Jeyamohan's Blog, page 990

May 8, 2021

நமது அரசியல், நமது வரலாறு- கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். என் பக்கத்து வீட்டில் 60 வயது மதிக்கதக்க அம்மா ஒருவர் இருக்கிறார். அவர் மகன் இறந்துவிட்டார். இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்துவிட்டார். இப்போது தனியாக வாடகை வீட்டில் இருக்கிறார். நான் அந்ந அம்மாவோடு அவ்வப்போது பேசுவதுண்டு. இன்று அவர்கள் தேர்தல் முடிவுகளைப் பற்றி என்னிடம் கேட்டார்கள். நானும் பதில் சொன்னே். (இது அரசியல் பற்றியது அல்ல)

சட்டென்று “இருந்தாலும் காங்கிரல் வந்திருக்கனும் பா” என்று சொன்னார்கள். “சரிதாம்மா ஆணா பாண்டிச்சேரில அவங்க தோத்துடாங்கலே” என்றேன்.

அவர்கள் “அது என்னம்மோ பா, ஆனா இந்திரா காந்தி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அஞ்சாது வரைக்கும் தான் படிச்சன். அப்புறம் நிப்பாடிடாங்க குடும்ப கஷ்டம். நான் ஸ்கூல் படிக்கும் போது இந்திர காந்தி எங்க ஊருக்கு எங்க ஸ்கூலுக்கு வந்தாங்க. டீச்சரு எங்க எல்லாரும் முன்னாடி நின்னுகிட்டு எதோ இங்கிலிஷ்ல பேசனாங்க. அப்பறம் செவுத்துல கருப்பு பெயின்ட அடிச்சு வச்சிருக்கிற போர்டல தமிழ்ல அ, ஆ அப்பறம் ஒரு சில தமிழ் வார்த்த எழுதினாங்க. எல்லோரும் சந்தோஷமாகி கைதட்டனோம்.” என்று அப்படி அதிசியத்து சொன்னார்கள். இந்திர காந்தி என்கிற ஆளமையை அவர்கள் எப்படி தன் அகத்தில் வைத்திருக்கிறார்கள் என்று உணர்ந்தேன்.

மேலும் சொன்னார்கள், “எனக்கு இந்திரா காந்தி அதனால மட்டும் பிடிக்கும்னு சொல்லமாட்டன். எங்க ஊருல அப்ப சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம். அத பத்தி எங்க கிட்ட இத்திரா காந்தி அம்மா கேட்டாங்க. நாங்கலும் சொன்னோம் சாப்பட்டுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குனு. இத கேட்டதும் நான் எதாது செய்யறனு சொன்னாங்க. அப்பறம் ரொம்ப நாள் கழிச்சி இந்திர காந்தி அம்மையார் காமாராஜர் கிட்ட சொன்னாதாகாவும், எங்க ஊருக்கு நிறையா ஊருக்கு காமராஜர் போனாரு. அதுக்கப்பறம் தான் மதிய உணவு திட்டமனு பேசிட்டு இருந்ததாங்க. எங்களுக்கு மதியம் பால் டப்பா மாதிரி ஒன்னு குடத்தாங்க” என்று சொன்னார்கள். அந்த அரசியல் நிகழ்வு உண்மைதானா என்றெல்லாம் எனக்கு தெரியாவில்லை. ஆனால் அது அவர்களின் ஆழமான நம்பிக்கையா இருக்கிறது.

இந்த சாப்பாட்டு விஷயத்திற்காக தான் மேலும் இந்திர காந்தியை அவர்களுக்கு பிடித்திருக்கிறது. அதற்கு அவர்களின் சிறு வயது நினைவு ஒன்றுபற்றி குறிப்பிட்டு சொன்னார்கள். “அன்னைக்கு வெறியும் கம்மங்கூழு தான். காலைல ஒரு சொம்பு. ராத்திரி ஒரு சொம்பு தான். மதியம் எதும் இல்ல. சோறுக்கு ரொம்ப கஷ்டம். எங்க நிலத்துல வெளஞ்சாலுமே எங்க அப்பா, அம்மா சோறு பொங்கி போட மாட்டாங்க. சோறு சாப்படனும்ங்கிறது அவ்வளவு ஆச.” என்றார்.

அவர் “ஒரு நாளு ஊருல பெரிய ஆளு, அவருக்கு நிறைய சொத்து இருக்கு. அவரு பையனுக்கு கல்யாண பன்னாரு. எங்க ஊரு சிவன் கோயிலில கல்யாணம். ஊரே கூப்பிட்டு சோறு போட்டாரு. நானு என் அக்கா தம்பிங்க என் அப்போதிய ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சாப்பிட போனோம். பந்தியில உக்காந்துடோம். இலைல வட, அப்பலம் பொறியிலுனு எல்லாம் வச்சிடாங்க. அந்த பெரியவரு எங்கல பார்த்தவொடனே கோப பட்டு எங்க எல்லாரையும் திட்டி எழுப்பி வெளிய  தள்ளி விட்டுடாரு(இது ஜாதி வேறுபாடு பற்றியது இல்லை). அப்போ இன்னோரு பெரிய மனுஷரு இருந்தாரு. அப்ப எல்லோரும் ‘முதலியாரு’ தான் அவர கூப்பிடுவாங்க. எங்கல தள்ளிவிட்டத பார்த்ததும் முதலியாரு ஓடி வந்து உங்கள் தூக்கி விட்டுட்டு அந்த ஆள பயங்கரமா திட்ட ஆரம்பிச்சுடாரு. ‘ ஏன்யா இந்த பசங்க சாப்பிடறதுதான் பந்தில சோறு காலியாக போதா’ அப்பிடுனு கேட்டாரு. அப்பறம் எங்க எல்லாரையும் அவரு வீட்டுக்கு கூப்பிட்டு போனாரு. ஊருலே பெரிய வீடு. அவரு சோறு கொழம்பு சொத்து உருண்டையாக்கி எல்லாருக்கும் ஒரு உருண்டைய கொடுத்தாரு. நாங்க வேனாமுனு சொன்னோம். எங்கள கட்டயாப்படுத்தி கொடுத்தாரு. சோறு சாப்பிட்ட சந்தோஷத்தில அவருக்கு நன்றி சொல்லி வீட்டுக்கு வந்தோம். யாரோ இந்த விஷயத்த வீட்டில சொல்லிட்டாங்க. எங்க தாத்தா என்ன போட்டு செம அடிச்சு சூடும் வச்சிடாரு. இத கேள்விபட்ட முதலியாரு எங்க தாத்தாவ செம திட்டு திட்டிடாரு. அதுகப்பறம் எந்த விசேஷத்துக்கும், யாரு சோறு குடுத்தாலும் சாப்பிட மாட்டோம். வீட்ல தவிர.” என்று அழுதும், ஏக்கத்தோடும், அவ்வப்போது கோவத்தோடும் சொன்னார்.

அவர் “இன்னைக்கும் நான் ஊருக்கு போன முதலியாரு வீட்டுக்கு முன்னாடி நின்னு அத நினச்சு பார்த்து ஒரு சொட்டு கண்ணீராது விட்டுட்டு தான் வருவன்” என்று சொல்லி உடைந்து அழுது விட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்மீது இருந்த முந்தைய அபிப்பிராயம் எல்லாம் வேறொன்றாக மாறிவிட்டாது.

அவர் ” இன்னைக்கும் இந்த சோத்த பார்த்தா அழுகையா வரும். அதே சமயத்துல என் அப்பா, அம்மா மேல கோவம் வரும். திட்டிட்டு தான் இருப்பன்.” என்று சொல்லி முடித்தார்.

இதை கேட்டதும் எனக்கு ஒரு சிறுகதை வாசித்த நிறைவு தான் வந்தது. இதை மனதிலே கூட வைத்திருக்கலாம் என்றாலும் தங்களிடம் இதை பகிர்ந்தே ஆக வேண்டும் என்று ஆசை. ஏனென்றால் தங்களின் ‘அறம்’ சிறுகதை தொகுப்பினூடாக எவ்வளவு அறம் சார்ந்த மனிதர்களைச் சொல்லியிருக்கிறீர்கள். அதை நான் நிஜ வாழ்க்கையில் பார்த்ததோ, கேட்டதோ இல்லை. தங்களின் எழுத்தினூடாகா இந்த தரிசனங்களைப் பெற்றிருந்தேன். இன்று  என் பக்கத்து வீட்டு அம்மா அவர்களின் கடந்த கால நிகழ்வை சொல்லும் போது நான் என்னை அறியாமல் மனம் இலகி, கண்ணீர் கசிந்து நின்றேன். இந்த அறம் சார்ந்த மனிதர்கள் எதோ மானுடத்தின் மீதான நம்பிக்கையை விதைத்துக் கொண்டே போகிறார்கள் என்று நினைத்தேன்.

சரண்ராஜ்

பாண்டிச்சேரி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2021 11:32

மழைப்பாடல் வாசிப்பு

மழைப்பாடல்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் ‘முதற்கனல்’ வாசிக்கும் போது சென்னையில் அக்கினி வெயில் கனன்று கொண்டிருந்தது. அடைமழை பெய்தும் மின்விசிறி கூட போட முடியாத அளவிற்கு (அதுவும் சென்னையில்) குளிர்ந்த நாட்களும் கடந்து செல்லும் போது ‘மழைப்பாடல்’ வாசித்தேன். உள்ளும் புறமும் மழையால் நனைய மழையையும் மழைப்பாடலையும் ஒரே நேரத்தில் ரசிக்க முடிந்தது மழையின் காதலனான எனக்குப் பேரனுபவம். சில நாள் இடைவேளைக்குப் பிறகு மதுரையில் ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி சென்னை வந்து அச்சிந்தனைகளை மீட்டிக் கொண்டிருக்கும் போதே ‘வண்ணக்கடல்’ தொடங்கிய போது எனக்கே ஆச்சரியம். முதல் அத்யாயமே ‘மாமதுரை’. வெண்முரசு என் சூழலுக்கு ஏற்ப கூடவே வருகிறதா? இல்லை நான் வெண்முரசுடன் என்னை இணைத்துக் கொள்கிறேனா? தெரியவில்லை.

மழைப்பாடல் வாசிப்பனுபவம்:

முக்கண்ணனின் சுண்டுவிரலில் இருந்து தெறித்த துவாபரனால் ஆரம்பித்த தேவர்களின் யுத்தம் அண்டவெளியில் நடக்க அவ்யுத்தத்தின் போக்கு தன்னால்  தான் நிர்ணயிக்கப்படுகிறது என்று நினைக்கும் துவாபரன் மேரு மலையில் மோதி மண்ணுலகில் விழுகிறான். இனிமேல் நம் யுத்தம் மண்ணில் நிகழட்டும் என்று தேவர்கள் முடிவெடுக்கிறார்கள். ஆனால் யாரும் தன் முடிவையும் எதன் முடிவையும் நிர்ணயிப்பதில்லை. அதன் போக்கில் எல்லாம் நிகழ்ந்து விடுகிறது. முக்கண்ணனும் துவாபரனும் அனைவரும். ஆனால் போரிடுபவர்கள் அனைவரும் தேவர்கள். விண்ணில் எதிரெதிரில் போரிட்ட சூரியனும் இந்திரனும் மனித இயல்பு களுடன் இனி மண்ணில் போரிடுவார்கள்…

மழைகள் பல விதம். பாலை மழை, அஸ்தினபுரியின் மழை, இமயத்தின் மழை என்று. ஆனால் எல்லாம் சேரும் போது மோதும் போது வருவது குருதி மழை. மழைப்பாடலில் நான் மிகவும் ரசித்தது நிலத்தின் அமைப்புகளின் வேறுபாடுகள் அது போலவே நாம் வாழ்க்கை முழுவதும் எண்ணி ரசிக்கத்தக்க வகையில் மனித மனங்களின் நுண்ணிய ஓட்டங்களையும் நீங்கள் பதிவு செய்திருப்பதையும் தான்.

சத்தியவதி, அம்பிகை, அம்பாலிகை போன்ற அன்னையர்களிடமிருந்து அரசியல் ஆட்டங்கள் தொடங்கினாலும் அம்மூவரும் திடீரென அஸ்தினபுரியின் எல்லா அரசியல்களிலிருந்து வஞ்சங்களிலிருந்து சச்சரவுகளிலிருந்து விலக முடிவெடுத்து கானகம் புகுதலில் மழைப்பாடல் முடிகிறது. இதை யோசித்துப் பார்க்கும் போது வாழ்க்கை அல்லது ஊழ் தன்னை நிகழ்த்திக் கொள்வதற்கு மானுடர்களையும் தேவர்களையும் இவ்வனைத்து இயக்கங்களையும் நடவடிக்கைகளையும் கூட வெறும் கருவியாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு அவைகளின் இருப்பின் தேவை முடிந்தவுடன் ஊழ் அனைத்தையும் கழற்றி வீசிவிடுவதாகத் தோன்றி மனதில் ஒரு வித பாரத்தை நிரப்புகிறது…

பணிவன்புடன்,
ஜெயராம் மழைப்பாடல் நிகழ்வது வரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல் மழைப்பாடல் வாசிப்பு முதற்கனல்,மழைப்பாடல் வாசிப்பு மழைப்பாடல் உரை  தண்டபாணி துரைவேல் மழைப்பாடல்- சுரேஷ் பிரதீப் மழைப்பாடல்- மாறுதலின் கதை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2021 11:30

May 7, 2021

ஓர் இலக்கிய வாய்வு

வணக்கம்  ஜெமோ,

“திருக்குறளுக்கு பின் 1900கள்  வரை ஒரு நல்ல இலக்கியம்  தமிழில் வரவில்லை”, “தமிழ் பக்தி இலக்கியங்கள் இலக்கியங்கள் அல்ல, அவை இரவல் இலக்கியங்கள்”, “இதற்கு  காரணம் பிராமண  ஆதிக்கம், அதாவது அவர்கள் பிற  ஜாதிகளுக்கு கல்வியை மறுத்தது’ என்ற கருத்து, சமிபத்திய தேர்தல் மேடைகளில்  எதிரொலிக்க  கேட்டேன். அது  ஒரு  நெருடலை உண்டாக்கி கொண்டே  இருக்கிறது.

நீங்கள் திராவிட இயக்கங்கள் பற்றி எழுதிய பதில்களை  படித்து  அவைபற்றிய கொஞ்சம் தெளிவை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் இந்தகருத்துக்கு சரியான எதிர்வினையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.  இப்படி பல நூறாண்டுகளாய் தமிழில் ஒரு இலக்கிய/கருத்தியல் தேக்கம் உண்மையிலயே இருந்ததா? அதற்கு பின்னால் ஓரு deliberate முயற்சி இருந்ததா ? அதற்கு என்ன காரணம்? அதிலிருந்து எப்படி தமிழிலக்கியம் மீண்டு வந்தது? வடமொழியல்லாத மற்ற மொழிகளுக்கும் இது போன்ற தேக்கம்  வந்திருக்கிறதா?

நன்றி

வேலுச்சாமி

***

அன்புள்ள வேலுச்சாமி,

கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். சொல்பவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பதே கருத்துக்கு மதிப்பை அளிக்கிறது. இதைச் சொன்னவரின் தரம் இந்த வரியாலேயே தெரிகிறது. அவர் அரசியல்மேடைகளில் எச்சில்தெறிக்கவைக்க மட்டுமே தகுதியானவர்.

முதலில் சங்க இலக்கியம் மதச்சார்பற்றது என்று எவர் சொன்னது? அதில் ஏராளமான மதக்குறிப்புகள் உள்ளன. இன்றிருக்கும் இந்துமத வழிபாட்டின் எல்லா கூறுகளும் அதிலுள்ளன. இதிகாசங்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. தெய்வங்கள் பேசப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரம் உள்ளிட்ட ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் பௌத்த, சமண மதச்சார்பு கொண்டவை. திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களே சமண, பௌத்த சார்பு கொண்டவைதான்.

அப்படி என்றால் மதச்சார்பின்மையை மேற்படி ‘அறிஞர்’ உத்தேசிக்கவில்லை. சைவ, வைணவச் சார்புடையவை நல்ல இலக்கியங்கள் அல்ல என்று மட்டுமே சொல்ல வருகிறார். சைவ வைணவ இலக்கியங்கள் பிராமணச்சார்பு கொண்டவை என்று எண்ணி ஒட்டுமொத்தமாக தூக்கிப் போடுகிறார். அவருடையது எந்த விழுமியத்தின் அடிப்படையிலும் அமைந்த பார்வை அல்ல, வெறும் சாதிக்காழ்ப்பு மட்டும்தான்.

பக்தி இலக்கியங்களில் தலையாயவை எனக் கருதப்படும் நம்மாழ்வார் பாசுரங்களோ, ஆண்டாள் பாசுரங்களோ, தேவார நால்வரின் பாடல்களோ வெளியே எங்கிருந்தும் கருத்துக்களையோ அழகியலையோ பெற்றுக்கொண்டவை அல்ல. அவற்றின் அழகியல் தமிழகத்தில் உருவானது, சங்க அகத்துறையின் நீட்சி அது. அந்த அழகியல் இங்கிருந்து வடக்கே சென்று பக்தி இயக்கமாகப் பரவியது. அவர்கள் பாடும் மாலும்,அனல்வண்ணனும் சங்ககாலம் முதலே இங்கே பாடப்பட்டவர்கள்.

சரி, பக்தியே இரவல் என்று கொண்டால்கூட மதக்குறிப்பே இல்லாத கலிங்கத்துப் பரணி போன்ற போரிலக்கியங்கள் பல உள்ளன. முத்தொள்ளாயிரம்,நந்தி கலம்பகம் போல தமிழ் மன்னர்களைப் பாடும் பெருநூல்கள் உள்ளன.

சம்பந்தப்பட்டவரிடம் வீரமாமுனிவரின் ’தேம்பாவணி’யும், உமறுப்புலவரின் ’சீறாப்புராண’மும் இலக்கியமா என்று கேளுங்கள்.  அவை சைவ, வைணவ இலக்கியங்கள் அல்ல. அந்த வினாவின் முன் அதைச்சொன்னவர் பம்முவதைக் காணலாம்.

சரி, அவையும் இரவல் இலக்கியம் என்பார் என்றால் சீவகசிந்தாமணியும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் எல்லாம் அசலா என்ன? மணிமேகலையின் பல கதைகள் நேரடியாகவே வடக்கிலிருந்து வந்தவை. சீவகசிந்தாமணி வடக்கத்திக் கதையின் மறு ஆக்கம். ஆக, ஜைனர்களும் பௌத்தர்களும் கொண்டுவந்தால் இரவல் இல்லையா?

தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மைகொண்ட தத்துவநூலாக கருதப்படும் திருமந்திரம்கூட இரவல் என்று சொல்வாரானால் அவர் யார்? உண்மையான நோக்கம் என்ன?

பிராமணர்கள் மற்றவர்களை கல்விகற்க விடவில்லை என்கிற அசட்டுத்தனமெல்லாம் எப்படிச் செல்லுபடியாகிறதென்றால் இங்கே எவருக்கும் மேடை அமைவதனால்தான். சைவ வைணவப் பேரிலக்கியங்களை இயற்றியவர்கள் பிராமணர்கள் அல்ல. நம்மாழ்வார், கம்பர், சேக்கிழார், ஜெயங்கொண்டார் எவருமே பிராமணர்கள் அல்ல.

தமிழின் பெரும்படைப்பாளிகளில் பிராமணர்கள் எனச் சொல்லத்தக்கவர் ஓரிருவரே.சாதியை சொல்லவேண்டும் என்றால் ஏராளமானவர்கள் வேளாளர்கள். சங்ககாலம் முதலே அவ்வாறுதான் – கிழார் என்னும் பின்னொட்டு வேளாளர்களுக்குரியது. ஏனென்றால் தமிழ்ப்பண்பாட்டின் உயர்குடியினராக இருந்தவர்கள் உண்மையில் அவர்கள்தான்.

இந்தவகையான இலக்கியக் கருத்துக்கள் இலக்கிய ஆய்விலிருந்து வருவன அல்ல, இது ஒருவகை வாயுத்தொல்லை. சம்பந்தப்பட்டவருக்கு வெளியேற்றிய நிம்மதி வரும், மற்றவர்களுக்குத்தான் குமட்டல்.

*

இனி உங்கள் புரிதலுக்காக. எங்கும் வரலாற்றின் போக்கு ஒரேவகையானதுதான். அதை எவரும் தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியாது. எவரும் வரலாற்றில் திரும்பிப்போக முடியாது.

எப்பண்பாட்டிலும் முதலில் உருவாவது நாட்டாரிலக்கியம். அதன்பின் அதிலிருந்து தொல்லிலக்கியம் அல்லது செவ்வியலக்கியம் உருவாகிறது. நமக்கு அது சங்க இலக்கியம். தொல்லிலக்கியம் பெரும்பாலும் உலகியல் சார்ந்ததாக, போர்வெற்றிகள் சார்ந்ததாக, வீரர்களை புகழ்வதாக இருக்கும். அதில் வாழ்க்கைச்சித்திரங்களே ஓங்கியிருக்கும்.

ஆனால் அது மதச்சார்பற்ற இலக்கியம் அல்ல, தொல்மதத்தின் பண்பாட்டுக் கூறுகள் அதில் நிறைந்திருக்கும். தொல்மதங்கள் பலவாறாகச் சிதறுண்டவையாக, வெறும் ஆசாரங்கள் மற்றும் நம்பிக்கைகளாகவே இருக்கும். நிறுவன அமைப்பு அவற்றுக்கு இருக்காது. தத்துவம் அவற்றில் ஓங்கியிருக்காது. சங்க இலக்கியத்திலேயே நடுகல் வழிபாடு, படையல் அளித்தல், வேலன் வெறியாட்டு, தெய்வங்களுக்கு பூசையிடுதல் என பல தொல்மதக் கூறுகள் உள்ளன.

வரலாற்றின் அடுத்த கட்டம் பேரரசுகள் உருவாவதும் பெருமதங்கள் உருவாவதும். இவை இணைந்தே உருவாகின்றன. ஒன்றையொன்று உருவாக்குகின்றன. தமிழ்ச்சூழலில் சமண -பௌத்த மதங்கள் வந்து இங்குள்ள தொல்மதங்களின் பல பண்பாட்டுக்கூறுகளை உள்வாங்கிக்கொண்டு பெருமதங்களாக ஆயின. நிறுவன அமைப்பும், தத்துவக் கட்டமைப்பும் உருவாயின.

உலகமெங்கும் அவ்வாறுதான் நிகழ்கிறது. பெருமதங்கள் எவையும் ஒரு நிலத்திற்குள் உருவாகி அங்கேயே முழுமை கொள்வதில்லை. அவற்றின் விதை எங்கோ இருக்கும். அவை பரவி பரவிச்சென்று, செல்லுமிடங்களில் வேரூன்றி, அங்கிருந்து ஆசாரங்கள், ஆழ்படிமங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இஸ்லாம், கிறிஸ்தவம் எல்லாமே அப்படித்தான். இஸ்லாமை அரேபியாவிலும் கிறிஸ்தவத்தை அராமியாவிலும் நிறுத்திவிடவேண்டும் என்று சொல்பவர்கள் வரலாற்றை திருப்பிச் சுழற்ற நினைக்கும் அற்பர்கள்.

தமிழகத்தில் ஓங்கிய பௌத்தமும் சமணமும் வடக்கிலிருந்து வந்தவை. அவற்றின் தரிசனங்களும் தத்துவங்களும் வடக்கிலிருந்து கொண்டுவரப்பட்டவை. ஆனால் அவை இங்கே தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டன. அவற்றை தமிழ்ச்சமணம், தமிழ் பௌத்தம் என்றே சொல்லமுடியும். அன்னிய மதங்கள், இரவல் மதங்கள் என்று சொல்லமுடியாது.

ஏற்கனவே, சங்க காலத்திலேயே தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தவை சைவ, வைணவ மதங்கள். சங்ககாலத்தில் இந்திரன் இங்கே முதன்மையான வழிபடு தெய்வம். மருதநிலத்தின் தலைவன். இந்திரவிழா இங்கே கொண்டாடப்பட்டதை சங்க இலக்கியம் காட்டுகிறது. சிலப்பதிகாரத்தில் சைவம் வைணவம் சாக்தம் ஆகியவை பலதெய்வங்கள் கொண்ட கோட்டங்கள் என்னும் பெரிய ஆலயங்களுடன் தமிழகத்தின் மைய மதங்களாக இருந்தமைக்கான சான்றுகளைக் காணலாம்.

ஆனால் அவை பெருமதங்களாக வளர்ந்தது சமண, பௌத்த மதங்களின் வருகைக்குப் பின்னர்தான். சமண, பௌத்த மெய்யியல்களுடன் விவாதித்து அவை விரிவடைந்தன. பல்லவர், பிற்காலச் சோழர்களின் காலத்தில் பெருமதங்களாக மாறி இன்றுள்ள வடிவை அடைந்தன.

சைவ, வைணவ மதங்களில் பெருவாரியான அடித்தள மக்களின் பங்கேற்பை உருவாக்கியதே ஆழ்வார்கள், நாயன்மார்களின்  பக்தி இயக்கம்தான். இதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதப்பட்டுவிட்டது. பக்தி இயக்கம் அடிப்படையில் அன்றைய சூத்திர மக்களின் எழுச்சி. அதனூடாக அவர்கள் கல்வியதிகாரம், சமூக அதிகாரம், மத அதிகாரம் ஆகியவற்றையும் நிலத்தின்மேலும் அரசிலும் ஆதிக்கத்தையும் அடைந்தனர்.

அதாவது தமிழகத்து பக்தி இலக்கியங்கள் என்பவை பிராமணர்கள் மற்றவர்களை படிக்கவிடாமல் ஆக்கியதன் விளைவுகள் அல்ல. மாறாக பெருமதங்கள் பெருவாரியான மக்களை மதக்கல்வி அளித்து தங்களுக்குள் இழுத்துக்கொண்டதன் விளைவுகள். நாயன்மார்களிலும் ஆழ்வார்களிலும் பிராமணரல்லாச் சாதியினரே மிகுதி. அடித்தளத்து மக்களும் உள்ளனர்.

பக்தி இயக்கம் கல்வியை பரவலாக ஆக்கியது. பக்தி அனைத்து மக்களுக்கும் உரிய மதநெறி என்பதனால் அது பெருந்திரளை சைவ, வைணவ பெருமதங்களுக்குள் கொண்டுவர உதவியது. திருவிழாக்களில் மண்டகப்படிகள் , தேர்வடம் பிடிக்கும் உரிமைகள் போன்ற ஏராளமான ஆசாரங்கள் வழியாக அனைத்துச் சாதியினரும் இணைக்கப்பட்டு அரசின் அங்கமாக ஆக்கப்பட்டனர்.

பக்தி இயக்கம் பல்லவ, சோழப் பேரரசுகளுக்குத் தேவையாக இருந்தது. அந்த மாபெரும் மக்கள் பங்கேற்புதான் அந்தப் பேரரசுகளின் அடித்தளம். சோழர் காலத்தில் அனைத்து சாதியினருக்கும் கல்வி அளிக்கப்பட்டமைக்கான நூற்றுக்கணக்கான சான்றுகள் உள்ளன. அனைத்துச் சாதியினரும் நிலவுரிமை கொண்டிருந்ததற்கும் சான்றுகள் உள்ளன.

சோழர்காலம் வேளாளர் முதலிய சாதியினரின் எழுச்சியை உருவாக்கியது. அதேசமயம் பறையர்கள் உள்ளிட்ட சாதிகள் அதிகாரம் இழந்து அடிமைநிலையை அடைந்ததும் அப்போதுதான். வரலாறு எப்போதுமே அப்படித்தான், வெல்பவரும் வீழ்பவர்களும் கொண்டது அது. எந்தப்பேரரசும் பெரும்பான்மையினருக்கு அதிகாரம் அளிப்பதன் வழியாகவே உருவாகும். சிறுபான்மையினர் சிலர் ஒடுக்கவும்படுவார்கள்

பக்தி இயக்கம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது. அதற்குள் பலவகையான இலக்கிய இயக்கங்கள் உள்ளன. ராமனின் கதையைச் சொல்லும் நூல் கம்பராமாயணம். ஆனால் அதுதான் அரசனைவிடப்பெரிய அறத்தை முன்வைக்கிறது. மானுடசமத்துவத்தை அறைகூவுகிறது.

தமிழக பக்தி இயக்கத்தின் புராணங்கள் பெரும்பாலும் இங்கே இந்த மண்ணில் உருவான தொல்கதைகளின் மறுஆக்கம்தான். திருவிளையாடற்புராணத்தை நீங்கள் தமிழகத்துக்கு வெளியே தேடமுடியாது. நப்பின்னையின் கதையை தமிழ்மண்ணிலேயே காணமுடியும்.

பக்தி இயக்கம்தான் தமிழ்மண்ணுக்கே உரிய தனித்துவம் கொண்ட மூன்று தத்துவமரபுகளை உருவாக்கியது. சங்கரரின் அத்வைதம் சேரநிலத்தில் உருவானது. சோழநிலத்தில் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். சைவசித்தாந்தத்தின் தமிழ்வடிவம் ஒன்றும் இங்கே உருவானது. சென்ற ஆயிரமாண்டுகளில் தமிழகம் உருவாக்கிக்கொண்ட முதன்மைத் தத்துவ சிந்தனைகள் இவை.

எந்த தத்துவசிந்தனைகளையும்போல இவற்றின் தொடக்கம் வெவ்வேறு ஊற்றுமுகங்களைச் சேர்ந்தது. ஆனால் அடிப்படைக்கொள்கைகளை உருவானது இங்கே. இங்கிருந்தே அவை வடக்கிலும் பின் உலகெங்கிலும் பரவின.

பக்தி இயக்க இலக்கியத்திற்குள்தான் தமிழக நாட்டாரிலக்கியம் புத்துயிர்கொண்டு வளர்ந்தது – அதன் மிகச்சிறந்த வெளிப்பாடுகள் குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, திரிகூட ராசப்ப கவிராயரின்  குற்றாலக்குறவஞ்சி போன்றவை.

பக்தி இலக்கியத்தில்தான் தமிழ்ப்பண்பாட்டுக்கே உரிய பண்மரபு இசை இயக்கமாக புத்துயிர் கொண்டது. நாதமுனிகள் இல்லையேல் பண்ணிசையே மறைந்திருக்கக்கூடும். பண்ணிசை- சந்த மரபின் உச்சம் அருணகிரிநாதரின் திருப்புகழ்.

இவையனைத்தையும் தூக்கிவீசிவிட்டு எந்த தமிழ்ப்பண்பாட்டை திரட்டி எடுக்கப்போகிறார்கள் இந்த அறிவிலிகள்? இவர்கள் பாணியில் இரவல் என திருக்குறளையே தூக்கி வீசலாம்.சமணசூத்திரங்களுக்கு திருக்குறள் பெரிதும் கடன்பட்டது. அதன் அறம்,பொருள்,இன்பம் என்னும் கருதுகோளே வெளியே இருந்து வந்ததுதான்.

கற்பனைசெய்து பாருங்கள், பௌத்தமதம் திபெத்திற்கு எட்டாம் நூற்றாண்டில் சென்று சேர்ந்தது. அங்கிருந்த பான் மதத்தின் பண்பாட்டை உள்ளிழுத்துக்கொண்டு தனித்தன்மை கொண்ட திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்தின் பண்பாட்டு முகமே அதுதான். இன்றைக்கு ஒருவர் வந்து திபெத்திய பௌத்தம் இரவல், ஆகவே தவிர்ப்போம் என்கிறார்.

சரி என்று பின்னகர்ந்தால் பான் மதமே வெளியே இருந்து வந்து சேர்ந்ததுதான். சீனத்து தாவோ மரபின் திபெத்திய வடிவம் அது. மேலும் பின்னகர்ந்து திபெத் பழங்குடிகளின் நம்பிக்கைகள்தான் அசல், அதுவே போதும் என்கிறார். அவர் திபெத்தை என்னவாக காட்ட முயல்கிறார்? வெறும்பழங்குடிகளாக. அப்படி காட்ட விரும்புபவரின் மெய்யான நோக்கம் என்ன?

இதே சூத்திரத்தின்படிப் பார்த்தால் உலகில் பிற பண்பாட்டு கலப்பே இல்லாத தனித்தன்மை கொண்ட பண்பாடுகள் எவை? ஒவ்வொரு நாடும் ஆயிரமாண்டு பண்பாட்டுக் கலப்பை நீக்கி பழங்குடிகளாக எஞ்சுமென்றால் உலகம் என்னவாக இருக்கும்?

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கே நவீன தமிழிலக்கியம் உருவானது. அது மட்டும் அசலாக வேரிலிருந்து முளைத்ததா என்ன? தமிழ் நவீனஇலக்கியம் முழுக்கமுழுக்க ஐரோப்பிய இலக்கியத்திற்குக் கடன்பட்டது. அதன் நவீன இலக்கணக் கவிதைகள் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிமரபில் இருந்து உருவானவை- பாரதி முதல் அனைவருமே.அதன் புதுக்கவிதை வால்ட் விட்மனுக்கு கடன்பட்டது.அதன் நாவல் இலக்கியம் ரெயினால்ட்ஸ், வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமா, விக்டர் யூகோ போன்றவர்களிடமிருந்து உருவானது. அதன் சிறுகதைக்கு மாப்பசானும், செகாவும் முன்னோடிகள். அது இரவல் அல்லவா?

இன்றுவரை தமிழில் நிகழும் எந்த இலக்கிய மாற்றமும், அலையும் உலகளாவிய இலக்கியப்போக்குகளின் விளைவாகவே நிகழ்ந்துள்ளது. மார்க்ஸிய அலை, நவீனத்துவ அலை, பின்நவீனத்துவ அலை அனைத்துமே. அப்படித்தான் இயலும். அதுவே அறிவியக்கத்தின் பாணி.

அறிவியக்கம் உலகை நோக்கி அனைத்து வாசல்களையும் திறக்கிறது. அத்தனை பண்பாடுகளுடனும் உரையாடுகிறது, மாறுகிறது மாற்றுகிறது. இனவெறியர்கள், பண்பாட்டு அடிப்படைவாதிகளின் குறுக்கல்போக்குகளுக்கு இலக்கியம் என்றுமே எதிரானது.

ஐரோப்பா தன் மாபெரும் பண்பாட்டுக் கலப்பால், பண்பாட்டு உரையாடலால் உருவாகி உலகின் மேல் அறிவாதிக்கத்தை அடைந்தது. ஐரோப்பா கிறிஸ்தவத்தை கைவிட்டு தனது பாகன் பண்பாட்டுக்கு திரும்பிச்செல்லவேண்டும் என்பார்களா?

சொல்லவே மாட்டார்கள். அவர்கள் சொல்வது கீழைநாடுகள் தங்கள் பண்பாட்டு வளர்ச்சியை துறந்து பழங்குடிப் பண்பாட்டை மட்டுமே ஏற்றுக்கொண்டு அரைப்பழங்குடிகளாக வாழவேண்டும் என்று. அந்தப் பழங்குடிகளுக்கு இவர்கள் வேறொரு ’உயர்நாகரீகத்தை’ கொண்டுவந்து கொடுப்பார்கள். அது அன்னிய மதமாகவே இருக்கும். அதைச் சொல்பவரின் நிதியாதாரம் அங்குதான். கீழோர், கூலிநத்திப் பிழைக்கும் அற்பர்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2021 11:35

கணக்கு- கடிதம்

கணக்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

புனைவு களியாட்டின் கணக்கு சிறுகதையை வாசித்தேன். இந்த வாரம் சுக்கிரி குழுமத்தில் அக்கதைக்கான கலந்துரையாடல் நிகழ்ந்தது. கதை குறித்த என் வாசிப்பை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உள்ளுணர்வுக்கும் தர்க்கத்திற்குமான உறவாகவே கணக்கு கதை எனக்கு திறந்தது. காளியன் புலையன் சாதியை சார்ந்த அரை பழங்குடி தன்மை கொண்ட தன் பாரம்பரிய திறனோடு உள்ளுணர்வின் துணை கொண்டு இயங்குகிறார். காளியை நாம் உக்கிர உணர்வில் நிற்பவளாக காண்கிறோம். உள்ளுணர்வின் திறப்பு நிகழ்கையில் நாமும் உணர்ச்சி நிலையிலேயே இருக்கிறோம். அங்கு தர்க்கங்கள் எழுவதேயில்லை. காளியன் கடைசி பந்தயத்தில் தோற்கையில் அதுபோலவே இருக்கிறார். அவருள் கேள்விகளே இல்லாத தன் திறன் தன்னை கைவிட்டு சென்றதை நம்ப முடியாமல் உணர்ச்சி கொந்தளிப்புடன் திரும்பி செல்கிறார்.

விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களில் ஒன்று அச்சுதன். அதற்கு அசையாதவன், மாறாதவன், வீழ்ச்சியடையாதவன் என்று பொருள். அச்சுதன் அண்ணா முற்றிலும் தர்க்கமானவர். இன்றைய மானுட அமைப்பின் பிரதிநிதியாகவே நிற்கிறார். அவர் வென்றதை என்னால் அத்தனை எளிதாக எடுத்துகொள்ள முடியவில்லை. அது என்னை சீண்டியது. அங்கிருந்தே தர்க்கம் ஏன் உள்ளுணர்வின் துணை கொண்டு செயல்படும் திறனை வெல்கிறது என்ற கேள்வி எழுந்தது. அதை நோக்கி செல்கையில் அறிந்தேன். நாம் அறிவென ஆக்கி வைத்துள்ளது அத்தனையும் தர்க்கமெனும் இழையறுபடாத சரடால் இணைக்கப்பட்டவை. ஒன்றின் மேல் ஒன்றென சீரான ஒத்திசைவு கொண்டவை. உள்ளுணர்வோ வளரும் இளந்தளிரை போன்றது. ஏற்கெனவே இருக்கும் பழைய அமைப்பு புதியவற்றின் மேல் எப்போதும் ஐயம் கொள்கிறது. அதன் பொருட்டு தன் ஆற்றலால் அதை ஒடுக்குகிறது. இவற்றை மீறி எழுதலே அதன் தேவைக்கு சான்று. ஒழுங்கின்மையில் ஒழுங்கை கொண்டுள்ள இயற்கையும் அவ்வாறே இயங்குகிறது.

அந்த உரையாடலில் எழுந்த இன்னொரு கருத்து என் கேள்வியை வெறொரு கோணத்தில் திறந்து கொள்ள உதவியது. காளியனின் பாட்டனிடமிருந்தது கணக்கு செய்வதற்கான ஒரு கருவி. அச்சுதன் அண்ணா வீட்டாரிடமிருந்தது இன்னொரு கருவி, பணப்பலகை. மாடன் புலையனுக்கு வெறும் பலாபழத்தை கொடுத்து ஏன் அனுப்பிவிட்டனர். அவர் இவர்களின் வேலையை எளிதாக்கி இருப்பாரே. அங்கு தோன்றியது மாடனிடமிருப்பது உள்ளுணர்வு பங்காற்றும் ஒரு திறன். எல்லோருக்கும் அது அமைவதில்லை. அதற்கென்றான வாழ்க்கை சூழலும் முறையிலும் வெளிப்படுவது. ஆனால் நமக்கு யாதும் ஊரே யாவரும் கேளீர், வசுதைவ குடும்பகம் என ஈராயிரம் தொடர்ச்சியுள்ள மரபு உள்ளது. அது மானுடனை ஒற்றை தனிமனிதனாக அல்ல, ஒட்டுமொத்தமாக கண்டது. மானுடம் என்றது. நானென்று அல்ல, நாம் முன்னேறுவோம் என்றது. எந்தவொன்றும் புறவயமாகுங்தோறும் எல்லோராலும் அணுக முடிவதாகிறது. அதில் ஏறி திறனுள்ளவர்கள் அகவயமான உச்சங்களை தொடலாம். அதன் பொருட்டே அறிவை நாம் முதல் தளத்தில் தர்க்கமாக்கி கொண்டோம் என நினைக்கிறேன்.

கல்லூரிக்கு செல்லும் காளியன் மகனால் அவன் தந்தையின் திறனை அடைய முடியுமா என்ற கேள்விக்கு இல்லையென்றே நினைக்கிறேன். பள்ளி என்னும் அமைப்பே நாம் ஆக்கி வைத்துள்ள அத்தனை தர்க்கத்தையும் குழந்தைக்குள் ஏற்றுவது தான். அதை மீறி எழுகையிலேயே அவர்கள் அரிதானவர்களாகிறார்கள். அதேபோல காளியன் அதை திரும்ப முயற்சிப்பாரா என்பதற்கு வேலியில் மின்சாரம் பாய்ச்சி பயம் காட்டப்பட்ட பசுவை போன்றவர் தான் அவர். ஆகவே அது ஒருவேளை நடக்கலாம் என சொல்லலாம்.

அச்சுதன் அண்ணாவிடமுள்ள அந்த மீறலும் சுரண்டலுமான அம்சம் ஏன் காளியனிடம் இல்லை. காளியனின் உள்ளுணர்வுடன் கூடிய திறன் நேர்வழியில் மட்டுமே ஏன் செல்கிறது. எத்திசையிலும் வழியில்லாது முட்டிமுட்டி திரும்புகையில் வெளிப்பட்டு நம்மை துணைக்கும் இயற்கை ஆற்றல் காளியனுடையது. காட்டில் முடிவிலியை நோக்கி பசித்திருந்து உணவுண்ணும் நிறைவு அது. நாம் இழந்த அந்த இன்பத்தை நிகர் செய்யும் பொருட்டு தான் இந்த சுரண்டலையும் மீறலையும் உருவாக்கி கொண்டோமோ.

அன்புடன்

சக்திவேல் 

25 எச்சம் [சிறுகதை] 24 நிறைவிலி [சிறுகதை] 23 திரை [சிறுகதை] 22.சிற்றெறும்பு [ சிறுகதை] 21 அறமென்ப…  [சிறுகதை] 20 நகை [சிறுகதை] 19.எரிசிதை [சிறுகதை] 18 இருளில் [சிறுகதை] 17 இரு நோயாளிகள் [சிறுகதை] 16 மலைபூத்தபோது [சிறுகதை] 15 கேளி [சிறுகதை] 14 விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை 100. வரம் [சிறுகதை] 99. முதலாமன் [சிறுகதை] 98. அருகே கடல் [சிறுகதை] 97. புழுக்கச்சோறு [சிறுகதை] 96.  நெடுந்தூரம் [சிறுகதை] 95. எரிமருள் [சிறுகதை] 94. மலைவிளிம்பில் [சிறுகதை] 93. அமுதம் [சிறுகதை] 92. தீவண்டி [சிறுகதை] 91. பீடம் [சிறுகதை] 90. சிந்தே [சிறுகதை] 89. சாவி [சிறுகதை] 88. கழுமாடன் [சிறுகதை] 87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை] 86. தூவக்காளி [சிறுகதை] 85. சிறகு [சிறுகதை] 84. வண்ணம் [சிறுகதை] 83. ஆபகந்தி [சிறுகதை] 82. ஆமை [சிறுகதை] 81. கணக்கு [சிறுகதை] 80. சுக்ரர் [சிறுகதை] 79. அருள் [சிறுகதை] 78. ஏழாவது [சிறுகதை] 77. மணிபல்லவம் [சிறுகதை] 76. மூத்தோள் [சிறுகதை] 75. அன்னம் [சிறுகதை] 74. மலையரசி [சிறுகதை] 73. குமிழி [சிறுகதை] 72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை] 71. செய்தி [சிறுகதை] 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1 69. ஆகாயம் [சிறுகதை] 68. ராஜன் [சிறுகதை] 67. தேனீ [சிறுகதை] 66. முதுநாவல்[சிறுகதை] 65. இணைவு [சிறுகதை] 64. கரு [குறுநாவல்]- பகுதி 1 64. கரு [குறுநாவல்]- பகுதி 2 63. ‘பிறசண்டு’ [சிறுகதை] 62. நிழல்காகம் [சிறுகதை] 61. லாசர் [சிறுகதை] 60. தேவி [சிறுகதை] 59. சிவம் [சிறுகதை] 58. முத்தங்கள் [சிறுகதை] 57. கூடு [சிறுகதை] 56. சீட்டு [சிறுகதை] 55. போழ்வு [சிறுகதை] 54. நஞ்சு [சிறுகதை] 53. பலிக்கல் [சிறுகதை] 52. காக்காய்ப்பொன் [சிறுகதை] 51. லீலை [சிறுகதை] 50. ஐந்து நெருப்பு[ சிறுகதை] 49. கரவு [சிறுகதை] 48. நற்றுணை [சிறுகதை] 47. இறைவன் [சிறுகதை] 46. மலைகளின் உரையாடல் [சிறுகதை] 45. முதல் ஆறு [சிறுகதை] 44. பிடி [சிறுகதை] 43.. கைமுக்கு [சிறுகதை] 42. உலகெலாம் [சிறுகதை] 41. மாயப்பொன் [சிறுகதை] 40. ஆழி [சிறுகதை] 39. வனவாசம் [சிறுகதை] 38. மதுரம் [சிறுகதை] 37. ஓநாயின் மூக்கு [சிறுகதை] 36. வான்நெசவு [சிறுகதை] 35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] 34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] 33. வான்கீழ் [சிறுகதை] 32. எழுகதிர் [சிறுகதை] 31. நகைமுகன் [சிறுகதை] 30. ஏகம் [சிறுகதை] 29. ஆட்டக்கதை [சிறுகதை] 28. குருவி [சிறுகதை] 27. சூழ்திரு [சிறுகதை] 26. லூப் [சிறுகதை] 25. அனலுக்குமேல் [சிறுகதை] 24. பெயர்நூறான் [சிறுகதை] 23. இடம் [சிறுகதை] 22. சுற்றுகள் [சிறுகதை] 21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை] 20. வேரில் திகழ்வது [சிறுகதை] 19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] 18. தங்கத்தின் மணம் [சிறுகதை] 17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] 16. ஏதேன் [சிறுகதை] 15. மொழி [சிறுகதை] 14. ஆடகம் [சிறுகதை] 13. கோட்டை [சிறுகதை] 12. விலங்கு [சிறுகதை] 11. துளி [சிறுகதை] 10. வேட்டு [சிறுகதை] 9. அங்கி [சிறுகதை] 8. தவளையும் இளவரசனும் [சிறுகதை] 7. பூனை [சிறுகதை] 6. வருக்கை [சிறுகதை] 5. “ஆனையில்லா!” [சிறுகதை] 4. யா தேவி! [சிறுகதை] 3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை] 2. சக்தி ரூபேண! [சிறுகதை] 1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2021 11:34

வெள்ளிநிலம்- சிறுமியின் விமர்சனம்

பெயர் : ரியா ரோஷன்.வகுப்பு: ஏழாம் வகுப்பு.வயது :12, இடம்: சென்னை

இந்த புத்தகத்தை விடுமுறையில் படிப்பதற்காக என் அம்மா எனக்கு வாங்கி கொடுத்தார். ஜெயமோகன் அவர்கள் எழுதிய புத்தகங்களில் நான் படிக்கும் முதல் புத்தகம் இது. அவர் என் மாமாவிற்கும், பாட்டியிற்கும் பிடித்த எழுத்தாளர். புத்தகத்தில் மொத்தம் 28 chapters. படித்து முடிக்க ஒரு மாதம் ஆனது. கதை என்னவென்று சுருக்கமாக கொடுத்து இருக்கிறேன்.

கதை : டிபெட்டில் ஒரு பௌத்த மடாலயத்திற்கு அருகில் தோண்டும் போது ஒரு மம்மி கிடைக்கிறது. மம்மியை ராணுவத்தை சேர்ந்த கேப்டன் பாண்டியன் பாதுகாக்கிறார். அதை திருட திருடர்கள் திட்டம் போடுகிறார்கள். கேப்டன் பாண்டியனுடன் சேர்ந்து டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், சிறுவன் நோர்பா, அவனுடைய நாய்க்குட்டி நாக்போ என்று ஒரு team உருவாகும். மற்றும் அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இந்த கதையே.

History+Geography +Mystery +GK எல்லாம் சேர்ந்த கதை இது.

History-  பௌத்த மதம், பான் மதம் அதன் தெய்வங்கள், சீன எழுத்துக்கள் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

Geography – பனிமலை பிரதேசத்தில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் அவர்களின் உடை, உணவு,நிலப்பரப்பு, சூரியன் உதிப்பது, Climate போன்ற  செய்திகள் இருந்தது.

GK- ஒவ்வொரு chapter யிலும் ஒரு புகைப்படத்துடன் GK facts இருந்தது.Spyware, Drone போன்ற சுவாரசியமான தகவல்கள்.

கதாபாத்திரங்கள்:

கேப்டன் பாண்டியன்: இவர் தான் இந்த கதையின் ஹீரோ. இவர் பனிமனிதன் என்ற புத்தகத்திலும் வருவாராம், ஆனால் பனிமனிதன் இனிமேல் தான் நான் படிக்க வேண்டும்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் :

இவர் ஒரு புத்திசாலியான ஆராய்ச்சியாளர்.

நோர்பா:

அட்டைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி  சிறுவன் இவன்தான். இவனுக்கு வரையும் talent உண்டு.

நாக்போ : இவன் நோர்பா வளர்க்கும் நாய்க்குட்டி. கதை முழுவதும் காமெடியனாக இருந்துவிட்டு கிளைமாக்ஸில் ஹீரோ வேலை செய்யும் cute and smart நாய்க்குட்டி.

இவர்கள் எல்லாம் சேர்ந்த ஒரு mystery கதையே வெள்ளி நிலம்.

கதையில் விதவிதமான உணவு பண்டங்கள் இருந்தது. துக்பா நூடுல்ஸ், Chowmein, Momos. Kashmiri kahwa என்ற டீ.கேக் மாதிரியான ஒரு பிஸ்கட்.

இந்த கதை குளிரான இடத்தில் நடப்பதால் இந்த வெயில் காலத்தில் படிப்பதற்கு சுகமாக இருந்தது.

நன்றி

ரியா ரோஷன்

வெள்ளிநிலம்- கடிதம் வெள்ளிநிலம் -குழந்தை வாசிப்பு வெள்ளிநிலம் நாவல் சுட்டிவிகடன் -வெள்ளிநிலம் பற்றி வெள்ளிநிலத்தில்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2021 11:34

உரைகள்- கடிதங்கள்

என் உரைகள்,ஒரு தயக்கத்துடன்…

அன்புள்ள ஜெமோ,

இலக்கிய படைப்புகளுக்கு  ஒலிவழி என்பது என் தேர்வாக எப்போதும் இருப்பதில்லை.  படித்தல் வழி மெதுவாக நமக்குள் இறங்கி, புரிதலாக நம்மோடு கலக்க அதற்ககு தேவைப்படும் நேரத்தை இந்த ஒலிநூல்கள் நமக்கு கொடுப்பதில்லை என்பது என் எண்ணம். இறுதியில் ஒரு இலக்கியப் படைப்பில் கதையை “தெரிந்து” கொள்கிறோம், அவ்வளவுதான்.  எனவே இலக்கியத்துக்கு ஓலிநூல்களை யாருக்கும் பரிந்துரைக்கக்கூட மாட்டேன். ஆனால் தகவல்கள் மற்றும் கருத்துக்களை  “தெரிந்துகொள்வதை” முதன்மையாக வைக்கும் அபுனைவுகளை ஒலிவழி கேட்பதில் எனக்கு பிரச்சனை இல்லை.

இதில் இன்னொன்றையும்  சொல்ல வேண்டும், இலக்கியமாக இருந்தாலும் மீள் வாசிப்பிற்கு ஒலி நூல்கள் நன்றாகவே இருக்கிறது. வெண்முரசை மீண்டும் முதலில் இருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்து அது தள்ளிபோய்க் கொண்டே இருந்தது. அப்போது நமது காயத்ரி சித்தார்த் வெண்முரசை ஒலிநூலாக கொண்டுவர, ஒரு விலகல் மனநிலையில்தான் அதை கேட்க ஆரம்பித்தேன். ஒன்றை கேட்க ஆரம்பித்து பின் தொடர்ச்சியாக எல்லாவற்றையும் கேட்டேன். அதில் கதையோடு பயணம் செய்ய எனக்கு எந்த சிரமமும் இல்லை, காயத்ரியின் கதை சொல்லல் தேவையான நிதானத்துடன், மிக தெளிவாக இருந்தது.  மிக சிறப்பான பணி. எனவே மீள் வாசிப்பிற்கு ஒலிநுல்கள் சரி போல்தான் தோன்றுகிறது.

ஆனால் முனைவர் ஆய்வுக்கே கூட எவரும் எதையும் வாசிப்பதில்லை என்று ஒருவர் சொன்னதாக சொன்னீர்கள், ஆச்சர்யமாக இருந்தது. வாசிக்காத எதுவும் அறிவாக சேகரமாவது இல்லை அல்லது “முழுமை” கொள்வது இல்லை. அறிவியல் உலகில் மேலதிக கேள்வி கேட்பது, தவறுகளை சுட்டுவது, விவாதிப்பது என்பது மிக அவசியமான ஒவ்வொருநாள்  நடைமுறை என்பதால் எப்போதும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பொதுவில் பிரசண்ட் பண்ணுவது என்பது வழமை, எனவே டேட்டா பிரசண்ட் பண்ணுவது, கருத்தரங்குகள் இயல்பானது, இப்போது கோவிட் காலம் என்பதால் அவை இணைய உரைகளாக இருக்கின்றன. ஆனால் இன்றும் ஆராய்ச்சி பிரிவில் இது ஒரு சிறு பகுதிதான், அவரவர் துறை சார்ந்த தற்போதைய ஆராய்ச்சி கட்டுரைகளை, தரவுகளை, மூலக் குறிப்புகளை தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பது என்பதுதான் பெரும்பகுதி.

உண்மையில் இணைய காணொளி/ஒலிகளில் தொடர்ந்த கவனம் சாத்தியமில்லாததாகத்தான் இருக்கிறது. மனம் கவனப்பிசகாகி பின் திரும்ப அதை கூட்டிக் கொண்டு வரணும். ஒரு குறிப்பிட்ட சிறு சிறு இடைவெளிகளில் இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உங்கள் உரைகள் எல்லாமே மிகத் தெளிவானவை, ஜெமோ. உங்கள் உரைகளுக்கும் ஒரு அமைப்பு, வடிவம் உண்டு. முன்தயார் செய்யப்பட்டதற்கான கோர்வை உண்டு, ஆனால் மிக கவனமாக தயார் செய்யப்படும் உரைகளில் இருக்கும் ஒரு “உறுதித்தன்மை” rigidity இருப்பதில்லை, இலகுவாக இருக்கிறது, எனவே அவை சலிப்பதில்லை, உங்கள் உரைகளை கேட்க்கும்போது அதன் தகவல்கள் வழி பயணம் செய்ய முடிகிறது. அதனால் உரை முடிந்தவுடன், முழுவதையும் திரும்ப சொல்லச் சொன்னால் கூட அதன் வடிவ ஒழுங்கால் திரும்ப சொல்லுவது சாத்தியமானதுதான்.

உங்கள் உரைகளை ஒலிவடிவில் Podcast ல் ஏற்றி வைத்திருக்கிறேன்.
விருப்பமானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Apple Podcast
https://podcasts.apple.com/sg/podcast/jeyamohan-audio/id1562533731

Google Podcast
https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy81NjQxNTljOC9wb2RjYXN0L3Jzcw

Spotify
https://open.spotify.com/show/2hNLeSj2mU5WbHXM47SRow

Radio Public
https://radiopublic.com/jeyamohan-audio-Wx2N2o

அன்புடன்
சரவணன் விவேகானந்தன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2021 11:31

May 6, 2021

ஆடை களைதல்

வணக்கம் ஜெமோ

மிச்சக்கதைகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரையை  இந்த இரவில் கேட்டுக்கொண்டிருந்தேன் .அதை பாதியிலேயே நிறுத்துவிட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற எனது நீண்டநாளைய ஆசையை  இப்போது செய்துகொண்டிருக்கிறேன் .

நாட்டாரியல் _ செவ்வியல் குறித்து நீங்கள் முன்வைத்ததைக் கேட்ட பிறகு மனம் சும்மா இருக்கமாட்டேன் என்கிறது . யோசனை எங்கெங்கோ அறுத்துக்கொண்டு ஓடுகிறது.முத்தாரம்மன் பாடல் கேட்டு  சுரா ஓடினார் அல்லவா அதே மனநிலையில்தான் நீண்டகாலமாக இருக்கிறேன் . நவீன இலக்கியத்தின் அறிமுகத்திற்கு முன்பாகவே கன்னியாகுமரியில் முதன் முதலாக கடல்பார்த்தபோது ஒரு பிரமாண்டமான போதாமையும் , தனிமையுணர்ச்சியும் வெறுமையும்  உண்டானது .

அதன் பிறகு விவேகானந்தர் ,  ராமகிருஷ்ணர் , கண்ணதாசன் என புரிந்தும் புரியாமலும் படித்தேன் . நாஞ்சிலின் ஒரு கட்டுரையின் மூலம் நவீன இலக்கியம் அறிமுகமானது .தொடக்கமே நகுலனும் ,  சுராவும் , அசோகமித்திரனும்தான் . சுராவின் ஜே.ஜே வும் , நகுலனின் நினைவுப்பாதையையும் படித்துவிட்டு நான்குமாதம் வேலைக்கு போகாமல் திரிந்தேன் இனி இந்த வாழ்க்கையில் அடையவேண்டியது என ஏதுமில்லையென .

பிறகு சாரு படித்தேன் . சாருவின் எழுத்து அதிர்ச்சியோ ஆச்சரியமோ அளிக்கவில்லை . ஆனால் சிந்தனை ரீதியாக அடுத்த தளத்தை நோக்கி நகர்த்தியது சாருவுடைய எழுத்து . பிறகு மனுஷ்யபுத்திரனின் கவிதை உலகம் எனது எல்லா ஸ்திதிகளையும் குலைத்தது . அதன்பின்பு நகுலன் , ஆத்மாநாம் ,  பெருந்தேவி , குமரகுருபரன் ஆகியோருடைய   கவிதையுலகம் ஏழுவருடங்களுங்கு முன் கன்னியாகுமரியில் கடல்பார்த்தபோது உண்டானன உணர்வுகளை மேலதிகமாய் பெருக்கின .

இப்போது கொஞ்சம் கவிதைகளும் எழுதுகிறேன் .சமீபத்தில் எனது கவிதைகள் குறித்து இரு மூத்தக் கவிஞர்கள் பேசினார்கள் . எனது சொற்களில் இருக்கும் துயரமும் கசப்பும் எரிச்சலும் நவீன இலக்கியம் – சு.ரா போன்ற முன்னோடிகளின் மேலைத்தேய சிந்தனை மரபு அல்லதே கலை மரபு –  கையளித்தது என . வறட்சியான மனநிலை சிறுவயதிலிருந்தே இருந்துவந்திருக்கிறது . அதை என்காலம் எனக்கு கையளித்திருப்பதாக உணர்கிறேன் .புலம்பெயர்வின்  உதிரி வாழ்க்கைமுறை .

சென்றவருடம் அபிக்கு விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தேன் . கவிஞர் பெருந்தேவியின் அமர்வில் நீங்களும் இருந்தீர்கள் . பெருந்தேவியிடம் சு.வேணுகோபாலும் , லட்சுமி மணிவண்ணனும் கேட்ட கேள்விகள்

1 .உங்கள் கவிதைகளில் மரபு எங்கே இருக்கிறது ?

2 . நிக்கனார் பார்ராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் ?

3 . இது ஒருமாதிரியான மேலைநாட்டு இலக்கிய மோகத்தால் எழுப்படுவதுபோல இருக்கிறது ?

4 . நகுலன் கவிதைகளில்கூட மரபு இருக்கிறது . உங்கள் கவிதைகளில் ஏன் இல்லை ?

இந்த கேள்விகளுக்கான பதில்களை பெருந்தேவி அளித்தார். ஆனாலும் அங்கிருந்து திரும்பி பிறகு மரபு குறித்து யோசித்துக்கொண்டே இருந்தேன் . இந்த நாள்வரை அப்படித்தான் இருக்கிறேன் .

நகுலனின் ஒரு கவிதையில் குடிக்க அமரந்திருப்பார்கள் இரு நண்பர்கள் .அதில் கடைசிவரி. ” இந்த சாவிலும் சுகமுண்டு ” என ஒரு வரி வரும். ஒருவனுக்கு தன் நண்பனுடன் இருக்கும்போது வாழ்க்கையைப்பற்றிய கனவுகளின் வண்ணங்கள் அல்லவா மிளிர வேண்டும் ? . மாறாக ஏன் சாகத் தோன்றுகிறது. எனக்கும் என் காதலி அருகில் இருந்தால் கூட சில கணங்களிலேயே மனம் முற்றாய் அங்கிருந்து விலகி ஒருவிதமான இருண்மையில் ஸ்திதி கொள்கிறது . இது ஏன் இப்படி  நிகழ்கிறது என்பதும் தெரியவில்லை .

ஆனால் நீங்கள் மரபும் நவீனமும் என்ற ஒரு உரையில் ” இனி நாகர்கோவில் கவிதை , தஞ்சாவூர் கவிதை என எழுதமுடியாது ” என்றும் நவீனத்துவத்தின் அத்தியவசியமான கூறுகளையும் நிறுவினீர்கள் . ” மரபை ஏற்பதும் மறுப்பதும் ” என்ற உரையில் நீங்கள் சொன்ன பண்பாட்டு மரபும் , குருதி மரபும் பெரும் வெளிச்சமாக இருந்தது .இருந்தும் இதுசார்ந்த இத்தனை பேச்சுகளுக்கு அப்பாலும் அது புகைமூட்டமாகவே இருக்கிறது . சமயங்களில் பாவனையாகக்கூட தோன்றுகிறது.

ஏனெனில் ஒருநாளில் பெரும்பாலான நேரம் எனை ஓர் தனித்த உயிரியாக உலகில் முதல் தோன்றிய ஒரு உயிரியின் தனிமையுடன் உணர்கிறேன். இதையெல்லாம் சொல்லி உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும் ஆசானே .என் ஒரே கேள்வி இதுதான் நான் என்னை உதிரியாக நினைக்கவில்லை உறுதியாகவே  உணர்கிறேன் ரத்தமும் சதையுமாக. எனை ஒருபோதும் எதன் தொடர்ச்சியாகவும உணர முடியவில்லை  . தமிழ் கூட பழக்கத்தின் காரணமாக அல்லது சூழலில் காரணமாக மட்டுமே இருப்பதாக மனதார உணர்கிறேன்.

ஆனால் இந்தத் தன்மையை நவீன இலக்கியம்தான் கையளித்ததா ? அல்லதுஇந்த உணர்வில் இவ்விலக்கியங்கள் கூடுதலான அழுத்தங்களை கையளிக்கிறதா? மேலும் யாருடைய எழுத்தும் எந்தக் கலையும் இந்த வெற்றிடத்தை நிரப்பவியலாத போதாமையுடன் இருப்பதாகவும் சமீபமாக உணர்கிறேன் . உண்மையில் நீங்கள்  கூறியதுபோல இந்த ஆதித்தனிமையின் தகிப்பை பதிலீடு செய்யத்தான் இவ்வளவுமா ?

சரியா தவறா என்றெல்லாம் தெரியவில்லை ஆசானே .ஆசான் என மனதார வேண்டி நிற்கிறேன் . வாழ் ஞானத்தை கையளிக்கவும் . .

சியர்ஸுடன்

சதீஷ்குமார் சீனிவாசன்

அன்புள்ள சதீஷ்குமார்,

என் படைப்புக்களில் ‘அதிநவீனத்துவ’ வாசகர்கள் பெரும்பாலும் வாசிக்காத ஒரு படைப்பு விஷ்ணுபுரம். அவர்கள் தங்களை நவீனமானவர்கள் என்று எண்ணிக்கொள்வதனால் அதை பழையது, புராணம் என உருவகித்துக் கொள்கிறார்கள். அவர்களில் பலருக்கு வரலாறு, தொன்மம் சார்ந்து ஆரம்ப அறிமுகம்கூட இருப்பதில்லை. பெரும்பாலானவர்களால் இருநூறு பக்கங்களுக்குமேல் படிக்க முடிவதில்லை.

ஒரு கட்டத்திற்குமேல் குடி. இந்தியாவின் மதுவகைகளை ஓராண்டுக்குமேல் குடிப்பவர்களால் மூளையுழைப்பு செலுத்த முடியாது. கண்ணுக்கும் உடலுக்குமான ஒத்திசைவு இல்லாமலாகும். சில பக்கங்கள் படிக்கையிலேயே மூளைக்களைப்பும் அதிலிருந்து எரிச்சலும் உருவாகும். இங்கே கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும் கவிதையை பழகுவதை விட குடியைப் பழகியிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் விஷ்ணுபுரம் பற்றிய செவிவழிச்செய்தியையே அறிந்திருப்பார்கள்.

விஷ்ணுபுரத்தின் முக்கியமான பேசுபொருட்களில் ஒன்று, அல்லது மொத்தநாவலுமே அதைப்பற்றித்தான், ‘தேடலும் பாவனைகளும்’ தான். மெய்மையை தேடுபவர்கள் தலைமுறை தலைமுறைகளாக தோன்றிக்கொண்டே இருப்பதைச் சொல்கிறது அந்நாவல். அவர்களிடமிருக்கும் பாவனைகள் அனைத்தையும் எடுத்து வைக்கிறது. இன்றைய இலக்கியவாதி, அறிவுஜீவி எதில் திளைக்கிறானோ அந்த பாவனைகளின் பெருங்கடல் விஷ்ணுபுரத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

மெய்மையை நாடுபவனின் இயல்புகளில் முதன்மையானது தன்னுணர்வு. அதை அவன் ஆணவமாக ஆக்கிக்கொள்கிறான். நான்  ‘மற்றவர்களை’ போல அல்ல , நான் வேறானவன் என்ற தன்னுணர்வே அவனுடைய அடிப்படை விசை. ஆகவே அவன் தன்னை வாழ்வதைவிட வாழ்க்கையை அறிவதை தலைக்கொள்பவன் என்று சித்தரித்துக் கொள்கிறான்.

அதன் பின் அந்த மெய்நாடுவோர் அனைவரும் செய்வது தங்களைத் தாங்களே ‘சித்தரித்துக்கொள்வது’ தான். அதை நடிப்பு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அது பொய் அல்ல. அது ஒருவகை உண்மை. ஒருவன் தன்னை ஒருவகையாக முன்வைத்துக்கொண்டே இருக்கையில் உண்மையாகவே அப்படி தன்னை ஆக்கிக்கொண்டும் இருக்கிறான். அப்படியே திகழ்கிறான்.

அதாவது பொதுவாக மனிதனின் இருப்பு என்பது அவனுடைய வெளிப்பாடுதான். அதற்கு அப்பால் அவனுக்கு ஓர் இருப்பு உண்டு என்றால் அதை அறிவதும் அதுவாக ஆவதும் அத்தனை எளிதல்ல. அதையே யோகம் என்கிறார்கள். யோகம் என்றால் இரண்டின்மை. இரண்டின்மை என்பது இங்கே இருத்தலும் வெளிப்பாடும் ஒன்றே என ஆகும் நிலை.

விஷ்ணுபுரத்தில் தத்துவவாதிகள், கவிஞர்கள், ஞானப்பயணிகள் கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட பாவனைகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றிய விமர்சனங்களும் கிண்டல்களும் கூட உள்ளன. அவற்றை எழுத என்னால் இயன்றது ஏனென்ன்றால் நான் அவற்றில் சிலவற்றினூடாக சென்றிருக்கிறேன். பலவற்றை கற்பனையில் நிகழ்த்தியிருக்கிறேன். ஏராளமானவற்றை கண்டிருக்கிறேன்.

விஷ்ணுபுரத்தில் ஒருவர் ‘ஞானத்தை தேடிச்சென்று முடிவிலியில் கரைபவர்’ என்ற வேடத்தை நடிப்பார். ஒருவர்   ‘ஞானத்தின் பொருட்டு கடைசியில் செத்துக்கிடப்பவர்’ என்பதை நடிப்பார். “ஞானமென ஒன்றில்லை, அது பொய்’ என்ற பாவனையை ஒருவர் நடிப்பார். ‘ஞானத்துக்கு எதிரான பொறுக்கி’ என ஒருவர் தன்னை ஆக்கிக்கொள்வார்.  எதுசெய்தாலும் அது ஒரு பாவனையாகவே ஆகிவிடும் நச்சுச் சூழல் அந்நாவலில் உள்ளது.

முடிந்தால் அதைப் படியுங்கள். அதன்பின் அப்படியே அதை நம் சமகால வாழ்க்கைக்குக் கொண்டுவாருங்கள். நாம் எங்கிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளுங்கள். இன்றைய சூழல் ஏதோ இப்போது உருவான ஒரு அரியுநிகழ்வு என்று எண்ணிக்கொள்கிறோம். இது இப்படியே மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் இருந்துகொண்டிருக்கிறது.

நான் சொல்ல வருவது, நாம் என நாம் முன்வைக்கும் ஆளுமையை நாம் அப்படியே நம்பிக்கொள்ளத்தான் வேண்டுமா என்றுதான். கலகக்காரனாக, நம்பிக்கையிழந்தவனாக, புரட்சியாளனாக, பிடிப்பற்றவனாக, தீவிரநம்பிக்கையாளனாக, இன்னும் என்னென்னவோ ஆக. இதெல்லாம் நாம்தானா? இவற்றை இங்கே இவர்கள்முன் வைத்துவிட்டு இதற்குள் ஒளிந்திருக்கிறோமா?

சர்க்கஸ் கோமாளியாக வேடமிட்டு தெருவில் ஆடும் ஒருவரை இளமையில் எனக்கு அறிமுகமிருந்தது. ‘சீரியசான’ ஆள் அவர். சிடுசிடுப்பானவர். ஆனால் அந்த கோமாளிமுகத்தை வேடமிட்டுக்கொண்டதும், வாயில் அந்தச் செயற்கை இளிப்பு பொருத்தப்பட்டதும், உற்சாகமான கோமாளி ஆகிவிடுவார். அந்தர்பல்டி அடிப்பார். மெய்யாகவே வெடித்துச் சிரிக்கவைக்கும் நகைச்சுவைகளைச் செய்வார்.

நாம் அணிந்துகொள்ளும் முகங்களை நாமே ஈவிரக்கமில்லாமல் பார்க்கவும் பரிசீலிக்கவும் முடிந்தால் மட்டுமே நாம் எழுத்தாளர், கவிஞர்.எந்த வகையான தத்துவச்செயல்பாடும், இலக்கியச்செயல்பாடும், ஆன்மிகச் செயல்பாடும் முதன்மையாக தன்னைக் கண்டடைதல்தான். தன்னுள்ளே ஆழ்ந்துசென்று வரலாற்றையும் பண்பாட்டையும் கண்டடைதல். இயற்கையையும் விசும்பையும்கூட தன்னுள் செல்வதனூடாகக் கண்டடைதல்.

அதற்கு மிகப்பெரிய தடையாக அமைவதென்ன? தன்னை தான் தேடத் தொடங்குவதற்கு முன்னரே தன்னை வரையறைசெய்துகொள்ளுதல். தன்னை முற்றாக கட்டமைத்துக்கொள்ளுதல். தன்னை அப்படி முன்வைக்க தொடங்குதல். படிப்படியாக அதற்குரிய வாழ்க்கைமுறையையும் அதற்குரிய உளநிலையையும் உருவாக்கிக் கொள்ளுதல்.மீளமுடியாதபடி அந்த வேடத்திலேயே சிக்கிக் கொள்ளுதல்.

இளையோர், குறிப்பாக கவிதை எழுதுவோர், அவ்வாறு சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முகமூடிகளுடன் என் முன் வந்து நின்றிருப்பதை காண்கிறேன். எங்கும் அந்த முகங்களுடன் சென்று தங்களை நிறுத்துகிறார்கள். பார்ப்பவர் எவரும் அதை முழுக்க நம்பப் போவதில்லை. அது அவர்களுக்கும் தெரியும், ஆகவே அதைக் கொஞ்சம் மிகையாகவே நடிக்கிறார்கள்.ஜேம்ஸ்பாண்டும் நம் நவீனக்கவிஞர்களும் தான்  licensed to overkill.

உங்களைப் பற்றி நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொள்கிறேன். உங்களுக்கு செவ்வியல்,நாட்டார் மரபுகளில் ஈடுபாடில்லை. எந்த இடத்திலும் வேர்கள் இல்லை. எங்கும் உதிரியாக புறனடையாக உணர்கிறீர்கள். சரி, அவ்வாறு ஒருவர் இருப்பது இயல்பானது. அவ்வாறு அவர் தீவிரமாக மொழிவடிவங்களில் வெளிப்பட்டால் அது இலக்கியம்தான்.

ஆனால் அதுதான் நீங்கள் என இப்போதே ஏன் வகுத்துக்கொள்கிறீர்கள்? அதுதானா நான் என திரும்பத் திரும்ப, முடிவில்லாமல், உசாவவேண்டியதல்லவா கலைஞனின் வேலை?

உண்மையிலேயே நீங்கள் அப்படி என்றால் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பெருமிதமோ சிறுமையுணர்வோ கொள்ளவேண்டியதில்லை. அது ஓர் ஆளுமையியல்பு. அப்படி ஏராளமான ஆளுமைத்தன்மைகள் இலக்கியத்தில் வெளிப்படுகின்றன

அப்படி அல்ல என்று எப்போது தோன்றுகிறதோ அக்கணமே அதுவரை அடைந்த அனைத்தையும் தூக்கிவீசி அப்போது நீங்கள் எவர் என்று தோன்றுகிறதோ அவராக ஆனால்தான் நீங்கள் கலைஞர். நீங்களொன்றும் இந்த வேடத்தை நடித்துக்கொடுக்க முன்பணம் வாங்கி இங்கே வரவில்லை அல்லவா?

ஓர் உதிரி உதிரியாக இருப்பதனாலேயே, உதிரிவாழ்வை எழுதுவதனாலேயே எந்த தகுதியும் வந்துவிடுவதில்லை. அதுபோல ஓரு நிலப்பிரபு அவ்வாறே வெளிப்படுவதனால் எந்த தகுதிக்குறைவும் இலக்கியத்தில் அமைவதில்லை. ஃபாஸிஸ்டுகளை ஆதரித்த பேரிலக்கியவாதிகளின் பெருநிரை உலக இலக்கியத்தில் உண்டு.

இலக்கியம் தேடுவது மெய்மையின் வெளிப்பாட்டை மட்டும்தான். ஒரு வாழ்க்கையின் அகஉண்மை வெளிப்படுகிறதா என்றுதான். அந்த அகஉண்மையினூடாக மானுடத்தின் மெய்மைகளில் ஒன்று வெளிப்பாடு கொள்கிறதா என்பதை மட்டும்தான்.

ஆகவே இலக்கியவாதி என இயங்கும் எவரிடம் சொல்ல எனக்கு ஒன்றே உள்ளது. எது ஒன்றாகவும் ’ஆக’ முயலாதீர்கள். எதுவாகவும் சித்தரித்துக் கொள்ளாதீர்கள். எதுவாக இருக்கிறீர்களோ அதுவாக வெளிப்படுங்கள். அதுவே இலக்கியம். இதைச் சொல்ல எனக்கு நிறைய தகுதி உண்டு. பலவாக ஆக முயன்று கொஞ்சகாலம் என்னை வீணடித்து சுயமாக கண்டுகொண்டவன் நான்.

இலக்கியவாதிக்கு அவன் இருப்பு எதுவாக இருப்பினும் அது ஒரு சவால்தான். கால்பந்தாட்டக்காரனுக்கு பந்து அவனுக்கு அவன் தன்னிலை, அவனுடைய உள்ளம். அதை உதைத்து உதைத்துத்தான் அவன் தன் வெற்றிகளை எய்த முடியும். வேறுவழியே இல்லை. இலக்கியவாதிக்கு அவன் அகம்.

இங்கே ஒவ்வொரு உயிர்க்குலத்திற்கும் மாளாத்தனிமையை இயற்கை அளித்துள்ளது. தெருவோரம் நோயுற்றுச் சாகும் நாய் ஒன்றை பாருங்கள். கூவிக்கூவி அழுது அழுது நைந்து அது சாகிறது. அத்தனை பெரிய தனிமை. அந்த தனிமை மனிதனுக்கும் உண்டு. அதை வெல்லவே சமூகம், குடும்பம், உறவுகள் என உருவாக்கினான். மதங்கள், அரசு, கொள்கைகள் என உருவாக்கினான்.

சாமானியர்கள் குளிருக்குப் போர்த்திக்கொள்வதுபோல அவற்றை ஒன்றன்மேல் ஒன்றென எடுத்து போர்த்திக்கொள்கிறார்கள். ஒரு தேர்தலரசியல் உருவாக்கும் கூட்டுக்களிவெறிக்கு தன்னைக் கொடுக்கும் இலக்கியவாதி அங்கே பாமரனாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். மெய்யான இலக்கியவாதிக்கு அந்த எந்தப்போர்வையும் உகக்காது. அவன் வெட்டவெளியில் நிற்கவேண்டியவன்.

அந்த வெட்டவெளித் தனிமை வதைதான். கைவிடப்பட்ட நிராதரவான இருப்புதான். விளக்கங்கள் அற்ற வெற்றுநிலைதான். ஆனால் அது எவருக்கும் உரியது. ஒன்றுமே செய்ய முடியாது. சரி, திரும்பச்சென்று விடலாமென்றால் அங்கே திரும்ப வாசலே இல்லை.

விஷ்ணுபுரத்துக்கே திரும்ப வருகிறேன். அதில் பிங்கலன் என்னும் கதாபாத்திரம் வினாக்களுடன் கிளம்பிச்சென்று அந்த வெறுமையில் திகைத்து மூளைக்கொதிப்படைந்து தன் ஆசிரியரிடமே திரும்ப வருகிறது. ’என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள், நான் பழைய பக்தனாக ஆகிவிடுகிறேன்’ என்கிறது. ’நீ கேள்விகள் கேட்டுவிட்டாய், இனி திரும்பவே முடியாது’ என்று ஆசிரியர் பதில் சொல்கிறார்.

என் இளமைமுதலே அந்த தனிமையை, விலக்கத்தை, எதிலும் முழுதுற அமையாத அலைதலை அறிந்துகொண்டிருக்கிறேன். இன்றுவரை மேலும் மேலும் கூர்மையாக அந்த தேடல் முன்சென்றுகொண்டேதான் இருக்கிறது. தீவிரம் மேலும் தீவிரம் என. நீள்கையில் மேலும் கூர்கொள்ளும் வாள் என. அத்துன்பத்தில், வலியில், தவிப்பில் ஒரு துளியும் கிடைக்காமல் தவறிவிடக்கூடாது என்றே நான் எண்ணுகிறேன்.

ஆனால் இந்த கொந்தளிப்பை அடைவது என் அகம். அங்கே எரியும் நெருப்பு என் சொத்து. என்னை கலைஞனாக்குவது அது. என் சொற்களில் எரிவதும் அதுவே. அதன்மேல் நான் நீரை அள்ளிக்கொட்டி அணைக்க முயலமாட்டேன். தன்  மூளையை மதுவூற்றிச் சேற்றில் சிக்கவைத்து அசைவற்றதாக்கும் கலைஞர்கள் எவர் மேலும் எனக்கு பெரிய மதிப்பில்லை. அதில் எழும் எல்லா பேய்களையும் நேருக்குநேர் நின்று பார்ப்பவர்களே எனக்குரிய கலைஞர்கள்.

குடி ஒரு சாக்கு. முதலில் எளிய அல்லல்களில் இருந்து தப்ப, கூட்டாளிகள் நடுவே இருக்கவேண்டுமென்ற விழைவால், அன்னியனாக தன்னை காட்டிக்கொண்டாகவேண்டும் என்பதனால் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன்பின்னர் அவர்களுக்கு இருப்பது ஆன்மிகச்சிக்கல் அல்ல, தத்துவச்சிக்கல் அல்ல, அழகியல் சிக்கல் அல்ல, இருத்தலியல் சிக்கல் அல்ல, குடி உருவாக்கும் சிக்கல்கள் மட்டுமே.

பொருளியல் சிக்கல், உறவுச்சிக்கல், உடல்நிலைச்சிக்கல் என குடி சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அதை ஆன்மிகச்சிக்கலாக, தத்துவச்சிக்கலாக, அழகியல் சிக்கலாக, இருத்தலியல் சிக்கலாக உருமாற்றிக் காட்டும் பாவனைகளை கற்றுக்கொண்டால் கலகக்கலைஞனாக வாழ்ந்து மடியலாம். நான் இலக்கியத்தில் வந்து முப்பதாண்டுகளாகின்றன. அப்படி இரண்டு மூன்று தலைமுறையினரை கண்டுவிட்டேன்.

ஆகவே உங்களிடம் என்ன சொல்வேன்? எதிர்கொள்க. போதையால், பாவனைகளால் அதை தவிர்க்கவேண்டியதில்லை. எது உங்களுக்குள் உள்ளதோ அதை அப்படியே எதிர்கொள்க. அதை மொழியாக ஆக்கும் பயிற்சியில் இடைவிடாது திகழ்க. வெளிப்பாடு கொள்கையில் அது தன்னியல்பாக இருக்குமென்றால், உங்களை மீறி நிகழுமென்றால் அதுவே கலை.

அவ்வண்ணம் கலை வெளிப்பட்டதென்றால் அக்கணமே அதை ஆமை தன் குஞ்சுகளை கைவிடுவதுபோல விட்டுவிடுங்கள். அடுத்ததற்குச் செல்லுங்கள், மேலும் மேலும் செல்லுங்கள். எழுதியவை உங்களை வரையறை செய்யக்கூடாது. எழுதவிருப்பவற்றை தடுக்கும் மிகப்பெரிய சக்தி அந்த வரையறைதான்.

எழுதும்போதிருக்கும் பரவசம், வெளிப்பாட்டிற்குப்பின் சிலகணங்கள் எழும் தன்னிறைவும் தருக்குதலும் மட்டுமே இந்த வாழ்க்கையில் எதிர்பார்க்கத்தக்க இன்பம். அந்தப் பயணம் கனிந்து தன்னை கண்டடைதலாக, அமைதலாக ஆகுமென்றால் அதுவே எதிர்பார்க்கத்தக்க மீட்பு.

சியர்ஸ் – சுக்குக்காப்பி என்றால் மட்டும்.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2021 11:35

கையறு: ஒரு முக்கியமான மலேசிய நாவல்

கையறு நாவல் வாங்க

ஜப்பானியர்கள் 1941 முதல் 1945 வரை ஆடிய கோர தாண்டவமே நாவல் நிகழும் காலகட்டம். பிரிட்டிஷ் அரசின் பிரஜைகளாக இருந்த இந்திய மக்கள் கடல் கடந்து வந்த பின்னர் ஒரே இரவில் அனாதரவாகி தங்களை ஆள்வது யார்? யாருக்கு தாங்கள் அடங்கி இருக்க வேண்டும்? என்று தெரியாத குழப்பத்துடன் கொலைகளுக்கும் வன்புணர்ச்சிக்கும் சூரையாடல்களுக்கும் வற்புறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் பயந்து ஒடுங்கி முடங்கிப்போகின்றனர். எந்தப் பிடியும் கிடைக்காமல் அந்த இல்லாத பெருங்கடலின் இருளில் தத்தளிக்கும் மனநிலையுடன் திணறும் இந்த மக்களின் வாழ்வே  கையறு.

கோ.புண்ணியவான்

‘கையறு’ எனும் பதம் இந்த நாவலின் தலைப்பு மட்டுமல்ல; நாவலின் ஆன்மாவும் அதுதான். அதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாயிலாகவும் கோ.புண்ணியவான் நிறைத்துச்சென்றுள்ளார்.

கையறு: இல்லாத கடலின் இடையறாத இருள்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2021 11:34

இலையின் கதை- கடிதம்

ராய் மாக்ஸம் ராய் மாக்ஸாம்- மூன்று நூல்கள் வழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்

கிழக்கு வெளியீடாக சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பில், ராய் மாக்ஸம் எழுதிய தே: ஒரு இலையின் வரலாறு முக்கியமான நூல். 1650 இல் டச்சு வணிகர்கள் வழியே சீனாவின் தே பிரிட்டனுக்கு அறிமுகமாகி, 1750 இல் பிரிட்டனுக்கு தே பைத்தியம் முற்றியது தொடர்ந்து உலக அரங்கில், தே வணிகம் வழியே நிகழ்ந்த மாற்றங்களை விவரிக்கும் நூல்.

பிரிட்டன், சீனா,ஜப்பான், இந்தியா, இலங்கை,ஆப்ரிக்கா என சுற்றி சுழலும் நூல். பிரிட்டன் அரச குடும்பத்துக்கு பரிசாக உள்ளே வந்த தே, 1750 துவங்கி லண்டனில் காபி க்ளப்புகள் வழியே பரவுகிறது. காபி க்ளப்புகளிலும் பல படித்தரங்கள். உயர் பண்பாட்டு மனிதர்கள் அருந்தும் தே வை சாதாரண தொழிலாளியும் அருந்தும் நிலை பெரிய சங்கடங்களை ஆண்டைகளுக்கு உருவாக்கி இருக்கிறது. ஆண்கள் தே குடித்தால் ஆண்மை போய்விடும், வீரம் போயிடும்  ,  கலவி செய்யவோ போர் புரியவோ முடியாது என்ற வகையிலான ஆய்வுகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இதன் மத்தியில்தான், பிரிட்டனில்  1750 இல் 15,000 டன் ஆக தே இறக்குமதி வெறும் 25 ஆண்டில் 50,000 டன் என உயர்ந்திருக்கிறது.

துவக்க அத்தியாயம் முழுக்க பிரம்மாண்ட கடல் கொள்ளையர் வலையும், அவர்கள் வசமிருந்து அதன் முதல் இலக்கான தே அது எவ்வாறு காப்பாற்ற படுகிறது, கொள்ளையருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என விரிகிறது. கொள்ளைக்கு துணை நின்றவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனை. கொள்ளையருக்கு அதிக பட்ச தண்டனை. குறைந்த பட்ச தண்டனையாவது தூக்கு. தூக்கில் போட்டு உயிர் போனதும் உடனடியாக உடலை உறவுகள் வசம் ஒப்படைத்து விடுவார்கள். அதிக பட்ச தண்டனை தூக்கில் போட்டு அந்த உடலை ஊர் மத்தியில் அப்படியே பல நாள் தொங்க போட்டு விடுவார்கள்.

எல்லாமே சீன பண்டைய அரசர்களின் குசும்பிலிருந்து துவங்குகிறது. சீனாவில் ஒரு அரசர். அவர் வருடம் ஒரு முறை முக்கிய தே திருவிழா கொண்டாடுகிறார். அந்த விழாவுக்கு அவர்க்கு தயாராகும் தே, அதன் இலைகள் உண்மையாகவே ஏழு கடல் தாண்டி,ஏழாவது மலையில் விளையும் தே செடியில் இருந்து வருகிறது. அதுவும் குறிப்பிட்ட ஒன்பது மரத்தில், வருடம் ஒரே ஒரு முறை பறிக்கப்படும் 90 இலைகள் மட்டும். அந்த இலையும் தளிர் இலைகள். அதை பட்டுக் கையுரை போட்டு, தங்க கத்திரி கொண்டு வெட்டி எடுக்கிறார்கள். பிறகு அது தே ஆக மாறி பரிமாறப்படும் ராஜ உபசாரம் அது தனி. இதையெல்லாம் மேன்மை தங்கிய பிரிட்டானிய அரியணை விட்டு வைக்குமா என்ன? மொத்தமாக ஒப்பியம் வழியே மொத்த சீனாவையும் அடிமை செய்து ஈடாக தே இலைகளை கரக்கிறது பிரிட்டன். ஒப்பியம் போர்கள், போஸ்டன் தே விருந்து, என நூலின் மத்திய பாகம் முழுக்க தே வணிகத்துடன் இணைந்த போர்க்கள காட்சிகள்தான்.

இந்தியாவுக்குள் தே வரும் தருணம் இந்த நூலின் முக்கிய பகுதி. இண்டிகோ உற்பத்தியை நிறுத்தி சீன தே பயிரிட முயற்சி நடக்கும் சூழலில், அசாமில் காட்டுக்குள் ஒரு ஆங்கிலேயே தாவரவியலாளர் அசாம் மண்ணுக்கு சொந்தமான தே மரத்தை கண்டு பிடிக்கிறார். அங்கே துவங்குகிறது அசாமில் மாற்றம். பர்மியர்கள் படையெடுத்து மொத்த அசாமும் அழிந்து மீண்டும் அது காடாக நிற்கும் சித்திரத்தை நூல் அளிக்கிறது. அசாமியர் ஜனத்தொகையில் சரி பாதியை பர்மியர்கள் படையெடுத்து குறைத்திருக்கிறார்கள். மீண்டும் வனமாக மாறிக்கொண்டிருக்கும் அசாம் மெல்ல மெல்ல தே தோட்டங்களாக மாறும் சித்திரம் வருகிறது. காட்டுக்குள் போனால் புலி அடிக்கும். ஆகவே கண்ணில் படும் புலி எல்லாம் ஆயிரக் கணக்கில்  கொல்லப் படுகின்றன. காட்டுக்குள் பயணிக்க அங்குள்ள யானைகள் மொத்தமும் இலவச உழைப்பாளிகளாக மாற்றப் படுகிறது. மொத்த அசாமின் தே தோட்டங்களும் வெறும் 20 வருடங்களில் அங்குள்ள யானைகளால் மட்டுமே உருவாக்கி வளர்த்து எடுக்கப்படுகிறது.

இப்படி இலங்கை, ஆப்ரிக்கா என உலகெங்கும் காலனி தேசங்களில் பிரிட்டன் கொத்தடிமைகளாக கொண்டு வந்த லட்சங்களை தொடும்  பஞ்சம் பிழைக்க வந்த இந்தியர்களின் எண்ணிகை அவர்களின் உயிர் குடித்து வளர்ந்த தோட்டங்கள்,   கிழக்கிந்திய கம்பெனி, ப்ரூக்பொண்ட்,லிப்டன் நிறுவனங்களின் வணிக வெறி, என இரண்டாம் உலகப்போரின் இறுதி வரை தே வணிகம் வழியே பிரிட்டன் நிகழ்த்தியவற்றை விவரிக்கும் நூல். முழுக்க முழுக்க இரும்புத் தனமான அல்லது பிரிட்டிஷ் தனமான இந்த வரலாற்று நூலில், ஒரு சிறிய தீற்றலில் வாசனை கற்பனை சாத்தியங்களுக்குள் தள்ளி விடும் சித்தரிப்புகளும் உண்டு. உதாரணமாக ராய் மலாவி தே தோட்டத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடம் முடிய, அவர் சில மாதம் ஓய்வில் பிரிட்டன் செல்ல விடுமுறை கிடைக்கிறது. அது அவரது 22 ஆவது பிறந்த நாள். நண்பர்களுடன் அங்கே பெண் நடத்தும் விடுதியில் மது கொண்டாட்டம். நன்கு அலங்கரிக்கப்பட்ட மது விடுதி. நன்கு அலங்கரிக்கப்பட்ட காசாளர் மேஜை. அலங்காரங்கள் மத்தியில், ஒரு கண்ணாடி கூஜா நிறைய சாம்பல். அது வேறொன்றும் இல்லை, அந்த விடுதியை நடத்தும் பெண்ணின் கணவரின் அஸ்தி தான் அது :).

கடலூர் சீனு

தே  ஓ ர் இலையின் வரலாறு வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2021 11:34

பயணம்,பெண்கள் – கடிதம்

அன்புள்ள ஜெ,

சித்திரைப் புத்தாண்டை ஒட்டிய விடுமுறையில் ஒரு பயணம் திட்டமிட்டோம். இங்கு ஏப்ரல் மாதத்தில் சுடர் கொள்ள தொடங்கிய வெம்மையில் இருந்து தற்காலிகமான தப்பித்தலாக நாகர்கோயில் மற்றும் கேரளத்தின் காடுகளை நோக்கி ஐந்து நாட்கள் பயணம். முதலில் நேராக திருவனந்தபுரம் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கொரானா இரண்டாம் அலையில் இ-பாஸ் முதலிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என்பதால், நாகர்கோயில் வந்து அங்கிருந்து பயணத்தைத் தொடங்க முடிவு செய்திருந்தோம்.

முதலில் அன்பரசி சென்னையில் இருந்து திருச்சி வந்து ரயில் நிலையத்தில் எங்களுக்காக காத்திருந்தாள். பிறகு நானும் செல்வராணியும் சேர்ந்துக் கொண்டோம். திருச்சியில் இருந்து வைகை எக்ஸ்பிரஸில் மதுரை. அங்கிருந்து புனலூர் எக்ஸ்பிரஸில் நாகர்கோயில் வந்து இறங்கிய போது விடியற்காலை 4.30 மணி. அதிகாலையில் பயணம் தொடங்குவதன் பரபரப்பு மனதை நிறைக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கோவையில் இருந்து வந்த ரயிலில் மகேஸ்வரி இறங்கினாள். ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து செல்ல சுப்ரமணியன் சார் காருடன் வந்திருந்தார். ஷாகுல் சாரின் நண்பர் மற்றும் தங்களது வாசகர் என்று செல்வா அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு வகையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவே.

முதலில் சென்றது காளிகேசம். காளிகேசம் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தின் முக்கியமான வனப்பகுதி. வழியெங்கும் வாழை ரப்பர் மற்றும் கிராம்பு தோட்டங்களைப் பார்த்து கொண்டு வந்தோம். ரப்பர் தோட்டங்களில் அதிகாலையில் பால் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களைக் காண முடிந்தது. சுப்ரமணியன் அங்கிருந்த வனத்துறை சூழியல் முகாமில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். அறையில் பைகளை வைத்ததும் நேராக காளிகேசம் அருவியை நோக்கி சென்றோம்.

காலை நேரத்தில் முற்றிலும் ஆட்கள் இல்லாது அமைதியாக ஓடிக் கொண்டிருந்த ஓடைகளின் வழியே ஓரமாக உள்ளாக நடந்து சென்றோம். இந்த ஆறு இங்குள்ள மலைச் சரிவுகளில் விழுந்தோடி, சிறு சிறு சரிவுகளில் பாறைகளைக் குடைந்தும் அறுத்துக் கொண்டும் செல்கிறது. சரிந்து அமைந்த கற்பாறைகள். பாறைகள் வழுக்கலாக இருப்பதால் கொஞ்சம் ஆபத்தானவை. கவனமாக செல்ல வேண்டி இருந்தது.

ஆங்காங்கு சரிவுகளில் தனியாகவும் சிறு குழுக்களாகவும் ஒரே சமயம் குளிக்கலாம். அருவியில் நல்ல தண்ணீர் இருந்தது. அந்த நேரத்தில் அங்கு நாங்கள் மட்டுமே. பசுங்காட்டின் மணம். அருவியின் சீரான ஓசை. சுற்றிலும் மலைகள் முழுக்க பசுமை சூடி நின்றிருக்க அந்த அருவி நீரில் நின்றிருந்தது உண்மையில் ஒரு அபூர்வமான அனுபவம். அலுப்பூட்டும் அன்றாடம் எங்கோ தொலைவில் இருந்தது. நீரில் இறங்கியவுடன் எங்களையும் மீறி ஒரே சந்தோசக் கூச்சல். கண்களை மூடி உச்சியில் அருவி நீர் விழுவதை உணர்ந்த படி நெடு நேரம் அருவியில் நின்றிருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக உடல் குளிர தொடங்கியதுமே நேரம் செல்வதை உணர்ந்து வெளியில் வந்தோம்.

அருவியில் குளித்து முடித்து வந்து அங்கிருந்த காளி கோயிலுக்கு சென்றோம். அருவிக்கு செல்லும் வழியில் இந்த காளி கோயில் உள்ளது. அருகில் இருந்த மலைக்குன்றுக்கு மேல் காளியின் உறைவிடம். அதற்கு கீழாக தாந்திரீக மரபில் காளி வழிபாட்டின் தடயங்கள் இருந்தன. நாங்கள் சென்ற போது சித்ரா பௌர்ணமியை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கான கொடை விழாவைப்  பற்றிய அறிவிப்பைக் கண்டோம்.

மதிய உணவிற்குப் பின், மாறாமலை செல்வது என முடிவானது. அங்கிருந்த காணிக்காரர் ஒருவர் ஜீப்புடன் வர நாங்கள் எல்லாரும் கிளம்பினோம். சரளைக்கற்களும் குழியும் ஆங்காங்கு பெரும் கற்களுமாக இருந்த அந்த மலைப் பாதையில் ஜீப் மேலேறி சென்றது. ஜீப்பை ஓட்டிய காணிக்காரர் மேலே ரப்பர் எஸ்டேட்டில் வேலை செய்கிறார். முன்பொருமுறை அந்த பாதையில் இரவில் ஜீப்பில் வந்த போது புலி குறுக்காக நடந்து சென்றதைப் பார்த்த அனுபவத்தையும் அந்த இடத்தையும் சுட்டி காட்டினார். மேலே ரப்பர் தோட்டம் வரை ஜீப்பில் சென்றதும் இறங்கினோம். ஜீப்பை முன்னால் இறங்கி கொஞ்ச தூரத்தில் நிற்க சொல்லி விட்டு அங்கிருந்து ஒரு நடை சென்றோம். முகில்கள் இறங்கிய வானத்தில் மழை வருவதன் சாயல். இரு பக்கமும் பசுமரச்செறிவு.

அன்பரசி இந்த பயணத்தின் முதலில் இருந்தே  அரிய வகை பறவைகளைத் தேடி காமெராவும் கையுமாக சுற்றிய படி இருந்தாள். அவள் சேலம் பறவையியல் கழகம் மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு குழுமம் ஒருங்கிணைக்கும் “தமிழ் பெண்களின் சிறகு பேச்சு” (SOF Sunday Talkies) நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறாள். இந்த பயணம் முழுவதும் பறவைகளைப் பற்றிய தனது அனுபவங்களையும் மற்றும் பல புதிய தகவல்களையும் சொல்லிய படி வந்தாள். ஒரு கட்டத்தில் நாங்கள் எல்லாரும் எங்கே புதிதாக பறவை தென்படுகிறதென்று சுற்றியும் பார்க்க ஆரம்பித்தோம். மாறாமலையில் இரண்டு புதிய வகைகளைக் கண்டோம். துடுப்பு வால் கரிச்சான் (Rocket tailed drongo) மற்றும் வெண்வயிற்று வால் காக்கை (White bellied treepie). இவை இரண்டும் பொதுவாக ஒன்றாக அடர் காடுகளில் காணக் கிடைப்பவை. திரும்பி ஜீப்பில் வரும் போது செந்தலை பஞ்சுருட்டானை (Chestnut-headed bee-eater) கண்டோம். மிளிரும் சிவப்பு நிறத்திலான தலையும் மஞ்சள் நிறத்திலான தொண்டையும் உடைய சிறிய அழகிய பறவை. இவற்றை மீண்டும் மாலை நடையின் போது பெருஞ்சாணி அணையின் கரையோரப் பகுதிகளில் அதிகமாகக் காண முடிந்தது. இப்பகுதி நாங்கள் தங்கியிருந்த வனத்துறை சூழியல் முகாமின் பின்பகுதியில் தொடங்கி அதன் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அடர் காடுகள் வழியே உள்ளே செல்கிறது.

நாங்கள் கரையோரமாக நீர் குறைந்த மணல் மேடுகள் மற்றும் புல்வெளிகளில் நடந்து சென்றோம். இங்கு சில நேரங்களில் நீரருந்த வரும் மிளாக்கள் உள்ளிட்ட வன விலங்குகளை காண நேரலாம். அப்படியே உள்ளே நடந்து சென்று ஒரு மணல் திட்டில் ஒளிரும் நீர்நிலைகளைப் பார்த்தவண்ணம் சும்மா அமர்ந்திருந்தோம். தூரத்தில் கோடுகளாக மலைகளின் உச்சி முனைகள். ஆற்றின் மறு கரையில் தென்னை மரங்கள் சூழ்ந்த கிராமங்கள். வட்டமான தீவாக நீரில் நீந்தித் திளைக்கும் மாடுகள். கூட்டம் கூட்டமாக வெண்கொக்குகள், நாரைகள் மற்றும் பல வித நீர்ப்பறவைகள். சிறு கூட்டங்களாக பறவைகள் கிளம்பி நீருக்கு மேலே தளர்வாக பறந்து மறுபக்கம் சென்றன.அந்தி அணைவது வரை அங்கிருந்தோம். இந்த நேரங்களில் பார்க்கும் நிலக்காட்சிகள் வெகு நாட்களுக்கு நம்மில் நீடிப்பதுண்டு.

அறைக்கு வந்ததும் இரவுணவு. செல்வா இரவுணவு உண்பதில்லையாதலால், அறைக்கு சென்றதும் உறக்கத்திலாழ்ந்தார். அருவியில் குளித்த பிறகு வரும் இனிய உறக்க மயக்கம். ஒரு வழியாக அவரையும் எழுப்பிக் கூட்டிக்கொண்டு இரவு வெளியில் வந்தோம். பின்பகுதியில் காடுகளை ஒட்டி அமர்வதற்கு பச்சை மூங்கில்களில் செய்யப்பட்ட வட்ட வடிவிலான மூங்கில் அமர்வுகள். காடுகள் முழுக்க இருட்டி நிலவின் ஒளி மேல் எழுந்தது. இரவில் காடு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. விதவிதமான பறவைகள் பூச்சிகளின் ரீங்காரம். மகேஸ்வரியும் அன்பரசியும் அங்கு நெடுநேரம் தனித்து கூவியபடி இருந்த பறவையின் குரலை கண்டுப்பிடிக்க முற்பட்டார்கள். தூரத்தில்  புதர்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு வன விலங்கின் சாயல். சுப்ரமணியன் மொபைல் டார்ச்சை அடித்தபோது சுடரும் இரு கண்களைக் காண முடிந்தது. மிளாவாக இருக்கலாம். சரியாக பார்க்க முடியவில்லை.

அங்கிருந்த வனக்காவலர் பெயர் காந்திராஜன். அந்த சூழியல் முகாம்களை நடைமுறைப்படுத்துவதற்கான தன்னுடைய பல்வேறு முயற்சிகளை பகிர்ந்து கொண்டார். நாங்கள் மாலை நடை சென்ற ஆற்றுக்கு எதிர்ப்பக்கமாக ரப்பர் மரங்கள் செறிந்த காட்டிற்குள் சிறிது தொலைவு சென்றால் வன விலங்குகளைப் பார்க்க முடியும் என்று சொன்னார். அந்த காட்டிற்குள் ராஜநாகங்கள் மிகுதி. அவரும் சுப்ரமணியனும் இரவு வெகு நேரம் அந்த காட்டினைப் பற்றி பேசி கொண்டிருந்தார்கள். நாங்கள் அறைக்கு சென்று படுத்தோம். இரவு நாங்கள் அறைக்கு சென்று உறங்கும் வரையிலும் மறுநாள் காலை எழுந்த பிறகும் கூட அந்த பறவையின் தனித்த குரல் ஒலித்து கொண்டேயிருந்தது.

மறுநாள் அங்கிருந்து கிளம்பி வாகமன் சென்றோம். ஏறத்தாழ பெரும்பகுதி நாள் கார்ப்பயணத்தில் சென்றது. இந்த பயணத்தின் நீண்ட கார்ப்பயணங்கள் அனைத்துமே உற்சாகமானவை. சுப்ரமணியன் சாரின் சுவாரஸ்யமான கதைகள். செல்வாவின் தேர்வில் இனிய பாடல்கள். கொஞ்சம் இலக்கியம். நிறைய சிரிப்பு. ஒரு கட்டத்திற்கு மேல் எங்கள் சிரிப்பு சத்தத்தையே கேட்டுக் கொண்டிருந்தோம். மகிழ்ச்சிகரமான தருணங்கள்.

வாகமனில் சுப்ரமணியன் சார் தன் நண்பர் மூலம் தெரிந்த ஒருவர் நடத்தி வரும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் அங்கு சென்று அவர் வருவதற்காக காத்திருந்தபோது, அருகிலிருந்த மலைக்குன்றின் மீதிருந்து ஒரு ஜீப் வளைந்து சரிவின் சிறிய பாதையில் வெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்தது. அதை எங்களுக்கு சுப்ரமணியன் சார் சுட்டிக்காட்ட நாங்கள் அனைவரும் கொஞ்சம் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் நாங்கள் ஏறிய ஜீப்பும் அந்த மலைக்குன்றின் பக்கமாக திரும்பி மேலே அதே பாதையில் ஏற ஆரம்பிக்க எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்தோம். பிறகு தான் தெரிந்தது நாங்கள் தங்க போகும் விடுதி அந்த மலைக்குன்றின் மேலே இருந்தது.  மலைச்சரிவில் வெட்டி உருவாக்கப்பட்ட பாதையின் ஏற்ற இறக்கங்களையும்  சக்கரங்களின் அதிர்வுகளையும் மிக அருகில் ஒரு பக்கமாக தெரிந்த மலைச்சரிவின் முனைகளையும் உணர்ந்தபடி சென்ற அந்த ஜீப் பயணத்தை மறக்கவே முடியாது. விடுதி கட்டிடம் குன்றின் உச்சியில் இருந்தது. அதற்கும் இடப்பக்கமாக மேலே கூடார முகம் ஒன்று. அங்கும் சிலர் தங்கி இருந்தனர். அதன் எதிர்புறமாக மலை உச்சியை சமப்படுத்தி சிறிய ஹெலிபேட் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டிருந்தது

அந்த விடுதியை நடத்தி வந்த சிபி சேட்டன் அருகிலிருந்த மூன்று மலைக்குன்றுகளுக்கு உடைமையாளர். தன்னுடைய பதினைந்து வயதில் இருந்து இந்த மலைப்பாதைகளில் ஜீப் ஓட்டுவதாகவும், அந்த குன்றின் மேல் வேறு வாகனங்கள் செல்ல முடியாதாகையால் அந்த ஜீப்பில் மட்டுமே தேவையான கட்டுமானப் பொருட்களை பெரும்பாலும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுச்சென்று இந்த விடுதியை கட்டிய கதையையும் கூறினார். இன்னும் இந்த விடுதி மற்றும் அருகில் இருந்த இரு மலைக்குன்றுகளையும் விரிவாக்கம் செய்யும் திட்டங்கள் வைத்திருந்தார். அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருந்த இன்னொரு மலைக்கு ரோப் கார் விடும் திட்டங்கள் உட்பட. உண்மையில் அவருடைய இந்த முயற்சிகள் மற்றும் ஈடுபாடுகள் அனைத்தையும் வைத்து இன்னொரு தனி கட்டுரை எழுதலாம்.

அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கிருந்து அருகில் ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்த மலையுச்சி வரை காலை மற்றும் மாலை நடை. அங்கிருந்த பாறை முனையில் அமர்ந்து அந்தி அடங்குவதையும் மறுநாள் புலரி எழுவதையும் கண்டோம். அவ்விடத்தை சுற்றிலும் பசுமை போர்த்திய மேகங்களில் மூழ்கிய மலைச்சரிவுகள். எதிரில் உருண்டு திரண்டு நின்றிருந்த மலைகளின் உச்சிப்பாறைகள். அதற்கும் மேலாக வானைத் தொடும்படி நின்றிருந்த சிறு மரங்கள். கீழிருந்து ஏறி வந்த மேகக் கூட்டங்கள். சில நிமிடங்கள் நின்றிருப்பது அவற்றின் நடுவிலா என்று புரியாத மயக்கம். மேகங்கள் திரண்டு சட்டென்று மழைத்துளிகளை அள்ளி வீசியபடி காற்றடிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் நல்ல மழை. வீசிய காற்றில் மழைத்துளிகள் வானில் நீண்ட பெரும் கோடுகளாக நடந்து செல்வதைக் காண முடிந்தது. தூரத்தில் தெரிந்த மலைச்சரிவில் மழை நீர் வழிந்து அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

அந்த மலைமுகப்பில் அமர்ந்து சுற்றிலும் விரித்திருந்த பச்சைப் பெருவெளியைப் பார்த்தவாறு நண்பர்களுடன் அரட்டை. சுப்ரமணியன் சாரின் பணி அனுபவங்கள், செல்வாவின் இமயமலை பயணம், இலக்கிய உரையாடல்கள். சிறந்த சுவையான கேரள உணவு. புட்டு, கடலைக்கறி, மரவள்ளி கிழங்கு, சம்பா அரிசிக் கஞ்சி, தேங்காய் மாங்காய் சம்மந்தி, சிக்கன் குழம்பு என இரண்டு நாட்களும் சேட்டன் அருமையாக சமைத்தார். மகேஸ்வரி பயம் தெளிந்து அதன் பிறகு ஜீப் கீழே  பொருட்கள் வாங்க செல்லும் போதெல்லாம் நானும் வருகிறேன் என்று ஆர்வமாக செல்லலானாள். அன்பரசி பறவைகளைத் தேடி கீழே மலைச்சரிவில் இறங்கத்  தொடங்கினாள். இந்த முறை மூன்று புதிய பறவைகள் கிடைத்தன என்று அவற்றின் படங்களைக் காட்டினாள். சீகார்ப் பூங்குருவி (Malabar whistling thrush), குங்குமப் பூச்சிட்டு (Orange Minivet),  சுடர் தொண்டைச்சின்னான் (Flame-throated bulbul). இவற்றுள் அடர் ஆரஞ்சு நிற உடலும் நீண்ட வாலும் கொண்ட குங்குமப் பூச்சிட்டு மிக அழகிய காட்டுப் பறவை.

அங்கிருந்து மறுநாள் திரும்பி வரும் வழியில் மொட்டகுன்னு வியூ பாயிண்ட் வந்தோம். பெரிய மரங்கள் இல்லாத முற்றிலும் மலை உச்சிகளாலும் புல்வெளி மூடிய பள்ளத்தாக்குகளாலும் ஆன அழகிய நிலம். மாலைக்குள் வற்கலை செல்லும் திட்டமிருந்ததால், மொட்டகுன்னுவின் புல் மடிப்புகளில் சிறிய நடை சென்று விட்டு விரைவில் கிளம்பிவிட்டோம். கோட்டயம் கொல்லம் வழியாக வற்கலை சென்று சேரும் போது கிட்டத்தட்ட மாலை ஆறு மணி.

சென்ற முறை செல்வா அங்கு வந்திருந்த போது தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றார். அந்த விடுதியின் மேலாளர் செல்வராணியை அடையாளம் கண்டுகொண்டார் (2019 நவம்பரில் வந்திருந்தீர்கள் அட்வொகேட்.) அந்த விடுதி கடற்கரையை ஒட்டி இருந்த மலைக்குன்றின் மேலே இருந்தது. அங்கிருந்து செங்குத்தாக கீழிறங்கும் நிலம் ஆழத்தில் கடற்கரையைத் தொடுகிறது. சுத்தமான வெண்மணல் விரிந்த கடற்கரை. நெடிய தென்னை மரங்களின் ஓலை அசைவுகள். பருந்துகள் வட்டமிட்ட வானம். கூட்டமாக பறந்த கரும்பருந்துகளையும் (Indian spotted eagle) செம்பருந்துகளையும் (Brahminy Kite) பார்த்தோம். நாங்கள் இருந்த மேட்டில் இருந்து பருந்துக்கூட்டங்களை அருகில் பார்க்க முடிந்ததால் அன்பரசி பரவசமானாள்.

இரவில் கீழே விரிந்து பரந்திருந்த நீரலைகளையும் அப்பால் தூரத்தில் சுடர்களென தெரிந்த கப்பல்களையும் பார்த்தவாறு முதல் தளத்தில் இருந்த அறையின் வெளியில் அமர்ந்திருந்தோம். காலை எழுந்து கடற்கரையில் ஒரு நீண்ட நடை. கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் செம்மண் நிறத்தில் சாய்ந்த குன்றுகள். நிறைய வெளிநாட்டவர்கள். இளைஞர்கள். கடலுக்குள் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். மதியத்திற்கு மேல் வற்கலையில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வந்தோம்.

அன்று ஊர் திரும்புவதாக ஏற்பாடு. வழியில் கரிக்ககம் சாமுண்டிகோயிலுக்கு சென்றோம். 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சாமுண்டி மூன்று வெவ்வேறு வடிவங்களில் வழிபடப் படுகிறார். விஷு பண்டிகை நாளாகையால் அன்று பரதநாட்டியம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சாமுண்டியின் மூன்று வடிவங்களையும் வெளிப்படுத்தி பெண்கள் ஆடிய நடனம் சில வினாடிகள் முழுமையாக ஆட்கொண்டது. நேரமாகியதால் மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். அன்பரசி கிருஷ்ணகிரிக்கு பஸ் ஏறினாள். என்னையும் செல்வராணியையும் மகேஸ்வரியையும் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சுப்ரமணியன் சார் விடைபெற்றார். மகேஸ்வரி கோவைக்கும் நானும் செல்வாவும் திருச்சிக்கும் ரயில் ஏறினோம்.

இந்த கடிதத்தை ஒரு வகையில் முழுப் பயணத்தையும் மொழி அனுபவமாக நினைவில் தொகுக்கும் பொருட்டே எழுதினேன். அங்கிருந்தோம் ஜெ. இன்று எண்ணும் போது மனதில் எழும் வரி அதுவே. பயணம் முடிந்து இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் கனவில் நிறைந்திருப்பவை அந்த மலைமுடிகளும் வானை நிறைத்து பரந்து நின்ற மேகக்கூட்டங்களும் தான். இந்த பயணத்தை சாத்தியப்படுத்தியதில் பெருமளவு செல்வாவுக்கும் சுப்ரமணியன் சாருக்கும் பங்குண்டு. இருவருக்கும் எனது நன்றிகள்.

 

– ம.பிரதீபாதேவி

 

அன்புள்ள பிரதீபா

பெண்கள் தாங்களே சேர்ந்து ஏற்பாடுசெய்துகொண்டு நிகழ்த்தும் பயணங்கள் பற்றி எப்போதுமே எழுதிவந்திருக்கிறேன். அந்தப்பயணங்களில் மட்டுமே இன்றைய சூழலில் பெண்கள் உண்மையான சுதந்திரத்தையும் கொண்டாட்டத்தையும் அடையமுடியும். பெண்கள் குடும்பத்துடன் செய்யும் எல்லா பயணங்களிலும் அவர்களுக்கு பொறுப்பு என்னும் சுமை வந்தமைகிறது

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.