவான் என்பதும் கொஞ்சம் திகைப்பை அளித்தது, பேச ஆரம்பித்தால் பேச்சே அவனைக் கொண்டுசென்றது.

“உன் குடும்பம் எங்கே ?” என்று கேட்டேன். “உனக்கு மனைவி இல்லையா?”

“வீட்டாள் இல்லை. வீட்டாள் பாம்புகடிச்சு செத்துபோய்” என்று அவன் பற்களைக் காட்டிச் சிரித்தபடிச் சொன்னாள். “குஞ்சாள் செத்து போயி”

“ஓ’ என்றேன்.  “குழந்தைகள் இல்லியா?”

“இல்லை” என்று அவன் சொன்னான். “நான் கோதையாறு போயி… கரண்டு கண்டேன்”

அவன் தன்னை மின்சாரத்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டவன். ஆகவே புலியின் குடிமக்களான காணிகளுடன் அவ்வளவு நெருக்கமான உறவு இல்லை. அவர்களுக்கும் கோதையாறுக்கும் நடுவே அவன்தான் தொடர்பு. ஆனால் அவர்களின் ஏறுமாடங்களில் அவன் தங்குவதில்லை.

“நான் சோறு தின்னும். சோறு!” என்று அவன் கையை விரித்து காட்டினான். “கோதையாறிலே நெறைய சோறு!”.

வயிறுமுட்ட சோறு கொடுத்து அவனை கோதையாற்றின் பிரஜையாக ஆக்கிவிட்டார்கள் என்று தெரிந்தது.

நாங்கள் கோதையாற்றை அடைந்தபோது வெயில் உடலையே மெழுகாக உருகிவழியச் செய்துவிடும் என்பதுபோல அடித்தது. என் வீட்டில் நெல்லவிக்கும் அண்டாவுக்கு அருகில் நின்று கிளறும்போதுதான் எனக்கு அப்படி வியர்க்கும்.

கோதையாற்றில் ஒரு கடைதான் இருந்தது. கப்ரியேல் நாடாரின் கடையில் மளிகைச்சாமான்களும் மருந்துகளும் டார்ச்லைட்டுக்கு பேட்டரிகளும் பிளாஸ்டிக் செருப்புகளும் துண்டுகள் வேட்டிகளும் எல்லாமே கிடைத்தன. சைக்கிள் டயரும் டியூபும் கூட கிடைத்தன.

நான் நாடாரிடம் பள்ளிக்கூடத்திற்கு தேவையான அரிசியும் பருப்பும் மளிகையும் கொண்டுவந்து பங்களாவிலேயே தரமுடியுமா என்று கேட்டேன்.

“என்னண்ணு சொல்லுதிய? அவனுகளுக்கு சோறு மட்டும் போரும். நம்ம கறியும் கூட்டுமெல்லாம் அவனுகளுக்கு பிடிக்காது. இவன் திம்பான், இவன் காட்டுநாய் பளகி நாட்டுநாய் ஆனதாக்கும். அவனுகளுக்கு ஒண்ணும் வயத்துக்குப் பிடிக்காது. நெறைய மலிவான அரிசிய வாங்கிட்டு போங்க.  நல்லா சோறு பொங்கி வயிறு முட்ட குடுங்க…”

“பத்து பிள்ளைக தானே?”

கப்ரியேல் நாடார் பெரிய பற்களைக் காட்டி சிரித்து “அது பள்ளிக்கூடத்துக்கு. இவனுக அத்தனபேரும் சோத்துக்கு வருவானுக“ என்றார். ”ஆனா தினமும் வரமாட்டானுக…ஏன்னா இவனுகளுக்கு அரிசிச்சோறு வயித்துக்கு அவ்ளவு பிடிக்காது. இவனுகளுக்கு இறைச்சிதான் முக்கியமான சாப்பாடு…முயலோ பெருச்சாளியோ மானோ கொன்னு இறைச்சியை சுட்டு வயிறுநெறைய ஒருநேரம் தின்னுட்டான்னா அப்டியே இருந்திருவானுக”

அவரே அரிசியை கழுதைகள்மேல் ஏற்றி பள்ளிக்கூடத்துக்கே கொண்டுவந்து தருவதாகச் சொன்னார். “பள்ளிக்கூடத்திலே அரிசியை வைக்க இடமில்லை” என்று நான் சொன்னேன்.

”பிளாஸ்டிக் காயிதத்திலே போட்டு நாலடி ஆழத்திலே புதைச்சு வையுங்க… அதெல்லாம் இவனுகளுக்கு தெரியும். அன்னன்னைக்கு தேவையானதை எடுத்துக்கிடுங்க…” என்றார் கப்ரியேல் நாடார். ‘அரிசி வேணும்னா முன்பணம் குடுக்கணும். நான் போனிலே கூப்பிட்டுச் சொன்னா கொலசேகரத்திலே இருந்து அரிசி லாரியிலே போட்டு அனுப்புவாரு நாடாரு. நான் நாளைக்கு வெயிலுக்கு முன்ன கொண்டுவந்து சேத்திருதேன்”

நான் பணம் கொடுத்து அவரிடம் ரசீது பெற்றுக் கொண்டேன். நானும் கோரன்னும் நாடாரின் கடையிலேயே ஒரு பன் சாப்பிட்டு டீயும் குடித்தோம். திரும்ப நடந்து பங்களாவுக்கு வந்தபோது உச்சிப்பொழுது கடந்துவிட்டது. இந்தக் காடு தூரங்களால் இங்குள்ளவர்களைக் கட்டிபோட்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். இன்னும் சில ஆண்டுகள் நான் இந்த மூன்று இடங்களுக்கும் நடுவே ஊசலாடிக்கொண்டே இருக்கப்போகிறேன்.

காடுவழியாக வரும்போது நாங்கள் ஒரு யானைக்கூட்டத்தைப் பார்த்தோம். அதற்கு நெடுநேரம் முன்பே கோரன் மூக்கைச் சுளித்து “ஆன” என்று சொல்லிவிட்டான். சரிவுக்கு கீழே நாலைந்து யானைகள் நின்றிருந்தன. மண்நிறமானவை, செம்மண் குன்றுகள் என்றே தோன்றின. எங்களையும் அவை உணர்ந்துவிட்டிருந்தன. அவற்றில் முதிய யானை இருமுறை மெல்ல ஒலியதிர்வை எழுப்பியது. மற்றயானைகள் வாலைச் சுழித்தபடி மேய்ந்துகொண்டிருந்தன.

கோரன்”கறம்பியும் கூட்டமும்”என்றான்

அவர்கள் யானைக்கூட்டங்களுக்கே பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. கோரன் சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்தான். இவர்கள் காட்டில் வாழ்வதன் வழியாக கற்றுக்கொண்டது காட்டில் செல்கையில் மனமில்லாமல் இருப்பது. உள்ளே எதுவுமே ஓடுவதில்லை. கண்ணும் காதும் மூக்குமாகவே செல்கிறார்கள். இந்தக் காட்டில் மனதையும் சுமந்து செல்பவன் வழிதவறுவான். விலங்குகளிடம் மாட்டிக்கொண்டு உயிர்விடுவான்.

சட்டென்று கோரன் ஒரு கல்லை எடுத்து சரித்து வீசினான். புதருக்குள் இருந்து ஒரு பெரிய முயல் துள்ளி விழுந்தது. அதன் மல்லாந்த அடிவயிறு தெரிந்தது. அது மீண்டும் துள்ளுவதற்குள் அவன் இன்னொரு கல்லால் அதை அடித்தான். அது துள்ளி துள்ளி அதிர்ந்துகொண்டிருந்தது. என்னால் அதைப் பார்க்கமுடியவில்லை. நான் முன்னால் சென்றேன்.

அவன் அதை எடுத்துக்கொண்டு வருவான் என்று நினைத்தேன். ஆனால் நான் சற்றுநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அவன் பெரிய நவரை இலையில் அந்த முயலின் இறைச்சியை கட்டி பொட்டலமாக்கி எடுத்துக்கொண்டு வந்தான். இரண்டுகிலோ வரை இருக்கும்.

“செவியன் இறைச்சி” என்று அவன் சொன்னான். நான் புன்னகைசெய்தேன்.

பங்களாவை அடைந்தபோது நான் மிகவும் களைத்திருந்தேன். கல்படிகளில் நிழலிருந்தது. அதிலேயே அமர்ந்துவிட்டேன்.அவன் உள்ளே சென்று எனக்கு டீ போட்டுக் கொண்டுவந்து தந்தான். அவனே முயலை சமைக்க ஆரம்பித்துவிட்டான்.

நான் எழுந்துசென்று அந்த நாவலை எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். டூவல் சீமாட்டி ஈவ்லினாவின் பொருட்டு அவளுடைய தந்தை சர் ஜான் பெல்மோன்டின் மேல் ஒரு வழக்கு தொடுக்க திட்டமிடுகிறாள். அவர் அவளை தன் மகளாகச் சட்டபூர்வமாக ஏற்கவேண்டும், அவருடைய சொத்துக்களுக்கு வாரிசாகவும் ஆக்கவேண்டும். ஆனால் ரெவெரெண்ட் வில்லர்ஸுக்கு அதில் ஈடுபாடில்லை. அவரிடம் சொத்துக்காக உரிமை கோரக்கூடாது, சொத்து என்பது விரும்பி அளிக்கப்படவேண்டியது என்கிறார். ஹோவார்ட் சீமாட்டி பெல்மோண்ட் பிரபுவுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதினாலும் அவர் ஆர்வம் காட்டுவதில்லை.

எனக்குச் சலிப்பாக இருந்தது. அந்நாவல் நான் எண்ணியதுபோல ஆழம் ஏதும் இல்லாததாகத் தோன்றியது. அப்போது ஏன் அந்தச் சலிப்பு வந்தது என்று இப்போது இப்படிச் சொல்கிறேன். புனைவெழுத்தில் ஒரு துடுக்குத்தனம் இருக்கவேண்டும். மீறல் என்றும் சொல்லலாம். பொதுப்புத்தியால் அறியும் விஷயங்களைத் தாண்டிச்செல்லும் ஆற்றலை அளிப்பது அந்த துடுக்குத்தனம்தான். அந்நாவலின் தலைப்பிலும், கருவிலும் எந்த அளவுக்கு துடுக்குத்தனம் தெரிந்ததோ அந்த அளவுக்கு நாவலில் இல்லை.

நீண்ட நீண்ட உரையாடல்கள், சில்லறை பிணக்குகள், அக்காலத்துச் சமூகச் சிக்கல்கள், அரசியல் முரண்பாடுகள். நாவலை மூடிவைத்துவிட்டேன். கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன். இங்கே எனக்கு நிகழ்ந்துகொண்டிருப்பது உண்மையில் என்ன என்று சிந்திக்கலானேன். இது கற்பனையும் பிரமையும் கலந்த ஒரு நிலை. இதற்கு உளவியலில் ஏதாவது பெயர்கூட இருக்கக்கூடும். ஒருவேளை மனச்சிக்கலின் தொடக்கமாகவே இருக்கலாம்.

அந்த எண்ணம் என்னை சில்லிட வைத்தது. மனச்சிக்கல் என் குடும்பத்தில் உண்டு. என் சித்தப்பா ஆவுடையப்ப பிள்ளை பலவகையான மனச்சிக்கல்களால் அவதிப்பட்டார். முழுப்பைத்தியமாக ஆகி சுசீந்திரம் போனவர் அங்கே தெப்பக்குளத்தில் குதித்து இறந்தார். உடனே அவரை நான் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வந்தன. அவர் எந்த புத்தகத்தை எடுத்தாலும் படித்துக்கொண்டே இருப்பார். தினத்தந்தியையே பலமணிநேரம் படிப்பார். எவராவது பிடுங்கிக் கொள்வது வரை.

வியர்த்துவிட்டேன். அந்த மனச்சிக்கல்தான் எனக்குமா? ‘எழுதாப்புறம் படிப்பது’ என்பார்கள் மலையாளத்தில். அது இல்லாதவற்றை கற்பனைசெய்து கொள்வது. அதைத்தான் செய்கிறேனா? இருக்கும் என்ற எண்ணம் அளித்த பதற்றத்தை தாங்கவே முடியவில்லை. ஆமாம் அதுவேதான் என்று தோன்றி, அதுவே என உறுதியாகி, கணநேரத்திற்குள் பூதம்போல எழுந்து நின்றது.

இது தொடக்கம்தான், இனி விழிப்பிலும் குரல்கள் கேட்கும், கண்களுக்குள் ஒளிப்புள்ளிகள் தோன்றும், காதில் அவ்வப்போது நாராசமான ஓசைகளும் மூக்கில் கெட்ட வாசனைகளும் வரும். அதன்பின் காட்சிகள் தெரிய ஆரம்பிக்கும். நேர் உலகம் போலவே தோன்றும் காட்சிகள். அவை நேருலகுடன் ஊடுகலந்துவிடும். எந்த உலகில் இருக்கிறேன் என்றே தெரியாமலாகும். பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சீறிக்கொண்டும் இருப்பேன்.ஒருநாள் கிளம்பிச் சென்றுவிடுவேன். தெருக்களில் அலைவேன். ஆடைகள் கந்தலாகும். சாக்கடைநீரை அள்ளிக்குடிப்பேன். எச்சில்களை உண்டு தெருவில் அமர்ந்திருப்பேன்.

என்ன செய்வது? இங்கிருந்து ஓடிவிடவேண்டும். இப்போதே, சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு ,பையை தூக்கிக்கொண்டு காட்டின்வழியாக ஓடி ,கோதையாறை அடைந்து, பஸ் பிடித்து குலசேகரம் சென்று, நாகர்கோயிலுக்கு சென்று, ஊரை அடைந்துவிடவேண்டும். ஆனால் திண்ணையில் அப்பா அமர்ந்திருப்பார். அவர் என்ன என்று கேட்பார். அம்மா உள்ளிருந்து வந்து “என்னடா மெய்யி?”என்பாள்.

நான் தளர்ந்து மீண்டும் நாற்காலியில் அமர்ந்துவிட்டேன். இந்த காட்டில், இந்த ஒழிந்த பங்களாவில் நான் இறந்தாலும் சரி, பைத்தியமாகி இங்கேயே அலைந்தாலும் சரி, என்னால் இந்த வேலையை துறக்க முடியாது. இது பைத்தியத்தின் தொடக்கம்தான். இல்லாதவற்றை காண்பது, இல்லாதவற்றை படிப்பது. பெரும்பாலான பைத்தியங்கள் இதைச் செய்கின்றன.

“இல்லை” என்று ஒரு குரல் மிக அருகே கேட்டது. என் முதுகுக்குப் பின்னால்.

“யார்?”என்றேன்

“நான் இங்கே இருக்கிறேன். உண்மையாகவே இருக்கிறேன். இது உங்கள் பிரமையெல்லாம் இல்லை”

பிரிட்டிஷ் உச்சரிப்பு கொண்ட ஆங்கிலம்.

“நீ பிரிட்டிஷ்காரியா?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“நீ யார்? ஃபேன்னி பர்னியா?”

அவள் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.

“இல்லை, ஈவ்லினா?”

அவள் இருப்பதாகவே தெரியவில்லை. நான் சட்டென்று திரும்பிப் பார்த்தேன், யாருமில்லை.

“பொய்’ என்றேன்.

செவிகூர்ந்துவிட்டு “வெறும் பிரமை” என்றேன்.

மீண்டும் சற்று நேரம் கவனித்துவிட்டு “என்னுடைய மனச்சிக்கல்தான் இது” என்றேன்.

என் முன் ஒரு நிழல் உருப்பெற்று வருவதைக் கண்டேன். எனக்குப்பின்னால் நின்றிருக்கும் ஒருவரின் நிழல் அது. அவருக்குப் பின்னால் கண்ணாடிச் சன்னல் இருந்ததனால் நிழல் கூர்மையாக, நீண்டு விழுந்து கிடந்தது.

ஒரு பெண்ணின் நிழல் அது.

“யார்?”என்று நடுங்கும்குரலில் கேட்டேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. நான் உரக்க “இதுவும் என் மனமயக்கமாக இருக்கலாம்… “ என்றேன்.

அவள் “எல்லாமே மனமயக்கமாகவும் இருக்கலாமே?”என்றாள்.

”அப்படியில்லை என்றால் நீ யாரென்று சொல்”

அவள் மீண்டும் பேசாமல் நின்றாள்.

“சொல், நீ யார்?”

உள்ளிருந்து கோரன் வெளியே வந்து “ஏமானே…’என்று சொல்லி உடனே அஞ்சி பின்னடைந்தான். அவனுடைய கண்களில் இருந்த பயவெறிப்பை, வாய் திறந்திருந்ததை, நான் நன்றாகவே கண்டேன். திகைப்புடன் எழுந்துவிட்டேன்.

“என்னடா?” என்றேன்.

அவன் மாறி மாறிப்பார்த்தபடி அருகே வந்தான்.

”என்ன? என்னடா?”என்றேன்.

“ஆரோ நிக்குந்நு மாதிரி தோந்நி…” அவன் தரையைச் சுட்டிக்காட்டி “ஈ நிழலு… இது அப்புறம் நிக்குண மாவின் நிழலு” என்றான்.

நான் கீழே பார்த்தேன். ஜன்னலுக்கு அப்பாலிருக்கும் மாமரத்தின் மங்கிய நிழல்தான் தரையில் விழுந்துக் கிடந்தது.

“நான் கண்டு பயந்நேன்…”என்று அவன் பற்களைக் காட்டிச் சிரித்தான். “இறச்சிக்கஞ்ஞி எடுக்கட்டா?”

“என்னது?”என்றேன்.

“இறச்சிக்கஞ்ஞி… நாரகச்சம்மந்தி உண்டு”

“எடு”

அவன் உள்ளே சென்றான். நான் அவள் குரலுக்காக செவிகூர்ந்தேன்.

“அவனும் பார்த்துவிட்டான்” என்று குரல் கேட்டது.

“ஆனால் அது நிழல்”

“நாங்கள் அப்படித்தான் வரமுடியும்….ஆனால் இது உன் மனச்சிக்கல் இல்லை… அதை உறுதிசெய்துகொள்“

”ஆமாம்”என்றேன்.

“ஆகவே நீ பயப்படவேண்டியதில்லை. நாங்கள் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை”

“நான் என்ன செய்யவேண்டும்?”என்றேன்.

“அந்தப்புத்தகத்தை படி… முழுக்கப் படி…”

“ஏன்?”

“இந்தமாதிரி சென்ற நூற்றாண்டு நாவல்களை இப்போது எவருமே படிப்பதில்லை”

“அதற்காகவா?”

“அதில் எத்தனை வாழ்க்கைகள்!” என்றது அக்குரல். “யாரும் படிக்காவிட்டால் அவை எங்கே போகும்?”

கோரன் வந்து “கஞ்ஞி எடுத்து வைச்சேன்” என்றான்.

“வாறேன்”என்றேன்.

“ஏமான், தனக்குத்தான் பேசுந்நூ’ என்றான் கோரன்.

“இல்லையே”என்றேன்.

“இல்ல, நான் கண்டேன்”

”சும்மா பேசிப்பார்த்தேன்” என்றேன்.

முயல்கறியை அரிசியுடன் போட்டு வைக்கப்பட்ட கஞ்சி. நார்த்தங்காய் மரத்தின் இலைத்தளிர்களை பச்சைப்புளியுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து எடுத்த துவையல். விசித்திரமான சுவை. ஆனால் எனக்கு மிகப்பிடித்திருந்தது.

“இந்த பச்சைப்புளி எங்க கிடைச்சுது?” என்றேன்.

“அவிடே… வலிய புளிமரம் உண்டு”

கொல்லையில் நார்த்தங்காய் மரம் நிற்பதை முன்பே கண்டிருந்தேன். கழுவி ஊற்றிய நீரில் முளைத்த மிளகாய்ச்செடிகள் நிறையவே நின்றிருந்தன.

“நீ சாப்பிடு” என்றபடி முகப்புக்கு வந்தேன்.

நாற்காலியை நோக்கிச் செல்ல முயன்றபின், திரும்பி கட்டிலை நோக்கிச் சென்றேன்.

“அந்தப் புத்தகம் அங்கே இருக்கிறது” என்று மிகமெல்ல குரல் ஒலித்தது.

”ஆமாம்” என்றேன்.

”அதைப்படி”

“வேண்டாம்…”

“நீ அதைப் படிக்கவேண்டும்…”

“மாட்டேன்”

”தயவுசெய்து தயவுசெய்து…”

“ஏன்?”

“நீ அதைப்படித்தால்தான் நான் தோன்றமுடியும்”

“நீ யார்?”

அவள் பதில் சொல்லவில்லை.

நான் கட்டில் நோக்கிச் சென்று அதன்மேல் அமர்ந்தேன். அந்த உரையாடல் என்னுள் ஒலிக்கிறது. உண்மையில் செவியில் கேட்கவில்லை, கேட்பதாகத் தோன்றுகிறது.

“அதை எடுத்து வாசி… அதை எடுத்து வாசி”

“மாட்டேன்”

“தயவுசெய்து… தயவுசெய்து”

அந்தப் புத்தகம் மேஜைமேல் இருந்தது. அதைப் பார்த்தபடிஅமர்ந்திருந்தேன். சட்டென்று ஓர் எண்ணம் வந்தது. எழுந்து சென்று அதை எடுத்து டிராயரை திறந்து மூடி உள்ளே வைத்தேன்.

பின்னர் திரும்பி நடந்து வெளியே போய் படிகளில் அமர்ந்தேன். கைகளை மார்பில் கட்டியபடி வெளியே வெயில் சாய்ந்திருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மழை வருவதுபோல எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் நீராவி மூச்சடைக்க வைக்கும் அளவுக்கு நிறைந்திருந்தது.

“ஏன்?”என்ற குரல் கேட்டது.

“நீ அதை எடுத்து வெளியே வை பார்ப்போம்”

“எதற்கு?”

“நீ என் எண்ணக்குழப்பம் அல்ல, எனக்கு வெளியே உண்மையிலேயே இருக்கிறாய் என்று நான் நம்புகிறேன்”

“அவனும் என்னைப் பார்த்தான்!”

“அவன் என்னுடைய பாவனைகளைக் கண்டு அஞ்சிவிட்டான். நான் என்னருகே ஒருவர் இருப்பதைப்போல பேசிக்கொண்டிருந்தேன்”

“அதை எடுத்து வாசி…”

“மாட்டேன். நீ அதை எடுத்து வெளியே வை”

நான் செவிகூர்ந்தேன். எந்த ஓசையும் இல்லை.

”இருக்கிறாயா?”

பதில் ஏதும் எழவில்லை.

“என்ன செய்கிறாய்?”

நெடுநேரம் செவிகூர்ந்தேன். எந்த ஓசையுமில்லை.

“போய்விட்டாயா?”

அங்கே நான் உணர்ந்த இன்மை என்னை திடுக்கிடச் செய்தது. அங்கே எவருமில்லை. நான் திரும்பிப்பார்த்தேன். மெய்யாகவே எவருமில்லை. எழுந்து உள்ளே சென்று விரிந்த கூடத்தை பார்த்தேன். அதே இன்மை. கூடத்தில் சுற்றி நடந்தேன். யாருமே இல்லை.

அங்கே அந்தக்குரல் ஒலிக்காதபோதுகூட நான் ஓர் இருப்பை உணர்ந்திருக்கிறேன். அது முற்றிலும் இல்லாமலாகிவிட்டிருக்கிறது. நான் நாற்காலியில் சென்று அமர்ந்தேன். மெய்யாகவே அவளை திருப்பியனுப்பி விட்டேனா? இனி அவள் இல்லையா?

டிராயரை திறந்தேன். அந்த புத்தகம் அங்கே இருந்தது. அதை எடுத்து வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. வாசிக்க ஆரம்பித்தால் அவள் தோன்றிவிடுவாள். அந்த புத்தகத்திலிருந்துதான் அவள் எழுந்து வந்தாள்.

ஆனால் அதைப் படிக்க ஆரம்பித்தால் மீண்டும் அந்த அவஸ்தையை இழுத்து என்மேல் போட்டுக்கொள்வேன். அது ஒருவேளை அது மனநோய் என்றால் நானே அதை வளர்த்துக்கொள்கிறேன். நான் தனியாள் அல்ல. எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. அத்தனைபேரும் என்னையே நம்பியிருக்கிறார்கள்.

டிராயரை மூடிவிட்டேன். என் நெஞ்சில் கழிவிரக்கம் நிறைந்தது. என்னால் முடிந்தது இதுதான். வேறெப்படியும் நான் நடந்துகொள்ளமுடியாது. நான் இழந்தது மிகப்பெரிய ஒன்று . என் வாழ்க்கையில் இத்தகைய உச்சநிலையை அடைந்ததே இல்லை. நாள்முழுக்க ஒன்றையே எண்ணிக்கொண்டிருக்க நேர்வது எத்தனை அரியது.அது நாட்களை எத்தனை ஒளிகொண்டதாக ஆக்குகிறது. ஒருமாதம் கழித்து நினைவுகூரும்படி ஒருநாள் இருந்தால் அதில்தான் மெய்யாகவே வாழ்கிறோம். விக்டர் யூகோவின் வரியா அது? ஆனால் அத்தகைய எத்தனை நாட்கள் ஒருவருக்கு அமைகின்றன?

காதலில் விழுந்தவர்கள் அப்படி இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு இந்தக்காட்டில் என்ன காதல்? என் தங்கைகளுக்கு நான் பணம்சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரையாக கல்யாணம் செய்து அனுப்பவேண்டும். அதன்பின் எனக்கான ஒரு பெண். பெரும்பாலும் உலகமறியாத வேளாளப் பெண். பெரும்பாலும் பற்கள் உந்திய, கண்கள் குழிந்த, பலகாரணங்களால் திருமணம் தட்டிப்போய் வயதுகடந்த பெண்.

எரிச்சலுடன் நான் அந்த டிராயரை திறந்தேன். புத்தகத்தை கையில் எடுத்தேன். நான் தற்கொலை செய்துகொள்வதுதான் இது. ஆனால் மலையிலேயே நம்மை கவருமிடம் அதலபாதாளத்தின் விளிம்புதான். சாவின் அருகாமை இல்லாத எதுவும் ஆழமும் தீவிரமும் கொள்வதில்லை. ஒருகணம் தவறினால் சாவு என்றிருக்கையிலேயே நாம் நம்மை முழுமையாகத் தொகுத்துக் கொள்கிறோம். இந்தக்காட்டில் அத்தனை உயிர்களும் அப்படித்தான் வாழ்கின்றன.

ஆனால் கையில் சற்றுநேரம் வைத்திருந்துவிட்டு நான் மீண்டும் அந்த புத்தகத்தை உள்ளே வைத்துவிட்டேன். என்னால் முடியாது. என்னால் ஆசைப்படத்தான் முடியும். நான் அத்தனை புத்தகங்களைப் படித்ததே என்னால் எதையும் மெய்யாகவே நிகழ்த்திவிட முடியாது என்பதனால்தான். என்னால் மலைகளில் ஏறமுடியாது, கடற்பயணம் செய்யமுடியாது, எந்தப்பெண்ணின் கண்ணைப்பார்த்தும் காதல் சொல்ல முடியாது, எவரிடமும் குரலை உயர்த்தி சண்டைபோட முடியாது.

தன்னிரக்கம் கொண்டு நான் தலையை கைகளில் தாங்கிக்கொண்டேன். அழவேண்டும் போலிருந்தது. எனக்கெல்லாம் காதல்கூட வாய்க்காது. காதலி ஒருத்தி கனவுடன் வந்து என் முன் நின்றால்கூட என் குடும்பப்பொறுப்பை நினைத்து அவளை துரத்திவிட்டு தனிமையில் அமர்ந்து புலம்புவேன்.

எழுந்து முற்றத்திற்கு வந்தேன். இருட்டிக்கொண்டிருந்தது. மழை இன்னும் வரவில்லை. ஆனால் மழைக்கான எல்லாமே ஒருங்கிவிட்டிருந்தன. மரங்கள் அசைவில்லாத இலைகளுடன் காத்துநின்றிருந்தன. பறவைகள் ஒடுங்கிவிட்டன. தெற்குவானில் இடியோசை யானையின் உறுமல்போல எழுந்தது. வானில் மின்னல்கள் கீறித்துடித்துக்கொண்டே இருந்தன. மெல்லிய காற்றசைவு. அதில் செவிகளில் குளிரை உணர முடிந்தது.

தளர்ந்த காலடிகளுடன், உடல் எடைகொண்டு தள்ளாடுவதுபோல நடந்து கற்படிகளில் ஏறினேன். உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தேன். மேஜைமேல் இருந்த புத்தகத்தை எடுத்து கவனமில்லாமல் புரட்டினேன்.

சட்டென்று கை சுட்டதுபோல அதை மேஜை மேல் வைத்துவிட்டேன். அதை யார் எடுத்து மேஜைமேல் வைத்தது? அவளா? அது ஓர் ஆவிதானா? ஆனால் நானே முன்பு அங்கே அமர்ந்தபோது அந்த புத்தகத்தை எடுத்தேன். திரும்ப உள்ளே வைக்கவில்லையா? கைமறதியாக நானே மேஜைமேல் வைத்துவிட்டேனா? உள்ளே வைக்க எண்ணினேன், அது நினைவில் இருக்கிறது. ஆனால் வைத்தேனா? அப்படியே எழுந்து சென்றுவிட்டேனா?

அவளுடைய குரல் காதில் ஒலிக்கும் என்று காத்திருந்தேன். ஒலிக்கவில்லை. நெடுநேரம் ஆகியது. சட்டென்று மழை பேரொலியுடன் உடைந்து பங்களாவின் கூரைமேல் கொட்டியது. அந்த ஓசை என்னை மெய்சிலிர்க்கவைத்தது. நான் அந்த புத்தகத்தை பிரித்தேன். இந்த மழையில் இங்கே நான் செய்வதற்கொன்றுமில்லை. இதை வாசிப்பதைத் தவிர வேறேதும் செய்ய என்னால் முடியாது. இங்கே வேறேதுவும் இல்லை. நான் அஞ்சலாம், தயங்கலாம், நாய் வாய் வைப்பதற்கு முன் சுற்றிச்சுற்றி வருவதுபோல. ஆனால் இதை மட்டுமே என்னால் செய்யமுடியும்.

நான் அதை வாசிக்கலானேன். இம்முறை அந்த மொழி மிக அணுக்கமானதாக, இயல்பானதாக இருந்தது. எளிதாக அதற்குள் சென்றுவிட முடிந்தது. O, Maria! London now seems no longer the same place where I lately enjoyed so much happiness; every thing is new and strange to me; even the town itself has not the same aspect.-My situation so altered!-my home so different!-my companions so changed!-But you well know my averseness to this journey. ஈவ்லினின் உள்ளம் பெருகி வழிந்துகொண்டே இருந்தது.

இந்த நகரத்தில் பாவம் என்பது களியாட்டாக மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே செல்வம் என்பது அதிகாரமாக மாறியிருந்தது. செல்வத்திலிருந்து பாவத்தைப் பிரிக்கமுடியாது என்று சொல்வது உண்மை. இன்னொருவரிடமிருந்து பிடுங்கப்படாத செல்வம் என்பது இல்லை என்று ஒருமுறை ஃபாதர் மான்ஸ்ஃபீல்ட் சொன்னார். உண்மைதான். ஆனால் இங்கே செல்வமில்லாத காலம் இருந்திருக்கிறதா என்றாவது? கற்கால மனிதன் அவன் செய்த கற்கோடரியை பத்திரமாக வைத்துக்கொண்டிருப்பான். அவன் வேட்டையாடி உண்ணும் உணவை அந்தக் கோடரி இல்லாதவன் கனவுகூட காணமுடியாது. ஆகவே அவன் இவன் தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு அந்தக் கோடரியுடன் சென்றுவிட்டிருப்பான்.

அந்தக் கோடரி கைமாறிக்கொண்டே இருக்கிறது. அதை விலைகொடுத்து வாங்கலாம். அதற்கு இணையான போகங்களை அளிக்கவேண்டும். விலை என்பது என்ன? பணம்! பணம் என்பது என்ன?அது வாங்கும் போகங்கள். ஒரு நல்ல கோச் வண்டியை வாங்க பத்தாயிரம் நல்ல விருந்துணவுகளை கொடுக்கிறோம். அல்லது ஐநூறு பட்டு ஆடைகளைக் கொடுக்கிறோம். அவ்வளவுதான். இங்கே பரிமாறிக் கொள்வதெல்லாம் போகங்களை மட்டும்தான்.

அப்படியென்றால் ரெவெரெண்ட் வில்லர்ஸும் ஃபாதர் மான்ஸ்பீல்டும் எதை கொடுக்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்படுவது எதற்கு பதிலாக? அவர்கள் அளிப்பது ஓர் எளிமையான இளைப்பாறல். அவர்கள் பிறரிடம் பாவம் பற்றிய எண்ணத்தை விதைக்கிறார்கள். பாவம் செய்தோம் என்னும் குற்றவுணர்வை ஏற்றுகிறார்கள். அதன் பின் அந்தச் சுமையை இறக்கி வைக்க உதவுகிறார்கள். அந்த ஆறுதல் ஒரு போகம். அதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் வீடுகளை, ஆடைகளை, நகைகளை, மடாலயங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ருமேனிய மாயாஜாலக்காரர்கள். அவர்கள் நம்மை பேயின் பிடியில் இருப்பதாக நம்பச்செய்கிறார்கள். பேயை துரத்தி நம்மை மீட்கிறார்கள். நாம் மகிழ்ந்து கூச்சலிடுகிறோம்.

இங்கே மிகமிக அரிய வணிகத்தைச் செய்பவர்கள் பெண்கள். அவர்கள் அளிப்பது என்ன? அவர்களால் உச்சகட்டமாக அளிக்கமுடிவது உடலை. காமத்தை. ஆனால் அது வெளியே பரவிக்கிடக்கும் கூழாங்கற்களைப்போல அத்தனை சாதாரணமானது. அத்தனை உயிர்களும் செய்துகொண்டிருப்பது. உயிர்கள் அதைச் செய்ததுமே மறந்து கடந்துவிடுகின்றன. பெண் என்றோ எப்படியோ அதை ஆண் மறக்கமுடியாதபடி செய்துவிட்டாள். அவன் அதையே நினைத்துக்கொண்டிருக்கும்படிச் செய்வதில் வெற்றிபெற்றுவிட்டாள். வரலாற்றில் பெண் அடைந்த மாபெரும் வெற்றி அதுதான்.

அதை அவள் ஏன் செய்தாள்? அவள் அதன் வழியாக தன் குட்டிகளுக்கு அந்த ஆண் பொறுப்பேற்கும்படிச் செய்தாள். அவன் அக்குட்டிகளுக்காக எஞ்சிய வாழ்நாள் முழுக்க உழைத்து, போராடி, தியாகம் செய்யும்படிச் செய்தாள். ஆண் அதற்குப்பின் செய்த போர்கள், சேர்த்த செல்வங்கள், அமைத்த பேரரசுகள் எல்லாமே அதன்பொருட்டுத்தான். கூழாங்கல்லை வைரமென காட்டினாள். உண்மையில் வைரமும் கூழாங்கல்தான். அதற்கு எங்கோ எவரோ எதனாலோ மதிப்பை ஏற்றியிருக்கிறார்கள்.

பெண் வாழ்நாளெல்லாம் செய்வது தன் மதிப்பை ஏற்றிக்கொள்வதைத்தான். அழகாக இருக்க முயன்றுகொண்டே இருக்கிறாள், வாழ்வின் கடைசிவரை. கலைகளை பயில்கிறாள், இலக்கியம் படிக்கிறாள், நடனம் ஆடுகிறாள். தன் தந்தைமேல் முதல் வெற்றியை அவள் அடைகிறாள். தந்தையை தன் அடிமையாக ஆக்குகிறாள். அவர்மேல் ஏறி நின்றுகொண்டு உலகை வெல்ல முயல்கிறாள். அவருடைய செல்வம், அவருடைய குடிப்பெருமை, அவருடைய சமூகநிலை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மேலே செல்ல எழுகிறாள்.

உயர்குடி என்பது இங்கே பெண்ணால் தீர்மானிக்கப்படுகிறது. ஆ! ஆதை தீர்மானித்தவள் ஒரு பெண்ணாகவே இருக்கவேண்டும். அவள் தன் மதிப்பின் உச்சமென முன்வைப்பது அது. இங்கே இந்த லண்டனில் அத்தனை பெண்களும் உயர்குடிப் பெண்களாகி, மேலும் உயர்குடிப் பெண்களாகி, அரசிக்கு சற்றுகீழே அமைவது வரை சென்றுகொண்டே இருக்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2021 11:34

மோட்சம்- சிறுகதை

ஒருமுறை எனக்கு காய்ச்சல் கண்டு நான் படுத்தபடுக்கையாகியபோது என் அப்பா கண்டிவீர நாயக்கர், மருத்துவரை அழைத்து மூன்று நாள் எனக்கு விபூதியிடச் சொன்னார். நான் விழித்தெழுந்த ஆறாம் நாளே மருத்துவர் வீதியில் எதிர்பட்டபோது எச்சில் உமிழ்ந்து காறித்துப்பிக்கொண்டே நடந்தார். போன காரியத்தை முடிக்காமல் பாதியிலேயே வீடு திரும்பினார், திரும்பி வரும் வரை காறிக்கொண்டே வந்தார்.

மோட்சம்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.